ஏகத்துவம் – அக்டோபர் 2015

தலையங்கம்

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம்  இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது.

விழுப்புரம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோயில் தேர் செல்கின்ற பாதை பற்றி இரு பிரிவினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் தேர் ஓட்டுகிறவர்களும் ஹிந்துக்கள், அதற்குத் தீ வைத்த வர்களும் ஹிந்துக்கள். இது மிகவும் வெட்ககரமானது. கேவலமானது. நமக்குள் இப்படிச் சண்டை போடுவதால் தானே வேற்று மதத்தவர்கள் இதைப் பயன்படுத்தி நம்மவர்களை மதம் மாற்றி வருகிறார்கள்? இப்படித்தான் பல கிராமங்களில் நமது சகோதரர்கள் முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிப் போனார்கள். ஹிந்துக் களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது என்று அதிர்ச்சியான செய்திகள் வந்துள்ளன.

இது கடந்த 11.09.2015 அன்று விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். ஏடு வெளியிட்ட தலையங்கமாகும்.

பொதுவாக அசத்தியத்தில் உள்ள வர்கள், தங்கள் அறியாமைக்குரிய ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த    ஒரு வெட்கமும் இல்லாமல் எல்லோருக்கும் மத்தியில் போட்டு உடைப்பார்கள்.

சிலை வணக்கத்தில் மூழ்கிக் கிடந்த தனது சமுதாயத்தை நோக்கி, இப்ராஹீம் (அலை) அவர்கள் சிந்திக்கத் தூண்டுகின்ற, சிக்கலான சீர்மிகு கேள்விகளைக் கேட்கிறார்கள். அம்மக்கள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல், சிக்குண்டு, உண்மையை ஒப்புக் கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இதைப் போன்று தான்  ஆர்.எஸ்.எஸ். அசத்தியவாதிகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றார்கள்.

நமக்குள் இப்படிச் சண்டை போடுவதால் தானே வேற்று மதத்தவர்கள் இதைப் பயன்படுத்தி நம்மவர்களை மதம் மாற்றி வருகிறார்கள்? இப்படித்தான் பல கிராமங்களில் நமது சகோதரர்கள் முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிப் போனார்கள்.

இதில், “மதம் மாறி வருகின்றார்கள்’ என்ற வாசகத்திற்குப் பதிலாக, “மதம் மாற்றி வருகின்றார்கள்’ என்ற வாசகத்தை வேண்டுமென்றே பயன்படுத்தி உள்ளார்கள்.

உண்மையில் இந்த வார்த்தைப் பயன்பாடு கிறித்தவ அழைப்பாளர் களுக்கு வேண்டுமானால் பொருத்திப் போகும். முஸ்லிம்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை. முஸ்லிம்கள் அப்படிச் செய்திருந்தால் முஸ்லிம் மக்கள் தொகை இமயத்தைத் தொட்டிருக்கும்.

உண்மையில் தீண்டாமை என்ற கொடுமையின் வேதனையை அனுபவித்து, அதிலிருந்து மாற்றுப் பரிகாரமும் மருந்தும் தேடித் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகின்றார்கள்.

முகடு உடைந்து, ஓட்டை விழுந்து, உருக்குலைந்து போன, பழுதடைந்த வீட்டைத்தான் இவர்கள் மார்க்கமாகக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் என்பது ஓர் எஃகுக் கோட்டையாகும். இவர்கள் தங்களது பாழடைந்த வீட்டைச் சரி செய்வதற்குப் பதிலாக இஸ்லாம் எனும் கோட்டையை அடித்து உடைக்க நினைக்கின்றனர்.

ஒரு பக்கம், இஸ்லாம் எனும் வீட்டில் தலித்துகளை ஒண்டவும் அண்டவும் விட மறுக்கிறார்கள். மறுபக்கம், தங்கள் வீட்டிலும் அவர்களைத் தங்கவிட மறுக்கிறார்கள். சேஷ சமுத்திரம் சம்பவம் இந்த அவலத்தைத் தான் படம்பிடித்துக் காட்டுகின்றது.

மேற்கண்ட விஜயபாரதம் தலையங்கத்தில், தீண்டாமை ஒரு பாவம் என்றும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தீண்டாமையை இவர்கள் பாவம் என்று சொல்வது வெறும் உதட்டளவில் தான். உண்மையில், உள்ளத்தளவில் பாவம் என்று சொன்னால் காஞ்சி சங்கராச்சாரியார் கோயிலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை, பூணூல் போடாத ஒருவரை அர்ச்சகராக நியமித்திருக்க வேண்டும். அது கூட வேண்டாம். ஒரு குமாஸ்தாவையாவது நியமிக்கட்டும் பார்க்கலாம்.

இதை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அவர்களால் செய்யவும் முடியாது. காரணம், சாதிய, சனாதன வர்ணாசிரம தர்மத்தை, தீண்டாமையை காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள், “ஷேமகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சேஷ சமுத்திரங்கள் ஷேமகரமானது என்று குறிப்பிடுகின்றார். அதனால் தான் தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தேர் ஓட்டுவதா? என்று தேரையே எரித்துவிட்டார்கள். தேரை மட்டுமல்ல, ஆளையும் எரிப்பதற்கு ஆயத்த மாவார்கள். நல்லவேளையாக அவ்வாறு நடக்கவில்லை.

இங்காவது தேரை மட்டும் எரித்தார்கள். கடந்த காலத்தில் கீழ்வெண்மணியில் ஊரையே எரித்தார்கள். அந்த அளவுக்கு சாதி வெறி அவர்களது தலையில் ஏறியுள்ளது.

கடவுளை வணங்கும் ஆலயத்தில், வழிபாடுகளில் அனைவரும் சமம் என்ற வழிபாட்டு சமத்துவம் மறுக்கப் படுகின்ற அநியாயத்தை சேஷ சமுத்திரம் எடுத்துக் காட்டுகின்றது.

இஸ்லாமிய மார்க்கமோ பள்ளி வாசலுக்குள் வந்து வழிபடுகின்ற மக்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வைக் களைந்தெறிந்து விடுகின்றது. இதற்கு ஒவ்வோர் ஊரிலும் உள்ள பள்ளிவாசல்கள் எடுத்துக்காட்டாகும். உலக அளவில் மக்காவில் உள்ள புனித கஅபா எனும் ஆலயம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அந்த ஆலயத்தைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுகின்றது:

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 22:25

சவூதி மன்னர் முதல் உலகின் எங்கோ ஒரு கடைக்கோடியில் உள்ள ஒரு சாமானியன் வரை அந்த ஆலயத்திற்குள் சரிநிகர் சமமாகி விடுகின்றார். இந்த சமத்துவ உரிமை உலகில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு தீர்வாகவும் திருப்பமாகவும் அமைந்துவிட்டது.

சேஷ சமுத்திரம் மக்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகம் முழுவதிலும் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையான ஷேமம் வேண்டும் என்றால் அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்.

என்னதான் கணக்கெடுப்பை எடுத்துப் போட்டு, “முஸ்லிம்கள் வளர்ந்துவிட்டார்கள்’ என்று பிரச்சாரம் செய்து, இந்துத்துவாவைச் சாராத உண்மை இந்து சமுதாய மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பி விட்டாலும் அது ஒருபோதும் எடுபடப் போவதில்லை. அப்படியே அது ஒருக்கால் எடுபட்டாலும் இந்தியாவை விட்டும் இஸ்லாம் ஒருபோதும் விடுபடப் போவதில்லை.

“பவுத்த மதத்திற்குச் செல்லுங்கள். காரணம் அது இந்து மதத்தின் ஒரு பகுதி தான். ஆனால் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்திற்குப் போகாதீர்கள்’ என்று இந்துத்வா சக்திகள் கூறுகின்றனர்.

எங்களுடைய ஓட்டை வீட்டிலிருந்து இன்னொரு ஓட்டை வீட்டிற்கு வேண்டுமானால் செல்லுங் கள். ஆனால் எஃகுக் கோட்டையான இஸ்லாத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று இவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.

நடிப்பு மன்னன் மோடி, பவுத்த மதத்தின் கோயிலுக்குச் சென்று அதைப் பணிந்து வணங்குவதும், பாராட்டுவதும் இந்த அடிப்படையில் தான்.

இவ்வாறாக, இஸ்லாமியக் கோட்டையை எப்படியாவது உடைத்து விடவேண்டும் என்று பெரும் முயற்சி செய்கின்றனர்.

“இந்துக்களின் சாதிகளுக்கும் பிரிவுகளுக்கும் அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் தான். இந்து மதத்தைக் காக்கும் போராளிகள் கீழ்சாதி மக்கள் என்பதால் அவர்களை, இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்கள் தண்டித்து விட்டனர். முஸ்லிம்களின் ஆட்சியால் தான் இந்துக்களிடம் சாதிகளும் பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவன் அசோக் சின்ஹால் ஒரு நிகழ்ச்சியின் போது அவிழ்த்து விடுகின்றான். செப்டம்பர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவன் மோகன் பகவத் முன்னிலையில் தான் இவ்வாறு புளுகித் தள்ளியுள்ளான்.

சங்பரிவாரங்களின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்குக் காரணம் இந்துக்கள் என்ற பெயரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இஸ்லாத்திற்கும் முஸ்லிம் களுக்கும் எதிராகத் திருப்பி விடுவதற்காகத் தான்.

இந்தியா முழுவதையும் ஆட் கொள்கின்ற அபார ஆற்றல், சக்தி இஸ்லாம் தான். இதைப் புரிந்து கொண்ட சங்பரிவார்கள் இஸ்லாத்தை அழித்துவிட வேண்டும் என்று முழு மூச்சாகச் செயல்படுகின்றனர்.

முஸ்லிம்களின் வாழ்வாதாரமாக அமைந்த மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், கலாச்சார ரீதியிலான தாக்குதல், இன்னபிற இஸ்லாமிய எதிர்ப்பு வேலைகள் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முடக்கிவிட முடியாது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இதற்குப் பதில் சொல்லும் என்பதை இந்தத் தீய சக்திகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்கள் என்னதான் இஸ்லாத் திற்கு எதிராக எரிமலையாகக் குமுறினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.

அண்மையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவின் தலைவர் வீரேந்திர பகோரிய்யா என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளர் வித்யா பூவின் ரவாத் என்பவர் நடத்திய நேர்காணலில், “இஸ்லாத்தில் இணைவதன் மூலமாக எங்களுக்குரிய இடஒதுக்கீட்டு உரிமையை இழந்தாலும் அதை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதப்போவதில்லை’ என்று முழங்கியிருக்கிறார்.

இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாகும். அந்த வளர்ச்சியை இவர்களால் தடுக்க முடியவில்லை என்பதற்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு!

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், “நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள்’ என்ற வழிகெட்ட கருத்தை வெளியிட்டிருந்தது.

இதற்கு ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் எடுத்து வைத்த சில வாதங்களுக்கான விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்.

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள். நாம் சொல்வதை எல்லாம் நேரடியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக, நபிமார்கள் அனைவர்களும் உயிருடன் உள்ளார்கள், கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்கள் எனும் ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸ்களின் உண்மைத்தரம் என்ன? அவை என்ன கருத்தைத் தெரிவிக்கின்றன? என்பதைப் பார்ப்போம்.

இமாம் பைஹகீ அவர்கள் தமது ஹயாதுல் அன்பியா எனும் நூலில் இது தொடர்பாக சில ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

செய்தி: 1

அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் முன் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள்.

ஹயாதுல் அன்பியா, ஹதீஸ் எண்: 4

இந்தச் செய்தி முழுக்க முழுக்க பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தியில் அஹ்மத் பின் அலி அல்ஹசனவிய்யு என்பவர் இடம் பெறுகிறார்.

இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இவர் பெரும் கூட்டத்திடமிருந்து அறிவிக்கின்றார். ஆனால் அல்லாஹ்வை சாட்சியாக்கி சொல்கிறேன். இவர் அவர்களிடம் செவியேற்றதில்லை என்று ஹாகிம் விமர்சித்துள்ளார்.

மீஸானுல் இஃதிதால் 1/121

மொத்தத்தில் இவரது ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது என்றும் ஹாகிம் விமர்சித்துள்ளார்.

