ஏகத்துவம் – செப்டம்பர் 2015

தலையங்கம்

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம் இது!

இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்கின்றன.

தனியோன் அல்லாஹ்வுக்காக தனித்துக் களம் கண்ட தன்னிகரற்ற போராளி அவர். அந்தப் போராளியிடம் தான் அல்லாஹ், தனது ஏகத்துவக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக புனித கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்யச் சொல்கின்றான்.

மணல் திட்டாகக் காட்சியளித்த அவனது முதல் ஆலயத்தை மாபெரும் ஆலயமாக மாற்றி யமைத்தார்கள். இணை வைப்பை வீழ்த்தி, ஏகத்துவ ஆலயத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி நிர்மாணிக்கின்றார்கள். இந்த வசனம் இதை எடுத்துரைக்கின்றது.

இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழு மிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

சிந்தனையைச் செயலிழக்கச் செய்து சீரழிக்கும் சிலை வணக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடிய அவர்கள் பின்வரும் பிரார்த்தனை யையும் செய்கின்றார்கள்.

இறைவா! இவ்வூரை அபயமளிப் பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமா னோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 14:35, 36

ஏகத்துவவாதிகளாகிய நாம் இந்த துஆவைக் கேட்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

காரணம், சிலை மீதுள்ள பிரியம் மக்களின் கண்களை மறைக்கச் செய்துவிடுகின்றது. இதற்குக் கீழ்க்காணும் நிகழ்வு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.

உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டுவிடாதீர்கள்!என்று அவர்கள் கூறுகின்றனர்.  “அதிகமானோரை அவர்கள் வழி கெடுத்து விட்டனர். எனவே அநீதி இழைத்தோருக்கு வழி கேட்டைத் தவிர வேறு எதையும் அதிகமாக் காதே!” (என்றும் பிரார்த்தித்தார்.)

அல்குர்ஆன் 71:23, 24

இந்த வசனம் பனூ இஸ்ர வேலர்கள் சிலை மீது கொண்டிருந்த வெறியை எடுத்துரைக்கின்றது.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!” என்று கேட்டனர்.

நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள்என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. “அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

ஃபிர்அவ்னை விட்டு மக்களைக் காப்பாற்றி, அவர்களைக் கடலில் நடக்கச் செய்த காரியம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. அலையடிக்கும் கடல் மலை போல் எழுந்து அவர்களைக் காத்து, கரை சேர்த்த ஈரம் கூடக் காய்ந்திருக்காது. அதற்குள்ளாக பனூ இஸ்ரவேலர்கள் சிலைகளைக் கண்ட மாத்திரத்தில் நிலை தடுமாறியதை இந்த வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம். “உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!” (எனக் கூறினோம்). “செவியுற்றோம்; மாறுசெய்தோம்என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது. “நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதேஎன்று கேட்பீராக!

அல்குர்ஆன் 2:93

இது பனூ இஸ்ரவேலர்களின் சிலை வெறிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

நபித்தோழர்கள் சிலை வணக் கத்தில் சிக்கவில்லை. ஆனால் நினைவுச் சின்னங்கள் பக்கம் அவர்களுடைய சிந்தனைகள் நீளவும் நீந்தவும் துவங்கியதற்குக் கீழ்க்காணும் சம்பவம் ஆதாரமாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத் அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத் அன்வாத்என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! இவையெல்லாம் (அறியாமைக் கால) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்டார்கள், (7:138) இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாஹித்அல்லைசி(ரலி)

நூல் : திர்மிதீ 2180

இந்த ஹதீஸ், சின்னங்கள் நபித்தோழர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றார்கள். சிலைகள், சின்னங்கள் என்று வருகின்ற போது அவற்றில் கப்ரு வழிபாடுகளும் உள்ளடங்கி விடுகின்றது. இன்று சமாதி வழிபாட்டுக்காரர்கள், தர்ஹாக்களை எழுப்பியிருப்பதெல்லாம் நினைவுச் சின்னங்கள் என்ற அடிப்படையில் தான்.

இவற்றையெல்லாம் பின்னணி யாகக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிலைகளையும், சமாதி களையும் அடித்துத் தகர்க்கவும் தரைமட்டமாக்கவும் உத்தரவிட்டுச் சென்றார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

ஷைத்தானுக்கு வழிபாடுகள் கிடைக்கின்ற அத்தனை வாசல் களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடைத்து விட்டார்கள்.

எனவே, சீரழிவைத் தருகின்ற சிலைகள், நினைவுச் சின்னங்கள், தர்ஹாக்கள் போன்றவற்றின் பாதிப்புகளை விட்டு நாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று பிரார்த்தனை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்ராஹீம் அவர்களின் நினைவு அலைகளைப் பரவச் செய்கின்ற இந்த ஹஜ் கால மாதங்களில் அவர்களின் இந்தப் பிரார்த்தனையையும், இன்னும் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற அவர்கள் செய்த பல்வேறு பிரார்த்தனைகளையும் நாம் நினைவு கூர்வோம். அவர்கள் கற்றுத் தந்த வழியில் ஏகத்துவத்தை நிலைநாட்டுவோம்.

—————————————————————————————————————————————————————-

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?

மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், “வரலாற்று ஆய்வில் புனித ரவ்ளா’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது.

அதில் இஸ்லாத்திற்கு முரணான, பரேலவிசக் கருத்துக்களை பக்கம் பக்கமாக நிரப்பியிருந்தனர்.

“கஅபாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட ரவ்ளா சிறந்தது’ என்ற அடிப்படையற்ற வாதத்தையும் அதற்கு ஆதாரமாக சில தவறான செய்திகளையும் அதில் அவர்கள் முன் வைத்திருந்தனர்.

அவர்களது அபத்தமான இக்கருத்திற்கு, தக்க மறுப்பை முந்தைய ஏகத்துவம் இதழில்  அளித்திருந்தோம்.

நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வழிகெட்ட கருத்தையும் மனாருல் ஹுதா அக்கட்டுரையில் தெரிவித்திருந்தது.

இதற்கு ஆதாரம் என்ற பெயரில் சில வாதங்களையும் வைத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய மார்க்கச் சான்றுகளை முந்தைய ஏகத்துவம் இதழில் விளக்கி விட்டோம்.

இனி அவர்கள் ஆதாரம் என்ற பெயரில் எடுத்து வைக்கும் செய்திகளுக்கு உரிய விளக்கத்தை விரிவாகக் காண்போம்.

கஃபுல் அஹ்பார் செய்தி ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்கிறார்கள் எனும் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கஃபுல் அஹ்பாரின் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

ஒருமுறை கஃபுல் அஹ்பார், ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்தார்கள். அப்போது கஃபுல் அஹ்பார் அவர்கள், “சூரியன் உதிக்கின்ற எந்தவொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வானிலிருந்து இறங்காமல் இருப் பதில்லை. அவ்வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தங்கள் இறக்கைகளை அடித்தவாறு சூழ்ந்து கொண்டு நபிகள் நாயகத்திற்காக ஸலவாத் ஓதி அருள் வேண்டுகிறார்கள். மாலையானதும் அவர்கள் மேலேறி விடுகிறார்கள். அவர்களைப் போன்றே மற்றொரு வானவர் கூட்டம் (மாலையில்) இறங்குகின்றனர். அவர்களும் அவர்களை போன்றே பிரார்த்தனை செய்கின்றனர்.

இறுதியில் பூமி அவர்களை விட்டும் பிளந்து விடும். எழுபதாயிரம் வானவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுவார்கள்.

இந்த செய்தி தாரமியில் (ஹதீஸ் எண்: 95) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபியவர்கள் இறக்கவில்லை என்ற தங்களின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இத்தகைய செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள் எனில் மனாருல் ஹுதா வகையறாக்களின் தரம் என்ன என்பதை எளிதாக விளங்க முடிகிறது.

ஏனெனில் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். பல காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

முதலாவது, இந்தச் செய்தி கஃபுல் அஹ்பாரின் சொந்தக் கருத்தாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கான எந்த வாசகமும் இந்தச் செய்தியில் இல்லை.

மேலும் கஃபுல் அஹ்பார் என்பார் நபித்தோழரல்ல.

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்திடமிருந்து அறிவிக்காமல் தனது சொந்தச் கருத்தை அறிவித்தால் அதையே ஆதாரமாகக் கொள்ள இயலாது. அப்படியிருக்கும் போது நபித்தோழரல்லாத, தாபியியான கஃபுல் அஹ்பார் கூறுவதை வைத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்த இயலும். ஒரு போதும் உறுதிப்படுத்த இயலாது. இதை எப்படி மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும்?

மேலும், தான் யாரிடமிருந்து கேட்டார் என்பதையும் அவர் தெளிவு படுத்தவில்லை.

எனவே நபிகள் நாயகத்தின் கருத்தாக இல்லாமல் கஃபுல் அஹ்பார் எனும் தாபியின் சொந்தக் கருத்தாக இருப்பது இச்செய்தியின் முதல் குறையாகும்.

இரண்டாவது, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவரைப் பற்றி இமாம் ஹிப்பான் கூறுகிறார்:

இவருடைய ஹதீஸ்கள் முற்றிலும் நிராகரிக்கத்தக்கதாகும். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அவர் களுடைய ஹதீஸில் இல்லாதவற்றை அறிவிப்பார். இவர் தன்னளவில் நல்லவராக இருந்தாலும் இவருடைய அண்டை வீட்டுக்காரர் மூலமாக இவருடைய செய்திகளில் மறுக்கத் தக்கவை புகுந்துவிட்டது. ஷைஹ் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் மீது அவர் அண்டை வீட்டுக்காரர் ஹதீஸை இட்டுக்கட்டி அவருடைய எழுத்தைப் போன்றே எழுதி அவருடைய வீட்டிலே அவருடைய புத்தகங்களுக்கு மத்தியில் நுழைத்து விடுவார். அப்துல்லாஹ் அதை தன்னுடைய எழுத்து என்று எண்ணி அறிவித்து விடுவார்.

