ஏகத்துவம் – செப்டம்பர் 2016

ஆதி திராவிடர்களும் ஆதமின் மக்களே!

கந்த தேவி முதல் கள்ளிமேடு வரை

கள்ளிமேடு…

கள்ளிமேடு…

இது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்திருக்கும் ஊர். இங்கு பிள்ளைமார் எனும் சாதியினர் வசிக்கின்றனர். பழங்கள்ளிக்காடு என்பது அதன் அருகில் உள்ள ஊராகும். இங்கு ஆதி திராவிடர்கள் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறைந்த அளவில் மற்ற சாதியினரும் வசிக்கின்றனர்.

இவ்விரு ஊர்களுக்கும் பொதுவாக பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 800 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகின்றது. ஆண்டுதோறும் இங்கு ஆடித் திருவிழா நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மண்டகப்படி செய்யும் உரிமை பிள்ளமார்கள் சாதியினருக்கு மட்டுமே உண்டு. ஆதி திராவிடர்கள் கோவிலில் வழிபாடு செய்யலாம். ஆனால் மண்டகப்படியை வழங்க உரிமையில்லை.

(மண்டகப்படி என்றால் பூஜை உள்ளிட்ட அனைத்து செலவினங்களுக்கும் பொறுப்பேற்று செய்வதாகும்.)

இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழாவின் போது தங்களுக்குரிய உரிமை மறுக்கப்படுவதை உணர்ந்த தலித்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறிவிடுவோம் என்று அறிவித்தனர். அவ்வளவு தான் ஆட்சித் தலைவர் முதல் மாநில அமைச்சர்கள் வரை அத்தனை பேர்களும் படையெடுத்து வந்தனர். தலித் மக்களிடத்தில் சமரசம், சமாதானம் பேசினர். மண்டகப்படி நடக்கின்ற 5 நாட்கள் கழித்து தலித்கள் தங்கள் வழிபாடுகளைச் செய்யலாம் என்ற ஒரு தலைப்பட்சமான தீர்வைத் தான் அதிகார வர்க்கம் முன்வைத்தது. அதை தலித்கள் ஏற்க மறுத்து விட்டனர். இறுதியில் திருவிழா நிறுத்தப்பட்டு விட்டது. இதை எதிர்த்து பிள்ளைமார்கள் உயர்நீதிமன்றம் சென்றும் பிரச்சனைக்கு முடிவு ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் தலித்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவது வரலாற்றில் இது முதல் முறை அல்ல! இதற்கு முன்பு இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பல அநியாயங்கள் அரங்கேறியிருக்கின்றன.

1997ல் சிவகங்கை மாவட்டம் கந்ததேவியில் உள்ள ஸ்வர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களான தேவேந்திர குல வேளாளர்கள் அக்கோயில் திருவிழாக் கொண்டாட்டத்தில் முழு உரிமை கோரினர். இதற்காகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.

ஜூலை 1998ல் உயர் நீதிமன்றம் தாழ்த்தப் பட்டவர்கள் திருவிழாவில் முழுமையாக பங்கேற்க உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ஆனால் அது பயனற்ற உத்தரவாகிப் போனது.

ஜூன் 2005ல் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ழி.வரதராஜன், உயர்நீதி மன்றம் ஏற்கனவே போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி அதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தலித்களுக்கு கோயில் திருவிழாவில் தேர் இழுக்கும் உரிமையை மறுப்பது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவை மீறிய செயலாகும் என்றெல்லாம் நீதிபதி வியாக்கியானம் கூறி, உத்தரவைச் செயல்படுத்துமாறு அரசின் நிர்வாக இயந்திரத்திற்கு மறு உத்தரவு போட்டார்.

நடந்தது என்ன? 2005 ஆண்டு நடந்த திருவிழாவில் வழக்கத்திற்கு மாற்றமாக பிரமாண்டமான அளவில் போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. எதற்கு? சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டவா? அப்படித்தான் யாரும் கருதுவார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாற்றம். நூற்றுக்கணக்கான தலித்கள் கைது செய்யப்பட்டனர். தேரிழுக்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு முன் முற்படுத்தப்பட்டது. பேருக்காக 26 தலித்துகள் மட்டும் தேர் கயிறைப் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டுகளில் தேரிழுப்பு ரத்துச் செய்யப்பட்டு விட்டது.

2014ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை மேற்படி உத்தரவுக்கு உயிர் கொடுத்தது. நீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் பவனி வரக் கூடிய தேரை, பழுது என்ற பெயரில் கூடாரத்தில் படுக்க வைத்து விட்டு தேரில்லாமலேயே திருவிழா நடந்து முடிந்தது.

1996ல் கோவில்பட்டி செண்பகவல்லி- பூவனந்தனார் கோயிலின் வருடாந்திர திருவிழா நடந்தது. இதற்கும் தலித்கள் மண்டகப்படி உரிமை கோரினார்கள். அப்போது 1995ல் அதே பகுதியிலுள்ள கொடியன்குளத்தில் தலித்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறிய அராஜகம் அரங்கேறிய நேரம். தேவேந்திர குலத்தவர்களும், தேவர் சாதியினரும் மோதிக் கொண்டு இரத்தக் குளியல் நடத்திக் கொண்டிருந்த கால கட்டம். அதனால் தலித்துகளின் அந்தக் கோரிக்கையும் இரத்தக் களறியில் தான் முடிந்தது. தேர் திருவிழா முழுவதுமாக முடங்கியே போனது.

சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கரிசல்குளத்தில் தலித்கள் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவில் தானியங்களைக் கொண்டு படையலிடும் முளைப்பாறி உரிமையைக் கோரினர். நீண்ட சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகு தலித்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் முளைப்பாறி நடத்தினர்.

தொடர்ந்து தலித்துகளின் உரிமைகள் ஆதிக்க சாதிக் காரர்களின் அராஜகப் போக்கால் பறிக்கப்பட்டே வருகின்றன.

நீதிமன்றம் அரசியல் சாசனத்தை அமல்படுத்து என்று காவல் துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் உத்தரவிடுகின்றது. உத்தரவை மீறியதற்காக நீதிமன்றம் அதிகாரிகளுக்கு எந்தத் தண்டனையும் விதிப்பதில்லை. வேறுவிதமாகத் தீர்ப்பு சொல்ல சட்டம் இடமளிக்கவில்லை என்பதற்காகவே உயிரற்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நீதிமன்றம் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்பதை அறிந்து வைத்துள்ள காவல் துறை தடியடிப் பிரயோகம் முதல் துப்பாக்கிச் சூடு வரை நடத்தி, தலித் மக்களை ஒடுக்கி வருகின்றது.

இப்படித் தான் தலித்களின் வழிபாட்டு உரிமை கந்ததேவியிலிருந்து கள்ளிமேடு வரை மறுக்கப்பட்டே வருகின்றது. இது உணர்த்துகின்ற பாடமும் படிப்பினையும் என்ன? தலித்கள் இந்து மதத்தில் இருக்கின்ற வரை அவர்களது தீண்டாமைக்குத் தீர்வே கிடையாது என்பது தான். வழிப்பாட்டுரிமைக்குரிய வாசல் திறக்கப்படாது என்பது தான்.

அப்படியானால், இதற்கு விடிவும் முடிவும் தான் என்ன? இதற்கு அதே கள்ளிமேட்டின் அருகில் உள்ள பழங்கள்ளிக்காடே வழிகாட்டுகின்றது.

இவ்வூர் மக்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்குத் தகவல் சொன்ன மாத்திரத்தில் அதன் தலைவர் அல்தாஃபி அவர்கள் நேரடியாகச் சென்று, ‘‘இஸ்லாமிய மார்க்கம் கோபத்தில் ஏற்கும் மார்க்கமல்ல. சிந்தித்து நிதானித்து ஏற்க வேண்டிய மார்க்கம்’’ என்று விளக்கினார். இந்த விளக்கத்தைக் கேட்டு விட்டு ஆறுபேர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். அலஹம்துலில்லாஹ்.

இவர்கள் தான் சரியான முடிவை எடுத்துள்ளனர். ஆலயம் என்றால் அனைவரையும் வரவேற்க வேண்டும். அது பாரபட்சம் காட்டுகின்றது என்றால் அந்த ஆலயத்தை மாற்ற வேண்டும். வாழ்த்தி, வரவேற்கின்ற ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். அதைத் தான் இந்த ஆறு பேர்களும் செய்திருக்கின்றனர்.

இப்போது மக்கள் மக்காவை நோக்கி ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எதற்கு? அங்கு நடைபெறும் மக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக!

வெள்ளையர், கருப்பர், வலியவன், எளியவன், அரசன், ஆண்டி என்று பல்வேறு நாடு. இனம், மொழிகள் பேசக்கூடிய அத்தனை பேரும் சங்கமிக்கின்ற மாநாடு தான் ஹஜ் என்று வணக்கமாகும்.

பிரம்மன் தலையில் பிறந்தவன் பிராமணன்! தோளில் பிறந்தவன் சத்திரியன்! தொடையில் பிறந்தவன் வைசியன்! காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துகின்ற வர்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்து, மனிதன் அனைவரும் ஆதம் என்ற ஒரே ஒரு மனிதனிடமிருந்து உருவானவர்கள் என்ற சமத்துவத்தை, சகோதரத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றுகின்ற மாநாடாகும்.

இதோ திருக்குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற அந்த சகோதரத்துவ, சமத்துவ முழக்கம்:

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

கடவுளை பயப்படுவதில் முந்துபவர்கள் தான் அவனிடம் மரியாதைக்குரியவர்கள். இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட சாதிய அடிப்படையில் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்துகின்றது. இந்த சகோதரத்துவ உணர்வைப் புதுப்பிப்பதற்கும், பதிப்பிப்பதற்கும் தான் ஆண்டு தோறும் இந்த மாநாடு, நம்மைப் படைத்த இறைவனின் கட்டளைப்படி மக்காவில் நடத்தப்படுகின்றது.

இதில் பங்கேற்க உலக மக்கள் அனைவரையும் இஸ்லாமிய மார்க்கம் அழைப்பு விடுக்கின்றது.

“மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள்.

அல்குர்ஆன் 22:27

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 22:25

கந்ததேவி முதல் கள்ளிமேடு வரை உள்ள ஆலயங்கள் தலித் மக்களை விரட்டியடிக்கின்ற வேளையில் அவர்களை ‘வாருங்கள்! அள்ளி அரவணைக்கின்றோம்; காலெடுத்து வையுங்கள்! கட்டித் தழுவுகின்றோம்’ என்று சாதி வேறுபாடின்றி மக்களை அந்த இறைவன் கஃபா என்ற அந்தப் புனித ஆலயத்திற்கு அழைக்கின்றான.

அந்த ஆலயம் சாமானியமான ஆலய மல்ல; சாதாரணமான ஆலயமல்ல! இந்த ஆதி திராவிடர்களுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தந்தையான ஆதம் என்ற முதல் மனிதனால் பூமியில் முதன் முதலில் கட்டப்பட்ட புனித ஆலயம்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில்  உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

அந்த ஆலயத்திற்குப் போய் வர சக்தி பெறாதவர்களுக்கு ஊருக்குள்ளே ஆயிரமாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அந்தப் பள்ளிவாசல்கள் புனிதத்தில் கஃபா என்ற ஆலயத்தைப் போல் அல்ல என்றாலும் சமத்துவத்தில் அதற்கு ஒத்தவையாகும்.

இங்குள்ள ஆலயங்களில் பாகுபாடு, பாரபட்சம், வித்தியாசம், வேறுபாடு காட்டுவது இருக்காது. அந்த ஆலயங்கள் கள்ளி மேடு, பழங்கள்ளிக்காடு தலித் மக்களை அள்ளி அரவணைக்கவும் ஆரத் தழுவவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் ஒரு நிபந்தனை. இவ்வளவு பாகுபாடுகளுக்கும், பாரபட்சங்களுக்கும் அடிப்படை காரணம் பலதெய்வக் கொள்கை தான். அந்தப் பலதெய்வக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களைப் படைத்த உண்மையான ஒரே ஒரு கடவுளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களை ஆலயத்திற்குள் வரவிடாமல் தடுக்கின்ற ஆதிக்க சாதிய சக்திகளைத் தண்டிப்பதற்கு அறவே சக்தியற்ற அந்த தெய்வங்களைத் தூர வீசி விட்டு, தங்கள் கடவுள் ஒரே ஒருவன் மட்டும் தான் என்ற கொள்கையின் பக்கம் வந்து விட்டால் குலம் ஒன்றாகி விடும். அந்தக் குலம் ஆதி மனிதன் ஆதமுக்குப் பிறந்த மனித குலமாகும். அது பாகுபாடு காட்டுகின்ற சாதிய குலமல்ல!

தலித்களே! உங்கள் தன்மானம் காக்க, சாதிய இழிவு நீங்க, உங்களைப் படைத்த அந்த இறைவனின் அழைப்புக்குப் பதில் அளியுங்கள்! அவனது ஆலயத்திற்குள் பிரவேசியுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

காதியானிகள் வரலாறு தொடர்: 4

மிர்ஸா குலாம் நபியா?

எம்.ஐ. சுலைமான்

திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டு விதமான சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். இது எந்த வகையில் தவறானது என்று கடந்த இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரலாம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதம் இதுதான்,

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?’’ என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்‘’ என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 3:81

மேற்கண்ட வசனத்தில் ஒரு தூதர் வருவார் அவரை அனைவரும் ஈமான் கொள்ள வேண்டும்; அது மட்டுமில்லாமல் அவருக்கு உதவியும் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் மக்களுக்குக் கட்டளை இடுகிறான்.

இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டதாகும். எனவே அவர்களுக்குப் பிறகு இறைத்தூதர் வருவார். அவருக்கும் உதவி புரியவேண்டும் என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.

நமது பதில்

இந்த வசனத்தில் நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

இவ்வசனம் என்ன சொல் கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங் களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள்.

என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.

“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்‘’ என்பது தான் உடன்படிக்கை.

“உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்’’ என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரவுள்ள ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும்.

உங்களுக்குப் பின் என்று கூறாமல், ‘உங்களிடம் ஒரு தூதர் வந்தால்’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

“உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்படுகிறது’’ என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.

நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.

  1. உங்களிடம் அவர் வந்தால்
  2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்
  3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்

ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏற்றுக் கொண்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனம் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரும் நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்’’ என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.

“உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்’’ என்று கூறாமல், ‘’ஜாஅகும் – உங்களிடம் ஒரு நபி வந்தால்’’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.

ஒரு நபி வாழும்போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும்போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்?

காதியானிகளின் வாதம்

“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்’’ என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது “இது தெளிவான சூனியம்‘’ எனக் கூறினர்.

