காஷ்மீர் விவகாரம்
ஒப்பந்தங்களைப் பேணாத இறை மறுப்பாளர்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள்.
அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள ‘ஹத்ஆ’ என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத்தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர்.
உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே, ‘இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்’ என்று கூறினர். எனவே, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர் சூழ்ந்தனர்.
அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்’ என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறங்க மாட்டேன்” என்று கூறிவிட்டு, ‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு’ என்று பிரார்த்தித்தார்கள்.
எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களும், மற்றுமொருவரும் ஆவர்.
இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளனர்’ என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3045
புகாரியில் இடம்பெறும் இந்தச் செய்தி உணர்த்துவது, இணைவைப்பாளர்கள் ஒருபோதும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டார்கள், வாக்குறுதியைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதைத் தான்.
யூதர்களும் இந்தப் பண்பைக் கொண்டவர்கள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறுகின்றான்.
அவர்கள் தமது வாக்குறுதிக்கு மாறு செய்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களது உள்ளங்களை இறுகச் செய்தோம். அவர்கள் (வேத) வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். அவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு துரோகத்தைக் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்வீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் 5:13
இ¬றை மறுப்பாளர்களும் இதே பண்பைக் கொண்டவர்கள் என்பதையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
இறை மறுப்பாளர்கள் தான் உயிரினங்களில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நீர் உடன்படிக்கை செய்தீர்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமது உடன்படிக்கையை முறிக்கின்றனர். அவர்கள் அஞ்சுவதில்லை.
அல்குர்ஆன் 8:55,56
ஒப்பந்தத்தை மீறுபவர்கள், வாக்குறுதிக்கு மாறு செய்பவர்கள் ஆகியோரை, படைப்பினத்தில் மிகவும் கெட்டவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இன்றைய இந்தியாவில் நாம் அதைத் தான் பார்க்கின்றோம்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் பணியை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார். ஹைதராபாத், ஜுனகட் போல காஷ்மீரும் இந்தியாவுடன் இணைய மறுத்தது. படேலின் முயற்சியால் ஹைதராபாத், ஜுனகட் சமஸ்தானங்கள் இணைந்தன.
காஷ்மீரைப் பொறுத்தவரை சுதந்திரமடையும் போது மன்னராக இருந்த ஹரிசிங், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
காஷ்மீர் மன்னர் ஹரிசிங் ஒரு இந்து. ஆனால் காஷ்மீரில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருந்தனர். இதனால் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி தொடர்ந்தது.
ஜம்மு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதேவேளையில் காஷ்மீரின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர்.
இந்நிலையில் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வளைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பின்புலத்தில் இருந்து செயல்பட்டது.
வேறு வழியில்லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். இதற்குப் பகரமாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழு பொறுப்பேற்றது. இருப்பினும் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதால் நேரு, ஐ.நா.சபையிடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்கோடு உருவாக்கப்பட்டது. இன்றவுளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு இருநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வாக்கெடுப்பு இன்று வரை நடைபெறவில்லை.
தேசிய மாநாட்டுக் கட்சி இஸ்லாமிய மக்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவராக ஷேக் அப்துல்லாஹ் இருந்தார். முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தந்தை இவர். உமர் அப்துல்லாஹ்வின் தாத்தா ஆவார். எனவே மன்னர் ஹரிசிங்குக்குப் பிறகு காஷ்மீர் விவகாரத்தில் அதன் பிரதிநிதியாக ஷேக் அப்துல்லாஹ் இருந்தார்.
1948ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 370 சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அத்துடன் 1952ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாஹ் மற்றும் பிரதமர் நேரு ஆகியோரிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதன்படி, சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆணை பிறப்பித்தார். இது அரசியல் சட்டப்பிரிவு 370-ன் இணைப்பாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சட்டப்பிரிவு 35ஏ, ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்குகிறது.
சட்டப்பிரிவு 35ஏ, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது.
* நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன.
அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகளை அளிக்கிறது.
இது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. ஆனால் காஷ்மீரிகள் வெளி மாநிலங்களில் சொத்துகளை வாங்க முடியும்.
அதுபோல அங்கு மற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது.
ஜம்மு – காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.
இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.
இந்த ஒப்பந்தத்தைத் தான் தற்போது இந்தியா முறித்துள்ளது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா? அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை வைத்தே 370-ஐ நீக்கியது தான்.
காஷ்மீரின் அப்போதைய சட்டமன்றம் அரசியல் நிர்ணய சபை (சிஷீஸீstவீtuமீஸீt கிssமீனீதீறீஹ்) என்று அழைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபை பரிந்துரை செய்த பின்னர் தான் இந்திய நாடாளுமன்றம் 370வது பிரிவை நீக்க முடியும். ஆனால் அந்த நிர்ணய சபை 1957ல் கலைக்கப்பட்டு விட்டது. கலைக்கப்பட்ட பின்னர் 370வது பிரிவை நீக்கமுடியாது. இதனால் இந்தப் பிரிவு நிரந்தரமாகவே இருந்து வந்தது.
ஆனால் மோடி அரசு ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கொடுத்து 370வது பிரிவை நீக்கியது. 370வது பிரிவில் கூறப்பட்டிருக்கின்ற (சிஷீஸீstவீtuமீஸீt கிssமீனீதீறீஹ்) அரசியல் சாசன நிர்ணய சபைக்கு சட்டமன்றம் என்று பொருள் கொள்ள வேண்டும். சட்டமன்றம் என்றால் நாடாளுமன்றம் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் கஷ்மீர் சட்டமன்றத்தின் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வந்து விட்டது என்று விளக்கம் கூறுகின்றது.
அதன்படி நாடாளுமன்றம், நாடாளுமன்றத்தைக் கேட்டு, குடியரசுத் தலைவர் 370வது பிரிவை ரத்துச் செய்து விட்டார்.
இது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
வீட்டை விற்க வேண்டுமானால் மூத்த மகன் செல்வன், தனது தம்பிகளான கதிரவன், கண்ணன் ஆகியோரிடத்தில் கலந்து ஆலோசித்த பிறகே விற்க வேண்டும் என்று தகப்பனார் மரண சாசனம் செய்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
தகப்பனார் இறந்த பிறகு மூத்த மகன் ஒரு முடிவு எடுக்கின்றார். செல்வன் என்றால் கதிரவன் என்று பொருள் கதிரவன் என்றால் கண்ணன் என்று பொருள். கண்ணன் என்றால் செலவன் பொருள். அதனால் என்னை நானே கலந்து ஆலோசித்துக் கொண்டு இந்த வீட்டை இரண்டு தம்பிமார்களிடமும் ஆலோசனை கேட்காமல் நான் விற்கின்றேன் என்பது தான் அந்த முடிவு. இந்த முடிவின்படி வீட்டை விற்பது எப்படியோ அப்படித் தான் இப்போது மோடி அரசாங்கம் கஷ்மீர் விவகாரத்தில் நடந்திருக்கின்றது. இதை ஒரு கூட்டம் புத்திசாலித்தனமான முடிவு என்று பாராட்டுகின்றனர் என்றால் இந்தப் பைத்தியங்களை என்னவென்று சொல்வது?
இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்து, காஷ்மீருக்கான 370வது பிரிவை, 370வது பிரிவை வைத்தே ரத்து செய்திருக்கின்றது. கஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் இதற்கு அடிப்படை காரணமாகும்.
உலக அளவில் எடுத்துக் கொண்டால் காஷ்மீரைப் போன்று சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட மாநிலங்கள் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றன.
இந்தியாவிலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகின்ற 370வது பிரிவைப் போலவே 371 கி முதல் 371 யி வரை சிறப்பு அந்தஸ்துகள் அளிக்கப்பட்ட பல மாநிலங்கள் இருக்கின்றன.
காஷ்மீர் மட்டும் இவர்களது கண்களை உறுத்துவதற்குக் காரணம் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பது தான்.
அரசியல் சட்டத்தின் 371 (கி) பிரிவு, நாகாலாந்து மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் சிறப்புப் பிரிவாகும். இதன்படி இந்திய நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாகா மக்களின் பாரம்பரிய சட்ட விதிமுறைகளுக்கும், அவர்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கும், அவர்களது மதம் மற்றும் சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கும் பொருந்தாது. மத்திய அரசின் சட்டங்களை அந்த மாநிலத்தில் அமலாக்கப்பட வேண்டிய தேவை இருந்தால் அங்குள்ள சட்டமன்றத்தில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாகலாந்து சட்டமன்றம் ஒப்புதல் இல்லாமல் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது.
இதுபோன்றே, சட்டப்பிரிவு 371(பி) மூலம் மிசோரம் மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பிரிவு 371: மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உரிமை. இந்தச் சிறப்புப் பிரிவின்படி அதன் மாநில ஆளுநர்களுக்கு விதர்பா, மராத்வாடா மற்றும் கட்ச் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் சரிசமமான வளர்ச்சியற்ற பகுதிகளில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பின் தங்கிய ஆறு மாவட்டங்களுக்கும் இதேபோல சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சட்டப்பிரிவு 371 (யி) ஆகும்.
பிரிவு 371(ஙி): அசாம் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் அளித்தும் அதன் பழங்குடிகளுக்கு அந்த மாநில சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டு உரிமை அளித்தும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஆகும்.
இது போன்றதே மணிப்பூர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 371(சி).
பிரிவு 371 (ஞி & ணி): இது ஆந்திர மாநிலத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கான சிறப்புரிமையையும் அதன் பாதுகாப்பையும் நிலை நாட்டுவதற்காக 1974-ல் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டப்பிரிவு ஆகும்.
பிரிவு 371 (தி): சிக்கிம் மக்களின் வெவ்வேறு பிரிவினரின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அந்த மாநிலச் சட்டப்பேரவையில் 30-க்கும் குறைவான உறுப்பினர்கள் இடம்பெறக் கூடாது என்பதற்கான சிறப்பு அந்தஸ்து ஆணையாகும்.
இதேபோன்று பிரிவு 371 (பி) அருணாசலப் பிரதேசத்திலும், பிரிவு 371 (மி) கோவாவிலும், அமலில் இருக்கிறது. இந்தப் பிரிவுகளின்படி மாநிலச் சட்டங்களின் மீது ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு இருந்தும் காஷ்மீர் மட்டும் இவர்களது கண்களை உறுத்துவதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மை தான்.
அத்துடன் அங்குள்ள கனிம வளங்களை கார்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தான் இவர்களின் நோக்கம். இத்தனை அராஜகத்தையும் பாஜக அரசாங்கம் காஷ்மீர் மக்களுக்கு அளித்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு அரங்கேற்றுகின்றது.
அத்துடன் காங்கிரஸ், பாஜக கட்சிகள் என்ற பாகுபாடில்லாமல் காஷ்மீர் மக்கள் தங்களுக்கென்று சுயநிர்ணயம் செய்து கொள்கின்ற பொது வாக்கெடுப்பையும் மறுத்து காஷ்மீர் மக்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவர்களுக்கு ஒப்பந்தம் ஒரு பொருட்டு கிடையாது.
இவர்களது வாக்குறுதிகளை நம்பி ஏமாறக் கூடாது என்பது தான் இதில் முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பாடமும் படிப்பினையும் ஆகும்.
வாய்மையே வெல்லும்
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.
இந்த உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும், மற்ற உயிர்களை விடத் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும், பகுத்தறிவின் அடிப்படையிலேயே அவன் செயல்படுகிறான் என்பதைப் பறைசாற்றுவதற்கும் மனிதர்களிடம் சில நல்ல குணங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது.
இன்றைய நவீன நாகரீக காலகட்டத்தில் மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கேற்ப நற்குணங்கள், நல்ல பண்புகள் போன்றவை அவனது அறிவோடு சேர்த்து வளர்ச்சி அடைவதில்லை. மாறாக நம்பிக்கை மோசடியும், ஏமாற்று வேலையும், வாக்குறுதி மோசடி செய்வதும், நம்ப வைத்துக் கழுத்தறுகின்ற காரியங்களில் ஈடுபடுவதும் இதுபோன்ற குணங்களே பெரும்பகுதியாக மிகைத்து நிற்கின்றது.
அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு மனிதனும் வாய்மையாளனாகவும், உடன்படிக்கையை நிறைவேற்றுபவனாகவும் தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் தவறிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களில் தலையாயது அவன் வாய்மையாளனாகத் திகழ்வதாகும்.
ஒருவன் வாய்மையையும் உண்மையையும் தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தவறி விட்டால் அவன் கடுமையான தோல்வியையும், வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும். இந்த வாய்மை என்ற குணத்தை வேறுவேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்,
வாக்குறுதியை நிறைவேற்றுவது;
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது;
உடன்படிக்கையைப் பேணுவது;
ஒப்பந்தத்தில் மோசடி செய்யாமல் இருப்பது;
நம்பிக்கை மோசடி செய்யாமல் இருப்பது;
அமானிதத்தை பேணுவது
இதுபோன்ற ஏராளமான வார்த்தைகளின் மூலமாக வாய்மை என்ற குணநலன் குறித்து ஆழமாகவும், அழுத்தந் திருத்தமாகவும் எடுத்துச் சொல்லலாம். மேலும், மேற்சொன்ன அத்தனை பண்புகளும் வாய்மை என்ற குணத்திற்குக் கீழாக உள்ளடங்கக் கூடியதாகவே வந்து விடும்.
முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் சொன்ன சொல்லில் உண்மையாக இருந்து, ஒப்பந்தத்தைப் பேணி, உடன்படிக்கையை நிறைவேற்றி, வாய்மையாளர்களாகத் திகழ்வதற்கு ஏராளமான உபதேசங்களை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தருகின்றது. மேலும், மேற்சொன்ன கட்டளைகளை மீறுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் பதிய வைக்கின்றது.
ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!
உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில் நின்று போராடுவார்கள். இது இயல்பான ஒன்று!
வாய்மையை நிலை நாட்ட வேண்டும் என்பது இயற்கையாகவே அனைவருக்கும் உள்ள பொதுவான சட்டமாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தால் இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பிற மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைவன் தனது திருக்குர்ஆனில் ஒப்பந்தங்கள் குறித்து ஏராளமான உபதேசங்களை அடுக்கடுக்காய் கொட்டி வைத்துள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!
அல்குர்ஆன் 5:1
இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.
அல்குர்ஆன் 23:8
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 13:20
அமானிதங்களை கண்டிப்பாகப் பேணி நடக்க வேண்டும் என்றும், உடன்படிக்கையை முறிக்கக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை பகர்கின்றான்.
மேலும் இறைவன் கூறும் போது;
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
அல்குர்ஆன் 16:91
படைத்த இறைவனைப் பொறுப்பாளனாக முன்னிறுத்தி நீங்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றும், நம்ப வைத்து ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பிறகு அதை முறிக்கக் கூடாது என்றும் ஆழமான கருத்தை இறைவன் பதிய வைக்கின்றான்.
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படும்.
அல்குர்ஆன் 17:34
முஸ்லிம்களாக இந்த உலகத்தில் பல இன்னல்களையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டு வாழ்வதற்கான மிக முக்கியமான காரணம், மறுமையை இலக்காகக் கொண்டு தான். அப்படிப்பட்ட விசாரணை நாளில் வாக்குறுதியை நிறைவேற்றாதவன் குறித்து கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று இறைவன் நினைவூட்டுகின்றான்.
தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
ஒருவன் பிறருக்கும் தனக்கும் நன்மை செய்பவனாக இருக்க வேண்டுமானால் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதியை மிகச் சரியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், யார் வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றுகின்றாரோ அவர் தான் உண்மை கூறியவராவார் என்றும் சொன்ன சொல்லை உண்மைப்படுத்தியவர்கள் குறித்து திருக்குர்ஆன் சிலாகித்துப் பேசுகின்றது.
இதுபோன்ற ஏராளமான வசனங்களில் வாய்மையைப் பேணுவதற்கு திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது.
பொய்யை இட்டுக்கட்டுவோர் யார்?
ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதி என்பது அனைத்து மனிதர்களும் தங்களின் வாழ்நாளில் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம். அதிலும் குறிப்பாக நபிகளார் காலத்தில் ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் வாழ்ந்த நல்லவர்கள், கெட்டவர்கள் குறித்தும், அவர்களின் குணநலன்கள் குறித்தும் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.
“நீர் ஒரு (பொற்)குவியலையே நம்பி ஒப்படைத்தாலும் உம்மிடம் திருப்பிக் கொடுப்போரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்தாலும், அவர்களிடம் விடாப்பிடியாய் நின்றாலே தவிர உம்மிடம் திருப்பிக் கொடுக்காதோரும் அவர்களில் உள்ளனர். “பாமரர்கள் விஷயத்தில் நம்மைக் குற்றம் பிடிக்க எந்த வழியுமில்லை” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 3:75
இந்த வசனத்தில் வேதமுடையோரில், அதாவது முஸ்லிகளாக இல்லாத சில மனிதர்களும் தங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குவியலாக இருந்தாலும் மிகச் சரியாக உரியவர்களிடத்தில் திருப்பி ஒப்படைத்து தங்களின் நாணயத்தையும், நம்பிக்கையையும் பேணுவார்கள் என்று கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் இஸ்லாத்தைப் பின்பற்றாத மனிதர்களில் சில கெட்டவர்கள், வாக்கு சுத்தம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். இத்தகையோரிடத்தில் அற்பமான ஒரு தங்கக் காசைக் கொடுத்தால், வலுக்கட்டாயமாகக் கேட்டாலும் கூடத் தருவதற்கு வாய்ப்பு குறைவு தான்.
மேலும், மக்களை மட்டமாகக் கருதி அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்க முயற்சிப்பார்கள். மேலும் இறைவன் மீது பொய்யையும் இட்டுக்கட்டுவார்கள் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.
அந்த வசனத்தின் தொடர்ச்சியில் இறைவன் கூறும் போது,
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, இறையச்சமுடையோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 3:76,77
தமது வாக்குறுதியையும், உறுதிமொழியையும் முறையாகப் பேணுபவர் தான் இறைவனுக்கு அஞ்சி தன்னுடைய வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதாகும்.
ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் யார் முறையாகப் பேணி நடக்கவில்லையோ, அத்தகையோரை இறைவன் பார்க்க மாட்டான்; அவர்களிடத்தில் பேச மாட்டான்; அவர்களைப் பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று கண்டன வார்த்தைகளை பதிய வைத்து எச்சரிக்கை விடுக்கின்றான்.
வாய்மையில் சிறந்து விளங்கிய நபிகள் நாயகம்
ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மைக்கும் வாய்மைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் தங்களின் வாழ்க்கையைக் கட்டமைத்திருந்தார்கள் என்பது தெரிய வரும்.
இறைவனின் தூதராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே மக்களால் நம்பிக்கைக்குரியவர்; உண்மையாளர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு மேலும் மெருகேற்றி தன்னுடைய வாய்மையை கன கச்சிதமாகக் காப்பாற்றினார்கள்.
மேலும், எதிரியிடத்திலும் கூட தனது வாக்குறுதியைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால், எதிரிகள் சில நேரங்களில் அநியாயமான முறையில் ஒப்பந்தங்களை எழுதினாலும் அதற்கும் சம்மதித்து தலையசைத்திருக்கின்ற தருணமும் உண்டு.
அதற்குச் சிறந்த உதாரணமாக, இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய உடன்படிக்கை தான் ஹுதைபியா உடன்படிக்கை. எதிரிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடைபெற்ற மாபெரும் ஒரு புரட்சிப் போர் என்றே சொல்லலாம்.
இந்த ஹுதைபியா உடன்படிக்கையை எதிரிகள் முஸ்லிம்களிடத்தில் கடுகளவு கூட ஈவு இரக்கமின்றி, அநியாயமாகவும், அக்கிரமமாகவும் நிறைவேற்றத் துடித்தார்கள்.
சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், “பேரருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…’ என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள்.
அதற்கு சுஹைல், “ரஹ்மான் – கருணையன்புடையோன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், ‘இறைவா! உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்’’ என்றார்.
முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப் பெயரால்’ என்றுதான் இதை எழுது வோம்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்’’ என்று சொன்னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’’ என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்’’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்றே எழுதுங்கள்’’ என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், “அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப் படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்’’ என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.
ஹுதைபியா உடன்படிக்கையில் எதிரிகள், முஸ்லிம்களை உச்சகட்ட ஆத்திரத்தையும் கோபத்தையும் கிளப்புகின்ற அளவுக்கு சில காரியங்களை அரங்கேற்றினாலும் அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற மௌனம் காக்கின்றார்கள்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியில்…
பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது’’ என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்’’ என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்’’ என்று கூறினார்; அவ்வாறே எழுதினார்.
மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’’ என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?’’ என்று வியப்புடன் கேட்டார்கள்.
அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப் பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து, முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள்.
உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே’’ என்று பதிலளித்தார்கள்.
அதற்கு சுஹைல், “அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை’’ என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், “நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்‘’ என்று கூறினார்.
அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.
ஆதாரம்: புகாரி 2731
இந்த உடன்படிக்கையில் எதிரிகளின் ஒப்பந்த மீறல் எந்தளவுக்கு அத்துமீறி நடந்திருக்கின்றது என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
நபியவர்கள் தமது சொந்த ஊருக்குச் சென்று வருவதற்குப் பல நிபந்தனைகள் எதிரிகளால் அத்துமீறி போடப்படுகின்றது.
மூன்று நாட்களுக்கு மேலாக மக்காவில் இருக்கக் கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்படுகின்றது. (முஸ்லிம் 3653)
ஒப்பந்தத்திற்காக ஏடு கொண்டு வரப்பட்டு முஸ்லிம்கள், முஷ்ரிக்குகள் என்று இருவருக்குமான ஒப்பந்தம் எழுதப்படுகின்றது.
கருணையாளன் என்று இறைவனுக்கு இருக்கக் கூடிய குணத்தை ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் எழுதக் கூடாது என்று மறுக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் என்று ஒப்பந்தத்தில் எழுதக் கூடாது என்று மறுக்கப்படுகின்றது.
புனிதத்தலமான கஃபா ஆலயத்திற்கு முஸ்லிம்கள் செல்வதற்குத் தடுக்கப்படுகின்றது.
உம்ராவை நிறைவேற்றுவதற்கு இஹ்ராம் ஆடை அணிந்து தயார் நிலையில் முஸ்லிம்களில் பலர் இருந்தார்கள். ஆனாலும், முஸ்லிம்கள் உம்ராவை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்கப்படுகின்றார்கள்.
மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவுக்கு முஸ்லிமாக மாறி இடம் பெயர்ந்தாலும் அவரைத் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற அநியாயமான ஒப்பந்தம்.
ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே அபூஜந்தல் என்ற தோழரை கையகப்படுத்துகின்றார்கள்.
அபூஜந்தல் என்ற அந்த நபித்தோழர் ஏற்கனவே இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் கால்களால் தத்தி தத்தி நடந்து வந்து முஸ்லிம்களே! காப்பாற்றுங்கள்! என்று கதறுகின்றார்.
நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் என்னை திருப்பி அனுப்புகின்றீர்களா? நான் பட்ட சிரமம்! துன்பம்! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டீர்களா? என்று கதறித் துடிக்கின்றார்! அந்தத் தோழர்.
ஆனாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்குக் கட்டுப்பட்டு அபூஜந்தலைத் திருப்பி ஒப்படைக்கின்றார்கள்.
இந்தச் செய்தி ஒட்டு மொத்த உலகத்தில் ஒப்பந்தத்தை அநியாயமாக மீறிக் கொண்டிருக்கின்ற அத்தனை நபர்களுக்கும் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது.
அநியாயமாக எதிரிகள் பல கோரிக்கைகளை ஒப்பந்தங்களாக எழுதி ஒப்பந்த மீறலில் ஈடுபடும் போது கூட, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நபி (ஸல்) அவர்கள் செலுத்திய மௌனம் அலாதியானது.
வாய்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு
நபி (ஸல்) அவர்கள் வாய்மைக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். மேலும், எதிரிகளுக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தன்னுடைய தோழர்களுக்கு நடத்திய மெய்சிலிர்க்க வைக்கின்ற பாடம் நம்மை விழி உயர்த்திப் பார்க்க வைக்கின்றது.
வாய்மையைப் பேணுவதிலும், வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் நபி (ஸல்) அவர்கள் எந்தளவிற்கு உச்சகட்டத்தில் இருந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்கண்ட செய்தி அற்புதமான சான்று.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள்.
நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்’’ என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது’ என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 3661
எதிரிகள் இரண்டு தோழர்களைப் பிடித்து நீங்கள் எங்களுக்கு எதிராகப் போர் செய்யச் செல்கின்றீர்களா? என்று கேட்கின்றார்கள். இல்லை நாங்கள் மதீனாவுக்குச் செல்கின்றோம் என்று தப்பிப்பதற்காகப் பேச்சை மாற்றிச் சொல்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் அந்த இரண்டு தோழர்களும் நடந்த செய்தியைச் சமர்பித்த போது, ‘அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்! எதிரிதானே!’ என்று அலட்சியப்படுத்தி விடாமல், ‘நீங்கள் எதிரிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்! நீங்கள் போருக்கு வர வேண்டாம்’ என்று சொல்லி, நம்முடைய மேனியெல்லாம் சிலிர்க்கின்ற அளவுக்கு உச்சகட்ட பதிலைக் கூறி உண்மையான வாய்மையாளராகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.
வாய்மையே வெல்லும்
இன்றைய சமூகத்தில் மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் வாய்மையாளர்களாகத் திகழ்வதிலிருந்து தடுமாறிக் கொண்டும் தவறிழைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.
ஆட்சி என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உடன்படிக்கையைப் பேணாமல் நம்பிக்கை மோசடி செய்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
எவ்வளவு தான் இவர்கள் பொய்யை இட்டுக்கட்டி, சாக்குப் போக்குகள் சொல்லி உண்மையையும், சத்தியத்தையும் குழி தோண்டிப் புதைக்க நினைத்தாலும், மக்களுக்கு அநியாயம் செய்து அவர்களின் உடைமைகளைக் கையகப்படுத்தினாலும் ஜெயிக்கப் போவது வாய்மை தான்! வாய்மையே வெல்லும் இன்ஷா அல்லாஹ்!!
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
அல்குர்ஆன் 21:18
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே நீதி செலுத்துவதில் மன விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:135
நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள்
எம்.ஷம்சுல்லுஹா
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் முன்னறிவிப்புச் செய்தால் உடனே நபித்தோழர்கள் அது நிறைவேறும் தருணத்தை ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் அறிவிக்கும் இறைச்செய்தி பொய்க்காது என்ற இறைநம்பிக்கையுடன் அதற்கான நேரத்திற்காகக் காத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்ற சில அறிவிப்புகள் உடனடியாகவும் பலித்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட, மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டுவைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.
(அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்’ என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.
அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலையை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி)
நூல்: புகாரி 2898, 3062
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த மாத்திரத்தில் ஒரு நபித்தோழர் போர்க்களத்தில், அதை கவனத்திற்குரிய அரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, புலன் துலக்கப் புறப்பட்டு விடுகின்றார். இறுதியில் அவர் கண்டு நெகிழ்ச்சியடைந்த அந்த நிகழ்வையும் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள்.
இப்படி உடனடியாகவும் கொஞ்சம் காலங்கடந்தும் பலித்த, பல்வேறு ஆதாரப் பூர்வமான முன்னறிவிப்புகளைப் பல்வேறு ஹதீஸ் நூல்களில் நாம் காண்கிறோம். மேற்கண்ட இந்த ஹதீஸை ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களும், அதுபோல் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். யார் பின் தொடர்ந்து பார்த்தாரோ அந்த நபித் தோழர் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை. சில முன்னறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்களே நேரடியாகக் களத்தில் கண்டு நெகிழ்ந்து போய் அறிவிப்பார்கள். அத்தகைய சில அறிவிப்புகளை நாம் இங்கு காண்போம்.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அவர்களைப் பற்றி அறிவித்த முன்னறிவிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்ட பொன்னறிவிப்பாகும்.
(49:2 வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், “அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகின்றேன், அல்லாஹ்வின் தூதரே’’ என்று கூறினார். ஸாபித் பின் கைஸிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையுடன்) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம், “உங்களுக்கு என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார். அதற்கு ஸாபித் பின் கைஸ் (ரலி), “மோசம் தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன் தான்’’ என்று கூறினார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.
அந்த மனிதர் (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்வீராக’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 4846, 3613
இந்த ஹதீஸை அறிவிப்பவர் அனஸ் (ரலி) அவர்கள் ஆவார்கள். அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான முன்னறிவிப்பு நிறைவேறியதை நேரில் காணும் பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.
கபன் துணி அணிந்த ஸாபித் பின் கைஸ்
கொடி சரிந்தால் படையின் கூடாரம் சரிந்தது என்றாகி விடும். அதனால் அன்சாரிகளின் கொடியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி), தோண்டிய குழியில் கணுக்கால்கள் வரை பதித்துக் கொண்டார்.
உலக வரலாற்றில் போருக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப வரவும் செய்யலாம். வராமலும் போகலாம் என்ற இரு நிலைப்பட்ட எண்ணத்தில் செல்வதைக் கண்டிருக்கின்றோம்; கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் திரும்ப வர மாட்டோம்; வரக் கூடாது; உயிர் போவது ஒரு முறை தான்! அது தீனுக்காக இருக்கட்டும். அடையப் போவது சுவனம் தான் என்று உறுதி பூண்டு, இறந்தோருக்கு அணிவிக்கும் கபன் துணியை போராடையாக தரித்துக் கொண்டு, சடலத்திற்குப் பூச வேண்டிய வாசனைத் திரவியத்தை உயிருடன் இருக்கும் போதே பூசிக் கொண்டு, போர்க்களத்திற்கு வந்த போர் வீரரை உலகம் கண்டதே இல்லை.
வரலாற்றில் முதன் முதலில் பிணக் கோலத்தில் போருக்கு வந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) தான்.
நெகிழ்வூட்டும் நிகழ்வை, பலிக்கும் இந்த முன்னறிவிப்பை அனஸ் (ரலி) அவர்கள் நேரில் கண்டு நேர்முகத்தை புகாரியிலிருந்து நுகர்வோம்.
மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார்.
(என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ்(ரலி), ‘என் சிறிய தந்தையே! நீங்கள் (யமாமா போருக்கு) ஏன் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இதோ! இப்போது வருகிறேன்’ என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு வந்து (போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள்.
அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள் – (மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித்(ரலி), ‘எனக்கு விலகி வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் மிக மோசமானது’ என்று கூறினார்கள்.
இதை ஹம்மாத்(ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.
நூல்: புகாரி 2845
இது அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நேர்முகமாகும். இந்த முன்னறிவிப்பை அறிவித்த அனஸ் (ரலி) அவர்களே களத்தில் அது நிறைவேறுவதைக் காணும் போது அவர்களைப் போன்ற இந்த நேர்முகம் நெகிழவைக்கின்றது. மேனியை சிலிர்க்க வைக்கின்றது.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் தியாக மரணத்தில் இன்னொரு தகவுப் பொருத்தத்தையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பேச்சாளர்கள் (ஷிஜீஷீளீமீs ஜீமீக்ஷீsஷீஸீ) இருப்பதை நாம் அறிவோம். அது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பேச்சாளராக ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் இருந்த நிகழ்வை நாம் புகாரியில் பார்க்க முடிகின்றது
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட) ‘முஸைலிமா’ எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், ‘முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்’ என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது.
முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி(ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, ‘இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர் தாம் ஸாபித், இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்’ என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4373
முஸைலமா வரும் போது நபி (ஸல்) அவர்களுடன் ஸாபித் (ரலி) இருந்ததிலும், உனக்கு ஸாபித் பின் கைஸ் பதில் அளிப்பார் என்று சொன்னதிலும், யமாமா போரில் ஸாபித் (ரலி) பங்கேற்று அதில் முஸைலமாவுக்கு எதிராகக் களம் காண்பார்கள் என்ற ஒரு மறைமுக முன்னறிவிப்பு இருப்பதையும் இங்கு நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
அனஸ் (ரலி) அவர்களின் அடுத்ததோர் அறிவிப்பு
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டு விட்டது என்ற) தகவலைச் சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். “நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்’’ என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)” என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு ‘பத்ர்’ வந்து சேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்’’ என்று கூறினார்கள்.
இணை வைப்பாளர்கள் நெருங்கி வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’’ என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை தான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.
அதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகி விடுமே!” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
நூல்: முஸ்லிம் 3858
இந்த ஹதீஸிலும் உமைர் (ரலி)க்குச் சொன்ன அந்த முன்னறிவிப்பு அனஸ் (ரலி) கண் முன்னரே நடப்பது நமக்கு இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றது.
பத்ரு போர் முன்னறிவிப்பு
பங்கு பெற்ற இப்னு மஸ்ஊத்
நபி (ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தா செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான்.
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருநார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, ‘யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!’ என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 240
பத்ருப் போரில் கொல்லப்படும் எதிரிகளின் முன்னறிவிப்பை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களே நேரில் கண்டு அறிவிக்கின்ற இந்த நேர்முகம் நம்மைப் புல்லரிக்கச் செய்கின்றது.
பலித்து விட்ட பாரசீக வெற்றி
பார்த்து அறிவிக்கும் அதீ பின் ஹாத்திம்
அதீ இப்னு ஹாத்திம் (ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ‘ஹீரா’வைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று கூறினார்கள். – நான் என் மனத்திற்குள், ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று கேட்டுக் கொண்டேன்.
நபி(ஸல்) அவர்கள் (தொடர்ந்து), ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்’ என்று கூறினார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தரக்காரரான) கிஸ்ரா இப்னு ஹுர்முஸா?’ என்று கேட்டேன். ‘கிஸ்ரா இப்னு ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)’ என்று பதிலளித்தார்கள்.
(மேலும் கூறினார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தன்னுடைய கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெறுபவரைத் தேடியலைவார். ஆனால், அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், ‘நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?’ என்று கேட்பான். அவர், ‘ஆம், (எடுத்துரைத்தார்)’ என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், ‘உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?’ என்று கேட்பான்.பிறகு அவர், ‘ஆம் (உண்மைதான்)’ என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ இப்னு ஹாத்திம்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள், ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)’ என்று சொல்லக் கேட்டேன்.
மேலும், ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா இப்னு ஹுர்முஸின் கருவூலங்களை வென்றவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நேரம் வாழ்ந்தால் ‘ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக்கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்’ என்று அபுல் காஸிம் நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.
நூல்: புகாரி 3595
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்து முறையிடும் போது அதீ பின் ஹாத்திம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்ததும், அவர்களிடமே நபி (ஸல்) அவர்கள், உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் என்று குறிப்பிட்டதும் இது ஓர் இறைத்தூதரின் முன்னறிவிப்பு என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. அதில் இரு முன்னறிவிப்புகள் பலித்ததும் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளரான அதீ பின் ஹாத்திம் நேரடியாகக் கண்டு, அனுபவித்து, அறிவிப்பதும் நமது இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விடுகின்றது.
இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்கள் நபியவர்களின் முன்னறிவிப்பைக் கேட்டு விட்டு, பின்னர் நீண்ட கால இடைவெளி ஆனாலும் அது நிகழ்வதற்கான காலத்தை எதிர்பார்த்து, களத்தில் நின்று நேரடியாகப் பார்த்து விட்டு அறிவிக்கின்ற நேர்முகங்களாகும்.
இது அல்லாமல், ஒரு சில நிகழ்வுகள் நபித்தோழர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே நடந்திருக்கும். அது போன்ற நிகழ்வுகளையும் நபித் தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்திருக்கின்றனர்.
இது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளில் அடங்காது என்றாலும் நபித்தோழர் ஒருவரது விருப்பம் எப்படி நிறைவேறுகின்றது என்பதைக் கூட மற்ற நபித்தோழர்கள் எவ்வாறு கூர்ந்து கவனித்து வந்துள்ளனர் என்பதற்காகவே இந்தச் செய்தியை இங்கு குறிப்பிடுகின்றோம்.
அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் அறிவித்தார்.
‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்றார்’ என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை’ என ஸஹ்ல்(ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள். பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத்தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘சரி’ என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
மக்கள், ‘நீ செய்தது சரியல்ல! நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத் தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று என்று இதை அறிவிக்கும் ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) தெரிவிக்கின்றார்.
நூல்: புகாரி 5810
நபித் தோழர்கள் எந்த அளவிற்கு உன்னிப்பாகக் கவனித்திருக்கின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
மறப்போம் மன்னிப்போம்
அபு ஆஃப்ரின்
பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதரும் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கை அமைப்பைக் கொண்டவர்களாகவே படைக்கப்பட்டுள்ளோம்.
பிறப்பு முதல் இறப்பு வரை எந்தவொரு உறவும் தேவையில்லை, எவரது உதவியும் தேவையில்லை என்று தனித்து வாழ்வது சாத்தியமேயில்லை. தாய், தந்தை, உடன்பிறப்புக்கள், வாழ்க்கைத் துணை, இன்னபிற உறவுகள் என உறவுகளுடன் பின்னிப் பிணைந்தவர்களாகவே நாம் வாழ்கிறோம். இன்னும் சொல்வதென்றால் நம்மில் ஒருவர் மூலமே மற்றவர் அடையாளம் காணப்படுகிறோம், அறியப்படுகிறோம்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:54
மனித வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழும் இந்த உறவுகளின் முக்கியத்துவம் குறித்து வல்ல இறைவன் கூறுகிறான்.
இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 8:75
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 33:6
மார்க்கத்தைக் கற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உறவைப் பேணி வாழ்வது குறித்தும், உறவைப் பேணி வாழாவிட்டால் ஏற்படும் விளைவு குறித்தும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி)
நூல்: புகாரி 5984
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப் படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5985
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று இறைவன் சொன்னான்).
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5989
அல்லாஹ்வினால் அதிகம் வலியுறுத்தப்பட்ட, அல்லாஹ்வின் தூதரால் அதிகம் உபதேசிக்கப்பட்ட இந்த உறவுகள் பசுமையாக்கப்படுவதற்குப் பதிலாக, பட்டுப் போய் காய்ந்து கருகியதாகவே பல குடும்பங்களில் இருக்கின்றது.
சிறு சிறு காரணத்திற்காக உறவை முறித்துக் கொண்டு, உன்னோடு எந்த உறவும் இனி கிடையாது, ஒருபோதும் உன்னுடன் பேச மாட்டேன், அந்தக் குடும்பத்துடன் சேரவே மாட்டேன், அவர்கள் உன் வீட்டிற்கு வந்தால் நான் வர மாட்டேன் என்றெல்லாம் ஒருவருக்கொருவர் வெறுப்பைக் கக்கும் அளவுக்குப் பகைமை வளர்ந்து கிடக்கின்றது. பெற்றோர் பிள்ளைகள் மீதும், உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் மீதும் இவ்வாறு பகைமை பாராட்டுவதைப் பார்க்கிறோம்.
காலங்கள் பல கடந்தாலும், ஆண்டுகள் பல ஆனாலும் இந்தப் பகை உணர்வு நீண்டு கொண்டே சென்று, வருங்காலத் தலைமுறையினருக்குத் தமது உறவுகள் யாரென்றே தெரியாத அளவுக்கு ஓர் அவல நிலையைத் தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இணைத்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன உறவுமுறைகள் இன்று பல்வேறு குடும்பங்களிலும் பிளவுபட்டு நிற்பதற்கும், குடும்ப உறவே வேண்டாம் என்று வெட்டி எறிவதற்கும் காரணம் என்னவெனில், நம்மிடம் மன்னிக்கும் பண்பும் மறக்கும் மனப்பான்மையும் இல்லாமல் போனது தான்.
ஆம்! பிறரால் நமக்கு ஏற்படும் பாதிப்பு எதுவாயினும் அதை அலட்சியம் செய்து, பொறுத்துக் கொள்ளும் பண்பு இல்லாமல், சிறு பிரச்சனையைக் கூட பெரிதுபடுத்தி, பூதாகரமாக்கி, குடும்ப உறவைச் சீரழித்து விடுகின்றோம்.
யாருக்கும் எற்படாத பாதிப்பு தனக்கு மட்டுமே ஏற்பட்டதைப் போன்று, அவர்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று அலட்டிக் கொள்வோரே அதிகம். இதில் ஏகத்துவக் கொள்கைவாதிகளும் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்லர். இத்தகையோர் நமது முன்னோரின் வாழ்க்கைப் பாடத்தை ஒருகணம் புரட்டிப் பார்த்து, படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அழகிய வரலாறு நடத்தும் அற்புதப் பாடம்
நெருங்கிய உறவுகளால் ஏற்படும் கஷ்டங்கள், பாதிப்புகளைத் தாங்க முடியாமல் சம்பந்தப்பட்டவர்களை சபிப்பது, திட்டுவது, பதிலுக்குப் பதில் தீங்கிழைப்பது, அவர்களுக்கு எதிராகப் பிரார்த்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடந்துவிடக் கூடாது என்றோ, கெடுதி ஏற்பட வேண்டும் என்றோ ஆசை கொள்கின்றனர்.
ஒருவர் செய்த தவறை தமக்குள் வைத்துக் கொள்ளாமல், அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள், இப்படியெல்லாம் செய்தார்கள் என்று அவர்களைக் குறித்து ஊரெல்லாம் குறை கூறிப் பரப்பி விடுகின்றனர். சகித்துக் கொள்ளும் பண்பு அறவே இருப்பதில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் பிரார்த்தனை செய்வதற்கும், பழிக்குப் பழி வாங்குவதற்கும் நமது மார்க்கம் அனுமதி அளிக்கின்றது. எனினும் மன்னிப்பது சிறந்தது என்றும், தவறுகளை அலட்சியம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.
உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும் மகிழ்ச்சிகளையும் ஏற்றுக் கொண்டு, அதை முழுவதுமாக அனுபவிக்கும் நாம், அவர்களால் ஏற்படும் பாதிப்புகளை, சிரமங்களை சகித்துக் கொள்ளாமல் அவர்கள் மீது ஆத்திரம் கொள்கிறோம்; வெறுப்பைக் காட்டுகிறோம். அழகிய வரலாறு என்று அல்லாஹ்வின் பாராட்டைப் பெற்ற யூசுஃப் நபியவர்களின் வரலாறு நமக்கு இதில் பாடம் புகட்டுகின்றது.
அவரை அவர்கள் கூட்டிச் சென்றபோது, ஆழ் கிணற்றுக்குள் அவரைப் போடுவதென்று ஒரு மனதாக முடிவு செய்தனர். “(பிற்காலத்தில்) அவர்களது இந்தக் காரியம் பற்றி அவர்களுக்கு நீர் கூறுவீர்’’ என்று அவர்கள் அறியாத வகையில் யூஸுஃபுக்கு அறிவித்தோம்.
அவர்கள் அழுது கொண்டே இரவில் தந்தையிடம் வந்தார்கள். “எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை’’ என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்’’ என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:15-18
“நீங்கள் அறியாதிருந்தபோது யூஸுஃபையும், அவரது சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை அறிவீர்களா’’ என்று அவர் கேட்டார். “நீர் தாம் யூஸுஃபா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர் “நான் தான் யூஸுஃப். இவர் எனது சகோதரர். அல்லாஹ் எங்களுக்கு அருள் புரிந்து விட்டான். யார் (இறைவனை) அஞ்சி பொறுமையைக் கடைப்பிடிக்கிறாரோ அத்தகைய நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்’’ என்று அவர் கூறினார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உம்மைத் தேர்வு செய்து விட்டான். நாங்கள் தவறிழைத்து விட்டோம்’’ என்று அவர்கள் கூறினர். “இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்’’ என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:89-92
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
1. தமது மகன்கள் யூசுப் நபிக்கு அநீதியிழைத்து விட்டனர் என்பதும், தமது அன்புக்குரிய மகனைத் தம்மிடமிருந்து பிரித்து விட்டனர் என்பதும் யஃகூப் நபிக்குத் தெரிந்த போதிலும் கூட அவர்கள் பொறுமையை மேற்கொள்கிறார்கள். தமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை சபிக்கவில்லை, தண்டிக்கவில்லை. எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து அவனிடமே உதவி தேடுகிறார்கள்.
2. அதே போன்று, சிறு வயதில் தமக்கு அநீதியிழைத்த தம் சகோதரர்களை யூசுஃப் நபியவர்கள் வளர்ந்து பெரியவரான பிறகு சந்திக்கிறார்கள். அவர்களைப் பழிவாங்குவதற்குத் தக்க காரணமும் அதற்கான அதிகாரமும் அவர்களிடம் இருந்த போதிலும் தமது சகோதரர்கள் செய்த தீங்கை மறந்து, மன்னித்தும் விடுகிறார்கள்.
தாம் பெற்றெடுத்த பிள்ளைகளால் யஃகூப் நபியும், தமது உடன்பிறந்த சகோதரர்களால் யூசுஃப் நபியும் மிகப் பெரிய துரோகத்தை எதிர்கொண்ட போதிலும் அவர்களது தவறை சகித்துக் கொண்டு, அவர்களை விட்டு விடுகின்றார்கள்.
சிறு சிறு மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் நமக்குள் ஏற்பட்டால் கூட அவற்றை மறவாமல் பகைமை வளர்த்து, பிரிந்து கிடக்கும் ஒவ்வொருவரும் இவ்வரலாற்றின் மூலம் படிப்பினை பெறக் கடமைப்பட்டுள்ளோம்.
பெருமானாரின் பெருந்தன்மை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்குச் சொந்தக்காரரான, அவர்களுக்கு உறுதுணையாக, பக்கபலமாக நின்று எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஹம்ஸா (ரலி) அவர்கள் உஹதுப் போரில் வஹ்ஷி என்பவரால் கொல்லப்பட்டார்கள். அன்னாரின் மரணத்திற்குக் காரணமான வஹ்ஷி என்பாரைப் பல வருடங்கள் கழித்து நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொள்ளும் முறை நம்மை வியப்படையச் செய்கிறது.
நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்குச் சென்று விட்டேன்.
தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)’ என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, ‘நீ வஹ்ஷி தானே?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்’ என்று கூறினேன். அப்போது அவர்கள், ‘என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.
நூல்: புகாரி 4072
தமது விருப்பத்திற்குரிய சிறிய தந்தையின் உயிரைப் பறித்த நபரைச் சந்தித்த அந்தத் தருணத்தில், பதிலுக்குப் பதில் என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள், வஹ்ஷியின் உயிரைப் பறித்திருக்கலாம். ஆனால் தாம் மறந்து விட்ட ஒரு கொடிய சம்பவம் வஹ்ஷியைக் கண்டவுடன் நினைவுக்கு வருவதால், அவரை ஒதுங்கி நிற்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அவரை அழிக்கத் துடிக்கவில்லை. பழிக்குப் பழி வாங்கவுமில்லை. பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்.
ஆனால் பெருமானாரின் சமுதாயமாகிய நம்மில் பெரும்பான்மையானோர் காலங்கள் பல கடந்தாலும் மறக்கவே மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று வீராப்பு கொண்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். இத்தகையவர்கள் மேற்கண்ட சம்பவத்தை ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
மன்னிப்பே சிறந்தது
சண்டையிட்டுப் பிரிந்து கிடப்பவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கிடையேயான ஈகோ பெரும் தடைக்கல்லாக நிற்கின்றது. தாமாக முன்வந்து சமாதானம் செய்து கொண்டால் மதிப்பிருக்காது, கவுரவம் குறைந்து விடும் என்று எண்ணியே பகைமை பாராட்டுகின்றார்கள்.
