ஏகத்துவம் – அக்டோபர் 2007

தலையங்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக “இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்’ என்ற தலைப்பில் கண்டோம். ஒரு கொடியில் இரு மலர்கள் என்பது போல் இந்த ரமளான் மாதத்தில் இரண்டாவது சிறப்பிதழாக “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்.

கொளுத்தும் வெயிலில் கோயிலைச் சுற்றி தரையில் உருண்டு அங்கப் பிரதட்சிணம் செய்தல், வாயிலும், முதுகிலும் அலகு குத்திக் கொண்டு கொக்கிகளில் மாட்டி அந்தரத்தில் தொங்குதல், ஆணியில் நடப்பது, தீச்சட்டிகளைக் கையில் ஏந்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து மண்டையையும் பிளப்பது, நரபலி கொடுத்தல்

கணவனை இழந்த பெண் அதிகப்பட்சமாக “சதி’ என்ற பெயரில் தற்கொலை செய்து கொள்ளுதல், குறைந்தபட்சமாக மொட்டையடித்துக் கொண்டு, வெள்ளாடை உடுத்தி, மூளியாக மூலையில் முடங்கிக் கிடத்தல்

இப்படி இந்த நாட்டில் அன்றாடம் அடுக்கடுக்கான அநியாயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த அநியாயங்கள், அறியாமைகள் இந்தியாவில் நடப்பவை. உலக அளவில் அந்தந்த நாட்டுக்கேற்ப வித்தியாசமான மூடச் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு உலகெங்கிலும் அரங்கேறும் இந்த அநியாயங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் ஓர் உன்னத மார்க்கம் தான் இஸ்லாம்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

மக்களின் சுமையை இறக்கி, அவர்கள் மீது பிணைக்கப் பட்டிருக்கும் விலங்குகளை இஸ்லாம் அப்புறப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை ஒரு விடுதலை இயக்கம் என்று குறிப்பிடலாம்.

அன்றாடம் அரங்கேறிய அநியாயங்களின் அசுத்தத்திலிருந்து மீண்டு, இந்த விடுதலை இயக்கத்தின் பால் வந்த பிறகு, இங்கும் வேறு விதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தினால் என்ன செய்வது? என்று கேட்கலாம்.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

அல்குர்ஆன் 54:17, 22, 32, 40

சிந்திப்பதற்கு எளிய நூல் என்று திருக்குர்ஆன் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

சிந்திப்பதற்கு மட்டுமல்ல! செயல்படுவதற்கும் எளிய வழி என்று கூறுகின்றது.

உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும்.

அல்குர்ஆன் 2:178

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப் பட்டுள்ளான்.

அல்குர்ஆன் 4:28

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

தான் காட்டுகின்ற பாதை எளிமையை, இலகுவை மையமாகக் கொண்டது; கடினத்தை, சிரமத்தை, சிக்கலை மையமாகக் கொண்டதல்ல என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

சிந்திப்பதற்கும், செயல் படுவதற்கும் எளிமை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டது தான் திருக்குர்ஆன் என்று இந்த வசனங்கள் உலக மக்களுக்குப் பறை சாற்றுகின்றன.

அத்துடன் மட்டுமன்றி, தனக்கு நிகராக இந்தத் தரணியில் வேறு எந்த வேதமும் இல்லை, தனக்கு நிகராக ஒரு வேதத்தையல்ல; ஒரு சில அத்தியாயங்களை அல்லது ஒரு சில வசனங்களையாவது யாரேனும் கொண்டு வாருங்கள் பார்ப்போம் என்று உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.

அல்குர்ஆன் 2:23

தனக்கு நிகராக உலகில் எந்தவொரு வேதமும் கிடையாது என்று இதன் மூலம் உலக மக்களுக்குப் பறை சாற்றுகின்றது. தன்னிகரற்ற இந்த வேதம் காட்டுகின்ற எளிய பாதையைத் தான் இந்த இதழில் நாம் காணவிருக்கிறோம்.

வாழ்வியலை மட்டுமின்றி வணக்க வழிபாடுகளையும் எளிமையாக்கி, அதில் மார்க்கம் நமக்குக் காட்டுகின்ற சலுகைகளை இதில் விவரிப்பதுடன், இந்த எளிய மார்க்கத்தை, மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் எப்படியெல்லாம் கடினமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் இவ்விதழில் அடையாளம் காட்டுவோம்.

———————————————————————————————————————————————-

சக்திக்கு ஏற்ப கடமை

இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், “சக்திக்கு அப்பாற்பட்ட சிரமம் இல்லை’   என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி இல்லாத நிலையில் ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் அவர் மீது குற்றம் ஏற்படாது. இதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

திருக்குர்ஆனின் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.

பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக மேலும் விளக்கத்தைத் தருகின்றது.

“வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்” எனும் (2:284) வசனம் அருளப்பட்ட போது மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்களை ஒப்படைத்தோம் என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே (மக்கள் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே! “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!” (என்று பிரார்த்தியுங்கள்) எனும் (2:286) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 179

நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும் கேட்க மாட்டான்.

அல்லது ஒருவரது உடல் நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாக சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகும். உண்மையாகவே அவருக்கு இயலவில்லை என்ற நிலையில் செயல்படுத்தாதிருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களுக்கும், வணக்க வழிபாடுகளுக்கும் இது பொருந்தக் கூடியது என்பதால், இந்த மார்க்கத்திலுள்ள அனைத்துச் சட்டங்களும் எளிமையானவை என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரமாகும்.

———————————————————————————————————————————————-

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் நம் கண் முன்னே நகரும் போது எத்தனையோ தவறான எண்ணங்கள் அலைமோதி விட்டுச் செல்கின்றன. இப்படி மனித மனத்தில் தோன்றுபவை எல்லாம் பாவமாகப் பதியப்பட்டால் மனிதனின் கதி என்னவாகும்?

நம்முடைய மனம் எண்ணுகின்ற நல்லவற்றையும், தீயவற்றையும் கொஞ்சம் பட்டியல் போட்டுப் பார்த்தோம் என்றால் தீயவை தான் மிகைத்து நிற்கும். நரகத்திற்குச் செல்வதற்கு வேறெந்த தீமையான செயல்களும் தேவையில்லை. நமது உள்ளத்தில் தோன்றுகின்ற தவறான எண்ணங்களே போதும். இப்படிப்பட்ட மனித உள்ளத்தின் சுபாவத்தை நன்கு அறிந்த வல்ல நாயன் அளிக்கும் சலுகையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம் 183

மலக்குகளுக்கு அல்லாஹ் இடுகின்ற இந்தக் கட்டளை மனித சமுதாயத்தின் மன நிலையை அறிந்த மாபெரும் படைப்பாளனின் மகத்தான பேரருட்கொடையாகும்.

இத்தகைய எளிய மார்க்கத்தை அளித்த இறைவா உனக்கே புகழனைத்தும் என்று போற்றி நிற்போமாக!

———————————————————————————————————————————————-

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

ஒரு கிராமவாசி பள்ளிவாச-ல் சிறுநீர் கழித்து விட்டார்.  உடனே மக்கள் அவரைப் பிடித்தனர்.  நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள்.  நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள்.  கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 220

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு எளிமையைப் போதிக்கிறார்கள்; இனிமையைப் போதிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் தாறுமாறாக நடந்து கொள்கிறார். தொழுது முடித்ததும் தன்னை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நபியவர்களின் இதமான பேச்சில் தன்னையே பறி கொடுக்கிறார்; அன்னாரைப் பார்த்து பரவசப்பட்டு நிற்கிறார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார்.  உடனே நான், “யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன்.  உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர்.  “(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்!  உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கிறீர்களே!” என்று நான் கேட்டேன்.  அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர்.  அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கிறார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்.  அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை;  என்னை அடிக்கவில்லை;  என்னை ஏசவுமில்லை.  “நிச்சயமாக இது தொழுகை!  இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது.  நிச்சயமாக தொழுகை என்பது இறைவனைத் துதித்தல், அவனைப் பெருமைப்படுத்துதல், குர்ஆன் ஓதுதல் ஆகியவை மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம்(ரலி)

நூல்: முஸ்-ம் 836

இங்கும் நபி (ஸல்) அவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு வியந்து நிற்கிறோம்.

“நபி (ஸல்) அவர்கள் மீது மரணம் உண்டாகட்டும்’ என்று யூதர்கள் தங்கள் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றனர். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நளினமான, இனிய நடைமுறையைப் பாருங்கள்.

யூதர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்)” என்று (முகமன்) கூறினர். உடனே நான், “(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி, உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்” என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! நளினமாக நடந்து கொள். மேலும் வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கேட்கவில்லையா? (வஅலைக்கும் – அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்து விட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6030

இப்போது சொல்லுங்கள்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? அல்லது நற்குணங்களால் பரப்பப்பட்டதா? இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கமா? அல்லது எளிய மார்க்கமா? என்பதைப் புரிந்து கொள்ள இது போன்ற ஏராளமான சம்பவங்களை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் எடுத்துக் காட்ட முடியும்.

