ஏகத்துவம் – செப்டம்பர் 2014

தலையங்கம்

இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கழிந்து விட்டன. 68வது சுதந்திர தினம் அன்று அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நிற்காமல் திறந்த வெளியில் நின்று பேசியதை ஓர் அசாதாரண செய்தி என்று தினமணி நாளிதழ் 21.08.2014 அன்று ஒரு தலையங்கமே தீட்டியிருந்தது. அவ்வாறு அவர் பேசியது ஒரு துணிச்சலான செயல் என்று தூக்கிப் போற்றியது.

பிரதம மந்திரியின் சுதந்திர தின உரையைக் கேட்க செங்கோட்டைக்கு வருவோர் அனைவரும் சோதனைக்குள்ளாகாமல் வர முடியாது. சாதாரண, சாமான்ய மக்கள் மற்ற பொதுக்கூட்டங்களில் சங்கமிப்பது போன்று அங்கு சங்கமிக்க முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித் தான் அங்குள்ள சபைகளுக்கு வர முடியும்.

மோடி கோட்டைக்கு வருவதற்கு முன்னால் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு விடுகின்றன. கண்ணாடிக் கூண்டில் நிற்காமல் பேசினார், அது துணிச்சல், தைரியம் என்றெல்லாம் பாராட்டுவதற்கு இதில் ஏதுமில்லை.

அடுத்து, அவரது சுதந்திர தின உரையை தினமணி மட்டுமல்ல! அனைத்து அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் ஆஹா, ஓஹோ என்று பக்கம் பக்கமாகப் பாராட்டின. படம் படமாகக் காட்டி, புகழ்ந்து தள்ளின.

சாதுரியமான பேச்சு; சாணக்கியமான பேச்சு! அலங்கார வார்த்தைகள் இல்லாமல் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பேச்சு என வானளாவப் புகழந்தன. உண்மையில் மோடியின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் தான் இருந்தது.

சாதியம், வகுப்புவாதம் நம்முடைய முன்னேற்றத்தின் தடைக்கற்கள் என்று அவர் பேசும் போது, பேசுவது மோடிதானா என ஒரு கணம் யோசிக்க வைத்தது. வன்முறைப் பாதைக்கு விடை கொடுப்போம் என்று அவர் கூறியபோது, குஜராத்தின் கலவரக்கார மோடியல்ல, இந்தியாவின் சமாதானக்கார மோடி என்று நமக்குத் தோன்றியது.

ஆனால் அந்தப் பேச்சில் உண்மை இல்லை. மோடி மாறவில்லை. அவர் இன்னும் இந்துத்துவாவின் மூடி தான் என்பதை 17.08.2014 அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய பேச்சு தெளிவுபடுத்தி விட்டது.

“இந்தியா ஓர் இந்து நாடு! இந்துத்துவா தான் நமது நாட்டின் அடையாளம். அதாவது இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரின் அடையாளம் இந்துத்துவம் தான்” என்று மும்பையில் நடந்த வி.ஹெச்.பி. பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது மோகன் பகவத் பேசியுள்ளார்.

அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா தான்; தற்போதைய இந்தியாவில் வாழ்பவர்கள் அந்தக் கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் தான் என்று அவர் முழங்கியுள்ளார்.

21.08.2014 அன்று இந்து ஆங்கில நாளேடு “கட்சியைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளது,

“கருத்தொற்றுமையின் மூலமே ஆட்சி நடத்தியுள்ளேன். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை வைத்து அல்ல!” பிரதமர் மோடி கூறுகின்றார். ஆனால் மோகன் பகவத் போன்றவர்கள் இந்தியக் குடிமக்களை இந்துத்துவாவுடன் இணைத்துப் பேசும் பேச்சுக்களைப் பார்க்கும் போது, மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் பெரும்பான்மை சிந்தனையின் பக்கம் பாஜக ஆட்சி திரும்பிக் கொண்டிருக்கின்றது என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவாவின் தாக்கத்தில் தாங்கள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, மோகன் பகவத்தின் பேச்சுக்கும், தங்களுக்கும் அறவே சம்பந்தமில்லை என்பதை பாஜக பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு இந்து ஆங்கில நாளோடு கூறியுள்ளது.

மோகன் பகவத்தின் பேச்சுக்கு மோடி இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தன் ஆட்சிக்கு வில்லங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி தற்காலிகமாக வாய் மூடியிருக்கின்றாரா? பின்னால் வாய் திறப்பாரா? என்பது தெரியவில்லை.

அவர் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலைப் பேசவும், செயல்படுத்தவும் முனைவாரானால் நாடு சுடுகாடாக மாறிப் போய்விடும் என்று எச்சரிக்கின்றோம். அந்த அளவிற்கு அவர் செல்ல மாட்டார் என்று நம்புகின்றோம். அனைத்து மக்களும் மோடியிடம் விரும்புவதும், எதிர்பார்ப்பதும் கலவரம் இல்லாத ஒரு சமாதான ஆட்சியைத் தான்.

அத்துடன் மோடிக்கும், மோகன் பகவத்திற்கும் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவில் வாழ்கின்ற முஸ்லிம்களாகிய நாங்கள் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள். கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் அல்லர். நீங்கள் நம்புகின்ற இந்துக் கலாச்சாரத்தில் இருந்தவர்கள் தான் நாங்கள்! சாதிய நுகத்தடியில் அடிமைகளாய் நசுக்கப்பட்டவர்கள்! மனிதனாய் மதிக்கப்படாதவர்கள்! இந்தக் கட்டத்தில் தான் இஸ்லாம் எங்களை அரவணைத்து மனிதாக்கியது. எங்களுக்கு சம அந்தஸ்தும் சமூக மரியாதையும் அளித்தது. அதனால் நாங்கள் இஸ்லாத்தை எங்கள் அடையாளமாக்கிக் கொண்டோம். அது கூறிய இறை நம்பிக்கையை உயிர்மூச்சாக ஆக்கிக் கொண்டோம். அந்த அடையாளத்தை எங்களிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

அப்படிப் பிரிக்க நினைத்தால் எங்களின் பதில் இது தான். தன்னையே கடவுள் என்று பிதற்றிக் கொண்ட ஃபிர்அவ்ன் எனும் கோர, கொடிய ஆட்சியாளனிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மந்திரவாதிகள் முழங்கிய முழக்கத்தையும் வீர தீர விளக்கத்தையும் இங்கு மோடியை நோக்கி நாங்கள் கூறுகிறோம். இதோ அந்த அனல் பறக்கும் ஆவேச வார்த்தைகள்:

எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்என்று அவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 20:72

எங்களின் உயிர்க்காற்றை உடற்கூட்டிலிருந்து பிரிக்கலாமே தவிர எங்களின் ஈமானியக் கொள்கையை, இஸ்லாமிய அடையாளத்தை எங்களை விட்டும் பிரிக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இஸ்லாம் என்ற அடையாளம் உங்களையும் எங்களையும் படைத்த ஏக இறைவன் இட்ட அடையாளமாகும்.

அல்லாஹ் தீட்டும் (இஸ்லாம் எனும்) வர்ணத்தை (நாங்கள் ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்

அல்குர்ஆன் 2:138

அத்துடன் இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம்.

சாதிக் கொடுமை, பாலியல் கொடுமை, லஞ்ச ஊழல்கள் போன்றவற்றைப் பற்றி மோடி தனது உரையில் பேசியுள்ளார். இந்த சமூகக் கொடுமையிலிருந்து ஒரு நாடு விடுதலை பெறாத வரை அந்நாடு சுதந்திர நாடல்ல! அது அடிமை நாடுதான் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூகக் கொடுமைகளிலிருந்து நாடு விடுதலை பெறவேண்டுமானால் அதற்குரிய ஒரே வழி இந்நாட்டுக் குடிமக்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வது தான். இது நடக்காதவரை நாடு உண்மையான விடுதலையை அடையாது.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?

இறந்துவிட்ட அவ்லியாக்கள், உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு பரேலவிகள் திருக்குர்ஆனிலிருந்து காட்டிய வசனங்களுக்குக் கடந்த ஜூன் மாத ஏகத்துவம் இதழில் பதிலளித்திருந்தோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய பதிலை இந்த இதழில் அறிந்துகொள்வோம்.

மரணித்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று கூறும் கப்ரு வணங்கிகள் தங்களின் இணைவைப்புச் செயலை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தில் ஆதாரம் இருப்பதாக இட்டுக்கட்டுகின்றனர். இவர்கள் குர்ஆன் வசனங்களில் செய்த தில்லுமுல்லு வேலைகளைக் கடந்த இதழில் அறிந்துகொண்டோம். ஹதீஸ்கள் என்ற பெயரில் இவர்கள் சில பொய்யான செய்திகளை ஆதாரமாகக் கூறி வருகின்றனர்.

கப்ரு வணக்கத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரேயொரு ஆதாரப்பூர்வமான செய்தி கூட கிடையாது. எனவே தான் கப்ரு வணங்கிகள் பிரபலமான ஹதீஸ் நூற்களான புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது போன்ற ஹதீஸ் நூற்களை விட்டுவிட்டு வேறு நூற்களில் யாருக்கும் தெரியாத பலவீனமான செய்தியைத் தேடிப்பிடித்து தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு இவர்கள் கூறும் ஒரு ஹதீஸைப் பற்றியும் அதன் நிலையைப் பற்றியும் இந்த இதழில் அறிந்துகொள்வோம். இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குப் பின்வரும் செய்தியை இவர்கள் ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது, “அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று கூறுங்கள். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

நூல்: தப்ரானீ 14146

இந்தத் செய்தி எவ்வாறு பலவீனமானது என்ற விபரத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் இவர்களின் கொள்கைக்கும், இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.

இறந்தவர்களிடத்தில் உதவி தேடலாம் என்பதற்கு கப்ரு வணங்கிகள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தச் செய்தியில் இறந்த மனிதர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யலாம் என்று சொல்லப்படவில்லை.

மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் பூமியில் இருக்கின்றார்கள் என்று இந்த செய்தி கூறுகின்றது. மனிதர்கள் இறந்துவிட்டால் இந்தப் பூமியை விட்டுப் பிரிந்து மறைவான கப்ரு வாழ்க்கைக்குச் சென்றுவிடுகின்றனர். கப்ரில் விசாரணை செய்யப்பட்டு நல்லவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை கப்ரில் உறங்கிக்கொண்டே இருப்பார்கள். இறந்தவர் தீயவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார். எனவே இறந்துவிட்ட மனிதர்களுக்கும் இந்தப் பூமி வாழ்வுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் கிடையாது.

இந்தச் செய்தி மனிதர்கள் அல்லாத அல்லாஹ்வின் வேறொரு படைப்பைப் பற்றிப் பேசுகின்றது. அந்தப் படைப்பு வானவர்கள் தான் என்று இது தொடர்பாக வரும் வேறொரு பலவீனமான அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மரத்தின் இலைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயணத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்என்று அழைக்கட்டும்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக அல்லாஹ் சில வானவர்களை பூமியில் ஏற்படுத்தியுள்ளான். எந்த மனிதரும் இல்லாத இடத்தில் உதவி தேவைப்பட்டால் அந்த வானவர்களை அழைக்கலாம் என்று தான் இந்தச் செய்தி கூறுகின்றது.

கப்ரு வணங்கிகள் யாரும் இந்தச் செய்தியில் கூறப்பட்டது போல் மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் ஆபத்து ஏற்படும் போது வானவர்களை அழைப்பதில்லை. மாறாக இறந்துவிட்டவர்களை அழைத்து வருகின்றனர். இவர்களின் கொள்கைக்கும், செயலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத செய்திகளைக் கொண்டு வந்து தங்களின் வழிகெட்ட கொள்கையை நியாயப்படுத்த முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் இவர்களால் காட்ட இயலாது.

யாரும் இல்லாத நேரத்தில் தேவை ஏற்படும் போது வானவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்ற கருத்தும் தவறானதாகும். படைத்த இறைவன் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடவேண்டுவது போல் வானவர்களை அழைத்து உதவி தேடினால் அதுவும் இணை கற்பித்தலாகும். இணை கற்பித்தலுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் இதற்கு எதிராகவும் பொருந்தும். மனிதர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் வானவர்களை நியமித்து இருந்தாலும் நாம் அந்த உதவியை  அல்லாஹ்விடம் தான் கோரிப்பெற வேண்டும்.

மேலும் இந்தக் கருத்தைக் கூறும் மேற்கண்ட செய்திகள் பலவீனமாக உள்ளன. அவை எவ்வாறு பலவீனமானது என்பதை அறிந்துகொள்வோம்.

