ஏகத்துவம் – செப்டம்பர் 2018

சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்!

இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை.

இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை.

மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை.

அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை.

அதே நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகின்ற விருந்து வைபவங்களில் கலந்து கொள்வதில்லை.

நபி பிறந்த தின விழா, நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளிலும் சேர்வதில்லை.

கந்தூரிகள், கருமாதிகள் என்று எதிலும் இணைவதில்லை.

வரதட்சணை வாங்குகின்ற மற்றும் ஆடம்பரமாக நடத்தப்படுகின்ற திருமணங்களில் நம் சொந்த வீடுகளிலும் அந்நிய வீடுகளிலும்  கலந்து கொளவதில்லை.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன்  60:4

இப்படி எதிலும் புறக்கணிப்பு, எங்கும் புறக்கணிப்பு என்று இப்ராஹீம் நபி பாதையில்  ஓரளவு நமது ஜமாஅத் உறுப்பினர்கள் பெரிய பிரயத்தனத்துடனும் தியாக உணர்வுடனும் ஈமானிய சிந்தனையுடனும் உறுதியாகப் பயணிக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இப்ராஹீம் நபியைப் பற்றியும், ஹஜ் எனும் வணக்கம் மற்றும் கால்நடைப் பலியிடுதல் பற்றியும் குறிப்பிடும் போது  மக்களை நோக்கிப் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.

சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன்  22:30

இப்ராஹீம்  நபியிடத்தில் புறக்கணிப்பில் உள்ள முன்மாதிரியைப் பின்பற்றுவது போன்று அவர்களின் வாழ்க்கையில் இன்னொரு முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நாம் நிறையவே பின் தங்கி இருக்கின்றோம். அதுதான் அவர்கள் தன் வாழ்வில் கடைப்பிடித்த உண்மை பேசுதல் என்ற நல்ல பண்பாகும். மொத்தமாக அவர்கள் பேசிய பொய்கள் மூன்று தான். அந்த மூன்றும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் பேசியது தான்.   இதை நாம் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை,

  1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன் நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்-
  2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) ‘இவர்களில் பெரிய சிலையான இந்தச் சிலை தான் இதைச் செய்தது’ என்று கூறியதுமாகும்.
  3. ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து), ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்’’ என்று கூறப்பட்டது.

உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் சகோதரி’ என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3358

சிலை வணக்கத்தையும் பொய் சொல்வதையும் அல்லாஹ் ஒரே தரத்தில் கொண்டு வைக்கின்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதே போன்று விளக்கமளிக்கின்றார்கள்.

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்றார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா(ரலி)

நூல்: புகாரி 2654

இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் புரிந்த சிலை வணக்கத்திற்கு எதிரான யுத்தத்தை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். அதே இப்ராஹீம் நபியவர்கள் மேற்கண்ட இந்த 3 விஷயங்களைத் தவிர்த்து அவர்கள் பொய்க்கு எதிரானவர்கள் என்பதையும் நாம் நன்கே விளங்கி வைத்திருக்கின்றோம்.  அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் உண்மை பேசிய உத்தமராவார்கள். அதனால் உண்மை பேசுவது என்பதும் அந்த உத்தம சீலரின் மார்க்கத்தில் உள்ளது தான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!’’ என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை.

அல்குர்ஆன்  16:123

அல்லாஹ் சொல்வது போன்று நாம் உண்மையைப் பேசுவதும் இப்ராஹீம் நபியவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற செயலாகும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. அவர்களது தோழரான அபூபக்ர் (ரலி) அவர்கள் சித்தீக் –  உண்மையாளர் என்ற பட்டத்தைப் பெற்ற அவர்கள், மிக நெருக்கடியான கால கட்டத்திலும் அவர்கள் பொய் சொன்னது கிடையாது. இதற்கு ஹிஜ்ரத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) (இள நரையின் காரணத்தினால் தோற்றத்தினால்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தினால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால் அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின் போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒருவர் சந்தித்து, ‘அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?’ என்று கேட்கிறார். அதற்கு, அபூபக்ர் (ரலி), ‘இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்’ என்று (நபியவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து விடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரண்டு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள். இதற்கு, (பயணத்தில்) பாதை (காட்டுபவர்)’ என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால், ‘மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்)’ என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3911

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் என்பது உயிரைப் பணயம் வைத்துச் சென்ற ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தில் ரசூல் (ஸல்) அவர்களின் உயிரைக் காப்பதற்காக வேண்டி பொய் சொன்னாலும் தப்பில்லை. இருப்பினும் அபூபக்ர் (ரலி) அவர்கள், உண்மையும் சொல்ல வேண்டும், அதே சமயம் காட்டியும் மாட்டியும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக  அற்புதமான பதிலைச் சொல்லி கடந்து செல்கின்றார்கள்.

இது, உண்மை பேச வேண்டும் என்று உண்மைத் தூதரிடத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட பாடமாகும்.

கஅப் பின் மாலிக் (ரலி) தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுகின்றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்ப வந்ததும் பொய் சொல்லித் தப்பிக்கலாம் என்று நினைக்கின்றார்கள். பின்னர் உண்மையைச் சொல்லி தண்டனையை பெற்றுக்கொள்கின்றார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘(போரில்) நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா?’’ என்று கேட்டார்கள்.

நான், ‘‘ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவரது) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்து விட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன்.

இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை’’ என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உண்மை சொல்லிவிட்டார் (என்று கூறிவிட்டு, என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்’’ என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

நூல்: புகாரி 4418

இதன்படி கஅப் பின் மாலிக் அவர்கள் 50 நாட்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்படுகின்றார்கள். இது அவர்களுக்குப் பெரும் பாரமாகவும் பளுவாகவும் இருந்தது. இறுதியில் அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான்.  இவர்கள் தொடர்பாக 9:117-119 ஆகிய வசனங்கள் இறங்கின.

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

அல்குர்ஆன் 9:117-119

உண்மைக்காக ஒரு விலை கொடுத்தார்கள். இது அவர்களுக்குப் பெரிய விடுதலையையும் விமோசனத்தையும் அளித்தது.

‘‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்’’ (நூல்: புகாரி 4418) என்று கூறி சபதம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

இது ஒவ்வொரு முஸ்லிமாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட 119வது வசனம் இறைவனை அஞ்சவும் உண்மை பேசவும் நமக்கு ஆணையிடுகின்றது.  இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் பேசிய பொய் அல்லாஹ்வால் பிடிக்கப்படாததாக இருந்தாலும்  அவர்கள் அதற்காக அஞ்சி நடுங்குவதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மக்கள் மறுமை நாளில் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.

அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’’ என்று கூறுவார்கள்.

நூல்: புகாரி 4712

ரஹ்மானின் நண்பரான இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இப்படி பயப்படுகின்றார்கள். நாம் கண்டமேனிக்கு வாய் திறந்தாலே பொய்களை நொடிக்கு நொடிக்கு அடித்துத் தள்ளுகிறோமே! இதற்கு அல்லாஹ்விடம் நமக்குப் பதில் இருக்கின்றதா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதனால்  அல்லாஹ்வை அஞ்சி, நம்முடைய வாழ்க்கையில் என்றும் உண்மை பேசுவோமாக! பொய்யை முழுமையாகத் தவிர்ப்போமாக!

————————————————————————————————————————————————–

தொடர் – 2

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம்.

இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

நாயனுக்கு நன்றி செலுத்த அல்ஹம்துலில்லாஹ் கூறுவோம்

நாம் இக்கட்டான சூழலில் துவண்டு கிடக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் உதவும் பொழுதோ, அல்லது ஒருவரின் உதவிக்காக அவரிடம் தேடிச் சென்ற போது அவர் நமக்கு மதிப்பளித்து, நமது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, நமக்காக உதவி செய்யும் பொழுதோ அவருக்கு நாம் மனமாற நன்றி தெரிவிப்போம்.

ஒரு சில உதவிகள் செய்த மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாம், நமக்கு ஆரோக்கியத்தை வழங்கியவன், உணவளித்தவன், அருள்வளங்களை அள்ளித் தந்தவன், நேர்வழியில் நடத்துபவன், ஆபத்தான கட்டங்களில் அபயம் அளிப்பவன், நமது வாழ்வில் கவலையைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கியவனான வல்ல இறைவனுக்கு நமது நன்றியை உளப்பூர்வமாகத் தெரிவிக்க அல்ஹம்துலில்லாஹ் எனக் கூற வேண்டும்.

இறைவனைப் புகழ்ந்த இறைத்தூதர்கள்

மனித குலத்திற்கு வழிகாட்டுவதற்காக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத் தூதர்கள், தங்கள் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவனைப் புகழ்ந்துள்ளனர்.

இப்ராஹீம் (அலை)

நெடுங்காலம் குழந்தை இல்லாத நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்தற்காக இறைவனைப் புகழ்ந்தார்கள்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

அல்குர்ஆன் 14:39

நூஹ் (அலை)

பாவிகளிடமிருந்து தன்னையும் தன் சமுதாய மக்களையும் காப்பாற்றியமைக்காக நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் “அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 23:28

சுலைமான் (அலை) மற்றும் தாவூத் (அலை)

ஜின் இனத்தையும் பறவை இனத்தையும், காற்றையும் தனக்கு வசப்படுத்திக் கொடுத்து ஆட்சி அதிகாரங்களை வழங்கிய இறைவனை நபி சுலைமான் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்கள் புகழ்ந்தார்கள்.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர்ஆன் 27:15

உஹதுக் களத்தில் உத்தமத் தூதர்

உஹதுக் களத்தில் நபிகளார் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களது தாடை உடைக்கப்பட்டது. தலை மகுடம் உடைந்து போனது. கடும் கோபம் கொண்ட நபியவர்கள் எதிரிகளைச் சபித்தார்கள். நபியின் முகத்தில் ரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெல்வார்கள்? என ஆவேசமடைந்தார்கள். அப்போது இறைவன் நபிகளாரை அறிவுறுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 3:127

எதிரிகளை மன்னிக்கவோ அல்லது தண்டிக்கவோ தான் தூதருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இறை அதிகாரத்தில் தலையிட்டு, எதிரிகள் விஷயத்தில் தீர்ப்பளிக்க நபிக்கு அதிகாரமில்லை என இறைவன் அறிவுறுத்தினான்.

உஹதுக் களத்தில் முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் படுதோல்வி அடையாத நிலை இருந்தது. பேரிழப்பிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் காப்பாற்றியமைக்கு நபிகளார் இறைவனை அதிகமதிகம் புகழ்ந்தார்கள்; போற்றினார்கள்.பிரார்த்தனையும் புரிந்தார்கள்.

அதைப் பின்வரும் நபிமொழியில் விரிவாக அறியலாம்.

உஹதுக் களத்தில் எதிரிகள் பின்வாங்கிச் சென்ற பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஹாபாக்களை அணிவகுத்தார்கள். என் இறைவனைப் புகழும் வரை அணியில் இருங்கள் என்றார்கள். மக்களும் நபிகளாருக்குப் பின் அணிவகுத்தார்கள்.

இறைவா!அனைத்துப் புகழும் உனக்கே உரித்தாகட்டும்.

இறைவா! நீ காத்தவனை அழிப்பவன் இல்லை. நீ அழிக்க நினைத்தவனைக் காப்பவன் யாருமில்லை. நீ வழிகேட்டில் விட்டவனை நேர்வழி காட்டுபவன் யாருமில்லை. நீ நேர்வழி காட்டியவனை வழிகெடுப்பவன் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவனில்லை. நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்பவன் யாருமில்லை. நீ விரட்ட நினைத்தவனை அரவணைப்பவன் யாருமில்லை. நீ அரவணைக்க நினைத்தவனை விரட்டுபவன் யாருமில்லை.

இறைவா! உனது அபிவிருத்தியையும் அருளையும் அன்பையும் உணவையும் எங்களுக்கு விசாலமாக்குவாயாக! இறைவா! அகலாத, விலகாத, நிலையான அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.

இறைவா! ஏழ்மை நாளில் உனது அருளை வேண்டுகிறேன். அச்சமுடைய நாளில் பாதுகாப்பைக் கேட்கிறேன்.

இறைவா! நீ எங்களுக்கு வழங்கியவற்றின் தீங்கிலிருந்தும் நீ எங்களுக்குத் தடுத்தவற்றின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

இறைவா! இறை நம்பிக்கையை எங்களுக்கு விருப்பமுள்ளதாகவும் எங்கள் உள்ளங்களுக்கு அழகானதாகவும் ஆக்கி வை. இறைமறுப்பு, பாவம், வரம்புமீறுதல் போன்ற காரியங்களை எங்களுக்கு வெறுப்பானதாக ஆக்கி வை. எங்களை நேர்வழிபெற்றோரில் சேர்த்து விடுவாயாக!

இறைவா! எங்களை முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை நல்லடியார்களுடன் இணைத்திடுவாயாக! அவர்கள் இழிவானவர்களோ, குழப்பவாதிகளோ இல்லை.

இறைவா! உன்னைப் மறுத்து உன் பாதையை விட்டுத் தடுக்கும் நிராகரிப்பாளர்களை அழித்துவிடு! அவர்கள் மீது உனது கோபத்தையும் அழிவையும் இறக்குவாயாக!

உண்மையான இறைவனே! மறுப்பாளர்களான வேதக்காரர்களை அழிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: ரிபாஆ (ரலி)

நூல்: அஹ்மத் 14945

புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல!

அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அதில் கடுகளவும் நமக்குப் பங்கில்லை என்ற உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அல்ஹம்துலில்லாஹ் கூற வேண்டும்.

நாம் ஏதாவது ஒரு பயனுள்ள காரியத்தைச் செய்து அதில் மிகப்பெரிய வெற்றி கண்டால் அதற்காகத் தலைதெறிக்க ஆடக்கூடாது. நமது வெற்றிக்கு முழுக் காரணம் அல்லாஹ்வே என்பதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து இறைவனைப் புகழ்ந்தால், ‘தான்’ என்ற அகம்பாவத்திலிருந்தும், பெருமை என்ற கொடிய நோயிலிருந்தும் விடுபடலாம்.

