ஏகத்துவம் – நவம்பர் 2011

தலையங்கம்

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!

மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

அல்குர்ஆன் 37:103-108

அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

  1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

(இதன் அதிக விளக்கத்தை இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.)

  1. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.

ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் “கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் “பலி’ என்ற வணக்கத்தினால் பலன் என்ன?

இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

அல்குர்ஆன் 22:37

அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.

இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று கேட்டார்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லைஎன்றனர்.

அல்குர்ஆன் 23:23, 24

இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.

எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி….

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

ஒன்றே குலம்

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் இஸ்லாம், “ஒருவனே தேவன், ஒன்றே குலம்’ என்று கூறுகின்றது.

ஒரே கடவுள் என்ற வட்டத்திற்குள் உலக மக்கள் வந்து விட்டால் கடவுள் நம்பிக்கையில் அவர்களுக்கு மத்தியில் ஓர் இணக்கம், ஐக்கியம் ஏற்பட்டு அதன் மூலம் தத்துவ ரீதியில் அவர்கள் ஒரே குலமாகி விடுகின்றனர். அந்த ஒற்றுமை வெறும் சிந்தனையாக ஏட்டளவில் இருக்கக் கூடாது. அது செயல்பாட்டளவில் வந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அதைத் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

ஒரு மனிதனுக்கு மரியாதை, அந்தஸ்து, தகுதி அனைத்தும் அவன் தன்னைப் படைத்த இறைவனை எந்த அளவுக்கு அஞ்சுகின்றானோ அதைப் பொறுத்து தான். பிறப்பால், பணத்தால், நிறத்தால், இனத்தால் உயர்வு, தாழ்வு ஏற்படுவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

இறைவனின் மதிப்பு, மரியாதை ஒரு குறிப்பிட்ட நாட்டவருக்கு – இனத்தவருக்கு – குடும்பத்தாருக்கு – மொழியினருக்குத் தான் கிடைக்கும் என்பதில்லை.

ஒரு வெள்ளையன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியாது. அதே சமயம் ஒரு கருப்பன் இறைவனை அஞ்சி நடந்தால் அவன் இறைவனின் அன்பை, மரியாதையைப் பெற முடியும்.

அதே போல் வெள்ளையனும் இறைவனைப் பயந்து நடக்கும் போது இறைவனிடம் உயர்ந்தவனாகி விடுகின்றான். ஒரு வெள்ளையன் இறைவனுக்கு மாற்றமாக நடந்தால் அவன் இறைவனிடம் தாழ்ந்தவனாகி விடுகின்றான்.

தூய்மையான துலாக்கோல்

ஒரு சாராரை நெற்றியில் பிறக்க வைத்து, அவர்களுக்கு உயர்வையும் மற்றொருவரைக் காலில் பிறக்க வைத்து அவர்களுக்குத் தாழ்வையும் கொடுப்பது இறைப்பண்பு அன்று! இது ஓர் அநியாய அளவுகோல் ஆகும். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதோ தூய்மையான துலாக்கோல் ஆகும்.

மனு தர்மம், பைபிள் போன்று இறைவனை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் திருக்குர்ஆன் சொந்தமாக்கவில்லை. உலகில் உள்ள மனித இனம் அனைத்தும் அவனது படைப்பு! அந்த மனித இனம் ஒரேயொரு ஜோடியிலிருந்து பிறந்திருக்கின்றது என்று கூறி ஒரு நொடியில் உலகில் உள்ள நிறம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்து பேதங்களையும் தகர்த்தெறிந்து விடுகின்றது.

குலம், கோத்திரம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவன் கூட்டாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். அந்தக் கூட்டு வாழ்க்கைக்கு யாராவது ஒருவன் தலைமைப் பொறுப்பேற்கின்றான். சமூகத்தில் இதனால் அவனது குடும்பத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கின்றது. பிறகு அந்த ஊரை, அந்த நாட்டை, தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பம் ஆண்டு வருகின்றது. அது மன்னர் பரம்பரை என்று அழைக்கப்படுகின்றது.

அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் ஒரு சீர்திருத்தச் சிந்தனைவாதி தோன்றியிருப்பான். அதனால் அந்தக் குடும்பம் மதிக்கப்படும். இந்தச் சமூக அந்தஸ்து தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.

இப்படிப் பல்வேறு காரணங்களால் ஒரு குடும்பம் சமுதாயத்தில் மரியாதையைப் பெறுகின்றது. இப்படி மரியாதை பெறும் இந்தக் குடும்பம் தங்களுக்கு மத்தியில் மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்கின்றது. மற்ற குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வது கிடையாது. தங்கள் குடும்பங்களுக்கென்று சில மரபுகளையும் விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு, வரம்புகளை வகுத்துக் கொண்டு தங்களைச் சிறந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

குரைஷிக் குலம்

இதற்கு உதாரணமாக அரபியாவின் குரைஷிக் குலத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள்.  இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர்.

இவர்கள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தனித்துவத்தைத் தக்க வைத்தல்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1665

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குல வெறிக்குத் தான் அல்குர்ஆன் ஆப்பு வைக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப்படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள்  அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், “இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 1664

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ஆப்பு வைத்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள்.  குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள்.  நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

நூல்: முஸ்லிம் 2137

சம்பந்தியும் சமபந்தியும்

எண்பதுகளில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியே போய் விடக் கூடாது என்பதற்காக இந்து மதத் தலைவர்கள் சமபந்தி போஜனம் நடத்தினார்கள். அப்போது அந்த மக்கள் எழுப்பிய கேள்வி இது தான். சமபந்தி போஜனம் வேண்டாம்! சம்பந்தி போஜனம் நடத்த முடியுமா?

அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நமக்குத் தார்மீக உரிமை இருக்கிறது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குடும்ப வெறியைத் தகர்க்கும் வகையில், தன்னிடம் வளர்ந்த ஸைத் என்ற அடிமைக்குத் தனது அத்தை மகள் ஸைனபைத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இது அரபுலகிற்கு ஓர் அதிசய நிகழ்வாகும். இவ்விருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு விவாக விலக்கு நிகழ்ந்தாலும், அரபகத்தில் நிலவிய “உயர் குலத்தவர்கள் தங்களுக்குள் தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற மரபு உடைக்கப்பட்டு விட்டது.

அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுவது போல் குலம் குறுக்கே நிற்காத வண்ணம் இறையச்சம் தான் சம்பந்தத்திற்குரிய அளவுகோல் என்று நிலைநாட்டி, தீண்டாமையைத் தகர்த்தெறிந்தார்கள்.

தாழ்த்தப்பட்டவர் தளபதியான அதிசயம்

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3730

பிரஞ்சுப் புரட்சி

குலம், கோத்திரத்தால் தீண்டாமை ஏற்படுவது போல் செல்வத்தாலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்குக் காரணம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்பட்ட வேறுபாடு தான். பிரான்ஸ் தேசிய சட்டசபையில் பாதிரியார்கள், பிரபுக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று மூன்று சாரார் இருந்தனர். இம்மூன்று சாராரில் ஆளும் வர்க்கத்தினருக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கும் ஜால்ரா போடும் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்கள் ஆகியோருக்குத் தான் வாக்குரிமை இருந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாக்களிக்க உரிமை இல்லை.

வாக்களிக்கும் போது தலைகளை எண்ணுங்கள்; தரத்தை எண்ணாதீர்கள் என்று நடுத்தர வர்க்கத்தினர் கோரினர். ஆனால் மன்னர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோன்றியது தான் பிரஞ்சுப் புரட்சி!

இப்படி செல்வம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் தகர்க்கின்றது.

முளையிலேயே கிள்ளிய திருக்குர்ஆன்

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

அல்குர்ஆன் 18:28

காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், மனோ இச்சையைப் பின்பற்றியவனுக்குக் கட்டுப்பட வேண்டாம் எனவும் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றது.

இறைவனைக் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தார் எனக் குறிப்பிடப்படுவோர் இவ்வுலகின் புகழ், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருந்தனர் எனவும் மனோ இச்சையைப் பின்பற்றியோர் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக இருந்தனர் எனவும் இந்த வசனத்தி-ருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  “இவ்வுலகின் கவர்ச்சியின் பால் உமது கண்களைத் திருப்ப வேண்டாம்’ என்ற சொற்றொடரிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற கருத்தை 6:52 வசனமும் கூறுகின்றது.

(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 6:52

இவ்வசனத்தில் காலையிலும் மாலையிலும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு விரட்டினால் அநீதி இழைத்தவராவீர் எனவும் கூறப்படுகின்றது.

இது போன்ற கருத்து மேலும் இரண்டு வசனங்களிலும் கூறப் பட்டுள்ளது.

அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக் காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக

அல்குர்ஆன் 15:88

(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.

அல்குர்ஆன் 20:131

சாமான்யர்களையும் ஏழைகளையும் அடிமைகளையும் செல்வந்தர்களுக்காக, செல்வாக்குடையோருக்காக இழந்து விடக் கூடாது என்பது இவ்வசனங்கள் கூறும் சாராம்சம்.

இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட அறிவுரை என்பதைப் பின்வரும் நபிமொழியி-ருந்து அறிந்து கொள்ளலாம்.

நான், இப்னு மஸ்ஊத், ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பிலால் மற்றும் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.  அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்.  அப்போது இணை வைப்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.  “இவர்களை விட்டு விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்களுக்குத் துணிச்சல் வந்து விடும்என்று கூறினார்கள்.  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் எது ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது.  அப்போது தான் இந்த (6:52) வசனம் அருளப்பட்டது என்று ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2413

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளார் மீது நம்பிக்கை இருந்தது.  நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள், இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கின்றார் என நினைக்கவில்லை.

அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலாகாலம் கட்டிக் காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார். உயர் குலத்தைச் சேர்ந்த இவர், இழிகுலத்தைச் சேர்ந்தவர்களைத் தம்மோடு சமமாக அமர வைக்கின்றார். இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.

எனவே தான் பலவீனர்களை விரட்டினால் அல்லது அவர்களுக்குத் தனி சபையையும் தங்களுக்குத் தனி சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள்.  இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப் படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை மேற்கண்ட முஸ்-ம் ஹதீஸி-ருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று, மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.

எனவே தான் இவ்வசனங்களில் கடுமையாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.  ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம், செல்வாக்கு போன்றவற்றால் கவரப் பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

நூல்கள்: திர்மிதி – 3452, 3328,

முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

அல்குர்ஆன் 80:1-10

ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட இஸ்லாத்தை ஏற்காதவர் பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளதால் தான் முஸ்-ம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு இஸ்லாம் ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைபாடே காரணமாக இருக்கின்றது.

சாதாரண மக்களுக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்-ம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.

