ஏகத்துவம் – நவம்பர் 2013

தலையங்கம்

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறு செய்வதில் தான் துவங்குகின்றது. அது தான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.

அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.

கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர்ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்கு சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.

வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வ சாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.

வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?

மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.

இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.

வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.

வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.

ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை(க் கண்டிக்காதீர்கள்😉 (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமேஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 24

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். 

இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3971

இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்

அல்குர்ஆன் 41:20

—————————————————————————————————————————————————————-

மனிதனுக்கேற்ற மார்க்கம்

உலகில் ஏராளமான மதங்கள் உள்ளன. இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களைப் போன்று அல்லாமல் ஏராளமான தனிச்சிறப்புகளைப் பெற்று, தனித்து விளங்குகின்றது. அவ்வாறான தனிச்சிறப்புகளில் ஒரு விஷயம் குறித்து இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

மனிதன் உலகத்தில் வாழும்போது நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கடவுள் நம்பிக்கை உள்ளவரானாலும் நாத்திகரானாலும் இந்த உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள். இறைவனை மறுக்கும் நாத்திகன், “கடவுள் எதற்கு? உலகத்தில் வாழும் போது நல்லவனாக வாழ்ந்தால் போதும்’ என்று கூறுவான்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், “நாங்கள் கடவுளை நம்புவதே நல்லவர்களாக வாழத்தான்’ என்று கூறுவார்கள். பாவங்களைச் செய்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இருப்பதில்லை. மொத்தத்தில் எல்லா மனிதனிடத்திலும் இந்த உணர்வை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

அல்குர்ஆன் (91:7)

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

அல்குர்ஆன் (90:10)

நல்லவனாக வாழும் போது கிடைக்கின்ற நன்மைகளையும் தீயவனாக வாழும் அதனால் உலகில் ஏற்படுகின்ற விளைவுகளையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். நல்ல பாதையில் செல்பவனின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக உள்ளது. தீயவழியில் செல்பவனின் உடல், உள்ளம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்தும் கெட்டு உலகில் சீரழிகிறான். எனவே தான் உலகில் நல்லவனாக வாழ வேண்டும் என்ற அடிப்படையை அனைவரும் கூறுகின்றனர்.

ஆனால் இதற்கான சரியான வழியை அநேக மக்கள் அறியாமல் இருக்கின்ற காரணத்தால் இந்த ஆசை பலருக்கு நிறைவேறுவதில்லை. இஸ்லாம் மட்டுமே இதற்குச் சரியான தீர்வைக் கொடுக்கின்றது. இஸ்லாம் அல்லாத வேறு எந்த மதத்திலும் இதற்கான தீர்வைக் காண முடியாது.

எந்த நம்பிக்கை மனிதனிடத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமோ அந்த நம்பிக்கையை உண்மையாகவும் ஆழமாகவும் ஏற்படுத்தும் வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்.

பொதுவாக, பெரும்பாலான மதங்கள் இறைநம்பிக்கையைப் போதிக்கின்றன. அது போல் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் – நரகம் இருப்பதையும் கூறுகின்றன. இந்த இரண்டும் தான் மனிதன் சீர்பெறுவதற்கு அடிப்படையான விஷயங்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் இஸ்லாம் மனித குலத்திற்கு எப்படிப் போதிக்கின்றதோ அதுபோல் வேறு எந்த மதமும் போதிக்கவில்லை.

உண்மையான இறை நம்பிக்கை

கல், மண், மரம், மனிதன் என இறைவனல்லாத இறைவனுடைய படைப்புகளைக் கடவுள் என்று நம்பி, அவற்றுக்கு மனிதனைப் போன்று பலவீனங்கள் இருப்பதாகவும் நம்பினால் அந்த நம்பிக்கை மனிதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

எவன் உண்மையான இறைவனோ அவனை இறைவன் என்று ஏற்க வேண்டும். அவனுக்குப் பலவீனங்கள் இல்லை என்றும், அனைத்திற்கும் அதிகாரம் படைத்தவன் என்றும் நம்ப வேண்டும்.

இறைவன் என்றால் யார்? அவன் எப்படிபட்டவன்? அவனுடைய அதிகாரங்கள் எவை? அவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சரியாகப் புரிந்தால் தான் அது சரியான இறைநம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையே மனிதனிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

இஸ்லாம் இப்படிப்பட்ட தூய இறைநம்பிக்கையை மனிதனுக்குப் போதிக்கின்றது. இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையைப் போன்று உலகில் வேறு எந்த மதமும் கூறவில்லை. அந்த வகையில் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

மனித வாழ்வின் நோக்கம்

அடுத்து, இந்த உலகத்தில் இறைவன் மனித குலத்தை எதற்காகப் படைத்தான்? மனிதன் உலகத்தில் படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? மரணத்திற்குப் பிறகு என்ன நிலை? ஆகிய கேள்விகளுக்கு சரியான பதிலை இஸ்லாம் மட்டுமே கூறுகின்றது.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை இறைவன் மனித குலத்திற்குக் கொடுத்துள்ளான். அந்த வழிகாட்டல் குர்ஆனும் நபிமொழியாகவும் உள்ளது. இவ்விரண்டையும் பேணி வாழ்வதே மனிதப் படைப்பின் நோக்கம்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன் 51:56)

இந்த உலகத்தில் மனம்போன போக்கில் வாழாமல் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்வில் இறைவன் சொர்க்கம் என்ற சந்தோஷமான வாழ்வைத் தருவான். இறைக் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தால் நரகம் என்ற கஷ்டமான கடும் நோவினையுள்ள வாழ்வைத் தருவான் என்ற மறுமை நம்பிக்கையை இஸ்லாம் போதிக்கின்றது.

பல சமூக மக்கள் இறைவன் தங்களை ஏன் படைத்தான் என்பதையே புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகள் அவர்களிடத்தில் இல்லை.

இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகிய இரண்டும் தான் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் முதலில் ஆழமாகப் பதிய வேண்டிய அம்சங்கள். இதுதான் மனித சீர்திருத்தத்திற்கு அஸ்திவாரம்.

மனிதனைச் சீர்படுத்தும் மறுமை நம்பிக்கை

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத ஒருவன் நீதமாக நடக்க நினைக்கின்றான். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் கட்டுப்படாத இவன், சில லட்சங்களுக்கு அடிபணிந்து நீதம் தவறிவிடுவான். இவனுடைய கொள்கை உறுதியின் விலை சில லட்சங்கள் தான். இன்னும் உறுதி உள்ளவனாக இருந்தால் அதற்குத் தகுந்தாற்போல் விலை கொடுத்தால் சறுகிவிடுவான்.

அல்லது அவனுடைய உயிருக்கோ அவனுடைய குடும்பத்தார்களுக்கோ பாதிப்பு என்றால் அப்போது நீதம் தவறிவிடுவான். இப்படி அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்களை இந்த உலகத்தில் எப்படியும் வழிகெடுத்து விடலாம்.

ஆனால் ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாக இஸ்லாம் கூறுவது போல் நம்பினால், எந்தப் பொருளையும் கொடுத்து அவனை விலைக்கு வாங்க முடியாது. எப்படிப்பட்ட மிரட்டலுக்கும் அவன் அடிபணிய மாட்டான்.

ஏனென்றால் இந்த உலகம் முழுவதையும் அவன் அற்பமாகக் கருதுகிறான். இந்த உலகத்திற்குப் பின் மறுமை வாழ்வு உள்ளது என்றும் அந்த மறுமை வாழ்க்கை, உலக வாழ்வை விடச் சிறந்தது என்றும் நம்புகிறான். அற்பமானதைப் பெற்று சிறந்ததை இழக்க முன்வரமாட்டான்.

சுயநலம் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. மனிதன் நல்லது கெட்டதைப் பார்த்து முடிவெடுப்பவனாக இல்லை. தீயதைச் செய்தால் தனக்கு நன்மை ஏற்படும் என்றால் மனிதன் தீயதையே தேர்வு செய்கிறான். நல்லது செய்தால் தனக்கு சிரமம் வரும் என்றால் நன்மையான காரியத்தைப் புறக்கணித்து விடுகிறான். இப்படிப்பட்ட மனிதனை எப்படி திருத்துவது?

வெறுமனே இந்த நன்மையான காரியத்தைச் செய் என்று சொன்னால் அவன் செய்ய மாட்டான். இதை செய். உனக்கு அதைத் தருகிறேன் என்றால் தான் நல்ல காரியத்தைக் கூட அவன் செய்வான். அவனுக்கு தரக்கூடிய பரிசு இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பரிசுக்காக இந்த உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்தால் அதையும் தியாகம் செய்ய முன்வருவான். நல்லவற்றின் பக்கம் நிலைத்து நிற்பான்.

மனிதனின் இந்த சுயநலத்தை அறிந்து வைத்துள்ள இறைவன், “உலகில் நீ நல்லவனாக வாழ்ந்தால் மறுமையில் உனக்கு நல்ல வாழ்க்கை உண்டு’ என்று வாக்களிக்கின்றான். இந்த சுயநலத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த சுயநலம் மனிதனை நல்லவனாக வாழ வைக்கின்றது.

எனவே தான் இஸ்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவதை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக வலியுறுத்துகின்றது. அல்லாஹ்வும் இதைக் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்துகின்றான்.

நடந்தேறிய உண்மை

இது வாôத்தை ஜாலமோ, வாய்ப்பேச்சு தத்துவமோ இல்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பபோல் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத சித்தாந்தமில்லை.

இந்த நம்பிக்கையை ஏற்றவர்களை தலைசிறந்தவர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கு உண்டு.

அரபு மண்ணில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபுகள் எல்லா தீமைகளையும் செய்து வந்தனர். இணை கற்பித்தல், கொலை, கொள்ளை, விபச்சாரம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், பெண்ணடிமைத் தனம், ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சதாவும் சண்டையிட்டுக் கொண்டிருத்தல் என எல்லா வழிகேடுகளும் அவர்களிடம் நிறைந்திருந்தது.

இஸ்லாம் கூறுகின்ற அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பின் அவர்கள் உலகிலேயே தலைசிறந்தவர்களாகவும் மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும் மாறினார்கள். இஸ்லாம் அவர்களை உலகையாளும் மன்னர்களாக மாற்றியது. ஒழுக்கம், நேர்மை, நாணயம் என அனைத்து நற்பண்புகளுக்கும் உரியவர்களாக மாறினார்கள். இது மறுக்க முடியாத, வரலாற்றில் நடந்தேறிய உண்மை.

இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் தான் இப்படிப்பட்ட மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

இன்றைக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் அதற்கு என பிரத்தியேகமாக சிகிச்சை செய்வதைப் பார்க்கின்றோம்.

இருபத்து நான்கு மணி நேரமும் போதையிலே திளைத்திருந்த சமுதாயத்தை எந்த சிகிச்சையும் இல்லாமல் மதுவிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தது இஸ்லாம். குடம்குடமாக மதுவைப் பருகியவர்கள் தெருக்களில் வந்து அதைக் கொட்டினர். சரியான இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் ஏற்படுத்திய விளைவு தான் இவை.

இந்த நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துவதற்கு அடிப்படையானது. இது ஒருவருடைய உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிகின்றதோ அந்த அளவுக்கு அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதன் பிறகு அவருக்கு உபதேசம் செய்தால் அந்த உபதேசம் அற்புதமாக வேலை செய்யும்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி

இந்த அடிப்படையை மனிதன் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் அடிக்கடி இதை நினைவுகூர வைக்கின்றது.

ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத் தொழுகையில் அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும் மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நினைவூட்டப்படுகின்றது.

உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத் தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் வியாபார நேரத்தில் கடையை மூடிவிட்டு ஜும்ஆ தொழுகைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சிகள் எல்லாம் எதற்காக?

இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் எதையும் நான் தியாகம் செய்வேன். மற்ற அனைத்தையும் விட எனக்கு இறைக்கட்டளை முக்கியமானது என்ற எண்ணத்தை மனிதனிடத்தில் ஏற்படுத்தி அவனைச் சீர்திருத்துவதற்காகத் தான்.

இறை நினைவு கலந்த வாழ்வு

மேலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனை எல்லா தருணங்களிலும் நினைக்கும் வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பின்பு, மலம் ஜலம் கழிப்பதற்கு முன்பு, பின்பு உறங்குவதற்கு முன்பு, பின்பு இவ்வாறு மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்து சூழ்நிலைகளிலும் இறை சிந்தனையை மனிதனுக்கு இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.

ஆன்மீகத்தை வாழ்க்கையின் ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்துவிடாமல் வாழ்க்கை முழுவதிலும் இறை நம்பிக்கை வியாபித்து இருக்கும் வகையில் இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது. இந்த உலகத்தில் வாழ்வதே இறைவனுக்காகவும் மறுமை வாழ்வுக்காகவும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.

மனிதனுடைய யதார்த்த நிலையைப் பாதிக்கும் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அவனுக்குத் தேவையான பல விஷயங்களை மனிதன் மறந்துவிடுவான். எதை மறந்தாலும் அந்த நேரத்திலும் இறைவனை மறந்துவிடக்கூடாது என்ற அளவுக்கு இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது.

இதேபோன்று சந்தோஷ நிலையிலும் இறைவனை முதலில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் அளவுக்கு அவனிடத்தில் இறை சிந்தனையை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. இந்த நம்பிக்கை தான் மனிதனிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

யாரிடத்தில் கோளாறு?