அல்குர்ஆன் 61:6

மேற்கண்ட வசனத்தில் ஈஸா (அலை) அவர்களுக்குப் பிறகு ஒரு தூதர் வருவார்; அவருக்குப் பெயர் அஹ்மத் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அஹ்மத் நான்தான். நான் தான் அந்தத் தூதர் என்னுடைய பெயர்தான் குலாம் அஹ்மத். நபி (ஸல்) அவர்களுடைய பெயர் முஹம்மது தான். எனவே இந்த வசனத்தில் கூறப்பட்டது என் வருகையைப் பற்றியதுதான் என்று மிர்சா குலாம் கூறுகின்றான். முஹம்மது நபிகளைப் பற்றியது அல்ல என்றும் கூறுகிறான்

நமது பதில்

மேற்கண்ட வசனத்தில் அஹ்மத் என்ற பெயருடைய தூதர் வருவார் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இவனுடய பெயர் குலாம் அஹ்மத் என்பதாகும். இதன் பொருள் அஹ்மதுடைய ஊழியன் என்பதாகும். எனவே அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் மிர்சா குலாம் அஹ்மத் வருவது பற்றி கூறவில்லை. அப்படி அவனைப்பற்றிக் கூறுவதாக இருந்தால் அல்லாஹ் தெளிவாகவே குலாம் அஹ்மத் என்ற பெயருடைய தூதர் வருவார் என்று கூறியிருப்பான். அஹ்மத் என்று கூறியிருப்பதிலிருந்தே அந்த வசனத்தில் கூறப்பட்ட தூதர் இவன் இல்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்ற சொல் எப்படி அல்லாஹ்வைக் குறிக்காதோ அதுபோல் அஹ்மதின் அடிமை என்பதும் அஹ்மதைக் குறிக்காது என்பது தெளிவு.

இவனுக்கு இவனுடைய தந்தை தான் குலாம் அஹ்மத் என்று பெயர் வைத்திருப்பார். இவனுடைய தந்தை, அஹ்மதின் அடிமை என்று பெயர் வைத்திருந்தால் அந்த அஹ்மத் இவனாக எப்படி இருப்பான்?

முஹம்மது நபிக்கு அஹ்மத் என்ற பெயரும் இருந்ததால் தான் அந்த அஹ்மதின் அடிமை அல்லது அஹ்மதின் ஊழியன் என்று பெயர் சூட்டினார்.

இவ்வளவு தெளிவான உண்மைக்கு மாற்றமாக நான் தான் அஹ்மத் என்று இவன் உளறியுள்ளான்.

எனவே இவனது பெயர் அஹ்மதாக இல்லாமல் இருந்தும் அஹ்மத் என்பது நான் தான்; எனவே நானும் நபி தான் என்று கூறுவது முட்டாள் தனமானதாகும்.

 மேற்கண்ட வசனத்தில் வரக்கூடிய அஹ்மத் என்பது நபி (ஸல்) அவர்களை குறிக்கக் கூடியதாகும்.

பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் ‘முஹம்மத்’ என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ‘அஹ்மத்’ என்ற மற்றொரு பெயரும் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

நூல்: புகாரி (3532,4896)

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹப் நூற்கள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

அல்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழி களும் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரத் தூண்களாகும். ஒரு முஸ்லிமின் ஈடேற்றத்திற்கும், மறுவுலக வெற்றிக்கும் இவ்விரண்டைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று இஸ்லாம் பறைசாற்றுகின்றது.

ஆனால் சில முஸ்லிம்கள் இதை மறுக்கும் விதமாக எங்களுக்குக் குர்ஆன் ஹதீஸ் போதாது; எங்கள் இமாம்கள் எவ்வழி நடந்தார்களோ அதுவும் எங்களுக்குத் தேவை என்று செயல்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி இமாம்கள் எழுதி வைத்த மற்றும் இமாம்களின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட தத்தமது மத்ஹபு சட்டநூல்களுக்கு குர்ஆன் – ஹதீஸிற்கு நிகரான, அதைவிட அதிகமான மதிப்பை இவர்கள் வழங்கி வருவதோடு மத்ஹபு நூல்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் செய்கிறார்கள். இவர்களது இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

உண்மையில் மத்ஹபு நூல்கள் என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா? என்பதைக் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்பவர், நிச்சயமாக இல்லை என்ற முடிவிற்கே வருவார்.

அதற்குக் காரணம் மத்ஹபு நூற்களில் மலிந்து கிடக்கின்ற ஆபாசமான கற்பனைகளும் அறிவுக்கு ஒவ்வாத உளறல்களும் தான்.

இதை விஞ்சும் விதமாக சில மத்ஹபு நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய் சொல்லும் மகா அநியாயமும் சர்வ சாதாரணமாக அரங்கேற்றம் செய்யப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தி இருந்தாக வேண்டும். ஆதாரமில்லாத செய்தியை அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று அவிழ்த்து விடுவது அறவே ஆகாத பொய்யாகும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

இத்தகைய கொடுஞ்செயலை குற்றவுணர்ச்சியில்லாமல் குதூகலமாக செய்யும் நூலாக நமக்கு காட்சியளிக்கின்றது ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயா.

இந்நூலை ஹிஜ்ரி 511ஆம் ஆண்டு பிறந்து 593ஆம் ஆண்டு இறந்து போன புர்ஹானுத்தீன் என்றழைக்கப்படுகின்ற அபுல் ஹசன் அலி பின் அபீபக்கர் அல்மர்கீனானி என்பவர் தொகுத்துள்ளார்.

இந்நூலில் நபிகள் நாயகம் சொன்னதாக, செய்ததாகப் பல செய்திகளைப் போகிற போக்கில் பதிவு செய்கிறார் நூலாசிரியர். உண்மையில் அந்தச் செய்திகளை நபியவர்கள் சொன்னார்களா? என்று நம் சக்திக்கு உட்பட்டு ஹதீஸ் நூல்களில் தேடிப்பார்த்தால் அவற்றில் பலவற்றுக்கு எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்ற பதில் தான் கிடைக்கின்றது.

இவ்வாறு அடிப்படை ஆதாரமின்றி ஹிதாயாவின் நூலாசிரியர் நபியின் பெயரால் பதிவு செய்துள்ள செய்திகளின் தொகுப்பைத் தான் வாசகர்களுக்கு அறியத் தரவிருக்கிறோம்.

இந்தப் பணியை முன்சென்ற பல அறிஞர்கள் செவ்வனே ஆற்றியுள்ளார்கள் என்பதை நாம் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

ஹிதாயாவில் நபியின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள பல ஹதீஸ்கள் எந்த ஹதீஸ் நூற்களிலும் இல்லை என்பதை நமக்கு முன்பே பல அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். அவர்களில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

அலட்சியம்

நபி பெயரில் ஒன்றை எழுதும் போது அது எந்த ஹதீஸ் நூலில் பதிவாகியுள்ளது? அது சரியான செய்திதானா? என்றெல்லாம் ஆராய்ந்து மிகுந்த கவனத்துடன் எழுத வேண்டும். ஏனெனில் எழுத்து வேறு, பேச்சு வேறு.

பேச்சில் கூட கவனத்துடன் இருந்தும் சில செய்திகள் தவறுதலாக வந்து விட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எழுத்து அப்படியல்ல.

அதில் தவறுகள் நிகழ்ந்திடாத வண்ணம் சரிபார்த்து எழுதவும் பிறரால் சுட்டிக்காட்டி திருத்தவும் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இதையும் மீறி ஒன்றிரண்டு செய்திகளில் மனிதன் என்ற முறையில் பிழை வரலாம் என்றாலும் ஹிதாயாவில் உள்ளதை அந்தக் கணக்கில் சேர்க்க முடியாது.

ஏனெனில் ஹிதாயாவில் நபியின் மீது பொய்யுரைக்கும் வகையில் பதிவான செய்திகள் ஒன்றிரண்டல்ல! கணக்கின்றி கட்டுப்பாடின்றி சென்று கொண்டே இருக்கின்றது.

இறைவன் நாடினால் அவற்றைத் தொகுத்து வழங்கும் போது நீங்களும் இதைச் சந்தேகமற உணர்வீர்கள்.

இறைவன் அந்த வாய்ப்பை நல்க வேண்டும் என்ற வாஞ்சையோடு ஹிதாயாவில் உள்ள நபி மீது அவிழ்த்து விடப்பட்ட பொய் செய்திகளை அறியத்தருகிறோம்.

சுன்னத்தை விட்டவருக்கு பரிந்துரை இல்லையா?

லுஹருக்கு முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒருவர் தொழாமல் விட்டுவிட்டால் அவருக்கு தனது பரிந்துரை கிடைக்காது என்று நபிகள் நாயகம் சொன்னதாக நூலாசிரியர் கூறுகிறார்.

الهداية شرح البداية – (1 / 72)

قال عليه الصلاة والسلام في سنة الفجر صلوها ولو طردتكم الخيل وقال في الأخرى من ترك الأربع قبل الظهر لم تنله شفاعتي

லுஹருக்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுவதை யார் விடுவாரோ அவருக்கு எனது பரிந்துரை கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா 1/72

இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது? யார் இதை அறிவித்தது உள்ளிட்ட எந்த விபரங்களையும் குறிப்பிடாமல் தேமே என்று அடுத்த சட்டத்திற்குத் தாவி விடுகிறார்.

லுஹர் தொழுகையின் முன் சுன்னத் நான்கு ரக்அத்கள் சிறப்பிற்குரியது, முக்கியத்துவம் வழங்கப்படத் தகுதியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நபிகள் நாயகம் இதற்குக் கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து இதனை அறிந்து கொள்ளமுடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும் சுப்ஹ் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் தொழாமல் இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1182

இங்கே நாம் கேட்பது லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களைத் தொழாமல் போனால் நபியின் பரிந்துரை கிடைக்காது என்பதற்கு என்ன ஆதாரம்?

இச்செய்தி எந்த நூலில் உள்ளது என்பதை மத்ஹபை ஆதரிப்பவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

பட்டு விரிப்பில் அமர்ந்தார்களா பண்பான நபி?

பட்டாடையைப் பயன் படுத்தலாமா என்ற சட்டத்தை விளக்கும் போது, இமாம் அபூஹனிஃபா பட்டு விரிப்பைப் பயன்படுத்தலாம், அதில் உறங்கலாம் என்று கூறுவதாக ஹிதாயா நூலாசிரியர் கருத்து தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களே பட்டு விரிப்பில் அமர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பச்சைப் பொய்யை பரப்பிச் செல்கிறார்.

الهداية شرح البداية – (4 / 81)

وله ما روي أنه عليه الصلاة والسلام جلس على مرفقه حرير

நபி (ஸல்) அவர்கள் பட்டு விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள் என்று ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிதாயா 4/81

நபிகளார் பட்டு விரிப்பில் அமர்ந்துள்ளதாக எங்கே அறிவிக்கப்பட்டுள்ளது? புகாரியிலா? முஸ்லிமிலா? அல்லது திர்மிதி, நஸாயி போன்றவற்றிலா? எதில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்ல வேண்டாமா?

நாம் இப்படி அழுத்தமாகக் கேட்கக் காரணம் நபி (ஸல்) அவர்கள் பட்டின் மீது அமர்வதைத் தடுத்த ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன என்பதேயாகும்.

நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும், அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹூதைஃபா பின் யமான்(ரலி)

நூல் : புகாரி 5837

பட்டின் மீது அமரக் கூடாது என்று மற்ற நபித்தோழர்களைத் தடுத்த நபிகளார் தாமே அதைச் செய்தார்கள் என்று சொன்னால் இதைப் படிக்கின்ற யாரும் இதற்கான ஆதாரம் என்ன? என்று கேட்கவே செய்வார்கள்.

அதைத் தான் நாம் கேட்கிறோம்.

மத்ஹபு அபிமானிகள் இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளார்கள். செய்வார்களா?

இறையச்சமுள்ள இமாம் இறைத்தூதருக்குச் சமமானவரா?

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56-ல் இமாமத் பற்றிய பாடத்தில் மக்களுக்கு முன்னின்று தொழுகை நடத்தும் இமாமிற்குத் தகுதியானவர் யார் என்பதை ஒவ்வொருவராக நபிமொழிகளின் துணை கொண்டு அலசுகிறார்.

குர்ஆனை நன்கு தெரிந்தவர் தொழ வைக்க வேண்டும், இதில் அனைவரும் சமமாக இருந்தால் நபி மொழிகளை நன்கு தெரிந்தவர் இமாமாக நிற்க வேண்டும் என்று துவக்கமாகக் கூறி அதற்கான ஆதாரமாக நபிமொழியையும் குறிப்பிடுகிறார். இதில் யாரும் ஆட்சேபணை செய்ய முடியாது.

ஆனால் அதையடுத்து அவர் குறிப்பிடும் விஷயம் ஹதீஸ்களில் ஆதாரமற்றதாகும்.

என்ன சொல்கிறார் எனில் மேற்கண்ட தகுதிகளில் அனைவரும் சமமாக இருந்தால் அவர்களில் மிகப் பேணுதலுடையவர் தொழுவிக்க வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் எனப் புழுகுகிறார்.

الهداية شرح البداية – (1 / 56)

فإن تساووا فأورعهم لقوله عليه الصلاة والسلام من صلى خلف عالم تقي فكأنما صلى خلف نبي

இறையச்சமுள்ள ஆலிமுக்குப் பின்னால் தொழுதவர் நபிக்குப் பின்னால் தொழுதவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56

தொழுவிக்கும் இமாம் இறை பயமுள்ளவரா இல்லையா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இறையச்சம் உள்ளம் சம்மந்தப்பட்டதாகும். அதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்ற அடிப்படை கூடத் தெரியாமல் இட்டுக்கட்டியுள்ளார்.

நபிகளார் சொல்லாத ஒன்றை நபியின் பெயரால் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதைச் சொல்லும் முன் அதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டாமா?

பிற மனிதர்கள் விஷயத்திலேயே ஊர்ஜிதம் செய்யாமல் எதையும் சொல்லக் கூடாது எனும் போது இறைத்தூதர் விஷயத்திலும், இறைத்தூது விஷயத்திலும் எத்தகைய பேணுதலைக் கடைப் பிடித்திருக்க வேண்டும். நூலாசிரியர் பேணுதலை வலியுறுத்திக் கொண்டே தாம் அதைத் தவற விட்டுவிட்டாரே!

—————————————————————————————————————————————————————-

தொடர் – 11 ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு

இழிவை விட்டும் பக்தர்களை இரு கடவுளர்கள் காப்பார்களா?

எம் ஷம்சுல்லுஹா

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்ற கீழ்க்காணும் கவிதைகளைக் காணுங்கள்!

فنجنا من شرور الخزي عبدكما

هذا محبا على الأيام مدحكما

ولو غبيا جهولا عاصيا حكما

عصيانه طول دهر لا يضركما

فالسفن تنجي غريقا حينما عثرا

கடுமையாக மாறு செய்பவனாக இருந்தால் கூட, அறிவு கெட்ட மடையனாக இருந்தால் கூட உங்கள் இருவரின் இந்த அடிமையை இழிவென்னும் தீங்குகளிலிருந்து நீங்கள் காப்பாற்றுங்கள்!

நாட்கள் பூராவும் உங்களைப் புகழ்வதையே நேசிப்பவன் நான்! இவன் செய்த துரோகம், காலம் முழுதும் உங்கள் இருவருவரையும் பாதிக்காது!

தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்து மூழ்குபவனை கப்பல் காப்பாற்றி விடும்! (அது போன்று பாவத்தில் மூழ்கும் என்னை நீங்கள் கப்பலாக வந்து காப்பாற்றுங்கள்)…

இந்தக் கவிதை வரிகளில் அடங்கியிருக்கின்ற இணை வைப்புகளை இப்போது பார்ப்போம்.

இந்தக் கவிஞன் ஹசனையும், ஹுசைனையும் கடவுள்களாக்கி, தன்னை அவர்களுக்கு முழுமையான அடிமையாக அர்ப்பணித்து ஆனந்தமடைவது முதல் இணை வைப்பாகும்.