———————————————————————————————————————————————-

கொலைக் குற்றத்திலும் ஓர் எளிய சலுகை

உலக நாடுகளிலுள்ள சட்டங்கள் அனைத்தும் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கின்றன. இந்தத் தண்டனையை அரசாங்கமே நிறைவேற்றுகின்றது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இந்த உரிமையை பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கின்றது. குற்றவாளியைத் தண்டிப்பதும், மன்னிப்பதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பொறுத்தது என்று தெளிவாக அறிவித்து விடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் 2:178

இப்போது கொலையுண்டவரின் குடும்பத்தினர், கொலையாளியை மன்னித்து விட்டால், அதற்காக ஈட்டுத் தொகை வாங்கிக் கொண்டு விடுதலை செய்யச் சொல்கிறது. இதை இறைவன் நமக்கு எளிமையாக்கிய அருட்கொடை என்று கூறுகிறான்.

குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.

———————————————————————————————————————————————-

உடலை வருத்தும் நேர்ச்சைகள்

மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால் அதற்காக நேர்ச்சை செய்வர். அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்துதல், காலில் செருப்பில்லாமல் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து கோயிலுக்குச் செல்லுதல், கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சிணம் செய்தல் என்று தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்ற நேர்ச்சைகளை செய்து வருகின்றனர்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான நேர்ச்சைகளைச் செய்வதை நாம் காண்கிறோம். இது போன்று கடுமையான நேர்ச்சைகளைத் தான் கடவுள் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. அதனால் தான் இவ்வாறு தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்து, அதை நிறைவேற்றவும் செய்கின்றனர்.

மனிதர்களிடம் உள்ள இந்த இயற்கையான உணர்வுகளைப் புரிந்த இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கம், இந்த நேர்ச்சை விஷயத்திலும் சரியான ஒரு நெறிமுறையை வழங்குகின்றது.

பெற்ற பிள்ளையைப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து நரபலி கொடுக்கும் கொடுமைகள் நமது நாட்டில் பரவலாக நடைபெறுவதைப் பார்க்கிறோம். இது போன்று பாவமான காரியங்களில் நேர்ச்சை செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அப்படியே நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்று கட்டளையிடுகிறது.

“அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

அதே போல் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளையும் மார்க்கம் தடை செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். “அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயி-ல் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6704

“இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயி-ல் நடப்பேன்” என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.

இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸி-ருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன.

ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். “நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1865, 6701

எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு பெண் இது போன்று நேர்ச்சை செய்த போது, அதை நிறைவேற்றுவதற்காக ஒரு எளிமையான தீர்ப்பை நபி (ஸல்) அவர்கள் வழங்குகிறார்கள்.

என் சகோதரி, கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி)

நூல்: புகாரி 1866

நேர்ச்சை என்ற பெயரில் மடத்தனமான காரியங்களையோ அல்லது மனிதன் தன்னை வருத்திக் கொள்கின்ற காரியங்களையோ செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது இறைவனுக்குத் தேவையில்லை என்று தெளிவாக இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

மக்களுக்கு எளிமையையே இஸ்லாம் போதிக்கின்றது. சிரமத்தைப் போதிக்கவில்லை என்ற அடிப்படையைத் தன்னகத்தே கொண்டு மக்களைத் தன் பால் விரைந்து வர அழைப்பு விடுக்கின்றது.

————————————————————————————————————————————————

இஸ்லாம் காட்டும் எளிய திருமணம்

வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்! என்று கூறும் அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ளது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.

(அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்து நடத்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் தான் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.

“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பாருங்கள்.

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். “இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!” என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது” என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, “உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 5030

இந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள் போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக் கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை வளைத்துப் போடப்பட்ட பந்தல்கள் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், “எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), “உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “என்ன விசேஷம்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்று பதில் கூறினார். அதற்கு, “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2048, 2049

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற இந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்ட விபரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தான் தெரிகின்றது என்றால் நபியவர்களின் காலத்தில் எந்த அளவுக்கு எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிய முடியும்.

இந்த ஹதீஸில், திருமணத்தின் போது அதிகப்பட்சமாக மணமகன் ஒரு விருந்தை வழங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இதுவும் அவரவர் சக்திக்கு ஏற்ப சாதாரண முறையில் தான் அமைய வேண்டுமே தவிர கடன் வாங்கி, லட்சக்கணக்கில் செலவு செய்து விருந்து வைப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள், (திருமணம் முடித்து வலீமா விருந்தளித்த போது) பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4213

திருமணத்தில் விருந்து கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது.  மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.

இது தான் இஸ்லாம் கூறும் எளிய திருமணமாகும். வரதட்சணை, ஆடம்பரங்கள், சீர் வரிசைகள், பெண் வீட்டு விருந்துகள் என மார்க்கத்திற்கு முரணான செயல்களின் மூலம் இஸ்லாம் காட்டித் தந்த எளிய திருமணத்தை, சிரமமான காரியமாக மாற்றியவர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.

———————————————————————————————————————————————–

கல்லானாலும் கணவன புல்லானாலும் புருஷன்

ஒரு பெண், ஓர் ஆடவனைத் திருமணம் முடித்த பின் அவன் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் தான் வாழ வேண்டும்; அவன் மூலம் வாழ்க்கைத் தேவை நிறைவேறாவிட்டாலும் அவனுடன் தான் வாழ வேண்டும் என்பது இந்து தர்மம். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இதைத் தான் எதிரொலிக்கிறது.

கிறித்தவ மதத்திலும் பைபிளின் அடிப்படையில் விவாகரத்து கிடையாது. இதை மாத்யூ 5:32  கூறுகின்றது.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: வேசித்தன முகாந்திரத்தினால் ஒழிய தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன் அவளை விபச்சாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான். அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபச்சாரஞ் செய்கிறவனாயிருப்பான்.

மாத்யூ 5:32

பைபளின் இந்த வசனம் விவாகரத்தை மறுப்பது மட்டுமின்றி, விதவைத் திருமணத்தையும் என்று ஒரேயடியாக மறுத்து விடுகின்றது.

யூத மதமோ ஒரு சிறு வெறுப்பு ஏற்பட்டாலும் விவாகரத்துச் செய்யலாம் என்று கூறி, எதிர் முனைக்குச் சென்று விவாகரத்தின் வாசலைத் திறந்து விட்டிருக்கின்றது.

ஒருவன் ஒரு ஸ்த்ரீயை விவாகம் பண்ணிக் கொண்ட பின்பு அவள் மேல் இலச்சையான காரியத்தைக் கண்டு அவள் மேல் பிரியமற்றவனானால் அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி அவள் கையிலே கொடுத்து அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பி விடலாம்.

அவள் அவனுடைய வீட்டை விட்டுப் போன பின்பு, வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம்.

அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும்,

அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளி விட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது;      அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணாயாக.

உபகாமம் 24:1-4

எந்த நிபந்தனையுமின்றி ஒரு சீட்டை எழுதிக் கொடுத்து மனைவியை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. மேலும் விவாகரத்துச் செய்த பின், சம்பந்தப்பட்ட பெண் தனது முதல் கணவனை மீண்டும் மணக்கவே முடியாது என்றும் இந்த வசனங்கள் தடை விதிக்கின்றன.

விவாகரத்தே இல்லை என்று கிறித்தவம் சொல்கிறது.

எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்ய யூத மதம் போதிக்கிறது.

ஆனால் இஸ்லாம் தான் இந்த விஷயத்தில் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்றது. விவாக விலக்கு என்ற ஒன்று இருந்தாக வேண்டும்; அதே சமயம் அந்த மண விலக்கு ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்ற நிலையை இஸ்லாம் கைக்கொள்கிறது. இஸ்லாமிய தலாக் முறையைப் படித்தால் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

விவாகரத்தின் அவசியம்

ஆண்களுக்கு அளிக்கப் பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர்.

கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதியில்லாவிட்டாலோ அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும்.

  1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; பராமரிக்கவும் மாட்டான்.
  2. அல்லது விவாகரத்துப் பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
  3. அல்லது மனைவியைத் தீயிலிட்டுக் கொளுத்தி விட்டு தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடி தப்பித்துக் கொள்வான்.

விவாகரத்தை அனுமதிக்காத போதும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருக்கும் போதும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.

ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் எளிதாக்கியிருக்கிறது.

விவாகரத்தில் ஒரு கட்டுப்பாடு

தலாக் எனும் விவாக ரத்துச் சட்டம் இஸ்லாத்தில் எளிமையாக்கப் பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. அதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது. கடைசி கடைசியாகவே “தலாக்’ எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.

