ஏகத்துவம் – அக்டோபர் 2011

தலையங்கம்

பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பச்சேரி (பள்ளர் சேரி என்பது தான் பச்சேரி என்று அழைக்கப்படுகின்றது) என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனி குமார் (வயது 16) கொலை செய்யப்படுகின்றான்.

தேவர் சமுதாயம் அதிகமாக வாழ்கின்ற முத்துராமலிங்கபுரத்திலும், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக வாழ்கின்ற பச்சேரியிலும் முத்துராமலிங்கத் தேவரை தரக்குறைவாகத் தாக்கி சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. அதை இந்தப் பள்ளி மாணவன் தான் எழுதினான் என்பதால் அவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து தான் 6 பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சாரம்சமாகும்.

தற்போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக முதல்வரின் இந்தக் கருத்தை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வன்மையாக மறுக்கின்றார்.

செப்டம்பர் 9ஆம் தேதியன்று நடந்த பதினாறு வயதுச் சிறுவனின் படுகொலைச் சம்பவத்திற்கும் கலவரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். தன்னைக் கைது செய்தது தான் கலவரத்திற்குக் காரணம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் தேதியன்று அவரது நினைவிடத்தில் ஜான் பாண்டியன் மரியாதை செலுத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஜான் பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் காவல்துறை கைது செய்தது.

இது தான் கலவரத்திற்கு வித்திட்டது என்று ஜான் பாண்டியன் தெரிவிக்கின்றார்.

இதற்கிடையே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள், அறிவு ஜீவிகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய நகரங்களுக்கு வருகையளித்தனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள், அது தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் விசாரித்து அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் முக்கியமாகக் குறிப்பிடுவது தீண்டாமையைத் தான்.

அந்தப் பகுதியிலும், மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் அதிக ஆதிக்கம் கொண்டுள்ள ஒரு சாதியினரிடம், இம்மானுவேல் சேகரனின் குருபூஜை பெரிய அளவில் நடைபெறக் கூடாது என்ற எண்ணம் குடி கொண்டிருக்கின்றது. இது தான் கலவரத்திற்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் காரணம் என்று அந்த உண்மை அறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராமநாதபுரம் பகுதிகளில் முத்துராமலிங்கத் தேவருக்கு இதே போன்ற குருபூஜை என்ற பெயரில் நினைவு விழா நடத்தப்படுகின்றது. இந்த நினைவு விழாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், சாதி சங்கத் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்கின்றார்கள். இதற்கு நிகராக இம்மானுவேல் சேகரனின் நினைவு விழா நடத்தப்பட வேண்டும் என்று தலித்துகள் நினைக்கின்றார்கள்.

பொதுவாகவே நமது நாட்டில் தலித்துகளுக்கு தனிக் குவளைகள் வைக்கப்படும் தேநீர்க் கடைகள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.

உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் செருப்பு போட்டு நடப்பதற்கு தலித்துகளுக்கு இன்னும் உரிமை கிடைக்கவில்லை.

உயர் சாதியினர் வாழ்கின்ற பகுதிகளில் சைக்கிளில் ஏறிச் செல்வதற்கு அனுமதியில்லை.

உயர் சாதியினர் வசிக்கின்ற பகுதிகளில் குடிநீர் குழாய்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் பிடிப்பதற்கு அனுமதியில்லை. குளங்களில் குளிப்பதற்கு அனுமதியில்லை.

உயர் சாதியினர் வணங்கும் கோயில்களில் வணங்குவதற்கு அனுமதியில்லை.

கோர, கொடிய இந்தத் தீண்டாமைக்குத் தீர்வு என்ன?

ஒரு முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக இம்மானுவேல் சேகரனுக்கும் குருபூஜை நடத்தி விட்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடுமா?

இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆவதிலோ, அல்லது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆவதிலோ அல்லது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்து அதிகாரியாக ஆவதிலோ இது ஒழியப் போவதில்லை.

இந்தியாவில் தலித்துகள் கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு என எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து, எங்கும் வியாபித்திருக்கின்றார்கள். ஆனால் தீண்டாமைத் தீயை இதுவரை அணைக்க முடியவில்லை.

தலித்துகள் இதற்குச் சரியான தீர்வைக் காணாததால் தான் இது போன்ற இழிவுகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாதியை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் தோல்வியைத் தழுவி விட்டன என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்னும் அளவுக்கு இந்தச் சம்பவம் முன்னுதாரணமாக அமைந்து விட்டது. ஆனால் சாதியை ஒழிக்கும் ஒரு தீர்வு, திட்டம் இதுவரை தோல்வி அடையவில்லை. அது தூய இஸ்லாம் ஆகும்.

இதோ நம் அனைவரையும் படைத்த கடவுளான அல்லாஹ் அழைக்கின்றான்.

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.

அல்குர்ஆன் 39:6

மனித குலத்தில் ஒரேயொரு சாதி தான். அதைத் தவிர வேறு எந்தச் சாதியும் இல்லை. இதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

முஸ்லிம்கள் இப்போது ஹஜ்ஜிற்காக மக்காவிற்கு செல்லத் துவங்கி விட்டனர்.

மக்காவில் உள்ள அரஃபா பெருவெளியில் உலகெங்கிலுமிருந்து வந்த முஸ்லிம்கள் உயர்ந்தவர் – தாழ்ந்தவர், வெள்ளையர் – கருப்பர், பணக்காரன் – ஏழை என்ற பாகுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், மொழி வேறுபாடு இல்லாமல் வந்து சங்கமிக்கின்றனர். ஏன் இந்தச் சங்கமம்? ஏன் இந்த மாநாடு? திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் கருத்தை நிரூபிப்பதற்காகத் தான். நிலைநிறுத்துவதற்காகத் தான்.

தேவர் என்ற சாதியும், தலித் என்ற தாழ்த்தப்பட்டவரும் இல்லை. எல்லோருமே ஆதம் என்ற மூல, முதல் மனிதரின் பிள்ளைகள் என்றாகி விடுகிறோம்.

குழாயடியிலிருந்து மட்டுமில்லாமல் கோயிலடியிலிருந்து விரட்டியடிக்கப்படும் சமுதாயமே! உங்களுக்கு விமோசனம் தர, விடுதலை தர, உங்கள் தீண்டாமையைத் துடைக்க, உடைக்க, அழிக்க ஓர் உயர்திரு உன்னத ஆலயம்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

இங்கே உங்கள் ஆலயங்கள் விரட்டியடிக்கும் போது இந்த ஆலயமோ உங்களை விரும்பி அழைக்கின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

அல்குர்ஆன் 3:97

இந்த ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் அங்கு மட்டும் பாதுகாப்பல்ல! உலகெங்கும் பாதுகாப்பு! உள்ளே நுழைந்த மாத்திரத்தில் நம்முடைய தந்தை, மனித குலத்தின் முதல் தந்தை ஆதம் கட்டிய முதல் ஆலயத்தில் நுழைந்து விட்ட ஒரு நிம்மதி! ஓர் ஆனந்தம்! ஒரு திருப்தி!

ஆனால் ஒரேயொரு நிபந்தனை, அந்த ஒரு இறைவனை மட்டும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் போதும். தீண்டாமை தானாக அழிந்து விடும். சாதிப் பாகுபாடுகள் தானாக ஒழிந்து விடும்.

ஜனவரி 2007 ஏகத்துவம் இதழில், தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் அந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————-

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

பரமக்குடியில் 7 பேரின் உயிரைப் பலி கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு அடிப்படைக் காரணம், சாதித் தகராறு தான் என்று தமிழக முதல்வரே சட்டமன்றத்தில் அறிவிக்கின்றார்.

சாதிப் பாகுபாட்டின் காரணமாகவும், தீண்டாமையின் காரணமாகவும் இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப்படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்சாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வச்சாத்தி என்ற கிராமத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்ட வழக்கு தற்போது தான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

1997ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள்

1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் பேரணியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களை மட்டும் பட்டியல் போட்டால் கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிடவே முடியாது.

2002ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.

அடிப்படைக் காரணங்கள்

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான். அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.

பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார். (மனு தர்மம் 2:35)

பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.  (மனு தர்மம் 9:263-267)

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.  (மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும். (மனுதர்மம் 10:277)

இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு.  (மனு தர்மம் 11:33)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும். (மனு தர்மம் 3:23)

மக்களை இப்படி வர்ணாஸ்ரம அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான்  தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.

பிராமணர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.

சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.

உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக் கூடாது.

உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.

இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம் என்று தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இது தான் இந்தியாவின் நிலை!

தீர்வு காண வந்த திருத்தவாதிகள்

இந்தியாவில் புறையோடிப் போன இந்தத் தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

  1. நாத்திகம்

கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு செய்து, கடவுள் கிடையாது என்று கூறி நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.

கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டு மிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார். சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்கு, படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக் கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.

இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், எம்.என். நடராஜன் போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தத் தீயைக் கொண்டு சென்றனர்.

புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்

தீண்டாமைக்கு எதிராக அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின் எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர் இவர்களது பொறி பறக்கும் பேச்சில் பொரிந்து போனார்கள்.

“பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பை அடிக்காதே! பார்ப்பனனை அடி!” என்ற பெரியாரின் பேச்சின் வீரியத்தால் பாம்பு விஷத்தை விடவும் கொடிய விஷமான ஆதிக்க வெறி அடங்கியது. அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல் ஆரியத்தை அரவமில்லாமல் ஆக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.

சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாஸ்ரம தர்மம் துடைக்கப்பட வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப் பலரால் ஏற்க முடியவில்லை. அத்துடன் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து அ.தி.மு.க. உருவானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத் தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது. ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில் மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.

தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான் முடிந்ததே தவிர அனைவரும் பிராமணர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.

  1. கல்வி

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புரட்சியாளர்கள், புதிய சிந்தனைவாதிகள் செய்தனர்.

காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.

நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும் தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச் சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள் களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள். எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம் ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.