அவர்கள் தானே முதலில் சண்டை போட்டார்கள், அவர்களே முதலில் வந்து பேசட்டும், நான் ஒருபோதும் இறங்கிப் போக மாட்டேன் என்று வறட்டுக் கவுரவம் பார்ப்பவர்கள் ஏராளம்.
ஒருவரது தவறை மன்னிப்பது தான் சிறந்தது என்பதுடன், பிறரது தவறை நாம் மன்னிக்கும் போது நமது தவறை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று மார்க்கம் கூறுகின்றது.
அபூபக்ர் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்’ என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள். உடனே அல்லாஹ், “உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூபக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2661
நன்மையை நீங்கள் வெளிப்படையாகச் செய்தாலோ, அதை ரகசியமாகச் செய்தாலோ அல்லது (மற்றவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலோ அல்லாஹ் மன்னிப்பவனாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:149
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 42:43
கண்ணியத்தை உயர்த்திக் கொள்ளும் வழி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5047
பகைவர்களையும் நண்பர்களாக்கிட…
பிறரால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதும், நம்மைப் பிறர் பகைத்து வெறுப்புக் காட்டும் போதும் அவர்களிடம் பதிலுக்குப் பதில் வெறுப்பைக் காட்டாமல் பகைமை வளர்த்துக் கொள்ளாமல், நமக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே நாட வேண்டும். நல்லதையே பேச வேண்டும். அவர்களது தவறுகளை மறந்து, மன்னித்து, அலட்சியம் செய்து நட்புறவோடு பழக வேண்டும்.
மறதி என்பது மனிதனின் இயல்பான குணநலன்களில் ஒன்றாக உள்ளது. வாழ்வில் முக்கியமான பல விஷயங்களை மறந்து விடும் நாம், நமது உறவுகளாலும் நட்பு வட்டாரத்தாலும் ஏற்படும் பாதிப்பை மட்டும் காலம் காலமாக மறந்து விட மறுக்கிறோம்.
பிறரால் ஏற்படும் தீமைகளை சகித்துக் கொண்டு, அவற்றை அலட்சியம் செய்யும் பண்பை நாம் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பின் மூலம் பகைமை, விரோதம், குரோதம் போன்றவற்றை அழித்துவிட முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
அல்குர்ஆன் 41:34, 35
நல்லடியார்களின் பண்பு
பிறரது தவறை மன்னிப்பது தான் நல்லடியார்களின் பண்பு என திருக்குர்ஆன் கூறுகின்றது.
அவர்கள் வசதியிலும் வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்; கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் 3:134
மன்னிப்பவருக்கு மகத்தான கூலி
உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப் பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்குப் பதிலளித்து தொழுகையை நிலைநாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்ததும் நிலையானதுமாகும். தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 42:36-40
இறையருளின் கிளைகளில் ஒன்றாக இருக்கும் உறவுகளைப் பேணி வாழ்ந்து, ஷைத்தானின் செயலாகிய பகைமையை அழித்தொழித்து, இறைவனின் அருளைப் பெறக்கூடிய பாக்கியவான்களாக ஆவோமாக!
மதங்களுக்கு அப்பாற்பட்டதா ஓணம் பண்டிகை?
அபு ஷஹீன்
ஓணம் பண்டிகை என்பது ஒரு மதச் சார்பற்ற பண்டிகை போலவும், மத பேதமின்றி மலையாளிகள் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு மாநில விழா போலவும் பள்ளிக்கூடப் பாடங்கள் உட்பட போதிக்கப்பட்டு வருகின்றது.
சில சிந்தனையற்ற மலையாள முஸ்லிம்களும் கூட, ஓணம் பண்டிகையின் வரலாற்றுப் பக்கங்களை அறிந்து கொள்ளாமல், இது ஏதோ தங்கள் இனத்தின் விழாவாக எண்ணிக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம் எப்படி சூரியனை வணங்குதலில் துவங்கி, படையல் செய்தல், பசு மாட்டை வழிபடுதல் என பிற மதச் சடங்குகளின் பின்புலத்தோடு, தமிழர் இனப் பண்டிகையென வலம் வருகிறதோ, அதே போன்ற மத அடையாளங்களுடன் கூடிய பண்டிகை தான் ஓணம் பண்டிகை.
இது முழுக்க முழுக்க இந்துக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
குலசேகர வம்சத்தைச் சேர்ந்த மகாபலி பெருமாள் என்ற ஓர் அரசன், கேரளா சமஸ்தானத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்ததாகவும்.நாட்டை செம்மையாக ஆட்சி செய்த அவனுக்கு இந்துக்கள் வணங்கும் பிரம்மா என்ற கடவுள் பல அற்புத சக்திகளை அருளியதாகவும் இந்து வேதங்களில் ஒன்றாக நம்பப்படும் பாகவத புராணாவில் எழுதி வைத்துள்ளனர்.
இந்த அற்புத சக்திகளைப் பெற்ற மகாபலி, இந்தப் பூமிக்கு அரசனானது மட்டுமின்றி, வானுலகில் இருக்கும் கடவுள்களையெல்லாம் போரில் சந்தித்து அவர்களைத் தோற்கடித்து இந்திரலோகத்திற்கும் அரசனாக ஆகி (ஸிuறீமீக்ஷீ ஷீயீ tலீக்ஷீமீமீ ஷ்ஷீக்ஷீறீபீs) அசைக்க முடியாத பெரும் சக்தியாகத் திகழ்ந்தானாம்.
மகாபலியின் அசுர வளர்ச்சியைக் கண்டு பயமுற்ற குட்டி தெய்வங்கள், பெரிய தெய்வமான விஷ்ணுவிடம் உதவி கேட்டுச் சென்றனர் எனவும், மகாபலியின் சக்தியை வீழ்த்துவதற்காக விஷ்ணு, வாமணனின் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வரம் கேட்டு வந்தார் என்றும், மூன்று கால் தடங்கள் மூலம் பெரும் நிலப்பரப்பைத் தன் வசம் எடுத்துக் கொள்ளும் வரத்தை வாமணனுக்கு மகாபலி கொடுத்தாகவும் நம்புகிறார்கள்.
இரண்டு கால் தடங்களிலேயே பூமி, ஆகாயம் என மொத்த லோகத்தையும் வாமணன் அடக்கி விட்டதால், கருணையே வடிவான மகாபலி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, மூன்றாவது காலைத் தனது தலை மீது வைத்துக் கொள்ள வாமணனிடம் சொன்னாராம். (அதாவது, தன் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை வழங்கினாராம்).
தனது சக்திகள் அனைத்தும் அழிந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கு முக்கியம் என்று கருதிய மகாபலியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்த வாமணன் (விஷ்ணு), தேவலோகத்தின் பொறுப்பை மகாபலியிடமே ஒப்படைத்தாராம்,
இருப்பினும், இந்த பூமியில் வசிப்பதே தமக்கு விருப்பமான காரியம் என்று சொன்ன மகாபலி, ஆண்டுக்கு ஒரு முறையேனும் பூமிக்குச் சென்று தனது ராஜ்ஜிய மக்களைக் காண அனுமதிக்க வேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்தார். இப்படிச் செல்கிறது அவர்களின் நம்பிக்கை…
இது தான் மகாபலியின் சுருக்கமான வரலாறு.
இதன் படி ஒவ்வொரு வருடமும் தனது குடிமக்கள் அனுஷ்டிக்கும் சிங்கம் மாதத்தில் மகாபலி ராஜா வானுலகிலிருந்து கடவுள் (?) விஷ்ணுவின் அனுமதி பெற்று கேரளாவிற்கு விஜயம் செய்கிறாராம்.
அவ்வாறு வருகை தரும் மகாபலியை வரவேற்பது தான் இன்று இவர்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை!
அத்துடன், மகாபலிக்கு இத்தகைய அந்தஸ்தை அளித்த வாமணக் கடவுளை வணங்குவதும் இந்தப் பண்டிகையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
முழுக்க முழுக்க இந்து மத நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்ட புராணங்களையும் இதிகாச நூல்களையும் வைத்து, கற்பனைகளை வரலாறுகளாக எழுதி வைத்துக்கொண்டு, இந்துக்கள் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை எப்படி மதச்சார்பற்ற பண்டிகையாகக் கருதப்படும்?
இதையும் அறியாமையின் வெளிப்பாடாக, தங்கள் இன அடையாளமெனக் கருதி, அதைக் கொண்டாடும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இருக்கிறார்கள் என்றால் குர்ஆன் ஹதீஸ் என்ற இறை வார்த்தைகளை நாம் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன்?
‘‘யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 3515
வரலாற்றை அறிவோம், ஈமானைப் பாதுகாப்போம்!!
உளூவின் சிறப்புகள்
ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள்
இதுவரை நாம் மேற்கண்ட விளக்கத்தில் நபித் தோழர்கள், அமல்களில் சிறியது பெரியது என எதையும் வேறுபடுத்திப் பார்க்காமல் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும், அதற்கு அல்லாஹ் வழங்கும் பரிசையும் தட்டிச் செல்வதற்காக, பந்தயக் குதிரையென களத்தில் பாய்ந்து சென்றதைப் பார்த்தோம். அந்த நிலை நம்மிடம் வர வேண்டும்.
நபித் தோழர்களைப் போன்று நன்மைகளைக் கொள்ளை கொள்வதில் நம்மிடம் போட்டி மனப்பான்மை வரவும் வளரவும் வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில் அமல்களின் சிறப்புக்களின் வரிசையில் முதலாவதாக உளூவின் சிறப்பைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவி (மஸஹ் செய்து) கொள்ளுங்கள். உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை (கழுவிக் கொள்ளுங்கள்)
அல்குர்ஆன் 5:6
இந்த வசனத்தில் தொழுகைக்காக உளூச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
எனவே தொழுகை எனும் வணக்கத்தை உளூவின்றி செய்யக் கூடாது. உளூவின்றி செய்தால் தொழுகை நிறைவேறாது. அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டும் போது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று தடவை கழுவிக் காட்டியிருக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) உளூச் செய்யும் போது தம் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிப் பின்னர் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தி தமது முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தனது வலது கையை மூட்டு வரை மூன்று கழுவினார். பின்னர் இடது கையை மூட்டு வரை மூன்று முறை கழுவினார். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார். பின்னர் வலது காலை மூன்று முறையும் இடது காலை மூன்று முறையும் கழுவினார். “நான் உளூச் செய்தது போல் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ததை நான் பார்த்து இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
நூல்: புகாரி 140
உளூவின் போது உதிரும் பாவங்கள்
மேலே இடம்பெற்ற ஹதீஸில் கடமையாக்கப்பட்ட உளூவை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் விளக்குகின்றது. உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற முஸ்லிமில் இடம் பெறுகின்ற மற்றொரு ஹதீஸ், ஒவ்வொரு உறுப்பைக் கழுகின்ற போதும் அந்தந்த உறுப்புகளின் பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று தெரிவிக்கின்றது.
ஒரு முஸ்லிமான அல்லது இறைநம்பிக்கை கொண்ட அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.
அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 412
சிறு பாவங்களுக்கு உளூ ஒரு பரிகாரம்
உஸ்மான் (ரலி), உளூச் செய்யும்போது ‘‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டு, ‘‘ஒரு மனிதன் அழகிய முறையில் உளூ செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன்’’ என்றார்கள். இதை ஹும்ரான் அறிவித்தார்.
அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது ‘நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்’ (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்’ என உர்வா கூறினார்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)யின் அடிமை ஹும்ரான்
நூல்: புகாரி 160
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
‘‘அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக உளூ செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான் பின் அபான்
நூல்: முஸ்லிம் 391
இந்த ஹதீஸ்கள் உளூவின் மூலம் பாவங்கள் உதிர்கின்றன என்றும் சிறு சிறுபாவங்களுக்கு அது பரிகாரமாகின்றது என்றும் தெரிவிக்கின்றன.
நனையாத உறுப்பும் நரகத்தின் நெருப்பும்
நாம் செய்கின்ற உளூவை நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள். அந்த ஹதீஸ்களை இப்போது பார்ப்போம்:
‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களை விட்டும் பின்தங்கிவிட்டார்கள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூ செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, ‘இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்’ என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரி 163, 165, முஸ்லிம் 405
தகுதியை உயர்த்தும் தரமிக்க உளூ
ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 421
உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள்
ஆதம் நபி முதல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அனைவரது சமுதாயங்களும் நிறைந்து நிற்கின்ற மறுமை நாளில், நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை அடையாளங்காண அரியதொரு அடையாளமாக அமைவது நாம் செய்கின்ற உளூ தான்.
இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது,
தொழுகைக்காக உளூ செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள் வரை நீட்டிக் கழுவினார்கள்.
நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு உளூ செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹாஸிம்
நூல்: முஸ்லிம் 420
இந்த ஹதீஸின் மூலம் உளூவின் சிறப்பையும் அது மறுமையில் நமக்கு அடையாளமாகத் திகழ்வதையும் விளங்கிக் கொள்ளலாம். அதனால் அந்த உளூவை நாம் நிறைவாகச் செய்யவேண்டும்.
நாளை மறுமையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் ‘குர்ரன் முஹஜ்ஜிலீன்’ அதாவது முகம் கைகால்கள் ஒளிமயமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்பதைப் பின்வரும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.
பள்ளிவாசலின் மேல்புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில், உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்
அறிவிப்பவர்: நுஐம் அல் முஜ்மிர்
நூல்: புகாரி 136
மறுமை நாளில் ஒளிமயமானவர்களாக வருவார்கள் என்று அல்லாஹ் கூறும் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் விளக்கமாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றது.
நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை நீர் காணும் நாள்! இன்று சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 57:12
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவர்.
அல்குர்ஆன் 66:8
எனவே, நாம் செய்யக் கூடிய உளூ நாளைக்கு ஒளிவீசச் செய்யும் ஒளிச் சுடர் என்று நம்பியவர்களாக உளூவை நிறைவாகவும் நிதானமாகவும் செய்யவேண்டும்.
ஜமாஅத்தைப் பிடிக்க வேண்டும் என்ற அவசர கோலத்தில் ஹவுஸ் தண்ணீரை மேனியில் அள்ளித் தெளித்து அரை குறையாக உளூச் செய்து விட்டுச் செல்லும் எத்தனையோ சகோதரர்களைப் பார்க்கின்றோம். அப்படி அவசரமாக தண்ணீரை அள்ளி முகத்திலும் கைகளிலும் அடித்து விட்டுச் செல்லும் அந்த சகோதரர்களை மார்க்கப் பிடிப்பு குறைந்தவர்கள் என்றே நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் உளூவை நிறைவாகச் செய்யும் போது கிடைக்கும் “பாவங்களை அழித்து நன்மையை உயர்த்துதல்’’ என்ற பரிசையும் இவர்கள் இழந்து விடுகிறார்கள்.
இன்று உளூ செய்பவர்களில் ஒரு சாரார் தலையில் மூன்று தடவை மஸஹ் செய்வதைப் பார்க்கிறோம். அவ்வாறு மஸஹ் செய்யும் போது தலை முழுவதும் மஸஹ் செய்வது கிடையாது. நெற்றிப் பொட்டையும் தண்ணீரையும் மாறி மாறி மின்னல் வேகத்தில் ஒரு சம்பிரதாயத்துக்கு தொட்டுத் தொட்டு முடித்து விடுகின்றனர்.
ஒரு சிலர் தலையிலும் காதுகளிலும் மஸஹ் செய்து விட்டு பிடரியில் தன் இரு கைகளாலும் கராத்தே போன்று வெட்டிக் கொள்கின்றனர். இது போன்ற உளூவெல்லாம் இறைத் தூதர் காட்டிய முறையில் இல்லை. எனவே மேலே நபி (ஸல்) அவர்கள் கூறியபடி பாவ மன்னிப்பு இன்னும் மேலதிகமான நன்மைகள் இதற்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.