பொதுவாக தமிழகத்தில் முஸ்லிம்கள் யாரைத் தங்களது ஆபத்பாந்தவன்களாகக் கருதுகின்றார்களோ அவர்களது பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஆண்களாக இருந்தால் முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஷாஹுல் ஹமீது, பெண்களாக இருந்தால் முஹ்யித்தீன் ஃபாத்திமா, செய்யது அலி ஃபாத்திமா, பீமா போன்ற பெயர்களைக் கூறலாம்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தங்களது முழு அடிமைத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக குலாம் ரசூல் (நபியவர்களின் அடிமை), குலாம் அஹ்மத், குலாம் முஹைதீன் (முஹைதீன் அடிமை), முகைதீன் பிள்ளை, முஹைதீன் பிச்சை, நாகூர் பிச்சை என்று தங்களது பிள்ளைகளின் பெயர்களில் அடிமைத் தனத்தை வெளிப்படுத்துவார்கள்.

தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தடம் பதித்த பிறகு தான் மனிதனுக்கு அடிமையாகின்ற அவமானகரமான அடிமைத்தனப் பெயர்கள் மதிப்பை இழந்து அல்லாஹ்வுடைய அடிமைத் தனத்தை வெளிப்படுத்துகின்ற ஏகத்துவப் பெயர்கள் மகிமை பெற்றன. இதைக் கூறுவதற்குக் காரணம் இறந்து போன நல்லடியார்களுக்கு அடிமையாக இருப்பது இவர்களிடத்தில் ஊறிப் போன இணை வைப்புக் கொள்கையாகும்.

இந்தக் கவிஞன் அந்த ரகத்தைச் சார்ந்தவன். அதனால் இவன் தன்னை ஹஸன், ஹுசைனுக்கு அடிமையாக ஆக்கிக் கொள்வதில் ஆனந்தமடைகின்றான். அன்றைய அரபகத்தில் மட்டுமல்ல அகில உலகத்திலும் பரவலாக ஒருவர் இன்னொருவரிடத்தில் அடிமையாகப் பணியாற்றுகின்ற முறை இருந்துள்ளது.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

அல்குர்ஆன் 16:71

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல்வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:75

இந்த வசனங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாகியிருப்பதை அனுமதி அளிக்கின்றன. இது அல்லாஹ்வே ஏற்படுத்திய நியதியாகும்.

வசதியுள்ளவரிடம் ஒரு வறியவர் வேலை பார்ப்பது, அவர் தெய்வீகத் தன்மை கொண்டிருக்கின்றார்; அவரிடம் கடவுளுடைய அம்சம் இருக்கின்றது என்பதற்காக அல்ல. மாறாக, வசதி படைத்தவர் தனது பணிகளைத் தானே சுமக்க முடியாத பலவீனத்தில் இருக்கின்றார். வறியவர், அவரிடம் உரிய வாழ்க்கை நடத்துவதற்குரிய பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்கின்றார். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயமாகும்.

அந்த அடிப்படையில் ஹசன், ஹுசைனிடத்தில் இந்தக் கவிஞர் பணி புரிந்திருந்தால் தன்னுடைய முதலாளியிடத்தில் பணி புரிந்த பாசத்தில் அழைக்கின்றார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவர் ஒரு போதும் அவரிடம் பணி புரிந்ததில்லை. அதனால் இதற்கு அந்த அர்த்தம் கொடுக்க முடியாது. அப்படியானால் இவர் ஹசனையும் ஹுசைனையும் கூப்பாடு போட்டு கூப்பிடுவதும், தன்னை அவ்விருவரின் அடிமை என்று கூவுவதும் அவ்விருவரும் தன்னைக் காக்கும் ரட்சகர்கள் என்ற அர்த்தத்தில் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தான் கடவுள். இந்த அடிப்படையில் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

வணக்கம் என்ற வார்த்தைக்கு அரபியில் இபாதத் என்று சொல்லப்படும். இபாதத் என்றால் அடிமையாய் நடத்தல், அடிமையாய் செயல்படுதல் என்று அர்த்தம். அதிலிருந்து பிறந்த வார்த்தை யஃபுதூன் என்பதாகும். என்னை வணங்குவார்கள் என்பது இதன் பொருளாகும். அதாவது எனக்கு அடிமையாய் நடப்பார்கள்; நான் இடுகின்ற கட்டளைப்படி செயல்படுவார்கள். அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கின்ற இந்த அடிமைத்தனத்தை அவர்கள் வேறு யாருக்கும் சமர்ப்பிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் இந்த வசனம் தெளிவாக அமைந்துள்ளது.

ஆனால் இந்தக் கவிஞனோ அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய அடிமைத்தனத்தை ஹசனுக்கும் ஹுசைனுக்கும் சமர்ப்பிக்கின்றான்.

எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!’’ என்று மனிதர்களிடம் கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.)

அல்குர்ஆன் 3:79

இந்த அடிமைத் தனத்திற்கு எந்த ஓர் இறைத் தூதரும் உரிமை கோரக்கூடாது என்பதை இந்த இறைவசனம் நெற்றியடியாக அடித்துத் தகர்த்து விடுகின்றது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

இந்த வசனத்திலும், இன்னும் இதுபோன்ற ஏராளமான வசனங்களிலும் எனது அடியார்களே என்று பாசத்துடன் அழைக்கின்ற இந்த அழைப்பில் அடியார்கள் என்ற கண்ணியமான வார்த்தை இடம் பெற்றிருந்தாலும் அதன் பொருள் எனது அடிமைகளே என்பது தான். அதாவது மனிதனை தனக்குரிய அடிமை என்று சொல்கின்றான். ஆனால் இந்தக் கவிஞன் இதற்கு மாற்றமாக தன்னை ஹசன், ஹுசைன் அடிமை என்று சொல்கின்றான்.

ஹசன், ஹுசைனும் அடிமைகள் தான்

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194,195

இந்தக் கவிஞன் எந்த ஹசன், ஹுசைனை அழைக்கின்றானோ அவர்கள் இருவரும் இவனைப் போன்ற அடிமைகள் என்று கூறி ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு ஒரு போதும் உதவ முடியாது என்று அல்லாஹ் தெளிவாக உணர்த்தி விடுகின்றான். அத்துடன் அவர்களுக்குப் பதிலளிப்பதற்குரிய எந்தத் திராணியும் இல்லை என்பதையும் போட்டு உடைத்து விடுகின்றான்.

எதிரிகளாக மாறும் இரு கடவுளர்கள்!

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது

அல்குர்ஆன் 35:14

மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

அல்குர்ஆன் 46:6

இறுதி நாள் வரை இவன் கும்பிட்டு, கூப்பிடுகின்ற ஹசன், ஹுசைன் ஆகியோர் பதிலளிக்க மாட்டார்கள். மாறாக இறுதி நாளில் இவனுக்கு எதிரிகளாகவும் மாறி விடுவார்கள் என்பதை இந்த வசனங்கள் விளக்கி விடுகின்றன.

இந்த அடிப்படையில் இந்தக் கவிஞனின் அழைப்பு செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி விடுகின்றது என்பதையும் தெளிவுபடுத்தி விடுகின்றன. மொத்தத்தில்,

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

என்ற இந்த வசனத்தின் படி, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளலாம்.

இந்த எல்லையைத் தாண்டி ஒருவன் சக மனிதனுக்கு, மனித சக்தியை விட கூடுதல் சக்தியைக் கொடுக்கும் விதமாகத் தன்னை அடிமையாக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற காரியமாகும் என்பதை இந்த வசனங்கள் குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் தெரிவித்து விடுகின்றன.

—————————————————————————————————————————————————————-

பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!!

உம்மு ராஷித், மேலப்பாளையம்

ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது.

ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

அல்குர்ஆன் 17:15

உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொருவன் என்ற நிலை சர்வ சாதாரணமாகி விட்டது.

ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்காக அவனைச் சார்ந்தவர்களை ஒட்டு மொத்த சமூகமும் இழிவாகக் கருதுவதைப் பார்க்கிறோம்.

ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் மது அருந்துகிறார்; அல்லது கொலை செய்திருக்கிறார்; அல்லது திருடியிருக்கிறார். அவரது இழி செயலுக்காக அவரைக் குறை கூறுவதும், குற்றம் பிடிப்பதும் நியாயமானது தான்.

ஆனால் இதற்காக அவரது பெற்றோர்களுக்கு, மனைவி, மக்களுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு இந்தப் பாதகச் செயல்களை அடைமொழியாக்கி குடிகாரனின் மகன், குடிகாரனின் மனைவி என்று அவர்களை அடையாளம் காட்டுகிறது இந்தச் சமூகம். இது எவ்விதத்தில் நியாயம்?

ஒருவர் செய்யும் பாவச் செயலை அவரது குடும்பத்தினர் எப்படிச் சுமக்க முடியும்? ஏற்கனவே அவரது இழிசெயலால் நொந்து, வெந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் ஊராரின் இந்தப் பழிச் சொல்லால் மென்மேலும் வேதனைக்குள்ளாகின்றனர். இது குறித்து மார்க்கம் என்ன கூறுகின்றது என்று என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

இந்தத் தவறைச் செய்பவர்களிடத்தில் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டால் இது உலக விஷயம் தானே? இதில் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப்போகின்றது என்று கேட்கின்றனர்.

இவ்வாறு கேட்பதே தவறாகும். ஏனெனில் மறுமையில் தண்டனையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு விஷயம் எப்படி உலக விஷயமாக இருக்க முடியும்? இஸ்லாம், மார்க்கத்தை உலக விஷயம் மார்க்க விஷயம் என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. ஆனால் மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது மார்க்க விவகாரம் தான்.

இந்தத் தவறைச் செய்யும் இன்னும் சிலர் வேறு வகையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். குற்றம் செய்பவரின் குடும்பத்தை இவ்வாறு பழிக்கும் போது, ‘நம் குடும்பத்தினரை, நம் பிள்ளைகளை மற்றவர்கள் தரக்குறைவாய் பேசுவர்’ என்று அஞ்சி அவன் தவறிலிருந்து விலகியிருப்பான் என்று தாங்கள் செய்யும் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால் அதற்காக அவருடைய குடும்பத்தினரை விமர்சிப்பதோ, தப்பான பார்வையில் பார்ப்பதோ தவறு என்றே நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

இவர் திருடியிருந்தால் இதற்கு முன் இவரது சகோதரரும் திருடியிருக்கிறார்’’ என்று அவர்கள் கூறினர். (அந்தச் சகோதரன் தானே என்ற விஷயத்தை) யூஸுஃப், அவர்களிடம் வெளிப்படுத்தாமல் தமது மனதுக்குள் வைத்துக் கொண்டார். “நீங்கள் மிகக் கெட்டவர்கள்; நீங்கள் கூறுவதை அல்லாஹ்வே நன்கு அறிவான்’’ என்றார்.

அல்குர்ஆன் 12:77

இவ்வசனத்தில், இவர் திருடியிருந்தால் இவரது சகோதரரும் திருடியிருப்பார் என்று அந்தச் சகோதரர்கள் கூறுகின்றார்கள். உண்மையில் இவர்கள் குறிப்பிடும் யூசுஃப் திருடுபவராக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் குற்றம் சாட்டப்பட்ட யூசுஃபின் சகோதரர் கூட திருடவில்லை. எனினும் திருடர் போன்ற ஒரு பிம்பம் அவர் மீது சுமத்தப்பட்டது. அதில் அவர் மாட்டிக்கொண்டார். இந்தத் தவறில் சம்பந்தப்பட்டவனை விட்டு விட்டு சம்மந்தமே இல்லாத யூசுஃபையும் குற்றவாளியாகச் சித்தரித்தனர். இதே அவலநிலை தான் காலம் காலமாக இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்திலும் இதேபோன்ற ஒரு நிலை தான் ஏற்பட்டது, அதை அன்னையாரே அறிவிக்கின்றார்கள்,,,

நபி (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக்) போர் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது இரவு வேளையில் தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்த போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது. ஆகவே நான் எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டனர்.

அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகை யைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனித உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்து கொண்டு “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதன் முன்னங் கால்களை மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.

இறுதியில் படையினர் நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவசகர்களின் தலைவன்) ஆவான்.

நூல்: புகாரி 4750

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட செய்தியை இந்த ஹதீஸ் கூறுகிறது.

காழ்ப்புணர்ச்சி கொண்ட கயவர்கள் இதைத் தக்க தருணமாக எடுத்துக் கொண்டு அவ்விருவருக்குமிடையே தவறு நடந்திருக்கலாம் என்ற தீப்பொறியை (அவதூறை) பற்ற வைத்து தீப்பந்தங்களாக உருவாக்கினர். இதன் உண்மை நிலை என்னவென்பதை அறிவதற்காக நபியவர்கள் தம் மனைவி பற்றிய விசாரணையில் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் தம் மற்றொரு மனைவியான ஸைனபிடம் ஆயிஷா (ரலி) பற்றி விசாரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஸைனபுக்கு சக்களத்தியாகவும், அழகில் அவர்களுக்கு இணையாகவும் இருந்த போதிலும் கூட ஸைனப் (ரலி)யின் வாக்குமூலமும் அவர்களின் நற்குணமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். “ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! (பழி சுமத்துவதை விட்டும்) என் காதையும் என் கண்ணையும் நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்’’ என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும் போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

நூல்: புகாரி 4750

மேற்கண்ட சம்பவங்களிலிருந்து இன்னும் சில படிப்பினைகள் நமக்குக் கிடைக்கின்றன.

  1. தவறு செய்யாதவர் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ, பிறரது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ குற்றவாளி யாகத் தோற்றமளிக்கப்படலாம்.
  2. ஒருவர் தவறு செய்தால் அவரைச் சார்ந்தவர்களும் அப்படித்தான் இருப்பர் என்று மக்கள் தீர்மானிக்கின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் உடன் பிறந்த சகோதரியான ஹம்னா இந்த அவதூறைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் செய்த தவறுக்காக ஹம்னாவின் சகோதரியான ஸைனபைக் கெட்டவர் என்று கூறிவிட முடியுமா?

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போன்றே மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு என்பதற்கு மேற்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால் தவறே செய்யாத எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் இஸ்லாம் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் போன்று வேறு எந்த ஒரு மார்க்கமும் இல்லை. அதனால் தான் கண்ணால் கண்ட சாட்சியங்களைக் கொண்டு வருமாறு அது மக்களுக்கு உத்தரவிடுகின்றது.

காதால் கேட்பதற்கும், கண்ணால் பார்ப்பதற்கும் கற்பனை உருவம் கொடுத்து விடுகின்றனர். மேலும் கேட்டதையெல்லாம் பரப்பியும் விடுகின்றனர். இது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:6

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 6

ஒருவர் செய்யும் தவறுக்காக மற்றவர்களை விமர்சிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் இதுபோன்ற விஷயத்தில் இன்னும் சில தவறுகளையும் செய்கின்றனர்.

தாய் தந்தை இல்லாதவர்களை அனாதைகள் என்று தரக்குறைவாகப் பேசுவதும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களைக் குலம் கோத்திரம் இல்லாதவர்கள் என்றும் அவர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுவதுமாக இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பேசுவது சம்மந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைச் சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

நம்மைச் சிறந்தவர்களாகவும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்பவர்களாகவும் இருப்பவர்களிடம் நாம் அழகிய முறையில் உறவு கொண்டாடாமல், அவர்களை அரவணைக்காமல் இழிவாகக் கருதுவதும் புண்படுத்துவதும், எவ்வகையில் நியாயம்?