முஸ்லிம் அல்லாத பலர் இஸ்லாத்திற்கு வராமல் தயங்குவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் நம்மைப் போன்று வட்டி, வரதட்சணை, மோசடி போன்ற காரியங்களைச் செய்கிறார்கள். எத்தனை முஸ்லிம்கள் ஐந்து வேளை சரியாகத் தொழுகிறார்கள்? முஸ்லிம்களின் செயல்பாடும் நம்முடைய செயல்பாடும் ஏறத்தாழ ஒன்றாகத் தான் உள்ளது. பிறகு ஏன் நாம் இஸ்லாத்திற்குச் செல்ல வேண்டும் என்று முஸ்லிமல்லாத மக்கள் பலர் நினைக்கின்றனர்.

முஸ்லிம் அல்லாத மக்களுக்காக நமது ஜமாஅத் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியிலும் இது போன்ற கேள்விகள் அதிகமாக வருகின்றன.

முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காத காரணத்தால் மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாத வகையில் வாழ்கின்றனர். முஸ்லிம் பெயர் தாங்கிகள் இவ்வாறு இருப்பதற்கு இஸ்லாத்தில் எந்தக் கோளாறும் இல்லை. இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்காத இவர்களிடத்தில் தான் கோளாறு உள்ளது.

ஒரு நோயாளி சரியான மருத்துவரிடம் சென்று நல்ல மருந்தை வாங்கியுள்ளான். ஆனால் அதை அவன் குடிக்கவில்லை. நோயும் குணமாகவில்லை.

வேறு ஒருவன் இந்த நோயாளியைப் பார்த்து, “இவன் மருந்து வாங்கியும் இவனுடைய நோய் குணமாகவில்லை. எனவே இந்த மருந்து சரியில்லை என்று முடிவெடுத்தால் அது தவறான முடிவு என்று கூறுவோம்.

மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை. அற்புதமான மருந்து என்றாலும் அதைக் குடித்தால் தானே குணம் கிடைக்கும். அதைக் குடிக்காவிட்டால் நோய் எப்படிக் குணமாகும்? இப்படிப்பட்ட மூடனைப் பார்த்தால் அவனைக் குறை சொல்லலாம். மருந்தை எப்படிக் குறை கூற முடியும்?

உண்மை முஸ்லிமாக வாழ்வோம்

முஸ்லிம் அல்லாத மக்கள் கேட்கும் இந்தக் கேள்வியை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்குப் புறம்பான நம்முடைய நடவடிக்கைகளால் இஸ்லாத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுகின்றது. பலர் இஸ்லாத்திற்கு வராமல் இருப்பதற்கு இதுவே காரணமாகவும் இருக்கின்றது. இதற்குக் கண்டிப்பாக நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி படித்துத் தெரிபவர்களை விட, முஸ்லிம்களைப் பார்த்து அதிலிருந்து இஸ்லாத்தை அறிபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு வருவதில்லை. உண்மையான முஸ்லிமைக் காண்பவர்கள் தங்களை இஸ்லாத்திற்குள் உடனே இணைத்துக் கொள்கின்றனர்.

இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம் முயற்சி செய்யவில்லை. எனினும் அல்லாஹ் தூய இஸ்லாத்தை மட்டுமே உலகில் அதிவேகமாகப் பரவும் சத்தியக் கொள்கையாக ஆக்கியுள்ளான்.

இத்துடன் நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன்றைக்கு உலகில் 72 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன.

நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இன்னும் பல நாடுகள் இஸ்லாத்தை தழுவும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் (24:55)

எனவே உண்மை முஸ்லிமாக வாழ்வோம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 7

ஒழுக்க வாழ்வும் உயர்ந்த கூலியும்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்கிற இந்தத் தொடரில், குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய ஒழுக்கக் கேடுகளிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதன் ஒரு பகுதியைப் பார்த்தோம்.

கணவன், மனைவி என்ற உறவின் மூலமே தவிர ஒரு ஆணோ, பெண்ணோ தன் உடல் சுகத்தை அனுபவிக்கவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி யாரெல்லாம் குடும்பத்திற்கு விசுவாசமாக, ஒழுக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்துகளைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்கள். மூன்று நபர்கள் பிரயாணம் செய்வது பற்றிய செய்தியாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்த போது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையி-ருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் அப்போது தமக்குள், “நாம் (மற்றவர்களின் திருப்திக்காக இன்றி) அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இதனை அகற்றிவிடக்கூடும்என்று பேசிக் கொண்டனர்.

எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முத-ல் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்தி-ருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முத-ல் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப்  பார்த்துக் கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக் கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.

இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்து விட்டாள். நான் முயற்சி செய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்த போது அவள் “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய உரிமை(யான திருமணம்) இன்றித்  திறக்காதேஎன்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!

அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு சற்றே நகர்த்திக் கொடுத்தான்.

மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! நான் ஒரு “ஃபரக்அளவு நெல்லைக் கூ-யாக நிர்ணயித்து கூ-யாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், “என்னுடைய உரிமையை(கூ-யை)க் கொடுஎன்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக் கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)-ருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடுஎன்று கூறினார்.

அதற்கு நான், “அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், “அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!என்று சொன்னார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!

அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2215, 2272, 2233, 3465

இந்தச் சம்பவத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்குப் பயந்து செய்யப்பட்டவையாக உள்ளன. அல்லாஹ்வுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து நாம் விலகினால், மறுமையிலும், இம்மையிலும் நன்மை தான். அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்பது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும். இந்த உலகத்திலும் நமது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

நமக்கு இவ்வுலகில் எவ்வளவோ நெருக்கடிகள் இருக்கின்றன. சிலருக்கு அது பொருளாதாரத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு அது வாரிசு தேவையாக இருக்கலாம். பதவித் தேவையாகவோ, படிப்புத் தேவையாகவே இருக்கலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் பல தேவைகளும் நிர்ப்பந்தங்களும் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாமும் இவற்றைப் பூர்த்தி செய்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் நமது பிரார்த்தனைகள் பூர்த்தியடைவதாக நமக்குத் தெரியவில்லை. நம் வாழ்விலும் இதுபோன்று இறைவனுக்காகவே செயல்பட்டால் நிச்சயமாக நமக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகள் பஞ்சாய் பறந்து போக வாய்ப்பு நிறையவே இருக்கின்றது.

ஒரு தடவை அல்லாஹ்வுக்காகச் செய்த காரியத்தினால் மரணம் ஏற்படுகிற அளவுக்குள்ள நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்படுவது மிகப் பெரிய அதிசயம் தான். இப்படியெல்லாம் நடப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று தான் நமது அறிவு சொல்லும். ஆனால் இறைவன் தனது அற்புதத்தைக்  நடத்திக் காட்டுவான்.

எனவே அல்லாஹ்வுக்காக ஒழுக்கமாக வாழ்ந்தால், நமது ஒழுக்க வாழ்க்கையைச் சொல்லியே நமது தேவைகளைப் பூர்த்தியாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்கலாம்.  “யா அல்லாஹ்! நான் இன்னாருக்குத் தர்மம் செய்தேன். இன்னாருக்குப் பொருள் உதவி செய்தேன். அதனால் எனக்கு இதைத் தா!’ என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அதுபோன்றே, “யா அல்லாஹ்! உனது அச்சத்தின் காரணமாக நான் திருமணத்தின் மூலமாகவே தவிர எந்த வகையிலும் தவறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை. எனவே அதன் காரணத்தினால் எனது இந்தத் தேவையை நிறைவேற்று’ என்று அல்லாஹ்விடம் கேட்பவர்களாக மாற வேண்டும். அதுபோன்ற தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் இவ்வுலகில் நமக்கும் இறைவனின் அருள் அறியாப் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தச் செய்தியில் மூன்று நபர்களின் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதில் இருவரின் பொதுவான பண்புகளில் எந்தக் குறையையும் காண முடியவில்லை. அவ்விருவரும் நல்லவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

ஆனால் பெண்ணுடன் தவறாக நடக்க வேண்டும் என்று செயல்பட்டவரின் நிலையைப் பார்த்தால், தவறான முறையில் பாலியல் சுகத்தை அனுபவிப்பதற்காக நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு காசு பணத்தைச் சேர்த்து வைத்து, அதே கெட்ட மனநிலையில் வாழ்ந்தவராகத் தான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அவரிடத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள் என்று சொன்னதும் தவறு செய்யாமல் தன்னைத் தடுத்துக் கொண்டதால் அல்லாஹ் கொடுத்த அருள் தான், மரணத்திலிருந்து இவர்கள் பாதுகாக்கப்பட்ட செய்தியாகும்.

எனவே கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டு, இனி வரும் காலங்களிலாவது இல்லற சுகத்தை அனுபவிக்கும் விஷயத்தில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கணவன் மனைவி என்ற அடிப்படையில் மட்டும்தான் சுகம் அனுபவிக்க வேண்டும் என்ற தெளிவுடையவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் வாழ வேண்டும். அப்படி வாழக் கற்றுக் கொண்டால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிடைக்கும்.

நபியவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்கின்ற ஆண்களிடமும் பெண்களிடமும் உறுதிமொழிகளை வாங்குவார்கள். அதில் இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் சொல்ல மாட்டார்கள். ஒரே நேரத்தில் அனைத்தையும் சொல்லவும் முடியாது. எனவே ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பதுடன் சில முக்கியக் கடமைகளைச் செய்வதற்கும் சில முக்கிய தீமைகளைச் செய்யாமல் இருப்பதற்கும் உறுதி மொழி வாங்குவார்கள்.

பத்ருப் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டுவரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: புகாரி 18

இதில் சொல்லப்பட்ட உறுதி மொழியில் விபச்சாரம் செய்யக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஸகாத் போன்று இன்னும் எத்தனையோ பல சிறந்த வணக்க வழிபாடுகள் பற்றி உறுதி மொழியில் கேட்காமல் மிகவும் முக்கியமானதை மாத்திரம் இஸ்லாத்திற்கு வருபவர்களிடம் உறுதிமொழியாக வாங்கிக் கொள்வார்கள் நபியவர்கள். எனவே இவ்வுலகில் ஒழுக்கமாக நடப்பது அல்லாஹ்விடத்தில் உறுதிமொழி எடுக்கின்ற அளவுக்கு முக்கியமானதாகும்.

(குறிப்பு: இந்தச் செய்தியை வைத்து நாமும் நமது இயக்கத் தலைவர்கள் அல்லது ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் பைஅத் (வாக்குறுதி பிரமாணம்) செய்யலாம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் பைஅத் சம்பந்தமாக வருகிற வசனங்களில் நபியவர்களிடத்தில் செய்கிற உறுதிமொழி அல்லாஹ்விடம் செய்கிற பைஅத் என்றுள்ளது. எனவே இது நபிக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒழுக்கக்கேடான செயல்கள், விபச்சாரம், ஆபாசங்கள், அருவருக்கத்தக்க செயல்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டித்துக் கூறுகிறான்.

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!  (அல்குர்ஆன் 6:151)

இஸ்லாத்தைப் பொறுத்த வரை, அசிங்கமான காரியத்தைச் செய்யாதே என்று மட்டும் சொல்லவில்லை. அதன் பக்கம் கூட நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். விபச்சாரம் செய்வது என்பது வெளிப்படையாக உள்ளது. அதற்குத் தகுந்தவாறு பேச்சுக்களைப் பேசுவது, கணவன் மனைவியல்லாத அந்நிய ஆண், பெண்கள் உடலுறவு பற்றிய செய்திகளைப் பரிமாறுவது போன்றவை அந்தரங்கமானது. இதுபோன்ற காரியங்களிலும் நெருங்கக் கூடாது என்று தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

—————————————————————————————————————————————————————-

படத்தை வணங்கும் பரேலவிகள்

நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை பரேலவிகள் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

இது குறித்து லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த ஃபத்வா இதோ:

பெறுதல்:

                முதல்வர் முஃப்தி ஹள்ரத் அவர்கள்

                ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, லால்பேட்டை

கேள்வி:

கண்ணியமிகு முஃப்தி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களூரில் சமீப காலமாக பொது இடங்களிலும் வீடுகளிலும் நமது பெருமானார் (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ருடைய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைக்கப்படுகின்றது. புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸிலும் இப்படம் மாட்டப்பட்டு பச்சைக் குழல் விளக்கு பொருத்தப்படுகின்றது. இது உண்மையிலேயே நம் பெருமானாரின் கப்ருடைய படம் தானா? என்பதை ஆய்வு செய்வதற்காக எங்கள் முஹல்லாவைச் சேர்ந்த உலமாக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்படி புகைப்படம் அருமைப் பெருமானாரின் கப்ருடைய புகைப்படம் என்பது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு புகைப்பட ஆதரவாளர்கள் சரியான பதிலும் சொல்லவில்லை. ஆதாரமும் காட்டவில்லை. உண்மையில் அது பெருமானாரின் கப்ருடைய படமாக இருந்தாலும் அதற்கு ஒளிவிளக்கு பொருத்தி வைப்பது ஆகுமா? மேலே குறிப்பிட்ட புகைப்படம் பெருமானாரின் முபாரக்கான கப்ருடைய படம் தானே? மேலே கண்ட கேள்விக்கு மார்க்க ரீதியாக ஃபத்வா வழங்கும்படியாக அன்புடன் வேண்டுகிறோம். வல்ல ரஹ்மான் என்றும் தூய்மையான நேர்மையான வழியில் செல்வதற்கு அருள்புரிவானாக!

இங்ஙனம்: மௌலவி அல்ஹாஜ் முஹம்மது பாரூக் ஆலிம், அல்ஹாஜ் ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் ஆலிம், மௌலவி அல்ஹாஜ் பாஸில் அஷ்ரப் ஆலிம், பேராசிரியர்கள் மற்றும் இமாம்கள், காயல்பட்டிணம்

பதில்:

நபியுடைய கப்ரு எப்படி இருந்தது என்பதற்கு அபூதாவூதுடைய ஹதீஸ் ஆதாரமாகும். புகைப்படத்தில் உள்ள கப்ரின் தோற்றம் நபியுடைய கப்ராக இருப்பதற்கு சாத்தியக்கூறு அறவே இல்லை. மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கப்ரை புகைப்படம் எடுத்து நபியின் கப்ராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றன.