பலவீனமான அறிவிப்பு – 1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம் இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது “அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று கூறுங்கள். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

நூல்: தப்ரானீ (14146)

தப்ரானியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரின் பெயர் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் என்று தவறாகக் கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று அபூ ஹாதிம் கூறியுள்ளார். இவர் நேர்மையானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

அப்துர் ரஹ்மான் இந்தச் செய்தியை தன்னுடைய தந்தை ஷரீக் பின் அப்தில்லாஹ் வழியாக அறிவிக்கின்றார். ஷரீக் பின் அப்தில்லாஹ்வும் நினைவாற்றல் குறைபாட்டின் காரணமாக பலவீனமானவர் ஆவார்.

இவர் நேர்மையானவர் என்றாலும் மிகவும் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என யஃகூப் பின் ஷைபா கூறியுள்ளார். ஹதீஸ்களை தவறாக மாற்றி அறிவிப்பவர் என இப்ராஹீம் பின் யஃகூப் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். மற்றும் பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (தஹ்தீபுல் கமால்)

மேலும் இவர் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை செய்யக்கூடியவர் என்று யஹ்யா பின் கத்தான் கூறியுள்ளார். இவர் மேற்கண்ட செய்தியை யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக இவர் சொல்லவில்லை. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.

இத்துடன் இந்த அறிவிப்பாளர் தொடரில் முறிவும் உள்ளது. இந்தச் செய்தியை உத்பா பின் கஸ்வான் என்ற நபித்தோழரிடமிருந்து ஸைத் பின் அலீ என்பவர் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி உள்ளது.

நபித்தோழர் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 17 வது வருடத்தில் மரணிக்கின்றார். ஆனால் ஸைத் பின் அலீ ஹிஜ்ரீ 80 வது வருடத்தில் தான் பிறக்கின்றார். உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் மரணித்து 63 வருடங்களுக்குப் பிறகே ஸைத் பின் அலீ பிறக்கின்றார். எனவே இவ்விருவருக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளனர். இது மோசமான அறிவிப்பாளர் தொடர் முறிவாகும். இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீஜுல் அத்கார் என்ற நூலில் இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவுள்ளது என்று கூறியுள்ளார். இமாம் ஹைஸமீ அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஸைத் பின் அலீ என்பார் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களை அடையவில்லை என்றும் இதன் அறிவிப்பாளர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றும் கூறியுள்ளார். அல்பானீ அவர்களும் மேற்கண்ட காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் இந்தச் செய்தி நான்கு காரணங்களால் பலவீனமாக உள்ளது.

  1. அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர்.
  2. ஷரீக் பின் அப்தில்லாஹ் பலவீனமானவர்
  3. ஷரீக் பின் அப்தில்லாஹ் தத்லீஸ் செய்யக்கூடியவர்.
  4. அறிவிப்பாளர் தொடர் முறிவு

இப்படிப்பட்ட மிகவும் பலவீனமான செய்தியைத் தான் கப்ரு வணங்கிகள் தங்களின் வழிகெட்டக் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடுகின்றனர்.

பலவீனமான அறிவிப்பு – 2

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தாக இன்னொரு அறிவிப்பும் உள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய வாகனம் தப்பிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள்என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: தப்ரானி

இந்தச் செய்தியில் மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவர் யார் என அறியப்படாதவர் என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களை தவறுதலாக அறிவிப்பவர் என இப்னு அதீ கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்)

இந்தச் செய்தியில் இன்னொரு குறையும் உள்ளது. இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் புரைதா என்பவர் அறிவிக்கின்றார். இவ்விருவருக்கிடையே அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32ல் மரணிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் புரைதா ஹிஜ்ரீ 105ல் மரணிக்கின்றார். இருவரின் மரணத்திற்கும் இடையில் 73 வருடங்கள் உள்ளது. எனவே அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பதால் இதன் தொடர் முறிவுள்ளதாகின்றது. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு – 3

இந்தச் செய்திக்கு இன்னொரு பலவீனமான அறிவிப்பும் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம் அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்என்று கூறட்டும். அவருக்கு உதவி செய்யப்படும்.

நூல்: முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா

இந்தச் செய்தியில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. முதலாவது பலவீனம் என்னவென்றால் இதில் இடம்பெறும் முஹம்மது பின் இஸ்ஹாக் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறினாலே இவரின் அறிவிப்பு ஏற்கப்படும். ஆனால் மேலுள்ள அறிவிப்பில் இவர் அப்பான் பின் ஸாலிஹிடம் தான் நேரடியாகக் கேட்டதாக கூறவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

இரண்டாவது பலவீனம் என்னவென்றால் இந்தச் செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்பான் பின் ஸாலிஹ் என்பவர் தான் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 100க்குப் பிறகு மரணிக்கின்றார். இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலர் விடுபட்டிருக்கிறார்கள். விடுபட்டவர்கள் யார்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமாக உள்ளது.

பலவீனமான அறிவிப்பு – 4

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

மரத்தின் இழைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயனத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்என்று அழைக்கட்டும்.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

இந்த அறிவிப்பில் உசாமா பின் ஸைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், நஸாயீ, இப்னு சஅத், இப்னு ஹிப்பான், அபூ தாவுத், இப்னு ஹஜர், தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

இவர் இந்தச் செய்தியை அறிவிக்கையில் பலருக்கு இதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். அபூகாலித் என்பவருக்கு மட்டும் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்காமல் குழம்பியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

இத்துடன் இவரை விட வலிமையானவரான முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கு மாற்றமாகவும் இவருடைய அறிவிப்பு உள்ளது.

முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள் அப்பான் பின் ஸாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முழு அறிவிப்பாளர் தொடரையும் கூறாமல் முர்சலாகவே அறிவித்தார். அதாவது நபித்தோழரை குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். மூன்றாவது பலவீனமான அறிவிப்பாக மேலே நாம் இதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆனால் உசாமா பின் ஸைத் அவர்கள் அப்பான் பின் சாலிஹிடமிருந்து அறிவிக்கையில் முர்சலாக அறிவிக்காமல் முழு அறிவிப்பாளர் தொடரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த முரண்பாட்டின் மூலம் இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் அறிவிக்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய உதவியை வானவர்களிடமோ, இந்த உலகத்தை விட்டும் உலகத்தின் அனைத்துத் தொடர்புகளை விட்டும் முழுவதுமாகப் பிரிந்துவிட்ட இறந்தவர்களிடமோ கேட்க முடியாது.

மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் பிடரி நரம்பை விட நமக்கு மிக அருகில் இருக்கும் சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ்வை மட்டுமே நாம் அழைக்க வேண்டும். அவனிடம் மட்டுமே உதவிதேட வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 13

கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவைப் பற்றி பல்வேறு மார்க்க அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஜூலை இதழில் ஹாபிழ் தஹபீ அவர்களின் விமர்சனத்தையும், விழிப்பூட்டும் எச்சரிக்கையையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியருல் அஃலாமின் நுபலாவில் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி பல்வேறு அறிஞர்களின் கண்டனத்திற்கும், கடிந்துரைக்கும் உள்ளானார். விதியைப் பற்றிய அவரது அறியாமைக் கருத்தும் கண்டனக் கணைகளுக்கு இலக்கானது.

“விதியைப் பற்றி சில ரகசியங்கள் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்பது கஸ்ஸாலியின் கருத்தாகும்.

விதிக்கு என்ன ரகசியம் இருக்கின்றது? ஆய்வின் மூலம் அதை அடைய முடியும் என்றால் கண்டிப்பாக அதை அடைந்து விடலாம். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மூலம் அடைய முடியும் என்றால் அதைப் பற்றிக் கூறுகின்ற ஆதாரப்பூர்வமான எந்த ஒரு ஹதீசும் இல்லை. ஆன்மீக நிலை, அகமிய ஞானத்தின் மூலம் அதை அடைய முடியும் என்று கூறினால் அது அர்த்தமற்ற ஓர் அவியல் வாதமாகும்.

விதியின் ரகசியத்தைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கஸ்ஸாலி கூறுகிறார். நாம் விதியில் மூழ்கி விவாதிக்கக் கூடாது என்று வேண்டுமானால் இதற்கு விளக்கம் கொடுக்கலாமே தவிர கஸ்ஸாலியின் இந்தக் கருத்தில் வேறெதுவும் இல்லை.

ஹாபிழ் தஹபீ அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது:

இவர் (கஸ்ஸாலி) கிரேக்கத் தத்துவத்தை இழித்தும் பழித்தும் “கிதாப் தஹாஃபுத்’ (தத்துவத்தின் வீழ்ச்சி) என்ற நூலை எழுதினார். அதில் கிரேக்கத் தத்துவவாதிகளின் குறைகளை அம்பலப்படுத்துகின்றார். அதே சமயம் அந்த நூலில் பல இடங்களில் கிரேக்கத் தத்துவவாதிகளின் கருத்துக்களுக்கு உடன்படவும் செய்கின்றார். இவ்வாறு அவர் உடன்படுவதற்குக் காரணம் அவர் அதை உண்மை என்று நம்புவது தான்.

ஹதீஸ் துறையில் அனுபவம் இல்லாதவர்

இவருக்கு ஹதீஸ் துறையில் எந்த ஞானமும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் அறிவின் அடிப்படையில் முடிவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நபிவழியைப் பற்றிய போதிய அனுபவமும் இல்லை.

இக்வானுஸ் ஸஃபா (தூய்மையான எடுகளின் சகோதரர்கள்) என்ற நூலை எழுதிய இவருக்கு இயல்பாகவே கிரேக்கத் தத்துவஞானிகள் மீது காதல் இருக்கின்றது.

(இக்வானுஸ் ஸஃபா என்று அழைக்கப்படுபவர்கள் ஆன்மீக ரகசிய அந்தரங்க ஜமாஅத்தினர் ஆவர்.)

இவர்கள் கிரேக்க தத்துவத்தையும் அந்தரங்க ஞானம் என்ற கோட்பாட்டையும் இஸ்லாமியக் கொள்கையுடன் கலப்படம் செய்தனர்.

இந்தத் தவறான கொள்கை ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் நடுவில் பஸராவில் தோன்றியது. இவர்கள் இந்தக் கொள்கை தொடர்பாக ஐம்பது ஏடுகளை இயற்றியுள்ளனர். அந்த ஏடுகளுக்குரிய அட்டவணையையும் தயார் செய்தனர். இவர்களின் முதன்மையான நோக்கம் ஏகத்துவ அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை நீர்த்துப் போகச் செய்து நிர்மூலமாக்குவது தான். இது நீங்காத கொடிய நோய்! தணியாத அரிப்பு! உயிர் கொல்லும் கொடிய விஷம்!

கஸ்ஸாலி பெரிய அறிவாளிகளின், சிறந்தவர்களின் பட்டியலில் இல்லையென்றால் அவர் அழிந்து தான் போக வேண்டும். எச்சரிக்கை! எச்சரிக்கை! இந்த நூல்களின் அபாயங்களிலிருந்து எச்சரிக்கை!

மார்க்கத்தில் இல்லாதவைகளை முதன்முதலில் தோற்றுவித்த ஒரு சாரார் உண்டு! அவர்களின் சந்தேகங்களுக்கு நீங்கள் இரையாகிவிடாமல் உங்களது மார்க்கத்தைக் கொண்டு நீங்கள் தப்பி ஓடிவிடுங்கள். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் தடுமாற்றத்திலும், தட்டழிவிலும் வீழ்ந்துவிடுவீர்கள். வெற்றியையும் ஈடேற்றத்தையும் நாடுபவர் அல்லாஹ்வை வணங்குவதில் தன்னைப் பிணைத்துக் கொள்வாராக! அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுவதில் நீடித்து நிலைத்திருப்பாராக!

இஸ்லாத்தில் உறுதிப்பாட்டைக் கடைப்பிடித்து தன்னுடைய எஜமானாகிய அல்லாஹ்விடத்தில் முற்றிலும் பணிந்து விழுவாராக! நேர்வழியில் சென்ற நபித்தோழர்களைப் போன்று கொள்கையை நிறைவாகப் பெறுவாராக!

அல்லாஹ்வே உதவி புரிபவன். மார்க்க அறிஞரின் நல்லெண்ணத்தின் காரணமாக தான் நாடும் போது அல்லாஹ் அவரை மன்னித்து வெற்றிபெறச் செய்கிறான்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் கஸ்ஸாலியைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள்.

மக்ராவியின் விளக்கம்

இஹ்யாவில் உள்ள அதிகமான செய்திகள் இக்வானுஸ்ஸஃபா என்ற கூட்டத்தின் ஏடுகளுக்கு ஒத்திருக்கின்றது என்று ஒப்பீடு செய்து ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். உண்மையில் தஹபீ அவர்கள் கூறியிருப்பது போன்று அது ஒரு நீங்காத, நிவாரணமில்லாத கொடிய நோயாகும். அல்லாஹ் நமக்கு நிவாரணத்தை அளிப்பானாக!