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்‘’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

நூல்: புகாரி 5304

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்‘’ என்று அலீ (ரலி) அவர்களிடம் சொன்னார்கள்.

 நூல்: முஸ்லிம் 4780

கண்ணியமும் இழிவும் இறைவனின் நாட்டப்படி அவன் ஏற்படுத்திய விதியின் அடிப்படையில் தான் நடக்கின்றது. எனவே இறைவன் கையில் உள்ள விஷயத்தில் நாம் தலையிட்டு, மற்றவர்களை இழிவுபடுத்துவதை விட்டும் – மற்றவர்களால் இழிநிலையை அடைவதை விட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவோமாக!

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:26


சத்தியத்தை உலகறியச் செய்த கோவை விவாதம்!  தொடர் – 2

உண்மையை ஒப்புக்கொண்ட பரலேவிகள்

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

“திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்!” என்ற தலைப்பில் கடந்த 19.07.16 மற்றும் 20.07.16 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பரலேவிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற விவாதத்தின் முதல் பகுதியை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காண்போம்.

“திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஆதாரப்பூர்வமான செய்திகளாக புகாரி, முஸ்லிம் உட்பட பல நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள எந்த ஒரு செய்தியையும் இதுவரை இஸ்லாமிய வரலாற்றில் எவருமே மறுத்ததில்லை; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் மட்டும்தான் இஸ்லாமிய வரலாற்றில் யாருமே செய்யாத செயலைச் செய்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து காஃபிராகியுள்ளது” என்பதுதான் நம்மீது நம்மை எதிர்ப்பவர்கள் வைத்து வரும் பிரதானமான குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது கீழ்க்கண்ட ஆதாரங்களின் வாயிலாக கோவை விவாதத்தில் நிரூபணமானது.

மத்ஹபுவாதிகளால் மதிக்கப்படக்கூடிய பல இமாம்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை மறுத்துள்ளனர். அந்தச் செய்திகளையும், இது குறித்து நாம் எடுத்து வைத்த வாதங்களையும், பரலேவி மதத்தினர் அதற்களித்த உளறல் பதில்களையும் காண்போம்.

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்த புல்கீனி இமாம்:

அல்லாஹ் மறுமையில் சொர்க்கம் நரகம் என்று தீர்ப்பளித்த பிறகு நரகத்திற்கென்றே புதிய படைப்புகளைப் படைத்து நரகத்தில் அந்தப் படைப்புகளைப் போடுவான் என்று புகாரியில் ஒரு செய்தி இடம் பெறுகின்றது.

இந்த ஆதாரப்பூர்வமான செய்தியை நமது தலைவர் புல்கீனி இமாம் அவர்கள் மறுக்கின்றார்கள். அவர்கள் அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கச் சொல்லும் காரணம்,

உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

அல்குர்ஆன் 18:49

என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு இந்த ஹதீஸ் முரணாக உள்ளது என்பதுதான் காரணம். மேற்கண்டவாறு புல்கீனி இமாம் அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கும் செய்தியை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியை நாம் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினோம். இதுவரை யாருமே திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்திகளையும் மறுத்ததே இல்லை என்று கூறினீர்களே! அவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுப்பவர் காஃபிர் என்று சொன்னீர்களே! நீங்கள் மதிக்கக்கூடிய புல்கீனி இமாம் காஃபிர் என்று இப்போது சொல்லுங்கள் பார்ப்போம் என கேள்வி எழுப்பினோம். பல அமர்வுகளாகப் பதில் சொல்லாமல் வாயடைத்துப்போன பரலேவி மதத்தினர் நாம் பலமுறை சுட்டிக்காட்டி இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப கேட்ட பிறகு வேறுவழியில்லாமல் அதற்குப் பதிலளித்தனர்.

உண்மையை ஒப்புக்கொண்ட பரலேவிகள்:

புல்கீனி இமாம் அவர்கள் ஹதீஸை மறுத்ததாக நீங்கள் சொல்லிக் காட்டுகின்றீர்கள். ஆமாம்! அந்தச் செய்தி உண்மையானது தான்.

புல்கீனி இமாம் அவர்கள் ஹதீஸ்களை மறுக்கத் தான் செய்துள்ளார்; அந்த ஹதீஸை அவர் மறுத்தது உண்மை தான்; அது குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸை மறுக்கவில்லை, மாறாக, பல ஹதீஸ்களுக்கு மாறாக அந்த ஹதீஸ் வருவதால் அவர் அதை மறுத்துள்ளார்.

அத்துடன் கூடுதல் ஆதாரமாகத் தான்…

உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையும் சொல்லியுள்ளார் என்று பதிலளித்தனர்.

இந்தப் பதிலின் மூலம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

அதாவது ஹதீஸுக்கு முரணாக இருந்தால் மறுப்பார்களாம்! குர்ஆனுக்கு முரணாக இருந்தால் மறுக்கமாட்டார்களாம்!

என்னே அருமையான விளக்கம். இதன் மூலம் அவர்களது பொய் வாதம் அம்பலமானது.

ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளை விட திருக்குர்ஆன் வசனங்களே வலிமையானவை – ஒப்புக் கொண்ட பரலேவிகள்:

ஒருவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் உளு முறிந்துவிடும் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஹனஃபி மத்ஹபு அறிஞர் ஸர்கசீ அவர்கள் அத்தவ்பா அத்தியாயத்தில் வரும் 108வது வசனமான “அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர்” என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்துக்காட்டி மறுத்துள்ளார்கள்.

(இந்த 9:108 வசனத்திற்கும், அந்த ஹதீஸிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தனி விஷயம்)

இந்தச் செய்தியைச் சொல்லி ஹனஃபி மத்ஹபு அறிஞர் ஸர்கசீ அவர்களை யூதன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் கேள்வி எழுப்பியதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைதான் சரியான கொள்கை என்பதை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையைப் பறைசாற்றி விவாதத்தில் முழங்கிய பரலேவிகள்:

ஸர்கசீ இமாம் அவர்கள், ஒருவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவரது உளு நீங்கிவிடும் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஏன் மறுத்தார்கள் தெரியுமா? அத்தவ்பா அத்தியாயத்தின் 108வது வசனத்தில் பள்ளிவாசல்களைப் பற்றி சொல்லும் போது அதில் தூய்மையை விரும்பக்கூடிய ஆண்கள் உள்ளதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அப்படியானால் ஒருவர் தனது உடலுறுப்பில் ஒன்றான ஆணுறுப்பை தொடுவதால் உளு முறியும் என்ற செய்தி இதற்கு முரணாக இருப்பதால்தான் அதை எங்கள் இமாம் அவர்கள் மறுத்துள்ளார்கள்.

ஏனென்றால் திருக்குர்ஆன் என்பது அனைவராலும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி. ஆனால் மர்ம உறுப்பைத்தொட்டால் உளு முறியும் என்ற செய்தி ஹதீஸ்களில் வந்துள்ள செய்தி. அதாவது இதற்கு, “ஹபர வாஹித்” என்று சொல்லப்படும். அதாவது ஹதீஸ்களில் வருபவை ஓரிரு நபர்கள் அறிவிக்கும் செய்திகள். ஓரிரு நபர்கள் அறிவிக்கும் செய்திகளை விட அனைவராலும் ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்வது தானே சரி; அதுதானே நமது கொள்கை என்று கூறி உண்மையை ஒப்புக் கொண்டனர்.

எதிர் தரப்பினரும் நமது கொள்கைக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்து நமது கொள்கையை நிலை நிறுத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் நபராகவே மாறி விவாதித்தது அல்லாஹ் இந்த விவாதத்திற்கு அளித்த மகத்தான வெற்றியாகும்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களை பொய்யர்களாக்கிய ராசி இமாம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3357

மேற்கண்ட செய்தியில் இப்ராஹீம் நபி மூன்று பொய் சொன்னதாக நபிகளார் கூறியதாக புகாரியில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆதாரப்பூர்வமான செய்தியை ஹனஃபி மத்ஹபு இமாம் ராசி அவர்கள் பொய் என்று சொல்லி மறுக்கின்றார். அது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்த போதிலும் அந்தச் செய்தியைப் பொய் என்று கூறி அதை அவர் மறுப்பதற்குச் சொல்லும் காரணத்தைத் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது…

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும் இதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இதை நாம் ஏற்றால் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பொய்யராக ஆக்கியவர்களாக ஆவோம். இப்ராஹீம் நபியைப் பொய்யராக ஆக்குவதைவிட இந்தச் செய்தியை அறிவித்த நபர்களைப் பொய்யர் என்று சொல்லுவதுதான் சரியானதாகும் என ராசி இமாம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பினோம்.

இன்னும் கூடுதலாகச் சொல்வதாக இருந்தால் நாம் ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியை திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லும்போது அந்த ஆதாரப்பூர்வமான செய்தியை அறிவித்தவர்களில் யார் யார் பொய்யர் என்றோ யார் இதில் இட்டுக்கட்டினார் என்றோ நாம் சொல்வதில்லை. மாறாக இதில் இட்டுக்கட்டியவர்; அல்லது தவறிழைத்தவர் யார் என்பது குறித்து நமக்குத் தெரியாது என்றே சொல்கின்றோம். ஆனால் இமாம் ராசி அவர்களோ அந்தச் செய்தியை அறிவித்த அனைவரும் பொய்யர்கள் என்று அறிவித்துள்ளார். அப்படியானால் இந்த ராசி இமாமைப் பற்றி ஏன் இவர்கள் வாய்திறக்கவில்லை?

நீங்கள் எந்த மத்ஹபைப் பின்பற்றுவதாகச் சொல்லுகின்றீர்களோ அந்த இமாம் பஹ்ருத்தீன் ராசி அவர்கள் இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள். அப்படியானால் நீங்கள் பின்பற்றும் மத்ஹபு இமாம் காஃபிரா?

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று இந்த இமாம் குறித்து அறிவிக்கத் தயாரா?

நீங்கள் அந்த இமாமின் மத்ஹபில் தானே இருக்கின்றீர்கள்; அப்படியானால் நீங்களும் புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானா? என அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தோம். கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை. அவர்களது கள்ள மௌனமே நமது கொள்கை நல்ல கொள்கைதான்; சரியான கொள்கை தான் என்பதை உறுதிப்படுத்தியது.

உமூமுல் பல்வாவிற்கு மாற்றமாக இருந்தால் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது:

ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டும் என்ற ஹதீஸை மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை எடுத்து வைத்தோம். இதற்கு மத்ஹபு இமாம்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை நாங்கள் மறுக்கின்றோம் என்றோ அல்லது இந்தச் செய்தி இன்ன பிற ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதால் அதை மறுக்கின்றோம் என்றோ சொல்லவில்லை. மாறாக ஒட்டக இறைச்சியை உண்டு விட்டு இதன் காரணமாக எங்களது உளு முறிந்துவிட்டது எனச் சொல்லி அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களில் எவருமே மறுபடியும் உளு செய்யவில்லை. எனவே ஒட்டக இறைச்சி உண்டால் உளு முறியும் என்ற செய்தி உமுமுல் பல்வாவிற்கு மாற்றமாக உள்ளதாம்; அதாவது நடைமுறையில் உள்ள நிகழ்வுகளுக்கு எதிராக உள்ளதாம். அதனால் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

எப்படியெல்லாம் ஹதீஸ்களை மறுத்து உள்ளார்கள். இவர்களையெல்லாம் காஃபிர்கள் என்று சொல்வீர்களா? எனக் கேட்டதற்கு, அந்தக் காரணம் மட்டுமா அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹதீஸை மறுப்பதற்கு இன்னும் பல காரணங்கள் அதற்குக் கீழ் உள்ள வரிகளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டீர்களே! என்று சொல்லி உண்மையை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல காரணங்களையும் ஹதீஸ்களை மறுப்பதற்காக மத்ஹபு இமாம்கள் சொல்லியுள்ளார்கள் என்ற உண்மையையும் சேர்த்து ஒப்புக் கொண்டனர்.

தானியங்களில் ஐந்து வஸக் அளவிற்கு விளைந்தவைகளுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை திருக்குர்ஆன் வசனத்தைக் காட்டி மறுத்த ஹனஃபி மத்ஹபு அறிஞர்களை காஃபிர்கள் என்று சொல்வீர்களா? எனக்கேள்வி எழுப்பினோம்.

அவ்வாறு சொல்லப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று நம்மிடம் பிரிண்ட் அவுட்டை கேட்டனர். பிரிண்ட் அவுட் கொடுத்த பிறகு வாய் மூடியவர்கள் தான் இது குறித்து கடைசி வரைக்கும் வாய்திறக்கவே இல்லை.

நாட்டுக் கழுதையைச் சாப்பிடுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை’’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:145) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டி மறுத்த செய்தியை எடுத்து வைத்ததற்கு அதற்கு விரிவுரையாக எழுதப்பட்ட சம்பந்தமில்லாத செய்தியைக் காட்டி சமாளித்தார்களே தவிர இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்த செய்திக்கு எவ்வித பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு தடவை கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை “தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?’’ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவைகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். (அல்குர்ஆன் 5:4) என்ற வசனத்தை மேற்கோள்காட்டி மாலிக் இமாம் மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை நாம் எடுத்துக்காட்டிய போதும் கடைசி வரைக்கும் அதற்கும் வாய் திறக்கவில்லை.

உளு செய்யும் போது தலைப்பாகை மீது மஸஹ் செய்து கொள்ளலாம் என்ற ஹதீஸை, நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 5:6) என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி பஹ்ருர் ராயிக் என்ற நூலில் ஹனஃபி மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ள செய்தியை ஆதாரமாகக் காட்டியதற்கு விழி பிதுங்கினார்களே தவிர வாய் திறக்கவில்லை.

இதுமட்டுமல்ல! இதைவிட இன்னும் பல ஆதாரப்பூர்வமான செய்திகளை விதவிதமான காரணங்களைக் கூறி மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ளனர். நபித்தோழர்களும் பல ஆதாரப் பூர்வமான செய்திகளை திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி மறுத்துள்ளார்கள். அந்தச் செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.


குடும்பவியல்  தொடர்: 34

பெண்ணினத்தை அழிக்கும் வரதட்சணை

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இந்தியாவில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. வெளியில் பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தைச் சொன்னால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கேவலமாகிவிடும் என்பதால் அதிகமானவர்கள் பொய்க் காரணங்களைச் சொல்கின்றனர்.

இளம் பெண்கள் தற்கொலை செய்யும் போது, வயிற்று வலியினால் தற்கொலை செய்ததாகச் சொல்வார்கள். ஆனால் அது பொய்யாகத்தான் இருக்கும். வயிற்று வலி என்பது எய்ட்ஸ் போன்ற மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய் போன்றதல்ல!

வயிற்று வலிக்கு தகுந்த வைத்தியம் செய்தால் சரியாகிவிடும். அதற்காக ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?

தனது தகப்பனால் தன்னைத் திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு இயலாது என்ற தீர்க்கமான முடிவுக்கு அவள் வரும் போது, பெற்றோருக்கு நாம் ஏன் பாரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்துவிடுகிறாள். அவள் 15 வயதில் வயதுக்கு வந்து. தனது திருமணத்தை 16 என்றும் 18 என்றும் 20 என்றும் 25 என்றும் எதிர்பார்க்கிறாள். இதன் பிறகுதான் தற்கொலை முடிவை எடுக்கிறாள் ஒரு பெண்.