இப்போதும் கூட நபியின் கப்ரும், இரு தோழர்களின் கப்ருகளும் பூமி மட்டத்திலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயரமாக மேல்புறத்தில் சிகப்பு நிற மண்ணுடன் இருப்பதாக வரலாற்று கிதாபுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சில முஸ்தஹப்பாக்களையும், ஆகுமான விஷயங்களையும் கூட பித்அத் பட்டியலில் ஆக்கி, அறவே இடம் தராத சவூதி அரசு, ஹதீசுக்கு மாற்றமாக நபியின் கப்ரு இருப்பதற்கு அறவே இடம் தராது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவைகளுக்கும் அப்பால் ஒருக்கால் அது கப்ரின் தோற்றமாக இருந்தாலும் அந்தப் புகைப்படத்திற்கு விஷேச விளக்குகள் பொருத்துவதும் மற்றுமுள்ள சடங்குகள் செய்வதும் முற்றிலும் ஹராமாகும். இதுவே பின்பு சிலை வணக்கமாக ஆக அல்லது பூஜிக்கும் பொருளாக ஆகிவிட சாத்தியம் உண்டு. எனவே அதை அகற்றுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் மேனியில் இருந்த பொருட்கள் ஆதாரப்பூர்வமாகக் கிடைத்தால் மட்டும் வரம்பு மீறாமல் அதிலிருந்து பரகத் பெறுவது ஆகுமானதாகும்.

இது லால்பேட்டை மதரஸா கொடுத்த மார்க்கத் தீர்ப்பாகும். இந்த மார்க்கத் தீர்ப்பைப் பொறுத்த வரையில், அது அசத்தியத்தின் மண்டைக் கபாலத்தை உடைத்துக் கலக்கும் அளவுக்கு சம்மட்டி அடியாக விழவில்லை. மாறாக, அசத்தியத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றது. எனினும் இந்த அளவுக்கு லால்பேட்டை மதரஸா வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பரேலவிகளால் இதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஃபத்வாவுக்கு எதிராக பரேலவிகள் பாய்கின்ற பாய்ச்சலைப் பாருங்கள்.

மேலுள்ள கேள்வியைக் கேட்டிருப்பவர்கள் வஹ்ஹாபிசத்தை ஆதரிப்பவர்கள் என்று மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அதனால் தான் இந்தக் கேள்வியை வஹ்ஹாபிசத்தை ஆதரிக்கும் லால்பேட்டை மதரஸாவில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை விளங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் ஃபத்வா பெறுவதற்கு மிக உயர்ந்த இடமான அவர்கள் வசிக்கும் காயல்பட்டணத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்டை, தமிழகத்தின் மிகப் பழமையான அரபுக் கல்லூரிகளில் ஒன்றான மஹ்லரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியில் இக்கேள்வியைக் கேட்டுத் தெளிவுபெற்றிருக்கலாம்.

எந்தக் கப்ரைப் பற்றி வினா எழுப்பப்பட்டுள்ளதோ அந்தக் கப்ரு அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கப்ரு என்று கூறுவதற்கு தக்க ஆதாரம் எதுவும் எடுத்து வைக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் கப்ரை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கப்ரைச் சுற்றிலும் மறைப்பு ஏற்படுத்தியுள்ளது இன்றைய வஹ்ஹாபிய அரசு. சவூது குடும்பம் ஹிஜாஸ் மாகாணத்தை ஆக்கிரமித்து ஒரு நூற்றாண்டு கூட முடிவடையவில்லை. அப்படியெனில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் கப்ரு எல்லோரும் பார்க்கும்படியாகத் தான் இருந்தது.

இக்காலத்தில் பல இடங்களிலும் படமாகக் காட்சிப்படும் அந்தக் கப்ரு நிழற்படம் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டதன்று. மாறாக, அது வரையப்பட்டதாகும். பிற்காலத்தில் தொழில் நுட்பத்தால் நிழற்படம் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை. பொதுவாக மிகச் சிறந்த ஓவியர்கள் ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தால் அவர்கள் தங்களின் மூளையில் பதிவேற்றம் செய்து கொண்டு அதை அப்படியே வரைந்து விடுவார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படித் தான் இப்படமும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை நேரில் பார்த்த ஒரு ஓவியர் வரைந்துள்ளார். பின்பு உலகெங்கும் அப்படம் பரவியுள்ளது. அப்படம் நபி (ஸல்) அவர்களின் கப்ருடைய படம் கிடையாது என்று உறுதியுடன் கூற ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி இறைத்தூதர்களின் கப்ரு படங்களையும் இறைநேசர்களின் கப்ரு படங்கûயும் மாட்டி வைப்பதில் தவறேதும் இல்லை. அந்தக் கப்ருக்கு மாலையிடுவதும், அல்லது ஊதுபத்தி கொளுத்தி வைப்பதும் அதை பூஜிப்பதும் முற்றிலும் ஹராமாகும் என்று தீர்ப்பு கொடுப்பதை கைவிடுத்து சவூதியை மேற்கோள் காட்டித் தங்களின் உண்மை நிலைபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் மதரஸா மன்பவுல் அன்வார் ஆசிரியர்கள்.

லால்பேட்டை மதரஸாவின் ஃபத்வாவை விமர்சித்து பரேலவிகள் தங்கள் பத்திரிகையில் எழுதியிருப்பது இது தான்.

பொதுவாக பரேலவிகள் சமாதிகளை வணங்குபவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் சமாதிகளின் புகைப்படத்தையும் வணங்கச் சொல்லும் பைத்தியங்கள் என்பதை இவர்களின் இந்த விமர்சனம் நமக்கு உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கப்ரு உட்பட அனைத்தையும் தகர்க்கச் சொல்கின்றார்கள். ஆனால் இந்தப் பரேலவிகள் கப்ருகளின் புகைப்படத்திற்காகக் கச்சை கட்டிக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நல்ல வேளை! சவூதி அரசு நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சுற்றி சுவர் கட்டி வைத்துள்ளது. இல்லையெனில் இவர்கள் அதிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்து இங்கொரு சிலையை எழுப்பி விடுவார்கள். பரேலவிகளின் இலட்சணம் எப்படியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களது இந்த விமர்சனம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?       தொடர்: 4

சூபிஸம் – ஓர் ஆய்வு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

வழிகேடர்கள் இஹ்யா உலூமித்தீனைப் புகழ்ந்து தள்ளிய புகழ் மாலைகளை ஆய்வு செய்ய நாம் புகுந்தோமானால் அதற்காக அதிகமான பக்கங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது ஒரு கடினமான பணி மட்டுமல்லாது கால விரயமுமாகும்.

அசத்தியம் எப்போதும் அதிக அளவில் இருக்கும் என்றால் அதை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதை விட அதிக அளவில் இருக்கும்.

மக்கள் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிபவர்களாக இருந்தால் இஸ்லாமிய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் வலம் வருகின்ற இத்தகைய பித்அத் மற்றும் வழிகேடான நூல்களை அவர்கள் ஏறிட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்கால அறிஞர்கள் இதுபோன்ற நூல்களிலிருந்து தங்கள் விளக்கங்களையும் மேற்கோள்கûயும் பெற்றுக் கொள்கின்றனர். அந்தக் காரியங்களைச் செய்யும் அவர்கள் தாங்கள் அழகிய செயல்கள் புரிவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் யாரேனும் ஒருவரிடத்தில் இஹ்யா மற்றும் அதுபோன்ற நூல்களைப் பற்றிக் கேட்டால், உடனே அந்நூல்களுக்குப் புகழ்மாலைகள் சூட்டி அவற்றைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர். தற்கால நூலசிரியர்களில் அதிகமானோரை இந்த நிலையில் தான் நாம் காண முடிகின்றது.

“என் போன்றோரிடம் கூட இஹ்யாவைப் பற்றி மக்கள் வினவுகின்றார்கள்” என்று இந்த சாரார் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே அந்த சாரார் சூபிஸ முகாமை விட்டும் சற்று தூரமானவர்கள். சூபிஸ முகாமில் உள்ளவர்களாக இருந்தால் இவர்களின் லட்சணம் நான் ஏற்கனவே கூறியது போன்று தான். இந்தச் சிறு நூலை இயற்றுவதற்கு இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இஹ்யா ஆசிரியரின் இரு நிலைகள்

நேர்மையான, நியாயமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மக்கள் பார்த்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நூலை ஆக்கியுள்ளேன். கஸ்ஸாலியைப் பற்றி நான் தன்னிச்சையாக எதையும் கூறவில்லை. ஏற்கனவே ஆலிம்கள் செய்த விமர்சனங்களைத் தான் நான் தொடர்ந்துள்ளேன்.

கஸ்ஸாலிக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று அவர் சூபிஸத்துடன் உழன்று, ஒன்றிணைந்த நிலை! மற்றொன்று சூபிஸத்தை விட்டு விலகி, வெளியேறி அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி புகாரி, அபூதாவூத் போன்ற நூல்களைப் படித்து அதிலேயே ஆழ்ந்து ஐக்கியமான நிலை!

இந்த இரண்டாம் நிலையில் உள்ள கஸ்ஸாலிக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்க வேண்டும்; அருள் பாலிக்க வேண்டும் என்று அவனிடம் மனம் உருகி, மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.

நாம் விமர்சிப்பதும் விளாசுவதும் முதல் நிலையில் உள்ள கஸ்ஸாலியைத் தான் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தான் எழுதிய நூல்களே கஸ்ஸாலிக்குக் கசக்க ஆரம்பித்து, அவற்றை அவர் வேதனையுடன் வெறுக்கத் தலைப்பட்டார் என்பதற்கு ஒருசில சான்றுகளைத் தருகின்றேன்.

அல் அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யா என்ற நூலில் ஷைகு இப்னு தைமிய்யா அவர்கள் கூறியதாவது:

மார்க்கத்தில் சில விஷயங்கள் எவ்வித மாற்று விளக்கமும் இல்லாமல் நேரடியாக எளிதில் விளங்கி விடும். சில விஷயங்களை நேரடியாக விளங்க முடியாது. அதற்கு மாற்று விளக்கங்கள் தேவைப்படும். இது தொடர்பாகக் கஸ்ஸாலி கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.

“இத்தகைய விஷயங்கள் அல்லாஹ்வின் தனி உதவியைக் கொண்டே தவிர ஒரு மகானுக்குப் புலனாகாது. அவர் அந்த விஷயத்தை உள்ளது உள்ளபடிக் காணுகின்றார். இவ்வாறு கண்டுவிட்டு அது தொடர்பாக செவி வழியாக இந்தச் செய்தியையும், அதன் வாசகங்களையும் ஆய்வு செய்கின்றார். உள்ளது உள்ளபடியாக, தான் கண்டதற்கு அது ஒத்திருந்தால் அதை ஏற்றுக் கொள்கின்றார். இல்லையேல் அதற்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றார்.

இது கஸ்ஸாலி கொடுக்கின்ற விளக்கமாகும். இதுபோன்று வேறு சிலரும் கூறியிருக்கின்றார்கள்.

இம்ரானின் மகனான மூஸா நபி, அல்லாஹ்வின் பேச்சைச் செவியுற்றது போன்று அவ்லியாக்களில் ஒருவர் செவியுற்றிருக்கின்றார் என்றும் கஸ்ஸாலி வேறொரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

புகாரி, முஸ்லிமில் புகுந்த கஸ்ஸாலி

இவ்வாறு கூறிக் கொண்டிருந்த கஸ்ஸாலிக்கு அவரது வாழ்நாளின் கடைசியில் இந்த சூபிஸம் தனக்குக் கை கொடுக்காது என்ற உண்மை புலப்பட்டதும், பூரணமாகத் தெரிந்ததும் அதிலிருந்து முற்றிலும் மாறி நபிவழியில் நேர்வழியைத் தேட முயன்று புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டார்.

தான் எழுதிய நூல்களில் மக்கள் வெறுத்த விஷயங்களை தானும் வெறுத்து ஒதுக்கினார்.

இது இப்னு தைமிய்யா அவர்கள் அல்அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யாவில் கூறியுள்ள கருத்தாகும்.

“இறையியல், தத்துவயியல் போன்ற தர்க்கக் கலையினரின் வாதங்களைப் பார்த்து விட்டு வணக்கம், பயிற்சி, துறவு என்ற பாதைகளில் பயணம் சென்ற கஸ்ஸாலி, தன் வாழ்நாள் கடைசியில் ஒருவிதமான தடுமாற்றத்திற்கு உள்ளானார். அவர் தன் வாழ்நாளின் கடைசியில் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் ஈடுபடலானார்” என்று இப்னு தைமிய்யா, மின்ஹாஜுஸ் ஸுன்னாவில் தெரிவிக்கின்றார்.

பல்வேறு நூலாசிரியர்களால் பொறாமை கொள்ளப்படுபவர் என்று கருதப்படக்கூடியவரும், மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலின் ஆசிரியருமான கஸ்ஸாலியின் உரையில் இதுபோன்ற கருத்து இடம்பெற்றிருக்கின்றது. அவர் வேறு சில இடங்களில் இந்த சூபிஸப் பேர்வழிகளை இறை மறுப்பாளர்கள் என்று சாடியும் உள்ளார். அந்த சூபிஸக் கருத்திலிருந்து திரும்பி, புகாரி முஸ்லிம் போன்ற நூல்களை ஆய்வு செய்யும் பணியில் முழுமையாகக் களம் இறங்கி விட்டார் என்றும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மீண்டும் கூறுகின்றார்.

கஸ்ஸாலியின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஹதீஸ் நூற்களின்பால் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டார் என்று அவர்கள் ஊர்ஜிதம் செய்கின்றனர்.