தொண்டருக்கு ஸலாம் கூறும் தலைவர்

செல்வம், செல்வாக்கு மிக்கவர்களுக்காக ஏழைகளின் உணர்வைக் காயப்படுத்தும் அந்தக் காட்டுத்தன்மை, ஏழைகளின் இயக்கமான இஸ்லாமிய மார்க்கத்தை உலகுக்குக் கூற வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அதை முளையிலேயே கிள்ளி எறிகின்றான். ஒரு தலைவர் தொண்டரிடத்தில் பார்க்க வேண்டியது இறையச்சம், மார்க்கப் பற்று ஆகிய அம்சங்களைத் தானே தவிர செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை அல்ல என்று வல்ல அல்லாஹ் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறான். அத்துடன் இன்னொரு விஷயத்தையும் தன் தூதரிடம் அழுத்தமாகப் பதிவு செய்கின்றான்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:54

இன்று உலகில் தொண்டர்கள் தான் தலைவருக்கு முகமன், வாழ்த்துச் சொல்ல வேண்டும். மாணவர் தான் ஆசிரியருக்கு முகமன் சொல்ல வேண்டும். மனைவி தான் கணவனுக்கு முகமன் சொல்ல வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தையெல்லாம் மாற்றியமைத்து தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தொண்டர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

ஏழைகளுக்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கும் மரியாதையைப் போன்று வேறு எந்த இயக்கமும் மரியாதை வழங்குமா? இந்த இயக்கத்தில் தீண்டாமை எள்ளளவு, எள் முனையளவாவது தலை காட்ட முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆட்சியாளர்களும் அடிமைகளும்

தீண்டாமையை உருவாக்குவதில் ஆட்சியதிகாரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒருவனுக்கு அதிகாரம் வந்தவுடனேயே அவன் மற்றவர்கள் தனக்குப் பணிய வேண்டும்; பாதத்தில் விழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விடுகின்றான்.

எனவே ஆள்பவன் கடவுள் நிலைக்கும், ஆளப்படுபவன் அடிமை நிலைக்கும் போய் விடுகின்றான். இதனால் ஆள்பவனின் குடும்பத்தார் உயர் ஜாதியினராகவும், ஆளப்படுபவனின் குடும்பத்தார் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படும் நிலை உருவாகி விடுகின்றது. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.

சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

அல்குர்ஆன் 41:37

படைப்பினங்கள் எதற்கும் சிரம் பணியக்கூடாது; அவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே சிரம் பணிய வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது.

தரை மட்டமாக்கப்படும் தனி மனித வழிபாடு

அரசனுக்குச் சிரம் பணிதல் என்ன? அவன் வரும் போது எழுந்து கூட நிற்கக் கூடாது என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்.

மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமக்காக மற்றவர்கள் எழுந்து நிற்பதைத் தடை செய்கின்றார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்

நுôல்: முஸ்லிம் 701

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை என்றாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூகள்: அஹ்மது 12068, திர்மிதி 2678

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். “தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் 4552

தொண்டன் எப்படி இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானோ அப்படித் தான் தலைவனும் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே ஒரு குடிமகன் தன்னுடைய ஆட்சியாளனிடம் ஒரு நொடிப் பொழுது கூட தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்கின்ற தூய மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான். உலகில் எந்தவொரு மார்க்கமும் சொல்லாத ஓர் உயரிய ஒப்பற்ற தன்மான உணர்வை இஸ்லாம் போதிக்கின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

இத்தகைய உயர்ந்த, அழுத்தமிக்க கொள்கைகளால் தான் தீண்டாமையைத் தன் பக்கம் அண்ட விடாமல் இஸ்லாம் தடுத்து வைத்துள்ளது. அதன் ஓரம்சமாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நெறியை இஸ்லாம் வலுவாகப் பற்றிப் பிடித்து நிற்கின்றது.

மனிதர்கள் அனைவரும் கடவுளின் அடிமைகள்! அந்த அடிமைகளில் ஆள்வோருக்கு ஒரு சட்டம்; ஆளப்படுவோருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை. மனு தர்மத்தைப் போல் பிராமணர்களுக்கு ஒரு சட்டம்; சூத்திரர்களுக்கு ஒரு சட்டம் என்று வேறுபாடு காட்டவில்லை.

திருக்குர்ஆனின் சட்டத்தைச் செயல்படுத்திக் காட்டிய திருத்தூதர் (ஸல்) அவர்கள், சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கடுகளவு கூட அனுமதிக்கவில்லை.

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

உயர் குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தன் மகளை முன்னிறுத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள்.

தேசியம், மொழி உணர்வுகள்

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப் பற்றும், மொழி வெறியும் திகழ்கின்றன.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கும், அங்கு இலட்சக்கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழி வெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழி வெறி தான் காரணம்.

இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமேஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது.

அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம்! மொழி உணர்வு!

என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழி வெறியின் குரல் வளையைப் பிடித்து திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.

எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!

நூல்: அஹ்மத் 22391

இவ்வாறு, மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.

தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்துக் காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில், பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது.

அடிமை விலங்குகளை உடைத்தெறிய வந்தவர் தான் அந்தத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்      தொடர்: 9

ஒவ்வொரு மாதமும் லைலத்துல் கத்ர்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இப்னுல் அரபியின் திமிர்

லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைப் பற்றி இஸ்லாமியர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அனைத்து முஸ்லிம்களும் இதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

வருடந்தோறும் ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் களை கட்டுவதும், ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்கள் கூட ரமலான் மாதத்தில் அதிலும் குறிப்பிட்ட நாட்களில் பள்ளிவாசலில் வந்து நிரம்புவதும் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் சான்றுகளாகும்.

ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவின் பாக்கியத்தைப் பெறுவதற்காகவே முஸ்லிம்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

அல்குர்ஆன் 97:1

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.

அல்குர்ஆன் 2:185

ரமலான் மாதத்தில் தான் புனித மிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது என்பதை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தை பல ஹதீஸ்களில் பிரதிபலித்துள்ளார்கள்.