பணிவை வெளிப்படுத்திய பெருமகனார்

அனஸ் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!’’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் எனும்- நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

நூல்: புகாரி 1356

தன் வீட்டில் பணிபுரிந்தவரிடம் சத்திய இஸ்லாத்தை எடுத்துரைத்ததன் விளைவாக அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் அதற்கான முழுக் காரணமும் தனது முயற்சியைவிட அல்லாஹ்வின் நாட்டத்தாலேயே நடந்தது. எனவேதான், புகழுக்குரியவன் அல்லாஹ் என்று கூறி நபிகளார் தனது பணிவை வெளிப்படுத்தினார்கள்.

இறைவனுக்குப் பிடித்த இரு பண்புகள்

நபியவர்கள்  அஷஜ் (ரலி) அவர்களிடம், ‘‘அஷஜ்ஜே உன்னிடம் இரு பண்புகள் உள்ளன. அவற்றை அல்லாஹ் விரும்புகிறான். அவ்விரு பண்புகள் சகிப்புத்தன்மை மற்றும் வெட்கவுணர்வு ஆகும்’’ என்றார்கள்.

உடனே அஷஜ் (ரலி), ‘‘அல்லாஹ்வுக்குப் பிடித்தமான இருபண்புகளை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உண்டாவதாக’’ என்றார்.

நூல்: அஹ்மத் 17160

இறைவனுக்குப் பிடித்த இரு பண்புகள் தன்னிடம் இருந்தமைக்குப் பெருமை கொள்ளாத அஷஜ் (ரலி) அவர்கள், அவற்றை வழங்கிய அல்லாஹ்வைப் புகழ்ந்து தனது பணிவை வெளிப்படுத்தினார்கள்.

நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, வெற்றி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றுக்காக ‘என்னால் தான் இதுவெல்லாம் சாதிக்க முடிந்தது’ என்று மமதை கொள்ளாமல் ‘என் இறைவனின் நாட்டப்படியே நடந்தது. அவனையே நான் புகழ்கிறேன்’ என பணிவை வெளிப்படுத்துவோம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வைப் புகழ்வது விரும்பத் தகுந்த காரியமாக இருந்தாலும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வைப் புகழ்வது நபிகளாரால் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தும்மல் வரும் போது…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6224

சாப்பிட்ட பின்னர்..

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லி-ல்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா’’ என்று பிரார்த்திப்பார்கள்.

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: புகாரி 5458

தூங்கி எழுந்த உடன் ….

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, “பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’’  ‘(இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்;  உயிர் வாழவும் செய்கிறேன்’  என்று கூறுவார்கள்.

(உறக்கத்தி-ருந்து) எழும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’’ 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

‘‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை  இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது’’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி)

நூல்: புகாரி 6312

ஹஜ், உம்ராவின் போது…

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லாஷரீக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க, வல்முல்க்க லாஷரீக்க லக்

(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்.இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்.இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை).

இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 1549

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பின்…..

اللَّهُمَّ رَبَّنَا و لَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்ப[ஙி]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள்:

இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

நூல்: புகாரி 795, 7346

அல்லது

رَبَّنَا و لَكَ الْحَمْدُ

ரப்ப[ஙி]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள்:

எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

நூல்: புகாரி 689, 732, 734, 735, 738, 803, 804, 805, 1046, 1066, 1114, 4559

கடமையான தொழுகை முடிந்த பின்…

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ

وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[தி]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

ஆதாரம்: புகாரி 844, 6330

அல்ஹம்துலில்லாஹ் கூறுவதால் நமக்குக் கிடைக்கவிருக்கும் இம்மை, மறுமைப் பலன்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

————————————————————————————————————————————————–

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா?

ஆர். அப்துல் கரீம்

சமீப காலமாகத் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி ஒரு விமர்சனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் இவ்வளவு காலம் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு தான் தங்களுக்கு மூல ஆதாரம் என்றார்கள். இப்போது எதற்கெடுத்தாலும் பைலா, பைலா என்கிறார்கள்.  குர்ஆன், ஹதீஸ் எனும் இருபெரும் ஆதாரத்தைத் தாண்டி, பைலா எனும் இயக்கவிதி இவர்களுக்கு மூன்றாம் ஆதாரமாகி விட்டது.

இது தான் அந்தக்குரல்.

இக்குரலுக்குச் சொந்தக்காரர்கள் யார்?

பைலா எனும் இயக்கவிதி குறித்து அடிப்படை அறிவு இல்லாத கப்ர் வணங்கிகளோ அல்லது இயக்கவிதியின் தேவையை வலியுறுத்தும் ஒன்றுபட்ட நிர்வாக அமைப்பைக் கட்டமைத்துக் கொள்ளாத ஸலபிக் கூட்டத்தினரோ அல்ல.

இவ்வளவு காலம் இதே ஜமாஅத்தில் பயணித்து, இன்று எந்த பைலாவைத் தூற்றுகிறார்களோ, அதே பைலாவை தூக்கிப்பிடித்துப் பேசிய ஒரு சிலர் தான் இன்றைக்கு இப்படி நிறம் மாறிப் பேசுகிறார்கள்.

இவர்களது கூற்றில் நியாயமுள்ளதா?

தவ்ஹீத் ஜமாஅத் தனது மூல ஆதாரங்களின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்திக் கொண்டதா? என்றால் நிச்சயமாக இல்லை.

இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்ட இறைச்செய்தி மட்டுமே இஸ்லாத்தின் மூலாதாரம் எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டில் எள்முனையளவும் மாற்றமில்லை.

அப்படியானால் பைலா குறித்த இவர்களின் விமர்சனம்?

மனிதர்கள் தங்களுக்குள் உடன்பட்டு, நிறைவேற்றுவதாக ஒப்புக் கொள்ளும் ஒப்பந்த விதிகளே பைலா எனப்படுகிறது.

ஒரு நிறுவனம், தனது ஊழியர்களிடம் விதிக்கும் விதிமுறைகள், ஒரு நாடு தனது குடிமக்களுக்கு விதிக்கும் சட்டவிதிகள், ஒரு பள்ளி அல்லது கல்லூரி தனது மாணவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் அனைத்துமே பைலாவின் கீழ்தான் வருகிறது.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர் அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பணியில் சேர்கிறார் என்றால் அவர் தனது ஒப்பந்தங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்.

இதுபோன்றே பள்ளி, கல்லூரியில் சேரும் மாணவர் அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை, சட்டவிதிகளை ஏற்றே பள்ளியில் சேர்கிறார் எனும் போது தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மார்க்கம் வலியுறுத்துகிறது.

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

அல்குர்ஆன் 17:34

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! 

அல்குர்ஆன் 5:1

இவ்வசனங்களின் படி, தான் ஏற்றுக் கொண்ட ஒப்பந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது தானே தவிர மார்க்கத்திற்கு எதிரானது அல்ல.

உதாரணமாக பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தில் காலை 9 மணிக்கு உள்ளே வந்தாக வேண்டும், இன்ன நிற ஆடை தான் அணிந்து வர வேண்டும், இத்தனை மணிக்கு வெளியே செல்ல வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்கள். அங்கே இது தான் பைலா.

அதற்கு உடன்பட்ட யாரும் ‘பைலா என்ன குர்ஆனா? ஹதீஸா பின்பற்றுவதற்கு? அதனால் நான் இதற்குக் கட்டுப்பட மாட்டேன்’ என்றால் அவர்களை என்னவென்போம்?

மார்க்கத்தைப் போதிக்கும் மத்ரசாக்களில் கூட இன்ன நேரத்தில் தான் சாப்பிட வேண்டும், இன்ன நேரத்திற்கு வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்று இத்தகைய சட்டவிதிகள் உண்டு.

அந்த ஒப்பந்தத்தில் உடன்பட்ட ஒருவர்…

இஸ்லாத்தில் பைலாவை மூன்றாம் ஆதாரமாக்கி விட்டீர்கள்,

பைலா என்ன குர்ஆனா? ஹதீஸா?

குர்ஆன் ஹதீஸை போதிப்பதாகக் கூறிக் கொண்டு பைலாவை தூக்கிப்பிடிக்கின்றீர்கள்?

என பிதற்றிக் கொண்டிருந்தால் அவருக்கு அறிவுலகம் என்ன பெயர் சூட்டும் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பவர்களின் போக்கு இதற்கு ஒப்பவே அமைந்துள்ளது.

ஆலோசனை

ஒரு இயக்கத்தை நிர்வகிக்க சட்டவிதிகள் தேவைப்படுகிறது.

எத்தகைய விதிகளை உருவாக்கி கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும் என தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசித்து எடுக்கப்பட்ட மஷூராவின் முடிவே பைலாவாகும்.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்குப் பதிலளித்து தொழுகையை நிலைநாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்ததும் நிலையானதுமாகும்

அல்குர்ஆன் 42:38

இறை விசுவாசிகள் தங்களுக்கிடையே காரியங்களில் ஆலோசித்துக் கொள்வார்கள் என்ற இறைவசனத்தின்படி தவ்ஹீத் ஜமாஅத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்ல என்னென்ன சட்டவிதிகள் தேவை என்பதை ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசித்து எடுத்த மஷூராவின் தொகுப்பே பைலாவாகும்.

அனைவரும் சேர்ந்து ஆலோசித்து அல்லது அதிகமானோர் சொன்ன முடிவை அனைவரும் ஆமோதித்து இயற்றப்பட்ட மஷூராவின் தொகுப்பைப் பின்பற்றுவதில் என்ன தவறு?

நம் நன்மைக்காக நாம் ஆலோசித்து எடுத்த முடிவின் படி நடந்தால் அது எப்படி குர்ஆன்,  ஹதீஸிற்கு எதிரானதாகும்?

இந்த அடிப்படை புரியாமல் தான் மாற்றுக் கருத்துடையோர் பைலா குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

மாற்றம் தேவையா?

அதேவேளை எந்தக் காலத்திற்கும் எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தத் தேவையில்லாத புனிதக் கருத்துக்கள் தாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலா என்று இங்கே யாரும் கூற முன்வரவில்லை.

எந்த மனிதரின் கருத்திற்கும் காலத்திற்கேற்ப மாறுதல் தேவை எனும் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவும் மாறுதலுக்கு உட்பட்டதே.

ஜமாஅத்தின் நன்மைக்கும் தூய்மைக்கும் பைலாவில் இன்னின்ன மாற்றங்கள் தேவை எனக் கருதி ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்தால் அத்தகைய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது நாம் வகுத்திருக்கும் அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் பெரிதான எந்தக் குளறுபடியும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த பைலா தான் பொருளாதார மோசடிப் பேர்வழிகளை வெளியேற்றியது.

பெரும் பெரும் ஜாம்பவான்களாக இருந்தாலும், ஜமாஅத்தின் உச்சக்கட்ட அதிகாரத்தைப் பெற்றவராக இருந்த போதிலும், அவர்கள் ஒழுக்க மாண்பில் சரியில்லை என்றதும் இதே பைலா தான் அவர்களையும் பொறுப்பிலிருந்து வெளியேற்றியது. இலட்சக்கணக்கான ஜமாஅத் உறுப்பினர்களை வழிநடத்தும் தகுதியை அவர்களிடமிருந்து பறித்தது.

நமது பைலாவின் நோக்கம் என்ன?

அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்பட வேண்டியவன். அவனன்றி வேறு யாரும் வணங்குதலுக்குத் தகுதியானவர்கள் அல்ல.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

அவர்களையன்றி வேறு யாரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள் அல்ல.

இது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலையாய ஏகத்துவ – தூதுத்துவக் கொள்கையாகும்.

இக்கொள்கைக்காகவே இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் இந்த ஜமாஅத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

தாய், தந்தை, சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் என பலரையும் இந்தக் கொள்கைக்காகப் பகைத்துக் கொண்டார்கள்.

எனவே, ஜமாஅத் இதே கொள்கைப் பாதையில் பயணிக்க வேண்டும். கொள்கை ரீதியாக இந்த ஜமாஅத்தை யாரும் தடம் மாற்றிப் பயணிக்க வைத்து விடக்கூடாது என்பதற்காகவே ஷிர்க் எனும் இணைவைப்பில் உள்ளவர்கள் யாரும் இந்த ஜமாஅத்திற்குள்ளே வரக்கூடாது எனும் விதி உருவாக்கப்பட்டது

தவ்ஹீதின் பெயரால் இந்த அமைப்பிற்குள்ளே வேறு பல நோக்கமுடையவர்கள் வந்தாலும் அவர்கள் இந்த அமைப்பை அதன் இலட்சியப் பாதையான ஏகத்துவத்திலிருந்து மடைமாற்றி, இணைவைப்பை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றுவிடக்கூடாது.

மனிதக் கருத்துக்களை மார்க்கமாக்கி விடக் கூடாது எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிராகவுள்ள மத்ஹப் பேர்வழிகள் யாரும் இந்த அமைப்பிற்குள்ளே வர முடியாது. ஏனெனில், உள்ளே வந்து மத்ஹப் எனும் வழிகேட்டை நோக்கி ஜமாஅத்தை அழைத்து சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த விதியை உருவாக்கியுள்ளோம்.

காலங்கள் பல கடந்தாலும் தலைவர்கள் – நிர்வாகிகள் மாறினாலும் இலட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பில் உருவாக்கப் பட்ட தவ்ஹீத் ஜமாஅத், அது எந்த உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதன் பாதையிலிருந்து திசைமாறிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய பைலா விதிகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

இதைப் புரிந்து கொள்ள முற்படாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் அது வகுத்து வைத்துள்ள பைலாவையும் விமர்சிப்பதைப் பற்றி நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.

————————————————————————————————————————————————–

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும்

அபுஉஸாமா

(உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும்.

இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் உள்ளாகாது. அல்ஃபாத்திஹாவிலிருந்து அந்நாஸ் வரையில் உள்ள அந்தத் திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்றான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் 75:16-19

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.

அல்குர்ஆன் 41:42

இந்த உறுதியும் உத்தரவாதமும் இதற்கு முந்தைய வேதங்களான இப்ராஹீம் (அலை), மூஸா (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களுக்கோ, தாவூத் (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட சபூர், ஈஸா (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட இன்ஜீல் இன்னும் இதர வேதங்களுக்கோ அளிக்கப்படவில்லை.  அதனால் அவை அந்த இறைத்தூதர்கள் இறந்த பிறகு கூடுதல், குறைவு என்ற குறைபாடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறவில்லை என்பது தான் குர்ஆன்  தொடர்பாக ஒவ்வொரு தூய முஸ்லிமின்  நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

மாற்றுதல், திரித்தல் போன்றவற்றிலிருந்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று யாராவது நினைத்தால் நிச்சயமாக அவர் குர்ஆனை  மறுக்கின்றார். ரசூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் தவறிருக்கின்றது என்று கருதுகின்றார் என்பது தான் அதன் பொருளாகும்.