தான் எழுதிய நூற்களிலிருந்து கஸ்ஸாலியே தனது பாதையையும் பயணத்தையும் ஹதீஸ் நூற்களை நோக்கித் திருப்பி விட்ட பிறகு தற்கால அறிஞர்கள் கஸ்ஸாலியின் நூற்களை ஏன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்? அவற்றை ஏன் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்?

பாதை மாறாத பக்தர்கள்

இந்த நவீன அறிஞர்கள் கஸ்ஸாலியைப் போன்று பாதை மாறி, புகாரி, முஸ்லிம், இதர ஹதீஸ் நூற்கள், முன்னோர்களின் குர்ஆன் விளக்கவுரைகள், சரியான கொள்கை நூல்கள், பயனுள்ள கல்வி தொடர்பான நூல்கள் போன்றவற்றைப் படிக்குமாறு மக்களிடம் அறிவுரை கூற வேண்டாமா?

பொய், புனை சுருட்டுதல், தத்துவவியல், இறையியல் போன்ற காலத்தையும் நேரத்தையும் கண்ணியமிக்க மார்க்கத்தையும் வீணாக்குகின்ற நூல்களைப் படிக்க வேண்டாம் என்று மக்களுக்கு இவர்கள் எச்சரிக்கை செய்ய வேண்டமா?

இவ்வாறு அறிவுரை செய்து எச்சரித்தால் தானே கஸ்ஸாலிக்கு ஏற்பட்ட கால விரயம் இந்த மக்களுக்கும் ஏற்படாமல் அவர்களையும் அவர்களது மார்க்கத்தையும், அவர்களின் ஆயுளையும் காக்க முடியும்.

சமுதாயத்தையே வழிகேட்டில் நிரப்பி விட்டுப் பின்னர் அதை விட்டு நேர்வழியின் பக்கம் கஸ்ஸாலி திரும்பியுள்ளார்.

நீண்ட நாட்களை வீணாகக் கழித்துவிட்ட கஸ்ஸாலியிடமிருந்தும் இன்னும் அவர்களைப் போன்றோரிடமிருந்தும் இத்தகையோர் பாடமும் படிப்பினையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விடமிருந்து பெற்ற தண்டனையாக நாற்பதாண்டுகள் ஊர் தடை செய்யப்பட்டு, தட்டழிந்து, நாடோடிகளாகத் திரிந்த பனூ இஸ்ரவேலர்கள் போன்று தான் இவர்களின் நிலை அமைந்துள்ளது.

தூதுச் செய்திக்கும் அதன் விளக்கத்திற்கும் எதிராகப் பிடிவாதத்துடன் செயல்பட்டதால் தான் பனூ இஸ்ரவேலர்கள் இந்தத் தண்டனையை அனுபவித்தனர்.

தூதுச் செய்தியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் இன்றைய உலமாக்களுக்கும் பனூ இஸ்ரவேலர்களின் கதி தான் ஏற்படும். கஸ்ஸாலி ஆரம்பத்தில் தட்டழிந்தது போன்று அவர்களும் தட்டழிய வேண்டியது தான்.

அல்லாஹ் மட்டும் அவரை தனது அன்பால் அரவணைக்கவில்லை என்றால் மரணம் வரும் வரை இப்படியே நீடித்திருப்பார். அவரது நல்லெண்ணம், நல்ல நோக்கம் அவர் இந்த நன்மையை அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் அல்லாஹ் அவரை அரவணைத்து விட்டான். இதனால் அவர் தவ்பா செய்து திருந்தி, தான் எழுதிய வழிகேட்டை வெறுத்திருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதை உணரவில்லை. அவர்கள் கண்மூடித்தனமாகவும் குருட்டுத்தனமாகவும் அவர் எழுதிய நூல்கள் மீது வீழ்ந்து கிடக்கின்றனர் என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

இவற்றில் உள்ள தவறுகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகின்றனர். அவற்றில் உள்ள வழிகேடுகள், இறை மறுப்புகளுக்கு மாற்று விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

சாக்குப்போக்குகளும் சப்பைக்கட்டுகளும்

அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆன், அவனுடைய தூதரின் வழிமுறையில் சரியான நேரிய பாதையில் பிடிமானம் கொண்ட எவராலும் எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாத சாக்குப்போக்குகளையும் காரணங்களையும் இந்த ஆசாமிகள் கஸ்ஸாலியின் நூல்களுக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.

இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது நிச்சயமாக அரசியல் நோக்கம் தான் என்று மக்கள் பேசிக் கொண்டனர். பல்வேறு ஏடுகளும் இந்தக் கருத்தைப் பிரதிபலித்தன.

கொள்கை அடிப்படையிலான இந்த நூலை நான் எழுதுவதற்கு மேற்கண்ட தவறான பிரச்சாரமும் ஒரு காரணமாகும்.

முஸ்லிம்கள் எப்போதும் கவனக்குறைவிலும், வழிகேட்டிலும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற, ஆர்வம் காட்டுகின்ற ஏமாற்றுப் பேர்வழிகள், கிழக்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களது எடுபிடிகளின் ஏமாற்று வித்தை தான் இந்தத் தவறான பிரச்சாரம் என்பதை நான் எழுதிய இந்த நூலைப் படிப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

இந்நூலை எழுத இன்றியமையாத காரணம்

இஹ்யா உலூமித்தீனையும் அதுபோன்ற வழிகேடு நிறைந்த ஒவ்வொரு நூலையும் எரிப்பதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:

முதல் காரணம்:

நபி (ஸல்) அவர்கள் மீதும், நன்மையில் அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் மீதும், தாபியீன்கள் மீதும் பொய் சொல்லுதல்.

இரண்டாவது காரணம்:

சூஃபிகளிடமும் மற்றவர்களிடமும் பரவியிருக்கின்ற ஒவ்வொரு பித்அத்துக்கும் அடிப்படையாகவும் ஆணிவேராகவும் இருப்பது இந்த இஹ்யா உலூமித்தீன் தான்.

மூன்றாவது காரணம்:

அந்நூலில் உள்ள கொள்கை ரீதியிலான பெரும் வழிகேடுகளும் பேரழிவு மிக்க அசத்தியக் கருத்துக்களும்.

நான்காவது காரணம்:

இஹ்யா ஒரு வழிகேட்டு நூல். முஸ்லிம்கள் அதன் மூலமாக வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக வேண்டி அதை முஸ்லிம்களை விட்டு அகற்றுவதும் அதைத் தீயிலிட்டுப் பொசுக்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

முன்னுரை

சூபிஸம்…

இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும்.

முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும்.

படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும்.

மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலமாக, தீமைக்கு எதிராக இதுவரை இஸ்லாமிய உலகம் சாத்தி வைத்திருந்த கதவடைப்பை தாமதமின்றி, தயக்கமின்றி திறந்து விடவேண்டும்.

இவை தான் சூபிஸம் என்ற இந்த அந்நியக் கொள்கையின் லட்சியமாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இஸ்லாத்திற்கு எதிராகப் பின்னப்பட்ட சதி வலை!

சூபிஸத்தின் வரலாற்றைத் தெரியாதவர்களை அதன் விபரீதத்தை அறியாதவர் என்று தான் கூற வேண்டும்.

நான் கஸ்ஸாலியின் இஹ்யாவை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்வதற்கு முன்னால், பிற மதத்திலிருந்து களவாடப்பட்ட இந்தக் கள்ளக் கலாச்சாரத்தின் நச்சுக்கருத்தை விவரிக்கும் விதமாக, முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

முதல் ஆய்வு

சூபிஸம் என்ற பெயர் சூட்டலின் சூட்சுமம்

சூபிஸம் என்ற இந்த வார்த்தையே இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமல்ல, அரபிய மொழிக்கும் அந்நியமானது. இந்த வார்த்தையின் ஆணிவேரை அடைவதிலும் அடையாளம் காண்பதிலும் முன்னோர்களும் பின்னோர்களும் கருத்துவேறுபாடு கொள்கின்றனர். முரண்பட்ட இவர்களின் கருத்துக்களைப் படித்த பிறகு சூபிஸம் என்ற பெயர் சூட்டலுக்கு ஒரு பொருத்தமான விடையைக் காண முடியவில்லை.

காரணம், இதற்கு மொழி என்ற அளவுகோலின்படி விளக்கம் காண முடியவில்லை. அதை அடுத்தது, அறிவு என்ற அளவுகோல். அதைக் கொண்டும் சூபிஸம் என்ற பெயருக்கான விடையைக் காண முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்கம் என்ற அளவுகோல். அதைக் கொண்டும் விடை காண முடியவில்லை.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது என்று பார்க்கும் போது அதுவும் சூனியமாகவே இருக்கின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

முன்சென்ற சமுதாயங்கள் அழிந்தது ஏன்?

எம்.முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில் நமக்குப் படிப்பினையும் போதனையும் இருக்கின்ற சிலவற்றை விளக்கியுள்ளான்.

இதுபோன்று, முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இறைச் செய்தியின் வாயிலாக முன்சென்ற சமுதாய மக்களைப் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லியுள்ளார்கள். அவர்களில் அழிந்து போனவர்களைப் பற்றியும் அதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அழிந்தார்கள் என்று சொல்வது ஆளே இல்லாமல் மடிந்து போனார்கள் என்ற அர்த்தத்தில் இல்லை. மாறாக, சத்தியத்தை விட்டும் விலகி வழிதவறி சென்று வழிகேட்டிலே விழ்ந்து விட்டார்கள் என்ற பொருளில் எடுத்துரைத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை, கடந்த காலத்தில் வாழ்ந்து அழிந்து போனவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளின் மூலம் விளங்கலாம்,

இந்த வகையில், முன்சென்ற சமுதாயத்தில் இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள், சத்தியத்தைப் புறக்கணித்தவர்கள், மார்க்கத்தைத்  தெரிந்த பிறகு வழிதவறிச் சென்றவர்கள் பற்றி நபியவர்கள் தெரிவித்த செய்திகள் நமது காரியங்களை சீர்திருத்தம் செய்து திருத்திக் கொள்வதற்குத் துணைபுரியும் என்பதால் அவற்றை இங்கு காண்போம்.

இறைத்தூதர்களுக்கு முரண்படுதல்

மார்க்கம் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் முஹம்மத் நபியவர்கள் நமக்குத் தெரிவித்து விட்டடார்கள். இவ்வாறு நபியின் போதனை வழிகாட்டுதல், விளக்கம் தெளிவாக இருக்கும் போது அதை அறிந்த பிறகும் அதற்கு எதிர்க் கருத்து கொண்டு கருத்து வேறுபாடு கொள்வது தவறான, மோசமான பண்பாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் எதற்காகவும் எவருக்காகவும் நமது சத்தியத்தூதரின் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கவே கூடாது என்று பின்வரும் செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி (7288)

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, “உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்என்று சொன்னார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் (4818)

தங்களது தூதருடைய போதனைக்கு எதிரான கருத்தைக் கொண்டது முன்சென்ற மக்களை வழிகெடுத்துவிட்டது. இத்தகைய பண்பில் இருப்பவர்கள் வழிதவறிச் செல்வதை இன்றும் நாம் காணலாம். இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்த சட்டதிட்டங்கள் அறிவுரைகள் பட்டவர்த்தமாகத் தெளிவாக இருக்கும் போது அதற்கு மாற்றமாகச் சிலர் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நபிகளாருடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக நபித்தோழர்கள், இமாம்கள் போன்ற முன்னோர்களின் சுய விளக்கத்திற்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். ஒற்றுமை, நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிரான கருத்துகளை அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல தூதரின் போதனைகள் தெளிவாக இருக்கும் போது மற்ற மற்ற காரணங்களுக்காக அவற்றிற்கு முரண்பாடாகச் சொல்வது, செய்வது, ஆதரிப்பது தவறான போக்காகும். இவ்வாறு தங்களுக்கு வந்த தூதருக்கு முரண்பாடாகச் செயல்படும் பண்பே முன்னோர்களை அழித்துவிட்டது.

தேவையில்லா கேள்வியைக் கேட்டல்

எந்தவொரு செய்தியையும் கேள்வி கேட்டு தெளிவு பெற்று கொள்வது தவறில்லை. மார்க்க விஷயமாக இருந்தாலும் உலக விஷயமாக இருந்தாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. அதேசமயம், கேட்கப்படும் கேள்வி அவசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில் கேள்விகள் கேட்கும் பழக்கம் இருக்கவே கூடாது.

குறிப்பாக மார்க்கச் சட்டங்ளை அணுகுவதில் இந்தப் பண்பு இருக்கவே கூடாது. காரணம், முன்சென்ற சமுதாய மக்களை அழித்து நாசமாக்கிய கெட்ட பண்புகளுள் இந்தப் பண்பும் ஒன்று என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச் செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: முஸ்லிம் (4702)

நபியவர்களின் வழிகாட்டுதல்கள் எவற்றிலும் தேவையின்றி கேள்வி கேட்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். ஆனால், மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகளிலே இவ்வாறான கேள்விகள் அதிகமாக இருப்பதை நாம் காணலாம். பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காத, பயனளிக்காத, சபையில் சொல்வதற்குத் தகாத கேள்விகளை எழுப்பி விடையளித்திருக்கும் வேடிக்கையும் கேவலத்தையும் மத்ஹபுகளில் நிறைந்து வழிவதைக் காணலாம்.

இதனாலேயே மத்ஹபுகளில் விழுந்தவர்கள் மாநபியின் போதனைக்கு மாறுசெய்யும் காரியங்களை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். எனவே கேள்விகளை கேட்கும் முன்னர் யோசித்து செயல்பட வேண்டும். நோன்பு, தொழுகை, ஹஜ் போன்ற சட்டதிட்டங்களில் இப்படி அடுக்கடுக்கான அவசியமற்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் மக்களை இன்றும் காணலாம்.

