ஏகத்துவம் – அக்டோபர் 2008

தலையங்கம்

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம்  ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை.

 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் கூடாது. வரும் ஆண்டு தான் உம்ரா செய்ய வர வேண்டும்.
 2. மக்காவிலிருந்து வரும் முஸ்லிம்கள் மக்காவிற்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவையாகத் தெரிந்தன.

இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் கையெழுத்தாவதற்கு முன்பே மக்காவிலிருந்து அபூ ஜன்தல் என்பவர் உடலில் சங்கிலியால் பின்னிப் பிணைக்கப் பட்டவராக, பரிதாபகரமான நிலையில் வந்து நிற்கின்றார்.

அபூ ஜன்தல் வேறு யாருமல்ல! ஒப்பந்தத்தில் குறைஷிகளின் சார்பில் கையெழுத்துப் போடவுள்ள ஸுஹைல் பின் அம்ரின் மகன் தான்.

அபூ ஜன்தல் அவ்வாறு     வந்த போது ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்கள் அவரை மக்காவிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று குறிப்பிடுகின்றார்கள். அவரை அவ்வாறு அழைத்துச் செல்லக் கூடாது; அழைத்துச் சென்றால் இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஸுஹைல் பின் அம்ர் பிடிவாதம் பிடிக்கின்றார்.

வேறு வழியில்லாமல் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையில் கையெழுத்துப் போடுகின்றார்கள். கதறக் கதற, கண்களில் கண்ணீர் ததும்ப அபூ ஜன்தல் மக்காவிற்கே திரும்ப அனுப்பப்படுகின்றார்.

நபித் தோழர்கள், குறிப்பாக உமர் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பணிந்து போவதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றார்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நபித் தோழர்கள் அபூ ஜன்தலின் விவகாரத்தில் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் உறைந்தே போய் விட்டார்கள். இருப்பினும் இந்த ஒப்பந்தம், உடன்படிக்கை பின்னால் அளப்பறிய நன்மையிலேயே முடிகின்றது. முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றியாக அமைகின்றது. இதை, புகாரி 2734 ஹதீஸைப் படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய கருத்து, மக்காவில் இஸ்லாம் கண்ட வளர்ச்சி பற்றியதாகும்.

மதீனாவிலிருந்து உம்ராவுக்காக வந்த நபி (ஸல்) அவர்களையும், ஏனைய முஸ்லிம்களையும் உம்ரா செய்ய விடாமல் குறைஷிகள் தடுத்து விட்டாலும், அபூ ஜன்தலைப் போன்ற முஸ்லிம்கள் மக்காவில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் கொடுத்த உயிர்ப் பிச்சை

மக்காவில் வாழும் இந்த முஸ்லிம்களின் காரணமாகத் தான் மக்கா குறைஷிகளுக்கு உயிர்ப் பிச்சை கிடைக்கின்றது. இல்லையெனில் நிராயுதபாணியாக, போர் நோக்கம் சிறிதும் இல்லாமல், உம்ராவுக்காக வந்த முஸ்லிம்களிடம் ஏறி மிதித்ததற்கு ஒரேயொரு பரிசும் தண்டனையும் போர் தான். குறைஷிகள் செய்த அநியாயத்திற்காக அவர்கள் மீது முஸ்லிம்கள் போர் தொடுப்பது தான் நியாயம்.

அந்த நியாயங்களை அல்லாஹ் பட்டியலிடுவதைப் பாருங்கள்.

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.)

அல்குர்ஆன் 48:25

 1. அல்லாஹ்வை மறுத்தது.
 2. மஸ்ஜிதுல் ஹராமில் நுழைய விடாமல் தடுத்தது.
 3. பலிப்பிராணிகள் அதற்குரிய இடத்தை அடைவதை விட்டும் தடுத்தது.

இத்தனை நியாயங்கள் இருந்தும் குறைஷிகளுக்கு ஏன் உயிர்ப்பிச்சை வழங்கப்பட்டது?

அதற்கு ஒரேயொரு காரணம், அபூ ஜன்தல் போன்ற உங்களுக்குத் தெரியாத வேறு சில முஸ்லிம்கள் மக்காவில் இருக்கிறார்கள்.

மக்கா காபிர்களைத் தாக்கும் போது இந்த முஸ்லிம்களையும் அறியாமல் தாக்கி விடுவீர்கள்; முஸ்லிம்களாகிய நீங்களே சக முஸ்லிம்களைக் கொன்ற துன்பம் உங்களைப் பாதிக்கச் செய்யும்.

இந்தக் காரணத்தினால் தான் மக்கா குறைஷிகள் மீது போர் தொடுப்பதை விட்டும் தடுத்து விட்டதாக முஸ்லிம்களை நோக்கி அல்லாஹ் கூறும் அதே வசனத்தின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 48:25

இந்த வசனம் நமக்கு இடுகின்ற கட்டளையும் செய்தியும் இது தான்.

அதாவது, ஒரு பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்தப் பகுதியை எதிர்த்துத் தாக்கக் கூடாது; அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தனியாக விலகாத வரை அந்தப் பகுதி மீது முஸ்லிம்கள் போர் தொடுக்கக் கூடாது என்பது தான் இந்த வசனம் இடுகின்ற கட்டளை!

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எல்லா நியாயங்களும் இருந்தாலும் மேற்கண்ட இந்தக் காரணம் இருந்தால் போர் தொடுக்கக் கூடாது என்பது இறைவனின் கட்டளை!

ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் இஸ்லாத்தில் அனுமதியில்லாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை முற்றிலும் புறக்கணித்து விடுகின்றது.

இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்று குவிப்பது இஸ்லாத்தின் எதிரிகளை அல்ல! பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளானாலும் சரி! இந்தியாவின் காஷ்மீரானாலும் சரி! இது போன்ற தாக்குதல்களில் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும், 90 சதவிகிதத்திற்கு மேல் முஸ்லிம்கள் தான்.

 1. தற்கொலைத் தாக்குதல் என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று; அதில் ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகம் என்பதை புகாரி 3463, 3062 போன்ற பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றன. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவதன் மூலமே இந்தக் கூட்டத்தினர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றனர்.
 2. இவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் பகுதி, வாகனம், சந்தை போன்ற அனைத்து இடங்களிலும் ஏதாவது முஸ்லிம்கள் இல்லாமல் இருப்பதில்லை. இதைத் தெரிந்தும் இவர்கள் இந்தத் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்றால் 48:25 வசனத்தில் அல்லாஹ் கூறும் கட்டளையைக் காற்றில் பறக்க விடுகின்றனர். குர்ஆனின் கட்டளையைக் காலில் போட்டு மிதிக்கும் இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
 3. போரில் கூட பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்திருந்தும் அதை அலட்சியம் செய்து, அவர்களையும் கொன்று குவிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புறக்கணிக்கும் இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
 4. இவர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு, தற்கொலை செய்து கொண்டோ அல்லது வேறு வழியிலோ தப்பித்து விடுகின்றனர். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் குண்டு வெடித்த பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தான். அந்தப் பகுதியில் வாழும் அப்பாவி முஸ்லிம்களை அரசாங்கம் குறி வைத்துத் தாக்கி அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்து விடுகின்றது.

யார் பேரில் சந்தேகம் ஏற்பட்டாலும் காவல் துறை அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் சித்ரவதை செய்கின்றது. அவர்கள் மீது தாங்கள் விரும்பிய வழக்குகளைப் பதிவு செய்து, மாநில அளவில், மத்திய அளவில், உலக அளவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி வாக்குமூலம் வாங்குகின்றது.

இந்த வாக்குமூலத்தை வரவழைப்பதற்காக அவருடைய இன உறுப்பில் மின் தாக்குதல் தொடுக்கின்றது. அவரது மனைவி மற்றும் வீட்டிலுள்ள பெண்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து மானபங்கம் செய்கின்றது.

இப்படிக் காவல்துறை செய்யும் காட்டுமிராண்டித்தனங்களையும், காட்டுத் தர்பாரையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அரசாங்கம் இப்படியொரு போரை முஸ்லிம்கள் மீது தொடுப்பதற்கு யார் காரணம்? இந்தக் குருட்டு ஜிஹாத் சிந்தனைக் கூட்டம் தான்? முஸ்லிம்களைக் காக்கப் போகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டு, முஸ்லிம்கள் மீது அரசாங்கத்தைப் போர் தொடுக்க வைப்பதன் மூலம் ஒரு வகையில் இவர்களே முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கின்றார்கள். இப்படி முஸ்லிம்களையே தங்கள்  கையால் அழிக்கும் இவர்கள் முஸ்லிம்களா? ஒரு போதும் முஸ்லிம்கள் அல்லர்.

 1. ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று திருக்குர்ஆன் (6:164, 17:15, 35:18, 39:7, 53:38) கூறுகின்றது. ஆனால் இந்தப் பாவிகளோ பாவத்தைச் செய்து விட்டுப் பழியை அடுத்தவர் மீது போட்டுவிட்டுத் தப்பி விடுகின்றனர்.
 2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: புகாரி 2442

இந்த ஹதீஸின் கட்டளைக்கு மாற்றமாக இந்தத் தற்கொலை வெறியர்கள் முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்து விடுகின்றனர்.

 1. இரக்கமுள்ள மார்க்கத்தை அரக்க மார்க்கமாகச் சித்தரித்து உலக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதை விட்டும் தடுத்து விடுகின்றனர். அதாவது அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து தங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்வதை இவர்கள் தடை செய்து விடுகின்றனர்.

இன்று இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும், “இந்தப் பயங்கரவாதத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் அறிவித்துத் தெளிவுபடுத்துகின்றனர். இது வரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்த தேவ்பந்தி உலமாக்கள் கூட அண்மையில், இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்கப்படுத்தினர். இருப்பினும் அண்மையில் நடந்த சம்பவங்களில் முஸ்லிம்களே குறி வைத்துக் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த மாபாவிகள் செய்கின்ற அநியாயத்தால், இந்துத்துவா சக்திகளே இது போன்ற காரியங்களைச் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டு, பலிகடாவாக்கி விடுகின்றனர். முஸ்லிம்களை அழிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்துத்துவா சக்திகள் செய்கின்றனர்.

டெல்லியில் நடத்த குண்டு வெடிப்பில் ராணுவ உடையில் ஒருவன் குண்டு வைத்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏன்? அது இந்துத்துவா பயங்கரவாதியாக இருக்கக் கூடாதா? என்று எந்தப் புலனாய்வுத் துறையும், பத்திரிகைத் துறையும் பார்ப்பதில்லை. இவ்வாறு பார்க்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்:

 1. இந்துத்துவா சக்திகள் இதைச் செய்யாது என்ற நம்பிக்கை. ஆனால் இந்துத்துவ இயக்கங்களின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்படும் வெடிகுண்டுகளும், அங்கு இயங்கும் ஆயுதத் தொழிற்சாலைகளும் அவர்கள் இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் புலன் விசாரணையைத் தொடர்ந்தால் இந்தியாவில் நடைபெறும் இந்தக் குண்டு வெடிப்புக்கள் ஒரு சரியான முடிவுக்கு வரும்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன என்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் அனைவரின் ஐயப்பாடும் இது தான். புலன் விசாரணை இந்தக் கோணத்தில் அமையாத வரை நாட்டில் இது போன்ற குண்டுவெடிப்புக்கள் தொடரவே செய்யும்.

 1. இந்தக் கோணத்தில் விசாரணை செல்லாததற்குக் காரணம், தற்கொலைப் படைத் தாக்குதல்.

குண்டு வெடிப்பு என்றாலே முஸ்லிம்கள் தான் என்பதை இந்தச் சண்டாளர்கள் உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளனர். இதற்குக் காரணம் மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான தாக்குதல் தொடுக்கும் கல்மனம் கொண்ட இந்த மாபாவிகள் தான்.

இந்தச் சிந்தனை தான் இங்குள்ள புலனாய்வுத் துறையினர் வேறு திசையில் விசாரணை செய்வதற்குத் தடையாக இருக்கின்றது.

இப்படி முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வேரறுக்கக் கிளம்பியிருக்கும் இவர்கள் மனிதர்களே கிடையாது.

இவர்கள் மனிதர்களே இல்லை எனும் போது இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்? இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் அல்லர்.

———————————————————————————————————————————————-

விமர்சனங்களும் விளக்கங்களும்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

கண்களால் பிறை பார்க்கப்பட்ட தகவல் தத்தமது பகுதியில் இருந்து வந்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 633

 இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். ஆனால் இலங்கையைச் சார்ந்த சில மவ்லவிகளும் தமிழகத்தைச் சார்ந்த  சில மேதாவிகளும் (?) இதனை பலவீனம் என்று கூறி வருகின்றனர்.