லிஸானுல் மீஸான் 1/541

இமாம் முஹம்மத் பின் யூசுஃப் இவரைப் பொய்யர் என்று சாடியுள்ளார்.

ஸியரு அஃலாமிந் நுபலாஃ, 30/49

இது இந்த ஹதீஸில் உள்ள ஒரு குறையாகும்.

அடுத்து, இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா என்பவரும் அறிஞர்களால் கடுமை யாகக் குறை கூறப்பட்டவர் ஆவார்.

இவரை விட நினைவாற்றலில் மோசமானவரை நான் பார்த்ததில்லை என இமாம் ஷுஃபா விமர்சித்துள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல் 1 152

கைஸ் பின் ரபீஃ எனும் பலவீனமான நபரைப் பற்றி இமாம் அபூஹாதம் விமர்சிக்கும் போது, முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலாவை விட கைஸ் தான் எனக்கு விருப்பத்திற்குரியவர்; ஆனால் இருவரது ஹதீஸ்களும் ஆதாரம் கொள்ளப்படாது என்கிறார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், 7/98

இமாம் அஹ்மத், இவர் நினைவாற்றல் மோசமானவர் என்று குறை கூறியுள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல் 7/322

இன்னும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.

எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி இதில் இஸ்மாயீல் பின் தல்ஹா, மற்றும் முஹம்மத் பின் அப்பாஸ் ஆகிய இரு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறிஞர்களால் உறுதி செய்யப் படவில்லை.

எனவே இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

செய்தி: 2

ஹீலூளீனீ ளீகூரீஞூறீலூளீமீ கூகூறீலூடூளுலூ 458 – (1

அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள்.

ஹயாதுல் அன்பியா ஹதீஸ் எண்: 1

இந்தச் செய்தி இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவை முஸ்னது பஸ்ஸார் 6888, முஸ்னது அபீயஃலா 3425, அல்ஃபவாயித் 58, அக்பாரு உஸ்பஹான் பாகம் 6, பக்கம் 316 ஆகிய நூல்களாகும்.

ஹஸன் பின் குதைபாவின் அறிவிப்பு

பஸ்ஸார், அல்ஃபவாயித் மற்றும் ஹயாதுல் அன்பியா ஆகிய நூல்களின் அறிவிப்பில் ஹஸன் பின் குதைபா என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

அல்அஸதீ எனும் அறிஞர் இவரை ஹதீஸ் துறையில் மோசமானவர் என்றும், அலி பின் உமர் என்பவர் இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்படுபவர் என்றும் குறை கூறியுள்ளார்கள்.

தாரீகு பக்தாத் 7/404

இவர் பிரச்சனைக்குரியவராக இல்லை என நான் கருதுகிறேன் என்று இப்னு அதீ அவர்கள் கூறிய கூற்றை எடுத்துக் கூறி, “அவ்வாறில்லை; இவர் (அழிந்து போகக் கூடியவர்) அபாயகரமானவர்’ என்று தஹபீ விமர்சித்துள்ளார்.

அபூஹாதம் இவரை பலவீன மானவர் என்று விமர்சித்துள்ளார்.

இவரிடம் அதிகமான சந்தேகங்கள் உள்ளன என்று உகைலீ குறை கூறியுள்ளார்.

பார்க்க: மீஸானுல் இஃதிததால்,

பாகம் 1, பக்கம்  519

எனவே ஹஸன் பின் குதைபாவை ஆதாரம் கொள்ள இயலாது என்பதால் இவர் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்புகள் பலவீனமானவையாகும்.

இதர அறிவிப்புகள்

அக்பாரு உஸ்பஹானில் பதிவான அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை அறிஞர்களிடம் நிரூபிக்கப்படவில்லை.

(குறைகள் உள்ள பல செய்திகளை ஒன்றிணைத்து அதன் அடிப்படையில்) ஹதீஸைச் சரி காணும் இமாம் அல்பானீ அவர்களும் கூட இவரது நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்.

அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் பற்றி எந்த குறை நிறையையும் இமாம் அபூநுஐம் தனது நூலில் குறிப்பிடவில்லை.

ஸில்ஸிலது ஸஹீஹா 2/120

மேலும் இச்செய்தியில் அலீ பின் மஹ்மூத் பின் மாலிக் இடம் பெறுகிறார். இவரின் நம்பகத் தன்மையையும் எந்த அறிஞரும் உறுதி செய்ததாக நாம் காணவில்லை.

எனவே நம்பகத்தன்மை அறியப் படாத அறிவிப்பாளரின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு பலவீனமாகி விடும்.

இறுதியாக மீதமுள்ளது முஸ்னது அபீயஃலாவின் அறிவிப்பாகும். இதில் அபுல்ஜஹ்ம் அல்அஸ்ரக் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவரை இப்னு ஹிப்பானை தவிரத் வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பானைப் பொறுத்தவரை யாரென்று அறியப்படாத நபரையும் நம்பகமானவர் என்று சான்றளித்து விடுவதால் அவர் மட்டும் தனித்து அளிக்கும் சான்றிதழ் ஏற்கப்படாது. இது ஹதீஸ்கலையில் அறியப்பட்ட விஷயமாகும்.

இப்னு ஹஜர் அவர்கள் இவரை உண்மையாளர். புதிய செய்திகளை அறிவிப்பர் என்று கூறுகிறார்.

இது அவரது நம்பகத் தன்மைக்கான சான்றாக ஆகாது.

எனவே அபீயஃலாவின் அறிவிப்பும் பலவீனமேயாகும்.

இமாம் அல்பானீ அவர்கள் இந்த மூன்றையும் இணைத்து ஒன்று இன்னொன்றுக்கு வலுசேர்க்கின்றது என்ற அடிப்படையில் தான் இந்த செய்தியைச் சரியானது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு பலவீனமான செய்தி இன்னொரு பலவீனமான செய்திக்கு வலு சேர்க்காது. இவ்வாறு எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் முடிவு செய்தால் பல ஆபத்தான, தவறான கொள்கை முடிவுகளை எடுக்க நேரிடும்.

எனவே நபிமார்கள் உயிருடனும், கப்ரில் தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள செய்தி பலவீனமானதாகும்.

மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?

நபிமார்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்பதற்கு மிஃராஜில் நபிகள் நாயகம் இறைத்தூதர்கள் பலரையும் பார்த்த நிகழ்வையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப் பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 4736

இது நபிகள் நாயகம் மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணம் செய்த போது நடந்த நிகழ்வாகும்.

அந்தப் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல இறைத்தூதர்களையும் பார்த்தார்கள்.

நபிகள் நாயகம் மிஃராஜில் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் மிஃராஜில் நபிகள் நாயகம் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தார்கள் என்று விளங்க முடியாது. மாறாக அது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வாகும்.

இறைவன் தனது வல்லமையினால் அவர்களை தன் தூதருக்கு எடுத்துக் காட்டினான். அவ்வளவு தான். மிஃராஜில் இறைவன் எடுத்துக் காட்டிய நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்று வாதிடமுடியாது.  எடுத்துக்காட்டப்படுதல் வேறு. பார்த்தல் என்பது வேறு.

மிஃராஜில் நபிகளார் பார்த்த நிகழ்வுகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன.

தஜ்ஜாலைப் பார்த்தார்கள்

மிஃராஜின் போது நபிகள் நாயகம் இறந்தவர்களை மட்டும் பார்க்க வில்லை. மாறாக உலகில் வெளிப்படாத பலரையும் பார்த்தார்கள். தஜ்ஜாலைப் பார்த்தார்கள் என்றும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை “ஷனூஆகுலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்ட வர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3239

உலகில் இதுவரை தோன்றாத தஜ்ஜாலை எப்படிப் பார்த்தார்கள்? அவன் தான் இதுவரை வெளிப் படவில்லையே? வெளியாகுவதற்கு முன்பே தன் தூதருக்கு இறைவன் எடுத்துக் காட்டியிருக்கிறான். இதுவே நபிகள் நாயகம் பார்த்த காட்சிகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதை உணர்த்துகின்றது.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்

நூல்: புகாரி 3241

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூதர் (ரலி),

நூல்: புகாரி 349

நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்ட தாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் முதல் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஆதமுடைய சந்ததிகள் அனைவரையும் சொர்க்கவாசிகள் – நரகவாசிகள் என இரு அணியாகப் பார்த்தார்கள் என இரண்டாவது ஹதீஸ் தெரிவிக்கின்றது.

அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?

உலகம் அழிக்கப்பட்டு, தீர்ப்பு நாளுக்குப் பிறகு தானே  சொர்க்க வாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் செல்ல முடியும்?

தீர்ப்பு நாளுக்கு முன்னரே நபிகள் நாயகம் எப்படி இந்தக் காட்சியைக் காணமுடிந்தது?

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி என்பது தான் இதற்குப் பதில்.

இறந்தவர்களையும் இறைவன் எடுத்துக்காட்டுவான். இனி வரவிருப் பவர்களையும் எடுத்துக்காட்டுவான். இது இறைவனுக்கு சாத்தியமே.

ஆதம் (அலை) அவர்களிடம் மறுமை நாள் வரையிலும் வரவிருக்கிற சந்ததிகளை வெளிப்படுத்தி எடுத்துக் காட்டியதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

ஆதமுடைய மக்களின் முதுகு களிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

அல்குர்ஆன் 7:172

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.

இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பல காட்சிகளை எடுத்துக் காட்டினான்.

எனவே இறைவன் தன் தூதருக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறுவது அபத்தமானதாகும்.

மேலும் நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்தது அனைத்தும் எடுத்துகாட்டல் தான் என்பதை இன்னும் சில ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.

ஏனெனில் நபிகள் நாயகம் மிஃராஜில் உலகில் உயிருடன் உள்ளவர்களையும் பார்த்தார்கள் என்று ஹதீஸ்களில் காண்கிறோம். மிஃராஜில் அவர்களை நபியவர்கள் பார்த்த அதே நேரத்தில் அவர்கள் உலகிலும் இருந்தார்கள்.

பிலாலைப் பார்த்தார்கள்

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1149

அனஸ் (ரலி) தாயார் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்த வனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, “யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருக் குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையதுஎன்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி 3679

பிலால் (ரலி) அவர்கள் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்களை மிஃராஜில் நபி பார்த்ததினால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா?

உலகில் உள்ள பிலால் தான் அங்கேயும் உலாவினார் என்றால் அதே நேரத்தில் அவர் எப்படி உலகிலும் இருக்க முடியும்?

நபிகள் நாயகம் பிலாலிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது பிலாலுக்கே இந்தத் தகவல் தெரியவில்லையே? நேரடியாக அவரே சொர்க்கத்தில் உலாவியிருந்தால் இது பிலாலுக்குத் தெரியாமல் போகுமா?

பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இது இறைவனின் வல்லமையை உணர்த்தும் செயலாகும்.

பல இடங்களில் மூஸா நபி

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள். (பார்க்க: புகாரி 349)

நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர். (முஸ்லிம் 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.

பல தண்டனைகள்

உலகம் அழிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத் திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. (பர்ஸக் வாழ்க்கையில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்)

ஆனால் நபிகள் நாயகம் மிஃராஜில் நரகத்தில் வழங்கப்படும் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக அந்த ஹதீஸ்களில் வருகிறது.

பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித் தவர், பிறர் மானத்தில் விளையாடியவர் ஆகியோர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்துள்ளார்கள்.

இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.

அறிவிப்பவர் ஸமுரா பின் ஜுன்துப்,

நூல்: புகாரி 1386

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: அபூதாவூத் 4255

இனி தான் உலகம் அழிக்கப் படவிருக்கின்றது. இனி தான் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது. அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் எப்படிப் பார்த்தார்கள்?

நபிகள் நாயகம் கண்ட இக்காட்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, நரகத்தின் தண்டனை எப்படி இருக்கும் என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இப்படி பல காட்சிகளையும், அத்தாட்சிகளையும் நபிகளாருக்குக் காட்டும் போது தான் இறந்து போன இறைத்தூதர்களையும் இறைவன் எடுத்துக் காட்டினான். இதனால் அவர்கள் உலகில் உள்ளதைப் போன்று  உயிருடன் இருக்கிறார்கள் என்பதாக ஆகாது.

எனவே மிஃராஜில் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வை வைத்துக் கொண்டு உலகில் உள்ளதைப் போன்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறான வாதமாகும்.

பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் இல்லையா?

இறந்தவர்கள் அனைவரும் பர்ஸக் வாழ்க்கைக்குள் சென்றுவிடுவதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23 99, 100

ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது. இது தான் பர்ஸக் வாழ்க்கை எனப்படுகிறது.

பர்ஸக் வாழ்க்கையில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் – தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள்.

தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் இருப்பது என்பது இவ்வுலக வாழ்க்கையில் உயிருடன் இருப்பதைப் போன்றதல்ல.

அங்குள்ளவர்கள் இங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள இயலாது.  அந்த அளவில் பலமான திரையொன்று இறைவனால் போடப்படுகிறது. நாம் உணரமுடியாத வகையிலேயே பர்ஸக் எனும் வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2 154

பர்ஸக் வாழ்க்கையில் – கப்ரில் தீயவர் சம்மட்டியால் அடிக்கப் படுவதாகவும் அதனால் கடுமையாக அலறுவதாகவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். (புகாரி 1338)

ஆனால் நாம் மையவாடிக்கு அருகில் இருந்தாலும் அந்தச் சப்தத்தை நம்மால் கேட்க இயலவில்லை. ஏன்?

இறைமறுப்பாளனுக்கு அவரின் மண்ணறையில் நெருப்பாலான ஆடை, விரிப்பு, போர்வை போன்றவை வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அபூதாவூத் 4127)

இப்போது ஒரு காபிரின் கப்ரில் தோண்டிப் பார்த்தால் நரகத்து ஆடை, போர்வை, விரிப்பு போன்றவைகள் இருக்குமா? அவற்றை நம்மால் பார்க்க இயலவில்லையே?

அதே போன்று நல்லவருக்கு சொர்க்கத்தின் விரிப்பு, சொர்க்கத்தின் நறுமணம் வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 17803)

முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்வதற்காகத் தோண்டும் போது இது நாள் வரையிலும் எந்தப் போர்வையும் கிடைத்ததில்லையே?

அப்படி எனில் இறந்தவர்கள் வாழும் பர்ஸக் வாழ்க்கை நம்முடைய புலன்களுக்கு அப்பாலும், நம்மால் அறிந்து கொள்ள முடியாத வகையிலும் உள்ளது என்பதை இது விளக்குகிறது.

பர்ஸக் வாழ்க்கையில் நடை பெறுவதை வைத்து உலகில் சட்டம் சொல்ல இயலாது. அந்த வாழ்க்கை நம்முடைய புலன்களால் அடைந்து கொள்ள முடியாத திரை போடப்பட்ட வாழ்க்கையாகும்.

எனவே அந்த வாழ்க்கையில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நபிமார்கள் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் உள்ளார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்தால் நபிமார்கள் உலகில் உயிருடன் இருந்தால் என்னென்ன செய்ய வேண்டும்? அவற்றைச் செய்கிறார்களா?

மிகக் குறிப்பாக, நபிமார்கள் தம் தூதுப்பணியை எடுத்துரைக்க வேண்டும். அதற்குரிய சான்றுகளை வெளிப்படுத்த வேண்டும். அற்புதங்கள் வழியாக தஃவா செய்ய வேண்டும். இவற்றில் எந்த ஒன்றையும் செய்யாமல் கப்ரில் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?

இறந்து விட்ட ஒவ்வொரு மனிதரும் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் தான் உள்ளனர். அதனால் அவர்களது சொத்தைப் பங்கிடக் கூடாது, அவர்களது மனைவியை இன்னொரு ஆண் திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவோமா? இதிலிருந்தே அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உலகத்தில் இருப்பதை போன்று இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில்லை.

நபிமார்கள் விஷயத்திலும் இவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 27

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்களைப் பார்த்து வருகிறோம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளுக்குப் பாலூட்டுதல், அவர்களை அரவணைத்தல் போன்ற கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அந்தப் பெண்களுக்கும் ஏற்படும் கேடுகளைக் கண்டோம்.

இவைகளெல்லாம் குழந்தையாக இருக்கும்போது ஏற்படும் பாதிப்பு களாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டி கொஞ்சம் வளர்ந்துவிட்டால், குழந்தைகள் சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும். பக்கத்து வீட்டில் நண்பர்கள் பழக்கம் கிடைக்கும். நண்பர்கள் கெட்டப் பழக்க வழக்கங்களை ஊட்டுவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கும். பீடி சிகரெட் குடிக்கிற பழக்கம் உருவாகும். இப்படி எத்தனையோ கெட்ட பண்புகளைப் பிள்ளைகள் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஒரு தாய் அந்தப் பிள்ளையுடன் இருந்து அவனைக் கவனித்து, அவனுக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லி சரியாக வழி நடத்த வேண்டும். குழந்தைகளைப் பொறுத்த வரை பல நேரங்களில் ஒளிந்து இருந்து கள்ளத் தனங்களைக் கற்றுக் கொள்ளும். வேலைக்குப் போகிற தாயினால் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. எப்படி வளர்கிறான் என்பதே தெரியாது.

எனவே குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கும் பெண்கள் வேலைக்குச் செல்வது தடையாக இருக்கிறது. இப்படி பொருளா தாரத்தைப் பெண்கள் தேடுவது குடும்ப அமைப்பையும், சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது என்பதையும் நடைமுறையில் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சந்தேகப்படும் கணவன்

வேலைக்குப் போகும் பெண்கள் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஆரம்பத்தில் ஆண்கள் ஆசைப்படுவார்கள். இவர்கள் நினைப்பதைப் போன்று அவளும் வேலைக்குச் சென்று விடுகிறாள். ஆணோ பெண்ணோ வீட்டுக்குள் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வார்கள். ஆனால் வேலைக்குப் போனால் ஆணோ பெண்ணோ, நல்ல வகையான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டுதான் செல்வார்கள். யாரும் வீட்டுக்குள் உடுத்தியிருந்த ஆடைகளுடனேயே வெளியிலும் வரமாட்டார்கள். ஆண்களை விட பெண்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி நல்ல ஆடைகளை அணிந்து, மேக்அப் செய்து கொண்டு பெண் வெளியில் சென்றால்,  அதனால் கணவனுக்குத் தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படும். இவள் இப்படி ஜோடிப்பதற்குக் காரணம் என்ன? என்று சலனத்துடன் நடப்பான்.

இவன்தான் வேலைக்குப் போகிற பெண் வேண்டும் என்று தேர்வு செய்தான். பிறகு இவனே சந்தேகம் கொள்வான். இதுவும் நடைமுறையில் எத்தனை பேருக்கு நடந்திருக்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு, இப்படி போகிறாளே என்று இவனது மனதில் லேசான சந்தேகம் வரும். பல பேருடன் தனியாக இருக்க வேண்டிய நிலையெல்லாம் ஏற்படுமே? வேலைக்குத்தான் போகிறாளா? வேறு எங்கும் போகிறாளா? இவையெல்லாம் மனதில் தோன்றும்.

நமது நாட்டில் பெங்களுருவில் வேலைக்குச் செல்லும் 750 பெண்களிடம் இதுபற்றி ஓர் ஆய்வு நடத்தினார்கள். நீங்கள் வேலைக்குச் செல்வதினால் உங்களது குடும்பங் களில் நடக்கும் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கேட்கும் போது, ஏன் தான் வேலைக்குச் சென்றோம் என்பது போன்றுதான் உள்ளது.

வேலைக்குப் போகாமலேயே குடும்பப் பெண்களாக நாங்கள் இருப்பதே எங்களுக்கு சிறந்ததாகத் தெரிகிறது என்றனர். இதில் 80 சதம் பெண்கள், எங்களது கணவர்களாலும்,  கணவரது குடும்பத்தினராலும் நாங்கள் கடும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறோம் என்றனர்.

அதாவது, 100 பெண்களில் 80 பெண்கள் கணவன்மார்களால் சந்தேகிக்கப்படுகிறார்கள். 20 பெண்கள் தான் கணவரால் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படாமல் இருக்கிறார்கள். பாதிக்குப் பாதி இருந்தால் கூட அது ஒரு கணக்கில் வரும். 100ல் 80 பெண்களுக்கு இப்படியொரு இழிநிலை என்றால் இதைத் தவிர்க்கத்தான் வேண்டும்.

ஓரிரு சதம் என்றால் ஆண்கள் மீது குற்றம் சுமத்துவதில் நியாயம் இருக்கிறது. 80 சதவிகிதம் பேர் சந்தேகம் கொள்கிறார்கள் எனில், பொருளாதாரம் தேடி பெண்கள் வேலைக்குச் செல்வது பெண்களின் இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயல் தான் என்பதைப் புரிய வேண்டும்.

வருமானத்திற்காகப் பெண்களை வேலைக்கு அனுப்பினாலும் மனைவி மீது பலவிதமான சந்தேகங்களுடன் தான் வாழ்கிறான். யதார்த்தமாக ஒரு நாள் பஸ் வருவதற்குத் தாமதமாகி விடுவதற்கு வாய்ப்புண்டு, புகைவண்டி குறித்த நேரத்தில் வராமல் போகலாம், வருகிற வழியில் மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று முற்றுகையிடலாம், டிராபிக் பிரச்சனைகள் வரலாம்; இப்படியெல்லாம் நடந்து தாமதமாக வருகிற போது சந்தேகத்துடன் கேள்வி கேட்டு துளைத்துவிடுவார்கள். அலுவலகத்தில் கேட்டதற்கு 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் நீயோ 2 மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறாய். தாமதத்திற்கு என்ன காரணம்? எங்கே சென்று சுற்றிவிட்டு வந்துள்ளாய்? இப்படிப் பலவிதமான சந்தேகங்கள் அவனுக்கு ஏற்படுவது இயல்புதான்.

அப்படியெனில் மனைவி சம்பாதிக்கின்ற இந்த அற்பமான காசுக்காக ஏன் மனச்சங்கடத்துடன் வாழ வேண்டும்? நல்ல மனைவியைக் கூட வீண் சந்தேகப்பட்டு குடும்ப சச்சரவுகளை உண்டாக்க வேண்டுமா? இவ்வளவு நடந்தால் கணவன் மனைவி சந்தோஷமாக வாழ முடியுமா? திருமண வாழ்க்கை என்பதே ஆணும் பெண்ணும் சந்தோஷமாக வாழத்தானே! அதற்கே வேட்டு வைக்கிற இந்த வருமானம் தேவையா? என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் சிந்திக்க வேண்டும்.

இப்படியெல்லாம் தேவையற்ற வீண் சச்சரவுகளும் சந்தேகங்களும் வரக் காரணம், குடும்ப அமைப்பின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்ளாமல் இருப்பதினால்தான். எனவே ஆண்கள் தான் பொருளாதாரம் அனைத்திற்கும் பொறுப்பாளி, பெண்களுக்கு இதில் துளியளவுக்குக் கூடப் பொறுப்பில்லை என்ற குடும்ப அமைப்பு விதியை நோக்கி வருவது மட்டும் தான் இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது பெண்பிள்ளைகளை, மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்குச் சம்பாதிக்க முடியாத அளவுக்கு நோய் நொடியில் மாட்டிக் கொண்டால், தந்தைமார்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால், கணவன் இறந்து விட்டு சொத்து சுகங்கள் எதுவும் இல்லையெனில் விதிவிலக்காக நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சிலர் வேலைக்குச் செல்வதைக் குறைகூற முடியாது. கணவனும், ஆண் மக்களும் நன்றாக உழைக்கிற போது, குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளை சுமப்பதற்கு ஆண்கள் பொறுப்பாளியாக இருக்கிற போது, பெண்கள் அவர்களது வருமானத்திற்கேற்ப வாழ்க்கையை நடத்துவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

கணவனால் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்றால், அதற்குள் எப்படி குடும்பத்தை வழிநடத்த முடியுமோ அப்படி நடத்த வேண்டும்; 5 ஆயிரம் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி நடத்த வேண்டும். 10 ஆயிரம் கிடைக்கிறது என்பதால் மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டுமா?

செத்துப் போய்விடுவார் என்ற நிலையில் கணவன் இருந்தால் மனைவியை வேலைக்கு அனுப்பு வதில் எந்தக் குற்றமும் சுமத்த முடியாது. எனவே, இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் குடும்பவியல் அம்சமாகும்.

