ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும்
ஹிஜ்ரி 1439 பூத்திருக்கின்றது. பிறை அடிப்படையில் அமைந்த புத்தாண்டு உதயமானதும் முஸ்லிம்கள் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.
குல்ல ஆம் வ அன்தும் ஃபீ கைர் – நீங்கள் நலமாயிருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மலரட்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் உதயமாகட்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று அரபியில் சொன்னதும் இது மார்க்கத்தில் உள்ள ஒரு துஆ அல்லது வாழ்த்து என்று பாமர முஸ்லிம்கள் தவறாக விளங்கி விடுகின்றனர்.
ஆங்கில ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துச் சொல்லக் கூடாது; இது இஸ்லாமிய ஆண்டு, அதனால் நாம் வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியுமா? என்று கருதுகின்றனர்.
சூரிய ஆண்டு துவங்கினாலும், சந்திர ஆண்டு துவங்கினாலும் அதற்கு வாழ்த்துச் சொல்வது மார்க்கத்தில் இல்லை. இது போன்ற வாழ்த்துக்கள் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டியும் கற்றும் தராத பித்அத்தாகும்.
பிறைக் கணக்கில் அமைந்த ஆண்டுக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது. அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த – நாடு துறந்து சென்ற – தியாகப் பயணத்தைப் பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.
பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா படையெடுத்து வந்த நிகழ்வு ஒரு முக்கியமான நிகழ்வாகும். அதை வைத்து ஆமுல் ஃபீல் – யானை ஆண்டு என்று அரபியர்கள் கணக்கிட்டனர். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்பட்ட பிறகும் இந்நிலை தொடர்ந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணமாகின்ற வரையிலும் இதே நிலை தான் நீடித்தது.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னால் உமர் (ரலி) காலத்தில் ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் தான் நபியவர்களின் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஹிஜ்ரி ஆண்டு முஸ்லிம்களிடம் அறிமுகமாகின்றது. உமர் (ரலி) அவர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்கள்.
பிறந்த நாளுக்கு மார்க்கத்தில் முக்கியத்துவம் இல்லை என்பதால், கிறித்தவர்கள் ஈஸா நபி பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வருடங்களைக் கணக்கிட்டது போல் நபிகள் நாயகத்தின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண்டைக் கணக்கிடாமல், ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்த நிகழ்வை வைத்து ஆண்டைக் கணக்கிட்டிருந்தால் அது மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது நபி (ஸல்) யானை ஆண்டை வைத்துக் கணக்கிட்டது போல் கணக்கிட்டிருக்கிலாம். இருப்பினும், ஹிஜ்ரத்தை வைத்து உமர் (ரலி) அவர்கள் கணக்கிட்டார்கள். இவ்வாறு கணக்கிட்டது வஹீயின் அடிப்படையில் இல்லை என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
ஓரிறைக் கொள்கைக்காக மக்காவிலிருந்து நாடு துறந்து வந்த (ஹிஜ்ரத் என்ற) இந்த தியாகப் பயணமும், மதீனாவில் உள்ள மக்களின் (நுஸ்ரத் என்ற) ஆதரவும் அரவணைப்பும் தான் இஸ்லாமிய எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்ற காரணத்தால் ஹிஜ்ரி ஆண்டு உண்டாக்கப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டுக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அது நிர்வாக வசதிக்காக நபியின் காலத்துக்குப் பின் உருவாக்கப்பட்டதாகும்.
ஹிஜ்ரத் என்ற இந்த தியாகப் பயணம் அல்லது புனிதப் பயணம் பல இறைத்தூதர்கள் மேற்கொண்ட பயணமாகும். ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இறைத்தூதர்கள் இந்த ஹிஜ்ரத்தை விட்டும் தப்ப முடியாது எனும் அளவுக்கு அல்லாஹ் சொல்கின்றான். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்க முடியும்.
“உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்’’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இ(ந்தச் செய்தியான)து, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.
அல்குர்ஆன் 14:13, 14
இப்ராஹீம் நபி அவர்கள் ஹிஜ்ரத் செயததை நாம் பார்க்க முடிகின்றது.
“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் 29:26
ஜிஹாத் பெண்களுக்குக் கடமையல்ல. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
‘இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்’ என்றார்கள்.
நூல்: புகாரி 1520
ஆனால் ஹிஜ்ரத் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையான வணக்கமாகும்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 8:72
இந்த வசனம் இறை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதாது. அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் அவசியம் ஏற்பட்டால் ஹிஜ்ரத்தும் செய்ய வேண்டும்; அவ்வாறு ஹிஜ்ரத் செய்யாதவர்களிடம் அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்று தெரிவிக்கின்றது. இவ்வசனத்தில் ஆண்களுக்கு மட்டும் ஹிஜ்ரத் என்று வரவில்லை.
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’’ என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்’’ என்று இவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?’’ என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் 4:97
இந்த வசனம் ஹிஜ்ரத் செய்யாதவரை மரணவேளையில் கடுமையாக மலக்குகள் பிடிப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
இந்த வசனங்களும், இன்னும் பல வசனங்களும் ஹிஜ்ரத் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கடமை என்று கூறுகின்றன. பின்வரும் வசனம் இதை உறுதிப்படுத்தி விடுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
அல்குர்ஆன் 60:10
நபித்தோழர்களில் ஆண்கள், பெண்கள், அனைவருமே ஹிஜ்ரத் செய்தனர். முதலில் அபீசீனியாவுக்கும் பின்னர் மதீனாவுக்கும் ஹிஜ்ரத் செய்தனர்.
நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்’ என்று கூறினார்கள். ‘அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்’ என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் செய்த சிறப்பு தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு’ என்று கூறினார்கள் என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 4231
ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஹிஜ்ரத் கடமை என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஒரு சாரார் இப்படி ஏகத்துவக் கொள்கைக்காக நாட்டைத் தியாகம் செய்து வரும் போது இன்னொரு சாரார் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, அடைக்கலம் கொடுத்து அரவணைக்கவும் சொல்கின்றது மார்க்கம். இதோ அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
அல்குர்ஆன் 8:74
உண்மையாக நம்பிக்கை கொண்டோர் என்றால் அவர்கள் நாட்டைத் தியாகம் செய்து வரக்கூடிய மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் அல்லாஹ் அடித்துச் சொல்கின்றான்.
இந்த வசனத்திற்கேற்ப, அன்சாரிகள் என்ற மதீனாவாசிகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள். தங்களிடமிருந்தவற்றை எல்லாம் அகதிகளின் மறுவாழ்விற்காகத் தாரை வார்த்தார்கள். தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதனால்தான் ஹிஜ்ரத் எனும் சொல் உலக முஸ்லிம்களை தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.
ஆனால் சமுதாயம் அதை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றதா? என்றால் இல்லை. அதன் விளைவு தான், சிதைந்து சிதிலமாய்ப் போன, சின்னாபின்னமாகி விட்ட சிரியாவிலிருந்து குடும்பத்துடன் தப்பி ஐரோப்பாவை நோக்கி அடைக்கலம் தேடி, பயணம் சென்ற அப்துல்லாஹ் ஆயிலானின் படகு கவிழ்ந்து தனது 35 வயது மனைவி ரீஹானையும், 5 வயது காலிபையும் 3 வயது ஆயிலான் குர்தியையும் கடல் நீருக்குப் பலி கொடுத்து, கண்ணீரில் மிதந்த சம்பவம்.
கரை ஒதுங்கிய 3 வயது ஆயிலான் குர்தியின் உடல் உலகின் உள்ள மக்களின் இதயங்களை உலுக்கியது. இரத்த நாளங்களை உறையச் செய்தது. குறிப்பாக, அவனது அந்த ஈர உடல் உலக இஸ்லாமிய மக்களை நோக்கி, ‘உங்களிடம் நுஸ்ரத் என்ற உதவும் மனப்பாங்கும் மனித நேய மாண்பும் இருக்கின்றதா? அன்சாரிகளின் அந்த இதயங்கள் உங்களுக்கு இல்லையா?’ என்று உரக்க கூவிக் கேட்டது.
‘பல இலட்சக்கணக்கான மக்களுக்கு கிறிஸ்துவத்தை மார்க்கமாக, முக்கடவுள் கொள்கையைக் கொண்ட ஐரோப்பா அடைக்கலம் கொடுத்தது! ஆதரித்தது! அரவணைத்தது!
இஸ்லாத்தை மார்க்கமாக, ஏகத்துவத்தை கொள்கையாகக் கொண்ட அரபியாவே! நீ அரவணைத்தாயா? அடைக்கலம் கொடுத்தாயா? ஆதரவுக் கரம் நீட்டினாயா?’ என்று ஆய்லான் குர்தியின் ஈர உடல் கேட்டது. அதற்கு இஸ்லாமிய உலகம் அளித்த பதில், இல்லை என்ற இரத்தினச் சுருக்கமான வார்த்தையைத் தான்!
ஹிஜ்ரத், நுஸ்ரத் என்ற வார்த்தைகள், சக்தியுள்ள முஸ்லிம் நாடுகளிடத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான்.
இப்போது அதே கேள்வியை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளை நோக்கி ரோஹிங்கியா முஸ்லிம்கள் கேட்கின்றனர். சிரியா முஸ்லிம்களைப் போலவே அடைக்கலம் தேடி, ஆதரவு தேடி நீர், நிலம் வழியாக மியான்மைரை ஒட்டி அமைந்திருக்கின்ற இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சீனா, பங்களாதேஷ் என்று திக்கற்ற முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
Arakan Rohingya Salvation Army (ARSA) – அராக்கன் ரோஹிங்கியா விடுதலைப் படை கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமிலும் ஏராளமான காவல்துறை சோதனைச் சாவடிகளிலும் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடுத்தது. இதில் 12 இராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் படையில் 59 பேர்கள் பலியாயினர்.
இதனையடுத்து மியான்மர் ராணுவம் ராக்கைன் மாநிலத்தில் தனது அராஜக வேட்டையைத் துவக்கியது. குடிமக்களான ஆண்களை வீடுகளுக்குள் குண்டுக் கட்டாக அடைத்து விடுகின்றனர். பின்னர் குய்யோ முறையோ அவர்கள் எழுப்புகின்ற கதறல் குரல் கூட வெளியே கேட்க முடியாத அளவுக்குத் தீ வைத்து அவர்களை உயிருடன் எரித்தே கொன்று விடுகின்றனர். இவர்களின் நிலை உண்மையில் அல்குர்ஆன் வசனங்கள் கூறுகின்ற முஸ்லிம்களுக்கு ஒத்த நிலையாகவே இருக்கின்றது.
எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
அல்குர்ஆன் 85:4,5,6,7
வீடுகளுக்கு உள்ளே வெந்து வெடித்து சிதறி, கரிக்கட்டையாகிக் கொண்டிருக்கும் தங்கள் கணவன்கள், பிள்ளைகள், சகோதரர்கள் பற்றிய சோகத்திலிருந்து அந்தப் பெண்கள் வெளியே வருவதற்கு முன்னால் அவர்களை இராணுவ வெறியர்கள், வேட்டை நாய்கள் கதற கதற கற்பழித்தே கொன்று விடுகின்றார்கள். பச்சிளங் குழந்தைகளையும் பாரபட்சமின்றி படுகொலை செய்து விடுகின்றனர்.
கற்பழிப்பு என்பது உலக ராணுவத்தினர் ஒருங்கிணைந்து சந்திக்கின்ற ஒரு மையப் புள்ளியாகும். அதில் பர்மீய ராணுவம் என்ன விதிவிலக்கா பெறப் போகின்றது? ஒரு போதும் கிடையாது. இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் உடுத்திய உடைகளுடன் தப்பி ஓடி வருகின்றார்கள். அவர்கள் செய்த பாவமென்ன?
“புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்’’ என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.
அல்குர்ஆன் 85:8
தப்பி வரக்கூடிய அவர்களை உயிருடன் தப்பவும் விடவில்லை. கால் கடுக்க தூக்கி வரும் குழந்தைகள், முதியோர்களுடன் அவர்கள் கடந்து வருகின்ற கரடு முரடான பாதைகளில் கன்னி வெடி வைத்து அவர்களைக் கொல்கின்றார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!
கட்டிய துணியோடு கண்ணீரும் கம்பலையுமாக வரக் கூடிய அவர்களைக் கடல் அக்கரையிலும் கொண்டு போய் சேர்க்கின்றது. அதே சமயம் அதே கடல் அவர்களை அடுத்த உலகுக்கும் அனுப்பி விடுகின்றது. அப்படிக் கடலால் மறு உலகிற்கு அனுப்பப்பட்டவர்களின் சடலங்கள் சலனம், சஞ்சலமில்லாமல் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய சடலங்களின் எண்ணிக்கை இதுவரை நூறு!
இப்படிப்பட்ட வெறியர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நீர், நிலம் எந்த மார்க்கமாக இருந்தாலும் வரும் வழிகளில் சாவே வழி மறித்தாலும் அவற்றில் எதையும் கடந்து வர அந்த மக்கள் தயாராகி விட்டார்கள். மியான்மரிலிருந்து 81 கிலோ மீட்டரில் பங்களாதேஷ் நாட்டின் காக்ஸ் பஜார் என்ற மாவட்டம்! இது வரைக்கும் வயற்காடு, மலைப்பாதை என்ற நிலம் மற்றும் வழியாக அங்கு வந்தோர் எண்ணிக்கை மட்டும் 6 இலட்சம்! ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த உலக நாடுகளில் பாராட்டப்பட வேண்டிய ஒரு நாடு என்றால் அது பங்களாதேஷ் நாடு தான்!
முஸ்லிம்களை இந்தக் கொடுமையான நிலைக்குத் தள்ளியது மியான்மரின் ராணுவம். அந்த ராணுவத்தை எதிர்த்து அரை நூற்றாண்டு காலம் போராடி வீர மங்கை என்று பெயரெடுத்த, அதற்காக நோபல் பரிசும் பெற்ற ஆங் சான் சூகி இப்போது ஆட்சியில் வீற்றிருக்கின்றாள். ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவள் இன்று அரக்கியாக மாறிவிட்டாள். அதனால் தான் இதுவரையிலும் பிணத்தை விடவும் கேடு கெட்டப் பேசாமடந்தையாக வாய்க்குப் பூட்டுப் போட்டு விட்டு மவுன விரதம் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
ஹிட்லரின் உடன் பிறந்த சகோதரன் மோடியோ இந்தியாவில் அடைக்கலமாகியிருக்கின்ற 40,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி, பர்மா வெறி நாய்களிடமே, வேட்டை நாய்களிடமே திரும்ப அனுப்பவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார்.
இந்த நேரத்தில் உலக முஸ்லிம் சமுதாயமே! இஸ்லாமிய ஆட்சியாளர்களே! சொந்த நாட்டை விட்டு உயிர் காக்க ஓடி வரும் இந்த ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீ செய்யப் போவதென்ன?