இந்த ஹதீஸ் பலவீனம் என்பதற்கு அவர்கள் வைக்கின்ற சான்றுகள் சரியானவை தாமா? என்பதை நாம் காண்போம்.

திர்மிதியில் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் தொடர்

 1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
 2. அபூ ஹுரைரா (ரலி) கூறியதாக ஸயீதுல் மக்புரி அறிவிக்கிறார்.
 3. ஸயீதுல் மக்புரி கூறியதாக உஸ்மான் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
 4. உஸ்மான் பின் முஹம்மத் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ அறிவிக்கிறார்.
 5. அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ கூறியதாக இஸ்ஹாக் பின் ஜஃபர் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
 6. இஸ்ஹாக் பின் ஜஃபர் பின் முஹம்மத் கூறியதாக இப்ராஹிம் இப்னுல் முன்திர் அறிவிக்கிறார்.
 7. இப்ராஹிம் இப்னுல் முன்திர் கூறியதாக இமாம் புகாரி அறிவிக்கிறார்.
 8. இமாம் புகாரியிடம் நேரில் செவியுற்று திர்மிதி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் தொடரில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பவர் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிக்கிறார். இந்த வழியாக வந்தால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். இது தான் இந்த ஹதீஸ் பலவீனம் எனக் கூறுபவர்கள் எடுத்து வைக்கும் வாதமாகும்.

ஆனால் இமாம் இப்னு ஹிப்பான் உடைய இந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாக இல்லை. இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. ஹதீஸ் கலையை ஆய்வு செய்யக் கூடிய இமாம்களே இவ்வாறு கூறியுள்ளனர்.

இமாம் இப்னுல் கய்யூம் அவர்கள் தமது நூலில் இப்னு ஹிப்பானின் விமர்சனத்திற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்.

“உஸ்மான் பின் முஹம்மத் அவர்களிமிருந்து இந்த அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பார் அறிவிக்கின்ற அறிவிப்புகளை ஒரு பொருட்டாக  எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பார் ஹதீஸ்களில் ஒன்றுமில்லாதவராவார்” என்ற இமாம் இப்னு ஹிப்பானின் விமர்சனம் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஏனெனில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பாரை ஒரு பெரும் கூட்டமே நம்பகமானவர் என்றுரைத்து அவரைப் பாராட்டியுள்ளனர். இமாம் அஹ்மத், நஸயீ, அபூ ஹாதிம், இப்னுமயீன், இப்னுல் மதீனி, இஜ்லீ, இப்னுல் ஹர்ராஸ், திர்மிதி, அல்பர்கிய்யூ, ஹாகிம், இமாம் புகாரி ஆகியோர் இவரை நம்பகமானவர் என உறுதிப்படுத்தியவர்களில் உள்ளோராவர். இப்னு ஹிப்பான் மட்டும் தனித்து, மேற்கண்ட தன்னுடைய விமர்சனத்தைக் கூறியுள்ளார். இதன் காரணமாகத் தான் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் தமது தஹ்தீப் என்ற நூலில், “இப்னு ஹிப்பான் வேறு யாரையோ நாடுவது போன்று தெரிகிறது. (இவ்விமர்சனத்திற்கு உரியவர்) யார் என்று அவருக்கு குழப்பமாக்கப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்: இப்னு கய்யும் அல்ஜவ்ஸிய்யா  பாகம்: 3, பக்கம்: 8

மேலும் இதே நூலில் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அப்துல்லாஹ்பின் ஜஃபர் அறிவிக்கின்ற ஹதீஸை இமாம் இப்னு தைமிய்யா மிகச் சிறந்த அறிவிப்பாளர் தொடர் என்று கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இமாம் தஹாவி  அவர்கள் தம்முடைய பயானு முஸ்கிலில் ஆஸார் என்ற நூலில்  அல்மக்ரமீ என்பார் ஹதீஸ்களில் மிகவும் புகழப்படுபவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இமாம் தஹபீ அவர்கள் “தவறாக விமர்சனம் செய்யப்பட்ட நம்பகமானவர்கள்” (மன் துகுல்லிம ஃபீஹி வகுவ முவஸ்ஸகுன்) என்ற பெயரில் ஒரு நூலைத் தொகுத்துள்ளார்கள். அதில் தவறாக விமர்சனம் செய்யப்பட்டவர்களின் பெயர்களைத் தொகுத்துள்ளார்கள்.

அப்பட்டியலில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பாருடைய பெயரையும் குறிப்பிட்டு ஒரு பெரும் கூட்டமே இவரை நம்பகமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்னு ஹிப்பான் இவரைப் பலவீனப்படுத்தியுள்ளார். மேலும் இப்னு முயீன் இவரை நல்லவர் என்று கூறியுள்ளார். (பாகம்: 1, பக்கம்: 107) என்ற தகவலை இடம் பெறச் செய்துள்ளார்கள்

மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஃபர் பலவீனமானவர் என்ற காரணத்தைக் கூறித் தான் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அவர் அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார். பலவீனம் என்ற காரணத்தைக் குறிப்பிடுவதால் அப்துல்லாஹ் பின் ஜஃபரின் அனைத்து அறிவிப்புகளையும் மறுக்க வேண்டும்.

புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூது, இப்னுமாஜா, அஹ்மது, தாரமீ போன்ற அனைத்து நூல்களிலும் இடம் பெற்றிருக்கும் இவரது அனைத்து அறிவிப்பு களையும் இவர் இடம் பெற்ற காரணத்தினால் பலவீனம் எனக் கூற இந்த மேதாவிகள் தயாரா? மேலே பெயர் கூறப்பட்ட நூற்களில் மட்டும் இவரது அறிவிப்புகள் 52 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

ஜகாத் விஷயத்தில் இமாம் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளதை ஆதாரமாகக் காட்டிய சிலரும் மேற்கண்ட ஹதீஸைத் தங்களுடைய சுய இலாபத்திற்காக பலவீனம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸை அல்பானீ அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். இமாம் அல்பானீ ஸஹீஹ் என்று கூறிய இந்த ஹதீஸை மறுப்பதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? என்பதை அவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

எனவே மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதே சரியானதாகும்.

————————————————————————————————————————————————

படைப்பின் தொழில் நுட்பம்

பி.எஸ். அலாவுதீன்

(மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து இக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.)

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:1, 2, 3

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

இந்த நியதி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களிலும் காணப்படுகின்றது. அவை எவ்வளவு பெரிய பொருளாயினும் சரி! மிகச் சிறிய ஒன்றாயினும் சரி! அற்பமான பொருளானாலும் சரி! பிரமாண்டமான பொருளானாலும் சரி! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளுமே மிகுந்த தொழில் நுட்பத்துடன் சீராக அமைக்கப்பட்டு முழுமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

அதனதன் தொழிலை நிறைவேற்றுவதற்கு ஏற்பவே ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை இருப்பதற்கு ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை அவை சென்றடைவதற்கு மிக எளிதான வழியும் மார்க்கமும் அவற்றுக்கு இலகுவாக்கப்பட்டுள்ளன.

இப்படி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுமே முழுமையாக சீர் செய்யப்பட்டுத் தான் திகழ்கின்றன. அவை இணைக்கப்படுவதற்கு முன்னர், தனிமங்களாக இருந்த போது, தனிமங்களின் பணிகளை நிறைவேற்ற வழிவகைகள் இலகுவாக்கப்பட்டிருந்தது. அதைப் போன்று அவை இணைக்கப்பட்டு, சேர்மங்களாக்கப்பட்ட போதும் அந்தச் சேர்மங்களின் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய வழிகள் சுலபமாக்கப்பட்டுள்ளன.

மிகப் பெரும் சூரிய மண்டலம் அதன் பிற கோள்களுடன் எப்படிப்பட்ட அமைப்புடனும், சீருடனும் இணைக்கப்பட்டு ஓர் ஒழுங்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றதோ அதே போன்ற அமைப்பும், சமச் சீரான நிலையும் ஒரு தனித்த அணுவிலும் காணப்படுகின்றது. அந்த அணுவின் மின்னாற்றலுக்கு இடையிலும் புரோட்டான் (நேர் மின்மம்), எலக்ட்ரான் (எதிர் மின்மம்) ஆகியவற்றுக்கிடையிலும் காணப்படுகின்றது.

பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு, முறையாக வடிவமைப்பட்டுள்ள ஓர் உயிருள்ள படைப்பு எப்படிப்பட்ட ஒழுங்குடன் செயல்படுகின்றதோ அதைப் போன்றே ஒரு தன்னந்தனியான உயிரணுவும், முழுமையான வடிவமைப்புடனும் செயல் திறனுடனும் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய முன்னேற்பாடுகளுடன் திகழ்கின்றது.

ஒரு தன்னந்தனியான அணுவுக்கும், மிகப் பெரிய சூரிய மண்டலமாக அது உருவாவதற்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அதே போல் ஒரேயொரு உயிரணுவுக்கும், பல உயிரணுக்கள் இணைந்து உருவாகும் ஓர் உயிர்ப் படைப்புக்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அத்தனை படித்தரங்களின் போதும் அவை முறையோடும், சீரோடும் அமைக்கப்பட்டிருப்பதையும், தனித்தனியாக அவை இருந்த போது காணப்பட்ட அந்த ஒழுங்கமைவு அத்தனை படித்தரங்களிலும் இருப்பதையும் நாம் காணலாம்.

அதைப் போன்றே அவற்றின் அமைப்பு, இயக்கம், விதி ஆகிய அனைத்திலுமே இதே நியதியை நாம் கடைசி வரை காணலாம். இந்த ஆழமான பேருண்மைக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிதர்சனமான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் தாளம் தவறாத சுருதி லயத்தைச் செவிமடுக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிற்கும் இந்த உண்மைகள் ஒட்டு மொத்தமாகப் புலப்படும். திறந்த மனதுடன் இந்தப் பிரபஞ்சத்தின் முற்ற வெளிகளில் நடமாடும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் ஆராயும் போது இந்தப் பேருண்மைகள் பளிச்சென்று புலப்படும். இந்த உள்ளுணர்வு எல்லாக் கால கட்டத்தின் போதும் வாழ்கின்ற மனிதனுக்கும், முயன்று அறிவு பெற நினைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

எப்போது ஒரு மனிதன் தனது இதய வாசல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு. அவனது நரம்புகளை எல்லாம் விழிப்புடன் வைத்துக் கொண்டு இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தைச் செவிமடுக்க முயல்கிறானோ அப்போது அவன், அதன் தாளம் தவறாத சுருதியைக் கேட்கவே செய்வான்.

மனிதன் இப்பிரபஞ்சத்தை நோக்கும் முதல் நோக்கில் அவனுக்கு ஏற்படும் அந்த உள்ளுணர்வை, தனித்தனி உதாரணங்கள் மூலம் அவன் அறிய முயலும் போதும், நுட்பமாக ஆராய முற்படும் போதும் தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது

நியூயார்க் கல்விச் சங்கத்தின் தலைவர் கிரேஸி மோரிஸன் என்பார், “மனிதன் தனித்து இயங்க முடியாது” என்று ஒரு நூல் எழுதியிருக்கின்றார். அந்நூலுக்கு விண்ணியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் என்பார், “அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது” என்ற தலைப்பில் ஒரு விரிவுரை எழுதியிருக்கின்றார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

வழிதவறாத பறவைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் ஆகும்.

முத்தாரம் 01.07.1984, பக்கம் 7

பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் கூடு கட்டி வாழும் தொண்டைப் பகுதி புடைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வகைச் சிட்டுக்குருவி இலையுதிர் காலத்தில் தென்திசை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றது. அவை எத்தனை ஆயிரம் மைல்கள் தூரம் சென்றாலும் அடுத்து வரும் வசந்த காலத்தில் தமது கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன.

அதே போன்று அமெரிக்க நாட்டுப் பறவைகளில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்தில் தென் திசை நோக்கி, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் விடுகின்றன. கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவை பறந்து போய் விடுகின்றன. ஆயினும் அவை தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி வரும் போது வழியைத் தவற விடுவதில்லை. திரும்பி வருவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

செய்தி கொண்டு செல்லும் புறாக்கள் அவற்றுக்குப் பரிச்சயமில்லாத புதிய சப்தங்களைக் கேட்டு மிரண்டு தடுமாறிப் போனாலும், பயம் தெளிந்ததும் தமது இருப்பிடங்களை நோக்கி மறக்காமல் வந்து விடுகின்றன.

