ஏகத்துவம் – செப்டம்பர் 2017

நொந்தே போயினும் வெந்தே மாயினும்  வந்தே மாதரம் பாடமாட்டோம்

பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் வங்காள மொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. பி.எட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்காள மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வந்தே மாதரத்தைப் பள்ளி, கல்லூரிகளில் பாடாததால் தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒரு முறையாவது வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழைமைகளில் பாடலாம். அரசு, தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். வந்தே மாதரம் பாடலை சமஸ்கிருதம், வங்கத்தில் பாட விருப்பமில்லாத பட்சத்தில் தமிழில் மொழிபெயர்த்து பாடலாம். வந்தே மாதரம் பாடலைப் பாட விருப்பமில்லாதோர் மீது எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி அளித்த இந்தத் தீர்ப்பு மகாராஷ்டிரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜ் புரோகித், எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் வந்தேமாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த மும்பை ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீனைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் ‘என் தலை மீது துப்பாக்கியை வைத்து பாடச் சொன்னாலும் வந்தேமாதரம் பாட மாட்டேன்’ என்று முழங்கினார்.

மகாராஷ்டிரா சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அபூ ஆசிம் அஜ்மி, என்னை நாட்டை விட்டு வெளியே வீசினாலும் வந்தேமாதரம் பாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாநகராட்சிக் கூட்டத்தில் வந்தேமாதரம் பாடப்பட்ட போது ஆல் இந்தியா மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீனைச் சார்ந்த இரு உறுப்பினர்கள் எழுந்து நிற்கவில்லை. இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது.

இப்படி வந்தேமாதரம் பாடவேண்டும் என்று முஸ்லிம்கள் மீது ஓர் இணைவைப்பு திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது.

மண்ணே! உன்னை நான் வணங்குகின்றேன் என்று மண்ணைக் கடவுளாக்கி வணங்கச் சொல்கின்றது இந்தப் பாடல்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிமின் கடமை என்ன? இது தொடர்பாக ஆகஸ்ட் 4ஆம் தேதி, தமிழ் இந்துவில் ‘வந்தேமாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க முடியுமா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு வழக்கைப் பார்த்து வருவோம்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு இமானுவேல் என்ற 15 வயது மாணவனும், அவனது சகோதரிகளான பினோ மோள், பிந்து இமானுவேலும் பள்ளியில் தேசிய கீதம் பாடப்படுகையில் எழுந்து நிற்பார்கள். ஆனால், பாட மாட்டார்கள். ஜெகோவா விட்னஸ் என்ற கிறித்துவ மதப் பிரிவைச் சேர்ந்த அவர்கள், தங்கள் மத விதிகளின்படி, ஜேகோவாவைத் தவிர வேறு யாரையும் வாழ்த்தி எந்தப் பாடலையும் பாடக் கூடாது. அவர்கள் தேசிய கீதத்தைப் பாடாததன் பின்னணி இதுதான்.

இது ஒரு பத்திரிகையில் செய்தியாக வந்ததையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.சி.கபீர் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பினார். இதை விசாரிக்க ஒரு நபர் குழுவை அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கருணாகரன் அமைத்தார். ‘தேசிய கீதம் பாடப்படுகையில், இந்தப் பிள்ளைகள் அமைதியாக எழுந்து நிற்கின்றன, தேசிய கீதத்துக்கு எவ்விதமான அவமரியாதையும் செய்யவில்லை’ என்று அறிக்கை அளித்தது குழு.

ஆனால், தேசிய கீதம் பாடுவோம் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றது மாவட்ட நிர்வாகம். மூவரும் மறுத்தனர். இதையடுத்து, பள்ளியிலிருந்து மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தேசிய கீதத்தில் கடவுளைப் புகழும் வாக்கியங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் தேசிய கீதம் பாடாதது தவறு என்று தீர்ப்பளித்தது. அவர்களின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டி மற்றும் எம்.எம். தத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவர் தேசிய கீதம் பாடியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் எந்தச் சட்டமும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51-ஏ வின்படி ஒரு குடிமகன், அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. தேசிய கீதம் இசைக்கப் படுகையில் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர். எனவே, ஒன்று சேர்ந்து பாடாத காரணத்தால், அவமரியாதை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது.

இந்த வழக்கில் மாணவர்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை மற்றும் மதத்தைப் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் தந்த உரிமை ஆகியவை மீறப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம் என்று கூறி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. “நமது பாரம்பரியம் நமக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுத் தந்துள்ளது. நமது தத்துவங்கள் சகிப்புத்தன்மையை வலியுறுத்துகின்றன. நமது அரசியலமைப்புச் சட்டம், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது. நாம் அதை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம்’’ என்றும் குறிப்பிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேர் முரணாக அமைந்திருக்கின்றது என்பதைப் பார்க்கின்ற அதே வேளையில் ஒரு ஜெகோவா விட்னஸ் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்கும் போது முஸ்லிம்களாகிய நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தச் சமயத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் இப்ராஹீம் நபியைப் போன்று இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தியாகத் திருநாள் நம்மிடம் வந்து சென்றாலும் நமக்கு இன்றைய இந்தியச் சூழலில் இப்ராஹீம் நபியின் வழிகாட்டுதல் மிகவும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

செந்தழலில் தனது மேனி எரிந்து சாம்பலானாலும் இதயத்தில் ஏந்திய ஏகத்துவக் கொள்கையை விட்டு ஓர் இம்மியளவும் விலக மாட்டேன் என்ற அவர்களின் கொள்கை உறுதிப்பாடு நம்மிடத்தில் ஆர்த்தெழும் அக்கினி ஜுவாலையாகப் பற்றி எரிய வேண்டும்.

இன்றைய இந்தியச் சூழல் காவிச் சித்தாந்தத்தின் கரிச் சிந்தனையால் கருப்புச் சிந்தனையால் மாசு பட்டுக் கிடக்கின்றது.

அண்மையில் யோகா என்ற பெயரில் நம்மிடம் சூரிய வணக்கத்தை மத்தியில் ஆளும் காவி அரசு திணிக்கப் பார்த்தது. அடுத்த கட்டமாக காவிச்சிந்தனை, நீதிமன்றத்தின் கருப்பு ஆடையை அணிந்து கொண்டு வந்தே மாதரத்தைத் திணிக்கின்றது.

அனைத்திந்திய அளவில் கொஞ்சம் கொஞ்சம் ஏகத்துவ சிந்தனை வெளிச்சம் கொண்ட மத்ரஸாக்கள், ஜமாஅத்துகள், இஸ்லாமிய அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகள், இயக்கங்கள் அத்தனையும் இந்த இணைவைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. கொதித்து, கொந்தளித்து எழுகின்றன.

குறட்டை விட்டுக் கொண்டு கூண்டுக்குள் அடங்கிக் கிடப்பது பரேலவிய, ஷியா கொள்கைக் கூட்டம் மட்டுமே! அது எழப் போவதுமில்லை. இதற்காக எதிர்ப்புக் குரல் கொடுக்கப் போவதுமில்லை. காரணம், அந்தக் கொள்கையும் இந்து மதக் கொள்கையும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகும் கேடு கெட்ட கொள்கையாகும். மொத்தத்தில், படைப்பினத்தைக் கடவுளாக்கும் இருட்டுக் கோட்பாடாகும்.

தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா 2009ல் தேவ்பந்தில் நடத்திய 3 நாட்கள் மாநாட்டில் வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது; அதை முஸ்லிம்கள் பாடக்கூடாது என்று தீர்மானம் போட்டது. தேவ்பந்த் இன்றும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் காணமுடிகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தேவ்பந்த் மற்றும் இதர அரசியல் ஆன்மீக அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்துகளுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வந்தேமாதரத்திற்கு எதிரான அவர்களது போர்க்குரலைப் பாராட்டுகின்றது.

அந்த அடிப்படையில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் வந்தேமாதரம் என்ற இணைவைப்பிற்கு எதிராக இப்ராஹீம் நபியைப் போன்று எரிமலையாகப் பொங்கி எழும்படி தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.

இந்த வந்தேமாதரத்தை ஆதரித்து பாரதியார்,

நொந்தே போயினும்

வெந்தே மாயினும்

நந்தேசத்தவர்

உவந்து சொல்வது

வந்தே மாதரம்

என்று பாடிய பாடல் வரிகளை நாம் அப்படியே  மாற்றிப் பாடுவோம்.

நொந்தே போயினும் வெந்தே மாயினும் இந்திய தேசத்து முஸ்லிம்கள் நாங்கள் வந்தே மாதரம் ஒரு போதும் பாடமாட்டோம் என நம்மை அடக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதற்காக தீக்குண்டம் தான் இந்திய முஸ்லிம்களுக்குப் பரிசு என்றால் அதை ஏற்றுக் கொள்ள இப்ராஹீம் நபியைப் போன்று தயங்க மாட்டோம் என்று உரத்து சொல்லிக் கொள்கின்றோம்.

‘‘இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!’’ என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 29:24

தீக்குண்டவாசிகள் போன்று தீக்குண்டத் தண்டனையை ஏற்கவும் தயங்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துவோமாக!

நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!

வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக!

சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!

எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர்.

அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்’’ என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.

(அத்தியாயம் 85:1-8)

இந்த இறை வசனங்களில் தெறிக்கின்ற ஏகத்துவத் தீக்கனலை இந்த தியாகத் திருநாள் நம்மிடத்தில் பற்றி எரியச் செய்யட்டுமாக! அசத்தியக் கொள்கையை கரித்துப் பொசுக்கட்டுமாக!

—————————————————————————————————————————————————————————————

வந்தே மாதரம் வந்த வரலாறு

வந்தேமாதரம் தொடர்பாக விடுதலை இதழில் ஓர் ஆக்கம் வெளியானது. அதை ஏகத்துவ வாசகர்களின் பார்வைக்குத் தருகின்றோம். இது வந்தேமாதரம் வந்த வரலாற்றுப் பிண்ணனியைத் தெரிவிக்கின்றது.

வந்தேமாதரம்!”  வாழ்த்துப்பாடலா?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர்களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது.

அம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி போன்றவர்கள் பங்கு கொண்டனர்.

‘வந்தே மாதரம்’ பாடல் தேசபக்திப் பாடல் என்றும், தாய்நாட்டை வணங்குகிறோம் என்பது பொருள் என்றும், அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்ட மாநாட்டில் எப்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கலாம் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவாரக் கூடாரம் கூச்சல் போடுகிறது.

வந்தே மாதரம்” பாடல் என்பது என்ன?

ஒரு தேசபக்திப் பாடலை இசுலாமியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படியென்றால் இசுலாமியர்களுக்குத் தேசபக்தி இல்லையா? சங்பரிவார் வகையறாக்கள் கூறி வருவது மெய்தானோ என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் நிலவுதல் இயற்கையே!

அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது? அதனை எழுதியவர் யார்? அதன் உள்ளடக்கம் என்ன? என்பதுதான் முக்கியமாகும். வங்காளத்தில் கண்டபுரத்தில் 1838ஆம் ஆண்டில் பிறந்து 1894ல் மரணமுற்ற பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”

இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர்களுக்கு விரோதமானவை என்கிற அளவில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.

நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான்.

மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? மகேந்திரனின் கேள்வி இது.

நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிருக்குக்கூட ஆபத்து வந்து விட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது! என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.

உன் ஒருவனால் இதனைச் சாதிக்க முடியுமா? மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.

மகேந்திரன் மசியவில்லை. முசுலிம்களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவா நந்தன்.

“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார்கள். ஆனால் வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!’’ என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.

முயற்சியைக் கைவிடவில்லை – அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கிறான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!

“யார் அந்தத் தேவி?” என்று கேட்கிறான் மகேந்திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்தப் பாரத மாதாவின் புத்திரர்கள்” என்கிறான் கோயில் பூசாரி.

அடுத்து ஒரு காட்சி… “ஜெகத்தாத்ரி” எனும் ஒளிமயமாகக் காட்சியளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.

ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ஜெகஜோதியாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரியுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்? கேட்கிறான் மகேந்திரன்.

“அன்று ஜெகஜோதியாகக் காட்சியளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.

மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங்களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.

அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்திரனுக்குக் காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்தத் தாண்டவமே ஆடுகிறான்.

இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான் பவாநந்தன் விரித்த வலையிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.

படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத் தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப்பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?

பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:

“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா? என இளைஞர்களைத் திரட்டிச் முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளையடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின்றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.

ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.

“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம்களைக் கொல்லு! கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்” என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத்தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!” என்று பிரசங்கம்.

“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.

ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

ஒரு கால கட்டத்தில் இந்த வந்தே மாதரத்தைத் தூக்கிப் பிடித்தது காங்கிரசு! அப்பொழுது காங்கிரசு என்றாலே, பார்ப்பன தர்பார்தானே! அன்றைய பா.ஜ.க. சங்பரிவார் என்றுகூட அதனைச் சொல்ல முடியும்.

பாரதியார் கூட வந்தே மாதரத்துக்கு வக்காலத்து வாங்கியவர்தான்!

நொந்தே போயினும்

வெந்தே மாயினும்

நந்தேசத்தவர்

உவந்து சொல்வது

வந்தே மாதரம்

பாரதியைத் தொற்றிப் பிடித்த பார்ப்பன வாடைக்கு இந்த ஒருசோறு பதம்போதும்.

சட்டமன்றங்களில் என்ன நடந்தது?

1937-இல், ஒரிசா சட்டப் பேரவையில், “வந்தே மாதரம்” தேசிய கீதமாகப் பாடப்பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. அமர்ந்தேயிருந்தனர். இது சட்டப் பேரவைத் தலைவரிடமும் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறிக் கழன்று கொண்டு விட்டார் சபாநாயகர்.

ஒரிசாவில் மட்டுமல்ல! அதே காலகட்டத்தில் (1938-ல்) சென்னை மாநிலத்தில் என்ன நடந்தது? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அப்பொழுது பிரதமர். (அப்பொழுது பிரதமர் என்றுதான் பெயர்)

சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் ஆந்திரப் பகுதி – கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற வழக்குரைஞர். இவர் சுதந்திரப் போராட்டத்துக்காக அத்தொழிலை உதறி எறிந்தவர் – மேல் சட்டை கூட அணியாதவர்.

வந்தேமாதரம் பாடலை சட்டமன்றம் தொடங்கப்படும் போது பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை! ஆசை நிறைவேற்றப்பட்டது. முசுலிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.

வறட்டுத்தனமாகக் கூச்சல் போடவில்லை அவர்கள்; வளமான காரணத்தையும் எடுத்துக் கூறினார்கள். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் ஒரு பாடலை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்க் கேள்வி வைத்தார்கள்.

பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மத முத்தேவிகளும் அப்பாடலில் துதிக்கப்படுகிறார்கள். எனவேதான் இந்த எதிர்ப்பு. குல்லுகப்பட்டர் ஆச்சாரியார் (ராஜாஜி) பிரதம அமைச்சர் ஆயிற்றே! இதற்கு ஏதாவது ஓரு வழி செய்ய வேண்டாமா? அப்படி செய்யாவிட்டால் அவர் எப்படி ராஜாதந்திரியாவார்?

சபை அலுவல் தொடங்கும் நேரம் காலை 11.00 மணி; இதற்கு முன்னதாக “வந்தே மாதரம்” பாடிவிடலாம்; மற்றவர்கள் இதற்குப் பின் சபைக்கு வரலாம் என்பது தான் அந்த சமாதான நடவடிக்கை.

இன்னொன்றையும் கூட அவர் சேர்த்துக் கூறினார்: வேண்டுமானால் வந்தே மாதரத்துடன் மற்ற மதத்துப் பாடல்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார்.

ஆனால் முசுலிம்களிடம் அந்தப் பருப்பு வேகவில்லை. சட்டமன்றத்தில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்கள் பெயரில் பாடல் இடம் பெறக் கூடாது என்பதிலே மிக உறுதியாக இருந்தார்கள்.

வேறு வழியில்லை, வந்தே மாதரம், கைவிடப்பட்டது. கெஞ்சினால் மிஞ்சுவார்கள். மிஞ்சினால் கெஞ்சக் கூடியவர்களாயிற்றே பார்ப்பனர்கள்.

72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரச்சனை தலைதூக்கி நிற்கிறது.

சவுத்துப்போய்க் கிடக்கும் சங்பரிவாரக் கூடாரம் இதனைத் தூக்கிப்பிடித்து உயிர் தப்பித்துக் கொள்ளலாமா என்று முண்டிப் பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட முசுலிம்களின் பிரச்சினை மட்டுமல்ல.

மதச்சார்பற்ற சக்திகளின் மகத்தான பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலே உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்றித் தீர வேண்டிய பிரச்சினையும் கூட!

பார்ப்பனியத்தின் நிலைப்பாடு என்ன?

சங்பரிவார் என்பது ஒரு முகமூடி; அதனுள் உறைந்திருப்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனியம். அதற்குள் பதுங்கிக் கிடப்பது ‘ஆனந்த மடங்கள்’ என்பதை மறந்துவிடக் கூடாது.

முசுலிம் மசூதிகளை இடியுங்கள்! அந்த இடத்திலே ராதா மாதவரின் ஆலயத்தைக் கட்டுங்கள்! என்று ‘ஆனந்தமடம்’ நாவலில் கேட்ட அதே சூளுரையைத் தானே 1992 டிசம்பரில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது கேட்டோம்.

அன்றைக்கு “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்று வலியுறுத்திய அதே குரலைத்தான் பாரதிய ஜனதா ஆட்சியின் போது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடவேண்டும் என்ற குரலாக ஒலித்தது.

காலம் மாறலாம்; ஆனால் காவிகளின் பார்ப்பனியத்தின் கபடநெஞ்சம் மட்டும் மாறுவதில்லை; மாறுவதேயில்லை!