“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ் வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:75
அல்லாஹ் சொல்வது போன்று போர் தொடுக்க வேண்டும். சரி அதைச் செய்ய முடியவில்லையா? அவர்களுக்கு உங்கள் நிலத்தில் அடைக்கலம் கொடுக்கலாம் அல்லவா?
இதை நீங்கள் செய்யவும், அவர்களுக்கு உதவவும் முன் வரவில்லை என்றால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உண்மையான முஸ்லிம்கள் அல்லர் என்பதே அதன் பொருள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது என்று உங்களை எச்சரித்துக் கொள்கின்றோம்.
—————————————————————————————————————————————————————————————
குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை
கே.எம். அப்துந்நாஸிர்
பர்மாவில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பர்மிய இராணுவத்தினாலும், பவுத்த தீவிரவாதக் குழுக்களாலும் மிகப்பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த வன்முறைகளை இனச் சுத்திகரிப்பு என ஐநா மன்றமே குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய சமுதாயம் கடும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், அவர்களை மீண்டும் பாதுகாப்பான முறையில் அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே குடியமர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது. மேலும் மத்திய அரசு அனுமதி தந்தால் இந்தியாவில் அகதிகளாகக் குடியேறியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான செலவீனங்களைப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் தவ்ஹீத் ஜமாஅத் தயார் என அறிவித்துள்ளது.
மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அவலங்கள் நீங்குவதற்காக இறை உதவியை வேண்டி ஒரு வார காலம் கடமையான ஐங்காலத் தொழுகைகளில் அவர்களுக்காக குனூத்துன் நாஸிலா எனும் சோதனை காலப் பிரார்த்தனையைச் செய்யுமாறும் முஸ்லிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்துள்ளது. இந்த குனூத்துன் நாஸிலா தொடர்பான சட்டதிட்டங்களைக் காண்போம்.
குனூத் நாஸிலாவின் நோக்கம்
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் ஓதியுள்ளார்கள்.
و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் ‘உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்’ என்றும் கூறினார்கள்
நூல்: முஸ்லிம் 1201
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِஞ். إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ
நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்,
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1002
குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் அவர்களைச் சபித்து, நபியவர்கள் கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.
நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக, கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.
கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்
சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.
கடமையான தொழுகைகளில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஓதியுள்ளார்கள்.
இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபியவர்களின் காலத்தில்) இருந்தது.
நூல்: புகாரி 798, 1004
و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும், மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1207, 1208
797 بَاب حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ رواه البخاري
அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லி-மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
நூல்: புகாரி 797
சுருக்கமாக ஓத வேண்டும்
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 32)
1001- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். ‘ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?’ என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள்’ எனப் பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி (1001)
மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.
இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.
நபியவர்கள் சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் காலப் பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) ‘குனூத்’ ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல்: புகாரி (6393)
நபியவர்கள் செய்த பிரார்த்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே நாமும் மிகவும் நீண்டு விடாமல் இதே அளவிற்கு சோதனைக்காலப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
யா அல்லாஹ் ! பர்மாவில் ராக்கைன் மாநிலத்தில் பாதிக்கப்படும் முஸ்லிமான, பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா! பர்மாவில் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!
என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.
கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்
مسند أحمد بن حنبل – (3 / 137)
12425 – حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك . فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم .
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராகப் பிரார்த்தனை செய்ததை நான் பார்த்தேன்.
நூல்: அஹ்மத் (12425)
சோதனைக் கால குனூத்தில் நபியவர்கள் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிவழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்திக்க வேண்டும்.
சப்தமாகப் பிரார்த்திக்கலாமா?
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையின் இறுதி ரக்அத்தில் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) ‘குனூத்’ ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல்: புகாரி (6393)
மேற்கண்ட செய்தியில் இமாமாகத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.
எனவே இமாமாகத் தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பற்றித் தொழுபவர்கள் கைகளை உயர்த்தி, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது ‘‘அல்லாஹும் மஸ்கினா” (இறைவா! எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபியர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாகச் செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர். (பார்க்க: புகாரி 1029, 1013, 1014)
இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆமீன் கூற வேண்டுமா?
சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தில் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
நூல்: அபூதாவூத் (1231), அஹ்மத் ( 2610)
இன்னும் பல நூற்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்’’ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப்படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
تهذيب التهذيب – (ج 11 / ص 69)
123 – 4 (الاربعة) هلال بن خباب (3) العبدي أبو العلاء البصري مولى زيد بن صوحا
سكن المدائن ومات بها.
روى عن أبي جحيفة ويحيى بن جعدة بن هبيرة وعكرمة مولى ابن عباس وميسرة أبي صالح وسعيد بن جبير وعبد الرحمن بن الاسود بن بزيد ومجاهد ابن جبر والحسن بن محمد بن الحنفية وغيرهم.
وعنه الثوري ومسعر ويونس بن أبي اسحاق وثابت بن يزيد أبو زيد الاحول وعبد الواحد بن زياد وهشيم وأبو عوانة وآخرون.
قال عبدالله بن أحمد عن أبيه شيخ ثقة وقال ابن أبي خيثمة وغيره عن ابن معين ثقة وليس بينه وبين يونس بن خباب قرابة وقال ابن الدورقي عن ابن معين هلال بن خباب وصالح ابن خباب أخوان ثقتان وقال يعقوب بن سفيان حدثنا أبو نعيم ثنا سفيان عن هلال ابن خباب كان ينزل المدائن ثقة إلا انه تغير عمل فيه السن وقال أبو بكر بن أبي الاسود عن يحيى بن سعيد القطان أتيت هلال بن خباب وكان قد تغير قبل موته وقال ابراهيم ابن الجنيد سألت ابن معين عن هلال بن خباب وقلت إن يحيي القطان يزعم انه تغير قبل أن يموت واختلط فقال يحيى لا ما اختلط ولا تغير قلت ليحيى فثقة هو قال ثقة مأمون.
وذكره ابن حبان في الثقات وقال يخطئ ويخالف وقال ابن عمار الموصلي والمفضل ابن غسان الغلابي ثقة.
زاد ابن عمار وأخوه يونس ضعيف قال الخطيب وهو ابن عمار لا نعلم بين هلال ويونس نسبة.
قال الخطيب وزعم الجوزجاني أن هلال بن خباب ويونس بن خباب وصالح بن خباب اخوة ووهم في ذلك ايضا وقال ابن عدي ارجو انه لا بأس به وقال ابن سعد مات في آخر سنة اربع واربعين ومائة.
قلت: وذكره ابن حبان ايضا في الضعفاء وقال اختلظ في آخر عمره فكان يحدث بالشئ على التوهم لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الساجي والعقيلي في حديثه وهم وتغير آخره وقال الحاكم أبو أحمد تغير بآخره وقال الآجري قلت لابي داود هلال بن خباب أخو يونس ما جعل الله تعالى
بينهما قرابة.
அஹ்மத், இப்னு மயீன், இப்னு கஸ்ஸான் அல் கலாபி ஆகியோர் “ஹிலால் பின் ஹப்பாப் என்பாரை நம்பகமானவர்’’ என்று கூறியுள்ளனர்.
“இவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நான் ஆதரவு வைக்கிறேன்“ என இப்னு அதீ கூறியுள்ளார்.
இவர் மாதாயின் என்ற நகரில் வசிப்பவராக இருந்தார். நம்பகமானவர். ஆனால் வயோதிகத்தின் காரணமாக கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று சுஃப்யான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
“நான் ஹிலால் பின் ஹப்பாபிடம் வந்தேன். அவர் தான் மரணிப்பதற்கு முன்னால் மூளை குழம்பியவராக ஆகிவிட்டார்” என யஹ்யா அல்கத்தான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
இப்னு ஹிப்பான் தம்முடைய ‘ஸிகாத்’ (நம்பகமானவர்கள்) என்ற நூலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் தவறிழைப்பவர், முரண்பாடாக அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளார்.
இப்னு ஹிப்பான் தம்முடைய “அல்லுஅஃபா” என்ற நூலிலும் இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய கடைசிக் காலத்திலே மூளை குழம்பி விட்டார். இவர் சந்தேகத்துடன் தான் செய்தியை அறிவிப்பவராக இருந்தார். இவர் தனித்து அறிவித்தால் அதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்றும் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.
“இவருடைய ஹதீஸ்களில் சந்தேகம் உள்ளது. இவர் தம்முடைய கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார்“ என்று அஸ்ஸாஜி, உகைலி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
ஹாகிம் அவர்களும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று கூறியுள்ளார்.
மொத்தில் இப்னுல் கத்தான், சுஃப்யான், இப்னு ஹிப்பான், அஸ்ஸாஜி, உகைலி, ஹாகிம் ஆகியோர் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று உறுதிப்படுத்துகின்றனர்.
ஹிலால் பின் ஹப்பாப் தான் மரணிப்பதற்கு முன்னால் தடுமாற்றமடைந்து விட்டார்; மூளை குழம்பி விட்டார் என்று யஹ்யா அல்கத்தான் கூறியதாக இமாம் இப்னு மயீனிடம் கேட்கப்பட்டபோது அவர் “மூளை குழம்பவுமில்லை, தடுமாற்றமடையவுமில்லை. அவர் உறுதியானவர், நம்பகமானவர்’’ இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 11 பக்கம் 69)
ஹிலால் பின் ஹப்பாப் அவர்கள் மூளை குழம்பியவர் என்ற யஹ்யா அல்கத்தானின் விமர்சனத்தை இப்னு மயீன் மறுத்தாலும் இப்னு மயீனின் கூற்றை நாம் ஏற்கமுடியாது.
ஏனென்றால் ஹிலால் பின் ஹப்பாப், தான் மரணிப்பதற்கு முன்னால் தடுமாற்றமடைந்து விட்டார், மூளை குழம்பி விட்டார் என்று யஹ்யா அல்கத்தான் அல்லாத மற்ற பல ஹதீஸ்கலை அறிஞர்களும் விமர்சித்துள்ளனர். எனவே அதிகமானவர்களின் கூற்றே ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இவர் மூளை குழம்பியதின் காரணமாக இவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
சோதனைக் கால குனூத் ஓதும் போது பின்னால் உள்ளவர் ஆமீன் சொன்னார்கள் என்று இவருடைய அறிவிப்பில் மட்டும்தான் வந்துள்ளது.
வேறு எந்த ஒரு நம்பகமான அறிவிப்பாளரும் “ஆமீன் கூறினார்கள்’’ என்று அறிவிக்கவில்லை.
மேலும் மேற்கண்ட செய்தியை இவர் மூளை குழம்புவதற்கு முன்னர்தான் அறிவித்தார் என்பதற்கு நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர், அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.
இந்த அறிவிப்பில் அதைத் தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச்செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.
எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.
இமாமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.
தமிழில் பிராரத்திக்கலாமா?
நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளன. ஒன்று நபியவர்களே அமைத்துத் தந்த பிரார்த்தனை வாசகங்கள்.
கழிப்பிடத்திற்குச் செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும் பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஓத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.
ஒவ்வொருவரும் இதுபோன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்றுதான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
மற்றொரு வகைப் பிரார்த்தனை, நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் ஆகும். அதாவது பிரார்த்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.
அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிரார்த்திக்க முடியும்.
இது போன்று என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளாக இருந்தால் அதனை நமக்குத் தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.
நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும். தற்போது பர்மிய இராணுவமும், ஆட்சியாளர்களும், பவுத்த தீவிரவாதக் குழுக்களும் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அநியாயம் செய்யும் இவர்களைக் குறிப்பிட்டுத்தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எனவே, யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைப் பிரார்த்திப்பவரே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய்மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
—————————————————————————————————————————————————————————————
சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டுமா?
அபுஆதில்
சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை.
பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஏனெனில் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதாயினும் அது அவ்வளவு எளிதல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ(ரலி)
நூல் : புகாரி 3250
சாட்டையின் இருப்பிற்கு சாண் அளவு இடமே போதும். சொர்க்கத்தில் அந்தளவு இடம் கிடைப்பது முழு உலகம் கிடைப்பதைக் காட்டிலும் சிறந்தது என்று நபிகளார் கூறுவதிலிருந்து, சொர்க்கம் நுழைவது எவ்வளவு சிரமம் என்பதையும் அதன் இன்பம் எவ்வளவு பெரிது என்பதையும் ஒரு சேர விளங்கலாம்.
சரி! ஒரு அடியானுக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு அதைத் தாண்டிய பெரும் இன்பம் ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் எண்ணம் தவறு. சொர்க்கம் செல்லும் நன்மக்களுக்கு அதில் பேரின்பமாக மற்றுமொரு பாக்கியத்தையும் இறைவன் வைத்திருக்கிறான். நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியமே அது.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
அல்குர்ஆன் 4:69
நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரும் பாக்கியம் என்பதை இந்த வசனம் அழகாகத் தெளிவுபடுத்தி விட்டது.
சொர்க்கத்தில் நபிமார்களை நண்பர்களாகப் பெறுவதை விடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்? நினைத்துப் பார்க்கும் போது உள்ளம் சிலிர்த்து விடுகின்றது.
நம்மைப் பொறுத்தவரை நாம் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கவே விரும்புவோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது போல.
ஏனெனில் நபிகள் நாயகம் கண்டிப்பாக உயர்ந்த அந்தஸ்திலேயே இருப்பார்கள். நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெறும் போது பிற நபிமார்களுடன் இருக்கும் வாய்ப்பையும் ஒரு சேரப் பெற்று விடுகிறோம்.
இதன்படி, சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் நம் உயர் இலக்கை, முஹம்மத் நபியுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் அதிஉயர் இலக்காக மாற்றி, அதை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான சரியான பாதையை நபிகளார் காட்டித்தந்துள்ளார்கள்.
நபி நேசம்
நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுடன் தான் சொர்க்கத்தில் இருப்போம் என நபிகளார் நவின்றுள்ளார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
நூல்: முஸ்லிம் 5143
நபிகள் நாயகத்தை நேசித்தால் சொர்க்கத்தில் நபிகளாருடன் இருக்கும் மகத்தான வாய்ப்பைப் பெறலாம்.
நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ, நோன்பையோ, தானதர்மங்களையோ முன்னேற் பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 5142
நபி மீதான நேசம் நம் உள்ளத்தில் எந்தளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
நபி நேசம் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது வாழ்க்கை முறை.
நபியவர்கள் ஏவியதைச் செய்வதும் அவர்கள் தடுத்திட்டவற்றை விட்டும் முற்றாக விலகி நிற்பதுமே நபியின் மீதான நேசத்தை வெளிக் கொணரும் அடையாளங்களாகும். நபியவர்களின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மவ்லித், கத்தம் பாத்திஹா போன்றவைகளை ஓதுவது நபிநேசமல்ல. உளமாற நபியை நேசிப்பவர் நபியின் வழிகாட்டுதலைத் தம் வாழ்வில் பின்பற்றுவார்.
