ஏகத்துவம் – செப்டம்பர் 2008

தலையங்கம்

அழைப்புப் பணியே அழகிய பணி!

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

அல்குர்ஆன் 41:33

அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன்: 110வது அத்தியாயம்

இந்த அத்தியாயம் குறிப்பிடுவது போன்று இன்று அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீது கிளைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு ஊரிலும் அழைப்பு மையங்கள், அல்லாஹ்வின் ஆலயங்கள் குடிசைகளிலும் கூரைக் கொட்டகைகளிலும் உதயமாகிக் கொண்டே தான் இருக்கின்றன.

கோபுரம் போன்ற பள்ளி வாசல்கள் இணை வைப்புக் கோட்டைகளாக உள்ளன. ஆனால் ஏகத்துவத்தின் கோட்டைகளோ எளிய மக்களின் சக்திக்கேற்ப குடிசைகளில் இயங்குகின்றன.

வறுமையில் உழலும் நமது கொள்கைச் சகோதரர்கள் மறுமையை நம்பி, தங்களது அன்றாட வருவாயில் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, வாடகை மற்றும் இரவல் இடங்களில் தங்கள் தூய வணக்கத்தைத் துவங்குகின்றனர்.

இப்படிப்பட்ட சகோதரர்கள் சரியான அழைப்பாளர்கள் – ஆலிம்கள் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ரமளானில் அழைப்பாளர்கள் பற்றாக்குறை அதிகமாகி விடுகின்றது. காரணம், அயல் நாடுகளில் வேலை செய்யும் நமது கொள்கைச் சகோதரர்களின் மார்க்கப் பசியைத் தணிப்பதற்காக அங்கும் நமது அழைப்பாளர்கள் சென்றாக வேண்டிய அவசியம் உள்ளது.

அதனால் இங்குள்ள பற்றாக்குறை மேலும் அதிகமாகி விடுகின்றது.

இந்தப் பற்றாக்குறையைத் தவிர்க்க, இரண்டே இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன.

 1. ஒவ்வொரு கிளையில் உள்ளவர்களும் தத்தமது ஊரில் ஒருவரைத் தத்தெடுத்து, குறுகிய காலக் கல்வித் திட்டத்தில் தலைமையகத்தில் செயல்படும் கல்வியகத்திற்கோ, அல்லது நீண்ட காலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கடையநல்லூரில் செயல்படும் இஸ்லாமியக் கல்லூரிக்கோ அனுப்பி வையுங்கள்.

சொந்த ஊர் எனும் போது ஓர் அழைப்பாளரின் மனதில், மண்ணின் மைந்தர் என்ற இயற்கையான மண் வாசனை வீசும். அது அழைப்புப் பணியில் அதிக ஊக்கமாகப் பணியாற்றச் செய்யும். தவ்ஹீது பிரச்சாரம் இன்னும் விண்ணைத் தொடும்.

 1. அழைப்பாளர்களை உருவாக்கும் மையங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளை அள்ளி வழங்குங்கள்.

ஓர் ஊருக்கு அழைப்புப் பணி மையம் எப்படி முக்கியமோ அதை விடப் பன்மடங்கு முக்கியமானது அழைப்புப் பணியாளர்களை உருவாக்குவதாகும்.

எனவே இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கி, தவ்ஹீதை நிலை நிறுத்துமாறு புனிதக் குர்ஆன் இறங்கிய இந்தப் புனித ரமளான் மாதத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

———————————————————————————————————————————————–

டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த விபச்சாரத்தை உண்மைப்படுத்துகின்றது; அல்லது பொய்ப்படுத்துகின்றது என்று நபியவர்கள் கூறுவது போன்று இந்த ஆபாசக் காட்சிகள் தான் பலரை விபச்சாரத்தில் செல்வதற்குத் தூண்டுகின்றன. அடுத்தவனுடன் நமது பெண்கள் ஓடுவதற்கும் இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

சொல்லப் போனால் சின்னத்திரை மற்றும் பெரிய திரைக் காட்சிகளில் வருவது போன்று ஒட்டுத் துணி அணிந்து கொண்டு பெண்கள் யாரும் வெளியில் வருவதில்லை. அப்படியே அணிந்து வந்தாலும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

ஆனால் டி.வி.யில் வரும் இந்த ஆபாசக் கூத்துக்களை, படுக்கையறைக் காட்சிகளை தாய், மகன், அண்ணன், தங்கை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது போன்ற காட்சிகளை நாம் ஒருபோதும் பார்க்கக் கூடாது. அதிலும் குறிப்பாக நம்மைத் திருத்த வந்துள்ள ரமளான் மாதத்தில் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை திறக்கக்கூடாது.

நரக வாசல் மூடியிருக்கும் இந்த ரமளான் மாதத்தில், டி.வி. எனும் நரக வாசலைத் திறந்து வைத்து நம்மை நாமே நாசமாக்கிக் கொள்ளக் கூடாது.

சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் திருக்குர்ஆனைத் திறந்து சுவன வாசல்களில் நுழையுங்கள். இனி டி.வி., சினிமா, சீரியல்களைப் பார்க்க மாட்டோம் என்று இந்தப் புனித ரமளான் மாதத்தில் சபதமிடுங்கள்; சத்தியம் செய்யுங்கள்.

———————————————————————————————————————————————–

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 5

எம். ஷம்சுல்லுஹா

மக்காவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் காஃபிர்கள். அவர்கள் மறுமையை நம்பாதவர்கள். இந்த உலமாக்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்?

மக்கத்துக் காஃபிர்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் தெளிவான நம்பிக்கையில் இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலத்து இந்த இணை வைப்பு ஆலிம்களை விட அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி மிக மிகத் தெளிவான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை நாம் திருக்குர்ஆனில் விளக்கமாகப் பார்க்கலாம்.

அவர்களைப் படைத்தவன்

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 43:87

வானங்களைப் படைத்தவன்

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 43:9

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் அல்லாஹ்வை அஸீஸ், அளீம் – மிகைத்தவன், அறிந்தவன் என்பதையும் மக்கத்து முஷ்ரிக்குகள் ஒப்புக் கொண்டிருந்தனர்.

பூமி அவனுக்கே சொந்தம்

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84, 85

அர்ஷின் நாயன்

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:86, 87

மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வையும், அவனது அர்ஷையும் நம்பியிருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

பாதுகாப்பு அளிப்பவன்

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)என்று கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

அல்லாஹ்வை இப்படியெல்லாம் நம்பியிருந்த அந்தக் காஃபிர்கள், சாதாரண காலங்களில் மற்ற தெய்வங்களை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். மிக நெருக்கடியான காலகட்டங்களில் அல்லாஹ்வை மட்டும் தான் அழைத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்கலாம்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

இப்படி சோதனையான காலத்தில் அந்தக் காஃபிர்கள் இறைவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தித்தனர். ஆனால் இன்றோ இவர்கள் சாதாரண காலத்திலும், அசாதாரண காலத்திலும் அதாவது ஆபத்துக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிற்கும் போதும் அல்லாஹ்வை அழைக்காமல் முஹ்யித்தீனை அழைக்கின்றனர்.

குறிப்பாக பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான கட்டம்! அந்த நெருக்கடியான, இக்கட்டான கட்டத்தில் இந்தப் பெண்கள் “யா முஹ்யித்தீன்’ என்று அழைக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் கேடு கெட்டவர்கள். இணை வைப்பில் அவர்களை விட மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். மற்ற வகையில் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.

பரிந்துரை செய்யும் அவ்லியாக்கள்

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே வாதத்தைத் தான் இன்றைய இணை வைப்பாளர்களும் முன்வைக்கிறார்கள்.

“நாங்கள் கேட்பதை இந்த அவ்லியாக்கள் தருவார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. இவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்’ என்று மக்கா காஃபிர்கள் சொன்னதைப் போல் சொல்கிறார்கள்.

மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் படைப்பாற்றலை நம்பியிருந்தார்கள். அவர்கள் கண்களால் காணாத, மறுமையில் மட்டுமே பார்க்கக் கூடிய அர்ஷை நம்பியிருந்தார்கள்.

ஆனால் அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தார்கள்.

அந்தத் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை கொண்டவர்களைத் தான் காஃபிர்கள், இணை வைப்பாளர்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

அப்படியானால் இதே கொள்கையைக் கொண்டிருக்கும் இந்த இணை வைப்பாளர்களை, இதைப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை எப்படி முஸ்லிம்கள் என்று கூற முடியும்?

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்

மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என்று மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்து கொண்டு மக்களிடம் மதுவை விற்பனை செய்து வருகிறது. பட்டப் பகலில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் சர்பத் குடிப்பது போல் மதுப் பிரியர்கள் இந்த விஷத்தைக் குடிக்கிறார்கள்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும், மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவே தான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப் பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன் வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக் கடைகளும் மதுப் பிரியர்களும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறார்கள்.

திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

ஆனால் குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாமல் காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி அரபு தேசத்தில் உருவானது.

இந்தக் கருத்தை நாம் மக்களிடம் கூறினாலும் இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சீர்திருத்தவாதி யார்? அவர் என்ன மருத்துவம் செய்தார்? அவர் சாதாரண ஆளாக இருக்க முடியாது? என்றெல்லாம் வியந்து கேட்பார்கள்.

அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்குக் குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புத பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோக நோய் செல்வதற்கு சிறந்த மருந்தாக இருந்தது.

எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக  வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் மறைமுகமாக முன்வைத்தது.

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

அல்குர்ஆன் 16:67

இந்த வசனம், மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகி இரண்டையும் பற்றிப் பேசுகிறான். இரண்டு பொருட்களைப் பற்றிப் பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது, மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.

இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு, போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4:43

இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) “குல் யா அய்யுஹல் காஃபிரூன்என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போது தான் நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: அபூதாவூத் (3186)

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும் என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மன நிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான். எடுத்த எடுப்பிலே மதுவைக் குடிக்கக் கூடாது என்று கூறியிருந்தால் இச்சட்டத்திற்கு யாரும் கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:

எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் “நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம்என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)

நூல்: புகாரி (4993)

இறை நம்பிக்கை அவசியம்

இஸ்லாம் என்பது உண்மையான ஆன்மீகம். மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்து வழிகாட்டும் மார்க்கம். மறுமை வாழ்க்கையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மறுமைக்காகத் தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. எனவே இஸ்லாத்தை நேசித்து ஏற்றுக் கொண்ட நபித்தோழர்கள் மதுவின் சுகத்துக்கு அடிபணியாமல் மதுவை விடப் பன்மடங்கு நேசித்த குர்ஆனின் கட்டளைக்கு உடனே பணிந்தார்கள்.

மக்களிடத்தில் இது போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் வெறும் தந்திரங்கள் இருந்தால் மாத்திரம் போதாது. உண்மையான ஆன்மீகக் கொள்கை அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சட்டங்களால் ஏன் பயன் ஏற்படுவதில்லை?

மக்களுடைய நன்மை கருதி ஆட்சியாளர்கள் சில சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த விடாமல் மக்களைச் தடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

உதாரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் விபச்சாரத்தைத் தூண்டும் விதத்தில் பெண்கள் நடந்து கொண்டால் அதைச் சட்டம் தடுக்காது. விபச்சாரத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு சட்டம் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளும் ஆண்களை இச்சட்டம் கைது செய்வதில்லை. விபச்சாரம் செய்தால் ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது.

கற்பழிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு கற்பழிக்கத் தூண்டும் ஆபாசப் படங்களை அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. இப்படி தவறுக்கு அழைக்கும் காரண காரியங்களைக் களையாமல் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தினால் என்ன பயன்?