—————————————————————————————————————————————————————————————

மனாருல் ஹுதாவின் மடமைத்தனங்கள்!

அபூஆதில்

சென்னை, காஷிஃபுல் ஹுதா மதரசாவை மையமாகக் கொண்டு மனாருல் ஹுதா எனும் மாத இதழ் வெளிவருகிறது.

இதை நடத்துவோர் மத்ஹபைப் பின்பற்றுவோர் என்பதால் அதில் எழுதப்படும் கட்டுரைகளில் குர்ஆன் – ஹதீஸ் ஆதாரத்தையோ, அறிவுப்பூர்வமான கருத்தையோ எதிர்பார்க்க முடியாது.

மத்ஹப் எனும் பெருங்குப்பையிலிருந்து சிந்திச் சிதறிய சிறு குப்பை தான் மனாருல் ஹுதா என்பதால் குர்ஆன் ஹதீசில் ஆதாரமில்லாத பல உளறல்களைச் சுமந்தவாறு அந்த இதழ் வெளிவருவதில் ஆச்சரியம் கொள்ள ஒன்றுமில்லை.

மனாருல் ஹுதாவின் கடந்த ஜூன், ஜூலை 2017 மாதங்களுக்கான இரட்டை இதழ் இணைப்பை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. அதில் கேள்வி – பதில் என்ற பெயரில் இவர்கள் செய்யும் கேலிக்கூத்துக்களைக் காண முடிந்தது.

மார்க்கத்தை இப்படிக் கேவலப்படுத்துகிறார்களே என்று கவலை கொள்வதா? அல்லது அதில் சொல்லப்படும் சட்டங்களைக் கண்டு சிரிப்பதா? என்று வாசிப்போர் பலரையும் குழப்பம் கொள்ளும் அளவு அந்த இதழின் தரம் அமைந்துள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மனாருல் ஹுதாவின் தரத்தையும், மத்ஹபின் வார்ப்பையும் அறிய அதில் இடம் பெற்ற ஒரு சில கேள்வி – பதில்களைப் படித்தாலே போதுமானது.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு அறியத் தருகிறோம்.

கேள்வி: கண், காது போன்றவற்றில் மருந்து செலுத்தினால் நோன்பு முறியுமா?

பதில்: கண்ணில் சுர்மா, மருந்து போன்றவை போடுவதால் நோன்பு முறியாது. ஆனால் காதில் மருந்து செலுத்தினால் நோன்பு முறிந்து விடும். ஏனெனில் காதிற்கும் மூளைக்கும் மத்தியில் தொடர்பு உள்ளது. காதில் போடப்படும் மருந்து மூளைக்குச் செல்வதால் நோன்பு முறிந்து விடும்.

மனாருல் ஹூதா, பக்: 11

ஆஹா என்ன ஒரு தத்துவம்!

கண்ணில் மருந்திட்டால் நோன்பு முறியாதாம். காதில் மருந்திட்டால் நோன்பு முறிந்து விடுமாம்.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் காதிற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளதாம். அதனால் காதில் இடப்படும் மருந்து நேரடியாக மூளைக்குச் சென்றுவிடுவதால் நோன்பு முறிந்து விடுகிறதாம்.

இவர்களுக்கும், மூளைக்கும் சம்பந்தம் உண்டா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் மூளையுடன் தொடர்பு உள்ளது என்பது அடிப்படை. மூளையின் கட்டளையின் படியே அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன.

மூளைக்கும், கண்ணுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது மருத்துவ உலகில் அறியப்பட்ட ஒன்று.

அப்படியிருக்க கண்ணுக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று கன்னாபின்னாவென்று உளறிக் கொட்டுகின்றனர்.

அது தவிர, காதுக்கும் மூளைக்கும் சம்பந்தம் உண்டா என்று பார்ப்பதற்கும் நோன்பு முறிவுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

நாம் வாசித்தால், அல்லது பிறரது பேச்சைக் கேட்டால், அல்லது சிந்தித்தால் அவை மூளையில் பதிவாகிறது. எனவே இதனால் நோன்பு முறியும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

மேலும் காதின் உள் பகுதியில் ட்ரம் எனும் சவ்வு உள்ளது. காதில் போடப்படும் சொட்டு மருந்து அதைக் கடந்து செல்லாது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

பொதுவாக மருந்து உண்ணும் நிலையில் உள்ள நோயாளி நோன்பை விட்டு விட்டு வேறு நாளில் வைத்துக் கொள்வதே சிறந்தது என்று மார்க்கம் வழிகாட்டுகிறது.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

அதையும் மீறி நோன்பு நோற்ற நிலையில் சத்துக்காக ஊசி, குளுக்கோஸ் போன்ற மருந்துகளை உடலில் ஏற்றினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும். எனவே இதன்படி இவரது நோன்பு முறிந்து விடும்.

ஆனால் கண், காதில் சொட்டு மருந்துகளை இடுவதால் இது உணவின் இடத்தை அடைவதில்லை. அதனால் கண், காதில் மருந்து போடுபவரை நோன்பை முறித்துக் கொண்டவராகக் கருத முடியாது என்று பாமரனுக்குத் தெரியும் விஷயம் கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

உதாரணமாக குளிக்கும் போது கண், காது வழியாக நீர் உட்புகுகிறது என்பதால் நோன்பு முறிந்து விடுமா? இது போலத்தான் கண் காதில் மருந்து இடும் போதும் நோன்பு முறிவதில்லை.

இதை விளக்குவதை விட்டு விட்டு, மூளைக்கும் கண்ணிற்கும் சம்பந்தமில்லை என மனித அறிவுக்குத் தொடர்பற்ற கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மனாருல் ஹூதாவின் அடுத்த கேள்வி பதிலைப் பார்ப்போம்.

இஃதிகாப் என்ற பிரிவில் பின்வரும் கேள்வி பதிலை இடம்பெறச் செய்துள்ளனர். இவர்கள் எத்தகைய கோமாளிகள் என்பதோடு மார்க்கத்தை பரிகாசப் பொருளாக ஆக்கிக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பதிலைப் படித்து விளங்கலாம்.

இஃதிகாப்

கேள்வி: பீடி, சிகரெட் பழக்கமுள்ளவர்கள் அதற்காக வெளியேறலாமா?

பதில்: இஃதிகாப் இருப்பதற்கு முன்பாகவே அவைகளை விட்டு விட முயற்சிக்க வேண்டும். முடியாவிட்டால் அளவையாவது குறைத்துக் கொள்ள வேண்டும். அறவே முடியாவிட்டால் சிறுநீர் கழித்தல் போன்ற தேவைக்காக செல்லும் போது அவற்றை செய்து கொண்டால் இஃதிகாப் முறியாது. ஆனால் பீடி, சிகரெட்டிற்காகவே சென்றால் முறிந்து விடும்.

மனாருல் ஹூதா, பக்: 15, 16

இஃதிகாப் இருக்கும் போது வெளியே வந்து பீடி, சிகரெட் குடிக்கலாமா என்று கேள்வி எழுப்பினால் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். கழிவறை செல்லும் போது குடித்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

மூளையற்றவர்களால் தான் இப்படியொரு பதிலை அளிக்க முடியும்.

பாவங்களிலிருந்து விலகி, இறையச்சத்தோடு நன்மையில் ஈடுபட்டு, இறை அருளைப் பெறும் நோக்கில் பள்ளியில் வந்து தங்கியிருத்தலே இஃதிகாப் எனப்படுகிறது.

இந்த நோக்கத்தில் வருபவன் கண்டிப்பாக பீடி, சிகரெட் குடிக்கலாமா என்று கேள்வி எழுப்பமாட்டான். அப்படியே எழுப்பினாலும் அதற்கு எப்படிப் பதிலளித்திருக்க வேண்டும்?

அல்லாஹ்வை அஞ்சும் ஒரு முஃமின் இஃதிகாபின் போது இவைகளைப் பற்றி யோசிக்கலாமா? பள்ளிவாசல் தொடர்பில் இருந்து கொண்டு பாவத்தைப் பற்றி பேசலாமா? என்று அறிவுறுத்தலாம். அல்லது இப்பாவத்தை விட மனமில்லை என்றால் எதற்கு இஃதிகாப் இருக்க வந்தீர்கள் என்று கடுஞ்சொற்களால் கண்டிக்கலாம்.

இங்கே என்ன பதிலளிக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்!

ஒரு நாளைக்கு பத்து சிகரெட் புகைப்பவன் இஃதிகாபின் போது ஐந்து சிகரெட் புகைத்துக் கொள்ளலாம். இது தான் மனாருல் ஹுதாவின் மார்க்கத் தீர்ப்பு (?).

கழிவறைக்குச் செல்லும் போது மட்டும் பீடி, சிகரெட் புகைத்துக் கொள்ளலாமாம். விட்டால் இவர்களே கழிவறையில் பீடி, சிகரெட் வாங்கி வைப்பார்கள் போலும். அல்லது கழிவறைக்குப் பக்கத்திலேயே இஃதிகாப் இருப்போருக்கான ஸ்மோக்கிங் ஏரியா – புகை பிடிப்பதற்கான பிரத்தியேக இடவசதி ஏற்பாடு செய்து தருவார்கள் போலும்.

என்னவொரு மடமைத்தனமான தீர்ப்பு.

பொதுவாக ஒரு நன்மையுடன் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்தை இணைத்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் தக்க கண்டனத்தைப் பதிவு செய்து விட வேண்டும்.

மது குடிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறலாமா? மறந்து விட்டால் இடையில் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி கூறலாமா என்று கேள்வி எழுப்புபவனுக்குப் பக்குவமாகப் பதிலளித்தால் சரிப்பட்டு வராது.

என்ன மார்க்கத்துடன் விளையாடுகிறாயா? என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்து விட வேண்டும். மார்க்க அறிவற்ற மத்ஹபு வெறியர்களிடம் இத்தகைய அணுகுமுறையை எதிர்பார்ப்பது பெரும் தவறு என்பதை மனாருல் ஹுதாவின் இந்தக் கேள்வி – பதில் தெளிவாக உணர்த்தி விட்டது.

மனாருல் ஹுதாவின் மடமைத்தனம் இத்துடன் முடிந்து விடவில்லை. இன்னும் தொடர்கிறது.

இவர்களின் அடுத்த அக்மார்க் உளறலை முடிந்தால் சிரிக்காமல் படியுங்கள்.

கேள்வி: நோன்பிருக்கும் நிலையில் ஈ. கொசு அல்லது ஏதேனும் திடமான தூசி போன்ற வஸ்துக்கள் வாயினுள் சென்று அதை விழுங்கி விட்டால் நோன்பு முறியுமா?

பதில் முறியாது. ஆனால் வேண்டுமென்றே செய்தால் முறிந்து விடும்.

மனாருல் ஹூதா

இவர்களின் ஆய்வுக்கு எல்லையே இல்லையா?

நோன்பாளியின் வாயிற்குள் ஈ, கொசு போனால் என்ன சட்டம் என்று விளக்க முற்படுகிறார்கள்.

அதுவாகப் போனால் நோன்பு முறியாதாம். ஓகே. இதில் பிரச்சினை இல்லை.

வேண்டும் என்றே இவற்றை விழுங்கினால் நோன்பு முறிந்து விடுமாம்.

ஒரு நோன்பாளி ஈ, கொசு போன்றவற்றை ஏன் வேண்டுமென்றே விழுங்க வேண்டும்? அவ்வளவு வறுமையிலும் பட்டியினிலுமா இருக்கிறான்? அட இதைக் கூட விட்டு விடலாம்.

எந்த கிறுக்கனாவது தூசியை விரும்பி விழுங்குவானா? அது என்ன தூதுவளை மிட்டாயா?

முன்பெல்லாம் நோன்பாளியை ஆபாசமாகச் சித்தரித்து கேள்வி எழுப்பி (?) பதிலளிப்பார்கள்.

இப்போது முட்டாளாகச் சித்திரித்து கேள்வி – பதிலை அமைக்கின்றார்கள்.

என்று தான் திருந்துவார்களோ? அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

அவர்களின் அடுத்த உளறலையும் பார்த்து விடுவோம்.

கேள்வி: கண்ணீர் துளிகளை அல்லது முகத்திலுள்ள வியர்வையை நோன்பாளி பருகினால் சட்டமென்ன?

பதில்: ஓரிரு துளிகளை விழுங்கினால் நோன்பு முறியாது. அதிகமாக இருந்து அதை ஒன்று சேர்த்து விழுங்கினால் நோன்பு முறிந்து விடும்.

மனாருல் ஹூதா, பக்: 23

இவர்களின் சிந்தனைப் போக்கு எங்கே போய் நிற்கின்றது என்று பாருங்கள்.

வியர்வை, கண்ணீரில் ஓரிரு துளியை விழுங்கினால் நோன்பு முறியாதாம். ஒன்று சேர்த்து விழுங்கினால் நோன்பு முறியுமாம்.

கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கூட வியர்வையையும், கண்ணீரையும் சேகரித்து மக்கள் குடித்தார்கள் என்று வரலாறிருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

இவர்களோ நோன்பாளி இதைக் குடித்தால் என்ன என்று சட்டம் எழுதுகிறார்கள்.

ஓரிரு துளியை விழுங்குபவனுக்கு நோன்பு முறியாது என்று கூறுவதன் சூட்சுமம் என்னவென்பதும் விளங்கவில்லை.

சுருக்கமாக சொல்லப் போனால் மனாருல் ஹுதாவின் மொத்த டீமும் உடனடியாக ஒரு நல்ல மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுதலே நலம். அதுவே காலத்தின் கட்டாயம்.

—————————————————————————————————————————————————————————————

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

M.A. அப்துர் ரஹ்மான் இஸ்லாமியக் கல்லூரி

மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான்.

இதற்கு மிக முக்கியக் காரணம், இறைவன் மனிதர்களைப் பாவம் செய்பவர்களாகவே படைத்திருக்கின்றான். ஆனால் பாவம் செய்கின்ற மனிதன் தன்னுடைய பாவச் செயல்களிலேயே மூழ்கி விடாமல் அந்தப் பாவத்திலிருந்து திருந்துவதற்கான வழிவகையையும் அல்லாஹ் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.

எந்த அளவிற்கென்றால் மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் தான் மனிதர்கள் என்றும், செய்த தவறுக்காகத் திருந்தி, வருந்தி, கண்ணீர் விட்டுக் கதறி அழுது இறைவனிடம் சரணடைபவர்களே சிறந்தவர்கள் என்றும் அல்லாஹ் அற்புதமான முறையில் மனித சமுதாயத்திற்குப் பாடம் நடத்துகின்றான்.

அல்லாஹ்வுக்குப் பிடித்தமானது

பாவம் செய்பவர்களையும், செய்த  பாவத்திற்குத் தாமதிக்காமல் மன்னிப்புத் தேடுபவர்களையும் அல்லாஹ் விரும்புகின்றான். கூடுதலாகச் சொல்வதென்றால், பாவம் செய்து பின்னர் மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான செயல் என்று சொல்கின்ற அளவிற்கு இறைவனின் வார்த்தைப் பிரயோகம் அமைந்திருக்கின்றது.

நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5302

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றி விட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5304

அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் பண்பு அல்லாஹ்வுக்கு உண்டு. அந்தக் குணத்தை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கவே அல்லாஹ், பாவம் செய்யும் மக்களைப் படைப்பான். நன்மை செய்வோருக்கு நற்பலன் வழங்குவதை அல்லாஹ் விரும்புவதைப் போன்று, தீமை செய்வோருக்கு மன்னிப்பு வழங்குவதையும் அவன் விரும்புகிறான். அல்லாஹ்வின் இந்த தாராள குணத்தை விளங்கி, பாவத்திலிருந்து மீண்டு பாவமன்னிப்புக் கேட்பவர்களை அல்லாஹ் அதிகமதிகம் நேசிக்கின்றான்.

திரும்பத்திரும்ப பாவம் செய்தாலும் மன்னிப்பு

திரும்பத் திரும்ப பாவம் செய்து விட்டு, திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் அதை அல்லாஹ் ஏற்பான். நூறு முறை என்ன, ஆயிரம் முறை இவ்வாறு செய்தாலும் சரியே! ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெற்றாலும், அல்லது மொத்தமாகப் பாவங்களைச் செய்து விட்டு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அது இறைவன் நாடினால் ஏற்கப்படும். இது அல்லாஹ்வின் ஒப்பற்ற கருணையையும், அடியார்கள் மீது அவனுக்குள்ள பரிவையையும் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:

ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு இறைவா!  என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று கூறினார். உடனே இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான்’’ என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்.

அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியான் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்து விட்டேன்’’ என்று சொல்கிறான்.

நூல்: முஸ்லிம் 5322

திரும்பத் திரும்ப எத்தனை முறை பாவம் செய்தாலும் இறைவனிடத்திலே கண்ணீர் விட்டுக் கதறி அழுது பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அந்த அடியானைப் பார்த்து சந்தோஷம் அடைந்து, அவனுடைய பாவத்தை மன்னிக்கின்றான்.

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு அடியாரிடத்திலும் இறைவன் ஒரு ஷைத்தானை உடன் வைத்திருக்கின்றான். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும், கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக் கொண்டிருக்கின்றான். அதுதான் அவனது மனோஇச்சை. ஒரு குற்றத்தைச் செய்ய முனையும் போது உள் மனம் மனிதனைத் தடுக்கும். ஆனால், மன விருப்பமும், பேராசையும் மேலோங்கி விட்டால் மனிதன் அதற்கு அடிமையாகி தவறிழைத்து விடுகின்றான்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (வேறு துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?’’என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்என்றார்கள். ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ஆம்என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 7288

இறைவனின் அளப்பரிய கிருபையினால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் அருட்கொடை ஷைத்தானை நபி (ஸல்) அவர்களுக்குப் பணியச் செய்து விட்டான். அவனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்து விட்டான். மற்ற எல்லா மனிதர்களிடத்திலும் ஷைத்தான் உடன் இருந்து வழிகெடுத்துக் கொண்டே இருப்பான் என்று கூறி மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள்.