இதைத் தாண்டி எந்த முஸ்லிமும் ரமலான் அல்லாத மாதங்களில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது என்று கூற முன்வர மாட்டான். ஷஃபான் மாதத்தில், ரபீஉல் அவ்வல் மாத்தில் லைலத்துல் கத்ர் உள்ளது என்று ஒருவன் கூறினால் அவனை முட்டாள் என்றே அனைவரும் கூறுவோம்.

ஆனால் இத்தகைய முட்டாள்தனமான கருத்தை ஒரு அறிஞர் (?) கூறுகிறார் என்றால் அவரை, அவருடைய கருத்தை என்னவென்பது? இது தொடர்பான விவரம் பின்வருமாறு:

நான் கூறுகிறேன் (நூலாசிரியர்): முஹ்யித்தீன் இப்னுல் அரபி தனது ஃபுதூஹாதுல் மக்கிய்யா என்ற நூலில் கூறிய கருத்து இக்கருத்தை வலுப்படுத்துகிறது.  அவர் கூறியதாவது:

மக்கள் லைலத்துல் கத்ர் இரவு தொடர்பாக அதனுடைய காலத்தில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். சிலர் வருடம் முழுவதிலும் அது சுற்றிவருகிறது என்று கூறுகின்றனர். இவ்வாறே நானும் கூறுகிறேன். நான் அதை ஷஃபான் மாதத்தில் பார்த்தேன்.  ரபீஉ மாதத்தில், மேலும் ரமலான் மாதத்திலும் பார்த்தேன். மிக அதிகமாக ரமலானில் அதன் இறுதி பத்தில் பார்த்தேன். மேலும் ஒரு முறை ரமலானின் நடுப்பத்தில் ஒற்றைப்படை இரவல்லாத நாளில் பார்த்தேன். அதில் ஒற்றைப்படையிலும் பார்த்தேன். நான் உறுதியாக கூறுகிறேன்: அது (லைலத்துல் கத்ர்) வருடம் முழுவதிலும் மாதத்தின் ஒற்றைப்படை, ஒற்றைப்படையல்லாத நாளிலும் சுற்றிவருகிறது.

நூல்: ரத்துல் முக்தார்

பாகம் 8 பக்கம் 98

ரத்துல் முக்தார் என்ற நூலின் ஆசிரியர் லைலத்துல் கத்ர் இரவு எப்போது என்பது தொடர்பாக இப்னுல் அரபி என்பவரின் கருத்தைத் தனது நூலில் பதிவு செய்திருக்கின்றார். அதன் மொழியாக்கத்தை மேலே தந்துள்ளோம்.

லைலத்துல் கத்ர் இரவு தொடர்பாக இப்னுல் அரபி கூறியது பல கோணங்களில் அலசப்படவேண்டிய கருத்தாகும்.

லைலத்துல் கத்ர் இரவில் தான் திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்றும், அது ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்பதையும் இறைவனும் இறைத்தூதரும் நன்கு விளக்கி விட்டார்கள். இதற்குப் பிறகு ஏனைய மாதத்தில் இருப்பதாக ஒரு முஸ்லிம் நம்புவது மிகப் பெரிய பாவம், அறியாமையாகும். ஆனால் இப்னுல் அரபி, வருடத்தின் அனைத்து மாதத்திலும் லைலத்துல் கத்ர் வருகிறது என்கிறார்.  எல்லா மாதத்திலும் லைலத்துல் கத்ர் உள்ளது எனில் ரமலான் மாதத்தில் புனித மிக்க இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று  இறைவன் கூறியதற்கு என்ன பொருள்?

மேலும் இக்கருத்தை அவர் கூறிய விதம் படிப்போருக்கு திமிர்த்தனம் என்றே எண்ணத் தோன்றும். எல்லா மாதத்திலும் லைலத்துல் கத்ர் இருக்கிறது என்று சொல்வதோடு நின்றுவிடாமல் எல்லா மாதத்திலும் தான் அதைப் பார்த்ததாகக் கூறுகிறார்.

மேலும் லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றப்படை இரவில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்:  “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!என்று கூறுவார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2020

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர்:  ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2021

மேலும் பல செய்திகளில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்னுல் அரபி ஷஃபான் மாதம், ரபீஉல் அவ்வல் மாதம், ஒற்றைப்படை, இரட்டைப்படை என எல்லா இரவிலும் லைலத்துல் கத்ர் இரவை கண்ணால் பார்த்ததாகக் கூறுகிறார்.

இறைவன் ஏற்படுத்திய ஒன்று அவன் நிர்ணயித்த நாளுக்கு மாற்றமாக ஒரு போதும் நிகழாது என்பதில் உண்மையான முஸ்லிமிற்கு ஊசி முனையளவும் சந்தேகமிருக்காது. லைலத்துல் கத்ரை ரமலான் மாதத்தின் இறுதிப் பத்தில் ஒற்றைப் படை நாள்களில் தான் இறைவன் நிர்ணயித்துள்ளான். இறைவன் நிர்ணயித்த இந்த நாளுக்கு மாற்றமாக லைலத்துல் கத்ரை யாரும் காண முடியாது. மீறி ஒருவர் தான் பார்த்ததாகக் கூறுவாரெனில் அது வடிகட்டிய பொய் என்பது உறுதி.

இந்த இப்னுல் அரபி, இறைவன் நிர்ணயித்ததற்கு மாற்றமாக, தான் பார்த்ததாகக் கூறுகிறார் என்றால், அதிலும் எல்லா மாதத்திலும், எல்லா நாட்களிலும் லைலத்துல் கத்ரை நான் பார்த்தேன் என்று கூறுகிறார் எனில் இது சந்தேகமற திமிர்த்தனமே தான்.