எனவே தான் இஸ்லாம் மது குடிக்கக் கூடாது என்ற ஒரு தடையை மட்டும் விதிக்காமல் மதுவைக் குடிக்கத் தூண்டும் எல்லா காரியங்களையும் தடை செய்கிறது. மதுவைக் குடிப்பது எப்படி தடையோ அது போல் விற்பதும் பிறருக்கு அன்பளிப்பாகத் தருவதும் அதை வைத்து மருத்துவம் செய்வதும் மதுவை சமையல் காடியாக மாற்றுவதும் கூடாது என்று சொல்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் “இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்று விடச் சொன்னேன்என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3220)

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4014

நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல நோய்என்றார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி)

நூல்: முஸ்லிம் (4015)

மதுவைப் பற்றி மக்களுக்கு ஞாபகம் கூட வந்து விடக் கூடாது என்று கருதிய இஸ்லாம் மதுபானங்கள் தயாரிப்பதற்கு அரபுகள் பயன்படுத்தி வந்த பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை செய்திருந்தது. ஏனென்றால் மதுவை மறப்பதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மது பாட்டில்கள் அங்கு இருந்தால் அந்தப் பயிற்சி பலனற்றுப் போய்விடும். மக்கள் மதுவை மறந்து, அதை வாங்கிக் கொடுத்தாலும் குடிக்க மாட்டார்கள் என்ற நிலையை  அடையும் போது அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள், எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (4067)

மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும் அதை பருகுபவரையும் பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும் அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும் அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும் (தானே) தயார் செய்து கொள்பவரையும் அதை சுமந்து செல்பவரையும் யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு மாஜா (3371)

மதீனத்துச் சாலைகள்  மது ஆறுகளாக மாறின

மதுவை ஒழிப்பதில் இத்தனை நுணுக்கங்களையும் இஸ்லாம் கவனத்தில் கொண்டு சட்டம் இயற்றியதால் தான் மதீனத்து மக்கள் தெருக்களில் மதுபானங்களைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய உன்னத நிலை உருவானது

(முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மதுவில் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டிவிட்டனர்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3219)

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்

எவ்வளவு அற்புதமான, அறிவுப்பூர்வமான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டத்தை மீறுகின்ற வகையில் சிலரை ஷைத்தான் தூண்டிவிடாமல் இருக்க மாட்டான். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்தை மீறுவார்கள். இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தீட்டிய திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

குற்றம் புரிபவனைப் பார்த்து மற்றவன் தவறு செய்ய ஆரம்பிப்பான். எனவே சட்டத்தை மீறுபவனுக்கு உண்மையான தண்டனையை வழங்கினால் அல்லாஹ்விற்குப் பயப்படாதவன், அரசாங்கத்திற்குப் பயந்தாவது சட்டத்தை மீறாமல் இருப்பான். எனவே தான் இஸ்லாம் மது குடிப்பவர்களுக்குத் தண்டனைகளை விதித்து, இக்குற்றத்தைச் செய்ய விடாமல் அவர்களைத் தடுக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: அபூதாவூத் (3886)

நுஐமான் என்பவர் மது குடித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரீச்ச மர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ்(ரலி)

நூல்: அஹ்மத் (18610)

மது என்ற கொடிய தீமையைப் பரவ விடாமல் இஸ்லாம் ஒழித்துக் கட்டிய விதத்தை இன்றைய உலகம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் இந்த உலகம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும், ஆரோக்கியத்தையும் நிரம்பப் பெற்ற உன்னத உலகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

———————————————————————————————————————————————–

உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அது அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் பின் அல்அரத்(ரலி)

நூல்: புகாரி 3612

மக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தமது தூதுச் செய்தியின் துவக்க காலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்த இஸ்லாமிய இலட்சியப் பிரகடனமாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறதுஎன்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.- நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காண மாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழி பெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்த வில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மை தான்)என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)என்று சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

இது முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது மதீனா வாழ்க்கையின் போது தெரிவித்த மற்றோர் இலட்சிய முழக்கமாகும்.

வறுமை

வழிப்பறி

கற்பழிப்பு

இந்த மூன்றும் உலகிலிருந்து துரத்தியடிக்கப்படும் காலம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையே நபி (ஸல்) அவர்கள் இங்கு உணர்த்துகின்றார்கள்.

வறுமை துரத்தியடிக்கப்பட வேண்டுமானால் இன்றைய பொதுவுடைமைக்காரர்கள் கூறுவது போன்று பணக்காரர்கள், முதலாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதல்ல! பணக்காரர்களின் சுரண்டல்கள் ஒழிக்கப்பட்டு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் ஓர் இணக்கமான உறவு உருவாக்கப்பட வேண்டும்.

பணக்காரர்கள் மட்டும் உலகத்தில் வாழ முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏழைகள் வேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் என்ற இரு சக்கரங்கள் இருந்தால் தான் சமுதாயம் சீராகச் சுழல முடியும்.

இவ்விரண்டிற்கும் இடையே ஒரு சமச்சீர் நிலை நிலவ வேண்டும். அப்படியொரு சூழ்நிலை உருவாகி விட்டால் போதும். வறுமையும், வழிப்பறியும் தானாக மறைந்து விடும்.

மூன்றாவதாக ஒழியவிருக்கும் தீமை கற்பழிப்பு!

இந்தத் தீமை ஒழிய வேண்டுமாயின் மனிதனை மிருகத் தன்மையிலிருந்து மீட்டு, மனிதத் தன்மைக்குக் கொண்டு வர வேண்டும். மனிதன் இந்த உன்னத நிலையை அடைந்து விட்டால் சமுதாயத்தில், நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்து விடும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கோடிட்டுக் காட்டிய அப்படியொரு சமுதாயம் அமைந்ததா? அப்படிப்பட்ட ஒரு புதிய வார்ப்பு தோன்றியதா? என்றால் நிச்சயமாக அமைந்தது. நிஜமாகவே தோன்றியது.

அதை அதீ பின் ஹாதம் அவர்களே குறிப்பிடுகின்றார் பாருங்கள்.

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ, வெள்ளியையோ கை நிறைய அள்ளிக் கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.

நூல்: புகாரி 3595

இது அறிவியல் உலகம்! எதையும் ஆய்வுக் கூடத்தில் வைத்துப் பரிசோதித்த பிறகே ஏற்றுக் கொள்ளும். அப்படிப்பட்ட அறிவியல் உலகத்திற்கு இந்த இஸ்லாம் தெளிவாக அறிவிக்கின்றது. இது ஏழாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நடந்தேறியது. அரபக ஆய்வுக் கூடத்தில் பரிசோதனைக்குள்ளாகி வெற்றி கண்டது. இன்னும் உலகின் ஒரு மூலையில், சவூதி அரேபியாவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வெற்றி கண்டு கொண்டு தான் இருக்கின்றது.

இந்த அமைதி எப்படி ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன?

ஓர் அழகிய இளம் பெண் இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ தன்னந்தனியாக ஒரு நாள் அல்லது இரு நாட்கள் வெளியூர் போய்விட்டு காசுடனும், கற்புடனும், உயிருடனும் திரும்பி வர முடியுமா? இப்படி பணத்திற்கும், கற்புக்கும் ஆபத்து ஏற்படாமல் திரும்ப வந்தால் அந்த நாடு அமைதியில் இருக்கின்றது; அங்கு சாந்தி நிலவுகின்றது என்று அர்த்தம். ஆனால் இன்று உலகெங்கிலும் இந்த நிலை இல்லை.

இஸ்லாம் இந்த வெற்றியை எப்படிக் கண்டது? அதன் ரகசியம் என்ன?

இஸ்லாம் இதை இரண்டு விதத்தில் கண்டது.

 1. கடுமையான குற்றவியல் சட்டம்
 2. மறு உலக நம்பிக்கை

அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கை; மறுமை உண்டு என்ற நம்பிக்கை.

இவ்விரண்டில் முதலில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தைப் பார்ப்போம்.

உலகத்தில் இன்று இஸ்லாமியச் சட்டம் நடைமுறையில் இருப்பது சவூதியில் மட்டும் தான். அங்கும் கூட நூற்றுக்கு நூறு இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுமானால் மொத்த உலகமே அதன் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். உலகத்தின் தலைமை பீடமாகத் திகழ்ந்திருக்கும்.

ஆனால் அதனிடம் உள்ள ஒரு சில குறைபாடுகளின் காரணமாக அதன் தலைமை சவூதியுடன் மட்டும் நின்று விட்டது. இந்த விளக்கத்துடன் சவூதியில் செயல்படும் ஷரீஅத் சட்டத்தைப் பார்ப்போம்.

சவூதியில் 2007ம் ஆண்டு மட்டும் கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், ஓரினச் சேர்க்கை, ஆயுதம் தாங்கிய கொள்ளை போன்ற குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மொத்தம் 156 ஆகும். இதில் கொல்லப்பட்டவர்கள் 153 ஆண்கள்; 3 பெண்கள்.

2002ம் ஆண்டு 45 ஆண்கள்; 2 பெண்கள்

2003ம் ஆண்டு 52 ஆண்கள்; 1 பெண்

2004ம் ஆண்டு 35 ஆண்கள்; 1 பெண்

2005ம் ஆண்டு 88 ஆண்கள்; 2 பெண்கள்

2006ம் ஆண்டு 35 ஆண்கள்; 4 பெண்கள்

தண்டனைக்குள்ளாகும் ஆண், பெண் குற்றவாளிகள் மயக்க மருந்து கொடுக்கப்படுகின்றார்கள். பிறகு காவல் துறை வாகனத்தில் பொது மக்கள் கூடும் பொது இடத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். பொது இடத்தில் 16 அடி அகல நீல நிற பிளாஸ்டிக் விரிப்பு விரிக்கப் படுகின்றது. அங்கு போக்குவரத்து சரி செய்யப்படுகின்றது. குற்றவாளிகளின் கண்கள் கட்டப்படுகின்றன. கைகளில் விலங்குகள் பூட்டப்படுகின்றன. கால்களுக்கு சங்கிலி போடப்பட்டு, மதிய நேரத் தொழுகைக்குப் பிறகு பொதுவிடத்தில் கஅபா இருக்கும் திசையை நோக்கி நிறுத்தப்படுகின்றார்.

காவல்துறை அதிகாரியால் 1000-1100 மி.மீ அளவிலான பளபளக்கும் வளைவான ஒரு வாள் வெட்டுநரிடம் வழங்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சக அதிகாரி, குற்றவாளியின் பெயரையும், அவர் செய்த குற்றத்தையும் கூடி நிற்கும் மக்களிடம் வாசிக்கின்றார்.

வெட்டுநர் வாளை ஓரிரு முறை சுழற்றி தனது கையை பலப்படுத்திக் கொள்கிறார். பிறகு லாவகமாக மின்னல் போல் பளிச்சென்று பளபளக்கும் வாளை தலையை நோக்கி வீசுகின்றார். அவ்வளவு தான். கூர்முனை வாள் குறித்த வேகத்தில், பதித்த வெட்டில் தலை ஓரடி அல்லது ஈரடி தள்ளி விழுகின்றது.

நிறுத்தப்பட்ட மருத்துவர், தூர விழுந்த தலையை எடுத்து வந்து உடலில் வைத்துத் தைக்கின்றார். அதன் பின் அவரது உடல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

இரக்கம் இல்லாதவர்கள்?

குற்றவாளிக்கு வழங்கப்படும் இந்த மரண தண்டனை சவூதியில் நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இன்று ஊடகங்களின் ஆந்தைப் பார்வை இதை உலகத்தின் பல்வேறு பாகங்களுக்கு, பல்வேறு பரிமாணங்களில் அடுத்த நொடியில் கொண்டு சென்று விடுகின்றது.