தவறுகளின் பிறப்பிடம்

பொதுவாகவே மனிதன் செய்கின்ற தவறுக்கு மிக முக்கியக் காரணம் அவனது உடலிலே உள்ள ஒரு உறுப்பு தான். அந்த உறுப்பு விஷயத்தில் மனிதர்கள் கன கச்சிதமாகப் பாதுகாப்போடு நடந்து கொண்டால் மனிதனை வழி தவறச் செய்வதற்கு யாராலும் முடியவே முடியாது. அந்த உறுப்பு தான் உள்ளம். இந்த உள்ளத்தை எல்லா மனிதர்களுக்கும் இறைவன் பலவீனமாகவே படைத்திருக்கின்றான்.

இந்த உள்ளம் நன்மையான காரியங்களை அதிகம் செய்யத் தூண்டுவதை விட தீமையான காரியங்களைத் தான் அதிகமதிகம் செய்யத் தூண்டுகிறது. இந்த உள்ளம் எல்லா மனிதர்களுக்கும் மிக மிகப் பலவீனமானதாகவே படைக்கப்பட்டிருக்கின்றது.

பலவீனமான இந்த உள்ளத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்’’ என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: முஸ்லிம்  5161

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உள்ளம் என்பது அல்லாஹ்வின் கரத்திலே இருக்கின்றது. அல்லாஹ் அந்த உள்ளத்தைப் புரட்டுகின்றான்.

நூல்:அஹ்மத்  13721

இன்னும் கூறுகிறார்கள்:

உள்ளம் என்பது பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகைப் போன்றது. எந்தத் திசையில் காற்று வீசுகிறதோ அந்தத் திசையை நோக்கி அது செல்கிறது.

நூல்: அஹ்மத்

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூமியிலே கிடக்கின்ற ஒரு இறகோடு ஒப்பிடுகிறார்கள். காற்று வீசும் திசையில் பறக்கும் இறகு போல் பலவீனமாக மனித உள்ளங்கள் இருக்கின்றன என்பதை இதிலிருந்து அறியலாம்.

வருந்தி, திருந்துவோருக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்

மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நாம் செய்கின்ற தவறுகளை எண்ணி வருந்தி, திருந்தி அந்தத் தவறுகளுக்காக இறைவனிடத்திலே சரணடைந்து மன்னிப்புக் கேட்டு விட்டால் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். நாம் திருந்தியதற்காக நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.

இன்னும் கூடுதலாகச் சொல்வதென்றால், இறைவனுக்கு அஞ்சி நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற காரியங்களில் நான் ஈடுபட மாட்டேன் என்று உளப்பூர்வமாக உறுதி கூறினால் நமக்கு வழங்குகின்ற கண்ணியம், மகத்துவம், சிறப்பைப் போன்று வேறு யாருக்கும் இறைவன் வழங்கவில்லை என்று சொல்கின்ற அளவுக்கு இறைவன் நம்மைக் கண்ணியப்படுத்துகின்றான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

பாவம் செய்து விட்டு அந்தப் பாவத்திற்காக வருந்தி, திருந்தி மன்னிப்புக் கேட்டவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய நாவால் கண்ணியப்படுத்தி மொழிந்த வார்த்தைகளைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்:

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக’’ என்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக’’ என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?’’ என்று கேட்டார்கள். அவர், “விபசாரக் குற்றத்திலிருந்துஎன்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?’’ என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?’’ என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபசாரம் செய்தீரா?’’ என்று கேட்டார்கள். அவர் ஆம்என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது’’ என்று கூறினர். வேறு சிலர்,  “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, ‘என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்என்று கூறினார்’’ என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்’’ என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!’’ என்று மக்கள் வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3499

இந்தச் செய்தியை நன்றாகக் கூர்ந்து படித்துப் பாருங்கள்! பாவம் செய்து விட்டு. திரும்பத் திரும்ப வந்து ‘என்னைத் தூய்மைப்படுத்துங்கள்! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்!’ என்று முறையிடுகிறார். தான் செய்த பாவத்தை எண்ணி, திருந்தி, இறைவனுக்கு பயந்ததன் காரணத்தினால் தான் திரும்பத் திரும்ப வந்து தண்டனையைக் கேட்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தத் தோழர் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்ததன் காரணத்தினால், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? இவர் போதையில் இருக்கின்றாரா? என்று கேட்ட பிறகும் கூட இவரது உள்ளம் தண்டனையைத் தேடுகிறது. தன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே நாம் செய்த தவறை மூடி மறைத்து விடலாம் என்று இவர் கடுகளவு கூட நினைக்கவில்லை. இவர் நினைத்திருந்தால் தான் செய்த தவறை யாருக்குமே தெரியாமல் மூடி மறைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அல்லாஹ்வுக்குப் பயந்து தவறை ஒத்துக் கொண்டு தண்டனையையும் பெறுகிறார்.

கூடுதலாகச் சொல்வதென்றால், இவர் மரணித்த பிறகு இவரைப் பற்றி மக்களில் சிலர் தவறான கருத்தைப் பதிய வைக்கின்றார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடைத்து விட்டு, இவரது பாவமன்னிப்பை ஒரு சமுதாயத்துக்குப் பங்கு போட்டுக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானது என்று கூறி, பாவமன்னிப்புக் கேட்டு வருந்தி திருந்தியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மகத்தான முறையில் கண்ணியப்படுத்தியிருக்கிறார்கள்.

இது போன்ற மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஃகாமிதிய்யாகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)’’ என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தை’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா’’ என்றார்கள்.

பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) அவர்களின் முகத்தில் தெறித்தது.

அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்’’ என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார்.

நூல்: முஸ்லிம் 3499

இதே போன்று இன்னொரு செய்தியும் உள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விபசாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என் மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, “இவளை நல்ல முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்’’ என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபசாரம் புரிந்தவள் ஆயிற்றே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?’’ என்று கேட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3500, 3501

ஒரு பெண்மணி தான் செய்த பாவத்தை எண்ணி, அல்லாஹ்வுக்குப் பயந்து தண்டனையைப் பெறுகிறாள். எந்தப் பெண்ணாவது தன்னுடைய மூன்று வயது குழந்தையை விட்டு விட்டு சாவதற்குத் துணிவாளா? எனக்கு என்னுடைய குழந்தையை விட, இறைவனிடத்திலே வழங்கப்படுகிற வேதனை தான் பெரியது என்று எண்ணி பெற்றெடுத்த தன்னுடைய குழந்தையைத் தியாகம் செய்கிறாள்.

கல்லை எடுத்து ஒரு தோழர் அந்தப் பெண்மணி மீது எறிகிறார். அந்தப் பெண்மணியின் இரத்தம் கையில் விழுந்தவுடன் “சீ” என்று விமர்சிக்கிறார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லக் கூடாது என்று கண்டித்து, அந்தப் பெண்ணைக் கண்ணியப்படுத்துகிறார்கள்.

அடுத்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு முன்வரும் போது உமர் (ரலி) தடுக்கிறார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கொடுக்கின்ற அருமையான பதிலைப் பார்த்தால் பாவம் செய்து விட்டுத் திருந்துவோருக்கு இஸ்லாம் கொடுக்கின்ற கண்ணியத்தைப் பறைசாற்றுகிறது.

இந்தச் செய்திகள் நமக்கு நடத்துகின்ற பாடம் என்ன?

ஒரு மனிதன் தான் செய்த பாவத்திற்கு வருந்தி, திருந்தி படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் அவர்களுக்கு இஸ்லாம் வழங்குகின்ற கண்ணியம், மகத்துவம், சிறப்பு அளப்பரியது என்பதை விளங்க முடிகின்றது.

மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை. அதே நேரத்தில் பாவம் செய்து விட்டுத் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அந்த அடியானின் பாவத்தை மன்னித்து விட்டாலோ அல்லது அந்தப் பாவத்திற்குத் தண்டனையை இந்த உலகத்திலேயே பெற்று விட்டாலோ அத்துடன் அவனது பாவத்தை அல்லாஹ் முடிவுக்குக் கொண்டு வருகின்றான். மேலும் இஸ்லாம் அந்த அடியானை விடச் சிறந்த ஓர் அடியான் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு அவனை மேன்மைப்படுத்துகிறது.

எனவே, மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. ஆனால் அந்தப் பாவத்தைத் தொடராக செய்து கொண்டே இருக்காமல், ஷைத்தானின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விலகி, அல்லாஹ்விடத்திலே மன்றாடி பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அல்லாஹ் நம்மை நிச்சயம் மன்னிக்கின்றான்.

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களில் திருந்துவோரே சிறந்தவர்கள். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் திருந்துவதற்கு முயற்சிப்போம் இறைவனுக்காக!!!

—————————————————————————————————————————————————————————————

மாதவிடாய் காலத்தில் மாதரை வதைக்கும் மதங்கள்

எம். ஷம்சுல்லுஹா

பொதுவாக யூத, இந்து மதங்களுக்கு மத்தியில் பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

  1. உயர் ஜாதி

உலகத்தில் யூதர்கள் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள். அது போல் தான் (உயர் ஜாதி) இந்துக்கள்,

  1. யூதர்கள் காளை மாட்டைக் கடவுளாக வணங்குபவர்கள். இந்துக்கள் பசுவைக் கடவுளாக வழிபடக்கூடியவர்கள்.
  2. மாதவிடாயின் போது யூதர்கள் பெண்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அது போன்று தான் இந்து மதத்தினரும் பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இங்கே இந்து மதம் என்று நாம் குறிப்பிடுவது ஆரிய இந்து மதமாகும்.

இப்படி சில ஒற்றுமைகளை நாம் யூத, இந்து மதங்களுக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கின்றோம். இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக இந்த மூன்றாவது ஒற்றுமையைப் பார்ப்போம்.

எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் மாதவிடாய் பற்றி கூறுகின்றான்.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

இந்த வசனம் இறங்கியதற்குரிய காரணத்தை முஸ்லிமில் இடம் பெறுகின்ற பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ‘‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.

நூல்: முஸ்லிம் 455

இந்த ஹதீஸ் யூத மதம் எப்படிப் பெண்களை மாதவிடாயின் போது தனிமைப்படுத்தி, கொடுமைப் படுத்துகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. இதே கொடுமையைத் தான் இந்து மதம் செய்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டு நேபாளம். உலகில் ஓரே தனி இந்து மத நாடு என்று சொல்லப்படுகின்ற நாடாகும். அந்த நாட்டின் மேற்கு மாநிலங்களில் இன்றளவும் நவீனம் நுழையவில்லை. இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் சுலபமாகச் செல்ல முடியாது. இங்குள்ள மக்கள் கல்வியறிவும் இல்லாதவர்கள். வடமேற்கு மாநிலங்களில் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

சாபக்கேடான சாவ்பாடி குடிசை

இப்பகுதியில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் இந்து மதத்தின் பெயரால் சொல்ல முடியாத சோதனைகளை அனுபவிக்கின்றனர். மாதவிடாய்க் காலத்தில் இவர்களுக்கு வெறும் சுடுநீரில் கரைத்த மாவும், சிறிதளவு வெல்லமும் தான் உணவு! இவர்கள் எதையும் தொட்டுவிடக் கூடாது, அப்படித் தொட்டால் அது தீட்டாகிவிடுமாம்.

ஆகையால் மாதவிடாய் வந்தவர்களை ஊரைவிட்டுத் தள்ளி, எந்த ஒரு பாதுகாப்புமே இல்லாத ஒரு மிகவும் சிறிய குடிசையில் தங்க வைக்கின்றனர். இந்த குடிசைக்கு “சாவ்பாடி” என்று பெயர்.

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய்க் குடிசையில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குடிசைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது; கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால், சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்கவேண்டியிருக்கும். ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய்க் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி முடியாத எத்தனையோ துன்பங்கள். மாதவிடாய்க் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

மாதவிடாயின் போது இரத்தப் போக்கு கடவுளுக்கு எதிரானது; ஆகவே இவர்களை ஊரில் வைத்திருப்பது பேரழிவைத் தந்துவிடுகிறதாம். ஆகவே கடவுளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்க வழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதம் என்ற நம்பிக்கையால், இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் எந்தப் பெண்களும் இதை எதிர்ப்பதில்லை.

மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இந்து மதம்.

சாவ்பாடியை ஒழிக்க அரசின் சிறப்பு சட்டம்

இந்த சாவ்பாடி குடிசைகளில் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியோ தொடர்ந்து பெண்கள் மரணமடைந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய்க் குடிசை தீப்பிடித்து எரிந்ததில் 3 பெண்கள் மரணமடைந்தனர்.

நேபாள அரசாங்கம் 2006ஆம் ஆண்டு சாவ்பாடியை ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. இருப்பினும் நேபாளத்தில் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சில இடங்களில் மாதவிடாய்க் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது.

மூத்திரத்தைத் தெளிக்கும் மூடப் பழக்கம்

மாதவிடாய் முடிந்த பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவரோ பசுவின் மூத்திரத்தை மாதவிடாய் நின்ற பெண்களின் கைகளில் ஊற்ற, பெண்ணும் அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார். பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும், அவர்கள் பயன்படுத்தித் துவைத்து வைத்திருக்கும் துணிகளின் மீதும் மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துவார்கள்.

இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்களைக் காப்பாற்ற நேபாள அரசு கடுமையான சட்டமொன்றை இயற்றியுள்ளது.

இது நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மாதவிலக்குப் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலோ, அவர்களை சாவ்பாடி குடிசைக்குச் செல்லுமாறு வற்புறுத்தினாலோ அவர்களுக்கு 3 மாதம் சிறைதண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ஏற்கெனவே சில கடுமையான சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டதன் விளைவுதான் கடந்த ஆண்டு இந்த குடிசை எரிந்து 3 பெண்கள் மரணமடைந்தனர்.

நேபாளத்தைப் பொறுத்தவரை உலகிலேயே ஒரே ஒரு இந்துமத அரசு அங்குதான் கோலோச்சியது.

அரசும் இந்து மதம் என்று ஆன நிலையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கேட்கவும் வேண்டுமா?

மாதவிடாயும் தடைகளும்

மாதவிடாய் என்பது மாதா மாதம் பெண்களுக்கு ஏற்படுகின்ற ஓர் உடல் ரீதியிலான தொல்லை. அதனால் அந்தக் காலக்கட்டத்தில் உடலுறவை மட்டும் இஸ்லாம் தவிர்க்கச் சொல்கின்றது. அத்துடன் வேறு எந்தத் தீண்டாமையையும் கடைப்பிடிப்பதை அனுமதிக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் புனித ஹஜ்ஜுக்குச் சென்ற சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) யிடம் ஹஜ்ஜின் வணக்கங்கள் அனைத்தையும் செய்யச் சொல்கின்றார்கள். அதே சமயம் புனிதப் பள்ளியான கஃபா எனும் இறை ஆலயத்தில் வலம் வர வேண்டாம், அதாவது தவாஃப் என்ற அந்த வணக்கத்தைச் செய்ய வேண்டாம் என்று மட்டும் தடுக்கின்றார்கள். (புகாரி  294)

பெண்கள் இது போன்ற காலக்கட்டத்தில் மக்காவில் உள்ள பள்ளிக்கு வருவது மட்டுமல்ல! உலகில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வருவது தடையாகும். இந்தத் தடை பெண்களுக்கு மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் இந்திரியம் வெளியானால் பள்ளிக்கு வருவதற்குத் தடையாகும். பெண்கள் மாதவிடாய் முடிந்ததும் குளித்து விட்டால் அந்தத் தடை நீங்கி விடும். அது போல் ஆண்கள் குளித்து விட்டால் அந்தத் தடை நீங்கி விடும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு எதிராக எந்தத் தடையும் கிடையாது என்பதற்கு இந்த ஹதீஸ் சரியான சான்றாகும். தவாஃப், தொழுகை,  நோன்பு ஆகிய வணக்கங்கள் மாதவிடாய் காலத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. குளித்து விட்டால் அந்தத் தடையும் நீங்கி விடுகின்றது.

இது போன்ற தடைகளைத் தவிர்த்து வேறு எந்தத் தடையும் கிடையாது. இன்று தமிழகத்தில் மாதவிடாய் தொடர்பாக பழக்கத்தில் உள்ள மாதவிலக்கு, தீட்டு என்று வார்த்தைகளே தீண்டாமையை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மாதவிடாய் தொடர்பான தீண்டாமையை உடைத்தெறிகின்றது.

—————————————————————————————————————————————————————————————

 

புலனடக்கம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும்.

நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது.

சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும்.

இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன.

விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது.

இத்தீமைகள் புரிவதிலிருந்து விலக விரும்புவோர் புலன்களின் தூண்டுதலுக்குப் பலியாகி விடாமல் அவைகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழக வேண்டும்.

அனைத்து புலனடக்கம் குறித்தும் அல்குர்ஆனும், அண்ணல் நபியவர்களும் போதிக்கின்றார்கள்.

எந்தெந்த புலன்களால் தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் அதிகக் கேடுகள் உண்டாகுமோ அவற்றைக் கண்டிப்பாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மார்க்கம் அறிவுறுத்துகிறது.

மறை உறுப்பும் – நாவும்

புலனடக்கம் பற்றி பேசினால் அதில் தவிர்க்க முடியாத இரு உறுப்புகள் நாவும், மறை உறுப்புமாகும்.

இவ்விரண்டு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதல்ல.

யார் இவ்விரண்டு உறுப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் இவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்கின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளதற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)

நூல்: புகாரி 6474

நாவையும், மறை உறுப்பையும் அடக்குவது எவ்வளவு சிரமம் நிறைந்த காரியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இவ்விரு உறுப்புக்களாலும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தீமைகளை யாராலும் பட்டியலிட முடியாது.