மேற்கண்ட புகாரி 160வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தான் செய்வது போல் உளூச் செய்தால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வது போல் நாமும் செய்ய வேண்டும். அதனால் இதைக் கவனத்தில் வைத்து நாம் உளூவை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்வோமாக!
குறிப்பு:
மேற்கண்ட புகாரி 136வது ஹதீஸில் இடம்பெறும், ‘உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’
(’’فمن استطاع منكم أن يطيل غرته فليفعل‘‘)
என்ற வாசகத்தைப் பற்றி நாம் ஒரு விளக்கத்தை இங்கே பார்க்க வேண்டும்
இதே ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் (10360)இடம் பெறுகின்றது. அதில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான நுஐம் அல்முஜ்மிர், ‘இது நபி (ஸல்) அவர்களின் செய்தியா? அல்லது அபூஹுரைரா (ரலி)யின் செய்தியா? என்று எனக்கு தெரியாது’ என்று தெரிவிக்கின்றார்.
இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் இதன் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார். அத்துடன், ‘இந்த ஹதீஸை பத்துக்கும் மேற்ப்பட்ட நபித் தோழர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடைய அறிவிப்பிலும் அது போல் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்ற அறிவிப்பிலும் இந்தக் கருத்து இடம் பெறவில்லை. இது நுஐம் அல்முஜிரிமிடந்து வருகின்ற அறிவிப்பில் மட்டுமே இடம் பெறுகின்றது. அல்லாஹ் மிக அறிந்தவன்’ என்றும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
‘‘கூடுதலாகக் கூறப்பட்ட இந்தச் செய்தி அபூஹுரைராவின் சொந்தக் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல! ஹதீஸில் இது இடையில் நுழைந்து விட்டது. அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அறிவிக்கின்ற நுஐம் அல்முஜ்மிர் என்ற அறிவிப்பாளர் அறிவிக்கின்ற அறிவிப்பில் மட்டுமே இது இடம் பெறுகின்றது. மற்றவர்களின் அறிவிப்பில் இது இடம் பெறவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீஸ் கலை ஹாபிழ்கள் இதைத் தெளிவுபடுத்தி உள்ளனர்’’ என்று ஹாதில் அர்வாஹ் என்ற நூலில் ஹாபிழ் இப்னுல் கய்யூம் ( ரஹ்) அவர்கள் தெரிவிப்பதாக அறிஞர் அல்பானி அவர்கள் இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்.
உளூவின் துஆவும் உறுதியாகும் சுவனமும்
இன்று நம்மில் பலர், சிறு சிறு அமல்களை அலட்சியம் செய்வதைப் பார்க்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது செய்த அறிவுரையில் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஊரில் தன்னை ஒரு போதும் மக்கள் வழிபட மாட்டார்கள் என்று ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். அதே சமயம் நீங்கள் அற்பமாகக் கருதி விடுகின்ற உங்கள் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு கிடைக்கின்றது. அதன் மூலம் அவன் திருப்தியடைகின்றான்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ்
நூல்: திர்மிதி 2085
இதைக் கவனத்தில் கொண்டால் நாம் சிறு சிறு அமல்களை விட மாட்டோம். அதில் பேணுதல் காட்டுவோம்.
உளூவின் துஆ சிறிய அமலாக இருந்தாலும் அதற்குச் சுவனம் கிடைக்கின்றது என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 397
சிறிய அமல்கள் மூலம் அல்லாஹ் நமக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான். எனவே இவற்றில் நாம் அலட்சியம் காட்டாமல் அமல்களைத் தொடர்வோமாக!
சொல்லும் செயலும் முரண்படாத தலைவர்
எம்.முஹம்மது சலீம்
சமூகத்தில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, அதற்கு மாற்றமாக நடக்கும் மக்கள் அநேகம் உள்ளனர். அந்தப் பட்டியலில், மக்களை வழிநடத்தும் தலைவர்கள் பலரும் அடங்குவர். மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, தாங்கள் கொடுத்த வாக்குறுதி பற்றிக் கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
சொல் ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் முஹம்மது நபியோ முரண்பாடுகள் இல்லாத தலைவராகத் திகழ்ந்தார்கள். எதை மக்களுக்குக் கட்டளையிட்டார்களோ அதை வாழ்வில் கடைப்பிடிப்பதில் முதல் நபராக இருந்தார்கள். ஆகவே தான் அல்லாஹ் பின்வருமாறு அறிவிக்கச் சொல்கிறான்.
“கட்டுப்பட்டு நடப்போரில் முதன்மையானவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்’’ எனக் கூறுவீராக! “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’’ எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 6:14)
“எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்’’ என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 6:123)
முஸ்லிமாக வாழ வேண்டும் என்று போதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், முழுமையான முஸ்லிமாக எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள். எப்படி வாழ வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார்களோ அவ்வாறு தான் வாழ்ந்து காட்டினார்கள். வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வைப் பயந்து அவனது கட்டளைக்குக் கட்டுப்படுவது அவர்களின் இயல்பாக இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது தர்மப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2431)
“நான் என் வீட்டாரிடம் வருகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2432)
தர்மப் பொருளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாதென நபிகளாருக்கு அல்லாஹ் தடை விதித்திருந்தான். ஆகவே, பேரீத்தம் பழம் விழுந்து கிடப்பதைக் காணும் போது அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று அஞ்சி அதை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள்.
இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குக் கட்டுப்படுகின்ற பண்பு நம்மிடம் இருக்கிறதா என்று நாமெல்லாம் யோசிக்க கடமைப் பட்டுள்ளோம்.
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால் எங்களைப் பார்த்து ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (275, 639)
நபியவர்கள் குளித்துவிட்டுத் தொழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தொழுகையில் நின்றதும் அது நினைவுக்கு வருக்கிறது. இப்போது குளிக்கச் சென்றால் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துக் கொண்டு தயங்கி நிற்கவில்லை. உடனே சென்று குளித்து வந்து தொழுகை நடத்தினார்கள்.
மற்றவர்கள் என்ன விமர்சனம் செய்வார்களோ என்று எண்ணிக் கொண்டு, குர்ஆன் ஹதீஸுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய பாடம் இருக்கிறது.
அல்லாஹ் அருளும் வேதத்தை மக்களுக்கு ஓதிக்காட்டி அதைத் தெளிவுபடுத்துவது நபிமார்களின் பொறுப்பு. இதன்படி பார்த்தாலும் நபிகளாரின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனுக்கு ஒப்பாகவும் அதற்கு விளக்கமாகவும் இருந்தது. இதோ இதை மெய்படுத்தும் ஒரு செய்தியைப் பாருங்கள்.
“இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!’’ எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?’’ என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)’’ என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது’’ என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் ஹிஷாம்
நூல்: முஸ்லிம் (1357)
இன்று பல ஆன்மீகவாதிகளைப் பார்க்கிறோம். சாதாரண மக்களை விடவும் தங்களை மிகவும் உயர்வாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதற்காக, மக்களுக்குச் சொல்லும் அறிவுரைகளிலிருந்து தங்களை விதிவிலக்கு செய்து கொள்வார்கள். இத்தகைய இரட்டை நிலை நபிகளாரிடம் இருந்தது கிடையாது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்)’ என்று கூறினார்கள். மக்கள், ‘தங்களையுமா இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘எனவே, நீங்கள் நேர்மையோடு செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5673, 6463)
அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே மறுமை நாளில் வெற்றி பெற முடியும் என்று கூறிய நபியவர்கள், தமக்கும் இந்த நிலை தான் என்று சொல்கிறார்கள். இன்றைய ஆன்மீகவாதிகள் இப்படியா இருக்கிறார்கள்?
உங்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்க வேண்டுமானாலும் எங்களுடைய தயவு தேவை; எங்களால் மட்டுமே அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். இதுவே ஆன்மீகத்தில் இடைத்தரகர் நிலை வருவதற்கு காரணம். இதுபோன்ற சிந்தனைகளை உடைத்தெறியும் வகையில் முஹம்மது நபியின் வாழ்வு இருந்தது.
ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 347
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1777)
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மிகப்பெரும் பாவம். அந்த நிலையில் இறப்போருக்கு மறுமையில் நிரந்தர நரக தண்டனை கிடைக்கும். எவரேனும் இணை வைக்கும் நிலையில் இறந்து விட்டால் அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதற்கு அல்லாஹ் தடை விதித்துவிட்டான்.
இது குறித்து மக்களுக்கு எச்சரித்த நபியவர்கள் தமது தாய் தந்தை விஷயத்தில் இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தமது பெற்றோர் இணைவைக்கும் கொள்கையில் இறந்ததால் அவர்களின் நிலையும் இதுதான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
மற்ற இணைவைப்பாளர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படிதான் தமது பெற்றோர் விஷயத்திலும் நடந்து கொண்டார்கள். இவ்வாறு, நம்பிக்கையிலும் நடவடிக்கையிலும் முரண்படாத தலைவராக முஹம்மது நபி இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘தங்களின் முந்தைய, பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?)’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்: புகாரி (1130, 4836)
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன்போன்றே கூறினேன். நானும் முன்போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை ‘நீங்கள் யூஸுஃப் நபியின் தோழியராக இருக்கிறீர்கள். அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றனர். (அதன் பின்னர்) அபூபக்ர் தொழுகை நடத்தினார். நபி (ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவர்களாக (பள்ளிக்குச்) சென்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (712)
முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான கடமை தொழுகை. தொழுகையை வலியுறுத்தும் நிறைய வசனங்கள் குர்ஆனில் உள்ளன. நபியவர்கள் மக்களுக்கு தொழுமாறு ஏவிவிட்டு ஒதுங்கி கொள்ளவில்லை. தனது மரணத் தருவாயிலும் கூட தொழுகை விஷயத்தில் கவனமாக இருந்தார்கள்.
கடமைகளைச் செய்வதில் மட்டுமல்ல! செய்யக் கூடாத காரியங்களை விட்டும் விலகுவதிலும் முதல் நபராகக் களத்தில் இருப்பார்கள் எனபதற்குப் பின்வரும் சம்பவம் முக்கிய சான்று.
(ஹஜ் நேரத்தில் உரையாற்றும் போது நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:) “உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது…. (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (2334)
வட்டியை வாங்காமல் தள்ளுபடி செய்து விடுங்கள் என்று கூறிய நபிகளார், தமது பெரிய தந்தைக்கு வர வேண்டிய வட்டியைத் தள்ளுபடி செய்து அதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.
இன்றோ தலைவர்கள் இவ்வாறு இருக்கிறார்களா? மக்களிடம் சொன்னதற்கு மாற்றமாக தலைவர்களே சட்டங்களை மீறுவதும் தீமையான விஷயங்களில் புகுந்து விளையாடுவதையும் பார்க்கிறோம். சமூகத்திற்கு நற்குணங்களை, நல்லறங்களைப் போதித்து விட்டு அவர்கள் அவற்றைக் கடைப்பிடிப்பது கிடையாது. ஆனால் முஹம்மது நபியின் செயல்பாட்டினைப் பாருங்கள்.
நபியவர்கள் (மதீனாவுக்கு வந்த பிறகு அங்கு) ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி (3906)
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹா எனும் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியைக் கொண்டு (பொதுநிதியிலுள்ள) ஸதகா ஒட்டகத்திற்குத் தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1502)
பள்ளிவாசலின் கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் (கல்லை வைத்து) அதைச் சுரண்டி சுத்தம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (417)
இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தாலும் பள்ளிவாசலைக் கட்டுவது, பராமரிப்பது, பொதுநிதியை முறைப்படுத்துவது என தம்மால் முடிந்தளவு அனைத்து பொதுப் பணியிலும் பங்கெடுத்தார்கள். இக்கட்டான நேரங்களில் மக்களோடு களத்தில் இறங்கி உதவிக் கரம் நீட்டினார்கள். அதுவே அல்லாஹ்வின் தூதரின் விருப்பமாகவும் பழக்கமாகவும் இருந்தது.
நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிய போது) மண்ணைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, ‘(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: புகாரி (2837, 4104, 7236)
“என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லா விட்டால் நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (36, 2972), முஸ்லிம் (3819)
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தலைமறைவாகிவிடும் தலைவர்களுக்கு மத்தியில், முந்தி வந்து சேவையாற்றும் நபியின் பண்பும் பழக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு ஏற்ப எப்படி வாழ்வது என்பதை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார்கள். இப்படியான தலைவரைத் தான் இஸ்லாமிய சமூகம் வாழ்வியல் முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – தொடர் 37
அல்லாஹ்விடம் அநீதி குற்றஞ்சாட்டும் கஸ்ஸாலி
மூலம் : முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அலீ மக்ராவி
தமிழில் : எம்.ஷம்சுல்லுஹா
كتاب الخوف والرجاء
بيان الدواء الذي به يستجلب حال الخوف
قرب الملائكة من غير وسيلة سابقة وأبعد إبليس من غير جريمة سالفة
முன்னர் எந்தவித வஸீலாவும் செய்யாமலே அல்லாஹ் மலக்குகளைத் தனக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொண்டான். எந்தவிதத் தப்பும் செய்யாமலே அவன் ஷைத்தானைத் தூரமாக்கி விட்டான்.
இஹ்யாஉ உலூமித்தீன்
அச்சம் ஆதரவு பற்றிய அத்தியாயம்
அச்சநிலையில் அவசியமாகின்ற மருந்து பற்றிய பாடம்
இது கஸ்ஸாலியின் இஹ்யா, எல்லாம் வல்ல இறைவன் மீது தொடுக்கின்ற குற்றச்சாட்டாகும். இதை மேம்போக்காகப் படிக்கும் வாசகருக்கும், கஸ்ஸாலியின் பக்தர்களுக்கும் போகிற போக்கில் கஸ்ஸாலி வீசி எறிந்த அணுகுண்டிலிருந்து கசிகின்ற அபாயகரமான கழிவும் அதிலிருந்து வெடித்து எழுகின்ற வெப்பக் கதிர் வீச்சும் எளிதில் தெரியப் போவதில்லை.
கொஞ்சம் தனிமனித பக்தியைக் கழற்றி வைத்து விட்டு, உணர்வுடனும் உயிர்ப்புடனும் படிப்பவருக்குத் தான் அதில் தெறித்துச் சிதறுகின்ற கதிர்வீச்சுக்கள் புலப்படும். கஸ்ஸாலி இதில் இரண்டு விதமான குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்.
1. அல்லாஹ் நீதமில்லாதவன்.
2. ஷைத்தான் நிரபராதி.
அதாவது, மலக்குகள் எந்த அமலும் செய்யாவிட்டாலும் அவர்களைத் தனக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொண்டான். ஷைத்தான் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் அவனை எதிரியாக்கி விட்டான். இதன் மூலம் அல்லாஹ் அநியாயம் செய்து விட்டான் என்ற கருத்தை கஸ்ஸாலி விதைக்கின்றார்.
ஆனால் வல்ல அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.
அணு அளவுக்கு அநியாயம் செய்யாதவன்
அல்லாஹ் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் 4:40
அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கிழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கிழைக்கின்றனர்.
அல்குர்ஆன் 10:44
யாருக்கும் அநீதி இழைக்காதவன்
உமது இறைவன் எவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான்.
அடியார்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்பவன் அல்ல.
அல்குர்ஆன் 3:182, 8:51 , 22:10, 41:46, 50:29
அல்குர்ஆன் 18:49
அல்குர்ஆனின் இந்த அருள் வசனங்கள், அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்காதவன் என்று அடித்து சொல்கின்றன. ஆனால் கஸ்ஸாலியோ அல்லாஹ் ரப்புல் ஆலமீனை அநியாயக்காரனாகச் சித்தரிக்கின்றார்.
ஷைத்தான் நிராபராதியா?
