தனிநபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்
தனிநபர் வழிபாட்டைத்
தரை மட்டமாக்குவோம்
இது, தவ்ஹீது ஜமாஅத்தின் ஆரம்ப கால கட்டத்தில் நாம் எடுத்து வைத்த முக்கியமான கோஷம் மட்டுமல்ல! கொள்கையுமாகும். இந்தக் கொள்கையை ஏன் எடுத்து வைத்தோம்?
நாம் மக்களுக்கு மத்தியில் தஃவா களத்தில் செல்கின்ற அந்தக் கால கட்டத்தில் மக்கள் இமாம்கள் மீது அளவு கடந்த பக்தியும் பிரியமும் கொண்டிருந்தார்கள்.
உதாரணத்திற்கு, விரல் அசைக்கும் ஹதீஸை மக்களிடத்தில் எடுத்துக் காட்டி, நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் விரலை அசைத்தார்கள் என்று சொல்லும் போது, எங்கள் ஷாஃபி இமாம் விரலை நீட்டித்தான் வைத்திருந்தார்கள். எங்கள் ஹனஃபீ இமாம் இப்படித்தான் நீட்டி விட்டு மடக்கி வைத்திருந்தார்கள் என்று ஹதீஸுக்கு எதிராக, அதாவது ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் எதிராக இந்த இமாம்களைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
சமீபத்தில் நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனையான முத்தலாக் விவகாரத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஒரே அமர்வில் முத்தலாக் கூறுவது, திருக்குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் நேர் எதிரான நடைமுறை. ஆனால் நான்கு மத்ஹபுகளும் இந்த முத்தலாக்கைக் கூடும் என்று சொல்கின்றன.
(இது குறித்து தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.)
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, தற்போது முத்தலாக் கூறினால் மூன்றாண்டு சிறை என்று காவி அரசாங்கம் சட்டம் இயற்றும் நிலையை உருவாக்கி விட்டது.
இதற்கெல்லாம் யார் காரணம்?
இங்கு தான் தக்லீத் தனது வேலையைக் காட்டுகின்றது. இமாம்கள் தப்பு செய்ய மாட்டார்கள் என்று இவர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை தான் இதற்கு அடிப்படைக் காரணம்.
தெளிவான ஆதாரம் கிடைத்தப் பின்னரும் ஒருவர் தவறிலிருந்து விலகவில்லை என்றால், அதை விட்டு வெளியேறவில்லை என்றால் அது தான் தக்லீது! தனிநபர் வழிபாடு!
இதை எதிர்த்துத் தான் இத்தனை காலம் மக்களிடம் போராடிப் போராடி அவர்களை மத்ஹபிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றோம், மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றோம். இன்னும் போராடவேண்டிய அவசியத்திலும் கட்டாயத்திலும் இருக்கின்றோம்.
கப்ர் வழிபாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் போது கூட மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் கப்ர் வழிபாட்டைப் பற்றிய பிரச்சாரம் கடந்த காலத்தில் பெரிய அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு மக்களிடத்தில் அந்தப் பிரச்சாரம் சென்றிருந்தது. ஆனால் அவர்களிடத்தில் செல்லாத, சொல்லாத ஒரு பிரச்சாரம் இருந்தது என்றால் தக்லீத் பிரச்சாரம் தான்.
அதனால் தான் தக்லீதைப் பற்றி நாம் பிரச்சாரம் செய்யும் போது கடும் எதிர்ப்பையும் காட்டாற்று வெள்ளத்தையும் எதிர் கொண்டோம்.
கப்ர் வழிபாடு, தக்லீத் ஆகிய பிரச்சாரங்களில் எதில் நாம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தோம்? தக்லீதில் தான் அதிகமான எதிர்ப்பலைகளைச் சந்தித்தோம் என்று அடித்துச் சொல்லி விடலாம். அந்த அளவுக்குத் தக்லீதின் வீரியமும் தாக்கமும் மக்களிடம் வேரூன்றியிருந்தது. அல்லாஹ்வின் அருளால் படிப்படியாக அதில் வெற்றி கண்டு மத்ஹபு இல்லாத, தனிநபர் வழிபாடில்லாத, தக்லீத் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கினோம்.
அதாவது, ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்றைச் சரி அல்லது தப்பு என்று முடிவு செய்கின்ற ஒரு ஜமாஅத்தை நாம் உருவாக்கியிருக்கின்றோம்.
தக்லீதை எதிர்த்துப் படை நடத்தும் நாம் இப்போது நமக்குள்ளே உள்நோக்கிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். காரணம், தக்லீதை எதிர்த்துப் போர் முரசு கொட்டிய நாம், நம்மில் சிலரே இன்று கண்மூடித்தனமாக தனிநபர் வழிபாட்டில் போய் விழுவதை நம் வாழ்நாளில் பார்க்கின்றோம்.
நமது ஜமாஅத்தில் தலைவராக இருந்து, நம்முடன் பயணித்த ஒருவர் ஒரு அன்னியப் பெண்ணிடம் 28 நிமிடம் ஆபாசமாகப் பேசிய ஓர் ஆடியோ வெளியானது. இந்த ஜமாஅத்தில் எவரும் அதை நம்பவில்லை. அவர் தானா என்று ஊர்ஜிதம் உறுதி செய்ய வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அவர் அப்படித் தப்பு செய்ய மாட்டார் என்ற அபரிமிதமான நம்பிக்கை தான் இதற்குக் காரணம்.
ஆனாலும் நமது ஜமாஅத்தின் தூய்மையைப் பறைசாற்ற வேண்டுமானால் அதைப் பொய் என்று மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டுமல்லவா? அதற்காக, அதை வெளியிட்டுக் குற்றம் சாட்டியவர்களிடம், இதை நிரூபிக்க வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தோம், அவகாசம் அளித்தோம்.
ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொண்டு நிரூபிக்க வரவில்லை. எனவே அந்த ஆடியோ ஓர் அவதூறு, அபத்தம் என்று முடிவு செய்து, ஜமாஅத் தன்னுடைய பயணத்தை எந்த ஓர் உறுத்தலும் இன்றி தொடர்ந்தது. மீண்டும் அவரை இந்த ஜமாஅத்தின் தலைவராக ஆக்கி அழகு பார்த்தது.
அதன்பின் ஒரு 10 நிமிட ஆடியோ வெளியானது. இதற்கும் ஆதாரத்தை ஜமாஅத் கேட்டது. ஆனால் இந்த முறை சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பமே வந்து ஆதாரத்தைச் சமர்ப்பித்தது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் சரியானவையாக இருந்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மைதானா என்று குற்றம் சாட்டப்பட்ட அவரிடம் நாம் கேட்கிறோம். அவரும் ஒப்புக் கொள்கிறார். நான் தவறு செய்து விட்டேன், அதற்காக என்மீது ஜமாஅத் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சொல்கிறார். அதன் பின்னர் தான் அவர் ஜமாஅத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகின்றார்.
இந்த 10 நிமிட ஆடியோ, ஏற்கனவே வெளிவந்த 28 நிமிடம் ஆடியோவின் கதாநாயகரும் இவர் தான் என்று ஊர்ஜிதம் செய்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த 10 நிமிட ஆடியோ அடிப்படையில் தான்!
ஜமாஅத்தின் நம்பகத்தன்மையைச் சீர்குலைத்த இவரை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகோபித்தக் குரலில் கூறினர். அதனால் இவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பின் அவர் மூன்று மாத காலம் மவுனமாக இருந்தார். தற்போது, தமிழகத்தில் இவரது பருப்பு வேகாது என்பதற்காக இலங்கையில் ஆள் பிடிக்கின்றார். இவரது பொய்யை நம்புவதற்கு அங்கொரு கூட்டம் முன்வந்தது தான் தாமதம். இப்போது இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டார். ஜமாஅத் எனக்கெதிராக சதி செய்துவிட்டது என்று கூற ஆரம்பித்தார்.
ஒட்டுமொத்த ஜமாஅத்தும் இவருக்கு எதிராகச் சதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? குற்றமே செய்யாமல் இவரை நீக்க வேண்டிய தேவை என்ன? இவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் அந்த மூன்று மாத காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்ட அவமானங்கள் என்னென்ன? தன் குடும்பத்தாரிடம், நண்பர்களிடம், அக்கம் பக்கத்தாரிடம் தலைநிமிர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டதே! அவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கேலி கிண்டலுக்கும் உள்ளாக நேர்ந்ததே! அப்படி ஒரு அவமானத்தை வம்படியாக விலைக்கு வாங்க ஜமாஅத் உறுப்பினர்கள், நிர்வாகிகள் யாராவது முன்வருவார்களா?
இதையெல்லாம் சிந்திக்காமல் தமிழகத்திலும் இப்போது மிகச் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
இவர்களை நோக்கி நாம் சொல்வது என்ன தெரியுமா? இவர்களின் தக்லீத், மத்ஹபுவாதிகளிடம் நாம் கண்ட தக்லீதை விட மிகவும் கொடுமையானது, சகிக்க முடியாதது என்பது தான்.
காரணம், மத்ஹபுவாதிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற இமாம்கள் வெளிப்படையை வைத்துப் பார்க்கும் போது இறையச்சத்தின் உச்சத்தில் இருந்தவர்கள். ஒழுக்கசீலர்களாக வாழ்ந்தவர்கள். அந்த இமாம்களின் பகிரங்க மற்றும் அந்தரங்க வாழ்க்கை கேள்விக்குரியதாக ஆனதில்லை. கேலிக்குரியதாக ஆனதில்லை. அவர்களின் ஒழுக்கத்தில் சிறு கீறல் கூட விழவில்லை. அதை வைத்துத் தான் அந்த இமாம்கள் ஆய்வில் தவறே வராது என்று மத்ஹபுவாதிகள் முடிவு செய்து அவர்களை தக்லீது செய்கின்றார்கள். அது கண்டிக்கத்தக்கது. அதை எதிர்த்துத் தான் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பது தனிவிஷயம்.
ஆனால் நமது ஜமாஅத்தில் தலைவராக இருந்து, பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நீக்கப்பட்ட இவரது வாழ்க்கையோ ஒழுக்கக் கேட்டின் மொத்த உருவமாக அமைந்து விட்டது. அப்படிப்பட்டவரையும் ஒரு சிலர் பின்பற்றுகின்றனர், பின் தொடர்கின்றனர் என்றால் அது தக்லீதில் கடைந்தெடுத்த தக்லீதாகும். மத்ஹபுவாதிகளை தக்லீத்வாதிகள் என்று சொல்வதற்கும் அவர்களை விமர்சனம் செய்வதற்கும் இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று தெளிவுபடுத்திக் கொள்கின்றோம்.
இந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத், தக்லீத் என்ற குற்றச்ச்சாட்டுக்கு அப்பாற்பட்ட ஜமாஅத்தாக ஆகியிருக்கின்றது. தனிநபர் வழிபாட்டைத் தகர்த்தெறிந்திருக்கின்றது. இந்த ஜமாஅத்தின் 99 சதவிகித உறுப்பினர்கள் இவரது ஒழுக்கக் கேடான செயலை அங்கீகரிக்கவில்லை.
தன் மீதான அசிங்கத்தைத் துடைப்பதற்காக இவர் ஜமாஅத்தின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசினாலும் ஜமாஅத்தின் தொண்டர்கள் அதைத் தடுக்கும் கேடயமாக நிற்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் சிலர், இதேபோன்று பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீக்கப்பட்ட இன்னொரு தலைவரைக் குறிப்பிட்டு, இவர் தப்பை ஒப்புக் கொண்டு விட்டார்; அதனால் அவருக்கு இவர் பரவாயில்லை; அதனால் இவரைப் பின் தொடர்ந்து பயணிக்கலாம் என்று வாதிடுகின்றனர். (தப்பு செய்த பின், தானாக முன்வந்து செய்த தவறை ஒப்புக் கொண்டு, நடவடிக்கைக்கு உள்ளானதைப் போல் நினைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள். ஆனால் இவரும் மாட்டிக் கொண்ட பின்னர் வேறு வழியில்லாமல் தான் ஒப்புக் கொண்டார் என்பது தனி விஷயம்.)
நம்மை வழி நடத்துபவர்கள் நம்மை விடத் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை விஷயமாகும்.
எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை.
அல்குர்ஆன் 11:88
ஷுஐப் (அலை) அவர்களின் இந்த போதனையிலிருந்து நாம் தெரிவது என்ன? மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்பவர் முதலில் தன்னளவில் தவறுகளை விட்டு விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் யாரிடம் மார்க்கத்தைச் சொல்கிறோமோ அவர்கள் நமது பிரச்சாரத்திற்குச் செவி சாய்க்க மாட்டார்கள். நீ ரொம்ப யோக்கியமா? என்று நமது வெளிப்படையான தவறுகளை ஆதாரமாகக் காட்டி, நம்முடைய அடிப்படைக் கொள்கையான ஏகத்துவப் பிரச்சாரத்தையே கேள்விக்குள்ளாக்கி விடுவார்கள்.
எனவே மார்க்கப் பிரச்சாரம் செய்பவர் வெளிப்படையான தீமைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் விதியை நிர்ணயித்து அதில் பயணிக்கவும் செய்கின்றது.
ஆனால் இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு, அடுத்தவரின் மனைவியுடன் தனித்திருந்து, ஜமாஅத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் தவிடு பொடியாக்கிய ஒருவர், இன்று நானும் தனி ஜமாஅத் காண்கிறேன் என்று துவங்கி, அவருக்குப் பின்னாலும் சிலர் செல்கின்றனர் என்றால் இதைவிட அசிங்கம் என்ன இருக்க முடியும்?
இதில் கொடுமை என்னவென்றால், யூசுப் நபி தவறிழைக்கவில்லையா? யூனுஸ் நபி தவறிழைக்கவில்லையா? என்று தன்னுடைய அருவருப்பான செயலுக்கு நபிமார்களை ஆதாரமாகக் காட்டுவது தான்.
தன்னைத் தவறான பாதைக்கு அழைத்த பெண்ணிடமிருந்து தப்பி, அதற்காகக் கணக்கிட முடியாத காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த கற்புக்கரசர் யூசுப் (அலை) அவர்களும், எந்தச் சலனமும் இல்லாமல் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்த இவரும் சமமாவார்களா?
இப்படி ஒரு உதாரணத்தைக் காட்டி தன்னுடைய அசிங்கத்தை ஒருவர் நியாயப் படுத்துகிறார். எந்தச் சலனமும் இல்லாமல் அதையும் ஒரு சிலர் உட்கார்ந்து ஆமோதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் இது உண்மையில் ஒரு கொடுமையான தக்லீதாகும்.
என்ன அருவருப்பான செயலைச் செய்தாலும் அவர் தான் என் தலைவர் என்று சொல்வதை விட தக்லீதுக்கு வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்?