இந்தத் தண்டனை நிறைவேற்றலைப் பார்ப்பவர்கள் வியக்கின்றனர். விழி இமைகளை மூடாமல் தொலைக்காட்சி வெண்திரைகளில் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே உள்ளத் திரையில் பொங்கி வழிகின்றது இரக்கம்! அதன் வெளிப்பாடாய் அவர்கள் எழுப்புகின்ற கேள்வி இது தான்!

இவர்களுக்கு இரக்கமே இல்லையா? இருபத்தோறாம் நூற்றாண்டில் இப்படியொரு அரக்க அரங்கமா? அநியாய வெறியாட்டமா?

மேற்கத்தியச் சிந்தனையாளர்கள், மேனாமிணுக்கர்கள் எழுப்பும் இந்தக் கேள்விக்குப் பதில் இது தான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 24:2

உலகத்திலேயே ஒரு வேதம் அதன் துவக்கத்திலேயே அன்பு மழை பொழிந்து, “அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று ஆரம்பிக்கின்றது என்றால் அது திருக்குர்ஆன் மட்டும் தான்.

இப்படி அன்பு மழையை, அருள் மழையை ஆரம்ப வசனமாக அருளிய அந்த அன்பாளன், அருளாளன் அல்லாஹ் தான் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றான்.

தண்டனை நிறைவேற்றும் போது குற்றவாளிகள் மீது இரக்கம் கொள்ள வேண்டாம் என்று தனது திருமறையில் கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். ஆகவே, அது பிழைத்துக் கொண்டது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3321

தாகத்தில் தரையை நக்குகின்ற நாயின் தாகம் தீர்த்த ஒரு விபச்சாரிப் பெண்ணுக்கு மன்னிப்பை வழங்கும் கருணை நாயன் தான் இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில் இரக்கம் வேண்டாம் என்று கூறுகின்றான். அதனால் ஒரு போதும் முஸ்லிம்கள், குற்றவாளிக்குத் தண்டனை வழங்கும் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டக் கூடாது. ஷரீஅத்தை உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் மரண தண்டனை நிறைவேற்றும் விஷயத்தில் இரக்கம் கொள்ள மாட்டார்கள்.

குற்ற எண்ணிக்கையில் குறைவான நாடு

மரணப் படுக்கையில் கிடக்கும் தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக வருகின்றான் மகன்! அவனுடைய சட்டைப் பையிலிருந்து பணம் திருடப்படுகின்றது. பணத்தைப் பறி கொடுத்த மகன் பதறுகின்றான். பலரிடம் பணத்திற்காகக் கெஞ்சுகின்றான். பரிதாப நிலையில் தவிக்கும் அவனுக்கு அனுதாபம் காட்ட யாரும் முன்வரவில்லை. கடைசியில் அவனது தாயின் உயிர் போய்விடுகின்றது.

தாயைப் பறிகொடுத்த இந்த மகனுக்கு முன்னால், திருடியவனைக் கொண்டு வந்து நிறுத்தினால் அவன் என்ன செய்வான்? அடித்துக் கொலை செய்து விடுவான்.

பாதிக்கப்பட்டவனின் மனநிலையைத் தான் இஸ்லாம் பார்க்கின்றது. பாதிக்கப்பட்டவன் திருடியவனின் தலையை எடுக்க முன் வருகின்றான். ஆனால் இஸ்லாமிய சட்டம் கையைத் தான் எடுக்கச் சொல்கின்றது. இந்த வகையில் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து ஒருபடி கீழிறங்கித் தான் தண்டனை வழங்குகின்றது.

அதாவது பாதிக்கப்பட்டவனின் மனநிலை, தன் பணத்தைத் திருடி, தன் தாயின் உயிரைப் பறித்தவனது தலையை எடுக்க வேண்டும் என்பதே! ஆனால் இஸ்லாம், “தலையை எடுக்காதே! கையை எடு’ என்று ஒரு படி கீழே இறங்கித் தான் தண்டனை வழங்குகின்றது.

இதைத் தான் இந்த அறிவுஜீவிகள் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கின்றனர்.

கிட்னி திருட்டு

பணமாகத் திருடியது போக, இப்போது மனிதனின் உறுப்புகளையே திருட ஆரம்பித்து விட்டார்கள். வயிற்றுவலி என்று மருத்துவமனைக்குச் செல்கின்றான். அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. சிறிது காலம் கழித்த பின் சிறுநீர் வெளியேறுவதில் தகராறு! என்னவென்று சோதித்துப் பார்க்கும் போது தான் கிட்னி களவு போன விபரம் தெரிகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவன் என்ன செய்வான்? இப்படிப்பட்ட மருத்துவரைக் கொல்ல வேண்டும் என்று துடிப்பான். ஆனால் இஸ்லாமோ கிட்னி எடுத்தவனின் உடலிலிருந்து கிட்னியை எடு என்று சொல்கின்றது.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:41

மூன்று முக்கிய அம்சங்கள்

இதை யாராவது காட்டுமிராண்டித் தனம் என்று சொல்ல முடியுமா?

குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப் பார்க்கின்றது.

 1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
 2. பாதிக்கப்பட்ட தனிநபர், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல் தடுப்பது.
 3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டணையின் மூலம் மீண்டும் அதே குற்றம் நடப்பதைத் தடுப்பது.

இதை விட்டுவிட்டு, ஒரு பெண்ணின் கற்பைச் சூறையாடியவனுக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்தால் அது குற்றங்களைக் குறைக்காது. மற்றவர்களையும் கற்பழிப்பதற்குத் தூண்டி விடுவதற்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பாகும்.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டும்.

சிறைத் துறைக்கான செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் செய்யப்படுகின்றன. அதாவது கற்பழிக்கப்பட்டவளின் வரிப் பணத்திலிருந்து குற்றவாளிக்கு உணவும், உறைவிடமும் வழங்கப்படுகின்றது. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு தானே விருந்து வழங்க யாரேனும் முன் வருவாரா? இந்த அக்கிரமத்தைத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் விவேகிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இரக்கத்தைப் பற்றிப் பேசுகின்ற இவர்கள் தான் இந்த அரக்கத்தனமான, காட்டுமிராண்டித்தனமான காரியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது?

இஸ்லாம் தூர நோக்குப் பார்வையுடன் சொல்கின்ற விவரமான, விவேகமான செயல்பாட்டால் தான் அதன் சட்டம் ஆள்கின்ற சவூதியில் குற்றங்களின் சதவிகிதம் பெரிய அளவில் குறைவாக இருக்கின்றது.

புள்ளி விபரப் புலனாய்வு

குற்றம்                     சவூதி  ஜப்பான்   அமெரிக்கா

கொலை                    0.71        1.10                       5.51

கற்பழிப்பு                   0.14        1.78                       32.05

கொள்ளை                  0.14        4.08                       144.92

பலவந்தத் தாக்குதல்        0.12        23.78                     323.62

வீடுபுகுந்து கொள்ளை       0.05        233.6                     728.42

சொத்து அபகரிப்பு           79.71      1401.26                                2475.27

வாகனத் திருட்டு            76.25      44.28

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

இந்த வசனத்தின் அடிப்படையில் சவூதியை சற்று உற்று நோக்குவோம். இன்டர்போலின் புள்ளி விபரப்படி சவூதி அரேபியா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக!

எஇஒ என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது. அவை:

 1. கொலை. 2. கற்பழிப்பு. 3. வழிப்பறி. 4. வன்முறைத் தாக்குதல். 5. வீடு புகுந்து கொள்ளையடித்தல். 6. சொத்து அபகரிப்பு. 7. வாகனத் திருட்டு.

இந்த ஏழு குற்ற அட்டவணைகளில் சவூதி அரேபியா, ஜப்பானுடனும், அமெரிக்காவுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. ஜப்பான் குற்றங்களில் குறைந்தது. அமெரிக்கா குற்றங்களில் அதிகரித்தது என்ற அடிப்படையில் இவ்விரு நாடுகளுடன் இந்த ஒப்பீடு செய்யப்படுகின்றது. 2000ம் ஆண்டுக்கான கணக்கு இது!

இந்தக் குற்ற அட்டவணைப்படி, குற்றங்களின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் என்று பார்க்கையில் சவூதி 157.12, ஜப்பான் 1709.88, அமெரிக்கா 4123.97 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

இந்தத் தகவல், “குற்றம் மற்றும் சமூகம் தொடர்பான உலகக் குற்றவியல் ஒப்பீட்டு உலா” என்ற தலைப்பில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தயவு தாட்சண்யமின்றி, குற்றவாளிகளைத் தண்டித்து குற்றம் பெருகாமல் தடுப்பது தான் ஓர் ஆட்சியின் அடிப்படை இலக்கணம். அதைச் செய்வதன் காரணமாகத் தான் சவூதி இன்று குற்ற அட்டவணையில் குறைந்து காணப்படுகின்றது. இது தான் மனித சமுதாயத்திற்கு மாபெரும் அருட்கொடையாகும். இந்த அருட்கொடையைத் தான் மேற்கத்திய மேதாவிகள் அரக்கத்தனம் என்று விமர்சனம் செய்கின்றனர். இதையே அல்லாஹ் தன் திருமறையில் கேட்கிறான்.

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

ஆகாயத்தில் சுனிதா ஆபத்தில் ஐரிஸ்

மூன்று வருடங்களுக்கு முன்னால் விழாக் கோல வெளிச்சத்தில் குளித்தது இந்தியத் தலைநகரம் டெல்லி! போதையின்றி ஒரு விழாவா? கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக நான்கு நபர்கள் குடிபோதையில் 18 வயது ஐரிஸ் என்ற பெண்ணை மறிக்கிறார்கள். நால்வரில் ஒருவனது காமப் பசிக்கு இரையாகின்றாள். விடிய விடிய கற்பழிக்கப்படுகின்றாள். தண்டனை என்ன? கற்பழித்தவனே கணவனாக வாய்க்கின்றான்.  கற்பழிப்பின் போது உருவான குழந்தையுடன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு வீதிக்கு விரட்டியடிக்கப்படுகின்றாள்.

இந்தத் தகவலை சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியில் 04.05.08 அன்று குறிப்பிட்டு விட்டு, கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 20,000 கற்பழிப்புகள் நடந்துள்ளன; கற்பழிப்புத் தலைநகரான டெல்லியில் கடந்த மாதம் மட்டும் 10 பேர் என்று குறிப்பிடுகின்றது.

சுனிதா வில்லியம்ஸ் ஆகாயத்தில் நடப்பதில் சமுதாயத்திற்குப் பெருமை கிடையாது. மண்ணில் நடக்கின்ற ஐரிஸ்களின் கற்புகள் காக்கப்படுவது தான் மனித குலத்திற்குப் பெருமையாகும்.

கற்பழிக்கப்படும் பெண் மருத்துவர்

ஐரிஸ் ஓர் அப்பாவிப் பெண் என்றால், ஒரு குழந்தை நல மருத்துவப் படிப்பு பயிலும் 24 வயதுப் பெண் டாக்டர் டெல்லியில் ஆர்.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் கற்பழிக்கப்படுகின்றாள்.

இந்தக் கற்பழிப்புகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றது. அவை அனைத்தையும் வெளியிட்டால் இது கற்பழிப்பு சிறப்பிதழ் ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டியது, கற்பழிக்கும் காட்டுமிராண்டிகளைத் தான்! இந்த மிருகங்களைச் சிறைச் சாலைகளில் போட்டுப் பூட்டி, நமது வரிப் பணத்தைக் கொட்டி வளர்க்கலாமா?

இவர்களுக்குக் கருணை காட்டலாமா? அதனால் தான் அத்வானி போன்றோர்கள் கூட அரபு நாட்டுச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றனர்.