என்ன தான் நல்ல செய்திகள் இஹ்யாவில் ததும்பினாலும் தடம் பதித்தாலும், இந்த உயிர்க் கொல்லி உள்ளே இருந்தால் அதனால் என்ன நன்மை விளையப் போகின்றது? இஹ்யாவில் நன்மை இருக்கின்றது என்று சொன்ன தஹபீ அவர்கள், உயிர்க் கொல்லி என்ற உதாரணத்தைக் கூறுவதன் மூலம் சரியான வழியை சமுதாயத்திற்குக் காட்டிவிடுகின்றார்கள்.

அப்துல் ஃகாஃபிர் என்பவரின் கருத்தை மேற்கோள் காட்டி ஹாபிழ் தஹபீ மேலும் கூறுவதாவது:

கீமிய்யத்துஸ் ஸஆதா வல் உலூம் (ஈடேற்றம் மற்றும் ஞானங்களின் வேதியியல்) என்ற தனது நூலில் கஸ்ஸாலி, பாரசீக மொழியின் வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கின்றார். அது தொடர்பான உதாரணங்கள் மற்றும் சட்டங்களை அவர் விளக்கும் போது, ஷரீஅத்தின் வெளிப்படையான சட்டங்களுக்கு நேர்முரணான விளக்கங்களைத் தெரிவித்திருக்கின்றார்.

அவர் இப்படி ஒரு நூலை இயற்றுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இதுபோன்ற விளக்கவுரையை எழுதாமல் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அப்துல் ஃகாஃபிர் அவர்கள் கீமியத்துஸ் ஸஆதா விஷயமாக கஸ்ஸாலியைக் கடுமையாகப் பிடித்து விட்டார். “எனது ஆசிரியர் கஸ்ஸாலி, கிரேக்கத் தத்துவவாதிகளை வயிற்றுக்குள் விழுங்கி விட்டார். அவர்களைத் தனது வயிற்றை விட்டும் வாந்தி எடுத்து வெளியே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவரால் முடியவில்லை” என்று கஸ்ஸாலியின் மாணவரான அபூபக்ர் பின் அல்அரபி தெரிவிக்கின்றார். இந்த அளவுக்கு கஸ்ஸாலியின் ஆக்கங்கள் தொடர்பான பல விஷயங்களை அப்துல் ஃகாஃபிர் தன் கைவசம் வைத்திருக்கின்றார் என தஹபீ குறிப்பிடுகின்றார்.

கஸ்ஸாலியின் ஆக்கங்களில் உள்ளது தான் இஹ்யா உலூமித்தீன். இது இந்த பூபாகத்தின் கிழக்கு, மேற்கில் வசிக்கின்ற சமுதாய மக்களை சரியான குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

இமாம் இப்னுஸ்ஸலாஹ் அவர்களின் விமர்சனம்

கஸ்ஸாலியின் பல்வேறு ஆக்கங்கள் உள்ளன. அவை ஆட்சேபணைக்கு இலக்காகின்றன. இதற்குக் காரணம் அவற்றில் தெரிவித்திருக்கும் அரிதான கருத்துக்கள் தான். “மன்திக்’ என்ற தர்க்கரீதியிலாகப் பேசுகின்ற கல்வி உண்டு. இது கிரேக்கர்களிடமிருந்து இறக்குமதியான கல்வியாகும். இந்தக் கல்வி தொடர்பாக கஸ்ஸாலி கூறிய கருத்து கடுமையான விமர்சனத்திற்கும், ஆட்சேபணைக்கும் உள்ளானது.

இந்தக் கல்வி பற்றி கஸ்ஸாலி குறிப்பிடுகையில், “இதுதான் அத்தனை கல்விகளுக்கும் முன்னணிக் கல்வியாகும். இதை நன்கு அறியாதவர் எந்தக் கல்வியையும் உறுதியாகத் தெரியாதவர் ஆவார்” என்று தெரிவிக்கின்றார்.

இது முற்றிலும் மறுக்கப்பட வேண்டிய கருத்தாகும். தெளிவான சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் இயல்பிலேயே தர்க்கரீதியாகப் பேசுபவர் தான். அதே சமயம் தர்க்கரீதியாகப் பேசுகின்ற எத்தனையோ இமாம்கள் தலைதூக்க முடியாமல் கிடந்திருக்கின்றார்கள்.

இதுதான் கஸ்ஸாலியைப் பற்றி இப்னுஸ்ஸலாஹ் செய்கின்ற விமர்சனமாகும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் விமர்சனம்

இப்னு தைமிய்யா அவர்களிடம் இஹ்யா உலூமித்தீன், கூத்துல் குலூப் (உள்ளங்களின் உணவு) என்ற நூல்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:

பொறுமை, நன்றி, இறைநேசம், தவக்குல் போன்ற பண்புகள் தொடர்பான செய்திகளை எடுத்துச் சொல்வதில் இந்த நூற்களில் ஒன்று மற்றொன்றைத் தழுவியது தான். கூத்துல் குலூபின் ஆசிரியர் அபூதாலிப், ஹதீஸ் மற்றும் அதன் கலையைப் பற்றிய நல்ல விபரமும் விளக்கமும் உள்ளவர்.

சூபிஸம், ஆன்மீகம் பேசுகின்ற கஸ்ஸாலி போன்ற ஆட்களின் பேச்சையும், அபூதாலிபின் பேச்சையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அபூதாலிபின் பேச்சு நியாயமானதாகவும் அழகாகவும், பித்அத்தை விட்டு மிகவும் தூரமானதாகவும் அமைந்திருக்கின்றது. அதே சமயம் கூத்துல் குலூபில் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், மறுக்கப்பட வேண்டிய வேறு பல செய்திகளும் மண்டிக் கிடக்கின்றன.

இஹ்யாவைப் பொறுத்தவரை அந்நூலில் மனிதனை நாசத்தில் தள்ளுகின்ற பெருமை, தற்பெருமை, முகஸ்துதி, பொறாமை போன்ற தீய பண்புகளை, விபரீதங்களை கஸ்ஸாலி கூறுகின்றார். இவற்றில் பெரும்பான்மையான கருத்துக்கள் அல்ஹாரிசுல் முஹாஸிமி என்பவர் எழுதிய “அர்-ரிஆயா’ என்ற நூலிலிருந்து தடமாற்றம் செய்யப்பட்ட கருத்துக்களாகும்.

அவற்றில் ஏற்கத்தக்கவையும் உண்டு. மறுக்கத்தக்கவையும் உண்டு. விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையும் உண்டு. மொத்தத்தில் இஹ்யாவில் பல பயன்கள் உள்ளன. ஆனால் இதில் இகழப்படவேண்டிய, இழிக்கப்பட வேண்டிய கோட்பாடுகள் பரவிக் கிடக்கின்றன. காரணம் அவை ஏகத்துவம், நபித்துவம், மறுமை தொடர்பாக கிரேக்கத் தத்துவ ஞானிகளின் தகிடுதத்த வார்ப்புகளைக் கொண்டவை.

இஹ்யாவின் ஆக்கம் இப்னு சீனாவின் தாக்கம்

கஸ்ஸாலி எழுதிய நூல்கள் மீது மார்க்க அறிஞர்கள் தங்களது கண்டனக் கணைகளைப் பாய விடுகின்றார்கள். கஸ்ஸாலியைப் பிடித்த நோயே இப்னு சீனா என்றழைக்கப்படும் அலிசென்னாவின் “ஷிஃபா’ என்ற நூல் தான். இந்த நூல் கஸ்ஸாலியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நூலில் பலவீனமான ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏராளம் இடம் பெற்றுள்ளன. சூபிய்யாக்களின் மாய தத்துவங்கள், மயக்கும் மந்திர ஜாலங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அத்துடன் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உள்ளங்களைச் சீர்படுத்துகின்ற பாதையில் உறுதியாக நின்ற நல்லவர்களின் கருத்துக்களும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. குர்ஆன் ஹதீசுக்கு ஒத்த வணக்க வழிபாடுகள், ஒழுக்கப் பண்பாடுகள் இஹ்யாவில் இடம்பிடித்திருக்கின்றன. இதனால் தான் அறிஞர்களுக்கு மத்தியில் இதைப் பற்றிய முடிவு தெரிவிப்பதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.

இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் விமர்சனமாகும்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி….

மறுமையின் சாட்சிகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்

இவ்வுலகில் வாழும் போது மனிதர்கள், தங்களது விருப்பு வெறுப்புகளுக்குத் தோதுவான குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து நற்காரியங்களையோ அல்லது தீய காரியங்களையோ செய்கிறார்கள். பல்வேறு காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இங்கே இப்படி இருக்கும் மனிதர்கள், மறுமை நாளில் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் செயல்களுக்கு சாட்சியம் செல்லும் நிலையில் நின்று கொண்டிருப்போம். இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

இந்த வகையில், ஒவ்வொரு சமுதாயத்தாருடைய காரியங்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சாட்சியாளர்களாக இருப்பார்கள். தங்களுடைய சமுதாயத்தினர் செய்திருக்கும் காரியங்கள் தாங்கள் போதித்தவையா? இல்லையா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நபிமார்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் யார்? மாறு செய்து தட்டழிந்தவர்கள் யார்? என்பது அன்றைய தினம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

(அல்குர்ஆன் 4:41,42)

(அது) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு எதிரான சாட்சியாகக் கொண்டு வரும் நாள்!

(அல்குர்ஆன் 16:89)

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

(அல்குர்ஆன் 4:159)

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்”  எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபேஅப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்என்று கூறினார்கள். அப்போது “இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்றுஎனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முசய்யப் (ரலி)

நூல்: புகாரி (1360)

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (1343, 1353)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி (1344)

ஒருவர் நன்மையான மற்றும் தீமையான காரியங்களைச் செய்யும் போது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அடுத்தவர்களால் கவனிக்கப்டுகிறார்கள். இப்படியிருக்கும் மனிதர்கள், மறுமையில் அவர்கள் செய்த காரியங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.

இவர்கள் நல்லவிதமான காரியங்களைச் செய்தார்கள் என்று நல்லவர்கள், நல்லவர்களுக்கு சாட்சியம் சொல்வார்கள். இதுபோன்று குற்றவாளிகள் குற்றவாளிக்கு எதிராக நின்று, இவர்களே எங்களை வழிகெடுத்தார்கள் என்று கூறுவார்கள். இங்கு வாழும் போது வழிகேட்டில் இருந்து கொண்டு நேர்வழியில் இருப்போரின் செயல்களை வேடிக்கை பார்ப்பவர்கள், மறுமை நாளில்  இவர்கள் நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள்; நாங்களோ அலட்சியமாக இருந்தோம் என்று ஆதங்கப்பட்டு நல்லவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பார்கள் இந்த உண்மைகளை பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.

(அல்குர்ஆன் 11:18)

அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், “நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.         

(அல்குர்ஆன் 3:64)

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு அவன், “ஆம், என் இறைவா!என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின், “நாம் இத்தோடு ஒழிந்தோம்என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், “இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும்என்று கூறுவார்கள்‘  என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (2441) (4685)

கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி

நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.

நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். “உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்).

(அல்குர்ஆன் 17:13,14)

உடல் உறுப்புகளின் சாட்சி

நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.

உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.

நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார், புகை பிடித்தார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

(அல்குர்ஆன் 36:63,65)

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 24:24, 25)

அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.

(அல்குர்ஆன்  41:19-23)

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். மற்றொருவர், “நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லைஎன்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், “நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்என்று கூறினார். அப்போது அல்லாஹ், “உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லைஎனும் வசனங்களை (41:22) அருளினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (4817)

ஜின்களின் சாட்சி

மனித இனத்தைப் போன்று ஜின் எனும் இனமும் படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் காட்டிலும் வலிமையான படைப்பினமான ஜின்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஜின்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நினைத்தால் நமது காரியங்கள் எப்படி இருந்தது என்பதற்கு நம்மைப் பற்றியறிந்த ஜின்களையும் சாட்சிகளாகக் கொண்டு வருவான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தியை கவனிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயித் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்என்று சொல்-விட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (609, 7548)

உயிரற்ற பொருட்களின் சாட்சி

மறுமை நாளில், ஒருவர் செய்த காரியத்தை நிரூபிப்பதற்கு அவர் அந்தக் காரியத்தை செய்வதற்குப் பயன்படுத்திய பொருட்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு நல்லவர்களும் கெட்டவர்களும் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படின் அவற்றையும் சாட்சியாகக் கொண்டுவரும் ஆற்றல் அல்லாஹ்விற்கு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவர் திருடினார் என்பதற்கு அவர் திருடிய பொருளை இறைவன் நாடினால் சாட்சியாகக் கொண்டுவருவான். ஒருவர் மார்க்கத்தை மக்களுக்குச் சொன்னார் என்பதற்கு அவர் அதற்குப் பயன்படுத்திய மைக்கையோ, எழுதுகோலையோ கூட சாட்சியாகக் கொண்டுவர முடியும். இதை விளங்கிய பிறகாவது நமது செயல்களை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையின்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.