இதுபோன்ற தனிநபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி, தவ்ஹீதைத் தூய வடிவில் நிலைநாட்டுவோமாக!
————————————————————————————————————————————————–
அல்லாஹ்வின் தூதரே அழகிய ஆசிரியர்!
எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்
மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது.
‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (39)
பாடமும் எளிதானது; ஆசிரியரும் சிறப்பாகப் போதிப்பவர். இந்தப் பாக்கியம் எல்லா மாணவர்களுக்கும் கிடைத்து விடாது. ஆனால், நாம் பெற்றிருக்கிறோம். இஸ்லாம் எளிதாக இருப்பது போன்று, அதன் வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எளிதாக எடுத்துச் சொல்லும் தன்மையைப் பெற்றிருந்தார்கள்.
…அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (2946)
மார்க்கம் சொல்வதற்கு வந்திருப்பதாகக் கூறாமால், அதை எளிமையாக சொல்வதற்கு வந்திருப்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். இங்கு தமது கற்பிக்கும் தன்மையையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள்.
அதற்கேற்ப, குறைவான சொற்களில் நிறைவான பொருள் கொள்ளும் வகையில் பேசும் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தந்திருந்தான்.
நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் (ஜவாமிஉல் கலிம்) வழங்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (7013)
நீண்ட நெடிய கருத்துக்களை ஓரிரு வார்த்தைகளில் விளக்கும் திறமை நபிகளாருக்கு இருந்தது. பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய விசயங்களைக் கூட இரத்தின சுருக்கமாக தெளிவுபடுத்தி விடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கற்றுத் தருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். நான் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்காரர் தமது மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்” என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, என்னை நோக்கி வந்துசேர்ந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. -அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று நான் எண்ணுகிறேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்து, அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது உரையை முழுமையாக்கினார்கள்.
அறிவிப்பவர்: தமீம் பின் அசத் (ரலி)
நூல்: முஸ்லிம் (1590)
அதிகமாக அறிந்திருக்கிறோம் என்பதை விடவும் அடிப்படையான விசயங்களை முதலில் அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு அறிய வந்தவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். கற்றுக் கொள்ள நாடுவோருக்கு தகுந்த ஏற்பாட்டினை வாய்ப்பை தருவது நபியின் வழக்கம். இதற்கு பின்வரும் சம்வமும் சான்றாக உள்ளது.
‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி)
நூல்: புகாரி (101)
கல்விப் பணியில் இருப்போர் கற்றுத் தருவதில் ஆர்வம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவரது அறிவாற்றல் மூலம் அடுத்தவர்களுக்கு பயன் கிட்டும். இல்லாவிட்டால், கொத்துக் கொத்தாக பூத்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றுதான் அவரது நிலை இருக்கும்.
சுற்றியிருக்கும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டுமெனும் ஆர்வம் நபியிடம் மோலோங்கி இருந்தது. சுருக்கமாக கூறின், எல்லா விதத்திலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைச்சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.
நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்“ என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம்(ரலி)
நூல்: முஸ்லிம் (935)
“அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை” என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதை செவியேற்பவர், யர்ஹமுகல்லாஹ் என்று பதில் சொல்ல வேண்டும். தொழுகை என்பது இறைவனிடம் உரையாடுவதற்கு நிகரானது என்பதால் அதில் இருக்கும் நிலையில் தும்மியருக்கு பதில் சொல்லக் கூடாது.
இது தெரியாமல் தொழுகையில் பதில் கூறியவருக்கு நபியவர்கள் நல்ல முறையில் தவறைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; தொழுகையின் நோக்கத்தையும் விளக்குகிறார்கள். இவ்வாறு, கேட்பவரின் நிலைக்கேற்ப கற்றுத்தரும் பண்பாளராக நபிகளார் இருந்தார்கள்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா(ரலி)
நூல்: புகாரி (5376)
பெரும்பாலான பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தருவதில்லை. வளர்ந்து ஆளானதும் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள் எனக் கருதிவிட்டு அடிப்படைச் செய்திகளைக் கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள்.
சிலரோ போதிக்கும் பெயரில் அதிக கண்டிப்பைக் காட்டுகிறார்கள். கண்டிப்பே கூடாதென நாம் வாதிடவில்லை. கற்கும் ஈடுபாட்டைக் கெடுக்காத வகையில் அது எல்லைக்குள் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பாருங்கள். கண்டிப்பை கட்டுக்குள் வைத்துவிட்டு குழந்தையின் மனதில் ஆழப்பதியும் வகையில் பக்குவமாக சொல்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்தான் அண்ணலாரின் அணுகுமுறை இருந்தது.
ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுஸவட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) ‘திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், ‘அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.
‘நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6667)
தொழுகை முக்கியமான முதல் கடமை. இப்படியிருக்க அது பற்றி தெரியாமல் இருக்கிறீர்களே என்று நபியவர்கள் கோபம் கொள்ளவில்லை. அவர் சரியாக தொழாததிற்கு காரணம் அறியாமையா அல்லது அலட்சியமா என்பதை மீண்டும் மீண்டும் தொழச்சொல்வது மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, தொழுகை பற்றிய செயல்முறையை நிறுத்தி நிதானமாக கற்பிக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்’ என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்‘ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்’.
அறிவிப்பவர்: பராவு இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி (247)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியமான பிரார்த்தனையைக் கற்றுத் தருகிறார்கள். மனனம் செய்தவர் ஒப்புவிக்கும் போது ஒரு வார்த்தையை மாற்றி விடுகிறார். அப்போது அவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை. இதிலும் நமக்கு தக்கப் பாடம் உள்ளது.
ஒரு முறையிலேயே ஒரேயடியாக கற்றுக் கொள்ள வேண்டுமென எவரையும் எதிர்பார்ப்பது கூடாது. கற்பவரிடம் பிழை நிகழும் போது சகட்டு மேனிக்கு திட்டாமல் திருத்திக் கொடுக்க வேண்டும். அது குறித்து ஏதேனும் கேள்வி கேட்டால் தெளிவுபடுத்த வேண்டும். இப்படித்தான் நபியவர்கள் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து நீங்கிக்கொள்ள தாம் எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குஜக்கும் முறையைக் கூறினார்கள். கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, “அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எப்படி(த் தூய்மைப்படுத்த வேண்டும்)?’’ என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்டவாறு) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக!’’ என்று கூறினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (314)
மேற்கண்ட சம்பவத்தை கொஞ்சம் கவனியுங்கள். ஒரு பெண் மாதவிடாய் குறித்து கேட்பதால் முடிந்தளவு மூடலாக சொல்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் பாடம் கற்றுத் தரும் போது பேச்சிலே, விளக்கத்திலே கூட வரம்பு மீறிவிடக் கூடாது எனும் பாடம் இச்சம்பவத்திலே பொதிந்துள்ளது.
எதைச் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எவருக்குச் சொல்கிறோம் என்பதையும் நபிகளார் கவனிக்கிறார்கள். எவராயினும் தகுந்த மனநிலை, வாழ்க்கை சூழல் இல்லாத போது அவரால் படிப்போடு ஒன்றிப் போக முடியாது. ஆகவே, கற்பவரின் நிலைக்கேற்ப கற்பித்தலை கையாள்வது அவசியம்.
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்‘ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி)
நூல்: புகாரி (631)
கல்வியைத் தேடி ஆர்வத்தோடு வந்திருந்தாலும் குடும்பத்தாரிடம் செல்ல நாடிய பிறகு, படிப்பிலே கவனம் நிலைக்காது. ஊர் திரும்ப முடியவில்லை எனும் ஏக்கம் கற்பதின் மீது வெறுப்பை விதைத்து விடக்கூடாது.
எனவே அவர்களுக்கு முக்கியமான தகவல்களைச் சொல்லிக் கொடுத்து நபியவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். இப்படி, கற்பவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து, சலிப்புக்கு இடம் அளிக்காத வண்ணம் போதிக்கும் தன்மையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சி பல்வேறு நாட்களிலும் (எங்கள் சூழ்நிலையை) கவனித்து நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (68)
உலக விசயம், மார்க்க விசயம் இந்த இரண்டில் எதைப் போதிப்பவராக இருந்தாலும் அதற்கேற்ப தமது அணுகு முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க திறமையாகும். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார்கள்.
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசி ஒருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.
பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (480)
கிராமவாசியை அதட்டும் நபித்தோழர்களை நபியவர்கள் தடுக்கிறார்கள்; அமைதிப் படுத்துகிறார்கள். பள்ளிவாசல் என அறியாமல் அவசர கதியில் சிறுநீர் கழித்து விட்டவரை இடைமறிக்க வேண்டாமென கூறுகிறார்கள். அதன் பிறகு அவரை அழைத்து பள்ளிவாசல் குறித்து நயமாக விளக்குகிறார்கள்.
இதே செய்தி இன்னொரு இடத்தில் வேறு வாக்கியங்களுடன் இடம் பெற்றுள்ளது. அதில், கற்றுத் தரும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கை நபியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (220)
அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு நளினமாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவ்வாறுதான் முஃமின்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளது எனவும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எப்படிச் சொல்கிறோம் என்பதையும் மனதில் கொள்வது முக்கியம். ஆகையால், அழைப்புப் பணிக்கு தமது தோழர்களை அனும்பும் போது பின்வருமாறு கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)’ என்று (அறிவுரை) கூறினார்கள்…
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்: புகாரி (4344) (4345)
கல்வியைத் தேடும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கற்பித்தல் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அதை விட்டும் விரண்டோடச் செய்துவிடக் கூடாது. இந்த அடிப்படையில் தான் நபிகளாரின் கல்வி போதனைகளும் நடைமுறைகளும் இருந்தன.
ஆகவே, நமக்கு குர்ஆன் ஹதீஸ் விளங்காது என்று உளறுவோரை அலட்சியம் செய்துவிடுங்கள். உரிய அக்கறையோடும் வழிமுறையோடும் கற்க முனைந்தால் மற்றதை விடவும் மார்க்கம் இலகுவாக புரிந்துவிடும்.
கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. நவீன காலத்தில் கல்வி உளவியல் எனும் துறையில் கல்வி அறிஞர்கள் நிறைய ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். அவற்றுக்கான அழகிய பாடம் நபிகளாரின் வாழ்வில் காண முடிகிறது.
இத்தகைய தூதரின் தலைச்சிறந்த வழிகாட்டுதலை உதறிவிட்டு, மற்றவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழகிய முறையில் பின்பற்றி ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக!
————————————————————————————————————————————————–
குர்ஆன் விஷயத்தில் அலீ (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?
ஷியாக்களின் புரட்டு வாதம்
ஷம்சுல்லுஹா
உலகில் ஷியாக்கள் அல்லாத முஸ்லிம்களில் உள்ள அனைத்து பிரிவினரும் குர்ஆன் எள்ளளவு மாற்றத்திற்கும் இம்மியளவு திருத்ததிற்கும் அறவே உள்ளாகவில்லை என்று ஆணித்தரமான நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் ஷியாக்கள் மட்டும் இதற்கு நேர்மாற்றமான கருத்தில் இருக்கின்றனர்.
இதுவரை நாம் கண்ட அல்காஃபி என்ற நூலில் கலீனீ அறிவிக்கின்ற இரண்டு அறிவிப்புகளும் தற்போது இருப்பதைப் போன்ற குர்ஆனின் மூன்று மடங்கு வசனங்கள் காணாமல் போய்விட்டன என்று முழங்குகின்றன. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
இந்த இலட்சணத்தில் ஷியாக்கள் மற்ற முஸ்லிம்களை போன்று “குர்ஆன் எந்த ஒரு மாற்றத்திற்கு உள்ளாகவில்லை” என்று இன்னொரு பக்கம் சொல்லிக் கொள்கின்றனர். அப்படியானால் இது அவர்களின் கள்ளத்தனமும் குள்ளநரித்தனமும் நிறைந்த நடிப்பைத் தவிர்த்து வேறெதுவுமில்லை என்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டுகின்றது.
கலீனீ என்ற அறிவிப்பாளர் யார் தெரியுமா? ஷியாக்களின் முக்கிய இமாம்களின் ஒருவரான மஹ்தீ என்பவர் கொஞ்ச காலம் தலைமறைவாக இருந்தாராம். அதாவது ஆன்மீக தலைமறைவு என்று ஷியாக்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். (கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்தார் என்று யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது) அந்த காலக் கட்டத்தில் அவர் ஷியாக்களை நான்கு தூதர்கள் மூலம் திரைமறைவில் இருந்துக் கொண்டு கண்காணித்திருக்கின்றார். இதற்கு சிறு தலைமறைவு என்று பெயர். இந்த நான்கு தூதர்களின் தொடர்பில் இருந்தவர் தான் கலீனி என்ற அறிவிப்பாளர். அப்படிப்பட்டவர் தான் குர்ஆனின் நான்கில் மூன்று பகுதிகளை காணவில்லை என்று பறைச்சாட்டுகின்றார்.
குர்ஆன் மாற்றத்திற்கு உள்ளானது என்று ஷியாக்களிடமிருந்து வருகின்ற அறிவிப்புகள் ஒன்றிரண்டல்ல! ஏராளமான அறிவிப்புகள், உள்ளன. நம்மிடம் உள்ள இந்த குர்ஆன் ஷியாக்களின் குர்ஆன் கிடையாது நம்மிடம் உள்ள இந்த குர்ஆன் அவர்களுடைய நம்பிக்கைப்படி நம்பகமான குர்ஆனல்ல! கறைபடிந்தது. களங்கமானது. (அல்லாஹ் நம்மை காக்க வேண்டும்) இது தொடர்பாக ஹதீஸ்கள் என்ற பெயரிலும் குர்ஆன் விரிவுரை என்ற பெயரிலும் அள்ளி விட்டிருக்கின்ற பொய்யான ஹதீஸ்களையும் கதைகளையும் பார்ப்போம்:
பொய்: 1
பஸாயிருத் தரஜாத் என்ற ஷியாக்கள் நூலில் அபூஜஃபர் வழியாக தெரிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவில் தன்னுடைய தோழர்களை அழைத்து மக்களே! உங்களிடம் அல்லாஹ்வுடைய புனிதங்களை விட்டுச் செல்கின்றேன். அவை அல்லாஹ்வின் வேதமும் என்னுடைய குடும்பமும் புனிதமிக்க ஆலயமான கஃபாவும் ஆகும் என்று அறிவித்தார். ஆனால் நபித் தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்தை திரித்து விட்டார்கள். எனது குடும்பத்தை கொன்று விட்டார்கள். கஃபாவை இடித்து விட்டார்கள். மொத்தத்தில் அல்லாஹ்வின் அமானிதங்களை நாசமாக்கி விட்டார்கள் என்று அபூஜஃபர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்புகள் மட்டும் இவர்களை அடையாளங்காட்ட போதாது. இதற்கு மேலும் அறிவிப்புகள் இருக்கின்றன. அவற்றையும் விடாமல் பார்ப்போம்.