இஸ்லாமியச் சட்டம், குர்ஆனியச் சட்டம் என்று சொன்னால் அது இஸ்லாத்தின் மேலாண்மையை ஒத்துக் கொண்டதாக ஆகி விடும் என்பதால் அரபு நாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறார்.

ஆம்! இங்கு இருக்கும் சட்டங்களால் இந்த மனித மிருகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றார். இந்தச் சட்டங்களினால் மனித சமுதாயத்திற்கு மத்தியில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்று தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றார்.

குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் தான் மனித சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பது அல்குர்ஆனின் நிலைப்பாடு!

அதனால் தான் உலகில், சவூதியில் குற்றத்தின் விகிதாச்சாரம் உலகத்தின் ஏனைய பகுதிகளை விடக் குறைந்து காணப்படுகின்றது; அமைதி நிலவுகின்றது.

இந்த அமைதியை, இஸ்லாம் சட்டத்தின் மூலம் நிறைவேற்றுகின்றது.

————————————————————————————————————————————————

இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்

சட்டத்தின் கண்கள் சாட்சிகள்

எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள்.

உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

இந்த உள்ளம் சரியாகி விட்டால் எல்லாமே சரியாகி விடும். அந்த உள்ளத்தை, திருக்குர்ஆன் எப்படிச் சரி செய்கின்றது? அந்த உள்ளத்தில், படைத்த இறைவனைப் பற்றிய அச்சத்தை விதைக்கின்றது.

அல்லாஹ் ஒருவனே!

இறைவனைப் பற்றிய அச்சத்தை மனிதனது உள்ளத்தில் விதைப்பதற்கு முன், “இறைவன் ஒருவன்; அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானவன் யாருமில்லை, எவருமில்லை’ என்பதைத் தெளிவுபட, தர்க்க ரீதியாக அந்த உள்ளத்தில் நிலை நிறுத்துகின்றது.

சிலைகள் கடவுள் இல்லை

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்என்று அவர் கூறினார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்குர்ஆன் 21:50-65

சிலைகள் கடவுளாக முடியும் என்ற சிந்தனையை தர்க்க ரீதியாகத் தகர்த்தெறிகின்றது.

சூரிய, சந்திரன் கடவுளாக முடியுமா?

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

அல்குர்ஆன் 41:37

மனிதர்கள் கடவுளாக முடியுமா?

மனிதனுக்கென்று பலவீனங்கள் உள்ளன. அந்தப் பலவீனங்கள் இருப்பவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

பசி

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

அல்குர்ஆன் 5:75

இயேசுவையும், அவரது தாயார் மேரியையும் மொத்த கிறித்தவ உலகமும் கடவுள் என்று எண்ணி வணங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவ்விருவரும் கடவுளர் அல்லர் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

பசி என்ற குறைபாடு அவ்விருவரிடமும் இருந்தது. உணவு சாப்பிட்டார்கள். உணவு சாப்பிடுபவர்கள் அது ஜீரணமாகி மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றியாக வேண்டும். இப்படிப்பட்ட குறைகளைக் கொண்டவர்கள் எப்படிக் கடவுளாக முடியும்? என்று திருக்குர்ஆன் வினவுகின்றது.

மனைவி, மக்கள்

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

அல்லாஹ் ஒருவன்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன்: 112வது அத்தியாயம்

மனைவி, மக்களின் ஆசாபாசத்திற்கு அடிமையான ஒருவன் எப்படி அகில உலகத்திற்கும் கடவுளாக இருக்க முடியும்? என்ற வாதத்தையும் திருக்குர்ஆன் முன்வைக்கின்றது.

உறக்கம், மரணம்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அல்குர்ஆன் 2:255

கடவுளாக இருப்பவனுக்கு உறக்கம் இருக்கக் கூடாது. அது போல் அவனுக்கு மரணமும் இருக்கக் கூடாது.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

மறதி

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

அல்குர்ஆன் 19:24

நித்திய ஜீவன்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் 2:255

ஒரே ஒருவன் தான்

கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா? அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

அல்குர்ஆன் 21:22

இப்படி திருக்குர்ஆன், ஒரு தெளிவான கடவுள் கொள்கையை மனிதனின் உள்ளத்தில் தர்க்க ரீதியாகப் பதிய வைத்து, அந்தக் கடவுளுக்கு அவ்வுள்ளத்தைப் பணிய வைக்கின்றது.

————————————————————————————————————————————————

மறுவுலக நம்பிக்கை

மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது.

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 41:39

காய்ந்து போன ஒரு மாங்கொட்டையை மண்ணில் பதிக்கும் போது, அதற்கு உயிர் கொடுத்து, மரமாகத் தழைக்கச் செய்யும் அந்த இறைவன், மனிதனை மீண்டும் தழைக்கச் செய்ய மாட்டானா? என்ற கேள்வியை முன்வைத்தது.

மறுமையை மறுக்கும் மனிதனை நோக்கி மற்றொரு கேள்வியையும் எழுப்பியது.

மறு உலகு உண்டா? என்று வாதம் புரியும் மனிதனே! ஒரு நூறாண்டு காலத்திற்கு முன்னால் உன் வரலாறு என்ன? உனது ஊர் என்ன? உன் பெயர் என்ன? நீ எங்கிருந்து வந்தாய்?

குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

அல்குர்ஆன் 76:1

இல்லாமையிலிருந்து வெளிவந்து, இப்போது ஒரு பொருளாகக் காட்சியளிக்கின்றாயா? அப்படிப்பட்ட உன்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உனக்கு உயிர் கொடுத்து எழுப்புவது எனக்குச் சிரமமா? என்ற கேள்வியைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் எழுப்புகின்றான்.

இதை இன்னொரு வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப் படுவேனா?” என்று மனிதன் கேட்கிறான். “முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் 19:66, 67

எவராலும் பதிலளிக்க முடியாத இந்தக் கேள்விக் கணைகள் அன்றைய அரபக மக்கள் மத்தியில், மறுமை உலகம் உண்டு என்ற நம்பிக்கையைப் பதித்தது.

தூதரின் தூய வாழ்க்கை

அத்துடன் முஹம்மது என்ற தூதரின் வாழ்க்கையும் மறுமையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. உலக வாழ்வில் பொய் சொல்லாத ஓர் உத்தமர் மறுமை வாழ்வு விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகின்றார்? என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் மறு உலக நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மறுமை என்றால் என்ன?

மறுமை நம்பிக்கை என்று சொல்லும் போது அப்படியென்றால் என்ன? என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு இன்னொரு உலகம் உருவாகும். அது தான் மறு உலகமாகும். அங்கு, இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். அந்த விசாரணை இரு வகையில் அமைந்திருக்கும்.

 1. மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்கள்.
 2. மனிதன், தனது சக மனிதனுக்கு எதிராகவும் இதர பிராணிகளுக்கு எதிராகவும் செய்த பாவங்கள்.

சுவனம்

மனிதன் இறைவன் இட்ட கட்டளைப்படி நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நன்மை செய்திருந்தால் அவனுக்குச் சுவனம்! அது நிரந்தரமான, அழியாத பெரு வாழ்வு! அங்கு மரணமே கிடையாது. அவன் என்றென்றும் அங்கு தங்கியிருப்பான்.

இவ்வுலகில் சக மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நன்மை செய்ததற்குப் பரிசாக அங்கு உணவு, உடை, அழகிய மனைவிகள் என அனைத்து வசதிகளையும் அந்தச் சுவனத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.

நரகம்

இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக மனிதன் நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தீமைகள் செய்திருந்தால் அவனுக்கு நரகம் தண்டனையாக அளிக்கப்படும். அதில் என்றென்றும் நிலைத்திருப்பான். அங்கு அவனுக்கு அழிவே கிடையாது. காலம் காலமாக அந்த நரகத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பான். அங்கு அவனுக்கு மரணம் கிடையாது.

இது தான் மறுமை நம்பிக்கை!

இந்த நம்பிக்கையை முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த மக்களுக்கு மத்தியில் ஊட்டினார்கள். மிருகமாய் வாழ்ந்த அந்த மனிதர்கள் மனிதர்களாக மாறினார்கள்.

இன்றளவும் சவூதியில் குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். அந்த நாட்டில் உள்ள சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட வலிமையான காரணம் இந்த மறுமை நம்பிக்கை தான்.

ஏற்கனவே கூறியது போன்று சட்டங்கள் சாட்சியங்களை வைத்துத் தான் செயல்பட முடியும். இது சட்டத்திற்கே உரிய பலவீனம்!

அதனால் சட்டத்தை மட்டும் கொண்டு மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திருக்குர்ஆன் முனையவில்லை.

மக்களின் உள்ளங்களை மாற்றுவதைத் தான் அது முதல் இலக்காகக் கொண்டிருக்கின்றது.

மறுமையில் கிடைக்கும் தண்டனையைத் தான் மக்களிடத்தில் மாறி மாறி எடுத்துக் கூறுகின்றது. இன்னின்ன பாவத்திற்கு, குற்றத்திற்கு இன்னின்ன தண்டனை என்று குற்ற அட்டவணையை வகைப்படுத்தி அதற்குரிய தண்டனையைக் குறிப்பிட்டு விட்டது.

அந்தக் குற்றப் பட்டியலில் இறைவனுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரு வகைகள் உள்ளன. அவற்றில் முதல் வகையைப் பார்ப்போம்.

 1. இணை வைப்பு, 2. கொலை, 3. வட்டி.

இந்த மூன்று பாவங்களும் கடவுளுக்கு எதிராகக் கொள்ளப்படும் மிகப் பெரும் பாவங்களாகும். இந்தப் பாவங்களுக்கு, குற்றங்களுக்கு மறுமை உலகில் நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டு விட்டது.

 1. இணை வைப்பு

குர்ஆனின் பார்வையில் இணை வைப்பு தான் மிகக் கொடிய பாவம்!

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

இணை வைப்பு என்றால், உயிருள்ள, மரணித்த மனிதர்களையோ, வானவர்களையோ, ஜின், சூரியன், சந்திரன் இன்னபிற பொருட்களையோ கடவுளாக ஆக்கி, இறைவனை வணங்குவது போன்று அவர்களை வணங்குவதாகும்.

கொலை, வட்டி ஆகிய பாவங்களை இறைவன் நினைத்தால் மன்னிப்பான். ஆனால் இணை வைப்புக்கு அந்த மன்னிப்பும் கிடையாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

அல்லாஹ்வின் படைப்புகளை அவனுக்குச் சமமாக ஆக்குகின்ற அந்த இணை வைப்பு எனும் பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அவனை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

நல்வழியும் தீய வழியும்

படைத்த அந்த ஓர் இறைவனை வணங்குவது தான் நல்வழியும் நேர்வழியும் ஆகும். படைத்தவனை விட்டு விட்டு, படைப்பினங்களை வணங்குவது தீய வழியாகும்; அதாவது சாத்தானிய வழியாகும்.