  1. பொருளாதாரம்

தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம் ஒழிந்து போகும் என்று கருதி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.

என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம் அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒருபோதும் அனுமதிக்காது.

ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால்  அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண உதவாது. எனவே இந்த வகையில் பொருளாதார முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது; சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.

  1. ஆட்சியதிகாரம்

இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.

இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும். இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

  1. கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.

தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.

“வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை” என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்?

எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதிய கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து போனது.

ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள் எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும் அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.

குறைபட்ட சிந்தனையும் குறுகிய வட்டமும்

தீண்டாமை என்பது தமிழகத்தில் மட்டுமோ, அல்லது இந்தியாவில் மட்டுமோ தொற்றி நிற்கும் நோயல்ல! உலகமனைத்திலும் பற்றிப் பரவி மக்களை அழிக்கும் ஒரு கொடிய, கோரத் தீ! எனவே அதற்குரிய தீர்வு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக் கூடாது. தீண்டாமையை ஒழிக்க நாம் மேலே கண்ட தீர்வுகள் எல்லாம் தமிழக அளவில், அல்லது இந்திய அளவில் தான் அமைந்திருக்கின்றன. உலக அளவில் தீண்டாமை ஒழிப்பிற்குப் பொருந்தக் கூடியவையாக இல்லை.

ஆப்பிரிக்கா இதுவரை தீண்டாமை எனும் தீயில் எரிந்து, கரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு யார் தீர்வு தருவது? ஆப்பிரிக்கா மட்டுமல்ல! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நிலவுகின்ற தீண்டாமையைத் துடைத்தெடுக்கும் வகையில் உலகளாவிய தீர்வாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், வட்டாரம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அது குறைவுபட்ட குறுகிய சிந்தனையாகவே அமையும்; தூர நோக்குடன் கூடிய சிந்தனையாக அமையாது.

அப்படிப்பட்ட தூர நோக்குள்ள திட்டம் எங்கு இருக்கின்றது? எதில் இருக்கின்றது?

மனு தர்மம்

இந்து மதத்தில் இருக்கின்றதா என்று பார்த்தால் அங்கு இல்லை  என்று சொல்வதை விட அது தான் சாதியத்தின் வேராகவும், விருட்சமாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மேலே மனு தர்மத்திலிருந்து நாம் எடுத்துக் காட்டிய வசனங்களைப் பார்த்தாலே விளங்கிக் கொள்ளலாம்.

புத்த மதம்

சட்ட மேதை என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் தீண்டாமைக்குத் தீர்வு புத்த மதம் தான் என்று தன்னுடைய தொண்டர்களுடன் புத்த மதம் புகுந்தார்.

02.10.2006 அன்று அம்பேத்காரின் புத்த மதப் பிரவேசத்தின் அடையாள நாள். ஆம்! லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கார் புத்த மதம் புகுந்ததன் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாள். அந்த நினைவு நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், அதாவது 29.09.2006 அன்று மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்திலுள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இதில் இரண்டு பெண்கள் நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் கற்பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. மகராஷ்ட்ரா முழுவதும் வன்முறை பற்றி எரிகின்றது.

மகராஷ்ட்ராவில் தான் அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் நடைபெற்றது. இந்த மதமாற்றம் நடந்து அரை நூற்றாண்டுகள் ஆன பின்னர் அதே மகராஷ்ட்ராவில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் தீண்டாமைக்குத் தீர்வாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

யூத, கிறித்தவ மதங்கள்

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனியத்தின் மறு பதிப்பு தான் அது! பிறப்பால் தான் யூதராக முடியுமே தவிர மத மாற்றம் அங்கு இல்லை. கிறித்தவ மதத்திலும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை.

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:10)

ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:12)

ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்போது அவருடைய சீடர்கள் வந்து, “இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்” என்று அவரை வேண்டிக் கொண்டார்கள்.  அதற்கு அவர் “காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.

அவள் வந்து, “ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அதற்கு அவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!” என்றாள். (மத்தேயு 15:22-27)

இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.

கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை. (செகண்ட் கிங் 5:15)

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை. (கேல் 2:15)

இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இன்று கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் அங்கு தலித் கிறித்தவர்களாகவே வாழ்கின்றனர். நாடார்கள் கிறித்தவ மதத்திற்குச் சென்றாலும் கிறித்தவ நாடார்கள் ஆகின்றனர்.

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

இவ்வாறு உலகத்தில் எங்கு பார்ப்பினும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை. அதற்குரிய திட்டமும் இல்லை. தீண்டாமைக்குரிய தீர்வும் திட்டமும் திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது. வாய் இனிக்கும் வகையில் ஏட்டளவில் நிலைத்திருக்கும் தத்துவார்த்தமாக மட்டுமில்லாமல் நடைமுறை வாழ்க்கையின் செயல்பாடாக அமைந்திருக்கின்றது.

இந்தத் தீர்வு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு – குலத்தாருக்கு – கோத்திரத்தாருக்கு – நிறத்தாருக்கு – மொழியினருக்கு என்று பார்க்கவில்லை.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த அரபிகள், பாரசீகர்கள், ரோமாபுரியினர், கிரேக்கர்கள், இந்தியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடம் ஈரடுக்கு வர்க்கங்கள், மூன்றடுக்கு வர்க்கங்கள், நான்கடுக்கு வர்க்கங்கள் இருந்தன. எனவே அப்போது அருளப்பெற்ற திருக்குர்ஆன் அரபகத்தை மட்டும் குறியீடாகக் கொள்ளவில்லை. முழு மனித சமுதாயத்தையும் குறியீடாகக் கொண்டது.

மனித குலத்தில் உள்ள இந்த வேறுபாடுகளின் வேரை நோக்கி குர்ஆன் தனது தூர நோக்குப் பார்வையை, தீர்க்கமான சிந்தனையைச் செலுத்தியது. தீண்டாமை என்ற நோயின் காரணத்தைக் கண்டறிந்தது.

அன்றிருந்த ஆளும் வர்க்கங்கள் தங்களிடம் தெய்வீகத் தன்மை இருப்பதாகப் பறை சாற்றினர். குடிமக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை, சாதாரண ஆட்சியாளர்கள் என்று பார்க்காமல் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.

ஆட்சியாளர்கள் தெய்வங்கள் ஆயினர்; மக்கள் அடிமைகளாயினர். ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைத்தார்கள்; குடிமக்களோ சுரண்டப்பட்டார்கள்.

ஒருவனே தேவன்

சுருங்கக் கூறின், மனிதன் மனிதனைக் கடவுளாக்கினான். இங்கு தான் தெய்வீகத்தன்மை யாருக்குச் சொந்தம் என்பதைத் திருக்குர்ஆன் விளக்கியது. தெய்வீகம் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தம்; அவனுடைய தனித்தன்மை; அந்தத் தனித்தன்மையில் மனிதனுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை என்று முழங்கியது.

இதோ திருக்குர்ஆன் கடவுள் கொள்கையைப் பற்றி முழங்குகின்றது.

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:158)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் 35:3)

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதாவது அவன் மட்டுமே கடவுள் தன்மை உள்ளவன். அவனது கடவுள் தன்மையில் வேறு யாரும் கூட்டாளி இல்லை; அவனுக்கு நிகரில்லை; இணையில்லை என்று இந்த வசனம் கூறுகின்றது.

தாயின் வயிற்றில் உருவாக்கியவன் அவனே!

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். (அல்குர்ஆன் 39:6)

அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் 21:29)

மேற்கண்ட இந்த வசனங்கள் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; எனவே அவையும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றன.

தான் ஒருவன் மட்டுமே கடவுள்! தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

இப்போது உலக மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமை என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

இதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இனம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்துத் திரைகளும், வேறுபாடுகளும் அகன்று விடுகின்றன. அனைத்துத் தடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.

இப்படிக் கடவுள் கொள்கையில் ஓர் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன் அங்கே மக்கள் தாமாகவே ஒரே குலம், ஒரே இனம் என்றாகி விடுகின்றார்கள்.

தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்.

—————————————————————————————————————————————————————-

தடுக்கப்படும் ஜனாஸா தெளிவும் தீர்வும்

அல்லாஹ்வின் அருளால் இன்று தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் வளர்ந்து வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு கிளை உருவாகின்ற போது அங்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. கொள்கைச் சகோதரர்களை ஊர் நீக்கம் செய்வது, அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிப்பது, அவர்களது குடும்பத்தினர் யாரேனும் இறந்து விட்டால் அடக்கம் செய்ய மறுப்பது போன்ற கொடுமைகள் தலைதூக்கி விடுகின்றன.

இந்தக் கொடுமைகளால் தவ்ஹீதுவாதிகள் யாரும் தளர்ந்து விடுவதில்லை; தடம் புரண்டு விடுவதில்லை. இந்தக் கொடுமைகளை தவ்ஹீதுவாதிகள் இயன்ற அளவுக்கு இறையருளால் மிகத் துணிச்சலாக எதிர்கொள்கின்றனர். இந்தக் கொடுமைகளால் தவ்ஹீத் சகோதரர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.

ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்தால் அதை சட்டரீதியில் சந்தித்து, அடக்கம் செய்து விடலாம். ஆனால் ஜனாஸா தொழுகை விஷயத்தில் மட்டும் மார்க்க ரீதியிலான ஒரு பாதிப்பு கொள்கைச் சகோதரர்களுக்கு ஏற்படுகின்றது.

பொதுவாக ஜனாஸா தொழுகை விஷயத்தில் இருவித முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன.

  1. இறந்தவர் நம் குடும்பத்தைச் சார்ந்தவராகவே இருப்பார். ஆனால் அவர் இறுதி வரை இணை வைப்பிலேயே, ஷிர்க்கிலேயே இறந்திருப்பார். அவருக்கு நாம் ஜனாஸா தொழ வைக்க முடியாது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இந்த வசனம் இணை கற்பிப்பவர்களுக்கு ஜனாஸா தொழுவிப்பதை விட்டும் நம்மைத் தடை செய்து விடுகின்றது.

