ஏகத்துவம் – நவம்பர் 2019

பருவ மழையும் பரவும் நோய்களும்

‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். வானிலை ஆய்வு அறிவித்தபடி அக்டோபர் 17 அன்று முதல் மழை துவங்கி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நமது ஜமாஅத் மழைத்தொழுகை நடத்தியதை நாம் அறிவோம். அல்லாஹ்வின் அருளால் வறட்சியைப் போக்கும் விதமாக, பருவமழைக் காலம் நமக்கு முன்னால் வந்திருக்கின்றது.

ஒவ்வொரு பருவமழையின் போதும் ‘சென்ற ஆண்டு பெய்த பருவமழையைக் காட்டிலும்  இந்த ஆண்டு பெய்த மழையளவு சதவிகிதம் குறைவு’ என வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரம் தருவதைப் பார்க்கிறோம். அணைகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், நீர் நிலைகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீர் சேமிப்பு  அடுத்தப் பருவமழைக் காலம் வரை போதாது என்பதுதான் அதன் விளக்கம்.

இப்படி, பெய்யும் மழை பற்றாப்படியாகி விடுகின்றது; அல்லது அளவுக்கதிமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அது பேரிடராக மாறிவிடுகின்றது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்து விடுகின்றன. பயிர்கள் சேதமாகி விவசாயம் பாழாகி விடுகின்றது. மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று நாட்டின் கட்டமைப்பு நிலைகுலைந்து போய்விடுகின்றது.  பல்லாயிரம் கோடி அளவில் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு விடுகின்றது. அரசாங்கமே மீண்டு எழ முடியாத அளவுக்கு அதன் பாதிப்பு அமைந்து விடுகின்றது.

பிரதம அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்தபடி கருடப் பார்வையாக ஒரு கருணைப் பார்வை பார்த்து விட்டு, கேட்ட நிவாரணத்தைக் கொடுக்காமல் ஒரு சில கோடிகளை பிச்சை போடுவார். அதிலும் தனது கட்சி ஆளாத மாநிலம் என்றால் போடுகின்ற பிச்சையும்  குறைந்து விடும்.  அதன் பின், பாதிக்கப்பட்ட மாநிலத்தை மறந்து போய் விடுவார். அரசாங்கத்தின் நிலை இதுவென்றால் தனிமனித வாழ்க்கையின் பாதிப்பை நாம் எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதுவெல்லாம் பெருவெள்ளத்தினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இதனால் நபி (ஸல்) அவர்கள் மழையைக் காணும் போது,

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

(அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ)

யா அல்லாஹ் (இதை) பயனுள்ள மழையாக  ஆக்குவாயா! என்று பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1132

பற்றாப்படி இல்லாமலும், அளவுக்கு மிஞ்சி அழிவு ஏற்படாமலும்  மழை பொழிய  நம்பிக்கையுடன் நாம் பிரார்த்திக்கும் போது இந்த மழை, பயனளிக்கும் மழையாக அமைந்திட அல்லாஹ் அருள்பாலிப்பான்.

இந்த மழை அழிவை ஏற்படுத்தினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

(அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா)

யா அல்லாஹ்! எங்கள் சுற்றுப் புறங்களில் (பொழியச் செய்வாயாக!) எங்களுக்கு எதிரானதாக (இம்மழையை) ஆக்கிவிடாதே!’  என்று பிரார்த்திப்பார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1015

மழைக் காலத்தின் போது  நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த துஆக்களை நாமும் செய்யத் தவறக்கூடாது.

மழைக்காலம் வந்ததும் பல்வேறு தொற்று நோய்கள் படை எடுத்து வந்து விடுகின்றன.  அவற்றில் காய்ச்சல்களுக்கே ஒரு பெரிய  பட்டியல் உண்டு. டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், சிக் குன் குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. காய்ச்சல்கள் அல்லாமல் வாந்தி, பேதி, காலரா, கண் நோய், மஞ்சள் காமாலை என்று இதர நோய்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. இதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசும் தனிநபர்களும் எடுக்க வேண்டும்.  (இது குறித்துத் தனியாக விளக்கப்பட்டுள்ளது.)

மழைக்காலங்களில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் நீர் காரணமாக அவை கொசு வளர்க்கும் பண்ணைகளாகி விட்டன என்று அபராதம் விதிக்கும் அரசாங்கம், சாலைகளில் வடியாமல் வழியாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இத்தனையும் தாண்டி நாம் இந்த நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இது அல்லாஹ் ஒருவனால் தான் முடியும்.

உங்களை இதிலிருந்தும், மற்ற எல்லாத் துன்பங்களிலிருந்தும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான். பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:64

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்ஆஃபியத்த ஃபித்துன்யா வல்ஆகிரா

(யா அல்லாஹ்! இவ்வுலகிலும் மறுமையிலும் எனக்கு சுகத்தைத் தருவாயாக!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்னத் அஹ்மத் 4554 (சுருக்கம்)

اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா”

(இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக் கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்)

என்று ஒருவர் உறங்கச் செல்லும்போது கூறுமாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “இதைத் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்களை விடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்

நூல்: முஸ்லிம் 5253

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 5017

இதுபோல் நாமும் படுக்கைக்குச் செல்கின்ற போது, குல்ஹுவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்துடன் சேர்த்து ஃபலக், நாஸ் ஆகிய அத்தியாயங்களையும் ஓதிக் கொள்ள வேண்டும். உண்மையில் இவ்விரு அத்தியாயங்களும், இறைவனின் படைப்புகளால் ஏற்படுகின்ற தீங்குகளை விட்டும் அவனிடமே பாதுகாப்பு இருக்கின்றது என்று தெளிவுபடத் தெரிவிக்கின்றன.

இந்த பருவமழைக் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வருமுன் காக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி துஆச் செய்தல் போன்ற காரியங்களை நாம் கடைப்பிடிப்போமாக! இத்தனைக்குப் பிறகும் ஒருக்கால் இதுபோன்ற நோய்களுக்கு நாம் ஆட்பட்டுவிட்டோம் என்றால் அவனே முழு சுகத்தையும் நிவாரணத்தையும் தருவதற்குத் தனி ஆற்றல் பெற்றவன்.

நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

அல்குர்ஆன் 26:80

அல்லாஹ்விடத்தில் மேற்கண்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திப்போமாக! அதைத் தாண்டி நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது அவனது சோதனை என்று பொறுத்துக் கொண்டு மறுமையில் அதற்குரிய பகரத்தைப் பெறுவோமாக!

பரவும் நோய்களும் தடுக்கும் வழிமுறைகளும்

மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களும் காலரா, மஞ்சள் காமாலை என்று இதர நோய்களும் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் மூன்று விதங்களில் பரவுகின்றன.

1) Air borne diseasesகாற்றின் மூலம் பரவும் நோய்:

ஃப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சல் தான் பன்றிக் காய்ச்சலாகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அல்லது மூக்கை சிந்தினாலோ போதும். காற்றின் மூலம் அடுத்தவருக்குத் தொற்றி விடும்.

2) Water borne diseases  – குடிநீர், உணவு போன்ற திரவம் மற்றும் திடப்பொருட்களால் பரவும் நோய்கள்

மழை நேரத்தில்  குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் குடி தண்ணீர் மாசுபட்டு விடுகின்றது.  அது போல் உணவும் மாசுபட்டு விடுகின்றது. அசுத்தம் நிறைந்த இது போன்ற நீர், உணவுகளை உட்கொள்வதால்  டைஃபாய்ட் காய்ச்சல், மஞ்சல் காமாலை, வாந்தி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

3) Vector borne diseases – கொசு, ஈ போன்ற முகவர்கள் மூலம் பரவும் நோய்கள்

கொசுக்கள், ஈக்கள், எலிகள் மூலமும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் மூலமும் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்கள் பரவுகின்றன.

கொசுக்களைக் கொல்லும் மீன்கள்:

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் இந்த அளவுக்கு அதிகமாகக் கொசுக்கள் இல்லை. காரணம், ஏரிகள், குளங்கள் நிறைய இருந்தன. அவற்றில் மீன்கள் வளர்ந்தன. நீரில் மிதக்கும் கொசுக்களின் ‘லார்வா’க்கள், மீன் குஞ்சுகளுக்கு உணவாகின. இதனால் கோடிக்கணக்கான கொசுக்கள் இயற்கையாகவே அழிக்கப்பட்டன.

இப்போதோ ஏரி, குளங்கள் இருந்த நீர்நிலைகளைக் குடியிருப்புகளாக மாற்றி விட்டோம். இயற்கை வழியில் கொசுக்கள் அழிவதை தடுத்து விட்டோம். நமது அழிவுக்கு நாமே காரணமாகி விட்டோம். இன்றைக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை இன்னும் பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அபினிஸ்’ எனும் மீன்களை வளர்த்து, கொசுக்களை ஒழிக்கிறார்கள். இந்த முயற்சி இப்போது நமக்கும் தேவை.

தடுக்க என்ன வழி?

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைத் தொங்க விடலாம். கொசுவர்த்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே, கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசுதல் போன்றவையும் பலன் கொடுக்கும். எனினும் இவற்றால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்

வீட்டைச் சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ அல்லது ‘மாலத்தியான்’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டா மெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர் நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம்.

மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ புகைத்தால் கொசுக்கள் இறக்கும். குடிநீர்த் தொட்டிகளில் ‘டெமிபாஸ்’ மருந்தைத் தெளிக்க வேண்டும்.

தண்ணீரை, மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றி வைப்பது பாதுகாப்பானது. வீட்டிலுள்ள பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் மூடிவிட வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும்.

தண்ணீர்த் தொட்டிகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், குளியலறைத் தொட்டிகள், பால்கனி, ஜன்னல்களின் ‘சன்ஷேடு’, ஏர்கூலர், பூந்தொட்டிகள், அழகுஜாடிகள், உடைந்த ஓடுகள், தகர டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள், பேப்பர் டம்ளர்கள், ஆட்டு உரல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுவலை கட்டுதல்:

கொசுவலை கட்டுதல் மூலம் கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம். படுக்கப்போகும் போது கொசுவலை கட்டினால் முழுப்பலன் கிடைக்காது. இருட்ட ஆரம்பிக்கும் போது தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் ஆகியவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கே படுக்கை அறையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அல்லது அப்போதே கதவு, ஜன்னல்களை மூடி விட வேண்டும். எட்டு மணிக்குப் பிறகு, ஜன்னல்களைத் திறந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 20 கோடிக்கும் அதிகமான மக்களை மலேரியா தாக்குகிறது. 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனால் உயிரிழக்கின்றனர். மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களாலேயே ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், டெங்கு கொசு பகலில் கடிக்கும். மலேரியா கொசு இரவில் கடிக்கும்.

நம்மால் முடிந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதுடன் படைத்த இறைவனிடம் பாதுகாவல் தேடவேண்டும். அவனது பாதுகாப்பு இல்லையென்றால் இவற்றிலிருந்து எந்த மனிதனும் தப்பிக்க இயலாது.

—————————————————————————————————————————————————————————————————————

ஆய்வுக் கட்டுரை

குர்பானிக்குரிய நாட்கள் எவை?

கடமையாக்கப்பட்ட ஹஜ் மற்றும் கொண்டாட்டத்திற்குரிய தினமான ஹஜ் பெருநாள் ஆகியவற்றில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் குர்பானி கொடுப்பது முக்கியமான ஒன்றாகும்.

முஸ்லிம்கள் காலம் காலமாக துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்றும், அதைத் தொடர்ந்து பிறை 11, 12, 13 ஆகிய தினங்களிலும் குர்பானி கொடுத்து வருகின்றனர்.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இதுவே சரியானது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

துல்ஹஜ் மாதத்தின் பிறை 11, 12, 13 ஆகிய தினங்கள் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ என்று அழைக்கப்படும்.

இந்நிலையில் சிலர், ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும்; பிறை 11, 12, 13 ஆகிய (தஷ்ரீக்) தினங்களில் குர்பானி கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர். தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன என்பது அவர்களின் வாதமாகும்.

அரபி இணைய தளங்களில் உள்ள செய்திகளைப் படித்து விட்டு இவ்வாறு கூறுகின்றனர்.

துல்ஹஜ் பிறை 10 அன்று குர்பானி கொடுப்பதைப் பற்றி யாரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.

அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுப்பதைப் பற்றியே இவர்கள் சர்ச்சை செய்வதால் அதை ஆய்வு செய்வோம்.

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையே. எனினும் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளன.

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக வந்துள்ள செய்திகளையும் அவை எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் முதலில் விரிவாகக் காண்போம்.

அதன் பின்னர் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்பதைத் தக்க சான்றுகளுடன்  நிறுவுவோம்.

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது பற்றிய ஹதீஸ்களின் நிலை

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் மூன்று / நான்கு நபித்தோழர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. ஜுபைர் பின் முத்இம் (ரலி)
  2. அபூஸயீத்
  3. அபூஹுரைரா (ரலி)
  4. பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர்

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிப்பு

“தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مسند أحمد بن حنبل (4/ 82)

16797 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو المغيرة قال ثنا سعيد بن عبد العزيز قال حدثني سليمان بن موسى عن جبير بن مطعم عن النبي صلى الله عليه و سلم قال : كل عرفات موقف وارفعوا عن بطن عرنة وكل مزدلفة موقف وارفعوا عن محسر وكل فجاج منى منحر وكل أيام التشريق ذبح

நபி ஸல் அவர்கள் கூறியதாக ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிக்கக் கூடிய அறிவிப்பு இப்னு ஹிப்பான் 3854, அஹ்மத் 16798, தாரகுத்னீ 4756 – 4758, முஸ்னதுல் பஸ்ஸார் 3444, அல்முஃஜமுல் கபீர் 1562, மஃரிபதுஸ் ஸுனன் வல்ஆஸார் 19114, பைஹகீயின் ஸுனனுஸ் ஸகீர் 1832, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227 உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இதன் அனைத்து அறிவிப்புகளிலும் சுலைமான் பின் மூஸா என்பவர் இடம் பெறுகிறார்.  இவர் ஜுபைர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவும் வேறு சில அறிவிப்பாளர்கள் வழியாகவும் அறிவிக்கின்றார்.

சுலைமான் பின் மூஸா, ஜுபைர் (ரலி)இடமிருந்து அறிவிக்கும் நேரடி அறிவிப்புகள்

சுலைமான் பின் மூஸா, ஜுபைர் பின் முத்இம் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் நேரடி அறிவிப்புகள் யாவும் தொடர்பு அறுந்த செய்திகளாகும்.

இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

(பத்ஹுல் பாரி, பாகம் 10, பக்கம் 8)

فتح الباري – ابن حجر (10/ 8(

 وفي كل أيام التشريق ذبح أخرجه أحمد لكن في سنده انقطاع

இந்த சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரில்லை. இதைப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுலைமான் பின் மூஸாவின் அறிவிப்பை குறிப்பிட்டு இது தொடர்பு அறுந்த செய்தியாகும். அவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) காலத்தில் வாழ்ந்தவரில்லை என்று இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்.

(பார்க்க: இப்னு கஸீர், பாகம் 1, பக்கம் 555)

تفسير ابن كثير (1/ 555(

وهذا أيضا منقطع، فإن سليمان بن موسى هذا -وهو الأشدق -لم يدرك جُبَير بن مطعم.

பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227, அஹ்மத் 16798 உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) இடமிருந்து அறிவிப்பதாகவே உள்ளது.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அவரிடமிருந்து செய்திகளை அறிவிப்பது அறவே சாத்தியமற்றதாகும்.

தொடர்பு அறுந்த செய்திகளை ஆதாரமாகக் கொள்ள இயலாது.