ஷைத்தான் என்பவன் தீய பாதைக்கு அழைக்கின்ற ஒரு சக்தி! அந்தத் தீய சக்தி மனிதனை உண்மையான ஏக இறைவனை வணங்காமல் மற்றவற்றை வணங்கச் செய்கிறான். அதனைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, மது, சூதாட்டம், விபச்சாரம் என்று எல்லா தீமைகளையும் செய்யுமாறு மனிதனைத் தூண்டுகிறான். அதனால் ஒரே இறைவனை வணங்காத, பல தெய்வங்களை வணங்குகின்ற நாடுகளில் எந்த நாட்டிலும் மது தடுக்கப்படவில்லை. ஆனால் ஒரே இறைவனை வணங்க வேண்டும்; சிலைகளை வணங்கக் கூடாது; நினைவுச் சின்னங்கள் எழுப்பக் கூடாது; சமாதிகள் கட்டப்படக் கூடாது என்ற சட்டங்களைக் கொண்ட சவூதியில் மது இன்று வரை தடுக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தைத் தூண்டுகின்ற ஆபாச நடனங்கள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன

மற்ற நாடுகளில் இது போன்ற பாவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. மது ஆறாக ஓடுகின்றது. அதற்கு அடிப்படைக் காரணமே அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது தான். அதனால் தான் எல்லா தீமைகளும் ஒழிக்கப்பட வேண்டும் எனில் முதன் முதலில் இந்த இணை வைப்பு எனும் தீமை அழிக்கப்பட வேண்டும். எல்லா நன்மைகளும் ஏற்பட வேண்டுமானால், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குகின்ற நன்மை முதலில் நிலை நாட்டப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் குறியாகவும், நெறியாகவும் கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் அது சவூதியில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. சவூதி ஆட்சியாளர்கள் புனிதர்கள் அல்லர்! எனினும் அவர்கள் இந்த இணை வைப்புப் பாவத்தைச் செய்யாததற்கு ஒரேயொரு காரணம், நாளை மறு உலகத்தில் குற்ற அட்டவணைப் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் இந்தப் பாவத்திற்கு நிரந்தர நரகம் என்பதால் தான்.

 1. கொலை

இது மனிதன், சக மனிதனுக்கு எதிராகச் செய்யும் பாவம் என்ற பட்டியலிலும், இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம் என்ற பட்டியலிலும் இடம் பெற்றுள்ள பெரும் பாவம் ஆகும். இந்தப் பாவத்திற்கும் நிரந்தரத் தண்டனை தான்.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

சவூதியில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கு சட்டங்கள் ஒரு காரணம் என்றாலும் அதை விட முக்கியமான காரணம் மறுமை நம்பிக்கை தான். கொலை செய்தால் இந்த உலகத்தில் தண்டனை கிடைக்கும் என்பதை விட, மறு உலகத்தில் நிரந்தரத் தண்டனை கிடைக்கும் என்று ஒருவன் பயப்பட ஆரம்பித்தால் நிச்சயமாக இந்தப் பாவத்தைச் செய்யத் துணிய மாட்டான்.

தற்கொலை

பிறரை ஒருவர் கொலை செய்யக் கூடாது என்றால் ஒருவர் தன்னைத் தானே கொலை செய்வதும் கூடாது.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)

இன்று உலகிலேயே முஸ்லிம்களிடத்தில் தான் தற்கொலை விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் “கால் அப்’ என்ற அமைப்பு தற்கொலை விகிதம் பற்றி 67 நாடுகளில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்துகின்றது.

அந்தக் கருத்துக்கணிப்பில் அது சந்திக்கின்ற ஆள் அந்த வாரத்தில் பள்ளிவாசலுக்கு, சர்ச்சுக்கு வணங்கச் சென்றாரா? என்று அவருடைய மதப்பற்றை மதிப்பீடு செய்கின்றது. அவர் மத சம்பந்தப்பட்ட அமைப்புகளில் தொடர்பு கொண்டிருக்கிறாரா? என்பதையும் விசாரித்து வெளியிட்ட புள்ளி விபர அறிக்கை இங்கு வெளியிடப் பட்டுள்ளது.

 இங்கு இந்த ஆய்வு, குவைத் என்று குறிப்பிட்டிருப்பது அதை ஒரு இஸ்லாமிய நாடாகக் கருதித் தான். அந்தந்த நாட்டு மக்களின் மத நம்பிக்கையின் விகிதாச்சாரமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் மிக மிகக் குறைவு என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதுபோன்ற ஏராளமான புள்ளி விபரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வெளியிட இந்த இதழ் தாங்காது. இவ்வாறு முஸ்லிம்களிடம் தற்கொலை விகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் மறுவுலக நம்பிக்கை தான்.

கொலையைப் போன்றே தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கும் நிரந்தர நரகம் தான்.

தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக் கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 157

ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் என்ன சோதனை ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்கிறான். அவன் தற்கொலை என்ற எல்லைக்கு ஒருபோதும் செல்வதில்லை.

“மகாராஷ்ட்ரா – விவசாயிகளின் மயானம்’ என்ற தலைப்பில் பி.சயினாத் என்பவர், 14.11.2007 அன்று ஹிந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில், சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30,000 என்று குறிப்பிடுகின்றார்.

தற்கொலையைத் தடுக்க சட்டம் ஏது?

உலகில் எந்த அரசாலும் தற்கொலையை, சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? எவராலும் முடியாது. குர்ஆன் ஊட்டுகின்ற இந்த மறுமைச் சிந்தனையைத் தவிர வேறு எந்தவொரு சிந்தனையாலும் தடுக்கவே முடியாது.

இங்கு தான் குர்ஆன், தன்னை ஓர் இறைவேதம் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றது.

இறந்தவருக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை இஸ்லாத்தில் உண்டு. அந்தத் தொழுகையைக் கூட, தற்கொலை செய்தவனுக்காக நடத்தக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் ரத்துச் செய்து விட்டார்கள். தற்கொலை என்பது இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சோதனையின் சோகத்தின் காரணமாக நொறுங்குவான். அப்போதெல்லாம் அவனுக்கு ஓர் ஆறுதல் அவசியம் தேவை. அந்தத் தேவையை இந்த அல்குர்ஆன் நிறைவேற்றுகின்றது.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

வேதம் என்பது மனிதனை கவலையிலிருந்து காக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குரிய ஒரே தகுதி அல்குர்ஆனுக்கு மட்டும் தான் உள்ளது. அது மட்டும் தான் உலகில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகத் திகழ்கின்றது என்பதற்கு தற்கொலைத் தடை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பயங்கரவாதம்

இன்று உலகம் சந்திக்கின்ற மிகப் பெரிய சோதனை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் உள்ள காலத்திலும் நடத்திய இஸ்லாமியப் போர்களில் ஒரு போதும் தற்கொலை முறையைக் கையாண்டதில்லை. காரணம், தற்கொலை இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதல் படலம் தொடங்கியது நமக்குத் தெரிந்த வரையில் 20ம் நூற்றாண்டிலிருந்து தான்.

இந்தத் தற்கொலைத் தாக்குதலைத் தொடங்கி வைத்தது முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் தான். அவர்களைப் பார்த்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும் தற்கொலைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு இஸ்லாமிய ஜிஹாத் என்றும் இவர்கள் பெயர் வைத்துக் கொண்டனர்.

சரியான இஸ்லாமியப் பார்வை, தற்கொலை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பது தான். இஸ்லாத்திற்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது.

இரண்டு நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போரில் கூட, பெண்களையும், குழந்தைகளையும், மதத் தலைவர்களையும் கொல்லக் கூடாது என்று கூறுவது இஸ்லாமிய மார்க்கம். அப்படிப்பட்ட தூய மார்க்கத்தை, அப்பாவிப் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இந்தக் கோரச் செயலுடன் தொடர்புபடுத்தி ஊடகங்கள் சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை!

தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது. அதனால் இதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அழைப்பது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இஸ்லாம் தற்கொலையை ஆதரிக்கவில்லை. மற்ற மதங்கள் தான் ஆதரிக்கின்றன.

 1. வட்டி

குர்ஆனின் பார்வையில் இதுவும் ஒரு கொடிய பாவமும், குற்றமும் ஆகும். கடவுளுக்கு எதிரான பாவங்கள், மனிதனுக்கு எதிரான பாவங்கள் என்ற இரண்டு பட்டியலிலும் இடம் பெறும் பாவங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கந்து வட்டியை ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் வட்டியை வைத்தே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்கு எதிராக அந்தச் சட்டம் பாய்ந்ததால் அந்தச் சமுதாயம் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தது. அந்த அளவுக்கு வட்டிக்காரர்களின் ஆதிக்கம் உள்ளது.

ஆனால் இங்கு இருப்பதைப் போன்று சவூதியில் வட்டிக் கடைகளோ, தனி நபர்களின் கந்து வட்டிகளோ நடத்தப்படவில்லை. இதற்குக் காரணம் அந்தப் பாவம் இறைவனால் மன்னிக்கப்படாது என்ற நம்பிக்கை தான்.

மற்ற பாவங்கள்

மது அருந்துதல்

இப்படி மறுமை நம்பிக்கை மூலமாக இந்த மூன்று பாவங்களை மட்டும் குர்ஆன் அகற்றியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்த மூன்று பாவங்களுக்கும் நிரந்தர நரகம் என்பதால் அவை மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவையல்லாமல் வேறு பாவங்களும் உள்ளன. அவற்றுக்கு நிரந்தர நரகம் என்று சொல்லப்படவில்லையே தவிர மற்றபடி நரகத் தண்டனை உண்டு. அவற்றில் ஒன்று மது அருந்துதல்.

மது அருந்தும் பாவம் சவூதியில் சட்டத்தின் மூலம் தடுக்கப் பட்டிருந்தாலும், மது வெள்ளமாகப் பாயும் மற்ற நாடுகளில் கூட முஸ்லிம்கள் மற்றவர்களைப் போன்று மது அருந்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை அச்சம் தான்.

விபச்சாரம் செய்தல்

இதே போன்று தான் விபச்சாரம்!

சவூதியில் விபச்சாரத்திற்கு மரண தண்டனை! ஆனால் மற்ற நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விபச்சாரம் நடைபெறுகின்றது. விபச்சாரத்திற்கான அனைத்து வாசல்களும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் விபச்சாரத்தின் பக்கம் செல்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு தான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாகஎன்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்று விட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு தான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவீராகஎன்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்று விட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர், “விபச்சாரக் குற்றத்திலிருந்துஎன்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?” என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபச்சாரம் செய்தீரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்கள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டதுஎன்று கூறினர். வேறு சிலர், “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, “என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்என்று கூறினார்என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!என்று வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்என்று கூறினார்கள்.

பிறகு “அஸ்த்குலத்தின் ஒரு கிளையான “ஃகாமித்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடு தான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவாயாகஎன்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், “மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் “என்ன அது?” என்று கேட்டார்கள். அப்பெண், “நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “நீயா (அது)?” என்று கேட்டார்கள். அப்பெண் “ஆம்என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும் வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)என்றார்கள். பிரசவிக்கும் வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக் கொண்டார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழுந்தை பிறந்து விட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப் போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டு விடவும் நாம் விரும்பவில்லைஎன்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, “அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம்

இவ்விருவரும் தப்பு செய்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் இவ்விருவரும் நபியவர்களிடம் வந்து, தாங்கள் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து, தண்டனையைப் பெற்றதற்குக் காரணம் என்ன? குர்ஆன் ஊட்டிய அந்த மறுமை நம்பிக்கை தான்.

இன்று இவ்வுலகம் விபச்சாரத்தின் பாதையைத் திறந்து விட்டதால் அதன் விளைவு ஹெச்.ஐ.வி. கிருமியின் அபாயகரமான தாக்குதல் ஆகும். இன்று எய்ட்ஸ் தாக்குதலுக்குள்ளான ஒரு தலைமுறையே தோன்றி விட்டது.

ஒன்றுமறியாத பிஞ்சுகள், பச்சிளம் குழந்தைச் செல்வங்கள் தங்களது பெற்றோர் செய்த பாவத்திற்காக இந்தக் கொடிய வைரஸைச் சுமக்கின்றனர். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றனர். இப்படிப்பட்ட கொடிய பாவத்தில் எல்லா முஸ்லிம்களும் ஈடுபடாததற்கு அடிப்படைக் காரணம் மறுமை நம்பிக்கை தான். இறந்த பின்னர் நிகழவுள்ள இறைவனின் விசாரணை தான்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இருப்பினும் எடுத்துக் காட்டுக்கு இவை போதும் என்று நிறுத்திக் கொண்டு, மனிதன் சக மனிதனுக்கும் இதர உயிரினங்களுக்கும் செய்யும் தீமைகளைப் பார்ப்போம்.