மார்க்க வரம்புகளை மீறுதல்

இந்த உலகில் வாழும் போது நமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? தடை செய்யப்பட்டவை எவை என்பதைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காணலாம். அதுபோன்று எந்தவொரு மார்க்க விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்யக் கூடாது? என்ற விளக்கமும் பரிபூரணமாக இருக்கின்றன.

இப்படியிருக்க, அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என்ன சொன்னார்கள் என்று கடுகளவும் கண்டு கொள்ளாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற வகையில் கண்டபடி வாழ்பவர்களைப் பார்க்கிறோம். இந்தப் பண்பு அழிவில் தள்ளிவிடும் என்ற பயம் சிறிதும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பின்வரும் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஆதாரம்: இப்னுமாஜா (3020)

தனிமனித ஒழுங்குகள் முதல் சமுதாயச் செயல்பாடுகள் வரை அனைத்திலும் எப்படி இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது? என்ற நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களை அறிந்து கொண்டதோடு அவற்றுக்கு அடிபணிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிகமானோர் அவ்வாறு இருப்பதில்லை என்பது தான் வருத்தமான செய்தியாக இருக்கிறது.

பச்சை குத்துவது, அரைகுறை ஆடை அணிவது, பொய் பேசுவது, லஞ்சம் வாங்குவது, மது குடிப்பது, அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பது, வட்டி, வரதட்சணை வங்குவது, அடுத்தவர்களுக்குரியதை அபகரிப்பது என்று வரம்பு மீறுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்கள் பலரைப் பார்க்கிறோம். இதுபோன்ற வரம்புமீறும் காரியங்கள் மக்களை அழிவில் கொண்டுபோய் விட்டுள்ளது என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையி-ருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), “மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டு விட்டு,  “நபி (ஸல்) அவர்கள் இது போன்றதி-ருந்து (மக்களைத்) தடுப்பதையும், “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி (3468)

எந்த வகையிலும் மார்க்க விஷயத்தில் வரம்பு மீறுதல் நம்மிடம் இருக்கக் கூடாது. மார்க்கக் கருத்துகûளைக் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டு வரம்பு மீறுபவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பேணுதலாக இருக்கிறோம்; பயபக்தியோடு நடந்து கொள்கிறோம் என்று வரம்பு மீறுபவர்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் பர்தாவைப் பேணாமல் வரம்பு மீறக்கூடாது. அதேசமயம், பேணுதல் என்ற பெயரில் கால்பாதங்கள் மற்றும் முன்கைகளுக்கும் உறைகளை அணிய வேண்டும்; முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று பர்தா விஷயத்தில் வரம்பு மீறுவதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் தொழுகை, நோன்பு போன்ற மார்க்கக் கடமைகளில் இருக்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களை சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். இந்த மாதிரி எந்த விதத்திலும் வரம்பு மீறக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனிதனுக்கு ஏற்ற சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த எளிமையான மார்க்கம் இத்தகையவர்களுக்கு, இன்னும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் கடுமையான, கொடுமை புரியும் மார்க்கம் போன்று தோற்றமளிக்கும் அபாயம் இருக்கிறது. இதைப் பெருமானாரின் பின்வரும் வரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புகாரி (39)

சட்டதிட்டங்களில் சமரசம் செய்தல்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும் வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச் செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து, கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் விடுக்கும் பின்வரும் எச்சரிக்கையை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.

மக்ஸூமிகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து  (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?” என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புகாரி (6788)

இதையறியாமல், ஏழைகளிடம் ஒருவிதமாகவும் பணக்காரர்களிடம் ஒரு விதமாகவும் மார்க்க செய்திகளைக் கையாள்பவர்களைப் பார்க்கிறோம். அதுபோல தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள் தவறு செய்யும் போது அலட்சியமாக விட்டுவிடுவது; அதேசமயம் அறிமுகமற்றவர்கள், நெருக்கமற்றவர்கள் தவறு இழைக்கும் போது கடுமையாக நடந்து கொள்வது என்றும் சிலர் செயல்படுகிறார்கள்.

சொந்த ஊரில் ஒருவிதமாகவும் வெளியூர்களில் வேறு விதமாகவும் இடத்திற்கு, எதிர்ப்புகளுக்கு ஏற்ப சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டு வேடம் போடும் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்பு கொண்டவர்கள் இந்தச் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

உலக இன்பங்கள் மீது மோகம் கொள்ளுதல்

தன்னை வணங்குவதற்காகவே ஏக இறைவன் மனிதர்களைப் படைத்திருந்தாலும் அவர்களின் உலக வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காகச் செல்வம் போன்ற பல அருட்கொடைகளை கொடுத்திருக்கிறான். அவற்றின் மூலம் அவர்களை சோதிக்கவும் செய்கிறான். ஆகவே படைத்த இறைவனை மட்டும் தொழுது  அவனது கட்டளைகளுக்கு ஏற்ப வாழ்வதிலேயே நம்முடைய முதல் கவனம் இருக்க வேண்டும். அதையடுத்த இடத்தையே உலக வாழ்க்கையின் இன்பங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அதிகமான  மக்கள் உலக இன்பங்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவற்றைச் சேகரிப்பதற்காக மார்க்த்தை மறந்து அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சிலர் போதுமென்ற மனம் இல்லாமல் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சுகபோக வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறார்கள்.

இதன் விளைவாக, இத்தகையவர்கள் பணத்திற்காகக் கடமைகளைத் தவற விடுகிறார்கள். தவறானவற்றை தேடிப்பிடித்துச் செய்கிறார்கள். மார்க்க நெறிமுறைகளைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் சென்று வழிகேடுகளில் விழுந்துவிடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் இந்தப் பண்பைக் கொண்டிருந்த சமுதாயம் அழிவில் அகப்பட்டுக் கொண்டது. அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடுவோமோ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஞ்சியிருக்கிறார்கள். ஆதங்கப்பட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனி-ருந்து ஜிஸ்யா வரியை வசூ-த்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனி-ருந்து  நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்று கூற, அன்சாரிகள், “ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது  அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

ஆதாரம்: புகாரி (3158)

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

ஆதாரம்: புகாரி (1344)

விதியைப் பற்றி தர்க்கம் செய்தல்

பிரபஞ்சத்தின் இரட்சகன் முக்காலத்தையும் அறிந்தவன். அவன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாக அறிந்த நுண்ணறிவாளன். அவன் அனைத்து காலத்திலும் நிகழும் சம்பவங்களையும் பதிவேட்டில் ஒன்று விடாமல் பதிவு செய்திருக்கிறான். அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது; எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது.

அவன் நினைத்திருந்தால் நமக்கு வாழ்க்கை எனும் வாய்ப்பே கிடைத்திருக்காது. அவன் தமது  விருப்பத்தின்படி பல்வேறு காரணங்களுக்காக இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறான். நன்மை மற்றும் தீமையைச் செய்வதற்கு வாய்ப்பளித்து நம்மைச் சோதிக்கிறான்.

கடந்த காலம் என்பது இறைவனின் நாட்டப்படி நடந்து முடிந்தவை; எதிர்காலம் என்பது அவன் நாடினால் நடக்கவிருப்பவை என்பதைப் புரிந்து கொண்டு நாம் நல்வழியில் செல்ல வேண்டும். தீய வழிகளைப் புறக்கணிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இறைவனையும் அவன் அமைத்திருக்கும் விதியைûயும் குருட்டுத்தனமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இறைவனும் இல்லை; விதியும் இல்லை வறட்டுவாதம் செய்கின்றனர். இறைவனின் ஆற்றலையும் அவனளித்த வாய்ப்பையும் விளங்காமல் தர்க்கம் செய்கின்றனர்.

இப்படி விமர்சிப்பவர்களில் சிலர் சத்தியத்தை விட்டும் தூர நிற்கிறார்கள். இன்னும் சிலர் கிடைத்த சத்தியத்தைத் துறந்து செல்கிறார்கள். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் விதியைப் பற்றி சர்ச்சைகளை எழுப்பி சச்சரவுகளில் ஈடுபட்டதால் திசைமாறிப் போனார்கள. வழிகேட்டில் வீழ்ந்து கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் இந்த (விதியின்) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டதால்தான்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: திர்மிதீ (2059)

குழப்பத்தை ஏற்படுத்துதல்

மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதிலும் செயல்படுத்துவதிலும் தவறிழைப்பவர்கள் அதன் மூலம் சமுதாயத்தில் குழப்பம் தோன்றுவதற்குக் காரணமாக ஆகிவிடுகிறார்கள். எனவே எந்த வகையிலும் மக்களுக்கு மத்தியில் வீணான சந்தேககத்தை, குழப்பத்தைத் தோற்றுவித்துவிடக் கூடாது. கண்ணும் கருத்துமாக மார்க்க போதனைகளைக் கையாளவேண்டும். இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது நம்மை நாசப்படுத்திவிடும் என்பதைப் பின்வரும் சம்பவத்தின் வாயிலாக விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடனே ஒருவர் எழுந்து தொழுதார். அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், “வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் அழிந்ததெல்லாம் அவர்களது தொழுகைகளுக்கு மத்தியில் தெளிவு இல்லாமல் இருந்ததால் தான்என்று கூறினார்கள். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “உமர் உண்மையையே சொன்னார்என்று கூறினாôர்கள்.

ஆதாரம்: அஹ்மத் (22041)

இதற்கு மாற்றமாகச் சிலர் சம்பந்தமில்லாத, தேவையற்ற காரணங்களை சொல்லிக் கொண்டு கண்மூடித்தனமாக மார்க்க செய்திகளை அணுகுகிறார்கள்; செயல்படுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல காரியங்கள் தானே நன்மைகளைத் தரும் காரியங்கள் தானே என்று சொல்லிக் கொண்டு எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட காரியங்கள் இன்று மார்க்க  சட்டதிட்டங்களில் ஒன்றோடு ஒன்றாகக் கருதி செயல்படுத்தும் பாரதூரமான நிலைக்கு சமுதாயம் சென்றுவிட்டது. இதனால், பாங்கு சொல்வதற்கு முன்னால் நபிகளார் மீது ஸவவாத் சொல்வது, ஜுமுஆ அன்று இரண்டு பாங்கு சொல்வது, மவ்லூது ஓதுவது, கத்தம் ஃபாத்திஹா ஓதுவது என்று ஏரளாமான பித்அத்கள் சமுதாயத்திற்குள் புகுந்து மக்கள்  குழம்பிக் கிடக்கிறார்கள். இதனால், நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு நன்மையை இழந்ததோடு பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கஞ்சத்தனம் கொள்ளுதல்

மனிதனிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளை மட்டுமல்லாது அவனிடம் இருக்கக் கூடாத கெட்ட பண்புகள் பற்றியும் இஸ்லாம் பேசுகிறது. அந்த வகையில் நம்மிடம் இருக்கக் கூடாத பண்புகளுள் ஒன்று கஞ்சத்தனம் ஆகும். இந்த பண்பு முந்தைய சமுதாயத்தையே அழித்திருக்கிறது.  கஞ்சத்தனம் என்பது மனிதனைத் தீமையான, தடுக்கப்பட்ட காரியங்களின் பக்கம் திசை திருப்பி வழிகெடுத்துவிடும் என்பதை இந்தச் செய்தி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கஞ்சத்தனத்தினால் அழிந்து போனார்கள். அது அவர்களுக்கு கருமித்தனத்தை கட்டளையிட்டது. அவர்கள் கருமித்தனம் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு உறவுகளைத் துண்டிப்பதை கட்டளையிட்டது. உறவுகளைத் துண்டித்தார்கள். மேலும் அவர்களுக்கு பாவமான காரியங்களை கட்டளையிட்டது. பாவமான காரியங்களைச் செய்தார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஆதாரம்: அபூதாவூத் (1447)

மேற்கண்ட செய்தியைப் பிரதிபலிக்கும் விதமாக இன்றும்கூட இந்தக் கஞ்சத்தனத்திற்கு அடிமையானவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட அருட்கொடைகளை மார்க்கம் கூறும் விதத்தில் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். பொருளாதார ரீதியான தங்களது கடமைகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்றாமல் பின்வாங்கிவிடுகிறார்கள். இதனால், நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதோடு தீமையான, மோசமான காரியங்களிலும் விழுந்துவிடுகிறார்கள்.

நம்மை நல்வழியில் நிலைக்கச் செய்யும் காரியங்களைத் தெரிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதாது. சத்தியத்தை விட்டு தூரப்படுத்தி அசத்தியத்தோடு ஐக்கியப்படுத்தும் காரியங்களையும் தெரிந்து அவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்த உலகிலும் மறுமையிலும் சிறப்பாக வாழ்ந்து உண்மையான வெற்றியைப் பெற முடியும். ஆகவே முந்தைய சமுதாயங்களை அழித்தொழித்த காரியங்கள் ஒரு போதும் நம்மை அண்டவிடாமல் அழகிய முறையில் வாழ்ந்து ஈடேற்றம் பெறுவோமாக. வல்ல இறைவன் நமக்குத் துணைபுரிவானாக.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 16

நபிகளாரின் பிரார்த்தனைகள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம்.

அதே போன்று ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக இருக்கும்.