பொய் 2
சிறையிலிருந்த அலீ பின் சுவைதுக்கு இமாம் அபுல்ஹசன் மூஸா எழுதிய கடிதத்தில், ஷியா அல்லாதவரின் மார்க்கத்தை நீ பின்பற்றாதே. அவர்களுடைய மார்க்கத்தை நீ நேசிக்கவும் செய்யாதே. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்திற்கும் துரோகமிழைத்து விட்டார்கள். அல்லாஹ் அவனது தூதரின் அமானிதங்களுக்கும் அவர்கள் துரோகமிழைத்து விட்டார்கள். அமானிதத்திற்கு துரோகம் என்றால் என்ன? என்று உனக்கு தெரியுமா? அல்லாஹ்வின் வேதத்தை நம்பி ஒப்படைக்கப்பட்ட இவர்கள் அதை திரித்து மாற்றி விட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கலீனீ அல்காஃபி என்ற நூலில் அறிவிக்கின்றார்.
பொய் 3
இது போன்று அபூபஸீர் அறிவிக்கின்ற மற்றொர் அறிவுப்பும் வந்துள்ளது. அதையும் கலீனீயே அறிவிக்கின்றார்:
இது நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகின்றது. (அல்குர்ஆன் 45:29)
هَذَا كِتَابُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُونَ
“ஹாதா கிதாபுனா யன்திகு அலைக்கும் பில்ஹக்” என்று அல்லாஹ் சொல்கின்றானே என அபூ அப்திஸ்ஸலாமிடம் கேட்டேன். அதற்கு அவர், “புத்தகம் பேசவில்லை. இனியும் அது ஒரு போதும் பேசாது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் புத்தகத்தின் வாயிலாக பேசவைக்கப்படுவார்கள்” என்று சொல்லி விட்டு, “ஹாதா கிதாபுனா யுன்தகு அலைக்கும் பில்ஹக்” என ஓதினார்.
அதாவது “யன்திகு” செய்வினையாக இருக்கும் வசனத்தை “யுன்தகு” என்று செயப்பாட்டுவினையாக மாற்றி ஓதினார். நான் உங்களுக்கு அர்ப்பணமாகமட்டும். “யுன்தகு” என்று நாம் ஓதுவதில்லையே! “யன்திகு” என்று தானே ஓதுகின்றோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஜிப்ரயீல் அப்படித் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கினார்கள். ஆனால் அது அல்லாஹ்வின் வேதத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளது.
(இங்கு ஒரு விளக்கத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். புத்தகம் என்று அல்லாஹ் குறிப்பிடுவது மறுமையில் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் நன்மை தீமை அடங்கியிருக்கும் பதிவேடு. ஆனால் ஷியாக் கூட்டம் புத்தகம் என்ற வார்த்தையை குர்ஆன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றது.)
பொய்:4
“1. குர்ஆன் 2. புனித மஸ்துல் ஹராம் 3. (எனது) குடும்பம் ஆகிய மூன்றும் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் வந்து முறையிடும். அப்போது என்னைக் கரித்து விட்டார்கள். என்னைக் கிழித்து விட்டார்கள் என்று குர்ஆன் கூறும்” என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
இவ்வாறு சதூக் ஷீஅத் பின் பாபவைஹ் அல்கிம்மிய்யி என்பவர் தனது நூலில் அறிவிக்கின்றார்.
பொய்: 5
ஷியாக்களிடத்தில் மிகப் பெரிய குர்ஆன் விரிவுரையாளர் என்று போற்றப்படுகின்ற ஒருவரிடமிருந்து முஹ்ஸின் அல் காஷி என்ற குர்ஆன் விரிவுரையாளர் குறிப்பிடுவதாவது; அல்லாஹ்வின் வேத்ததில் கூட்டியும் குறைத்தும் சொல்லப்பட்டிருக்காவிட்டால் நம்முடைய (தலைமைத்துவம் தொடர்பான) உரிமை அறிவுடையோருக்கு தெளிவாக தெரிந்திருக்கும். (அது நபித்தோழர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது) நம்மில் ஒருவர் அந்த உரிமையைக் கோரினால் அவருக்கு குர்ஆன் சான்று பகரும் என்று அபூஜஃபர் கூறுவதாக அந்த பெரிய அறிஞரின் விரிவுரையில் இடம்பெற்றிருக்கின்றது.
(இவர்கள் நபித் தோழர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு அடிப்படைக் காரணம் ஷியாக்கள் நம்புகின்ற தலைமைத்துவம் அமையாமல் போனது தான். அதை பொருத்தமான இடத்தில் பார்ப்போம்)
அலி (ரலி)யைக் கொல்ல உமர் (ரலி) முயற்சி?
சஹாபாக்கள் தான் குர்ஆனில் விளையாடி விட்டார்கள் என்பது ஷியாக்களின் பகிரங்க, பயங்கர குற்றச்சாட்டாகும். இதை தான் அபூஜஃபர் என்பவர் சொன்னதாக மேலே பார்த்தோம். இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு இன்னொரு அபத்தம் வருகின்றது. தப்ரஸீ அறிவிக்கும் அந்த செய்தி இஹ்திஜாஜ் என்ற நூலில் இடம் பெறுகின்றது. இது ஒட்டுமொத்த ஷியாக்களின் நம்பகத்தன்மையை பெற்ற நூலாகும். இந்த செய்தியை படிப்பவர்களுக்கு முஹாஜிர் மற்றும் அன்சாரி சஹாபாக்கள் மீது ஷியாக்கள் கொண்டிருக்கின்ற குரோத மனப்பான்மையும் விரோத விஷச் சிந்தனையும் அப்பட்டமாக விளங்கும். இப்போது அபூதர் அல்கிஃபாரி (ரலி) அறிவிப்பதாக தப்ரஸீ கூறும் புரட்டுச் செய்தியை பார்ப்போம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததும் அலீ (ரலி) குர்ஆனை தொகுக்க ஆரம்பித்தார். பிறகு அதை முஹாஜிர்கள், அன்சாரிகளிடம் கொண்டு வந்து காண்பித்தார்கள். இதற்கு காரணம் இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்கு அறிவுரை செய்தது தான். அதை அபூபக்ர் (ரலி) திறந்ததும் முதல் பக்கத்திலேயே அவர்களின் கண்ணில் பட்டது சஹாபாக்களின் கேவலமான செய்திகள் தான்.
இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) மீது பாய்ந்து, “அலீயே! இதை திரும்பக் கொண்டு போய் விடும்! இந்த குர்ஆன் எங்களுக்கு தேவையில்லை” என்றார். உடனே அதை அலீ (ரலி) எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். பிறகு சைத் பின் சாபித் வந்தார்கள். அவர், குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவர். அவரிடம், “அலீ (ரலி) நம்மிடம் ஒரு குர்ஆனைக் கொண்டு வந்தார். முஹாஜிர்கள், அன்சாரிகளின் கேவலங்கள் தான் அதில் நிறைந்து வழிகின்றன. அதனால் நாம் முஹாஜிரிகள், அன்சாரிகள் மானங்களை வாங்குகின்ற கேவலமான செய்திகளைக் களைந்து விட்டு ஒரு குர்ஆனை தொகுக்க விரும்புகின்றோம்” உமர் (ரலி) என்று குறிப்பிட்டார்கள். அதற்கு சரி என்று பதிலளித்த சைத், “நீங்கள் கேட்ட மாதிரி நான் தொகுத்து முடித்ததும் அலீ (ரலி) ஒரு குர்ஆனை தொகுப்பார். அது நீங்கள் செய்த அந்த வேலையை எல்லாம் பாழாக்கி விடும்.அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு “வேறு என்ன தந்திரம் இருக்கின்றது?” என்று உமர் (ரலி) கேட்டார். “நீங்கள் தான் இதைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்” என்று சைத் (ரலி) பதிலளிக்கின்றார்.
ثم قال: فإن أنا فرغت نم القرآن على ما سألتم وأظهر علي القرآن الذي ألفه أليس قد بطل كل ما عملتم؟- قال عمر: فما الحيلة؟ قال زيد: أنتم أعلم بالحليلة، فقال عمر: ما حيلة دون أن نقتله ونستريح منه، فدبر في قتله على يد خالد بن الوليد فلم يقدر على ذلك
அப்போது உமர் (ரலி), “ஆளை கொல்வதை விட வேறு என்ன தந்திரம் இருக்கின்றது” என்று சொன்னார்கள். அதனால் அவர்கள் காலித் பின் வலீத் மூலம் அலியை கொல்லலாமா? என்று உமர் (ரலி) யோசித்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு முடியவில்லை.
உமர் (ரலி) ஆட்சிக்கு வந்ததும் நபித்தோழர்கள் அலீ (ரலி)யிடம் குர்ஆனைக் கொண்டு வந்து தங்கள் தொடர்பாக அதில் இடம் பெற்றிருக்கும் கேவலமான செய்திகளை மாற்றி விடலாம் என்று கேட்டனர். அலீ (ரலி)யிடம், “ஹசனின் தந்தையே! அபூபக்கரிடம் ஏற்கனவே நீங்கள் கொண்டு வந்த குர்ஆனை (இப்போது) கொண்டு வந்தால் அது தொடர்பாகப் பேசி நாம் ஒருமித்து ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம்” என்று உமர் (ரலி) கூறினார்கள்,
அதற்கு அலீ, “காலம் கடந்த முடிவு இது. இதற்கு இப்போது எங்களுக்கு எந்த வழியும் இல்லை. ஆதாரம் உங்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் நாளை மறுமையில் இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம் என்று நீங்கள் சாக்கு போக்கு சொல்லாமல் இருப்பதற்காகவும் அல்லது (அலீயாகிய) நீங்கள் என்னிடம் இந்த குர்ஆனை கொண்டு வரவில்லை என்று எனக்கு எதிராக சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும் வேண்டித் தான் நான் அந்தக் குர்ஆனை அபூப்பக்கரிடம் கொண்டு வந்தேன். என்னிடமுள்ள இந்தக் குர்ஆனை, தூய்மையானவர்களையும் என்னுடைய சந்ததியில் தோன்றுகின்ற வஸிய்யத் பெற்றவர்களையும் தவிர தொடமாட்டார்கள்” என்று அலீ (ரலி) பதிலளித்தார். அப்போது உமர் (ரலி), “இதை வெளியே கொண்டு வருவதற்குக் குறிப்பிடப்பட்ட நேரம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி), “ஆம்! எனது சந்ததியிலிருந்து உரிமைக் கோருபவர் உரிமைக் கோரும் போது அதை அவர் வெளியிடுவார். மக்களை அதன் மீது தூண்டுவார்” என்று பதிலளித்தார்கள்.
நமது விளக்கம் 1
இதுவரை பார்த்த இந்த பொய்களின் மொத்த சாராம்சம் நபித் தோழர்கள் குர்ஆனில் தங்களுடைய கைவரிசையைக் காட்டி விட்டார்கள். நபித் தோழர்கள் குர்ஆனை திரித்து விட்டார்கள், மாற்றி விட்டார்கள். என்பது தான். இவ்வாறு சொல்லக் கூடிய இந்த ஷியா ஷைத்தான்கள் தான் பொய் 3ல் இடம் பெற்றிருக்கும் வசனத்தில் யன்திகு என்று வரக்கூடிய வார்த்தையை யுன்தகு என்று திரிக்கும் வேலையை செய்கின்றார்கள். குர்ஆன் தலைமுறை தலைமுறையாக மாற்றத்திற்கும் திரித்தலுக்கும் உள்ளாகாமல் பாதுக்காக்கப்பட்டிருக்கின்றது. கீழ்க்கண்ட வசனம் இதை தெளிவுப்படுத்துகின்றது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9
ஷியாக்கள் இந்த குர்ஆன் வசனத்தையே மறுக்கின்றார்கள்.
நமது விளக்கம்: 2
அலீ (ரலி) தனக்கென்று ஒரு தனிக்குர்ஆனை வைத்திருந்ததாக ஷியாக்கள் புளுகித் தள்ளுகின்றனர்.
‘உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை’ என்று அவர் கூறினார். ‘அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?’ என்று நான் கேட்டதற்கு, ‘நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது’ என்ற சட்டங்களும் இதிலுள்ளன’ என்று கூறினார்கள்’ என அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.
புகாரி 111
இந்த ஹதீஸ் இதை மறுக்கின்றது. தனக்கென்று தனி ஞானம் எதையும் ரசூல் (ஸல்) ஒதுக்கீடு செய்யவில்லை என்று அடித்துச் சொல்கின்றார்கள்.
நமது விளக்கம்: 3
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) – அன்னார் வேத அறிவிப்பினை (வஹீயை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார். யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்’ என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) ‘நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது.
நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.
முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், பேரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) ‘அத்தவ்பா’ எனும் (9வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
(அவை:) ‘உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கிறான்.’ (திருக்குர்ஆன் 09:128, 129)
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.
புகாரி 4679
குர்ஆன் எப்படி திரட்டப்பட்டது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. இதற்கு நேர்மாற்றமான செய்தியைத் தான் ஷியாக்கள் பதிவு செய்கின்றனர். இவர்கள் பொய் சொல்வதற்கு அஞ்சாதவர்கள். எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய அநியாயக்காரர்கள்.
நமது விளக்கம்: 4
எல்லாவற்றிற்கும் மேலாக அலீயைக் கொல்வதற்கு உமர் (ரலி) முயற்சித்தார்கள். கொலை செய்யத் தூண்டினார் என்று ஆதாரமின்றி சொல்வதை ஒரு போதும் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்க துணிய மாட்டான். இது ஷியாக்களின் உச்சபட்ச வெறித்தனமும் விஷமத்தனமும் ஆகும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இருக்க முடியாது.
அல்லாஹ்வின் மீதும் அவனது திருத்தூதரின் மீதும் அவர்கள் சொல்லாததை இட்டுக் கட்ட துணிந்த ஷியாக்கள், உமர் (ரலி) மீது இப்படிப்பட்ட அபாண்டத்தையும் அபத்தத்தையும் இட்டுக் கட்டுவதற்குத் தயங்குவார்களா?
————————————————————————————————————————————————–
எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா?
கே.எம். அப்துந்நாஸிர்
எருமை மாட்டை குர்பானி கொடுப்பது தொடர்பாக ”குர்பானியின் சட்டங்கள்” என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
”எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.”
இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகவும் இருந்தது.
