ஏகத்துவம் – அக்டோபர் 2014

தலையங்கம்

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எதுஎனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.

ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமானஅல்லது “அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீரா எனும் ஊரைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறதுஎன்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள். – நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன். – நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மைதான்)என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கை நிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.

நூல்: புகாரி 3595

நீங்கள் படித்த இந்த நபிமொழி தெரிவிப்பது என்ன? வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு பெண் வெளியூர் சென்று விட்டு, பத்திரமாக வீடு திரும்புகின்ற பாதுகாப்பு தான் இஸ்லாம் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 11

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய பதிலாகும்.

“பிற முஸ்லிமுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “பிற முஸ்லிம்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற முஸ்லிம்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்வதால் பிற மதத்தவருக்கு ஒரு முஸ்லிம் துன்பம் தரலாம் என்று இதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதியில் இதைக் கூறுவதால் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குத் துன்பம் தரக் கூடாது என்று கூறுகின்றார்கள். பிற மதத்தவருடன் கலந்து வாழ்கின்ற பகுதிகளில் யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்பது தான் இதன் பொருள். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: திர்மிதி 2551

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.

இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

போரா? சமாதானமா? என்று வந்தால் சாந்தியும் சமாதானமும் நிறைந்த அந்த இறைவன் சமாதானத்தையே முன்னிறுத்துகின்றான்.

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:61

இவையெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் அமைதியைத் தனது கொள்கையாகவும் செயல்திட்டமாகவும் கொண்டிருக்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. இதைத் தான் வல்ல இறைவனும் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.

அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!

இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!

இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.

பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதை முஸ்லிமல்லாத மக்களுக்குத் தெளிவாக உணர்த்திடவே அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகின்றது.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

அல்குர்ஆன் 5:32

இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

—————————————————————————————————————————————————————-

போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான, அராஜகமான செயல்களைத் தடுக்கும்.

இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதன் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். இஸ்லாம் தீவிரவாத்தைப் போதிக்கிறது; அதை ஆதரிக்கிறது; அதைப் பரப்புகிறது என்று நினைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாகக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இருக்கும் போர் சம்பந்தமான செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இத்தகைய மக்கள், போர் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் ஒன்று சேர்த்து பார்த்தார்கள் எனில், தங்களது கருத்து தவறு என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள்.

காரணம், போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, போரில் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதை நாம் மறுக்கவில்லை. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே, போர் குறித்து மார்க்கம் வரையறுத்து இருக்கும் சட்டங்களைப் பார்ப்போம்.

போர் செய்ய அரசாங்கம் அவசியம்

போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லைஎன்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன் 2:246, 247)

இவ்வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.

அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.

இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

ஆரம்ப காலத்தில் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளமான துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது, உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்டவர்களை வைத்து போர்ப் பிரகடனத்தை அறிவிக்கவில்லை. மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து தமது தலைமயிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகே போர்  நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதைச் சரியாக விளங்காமல் செயல்படும் ஒரு சில முஸ்லிம்களின் செயல்களால், இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் போர் செய்யத் தூண்டுகிறது என்று பிறமத மக்கள் தவறாகக் கருதி விடுகிறார்கள்.

போருக்கான படைபலம்

முஸ்லிம்களை வழிநடத்தும் அராசங்கம் இருந்தாலும், போர் செய்வதற்கான முழு அனுமதி இருப்பதாக நினைத்துவிடக் கூடாது. எதிரிகள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்தத் தொகையில் பாதியளவில் முஸ்லிம்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், போர் செய்யப் புறப்படக்கூடாது.

நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 8:65, 66)

ஆரம்பத்தில் எதிரிகளுடைய எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்யலாம் என்று அனுமதி இருந்தது. பிறகு மனிதர்களுக்கு இருக்கும் பலவீனமான நிலைகளைக் கருத்தில் கொண்டு, எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையைப் பிறப்பித்து விட்டான். இதற்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இதை விளங்கிக் கொண்டால், சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்களில் ஒரு சிலர், பெரும் தொகையில் இருக்கும் எதிரிகளுக்கு எதிராக ஆவேசப்பட்டு அவசரப்பட்டு செயல்படுவது இறைக் கட்டளைக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போருக்கு வருவோருடன் மட்டுமே போர்

ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எதிரியாக இருக்கும் நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் பாதியை விட அதிகமாக இருக்கிறார்கள். உடனே போர் செய்ய அனுமதி இருக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. காரணம், எதிரிகள் நம்முடன் போர் செய்வதற்காகப் படை திரண்டு வரும்போது மட்டுமே எதிர்த்துத் தாக்கி, போர் செய்ய மார்க்கம் அனுமதி அளிக்கிறது. இதற்கு மாற்றமாக, நாமாக தேடிச் சென்று போரைத் துவங்கக்கூடாது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 2:190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

(திருக்குர்ஆன் 9:13)

போர் செய்யுங்கள், கொல்லுங்கள், வெட்டுங்கள், போர்க் கருவிகளை திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆனில் சொல்வதெல்லாம், போர் செய்வதற்கு வலிந்து வருபவர்களை எதிர்த்துப் போரிடும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள். சத்தியத்திற்கு எதிராகப் படை திரண்டு வருபவர்களை எதிர்கொள்வதற்கான ஆணைகள், ஆலோசனைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“இஸ்லாமிய ஆட்சி அமைப்பது நமது கடமை; அதற்காக ஜிஹாத் செய்ய வேண்டும்’ என்று கூறிக் கொண்டு ஒரு சில முஸ்லிம்கள், எந்த விதத்திலும் நமக்குத் தொல்லை தராமல் அமைதியாக இருக்கும் மக்களுக்கு எதிராகச் செயல்படுவது, அவர்களைத் தேடிச் சென்று தாக்குவது முற்றிலும் குற்றம். இது மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாததன் அடையாளம் என்பதே உண்மை.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலையிட்டு, பிறகு அதற்குள் அத்துமீறி நுழைந்து போர் செய்யும் நாடுகளை இன்றைய காலகட்டத்தில் நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறின்றி, வலிந்து போருக்கு வருவோருடன் மட்டுமே போர் என்ற இஸ்லாத்தின் கோட்பாடு பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாதிக்கப்படும் போது போர்

ஒருவர் நம்மைத் தாக்குகிறார், அவரிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அவரை எதிர்த்துத் தாக்குவதற்கு அனுமதி இருக்கிறது. இது உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையிலும் தவறாகாது.