தலாக் விடுமுன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

சொல்லித் திருத்துதல்

இல்லற வாழ்வில் பிரச்சனையைச் சந்திக்கும் கணவன், மனைவியிடம் பக்குவமாக அவளது குறைகளைச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடமைகளை உணர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, தான் அவளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதையும் விவாக ரத்தினால் அவள் சந்திக்க நேரும் பாதிப்புகளையும் இனிய மொழிகளால் எடுத்துரைக்க வேண்டும்.

“அப்பெண்கள் உங்களுக்கு மாற்றமாக நடப்பார்கள் என்றஞ்சினால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்” (அல்குர்ஆன் 4:34) என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இப்போதனையிலிருந்து, பெண்கள் மட்டுமே தவறு செய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவறே ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாம் இதை விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.

“நீங்கள் மனைவியருடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது முறையில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கலாம்”. (அல்குர்ஆன் 4:19) என்று இறைவன் கூறுகிறான்.

“நீங்கள் உங்கள் துணைவிகளிடம் ஏதேனும் தீய குணங்களைக் கண்டால் உடனே அவர்களை வெறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் வேறு நல்ல குணங்களைக் காண்பீர்கள்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்த அறிவுரையைக் கூறியுள்ளனர்.

(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

தள்ளித் திருத்தல்

இவ்வாறு எடுத்துரைத்தும் மனைவி தன் போக்கிலிருந்து திருந்தாத போது, அடுத்த கட்டமாக, தனது அதிருப்தியையும், அவள் மீதுள்ள கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும் தாம்பத்ய உறவின் தேவையை அவளுக்கு உணர்த்துவதற்காகவும் நிரந்தரமாகவே பிரிய நேரிடும் என்பதை அவளுக்குப் புரிய வைப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

“அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்” (அல்குர்ஆன்4:34) என்று இறைவன் அடுத்த அறிவுரையை வழங்குகிறான்.

தன் மீது கணவன் மோகமும் இச்சையும் கொண்டிருக்கிறான்; தன்னை அவனால் தவிர்க்க முடியாது என்று பெண் இயல்பாகவே இறுமாந்திருக்கிறாள். இந்த நிலையில், அவளது பெண்மையும், அண்மையும் கணவனால் புறக்கணிக்கப்படும் போது, அவளது தன்மானம் சீண்டப் படுவதையும் தனது உறவைக் கணவனால் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக உணரும் போது, நிலைமையின் விபரீதத்தை அவள் புரிந்து கொள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப் பட்டு குடும்பத்தில் சுமூக உறவு ஏற்படலாம்.

அடித்துத் திருத்துதல்

மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் கூட மனைவியிடம் மாற்றத்தை  ஏற்படுத்தவில்லையாயின் மூன்றாவது நடவடிக்கையாக அவளை அடித்துத் திருத்த இஸ்லாம் அனுமதிக்கிறது!

“அவர்களை (இலேசாக) அடியுங்கள்” (அல்குர்ஆன் 4:34)

அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோ அல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை.

ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

கணவனால் அடிக்கப்பட்டால், அவளது பெண்மையும், தன்மானமும் சீண்டப்படுவதை இன்னும் தெளிவாக அவள் உணர்ந்து கொள்வதோடு கணவன் “எதற்கும்’ தயாராக இருப்பதையும் புரிந்து கொள்கிறாள். இதனால் அவளது போக்கில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு விவாகரத்துச் செய்யப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.

விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இதையும் பெண்ணுரிமை பேசுவோர் குறை கூறுவார்கள்.

இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்பியவர்களை விட அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறர்கள்.

ஆண் வலிமை உள்ளவனாகவும் பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு போலீசாரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்று தான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.

இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்!  மனைவியரைச் சித்திரவதைப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்களை விட குறைவாகவே இருப்பதற்கு இதுவே காரணம் என்பதை உணர வேண்டும்.

ஜமாஅத் தீர்வு

கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள பிணக்கு மேற்சொன்ன மூன்று நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடருமானால், அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.

“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.”

அல்குர்ஆன் 4:35

எந்தப் பிரச்சனையிலும் சம்மந்தப் பட்டவர்களே பேசித் தீர்க்க விரும்பினால் பெரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் உணர்வுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகுவதால் சில வேளை சிக்கல் மேலும் முற்றிப் போகலாம். தத்தம் நிலையிலேயே பிடிவாதமாக நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்லை.

இதன் காரணமாக இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பில்லாத ஆனால் தம்பதியர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கறையும் ஆசையும் கொண்ட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடுவர்களாக, ஜமாஅத் நியமித்துச் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு வெறுப்பற்ற, ஒருதலைப் பட்சமற்ற கோணத்தில் அணுகப்பட்டு, சமூகமான, ஒத்த தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும்.

இந்த நான்கு நடவடிக்கை களாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

விவாகரத்துச் செய்யும் முறை

“உன்னை விவாகரத்துச் செய்கிறேன்” என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடும் என்று கருதிவிடக் கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 65:4)

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லை என்றால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளவும் செய்யலாம். அந்தக் காலக் கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்-ணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.

மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.

ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்து விட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

“(திரும்பவும் அழைத்துக் கொள்ளத் தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான்” (திருக்குர்ஆன் 2:229) என்ற இறை வசனத்தி-ருந்து இதை அறியலாம்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்-ம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்-ம் 2691)

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் முதல் கணவனை மணக்கவே முடியாது என்று ஒரேயடியாக யூத மதம் மறுத்து விடுகின்றது. ஆனால், இஸ்லாம் விவாகரத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளது. இரண்டு கட்டங்களில் மீட்டிக் கொள்ளலாம் என்ற அவகாசத்தை, அதாவது விவாகரத்துச் செய்த மனைவியுடன் மீண்டும் இணையலாம் என்ற சட்டத்தை வழங்குகிறது.

மூன்றாவது கட்டம் தான் இறுதிக் கட்டம். அந்தக் கட்டத்திற்குப் பின்னர், விவாகரத்துச் செய்து விட்டால் அந்தத் தம்பதியர் சேர முடியாத பிரிவு என்ற எல்லைக்குள் வந்து விடுகின்றனர்.

அதற்குப் பிறகும் இஸ்லாம் சலுகை மழை பொழிகின்றது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண், வேறொருவரை மணந்து, அந்த இரண்டாவது கணவரும் மூன்று தலாக் விட்டு விட்டால் மீண்டும் முதல் கணவருக்கு அந்தப் பெண் வாழ்க்கைப் படலாம் என்று இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டுகின்றது.

பெண்களின் விவாகரத்து உரிமை

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 5273, நஸயீ

மேற்கண்ட செய்தியி-ருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும், திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியி-ருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிகச் சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதி-ருந்து இதை உணரலாம்.

இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது. இதைத் திருக்குர்ஆன் “அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே! (திருக்குர்ஆன் 4:21) என்றும்

“கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” (திருக்குர்ஆன் 2:228) என்றும் கூறுகிறது.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதி-ருந்து அறியலாம். (பார்க்க திருக்குர்ஆன் 2:228-232)

இப்போது சொல்லுங்கள்! உலகில் உள்ள மதங்களில் எந்த மதம் இலகுவான மதமாக இருக்கின்றது? பெண்களுக்கும் இலகுவான சட்டங்களை வகுத்துள்ளது?

இஸ்லாமிய மார்க்கம் தான் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்வியலிலும் எளிமையான சட்டங்களை வழங்கி, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று பறைசாற்றுகிறது. இதைத் தான்  வல்ல அல்லாஹ்வும் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உடன் கட்டையும் இல்லை! உடன் மொட்டையும் இல்லை!

கணவன் இறந்து விட்டால் போதும்! அந்தப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலி; தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

மொட்டை அடித்து வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பில் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்வர்.

04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.

தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள்.

இன்றைய காலத்து 24 மணி நேரத் தொலைக்காட்சி அலை வரிசைகள் அன்று இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தச் செய்தியைக் கண்டு உலகமே வெகுண்டு, வீறு கொண்டு எழுந்திருக்கும். பத்திரிகைகள் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

அகில இந்திய அளவில் கிளம்பிய எதிர்ப்பலையால் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் ஊர் மக்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் 31.04.2004 அன்று இந்த வழக்கைத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.

ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.

நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.

விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகளைப் பார்த்தீர்களா? ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்களைப் பாருங்கள்.

உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்நாட்டில் இந்து மதத்தில் உள்ள நடைமுறையாகும்.

யூத மதத்தில் விதவையின் நிலை

யூத மதப்படி, கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும். கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

ஆதியாகாமம் 38:8

இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்.

விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.

அது மட்டுமின்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.

விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக் குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.

அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21:13-15

இப்படி யூத மதம் தன் பங்குக்கு விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது; கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

அரபியர்களிடம் விதவைகள்

இஸ்லாம் வருவதற்கு முன் வாழ்ந்த அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களிடத்திலும் ஒரு கொடுமை நீடித்து வந்தது.

சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். இதில் இஸ்லாம் மட்டும் தான் விதிவிலக்காகத் திகழ்கிறது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.

கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?