மனித உரிமை மீறல்

உலகத்தில் மனித உரிமை மீறலுக்கான விசாரணை முடியும் முன்பே அந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளி மரணித்து விடுவார். அதாவது, தான் செய்த குற்றத்திற்கு இந்த உலகத்தில் தண்டனை எதுவும் அனுபவிக்காமலேயே மரணித்து விடுவார். ஆனால் இஸ்லாத்தில் அப்படிக் கிடையாது. மனித உரிமை மீறலை நடத்திய குற்றவாளி மறுமையில் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். கொலை, கொள்ளை, வட்டி, பொருளாதார மோசடி, கடன் மோசடி, புறம், கோள் என்று மனித உரிமை மீறல் குற்றப் பட்டியலில் வருகின்ற அனைத்திற்கும் மறுமையில் விசாரணை உண்டு.

வாக்குறுதிக்கும் விசாரணை

சாதாரணமாக ஒருவர் மற்றொருவரிடம் உதவி கேட்கும் போது, “நாளை தருகிறேன்’ என்று சொல்லி விடுவார். அப்படிச் சொல்லும் போது ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே சொல்வார். வாக்குறுதி கொடுத்தது போன்று மறு நாள் அந்த உதவியைச் செய்வதுமில்லை. அதைப் பற்றி அவர் ஒன்றும் கண்டு கொள்வதுமில்லை. இது மனிதர்களுடைய பார்வையில் சிறு பாவம். ஆனால் அல்லாஹ் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர்ஆன் 17:36

அடுத்தவனுடைய உள்ளம் புண்படும்படி எந்த வார்த்தை பேசியிருந்தாலும் அது அல்லாஹ்வுடைய ஏட்டில் பதியப்படுகின்றது.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

அல்குர்ஆன் 50:17, 18

மிருக வதைக்கும் நரக தண்டனை

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, மனித உரிமை மீறல்களுக்காக மட்டுமல்ல. மிருக வதைக்கும், மிருக உரிமை மீறலுக்கும் மறுமையில் தண்டனை வழங்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லைஎன்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 2365

இப்படியொரு விசாரணை மன்றத்தை நினைவூட்டி, மக்களிடம் மனித உரிமை மீறல் ஏற்படாமல் திருக்குர்ஆன் தடுக்கின்றது.

———————————————————————————————————————————————–

போர் நெறியும் புனிதக் குர்ஆனும்

ஒட்டு மொத்த உலகமும் புனிதக் குர்ஆன் கட்டளைப்படி நடந்திருந்தால் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

அல்குர்ஆன் 9:13

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 22:39

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!

அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!

அல்குர்ஆன் 2:191

எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை!

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:192

அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்!

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:7

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:61

மதத்தைப் பரப்ப போர் இல்லை!

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

போருக்கு இது போன்ற பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கின்றது. அப்படியே போர் தொடுத்தாலும், நான்கு புனித மாதங்களில் போரை நிறுத்தி விட வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:217

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, நான்கு மாதங்கள் போரை நிறுத்தினால், அந்த இடைவெளி நிச்சயமாக சண்டை செய்யும் நாடுகளுக்கு மத்தியில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக மனிதன் செய்யும் காரியத்தில் ஓர் இடைவெளி ஏற்படும் போது அதை எளிதில் மீண்டும் துவக்கி விடுவது கிடையாது. அல்குர்ஆன் இந்த உளவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒரு சமாதானத்தை ஏற்படுத்துகின்றது. இதையும் மீறி சண்டை தொடர்ந்தால் போர் தாக்குதலில் ஒரு வரம்பை நிர்ணயிக்கின்றது.

தாக்குதலுக்கு ஒரு வரம்பும் வரையும்

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

அல்குர்ஆன் 16:126

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:194

தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 42:40

போரின் போது புனிதக் குர்ஆன் கூறும் இந்த வரைமுறையை உலகில் எந்த ஒரு வேதமும், எந்த ஓர் அரசாங்கமும், ஆட்சியாளரும் கூறவில்லை. இந்த விதிமுறையை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மீறியதால் தான் உலக வரலாற்றில் மறக்க முடியாத ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவு நிகழ்ச்சி ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது நடுநிலை வகித்து வந்த அமெரிக்காவை வம்புக்கிழுப்பது போல், ஜெர்மனியின் நேச நாடான ஜப்பான், ஹிட்லரின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தைத் தாக்குகின்றது. 1941ம் ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க் கப்பல்களையும், 200 போர் விமானங்களையும் ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதில் 3000 அமெரிக்க வீரர்கள் பலியாயினர்.

அவ்வளவு தான்! அன்றே அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ஜப்பான் மீதும் அதைத் தூண்டி விட்ட ஜெர்மனி மீதும் யுத்தப் பிரகடனம் செய்தார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து நேச நாடுகளாகக் களத்தில் குதித்தன.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, கால் டிப்பெட் என்பவரின் தலைமையில் 11 பேர் அடங்கிய விமானப் பணிக்குழுவினர் ஜப்பான் ஹிரோஷிமாவின் அயியாயி என்ற பாலத்தைத் தகர்ப்பதற்காக விண்வெளியில் வட்டமடிக்கின்றனர்.

அழிவு சக்தி அமெரிக்காவின் விமானம் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டைப் போடுகின்றது. அந்த அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய் – குட்டிப் பையன் என்பதாகும். பாலத்தைக் குறி வைத்துப் போடப்பட்ட அந்த அணுகுண்டு, கொஞ்சம் தவறி 800 அடி தள்ளி விழுகின்றது.

அவ்வளவு தான்!

மூன்று மீட்டர் நீளம், முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர் அக்கினிக் குஞ்சைப் பொறிக்கின்றது. யுரேனியம், புளூட்டோனியம் உரசலில் நியூக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியூட்ரான்களாக அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கிப் பறந்து வருகின்றது.

அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10,000 டிகிரி செல்சியஸ். அந்த சாப்பறைவை சாவகாசமாகத் தரையிறங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.

அவ்வளவு தான். அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைந்தவர்கள் 30,524 பேர், காயம் பட்டவர்கள் 79,130 பேர், காணாமல் போனவர்கள் 3,622 பேர்.

ஆகஸ்ட் 9ம் தேதி பாக்ஸ் கார் என்ற விமானம், கேப்டன் ஸ்வீனி என்பவரது தலைமையில் ஜப்பானின் கோகுரா துறைமுகத்தின் மீது குண்டு போடுவதற்காகப் பறந்து கொண்டிருக்கிறது. அந்தக் குண்டின் பெயர் ஃபேட் பாய் – கொழுத்த பையன் அல்லது குண்டுப் பையன்.

கோகுரா துறைமுகம் சரியாகத் தெரியாததால் அந்தக் குண்டுப் பையனை நாகசாகி துறைமுகத்தில் நழுவ விடுகின்றார் அந்தக் கேப்டன். வெடித்த மறு கணத்திலேயே வெந்து போனவர்கள் 35,000 பேர். கதிரியக்கத் தாக்குதலில் கரிந்து போனவர்கள் 40,000 பேர்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தல்

ஜப்பான் மட்டுமல்ல! மனித நேயமிக்க உலக மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த போது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமேன் சொன்ன அக்கினி வார்த்தைகள்:

“இது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்!”

வயோதிகர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அழித்த ஒரு நாளை வரலாற்றில் முக்கியமான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகின்றார்.

பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, அதற்கு ஈடான ராணுவ வீரர்களைத் தாக்கினால் நியாயம்! ஆனால் அதற்குப் பதிலாக லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லும் பேரழிவை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இப்போது குர்ஆன் கூறும் போர் நெறியைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

அல்குர்ஆன் 16:126

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:194

உலகில் வேறு எந்த மதமாவது இப்படியொரு புனித நெறியைப் போதித்திருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

மறுமை நம்பிக்கை தான் அவர்களை மனித மாணிக்கங்களாக ஆக்கியது. மறுமையில் தொடரும் மனித உரிமை விசாரணை அவர்களை இதுபோன்ற கொடுமைகள் நடத்துவதை விட்டும் தடுத்தது.

மனித உயிர் புனித உயிர்

அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னால் பெண்ணினம் ஒரு பேயினம்; அது ஓர் ஈன இனம் என்று உயிருடன் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த அந்த அரபு மக்கள்!

என்ன பாவத்துக்காக கொல்லப் பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது…

அல்குர்ஆன் 81:8

திருக்குர்ஆனின் இந்த வசனம் அவர்களின் கல் மனதைக் கரைய வைத்தது. இன்றைக்குப் பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு கொடுக்கும் பேரன்பு மிக்கவர்களாக மாறி விட்டனர். அப்படி மனித உயிருக்கு மாண்பும், மரியாதையும் அளிக்கும் ஒரு சமுதாயமாக இஸ்லாமியச் சமுதாயம் பரிணமித்து விட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்தது மறுமை உலக நம்பிக்கை தான்.

பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் அந்த அரக்கர்களை, ஓர் இருபத்து மூன்று ஆண்டு கால வரலாற்றில் இரக்க குணமுடையவர்களாக மாற்றிய அல்குர்ஆன், அதைப் போதிக்கும் தூதர் வழியாக மனித உயிரைப் பற்றிய பிரகடனத்தை அறிவிக்கச் செய்கின்றது. அதன்படி அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது அறிவிக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “விடை பெறும்ஹஜ்ஜின் போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம் தான்என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (“மக்கா‘)தான்என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், “ஆம்என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 6785

மாநபியின் இந்த வேண்டுகோளை முஸ்லிம் சமுதாயம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு சிலர் மீறியிருக்கலாம். ஆனால் மேற்கத்தியர்கள் மீறியது போன்று மீறியதில்லை. இதற்கு எடுத்துக் காட்டாக இரண்டு உலகப் போர்களைக் கூறலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் போட்டு போட்டு முன்னேறின. ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்ய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனி நாடுகள் சந்தைகளாக விளங்கின. ஜெர்மனிக்கு அப்படிப்பட்ட காலனி நாடுகள் எதுவும் இல்லை.  எனவே பிரஞ்சு, பிரிட்டானிய காலனி நாடுகளில் சிலவற்றையாவது கைப்பற்றினால் தான் ஜெர்மனியின் தொழில் முன்னேற்றம் சாத்தியம்; இதற்கு உலகப் போரைத் தொடங்குவது தான் வழி என்று ஜெர்மன் கருதியது. இதனால் ஆஸ்திரியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையே ஏற்பட்ட போரை உலகப் போராக மாற்றியது. செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா போரில் குதித்தது அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கி, 1918, நவம்பர் 11 அன்று முடிவடைந்த முதல் உலகப் போரின் இழப்புகளை வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு கணித்துள்ளனர்.

இறந்து போன பொது மக்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம்.

ராணுவ வீரர்கள் நாடு வாரியாக,

ஜெர்மனி     – 20,00,000

ரஷ்யா – 17,00,000

பிரான்ஸ்     – 13,60,000

ஆஸ்திரியா, ஹங்கேரி – 12,00,000

பிரிட்டன்     – 7,60,000

இத்தாலி      – 6,50,000

துருக்கி       – 3,75,000

பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகள் – 2,50,000

ஐக்கிய அமெரிக்கா – 1,26,000

இதில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் ஆகியோரின் தொகை சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் மூன்றே முக்கால் கோடியைத் தாண்டும்.

51 மாதங்கள் நடைபெற்ற இந்த முதல் உலகப் போர் ஜெர்மனியின் சரணாகதியுடன் முடிவடைந்தது. மன்னர் கெய்ஸர் முடி துறந்தார். உலகத்தையே ரணகளமாக்கிய சர்வாதிகாரி ஒழிந்தார் என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உலகப் போர் தொடங்கியது. கெய்சரை விடப் பன்மடங்கு இனவெறியைத் தூண்டி விட்டுப் பேசி ஹிட்லர் இதைத் தொடங்கி வைத்தார்.