காற்று வீசும் போது மரங்களிலும், கூடுகளிலும் பட்டு வரும் வாசனைகளை வைத்துக் கொண்டு தனது கூட்டுக்குத் திரும்பி விடும் தேனீயானது, காற்று வீசாமல் சலனமற்று இருக்கும் போதும் தனது கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு நெடுந்தூரம் சென்றாலும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி விடும் இந்த இயல்புணர்ச்சி மனிதனுக்குள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது. ஆயினும் அவன் திசையறி கருவி போன்ற கருவிகளால் தனது குறைவான ஆற்றலை முழுமைப்படுத்திக் கொள்கிறான். பறவைகள், பிராணிகளுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் அந்த இயல்புணர்ச்சியின் தேவையை மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் ஈடு செய்து கொள்கின்றான்.

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன.

இங்கேயும் தனது இயந்திர சாதனங்களால் மனிதன் அவற்றை மிகைத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அவனுக்கு இருக்கின்ற பார்க்கும் சக்தியைப் போன்று இருபது லட்சம் மடங்கு அதிகமான சக்தி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்குத் தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களைக் கூட டெலஸ்கோப் மூலம் அவனால் பார்க்க முடிகின்றது. மேலும் அவன் தனது மின்னியல் நுண்ணோக்காடி மூலம் சாதாரணமாகப் பார்க்க முடியாத நுண்ணிய பாக்டீரியாக்களையும் பார்க்கிறான்.

நமது கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், வழியில் எவ்வளவு கும்மிருட்டு நிலவிய போதும் அது வழியை அறிந்து நமது வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு வெளிச்சமற்ற நிலையிலும் அதனால் பார்க்க முடிகின்றது. வெளிச்சமே இல்லாவிட்டாலும் பாதையிலும், அதன் இரு மருங்கிலும் காணப்படும் வெப்ப அளவின் மாற்றத்தை அது அனுமானித்துக் கொள்கின்றது. வழியில் காணப்படும் மிகக் கடினமான வெப்பத்தின் ஒளிக்கதிர்களால் மிகக் குறைந்த அளவுக்கே உணர்ச்சிக்கு ஆளாகும் தனது கண்களால் அது எப்படியோ வழியை அறிந்து, வந்து சேர்ந்து விடுகின்றது.

அது போன்று எவ்வளவு இருட்டாக இருந்தாலும், எங்கோ செடி கொடிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்ற எலியின் உடலில் காணப்படும் கதகதப்பான வெப்பத்தை அறிந்து ஆந்தை, எலியை வேட்டையாடி விடுகின்றது. மனிதர்களாகிய நாம் இருட்டில் ஒரு பொருளைக் காண்பதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும் நமது பகுத்தறிவால் கண்டுபிடித்த மின்சார விளக்குகள் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இரவையே பகலாக்கி விடுகின்றோம்.

தேனீக்களின் கூட்டு வாழ்க்கை

தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் இருக்கின்றன. பெண் தேனீக்களில் கருவுறாதவை பாட்டாளித் தேனீக்களாகவும், கருவுற்றவை ராணித் தேனீக்களாகவும் கருதப்படுகின்றன. அந்தப் பாட்டாளித் தேனீக்கள் இனப் பெருக்கத்திற்காகப் பலதரப்பட்ட பருமன்களிலும், அளவுகளிலும் தேன் கூட்டில் பல அறைகளை உருவாக்குகின்றன. அவற்றில் அளவில் சிறியதான அறைகளைத் தொழிலாளித் தேனீக்களுக்கும், அவற்றை விடப் பெரிய அறைகளை ஆண் தேனீக்களுக்கும், கருவுற்றிருக்கும் ராணித் தேனீக்களுக்கு ஒரு பிரத்தியேகமான அறையும் ஆயத்தப்படுத்துகின்றன.

ராணித்தேனீ கருவுறாத முட்டைகளை ஆண் தேனீக்களின் அறைகளிலும், சினைப்படுத்தப்பட்ட முட்டைகளை பெண் தேனீக்களின் அறைகளிலும் எதிர்கால ராணித் தேனீக்களின் அறைகளிலும் இடுகின்றது. உழைக்கும் தேனீக்களான அந்தப் பெண் தேனீக்கள் அந்த முட்டையிலிருந்து புது இனப்பெருக்கம் ஏற்படும் வரை நீண்ட காலம் அவற்றைக் கவனத்துடன் காக்கின்றன.

முட்டைகளிலிருந்து வெளிப்படும் சின்னஞ்சிறு தேனீக்களுக்குத் தேனுடன் மகரந்தத் தூளைச் சேர்த்து மென்று எளிதில் செரிப்பதற்கேற்ற உணவாக்கி அவற்றுக்கு ஊட்டுகின்றன. அவை ஆண், பெண் என இனம் மாறும் அந்தக் குறிப்பிட்ட காலம் வரை தேனையும் மகரந்தத் தூளையுமே உணவாக்கி வளர்க்கின்றன. அவ்வாறு இன மலர்ச்சி ஏற்பட்டதும் அந்தப் பணியை நிறுத்திக் கொள்கின்றன. அவற்றில் பெண் தேனீக்களாக மாறுபவை இப்போது உழைக்கும் பாட்டாளித் தேனீக்களாக மாறி விடுகின்றன.

ராணித் தேனீயின் பிரத்தியேக அறையில் இருக்கின்ற பெண் தேனீக்களுக்கு மட்டும் தான் மெல்லப்பட்டு செரிப்பதற்கேற்றவாறு பக்குவப்படுத்தப்பட்ட உணவு ஊட்டப்படுகின்றது. இவ்வாறு பிரத்தியேகமாகக் கவனிக்கப்படும் அந்தப் பெண் தேனீக்கள் மட்டும் தான் ராணித் தேனீக்களாக மாறும் வாய்ப்பைப் பெறுகின்றன. அவை மட்டும் தான் சினையூட்டப்பட்ட முட்டைகளையும் ஈனுகின்றன. அவ்வாறு தொடர்ந்து சினையூட்டப்பட்ட முட்டைகளை ஈனும் பணி சில குறிப்பிட்ட அறைகளில் மாத்திரம் தான் நிகழ்கின்றன.

எப்படி செரிப்பதற்கேற்றவாறு உணவை மாற்றித் தரும் அந்த ஆச்சரியமான பணியைச் சில குறிப்பிட்ட தேனீக்களே ஏற்றிருக்கின்றனவோ அதே போல சில குறிப்பிட்ட முட்டைகளிலிருந்து மட்டும் தான் இனப் பெருக்கமும் நிகழ்கின்றது. உண்மையில் இது நமது ஆராய்ச்சிக்கும் தனிச் சிறப்பியல்பைப் பற்றிய ஆய்வுக்கும் உரிய ஒன்றாகத் திகழ்கின்றது.

அந்த உணவின் விளைவுகளில் எப்படி இந்த அதிசயம் நிகழ்கின்றது என்பதைக் கண்டுபிடித்து அதை நமது ஆராய்ச்சியுடன் பொருந்த வைத்துப் பார்ப்பதும் அவசியமாகப் படுகின்றது.

இந்த மாற்றங்கள் ஒரு பிரத்தியேகமான முறையில் தேனீக்களின் கூட்டு வாழ்க்கையைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருக்கின்றன. தேனீ என்ற ஒன்று உருவாவதற்கோ, உருவான பின் அது உயிர் வாழ்வதற்கோ இந்தச் சாமர்த்தியமும், அறிவும் அவசியமில்லை என்றாலும் அவற்றின் கூட்டு வாழ்க்கைக்கு அவை அவசியமாகப்படுகின்றன.

இதன்படிப் பார்த்தால், சில குறிப்பிட்ட பாத்திரங்களில் மட்டும் சினைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவை நிலை மாற்றும் அந்தக் கலையில் தேனீ, மனிதனை வென்று விடுகின்றது என்றே தோன்றுகின்றது.

நாயின் மோப்ப சக்தி

நாய் அதற்கு வழங்கப் பட்டிருக்கும் ஒழுகும் மூக்கினால், உயிர்ப் பிராணிகளை மோப்பம் பிடித்து அறியும் ஆற்றல் பெற்றிருக்கின்றது. அதனுடைய குறைந்த அளவிலான மோப்ப சக்தியை வலிமைப்படுத்திக் கொள்வதற்கு மனிதனிடமிருப்பது போன்ற புதுமைக் கருவிகள் எதுவும் அதனிடம் இல்லை. இருப்பினும் நம்முடைய சாதாரண நுகரும் சக்தியால் அறிய முடியாத, மைக்ரோஸ்கோப் மூலமே காண முடியுமளவுக்கு நுண்ணிய அணுக்களையும் நாயினால் உணர முடிகின்றது.

நம்மைத் தவிர எல்லாப் பிராணிகளாலும் நமது அதிர்வு மண்டலங்களுக்கு அப்பாலிருந்து வரும் பெரும்பாலான ஒலிகளைச் செவியுற முடிகின்றது. நமது கேட்கும் சக்தியை வென்று விடத்தக்க அவ்வளவு நுண்ணிய செவிப்புலன்கள் அவற்றுக்கு இருக்கின்றன. ஆயினும் இன்று மனிதனால் கண்டுபிடிப்புச் சாதனங்கள் மூலம் பல மைல்களுக்கு அப்பால் பறந்து போகும் ஒரு கொசுவின் ஒலியைக் கூடக் கேட்க முடிகின்றது. மேலும் அவனால் தனது கருவிகள் மூலம் சூரியனின் ஊதாக் கதிர்களின் வீழ்ச்சி ஒலியைக் கூட பதிவு செய்து விட முடிகின்றது.

ஒரு வகை நீர்ச்சிலந்தி தனது சிலந்தி வலை நூலால் பலூன் போன்ற வடிவத்தில் ஒரு கூடு கட்டுகின்றது. அதைத் தண்ணீருக்கு அடியிலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் மாட்டி வைத்து விட்டுப் பிறகு வெளியே வந்து தனது சாமர்த்தியத்தால் காற்றுக் குமிழிகளை உண்டாக்கி அவற்றைத் தனது உடலிலுள்ள ரோமங்களில் திரட்டிக் கொண்டு தண்ணீருக்குள் எடுத்துச் சென்று அவற்றை அந்தக் கூட்டுக்குள் அவிழ்த்து விடுகின்றது. இப்படியே பலமுறை முயன்று அந்தக் குமிழிகளால் அந்தக் கூட்டை ஊத வைக்கின்றது. ஊதிய பலூனைப் போன்று அது மாறியதும் அதனுள் குஞ்சு பொறித்து அவற்றை வளர்க்கின்றது. இங்கே அதனுடைய வலை நெய்யும் திறமையையும் அதனுடைய பொறியியல் திறமை மற்றும் வானியல் ஆய்வு ஆகியவற்றையும் கண்டு வியக்கின்றோம்.

பிறந்த இடம் நோக்கி…

ஆற்றிலே பிறக்கின்ற சின்னஞ்சிறு வஞ்சிர மீன், ஆற்றை விட்டு வெளியேறி கடலில் பல ஆண்டு காலம் நீந்தித் திரிந்து விட்டுப் பிறகு அது பிறந்த அந்தக் குறிப்பிட்ட ஆற்றுப் பகுதிக்குத் திரும்பி வந்து விடுகின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை ஆற்றுப் பெருக்கு ஏராளமாக இருக்கும் ஆற்றுப் பகுதி வழியாக எதிர் நீச்சல் போட்டு தமது பிறப்பிடத்தை வந்தடைகின்றன.

இப்படிப்பட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டு, தான் பிறந்த இடத்தை வந்து சேர்ந்து விடுகின்ற திறமையை அதற்கு அளித்தது எது? அவ்வாறு கடலை விட்டு வெளியேறி அது நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கும் போது நீரின் வேகத்தால் வேறொரு சிற்றோடைக்கு அடித்துச் செல்லப்பட்டு விட்டால் உடனடியாக, “இது தான் பிறந்த இடமல்ல’ என்பதைக் கண்டு கொண்டு ஆற்றைக் குறுக்கே கிழித்துக் கொண்டு வேறு பக்கத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி முடிவில்  எப்படியோ தனது பிறப்பிடத்தை வந்து அடைந்து விடுகின்றது.