ஒருவர் இணை வைப்பில் இறந்தார் என்பதை நாம் எப்படி முடிவு செய்வது? இது முற்றிலும் ஒருவரது உள்ளம் சார்ந்த விஷயம். இதில் நாம் வெளிப்படையை வைத்துத் தான் முடிவு செய்ய முடியும்.

நாம் இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் போது அவர் மரணிக்கின்ற வரை எதிர்த்துக் கொண்டே இருந்திருப்பார். நாம் வேண்டாம் என்று தடுத்து, அதன் தீமைகளை எடுத்துக் கூறிய பின்னரும் மவ்லிதை வீம்புக்கு ஓதியிருப்பார். நாம் தடுத்த பின்னும் கடைசி வரை தர்ஹாவிற்குச் சென்று பிரார்த்தனை செய்திருப்பார். இந்த நிலையில் அவர் மரணித்திருந்தால் அவர் இணை வைப்பில் மரணித்திருக்கின்றார் என்று முடிவு செய்யலாம். இத்தகையோரின் ஜனாஸாவில் நாம் பங்கெடுக்க முடியாது.

  1. இறந்தவர் முழுமையான ஏகத்துவக் கொள்கையில் வாழ்ந்த தீவிர தவ்ஹீதுவாதியாக இருப்பார். அல்லது வீட்டில் மகன் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது அதை ஆட்சேபணை செய்யாமல் இருந்திருப்பார். மவ்லிது ஓதக் கூடாது; தர்ஹாவுக்குச் செல்லக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதை அவர் எதிர்த்திருக்க மாட்டார். இவ்வாறு எதிர்க்காமல் இருப்பது மகனுடைய வருவாயில் அவர் காலம் தள்ளுவதால் கூட இருக்கலாம். இருந்தாலும் அவரிடம் வெளிப்படையாக ஷிர்க்கைக் காணாத போது அல்லது தவ்ஹீது எதிர்ப்பைக் காணாத போது அவர் ஏகத்துவத்தில் மரணித்திருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் இறந்தவருக்கு நாம் கண்டிப்பாக ஜனாஸா தொழுகை தொழுதாக வேண்டும். இப்படிப்பட்ட ஜனாஸா தொழுகைக்கு இருவிதமான இடையூறுகள் ஏற்படும்.

ஒன்று, தடுக்கப்பட்ட பள்ளிகளில் ஜனாஸா தொழ வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற கட்டங்களில் இந்த ஜனாஸாவை வீட்டில் வைத்து தொழுவதையும் ஊர் ஜமாஅத் தடுக்கின்றது. அல்லது பள்ளிக்கு வெளியேயும் தொழ முடியாத இக்கட்டான நிலை.

அடுத்து, பள்ளியில் தொழுவதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது; ஆனால் தொழுகை நடத்துகின்ற இமாம் இணை வைப்பில் உள்ளவர். இறந்தவர் தவ்ஹீதுவாதியாக இருந்தாலும், இறந்தவரின் தந்தை அல்லது சகோதரர் முஷ்ரிக்காக இருப்பார். அவர்களில் யாராவது ஒருவர் ஜனாஸா தொழுவிப்பார். அத்தகைய இணை வைப்பாளரைப் பின்பற்றி ஒரு தவ்ஹீதுவாதி ஜனாஸா தொழுகை மட்டுமல்லாது வேறு எந்தத் தொழுகையும் தொழ முடியாது.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 9:17)

இந்த வசனத்தின் படி இணை கற்பிப்பவருக்குப் பள்ளிவாசலை நிர்வாகம் செய்யத் தகுதியில்லை என்று அல்லாஹ் கூறுவது, பள்ளியில் மின்சாரக் கட்டணம் செலுத்துவது பற்றியது அல்ல. இமாமாக நின்று தொழுவிக்கும் முக்கியமான நிர்வாகப் பொறுப்பையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.

அதனால் இத்தகைய இணை கற்பிக்கும் இமாம், ஜனாஸா தொழுகை மட்டுமல்லாது வேறு எந்தத் தொழுகை நடத்தினாலும் அவரைப் பின்பற்றித் தொழ முடியாது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன?

இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் அடக்கவிடத்தைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், “இது எப்போது அடக்கம் செய்யப்பட்டது?” எனக் கேட்டார்கள். தோழர்கள் “நேற்றிரவு தான்என்றதும், “எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், “அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவே தான் உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லைஎன்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்ததும் அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1321, 1248, 458, 460

இந்த ஹதீஸின்படி கப்ரில் போய் தொழலாம் என்று சிலர் விளக்கமளிக்கின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சட்டமாகும்.

பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கருத்த “பெண்அல்லது “இளைஞர்ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்என மக்கள் தெரிவித்தனர். “நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக்கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு அவருக்காக தொழுகை நடத்தினார்கள். பிறகு “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1588

இந்த ஹதீஸில் “எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:103)

என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே கப்ரில் சென்று தொழுவது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அதனால் இதுபோன்ற கட்டங்களில் தவ்ஹீதுவாதிகளுக்கு முன்னால் இருக்கும் ஒரு வழிமுறை காயிப் ஜனாஸா ஆகும்.

தவ்ஹீதுவாதி ஒருவர் இறந்து விடும் போது, அவருக்கு இணை வைப்பாளர்கள் முன்னின்று ஜனாஸா தொழுகை நடத்தினால், தொழுகையே நடக்கவில்லை என்று எடுத்துக் கொண்டு காயிப் ஜனாஸா தொழுவது தான் சரியான வழிமுறையாகும். நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது, நபி (ஸல்) அவர்கள் காயிப் ஜனாஸா தொழுததை இதற்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை              தொடர்: 3

கியாம நாளின் அடையாளங்கள்

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!

அல்குர்ஆன் 78:1, 2, 3

அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதற்கு அடையாளமாக இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளனர். அந்த முன்னறிவிப்புக்களில் சிலவற்றைக் கடந்த இதழில் கண்டோம். மேலும் சில அடையாளங்களை இப்போது பார்ப்போம்.

கொலைகள் பெருகுதல்

மனிதனை மனிதன் கொன்று குவிப்பது தொன்று தொட்டு நடந்து வருவது தான். ஆயினும் இன்றைய நவீன யுகத்தில் மிகப் பெரும் அளவுக்குக் கொலைகள் பெருகிவிட்டதைக் காண்கிறோம்.

அற்பமான காரணங்களுக்காகவும், கூலிக்காகவும் கொலைகள் நடக்கின்றன. நவீன ஆயுதங்கள் காரணமாக கொலைகள் எளிதாகி விட்டன. சொந்த பந்தங்களுக்கிடையிலும், கணவன் மனைவிக்கிடையிலும் கூட கொலைகள் அதிகரித்துள்ளன.

சட்டத்தின் காவலர்களும் கொலை செய்கின்றனர். போர்கள் மூலமும் கொல்லப்படுவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.  (நூல்: புகாரி 85, 1036, 6037, 7061)

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

சமீப காலமாக உலகில் பூகம்பங்கள் மிகவும் அதிகமாகியுள்ளன. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போகின்றனர்.

இத்தகைய பூகம்பங்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைக்குக் குறையாமல் நடப்பதை நாம் காண்கின்றோம்.

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம்.

அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காகப் பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாகப் பள்ளிகள் கட்டப்படுகின்றன.

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள்: நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731,

அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்

அன்றைய காலத்தில் கடை வீதிகள் பெரிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும்.

ஆனால் இன்று கண்ட இடத்திலெல்லாம் கடைகளைக் காண்கிறோம்.

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ஆண்களும், பெண்களும் ஏறக்குறைய சம அளவில் தான் இருந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை.

ஆனால் இன்று பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பெண் சிசுக் கொலை மூலம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்க கொடியவர் சிலர் முயற்சி செய்தும் கூட ஆண்களை விடப் பெண்கள் தாம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்

பெண்களின் ஆடைகளில் இன்று பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களே கவர்ச்சி மிக்கவர்களாக இருந்தும், ஆண்கள் அணிவதை விட குறைந்த அளவு மறைக்கும் ஆடைகளையே பெண்கள் விரும்பி அணிகின்றனர்.

அவர்கள் பெயரளவுக்குத் தான் ஆடை அணிந்துள்ளனர். உண்மையில் நிர்வாணமாகத் தான் உள்ளனர்.

முட்டுக்கால்களுக்குக் கீழே உள்ள பகுதியை வெளிப்படுத்தும் ஆடையை ஆண்கள் கூட அணிவதில்லை. ஆனால் பெண்கள் கூச்சமின்றி இத்தகைய ஆடைகளை அணிகின்றனர்.

இடுப்புப் பகுதியும், முதுகுப் பகுதியும் தெரியும் வகையில் ஆண்கள் கூட ஆடை அணிவதில்லை. ஆனால் பெண்கள் கொஞ்சமும் உறுத்தலின்றி இது போன்ற ஆடைகளை அணிகின்றனர்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல்: முஸ்லிம் 3971, 5098

உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிûடேய பேசிக் கொள்வதை மனிதனும் விளங்கிக் கொள்ளக் கூடிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

செருப்புகளுக்கு வாராகப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பேசுவதை நாம் காண்கிறோம். ஒளி நாடாக்களிலும் குறுந்தகடுகளிலும் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

பேச்சைத் தொழிலாக்கிப் பொருள் திரட்டுதல்

ஏதேனும் ஒரு பொருளை மக்களிடம் விற்பதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் இன்று பேச்சுத் திறன் ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது.

இவ்வளவு நேரம் பேசுவதற்கு இவ்வளவு ரேட் என்ற அளவில் அந்த வியாபாரம் நடக்கிறது.

இன்று ஆதரித்துப் பேசியதை நாளை எதிர்த்துப் பேசி நாளை மறுநாள் மீண்டும் ஆதரித்துப் பேசுகின்றனர். கொடுக்கின்ற காசுக்காகவே இந்த இழிந்த நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முஸ்லிம்கள் ஸலாம் கூறுவது நபிவழியாகும்.