ஷைத்தான் ஏதோ குற்றம் செய்யாதவன் போல் கஸ்ஸாலி கூறுகின்றார். ஆனால் ஷைத்தானோ அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவன், பெருமையடித்தவன் என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். அவை ஷைத்தான் எப்படிப்பட்டவன் என்பதைத் தெளிவாக விளக்கி விடும்.
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் “ஆதமுக்குப் பணியுங்கள்!’’ என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
“நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’’ என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!’’ என்று கூறினான்.
“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்’’ என்று (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் 7:11,12,13
இந்த வசனங்களெல்லாம் படைத்த இறைவனின் கட்டளைக்கு ஷைத்தான் மாறு செய்து, பெருமை அடித்தவன் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றன.
அல்லாஹ்வை அநியாயக்காரன் என்று சொன்னால் அது உண்மையில் இறைமறுப்பாகும். இஹ்யாவைப் படிக்கும் ஒருவர் கஸ்ஸாலியின் இந்தக் கருத்தை நம்பினால் அவர் இறைமறுப்பை நோக்கிப் பயணிக்கினறார் என்பதே அதன் நிலையாகும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஷைத்தானின் ஆணவமும் மலக்குகளின் அடக்கமும்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலிலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 21:19,20
“அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’’ எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள். அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
அல்குர்ஆன் 21:26,27,28
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
இந்த வசனங்கள் மலக்குகளின் பணிவையும் அடக்கத்தையும் போதிக்கின்றன. ஒளியினால் படைக்கப்பட்ட அந்த மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு பணியுங்கள் என்று அல்லாஹ் சொன்ன மாத்திரத்தில் பணிந்தனர். ஆனால் ஷைத்தானோ பெருமை வாதம் பேசி பணிய மறுத்து விட்டான். படைத்தவனிடம் எதிர்வாதம் பேசுவது என்பது பாரதூரமான ஒரு குற்றமாகும். ஷைத்தானின் அடாவடிப் பேச்சையும் ஆணவப் போக்கையும் விவரிக்கின்ற வசனங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் கஸ்ஸாலியோ இத்தனை வசனங்களின் விளக்கத்தைத் தாண்டி அவன் குற்றம் செய்யாதவன் என்று சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்கின்றார்.
அவர், அதை சாதாரணமாகப் பார்க்கின்றார். அதுபோல் இஹ்யாவின் வாசகர்களும் பக்திமான்களும் இந்தக் கருத்தை ஓர் அற்பப் பொருளைப் போன்று பார்க்கின்றனர். இது இறைநம்பிக்கையை அழித்து விடும் அபாயகரமான பாவம் என்பதாகப் பார்க்கவில்லை.
கஸ்ஸாலியின் இந்த வாதம் ஒவ்வோர் இறையச்சவாதிக்கும் பொருந்தும். ஒவ்வொரு பாவிக்கும் பொருந்தும்.
இறையச்சவாதி இறைவனை நெருங்குவது எவ்வித வஸீலாமின்றி நெருங்கி விடுகின்றார். ஒரு பாவி முன்னர் செய்த எந்தப் பாவமுமில்லாமல் இறைவனுடைய அருளை விட்டும் தூரமாகி விடுகின்றார் என்ற தவறான வாதம் வந்து விடும்.
விதியுடன் சர்ச்சை செய்யும் இதுபோன்ற அபத்தங்களையும் அபாயகரமான கருத்துக்களையும் தாங்கிய இந்த இஹ்யாவைத் தான் தமிழக ஆலிம்கள் தாங்கிப் பிடிக்கின்றனர். இது வேதனைக்குரிய விஷயமாகும். மறு உலக வாழ்க்கையைப் பாழாக்கி விடும் பாதகமான இந்நூலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது தனது தலையாயக் கடமையாகும் என்று உறுதி பூண்டு ஏகத்துவம் இந்தப் பணியை ஆற்றி வருகின்றது.
அநியாயக்காரர்களைப் புகழும் கஸ்ஸாலி
அல்லாஹ்வை அநியாயக்காரன் என்று சொன்ன கஸ்ஸாலி அநியாயத்தையும் அநியாயக்காரர்களையும் இஹ்யாவில் புகழ்ந்து தள்ளும் அநியாயத்தை நாம் காண முடிகின்றது. இதோ அதற்குரிய எடுத்துக் காட்டு:
قال الغزالي: ولما دخل الزنج البصرة فقتلوا الأنفس ونهبوا الأموال، اجتمع إلى سهل إخوانه فقالوا: لو سألت الله تعالى دفعهم، فسكت، ثم قال: إن لله عبادا في هذه البلدة لو دعوا على الظالمين لم يصبح على وجه الأرض ظالم إلا مات في ليلة واحدة ولكن لا يفعلون، قيل: لم ؟ قال: لأنهم لا يحبون ما لا يحب، ثم ذكر من إجابة الله تعالى أشياء لا يستطاع ذكرها حتى قال: ولو سألوه ألا يقيم الساعة لم يقمها
كتاب المحبة والشوق والأنس والرضا
بيان جملة من حكايات المحبين وأقوالهم ومكاشفاتهم
சஞ்சிகள் (அல்லது சங்கிகள்) பசரா நகரத்தில் நுழைந்ததும் மக்களைக் கொலை செய்து பொருட்களைக் கொள்ளையடித்தனர். இதைக் கண்ட பஸரா நகர சகோதரர்கள் ஸஹ்ல் அவர்களிடம் வந்து, “நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தால் அவன் இவர்களை ஊரை விட்டும் விரட்டி விடுவான்” என்று முறையிட்டனர். ஸஹ்ல் சிறிது நேரம் மவுனமாக இருந்து விட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்.
“அல்லாஹ்வுக்கென்று சில அடியார்கள் இந்த ஊரில் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த அநியாயக்காரர்களுக்கு எதிராக துஆச் செய்தால் இந்த பூமியில் எந்த ஓர் அநியாயக்காரனும் ஒரே இரவில் மரணிக்காமல் இருக்கமாட்டான். இருந்தாலும் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்.
ஏன்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அவர்கள் அல்லாஹ் விரும்பியதைத் தவிர வேறெதையும் விரும்ப மாட்டார்கள்” என்று பதிலளித்தார்.
அத்துடன், அல்லாஹ் பதிலளிக்கும் சில விஷயங்களும் குறிப்பிட்டார். அவற்றில் சில விஷயங்கள் குறிப்பிட இயலாதவையாகும். அவர்கள், ‘கியாமத் நாள் வேண்டாம்’ என்று துஆச் செய்தால் அல்லாஹ் கியாமத் நாளைக் கொண்டு வரமாட்டான் என்று இறுதியாக அவர் குறிப்பிட்டார்.
இஹ்யாஉ உலூமித்தீன்
அன்பு, ஆசை, பிரியம், திருப்தி தொடர்பான அத்தியாயம்
நேசர்களின் சரித்திரங்கள், அவர்கள் கருத்துக்கள், அவர்களின் ஞான வெளிப்பாடுகள் பற்றிய பாடம்
இந்தச் சம்பவத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்துப் பாருங்கள். சூஃபிஸப் பேர்வழிகளின் திமிரான பேச்சுக்களும் வரம்புமீறல்களும் தெரியும்.
சஹ்ல் என்று சூஃபி இருவிதமான அபத்தங்களை அடித்து விடுகின்றார்.
1. ஓர் ஊரில் அநியாயம் நடக்கின்றது. கொள்ளையர்களின் அராஜகம் அரங்கேறுகின்றது. அதிலிருந்து காப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அங்கீகரித்து விடுவான் என்று அந்த மக்கள் கூறுவதே அறியாமை என்பது தனி விஷயம். அதற்கு அவர் என்ன பதிலளித்திருக்க வேண்டும்?
ஒன்று, அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். அல்லது நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அவரோ சூஃபிகள் மறைவான ஞானம் உள்ளவர்கள், அல்லாஹ் எந்தப் பிரார்த்தனையை ஏற்பான், எதை ஏற்க மாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதாகக் கதையளக்கின்றார்.
கொள்ளையர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், அல்லாஹ்வே கொள்ளையர்களை ஆதரிக்கிறான் என்ற அபத்தக் கருத்து இதில் வருகின்றதா? இல்லையா?
அநியாயக்காரர்கள் பக்கம் சாய்ந்து விடாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) உங்களை நரகம் தீண்டும். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 11:113
அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 3:140
அநியாயம் செய்யும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 9:109
அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று சொல்கின்றான்.
ஆனால் ஸஹ்ல் என்ற அஞ்ஞானியோ, அல்லாஹ் அநீதியை ஆதரிப்பது போல் சித்தரிக்கின்றார். கஸ்ஸாலியும் அதற்கு வாழ்த்துக் கூறி வழிமொழிகின்றார்.
2. ‘அந்த சூஃபிகள் துஆச் செய்தால் கியாமத் நாளைக் கூட அல்லாஹ் கொண்டு வரமாட்டான்’ என்று கூறுகின்றார். இது இவர்களது இரண்டாவது அபத்தமாகும்.
நபிமார்களின் துஆக்களைக் கூட அல்லாஹ் ஏற்க மறுத்திருக்கின்றான். உதாரணத்திற்கு அல்லாஹ்வின் நண்பரான நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த துஆக்கள் சிலவற்றை ஏற்று, சிலவற்றை மறுத்திருக்கின்றான்.
“இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!’’ என்று இப்ராஹீம் கூறியபோது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது’’ என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 2:126
இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை ஏற்க மறுத்து விட்டான். இப்படி உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டமுடியும். ஆனால் கஸ்ஸாலியோ இந்த சூஃபி பேர்வழிகள் கியாமத் நாளை வேண்டாம் என்று சொன்னால் கூட அல்லாஹ் கியாமத் நாளைக் கொண்டு வரமாட்டான் என்று சொல்வது மிகப்பெரும் கொடுமையாகும்.
யுகமுடிவு நேரம் வந்தே தீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன்.
அல்குர்ஆன் 20:15
கியாமத் நாள் வந்தே தீரும் என்று சொல்கின்றான்.
“யுகமுடிவு நேரம் எங்களிடம் வராது’’ என்று இறை மறுப்பாளர்கள் கூறுகின்றனர். “அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ, பூமியிலோ அணுவளவோ அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் அவை இல்லாமல் இல்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 34:3
இறுதி நாள் வந்தே தீரும் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுமாறு அவன் குறிப்பிடுகின்றான். கியாமத் நாள் நடந்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகின்ற வசனங்கள் ஏராளம்! ஏராளம்!
ஆனால் இந்த வழிகேடர்களுக்கு அது ஏளனமாகத் தெரிகின்றது என்றால் இவர்கள் என்ன ரகம் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இவர்களை ஆதரித்துப் பாராட்டுகின்ற கஸ்ஸாலி என்ன ரகம் என்பதையும் அவரது பக்திமான்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எங்கே நிம்மதி
சபீர் அலி
இவ்வுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தைத் தேடி அலைகிறான்.
பொருளாதாரம், கல்வி, பதவி, சாதனை என்று ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசப்படுகிறது.
இதில் அனைவரும் தேடக்கூடிய தேடல், “நிம்மதி” என்பதே ஆகும்.
மன நெருக்கடியில்லா வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்த நிம்மதியையே அனைத்து மனிதர்களும் தேடி அலைகிறான்.
நிம்மதி எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலைத் தேடி அலைபவன், ஒரு கட்டத்தில் அது பொருளாதாரத்தில் இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
கோடிகளில் புரண்டு, கார், பங்களா என பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த தனவந்தர்களைப் பார்த்து இவனது வாழ்க்கை எத்தனை நிம்மதியானது என்று பிரமிக்கிறான், பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ளவன்.
எங்கே நிம்மதி என்ற கேள்விக்கு, பொருளாதாரத்தில் என்ற தவறான விடையைப் பெற்றவன் அதைத் தேடுவதற்காகக் கண்கள் மூடி ஓடுகிறான்.
சிலர் அந்தப் பொருளாதாரத்திற்காக குடும்பத்தைப் பிரிகிறார்கள், குழந்தைகளைப் பிரிகிறார்கள், உற்றார் உறவினர் என்று அனைவரையும் துறந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வாழ்நாளின் முக்கால் வாசியைக் கழித்து ஊர் திரும்புகின்றனர்.
சிலர் உள்நாட்டில் இருந்தாலும் பொருளாதாரத்தைத் தேடுவதையே வாழ்வின் மையமாகக் கொண்டு குடும்பத்தோடு அன்புடன் நேரம் கழிக்காமல் மனதால் தூரமாகியிருப்பர்.
இப்படிப் பல்வேறு இன்னல்களையெல்லாம் சந்தித்து, வாழ்வின் பிற்பகுதியில் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்று பொருளாதாரத்தைத் தேடி கண்மூடி ஓடியவன் கடைசியில் கண்கள் திறந்து பார்க்கும் போதுதான், நிம்மதி பணம் கொடுத்து வாங்கும் பொருளல்ல என்ற வாழ்வின் யதாரத்தத்தை அவன் புரிந்து கொள்கிறான்
மனைவி மக்களோடு அனுபவிக்கும் சந்தோஷங்களையெல்லாம் இழந்தும் இறுதி வரை நிம்மதி கிடைக்கவில்லை என்று உணர்கிறான்.
பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவன் மேலுள்ளவனைப் பார்த்து இப்படி நினைக்கிறான் எனில் மேலுள்ளவன் கீழுள்ளவனைப் பார்த்து சந்தோஷமாக, ஆரோக்கியமாக குடும்பத்தில் சச்சரவுகள் ஏதுமின்றி நிம்மதியாய் வாழ்கிறான் என்று நினைப்பான்.
பொருளாதாரம் இல்லாதவன் இருப்பவனைப் பார்த்தும்,நோய்கள் இருப்பவன் இல்லாதவனைப் பார்த்தும், குடும்பத்தில் பிரச்சனைகள் உள்ளவன் இல்லாதவனைப் பார்த்து, பள்ளி படிப்பவன் கல்லூரியில் படிப்பவனைப் பார்த்தும் இப்படியாக அவன் இவனை, இவன் அவனைப் பார்த்து அவனிடம் நிம்மதியுள்ளது, இவனிடம் இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறான்.
ஆனால் கடைசி வரை நிம்மதி எங்கே என்று கேள்விக்கு விடை மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதாய் தெரியவில்லை.
ஆனால் அதற்கான பதிலை, நிம்மதி எங்குள்ளது என்று சில வழிமுறைகளுடன் நமக்கு எடுத்துரைக்கிறது இஸ்லாம்.
இறை நினைவில்தான் நிம்மதியுள்ளது என்ற அந்த வழிமுறைகளின் ஒட்டுமொத்த சாரம்சத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியுறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியுறுகின்றன.
அலகுர்ஆன் 13:28
எல்லா மதங்களும் கூறுவது போன்று, ‘ஆன்மீக தியானத்தில் மன நிம்மதி ஏற்படும்; அதனால் தனியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்யுங்கள்’ என்று பொதுவாக இஸ்லாம் சொல்லவில்லை.
இதில் கூறப்படும் இறை நினைவு என்பது தியானத்தை மாத்திரம் குறிக்கும் நினைவல்ல. இறை நம்பிக்கை, அச்சம், வழிபாடு, மறுமை சிந்தனை என்று அல்லாஹ் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறைப்படி வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் இறை நினைவுடன் வாழக்கூடிய வாழ்க்கை முறையாகும்.
ஆழமான இறைநம்பிக்கை
நம் வாழ்வில் எப்போது நிம்மதியை இழக்கிறோம் எனில் ஒரு சோதனை, கஷ்டம் நமக்கு வருகிற போதுதான்.
வாழ்வில் எந்தவொரு கஷ்ட நஷ்டம் வந்தாலும் இறைவன் நிச்சயம் நமக்கு இதிலிருந்து ஒரு விடியலைத் தருவான் என்ற நம்பிக்கை வேண்டும்.
சிலர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக உதவ நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் முன்வராவிட்டால் உலகமே சுருங்கி விட்டதைப் போல் இடிந்துவிடுகிறார்கள்.