இறுதியில் அவர் கூறிய வார்த்தையை வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

நான் உறுதியாகக் கூறுகிறேன் அது (லைலத்துல் கத்ர்) வருடம் முழுவதிலும் மாதத்தின் ஒற்றைப்படை, ஒற்றைப்படையல்லாத நாளிலும் சுற்றிவருகிறது.

இக்கருத்தை ஒன்றுக்குப் பலமுறை வாசித்துப் பாருங்கள். இதை திமிர்த்தனம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல? இது போன்ற திமிர்த்தனமான விளக்கம் (?) மார்க்கத்தை நன்கு விளங்க உதவுமா? என்பதற்கு இதை ஆதரிப்போர் பதில் சொல்லட்டும்.

படைத்த இறைவனையே ஓவர் டேக் செய்யும் விதமான கருத்துக்களைக் கூறுவது “இமாம்கள்’ என்பதால் இந்த ஆலிம்கள் அதைக் கண்டு கொள்ளாமல் வாய்மூடி மௌனிகளாக இருப்பார்களா? மௌனமாக இருப்பது ஒரு ரகம் என்றாலும் சிலர் இக்கருத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து, ஆஹா ஓஹோ என்று புகழ்பாடுவதைக் கிஞ்சிற்றும் சகிக்க முடியவில்லை. இவர்கள் யாவரும் இறைவனை, இறைத் தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் மாபாதகச் செயலில் ஈடுபடுகிறவர்கள். இதனால் இறைவனுக்கு எவ்வித இழிவும் இல்லை. எனினும் இறைவனை, இறைத் தூதரை அவமதிப்போரின் கதி அதோ கதி தான்.

மேலும் ரத்துல் முக்தாரின் நூலாசிரியர் இது தொடர்பாகக் குறிப்பிடும் போது,

இதில் அறிஞர்களுக்குப் பல கருத்துக்கள் உள்ளன. அவை சுமார் நாற்பத்தாறு கருத்துக்களாகும். (என்று கூறுகிறார்.)

லைலத்துல் கத்ர் தொடர்பாக இமாம்களுக்குப் பல கருத்துக்கள் உள்ளனவாம். அவை மொத்தம் 46 கருத்துக்களாம்? இப்னுல் அரபியின் கருத்தை மட்டுமே நாம் விமர்சித்து எழுதியுள்ளோம். மற்ற இமாம்களுடைய அந்த 46 கருத்துக்களை நாம் குறிப்பிடவில்லை. அவற்றைக் குறிப்பிட்டால் நம்மில் பலர் கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டி வரும் என்பதைக் கவனத்தில் கொண்டு அதைத் தவிர்த்திருக்கிறோம்.

இறைவனும், இறைத்தூதரும் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு அதில் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை எனும் போது 46 கருத்துக்கள் எவ்வாறு தோன்றியது.? இறைவனுடைய வார்ததையை விளக்க இறைவன் நியமிக்கும் இறைத்தூதரைத் தவிர வேறு எந்த இமாம்களும் தேவையில்லை. இதை மீறி இமாம்களின் விளக்கங்களை நாடினால் குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஃபிர்அவ்ன் முஸ்லிமா?

இஸ்ரவேல் சமுதாயத்தை அடிமைகளைப் போன்று அடக்கி ஆட்சி செய்து, தன்னைத் தானே கடவுள் என்றும் பிதற்றிக் கொண்டிருந்த கொடுங்கோல் மன்னன் ஃபிர்அவ்ன்.

ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து காக்கவும், ஃபிர்அவ்ன் என்பவன் கடவுள் கிடையாது; அவனையும் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனே கடவுள் என்ற ஏகத்துவக் கொள்கையை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் இச்சமுதாயத்திற்கு  இறைத்தூதராக மூஸா (அலை) அவர்களை இறைவன் அனுப்பினான்.

சிலர் மூஸா போதித்த கொள்கையை ஏற்றார்கள். ஃபிர்அவ்னின் தரப்பிலிருந்து பல இன்னல்கள் மின்னல்களாக மூஸா மற்றும் அவரை நம்பிக்கை கொண்டோரையும் தாக்கிய வண்ணம் இருந்தன. மூஸா (அலை) பல்வேறு சோதனைக்கிடையில் தமது தூதுப்பணியைத் தொய்வின்றி தொடர்ந்தார்கள்.

முடிவில் மூஸா மற்றும் அவரை நம்பிக்கை கொண்டோரைக் கொல்வதற்காக அணி திரண்டு ஃபிர்அவ்ன் வந்தான். அவர்களை விரட்டினான். அவர்களிடமிருந்து தப்பிக்க மூஸா (அலை) அணியினர் ஓடினர். வழியில் கடல் இடைமறிக்கும் போது இறைவன் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஏதுவாக கடலில் பாதைகளை ஏற்படுத்தினான். அதே கடல் பாதையில் ஃபிர்அவ்ன் தனது அணியினருடன் செல்ல முனைகையில் இறைவன் கடல் நீரில் மூழ்கச் செய்து அவர்களை அழித்தான். இது மூஸா (அலை), ஃபிர்அவ்ன் ஆகிய இருவரைப் பற்றிய திருக்குர்ஆன் கூறும் உண்மை வரலாறு.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.       