நமக்கு எதிர்ப்படுபவர் அறிமுகமானவராக இருந்தாலும் அறிமுகமற்றவராக இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். நபிகள் நாயகத்தின் இந்த வழி காட்டுதலை சமீப காலமாக முஸ்லிம்கள் புறக்கணித்து வருகின்றனர். நன்கு தெரிந்தவர்களைக் கண்டால் மட்டுமே ஸலாம் கூறுகின்றனர்.

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டதே பள்ளிவாசல்கள் என்பதை நாம் அறிவோம்.

பள்ளிவாசல் பக்கேம தலை வைத்துப் படுக்காத சிலர் பள்ளி வாசலுக்குள் புகுந்து அடுத்த தெருவுக்குச் செல்ல முடியும் என்றால் அதற்கு மட்டும் பள்ளிவாசலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு ஆசைப்படுதல்

அன்றைய சமுதாயத்தினர் எத்தகைய பிரச்சனைகளையும் துணிச்சலுடன் கையாண்டார்கள். ஆனால் ஆடல், பாடல், சினிமா, நாடகம் போன்றவற்றின் தாக்கத்தினால் மனிதர்களின் மனோ வலிமை குன்றி விட்டது. எந்தப் பிரச்சனையையும் அவர்களால் எதிர் கொள்ள முடிவதில்லை.

செத்து விடுவது தான் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று எண்ணுகின்றனர். இதன் காரணமாகவே அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன.

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி, கடைசி ரஸுல் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் சான்றுகளாகவுள்ளன.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் பல்வேறு காலகட்டங்களில் தம்மையும் இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட பொய்யர் சிலர் தோன்றினார்கள்.

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் யமாமாவில் முஸைலமா என்பவன், யமன் நாட்டில் அல் அஸ்வத் என்பவன், ஆபூபக்ர் (ரலி) ஆட்சியில் தலீஹா என்பவன் ஸஜாஹ் என்ற பெண், பின்னர் முக்தார் என்பவன், அதன் பின்னர் அல்ஹாரிஸ் என்பவன், நமது காலத்தில் மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் என்று தோன்றியுள்ளனர். இவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று பொய்யாக அறிவித்துக் கொண்டனர்.

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை அனைத்தையும் நமக்குக் கற்றுத் தந்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் மார்க்கத்தில் எள் முனையளவும் குறை வைக்கவில்லை.

ஆனாலும் முஸ்லிம்கள் அவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் மற்றவர்களிடமிருந்து மார்க்கத்தைக் காப்பியடிப்பதைக் காண்கிறோம்.

உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதேர முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

மற்றவர்கள் திதி, திவசம் செய்வது போல் முஸ்லிம்கள் மூன்றாம் பாத்திஹா நாற்பதாம் பாத்திஹா என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.

மற்றவர்கள் தேர், சப்பரம் இழுப்பதைப் பார்த்து இவர்கள் சந்தனக் கூடு இழுக்கின்றனர்.

அவர்கள் கொடி மரம் ஏற்றினால் இவர்களும் ஏற்றுகின்றனர். அவர்கள் பிரசாதம் கொடுத்தால் இவர்கள் தபர்ருக், சீரனி, நார்சா என்று கொடுக்கின்றனர்.

அவர்கள் பஜனை பாடுவதற்குப் போட்டியாக இவர்கள் மவ்லிதை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் கற்பனைக் காவியம் உருவாக்கிக் கொண்டது போல் இவர்கள் சீராப்புராணம் போன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர்.

பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்று அனைத்திலும் காப்பி அடித்து விட்டனர். இவையும் யுக முடிவு நாள் நெருங்கி விட்டதற்கான அடையாளமாகும்.

இது வரை நிகழாத அடையாளங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்த அடையாளங்களில் இன்று வரை நிறைவேறிய அடையாளங்களை நாம் கண்டோம். இப்படிப் பல அடையாளங்கள் வந்து விட்டன என்றாலும் அவர்கள் அறிவித்து இன்னும் நிறைவேறாத அடையாளங்களும் உள்ளன.

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது “முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் “கால்கள் சிறுத்த அபீஸனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

நூல்: புகாரி 5179

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 7119

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல்: புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.

நூல்: முஸ்லிம் 5183

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல்: முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல்: புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். “நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 1424

மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

நூல்: புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

  1. எனது மரணம், 2. பைத்துல் முகத்தஸ் வெற்றி, 3. கொத்து கொத்தாக மரணம், 4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு, 5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள், 6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள். (நூல்: புகாரி 3176)

முதல் இரண்டு நிகழ்வுகள் நடந்து விட்டன. மூன்றாவதாகக் கூறப்பட்டது ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் பாலஸ்தீனில் நடத்தப்படும் கொடுமைகளைக் குறிக்கிறதா? அல்லது இனி மேல் நடக்கவுள்ளதா? என்பது தெரியவில்லை. மற்றவை இன்னும் நடக்கவில்லை.

மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.  (நூல்: முஸ்லிம் 2451)

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காகப் போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல்: முஸ்லிம் 3546

யுக முடிவு நாள் நெருங்கி விட்டது என்பதை அறிவிக்கும் அடையாளங்களில் மேலே கூறிய சில அடையாளங்கள் இன்னும் நிறைவேறவில்லை. இதுபோன்ற சிறிய அடையாளங்கள் நிறைவேறினாலும் அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.

அந்த நாள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும் போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம். அந்த அடையாளங்களையும் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? எட்டு வயதுக் குழந்தை சுபுஹ் தொழுகைக்கு எழுந்திருக்காவிட்டால் எழுந்தவுடன் தொழச் சொல்லலாமா?

முஹைதீன், பஹ்ரைன்

பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளன. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை.

எட்டு வயது பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களைப் பழக்குவதற்காக தொழுகையை திரும்பத் தொழச் சொன்னால் அது நல்ல காரியமே.

ஏனென்றால் பொதுவாகக் குழந்தைகளை வணக்க வழிபாடுகளிலும் நற்காரியங்களிலும் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களைச் செய்வதற்கு குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பயிற்சி அளித்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷா தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கி விட்டனர்என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) புறப்பட்டு வந்து, “பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 862

நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல்: புகாரி 1960

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 1858

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டுஎன விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2596

? குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

ரஸ்னா

தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று இதைத் தெளிவுபடுத்துகின்றது.

முஹம்மது என்ற தன் பெயரைச் சூட்டுவது வணக்கம் என்றோ, அதனால் நன்மை கிடைக்கும் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இவ்வாறு பெயர் வைக்குமாறு அவர்கள் ஆர்வமூட்டவுமில்லை. எனவே இவ்வாறு பெயர் சூட்டுவது வணக்கம் அல்ல. வணக்கமில்லாத இந்தக் காரியத்தை நேர்ச்சையாகச் செய்ய முடியாது.

இதை நேர்ச்சையாக ஆக்காமல் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு முஹம்மது எனப் பெயரிட்டால் அதில் தவறேதுமில்லை. அவ்வாறு பெயர் வைக்கலாம்.

பொதுவாக நோச்சை செய்வதை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. நேர்ச்சை செய்யுமாறு அவர்கள் ஆர்வமூட்டவுமில்லை. இதைச் செய்யாமல் இருக்க வேண்டும். இதனால் எந்த நன்மையும் இல்லை என்றே போதித்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக் கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், “நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6608

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6609

எனவே நேர்ச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் நேர்ச்சை செய்துவிட்டால் அதை நிறைவேற்றுவது அவரின் கடமையாகி விடுகின்றது.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்

அல்குர்ஆன் 22:29

புவானாஎன்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லைஎன்று கூறினார்கள். “அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் “இல்லைஎன்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கைவசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

? தஸ்பிஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள். ஏனென்றால் சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே என்று என்னுடைய நண்பர் சொல்லுகிறார்.

தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நான்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்என கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: திர்மிதீ 3477

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை. மேலும் அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ் மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ் செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூற முடியாது என்று வாதிடுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், “இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை” என்று குறை கூறியுள்ளார்கள்.

மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்…

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491

இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள். எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது.

“யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: பஸ்ஸார்)

சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுவதால் தஹ்பீஹ் மணி மார்க்கத்தில் உள்ளது என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஒரு காரியம் கூடுமா? கூடாதா? என்று முடிவெடுக்க குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்   தொடர்: 16

ஹலாலை ஹராமாக்கும் வீண் சந்தேகங்கள்

சந்தேகமானதை விட்டு விலக வேண்டிய அதே நேரத்தில் அல்லாஹ் ஹலாலாக்கியதை நாமாக ஹராமாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது குற்றம். நாம் ஒரு விஷயத்தை சந்தேகம் கொண்டால், சந்தேகம் கொள்வதற்குரிய முகாந்திரம் இருக்க வேண்டும். வீணாண சந்தேகத்தால் ஹலாலான விஷயங்களை ஹராமாக்கிவிடக் கூடாது

தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியதுஎனக் கூறுவீராக! அறிகிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

அல்குர்ஆன் 7:32

அல்லாஹ் உங்களுக்கு உணவை இறக்கினான். அதில் விலக்கப்பட்டதையும், அனுமதிக்கப்பட்டதையும் நீங்களாக ஏற்படுத்திக் கொண்டீர்கள்!என்று (முஹம்மதே!) கூறுவீராக! “அல்லாஹ்வே உங்களுக்கு அனுமதியளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறீர்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!என்று கேட்பீராக      

அல்குர்ஆன் 10:59

அல்லாஹ் ஹராமாகிய விஷயங்களை பேணுதல் என்ற அடிப்படையில் ஹராமாக்குவது மறுமை வாழ்வை அழித்துவிடும்.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

அல்குர்ஆன் 6:140

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை விலக்கப்பட்டவைகளாக்கி விடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 5:87

சில நபர்கள் ஆடு அறுத்து விருந்திற்காக அழைக்கப்பட்டால், ஒரு உயிரைப் பலி கொடுத்து விருந்தா? என்பார்கள். விருந்திற்கு வரமாட்டார்கள். பேணுதல் என்ற அடிப்படையில் இப்படி செய்கிறார்கள் இவ்வாறு செய்வது குற்றம்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

அல்குர்ஆன் 6:119

இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டதுஎன்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:116

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட ஹலாலை ஹராமாக்கக் கூடிய அதிகாரமில்லை.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடைய குடும்பப் பிரச்சனைக்காக தேனை தமக்கு ஹராமாக்கிக் கொண்டார்கள். அதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 66:1

அடிப்படை இல்லாமல் சந்தேகம் கொள்பவர்களுக்கு நபியவர்களின் அறிவுரை

மார்க்கத்தில் ஹரமாக உள்ள பொருட்கள் இரண்டு வகைப்படும்.