(அல்குர்ஆன் 17:78)

அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றனஎன்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (3296)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்எனக் கூறினார்கள். 

ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.

பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றனபசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (1465, 2842)

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி‘ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (381)

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகராமற்றும் “ஆலு இம்ரான்ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகராஅத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1470)

ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனை சாட்சிகளை இறைவன் கண்டிப்பாகக் கொண்டு வருவான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. நல்ல விதமான காரியங்களைச் செய்த ஒருவர் தமக்கு வழங்கப்படும் கூலி சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அந்தளவிற்கு இறைவன் சாட்சிகளைக் கொண்டு வருவான்.

அதுபோன்று கெட்ட செயல்களைச் செய்த ஒருவர் தமக்குக் கொடுக்கப்படும் தண்டனை நியாயமானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அதற்குரிய வகையில் அவன் சாட்சிகளை ஏற்படுத்துவான். சிலருக்கு ஒரு சாட்சியே போதுமானதாக இருக்கும். சிலருக்கு இரு சாட்சிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு மறுமை நாளில் நமது செயல்களுக்கு சான்றுகள், சாட்சிகள், ஆதாரங்கள் இருக்கும் என்று மார்க்கம் சுட்டிக் காட்டுவதற்கும் நோக்கம் இருக்கிறது. நல்ல காரியங்களைச் செய்பவர்கள் நமது செயல்களுக்குத் தக்க வெகுமதிகள் கிடைக்காதோ என்று தவறுதலாக நினைத்து தளர்ந்து விடக்கூடாது. கெட்டவர்கள் எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று தைரியமாக இருந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் நாம் கவனிக்கப்படுகிறோம்; நம்மைச் சுற்றி சாட்சிகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு நல்ல முறையில் செயல்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 25

நபிமார்களை அறியாத நபிகள் நாயகம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு வானத்திற்கும் இறைவன் அழைத்துச் சென்று நபிமார்களைக் காட்டுகின்றான். மேலும் அங்கு பல காட்சிகளைக் காணச் செய்கின்றான். ஒவ்வொரு வானத்திலும் ஒவ்வொரு நபியைக் காணும் போதும் இவர் யார்? இவர் யார்? என்று வானவர் ஜிப்ரீலிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கின்றார்கள். பல நபிமார்களை அல்லாஹ் காட்டுகின்றான். ஆனால் அவர்கள் யார் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. ஜிப்ரீலிடம் கேட்டுத் தான் எல்லா நபிமார்களையும் அறிந்து கொண்டார்கள்.

என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)  அவர்கள், “இவர் தாம் இத்ரீஸ்என்று பதிலளித்தார்கள்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல  சகோதரரே வருக!என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்கள் தாம் மூசாஎன்று பதிலளித்தார்கள்.

நான் (அந்தப் பயணத்தில்) ஈஸா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும், “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தாம் ஈஸாஎன்று பதிலளித் தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் இப்ராஹீம்என்று கூறினார்கள்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 349

மிஃராஜில் தாம் சந்தித்த எந்த நபியையும் அடையாளம் தெரியாதவர்களாகவே நபிகள் நாயகம் (ஸல்) இருந்துள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது. பல நேரங்களில் நபிமார்களுக்குரிய அடையாளங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய பண்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நேரில் பார்த்த போது அவர்கள் யார் என்பதையே கண்டறிய முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் அனைத்தையும் அறியக்கூடிய ஆற்றல் இருந்திருந்தால் ஜிப்ரீலிடம் இவர் யார்? இவர் யார்? என்று கேட்டுத் தெரிந்திருப்பார்களா? அவர்களாகவே அனைவரையும் அறிந்திருப்பார்களே!

இதிலிருந்து என்ன விளங்குகிறது? யாரையும் நாம் பார்த்தவுடன் அறிந்து கொள்ள முடியாது. தெரிந்த நபராக இருந்தால் அவர் யார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். திடீரென்று நாம் பார்க்காத, நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நமக்கு முன்னால் வந்து நின்றால் நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? அவருடைய உருவம் தான் நமக்கு தெரியுமே தவிர அவர் யார்? எந்த ஊர்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியுமா? அவரிடமோ அல்லது அவரைப் பற்றித் தெரிந்த ஒருவரிடமோ கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படித்தான் நபிகளாரும் ஒவ்வொரு வானத்திலும் இதுவரை பார்க்காத அறிமுகம் இல்லாத நபிமார்களைக் காணும் போது அவர்களால் அடையாளம் கண்டறிய முடியாமல் போனது.

அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுடைய தகப்பனார் அப்துல்லாஹ் உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்படுகின்றார். அவருடைய உடல் அவரது வீட்டில் வைக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்கு வருகின்றார்கள். அப்போது ஒரு பெண்மனி ஒப்பாரி வைத்து அழுவதைக் கண்ட நபியவர்கள் இவர் யார்? ஏன் இவ்வாறு ஒப்பாரி வைக்கிறார்? என்று கேட்ட சம்பவம் புகாரியில் இடம் பெறுகின்றது. (பார்க்க: புகாரி 1293)

இந்தச் சம்பவத்தில் ஒப்பாரி வைத்த பெண்மனி அம்ருடைய மகள் ஆவார். ஆனால் நபியவர்களுக்கு அந்தப் பெண்மனி யார் என்று தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? “நீ அம்ருடைய மகள் தானே எதற்காக ஒப்பாரி வைக்கிறாய்?’ என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா? இவள் யார் என்று கேட்டு, இன்னார் என்று சொன்ன பிறகு தான் அவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.

நபியவர்கள் ஒரு நாள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற நபித்தோழரைச் சந்திக்கின்றார்கள். அந்த நபித்தோழரின் ஆடையில் திருமணம் செய்ததற்குண்டான அறிகுறிகளைப் பார்த்த நபியவர்கள், “நீ திருமணம் முடித்துவிட்டாயா? யாரை திருமணம் முடித்தாய்?’ என்று கேட்கிறார்கள். (பார்க்க: புகாரி 2048)

மேற்கண்ட சம்பவத்திலும் அந்த நபித்தோழருக்குத் திருமணம் முடிந்தது நபியவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. யாரைத் திருமணம் செய்தார் என்பதும் தெரியாமல் இருந்திருக்கின்றது. எவ்வளவு மஹர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை. மறைவானது நபியவர்களுக்குத் தெரியுமென்றால் இந்தக் கேள்வியை அந்த நபித்தோழரிடம் கேட்டிருப்பார்களா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நறுமணம் பூசியதை வைத்துத் தான் அந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கொண்டார்களே தவிர தாமாக அறிந்து கொள்ள முடிந்ததா? அதையும் கேட்டுத்தான் தெரிந்து கொண்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை  நாம் அறியலாம்.

இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். இது யாருடைய நிலம்? என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு இரவலாகக் கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு அது நன்மையானதாக இருந்திருக்கும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2634

இந்தச் சம்பவத்திலும் நபியவர்கள் அந்த தோட்டத்தைக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தோட்டத்தைப் பார்த்து விட்டு, இது யாருடைய தோட்டம் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு மறைவானது தெரியும் என்றிருந்தால் இது இன்னாருடைய தோட்டமா? பயிர்களெல்லாம் பச்சைப் பசேலென்று வளர்ந்திருக்கிறதே! இதை நன்றாக பராமரித்திருக்கின்றாரே! என்று சொல்லியிருப்பார்கள். இதுவும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைக் காட்டுகின்றது.

அது போன்று நபியவர்கள் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக சில ஆட்களை பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள். நானே உம்மைப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் சொன்ன பிறகு அந்தப் பாதுகாப்பை விலக்கிக் கொண்டார்கள்.

ஒருநாள் இரவு நபியவர்கள், இன்றைக்கு யார் என்னைப் பாதுகாக்க வருவீர்கள்? என்று அழைப்பு விடுக்கும் போது, ஒரு நபித்தோழர் நான் வருகின்றேன் என்று முன்வருகின்றார். அவரை பார்த்து நபியவர்கள், “நீ யார்?’ என்று கேட்கின்றார்கள். புகாரியில் இடம்பெற்றிருக்கும் அந்தச் செய்தி இதோ:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபின், முத-ல் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, “என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமேஎன்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “யாரது?” என்று கேட்டார்கள். வந்தவர், “நான் தான் சஅத் பின் அபீவக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.

நூல்: புகாரி 2885

இந்தச் சம்பவத்திலும் கூட அந்த நபித்தோழர் யார் என்பதைக் கேட்டுத் தான் அறிந்து கொள்கின்றார்கள்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறை நாம் எடுத்துப் பார்த்தால் நிறைய சந்தர்ப்பங்களில் சராசரி மனிதரைப் போலத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களுக்குரிய தனிச் சிறப்பு, அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருந்து வஹீ வரும். அவ்வளவுதான். மார்க்கத்தை அவர்கள் வழியாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடியும். அவர் அல்லாஹ்வின் தூதர் என்பது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடே தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்கள் மனிதராகத் தான் இருந்தார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

மேலும் இது தவிர இன்னும் பல சம்பவங்களும் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் “அர்ரவ்ஹாஎனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது “இக்கூட்டத்தினர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “முஸ்லிம்கள்என்றார்கள். அப்போது அக் குழுவினர், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர்என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?”என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டுஎன விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2377

இந்த ஹதீஸ் தெரிவிப்பது என்ன? தமக்கு முன்னால் இருந்த ஒரு கூட்டத்தைப் பற்றி, மற்றவர்களிடம் விளக்கம் கேட்டுத் தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொள்கின்றார்கள்

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) பின்தொடர்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதைப் பின்வரும் முஸ்லிம் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.

உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் “அல்பகீஉபொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன்.

நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து “ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது?உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லைஎன்றேன். அதற்கு அவர்கள் “ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்என்று கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்என்றேன்.

உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?” என்று கேட்டார்கள். நான் “ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்து விடுவானே!என்று கூறினேன். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களின் மூச்சிறைப்பை வைத்துத் தான் அவர்கள் தொடர்ந்ததைக் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர வேறு வழியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது எதுவும் தெரியாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

பகட்டுத் திருமணம்பரக்கத்தை மறுக்கும் பணக்கார வர்க்கம்

கடந்த ஜூன் 17, 2014 அன்று என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியானது. ஆனந்த்ஜி என்பவர் ஒரு பெரிய வியாபாரி! அவர் தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

திருமண அரங்கம் பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி! பத்து நாடுகளிலிருந்து விருந்தினர்கள், சமையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். பட்டத்து அரசி திருமணத்தின் பிரம்மாண்டம் அழைப்பிதழில் பளபளத்தது; பணத்தின் வலிமையைப் பறைசாற்றியது.

இதைத் தொடர்ந்து இத்தகைய டாம்பீக, ஆடம்பரத் திருமணங்கள் மீது கர்நாடக அரசின் கழுகுப் பார்வை திரும்பியுள்ளது. பணக்கார, பகட்டுத் திருமணங்களின் படோடபச் செலவுகளைக் கட்டுப்படுவதற்கு ஆடம்பர வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

“கொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்” என்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.

“கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்’ என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

“நாங்கள் தான் ஏற்கனவே 23 சதவிகிதம் வரி செலுத்துகின்றோமே! ஹோட்டலில் செலுத்தும் பில்லுக்கும் வரி செலுத்துகின்றோம்; இதற்கு வேறு தனியாக வரி செலுத்த வேண்டுமா?’ என்று இந்த ஆடம்பரக்காரர்கள் வாதிக்கின்றனர்.

இது தான் என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சியில் வந்த செய்தியின் சாரம்சம்.

கர்நாடக அரசின் சமூகப் பார்வை

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், கர்நாடக அரசு ஒரு சமூகப் பார்வையைப் பார்க்கின்றது. இந்தப் பார்வை இஸ்லாமியப் பார்வையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணத்தில் ஓர் ஆட்டை அறுத்தேனும் விருந்து வை (நூல்: புகாரி 2048) என்று கூறியிருந்தாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கின்றார்கள்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

இந்தக் கட்டுப்பாட்டை கர்நாடக அரசு கவனத்தில் கொள்கின்றது. அதற்கு அரசு கூறுகின்ற காரணம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் மிகச் சரியான, பொருத்தமான காரணமாகும். இதற்கு எதிராகப் பணக்காரர்கள் கூறும் வாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர்கள் தங்கள் பணக்காரத்தனத்தையும், பகட்டையும் தான் பார்ப்பார்கள். பாட்டாளிகள் படுபாதாளத்தில் வீழ்கின்ற பாதிப்பை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்.