1945ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில் 2 கோடி பேர், போலந்து நாட்டில் 60 லட்சம் பேர் உட்பட உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடிப் பேர் பலியாயினர்.

இந்தப் போர்கள் உலகப் போர்கள் என்றால் சில ஆண்டுகளுக்கு முன் இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போர் ஓர் அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போராகும். ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி, இறையாண்மை மிக்க ஒரு அரசாங்கத்தின் மீது அமெரிக்கா நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கப் போர். இதற்கு அது காட்டிய காரணம், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்பது தான்.

மார்ச் 20ம் தேதி, 2003ம் ஆண்டு அமெரிக்க, பிரிட்டன் படைகள் இராக்கின் மீது படையெடுத்தன. ஆனால் இதுவரை அந்தப் பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை.

இறுதியில் இராக் அதிபர் சதாமைக் கைது செய்து அவரைத் தூக்கில் போட்டு, அமெரிக்கா தனது வெறியைத் தணித்துக் கொண்டது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 6 லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.

லட்சக்கணக்கான மக்களை முடமாக்கியது.

லட்சக்கணக்கானோரை அகதிகளாக்கியது.

லட்சக்கணக்கான குழந்தைகளை அனாதைகளாக்கியது.

லட்சக்கணக்கானோரை சிறைபிடித்து சித்ரவதை செய்தது.

இவ்வாறு அமெரிக்க, பிரிட்டானியர்கள் செய்த இந்த அராஜகப் போர் இருபத்தோறாம் நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறலாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் எங்கேனும், ஏதேனும் ஓர் இடத்தில்; இது போன்ற மனிதப் பேரழிவுகளைக் காட்ட முடியுமா? இதற்குக் கடிவாளமாக, கவசமாக இருந்து இஸ்லாமிய சமுதாயத்தைக் காத்துக் கொண்டிருப்பது திருக்குர்ஆன் தான். அது ஊட்டுகின்ற, போதிக்கின்ற மறு உலக நம்பிக்கை தான். இப்படிப்பட்ட நம்பிக்கை மூலமாகத் தான் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இன்று உலகை சீர்கேட்டிற்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள்:

 1. தேசிய வாதம்

உலகில் நடக்கும் அனைத்துப் போர்களுக்கும் இது ஒரு மூல காரணமாக அமைந்துள்ளது.

 1. இனவாதம் மற்றும் தீண்டாமை

இன்றைக்கும் இந்தியா தீண்டாமை எனும் தீயில் வெந்து கொண்டு தான் உள்ளது. இன்னும் ஒரு சில ஜாதியினருக்கு, தேனீர் விடுதிகளில் தனிக் குவளைகளில் தேநீர் பரிமாறப்படும் அவல நிலை! ஒரு சில ஜாதியினர் இன்னும் மலம் வாரும் பரம்பரைத் தொழிலை விட்டு மாறவில்லை. இப்படியொரு தீண்டாமை இந்தியாவில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

வளர்ந்து விட்ட அமெரிக்காவிலும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக வெள்ளையர் இனம் இந்தச் சாக்கடை நீரை அள்ளி வீசுகின்றது. கருப்பர், வெள்ளையர் சாதியச் சண்டை அறிவியலின் உச்சியிலிருக்கும் அமெரிக்காவிலும் அகன்றபாடில்லை.

 1. மொழிவாதம்

இலங்கையில் இந்த மொழிவாதம் தான் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்தது. ஒன்றுபட்ட இந்தியாவிலேயே கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் தண்ணீர் தகராறு!

இப்படிப்பட்ட வேற்றுமைகளை எல்லாம் இந்தக் குர்ஆன் ஒரேயடியில் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி விடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இதையெல்லாம் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மறுமை அச்சத்தின் மூலமாகத் தான் முடியும் என்பதை திருக்குர்ஆன் இந்த நூற்றாண்டு வரை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.

இன்று உலகத்தில் இதுவரை தீராத, தீர்க்க முடியாத இதரப் பிரச்சனைகளுக்கும் இந்தத் திருக்குர்ஆன், மறுமை நம்பிக்கை எனும் ஒரு மாமருந்தை வைத்திருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்தில், நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல் நீதித்துறையில் ஊழல்

இன்று நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல் ஏற்பட்டால் அதை நீதித் துறை சரி செய்யும். மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் குளிக்கலாம்; அந்த கங்கையே சூதப்பட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பார்கள். அது போன்று நிர்வாகத் துறையைச் சரி செய்ய வேண்டிய நீதித்துறை உலகெங்கிலும் லஞ்ச லாவண்யத்தில், ஊழலில் ஊறிப் போய்விட்டது.

நிதியை வாங்கி நீதியை விற்கும் நீர்த்துப் போன நீதித்துறை! இதற்கு அடிப்படைக் காரணம், சட்டம் என்ன செய்யும் என்ற தைரியம் தான். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, “மனிதா! இறந்த பிறகு ஒரு விசாரணை இருக்கின்றது; அங்கு வா! அதிலிருந்து நீ தப்ப முடியாது’ என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது.

போதை மருந்து கடத்தல்

கலப்படம்

பதுக்கல்

பெண் சிசுக் கொலை

சினிமா, ஆபாசம்

ஓரினச் சேர்க்கை

ஆட்சியாளர்களின் அராஜகம்

அடுத்த நாட்டு ஆக்கிரமிப்பு

விவாக ரத்து

வரதட்சணை

பாகப்பிரிவினையில் மோசடி

வயதான பெற்றோரைப் புறக்கணித்தல்

நில மோசடி

சூதாட்டம், லாட்டரி

புகை பிடித்தல்

தனிநபர் ரகசியத்தை அம்பலப்படுத்துதல்

கற்பு நெறியுள்ள பெண்கள் மீது அவதூறு பரப்புதல்

சைபர் கிரைம்

இன்னும் என்னென்ன பாவங்கள், குற்றங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் திருக்குர்ஆன் மட்டுமே தீர்வைத் தருகின்றது.

இஸ்லாம் இவற்றுக்கு இரு விதமான தீர்வுகளைத் தருகின்றது. ஒன்று சட்டத்தின் அடிப்படையில்! மற்றொன்று, மறுமை அச்சத்தின் அடிப்படையில்!

———————————————————————————————————————————————–

அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்

இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன் நோன்பு நோற்கச் சொல்கிறது.

அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல், கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது.

இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன?

தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை.

பசிக்கின்றது; ஆனால் அவர் உணவைச் சாப்பிடுவதில்லை.

அருகிலேயே மனைவி இருக்கிறாள்; ஆனால் அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுவதில்லை.

ஏன்? அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயம் தான்.

இந்தப் பயம் தான் அவருக்கு முன்னால் இருக்கும் அவருக்கே சொந்தமான நீரை, அவருக்குச் சொந்தமான உணவை உட்கொள்ளாமல் தடுத்தது. இந்தப் பயம் தான் அவர் திருமணம் செய்து கொண்ட, அவருக்குச் சொந்தமான அவரது மனைவியை அனுபவிக்க விடாமல் தடுத்தது.

தனக்குச் சொந்தமான பொருளையே அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயத்தில் அனுபவிக்காமல் இருக்கும் போது அடுத்தவர் பொருளை அனுபவிக்கலாமா? என்ற பாடத்தை இந்த நோன்பு அவருக்கு அளிக்கின்றது.

நோன்பின் போது யாரும் பார்க்காமல் இருந்தாலும் அவர் சாப்பிடுவதில்லை. ஏன்? அல்லாஹ் பார்க்கிறான்; மனிதர்கள் யாரும் இந்த விஷயத்தில் தன்னைத் தண்டிக்கப் போவதில்லை என்றாலும் நாளை மறுமையில் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்ற பயம் ஏற்படுகின்றது. இந்த சார்ஜைத் தான் ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருக்குர்ஆன் ஏற்றுகின்றது. இது ஒரு வருடம் ஆனதும் சார்ஜ் இறங்கி விடாமல் இருப்பதற்காக மறு வருடம் ரமளானில் மீண்டும் ஏற்றுகின்றது.

இவ்வாறு மனிதன் தன் ஆயுட்காலம் முடிகின்ற வரை அல்லாஹ்வைப் பயந்து வாழச் செய்கின்றது.

அல்லாஹ்வுக்கு எதிரான பாவங்களை, குற்றங்களைச் செய்யாமல் அவன் மனது பக்குவப்படுகின்றது. அதைத் தொடர்ந்து, சக மனிதனுக்கு எதிரான, பிற உயிரினங்களுக்கு எதிரான பாவங்களைச் செய்ய விடாமல் தடுக்கின்றது.

மனித இனத்தில் ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளையும் இறையச்சம், மறுமை நம்பிக்கை, மறு உலக விசாரணை மூலம் தடுத்து, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றது.

அப்படிப்பட்ட தன்மை உலகின் தன்னிகரற்ற வேதமான அல்குர்ஆனுக்கு மட்டும் தான் இருக்கின்றது என்பதால் தான் அது உலக மக்களை நோக்கி, தன் போன்ற திட்டத்தை யாராலும் உருவாக்க முடியுமா? என்று அறைகூவல் விடுக்கின்றது. இதன் மூலம், தான் மட்டுமே இறைவேதம் என்று நிரூபித்து நிற்கின்றது.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர் களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

சவால் விட்டதுடன் நிற்காமல், உலக மக்களின் பிரச்சனைகளை, தான் மட்டுமே தீர்த்து வைப்பேன்; அவர்களுடைய சுமைகளை நீக்குவேன் என்று சான்று பகர்ந்து, உறுதிமொழியையும் அது தருகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மை யற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

———————————————————————————————————————————————–

ஜாக் பின்பற்றுவது இஸ்லாமியக் காலண்டரல்ல! இஸ்ரேலியக் காலண்டரே!

14.07.08 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாக் அமைப்பிற்கும், கேரளாவைச் சேர்ந்த நத்வத்துல் முஜாஹிதீன் என்ற அமைப்பிற்கும் இடையே பிறை பற்றிய விவாதம் கோவையிலுள்ள மஸ்ஜிதுல் முஜாஹிதீனில் நடைபெற்றது.

கேரள நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பு கொள்கையில் ஜாக்கைப் போன்றது தான். குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டைத் தவிர்த்து நபித்தோழர்கள் என்ற ஓர் அடிப்படையையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இவ்விரு இயக்கங்களும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.

அப்படி ஒத்த கருத்தைக் கொண்ட இவ்விரு அமைப்புகளுக்கிடையே பிறை பற்றிய விவாதம் நடந்திருக்கின்றது. ஒத்த கருத்தைக் கொண்ட அமைப்புகளுக்கு இடையிலேயே விவாதம் நடைபெற்றதை வைத்துப் பார்க்கும் போது, பிறை விஷயத்தில் ஜாக் ஓர் ஆதரவற்ற அனாதை என்பது அம்பலமாகியுள்ளது.

ஜாக்கின் கருத்துக்களுக்கும் காலண்டருக்கும் கை கொடுப்பது யூதவிசமும், அதன் கிளையான ஷியாயிஸமும் தான் என்பதை நாமல்ல! நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பே நன்றாகத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

முதல் பிறையா? மூன்றாம் பிறையா? சிவகாசி காலண்டர் அடிப்படையா? என்று பிறை பார்த்து நோன்பு வைப்பவர்களை, பெருநாள் கொண்டாடுபவர்களைக் கேலி செய்து சுவரொட்டிகள் ஒட்டி, தங்களை அறிவு ஜீவிகள் போலவும், இருபத்தோறாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சிகரங்கள் போலவும் ஜாக் வர்க்கம் பீற்றியும் பிதற்றியும் கொள்கின்றது.