  1. அடிப்படையில் ஹராம்
  2. புறக் காரணத்தால் ஹராம்

பன்றி இறைச்சி, தானாக செத்தவை போன்றவை முதல் வகையைச் சேரும். இவை அடிப்படையிலேயே ஹராம்.

இரண்டாவது வகை, ஆயிரம் ரூபாய் என்பது ஹலால். ஆனால் அதே ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கினால் ஹராம். லஞ்சம் என்ற புறக் காரணத்தால் ஹராமாகின்றது.

இரண்டாவது வகையில் தான் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள். வட்டி வாங்குபவரிடத்திலோ அல்லது சாராயக்கடை வைத்திருப்பவரிடத்திலோ அல்லது ஹராமான முறையில் தொழில் செய்யக் கூடிய வேறு எவரிடத்திலோ அன்பளிப்பாகவோ, வேறு எந்த வகையிலோ பணம் வாங்குவது சந்தேகத்திற்கு இடமானது என நினைக்கிறார்கள். ஆலிம்களும் அவ்வாறே ஃபத்வா கொடுக்கிறார்கள். இது தவறாகும். நாம் ஒருவரிடத்தில் பணம் வாங்கினால் அவரிடமிருந்து நாம் எப்படி வாங்குகிறோம் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும். (நாம் வட்டியாக வாங்கினால் அது தவறு; அன்பளிப்பாக வாங்கினால் அது சரி) ஆனால் அவருக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்று பார்க்கத் தேவையில்லை.

அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:134

அல்லாஹ் அல்லாதோரையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்என்றும் கூறுவீராக

அல்குர்ஆன் 6:164

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை

அல்குர்ஆன் 17:15

இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடைமுறை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வரியை வசூல் செய்தார்கள். அவ்வாறு வசூல் செய்யும் போது ஹலாலான முறையில் சம்பாதித்தவர்களிடமிருந்து மட்டும் தான் வசூல் செய்தார்களா? ஹலாலான முறையில் சம்பாதித்தவர்களிடமிருந்து மட்டும் தான் வசூல் செய்ய வேண்டும் என்று சொன்னார்களா? இல்லை. அப்படியானால் அல்லாஹ்வின் துôதருக்கு இல்லாத பேணுதல்  இவர்களுக்கு இருக்கிறதா? இந்த ஜகாத் பின்வரும் விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்

அல்குர்ஆன் 9:60

இந்த ஸகாத்தை அல்லாஹ்வின் பாதையில் கொடுப்பதற்குக் கூட மார்க்கம் கட்டளையிடுகிறது. இது சந்தேகத்திற்கிடமான ஒன்றாக இருந்தால் அல்லாஹ் இவ்வாறு கட்டளையிடுவானா?

ஜிஸ்யா வரியென்பது காஃபிர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களால் வசூல் செய்யப்பட்டது. அன்றைய காஃபிர்கள் ஹலாலான முறையில் மட்டும் சம்பாதித்தார்கள் என்று சொல்ல முடியுமா?

போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களுக்கு கனீமத் என்று பெயர். நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் ஹலாலான முறையிலா சம்பாதித்தார்கள்? ஆனாலும் இது மார்க்க அடிப்படையில் நமக்கு ஹலால் ஆகும்.

தகப்பன் விட்டுச் சென்ற சொத்தில் மகன் வாரிசாவார். இதற்கு வாரிசுரிமை என்று பெயர். ஒரு மனிதர் முழுக்க முழுக்க ஹராமான முறையில் சம்பாதித்துள்ளார். இப்போது அவருடைய சொத்தில் மகன் வாரிசாக மாட்டார் என்று சொல்ல முடியுமா? அல்லது ஹலாலான முறையில் தகப்பன் சம்பாதித்தால் மட்டுமே மகன் வாரிசாக முடியும் என்று மார்க்கம் கூறுகிறதா?

நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களிடமிருந்து அன்பளிப்பைப் பெற்றுள்ளார்கள்.

அய்லா என்ற மன்னர் கோவேறுக் கழுதையையும் போர்வையையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

அய்லா என்ற ஊரின் மன்னன் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்று எழுதிக் கொடுத்தார்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)

நூல்: புகாரி 1482

உகைதிர் என்ற மன்னர் பட்டாடையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “தூமத்துல் ஜந்தல்பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை  அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே (பெண்களுக்கிடையே) பங்கிட்டுவிடுங்கள்என்று சொன்னார்கள் .

நூல்: முஸ்லிம் 1409

தூயசன் என்ற மன்னர் 33 ஒட்டகங்கள் கொடுத்து வாங்கிய ஆடையை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அபூதாவூத் 3516

மன்னர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது, மக்களுடைய வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்கை வாழ்ந்தவர்கள். எனவே இந்தப் பணத்திலிருந்து வாங்கப்பட்ட பொருட்களை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த போது அதை ஏற்றுள்ளார்கள்.  யூதப் பெண்மணி கொடுத்த விருந்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் அடிமையாக இருந்த பரீரா என்ற அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வந்த இறைச்சியை அந்த பெண் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த போது அதை ஏற்றுக் கொண்டார்கள்.

ஹலாலான விஷயங்களை ஹராமாக நாம் கருதியதன் விளைவு, ஹராமான விஷயங்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறோம்.

பேணுதல் என்ற பெயரில் ஹலாலை ஹராம் ஆக்கலாமா?

முஸ்லிம்கள் சிலர் பேணுதல் என்ற பெயரில் ஹலாலை ஹராமாக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை அனுமதித்தார்களோ அதைத் தடை செய்வதற்கு நாம் உரிமை படைத்தவர்கள் அல்லர் என்பதை நாம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வையும் அவனுடைய துôதரையும் நம்பியவர்கள் இப்படி சுயமாக முடிவெடுப்பதும் கூடாது. அதோடு மட்டும் நின்று விடாமல் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாம் பின்பற்றுவது தான் அதற்கு உரிய வழியாகும். குர்ஆனிலும் ஹதீஸிலும் எது தடை என்று சொல்லப்பட்டதோ அதை மட்டும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு சில உதாரணத்தைப் பார்ப்பதன் மூலம் இதை நாம் விளங்கி கொள்ளமுடியும்.

இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டை ஆடுவது தடை செய்யபட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!

அல்குர்ஆன் 5:95

இஹ்ராம் அனிந்தவர்கள் தரையில் வேட்டை ஆடுவது தடையாகும். கடலில் வேட்டை ஆடுவது கூடும்.

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 5:96

இஹ்ராம் அனிந்திருப்பவர் தரையில் வேட்டையாடக் கூடாது என்று சொல்லப்பட்டிருப்பதால் அது மட்டுமே தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)  அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர்.  அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்)  அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள்.  “நாம் சந்திக்கும் வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்!என்று நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.  கடலோரமாகச் சென்று திரும்பிய போது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டினர்நான் மட்டும் இஹ்ராம் கட்டவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.  நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன்.  அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?” என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக் கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்.  என் தோழர்கள் நபி (ஸல்)  அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்:  அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லைஅப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார்.  ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?” என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம். பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!என்று கூறினார்கள்.  அப்போது நபி (ஸல்)  அவர்கள், “உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள்.  நபித் தோழர்கள் “இல்லை!என்றனர்.  “அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நுôல்: புகாரி 2570, 5407, 1821, 1822, 1823, 1824, 2914, 5491, 5492

இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்க வேண்டியது என்னவென்றால் இஹ்ராம் அனிந்திருப்பவர் வேட்டையாடக் கூடாது. அதே நேரத்தில்  இஹ்ராம் அனியாதவர் வேட்டையாடிக் கொண்டு வந்தால் அதைத் தாராளமாக நாம் உண்ணலாம். பேணுதல் என்ற அடிப்படையில் அதை உண்ணாமல் இருப்பது நபிவழிக்கு முரணானதாகும்

புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் கொடுத்தால் உண்ணலாமா?

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அதனை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை  என்று ஒரு கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அதை உண்ணுங்கள் என்றார்கள்.

நூல்: புகாரி 2057, 5507

ஆகவே பேணுதல் என்ற அடிப்படையில் நாம் உண்ணாமல் இருப்பதும் அதை வெறுத்து ஒதுக்குவதும் தவறாகும்.

மது ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை உபயோகிக்கலாமா?

இஸ்லாத்தில் ஆரம்ப காலத்தில் மது அருந்துவது முறையாகத் தடுக்கப்படவில்லை. மாறாக மது அருந்திவிட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்ற தடை மட்டும் வழங்கப்பட்டது. பின்பு முற்றிலுமாக அல்லாஹ் தடுத்து விட்டான். பின்பு நபி (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தை உபயோகிப்பதை தடுத்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் (இன்ன குலத்தாரில்) இந்தக் குடும்பத்தார் ஆவோம். (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) புனித மாதங்களிலே தவிர வேறு மாதங்களில் நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள். அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம்; எங்கள் பின்னணியில் (இங்கே வராமல் ஊரில்) இருப்போருக்கு, அதன்பக்கம் அழைப்பு விடுப்போம்என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடை விதிக்கிறேன்என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது – அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதி கூறுவது, தொழுகையை நிரந்தமாகக் கடைபிடிப்பது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்தி-ருந்து ஐந்திலொரு பங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியவையே நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.