இளம் பெண்ணின் வயது ஏற ஏற பெண்ணுக்கே உள்ள கவர்ச்சி, அழகு போன்றவை குறைய ஆரம்பித்துவிடும். ஓரளவு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்ணை ஆண்கள் திருமணம் முடிக்க விரும்பமாட்டார்கள் என்பது சமூக எதார்த்தம். எனவே மணவாழ்க்கை கிடைக்காது என்று நினைக்கிற போதுதான் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே நாம் பெண்களிடம் வரதட்சணை கேட்பதால், அவர்கள் செய்யும் தற்கொலை என்ற பாவத்திலும் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை வரதட்சணை வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் மறுக்க முடியாது.

வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவருக்கும், அதில் வாங்குகின்ற கொடுக்கின்ற ஒவ்வொருக்கும், அதை நியாயப்படுத்துகின்ற ஒவ்வொருக்கும், வரதட்சணைத் திருமணங்களைப் புறக்கணிக்காமல் அதை ஆதரிக்கின்ற ஒவ்வொருவருக்கும் தற்கொலைக்கான பாவத்தில் நிச்சயம் பங்குண்டு. பெண்கள் தவறான ஒழுக்கக் கேட்டில் விழும் பாவத்திலும் பங்குண்டு. அதேபோன்று இஸ்லாத்தை விட்டே வெளியேறும் பாவத்தைச் செய்வதிலும் பங்குண்டு. ஏனெனில் ஒழுங்கான வாழ்க்கையை இந்தச் சமூகம் கொடுக்காததால் தான் இந்தத் தவறுகளெல்லாம் நடந்தேறுகின்றன.

இவற்றையெல்லாம் கடந்து, ஒரு பெண் இறையச்சத்துடன் மறுமைக்காகவே வாழ்வது என்ற முடிவையும் எடுத்தால், அதாவது தற்கொலையை செய்யாமலும், ஒழுக்கக் கேட்டை விரும்பாலும், திருமணத்தின் மூலம்தான் உடல் சுகம் அடைய வேண்டும் என்று மார்க்கம் சொன்னதைக் கடைப்பிடிக்கும் பெண்ணாக இருந்தால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கடைசியில் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மனநோயாளியாக மாறிவிடுகிறாள்.

பெண்களில் சிலருக்குப் பேய் பிடிக்கும். உண்மையில் பேய் என்று எதுவும் கிடையாது. அது ஒருவிதமான மனநோய். எனவே பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் மனநோயாளியாகும் நிலையைப் பார்க்கிறோம்.

அதேபோன்று, பெண் சிசுக் கொலை செய்வதும் இந்த வரதட்சணையினால்தான். கடந்த காலங்களிலெல்லாம் குழந்தை பிறந்த பிறகுதான் ஆணா? பெண்ணா? என்பது தெரியும். ஆனால் தற்போதுள்ள நிலையில் கருவுக்குள் இருப்பது ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் கருவியின் மூலம் தெரிந்து கொண்டு, பெண் என்றால் கருவுக்குள்ளேயே வைத்து சமாதியாக்கிவிடுவதையும் பார்க்கிறோம். மத்திய அரசாங்கம் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று பார்த்து பெற்றோரிடம் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பேணும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் தெரிந்த பிறகு பெண் என்றால் அழிப்பதற்குப் பயன்படுத்துவதால் தான் தடை விதிக்கிறது அரசாங்கம்.

இப்படி முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் கருவில் பெண் சிசுக்களைக் கொல்வதற்குக் காரணம் வரதட்சணை தான். அதாவது பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அதைக் கரைசேர்க்க முடியாது; அதற்கு நமது சமூகம் ஒத்துழைக்காது; சமூகம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு நம்மிடம் சக்தியில்லை; இப்போது 5 இலட்சம் கேட்கிறார்கள்; இந்தப் பெண் குழந்தை வயதிற்கு வந்து அதைக் கல்யாணம் கட்டிக் கொடுக்கும் போது எத்தனை இலட்சம் கேட்பார்களோ என்று மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு, அப்படியொரு அவமானம் நமக்குத் தேவையில்லை என்றெண்ணித் தான் சிசுவிலேயே, கருவுக்குள் வைத்தே பெண்களை சமாதியாக்கும் அவலச் செயல் நடந்தேறுகிறது.

கொன்றுவிட்டால் ஒருசில நாட்களுக்குத்தான் கவலை. ஒவ்வொரு நாளும் பொத்திப் பொத்தி வளர்த்து திருமணம் முடிக்க முடியாமல் தினந்தோறும் கவலைப்படத் தேவையில்லை என்று நினைத்து இதைச் செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமைதானே! இன்னும் சிலர் பெண் பிள்ளையைக் கொலை செய்யாவிட்டாலும் பெண் பிள்ளை என்றதும் மனக் கவலையும் பொருளாதாரத்தின் மீது கடும் அக்கறையும் காட்டி, பிறந்த நாளிலிருந்தே சேமிப்பு கணக்கைத் தொடங்குகிறார்கள். இப்படியெல்லாம் அவலம் ஏற்படக் காரணம் வரதட்சணைதானே!

சிசுக்கொலை அறியாமைக் கால மக்கத்து காஃபிர்கள் செய்த மாபாதகச் செயலாகும். அவர்கள் வேறு காரணத்திற்காக சிசுக் கொலை செய்தார்கள். அறியாமைக் காலமாக இருந்தாலும் வரதட்சணைக் கொடுமை கிடையாது.

இன்னும் சொல்வதெனில் அரபுச் சமூகம் பெண்களுக்கு மஹர் கொடுத்தே மணம் முடித்தனர். நபியவர்கள் வந்துதான் வரதட்சணையை ஒழிக்க வேண்டும் என்ற நிலை அரபு சமூகத்தில் இருந்ததில்லை.

அவர்கள் நிர்வாக நன்மைக்காக ஆணின் கீழ் பெண் என்று வாழாமல் பெண் என்றாலேயே அடிமைதான் என்றெண்ணிய காலம். பெண்ணுக்குத் தனி சுதந்திரம் என்பதே கிடையாது என்ற காலம் அது. இதுபோன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக பெண் குழந்தைகளைக் கொன்றனர்.

ஆனால் இன்றைய நவீன உலகம் வரதட்சணை என்ற காரணத்தை முன்வைத்து பெண் சிசுக்களைக் கொல்கிறது. எப்படிக் கொன்றாலும் குற்றம் குற்றம்தான். குர்ஆனில் இது பற்றி மறுமையில் விசாரணை நிச்சயம் உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது…

(அல்குர்ஆன் 81:8,9)

சிசுக்கள் எதற்காக கொல்லப்படுகின்றன என்பதை இறைவனால் விசாரிக்கப்படும் என்று அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் எச்சரிக்கிறான். ஒரு குழந்தை எதற்காகக் கொல்லப்பட்டது என்று பெற்றோரைக் கேட்டால் அதற்கு அந்தப் பெற்றோர்கள் சமூகத்தின் வரதட்சணை அவலத்தைப் பதிலாக நிச்சயம் கூறுவார்கள். அவர்களும் தப்பிக்க முடியாது. சமூகம் தவறு செய்ததால் அதற்கு இன்னொரு தவறு தீர்வாகுமா? என்று இறைவன் பெற்றோரையும் தண்டிப்பான். அப்படி அவர்களுடன் இந்தச் சமூகத்திற்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கத்தான் செய்யும்.

நாளை மறுமையில் அந்தப் பாவத்திற்குரிய தண்டனையில் நாம் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வரதட்சணை என்ற தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். வரதட்சணைத் திருமணங்களைப் புறக்கணிக்க வேண்டும்,

வரதட்சணையை ஊக்குவித்து முன்னின்று நடத்தும் ஊர் ஜமாஅத்துக்களையும் நிர்வாகத்தையும் ஆலிம்களையும் இன்னும் யாரெல்லாம் அதை ஆதரிக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்யவேண்டும். அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளுக்காவது அதுபோன்ற தீமையான திருமணங்களை நடத்தாமல் எதிர்ப்பைக் காட்டியிருந்தால் மறுமையில் சிசுக் கொலைக்கான தண்டனையிலிருந்து நாம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.


நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர்!

எம்.எஸ். ஜீனத் நிஸா, மேலப்பாளையம்

அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்பட வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட சுயமாக எதையும் கூறிவிடமுடியாது; அவ்வாறு கூறியதை இறைவன் தன் திருமறையில் கண்டித்துள்ளான் என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே இந்நிலையென்றால் ஸஹாபாக்களெல்லாம் எம்மாத்திரம்? என்று நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு பல நபித்தோழர்கள் திசை மாறிய காட்சியை பல ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகின்றது. எந்தப் பதவி ஆசை கூடாது என்று நபிகளார் தடுத்தார்களோ அந்தப் பதவி ஆசை நபித்தோழர்களின் மனதிலும் நுழைந்ததை நாம் காண்கின்றோம்.

நீங்கள் உலக ஆசைக்காக உங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வதைத் தான் உங்களிடத்தில் நான் அஞ்சுகின்றேன் என்று நபிகளார் கூறிய நிகழ்வுகளும் நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு நடந்தேறின.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்’’ என்று என்னிடம் கூறினார்கள். (அமைதி திரும்பிய பினனர்) “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6869

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை மீதேறி (உரை நிகழ்த்தி)னார்கள். அது உயிரோடுள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடை பெறுவது போலிருந்தது.

அவ்வுரையில் அவர்கள், “நான் (அல்கவ்ஸர் எனும்) தடாகத்தினருகில் உங்களுக்(கு நீர் புகட்டுவதற்)காகக் காத்திருப்பேன். அத்தடாகத்தின் பரப்பளவு ‘அய்லா’விலிருந்து ‘ஜுஹ்ஃபா’ வரையுள்ள தொலைதூரத்தைப் போன்றதாகும். எனக்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக் கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்’’ என்று சொன்னார்கள். இதுவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறுதியாகச் சொற்பொழிவு மேடை மீது பார்த்த நிகழ்வாக அமைந்தது.

நூல்: முஸ்லிம்:4603

 முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் (நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், “அபுல் ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?’’ என்று விசாரிக்க, அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்து விட்டார்கள்’’ என்று சொன்னார்கள்.

உடனே அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப் போகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின் போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். “இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?’’ என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்து கொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்து கொள்வோம். அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்து விட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 4447

நபித்தோழர்களும் மனிதர்களே!

நபித்தோழர்களிடத்திலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறிய உடனே பலருக்கு ஆத்திரம் அளவு கடந்து வருவதைப் பார்க்கின்றோம்.

எவ்வாறு நபிகள் நாயகம் இறை அந்தஸ்தை அடைய முடியாதோ அது போல நபித்தோழர்களும் அல்லாஹ்வின் தூதர் ஆக முடியாது. நபிகளார் மக்களோடு வாழ்ந்த கால கட்டத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகள், பிரச்சனைகளுக்கு அவர்கள் சமாதானத்தையும், தீர்வையும் ஏற்படுத்தி வைத்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “ஒரு போரில் இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி “அன்சாரிகளே! (உதவுங்கள்.)’’ என்று கூறினார். அந்த முஹாஜிர் “முஹாஜிர்களே! உதவுங்கள்!’’ என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, “இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்’’ என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். இவை நாற்றம் பிடித்தவை’’ என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு “இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்’’ என்று கூறினான்.

நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது’’ என்று சொன்னார்கள். மக்காவாசிகள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமாகிவிட்டனர்.

நூல்: புகாரி 4905

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்’’ என்று அவர்கள் கூறினார்கள்.

அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்’’ என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), “தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை’’ என்று பதில் கூறினார்.

உடனே, அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிப்பதற்கு  உதவும்படி கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் வீட்டார் விஷயத்தில் எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் ஒரு மனிதரை தொடர்புபடுத்தி  கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் வந்ததில்லை’’ என்று கூறினார்கள்.

உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகின்றேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகின்றோம்‘’ என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாது’’ என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டி விட்டது. உடனே, உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, “நீர் தாம் பெய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமாகிவிட்டார்கள்.

நூல்: புகாரி 2661

எப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்களோ அப்போதே நபித்தோழர்களின் மனதிலிருந்த மனக்கசப்புகளும், கொள்கை ரீதியிலான பிரச்சனைகளும் அதிகமானது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள்  ‘ஸுன்ஹ்’ என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்’’ என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) “சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்’’ என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் ‘அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்’ என்று சொன்னார்கள்.

மேலும், ‘‘(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே’’ என்னும் (39:30-ம்) இறை வசனத்தையும், ‘‘முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’’ என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3667, 3668

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் இறைத்தூதருக்கு நிகராக முடியாது என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.


இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் தொடர்: 28

வழிகேடுகளை வழிபாடுகளாக்கிய கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாஉ உலூமித்தீன் முதல் பாகத்தில், கிதாபுத் தர்த்தீபுல் அவ்ராத், வ தஃப்சீலு இஹ்யாயில் லைல் (வழமையாக ஓதுகின்ற துஆக்களை வரிசைப்படுத்தல், இரவுகளை உயிர்ப்பித்தல் என்ற அத்தியாயத்தில், இரவில் நின்று தொழுவதற்கு எளிமையாக்கப் படுவதற்குரிய காரணங்கள் என்ற பாடத்தில்) சிறப்புக்குரிய இரவு, பகல்களின் விளக்கம் என்ற தலைப்பில் கீழ் கஸ்ஸாலி கூறுவதாவது:

ரமளான் மாதம் 17 வது இரவு, முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு, ஆஷூரா இரவு, ரஜப் மாதத்தின் முதல் இரவு, அம்மாதத்தின் 15 ஆம் இரவு, அதே மாதத்தின் 27வது அதாவது மிஃராஜ் இரவு, ஷஃபான் பிறை 15 ஆம் இரவு தொழுகை,பெருநாள் இரவுகள், வெள்ளிக் கிழமை இரவுகள், துல்ஹஜ் மாதத்தின் அரஃபா நாள், அம்மாதத்தின் 10 நாட்கள், அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படுகின்ற 11,12,13 நாட்கள் என்று ஒரு சில நாட்களையும் இரவுகளையும் பட்டியலிட்டு அவற்றிற்கு என்று சில அமல்களையும் சிறப்புகளையும் கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மக்ராவியின் விளக்கம்:

இந்நாட்களில் செய்கின்ற அமல்களின் சிறப்புகள் குறித்து வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை. இஹ்யாவின் அடிக்குறிப்புகளில் இடம் பெற்றிருக்கின்ற அறிஞர்களின் விமசர்னங்கள் அவற்றின் தரங்களைத் தெளிவாக விளக்குகின்றன.

இந்த பலவீனமான, ஆதாரமற்ற ஹதீஸ்கள் அடிப்படையில் குறிப்பாக ரஜப் மாத முதல் இரவு, அம்மாதத்தின் 15வது இரவு, 27வது இரவான மிஃராஜ் இரவுத் தொழுகைகளை கஸ்ஸாலி அளந்து விடுகின்றார்.