இதுபோன்று அநியாயமான முறையில் ஒருவர் மற்றொருவரைத் தாக்குகிறார்; அவரை அடிக்கிறார்; உதைக்கிறார். இப்போது பாதிக்கப்படும் மனிதருக்கு உதவி செய்வதை, வரம்பு மீறும் நபரைத் தடுப்பதை யாரும் குற்றம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த வகையில் தான் இஸ்லாமும் போருக்கு அனுமதியைக் கொடுக்கிறது.

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

(திருக்குர்ஆன் 4:75)

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். “எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

(திருக்குர்ஆன் 22:39, 40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும் உழைத்தார்கள்.

இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமாதானத்தை ஏற்க வேண்டும்

சத்திய மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும்; சத்தியவாதிகளான முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் என்று படை திரண்டு வருகிறார்கள். இஸ்லாம் அனுமதி அளித்தபடி அவர்களை எதிர்த்து போர் நடைபெறுகிறது.

இந்நிலையில் எதிரிகள் போரிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்தால், சமாதானத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது. போரிடுவதை நிறுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.

(திருக்குர்ஆன் 2:192, 193)

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 8:61)

உயிர் இழப்புகளும் பொருளாதார சேதமும் இல்லாமல் சமுதாயத்தில் சுமூகமான சூழ்நிலை தோன்றுவதையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும். மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம், இஸ்லாம் என்பது அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுநலம் நாடும் மார்க்கம்.

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன் பக்கம் மற்ற மக்களையும் அழைக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, பிறமத மக்களை அழைப்பது மட்டுமே முஸ்லிம்கள் மீது கடமையே தவிர, அவர்களைக் கட்டாயம் செய்வதற்கு, நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தைத் திணிப்பதற்கு மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை.

இப்படி இருக்கும்போது, இஸ்லாத்தைப் பரப்புவதற்காக, அதன் கொள்கையை, கருத்துக்களைப் பிற மக்கள் மீது திணிப்பதற்காகப் போர் செய்ய இஸ்லாம் தூண்டுமா? இதை ஆதரிக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். அடுத்த நொடியே இதை இஸ்லாம் அறவே அனுமதிக்காது என்று நமது மனதும் நாவும் சொல்லும். இதுவே நிதர்சனம்.

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

(திருக்குர்ஆன் 10:99)

ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்குஎனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 109; 1-6)

முன்சென்ற இறை வசனங்களை மெய்ப்படுத்தும் வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சி செய்தார்கள். அதனால்தான் யூதர்கள், கிறித்தவர்கள் என்று ஏராளமான பிறமத மக்களும் நபிகளாரின் ஆட்சிக்கு உடன்பட்டு இஸ்லாமிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

போரில் வரம்பு மீறக் கூடாது

போரின் போது எதிரிகளை, எதிரிகளைச் சார்ந்தவர்களை, எதிரிகள் இருக்கும் இடங்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாத அளவிற்கு எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் எதிரிகளிடம் நடந்து கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் போர்க்களத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்கிறது. போர் செய்வதற்கு வந்த எதிரிகளைத் தவிர்த்து பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் போன்ற போரில் பங்கெடுக்காமல் இருப்பவர்களைக் கொல்லக் கூடாது என்று சொல்கிறது. இன்னும் ஏன்? எதிரிகள் நாட்டில் இருக்கும் மத குருமார்களைக் கொல்லக்  கூடாது என்றும் சொல்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் போர்க்களங்களின் போதுகூட வரம்பு மீறிவிடக்கூடாது என்று போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

(நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

“பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்”

(புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: புரைதா (ரலி),

நூல்: முஸ்லிம்.

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள்.

(நூல்: புஹாரி 2474)

புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ, அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.

நூல்: முஸ்லிம் 3566

யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுத மாட்டேன்என்று கூறி பின்வருமாறு அவருக்குப் பதில் எழுதினார்கள்): நீர் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்து கொண்டார்களா?” எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச் செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.

நூல்: முஸ்லிம் 3700

பொதுவாக இஸ்லாம், எந்த இக்கட்டான நேரத்திலும் எடுத்த எடுப்பிலேயே போரைத் தீர்வாக முன்வைக்கவில்லை. இறுதி முடிவாகத்தான் அனுமதி கொடுக்கிறது.

இஸ்லாம் கூறும் போர் நெறிமுறைகளுக்கும், இன்று நடக்கும் போர் நடைமுறைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. இன்று நடக்கும் போர்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்று பலரும் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள். பொருளாதாரம் சுருட்டப்படுகின்றன; வளங்கள் சூறையாடப்படுகின்றன. நாடும் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கப்படுகிறது. இதன் மோசமான, கோரமான விளைவுகள் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன.

இன்று நடக்கும் போர் முறைகளையும் நோக்கங்களையும் இஸ்லாம் அறவே ஆதரிக்கவில்லை. இத்தகைய காரியங்களை முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்கள் செய்தாலும் சரியே. இதற்குக் காரணம், இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, மாறாக அதை எப்போதும் எதிர்க்கிறது என்பதே! இதை முஸ்லிம்களும் பிற மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

பொதுவாக இஸ்லாம் என்றால் வன்முறையைத் தூண்டும் மார்க்கம், மற்றவர்களை வலிய வம்புக்கு இழுக்கும் மார்க்கம், சண்டைக்கும், சச்சரவுக்கும் பெயர் போன மார்க்கம் என்ற தப்பும் தவறுமான ஒரு முத்திரை திட்டமிட்டு இஸ்லாத்திற்கு எதிராகக் குத்தப்படுகின்றது. திட்டமிட்டே, வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிராக இந்தப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

உண்மையில் சண்டையா? சமாதானமா? என்ற நிலை ஏற்படுகின்ற போது இஸ்லாம் அமைதிக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இது வெறும் ஊகமல்ல! உண்மை நிகழ்வும் நிலவரமும் ஆகும். இதற்கான ஆதாரங்களைப் பல்வேறு தலைப்புகளில் இந்த இதழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மேலும் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார். “நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், “நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லைஎன்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 18152

உஸ்மானை, குறைஷிகள் தடுத்து வைத்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள்.