திருக்குர்ஆன் அதையே போதிக்கின்றது.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:31
இரவுத் தொழுகை
நபியின் காலத்திலேயே நபித்தோழர்களில் சிலருக்கு இந்த ஆசை துளிர்விட்டிருக்கின்றது.
சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் அவா, அதற்கான வழியைக் கேட்டுத் தெரிந்தே தீர்வது என நபியிடமே முறையிடவும் செய்திருக்கின்றது.
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 843
ரபீஆ பின் கஅப் எனும் நபித்தோழரிடம் உமக்கு ஏதும் வேண்டுமா என்று நபிகளார் வினா எழுப்புகிறார்கள். நம்மிடம் யாரேனும் இவ்வாறு வினா எழுப்பினால், கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்றோ, இன்ன பொருள் இனாமாக வேண்டும் என்றோ கேட்போம்.
ஆனால் நபிகளாரால் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்ட ரபிஆ எனும் நபித்தோழரோ சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டும். அதற்கான வழியை அறிய வேண்டும் என்கிறார். வேறு ஏதாவது கேளேன் என்று நபிகளார் மடைமாற்றினாலும் ‘இல்லை! அடியேன் தங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதுவே வேண்டும்; அது ஒன்றே வேண்டும்’ என்று கறாராகக் கேட்டு விடுகிறார்.
அதுதான் வேண்டும் என்றால் அதிகமாகத் தொழு. அது உன் கோரிக்கையை நிறைவேற்றித்தர எனக்கு உதவியாக இருக்கும் என்று நபிகளார் விடையளிக்கின்றார்கள்.
கடமையான தொழுகைகளில் பேணுதலாக இருப்பதுடன் இன்ன பிற சுன்னத் – நபிலான தொழுகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் மறுமையில் நபியுடன் சொர்க்கத்தில் இருக்கும் உன்னத வாய்ப்பு வாய்க்கப் பெற்றவர்களாவோம். இதுவரை எப்படியோ? இனியாவது விழித்துக் கொள்வோமே!
அனாதைகளைப் பொறுப்பேற்பது
நபிகளாருடன் சொர்க்கத்தில் இருப்பதெல்லாம் சரி! பரந்து பட்ட, விசாலாமான வெளியிடையில் நபியவர்கள் ஓர் ஓரத்திலும் நாம் பிறிதொரு ஓரத்திலும் இருந்துவிட்டால் அதுவும் நபியுடன் இருப்பது தானே?
அப்படி வாய்த்து விட்டால் என்னாவது? இது அவ்வளவு ஒன்றும் நெருக்கம் இல்லையே என்ற கேள்வி சிலருக்குக் குடைச்சல் கொடுக்கலாம்.
அத்தகைய சந்தேகப் பேர்வழிகளின் திருப்திக்கும் ஒரு வழியுண்டு. நபிகளார் அம்மக்களையும் கவனத்தில் கொண்டே பின்வரும் வழிமுறையை கற்றுத் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி 5304
நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் உள்ள இடைவெளியின் அளவே நமக்கும் நபிக்குமான இடைவெளி என்றால் என்னவொரு நெருக்கம். இவ்வளவு அருகில் அமர்ந்து நபியைப் பார்ப்பதும் அவர்களுடன் அளவளாவுவதும் எத்தகைய பேரின்பம்.
ஆதரவற்ற அனாதைகளைப் பராமரிப்பது அந்தப் பேரின்பத்தை உறுதி செய்கிறது. நபியுடன் இத்தகைய நெருக்கத்தில் இருக்க விரும்புவோர் அனாதைகளை அரவணைக்க முற்பட வேண்டும்.
தந்தையை இழந்த பிள்ளைகளே அனாதைகள். அவர்கள் படும் அல்லல்களுக்கு எந்தக் குறையுமில்லை. மற்ற பிள்ளைகளைப் போன்று இவன் ஏதும் சேட்டை செய்துவிட்டால் அவனுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை என்பதை அவனுக்கே உணர்த்தும் தொனியில் ‘அனாதைப் பயலே’ என்று திட்டுவதை பலரிடத்திலும் காணலாம். இது ஒருவகையிலான துன்புறுத்தலே ஆகும்.
அன்பு செலுத்தும் மற்ற தந்தையர்களைப் பார்க்கும் போது, நமக்குத் தோள் கொடுக்க, கட்டியணைக்க, கற்றுக் கொடுக்க, பொருள் வாங்கித் தந்து அரவணைக்கத் தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவன் வளர்ந்து பெரியவனாகும் வரை அவனை நெருடிக் கொண்டே இருக்கின்றது.
பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் அவர்கள் படும் மனவேதனை மகா கொடியது.
அத்தகைய அனாதைகளைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தால் நபியுடன் நெருக்கமாக சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் கிட்டும்.
பெண்பிள்ளைகளைப் பராமரித்தல்
ஊரார் பிள்ளைகளை மட்டுமல்ல; தன் பிள்ளைகளைப் பராமரிப்பதும் சொர்க்கத்தில் நபியுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும். ஒரு நிபந்தனை. அவர்கள் பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று, கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்’’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 5127
இரு பெண் குழந்தைகளைக் கருத்தாக மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுத்து வளர்த்தால் அவர் இந்த அரிய வாய்ப்பை பெறுகிறார்.
பெண் குழந்தைகளைக் கருத்தாக வளர்த்து ஆளாக்குவது அவ்வளவு சுலபமல்ல. குயவனுக்கே உண்டான கவனமும், கரிசனமும் வேண்டும்.
கொஞ்சம் கவனம் சிதறினாலும் எக்குத்தப்பாகப் பிசகி விடும். அதன் பிறகு நாம் நினைத்த வடிவில் அதை (அவளை) மீண்டும் உருவாக்குவது கடும் சிரமம்.
அதுவும் சீர்கேடு நிறைந்த இக்கால கட்டத்தில் பெண் குழந்தைகள் மீது தனிக்கவனமும் கண்காணிப்பும் அவசியமான ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது பெரும் சவால். அதை வெற்றிகரமாக முடிப்போருக்கு இறைவன் தரும் பரிசு தான், சொர்க்கத்தில் நபிமார்களுடன், நபிகள் நாயகத்துடன் இருக்கும் மகோன்னதப் பரிசு.
நல்லொழுக்கம்
நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்பது பிள்ளைகள் குறித்துப் பல பெற்றோர் புலம்பும் உலகளாவியப் புலம்பல். இதற்கு என்ன காரணம்?
பிள்ளைகளை அப்படிச் செய், இப்படிச் செய்யாதே என அதட்டும் பல பெற்றோர், பிள்ளைகளுக்குப் போதிக்கும் நன்னெறிகளைத் தாங்கள் பின்பற்றுவோராக இல்லை.
சொர்க்கத்தில் நபியுடன் இருக்க விரும்பினால் நபியின் குணத்திற்கு ஏற்ப நம்மை ஒழுக்கசீலராக மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கும் ஒழுக்கவாதியாக நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
மறுமையில் சொர்க்கத்தில் நபிகளாரின் அவையில் நமக்கும் ஒரு இடம் வேண்டும் என விரும்பினால் நினைவில் கொள்ளுங்கள். ஒழுக்கவாதிகளுக்கே நபியின் அவையில் இடமுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: திர்மிதி 1941, அஹ்மத் 6447
மறுமையில் நபியின் அவையில், நபிக்கு நெருக்கத்தில் நமக்கான இடத்தைப் பிடிக்க இப்போது ஆகக் கூடிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படுவோம். அல்லாஹ் அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் நல்குவான்.
—————————————————————————————————————————————————————————————
தொழுகையில் நிதானம்
அமீன் பைஜி
தொழுகை என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்த அளவுக்கு என்றால், தொழுகை நமது பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறது. மேலும் பாவமான காரியங்களையும், அருவருக்கத்தக்க காரியங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது. மேலும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
மேலும் தொழுகை இறைவனுக்கும், அடியார் களாகிய நமக்குமிடையே உள்ள உரையாடலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும், கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 405
எனவே, இஸ்லாத்தில் தொழுகை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தொழுகையை அழகுறவும், அவசரமின்றியும், நிறுத்தி நிதானமாகவும் செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும், ஸஜ்தாவையும், ருகூவையும் நிறுத்தி நிதானமாகச் செய்வதற்கு ஏவப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்ய மாட்டார்கள். ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் ‘அத்தஹிய்யாத்’ ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங் கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்து வந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.
நூல்கள்: முஸ்லிம் 857, திர்மிதி 245, நஸயீ1017
ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாக நிதானமின்றி, அவசரகோலமாகத் தொழுகையை நிறைவேற்றுகின்றோம்.
இதனால் நம்முடைய தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? என்று சந்தேகத்திற்கு உரியதாகி விடுகிறது.
அவசரமாகத் தொழப்படும் தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதைப் பின்வரும் செய்தி நமக்கு விவரிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.
நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 757
தொழுகைக்கு வருபவர்கள், தொழுகையை நிறைவேற்றி விட்டு வேலைக்குச் செல்வதாக இருந்தாலோ, பயணம் செய்வதாக இருந்தாலோ, முக்கியமான ஒரு காரியத்தைச் செய்பவராக இருந்தாலோ, அவசரத் தேவைக்காகச் செல்பவராக இருந்தாலோ, பசியாக இருந்தாலோ, இதுபோன்ற பல விஷயங்களைச் செய்பவர்கள் அந்த செயல்களை முடிப்பதற்கு காட்டுகின்ற முனைப்பில், தொழுகையின் மீதுள்ள கவனம் குழித் தோண்டிப் புதைக்கப்படுகிறது.
இதன் காரணத்தினால் தொழுகையில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களான ருகூவு, ஸுஜூது, ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் போன்ற நிலைகளைச் சரியாக நிறைவேற்றாமல் அவசர அவசரமாகத் தொழுகையைப் பூரணமின்றி நிறைவேற்றுகிறோம், இப்படிப்பட்டத் தொழுகை களெல்லாம் இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சூரா ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகை இல்லை!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.
அறிவிப்பாளர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 756
ருகூவு, ஸுஜூது பூரணமாகச் செய்யாதவருக்குத் தொழுகை இல்லை!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது.
அறிவிப்பாளர்: அபூமஸ்வூத் அல்அன்சாரி(ரலி)
நூல்: திர்மிதி 245
தொழுகையின் திருடன்
“திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 11106
தொழுகையில் நிதானம் தேவை!
இன்னும் சொல்வதென்றால், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கூட தொழுகைக் காக வருபவர்கள் நிதானமாக வரவேண்டும் என்றும், ஓடி வரக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்! அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 636
எனவே என்ன முக்கியமான தேவைகள் இருந் தாலும், எவ்வளவு பெரிய வேலைகள் இருந்தாலும் நம்முடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதானமாகவும், பரிபூரணமாகவும், உளத்தூய்மையுடனும் தொழுது நன்மையை முழுமையாகப் பெற்று மறுமையில் வெற்றி பெறுவோமாக!
—————————————————————————————————————————————————————————————
குடும்பவியல் தொடர் : 41
வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
குடும்பத்தில் பெண்கள் ஒரேயடியாக வேலை வேலை என்று இருந்தால் அதுவே மனச் சோர்வை ஏற்படுத்தக் கூடும். அவ்வப்போது ரிலாக்ஸாக வெளியிடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வர வேண்டும். பூங்காவுக்குச் செல்வது, சில நேரங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் பெண்களின் மனதிற்கு சந்தோஷத்தையும் குடும்ப உறவில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பையும் பெற்றுத்தரும்.
மார்க்க வரம்புகளை மீறாத வகையில் கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பார்க்கலாம்; பீச்சுக்குச் செல்லலாம். இதற்கு ஆண்களுக்கு அனுமதி இருப்பது போல் பெண்களுக்கும் அனுமதி உள்ளது என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
இதுபோன்ற விஷயங்களில் ஆண்களில் பலர் குறை வைத்து விடுகின்றனர். இவ்வாறு பொழுது போக்குவது சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் தாமும் சுற்றுலா செல்லாமல் மனைவியையும் அழைத்துச் செல்லாமல் இருந்தால் கூட அவ்வளவாக வெறுப்பை ஏற்படுத்தாது. தான் மட்டும் நன்றாக ஊர் சுற்றிப்பார்த்து விட்டு, மனைவி மக்களை விட்டு விடுவது வெறுப்பை ஏற்படுத்தும். சில ஆண்கள் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக ஹோட்டலில் சாப்பிடுவார்கள். ஆனால் மனைவியையும், பிள்ளைகளையும் அறவே அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
இதுபோன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வாய்ப்புக்குத் தகுந்த மாதிரியோ, ஒருநாள் வீட்டில் சமைப்பதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று அவரவர் வசதிக்கேற்ப வகை வகையாக ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அழைத்துச் செல்லலாம். ஏனெனில் வீட்டில் அப்படியெல்லாம் வகை வகையாகச் சமைக்க முடியாது.
நண்பர்களோடு போவதைப் போன்று மனைவியோடும் செல்ல வேண்டும். மனைவியுடன் போவதினால் இரண்டு நன்மை கிடைக்கிறது. ஒன்று மனைவியின் ஆசையை நிறைவேற்றிய நன்மை. இன்னொன்று ஹோட்டலுக்கு மனைவியை அழைத்துச் செல்வதினால் அன்றைய தினம் மனைவிக்கு அடுப்பங்கரையிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படியெல்லாம் கணவன்மார்கள் சிந்தித்துக் குடும்பத்தை வழி நடத்திட வேண்டும் என நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
நபியவர்கள் காலத்தில் பெருநாள் தினத்தில் தொழுகை, பிரார்த்தனைக்குப் பிறகு வீர விளையாட்டுக்கள் நடைபெறும். அதனைத் தமது மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பார்க்க ஆசைப்பட்ட போது அதனை நபியவர்கள் அனுமதித்தார்கள்.
பெருநாள் தினத்தில் சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுக்களைப்) பார்க்க விரும்புகிறாயா?’’ என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்துக் கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்’’ என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது “போதுமா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)’’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 950
நம்மில் பலர், ஆண்கள் விளையாடும் போது பெண்களுக்கு என்ன வேலை? என்று பெண்களின் சிறு விருப்பத்தைக் கூட மார்க்கத்தில் ஏதோ பெரிய பாவங்களைச் செய்வதைப் போன்று நினைத்துச் செயல்படுகின்றனர்.
பெண்களுக்கென தனியான விளையாட்டுக் களான பொம்மைகளை வைத்து விளையாடுவது, பல்லாங்குழி, நொண்டி தொட்டு விளையாடுவது, இதுபோன்ற ஆசைகளைத் தடுக்கக் கூடாது.