இப்னு அதீ கூறுகிறார்: இவர் என்னிடத்தில் ஹதீஸ்களில் உறுதி யானவர் என்றாலும் இவருடைய ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் களிலும், கருத்திலும் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. இவர் திட்டமிட்டு பொய்யுரைக்க மாட்டார்.

ஸாலிஹ் இப்னு முஹம்மத் கூறுகிறார்: இப்னு மயீன் இவரை நம்பகமானவர் என்று உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் நான் இவரை ஹதீஸ்களில் பொய்யுரைப் பவர் என்றே கருதுகிறேன்.

இப்னுல் மதீனி கூறுகிறார்: இவருடைய ஹதீஸை நான் எழுதினேன். ஆனால் அவரிட மிருந்து எதையும் நான் அறிவிக்க மாட்டேன்.

அஹ்மத் இப்னு ஸாலிஹ் கூறுகிறார்: இவர் தவறிழைக்கக் கூடியவர். ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை.

இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஹதீஸ்களில் பலவீன மானவர் என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.

பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் 2:127,

தஹ்தீபுத் தஹ்தீப்  5:256

எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கும் இரண்டாவது காரணமாகும்.

இந்தச் செய்தியினை கஃபுல் அஹ்பார் என்பாரிடமிருந்து நுபைஹ் பின் வஹ்ப் என்பார் அறிவிப்பதாக உள்ளது. ஆனால் நுபைஹ் என்பவர் கஃபுல் அஹ்பாரை அடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது குறையாகும்.

எப்படிப் பார்த்தாலும் இது ஆதாரமாகக் கொள்ள ஏற்புடைய செய்தி அல்ல என்பது தெளிவு.

மேலும் இந்தச் செய்தியின் கருத்தை நன்கு கவனித்துப் பாருங்கள்.

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதா? அவ்வாறு சொல்லப்படவில்லை.

மறுமை நிகழ்வு ஏற்படும் போது நபிகள் நாயகம் எழுப்பப்பட்டு வெளிவருவார்கள் என்றுதான் உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் தற்போது உயிருடன் இல்லை என்ற கருத்து தான் வருமே தவிர மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்து இதில் வராது.

மறுமையில் பூமி பிளந்து நபிகள் நாயகம் வெளிவருவார்கள் எனும் வாசகத்திலிருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டால் உலகில் இறந்துவிட்ட ஏனைய மனிதர்களும் அவ்வாறே உயிருடன் உள்ளார்கள் என்று புரிய முடியும்.

ஏனெனில் பொதுவாக மனிதர்களைப் பற்றி இறைவன் கூறும் போதும் இதே வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.

அல்குர்ஆன் 50:44

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?” என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

அல்குர்ஆன் 36:51, 52

இந்த வசனங்களில் பூமி பிளந்து சமாதிகளிலிருந்து மனிதர்கள் வெளிப்படுவார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்றாகி விடுமா?

எனவே மறுமையில் கப்ரிலிருந்து வெளிவருவார்கள் என்பதை வைத்துக் கொண்டு நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதம் வைப்பது மடமைத்தனமான வாதமாகும்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் கருத்து இந்தச் செய்தியில் நேரடியாகக் கூறப்பட்டிருந்தால் கூட பலவீனமான செய்தியாக இருப்பதால் இது ஆதாரமாகாது. அவ்வாறிருக்க இந்தச் செய்தி எப்படி ஆதாரமாகும்?

அறிவுக்கும் தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்த நவீன பரேலவிகள் இதன் மூலம் தெளிவுபடுத்தி விட்டனர்.

நபிமார்களின் உடல்களை மண் தின்பதில்லையே!

இந்த அறிவிலிகள் எதை ஆதாரமாகக் குறிப்பிடுவது என்ற அடிப்படை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

காரணம், நபிமார்களின் உடல்களை மண் தின்றுவிடாது  என்பதைத் தங்கள் கருத்துக்கு அதாவது நபிகள் நாயகம் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தங்கள் அபத்தக் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபிமார்களின் உடல்களை பூமி தின்று விடாது என்பது உண்மையே. நபியவர்கள் இதை விளக்கியுள்ளார்கள்.

உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357

நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாது என்பதால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொருளாகாது.

நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளான் என்பதைத் தான் இதிலிருந்து விளங்க முடிகிறதே தவிர நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள் என ஒரு போதும் விளங்க முடியாது. அறிவுடையோர் அவ்வாறு விளங்க மாட்டார்கள்.

மக்களின் நம்பிக்கை பிரகாரம் பிர்அவ்ன் உடல் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பதால் பிர்அவ்ன் உயிருடன் வாழ்ந்து வருகிறான் என்று பொருளாகுமா?

இரசாயனக் கலவைகள் மூலம் இன்றைக்குப் பல உடல்கள் அழியாத படி பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றா அர்த்தம்?

அரசின் சார்பில் எத்தனையோ உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?

அப்படி ஒரு வாதம் வைத்தால் அது மூளையுள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியுமா?

ஓர் உடல் அழியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்றால் உடல் (ஜடம்) பாதுகாக்கப்படுகிறது என்று தான் ஆகுமே தவிர உயிருடன் அவர் வாழ்கிறார் என்று ஒரு போதும் ஆகாது.

எனவே இவர்களின் இந்த வாதமும் சரியானதாக இல்லை.

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் இந்தக் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாதல்லவா?

அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, “நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது” என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

சப்தம் போடாதே!

நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.

இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில்  கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் 49 2

இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.

“நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்’ என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.

இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.

அல்குர்ஆன் 49:3

 (முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.

அல்குர்ஆன் 49:4

இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் “உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.

நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.

நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?

இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?

அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.

இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.

நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.

நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:53

அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?

நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.

நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

அல்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி “பர்ஸக்’ எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.

(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்என்று சொன்னார்கள். மேலும், “(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரேஎன்னும் (39:30) இறை வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் – உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.

பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 26

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா?

நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் பால் கொடுப்பவர்களாகவும், பிள்ளையை வயிற்றில் சுமப்பவர் களாகவும் இறைவன் ஆண்களைப் படைக்கவில்லை.

எனவே இவ்வளவு பொறுப்புக் களையும் சுமக்கும் பெண்கள், பொருளாதாரத்திற்காக வேலை பார்க்க வேண்டும் என்ற சுமையையும் சுமக்க நேர்ந்தால் இரட்டைச் சுமைகளாகி மனஅழுத்தத்திற்கு ஆளாகி விடுவ தையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

பெண்களை விடவும் உடல் திடகாத்திரமாகவும் அறிவுக் கூர்மையாகவும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற ஆணுக்கு, பொருளாதாரம் சம்பாதிக்கும் ஒரு வேலை தான். ஆனால் ஆண்களை விடவும் பலவீனமாகப் படைக்கப் பட்டிருக்கிற பெண்களுக்கு இரு வேலைகள் எனில் அது நியாயமானதாக இல்லை.

வேலைக்குச் செல்லும் பெண்களும், வேலைக்குச் செல்லாத பெண்களும் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் நிர்வாகத்தை அன்றாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு, வீட்டு நிர்வாகத்தைக் கவனிப்பது மட்டும் தான் அவர்களது பணி. இத்துடன் சம்பாதிக்கும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற பெண்ணுக்கு மேலும் பணிச்சுமை கூடி அதிகப்படியாகச் சம்பாதிக்கும் வேலையினால் அவளுக்குச் சிரமம் தான் ஏற்படுகிறது.

பெரிய வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் துணி துவைப் பதற்கும், பாத்திரங்களைத் தேய்ப்பதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் கூலிக்கு ஆள் வைத்துப் பார்ப்பார்கள். இருப்பினும் சொந்தமாகப் பார்க்கிற மனதிருப்தியும், அதில் பெண்கள் அடைகிற இயற்கை ஆனந்தமும் வேலையாள் வைத்துப் பார்ப்பதில் இருக்காது. எப்படி யிருப்பினும் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான்.

இன்னும் சொல்வதாக இருப்பின், ஆண்கள் திருமணத்திற்காக பெண் பார்க்கும் போதே, வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும், அதுவும் அரசாங்க வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும் பார்க்கிற பலவீனமான ஆண்களை அதிகமாகப் பார்க்கிறோம்.

படித்த பெண் தான் வேண்டும் என்றால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். வேலையில் உள்ள பெண்களைத் தேடுவது என்பது அந்த ஆணின் பலவீனத்தையும் அவளது சம்பாத்தியத்தை எதிர்பார்க்கிற கையாலாகாத தன்மையையும் தான் காட்டுகின்றது. அதாவது பெண்ணின் வருமானத்தில் வாழ நினைக்கிறான்.

நாம் சம்பாதிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை என்றோ, அல்லது நாம் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்றோ நினைத்துப் பெண் தேடுபவர்களை நடைமுறையில் அதிகம் பார்க்கிறோம்.