சுலைமான் பின் மூஸா, பிறர் மூலமாக அறிவிக்கும் அறிவிப்புகள்

சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைரிடமிருந்து நேரடியாக அறிவிக்காமல்  வேறு  சிலர்  வழியாக அறிவிக்கும் செய்திகளும் உள்ளன. அவைகளும் வெவ்வேறு காரணங்களால் பலவீனமானவை ஆகும்.

அவற்றை விரிவாகக் காண்போம்.

அப்துர் ரஹ்மான் பின் அபீஹுஸைன்

இப்னு ஹிப்பான் 3854, பைஹகீயின் ஸுனனுஸ் ஸகீர் 1832, மஃரிபதுஸ் ஸுனன் வல்ஆஸார் 19114, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 19241, முஸ்னதுல் பஸ்ஸார் 3444 உள்ளிட்ட நூல்களில் இடம்பெறும் அறிவிப்புகளில் சுலைமான் பின் மூஸாவுக்கும் ஜுபைருக்கும் இடையில் அப்துர் ரஹ்மான் பின் அபீஹுஸைன் என்பவர் இடம்பெறுகிறார்.

صحيح ابن حبان مع حواشي الأرناؤوط كاملة (9/ 166(

 3854 أخبرنا أحمد بن الحسن بن عبد الجبار الصوفي ببغداد، حدثنا أبو نصر التمار عبد الملك بن عبد العزيز القشيري في شوال سنة سبع وعشرين ومئتين، حدثنا سعيد بن عبد العزيز، عن سليمان بن موسى، عن عبد الرحمن بن أبي حسين، عن جبير بن مطعم قال: قال رسول الله صلى الله عليه وسلم: “كل عرفات موقف، وارفعوا عن عرنة، وكل مزدلفة موقف، وارفعوا عن محسر، فكل فجاج منى منحر، وفي كل أيام التشريق ذبح”

இந்த அறிவிப்புகளை பொறுத்தளவில் ஜுபைர் பின் முத்இம் (ரலி)  அவர்களிடமிருந்து அறிவிக்கின்ற அப்துர் ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பவரது நம்பகத்தன்மை ஹதீஸ் கலை வல்லுனர்களால் உறுதி செய்யப்படவில்லை.

இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கும் வழக்கமுடையவர் ஆவார்.

எனவே பிற அறிஞர்கள் அவரது நம்பகத்தன்மை குறித்து எதுவும் கூறாத காரணத்தால் அப்துர் ரஹ்மானின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றாகிறது.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவரின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானவை என்ற தரத்தை அடையாது. அத்தகையவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படாது.

எனவே அப்துர் ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பவர் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்புகள் யாவும் ஏற்க முடியாத, பலவீனமான செய்திகளாகி விடுகிறது.

நாபிஉ பின் ஜுபைர்

இன்னும் சில நூல்களில் சுலைமான் பின் மூஸா அவர்களுக்கும் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களுக்கும் இடையில் நாபிஉ என்பார் இடம்பெறுகிறார். இவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) என்பாரின் மகன் ஆவார்.

நாபிஉவின் அறிவிப்பு தாரகுத்னீ 4756, அஸ்ஸுனனுஸ் ஸகீர் 1833, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227, அல்முஃஜமுல் கபீர் 1562 உள்ளிட்ட நூல்களில் இடம் பெறுகிறது.

سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (5/ 511(

4756- حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ الْحَضْرَمِيُّ ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ التَّنُوخِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ

இந்த நாபிஉ அவர்களிடம் எந்தக் குறையும் பிரச்சனையும் இல்லை என்றிருந்தாலும் இவர் மூலமாக அறிவிக்கப்படும் அனைத்து அறிவிப்புகளிலும் சுவைத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் பலவீனமானவர்  ஆவார்.

இமாம் அஹ்மத், அபூஹாத்திம், நஸாயீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம் 2, பக்கம் 251

எனவே இக்காரணத்தால் இந்த அறிவிப்புகளும் பலவீனமடைகிறது.

அம்ர் பின் தீனார்

பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 19243, தாரகுத்னீ 4758 ஆகிய அறிவிப்புகளில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) யிடமிருந்து அம்ர் பின் தீனார் என்பவர் அறிவிக்கும் வகையில் உள்ளது.

السنن الكبرى للبيهقي (9/ 498(

 19243وَرُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ سُلَيْمَانَ، كَمَا أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ، أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، ثنا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَشَّابُ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ثنا أَبُو مُعَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ عَمْرَو بْنَ دِينَارٍ حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “ كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “

இந்த அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். ஏனெனில் இதில் அஹ்மத் பின் ஈஸா என்பவர் இடம் பெறுகிறார்.

இவர் ஹதீஸ்துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

ميزان الاعتدال (1/ 126(

 508 أحمد بن عيسى التنيسى الخشاب.

قال ابن عدى: له مناكيرஞ்وقال الدارقطني: ليس بالقوى وقال ابن طاهر: كذاب، يضع الحديث

இவரிடத்தில் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் இப்னு அதீ அவர்களும் இவர் வலுவானர் அல்ல என்று தாரகுத்னீ அவர்களும் இவர் பொய்யர், செய்திகளை இட்டுக்கட்டுபவர் என்று இப்னு தாஹிர் அவர்களும் குறைகூறியுள்ளனர்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 1, பக்கம்: 126.

எனவே இந்தச் செய்தியும் ஏற்புடையதல்ல என்று தெளிவாகிறது.

இதுவரை நாம் பார்த்தவற்றின் சுருக்கம்:

சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவிப்பது தொடர்பு அறுந்த செய்தி. ஏனெனில் அவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களின் காலத்தில் இருந்தவரல்ல.

சுலைமான் பின் மூஸாவிற்கும் ஜுபைர் பின் முத்இம் (ரலி) க்கும் இடையில் சில அறிவிப்புகளில் அப்துர் ரஹ்மான் வருகிறார். அப்துர் ரஹ்மானின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை

சில அறிவிப்புகளில் நாஃபிஉ வருகிறார். நாபிஉவின் அறிவிப்பில் பலவீனமான சுவைத் இடம்பெறுகிறார்

சில அறிப்புகளில் அம்ர் பின் தீனார் வருகிறார். அம்ர் பின் தீனாரின் அறிவிப்பில் பலவீனமான அஹ்மத் பின் ஈஸா இடம்பெறுகிறார்.

ஆக, ஜுபைர் பின் முத்இம் (ரலி) மூலம் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் ஏதேனும் விதத்தில் பலவீனமானவையாகவே உள்ளன.

அடுத்து அபூஸயீத், அபூஹுரைரா (ரலி) ஆகியோரின் அறிவிப்புகளைப் பார்ப்போம்.

அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்

தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்திலும் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் நபியவர்கள் கூறியதாக  அபூஸயீத் (ரலி) – அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி பைஹகீயின் ஸுனனுல் குப்ராவில் பதிவாகியுள்ளது.

و السنن الكبرى للبيهقي (9/ 499(

19245 وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، مَرَّةً عَنْ أَبِي سَعِيدٍ وَمَرَّةً عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ “. أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ , ثنا دُحَيْمٌ , ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثنا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى , فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي سَعِيدٍ.

தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: ஸுனனுல் குப்ரா 19245

இந்த செய்தியை அறிவிக்கும் ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் அபூஹுரைரா (ரலி) யிடமிருந்தும் இதை கேட்டுள்ளார். அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்தும் கேட்டுள்ளார். எனவே தான் இரண்டு நபித்தோழர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதபீ என்பார் இடம்பெறுகிறார். இவர் பலவீமானவர் ஆவார். எனவே இவரது செய்தியை ஏற்க முடியாது.

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே அச்செய்தியின் தொடர்ச்சியில் இவர் பலவீனமானவர், இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

السنن الكبرى للبيهقي (9/ 499(

 19246 وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ، أنبأ أَبُو أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ، ثنا دُحَيْمٌ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الصَّدَفِيِّ، فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ. قَالَ أَبُو أَحْمَدَ: وَهَذَا سَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَسَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ، جَمِيعًا غَيْرُ مَحْفُوظَيْنِ لَا يَرْوِيهُمَا غَيْرُ الصَّدَفِيِّ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ

முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதபீ என்பவர் இடம் பெறும் இந்த அறிவிப்பை ஏற்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்,  இவர் ஷாம் பிரதேசத்தில் அறிவித்தவற்றை ஏற்கலாம். ரய்யி எனும் பகுதியில் அறிவித்தவையே குளறுபடியானவை என்று பிரித்துக் கூறுகின்றனர்.

இந்தச் செய்தி ஷாம் பிரதேசத்தில் அறிவித்தாகும். எனவே இதை ஏற்கலாம் என்கின்றனர். இது சரியான கருத்தல்ல.

இவரைப் பற்றி வந்துள்ள அனைத்து விமர்சனத்தையும் ஆராய்ந்தால் இவர் மொத்தமாகவே பலவீனமானவர் என்ற முடிவே சரி என்பதை அறியலாம்.

இவரைப் பற்றிய அறிஞர்களின் விமர்சனங்களைக் காண்போம்.

அறிஞர்களின் விமர்சனங்கள்

الجرح والتعديل (8/ 384(

نا عبد الرحمن قال سألت ابا زرعة عن معاوية بن يحيى الصدفى فقال: ليس بقوى. احاديثه كلها مقلوبة، ما حدث (1) بالرى، والذى حدث بالشام احسن حالا.

முஆவியா பின் யஹ்யா வலுவானவர் அல்ல. ரய்யி பகுதியில் இவரிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் புரட்டப்பட்டவையாகும். ஷாமில் அறிவிக்கப்பட்டவை நல்ல நிலையில் உள்ளவையாகும் என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.

நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்,

பாகம்: 8, பக்கம்: 384

ميزان الاعتدال (4/ 138(

 8635معاوية بن يحيى [ ت، ق ]، أبو روح الصدفى الدمشقي.

ولى نظر (2) الرى للمهدى. وحدث عن مكحول، والزهرى، وطائفة. وعنه محمد بن شعيب، والهقل، وإسحاق بن سليمان الرازي، وآخرون. قال البخاري: روى عن الزهري أحاديث مستقيمة (3)، كأنها من كتاب، فروى عنه عيسى بن يونس، وإسحاق الرازي أحاديث مناكير، كأنها من حفظه. وقال ابن معين: ليس بشئ [ وقال أبو زرعة ] (4): أحاديثه كلها مقلوبة. وقال الدارقطني وغيره: ضعيف. وقال ابن حبان: كان يسرق الكتب ويحدث بها، ثم تغير حفظه.

இவர் ஸுஹ்ரியிடமிருந்து சரியான செய்திகளை அறிவித்துள்ளார். அவை புத்தகத்திலிருந்து அறிவிக்கப்பட்டவை போன்றுள்ளது. ஈஸா பின் யூனுஸ், இஸ்ஹாகுர் ராஸி ஆகியோர் இவரிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார்கள். அவை அவரது மனனத்திலிருந்து அறிவிக்கப்பட்டவை போன்றாகும்.

இவ்வாறு இமாம் புகாரி அவர்கள் விமர்சித்துள்ளதாக தஹபீ கூறுகிறார்.

இவர் ஒரு பொருட்டாகக் கருதப்படமாட்டார் என்று இப்னு மயீன் அவர்களும், இவரது மொத்த ஹதீஸ்களும் புரட்டப்பட்டவையாகும் என்று அபூஹாத்திம் அவர்களும், இமாம் தாரகுத்னீ மற்றும் ஏனையோர் இவரை பலவீனமானவர் என்றும், இவர் புத்தகங்களைத் திருடி அதிலிருந்து அறிவிப்பவராக இருந்தார். மேலும் இவரது நினைவாற்றல் குழம்பி விட்டது என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

இந்தச் செய்திகளை இமாம் தஹபீ கூறுகிறார்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 4, பக்கம்: 138

الضعفاء للبخاري – مكتبة ابن عباس (ص: 127(

 366 معاوية بن يحيى الصدفي: دمشقي، وكان على بيت المال بالري، عن الزهري، وروى عنه عيسى بن يونس، وإسحاق بن سليمان أحاديث مناكير، كأنها من حفظه، اشترى كتابا من السوق للزهري، فجعل يرويه عن الزهري.

இமாம் புகாரி அவர்கள் தனது அல்லுஅபாஉ – பலவீனமானவர்கள் – எனும் புத்தகத்தில் இவரைப் பட்டியலிட்டுள்ளார். கடைவீதியில் (விற்கப்படும்) ஸுஹ்ரியின் புத்தகத்தை விலைக்கு வாங்கி ஸுஹ்ரியிடமிருந்து அறிவிப்பவராக ஆக்கிக் கொண்டார் என்ற விமர்சனத்தையும் இவர் மீது வைத்துள்ளார்கள்.

நூல்: அல்லுஅபாஉ பாகம்: 1, பக்கம்: 127

الضعفاء والمتروكين لابن الجوزي (3/ 128(

 3364 معاوية بن يحيى أبو يحيى الصدفي كان على بيت المال يروي عن الزهري وسعيد بن أبي أيوب وخالد الحذاء وروى عنه الهقل بن زياد قال يحيى ليس بشيء وقال مرة هالك ليس بشيء وقال ابن المديني والنسائي والدراقطني ضعيف وقال السعدي ذاهب الحديث

இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நூலில் இவரைப் பற்றி கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்.

இப்னு மயீன் அவர்கள் இவரை நாசக்காரர், இவர் பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று விமர்சித்துள்ளார்.

ஸஃதீ என்பவர் இவரை ஹதீஸ் துறையில் தகுதியற்றவர் என்றும்

அலீ இப்னுல் மதீனீ, நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளனர்.

நூல்: அல்லுஅபாஉ வல்மத்ரூகீன்

பாகம்: 3, பக்கம்: 128

இதுவல்லாத இன்னும் பல அறிஞர்களும் இவரை பலவீனமானவர் என்ற பட்டியலிலே கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த விமர்சனங்களிலிருந்து பெறப்படும் கருத்து:

முஆவியா பின் யஹ்யா மீது இரண்டு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. அவரது நினைவாற்றல் குழம்பி விட்டது
  2. புத்தகங்களை விலைக்கு வாங்கியும் திருடியும் அதிலிருந்து அறிவிப்பவர்.

இதில் இறுதிக்காலத்தில் நினைவாற்றல் குழம்பி விட்டார் என்பது மட்டுமே இவர் மீதான விமர்சனம் என்றிருந்தால் அவரது செய்திகளைப் பிரித்து வகைப்படுத்தலாம்.

ஆனால் இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் புகாரி ஆகியோரின் விமர்சனம் அதிக கவனத்திற்குரியதாகும்.

பிறரது புத்தகங்களைத் திருடி அதிலிருந்து அறிவிக்கும் வழக்கமுடையவராக இவர் இருந்திருக்கிறார் என்பது இவர் மீதான பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

பொதுவாக ஒருவரது புத்தகத்திலிருந்து அறிவிப்பதாக இருந்தால் அதற்கென்று ஒரு விதி உண்டு.

அப்புத்தகத்தில் உள்ளவை தமது அறிவிப்புகள் தாம் என்பதைக் குறிப்பிட்ட ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற பிறகே அதிலிருந்து அறிவிக்கும் உரிமையை ஒருவர் பெறுவார்.

ஆனால் இந்த முஆவியா என்பவர் இவ்வாறான ஒப்புதல் பெறாமல் மற்றவரின் புத்தகங்களில் உள்ளதைத் தாம் நேரடியாக கேட்டது போல அறிவிப்பார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டு.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இந்தச் செய்தியை முஆவியா பின் யஹ்யா ஸுஹ்ரியிடமிருந்து அறிவிக்கின்றார்.

ஸுஹ்ரியின் ஹதீஸ்கள் என்று கடைவீதியில் விற்கப்படும் செய்தித் தொகுப்புகளை விலைக்கு வாங்கி அதிலுள்ளவற்றை ஸுஹ்ரியிடமிருந்து நேரடியாகக் கேட்டது போன்று அறிவிப்பார் என்று புகாரி இமாம் கூறியுள்ளது கவனித்தக்கது.