பாலியல் தொந்தரவுகள்

பெண்கள் வேலைக்குச் செல்வதால் தங்களது கணவன்மார்களாலும், கணவனது குடும்பத்தினராலும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழலுக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள் என்பதோடு இதன் விளைவு நிற்கவில்லை.

அலுவலகத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் வேலை பார்க்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அங்கு வேலை பார்க்கிற சக ஊழியர்களில் ஆண்களின் வக்கிரத்திற்குப் பெண்கள் ஆளாக்கப் படுகின்றனர்.

வேலைக்குச் செல்கிற பெண்கள் நல்ல ஆடை அணிந்து முகப் பூச்சுக்களையெல்லாம் பூசிக் கொண்டுதான் வருவார்கள். இதைப் பார்க்கிற ஆண் ஊழியர்கள் அந்தப் பெண்களிடம் தனது சல்லாபத்தைக் காட்டுவதற்காக, இரட்டை அர்த்தத்தில் பேசுவார்கள்; பொருளை வாங்கும் போது அந்தப் பெண்களின் கையை உரசித் தொடுவதைப் போன்று வாங்குவார்கள்; தேவையற்ற தொந்தரவுகள் கொடுப்பார்கள். இதை நாமாக ஊகித்துச் சொல்லவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆய்வில் இதையும் சேர்த்துத்தான் அந்தப் பெண்கள் கூறினார்கள். சக ஊழியர்களில் 90 சதம் பேர்களால் நாங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறோம் என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பெண்கள்தானே என்று நினைத்துக் கொண்டு பெரும்பாலான ஆண்கள், தவறான சீண்டுதலுக்கு அங்குள்ள பெண்களை ஆளாக்குவார்கள். அவளும் வேலைக்காக இவற்றை யெல்லாம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறாள். இதுவே மேல்மட்ட அதிகாரியாக இருந்தால், கையைப் பிடித்து இழுப்பதையும் சரச விளையாட்டுக்களை வக்கிரமாகச் செய்வதையும் அதையும் தாங்கிக் கொள்கின்ற அளவுக்குப் பெண்கள் இறங்கிச் செல்வதையும் பார்க்கிறோம்.

இதுவெல்லாம் பெரிதாகத் தெரிந்திருந்தால் வேலைக்குப் போய் இருக்கவே மாட்டார்கள். வேலையின் மூலம் சம்பாதிப்பதுதான் பெரிது என்றும் அதுதான் முதல் கடமை என்றும் குடும்ப அமைப்பு, குடும்ப சந்தோஷம் இரண்டாம் பட்சமாகத் தெரிவதால் மேலதிகாரிகளின் சீண்டல்  எல்லாம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.

ஆரம்பத்தில் வெறுப்பு இருந்தாலும் அனுசரிக்க வேண்டும், இல்லை என்றால் வேலை போய் விடும் என்ற மனநிலை காரணமாக, முதலில் விட்டுக் கொடுப்பது, அடுத்தடுத்து பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதைப் போன்று எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். மொத்தத்தில் எல்லாம் போய்விடும். இப்படி, வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்களாலும் மேலுள்ள அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் இந்தப் பெண்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் நமது சென்னையிலேயே நடந்தேறியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மாநகரக் கமிஷனரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், அனைத்து பெண்களும் சொன்ன ஒரேமாதிரியான குற்றச்சாட்டு, வேலைக்குப் போகும் போது பஸ்ஸில், ஆட்டோவில், தெருவில் நடக்கும் போதும், எங்களை வேண்டுமென்றே இடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த இடிமன்னர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்பதுதான். இதையாவது மக்கள் தொகை நெருக்கத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எங்களது சக ஆண் ஊழியர்களாலும், ஆண் முதலாளிகளாலும் பல்வேறு பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ச்சியாக ஆளாக்கப்படுகிறோம், அதற்கு விதிமுறைகளையும் நெறிகளையும் ஏற்படுத்தித் தாருங்கள் என்றும் புகார் கொடுத்தனர்.

இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு பெண்களாகிய நாங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக வேலைக்குச் செல்வதால், எங்களது கணவன்மார்களாலும் எங்களது கணவனது குடும்பத்தினர்களாலும் அதிகமான கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எங்களை குத்திக்காட்டி பேசி இழிவாகப் பார்க்கப்படுகிறோம்; மனதால் காயப்படுத்தப்படுகிறோம் என்று சென்னை கமிஷனரிடம் பெண்கள் தங்களது கருத்துக்களையும் மனக்குமுறல்களையும் புகார்களையும் தெரிவித்திருந்ததை சில ஆண்டு களுக்கு முன்னால் தினத்தந்தி நாளிதழ் ஒரு முழுப் பக்கத்திற்கு செய்தியாக வெளியிட்டிருந்தது.

இவ்வளவு பிரச்சனைகளும் வருவதற்குக் காரணம், குடும்ப அமைப்பைச் சரியாகப் புரியாமல் பெண்கள் வேலைக்குச் செல்வது தான். பணத்திற்காக இத்தனை அநியாயங்களும் நடக்க ஒரு பெண் அனுமதிப்பது மிகவும் தவறான செயல்.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இது ஒரு வகை. இன்னும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை வரும் இதழ்களில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

—————————————————————————————————————————————————————-

மதுவிலக்கின் முன்மாதிரி மக்கா!

எம். ஷம்சுல்லுஹா

அகிலத்தின் நேர்வழிக்குரிய தாகவும், பாக்கியம் பொருந்திய தாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன் 3:96)

இது அல்குர்ஆன் கூறுகின்ற ஓர் அற்புத வசனமாகும். இந்த வசனத்தில் புனிதமிகு கஅபாவை அகிலத்தின் நேர்வழி என்று அழைக்கின்றான்.

உலகத்தில் வாழ்கின்ற கருப்பர், வெள்ளையர் என்ற பல நிறத்தவர் களையும், ஆங்கிலேயர் – அரேபியர் என பல்வேறு மொழியினரையும், ஐரோப்பியர், ஆப்பிரிக்கர் என பல்வேறு நாட்டவர்களையும் ஒரே இடத்தில் அதாவது மக்காவில் ஒன்று கூடச் செய்து தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்காக அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக மாநாடு தான் ஹஜ் ஆகும்.

இந்த வகையில் தீண்டாமை ஒழிப்புக்கு ஒரு தூய முன்மாதிரியாக மக்கா நகரம் அமைந்திருக்கின்றது. தீண்டாமைக்கு மட்டுமல்ல! உலகம் இன்று திண்டாடி, திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்ற மதுவிலக்கிற்கும் ஒரு மாதிரி நகரமாக மக்கா நகரம் திகழ்கின்றது. அதாவது மக்காவை உள்ளடக்கியிருக்கின்ற இஸ்லாமிய நாடான சவூதி அரபியா திகழ்கின்றது.

இதை நாம் சொல்லவில்லை! ஆகஸ்ட் 7, 2015 அன்று வெளியான தி இந்து தமிழ் நாளிதழ் தெரிவிக்கின்ற கருத்தாகும்.

உலகெங்கும் மதுவிலக்கு பெரும் பாலும் தோல்வி அனுபவங்களையே தந்திருக்கிறது. அன்றைய ரஷ்யா 1914-ல் மதுவிலக்கை அமல்படுத்தியது. 1915-ல் ஐஸ்லாந்து, 1916-ல் நார்வே, 1919-ல் பின்லாந்து, 1920-ல் அமெரிக்கா என வரிசையாக மதுவிலக்கை அமல்படுத்தின.

ஆனால், அரபு நாடுகள் நீங்கலாக எங்கும் மதுவை நீண்ட காலத்திற்கு முடக்கிவைக்க முடியவில்லை. ஒரே காரணம் மது வியாபாரத்தில் புரளும் பணம்; அது பின் நின்று இயக்கும் அரசியல்.

அதேசமயம், மதுவிலக்கு அமலிலிருந்த ஆண்டுகளில் இங்கு எல்லாம் மக்களின் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்கள் அபாரமானவை.

இவ்வாறு “மதுவும் மக்களரசியலும்” என்ற தலைப்பில் இதை இந்து நாளிதழ் கட்டுரையாளர் சமஸ் குறிப்பிடுகின்றார்.

மதுவிலக்கு தோற்றமும் மறைவும்

டால்மியாபுரத்தை கள்ளக்குடி என்று மாற்றியதைப் புகழ்ந்து, “கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று சாரண பாஸ்கரன் எழுதிய பாடலை நாகூர் ஹனிபா பாடினார். இப்படிப் பாடியதற்குப் பதிலாக, “கள்ளுக்கடை கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று பாடியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அந்த அளவுக்கு, மண் வாசனையை மட்டுமே அறிந்த மக்களிடம் மது வாசனையை அறிமும் செய்தவர் கருணாநிதி! இதற்கு அவர் கூறிய காரணமே வருவாய் தான்.

1949ல் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் முழுவதுமாக மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது. அந்த மதுவிலக்கை ரத்து செய்து மதுக்கடைகளை 1971ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

இதற்குப் பின்னால் 1974ல் மதுக்கடைகளை மூடினாலும், மதுவால் அடிமையான மக்களின் வாய்களை மூட முடியவில்லை.

அப்போது திமுகவிலிருந்து நீக்கப் பட்ட எம்.ஜி.ஆர்., தான் ஆரம்பித்த அதிமுகவை நிலைநிறுத்துவதற்காக மதுவிலக்கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். அதில் அவர் வெற்றியும் கண்டார். அதிமுகவும் 1977ல் ஆட்சிக்கு வந்தது. தாயின் மீது ஆணை, தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவேன் என்று தாய்மார்களிடம் சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த சத்தியாவின் மகன் எம்.ஜி.ஆர். தனது சத்தியத்தைச் சரியாக மறந்து விட்டு 1981ல் மீண்டும் மதுக்கடைகளைத் திறந்தார்.

இந்த ஆட்சியாளர்கள் மாறி, மாறி மதுக்கடைகளைத் திறப்பதற்கு, கள்ளச்சாராயம், விஷச் சாராய சாவுகள், காவல்துறையில் குவிகின்ற புகார்கள், காவல்துறையிலும் நிர்வாகத் துறையிலும் தலைவிரித்தாடுகின்ற லஞ்ச லாவண்யங்கள், நீதித்துறையில் குவிந்த வழக்குகள் ஆகியவை காரணமாகக் கூறப்பட்டாலும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக வருவாய் தான் முதல் மூலக் காரணமாக அமைந்திருந்தது.

இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த வருவாய் ஒரு லட்சத்து ஐந்து கோடி. இதில் 36,000 கோடி மதுவிலிருந்து கிடைக்கின்றது. அதனால் தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வருவது பற்றிக் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடையில் சசிபெருமாள் மதுவை எதிர்த்துப் போராடுகின்றார். அந்தப் போராட்டம் மரணத்தில் போய் முடிகின்றது. தமிழகமெங்கும் அவரது மரணம் எதிரொலித்தது. இதன் விளைவாக சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்கை அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஓர் அறிவிப்பையும் செய்யாததால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத் திலேயே முடிந்தது.

மதுவினால் எத்தனை பேர் மரணித்தாலும் முதல்வர் ஜெயலலிதா தனது மவுனத்தை ஒருபோதும் கலைக்கப் போவதில்லை. மது விலக்கை அமல்படுத்தப் போவ தில்லை. காரணம், அந்த அளவுக்கு சாராய ஆதாயம் சாம்ராஜ்யத்திற்குத் தேவைப்படுகின்றது.

பாமகவின் மதுவில்லாத மாநிலம்?

ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், அவரது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர், ஒரு சொட்டு மதுவில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப் போகிறோம் என்று முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்துப் பிரச்சாரம் ùச்யது வருகின்றனர். டெல்லியின் கேஜ்ரிவால் பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கணக்குப் போட்டு இவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றார்கள்.

தாயின் மீது ஆணை என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரே தலை கீழாகப் புரண்டு விட்ட வரலாற்றைப் பார்த்தோம். அதனால் இவர்களின் வார்த்தைகளை மக்கள் நம்பத் தயாரில்லை. வன்னிய சாதியை மையமாகக் கொண்டு கட்சி நடத்தும் இவர்கள், தங்கள் கட்சியினர் யாரும் மது அருந்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அளிப்பார்களா?