மனித சமுதாயத்திற்கு எழுதப்பட்ட அறிவுரை நூல்கள் பலவும் இவற்றை மையப்படுத்தியதாகவே உள்ளன.

விபச்சாரத்திற்கு முறையான சட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை (?) குரல்கள் எழுப்படுவதிலிருந்து மனிதர்கள் எதன் பிடியில் இருக்கிறார்கள்? எதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள் என்பதை விளங்கலாம்.

குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சனை, ஏன் கொலைக்கான காரணமாகக் கூட நாவும், அதனிலிருந்து வெளிப்படும் தடித்த வார்த்தைகளும் காரணமாகிறது என்பதை அன்றாடம் நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் உணர்த்துகின்றன.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறை உறுப்பையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வோருக்கு சொர்க்கத்திற்கான உத்தரவாதத்தை நான் அளிக்கின்றேன் என்கிறார்கள்.

இதிலிருந்து இவ்விரு புலனடக்கத்தின் மகிமையை அறியலாம். பின்வரும் செய்தியும் இவ்விரு புலன்களின் எல்லை மீறலை அடக்கத் தவறுவதால் ஏற்படும் மறுமை விளைவை கடுமையாக எச்சரிக்கின்றது.

மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது இறையச்சமும், நன்னடத்தையுமே என்று பதிலளித்தார்கள்.

நரகில் எது மனிதனை அதிகம் நுழைவிக்கும்? என்று கேட்கப்பட நாவும் மறை உறுப்பும்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1927

பல இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்தைப் பாழாக்குவதன் பின்னணியில் இவ்விரு புலன்களுக்கும் மிக முக்கிய பங்குள்ளது.

அந்நியப் பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசாக்கூடா பேச்சுக்களைப் பேசி இன்பம் அடைவதற்காக கேர்ள் பிரண்ட் என்ற நாகரீக பெயரில் அந்நியப் பெண் தொடர்பைப் பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். அப்படி கேர்ள் பிரண்ட் வாய்க்கப் பெறாதவர்கள் அதற்காகக் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள்.

சிறிது நேர சிற்றின்பத்திற்காக உடலின்ப மோகத்தில் மூழ்கி தங்கள் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள்.

ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மாணவச் செல்வங்கள் பைகளை வெளியில் இருந்தபடியே வீட்டுக்குள் வீசி விட்டு விளையாடச் செல்வார்கள்.

வியர்க்க விறுவிறுத்து ஓடியாடி விளையாடி மகிழ்வுறுவார்கள். இருள் சூழவும் விளையாட்டை முடித்து வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு நன்கு உறங்குவார்கள். இது யாவும் இரவு ஒன்பது மணிக்குள்ளாக நடந்து முடிந்து விடும்.

ஆனால் இன்று நள்ளிரவு தாண்டியும் உறங்காமல் போர்வைக்குள் போனை நோண்டுவதில் சுகம் காணும் இளைஞர்களை அதிகம் அறிகிறோம்.

யூசுப் நபி

புலனடக்கதிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக யூசுப் நபி அவர்களைச் சொல்லலாம்.

உடலின்ப மோகத்தைத் தணிக்க, தான் வசிக்கும் வீட்டில் உள்ள ஒருத்தியே தனிமை எனும் சூழலைப் பயன்படுத்தி யூசுப் நபியைத் தவறு செய்ய அழைக்கின்றாள்.

நபி யூசுப் (அலை) அவர்களோ அதற்கு இணங்க மறுத்து மறை உறுப்பு எனும் புலனை அடக்கி ஒடுக்கி, விபச்சாரம் எனும் மகா பெரிய பாவத்திலிருந்து விலகி நிற்கின்றார்கள்.

சர்வ நிச்சயம் இது சாதாரண நிகழ்வல்ல.

யூசுப் நபி செய்தததைப் போன்று என்னாலும் முடியும் என்று இங்கே யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. அப்படி சொல்வோர் யாரும் இங்கே இருந்தால் யூசுப் நபியின் புலனடக்கத்தைப் பற்றி குர்ஆன் கூறும் அழகிய வரலாறை ஒரு கணம் வாசித்துப் பார்க்கட்டும்.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து வா!என்றாள். அதற்கவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்’’ எனக் கூறினார்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?’’ என்று அவள் கூறினாள்.

இவள் தான் என்னை மயக்கலானாள்’’ என்று அவர் கூறினார். அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்’’ என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

 அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்டபோது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது’’ என்றார். யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!’’ (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக்கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).

அல்குர்ஆன் 12:23-29

தவறிழைக்கத் தூண்டிய பெண்ணின் சதிவலையில் சிக்காமலிருக்க யூசுப் நபி நடத்திய போராட்டத்தைப் பாருங்கள்.

யூசுப் நபி அணிந்திருந்த சட்டையின் பின்பகுதி அப்பெண்ணால் கிழிக்கப்படுமளவு பெரும் போராட்டம் நடந்திருக்கிறது என்றால் இப்போது சொல்லுங்கள். யூசுப் நபியின் புலனடக்கம் சாதாரணமானதா? நம்மால் இயலக் கூடியதா?

இன்றைக்கு ஒரு பெண் ஒரு ஆணை அடைய விரும்பினால் கதவை அடைத்து இப்படியொரு போராட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஜஸ்ட், ஒரு போன்கால் அல்லது ஒரு மெசேஜ் தட்டி விட்டால் போதும். மற்ற வேலைகள் தன்னால் நடக்கும். அந்த அளவில் தான் இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் புலனடக்கம் இருக்கின்றது.

தனியறையில் அந்நியப் பெண்ணுடன் சில மணி நேரங்கள் இருந்து விட்டு வரும் ஒருவர், ‘நான் யூசுப் நபியைப் போன்று நடந்து கொண்டேன்’ என்று சொல்லும் போது அவரது சட்டையின் பின்புறம் கிழிக்கப்பட்டிருக்கின்றதா என்று தேடினால் நம்மை விட வெகுளிகள் யாருமில்லை.

உண்பதிலும் உண்டு நாவடக்கம்

நாவை அடக்குதல் என்பதை வெறும் தீய வார்த்தைகளைப் பேசுதல், அவதூறு கூறல் ஆகியவற்றிலிருந்து அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்று தான் புரிகிறோம்.

இவற்றையும் தாண்டி ஹராமானவைகளை உட்கொள்வதை விட்டும் நா எனும் புலனை அடக்கி ஒடுக்க வேண்டும்.

நபிகளார் இதனையும் நாவை அடக்குவதில் நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.

அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘இது ஸதகா பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்என்றார்கள்.

என்னுடைய படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்…என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 2055

அற்ப பேரீச்சம் பழம் தன் முன்னே கிடந்த போது ஹராமான பொருளாக இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிந்த நிலையில் அதை உண்ணாமல் தம் நாவு எனும் புலனை அடக்கி வெற்றி காண்கிறார்கள்.

இது இன்றைக்கு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

வட்டி, வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு எதிரான விருந்துகள், போதையூட்டும் பொருட்கள் போன்றவற்றை உண்பது நம் சமுதாயத்தில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

பொய், புறம் சொல்வதிலிருந்து மட்டும் நாவை காத்தால் அது போதாது. வட்டி, போதையூட்டும் பொருட்கள், தவறான விருந்துகள் போன்றவற்றை உண்பதிலிருந்தும் நா எனும் புலனைக் காக்க வேண்டும். நபிகளாரை இதிலும் பின்பற்ற வேண்டும்.

இம்மை, மறுமை வாழ்வு இனியதாய் அமைந்திட ஆசைகொள்வோர் இவ்விரு புலனடக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

வாழ்நாள் முழுவதும்  வசதியை ஏற்படுத்தித் தரும்  ஆசூரா நாள்?

எம்.ஐ. சுலைமான்

3515 – أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا الْحسَنُ بْنُ عَلِيٍّ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ذَكْوَانَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: “ مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ “ . “

யார் ஆசூரா நாளன்று தன் குடும்பத்தினருக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பாரோ அவருக்கு அல்லாஹ் ஏனைய வருடங்கள் (முழுவதும்) வசதி வாய்ப்பை ஏற்படுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி),

நூல்: ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3515).

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வனமானது அல்ல. இதில் பலவீனமான பல அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இடம்பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் பலவீனமானவராவார்.

الجرح والتعديل – (3 / 167)

712 – حجاج بن نصير الفساطيطى (4) البصري أبو محمد روى عن شعبة روى عنه الحسين بن عيسى ويحيى بن ابى الخصيب واحمد بن الحسن الترمذي وحميد بن زنجويه سمعت ابى يقول ذلك حدثنا عبد الرحمن حدثنى ابى قال قال على ابن المدينى: الحجاج بن نصير ذهب حديثهحدثنا عبد الرحمن قال سمعت ابى يقول: الحجاج بن نصير منكر الحديث، ضعيف الحديث، ترك حديثه، كان الناس لا يحدثون عنه.

ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்றும், பலவீனமானவர் என்றும் அபூஹாத்திம் குறிப்பிட்டுள்ளார்கள். இவரின் செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் அறிவிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்,

பாகம்: 3, பக்கம்: 167.

الضعفاء والمتروكين للنسائي ـ تح الضناوي والحوت – (1 / 92)

حجاج بن نصير ضعيف بصري

நஸாயீ அவர்கள் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்,

பாகம்: 1, பக்கம்: 92.

இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் தக்வான் என்பவரும் பலவீனமானவராவார்.

التاريخ الصغير – (2 / 48)

حدثنا محمد بن إسماعيل حدثنا محمد بن ذكوان مولى الجهاضم البصري خال ولد حماد بن زيد منكر الحديث

முஹம்மத் பின் தக்வான் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அத்தாரிகுஸ் ஸகீர், பாகம்: 1, பக்: 48

تهذيب التهذيب ـ محقق – (9 / 138)

وقال النسائي ليس بثقة ولا يكتب حديثه

முஹம்மத் பின் தக்வான் என்பவர் நம்பகமானவர் இல்லை. அவருடைய ஹதீஸ்களை எழுதக்கூடாது என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,  பாகம்: 9, பக்: 138

تهذيب التهذيب ـ محقق – (9 / 138)

ثم أورد له ابن عدي أحاديث وقال وله غير ما ذكرت وعامة ما يرويه افرادات وغرائب ஞ் وقال الساجي عنده مناكير وقال الدارقطني ضعيف

இவர் அறிவிக்கும் பெரும்பாலான செய்திகள் புதுமையானதாகவும் தனித்து அறிவிப்பவையாகவும் இருக்கிறது என்று இப்னுஅதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரிடம் மறுக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன என்று ஸாஜி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தாரகுத்னீ அவர்கள், இவர் பலவீனமானவர் என்று சொல்லியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்: 138

இதே செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் பைஹகீ அவர்களின் ஷுஅபுல் ஈமானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

شعب الإيمان – (5 / 333)

3514 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، حَدَّثَنَا ابْنُ أَبِي الدُّنْيَا، حَدَّثَنَا خَالِدُ بْنُ خِدَاشٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ مِينَاء، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ “

இந்தச் செய்தியில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து கேட்டவர் ஒரு மனிதர் என்று இடம்பெற்றுள்ளது. அவர் யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன? என்பது தெரியவில்லை.

அதற்கு அடுத்த அறிவிப்பாளர் அய்யூப் பின் சுலைமான் பின் மீனா என்பவரும் யாரென அறியப்படாதவர் ஆவார்.

இச்செய்தி தப்ரானீ முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

المعجم الأوسط – (9 / 121)

9302 – حدثنا هاشم بن مرثد نا محمد بن إسماعيل الجعفري ثنا عبد الله بن سلمة الربعي عن محمد بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه و سلم من وسع على أهله في يوم عاشوراء أوسع الله عليه سنته كلها لا يروى هذا الحديث عن أبي سعيد الخدري إلا بهذا الإسناد تفرد به محمد بن إسماعيل الجعفري

இந்தச் செய்தியில் இடம்பெறும் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்ஜஅஃபரீ என்பவர் பலவீனமானவராவார்.

لسان الميزان لابن حجر(اتحقيق أبو غدة) – (6 / 568)

6495 – محمد بن إسماعيل الجعفري عن الدراوردي وغيره قال أبو حاتم منكر الحديث انتهى وبقية كلامه يتكلمون فيه ஞ் وقال أبو نعيم الأصبهاني متروك

ஹதீஸ் துறையில் இவர் மறுக்கப்பட்டவர் என்று அபூஹாத்திம் அவர்களும் இவர் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று அபூநுஐம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 6, பக்: 568

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) வழியாகவும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

المعجم الكبير للطبراني – (8 / 404)

9864 – حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بن أَبُوعُبَيْدَةَ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بن أَبِي طَالِبٍ الْبَزَّازُ، حَدَّثَنَا الْهيصم بن الشَّدَّاخِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَلْ فِي سَعَةٍ سَائِرَ سَنَتِهِ.

இந்தச் செய்தி தப்ரானீ அவர்களின் முஃஜமுல் கபீரில் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெறும் ஹைஸம் பின் ஷத்தாக் என்பவர் ஆதாரத்திற்கு ஏற்றவர் அல்ல.

ஹைஸம் பின் ஷத்தாக் என்பவர் அஃமஷ் அவர்கள் வழியாக (பொய்யான) பிரமிப்பூட்டும் அறிவிப்புகளைச் சொல்பவர். இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இப்னுஹிப்பான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 3, பக்கம்: 97

ஹைஸம் என்பவர் யாரென அறியப்படாதவராவார். அவரின் செய்திகள் பாதுகாப்பற்றவை என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 8, பக்: 366

எனவே “யார் ஆசூரா நாளன்று தன் குடும்பத்தினருக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பாரோ அவருக்கு அல்லாஹ் ஏனைய வருடங்கள் (முழுவதும்) வசதி வாய்ப்பை ஏற்படுத்துவான்’’ என்று வரும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

—————————————————————————————————————————————————————————————

தலைவன் ஒருவனே!

ஃபாத்திமா ஹாரிஸ், அல்இர்ஷாத் ஆசிரியை

உலகில் தோன்றுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், கோட்பாடாக இருந்தாலும், அதை உருவாக்கிய தலைவன் ஒருவன் இருப்பான். அந்தத் தலைவன் உயிரோடும், உணர்வோடும் இருக்கின்ற வரை அந்தக் கொள்கை உயிரோடு இருக்கும். அவன் மரணித்துவிட்டால் அவனோடு சேர்ந்து அவனுடைய கொள்கையும் மரணித்துவிடும். அல்லது அவனுக்குப் பின் மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தக் கொள்கையே சிதைக்கப்பட்டு விடும்.

உதாரணமாக, சர்வாதிகாரிகளான ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இறந்த பிறகு அவர்களின் கொள்கைகளும் மறைந்து விட்டன. சிலைகளுக்குச் சக்தியில்லை என்று போதித்த பெரியார் இறந்த பிறகு, அவரது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் பெரியாருக்குச் சிலை வடித்து, அதற்கு மாலையிட்டு மரியாதை செய்வதைப் பார்க்கிறோம்.

அதிமுக கட்சித் தலைவி ஜெயலலிதா இருந்த வரை அடங்கி ஒடுங்கிக் கிடந்த அதிமுக நிர்வாகிகள், அவர் மரணித்த பின் பல கூறுகளாகப் பிரிந்து கிடப்பதையும், கட்சியின் அடிப்படை தகர்ந்து, பதவிக்காக சண்டை நடப்பதையும், நாட்டு மக்கள் பரிதவிப்பதையும் காண்கிறோம்.

ஆனால் தவ்ஹீதுவாதிகளின் உயிர்மூச்சான ஏகத்துவத்தின் தலைவன் ஏகன் அல்லாஹ் ஒருவனே! அவன் மரணிக்கவும் மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அஷ்ஷகீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்

நான் பனூ ஆமிர் கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நீங்கள் தான் எங்கள் தலைவர் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபியவர்கள் உயர்ந்தவனான பாக்கியமிக்க அல்லாஹ் தான் தலைவன் என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 4806

இறைவன் அவனுடைய ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மனிதர்களிலிருந்தே தூதர்களை அனுப்பினான்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!’’ என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

திருக்குர்ஆன் 16:36

தூதர்கள் மரணித்துவிட்டால்…

இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை. பசி, தாகம், மறதி, தூக்கம் போன்றவை அவர்களுக்கும் ஏற்பட்டன. அவர்களில் மரணித்தவர்களும், இருக்கிறார்கள்; கொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

(முஹம்மதே) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக்கூடியவர்களா? என்று அல்லாஹ் கேட்கின்றான்.

பார்க்க: அல்குர்ஆன் 21:34

ஆனால் அந்தத் தூதர்கள் மரணித்து விட்டாலும் அவர்கள் கொண்டுவந்த கொள்கை, இறைவனின் கொள்கை என்பதால் அது உயிரோடு இருக்கும். ஏகத்துவத் தந்தை நபி இப்ராஹீம் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பின்பற்றி அவருடைய வழியை மக்களுக்குப் போதிக்கின்ற ஏகத்துவவாதிகள் இருக்கத் தான் செய்தார்கள். நபியவர்கள் தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே இப்ராஹீம் நபி காட்டிய தூய மார்க்கத்தைப் பின்பற்றி, தானும் வாழ்ந்து பிறருக்கும் அதை போதித்த ஒரு மனிதரைப் பற்றிய செய்தி புகாரியில் இடம்பெறுகிறது.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்கவில்லை’’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம் (சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்)க் கொள்கிறேன்’’ என்று சொல்வார்.

(புகாரி 3828)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் பல்தஹில்ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), “நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன். (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்’’ என்று சொன்னார்கள். ஸைத் பின் அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், “ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக, பூமியிலிருந்து (புற்பூண்டுகளை) முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்’’ என்று கூறி வந்தார்கள்.