வயதுக்கு தகுந்த மாதிரி ரசனைகள் இருக்கும். அதற்கெல்லாம் கணவன்மார்கள் தடை செய்யக் கூடாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள்.தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
நூல்: புகாரி 6130
இந்தச் சம்பவத்தில் நபியவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ரலி) அவர்களின் தோழியர்கள் நபியவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்களை அழைத்து, ஆயிஷா (ரலி) அவர்களுடன் விளையாடச் சொல்வார்கள். தன் மனைவியின் ஆசையை நபியவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.
விளையாட்டு என்பது கணவருக்குப் பயந்து மாய்கிற விஷயம் ஒன்றுமல்ல. விளையாடுவது, விளையாட்டைப் பார்ப்பது என்பதெல்லாம் மார்க்கம் அனுமதித்த காரியம். இதைச் செய்வதற்கு கணவன்மார்களுக்குப் பயப்படத் தேவையில்லை.
கணவன் வந்ததால் சக தோழியர் ஏன் ஓடவேண்டும்? பெண்களும் பெண்களும்தானே விளையாடுகிறார்கள். அதில் என்ன தவறு? என்று நபியவர்கள் இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
மார்க்கம் ஹராமாக்கிய காரியத்தில் மட்டும் தான் கடிவாளத்தைப் பிடித்து இழுக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்கிற விஷயமாக இருந்தால் கணவன்மார்கள் விட்டுவிட வேண்டும். ஆணுக்கு இருக்கிற ஆசாபாசங்கள் பெண்களுக்கும் இருக்கத் தான் செய்யும் என்று நினைத்து ஆண்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே மேற்கண்ட சம்பவத்தில் நபியைப் பார்த்து ஓடி ஒளிந்த ஆயிஷாவின் தோழிகளை அழைத்துக் கொண்டு வந்து, என் மனைவியுடன் நன்றாக விளையாடிக் கொண்டிருங்கள் என்று சொன்னதன் மூலம், வந்திருந்த பெண்களின் பயத்தையும் போக்குகிறார்கள்; மனைவிக்கும் பயத்தைப் போக்குகிறார்கள். இதுபோன்ற செயல்கள் மூலம், கணவருக்குப் பயந்து கொண்டு மனைவிமார்கள் அடிமை போன்று வாழ வேண்டாம் என்பதை நமக்கு நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
சில வீடுகளில், கணவருக்கு அருகில் நிற்பதற்குக் கூட மனைவிமார்கள் அஞ்சுவதைப் பார்க்கிறோம். கணவர் வந்தால் மனைவி தரையில் அமர்ந்துகூட இருக்க மாட்டார்கள். ஏன்? மாமியார், மருமகளை விளாசித் தள்ளிவிடுவார். வீட்டுக்காரர் வரும் போது சாகவாசமாக அமர்ந்திருப்பாயோ? என்று பல மாமியார்கள் மிரட்டி வைத்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இவை மார்க்கம் அனுமதிக்காதவை. இதை விளங்காமல் பல மாமியார்கள் செயல்படுவது கண்டனத்திற்குரியது. இதனால் தான் குடும்பங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே இதுபோன்று பெண்கள், பெண்களோடு பேசிக் கொண்டிருப்பது, விளையாடிக் கொண்டிருப்பது, நாம் வரும் போது அமர்ந்திருப்பது, நாம் கீழே உட்கார்ந்து இருக்கும் போது மனைவி நாற்காலியில் உட்காருவது ஆகியவற்றின் மூலம் பெண்கள் நம்மை அவமரியாதை செய்துவிட்டார்கள் என்று நினைக்கக் கூடாது.
அதேபோன்று கணவன், மனைவி சேர்ந்து கூட விளையாடலாம். நம்மில் பலர் மனைவிமார்களை இயந்திரமாக நினைத்துச் செயல்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் நபியவர்கள் அப்படியல்ல.
நான் நபி (ஸல்) அவர்களுடன் சில சமயங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடத்தில், ‘‘முன்னே செல்லுங்கள், முன்னே செல்லுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் “ஓட்டப் பந்தயப் போட்டிக்கு வா’’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்குச் சென்று அவர்களை முந்தினேன். அப்போது என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை.
என் உடல் பருமனானது. நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப் பந்தயம் பற்றி) மறந்து விட்டேன். (பின்னர் ஒரு நாள்) அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் “முன்னே செல்லுங்கள், முன்னே செல்லுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் “ஓட்டப் பந்தயத்துக்கு வா’’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு, சிரித்துக் கொண்டே “அதற்குப் பதிலாக இது’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 25075
இது தொடர்பாக இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.
—————————————————————————————————————————————————————————————
அற்ப விஷயத்தையும் பின்பற்றிய அண்ணலாரின் தோழர்கள்
M.A. அப்துர் ரஹ்மான் இஸ்லாமியக் கல்லூரி
மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம்.
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:32
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 3:132
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 4:13
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
அல்குர்ஆன் 4:69
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 5:92
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
அல்குர்ஆன் 8:20
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
அல்குர்ஆன் 8:46
அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 24:52
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 33:36
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
அல்குர்ஆன் 33:71
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
அல்குர்ஆன் 47:33
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதன் மூலமே இறையருள் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படாவிட்டால் ஒரு மனிதன் செய்கின்ற அமல்கள் பாழாகி விடும்.
இது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை மேற்கண்ட வசனங்களிலிருந்து நம்மால் பெற முடிகின்றது.
நம்மில் பெரும்பாலானோர் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுகின்ற விஷயத்தில் மிகவும் பலவீனமானவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆனால் நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள், கட்டுப்படுகின்ற விஷயத்தில் கடுகளவாக இருந்தாலும் அதையும் பின்பற்றினார்கள்.
கட்டுப்பட்டதால் தவிடுபொடியான கோபம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும்,ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத்தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
நூல்: புகாரி 4642
இந்த வசனத்தினுடைய இறுதி வாசகங்களைக் கவனித்துப் பார்த்தால் நபித்தோழர்களின் கட்டுப்படுதல் எந்த அளவுக்கு இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
கவுரவத்தை விட கட்டுப்படுதலே மேலானது
கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் இன்றைக்குப் பெரும்பாலோனோர் தங்களுடைய கவுரவத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர். இன்னும் சொல்வதாக இருந்தால் குர்ஆன், ஹதீஸ் ஒன்று சொல்லும் பொழுது, அதை நடைமுறைப்படுத்தினால் நம்முடைய கவுரவம் போய்விடுமோ என்ற பிடிவாதத்தினால் கட்டுப் படுவத்தை விட கவுரவம் தான் முக்கியம் என்று கருதுகின்றனர்.
ஆனால் கவுரவத்தை விடக் கட்டுப்படுதலே மேன்மையானது என்பதை அற்புதமான முறையில் நிரூபிக்கும் சம்பவம் இதோ:
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)
அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்’’ என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான்.
(என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்’’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். – அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’’ எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் (செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’’ என்றும் கூறினார்கள்.
நூல்: புகாரி 6679
கொஞ்சம் இந்த ஹதீஸை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! தன்னிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்ற ஒருவர், தான் உயிருக்கு உயிராக நேசிக்கின்ற தன்னுடைய மகளை, அல்லாஹ்வின் தூதருடைய மனைவியையே அவதூறு கற்பித்த கூட்டத்துடன் சேர்ந்து அவதூறு கூறினார். இனிமேல் என்னுடைய புறத்திலிருந்து உதவியே தர மாட்டேன் என்று இறைவன் மீது அபூபக்கர் (ரலி) சத்தியம் செய்கின்றார்கள். ஆனால் இறைவனின் வசனம் இறங்கிய அடுத்த வினாடியே தன்னுடைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இறைவனுக்காக மன்னித்து இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்படுவது தான் மிகப் பெரியது என்பதை நிரூபித்திருக்கின்றார்.
இன்றைய காலகட்டத்தில் சொத்து தகராறுக்காக, குடும்பப் பிரச்சனைகளுக்காக, கொடுக்கல் – வாங்கல் பிரச்சனைகளுக்காக, வியாபாரத்தில் கூட்டாக இருந்து கொண்டு மனஸ்தாபத்தினால் பிரிந்த பிரச்சனைகளுக்காக, இன்னும் ஏராளமான பிரச்சனைகளுக்காக நம்மில் பலர், சொந்த பந்த உறவினர்களைப் பகைத்து வருடக்கணக்கில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றோம். நான் பல வருடங்களாக இவரோடு பேச மாட்டேன் என்று பீற்றிக் கொண்டு வேறு சொல்லித் திரிகின்றோம்.
தோழர்களின் மிகச் சிறந்த கட்டுப்பாடு
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நல்லவர்களான அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூ தமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்கர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல் ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்’’ என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள் “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று’’ என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான், “இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்’’ எனும் (49:2ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது..
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
நூல்: புகாரி 7302
நபித்தோழர்களின் நிலை இப்படி என்றால் நமது நிலை என்ன?
- ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளை யிடப்பட்டுள்ளது. ஐவேளைத் தொழுகை தொழுது கட்டுப்படுகின்றோமா?
- எவ்வாறு தொழ வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. அவ்வாறு தொழுது கட்டுப்படுகின்றோமா?
- பொய் பேசினால் கடுமையான பாவம் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றது. பொய்யை விட்டும் தவிர்ந்து கட்டுப்பட்டு வாழ்கின்றோமா?
- மோசடி செய்வது கடுமையான பாவம் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றது. மோசடி செய்யாமல் கட்டுப்பட்டு வாழ்கின்றோமா?
- அவதூறு கூறுவது இறைவனுடைய சாபத்தைப் பெற்றுத் தருகின்ற காரியம் என்று சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. அவதூறு கூறுவதிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றோமா?
இதுபோன்று திருமறைக் குர்ஆன் நெடுகிலும் கூறப்பட்ட கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல், நம்முடைய மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டு வருகின்றோம். அவ்வாறில்லாமல், நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலகட்டங்களில் என்னுடைய இறைவனின் வார்த்தைக்கும், தூதரின் வார்த்தைக்கும் என்னால் இயன்ற வரை கட்டாயம் கட்டுப்படுவேன் என்ற சபதத்தை எடுத்துக் கொள்வோம்.
—————————————————————————————————————————————————————————————
பெண்கள் பகுதி
இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்
ஆப்ரின் சிதிரா
மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம்.
இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடின்றி, மரணத்தைச் சந்திக்கின்ற வரை செல்வத்தில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.
இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக, ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன.
- பொருளாசை.
- நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை.
நூல்: புகாரி 6421
நிறைவு பெறாத மனம்
பணம் அதிகமாக இருந்தாலும் சரி! குறைவாக இருந்தாலும் சரி! அதுவே மனிதனை அழிக்கக் கூடிய மிகப் பெரும் ஆயுதமாக இருக்கின்றது. செல்வம் அதிகமாக இருக்கும் போது ஆடம்பர வாழ்க்கை, அகங்காரம், அழிச்சாட்டியம் என்று உலக வாழ்வில் மதிமயங்கிப் போய் நன்மைகள் செய்ய மறந்து, இறையருளை நிராகரித்து நன்றி கெட்டவனாக மனிதன் நடக்கிறான்.
அதேபோல் செல்வம் குறைவாக, அளவோடு கொடுக்கப்பட்டாலும் கூட இறைவன் தனக்கு வழங்கிய அருள்வளத்தை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வருவதில்லை.
நிம்மதியாக வாழும் அளவிற்குப் பொருளாதாரம் இருந்தாலும் கூட, இன்னும் வேண்டும் என்று ஆவல் கொள்வதே மனித குலத்தின் இயல்பாக இருக்கின்றது.
நம்மிடமுள்ள வசதி வாய்ப்புக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே நமது மார்க்கம் போதிக்கின்றது. ஆனால் மனித மனமோ இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆண்களாவது தங்களது ஏக்கத்தை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொள்கின்றனர். ஆனால் பெண்களோ அதைத் தங்களது சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தி விடுகின்றனர்.
தம்மைச் சுற்றி வாழக்கூடிய அண்டை வீட்டுப் பெண்கள், சொந்த பந்தத்திலுள்ள பெண்கள் என மற்ற பெண்களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர். இதனால் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் பெரிய பூதாகரமாக மாறிவிடுகின்றது.
தாம் கேட்டது கிடைக்காத போதும், பிறரை விட வசதி வாய்ப்பு குறைவாக இருக்கும் போதும், “இவள் ராணி மாதிரி வாழ்கிறாள். கொடுத்து வைத்தவள். நான் தான் இப்படிக் கஷ்டப்படுகிறேன்” என்று மற்ற பெண்களைக் கண்டு ஏக்கம் கொள்கின்றனர். அந்த வெறுப்பில் தன் கணவன் செய்யும் அனைத்து நன்மைகளையும் மறந்து, “என் பிறந்த வீட்டில் நான் எப்படி வாழ்ந்தேன் தெரியுமா? உங்களைக் கட்டிக்கொண்ட பிறகு தான் இப்படிக் கஷ்டப்படுகிறேன்” என்று கூறி ஒரு வார்த்தையில் நிராகரித்து விடுகின்றனர். இந்த நிராகரிப்பு தான் நரகத்திற்குக் கொண்டு செல்லும் வழிப்பாதை என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
‘‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 29
நிராசையான வார்த்தைகள்
நம் சகோதரிகளின் புலம்பல்கள் இத்துடன் நின்று விடுவதில்லை. இதற்கும் ஒரு படி மேலே சென்று, தான் மட்டும் தான் இந்த உலகத்தில் கஷ்டப்படுவதைப் போன்றும், தனக்கு வந்த சோதனை யாருக்குமே – வராததைப் போன்றும், “அல்லாஹ் என்னை மட்டும் தான் இப்படிக் கஷ்டப்படுத்துகிறான். நான் மட்டும் தான் அவன் கண்ணுக்குத் தெரிகிறேன்” என்று சாதாரண மனிதர்களிடம் சலித்துக் கொள்வது போன்று இறைவனிடமும் சலித்துக் கொள்கிறார்கள்.
அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவுக்கு இறைவன் நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கும் போது, அதற்கே நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதை மறந்து விட்டு அனாவசியத் தேவைகளுக்கெல்லாம் இறையருளை மறந்து விடுகின்றார்கள்.
எல்லாப் பெண்களும் இதே குணம் கொண்டவர்கள் என்று நாம் கூறவில்லை. எனினும், செல்வம் குறைவாக இருந்தாலும் பிறரிடம் கையேந்தாமல், கணவன், குழந்தை, குடும்பம் என நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமே என்று எண்ணி சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, வசதி வாய்ப்புகள் குறைவாக இருப்பது தமக்கு ஏற்பட்ட ஒரு கேவலமாக நினைத்து வாடுபவர்கள் தான் ஏராளமாக இருக்கிறார்கள். மனிதனின் குணமே இது தான் என்று இறைவனும் கூறுகிறான்.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்’’ என்று கூறுகிறான்.
அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்’’ எனக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 89:15, 16
எளிமையை விரும்புதல்
ஆடம்பரத்தை விரும்பும் மனிதன், எளிமையை அதிகமாக வெறுக்கிறான். அதனால் தான் எவ்வளவு அருள்வளம் கொடுக்கப்பட்டாலும் எதுவுமே இல்லை என்று மறுத்து விடுகிறான். நிறைவு பெறாத இந்த மனநோய்க்கு நபிகளாரின் வாழ்க்கையில் நிவாரணம் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கைப் பாடத்தில் ஒரு சிறு துணுக்கை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது.
நூல்: புகாரி 5191
நபியவர்கள் ஆடம்பரத்தை விரும்பியதே இல்லை. காரணம், ஆடம்பர வாழ்வு நிலையானது இல்லை என்பதை அறிந்திருந்தார்கள். மேலும் தம் சமுதாயத்திற்கும் ஏந்தல் நபியவர்கள் எளிமையைத் தான் போதித்தார்கள். இதே அந்த மாமேதையின் போதனைகள்…
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்
என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6435
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் அவர்கள் கூறுகிறார்கள்:) ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்தைய மறுமை நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
நூல்: புகாரி 6416
நேற்று ஓர் இடம், இன்று ஓர் இடம், நாளை ஓர் இடம் என்று எதுவுமே நிலை இல்லாத, சொந்தமில்லாத ஒரு வாழ்க்கை தான் நாடோடியின் வாழ்க்கை. அப்பேற்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள்.
கீழ்நிலையில் உள்ளோரைச் சிந்தித்தல்
கல்வி, தோற்றம், செல்வம் என அனைத்து விஷயங்களிலும் நமக்கு மேல்நிலையில் இருப்பவர்களைப் பற்றிச் சிந்திக்கும் நாம், நமக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்
என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6490
மாட மாளிகையின் மீது எண்ணம் கொள்ளும் நாம், மழையிலும் வெயிலிலும் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் வாழக்கூடிய மக்களை நினைத்துப் பார்த்தோம் என்றால் குடிசை வீடு கூட நமக்குக் கோபுரமாகத் தோன்றும்.
விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் என்று ஆடம்பரமாய் வாழும் மக்களை நினைத்து ஏக்கம் கொள்ளும் சமயத்தில், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி பஞ்சம் பட்டினியில் அல்லல்படும் மக்களைச் சிந்தித்துப் பார்த்தோமானால், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனை மக்கள் வேதனைப்படுகிறார்கள் என்பதை உணரலாம்.
நாம் அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில் ஒருவர் இருந்தால் நாம் குனிந்து பார்க்கும் அளவுக்கு அடிமட்டத்திலும் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக, மனநிறைவுடன் வாழ முடியும்.
நாம் எத்தகைய சுகபோக வாழ்வு வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் நமக்குக் கீழே உள்ளவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
போதுமென்ற மனம்
சகோதரிகளே! இறைவன் நமக்கென்று எதனை நிர்ணயித்துள்ளானோ அது நம்மை வந்தடைந்தே தீரும். பிறந்த வீடாயினும், புகுந்த வீடாயினும் நமக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத்தை மன நிறைவோடு ஏற்று, வரவுக்கு ஏற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் நாமும் மகாராணியாக வாழலாம். மேலும் இறைவன் நம்மைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.
நிறைவான மனதை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக!
—————————————————————————————————————————————————————————————
விமர்சனங்களும் விளக்கங்களும்
மாற்றி மாற்றி ஃபத்வா வழங்கி மார்க்கத்தைக் குழப்புவது சரியா?
எம்.எஸ். செய்யது இப்ராஹிம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, “முன்னர் ஒரு ஃபத்வா வழங்கிவிட்டு, அதன் பிறகு அதற்கு மாற்றமாக மற்றொரு ஃபத்வா வழங்கி மார்க்கத்தைக் குழப்பலாமா? ஏன் இவ்வாறு மாற்றி மாற்றிப் பேசுகின்றீர்கள்?’’ என்ற விமர்சனமும் ஒன்றாகும்.
இது குறித்து இஸ்லாம் கூறும் விளக்கம் என்ன என்பதைத் தான் இந்தக் கட்டுரையில் காணப் போகின்றோம்.
முதலில் இவ்வாறு நம்மை நோக்கிக் கேள்வி எழுப்புபவர்கள் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவன் எந்தவொரு ஆய்வை மேற்கொண்டாலும் அதில் தவறு வர வாய்ப்புள்ளது. எந்த மனிதனாலும் 100 சதவீதம் எந்தத் தவறும் வராமல் முடிவுகளை எடுக்க முடியும் என்று எவராலும் சொல்ல முடியாது. முன்னால் ஒன்றைச் சொல்லிவிட்டு அவ்வாறு தான் சொன்னதற்கு மாற்றமாகப் பின்னர் ஆய்வு செய்யும் போது வேறு விளக்கம் கிடைத்த பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது மனித இயல்பு.
இந்த அடிப்படையைச் சரியாக ஒருவர் புரிந்திருப்பாரேயானால் அவர் இந்தக் கேள்வியை நம்மை நோக்கிக் கேட்கமாட்டார்.
நமது சக்திக்குட்பட்டு, இறைவனை அஞ்சி ஆய்வு செய்து அந்த ஆய்வின் முடிவை நாம் வெளியிடுகின்றோம்.
நாம் செய்த ஆய்வு தவறு என்று தக்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படுகின்றது; அல்லது தவறுதலான மேற்கோளைக்காட்டி நாம் அந்த முடிவை எடுத்துள்ளோம்; அல்லது அது குறித்த முடிவை எடுப்பதற்குண்டான தக்க ஆதாரங்கள் இருந்தும் அதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்; அல்லது அந்த ஆதாரம் நமக்குத் தெரியவில்லை; அல்லது அந்த ஆதாரத்தையே தவறுதலாக நாம் விளங்கிக் கொண்டு தவறாக முடிவெடுத்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் நாம் செய்த ஆய்வு தவறு என்பதும், நாம் முன்னர் சொன்ன ஃபத்வா தவறு என்பதும் நமக்கு சுட்டிக்காட்டப்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் இதற்கு முன்னர் சொன்னது தவறு என்பதை மக்கள் மத்தியில் அறிவிப்புச் செய்து அதை வாபஸ் வாங்க வேண்டும். இதுதான் ஒரு இறையச்சவாதி செய்ய வேண்டிய செயல்.
இதைத்தான் இறைவனுக்கு அஞ்சி தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகின்றது; அதனால் தான் இத்தகைய விமர்சனங்களுக்கு நாம் ஆளாக்கப்படுகின்றோம்.
நாம் சொல்லக்கூடிய மார்க்க ஆய்வு முடிவுகளில் எவ்வித தவறுமே வரக்கூடாது என்றும், ஒரு தடவை நாம் ஒரு மார்க்க ஆய்வு முடிவைச் சொல்லிவிட்டால் அது குறித்து மாற்றுக் கருத்தே நாம் சொல்லக்கூடாது என்றும் இவர்கள் சொல்ல வருகின்றார்கள்.
இது எவ்வளவு பெரிய ஆபத்தான கருத்து என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய வார்த்தைகளில் தான் தவறே வராது; அவனது முடிவுகளில் தான் எவ்வித மாற்றமும் இருக்காது; முன்னுக்குப் பின் முரண் வராது.
மனிதன் என்றாலே தவறு வருவது இயல்புதான். அப்படியிருக்கையில் நமது ஆய்வுகளில் தவறே வரக்கூடாது என்று இவர்கள் சொல்லுவார்களேயானால் நம்மை அல்லாஹ்வுடைய இடத்தில் இவர்கள் வைத்துப் பார்க்கின்றார்கள். இது மிகப்பெரிய இணைவைப்பாகும்.
நாம் சொல்லும் ஆய்வுகளில் தவறு வரவே கூடாது என்று சொல்வதும், என்னுடைய ஆய்வில் தவறே வராது என்று சொல்வதும் அல்லாஹ்வின் அதிகாரத்தை நாம் நமது கையில் எடுக்கும் மாபாதகச் செயல் ஆகும்.
எனவே இதுபோன்ற மிக மோசமான கருத்தை விதைப்பதையும், எண்ணுவதையும் அத்தகையோர் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படியானால் தப்பும் தவறுமாகத்தான் ஃபத்வாக்களை வழங்கி, முன்னுக்குப் பின் முரணாக, மாற்றி மாற்றி ஃபத்வாக்களை வழங்கிக் கொண்டே இருப்பீர்களா? என்ற கேள்வி நம்மை நோக்கி எழலாம்.
நாம் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யில் ஆய்வு செய்கின்றோம்; நமது சக்திக்குட்பட்டு இறைவனுக்கு அஞ்சி உளத்தூய்மையுடன் ஒரு ஆய்வை மேற்கொள்கின்றோம்; அது சரியாக இருந்தால் நமக்கு இரண்டு கூலி கிடைக்கும் என்றும், அது தவறாக இருக்கும்பட்சத்தில் ஒரு கூலி கிடைக்கும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
அறிவிப்பாளர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: புகாரி 7352
விஷயம் குறித்து எது சரியான தீர்ப்பு என்பதை ஆய்வு செய்யும் ஆய்வாளர், சரியான முடிவெடுத்தால் அவருக்கு இரண்டு கூலியும், தனது சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்து தவறான முடிவை எடுத்தாலும் கூட ஒரு கூலியும் வழங்கப்படும் என்று நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
மனிதன் என்றால் அவனிடம் தவறு வரத்தான் செய்யும் என்பதையும், யாராலும் எந்த தவறுமே வராத வகையில் 100 சதவீதம் சரியான தீர்ப்பை மட்டுமே சொல்லிவிட முடியாது என்றும் நபிகளார் இந்தச் செய்தியின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அந்த அடிப்படையில்தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்களது சக்திக்கு உட்பட்டு இறைவனுக்கு அஞ்சி ஆய்வுகளை மேற்கொண்டு மார்க்க ஃபத்வாக்களை வழங்குகின்றனர். அது தவறு என்று தக்க காரணங்களுடனும், ஆதாரங்களுடனும் சுட்டிக் காட்டப்பட்டால் அதை திருத்திக் கொள்கின்றனர்.
உண்மையிலேயே இது குறை சொல்ல வேண்டிய விஷயமல்ல; மாறாக, தவறாகச் சொன்ன ஒரு விஷயத்தை மாற்றி, தவறிலிருந்து நம்மைத் திருத்தி, மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தும் இந்தப் போக்கு சிலாகிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல பண்பாகும்.
மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சாமல் அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுபவர்களிடம் தான் இந்தப் பண்பு மிளிரும். அதைத்தான் நம்மை எதிர்ப்பவர்கள் குறை சொல்லிக் கொண்டு திரிகின்றனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும், இதுபோன்ற ஃபத்வாக்களை வழங்குவதாக இருந்தால் முதலில் அனைத்து மார்க்கச் சட்டங்களையும் முழுமையாகப் படித்து விட்டு அதன் பிறகுதான் யாராக இருந்தாலும் ஃபத்வா வழங்க வேண்டும்; அப்போது தான் தவறே வராது என்று சொல்லி ஒரு வறட்டு வாதத்தையும் முன்வைக்கின்றனர்.
இதுவும் தவறான வாதமாகும். அனைத்தையும் அறிந்த அறிஞர் உலகத்தில் யாரும் இல்லை; இருக்கவும் முடியாது. அல்லாஹ் தான் அனைத்தையும் அறிந்தவன். இப்படி இருக்கையில் எப்படி அனைத்தையும் அறிந்த பிறகுதான் ஃபத்வா வழங்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றார்களோ தெரியவில்லை. இவ்வாறு இவர்கள் சொல்வதிலிருந்தே இவர்களுக்குப் போதிய மார்க்க அறிவு இல்லை என்பது தெளிவாகின்றது.
என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதைப் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லி விடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கும் நிலையில் அனைத்தையும் அறிந்த பிறகு தான் சொல்ல வேண்டும் என்று சொல்வது இவர்களின் அறியாமையின் வெளிப்பாடுதானே!
மேலும், இந்த விஷயத்தில் மற்றுமொரு உண்மையையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நம்மை யாரெல்லாம் இந்த விஷயத்தில் விமர்சிக்கின்றார்களோ அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள இமாம்களாக இருக்கட்டும்; ஸஹாபாக்களாக இருக்கட்டும்; இன்னபிற மார்க்க அறிஞர்களாக இருக்கட்டும். அவர்களில் யாராவது ஒருவராவது முன்பு ஒன்று சொல்லிவிட்டு, அதை மாற்றமே செய்யாமல் அதிலேயே, அப்படியே நிலைத்து, நீடித்து இருந்துள்ளார்களா என்றால் அப்படி யாரும் கிடையாது.
மனிதன் என்ற அடிப்படையில் அந்த ஸஹாபாக்களிடத்திலும், இமாம்களிடத்திலும் தவறு நிகழ்ந்துள்ளது.
எத்தனையோ ஸஹாபாக்கள், இமாம்கள் தவறான ஃபத்வாக்களைக் கொடுத்துவிட்டு அதன் பிறகு மாற்றியுள்ளார்கள்.
இமாம் ஷாஃபி அவர்களின் புத்தகங்களிலேயே கதீம் -ஜதீத் என்று பல கூற்றுக்கள் உள்ளன. அதாவது பழைய நிலைப்பாடு; புதிய நிலைப்பாடு.
அதேபோல அபூஹனீஃபா இமாம் அவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டு அதிலிருந்து திரும்பிய கூற்றுக்கள் என எண்ணற்ற கூற்றுக்கள் உள்ளன.
அப்படியானால் அவர்களும் இதுபோல மாற்றி மாற்றிச் சொல்லியுள்ளார்களே! நம்மை விமர்சிப்பவர்கள் இவர்களையும் குழப்பவாதிகள் எனச் சொல்வார்களா?
நிச்சயம் அவ்வாறு சொல்லமாட்டார்கள். காரணம், அந்த இமாம்களுக்கு அந்தச் சட்டம் தெரியாமல் சொல்லியிருப்பார்கள்; அல்லது அந்த ஹதீஸ் தெரியாமல் இருந்திருக்கும் என்றுதான் வியாக்கியானம் சொல்கின்றார்கள்.
இதுதான் நம்மை நோக்கி அவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்குமான பதில் என்பதை சொல்லிக் கொள்கின்றோம்.
—————————————————————————————————————————————————————————————
ஆஷுரா தரும் படிப்பினைகள்
சபீர் அலீ
அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1438ஆம் ஆண்டு நிறைவடைந்து, 1439ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.
ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு ஆஷுரா நோன்பு எனப்படும்.