இவர் குறிப்பிடுகின்ற மிஃராஜ் இரவுத் தொழுகை மிகப் பெரிய பித்அத்தாகும். இந்த பூபாகத்தின் கிழக்கு, மேற்குத் திசைகளில் வாழ்கின்ற எவ்வளவு மக்கள் இந்த பித்அத் என்ற குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். இந்த பித்அத்தை நிலைநிறுத்துவதற்குத் தான் எவ்வளவு பெரிய பொய்கள், கதைகள் கப்ஸாக்கள்.

இது தொடர்பாக, தப்யீனுல் அஜப் ஃபீ பயானி இப்தாலி மா வரத ஃபீ ரஜப் (ரஜப் தொடர்பாக வந்திருக்கும் செய்திகளை தகர்த்தெறிகின்ற விளக்கம் மற்றும் அதில் ஏற்படும் ஆச்சரியத்தைக் களைதல்) என்ற பெயரில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஒரு நூலையே இயற்றிருக்கின்றார்கள். ரஜப் மாத அமல்களைப் பற்றி கதை அளக்கின்ற, கப்ஸா அடித்து விடுகின்ற பொய்யர்களை இந்நூலில் அடையாளம் காட்டுகின்றார்கள். அந்த அளவுக்கு இந்த பித்அத் வேறூன்றி உள்ளது.

பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த இந்த பித்அத்தை நிலை நிறுத்துவதற்கு இந்தப் பேச்சாளர்கள் பெரிதும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். இதற்குக் காரணம், ஹதீஸைப் பற்றியும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களும் இவர்களுக்குத் தெரியாதது தான். அத்துடன், சதாவும் இந்த பித்அத்துகளிலேயே இவர்கள் உழன்று கிடப்பது தான். அல்லாஹ் நாடியபடி விதிவிலக்கு பெற்றவர்களும் இருக்கின்றார்கள்.

 இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த மிஃராஜ் எப்போது நடந்தது என்று தெரியாது. எப்போது நடந்தது என்பதில் பல்வேறு பட்ட, ஒன்றுக்கு ஒன்று மோதக்கூடிய கருத்துக்கள் நிலவுகின்றன. இன்ன தேதியில், இன்ன நாளில் நடந்தது என்று யாரும் வரையறுத்துக் கூற முடியவில்லை. இந்த இலட்சணத்தில் தான் இந்த பித்அத் உலகெங்கிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

ஒரு பேச்சுக்கு அது நடந்த நாள், தேதி தெரிந்திருந்தாலும் அந்நாளில் அமல் செய்ய வேண்டும் என்றால், அந்நாளை சிறந்த நாளாக ஆக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் அறிவிக்க வேண்டும். வேறு யாருக்கும் அதை அறிவிக்கும் அதிகாரம் இல்லை. இதைப் பற்றி விளக்க வேண்டுமென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டும். ஆனால் அதில் பயனில்லை.

நம்முடைய நோக்கம் இஹ்யாவில் இடம் பெற்றிருக்கின்ற மார்க்கத்திற்கு விரோதமான, வீணான செய்திகளை தொட்டுக் காட்டுவது தான். ஹதீஸ் கலையைப் பற்றிய கொஞ்சம் சிறிய அனுபவம் உள்ளவர் இந்த ஹதீஸ்கள் பொய்யானவை என்று அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டு விடுவார்.

மார்க்கத்தில் சரியான ஹதீஸ்கள் அடிப்படையில் அமைந்த வணக்கங்களுடன் பொய்யான, பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த வணக்கங்களையும் கஸ்ஸாலி கலந்து விட்டிருக்கின்றார். அப்போது தான் அவர் இந்த பித்அத்தான வணக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இந்த வழிமுறையைக் கையாண்டிருக்கின்றார்.

இவர் கூறுகின்ற இந்த இரவுகளில் ரமளான் மாதத்தின் பிந்திய 10 இரவுகளைத் தவிர வேறெதற்கும் ஆதாரமில்லை.

நமது விளக்கம்:

ரஜப் பிறை 27, ஷஃபான் பிறை 15 இரவுகள் இந்தியாவெங்கும் படு விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்ற மேலப்பாளையம் போன்ற ஊர்களில் பெருநாள் இரவுகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடக்கின்றன.

இந்த பித்அத்கள் எல்லாம் தலைவிரித்து, தாண்டவம் ஆடுவதற்குக் காரணம் கஸ்ஸாலியின் இஹ்யா தான் என்பதை இதைப் படிப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம், கஸ்ஸாலியின் காதலர்கள் அவரை கல்விக் கடல் என்று வானளாவிய அளவுக்குப் புகழ்ந்து தள்ளுகின்றார்கள். அந்தக் கல்விக் கடலோ, கடுகளவுக்குக் கூட பித்அத்தின் தீய விளைவுகளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றார். அதனால் தான் மக்களில் ஒரு தொகையினர் இந்த பித்அத்துகளில் மூழ்கிக் கிடப்பதற்கு மூல காரணமாகி விட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவைத் துவக்கும் போதும் ஓர் எச்சரிக்கையைச் செய்வார்கள்.

عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ رواه مسلم

(அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உரையாற்றும் போது) “செய்தியில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும்.காரியங்களில் மிக கெட்டது புதிய காரியங்களாகும். ஒவ்வொரு புதிய காரியமும் வழி கேடாகும்” என்று கூறுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1435

ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் தான் (போய்ச் சேர்க்கும்) என்று நஸாயீயில் 1560வது ஹதீஸாக இடம் பெறுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பித்அத் பேராபத்து நிறைந்தது என்பதால் தனது சொற்பொழிவின் துவக்கத்திலேயே அதைப் பற்றிய எச்சரிக்கையை முன் வைக்கின்றார்கள்.

மக்களுக்கு மத்தியில் உரையாற்றுபவர்கள் தங்கள் உரையின் போது தான் பெரும்பாலும் பித்அத்துகளை அவிழ்த்து விடுவார்கள். அதனால் உரையாற்றுபவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அந்த வார்த்தைகளைத் தங்களது உரையைத் துவக்குமுன் சொல்கின்ற போது பித்அத்துகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பார்கள். பித்அத்தின் வாசல்களைத் திறந்து விடுவதை விட்டும் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்ற ரீதியில் கூட நபி (ஸல்) அவர்கள் இந்த அபாய மணியை அடித்திருக்கலாம்.

பித்அத்துகளும் பின் விளைவுகளும்

மறுமையில் ஏற்படும் பித்அத்தின் பின் விளைவுகளைப் பற்றித் தெரிந்திருந்தால் நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையின் ஆழத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

நாளை மறுமையில் அடிக்கின்ற வெயிலைப் பற்றியும் எடுக்கின்ற தாகத்தைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. அந்தச் சமயத்தில் தாகத்தைத் தணிப்பது நபி (ஸல்) அவர்களின் கவ்ஸர் எனும் தடாகம் தான். இதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒரு போதும் தாகமடைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 6579

பித்அத் செய்பவர் இந்த பாக்கியம் கிடைக்காமல் தடுக்கப்படுவார் என்பதை அடுத்து வரும் ஹதீஸ் எடுத்துரைக்கின்றது.

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், ‘‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’’ என்பேன். அதற்கு இறைவன், ‘‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்’’ என்று சொல்வான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6585

இந்த ஹதீஸ், பித்அத் செய்பவர் தண்ணீர் தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நரகத்திற்கும் இழுத்துச் செல்லப் படுகின்றார் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு; வழிகேடு அனைத்தும் நரகத்தில் தான் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நல்ல நோட்டும் கள்ள நோட்டும்

நமது நாட்டில் மத்திய ரிஸர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றது. அந்த நோட்டைக் கொடுத்தால் பணத்திற்கு நிகரான பொருள் கிடைக்கின்றது. அதே நோட்டை ரிஸர்வ் வங்கி அல்லாத மற்றவர் அடித்து அதை ஒருவர் கடையில் கொடுத்தால் அது செல்லாதது மட்டுமல்ல! அதற்காக அவருக்குத் தண்டனையும் கிடைக்கின்றது.

இதைத் தான் நபி (ஸல்) அவர்கள்,

“யார் நமது மார்க்கத்தில் இல்லாத வணக்கத்தை உருவாக்குகின்றாரோ அவரது அந்த வணக்கம் நிராகரிக்கப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

இது போன்று தான் அமல் – வணக்கம் என்றால் அது அல்லாஹ்வும் அவனது தூதரும் உத்தரவிட்ட அல்லது ஒப்புதல் தந்த வணக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த வணக்கம் செல்லாதது மட்டுமல்ல! அதைச் செய்தவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மார்க்கத்தின் இந்த அடிப்படை அறிவு இல்லாததால் தான் அறியாமைக் கடல் கஸ்ஸாலி பல்வேறு பித்அத்துகள் உருவாவதற்கும் அது தொடர்வதற்கும் காரணமாகி விட்டார். அத்தகைய பித்அத்கள் உருவாகக் காரணமான இஹ்யாவின் மாயையை விட்டும் மக்களை மீட்டெடுப்போமாக!


யார் தக்லீத்வாதிகள்?

சபீர் அலீ, எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் எனும் வாழ்வியல் ஏகத்துவ நெறியை நமக்கு மார்க்கமாக இறைவன் அருளியிருக்கின்றான்.

இஸ்லாம் என்பது வஹியின் (இறைச் செய்தியின்) அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்.

வஹி என்பது திருமறைக் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் ஆகும்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை

அல்குர்ஆன் 53:3,4

மார்க்கம் என்று ஒரு விஷயத்தை நாம் முடிவு செய்ய வேண்டுமேயானால், அது வஹியின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். அவ்வாறின்றி, வஹியைத் தாண்டி ஒரு தனி மனிதரின் கருத்தை எடுப்பது அல்லாஹ்வின் வார்த்தைக்கு இணையாக அம்மனிதரின் வார்த்தையைக் கருதியதற்குச் சமமாகும்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

இதுவே இஸ்லாம் சொல்கின்ற கொள்கையாகும்.

இதை நாம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

நாம் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவக்கிய காலகட்டத்தில், மக்கள் திருமறைக் குர்ஆனையும், நபிமொழிகளையும் ஓர் சடங்காகக் கருதிக் கொண்டு வந்தார்கள்.

குர்ஆன் மீது சத்தியம் செய்தல், இறந்தவர்களுக்காக யாஸீன் ஓதுதல் போன்ற மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்களுக்காக மாத்திரம் திருக்குர்ஆன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மார்க்க விஷயங்களில் தங்களின் சிந்தனைகளை ஆலிம்ஷாக்களிடம் அடைமானம் வைத்து அவர்கள் சொன்னதைத் தாண்டி எதுவும் யோசனை செய்யக் கூடாது என்று அறிவுக்குத் திரை போட்டு வைத்திருந்தார்கள்.

மக்களின் இந்த அப்பாவித்தனத்தையும், பாமரத்தனத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலிம்ஷாக்கள் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத சடங்கு சம்பிரதாயங்களையெல்லாம் உருவாக்கி அதை நோக்கி மக்களின் கவனத்தைத் திருப்பினார்கள்.

இந்த சமயத்தில் தான், திருமறைக் குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் மாற்றமாக இருக்கும் இந்த வழி நரகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லும் வழி என்பதை அறிந்த நமது மூத்த தாயிக்களின் உள்ளத்தில் இவற்றைத் தடுக்க வேண்டும் என்ற பிரச்சாரப் பொறி வெடிக்கின்றது.

அப்போது பல இடங்களில் சொற்பொழிவுகளின் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் நாம் மக்களுக்கு மத்தியில் அதிகமாகக் கொண்டு சென்ற செய்தி, “ஆலிம்கள் சொல்கின்றார்கள் என்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு மார்க்கத்தைப் பின்பற்றாதீர்கள், எதை எவர் சொன்னாலும் அதற்கான ஆதாரத்தைக் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் சமர்பிக்குமாறு கேளுங்கள், ஆதாரம் இருந்தால் நடைமுறைப் படுத்துங்கள், இல்லையெனில் அவற்றைப் புறக்கணியுங்கள்” என்ற செய்தியாகும்.

இந்தப் பிரச்சாரத்தின் வாயிலாகத் தமிழகத்தில் மிகப்பெரும் புரட்சி வெடித்தது. ஆலிம்கள் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது.

மார்க்கத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளத் துவங்கிய மக்கள், அலை அலையாக ஏகத்துவத்தில் சங்கமிக்கத் துவங்கினார்கள்.

இறையருளால் இன்றைக்கு ஏகத்துவக் கொள்கை பெரும் ஆல விருட்சமாக வளர்ந்து, இணைவைப்பை கிள்ளுக்கீரையாக மாற்றியதற்குக் காரணம், “கண் மூடிப் பின்பற்றாதே” என்று அன்றைக்கு நாம் விதைத்த விதை தான். அல்ஹம்துலில்லாஹ்.

‘எந்தத் தனி மனிதனையும் கண்மூடிப் பின்பற்றாதீர்கள்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்ற தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்தே இன்றைக்கு தக்லீத்வாதிகள் (கண் மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள்) என்று சொல்வதுதான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கிறது.

ஏனென்றால், மத்ஹபு இமாம்களுக்குப் பின்னாலும், உள்ளூர் இமாம்களுக்குப் பின்னாலும் கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருந்தவர்களை, குர்ஆன் ஹதீஸ் வழியில் மாற்றியமைத்தது தவ்ஹீத் ஜமாஅத் தான். மேலும் ஆரம்பத்தில் செய்த அதே முழக்கத்தைத் தான் தற்போது வரை முழங்கி வருகிறது; நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

இன்னும், தக்லீத் செய்யாதே என்ற அதே முழக்கத்தைத் தான் இக்கட்டுரையின் வாயிலாகவும் அறியத் தருகின்றோம்.

தக்லீத் என்ற அரபு பதத்துக்கு, “ஒருவர் சொல்லுகின்ற சொல்லையோ அல்லது செய்கின்ற செயலையோ அது சரியானதா, ஆதாரத்திற்கு உட்பட்டதா என்று எவ்வித சிந்தனையும் செய்யாமல் பின்பற்றுதல்” என்று பொருளாகும்.

உலக ரீதியான ஒரு விஷயத்தில் கூட இவ்வாறல்லாமல், ஒரு தடவைக்குப் பல தடவை சிந்தித்து, விசாரித்து தான் முடிவெடுக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு மனிதனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு தொடர்பாக கடிதமொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கடிதமோ இவன் அறியாத வேற்றுமொழியில் இருக்கின்றது.

அதனால் அவன் தனக்கு நெருக்கமான நபர்களில் இம்மொழியை அறிந்தவர்கள் யார் என்று முதலில் ஆராய்வான். பின்பு அவர்களில் ஒரு நபரிடம் அக்கடிதத்தை மொழிபெயர்க்குமாறு கூறுவான். அவரும் மொழிபெயர்த்துச் சொல்வார்.

ஆயினும், இவனது மனம் திருப்தியடையாது. இவன் சரியாக மொழிபெயர்த்தானா? அல்லது ஏதேனும் கவனக்குறைவாக இருந்திருப்பானா? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு சிந்தித்துக் கொண்டேயிருப்பான்.

மேலும், அவன் சொன்ன தகவல் சரிதானா என்பதை உறுதி செய்ய இம்மொழியறிந்த மற்றவர்களிடமும் சென்று தகவலைக் கேட்டறிந்து, அவன் சொன்ன தகவலும், இவர்கள் சொல்லும் தகவலும் முரண்படாமல் அமைந்திருக்கிறதா என்று பார்த்து ஓர் முடிவுக்கு வருவான்.