இவர்களுக்குக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் அந்தச்  சந்தேகம் தொக்கி நிற்கும்.  எப்போது சந்தேகம் வந்து விடுகின்றதோ அங்கு உறுதிப்பாடு அடிப்பட்டுப் போய் விடும்.

உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைவது தான் இறை நம்பிக்கையாகும்.  இந்த நம்பிக்கையை இழந்தவர் இறை நம்பிக்கையை இழந்தவராவார். இது தான் குர்ஆனைப் பற்றிய உண்மையான முஃமின்களுடைய  நம்பிக்கையாகும்.

காணாமல் போன  குர்ஆன் வசனங்கள் (?)

ஷியாக்களைப் பொறுத்தவரையில் மக்களின் கைகளில் இருக்கின்ற, அல்லாஹ்வால் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட  இந்தக் குர்ஆனில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்தக் குர்ஆன் தொடர்பாக வருகின்ற அத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் புறந்தள்ளி விடுகின்றார்கள்.  அது தொடர்பான அறிவுப்பூர்வமான வாதத்தையும் அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை.

அகம்பாவம், ஆணவத்தின் காரணத்தால் உண்மையை உண்மை என்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும்  எடுத்துச் சொல்லிச் சமர்ப்பித்தார்களே அது தான் உண்மையான குர்ஆன். அந்தக் குர்ஆனை மறுப்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மறுப்பதாகும். ஆனால் இவர்களோ இந்தக் குர்ஆனை மறுக்கின்றார்கள். இது நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள அடிப்படையான கருத்து  வேறுபாடாகும்.

இப்போது குர்ஆன் தொடர்பான ஷியாக்களின் அபத்தமான, ஆபத்தான ஆதாரங்களை அவர்களது நூல்களிலிருந்து பார்ப்போம்.

முஹம்மத் பின் யஃகூப் அல்கலீனி என்பவர் ஷியாக்களின் நம்பகமான இமாம் ஆவார். ஷியாக்களின் ஹதீஸ்கலை அறிஞரும் ஆவார்.  நாம் இமாம் புகாரியை மதிப்பது போன்று அவர்கள் கலீனியை மதிக்கின்றார்கள். அவர் அல்காஃபி ஃபில் உஸூல் என்ற நூலில் இமாம் ஜஃபர் சாதிக்கிடமிருந்து  ஹிஷாம் வாயிலாக, ‘முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை)  கொண்டு வந்த குர்ஆன் 17 ஆயிரம் வசனங்கள் கொண்டதாகும்’ என்று அறிவிக்கின்றார்.

இதற்குரிய அரபி மூலம்:

عن هشام بن سالم عن أبي عبد الله عليه السلام قال: إن القرآن الذي جاء به جبرئيل عليه السلام إلى محمد صلى الله عليه وآله سبعة عشر آلف آية” (الكافي في الأصول” كتاب فضل القرآن)

குர்ஆனின் மொத்த வசனங்கள் ஆறாயிரத்துச் சொச்சம் தான். ஷியாக்களின் குர்ஆன் விரிவுரையாளரான அபூ அலி அத்தப்ரஸீ என்பவர் ‘அத்தஹ்ர்’ என்ற 76வது அத்தியாயத்தின் விளக்கவுரையில் ‘குர்ஆனுடைய வசனங்கள்  ஆறாயிரத்து முப்பத்து ஆறு வசனங்கள்’ என்று குறிப்பிடுகின்றார். அவர்களுடைய அறிஞரான  இவர் ஒப்புக் கொள்கின்ற எண்ணிக்கை ஆறாயிரத்து சொச்சம் எனும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் பதினேழாயிரம் என்று சொல்வது பெரும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

ஷியாக்கள் கூறுகின்ற இந்தக் கருத்துப்படி, குர்ஆனில் மூன்றில் இரண்டு பகுதி இப்போது இல்லை என்றாகின்றது.  இதை வலியுறுத்தும் விதமாக அல்காஃபியில் இன்னொரு செய்தியும் பதிவாகிவுள்ளது. அபூபஸீர் என்பார் தெரிவிக்கின்றார்.

நான் அபூஅப்தில்லா (ஜஃபர் சாதிக்) இடம் சென்று சலாம் சொன்னேன் என்று சொல்லி, அவர் கூறும் உரையாடல் இதோ:

‘நான் பேசுவதைச் செவியுறுகின்ற வகையில்  உங்களுடன் வேறு யாரும் உள்ளனரா?’  என்று கேட்டேன். அப்போது அபூஅப்தில்லாஹ் அவருக்கும் இன்னொரு வீட்டிற்கும் மத்தியில் இருந்த  திரையை அகற்றினார்.  பிறகு அங்கு பார்த்து விட்டு (யாரும் இல்லை என்றதும்)

ஜஃபர் சாதிக்: என்னிடம் நீ விரும்பியதைக் கேள்.

அபூபஸீர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்குக் கல்வியின் ஒரு வாசலைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த ஒரு வாசல் மூலம் ஆயிரம் வாசல்கள் திறக்கப்படும் என்று உங்களுடைய  ஷியாவினர் பேசிக் கொள்கின்றார்களே!

ஜஃபர் சாதிக்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்குக் கல்வியின்  ஒரு வாசலைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த ஒரு வாசல் மூலம் ஆயிரம் வாசல்கள் திறக்கப்படும். (என்பது உண்மைதான்)

அபூபஸீர்: அல்லாஹ்வின் மீது ஆணையாக  அது கல்வி தான்!

ஜஃபர் சாதிக்: (கொஞ்சம் நேரம் கழித்து) அது ஒரு கல்வி தான். அது மட்டுமல்ல.  அபூமுஹம்மதே! நம்மிடம் அல்ஜாமிஆ இருக்கின்றது. ஜாமிஆ என்றால் என்னவென்று மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்: நான் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஜாமிஆ என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: அது ஓர் ஏடு. அதன் நீளம் ரசூல் (ஸல்) அவர்களின்  முழங்கைக்கு எழுபது முழங்கைகள் ஆகும்.  ரசூல் (ஸல்) அவர்கள் வாய் திறந்து சொல்ல அலீ (ரலி) தன் வலது கையால் எழுதினார்கள்.   அதில் ஹலால், ஹராம்  சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும், கொலையுண்டவருக்குக் கொடுக்கக் கூடிய  நஷ்ட ஈடு உட்பட மக்களுக்குத் தேவையான  ஒவ்வொரு விஷயமும் இருக்கின்றது.

(என்று கூறிவிட்டு, என்னைத் தனது கையால் ஓர் அடி அடித்து)

ஜஃபர் சாதிக்:  அபூமுஹம்மதே! உன்னைக் கொஞ்சம் கிள்ளிக் கொள்ளவா?

அபூபஸீர்: நான் தான் உங்களுக்கு அர்ப்பணமாகி விட்டேனே! நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

ஜஃபர் சாதிக்: (ஏதோ கோபப்பட்டவர் போன்று அவர் தன்னுடைய கையால் என்னைக் கிள்ளி விட்டு)  இந்த கிள்ளலுக்குரிய தண்டனை கூட அதில் கூறப்பட்டிருக்கின்றது.

அபூபஸீர்: அப்படியானால் அது ஒரு கல்வி தான்!

ஜஃபர் சாதிக்: இது ஒரு கல்வி தான்.  அது மட்டுமல்ல!

(கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். பிறகு)

நம்மிடம் ஜிஃப்ர் இருக்கின்றது. ஜிஃப்ர் என்றால் மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்: ஜிஃப்ர் என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: அது ஒரு  தோல் பை. அதில் நபிமார்கள், வஸிய்யத் செய்யப்பட்டவர்கள், இஸ்ரவேலர்களிலிருந்து சென்று விட்ட அறிஞர்களின் கல்வி அதில் அடங்கியிருக்கின்றது.

அபூபஸீர்: அப்படியானால் அது ஒரு கல்வி தான்.

ஜஃபர் சாதிக்: அது கல்வி தான். அது மட்டுமல்ல!

(கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு, பிறகு)

நம்மிடத்தில் ஃபாத்திமாவின் முஸ்ஹஃப் இருக்கின்றது. ஃபாத்திமாவின் முஸ்ஹஃப் என்னவென்று மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்:  ஃபாதிமாவின் முஸ்ஹஃப் என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: முஸ்ஹஃப் என்றால் அதில் தான் உங்களுடைய குர்ஆனைப் போன்ற மூன்று மடங்கு அடங்கியிருக்கின்றது. உங்களுடைய குர்ஆனிலிருந்து ஓர் எழுத்துக் கூட அதில் இல்லை.

இதற்குரிய அரபி மூலம்:

قال: مصحف فيه مثل قرآنكم هذا ثلاث مرات، والله ما فيه من قرآنكم حرف واحد” الخ (“الكافي في الأصول” كتاب الحجة،)

தொடரும் இன்ஷாஅல்லாஹ்…

————————————————————————————————————————————————–

அன்பளிப்பு

ஆஃப்ரின் சிதிரா

அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் அன்பளிப்பு வாங்குவதும், வழங்குவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து ஒரு கலாச்சாரமாகும்.

நமது வீட்டில் நடைபெறுகின்ற மார்க்கம் அனுமதித்த, மார்க்கம் அனுமதிக்காத விஷேசங்களில், குழந்தை பிறப்பு முதற்கொண்டு, திருமணம், பெயர் சூட்டுவிழா, புதுமனை புகுவிழா என அனைத்து விதமான காரியங்களிலும் அன்பளிப்பு பரிமாறிக் கொள்வது ஒரு கட்டாயமான சம்பிரதாயமாக உள்ளது. இந்த அன்பளிப்பு குறித்த மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்ன என்பதையும் அதையொட்டி நம்மிடம் உள்ள தவறான நடைமுறைகளையும் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அன்பளிப்பின் நோக்கம்

நமது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பரிசுப் பொருட்களே அன்பளிப்பு எனப்படும். அன்பளிப்பின் மூலம் மக்களுக்கிடையே அன்பை அதிகரிப்பதும் சுமுக உறவு நீடிக்கச் செய்வதுமே நோக்கமாகும்.

இதன் காரணமாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமைக்கும் குழம்பில் கூட சிறிது தண்ணீர் சேர்த்தாவது அருகிலிருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2568, முஸ்லிம் 5120

இந்த அன்பளிப்பு என்பது பணமாகவோ, விலை உயர்ந்த பொருளாகவோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உணவு, ஆடை, இன்னபிற பொருட்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை மையமாக வைத்துத் தரப்படும் பொருட்களில் அன்பு மட்டுமே கவனிக்கப்பட வேண்டுமே தவிர பொருட்களின் மதிப்பு கணிக்கப்படக் கூடாது. எதையுமே அற்பமாகக் கருதக்கூடாது.

முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 6017

எதிர்பார்க்கப்படும் அன்பளிப்பு

நாமாக மனமுவந்து விரும்பிக் கொடுப்பது தான் அன்பளிப்பு ஆகும். இந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்புகள் பரிமாறப்பட்டன. மேலும் அன்பளிப்பு என்பது தேவையுடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தோடு கொடுப்பது தான்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அன்பளிப்பு என்பதோ,  அன்பு புறந்தள்ளப்பட்டு, வட்டியில்லாக் கடனாகவும் வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடாகவும் மாறி விட்டது. கொடுக்கப்படும் அன்பளிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மிகுதியாக உள்ளது.

அதாவது, இன்று நாம் கொடுத்தால் நாளை நமக்குத் தருவார்கள் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. தமக்கு வரும் அன்பளிப்புகளை மொய் என்ற பெயரில் எழுதி வைத்து, அதையே மீண்டும் திருப்பிச் செலுத்தும் வழக்கமும் உள்ளது.

இவ்வாறு திருப்பித் தருவார்கள் என்று எதிர்பார்த்து நாம் அன்பளிப்பு வழங்குவது தவறான நடவடிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’ என்றார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1473

மேலும் கொடுத்த அன்பளிப்பைத் திரும்ப வாங்குவதும் கண்டிக்கத்தக்க செயலாகும். இத்தகைய செயலுக்கு நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான உதாரணத்தைக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2589

பொதுவாக அன்பளிப்பைத் திரும்பப் பெறுவது கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருந்தாலும் தந்தை, தன் மகனுக்கு வழங்கிய அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, மகனுக்குத் தந்தை வழங்கிய அன்பளிப்பை திருப்பி வாங்கிக் கொள்வதற்குத் தடையில்லை.

‘‘தன்னுடைய மகனுக்குத் தந்தை கொடுத்த அன்பளிப்பைத் தவிர்த்து பிறருக்குத் தானளித்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுவது முஸ்லிமான எந்த ஓர் ஆணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்.

நூல்: திர்மதி 1220, நஸயீ 3630

அன்பளிப்பா? அபகரிப்பா?

விரும்பிக் கொடுப்பது தான் அன்பளிப்பு என்பதை மேலே கண்டோம். ஆனால் தற்காலத்தில் உடன்பிறப்புக்கள், சம்பந்தக்காரர்கள், மாமா, மச்சான், சின்னம்மா, பெரியம்மா போன்ற நெருங்கிய உறவுகளாக இருந்தால் விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்டாயம் அன்பளிப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலை நமது சமூகத்தில் உள்ளது.

எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும், “உங்க மாமா என்ன  செய்தார்கள்? உங்க தங்கச்சி என்ன கொண்டு வந்தார்கள்?” என்று புலனாய்வு விசாரணை செய்வதும், ‘‘உங்க தாய் மாமன் தானே! கொஞ்சம் பெரிய பொருளாகக் கேட்டால் என்ன?” என்ற உசுப்பி விடுவதும் நமது பார்வையில் அன்பளிப்பு என்பது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிடுகின்றது.

இன்னும் சொல்வதாக இருந்தால் தாய்மாமன் என்றால் இதைத் தான் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும், சின்னம்மாவாக இருந்தால் இன்ன பொருள் கொடுத்தாக வேண்டும் என்று உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நபரால் அதைச் செய்ய இயலுமா? அவருடைய பொருளாதார நிலை என்ன? என்பதையெல்லாம் கவனிப்பதும் இல்லை. அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை.

இதுபோன்று கேட்கப்படும் பொருட்கள் சாமானியமானதாகவும் இருப்பதில்லை. மரக் கட்டில், மெத்தை, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கச் சங்கிலி, நெக்லெஸ், வளையல் என விலை உயர்ந்த பொருட்களாவே உள்ளன.