இஸ்லாமியக் குடும்பவியலுக்கு இது தகுதி கிடையாது. வேலைக்குச் செல்லாத பெண் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என ஒரு ஆண் மகன் தேடவேண்டும். ஏனெனில் மனைவி என்பவள் கணவனின் அரவணைப்பில் வாழ வேண்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இஸ்லாமிய மார்க்கம் குடும்பவியல் நிர்வாகத்தை இரண்டாகப் பிரித்து, பொருள் தேடும் நிர்வாகமான வரவு செலவு வகைகள் அனைத்தையும் கணவன் நிர்வகிப்பான் என்றும், வீட்டு நிர்வாகத்தை மனைவி நிர்வகிப்பாள் என்றும் பிரித்து வைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பொறுப்புக்கள் உண்டு என்று கூறுகிறது. அப்போதுதான் அந்தச் குடும்பம் சீராக இயங்கும். அவரவர் பொறுப்பை அவரவர் சரியாகப் பேணினாலே போதுமானது. எந்தப் பிரச்சனைகளும் வராது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத் திற்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப் படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

புகாரி 893, 2554, 2558, 2751, 5188, 5200

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 3733

பெண்கள் கணவனின் வீட்டை நிர்வகிப்பார்கள். கணவன் பொருளா தாரத்தைக் கொடுத்துவிடுவான். மனைவிமார்கள்தான் வீட்டுக்குத் தேவையான அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, புளி, மசாலா சாமான்கள், சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்கள் என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொள்வார்கள். நம்மிடம் பொருள் பட்டியல் தந்தால் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அவர் களாகவே வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பொருளை உணவாக சமைப்பதும் பெண்களின் பொறுப்பு தான். வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவர்களைச் சார்ந்த பொறுப்புதான். அதுபோக வயதான முதியவர்களை அரவணைப்பது, சீராட்டுவது, குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வி கொடுப்பது, அவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, ஒழுங்காக வருகிறார்களா? போகிறார்களா? என்று கவனிப்பது போன்ற இந்த வேலைகளையெல்லாம் ஆண்கள் பார்க்க முடியாது.

ஏனெனில் அவன் தான் இத்தனை வேலைக்குமான பொருளாதாரத்தை ஈட்டிக் கொண்டு வர வேண்டும். அதற்கான வேலையில் அவன் ஈடுபட்டிருப்பதால் ஆண்களுக்கு மேற்சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்கவே முடியாது. எனவே வீட்டிலிருந்து கண்காணிக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் பெண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று இஸ்லாம் இரண்டாகப் பிரித்து பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.

எனவே இஸ்லாமிய அமைப்பில் யாரெல்லாம் வேலைக்குப் போகும் பெண்களை திருமணத்திற்காகத் தேடுகிறார்களோ அல்லது வேலைக்கு அனுப்பலாம் என்பதற்காகப் படித்த பெண்களைத் தேடுகிறார்களோ அவர்கள் தங்களது ஆண்மைத் தன்மையை விட்டுக் கொடுத்தவர்கள்; தரம் தாழ்ந்தவர்கள். பெண்களுக்குப் படிப்பறிவு இருந்தால் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பார்கள் என்று நினைத்துப் படித்த பெண்களைத் தேடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஒரு மனிதன் தற்போது 8 மணி நேரம் வேலை செய்கிறான். இன்றைய உலகில் அப்படித்தான் நேரம் குறித்து வைத்திருக்கிறார்கள். இதை உலகம் முழுவதும் சட்டமாக்கி விட்டார்கள். 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் பொழுதைக் கழிக்கும் கேளிக்கைகள், ஓய்வு என்று சந்தோஷமாக இருப்பது என்றெல்லாம் பிரித்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.

உலகம் முழுவதும் ஆய்வு செய்து, மனிதன் உடற்கூறு எதை ஏற்றுக் கொள்ளும்? எதை ஏற்றுக் கொள்ளாது? என்றெல்லாம் பரிசோதித்துத் தான் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்துள்ளனர். இது மனித உரிமையாகப் பேணப்பட்டு, சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் மனிதன் நிம்மதி யாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

8 மணி நேரத்திற்கு மேல் அதிகப்படியான நேரம் (ஞஸ்ங்ழ் பண்ம்ங்) வேலை பார்த்தால் மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. மன அழுத்தம் வந்துவிடும்.

பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் முதலாவது விளைவு, பெண்கள் 16 மணி நேரம் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆண்களே 8 மணி நேரம்தான் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால், காலையில் எழுந்து பம்பரமாகச் சுழன்று தன்னுடைய சுயதேவைகளையும் கடமைகளையும் முடித்துவிட்டு, குடும்பத்திற்குத் தேவையான சமையல் வேலைகள், துணி துவைக்கும் வேலைகள் என்றெல்லாம் அவசர அவசரமாகச் செய்ய வேண்டும்.

பிறகு குடும்பத்திற்கும் தனக்கும் மதிய உணவையும் சேர்த்துச் செய்து கொண்டு, தனது உணவை கட்டிக் கொள்ள வேண்டும். இத்தனையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண் டும் என்பதற்காக ஆட்டோவைப் பிடிப்பதற்கும், பஸ்ஸைப் பிடிப்ப தற்கும், புகை வண்டியைப் பிடிப்பதற்கும் பதறிப் பதறி ஓடுகிற காட்சிகள் நம்மை உருக்குகிறது.

இதற்கிடையில் தான் கணவனுக் கும் பிள்ளைகளுக்கும் துணி தேய்த்துக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளைக் குளிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் வேக வேகமாகச் செய்ய வேண்டும். ஆனால் பெண்களின் சுபாவமே மெதுவாகச் செய்வது தான் என்பதை இவ்விடத்தில் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஆண்கள்தான் வேகவேகமாகப் பணிகளைச் செய்யும் விதமாக இறைவனால் உடற்கூறு வழங்கப் பட்டுள்ளனர். பெண்களின் இயல்புத் தன்மையே மெதுவாகவும் இலகு வாகவும் செய்யும் வகையில் தான் இறைவன் அவளது உடற்கூற்றைப் படைத்துள்ளான். அதற்கு மாற்றமாக ஆண்களைப் போன்று வேகமாகச் செய்யப்பழகுகிறாள்.

அதன் பிறகு பதறிப் பதறி ஓடி, பறந்து வேலைக்குச் சென்று விடுகிறாள். அங்கே எவ்வளவு சிரமங்களைக் கையாளுகிறாளோ அதையும் தாங்கிக் கொண்டு, வேலை முடித்து வந்த பிறகு உடனே மீண்டும் கணவனுக்கும் பிள்ளை களுக்கும் பணிவிடை செய்கிறாள். அதன் பிறகு இரவு உணவு சமைக்கும் வேலையில் ஈடுபடுகிறாள்.

ஆண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு ஓய்வு எடுப்பதைப் போன்று பெண்களுக்கு எடுக்க முடியாது. ஆண்கள் அங்கே இங்கே என்று வெளியில் செல்வார்கள். தனது மூளைக்கு ஓய்வளிப்பார்கள்.

ஆனால் பெண்கள் தங்களது இயல்புத் தன்மைக்கு மாற்றமாக காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் செய்யும் வேலை மொத்தம் 16 மணி நேர வேலையாகும். அதுவும் இடைவிடாத வேலை. இவ்வாறு செய்வது பெண்களின் தன்மைக்குக் கேடு விளைக்கும் என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதனால் ஏற்படும் முக்கிய விளைவு மன உளைச்சல் தான். சாப்பாட்டில் ஈடுபாட்டுடன் சாப்பிட மாட்டார்கள். ஒருவகையான வெறுப்பை தொடர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள். வெகு விரைவாகக் கோபப்படுவார்கள். ஆத்திரமடைவார்கள். இன்னும் சொல்வதெனில் இப்படி வேலைக்குச் செல்பவர்களில் பலர் கணவனுடன் குடும்ப உறவில் சந்தோஷமாக ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் குன்றிவிடும். இல்லற வாழ்வைக் கூட இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

இவ்வளவு வேலைகளைச் செய்துவிட்டுப் போய் படுக்கையில் விழுந்தோம், படுத்தோம், தூங்கினோம் என்பதாக வாழ்க்கை இயந்திரத்தைப் போன்றாகிவிடும். இதனால்தான் கணவன் வேறுமாதிரியாக சுற்ற ஆரம்பித்து விடுகிறான். இப்படி இல்லற வாழ்க்கையில் கூட நாட்டமில்லாத வகையில் மன அழுத்தம் உண்டாகி விடுகிறது. மேலும் குடல் அளற்சி என்ற நோய்கூட பெண்களுக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தையை விட்டும் 8 மணி நேரம் பிரிகிறார்கள். உடலால் தாய் பிள்ளையைப் பிரிந்து இருந்தாலும் மனதால் தனது குழந்தையின் மீதே பற்றுதல் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் வேலையையும் சரியாகக் கவனிக்க முடியாமல், குழந்தையையும் ஒழுங்காகப் பராமரிக்க முடியாத மனச் சிதைவு நிலையை அடைகிறார்கள்.

பெண்களின் இயற்கைத் தன்மை என்னவெனில், இரவில் நடுநிசியில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் குழந்தையின் அழுகுரல் கேட்ட அடுத்த கணத்திலேயே எழுந்து விடுவார்கள். ஆனால் ஆண்களால் அப்படி எழுந்திருக்க முடியாது. அதாவது உளப்பூர்வமாக தாய்க்கும் சேய்க்கும் மத்தியில் இனம்புரியாத ஒரு தொடர்பு இருக்கிறது. வேலைக்குப் போகிற பெண்களின் உடல் தான் அலுவலகத்தில் இருக்குமே தவிர மனது முழுவதும் தன் குழந்தை குறித்தே ஏங்கிக் கொண்டிருக்கும்.