இவ்வாறு உலக ரீதியாக நமக்கு லாபத்தை ஈட்டித்தரும் பாதையையே ஒரு தடவைக்குப் பல தடவை சிந்தித்துத் தான் தேர்வு செய்கின்றோம்.

அவ்வாறிருக்க, இவ்வுலகில் கிட்டும் லாபங்களை விடப் பன்மடங்கு இன்பமயமான சுவர்க்கம் இறைவனிடத்தில் லாபமாகக் கிடைப்பதற்குப் பாதையாக இருக்கும் கொள்கை சரியானது தானா என்பதை எந்த அளவிற்கு நாம் யோசனை செய்து ஆதாரத்துடன் பின்பற்ற வேண்டும்?

இந்த உதாரணத்தை நமது மார்க்க விடயங்களுக்குப் பொருத்திப் பார்ப்போம். இவ்வுதாரணத்தில் கூறப்பட்ட மனிதனுக்கு வந்த வேற்று மொழிக் கடிதம் தான் நமது மார்க்கம். அக்கடித்தின் மொழியறிந்தவர்கள் தான் ஆலிம்கள். அக்கடிதத்தினால் அம்மனிதனுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு தான் நமக்கு மறுமையில் கிடைக்கப் பெறும் சுவர்க்கப் பூஞ்சோலை.

இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரையில் நமக்கு முன்னால் வாழந்த சமுதாயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது. நமக்கு நபி (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனால், நமது தமிழ் பேசும் சமுதாயத்தில் அரபு மொழியை அறிந்து அதன் மூலம் மார்க்கத்தைக் கற்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட சிலர் கல்வி பயின்றிருக்கிறார்கள். இவர்கள் தான் ஆலிம்கள் எனப்படுகிறார்கள்.

எனவே, ஆலிம்கள் அம்மொழியறிந்ததினால் மார்க்க விடயங்களைப்பற்றி அவர்களிடம் மக்கள் வினவ ஆரம்பித்தார்கள். மார்க்கத்தைப் பற்றி ஒருவரிடம் கேட்பது எவ்விதத் தவறும் இல்லை. மாறாக, அது ஆர்வமூட்டப்பட்ட விஷயமே!

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

அல்குர்ஆன் 16:43

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

அல்குர்ஆன் 21:7

அதே சமயம், நாம் அறியாத காரணத்தினால் அவர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்வது சரிதானா என்பதை பல தடவை நாம் விசாரித்து சிந்தித்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் 47:24

ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கொள்கையினைச் சொல்லும் இக்காலத்தில் அனைவருடைய கொள்கைகளையும், அதற்கான ஆதாரங்கள், வாதங்கள் அனைத்தையும் தீர ஆராய்ந்து, இவற்றுள் எது குர்ஆன் ஹதீஸிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவர் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார் என்பதற்காகவும், சொன்னவர் நம்பகமானவர் என்பதற்காகவும் கண்மூடி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர் எவ்வளவு நம்பகமானவராக இருந்தாலும், நெருக்கமானவராக இருந்தாலும் அவர் சொல்லும் செய்தி சரியானதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

“என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி நம்மை வந்தடைந்தால் இது நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பார்களா என்று கவனிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அதை எவ்வளவு பெரிய ஆலிம் நமக்கு எடுத்துரைத்தாலும் சரியே!

அரபு மொழி அறியாதிருந்தாலும், சிந்திக்கும் திறனை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான். அதன் மூலம் நபிகள் நாயகம் இவ்வாறு சொல்லியிருப்பார்களா என்று சிந்திக்க வேண்டும்; அல்லது அது பற்றிய விளக்கம் சரியானதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

இன்னும், மக்கத்து முஷ்ரிக்கீன்கள் தங்கள் முன்னோர்கள் எந்த வழியில் மார்க்கத்தை அமைத்துக் கொண்டார்களோ அவ்வழியிலே சென்றார்கள். அவர்கள் அவ்வழி சரியானதா என்பதைச் சிந்திக்கத் தவறினார்கள்; கண்மூடிப் பின்பற்றினார்கள்.

இதனால் திருக்குர்ஆன் பல வசனங்களில் அச்செயலை கண்டிக்கின்றது.

“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

அல்குர்ஆன் 2:170

“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

அல்குர்ஆன் 5:104

“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்படும் போது “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?

அல்குர்ஆன் 31:21

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?’’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 39:43

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்’’ என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? என (எச்சரிக்கை செய்பவர்) கேட்டார் “எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே’’ என்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களைத் தண்டித்தோம். பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!

அல்குர்ஆன் 43:23-25

கண்மூடித்தனமாக ஒரு வழியைத் தேர்வு செய்த தனது தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்ட புதியவர்களாக இருந்தோம். முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.

அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்: “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!’’ என்று கேட்டனர். “நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்’’ என்று அவர் கூறினார். (அல்அஃராப் 7:138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுவாகித் அல்லைஸி (ரலி)

நூல்: திர்மிதீ 2180

இணை வைப்பாளர்கள் செய்கின்ற காரியம் சரியானதா? தவறானதா? என்பதை ஆய்வு செய்யாமல் அவர்களைப் போன்றே தங்கள் வழியையும் அமைத்துக் கொள்ள விரும்பியவர்களை அல்லாஹ்வுடைய தூதர் மேற்படி சம்பவத்தில் கண்டிக்கிறார்கள்.

மேலும், ஒருவரிடம் ஒரு செய்தியைக் கேட்டால், அதை நாம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரும், அதை பிறருக்குச் சொல்வதற்கு முன்னரும் அச்செய்தி உண்மையானதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

“ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 6

ஒருவரிடம் ஒரு செய்தியைக் கேட்டு அச்செய்தி உண்மையானதுதானா என்ற ஆய்வு இல்லாமல் அச்செய்தியை நாம் பிறருக்குக் கூறினால் நாம் பொய்யர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதுர் எச்சரித்துள்ளார்கள்.

அச்செய்தி உண்மையானதாகவே இருந்தாலும், நாம் அதைப்பற்றி விசாரிக்காமல் இருந்தால் பொய்யர்கள் என்ற பட்டியலில் இறைவன் நம்மை இணைத்து விடுவான்.

அச்செய்தி உலக ரீதியாக இருந்தாலும், மார்க்க ரீதியாக இருந்தாலும் சரியே.

இவ்வாறு இஸ்லாத்தின் பல்வேறு ஆதாரங்கள், ஒருவர் எவ்வளவு நம்பகமானவராக இருந்தாலும் அவர் சொல்லும் செய்தி சரியான செய்தியா என்று சிந்தித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதையும், கண்மூடித்தனமாக ஒருவரை நம்பி பின்பற்றக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.

ஒருவனிடம் எவ்விதத் தவறும் நிகழாது. இவன் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணையாக அம்மனிதனைக் கருதியதாகும். இந்தப் பிரச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலத்திலிருந்து சொல்லி வருகிறது.

ஆனால், நம்மீது சொல்லப்படும் அவதூறு, தவ்ஹீத் ஜமாஅத்தினர் சுயமாகச் சிந்திப்பது கிடையாது. சகோதரர் பி.ஜே என்ன கூறுகின்றாரோ அதை அப்படியே ஆமோதித்துச் சென்று விடுவாரகள் என்பதாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் சகோதரர் பி.ஜே உட்பட எந்த தனிமனிதருக்கும் இங்கு முக்கியத்துவம் கிடையாது. கொள்கைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

மார்க்கத்தில் எந்த விடயத்தைப் பற்றி முடிவெடுப்பதாக இருந்தாலும் ஆய்வு கூட்டம் கூட்டப்பட்டு அத்தனை அறிஞர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படும்.

அந்தக் கருத்துக்களில் எது குர்ஆன் ஹதீஸிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளதோ அதுவே முடிவாக எடுக்கப்படும்.

சில சமயங்களில் எம்.ஐ. சுலைமான் அவர்களுடைய கருத்து, சில நேரங்களில் அப்துந் நாஸிர் அவர்களின் கருத்து அல்லது அப்துல் கரீம் அவர்களுடைய கருத்து அல்லது இன்ன பிற அறிஞர்களின் கருத்து முடிவாக எடுக்கப்படும். சில சமயங்களில் பி.ஜே அவர்களின் கருத்தும் எடுக்கப்படும்.

குர்ஆன் ஹதீஸிற்கு ஒத்த கருத்துத்தான் இந்த ஜமாஅத்திற்கு முக்கியமே தவிர. எந்த தனி மனிதனுடைய கருத்தும் இங்கு மதிப்புபெறாது.

தவ்ஹீத் ஜமாஅத்தில் அனைவருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று சமீபத்தில் இந்த ஜமாஅத்திலிருந்து வெளியேறி ஸலபுக் கும்பலில் ஐக்கியமாகியிருக்கும் ஒருவர் கூட கூறியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்த ஜமாஅத்திற்கு அப்பாற்பட்டவர்களின் நாவிலிருந்து கூட அவர்களையும் அறியாமல் இவ்வுண்மையை அல்லாஹ் கொண்டு வந்து விடுகின்றான்.

தவ்ஹீத் ஜமதஅத் ஒரு போதும் தக்லீதை ஆதரிக்காது. அத்தகைய வழிகேட்டிலிருந்து கடைசி வரை இறைவன் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

யாரெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தை தக்லீத் வாதிகள் என்று கூறுகின்றார்களோர் அவர்களே தக்லீத் வாதிகளாக இருக்கிறார்கள்.

மத்ஹப் இமாம்களுக்குப் பின்னால் கண்மூடி சென்று, மத்ஹபிற்கு மாற்றமாக குர்ஆன் சுன்னாவை எடுத்துக் காண்பித்தாலும் அதைப் புறந்தள்ளி விட்டு மத்ஹபைத் தூக்கிப் பிடித்து வருகின்ற மத்ஹபுவாதிகள் ஒரு புறம்.

மார்க்கத்தின் சட்டங்களை நாம் வழங்கும் போதெல்லாம், எந்த அறிஞராவது இவ்வாறு கூறியுள்ளார்களா? இப்னு தைமிய்யா சொல்லியிருக்கின்றாரா? இப்னுல் கைய்யிம் சொல்லியிருக்கின்றாரா? என்று இமாம்களின் பட்டியலை கேட்டு, இமாம்களைத் தாண்டி சிந்திக்க கூடாது என்று சிந்திக்க மறுக்கும் கள்ள ஸலஃபுகள் மறுபுறம்.

திருடன், தான் தப்பிப்பதற்காகத் தன்னைத் துரத்தி வந்தவனைப் பார்த்து, திருடன் திருடன் என்று கூறி தப்பிக்கப் பார்த்தானாம்.

அது போன்று மத்ஹபையும், இமாம்களையும் தக்லீத் செய்யக்கூடியவர்கள் தாங்கள் மக்களின் பார்வையில் தக்லீத்வாதிகள் என்று பெயரெடுத்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களைக் குர்ஆன் சுன்னா அடிப்படையில் விவாதங்களில் ஓட விடும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத்வாதிகள் என்று கூறுகிறார்கள். யார் தக்லீத்வாதிகள் என்று சிந்திக்க கூடிய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.


பள்ளிவாசலின் சிறப்புகள்

சென்ற இதழின் தொடர்ச்சி…

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி., மங்கலம்

பள்ளிவாசலின் தகுதியை இழந்த இடங்கள்

அல்லாஹ்வின் ஆலயம் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மார்க்கம் ஆணை பிறப்பித்துள்ளதோ அதன்படி அது அமைந்திருப்பது அவசியம். அதற்கு மாற்றமாக இருந்தால் அது தனக்குரிய அந்தஸ்த்தை இழந்துவிடும். இதைப் புரிந்து கொள்ளாமல், அதிக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழ்படுத்தி வருகிறார்கள்.

மக்களெல்லாம் பள்ளிவாசல் என்று அழைத்தால் மட்டும் போதாது; அல்லாஹ்வின் பார்வையில் அது பள்ளிவாசலாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள மறந்துவிட்டார்கள். இது குறித்து இருக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை’’ என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே’’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

(திருக்குர்ஆன் 9:107-109)

இந்த வசனம் சொல்வதைப் போன்று பள்ளிவாசலின் தகுதியை இழக்க வைக்கும் காரியங்கள் இன்றைய பெரும்பாலான பள்ளிவாசல்களில் தாரளமாக, சகஜமாக இருக்கின்றன.

பள்ளிவாசலில் வரதட்சணைத் திருமணங்கள் நடைபெறுகின்றன; பள்ளிவாசல் பணம் வட்டிக்கு விடப்படுகின்றது. பள்ளிவாசலுக்குள் தர்ஹா கட்டி கும்பிடுகிறார்கள்; அந்த தர்ஹாவில் கோரிக்கை வைத்து மன்றாடுகிறார்கள். மத்ஹபுகளின் பெயரால் மார்க்கச் சட்டங்களைக் கூறுபோட்டு மக்களைப் பிரிக்கிறார்கள்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய மார்க்க நெறிகளை அழித்து நாசமாக்கத் துடிக்கும் சூபியிஸம், ஷியாயிஸத்தின் சடங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகின்றன. பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, பால் கிதாபு பார்ப்பது போன்ற பிறமதக் கலாச்சாரங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறெல்லாம், திருமறை வசனங்கள் கண்டித்துள்ள பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இடங்கள் பள்ளிவாசல்கள் அல்ல. அவற்றில் தொழுவதற்கும் ஒருபோதும் அனுமதி இல்லை என்பதே மார்க்கத்தின் நிலைபாடு!

பள்ளிவாசல் நிர்வாகிகளின் பண்புகள்

மஸ்ஜிதுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டு இருப்பது போன்று அதனை நிர்வாகம் செய்பவர்களுக்குரிய தகுதிகளும் சொல்லப்பட்டு உள்ளன. மார்க்கம் கூறும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் செயல்பாடுகளிலும் சரியாக இருக்க வேண்டும். மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில் மற்ற மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இப்படித்தான் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மார்க்கம் வரையறை வகுக்கிறது என்பதற்குப் பின்வரும் வசனங்கள் சான்றுகளாக உள்ளன.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 9:17)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

(திருக்குர்ஆன் 9:18)

இந்தக் கட்டளைகளும் பல இடங்களில், பள்ளிவாசல் நிர்வாகத்தில் மீறப்படுகின்றன. வட்டி, வரதட்சணை போன்ற பெரும்பாவங்களிலும், சமூகத் தீமைகளிலும் பங்கெடுப்பவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்கள், ஒழுக்க வீழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுள் தாயத்து, தகடு போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்கள், தர்ஹாக்களுக்கு வலம் போகும் அவ்லியா பக்தர்கள் இருக்கிறார்கள். இத்தகைய நபர்கள் நிர்வாகத்தில் அமர அறவே அனுமதிக்க கூடாது. இந்தப் பாவ காரியங்களில் ஈடுபடுபவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக வந்து விடாமல் இருக்க முஸ்லிம்கள் கவனம் செலுத்தி, இதிலும் மார்க்கத்தை நிலைநிறுத்த வேண்டும்.