(புகாரி 3826)

தலைவர்கள் கைவிட்டால்…

முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றி புகாரியில் இடம்பெறும் ஹதீஸின் சுருக்கம்:

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலத்தில் சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும், எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்’’ என்று கூறினார் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’’ என்று நிபந்தனையிட்டனர். அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப் பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள்.

அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரது தந்தையான) சுஹைல், ‘‘முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே’’ என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், ‘‘அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை’’ என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்’’ என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பிறகு, குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்றுதிரண்டு விட்டனர்.

குறைஷிகள் (அபூபஸீரும் அவரது சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், “குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)’’ என்று கூறிவிட்டனர்.

(புகாரி 2731)

நபி (ஸல்) அவர்கள் அபூபஸீர் அவர்களையும், அபூஜந்தல் அவர்களையும் விரட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.

அப்போது அவ்விருவரும், எந்த முஹம்மது மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவரே நம்மை விரட்டி விட்டார்; எனவே நாம் வந்த வழியே திரும்பச் சென்று விடுவோம் என்று ஓடவில்லை; ஓயவில்லை. எதிரிகளே பயந்து ஓடும் அளவுக்கு சவாலாக உருவெடுத்தார்கள். ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

இறுதிவரை தொடரும் ஏகத்துவப்பணி

இறுதித் தூதரான முஹம்மது நபியவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கையை கியாமத் நாள் வரை எடுத்துச் சொல்லும் கடமை அவருடைய சமுதாயத்தவரான நம் ஒவ்வொருவர் மீதும் இருக்கின்றது. இதை நபியவர்களும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் 3885)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(முஸ்லிம் 3886)

எனவே நித்திய ஜீவனான இறைவனின் தொண்டர்களாக நாம் இறுதிவரை உறுதியாக இருப்பதற்கும், இந்த கொள்கையை எடுத்துச் சொல்வதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

(அல்குர்ஆன் 3:8)

—————————————————————————————————————————————————————————————

 

பசுக்களுக்கு மலர் மாலை சிசுக்களுக்கு மரண மாலை

உலகப் புகழ் பெற்ற பொய் மன்னன் கோயபல்ஸின் உடன் பிறவா சகோதரன் நரேந்திர மோடி கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் டெல்லிக் கோட்டையில் தேசியக் கொடியேற்றுகையில் கம்பத்தில் ஏறிய கொடியின் கயிற்றை பிடித்து இழுத்ததும் மலர்கள் விழுந்தன. ஆனால் இந்த 71வது சுதந்திர தினமன்று மலர்கள் கொட்டுவதற்குப் பதிலாக மழலைகள் கொட்டின.

ஆம்! பாஜக ஆளுகின்ற உ.பி.யில் கிழக்கு மாநிலமான கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பி.ஆர்.டி. என்ற பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் 71 குழந்தைகளுக்கு மேல் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் ஆக்ஸிஜன் இல்லாமல் அநியாயமாக உயிரிழந்தன. அந்த மழலைகளைத் தான் இந்த சுதந்திர தினக் கொடியிலிருந்து உதிரும் மலர்களாகக் கேலிச்சித்திரங்களில் மிகவும் பொருத்தமாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள்.

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைந்த இந்தக் கோரச் சம்பவம் இந்திய நாட்டையே உலுக்கியது.

ஆனால் இந்தக் கோர, கொடூர நிகழ்வை ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவில்லை. இந்தக் கொடூரம் ஒரு பிஜேபி ஆளாத மாநிலத்தில் நடந்திருந்தால் அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் நடந்திருந்தால் இதே ஊடகங்கள் அதை வளைத்து வளைத்து வெவ்வேறு பரிமாணங்களில் வித்தியாசமான கோணங்களில் ஒளிபரப்பி நாறடித்திருக்கும்.

ஆனால் இந்தச் சம்பவம் நடந்தது, தங்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசி எறிகின்ற பிஜேபி ஆளுகின்ற மாநிலமான உ.பி. என்பதால் விலை போன விபச்சார ஊடகங்கள் ஊமையாகி, உண்மையை உரத்து முழங்கவும் விரிவாக விளக்கவும் மறுத்து விட்டன. நீதி கேட்டுப் பொங்கி எழுந்து, தன்னெழுச்சியாக வீதிக்கு வந்த போராட்டக் களங்களைக் கூட பக்கவாக மறைத்து விட்டன.

எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏதோ கொடிய நோயின் பாதிப்பால் இறந்து விட்டன என்று எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையில், திரை மறைவில் திரவ ஆக்ஸிஜன் நிறுவனத்திடம் பேசிய பேரம் கனிந்து, உரிய கையூட்டுகள் கிடைக்காததால் ஒரு மாநில அரசு தெரிந்தே நடத்திய படுகொலையாகும். பச்சிளங்குழந்தைகள் உயிர்களைப் பறித்த படுகொலை பாதக சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத் ராஜினாமா செய்வான் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. காரணம் இவர்கள் மனித வடிவில் திரிகின்ற காட்டு மிருகங்களின் இனத்தைச் சார்ந்தவர்கள். அதனால் இவர்களிடமிருந்து துளியளவும் இது போன்ற நேர்மை, நியாய உணர்வை எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும் மாநிலத்தை ஆளுகின்ற இந்த ஆதித்யநாத், மத்தியில் ஆளுகின்ற இவனது அண்ணனான மோடியும் மக்களிடம் கள்ள, கபட நாடகம் ஆடுகின்றனர். உத்தம வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அந்த வேடத்தைக் களைவது நம் மீது கடமை என்ற அடிப்படையில் இப்போது இந்தக் கோர சம்பவத்திற்குரிய அடிப்படையான இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.

  1. ஊழல்
  2. தூய்மையின்மை

ஊழலை ஒழிக்க உருவெடுத்த ஒரே ஓர் உத்தமன் மோடி தான் என்றும் ஒட்டுமொத்த ஊழலை ஒழிக்கவும் ஓய்க்கவும் ஒரே ஓர் அமைப்பு பாஜக தான் என்றும் ஒரு போலித் தோற்றம் மக்களிடத்தில் காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கள்ளப் பேர்வழிகள் ஆளுகின்ற மாநிலமான மத்திய பிரதேசத்தில் வியாபித்து விரிந்த வியாபம் என்ற ஊழல் இவர்களது போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது.

இதுவரை ஆண்ட ஊழல் பெருச்சாளிகளில் இவர்கள் கொஞ்சமும் வித்தியாசமானவர்கள் கிடையாது என்பதை இது தெளிவாக நாட்டுக்கு உணர்த்தியது. இப்போது உ.பி.யில் 71 குழந்தைகளின் உயிரைக் குடித்த பி.ஆர்.டி. மருத்துவமனை இவர்களது ஊழலை மேலும் உலகறிய நாறடித்துக் கொண்டிருக்கின்றது.

ஊழலை ஒழிப்போம் என்று இவர்கள் பேசுவதெல்லாம் மாய் மாலமும் வெறும் வார்த்தை ஜாலமும் ஆகும். சாமியார் ஆதித்யநாத் திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனது தனக்கு தெரியாது என்று சாதிக்கின்றார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை ஆகஸ்ட் 17 இந்து ஆங்கில நாளேடும் ஆகஸ்ட் 18 தமிழ் இந்து நாளேடும் தோலுரித்துக் காட்டுகின்றன.

கோரக்பூர் மருத்துவமனை முறைகேடுகள் அமைச்சருக்குத் தெரியும் என்ற தலைப்பில் இந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் இதழ்களில் வந்த செய்தி இதோ:

கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால், கிடைக்கும் ஆவணங்கள், அவர்களுக்குத் தெரியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

மருத்துவக் கல்விக்கான அமைச்சர் அசுதோஷ் தாண்டனிடம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்தும், லட்சக்கணக்கான ரூபாய் வழங்கப்படாததால் அந்நிறுவனம் சிலிண்டர் வழங்க மறுப்பது குறித்தும், நிறுவனத்தின் பில்களை ஏற்றுப் பரிந்துரைக்க கமிஷன் கேட்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

ஆகஸ்ட் 11-ல் குழந்தைகள் மரணம் பற்றிய செய்தி வெளியாவதற்கு முன்னால், மாலை 4.30 மணிக்கு முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளர் ரமாசங்கர் சுக்லா, மருத்துவமனை முதல்வர் ஆர்.கே. மிஸ்ராவிடம் ‘திரவ ஆக்சிஜன் கையிருப்பு வேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கிறது, அந்நிறுவனம் சிலிண்டர் அனுப்ப மறுக்கிறது’ என்று கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். சிலிண்டர்களை வழங்குமாறு விரைந்து நடவடிக்கை எடுங்கள், அப்போதுதான் கவலைக் கிடமான நிலையிலிருக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

குறைந்துவரும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மாற்று வழிகளை உடனே யோசிக்குமாறும், கோரக்பூர் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் ஆகியோரின் உதவிகளை நாடுமாறும்கூட அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 9-ல், அதாவது ஒரே நாளில் 23 குழந்தைகள் இறந்ததற்கு முதல் நாளில் – மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்க ஒப்பந்தம் பெற்றிருந்த ‘புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் மனீஷ் பண்டாரி, அமைச்சர் தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறார். அவரே தான் எழுதிய கடிதங்களின் நகல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி முதலே பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்ரல் 6ல் எழுதிய நினைவூட்டல் கடிதம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த்தநாத் சிங் ஆகியோருக்கும் கூட அனுப்பப்பட்டிருக்கிறது.

முதன்மை மருத்துவ மேற்பார்வையாளர் அனுப்பிய குறிப்பில் ‘மருத்துவ ஆக்சிஜன் வெகு விரைவில் முற்றாகத் தீர்ந்துவிடும், அதை உடனே நிரப்பியாக வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனம் இனி சிலிண்டர்களை அனுப்பாது’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிய வகையில் நிலுவைத் தொகை ரூ. 68 லட்சமாகிவிட்டது, பல முறை மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி வாயிலாகவும், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பித் தெரிவித்த பிறகும் மருத்துவமனையோ அரசுத் துறைகளோ தனக்குப் பதிலே தரவில்லை என்று தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் பண்டாரி குறிப்பிட்டிருக்கிறார். தடையில்லாமல் சிலிண்டர்கள் கிடைக்க நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த செய்தி, சந்தேகமில்லாமல் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கமிஷன் கிடைக்காததால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களுடன் பிஜேபி அரசு விளையாடியிருக்கின்றது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

அதனால் இவர்களது ஊழலுக்கு எதிரான கோஷம் வெற்றுக் கோஷம், வேஷக் கோஷம் என்பதை இந்தச் சம்பவம் ஐயத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபித்திருக்கின்றது. 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள் பறிபோனதற்குப் பாஜகவின் நாற்றமெடுக்கும் ஊழல் முதல் காரணமாகும்.

இப்போது இரண்டாவது காரணமான தூய்மையின்மைக்கு போவோம்.

தூய்மை இந்தியா என்ற கோஷத்தை மோடி பிரதமர் ஆனதும் முழங்க ஆரம்பித்தார். அதையே ஆதித்தியநாத்தும் மூச்சுக்கு முன்னூறு தரம் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றார். உண்மையில் இதுவும் ஒரு வெற்றுக் கோஷம் தான். இதற்கு இந்த மருத்துவமனையே ஓர் எடுத்துக் காட்டாகும். இந்த ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பகுதியை இந்த சோகம் நடந்தேறிய பிறகு பத்திரிக்கைகள் படம் பிடித்து வெளியிட்டன.

மூக்கைத் துளைக்கும் மூத்திரமும் சாணமும்

தடுப்பூசி போடும் பிரிவில் பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத்தின புனித அன்னையான பசு படுத்துக் கிடக்கின்றது. ஒரு மாடு படுத்துக் கிடக்கும் இடம் எப்படி இருக்கும்? மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் அளவுக்கு நாற்றமடிக்கும் மூத்திரமும் சாணியும் சுற்றி பரவிக் கிடக்கும். கொசுக்கள் முகாமிட்டு முட்டை பொரித்து தன் சந்ததிகளை பல்கி பரவச் செய்கின்ற பண்ணையை வளர்த்துக் கொண்டிருக்கும்.

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுகாதார சிந்தாந்தப் படி மாட்டு மூத்திரமும் சாணமும் நோய் தடுக்கும் மருந்துகள் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள மருத்துவ நிர்வாகம் இதை அனுமதித்திருக்கலாம் போல் தெரிகின்றது. ஒரு மருத்துவமனையின் தடுப்பூசி போடுகின்ற பகுதியின் இலட்சணம் இப்படியிருந்தால் இதர பகுதிகளின் இலட்சணம் எப்படி இருக்கும்? அதையும் பார்ப்போம்.

கூடி நிற்கும் குரங்கு கூட்டம்

மருத்துவமனையின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் இணைக்கும் வளாகங்களில் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் உணவுப் பொட்டலங்களை விரித்து நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. காரணம் என்ன? உணவுப் பொட்டலங்களை யாரும் துப்பாக்கி முனையில் தட்டிப் பறிக்கின்றார்களா? என்று கேட்கலாம்! ஆம்! தட்டித் தான் பறிக்கின்றார்கள். இவர்களின் கடவுள்களான குரங்கு கூட்டங்கள் தான் இந்த வேலையைச் செய்கின்றன. இதையும் நாம் சொல்லவில்லை. பத்திரிக்கைகள் தான் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இது என்ன நாட்டில் உள்ள மருத்துவமனையா? அல்லது குரங்குகள் கொட்டமடிக்கும் காட்டில் உள்ள கூடாரமா? என்று பத்திரிக்கையின் படங்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. விழிப் புருவங்களை விரிய வைக்கின்றன. நோயாளிகளைப் பார்க்க வந்த கோபுரமாய்க் குவிந்துக் கிடக்கும் குப்பைகள், கொசுக்கள் கூடாரமடித்து குடியிருந்து, குடும்பம் நடத்தி குஞ்சு பொறித்து தள்ளுகின்ற கழிவு நீர் குட்டைகள், கோமாதாக்கள் போட்டுச் சென்ற விட்டைகள் என்று கோரக்பூர் மருத்துவமனையின் சுகாதாரப் பெருமை கோபுரமாய் உயர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இவ்வளவு அலங்கோலங்களும் அசுத்தங்களும் பன்றிக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல் எப்படிப் பரவுகின்றது என்று விளம்பரப்படுத்தியிருக்கின்ற சுவர்களுக்கு அருகில் காட்சியளிக்கின்றன என்றால், மோடியின் சுவஜ் பாரத்தின் திட்டத்தை அவருடைய தம்பியான மொட்டை சாமியார் ஆதித்யநாத் எப்படி கடைப்பிடிக்கின்றார் என்பதற்கு இவை அற்புதமான சாட்சிகளாக திகழ்கின்றன என்பதை எவரும் எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.

ஐ.சி.யூனிட்டின் அவலட்சணம்

முரண்பாட்டின் ஒட்டுமொத்த முன்னுதாரணம், முழு உதாரணம் மோடியின் பிஜேபியும் மற்றும் அவரது பரிவாரங்களும் தான் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டாகும்.

ஓர் அவசர சிகிச்சைப் பிரிவுப் பகுதி என்றால் அந்தப் பகுதியில் வருகையாளர்களை செருப்புகளைக் கூட காலில் போட்டு வர அனுமதிக்க மாட்டார்கள். நோய் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அதை ஒரு தனித் தீவாகவே பராமரிப்பார்கள். ஆனால் அந்த ஐ.சி.யு.வில் எட்டிப் பார்த்த உறவினர் ஒருவர், துப்புறவு பணியாளர்கள் பயன்படுத்திய துப்புறவுத் துணிகள், மெல்லிய மருந்து துணிகள், குழந்தைகளிடமிருந்து கழற்றிய டயாபர்கள், காலி தண்ணீர் பாட்டில்கள், அவ்வப்போது உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டிய அபாயகரமான மருந்துகளின் பைகள் ஐ.சி.யு.வின் தரையில் பரவிக் கிடப்பதைப் பார்த்து மருத்துவமனையின் அசுத்தத்தையும், அதன் அசிங்கத்தையும் வேதனையுடன் பதிவு செய்கின்றார்.

ஒரு மருத்துவமனையின் உயிர் காக்கும் உயர் பகுதியே உயிர் பறிக்கும் பகுதியாக இருந்தால் அந்த மருத்துவமனையின் பிறபகுதி எப்படியிருக்கும்? அதையும் இப்போது பார்ப்போம்.

தெரு நாய்கள் திரியும் அவலம்

71 குழந்தைகள் இறந்ததை ஒட்டி சாமியார் ஆதித்யநாத் வருகையளிப்பதற்கு முன்னால் மருத்துவமனை மறுபிறவி எடுத்தது. தரை கழுவப் பட்டது. தூரத்திலிருந்து வருகின்ற மக்களை வரவேற்கும் விதமாக இருந்த கழிப்பறையின் துர்நாற்றம் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. சுத்தம், சுகாதாரத்தின் மறுபதிப்பாகத் திகழ வேண்டிய ஒரு மருத்துவமனை அசுத்தத்தின் அவமானச் சின்னமாக இருக்கின்றது என்பதையும் அதே சமயம் அந்த மருத்துவமனையை அரசு முயற்சி செய்தால் நிரந்தரமாகவே சுத்தமாக வைத்திருக்கலாம் என்பதையும் இது துல்லியமாக எடுத்துச் சொல்கின்றது.