பொதுவாகவே அன்றைய காலத்தில் தூது செல்பவர்களைக் கொலை செய்யும் வழக்கம் இல்லை. அதை ஒரு மரபாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த மரபுக்கு மாற்றமாக மக்கா குறைஷிகள் நடந்து விட்டார்கள் என்பது முஸ்லிம்களிடம் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். தங்கள் உயிர்களை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கவும் முன்வந்தார்கள்.

பைஅத் ரிள்வான்

நபித்தோழர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கையும் செய்தனர்.

ஹுதைபிய்யா தினத்தில் என்ன விவகாரத்தின் மீது நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர்கள்?’ என்று ஸலமா பின் அக்வஃ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “மரணத்தின் மீது உடன்படிக்கை செய்தோம்என்று பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஸீத் பின் அபீஉபைத், நூல்: முஸ்லிம் 3462

உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வந்த விவகாரத்தில் தங்களுடைய உயிர்களை அர்ப்பணம் செய்ய முன்வந்த தியாகத்தை இந்தச் செய்தி தெரிவிக்கின்றது. அல்லாஹ்வும் நபித்தோழர்களின் இந்த தியாகத்தையும், தங்களது உயிர்களை அர்ப்பணிப்பதாகச் செய்த உடன்படிக்கையையும் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றான்.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்த அந்த உடன்படிக்கையை, தன்னிடம் செய்த உடன்படிக்கை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் தான் திருப்திப்பட்டுக் கொண்டதாகவும் இறைவன் கூறுகின்றான். அதனால் இந்த உடன்படிக்கைக்கு பைஅத்துர் ரிள்வான் (இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்ற உடன்படிக்கை) என்று பெயர் வழங்கப்படுகின்றது.

மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகத் தான் முஸ்லிம்கள் வந்தனர். ஆனால் இடையில் அவர்களது பயணத்தில் இப்படி ஒரு இனம்புரியாத திருப்பம் ஏற்பட்டு அது ஒரு போராக மூளப் பார்த்தது. ஆனால் பின்னர் உஸ்மான் (ரலி) கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சமாதான முயற்சிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குறைஷிகளின் முதல் நல்லெண்ணத் தூதராக வந்த பிஷ்ர் பின் சுஃப்யான் அல்கஃபி என்பார் உஸ்ஃபான் என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, “குறைஷிகள் நீங்கள் வருவதைத் தெரிந்து கொண்டு தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வெளியே கிளம்பி வந்துவிட்டார்கள். வலுக்கட்டாயமாக, முஹம்மது மக்காவிற்கு வருவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தில் காலித் பின் வலீத் தனது குதிரைப் படையுடன் முன்னரே வந்து விட்டார்” என்று கூறினார். காலித் பின் வலீத் அப்போது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் படை திரட்டி வந்திருந்தார்.

போர்ப் பயணம் அல்ல! புனிதப் பயணமே!

நபி (ஸல்) அவர்களுக்குப் போர் செய்வது தான் நோக்கம் என்றிருக்குமானால் குதிரைப் படையுடன் நின்றிருந்த காலித் பின் வலீதிடம் தமது கைவரிசையைக் காட்டியிருப்பார்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் “கமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார்.

நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் (“மிரார்’ என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) “ஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், ” “கஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது, “கஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கின்றான்” என்று கூறினார்கள். பிறகு, “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது பயணம் போருக்கான பயணம் அல்ல! உம்ராவுக்கான புனிதப் பயணம் என்பதை நிரூபிக்கும் விதமாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஹுதைபிய்யாவில் முகாமிடுகின்றார்கள்.

இப்போது இங்கு குறைஷிகளின் இரண்டாவது நல்லெண்ணத் தூதர் புதைல் பின் வரக்கா என்பார் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள்.

நம்பிக்கையாளர் புதைலின் வரவு

இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், “(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டு விட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்கள்.

புதைல் அவர்களின் இந்தச் செய்தி, முதல் தூதரான பிஷ்ர் என்பாரின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

“தாய் ஒட்டகங்கள், குட்டிகளுடன் வந்துள்ளனர்’ என்ற புதைலின் வார்த்தைகள் அரபியர்களின் முக்கியமான நடைமுறைகளைத் தெளிவுபடுத்துகின்றன. நீண்ட நாட்கள் ஓரிடத்தில் முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரபிகள் இப்படி பால் கொடுக்கும் ஒட்டகங்களை அவற்றின் குட்டிகளுடன் ஓட்டிச் செல்வார்கள். தங்களுடைய உணவுக்கு ஒட்டகத்தின் பாலைக் கறந்து குடித்துக் கொள்வார்கள் என்பது தான் அந்த நடைமுறை. இதையே புகைலின் வார்த்தைகள் விளக்குகின்றன.

தங்களுடைய மனைவி, மக்களுடன் வந்து முகாமிடுவதையும் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. பயந்து, போரிலிருந்து பின்வாங்கி ஓடக்கூடாது என்பதற்காக மனைவி, மக்கள், பிள்ளை குட்டிகளுடன் போர்க்களங்களுக்கு வருவது அரபுக் குலத்தவரின் வழக்கத்தில் இருந்தது. இந்தக் கருத்தும் புகைலின் இந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதை நாம் அறியலாம்.

மொத்தத்தில் குறைஷியர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒரு கடினப் போக்கைக் கடைப்பிடித்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ நிதானம், நீக்குப்போக்குத் தன்மையையும், சாந்தி, சமாதானத்தையும் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதோ அந்த சமாதானத் தூதர் தெரிவிக்கின்ற சாந்தி வார்த்தைகளைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்று விட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்து விட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட புதைல் அவர்கள் கூறுகிறார்கள்:

“நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்” என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, “நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார். அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், “அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், “அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், “அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உர்வாவின் வருகை

புதைலின் இந்த சமாதானப் பேச்சை குறைஷிகள், குறிப்பாக அவர்களிலுள்ள அறிவிலிகள் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. இப்போது உர்வா என்பவர் எழுந்து குறைஷிகளிடம் அனுமதி கேட்கின்றார்.

உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ, “முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், “அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர்.

சூடான சூழல்

அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடியவர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்” என்று கூறினார்.

உர்வா நபித்தோழர்களிடம் ஏடாகூடமாகப் பேசி அவர்களை சூடாக்கி விடுகின்றார். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் சூழலை சூடாக்காமல் விவகாரத்தை சாதுரியமாகக் கையாள்கிறார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆக்ரோஷம்

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, “நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் “அபூபக்ர்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, “நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்; நபி (ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, “உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து” என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, “இவர் யார்?” என்று கேட்க மக்கள், “இவர் முகீரா பின் ஷுஅபா” என்று கூறினார்கள். உடனே உர்வா, “மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?” என்று கேட்டார். முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்த போது அவரது தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்கள்.