தங்களிடம் பணம் இருந்தாலும் இல்லா விட்டாலும் அன்பளிப்பு என்பது கட்டாயம் செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தமாக ஆகிவிட்டதால், தமது சக்தியை மீறி, கடன்பட்டாவது செய்ய வேண்டியதைச் செய்து விடுகின்றனர். வசதியற்ற நபர்களைக் கடும் சிரமத்திற்குள்ளாக்கும் அளவிற்கு அன்பளிப்பு என்பது ஒரு கவுரவப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகின்றது.

ஏகத்துவப் பிரச்சாரம் பட்டிதொட்டியெங்கும் பரவிய பின்னர் பல குடும்பத்தினர் இந்த நிர்ப்பந்த நிலையிலிருந்து விடுபட்டிருந்தாலும் இன்னும் பலர் நாள்தோறும் இந்த நிர்ப்பந்தத்தை சந்திக்கவே செய்கின்றர்.

இந்த அன்பளிப்பு தான் வரதட்சணைக் கொடுமையாகவும்  உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்பளிப்பு என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து, மாப்பிள்ளை வீட்டார் நகை, தொகை, சீர் வரிசை போன்றவற்றைப் பறித்துக் கொள்ளும் அவலமும் நடந்தேறுகின்றது.

அன்பளிப்பின் வரையறை

அன்பளிப்பு செய்யக் கூடாதா? அது மார்க்க அடிப்படையில் தவறா? என்ற கேள்விகள் மேற்கூறியவற்றைப் படிக்கும் போது நமக்கு எழலாம்.

அன்பளிப்பு தடை செய்யப்பட்டதல்ல. இதற்கு அனுமதி உள்ளது என்பதை ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் குறிப்பிட விரும்புவதெல்லாம் தற்போது நடைமுறையில் உள்ள அன்பளிப்பு குறித்த தவறான எண்ணங்களும் செயல்பாடுகளும் பற்றித் தான் என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அன்பளிப்பு கொடுப்பதும் வாங்குவதும் கட்டாயம் என்ற ஒரு நிலை உருவாகியிருப்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்கள், அன்பளிப்பு கொடுக்கவில்லை என்றால் ஊரார் என்ன சொல்வர்? உறவினர் என்ன சொல்வர் என்று விமர்சனத்திற்குப் பயந்தே பலவிதங்களிலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வகையில் இந்த சிரமத்திற்கு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருமே காரணமாக இருக்கிறோம். எனவே அன்பளிப்பு பெறுபவரும் கொடுப்பவரும் சில வரையறைகளைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.

  • அன்பளிப்பு என்பது கட்டாயம் அல்ல. விரும்பினால் செய்யும் ஒன்று தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
  • நாமாக வலியுறுத்திக் கேட்டு வாங்குவது அன்பளிப்பாக ஆகாது.
  • அன்பளிப்பு என்பது விலையுயர்ந்த பொருளாகவோ, பணமாகவோ தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.
  • திருப்பிப் பெற வேண்டும் என்ற எண்ணமும், திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கக் கூடாது.
  • புகழ்ச்சிக்காகவோ, பகட்டுக்காகவோ அன்பளிப்புச் செய்யக்கூடாது. அன்பளிப்புச் செய்பவர் தமது சக்திக்கு மீறிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தம்மிடம் இல்லாத ஒன்றை, இருப்பது போன்று காட்டிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
  • அன்பளிப்பு பெறுபவர்களும், கொடுப்பவரின் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, எந்த ஒன்றையும் அற்பமாகக் கருவிடக் கூடாது.

அன்பளிப்பாக மாறும் தர்மப் பொருள்

ஒருவருக்கு தர்மமாக ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. அதை அவர் தமது நெருங்கிய உறவினருக்கு வழங்குகின்றார் என்றால் அப்பொருளை ஏற்றுக் கொள்வதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் தர்மப் பொருளை நாம் எப்படி வாங்குவது என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணம் தவறானதாகும். ஒரு பொருள் நம்மிடமிருந்து இன்னொரு நபருக்கு மாறும் போது அதன் தன்மை மாறிவிடுகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தர்மப் பொருள் ஆகுமானதல்ல. ஆனால் அதைத் தமது அடிமைப் பெண்ணிடமிருந்து பெறும் போது அன்பளிப்பு என்ற நிலையிலேயே பெறுகின்றார்கள்.

நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘நான் (நெருப்பின் மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்னவாயிற்று?)’’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது பரிராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி, தர்மப் பொருளைத் தாங்கள் உண்ண மாட்டீர்களே!’’ என்று செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது பரிராவிற்குத் தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 5097, 2577

லஞ்சமாக மாறும் அன்பளிப்பு

உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அல்லது சமூகத்தில் பெரும் பிரமுகர்களாக இருப்பவர்களிடம், பிறரின் உரிமையைப் பறித்து தமது காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அன்பளிப்பு வழங்கப்படுவதும் உண்டு. இத்தகைய அன்பளிப்பு ஒரு வகையில் லஞ்சம் ஆகும். இந்த நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் அன்பளிப்பு வாங்கி வந்ததை மக்கள் மத்தியில் வன்மையாகக் கண்டித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதாக்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், ‘இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்’ என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து, ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தம் தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தம் தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, தம் அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?’ என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி)

நூல்: புகாரி 6979

வணக்கம் முதற்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் எளிமையைப் போதிக்கும் மார்க்கத்தில் நாம் வாழ்கிறோம். நபி (ஸல்) அவர்களும் எளிமையையே தேர்ந்தெடுப்பவர்களாகவும், எளிமையைப் போதிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். எனவே நாமும் உலக விஷயங்களில் நமக்கு நாமே ஒரு நிர்ப்பந்தத்தை, நெருக்கடியை ஏற்படுத்தாமல், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி விடாமல் ஓர் எளிய, இன்பமான வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.

சிறந்த அன்பளிப்பு எது?

அன்பளிப்பு என்றவுடன் விலை உயர்ந்த பொருட்களின் மீது தான் நமது எண்ணங்கள் பாய்கின்றன. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்பளிப்பு எப்படி இருந்தது என்றால் ஒருவருக்கு எது மிகவும் தேவையுடையதாக இருக்கிறதோ அதுவே வழங்கப்பட்டது. நபியவர்களின் காலத்தில் உணவு, உடை போன்ற பொருட்களே அதிகம் தேவைப்பட்டன. அத்தகைய பொருட்கள் தான் பகிரப்பட்டன.

ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்றார்.

இவ்வாறு ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘ஆம் அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை’ என ஸஹ்ல்(ரலி) கூறினார். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கினார்கள். பிறகு, அதை கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத் தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இதை அணியக் கொடுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘சரி’ என்றார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தம் வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

மக்கள், ‘நீ செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடு) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்’ என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று.

அறிவிப்பவர்: அபூ ஹாஸிம் ஸலமா இப்னுதீனார்

நூல்: புகாரி 5810, 2574, 2616

நாமோ தேவையுடையதை, தேவையுடைய நபர்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, எது ஆடம்பரமாக இருக்கிறது? எது நம் பெயர் கூறும் விதமாக இருக்கின்றது என்று யோசித்து பெருமைக்காக, பொருளின் பகட்டைக் காட்டுவதற்காக அன்பளிப்பு வழங்குகிறோம். இல்லாதவர்களுக்கு நாம் வழங்குவதில்லை. இருப்பவர்களுக்கு மேலும் மேலும் பொருட்களை வழங்குகிறோம். நாம் கொடுக்கும் பொருள் இம்மையிலும் பயன் தந்து அதன் நன்மையை மறுமையிலும் அனுபவிக்க வுண்டும் என்ற நோக்கம் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு இருப்பதில்லை. உணவு வழங்குவதும் அன்பளிப்புத் தான் என்பதே நமக்குத் தெரிவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பளிப்பை வலியுறுத்தும் போது உணவையே முற்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 2566

பசித்தவர்களுக்கு உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்த செயலாகப் பார்க்கப்படுகின்றது.

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

நூல்: புகாரி 12

எனவே வறியவர்களுக்கும் தேவையுடையவர் களுக்கும் அவர்களது தேவையை உணர்ந்து பயனடையும் வகையில் கொடுக்கப்படும் அன்பளிப்பே சிறந்தது.

தடுக்கப்பட்ட அன்பளிப்பு

சில நபர்கள் வெள்ளி, தங்கத்தினாலான பாத்திரங்களை அன்பளிப்பாக வழங்குவார்கள். அது தடை செய்யப்பட்டதாகும்.

நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா

நூல்: புகாரி 5633, 5634

தனது கவுவரத்த்தையும் மதிப்பையும் நிலைநாட்டுவதற்காகத் தனது தகுதிக்கு மீறிய அன்பளிப்புச் செய்வதற்காக வட்டிக்குக் கடன் வாங்கி செய்கின்றனர். இதுவும் தடை செய்யப்பட்டதாகும். வட்டி என்பது நிரந்த நரகில் தள்ளும் பாவமாகும்.

அன்பளிப்பு வழங்கத் தகுந்த நேரம்

அன்பளிப்பு வழங்கப்பட்டதற்கு, நாமும் பிரதி அன்பளிப்பு வழங்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாடு சமூகத்தில் நிலவுகின்றது. இதன் காரணமாகத் தான் திருமணம், புதுவீடு புகுதல் போன்ற காரியங்களில் அவர்கள் வழங்கியதைப் போன்று அல்லது அதை விட சற்று  அதிகமாக வழங்கி கடமை கழிந்தது என்று எண்ணுகின்றனர். இன்னும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பெயர் எழுதப்பட்ட பணக் கவரை அல்லது பெயர் பொறிக்கப்பட்ட பாத்திரத்தை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டுக் கடனை நிறைவேற்றுகின்றனர். இதுதான் சமூகத்தின் பார்வையில் அன்பளிப்பாக உள்ளது.

ஆனால் உண்மையில் அன்பளிப்பு என்பது கொடுத்ததற்குப் பதிலாகக் கொடுப்பது கிடையாது. நமக்கு அன்பளிப்பு வழங்கியவருக்கு ஒரு இக்கட்டான நிலை வரும் போது, தேவை ஏற்படும் போது அவரது தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அன்பளிப்பு வழங்க வேண்டும். அதுவே தகுந்த நேரத்தில் வழங்கப்படும் சரியான அன்பளிப்பாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமக்கு அன்பளிப்பு வழங்கியவர்களுக்கு அவ்வாறே எதையேனும் கொடுத்து ஈடு செய்து வந்தார்கள்.

ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் செய்யாமல் நமது நெருங்கிய உறவுகளுக்குப் பொருளுதவி தேவைப்படும் போது அவர்களுக்கு நாம் உதவி செய்யலாம். அதற்குக் கூலி இருக்கின்றது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார்.

நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், ‘‘நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா-? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்’’ எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான், ‘‘என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம்’’ எனக் கூறினோம்.

உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்?’ எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால்(ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது’ எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி  1466

அன்பளிப்பு குறித்த தவறான நடைமுறையிலிருந்து விலகி, அன்பளிப்பின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, நாமும் பயனடைந்து, பிறரையும் பயனடையச் செய்வோமாக!

————————————————————————————————————————————————–

புகாரியின் பிரதிகளில் உள்ள கருத்து வேறுபாடுகள்

எம்.ஐ. சுலைமான்

புகாரி இமாமின் மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்பவரிடமிருந்து பல மாணவர்கள் புகாரி நூலைப் பிரதி எடுத்துள்ளனர். அவர்களில் பின்வரும் மாணவர்கள் முக்கியமானவர்கள்.

இப்ராஹீம் பின் அஹ்மத் அல்முஸ்தம்லீ

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்ஹமவீ

முஹம்மத் பின் மக்கீ குஷ்மீஹனீ

அபூ அலீ அஷ்ஷப்பூவீ

இப்னு ஸகன் அல் பஸ்ஸார்

அபூ ஸைத் அல்மரூஸீ

அபூஅஹ்மத் அல்ஜுர்ஜானீ

இவர்களிடம் இருந்த பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும் வாசக மாற்றங்கள் இருந்துள்ளன. இவை மிக குறைவானதே. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

فتح الباري – ابن حجر – (1 / 8)

أن رواية أبي إسحاق المستملى ورواية أبي محمد السرخسي ورواية أبي الهيثم الكشمهينى ورواية أبي زيد المروزي مختلفة بالتقديم والتأخير مع إنهم انتسخوا من أصل واحد

அபூஇஸ்ஹாக் அல்முஸ்தம்லீ அவர்களின் அறிவிப்பும், அபீ முஹம்மத் அஸ்ஸர்கஸீ அவர்களின் அறிவிப்பும், அபில் ஹைஸம் அல்குஷ்மீஹனீ அவர்களின் அறிவிப்பும், அபீ ஸைத் அல்மரூஸீ அவர்களின் அறிவிப்பும் முன் பின் வார்த்தைகள் இடம்பெற்று மாறுபட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு பிரதியிலிருந்துதான் காப்பி எடுத்துள்ளார்கள்.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 8)

வார்த்தையில் கூடுதல் குறைவு

புகாரியின் பிரதிகளில் சில பிரதிகளில் சில வார்த்தைகள் கூடுதலாகவும் சில பிரதிகளில் குறைவாகவும், வேறு சில வார்த்தைகளாகவும் இடம்பெற்றுள்ளன. சில வார்த்தைகள் முற்றிலும் இல்லாமலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

فتح الباري – ابن حجر – (1 / 36)

قوله ولا تشركوا به شيئا وسقط من رواية المستملى الواو فيكون تأكيدا لقوله وحده

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில்

وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا                                                           

என்ற வார்த்தையின் முதலில் உள்ள வாவ் என்று சொல் முஸ்தம்லீ அவர்களின் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 8)

الباري – ابن حجر – (1 / 41)

وفي رواية الكشميهني سقف بكسر القاف على ما لم يسم فاعله وفي رواية المستملى

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில்

وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى

என்ற வாசகத்தில் இடம்பெறும் ஸுகுஃபன் என்ற சொல், முஸ்தம்லீ அறிவிப்பில் ஸுகுஃபுன் என்று இடம் பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 41)

فتح الباري – ابن حجر – (1 / 43)

قوله فأذن هي بالقصر من الإذن وفي رواية المستملى وغيره بالمد ومعناه أعلم

புகாரி 7ஆவது ஹதீஸில் இடம்பெறும் செய்தியில்

فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ

என்ற வாசகத்தில் இடம்பெறும் அதின என்ற சொல், முஸ்தம்லீ அறிவிப்பில் ஆதன என்று இடம் பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 43)

فتح الباري – ابن حجر – (1 / 140)

قوله كتاب العلم بسم الله الرحمن الرحيم باب فضل العلم هكذا في رواية الأصيلي وكريمة وغيرهما وفي رواية أبي ذر تقديم البسملة

புகாரியின் கல்வி என்ற அத்தியாயத்திற்கு பிறகு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று அஸீலீ, கரீமா ஆகியோர் அறிவிப்பிலும் அவரல்லாதோர் அறிவிப்பிலும் இடம்பெற்றுள்ளது. அபூதர் அவர்களின் அறிவிப்பில் கல்வி அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 140)

فتح الباري – ابن حجر – (1 / 158)

قوله أي يوم هذا سقط من رواية المستملى والحموي السؤال عن الشهر

புகாரி 7ஆவது ஹதீஸ் இடம்பெறும் செய்தியில் ‘‘இது எந்த மாதம்” என்ற வாசகம் அல்முஸ்தம்லீ, அல்ஹமவீ ஆகியோர் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 158)

فتح الباري – ابن حجر – (2 / 553)

وكان بن عمر يسجد على غير وضوء كذا للأكثر وفي رواية الأصيلي بحذف غير

புகாரி ஜும்ஆ அத்தியாயம், இணை வைப்பவர்களுடன் முஸ்லிம்கள் ஸஜ்தா செய்தல் என்ற பாடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் உளு இல்லாமல் ஸஜ்தா செய்வார்கள் என்று அதிகமான அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அஸீலீ அவர்களின் அறிவிப்பில் கைர்  இல்லாமல் என்ற வாசகம் இடம்பெறாமல் உள்ளது. (உளுவுடன் ஸஜ்தா செய்வார்கள் என்று இடம்பெற்றுள்ளது.)