மேலும், (மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய் ஆகியவற்றை (குடிபானங்கள் ஊற்றி வைக்கப் புழங்க வேண்டாமென) நான் உங்களுக்குத் தடை விதிக்கிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 523

நீக்கப்பட்ட தடை

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் “அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)என்று சொல்-விட்டார்கள்.

நூல்: புகாரி 5592

முதலில் நபி (ஸல்) அவர்கள் மது ஊற்றி வைத்த பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்று கூறினார்கள். பின்பு மதுவை அருந்துவது தான் தவறேயன்றி அந்தப் பாத்திரத்தை உபயோகம் செய்வதற்குத் தடையில்லை என்று கூறி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் மது குடிப்பதில் மூழ்கி இருந்தார்கள். அதை அவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகத் தடுத்தார்கள். பின்பு, அந்தப் பாத்திரங்களை உபயோகம் செய்வதை  நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

இன்று நம்மில் சிலர் பேணுதல் என்ற பெயரில், இந்தப் பாத்திரத்தையா நாம் உபயோகம் செய்வது என்று விதண்டாவாதம செய்கின்றனர். ஆனால்  நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதை மேற்கூறப்பட்ட ஹதீஸில் நாம் பார்த்தோம். ஆகவே பேணுதல் என்ற பெயரில் சுன்னத்தை மறுத்து விடுதல் கூடாது.

இறை மறுப்பாளர்களின் அன்பளிப்பை வாங்கலாமா?

இன்று நாம் பரவலாக முஸ்லிமல்லாத அன்பர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் அவர்கள் ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதைப் பெற்றுக் கொள்ளலாமா? அல்லது பேணுதல் என்ற  பெயரில் மறுக்க வேண்டுமா? என்றால் மறுக்கக்கூடாது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கூறுவதாக இருந்தால், எந்த நபியை அல்லாஹ் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டானோ, இன்னும்  எவருடைய வாழக்கையின் மூலம் நமக்கு ஹஜ் என்ற கடமையை வகுத்துத் தந்தானோ அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். இதோ அந்த செய்தி:

(நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:        1. (அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) “நான் நோயுற்றிருக்கின்றேன்என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்.  2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு  மக்கள், “இப்படிச் செய்தது யார்?” என்று கேட்ட போது,) “ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்ததுஎன்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) “இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் அவரது  அழகான மனைவியும் இருக்கிறாள்என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை  அழைத்து வரச் சொல்- அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, “இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் சகோதரிஎன்று பதிலளித்தார்கள். பிறகு சாரா(அலை) அவர்களிடம் சென்று, “சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான், “நீ என் சகோதரிஎன்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்-) என்னைப் பொய்யனாக்கி விடாதேஎன்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வ-ப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்) “அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வ-ப்பி-ருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், “எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வ-ப்பி-ருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, “நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, “என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ் நிராகரிப்பாளனின்…. அல்லது தீயவனின்…. சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3358

அந்தக் கொடுங்கோல் மன்னன், ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். அன்னை ஹாஜர் அவர்கள் வழியாகத் தான் இஸ்மாயீல் நபி பிறக்கிறார்கள். பின்பு அவர்களுடைய சந்ததியிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, முஸ்லிமல்லாத நண்பர்கள் கொடுக்கும் அன்பளிப்பை எந்த ஒரு மன உறுத்தலும் இல்லாமல் நாம் அதை பெற்றுக் கொள்ளலாம். பேணிக்கை என்ற பெயரில் தவிர்ந்திருப்பது கூடாது.

இன்னும் சொல்லப் போனால், ஒரு காஃபிர் என்பதையும் தாண்டி அவன் ஒரு கொடிய அரசன்; இப்ராஹிம் நபியவர்களின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவன். இதன் காரணமாகத் தான் இப்ராஹீம் நபியவர்கள், சாரா அவர்களைத் தமது தங்கை எனப் பொய் கூறினார்கள். இந்த விபரங்களை நாம் மேற்கண்ட ஹதீஸில் பார்த்தோம். அப்படியிருந்தும் இப்ராஹீம் (அலை) அவர்கள் அந்த மன்னனின் அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.

எனவே பேணுதல் என்பதை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பேணுதல் என்ற பெயரில் ஹலாலானதைப் புறக்கணிப்பது கூடாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

எது உண்மையான ஒற்றுமை?

கே.எம். அப்துந் நாசிர்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 15:94

மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.

மேலும் இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.

இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்

நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான். ஆனால் இந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கக் கூடிய தர்ஹா வழிபாடுகள், தாயத்து தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், மவ்லித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள், மீலாது விழா, ஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.

வரதட்சணைக் கொடுமை, வட்டி, பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது, பெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை, போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.

இந்நிலையில் தான் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரச்சாரம் இலட்சக்கணக்கான மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபி, ஹனபி என்றும் இராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்றும் காதிரியா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா, நக்ஷபந்தியா என்றும் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள்.

அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் இந்தத் தவ்ஹீத்வாதிகள் தான் சமுதாய ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள், அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத் தான் செய்யும்.

ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத் தான் செய்யும். எனவே ஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவது தான் இஸ்லாமிய நெறிமுறையா?

ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத் தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத் தான் செய்யும். எனவே ஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பது தான் இஸ்லாமிய வழிமுறையா?

தவ்ஹீத் பிரச்சாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததினால் ஊர் மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. எனவே லூaத் நபியவர்கள் பிரிவினைவாதியா?

ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வந்த ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?

அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும், அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் ஷுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவானார்கள். எனவே ஷுஐப் நபி பிரிவினைவாதியா?

இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கி, உங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமை தான் என்றுரைத்தார்களே அந்த இப்ராஹீம் (அலை) பிரிவினைவாதியா?

உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லைஎன்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

அல்குர்ஆன் 60:4-6

இப்ராஹீம் நபி ஓரிறைக் கொள்கைக்காகத் தம்முடைய சமுதாயத்தைப் பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்று தான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியா? திருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன சொன்னார்கள் தெரியுமா?

இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார், நம்முடைய வழிமுறைகளைக் குறை கூறுகிறார், நம்முடைய ஜமாஅத்துகளைப் பிரித்து விட்டார், நம்முடைய கடவுள்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (பார்க்க: அஹ்மத் 6739)

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினைவாதியா?

லூத் (அலை), ஸாலிஹ் (அலை), ஷுஐப் (அலை), இப்ராஹீம் (அலை), முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பாவமான காரியங்களைச் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

திருக்குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறவே கிடையாது.

மாறாக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், ”மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான்.

அல்குர்ஆன் 42:13

மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!

அல்குர்ஆன் 3:103

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம்  மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்” என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

குர்ஆன், ஹதீஸில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்து, பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்து, பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும். அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடுவோமாக!

—————————————————————————————————————————————————————-

சட்டமன்றத்தில் ஒரு ஜனாஸா

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 85,685 கோடி ரூபாய்! இதில் ஐந்தில் ஒரு பகுதி மது விற்பனை மற்றும் அதற்காக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கின்றது.

இப்படி ஒரு வருவாயை ஈட்டுகின்ற மாநில அரசு மதுக்கடைகளை மூடுகின்ற அளவுக்கு முன்வருமா? ஒருபோதும் வராது.

“தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?’ என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு:

டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.

இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.

சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.

ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.

மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினாம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளது.

இதுதான் மதுவிலக்கு (?) துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பதில் ஆகும்.

அமைச்சரின் இந்தப் பதிலில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத் தடையாக இருப்பது வருவாய் தான் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் உட்பட இளைய தலைமுறையினர் குடிகாரத் தலைமுறையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சாலை விபத்துக்களில் அதிகமான சதவிகிதம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவது தான்.

மனைவி மக்களை அடிப்பது, கொலை செய்வது, குடும்ப அமைப்பைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவது போன்ற கொடுமைகளுக்குக் காரணமாக அமைவது மது தான்.

ஆக அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படையான, வீட்டையும் நாட்டையும் அழிக்கின்ற மதுவை, அதில் கிடைக்கின்ற வருவாய் காரணமாக அரசு ஒழிக்க மறுக்கின்றது.

மக்கள் நலனைக் காக்க வேண்டிய அரசுகள், மக்களைக் கொலை செய்யும் அரசாக மாறியுள்ளன.

மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்று காரணம் சொல்கின்றார் அமைச்சர்.

மதுவிலக்கை ரத்துச் செய்து விட்டு, தமிழகத்தில் முதன்முதலில் மதுக்கடைகளைத் திறக்கும் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்ன காரணம் தான் இது.

அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழகத்தில் அமல்படுத்துவது அசாத்தியம் என்று கூறுகின்றார்.

இதுவும் கருணாநிதி அன்று கூறியது தான். சுற்றியும் பற்றி எரிகின்ற வளையத்தின் நடுவே தமிழகம் ஒரு சூடத்தைப் போன்று இருக்கின்றது. அது பற்றாமல் இருக்க முடியாது என்று கருணாநிதி அவருக்கே உரிய இலக்கிய நடையில் சொன்னதைத் தான் இன்று நத்தம் விஸ்வநாதன் சாதாரண நடையில் சொல்கின்றார்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதிலுக்கு தினமணி வைத்தியநாதன் தனது தலையங்கத்தில், “லஞ்சம் இன்று எல்லா மட்டத்திலும் ஆட்டிப் படைக்கின்ற அரக்கனாக இருக்கின்றது என்பதால் அதைச் சட்டப்பூர்வமாக ஆக்க முடியுமா?’ என்று சரியாகக் கேட்டிருக்கின்றார்.

குடி குடியைக் கெடுக்கும்

மதுவின் தீமைகளை விளக்க முகாம்களும் மாவட்டம் தோறும் அமைக்கப் போகின்றார்களாம். தீயைக் கொளுத்தி எரிய விட்டு விட்டு, அதை அணைக்காமல் தீயினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி பாடம் நடத்தப் போகிறார்களாம். அத்தனையும் கேலிக் கூத்து!