விலாங்கு என்பது ஈல் வகையைச் சேர்ந்தது. அது பாம்பல்ல; ஒரு வகை மீன் தான்! பாம்பு போல ஷேப் கொண்டு நழுவும் மீன். முதுகெலும்பு உண்டு. எப்போதும் தண்ணீரில் வாழும். நதிக் கரையில் மிகச் சில நேரம் வாழ்ந்தாலும் தன் வாழ்நாட்களில் ஒரு பகுதியையாவது கடலில் கழிக்கும். ஏனெனில் முட்டையிடுவதற்கு அவற்றுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும். எனவே நதிவாழ் ஈல் மீன்களால் கடலுக்குப் போவதற்கென்றே சில சமயம் தரையில் ஊர்ந்து செல்ல முடிகின்றது. அப்படிக் கடல் நோக்கித் தரையில் ஊர்ந்து செல்கையில் அவற்றுக்கு மூச்சு வாங்குவதற்காக அவற்றின் சருமத்தின் மேலிருக்கும் ஒரு விதமான ஜவ்வு பயன்படுகின்றது.

இந்த மாதிரி அல்லல் படுவதெல்லாம் பெண் ஈல்கள் தான். முட்டையிடுவதற்காக நாடு கடந்து கூட கடலுக்கு வந்து சேரும். பெண் ஈல்களைக் கடலோர ஆண் ஈல்கள் (அளவில் சற்று சிறியவை) “வா நாமெல்லாம் ஜாலியாக நீந்தலாம்” என்று அழைத்துச் செல்ல, பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டு ஆண்களுடன் நூறு மைல் கணக்கில் நீந்தி கடலுக்குள் சந்தோஷப்பட்டு முட்டையிட்டு விட்டுச் செத்துப் போகும். ஐரோப்பிய மீன்கள் இம்மாதிரி முட்டையிட பெர்முடா வரை வருவதும் உண்டு. அங்கே இட்ட முட்டைகள் லார்வா பருவத்தில் நீரோட்டத்தில் மறுபடி ஐரோப்பிய நதிகளின் முகவாய் வரை சென்று அங்கே ஒரு முழு மீனாக மாறுகின்றன.

ஏன்? எதற்கு? எப்படி? –  சுஜாதா

ஜூனியர் விகடன், 18.07.1984

விலாங்கு மீன் என்ற இந்த ஆச்சரியமான படைப்பு நன்கு முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் அவை வாழும் பலதரப்பட்ட குட்டைகளையும், ஆறுகளையும் விட்டு வலசை புறப்பட்டு விடுகின்றன. அவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருந்தால் ஐரோப்பியப் பெருங்கடலில் பல ஆயிரம் மைல்களைக் கடந்து நெடுந்தொலைவிலுள்ள ஆழமான பகுதிகளுக்குச் சென்று அங்கே முட்டையிட்டு விட்டு இறந்து விடுகின்றன.

கொந்தளிப்பான தண்ணீரைத் தவிர வேறு எதனையும் அறிந்திருக்க முடியாத, அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அவற்றின் தாயைப் போலவே அந்தப் பெருங்கடலில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, எங்கிருந்து அவற்றின் தாய் தனது பயணத்தைத் துவங்கியதோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கிருந்து பல்வேறு குட்டைகள், குளங்கள், ஆறுகள், சிறு கடல்கள் இவற்றை நோக்கிச் சென்று விடுகின்றன.

எனவே தான் எந்த வகைத் தண்ணீரும் இந்தக் கடல் விலாங்கு மீன்களுக்கு ஏற்புடையதாக அமைந்து விடுகின்றது. அவற்றின் நெடும் பயணத்தின் போது மிகப் பெரும் கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயற்காற்று ஆகியவற்றை அவை எதிர்கொண்ட போதும் உறுதியாய் அவற்றைச் சமாளிக்கின்றன. இடைவிடாது அடித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு ஈடு கொடுத்து, தமது தாயின் இருப்பிடத்தை வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்போது அவை வளரத் தலைப்படுகின்றன. முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி அவற்றை, அவை எங்கு பிறந்தனவோ அதே இடத்திற்கு மீண்டும் வலசை புறப்படச் செய்கின்றது. இவ்வாறு அவற்றை அவற்றின் பிறப்பிடத்தை நோக்கி உந்தித் தள்ளும் அந்த உந்து விசை எங்கிருந்து பிறக்கின்றது?

இது வரை அமெரிக்க நாட்டு விலாங்கு மீன் வகைகள் ஐரோப்பியக் கடல்களில் வேட்டையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததில்லை. அது போன்றே ஐரோப்பிய நாட்டு விலாங்கு மீன் வகைகள் அமெரிக்க நீர் நிலைகளிலும் வேட்டையாடப் பட்டதில்லை. அது தனது நெடும் பயணத்தின் போது கடந்து வந்த தூரத்தை ஈடு செய்வதற்காக ஒரு இயற்கையான சக்தி, அந்த ஐரோப்பிய நாட்டு மீனை வளர்ப்பதில் ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளோ தாமதிக்க வைக்கின்றது. ஏனெனில் ஒரு அமெரிக்க விலாங்கு மீன் கடந்து வந்த தூரத்தை விட ஐரோப்பிய விலாங்கு மீன் அதிக தூரத்தைக் கடந்து வர வேண்டியிருக்கின்றது.

பொதுவாக எல்லா வகை விலாங்கு மீன்களிலும் இருக்கின்ற அணுக்கள் எல்லாம் ஒன்றாகவே இருந்தால் அவை அனைத்திற்கும் வழிகாட்டுதலும், அதைச் செயல்படுத்துவற்கு அவசியமான எண்ணங்களும் ஒன்றாகவே இருக்க வேண்டுல்லவா? இது எப்படி ஐரோப்பிய விலாங்குகளுக்கும், அமெரிக்க விலாங்குகளுக்கும் வேறுபட்டது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்

டோசி டோசி என்று ஒருவகை வண்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆண் வண்டுக்கு மோகம் ஏறும் போது, பக்கத்தில் உள்ள கல்லைத் தட்டுமாம். சாதாரண மைக்கினால் கூட வாங்கிக் கொள்ள முடியாதபடி அவ்வளவு மென்மையாகத் தட்டுமாம். ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் பெண் வண்டுக்கு அது எட்டி, அது புரிந்து கொண்டு பறந்து வருமாம். (ஆதாரம்: இயான் மெஸ்ஸிடர் எழுதிய நூல்)

குமுதம், 28.061984,

அரசு பதில்கள், பக்கம்: 16

பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது.

அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளின் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை நம்மால் குலைக்கவே முடியாது. அறிவுத் திறன் குறைந்த இந்தச் சாதாரண படைப்புக்கு ஏதாவது வானொலி நிலையம் இருக்கின்றதா? அல்லது அந்த ஆண் வண்ணத்துப் பூச்சியிடம் அதன் துணை அனுப்பும் செய்திகளைப் பெறுவதற்கான ஏரியல் எதுவும் இருக்கின்றதா? அல்லது அவை ஒலி அலைகளை அதிர்வுறச் செய்த அந்த அதிர்வுகளின் மூலம் பதில்களைப் பெறுகின்றனவா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தொலைபேசி, வானொலி ஆகியவை நமது அதிசயமான கண்டுபிடிப்புகள் தான். மிக விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கு அவை நமக்கு வழிகோலுவது உண்மை தான். ஆயினும் அந்தச் செய்திப் பரிமாற்றங்களுக்கு உரிய சாதனங்களும், குறிப்பிட்ட இடங்களும் நமக்குத் தேவைப் படுகின்றனவே!

எனவே இந்த வகையில் அவையெல்லாம் தேவைப்படாமல் தமது செய்திப் பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நம்மை வென்று விட்டதாகவே சொல்ல வேண்டும்.

தாவரங்களின் வேலையாட்கள்

தாவரங்கள், தாம் இவ்வுலகில் நீடித்திருப்பதற்காகச் சிலரை, அவர்கள் விரும்பாவிட்டாலும் பணியாளர்களாக நியமித்து அவர்களிடமிருந்து தந்திரமாக வேலை வாங்கிக் கொள்கின்றன. ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு மகரந்தப் பொடிகளை எடுத்துச் செல்லும் வண்டுகள், காற்று மற்றும் நடமாடும், பறக்கும் எல்லாப் பொருட்களும் தங்களை அறியாமலேயே தாவரங்களுக்காக இந்தப் பணியை மேற்கொள்கின்றன. அவற்றின் மூலம் தாவர இனங்கள் விருத்தியடைந்து கொண்டும் அதன் வித்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

அவ்வளவு தூரம் போவானேன்? தலை சிறந்த மனிதனைக் கூட அந்தத் தாவர இனங்கள் இந்தப் பொறியில் சிக்க வைத்து விடுகின்றன. மனிதனும் அவற்றைப் பெருக்குவதற்கு அருமுயற்சிகள் செய்பவனாகவே திகழ்கின்றான். கலப்பையும் கையுமாகவே காட்சியளிக்கின்றான். விதைக்க, நாற்று நட, நீர் பாய்ச்ச, அறுவடை செய்ய என்பன போன்ற பல கடமைகளுக்கு அவன் ஆளாகி விடுகின்றான். அவன் மாத்திரம் இந்தக் கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் பட்டினி அவனது தலைவிதியாகி விடும். காலம் காலமாக மனிதன் உருவாக்கியிருக்கின்ற நாகரீகங்கள் சிதைந்து, பூமி அதன் பழைய இயற்கை நிலைக்கு மாறி விடும்.

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள்

கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன.

எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இழந்த உறுப்பு வளர்ச்சியடைந்த உடன் தமது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிரணுக்கள் எப்படியோ ஒரு முறையில் தெரிந்து கொள்கின்றன.

ஆக்டோபஸ் என்ற பல கால்களையுடைய ஒரு கடல்வாழ் உயிரி இரண்டாகப் பிளந்து விட்டாலும், அந்த இரண்டு துண்டங்களில் ஒரு துண்டத்தின் வழியாகத் தன்னைச் சீர் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது.

உணவுப் பண்டங்களில் காணப்படும் ஒரு வகைப் புழுக்களின் தலையை நாம் கொய்து விட்டால் விரைந்து இன்னொரு தலையை உருவாக்கிக் கொள்ள அதனால் முடியும்.

நமது உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் உயிரணுக்களைத் தூண்டி முன்பிருந்தபடியே அவை இணைந்து கொள்ளும்படிச் செய்வதற்கு நம்மாலும் முடிகின்றது. என்றாலும் ஒரு புதிய கையையோ, அல்லது சதைப் பகுதியையோ, எலும்பு, நகம், நரம்புகளையோ இழந்து விடும் போது அவற்றை மீண்டும் உருவாக்க உயிரணுக்களை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது சாத்தியமாகும்? அந்நிலையை மனிதன் அடைவது சாத்தியம் தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உடலில் இழந்த அல்லது சேதமுற்ற பகுதி புதிதாக உருவாவது எவ்வாறு? எனும் புதிருக்கு விளக்கமளிக்கக் கூடிய வியத்தகு உண்மை ஒன்று இங்கே இருக்கின்றது. உயிரணுக்கள் தமது முதல் கட்டங்களின் போது பல கூறுகளாகப் பிரிகின்றன. அவ்வாறு அவை பிரியும் போது அவற்றில் ஒவ்வொரு அணுவும் முழுமையான வேறொரு உயிரைப் படைக்க ஆற்றல் மிக்கதாய் மாறி விடுகின்றது. முதல் உயிரணு இரண்டாகி, பின்னர் அவ்விரண்டும் பிரிந்து நான்காகி இப்படியே பிரிந்து கொண்டு போனாலும் ஒன்று போல் தோற்றமளிக்கக் கூடிய இரண்டிற்குள்ளும் அவற்றைப் பற்றிய எல்லா விபரங்களும் அடங்கியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ செய்திகள் அவை ஒவ்வொன்றின் உள்ளும் பதிவாகியிருப்பதை நாம் நுண்ணோக்காடியில் காணலாம்.

மொத்தத்தில் தனித்தனியான ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அந்தப் படைப்பின் முழுமையான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் நமது உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் நம்மைப் பற்றிய எல்லா தகவல்களும் அடங்கியிருப்பதால் அந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அதன் ஒவ்வொரு இழைகளிலும் நாம் இருக்கிறோம் என்பதில் மட்டும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

விதையில் ஒரு சாப்ட்வேர்

அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது.

ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே போல அந்தக் கொட்டைக்குள் இருக்கும் அதன் பருப்பு, அதன் பாரம்பரியத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய மென்பொருளாக, சாப்ட்வேராக அமைந்துள்ளது. அந்தப் பருப்பின் வழியாக அது உணவு உட்கொள்ள ஆரம்பிக்கின்றது. தனது வேர்களை மண்ணுக்குள் பதிக்கின்றது. இப்போது அங்கே ஒரு சிறு கன்றும் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருவாலி மரமும் உருவாகி நிற்பதை நாம் பார்க்கிறோம்.