இவ்வாறான விமர்சனம் வைக்கப்பட்ட ஒருவரின் எந்த அறிவிப்பையும் ஒரு போதும் ஏற்க இயலாது.

அதனால் தான் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு, பலவீனமானவர் என்று கூறுகிறார்.

تقريب التهذيب : ابن حجر (2/ 538)

6772- معاوية ابن يحيى الصدفي أبو روح الدمشقي سكن الري ضعيف وما حدث بالشام أحسن مما حدث بالري من السابعة ت ق

பலவீனமானவர் என்று கூறிய பிறகே ரய்யி பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட ஷாம் பகுதியில் அறிவிக்கப்பட்டவை (சற்று சிறந்ததாக இருப்பதால்) நல்லவை என்று ஒப்பீடு செய்து கருத்துக் கூறுகிறார்.

பார்க்க: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 538

கடைவீதியில் வாங்கிய புத்தகங்களிலிருந்து அறிவிப்பவர் என்றாகி விட்ட போது அது ஷாமில் அறிவித்தாலும் ரய்யி பகுதியில் அறிவித்தாலும் மறுக்கப்பட வேண்டியதே என்பதில் சந்தேகமில்லை.

எனவே இதன் படி தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்திலும் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் நபியவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தியும் பலவீனமான செய்தியாகும்.

பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழரின் அறிவிப்பு

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தெரிவிப்பதாகப் பின்வரும் செய்தியும் குறிப்பிடப்படுகிறது.

سنن البيهقي الكبرى (9/ 296(

 19026 – وأخبرنا علي بن أحمد بن عبدان أنبأ أحمد بن عبيد ثنا الحارث بن أبي أسامة ثنا روح بن عبادة عن بن جريج أخبرني عمرو بن دينار أن نافع بن جبير بن مطعم رضي الله عنه أخبره عن رجل من أصحاب النبي صلى الله عليه و سلم قد سماه نافع فنسيته أن النبي صلى الله عليه و سلم قال لرجل من غفار : قم فأذن إنه لا يدخل الجنة إلا مؤمن وأنها أيام أكل وشرب أيام منى زاد سليمان بن موسى وذبح يقول أيام ذبح بن جريج يقوله

“இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மினாவுடைய நாட்கள் (பிறை 11, 12, 13) உண்ணுவது மற்றும் பருகுவதற்குரிய நாட்களாகும். இதனை எழுந்து அறிவிப்பு செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கிபார் குலத்தைச் சார்ந்த மனிதரிடம் கூறினார்கள்.

சுலைமான் என்ற அறிவிப்பாளர் மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரிய நாட்களுமாகும் என்ற வார்த்தையைக் கூடுதலாக அறிவித்துள்ளார். இதை இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.

நூல்: பைஹகீ 19026

இச்செய்தில் மினாவுடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரியவை என்பது தான் நபி கூறியதாக உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் என்பவர் மினாவுடைய நாட்கள் குர்பானிக்குரியவை என்று சுலைமான் கூடுதலாக கூறியதாக அறிவிக்கின்றார். அதற்குரிய முழுமையான அறிவிப்பாளர் வரிசையை இப்னு ஜுரைஜ் குறிப்பிடவில்லை.

எனவே மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரியதாகும் என்ற வார்த்தை நபியின் வார்த்தையாகக் கருதப்பட மாட்டாது.

துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நேரடியாகக் கூறிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எத்தனை நாட்கள் குர்பானி கொடுக்கலாம்?

அப்படியானால் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கக் கூடாதா? பெருநாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம்.

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பான செய்திகள் அனைத்தும் பலவீனம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும். மற்ற (தஷ்ரீக்) நாட்களில் குர்பானி கொடுக்க கூடாது என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்றாகும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஹஜ் பெருநாள் ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கே எதிரான கருத்தாகும்.

இந்தக் கருத்து எப்படி திருக்குர்ஆனுக்கு எதிரானது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆன் வசனம் கூறுவதென்ன?

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) )الحج: 27، 28(

மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும். அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:27, 28

மேற்கண்ட வசனம் ஹஜ்ஜைப் பற்றிப் பேசுகிறது. ஹஜ்ஜின் போது, ‘அறியப்பட்ட நாட்களில் அவர்கள் குர்பானி கொடுப்பார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பது கால்நடைகளை அறுப்பதைப் பற்றி குறிக்கும் சொல்லாடலாகும்.

குர்பானிக்குரியவை அறியப்பட்ட நாட்கள் என்று இறைவன் பன்மையாகக் கூறிய பின் ஒரு நாள் மட்டும் தான் குர்பானி கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் குர்ஆனுக்கு எதிராகச் சொல்கிறார்கள்.

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக, நேரடியாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன என்றாலும் அதன் மூலம் குர்பானிக்குரிய நாட்கள் ஒரு நாள் மட்டும் தான் என்று வாதிட முடியாது என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்தி விடுகிறது.

ஏனெனில்  அறியப்பட்ட நாட்கள் என்ற சொல்லின் மூலம் அறுப்பதற்குப் பல நாட்கள் உள்ளன என்பதைத் தெளிவுபட இவ்வசனம் எடுத்துரைத்து விட்டது.

அப்படியானால் அந்த அறியப்பட்ட நாட்கள் எவை என்ற கேள்வி நமக்கு முன்னே உள்ளது.

குர்பானியின் நாட்கள் எவை?

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

அல்லாஹ், ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்யும் போது ஹஜ்ஜின் ஒரு பகுதியாகக் குர்பானி கொடுப்பதையும் கூறுகிறான். குர்பானி என்பது ஹஜ்ஜின் ஒரு அம்சமாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களில் குர்பானியின் துவக்க நேரத்தை நபியவர்கள் கூறிவிட்டார்கள்.

துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 21(

955- حَدَّثَنَا عُثْمَانُ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ فَقَالَ مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ ، فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ ، وَلاَ نُسُكَ لَهُ فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ الْبَرَاءِ يَا رَسُولَ اللهِ فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ قَالَ شَاتُكَ شَاةُ لَحْمٍ قَالَ يَا رَسُولَ اللهِ فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْنِ أَفَتَجْزِي عَنِّي قَالَ نَعَمْ وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே!  இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே!  என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா?” என்று கேட்டார். “ஆம்!  இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர்: பராஃ (ரலி), நூல்: புகாரி (955)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 20(

 951حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : أَخْبَرَنِي زُبَيْدٌ قَالَ : سَمِعْتُ الشَّعْبِيَّ ، عَنِ الْبَرَاءِ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا

நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அறவிப்பவர்: பராஃ (ரலி), நூல்: புகாரி (951)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (7/ 118(

5500- حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أُضْحِيَّةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى ، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ

ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள், தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது, “யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)

நூல்: புகாரி (5500)

எனவே இந்த நபிமொழிகளின் அடிப்படையில் துல்ஹஜ் பிறை 10ஆம் நாளுக்கு முன்போ அல்லது 10ஆம் நாளில் தொழுகைக்கு முன்போ குர்பானி கொடுக்கக்கூடாது என்பது தெளிவாகிறது.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் ஹஜ்ஜின் ஒரு அம்சமாக குர்பானி குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட வசனம், ‘நாட்கள்’ என்று பன்மையாகச் சொல்வதால் குர்பானி கொடுப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. பிறை 13க்குப் பிறகு ஹஜ்ஜின் கிரியைகள் எதுவும் இல்லை. எனவே 13க்குப் பிறகு வரும் நாட்களில் குர்பானி கொடுப்பது ஹஜ்ஜுக்குரியதாகாது.

எனவே இந்த வசனத்திலிருந்து குர்பானிக்குரிய நாட்கள் என்பது பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து பிறை 13 அன்று ஹஜ் கிரியைகள் முடியும் வரை உள்ள நாட்களாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————————————————————

கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றால் என்ன?

தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கூடாது என்று வாதிடுவோர் குர்பானி தொடர்புடைய இந்தக்  குர்ஆன் வசனத்தை (22:28) பற்றி அறவே பேசவில்லை.

இந்த வசனத்தை கருத்தில் கொள்ளாமலேயே தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு விட்டார்கள்.

சில சகோதரர்கள் அவர்களுக்கு இந்த வசனம் குறித்து சுட்டிக்காட்டினார்கள். அதற்குப் பிறகும் தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி, இவ்வசனம் குர்பானியை பற்றி பேசவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.

இந்த வசனத்திற்கு ‘கால்நடைகளை அறுப்பது’ என்று பொருள் கொண்டு விட்டால் இது குர்பானியைப் பற்றிப் பேசுகிறது என்றாகி விடும்.

குர்பானியைப் பற்றிப் பேசுகிறது என்றாகும் போது ‘அறியப்பட்ட நாட்கள்’ என்று பன்மையாக வந்துள்ளதால் குர்பானிக்குரிய நாள் ஒரே ஒரு நாள் அல்ல, பல நாட்கள் என்று கருத்து தானாகவே உறுதியாகிவிடும்.

எனவே இந்த விளக்கத்தை மறுப்பதற்காக மனமுரண்டாக வேறு வியாக்கியானத்தை அளிக்கின்றார்கள்.

எனவே, அல்குர்ஆனின் 22:28 வசனத்திற்குப் பின்வருமாறு பொருள் செய்கிறார்கள்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகவும் அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

‘கால்நடைகளை அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்’ என்று இந்த வசனத்திற்கு பொருள் செய்கிறார்கள்.

இப்படிப் பொருள் செய்யும் போது அறுத்தல் என்ற கருத்து வராது.

அறுத்தல் என்ற கருத்து வரவில்லை என்றால் பல நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தும் அதில் இல்லை என்றாகி விடும் என்பதே அவர்களின் எண்ணம்.

தவறாகத் தாங்கள் எடுத்து விட்ட முடிவிற்கு ஏற்ப இவ்வசனத்தை வளைக்கின்றார்கள்.

இந்த வசனத்திற்கு இவர்கள் செய்யும் பொருள் சரியா என்று ஆதாரங்களுடன் அலசுவோம்.

கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றால் என்ன?

மேற்கண்ட வசனத்திற்கான பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் மொழிநடையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَام

وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ

வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக

فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ

பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்

عَلَى مَا

அலா மா – ஒன்றின் மீது

رَزَقَهُمْ

ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த

مِنْ بَهِيمَةِ الْأَنْعَام

மின் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து

சாதுவான கால்நடைகளிலிருந்து அவன் அவர்களுக்கு அளித்த ஒன்றின் மீது அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக (வருவார்கள்)

இதுதான் மேற்கண்ட சொற்களின் தனித்தனியான நேரடிப் பொருளாகும். இது தான் நேரடிப் பொருள் என்பதை அரபு மொழி அறிந்த யாரும் மறுக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் பெயரை கூறுதல் என்பது உண்ணத்தகுந்த பிராணிகளுடன் தொடர்பு படுத்தி பேசும் போது அங்கு அறுப்பது என்பது தான் அதன் கருத்தாகும்.

இதற்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

{وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (36)} [الحج: 36]

(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

அல்குர்ஆன் 22 36

இந்த வசனத்தில் ‘அல்லாஹ்வின் பெயரை கூறுதல்’ என்பது அறுத்தல் எனும் கருத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை யாரும் அறியலாம்.

{فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ (118) } [الأنعام: 118]

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 6:118

{وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ (119)} [الأنعام: 119]

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும்போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

அல்குர்ஆன் 6 :119

{وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ} [الحج: 34]

அவர்களுக்கு வழங்கிய சாதுவான கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம்.

அல்குர்ஆன் 22: 34

{وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ (121)} [الأنعام: 121]

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் 6:121

{وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ (138)} [الأنعام: 138]

இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது’’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

அல்குர்ஆன் 6: 138

இந்த வசனங்களில் எல்லாம், ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படுதல்’ என்று வருகிறது. இவையனைத்தும் கால்நடைகளை அறுப்பதைப் பற்றியே பேசுகின்றன.

அரபு மொழி வழக்கத்தின் படி இச்சொல்லாடல் அறுத்தலைத் தான் குறிக்கும் என்பதைப் பின்வரும் செய்தியும் தெளிவுபடுத்துகின்றது.

صحيح البخاري رقم فتح الباري (7/ 91)

5499 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ يَعْنِي ابْنَ المُخْتَارِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ، يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحٍ، وَذَاكَ قَبْلَ أَنْ يُنْزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَحْيُ، فَقَدَّمَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُفْرَةً فِيهَا لَحْمٌக்ஷ்      ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا، ثُمَّ قَالَ: «إِنِّي لاَ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلَّا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِயு

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (‘வஹீ’) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அருகிலுள்ள) கீழ் ‘பல்தஹில்’ ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தமக்கு முன் வைக்கப்பட்ட குறைஷியரின்) பயண உணவு ஒன்றை ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதில் (பலிபீடங்களில் அறுக்கப்பட்டவற்றின்) இறைச்சி இருந்தது. எனவே, அதிலிருந்து உண்ண ஸைத் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), ‘நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5499

صحيح البخاري رقم فتح الباري (3/ 142)

2507 – حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ، فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلًا، فَعَجِلَ القَوْمُ، فَأَغْلَوْا بِهَا القُدُورَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا، فَأُكْفِئَتْ ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الغَنَمِ بِجَزُورٍ، ثُمَّ إِنَّ بَعِيرًا نَدَّ وَلَيْسَ فِي القَوْمِ إِلَّا خَيْلٌ يَسِيرَةٌ، فَرَمَاهُ رَجُلٌ، فَحَبَسَهُ بِسَهْمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ البَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا، فَاصْنَعُوا بِهِ هَكَذَاயு قَالَ: قَالَ جَدِّي: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَرْجُو – أَوْ نَخَافُ – أَنْ نَلْقَى العَدُوَّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى، فَنَذْبَحُ بِالقَصَبِ؟ فَقَالَ: “ اعْجَلْ – أَوْ أَرْنِي – مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، فَكُلُوا لَيْسَ السِّنَّ، وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ: فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ: فَمُدَى الحَبَشَةِ “

ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்க வைத்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு, ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு, அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. எனவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கட்டுங்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக் கடங்காதவை சில உண்டு. எனவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்லுகிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! ‘(இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க்களத்தில்) பகைவர்களைச்  சந்திக்க வேண்டியிருக்குமே’ என்று நாங்கள் அஞ்சுகிறோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்‘ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 2507

இவ்வாறு ஏராளமான சான்றுகள் நபிமொழியில் உள்ளன.

இதே போன்று தான் அல்குர்ஆன் 22:28 வது வசனத்திலும் வருகின்றது.

மீண்டும் ஒரு முறை அந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள்.

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:27, 28

முந்தைய வசனங்களைப் போலவே இதிலும் ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பது கால்நடைகளுடன் இணைத்து கூறப்படுகிறது.

கால்நடைகளின் மீது இறைவனின் பெயரைக் கூறுதல் என்பது அறுப்பதைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு இறைவனின் இவ்வளவு வசன சான்றுகள் ஆதாரமாக உள்ளன.

எனவே அறுத்தல் என்று கருத்து கொள்வதற்கு மாற்றமாக வேறொரு பொருளை இங்கே நாடுவதென்பது இறைவன் உணர்த்திய நேரடி மொழி நடைக்கு எதிரானதாகும்.

நீங்களும் உண்ணுங்கள்

அது மட்டுமின்றி இந்த வசனம் அறுப்பதைப் பற்றித்தான் பேசுகிறது என்பதை விளங்க மேற்படி வசனத்திலேயே ஆதாரம் உண்டு.

‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்’ என்று கூறிய பிறகு ‘அதை நீங்களும் உண்ணுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதன் கருத்து அறுத்தல் என்பது தானே?

அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் தானே நாமும் உண்டு, பிறருக்கும் கொடுக்க இயலும்?