(பத்ஹுல் பாரி, பாகம் 2, பக்கம் 553)

فتح الباري – ابن حجر – (13 / 62)

 ( قوله باب قول النبي صلى الله عليه و سلم للحسن بن علي ان ابني هذا لسيد )

 في رواية المروزي والكشميهني سيد بغير لام

புகாரியின்

ان ابني هذا لسيد

என்ற வாசகத்தில் ல ஸய்யிதுன் என்ற வாசகத்தில் இடம்பெறும் ல என்ற சொல் மரூஸீ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 13, பக்கம் 62)

فتح الباري – ابن حجر – (3 / 620)

قوله إذا بلغ المدينة في رواية السرخسي إذا دخل

புகாரி ஹஜ் அத்தியாயம், மதீனாவை அடைந்ததும் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லக்கூடாது என்ற (16வது) பாடத்தில் இடம்பெறும் வாசகத்தில் ‘பலக’ (அடைந்ததும்) என்ற சொல்லுக்கு பதிலாக ‘தகல’ (நுழைந்ததும்) என்ற வாசகம் ஸர்கஸீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 13, பக்கம் 620)

(فتح الباري – ابن حجر – (1 / 466

قوله يوم العيدين وفي رواية المستملى والكشميهني يوم العيد بالافراد

புகாரி 351ஆவது ஹதீஸில் இரண்டு பெருநாள் என்ற வரும் இடத்தில் முஸ்தம்லீ, குஷ்மீஹனீ அறிவிப்புகளில் பெருநாள் என்று ஒருமையாக இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 466)

فتح الباري – ابن حجر – (8 / 113)

قوله غزوت مع رسول الله صلى الله عليه و سلم العسرة كذا للأكثر وفي رواية السرخسي العسيرة بالتصغير

புகாரி 4417ஆவது ஹதீஸில் உஸ்ரா என்று அதிகமானோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ஸர்கஸீ அறிவிப்பில் உஸைரா என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 113)

فتح الباري – ابن حجر – (2 / 107)

 599 – قوله في حديث أنس كان المؤذن إذا أذن في رواية الإسماعيلي إذا أخذ المؤذن في أذان المغرب

புகாரி 625 ஹதீஸில் ‘‘தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி” என்ற வாசகத்திற்கு பதிலாக இஸ்மாயீலியின் அறிவிப்பில் ‘‘மஃரிப் தொழுகையின் பாங்கிற்கு முஅத்தின் (பாங்கு) சொல்லும் போது” என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 113)

فتح الباري – ابن حجر – (1 / 28)

قوله فقلت زملوني زملوني وفي رواية الأصيلي وكريمة زملوني مرة واحدة

புகாரி 4ஆவது ஹதீஸில் ‘‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’’ என்ற இடம்பெற்றுள்ளது. அஸீலீ, கரீமா அறிவிப்பில் ‘‘என்னைப் போர்த்துங்கள்’’ என்று ஒரு தடவை இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 28)

فتح الباري – ابن حجر – (1 / 64)

( قوله باب كذا )  هو في روايتنا بلا ترجمة وسقط من رواية الأصيلي أصلا

(புகாரி, தயம்மும் அத்தியாயம், பாடம் எண் 9ல்) பாடம் என்று மட்டும் இடம்பெற்றுளள்ளது. அதன் கீழ் எந்த கருத்தும் இடம்பெறவில்லை. அஸீலீ அவர்களின் அறிவிப்பில் பாடம் என்ற வாசகம்கூட இடம்பெறவில்லை.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 64)

فتح الباري – ابن حجر – (6 / 271)

قوله أخرجوا المشركين من جزيرة العرب ووقع في رواية الجرجاني أخرجوا اليهود والأول أثبت

புகாரி 3168வது அறிவிப்பில் ‘‘இணைவைப்பவர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்”  என்ற வாசகத்தில் இணைவைப்பவர்கள் என்ற இடத்தில் ஜுர்ஜானீ அறிவிப்பில் யூதர்கள் என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 6, பக்கம் 271)

(فتح الباري – ابن حجر – (8 / 538

قوله على لسان الساحر أو الكاهن في رواية الجرجاني على لسان الآخر بدل الساحر وهو تصحيف

புகாரி 4800வது அறிவிப்பில் ‘‘இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறி சொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்” என்ற வாசகத்தில் உள்ள சூனியக்காரர் என்ற இடத்தில் மற்றொருவர் என்று ஜுர்ஜானீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

 (பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 538)

அறிவிப்பாளர் பெயர்களில் மாற்றம்

புகாரியின் பிரதிகளில் சில பிரதிகளில் பெயர்களில் மாற்றமாக இடம்பெற்றுள்ளது. தந்தை பெயர், இயற்பெயர் என்று சில மாற்றமாக இடம்பெறுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

فتح الباري – ابن حجر – (1 / 96)

 – قوله حدثنا عمرو بن خالد هو بفتح العين وسكون الميم وهو أبو الحسن الحراني نزيل مصر أحد الثقات الاثبات ஞ்وفي رواية أبي ذر عن الكشميهني عمر بن خالد بضم العين وفتح الميم وهو تصحيف نبه عليه من القدماء أبو على الغساني وليس في شيوخ البخاري من اسمه عمر بن خالد

புகாரி 40வது ஹதீஸ் இடம்பெறும் அம்ர் பின் காலித் என்ற அறிவிப்பாளருக்கு மாற்றமாக உமர் பின் காலித் என்று குஷ்மீஹனீ அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 96)

فتح الباري – ابن حجر – (8 / 319)

قوله قال أبو هريرة فأذن معنا على كذا للآكثر وفي رواية الكشميهني وحده قال أبو بكر فأذن معنا وهو غلط فاحش مخالف لرواية الجميع وإنما هو كلام أبي هريرة قطعا فهو الذي كان يؤذن بذلك

புகாரியின் 4656வது ஹதீஸில் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள் என்ற செய்தியை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் என்று அதிகமானவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால் குஷ்மீஹனீ அறிவிப்பில் மட்டும் அபூபக்ர் அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 8, பக்கம் 319)

فتح الباري – ابن حجر – (1 / 244)

قوله عن عبيد الله بالتصغير بن أبي يزيد مكي ثقة لا يعرف اسم أبيه ووقع في رواية الكشميهني بن أبي زائدة وهو غلط

புகாரி 143வது ஹதீஸில் உபைதுல்லாஹ் பின் அபீ யஸீத் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். குஷ்மீஹனீ அறிவிப்பில் அபீ யஸீத் என்பதற்கு பதிலாக அபீ ஸாயிதா என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 244)

فتح الباري – ابن حجر – (1 / 333)

قوله عمرو بن ميمون الجزري كذا للجمهور وهو الصواب وهو بفتح الجيم والزاي بعدها راء منسوب إلى الجزيرة وكان ميمون بن مهران والد عمرو نزلها فنسب إليها ولده ووقع في رواية الكشميهني وحده الجوزي بواو ساكنة بعدها زاى وهو غلط

புகாரி 229 அறிவிப்பில் இடம்பெறும் அம்ர் பின் மைமூன் அல்ஜஸரீ என்று பெரும்பான்மையோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. குஷ்மீஹனீ அறிவிப்பில் மட்டும் (ஜஸரீ என்பதற்குப் பதிலாக) ஜவ்ஸீ என்று இடம்பெற்றுள்ளது.

(பத்ஹுல் பாரி, பாகம் 1, பக்கம் 333)

இதுபோன்ற சில மாற்றங்கள் புகாரியின் பிரதிகளில் இடம்பெற்றுள்ளது. எனினும் இதில் எது சரியானது? எது தவறானது என்பதை அறிஞர்கள் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

அன்றைய கால எழுத்து முறைகளில் இதுபோன்ற தவறுகள் வருவது சாதாரணமே! எனினும் அறிஞர்கள் இதில் அதிகக் கவனம் செலுத்தி சரியானதை இந்த சமூகத்திற்குக் கொடுத்துச் சென்றுள்ளனர். எனவே புகாரி, முஸ்லிம் மற்றும் ஹதீஸ் நூல்களை முற்றிலும் புறக்கணிக்க எந்த ஆதாரமும் இல்லை.

————————————————————————————————————————————————–

கொலையை விட குழப்பம் கொடியது!

  1. M. முஹம்மது சலீம் I.Sc. மங்கலம்

ஒரு தனிமனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் சரியானதையும் தவறானதையும் பிரித்தறிய முடியாத அளவுக்குக் குழப்பங்கள் ஏற்படலாம்; அதனால் மக்களைத் தடுமாற்றமும் பதட்டமும் பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இத்தகைய சூழ்நிலை பற்றியும் அப்போது கையாள வேண்டிய முறை பற்றியும் இஸ்லாம் விளக்கியுள்ளது. அவற்றை நம்பிக்கையாளர்கள் அறிந்து செயல்படுவது மிகவும் அவசியம். ஆகையால், குழப்பம் தொடர்பான சில செய்திகளை இப்போது பார்க்க இருக்கிறோம்.

குழப்பம் விளைவிக்காதீர்!

மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலக விஷயமாக இருந்தாலும் சரி! அதில் உண்மைக்கு எதிராக நடப்பதும், களம் காண்பதும் குழப்பம் செய்வதில் அடங்கும். மறுமை வெற்றியை விரும்பும் மக்கள் குழப்பமெனும் இழிகுணத்தை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

(திருக்குர்ஆன்  47:22)

பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(திருக்குர்ஆன்  7:56)

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

(திருக்குர்ஆன்  28:83)

குழப்பத்திற்கு எதிரான பிரச்சாரம்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவன் சொன்னபடியே வாழ வேண்டுமென எடுத்துரைத்த நபிமார்கள், தமது சமூகத்தில் இருந்த தீமைகளையும் எதிர்த்தார்கள். அதன்படி மக்களை பரிதவிக்கச் செய்யும் குழப்பத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். சமூகத்தைச் சீரழிக்காமல் வாழுமாறு போதித்தார்கள். இதன் மூலம் குழப்பம் என்பது தவிர்க்க வேண்டிய சமூகத்தீமை என்பதை எளிதாக அறியலாம்.

ஆது சமுதாயத்துக்குப் பின்னர் (ஸமூது கூட்டமான) உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!’’

(திருக்குர்ஆன்  7:74)

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது’’ என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன்  7:85)

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’ (என்று அவர்களுக்கு மூஸா நபி மூலம் அறிவுரை கூறினோம்).

(திருக்குர்ஆன்  2:60)

கொலையை விடக் கொடியது

எல்லா விதமான தீமைகளையும் இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. அவற்றில் வீழ்ந்து விடாமல் இருக்குமாறு அறிவுரை வழங்குகிறது. அந்த வரிசையில் குழப்பம் செய்யும் பண்பு கொலையை விடவும் கொடிய குற்றமென அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கிறான்.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது’ எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன்  2:217)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

(திருக்குர்ஆன்  2:191)

ஒருவரைக் கொல்வது ஒட்டுமொத்த சமுதாயத்தையே கொலை செய்வதைப் போன்று என திருக்குர்ஆன் நமக்குப் பாடம் நடத்துகிறது. இப்படியிருக்க இத்தகைய கொலையை விட குழப்பம் கொடியது என்று சொல்வதிலிருந்து அப்பாவத்தின் கொடூரத்தைப் புரிய முடிகிறது.

குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான்

உண்மைக்கு மாற்றமான நடவடிக்கைகள் மூலம் சீர்குலைவு ஏற்படுத்துவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அதற்கு ஆயிரம் காரணங்களை கூறிக் கொண்டாலும் குழப்பவாதிகளை அல்லாஹ் விரும்ப மாட்டான்; அவர்களின் அட்டூழியத்தை அல்லாஹ் மேலோங்க விடமாட்டான். இதோ அவனது அறிவிப்பைப் பாருங்கள்.

அவன் உம்மை விட்டுப் புறப்பட்டதும் இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும், பயிர் களையும், உயிர்களையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன்  2:205)

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் காரூனிடம் கூறினர்).

(திருக்குர்ஆன்  28:77)

அவர்கள் (தங்கள் வித்தையைப்) போட்ட போது “நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை’’ என்று மூஸா கூறினார்.