குறைஷிகளிடம் திரும்பிய உர்வா, “முஹம்மது ஒரு நேரிய திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று என்று கூறினார். ஆனால் அதைக் குறைஷிகள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

தாக்க வரவில்லை, தவாஃபுக்கே வருகின்றோம்

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “என்னை அவரிடம் செல்ல விடுங்கள்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “சரி, செல்லுங்கள்” என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் “தல்பியா’ கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், “சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். தம் தோழர்களிடம் திரும்பிச் சென்ற போது, “தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார்.

இதற்கு அடுத்து, பனூ கினானா குலத்தைச் சார்ந்த ஒருவர் நான்காவது தூதராக வருகின்றார். இவரது ஆலோசனையையும் குறைஷிகள் ஏற்க முன்வரவில்லை. பலிப் பிராணிகள் அழைத்து வந்ததன் மூலம் நாங்கள் போர் தொடுப்பதற்கு வரவில்லை, புனிதத் தலத்தில் வலம் வந்து, பலி கொடுக்கவே வந்துள்ளோம் என்ற முஸ்லிம்களின் உண்மை நிலையை குறைஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதுவரை நபி (ஸல்) அவர்களிடம் சென்று வந்த அத்தனை பிரதிநிதிகளும் நபி (ஸல்) அவர்களைத் தடுப்பது நியாயமில்லை என்ற கருத்தையே குறைஷிகளிடம் பதிவு செய்தனர். ஆரம்பத்தில் காட்டமாகப் பேசிய உர்வாவும் முஹம்மது (ஸல்) அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதையே பிரதிபலிக்கின்றார். ஆனால் குறைஷிகள் அசைந்து கொடுக்கவில்லை.

மிக்ரஸின் வருகை

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, “என்னை அவரிடம் போக விடுங்கள்” என்று கூறினார். மக்காவாசிகள், “சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள்” என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்” என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

ஐந்தாவது பிரதிநிதியாக சுஹைல் பின் அம்ரீ வருகையளிக்கின்றார்.

மிக்ரஸ் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் பின் அம்ர் வந்த போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது” என்று கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார்.

முஸ்லிம்களின் முதல் கொந்தளிப்பு

நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், “அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…’ என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், “ரஹ்மான் – அளவற்ற அருளாளன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், “இறைவா! உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்” என்றார். முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்று தான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ” “பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்” என்று சொன்னார்கள்.

அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பெயர் குறைஷிகளுக்கு ஒருவிதமான குமட்டலை ஏற்படுத்துகின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!என்று அவர்களிடம் கூறப்படும் போது “அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?” என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.

அல்குர்ஆன் 25:60

இணை வைப்பாளர்களின் இந்த வெறுப்பு முஸ்லிம்களைக் கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்துகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நபித்தோழர்களின் இந்த வெறுப்பையும் தாண்டி சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்கிறார்கள்.

இரண்டாவது கொந்தளிப்பு

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, “முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்றே எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

ஒப்பந்தத்தின் இந்த இரண்டாவது விதியும் முஸ்லிம்களைக் கொதிநிலைக்குக் கொண்டு போய்விடுகின்றது. இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கசப்பு மருந்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், “அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட(மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.

மூன்றாவது கொந்தளிப்பு

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது’ என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்’ என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்” என்று கூறினார்; அவ்வாறே எழுதினார்.

ஒப்பந்தத்தின் இந்த விதியும் நபித்தோழர்களிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதையும் அவர்கள் அமைதியாக சகித்துக் கொண்டனர்.

நான்காவது கொந்தளிப்பு

மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார்.

ஒப்பந்தத்தில் அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு விதியும் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு அடி அல்ல, இடியாகவே விழுகின்றது. இதனால் அவர்கள் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுஹைல் தொடர்ந்து சூடாக்கிக் கொண்டிருந்தார். நபித்தோழர்கள் உணர்ச்சிக் கொதிப்பில் தகித்தனர்.

முஸ்லிம்கள், “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

நபித்தோழர்கள் தங்கள் சூட்டை இப்படி வியப்புடன் கூறி தணித்துக் கொண்டனர்.

ஐந்தாவது கொந்தளிப்பு

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார். உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே” என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், “அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை” என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், “நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூஜன்தல் அவர்கள் இணை வைப்பாளர்களிடமே திருப்பி அனுப்பப்படுகின்றார். இதை நபித்தோழர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கெஞ்சிக் கேட்ட பிறகும் குறைஷிகள் ஒப்புக் கொள்ளாததால், இரத்தம் தோய்ந்தவராக இருந்த அபூ ஜன்தல் இணை வைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்.

“முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக வந்திருக்க என்னை இணைவைப்பாளர்களிடம் திருப்பி அனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்களா?” என்று அபூஜன்தல் கேட்டது முஸ்லிம்களின் இதயங்களை நொறுங்கச் செய்து விட்டது.

அதுவரை கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் இருந்த நபித்தோழர்கள் அக்கினிப் பிழம்பாக மாறிவிட்டார்கள். அவர்கள் சார்பாக உமர் (ரலி) அவர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள். அசத்தியத்திற்கு எதிராக அடங்கிக் போவதா? இறை நிராகரிப்பு எகிறிக் குதிப்பதா? அது இறை நம்பிக்கையாளர்களை ஏறி மிதிக்க நாம் அனுமதிப்பதா? என்று கேட்டு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கொப்பளித்த வார்த்தைகள் இதோ:

அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்” என்று பதிலளித்தார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)” என்று பதிலளித்தார்கள்.

“அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்” என்று பதிலளித்தார்கள். நான், ” “விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்’ என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான பதிலில் அடங்காத உமர் (ரலி), அடுத்தக்கட்டத் தலைவரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அதற்கு அபூபக்ரும் நபியவர்களின் பதிலை அப்படியே அச்சுப் பிசகாமல் அழுத்தம் திருத்தமாய் சமர்ப்பிக்கின்றார்கள். அந்த சூடான விவாதத்தையும் உமர் (ரலி) அவர்களின் வார்த்தையில் சுவைப்போம்.

பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்” என்று கூறினார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். நான், “அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

“அவர்கள் நம்மிடம், “நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், “நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

துயரத்தில் மூழ்கிய தோழர்கள்

ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டால் அவர் தடுக்கப்பட்ட அந்த இடத்திலேயே பலிப்பிராணிகளை அறுத்து, தலைமுடியைக் களைய வேண்டும்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.

தோழர்கள் ஒருபோதும் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீற மாட்டார்கள். ஆனால் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியும் தங்கள் மீது விழுந்த அடியாக அல்ல, இடியாக இருந்ததால் அவர்களிடம் இந்தத் தயக்கம் ஏற்பட்டது.

அருமை மனைவியின் அற்புத யோசனை

அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியைச் சொன்னார்கள். உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

உரிய நேரத்தில் உரிய ஆலோசனையை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழங்கினார்கள். அது உடனே எடுபடவும் ஆரம்பித்தது. அந்த சோக மயமான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி உத்தரவில் நபித்தோழர்கள் சிறிது தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் செயலில் இறங்கிய பிறகு அதைப் பின்பற்றுவதை விட்டுக் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. அதில் அவர்கள் கொஞ்சம் கூடப் பின்தங்கவில்லை. உடனே செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நெருக்கியடித்து ஒருவரையொருவர் கொன்று விடுவார்கள் என்ற அளவுக்கு நபியவர்களின் செயலை, செயல்படுத்த முனைந்துவிட்டனர். அந்த அளவுக்கு அவர்களது கட்டுப்பாடு அவர்களின் இந்தச் செயலில் பிரதிபலித்தது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நபி (ஸல்) அவர்கள் ஒரு போரைத் தவிர்ப்பதற்காகக் கடைப்பிடித்த சமாதான நடவடிக்கையையும், அதில் அவர்கள் கொண்ட பிடிமானத்தையும் தான்.

மக்காவின் மீதும் குறைஷிகள் மீதும் போர் தொடுப்பதற்கான அத்தனை நியாயங்களும் சரியான காரணங்களும் அவர்களுக்கு முன்னால் இருந்தன. ஏற்கனவே உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது, நபித்தோழர் தங்கள் உயிரை அர்ப்பணிப்பதாக உறுதிப்பிரமாணமும் செய்திருந்தனர். போர் என்ற கார்மேகம் சூல் கொண்ட கருவாக போர் மழையைக் கொட்டுவதற்குத் தயாராக இருந்தது. போருக்கான சூழ்நிலைகள் அத்தனையும் நபியவர்களுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அத்தனையையும் தட்டிக் கழித்து, நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையே நிலைநாட்டினார்கள். அதை அல்லாஹ்வும் அங்கீகரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பும் போது “அல் ஃபத்ஹ் – அந்த வெற்றி’ என்ற அத்தியாயத்தின் 1 முதல் 5 வரையிலான வசனங்கள் இறங்கின.

நபித்தோழர்கள் கவலையிலும் வேதனையிலும் மூழ்கியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தியாகப் பிராணியை ஹுதைபிய்யாவில் அறுத்துப் பலியிட்டனர். அப்போது இந்த உலகம் அனைத்தை விடவும் எனக்கு மிக விருப்பமான ஓர் வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 3341

(முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.) தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

அல்குர்ஆன் 48:1-5

கவலையில் மூழ்கியிருந்து நபித்தோழர்களுக்கு ஆறுதலாக இந்த வசனங்கள் இறங்கின. வெற்றி என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுவது ஹுதைபிய்யா உடன்படிக்கையைத் தான். இதற்குப் பிறகு நடந்த மக்கா வெற்றியைப் பற்றி இந்த வசனம் பேசவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பாக்கியத்திற்காக நபித்தோழர்கள் வாழ்த்துத் தெரிவிக்கின்றார்கள். அதே சமயம் இதனால் எங்களுக்கு என்ன பயன் என்றும் கேட்கின்றார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கீழ்க்காணும் இந்த ஹதீஸ் அமைகின்றது.

தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்என்னும் (48:1) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “(நபியவர்களே!) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (இந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்)?” என்று கேட்டனர். அப்போது, “நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்என்னும் (48:5) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4172

உண்மையில் ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு போர் தொடுத்தால் கூட இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. மக்காவில் இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி, ஒட்டுமொத்த மக்காவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. அந்த அளவுக்கு இந்த உடன்படிக்கை மாபெரும் வெற்றியாக அமைந்தது.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தவர்களை திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற விதியை கொஞ்ச காலம் கழித்துத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். மக்காவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண், பெண் என அனைவரும் மக்கா வெற்றிக்கு முன்பே இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்து விட்டனர்.

இஸ்லாத்தின் முதல் எதிரியாகவும், குறைஷிகளின் முன்னணித் தலைவராகவும் திகழ்ந்த உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்சூம் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து விட்டார்.

அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், “விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) சோதித்துப் பாருங்கள். அவர் களுடைய இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.

நூல்: புகாரி 2713

இதே போன்று ஆண்கள், பெண்கள் என்று பலர் இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். இம்மாபெரிய பயன்கள் இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையால் விளைந்தன. ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்த உமர் (ரலி) அவர்கள் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து, நான் இவ்வாறு அதிருப்தியுடன் பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்கள் புரிந்தேன் என்று கூறுகின்றார்கள்.

சண்டையா? சமாதானமா? போரா? அமைதியா? என்றால் நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையும் அமைதியையும் தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான இந்தச் செய்தி புகாரி 2734, முஸ்னத் அஹ்மத் 18166 ஆகிய ஹதீஸ்களிலிருந்து தொகுக்கப்பட்டது.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை செயல்படுத்தியதிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு சமாதானப் போக்கை மேற்கொண்டார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

கொலை கொடியது

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது; வாளால் தனது சித்தாந்தங்களைப் பரப்புகின்றது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இஸ்லாத்தைப் பற்றி சரியாக அறியாத சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும்.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற இவர்களது முடிவு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனையோ, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையோ ஆழமாக வாசித்து எடுக்கப்பட்ட முடிவல்ல.

மாறாக, போர் குறித்துக் குர்ஆன் கூறும் வசனங்களை அவசர கோலத்துடன் படித்து எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இது. (போர்  நெறிமுறைகள் குறித்து இதே இதழில் தனிக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.)

போரில் எதிரிகளைக் கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்று குர்ஆன் கூறும் வசனங்களை எடுத்துக் கொண்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது, வன்முறையைப் போதிக்கின்றது என்று கூறுகிறார்கள்.