அந்தக் கருவாலி மரக் கொட்டைக்குள்ளிருந்து வெளி வரும் முளைக்குள் பல மில்லியன் மரபு வழிக் காரணிகள் அமைந்திருக்கின்றன. அவை இலை, கிளை, பழம், கொட்டை, கொட்டையின் ஓடு அனைத்தையும் உருவாக்குகின்றன. அது உருவாக்கும் ஒவ்வொன்றும் அந்தக் கொட்டை எந்தக் கருவாலி மரத்தினுடைய கொட்டையோ அதே மரத்தின் பாகங்களுக்கு அப்படியே ஒத்திருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகில் தோன்றிய முதல் கருவாலி மரத்தினுடைய கொட்டையும், பழமும், இலையும், கிளையும் எப்படி இருந்தனவோ அப்படியே தான் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் இருக்கின்றன. கொஞ்சமும் மாறுபடவில்லை.

வழிகாட்டப்படும் உயிரணுக்கள்

எந்த உயிருள்ள படைப்பில் இருக்கின்ற உயிரணுக்களாக இருந்தாலும் அவை தம்மை அந்தப் படைப்பினுடைய தசையின் ஒரு கூறாகப் புனைந்து கொள்ள வேண்டிய அவசியமுடையவையாக இருக்கின்றன. அன்றாடம் உராய்வினாலும் தேய்மானத்தினாலும்  சிதைந்து கொண்டிருக்கின்ற உடலின் மேல் தோலின் ஒரு கூறாகத் தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு உயிரணுக்கள் ஆளாகின்றன.

பற்களுக்குப் பளபளப்பைத் தரும் இனாமல் பூச்சாகவோ, கண்களுக்குத் தெளிவையும் பளபளப்பையும் தரும் திரவமாகவோ அல்லது மூக்கு, காது போன்ற அங்கங்களை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டிய அவசியம் உடையவையாகவோ இருக்கின்றன.

மேலும் ஒவ்வொரு செல்லும் தன்னை அந்தந்த வடிவங்களுக்கு ஏற்பப் புனைந்து கொள்வதுடன் அதனதன் முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்குரிய தனித் தன்மைகள் பெற்றுத் திகழ்வதும் அவசியமாகும்.

ஆனால் எந்தெந்த உயிரணு வலது கையாக மாறக் கூடியவை, எவை இடது கையாக மாறக் கூடியவை என்பதையெல்லாம் யூகித்து அறிவது சிரமம். ஆயினும் ஏதோ ஓர் உயிரணு இடது காதின் ஒரு கூறாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொன்று வலது காதின் கூறாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இநத உயிரணுக்களின் செயல்பாட்டினை ஆராயும் போது பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களிடம், மிகச் சரியான ஒன்றை மிகச் சரியான தருணத்திலும் மிகச் சரியான இடத்திலும் செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் தெரிகின்றது.

குளவிகளின் இனப் பெருக்கம்

இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன.

உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது.

உணர்விழந்த அந்த வெட்டுக்கிளி பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாமிசத்தைப் போல் உயிருடன் பத்திரமாக இருக்கின்றது. பிறகு ஒரு குழி தோண்டி அதில் அந்த வெட்டுக்கிளியைப் போட்டு விடுகின்றது.

இப்போது பெண் குளவி வந்து மிக நுட்பமாக அந்த வெட்டுக் கிளியின் உடலில் எங்கே துளையிடப்பட்டுள்ளதோ அந்தப் பொருத்தமான இடத்தில் முட்டையிட்டுப் பின்னர் குழியை மூடிவிட்டுப் பறந்து போய் விடுகின்றது.

புழு, பூச்சியினங்களை உணவாக உட்கொண்டு தான் குளவிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் புழு, பூச்சிகளைக் கொன்று அதைத் தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதன் பாடு ஆபத்தாக முடிந்து விடும். அதற்கு அவசியமில்லாமல் தனது குஞ்சுகள் இந்த வெட்டுக்கிளியின் மாமிசத்தையே உணவாக உட்கொள்ளட்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகக் கூட அந்தக் குளவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தனது குஞ்சு உயிர் வாழ்வதற்காக இம்முறையைத் தான் குளவிகள் பின்பற்றி வருகின்றன.

அவ்வாறு அந்தக் குஞ்சுகளின் உணவுக்கான முன்னேற்பாடுகளை அது செய்து வைக்கவில்லை என்றால் இம்மண்ணில் குளவி இனமே இல்லாது அழிந்து போயிருக்கும். மேலோட்டமாகத் தெரியும் இந்த ரகசியத்திற்கு இது வரை எந்த விளக்கமும் தெரியவில்லை. ஆயினும் இதை ஒரு தற்செயலான செயல் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை.

முட்டையிட்டு முடிந்ததும் பெண் குளவி குழியை மூடி விட்டு மகிழ்ச்சியாகப் பறந்து போய், பிறகு மடிந்து விடுகின்றது. அதுவோ அதன் முன்னோர்களோ இந்தச் செயலைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்ததில்லை. தமது குஞ்சுகளுக்கு அடுத்து என்ன நேரிடப் போகின்றது என்ற அறிவும் அவற்றுக்கு இல்லை. அந்தக் குழிக்குள் குஞ்சு என்கின்ற ஒன்று வரப் போகின்றது என்பதோ அதுவும் நம்மைப் போன்றே வாழ்ந்து நம்மைப் போன்றே தனது இனத்தின் விருத்திக்காகப் பாடுபட்டுப் பிறகு மடியும் என்பதோ அவற்றுக்குத் தெரியாது.

எறும்புகளின் அறிவாற்றல்

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்னச் சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்குள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்து தருவதற்கான பொறுப்பை, பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும் போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்று தான்.

இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோ அல்லது அறிவுத் திறமோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகின்றது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

அவை தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்தப் புழுக்களும் பூச்சிகளும் தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல் வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்ளுகின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை, கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும் போது, பட்டுப் புழுக்களைப் போல் பட்டு நூல் நூற்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

வழிகாட்டியவன் யார்?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்தச் சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றிற்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இத்துடன் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் அவர்களின் “அறிவு, இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது’ என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்கள் முடிகின்றன.

ஆம்! நிச்சயம் அந்த எறும்புகளுக்கும் அவைகளல்லாத சிறிய, பெரிய பிற படைப்புகளுக்கும் ஒரு படைப்பாளன் இருக்கிறான்; அவன் தான் அவற்றைப் படைத்து அவற்றிற்குச் சரியான வழியையும் காட்டுகின்றான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:2, 3

அந்தப் பேராசிரியரின் நூலிலிருந்து நாம் அளித்த எடுத்துக் காட்டுக்கள் உயிரினங்கள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் உலகங்களைப் பற்றி மனிதன் பதிவு செய்து வைத்திருக்கின்ற ஆய்வுகளின் ஒரு சிறிய பகுதி தான். இவையல்லாமல் இவை போன்ற இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் தொகுப்புகள் இருக்கின்றன.

நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தைப் பற்றி மிகக் குறைவிலும் குறைவாகத் தான் நாம் தெரிந்திருக்கிறோம். அதனையும் தாண்டி இன்னும் எத்தனையோ உலகங்களும் இருக்கின்றன. சாமானியமான நமது மனிதப் படைப்பு புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு மட்டுமே இறைவன் அவற்றைப் பற்றி நமக்கு அறிவிக்கின்றான்.

———————————————————————————————————————————————-

பொதி சுமக்கும் கழுதைகள்

கே.எம். அப்துந் நாசிர்

துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்

ரமலான் மாதத்தின் சிறப்பே அம்மாதத்தில் திருமறைக் குர்ஆன் அருளப் பெற்றது தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் ரமலானை அடைகின்ற நாம் எதற்காக ரமலான் சிறப்பிக்கப்பட்டதோ அத்தகைய திருமறைக் குர்ஆனுடைய சட்டங்களை நடைமுறையில் பின்பற்றுகின்றோமா? என்றால் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பதில் இதற்கு, இல்லை என்றே இருக்கும்.

தவ்ராத் சுமத்தப்பட்டு, பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன் 62:5)

தவ்ராத் என்ற வேதத்தைப் பெற்று அவ்வேதக் கருத்துக்களை நடைமுறையில் முறையாகப் பின்பற்றாத யூத சமுதாயத்தை அல்லாஹ், பொதி சுமக்கின்ற கழுதைக்கு உதாரணமாகக் கூறுகின்றான்.

கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றி வைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதைச் சிந்திக்காமல் அது சுமந்து செல்லும். அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அதையும் அழுக்கு மூட்டையைப் போல் சுமந்து தான் செல்லுமே தவிர அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்றொரு பழமொழி கூடக் கூறுவார்கள். தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம் தான் கழுதை. அது போன்று தான் தவ்ராத் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த யூத சமுதாயத்தை அல்லாஹ், ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.

வேதத்தை மாற்றிய வேதக்காரர்கள்

வேதக்காரர்களான யூத, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட வேதக் கருத்துக்களை மாற்றினார்கள்; மறைத்தார்கள் என்பதை திருமறைக் குர்ஆன் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்துகின்றது.

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.  (அல்குர்ஆன் 2:75)

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 2:79)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுஎனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். ( அல் குர்ஆன் 5:13)

நாங்கள் கிறித்தவர்கள்என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள் வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. (அல்குர்ஆன் 5:14, 15)

மேற்கண்ட வசனங்கள் யூத, கிறித்தவர்கள் இறை வேதங்களை எப்படியெல்லாம் மாற்றினார்கள்; வளைத்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.  பின்வரும் ஹதீஸ் அவர்களின் நிலையை இன்னும் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று பதிலளித்தார்கள். உடனே (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் “நீங்கள் பொய் சொன்னீர்கள்.  (விபச்சாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்று தான் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபச்சாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடுஎன்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படிக் கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறதுஎன்று சொன்னார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.

நூல்: புகாரி 3635

யூதர்கள் எவ்வாறு தங்களுக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதங்களை நடைமுறைப் படுத்தாமல் அதனைப் புனிதப்படுத்த மட்டும் செய்தார்களோ அது போன்று தான் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் நிலையும் இருப்பதைப் பார்க்கின்றோம்.

இறைச் சட்டத்தைப் புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள்

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5:44)

மேற்கண்ட வசனத்தில் இறைச் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்காதவர்கள் காஃபிர்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதற்கு மார்க்கம் நமக்கு அனுமதித்துள்ளது. இதனைப் பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

“நீங்கள் பொய்யர்களாக இருந்தால் இதற்குரிய தண்டனை என்ன?” என்று அவர்கள் கேட்டனர். “யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை இவ்வாறே தண்டிப்போம்” என்று இவர்கள் கூறினர். அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். (அல்குர்ஆன் 12:74, 75, 76)

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.

எனவே தான் தமது சகோதரர்களிடமே திருடர்களுக்குரிய தண்டனை என்னவென்று கேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொடுப்பதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதனடிப்படையில் தம் சகோதரரைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

“மன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது” என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.

மேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் இவ்வாறு தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.

எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப் படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும்.  என்றாலும் இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இருந்தாலும் நடைமுறைப்படுத்த இயலக்கூடிய இறைச் சட்டங்களையாவது நாம் பின்பற்றுகிறோமா? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இறைச் சட்டத்திற்கு எதிராக இணை வைக்கும் முஸ்லிம்கள்

பல்வேறு இறை வசனங்கள் இணை கற்பிப்பது பெரும்பாவம், அதற்குக் கூலி நிரந்தர நரகம் என எச்சரிக்கை செய்கின்றன.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக்குர்ஆன் 4:48)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன் 31:13)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் கூறினார். (திருக்குர்ஆன் 5:72)

பெரும்பாலான இஸ்லாமியர்கள் மேற்கண்ட வசனங்களையெல்லாம் வெறும் வாயளவில் தான் ஓதிக் கொண்டிருக்கிறார்களே தவிர இதனை நடைமுறையில் கொண்டு வரவில்லை. இதன் காரணமாகத் தான் இன்று இஸ்லாமியர்கள் தர்ஹா வழிபாடு, தாயத்து, தகடு, பேய், பிசாசு, மௌலிதுகள் போன்ற மூடநம்பிக்கைகளுடன் இணைந்த இணை கற்பிக்கின்ற காரியங்களில் மூழ்கித் திளைக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் திருமணம் போன்ற அன்றாட காரியங்கள் அனைத்திலும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல், ஆரத்தி எடுத்தல், வாழை மரம் கட்டுதல், தாலி கட்டுதல் போன்ற இணை கற்பிக்கும் காரியங்கள் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

திருமறைக் குர்ஆன் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்தும் அதனை ஓதிக் கொண்டே இணை கற்பிப்பவர்கள் இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகள் போன்று தான்

இறையதிகாரத்தைக் கையிலெடுத்த இஸ்லாமியர்கள்

மார்க்கத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அதனைக் கடமையாக்குகின்ற, வழிகாட்டுகின்ற அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இறைத் தூதரும் கூட இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் ஒன்றைக் கூற முடியுமே அவருடைய சுய விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. “அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாதுஎன்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை. (அல்குர்ஆன் 12:40)

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (அல்குர்ஆன் 69:44-49)

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக ஆக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31, 32)

மேற்கண்ட வசனங்கள், மார்க்கத்தில் இறைவன் கடமையாக்கிய சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும்; இறைத் தூதருக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன. ஆனால் இவ்வசனங்களையெல்லாம் ஓதக் கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் இதனை நடைமுறைப்படுத்துவதில்லை. இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகள் போன்று தான் இவர்களின் நிலை உள்ளது.