(திருக்குர்ஆன்  10:81)

கடும் தண்டனைக்குரிய குற்றம்

இஸ்லாம் என்பது பிறர் நலன் நாடும் மார்க்கம். அது பொதுநலனுக்குப் பங்கம் விளைப்பதை பொறுத்துக் கொள்ளாது. சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்களை ஆதரிக்காது. அதற்கும் மேலாக, தான்தோன்றித் தனமாக வரம்பு மீறிக் குழப்பம் செய்து திரிபவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தால் கடும் தண்டனை கிடைக்கும்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

(திருக்குர்ஆன்  5:32)

கொலையாளிக்கு மரண தண்டனையை நிர்ணயித்துள்ளது மார்க்கம். அதே தீர்ப்புதான் பூமியில் குழப்பத்தை நாடும் ஆசாமிகளுக்கும் எனும் போது அந்தக் குற்றத்தின் வீரியத்தைப் புரிய முடிகிறது.

மறுமையில் அழிவைத் தரும் குழப்பம்

படைத்தவனின் சாபம் என்பது சாதாரணமானது அல்ல. அதை அடைந்தோருக்கு ஈருலகிலும் கேடுதான் கிடைக்கும். இத்தகையை கேவலம் குழப்பவாதிகளுக்குக் காத்திருக்கிறது. பொய்யை மூலதனமாகக் கொண்டு திரியும் தந்திரக்காரர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். அவர்கள் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைகள் காத்திருக்கின்றன.

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.

(திருக்குர்ஆன்  13:25)

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

(திருக்குர்ஆன்  16:88)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா? அல்லது (நம்மை) அஞ்சுவோரைக் குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா?

(திருக்குர்ஆன்  38:28)

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.

(திருக்குர்ஆன்  2:27)

குழப்புவது ஷைத்தானின் ஆயுதம்

பூமியில் குழப்பம் விளைவிப்பது பெருங்குற்றம் என்பதை இன்னொரு கோணத்திலும் புரிந்து கொள்ளலாம். இப்லீஸ், மனித இனத்தை வழிகெடுக்க ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிக்கிறான்; தனது அடியாட்களை அங்கும் இங்குமாக ஓயாமல் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அதற்கு அவனது வகையறாக்கள் கையாளும் முக்கிய ஆயுதம் மக்களிடம் குழப்பத்தை விதைப்பதாகும்.

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5419, 5418

ஷைத்தான்களின் சூழ்ச்சிக்குப் பலியான வர்களே கெட்ட நோக்கத்துடன் சுற்றித் திரிகிறார்கள்; குழப்பத்தைப் பரப்புகிறார்கள். அதில் மூழ்கித் திளைக்கிறார்கள். இந்த ஆட்கள் இனியாவது ஷைத்தான்களின் வலையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளட்டும்.

குழப்புவது வழிகெட்டவர்களின் பண்பு

நமக்கு முன்னால் வாழ்ந்த வழிகேடர்களின் பண்புகளை அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். அவனது கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. குழப்பம் செய்யும் கேவலமான பண்பு அவர்களிடம் சர்வ சாதாரணமாக இருந்துள்ளது. அதனால் அழிவில் சிக்கிக் கொண்டார்கள். அந்தப் பண்பு முஃமின்களான நம்மிடம் புகுந்துவிடாதபடி கவனத்தோடு வாழவேண்டும்.

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம். அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன்  5:64)

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத் தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?) அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர். அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன் வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.

(திருக்குர்ஆன் 89:7-13)

ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது’ என்பதைக் கவனியுங்கள்!’’

(திருக்குர்ஆன்  7:86)

இவ்வாறான சதிகாரர்கள் நபிகளாரின் காலத்திலும் இருந்தார்கள். இவர்கள் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நயவஞ்சகமாகப் பெரும் நெருக்கடி கொடுத்தார்கள். சமூக நலனைக் கெடுப்பதே இந்த வேடதாரிகளின் முக்கிய வேலையாக இருந்தது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால் சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள் மூட்டியிருப்பார்கள். உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன். (முஹம்மதே!) முன்னரும் அவர்கள் குழப்பம் விளைவிக்க எண்ணினார்கள். பிரச்சனைகளை உம்மிடம் திசை திருப்பினார்கள். முடிவில் உண்மை தெரிந்தது. அவர்கள் வெறுத்த போதும் அல்லாஹ்வின் காரியம் மேலோங்கியது.

(திருக்குர்ஆன் 9:47, 48)

வேறு சிலரையும் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத் தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும், தமது கைகளைக் கட்டுக்குள் வைக்காமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.

(திருக்குர்ஆன்  4:91)

குழப்பவாதிகளிடம் எச்சரிக்கை

தங்களது சுயநலத்திற்காக, உலக ஆதாயத்திற்காக மற்றவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் கயவர்கள் எக்காலத்திலும் எச்சமூகத்திலும் இருக்கவே செய்வார்கள். மார்க்கம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கம் போன்ற ஏதேனும் ஒருவடிவில் நாசத்தைத் தூவுவார்கள். இதை மனதில் கொண்டு சுதாரிப்போடு இருக்க வேண்டும்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

(திருக்குர்ஆன்  5:49)

மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. “என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!’’ என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார்.

(திருக்குர்ஆன்  7:142)

‘‘இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ  இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்கள் விஷயத்தில் தான் ஏற்பட்டது’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (5292)

குழப்பத்தைப் பற்றிய முன்னறிவிப்பு

சத்திய மார்க்கம், இஸ்லாமிய ஆட்சி, சமூக ஒழுக்கம் ஆகிய சம்பந்தமாக எதிர்காலத்தில் ஏற்படும் சில குழப்பங்களை நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை உருவெடுக்கும் இடங்களின் சில பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இப்படியான நெருக்கடிகள் கியாமத் நாள் வரை தொடரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

‘(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவிவிடும். கொந்தளிப்பு மிகுந்து விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! கொந்தளிப்பு என்றால் என்ன?’ என வினவப்பட்டதற்கு, தம் கையால் கொலை செய்வதைப் போல் நபி (ஸல்) பாவனை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (85)

கல்வி பறிக்கப்படும் வரை – பூகம்பங்கள் அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை செய்தல் அதிகமாகும் வரை- – உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை – கியாம நாள் ஏற்படாது என்று  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (1036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, “அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டு வைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்)காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளன” என்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி)

நூல்: முஸ்லிம் (5541)

நபியின் காலத்திற்குப் பின்பு மார்க்கம் தொடர்பாகவும் அரசியல் சார்பாகவும் பல்வேறு கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. இதன் வெளிப்பாடாக பல கூட்டத்தினர் அசத்தியக் கோட்பாட்டில் வீழ்ந்தனர். அடிப்படையை மறந்து அடித்துக் கொண்டனர். வெட்டி மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் உள்ளன. அவற்றின் தாக்கம் இன்றளவும் பல இடங்களில் இருப்பதை மறுக்க இயலாது. இதுபோன்ற சமயங்களில் மார்க்கம் கூறும் வழிமுறைகளை அறிவது கட்டாயம்.

குழப்பத்தைத் தடுப்பவர்களே நல்லோர்

சமூகத்தில் குழப்பம் வெடிக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அழகல்ல. அதுபற்றிய அறிவும் தெளிவும் பெற்றவர்களுக்கு அதைத் தடுக்கும் பொறுப்பு உள்ளது. குறைந்தபட்சம் அது பரவும் வாசல்களையாவது அடைக்க வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்விடம் நற்பெயரும் உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.

நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

திருக்குர்ஆன்  11:116

நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் கலகமும், பெரும் சீரழிவும் ஏற்படும். (ஏக இறைவனை) மறுப்போர், ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.

(திருக்குர்ஆன் 8:72, 73)

குழப்பத்தை விட்டும் ஒதுங்குவோம்

ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி)

நூல்: புகாரி (19, 3300)

விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவரை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெறட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3601) (7081) (7082) (7083)

ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் ஒட்டகங்களுக்கிடையே இருந்தார்கள்.அப்போது அவர்களுடைய புதல்வர் உமர் பின் சஅத் அவர்கள் வந்தார்கள். அவரை சஅத் (ரலி) அவர்கள் கண்டபோது, “வாகனத்தில் வரும் இந்த மனிதரின் தீமையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்”  என்று கூறினார்கள்.

அவர் (வாகனத்திலிருந்து) இறங்கி, “நீங்கள் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்குமிடையே தங்கிவிட்டீர்கள்; ஆட்சியதிகாரத் திற்காக மக்களைத் தம்மிடையே சண்டையிட்டுக் கொள்ள விட்டுவிட்டீர்கள்” என்று (குறை) கூறினார்.

உடனே, சஅத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் அடித்து, “பேசாமல் இரு! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் (5673)

குழப்பத்தில் வீழாமல் நன்மைக்கு விரைவோம்

நமது மறுமைக்கான பயணத்தில் சுணக்கம் வருவதற்கு முன்பாகவே நம்மால் முடிந்தளவு நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழப்பங்கள் வரும் போது அதில் மூழ்காமல் நல்லறங்களில் கவனம் செலுத்துவது தான் உகந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (186)

குழப்பங்களை விட்டும் பாதுகாப்புக் கோருவோம்

தினமும் பல்வேறு கோரிக்கைகளை படைத்தவனிடம் முன்வைக்கிறோம். அதில் ஒன்றாக, இறைவா! குழப்பங்களை விட்டும் பாதுகாப்பாயாக! என்று கேட்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் சிறியது பெரியது என்று அனைத்தை விட்டும் காக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது. அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், “நான் (அறிவேன்)” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், “இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை) காலத்தில் இறந்தனர்” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள். பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர். பிறகு “மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுக மானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்’’ என்று கூறினர்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை. மாறாக, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: முஸ்லிம் (5502)

நபித்தோழர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடையின் மீதேறி, ‘(இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப்பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை’ என்று (கோபத்துடன்) கூறினார்கள்.

உடனே நான் வலப் பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தம் ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டை சச்சரவு செய்யும்போது அவரின் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டு வந்தார். எனவே அவர், ‘அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தந்தை ஹுதாஃபா’ என்றார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். குழப்பங்களின் தீங்கிலிருந்து (எங்களை) பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறோம்’ என்று கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (7089)

முஃமின்களாக இருக்கும் நமக்கு சமூக அக்கறை இருப்பது அவசியம். ஆகவே சமூகத்திற்குத் தீங்கு தரும் குழப்பத்தை விட்டும் நாம் அறவே நீங்கியிருக்க வேண்டும். சமுதாயத்தைச் சீர்படுத்துவது யார், சீர்குலைப்பது யார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்பதை மறந்து விடக்கூடாது.

அவர்களில் இதை (குர்ஆனை) நம்புவோரும் உள்ளனர். இதை நம்பாதோரும் உள்ளனர். குழப்பம் செய்வோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆன்  10:40

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!’ என்று அவர்களிடம் கூறப்படும் போது ‘நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே’ எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்  2:11, 12)

எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி நமது சிந்தனைகளையும் செயல்களையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்வோமாக!  மார்க்கம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் கிளம்பும் போது அதற்கு மார்க்கமே அழகிய தீர்வை வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரமான வஹீயின்படி தகுந்த நிலைபாடு எடுக்க வேண்டும். அதுதான் சரியானது.

உலக ரீதியான பிரச்சனைகள் இருந்தால் உரிய சான்றுகள் அடிப்படையில் அதற்குரிய தீர்வை எட்ட வேண்டும். இத்தகைய பக்குவத்தைத் தந்து ஈருலகிலும் வெற்றி பெறும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நமக்கு அருள்வானாக!

————————————————————————————————————————————————–

இஹ்யாவை ஏன் கொளுத்த வேண்டும்?  தொடர்: 32

கண்ணியமிகு நபி யூசுஃபை களங்கப்படுத்தும் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

யஃகூப் (அலை), இஸ்ஹாக் (அலை) இப்ராஹீம் (அலை) என்று மூன்று நபிமார்களை தலைமுறையாகக்  கொண்ட ஒரு தனிச்சிறப்பும் பாக்கியமும் கொண்ட நபி தான் யூசுஃப் (அலைஹி) அவர்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3374

இப்படிப்பட்ட சிறந்த நபியான யூசுஃப் (அலைஹி) அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாகவும் குலைக்கும் விதமாகவும்  கஸ்ஸாலி அவர்கள் தனது இஹ்யா எனும் நூலில் எப்படிக் களமாடுகின்றார் என்று பாருங்கள்.

قال الغزالي: وروي أن سليمان بن يسار كان من أحسن الناس وجها، فدخلت عليه امرأة فسألته نفسه، فامتنع عليها، وخرج هاربا من منزله وتركها فيه. قال سليمان: فرأيت تلك الليلة في المنام يوسف عليه السلام وكأني أقول له أنت يوسف؟ قال: نعم أنا يوسف الذي هممت، وأنت سليمان الذي لم تهم، أشار إلى قوله تعالى: وَلَقَدْ { هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّهِ }. وعنه أيضا ما هو أعجب من هذا.

சுலைமான் பின் யஸார் வசீகரமான முகத்தைக் கொண்ட ஓர் ஆணழகர். அவரது வீட்டிற்கு  ஒரு பெண் வந்து அவரை அடைய விரும்பினார். அவர் அந்த பெண்ணைக் கண்டதும் வீட்டை விட்டே அடித்துப் புரண்டு வெளியே ஓடி விட்டார். இதன் பின் என்ன நடந்தது? அவரை அதை  விவரிக்கின்றார்?

அன்று இரவு உறங்குகையில், கனவில் யூசுஃப் நபி காட்சியளித்தார்கள். ‘நீங்கள் யூசுஃப் தானே?’  என்று நான் கேட்ட போது அவர்கள், ‘ஆமாம், என்னை அடைய வந்த பெண்ணை நாடி விட்டேனே அந்த யூசுஃப் தான் நான்’ என்று பதிலளித்தார்கள். அதாவது, ‘அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்)’ வசனத்தை இதன் மூலம் யூசுஃப் நபி (அலைஹி) சுட்டிக்காட்டுகின்றார்கள். (அல்குர்ஆன் 12:24)

இவ்வாறு சுலைமான் பின் யஸார்  தெரிவித்தார்.

இவர் தொடர்பாக இன்னும் இதை விட ஆச்சரியமான ஒரு  செய்தி இருக்கின்றது. அது வருமாறு:

சுலைமான் தனது நண்பருடன் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். அப்வாஃ என்ற இடத்தில் இருவரும் தங்குகின்றனர். நண்பர் பையை தூக்கிக் கொண்டு உணவுப் பொருள் வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்று விடுகின்றார். இப்போது  கூடாரத்தில் சுலைமான் மட்டும் தனிமையாக இருக்கின்றார். சுலைமான் கவர்கின்ற காந்தமிகு அழகராகவும் அதே சமயம் கற்பு நெறி காக்கின்ற ஒழுக்க சீலராகவும் இருந்தார்.