இதோ இஸ்லாம் எனும் இந்த எளிய மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி)

நூல்: புகாரி 5136

எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்தப் பழக்கத்தை இஸ்லாம், அரபியர்களிடமிருந்து வேரறுத்து எறிந்து விடுகின்றது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

அல்குர்ஆன் 4:22

விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் மணம் முடிக்கும் வழக்கம் கிறித்தவர்களிடம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் வேதத்தில் இல்லை. எனவே இது வேதத்தின் குறைபாடாக ஆகிவிடுகின்றது. ஆனால் திருக்குர்ஆன் நிறைவான வேதம் என்பதால் இந்த நிவாரணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், அதை மக்களிடம் நடைமுறையிலும் கொண்டு வந்தது.

இவ்வாறு விதவைப் பெண்களின் கொடுமைகளைப் போக்கும் எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த எளிய மார்க்கம் விதவைகளுக்கென சில வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அது தான் இத்தா சட்டமாகும்.

இத்தா  ஒரு விளக்கம்

கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் “இத்தா’ எனப்படுகிறது.

கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.

ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால் தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்  2:228)  தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூறமுடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.

குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.

இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர் காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

(அல் குர்ஆன் 65:4)

கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிலிலி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன் 65:4)

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

இவ்வசனத்திலிலி-ருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.

இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன் தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கால கட்டத்தில் பகிரங்கமான முறையில் மணம் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. மறைமுகமாக திருமணம் குறித்து பேசிக் கொள்வதில் தவறில்லை.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:235

கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப் எனும்)  ஆடைகளைத் தவிர!

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 313

இதைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மேலே கூறப்பட்டுள்ள காரியங்கள் தவிர மற்றவற்றுக்கு சாதாரண நாட்களில் பெண்களுக்கு என்ன சட்டமோ அது தான் இந்த இத்தா காலத்திலும் உள்ளது.

ஆனால் இன்று நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில், இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைத்து வைக்கின்றனர். பெண்களைச் சூரிய ஒளி கூட படாத வகையில்  இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அவர்கள் வானம் பார்க்கக் கூடாது; வெளிச்சம் பட்டுவிடக் கூடாது; யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகப் பாயிலுள்ள ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும், சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.

அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.

சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப் பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது.

இது போன்று மார்க்கத்தில் இல்லாத கற்பனைக் கட்டுப்பாடுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த எளிய மார்க்கத்தை கடின மார்க்கமாக ஆக்கி விட்டவர்கள், அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைக்கும் பழக்கம் பிற மதத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகும். கணவனை இழந்தவர்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டும்; அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ் விதிக்கவில்லை. காரணம், இது அல்லாஹ்விடமிருந்து வந்த     கரை படாத கலப்படமில்லாத மார்க்கமாகும். மக்கள் மீது எந்தச் சிரமத்தையும் விதிக்காத எளிய மார்க்கமாகும்.

இத்தாவிலும் சலுகைகள்

கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா குறித்து பார்த்தோம். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்றாலும், அதே கால அளவு இருக்கத் தேவையில்லை.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகும். மேலும், பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டதைப் போன்று, விவாகரத்துச் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரேயடியாகத் தடை விதிக்கவில்லை. இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் கணவன், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறது.

ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து, அவளைத் தொடாமலேயே விவாகரத்துச் செய்து விட்டால் அந்தப் பெண் இத்தா அனுஷ்டிக்க வேண்டுமா? என்றால் தேவையில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

அல்குர்ஆன் 33:49

இது போன்ற இல்லறவியலின் ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி, தான் ஓர் எளிய மார்க்கம் என்பதை உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றது.

———————————————————————————————————————————————–

தீட்டான பெண்கள் வீட்டுக்குத் தூரம்?

மாதவிடாய் என்பது மாதந் தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கைக் கூறாகும். கரு முட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவாகும்.

பெண்களுக்கு இவ்வாறு மாதவிடாய் ஏற்படும் போது மக்கள், அப்பெண்ணைத் தீண்டத் தகாதவளாகப் பார்க்கின்றனர். அவர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. வீட்டுக்குத் தூரமானவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவ்வாறே நடத்தவும் செய்கின்றனர். அப்படி ஓர் அருவருப்பான தோற்றத்தை மதங்கள் மக்களிடம் உருவாக்கி விட்டிருக்கின்றன.

யூத மதம் இதில் தலைமை வகிக்கின்றது.

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.

அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக் கொள்ளுகிறாளோ எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:19-23

மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாட்கள் வீட்டை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும், அவள் எதையெல்லாம் தொடுகிறாளோ அவையனைத்தும் தீட்டுப்பட்டவை என்றும், அவள் உட்கார்ந்த இடமும் தீட்டு என்றும் பைபிள் பழைய ஏற்பாட்டின் இந்த வசனங்கள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி, மாதவிடாய் பெண்களைத் தொட்டவர்களும், அவள் இருந்த இடத்தையும், படுக்கையையும் தொட்டவர்களும் தீட்டுப்பட்டவர்கள் என்றும் யூத மதம் கூறுகின்றது.

யூத மதத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு அமைந்த மனு தர்மமும் இது போன்றே குறிப்பிடுகின்றது.

சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக!

தீட்டுக்கு மாற்று என்ற தலைப்பின் கீழ் 111வது வசனத்தில் மனு தர்மம் இதைக் கூறுகின்றது.

இஸ்லாம் தான் இந்தக் கொடுமைகளைக் களைந்து எறிகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் கூறுகின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:222)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.  எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் (நபி (ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை” என்று பேசிக் கொண்டனர்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 455, அபூதாவூத் 225

மாதவிடாய் பெண்களிடம் இல்லறத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகும் என்று அறிவித்து, பெண்களின் மீது பூட்டப் பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இஸ்லாம் உடைத்தெறிகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள், பெண்கள் மீது போடப்பட்டிருந்த விலங்குகளை தகர்த்தெறிகின்றார்கள்.

இந்த எளிய மார்க்கத்தின் இனிய இறைத்தூதர் அவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை எப்படி எல்லாம் நடத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள்!

கணவனுக்குத் தலை வாருதல்

யூத, இந்து மதங்கள் தீட்டுப்பட்ட பெண்களைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இந்த எளிய மார்க்கத்தின் தூதர் (ஸல்) அவர்கள், தமது மனைவி மாதவிடாயாக இருந்த நேரத்தில் தமது தலையைக் கழுவி விடுமாறு கூறுகின்றார்கள்.

ஹிஷாம் பின் உர்வா அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? பெருந்தொடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப் பட்டது.

அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இயல்பான விஷயம் தான். (மாதவிடாய் ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 296

மாதவிடாய்ப் பெண்ணை அணைத்துக் கொள்ளுதல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (தமது மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் வெளிப்படுமிடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உஙகளில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

நூல்: புகாரி 301

ஒன்றாகப் படுத்துக் கொள்ளுதல்

(நபி ஸல் அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி, மாதவிடாய் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

நூல்: புகாரி 298

தீட்டு கையில் இல்லை

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு, “ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்துக் கொடு” என்று கூறினார்கள். அதற்கு, “நிச்சயமாக நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேன்” என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவர்கள். “உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை” எனக் கூறினார்கள். பின்னர் அத்துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 450, திர்மிதீ 124

மாதவிடாய்ப் பெண் தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற தீண்டாமையை இஸ்லாம் உடைத்து நொறுக்கி விடுகின்றது. அத்துடன் மாதவிடாய் ஏற்பட்ட பெண், தொழுகை விரிப்பை எடுத்து வருவதற்குக் கூட அனுமதிக்கிறார்கள். “மாதவிடாய் என்பது கையில் இல்லை” என்ற அற்புதமான கூற்றின் மூலம் உலகில் உள்ள மற்ற மதங்களிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிகின்றார்கள்.

மாதவிடாய் பெண் ஹஜ் செய்தல்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்கிறார்கள். ஹஜ் செய்யும் கால கட்டத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. அதனால், ஏன் தான் ஹஜ் செய்ய வந்தோம்? என்று கடுமையான வேதனையை அடைகிறார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளிக்கும் அற்புதத் தீர்வைப் பாருங்கள்.

“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 305, 1650

தீட்டுப்பட்ட பெண்கள் வீட்டுக்குத் தூரம் என்று மற்ற மதங்கள் கூறுகையில், அவள் வீட்டுக்கும் தூரமானவள் அல்ல! ஹஜ் போன்ற மிகப் பெரிய வணக்க வழிபாட்டைச் செய்வதற்குக் கூட தூரமானவள் அல்ல என்று இஸ்லாம் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

தீட்டுப் பெண் திடலுக்கு வருதல்

மாதவிலக்கான பெண்கள் பெருநாளன்று வீட்டில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது என்பதற்காகவும், “நமக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் தான் நம்மால் இந்தப் பெருநாளின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போய் விட்டது’ என்று அந்தப் பெண்கள் மனச் சங்கடம் அடையக் கூடாது என்பதற்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை இட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 971

தொழுகையைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டு பெருநாளின் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு இந்த எளிய மார்க்கம் வகை செய்கின்றது.