‘நீங்களும் உண்ணுங்கள்; ஏழைகளுக்கும் கொடுங்கள்’ என்ற வாசகம் அதற்கு முன்பாகச் சொல்லப்பட்ட ‘அல்லாஹ்வின் பெயரை கூறுங்கள்’ என்பதன் கருத்தை மிகத் தெளிவாக, சந்தேகத்திற்கிடமின்றி உணர்த்திவிடுகின்றது.

எனவே இவ்வசனம் அறுப்பதைப் பற்றியே பேசுகின்றது. திக்ர் எனும் நினைவு கூர்வதைப் பற்றியோ, புகழ்வதைப் பற்றியோ அல்ல என்பது தெளிவு.

அலா பஹீமதில் அன்ஆம்?

இவ்வளவையும் தாண்டி ஒரு சிலர், இவ்வசனத்தில் அறுத்தல் என்று கருத்து கொள்வதாக இருந்தால் ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வரவேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக வாதம் வைக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பது அலா பஹீமதில் அன்ஆம் என்ற சொற்றொடருன் இணைத்து வந்தால் தான் அங்கே அறுத்தல் என்று பொருள் கொள்ள இயலும்; அலாவிற்கு பிறகு வேறு வார்த்தைகள் இடையில் வந்து விட்டால் அப்போது அறுத்தல் என்று கருத்துக் கொள்ள முடியாது என்று வாதிடுகின்றனர்.

இந்த வாதத்தை அரபு மொழியறியாத பாமர மக்கள் முன்வைத்தால் கூட ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அரபு இலக்கணச் சட்ட விதிகளை படித்தவர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமானது.

இப்போது முன்னர் சொன்ன வசனத்தின் தனித்தனியான அர்த்தங்களை  நினைவு கூற மீண்டும் ஒரு அறியத் தருகிறோம்.

வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக

பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்

அலா மா – ஒன்றின் மீது

ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த

மிம் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து

‘அலா மா’ என்று கூறிய பிறகு ‘ரஜகஹும் மிம் பஹீமதில் அன்ஆம்’ என்று இறைவன் கூறுகிறான்.

இதில் ‘மின்’ என்றால் ‘இருந்து’ என்று பொருள்.

அதிலிருந்து – இதிலிருந்து என்பதை குறிக்க இவ்வார்த்தை பயன்படும்.

மேலும் முன்னர் சொல்லப்பட்ட வார்த்தையின் கருத்து எது என்பதை விளக்கவும் பயன்படுத்தப்படும்.

இப்போது அவ்வசனத்தில் இடம்பெற்ற வாசகங்களை முன் பின்னாக மாற்றி பாருங்கள்.

மின் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து

ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த

அலா மா – ஒன்றின் மீது

பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்

வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக

இப்போது வாசித்து பாருங்கள்.

இங்கே ‘அலா’வும் வருகிறது

‘பஹீமதில் ஆன்ஆம்’ என்பதும் இடம் பெறுகிறது.

‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பதும் இடம்பெறுகிறது.

ஆக, ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை கூறுதல்’ என்ற கருத்து தான் இப்போதும் வருகிறது.

அலா பஹீமதில் அன்ஆம் (சாதுவான கால்நடைகளின் மீது) என்று சொன்னாலும்

அலா மா ரஜகஹும் மின் பஹீமதில் அன்ஆம் (சாதுவான கால்நடைகளிலிருந்து அவன் அவர்களுக்கு அளித்த ஒன்றின் மீது) என்று சொன்னாலும்  கருத்து ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பதைத் தான் குறிக்கின்றது என்பது புரிகிறதா?

அது தவிர, ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வந்தால் தான் அறுத்தலைக் குறிக்கும் என்கிறார்களே!

இங்கே ‘அலா மா’ என்று வருவது அரபு இலக்கண அடிப்படையில் ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வருவதற்குச் சமமானதேயாகும்.

அரபு இலக்கண விவகாரம் சாமானிய மக்களுக்குப் புரியாது என்று எண்ணிக் கொண்டு, வார்த்தை விளையாட்டு விளையாடித் தங்கள் கருத்தை நிலைநாட்டுவது எந்த நன்மையையும் தராது.

எனவே, அல்குர்ஆன் 22:28வது வசனம் குர்பானியைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவு.

பெருநாள் தினத்தன்று மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்போர் தங்கள் கருத்தை வலுவூட்ட இன்னும் சில வாதங்களை வைக்கின்றார்கள். அவற்றையும் அறிந்து கொள்வோம்.

—————————————————————————————————————————————————————————————————————

குர்பானி – விமர்சனங்களும் பதில்களும்

ஹஜ் பெருநாள் தினத்தில், அதாவது துல்ஹஜ் பிறை 10ல் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கான பதில்கள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமை பெறவில்லையா?

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

மேற்கண்ட வசனத்தில் குர்பானிக்குரிய நாட்கள் குறித்துப் பேசப்படுகின்றது என்று நாம் விளக்கம் அளிக்கின்ற போது, ‘இந்த அர்த்தம் ஹஜ்ஜுக்கான அழைப்பை அர்த்தமற்றதாக்குகின்றது’ என அர்த்தமற்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

இவ்வசனத்திற்கு அறுப்பதற்குரிய நாட்கள் என்று கருத்து கொள்ளும் போது ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமை பெறவில்லை. குர்பானி தவிர்த்து பிற வழிபாடுகள் குறித்துப் பேசப்படவில்லை என்றாகி விடும் என வாதிடுகின்றனர்.

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக – அதாவது இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக என்று பொருள் கொள்ளும் போது ஹஜ்ஜின் எல்லா நாட்களும் அதில் அடங்கி விடுகிறது என்கிறார்கள்.

ஹஜ்ஜைப் பற்றி இறைவன் அறிவிப்பு செய்வதாக வசனம் துவங்கும் போது, அந்த வசனத்திலேயே ஹஜ் தொடர்புடைய அனைத்தும் இடம் பெற்று விட வேண்டும் என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு தன் கற்பனைக்கு மாற்றமாக இருக்கின்ற போது அதனை அர்த்தமற்றது என்பது எவ்வளவு அறிவீனம்?

திருக்குர்ஆனில் ஒரு வணக்க வழிபாட்டை, ஒரு அறிவுரையை சொல்லத் துவங்கினால் அந்த இடத்திலேயே அனைத்தும் குறிப்பிடப்பட வேண்டும் என்பதில்லை. அப்படி இல்லாமல் எத்தனையோ வசனங்கள் குர்ஆனில் உள்ளன.

‘தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்’ என்று அல்குர்ஆனின் 59வது அத்தியாயம் 9வது வசனம்  குறிப்பிடுகிறது.

மறுமை வெற்றிக்கு, கஞ்சத்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்வது மட்டும் போதுமா? தொழுகை, நோன்பு போன்றவை தேவையில்லையா? என இவ்வசனத்திலிருந்து கேள்வி எழுப்பலாம்.

எது நன்மை? யார் இறைவனை அஞ்சுவோர் என்பதைப் பற்றிப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

{لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ (177)} [البقرة: 177]

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங் களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழை களுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

இந்த வசனத்தில் விதியை நம்புதல் இல்லை. ஹஜ் செய்வது பற்றியும் இல்லை. ஆதலால் அவை நன்மை இல்லையா? என்று கேள்வி எழுப்பலாம்.

ஒரு வசனத்திலேயே அனைத்தும் குறிப்பிடப் பட வேண்டும் அப்படி இல்லை என்றால் அவை அர்த்தமற்றவை (?) என்ற இவர்களின் அளவீட்டின் படி இந்த வசனங்கள் எல்லாம் அர்த்தமற்றவை என்பார்களா? (அல்லாஹ் காப்பானாக)

இப்படி நிறைய வசனங்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பலாம்.

எனவே இது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கேட்பது வசனத்தின் நேரடிப் பொருளை விட்டு மாறுவதற்கு ஒரு போதும் உதவாது.

இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.

அறியப்பட்ட நாட்கள் என்பது குர்பானி தொடர்புடையது எனச் சொல்வதால் ஹஜ்ஜுக்கான அழைப்பு அர்த்தமற்றதாக்கப்படுகின்றது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

இவர்கள் செய்யும் பொருளில் ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமையாகின்றதா? என்றால் அப்போதும் இல்லை என்பது தான்.

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக என்று பொருள் செய்தாலும் அப்போதும் கல்லெறிதல் பற்றி, அரபா, மினா – முஸ்தலிபாவில் தங்குவது பற்றி எதுவும் இல்லை.

இவையாவும் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறுவதில் வரும் என்பார்களேயானால் அது போல வசனத்தின் துவக்கத்தில் ‘அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காக’ என்பதிலும் இவை உள்ளடங்கும் தானே.

பயன்கள் என்பது இம்மை – மறுமை என இருவுலக பயன்களையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இதில் ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்தும் உள்ளடங்கி விடுமே.

ஒரு இடத்திலே அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற அளவீடு குர்ஆனின் பார்வையில் சரியான அளவீடல்ல என்ற பதிலே இந்த வாதத்திற்கு போதுமான பதிலாகும்.

எனவே குர்பானிக்கு அறியப்பட்ட நாட்கள் என்று பொருள் செய்து வசனத்தின் அர்த்தத்தை அர்த்தமற்றதாக்குகிறார்கள் என்பது ஒருவகையான உளறலேயாகும்.

பிறை 13க்குப் பிறகு தான் இஹ்ராம் களைய வேண்டுமா?

தங்களது அதிமேதாவித்தனத்தை வெளிப் படுத்தும் விதமாக அடுத்த ஒரு கேள்வியை இப்படி முன்வைக்கின்றார்கள்.

அல்குர்ஆன் 22:27வது வசனத்தில் ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பு செய்யுமாறு கூறப்படுகிறது. அதையொட்டி அவர்கள் ஹஜ்ஜுக்காக வருவார்கள் என்கிறது.

29வது வசனத்தில் அழுக்குகளைக் களையட்டும், தவாஃப் செய்யட்டும் என்று குறிப்பிடப்படுகிறது.

ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (29வது வசனம்)

இதில் 28வது வசனம் குர்பானிக்குரிய நாட்களைப் பற்றிப் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டால் பிறை 13 வரையிலும் குர்பானி கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டின் படி அதற்குப் பிறகுதான் இஹ்ராம் களைய வேண்டுமா? தவாஃப் செய்ய வேண்டுமா?

ஒருவர் பிறை 12 – 13ல் தான் பலியிடுகிறார் என்றால் பிறை 13க்குப் பிறகு நகம் – முடி களைதல், தவாப் உள்ளிட்டவை செய்யலாமா?

இது தான் அந்த கேள்வி.

ஹஜ்ஜின் கிரியைகள் குறிப்பிட்ட சிலவற்றில் வரிசை முறை குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

கல்லெறிதல், பலியிடுதல், தலைமுடியை மழித்தல், தவாப் செய்தல் உள்ளிட்டவற்றில் வரிசை முறை மாறிவிட்டிருந்தாலும் அது குற்றமாகாது.

இதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே விளக்கி விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள்.  மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள்.  அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார்.  “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார்.  “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம் 2138

நபிகளார் இந்தக் காரியங்களில் வரிசை முறையில் செய்திருந்தாலும் மக்களுக்கு இப்படியொரு சலுகையை வழங்கியிருக்கிறார்கள்.

எனவே பத்தாம் நாளிலேயே குர்பானி கொடுத்து விடுபவர் அதன் பிறகு அதற்கடுத்த கிரியைகளை நிறைவேற்றுவார்.

அதுவன்றி ஒருவர் 12ம் நாளில் குர்பானி கொடுப்பதாக இருந்தாலும் அவர் பத்தாம் நாளுக்குப் பிறகு, பலியிடுவதற்கு முன்பே நகம், முடி போன்றவற்றைக் களைவதில் எந்த தவறுமில்லை. அது குற்றமாகாது.

இவற்றைப் பத்தாம் நாளில் நிறைவேற்றி விட்டு அதன் பிறகு கூட அவர் பலியிட்டுக் கொள்ளலாம். ஹஜ்ஜில் உள்ளோருக்கு அப்படியான சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது ஹதீஸில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதற்குப் பிறகு இதைச் செய்யலாமா? இதற்குப் பிறகு அதைச் செய்யலாமா? என்று கேள்வி எழுப்பி விட்டால் வசனத்தின் கருத்து தவறு என்றாகி விடாது.

யவ்முன் நஹ்ர் என்று வருவதால்…

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் என்போர் பின்வரும் வாதம் ஒன்றை வைக்கின்றார்கள்.

துல்ஹஜ் பிறை பத்தாம் நாளை நபி (ஸல்) அவர்கள் யவ்முன் நஹ்ர் – அறுத்து பலியிடுவதற்குரிய நாள் என்று குறிப்பிடுகிறார்கள்.

பெருநாள் அல்லாத மற்ற நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்றிருந்தால் யவ்முன் நஹ்ர் என்று ஒருமையாக வருமா?

மற்ற நாட்களுக்கு எல்லாம் இல்லாமல் பெருநாள் தினத்திற்கு மட்டும் யவ்முன் நஹ்ர் என்று நபி (ஸல்) அவர்களால் பெயர் குறிப்பிடப்படுகிறது என்றால் அந்த ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறது.

இதுதான் அவர்களின் மயிர்க்கூச்செரியச் செய்கின்ற வாதம்.

துல்ஹஜ் பிறை 10 யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்படுவதால் பெருநாள் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் அந்தச் செய்தியைப் படித்து விட்டாலே இவர்களின் இந்த வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதோ அவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்:

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 26(

 67 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا بِشْرٌ قَالَ : حَدَّثَنَا ابْنُ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம். அடுத்து இது ‘எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து ‘(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்’ என்று கூறிவிட்டு ‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்.

இவ்வாறு அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.

இந்தச் செய்தியில் துல்ஹஜ் மாதத்தை புனித மாதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

துல்ஹஜ் மாதம் ‘புனித மாதம்’ என்று அழைக்கப்படுவதால் வேறு எந்தப் புனித மாதங்களும் இல்லை என்று வாதிட்டால் அது சரியா?

துல்ஹஜ் மாதம் புனித மாதம் என்று அழைக்கப்பட்டாலும் வேறு புனித மாதங்களும் உண்டு என்று தானே புரிந்து கொள்கிறோம்.

துல்கஃதா, முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களும் புனிதமானவையே!

அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கையானது, வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாளில் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி பன்னிரண்டு மாதங்கள். அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே நேரான மார்க்கம். புனித மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்!  இணைவைப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக உங்களுடன் போரிடுவதைப் போன்று நீங்களும் ஒட்டுமொத்தமாக அவர்களுடன் போரிடுங்கள்! “இறையச்சமுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 9:36

துல்ஹஜ்ஜைப் புனித மாதம் என்று அழைப்பதால் வேறு எந்த மாதங்களும் புனிதமில்லை என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

அதுபோலவே துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்பட்டாலும் அது மட்டுமே அறுப்பதற்குரிய நாளல்ல. அதுவல்லாத பிற நாட்களும் குர்பானிக்குரிய நாட்களாக உள்ளது என்று புரிந்து கொள்கிறோம்.

அறியப்பட்ட நாட்கள் என்று திருக்குர்ஆன் பன்மையாகக் கூறியதன் அடிப்படையில் குர்பானிக்குரிய நாட்கள் ஒரு நாள் மட்டும் அல்ல என்ற இந்த புரிதலே சரியானதாகும்.

துல்ஹஜ் பிறை பத்தாம் நாளிலிருந்து தான் குர்பானி துவங்குகின்றது என்பதால் அந்த நாள் மட்டும் விசேஷமாக யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்படலாம்.

அதனால் மற்ற நாட்கள் அறுப்பதற்குரிய நாட்கள் அல்ல என்றாகி விடாது.