இதை இஸ்லாமிய சமுதாயத்திலேயே பார்க்கின்றோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் இந்த சமூக அநீதியை நிதர்சனமாகப் பார்க்கின்றோம். பணக்காரர்களைப் போன்று தாங்களும் தங்கள் பங்குக்கு செலவு செய்ய வேண்டும் என்று கடனை வாங்கி அல்லது இருக்கின்ற சொத்துக்களை விற்று அல்லது வட்டிக்கு வாங்கி திருமணச் செலவு செய்கின்றனர்.

முஸ்லிம் தெருக்களில் உள்ள தங்களுடைய வீடுகளை விற்று விட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வீடு வாங்கிச் செல்கின்றனர். அல்லது சொந்த வீட்டை விற்று திருமணச் செலவு செய்து விட்டு, வாடகை வீட்டில் போய் குடியிருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.

இந்த அவலத்தை, சமூக அநியாயத்தை எந்த ஜமாஅத்தும் கண்டு கொள்ளவில்லை.

ஊனமான உலமாக்கள்

திமுகவினரின் திருமண விளம்பரம் முரசொலியில் முழுப்பக்கம் வருகின்றது என்றால், “உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா?’ என்று கூறி, மணிச்சுடரில் பக்கத்துக்குப் பக்கம் திருமணம் விளம்பரம் கொடுக்கின்றனர். இதனால் மணிச்சுடர் பணச்சுடராகின்றது. ஆலிம்களும் இதைக் கண்டுகொள்வதாக இல்லை. அவர்களுடைய ஒரே வேலை மணவீட்டிலும் பிணவீட்டிலும் அல்பாத்திஹா சொல்வதும், அதற்குரிய கைமடக்கைப் பெறுவதும் தான். எல்லா விஷயத்திலும் ஊமையானது போன்று உலமாக்கள் இதிலும் ஊமையாகி விட்டனர்.

உண்மையான ஒரு முஸ்லிம் திருமணம் தொடர்பான இரண்டு ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும். இரண்டையும் செயல்படுத்த வேண்டும். ஒரு சிறிய சமோசா, டீயோ அல்லது பேரீச்சம்பழமோ வினியோகித்துவிட்டால் விருந்து முடிந்து விடுகின்றது. அதே சமயம் சிக்கனமாகவும் அமைந்து விடுகின்றது. இதன் மூலம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி, நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியவராகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மறைமுகமான அருளான பரக்கத்தையும் பெற்று விடுகின்றார்.

விருந்து போடவில்லை என்றால் என் கவுரவம் என்னாவது? என்று கேட்டு, ஊர் மெச்ச ஊர் முழுக்க ஆட்களை அழைத்து விருந்து வைக்கின்றனர். விருந்து இல்லாவிட்டால் அது என்ன கல்யாணம்? ஒரு சாப்பாடு இல்லை என்றால் அது என்ன திருமணம்? என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் கூறும் பரக்கத் தொடர்பான ஹதீஸைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றார். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறி அந்த ஹதீஸை மறுக்கின்றார். இதை ஆலிம் வர்க்கமும் அல்பாத்திஹா போட்டு ஆதரிக்கின்றது.

கர்நாடக அரசு பார்க்கின்ற சமூகப் பார்வையை, இஸ்லாமியப் பார்வையை இந்தப் பணக்கார வர்க்கம் பார்ப்பதில்லை; பார்க்க மறுக்கின்றது. ஆடம்பரக் கல்யாணம், அட்டகாசக் கல்யாணம் எந்த வரம்பும் இன்றி எகிறிக் கொண்டே செல்கின்றது. இதன் எதிர் விளைவு ஏழைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஏழைகளைப் பாதிக்கின்ற இவர்களின் பணத்தை இறைவன் பறித்து விடுவதற்கு ஒரு நிமிடம் ஆகாது. அரசனும் ஆண்டியாகி விடுவான். அப்படியே இந்த உலகில் விட்டு விட்டாலும் மறுமையில் கண்டிப்பாகப் பிடித்தே தீருவான்.

உமது இறைவனின் பிடி கடுமையானது.  (அல்குர்ஆன் 85:12)

அதிலும் குறிப்பாக இவர்கள் வைக்கின்ற விருந்தின் நோக்கம் கவுரவம் தான். வலீமா என்பது நபிவழி என்ற நோக்கம் இல்லை.

பிறர் மெச்ச வேண்டும் என்று செயல்படக்கூடியவர்களுக்கான தண்டனை இதோ:

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்என்று பதிலளிப்பார்.

இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)என்று கூறுவான். பிறகு இறை வனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந் தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு வள்ளல்என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

நூல்: முஸ்லிம் 1905

தடம்புரளும் தவ்ஹீதுவாதிகள்

பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் விருந்து வைப்பவர்களுக்கு உரிய தண்டனை என்ன என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. நபிவழித் திருமணம் என்ற பெயரில் தவ்ஹீதுவாதிகளின் திருமணம், மண்டபத்தில் பல லட்சக்கணக்கான செலவில் நடக்கின்றது. இதைக் கட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஆடம்பர மண்டபத் திருமணத்திற்குப் பதிவேடு மட்டுமே உண்டு, தாயீக்களை அனுப்ப முடியாது என்ற கட்டுப்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத் தலைமை கொண்டு வந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு கொடுத்துனர். ஆனால் சிலர் எங்களுக்கு தாயீ வேண்டாம்; திருமணப் பதிவேடு மட்டும் போதும் என்று கூறி மண்டபத்தில் ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். வேறு சிலர் தாயீயும் வேண்டாம்; தப்தரும் வேண்டாம் என்று கூறி ஆடம்பரத் திருணமத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான செலவினங்கள், ஆடம்பரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் மண்டபத் திருமணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தலைமை கட்டுப்பாடு விதித்தது. ஆனால் அதே சமயம், மண்டபத் திருமணத்திற்கு ஈடாக, அல்லது அதைவிட மேலாக ஆடம்பரத் திருமணங்களை மண்டபம் இல்லாமல் நடத்துகின்றனர். இவர்கள் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்வது பெயரளவுக்குத் தான். கொள்கையளவில் இவர்கள் முழுமையாக ஏகத்துவக் கொள்கையில் வாழவில்லை என்று தான் அர்த்தம்.

திருமண விஷயத்தில் மார்க்கம் கூறுகின்ற வழிமுறைகளைப் பேணி எளிமையாக நடத்துவதற்குத் தவ்ஹீதுவாதிகள் முன்வர வேண்டும். இந்தத் திருமண விஷயத்தில் தடம் புரண்டவர்கள் தவ்ஹீதை விட்டே தடம்புரண்டு போயிருக்கின்றார்கள். இவர்களின் பட்டியலில் நாம் ஆகிவிடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

நாத்தனார்களும் நாறும் சண்டைகளும்

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பார்த்து வருகிறோம்.

கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் கணவன், மனைவியின் வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் போய்விடும்.

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்றான மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். மாமியார், மருமகள் பிரச்சனைகளுக்கு அடுத்தபடியாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணமாக அமைவது நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகள் ஆவர்.

கூட்டுக் குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்க்கைக்கிடையில் கணவனின் சகோதரிகள் குறுக்கிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளையும் அவை குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டையும் பார்ப்போம்.

குழந்தைகள் சண்டையைப் பெரிதுபடுத்துதல்

நாத்தனார்களின் பிள்ளைகளை, அவர்களது அண்ணன், தம்பியினுடைய குழந்தைகள் அடித்துவிட்டால் அதற்காக அந்தக் குழந்தைகளை அடிப்பதற்கும், கண்டிப்பதற்கும் உரிமை இருக்கின்றது. இதில் தவறில்லை. ஆனால் இதைச் சாக்காக வைத்து மச்சியிடம் இதற்காகச் சண்டையிடுகின்றனர்.

தனது சகோதரன் குழந்தைகள் செய்த அதே தவறுகளைத் தன்னுடைய குழந்தைகள் செய்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இதைப் பற்றி குழந்தையின் தாய், அதாவது அண்ணி தட்டிக் கேட்டு விட்டால் போதும். அவள் தன் தாய் வீட்டிற்குப் போய் விடவேண்டியது தான். அந்த அளவிற்குப் பிரச்சனை பெரிதாகிவிடுகின்றது.

இதில் தன் பிள்ளைக்கு ஒரு நியாயம்; தன் அண்ணியின் பிள்ளைக்கு ஒரு நியாயம் என்று நியாயமின்றி நாத்தனார்கள் நடக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது, (“மக்ஸூமிஎனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், “அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?” என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?” என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, “அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்என்றார்கள்.

அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை, அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.

நூல்: முஸ்லிம் 3486

குழந்தைகள் வந்ததற்குப் பிறகு இனியும் கூட்டுக் குடும்பம் சரிவராது என்று பலர் கூறுகின்றனர். குழந்தைகளிடத்தில் பக்குவம் கிடையாது, பின்விளைவுகளையும் அது அறியாது. ஆனால் பெரியவர்களோ சிறுபிள்ளைத்தனமாக குழந்தைகள் சண்டையைப் பெரிதுபடுத்துகின்றனர். இதில் சரியான அணுகுமுறைகளைக் கையாண்டாலே இது போன்ற பிரச்சனைகள் பெரிதாகாது என்பதை, குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உணரவேண்டும்.

வீட்டு வேலைகளைச் செய்யாமல் புறக்கணித்தல்

நாத்தனார்கள், வீட்டு வேலைகளில் தங்கள் அண்ணிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். தங்கள் வேலைகளைக் கூட தங்கள் அண்ணி தான் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். தாங்கள் டீ குடித்த தம்ளரைக் கூட கழுவி வைக்கக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

அதாவது வீட்டின் மருமகள் தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஒருவர் மற்றவர்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளுக்கு நன்மை இருக்கின்றது என்று கூறிய மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா நற்செயல்களும் தர்மமே.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6021

இப்படிப்பட்ட மார்க்கத்தில் இருந்து கொண்டு, தனது வேலைகளைக் கூட மற்றவர்களிடத்தில் திணிப்பது எவ்வகையில் நியாயம்?

ஒருவர் விரும்பி மற்றவர்களுக்கு உதவிகள் செய்தால் அது நன்மையைப் பெற்றுத்தரும். ஆனால் நாத்தனார் கூறியதற்காக அவள் செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டால் அது அநியாயத்தில் போய்ச்சேரும். எனவே நாத்தனார்கள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளில் அண்ணிக்கு உதவியாக இருக்க வேண்டும். தங்கள் வேலைகளையும் சேர்த்து அண்ணியிடம் திணிக்கக் கூடாது. இந்த வேலைச் சுமையே சில சமயங்களில் குடும்பம் பிரிவதற்குக் காரணமாக அமைகின்றது.

தங்களை தனது அண்ணி உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். மார்க்கத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதரே தமது சொந்த வேலைகளைத் தாமே செய்துள்ளார்கள். மனைவி தமக்காக வேலை செய்து தரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அத்துடன் வீட்டு வேலைகளிலும் உதவியாக இருந்துள்ளார்கள்.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 6039

ஆனால் இந்த நாத்தனார்களோ, தங்களுடைய சொந்த வேலைகளைக் கூட வீட்டிற்கு வந்திருக்கும் பெண் தான் செய்ய வேண்டும்; அதுவும் சொல்லாமலே செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு செய்யவில்லையென்றால் அதனைப் பிரச்சனையாக்குகின்றனர். இவ்வாறு நடந்து கொள்வது குடும்பத்தில் உள்ள அனைவரின் நிம்மதியையும் கெடுக்கின்றது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

மாமியார் கொடுமைகளுக்கு அடுத்தபடியாக நாத்தனார் பிரச்சனைகளால் பிரிந்த கணவன் மனைவிகள் எத்தனை பேர்? தன்னுடைய சகோதரன் தனிக்குடித்தனம் சென்று விடக்கூடாது என்றே நாத்தனார்கள் விரும்புகின்றனர். ஆனால் இதுபோன்ற வேலைச்சுமைகளின் காரணமாகவே தனிக்குடித்தனம் அல்லது விவாகரத்து போன்ற சம்பவங்கள் அந்த குடும்பத்தில் நடந்துவிடுகின்றது.

இந்த நாத்தனார்கள் தாங்கள் தனிக் குடித்தனம் இருந்தாலும், அண்ணி தன் கணவனுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதிலும் தனக்கு ஒரு நீதி; அடுத்தவருக்கு ஒரு நீதி என்றே நடக்கின்றனர்.