சுண்டெலிகளின் சுதந்திர ராஜ்யம்

தொற்று நோய்களைச் சுமந்து திரிவதில் சுண்டெலிகளுக்கும் பங்குண்டு என்று நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் அந்தச் சுண்டெலிகளுக்கு கோரக்பூர் மருத்துவமனையில் சுயராஜ்யம் வழங்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லுமளவுக்கு சுண்டெலிகளின் சுதந்திர ராஜ்யம் கொடிக்கட்டிப் பறக்கின்றது. திரியும் தெரு நாய்கள், சுற்றி வரும் சுண்டெலிகள் என்று குறிப்பிட்டதும் நாம் கூடுதலாக சொல்கின்றோம் என்ற சந்தேகம் உள்ளங்களில் தலை காட்டலாம்.

ஐஎம்ஏயின் அறிக்கை!

இந்தச் சோக நிகழ்வு நடந்த பிறகு Indian Medical Association (IMA)  எனும் இந்திய மருத்துவ சங்கத்திலிருந்து ஒரு மருத்துவர் குழு பாபா ராகவ் தாஸ் மருத்துவமனைக்கு வருகையளித்து, அது ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்த மருத்துவமனை வார்டுகளில் சுண்டெலிகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது; தெரு நாய்களும் மருத்துவமனை வளாகங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன என்றும் மருத்துவமனையின் சுத்தம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அத்துடன் மருத்துவமனை தனது சக்திக்கு மீறி நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கின்றது. போதிய குழந்தைகள் நல மருத்துவர்கள் இல்லை. போதிய நர்ஸ்கள் இல்லை. துணை மருத்துவர்கள் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. மொத்தத்தில் இந்த அறிக்கையின் ஒட்டு மொத்த சாராம்சம் இது ஒரு மருத்துவமனையாக இல்லை என்று தெரிவித்துள்ளது. அதில் அதன் சுகாதார சீர்கேட்டைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

இப்போது சொல்லுங்கள்! இது ஓர் மருத்துவமனையா? அல்லது மரணக் கிடங்கா? என்று தீர்ப்பு சொல்லுங்கள். அதனால் இங்கு வரும் நோயாளிக்கு சுகம், குணம், நிவாரணம் எல்லாம் இரண்டாம் பட்சம் என்று பின்வரும் பத்திரிக்கை செய்தி படம் பிடிக்கின்றது.

மருத்துவமனையா? மரணக் கிடங்கா?

Death is the only certainty here, rest is just a chance  என்று தலைப்பிட்டு ஆங்கில இந்து நாளேட்டில் ஒரு செய்தி 20.07.17 வெளியானது. ‘மரணம் மட்டுமே இங்கு நிச்சயம். நிவாரணம் இரண்டாம் பட்சமே’ அதாவது உயிர் பிழைத்து சுகம் கிடைத்தால் உண்டு என்று பிஆர்டி மருத்துவமனையை அழகாக தலைப்பிலேயே நறுக்கென்று படம் பிடித்திருந்தது.

பகாதா என்ற கிராமத்திலிருந்து சுமன், பரமதேவ் யாதவ் என்ற தம்பதியர் தங்களுக்கு 8 வருடங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் கொண்டு வந்திருந்தனர். ஒரு குழந்தை ஆண், இன்னொரு குழந்தை பெண். 2ஆம்தேதி பிறந்து 3ஆம்தேதி பிஆர்டி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் அதாவது எட்டே நாட்களுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டன.

சுகமாகத் தான் பிள்ளைகள் பிறந்தன; காய்ச்சல் வந்தது; அவ்வளவு தான். உடனே குழந்தைகளை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். அதற்குப் பின்னால் குழந்தைகளை உயிருடன் பார்க்கவில்லை. அப்புறம் அவர்களைப் பிணமாகத் தான் பார்த்தோம். பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் பெயர் வைத்து இனிப்புகள் வழங்க வேண்டும் என்று இனிப்புகளும் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பவில்லை என்று பிள்ளைகளின் பாட்டி கையில் வைத்திருந்த இனிப்பு டப்பாவை காட்டியவாறு கூறினார்.

பிள்ளைகள் சுவாசக் கோளாறால் இறந்து விட்டன என்று மருத்துவமனை இறப்பு சான்றிதழ் கொடுத்தது. உண்மையில் தன் பேரக்குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தான் ஏற்பட்டதா? என்று அந்தப் பாட்டிக்குத் தெரியாது. காரணம் மருத்துவ நிர்வாகம் மரணத்திற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

தீபக் என்ற 4 வயது பையனை அதே கோரக்பூர் குல்ஹராயா பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு பஹதுர் நிஷாத் கொண்டு வந்து சேர்க்கின்றார். அன்றைய தினம் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் ஆஸ்பத்திரிக்கு வருகையளித்ததால் சேர்த்ததிலிருந்து 4 மணி நேரம் பையனை டாக்டர்கள் பார்க்கவில்லை. பிறகு ஆக்ஸிஜன் பைப் இணைப்புக் கொடுத்தார்கள். அதிலிருந்து ஆக்ஸிஜன் வந்ததா?  என்று தெரியாது. பிறகு ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டு விட்டது என்று தெரிந்தது. இது மாதிரியான நோய் இவர்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இவர்கள் இதன் வேதனையை உணர்வார்கள் என்று அந்த பெண்மணி கூறினார்.

இதுபோன்ற பல சோக நிகழ்வுகள் மேற்சொன்ன தலைப்பில் அந்தப் பத்திரிக்கையின் பத்திகளில் இடம் பெற்றிருந்தன. பொதுவாகவே இந்த மருத்துவமனையில் 2014 ஆகஸ்டில் 567 குழந்தைகள், 2015ல் 668 குழந்தைகள் 2016ல் 587 குழந்தைகள் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயால் இறந்திருக்கின்றன. அதாவது இந்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஆகஸ்டிலும் நாளொன்றுக்கு 18லிருந்து 21 குழந்தைகள் இறந்திருக்கின்றன. மருத்துவ நிர்வாகம் சுதாரிக்கவில்லை.

மேற்கண்ட செய்தியிலிருந்து இந்த மருத்துவமனை மருத்துவமனையாக இல்லை. மழலைகளைக் கொல்கின்ற ஒரு மரணக் கிடங்காக இருந்திருக்கின்றது என்பதற்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளாகும்.

பசுக்களா? சிசுக்களா?

இந்த மருத்துவமனைக்குக் குழந்தைகளைக் கொண்டு வருவதற்குக் காரணம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்று பார்த்தோம். இந்த நோய் பன்றிகள் மூலமாக குழந்தைகளுக்குத் தாவுகின்றது என்று கண்டறிந்திருக்கின்றார்கள். 1978வது ஆண்டு முதல் தற்போது வரை 25000 ஆயிரம் குழந்தைகள் இந்நோய்க்குப் பலியாகி இருக்கின்றார்கள் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது. அப்படியானால் இது எவ்வளவு பெரிய கொடிய நோய் என்பது இதிலிருந்து புலனாகின்றது.

1978லிருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, பாரதீய ஜனதா கட்சி என்று மாறி, மாறி ஆண்ட பல கட்சிகள் இந்த நோய் விஷயத்தில் உரிய கவனம் செலுத்தாமல் சுத்தம், சுகாதாரத்திற்கு இன்றியமையாத கட்டமைப்புகளைச் செய்யத் தவறி விட்டன. சுத்தத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த மாத்திரத்தில் இதற்கு ஒரு திட்டத்தை உடனே வகுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் தனது கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, முஸ்லிம்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கின்றார்.

இந்நோய்க்கு தடுப்பூசி இருந்தாலும் அது பெரிய அளவு பயன் தர மறுக்கின்றது. சுத்தமான குடிநீர், சரியான கழிப்பறைகள் இல்லாதது தான் இந்நோய் தொற்றுவதற்கு அடிப்படைக் காரணம் என்று மருத்துவர்கள் ஒருமித்துக் கூறுகின்றனர். முதல்வர் ஆதித்யநாத்தும் இதற்கெல்லாம் தீர்வு சுவஜ் பாரத்தில் (தூய்மை இந்தியா திட்டத்தில்) அடங்கியிருக்கின்றது. அதனால் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். நான் 20 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தொடர்பாக குரல் எழுப்பி வருகின்றேன் என்று குறிப்பிடுகின்றார்.

சுவஜ் பாரத் என்று முழங்குபவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்து விட்டார். வந்ததும் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? 1978லிருந்து 2017 வரைக்கும் 25000 குழந்தைகளை சுனாமி அலை போல் சுருட்டி இழுத்துப் பலி கொண்ட இந்த நோய்க்கு எதிராகப் போர்க்கால நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். இந்த நோய்க்கு எதிரான போர்க்களத்தில் குதித்திருக்க வேண்டும். ஆனால் இவர் என்ன செய்தார்? சிசுக்கள் கொசுக்கள் போல் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் இவர் பசுக்களுக்கு கோசாலை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றார்.

பசுக்களின் உயிர் அளவுக்குக் குழந்தைகள் உயிர்மீது அவருக்கு அக்கறை இல்லையா என்றுதான் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது! ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதித்யநாத் நடந்த பேரழிவுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், பதவிகளுக்காக மத துவேஷத்தை வளர்த்தெடுக்கத் தயங்காதவர்கள், தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்ப்பதோ அல்லது அப்படிச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதோ நகைமுரணாகத்தான் இருக்கும்.

இவ்வாறு தமிழ் இந்துவில் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று ‘‘குழந்தைகள் மரணத்தில் உங்களுக்கு பொறுப்பில்லையா? ஆதித்யநாத்?” என்ற தலைப்பில் செல்வப் புவியரசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

பசுக்களுக்கு கோசாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செயவதுடன் மட்டும் நிற்கவில்லை. இதே பிஆர்டி மருத்துவமனையில் இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அழுது கொண்டே ஒரு தாய் இரு சக்கர வாகனத்தில் ஒருவருக்குப் பின்னால் அமர்ந்து செல்வதை முக நூல்களில் பார்த்து மக்கள் கண்கள் கலங்கினர். ஆனால் சிசுக்களுக்கு ஆம்புலன்ஸ் அமர்த்திக் கொடுக்க முன் வராத இந்தப் பாவிகளோ உலகில் எங்கும் இல்லாத அளவுக்குப் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை உ.பி.யின் துணை முதல்வர் கெஷவ் பிரசாத் மவ்ரியா கடந்த மே மாதம் துவக்கி வைத்திருந்தார். இது இவர்கள் ஈவு, இரக்கமற்ற மிருகங்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

இவர்கள் போடுகின்ற சுவஜ் பாரத் என்ற கோஷத்தில் இவர்கள் உண்மையாளர்களா? என்றால் அதிலும் இவர்கள் பொய்யர்கள் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இதை நாம் சொல்வதை விட செல்வப் புவியரசன் கேட்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்

மூளைக் காய்ச்சல்தான் காரணமா?

மூளைக் காய்ச்சல்தான் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்று சமாளிக்கத் தெரிந்த ‘யோகி’க்கு அந்நோய் எப்படி தொற்றுகிறது என்று தெரியாதா என்ன? பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமையும் சுகாதாரத்தில் நிலவும் குறைபாடுகளுமே மூளைக் காய்ச்சல் உருவாவதற்கும், பரவுவதற்கும், பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் குடிப்பதற்கும் காரணம்.

குடிநீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தி தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பில்லையா? நோய் ஏதோ வானிலிருந்து ஏவப்பட்டது போன்றும், அதைத் தடுப்பூசி கொண்டு தடுத்துவிடலாம் என்றும் ஆதித்யநாத் கூறுவது வேடிக்கை என்றாலும் வேதனையின் உச்சம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் இறந்ததும் உலகமே இந்தக் கயவர்கள் மீது காரி துப்ப ஆரம்பித்ததும் இப்போது 85 கோடி ரூபாய் செலவில் குழந்தைகளுக்கான ஒரு மருத்துவமனையை நிறுவப் போகின்றோம் என்று இந்த கொலைகாரக் கும்பல் அறிவித்திருக்கின்றது. இப்படி ஓர் நடவடிக்கையை இந்த நிகழ்வுக்கு முன்பு அறிவித்திருக்க வேண்டும். இது போன்று சுகாதார நடவடிக்கைக்கு இதுவரை எந்தத் திட்டத்தையும் இவர்கள் கையில் எடுக்கவில்லை. அதைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து தெளிவாகக் கூடிய விஷயம் சுவஜ் பாரத் (தூய்மை இந்தியா) ஒரு வெற்றுக் கோஷம் என்பது தான்.

அதனால் தான் அண்மையில் ராகுல் காந்தி சுவஜ் பாரத் (தூய்மை இந்தியா) வேண்டாம், சஜ் பாரத் (வாய்மை இந்தியா) வேண்டும் என்று பொருத்தமாகக் குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியாவுக்கு தேவை இஸ்லாமே!

தூய்மை இந்தியாவென்றால் அது வெறும் வாய்ச்சொல் மந்திரமல்ல! வெறும் வாயால் வடை சுடும் வேலையல்ல! தூய்மை இந்தியாவென்றால் அதற்குத் தேவை தூய்மை இஸ்லாம் தான். இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. இன்று மில்லியன் கணக்கில் புனித ஹஜ்ஜுக்காக மக்காவில் குவிந்திருக்கின்றார்கள். ஒருவர் எங்காவது பொதுவிடத்தில் மலம் ஜலம் கழித்து அசுத்தப்படுத்துகின்றாரா? என்று ஒரு குழுவை அனுப்பி பார்க்கச் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் உள்ள கோயில்களைச் சுற்றி சிறுநீர், மலம் கழித்து நாசமாக்குகின்ற மிருகச் செயலைப் பார்க்கின்றோம். மக்காவில் உள்ள அந்தப் புனித ஆலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இதுபோன்ற அசிங்கத்தையும், அசுத்தத்தையும் செய்கின்றார்களா? என்று அந்தக் குழு பார்த்து வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யட்டும்.

அதனால் தான் எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் உலக மக்களை இந்த மக்காவை நோக்கிப் பல வழிக்காட்டல்களுக்காகப் பார்க்கச் சொல்கின்றான்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

அந்த வழிகாட்டல்களில் இந்தியாவைக் கவிழ்த்துக் கொண்டிருக்கின்ற இந்த சுகாதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

கஅபாவுக்கு வரும் மக்கள் ஏன் பொது வெளியில் மலஜலம் கழிப்பதில்லை.

மக்காவில் மட்டுமல்ல. இந்தியாவிலே கூட இஸ்லாத்தைச் சரியான முறையில் கடைப்பிடிக்கின்ற மக்களும் கண்ட கண்ட இடங்களில் மல, ஜலம் கழிப்பதில்லை. அதற்குக் காரணம் என்ன?

1)            இஸ்லாம் அசுத்தத்தை அசுத்தமாகப் போதிக்கின்றது. மூத்திரம் என்றால் அது கழிவு நீர். அது வெளியானதும் கழுவ வேண்டும். அதைக் கழுவாமல் தொழக் கூடாது, அதாவது இறை வணக்கம் புரிதல் கூடாது என்று இஸ்லாம் அசுத்தத்தைப் பற்றி ஓர் அடிப்படை அறிவையும் அதன் படி செயல்பட பழக்கியும் விடுகின்றது.

மூத்திரம் என்றால் மனித மூத்திரத்திலிருந்து அனைத்து வகையான விலங்குகள் மூத்திரத்தையும் அசுத்தம் என்று போதிக்கின்றது. ஒரு முஸ்லிம் எந்த வகையான சிறு நீராக இருந்தாலும் ஒரு துளி தெறித்து விட்டாலே அதைக் கழுவதற்குத் தெறித்து ஓடி விடுவான். இப்படிப்பட்ட பண்பாடு ஒரு மனிதன் தன்னையும் தன் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் தொற்று நோயையும் துரத்தி அடித்து விடும்.

இது தூய்மையா? அல்லது மாட்டு சாணத்தையும் மூத்திரத்தையும் மருந்தாகப் பார்ப்பது தூய்மையா?

2)            சிறுநீர் கழிக்கின்ற ஒரு முஸ்லிம் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு தான் கழித்த இடத்தில் தண்ணீர் விட்டும் செல்வதால் அந்த இடமும் துப்புறவாகின்றது. இதன் மூலம் தனது சுற்றுப்புற சூழ்நிலையையும் ஒரு முஸ்லிம் காத்துக் கொள்கின்றான்.

3)            பொதுவிடத்தில் மலம் ஜலம் கழிக்கும் எந்த ஒரு மனிதனும் வெட்கப்படுவதில்லை. பேருந்துகளில் அல்லது ஓடும் ரயிலில் பயணிப்பவர்கள் தன்னைப் பார்ப்பார்களே என்ற வெட்க உணர்வு ஆண், பெண் இரு பாலர்களுக்கும் சிறிதும் இல்லை. சாலைகள், இரயில் பாதையின் இரு ஓரங்களிலும் சர்வ சாதாரணமாக மலம் ஜலம் கழிக்கின்றார்கள்.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ (நூல்: புகாரி-9) என்று கூறுகின்றார்கள்.

அதனால் இஸ்லாத்தின் பிடிமானத்தில் உள்ள முஸ்லிம்கள் வெட்கமில்லாமல் மலம் ஜலம் கழிப்பதில்லை. இந்த வெட்க உணர்வு வேண்டுமென்றால் அதற்கு இஸ்லாம் மற்றும் இறை நம்பிக்கை வேண்டும். இந்த வெட்க உணர்வு அதாவது இஸ்லாமிய சிந்தனை அனைவருக்கும் ஏற்பட்டு விட்டால் பொது இடங்களில் மலஜலம் கழிப்பது ஒரு முடிவுக்கு வந்து விடும்

4)            இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமே பன்றி தான். இத்தனை குழந்தைகளின் உயிர்களைக் குடிப்பதற்குக் காரணமாக அமைந்த இந்தப் பன்றிகளை இது வரைக்கும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

கோரக்பூரில் குழந்தைகளின் சோக நிகழ்வு நடந்த மறுநாள் ஒடிசாவில் 100 பன்றிகள் இறக்கின்றன என்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவருகின்றது. இது எதைக் காட்டுகின்றது? இந்தியா இன்னும் பாடம் படிக்கவில்லை என்று காட்டுகின்றது.