ஆனால் கடந்த ஹஜ்ஜூப் பெருநாளிற்கு முன்பு சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாக எருமை மாட்டைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று தனது கேள்வி பதில் உரையின் போது குறிப்பிட்டார். அது தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பேசிய கருத்து மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் தவறானதாகும். அது அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதே நேரத்தில் எருமை மாட்டைக் குர்பானி கொடுப்பது தொடர்பாக குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ஜமாஅத்தின் தெளிவான நிலைப்பாட்டை மக்களிடையே அறியச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
எருமை மாட்டைக் குர்பானி கொடுக்கலாமா?
{وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ (29)} [الحج: 27 – 29]
“மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்‘’ (என்றும் கூறினோம்.)
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
(அல்குர்ஆன் 22 : 27 -29)
{ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ (34)} [الحج: 34]
சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 22 : 34)
மேற்கண்ட இரண்டு வசனங்களும் ஹஜ்ஜூப் பெருநாளில் ஹஜ் செய்பவர்களும், ஹஜ்ஜூப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கு தகுதியான ஏனைய முஸ்லிம்களும் ”சாதுவான கால்நடைகளை” அறுத்துப்பலியிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் ஹஜ்ஜூப் பெருநாளின் போது அறுத்துப் பலியிட வேண்டிய கால்நடைகள் ”அன்ஆம்” என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
”அன்ஆம்” என்பதற்கு ”கால்நடைகள்” என்று மொழிபெயர்ப்பு செய்தாலும் இவை எந்தெந்த பிராணிகளைக் குறிக்கும் என்பதை திருமறைக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
”அன்ஆம்” என்பது எட்டு ஜோடிகள்தான் என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
{ وَأَنْزَلَ لَكُمْ مِنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ } [الزمر: 6]
(பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான்.
(அல்குர்ஆன் 39 : 6)
அந்த எட்டு ஜோடிகள் எவை? எவை? என்பதை அல்குர்ஆன் 6 வது அத்தியாயம் 143, 144 வசனங்களில் அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான்.
ثَمَانِيَةَ أَزْوَاجٍ مِنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ ..(143)
“(பலியிடும் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன.
(அல்குர்ஆன் 6 : 143)
وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ (144) } [الأنعام: ]
“ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன.
(அல்குர்ஆன் 6 : 144)
மேற்கண்ட வசனங்களிலிருந்து ஹஜ்ஜூப் பெருநாளின் போது ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் அறுத்துப் பலியிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இது அல்லாத வேறு எந்த பிராணிகளையும் ஹஜ்ஜூப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பது கூடாது.
பகர் என்றால் என்ன?
”அன்ஆம்” என்பதின் ஒரு பகுதியாக ”பகர்” என்பதைக் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த ”பகர்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒருவகையான மாட்டைக் குறிப்பதற்கான வார்த்தை அல்ல. அனைத்து மாட்டு இனத்திற்குரிய பொதுவான வார்த்தையாகும்.
உலகத்தில் உள்ள அனைத்து மாட்டு வகைகளையும் இந்த ”பகர்” என்ற வார்த்தை உள்ளடக்கும்.
”எருமை” என்பது மாட்டு இனத்தின் ஒரு பகுதியாகும்.
எருமை, மாட்டு இனத்தில் அடங்கும் என்பதற்கு பல்வேறு சான்றுகள் திருக்குர்ஆனில் உள்ளது.
} وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ } [الحج: 34]
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாதுவான கால்நடைகளிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி உள்ளோம்.
அல்குர்ஆன் 22 : 34
மேற்கண்ட வசனம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் சாதுவான கால்நடைகளை வழங்கியதாகக் குறிப்பிடுகின்றான்.
அதாவது ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய சாதுவான கால் நடைகள் இன்னொரு சமுதாயத்திற்கு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமக்கு வழங்கப்பட்ட சாதுவான கால்நடைகளை அறுத்துப் பலியிட வேண்டும் என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதுதான் இறைவனின் கட்டளையும் கூட.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அம்மக்களிடம் எருமை மாடு அறியப்படாததாக இருந்தாலும் ஒவ்வொரு சமூகமும் இறைவன் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை பெருநாளின் போது அறுத்துப் பலியிட வேண்டும் என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எருமையை அறுத்துப் பலியிடலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
”எருமை” கருப்பு நிறமாக உள்ளதால் அது மாட்டு இனத்தைச் சார்ந்தது இல்லை என்று யாரும் வாதிக்க முடியாது.
ஏனென்றால் ”அன்ஆம்களில்” பல்வேறு நிறம் உடையவை இருப்பதாக திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
{وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ } [فاطر: 28]
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன.
(அல்குர்ஆன் 35 : 28)
எனவே நிறத்தினை அடிப்படையாக வைத்து எருமை, மாட்டு இனத்தைச் சார்ந்ததல்ல என வாதிக்க இயலாது.
மேலும் அன்ஆம்களின் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்களை திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது,
அதிலிருந்தும் எருமை, மாட்டு இனத்தைச் சார்ந்ததுதான் என்பது நிரூபணமாகிறது.
{ وَجَعَلَ لَكُمْ مِنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ مَا تَرْكَبُونَ } [الزخرف: 12]
கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.
(அல்குர்ஆன் 43 : 12)
{ اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَنْعَامَ لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ (79) وَلَكُمْ فِيهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوا عَلَيْهَا حَاجَةً فِي صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ (80)} [غافر: 79، 80]
நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள். அவற்றில் உங்களுக்கு (வேறு) பயன்களும் உள்ளன. உங்கள் உள்ளங்களில் உள்ள தேவையை அவற்றின் மீது (ஏறிச் சென்று) அடைந்து கொள்கிறீர்கள். அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.
(அல்குர்ஆன் 40 : 79. 80)
{أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ (71) وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ (72) وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ (73)} [يس: 71 – 73]
நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா? அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. நன்றி செலுத்த மாட்டார்களா?
(அல்குர்ஆன் 36 : 71 – 73)
{وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66)} [النحل: 66]
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.
(அல்குர்ஆன் 16 : 66)
{وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ (80)} [النحل: 80]
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின்போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும்போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.
(அல்குர்ஆன் 16 : 80)
மேலும் திருமறைக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் அன்ஆம்கள் உண்பதற்காக புற்பூண்டுகளையும், தாவரங்களையும், செடி கொடிகளையும் முளைக்கச் செய்திருப்பதாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேற்கண்ட வசனங்களில் ”அன்ஆம்கள்” எனும் ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அவைகளின் மூலம் நாம்…
பால் என்ற உணவைப் பெற்றுக் கொள்கிறோம்,
அவைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்கிறோம்,
அவற்றில் தோல்கள் பயன்தருகின்றன.
மாடு ஒட்டகம் போன்றைவை சுமைகளை சுமக்கின்றன.
மனிதர்கள் அதில் ஏறிச் செல்கின்றனர் .
அல்லாஹ் அன்ஆம்களில் என்னென்ன பயன்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றானோ அந்த அனைத்துப் பயன்களும் எருமை மாட்டிலும் உள்ளன.
எருமை பால் தருகிறது.
எருமையை வண்டியிழுப்பதற்கும்,
ஏறிச் செல்வதற்கும் பயன்படுத்தும் மக்களும் உள்ளனர்.
எருமைத் தோலிலிருந்தும் மக்கள் பயன்பெறும் விசயங்கள் தயாரிக்கப்படுகிறது.
அனைத்து மாடுகளும் உண்ணும் உணவைத்தான் எருமையும் உண்கிறது.
எனவே திருமறைக்குர்ஆன் அடிப்படையில் ”எருமை” என்பது தெளிவாக மாட்டு இனத்தினைச் சார்ந்தது என்பதை நாம் சந்தேகமின்றி புரிந்து கொள்ளலாம்.
மேலும் அறிவு ரீதியாகவும் எருமை மாடு இனத்தைச் சார்ந்ததுதான் என்பது நிரூபணமான ஒன்றாகும்.
பசு, எருமை கலப்பினமாடுகள் ஏராளம் உள்ளன. இதிலிருந்தும் எருமை மாட்டின் ஒரு வகை என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் லிஸானுல் அரப், முஃஜமுல் வஸீத் போன்ற பல அரபி அகராதி நூற்களிலும் எருமை என்பது மாட்டின் ஒரு வகையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
المعجم الوسيط (1/ 65)
( البقر ) جنس من فصيلة البقريات يشمل الثور والجاموس ويطلق على الذكر والأنثى ومنه المستأنس الذي يتخذ للبن
لسان العرب (6/ 42)
والجامُوسُ نوع من البَقر دَخيلٌ وجمعه جَوامِيسُ فارسي معرّب وهو بالعجمية كَوامِيشُ
எனவே மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் எருமை மாட்டைக் குர்பானி கொடுக்கலாம் என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.
————————————————————————————————————————————————–
நபிகளாரின் வஸியத்
எம்.ஐ. சுலைமான்
நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாட்களில் அவர்களின் தோழர்களுக்கு அழகிய பல அறிவுரைகளைச் சொல்லியுள்ளார்கள். அவற்றில் சில அறிவுரைகள் மிகவும் முக்கியமானதாகவும் அமைந்துள்ளது. அவற்றை நபிகளார் மிகவும் வலியுறுத்தி சொல்லியுள்ளார்கள். அது போன்று வலியுறுத்தி நபிகளாரால் சொல்ல செய்திகளை தொகுத்து இங்கு தருகிறோம்.
இரவுத் தொழுகை
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 73)
1178- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ ، هُوَ ابْنُ فَرُّوخَ ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَنَوْمٍ عَلَى وِتْرٍ.
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹாத் தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். நான் இறக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி (1178), முஸ்லிம் (1330)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மூன்று முக்கியமான விசயங்களை வலியுறுத்தி சொல்லியுள்ளார்கள்.
- மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, 2. ளுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவது 3. வித்ரு தொழுவது.
இந்த மூன்றும் நபிகளாரால் வலியுறுத்தி சொல்லப்பட்ட நன்மைகள் அதிகம் கிடைக்கும் நல்லறங்களாகும்.
மாதம் மூன்ற நாட்கள் நோன்பு நோற்பதின் நன்மைகள்
மாதம் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்ப நோற்றதின் நன்மைகளை பெறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், நீங்கள் இரவில் நின்று வணங்கு வதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே என்று கேட்டார்கள். நான், ஆம் (உண்மைதான்!) என்றேன். அவர்கள், நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்…. அல்லது கால மெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்ற தாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி),
நூல்கள் : புகாரி (3419), முஸ்லிம் (2136)
ளுஹாத் தொழுகையின் நன்மைகள்
தினமும் இரண்டு ரக்அத்கள் ளுஹாத் தொழுதால் பல நன்மையான காரியங்கள் செய்த கூலியைப் பெற்றுவிடமுடியும்.
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி’யும் (-லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1302)
வித்ரு தொழுதல்
நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைக்கு பிறகு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த தொழுத தொழுகை இரவுத் தொழுகையாகவும்.
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடி யாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ் வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (2157)
இரவில் தொழும் தொழுகையில் இறுதியாக தொழும் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுமாறு நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.
இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1368)
தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஸிய்யத் செய்த விஷயங்களில் ஒன்று, தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதாகும்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (2 / 120)
1499 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ شُعْبَةَ عَنْ أَبِى عِمْرَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِى ذَرٍّ قَالَ إِنَّ خَلِيلِى أَوْصَانِى أَنْ أَسْمَعَ وَأُطِيعَ وَإِنْ كَانَ عَبْدًا مُجَدَّعَ الأَطْرَافِ وَأَنْ أُصَلِّىَ الصَّلاَةَ لِوَقْتِهَا « فَإِنْ أَدْرَكْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلاَتَكَ وَإِلاَّ كَانَتْ لَكَ نَافِلَةً யு.
என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும், தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். “பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக்கொண்டவராவீரர்கள்; அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்‘’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் (1142)
இந்த செய்தியில் முதலில் ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படுதல் தொடர்பாக நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். ஆட்சித் தலைவரின் தோற்றங்களை கவனிக்காமல் முஸ்லிம்களின் தலைவராக இருப்பதால் அவருக்கு கட்டுப்படுதல் அவசியமாகும். அவ்வாறு நடக்கும் போதும்தான் நாட்டின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். முஸ்லிம்களுக்கும் வலிமை இருக்கும் என்பதால் இதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
இரண்டாவதாக இஸ்லாத்தின் தூண்களின் ஒன்றான தொழுகையைப் பற்றி கட்டளையிட்டுள்ளார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம் தொழுவது கடமையாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் உள்ளது. எனவே அந்த நேரத்திற்குள் தொழுவது அவசியமாகும்.
இதையே அல்லாஹ்வும் குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
தொழுகையை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் தொழுவது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று கேட்டேன். அவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். தாய் தந்தையருக்கு நன்மை புரிவது என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவது என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
நூல்கள் : புகாரி (527), முஸ்லிம் (137)
அண்டை வீட்டாரை கவனித்தல்
என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்,) என்னிடம், “நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்து உதவுக!’’ என்று அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் (5121)
நாம் வசிக்கும் வீட்டின் அண்டைய வீட்டார் விசயத்தில் நன்மை நாடவேண்டும். அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
இந்த நபிமொழியில் நாம் குழம்பு வைத்தால் பக்கத்துவீட்டாருக்கு பயன்படும் வகையில் அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து பக்கத்து வீட்டாருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்று நபிகளார், அபூதர் (ரலி) அவர்களுக்கு வஸியத்தாக குறிப்பிட்டுள்ளார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களும் நபிகளாருக்கு இதை அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டே யிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள் :புகாரி (6014) முஸ்லிம் (5118)
கோபத்தை கட்டுப்படுத்து
மனிதன் பெரும் தவறுகள் செய்வதற்கு காரணமாக அமைவது கோபமாகும். கோபத்தில் நிதானத்தை இழக்கின்றான். அதனால் பல பெரிய, சிறிய தவறுகளை செய்துவிடுகின்றான். அதனால்தான் நபிகளார் கோபத்தை கட்டுப்பத்த வலியுறுத்தினார்கள்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 35)
6116- حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ ، هُوَ ابْنُ عَيَّاشٍ ، عَنْ أَبِي حَصِينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي قَالَ : لاََ تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ : لاََ تَغْضَبْ.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (6116)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் 3:134
அதிரகாரம் படைத்தவர்கள் இறைச்சத்தைப் பேணுதல்
ஆட்சி, அதிகாரம் வந்துவிட்டால் மனஇச்சையின் அடிப்படையில் ஆணவத்துடன் நடப்பது சாதரணமாக ஆட்சியாளரிடம் ஏற்படுகிறது. அதிகாரம் ஆட்சியும் வரும் போது அடக்கமும் பணிவும் இறைச்சமும் ஏற்படவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம் (3566)
தொழுகைக்கு பிறகு பிரார்த்தனை
மறுமையில் சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால் அல்லாஹ் கூறிய அடிப்படையில் அழகிய முறையில் வணக்க வழிபாட்டில் ஈடுபடவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். இதற்கு அல்லாஹ்வின் உதவி நமக்கு தேவை. இந்த உதவியை அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகைப்பிறகும் கேட்குமாறு நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
“அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே’’ என்று உனக்கு நான் வஸியத் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவுத் 1301, அஹ்மத் 21109
நபிகளார் வலியுறுத்திய இந்த அறிவுரைகளை பின்பற்றி நடக்க முயற்சி செய்வோம்.