அல்குர்ஆன் 10:90, 91

மனிதர்களின் வரம்பு மீறிய குற்றத்துக்காக இறைவனின் வேதனை சம்பவிக்கும் நேரத்தில் யார் நம்பிக்கை கொண்டாலும் அவரது நம்பிக்கை இறைவனால் ஏற்கப்படாது. இத்தகைய நேரத்தில் ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொண்டதால் அவனுடைய நம்பிக்கை பலனளிக்காமல் போனது, மேலும் இறைவனின் தண்டனைக்குரியவனாய் ஆனான். அந்நேரத்தில் தன்னை முஸ்லிம் என்று அவன் சொல்லிக் கொண்டாலும் இறைவன் அவ்வாறில்லை என்று மறுக்கின்றான். திருக்குர்ஆன் கூறும் இவ்வரலாற்றின் மூலம் ஃபிர்அவ்ன் எத்தகையவன் என்பதை அறியலாம்.

ஃபிர்அவ்ன் முஸ்லிமல்ல என்பது ஆய்வுக்குரிய விஷயமல்ல. பச்சிளங்குழந்தையும் அறிந்த விஷயம். குர்ஆன் கூறும் வரலாற்று உண்மை. இமாம்கள் என்போர் இதிலும் தங்களின் விளையாட்டை விளையாடியுள்ளனர்.

ஃபிர்அவ்னின் கண் குளிர்ச்சி, (அவன்) மூழ்கும் வேளையில் இறைவன் அவனுக்கு வழங்கிய இறை நம்பிக்கையில் உள்ளது. தூய்மையானவனாகவே அவனை இறைவன் கைப்பற்றினான். அவனிடம் எந்தத் தீமையும் இல்லை. ஏனெனில் அவன் எந்தத் தீமையையும் செய்யும் முன் நம்பிக்கை கொண்ட வேளையில் அவனைக் கைப்பற்றினான். இஸ்லாம் அதற்கு முன்பே (ஏற்றுக் கொள்வது) அவசியமாகும். மேலும் அல்லாஹ்வின் அருளில் யாரும் நிராசையாகி விடக்கூடாது என்பதற்காக தான் நாடியோருக்கு இறைவன் அவனை தன் பாதுகாப்பின் அடையாளமாக ஆக்கினான். இறைவனை நிராகரிக்கும் கூட்டத்தாரைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் அருளில் நிராசையடைய மாட்டார். ஃபிர்அவ்ன் நிராசை அடைந்தவர்களில் ஒருவனாக இருந்தால் இறைநம்பிக்கையை நோக்கி விரைந்திருக்க மாட்டான்.

நூல்: ஃபுஸுசுல் ஹுக்ம்

பக்கம் 20 21

ஃபிர்அவ்ன் இறையருளில் நிராசை அடையவில்லை; எனவே தான் இறை நம்பிக்கை கொண்டான் என்பதை இங்கு அழுத்தமாகக் கூறுகிறார் ஒரு அறிஞர். இறை நம்பிக்கையில் தான் ஃபிர்அவ்னின் கண் குளிர்ச்சி உள்ளது என்று சொல்வதன் மூலம் ஃபிர்அவ்னை முஸ்லிம் என்று கூறுகிறார்.

எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை. ஃபிர்அவ்ன், நான் முஸ்லிம் என்று கூறும்போது இறைவன் இப்போது தான் நம்பிக்கை கொள்வாயா? என்று வினா எழுப்பி இது நம்பிக்கையாகாது என்று உணர்த்துகின்றான். இந்த வசனத்தைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் வாயில் வந்ததை விளக்கம் என்ற பெயரில் (உளறி) கொட்டியுள்ளனர்.

பொதுவாக இறைவனுடைய தண்டனையைக் காணும் வேளையில் மனிதர்கள் நம்பிக்கை கொள்வது மனித இயல்பு. இதனால் ஒருவரை இவர் இறையருளில் நம்பிக்கை கொண்டவர், முஸ்லிம் என்று அங்கீகரிக்க இயலாது. இவ்வேளையில் நம்பிக்கை கொள்வதை இறைவன் ஏற்றுக் கொள்ளாததே காரணம். இறைவன் யாருடைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லையோ, யாரை முஸ்லிம் என்று அங்கீகரிக்கவில்லையோ அவரை முஸ்லிமாக ஏன் சித்தரிக்க வேண்டும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?

ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொண்டான் எனினும் இது இறைவனிடத்தில் பலனிக்காத நம்பிக்கை என்று இந்த இமாம்கள் விளக்கியிருக்கலாம் அல்லவா?  அதை விடுத்துவிட்டு ஃபிர்அவ்ன் மாதிரி முஸ்லிம் இல்லை. மற்ற முஸ்லிம்களுக்கு ஃபிர்அவ்ன் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரி என்ற ரேஞ்சுக்கு விளக்கமளித்துள்ளனர்.

எந்த அடிப்படையில் ஃபிர்அவ்னை முஸ்லிமாக வர்ணித்தனர் என்பது இமாம்களுக்கே வெளிச்சம், ஃபிர்அவ்னை முஸ்லிமாக வர்ணிக்கும் இமாமின் இவ்வாக்கியங்கள் குர்ஆனுடன் போரிடும் வார்த்தைகளாகும் என்பதைப் பதிவு செய்கிறோம்.

நூன்….

அல்கலம் என்ற அத்தியாயத்தின் (68) துவக்கத்தில் நூன் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. தனி எழுத்துக்களுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவை ஒரு வாக்கியமாக வரும் போது தான் அதற்கென்று பொருள் கிடைக்கும். எனினும் இவ்வாறு தனித்தனி எழுத்துக்களைக்  குறிப்பிடுவது அரபுகளின் வழக்கமாகும். அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெறும் இது போன்ற எழுத்துக்களுக்குரிய விளக்கத்தை முந்தைய தொடரில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம். (இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அதைப் பார்வையிடவும்)

இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம்:

நூன் என்றால் மைக்கூடு என்பதாகும் என்று கதாதா, ஹஸன் விளக்கமளிக்கின்றனர்.