இவர்களின் இந்தப் புரிதலை என்னவென்பது?

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, தம்மைத் தாக்க வரும் நாட்டுடன் ஒரு நாடு போர் புரிவதை தீவிரவாதம் என்று யாரும் சொல்ல மாட்டோம். இது ஒவ்வொரு நாட்டின் கடமை.

ஆதலால் தான் எல்லா நாடும் தன் நாட்டின் எல்லைப்பகுதியில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. தம்மைத் தாக்க வருபவர்களுடன் போர் புரிகிறது. இதைத் தீவிரவாதம் என்று சிந்தனையுள்ளவர்கள் கூறுவார்களா?

இதைத் தான் இஸ்லாமும் ஜிஹாத் (புனித போர்) என்று குறிப்பிடுகிறது. இஸ்லாமிய அரசு தம்முடன் சண்டையிட வரும் நாட்டுடன் தன் நாட்டு மக்களைக் காப்பதற்காக நடத்தும் யுத்தம் தான் ஜிஹாத். போர் (ஜிஹாத்) என்பதே ஒரு நாடு நடத்தும் யுத்தம் தானே தவிர தனிமனிதர்கள் நடத்தும் தாக்குதல் அல்ல.

அவ்வாறு ஒரு (இஸ்லாமிய) நாட்டின் மீது இன்னொரு நாடு படைதிரட்டி வந்தால் அவர்களுடன் ஆயுதம் தாங்கி போரிட வேண்டும், எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம், இஸ்லாமிய அரசுக்கு அறிவுறுத்துகிறது.

இதில் தீவிரவாதம் எங்கே இருக்கிறது?

இதுவே தீவிரவாதம் எனில் உலக நாடுகள் அனைத்தும் இந்த தீவிரவாதத்தை செய்யத்தானே செய்கிறது. இதில் இஸ்லாம் மாத்திரம் குறிவைத்து பழிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் ஏன்?

இதிலிருந்தே இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்ற வாதத்தில் துளியும் உண்மையில்லை. அது அபத்தமான, அவதூறான ஒரு பொய்க் குற்றச்சாட்டு என்பதை எளிதில் அறியலாம்.

தனிமனிதத் தாக்குதலை இஸ்லாம் ஆதரிக்கின்றதா?

போரிலும், (மரண) தண்டனை வழங்குவதிலும் மனித உயிர்களைக் கொல்வதற்கு அரசுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கின்றது.

இது தவிர எந்த நிலையிலும் மதிப்புமிக்க மனித உயிர்களைப் பறிப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

குறிப்பாக, தனிமனிதர்கள் ஆயுதம் தாங்கி தாக்குதல் புரிவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை. என்ன காரணத்திற்காகவும் அரசு அல்லாத ஒரு குழு ஆயுதம் ஏந்தி சண்டையிடுவதை இஸ்லாம் அனுமதிக்காததோடு ஒரு மனிதன் சக மனிதனைக் கொலை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எனவே தான் இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களிடம் எடுக்கும் உறுதி மொழிகளில் ஒன்றாக, “அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்’ என்பதையும் இணைத்திருந்தார்கள். தம் காலத்தில் இஸ்லாத்தை ஏற்க வரும் எல்லா முஸ்லிம்களிடமும் இதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்வார்கள். (ஹதீஸின் கருத்து புகாரி6873)

இவ்வாறு மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவை என்றும் கொலை செய்வது கொடிய செயல் என்றும் இஸ்லாம் ஏராளமான செய்திகளில் வலியுறுத்தி உள்ளது. அவற்றை அறிந்தால் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்று யாரும் சொல்ல மாட்டார்.

கொலை பெரும் பாவம்

இஸ்லாத்தில் மனித உயிரைப் பறிப்பது பெரும் பாவம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி),

நூல்: புகாரி 6871

கொலை செய்பவன் முஸ்லிமல்ல!

மனிதனை கொல்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்று இறைத்தூதர் போதனை பிரகடனம் செய்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகின்ற போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6809

இறைவனின் உண்மையான அடியார்கள் கொலை செய்யமாட்டார்கள் என்றும் அவ்வாறு கொலைக்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மறுமையில் வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

திருக்குர்ஆன் 25:68

நன்மையை இழப்பான்

மனிதனின் உயிரை மதிக்காமல் கொலை எனும் குற்றத்தில் ஈடுபடுட்டவன் தான் செய்த நன்மைகளை மறுமையில் இழப்பான். யாரைக் கொலை செய்தானோ அவரது பாவத்தை இவன் சுமப்பான். இறுதியில் நரகில் நுழையும் இழிநிலை ஏற்படும் என்று கொலையைப் பற்றி அண்ணல் நபி ஆணித்தரமாகப் போதித்துள்ளார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5037

நம்மை அறியாமல் பிறரைத் தாக்கி விடக்கூடும் என்பதால் நம் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் ஆயுதத்தால் பிறரை நோக்கி சைகை செய்யக் கூடாது என்று இஸ்லாம் தடை விதிக்கின்றது. நம்மை அறியாத புறத்திலிருந்து கூட பிறரைத் தாக்கும் செயல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் இஸ்லாம் கவனம் செலுத்துவதை இந்தத் தகவலிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7072

எந்த வகையிலும் தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதற்கு இது போன்று எண்ணற்ற சான்றுகள் நிறைந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்ôர்கள். மக்கள் “புனிதமிக்க தினம்என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இது எந்த நகரம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க நகரம்என்றனர். பிறகு அவர்கள் “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க மாதம்!என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1739

மனித உயிர்களைப் புனித மக்காவிற்கு ஒப்பிட்டு, அது மதிக்கப்படுவதைப் போன்று மனித உயிர்கள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறும் இஸ்லாம் தீவிரவாதச் செயலைப் போதிக்கின்றது என்ற வாதம் எந்த வகையில் சரியானதாகும்?

இஸ்லாம் அமைதி மார்க்கம். அது உலகம் முழுவதும் அமைதி நிலவவே விரும்புகிறது. அது தன்னுடைய போதனைகளை அதனடிப்படையிலேயே வகுத்துள்ளது. பரஸ்பரம் மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றே அது போதிக்கின்றது. எந்த வகையிலும் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும் செயலை செய்யக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. இத்தகைய அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாத, வன்முறைச் செயல்களுக்குத் துளியும் இடமில்லை.