அதிலும் பால் குடிப் பருவத்திலுள்ள 2 வயதிற்குட்பட்ட குழந்தையாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் கொடுத்தாக வேண்டும். இந்நேரத்தில் வேலைக்குச் சென்ற பெண் என்ன மாதிரியான மனநிலையில் உழல்வாள்? 8 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கிடைக்காமல் அந்தக் குழந்தை வேறு வகையான செயற்கை உணவைத் தான் உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆனால் இன்றைய அறிவியலும் மருத்துவமும் தாய்ப்பாலுக்கு இணையான உணவு உலகில் வேறு இல்லவே இல்லை என்கிறார்கள். எல்லாவிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் அதில்தான் உள்ளது. அப்படியெனில் தாய்ப்பாலை உரிய பருவத்தில் சரியான அளவுக்குக் கொடுத்து, நோய் எதிர்ப்புத் தன்மையுடைய குழந்தையாக வளர்ப்பதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களால் முடியுமா? அப்படி நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

இதனால் நீண்ட நேரத்திற்கு பால்குடிக்காமல் இருந்தால் அந்தக் குழந்தையும் ஏக்கம் அடைகிறது. அதுமட்டுமல்ல, தாய்க்குப் பால் சுரந்து விட்டால் சுரக்க சுரக்க பிள்ளைக்குக் கொடுத்துவிட வேண்டும். 8 மணி நேரம் வேலை, போவதற்கு 1 மணி நேரமும் வீட்டிற்கு திரும்ப வருவதற்கு 1 நேரம் கணக்கிட்டால் மொத்தம் 10 மணிநேரம் குழந்தையைப் பிரிந்து வாழ்கிற தாய், சுரக்கிற பாலைக் குழந்தைக்குக் கொடுக்காமல் செயற்கையாக கட்டுப்படுத்த முயற்சித்தால் தாய்ப்பால் சுரப்பது குறையும்.

எந்த அளவுக்குப் பால் கொடுக் கிறார்களோ அந்தளவுக்குத் தாய்க்குப் பால் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். கிணறு, இறைக்க இறைக்க ஊறுவதைப் போன்றுதான் தாய்ப்பால் சுரப்பையும் இறைவன் படைத்து வைத்துள்ளான்.

மேலும் பால் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதால் பலருக்குப் பால் கட்டி உறைந்து விடுகிறது. இது தேவையற்ற வலியையும் மனஉளைச்சலையும்  ஏற்படுத்துகிறது. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமைகின்றது.

இதனால் தாய்க்குத் தேவையற்ற கோபம் வருவதாகவும், உடல் சிதைவில் பல மாற்றங்களினால் தேவையில்லாத ரசாயண மாற்றங்கள் உண்டாவதாகவும் ஆரோக்கியத்திற்கு கேடு என்றெல்லாம் பல விஷயங்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இத்தனை விளைவுகளையும் வேலைக்குப் போகின்ற பெண் சுமக்க நேரிடுகிறது.

குழந்தைக்கு, தாய்ப் பாசம் என்பது இன்றியமையாத தேவை. பால் கொடுப்பதை விடவும் இதுதான் முக்கியம். தாய் என்றால் பிள்ளையை அணைத்து அரவணைத்து, சிரித்து, கொஞ்சிப் பேச வேண்டும். இது குழந்தைக்கு ஒரு டானிக் போன்ற மருந்து தான். இப்படி கொஞ்சுவதையும் சிரிப்பதையும் தூக்கி அரவணைப்பதையும் எல்லாக் குழந்தைகளுமே எதிர்பார்க்கும். எந்த வீட்டில் குழந்தைகளை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சி, சிரிப்புக் காட்டி வளர்க்கிறார்களோ அந்த வீட்டுக் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக, நல்ல சூழ்நிலையுடன் வளர்வதாகக் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதற்கு மாறாக வேலைக்குச் செல்கிற தாய் வளர்க்கிற பிள்ளைகளைப் பார்த்தால், பெரும் பாலும் தறுதலை களாவும், முரடர்களாவும், அன்புக்கு ஏங்குகிறவர்களாகவும் இருப்பார்கள். இந்தச் சூழலில் வளர்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வ தற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக, குடும்ப வாழ்க்கை வேண்டும் என்று திருமணம் முடித்துவிட்டு, அதன் வழியாகப் பிள்ளையையும் பெற்றெடுத்துவிட்டு, யாரோ வளர்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டுச் சென்றால், அதற்காகவா இவர்கள் திருமணம் முடித்தார்கள்? அதற்காகவா குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள்?

எனவே பிள்ளைகளுக்குச் சரியான பாச உணர்வு ஊட்டப்படாமல் கண்ட மாதிரி வளர்வதால் பிள்ளைகள் பாச உணர்வற்றவர்களாக வளர்வது குழந்தைக்கும் கேடு, தாய்க்கும் கேடு,  இந்தச் சமூகத்திற்கும் கேட்டை விளைவிக்கின்றது.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் இன்னும் பல்வேறு பாதிப்புகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

இணை வைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? என்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்திருந்தது.

இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நமது முடிவு ஹலாலை ஹராமாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது; ஹராமை ஹலாலாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதால் ஆகஸ்ட் மாதம் இறுதி அமர்வில் இது குறித்த எல்லா சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி வருமாறு அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில்  குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட  முடிவுகளையும், கருத்துக்களையும் மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இது குறித்துப் பின்வரும் திருக் குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

நீங்கள் அல்லாஹ்வின் வசனங் களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 6:118

அல்லாஹ்வின் பெயர் கூறப் பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமா னோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின் றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:119

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் 6:121

ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. “நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாக குறிப்பிடுகிறது.

6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும்; உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் கூறப் படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்று இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணை கற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை

திருக்குர்ஆன் 5:72

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடி யோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65

இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் எழுகின்றது.

வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாகத் தெரிகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிக குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர்.     இணை கற்பிப்பவர் களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.

இணை கற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ காபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப் படுத்தும் வகையில் “அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்  கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற     கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன.  நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.

முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.

எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணை கற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணை கற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.

இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

மக்காவில் வாழ்ந்த இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டி ருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 6:138

“சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்” என்ற வாசகத்தில் இருந்தே ”மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர்கள் சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக் கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத் தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.

இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப் பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப் படும் போது) அதன் மீது அல்லாஹ் வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப் பட்டதைத் தவிர.

அறிவிப்பவர்: ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல்: புகாரி (2488)

மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளை யாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இதுதான் இறை வசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.

அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள், தர்கா வழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாக தெரிகிறது.

நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இணை கற்பித்த மக்காவாசி களுக்கும், ந்மது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டி தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வை களையும் தன் கைவசம் வைத்திருப் பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதி லிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! “அல்லாஹ்என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?’ என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ் வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)என்று கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

திருக்குர்ஆன் 29:61

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர் களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். “அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அப்படியானால் எதற்காக குட்டி தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாத வற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம் மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை‘ (என்று கூறுகின் றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டி தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமது நாட்டில் உள்ள இணை கற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க மாட்டார்கள். அல்லாஹ் என்ற சொல்லை அவர்கள் கூறினாலும் அதன் பொருளைக் கருத்தில் கொள்ளாமல் மந்திரச் சொல்லாக மட்டுமே சொல்வார்கள். கிளிப்பிள்ளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்கு ஒப்பாக இது அமைந்துள்ளது. எனவே அல்லாஹ் என்று ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் பெயர் கூறி ஒருவர் அறுத்தால் அதை உண்ணக் கூடாது.

நமது நாட்டில் உள்ள பிற மதத்தில் உள்ளவர்கள் அகில உலகுக்கும் ஒரு கடவுள் தான் இருக்கிறான் என்று மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதை உண்ணலாம்.

மக்காவாசிகள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த காரணத்தால் அவர்கள் மறுமையில் நிரந்தர நரகை அடைவார்கள் என்றாலும் உலகில் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 29:65

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித் தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

நெருக்கடியான நேரத்தில் துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அதை ஏற்று அவரகளுக்கு உதவிபுரிகிறான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதுபோல் தான் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையும் அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் நல்லறங்கள் பாழாகும் என்பது வேறு. அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததை உண்ணலாம் என்பது வேறு.

வேதம் கொடுக்கப் பட்டோரின் உணவு

அல்லாஹ்வை நம்பியிருந்தும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த மக்காவாசிகள் அறுத்ததை உண்ணலாம் என்று மக்காவில் அருளப்பட்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

மதீனாவில் வேதம் கொடுக்கப் பட்ட மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அறுத்த்தை உண்ணலாமா என்று ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர்கள் அறுத்ததையும் உண்ணலாம் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. உங்கள் உணவு அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

அல்குர்ஆன் 5:5

இவ்வசனத்தில் வேதம் கொடுக்கப் பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கே உணவு என்று சொல்லப் படுவது சைவ வகை உணவைத்தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.

சைவ உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப் படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவைகளே! அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.

வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள்

நூல்: புகாரி (2617)

இந்த ஹதீஸிலிருந்து வேதம் கொடுக்கப்பட்டோரின் மாமிச உணவை நபியவர்கள் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துள்ளாரா? என்பதை நாம் தெளிவு படுத்திய பிறகுதான் அதனைச் சாப்பிட வேண்டும். ஆனால் வேதக்காரர்கள் நமக்கு மார்க்கம் அனுமதித்த உணவுப் பொருளைக் கொடுத்தால் அதனை நாம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. அதனை நாம் தாராளமாக உண்ணலாம் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

வேதக்காரர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான முறையில் அறுத் துள்ளார்கள் என்று தெளிவாகத் தெரியும் பட்சத்தில்தான் அவர்களின் உணவை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

வேதமுடையோர் அனுமதிக்கப் பட்ட பிராணியின் மாமிச உணவை நமக்குத் தந்தால் அதனை நாம் தாரளாமாக உண்ணலாம். பின்வரும் ஹதீசும் இதனை நமக்கு உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.

நூல் : முஸ்லிம் 3636

”அது உனக்குத்தான்” என்று நபியவர்கள் கூறியதாக பைஹகிக்குரிய ”சுனனுஸ் ஸகீரில்” 2867வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

கைபர் போர் என்பது யூதர்களுடன் நடைபெற்ற யுத்தமாகும். யூதர்களிடம் இருந்து வீசப்பட்ட கொழுப்பை அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் உண்பதற்காக எடுத்துக் வைத்துக் கொண்டதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக அது உனக்குத் தான் என்று கூறி அவருக்கே கொடுத்துள்ளார்கள்.