தொடர் உதிரப் போக்கும், தொழுகையும்

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு, “இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 228

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு, அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது. அது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாஙகள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

நூல்: புகாரி 2037

மற்ற மதங்கள் மாதவிலக்கு ஏற்பட்ட மாதர்களை தீண்டக் கூட விடாமல் அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கையில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அப்பெண்களுக்கு விடியலை வழங்குகின்றது.

குறிப்பிட்ட சில வணக்கங்களைத் தவிர்த்து மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்று அனுமதிக்கிறது. அது போல் இல்லற வாழ்க்கையிலும் உடலுறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளலாம் என்று கூறி, பெண்களுக்கு ஏற்ற இலகுவான மார்க்கமாகத் திகழ்கிறது.

———————————————————————————————————————————————–

சொட்டு மூத்திரம் ஒரு சோதனை அல்ல!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இந்த இதழில், முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அது தான் சொட்டு மூத்திர நோய் பற்றிய சட்டமாகும்.

சிலர் தொழுகைக்காக உளூச் செய்து விட்டு, தொழுகையில் நிற்பர். ருகூவுக்குச் செல்லும் போது ஒரு சொட்டு சிறுநீர் வந்தது போன்று ஓர் உணர்வு ஏற்படும். சிலருக்கு ஒரு சொட்டு வந்து விடவும் செய்யும்.

இத்தகையவர்கள் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்பு கேட்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது நன்றாகக் கனைக்க வேண்டும் என்றும், மண் கட்டியை வைத்துக் கொண்டு நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்வார்கள். இதனால் தான் பள்ளிவாசல் கழிவறைகளில் அதிகமான கனைப்புச் சத்தத்தை நாம் செவியுற முடிகின்றது. இவர் நாற்பதடி தூரம் நடப்பதற்குள் தொழுகை முடிந்து விடும்.

அப்படி நடந்தாலாவது இந்தப் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பிறகும் சொட்டு வருவது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இங்கு தான் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று இறைவன் திருமறையில் சொல்வதை நாம் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.

நாற்பதடி தூரம் நடக்க வேண்டும் என்று நம்மை நாமே சிரமப்படுத்திக் கொண்ட போதும் நமக்கு இந்தப் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைத்து விடும். எனவே நடுநிலையையே கடைப் பிடியுங்கள்; இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 39

எளிய மார்க்கமான இஸ்லாம் இப்படியெல்லாம் நம்மைக் கஷ்டப்படுத்துமா? என்று சிந்திக்க வேண்டும். நாம் தான் நம்மையே கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். அதிலும் நாற்பதடி நடப்பவர்கள் பேருந்து நிலையம் போன்ற பெண்கள் நடமாடும் இடங்களிலும் “மார்ச் பாஸ்” செய்வதால் அந்த மக்கள் இஸ்லாத்தையே தவறாகப் பார்க்கும் நிலை ஏற்படுகின்றது.

சிறுநீர் அல்லது மலம் கழித்தால் மார்க்கம் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்கிறது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்  கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்து விட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.

நூல்: புகாரி 152

தண்ணீர் இல்லாவிட்டால் நீரை உறிஞ்சுகின்ற, அசுத்தத்தைத் துடைக்கின்ற கற்கள் அல்லது அது போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களைக் கொண்டு அந்த இடத்திலேயே சுத்தம் செய்து விட்டு நகர்ந்து விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்ற போது, “நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்காகச் சில கற்களை எடுத்து வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ கொண்டு வந்து விடாதே!” என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்து விட்டு அஙகிருந்து திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால் சுத்தம் செய்து கொண்டார்கள். பிறகு அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 155

இன்று சுத்தம் செய்வதற்குரிய பேப்பர்கள் கூட வந்து விட்டன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மலஜலம் கழித்தால் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை! அவ்வாறு நாம் சுத்தம் செய்த பிறகு ஒரு சொட்டு வெளியானால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். அதாவது அதற்குப் பின் வெளியாகும் சொட்டு நீருக்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான். இதைத் தான் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

இதற்குப் பின்னும் ஒரு மனிதனின் உள்ளத்தில் சொட்டு வந்து கொண்டிருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டால் அது ஷைத்தானின் ஊசலாட்டம். இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இடம் கொடுத்தால் ஷைத்தான் நம்மை ஸைக்கோவாக, மன நோயாளியாக மாற்றி விடுவான். இந்த ஊசலாட்டத்திற்கு அரபியில் “வஸ்வாஸ்’ என்று கூறுவர். இதை நாம் உதாசீனம் செய்து விட வேண்டும். அப்போது தான் ஷைத்தான் நம்மிடம் வாலாட்ட மாட்டான்.

சொட்டு மூத்திரம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் இதெல்லாம் சரி தான். உதாசீனம் செய்து விடலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு சொட்டு சிறுநீர் வந்தே விடுகின்றது. ஈரம் தென்படுகின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் இதற்கும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

அப்படிப்பட்டவர்கள் அது ஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் உள்ளவர்கள் ஒரு தொழுகைக்குச் செய்யும் உளூவைக் கொண்டு அடுத்த தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் மார்க்கம் வழங்கும் தீர்ப்பாகும். உதாரணமாக மக்ரிப் தொழுகைக்கு உளூச் செய்தால் அதைக் கொண்டு இஷா தொழக் கூடாது. இஷா தொழுகைக்குத் தனியாக உளூச் செய்ய வேண்டும்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண்.  நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு, “இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 228

இந்த ஹதீஸில் தொடர் உதிரப் போக்குக்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தீர்வு சொட்டு மூத்திரத்திற்கும் பொருந்தும். வழக்கமாகச் சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு சிறுநீர் வெளியே வந்தாலும் அது நோய் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டியது தான். எனவே இதற்காகத் தொழுகையைப் பாழாக்கி விடக் கூடாது.

எளிமையான இந்த மார்க்கத்தில் இனியும் கடினத்தைக் கடைப் பிடிக்காமல் உண்மையான, எளிமையான சட்டங்களைக் கடைப்பிடிப்போமாக!

———————————————————————————————————————————————–

ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை

பொதுவாக மனிதனுக்கு ஒரு பணியை முதலில் குறைத்துக் கொடுத்து விட்டு, அதன் பின்னர் அதை அதிகப்படுத்தினால் அவன் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அது தான் மனித இயல்பு!

எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு எட்டு மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, பின்னர் அதை 12 மணி நேர வேலையாக ஆக்கும் போது அவனது இயல்பு அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தனக்கு அந்த வேலை பறி போய் சும்மா இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அந்தப் பணியை விட்டே விலகி விடுகின்றான்.

ஒருவருக்கு 12 மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, அதை அவன் தாங்க முடியவில்லை எனும் போது, 8 மணி நேரமாகக் குறைத்தால் ஆயிரம் சலாம் போட்டு அதை ஏற்றுக் கொள்வான். இந்த மனித இயல்பின் அடிப்படையில் தான் மார்க்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “என்           மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம் நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.

பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்க, “அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள். அதற்கு, “நான் ஒப்புக் கொண்டு விட்டேன்” என்று பதிலளித்தேன்.

அப்போது, “நான் எனது விதியை அமல் படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3207

முதலில் ஐம்பது நேரத் தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்குகிறான். அந்தக் கடமையை அப்படியே பெற்று விட்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் திரும்ப வருகின்ற போது மூஸா (அலை) அவர்கள் வழிமறித்து, விசாரிக்கிறார்கள். 50 நேரத் தொழுகை என்ற சொன்ன மாத்திரத்திலேயே, “உடனே திரும்பிச் செல்லுங்கள்” என்று மூஸா நபி கூறி விடுகிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களிலேயே மக்களிடம் பெருத்த சோதனைகளைச் சந்தித்த இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள் தான். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (பார்க்க புகாரி 3405)

மக்களிடம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து அவர்களின் மன ஓட்டங்களைப் புரிந்த மூஸா நபியவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களைத் திரும்ப அனுப்பி வைக்கிறார்கள். ஒரு முறை, இரண்டு முறையல்ல! இவ்வாறு 9 தடவை திரும்ப அனுப்புகிறார்கள். இதனால் 45 நேரத் தொழுகைகள் குறைகின்றன. ஐந்து நேரத் தொழுகைகள் மட்டும் எஞ்சின. இருப்பினும் ஒன்றுக்குப் பத்து நன்மை என்ற விகிதத்தில் 5 நேரத் தொழுகைகளுக்கும் 50 நேரத் தொழுகைகளுக்கான நன்மைகளை அளிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், முதலில் நமக்குக் கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான். இதைப் பெற்றுக் கொண்டு நபியவர்கள் வரும் போது, மூஸா நபியவர்களை அல்லாஹ் சந்திக்கச் செய்கிறான். இந்தச் சந்திப்பு அல்லாஹ்வின் மிகப் பெரிய ஏற்பாடாகும். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.