இவற்றைச் சரியாக விளங்காமல் யவ்முன் நஹ்ர் என்று குறிப்பிடப்படுவதால் பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று பிதற்றுவது அறிவீனமாகும்.

இப்றாஹிம் நபியின் வழிமுறை?

இன்னொரு அரிய வகை (?) வாதம் ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.

இப்ராஹீம் நபியைப் பின்பற்றியே குர்பானி கொடுப்பது வழிமுறையாக்கப்பட்டுள்ளது  என்று திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. ‘இப்றாஹீம் நபியவர்கள் எந்த நாளில் குர்பானி கொடுத்தார்களோ அந்த நாள், ஏதோ ஒரு நாளாகத்தான் இருக்க முடியும். எனவே ஒரு நாளில் தான் குர்பானி கொடுக்க வேண்டும்’ என்று கூறுகின்றனர்.

உண்மையில் இது ஒரு வினோதமான வாதமாகும்.

இறைவனுக்காக எதையும் அர்ப்பணிக்கவும், இறைக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தவும் முன்வந்த இப்றாஹீம் நபியின் செயலைப் பின்பற்றியுமே குர்பானி கொடுக்கப்படுகிறது. இது தவிர இப்ராஹீம் நபி எதை, எப்படி, எப்போது அறுத்தார்களோ அதை, அப்போது, அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நமக்கு நபியவர்களால் வழிகாட்டப்படவில்லை.

இப்ராஹீம் நபியின் அர்ப்பணிப்பைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இப்ராஹீம் நபியின் அறுப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.

இப்ராஹீம் நபி எந்த நாளில் அறுத்தார்கள்?

துல்ஹஜ் பத்தாம் நாளில் தான் அறுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

இப்ராஹீம் நபி அறுத்தார்கள் என்றால் எந்தப் பிராணியை அறுத்தார்கள்? ஆட்டையா? மாட்டையா? ஒட்டகத்தையா?

இவற்றுக்கெல்லாம் இவர்களால் பதில் சொல்ல முடியாது.

இவர்களின் வாதப்படி ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்க முடியுமா?

இப்றாஹீம் நபியவர்கள் தனியொருவராகவே குர்பானி கொடுத்தார்கள். ஆகவே கூட்டுக் குர்பானி இப்ராஹீம் நபியின் வழிமுறைக்கு எதிரானது எனலாமா?

இப்றாஹீம் நபியவர்கள் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிராணியையைத் தானே அறுத்திருப்பார்கள்.

மற்ற இரு பிராணிகளைக் குர்பானி கொடுப்பது இப்றாஹீம் நபியின் வழிமுறைக்கு மாற்றமானது என வாதிட்டால் அது அறிவுடையவர்களின் வாதமா?

பெரிய பிராணியை அறுத்தார்கள் என்கிறது திருக்குர்ஆன். அதனால் சிறியதை அறுப்பது இப்ராஹீம் நபி வழிமுறைக்கு எதிரானது என்பார்களா?

இப்படிப் பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம்.

எனவே இப்றாஹீம் நபியவர்கள் ஒரு நாளில் தான் அறுத்திருப்பார்கள் என்பதால் பெருநாள் அல்லாத மற்ற நாட்களில் குர்பானி கொடுப்பது சரியல்ல என்பது முற்றிலும் பிழையான, அறிவற்ற வாதமாகும். இது ஒருபோதும் அறிவார்ந்த வாதமாகாது.

அதிலும் கூட இப்றாஹீம் நபியவர்கள் துல்ஹஜ் பிறை 10ல் தான் அறுத்தார்கள் என்பதற்கு நேரடிச் சான்று எதுவுமில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கதாகும்.

எனவே ஹஜ் பெருநாள் ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு இவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை.

—————————————————————————————————————————————————————————————————————

மனிதகுல முன்னோடி நபிகள் நாயகம்       தொடர்: 7

ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி!

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும் வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது.

நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கோட் சூட் அணிகிறான். பலதரப்பட்ட உணவுகள், பல்வேறு நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா என மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாக இன்றைய அரசியல்வாதிகள் மிதந்து வருவதைக் காண்கிறோம். இந்நிலையை, பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பட்டிதொட்டிகளில் இருக்கும் வார்டு உறுப்பினர்கள் வரைக்கும் காண முடிகிறது.

ஆனால் நபி (ஸல்) அவர்களோ இவர்களுக்கு நேர்மாற்றம். நபிகளாரும் சில ஆண்டுகள் மக்களுக்கு ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். ஆனால் தற்காலத்து அரசியல்வாதிகளைப் போல் வகைவகையாக உண்ணவில்லை! ஆடம்பர உடைகளை உடுத்தவில்லை! பல வகையான பொருட்களைப் பயன்படுத்தவில்லை! பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை! செல்வத்தைத் தன் பெயரிலோ பினாமிகளின் பெயரிலோ குவிக்கவில்லை! மாளிகைகள் பல கட்டவில்லை! தமது வாரிசுகளை, தமது சொத்துக்கோ பதவிக்கோ வாரிசாக்கவில்லை! அதற்கான வரலாற்று வரிகள் இதோ!

ஜனாதிபதி வீட்டில் அடுப்பெரியவில்லை

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது”  என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  “என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?”  என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி)  “பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்” என விடையளித்தார்.

அறிவிப்பவர்: உர்வா

நூல்: புகாரி 2567, 6459

வயிரார உணடதில்லை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நபியவர்களின் குடும்பத்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை  என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5374

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபியவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  “இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு, “குழம்புடன் கூடிய ரொட்டியை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே”  என விளக்கமளித்தார்.

நூல்: புகாரி 5423

பொறித்த இறைச்சியைக் கண்ணிலும் கண்டதில்லை

நபி (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி ‘சாப்பிடுங்கள்’ என்று அனஸ் (ரலி) கூறி விட்டு, “நபி (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தமது கண்களால் பார்த்ததில்லை”  எனக் கூறினார்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: புகாரி 5385, 5421, 6457

வகைவகையான உடைகளை அணியவில்லை

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்  என்று குறிப்பிட்டார்.

நூல்: புகாரி 3108, 5818

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து “இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்” என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 1277, 2093, 5810

ஆடம்பர வாழ்வில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்த வில்லை. அலங்காரப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல்: புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 6456

பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள்  “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்’’ எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது”  எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

பகலில் பாய்! இரவில் கதவு!

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்  என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 730, 5862

நபி (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன்.  ஏன் அழுகிறீர்  என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?”  என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?”  எனக் கேட்டார்கள்.

இதை உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 4913

இருள் நிறைந்த ஜனாதிபயின் இல்லம்

நபி (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துகளை அங்கேயே விட்டு விட்டு, எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும்  இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்  எனக் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல்: புகாரி 3906

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு தொழும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் தமது நெற்றியை நிலத்தில் வைப்பதற்குக் கூட எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபி (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது  என நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல்: புகாரி 382, 513, 1209

நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபி (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.

நூல்: புகாரி 729

நபி (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.

செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபி (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விடக் கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமையைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபி (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ? என யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

முப்பது படி கோதுமைக்காக நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபி (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துகளின் பட்டியலைப் பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபி (ஸல்) விட்டுச் சென்றார்கள்.

நூல்: புகாரி 2739, 2873, 2912, 3098, 4461

நபி (ஸல்) அவர்களது ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபியவர்களும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகளாரிடம் இருந்தது. அதுதான் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபி மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துகள் இவை தாம்.

அந்த அற்பச் சொத்துக்களும் எனது மரணத்துக்குப் பின் அரசைச் சேரவேண்டும் என்று அறிவித்து விட்டு மரணித்தார்கள்.

எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக் காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபியவர்கள் அறிவித்தார்கள்.)

நூல்: புகாரி 2776, 3096, 6729

நபிகளாரின் சொத்து மதிப்பு

பொதுவாக ஒரு அரசியல்வாதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அனைத்து மக்கள் மீது கடமையாகும். அவர் அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு என்ன? வந்த பின்னர் என்ன சம்பாதித்தார்? எவ்வளவு சேமித்தார்? என மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிக்கு உண்டு.

நபி (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.

அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது. ஏதாவது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.

தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?  என்றார்கள். அவர் கிடாய்  என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி  நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி)

நூல்: அஹ்மத் 17172

நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நபி (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.

புகழை விரும்பவில்லை

நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மூலம் செல்வம் சேர்க்காவிட்டாலும் புகழுக்காவது ஆசைப்பட்டார்களா? எனக் கேள்வி எழலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள்  இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2433, 2055, 2431

கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ  என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை  என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. அள்பா என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராமவாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராமவாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள்  இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2872, 6501

எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.

இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபியவர்களை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபி (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. ‘எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்’  என்று கூறினார்கள். “இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்”  எனவும் கூறினார்கள்.

நூல்: புகாரி 2821, 3148

இது நபி (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபியவர்களை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்குக் கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபியவர்கள் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடலின் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபி (ஸல்) அவர்களின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி  உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக  என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.

நூல்: புகாரி 3149, 5809, 6088

சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.

உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான முஹம்மது நபியை, முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராமவாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்தவனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது. உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்  என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.

இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபியவர்களால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

மக்களோடு மக்களாக…

நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம்  இந்த ஆட்டைச் சமையுங்கள்  என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்” என்று விடையளித்தார்கள்.

நூற்கள்: அபூதாவூத் 3773, பைஹகீ 14430

ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மணமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.

மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபி (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.

மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.  நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?  என்று பேரனிடம் கேட்டார்கள்.

நூல்: புகாரி 1485, 1491, 3072

நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அரசியல்வாதியும் வாழ்ந்து காட்டினால் நாடு செழிக்கும் என்பதிலை ஐயமில்லை.

—————————————————————————————————————————————————————————————————————

நன்மைகளை அள்ளிக் கொள்வோம்

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்

இந்த உலகில் வாழும் போது நமது செயல்கள் எவ்வாறு இருந்ததோ அதன் அடிப்படையில் தான் அல்லாஹ் மறுமையில் நமக்குத் தீர்ப்பு வழங்குவான். இதை நினைவில் கொண்டு தீமையான காரியங்களை விட்டு விலகி இருப்பதோடு, முடிந்தளவுக்கு நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.

இத்தகைய ஆர்வமும் அக்கறையும் எப்போதும் இருக்க வேண்டுமெனில், நமது நற்காரியங்களுக்கு அல்லாஹ் எவ்வாறெல்லாம் கூலியை வழங்குகிறான் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஆகவே. இது தொடர்பாக சில செய்திகளை இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நினைப்பதற்கும் நன்மை

மார்க்க விசயத்திலோ, உலக விசயத்திலோ ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்ய வேண்டுமென நினைத்தால், அந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டும் வகையில் அதற்கும் அல்லாஹ் கூலியை வழங்குகிறான்.

“(எனது அடியான்) அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்” என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (7501)

ஆகவே எந்தவொரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் கூலியைப் பெறுவதற்காக செய்கிறோம் என்ற மனத்தூய்மை அவசியம். அப்போது தான், ஒருவேளை அந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் கூட அதைச் செய்ய வேண்டுமென நினைத்ததற்கு அல்லாஹ்விடம் கூலியைப் பெற முடியும்.

பத்து முதல் எழு நூறு வரை நன்மைகள்

நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு அல்லாஹ் பத்து முதல் எழு நூறு வரை நன்மைகளைத் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்குரிய ஆதாரத்தைப் பார்ப்போம்.

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (7501)

ஒரே காரியத்தை ஒரே நேரத்தில் பலர் செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் எந்தளவுக்கு சரியாகவும் ஆர்வமாகவும் செய்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்களுக்கு வழங்குப்படும் நன்மையில் வித்தியாசம் ஏற்படும்.

முயற்சி செய்வதற்கும் நன்மை

ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்வதற்கு முனையும் போது போது அதைச் செய்ய முடியாமால் போனாலும் கூட அந்த முயற்சிக்கும் அல்லாஹ் கூலி தருகிறான். இதைப் பின்வரும் நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயை, பள்ளத்தாக்கைக் கடந்தாலும்  அவர்களும் நம்முடன் இருக்கும் நிலையிலேயே அதை நாம் கடந்து வருகிறோம். (ஏற்கத்தகுந்த) சில காரணங்களே (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (2839)

அல்லாஹ்வின் பாதையில் அவனது மார்க்கத்தைக் காப்பதற்காக போர்க்களத்தில் கலந்து கொள்வது சாதாரண விசயமல்ல. அது மிகச்சிறந்த அறச்செயல். அதில் கலந்து கொண்டு திரும்பி வருபவர்களுக்குக் கிடைக்கும் அதே நன்மை, மதீனாவிலுள்ள சில தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறார்கள், நபியவர்கள்.

அவர்கள் விரும்பினாலும், முயற்சித்தாலும் நிர்ப்பந்தமான சூழலால் தான் அவர்கள் போருக்கு வரமுடியவில்லை. ஆகவே போரில் கலந்து கொண்டவர்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவர்களுக்கும் கிடைக்கும் என்று நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதை மனதில் கொண்டு நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

இரு மடங்கு நன்மைகள்

பத்து முதல் எழுநூறு மடங்கு வரை தருகிற நன்மையை சிலருக்கு, சில காரியங்களுக்கு அல்லாஹ் இரண்டு மடங்கு பெருக்கித் தருகிறான். இதற்குப் பின்வரும் காரியத்தை உதாரணமாக கூறலாம்.

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி (4937)

திருக்குர்ஆனை ஓதும் போது ஒரு எழுத்துக்கு அல்லாஹ் பத்து நன்மைகளை வழங்குகிறான். இது பற்றி நபியவர்கள் நமக்கு தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஒருவர் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சிக்கிறார். சிரமாக இருந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து ஓதுகிறார்.

இவர் குர்ஆனில் ஒவ்வொரு எழுத்தை படிக்கும் போதும் இருபது நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.இவ்வாறு நன்மைகளை இரண்டு மடங்காகப் பெற்றுத் தரும் காரியங்கள் பற்றி மார்க்கத்தில் நிறைய கூறப்பட்டுள்ளன.

பத்து மடங்கு நன்மைகள்

சில காரியங்களுக்கு இரண்டு மடங்கு கூலி தருவது போன்று சில காரியங்களுக்கு அல்லாஹ் பத்து மடங்கு கூலியைத் தருகிறான். ஒரு முறை அந்தக் காரியத்தைச் செய்தாலும் பத்து முறை செய்த நன்மையை வழங்குகிறான். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.

(நபியவர்கள் மிஃராஜ் பயணம் சென்றார்கள். அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது கடமையாக்கப்பட்டு உள்ளது’ என்பதும் அடங்கும்)

….. நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவன் ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அல்லாஹ், ‘சொல் என்னிடம் மாற்றப் படுவதில்லை; அதை (ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (7517)

முஹம்மது நபியின் சமூகத்தினராகிய நாம், ஒரு நாளைக்கு ஐம்பது நேரம் தொழ வேண்டுமென அல்லாஹ் முதலில் கட்டளையிட்டான். பிறகு, நபிகளாரின் கோரிக்கையை ஏற்று, நம் மீது இரக்கம் காட்டி அதை ஐந்து நேர தொழுகையாகக் குறைத்து விட்டான். ஐவேளை கடமையான தொழுகையை நிறைவேற்றினால் ஐம்பது வேளைகள் தொழுத நன்மையைத் தருவதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான். இவ்வாறு பத்து மடங்கு நன்மையைப் பெற்றுத் தரும் காரியங்கள் மார்க்கத்தில் நிறைய கூறப்பட்டுள்ளன.

அளவில்லா நன்மைகள்

பத்து முதல் நூறு வரை நன்மைகள் என்பதையும் கடந்து சில நற்செயல்களுக்கு அல்லாஹ் கணக்கற்ற கூலியைத் தருகிறான். அளவில்லா நன்மைகள் பெற்றுத் தரும் காரியங்கள் பற்றி குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாக ஒரு செய்தியை மட்டும் காண்போம்.