பன்றிகளைப் பற்றி இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அரபு நாடுகளில் இந்தத் தொற்று நோய்க்கு வேலையே இல்லை. அதற்கு காரணம் என்ன? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உத்தரவு இதோ:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!என்று கூறினார்கள். (புகாரி : 2236)

இஸ்லாத்தின் தொலை நோக்குப் பார்வையை கவனத்தில் கொண்டால் இந்தியா இது போன்ற தொற்று நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும்.

5)            இஸ்லாம் என்றாலே சுத்தம் தான். காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘‘தூய்மை இறை நம்பிக்கை எனும் கொள்கையில் பாதி” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம்  328)

மூளைக் காய்ச்சல் அசுத்தத்தால் தான் வருகின்றது என்று ஆதித்யநாத் நன்கு விளங்கி வைத்திருக்கின்றார். ஆனால் அந்த சுத்தம் தனி மனிதனின் மனதில் உருவாக வேண்டும். அரசாங்கம் சில பொதுக்கழிப்பறைகளைக் கட்டி விடுவதால் மட்டும் ஏற்பட்டு விடாது. கழிப்பறைகள் கட்டி வைத்த பின்பு எத்தனை கழிப்பறைகள் பாழடைந்து கிடக்கின்றன. காரணம் மக்கள் மீண்டும் பொதுவெளியில் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் தனி மனித உள்ளத்தில் மாற்றம் ஏற்படாதது தான். அந்த மாற்றத்திற்கு இஸ்லாம் மட்டும் தான் வழியும் வகையும் ஆகும்.

—————————————————————————————————————————————————————————————

அவதாரமெடுக்கும் அவதூறுகள்

சபீர் அலீ

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதன் அறிவியல் யுகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றான்.

சில நூற்றாண்டுக்கு முன்னால் மனிதனின் கற்பனைக்குக் கூட சாத்தியமற்றவையாக இருந்த விஷயங்களெல்லாம் இன்று சாத்தியமாகியுள்ளன.

இத்தகைய நவீன வளர்ச்சி, பல நன்மைகளை உலகிற்குத் தந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட தீமைகளும் ஏராளம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய தீமைகளில் உழன்று அதனுடன் பழக்கப்பட்ட மனிதன், யதார்த்தத்தை மறந்து செயல்படுபவனாகவும், தவறான காரியங்களை, தீமைகள் என்றே உணராதவனாகவும் மாறிவிட்டான். இதனால் உலகில் தீமைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய தீமைகளில் ஒன்றுதான் ஒருவனைப் பற்றி இன்னொருவன் அவதூறு பரப்புவது.

அவதூறு என்றால் என்ன?

ஒரு மனிதனின் மீது கொண்டுள்ள கோபம், குரோதங்களின் காரணத்தினால் அவன் மீது களங்கம் சுமத்துவதற்காக அவனிடம் இல்லாத குறையை, தவறை பொய்யாகப் பரப்புவதே அவதூறாகும்.

அவதூறு என்றால் என்ன? என்று மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்என்று பதிலளித்தார்கள்.

அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால் நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5048

ஒரு மனிதனிடம் இல்லாத குறையைப் பரப்புவதே அவதூறு என்று நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் அவதூறுக்கு வரைவிலக்கணம் சொல்லியுள்ளார்கள்.

தான் கோபம் கொண்ட மனிதனின் எதிரில் நின்று, கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகள் எடுக்கும் ஆயுதமே அவதூறு பரப்புதலாகும்.

அவதாரம் எடுக்கும் அவதூறு

ஒரு காலத்தில் அவதூறு என்பது ஒருவர் தனக்குப் பிடிக்காத மனிதனைப் பற்றி பொய்யாக இன்னொருவரிடத்தில் சொல்வதும், அவர் அதன் உண்மை நிலையறியாமல் மற்றொருவரிடத்தில் சொல்வதுமாக செவிவழியில் பரவுகின்ற செய்தியாகத்தான் இருந்தது.

ஆனால், இந்த நவீன யுகத்தில் அவதூறு வேறொரு அவதாரம் எடுத்துள்ளது.

இன்று ஒருவரின் மீது குறை சொல்ல, களங்கம் சுமத்த நினைப்பவர்கள் வெறும் வாய்வழிச் செய்தியாகப் பரப்பாமல் அதை உண்மையென நம்ப வைக்கும் விதமாகப் பலவிதமான போலி ஆதாரங்களை உருவாக்குகிறார்கள்.

உதாரணமாக, ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்தை கேள்விக்குறியாக்கி, களங்கம் சுமத்த நினைப்பவர்கள் முன்னரெல்லாம் அப்பெண்ணை வேறொரு ஆடவனோடு தொடர்புபடுத்திய பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள்.

ஆனால், இன்று கிராஃபிக்ஸ் (ரீக்ஷீணீஜீலீவீநீs), மார்ஃபிங் (னீஷீக்ஷீஜீலீவீஸீரீ) போன்ற நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு அந்த பெண்ணின் உருவத்தை வேறொரு ஆடவனோடு தவறாக இணைத்தோ அல்லது அப்பெண் வேறொரு ஆடவனோடு தொலைபேசியில் உரையாடுவதைப் போன்று அப்பெண்ணின் குரலையே போலியாகத் தயாரித்தோ தாங்கள் சுமத்திய களங்கத்திற்கு இதோ ஆதாரம் என்று காட்டுகிறார்கள்.

(இவ்வாறு உருவாக்குவதற்கு பல மென்பொருள்கள் இன்றைக்கு இருக்கிறன்றன. யாரைப் போலும் குரலை மாற்றி பேசுகின்ற (மிமிக்ரி) மனிதர்களும் இருக்கின்றனர்)

இதைப் பார்க்கும் பாமர மக்களும் அதை உண்மையென நம்பிவிடுகின்றனர். அவதூறு பரப்பியவர்களும் மக்களை மடையர்களாக்கி விட்டோம், களங்கத்தைச் சுமத்திவிட்டோம் என்ற மமதையில் திளைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இவ்வாறுதான் வாய்வழிச் செய்தியாக மட்டும் இருந்த இந்த அவதூறு இன்று நவீன அவதாரம் எடுத்துள்ளது.

அவதூறைப் பரப்புவதற்கு முன்னால் அவதானியுங்கள்!

முன்னர் அவதூறை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவர்களின் செவிகள் மட்டுமே சாதனமாக இருந்தது.

ஆனால் இன்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் துணை நிற்கின்றன.

இந்த வலைத்தளங்கள் வாயிலாக ஒரு செய்தியை உலகம் முழுவதும் பரப்புவது மிக எளிதான காரியமே.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருக்கும் சிலர் தங்களுக்கு வரும் செய்தியைப் பிறருக்குப் பரப்புவதற்கு முன்னால் அந்தச் செய்தி உண்மையா? பொய்யா? என்பதை அவதானிப்பது கிடையாது.

தனிமனிதர்கள் மீது கூறப்பட்ட பொய்யான செய்தி ஒருபுறம் இருக்கட்டும். நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் வந்தால் கூட அவை ஹதீஸ்கள் என்பதைப் போன்று வேகமெடுத்து பரப்புவதைக் காண்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 6

எந்தச் செய்தியாயினும் நாம் பரப்புவதற்கு முன்னால் உண்மையான செய்தியா என்று அவதானித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் நாம் இறைவனிடம் பொய்யன் என்ற ஸ்தானத்தைப் பெற்றுவிடுவோம்.

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை

கற்பொழுக்கமுள்ள பெண்கள் விஷயத்தில் அவதூறு சொல்வது பெரும்பாவமாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)’’ என்று (பதில்) கூறினார்கள்.

நூல்: புகாரி 2766

அவதூறு கூறுவோருக்கு ஈருலகிலும் தண்டனை

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

மண்ணறையில்…

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை’’ என்று சொல்லிவிட்டு, “ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்’’ என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்‘’என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 216

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், “அல்லாஹ் நாடியது நடக்கும்’’ எனக் கூறுவார்கள். இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?’’ என்று கேட்டதும் நாங்கள் இல்லைஎன்றோம்.

அவர்கள், “நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது.

உடனே நான் இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் நடங்கள்என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் நடங்கள்என்றனர். எனவே நடந்தோம். ….

(இறுதியில்) நான் இருவரிடமும் இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டேன்.

அதற்கு இருவரும் ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.

அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல்: புகாரி 1386)

மானத்தோடு விளையாடியோருக்கு  மறுமை தண்டனை

அவதூறு கூறுவதன் மூலம் பிறர் மான விவகாரத்தில் விளையாடியவர்களுக்கு மறுமையில் செம்பு உலோகத்தினாலான நகத்தால் உடல் முழுவதும் கீறிக்கிழிக்கப்படும் வகையில் தண்டனை அளிக்கப்படும்.

நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும், உடம்பையும் கீறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் (புறம் பேசுவதின் மூலம்) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 4235

நன்மையற்று, நரகமே பரிசாகும்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

இவ்வளவு பாவச் சுமைகளையும் தண்டனை களையும் அவதூறு பரப்புவோருக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்.

இதில் அவதூறை உருவாக்கியவர்களும், அதைப் பரப்புவர்களும் ஒருவொருக்கொருவர் பாவத்தில் சளைத்தவர்கள் அல்லர். இருவரும் சமமானவர்களே.

அவதூறால் அல்லாஹ்வின் கொள்கை அழியுமா?

மேற்குறிப்பிட்டதைப் போல் அல்லாஹ்வின் எச்சரிக்கை மிகுந்த அவதூறு பரப்புதலை அல்லாஹ்வின் கொள்கைக்கு எதிராகவும், அக்கொள்கையைப் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராகவும் பயன்படுத்தி அல்லாஹ்வின் கொள்கையை அழித்துவிடலாம் என்று கற்பனைக் கனவில் மூழ்கி கிடக்கின்றனர்.

அவர்களுக்கு அல்லாஹ்வின் பதில் இதோ:

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

—————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்    தொடர்: 40

பெண்கள் விருந்து பரிமாறலாமா?

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனைவி தன்னை மாற்றிக் கொண்டால்தான் தம்பதிகள் இருவரும் உளப்பூர்வமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும்.

அதேபோன்று திருமணம் முடிக்கும் போது ஏழ்மையாக இருந்து, பின்னர் செல்வந்தராக கணவர் மாறினாலும் நமக்குத்தானே அவைகளும் கிடைக்கும் என்று பெண்கள் நினைத்து செயலாற்ற வேண்டும். அதேநேரம் ஏழ்மையாக இருக்கும் போதும் அதிலும் நாம்தான் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துப் பெண்கள் கணவன்மார்கள் வீட்டில் பணியாற்ற வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு சுமையாகவே கருதக் கூடாது. இப்படித்தான் அல்லாஹ் நம் வாழ்க்கைத் தீர்ப்பை அமைத்துள்ளான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது தந்தையர் வீட்டில் இருக்கும் போது, ஏழ்மையைப் போக்குவதற்காக, அல்லது நம் தாய் தந்தையர் கஷ்டப்படும் போது நாமும் சேர்ந்து உதவியாக இருந்து ஒத்துழைப்போம். வறுமைக்காக வேண்டி சிலர், வீட்டிற்குள்ளேயே பெண்கள் அப்பளம் தயாரித்தல், தீக்குச்சி அடுக்குவது, துணிகளில் பிசிறு வெட்டுவது, தையல் தைப்பது போன்ற சிறு குறு குடிசைத் தொழில்களை பெற்றோர்களோடு பெண் பிள்ளைகளும் ஈடுபடத்தான் செய்வார்கள். அதுபோன்று கணவர் வீட்டிலும் இருந்து கொள்வதுதான் ஏற்றது. இப்படியெல்லாம் கணவர் வீட்டில் பெண்கள் தாராளத் தன்மையோடு நடந்து கொண்டால் அது அழகான குடும்பமாக மாறிவிடும்.

கணவர் வீட்டில் இருக்கும் போது வெளியாட்களோ, விருந்தாளிகளோ வந்தால், அவர்களைப் பெண்கள் விருந்துக்காக உபசரிப்பது தவறொன்றுமில்லை. ஆனால் இந்தச் சட்டத்தை சமூக மக்கள் தவறாக விளங்கியுள்ளனர். முஸ்லிம் குடும்பங்களில் விருந்தாளிகள் வந்தாலும் அந்த வீட்டிலுள்ள முஸ்லிம் பெண்களில் பெரும்பாலும் உணவுப் பொருட்களைப் பரிமாறவே மாட்டார்கள். எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு அப்புறமாக விருந்தாளிகளை உண்பதற்காக அழைப்பார்கள். வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் அவர்களாகவே உணவை எடுத்து வைத்துக் கொள்வார்கள். அல்லது வீட்டிலுள்ள ஆண்கள் எடுத்து வைப்பார்கள்.

விருந்தாளிகளுக்குப் பெண்கள் பரிமாறுவதையோ அல்லது ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே சபையில் அமர்ந்து உண்ணுவதைக் கூட நம் சமூகம் தவறாக நினைக்கிறது. அப்படிச் செய்வது கூடாது என பலர் நினைக்கின்றனர். கணவன் மனைவி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கூட நம் சமூகம் இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிக்குடும்பமாக இருந்தால் இது சாத்தியமாக இருக்கலாம். கூட்டுக் குடும்பமாக இருந்தால் இந்தச் செயல் மாமியார் மூலமாகக் கண்டிக்கப்படும் அவலங்களையும் சமூகத்தில் பார்க்கிறோம்.

இப்படியெல்லாம் இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது. தேவைப்பட்டால் கணவனுடன் சேர்ந்து சாப்பிடலாம். குடும்பத்தார் எல்லாரும் சாப்பிடும் போது ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். எனினும் ஒரே குடும்பத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சாப்பிடும் போது, மஹ்ரமான ஆண்கள் இருந்தால் பெண்கள் தங்களது பர்தா முறையான முகம், முன் கைகள் தவிர அனைத்தையும் மறைத்துக் கொண்டு சாப்பிடலாம். இதுபோன்று குடும்பத்துடன் சாப்பிடுவதற்கும் மார்க்கம் அனுமதிக்கிறது.

அதேபோன்று அந்நிய ஆண்கள் விருந்தில் கலந்து கொண்டாலும் பர்தாவுடன் ஒரு பெண் விருந்தாளிகளை உபசரித்து பரிமாறிக் கொள்ளவும் செய்யலாம். பெண்கள்தான் பரிமாற வேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை. அதே நேரத்தில் பெண்கள் பரிமாறிக் கொள்ள ஆசைப்பட்டால் பரிமாறலாம். தவறொன்றுமில்லை. இப்படிப் பெண்கள் பரிமாறுவதை சமூகம் தவறாகவும் நினைக்கக் கூடாது. சபையில் பெண்கள் பரிமாறவும் செய்யலாம். பரிமாறாமலும் இருக்கலாம். இரண்டுமே ஆகுமான காரியம் தான்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?’’… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?’’… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கிறேன்)’’ என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்துவிடு’’ என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்… அல்லது வியப்படைந்தான்’’ என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்’’ என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3798

இந்தச் செய்தியில் விருந்தாளியாக வந்தவர் ஓர் அந்நிய மனிதர்தான். அவருடன் அந்தப் பெண்மணியும் அவரது கணவரும் விருந்துண்பதைப் போன்று பாவனை செய்து கொண்டனர். இதில் பர்தாவைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றாலும் பர்தா முறையைப் பேணித்தான் ஸஹாபியப் பெண்மணிகள் இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு நபருக்குப் பரிமாறவும் கணவரின் பாதுகாப்புடன் ஒரு பெண் பிறருடன் ஒன்றாக ஒரே சபையில் உட்கார்ந்து சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை.

அதே போன்று அபூ உஸைத் என்ற நபித்தோழர் திருமணம் முடிக்கிறார். அவரது மண விருந்துக்காக நபியவர்களையும், நபித்தோழர்களையும் அழைக்கிறார். ஆனால் இவர்களது வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாது. இவரும் இவரது மனைவி புதுப் பெண்ணும்தான் உணவு, பானங்களை விருந்தாளிகளுக்குப் பரிமாறினார்கள். கல்யாணப் பெண் வேலையே செய்யக் கூடாது என்பதெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 5182

இது நபியவர்கள் முன்னிலையில் நடந்த சம்பவம். இப்படியெல்லாம் சபையோர் விருந்தில் பெண்கள் பரிமாறுவது தவறு என்றிருக்குமானால் நபியவர்கள் அதைக் கண்டித்து இருப்பார்கள். ஒரு தனியான அந்நிய ஆணுக்கு, தனியாக ஒரு பெண் மட்டும் இருந்துகொண்டு பரிமாறினால் தான் மார்க்கம் தடை செய்த காரியம் என்றாகும். இந்தச் சம்பவத்தில் கணவன் மனைவி சேர்ந்து இருக்கும் சபை.

இதுபோன்று கணவன் இல்லாமல், பெண் மட்டும் இருக்கிற, பல ஆண்கள் கலந்து கொள்ளும் சபையோருக்கும் பெண்கள் விருந்து பரிமாறுவது தவறாகாது. அதாவது தனிமை என்ற நிலையில்லாமல் இருந்தால் பெண்கள் விருந்துணவை பரிமாறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமாக உள்ளது.

ஒரு பெண் தனியாக இன்னொரு ஆணுக்கு விருந்து கொடுப்பது கூடாது. அதே நேரத்தில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை விருந்துக்கு அழைத்தால் அதில் தவறொன்றும் கூறமுடியாது. இந்தச் சம்பவத்தில் ஒரு அன்சாரிப் பெண் நபித்தோழியர்தான் ஆண்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள்.