எனவே நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக்கூடாது.

வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?

வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர்கள் தரும் உணவுகளை மட்டுமே இது குறிக்கும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண லாகாது என்பதே சரியான கருத்தாகும்.

இஸ்ரவேலர்களாக இல்லாத யூத கிறித்தவர்கள் மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம்.

தர்ஹாக்களில் அறுக்கப்பட்ட பிராணிகள்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக

அல்குர்ஆன் (108:2)

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 4001, 4002, 4003

மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழி அல்லாஹ்விற்கு மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக ஒரு பிராணியை அறுத்தால் அதனை அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்க வேண்டும.

அல்லாஹ்விற்காக ஒரு பிராணியை அறுத்தல் என்றால் இறைவன்   இட்ட கட்டளைக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறை வேற்றும் குர்பானி வணக்கம், பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்தல், மற்றும் அகீகா போன்றவை வணக்கங்களாகும்.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக அல்லாமல் வணக்கமாக அறுப்பதாக இருந்தால் அல்லாஹ் விற்காக மட்டுமே மார்க்கம் அனுமதித்த அறுத்துப் பலியிடும் வணக்கங்களைச் செய்ய வேண்டும்.

அதுவல்லாமல் ஒருவன் தர்ஹாக்களிலோ அல்லது அவுலியாக் களுக்காகவோ அறுத்துப் பலியிட்டால் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் காரியமாகும்.

எனவே ஒருவன் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறைவன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டால் அதனை உண்பது கூடாது. அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அது ஹராமானதாகும்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்  தொடர்: 33

தீயோருக்கு நிகழ்ந்த அற்புதங்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்வதைப் போன்று, நபிமார்கள் அல்லாத மற்ற சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு நாம் இதுவரை ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதர் பயணம் செய்து சென்று கொண்டிருக்கும் போது கட்டடங்கள் இடிந்து போன, பாழடைந்த, அங்கு குடியிருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத, சிதிலமடைந்த ஒரு ஊரைக் கடந்து செல்கிறார். அதைப் பார்த்து விட்டு அந்த மனிதர், “இப்படிப் சிதைந்து போய் கிடக்கின்ற இந்த ஊரை எவ்வாறு அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிப்பான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறார். உடனே அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தை (வல்லமையை) காட்டுவதற்காக அவரை அந்த இடத்திலேயே மரணிக்கச் செய்கின்றான். அந்தச் சம்பவம் பின்வருமாறு.

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டு கிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக் கிறோம் என்பதையும் கவனிப்பீராக!என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்எனக் கூறினார்.

(அல்குர்ஆன் 2.259)

இப்ராஹீம் நபிக்கு, அவர்களின் மன நிம்மதிக்காக  இறைவன் சில அற்புதங்களைச் செய்து காட்டியது போன்று இந்த நல்லடியாருக்கும் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். நூறு ஆண்டுகள் கழித்த பிறகு உயிர்த்தெழுந்த அந்த நல்லடியார், தான் எவ்வளவு காலம் உறங்கினேன்? என்பதை அறியாமல் இருந்திருக்கிறார். ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில மணி நேரமே உறங்கியிருப்போம் என்றும் சொல் கிறார் என்றால். இந்த அற்புதம் அவர் அறியாத விதத்தில் தான் நடந்திருக்கின்றது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன வென்றால், பூமிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த, குர்ஆனில் நல்லடியார் என்று சொல்லப்பட்ட ஒரு மனிதரால் நூறு ஆண்டுகளாக உலகத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பதைக் கூட அறியாதவராக இருந்திருக்கிறார் என்றால், பூமிக்குள் புதைக்கப் பட்டிருக்கின்ற, நல்லடியார் என்று சொல்லப்படாத ஒருவரால் எவ்வாறு உலகில் நடக்கக்கூடியதை அறிய முடியும்? அவரை நல்லலடியார், மகான்  என்று நம்மால் எவ்வாறு சொல்ல முடியும்?

ஆனால் நாம், இறந்து போனவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் உலகில் நடக்கின்ற வற்றை பார்ப்பார்கள்; நாம் பேசுவதைக் கேட்பார்கள்; நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்; கப்ருக்குள் இருந்து கொண்டே நாம் செய்யக்கூடியதைப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட அந்த நல்லடியாருக்கு உணவு கெட்டுப் போகாமல் இருந்தது தெரியவில்லை. கழுதை இறந்து எழும்புக் கூடானதும் தெரியவில்லை.

ஆக, இதுவும் நபிமார்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகும்.

இப்ராஹீம் நபியினுடைய மனைவி சாரா அவர்கள் சம்பவமும் இது போன்றதுதான்.

அந்தச் சம்பவம் வருமாறு..

ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவி யார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவ னுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) “இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.

சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்ற போது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்), “அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.

பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், “எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப் பட்டான்.

பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, “நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான்.

சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, “என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்… சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப் பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 3358

மேற்கண்ட சம்பவமும், நபிமார் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

அவர் தொழு நோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை).  மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான் (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)என்று பதிலளித்தார்.  கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத்  (வளர்ச்சி) வழங்கப்படும்என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்ப மானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்ப மானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப் பட்டவரும் மாடு வழங்கப் பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈன்றிடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும்வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு  அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளி யாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர் களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப் போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ் வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவரு மில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத்  திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக் கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தி யடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்என்று சொன்னார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3464

மேற்கண்ட சம்வத்தில் அந்த குருடரைத் தவிர மற்ற இருவரும் தீய மனிதர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அல்லாஹ் ஒரு மாடு மற்றும் ஆட்டை வழங்கி அதனை பல்கிப் பெருகச் செய்திருக்கிறான். இது ஓர் அற்புதமாகும். இதன் மூலம் தான் நாடியோருக்கு அருளை தாராளமாக வழங்குவான் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

மேலும் தீயவர்களுக்கும் அற்புதங்களை வழங்குவான் என்பதற்கும் இது சான்றாக அமைகின்றது.

மேலும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னால் உள்ள நபிமார்கள் அல்லாத சில மனிதர் களுக்கு அல்லாஹ் ஒரு ஆற்றலை வழங்கியிருந்தான். அல்லாஹ் ஒரு செய்தியை அந்த மனிதர்களுக்கு அறிவிப்பதாக இருந்தால் மலக்கு மார்கள் மூலமாக அறிவிக்காமல் நேரடியாக அவர்களுடைய உள்ளத்தில் உதிக்கச் செய்வான். முந்தைய சமுதாயத்தில் சில ஆட்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து இவ்வாறு சில அற்புதங்களை வழங்கியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத் தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4769

இந்த மாதிரியான அம்சங்களை வைத்து அவ்லியாக்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மாதிரி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.

—————————————————————————————————————————————————————-

அண்ணலாரின் அச்சம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மனித குலத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருப்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அறநெறிகளும், அறிவுரைகளும் நிறைந்து இருக் கின்றன. அண்ணலார் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்திலும் அழகிய வழி காட்டுதல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஒரு முக்கியமான போதனையை இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையிலே பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். பல சமயங்களில் சமுதாயத்தின் நிலை குறித்தும் தமது அச்சத்தை, பயத்தை வெளிபடுத்தி இருக்கிறார்கள். நபிகளாருக்கு இருந்த அச்சம் நமக்கும் இருக்க வேண்டும். நாமும் அந்தக் காரியங்களை, பண்புகளை விட்டு விலகி வாழ வேண்டும். ஆனால், அதிகமான மக்கள் அவற்றை அறியாமல் இருக்கிறார்கள். அறிந்து கொண்டாலும், அவர்களிடம் இருக்கும் அச்ச உணர்வு அரிதாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. ஆகவே, அது குறித்து சில செய்திகளை இப்போது பார்ப்போம்.

பொதுநலத்தைப் பற்றிய அச்சம்

வாழ்க்கையில் தவறான சிந்தனை களை விதிமுறையாக வகுத்துக் கொண்டு செயல்படும் மக்கள் இருக்கிறார்கள். எதற்காகவும் மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று எப்போதும் சுயநலமாக நடக்கும் நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சர்வ சாதாரணமாக பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்; இடையூறு விளைவிக்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கை நம்பிக்கைக் கொண்டவர்களிடம் இருக்கவே கூடாது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு எவ் விதமான சிரமத்தையும் தரக்கூடாது. மார்க்க விஷயம், உலக விவகாரம் என்று எதிலும் எவருக்கும் மோசமான பாதிப்பை, நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது. இவ்வாறு, பொதுநலம் கலந்த அச்சம் நமக்கு இருக்க வேண்டும். இந்த அழகிய அறிவுரை மாமனிதர் நபிகளாருடைய வாழ்க்கையில் பரவிக் கிடக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத் தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து “தொழுகைக்கு வாருங்கள்என்று   (நபிகளாரை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்(து தமது தலையிலிருந்து தண்ணீரைத் துடைத்)தவர்களாக புறப்பட்டு வந்ததை இன்றும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது அவர்கள், “என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்திலேயே) தொழுமாறு  பணித்திருப்பேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி (571) முஸ்லிம் (1121)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை.  (அன்று இரவு நபிகளார் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை) சுப்ஹுத் தொழு கைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் “அம்மா பஅத்‘ (இறைவாழ்த்துக்குப் பின்…) எனக் கூறிவிட்டு, நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவே தான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக் காக பள்ளிக்கு வரவில்லை)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (729), (924), (1124)

என் சமுதாயத்திற்கு அல்லது மக்களுக்கு நான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (887)

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால் நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டி யிருப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறை வழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (36) (2972), முஸ்லிம் (3819)

இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சட்டங்கள் அனைத்தும் எளிமை யானவை. மக்களுக்கு அவர்களின் சக்திக்கு மீறி சிரமம் கொடுக்காதவை. இந்நிலையில், குர்ஆன் ஹதீஸை மட்டும் முழுமையாக ஏற்க மறுத்து அல்லது மறைத்து மக்களை வழிகெடுக்கும் மத்ஹபுவாதிகள் மேலிருக்கும் செய்திகளை சிறிதாவது சிந்திப்பார்களா? காரணம், இவர்கள் இதற்கு இந்த நன்மை, அதற்கு அந்தச் சிறப்பு என்றெல்லாம் பொய்யாகக் கதையளந்து பித்அத்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம் கொடுக்கிறார்கள்.