ஆஷுரா நோன்பு
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1592
கடமையான ரமலான் மாதத்தின் நோன்பு அல்லாத ஏராளமான சுன்னத்தான நோன்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் அதிகம் முக்கயத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆஷுரா நோன்பாகும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும், (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவராலும் நோற்கப்படும் நோன்பாக இந்த நோன்பு இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவுசெய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கவைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி)
நூல்: புகாரி 1960
ஆஷுரா நோன்பின் சிறப்பு
கடந்த ஓராண்டு காலமாக நாம் செய்து வந்த பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது.
‘‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸீன் சுருக்கம்)
இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்
நூல்: முஸ்லிம் 2151
ஆஷுரா நோன்பிற்கான காரணம்
ஹஜ் பெருநாளும் அன்று கொடுக்கப்படும் குர்பானியும் இப்ராஹிம் நபியின் தியாகத்தையும் வரலாற்றையும் நினைவுகூரும் விதமாக அமைந்திருப்பதைப் போன்று ஆஷுரா நாளும் அன்று நோற்கப்படும் நோன்பிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூராவுடைய (முஹர்ரம் 10 ஆவது) நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்கள், (அந்த நாளைப் பற்றி) “இது மாபெரும் நாள் என்றும், மூசா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்’’ என்றும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களை விட மூசாவுக்கு நான் மிக நெருக்கமானவன்’’ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
நூல்: புகாரி 3397
மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவனால் காப்பாற்றப்பட்ட நாளே இந்த ஆஷுரா நோன்பிற்கான காரணம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகிறது.
வரலாற்றுப் பின்னணி தரும் போதனை
“என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான். ‘அவர்கள் சிறிய கூட்டத்தினரே. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர். நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள்’ (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)
தோட்டங்கள், நீரூற்றுகள், பொக்கிஷங்கள், மற்றும் மதிப்புமிக்க தங்குமிடங்களை விட்டும் அவர்களை வெளியேற்றினோம். இப்படித் தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.
காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ‘நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’ என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
அல்குர்ஆன் 26: 52 – 61
மூஸா நபியவர்களையும், அவர்களின் சமுதாயத் தாரையும் சர்வாதிகாரியான கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் விரட்டி வருகிறான்.
ஒரு கட்டத்தில் விரட்டப்பட்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னால் கடல் குறுக்கிடுகிறது.
முன்னால் கடல்! பின்னால் ஃபிர்அவ்னின் படை! இருபுறத்தில் எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் நிச்சயம் என்ற தருணம் ஒரு புறம்.
இந்த இக்கட்டான சூழலில் மூஸா நபியவர்களை நம்பிக்கை கொண்டிருந்த மக்கள், “நாம் ஃபிர்அவ்னால் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று கவலையுற்றார்கள்.
இத்தனையையும் எதிர்நோக்கிய மூஸா நபியவர்களின் மனோ நிலை எவ்வாறு இருந்தது? இறைவன் கொடுத்த பரிசு என்ன? என்ற வினாக்களின் விடையே ஆஷுரா தினம் நமக்குத் தரும் முதல் படிப்பினையாகும்.
மூஸா நபியின் மனோ நிலை
மூஸா நபியின் மக்கள் நாம் ஃபிர்அவ்னால் பிடிப்பட்டுவிடுவோம் என்று நிராசை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் மூஸா (அலை) அவர்களின் பதில் இதோ…
“அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்’’ என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 26: 62 – 68
எத்திசையில் சென்றாலும் மரணம், எந்த மனிதனாலும் காப்பாற்ற முடியாது என்பதை மேற்கண்ட நெருக்கடி உணர்த்துகிறது.
அந்த மனோ நிலையில்தான் மக்கள் அனைவரும் நிராசை கொண்டனர்.
ஆனால், மூஸா நபியவர்களின் மன நிலையோ ஈமானிய அமுதம் சுரந்ததாக இருந்தது. புயல் அடித்தும் கம்பீரமாய் நிற்கும் ஆலமரமாய் இருந்தது அவர்களின் ஈமான்.
மரணம் நிச்சயம் என்று மனிதர்கள் கைவிட்டாலும் எல்லாவற்றுக்கும் மேலான இறைவன் இருக்கின்றான்; அவனை மீறி அணுவும் அசையாது; அவன் உதவிக்கரம் நீட்டுவான் என்ற உறுதியான நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்தார்கள்.
அந்த நம்பிக்கைக்குப் பரிசாக கடலை இரு கூறுகளாக இறைவன் பிளந்தான். தன்னைத் தானே உயர்ந்த கடவுள் என்று கூறிக் கொண்டிருந்த ஃபிர்அவ்னும், அவனது சகாக்களும் பிளவுக்குள்ளும் விரட்டி வருகின்றனர். உண்மை மார்க்கத்தில் இருந்த மூஸா நபியவர்களும், அவர்களது தோழர்களும் காப்பாற்றப்படுகின்றனர்.
கடல் பழைய நிலைக்குத் திரும்புகிறது. பிளவில் வந்து கொண்டிருந்த ஃபிர்அவ்னும், அவனது படையும் மூழ்கடிக்கப்படுகின்றனர்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுவிட்டோம் என்று வாயளவில் சொல்வது உண்மையான ஈமான் கிடையாது. எந்த ஒரு தருணத்திலும், உலகமே எதிர்த்தாலும், எத்தகைய கஷ்டம் பீடித்தாலும் ‘அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவன் என்னைக் காப்பாற்றுவான்’ என்று உறுதியான நம்பிக்கை வைப்பதே உண்மையான ஈமான். அந்த உறுதியான ஈமானே சுவனத்திற்கான பாதை.
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 3:173
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!’’ எனக் கூறுவார்கள்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
அல்குர்ஆன் 41:30-32
எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலி.
அல்குர்ஆன் 46:13, 14
உறுதியற்ற, சோதனைகள் வந்ததும் நிராசை அடையும் நம்பிக்கை மறுமையில் நஷ்டத்தையே பரிசளிக்கும்.
விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் இழப்பை அடைந்து விட்டான். இதுவே தெளிவான இழப்பு.
அல்குர்ஆன் 22:11
மூஸா நபியவர்களின் ஈமான் எப்படி உறுதியான ஈமானாக இருந்ததோ அதுபோன்று நம்முடைய ஈமானையும் பலம் பொருந்தியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
குடும்பம், வியாபாரம், வறுமை, நோய், இழப்பு போன்ற நம் ஈமானை பரீட்சித்துப் பார்க்கின்ற சோதனைகளை இறைவன் கொடுக்கும் போது அதில் மனம் தளராமல் உறுதியுடன் இருந்தால் இறை உதவி நம் கஷ்டங்களை நீக்கிவிடும்.
நன்றி மறப்பது நன்றன்று
உலகமே கைவிட்ட போது உலகத்தின் நாயன் அல்லாஹ், மூஸா நபியவர்களையும் அவர்களது சாராரையும் காப்பாற்றி அருள் புரிந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் இந்த ஆஷுரா நோன்பை மூஸா நபியவர்கள் நோற்று வந்தார்கள்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வழிகாட்டியுள்ளார்கள்.
இறைவன் புரிகின்ற அருளுக்கு நன்றி செலுத்துவது தான் இறைநம்பிக்கையாளர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை.
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
அல்குர்ஆன் 2:152
உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.
அல்குர்ஆன் 27:73
அல்லாஹ்வின் அருளின் காரணத்தினால் இவ்வுலகில் நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான முறையில் நன்றி செலுத்துகிறோம்?
நன்றி செலுத்தும் வகையில் நம்முடைய வணக்க வழிபாடுகளைச் சரியான முறையில், தவறவிடாமல் அல்லாஹ்விற்கு உரித்தாக்குபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
அருள்மழை பொழிந்து, உதவி புரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பது ஆஷுரா நோன்பு தரும் இரண்டாவது படிப்பினையாகும்.
மாறு செய்வதில் மாற்றம் இல்லை
இஸ்லாம் உலகில் தனித்துவமான, மனித குலத்திற்கு ஏற்ற மார்க்கமாகும். எந்தச் சூழலிலும் அசத்திய வழியை ஏற்றுக்கொள்ளாத மார்க்கமாகும். தனது தனித்துவத்தை என்றும் இழக்காத மார்க்கமாகும்.
அதனால்தான் இஸ்லாத்தின் மிக முக்கிய கட்டளைகளில் ஒன்று, பிற மதத்திற்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 3512
இஸ்லாமியர்களின் அடையாளமாக இருக்கும் தாடி வைத்தல் கூட யூத, கிறித்தவர்களுக்கு மாறு செய்வதற்காகச் சொல்லப்பட்ட கட்டளையே ஆகும்.
இது போன்று யூத கிறித்தவர்களுக்குக் கடுகளவில் கூட ஒப்பு வந்துவிடக்கூடாது என்பதில் இஸ்லாம் தெளிவாக இருக்கும்.
அந்த அடிப்படையில்தான் ஆஷுரா நோன்பும் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் முஹர்ரம் 9 மற்றும் 10 அன்று நோற்கப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089
அசத்தியத்தில் இருக்கும் யூதர்களே மூஸா நபி காப்பாற்றப்பட்ட நாளில் நோன்பு வைக்கிறார்கள் எனில் சத்தியத்தில் இருக்கும் நாம் தான் அந்த நோன்பை நோற்க அதிகம் தகுதிபடைத்தவர்கள்.
எனினும், இதிலும் கூட ஒப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக நபியவர்கள் செய்த ஏற்பாடே முன்னால் ஒரு நாள் சேர்த்து நோன்பு வைப்பதாகும்.
இப்படி நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடாக இருந்தாலும் கூடப் பிற மதத்திற்கு ஒப்பு வந்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பு காட்டுகிறது.
ஆனால், இன்றைக்கு இஸ்லாம் என்ற பெயரில் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் திருமண வீடு முதல் மரண வீடு வரை அனைத்திலும் இஸ்லாத்தில் இல்லாத பிறமதக் கலாச்சாரத்தை நுழைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? அவர்களுக்கு மாறு செய்வதில் எந்தச் சமயத்திலும், எந்தக் காரியத்திலும் மாற்றுக் கருத்தே இல்லை என்பதே ஆஷுரா தினம் தரும் மூன்றாவது பாடமாகும்.
ஆஷுரா தினம் தருகிற இந்தப் படிப்பினைகளை வெறும் ஏட்டளவில் வைத்துவிடாமல் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
—————————————————————————————————————————————————————————————
ஏகத்துவத்தின் எழுச்சியில் இணைந்து கொள்ளுங்கள்
எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்
உலகிலே ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் ஏராளமான கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கின்றன. பல்வேறு விதமான சித்தாந்தங்கள் இருப்பினும், அவற்றுள் அதிகம் அதிகமாக எதிர்க்கப்படும் ஒரேயொரு மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே இருக்கிறது.
கனிந்த மரம் தான் கல்லடிபடும் என்று பழமொழி சொல்வார்கள். இந்தக் கூற்று இஸ்லாத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறது. அரை வேக்காட்டுத் தனமான சட்டங்களைக் கொண்ட கொள்கைகளுக்கு மத்தியில் முழு வாழ்க்கைத் திட்டமாக இருக்கும் இஸ்லாம் அதிகளவு விமர்சிக்கப்படுகிறது. இதை நோக்கித் தப்பும் தவறுமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக முஸ்லிம்களை அழித்தாவது ஓரிறைக் கொள்கையை ஒழித்துவிடலாமென கங்கணம் கட்டி அலைகிறார்கள்; துடிக்கிறார்கள்.
எந்தளவிற்கெனில், இஸ்லாம் இடத்தில் வேறொரு கொள்கை இருக்குமாயின் அது அடையாளமே இல்லாமல் அழிந்திருக்கும்; இடம் தெரியாமல் தொலைந்து போயிருக்கும். அந்தளவுக்குப் பெரும் எதிர்ப்பு காலங்காலமாக இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனாலும், இந்த மார்க்கம் இக்கட்டான சூழ்நிலைகளையும், பிரச்சனைகளையும் கடந்து நாள்தோறும் எழுச்சி பெற்று வருகிறது. இதன் பின்னணியில் முஸ்லிம்களாக இருக்கும் நமக்குப் பல்வேறு போதனைகள் நிறைந்து இருக்கின்றன.
நமது வாழ்க்கை நெறியாக இருக்கும் ஏகத்துவத்திற்கு எதிராக எத்தனை விதமான சதித்திட்டங்கள் தீட்டினாலும், எந்த வழியில் முயற்சித்தாலும் அதை ஒருபோதும் அழித்துவிட இயலாது. காரணம், இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது அல்ல; அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனின் மார்க்கம்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
(திருக்குர்ஆன் 39:3)
ஓரிறைக் கொள்கையைக் கொடுத்த இறைவனே அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தமது கைவசம் வைத்திருக்கிறான். ஆகையால் அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். எத்தனை பேர் திரண்டாலும் அதன் வளர்ச்சிக்கு அணைபோட இயலாது.
(இஸ்லாம் எனும்) அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (திருக்குர்ஆன் 9:32)
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அல்லாஹ் தமது மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டுமென நினைத்தால் எந்த வழியில் வேண்டுமானாலும் அதனை நிகழ்த்தி விடுவான்.
களத்தில் எவர் எதிரியாக நிற்கிறாரோ அவரையே கூட, பாதுகாக்கப் போராடுபவராக அல்லாஹ் மாற்றிவிடுவான். இதற்குரிய சான்று, நபிகளாரின் வரலாறு முழுவதும் கொட்டிக் கிடக்கிறது.
அபூசுப்யான் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), சுமாமா (ரலி), ஷுரகா (ரலி) போன்ற நபித்தோழர்கள் ஆரம்பத்தில் சத்தியத்திற்கு எதிரான அணியில் பிரபலமாக இருந்தவர்கள். பின்னாளில் சத்தியத்தைத் தாங்கி நிற்பவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்கள்.
இதுபோன்று, அல்லாஹ் நாடினால் எவர் எதிர்க்கிறாரோ அவரின் வாரிசுகள், சொந்தங்களில் இருந்துகூட சத்தியத்தை வளர்க்கும் நபர்களை அல்லாஹ் உருவாக்கி விடுவான். இதையெல்லாம் இன்றும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஏகத்துவத்தை எதிர்த்த பலரும் இன்று ஏகத்துவவாதிகளாக மாறி இருக்கிறார்கள். சத்தியத்திற்கு விரோதமாக ஷிர்க் பித்அத்தில் மூர்க்கத்தனமாக இருக்கும் பலரின் மகன்கள், பேரப்பிள்ளைகள், இரத்த பந்தங்கள் தவ்ஹீத் வாதிகளாக மிளிருகிறார்கள்.
இவற்றைச் செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில், அவன் முடிவெடுத்தால் மறுமை நாளில் நிரந்தரமாக நரகத்திற்குச் செல்லவிருக்கும் பெரும் பாவியை வைத்தும் கூட இந்த மார்க்கத்தை நிலை நாட்டிவிடுவான். இந்தப் பாடம் பின்வரும் சம்பவத்தில் இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி “இவர் நரகவாசிகளில் ஒருவர்’’ என்று கூறினார்கள்.
போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து ‘அவர் நரகவாசி’ என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்’’ என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம்’’ என்றே கூறினார்கள்.
அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மை ஆக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார் (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்)’’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பிலாலே! எழுந்து சென்று ‘இறைநம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்’ என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3062, 4204, 6606
அன்று நபிகளார் உதிர்த்த வார்த்தைகள் இன்று அடிக்கடி நிதர்சனம் ஆகிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாத்தைக் கேவலமாகவும் கொச்சையாகவும் சித்தரிப்பதற்கு எதிரிகள் செய்யும் செயல்கள் பல மக்களின் கவனமும், ஆர்வமும் இஸ்லாத்தை நோக்கித் திரும்புவதற்குக் காரணமாக அமைவதைப் பார்க்கிறோம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு உண்மைதானா என்று எட்டிப் பார்ப்பவர்கள் இறுதில் அதைக் கட்டிக்காப்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.
இங்கு அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றொரு போதனை இருக்கிறது. இந்த மார்க்கத்தின் எழுச்சி எவரை நம்பியும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த மார்க்கம் இன்னார் இருந்தால் தான் தழைக்கும்; அவரால் தான் செழிக்கும் என்றெல்லாம் சொல்வது பெரும் தவறு என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுமட்டுமல்ல! மார்க்கப் பணிகளில் பங்கெடுப்பவர்கள் தங்களது உதவியை நம்பித் தான் மார்க்கம் தவித்திருக்கிறது என்று ஒருபோதும் பெருமித போதையில் விழுந்துவிடக் கூடாது. மற்றவர்கள் உலக ஆதாயத்திற்கு அதிகமாக உழைக்கும் போது நாம் மட்டும் தீனுக்காக ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக அடிக்கடி உதவ வேண்டும்? என்று சடைந்து கொள்ளக் கூடாது.
இவ்வாறு ஷைத்தான் தூண்டும் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பலியாகி, பலரும் மார்க்கம் மூலம் கிடைக்கும் நன்மைகளை இழந்துவிடுகிறார்கள். நஷ்டம் அவர்களுக்குத் தானே ஒழிய மார்க்கத்திற்கு அல்ல!
எப்படி ஒட்டுமொத்த மக்களும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டாலும் அல்லது மறுப்பதாலும் அவனது அந்தஸ்தில் எந்தவொரு கூடுதல் குறைவும் ஏற்பட்டுவிடாதோ, அதுபோன்று எவர் மார்க்கத்திற்குள் வந்தாலும் வெளியே போனாலும் இதுதான் சத்தியம்; என்றும் நிலைத்து நிற்கும்.
“நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்’’ என்று மூஸா கூறினார்.
(திருக்குர்ஆன் 14:8)
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
(திருக்குர்ஆன் 3:19)
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
(திருக்குர்ஆன் 3:85)
இஸ்லாம் மூலமாக அல்லாஹ் நமக்கு அருள் புரிந்திருக்கிறான். அவனது பாக்கியங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளான். பலருக்கும் கிடைக்காத நிலையில் நமக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அருட்கொடையைக் குறித்து மறுமையில் நாம் கண்டிப்பாக விசாரிக்கப்படுவோம்.
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
(திருக்குர்ஆன் 102:8)
இதைப் புரிந்து கொண்டு சரியான முறையில் மார்க்கத்தை அறிந்தும், செயல்படுத்தியும் அடுத்தவருக்கு அறிவித்தும் ரஹ்மானிடம் நன்மைகளை அள்ளிக் கொள்ள முனைய வேண்டும். அதன் வளர்ச்சியில் அங்கம் வகிக்க மறந்துவிடக் கூடாது. இல்லாவிடின் என்ன நடக்கும் என்று அல்லாஹ் எச்சரிப்பதை கவனியுங்கள்.
மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 4:133)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 4:54)
உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத் துக்குக் கொண்டு வருவான். (திருக்குர்ஆன் 6:133)
ஏகத்துவத்திற்குள் போதுமான மக்கள் வந்து விட்டார்கள் என்றோ, அல்லது அடுத்தவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்றோ மார்க்கத்தில் வளைந்து கொடுப்பவர்கள் ஒரு கணம் கவனிக்கட்டும்.
சுய வாழ்விலும், சமூக வாழ்விலும் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்குத் தயங்கினால் இந்தப் பொன்னான வாய்ப்பை அல்லாஹ் பிறருக்குக் கொடுத்துவிடுவான. அவர்கள் அதிலே உறுதியாக இருந்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொள்வார்கள். அம்மாதிரியான சந்தர்ப்பம் மீண்டும் நமக்கு வாய்க்குமென எந்தவொரு உத்திரவாதமும் இல்லை.
மார்க்கம் மூலமான இந்தச் சோதனை காலந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் புரிந்து கொள்வதில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுயநலமாக ஒதுங்கிக் கொள்கிறார்கள். சத்தியத்திற்கு உதவி செய்து மறுமைப் பலனைத் தேடிக் கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதில்லை. இது குறித்து நபியவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்த போது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு (வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் மீது கருப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. மிம்பரின் (மேடை) மீது சென்று அமர்ந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைப் போற்றி பிறகு சொன்னார்கள்: பிறகு, மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்) உணவில் உப்பைப் போன்று ஆகிவிடும் அளவிற்கு குறைந்து போய்விடுவார்கள். ஆகவே, ஒருவருக்கு நன்மையளிக்கக் கூடிய, அல்லது தீங்கு செய்யக் கூடிய (அளவிற்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால் அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக் கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3800
இஸ்லாத்திற்கு எதிராக உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் அவை செல்லுபடி ஆகாது. இறுதி வெற்றி சத்தியத்திற்கே கிட்டும். உண்மையை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நீடிக்கும்.
இருப்பினும், இதில் சரியாக இருந்து இதற்காக உதவி செய்யும் மக்கள் அரிதிலும் அரிதாகவே இருப்பார்கள். சொற்பமான மக்களே மார்க்கம் மேலோங்க வேண்டுமென மெனக்கெடுவார்கள்.
தூதரின் திருவாக்கை இன்று கண்முன் பார்க்கவே செய்கிறோம். ஒரு ஊரிலே ஆயிரம் பேர் இருந்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சில நபர்கள் மட்டுமே ஏகத்துவப் பணியில் அக்கறை காட்டுகிறார்கள். மூடநம்பிக்கை, அனாச்சாரங்கள் ஆகியவற்றை ஒழிக்கக் குரல் கொடுக்கிறார்கள்.
இங்ஙனம் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருந்தாலும் சிறு கூட்டம் தான் அல்லாஹ்வின் பாதையில் உறுதியாக இருப்பார்கள் என்பதை நபியவர்கள் மற்றொரு முறை புரிய வைத்துள்ளார்கள்.
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: புகாரி (3640)
‘‘இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையே தான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச் செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (232)
எனவே, படைத்தவனின் வெகுமதியை விரும்பும் மக்கள், மார்க்கம் போற்றும் தூய பணிகளில் சங்கமிக்க வேண்டும். எவர் செய்தாலும் செய்யாவிட்டாலும் தாமாக முன்வந்து அழைப்புப் பணிக்கு இயன்ற ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்கம் வெற்றி வாகை சூட மனதார விரும்பினால் எப்போதும் நபியவர்களை முன்மாதிரியாக ஏற்று வாழ வேண்டும். காரணம், அவர்கள் வழியாக சத்தியம் மோலோங்குவற்கான ஏற்பாட்டினை அல்லாஹ் செய்திருக்கிறான்.
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
(திருக்குர்ஆன் 9:33)
ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
(திருக்குர்ஆன் 48:28)
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(திருக்குர்ஆன் 61:9)
அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளைப் புறக்கணித்து விட்டு, முன்னோர்களை கண்மூடித் தனமாகப் பின்பற்றும் நபர்கள், மார்க்கத்திற்கு மாறு செய்பவர்கள் ஆவர். அதுபோன்று தூதர் இட்ட கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்பவர்கள் வரம்பு மீறியவர்கள் ஆவர்.
இத்தகைய ஆட்கள் இறைவனின் சட்டங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக உபத்திரவம் செய்கிறார்கள். சத்தியத்திற்கு எதிராக அழிச்சாட்டியம் செய்பவர்களின் வேலையை எளிதாக்குகிறார்கள். இவ்வாறு மறுமையை மறந்து, உலக மோகத்தில் மூழ்குவதால் ஏற்படும் மோசமான விளைவு குறித்து நபிகளார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
‘‘உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போன்று ஒவ்வொரு திசையில் இருந்தும் பிற சமுதாயங்கள் உங்களைக் கொன்றுவிட அழைக்கும் காலம் வரும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?’’ என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபியவர்கள், ‘‘அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்து) போய் விடுவீர்கள். உங்கள் எதிரிகளின் (உள்ளங்களில் உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும்; உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்’’ என்று பதிலளித்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’’ என்று கேட்டோம். ‘‘உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)
நூல்: அபூதாவூத் (4297), அஹ்மத் (8713)
எனவே கொள்கைச் சொந்தங்களே! மறுமை வெற்றியை மனதில் கொண்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் பயணத்தைத் தொடருங்கள். மார்க்கத்தின் எழுச்சிக்கு உதவும் வகையில் அனைவருக்கும் ஏதாவதொரு வாய்ப்பு கண்டிப்பாக இருக்கவே செய்யும்.
அதற்கேற்ப உங்களது ஆற்றல்களையும் திறமைகளையும் நல்ல முறையில் பயன்படுத்துங்கள்; உடல் உழைப்பு செலுத்துங்கள்; பொருளாதாரத்தை அள்ளி வழங்குங்கள். மார்க்க ரீதியான வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் விழிப்போடும் துடிப்போடும் செயல்படுங்கள். சத்தியத்தின் எழுச்சியில் இணைந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் அருள்புரிவானாக!
—————————————————————————————————————————————————————————————
நபித்தோழர்களும் மனிதர்களே!
எம்.எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்
“லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண்பிக்க வைக்கும் விதமாக, ஸஹாபாக்களையும் பின்பற்றலாம் என்ற கொள்கையைச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே, ஸஹாபாக்களும் மனிதர்களே! மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை விளக்குவதற்காக நபித்தோழர்களிடம் ஏற்பட்ட சில தவறுகளைக் கடந்த இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
நபிகளாரின் இறப்பிற்குப் பின் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. ஆனால் உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் குழப்பங்கள் மிகுந்து, குழப்பவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து, அக்குழப்பவாதிகளின் கரங்களினாலேயே உஸ்மான் (ரலி) கொல்லப்படும் சூழல் உருவானது.
உஸ்மான் (ரலி)யைக் கொன்றவர்களுக்கு எதிராக அடுத்த கலீஃபாவான அலீ (ரலி) அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவர்களுக்கும் உஸ்மான் (ரலி) கொலையில் பங்குள்ளதோ? போன்ற பல கருத்துக்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்டன.
இதன் விளைவாக ஆட்சிப் பீடத்தில் இருந்த அலீ (ரலி)க்கு எதிரான போர் மூண்டது. இதில் இருபுறம் இருந்ததும் நபித்தோழர்கள். ஒரு புறம் இருந்தது அலீ (ரலி) அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். மறு புறம் இருந்தது ஆயிஷா (ரலி) அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். வேதனைக்குரிய விஷயம் முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்கள், அலீ (ரலி)க்கு எதிரான அணியில் இருந்ததும், அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் தான்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப் போரிட முனைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது. பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கி விட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் “தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒரு போதும் உருப்படாது’’ என்று சொன்னார்கள். இதுதான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்.
நூல்: புகாரி 4425
ஒரு பெண் ஒரு கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பது சரி கிடையாது என்று நபிகளார் குறிப்பிட்டிருந்தும் அவர்களைத் தலைவியாக ஏற்றுக் கொண்டதும் அவர்களை ஆயுதங்களின் குறியாக ஆக்கியதும் ஸஹாபாக்கள் செய்த தவறாகும்.
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு அலீ (ரலி) அவர்களுக்கு உதவி செய்வதற்காக (காலதாமதமாக) போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “எங்கே செல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். “நான் இந்த மனிதருக்கு உதவி செய்யச் செல்கிறேன்’’ என்றேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். ஏனெனில், (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்குத் தான் செல்வார்கள்’’ என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6875
எதிர்த்தரப்பில் இருப்பது காஃபிர்கள் அல்ல, முஸ்லிம்கள் தான் என்று தெரிந்திருந்தும் அவர்களுடன் போரிடச் சென்றது அலீ (ரலி) அவர்களின் தவறாகும் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் அறியலாம்.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் (தமக்கு ஆதரவாக ‘ஜமல்’ போரில் கலந்து கொள்ளும்படி) மக்களை அழைப்பதற்காக அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹஸன் (ரலி) அவர்களையும் ‘கூஃபா’ நகருக்கு அனுப்பி வைத்த போது (மக்களுக்கு) அம்மார் உரையாற்றினார்கள். அப்போது (தமது உரையில்) “நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், ‘நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவைப் பின்பற்றுவதா?’ என உங்களை அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான்’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3772
ஃபாத்திமா(ரலி)
சொர்க்கத்துப் பெண்களின் தலைவி, என்னில் ஒரு பகுதி என்று நபிகளாரால் பாராட்டப்பட்ட நபிகளாரின் நேசத்திற்குரிய மகளான ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபிகளாரின் இறப்பிற்குப்பின் நடந்து கொண்ட விதம் அவர்களும் மனிதர்கள் என்ற வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உணர்த்துகின்றது.
நபிகளாருக்குப் பின் மக்களுக்கு அடுத்த கலீஃபாவாகப் பொறுப்பேற்ற நபிகளாரின் அன்புத் தோழரான அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘நபிகளாரின் சொத்திற்கு யாரும் வாரிசாக ஆக முடியாது, அவர்கள் விட்டுச் செல்பவை அனைத்தும் தர்மம் செய்யப்பட வேண்டும்’ என்ற நபிகளாரின் தெளிவான பிரகடனத்தை எடுத்துக்கூறிய பின்னரும், அதை எடுத்துக்கூறிய ஒரே காரணத்திற்காக, ஃபாத்திமா (ரலி) அவர்கள் தாம் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி)யிடம் பேசாமலேயே இருந்து, அதே நிலையிலேயே மரணித்தும் விட்ட காட்சியை நாம் ஹதீஸ்களில் காண்கின்றோம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்’’ என்று பதில் கூறினார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
இதனால் அபூபக்ர் (ரலி) மீது மன வருத்தம் கொண்டு, இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவரது கணவர் அலீ (ரலி), இரவிலேயே அவரை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை.