அல்குர்ஆன் 32:23

இந்தச் சந்திப்பின் மூலம் தொழுகையைக் குறைத்து, “உங்கள் மீது கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான்; மூஸாவின் தலையீட்டால் இதை ஐந்தாகக் குறைத்திருக்கிறேன். இதை நீங்கள் நிறைவேற்றத் தவறி விடாதீர்கள்” என்று மனோதத்துவ ரீதியாக நமக்கு இறைவன் உணர்த்துகிறான்.

சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகையை இனியும் தவற விடலாமா?

———————————————————————————————————————————————–

பயத் தொழுகையும் பயணத் தொழுகையும்

போர்க்களத்தில் தொழும் தொழுகைக்கு, ஸலாத்துல் கவ்ஃப் – பயத் தொழுகை என்று பெயர்.

இறைவன் தொழுகையை நமக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆக்கியிருக்கிறான். இவ்வாறு நேரம் குறிக்கப்பட்ட இந்தக் கடமையை போர்க் காலத்திலும், பயணக் காலத்திலும் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது மிகக் கடினமாகும். இப்படியொரு கடினமான, சிரமமான சூழ்நிலை நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் அஹ்ஸாப் எனும் அகழ்ப் போரின் போது ஏற்படுகின்றது.

அஹ்ஸாப் (அகழ்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 2931, 4111, 6396

நபித்தோழர்களும் இது போன்ற சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

அகழ்ப் போர் தினத்தில் நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்.) எனவே நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது, அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 4119

இப்படி நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தான் பயத் தொழுகை, அதாவது போர்க்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது.

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங் களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:102

இவ்வசனம் போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.

போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க வேண்டும்; மற்றொரு அணியினர் இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.

ஒரு ரக்அத் தொழுததும் அவர்கள் களத்திற்குச் சென்று விட வேண்டும். தொழாத அணியினர் வந்து தொழுகையில் சேர வேண்டும். இவர்கள் வரும் வரை இமாம் தொழுகையை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதி-ருந்து போர்க்களத்தில் எல்லாத் தொழுகையும் ஒரு ரக்அத் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இமாம் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்பதைப் பொதுவானதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் இவ்வசனத்தின் துவக்கத்தில் “நீர் அவர்களுடன் இருந்து”, “நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்” என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாது விட்டால் அவர்கள் வருத்தம் அடைவார்கள்.

நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும் போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும்.

போர்க்காலங்களில் இடையூறுகள் குறுக்கிடும் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கொரு விதிவிலக்கை அளித்து, இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு ஓர் இலகுவை, எளிமையை வழங்குகிறான். சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகைக்குத் தான், பயத் தொழுகை என்று பெயர்.

போர்க்களத்தில் நிற்கும் மக்களுக்கு இறைவன் அளித்த மாபெரும் சலுகையும் அருட்கொடையுமாகும்.

பயணத் தொழுகை

இது போலவே பயணத்தின் போதும் மக்களுக்குத் தொழுகையில் அல்லாஹ் சலுகையளிக்கிறான். அதற்குப் பெயர் பயணத் தொழுகையாகும்.

உண்மையில் பயணம் என்று நரகமாகும். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 1804)

மனிதன் தன் பயணத்தின் போது இது போன்ற ஒரு வேதனையை அனுபவிக்கையில் மார்க்கம் கடமையாக்கியுள்ள தொழுகையின் மூலமும் சிரமப்படக் கூடாது என்பதற்காக இரு விதமான சலுகைகளை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

  1. குறைத்துத் தொழுதல்
  2. இணைத்துத் தொழுதல்

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாக சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்தை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1230

இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார்.

இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

பயணத்திலிருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாகவுமே தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2477

பயணத்தில் அல்லாஹ் இப்படி ஒரு சலுகையை வழங்கி, மக்களுக்கு மார்க்கத்தை இலகுவாக்கியுள்ளான். இந்தச் சலுகை இல்லையெனில் மக்கள் பெரும் அவதிக்கும் அல்லலுக்கும் உள்ளாகி விடுவார்கள்.

உறக்கம், மறதிக்கும் ஒரு சலுகை

இப்படிப் பயணத்தில் சலுகையளித்த எல்லாம் வல்ல அல்லாஹ், ஒரு மனிதன் தொழுகையை விட்டு விட்டு, தன்னையறியாமல் தூங்கி விட்டால், அல்லது மறந்து விட்டால் அதற்காக அவனைத் தண்டிப்பதில்லை. அதற்கும் ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

உறக்கத்திற்கும் மறதிக்கும் மகத்தான இந்தச் சலுகையை அல்லாஹ் வழங்குகிறான். தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்பதால் அதில் “களா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. (இதைத் தனிக் கட்டுரையில் காண்க!)

தொழுகையில் களா இல்லை எனும் போது அதற்கேற்றவாறு மார்க்கத்தில் சலுகை இருந்தாக வேண்டும். இந்தச் சலுகை இல்லையென்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். அதற்காகத் தான் அல்லாஹ் இப்படிப்பட்ட சலுகையை அளிக்கிறான்.

நோயாளியின் தொழுகை

தொழுகைக்கான சலுகைகள் இத்துடன் நின்று விடவில்லை. தொழுகையை நின்று தான் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. ஆனால் நின்று தொழ முடியாத கட்டங்களில் உட்கார்ந்தும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக நோயாளிக்கு இந்த விஷயத்தில் பெரும் சலுகையை மார்க்கம் வழங்கியுள்ளது.

எனக்கு மூல நோய் இருந்தது. “எவ்வாறு தொழுவது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரீ 1117

தொழுகை விஷயத்தில் கடுமை காட்டும் மார்க்கம், மறு பக்கத்தில் இப்படிப்பட்ட சலுகைகளை வழங்கி, தன்னை மனித குலத்திற்கு ஓர் எளிய மார்க்கமாக ஆக்கி வைத்திருக்கின்றது.

———————————————————————————————————————————————–

 தொழுகையில் களா இல்லை!

தொழுவோருக்குக் கஷ்டம் இல்லை!

தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில், உடனே தொழுவதற்கு “அதா’ என்று பெயர். குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல் ஆறப் போட்டு, கடன் மாதிரித் தொழுவதற்குப் பெயர் “களா’ ஆகும். இவ்வாறு தொழுவது இன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

சிலர் இஷா நேரத்தில் சுபுஹ் தொழுவார்கள். காலையில் கடைக்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடுவார்கள். இஷா வரை எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். பிறகு அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலையிலிருந்து கணக்குப் பார்த்து, ஐந்து வேளை தொழுகையையும் தொழுது முடிப்பர்.

தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதே ஆக வேண்டும். அவ்வாறு தொழவில்லை என்றால் அவர் குற்றவாளி ஆகி விடுகின்றார். போர்க்களத்தில் கூட தொழுகையை ஒத்திப் போட அனுமதியில்லை. இதற்காக போர்க்காலத் தொழுகை என்ற சலுகையை வழங்கி, அந்தந்த நேரத்தில் தொழச் செய்கிறான். கடமையான தொழுகையை போர்க்களத்திலேயே தள்ளிப் போட அனுமதியில்லை எனும் போது மற்ற சாதாரண நேரத்தில் தள்ளிப் போட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.

கடமையான தொழுகைகளைத் தள்ளிப் போடக் கூடாது என்பதற்கு, போர்க்காலத் தொழுகை ஓர் ஆணித்தரமான சான்றாகும்.

இதனால் தான் தொழுகைக்காகப் பல சலுகைகளை வழங்கியுள்ளான்.

  1. தொழுகைக்காக உளூச் செய்வதற்குத் தண்ணீர் இல்லா விட்டால் தயம்மம் செய்தல்.
  2. குளிப்பு கடமையாகி விட்டாலும் தண்ணீர் இல்லாவிட்டால் அல்லது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் தயம்மம் செய்தல்.
  3. பயணத்தில் இருந்தால் இரு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்.
  4. பயணத்தில் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதல்.
  5. நோயாளியாக இருப்பவர் நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுதல்; உட்கார்ந்து தொழ முடியாதவர்கள் படுத்துத் தொழுதல்; அதற்கும் இயலாவிட்டால் சைகை மூலம் தொழுதல்.