இதுபோன்று, அரசியலையும் ஜிஹாதையும் பற்றி மட்டும் கண்மூடித்தனமாக வாய்கிழியப் பேசும் போலிகள், மார்க்கத்திற்கு புறம்பாக தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தையே மோசமான நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்டிப்பாக நபிகளாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அலட்சியத்தைப் பற்றிய அச்சம்

மறுமை வெற்றிக்காக வாழும் முஃமின்கள், மார்க்க கடமைகளை மிகவும் கவனத்தோடு கடைபிடிக்க வேண்டும். நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் திகழ வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதைத் தொலைத்துவிடாமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஜகாத் என்று மார்க்கத்தில் இருக்கும் எந்தவொரு வணக்க வழிபாட்டிலும், நற்காரியத்திலும் பொடும்போக்குத் தன்மைக்கு இடம் தரக்கூடாது. கவனக் குறைவான தன்மைகளில் ஏமாந்து விடாமல் விழிப்போடு இருக்க வேண்டும். அலட்சியம் ஆபத்தானது என்ற அச்சம் நமக்கு இருக்கும் போது, அது எல்லாக் காலத்திலும் நன்மையின் பக்கம் விரைவதற்கும் குறைகளைச் சரிசெய்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத் திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார்என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள் “இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்க, “(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (129)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன்என்று கூறினார்கள். எனவே அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக் கொண்டிருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இது போன்று உறக்கம்  எனக்கு எப்போதும் ஏற்பட்ட தில்லைஎன்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தான் நாடும்போது உங்கள் உயிர்களை கைப்பற்றிக் கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்டபோது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புஹாரி (595)

நபி (ஸல்) அவர்கள் வேலைப் பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை  ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், “எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) “அன்பிஜான்‘ (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையி லிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டதுஎன்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு  இருந்தேன். அது என்னைக்  குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (373)

பாவங்களைப் பற்றிய அச்சம்

மனித இனத்திற்குத் தீங்கு தரும் அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. நம்மிடம் இருக்கக் கூடாத தவறுகள், பாவங்கள் தொடர்பாக திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளன. அவ்வாறான, அநீதியான, அநியாயமான செயல்களை விட்டும் நாம் அகன்று இருக்க வேண்டும். சிறிய பாவம் தானே செய்கிறோம் என்று எதிலும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

எந்தக் காலகட்டத்திலும் மார்க்கத்தின் அனுமதி இல்லாத பாதையில் நமது வாழ்க்கை பயணம் இருந்துவிடக் கூடாது. இந்த எச்சரிக்கைக் கலந்த பயம் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த அச்சம் இல்லாதவர்கள் தர்ஹா, மவ்லூது, வட்டி, வரதட்சனை, மோசடி போன்ற தடுக்கப்பட்ட காரியங்களில் வீழ்ந்து விடுக்கிறார்கள். பாவங்களுக்கு பலியாகி விடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (2431)

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது ஸதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2432)

நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், “பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பி யிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்று விட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டை யாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புஹாரி (5483), முஸ்லிம் (3900)

உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) “சிறிய இணை வைப்பு என்றால் என்ன? அல்லாஹ் வின் தூதரேஎன்று கேட்டார்கள். “அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ் துதிக்குச் செய்வதாகும்என்று பதிலளித்தார்கள். மேலும், “மனிதர் களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல்: அஹ்மத்  (22523)

குழப்பத்தைப் பற்றிய அச்சம்

நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் மட்டும் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தவொரு உலக விவகாரத்தையும் மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் கையாள வேண்டும்.

சமுதாயத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். மக்களுக்கு மத்தியில் பலவிதமான பிரச்சனைகள், நெருடல்கள் இருக்கவே செய்யும். இந்நிலையில் முற்போக்கு சிந்தனையோடும் சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நாசத்தை, சீர்கேட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.

குறிப்பாக, சிக்கல்களை முடிந்தளவு தீர்க்க வேண்டுமே தவிர, ஒருபோதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் எவ்வித சந்தேகத்தையும் குழப்பத்தையும் கிளறிவிடக் கூடாது என்ற சுதாரிப்பான பயம் இருக்க வேண்டும். நபிகளாரின் பின்வரும் உலகம் தொடர்பான நிகழ்வுகளில் நமக்குப் படிப்பினை இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர் களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்‘ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: புஹாரி (2035) (2038) (3101)

நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, “இது கஅபாவில் சேர்ந்ததா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்!என்றார்கள். பிறகு நான் “எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கவர்கள் “உனது சமூகத்தாருக்குப் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டதால்தான்!என்று பதிலளித்தார்கள். நான் “கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர் களை உள்ளே அனுமதிப்பதற்காகவும்  தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். “உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி 1584, 7243, முஸ்லிம் 2592

உலக மோகத்தைப் பற்றிய அச்சம்

உலகம் என்பது மறுமை வாழ்வுக்கான சோதனைக் களம். இதை நினைவில் கொண்டு மறுமை வெற்றியை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும். இம்மையின் தேவைகளுக்கான தேடலில் மொத்தமாக மூழ்கிவிடக் கூடாது; சொர்க்கத்தின் இலக்கை மறந்துவிடக் கூடாது.

பணம், பதவி போன்ற சுக போகங்களுக்குப் போட்டிப் போட்டு ஈமானை, இறையச்சத்தை இழந்துவிடக் கூடாது. இங்கு இன்பமாக இருப்பதற்காக மறுமையில் துன்பம் தரும் செயல்கள் பக்கம் போய்விடக் கூடாது; வரம்புகளை மீறிவிடக்கூடாது.

மக்களை உலக மோகம் வழிகெடுத்து விடும்; அவர்களை ஆடம்பர ஆசை அழித்துவிடும் என்பதால் அது குறித்து அல்லாஹ் வின் தூதர் அவர்கள் அதிகம் அஞ்சி இருக்கிறார்கள். அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்எனக் கூறினார்கள்.  ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.

உடனே அந்த நபரிடம், “என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப் படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; –பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும் கொடுத்துக் கொண்டி ருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ – அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புஹாரி (1465) (2842)

உலக மோகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள் ளார்கள். அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

எழுச்சி கண்ட வீழ்ச்சி

எம். எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்மேலப்பாளையம்

சமுதாயப் பணி

இரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், கல்வி கருத்தரங்குகள், வட்டியில்லாக் கடன் உதவி, ஜகாத் நிதியிலிருந்து ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத் திற்காக அறவழிப் போராட்டங்கள் இது போன்ற எண்ணற்ற அரும் பணிகளை தழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எவ்வித சுயநலமுமின்றி செய்து வருகின்றது. இது போன்றுள்ள சமுதாயப் பணிகளில் ஒன்று தான் திருமணத்தை நடத்தி வைப்பதும் ஆகும்.

திருமணம் என்பது ஒர் ஆண், பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மாறாக இது ஒரு சமுதாயப் பிரச்சனை. ஆணோ பெண்ணோ வழி தவறாமல் இருப்பதற்கும் சமுதாயம் ஒழுக்கக்கேட்டில் செல்லாமல் இருப்பதற்கும் திருமணம் தான் வடிகாலாகும். இதை உரிய முறையில் நடத்தி வைக்கவில்லையென்றால் சமுதாயம் சீர்குலைந்து விடும்.

இரத்தத் துளிகளால் வளர்ந்த ஏகத்துவம், குஃப்ரில் உள்ள பெண்களைக் கரம் பிடிப்பதால் அழிந்துவிடக் கூடாது. இதற்குக் காதல் என்ற சீர்கேடே காரணம். குடும்பச் சூழல் மற்றும் வறுமையின் காரணமாக மணமுடிக்கப்படாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணை யற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்கு வான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவதுதான்என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனு டைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 95

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தமது வாழ்க்கையிலும், தனது குடும்பத்தினர் திருமண விஷயத்திலும் ஏகத்துவத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி  முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.  இது போன்ற விஷயங்களில் மக்களுக்கு செயல் முறைகள் தான் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங் களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக நபியவர்களது வளர்ப்பு மகன் ஸைத் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவி யரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:37

அன்றைய அரபிகளிடத்தில் வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் முடிப்பது கேவலமாகப் பார்க்கப்பட்டது. போலியான உறவுகளுக்கு இஸ்லாத்தில் எந்த உரிமைகளும் கிடையாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத் தான் அல்லாஹ் இத்திருமணத்தை நடத்தி வைத்தான்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், நமது ஜமாஅத்தின் நிர்வாகிகள் திருமண விஷயத்தில் உறுதியாகச் செயல்பட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுச்சியும் வீழ்ச்சியும்

  1. பொதுவாக, ஒரு பெண்ணால் தன் பெற்றோரிடம் தனது திருமணத்தைப் பற்றி கருத்துச் சொல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்து வதற்காக பெற்றோரை எதிர்த்து ஒரு ஏகத்துவவாதியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் கூறுவது ஏகத்துவம் ஏற்படுத்திய எழுச்சியாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக எந்த ஒரு  விஷயத்திலும் பெற்றோர் பேச்சைக் கேட்காத ஆண்களோ திருமணப் பொறுப்பை மட்டும் தாய், தந்தையரிடம் ஒப்படைக்கத் துடிப்பது எதனால்? தனது பெற்றோர் தனக்கு அழகான, அந்தஸ்தான பெண்ணை மணமுடித்துத் தருவாள் என்பதற்காகத் தானே? இது தவ்ஹீத் கண்ட வீழ்ச்சியாகும்.