பெண் கொடுத்து பெண் எடுத்த குடும்பங்களில் ஒரு கொடுமை நடக்கின்றது. ஒரு மருமகள் தவறு செய்து, அதனால் அவளை அவளது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் போதும். என் மகளை எப்படி இவ்வாறு செய்வீர்கள்? அல்லது என் தங்கையின் வாழ்க்கையையா கேள்விக்குறியாக்கினீர்கள்? என்று மாமியாரும் கணவனும் சேர்ந்து கொண்டு தவறே செய்யாத இன்னொரு பெண்ணைத் தண்டிக்கிறார்கள். இதற்குத் தூண்டுகோலாக இருப்பதும் நாத்தனார் தான். அந்தப் பெண்ணின் வீட்டார் என்னைத் துரத்தி விட்டதால் அந்தப் பெண் இந்த வீட்டில் வாழக்கூடாது என்று இந்த நாத்தனார்கள் தனது சகோதரனை நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் இரண்டு குடும்பங்களிலும் பிரச்சனை முற்றி விவாகரத்தில் போய் முடிகின்றது.

தான் மட்டும் தன் கணவன் வீட்டில் மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன் தாய் தன்னுடைய மருமகளை நல்ல முறையில் வைத்திருப்பதாகவும், அவள் சொகுசாக வாழ்வதாகவும் எண்ணிக் கொண்டு, குரோத மனப்பான்மையுடன் பொறாமை உணர்வோடு தனது அண்ணியிடம் நடந்து கொள்கிறார்கள்.

கோள் மூட்டுதல்

தனது சகோதரனிடமும், தாயிடமும் அண்ணியைப் பற்றி எதையாவது சொல்லி கோள் மூட்டி பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கள்) பேசிக் கொள்வதை ஒரு மனிதர் (ஆட்சியாளர் வரை கொண்டுபோய்) கோள் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்என்றார்கள். 

நூல்: முஸ்லிம் 168

தனக்கு ஒரு நீதி; பிறருக்கு ஒரு நீதி!

தன் சகோதரன் அவனது மனைவியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அவளுடன் சகஜமாகப் பேசக்கூடாது. கணவன் மனைவி தனியாக வெளியே சென்றால் தன்னையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லவில்லையென்றால் அதையே நினைத்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பெண் வீட்டில் உள்ள சிறுவர்கள் உட்பட அனைவரும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வேலை செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

நாத்தனாரின் தாய் வீட்டிற்கு, அவளது கணவன் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். என் தாயாருக்கு அதை வாங்கித் தாருங்கள்; என் தந்தைக்கு இதை வாங்கித் தாருங்கள் என்றெல்லாம் தங்கள் கணவனிடம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தன் அண்ணியின் தாய் வீட்டிற்கு, அதாவது தனது சகோதரன் அவனது மாமியார் வீட்டிற்கு ஏதாவது உதவிகள் செய்துவிட்டால் போதும். “என்ன சொக்குப் பொடி போட்டாளோ? கணவனை வளைத்துப் போட்டு அவனது வருமானத்தையெல்லாம் இவள் வீட்டிற்குத் தான் கொண்டு போகிறாள்’ என்று அண்ணியைக் குத்திக் காட்டிப் பேசுகின்றார்கள்.

அண்ணியின் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தால் கூட, அதற்காக அண்ணனையும் அண்ணியையும் சேர்த்து இடித்துரைக்கிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

நூல்: புகாரி 13

இவ்வாறெல்லாம் குடைந்து குடைந்து கேள்வி கேட்பதன் விளைவுதான் பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய மனைவிக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களை வீட்டில் உள்ள தன் தாய் தங்கைகளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொடுக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களை அவனது மனைவி குழந்தைகளுக்குக் கொடுப்பது கூட அவனது தாய்க்கும் (மாமியாருக்கும்) அவனது அக்கா தங்கைகளுக்கும் (நாத்தனார்களுக்கும்) பிடிக்கவில்லை. இதை எனக்குத் தந்தால் என்ன? எல்லாவற்றையும் பெண்டாட்டியிடமே கொண்டு போய் கொட்ட வேண்டுமா? என்று கேட்கத் துவங்கிவிடுகின்றனர்.

இதைப் புரிந்து கொண்ட ஆண்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்குவதற்கு முன்பே தன் தாய் வீட்டிற்கு பார்சல் அனுப்புவது போல ஒரு பார்சலை தன் குடும்பத்திற்குத் தெரியாமல் மனைவியின் வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர்.

ஒருவன் தனது மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதற்கும் இறைவனிடம் கூலி வழங்கப்படுகின்றது.

அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் செய்வதற்கு) நீ செலவழித்த ஒரு தீனார்! அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார்! ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார்! உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்த ஒரு தீனார்! இவற்றில் மாபெரும் கூலியைக் கொண்டது உனது குடும்பத்தாருக்கு நீ செலவழித்த தீனார் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1661

இப்படிப்பட்ட மார்க்கத்தில் இருந்துகொண்டு தனது மûனைவி, மக்களுக்கு பயந்து, பயந்து செலவு செய்யும் நிலை ஒரு ஆணுக்கு ஏற்படலாமா? இதற்குக் காரணமாக அமைவது இந்த நாத்தனார்கள் தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 15

ஆணாதிக்கம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஒழுக்கத்தைப் பேணி வாழ்வதுதான் குடும்பவியலுக்கு மிகவும் அடிப்படை என்பதற்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.

இஸ்லாமிய குடும்பவியலைப் பொறுத்தவரை, அதற்கென அடிப்படையான விதிகள் உள்ளன. அந்த அழுத்தமான விதிகளின் படிதான் இஸ்லாமிய குடும்பவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் என்னவென்பதை ஒவ்வொன்றாகத் தெரிந்து, தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நம்முடைய குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக, சரியான வாழ்க்கை நெறியில் அமைந்த குடும்பமாக இருக்கமுடியும்.

ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும்

இஸ்லாமிய குடும்பவியலில் முக்கிய அம்சம் என்னவெனில், ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பத்தைக் கட்டியமைக்கின்றனர்.

பொதுவாக எங்கெல்லாம் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்து ஒரு நிர்வாகம் செய்ய வேண்டிய நிலைமை வருகிறதோ, அப்போது அவர்களில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். நிர்வாகம் இல்லாத இடத்திற்குத் தலைமை தேவையில்லை. உதாரணத்திற்கு, இரண்டு நபர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்; நன்றாகப் பழகுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எந்த நிர்வாகமும் கிடையாது. எந்த வரவு செலவும் கிடையாது.

அதே நேரத்தில் இருவர் சேர்ந்து ஒரு நிறுவனத்தையோ, தொழிலையோ, கடையையோ அமைத்தால் அங்கே ஒரு நிர்வாகம் அமைந்துவிடுகிறது. எங்கெல்லாம் நிர்வாகம் அமைகிறதோ அங்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு முடிவை மேற்கொண்டார்களானால் அந்த நிர்வாகம் சீரழிந்துவிடும். அதற்கு யாராவது ஒரு நபர்தான் தலைமை தாங்க வேண்டும்.

ஆக, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் என்ற நிர்வாகத்தைக் கட்டியமைக்கின்ற போது அதற்குத் தலைவர் யாராக இருக்க வேண்டும்? இது மிக முக்கியமான விஷயம்.

இஸ்லாத்தைப் பொறுத்தளவில், குடும்பத்தின் தலைவனாக ஆண்தான் இருக்கிறான். குடும்பத்தின் தலைவனாக, நிர்வகிக்கக் கூடியவனாக, குடும்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவனாக, கண்காணிப்பவனாக, நல்லது கெட்டது என்ற பொறுப்பை ஏற்றுச் செயல்படுத்துபவனாக ஆண் தான் திகழ்வான் என்பது இஸ்லாமியக் குடும்பவியலில் மிக முக்கிய அடிப்படை விதி.

இறைவன் முதலில் ஆணைப் படைத்து, அந்த ஆணிலிருந்துதான் பெண்ணை படைத்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே ஆணைப் படைத்து விட்டு அவனுக்குத் துணையாக பெண் அந்த ஆணிலிருந்து படைக்கப்பட்டதால் பெண்ணை விட ஆணுக்கு முதலிடம் இஸ்லாத்தில் வழங்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

அல்குர்ஆனின் 4:01, 7:189, 39:6 ஆகிய வசனங்களில் ஆணைப் படைத்து அந்த ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து ஆணின் முக்கியத்துவத்தை சொல்கிறான் அல்லாஹ்.

அதேபோன்று, ஆண் தான் நிர்வகிக்க வேண்டும் என்ற தெளிவான கட்டளையையும் அல்லாஹ் பிறப்பிக்கிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

அல்குர்ஆன் 4:34

இஸ்லாமியக் கட்டமைப்பில் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வசனம் சொல்கிறது. ஒருவரை விட ஒருவரை அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அதாவது பெண்களை விட ஆண்களுக்கு சில சிறப்புத் தகுதிகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்ற காரணத்தினாலும், ஆண்கள் தங்களது பொருளாதாரத்தை மனைவிமார்களுக்காகச் செலவிடுகிறார்கள் என்ற காரணத்தினாலும் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இதுதான் இஸ்லாத்தில் குடும்பவியலின் அடித்தளம். ஆண்கள் தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் அதற்கான இரண்டு காரணங்களையும் சொல்கிறான். குருட்டுத்தனமாக இந்த விதியை உருவாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ஆண்களுக்குத்தான் அதற்குத் தகுதி இருக்கிறது; அந்தச் சிறப்பை அல்லாஹ் ஆண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான் என்பது ஒரு காரணம். அவனுடைய பொருளாதாரத்தில் தான் அந்தக் குடும்பம் இயங்குகிறது என்பது மற்றொரு காரணம். நல்லது கெட்டது அனைத்திற்குமான செலவுகள் ஆண் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் மீது எந்த ஒரு பொருளாதாரச் சுமையும் சுமத்தப்படவே இல்லை. அவளாக விரும்பிச் செய்யும் செலவுகள் என்பது வேறு விஷயம்.

ஒரு பெண் கணவனின் நல்லது கெட்டதற்குப் பொறுப்பாவாளா? குடும்பத்தின் செலவுகளுக்குப் பொறுப்பாளியாவாளா? கிடையாது. இவ்வளவு ஏன்? ஒரு குடும்பத்தில் அவள் நுழைந்துவிட்டால் எனில் அவளது சாப்பாட்டிற்குக் கூட அவள் பொறுப்பாளி இல்லை. அதற்கும் ஆண் மீது தான் பொறுப்பு என்று சுமத்தப்பட்டிருக்கும் போது ஆண் இயல்பாகவே நிர்வகிப்பதற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

அதேபோன்று இஸ்லாமியக் குடும்பவியலில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கும் உரிமை இருக்கிறது; பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆண்களுக்கும் கடமைகள் இருக்கின்றன; பெண்களுக்கும் கடமைகள் இருக்கின்றன. பெண்களை அடிமையாக ஆக்கிவிடவில்லை என்பதைக் கீழ்க்காணும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

பெண்கள் ஒரேயடியாக குடும்பத்திற்கு சேவைகள் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. அதில் கணவன் செய்ய வேண்டியவைகளும் இருக்கிறது. அதாவது பெண் தனது கணவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கடமை. பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டியது பெண்களின் (மனைவி) உரிமை.

எனவே பெண்களுக்கு வெறுமனே கடமைகளை மட்டுமே சுமத்திவிடவில்லை இஸ்லாம். அவர்களது உரிமையையும் கொடுக்கிறது. ஆனாலும் பெண்களை விட ஒருபடி மேல் ஆண்களுக்குத் தகுதி இருக்கிறது, ஒரு படித் தரம் அதிகமாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இப்படிச் சொன்னதால் ஆண்களுக்கு தற்பெருமை தலைக்கு ஏறிவிடக் கூடாது என்பதால் எல்லாவற்றும் மேலாக உயர்ந்தவனாக மனிதனைப் படைத்த அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் “அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ என்று சேர்த்து அவ்வசனத்தில் முடிக்கிறான்.

பெண்களை விட ஆண்கள் ஒருபடி மேல்தான் எனினும் ஆணை விடவும் எல்லாவற்றையும் விட நான் மேலானவனாக இருக்கிறேன் என அல்லாஹ் உணர்த்துகிறான்.