மலை அடிவாரத்தில் வசிக்கின்ற ஓர் கிராமப்புறத்து பெண் அவரைப் பார்த்த மாத்திரத்தில் கூடாரத்திற்கே வந்து விடுகின்றாள். வந்ததும் தன் முகத்திரையையும்  விலக்கிக் கொண்டு கையுறைகளைக் கழற்றி விடுகின்றாள். அவளது முகமோ பவுர்ணமி நிலவு போல் பளிச்சிடுகின்றது.   ‘என்னை மகிழ்வியுங்கள்’ என்று சொல்கின்றாள்.

உடனே அவர் அந்தப் பெண் உணவை எதிர்பார்க்கின்றாள் என்று எண்ணிக் கொண்டு  மிச்சம் மீதமுள்ள உணவை எடுத்துக் கொடுக்கின்றார். அதற்கு அவள், ‘இதை நான் விரும்பவில்லை. ஓர் ஆடவர் தன்னுடைய மனைவியிடம் என்ன எதிர்பார்ப்பாரோ அதைத் தான் உம்மிடம் நான் எதிர்பார்க்கின்றேன்’ என்று சொன்னாள்.

அவர் அவளை நோக்கி, ‘உன்னை ஷைத்தான் தான் ஆயத்தப்படுத்தி என்னிடம் அனுப்பியிருக்கின்றான்’ என்று கூறித் தன் இரு தொடைகளுக்கிடையே தலையை நுழைத்துக் கொண்டு அழத்தொடங்கி விட்டார். அழத் தொடங்கியவர் அழுகையை நிறுத்தியபாடில்லை. இதைப் பார்த்த அந்தப் பெண், திறந்த தன் புர்காவை முகத்தில் தொங்க விட்டுக் கொண்டு திரும்பி வீட்டுக்குச் சென்று விடுகின்றாள்.

கடை வீதிக்குச் சென்ற நண்பர் திரும்பியதும் தனது நண்பரின் கண்கள் அழுது வீங்கி, புடைத்துப் போயிருப்பதைக் காண்கின்றார்.  ‘ஏன் அழுகின்றாய்?’ என்று நண்பரைப் பார்த்துக் கேட்கும் போது ‘(இறந்து போன)  என் குழந்தையை நினைத்து அழுகின்றேன்’ என்று சொல்கின்றார். ‘துக்கத்திற்கு அழுகின்றாய் என்றால் அதன் கால அளவு மூன்று நாட்கள் தான். நீ அதற்காக அழவில்லை. நீ எதையோ மறைக்கின்றாய். நீ விஷயத்தைச் சொல்லாத வரை உன்னை நான் விடமாட்டேன்’ என்று சொன்னதும் கிராமப்புற அரபியப் பெண்ணின் கதையைச் சொல்லி விடுகின்றார்.

அவ்வளவு தான்! அவரும் கடுமையாக அழுகின்றார். ‘நீ ஏன் அழுகின்றாய்?’ என்று சுலைமான் தன்  நண்பரைப் பார்த்துக் கேட்டதும் ‘உன்னை விட அழுவதற்கு நான் தான் தகுதியானவன். காரணம் உன்னுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் என்னால் அப்படிப் பொறுமையாக இருந்திருக்க முடியாது’ என்று சொன்னதும் இருவரும் சேர்ந்து கொண்டு அழுகின்றனர். இதன் பின்னர் சுலைமான் மக்கா வந்தடைகின்றார். தவாஃப், சயீ முடித்து விட்டு ஹிஜ்ர் என்ற பகுதியில் ஆடையை சுற்றிக் கொண்டு குத்த வைத்தவாறு அமர்ந்திருக்கும் வேளையில் அவரை தூக்கம் தழுவிக் கொண்டது. அவர் படுத்து உறங்கி விட்டார்.

وإذا رجل وسيم طوال له شارة حسنة ورائحة طيبة: فقال له سليمان: رحمك الله من أنت؟ فقال له: أنا يوسف، قال: يوسف الصديق؟ قال: نعم، قال: إن في شأنك وشأن امرأة العزيز لعجبا، فقال له يوسف: شأنك وشأن صاحبة الأبواء أعجب

அப்போது கனவில் அழகிய தோற்றமும் கமகமக்கின்ற நறுமண வாடையும் கொண்ட ஒருவர் கனவில் காட்சியளிக்கின்றார். அவரை நோக்கி சுலைமான், ‘அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! நீங்கள் யார்?’ என்று கேட்கின்றார் அவர், ‘நான் யூசுஃப்’ என்று பதிலளிக்கின்றார்கள். இவர் ஆச்சரியத்தில் உறைந்து போனவராக, ‘நீங்கள் சித்தீக் என்று அழைக்கப்படக்கூடிய (நபி) யூசுஃபா?’ என்று கேட்கின்றார்.

அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். ‘மன்னரின் மனைவி விரித்த வலையில் விழாமல்   நீங்கள் உங்களை காத்துக் கொண்டது ஓர் ஆச்சரியமாகும்’ என்று இவர் குறிப்பிடுகின்றார். அதற்கு,  ‘அப்வா என்ற இடத்துப் பெண்ணிடமிருந்து உன்னை நீ காத்துக் கொண்டது பேராச்சரியமாகும்’ என்று யூசுஃப் நபி (அலைஹி) சுலைமானிடம் தெரிவித்தார்கள்.

நூல்: இஹ்யா உலூமித்தீன்

கிதாபு கஸ்ருஷ் ஷஹ்வத்தைன் (இரு இச்சைகளை அடக்கும் அத்தியாயம்)

பயானு மன் யுகாலிஃபு ஷஹ்வதில் ஃபர்ஜ் வல் அய்ன் (மான உறுப்பு மற்றும் கண் பார்வைகளின் இச்சைக்குப் பலியாகதவர் தொடர்பான  பாடம்)

கஸ்ஸாலி கூறும் இந்தச் சம்பவத்தை இப்போது நாம் அலசுவோம்.

பொதுவாக சூஃபிஸத்தின் அடிப்படைக் கொள்கையே  நபித்துவத்தைத் தாழ்த்தி, விலாயத்தை உயர்த்திப் பிடிப்பது தான்.  அவர்கள் ஆன்மீகம் என்ற பெயரில் சஞ்சரிக்கின்ற மாயமான, மறைவான உலகில், நபி என்பவர் ரசூலை விட சற்று உயர்ந்தவர்; வலியை விடக் குறைந்தவர் ஆவார். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் தன்னைக் காத்துக் கொள்வதற்காக வேண்டி மனதை அடக்கும் போராட்டம், தனிமையில் கடுந்தவம், ஊர் விட்டு ஊர் சுற்றல், பசி, பட்டினி, கண் விழிப்பு போன்ற உடல் வருத்தும் வணக்க வழிபாடுகள் மூலம் நுபுவ்வத்தை எளிதில் அடைந்து விடலாம் என்பது சூஃபிஸத்தின் கொள்கை மற்றும் கோட்பாடு!

இது, குர்ஆன் கூறுகின்ற நுபுவ்வத் என்ற தூதுத்துவக் கொள்கைக்கும் கோட்பாடுக்கும் நேர் எதிரான  கொள்கையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ், தான்  யாரைத் தேர்வு செய்கின்றானோ அவர்களைத் தான் தூதர்களாக ஆக்குகின்றான். விரும்பியோர், விண்ணப்பித்தோர் அத்தனை பேர்களுக்கும் விளம்பப்படுகின்ற விருப்பப் பொருளாக இந்த நபித்துவத்தை ஆக்கவில்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை சரியான முறையில் விளங்கிய அறிஞர்களின் நிலைபாடாகும்.

அவர்களிடம் ஏதேனும் சான்று வருமானால் “அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்கப்படும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர். “தனது தூதை எங்கே வைப்பது? (யாரிடம் கொடுப்பது)” என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்குர்ஆன் 6:124

வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் 22:75

ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.

அல்குர்ஆன் 3:33

மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!’’ என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 7:144

ஆகிய வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நபித்துவம் என்பது எந்த ஒரு நபரும்  சுயமாக,  தேடிப் பெறக்கூடிய துறை கிடையாது என்பதை புரிந்துக் கொள்ளலாம். இந்த வசனங்கள் விதித்திருக்கின்ற வரம்புகளைத் தாண்டித் தான் சூஃபிஸம், நபித்துவம் என்பது சம்பாதித்துப் பெறக்கூடிய ஒரு தகுதி, அந்தஸ்து என்று சாதிக்கின்றது. குருட்டுத் தனமான அந்தக் கொள்கையும் கோட்பாடும் தான் யாரோ ஒரு சுலைமானை, யூசுஃப் நபியை விடத் தூக்கி நிறுத்த முடிகின்றது.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர். 

 அல்குர்ஆன் 12:24

இது, நபி   யூசுஃப் (அலைஹி) பற்றி அல்லாஹ் கூறுகின்ற உண்மை நிலையாகும். அதனால் தான் அவர்கள், “எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ (12:53) என்று குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது ஒரு புறத்தில்  அந்தப் பெண் விரித்த வலையில் விழாமல் தான் தப்பியது அல்லாஹ்வின் அருளால் தான் என்றும், இன்னொரு புறத்தில் தனது உள்ளத்தில் ஏற்பட்ட பலவீனத்தை ஒப்புக்கொள்ளும் விதத்தில் மேற்கண்டவாறு நினைவு கூர்கின்றார்கள். அம்மாபெரிய தூய்மை நாயகர், தூய நபிகளார் தான் இவரது கனவில் தோன்றி, ‘சுலைமான் பின் யஸாரே! நீ என்னை விடப் பரிசுத்த நாயகர்’ என்று பட்டமளிப்பதாகக் கஸ்ஸாலி கூறுகின்றார்.

இது எவ்வளவு படுபாதகமான கொள்கை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.  நபியை விட வலீ மேலானவர் என்ற கொள்கையை கஸ்ஸாலியும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பது தான் அதன் அர்த்தம் என்று தெளிவாகப் புரிகின்றதல்லவா?

இஹ்யாவைப் பாடமாக நடத்தும் பள்ளி மத்ரஸாக்களின் நிலைபாடு இது தானா? என்று சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களிடம் பகிரங்கமாகக் கேட்கின்றோம். சுலைமான் பின் யஸார் என்பவர்  யூசுஃப் நபியை விட மேலானவர் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? என்றும் கேட்கின்றோம்.

சுன்னத் வல் ஜமாஅத்தினர் முன்பு இரண்டே இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன. ஒன்று,   யூசுஃப் நபி (அலை) ஒருபோதும் சுலைமான் பின் யஸாரை விடச் சிறந்தவர் கிடையாது. அல்லது கஸ்ஸாலி சொல்கின்ற இந்தச் சம்பவம் பொய் என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் கிடையாது.

இப்படிச் சொல்வதைத் தவிர்த்து அவர்களுக்கு முன் வேறு வழியே கிடையாது. அப்படியானால் இப்படிப்பட்ட இஹ்யாவைக் கொளுத்துவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்குமாறும் சீர்தூக்கிப் பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

கஸ்ஸாலி இப்படியெல்லாம் அளந்து விடுவதற்குக் காரணம், செய்தி வருகின்ற வழியைப் பார்க்காதது தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்திகள் வருகின்ற வழித்தடங்களையே பார்க்காதவர் இதுமாதிரியான செய்திகள் வருகின்ற வழித் தடங்களை எப்படிப் பார்க்கப் போகின்றார்?

அந்தப்புரக் காதலனா? அந்தகாரக் கைதியா?

யூசுஃப் நபி (அலைஹி) அவர்களையும் இந்த சுலைமானையும் கடுகளவு கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.  அந்த அழகுப் பேரரசர், தான் கொள்ளை கொள்கின்ற அந்தப்புரத்து, அந்தரங்க கள்ளக் காதலனாக இருக்க வேண்டும் அல்லது  சிறைக் கைதியாக இருக்க வேண்டும் என்று அந்தப் பெண் அதிகாரத்தில் மிரட்டுகின்றாள்.

இவரைக் குறித்துத் தான் என்னைப் பழித்தீர்கள். இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார்’’ என்று அவள் கூறினாள்.

அல்குர்ஆன் 12:32

அந்தப்புரத்துக் காதலனாக இருப்பதை விட அந்தகாரக் கைதியாக இருந்து விட்டுப் போகின்றேன் என்று சிறைவாசத்தைத் தேர்வு செய்த சத்திய சீலர் நபி யூசுஃப் (அலைஹி) அவர்கள். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்’’ என்றார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 12:33, 34

சிறையில் அடைக்கப்பட்ட கற்புக்கரசர் யூசுஃப் நபி (அலை) அவர்கள் எவ்வளவு காலம் சிறையில் இருந்தார்கள்? அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடம் தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள்.

யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட்டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். (ஆனால், அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘தம் குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காதவரை சிறையிலிருந்து வெளியேற மாட்டேன்’ என்று அவர் கூறிவிட்டார்.)

நூல்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 3387

துல்லியமாக எத்தனை ஆண்டுகள் யூசுஃப் நபி (ஸல்) சிறைவாசம் அனுபவித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இப்படிப்பட்ட ஒரு தியாகச் செம்மலை, ஒழுக்க சீலரை விட எங்கோ ஒரு மூலையில் உள்ள சுலைமானைச் சிறந்தவர் என்று கஸ்ஸாலியால் எப்படிச் சொல்ல முடிகின்றது?

காணும் கனவு ஆதாரமாகுமா?

அதிலும் கனவை இந்தச் சம்பவத்திற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார் கஸ்ஸாலி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பதற்கே மார்க்கம் அளவுகோலை வைத்திருக்கின்றது.

கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்:  புகாரி 6993

அதாவது கனவில் பார்த்தவர் நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்திருக்க வேண்டும். நேரில் பார்த்தவர் தான் கனவிலும் பார்க்க முடியும் என்பது தான் இதன் விளக்கமாகும்.

இப்போது யாராவது  நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததாகச் சொன்னால்  அதையே ஏற்றுக் கொள்ள முடியாது எனும் போது, யூசுஃப் நபியைப் பார்த்ததாகச் சொல்வதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது.

எனவே, கஸ்ஸாலி சொல்கின்ற இந்தச் சம்பவம் போலியான சம்பவமாகும். நிராகரிக்கப்படவேண்டிய பொய் சம்பவமாகும்.