அத்துடன் இந்தூரில் முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அன்புமணி ராமதாஸ் மாட்டிக் கொண்டு சி.பி.ஐ. அவரை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு சொட்டு மதுவில்லாத, ஒரு துட்டு ஊழலில்லாத மாநிலம் என்ற இவர்களது முழக்கம் வெற்றுக் கோஷம் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ராமதாசும் அன்புமணியும் மதுவிலக்கு, மதுவிலக்கு என்று கூறி ஒரு பலூனை ஊதிப் பெரிதாக்கி வைத்திருந்தனர். சசி பெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மக்களின் மனநிலையைப் பார்த்த திமுக தலைவர் கருணாநிதி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியின் பலூனை வெடிக்க வைத்துவிட்டார். அதனால் அவர்களுடைய மதுவிலக்கு ஆயுதம் சுக்குநூறாக உடைந்து நொறுங்கி விட்டது.

திமுகவின் வாக்குறுதி

மக்களின் போக்கையும் அவர்களின் தேர்தல் வாக்கையும் கவனத்தில் கொண்டு கருணாநிதி தன் பங்கிற்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தார். அவ்வளவு தான். திமுகவில் யார்? யார்? எத்தனை மது ஆலைகளை நடத்துகின்றனர் என்று பாமக மட்டுமல்லாது பாமர மக்களும் பட்டியலிட்டனர். ஐந்து மது ஆலைகளை திமுகவினர் நடத்துகின்றனர். ஆளும் அதிமுக வினர் மூன்று மது ஆலைகளை நடத்துகின்றனர் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அடுத்த ஆட்சி வந்து மதுவிலக்கு அமலாவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுவைக் குடித்து விட்டு 10 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிடுகின்றார்.

திமுக தலைவர் தான் 1971ல் ஏற்கனவே மதுவிலக்கை ரத்துச் செய்தவர்.

1971, ஜூலை 20 அன்று ஒரு மழைக் காலத்தில் சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி அவர்கள் குடை பிடித்துக் கொண்டு கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து, “மது விலக்கை ரத்துச் செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். இருபது நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ராஜாஜி வைத்த கோரிக்கையை கருணாநிதி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இறுதியாக மதுவிலக்கை ரத்துச் செய்து, அதுவே தமிழகத்தில் இன்று வரை மது ஆறாக ஓடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்படிப் பட்ட கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் செய்வேன் என்கிறார். இவரது வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.

மதுவிலக்கைப் பற்றிப் பேசுகின்ற அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதைப்பற்றிப் பேசுவதற்கு அருகதையே இல்லை என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். மது ஆலைகளை திமுக, அதிமுக கட்சியினரே நடத்தி வருவதால் அவர்கள் அதைப்பற்றிப் பேசும் தகுதியை இழந்து விடுகின்றனர். மதுவிலக்கைப் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற வைகோ அன்று திமுகவில் இருக்கும் போது வாய் பொத்தி இருந்தவர்.

விஜயகாந்த் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மதுவிலக்கை அவர் பேசும் போதே மது அருந்தி விட்டு, போதையில் தான் பேசுகின்றார். பா.ம.க.வுக்கும் இதைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. காரணம், தமிழகம் மதுவில் தள்ளாடக் காரணமாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்த கட்சி தான் பா.ம.க.

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறுகின்றீர்கள்; ஆனால் நீங்களே மதுபான ஆலைகளை நடத்துகிறீர்களே! என்று மு.க. ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல், ஆட்சிக்கு வந்ததும் ஆலைகளை மூடி விடுவோம் என்று மழுப்புகின்றார்.

மதுவினால் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று முழங்கும் வைகோவிடம், “உங்கள் மகன் சிகரெட் கம்பெனி ஏஜெண்டாக இருக்கின்றாரே! புகை பிடிப்பது மக்களின் உடல் நலத்தைப் பாதிக்காதா?’ என்று கேட்கும் போது, “அது போதைப் பொருள் அல்ல! அரசு தடை செய்தால் என் மகன் சிகரெட் வியாபாரத்தை விட்டு விடுவான்’ என்று கூறுகின்றார்.

ஆக, மக்கள் நலனில் இவர்களுக்கு அக்கறையில்லை. மக்கள் நலம் பாதிக்கக் கூடாது என்று இவர்கள் விரும்புவார்களானால் அரசு தடை செய்யும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இதற்கும் இஸ்லாம் ஓர் அழகிய வழிமுறையைக் கற்றுத் தருகின்றது.

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை” (என்று ஷுஐப் நபி கூறினார்)

அல்குர்ஆன் 11:88

தமிழகத்தைப் பொறுத்த வரை மதுவிலக்கு அறிமுகம், அமல் என்பதெல்லாம் பசப்பு வார்த்தை தான். இவர்கள் மதுவிலக்கை அமல் செய்ய வேண்டுமானால் இவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே வழி இஸ்லாமிய வழி தான். இஸ்லாம் மதுவை மட்டுமல்ல! மதுவினால் வரும் வருவாயையும் சேர்த்தே தடை செய்கின்றது.

இஸ்லாம் விபச்சாரத்தைத் தடை செய்கின்றது. அத்துடன் அதனால் கிடைக்கும் வருவாயையும் தடை செய்கின்றது.

இஸ்லாம் வட்டியைத் தடை செய்கின்றது. அத்துடன் சேர்த்து அதன் வருவாயை, அதன் மூலம் கிடைக்கும் உணவைத் தடை செய்கின்றது.

இஸ்லாம் பன்றி இறைச்சியைத் தடை செய்கின்றது. அதன் வியாபாரத்தையும் தடை செய்து அதன் மூலம் வரும் வருவாயைத் தடை செய்கிறது.

இந்து நாளிதழின் கட்டுரையாளர் சமஸ் சொல்கின்ற அரபு நாடுகள், அதாவது முஸ்லிம் நாடுகளில் மது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி) அவர்கள், “அவரை அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்துவானாக (சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அவர்களை அல்லாஹ் அழிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறிய வில்லையா?” எனக் கேட்டார்கள்.

நூல்: புகாரி 2223

மறுக்கப்படும் பிரார்த்தனை

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவாஎன்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப் பட்டதாக இருக்கிறது; தடை செய்யப் பட்ட உணவையே அவர் உட் கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2236

குடியைத் தடுக்கும் இறைநம்பிக்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரி, விபச்சாரம் செய்யும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடு கின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது   மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 2475

மறுமை நம்பிக்கை

ஒவ்வொரு முஸ்லிமும் தான் இறந்த பிறகு இன்னோர் உலகம் உள்ளது; அதில் தன்னைப் படைத்த இறைவன் விசாரிப்பான். நன்மை செய்தால் சுவனத்தையும், தீயது செய்தால் நரகத்தையும் அளிப்பான் என்று நம்பியிருக்கின்றான். இந்தப் போதனையை திருக்குர்ஆன் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஊட்டுகின்றது.

மக்காவை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளில் இந்தத் திருக்குர்ஆன் சட்டமே ஆளுகின்றது. அதனால் மதுவிலக்கில் அந்நாடு மகத்தான வெற்றியைக் கண்டிருக் கின்றது. இந்தியாவில் மதுவிலக்கு வெல்ல வேண்டுமா? அது இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போது தான் மதுவிலக்கில் இந்தியா மகத்தான வெற்றி காணும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

அண்ணலாரின் அச்சம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். அவற்றைக் கடந்த இதழில் கண்டோம். அவற்றில் ஒன்று தான் உலக மோகத்தைப் பற்றிய அச்சமாகும்.

உலக மோகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றைக் கடந்த இதழில் கண்டோம். அதுதொடர்பான மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா  தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள்வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணை யாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி (1344)

பனூ ஆமிர் பின் லுஅய்குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்ட வருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸி களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து  நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்என்று நீங்கள் கேள்விப்பட்டிருக் கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்று கூற, அன்சாரிகள், “ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கு மென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப் பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டி யிட்டதைப் போல் நீங்களும் போட்டி யிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது  அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

நூல்: புகாரி (3158)

வழிகேட்டைப் பற்றிய அச்சம்

நாம் மட்டுமல்ல! நம்முடன் இருப்பவர்களும் ஈருலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அவர்களின் பட்டியலிலே நமது குடும்பத்தாரும் இருக்க வேண்டும். நாம் கொள்கைப் பிடிப்போடு சிறந்து விளங்குவதோடு அவர்களும் அவ்வாறிருக்க சீரிய முறையில் செயல்பட வேண்டும்.  மனைவியும் பிள்ளைகளும் நேர்வழியில் நிலைத்து இருக்க வேண்டும்; தடம் புரண்டு விடக் கூடாது என்ற அச்சம் கலந்த அக்கறை நமக்கு இருக்க வேண்டும். இந்த உணர்வானது தலைச் சிறந்த இஸ்லாமிய குடும்பம் தலைத்தோங்க துணை புரியும்.

ஒருவர் தன்னளவில் மட்டுமல்லாது பிறர் விஷயங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் போதிக்கும் மார்க்கமே இஸ்லாம். சுய வாழ்விலும் பொதுவாழ்விலும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.

ஒருவர் சத்தியத்தைத் தழுவுவ தற்கும், அதிலே நிலைப்பதற்கும் தடையாக நாம் இருந்துவிடக் கூடாது. பாவம் செய்வதற்கும் தீங்கிழைப்ப தற்கும் கடுகளவும் ஒத்தழைப்பை கொடுத்து விடக் கூடாது. எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் இடமறிந்து செயல்பட வேண்டும்; பொருளறிந்துப் பேச வேண்டும்.  நமது சொற்கள், செயல் கள்  மூலம் எவரையும் வழிகேட்டில் தள்ளிவிடக் கூடாது. இந்த அச்சம் அழகிய அணுகுமுறைக்கு, பழக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போதுஅவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (இறைநெறியில் நடப்பவர்) என்று சொல்என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, “சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்க வில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம் தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்

நூல்: புகாரி (27) (1478), முஸ்லிம் (236)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அவர்கள் (அதைப் பொறுத்துக்  கொள்ள முடியாமல்) நபி (ஸல்) அவர்களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “எவர், நம்பிக்கை பலவீனப்பட்டுப் போய்விடுவார் என்றும் பொறுமையிழந்து நிலை குலைந்து போய் விடுவார் என்றும் நான் அஞ்சுகின்றேனோ அவருக்குக் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையை யும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டு விடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர் தான் அம்ரு பின் தக்லிப் அவர்களும்என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடைய வர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டுப்) புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை எனக்குத் தருவதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்ப மாட்டேன்.

அறிவிப்பவர்: அம்ரு பின் தக்லிப் (ரலி)

நூல்: புகாரி (3145)

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந் தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறுக் கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது. அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப் பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், “நான் (அறிவேன்)என்றார். நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், “இணைவைப்பு (கோலோச்சி யிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்என்று கூறினார்கள்.

பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்என்றார்கள். மக்கள், “நரக நெருப்பின் வேதனை யிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று கூறினர். பிறகு “மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்என்றார்கள். மக்கள், “மண்ணறையின் வேதனை யிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “குழப்பங்களில் வெளிப்படை யானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்என்று கூறினார்கள். மக்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்தி லிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்என்றார்கள். மக்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்என்று கூறினர்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்: முஸ்லிம் (5502), (5503)

அழிவைப் பற்றிய அச்சம்

அல்லாஹ் அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவன் நாடினால் எந்த நேரத்திலும் எதையும் செய்ய இயலும். நம்மை தண்டிப்பதற்கு அழிப்பதற்கு ஒரு நொடி போதும். இந்த அச்சம் இல்லாமல் இருப்பதாலேயே அநேக மக்கள் ஏக இறைவனை மறுப்பதிலும், அவனுக்கு மாறு செய்துவதிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் மூலம் படுமோசமாக பாதிக்கப்பட்டாலும், பல்லாயிரம் பேர் பலியானாலும் பாவங்களை விட்டு மீளாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். படைத்தவனுக்குப் பயந்து பணிந்து வாழ வேண்டும்.