இது இஸ்லாமிய குடும்பவியலின் அடிப்படைக் கொள்கையாகும். அதாவது ஒவ்வொரு ஆணும் தான்தான் தனது குடும்பத்தின் பொறுப்பாளர் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனின் நிர்வாகத்திற்குக் கீழ்தான் இருக்க வேண்டும். கணவனின் தலைமைப் பொறுப்புக்கு நாம் கட்டுப்பட வேண்டும். அதுதான் நமக்கு சுமத்தப்பட்ட கடமை என்பதைப் பெண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அறிவுஜீவிகளின் அறியாமை

இதனை விரிவாக அலசி ஆராய்வதற்கு முன், இன்றைய உலகில் இது குறித்து என்ன கருத்து நிலவுகிறது என்பதையும் தெரியவேண்டும். ஏனெனில் ஆண்தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என நாம் சொல்லும் போது, சமூகத்தில் தங்களை முற்போக்குவாதிகள் போன்று காட்டிக் கொள்ளும் சில ஆண்களும் சில பெண்களும் இது ஆணாதிக்க சமூகம் என்று அருவருக்கத்தக்க ஒரு சொல்லைப் போன்று விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் ஆண் தலைவராக இருந்து குடும்பத்தைப் பராமரிப்பது கெட்டது போன்றும் இழிவானது போன்றும் மடமையானது போன்றும் அடிமைத்தனம் போன்றும் சித்தரிக்கின்றனர். ஆண் ஆதிக்க சமுதாயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்கத் தேவையில்லை என்று சொல்வதை முற்போக்குத்தனமாக நினைக்கிறார்கள். அதுதான் பெண்களுக்கான சுதந்திரம் என்றெல்லாம் பேசுகின்றார்கள்,

இஸ்லாமிய வட்டத்துக்குள் இல்லாத இவர்கள் இஸ்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படையில் இவர்களுக்கு அறிவுரை கூறுவது பயனளிக்காது. அறிவின்படியும் அறிவியல் முடிவின்படியும் இவர்களுக்கு நாம் அறிவுரை கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அறிவியல் அடிப்படையில் பார்த்தாலும் அவர்களின் பேச்சு அறிவியலுக்கு எதிரானது. அவர்கள் பேசுவது எழுதுவது பெண்களின் உடற்கூறு விஞ்ஞானத்திற்கும் எதிரானது.

ஏன் இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால், இந்தப் பெண்கள் தங்களது கணவனிடம் குடும்ப வாழ்க்கையில் சரியான இன்பத்தையும் சந்தோஷத்தையும் அடையாதவர்களாக இருப்பதால், கணவனல்லாத தவறான வழிமுறைகளில் தங்களது இன்பத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்வதற்காக “பெண்களின் உரிமைக்காக போராடுகிறோம்’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தங்களது தவறைச் சரிகாண்கின்றனர்.

ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை. அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான் அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை.

இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால் அந்த உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் வெறுப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

“புரட்சி’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம் என்பதற்காக இப்படி “பெண் உரிமை’ என்றும் “ஆண் ஆதிக்க எதிர்ப்பு’ என்றும் கிளம்பிவிடுகிறார்கள்.

பெண் சுதந்திரம் என்று உளறிக் கொண்டு, எந்த ஆணுடனும் சுற்றித் திரியலாம், எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம், வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலத்திற்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்று நினைக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால் ஆண் ஆதிக்கம், பெண்ணின் சுதந்திரம் பறிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுவாôர்கள். அதையும் முற்போக்கு போன்று பேசுவார்கள். ஆனால் அவர்களது கருத்தும் பேச்சும்தான் பிற்போக்குத்தனமானது. அறிவியலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் கூட எதிரானது.

அதே போன்று மனைவியை சந்தோஷப்படுத்த முடியாத ஆண்களில் சிலர், இதனால் தனது ஆண்மைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்பதாலும் தனது மனைவி தன்னைப் பற்றி வெளியில் பரப்பிவிட்டால் தனது நிலை என்னவாகும்? என்று அஞ்சுகிறவர்களும் இந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, ஆண் ஆதிக்க சமூகத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பார்கள். அதாவது தன்னிடமுள்ள குறை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக தனது மனைவி எவருடனும் செல்வதை ஏற்றுக் கொண்டும் வாழ்கிற இத்தகையவர்கள் ஆண் ஆதிக்க எதிர்ப்பு ஆண்களாக சமூகத்தில் வலம் வருவார்கள்.

முற்போக்கு என்ற நோய் பிடித்த சில ஆண்கள், கண்ட பெண்களுடனும் உல்லாசமாக இருப்பதற்காகவும் சட்ட விரோதமாக சந்தோஷத்தைப் பெறுவதற்காகவும் ஒரு ஆணும் பெண்ணும் தனது இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம் என்ற கருத்தை ஆதரிப்பார்கள். அதாவது பலான மாதிரித் திரிய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஆணாதிக்க எதிர்ப்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தன்னை ஒரு முற்போக்காளனாகக் காட்டிக் கொள்வார்கள்.

முதலாவது புரிய வேண்டிய செய்தி, எந்த நிர்வாகமாக இருந்தாலும் ஒரு ஆதிக்கம் இல்லாமல் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? ஆதிக்கம் இல்லாமல் எந்த நிர்வாகத்தையும் நடத்தவே முடியாது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், ஒரு பள்ளிக் கூடம் இருக்கிறது. அதை ஒரு தலைமை ஆசிரியர் நிர்வாகம் செய்வார். அதாவது ஆதிக்கம் செலுத்துவார். உடனே இந்த முற்போக்குகள் சொல்வதைப் போன்று ஒரே தலைமை ஆசிரியரின் ஆதிக்கமாக இருக்கிறது என்று குறை சொல்லமுடியுமா?

பள்ளிக்கூடம் என்றால் அதற்கு ஒரு தலைமையாசிரியர் தான் நிர்வாகம் செய்யவேண்டும். அதுதான் சரியானது. அல்லது மாணவர் ஆதிக்கம் செய்வதா? அதையாவது இந்த முற்போக்குகள் சொல்வார்களா? அல்லது ஒருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒருவரும் ஆதிக்கம் செலுத்தாவிட்டால் அந்த நிர்வாகம் ஒழுங்காக நடக்குமா?

ஒரு கடையில் முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு வர்க்கத்தினர் இருக்கத்தான் செய்வார்கள். முதலாளி ஆதிக்கம் செலுத்தினால், முதலாளிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்று கூக்குரலிட முடியுமா? கடைக்குச் சொந்தக்காரன்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். இதில் எந்த வியப்புக்கும் அவசியமில்லை. ஆதிக்கம் என்பது கெட்டதா? நல்லதா? என்பதை முதலில் முடிவு எடுக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துவது என்றால் நிர்வாகம் செய்வது என்று பொருள். ஒழுங்காக ஆதிக்கம் செலுத்தினால்தான் கண்காணித்தால்தான் எந்த நிறுவனமும் சரியாக நடக்கும்.

குடும்பத்தில் அது நடக்கிறதா? இது நடக்கிறதா? குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் போடுவதும், மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா? இல்லையா? என்பதையெல்லாம் கவனிப்பதும் தானே நிர்வாகம். அதுதான்ஆதிக்கம் செலுத்துதல் என்பதாகும்.

இதைத் தவறு என்று சொல்வார்களேயானால், அடுத்து என்ன சொல்ல வருகிறார்கள்? இரண்டு விஷயத்தைத் தான் இவர்களால் சொல்ல முடியும். ஒன்று, ஆணிடம் இருக்கும் தற்போதைய நிர்வாகத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது. அதாவது பெண் ஆதிக்கம். இரண்டாவது, ஆணிடமும் பெண்ணிடமும் நிர்வாகம் இருக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும்.

நிர்வாகமே தேவையில்லை என்று மூளை கழன்றவர்கள் தான் சொல்வார்கள். ஒரு நபர் தனியாக இருக்கிற போது அவர் எந்த நிர்வாகத்தின் கீழும் வரமாட்டார். ஒருவருடன் மற்றவர்கள் சேர்கின்ற போது அதில் நிர்வாகம் வந்துவிடும். அவர்களுக்கிடையே நடக்கிற கடன்கள், கொடுக்கல் வாங்கல்கள் வந்துவிடுமாயின் அதில் ஒரு நிர்வாகம் (ஆதிக்கம்) இருக்க வேண்டும். ஆளாளுக்குச் செலவழித்தால் கணக்கு வழக்குகள் நாசமாகிவிடும். ஒரு கடைக்கு இரண்டு முதலாளிகள் இருந்து ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பொருளாதாரத்தை எடுத்தால் கடை இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். ஒரு நிர்வாகம் என்ற திட்டமிடுதல் பிரகாரம் நடத்தினால் தான் கடையை ஒழுங்காக நடத்திட முடியும்.

எனவே ஆண் நிர்வாகம் செய்வது, அல்லது பெண் நிர்வாகம் செய்வது, அல்லது யாரும் நிர்வாகம் செய்யக் கூடாது என்று மூன்று விதமாகத்தான் நிர்வாகத்தைப் பிரிக்க முடியும். ஆணும் பெண்ணும் சேர்ந்து என்றால் அதில் யாரையாவது  ஒருவரைத்தான் தலைமையாக ஏற்க வேண்டும். எனவே இந்த மூன்று அம்சங்களில் மூன்றாவதான, “யாரும் நிர்வாகம் செய்யவேண்டாம்’ என்பதை அறிவு ஏற்றுக் கொள்ளாது.

ஆண் தேவையில்லை, பெண் நிர்வகிக்க வேண்டும் என்றால் அதற்குப் பெயர் பெண் ஆதிக்கம் என்று வரும். ஆண் செய்கிற எல்லாவற்றையும் பெண்ணால் செய்ய முடியுமா? என்பதற்கு அறிவுப்பூர்வமாக, உடல்கூறு விஞ்ஞானத்தின் மூலமும் நடைமுறை சாத்தியம் என்ற அடிப்படையிலும் பதில் சொல்ல வேண்டும்.

ஆண் செய்யும் அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும் என்று இவர்கள் வாதிக்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பொய். மீடியாக்களும் பத்திரிக்கைகளும் இந்தப் பொய்யை திரும்பத் திரும்ப சரியானது போன்று  காட்டுவதால் மக்களிடம் ஆண் ஆதிக்க சமூகம் என்ற வார்த்தை தவறுதலாகவும் இழிவானதாகவும் கருதப்படுகிறதே தவிர மற்றபடி அதில் எந்த உண்மையும் அதில் இல்லை. இதுதான் கோயபல்ஸ் தத்துவம். கோயபல்ஸ் தத்துவம் என்றால் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப உண்மை போன்று சொல்லிக் கொண்டிருப்பது. உதாரணத்திற்கு குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்பதைப் போன்றதாகும்.

தமிழில் ஆட்டைக் கழுதையாக்கும் வேலை என்று ஒரு கதை சொல்வார்கள். அதாவது, ஒருவன் ஆட்டை வாங்கிக் கொண்டு போகின்ற வழியில் நான்கு பேர் திட்டமிட்டு அவனது ஆட்டைப் பறிப்பதற்காக ஆட்டை கழுதை என்று சொல்லி அவனது மனதை மாற்றும் செயலில் இறங்குகிறார்கள். அதில் ஒருவர், “கழுதையை ஓட்டிக் கொண்டு போகிறாயே! உனக்கு என்ன ஆனது?’ என்று கேட்டதும், ஆட்டை ஓட்டிச் சென்றவன் சண்டை போடும் அளவுக்கு, ஆட்டைத்தான் நான் கொண்டு செல்கிறேன் என்று பதில் சொல்கிறான்.

இன்னும் சிறிது தூரத்தில் இன்னொருவன் அதே போன்று, “கழுதையைக் கூட்டிச் செல்கிறாயே! உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்கிறான். அப்போது ஆட்டை இழுத்துச் செல்பவனுக்கு இலேசாக மனதில் சலனம் ஏற்படுகிறது. முதலில் கேட்டவனிடம் சண்டை போடும் அளவுக்குப் பதில் சொன்னவன், கொஞ்சம் நிதானமாக பதில் சொல்கிறான்.

சிறிது தூரத்தில் இன்னொருவன் இதுபோன்றே கேட்டதும், தன் மனநிலையில் தான் கோளாறு இருக்கிறதோ, நம் பார்வைக்குத் தான் கழுதை ஆடாகத் தெரிகிறதோ என்கிற நிலைக்குள் தள்ளப்பட்ட பிறகும் ஆட்டைக் கூட்டிச் செல்கிறான்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் அதே போன்றதொரு கேள்வியை நான்காம் நபர் கேட்டதும், ஆட்டைக் கூட்டிச் செல்பவனின் மனதில், “நிச்சயம் நாம் ஒரு கழுதையைத் தான் கூட்டிச் செல்கிறோம். நமது பார்வையில் தான் தவறு இருக்கிறது; அல்லது நமது மனநிலை தான் கழுதையை ஆடாக ஏற்று இருக்கிறது. இப்படியே நமது ஊருக்குப் போனால் ஊர்வாசிகள் அனைவரும் நம்மைக் கேள்வி கேட்டால் நமக்கு இழுக்காகிவிடும்’ என்றெண்ணி ஆட்டை விட்டுவிட்டுச் செல்கிறான்.