மொத்தத்தில், இது சுலைமான் பின் யஸாரின் கனவில் ஷைத்தான் ஆடிய அசத்திய ஆட்டமாகும்.  அதைத் தான் கஸ்ஸாலி ஆதாரமாகச் சமர்ப்பித்து சூஃபிஸத்தின் விஷ வித்துகளை மக்களின் மனங்களில் விதைக்கப் பார்க்கின்றார்.

————————————————————————————————————————————————–

பொறுப்பு – ஓர் அமானிதம்

M.A. அப்துர்ரஹ்மான்

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

பொதுவாகவே, ஒருவருக்கு கிடைக்கின்ற பதவி, அந்தஸ்து, அதிகாரம் இவைகளெல்லாம் நம்முடைய அறிவினாலோ, ஆற்றலினாலோ, திறமையினாலோ நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்று ஒருவன் நம்பினால் அவனை விட மிகப்பெரிய அறிவிலி யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.

மாறாக, நமக்குக் கிடைக்கின்ற பதவியாக இருந்தாலும், அந்தஸ்தாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், மக்களை நிர்வகிக்கின்ற எந்தப் பொறுப்பாக இருந்தாலும் இறைவனின் தனிப்பெரும் கிருபையினால் நமக்குக் கிடைத்திருக்கின்றது; எத்தனையோ அறிவிற் சிறந்தவர்கள், பட்டம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை இறைவன் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியைக் கொடுத்திருக்கின்றான். இது இறைவனின் மகத்தான கிருபை என்றே நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்றைக்குப் பெரும்பாலானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற பதவி, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றை புகழுக்காகவும், பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் பயன்படுத்திக் கொண்டு, மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுப்பதைப் பார்க்கின்றோம்.

பொறுப்பு ஓர் அமானிதம்:

பெரும்பாலான மக்கள் பதவியை ஒரு அதிகாரமாக கருதிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பதவி என்பது அமானிதம். அமானிதத்தை உரிய முறையில் பேணி மக்களின் நன்னம்பிக்கையைப் பெற வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், பொறுப்புகளைப் பெறுகின்றவர்கள் புகழ், அதிகாரம், செல்வம் ஆகிய காரணங்களுக்காகவே அதற்கு ஆசைப்படுகின்றனர். இந்த மூன்று அம்சங்களும் மிகச்சரியான முறையில் பயன் படுத்தப்படுமேயானால் பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார்கள்.

பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3729)

பொறுப்பு ஓர் அமானிதம் என்றும், அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாளத் தவறினால் மறுமையில் மிகப்பெரும் இழிவையும், கைசேதத்தையும் சந்திக்க நேரிடும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

மேலும், அமானிதத்தை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஆழமாக வலியுறுத்துகின்றார்கள்.

துன்பத்தில் மிகப்பெரும் துன்பம்:

ஒருவர் ஆட்சிப் பதவியை அடைய போட்டி போடுகின்றார், அல்லது தனக்கு மக்களை நிர்வகிக்கின்ற பதவி பல்லாண்டு காலம் கிடைக்க வேண்டும் என்று பேராசைப்படுகின்றார். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களுக்கு அந்தப் பதவி வெறி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மறுமையில் பயங்கரமான துன்பமாக அமைந்து விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப் பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.

ஆதாரம்: புகாரி 7148

பால்குடியை மறக்கடிப்பதில் பதவிப்பால் தான் நிறுத்தவே முடியாத மோசமான துன்பம். பதவிக்காக ஆசைப்படுவோர் மறுமை நாளில் கடுமையான முறையில் வருத்தப்படுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள்.

பதவியை கேட்டுப் பெறாதே!

ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி 7149

பதவியை எனக்குத் தாருங்கள் என்று கேட்பவருக்கும், பதவி வெறி பிடித்து நிர்வாகப் பொறுப்பை ஆசைப்படுவோருக்கும் ஒருபோதும் இந்தப் பதவி வழங்கப்படக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

பேணத் தவறினால் சொர்க்கம் ஹராம்:

பொதுமக்களின் பொறுப்பு வழங்கப்பெற்ற ஒருவர் மக்கள் நலன் காக்கத் தவறினால் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான் என்று பதவி வெறி பிடித்து, பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாத நபர்களைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 7150

மக்களை நிர்வகிக்கும் அதிகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் மக்களுக்கு மோசடி செய்தாலோ, மக்களை ஏமாற்றினாலோ அந்தப் பொறுப்பாளிகளுக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விடுவான் என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கின்றார்கள்.

நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்:

முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 7151

ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்’’ என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3735

மக்களில் சிறந்தவர்கள்:

பதவி, அதிகார விஷயத்தில் மக்களின் பார்வையில் ஏராளமானோர் சிறந்தவர்களாகத் தெரியலாம். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் மக்களில் சிறந்தவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணிக்கின்றார்கள்.

இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.

ஆதாரம்: முஸ்லிம் 4945

தலைமைப் பொறுப்பு, தானாகத் தன்னுடைய தலைக்கு மேலே விழுந்தாலே தவிர, தலைமைப் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுபவர்களும், தலைமைப் பொறுப்புகள் விஷயத்தில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களும் தான் மக்களில் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.

பொறுப்பாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை:

சமுதாய விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு சிறப்புமிக்க பிரார்த்தைனையை இறைவனிடத்தில் பிரத்தியேகமாக நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். இந்தப் பிரார்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்களாக, பொறுப்பாளிகள் மாற முயற்சிக்க வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

ஆதாரம்: முஸ்லிம் 3732

பொறுப்பாளியாக இருப்பவர் மக்களுக்கு சிரமத்தையோ அல்லது சிரமம் தருகின்ற வேலையிலோ ஈடுபட்டால் அல்லாஹ்வின் அந்தப் பொறுப்பாளிகளுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவான். எனவே, மக்களிடத்தில் மென்மையான முறையில் பொறுப்புகளைக் கையாள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.

மிகவும் மோசமானவர்கள்:

மக்களின் பொறுப்பைத் தன்னகத்தே கொண்டு செயல்படுகின்ற பொறுப்பாளர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தீயவர்களும் இருக்கின்றார்கள். பொறுப்பாளர்களில் மிகக் கெட்டவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3736

மக்களை நிர்வாகம் செய்பவர்கள் கல் நெஞ்சக்காரர்களாக இருக்கக் கூடாது. இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி மக்களை நிர்வகிக்காமல், தன்னுடைய மனம் போன போக்கிலே நிர்வாகம் செய்பவர்கள் தங்களுடைய உள்ளங்களைக் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்வார்கள். இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சர்க்கை விடுக்கின்றார்கள்.

பொறுப்பாளர்களின் தனிச்சிறப்பு:

அல்லாஹ்வுக்காக நேர்மையான முறையிலும், இறையச்சத்தோடும் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தனிச்சிறப்பை வழங்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).

ஆதாரம்: முஸ்லிம் 3731

உமர் (ரலி) அவர்களின் அற்புதமான குணம்:

உமர் (ரலி) ஆட்சிப் பதவியில் இருக்கும் போது மக்கள் அவரையும், அவரது ஆட்சி முறையையும் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் சொன்ன பதில் அற்புதமான ஓர் எடுத்துக் காட்டாக, பொறுப்பாளர்களுக்கு இருக்கின்றது.

(நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது(தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 7218

உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட விஷயங்களில், நான் என்னுடைய இறைவனிடத்தில் இருந்து தப்பித்தாலே போதும் என்று நிர்வாக விஷயத்தில் அல்லாஹ்வைப் பற்றிக் கடுமையாக அஞ்சக் கூடியவர்களாக இருந்தார்கள். மேலும், எனது ஆட்சி காலத்திற்குப் பிறகு நான் ஒருவரை நியமித்து மரணத்திற்குப் பிறகும் பொறுப்பை சுமக்கத் தயாரில்லை என்று தெள்ளத் தெளிவாக, ஆட்சி பொறுப்பு ஒரு அமானிதம் தான் என்பதை விளக்குகின்றார்கள்.

இறுதியாக:

பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் மற்றும் பொறுப்பில் இருந்து விலகியவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் விளக்குகின்றார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன்  பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)

ஆதாரம்: புகாரி 2887

பொறுப்பு வழங்கப்பட்டுப் பின்னர் பொறுப்பு கைமாறியவர்களுக்கும், பொறுப்பை வகிப்பவர்களுக்கும் இந்தச் செய்தி மிக அற்புதமான உதாரணம். மேல்நிலை, கீழ்நிலை என்று இல்லாமல், இதன் அடிப்படையில் பொறுப்புகளில் செயல்பட்டு, சொர்க்கம் செல்லப் பாடுபட வேண்டும்.

என்னை இந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதால் நான் இந்த ஜமாஅத்தில் நீடிக்க மாட்டேன், அல்லது நான் இதில் பணி செய்ய மாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்பவர்களுக்கும், என்னை நீக்கியதால் நான் இந்த ஜமாஅத்தை அழிக்காமல் ஓயமாட்டேன் என்று களம் காண்பவர்களுக்கும் இந்த ஹதீஸில் அற்புதமான அறிவுரை இருக்கின்றது.

பதவியை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படாமல், சுவனம் செல்வதை மட்டுமே இலக்காகக் கொண்டு நமது இலட்சியப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

ஒரு ஜமாஅத்தையோ, அரசாங்கப் பொறுப்புகளையோ நிர்வாகம் செய்கின்ற யாராக இருந்தாலும் அல்லாஹ்வுக்குப் பயந்து, நீதிக்கு சாட்சியாளர்களாக இருந்து, பதவி, புகழ், அதிகாரம் கிடைப்பதற்காக அல்லாமல் மக்களை நிர்வாகம் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!!

————————————————————————————————————————————————–

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

கே.எம். அப்துந்நாஸர்

நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது.

நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று யாரும் தரம் பிரித்துப் பார்ப்பது கிடையாது.

நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று அடிப்படை அறியாத சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நபித்தோழர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்பது ஹதீஸ்கலை வல்லுநர்களில் பெரும்பாலானவர்களின் முடிவாகும்.

நபித்தோழர்களில் மிக, மிக அரிதானவர்கள் தொடர்பாகத் தான், அவர்களின் அறிவிப்பை ஏற்கலாமா? ஏற்கக் கூடாதா? எனக் கருத்து வேறுபாடு உள்ளது. எந்த நபித்தோழர்கள் விஷயத்தில் அந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ அவர்களிடமிருந்து மிக முக்கியமான மார்க்கச் சட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானிப்பதும், பலவீனமானவர் என்று தீர்மானிப்பதும் அவர்களின் வெளிப்படையான செயல்களை வைத்துத்தான்.

ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானித்து விட்டால் அவர் நூறு சதவிகிதம் நல்லவராகத்தான் இருப்பார் என்பது கிடையாது. அவர் கெட்டவராகவும் இருக்கலாம். அதற்கான வெளிப்படையான சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அதன் பொருளாகும்.

அதுபோன்று ஒருவர் நம்பகமானவர் கிடையாது என்று நாம் முடிவு செய்வதும் அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளை வைத்துத்தான். நாம் ஒருவரை நம்பகமானவர் கிடையாது என முடிவு செய்துவிட்டால் அவர் நூறு சதவிகிதம் கெட்டவர்தான்; அவர் திருந்தவே மாட்டார் என்பது கிடையாது. அவர் திருந்தியும் இருக்கலாம்.

நபித்தோழர்களைப் பொறுத்தவரை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும், பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படும் எந்த ஒரு நபித்தோழரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்களைச் செய்ததாகவோ, திட்டமிட்டுப் பொய் சொன்னதாகவோ வெளிப்படையான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

ஒட்டு மொத்தமாகவும், குறிப்பாகவும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே என நாம் வெளிப்படையின் மூலமாகத் தீர்மானிக்கும் ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஒருவரை நம்பகமானவர் என்று தீர்மானிப்பதற்கு மனிதர்கள் கூறும் சான்றுகளை விட அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் குறிப்பிடும் சான்றுகள் பல கோடி மடங்கு உயர்ந்தவையாகும். அவற்றுக்கு நிகர் எதுவுமே கிடையாது.

நபித்தோழர்களின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சான்று பகர்ந்துள்ளனர்.

நபித்தோழர்களின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகத் திருக்குர்ஆன் குறிப்பிடும் சான்றுகளைக் காண்போம்.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

திருக்குர்ஆன் 48:29

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 7:157

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:99,100

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9:108

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 9:117,118

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 57:10

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 59:9

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

அல்குர்ஆன் 48:18

நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு முபஷ்ஷிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4909)

அல்லாஹ், பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: புகாரி (3007)

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல்: புகாரி (3673)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல் : புகாரி (17)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க  மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும்  மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: பராஉ (ரலி)

நூல்: புகாரி (3783)

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி)

நூல்: திர்மிதி (3797)

‘‘உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல்: புகாரி (2651, 3650, 6428, 6695)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்ரி (ரலி) நூல்: முஸ்லிம் (4953)

(ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையானவர்கள். (48:29)

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.(59:8)

அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்.(59:9)

அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான்.(48:18)

ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். (59:9)

அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். (48:29)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான்.(9:117)

என்றெல்லாம் அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ் நற்சான்று வழங்கிய பிறகு அவர்களின் நம்பகத்தன்மைக்கு இவையே போதுமான சான்றாகும்.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று நாம் தீர்மானித்துவிட்டதால் அவர்கள் அனைவரும் சுவர்க்கவாசிகள் என நாம் தீர்மானித்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் யாரை சுவர்க்கவாசி என்று குறிப்பாகவும், பொதுப்படையாகவும் குறிப்பிட்டார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் நாம் சுவர்க்கவாசி என்றோ, நரகவாசி என்றோ தீர்மானிப்பது கூடாது.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பக மானவர்கள் என்பதன் பொருள் அவர்களின் அறிவிப்பை மறுக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த ஒரு குறையும் இல்லை என்பதுதான். அவர்களது சொந்தக் கருத்துக்களை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இறைச்செய்தியை மட்டுமே ஒரு முஸ்லிம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.

நபித்தோழர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் அறியாமல் நிகழும் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவை ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகும் போது அந்த அறிவிப்புகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இது போன்றவை தவிர நபி (ஸல்) கூறியதாக நபித்தோழர்கள் அறிவிக்கும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாகவும், குர்ஆனுக்கு முரண் இல்லாமலும் இருந்தால் அது ஆதாரப்பூர்வமான செய்தியாகவே கருதப்படும்.