(சூறாவளிக்) காற்று, மழை மேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப் படுவார்கள்.) மழை பொழிந்து விட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களை விட்டு நீங்கி விடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, “அது என் சமுதாயத்தார் மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது “(இது இறைவனின்) அருள்என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1639)

வாழ்க்கையில் எதைச் செய்தாலும், பார்த்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பயந்து நடுங்குவது அழகல்ல. அதேசமயம் அச்சம் என்பது அறியாமையும் அல்ல. அது மடமையும் அல்ல. அவசியமான நேரத்தில் அர்த்தமுள்ள வகையில் அச்சம் கொள்வதே விவேகம். ஏனெனில், அதன் வாயிலாகவும் அழகிய வாழ்வு அமையும்.

எனவே எந்தெந்த விஷயங்களில் பயந்து நடக்க வேண்டும் என்று நபிகளாரின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் முறைப்படி வாழ்ந்து வெற்றி பெறுவோமாக! அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

எத்தி வைக்கும் யுக்தி

எம்.எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்

ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொண்டிருக் கின்ற நாம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் என்று கூறி அதன் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் எத்தி வைப்பதற்காக நம் கொள்கைச் சொந்தங்கள் படுகின்ற கஷ்ட நஷ்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஏராளம் என்று கூறலாம்.

எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்ற விடுமுறை நாட்களிலும் கூட அவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் குடும்பங்களைப் பிரிந்து, அவர்களிடமிருந்து கிடைக்கின்ற ஆசாபாசங்களை இழந்து எத்தி வைப்பதற்காக கடும் சிரமங்களை மேற்கொள்கின்றனர்.

பொருளாதாரம், குடும்பம், ஓய்வு போன்ற அடிப்படையான எதார்த்த மான இன்பங்களைக் கூட அவர்கள் இழப்பதால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் கடும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

பெருநாள் போன்ற விஷேச தினங்களையும் இவர்களால் மனைவிமார், குழந்தைகள், பெற்றோர் போன்ற குடும்பத்தினருடன் சந்தோஷமாகக் கழிக்க முடிவதில்லை. சந்தோஷமான சூழ்நிலைகளில் உடனிருக்காவிட்டாலும் துக்கமான நேரங்களில் அவர்களுடன் கலந் திருப்பது அவசியமாகும். இதனையும் சில நேரங்களில் அவர்கள் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

பொருளாதார ரீதியில் அவர்கள் மார்க்கத்திற்காக செலவழிக்கின்ற அந்த நேரத்தினால் அந்த நாளில் செய்ய வேண்டிய பொருளாதார நிர்வாக ரீதியிலான வேலைகள் பாதிக்கப் படுகின்றன. இந்த வேலைகளை இவர்களுக்காக மற்றவர்கள் செய்து கொடுப்பதில்லை. அவற்றையும் இவர்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற மற்ற ஒய்வு நேரங்களில் செலவழிக் கின்ற சூழல்கள் ஏற்படுகின்றன.

மேலும் ஒரு ஜும்ஆ பயானாகவோ அல்லது இதர பிரச்சாரங்களாகவோ இருக்கட்டும் இதில் ஏதேனும் ஒன்று அவர்களுக்குச் சாட்டப்பட்டால் அதற்காக அவர்கள் குறிப்பு எடுப்பது என்று ஒரு சொற்பொழிவுக்காக அந்த வாரம் முழுவதும் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இளமைக்குரிய துள்ளல்களை, ஒழுக்கங்கெட்ட செயல்களை ஆட்டம் பாட்டங்களைத் தவிர்த்து அடக்கத்துடன் வீரிய பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் பட்டாளம் ஒரு புறமென்றால், குடும்பம் குட்டிகளுடன் நேரங்களைச் செலவழிக்காமல் எத்தி வைப்பதே முதல் சந்தோஷம் என்று இழக்கின்ற சந்தோஷங்களில் மறுமை இன்பத்தைத் தேடும் ஆண்கள் மறுபுறம்.

இவர்களுக்குத் தாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக கணவனிடம் அனுமதி கேட்டு, குழந்தைகளைப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டு வேலைகளை முன்கூட்டியே முடித்து விட்டு சொற் பொழிவுக்குத் தயாராகி அதற்காகப் பெரும் சிரமங்களை மேற்கொள் கின்றனர் நம் பெண் தாயிக்கள்.

ஆண்களுக்கு பயான் பேசிய தற்குப் பிறகு கிடைக்கின்ற ஒரு சில நிம்மதி கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மாமியாரின் குத்தலான பார்வைக்குப் பயந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட நேரமில்லாமல் உடனடியாக வீட்டிற்கு திரும்பி வீட்டில் உள்ள வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இது அவர்களது சக்திக்கு மீறிய சுமையாகும்.

பொதுவாகவே பெண்கள் தங்களது கணவன்மார்களின் வீடுகளில் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஆண்களைப் போல் கைகளை கழுவி விட்டு சாப்பாட்டில் கைவைக்க முடியாது. இது போன்ற ஒரு சில நேரங்களில் அவ்வாறு நேர்ந்தாலும் கூட அதற்காக அவர்கள் வாங்குகின்ற ஏச்சுப் பேச்சுக்கள் வெளியே சொல்ல முடியாத மானம் போகின்ற விஷயங்களாகும்.

இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் நாம் செய்கின்ற ஏகத்துவ பிரச்சாரங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான முறையில் தான் அமைகின்றதா என்பதை நாம் இத்தருணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே நமது கொள்கைச் சகோதர சகோதரிகள் தங்களது சொற் பொழிவுகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

  1. நமது உரை, நாம் பேசக்கூடிய தலைப்பை மையமாகக் கொண்டு இரத்தினச் சுருக்கமாக அமைய வேண்டும்.

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக் கிழமை) சுருக்கமாகவும், செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, “அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளதுஎன்று கூறியதை நான் கேட்டுள்ளேன்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 1577

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது வந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.

நூல்: முஸ்லிம் 1571

  1. நமது பேச்சு பிறர் விளங்குகின்ற அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும்

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இன்னாரின் தந்தை (அபூ ஹுரைராவைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.) உனக்கு வியப்பூட்ட வில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (தாம் கேட்டதை) என் காதில் விழுமாறு அறிவித்துக் கொண்டிருந்தார். நான் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தேன். நான் என் தஸ்பீஹை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று) விட்டார். நான் அவரைச் சந்தித்திருந்தால் அவரை (ஒன்றன் பின் ஒன்றாக விடுவிடுவென்று நபிமொழிகளை அறிவித்துக் கொண்டே சென்றதை)க் கண்டித்திருப்பேன். நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லைஎன்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: புகாரி 3568

  1. உரை ஆக்ரோஷமாக அமைய வேண்டும்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப் போகின்றனர்என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றி ருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப் பெற்றுள்ளோம்என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்என்று கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் 1573

  1. சொற்பொழிவு அறிவுப் பூர்வமாகவும் கருத்தாழமிக்கதாகவும் அமைய வேண்டும்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக!

அல்குர்ஆன் 4:63

  1. நமது பேச்சு பிறர் இரசிக்கும் வண்ணம் இனிமையாக இருக்க வேண்டும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளதுஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5146

  1. பிற மதத்தினர் தெய்வங்களாக நம்புபவற்றை இழிவுபடுத்தி பேசக் கூடாது:

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

அல்குர்ஆன் 6:108

  1. மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்கள் விரும்புகின்ற (விடுமுறை) தினங் களில் பயான்களை அமைத்துக் கொள்ளவேண்டும்

அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை (அவர்களின் அறிவுரையைக் கேட்பதற்காக) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். அப்போது யஸீத் பின் முஆவியா வந்தார். அப்போது நான், “(யஸீத் அவர்களே!) நீங்கள் அமரவில்லையா?” என்று கேட்டேன். யஸீத், “இல்லை. நான் உள்ளே சென்று உங்கள் தோழரை (இப்னு மஸ்ஊதை) அழைத்து வருகிறேன். அவர் வராவிட்டால், நான் வந்து (உங்களுடன்) அமர்ந்துகொள்கிறேன்என்று கூறினார். (பிறகு உள்ளே சென்றார்.) அதன்பின் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் யஸீதின் கையைப் பிடித்தவராக வெளியே வந்து எங்களிடையே நின்று, “நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலை களைக் கவனித்து) விட்டுவிட்டு எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். இதுவே உங்களிடையே (அறிவுரை கூற) வரவிடாமல் என்னைத் தடுக்கின்றதுஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6411

  1. மக்களுக்கு நாம் பேசுகின்ற பேச்சு எளிதாக விளங்குவதற்கு ஏற்ப அவர்களுக்குப் புரிகின்ற நடைமுறை உதாரணங்களைக் கூறி விளக்கலாம்.
  2. நான் மேடையில் தான் பேசுவேன் என்று சிலரும், மேடை என்றாலே எனக்கு பயம் நான் மேடையில் பேசமாட்டேன் என்று சிலரும் உள்ளனர். இவற்றையும் பேச்சாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலைகளிலும் ஏகத்துவத்தை எத்தி வைப்போம் என்ற இலட்சியத்தை எடுக்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபாமலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்த தில்லைஎன்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன் னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப் பெற்றது.

நூல்: புகாரி 4770

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான், “நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத்தொகையும்) நான் செலுத்திவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம், “நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம்என்று கூறினார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “அவரை வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதுஎன்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலிலுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்த லானார்கள்:), “மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியேஎன்று குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 456

மேற்கண்ட இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள், மக்கள் அனைவரையும் கவனிக்கும் விதமாக உயரமான பகுதியின் மீதும் மிம்பரின் மீது நின்றும் உரையாற்றியுள்ளார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக மக்களோடு மக்களாக இருக்கும் சமயத்திலும் எந்த ஒரு மிம்பரும் இல்லாமல் இயல்பாக மார்க்கத்தை மக்களுக்கு எத்தி வைத்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை “அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாதுஎன்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உம் மனதில் பட்டதைக் கேளும்!என்றார்கள். உடனே அம்மனிதர் “உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணை யாகக் கேட்கிறேன்; அல்லாஹ் தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!என்றார்கள். அடுத்து அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட் கிறேன்; அல்லாஹ் தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வர வேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளை யிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாகஎன்றார்கள். அவர் “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளை யிட்டிருக்கிறானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!என்றார்கள். அவர், “அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ் தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின் றானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!என்றார்கள்.

(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் “நீங்கள் (இறைவனிட மிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்என்று கூறிவிட்டு “நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனா வேன்நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபாஎன்றும் கூறினார்.

நூல்: புகாரி 63

எத்தி வைப்பதில் உள்ள மேலும் சில யுக்திகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 7 ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஆடுவதும் பாடுவதும் அற்பக் காசுக்கு!

எம். ஷம்சுல்லுஹா

என் கண் குளிர்ச்சியே!

இரு பேணுதல் மிக்கவர்களின் சந்ததியே!

அலீயின் குமாரர் ஹுஸைனே!

உதவி தாருங்கள்!

என் கண்களின் தீங்கை என்னை விட்டும் தடுத்து விடுங்கள்

இந்தக் கவிதை வரிகள் ஹுஸைன் மவ்லிதில் பொதிந்து கிடக்கும் நரக நெருப்புப் பொறிகளாகும். காசுக்காக கூவிப் பிழைக்கும் கூட்டம், “ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பல ஆளை குல்லா போடுவதும் காசுக்கு!’ என்பதற்கு ஏற்ப ஆடி, ஆடி மவ்லிதுப் பாடலைப் பாடி சம்பாதிக்கிறார்கள்.

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற் காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித் ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

அல்குர்ஆன் 2:79

இந்த வசனத்திற்கு எடுத்துக் காட்டாக இவர்கள் திகழ்கின்றனர்.

“மவ்லிதுகள் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்கின்ற கவிதைகளாகும்; மவ்லிதுகள் நல்லவர்களின் புகழைப் பாடுகின்ற புகழ் மாலைகளாகும்; இதைக் கூடாது என்று இந்த வஹ்ஹாபிகள் கூறுகின்றனர்’ என்றெல்லாம் மவ்லிதுக்கு பரேலவிகள் வக்காலத்து வாங்குகின்றனர். சில சமயங்களில் மவ்லிதுகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றே கூறுகின்றனர். அத்துடன் இவர்கள் குர்ஆனை அற்ப விலைக்கு விற்கும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களை நரக நெருப்பை சாப்பிடக் கூடியவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

அல்லாஹ் இவர்களிடம் பேசாமல் புறக்கணித்து, அவர்களின் பாவங்களை விட்டு தூய்மைப்படுத்தவும் மறுத்து விடுகின்றான். துன்புறுத்தும் வேதனையையும் அளிக்கின்றான்.