இது போன்ற எண்ணற்ற சலுகைகளை மார்க்கம் வழங்கி, தொழுகையைத் தள்ளிப் போடக் கூடாது, களாச் செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

ஒரு கம்பெனியில் பணி புரியும் பணியாளர்கள், விடுப்பு எடுக்கக் கூடாது என்று நிர்வாகம் நிபந்தனையிடுகின்றது. குடும்பத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று அதன் தொழிலாளர்கள் கூறும் போது, பக்கத்திலேயே குடியிருப்பை நிர்வாகம் கட்டிக் கொடுக்கிறது. சாமான்கள் வாங்க கடைக்குப் போக வேண்டும் என்றால், அதற்காக கடைகளையும் அதில் ஏற்படுத்துகிறது. குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்றால், பள்ளிக்கூடத்தையும் கட்டித் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இத்தனை சலுகைகளையும் அந்தக் கம்பெனி வழங்குவதற்குக் காரணம், தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

இது போன்று தான் தயம்மும், ஜம்வு, கஸ்ர் என பல்வேறு சலுகைகளை இறைவன் வழங்கியிருப்பதற்குக் காரணம் உரிய நேரத்தில் தொழாமல் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதால் தான். இதன் மூலம் தொழுகைக்குக் களா இல்லை என்று தெளிவாக அறிவிக்கிறான்.

காலா காலம் களாச் செய்யும் கொடுமை

அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும் என்று 4:103 வசனத்தில் அல்லாஹ் கடுமையாகக் கூறியிருந்தும் மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்று கண்டிப்பாக உணர்த்தியிருந்தும் சிலர் சுபுஹ் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை மொத்தமாகத் தொழுது கடனைக் கழித்து கணக்கைத் தீர்ப்பதற்குக் காரணம், ஒரு வேளையில் தொழுகையை விட்டு விட்டால் மறு வேளையில் தொழுது கொள்ளலாம் என்பது போன்ற சட்டங்களைச் சொல்வதால் தான்.

“தொழுகையை இவ்வாறு களாச் செய்யலாம் என்று சொல்வது நல்ல நோக்கத்திற்காகத் தான்.  ஓர் அடியான் தன் மீது கடமையாகி விட்ட தொழுகையை விட்டு விட்டால் அது கடனாகி விடுகின்றது.  கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி கட்டாயமோ அது போல் செலுத்தியாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதற்காகத்தான் களாத் தொழுகை உண்டு என்று கூறுகின்றோம்” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர்.

மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். “இவ்வளவு நாளும் தொழாமல் இருந்து விட்டோமே, சரி இன்றையிலிருந்து இனிமேலாவது ஒழுங்காகத் தொழுவோம்” என்ற நல்ல முடிவிற்கு ஒருவன் வந்து, மார்க்க அறிஞரிடம் ஃபத்வா கேட்கின்றான்.  இன்றையிலிருந்து நான் தொழப் போகின்றேன், இதுவரை நான் விட்ட தொழுகைகளின் நிலை என்ன? என்று கேட்கின்றான்.

அதற்கு அந்த மார்க்க அறிஞர் ஓர் அதிரடித் தீர்ப்பை வழங்குகின்றார். “15 வயதில் உனக்குத் தொழுகை கடமையாகி விட்டது. ஆனால் இருபது வருடங்களாகத் தொழாமல் இருந்து விட்டாய். எனவே இருபது ஆண்டு காலத் தொழுகையை நீ களாச் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குகின்றார்.

தொழப் போகிறேன் என்று திருந்தி வந்தவருக்கு இந்தத் தீர்ப்பு திருப்பு முனையாக அமையவில்லை. திருந்தி, வருந்தி வந்தவரின் நம்பிக்கையை அறுத்து விடும் கத்தி முனையாக அமைந்து விட்டது. இவ்வளவு நாட்கள் நிலுவையாகக் குவிந்து கிடக்கும் தொழுகைகளுடன் இனிமேல் உள்ள தொழுகைகளும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று வந்த வழியைப் பார்த்து திரும்பி விடுகின்றார்.

இல்லையென்றால் காலா காலம் களாச் செய்து அவதிப்படுகின்றார்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

அல்லாஹ் இந்த மார்க்கத்தை எளிமையாக்கியிருக்கும் போது இம்மார்க்கத்தை நாம் சிரமமாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?

உறக்கமும் மறதியும்

ஒருவர் தொழாமல் தூங்கி விட்டால் தூக்கத்திலிருந்து விழித்ததும் தொழலாம்.  அல்லது மறந்து போய் தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தில் இருந்து திரும்பும் போது இரவுப் பயணம் மேற்கொண்டார்கள்.  எங்களுக்குத் தூக்கம் வந்ததும் ஓய்வெடுத்தார்கள்.  பிலாலிடம் இன்றைய இரவில் காவல் காப்பீராக! என்று சொன்னார்கள்.  பிலால் தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து கொண்டிருக்கும் போதே அவர்களது கண்களில் தூக்கம் மிகைத்து விட்டது.  சூரிய வெளிச்சம் தங்கள் மீது வருகின்றவரை நபி (ஸல்) அவர்களோ, பிலாலோ அவர்கள் தோழர்களில் வேறு யாருமே விழிக்கவில்லை.  அவர்களில் முதன் முதலில் விழித்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான்!  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்கம் அடைந்து, பிலாலே! என்றார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் அர்ப்பண மாகட்டும்!  உங்களுடைய உயிரைப் பிடித்து வைத்திருந்தவனே என்னுடைய உயிரையும் பிடித்து விட்டான்” என்று பிலால் சொன்னார்.  உடனே அவர்களுடைய வாகனங்களில் கொஞ்சம் ஓட்டிச் சென்றனர்.  பிறகு நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்து பிலாலுக்கு உத்தரவு இட்டார்கள்.

பிலால் தொழுகைக்கு இகாமத் சொன்னார்.  அவர்களுக்கு நபி (ஸல்) சுப்ஹ் தொழுவித்தார்கள்.  தொழுகை முடிந்ததும், “தொழுகையை மறந்தவர் அந்தத் தொழுகை நினைவுக்கு வந்தவுடன் தொழுது விடுவாராக!  ஏனெனில் என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக! என்று அல்லாஹ் சொல்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள்.  சூரியன் உதித்த பிறகு தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கடந்து சென்று தொழுகை நடத்துகின்றார்கள். தொழுது முடித்து விட்டு, “மறந்தவர்கள் நினைவு வந்ததும் தொழுங்கள்” என்று சொல்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸில், “யார் தொழுகையை மறந்து விடுகிறாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகிறாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனஸ் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு, முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

மற்றோர் இடத்தில், “தூங்கிக் கொண்டிருக்கையில் (தொழுகையை) தாமதப்படுத்துதல் (குற்றம்) இல்லை. தாமதப்படுத்துதல் (என்ற குற்றம்) அடுத்த நேரத் தொழுகை வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ்களிலிருந்து தூக்கம், மறதி ஆகியவற்றின் காரணமாக தொழுகை தாமதமாகி விட்டால் அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.  ஏனெனில் இவை இரண்டுமே நம்முடைய கட்டுப் பாட்டில் இல்லாத விஷயங்கள்.

அதற்காக அலாரத்தை அணைத்து விட்டு வேண்டுமென்றே சுபுஹ் தொழாமல் தூங்குபவருக்கு இது பொருந்தாது.  எதுவுமே தெரியாத அளவுக்குத் தூங்கி விட்டால் அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இந்த இரண்டு காரணங்களைத் தவிர்த்து சுய நினைவுடன் தொழுகையை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அப்படியானால் களா தொழுகையே இல்லையா? இவ்வளவு நாளும் தொழாமல் 20 வருடங்களாகத் தேங்கிப் போனவருக்கு வழி வகை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ் திருக்குர்ஆன் 2:183 வசனத்தில் நோன்பைக் கடமையாக்குகின்றான். 185வது வசனத்தில் நோன்பு மாதம் வந்து, ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் ரமலான் மாதம் அல்லாத வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நோன்பை களாச் செய்யுமாறு கூறுகின்றான்.

இப்படி நோன்பில் களாச் செய்யுமாறு கூறிய இறைவனுக்கு தொழுகையில் சலுகையளிக்க மறந்து விடவில்லை; மறக்கவும் மாட்டான். நிச்சயமாக அவன் ஞானமிக்கவன்.

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

அல்குர்ஆன் 19:64

என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்.

அல்குர்ஆன் 20:52

தொழுகையில் அல்லாஹ் களாவை விரும்பவில்லை. அவ்வப்போது உடனே தொழ வேண்டும் என்று உறுதியாகக் கட்டளையிடுகின்றான்.  அல்லாஹ் தன் திருமறையில் 4:102 வசனத்தில், போர்க்களத்தில் எப்படித் தொழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர், தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறுகின்றான்.

தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்ற இடம் உண்டென்றால் அது போர்க்களம் தான்.  எதிரிகள் முஸ்லிம்களை அழித்து விடத் துடிக்கும் அந்தக் கட்டத்தில் கூட தொழுகையை விடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து களாத் தொழுகை என்பது இஸ்லாத்தில் அறவே அனுமதிக்கப் பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

எனவே தொழுகையைக் களாச் செய்வதற்கு வல்ல அல்லாஹ் எந்தவிதமான வழியையும் விட்டு வைக்கவில்லை. அந்தந்த நேரத்தில் உரிய தொழுகையைக் கண்டிப்பாகத் தொழுதாக வேண்டும்.