அரசாங்க விடுமுறை நாட்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப் போகிறார்களாம். விடுமுறைக்கு முந்தைய நாளே மது வாங்கி வைக்கத் தெரியாத பச்சைப் பாலகர்கள் தான் குடிகாரர்களாக இருக்கிறார்களா? எப்படியெல்லாம் காதில் பூச்சுற்றுகிறார்கள்.

தேர்தல் நடைபெறுகின்ற நாளில் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய நாள், பிந்தைய நாள், வாக்கு எண்ணும் நாள் போன்ற நாட்களில் மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கின்றது. புத்தி சுவாதீனத்துடன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக! ஆள்வோரைத் தேர்வு செய்வதற்குத் தெளிவான அறிவு தேவை! அதனால் தான் மதுக்கடைகளுக்கு இந்த மூடுவிழா!

அன்றாடம் தன்னுடைய ஒவ்வொரு குடும்ப விவகாரத்திலும் எல்லா குடிமகனுக்கும் தெளிவான அறிவு இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை என்பதை நாம் இங்கு தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு மாநில அமைச்சர் சட்டமன்றத்தில் மதுவிலக்கை அமல் செய்ய முடியாது என்று சொல்கிறார். மதுவை அரசாங்கமே விற்பனை செய்யும் என்கிறார். அந்தப் பணத்தில் தான் அரசை நடத்துகிறோம் என்கிறார். இப்படி சட்டமன்றத்தில் அறிவிக்கும் போது ஒரு முஸ்லிமின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

ஆனால், சாதனை படைக்கப் போகிறோம்; சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறோம்; நாங்கள் சமுதாயத்தின் மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று அல்ல. மானம் காக்கப் போகிறோம் என்று புறப்பட்ட ம.ம.க. தலைவர் சட்டமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?

சாய்மான நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் கட்டையாக – தப்பித் தவறி வெளிநடப்பு செய்து விட்டால் அம்மாவின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமே என்று சத்தியம் செய்து கொண்டு நாற்காலியில் அட்டையாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்.

இஸ்லாமிய ஆட்சி என்று வாய்கிழியப் பேசிய வாத்தியார் இவர். அப்போது பேசியதெல்லாம் புரட்சி! இப்போது பேசுவதெல்லாம் புரட்சித் தலைவி (?) புகழ்ச்சி!

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இந்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்” என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முற்றுகைப் போர் நடத்தினார் இந்த மமக தலைவர். ஆனால் அவரது நெஞ்சம் நிறைந்த சகோதரி, மதுவிலக்கு கேட்பவர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் என்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார். அதுவும் இவர் சதாவும் அம்மா புகழ் பாடிக் கொண்டிருக்கும் சட்டசபையிலேயே இதை அறிவிக்கிறார். அதையும் கேட்டுக் கொண்டு இந்த ஜனாஸா அசையாமல் இருந்து கொண்டிருக்கின்றது.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தனது சமுதாயத்திற்குப் பாதிப்பு என்றதும் வெளிநடப்பு செய்கின்றார். கம்யூனிஸ்ட்கள் வெளிநடப்பு செய்கின்றனர்.

ஆனால் இவரோ ஆளும் கட்சியின் அடிமைச் சின்னமாக அடங்கிக் கிடக்கின்றார். அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்திற்காக, சமுதாயத்திற்காக இந்த மதுவிலக்கு விவாதத்தின் போது மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் குறைந்தபட்சம் வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டும். அதை இவர் செய்ய மாட்டார். இவர்கள் மானம் காக்கப் புறப்படவில்லை. சமுதாய மானத்தை அடகு வைத்து விட்டு மவுனம் காக்கவே புறப்பட்டிருக்கின்றார்கள். மரணமாகி ஜனாஸாவாகக் கிடக்கின்றார்கள்.

இவர்கள் சட்டசபையில் ஜெயலலிதா புகழ் பாடுவதும், முந்தைய அரசை வசை பாடுவதுமாக இருந்து கைதட்டல் பெறுவதிலேயே குறியாக இருந்தனர் என்று நாளிதழ்கள் குறிப்பிடும் அளவுக்கு சமுதாயத்தைக் கேவலப்படுத்தி விட்டார்கள்.

ஏகத்துவம் இதழுக்கு இவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற அரசியல் கட்சிகளைப் போன்று எங்களுக்கும் தேர்தலில் நிற்க ஆசை, அதனால் போட்டியிடுகிறோம் என்று இவர்கள் சொல்லியிருந்தால் இவர்களை நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் இவர்கள் சமுதாயத்தின் மானம் காக்கப் புறப்பட்டு விட்டோம்; நாங்கள் மற்றவர்களைப் போன்றல்ல. நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சமுதாயத்தின் பெயரை விற்றதால் அவர்களை விமர்சிக்கின்றோம்.

குஜராத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரபலி மோடியை பதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைத்து வந்தார். அதற்குப் பிறகும் இவர்கள் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை.

குஜராத் போன்ற கலவரங்களில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் தான் என்பதால் மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கையாக இருந்தது. அதை மத்திய அரசு நிறைவேற்ற முன்வந்த போது நரபலி மோடி கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அந்தச் சட்டத்தை எதிர்த்து தனது பாசிச சிந்தனையை உறுதிப்படுத்தினார். அப்போதும் இவர்கள் அம்மாவைத் துதி பாடுவதை விடவில்லை.

குஜராத்தில் முஸ்லிம்களின் பிணத்தின் மீது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நரபலி மோடி, அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கின்றாராம். 2000 முஸ்லிம்களைக் கொன்றதை மூடி மறைக்கும் இந்த மோடி வித்தைக்குப் பறந்தோடி ஆதரவளித்த ஜெயலலிதா, தனது சகாக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோரை அனுப்பி வைத்து முஸ்லிம்களின் மீதான இனப் படுகொலைக்கு அங்கீகாரம் வழங்கினார். அதையும் இவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இத்தனைக்குப் பிறகும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்குவதாகப் பல்லிளித்து பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கிறார் ஜவாஹிருல்லாஹ்.

முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதை ஆதரிப்பதற்கும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கும் ஒரு சட்டத்தை எதிர்ப்பதற்கும் நூறு மதிப்பெண் கொடுக்கும் இந்த வாத்தியார், சங் பரிவாரத்தின் ஊதுகுழலாகி விட்டார் என்று தானே அர்த்தம்?

இத்தனைக்குப் பிறகும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேரம் படியாமல் இவர்களின் நெஞ்சம் நிறைந்த சகோதரி இவர்களைக் கழற்றி விட்டு விட்டதால், ஜெயலலிதா மோடியின் தோழி, கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்த்தவர், கரசேவைக்கு ஆளனுப்பியவர், அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர், மறுபடியும் அம்மா புகழ் பாட ஆரம்பிப்பார்கள். இன்னும் நான்கரை வருடங்களை ஓட்ட வேண்டுமே!

இலங்கையில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த விடுதலைப் புலிகளை தங்களது இழிவான அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, காவல் கண்காணிப்பாளர் முஹம்மது இக்பால் உள்ளிட்டோரை மனித வெடிகுண்டு மூலம் உடல் சிதற வைத்த தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது; மன்னிப்பளித்து கருணை காட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் சட்டத்தையும் குறை காணத் தயாராக விட்டார்கள் என்று தானே அர்த்தம்.

ஆக, இவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே தாங்கள் போட்டியிடும் ஒருசில சீட்டுக்கள் தானே தவிர, சமுதாயம் அழிந்து போவதைப் பற்றிக் கூட இவர்கள் கவலைப்படவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டார்கள்.

சட்டமன்ற வரலாற்றில் சமுதாயத்திற்கு வாய்த்த எம்.எல்.ஏ.க்களில் இவர்களைப் போன்று கேடுகெட்டவர்கள் எவரும் இருந்ததில்லை.

—————————————————————————————————————————————————————-

குடியைக் கெடுக்கும் குடியரசுகள்

இஸ்லாம் மதுவை மட்டுமல்ல! மதுவிலிருந்து வரும் வருவாயையும் தடை செய்கின்றது.

அல்பகரா அத்தியாத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம் வரை இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, “மதுபான வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டது!என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2226

ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. கிருஷ்ணய்யர் அவர்கள், ஹிந்து நாளேட்டில் பட்ங் நற்ஹற்ங் ஹய்க் ங்ஸ்ண்ப் ர்ச் க்ழ்ண்ய்ந் என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் மது குறித்து இஸ்லாம் கொண்டிருக்கின்ற பார்வையைப் பார்க்கின்றார். அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம்.

கேரளா தான் இந்தியாவின் மகாக் குடிகார மாநிலம் என்று அடித்துச் சொல்லி விடலாம். காரணம், அந்த மாநிலத்தில் தான் தனி மனித மது நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகின்றது. தன்னுடைய தனி வணிக சாம்ராஜ்யமான மதுபானக் கழகத்தின் மூலம் கேரள அரசு கொள்ளை லாபம் அடைந்து வருகின்றது.

அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பார்த்தால் மதுபானத்திற்கு ஒரு போற்றுதலுக்குரிய மரியாதையை வழங்கி விடும் போல் தெரிகின்றது. பொதுத்துறையில் இது மக்களுக்குக் கணிசமான வேலை வாய்ப்பைக் கொடுத்தாலும் இளைய தலைமுறையினரை குடிப் பழக்கத்திற்கு அடிமையாக்கி ஒரு குடிகாரத் தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டத்தை விட இது மிகக் கொடியதாகும்.

தனக்கு நியாயம், சரி என்று படுகின்ற விதத்தில் எந்த ஒரு வியாபாரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்குரிய அதிகாரமும் உரிமையும் மாநில அரசுக்கு உண்டு. அந்த அதிகாரத்தின் மீது வினா தொடுப்பதோ அந்த அதிகாரத்தின் மீது தாக்குதல் தொடுப்பதோ நம்முடைய நோக்கமல்ல! ஆனால் இந்த வியாபாரமே ஒரு விபரீத விளைவைத் தரும் வியாபாரமாகும்.

இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர் தனது வாயில் ஒரு சில சொட்டுக்கள் தொண்டைக்குழியில் விழத் துவங்கிய மாத்திரத்தில் அவருக்குத் தோன்றுவது ஒரு வேடிக்கை உணர்வு! ஒரு விளையாட்டு உணர்வு!

அடுத்து வாய்க்கு வந்தபடி உளறல், பித்துக்குளித்தனமான பிதற்றல்! அதற்குப் பிறகு உச்சக்கட்டமாக உள்ளுணர்வு மங்கி, மழுங்கி ஒரு உதறல்! தரையில் உடையின்றி, உணர்வின்றி உருளுதல் என்ற உறை நிலைக்கு அவரை இது கொண்டு போய் விடுகின்றது.

நிறைய வாய்த் தகராறுகள், கடுங்காவல் தண்டனை வரவழைக்கும் குற்றச் செயல்கள், கோரமான சாலை விபத்துக்கள், பெரும் தெருச் சண்டைகள், கலவரங்கள் அனைத்திற்கும் காரணமாக அமைவது மதியை மயக்கும் இந்த மது தான்.

கற்பழிப்புக்கள், பலாத்கார பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணம் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சிக் கொஞ்சி உறிஞ்சுகின்ற, திராவகத்தை மிஞ்சிய, நஞ்சை விடக் கொடிய இந்தப் போதைமிகு திரவம் தான்.

முதல் உறிஞ்சலில் ஒரு வினோதம், வேடிக்கை! அடுத்த உறிஞ்சலில் வம்புக்கு இழுக்கின்ற சண்டை சச்சரவு உணர்வு! மூன்றாவது உறிஞ்சலில் முடங்கிப் போகும் மூளை செயலிழப்பு! இத்தனையும் சாலையில் நடந்தால் தான்.

வீட்டில் நடந்தாலோ, மனைவி ஆட்சேபணை செய்யவில்லை என்றால் பிழைத்தாள். இல்லையேல் அன்றாடம் அவள் செத்து, செத்துத் தான் பிழைக்க வேண்டும். அவளது வாழ்நாள் முழுவதும் சாக்காடும் சாபக் கேடும் தான்.

மதுவுக்காக ஒரு தொகையை தொடர்ந்து தொலைப்பதால் அந்தக் குடும்பம் திவாலாகி விடுகின்றது.

குடியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மாநில அரசு தான் விற்பனை மற்றும் பார்களுக்குரிய உரிமங்களை வழங்குகின்றது. ஆனால் அது இந்தக் கேடுகளைப் பற்றி விசாரிப்பது கிடையாது.

அமைதியாகப் பயணம் செய்வது, மற்றவர்களுடன் நட்புரிமையுடன் பழகுதல், சகோதர வாஞ்சையுடன் ஒன்றிணைந்து வாழ்தல் ஆகியவை ஒரு குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமைகளைப் பறித்து விடுகின்றது தாராள மது வினியோகம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் அரசுகள் கூட பார் அட்டாச்சுடன் கூடிய கிளப்புகளுக்கு உரிமங்களை அள்ளி வழங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கின்றன.

மதுவெனும் இந்த சாபக்கேட்டை விட்டுத் தொலையுங்கள் என்று அரசு நிர்வாகத்தைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் செயல்படுத்த விரும்பியது போன்று, “மது அருந்த மாட்டோம்’ என்று முதலில் நீதிபதிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழி கொடுத்து விட்டு, அவர் குடிகாரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நீதிபதியை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தனியார் சாராய விற்பனைக்குத் தடை விதித்து விட்டு, தான் மட்டும் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்ற கேரள அரசுக்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு அரசு சரியான கூட்டாளியாக அமைந்து விட்டது. சாராயத்தைத் தானே தயாரித்து, விற்பனை செய்வதில் தமிழ்நாடு அரசு தனி சாம்ராஜ்யமாகத் திகழ்கின்றது. அதற்கு இணையாகத் தனியார் போட்டி போடுவதை விட்டும் அது தடை செய்து விட்டது.

இந்த நாசகார சாராயத்தின் இலாபம் மாநில அரசாங்கத்தின் கருவூலங்களுக்குத் தான் வலு சேர்க்கின்றது. அரசியல் சட்டத்தின் 47வது பிரிவுக்கு எதிராகச் செயல்படும் இந்த மாநில அரசுகளைக் கலைப்பதற்கு யார் துணிவார்? பல்வேறு அரசியல் பின்னணிகள், பிரச்சனைகள் இருப்பதால் மத்திய அரசு இதை ஒருபோதும் செய்யத் துணியாது.

தமிழக அரசு சில அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் சீராகவும் சிறப்பாகவும் வினியோகிப்பது பாராட்டத்தக்கதாகும். இந்த அத்தியாவசியப் பொருட்களில் காலம் கழிக்கின்ற மக்கள் இதை வெகுவாகப் பாராட்டுகின்றனர். ஆனால் கேரளாவிலோ பொருட்களின் விலையும் மதுவும் எந்தக் கட்டுப்பாடுமின்றி ஏறிக் கொண்டே இருக்கின்றது.

ஒரு பொதுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசும் போது, குடிப் பழக்கம் என்ற தொற்று நோய் கேரளாவைத் தொற்றிக் கொண்டு இருக்கின்றது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக மதுவினால் அந்த மாநிலம் அழிந்து போகும் என்பதை நானும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மது அருந்துதல் படு மோசமான ஒரு தீமை! குடிப் பழக்கம் தொடருமானால் அது கட்டுக்குள் அடங்காத, பன்மடங்கு பரிமாணம் கொண்ட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

குற்றவாளிகளும், வன்முறைச் சிந்தனை கொண்ட குண்டர்களும் தான் மதுவில் மட்டற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி ஒரு கேடு கெட்ட தொழிலைத் தான் மாநில அரசுகள் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றன.

முக்கியமான மத விழாக்களுக்கு விடுமுறை நாட்களையொட்டி மதுக்கடைகளில் மது விற்பதை நிறுத்தி வைக்க கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பெரும் முயற்சி மேற்கொண்டார். அது வெற்றிகரமாகவும் அமைந்து மக்களுக்கு ஓர் அமைதியையும் ஆறுதலையும் அளித்தது. செல்வாக்கு படைத்த அரசியல் சக்தி, ஒருவாறாக அவரை இட மாற்றம் செய்து மகிழ்ச்சியடைந்தது.

நேரு ஆட்சியில் இருந்த போது சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் மது வினியோகிக்கக் கூடாது என்று தடை விதித்தார்.

மது வினியோகம் இல்லையென்றால் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு விருந்தினர்கள் இந்தியத் தூதரகத்துக்கு வர மாட்டார்கள் என்று தூதரக அதிகாரிகள் டெல்லிக்குக் கடிதம் எழுதினர். தேசிய தினங்கள் மதுவுடன் கொண்டாடப்படும் என்றால், தேசிய தினங்களில் மது வினியோகம் தான் மகிழ்ச்சியளிக்கும் என்றால் அத்தகைய தேசிய தினக் கொண்டாட்டம் தேவையில்லை என்று நேரு அதற்குப் பதில் அனுப்பினார்.

இந்தத் தீமைக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதி மொரார்ஜி தேசாய் மட்டும் தான். சம்பளம் கொடுக்கப்படும் நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் மது வினியோகம் இல்லாத நாட்களாக அறிவித்தார்.

மத்திய அரசு நினைத்தால் அரசியல் சட்டம் பிரிவு 47ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்.

பெர்னாட்ஷா முதல் காந்தி வரையிலான பேரறிஞர்கள், பெரியோர்கள் மதுவெனும் தீமைக்கு ஆட்படாதவர்களாக, அடிமைப்படாதவர்களாகத் திகழ்ந்தனர். வேத காலம் முதல் இஸ்லாமிய மார்க்கம் வரை கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய நெறிகள் அனைத்தும் மது அரக்கனிடமிருந்து பெறுகின்ற விடுதலையை வலியுறுத்தியிருக்கின்றன.

கலைஞர்கள், கவிஞர்கள் தான் மதுவை ஆதரித்து, மதுவின் பாதிப்பினாலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

மதியுள்ள மனிதர் அவசியம் மது அருந்த வேண்டும்; வாழ்க்கையின் வெற்றி, போதையில் தான் புதைந்து கிடக்கின்றது என்று பைரோன் என்ற கவிஞன் புலம்புகின்றான்.

வறுமை மற்றும் இல்லாமையை நீக்குவது தேச பக்தி என்றால், மது விலக்கை அமல்படுத்துவதற்கு நாட்டில் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

1998ல் மதுவில்லா நாட்கள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. உச்ச நீதிமன்றம் மதுப்பழக்கத்தை ஒழிக்கும் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

திருட்டு, கொள்ளை, விபச்சாரத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயை விட மதுவின் மூலம் வரும் வருவாய் பழிப்புக்கும் இழிவிற்கும் உரிய வருவாயாகும்.

மதுவினால் வரும் அரசு வருமானம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு, மதுக்கடைகள் அழிக்கப்பட வேண்டும்.

எனக்கு மட்டும் ஒரேயொரு மணி நேரம் சர்வாதிகார ஆட்சியாளராக ஆள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டால் நான் செய்யப் போகின்ற முதல் காரியம் எவ்வித நஷ்ட ஈடுமின்றி சாராயப் பண்ணைகளை மூடி அவற்றைத் தகர்த்தெறிந்து விடுவேன்.

பண்டிகை நாட்களில் மது விற்பனையைத் தடை செய்யக் கூடாது என்பதற்காக, சாராய சாம்ராஜ்யம் என்ன விலை கொடுத்தாவது அரசியல்வாதிகளை வாங்கி விடும். இதனால் குடிப்பழக்கம் இளைஞர்களிடம் குடிகொண்டு வீதிகளிலும் வீடுகளிலும் இரத்த ஆறு பீறிட்டு ஓடும். இந்த நாடு அழிந்து நாசமாகி விடும்.