————————————————————————————————————————————————–
பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?
ஆஃப்ரின் சிதிரா
கனிவும் மாண்பும் மிகுந்த ஏக இறைவன், படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக மனித குலத்தைத் தேர்வு செய்திருக்கிறான். எந்த உயிரினத்திற்கும் வழங்காத பகுத்தறிவை மனித இனத்திற்கு வழங்கி, எதுவெல்லாம் நன்மை, எதுவெல்லாம் தீமை என்பதை பிரித்துக் காட்டியுள்ளான். நன்மை செய்தால் கிடைக்கும் வெகுமதியைப் பற்றியும், தீமை செய்வதால் கிடைக்கும் தண்டனைகளைப் பற்றியும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான்.
(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
அல்குர்ஆன் 90:10
இவ்வாறு நன்மை, தீமை என இரு வழிப்பாதையும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் மனிதனின் உள்ளம் நன்மையின்பால் ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் தீமையின்பால் தான் அதிகம் ஈர்க்கப்படுகின்றது.
அறிந்து, அறியாமல், மறதியாக, தடுமாறி என நாள்தோறும் மனிதனின் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் தவறிழைப்பது நமது இயல்பான குணாதிசயமாகவே உள்ளது. இதன் காரணமாகத் தான் மனிதனின் இயல்புநிலையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகாகக் கூறினார்கள்.
“ஆதமுடைய சந்ததியினர் ஒவ்வொருவரும் இரவிலும் பகலிலும் பாவம் செய்கின்றான். என்னிடம் பாவமன்னிப்புத் தேடுகின்றான். நான் அவனுக்கு மன்னிப்பளிக்கிறேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 21750
இத்தகைய குணத்தோடு நம்மைப் படைத்த இறைவன், நம்மீது கருணை காட்டும் விதமாக, தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, நம்முடைய பாவத்திற்காக பாவமன்னிப்புத் தேடுவதை விதியாக ஆக்கியுள்ளான். அவ்வாறு மனிதன் பாவமன்னிப்புத் தேடும் போது அவனது கோரிக்கையை ஏற்று, அவனுக்கு மன்னிப்பு வழங்குவதையும் தன் மீது இறைவன் விதியாக ஆக்கியுள்ளான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையைநான் அங்கிகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறிகிறான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6321,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 5304
மனிதர்களாகிய நாம் மனம் திருந்தி, வருந்தி பாவமன்னிப்புத் தேடும் போது அந்த மன்னாதி மன்னன் எல்லையில்லா மகிழ்ச்சியடைகின்றான். அம்மகிழ்வின் வெளிப்பாட்டை ஏந்தல் நபியவர்கள் சிலாகித்துக் கூறுவதைக் கேளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.
தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக) “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 5300
பாவமன்னிப்புத் தேடுவதால் நமக்குக் கிடைக்கும் வெகுமதியையும், தனது அடியார்களுக்கு அருளாளன் பொழியும் அருள் மழையையும் ஓரிரு வரிகளில், வார்த்தைகளில் வரையறுத்து விடமுடியாது என்று சொல்லும் அளவிற்கு அல்லாஹ் அளவில்லா நன்மைகளை வாரி வழங்குகின்றான்.
எனினும் மனிதனோ பாவம் செய்வதில் காட்டும் முனைப்பையும் ஈடுபாட்டையும் பாவமன்னிப்புத் தேடுவதில் காட்டுவதில்லை. அசட்டையாகவும் அலட்சியப் போக்கு உடையவனாகவும் இருக்கிறான். மனிதனின் இந்த பலவீனத்தை அறிந்து வைத்திருக்கும் இறைவன், நமக்கு மாற்று ஏற்பாடாக மற்றொரு வாய்ப்பையும் வழங்குகிறான்.
ஆம்! படைப்பினங்களுக்கு உதவி செய்வதன் மூலமும், சில குறிப்பிட்ட நல்லமல்களைச் செய்வதன் மூலமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என மார்க்கம் வழிகாட்டுகின்றது.
தர்மம் செய்தல்
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 2: 271
நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன்.
அல்குர்ஆன் 5:12
தர்மம் செய்வது குறித்து நமது மார்க்கம் அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. அதற்காகப் பல்வேறு வெகுமதிகளை இறைவன் வழங்குகின்றான். அந்த வெகுமதிகளில் ஒன்று பாவங்கள் அழிக்கப்படுவதாகும்.
கடன் கொடுத்தல் மற்றும் அதைத் தள்ளுபடி செய்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், ‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும்‘ என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 3480
மக்களிடம் அரிதாகி விட்ட பண்பு கடன் கொடுப்பது. கடன் கொடுத்தால் திரும்பப் பெறுவது கஷ்டம் என்று எண்ணியே கடன் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. ஆனால் கடன் கொடுத்து. அதற்காக அவகாசம் அளிக்கும் காலமெல்லாம் பெருமளவு நன்மையைச் சம்பாதிக்க முடியும்.
விலங்கினங்களின் மீது அன்பு செலுத்துதல்
‘ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (ம்ணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்‘ என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி, 6009
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 4517
விபச்சாரம் என்பது பெரும்பாவமாக இருந்தாலும் அப்பாவத்தை அழிக்கும் நல்லறமாக, விலங்கினங்களின் மீது அன்பு செலுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இடையூறு தரும் பொருட்களை அகற்றுதல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 2472
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு, அது மனித இனமாயினும் பிற விலங்கினமாயினும் அந்த உயிரினங்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்கிறான் என்பதை மேற்கூறிய செய்திகள் விளக்குகின்றன.
இது மட்டுமல்லாமல் சில வணக்கங்களின் மூலமும் அல்லாஹ் நமது பாவத்தை அளித்து, மன்னிப்பிற்கு வாய்ப்பளிக்கின்றான்.
மார்க்க போதனைகளைக் கேட்டல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர்.
அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6408
உளு செய்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)
நூல்: முஸ்லிம் 413
ஒவ்வொரு நேரத் தொழுகைக்காகவும் நாம் உளுச் செய்யும் போது நமது பாவம் நம்மை விட்டும் வெளியேறிவிடுகின்றது.
தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லுதல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 477
ஐவேளைத் தொழுகை
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 528
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 394
இறைவனை நினைவு கூர்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’ என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6403
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6405
ஆஷுரா நோன்பு மற்றும் அரஃபா நோன்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்“ என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு “அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்“ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி(ரலி)
நூல்: முஸ்லிம் 2152
நன்மை செய்தல்
நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.
அல்குர்ஆன் 23:96
ஏக இறைவனாகிய கருணையாளன் நமது பலவீனத்தை உணர்ந்து நமக்கென்று வழங்கியிருக்கும் இத்தகைய வாய்ப்புகளைத் தவற விடாமல் நம்மால் இயன்ற வரை பாவத்தை அழிக்கக் கூடிய, பாவத்திற்குப் பரிகாரமாக அமையக்கூடிய அனைத்து நற்காரியங்களையும் செய்ய வேண்டும்.
மேலும் அளவற்ற அருளாளனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்புத் தேடுவதுடன், பாவங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். மறுமையில் நன்மையின் எடைத்தட்டு கனத்த நிலையில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் தந்தருள்வானாக!
—————————————————————————————————————————————————————————————————————
தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள்
சபீர் அலீ
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் கொள்கை பட்டிதொட்டியெல்லாம் தனது கிளைகளை படரச்செய்து ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.
ஏகத்துவ அடிப்படையில் அமைந்த ஐவேளை தொழுகைக்கான பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
அந்த பள்ளிவாசல்கள் வெறுமனே ஐவேளைத் தொழுகைகளுக்கான ஸ்தலாமாக மட்டுமிராமல் அழைப்புப் பணி, சமுதாயப் பணி என்று பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும் மையங்களாகவும் இருக்கிறது.
அந்த பணிகள் தொடர்பான அறிவிப்புகள் மக்கள் ஒன்றினையும் நேராமான தொழுகை நேரத்தில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் பல இடங்களில் செய்யப்படுகிறது.
இவ்வாறு தொழுகை முடிந்ததும் அறிவிப்பு செய்தல் என்பது சில இடங்களில் விமர்சனப் பொருளாக மாறியுள்ளது.
இவ்விவகாரத்தை மார்க்க அடிப்படையில் எப்படி முடிவு செய்வது என்று இக்கட்டுரையில் காண்போம்.
அல்லாஹ் ஐவேளைத் தொழுகையை கட்டாயக் கடமையாக்கியுள்ளான். ஒவ்வொரு தொழகை முடிந்ததும் சில துஆக்களையும், திக்ருகளையும் செய்ய நபி(ஸல்) அவர்கள் அதிம் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொதுவாக, மார்க்கத்தில் ஃபர்ளாக – கடமையாக உள்ளவற்றை நிச்சயம் செய்ய வேண்டும். அதை செய்யாவிடில் குற்றமாகிவிடும்.
சுன்னத்தாக உள்ளவற்றை செய்தால் அல்லாஹ்விடத்தில் நன்மை என்றாலும் அதை செய்யாவிடில் அல்லாஹ்விடத்தில் குற்றமாகாது.
இந்த இரு வகைகளில் இரண்டாம் வகையான சுன்னத்தைச் சார்ந்ததுதான் தொழுகைக்கு பின்னால் உள்ள துஆ, திக்ரு ஆகியவைகள்.
மேலும், ஒரு சுன்னத்தை செய்வதும், அதை செய்யாலம் விட்டுவிடுவதும் ஒவ்வொரு தனிமனிதனைச் சார்ந்த விஷயமாகும்.
யாரையும் அதை செய் என்று நிர்பந்திக்கவும் இயலாது. அதை செய்யாதே என்று தடுக்கவும் இயலாது என்ற இந்த அடிப்படையை முதலில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
அடுத்து, நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைகளுக்கு பின்னால் உள்ள திக்ரு, துஆ போன்றதில் எவ்வாறு நடந்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்றாலும் மார்க்கத்தில் உள்ள சுன்னத்தான் காரியங்களில் அலட்சியம் கொள்ளாமல் அவற்றில் அதிகம் ஈடுபாடுள்ளவர்களாகதான் அவர்கள் இருப்பார்கள் என்று வரலாறு நமக்கு சொல்கிறது.
அதே போலத்தான், இந்த தொழுகைக்கு பின்னால் உள்ள திக்ருகள் விஷயத்திலும் நபி(ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள்.
தொழுகைக்கு பின்னால், அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று பாவமன்னிப்பு கோருவதிலும், அல்லாஹும்ம அன்த்த ஸலாம் என்று துவங்கும் துஆக்கள் போன்வற்றை மொழிவதிலும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்ற திக்ருகளை செய்வதிலும், மேலும் மற்ற அனைத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஈடுபாடுடன் இருந்துள்ளார்கள்.
தொழுகைக்கு பின்னால் ஓதப்படும் திக்ருகளைப் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளில் சொல்லப்படும் தகவல், “கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் நபி(ஸல்) அவர்கள் இவற்றை கூறுபவர்களாக இருந்தார்கள்” என்பதுதான்.
இந்தளவிற்கு நபி(ஸல்) அவர்கள் இவற்றை பேணி கடைப்பிடித்தாலும் ஒரு சில சமயங்களில் தொழுகை முடிந்ததும் வேறு காரியங்களில் ஈடுபட்டுமிருக்கிறார்கள்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்’ குலத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்’ குலத்தைச் சேர்ந்த வர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள் ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை யாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉ’ கோதுமை, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்‘’ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை யேனும் தர்மம் செய்யட்டும்‘’ என்று வலியுறுத் தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டி ருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1848
மேற்படி செய்தியில் நபி(ஸல்) கடமையான தொழுகையை தொழுது முடிந்ததும், எழுந்து திக்ருகளுக்கு பதிலாக தர்மத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்றுள்ளது.
மேலும் பின்வரும் செய்தியில், தர்மப் பொருள் தன்னிடம் இருப்பதை நினைவுக்கூர்ந்த நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தன் இல்லத்திற்கு சென்று அதை எடுத்து பகிர்ந்து கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்றுள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்’’ என விளக்கினார்கள்.
இதை உக்பா பின் ஹாரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1221
தொழுததும் திக்ரு செய்வதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றுள்ளார்கள் என்று இச்செய்தி கூறுகிறது.
இது போல் வேறு சில செய்திகளும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் திக்ரு செய்ததற்கு பதிலாக வேறு காரியங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நமக்கு சொல்கிறது.
தொழுகை முடித்ததும் சில திக்ருகளை செய்ய வலியுறத்திய நபி(ஸல்) அவர்கள் மேற்படி செய்திகளில் அதை செய்யாமல் வேறு காரியங்களில் ஏன் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு அந்த செய்திகளிலேயே விடையிருக்கிறது.
மிகவும் அவசியமான, அவசரமான சூழ்நிலையில் இதுபோல் நடந்துக் கொள்ளலாம் என்பதே அந்த விடையாகும்.
முளர் குலத்தைச் சேர்ந்த ஏழைகள் வந்தது தொடர்பான செய்தியில், அவர்களின் பஞ்சத்தை போக்க வேண்டும். மக்கள் திரண்டிருக்கும் இந்த சூழல்தான் அதற்கு சரியான தருணம் என்பதால் நபி(ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
தொழுகையை முடித்ததும் வீட்டிற்கு விரைந்து சென்ற செய்தியில், தர்மப்பொருள் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் தடுக்கப்பட்டுள்து. தடுக்கப்பட்ட பொருள் தன்னிடத்தில் ஒரு மாலைப் பொழுதை கடப்பதை கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை. அதனால் உடனே சென்று அதை பங்கிட கட்டளையிட்டுள்ளார்கள் என்று உறுதியாகிறது.
இதுபோன்ற அவசியமான விஷயம் என்றால், அப்போது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான விஷயமான இந்த திக்ருகளுக்கு முன்னால் அந்த அறிவிப்புகள் செய்யலாம்.
வந்திருக்கும் ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் செய்த அறிவிப்பும், தர்மப்பொருளை பங்கீட்டு கொடுக்க வேண்டும் என்ற கட்டளை அறிவிப்பும் இதற்கு சான்றாகவுள்ளது.