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1904)

நிரந்தரமான நன்மைகள்

பொதுவாக, ஒரு காரியத்திற்கு ஒரு முறை கூலி வழங்கப்படும். ஆனால், சில காரியங்களுக்கு தொடர்ந்து பல நாட்கள் நன்மைகள் தரப்படும். எந்தளவுக்கு என்றால், அந்தக் காரியத்தைச் செய்தவர் மரணித்து விட்டாலும் அவருக்கு நன்மைகள் பதிவாகிக் கொண்டே இருக்கும். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான தர்மம் 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3358)

ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை.  இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (3161)

எல்லாச் செயலுக்கும் நன்மைகள்

வழிபாடுகள், கடமைகள் போன்றவற்றிற்கு மட்டுமல்ல, உலகத்தில் எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கும் அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதோ அல்லாஹ்வின் தூதர் சொல்வதைக் கேளுங்கள்.

இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! சொல்லுங்கள்! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1832)

பசி, தாகம், தூக்கம் போன்று பாலுணர்வு என்பதும் பருவம் அடைந்தவர்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை மார்க்க வரம்புக்குள் நின்று முறையாகத் தீர்த்துக் கொள்பவருக்கும் அல்லாஹ் நன்மையைத் தருவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்கிற செயல்கள் அனைத்திற்கும் மறுமையில் நன்மைகள் கிடைக்கும். இதைப் பின்வரும் செய்தி மூலமும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூமஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி (55)

அனைத்துச் சூழலிலும் நன்மைகள்

எந்த மனிதருக்கும் வாழ்க்கை முழுவதும் ஒரே விதமான சூழல் இருக்காது. இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். எப்போதும் நமது மனநிலை மார்க்கம் சொன்ன அடிப்படையில் இருந்தால் அனைத்து சூழலிலும் நாம் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நற்செய்தியைப் பாருங்கள்.

இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் (5726)

பிறர் செய்தாலும் நமக்கு நன்மை

நேரத்தை ஒதுக்கி, உடல் உழைப்பைச் செலுத்தி நாம் செய்கிற காரியங்களுக்கு நன்மைகளைத் தருவதைப் போன்று, சில வேளை அடுத்தவர் செய்யும் காரியங்களுக்கும் கூட அல்லாஹ் நமக்கு நன்மைகளை, நற்கூலியை அளிக்கிறான்.

எப்போது இந்த மாதிரி நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். ஏதேனும் நற்காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் பரிந்துரையோ, அறிவுரையோ சொல்லும் போது அதைச் செய்பவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை நமக்கும் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய நாவினால் நிறைவேற்றித் தருவான்’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1432)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை” என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3846)

நாம் எவரிடமும் எந்தக் காரியத்தையும் செய்யும் படி கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன காரியத்தைச் செய்யும் போது நம்மைப் பார்த்து மற்றவர்களும் அதைச் செய்தால், அவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை நமக்கும் கிடைக்கும். இதைப் பின்வரும் செய்தி மூலம் அறியலாம்.

நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1848)

நமது தீமைகளை விடவும் நன்மைகள் அதிகமாக இருக்கும் போது தான் மறுமையில் முழுமையான வெற்றியைப் பெற முடியும். ஆகவே, நாம் நரகிலிருந்து தப்பித்து, சொர்க்கம் செல்வதற்கு ஏற்ப மேற்கண்டவாறு அல்லாஹ் ஏராளமான வழிகளில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறான். அந்த வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

பெண்கள் பகுதி

எது நாகரீகம்?

அபூ ஆஃப்ரின்

அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலங்கள் மாற மாற அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் கண்டுகொண்டே இருக்கிறோம்.

நமது சிறு வயதில் கண்கவர் பொருளாக இருந்த மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, மாட்டுவண்டி போன்றவை இன்று தடம் தெரியாமல் அழிந்து விட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பொருட்கள் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இவையெல்லாம் இன்றைய சமூகம் கண்ட வளர்ச்சி என்று நாம் பெருமிதம் கொண்டாலும் மறுபுறம் நாகரீகம் என்ற பெயரில் இவ்வளர்ச்சி பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. படிப்பறிவு இல்லாமல், எதையும் அறியாத பட்டிக்காடாக, பாமரர்களாக வாழ்ந்த காலத்தில் ஏற்படாத பல சமூக சீரழிவுகள் இன்று அரங்கேறி வருகின்றன.

ஆம்! கற்பழிப்பு, கள்ளத்தொடர்பு, ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், கெட் டு கெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தவறான உறவு என  அன்றைய காலத்தில் அரிதாக இருந்த பல விஷயங்கள் இன்றைய நவீன யுகத்தில் மலிந்து போய்விட்டன.

கல்வி, செல்வம், விஞ்ஞானம் என முன்னோக்கிச் செல்லும் நாகரீக உலகில் கற்பொழுக்கம், பாரம்பரியம், பண்பாடு, ஆன்மீக நெறிகள் அனைத்தும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய நவீன உலகின் வளர்ச்சி (?)

குறிப்பாக நாகரீகம் என்ற பெயரில் அடிமைப்பட்டு அத்துமீறி நடந்துகொள்பவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம் பெண்களும் கூட மார்க்கம் சொல்லக் கூடிய ஒழுங்குகளைப் பேணாமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் செய்யும் அட்டூழியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது

வளர்ச்சி கண்ட வீழ்ச்சி

பெண்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, வீட்டு வேலைகள் பார்ப்பது என இருந்த காலம் மலையேறிப் போய் தற்போது சுற்றுலாத் தலங்கள், ஜவுளிக் கடை, நகைக்கடை, பொருட்காட்சி, கடைவீதி என எங்கு திரும்பினாலும் பெண்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

அது மட்டுமா? ஆணும் பெண்ணும் சரி சமம்  என்று சமத்துவம்  பேசுவது, ஆண்கள் துணையின்றிப் பயணிப்பது, சமூக வலைத்தளங்களில் அடிமைப்பட்டு அதிலேயே மூழ்கிக் கிடப்பது, யாரென்றே தெரியாத நபர்களுடன் பேசிப் பழகி காதல் வயப்பட்டு, கற்பிழந்து, உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இத்தகைய செயல்களுக்குக் காரணியாக அமைகின்றது. ஊர் சுற்றுவதும், அந்நிய ஆண்களுடன் தனித்திருப்பதும் நவீன மயமோ, நாகரீக வளர்ச்சியோ கிடையாது. உண்மையில் இவை அநாகரீகம், அசிங்கமாகும்.

இதோ நமது மார்க்கம் நமக்குக் கற்றுத் தரும் நாகரீகத்தைப் பாருங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!  தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

அல்குர்ஆன் 33:33

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்ல. நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் குழைந்து பேசாதீர்கள்! யாரது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன் 33:32

இச்சட்டங்கள் நபியின் மனைவிமார்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டு இருந்தாலும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தக்கூடியதே! வெளியில் சுற்றித் திரிவது என்பது அறிந்தவர்களின் பண்பு கிடையாது; அது அறியாமைக் காலத்தவர்களின் பண்பு என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகின்றது. எனினும் அவசியத் தேவைக்காகச் செல்வதை மார்க்கம் தடை செய்யவில்லை. அநாவசியமாகச் சுற்றுவதையே இங்கு சொல்லப்படுகின்றது. அவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வது தவறில்லை என்பதை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களான வாட்சப், ஃபேஸ்புக் போன்றவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்ல! அது விபச்சாரத்தின் ஓர் அம்சம். விபச்சாரத்தைத் தூண்டக்கூடிய ஓர் ஆயுதம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபச்சாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5165

ஆள் பாதி! ஆடை பாதி!

ஒருவரது தரத்தை, தகுதியை அவரது ஆடையை வைத்தே முடிவு செய்து விடலாம் என்பதே, ஆள் பாதி, ஆடை பாதி என்பதன் பொருள். இந்த வாசகம் தற்போதைய பெண்களுக்கு முற்றிலும் பொருந்திப் போகின்றது. பண வசதி இல்லாமல், பட்டினியில் வாடிய வண்ணம் அன்றைய காலத்தில் இருந்த பெண்கள் தங்களிடம் இருந்த ஓரிரு ஆடைகளைக் கொண்டு தங்கள் உடல் முழுவதையும் மறைந்து வந்தார்கள்.  கிழிந்த ஆடைகளைத் தைத்து உடுத்தி வந்தார்கள்.

ஆனால் இன்றோ, பசியில்லை! பட்டினியில்லை! ஆடைகளுக்கு எவ்விதக் குறையுமில்லை! எனினும் ஃபேஷன் என்ற பெயரில் முட்டி தெரிய குட்டைப் பாவாடை, தொப்புள் தெரிய மேலாடைகள், ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள், கையில்லாத சுடிதார்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், முக்கால் டிரவுசர், உடலை ஒட்டிய லெக்கின்ஸ்கள், உள்ளாடை வெளியே தெரியுமளவுக்கு மேலாடைகள் என இன்றைய பெண்கள் ஆள் பாதி, ஆடை பாதியாகத் தான் இருக்கின்றார்கள்.

இவை தான் நவீன உலகின் நாகரீக ஆடைகள் என்று கூறுகின்றனர். சினிமா கூத்தாடிகளின் பாணியில் ஆடை முறைகளை மாற்றியமைத்துக் கொண்டு, காலம் மாறி விட்டது, அதற்கேற்றாற்போல் நாங்களும் மாறிக் கொண்டோம் என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய ஆடைகள் தான் தங்களைக் கண்ணியமாகக் காட்டும் என்பதும், இது தான் நாகரீகம் என்பதுமே பெண்களின் மனநிலையாக இருக்கின்றது. உடல் முழுவதும் மறைத்து ஆடை அணிந்திருந்தால், பட்டிக்காடு என்று கிண்டல் செய்யும் உலகமாக இருக்கின்றது.

உண்மையில் பெண்களைக் கண்ணியப்படுத்தும் ஆடை எது என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக!  அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது’’ அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:59

பிறரின் தவறான பார்வையிலிருந்து நம்மைக் காக்கும் ஆடையே கண்ணியமானது. உடல் அங்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் ஆடை அணிவது நாகரீகமோ, கண்ணியமோ கிடையாது. அவை பிறரின் கெட்ட பார்வைக்கும், அருவருப்பான பேச்சுக்குமே வழிவகுக்கும்.

அல்லாஹ் கூறும் இந்த வசனத்தில் ஹிஜாப் முறையை வலியுறுத்துகின்றான். இந்த ஹிஜாபிலும் தற்போது ஃபேஷன் புகுந்து விட்டது.

ஹிஜாப் என்பது அலங்காரமா?

இந்த நவநாகரீக உலகின் ஜாம்பவான்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரைகுறை ஆடைகளுடன் சுற்றித் திரியும் பெண்கள் ஒருபுறம் என்றால், இறைவன் கட்டளையிடும் ஆடையாகிய ஹிஜாபையே, இவர்கள் ஏன் இதை அணிந்திருக்கிறார்கள் என்று கேட்கச் செய்யும் பெண்கள் மறுபுறம்!

ஆம்! இன்றைய ஃபேஷன் உலகில் கண்ணியமான ஆடையாகிய ஃபர்தாவும் மாட்டிக் கொண்டு பாடாய் படுகின்றது. உடைகளில் பல்வேறு மாடல்கள் வருவது போன்று ஃபர்தாக்களிலும் அம்பர்லா, அனார்கலி, கவுன் மாடல் என்று விதவிதமான மாடல்கள் வந்து, அவையே பெண்களின் விருப்பத்திற்குரிய ஆடையாக இருக்கின்றது.

கைப்பகுதி, இடுப்புப் பகுதி, பின்புறம்  இறுக்கமாகவும், கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் நிறைந்த ஃபர்தாக்களும், அதற்கேற்றாற்போல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட முக்காடுகளும் பார்க்காதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அலங்கார ஆடையாக, பெண்களை மேலும் மெருகூட்டும் ஆடையாக இன்றைய ஃபர்தாக்கள் மாறி விட்டன. இதேபோன்ற ஃபர்தாக்களைத் தான் பெண்கள் விரும்பி வாங்குவதாகவும், வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண ஃபர்தாக்கள் விற்பனையாவது இல்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமது அலங்காரமும், ஆடையும் தான் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றது. ஃபர்தாவாவது கொஞ்சம் அலங்காரமாக இருக்கட்டுமே! என்று ஏக்கத்துடன் பெண்கள் தங்கள் தவறை நியாயப்படுத்துகின்றனர்.

உண்மையில் தற்போது பெண்கள் அணியும் ஆடம்பரமான ஹிஜாப் தான் அவர்களை மேலும் மேலும் அலங்கரித்துக் காட்டுகின்றது. ஆண்களைத் தம் பக்கம் கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய காலத்து ஃபர்தாக்களுக்கு, சாதாரண சேலை, சுடிதாரே பரவாயில்லை என்று எண்ணுமளவுக்கு நமது பெண்களின் ஃபர்தா முறை மோசமாக இருக்கின்றது.

இத்தகைய அவல நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், ஹிஜாப் அணிவது எதற்காக? அதன் மையக்கரு என்ன? என்று நமது பெண்கள் விளங்காமல் இருப்பது தான்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறிய விஷயம் என்னவென்றால் ஹிஜாப் என்பது தனிப்பட்ட கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படும் ஓர் ஆடை கிடையாது. நமது உடல் அழகையும் அலங்காரத்தையும் மறைப்பதற்காக அணியக்கூடிய ஆடையே ஹிஜாப் ஆகும். நபித்தோழியர், தாம் உடுத்தியிருந்த ஆடையாலேயே தமது அலங்காரங்கள் வெளியே தெரியாத வண்ணம் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டனர். ஆனால் இன்றோ, அலங்காரத்தை மறைப்பதற்கென்று அணியப்படும் ஓர் ஆடையே அலங்காரமாக மாறி விட்டது. இதுபோன்ற ஹிஜாப்களை அணியாமல் இருப்பதே மேல்! இதோ இறைவன் கூறுகிறான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 24:31

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2718

நாகரீக ஆடையும் நரகப் படுகுழியும்

அரைகுறை ஆடை அணிபவர்களே! ஹிஜாப் என்ற பெயரில் தங்கள் அழகையும் ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பெண்களே! நீங்கள் அதிகமாக விரும்பி அணியக்கூடிய உங்கள் ஆடைகள், அலங்காரங்கள் அனைத்தும் நரகில் கொண்டு போய் தள்ளக்கூடிய நச்சுக்கள் என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் வாழ்கின்ற காலத்திலேயே சில முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பெண்களைப் பற்றியது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை(முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

நபிகளார் கூறிய அந்தக் கூட்டத்தார் இக்கால நாகரீகப் பெண்கள் தானோ என்ற ஐயம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கின்றது. ஏனெனில் இந்தப் பெண்களின் ஆடைகள் அவ்வாறே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தரையில் இழுபடக்கூடிய ஆடை அணிவதும் தடைசெய்யப்பட்டுள்ளது, நரகில் கொண்டு சேர்க்கக் கூடியது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

அறிவிப்பவர்:  அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 5787, 5788, 5789

நமது பெண்களில் பெரும்பாலானவர்களின் ஹிஜாப் தரையில் இழுபடும் விதத்தில் ஃபேஷனாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பாளிகளே! பொறுப்புணருங்கள்!