தனி எழுத்துக்களுக்கு எந்தப் பொருளும் இல்லை எனும் போது இவர்கள் மைக்கூடு என்று கூறுகிறார்கள். திடீரென்று ஏன் மைக்கூடு என்ற பொருளைக் கொடுக்கின்றார்கள் என்று யோசிக்கிறீர்களா?

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் இறைவன் சத்தியம் செய்கின்றான். ஆக எழுதுகோல், எழுதப்படும் பொருள் இரண்டைப் பற்றி கூறப்படுவதால் மீதம் இருப்பது மை ஒன்று தான். எனவே தான் “நூன்’ என்பதற்கு மைக்கூடு என்று பொருள் செய்கின்றனர்.

இங்கே நாம் கேட்பது நூன் என்பற்கு அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இப்பொருளை எங்கேயாவது கூறியிருக்கின்றார்களா? அவரவர் இறைவனுடைய வார்த்தைக்கு ஏதேனும் பொருளை யூகம் செய்து கூறுவது குர்ஆனை அவமதிப்பதாகாதா?

ஒருவர் மைக்கூடு என்று யூகம் செய்தால் மற்றொருவர் எழுதுவதற்கு மனிதன் அவசியம் எனவே இறைவன் மனிதனை தான் நூன் என்று குறிப்பிடுகின்றான் என்று யூகம் செய்வார். இது இறைவனுடைய வார்த்தையில் விளையாடும் செயலாகும்.

ஏழாவது வானத்திற்குக் கீழுள்ள மீன் என்பதாக முஜாஹித் கூறுகிறார்.

அது பூமியை தாங்கும் மீன் (?) என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 14 பக்கம் 618

மேற்கண்ட விளக்கத்தை மிஞ்சும் வகையில் நூன் என்பதற்கு ஒருவர் மீன் என்கிறார். மற்றொருவர் பூமியை தாங்கும் மீன் என்று விளக்கம் அளிக்கின்றார். என்னே ஒரு கற்பனை..? ஆனால் இது ஹாலிவுட் சினிமா எடுப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர குர்ஆனை நன்கு விளங்க ஒரு போதும் உதவாது.

இமாம்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்களே! அவர்களிடத்திலும் தவறுகள் நிகழும் என்பதைத் தான் இது போன்ற விளக்கங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன.

—————————————————————————————————————————————————————-

இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி

இறைத் தூதர் நூஹ் நபி அவர்கள் 950 ஆண்டு காலம் வாழ்ந்து அழைப்புப் பணியாற்றிய ஓர் உன்னதத் தூதர். ஒரு நூற்றாண்டல்ல! சுமார் 10 நூற்றாண்டுகள் ஓயாது, உரக்கவும் உள்ளூரவும், இரைந்தும் இரகசியமாகவும், தனியாகவும் கூட்டாகவும் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

ஆனால் அவர்களது பிரச்சாரத்தைக் கேட்பாரும் இல்லை. ஏற்பாரும் இல்லை. பொறுத்தது போதும் என்று அவரது உள்ளம் பொங்கி எழுகின்றது. அவர்களது நாவு வல்ல நாயனிடம் பொரிந்து தள்ளுகின்றது.

என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!என்று நூஹ் கூறினார். நீ அவர்களை விட்டு வைத்தால் உனது அடியார்களை அவர்கள் வழி கெடுப்பார்கள். (உன்னை) மறுக்கும் பாவியைத் தவிர அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 71:26, 27

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது குமுறலை, கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்.

திருக்குர்ஆனின் 71வது அத்தியாயம் முழுமையும் நூஹ் நபியின் பிரச்சாரத்தையும் அதற்கு மக்கள் அளித்த ஆத்திரமூட்டும் பதிலையும் எதிரொலிக்கும் ஓர் உன்னத அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் வசனங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் விடாது.

நூஹ் நபியின் அந்தப் பிரார்த்தனையின் பலனாய், விளைவாய் அல்லாஹ் அம்மக்களுக்கு எதிராகப் பெரும் பிரளயத்தைப் பெருக்கெடுக்கச் செய்கிறான்.

வானம் மழையைப் பெய்வதற்கு முன்னால், பூமி ஊற்றுக் கண்களைப் பீறிடச் செய்வதற்கு முன்னால் கப்பலைக் கட்டிக் கொள்ளுமாறு நூஹ் நபிக்கு உத்தரவிடுகின்றான். அதில் ஏற்ற வேண்டிய பயணிகளையும் மனித சமூகம் அல்லாத பிராணிகளையும் பட்டியலிடுகின்றான்.

வெள்ளத்தில், வேதனையில் பலியாகப் போகும் மக்களுக்காக என்னிடம் பரிந்து பேசக் கூடாது; பிரார்த்தனை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றான்.

நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்என்று அவருக்கு அறிவித்தோம். (அல்குர்ஆன் 23:27)

“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36, 37)

பெருக்கெடுத்த பிள்ளைப் பாசம்

மேலெழுந்த வெள்ளத்தில் மிதக்கின்ற மகனைப் பார்த்து நூஹ் என்ற தந்தையின் உள்ளம் பாச வெள்ளத்தில் மிதக்கின்றது. அல்லாஹ் விடுத்த எச்சரிக்கையை அவரது உள்ளம் மறக்கின்றது.

அவர்களின் கப்பல் தண்ணீரில் மிதக்கின்றது; கண்களோ கண்ணீரில் மிதக்கின்றது.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்என்றார்.  (அல்குர்ஆன் 11:45)

என்ற பிரார்த்தனை அவர்களுடைய நாவில் வந்து விடுகின்றது. அவ்வளவு தான்.