என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

நூல்: புகாரி 6398, 6399

நாம் இன்றைக்கு அவ்லியாக்கள், மகான்கள் என்றால் அவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். அவர்களிடத்தில் பாவங்கள் நிகழுமா? அவர்கள் பாவங்கள் செய்வார்களா? அவர்களுக்கு மறதி வருமா? அவர்களுக்கு அறியாமை வருமா? அவர்கள் வேண்டுமென்றே ஏதேனும் பாவங்கள் செய்வார்களா? அவர்கள் அவற்றையெல்லாம் விட்டு விதிவிலக்கு பெற்றவர்களாயிற்றே! அந்த மாதிரி தன்மைகளெல்லாம் அவர்களுக்குக் கிடையாதே! என்று நினைத்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள். அதுவும் இந்த முறையீட்டை மக்களுக்குக் கேட்கும் அளவுக்கு அத்தஹிய்யாத் அமர்வில் சப்தமாக கேட்கிறார்கள். நானும் மனிதன் தான் என்னிடமும் தவறுகள் நிகழும். மறதியாகவும் தவறு செய்து விடுவேன். வேண்டுமென்றும் தவறு செய்து விடுவேன். கேலியாகவும் தவறு செய்து விடுவேன். எல்லாவிதமான தவறுகளும் என்னிடம் நிகழும். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறுயாருமில்லை. எனவே நீ என்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து நபிமார்களும் அனுப்பப்பட்டதன் நோக்கமே அனைவரும் அல்லாஹ்விடத்தில் சரணடைந்து விட வேண்டும். எல்லாக் காரியங்களையும் அவனிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகத் தான்.

இவ்வாறுதான் அல்லாஹ்வும் கட்டளையிட்டிருக்கின்றான்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

ஆக நபிமார்களுக்கே இந்த நிலை என்றால் மகான்கள், அவ்லியாக்கள் எல்லாம் நபிமார்களை விட உயர்ந்த நிலையை அடைந்து விட முடியுமா? அவர்கள் பாவம் செய்வதை விட்டும் விதிவிலக்கு பெற்றவர்களாக முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் சந்தித்த சோதனைகள்

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது ஆரம்ப காலத்தில் பலவிதமான கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார்கள். அதில் ஒரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்து விட்டு கஅபத்துல்லாவிற்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். கஅபத்துல்லாஹ்வில் சிலைகள் இருந்தாலும் அது நமக்கு சொந்தமான பள்ளிவாசல் என்ற ஓர் உரிமையுடன் அதில் தொழுது வந்தார்கள்.

ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தது. நபியவர்கள் ஸஜ்தாவிற்குச் சென்றவுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஒட்டகக் குடலை நபியவர்களின் முதுகில் வைத்தனர். அந்தக் குடல் அதிக பாரமாக இருந்ததால் நபியவர்களால் எழ முடியவில்லை. நபியவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து எதிரிகள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் நபியவர்களுக்கு, இவர்கள் ஏற்கனவே திட்டம் தீட்டித் தான் இதனைச் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்ட நபியவர்களுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தை சிரமப்படுவதைப் பார்த்து அந்தக் குடலை அப்புறப்படுத்துகிறார்கள். உடனே நபியவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி ஒரு துஆச் செய்கிறார்கள். அந்தச் சம்பவம் பின்வருமாறு:

 நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து “இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி “யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாகஎன்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், “அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்என அவர்களும் நம்பியிருநார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் “கலீப்என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 240

இந்தச் சம்பவத்தில், எதிரிகள் இழைத்த இந்த மாதிரியான அவமானத்திற்கு நபியவர்களுக்கு மட்டும் அபார சக்தி இருந்தால், அதிகாரம் இருந்தால், ஏதேனும் மாய மந்திரம் தெரிந்திருந்தால் இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? அதுமட்டுமல்ல! அல்லாஹ் அவர்களுக்கு சக்தியை – பவரைக் கொடுத்திருந்தால் அத்தனை பேருக்கும் கை, கால்கள் விளங்காமல் போயிருக்குமே! ஆனால் அப்படி ஏதேனும் நடந்ததா?  அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை பார்த்து எதிரிகள் கைகொட்டி சிரித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

நபியவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்த உடனேயே அவர்கள் அழிந்து போய்விட்டார்களா? துஆ செய்த பிறகு அவர்களுடைய (எதிரிகளுடைய) கை தான் ஓங்கியது. மேலும் மேலும் நபியவர்களுக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும் அதிகளவில் கட்டவிழ்த்துவிட்டனர்.

அதற்குப் பிறகு நபியவர்களை ஊரை விட்டு விரட்டுவதிலும் அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். நபியவர்களால் அதனை வெல்ல முடியவில்லை. அத்தனை நபித்தோழர்களும் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து வேறு நாட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுடைய சொத்து, செல்வங்களை சூறையாடினார்கள். அதிலும் எதிரிகளின் கை தான் ஓங்குகிறது.  ஊரை விட்டு நபிகளார் சென்ற பிறகும் அவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவ்வளவும் செய்த பிறகும் கூட நபிகளார் அவர்களுக்கு எதிராகச் செய்த பிரார்த்தனைக்கு எந்தவித விளைவும் ஏற்படவில்லை. அல்லாஹ் அவர்களை உடனே தண்டிக்கவுமில்லை.

நீ என்னிடம் பிரார்த்தித்தால் உடனே அவர்களை நான் தண்டிக்க வேண்டுமா? அவர்களைத் தண்டிப்பதும் தண்டிக்காமல் இருப்பதும் என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டது. அவர்களை உடனேயும் தண்டிப்பேன். அவர்களை சிறிது விட்டுப் பிடிக்கவும் செய்வேன் என்று அவர்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுகிறான்.

நபிமார்கள் அனைவரும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனித சக்தி தான் அவர்களுக்கு இருந்தது. ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதற்கு மேற்கொண்ட ஆற்றல் அவர்களிடத்தில் இருந்ததில்லை. நபியவர்களும் கூட தன்மீது வைக்கப்பட்ட குடலை  தன்னுடைய  சக்தியைப் பயன்படுத்தி, தானே அப்புறப்படுத்துவதற்குக் கூட ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைக்காக அல்லாஹ் அவர்களை உடனே தண்டித்திருந்தால் அந்த மக்கள், அல்லாஹ்வை வணங்குவதற்குப் பதிலாக, அவனை பயப்படுவதற்குப் பதிலாக, “இம்முஹம்மதுக்கு ஏதோ சக்தி இருக்கிறது; அதனால் தான் இவரை நோவினை செய்ததற்காக உடனே அவர்களை அழித்து விட்டார்’ என்று நபிமார்களை வணங்கும் மக்கள் உருவாகியிருப்பார்கள். நபிமார்களுக்கு எந்த அற்புதமும் செய்ய ஆற்றல் இல்லாத போதே பல சமுதாய மக்கள் நபிமார்களைக் கடவுள்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

—————————————————————————————————————————————————————-

அறிவியல்

உறக்கம் ஓர் அற்புதம்

கடவுளையும் மனிதனையும் பிரிக்கின்ற பல காரணிகள் உள்ளன. அவற்றில் பசி, தூக்கம், மறதி ஆகியன முக்கியமான காரணிகள். படைத்த அல்லாஹ் இந்த பலவீனமான காரணிகளை விட்டும் தூய்மையானவன். இதை நினைவுபடுத்தும் விதமாகவும் எல்லாம் வல்ல இறைவனை என்றும் நினைக்கும் விதமாகவும் சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூய்மையானவன் – என்று நாம் அடிக்கடி  நமது நாவுகளை நனைத்துக் கொண்டிருக்கின்றோம். உயிர்ப் பிராணிகள் அத்தனையும் உறக்கத்துக்கு விதிவிலக்கல்ல! எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் உள்ள பிரபலமான கோவிலுக்கு மீனாட்சி அம்மன் என்று பெயர்! நீரில் நீந்தும் மீனுக்கு நித்திரை கிடையாது. அது போன்று நித்திரையின்றி மதுரையை மட்டுமல்ல! இத்தரை முழுவதும் விழித்திருந்து ஆட்சி செய்வதால் அந்தக் கடவுளுக்கு மீனாட்சி என்று பெயர். இது தவறு என்பதைப் பின்வரும் அறிவியல் உண்மை தெளிவுபடுத்துகின்றது.

நீந்தும் மீனுக்கும் நித்திரை உண்டு

உண்மையில் மீனுக்கு தூக்கம் இல்லையா என்று பார்க்கும் போது மீனுக்கும் தூக்கம் உண்டு என்றே அறிவியல் கூறுகிறது. இமைகள் மூடியிருப்பதை வைத்து மனிதர்கள் தூங்குவதை அறிந்து கொள்ள முடியும். மீன்கள் தூங்குவதை எப்படி அறிய முடியும்?

நம்மைப் போன்று மீன்களுக்கு இமைகள் உள்ளனவா என்று வெளிப்படையாகப் பார்த்தால் இமைகள் இல்லை என்றே முடிவு செய்ய முடியும். ஆனால் மீன்களுக்கு விழித்திரைகள் உள்ளன. அவை கண்ணாடி போன்று இலைமறை காயானவை ஆகும். மெல்லிய இமைகளை மூடிக்கொண்டு அந்தக் கயல்களும் நீரில் கண்ணயர்கின்றன.

அவ்வாறு கண்ணயரும் போது நீரில் அவை அந்தரமாக ஆடாமல் அசையாமல் சலனமின்றி நிற்கின்றன; அல்லது மனிதர்களைப் போன்று தரையில் மண்ணோடு மண்ணாக ஒட்டி படுத்துக்கொள்கின்றன. தண்ணீரில் இழுப்பு அதிகமாக இருக்குமேயானால் நீரின் அடியில் கிடக்கும் மரத் துண்டுகளில் அல்லது கற்பாறைகளில் ஒதுங்கி உறங்குகின்றன. ஆனால் இவற்றை மீன்கள் உறங்குவதற்குரிய உறுதியான அடையாளங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை உறங்குவதை உறுதி செய்ய ஆய்வு ரீதியிலான அணுகுமுறைகள் உள்ளன.

மீன்கள் ஏராளமான அளவு தண்ணீரை உட்கொள்கின்றன. வாய் வழியாக உட்கொள்கின்ற அந்தத் தண்ணீரைத் தாடையினால் அழுத்துகின்றன. தாடையினால் அழுத்தப்படுகின்ற அந்தத் தண்ணீர் சீப்பு போன்று அமைந்திருக்கும் செவுள் போன்ற பற்கள் வழியாக வெளியேறுகின்றது. இந்தக் கட்டத்தில் தான் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டு மீன்களின் இரத்தத் துளைகளிலும் துவாரங்களிலும் செலுத்தப்படுகின்றது. இதேவேளையில் கார்பன்டை ஆக்ஸைட் வெளியேற்றவும் படுகின்றது. இந்த பண்டமாற்றமும் பரிமாற்றமும் மீன் சுவாசத்தின் போது மின்னல் வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த ஏக்கம் கூடுதல் வேகத்தில் நடக்கும் போது அது விழித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த வேகம் குறையும் போது அது உறங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிவியல் உறுதி செய்கின்றது. (தி ஹிந்து 07/12/2007 அறிவியல் பகுதி).

மீனுக்கு உறக்கம் இல்லை அதனால் அது கடவுள் என்று மக்களின் ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தான் மீனாட்சி என்று பெயர் அந்த தெய்வத்துக்குப் பெயர் சூட்டப்படிருகின்றது. இது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த அறிவியல் உண்மை இங்கு தரப்படுகிறது.

ஒருபோதும் எந்த ஓர் உயிர்ப்பிராணியும் உறக்கம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதனால் அது ஒரு போதும் கடவுள் ஆக முடியாது என்பதற்கும் இந்த அறிவியல் உண்மை எடுத்துக்காட்டாகும்.

உறக்கம் இல்லாத உயர் நாயன்

உறக்கம் என்பது மனிதனையும் இறைவனையும் பிரித்துக்காட்டும் ஒரு அளவுகோல் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ இல்லையென்று தெளிவாக மறுக்கின்றான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.  (அல்குர்ஆன் 2:255)

ஆனால் மனிதர்களைக் கண்டிப்பாக தூக்கம் ஆக்கிரமிக்கும். அது அவனை அமுக்கி படுக்க வைத்து விடும். இந்தத் தூக்கத்தை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது மனிதனுக்கு பலவீனம் ஆகும். அதே சமயம் மனிதனுடன் அதை இணைத்துப் பார்க்கும் போது அவனுக்கு அதுதான் பலமும் சிரமப் பரிகாரமும் ஆகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். (அல்குர்ஆன் 25:47)

உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 78:9)

அல்லாஹ் மனிதனின் தூக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அதை ஓர் ஓய்வாகவும் சிரமப் பரிகாரமாகவும் ஆக்கி வைத்ததாகக் கூறுகின்றான்.

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 30:23)

இந்த வசனத்தில் உறக்கம் ஓர் அற்புதம் என்று குறிப்பிடுகின்றான். குவைத்தில் அரப் டைம்ஸ் என்ற பத்திரிகை 19.10.2013 இதழில் அமெரிக்காவின் ஆய்யை மேற்கோள் காட்டி ஒரு துணுக்கை வெளியிட்டுள்ளது.