ஆண்களே! உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கும் புதல்வியர், சகோதரிகள், மனைவியர் ஆகியோர் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள் அணியக் கூடிய ஆடை, ஹிஜாப் போன்றவை எவ்விதத்தில் இருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அதேபோன்று, ஓர் ஆடை வாங்கித் தருவதற்கு முன், அதன் விலை மதிப்பை, தரத்தை, அலங்காரத்தைப் பார்ப்பதற்கு முன்னால், அது நமது பெண்கள் அணிவதற்குத் தகுதியானதாக உள்ளதா என்பதை உற்று நோக்குங்கள்! ஏனெனில், அதிகமான ஆண்கள் தமது மனைவி, மக்கள் எதைக் கேட்டாலும், எதன் பக்கம் கை நீட்டினாலும் துளி கூட யோசிக்காமல் அதை வாங்கிக் கொடுக்கின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவு என்ன என்பதைச் சிந்திப்பதில்லை.

உங்கள் பெண்களின் அழகும் அலங்காரமும் அந்நிய ஆண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்காட்சி அல்ல என்பதை உணருங்கள்! உங்கள் பெண்களுக்கும் உணர்த்துங்கள்! நாம் அலட்சியமாக இருக்கும் ஆடை விஷயம் கூட நம்மை நரகத்தில் தள்ளக்கூடியதாக இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்!

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

எனவே நமது குடும்பத்தாரை நரகிலிருந்து காக்கும் பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. பொறுப்பாளிகளே!  உங்களது கண்டிப்பின்மையும் கவனக்குறைவும் உங்கள் குடும்பத்துப் பெண்கள் நரகம் செல்லக் காரணியாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஸாலிஹான பெண்

இறைவன் தனது திருமறையில் ஸாலிஹான பெண்ணின் குணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.

அல்குர்ஆன் 4:34

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:35

காலம் மாறினாலும், மாற்றங்கள் பல தோன்றினாலும் மார்க்கச் சட்டங்கள், இறை நெறிகள் ஒருபோதும் மாறாது. எனவே, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் நமது ஆடை மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துவோம்.

கற்பைப் பேணி வாழக்கூடிய ஸாலிஹான பெண்ணாக, இறைவனின் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறும் பாக்கியத்தைப் பெறுபவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும்

நான்காம் ஆண்டு மாணவர்கள், இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்று திருமறை குர்ஆனும், மற்றொன்று  ஆதாரப்பூர்வமான நபிவழியும் தான் என்பதில் துளிகூட நமக்கு ஐயம் இல்லை.  இதைத்தவிர மார்க்கத்தின் பெயரால் சொல்லப்படும் அனைத்தும் வழிகேடு என்பதைப் பல வருடங்களாக உலகெங்கும் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அதில் முக்கியமான ஒன்றாக, திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளை ஏற்று கொள்ளக் கூடாது என்றும் அதன் முரண்பாடுகள் நீங்கும் வரை (ஹதீஸ் கலையின் விதிபடி) அதைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் நாம் செய்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் சில ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதன் காரணத்தாலும், அதற்கு எந்த அடிப்படையிலும் விளக்கம் சொல்ல முடியாது என்பதாலும்  திருக்குர்ஆனுக்கு முரண்பாடாக நபிகளார் பேசமாட்டார்கள் என்பதாலும் நாம் சில ஹதீஸ்களைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் மூஸா (அலை) அவர்கள் தொடர்பான, திருக்குர்ஆனுக்கு நேரடியாக  முரண்படுகிற ஒரு செய்தி.

அதைக்குறித்த ஒரு சிறிய நினைவூட்டலையும்  அதைத்தொடர்ந்து  அதற்கு எதிர் தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்களையும் அதனுடைய மறுப்பையும் பார்போம்.

மூஸா(அலை) அவர்கள் மலக்கை அடித்தார்களா?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 113)

1339- حَدَّثَنَا مَحْمُودٌ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ ابْنِ طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى – عَلَيْهِمَا السَّلاَمُ – فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا ؟ قَالَ : ثُمَّ الْمَوْتُ قَالَ فَالآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ.

உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரது கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், “இறைவா! இறக்க விரும்பாத ஒரு அடியாளிடம் நீ என்னை அனுப்பி விட்டாய்” என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிப்படுத்தி விட்டு, நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக்கொள்கின்றதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பிவைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை), “இறைவா, அதற்குப் பிறகு?” எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்” என்றான். உடனே மூசா (அலை) அவர்கள் “அப்படியானால் இப்பொழுதே (தயார்)” எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத்தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூசா (அலை) அவர்களது அடக்கவிடத்தைக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1339)

இந்த செய்தி பல வழிவழிகளில் திருமறை குர்ஆனுக்கு முரண்படுவதை நம்மால் காண முடிகிறது. எப்படி இந்தச் செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இறைக் கட்டளையை மீறும் வானவர்?

  1. மேற்கண்ட செய்தியில் ஒரு வானவர் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பி செல்கிறார். இது இறைவன் வானவர்களுக்கென்று வகுத்துள்ள இலக்கணங்களுக்கு மாற்றமானது. வானவர்கள் ஒருபோதும் அவர்களுக்கு ஏவப்பட்ட விஷயங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆனின் கூற்று.

நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக நெருப்பைவிட்டும்) காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கற்களுமாகும், அதில்  கடுமையும் பலமும் நிறைந்த வானவர்கள் உள்ளனர், அல்லாஹ்விற்கு  அவர்களுக்கு ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள், (இறைவன்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

இதே கருத்து 16:49,50, 21:26,27 ஆகிய வசனங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இறைக் கட்டளையை ஏற்க மறுக்கும் நபி?

மேற்கண்ட செய்தியில் அல்லாஹ் சொன்ன ஒரு கட்டளைக்குச் செவிசாய்க்காமல் மூசா (அலை) அவர்கள் வானவரை அடித்தது, இறைக்கட்டளை எந்நிலையிலும் ஏற்று நடக்கும் நபிமார்களுக்குரிய உயரிய அந்தஸ்தை உடைத்தெறிகிறது. எல்லா நபிமார்களும் இறைவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டுதான் நடந்தார்களே தவிர மாறு செய்யவில்லை. அப்படி அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்காமல் நடந்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை யூனுஸ் (அலை) அவர்களின் வரலாற்றின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

(நபியே!) நீர் உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம்.  அப்போது அவர் துக்கம் நிறைந்தவராக  அழைத்தார். அவரது இறைவனின் அருட்கொடை அவரை அடையாதிருந்தால், வெட்டவெளியில் பழிக்கப்பட்டவராக அவர் எறியப்பட்டு இரு(ந்திரு)ப்பார்.

(திருக்குர்ஆன் 68:49)

படைத்தவனின் கட்டளைக்கு உடனே கட்டுப்படுவதுதான் இறைத்தூதர்களின் பண்பு. ஆனால் மேற்கண்ட மூஸா நபி செய்தியில் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களின் கட்டளைக்கு அவர் கட்டுப்பட மறுப்பதும் அவரைத் தாக்குவதும் திருக்குர்ஆன் காட்டும் வழிமுறைக்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.

தோல்வியைத் தழுவும் வானவர்?

ஒரு பணிக்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான் என்றால் அதற்க்கான எல்லா ஆற்றல்களையும் கொடுத்து தான் இறைவன் அனுப்புவான். அந்த அடிப்படையில் வானவர் அடிவாங்கி விட்டுத் தோல்வியுடன் திரும்புவது என்பது அல்லாஹ்வுடய தோல்வியாகத் தான் அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் இந்தச் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு முரணாக அமைவதால் இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினோம்.

ஆனால் சிலர் இந்த வாதங்களுக்கு சில பதில்களைச் சொல்லியுள்ளார்கள். அவை நியாயமானதாக இருந்தால் அவற்றை நாம் ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அவர்களின் வாதம் நியாயமாக உள்ளதா? என்பதைப் பார்ப்போம்.

எதிர்வாதம்: 1

மூஸா (அலை) அவர்கள் தமக்குப் பிடிக்காத சில காரியங்களைக் காணும்போது கோபப்படுபவர்களாக இருந்துள்ளார்கள்.

மூஸா (அலை) ஆரம்பத்தில் தனது இனத்தைச் சேர்ந்த ஒருநபருக்கு ஆதரவாக மற்றொரு மனிதரை அடித்துக் கொன்று விடுகிறார். (திருக்குர்ஆன் 28:14)

அதேபோன்று மூசாவுக்கு வேதத்தை வழங்குவதற்காக அல்லாஹ், அழைத்த நேரத்தில் அவருடைய சமூகம் வழிகேட்டை நோக்கிச் சென்றது. மூஸா (அலை) திரும்பி வந்து பார்த்து, கடுமையாகக் கோபப்பட்டு தன்னுடைய சகோதரரையே அடிக்கச் செல்கிறார்கள். (திருக்குர்ஆன் 7:150)

மேலும் மூஸா (அலை) அவர்கள், ஹிழ்ர் (அலை) அவர்களுடன் சென்ற நேரத்தில் பொறுமையை இழந்த நபராகக் காணப்படுகிறார். (திருக்குர்ஆன் 18:67)

எனவே மூஸா (அலை) அவர்கள் இயற்க்கையாகவே கோபப்படக்கூடியவர் ஆவார். பொறுமை இல்லாதவர் ஆவார். அந்த அடிப்படையில் மூஸா, வானவரை அடித்திருப்பார்.

வாதம்: 2

உயிரை எடுக்க வந்த வானவரை மூஸா (அலை) அறியாத காரணத்தினால் தான் வானவரை அடித்துள்ளார்கள். ஏனென்றால் சில நபிமார்கள் வானவர்களை அறியாமல் இருந்துள்ளார்கள்.

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா? அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறியபோது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் (அவருக்கு) அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து “சாப்பிட மாட்டீர்களா?’’  என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். “பயப்படாதீர்!’’ என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

 அல்குர்ஆன் 51:24-28

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் வானவர்களை சில நேரங்களில் நபிமார்கள் அறியமாட்டார்கள் என்பது தெளிவாகிறது .

இன்னும் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சிறந்த அந்தஸ்தில் இருந்ததால் தான் வானவர் மூஸா (அலை) அவர்களைத் திருப்பி அடிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

என் இறைவா! உன் அடிமை மூஸா என் கண்ணை பிதுங்கச் செய்து விட்டார். உன்னிடம் அவர் அந்தஸ்திற்குரியவராக இல்லாவிட்டால் அவரை கஷ்டப்படுத்தி இருப்பேன் என மலக்குல் மவ்த் கூறினார்.

(நூல்: அஹ்மத் 10484)

வாதம் : 3

பொதுவாக நபிமார்களுக்கு அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் வாழ்வு, மரணம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் வழங்குகிறான.

உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி( 4435)

எனவே மூஸா (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் அவருக்கென்று உள்ள உரிமையை வழங்குகிறான். ஆனால் வந்தவர் வானவர் என்பதை அறியாத காரணத்தாலும் வந்த வானவர் “உமது இறைவனுக்கு பதிலளி” என்று சொன்ன காரணத்தாலும் மூஸா அலை) வேறு யாரோ என்று நினைத்து அடித்து விட்டார்கள்.

இவை தான் இந்த ஹதீஸை நியாயப்படுத்த இவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.

வாதங்கள் நியாயமானவையா?

நம்பகமான அறிவிப்பாளர்களின் வழியாக ஒரு செய்தி வந்து, அது திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக இருக்குமானால் அதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சரியான விளக்கம் கொடுப்பது தவறில்லை. அந்த மாற்று விளக்கம் சரியாக இருந்தால் அதை நாம்தான் முதலில் ஏற்றுக் கொள்வோம். ஆனால் மாற்று விளக்கமே இன்னும் சில அடிப்படைகளுக்கு முரண்படுமானால் அதை எவ்வாறு ஏற்று கொள்ள இயலும்? அந்த அடிப்படையில்தான் குறிப்பிட்ட செய்திக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கமும் அமைந்துள்ளது.

அவர்களின் முதல் வாதம்

நபி மூஸா (அலை) அவர்கள் கோபக் காரராகவும் நிதானமற்றவராகவும் இருந்ததால் தான் வானவர்களை அடித்தார்கள் என்று வாதிக்கிறார்கள்.

இந்த வாதம் நபிமார்களுக்குரிய நற்பண்புகளை இழிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில் இவர்கள் கொடுக்கும் விளக்கம் “மூஸா (அலை) அவர்களை முரடராகச் சித்தரிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் அறியாமைக் காலத்தில் செய்த ஒரு தவறை ஆதாரமாக வைத்து அவர்களுக்கு முரடர் பட்டத்தை கொடுப்பது நியாயமா?

மூஸா (அலை) அவர்கள்  தம்முடைய சமூகம் வழிகேட்டிற்குச் செல்லும் போது, அதற்க்கு பொறுப்பாளியாக இருந்த ஹாரூனிடம் கோபப்படுகிறார்கள். இதை வைத்து கொண்டு மூஸா இயற்கையாகவே கோபப்படக்கூடியவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நபிகளாரே இதுபோன்று பல இடங்களில் கோபப்பட்டுள்ளார்கள்.

 அந்த அடிப்படையில் பார்த்தால் நபிகளாரின் இயற்கையான குணமும் கோபப்படுவதுதான் என்று சொல்வார்களா?

இதிலும் உச்சக்கட்டம் என்னவென்றால் மூஸா (அலை) அவர்களை பொறுமை இல்லாதவர்கள் என்று சொன்னதுதான். நபிகளார், மூஸா (அலை) அவர்களைப் பற்றி புகழ்ந்து சொன்ன ஒரு விசயத்தையே மறுத்துவிடுகிறார்கள்.

மூஸா(அலை) அவகளுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர்  புண்படுத்தப்பட்டார். இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார்” என்று கூறினாகள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் மாஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (3405)

 மூஸா (அலை) அவர்கள் ஒருவரைக் கொலை செய்தது, இருவர் சண்டையிட்டுக் கொண்ட சந்தர்ப்பத்தில். இந்த இடங்களில் கோபம் வருவது இயற்கையே.

ஹாரூன் (அலை) அவர்கள் மீது கோபம் கொண்டது, ஏகத்துவத்திற்கு மாற்றமாக இணை வைப்புக் கொள்கையில் மக்கள் சென்றதால்தான்.

இந்த இடங்கள் கோபம் ஏற்பட வாய்ப்புள்ளவை. இறைவனிடமிருந்து வந்த வானவர் ‘அல்லாஹ்வுக்குப் பதிலளி’ என்று சொன்னது எப்படி கோபத்தை ஏற்படுத்தும்? இது அவ்வளவு கடுமையான வாசகமா? கோபத்தை ஏற்படுத்தும் சொல்லா?

நபி மூஸா (அலை) அவர்கள் கோபட்ட இரண்டு இடங்களும் தன்னைப் பற்றி விசாரித்ததற்காக அல்ல. மக்களில் உள்ள தவறுக்காகத் தான் என்பதை கவனதில் கொள்ள வேண்டும்.

இறைவன் நபிமார்களுக்கு இரண்டு வாய்ப்புகளைத் தருகிறான். எனவே அந்த வாய்ப்பை வானவர் தரவில்லை அதனால்தான் அடித்தார்கள் என்று அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.

இரண்டு வாய்ப்புகள் உள்ள விசயத்தில் வானவர் அதைத் தரவில்லையென்றால் அதற்காக அவரை அடிக்க வேண்டுமா? அல்லது இறைவன் எனக்கு இரண்டு வாய்ப்புகள் தந்துள்ளான் என்று அவரிடம் சொல்ல வேண்டுமா? இறைவன் அனுப்பிய வானவரிடம் இவ்வாறு நடப்பது இறைவனை அவமதிப்பது போல் ஆகாதா?

இரண்டு வாய்ப்பு இருக்கும் போது அல்லாஹ் ஏன் வாய்ப்பளிக்காமல் வானவரை அனுப்பினான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இந்தக் கேள்விக்குப் பதிலாக, வந்தவர் வானவர் என்று தெரியவில்லை. எனவேதான் மூஸா (அலை) அவர்கள் அடித்துவிட்டார். வானவர் என்று தெரிந்திருந்தால் அடித்திருக்க மாட்டார் என்று வாதம் சரியாக இருந்தால் வானவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

‘நீங்கள் தெரியாமல் அடித்துவிட்டீர்கள். நான் இறைவானால் அனுப்பப்ட்ட வானவர்’ என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு மூஸா (அலை) அவர்கள் ‘நான் இறைத்தூதர். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நீர் எப்படி உயிரை தருமாறு கேட்கலாம்’ என்றுதான் பதில் இருந்திருக்க வேண்டும்.