எல்லா மதத்திலும் உள்ளவர்களைப் போன்று பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடலாம். அது அந்தந்த மதத்தைச் சார்ந்த தனிமனிதர்களின் கண்டிக்கத்தக்க செயல்தானே அன்றி அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தங்களது சுயலாபத்திற்காகவும் மக்களிடம் ஆதரவு திரட்டும் நோக்கிலும் இவர்கள் தாங்கள் செய்யும் வன்முறைச் செயல்களுக்கு மதத்தை அடையாளமாகக் காட்டிக் கொண்டாலும் எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்காது, இஸ்லாமும் ஆதரிக்கவில்லை.

ஒரு ஹிந்து தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் ஹிந்து மதம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.

ஒரு கிறித்தவன் தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் கிறித்தவ மதம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.

ஒரு முஸ்லிம் தீவிரவாதச் செயலில் ஈடுபடுவதால் இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றது என்றாகாது.

மனித நேயமிக்க இஸ்லாத்தில் அப்பாவி மனித உயிர்களைக் கொல்ல துளியும் அனுமதியில்லை. இஸ்லாம் அமைதி மார்க்கமே என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

மனிதநேய மார்க்கம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:1

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

ஒருவரது பொருளை அவரது வாகனத்தில் ஏற்றி விடுவதும் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு சரியான வழியைக் காட்டுவதும் இஸ்லாம் இயம்பும் இனிய பண்புகளாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2891

முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் தமது தேவை போக எஞ்சியதை, தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுமாறு நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள். இதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதோர் என்று வித்தியாசம் கிடையாது. தேவையுள்ளோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப் பக்கமும் இடப் பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம் 3562

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லைஎன்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லைஎன்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லைஎன்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4661)

கடனாளிகளுக்கு உதவி

கடனில் தத்தளிப்பவர்களின் சிரமத்தைப் போக்கினால் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை மறுமை நாளில் அவருக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளித்து மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யுமாறு போதிக்கின்றான்.

யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் நிழல் தருகின்றான்.

அறிவிப்பவர்: அபுல்யசர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5736

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

—————————————————————————————————————————————————————-

எதிர்விளைவைக் கவனிக்கும் இஸ்லாமிய மார்க்கம்

இறைவன் ஒரே ஒருவன் தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; வேறு எந்தச் சக்தியுமில்லை என்ற ஏகத்துவ, ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாகும்.

ஒரு முஸ்லிம் இந்த ஏகத்துவக் கொள்கையை நம்பிக்கை கொள்வதுடன், மற்றவர்களையும் இந்தக் கொள்கையின்பால் கனிவோடும், கண்ணியத்தோடும் அழைக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அவ்வாறு அழைக்கும் போது உண்மையான கடவுளான அல்லாஹ்வுக்கு மட்டும் தான் அனைத்து ஆற்றலும் உள்ளன; மற்ற தெய்வங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை, குர்ஆன் கூறக்கூடிய அழகிய, அறிவார்ந்த வாதங்களுடன் எடுத்து வைக்கச் சொல்கின்றது.

அப்படி உண்மையான கடவுள் கொள்கையை எடுத்து வைக்கும் போதும், இன்னபிற சமயங்களிலும் பிற மதத்தின் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று தெளிவான கட்டளையைப் பிறப்பித்துள்ளது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)

இவ்வாறு கட்டளையிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்துப் பேச வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.

ஒவ்வொரு சாமானியனும் உலக விவகாரங்களில் எதிர்விளைவைத் தெரிந்தே வைத்திருக்கின்றான். ஒரு வியாபாரி, ஒரு பொருளுக்கு 100 ரூபாய் என்று விலை சொல்லும் போது, வாங்குபவர் அதை 50 ரூபாய்க்குத் தருவீர்களா? என்று கேட்கின்றார். அப்போது தான் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் 70 ரூபாய்க்கு வியாபாரி வருவார் என்று வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றார்.

இப்படி, என்ன செய்தால் என்ன வரும் என்ற எதிர் விளைவை ஒவ்வொரு சாதாரண மனிதனும் விளங்கி வைத்திருக்கின்றான். இந்த விவரமும் விளக்கமும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

அந்த அடிப்படையில் தான் பிற மதக் கடவுள்களைத் திட்டக்கூடாது என்று கூறுகின்றது. ஒரு முஸ்லிமின் பார்வையில் பிற மதக் கடவுள்கள் போலியானவை, அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை தான். அதனால் அவன் அந்தக் கடவுள்களைத் திட்டும் போது அந்த தெய்வங்களால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

ஆனால் இவர் திட்டுவதால் பிற மதத்தவர் பாதிப்புக்குள்ளாகி, அவர் பதிலுக்கு இவர் வணங்குகின்ற உண்மையான கடவுளைத் திட்ட ஆரம்பித்துவிடுவார். அது இவரை உண்மையான கடவுளைத் திட்டிய பாவத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது.

முஸ்லிமல்லாத அந்த நபர் உண்மையான கடவுளாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு இந்த முஸ்லிம் காரணமாகின்றார். அதனால் அந்த முஸ்லிமுக்கு இது பாவமாகவும் பாதகமாகவும் ஆகி விடும். ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனிக்க வேண்டும் என்று இறைவனின் வேதம் கூறுகின்றது.

பிள்ளையின் திட்டு தான்; பிறர் திட்டல்ல!

கடவுள் விஷயத்தில் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்ற மார்க்கம், பெற்றோர்கள் விஷயத்திலும் பிள்ளைகள் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.

நூல்: புகாரி 5973

இன்றைக்கு நமது நாட்டில் ஒருவர் மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது, தன்னுடன் சண்டை போடுபவரைத் திட்டுவதுடன் மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. அவருடைய ஏச்சு பேச்சுக்கள் அத்துடன் நிற்பதில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்தே திட்டுகின்றார். இவரும் பதிலுக்கு அவருடைய பெற்றோரைத் திட்டுகின்றார்.

இப்படி எதிர்விளைவை ஏற்படுத்தி, தன்னுடைய பெற்றோரை எதிரி திட்டினால் அது இவரே நேரடியாகத் தனது பெற்றோரைத் திட்டியதற்குச் சமம் என்று மார்க்கம் கூறுகின்றது. இது பெரும் பாவமாகும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படிப் பிறர் மூலம் தன்னுடைய பெற்றோரைத் திட்டுகின்ற எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியவராக ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பிறர் நம்முடைய பெற்றோரைத் திட்டுவதற்குத் தூண்டுவதும் பெரும் பாவம் தான் என்று இஸ்லாம் சொல்கின்றது. அப்படியானால் பெற்றோரை நேரடியாகத் திட்டுவது மிகப் பெரும் பாவம் என்பதையும் பெற்றோரை அடிப்பது கொடிய பாவம் என்பதையும், அவர்களைக் கொலை செய்வது மிகக் கொடூரமான பாவம் என்பதையும் இந்தச் செய்தி உள்ளடக்கி அமைந்துள்ளது.