அந்தக் கலக்கம் நம் வாழ்வின் நிம்மதியைக் குலைத்துவிடுகிறது. குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தைக் கெடுத்துவிடுகிறது. நெருக்கத்தை அழித்துவிடுகிறது.
நான்கு மனிதர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை வைத்து, அவர்கள் உதவ முன்வராததால் இடிந்து போகின்றோம்.
அந்த நான்கு பேர் இல்லை என்றதும் ‘அவ்வளவுதான் முடிந்தது’ என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.
நான்கு நபர்களின் மீது வைத்த நம்பிக்கை, படைத்த இறைவனின் மீது இல்லாமல் போனதையே இந்த நிலை படம் பிடித்துக் காட்டுகிறது.
இத்தகைய பலவீனமான இறை நம்பிக்கை இருக்கும் என்றால் சிறு கஷ்டம் கூட பூதாகரமாக நமக்குத் தெரியும்.
ஆழமான இறைநம்பிக்கை இருக்கும் எனில் பெருங்கஷ்டங்கள் கூட ‘இறைவன் எனக்கு உதவுவான்’ என்ற நம்பிக்கையால் சுக்கு நூறாக்கப்படும்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இதற்கு சான்றாகப் பார்க்கலாம்.
நீங்கள் (இறைத்தூதராகிய) இவருக்கு உதவி செய்யாவிட்டால், இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில், இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரிலிருந்து) வெளியேற்றிய போது அவருக்கு அல்லாஹ் உதவி செய்திருக்கிறான். இருவரும் (ஸவ்ர்) குகையில் இருக்கும் சமயத்தில் “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறினார். அப்போது அல்லாஹ் அவர் மீது தனது அமைதியை இறக்கிவைத்தான். நீங்கள் காண முடியாத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் கொள்கையை தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வுடைய கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.
அல்குர்ஆன் 9:40
நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி) அவர்களையும் எதிரிகள் துரத்துகின்றனர்.
அப்போது இருவரும் ஒரு குகையில் தஞ்சம் அடைகிறார்கள். இருவரும் எதிரிகளிடம் பிடிபடுகின்ற சூழல் நிலவுகிறது. எதிரிகளிடமிருந்து காப்பாற்ற உதவிக்கு யாரும் அங்கிருக்கவில்லை.
அந்த நிலையிலும் உலகமே இருண்டு விட்டதைப் போன்று இடிந்துபோய்விட வில்லை.
இரும்பின் திடத்தை விட பலமான நம்பிக்கை கொண்டு இறை உதவியை எதிர்பார்த்தார்கள்.
இறைவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற சிந்தனை, நெருக்கடியான நிலையையும் கூட அவர்களுக்கு நிம்மதியாக மாற்றியது.
ஆனால், இன்று சிறுசிறு கஷ்டங்கள் வந்ததும் கலக்கம் கொண்டு கவிழ்ந்துவிடுகிறோமே! அதுவே நிம்மதியற்ற வாழ்வின் பிறப்பிடம்.
இறைவன், தான் விரும்புகின்ற அடியார்களின் நம்பிக்கையின் ஆழத்தை அளக்க கஷ்டங்களைக் கொடுப்பான். அதில் கடைசி எல்லை வரை தாக்குப் பிடிக்கிறோமா என்பதுதான் இறைவன் நமக்கு கொடுக்கும் டாஸ்க்.
அத்தகைய கட்டங்களில், எத்தனை கஷ்டங்கள் வந்தாலென்ன? அல்லாஹ் இருக்கிறான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் உள்ளத்தைக் கலக்கம் கொள்ளாமல் நிம்மதியுடன் பெருமூச்சு விட வைக்கிறது.
போதுமென்ற மனம்
நிம்மதியை இழக்க வைக்கும் மற்றொரு வாழ்க்கை முறை, இருக்கின்ற வசதிகளை வைத்துப் போதுமாக்கிக் கொள்ளாமல் பிறரைப் போன்று வாழ நினைப்பது.
இந்த வாழ்க்கை முறை ஆண்களிடமும், அதை விட அதிகமாகப் பெண்களிடமும் காணப்படுகிறது.
தனக்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கே ஒவ்வொருவருக்கும் நாட்கள் போதாது.
அப்படியிருக்க, கொடுத்ததை எண்ணி நன்றி செலுத்தவதற்குப் பதிலாக பிறரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்று தேடிப் பார்க்கும் போது, தான் அவனை விடத் தாழ்ந்தவனோ என்று எண்ணித் துவண்டு போகிறான்; நிம்மதி இழக்கிறான்.
பிறரைப் போல் வாழ வேண்டும் என்று பார்ப்பவன் அடுத்தவனிடத்தில் உள்ள நிறைகளையும், தன்னிடம் உள்ள குறைகளையும் மாத்திரமே பார்ப்பான்.
தான் அவனை விடப் பொருளாதாரத்திலோ, ஆரோக்கியத்திலோ, அழகிலோ, ஆடை அணிகலன்களிலோ என்று ஏதோ ஒரு விஷயத்தில் குறைவுற்று இருப்பதாக உணரும் போது அவனைப் போன்று நான் இல்லையே என்ற எண்ணமே நிம்மதியைக் குலைத்துவிடுகிறது.
அதனால்தான், ‘உனக்கு மேலுள்ளவனைப் பார்க்காதே! கீழுள்ளவனைப் பார்’ என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6490
சிலர் பைக் வைத்திருப்பார்கள். அவர்களின் பார்வை கார் வைத்திருப்பவரை நோக்கியிருந்தால், நம்மால் இயலவில்லை என்ற ஏக்கம் நிம்மதியைக் குலைத்துவிடும்.
அதனால் அவர் தனக்குக் கீழ்நிலையில் உள்ள, சைக்கிளில் செல்பவரைப் பார்க்க வேண்டும். அவர் நடந்து செல்பவரை, அவர் கால்கள் இல்லாமல் தவழ்பவரை என்று ஒவ்வொருவரும் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்க்கும் போதுதான் நமக்கு இறைவன் கொடுத்த நிறையைக் கவனத்தில் கொண்டு மனம் ஆறுதல் அடையும்.
இறைவன் கொடுத்ததையே நிறையாக எண்ணி, போதுமாக்கிக் கொள்வதே நிம்மதியான வாழ்க்கைக்கு வித்திடும்.
நபி (ஸல்) அவர்கள் மிக ஏழ்மையான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். ஒருவர் படுத்திருந்தால் மற்றவரால் தொழுகையில் ஸஜ்தா செய்ய முடியாத அளவுக்குக் குறுகிய இருப்பிடம், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாமலிருக்கும் பசி என்று ஏழ்மையின் உச்சத்தில் இருந்தார்கள்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் கூட இத்தகைய வாழ்க்கையையே வாழ்ந்தார்கள்.
இவ்வளவு ஏழ்மையிருந்தும் கூட நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கின்றதே! காரணம் என்ன?
அடுத்தவரைப் போல் வாழ எண்ணம் கொள்ளவில்லை. தன் வாழ்விலிருக்கும் குறைகளை எண்ணிக் கொண்டிருக்கவில்லை. இறைவன் கொடுத்ததை நிறையாக ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்.
நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஏதேனும் உணவு உள்ளதா?’’ என்று கேட்டார்கள். வீட்டார், “ஆம்’’ என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), “குழம்பேதும் இருக்கிறதா?’’ என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4172
வீட்டில் இருப்பதே மூன்று ரொட்டிகள். அதிலும் பாதி ஒன்ரையை மற்றவருக்கு உபசரிக்கிறார்கள்.
ரொட்டியை நனைத்துச் சாப்பிட குழம்பு எதுவும் இல்லை. காடி எனும் வினிகர் போன்ற புளித்த ஒரு பொருள் தான் உள்ளது. அதில் நனைத்துச் சாப்பிடுகிறார்கள். இதுதான் சிறந்த குழம்பு என்று சொல்கிறார்கள்.
குழம்பு இல்லாமல் காடியைச் சாப்பிட்டும் கூட அதை ஒரு குறையாக எண்ணாமல் இருப்பதை நிறைவாக ஏற்றுக் கொண்டு, பிறருக்கும் அதை உபசரிக்கிறார்கள் என்றால் இந்த உயரிய உள்ளம்தான் நபிகளாரின் நிம்மதியின் ரகசியமாகும்.
மறுமை நம்பிக்கை
நபிகளாரின் இத்தகைய நிம்மதியான வாழ்விற்குக் காரணங்களில் ஒன்று மறுமை நம்பிக்கையும்தான்.
அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் செல்வச் செழிப்பில் உலா வந்து கொண்டிருந்த காலத்தில், ஆட்சித் தலைவர் ஆன்மீகத் தலைவர் இருபெரும் தலைமைப் பொறுப்புகளைத் தன்னகத்தே வைத்திருந்தாலும் கூட பிற மன்னனைப் போல் வாழ வேண்டும் என்ற ஆசை சற்றும் இல்லாதிருந்தார்கள்.
சிறு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நபித்தோழர்கள் சொன்ன போதும் கூட, மறுமைக்காக வாழ்பவனுக்கு ஏன் அதெல்லாம் என்றார்கள்.
நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த உமர் (ரலி) அவர்கள் தொடர்பான நிகழ்வை சற்றுப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டினார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு ‘ஸாஉ’ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?’’ என்று கேட்டார் கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே! (இதோ) இதுதான் உங்களது தனி அறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!’’ என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?’’ என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்திதான்)’’ என்றேன்.
நூல்: முஸ்லிம் 2947 (சுருக்கம்)
ஒரு சிறு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்த போது கூட, அதுவெல்லாம் மறுமையில் பெற்றுக் கொள்ளலாம் என்று நபிகளார் சொல்கிறார்கள்.
இந்த உலகம் நிரந்தரம் அல்ல! இது ஒரு பயணி, மரத்தின் கீழ் நிழல் அனுபவிக்கின்ற நேரம் போன்ற அற்பமானது தான் என்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
நபி(ஸல்) ஒரு பாயில் படுத்திருக்கும்போது அவர்களிடம் உமர்(ரலி) வந்தார்கள். அந்த பாய் அவர்களின் விலாப் புறத்தில் தடம்பதித்திருந்தது. (அதை கண்ட) உமர்(ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இதை விட மென்மையான ஒரு விரிப்பைத் தாங்கள் எடுத்துக் கொள்ள கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கு என்ன சம்பந்தம்? எனக்கும் இந்த உலகத்திற்கும் உதாரணம் என்பது, ஒருவன் கோடை நாளில் பயணிக்கின்றான். பகலில் சிறிது நேரம் ஒரு மரத்திற்குக் கீழ் நிழலாடுகிறான். பிறகு அதை விட்டுவிட்டு சென்று விடுகிறானே! அத்தகையவனைத் போன்றது தான்” என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 2744
இதுபோல் இந்த உலகத்தை அனைவரும் எண்ணி விட்டால் எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது.
எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலே ஏமாற்றங்கள் இருக்காது. ஏமாற்றங்கள் குறைந்து விட்டாலே நிம்மதி மேலோங்கும்.
உலக எதிர்பார்ப்புகள் குறைந்து, மறுமை எதிர்பார்ப்பு மேலோங்குவதும் நிம்மதிக்கான வழியாகும்.
மேலும், இந்த உலகத்தில் எந்தவொரு கஷ்டம் வந்தாலும் அதற்கு இறைவன் நமக்கு மறுமையில் பாவங்களை மன்னிக்கிறான், நன்மையை வழங்குகிறான் எனும்போது அந்த நிரந்தரத்தை எண்ணி ஆறுதல் பெற வேண்டும்.
“ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 5641, 5642
இந்த உலகத்திலேயே ஒரு பொருளாதாரம் நமக்குக் கிடைக்கிறது என்றால் அதற்காக எவ்வளவோ கஷ்டம் கொள்கிறோம்.
நாளை மறுமையில் நாம் இந்த உலகத்தில் அடைகின்ற கஷ்டத்திற்காக நன்மைகள் கிடைக்கிறது எனும் நம்பிக்கை ஆழமாகும் போது கஷடங்கள் எல்லாம் தூசுகளாகும்.
எல்லாம் நன்மைக்கே!
எல்லாவற்றிற்கும் மேலாக விதி தொடர்பான நம்பிக்கை சரியாக இருந்து விட்டால் கவலைகள் நீங்கி, நிம்மதி பெறலாம்.
எதிர்காலத்திற்காக முயற்சி செய்ய வேண்டும். இறந்த காலத்திற்காகக் கவலைப்படக்கூடாது. எது கிடைத்தாலும் அல்லாஹ் வழங்கியது என்ற பணிவு வேண்டும். தன்னால் கிடைத்தது என்ற அகந்தை கூடாது. தவறிவிட்டால் அதற்காகக் கலங்கக் கூடாது என்பதற்காகவே விதி ஏற்பாடு.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 57:22, 23
எந்தக் கஷ்டம் வந்தாலும் இறைவன் கொடுத்த விதி என்று கடந்து போகிற போது நமது மன அழுத்தம் குறைந்து நிம்மதியுடன் இருக்கலாம்.
இறைவன் ஏற்படுத்திய இந்த விதியில் ஏதேனும் நன்மையை இறைவன் வைத்திருப்பான்.
நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். நீங்கள் ஒன்றை விரும்பலாம். அது உங்களுக்கு தீயதாக இருக்கும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:216
நமக்கு எது சிறந்தது என்று படைத்தவனுக்குத் தெரியும். நாம் நன்மையாக நினைப்பது நமக்குத் தீங்காக இருக்கலாம். நாம் தீங்காக நினைப்பது நன்மையாக இருக்கலாம். அவனே அறிவான். அதைதான் நமக்கு வழங்குவான் என்ற விதியின் நம்பிக்கை வாழ்வின் அனைத்துக் கஷ்டங்களின் போதும் மன நெருக்கடியைக் குறைத்து நிம்மதியைத் தரும்.
உணர்வுகளை புரிந்து கொள்வோம்
மங்கலம் சலீம்
நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனில், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பண்பு நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவும். பிரச்சனைகளை விட்டும் தப்பிக்க முடியும். இதைப் பின்வரும் வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(திருக்குர்ஆன் 6:108)
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவன் அல்லாதவர்களை வணங்கக் கூடாது என்று பிறமத மக்களிடம் சொல்லும் போது கூட, அவர்கள் வணங்கும் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியோ கேவலைப்படுத்தியோ பேசக் கூடாது. அழகிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு பேசினால் நாம் சொல்கிற நல்ல விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்க முன்வர மாட்டார்கள்.
ஆகவே, எல்லா விஷயத்திலும் மார்க்கம் சொல்லும் வகையில் அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய முறையில் அறிவுரை கூறியுள்ளார்கள். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
நான், அபூதர் கிஃபாரீ (ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்:
நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?’ என்று கேட்டார்கள். பிறகு, ‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ம்ஃரூர் இப்னு சுவைத்
நூல்: புகாரி (2545)
ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக அவருடைய தாய் தந்தையரைத் திட்டுவது சரியல்ல. அதனால் அவருடைய மனம் புண்படும், துயரப்படும். இந்தப் புரிதல் இல்லாமல், அடுத்தவர் உணர்வுகளை மதிக்காமல் நடப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.
தனக்குக் கீழ் வேலை செய்பவர்களாக இருந்தாலும், தனது முதலாளியாக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலும் பக்குவமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமாக இருந்தது.
என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்’’ என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீது அல்ல)” என்று கூறினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (5228)
தமது மனைவியின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அவர் இயல்பாக இருக்கிறாரா, கோபத்தில் இருக்கிறாரா என்று புரிந்து கொள்பவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். வாழ்க்கை துணைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவராக இருந்தார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?’’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’’ என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்கு போதுமா?’’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி (950)
பெருநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள். அந்த நாளில் தனது மனைவியின் ஆசையை அறிந்து அதற்குரிய வாய்ப்பை நபியவர்கள் அளிக்கிறார்கள்.