 இதே போன்று அவர்கள் எடுத்து காட்டக்கூடிய இப்ராஹீம் (அலை) அவர்களிடத்தில் மலக்குகள் மனித வடிவத்தில் வந்ததை இப்ராஹீம் (அலை) அவர்கள் அறியாத போது வானவர்கள் தங்களை யார் என்று தெளிவு படுத்துகிறார்கள்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸிலோ அல்லது அவர்கள் எடுத்துக் காட்டும் அஹ்மதில் வரக்கூடிய செய்தியிலோ மலக்குல் மவ்த் அடிவாங்கி, பிதுங்கிய கண்ணோடு இறைவனிடத்தில் ஓடுகிறார்.

அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் எதிலும் நியாயம் இல்லை. வலிந்து சரிசெய்ய வேண்டும் என்பதற்காகச் சில வாதங்களை வைத்திருக்கிறார்கள். அவை திருக்குர்ஆனின் வசனங்களுக்கு மாற்றமாகவும், ஏற்கும் வகையில் இல்லாமலும் இருக்கிறது.

திருக்குர்ஆனுக்கு முரணில்லாமல் நியாயமான முறையில் இந்தச் செய்தியை விளக்கினால் நாமும் ஏற்கத் தயாராகவே இருக்கிறோம்.

—————————————————————————————————————————————————————————————————————

மறுமைக்காகவே இந்த உயிர்

நாஷித் அஹ்மத்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக இஸ்லாமிய வரலாற்றைச் சீர்படுத்தி, புரட்சிகர வரலாறாகப் புரட்டிப் போட்டது, தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை உருவாக்கிய எழுச்சிமிகு மாற்றம்.

கப்ரும், மய்யித்தும், தட்டும், தாயத்துமே மார்க்கம் என எண்ணிக் கொண்டிருந்த அறியாமைமிகு சமூகத்தின் சிந்தனைகளைத் தட்டியெழுப்பி, இறைவனின் வேதவரிகளையும், நபி (ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் கொண்டு உரமேற்றி மிகப்பெரிய சிந்தனை புரட்சியினை, ஏகத்துவப் பிரச்சாரம் இந்த மண்ணில் நிகழ்த்தியிருக்கிறது. இறைவனுக்கே புகழனைத்தும்..!

சாதாரண பயணமல்ல! இந்தப் புரட்சிக்காக மிகப் பெரிய விலையினை இந்தச் சமூகம் கொடுக்க வேண்டியிருந்தது. தொழும் போது விரலசைத்தால் அவன் ஒரு வஹாபி என முத்திரை குத்தப்படுவது மட்டும் தான் வெளியுலகிற்குத் தெரிந்த தகவலாக இருந்தது. திரைமறையில், அசைத்த அந்த விரல் ஒடித்து நொறுக்கப்பட்ட வரலாறு, வேதனையின் மறுபக்கங்கள்!

நெஞ்சில் கைகட்டுதல் மட்டுமே நபிவழி என்கிற போதனையைச் செய்தால் இவனெல்லாம் நஜாத்காரன் என்று பட்டம் சூட்டி வேடிக்கை பார்த்தது சமூகம்.

ஆனால் தனது தொழுகையில், தனது கையை நெஞ்சில் கட்டுவதற்காகவே அடி உதைகளையும் பலகட்ட தியாகங்களையும் சகித்த வரலாறுகள் திரைமறைவில் இருப்பவை. ஏன் இந்த தியாகம்?

அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் என்கிற சாதாரண இந்த வரிகள், அன்றைக்கு மக்கத்து காஃபிர்களின் குலை நடுங்க வைத்த வரிகளாயின. அதனால் தான் சாதாரண அந்த வரிகளுக்கு ஈடாக, சஹாபாக்களின் உயிரை அவர்கள் விலை பேசினர். சொல்லெணா இன்னல்களுக்கு அந்தச் சமூகத்தை அவர்கள் ஆளாக்கினர். ரம்பத்தால் தோல்களும், சதைத் துண்டுகளும் கிழித்தெறியப்பட்டு, உள்ளிருக்கும் எலும்புகளை அது பதம் பார்க்கும்.

கதை போலக் கேட்டு விட்டுச் செல்கிறோம். நபிமார்களும் நபித்தோழர்களும் இதை நிதர்சனத்தில் அனுபவித்தவர்கள். இக்கொடுமையிலிருந்து விடுபட அவர்கள் கோடிகள் எதையும் கொட்டிக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படவில்லை. சொத்துக்களையும் செல்வங்களையும் வாரி இறைத்தால் உங்களை விட்டு விடுவோம் என பேரம் பேசவில்லை.

நடந்த பேரமெல்லாம், ‘இந்தக் கலிமாவை மொழிவதை மட்டும் நிறுத்து, உன்னை விட்டு விடுகிறேன்’ என்பது தான். நிறுத்தினார்களா? கலிமாவை மொழிவதையோ, அதை உயிர் மூச்சாகக் கொள்வதையோ நிறுத்துவதற்குப் பதில், என் மூச்சை நிறுத்தி விடுவது மேலானது எனத் துணிந்தார்களே!

அதில் நமக்குப் படிப்பினை இல்லையா?

அந்தப் பாடமும் படிப்பினையும் தான், நபியினுடைய சுன்னாஹ்வைக் கடைப்பிடிப்பதில் எத்தகைய எதிர்ப்பு உருவானாலும், அதை எதிர்கொண்டு முறியடிப்போம் என்கிற துணிச்சல் இன்றைய ஏகத்துவவாதிகளின் உள்ளங்களை ஆட்கொள்ள ஒரே காரணம்.

1980களில் எதையெல்லாம் இஸ்லாம் என நினைத்து இந்தச் சமூகம் பின்பற்றி வந்ததோ அவை அனைத்துமே நரகப் படுகுழியில் நம்மைச் செலுத்தக்கூடிய மாபாதகக் காரியங்கள் என தெளிவான முறையில் போதிக்கப்பட்டன.

மத்ஹபை வெறுத்ததில் துவங்கி, தர்காக்களிலிருந்து மக்களை மீட்டெடுத்தது வரை, ஒவ்வொரு அசைவும் தியாக வரலாறுகள் தாம். குடும்பத்தை இழந்தோம்.. சமூகத்தின் அங்கீகாரத்தை இழந்தோம்..

சத்தியக் கொள்கையை நாவில் உச்சரித்த ஒரே காரணத்திற்காக ஆள்வோராலும், ஆதிக்க சக்தியினராலும், மாற்று கொள்கையில் இருக்கும் சக சமூகத்தவராலும் சொல்லெணாத் துயரங்களுக்கு ஏகத்துவக் கொள்கைவாதிகள் ஆளாயினர். சமூக பரிஷ்காரம் செய்யப்பட்டனர். குடும்பத்தாரின் ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்து, மையவாடி கதவுக‌ள் மூடப்பட்டன.

நெல்லை பேட்டையில் நிகழ்த்தப்பட்ட வன்முறை, சென்னை திருவல்லிக்கேணி தடியடிகள், மேலப்பாளையத்தில் பள்ளிவாசலின் புனிதம் என்றும் பாராமல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என தமிழக தவ்ஹீத் வரலாறு தாங்கி வந்த தியாக வரலாற்றினைச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

சோதனைகளை எதிர்கொள்ளும் கொள்கை வாதி, எத்தகைய நிலையிலும் கலங்காமல் நிற்பதற்கு ஒரே காரணம், அவன் எதிர்கொள்ளும் சோதனைகள், நபிகளார் காலத்தில் ஸஹாபா பெருமக்கள் எதிர்கொண்டவற்றில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்கிற மகத்தான ஆறுதல், உடலிலும் மனதிலும் உருவாகியிருக்கும் காயங்களுக்கு அருமருந்தாய் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் உயிர் மூச்சு, இதயத் துடிப்பு எல்லாமே ஏகத்துவம் தான். ஷிர்க் என்ற பாவத்தின் நிழலில் கூட, தவறியும் நாம் மிதித்து விட மாட்டோம்.

உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

என அல்லாஹ் கூறுவது போன்று இப்ராஹீம் (அலை) அவர்களது வழியில் நின்று,  ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதில், அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பரிப்பதில் மூஸா, ஹாரூன் (அலை) அவர்களைப் போன்று செயல்படுவோம்.

மார்க்க  அடிப்படைக்கு மாற்றமாக நடத்தப்படும் எந்தவொரு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நமக்குத் தேவையேயில்லை. இந்த லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகையில் எண்ணிக்கை நமக்கு ஒரு பொருட்டே கிடையாது. இது நம்முடைய அளவு கோல் மட்டுமல்ல, வல்ல அல்லாஹ்வின் அளவு கோலும் இது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

லா இலாஹ இல்லல்லாஹ்.. என்கிற மந்திரச் சொல்லை நாவினால் உதிர்த்த மாத்திரத்திலேயே நேசத்திற்குரிய தன் குடும்பத்தார் தன் மீது மண்ணை வாறி வீசுவர் என்பதை எண்ணிப் பார்த்திருப்பார்களா நம் உத்தம நபிகளார்?

அது மனதில் ஏற்படுத்தியிருக்கும் காயம் எத்தனை ஆழமானது..! அன்று வரை நட்பாக, சகோதரர்களாகப் பழகிய ஊராரே தன்னை ஏளனம் செய்வதையும் இழிவு செய்வதையும், ஒரு கட்டத்தில் கொலை செய்யப் படை திரட்டி வருவதையும் யாரேனும் சகிப்பாரா? அந்த மாமனிதர் அனைத்தையும் சகித்தார்.

பிறந்த தாய்மண்ணை விட்டும், அனைத்தையும் தியாகம் செய்து அகதியாக நாடுகடந்து செல்கின்ற வேதனையை இவ்வுலகில் எவராலும் எளிதில் ஏற்றுக் கொண்டுவிட இயலுமா?  அந்த மகத்தான மனிதர் ஏற்றார்.

ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தன் இன்னுயிரை நீத்த யாஸரிடமும் சுமைய்யாவிடமும் நமக்குப் படிப்பினைகள் இல்லையா? நான் ஏற்றிருக்கும் இந்தக் கொள்கை, இவ்வுலகில் கிடைக்கும் அற்ப சுகங்களுக்காக அல்ல. இவ்வுலகில் ஏற்படும் அற்பமான சோதனைகளை வைத்து அலசப்படுவதுமல்ல!

இந்தக் கொள்கை, இவ்வுலக வாழ்க்கைக்கானதல்ல! மாறாக, இந்தக் கொள்கை என் மரணத்திற்கானது!

மரணத்திற்குப் பிறகு மகத்தான வாழ்க்கை இருப்பதை உளமாற நம்பியிருக்கும் சமூகம், அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக விலை மதிக்க முடியாத இந்த உயரிய கொள்கையை அடமானம் வைத்து விட மாட்டோம் என்பதை உரக்கச் சொல்வதே இஸ்லாமிய தியாக வரலாறு நம் ஒவ்வொருவருக்கும் தருகின்ற பால பாடம்..!

வலிப்பு நோயின் வேதனை தாளாமல், எப்படியாவது அதிலிருந்து நிவாரணம் கிடைத்து விடாதா என ஏங்கிய பெண்மணியின் வரலாற்றை ஹதீஸ்களில் நாம் படித்திருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்வீர்களா? என கோரிக்கை வைத்த அந்தப் பெண்ணிடம், நபிகள் பெருமகனார் சொன்னது, ‘நான் பிரார்த்தனை செய்து, அல்லாஹ்வும் நாடி விட்டால் உனது நோய் குணமாகி விடும். ஆனால், இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக இந்தச் சிரமத்தை சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறாயா? அப்படியெனில், அதற்குப் பகரமாக சொர்க்கத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் உனக்குத் தயார் செய்து தருவான். நீ எதை விரும்புகிறாய்?’ என்று கேட்ட மாத்திரத்தில் வேதனையுடன் வந்த அந்தப் பெண்மணி, ‘சொர்க்கம் கிடைக்கும் என்றால், இந்த அற்பமான வேதனையை நான் சகித்துக் கொள்ளத் தயார்! வலிப்பு வரும் நேரத்தில் என் ஆடை விலகாமல் இருப்பதற்கு மட்டும் பிரார்த்தியுங்கள்’ என திரும்பிச் சென்றார்களே..

சுப்ஹானல்லாஹ்… இதை விட வேறென்ன ஈமானிய உறுதியை நாம் காணவியலும்..?!

நாம் ஒவ்வொருவரும் அத்தகைய ஈமானின் உச்சத்தைத் தொட்ட இறை நேசர்களின் வழித்தோன்றல்கள்.

அத்தகைய உறுதி, இன்றைய இளம் தலைமுறையிடம் உரமேற்றப்பட்டதில் தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் நிச்சயம் அது மிகையல்ல!

கொள்கைக்காகக் குடும்பத்தைப் பகைப்பதில் துவங்கிய அந்த உறுதி, எத்தகைய ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளையும் துணிவுடன் எதிர்கொள்வது வரை நீள்கிறது.

இங்கு தக்லீது இல்லை! சுயநலம் இல்லை! பெருமையும் பகட்டும் இல்லை! தனி நபர்களுக்கென்று எந்த‌ முக்கியத்துவமில்லை!

அனைத்தையும் வெறும் வாய்ச் சொல்லால் இல்லாமல், செயலால் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். தாவா என வந்து விட்டால், தன்னலம் பாராமல் பணத்தையும் நேரத்தையும் உடலுழைப்பையும் செலுத்துகின்ற கொள்கைச் சகோதரர்கள் இந்த இயக்கத்தின் இரும்புத் தூண்களாக‌ நின்று கொண்டிருக்கின்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் கடைக்கோடி உறுப்பினர்க‌ள் அவர்க‌ள்! அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. படைத்த ரப்புல் ஆலமீன் மறுமையில் தரவிருக்கின்ற மகத்தான நற்பேற்றினை அடைந்து விட வேண்டும் என்கிற பேராசை மட்டுமே அவர்க‌ள் உள்ளத்தில் தணியாத தாகமாக இருந்து வருகிறது.

அத்தகைய கொள்கைக் குன்றுகளை வைத்து, அல்லாஹ் தனது மார்க்கத்தை மேலோங்கச் செய்யப் போதுமானவன். நாம் செய்ய வேண்டியதெல்லாம், மறுமை ஒன்றையே இலக்கெனக் கொண்டு துவங்கப்பட்ட இந்தப் பயணத்தில், அதன் இறுதிவரை நம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஒன்று தான்.

இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனும் போது அதில் புரட்சிக‌ள் ஏற்படுத்த அந்த வல்லோனே போதுமானவன். நாம் எந்தத் துரும்பையும் அசைத்து விட முடியாது. ஆனால், அல்லாஹ் ஏற்படுத்த விரும்புகிற மாற்றங்களுக்கும் புரட்சிகளுக்கும் நம்மையும் காரணியாக்க அவன் விரும்பி விட்டால் அதைவிட நற்பேறும் பாக்கியமும் இந்த அடிமைகளுக்கு வேறென்ன இருக்க முடியும்?

இறைநம்பிக்கையாளர்களின் உயிர்களையும், செல்வங்களையும் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்குப் பகரமாக அவர்களிடமிருந்து அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, (எதிரிகளைக்) கொல்கின்றனர்; கொல்லவும் படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட உண்மையான வாக்குறுதி! தனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் அல்லாஹ்வை விட யார் இருக்க முடியும்? எனவே, நீங்கள் ஒப்பந்தம் செய்த இவ்வியாபாரத்தின் மூலம் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9:111