இறைச் சட்டத்திற்கு நிகராக ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும்; மத்ஹபு இமாம்களின் பெயரால் கூறப்பட்டவற்றைத் தான் அந்தந்த மத்ஹபைச் சார்ந்தவர்கள் பின்பற்ற வேண்டும்; ஆலிம்கள் கூறுவது தான் வேதவாக்கு; தங்களுடைய மனம் விரும்பியது தான் மார்க்கம் என்று இறை வசனங்களை முற்றிலுமாகப் புறக்கணித்தே வாழ்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

வேதத்தை மறந்து வட்டியில் வீழ்ந்த சமுதாயம்

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

– அல்குர்ஆன் 3:130

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

– அல்குர்ஆன்: 2:275-279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டான்.

ஆனால் வேத வரிகளை நடைமுறைப்படுத்த மறந்த இஸ்லாமியர்களில் பலர் இன்றைக்கும் வட்டி வாங்கி உண்பவர்களாகத் தான் உள்ளனர். குர்ஆனை ஓதித் தான் வட்டிக் கடையையே துவக்கவும் செய்கின்றனர். குர்ஆன் எச்சரிக்கை செய்த பிறகும் அதை நடைமுறைப்படுத்தாத இவர்கள் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளாகத் தான் உள்ளனர்.

வல்ல நாயனின் வரிகளை மறந்து வரதட்சணையில் வீழ்ந்த சமுதாயம்

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! (அல்குர்ஆன்4:4)

விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தி அடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞான மிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:24)

கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர் களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை நியாயமான முறையில் வழங்கி விடுங்கள்! (அல்குர்ஆன் 4:25)

அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (அல்குர்ஆன் 60:10)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் பெண்களுக்கு மஹர் கொடுத்து மணம் முடிக்கச் சொல்கின்றன. ஆனால் இதற்கு மாற்றமாக லட்சக்கணக்கில் தொகையாகவும், நகையாகவும் பெண்ணிடமிருந்து வாங்கி மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது. இறை வேதத்தை வாயளவில் ஓதிக் கொண்டே வரதட்சணையை ஆமோதிக்கும் சமுதாயம் இவ்விஷயத்தில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பாகவே உள்ளனர்

படைத்தவனின் வரிகளை மறைத்து பாகப்பிரிவினை

இறந்தவனின் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்பதற்குரிய சட்டங்களை 4:11, 12, 176 ஆகிய வசனங்களில் இறைவன் நமக்கு வரையறுத்துக் கூறியுள்ளான். இச்சட்டங்களைப் பின்பற்றாதவர்களை இறைவன் பின்வருமாறு மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கிறான்.

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13, 14)

இறைவன் சொன்ன அடிப்படையில் பாகப் பிரிவினை செய்யாதவர்கள் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று இறை மறை எச்சரிக்கை செய்த பிறகும் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இறைச் சட்டத்தை ஓதிக் கொண்டே அதற்கு மாற்றம் செய்கின்றனர். இத்தகையவர்கள் பொதி சுமக்கும் கழுதைக்கு ஒப்பானவர்கள் தான்.

தனியோனின் கட்டளைகளைத் தகர்த்த முத்தலாக்

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 2:228)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 2:229)

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2689

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ்

நூல்: முஸ்லிம் 2690, 2691

அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டு விட்டார். பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?” என்று கேட்டார்கள். நான் அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே அமர்விலா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். “அது ஒரு தலாக் தான். நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத் 2266

ஒரே நேரத்தில் முத்தலாக் என்பதை ஆதரிப்பவர்கள் இறைவனின் பார்வையில் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள் தான்.

இறை மறையை மறந்து இருட்டு திக்ர்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே கூறப்படுகிறது. முத-ல், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் ராத்திபு என்ற பெயரிலும், ஹல்கா என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம், பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர். இறைச் சட்டத்திற்கு எதிரான இவர்கள் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளே!

குர்ஆனுக்கு எதிரான கூட்டு துஆ

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

இவ்வசனம்  இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையைக் கற்றுத் தருகிறது. மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. இதி-ருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும். ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

ஆனால் குர்ஆன் வரிகளை ஓதிக் கொண்டே கூட்டு துஆ ஓதுபவர்கள் இறைவனின் பார்வையில் ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இது மட்டுமல்லாமல் தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத்தை நிறைவேற்றுதல், பெற்றோர் நலம் பேணுதல், உறவைப் பேணுதல் நற்பண்புகளைக் கடைப்பிடித்தல், தீய பண்புகளை விட்டொழித்தல் போன்ற பல விஷயங்களில் நாம் வேதத்தைப் பெயரளவில் மட்டும் தான் படித்து வருகிறோமே தவிர நடைமுறையில் அவற்றை நாம் பின்பற்றுவதில்லை.

திருமறைக் குர்ஆன் இறங்கிய மாதத்தை அடைந்து அதற்காக அம்மாதம் முழுதும் நோன்பு நோற்ற நாம், இவ்வேதத்தை நடைமுறையில் பின்பற்றக் கூடிய நன்மக்களாக ஆக வேண்டும்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறை வேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள் (அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிகமாக முன்னுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். (அந்த நேர் பாதையை விடுத்து) வலப் பக்கமோ இடப் பக்கமோ (திசைமாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழி தவறிச் சென்று விடுவீர்கள்.

(நூல்: புகாரி 7282)

———————————————————————————————————————————————-

தொடர்: 5         

முதஷாபிஹாத்

முதஷாபிஹ் வசனங்களை மனிதர்களில் எவராலும் விளங்கிக் கொள்ள முடியாது என்ற கருத்துடையோரின் வாதங்களையும், அதற்கு நமது மறுப்புகளையும் கண்டோம். இனி நமது வாதங்களைக் காணவிருக்கின்றோம். அதற்கு முன் முதஷாபிஹ் பற்றி நமது முடிவை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

திருக்குர்ஆனில் முஹ்கம் என்றும், முதஷாபிஹ் என்றும் இரு வகையான வசனங்கள் உள்ளன. இரு வகையான வசனங்களும் மனிதன் விளங்குவதற்காகவும், படிப்பினை பெறுவதற்காகவுமே இறைவனால் அருளப்பட்டன. ஒருவருக்கும் விளங்காத எந்த ஒரு வசனமும் திருக்குர்ஆனில் இல்லை. ஆயினும் முஹ்கம் எனும் வகையிலமைந்த வசனங்கள் எளிதில் எவரும் விளங்கத்தக்கவையாகவும், வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவையாகவும் உள்ளன.

முதஷாபிஹ் எனும் வகையிலான வசனங்கள், கல்வியில் உறுதிப்பாடு கொண்டோர் அதன் முறையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளத் தக்கதாகவும், வழிகேடர்கள் தங்கள் தவறான கொள்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தக்கவையாகவும் அமைந்திருக்கும். இது தான் முதஷாபிஹ் பற்றி நமது நிலைபாடு ஆகும். இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் விளங்குமா? விளங்காதா? என்ற கருத்து வேறுபாடு கொண்டுள்ள இரண்டு சாராரும் தங்களின் கூற்றுக்கு முதல் ஆதாரமாக திருக்குர்ஆனின் 3:7 வசனத்தையே எடுத்து வைக்கிறோம் என்பதை முன்பே தெரிவித்துள்ளோம். அந்த வசனத்தின் சரியான பொருள் என்ன என்று தீர்மானித்து விட்டால்    வேறு ஆதாரம் எதுவும் தேவைப்படாமலேயே முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரு முடிவுக்கு நாம் வந்து விட முடியும். முன்பு இது பற்றி நாம் சுருக்கமாகச் சொல்லியிருந்தாலும் அதிக விளக்கத்துடன் இங்கே அதை விளக்குவோம்.

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட (முஹ்கம்) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:7

இது மாற்றுக் கருத்துடையோர் இந்த வசனத்திற்குச் செய்யும் அர்த்தமாகும்.

இதே வசனத்திற்கு நாம் செய்யும் பொருள் என்ன என்பதை இங்கே காண்போம்.

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் “இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையேஎனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 3:7

இரண்டு சாராரும் எந்த இடத்தில் முரண்படுகிறோம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். அரபி மொழி இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதால் இரு வேறு முரண்பட்ட அர்த்தங்களைக் கொள்ள வேண்டிய நிலை. மாற்றுக் கருத்துடையோர் செய்த அர்த்தம் தான் சரியானது என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களின் முடிவு சரியானது என்பதை எவரும் மறுக்க முடியாது. நமது அர்த்தம் தான் சரி என்றால் நமது முடிவு சரியானது என்றாகும். இதற்குத் தீர்வு காண அரபு மொழி இலக்கணம் துணை செய்யாத போது வேறு சான்றுகளின் அடிப்படையிலேயே இதற்குத் தீர்வு காண முடியும்.

காரணங்கள்

நாம் செய்யும் அர்த்தமே சரியானது என்பதற்குச் சில காரணங்கள் உள்ளன. “உள்ளங்களில் கோளாறு இருப்போர் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுவார்கள்” என்ற வசனத்தில் இடம் பெற்ற “குழப்பத்தை நாடி” என்ற வார்த்தைப் பிரயோகம் நமது கருத்தை உறுதி செய்கின்றது. அதாவது குழப்பம் விளைவிக்கும் தீய நோக்குடன் முதஷாபிஹ் வசனங்களை அணுகுவதற்கே இந்த வசனம் தடை விதிக்கின்றது. குழப்பம் விளைவிக்கும் தீய நோக்கின்றி அதை அணுகலாம்; விளங்கலாம் என்று இதிலிருந்து தெளிவாகின்றது.

மாற்றுக் கருத்துடையோர் செய்த அர்த்தத்தின் படி முதஷாபிஹ் வசனங்களின் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்; கல்வியில் சிறந்தவர்கள் தங்களுக்கு விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள் என வருகின்றது. அதாவது முதஷாபிஹ் வசனங்களை இறைவன் அருளியதன் காரணம் அதை விளங்க வேண்டும் என்பதல்ல, விளங்காவிட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து.

விளங்கினாலும் விளங்கா விட்டாலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது தான் முதஷாபிஹ் வசனங்கள் அருளப்பட்டதன் நோக்கம் என்றால், “கல்வியில் சிறந்தவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்” என்று இறைவன் கூற மாட்டான்.

ஏனெனில் நம்பிக்கை கொள்வது கல்வியில் சிறந்தவர்களுக்கும், கல்வியறிவு அற்றவர்களுக்கும் பொதுவான அம்சமாகும். “முஃமின்கள் நம்பிக்கை கொள்வார்கள்” என்று கூறியிருந்தால் அவர்களது கூற்றில் ஏதேனும் நியாயம் இருக்கும்.

ஆனால் “முஃமின்கள்’ என்று பொதுவாகக் கூறாமல் “கல்வியில் சிறந்தவர்கள்’ என்று இறைவன் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதையும், “கற்றவர்கள்’ என்று கூடக் கூறாமல், “கல்வியில் சிறந்தவர்கள்’ என்று கூறியிருப்பதையும் கவனிக்கும் போது கல்வியில் சிறந்தவர்கள் அதை விளங்கி நம்பிக்கை கொள்வார்கள் என்ற கருத்தையே தருகின்றது.