களாத் தொழுகை என்ற ஒன்று இருக்கின்றது என்று சொல்வதால் தான் மக்களிடம் அலட்சியம் ஏற்படுகின்றது. அதனால் தொழுகையை விட்டு விட்டு களாவாக, 17 ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழும் நிலைக்குச் சென்று விடுகின்றார்கள். சினிமாவுக்குச் செல்வதற்காகத் தொழுகையை விட்டு விட்டு, சினிமா முடிந்த பின்னர் மூன்று வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களும் உண்டு.

ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று விடுவது இறை நிராகரிப்புக்குக் கொண்டு செல்லும் பெரும் பாவம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் உணரத் தலைப்பட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த தொழுகையை நிலைநாட்டுவார்கள்.

ஒருவர் தனக்குத் தொழுகை கடமையான நாளிலிருந்து 20 வருடங்களாகத் தொழவில்லை என்றால் அதற்காக அவரது மனம் வருந்துகின்றது. அவர் 15 வயதிலிருந்து விட்ட தொழுகையை எல்லாம் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்குப் பரிகாரம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது தான். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக் காத்திருக்கின்றான்.

மனிதன் மாபெரும் தவறுகளைச் செய்திருந்தாலும், அவன் திருந்தி பாவ மன்னிப்புத் தேடுகின்ற போது அவனது கடந்த காலத் தவறுகளையெல்லாம் அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 19:59, 60

அல்லாஹ் இப்படி ஒரு விசாலத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் போது அதில் இந்த அறிஞர்கள் குறுக்கிட்டு, திருந்தி வருபவர்களிடம் களா எனும் பெரும் பாரத்தை ஏற்றி அவர்களை விரக்தியாளர்களாக, அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடையக் கூடியவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

சமுதாயத்தில் இன்று அதிகமான மக்கள் தொழாமல் இருக்கின்றனர். அவர்களுக்குக் கடந்த காலத் தொழுகைகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும். அப்படிப் பட்டவர்கள் திருந்தி வருகின்ற போது மத்ஹபுப் பாணியைக் கடைப்பிடித்தால் அவர்கள் காலா காலம் பள்ளிக்கு வரவே மாட்டார்கள். மார்க்கம் கூறும் இந்த உண்மையான வழியைக் காட்டினால் தான் அதிகமான மக்கள் தொழ முன்வருவார்கள்.

இப்படி ஒரு இலகுவான மார்க்கத்தில் மனந்திருந்த வரும் அடியார் மீது களா எனும் நெருக்கடியைத் திணித்து, எளிமையான இந்த மார்க்கத்தைக் கடின சித்தாந்தமாக இந்த மார்க்க அறிஞர்கள் மாற்றி விட்டனர்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

“இத்தனை நாளும் தொழாத மக்களே! கவலைப்படாதீர்கள்! உங்களை நான் மன்னிக்கக் காத்திருக்கிறேன்” என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான்.

எனவே இந்த எளிய மார்க்கத்தில், சுவனத்தின் வாயில்கள் திறந்திருக்கும் இந்த ரமளான் மாதத்தில் தொழுகையைத் தொடங்கி, அதன் மூலம் சுவனத்தில் நுழைய ஏகத்துவம் இதழ் உங்களை அழைக்கிறது.

———————————————————————————————————————————————–

முகத்திரையைக் கிழித்த முதல் பிறை

இது மேலப்பாளையத்தில் ஜாக் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி! இது தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ!

  1. ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கப்பட்டு வருகிறதாம்.
  2. அதன் படி புனித ரமளான் துவக்கம் புதன் கிழமையாம்.

இந்த உத்தம புத்திரர்கள், உண்மை சொரூபிகள் மாதா மாதம் பிறை பார்த்து வருகிறார்கள் என்ற கருத்தை இந்தச் சுவரொட்டி தெரிவிக்கின்றது.

“ஒரு மாதம் என்பது 29 இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1907

“பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப் படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1909

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பிறை பார்த்து நோன்பு வைப்பது நபிவழியாகும். எனவே, ரமளானின் முதல் நாளை அறிவதற்காக மாதா மாதம் பிறையைப் பார்த்து வந்தால் அதை நாமும் வரவேற்கலாம்.

ஆனால் இவர்களோ முழுக்க முழுக்க கணிப்பின் அடிப்படையில் நோன்பைத் தீர்மானிப்பவர்கள். அதன் அடிப்படையில் தான் உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத 12.09.07 அன்று முதல் பிறை என்று சுவரொட்டி ஒட்டியுள்ளார்கள்.

இவர்கள் மாதா மாதம் பிறை பார்த்து வருவது உண்மை என்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களது கணக்குப்படியே முதல் பிறை 12.09.07 என்று வைத்துக் கொண்டாலும் 10.10.07 அன்று (இவர்களது கணக்குப்படி பிறை 29) பிறை பார்த்து அன்று பிறை தென்பட்டால் அடுத்த நாள் 11.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்களோ 12.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்து 13.09.07 அன்றே கடிதம் அனுப்புகின்றார்கள்.

பிறையைப் பார்த்ததன் அடிப்படையில் ரமளான் மாதத்திற்கு முப்பது நாட்கள் தான் என்று 13.09.07 அன்றே எப்படிச் சொல்ல முடியும்?

அதாவது கணிப்பின் அடிப்படையில் 12.10.07 அன்று பெருநாள் என்று முடிவு செய்கிறார்கள். அப்படியானால், “ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்கப்பட்டு வருவதன் அடிப்படையில்” என்று போஸ்டர் ஒட்ட வேண்டிதன் அவசியம் என்ன? கணிப்பின் அடிப்படையில் இன்ன தேதியில் நோன்பு, இன்ன தேதியில் பெருநாள் என்று அறிவிக்க வேண்டியது தானே?

“பிறை பார்க்கப்பட்டு வருவதன்” அடிப்படையில் நோன்பை முடிவு செய்ததாகக் கூறியது பச்சைப் பொய் தானே?

மார்க்க விஷயத்தில், துளியும் இறையச்சம் இல்லாமல் இப்படித் துணிந்து பொய் சொல்பவர்கள் வேறு எதைத் தான் செய்யத் துணிய மாட்டார்கள்? என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“பிறை பார்க்கப்பட்டு வருவதன் அடிப்படையில்” என்று இவர்கள் மார்க்க விஷயத்தில் கூறியிருக்கும் பொய் ஏதோ, கவனக்குறைவாக நடைபெற்ற ஒன்றல்ல! கடந்த ஆண்டும் இதே பொய்யைத் துணிந்து கூறினார்கள்.

இவர்களது அகில உலக அமீர் (?) கமாலுத்தீன் மதனி 06.09.06 அன்று கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் “பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரமளான் மாதம் 22.09.06 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது, அதனால் 23.09.06 அன்று நோன்பு துவக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

22ம் தேதி ரமளான் துவக்கம் என்பதை 6ம் தேதியே கணிப்பின் அடிப்படையில் அறிவித்தார். ஆனால், “பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில்” என்ற பச்சைப் பொய்யை அந்தக் கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கடந்த அக்டோபர் 2006 ஏகத்துவம் இதழில், “கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு” என்ற கட்டுரையில் அமீரின் (?) கடிதத்தை அப்படியே வெளியிட்டு விளக்கியிருந்தோம்.

அமீரின் இந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரது அடிவருடிகளும் இன்று அதே பொய்யை போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். எனவே மார்க்க விஷயத்தில் பொய் கூறுவதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளனர்.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், நாம் பிறை பார்த்ததன் அடிப்படையில் அரஃபா நாள் நோன்பு நோற்கும் போது, “சவூதியில் எல்லோரும் பெருநாள் கொண்டாடும் போது இவர்கள் அரஃபா நோன்பு நோற்கிறார்கள்” என்று நம்மைப் பார்த்து கேலி செய்து வந்தனர்.

ஆனால் இவர்களது குழப்பத்தால் இன்று சவூதியை விட ஒருநாள் முந்தி நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை நாளை முதல் பிறை என்று அறிவித்துள்ளனர்.

இப்போது இவர்களுக்கும், சவூதிக்கும் ஒரு நாள் வித்தியாசம் வந்துள்ளது. எனவே இவர்கள் இதுவரை கூறி வந்த அரஃபா நாள் வாதம் வெறும் சந்தர்ப்ப வாதம் தான் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

இவர்களது இந்தச் சந்தர்ப்பவாதம், இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரபில் எடுபடாமல் போனது. அங்கு இவர்களது சர்வதேசப் பிறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன்… என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தனது சொந்த ஊரிலேயே ஒரு பிறையைக் கொண்டு வர முடியாதவர், உலகத்துக்கெல்லாம் ஒரே பிறையைக் கொண்டு வரப் போகிறாராம். சர்வதேசத்திலும் பிறையில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறாராம்.

பிறை மூலம் ஊர் ஊராகக் கூறு போடக் கிளம்பியிருக்கும் இந்தக் குழப்பவாதிகளை ஏகத்துவவாதிகள் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.