விளையாட்டு வினையாகும்

ஒருவர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு, உன்னைக் குத்தி விடுவேன் என்று தனது நண்பரை நோக்கி கத்தியைக் காட்டிக் கேலி செய்வார். இஸ்லாம் இங்கும் பின்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 7072

இந்தக் கேலிப்பேச்சு துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கும் இன்று மிகவும் பொருந்திப் போகின்றது. கத்தியாவது அதை வீசுவதற்குக் கொஞ்சம் முயற்சியைப் பிரயோகிக்க வேண்டும். துப்பாக்கிக்கு அதுகூடத் தேவையில்லை. ஆட்காட்டி விரலை அசைத்தால் போதும். அநாயசமாக எதிரில் நிற்கும் ஆள் காலியாகிப் போய்விடுவார்.

எனவே தான் ஒரு முஸ்லிம் விளைவைக் கவனித்து வினையாற்ற வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. ஒரு விளையாட்டு வினையாகிப் போய்விடக்கூடாது என்ற விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

எலி ஏற்படுத்தும் எதிர்விளைவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6295

இரவில் தூங்கும் போது எலி ஏற்படுத்தும் எதிர்விளைவைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் போடுகின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும் என்ற சட்டத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டர் வெடித்து எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. ஒருவர் இரவில் தூங்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் பின்விளைவைக் கவனிக்க வேண்டும்.

ஆலய உடைப்பு அறவே கூடாது

ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டு பிற மத வழிபாட்டுத் தலங்களை உடைத்துவிடக் கூடாது. ஒரு முஸ்லிம் இந்தப் பாவத்தைச் செய்தான் என்றால் அதன் எதிர்விளைவு, பள்ளிவாசல் தகர்ப்புக்கு அது வழிவகுத்து விடும். இதன் மூலம் பள்ளிவாசலை இடித்ததற்கு அந்த முஸ்லிமே காரணமாகி விடுகின்றார். இதைத் திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

ஒரு மதத்தவர், அடுத்த மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தைத் தாக்காமல் காப்பது தான் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வளையமாகும். அந்தப் பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டுவிட்டால் எந்த வழிபாட்டுத் தலத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிடும். இதிலும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

பிற மதத்தவரைக் கொலை செய்தல்

பல்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்கின்ற நாடு இந்தியா! இதுபோன்ற நாடுகளில் பிற மதத்தவரை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் விளைவு விபரீதமாக அமைந்துவிடும்.

பிற மதத்தினரில் யாரையேனும் ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் பதிலுக்கு அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். இதைக் கவனித்தே ஒரு முஸ்லிம் செயல்பட வேண்டும்.

அப்படியானால் பிற மதத்தினர் எதிர்த்துத் தாக்க மாட்டார்கள் என்றால் அப்போது அவர்களைக் கொலை செய்யலாம் என்று இதை விளங்கிக் கொள்ளக்கூடாது. பொதுவாகக் கொலை செய்வது கொடிய பாவம் என்பதை இதே இதழில், “கொலை கொடியது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்து செயல்படவேண்டும். அப்படிக் கவனிக்கத் தவறினால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம். (அல்குர்ஆன் 48:25)

மக்காவில்  தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலையைக் கவனித்துச் செயல்படுமாறு வல்ல இறைவன் தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான்.

முஸ்லிம்களே முஸ்லிம்களை நேரடியாகத் தாக்கிவிடும் அபாயத்தை இங்கு அல்லாஹ் குறிப்பிட்டாலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிற மதத்தவர்களால் அழிவுக்குள்ளாகி விடுகின்ற எதிர்விளைவையும் சேர்த்துத் தான் இந்த வசனம் குறிக்கின்றது.

இன்று இந்த எதிர்விளைவுகளை, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை விடுகின்ற அய்மான் ஜவாஹிரிகள் பார்ப்பதில்லை. இதனால் எத்தனை முஸ்லிம்கள் அழிந்தாலும் அதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இப்படி எதிர்விளைவைப் பார்க்காதவர் முஸ்லிம்கள் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ஒரு முஸ்லிம் இந்த உலகம், மறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் எதிர்விளைவுகளைக் கவனித்தே செயல்பட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதைப் புரிந்து செயல்பட்டால் தான் இம்மை, மறுமையில் வெற்றி பெற முடியும்.

—————————————————————————————————————————————————————-

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல்

இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆகும். அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமடைந்தது.

இன்றளவும் இராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் என முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் முஸ்லிம்கள் தானா? அல்லது இஸ்ரேலிய, அமெரிக்க உளவுத் துறைகளா? என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் வெளிப்படையாகப் பார்த்தால் இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம் பெயர்களில் செயல்படும் சில குழுக்களால் நடத்தப்படுவதை மறுக்க முடியாது.

இந்த நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணம் முஸ்லிம்கள் என்று சொல்லப்பட்டாலும், இதில் கொல்லப்படுபவர்களும் முஸ்லிம்கள் என்பது இங்கு வேதனைக்குரிய விஷயம்.

ஆனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஊடகங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளால்தான் முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்; எனவே இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துகின்றனர்.

உண்மையில் இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை இந்த ஏகத்துவம் இதழ் முழுவதும் நாம் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை என்று கூறுவதை விட, இஸ்லாம் இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றது என்பது தான் உண்மை. எனவே தற்கொலைத் தாக்குதல் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு மனிதன் தன்னுடைய உயிரை, தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலைக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதற்கு யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது.  (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார்.  உடனே அல்லாஹ், “எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தைத் தடை செய்து விட்டேன்என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),

நூல்:  புகாரி 1364

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காகத் தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.  தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண் டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப் படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப் படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்பு களுக்கிடையே  வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 2898, 3062

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப்பட்டது தான் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப்படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது.  இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா?  நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொதுமக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க்களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.  இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.  ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணைவைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்என்று கூறினார்கள். 

(நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக, பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.