திருக்குர்ஆனின் மற்றொரு இடத்தில் இறைவன், “வர்ராஸிகூன பில் இல்மி” (கல்வியில் சிறந்தவர்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறான். அந்த இடத்தைக் கவனிக்கும் போது நமது கருத்துக்கு மேலும் வலு ஏற்படுகின்றது.

அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர்.

அல்குர்ஆன் 4:162

ஈமான் கொள்வது பற்றிக் கூறப்படும் இந்த வசனத்தில், “கல்வியில் சிறந்தவர்கள்” என்று கூறியதுடன், “முஃமின்களும்” என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் நம்பிக்கை கொள்வது மட்டுமே இங்கு பிரதானமாகக் கூறப்படுகின்றது. ஆனால் 3:7 வசனத்தில் “கல்வியில் சிறந்தவர்கள்” என்று மட்டும் கூறப்படுவதால் அவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கி ஈமான் கொள்வார்கள் என்பதே பொருத்தமானது என்பதை உணரலாம்.

இந்த வசனத்தை முடிக்கும் போது, “வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்பாப்” என்று இறைவன் குறிப்பிடுகிறான். “அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை; பாடம் பெறுவதில்லை” என்பது இதன் பொருள். இன்னும் பல வசனங்களிலும் இதே கருத்துள்ள வார்த்தையை இறைவன் பயன்படுத்தி இருக்கிறான். அந்தந்த வசனங்களில் கூறப்பட்டவை எப்படி அறிவுடையோரால் விளங்கிக் கொள்ள முடியுமோ அது போல் இவையும் விளங்கத்தக்கவை தான் என்பதை இதி-ருந்து அறியலாம்.

இரண்டாவது ஆதாரம்

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காகவும், படிப்பினை பெற வேண்டுமென்பதற்காகவும் திருக்குர்ஆனை அருளியதாக இறைவன் கூறுகின்றான். நேர்வழி பெற வேண்டுமானால், படிப்பினை பெற வேண்டுமானால் நிச்சயமாக அது புரியும்படி அமைந்திருக்க வேண்டும். எவருக்குமே புரியாத மந்திர உச்சாடனங்கள் நேர்வழி காட்ட இயலாது. இந்தப் பொதுவான விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற வேண்டுமானால் அதை இறைவன் தெளிவாகக் கூறியிருப்பான்.

அதிலிருந்து விலக்கு அளிக்கவே 3:7 வசனத்தை இறைவன் அருளியிருப்பான் என்று மாற்றுக் கருத்துடையோர் கூறுவது ஏற்புடையதல்ல. விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் அதைத் தெள்ளத் தெளிவாகக் கூறிவிடும். ஆனால் 3:7 வசனத்திற்கு இவர்கள் செய்த பொருளே சரியானதல்ல எனும் போது விதிவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றோ, குர்ஆன் விளங்கும் என்ற பொது விதியிலிருந்து முதஷாபிஹ் வசனங்கள் விலக்குப் பெற்றவை என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸிலும் இல்லை.

எனவே ஏனைய வசனங்களிலும், நபிமொழிகளிலும், “குர்ஆன் வசனங்கள் விளங்கத்தக்கவையே” என்று கூறப்படும் கருத்துக்கு ஒட்டியே 3:7 வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இலக்கணமும் அதற்கு இடம் தருகின்றது. அந்த வசனத்தில் இடம் பெறும் வாசகங்களும் அதை உறுதி செய்கின்றன.

மேலும், “குர்ஆன் முழுவதும் விளங்கிடத்தக்கவை” என்பதைக் கூறும் ஏராளமான வசனங்கள் உள்ளன. அவற்றை அப்படியே எழுதினால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் அந்த வசனங்களில் சிலவற்றின் எண்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.

2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11

இந்த வசனங்களும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற வசனங்களும், திருக்குர்ஆன் விளங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன. திருக்குர்ஆனில் விளங்காதவை எவையுமே இல்லை என்பதே தெளிவு. இன்னும் பல வலுவான ஆதாரங்களைப் பார்ப்போம்.

———————————————————————————————————————————————-

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்

தொடர்: 6

எம். ஷம்சுல்லுஹா

இன்னும் சொல்லப் போனால் தங்களது பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் எவர்களை நம்பிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள் மாபெரும் இறைத் தூதர்கள். இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள்.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்என்று கூறி விட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352

இவ்விரு இறைத் தூதர்களும் சாதாரணத் தூதர்கள் கிடையாது. அந்த அரபியர்களின் தந்தையர்களும் ஆவர். இப்படி அவர்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்த அந்த தூதர்களைத் தான் தங்கள் பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் நம்பினர்.

அவர்கள் நம்பிய அந்த மாபெரும் இறைத் தூதர்கள் எங்கே? இறை நேசர்கள் என்ற பெயரில் இங்க இவர்கள் நம்புகின்ற சாதாரண அடியார்கள் எங்கே?

அந்த இறைத் தூதர்கள், நல்லடியார்கள் தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இறை நேசர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், ஷாகுல் ஹமீது, மஸ்தான் போன்றோர்கள் இறை நேசர்கள் என்பதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கோ நேரடியாக எந்தச் சான்றும் இல்லை.

மக்கா இணை வைப்பாளர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தூதர்களை பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த போதும் அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்தெறிந்து, அந்த மக்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று முத்திரையிட்டு விட்டான்.

இந்த ஆலிம்களோ, அந்த நபிமார்களுக்கு அருகில் கூட நெருங்க முடியாத ஆட்களை, வரலாற்றுத் தடயமே இல்லாதவர்களை, ஆதாரப்பூர்வமான வரலாற்றை இழந்து விட்ட சாதாரணமானவர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

இந்த வகையில் மக்கா காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை சற்று உயர்வாகவும், இவர்களது நம்பிக்கை மிக மிக மட்ட ரகமானதாகவும் அமைந்து விடுகின்றது. இதன்படி பார்க்கும் போது இந்த ஆலிம்கள் மக்கா காஃபிர்களை விட கீழ் நிலையிலேயே உள்ளார்கள்.

எனவே இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் அதிகமான நரகத் தண்டனை பெறுவதற் குத் தகுதியானவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் இவர்களை ஒரு போதும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது.

என்ன தான் மறுமை நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை, இணை வைப்பின் காரணமாகத் தகர்ந்து போய் விடுகின்றது.

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:65, 66

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! எல்லா இறைத் தூதர்களுக்கும் தான்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இறைத் தூதர்கள் இணை கற்பித்தாலே அவர்களது அமல்கள் எல்லாம் அழிந்து போகும் எனும் போது இவர்கள் எம்மாத்திரம்?

ஒரு குடம் பால் ஒரு துளி விஷம்

இவர்களது இறை நம்பிக்கை, ஏனைய அமல்கள் எல்லாமே இணை வைப்பின் காரணமாக அழிந்து போய் விடுகின்றன. இவர்களது தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள், இன்ன பிற சமூக நலச் சேவைகள் அத்தனையுமே அழிந்து போய் விடுகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். அவ்வளவு பாலும் விஷமாக மாறி வீணாகி விடுகின்றது. அது போல் இணை வைப்பவர்கள் செய்கின்ற அத்தனை அமல்களும் பாழாகிப் போய் விடுகின்றன. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து, இந்த ஆலிம்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கை இவர்களுக்கு ஒரு போதும் கை கொடுக்காது என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் தான் இறை நம்பிக்கை கொண்டிருக்கிறோமே! நாம் எப்படி நரகத்திற்குப் போவோம்? என்று ஒருவர் இணை வைப்பில் நீடிப்பாரானால் அவர் குர்ஆனைச் சரியாக விளங்காதவர் ஆவார். காரணம், எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகின்றான்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. (அல்குர்ஆன் 12:106)

அதாவது இம்மக்கள் இறை நம்பிக்கை கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் இணை வைக்கின்றனர் என்று கடுமையாகச் சாடுகின்றான்.

அதனால் ஒருவரிடம் இறை நம்பிக்கை மாத்திரம் இருந்தால் போதாது. அவரிடம் இணை வைப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை அல்லது அது போன்ற மறுமை நம்பிக்கை ஒருவரிடம் இருந்து அவர் இணை வைப்பாரானால் அவரும் நரகவாதி தான்.

எனவே மக்கா காஃபிர்கள் மறுமை நம்பிக்கை இல்லாதவர்கள்; இந்த ஆலிம்கள் மறுமை நம்பிக்கை உள்ளவர்கள்; அவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்று பேசுவதெல்லாம் இங்கு அடிபட்டுப் போய் விடுகின்றது. அடுத்து இன்னொரு கேள்வி எழுகின்றது.

இனிமையான குரலில், லயிக்க வைக்கும் ராகத்தில் மிக ரசனையாகக் குர்ஆனை ஓதி, நம்மை வசப்படுத்தி ரசிக்க வைக்கும் இந்த ஆலிம் பெருமக்களா நரகில்? ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கான பதிலைச் சில ஹதீஸ்களிலிருந்து பார்ப்போம்.

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர்

அப்துந்நாஸிர்

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்குர்ஆன் 51:56

அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள், போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற காரியங்கள் புகுந்து விட்டன.

ஆனால் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாது எடுத்துரைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணத்தினால் ஷைத்தானிய சக்திகளான கப்ரு வணங்கி பரேலவிகளின் சிலந்திக் கோட்டைகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

இன்றைக்கு அதிகமான மக்கள் சத்தியத்தை விளங்கி உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றத் துவங்கி விட்டார்கள். இதனால் முஸ்லிம்களைப் போன்று வேடமிட்டு கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர், “நாங்கள் கப்ரை வணங்கவில்லை. கப்ரு ஸியாரத்தைத் தான் செய்கிறோம்” என்று கப்ரு வணக்கத்திற்கும் கப்ரு ஸியாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் செய்கின்ற இழிசெயலை நற்செயலாகக் காட்டியுள்ளனர்.

இணை கற்பிக்கின்ற, பெரும் பாவ காரியங்களான சமாதிகளைக் கட்டி அதற்கு விழாக்கள் எடுப்பது, ஊர்வலம் நடத்துவது, சமாதியில் சந்தணம் பூசுவது, மாலையிடுவது, மரியாதை செய்வது, மவ்லூது பஜனைகள் பாடுவது, நேர்ச்சைகள் வழங்குவது, சமாதிகள் பெயரில் சினிமாப் பாட்டுகளை இசையுடன் பாடி கச்சேரி நடத்துவது, யானை என்ற மிருகத்துடன் பரேலவியிஸ மாக்களும் சேர்ந்து மிருக ஊர்வலம் செல்வது, சமாதியில் முறையிடுவது, உண்டியல் வைத்து வசூலிப்பது போன்றவையும் உண்மையான இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களே என்பது இஸ்லாத்தைப் படிக்காத, கப்ரை வணங்கும் பரேலவியிஸ மதத்தினருக்கு விளங்கவில்லை.

உண்மையான இஸ்லாத்தில் கை தட்டுவது, சீட்டியடிப்பது போன்றவை தொழுகையாகக் கருதப்படாது. இதையே பரேலவிகளைப் போன்று அல்லாஹ்வை நம்பிய மக்கா காஃபிர்கள் தாங்கள் வணங்கிய சிலைகளுக்குச் செய்ததால் அக்காரியங்களை அவர்களுடைய தொழுகையாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 8:35

இது போன்றே கப்ரை வணங்கும் பரேலவிகள் செய்யும் மேற்கண்ட காரியங்களும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் வணக்கமாகவே கருதப்படும்.

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இனி பரேலவிகள் கப்ரை வைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் கப்ரு வணக்கமே என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இறந்தவர்களை இறை நேசர்கள் (அவுலியா) என்று தீர்மானிப்பது இணை வைத்தலே!

புத்தன் துறையைச் சேர்ந்த பரேலவி மதத்தினர் அல்ஆரிபுபில்லா என்ற பெயருடைய ஒருவரை இறை நேசர் என்றும் மகான் என்றும் கூறுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு தர்ஹாவில் உள்ளவர்களையும் கூறுகின்றனர். இவர்கள் அவுலியா எனக் கூறுபவர்களில் சில குரங்களும், யானையும், அணில்களும், கட்டை பீடி மஸ்தான்களும், அறுபதடி பாவாக்களும் அடங்கியுள்ளனர்.