அவர்களே நேர்வழியை விற்று வழிகேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!

அல்குர்ஆன் 2:175

இவ்வாறு நாம் கூறும் போது நாம் மிகைப்படுத்திக் கூறுவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கு மேலே நாம் காட்டியுள்ள கவிதை வரிகள் பதில் சொல்லி விடுகின்றன. இந்த வரிகளில் சிந்துகின்ற விஷக்கருத்துக்கள் தெளிவுபடுத்திவிடுகின்றன.

தமிழக முஸ்லிம்களின் பிரதான கடவுள் முஹ்யித்தீன் ஆவார். காயல்பட்டிணம் போன்ற ஊர்களில் தங்கள் வீட்டு வாசல்களில் “அல்மதத் யா முஹ்யித்தீன் – முஹ்யித்தீனே! உதவி அளிப்பீர்’ என்று எழுதி வைத்திருப்பார்கள். இவையெல்லாம் இவர்களின் வேதங்களான மவ்லிதுக் கிதாபுகளின் வசன வார்த்தைகளே ஆகும்.

இந்தக் கவிஞன் “அல்மதத் –  உதவி அளிப்பீர்’ என்ற வாசகத்தைப் பயன்படுத்துகின்றான். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய உதவியை இவர்கள் தங்கள் கடவுளாகக் கருதும் ஹுஸைனிடம் கேட்கின்றனர்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) “கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.

இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்று வாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்கு றுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந் தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்று வான்என்று கூறினார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான்.

அவ்வாறே நபி (ஸல்) அவர் களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான். (சுருக்கம்)

நூல்: முஸ்லிம் 3309

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவனது உதவியை அல்மதத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும் வேறு வார்த்தைகளில் கேட்கிறார்கள். ஆனால் இதற்குப் பதிலளிக்கும் போது, “மதத்’ என்ற வேர்ச் சொல்லைக் கொண்ட முமித்துக்கும், யுமித்துக்கும் என்ற வார்த்தைகளில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்.

“(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 3:124

இதே ஹதீஸின் பிற்பகுதியில் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் எதிரி ஒருவரின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதைப் பற்றி விவரிக்கும் நபி (ஸல்) அவர்கள், “மதத் – உதவி’

என்ற வார்த்தையைப் பயன் படுத்துகின்றார்கள்.

இந்த வார்த்தை குர்ஆனில் அல்லாஹ் மற்றும் அடியார்களின் உதவியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சில உதவிகளை சில சூழல்களில் அல்லாஹ்விடம் மட்டுமே பெற முடியும். அத்தகைய உதவியை அல்லாஹ் அல்லாதவர்களிடம் இந்தக் கவிஞன் கோருகின்றான் என்பதை இந்தக் கவிதை வரிகளின் பிற்பகுதி எடுத்துரைக்கின்றது.

அந்த அடிப்படையில் அல்லாஹ் விடம் கேட்க வேண்டிய உதவியை அவன் அல்லாதவர்களிடம் கேட்பதால் இங்கே அல்லாஹ்வுக்குப் பகிரங்கமாக இணை வைக்கின்றனர். இந்தக் கவிதை வரிகளைப் பாடுகின்ற இந்த ஆலிம்களும் லெப்பைகளும் அவனுக்குப் பகிரங்கமாக இணை வைக்கின்றனர்.

இந்த அடிப்படையில் இது இந்தக் கவிதையில் இடம் பெற்ற முதல் இணை வைப்பாகும். இப்போது இரண்டாவது இணை வைப்பைப் பார்ப்போம்.

கண்களின் தீங்கை விட்டும்…. என்று இந்தக் கவிஞன் கூறுகின்றான். கண்களின் தீங்கு என்று சொல்லும் போது அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

கண்கள் சில துரோகங்களைச் செய்யும். அதையும் கண்கள் செய்யும் தீங்கு என்ற இந்த வார்த்தை குறிக்கும். அதுபோல் கண்களில் ஏற்படுகின்ற நோய்கள், வலி ஆகியவற்றையும் தீங்கு என்ற வார்த்தை குறிக்கும்.

இவ்விரண்டில் இந்தக் கவிஞன் எதைக் குறித்துப் பேசினாலும் அது கலப்பற்ற இணைவைப்பாகத் தான் ஆகும்.

முதலில் கண்கள் செய்கின்ற துரோகம் என்ற தீங்கைப் பற்றிப் பார்ப்போம்.

சில கட்டங்களில் கைகளால் செய்ய முடியாத காரியத்தை ஒருவர் கண்களால் செய்துவிட முடியும்.

சிலர் தங்கள் எதிரிகளைக் கொலை செய்யுமாறு தங்கள் அடியாட்களுக்கு உத்தரவிடும்போது, அடுத்தவர் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கண் சாடை செய்தே கொலை செய்து விடுகின்றனர்.

பெண்களைக் கண்டதும் அல்லாஹ் போட்டிருக்கும் தடைகளைத் தாண்டி, கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு கண் பார்வைகள் பாய்ந்து விளையாடுகின்றன. இவையெல்லாம் கண்கள் செய்கின்ற துரோகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

கண்கள் செய்கின்ற இந்தத் துரோகத்தைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

அடியார்களின் கண்கள் ஆடுகின்ற இந்த ஆட்டத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான் எனும் போது இந்த ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது தெளிவாகி விடுகின்றது. இதை எப்படி அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்க முடியும்?

பார்வையைப் படைத்த நாயன்

உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறை வாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

அல்குர்ஆன் 32:9

இந்த வசனத்தில் பார்வை, செவிப்புலன் போன்றவற்றை அவனே படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

வானத்திலிருந்தும், பூமியிலி ருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?” என்று கேட்பீராக! அல்லாஹ்என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களாஎன்று நீர் கேட்பீராக!

அல்குர்ஆன் 10:31

செவி, பார்வைகளுக்கு அவனே உரிமையாளன் என்று கூறுகின்றான்.

அதனால் ஒருவனுக்குக் கண்களில் தீங்கு ஏற்படும் போது அந்தத் தீங்கை விட்டும் தடுக்கின்ற ஆற்றலைப் பெற்ற அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஹுஸைன் (ரலி) அவர்களிடம் போய் இந்தக் கவிஞன் கேட்கின்றான் என்றால் இது முழுமையான இணைவைப்பாகும். அதை ஆதரித்து, ஆமோதித்துப் பாடுகின்றவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் காரியத்தையே செய்கின்றார்கள்.

அடுத்து, கண்களின் தீங்கு என்ற கவிஞனின் கருத்து, கண்களில் ஏற்படுகின்ற வலி, நோய் போன்றவற்றைக் குறிக்குமானால் அதுவும் இறைவனுக்கு இணை வைக்கின்ற காரியமேயாகும்.

இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்கின்றான்:

உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

அல்குர்ஆன் 6:46

கண் பார்வை என்பது அல்லாஹ்வின் அளவிட முடியாத மாபெரும் அருட்கொடையாகும். இந்த அருட்கொடையில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அவனிடம் தான் உதவி தேட வேண்டும். அதன் பின் அவன் அனுமதித்தபடி அதற்குரிய சிகிச்சையைச் செய்ய வேண்டும்.

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண்வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது கண்ணில் எச்சில் உமிழ்ந்து அவருக்காக துஆச் செய்கின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, “நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கிறார்கள்என்று சொன்னார்கள். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?” என்று தமக்குள் (“இன்னாரிடம் கொடுப்பார்கள்என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ் லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) “அலீ எங்கே?” என்று நபி  (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அலீ அவர்களுக்குக் கண் வலிஎன்று சொல்லப்பட்டது. ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) துஆ செய்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள்.

நூல்: புகாரி 3009, 4210

ஹுஸைன் (ரலி) அவர்களைக் கடவுளாக்கி, அவர்களிடம் உதவி தேடும் விதமாகத் தான் இந்தக் கவிதை வரிகளை ஓதுகின்றார்கள். அந்த ஹுஸைன் (ரலி) அவர்களின் தந்தை அலீ (ரலி) அவர்களோ தாமாகக் கண்வலியைப் போக்கிக் கொள்ளவில்லை. போக்குகின்ற ஆற்றலும் அவர்களுக்கு இருக்க வில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களும் எச்சில் உமிழ்ந்து விட்டு சும்மா இருக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். கண்வலி ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் ஹுஸைனைக் கடவுளாகச் சித்தரிக்கின்ற இந்தக் கவிஞன், ஹுஸைனிடம் நிவாரணம் கேட்டுப் பிரார்த்தனை செய்கின்றான். இது பகிரங்க இணைவைப்பு இல்லாமல் வேறென்ன?

இதைத் தான் இந்த ஆலிம்கள் உலக ஆதாயத்திற்காக, அற்ப கிரயத்திற்காக ஓதி அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றனர்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

இந்த வசனத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். இவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சமோ, மறுமை சிந்தனையோ கிடையாது.

அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப் பகரமாக வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த மட்டமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவு படுத்தி) உறுதிமொழி எடுக்கப் படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறை வனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

அல்குர்ஆன் 7:169

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்ற சாரார் இவர்கள் தான். அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறி கைமடக்குகள் வாங்கிப் பிழைக்கின்ற ஆசாமிகளாக உள்ளனர். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்

எம்.எஸ். சுலைமான்

கடந்த செப்டம்பர் 2015 அல்ஜன்னத் இதழில் “சரியான நாளில் அரபாவும் பெருநாளும்’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரையின் சாராம்சமே உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை நாம் ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பது தான்.

உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை.

ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும் யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப் பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

ஆதாரம்: 1

உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது உலக அளவில் பரவலாக முஸ்லிம்களிடம் உள்ள சரியான கருத்தாகும். பல இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மை யினராக வாழும் இஸ்லாமிய நாடு அல்லாத ஏனைய நாடுகளிலும்   இதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நமது பதில்

இது தான் அவர்களின் ஆதாரமாம். அதாவது உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குக் குர்ஆனிலும் ஹதீஸிலும் நேரடியான ஆதாரம் இல்லை என்பதால் “அதிகமானவர்கள் இதைப் பின்பற்று கிறார்கள்’ என்பதை ஆதாரமாக முன்னிறுத்துகிறார்கள்.

இதெல்லாம் ஒரு ஆதாரமா?

உலகில் அதிகமான முஸ்லிம்கள் மத்ஹபைத் தான் பின்பற்றுகின்றனர். எனவே எங்கள் கொள்கை தான் சரி என்று மத்ஹபுவாதிகள் கூறுவ தற்கும் இவர்களுக்கும் என்ன வித்தி யாசம்?  ஒரு வித்தியாசமும் இல்லை.

உலகம் முழுவதிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப் படையில் பார்த்தால் முஸ்லிம்களை விட கிறித்தவர்களே பெரும் பான்மையாக உள்ளனர். எனவே கிறித்தவக் கொள்கை தான் சரியானது என்று இவர்கள் கூறுவார்களா?

ஜாக் என்ற அமைப்பு குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என நாம் பலமுறை கூறி வருகிறோம்.

அதை உண்மைப்படுத்தும் விதமாக இவர்களது வாதம் அமைந்துள்ளது.

இவர்கள் குறிப்பிடும் ஆதாரத்திற்கு எதிராக அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 3:116

அதிகமானோர் தங்கள் கருத்தைத் தான் பின்பற்றுகின்றனர்  என்ற இவர்களின் வறட்டு வாதத்திற்கு இந்த இறைவசனம் ஒன்றே போதுமான பதிலாகும்.

ஆதாரம் 2

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் எனும் ஹதீஸையும் உலகப் பிறை ஆதரவாளர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

நமது பதில்

ஒரு ஹதீஸைத் தங்கள் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிடுபவர்கள் அந்த ஹதீஸில் தாங்கள் குறிப்பிடும் கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இந்த ஹதீஸில் இவர்களது வாதத்திற்கு ஆதாரம் உள்ளதா?