பெரிய கட்டிடத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு அதன் வாயிற்காப்பாளன் அதன் முற்ற வெளிகளில் குவிந்து கிடக்கும் குப்பைக் கூழங்களை கூட்டிப் பெருக்கி, துப்புரவு செய்வது போன்று தூக்கம் மூளையிலிருந்து கழிவுகளை அகற்றி துப்புரவு செய்கின்றது. அத்துடன் சில நோய்கள் வராமல் தடுத்துக் காக்கின்றது. மக்கள் ஏன் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழிக்கின்றனர் என்ற ஆய்வு வினாவுக்கு அறிவியல் இதழ் (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ஓர்ன்ழ்ய்ஹப்) இவ்வாறு பதிலளிக்கின்றது. வயோதிக பருவத்தில் ஏற்படும் டிமின்ஷியா (உங்ம்ங்ய்ற்ண்ஹ) என்ற நினைவு மறதி நோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு தூக்கம் தான் அருமருந்து என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அல்ஸீமியர்ஸ் (ஆப்க்ஷ்ட்ங்ம்ங்ண்ழ்’ள் உண்ள்ங்ஹள்ங்) என்ற நினைவு மறதி நோய் ஏற்பட காரணமே அமிலாய்ட் பீட்டா (ஆம்ஹ்ப்ர்ண்க் இங்ற்ஹ) என்ற புரதம் தான். இந்த புரதச் சத்து தான் மூளையில் இருந்து நீக்கப்படும் கழிவு என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

அல்குர்ஆன் தூக்கத்தை ஓர் ஓய்வு என்று மட்டும் நிறுத்தாமல் ஓர் அற்புதம் என்று கூறுவதன் உண்மையினை இந்த ஆய்வு நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

இன்று உலகில் இன்ஸோமேனியா என்ற உறக்கமின்மை நோயால் பலர் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநோயாளியாக இருக்கின்றனர். இதற்காக வேண்டி தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் நமக்கு இது போன்ற சிரமம் இன்றி உறக்கத்தை அளித்திருக்கின்றான். இந்த உறக்கம் என்பது பாக்கியம் ஆகும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் உறங்கி முடிந்து எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (உறக்கத்திலிருந்து) எழும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்” “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளதுஎன்று கூறுவார்கள். (புகாரி 6312)

தூங்கிவிட்டு எழுந்ததும் நாமும் இந்த வார்த்தைகளை நாள்தோறும் சொல்லி நாயனுக்கு நன்றி செலுத்தும் நன்மக்களாக ஆவோமாக!

—————————————————————————————————————————————————————-

கேள்வி – பதில்

? ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?

ஃபர்சான்

ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் உரையாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இவ்வாறு செய்தும் வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு உரையாற்றியதாக வரும் செய்தியைத் தவறான முறையில் புரிந்து கொண்டதால் இவ்வாறு செய்து வருகின்றனர்.

ஹகம் பின் ஹஸ்ன் அல் குலஃபீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் பங்கு கொண்டோம். அப்போது அவர்கள் கைத்தடி அல்லது வில்லை ஊன்றியவர்களாக நின்றார்கள். அல்லாஹ்வை அவர்கள் புகழ்ந்து வளமான, மணமான, எளிமையான வார்த்தைகளால் அவனைப் பாராட்டினார்கள். பிறகு “மக்களே! ஏவப்பட்ட அனைத்தையுமே நீங்கள் செய்ய முடியாது அல்லது செய்ய மாட்டீர்கள் எனினும் நீங்கள் நடுநிலையைக் கடைபிடித்து நன்மாராயம் பெறுங்கள்என்று கூறினார்கள்.  (நூல்: அபூதாவுத் 924)

கைத்தடியை வைத்துக் கொள்வது அல்லது பிடித்துக் கொள்வது என்ற கருத்து இந்த ஹதீஸில் இல்லை. மாறாக, கைத்தடியை ஊன்றுகோலாகக் கொண்டு உரையாற்றினார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஊன்றுகோல் என்பது ஒருவரது பலவீனம் காரணமாகப் பயன்படுத்துவதாகும்.

வணக்க வழிபாடுகளில் தான் நபியவர்கள் செய்த அனைத்தும் மார்க்கச் சட்டமாக ஆகும். வணக்க வழிபாடுகள் அல்லாத மற்ற செயல்களில் அது குறித்து அவர்கள் கட்டளைப் பிறப்பித்தால் தான் அது மார்க்கச் சட்டத்தில் சேரும். இல்லாவிட்டால் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்ததாகக் கருதப்படும்.

கைத்தடியை ஊன்றி உரையாற்ற வேண்டும் என்பது ஜும்ஆவின் ஒழுங்கு முறைகளில் ஒன்றாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை.

கைத்தடியை ஊன்றி உரையாற்றுவது மார்க்க ஒழுங்கு முறை என்பதற்காக நபியவர்கள் அதைச் செய்யவில்லை. நிற்கும் போது ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபியவர்கள் ஜும்ஆ அல்லாத வேறு இடங்களிலும் கைத்தடியை ஊன்றி சொற்பொழிவாற்றியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சகீஃப் குலத்தாரிடம் உதவி கேட்டு வந்த நேரத்தில் அவர்கள் வில் அல்லது கைத்தடியை ஊன்றி நின்றதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வஸ்ஸமாயி வத்தாரிக் எனத் தொடங்கும் அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: காலித் (ரலி), நூல்: அஹ்மது (18190)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவையின் நிமித்தமாகவே கைத்தடியைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது. முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவில் கைத்தடியை வைத்துக் கொள்வது சுன்னத் என வாதிடும் உலமாக்கள், இந்த இரண்டாவது ஹதீஸை ஆதரமாகக் கொண்டு மீலாது மற்றும் அவர்கள் நடத்தும் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏன் கைத்தடி வைத்துக் கொள்வதில்லை? என்பதைச் சிந்தித்தால் மன முரண்டாகவே இதை சுன்னத் போல் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில் தமக்குப் பிடிமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்றியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் பள்ளிவாசலில் நட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பேரீச்சை மரத் தண்டின் மீது சாய்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்கள். ரோம் நாட்டைச் சார்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே) நீங்கள் அமர்ந்து கொள்வதற்காக நான் உங்களுக்கு (சொற்பொழிவு மேடை) ஒன்றை செய்து தரட்டுமா? நீங்கள் நிற்பதைப் போன்ற (தோற்றத்தை அது ஏற்படுத்தும்)என்று கூறினார். நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை ஒன்றை அவர் தயாரித்துக் கொடுத்தார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: தாரமீ (41)

நபி (ஸல்) அவர்கள் மிம்பர் இல்லாத போது தரையில் நின்று உரையாற்றியுள்ளார்கள். இந்தச் சமயத்தில் தான் அவர்களுக்குப் பிடிமானம் தேவைப்பட்டது. மிம்பர் வந்தவுடன் அவர்களுக்குப் பிடிமானம் தேவையற்றதாகி விட்டது. இதை மேலுள்ள செய்தி தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மரத்தின் மீது சாய்ந்து உரையாற்றியுள்ளதால் இன்று ஜும்ஆவில் இமாம் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வணக்கம் என்ற அடிப்படையில் செய்யவில்லை. தேவை என்ற அடிப்படையில் செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போதெல்லாம் கைத்தடியைப் பிடித்து வந்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இந்தச் செய்திகள் இப்னு சஃத் அவர்கள் தொகுத்த தபகாத் எனும் நூலிலும் பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.

இந்தச் செய்திகளில் யஹ்யா பின் அபீ ஹய்யா, இப்னு லஹீஆ, ஹசன் பின் உமாரா, அப்துர் ரஹ்மான் பின் சஃத், லைஸ், மற்றும் இப்ராஹீம் பின் அபீ யஹ்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நம்பகமானவர்கள் அல்லர் என அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே மிம்பரில் இமாம் கைத்தடி, கத்தி போன்றவற்றை ஊன்றி நிற்க வேண்டும் என்பது மார்க்கம் கூறாத சட்டமாகும். நல்ல இளைஞராகவும் நடுத்தர வயதுடையவராகவும் இருப்பவருக்கு கைத்தடியைப் பிடித்துக் கொள்வது சிரமமாகவும் இயற்கைக்கு மாற்றமாகவும் இருக்கும். அப்படி இருந்தும் பிடிக்க முடியாமல் பிடித்து, தோளில் கைத்தடியை சாய்த்துக் கொண்டு படும் அவஸ்தைக்கும் இந்த ஹதீஸுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கைத்தடியின் மீது தனது பாரத்தைச் சாய்த்து ஊன்றிக் கொள்ளாமல் கைத்தடியின் பாரத்தையும் சேர்த்து சுமக்கிறார்கள். கைத்தடி தான் இவர்களை ஊன்றுகோலாகப் பயன்படுத்துகிறது. அதுவும் சொந்தமாக உரை நிகழ்த்தாமல் எழுதி வைத்ததைப் படிக்கும் இமாம்கள் என்றால் அந்தப் புத்தகத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு ஒரு தோளில் கைத்தடியைச் சாய்த்துக் கொண்டு நிற்பார்கள்.

மேலும் சில ஊர்களில் முஅத்தின் அந்தக் கைத்தடியை எடுத்து சில வாசகங்களை ஓதி இமாமிடம் கொடுக்க அதை இமாம் பய பக்தியோடு வாங்கி படியில் ஏறும் போது சீன் காட்டுகின்றனர். இதற்கும் இந்த ஹதீசுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

? ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா?

ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும். நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று சொன்னால் இது வடிகட்டிய பொய்யாகும்.  ஏனெனில் மறைவானவற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

நாளை என்ன நடக்கும்? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.  (அல்குர்ஆன் 6:59)

எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் எவராலும் அறிந்து கொள்ளவோ, சொல்லவோ முடியாது. அவ்வாறு ஒருவன் சொல்வான் என்று நம்புவது இணைவைப்பாகும். தாங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையைப் பற்றி சொல்வது கிடையாது. மாறாக ஜோசியம் சொல்வதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். இதை ஒருபோதும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபியாகிய என்மீது அருளப்பட்டதை (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 9171

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி),  நூல்: முஸ்லிம் 4137

மேலும் ஒரு பெண் எப்போது கருத்தரித்தாள் என்பதை எப்படி அவளால் அறிந்து கொள்ள இயலும்? ஒரு மாதத்தில் ஒரே தடவை மட்டும் உடலுறவு வைத்திருந்தால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொண்ட பெண்ணால் கரு எந்த நாளில் உண்டானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கருவுற்ற நாளைச் சொன்னால் கண்டுபிடித்துத் தருவோம் என்று சொல்வது முட்டாள்தனமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். இவர்கள் சொன்னபடி இல்லாமல் மாறிவிட்டால் நீங்கள் கருத்தரித்த நாளை தவறாகச் சொல்லி இருப்பீர்கள் அதனால் மாறிவிட்டது என்று தப்பித்துக் கொள்வதற்காக இப்படி கேட்கிறார்கள் போலும்.

—————————————————————————————————————————————————————-

அஞ்சா நெஞ்சம்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

உலகில் மனிதர்கள் பல வகையான ஏற்றத்தாழ்வுகளுடனே வாழ்ந்து வருகின்றனர். குட்டை, நெட்டை, கறுப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் போன்ற எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களுக்கிடையில் உள்ளன. ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாக, சிறு துரும்பைக் கண்டால் கூட பதறுபவர்களாக இருப்பார்கள். மறு சிலரோ எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சட்டை செய்யாதவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறாக மனிதர்களில் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்பவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் என இரு வகையினர் இருப்பதை நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணமே ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்தச் செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. ஆகவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு தைரியத்தை அறிவுறுத்துகிறது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் கோழையாக இருக்கக் கூடாது. தாம் களமிறங்கும் எந்த ஒரு நல்ல செயலிலும் அஞ்சா நெஞ்சத்துடன் இறுதி வரை இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களுக்கு அது முன் வைக்கும் அறிவுரையாகும்.

எதற்கெடுத்தாலும் அஞ்சுவதைத் தவிர்த்து மன தைரியத்துடன் ஒவ்வொரு செயலையும் அணுக வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. கோழைத்தனத்தை வன்மையாகப் பழிக்கின்றது.

எனவே தான் போர்க்களத்தில் கோழைத்தனமாகப் புறமுதுகிட்டு பின்வாங்குவதை பெரும்பாவத்தில் ஒன்றாக நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2766

கோழைத்தனத்தை இஸ்லாம் எந்த அளவு பழிக்கின்றது என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

நபி மூஸா (அலை) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட துவக்கம், கொடிய அரசனான ஃபிர்அவ்னிடம் ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொல்லுமாறு இறைவன் கட்டளையிட்ட சமயம், அடுத்து சூனியக்காரர்களுடனான போட்டி ஆகிய சந்தர்ப்பங்களில் மூஸா நபியவர்கள் தைரியமின்றி அச்சத்துடன் காணப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மூஸாவே! நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ். உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். “மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 27:9,10)

நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்) “என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக. நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.) “மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டதுஎன்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:24-36)

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்என்று கூறினோம். (அல்குர்ஆன் 20:65-68)

இந்தச் சந்தர்ப்பங்களில் அல்லாஹ் அன்னாரது அச்சத்தைப் போக்கி மன தைரியத்தை ஊட்டுகின்றான். அதன் பிறகு ஒரு போர் வீரனைப் போன்று தமது பிரச்சார வாளைச் சுழற்றினார்கள் என்ற இந்த வரலாற்றுச் செய்தியும் ஒரு முஸ்லிம் எதற்கும் அஞ்சலாகாது  என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்

மேலும் எதற்கும் அஞ்சாத உறுதியான முஸ்லிமே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5178

அல்லாஹ்வின் தூதர் ஓர் அஞ்சா நெஞ்சர்

இன்றைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தமது தொண்டர்களால் அஞ்சா நெஞ்சர், போர்வாள் போன்ற பல அடைமொழிகளோடு அழைக்கப்படுவதை அறிகிறோம். அவ்வாறு அழைக்கப்படும் தலைவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் அவ்வாறிருக்க மாட்டார்கள். கட்சிக்கு ஒரு துன்பம் அல்லது தனக்கு ஒரு துன்பம் என்றவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அனைத்தையும் அம்போ என விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்.

அல்லது என்னை விட்டு விடுங்கள் என கதறி அழும் பரிதாப காட்சியையைத் தான் காண முடிகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க இந்த அற்பர்களை அஞ்சா நெஞ்சர் என வர்ணிப்பது நகைச்சுவைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. தலைவனே இப்படி என்றால் இவரது தொண்டர்களின் வீரத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

ஆனால் நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவு மிக்க தலைவராகத் திகழ்ந்தார்கள்.