இவர்கள் முதல் பிறையா? மூன்றாம் பிறையா? என்று கேலி செய்வது முஸ்லிம்களை மட்டுமல்ல! முஹம்மது (ஸல்) அவர்களையும் தான். ஏனெனில் அவர்கள் தான் பிறை பார்த்து நோன்பு      வையுங்கள் என நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1906

அவ்வாறு பிறை பார்த்து நோன்பு வைக்கும் போது, சமயத்தில் முதல் நாளன்று நமக்குத் தெரியும் பிறை இரண்டாம், மூன்றாம் பிறை போன்று தெரியும். இந்தப் பிறையைப் பார்த்து விட்டு முஸ்லிம்கள், “நாம் ரமளானில் ஒரு நாளை அநியாயமாக விட்டு விட்டோமே!’ என்று எண்ணத் தலைப்படுவார்கள். பெருநாள் கொண்டாட வேண்டிய நாளில் நோன்பு நோற்று விட்டோமே என்று கவலைப்படுவார்கள். அவ்வாறு கவலைப்படக் கூடாது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் “நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான்என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபுல்பக்தரீ

நூல்: முஸ்லிம்

எனவே ஜாக் ஒட்டியுள்ள இந்தச் சுவரொட்டிகள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைத் தான் கேலியும் கிண்டலும் செய்கின்றன. தூதர் நபி (ஸல்) அவர்களின் இந்தக் குர்ஆனிய கட்டளைக்கு எதிராகக் குதர்க்க வாதமும் கோணல் வசனமும் பேசுகின்றார்கள். இதற்கு அல்லாஹ்வே பதில் சொல்கின்றான்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:85

ஆம்! அல்லாஹ் இவர்களை இவ்வுலகிலும், மறுவுலகிலும் இழிவுபடுத்தப் போவதாகக் கூறுகின்றான். கோவையில் இவர்களுக்கும், கே.என்.எம். (கேரள நத்வத்துல் முஜாஹிதீன்) அமைப்பினருக்கும் நடந்த விவாதத்தின் போது இந்த அறிவுஜீவிகளை, அறிவியல் சிகரங்களை (?) அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டான்.

ஏகத்துவம் ஏற்கனவே இவர்களைப் பற்றி, “இவர்கள் பின்பற்றுவது தூதரையல்ல! யூதரைத் தான்” என்று துல்லியமாகக் கூறியுள்ளது. ஏகத்துவம் முன்மொழிந்த அதே கருத்தை, இவர்கள் பின்பற்றுவது யூதரைத் தான் என்ற கருத்தை கே.என்.எம். தெளிவாக இப்போது வழிமொழிந்துள்ளது.

யூதவிஷம் இவர்களிடம் ஏறிப் போனதால் தான், முதல் பிறையா? மூன்றாம் பிறையா? என்று சுவரொட்டிகள் மூலம் ஹதீஸைக் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

நம்மைப் பார்த்து சிவகாசி காலண்டரா? என்று கேட்கிறார்கள். பிறை விஷயத்தில் யாரும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வது கிடையாது. எத்தனையோ முறை நமது நோன்பு மற்றும் பெருநாட்கள் காலண்டருக்கு மாற்றமாக, கண்ணில் பிறை கண்ட அடிப்படையில் அமைந்திருக்கின்றது. இதை யாருமே மறுக்க முடியாது.

“உமர் (ரலி) அவர்கள் காலண்டர் வைத்திருந்தார்கள். ஆனால் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் அவர்கள் காலண்டரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொண்டது பிறை பார்ப்பதைத் தான்” என்று கே.என்.எம். ஆலிம் அப்துர்ரஹ்மான் ஸலபீ அவர்கள் இந்த விவாதத்தில் குறிப்பிட்டது போல்,

நாம் இன்று சிவகாசி காலண்டரை அல்ல! வேறு எந்தக் காலண்டரையும் நோன்பு, பெருநாளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை. நாம் ஆதாரமாகக் கொள்வது பிறையைப் பார்த்துத் தீர்மானிக்கும் இஸ்லாமியக் கணக்கை மட்டும் தான்.

இதைத் தான் இவர்கள் சிவகாசி காலண்டர் என்று கிண்டல் செய்கிறார்கள்.

சரி தான்! யூத ரசம் ஊட்டப்பட்ட இவர்களுக்கு இஸ்லாமியக் கணக்கு கிண்டலாகத் தான் தெரியும். ஜாக் பருகியிருக்கும் யூத ரசத்தையும், அதற்கு அது பூசுகின்ற இஸ்லாமிய ரசாயன சாயத்தையும் கே.என்.எம். மவ்லவி அப்துர்ரஹ்மான் ஸலபி மிகச் சரியாகவே கிழித்துக் காட்டி விட்டார்.

“முதன் முதலில் இந்தக் காலண்டரை அறிமுகப்படுத்தியவன் அப்துல்கரீம் பின் அபில் அவ்ஜா என்ற நாத்திகன் தான். பிறையைக் கண்ணால் பார்க்கத் தேவையில்லை. பிறையைக் கணித்தால் போதுமானது என்ற யூதக் காலண்டரைத் திணித்தவன் இந்த நாத்திகன் தான். இதைத் தான் (யூதத்தின் கள்ளப்பிள்ளையும் செல்லப் பிள்ளையுமான) ஷியாக்களின் இமாம் ஜஃபர் சாதிக் தங்களது காலண்டராக ஆக்கிக் கொண்டார். இந்த நாத்திகன் இந்த அக்கிரமத்தை மட்டும் இஸ்லாத்தில் நுழைக்கவில்லை; நான்காயிரம் பொய்யான ஹதீஸ்களையும் நுழைத்திருக்கிறான்.

இத்தகைய துரோகிக்கு கூஃபாவின் கவர்னர் அபூஜஃபர் மரண தண்டனை என அறிவித்தார். மரண தண்டனைக்குள்ளான இந்த நாத்திகன் சொன்ன பதில்:

எனக்கு எப்படி இவர் மரண தண்டனை விதிக்க முடியும்? நான் இறக்காதவன். சாகா வரம் பெற்றவன். நான் நுழைத்த நாலாயிரம் ஹதீஸ்கள், நான் அழியாதவன் என்பதைக் காலாகாலம் நிரூபித்துக் கொண்டிருக்கும்.

அவை ஹலாலை ஹராமாக்குபவை. ஹராமை ஹலால் ஆக்குபவை. அவற்றில் ஒன்று தான் நோன்பன்று பெருநாள் கொண்டாடுவதும், பெருநாளன்று நோன்பு நோற்பதும் ஆகும்.

இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் ஸலபி அவர்கள் ஜாக்கின் வேஷத்தைக் கலைத்தெறிந்தார்.

மரண தண்டனை பெற்ற நாத்திகவாதி உதிர்த்த நச்சுக் கருத்துக்கள், கக்கிய விஷ வாயுக்கள் அடிப்படையில் தான் ஜாக் இந்தக் குழப்பத்தை, அதாவது பெருநாளன்று நோன்பையும், நோன்பன்று பெருநாளையும் சமுதாயத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேரள அணியினரின் அற்புதக் கேள்வி

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கே.என்.எம். மார்க்க அறிஞர் ஜக்கரிய்யா சுலாஹி அவர்கள், “ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் தான். அதை நான் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். யூதக் காலண்டரில் 31 வரும். இந்த விஷயத்தைத் தவிர மற்றவைகளில் ஜாக் காலண்டர், இஸ்ரேலியக் காலண்டரை ஒத்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன் அந்த அணியினர் ஓர் அற்புதமான கேள்வியையும் முன்வைத்தனர்.

பிறைக் கணிப்பிற்கு அறிவியலைப் பயன்படுத்துகின்ற நீங்கள் ஏன் இத்தாவுக்கு இதே அறிவியல் அளவுகோலைப் பயன்படுத்த மறுக்கிறீர்கள்? அறிவியல் வளர்ந்து விட்டது என்று கூறி அங்கும் அதைப் பயன்படுத்தி மூன்று மாத கால இத்தாவை மிச்சம் பிடிக்கலாம் அல்லவா? என்ற கருத்தில் ஒரு கேள்வியையும் முன்வைத்தனர்.

கலந்துரையாடலா? கழன்ற உரையாடலா?

ஜாக் தரப்பில் சென்ற அணியினரில், கமாலுத்தீன் மதனியைத் தவிர மற்றவர்கள் கூறு கெட்டவர்கள். இதைக் கவனத்தில் கொண்டே கமாலுத்தீன் மதனி ஆரம்பத்திலேயே மிக ஜாக்கிரதையாக, “இது ஒரு கலந்துரையாடல் தான். விவாதம் அல்ல” என்பதாகத் தன் அறிமுக உரையில் குறிப்பிடுகின்றார்.

விவாதத்திற்கு, கலந்துரையாடல் என்று ஜாக் தரப்பில் கூறப்பட்டாலும் இது ஜாக்கிற்குத் தோல்வியாகவே முடிந்தது.

கே.என்.எம். மார்க்க அறிஞர்களின் கூரான விவாதத்திற்கு, ஜாக்கினர் கூறான பதிலைத் தரவில்லை.

ஒரு கட்டத்தில் கே.என்.எம். அணியினர், “கமாலுத்தீன் மவ்னம் காப்பது வியப்பளிக்கின்றது’ என்றும் குறிப்பிட்டனர்.

இதன் பின்னர் சூடாகிப் போன கமாலுத்தீன் மதனி மலையாளத்தில் பறைய ஆரம்பித்தது.

“உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். யூதன், கிறித்தவன், இந்து யார் சொன்னாலும் ஏற்க வேண்டும்” என்ற தத்துவத்தைத் ததும்பச் செய்தார்.

ஜாக்கின் மற்றொரு மவ்லவி கணிப்பிற்கு வக்காலத்து வாங்கி, வரிந்து கட்டிக் கொண்டு, “(பிறை பார்ப்பது தொடர்பான) ஒரு ஹதீஸைப் பின்பற்றுவதற்காக வேண்டி, வானியல் பற்றிக் குர்ஆன் கூறும் வசனத்தை மறுப்பதா?” என்று கேள்வி எழுப்பிக் கொந்தளித்தார்.

இவர்களின் இந்தக் கொந்தளிப்பையும், வார்த்தைக் கொப்பளிப்பையும் கூர்ந்து பாருங்கள். இவர்கள் தங்களுக்குள் யூதச் சிந்தனையை வார்த்து விட்டார்கள் என்பது புலப்படும். தாங்கள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்குத் தக்க மார்க்கத்தை வளைப்பது யூதர்களின் மூர்க்கத் தனமான முரட்டு வழக்கம்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

அல்குர்ஆன் 2:87

குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் மோதல் போன்று தெரிகின்ற இடங்களில் இணைத்து ஒரு பொருத்தமான விளக்கத்தை, தவ்ஹீது ஜமாஅத்தின் அறிஞர்கள் கூறுகின்ற போது, நம்மை வழிகேடர்கள் என்று வாய் கிழியப் பேசினார்கள். இன்று இவர்கள் தாங்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, அந்த முடிவுக்காக, குர்ஆனுடன் எந்த வகையிலும் முரண்படாத ஒரு ஹதீஸையே உதறித் தள்ளும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.

இனியும் இவர்கள் பின்னால் செல்லலாமா? சிந்தியுங்கள். குர்ஆனுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கும் மாற்றமாக, பிறை விஷயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கருத்தை ஏற்றுக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாத்திக யூதனின் கருத்தைத் தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ஜாக் – கே.என்.எம். விவாத சி.டிக்களைப் பார்த்து மேலதிகமான விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.