நபியின் காலத்தில் பல நாடுகள், பல ஊர்கள் இருந்தன. ஸஹாபாக்கள் சிரியா போன்ற நாடுகளுடன் வியாபாரத் தொடர்புடன் தான் இருந்தார்கள்.

தங்கள் பகுதியில் பிறை தெரியாத போது இது போன்ற நாடுகளில் பிறை தென்பட்டதா என அவர்கள் அறிய முற்பட்டார்களா? அப்படி ஒரு பலவீனமான செய்தியையாவது குறிப்பிட இயலுமா?

உளவுத் துறையைக் கையில் வைத்திருந்த நபியவர்கள் பல தேவைகளுக்காகப் பல நாடுகளுக்கு உளவுப்படையை அனுப்பிவைத்து செய்திகளை அறிந்து கொண்டார்கள்.

அது போன்று பிறை விஷயத்தில் பிற இடங்களில் உள்ள தகவல அறிய சிறு முயற்சியாவது மேற்கொண்டார்களா?

இன்னும் சொல்லப் போனால் நபித்தோழர்களின் காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பிறை வேறுபாடுகள் இருந்திருக்கிறது.

ஒரு இடத்தில் பார்க்கப்பட்ட பிறையை வைத்து இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட அனைத்து பகுதி களிலும் அதைக் கடைப்பிடித்தார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இக்கருத்தை பின்வரும் செய்தி யின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித் தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்என்றார்கள். “முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள் ளார்கள்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம் 1983

இதன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிறைக் கணக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்கலாம் என்று இவர்கள் கூறுவது மக்களை ஏமாற்றுவதற்குத் தானே தவிர அதைப் பின்பற்றுவதற்கு அல்ல.

கட்டுரையின் துவக்கத்தில் பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

கட்டுரையின் முடிவில் அந்தர் பல்டியடித்து அதற்கு நேர்மாறான கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.

நம்மை நோக்கி துல்ஹஜ் மாதம் வருகிறது. அதில்  சிறப்பிற்குரிய அரஃபா, ஈதுல் அழ்ஹா, அய்யாமுல் தஷ்ரீக் ஆகிய நாட்கள் உள்ளன.

அந்த நாட்களை நாம் சரியாக அடைந்து கொள்ள வேண்டும். முக்கியமாக ஹாஜிகள் அரஃ.பாவில் ஒன்று கூடும் நாளில் நாம் அரஃபா நோன்பு நோற்க வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?

உலகில் எங்கு பிறை பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது எங்கள் கொள்கையல்ல. பிறை விஷயத்தில் சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் கொள்கை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கின்றார்கள்.

உலகப் பிறை எனும் அவர்கள் முகமூடி அவர்களாலேயே கிழித்துத் தொங்க விடப்பட்டிருக்கின்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

ஹாஜிகள் அரபாவில் கூடும் நாளில் தான் நாம் அரபா நோன்பு வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதற்கு மனோ இச்சையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

தங்களின் சுய கருத்தை மார்க்கத்தில் திணித்து மக்களின் இறை வழிபாடுகளில் எப்படியெல்லாம் விளையாடுகிறார்கள்? அல்லாஹ்வின் அச்சம் கடுகளவு இருந்தாலும் இப்படிச் செய்யத் துணிவார்களா?

இவர்கள் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக உலகப் பிறை என்று சொல்லிக் கொண்டு சவூதியை மட்டுமே கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக சவூதி அல்லாத மற்ற இடங்களில் பிறை பார்க்கப்பட்டு அந்தத் தகவலின் படி இவர்கள் செயல்பட்டதுண்டா? சவூதி அல்லாத உலகின் மற்ற நாடுகளில் முதல் பிறை தென்படவே செய்யாதா?

இதிலிருந்து  பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அவர்கள் கூறுவது வெற்று வேஷமே என்பது உறுதியாகிறது.

இப்போது அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸிற்கு வருவோம்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள் எனும் ஹதீஸைக் குறிப்பிட்டு எங்கிருந்து பிறை தகவல் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அது எந்த நாடாக இருந்தாலும் எந்த மாநிலமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ஹதீஸிலிருந்து வாதம் வைப்பவர்கள் அந்த ஹதீஸை முழுமையாகக் குறிப்பிட்டு பிறகு தங்கள் வாதத்தை வைக்க வேண்டும்.

ஹதீஸின் ஒரு பகுதியைக் குறிப் பிட்டு மறு பகுதியைத் திட்டமிட்டு மறைத்து  மக்களை முட்டாளாக்க முயற்சிக்கக் கூடாது.

இவர்கள் குறிப்பிடும் ஹதீஸின் பிற்பகுதியை இவர்கள் கூறும் கருத்திற்கு எதிராக இருப்பதால் வசமாக மறைத்து இருக்கிறார்கள்.

அந்த ஹதீஸை முழுமையாகப் போட்டிருந்தால் உலகப் பிறைக்கு எதிராகத்தான் இந்த ஹதீஸ் உள்ளது என்பதை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

இது தான் அவர்கள் குறிப்பிடும் ஹதீஸின் முழுமையான பகுதி.

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

உலகில் எங்காவது பிறை பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை.

உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும் அங்கே பார்த்து உலகிற்கு அறிவிக்கலாம்.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தைத் தான் தருகிறது.

தங்களின் கருத்திற்கு எதிராக ஹதீஸின் பிற்பகுதி இருப்பதால் தான் அதை மறைக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் மார்க்கத்தை, சத்தியத்தை மறைக்கத் தயங்காதவர்கள் என்பது தெளிவு.

சவூதிப் பிறையைக் கடைபிடிக்கும் ஜாக் அமைப்பிற்கு பெரிய இடியாக அமைந்த ஹதீஸ் குரைப் அறிவிக்கும் ஹதீஸாகும். இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “சிரியாவில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்க முடியாது எங்கள் பகுதியில் பார்த்தால் தான் ஏற்றுக் கொள்வோம் நபியவர்கள் எங்களுக்கு இப்படித்தான் கட்டளை யிட்டார்கள் என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள்.

ஆனால் இந்த சவூதி பிறைக் கூட்டம் ஆரம்பத்தில், “குரைப் சாட்சி சொல்ல வரவில்லை; எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது’ என்றார்கள்.

அதற்கு நாம் பதிலடி கொடுத்த பின் இது ஹதீஸே இல்லை எனக்கூறி அடம்பிடித்தார்கள். அதற்கும் நாம் இது ஹதீஸ் தான் என்பதை நிரூபித்த பின் இப்போது குரைப் அவர்கள் சிரியாவில் பார்க்கப் பட்ட பிறையை மாதத்தின் கடைசியில் தான் தெரிவிக்கிறார்கள். மாதத்தின் கடைசியில் தகவல் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதனால் குழப்பம் வரும் என்று ஏதாவது சொல்லி இந்த ஹதீஸை மறுப்பதற்கு பெரும்பாடு படுகிறார்கள்.

மாதத்தின் கடைசியில் தகவல் வந்தால் எதுவுமே செய்ய முடியாதா?

குரைப் கூறிய தகவலின் அடிப்படையில் பெருநாளைத் தீர்மானிக்கலாமே! ஒரு நோன்பு விடுபட்டிருந்தால் அந்த நோன்பை களா செய்யலாமே?

இப்னு அப்பாஸ் அவர்கள் குரைப் பிறை பார்த்த தகவலை மறுக்கவில்லை.

எங்கள் பகுதியில் நீங்கள் பிறை பார்த்த தினத்தில் நாங்கள் பிறை பார்க்கவில்லை. எனவே உங்கள் தகவலை ஏற்கம மாட்டோம் என்று தான் கூறுகிறார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலை தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம்.

அதை இப்னு அப்பாஸ் மறுக்கின்றார் என்றால் தொலை தூரத்தில் பார்க்கப்பட்ட பிறைத் தகவலை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

குர்ஆன், ஹதீஸைப் பெயரளவில் மட்டும் வைத்துக் கொண்டு, நபித்தோழர்களின் கருத்தும் மார்க்கம் என்ற கொள்கையைப் பின்பற்றி வந்த ஜாக் அமைப்பு தற்போது, பெரும்பான்மையைப் பின்பற்றலாம் என்ற அளவுக்கு இறங்கியுள்ளது.

குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளை விட்டு விலகி விட்டால் தங்கள் மனோ இச்சை எதையெல்லாம் மார்க்கம் என்று கூறுகின்றதோ அதையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்கு ஜாக் உதாரணமாக அமைந்துள்ளது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்        தொடர்: 34

அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4769

பின்னால் நடக்கக் கூடியதை முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம் நபிமார்களோடு முடிந்து விட்டது. இந்த உம்மத்தில் யாருக்கும் அவ்வாறு கிடையாது. இதை இறைவன் தந்த அருட்கொடை என்று கூடச் சொல்லலாம்.

இந்தச் செய்தியை மையமாக வைத்து  உமர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக ஒரு செய்தியையும் சொல்வார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மதினாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, ஈரான் நாட்டிற்குப் போருக்காக அனுப்பியிருந்த படை யின் தளபதி ஸாரியா மற்றும் அவரது படையினரை அந்த மலையின் பின் பகுதியில் இருந்து ஒரு படை தாக்க வருவதை  மதினாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பார்த்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் ஸாரியா! ஸாரியா! என்று சப்தமிட்டார்கள். மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களிடத்தில் இதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து ஸாரியாவும் அவரது படையினரும் போரை முடித்து விட்டு திரும்பி வந்த பிறகு மக்கள் அவரிடம் சென்று விசாரித்து தெரிந்து கொண்டார்கள்.

இப்படி ஒரு செய்தியைக் கூறி உமர் (ரலி) அவர்களுக்கு மறைவான ஞானத்தை அல்லாஹ் வழங்கி சிறப்பித்திருப்பதாகவும் கூறுவார்கள்.

மேற்கண்ட செய்தி பலவீன மானதாகும். இந்தச் செய்தி தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் அய்யூப் பின் ஹூத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் புகாரி, நஸாயி, அபூஹாத்தம், பைஹகீ, அஹ்மது இப்னு ஹம்பல், தாரகுத்னி, அபூதாவூத் ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் இதே செய்தியை லைஸ் என்பவர் அம்ரு இப்னு ஹாரிஸ் வழியாக அறிவிக்கிறார். ஆனால் இவர்கள் இவருடைக்குமிடையில் சுமார் 124 வருடங்கள் இடைவெளி இருக்கின்றது. இத்தனை வருடங்கள் இடைவெளி இருக்கும் போது இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.

எனவே இந்தச் செய்தியும் பலவீனமானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்ததாக, அவ்லியாக்களுக்கு சக்தி உண்டு என்பதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

நூல்: புகாரி 6502

இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக் கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்வார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது பாதுஷா,  உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்று சொல்லி மக்களை வழிகெடுப்பதைப் பார்க்கலாம்.

நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த ஹதீஸை நாம் அதில் சொல்லப்பட்டதைப் போன்று நேரடியாகத்தான் புரிந்து கொள்வதா?

நம்முடைய கை அல்லாஹ்வுடைய  கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப் பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கி றார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இறந்த பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டிருக்கின்றது. மேலும் அவ்லியாக்களுக்கு வாரிசு (பிள்ளைகள்) இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொத்துக்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கு மனைவியும் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இறந்து போனது அல்லாஹ்வா?

இந்த ஹதீஸைப் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனை இருக்கிறது. சாதாரண மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ் வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல் வது என்பது ஒருவகை இருக்கிறது. நேரடியாகப் புரிந்து கொள்வது என்றும் ஒருவகை இருக்கின்றது.

எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக் கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?

இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதுபோன்று, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள ஒன்று தான், நாம் ஒருவரை இவர் இன்னாரின் வலது கையாகச் செயல்படுகிறார் என்று சொல்வதாகும். உண்மையில் அவர் அவரின் வலது கையா? அவருக்கு என்ன வலது கை இல்லாமலா இருக்கிறது?

இதை நாம் எப்படி விளங்கிக் கொள்வோம். நாம் நமது பெரும் பாலான காரியத்தை வலது கை மூலமாகத்தான் நிறைவேற்றுகின்றோம். எவ்வாறு நமக்கு வலது கை முக்கியமானதாக இருக்கின்றதோ அதை போன்று அந்த மனிதரும் வலது கையாகச் செயல்படுகிறார் என்று தான் நாம் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்