நூல்: புகாரி 4240
அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி)
ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குப் பின்னர் ஃபதக் சொத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டிய அலீ மற்றும் அப்பாஸ் (ரலி) அவர்கள்.
மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். நண்பகல் நேரத்தில் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது இல்லத்தில் ஒரு கட்டிலில் விரிப்பு ஏதுமின்றி ஈச்சம் பாயில் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் என்னிடம் (என் பெயரைச் சுருக்கி) “மால்! உங்கள் குலத்தாரிலுள்ள சில குடும்பத்தார் (என்னிடம்) விரைந்து வந்தனர். அவர்களுக்குச் சிறிதளவு நன்கொடைகளை வழங்குமாறு உத்தரவிட்டேன். அதை நீங்கள் பெற்றுச் சென்று, அவர்களிடையே பங்கிட்டுக் கொடுங்கள்’’ என்று கூறினார்கள். நான், “இந்தப் பொறுப்பை வேறெவரிடமாவது நீங்கள் ஒப்படைத்தால் நன்றாக இருக்குமே!’’ என்று சொன்னேன். அதற்கு “மாலே! நீங்களே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள்.
அப்போது யர்ஃபஉ என்பார் வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்) சந்திக்க அனுமதியளிக்கிறீர்களா?’’ என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘ஆம்’ என அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்தனர்.
பிறகு யர்ஃபஉ வந்து, “அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர்களா?’’ என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும், பாவியும், நாணயமற்றவரும், மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்’’ என்று சொன்னார்கள்.
அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன் வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய) அக்குழுவினர், “ஆம்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்குமிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்’’ என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது.)
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் “ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)’’ என்று பதிலளித்தனர்.
பிறகு உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்டார்கள்.
அவ்விருவரும் “ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)’’ என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், “(போரிடாமல் கைப்பற்றப்பட்ட) இந்த ‘ஃபைஉ’ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை’’ (என்று கூறிவிட்டு,) “(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்… உரியது’’ (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.)
தொடர்ந்து “எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்ட பின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டு விட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவுமில்லை. இறுதியாக இந்த (ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு) வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு அக்குழுவினர் “ஆம் (அறிவோம்)’’ என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரரிலி) அவர்களிடமும் “அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “ஆம் (அறிவோம்)’’ என்று பதிலளித்தனர்.
தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறினார்கள். (அச்செல்வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்முடைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தையிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்’ என்று பதிலளித்து (அதைத் தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும், பாவியாகவும், நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையையே உரைத்தார்கள்; நல்ல விதமாகவே நடந்து கொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று, வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான் “நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக்குறுதியளிக்க வேண்டும்’’ என்று நான் கூறினேன். நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?’’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் இருவரும் “ஆம்’’ என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், “பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும் வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)’’ என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 3612
அப்பாஸ் (ரலி):
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “இதைப் பள்ளிவாசலில் பரப்பி வையுங்கள்’’ என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப் பார்க்காமல் தொழுகைக்காகச் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு அந்த செல்வம் நோக்கி வந்து (அதனருகில்) அமர்ந்து கொண்டு ஒருவர் விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தையார்) அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப்போரில் தங்களால் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கின்றேன்’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப் போட்டார்கள்.
பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை இதை எனக்குத் தூக்கிவிடப் பணியுங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (நான் எவரையும் பணிக்கமாட்டேன்)’’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களாவது என் (தோள்) மீது தூக்கிவையுங்கள்’’ என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை (முடியாது)’’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அதிலிருந்து சிறிதைக் கொட்டிவிட்டு பிறகு அதை தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதை தூக்க முடியவில்லை.) எனவே நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கிவிடுமாறு இவர்களில் ஒருவரைப் பணியுங்கள்’’ என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (பணிக்கமாட்டேன்)’’ என்று சொல்லிவிட்டார்கள். “நீங்களாவது என்(தோள்) மீது இதைத் தூக்கி வையுங்கள்’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இல்லை (முடியாது)’’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதிலிருந்து இன்னும் சிறிதைக் கீழே கொட்டிவிட்டு அதைத் தூக்கி தமது தோள்களுக்கிடையில் வைத்துக்கொண்டு நடக்கலானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம் கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இடத்தை விட்டு எழுந்தார்கள்.
நூல்: புகாரி 421
உஸாமா பின் ஸைத் (ரலி):
தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனக்கென ஒரு சொகுசு வாழ்க்கையை ஏற் படுத்திக் கொள்ளாதவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். பொதுச்சொத்தைப் பயன்படுத்துவதிலிருந்து அனைத்து உரிமைகள் விஷயத்திலும் தனக்கு எந்நிலையை உருவாக்கி வைத்திருந்தார்களோ அதே நிலையைத் தான் தன் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். நீதி, நேர்மைக்கு எதிராக யார் பேசினாலும் அது அநியாயமாகவே கருதப்படும். பாச உணர்வை (சென்டிமென்டை) காரணம் காட்டித் தவறு செய்வதற்கு இஸ்லாத்தில் கடுகளவும் அனுமதியில்லை.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:135
நபிகளார் குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு போதும் நடந்ததேயில்லை. மேலும் அவர்களின் குணமே குர்ஆனாகத் தான் இருந்தது. தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்று நபி (ஸல்) அவர்கள் நடக்கவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை ஹதீஸ்களில் நாம் காண்கின்றோம். ஆனால் உஸாமா (ரலி) அவர்களோ நபிகளாரின் விருப்பத்திற்குரியவராக இருக்க, அந்தப் பாசத்தை அடிப்படையாக வைத்து, தாம் பேசுவது நியாயமா? அநியாயமா? என்பதைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் உயர்ந்த குலத்துப் பெண்மணி என்ற ஒரு காரணத்திற்காகப் பரிந்து பேசுவதற்குத் தயாராகிவிட்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்’’ என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி3475
—————————————————————————————————————————————————————————————
மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.
முஸ்லிம்கள் தீர்மானிப்பது நல்லதாகுமா?
الهداية شرح البداية (3/ 239)
قال عليه الصلاة والسلام ما رآه المسلمون حسنا فهو عند الله حسن
முஸ்லிம்கள் எதை நல்லதாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹிதாயா, பாகம் 3 ,பக்கம் 239
இப்படி ஒரு செய்தியை நபிகளார் கூறியதாக ஹிதாயா எனும் ஹனபி மத்ஹபு நூல் பச்சையாகப் புளுகுகிறது.
நபிகளார் இவ்வாறு கூறியதற்கு எந்த ஹதீஸ் நூற்களிலும் ஆதாரம் இல்லை. நாமறிந்தவரை நபி இதைச் சொன்னார்கள் என்பதற்கு ஒரு பலவீனமான செய்தி கூட இல்லை என்பதே உண்மை.
எது நல்லது? எது கெட்டது? என்பதை கற்றுத் தரவே குர்ஆன் அருளப்பட்டது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அல்குர்ஆன் 2:185
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் இறைத்தூதராக அனுப்பியதன் நோக்கமும் கூட எல்லாவற்றிலுமுள்ள நல்லதையும், கெட்டதையும் இனங்காட்டுவதற்கே!
நல்லவற்றைக் கண்டறிந்து அதை நபிகளார் சமுதாயத்திற்கு அனுமதிப்பார்கள். தீயனவற்றைத் தடை செய்வார்கள். இது தான் இறைத்தூதரின் பணி என திருக்குர்ஆன் தெளிவுபடச் சொல்கின்றது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.
அல்குர்ஆன் 7:157
நல்லது கெட்டதைக் குர்ஆன் ஹதீஸ் தான் தீர்மானிக்குமே தவிர முஸ்லிம்கள் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
மேலும் முஸ்லிம்கள் நல்லது என தீர்ப்பளிப்பதால் அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே எனும் இச்செய்தியின் கருத்து ஏற்புடையதல்ல.
எத்தனையோ முஸ்லிம்கள் சினிமா, வட்டி, போன்ற மார்க்கத்தில் பாவம் என்று உறுதி செய்யப்பட்டவைகளை நல்லதாகக் கருதுகிறார்கள்.
அவ்வளவு ஏன் தர்கா வழிபாடு, மவ்லித், தாயத்து போன்ற இணைவைப்புச் செயல்களையும் நல்லதாகக் கருதும் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கின்றனர்.
இந்த முஸ்லிம்கள் இவைகளை நல்லதாகக் கருதியதால் அல்லாஹ்விடத்திலும் இவை நல்லவையாகி விடுமா? இதைச் செய்பவர்கள் அல்லாஹ்விடத்தில் நல்லவர்களாகி விடுவார்களா?
நபி மீது மத்ஹப் விட்டு அடித்த மேற்கண்ட பொய்க்கு மாற்றமாகப் பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் நல்லது என நினைப்பது உண்மையில் கெட்டதாகவும், கெட்டது என தீர்மானிப்பது நல்லவையாகவும் இருக்கும் என திருக்குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது.
உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:216
மனிதன் ஒன்றை நல்லதாக நினைப்பான். ஆனால் அது கெட்டதாக இருக்கும் என இவ்வசனம் சொல்கிறது.
மனித சமுதாயத்திற்கு எது நல்லது, எது கெட்டது என அல்லாஹ்வே அறிவான். மனிதர்கள் சரியாகக் கணிக்க முடியாது என்பது இவ்வசனத்தின் கருத்து.
மேலும் பின்வரும் செய்தி, மனிதர்களின் கணிப்பு தவறாகி விடவே வாய்ப்பு அதிகம் என்பதை சந்தேகமற உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களும், இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.
(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை’’ என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்’’ என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)’’ என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?’’ என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்’’ என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப் படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’’ என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ(ரலி)
நூல்: புகாரி 2898
இப்படியிருக்க முஸ்லிம்கள் எதை நல்லது என தீர்மானிக்கிறார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நல்லதே என நபி சொல்லாத, குர்ஆனுக்கு எதிரான, பிற நபிமொழிகளுக்கும் முரணான கருத்து நபியின் மீது துணிந்து பொய்யாக இட்டுக் கட்டிக் கூறப்படுகிறது.
மத்ஹப் என்றாலே கழிவறை என்றாகி விட்ட போது அதில் நபி மீது பொய் எனும் அசுத்தம் நிறைந்திருப்பதில் வியப்பென்ன உள்ளது?
இப்படி இப்னு மஸ்வூது அவர்கள் தமது கருத்தாகக் கூறியதாக ஆதாரம் உள்ளது. குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணாக அது உள்ளதாலும் இது வஹீ செய்தி அல்ல என்பதாலும் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
குபைப் (ரலி) ஷுஹதாக்களின் தலைவரா?
நபித்தோழர்களில் பலருக்கும் அவர்களின் பண்புகளுக்கேற்ப நபிகளார் பட்டப் பெயர்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்களை சித்தீக் உண்மையாளர் என்றும் (புகாரி 3675)
காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் போர்வாள் எனவும் (3757)
ஃபாத்திமா (ரலி) அவர்களை சொர்க்கத்துப் பெண்களின் தலைவி என வர்ணித்தும் (புகாரி 3624)
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களை ஹவாரிய்யு என்று சிறப்பித்தும் (புகாரி 2847) இதுபோன்ற பல செய்திகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஒரு நபித்தோழரை, நபிகள் நாயகம் இவ்வாறு பட்டப்பெயர் வழங்கி அழைத்தார்கள், சிறப்பித்தார்கள் எனக் குறிப்பிடுவதாக இருந்தால் தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். பொய்யாக, நாமாகக் கற்பனை செய்து நபிகளாரின் பெயரில் கதை விடக்கூடாது; அது மகா பெரிய பாவமாகும்.
மத்ஹபு தான் அப்பாவத்தை துணிந்து செய்யுமே! இதிலும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டத் தவறவில்லை.
குபைப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் ஷஹீத்களின் தலைவர் என்று கூறி சிறப்பித்ததாக ஹிதாயா நூலாசிரியர் கூறுகிறார்.
الهداية شرح البداية (3/ 277)
لأن خبيبا رضي الله عنه صبر على ذلك حتى صلب وسماه رسول الله عليه الصلاة والسلام سيد الشهداء
குபைப் (ரலி) அவர்கள் கொல்லப்படுமளவு துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார்கள். எனவே அவர்களை ஷுஹதாக்களின் தலைவர் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டார்கள்.
ஹிதாயா, பாகம் 3, பக்கம் 277
இதுவும் வழக்கம் போல நூலாசிரியரின் கைவண்ணமே!
குபைப் (ரலி) அவர்கள் சத்தியத்திற்காகக் கொல்லப்படும் அளவு கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தான் கொல்லப்படும் சந்தர்ப்பத்தின் போது கூட இறைவனுக்காக இரண்டு ரக்அத் தொழ விரும்பி அதற்கு அனுமதி கேட்டு, தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
இதைப் பின்வரும் சம்பவத்திலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா’ என்ற) இடத்தில் இருந்த போது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்தனர்.
உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது “இது ‘யஸ்ரிப்’ (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்’’ என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்த போது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்து விட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும், வாக்குறுதியும் தருகிறோம்’’ என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் சாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு’’ என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.
இறுதியில் குபைப், ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும், வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களது அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.’’ என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலை செய்து விட்டனர்.
பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் தஸினா (ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்று விட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ருப் போரின் போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல, அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரையில் கைதியாக இருந்து வந்தார். (கொல்லப்படும் நாள் நெருங்கிய போது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள்.
(அதற்குப் பின் நடந்ததை அப் பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்:
நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்த போது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்று விடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்’’ என்று கூறினார்.
குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.
(பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து) ‘‘அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு’’ என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக – மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்த போது, “இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்’’ என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.)
பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கி யிருப்பேன்’’ என்று கூறினார். அவர் தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார்.
பிறகு “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்’’ என்று (கவிபாடிக்) கூறினார்கள்.
பிறகு, உக்பா பின் ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4086
சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் குபைப் (ரலி) அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக!
இதுவே குபைப் (ரலி) அவர்களின் தியாகத்திற்கும் ஈமானிய உறுதிக்கும் ஆகச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கும் போது. இதைச் சொல்லி குபைப் (ரலி) அவர்களை சமுதாயத்திற்கு நினைவுபடுத்தலாமே! அதை விட்டு ‘ஷுஹதாக்களின் தலைவர் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்’ என இல்லாததை, நபி சொல்லாததை ஏன் நபியின் பெயரால் அள்ளிவிட வேண்டும்?
குபைப் (ரலி) யை உயிர்த்தியாகிகளின் தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டு நபிகள் நாயகம் அழைத்ததாக எந்த ஆதாரப்பூர்வமான குறிப்பும் இல்லை.
நபிகளார் இவ்வாறு அழைத்ததற்கு ஹதீஸ் ஆதாரம் எதுவுமில்லை என்றால் அது பொய் என்று தானே அர்த்தம். ஹிதாயா நூலில் அது தான் பக்கத்திற்குப் பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.