இதுபோன்றல்லாமல், அவசியமில்லாத விஷயங்களுக்கு இடம்கொடுத்து திக்ரு என்ற சுன்னத்தை விடுவதும் அதை செய்யும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தவறாகும்.
சில இடங்களில், தொழுகை முடிந்ததும் குர்ஆன் வசனம் வாசிக்கப்படுகிறதே அதுவும் செய்யக்கூடாதா? என்ற கேள்வி நமக்கு தற்போது எழலாம்.
குர்ஆன் ஓதுவதும், அது ஓதப்படுவதை கேட்பதும் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய விஷயங்கள்தான். எனினும் தொழுகை முடிந்தவுடன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட அமல்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அதைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தொழுகை முடிந்தவுடன் இந்த திக்ருகளைச் செய்வதற்குப் போதுமான இடைவெளி விட்டு, அதற்குப் பின்னர் குர்ஆன் வசனத்தை வாசிப்பதே சிறந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் நபிவழியை நிறைவேற்றியவர்களாக ஆவதுடன் குர்ஆன் வசனங்களை ஓதிய நன்மையையும் பெற முடியும்.
—————————————————————————————————————————————————————————————————————
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 33
நபிவழியைக் கொச்சைப்படுத்தும் கஸ்ஸாலி
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
அல்லாஹ்வால் உத்தமர், உண்மையாளர் என்று பாராட்டவும் போற்றவும் படுகின்ற நபி யூசுஃப் (அலை) அவர்களை, சுலைமான் பின் யஸார் என்பவரை விட கற்புநெறியில் குறைந்தவர்கள் என்று களங்கப்படுத்தியதைக் கண்டோம். இந்த இதழில் நபி (ஸல்) அவர்களையே குறை காண்கிறார் என்பதைக் கீழ்காணும் அவரது அறிவுரையிலிருந்து பார்ப்போம்:
اعلم أن المريد في ابتداء أمره ينبغي ألا يشغل نفسه بالتزويج فإن ذلك شغل شاغل يمنعه من السلوك، ويستجره إلى الأنس بالزوجة. ومَن أنس بغير الله تعالى شغل عن الله، ولا يغرنه كثرة نكاح رسول الله صلى الله عليه وسلم. فإنه كان لا يشغل قلبه جميع ما في الدنيا عن الله تعالى فلا تقاس الملائكة بالحدادين. ولذلك قال أبو سليمان الداراني: من تزوج فقد ركن إلى الدنيا، وقال: ما رأيت مريدا تزوج فثبت على حاله الأول، وقيل له مرة: ما أحوجك إلى امرأة تأنس بها؟ فقال: لا آنسني الله بها، أي أن الأنس بها يمنع الأنس بالله تعالى، وقال أيضا: كل ما شغلك عن الله من أهل ومال وولد فهو عليك مشؤوم. إلى أن قال: فشرط المريد العزبة في الابتداء إلى أن يقوى في المعرفة
முரீது (அல்லாஹ்வை நாடுபவர்) ஆரம்ப கட்டத்தில் திருமண செய்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது அவரை ஆன்மீகப் பயணத்தை விட்டும் தடுத்து விடும். மனைவியின் மீது அன்பு கொள்ள வைத்து விடும். அல்லாஹ் அல்லாதவரிடம் அன்பு செலுத்துபவர் அல்லாஹ்வின் அன்பை இழந்தவராகி விடுகின்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதிகமான திருமணம் முடித்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அதிகமான மனைவியருடன் வாழ்ந்த அந்தத் திருமண வாழ்வு அவரை ஏமாறச் செய்து விட வேண்டாம். காரணம் உலகத்தில் அனைத்துமே நபி (ஸல்) அவர்களை வேறு கவனத்தில் திசை திருப்பி விடாது. மலக்கு நிலையில் உள்ளவர்களை மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது.
இதனால் தான் சுலைமான் அத்தாரானீ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: யார் திருமணம் செய்கின்றாரோ அவர் உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டார். திருமணம் முடித்த எவரையும் அவரது திருமணத்திற்கு பின்பு பழைய நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருப்பதை நான் கண்டதே இல்லை.
அவ்வாறு சொன்ன அவரிடத்தில் “உங்களுக்கு மட்டும் உங்கள் மனைவியிடம் அன்பு செலுத்துகின்ற அவசியம் என்ன வந்து விட்டது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ் மனைவியிடத்தில் அன்பு செலுத்தாதவனாக ஆக்குவானாக! அதாவது மனைவியின் அன்பு அல்லாஹ்வின் அன்பை விட்டும் தடுக்கின்றது” என்று பதிலளித்தார். “மனைவி, மக்கள், காசு பணம் ஆகியவற்றில் எது அல்லாஹ்வை விட்டும் உன்னை தடுத்தாலும் அது துர்ப்பாக்கியமானது தான்” என்று தொடர்ந்து குறிப்பிட்ட அவர், “அகமிய ஞானத்தில் வலுவடைகின்ற வரை ஒரு முரீதுக்கு ஆரம்பக்கட்டத்தில்பிரம்மச்சாரியம் ஒரு நிபந்தனையாகும்” என்று இறுதியாக தெரிவித்தார்.
நூல்: இஹ்யா உலூமித்தீன்
பாகம்: 3
கிதாபு கஸ்ருஷ் ஷஹ்வத்தைன்.
இரு இச்சைகளை அடக்கும் அத்தியாயம்
திருமணத்தை விடுவது அதன்படி செயல்படுவது தொடர்பாக முரீதுக்கு விளக்குதல்
மேற்கண்ட இந்த செய்தியில் கஸ்ஸாலி இரண்டு விஷயங்களை முன் வைக்கின்றார்.
- வாலிப வயதில் திருமணம் கூடாது. காரணம் அது அல்லாஹ்வை அறிவதற்கு அடைவதற்கு தடைக்கல்லாகி விடும்..
- திருமணம் செய்தவர் அல்லாஹ்வின் நினைவை விட்டு அகன்று விடுகின்றார்.
கஸ்ஸாலியின் திருமணம் தொடர்பான அறிவுரையை முதலில் பார்ப்போம். இது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் நேர் எதிரான அறிவுரையாகும். குர்ஆனையும் ஹதீஸையும் ஓர் ஓரத்தில் மூட்டைக் கட்டி ஒதுக்கி வைத்து விட்டுத் தான் கஸ்ஸாலி இந்த விஷயத்தை அணுகுகின்றார். இதில் இஸ்லாமிய பார்வையை பார்ப்பதை விட்டு விட்டு யூத கிறிஸ்துவ மதத்தில் உள்ள துறவுப் பார்வையை பார்க்கின்றார் என்று எளிதில் புரிந்துக் கொள்ளலாம். யூத,கிறிஸ்துவத்தில் உள்ள துறவுப் பாதையை இஸ்லாத்திற்குள் திறந்து விடுகின்றார் என்று எளிதில் விளங்கிக்கொள்ளலாம். நபியின் அந்த திருமண வாழ்வு அவரை ஏமாறச் செய்து விட வேண்டாம் என்பது அதிகபிரசங்கித் தனமும் வரம்பு மீறலுமாகும்.
இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
அல்குர் ஆன் 31:33
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
அல்குர் ஆன் 35:5
இதுபோன்ற வசனங்களில் மனித மயக்கக் கூடிய மறுமை வாழ்க்கையை மறக்கக் கூடிய இவ்வுலக வாழ்க்கைக்கும் ஷைத்தானுக்கும் அல்லாஹ் இந்த சொல்லாடலை பயன் படுத்துகின்றான். கஸ்ஸாலியும் அதே சொல்லாடலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றார் என்றால் இவரின் மார்க்கம் என்ன? என்பதை இவரை கல்விக்கடல் என்று பாராட்டி மகிழ்கின்ற கஸ்ஸாலியின் காதலர்கள் புரிந்துக் கொள்ள வெண்டும்.
திருமணம் பற்றி திருக்குர்ஆன் கூறக்கூடிய வசனங்களை பார்த்தாலே இவர் தூய மார்க்கத்தை விட்டும் எவ்வளவு பாரதூரத்தில் இருக்கின்றார் என்று எளிதில் புரிந்து விடும்.
மணமுடிக்கச் சொல்லும் மாமறை வசனங்கள்
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
அல்குர்ஆன் 4:3
உலக மதங்கள் தத்துவங்கள் கடவுளை அடைய ஒரு மனைவியே தடை என்று சொல்கின்ற கட்டத்தில் இஸ்லாம் ஒரு மனைவிக்கு மேல் இரண்டு இரண்டாக மும்மூன்றாக நன்னான்காக திருமணம் முடித்துக் கொள் என்று சொல்கின்றது. அதாவது அன்பு ஒரு மனைவிக்கு மேல் பல மனைவியரிடம் பகிரப்பட்டாலும் அல்லாஹ்வின் அன்பை அடைவதற்கு அது தடையல்ல என்று தெளிவுப்படுத்துகின்றது.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 24:32
விதவைப் பெண்களுக்கும் பொருளாதாரத்தில் தனது எஜமானர்களை சார்ந்து நிற்கின்ற அடிமையான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாம் திருமணம் முடித்து வைக்கச் சொல்கின்றது.
அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்கச் சொல்வதின் மூலம் திருமணம் என்பது வாழ்க்கையில் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் உரியது என்றில்லாமல் அதை பொதுவுடைமையாக ஆக்கியிருக்கின்றது.
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர் ஆன் 2:232
விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை இன்னொரு கணவரை பார்த்து திருமணம் முடிப்பதை தடுக்காதீர்கள் என்று திருமணத்தை தடுப்பதை இஸ்லாம் வன்மையாக் கண்டிக்கின்றது.
இறைத்தூதர்களின் பணி என்ன? மக்கள் இறைவனின் அன்பை பெறுவதற்கு உரிய வழியைக் காட்டுவதாகும். அந்த இறைத்தூதர்களே திருமணம் முடித்து மனைவி மக்களுடன் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.
அல்குர்ஆன் 13:38
ஜோடியாக படைத்தது ஓர் அத்தாட்சி!அற்புதம்
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர் ஆன் 30:21
அன்பையும் பாசத்தையும் மனைவிகளிடம் ஏற்படுத்தியிருப்பது அவனது அத்தாட்சியிலிருந்து உள்ளது என்று திருக்குர்ஆன் பறைசாற்றுகின்றது.
மனைவி, மக்கள் கண்களின் குளிர்ச்சி
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர் ஆன் 25:74
கண்குளிர்ச்சியை மனைவி மக்களிடமிருந்து கண் குளிர்ச்சியை தருமாறு பிரார்த்திக்கச் சொல்கின்றான். இந்த பண்பை அர்ரஹ்மானின் அடியார்களின் பண்புகளில் பட்டியலிடுகின்றான்.
இந்த வசனங்கள் அனைத்தும் திருமணம் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு என்று மார்க்கம் அடித்துச் சொல்கின்றது.
மணமுடிக்கும் சொல்லும் மாநபியின் ஹதீஸ்கள்
இப்போது திருமணத்தை வரவேற்கின்ற வலியுறுத்துகின்ற ஹதீஸ்களை பார்ப்போம்
நல்ல மனைவி நல்ல செல்வம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 2911
உலகச் செல்வங்களில் உன்னத செல்வம் நல்ல மனைவி. அந்த மனைவியை உரிய காலத்தில் அதாவது வாலிபக் காலத்தில் அடைவதற்கு தடை விதிக்க கஸ்ஸாலி யார்?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி 5090
இவை எல்லாம் திருமணத்திற்கு வழிக்காட்டுகின்ற ஹதீஸ்களாகும். இவற்றை தூர தூக்கி எறிந்து விட்டு தான் அல்லாஹ்வை அடையவேண்டும் என்று கஸ்ஸாலி அறிவுரை வழங்குகின்றார்.
அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்‘’ என்று கூறினார்கள்.
புகாரி 5065,5066
கஸ்ஸாலி வாலிப வயதில் கல்யாணத்தை தள்ளிப் போடச் சொல்கின்றார். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாலியர்களே! என்ற அழைத்துத் தான் திருமணம் முடிக்கச் சொல்கின்றார்கள். இதை பின்வரும் ஹதீஸ் இன்னும் நெற்றியில் அடித்தால் போல் உறுதியாக சொல்கின்றது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’’ என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்’ என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்’’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.
புகாரி 5063
இந்த ஹதீஸ் திருமணம் முடிக்காதவர் என்னைச் சார்ந்தவர் கிடையாது என்று சொல்லி விடுகின்றது. அதாவது முஸ்லிம் என்றால் அவர் திருமணம் முடிக்க வேண்டும். உடல் ரீதியான காரணத்தை தவிர்த்து பக்தி, இறை அன்பு, ஆன்மீக ஞானம் என்ற போர்வையில் திருமணத்தை தவிர்ப்பவர் முஸ்லிம் அல்ல என்று இந்த ஹதீஸ் பிரகடனப்படுத்துகின்றது.
கஸ்ஸாலி இவ்வாறு சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று இவருக்கு ரசூல் (ஸல்) அவர்களுக்கு பிறகு வஹீ வந்திருக்க வேண்டும் அல்லது யூத, கிறிஸ்துவ மதக் கலாச்சாரத்தை இவர் இஸ்லாத்தில் திணிக்க வேண்டும். நம்மை பொருத்தவரையில் கஸ்ஸாலி இதில் இரண்டாவது வழிமுறையைத் தான் பின்பற்றியிருக்கின்றார் என்று உறுதியாக கூறுகின்றோம். இதை தவிர்த்து குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுக்கு நேர் எதிராக ஒருவர் பயணிப்பதற்கு வேறொரு காரணம் இருக்க முடியாது. அத்துடன்
வாலிப வயதில் திருமணம் கூடாது. காரணம் அது அல்லாஹ்வை அறிவதற்கு அடைவதற்கு தடைக்கல்லாகி விடும். திருமணம் செய்தவர் அல்லாஹ்வின் நினைவை விட்டு அகன்று விடுகின்றார் என்று கஸ்ஸாலி கூறுகின்ற பிறமத சித்தாந்ததிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் சமத்தையான சம்மட்டி அடிக் கொடுத்து விடுகின்றது. யார் திருமணம் செய்கின்றாரோ அவர் உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டார். திருமணம் முடித்த எவரையும் அவரது திருமணத்திற்கு பின்பு பழைய நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருப்பதை நான் கண்டதே இல்லை என்று சுலைமான் அத்தாரானீ கூறுகின்ற கருத்திற்கும் இது சம அடிக்கொடுத்து விடுகின்றது.
திருமணம் என்ற வாசல் அடைக்கப்பட்டால் அதனால் மார்க்கம் மற்றும் சமுதாய ரீதியில் ஏற்படுகின்ற விளைவுகளை கேடுகளையும் இங்கே பார்ப்போம்.
- ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையை புறக்கணிக்கும் ஒரு கொடுமை இதில் ஏற்படுகின்றது.