அல்லாஹ்வும், அவனிடமிருந்து இறைச்செய்தி பெற்றதன் அடிப்படையில் இறைத்தூதரும் யாரையெல்லாம் சுவர்க்கவாசிகள் என்றும் நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் அவர் மரணித்த பிறகு இவர் சுவர்க்கவாசி தான் அல்லது இவர் நரகவாசி தான் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் யாருக்கும் கிடையாது. இறைத் தூதர்கள் கூட இறைவன் அவர்களுக்கு அறிவித்தவர்களை மட்டும் தான் கூற முடியுமே தவிர வேறு யாரையும் அவர்களாகத் தீர்மானிக்க முடியாது.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

இறை நம்பிக்கை, இறையச்சம் கொண்ட அனைவரும் இறை நேசர்களே என மேற்கண்ட வசனம் கூறுகிறது. ஒருவனுடைய உண்மையான இறையச்சத்தையும், இறை நம்பிக்கையையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபியவர்களுக்குக் கூட இந்த அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி 4351

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள்  “அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சஹாபி. ஹிஜ்ரத் செய்தவர். அவர் மரணித்த பிறகு, அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை நூறு சத விகிதம் உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸாஇத்(ரலி)

நூல்: புகாரி 2898

ஒருவர் மரணித்த பிறகு அவரை மகான், நல்லவர், அவுலியா, சுவர்க்கவாசி என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும். இதற்கு மாற்றமாக இறை அதிகாரத்தைக் கையிலெடுத்து ஆரிபு என்பவரையும், முஹைதீன் என்பவரையும் அனைத்து தர்ஹாவில் அடக்கப்பட்டவர்களையும் யானைகளையும், குரங்குகளையும், கட்டைப்பீடி மஸ்தான்களையும் இந்த பரேலவி மதத்தினர் அவுலியாக்கள் என்று தீர்மானித்தது இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற காரியமே! இதை உண்மையான முஸ்லிம்கள் தெளிவாக விளங்கியுள்ளனர்.

கப்ரைக் கடவுளாக்கிய பரேலவி மதத்தினர்

பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்வது கூடாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் நாம் அவர்களைக் கடவுளாக எடுத்துக் கொண்டோம் என்பதே அதன் பொருளாகும்

பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி)

நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, ஹாகிம், அபூதாவூத்

வணக்கங்களில் சிறந்தது எதுவென நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒரு மனிதன் தனக்காக இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையாகும்என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அல்அதபுல் முப்ரத்

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லைஎனவும் நபிகள் நாயகம் (ஸல்) அருளியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: ஹாகிம்

இந்த நபிமொழிகள் யாவும் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கம் என்று கூடச் சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் எனத் தெளிவாக அறிவிக்கின்றன. யார் இறைவனல்லாத மற்றவர்களைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாகவே இறைவனால் கருதப்படுவர். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.

எனவே கப்ரிடம் பிரார்த்தனை செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

கப்ரில் உள்ளவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அவ்வாற்றல் இருப்பதாக நம்புபவர்கள் இறை வணக்கத்தை இறைவனல்லாத மற்றவர்களுக்குச் செய்தவர்களாவர். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

செத்தவன் செவியேற்க மாட்டான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

ஆனால் பரேலவி மதத்தினர் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் கப்ருக்கு முன்னால் நின்று கேட்கின்றனர். கப்ரில் உள்ளவர் அனைவரின் கூற்றையும் கேட்கிறார் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.

மேலும் எங்கோ வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற ஒரு பரேலவி மதத்தைச் சார்ந்தவன், தமிழே தெரியாத என்றைக்கோ இறந்து பக்தாதில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவரை அழைக்கின்றான். எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் செத்தவன் கேட்கின்றான் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்கின்றனர். முஹைதீனை ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண்ணெதிரே வருவார் என்றும் மவ்லிதுகளில் எழுதி வைத்துள்ளனர்.

எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும், எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.  இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதால் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக் கடவுளிடம் உதவி தேடும் பரேலவி மதத்தினர்

(அல்லாஹ்வே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

அல்குர்ஆன் 1:4

மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.

அல்குர்ஆன் 3:126

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 3:160

நபி (ஸல்) கூறினார்கள்: நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு (மட்டுமே) உதவி தேடு.

அறிவிப்பவர்: இப்னு  அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2440

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடும்படி மேற்கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. எனவே உதவி தேடுதல் என்பது வணக்கமாகும்

இந்தப் பரேலவி மதத்தினர் இறைவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்பதன் சரியான பொருளைத் திரிக்கின்றனர்.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 5:2

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கிறான்; வலியுறுத்தவும் செய்கிறான்.

எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதும், மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதும் இணை வைத்தலாகாது.

ஆனால் மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவது மட்டுமே இணை வைத்தலாகும். கப்ரில் அடங்கி மண்ணோடு மண்ணாகி விட்ட ஒருவரை, ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார்.

எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் எப்போது அழைத்தாலும் செவியேற்றுப் பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வாற்றல் கப்ருக்கு இருப்பதாக நம்புவதாலும் எவ்வித உபகரணங்களும் இல்லாமால் நோய் நீக்குதல்,  குழந்தை பாக்கியத்தை அளித்தல் போன்ற ஆற்றல்கள் இறைவனுக்கு இருப்பதைப் போன்று கப்ருக்கு இருப்பதாக நம்பி இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டியவற்றை கப்ரிடம் முறையிடும் பரேலவிகள் கப்ரு வணங்கிகளே!

கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

தொழுகை எப்படி வணக்கமோ அது போல் அறுத்துப் பலியிடுவதும் வணக்கமே! தொழுகைகளை எப்படி இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாதோ, அது போல் அறுத்துப் பலியிடுவதையும் இறைவனல்லாத எவருக்கும் செய்யக் கூடாது என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் லஃனத் செய்கிறான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4001

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் உயிரே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டாலும், எதனையும் பலியிடக் கூடாது. அற்ப ஈ போன்ற மதிப்பற்ற உயிரினங்களைக் கூட, அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடக் கூடாது; நேர்ச்சை செய்யக் கூடாது  என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையும் அறுத்துப் பலியிடலும் ஒரு இபாதத் – வணக்கம் என்பதை எவர் அறியவில்லையோ, அதன் படி நடக்கவில்லையோ, அவர்கள் இறைவனல்லாதவர்களை வணங்கியவர்களாக ஆகி நிரந்தர நரகத்திற்குத் தகுதி பெறுகிறார்கள்.

எனவே கப்ருகளுக்கு அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் என்ற வணக்கங்களைச் செய்யும் பரேலவி மதத்தினர் கப்ரு வணங்கிகளே!

யானையைக் கடவுளாக்கிய கப்ரு வணங்கிகள்

கப்ரு வணக்கத்தை கப்ரு ஸியாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் பரேலவிகள் தங்களுடைய வணக்கத் தலங்களாகிய தர்ஹாக்களில் யானையைக் கட்டி வைத்து தீனி போடுகின்றனர். ஆண்களும் பெண்களும் கலர்ஃபுல்லாகக் காட்சி தந்து ஒருவரை ஒருவர் பார்த்து ரசிப்பதற்காவும், சினிமாப் பாட்டுப் பாடி பக்தர்களைக் குஷிப்படுத்தவும், கோயில்களில் சிலைகளுக்காக பாடப்படும் பஜனைகளை தங்களது கோயில்களாகிய தர்ஹாக்களில் பாடுவதற்காவும் இன்னும்  மார்க்கத்திற்கு புறம்பான பல அனாச்சாரங்களை அரங்கேற்றுவதற்காகவும் கந்தூரி விழா என்று ஏற்பாடு செய்வர்.

இதற்குக் கூட்டம் சேர்ப்பதற்காக யானையைத் தெருத் தெருவாக அழைத்து வருவர். இந்த யானையைப் பார்க்கும் போது தான் மக்களுக்கு அவுலியாவின் ஞாபகம் வந்து இவர்களின் வணக்கத் தலங்களாகிய தர்ஹாவில் நடக்கும் லீலைகளில் கலந்து கொள்வார்கள் என்பதற்காவே இவ்வாறு செய்கிறோம் என பரேலவிகள் கூறுகின்றனர்.

நபியவர்கள் இவ்வாறு தான் கப்ரு ஸியாரத் செய்தார்களா? என்றெல்லாம் இவர்களிடம் கேள்வி கேட்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் பரேலவி மதத்தினர்.

இந்தப் பரேலவி மதத்தினர், யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒரு பக்தனின் மீது சிந்தினால் அவன் பாக்கியம் பெற்றவனாகி விடுவான் என நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த யானை தண்ணீரை உறிஞ்சி அடிப்பதின் மூலமே தர்ஹாக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் இந்தப் பரேலவி மதத்தினர் யானை ஊர்வலம் வரும் போது அதன் முதுகிலிருக்கும் கொடிக்களையின் பூக்களைப் பெறுவதையும், தங்கள் குழந்தைகளை அதன் முதுகில் ஏற்றி இறக்குவதையும் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர்.

இவர்கள் யானையைக் கடவுளாகக் கருவதுவதாலேயே இது போன்ற வணக்கங்களைத் தங்களுடைய யானைக் கடவுளுக்குச் செய்கின்றனர் என்பதை உண்மையான முஸ்லிம்கள் நன்றாக விளங்கியே வைத்துள்ளனர்.

சந்தனம், கொடிக்களை, நெருப்பை வணங்கும் பரேலவிகள்

பரேலவி மதத்தினர் தங்களது வணக்கத்தலங்களாகிய தர்ஹாக்களில் அவர்கள் கடவுளாக வணங்கும் கப்ருகளுக்கு சந்தனத்தைப் பூசுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கற்சிலைகளுக்குப் பாலை ஊற்றி அபிஷேகம் செய்கின்றனர். அது போன்று கற்சிலையை விடக் கீழ் நிலையில் உள்ள கப்ருகளுக்கு சந்தன அபிஷேகம் செய்தல், சந்தனம் பூசுதல் என்பது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அது போன்ற கப்ருகளில் பூசப்பட்ட சந்தனம் தங்களுக்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதனைக் கழுத்துகளில் பூசிக் கொள்கின்றனர். இறைவனல்லாத ஒரு பொருள் இறைவனைப் போன்று நமக்கு நன்மை ஏற்படுத்தும் என நம்பிக்கை வைப்பதால் இதுவும் இணை கற்பிக்கின்ற காரியமே!

அது போன்று தர்ஹாக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து   அந்த நெருப்பைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அதற்கு விளக்கு ராத்திரி என்றும் பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதே நம்பிக்கையில் தான் கொடிக்களைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். நமக்கு துன்பத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

சந்தனமும், நெருப்பும், கொடிக் களைகளும் இறைவனைப் போன்று இன்ப துன்பங்களைத் தரக் கூடியவை என பரேலவி மதத்தினர் நம்பிக்கை வைத்திருப்பதால் கொடி ஊர்வலமும், தர்ஹாக்களில் விளக்கேற்றுவதும் இணை கற்பிக்கின்ற காரியங்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.

பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணை கற்பித்தலே!

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத் தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன.

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த மொழியில், எந்த நேரத்திலும் “முஹைதீனே! வந்து விடுங்கள்!’ என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்.

நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களை மண் சாப்பிட்டு விடும் என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன் என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் என பரேலவி மதத்தினர் பஜனை பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும் இவ்வாறு அமைந்துள்ளதாலும், இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை வைத்திருப்பதாலும் பஜனைகள் பாடுவது இணை கற்பிக்கின்ற காரியமே!

இது போன்றே நாம் எந்த ஒன்றைச் செலவு செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செலவிட வேண்டும். இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோ அவர்கள் தனக்கு அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்கு வாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணை கற்பிக்கின்ற காரியமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக மனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும் செய்கின்ற செயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: நஸயீ 3089

ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின் திருப்திக்காகவும், அருளுக்காகவும் உண்டியல் வைத்து வசூலித்து கொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் காசு போடுவதும் இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. யூத, நஸராக்களின் கலாச்சாரமாகிய இந்தச் சமாதி வழிபாட்டை ஒழிப்பதற்காகத் தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைக் கூறியுள்ளார்கள்.

கப்ரைக் கட்டுவது, பூசுவது கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

கப்ருகளைத் தரைமட்டமாக்குதல்

அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள்:

அலீ (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுடைய கப்ருகளைத் தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத்(ரலி)

நூல்: அஹ்மது 22834

அல்லாஹ்வின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக் கொண்டனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 1330

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.

அறிவிப்பவர்: சுன்துப் (ரலி)

நூல்:  முஸ்லிம் 827

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்

அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉபைதா (ரலி)

நூல்: அஹ்மத் (1599)

எனவே சாபத்தைத் தரும் இந்தச் சமாதி வழிபாட்டைப் புறக்கணிப்போம். சத்தியத்தை நோக்கி அணி திரள்வோம்.