  1. தனது மகளுக்கு முஷ்ரிக்கை மணமுடித்து வைத்தால் அவனுடன் அவள் தொடர்ந்து வாழமாட்டாள் என்பதை அவளது பெற்றோர்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு ஒரு பெண் போராடுகிறாள். இறுதியில் தனது பெற்றோர்கள் முஷ்ரிக்கைத் திருமணம் முடித்து வைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த உடன் தவ்ஹீத் மாப்பிள்ளையைப் பார்த்து தருமாறு மூன்றாவது நபரிடம் ஒரு பெண் கேட்கின்றாளே! இது பெண்களிடத்தில் ஏற்பட்ட எழுச்சி.

ஆனால் ஆண்களோ, இணை வைப்பவர்களின் வீட்டில் பெண் எடுக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 1. வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. 2. தவ்ஹீதை எதிர்ப்பவர்களுக்கே, அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தவ்ஹீத் மாப்பிள்ளை.

அப்படியானால் ஏகத்துவவாதியைத் தவிர வேறு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தவ்ஹீத் பெண்கள் யாரைத் திருமணம் முடிப்பது? என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஏகத்துவ வாதியைத் தான் மணமுடிப்போம் என்பவர்களைக் கை கழுவி விட்டு முஷ்ரிக் வீட்டில் கை நனைக்கின்றீர்கள்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பெண்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் காதலித்ததற்காகத் தான் இந்த சத்தியப் போராட்டமே தவிர சில கழிசடைகளை நேசித்ததற்காக அல்ல!

ஒரு சமயம் அந்தப் பெண் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு சோதனையில் சோர்வடைந்து ஒரு முஷ்ரிக்கை மணமுடித்துவிட்டால் அந்தப் பாவத்தை சுமப்பது யார்?

அதிகமான இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். போராட்டங்களில் மிகைத்துக் காணப்படும் இளை ஞர்களில் பலரை மணமகன் போட்டோக்களில் காண முடிவதில்லை.

எனவே ஒவ்வொரு இளைஞனும் மணமுடித்தால் கொள்கைவாதிப் பெண்ணை தான் மணமுடிப்பேன் என்று இத்தருணத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு முன்னோடியாக முன்மாதிரியாகத் திகழ்வதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவோமாக!

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன்25:74

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?               தொடர்: 21

பலவீனமான ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் முல்லாக்கள் அல்ல! முட்டாள்கள்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது, அவற்றின்படி அமல் செய்வது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி மக்ராவி குறிப்பிட்ட விமர்சனத்தைக் கடந்த இதழில் கண்டோம்.

ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை இங்கு வெளியிட விருந்த வேளையில், அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலில் இடம்பெற்ற அல்பானி அவர்களின் முன்னுரை கிடைத்தது. அந்த முன்னுரை, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை விட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிகமான விளக்கங்கள் உள்ளன. எனவே அதையும் இணைத்துக் கூறினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்ற அடிப்படையில் அதையும் இங்கு அளிக்கிறோம்.

இன்ன அமல் செய்தால் இவ்வளவு நன்மை என்று அமல் களைச் சிறப்பித்துக் கூறுகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் அமல்கள், வணக்கங்கள் செய்யலாம். ஆனால் இவ்வாறு அமல் செய்வது வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவ்வாறு ஹதீஸ் கலை அறிஞர்கள் தெரிவிப்பதாக ஜாமிவுஸ் ஸகீருக்கு, அல்ஃபத்ஹுல் கபீர் என்ற பெயரில் இணைப்பு நூல் வெளியிட்ட அறிஞர் யூசுப் அன்னப்ஹானி கூறியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு எதிராக நான் இரண்டு விமர்சனங்களை அவர் முன்வைக்கிறேன்.

பலவீனமான ஹதீஸ்களை, அமல் களின் சிறப்புகளில் செயல்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்லும் போது, இதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறவே இல்லை என்று பெரும் பான்மையான மக்கள் விளங்கிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறில்லை. ஹதீஸ் கலையில் விரிவாகக் கூறப்பட்டது போன்று இதில் மிகுந்த கருத்துவேறுபாடு உள்ளது.

இதற்கு அஷ்ஷைகு ஜமாலுத்தீன் அல்காணம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹதீஸ் சட்டங்கள் என்ற நூலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

பலவீனமான ஹதீஸை அடிப் படையாகக் கொண்டு அமல் செய்யலாம் என்ற கருத்தை, அனைவருக்கும் உரிய பொதுவான அனுமதியாக அறிஞர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

இமாம் இப்னு மயீன், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், சட்ட அறிஞர் அபூபக்கர் இப்னு அரபி ஆகியோர் இந்தக் கருத்தில் உடன்பாடு கொள்ளவில்லை என்று ஷைஹ் ஜமாலுத்தீன் அவர்கள் அந்நூலில் குறிப்பிடுகின்றார்கள். இப்னு ஹஸ்மு அவர்களும் இதே கருத்தில் தான் உள்ளார்கள்.

“பொய்யர் அல்லது மெத்தனப் போக்குள்ளவர் அல்லது யாரென்ற நிலை அறியப்படாத ஒருவர் ஓர் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறுகின்றார். இந்த அறிவிப்புத் தொடரை கிழக்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; மேற்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; இந்தத் தொடரை ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்திடமிருந்து அறிவிக்கின்றது; ஒரு நம்பகமானவர் மற்றொரு நம்பகமானவரிடமிருந்து அறிவிக்கின்றார். இப்படியே நபி (ஸல்) அவர்கள் வரை அந்தத் தொடர் செல்கின்றது.

எனவே அப்படிப்பட்ட தொடரைக் கொண்டு அமைந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஹதீஸை அறிவிப்பது நமக்கு ஆகுமானது (ஹலால்) அல்ல. அதை நம்புவதும் அதைக் கொண்டு செயல்படுவதும் கூடாது என்று தனது அல்மிலல் வன்னிஹல் என்ற தமது நூலில் இப்னு ஹஸ்மு தெரிவிப்பதாக அறிஞர் ஜலாலுத்தீன் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

(ஜாமிவுஸ்ஸகீர் முன்னுரை)

முஸ்லிம் இமாம் கூறும் முட்டாள்கள்

அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:

சந்தேகத்திற்குரிய அறிவிப் பாளர்கள் குறித்தும், அவர்களுடைய குறைகள் குறித்தும் (நபிமொழி) அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இதைப் போன்ற தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகக் குறிப்பிட இந்த ஏடு போதாது. நாம் இதுவரை எடுத்துரைத்த தகவல்கள் இந்த விஷயத்தில் நபிமொழி அறிஞர்களின் கோட்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பு வோருக்குப் போதுமானவை ஆகும்.

நபிமொழி அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறைகளை எடுத் துரைப்பதையும், தங்களிடம் வினவப்பட்டபோது அவற்றைத் தெளிவாகக் கூறுவதையும் நபிமொழி அறிஞர்கள் கட்டாயமாக்கிக் கொண்டதற்குக் காரணமே, அ(வற்றை மறைப்ப)தில் உள்ள மாபெரும் கேடுதான். ஆம்! மார்க்கச் செய்தி என்பதே அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தடை செய்யப்பட்டது (ஹராம்), செய்யத் தூண்டுவது (அம்ர்), தடுப்பது (நஹ்யு), ஆவலூட்டுவது (தர்ஃகீப்), எச்சரிப்பது (தர்ஹீப்) ஆகியவற்றில் ஒன்றாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் மார்க்கச் செய்தி களை அறிவிப்பவர் உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எடுத்துக் காட்டாக இல்லாமலிருந்தால் நிலைமை என்னவாகும்? அவரைப் பற்றித் தெரிந்த ஒருவர் அவரிடமிருந்து மார்க்கச் செய்திகளை அறிவிக்கப் போய், அவரிடமுள்ள குறைகளை விவரம் தெரியாத மக்களிடம் மறைத்தால், அது பாவம் மட்டுமல்ல; முஸ்லிம் பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.

ஏனெனில், அச்செய்திகள் அனைத்துமோ பெரும்பாலானவையோ அடிப்படையற்ற பொய்யான தகவல்களாக இருக்க, அவற்றைக் கேட்கும் சிலர் அப்படியே அவற்றைச் செயல் படுத்திவிடலாம்; அல்லது சிலவற்றையாவது செயல்படுத்தி விடலாம். அதே நேரத்தில், நம்பத் தகுந்த, திருப்தி தருகின்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகக் கிடைத்துள்ள சரியான தகவல்கள் ஏராளம் உள்ளன. அப்படியிருக்க, நம்பத் தகாத, திருப்தி கொள்ள முடியாத அறிவிப்பாளர்களின் செய்திகளுக்கு என்ன அவசியம் நேர்ந்தது?

பலவீனமான ஹதீஸ்களையும் அடையாளம் தெரியாத அறிவிப்பாளர் தொடர்களையும் தெரிந்துகொண்டே அறிவிப்பதில் சிலர் முனைப்புக் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களிடம் தங்களை அதிக அறிவுபடைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றே கருதுகிறேன். இன்னார் எத்துணை எத்துணை ஹதீஸ்களை அறிந்துள்ளார்; ஏராள மான ஹதீஸ்களைத் திரட்டியுள்ளார் என்று (சிலாகித்துக்) கூறப்பட வேண்டும் என்பதே அவர்களின் இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.