பத்ருக் களம் நபிகளாரின் துணிச்சலுக்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களின் மீது வலிய திணிக்கப்பட்ட முதல் போர் பத்ருக் களம். எதிரிகள் ஆயிரக்கணக்கானோர் போர்த்தளவாடங்களுடன் வலிமையான நிலையில் இருந்த போதும் சொற்ப நபர்களுடன் சொற்ப ஆயுதங்களுடன் இறை உதவியின் மீதுள்ள நம்பிக்கையில் வலிமையான அந்த அணியைச் சந்திக்க தலைமை தாங்கிப் புறப்பட்டு சென்றார்கள் எனில் இது நபிகளாரின் துணிச்சலைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி கோழைத்தனத்தை நபிகளார் தமது வாழ்வில் முற்றிலுமாக வெறுத்தார்கள். ஆதலால் தான் தமது துஆவில் கோழைத்தனத்தை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவதை அன்றாட வழக்கமாக்கி இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலில் இருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும்  இறப்பின்  சோதனையிலிருந்தும் உன்னிடம்  பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்என்று    பிரார்த்திப்பது வழக்கம்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),  நூல்: புகாரி 2823

நபிகளாரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சம்பவமும் ஆதாரமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். “(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், “இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்  (ரலி), நூல்: புகாரி 2820

இத்தகைய அஞ்சா நெஞ்சரின் தொண்டர்களான நாம் எத்தகைய துணிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்? ஆனால் நம்மில் பலரோ பேய் என்ற தவறான நம்பிக்கையினால் நடுநிசியைத் தாண்டிவிட்டால் வெளியில் வரவே அஞ்சும் தொடை நடுங்கிகளாக இருக்கிறோம் எனில் இது சரியா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எது துணிச்சல்?

இன்றைக்குத் துணிச்சல், வீரம், தைரியம் என்றாலே அடுத்தவனை அநியாயமாக அடித்து உதைப்பது என்ற அளவில் தான் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாம் இதைப் போதிக்கவில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது துணிச்சலும் அல்ல.

தைரியம், வீரம் என்பது நம் கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கும் போது அதைக் கண்டித்துக் குரலெழுப்புவது ஆகும். அந்தத் தீமைக்கு எதிராக நமது கண்டனத்தைப் பதிவு செய்வதும் தைரியத்தில் உள்ளதாகும். ஒரு முஸ்லிம் இவற்றைச் செய்வதிலிருந்து கோழையாகப் பின்வாங்கிடக் கூடாது. தவறைக் கண்டிக்கும் இத்துணிச்சலை நபியவர்கள் ஈமானில் ஒரு முக்கிய அங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி  (ரலி), நூல்: முஸ்லிம் 78

சாதாரண நிகழ்வொன்று நடந்தாலே அச்சம், பயம், நடுக்கம் ஆகியவை அனைவரையும் பற்றிக் கொள்கிறது. இதை எப்படி எதிர் கொள்வது? இதை எதிர்த்தால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற தயக்கம் தடைக் கல்லாய் நிற்கிறது. இந்த தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுமாயின் தைரியத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் துணிவுள்ளவர்களாக நாம் செயல்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் தைரியத்தில் உள்ள முக்கியமான அம்சமாகும்.

ஏனெனில் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதை சிறந்த ஜிஹாத் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அஹ்மத் 18074

நபியவர்கள் ஒரு சமயம் பாதையில் நடந்து வரும் போது தம் கண்முன்ணே ஒரு வியாபாரி அநியாயமான முறையில் பொருளை விற்பதை அறிந்த போது உடனே அதைத் தட்டிக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் என்று வரலாறு நமக்குச் சான்றளிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் உணவுக் குவியல் அருகே சென்றார்கள். அதனுள் தன் கையைப் புகுத்தினார்கள். விரல்களில் ஈரப்பதம் பட்டது. “உணவுப் பொருள் விற்பவரே! இது என்ன?” என்று கேட்டார்கள். “இறைத்தூதர் அவர்களே! மழை பெய்து விட்டதுஎன்று அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அந்த ஈரம் பட்ட தானியத்தை மக்கள் பார்க்கும் வகையில் மேற்பகுதியில் நீர் வைத்திருக்க வேண்டாமா? நம்மை ஏமாற்றுகிறவர், நம்மைச் சேர்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 187

நாம் காணும் தீமையை நம்மால் இயன்றவரை தைரியத்துடன் தட்டிக் கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

தவறை உணர்த்தத் தயங்கி விடாதே!

சில நேரங்களில் அடுத்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால் தவறிழைப்பவர்கள் நம்மை விட ஏதாவது ஒரு வகையில் பெரியவர்களாக இருப்பார்கள். பெரிய பதவியில் உள்ளவர்களாகவோ அல்லது பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களாக அல்லது வயதில் மூத்தவராகவோ இருப்பதால் அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டத் தயங்கி விடுவோம். அவரோ நம்மை விடப் பெரியவர்; அவருடைய தவறை நாம் எப்படி சுட்டிக் காட்டுவது என்ற அச்சமே இதற்குக் காரணம். இது தவறான பார்வையாகும். இந்த அச்சமும் ஒரு வகையான கோழைத்தனமாகும்.

தவறு செய்பவர் எத்தகையவராக இருந்தாலும் ஒரு பெரும் சமுதாயமாகவே இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் மனவலிமை நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.

இஸ்லாமிய வரலாறு, பல நல்லோர்களின் வரலாறு இதைத் தான் நமக்கு உணர்த்துகின்றது.

நபிகளார் மரணித்த வேளையில் நபிகளாரின் மரணம் தொடர்பாக நபித்தோழர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. உமர் (ரலி) உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள் நபிகளார் இன்னும் மரணிக்கவில்லை, அல்லாஹ் அவரை மீண்டும் எழுப்புவான் என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். இத்தகைய நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள், நபிகளார் இறந்து விட்டார்கள் என்பதை அழகான, பக்குவமான தனது பேச்சின் மூலமாக மக்கள் அனைவருக்கும் உணர்த்தினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) “ஸுன்ஹ்என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) “(நபியவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்என்று சொன்னார்கள். மேலும், “நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களேஎன்னும் (39:30) இறை வசனத்தையும், “முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3667, 3668

அத்தனை நபித்தோழர்கள் தவறான நிலைப்பாட்டில் இருந்த போதும் நெஞ்சுறுதியோடு அவர்களின் தவறான நிலைப்பாட்டை, தனது தெளிவான பேச்சின் மூலம் அபூபக்கர் (ரலி) அவர்கள் உணர்த்தினார்கள். நபியவர்களின் இறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அபூபக்கர் (ரலி) அவர்களின் உரை இருந்தது எனில் அதற்கு அடித்தளமாக அமைந்தது அன்னாரது மன தைரியமும் யாருக்கும் அஞ்சாத தன்மையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இது போலவே சமுதாயம் முழுவதும் தவறில் இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு அஞ்சாத நெஞ்சம் அவசியம் தேவை என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது.

அவ்வாறு ஒரு சமுதாயத்திடம் காணப்படுகின்ற தவறை நாம் எச்சரிக்கும் போது அதை சரிகாணக் கூடியவர்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பலைகளும் கிளம்பலாம். தொல்லைகள் தொடரலாம். அதை எல்லாம் எதிர்கொள்ள நெஞ்சுரம் வேண்டும் யாருக்கும் எதற்கும்  அஞ்சாத நெஞ்சம் வேண்டும்.

அதை நபியவர்களும் நபித்தோழர்களும் பெற்றிருந்த காரணத்தினால் தான் பல்வேறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் தமது இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து தொய்வின்றி நிறைவேற்றலானார்கள்.

அத்தகைய அஞ்சாத நெஞ்சத்தை நாமும் பெற இறைவனிடம் வேண்டுவோமாக!

—————————————————————————————————————————————————————-

உலகம்

அமெரிக்கா கொன்றொழித்த ஐந்து லட்சம் முஸ்லிம்கள்

பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். Weapons of  Mass Destruction # பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும். படை எடுத்த இருபத்தோரு நாட்களில் இராக்  முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. போரில் தோற்ற சதாம் ஹுசைன் தப்பி, தலைமறைவானார்.

2003 டிசம்பர் 13ல் சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு, 2006 நவம்பர் 5ம் தேதி தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடுவதற்கு அவர் மீது  சாட்டப்பட்ட  குற்றச்சாட்டு துஜைல் என்ற ஊரில் 148 ஷியாக்களைக் கொலை செய்தார் என்பது தான். இராக்கைப் பிடித்து  இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இதுவரை பேரழிவு ஆயுதங்களை அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை.

கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியான ஒரு கல்வி ஆய்வு, “இதுவரையில் இராக்கில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டும்’ என்று குறிப்பிடுகின்றது. ஏற்கனவே, பிரிட்டனைச் சார்ந்த ஓர் அமைப்பு ஊடகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போரினால் ஏற்பட்ட வன்முறை மூலம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,000 என்று தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, கனடா, பாக்தாத் பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வை  இராக் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் துணையுடன் நடத்தின. போர், கலவரச் சாவுகளுடன் மட்டும் இந்த ஆய்வு நிற்கவில்லை. போர் ஏற்படுத்திய மறைமுகச் சாவுகளையும் கணக்கில் எடுத்துள்ளது. உண்மையில் இந்தச் சாவுகள் அமெரிக்காவுடைய படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மூலமும் நடந்துள்ளன. அந்த சாவுகளையும் இந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது. இதற்கு முந்தி எடுக்கப்பட்ட ஆய்வுகள் இத்தனை நீண்ட ஆண்டு கால அளவை எடுக்கவில்லை. ஆனால் இந்த ஆய்வு 2003லிருந்து 2011 வரையிலான கால கட்டத்தை எடுத்திருக்கின்றது. போர்க் கலவரம் மிக மிக அதிகமான உயிர்களைப் பலி கொண்டிருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினர் போர் மூலமாகவே கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விபரம் இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கில் வரவில்லை.

போரினால் ஏற்பட்ட மறைமுக சாவு பற்றிக் குறிப்பிடுகையில், சில நிகழ்வுகளை அது பதிவு செய்துள்ளது. பிரசவ வேதனையினால்  துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெண் மருத்துவமனைக்கு உடனே போக வேண்டும். ஆனால் அவள் அவ்வாறு போக முடியவில்லை. காரணம் போர் தான். அதனால் அந்த பெண் மரணத்தைத் தழுவுகின்றாள். பாதுகாப்பில்லாத மாசுபட்ட குடிநீர் குடிப்பதால் மக்கள் மரணிக்கின்றனர். போரில் அல்லது கலவரத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியவில்லை. காரணம் மருத்துவமனை தன் சக்திக்கு மீறிய அளவில் நோயாளிகள் சேர்க்கையினால் திக்குமுக்காடி, திணறியது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இவை மறைமுக மரணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், மனித குலத்திற்கு எதிரான தாக்குதல் என்ற குற்றச்சாட்டின் பேரிலும், ஒரு 148 பேர்களைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை என்றால் இராக்கில் மட்டும் இத்தனை லட்ச மக்களைக் கொன்ற உலா  மகா பாதகன், உலா மகா கிராதகன், ஈவு இரக்கமற்ற சண்டாளன் ஜார்ஜ் புஷ் மற்றும் உத்தம புத்திரனாய், உலக மகா யோக்கியனாய் வேதாந்தம் பேசி பதவிக்கு வந்து புஷ்ஷின் பாதையில் பயணம் செய்கின்ற ஒபாமா ஆகியோருக்கு என் மாதிரியான தண்டணை கொடுக்க வேண்டும் என்று நியாயம் உள்ளம் கொண்டோர் சிந்திக்க வேண்டும்.

இந்தச் சண்டாள அமெரிக்காவின் ஆப்கானிய படையெடுப்பின் போது கொல்லப்பட்டோரின் புள்ளி விபரத்தைப் பார்த்தோம் என்றால் இதயம் வெடித்து விடும். அந்த அளவுக்கு அவர்களது கொலைப் பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. இந்த அமெரிக்கா தான் இன்றைக்கு உலகில் சட்டாம்பிள்ளைத்தனம் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த அராஜகனைத் தட்டிக் கேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகள் முதுகெலும்பில்லாத, கடைந்தெடுத்த கோழைகளாக இருந்து  கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவின் அடிவருகிகளாகிவிட்டனர்.

உலகில் எங்காவது ஓரிரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டு விட்டால் அங்குள்ள தனது தூதரகங்களேயே மூடிவிட்டு அமெரிக்கர்களை உடனே அங்கிருந்து வெளியேறச் செய்கின்ற நாடு தான் அமெரிக்கா.

தன்னுடைய நாட்டவரின் உயிர் தான் உயிர்! மற்ற நாட்டுக்காரர்களின் உயிர் மயிர் என்று நினைக்கின்ற முதல் தர சுயநலக்கார நாடு அமெரிக்கா தான்! இல்லையெனில் இராக்கில் இப்படி ஐந்து இலட்சம் உயிர்களை அநியாயமாகப் பறித்து, பலி வாங்கியிருக்குமா? அதிலும் குறிப்பாக, பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி உள்ளே அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் அமைதியை சீர்குலைத்திருக்குமா? இன்றளவும் அங்கு சிவகாசி சரவெடி போல் குண்டு வெடித்து உயிர்கள் அன்றாடம் அழிவதற்குக் காரணம் இந்த அக்கிரமக்காரன் அமெரிக்கா தான்.

தன்னை யாரும் தண்டிக்க மாட்டார்கள் என்ற தலைக்கனத்தில் இந்த அமெரிக்கா ஆடிக் கொண்டிருக்கின்றது.

காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். (அல்குர்ஆன் 3:140)

அல்லாஹ் கூறுவது போல் சுழலும் காலச் சக்கரம் அமெரிக்காவை நோக்கி வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!!

அல்லாஹ்வின் பிடிக்காகக் காத்திருப்போம்!