- அல்லாஹ் அனுமதித்தவைகளை தடை செய்கின்ற வரம்பு மீறிய காரியமும் இதில் ஏற்படுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர் ஆன் 5:87
- திருமணம் என்பது மனிதனின் இயற்கயான அடிப்படை தேவை. அவனது இயற்கை தேவை நிறைவேறுகின்ற அதே வேளையில் இதன் மூலம் மனித இனப்பெருக்கமடைகின்றது. துறவு என்பதை இயற்கையின் இந்த வாசலை தாழிட்டு அடைத்து விடுகின்றது.
- நாம் மேலே குறிப்பிட்டது போன்று இது யூத,கிறிஸ்துவ, இந்து மத கலாச்சாரத்தை இஸ்லாத்தில் திணித்து விடுகின்றது.
- சமுதாயத்தில் இது ஓரினச்சேர்க்கையை உருவாக்கிவிடுகின்றது. தவம், தியானம், பிரமாச்சாரியம், சூஃபிஸம் என்ற பெயரில் வலம் வருகின்றவர்கள் இந்த ஓரினச் சேர்க்கையில் ஊறி நாறி நாற்றமெடுத்த வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகின்றது.
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 24:19
இந்த வசனத்தின் எச்சரிக்கையின் படி இத்தகையவர்கள் இம்மை மறுமையின் தண்டனைக்குரியவர்களாகிவிடுகின்றார்கள்.
- இறுதியாக, கஸ்ஸாலியும் அவர் மேற்கோள் காட்டுகின்ற சுலைமான் அத்தாரானியும் வைக்கின்ற வாதம் ரசூல் (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும்… ஏன்? இதற்கு முன் வந்த அத்துணை நபிமார்களையும் குறை காண்பதாகவே அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் அதிகமான மனைவியருடன் வாழ்ந்த அந்த திருமண வாழ்வு முரீதை ஏமாறச் செய்து விட வேண்டாம் என்ற கஸ்ஸாலியின் சொல்லாடல் சாதாரணமான சொல்லாடல் அல்ல! அது ஓர் அபாயகாரமான சொல்லாடலாகும்.
—————————————————————————————————————————————————————————————————————
பொய்யர்கள் அழிவார்கள்!
M.A. அப்துர்ரஹ்மான்
இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்கள் செய்கின்ற செயல்களில் நன்மையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? தீமையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? என்பதை ஏராளமான உபதேசங்களின் மூலமாக மிகவும் விரிவாகவும், எளிமையான முறையிலும் அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது.
நாம் செய்யக்கூடிய கேடுகெட்ட காரியங்களைப் பொறுத்தே இம்மையிலும், மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்று மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. நாம் செய்யக்கூடிய செயல்களில் சர்வ சாதரணமாக நம்முடைய நாவினால் செயல்படுத்துகின்ற பெரும்பாவம் பொய்.
இன்றைய காலகட்டங்களில் பொய் என்பது பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படுகின்ற பெரும்பாவமாக இருக்கின்றது. உலகத்திலே பொய் பேசாதவர்கள் யாருமில்லை என்று மிகைத்து சொல்கின்ற அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பொய் எனும் பெரும்பாவத்தில் மூழ்கிக் கிடப்பதையும், சர்வ சாதாரணமாக அனைவராலும் மொழியப்பட்டும், பேசப்பட்டும் வருவதையும் நம்மால் பரவலாக காண முடிகின்றது.
இன்னும் ஒருசிலர் பொய்யை மூலதனமாகக் கொண்டு வயிறு வளர்ப்பதையும், இன்னும் சிலர் பொய்யை மூலதனமாகக் கொண்டு பிறரை அழிக்க நினைப்பதையும், இன்னும் சிலர் பொய் பேசி அப்பாவி மக்களை நம்ப வைத்து சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவதையும் பார்க்கின்றோம்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனும், இறைத்தூதரும் பொய்யையும், பொய்யர்களையும் கடுமையான முறையில் விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் பொய்யர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையான இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 22:30
இணைகற்பித்தல் போன்ற பெரும் பாவங்களுக்கு நிகராக இறைவன் பொய்யையும் பெரும் பாவமாக கருதி பொய் பேசுவதிலிருந்து விலகி திருந்தி வாழுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
இதை விட்டும் திசை திருப்பப்படுபவர் திசை திருப்பப்படுகிறார். பொய்யர்கள் அழிவார்கள்.
அல்குர்ஆன் 51:9,10
பொய்யர்கள் தாங்கள் பேசி வருகின்ற பொய்யின் காரணத்தினால் கட்டாயமாக இவ்வுலகிலும், மறுமையிலும் நட்டத்தையும், அழிவையும் சந்திப்பார்கள் என்று அல்லாஹ் ஆழமாக எச்சரிக்கை விடுக்கின்றான்.
பொய் பேசுபவர்கள் எந்த விஷயத்தில் பொய் பேசினாலும் அது அவர்களுக்கு வெற்றியைத் தருவது போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுமே தவிர, கட்டாயம் அவர்கள் கடும் வீழ்ச்சியை தான் சந்திப்பார்கள் என்றும், அவர்களின் அழிவு உறுதி என்றும் இறைவன் அழுத்தமாக பதிய வைக்கின்றான். எனவே பொய் என்ற மோசமான, அழித்தொழிக்கும் பாவத்திலிருந்து நாம் அனைவரும் தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பொய் கூறுவோருக்கு கடுமையான தண்டனை:
இன்று நம்மில் பெரும்பாலானோர் பொய்யை ஒரு பாவமாகவே கருதாமல் அலட்சியம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், பொய் சொல்பவர்களுக்கு கடுமையான வேதனை ஏற்படும் என்று திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 2:10
பொய்யர்கள் – நயவஞ்சகர்களே!
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.
அல்குர்ஆன் 9:77
இன்றைய சூழலில் சர்வ சாதாரணமாக கண்டவர் கழியவர் எல்லாம் முகநூல் வாயிலாகவும், வலைதளங்களின் வாயிலாகவும் பிறரின் நன்மதிப்பை கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யையே பிழைப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏதேனும் ஒரு ஆதாயத்திற்காகவோ, புகழுக்காகவோ, நம்முடைய முகம் முகநூலில் தெரிகின்றது. நம்முடைய முகத்தை பலரும் பார்க்கின்றார்கள் என்ற மட்டரகமான எண்ணத்தில் பொய் சொல்லித் திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உள்ளங்களில் அயோக்கியத்தனத்தின் மறு உருவமான நயவஞ்சகத்தனத்தை இறைவன் ஆழப்பதிய வைக்கின்றான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பொய் பேசுபவர்களை நயவஞ்சகர்களின் பட்டியலுக்குள் கொண்டு வந்து எச்சரிக்கை செய்வதை பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை (நான்கும்).
ஆதாரம்: புகாரி 34
இந்த செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! பொய் பேசுவது ஒரு முஃமினின் பண்பு அல்ல; முனாஃபிக்கின் பண்பு. நயவஞ்சகத்தனத்தின் நான்கு குணத்தில் ஒரு குணம் இருந்தாலும் நயவஞ்சகத்தனம் அவனை விட்டும் நீங்காது. மாறாக, அவனிடமே குடிகொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
எனவே பொய்ப்பித்தலாட்டத்தில் ஈடுபட்டு இந்தக் கோரமான குணத்தை பெற்று நரகத்திலே விழுந்து விடாமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
பொய்யர்களின் தாடை கிழிக்கப்படுதல்:
இன்றைக்கு மிகவும் கீழ்த்தனமான முறையில் நாம் பேசுகின்ற பொய் மக்களிடத்திலே விரைவாக சென்று குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பயன்படுத்துகின்ற ஆயுதம் தான் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக என்ன பேசுகின்றோம் என்ற நிதானம் இல்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விட்டு அப்பட்டமாக பொய்ப்பிரச்சாரம் செய்து சத்தியக் கருத்துக்களை அழிக்க நினைக்கின்ற அநியாயக்காரர்களை பார்க்கின்றோம்.
உலகத்தில் பொய் பேசுபவர்களாக இருப்பவர்களுக்கும், பேசுகின்ற பொய் உலகம் முழுவதும் பரவி மக்களை குழப்புகின்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் கடுமையான வேதனை வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
“உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?’’ என்று கேட்டதும் நாங்கள் “இல்லை’ என்றோம். அவர்கள், ““நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர். இப்படியே பல சம்பவங்கள் எடுத்துக் காட்டப்பட்டது.
இறுதியாக, “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.
ஆதாரம்: புகாரி 1386 (ஹதீஸ் சுருக்கம்)
மற்றொரு அறிவிப்பிலே, தாடையில் குத்துகின்ற குத்தின் காரணமாக கண்களும், காதுகளும் பிதுங்கி வெளியேறுகின்ற அளவுக்கு அதன் வேகமும், ரணமும் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் அச்சுறுத்துகின்றார்கள்.
ஒருவர் நின்று கொண்டு தன்னுடைய கரங்களிலே இரும்பாலான கொக்கிகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பவரின் இருதாடைகளையும் கடுமையான முறையில் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். குத்துகின்ற குத்து பிடரியைக் கிழித்துக் கொண்டு வெளியேறுகின்றது.
இதுபோன்று ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் சுகமாக இருக்குமா? தண்டனையைப் படிக்கும் போதே உள்ளம் நொறுங்கி, கடுமையான அச்சம் ஏற்படுகின்றது. வெறுமனே மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கு பொய்ப் பிரச்சாரம் செய்து மறுமையில் தாடை கிழிக்கப்படாமல் இருக்க, உண்மையை பேசி இந்த கோரமான தண்டனையிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒருவர் சர்வ சாதாரணமாக கருதிக் கொண்டு பேசுகின்ற பொய்யின் காரணத்தினாலும், எவ்வித ஆதாரமும் இல்லாமல் நம்முடைய நாவு ஆடுகின்ற ஆட்டத்தினாலும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். பல்வேறு விதமான நன்மையான காரியங்கள் தடைபட்டு போகின்றது. மக்கள் குழப்பமான சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள்.
இதுபோன்ற கடுமையான விபரீதத்தை ஏற்படுத்தியவரின் தாடைகளை கிழித்து தொங்க விடுவதில் எள்முனையளவு கூட பாரபட்சம் காட்டாமலும், இரக்கம் காட்டாமலும் அத்தண்டனையை அமுல்படுத்துகின்றார்கள்.
பொய் சொல்வது பெரும்பாவமே:
இன்றைக்கு சர்வ சாதரணமாக பெரும்பாலான மக்கள் பொய் என்னும் கொடூரமான நோயில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால் பொய் பேசுதல் பெரும் பாவம் என்பதை அறியாமல் சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுவதைப் பார்க்கின்றோம்.
பொய்யைப் பற்றி அதிபயங்கரமான அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கை இதோ!
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெரும்பாவங்கஜலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)’’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்‘’ என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் “அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’’ என்றேன்.
ஆதாரம்: புகாரி 5976
பெரும் பாவங்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பது நாம் பேசுகின்ற பொய். மேலும் ஒரு நபித்தோழர் பெரும்பாவங்களைப் பற்றிப் கேள்வி எழுப்புகின்றார். நபி (ஸல்) அவர்கள் நிறுத்தாமல் திரும்பத் திரும்ப பொய்யைப் பற்றியும், பொய் சாட்சியத்தை பற்றியும் கூறுவதைப் பார்த்து விட்டு நிறுத்திக் கொள்ளக் கூடாதா? என்று நினைக்கும் அளவுக்கு பொய்யைப் பற்றி அதிபயங்கரமாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இன்னும் சற்று சிந்தித்துப் பாருங்கள்! திரும்பத்திரும்ப ஏன் கூற வேண்டும்? நாம் சாதாரணமாக எண்ணிக் கொண்டிருக்கின்ற பொய்யின் விபரீதம் மோசமான விளைவை ஏற்படுத்தும். எந்த அளவிற்கென்றால் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விடும். மேலும் ஆணவம், அகம்பாவம், பெருமை, பொறாமை போன்ற கேடுகெட்ட காரியங்களை இந்தப் பொய் மென்மேலும் தூண்டும். நாம் வாழ பிறர் வீழ்ந்தாலும் பரவாயில்லை பொய்யைப் பரப்பியாவது நன்மதிப்பை பெற்றுக் கொள்வோம் என்ற கயமைத்தனம் உள்ளத்தில் ஏற்படும்.
நரகத்தை தீர்மானிக்கும் பேச்சு:
ஒருவர் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பதையும், இறைவனின் திருப்திக்குரியவரா? கோபத்திற்குரியவரா? என்பதையும் நாம் பேசுகின்ற பேச்சு தீர்மானித்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் அழகான ஒரு செய்தியின் மூலமாக நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ் வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
ஆதாரம்: புகாரி 6478
இறைவனிடத்தில் நம்முடைய அந்தஸ்த்து உயர வேண்டுமானால், இறைவனின் திருப்தியை பெற வேண்டுமானால் நல்ல வார்த்தையை பேச வேண்டும். நாம் பேசுகின்ற கெட்டப் பேச்சு, பொய்ப் பேச்சின் காரணத்தினால் கடுமையான பின்விளைவாக நரகத்திலே விழுந்து அழிந்து போவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இறைவனின் பதிவேட்டில் பெரும் பொய்யர்:
இறைவனிடத்தில் இருக்கின்ற சிறப்பு பதிவேட்டில் ஒருவர் உண்மையைப் பேசிக் கொண்டே வரும்போது வாய்மையாளர் என்று பதிய வைக்கப்படுகின்றார். பொய்யை பேசிக் கொண்டு வருபவர் பெரும் பொய்யர் என்றும் பதிய வைக்கப்படுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
ஆதாரம்: புகாரி 6094
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் பொய் பேசிக்கொண்டே இருந்தால், அவன் பேசுகின்ற பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும் என்றும், இறைவனின் பதிவேட்டில் பெரும் பொய்யர் என்றும் பதிய வைக்கப்படுகின்றார். ஒருவன் தீமைக்கு மேல் தீமை செய்வதற்கு அவன் பேசுகின்ற பொய் மிகப்பிரதானமான காரணமாக அமைந்து விடுகின்றது.
இன்றைக்கு ஒருவன் பேசுகின்ற பொய் இறைவனின் பதிவேட்டில் பெரும் பொய்யர் என்று எப்படி பதிய வைக்கப்படுவாரோ, அது போன்று உலகத்திலும் அப்பட்டமான பொய்யர் என்று தெளிவாகின்றது. அந்தளவிற்கு பொய்யை சாதாரணமாக பேசி வருகின்றார்கள்.
பொய்யர்கள் அழிவார்கள்:
கடந்த காலங்களில் ஆட்டம் போட்ட பொய்யர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதை இறைவன் எச்சரிக்கின்றான்.