இப்படியான குணம் கணவருக்கும் இருக்க வேண்டும்; மனைவிக்கும் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் குடும்பத்திற்குள் வரும் பல பிரச்சனைகள் ஆரம்பித்திலேயே முடிவுக்கு வந்துவிடும். இந்தப் பாடம் பின்வரும் சம்பவத்திலும் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்து அனுப்பினார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கி இருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்’’ என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (5225)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முறை வைத்து வெவ்வேறு நாட்களில் தமது மனைவியரின் வீட்டிற்குச் சென்று வந்தார்கள். அவ்வாறு வீட்டில் இருக்கும் போது அவரது இன்னொரு மனைவியிடம் இருந்து உணவுத் தட்டு கொண்டு வரப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்த நபிகளாரின் மனைவி கோபத்தில் அந்தத் தட்டை உடைத்துவிட்டார். அந்தக் கோபத்திற்கு ரோஷம் தான் காரணமென நபியவர்கள் புரிந்து நடந்து கொண்டார்கள்.
இவ்வாறு அண்டைவீட்டார், உறவினர்கள், சக ஊழியர்கள் என்று சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை, இயல்புகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். இதுபோன்று இருந்தால், நமக்கு வீட்டிற்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் சுமூகமான சூழல் நிலவும். இந்தப் பண்பு நபியிடம் இயல்பாகவே இருந்தது.
அபூபக்ர் (ரலி) (ஒரு முறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக் கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) நாள்களில் (ஒன்றாக) இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அபூபக்ர் (ரலி) இரண்டு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, ‘அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்’ என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவில் தங்கும் நாள்களாயிருந்தன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3529)
பண்டிகை தினத்தில் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நபியவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் பல பிரச்சனைகளைத் தவிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கு நம்மீது இருக்கும் மதிப்பும் நேசமும் கூடும். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரி (631)
மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து மதீனாவிற்கு இளைஞர்கள் வருகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென விரும்புவதை உணர்ந்த நபியவர்கள், அவர்களுக்கு முக்கியமான மார்க்க விஷயங்களை எடுத்துக் கூறி ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.
இளைஞர்களின் உணர்வையும் சூழ்நிலை யையும் கருத்தில் கொண்டு நபிகளார் நடந்து கொண்டதில் நாமெல்லாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதோ இதுபோல இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், “நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன். அங்கு ஒரு ‘வீட்டை’ அல்லது ‘மாளிகையைக்’ கண்டேன். “இது யாருக்குரியது?” என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), “(இது) உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. (ஆகவே, உள்ளே செல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா தன்மானத்தைக் காட்டுவது?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4766)
உமர் (ரலி) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுள் ஒருவர். அவர் சின்னச்சின்ன விஷயத்திலும் ரோஷத்தோடு நடந்து கொள்பவராக இருந்தார். அவரின் இந்த சுபாவத்தை நபியவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.
இப்படி, சமூகத்தில் எல்லோரும் பலவிதமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். வெவ்வேறு வகையான சூழலில் மனநிலையில் இருப்பார்கள். சிலர் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்; சின்ன விஷயத்திலும் சிலருக்கு கோபம் வரும். சிலர் எதிலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள்.
இந்நிலையில் சுற்றியுள்ள மக்களின் இயல்புகளை அறிந்து மார்க்கம் அனுமதி அளித்த அடிப்படையில் நடக்கும் போது சுமூகமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். இதற்குரிய முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடம் நமக்கு இருக்கிறது.
அஸ்ஸாம் முஸ்லிம்களின் நிலை அகதிகளா? அல்லது கைதிகளா?
ஏகத்துவப் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்கள் பெரும்பான்மையான அளவில் சந்தித்த சோதனை, ஊர் வெளியேற்றமாகும். இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் தெளிவுப்படுத்துகின்றது.
“உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’’ என்று இறை மறுப்பாளர்கள் தமது தூதர்களிடம் கூறினர். “அநியாயக்காரர்களை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்’’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இ(ந்த வாக்குறுதியான)து, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
அல்குர்ஆன் 14:13, 14
லூத் நபியை நோக்கி அவரது சமுதாயம் இதைத் தான் சொன்னது.
“லூத்தின் குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்’’ என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் 27:56
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
“எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அல்குர்ஆன் 22:40
மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் செய்த ஒரே பாவம், ஏக இறைவனான அல்லாஹ்வை நம்பியது தான். இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் சந்திக்கின்ற சோதனையும் இதே மாதிரியாகத் தான் உள்ளது.
2016, ஜூலை 19 அன்று மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்தது. அதன்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக இந்தியா வருகின்ற ஹிந்து, சீக்கியர், பார்சீ, ஜெயின், கிறிஸ்துவர் ஆகியோர் இந்தியக் குடியுரிமை பெறுவதற்குத் தகுதியானவர்கள். முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.
குடியுரிமை பெறுவதற்கு அவர்கள் இந்தியாவில் 11 வருடம் தங்கியிருக்க வேண்டும் என்ற சட்டத்தையும் மாற்றி, 6 வருடங்கள் தங்கியிருந்தால் போதும் திருத்தமும் அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கின்றது.
இது தெளிவாகக் கூறுவது என்ன? முஸ்லிமாக இருந்தால் உனக்குக் குடியுரிமை கிடையாது என்பது தான். அண்மையில், பர்மாவிலிருந்து சுமார் ஆறரை லட்சம் முஸ்லிம்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டனர். உலகில் பல்வேறு நாடுகளில் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். பங்களாதேஷில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர்கள் அடைக்கலமாயிருக்கின்றனர். இவர்கள் ஊரை விட்டு துரத்தப்பட்டதற்குக் காரணம் என்ன? இவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைவனாக நம்பியது தான். அதற்குத் தான் அவர்கள் இப்படிப்பட்ட சோதனைகளைச் சந்திக்கின்றார்கள்.
இதுபோன்று தான் தற்போது அஸ்ஸாமில் 40 லட்சம் முஸ்லிம்களின் குடியுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. அதைப் பின்வரும் கட்டுரை விவரிக்கின்றது.
திலீப் பிஸ்வாஸ் என்ற ஒரு சராசரி இந்தியக் குடும்பத் தலைவனின் துயரக் கதையிலிருந்து தொடங்குகிறது அந்தக் கள ஆய்வறிக்கை.
அசாமின் ஒரு கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு, மதிய வேளைகளில் அதே ஊரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் பகுதி நேரமாக வேலைசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் காவல் துறை அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. அன்றோடு அவரது வாழ்க்கை திசை மாறிப்போனது.
இன்று திலீப் பிஸ்வாஸ் எப்படி இருக்கிறார்? விவசாயியாக இல்லை. வழக்கறிஞர் கட்டணத்துக்காகவே தனது நிலத்தை அவர் விற்க வேண்டியதாகிவிட்டது. தான் இந்தியக் குடிமகன் என்பதை உரிய ஆவணங்களைக் காட்டி உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் நிரூபித்துவிட்டார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும்கூட சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். செய்த குற்றம், அவர் இந்தியரா, அந்நியரா என்று சந்தேகத்துக்கு ஆளானது மட்டும்தான்.
நல்ல வேளையாக, திலீப் பிஸ்வாஸுக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். இல்லையென்றால், திலீப் பிஸ்வாஸ் இன்னும் சிறையில்தான் இருக்க வேண்டும். அவர் பேசிய வங்க மொழியே அவர் இந்தியர் அல்ல என்ற சந்தேகத்துக்குப் போதுமான காரணமாகிவிட்டது.
திலீப் பிஸ்வாஸ் போன்று ஏறக்குறைய 40 லட்சம் பேர் தாங்கள் எந்த நேரத்திலும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். அசாம் மாநில அரசு, 2015-ல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகளைத் தொடங்கியது. அதன்படி, அசாமில் வசிக்கும் ஒவ்வொருவரும் 1971-க்கு முன்னால் அந்த மாநிலத்தில் வசித்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. 1971 என்பது வங்க தேசம் உருவான ஆண்டு. அதற்கு முன்பு இந்தியாவில் குடிமக்களாகப் பதிவுசெய்துகொண்டவர்களும் அவர்களின் வாரிசுகளும் மட்டுமே பதிவேட்டில் இடம்பெறுவார்கள். ஒருவேளை, பெற்றோர்கள் தங்களை இந்தியாவின் குடிமக்களாகப் பதிவுசெய்து கொள்ளவில்லை என்றால், அவர்களின் வாரிசுகள் அந்நியர்கள் என்றே அறிவிக்கப்படுவார்கள்.
இரண்டே கேள்விகள்
வங்க மொழி பேசுபவரா? முஸ்லிமா? இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே அசாமில் ஒருவர் இந்தியரா? இல்லை அந்நியரா என்று முடிவெடுப்பதற்குப் போதுமானதாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று அசாம் மாநில அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. ஏறக்குறைய 20 லட்சம் பேர், அதாவது மாநில மக்கள் தொகையில் 6 சதவிகிதம் பேர் பதிவேட்டில் இடம்பெறவில்லை. பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள் தீர்ப்பாயங்களை அணுகித் தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தீர்ப்பாயங்கள் பின்பற்றும் நடைமுறையோ இயற்கை நீதிக்குப் புறம்பாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்டதாய் இருக்கிறது.
இந்நடவடிக்கையைப் பற்றி சுயேச்சை பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பான ‘டைப் மீடியா சென்டர்’ நடத்திய கள ஆய்வறிக்கையின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. தீர்ப்பாயங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், தீர்ப்பாயங்களை எதிர் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது இந்த நேரடிக் கள ஆய்வு.
இதற்கென உள்ள 100 தீர்ப்பாயங்களிலும் 2018-ல் இறுதி ஆறு மாதங்களில் அளிக்கப்பட்ட தீர்வறிக்கை விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்தது டைப் மீடியா சென்டர் என்ற அந்த அமைப்பு. அதில் ஐந்து தீர்ப்பாயங்கள் மட்டுமே அந்த விவரங்களை அளித்தன. அத்தீர்ப்பாயங்களில் 10 வழக்குகளில் 9 வழக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்தன. ஏறக்குறைய 90% முஸ்லிம்கள் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்துக்களில் இந்த விகிதம் 40%.
அதிகரிக்கும் தற்கொலைகள்
தீர்ப்பாயங்கள் தங்கள் முன்னால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்களையே பொறுப்பாளியாக்கியது. இப்படிப் பெயர் மற்றும் வயதைப் பதிவு செய்வதில் நிர்வாகத் துறை காட்டிய அலட்சியத்தால் குடியுரிமையை இழந்து நிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது.
தாங்கள் இந்தியாவின் குடிமக்கள் தான் என்பதை மேல்முறையீட்டில் நிரூபிப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சேமிப்பையெல்லாம் செலவழித்து ஆவணங்களைத் திரட்டுகிறார்கள். செலவழிக்க வாய்ப்பில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களோ தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள்.
தொடரும் அபாயம்
இந்நிலையில்தான், ஏற்கெனவே இருக்கும் 100 தீர்ப்பாயங்களோடு மேலும் கூடுதலாக 200 தீர்ப்பாயங்களைத் தொடங்கும் அசாமின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அந்நியர்கள் என்று அடையாளப்படுத்துபவர்களை அடைத்து வைப்பதற்காக மேலும் 10 சிறைச்சாலைகளைக் கட்டவும் அசாம் மாநில அரசு திட்டமிட்டுவருகிறது.
‘வெளியேறு! அல்லது சிறையில் இரு!’ என்பது தான் முஸ்லிம்களை நோக்கி இன்றைய இந்தியாவில் இந்துத்துவாவினர் வைக்கின்ற கோஷமாகும். இது முஸ்லிம்களுக்குப் புதிதல்ல. ஏற்கனவே இறைத்தூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வைக்கப்பட்ட கோஷமாகும். இவர்கள் இந்தப் பூமி தங்களுக்கென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்தப் பூமி தனக்கே சொந்தம் என்று அல்லாஹ் தனது திருமறையில் சொல்கின்றான்.
ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்’’ என்று எழுதியிருந்தோம்.
அல்குர்ஆன் 21:105
மூஸா நபி கொண்டு வந்த ஏகத்துவக் கொள்கையை ஏற்ற இஸ்ரவேல் மக்களை அன்றாடம் ஃபிர்அவ்ன் வதைத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த மக்கள் மூஸா நபியிடம் முறையிட்டார்கள்.
“இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?’’ என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். “அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்’’ என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக இருக்கும்’’ என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.
“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்’’ என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்’’ என்றும் கூறினார்.
அல்குர்ஆன் 7:127,128,129
இந்த வசனங்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயம் சந்தித்த சோதனைகளையும் அவர்களுக்கு மூஸா நபி அளித்த ஆறுதல், அறிவுரை, அழகான வாக்குறுதியையும் விளக்குகின்றன. மூஸா நபி அம்மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறும் காலம் நெருங்கியது. ஃபிர்அவ்ன் நாட்டை விட்டு அவர்களைத் துரத்திவிடத் திட்டமிட்டான். ஆனால் அது நடக்கவில்லை. அவனே அழிக்கப்பட்டான். இதைத் திருக்குர்ஆன் விவரிக்கின்றது.
“வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதி தான் இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்’’ என்று அவர் கூறினார். அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன் இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். “இப்பூமியில் வசியுங்கள்! மறுமை பற்றிய வாக்கு நிறைவேறும்போது உங்களை ஒருசேரக் கொண்டு வருவோம்’’ என்று இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்.
அல்குர்ஆன் 17:102-104
தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம். இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.
அல்குர்ஆன் 26:57-59
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.
அல்குர்ஆன் 7:137
மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் நாட்டை விட்டுத் துரத்த ஃபிர்அவ்ன் முயற்சிக்கும் போதே அவனும் அவனது படையும் அழிவைச் சந்தித்து விட்டது. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களும் நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்டனர். அவர்கள் சொந்த நாடான மக்காவை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள்.
“எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று அவர்கள் கூறியதற்காகவே தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர்.
அல்குர்ஆன் 22:40
(நபியே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள்.
அல்குர்ஆன் 17:76
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மதீனாவின் அரவணைப் பையும் ஆதரவையும் பெற்று, இறுதியில் மக்காவையே வெற்றிக் கொண்டார்கள்.
உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.)
அல்குர்ஆன் 48:2
மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 48:24
இது தெரிவிப்பது என்ன? இறுதி வெற்றி ஏகத்துவத்திற்குத் தான். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களிடமே இந்தப் பூமி திரும்ப அளிக்கப்படுகின்றது. இன்று அகண்ட பாரதம் என்ற பெயரில் முஸ்லிம்களை அடித்துத் துன்புறுத்தவும், நாட்டை விட்டு விரட்டவும், அவர்களை சிறைக் கொட்டடிகளில் அடைக்கவும் துடிக்கும் காவிக் கொடுங்கோலர்கள் திட்டமிட்டு அதை படிப்படியாகச் செயல்படுத்தியும் வருகின்றார்கள்.
அவர்களுக்கு இந்தத் திருக்குர்ஆனின் வாக்குறுதியையும் எச்சரிக்கையையும் சமர்ப்பித்துக் கொள்கின்றோம். அதே சமயம் முஸ்லிம்கள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாக இருக்க வேண்டும். தர்ஹாவாதிகளாகவும் தரீக்காவாதிகளாகவும் இருந்தால் இது சாத்தியமில்லை.
அஸ்ஸாமில் இன்று குடியுரிமை கிடைக்காத முஸ்லிம்கள் தற்கொலை செய்வதாக அறிகின்றோம். இவர்கள் இந்த உலகத்தையும் மறு உலகத்தையும் இழந்தவராகி விடுகின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஏகத்துவக் கொள்கையில் இருந்து, அதிலேயே இறந்து விட்டால் இம்மை வாழ்வு தொலைந்தாலும் மறுமை வாழ்வு நிச்சயம் அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தங்களது இம்மை, மறுமை வாழ்வை சிறக்கச் செய்வார்களாக!
முஸ்லிம்களின் குடியுரிமையை, இந்தக் கொடுமையாளர்கள் பறித்தால், எல்லாம் வல்ல இறைவனால் அது அவர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும் என்ற இறை வாக்குறுதியை மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.