(ஹதீஸ் எனும்) கல்வித் துறையில் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட எவருக்கும் விமோசனமே கிடையாது. இவர்களை “அறிஞர்கள்’ என்று குறிப்பிடுவதைவிட “முட்டாள்கள்’ என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

(தர்கீப் வத்தர்ஹீப் முன்னுரை)

“ஆர்வமூட்டுகின்ற மற்றும் அச்சமூட்டுகின்ற ஹதீஸ்களை மார்க்கச் சட்டங்களைச் சொல்பவரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்து அறிவிக் காதீர்கள்” என்ற கருத்தைத் தான் முஸ்லிம் ஹதீஸ் நூலில் இடம்பெற்ற இமாம் முஸ்லிம் அவர்களின் முன்னுரை தெரிவிக்கின்றது என்று ஹாபிழ் இப்னு ரஜப் அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.

அதனால் தான் அமல்களின் சிறப்புகளிலும், விரும்பத்தக்கவை என்று வரக்கூடிய அமல்களிலும் பலவீனமான ஹதீஸை அடிப் படையாக வைத்து எந்தவொரு அமலையும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி நான் (அல்பானி) மக்களை அழைக்கிறேன். இந்த நிலைப்பாட்டையே மார்க்கமாகக் கடைப்பிடிக்கும்படி அவர்களிடம் நான் வேண்டுகிறேன்.

இதற்கு அடிப்படைக் காரணம், பலவீனமான ஹதீஸ் என்பது யூகம் மற்றும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கின்றது. உண்மை இவ்வாறிருக்கையில் யூகத்தை அடிப்படையாகக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும்?

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

அல்குர்ஆன் 53:28

அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.

அல்குர்ஆன் 53:23

யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இறைவன் பல வசனங்களில் கண்டிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதையே கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்ற வர்களின் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

நூற்கள்: புகாரி 5144, முஸ்லிம் 4646

பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிக்கக் கூடாது என்ற என்னுடைய நிலைப்பாட்டிற்கு மாற்ற மான கொள்கை கொண்டவர்களிடம் இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்த ஆதாரமும் இல்லை.

இதற்குப் பதிலளிக்க வந்த பிந்தைய கால அறிஞர்களாலும் எந்த ஆதாரத்தையும் அளிக்க முடிய வில்லை. அவர்கள் அளித்த ஒரு சில ஆதாரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதற்குக் கீழ்க்கண்ட இரண்டு செய்திகளை உதாரணமாகக் கூறலாம்.

விரும்பத்தக்க அமல்களை பலவீன மான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யலாம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் செய்யக்கூடாது என்று இப்னு ஹம்மாம் கூறுகின்றார்.

(தொழுகை, நோன்பு போன்ற) ஐந்து கடமைகளின் சட்டங்களை பலவீனமான ஹதீஸ்கள் மூலம் எடுக்க முடியாது என்று அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர். விரும்பத்தக்க அமல்களும் இந்த வகையைச் சார்ந்தது தான் என்று ஜலாலுத்தீன் அத்தவானி கூறுகின்றார்.

இந்த இரு செய்திகள் இவர்களின் முரண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதே சமயம் இந்த எடுத்துக்காட்டில் நாம் கண்ட அறிஞர்களின் ஏகோபித்த முடிவு நேர்மையான கருத்தாகும். இதற்குக் காரணம், பலவீனமான ஹதீஸிலிருந்து பெறப்படுகின்ற யூகத்தின் அடிப் படையில் செயல்படக்கூடாது என்று முன்னர் நாம் கண்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை தான்.

வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் என்ற நூலில் இடம்பெறுகின்ற, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்து இதைத் தான் வலியுறுத்துகின்றது. அதை இப்போது பார்ப்போம்.

ஸஹீஹ் மற்றும் ஹஸன் அல்லாத பலவீனமான ஹதீஸ்களை மார்க்கத்தில் ஆதாரமாகக் கொள்வது கூடாது. எனினும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்று அறியப்படவில்லை. அதே சமயம் அந்த ஹதீஸ் உறுதியான ஹதீஸ் என்றும் அறியப்படவில்லை. இத்தகைய ஹதீஸை அறிவிப்பது கூடும் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் ஏனைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், மார்க்க ஆதார அடிப்படையில் ஓர் அமல் அமைந்து, இதன் சிறப்பு குறித்து, பொய் என்று சொல்ல முடியாத ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டால் அதற்குக் கூலி கிடைக்கலாம் என்பது தான். (இப்னு தைமிய்யா அவர்களின் இந்த நிலைப் பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன் பாடில்லை) பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் செய்யப்படும் ஒரு அமலை கடமை என்றோ, விரும்பத்தக்கது என்றோ எந்தவொரு அறிஞரும் கூறவில்லை.

அப்படியொரு கருத்தை யாராவது சொன்னால் அவர் இது தொடர்பான அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துக்கு மாற்றமாக நடந்தவர் ஆவார்.

அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் அவரைப் போன்ற அறிஞர்கள் மார்க்கத்தில் இதுபோன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டதில்லை. பலவீனமான ஹதீஸை அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் மார்க்க விஷயங்களுக்கு ஆதாரமாகக் கொண்டார் என்று யாராவது சொன்னால் அது சரியான கருத்தல்ல. அவர் தவறான கருத்தைக் கூறியவராவார்.

இவ்வாறு இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதுதொடர்பாக அறிஞர் அஹ்மத் ஷாகிர் என்பார், அல்ஃபாயிலுல் ஹஸீஸ் என்ற நூலில் கூறுவதாவது:

ஹலால், ஹராம் தொடர்பாக நாம் அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம் குறித்து நாம் கடுமை காட்டுவோம். சிறப்புகள் போன்ற வற்றைக் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின் தரம் குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அஹ்மத் பின் ஹன்பல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ் பின் அல்முபாரக் ஆகியோர் கூறியுள்ளார்கள்.

இதனால் அவர்கள் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ள லாம் என்று கூறுவதாக இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாறாக, சில ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தை விடக் குறைந்து ஹஸன் என்ற தரத்தில் அமைந்திருக்கும். அப்படி ஹஸன் என்ற தரத்தில் அமைந்த அத்தகைய ஹதீஸ்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் என்று அவர்கள் கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

ஆரம்ப கால கட்டத்தில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் (சரியானது) அல்லது லயீஃப் (பலவீனமானது) என்று தான் தரம் பிரித்தனர். ஹதீஸ் கலை உருவான பின்னர் தான், ஸஹீஹான ஹதீஸை விடக் கொஞ்சம் தரத்தில் குறைந்ததை ஹஸன் என்று தரம் பிரிக்கும் வழக்கம் உருவானது. இதுதான் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இவ்வாறு கூறியதற்கு அடிப்படைக் காரணமாகும் என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இவ்வாறு அறிஞர் அஹ்மத் ஷாகிர் அவர்கள் கூறுகின்றார்கள்.

“ஹலால், ஹராம் தொடர்பாக அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம் குறித்து நாம் கடுமை காட்டுவோம். சிறப்புகள் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின் தரம் குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்’ என்று கூறிய அஹ்மத் பின் ஹன்பல், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ் பின் அல்முபாரக் போன்ற அறிஞர்களுக்கு நான் ஒரு விளக் கத்தைக் கொடுக்க நினைக்கின்றேன்.

கண்டு கொள்ளாமல் விடுவது என்றால் அதன் பொருள், அந்த ஹதீஸ்களின் பலவீனத்தை அவர்கள் சொல்லாமல் விட்டுவிடுவதாகும். அதே சமயம் அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரை விட்டுவிட மாட்டார்கள். அந்த அறிவிப்பாளர்கள் தொடர் மூலம் அதில் இடம்பெறும் பலவீனமான அறிவிப்பாளர்களை அடையாளம் கண்டு, அந்த ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு ஒருவர் வந்து விடலாம்.

ஆனால் அறிவிப்பாளர்கள் தொடரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஹதீஸ் கலையில் ஈடுபட்ட மார்க்க அறிஞர்கள், அறிவிப்பாளர் தொடருடன் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்தார்கள். இதுதான் ஹதீஸ் துறையைப் பாதுகாத்து வருகின்றது.

இந்த அடிப்படையில் இதைப் புரிந்து கொண்டால் மேற்கண்ட அறிஞர்கள் பலவீனமான ஹதீஸ் களைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்ற தவறான கண்ணோட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

நமது விமர்சனம்

தமிழக ஆலிம்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் என்று குறிப்பிடுவார்கள். அவர்களது நூற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது புகாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் என்று போற்றிப் புகழ்ந்து கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் இந்த இமாம்களுக்கு மாற்றமாக நடக்கின்றனர். பலவீனமான ஹதீஸ் பற்றி புகாரி இமாமின் பார்வையை விளக்கவோ, விவரிக்கவோ தேவையில்லை. அதுபோல் தான் இமாம் முஸ்லிம் அவர்களின் பார்வையும்!

“பலவீனமான ஹதீஸ்களின் பாதையைத் தேர்வு செய்து, அந்தப் பாதையில் தானும் சென்று, ஒரு சமுதாயத்தையும் வழிகேட்டின்பால் தாரை வார்க்கின்ற இந்த முல்லாக்கள் ஆலிம்கள் அல்ல, அறிவிலிகள்! முதிர்ந்த சிந்தனையுடையவர்கள் அல்ல, முட்டாள்கள்” என்று இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலான முஸ்லிமின் முன்னுரையில் கடுமையாகச் சாடுகின்றார்கள்.

இமாம் முஸ்லிம் போன்றோர் கூறிய ஹதீஸ் துறை இலக்கணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தை இந்த முல்லாக்கள் பழிப்பது தான் இதில் வேடிக்கை.

உண்மையில் இவர்கள் தான் பழிப்பதற்கும் பரிகாரத்திற்கும் உரியவர்கள். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தரம் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் என்றெல்லாம் சொல்வது கள்ள வேடம், கபட நாடகம் ஆகும்.