உங்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைச் சிந்தியுங்கள்!
அல்குர்ஆன் 3:137
உண்மை தெளிவாக தெரிந்த பிறகும் உண்மையைப் பொய்யென்று கருதிய அயோக்கியர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதை சிந்தியுங்கள்! என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான். மேலும் உண்மையைப் பொய்யென்று கருதியவர்களின் கதி அதளபாதளம் தான் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்க முடிகின்றது.
மேலும், இறைவன் கூறுகின்றான்;
உண்மை அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் பின்னர் அவர்களிடம் வந்து சேரும்.
அல்குர்ஆன் 6:5
உண்மை என்று தெளிவாக தெரிந்த பிறகும் கேலிக்கூத்தாக கருதியவர்கள் குறித்த முழு விபரமும் பின்னால் அவர்களிடம் வந்து சேரும் என்று அவர்களின் பாணியிலேயே அவர்களை கேவலப்படுத்தி, கிண்டல் செய்யும் விதமாக இறைவன் பதிலளிக்கின்றான்.
பொய்யர்களுக்கு இறைவனின் அதிபயங்கரமான எச்சரிக்கை;
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
அல்குர்ஆன் 21:18
உண்மை என்பது அதிபயங்கரமான ஒரு ஆயுதம். அந்த உண்மையை அற்பத்திலும் அற்பமாக வலம் வருகின்ற பொய்யின் மீது வீசி எரியும் போது, அந்த பலமான உண்மை, போலியான பொய்யை அடித்து துவம்சம் செய்கின்றது என்று பொய்யர்களின் முகத்திரையை கிழித்து தொங்க விடும் முகமாக இறைவன் எச்சரிக்கின்றான்.
பொய்யர்கள் எவ்வளவு தான் கத்தினாலும், கூப்பாடு போட்டாலும் பொய் ஒருக்காலும் நிலைக்காது. பொய்யர்களை அல்லாஹ் அழித்து இருந்த இடம் தெரியாமல் தடம் மாற்றி தடுமாறச் செய்து விடுவான் என்பதை பொய்யர்களும், பொய்யர்களை நம்புபவர்களும் தங்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டு பொய்யர்களின் சதிவலையிலிருந்து வெளியேறி உண்மையின் பக்கம் வருவதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
அல்குர்ஆன் 9:11
—————————————————————————————————————————————————————————————————————
அவ்லியாக்கள் யார்?
ஏ.கே. கமால்
அவ்லியாக்கள் என்போர் ஒருபோதும் மரணிப்பதில்லை. அப்படி மரித்தாலும் கூட அது மற்றவர்களுக்கு வரக்கூடிய மரணம் போன்றதல்ல. உண்மையில் அவர்கள் உயிர் வாழும் போது இருந்த மனித சக்திகளைவிட பன்மடங்கு, பன்மடங்கு ஆற்றல்களுடனும், கராமத்களுடனும் உயிருடன் வாழ்ந்து கொண்டே உள்ளனர். எனவே நாம் நேரடியாக அல்லாஹ்விடம் துஆ செய்யாமல் அவ்லியாக்களிடம் பிரார்த்தித்தால் அவர்கள் அல்லாஹ்விடன் இடைத்தரகராக இருந்து நமக்கு வேண்டியதைப் பெற்றுத் தருவார்கள் என்று போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் நம்பி வருகின்றனர்.
இந்த நம்பிக்கை தவறானது என்பதை நாம் பல்வேறு கட்டுரைகள், நூல்கள், உரைகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எனினும் அவ்வப்போது புதிதாக ஆதாரங்கள் என்ற பெயரில் சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையோ அல்லது பொருத்தமில்லாத செய்திகளையோ வெளியிடுவது இவர்களின் வழக்கம். அந்த அடிப்படையில் அவ்லியாக்கள் பற்றி அவர்கள் எடுத்துவைக்கும் ஒருசில ஆதாரங்களையும் அதன் நிலைமைகளையும், அறியாமைகளையும் பார்ப்போம்.
நபிமொழிகள் எனும் பெயரில் சில செய்திகளை குறிப்பிட்டு தவறான கருத்தை மக்கள் மத்தியில் ஒரு சிலர் விதைக்கின்றனர்.
அவ்வாறு குறிப்பிடப்படும் செய்திகள் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் சுருக்கமாக இங்கே காண்போம்.
முதல் செய்தி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நபித்தோழர்களில் ஒருவர் தனது கூடாரத்தை ஒரு கப்ரின் மீது அமைத்து விட்டார். ஆனால் தான் கூடாரம் அமைத்த இடம் கப்ரு என்பது அவருக்கு தெரியாது.
அப்போது அதிலே (கப்ரின் உள்ளே) ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் தபாரகல்லதி பியதிஹில் முல்க் என்ற சூராவை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதி முடித்தார். உடனே (இதை பார்த்த கூடாரம் அடித்த) அந்த மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே (நான் பயணிக்கும் வழியில் எனக்காக) ஒரு கூடாரத்தை அமைத்தேன். நான் எனது கூடாரத்தை அமைத்த அந்த இடம் கப்ரு என்பதை அறியாமலேயே என் கூடாரத்தை அடித்து முடித்தும் விட்டேன். அப்போது அந்த கப்ரில் ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் தபாரகல்லதி பியதிஹில் முல்க் என்ற சூராவை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதி முடித்ததை நான் பார்த்தேன் என்று கூறிய உடனே நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் முல்க் என்ற அந்த அத்தியாயம் தன்னை ஓதக்கூடியவரை (கப்ருடைய வேதனையை விட்டு) தடுக்கக் கூடியதும், கப்ருடைய வேதனையிலிருந்து காப்பாற்றி வெற்றி தரக்கூடியதாகவும் உள்ளது என்று மாநபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி).
இறந்தோர் உயிருடன் உள்ளனர் என்பதற்கு இந்த செய்தியை ஆதாரமாக கொண்டு இறைநேசர்கள் இறந்த பிறகும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை நிலைநாட்ட முயலுகின்றனர்.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். உலகில் மனிதன் உயிருடன் உள்ளதை போன்று இறந்தோர் உயிருடன் இருக்க மாட்டார்கள். நமது கோரிக்கையை செவிமடுக்கவோ அதற்கு பதிலளிக்கவோ ஆற்றல் பெற மாட்டார்கள். அப்படியே அவர்கள் செவிமடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட இறைவனிடத்தில் கேட்பதை இறந்து விட்ட இறை அடியார்களிடத்தில் கேட்கலாம் என்பதற்கு அச்செய்தி ஆதாரமாகி விடாது என்பது பற்றி எல்லாம் பல முறை ஏகத்துவம் இதழில் தக்க சான்றுகளை கொண்டு விவரித்துள்ளோம்.
எனவே இந்த செய்தியை பற்றி மட்டும் இங்கே அறிந்து கொள்வோம்!
இந்த ஹதீஸ் ஸுனன் அத்திர்மீதியில் பாகம் 5 பக்கம் 164 எண் 2890, ஷீஃபுல் ஈமானில் பாகம் 4 பக்கம் 125 எண் 2280, இஸ்பாதுல் அதாபில் கப்ரி லில்பைஹகீயில் பாகம் 1 பக்கம் 99 எண் 150 மற்றும் அல்முஃஜமுல் கபீர் அத்தப்ரானீயில் பாகம் 10,12 பக்கம் 318,174 எண் 12801,12630, தலாயிலுன் நுபுவதி லில்பைஹகீயில் பாகம் 7 பக்கம் 41 போன்ற இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي، قَالَا: حدثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حدثنا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ حَيَّانَ الْمَدَائِنِيُّ، حدثنا شُعَيْبُ بْنُ حَرْبٍ، حدثنا يَحْيَى بْنُ عَمْرِو بْنِ مَالِكٍ الْنُكْرِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ
மேற்கண்ட புத்தகங்களில் உள்ள இந்த செய்தி நம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது. இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையிலும் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் அன்னுக்ரீ என்பவர் இடம் பெறுகின்றார். முதலில் இவரைப் பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.
الكتاب: إكمال تهذيب الكمال في أسماء الرجال 5179 – (ت) يحيى بن عمرو بن مالك النكري البصري.
قال الساجي: منكر الحديث، وقال أحمد بن حنبل: ليس هذا بشيء.
وقال أبو جعفر العقيلي: لا يتابع على حديثه.
وذكره أبو محمد بن الجارود، وأبو العرب في جملة الضعفاء.
யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் என்பவரை பற்றி இமாம் ஸாஜிய் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் வெறுக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
மேலும் இமாம் அஹமத் பின் ஹன்பல் இவர் ஹதீஸ் துறையில் ஒரு பொருட்டாகவே இல்லை என்று கடும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
மேலும் இமாம் அபூ ஜஃபர் அல்வுகைலீ அவர்கள் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் உடைய ஹதீஸ் பின்பற்றத் தகுந்தது இல்லை என்று சாடியுள்ளார்.
மேலும் இமாம் அபூ முஹம்மது பின் அல்ஜாரூத் அவர்களும், அபுல் அரப் அவர்களும் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக்கை பலவீனமானவர்களின் தொகுப்பில் சேர்த்துள்ளார்கள்.
الكتاب : الكامل في ضعفاء الرجال
2107- يَحْيى بن عَمْرو بن مالك النكري بصري. حَدَّثَنَا ابن حماد، حَدَّثَنا عباس، عَن يَحْيى، قال يَحْيى بن عَمْرو بن مالك النكري ضعيف قال النسائي يَحْيى بن عَمْرو بن مالك بصري ضعيف.
இமாம் நஸாயீ அவர்கள் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் என்பவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
الكتاب: ديوان الضعفاء والمتروكين
4668 – يحيى بن عمرو بن مالك النكري: كان حماد بن زيد يكذبه.
ஹம்மாது பின் ஜைத் அவர்கள் யஹ்யா இப்னு அம்ரு என்பவரை பொய்யர் என்று சொன்ன மிகக் கடுமையான விமர்சனத்தை இமாம் தஹபீ அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.
பாகம் 9, பக்கம் 176,177
الكتاب : الجرح والتعديل
பாகம் 2, பக்கம் 463,
الكتاب : الضعفاء وأجوبة 531
பாகம் 1, பக்கம் 28,
الكتاب : الضعفاء وسؤالات 41
732 – نا عبد الرحمن قال قرئ على العياس بن محمد الدوري عن يحيى بن معين انه قال يحيى بن عمرو بن مالك النكرى ضعيف. نا عبد الرحمن قال سئل أبو زرعة عن يحيى بن عمرو بن مالك فقال: ضعيف الحديث.
وسألت أبا زرعة عن عبد الله بن ميمون القداح فقال : واهي الحديث
سألته عن يحيى بن عمر بن مالك فقال : ليس بشيء واهي ضعيف لو كلمة نحوها
இமாம் யஹ்யா இப்னு மயின் அவர்கள் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் என்பவரை பலவீனமானவர் என்றும், இமாம் அபூ சுர்ஆ அவர்களிடம் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக்கை பற்றி கேட்கப்பட்ட போது இவர் ஹதீஸில் பலவீனமானவர் என மிக தெளிவாக விமர்சித்துள்ளார்கள். மேலும் அவர் ஒரு பொருட்டே (கணக்கே) இல்லை, தவறிழைப்பவர், பவவீனமானவர் என்ற இது போன்ற வார்த்தைகளை கூறினார்கள்.
الكتاب : الضعفاء والمتروكون
பாகம் 1, பக்கம் 40
(581) يحيى بن عمرو بن مالك. بصري.
இமாம் தாரக்குத்னி, யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக்கை பலவீனமானவர்கள் மற்றும் விடப்பட வேண்டியவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்.
الكتاب: تهذيب الكمال في أسماء الرجال
பாகம் 31, பக்கம் 477,478,479.
6892 – ت: يَحْيَى بن عَمْرو بن مَالِك النكري البَصْرِيّ
قال عَبَّاس الدُّورِيُّ عَنْ يحيى بْن مَعِين، وأبو زُرْعَة ، وأبو داود ، والنَّسَائي ، وأبو بشر الدولابي: ضعيف وَقَال الدَّارَقُطْنِيُّ: صويلح، يعتبر بِهِ وَقَال غيره : كَانَ حَمَّاد بْن زيد يرميه بالكذب
இந்த யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக்கை பற்றி இமாம் அப்பாஸ் அத்தூரிய் மற்றும் அபூ சுர்ஆ மேலும் இமாம் அபூ தாவூத் மற்றும் இமாம் நஸாயி மேலும் அபூ புஷ்ர் அத்தூலாபிய் போன்ற அறிஞர்கள் அனைவரும் இவரை பலவீனமானவர் என்ற கடும் விமர்சனத்தைக் கூறியுள்ளனர்.
மேலும் இந்த செய்தியினுடைய அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது பின் ஈஸா பின் ஹய்யான் அல்மதாயினி என்பவர் இடம் பெறுகின்றார் இவரை பற்றிய விமர்சனங்களையும் நாம் பார்ப்போம்.
الكتاب: ميزان الاعتدال في نقد الرجال
பாகம் 3, பக்கம் 678
الكتاب: تاريخ الإسلام وَوَفيات المشاهير وَالأعلام
பாகம் 6, பக்கம் 617
الكتاب: ديوان الضعفاء والمتروكين وخلق من المجهولين وثقات فيهم لين
பாகம் 1, பக்கம் 369
8034 – محمد بن عيسى بن حيان المدائني.
حدث عن ابن عيينة، وشعيب ابن حرب.
قال أبو الحسن الدارقطني: ضعيف متروك.
وقال الحاكم: متروك.
وقال آخر: كان مغفلا.
وأما البرقاني فوثقه.
405 – قَالَ الدّارَقُطْنِيّ: ضعيف.
وقَالَ البَرْقانيّ: لا بأس به.
تُوُفِّيَ سنة أربعٍ وسبعين، عن سِنٍّ عالية.
3921 – محمد بن عيسى بن حيان المدائني: قال الدارقطني: ضعيف.
முஹம்மது பின் ஈஸா பின் ஹய்யான் அல்மதானி என்பவர் பற்றி இமாம் அபுல் ஹஸன் அத்தாரகுத்னீ பலவீனமானவர் விடப்படவேண்டியவர் என்றும், இமாம் அல்ஹாக்கிம் இவர் விடப்படுவதற்கு தகுதியானவர் அலட்சியமானவராக இருந்தார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒரு மனிதர் உயிருடன் கப்ரில் ஸூரத்துல் முல்க் ஓதினார் என்ற செய்தியுடைய அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா இப்னு அம்ரு இப்னு மாலிக் மற்றும் முஹம்மது பின் ஈஸா பின் ஹய்யான் போன்றோர் இடம் பெறுகின்றனர் இவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் இந்த செய்தியை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.