பள்ளிவாசலும் பராமரிப்பும்

எந்த நோக்கத்திற்காகப் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும்; நீடிக்க வேண்டும் என்றால் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு அளிப்பதைக் காட்டிலும் அதன் பராமரிப்புக்கு நன்கொடை அளிப்பதில் அநேக மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் ஆலயத்திற்காக செலவளிப் பதற்கும் நிச்சயம் நன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு நிறைவேற்றப்படும் நற்காரியங்கள், வணக்க வழிபாடுகள் மூலம் அதேபோன்று நன்மை நமக்கும் கிடைக்கும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(திருக்குர்ஆன் 47:7)

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த “ஒரு கறுப்பு ஆண்’ அல்லது “ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். ஆகவே அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்’’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? “அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (458)

அல்லாஹ்வின் ஆலயத்தைப் பராமரிப்பதற்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு பள்ளிவாசலின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் ஒருபோதும் ஈடுபட்டு விடக்கூடாது. அதன் பொருட்களை, வளங்களை சேதப்படுத்தி விடக்கூடாது.

நம்முடைய வீட்டில் எவ்வாறு அக்கறையோடு நடந்து கொள்வோமோ அதைவிட அதிகமாக அல்லாஹ்வின் ஆலயத்தில் பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்திலும் நபிகளாரிடம் நமக்கு முன்மாதிரி இருக்கிறது.

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். பிறகு ‘‘உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது ‘அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும் தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்’’ என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, ‘‘அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (405)

பள்ளிவாசலும் தொழுகை அழைப்பும்

பள்ளிவாசல் என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய அடையாளம். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டிப்பாகப் பள்ளிவாசல் இருக்க வேண்டும். அதன் மூலம் பாங்கு சொல்லி மக்களை, படைத்தவனை வணங்குவதன் பக்கம் அழைக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் கற்றுக் கொடுத்த அந்த அழைப்பில் எந்தவொரு கூடுதல் குறையும் செய்யாமல் அதில் உள்ளவாறு சொல்ல வேண்டும். தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதியபோது) மக்கள் நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும் படியும் (நபியவர்கள் மூலம்) உத்தரவிடப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (603)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: புஹாரி (2943)


தொடர்: 4

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கு அதிபதி அல்லாஹ்வே! தனது அடியார்கள் மறுமையில் வெற்றிபெற எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே முஹம்மது நபியைத் தனது தூதராக அல்லாஹ் நியமித்தான். அவர்கள் வழியாக அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுத்தானோ அது மட்டுமே இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளதாகும். அவர்கள் அறிவிக்காமல் மற்றவர்களால் உருவாக்கப் பட்டவை இஸ்லாத்தில் இல்லாததாகும் என்பதும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் கருத்தாகும். அவர்கள் காட்டித் தராத அனைத்தும் பித்அத் எனும் வழிகேடாகும்.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக, பல கட்டளைகளை நமக்குப் பிறப்பித்துள்ளார்கள்.

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல்: முஸ்லிம், 3442

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத ஒன்றை யார் கட்டளையிட்டாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப் பட்டு விடும்.

இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல்: புகாரி, 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ‘‘செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு’’ என்று குறிப்பிடுவது வழக்கம்.

நூல்: முஸ்லிம், 1435

இஸ்லாம் மார்க்கம் என்ற பெயரில் நாம் செய்யும் எந்தக் காரியமானாலும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? செய்துள்ளார்களா? அனுமதித்துள்ளார்களா என்று கவனிக்க வேண்டும். அவர்கள் சொன்னதாகவோ, செய்ததாகவோ, அனுமதித்ததாகவோ ஆதாரம் இல்லாவிட்டால் அதை விட்டு விலகுவது தான் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதன் அடையாளமாகும்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து:

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றால் அவர்களுக்குத் தான் மார்க்கம் சம்பந்தமான வஹீ எனும் இறைச் செய்தி வரும். இந்த உம்மத்தில் அவர்களைத் தவிர யாருக்கும் வஹீ வராது என்பதும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதன் கருத்தாகும்

இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறாத அறிஞரையோ, நபித் தோழரையோ பின்பற்றக் கூடாது என்பதை இந்த அடிப்படைத் தத்துவத்தில் இருந்து அறியலாம்.

இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:170, 3:103, 6:106, 6:114,115, 7:3, 10:15, 33:2, 39:3, 39:58, 46:9, 49:16, 24:51,52, 5:3, 16:116, 42:21, 5:87, 6:140, 7:32, 9:29, 9:37, 10:59, 5:48,49

அதிகமான முஸ்லிம்கள் மத்ஹப் எனும் கோட்பாட்டின் படியே தங்களின் தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களையும் கொடுக்கல் வாங்கல், திருமணம், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி ஆகிய நான்கு மத்ஹபுகளின் ஒன்றைத் தான் பின்பற்ற வேண்டும் எனவும் நம்புகின்றனர். இதுதான் நேர்வழி எனவும் வாதிடுகின்றனர். மேலே நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களுக்கும் எதிராக இந்த நம்பிக்கை அமைந்துள்ளது.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதற்கு எதிராகவும் மத்ஹபுகளைப் பின்பற்றுவது அமைந்துள்ளது. முஹம்மது நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் வஹீ வராத இமாம்களை எப்படிப் பின்பற்ற முடியும்? நான்கு இமாம்கள் எனக்குப் பின்னால் வருவார்கள்; அவர்களைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்களா? இந்த நான்கு பேரும் பின்பற்றத்தக்கவர்கள் என்று மக்களாக முடிவு செய்துள்ளார்களே தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இமாம்கள் என்று சொல்லப்படும் இவர்களை விட அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ ஆகிய நபித்தோழர்கள் பெயரால் மத்ஹபு உருவாக்கப்படவில்லை. நான்கு இமாம்களும் அந்த நபித்தோழர்களை விட மேலானவர்களா?

மத்ஹபில் உள்ள சில சட்டங்கள் குர்ஆனுக்கு நேரெதிராக இருப்பதையும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டலுக்கு நேரெதிராக இருப்பதையும் நாம் எடுத்துக்காட்டினால் அப்போது கூட மத்ஹபைத் தான் பின்பற்றுவோம் என்று மத்ஹபுவாதிகள் கூறுகின்றனர். மத்ஹபு எனும் நச்சுக் கொள்கை காரணமாக அல்லாஹ்வின் தூதருடைய மரியாதை குறைக்கப்படுகிறது.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்’’ எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’’ எனவும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33:66-68

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று உண்மையாக நம்பக்கூடிய யாரும் மத்ஹப் எனும் வழிகேட்டில் விழ மாட்டார்கள்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்து:

முஹம்மது நபி அவர்கள் திருக்குர்ஆனை விளக்குவதற்காக அனுப்பப்பட்டார்கள். எனவே அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் திருக்குர்ஆனை ஒட்டியதாகவும், அதற்கு முரணில்லாத வகையிலும் தான் இருக்கும். அப்படித்தான் அதிகமான ஹதீஸ்கள் இருக்கின்றன.

ஆயினும் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் சில நபிமொழிகள் குர்ஆனுடன் முரண்படும் வகையில் உள்ளன. இப்படி திருக்குர்ஆனுடன் மோதும் செய்திகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல என்பதும் முஹம்மதுர் ரசூலுல்லாவின் கருத்தாகும்.

முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் செய்தியைத் தான் மக்களுக்குச் சொல்வார்கள். அல்லாஹ்வுக்கு எதிரான கருத்தை அவர்கள் சொல்ல மாட்டார்கள். திருக்குர்ஆனுக்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாகவோ, செய்ததாகவோ பதிவு செய்யப்பட்டவைகளை அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக நம்பினால் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியவர்களாக மாட்டோம்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16:44)

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.

குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை.

தன் பெயரால் அறிவிக்கப்படும் இதுபோன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்.


இணை கற்பித்தல் தொடர்: 42

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஒரு மனிதன் இறந்து விட்ட பிறகு அவனுக்கு இந்த உலகத்துடன் உள்ள எல்லாத் தொடர்புகளுமே நிறுத்தப்படுகின்றன; துண்டிக்கப்பட்டு விடுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம்.

அதனுடைய தொடர்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது சம்பந்தப்பட்ட செய்தியில், ஸலாமை என்னிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்திருக்கிறான். அவர்கள் வழியாகத்தான் அது என்னிடத்தில் வந்து சேரும் என்று சொன்னதிலிருந்து பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

முதலாவது, இந்த உலகத்திலுள்ள எல்லா விஷயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்கு அது தேவையுமில்லை. அவர்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறான். அந்த விஷயங்களைக் கூட நபியவர்களை நேரடியாகக் கேட்கச் செய்யாமல் மலக்குமார்களின் வழியாக அந்தச் செய்திகள் போய்ச் சேருகின்றது என்பதைப் பார்க்கிறோம்.

‘‘உங்களுடைய நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன நிலையில் நாங்கள் சொல்கின்ற சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும்?’’ என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ‘‘இறைவன் நபிமார்களுடைய உடல்களை (சாப்பிடுவதை விட்டும்) பூமிக்குத் தடை செய்து விட்டான்’’ என்றார்கள்.

நூல்: அபூதாவூத் 1049

நபிமார்களின் உடலை மண் சாப்பிடாது என்பதை அல்லாஹ் இந்த உலகத்திலேயே காட்டுகிறான். நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணிக்கிறார்கள். புதன்கிழமை அன்று அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த 3 நாட்களில் சாதாரண மனிதர்களின் உடல் அழுகி துர்நாற்றம் அடித்துவிடும். ஆனால் நபியவர்களின் உடல் 3 நாட்களாகியும் அழுகாமல் துர்நாற்றம் அடிக்காமல் இருந்திருக்கின்றது.

அதனால் தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த பிறகு, நீங்கள் உயிருடன் இருக்கும் போதும் மணம் கமழுகிறீர்கள். இறந்த பிறகும் மணம் கமழுகிறீர்கள் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அல்லாஹ் அவர்களின் உடல்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறான். இது நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பு.

ஆக மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் சலவாத்தும் சலாமும் மட்டும்தான் அவர்களுக்கு மலக்குமார்களால் எடுத்துச் சொல்லப்படுமே தவிர வேறு எந்தச் செய்தியும் எடுத்துச் சொல்லப்படாது. அவர்கள் அதை நேரடியாக அறியவும் மாட்டார்கள். அது அவர்களுக்குத் தேவையுமில்லை என்பது விளங்குகிறது.

நாம் சலவாத்தும் சலாமும் சொல்வது, கப்ரு ஜியாரத் செய்யும் போது நாம் ஓதுகின்ற துஆ இவற்றை வைத்துக் கொண்டு, இறந்து போனவர்களும் நபியவர்களும் யாருடைய உதவியின்றி செவியேற்பார்கள் என சிலர் வாதிடுகின்றனர்.

அனஸ் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்‘ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்‘ என்றார்கள்.

நூல்: புஹாரி 1303

இந்தச் செய்தியில், நபியவர்கள் தன்னுடைய மகன் இப்ராஹீமைப் பார்த்து, நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகம் கவலைப்படுகிறோம் என்று சொன்னது, தனது பாசத்தை மக்களுக்கு விளக்குவதற்குத்தான். தான் சொன்னதை  தனது மகன் செவியேற்பார் என்பதற்காக அல்ல!

இதுபோல் பேசுவது எல்லா மக்களிடத்திலும் உள்ளது தான். இன்று நாம் இறந்தவர் வீடுகளில் சென்று பார்த்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். இறந்து போனவர் அருகில் அமர்ந்து கொண்டு இறந்து போனவரை நோக்கி, ‘நீ என்னை தனியாக விட்டுப் போய் விட்டாயே! நானும் உன்னுடனே வந்து விடுகிறேன்’ என்று சொல்வார்கள்.

அல்லது யாரேனும் அரசியல் தலைவர்கள் இறந்து விட்டால் அவரை நோக்கி, ‘தலைவரே! கட்சியை அனாதையாக்கி விட்டு விட்டுப் போய் விட்டீர்களே! இனிமேல் இந்தக் கட்சியை கட்டிக் காக்க யார் இருக்கிறார்?’ என்று சொல்வதையும் பார்க்கிறோம்.

நாம் சொல்வதை அவர்கள் விளங்குவார்கள் என்று அவரைக் கூப்பிடுபவரும் நினைக்க மாட்டார். மக்களும் நினைக்க மாட்டார்கள்.

இந்த வார்த்தையை இவர்கள் சொல்வதற்குக் காரணம் அவர் செவியேற்பார். நாம் சொல்வதை விளங்கிக் கொள்வார் என்பதற்காக அல்ல. அவரை நோக்கிச் சொல்கின்ற தோரணையில் ஒரு செய்தியை மக்களுக்கு விளங்க வைப்பதற்காகத்தான்.

இறந்தவர்களை நேரடியாகக் கூப்பிட்டுச் சொல்வதால் அவருக்குக் கேட்கும் என்று விளங்கி விடக்கூடாது. விளங்கக் கூடிய நிலையில் உள்ளவற்றை நோக்கிப் பேசுவதும், எதையும் விளங்காத நிலையில் உள்ளவற்றை நோக்கிப் பேசுவதும் அனைத்து மக்களிடத்திலும் சாதாரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். இலக்கியங்களில் இவ்வாறு பேசக் கூடிய வழமையும் உள்ளது.

நாகூர் ஹனீபா ‘‘தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு” என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதை வைத்து அவர் தென்றால் காற்றைக் கூப்பிட்டு அதை நிற்கச் சொல்கிறார். எனவே தென்றல் காற்றுக்கு நாம் சொல்வது விளங்கும் என்று சொல்வோமா!

இது மிகைப்படுத்தி, உவமைப்படுத்தி சொல்லக்கூடிய வார்த்தைகள் தானே தவிர, நாம் சொன்னதால் காற்று அதை விளங்கவும் செய்யாது. அது நம்முடைய கட்டளையின்படி நிற்கவும் செய்யாது.

இறந்தவர்களிடம் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். உயிருடன் இருக்கின்ற அதுவும் பிறந்து ஒரு நாள் ஆன குழந்தைக்கு நாம் சொல்வது கேட்குமா? ஆனால் தாய் அந்தக் குழந்தையை நோக்கி, கண்ணே, கண்மணியே, செல்லமே என்று கூப்பிட்டுக் கொஞ்சுவாள். இதை வைத்துக் கொண்டு அந்தக் குழந்தை தாய் சொல்வதைக் கேட்கும் என்று சொல்ல முடியுமா?

இறந்தவர்களை நோக்கிப் பேசினாலும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு நபிகளாருடைய காலத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் ஆதாரமாக இருக்கின்றது,

நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) ‘அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.’

 நூல்: புகாரி 1243

இந்தச் சம்பவத்தில் உம்முல் அஃலா என்ற பெண், இறந்த கிடந்த உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி, ‘அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று சொன்னார்களே! இந்த வார்த்தையை அவர்கள் செவியேற்பார்கள் என்பதற்காகச் சொன்ன வார்த்தை இல்லை. அவ்வாறு எந்த நபித்தோழர்களும் புரிந்து வைத்திருக்கவில்லை. மாறாக அந்தப் பெண்மணி, அவர்களுடைய தியாகத்தை நினைவு கூரும் விதமாகச் சொன்ன வார்த்தைகள். அதை மற்ற மனிதர்களுக்கும் விளங்க வைக்க வேண்டும் என்பதற்காகச் சொன்ன வார்த்தைகளாகும்.

இதுபோன்று தான் அத்தனை விஷயங்களையும் இடம், பொருள் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும். அதல்லாமல் எல்லா விஷயங்களுக்கும் நேரடி அர்த்தம் கொடுத்தோம் என்றால் அத்தனையும் தவறாக ஆகிவிடும்.