இந்தக் கதையைப் போன்றுதான் இன்றைய மீடியாக்களும் பத்திரிக்கைகளும் திட்டமிட்டு ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கிற உண்மையை ஆண் ஆதிக்க சமூகம் என்ற பொய் குற்றச்சாட்டைக் கூறி, தவறான விமர்சனம் மூலமாக ஆட்டைக் கழுதையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஆண் ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதினால், முதலில் படிக்கும் போது இவர்கள் கிறுக்கர்கள் என்று நினைப்போம். இரண்டாவது படிக்கிற போது, நமக்குத்தான் புரியாமல் இருக்கிறதோ என்று நினைப்போம். இப்படியே திரும்பத் திரும்பக் கேட்கிற போது அவர்கள் சொல்வதுதான் சரியானது என நமது மனது ஏற்றுக் கொள்கிறது. எனவே இவர்கள் எத்தனை தடவை சொன்னாலும் இது ஒரு பொய். இந்தப் பொய்யை உண்மையாக்கும் வேலையில் இவர்களை வெற்றி காண விடக் கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

எனவே முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை, பணம் கொடுக்கல் வாங்கல் நடக்கின்ற சூழல் ஏற்பட்டால், ஒருவருடைய தேவைகள் இன்னொருவரினால் நிறைவடைந்தால் அதற்கு ஒரு நிர்வாகம் தேவைப்படுகிறது. அந்த நிர்வாகம் ஒரு தலைமையின் கீழ் செயல்படுவது அவசியத்திலும் அவசியமாகிறது. ஒரு தலைவர் நிறுவனத்தை நடத்துகிறார் என்றால் அதனை தலைவர் ஆதிக்கம் என்று குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிறுவனத்தை அதன் தலைவர் ஆதிக்கம் செலுத்துவது தான் அந்த நிறுவனம் ஒழுங்காக இயங்குகிறது என்பதற்கான அடிப்படை. அதை ஆதிக்கம் என்று கொச்சைப்படுத்துவதை ஏற்கக் கூடாது. தலைவர் நிறுவனத்தை ஆதிக்கம் செலுத்தாவிட்டால் வேறு யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என இந்த மூடர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

இப்படி ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கிற நிறுவனம் தான் குடும்பம் என்பது. அதில் யார் ஆதிக்கம் செலுத்துவது நல்லது என்ற கேள்விகள் வரக்கூடாது என்பதால் ஒரு ஆண்தான் பெண்ணை நிர்வாகம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அதாவது முடிவு எடுக்கும் கடைசி அதிகாரம் ஆணுக்குத் தான் இருக்கிறது என்று இஸ்லாம் கூறுகிறது.

—————————————————————————————————————————————————————-

ஒட்டகம் ஓர் அற்புதம்

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

அல்குர்ஆன் 88:17

இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது!

தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ:

50 டிகிரியிலும் வியர்க்காது

ஆடுகளையும், மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.

இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.

ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.

பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய்ப் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.

ஒட்டகத்தின் தண்ணீர் அறை

பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்?

உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.

ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.

இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதால் தான் ஒட்டகத்தைப் “பாலைவனக் கப்பல்’ என்றழைக்கிறார்கள்.

நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இவை இந்து தமிழ் நாளிதழில் வெளியான தகவல்களாகும். இந்தக் கட்டுரை ஒட்டகத்தின் அற்புதத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றது. நாம் இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

30 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் ஒட்டகத்தின் உடல்வாகையும் வலிமையையும் இந்தக் கட்டுரை விவரிக்கின்றது.

மனித உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் வளிமண்டல வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பத்தை மனித உடல் தாங்காது என்பதற்காக, அதைக் குளிர்விப்பதற்காக வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை மழையை இறைவன் கொட்டச் செய்கிறான்.

இதனால் மனித உடலில் தண்ணீர் இருப்பு குறைகின்றது. அதைச் சரிகட்ட தாகம் எடுக்கின்றது. குடம் குடமாக நீரை உடலில் கொட்டி இழந்த நீர்ச்சத்தை மனிதன் ஈடுகட்டி விடுகின்றான். கோடையில் மனிதனின் நிலை இது!

ஆனால் ஒட்டகத்தின் நிலை இப்படி இருந்தால் என்னாவது? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மனிதனை அது சுமந்து செல்கின்றது. அதனுடைய உடலில் Flexible Thermostat எனும் எளிதில் வளையத்தக்க வெப்ப நீர்நிலைக் கருவி போன்ற அமைப்பு உள்ளது. அதனால் அதன் உடல் 42 டிகிரி வெப்பநிலையை அடைகின்ற வரை அதற்கு வியர்ப்பதில்லை. 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு 8 நாட்கள் உணவு, நீர் இன்றி ஒட்டகம் உயிர் வாழும்.

ஒட்டகம் ஒரு தடவை தண்ணீர் குடித்தால் தனது உடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சுமார் 137 லிட்டர் தண்ணீரைக் குடித்துக் கொள்கிறது. ஒட்டகம் குடிக்கின்ற தண்ணீர் அதன் உடலில் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? இந்தத் தண்ணீர் ஒட்டகத்தின் திமில்களில் தான் சேமித்து வைக்கப்படுவதாகப் பரவலாக நம்புகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!

திமில்களில் இருப்பது சுமார் 40 கிலோ அளவிலான கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு, ஒட்டகத்தின் உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கின்றது. வெப்பத்தின் தாக்கம் உள்ளே பாயாமல் காக்கும் அரணாகத் திகழ்கின்றது.  இந்தக் கொழுப்பு Metabolism – வளர்சிதை மாற்றம் அடைகின்ற போது, அதாவது உடலுக்குத் தேவையான சத்தாக மாறுகின்ற போது, அப்பொழுதும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது.

அதன் ஒவ்வொரு கிராம் கொழுப்புக்கு ஈடாக ஒரு கிராம் தண்ணீரை ஒட்டகத்தின் உடல் பெறுகின்றது. ஒட்டகம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன் இந்த எதிர் வினையாக்கத்தை நிகழ்த்துகின்றது.

குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டுப் பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.

நீர்ச்சத்து வீணாவதை விட்டும் தடுக்கக்கூடிய வகையில் தான் ஒட்டகத்தின் குடலும், சிறுநீரகமும் மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் சிறுநீர் மிகவும் அடர்த்தியானதாகும். இதன் அடர்த்தி கடல்நீரை விட அதிகமானது. அதன் சிறுநீர் மருந்துத் திரவம் அல்லது பழச்சாறு போன்று அமைந்திருக்கின்றது. ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.

உக்ல்அல்லது “உரைனாகுலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினார்கள்.

நூல்: புகாரி 233

நபி (ஸல்) அவர்கள் உரைனா கூட்டத்தினரை ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கச் சொன்னதன் அறிவியல் உண்மையும் நமக்குப் புலனாகின்றது.

ஒட்டகம் ஓர் அனைத்துண்ணி ஆகும். சைவம், அசைவம் என அனைத்தையும் சாப்பிடுகின்ற கால்நடைப் பிராணி ஆகும்.

பெரும்பான்மையான பாலைவன உணவு உலர்ந்த, முள்ளடர்ந்த தாவர இனங்கள். எத்தகைய கூரிய முட்செடிகளையும் இழுத்து வளைத்து சாப்பிடக்கூடிய அளவுக்கு அதனுடைய உதடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜீரண உறுப்புக்களும் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாமிசம், எலும்பு, உப்பு, இனிப்பு என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும் ஒட்டகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது. தண்ணீரில் நல்ல தண்ணீர், உப்புத் தண்ணீர் என பேதம் கொள்வதில்லை.

பாலைவனங்களில் வீசுகின்ற பாலைவனப் புயல் ஒரு வித்தியாசமான புயலாகும். தூசியையும் மணல் துகள்களையும் மணற்பரப்பின் அடிப்பகுதியிலிருந்து அப்படியே வாரியிறைக்கும். கண் இமைகளை மூடவில்லை என்றால் கண்ணின் கருவிழிகளில் ஊடுறுவி பதம் பார்த்துவிடும். மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற பாலைவனப் புயலின்போது ஒட்டகம் தன் இமைகளை இறுக மூடிக் கொள்கிறது. அப்படியானால் பயணம் எப்படி என்று பயப்படத் தேவையில்லை. இமைகள் மூடினாலும் பார்வையை மறைப்பதில்லை. இமைகளின் தோல்கள் கண்ணாடிகள் போன்று ஒளி ஊடுறுவும் (பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ற்) தன்மை கொண்டதாகும். அதனால் அவை கண்களை மூடிக் கொண்டு வெளியே பார்க்கும் சக்தி கொண்டவை. ஒட்டகத்தின் இந்தப் பார்வையிலும் அல்லாஹ்வின் அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஒட்டகத்தின் உடலமைப்பு

ஒட்டகத்தின் உடல் மெல்லிய மயிர் தோலில் அமைந்துள்ளது. இந்தத் தோலமைப்பு ஒட்டகத்தைப் பகல் நேரத்தில் கரித்துப் பொசுக்குகின்ற சூரிய வெப்பக்கதிர்களின் பிரதிபலிப்பிலிருந்து காப்பதற்காகத் தான். அதே சமயம் இரவு நேரத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே போகும் போது அந்தக் குளிரின் கோர ஆட்டத்திலிருந்தும் இந்தத் தோலமைப்பு காக்கின்றது.

ஒட்டகம் பாலைவனத்தின் தரையில் படுக்கின்ற போது, தரைச் சூடு அதன் உடலில் தாவி, வாட்டி வதைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட தோல் பகுதிகள் பல அடுக்குகளால் ஆகியிருக்கின்றது.

மனிதனின் பாதங்களின் அடிப்பகுதியில் தோலமைப்பு உடலின் இதர தோலை விட முற்றிலும் வேறுபாடானது. சற்று தடிமனாக அமைந்திருக்கின்றது. இந்தத் தடிமனான பாதப் பகுதி நடந்து, நடந்து காய்த்துப் போவதால் ஏற்பட்டதல்ல. பிறக்கும் போதே அப்படியே அமைந்துள்ளது.

இதுபோன்றே ஒட்டகமும் பிறக்கும் போதே அதன் தோல் பகுதி வெப்பம், குளிர் போன்றவற்றைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தடிமனாக அமைந்துள்ளது.

மனிதன் பயணிக்கின்ற இந்த பாலைவனக் கப்பலில் தான் அல்லாஹ்வின் எத்தனை தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.

அல்லாஹு அக்பர்! இது மிகப் பெரிய இறை ஏற்பாடாகும்.

ஒட்டகத்தின் உயிரணுக்கள்

பாலூட்டிகளின் இரத்த அணுக்கள் வட்ட வடிவமானவை! ஆனால் ஒட்டகத்தின் உயிரணுக்கள் முட்டை வடிவமானவை! நீர்ச்சத்து குறையும் போது அதன் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!

ஒட்டகம் அதிகமான தண்ணீர் பருகும் போது இந்த உயிரணுக்களில் தண்ணீர் ஊடுறுவுகின்ற போது அது பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி ஓர் அமைப்பை ஆக்கியுள்ளான்.

மூக்கு துவாரத்தை மூடும் கதவுகள்

பாலைவனப் புயலின் போது பொடிப்பொடி மணல் துகள் மூக்கில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மூக்கை மூடக்கூடிய விஷேச மூடிகள் உள்ளன. அவற்றை வைத்து மூக்கு துவாரத்தை மூடிக் கொள்கின்றன.

நாசித்துவாரத்தைக் குளிரூட்டுவதற்காக இறைவனின் தனி ஏற்பாடும் நாசிப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த அலாதியான அற்புத ஏற்பாடு, ஒட்டகம் சுவாசிக்கின்ற மூச்சுக் காற்று மூக்கின் வழியே கடந்து சொல்லும் போது அதன் நீர்ச்சத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

ஒட்டகத்தின் பாதங்கள்

இந்த ஒட்டகத்தின் பாதங்கள் மனிதர்கள் அணிகின்ற ஷூக்கள் போன்று தரைச் சூட்டின் தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்கின்றது. அதிக எடை கொண்ட பாரங்களை ஒட்டகம் சுமந்து செல்கின்ற போது பாலை மணலில் புதைந்து உள்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரத்தியேக தொழில்நுட்பத்தில் அதன் பாதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒட்டகத்தின் ஒவ்வொரு உள், வெளி உறுப்புகளும் தனித்தனி அற்புதத்தைத் தாங்கி நிற்கின்றன.

இதனால் தான் அல்லாஹ், “ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?” (88:17) என்று கேட்கின்றான்.