நபியவர்களுடன் நாங்களும் ஒரு அன்சாரித் தோழியரின் விருந்துக்காகச் சென்றோம். அப்போது அவர்கள் விரிப்பை விரித்து, அதைச் சுற்றி தண்ணீர் தெளித்தார்கள். எங்களுக்காக உணவு தயாரித்திருந்தார்கள். நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதோம். அப்போது அந்தப் பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காக அறுத்த ஆட்டின் இறைச்சி அதிகமாக இன்னும் மீதம் இருக்கிறது. தாங்கள் மாலை உணவுக்கும் வருவீர்களா?’’ என்று கேட்டதற்கு, நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பிறகு உளூவுச் செய்யாமலே அஸர் தொழுகையைத் தொழுதோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்னத் அபீ யஃலா 2160

இந்தச் செய்தியில் அன்சாரிப் பெண்ணுக்கு சபையில் கணவர் இருப்பதாகவோ அல்லது மஹ்ரமானவர்கள் இருப்பதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ஒரு பெண் பல ஆண்களுக்கு விருந்துபசரிப்பைச் செய்வதற்கு மார்க்கம் அனுமதியளிக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் தனியாக ஒரு ஆணுக்கு விருந்து கொடுப்பதுதான் மார்க்கம் தடைசெய்த காரியமாகும்.

இன்னும் சொல்வதாக இருப்பின், திருமறைக்குர்ஆனிலேயே இதுபற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 24:61

சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது குற்றமில்லை என்று இறைவன் சொல்வதிலிருந்து அனைத்து விதமான உறவுகளும் இணைந்து பெண்கள் ஹிஜாபைப் பேணி தாராளமாக உணவு அருந்தலாம் என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலும் 20 பேர் கொண்ட குடும்பத்திற்கு தனித்தனியாக பரிமாறுவது மிகப்பெரும் சிரமத்தைக் பெண்களுக்குக் கொடுப்பதாக அமைந்துவிடும். சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால்தான் கல்யாண வீடுகளில் நடக்கும் வலிமா விருந்து, சபை விருந்துகளெல்லாம் இந்த அடிப்படையிலேயே வைக்கிறோம்.

இன்னும் சிலர் சஹனில் சேர்ந்து சாப்பிடுவதுதான் சுன்னத் என்பார்கள். அப்படியொன்றும் இல்லை என்பதற்கும் இவ்வசனம்தான் சான்றாக இருக்கிறது.

அப்படி ஆணும் பெண்ணும் ஒரே சபையில் சாப்பிடும் போது, பெண்கள் முகம், கைகளை மறைத்தவர்களாக ஹிஜாப் அணிந்து இருப்பது, ஆணும் பெண்ணும் தொட்டுவிடாமல் நடந்து கொள்வது, மார்க்கம் தடைசெய்த பேச்சுக்களைப் பேசாமல் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு சாப்பிடுவது குற்றமில்லை. அதுபோன்ற சபைகளில் பெண்கள் பறிமாரிக் கொள்வதும் உபசரிப்பதும் தவறொன்றுமில்லை. இவைகளெல்லாம் குடும்பத்தில் பெண்கள் பேணிக் கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகள்.

அடுத்ததாக, இல்லற வாழ்க்கையில் இன்னும் சில முக்கியமான அம்சங்கள் கணவன்மார்களுக்கு இருக்கின்றன.

கணவன், மனைவிக்கு உணவு கொடுக்கிறான், ஆடை கொடுக்கிறான். இதுபோக பெண்களுக்கென தனியான சிறிய, பெரிய ஆசைகள் இருக்கும். மனவிருப்பங்கள் இருக்கும். அது மிகவும் அத்தியாவசியமானதாகக் கூட இருக்காது. சாப்பாட்டில், ஆடையில், மருத்துவம் போன்றவற்றில் ஏற்படும் விருப்பம் என்பது கூட அத்தியாவசியம் என்று கூறலாம். ஆனால் இவை அல்லாத உபரியான ஆசைகளும் பெண்களுக்கு இருக்கும்.

உதாரணத்திற்கு, சில பெண்கள் கணவனுடன் வெளியில் சென்று எதையாவது பார்த்து வருவதற்கு ஆசைப்படுவார்கள். அதிலும் சிலர் இருசக்கர வாகனத்தில் கணவனுடன் செல்வதை விரும்புவார்கள். அவற்றையெல்லாம் கணவன்மார்கள் நிறைவேற்றிக் கொடுப்பது குடும்ப உறவில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தும்.

கணவன்மார்கள் எத்தனை வேலைகள் இருந்தாலும் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைக்கிற போது கிளம்பி விடுகிறார்கள். ஆண்கள் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் போன்று பெண்களின் சிற்சில ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பது முக்கியம்.

மார்க்கம் தடைசெய்த இடங்களுக்கோ சபைகளுக்கோ அழைத்துச் செல்லக் கூடாது. அதே நேரத்தில் மார்க்கம் அனுமதியளிக்கின்ற பொழுதுபோக்குகளில் ஆண்களைப் போன்று பெண்களும் கலந்து கொள்வதற்கு, பார்வையிடுவதற்கு ஆண்கள்தான் மனைவிமார்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

விமர்சனங்களும், விளக்கமும்!

பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமா இஸ்லாம்?

எம்.எஸ். செய்யது இப்ராஹிம்

இஸ்லாத்தின் சத்திய போதனைகளை எவ்வித சமரசமுமின்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இப்பேரியக்கம் மக்கள் மத்தியில் எடுத்தியம்பி வருகின்றது.

நமது இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட பலர் நம்மீது பல அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவ்வாறு நம்மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமான ஒன்றுதான், “இவர்கள் பகுத்தறிவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்; பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கிறோம் என்று சொல்லி இஸ்லாத்தை மறுக்கின்றனர்; திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்” என்ற குற்றச்சாட்டாகும்.

இவ்வாறு நம்மீது இந்த அவதூறை இவர்கள் சுமத்தக் காரணம் இஸ்லாத்தின் அடிப்படை அகீதா குறித்தும், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் குறித்தும் இவர்கள் முழுமையாக அறியாததுதான்.

பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திப்பது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட ஒரு செயல் போல இவர்கள் சித்தரிக்கின்றனர்.

பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திப்பது பாவச்செயல் என்பதுபோல இவர்கள் பில்டப் கொடுப்பதால்தான் நாம் திருக்குர்ஆனை இழிவுபடுத்துவதாக நம்மீது அவதூறு கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

பகுத்தறிவுப்பூர்வமாக எதையெல்லாம் இஸ்லாம் சிந்திக்கச் சொல்லியுள்ளதோ அவற்றையெல்லாம் பகுத்தறிவுப்பூர்வமாக சிந்தித்து அறியும் அறிவுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவாகும்.

திருக்குர்ஆன் எந்த வழியில் நின்று நம்மை வழிநடத்துகின்றதோ அந்த வழியைப் பின்பற்றி, திருக்குர்ஆன் கூறும் அறிவின் பிரகாரம் சிந்தித்து, திருக்குர்ஆனோடு நேரடியாக முரண்படும் ஒரு கட்டுக்கதையை நாம் பொய் என்று மறுத்தால் அதற்கு நம்மை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்ன தெரியுமா?

இப்படித்தான் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் திருக்குர்ஆனை மறுக்கின்றார்கள்; ஹதீஸ்களை மறுக்கின்றார்கள் என்று நம்மீது அவதூறை இட்டுக்கட்டுகின்றனர்.

ஆனால் குர்ஆன் முழுவதும் நாம் புரட்டிப் பார்த்தோமேயானால் அறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லியும், தர்க்க ரீதியாக –  லாஜிக் பிரகாரம் சிந்திக்கச் சொல்லியும் அல்லாஹ் பல இடங்களில் கட்டளையிடுகின்றான்.

அவ்வாறு லாஜிக் பிரகாரம் சிந்திப்பது நமக்கு இறைவன் இடக்கூடிய கட்டளையாகும்.

இதோ வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக!

(திருக்குர்ஆன் 46:4)

மேற்கண்ட வசனத்தை ஒன்றுக்குப் பலதடவை வாசித்துப் பாருங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கூடாது என்பதற்கு அல்லாஹ் பகுத்தறிவுப் பூர்வமாக எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்.

இதற்கு முன்பு உள்ள வேதத்திலிருந்து ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் அல்லது அறிவுச்சான்றைக் கொண்டு வாருங்கள்.

அறிவிப்பூர்வமாகச் சிந்தித்தாலே ஒரேயொரு இறைவன் தான் நம்மைப் படைத்திருக்க முடியும் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம். இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்பது. இதைத்தான் திருக்குர்ஆன் கூறும் அறிவு என்கிறோம்.

இப்ராஹீம் யூதரா? கிறித்தவரா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் யூதர் என்று யூத மதத்தைச் சேர்ந்தவர்களும், இல்லை, அவர் கிறித்தவர் என்று கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் வாதிட்டு வந்தனர்.

இந்த தருணத்தில் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை அருள்கின்றான்.

வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத்தும், இஞ்சீலும் அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா?

(திருக்குர்ஆன் 3:65)

இப்ராஹீம் (அலை) அவர்கள் யூதரும் இல்லை; அவர் கிறித்தவரும் இல்லை என்பதை நிரூபிக்க அல்லாஹ் தர்க்க ரீதியான அதாவது லாஜிக் பிரகாரம் ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றான்.

தவ்ராத்தும் இஞ்சீலும் அவருக்குப் பிறகு அருளப் பட்டிருக்கும் போது அவர் எப்படி யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்க முடியும் என்பதுதான் அல்லாஹ் எழுப்பும் லாஜிக் ரீதியான கேள்வி.

இதை இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைக் கூறலாம். இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் ஒருவரான காந்தி 1948ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கப்பட்டன.

காந்தி அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர் தான் என்று இப்போது திமுக மற்றும் அதிமுகவினர் சொன்னால் அது எப்படி அறிவற்ற வாதமாக இருக்குமோ அதுபோலத்தான் இந்த வாதமும்.

காந்தி இறந்த பிறகுதான் திமுகவும், அதிமுகவும் உருவாகின எனும் போது காந்தி எப்படி திமுக உறுப்பினராகவோ அல்லது அதிமுக உறுப்பினராகவோ இருக்க முடியும்?

இதுதான் லாஜிக் என்பது.

இதைத்தான் பகுத்தறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவுவெடுப்பதற்கான ஒரு அளவுகோலாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

இப்படி சிந்திப்பதுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவு ஆகும்.

யூதர்களே சாவதற்கு ஆசைப்படுங்கள்

அல்லாஹ்விடம் உள்ள மறுமை வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!’’ என்று கூறுவீராக! அவர்கள் செய்த வினை காரணமாக ஒரு போதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப் படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 2:94-96

இந்த வசனத்தில் அல்லாஹ் யூதர்களுக்கு பகுத்தறிவுப்பூர்வமாக ஒரு அறைகூவல் விடுக்கின்றான்.

யூதர்கள் தாங்கள் மரணித்துவிட்டால் எங்களுக்கு உடனே சொர்க்கம் என்று சொல்லி வந்தனர். அப்படியானால் ஏன் இந்த உலகத்தில் வாழ்கின்றீர்கள்; செத்ததும் உடனே சொர்க்கம் போய் விடலாமே! அப்படியானால் உடனே சாகுங்கள் என்று அல்லாஹ் தர்க்க ரீதியாக அவர்கள் சொல்வது பொய் என்பதைத் தெளிவுபடுத்துகின்றான்.

மறைவானவற்றின் திறவுகோல்  நபிகளாரிடம் இல்லை:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த அல்லாஹ் எடுத்து வைக்கும் தர்க்க ரீதியான ஆதாரத்தைப் பாருங்கள்:

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர் ஆன் 7:188)

மறைவானவற்றை அறியக்கூடிய  ஞானம் எனக்கு இருந்திருந்தால் எந்தத் தீங்கும் எனக்கு வந்திருக்காதே! எனக்கும் பல துன்பங்கள் நிகழ்கின்றதென்றால் மறைவானது எனக்குத்தெரியாது என்றுதானே அர்த்தம் என இஸ்லாத்தின் அடிப்படை அகீதாவைப் புரிய வைப்பதற்கும் கூட அல்லாஹ் லாஜிக்கான வாதத்தை முன்வைக்கச் சொல்லி தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான்.

அரபியல்லாதவர் அரபுக் குர்ஆனை கற்றுக் கொடுக்க முடியுமா?

அதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் உயர்ந்த நடையானது அரபு காஃபிர்களை ஆச்சர்யப்பட வைத்தது. எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபி இவ்வளவு உயர்ந்த இலக்கண நடையுடன் கூடிய திருக்குர்ஆனை ஓதிக்காட்டுவதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. எனவே நபியின் மீது ஒரு அவதூறை இட்டுக்கட்டினார்கள். ஏதோ வேறு ஒரு பிரதேசத்திலிருந்து ஒரு நபர் இவருக்கு இந்தக் குர்ஆனை ஓதிக் காட்டுவதாக அவதூறு பரப்பினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அல்லாஹ் கீழ்க்கண்டவாறு ஒரு லாஜிக்கான கேள்வியை, தர்க்க ரீதியாக முன் வைக்கின்றான்.

ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்’’ என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.

(அல்குர்ஆன் 16:103)

யார் நபிகளாருக்கு இந்தச் செய்தியை சொல்லிக் கொடுப்பதாக இவர்கள் அவதூறு சொல்கிறார்களோ அவர் வேறு மொழிக்காரர்; அவருக்கு அரபியே தெரியாத நிலையில் அவர் எப்படி இவ்வளவு உயர்ந்த இலக்கண நடையில் உள்ள அரபி மொழியிலான குர்ஆனை நபிகளாருக்குக் கற்றுக் கொடுத்திருப்பார் என்பது குறித்து சிந்திக்க வேண்டாமா? என அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்.

அதோடு மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் முழுதும் நாம் புரட்டினால் பல இடங்களில் அல்லாஹ் இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகின்றான்.

அல்லாஹ் தான் இந்த உலகைப் படைத்தான் என்பதற்கும் படைப்பினங்களை சிந்தித்துப் பார்த்து படைத்தவனின் வல்லமையை பகுத்தறிவுப்பூர்வமாக விளங்கச் சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப் பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ (என்று அவர்கள் கூறுவார்கள்)

அல்குர்ஆன் 3:190, 191

இத்தகைய ஆற்றல் மிக்க இறைவனுக்கு ஈடு இணையில்லை என்பதைத்தான் அல்லாஹ் இங்கே பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி கட்டளையிட்டுள்ளான்.

ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். திருக்குர்ஆன் முழுவதுமே இதுபோன்ற லாஜிக்குகளால் நிறைந்து காணப்படுகின்றது.

எனவே ஒரு செய்தி உண்மையா இல்லையா என்பதை பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதை விளங்காமல் தான் பலரும்  ஏதோ நாம் நமது சுய அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிவு வாதம் பேசுவதாக நம்மீது அவதூறு சொல்லி வருகின்றனர்.

மிகச்சரியாகச் சொல்வதாக இருந்தால் இது பகுத்தறிவல்ல; குர்ஆன் கூறும் அறிவு. இந்தக் குர்ஆன் கூறும் அறிவின் அடிப்படையில் அறிவுப்பூர்மாகச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.

மறைவானவற்றை நம்புவதில் பகுத்தறிவுக்கு வேலை இல்லை

அதே நேரத்தில் இங்கு நாம் முக்கியமான மற்றுமொரு செய்தியையும் கவனிக்க வேண்டும். அனைத்தையுமே பகுத்தறிவுப்பூர்வமாகச் சிந்திப் பதாக இருந்தால் சொர்க்கம் நரகம் உண்டு, மறுமை உணடு, விதி உண்டு என்பதையெல்லாம் எப்படி நம்பிக்கை கொள்வீர்கள் என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

இதுபோன்ற மறைவான செய்திகளை நம்புவதில் பகுத்தறிவைப் பயனபடுத்தமாட்டோம்; அவ்வாறு பயன்படுத்தக்கூடாது; ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்:

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.

அல்குர்ஆன் 2:2-5

மறைவானவற்றை முழுமையாக நம்பிக்கை கொள்வோமே தவிர அதில் கேள்வி எழுப்பமாட்டோம்.

இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப் பதிலும், வஹீச் செய்தியைப் பின்பற்றுவதிலும் நாம் பகுத்தறிவுப்பூர்வமாகக் கேள்வி எழுப்புவதில்லை; அவ்வாறு கேள்வி எழுப்பக்கூடாது.

செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் என்று சொல்லி முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்போம்.

உளூ செய்ய தண்ணீர் இல்லாவிட்டால் தயம்மம் செய்யச் சொல்லி மார்க்கம் சொல்லிக் காட்டுகின்றது; அதில் நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி, ‘ஏன் மண்ணைத் தொட்டு தயம்மம் செய்ய வேண்டும்’ என கேட்பதில்லை.

அதுபோல கால் உறைக்கு மேலே தான் மஸஹ் செய்யச் சொல்லி நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்; காலுறைக்கு அடியில் பாதத்தில் தானே மஸஹ் செய்ய வேண்டும் என்று நாம் சொல்வதில்லை.

உளூ செய்த பிறகு காற்றுப் பிரிந்தால் மறுபடியும் உளூ செய்ய வேண்டுமே தவிர, காற்றுப்பிரிந்த இடத்தைக் கழுவினால் போதாதா என்று நாம் கேள்வி எழுப்புவதில்லை.

ஆக பகுத்தறிவை எந்த இடத்தில் பயன்படுத்தச் சொல்லி வஹீச் செய்தியில் இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அந்த இடங்களில் மட்டுமே பகுத்தறிவைப் பயன்படுத்துவோம். இதுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவு.

பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமல்ல இஸ்லாம். பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி வழிகாட்டியதால் எழுச்சி கண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.