அல்லாஹ்வின் கட்டளையும் அவனது தடையும் உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பியைப் போன்றதாகும். அது யாரிடமும் பாகுபாடு பார்க்காது; பாரபட்சம் காட்டாது. இதோ அல்லாஹ்வின் கண்டனம் நூஹ் நபியை நோக்கிப் பாய்கின்றது.

நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்என்று அவன் கூறினான்.  (அல்குர்ஆன் 11:46)

நபியின் மகன் நரகத்தில்….

பத்து நூற்றாண்டு காலம் உழைத்த ஒரு தூதராயிற்றே என்பதெல்லாம் அல்லாஹ்விடம் எடுபடவில்லை. இறை மறுப்பு, இணை வைப்பு போன்றவை அவனிடம் மன்னிக்க முடியாத குற்றம். இந்த இறை மறுப்புக்கும், இணை வைப்பிற்கும் அல்லாஹ்விடத்தில் தண்டனை, என்றென்றைக்கும் பற்றி எரியும் நெருப்பு தான்.

அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காண மாட்டார்கள். (அல்குர்ஆன் 71:25)

இறுதியாக அல்லாஹ் சொல்வது போன்று நூஹ் நபியின் மகன் நீரில் மூழ்கி, நெருப்பில் நுழைந்து விட்டான்.

இதன் மூலம் கொள்கை உறவு தான் உறவு; குடும்ப உறவு உறவல்ல என்பதை அல்லாஹ் உணர்த்தி விட்டான்.

இதே போன்ற ஒரு நெருக்கடி இப்ராஹீம் நபிக்கு ஏற்படுகின்றது. இப்ராஹீம் தமது தந்தையை நோக்கிப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்

என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்” (என்றார்.)

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!என்று (தந்தை) கூறினார்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.

உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்” (என்று இப்ராஹீம் கூறினார்.)  (அல்குர்ஆன் 19:41-48)

நூஹ் நபிக்கு ஏற்பட்ட அதே நிலை இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் ஏற்படுகின்றது. நூஹ் நபி சம்பவத்தில் மகன். இப்ராஹீம் (அலை) சம்பவத்தில் தந்தை! அவ்வளவு தான்.

உங்களுடைய தந்தைக்குப் பாவ மன்னிப்பு தேட வேண்டாம் என்று அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு விதித்த தடை எதையும் நாம் காண முடியவில்லை.

ஆனால் அவர்கள் தமது தந்தைக்குப் பாவ மன்னிப்பு தேடுவதை விட்டும் விலகிக் கொள்கிறார்கள்.

தயவு காட்டாத தனயன்

நூஹ் (அலை) அவர்களின் சம்பவம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பாடமாக அமைந்து, அல்லாஹ்வின் கோபத்தைத் தவிர்த்துக் கொள்கிறார்கள் என்றும் விளங்கலாம்.

 அல்லாஹ் அவர்களுக்கு, பாவ மன்னிப்பு தேடக் கூடாது என்று அறிவித்துக் கொடுத்து, அதன்படி அவர்கள் விலகிக் கொண்டார்கள் என்றும் விளங்கலாம். எப்படியிருந்தாலும் தனது தந்தை ஏகத்துவத்தின் எதிரி என்று தெரிந்ததும், அதாவது அல்லாஹ்வின் எதிரி என்று தெரிந்ததும் அவரைத் தனது எதிரியாகப் பாவித்து விலகிக் கொள்கின்றார்கள்.

இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)

அவர்கள் ஏற்கனவே ஊரை, உலகை அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

உங்களை விட்டும், அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

இப்போது அந்தப் பட்டியலில் தனது தந்தையையும் தயவு தாட்சண்யமின்றி சேர்த்து விட்டார்கள்.

ஊரை, உலகை, பெற்ற தந்தையை அவர்கள் பிரிந்து நின்றால் உலகப் பார்வையில் அவர் ஒரு தனி மனிதர்! சிறுபான்மையிலும் சிறுபான்மை! இன்னும் சொல்லப் போனால் பூஜ்யம்!

ஆனால் அல்லாஹ்வின் துலாக்கோலில் அவர் ஒரு சமுதாயம்! இப்ராஹீம் நபி இருந்த தட்டு கனத்து நிற்கின்றது. ஏகத்துவ எதிரிகள் இருக்கும் தட்டு கனமின்றி, காலித் தட்டாகக் காற்றாடுகின்றது. இதையே அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.  (அல்குர்ஆன் 16:120)

இங்கே நாம் பார்க்க வேண்டியது, அவர்கள் தமது தந்தைப் பாசத்தை, இறையன்புக்கு எதிராக உரச விடவில்லை. ஏகத்துவத்திற்கு எதிராக இந்த உலகமே ஒன்று திரண்டாலும் ஓரணியில் சேர்ந்தாலும் இப்ராஹீம் நபியவர்கள் ஓரணு கூட அசையவில்லை.

ஓர் ஏகத்துவக் கொள்கையாளர் ஊர் நீக்கம் செய்யப்படும் போது, உறவுகள் அவருக்கு எதிராகக் கிளம்பும் போது, இப்ராஹீம் நபியின் இந்த வாழ்க்கைப் பகுதியைத் தனது பாடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தேற்றிக் கொள்ள வேண்டும்.

முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய அவர்களது உறுதியும், சோதனையும் இத்துடன் நின்று விடவில்லை.

கால தாமதமான குழந்தை பாக்கியம்

ஏகத்துவக் கொள்கைக்காகத் தீக்குண்டத்தில் வீசியெறியப்பட்டவர்கள், தந்தையைப் பகைத்தவர்கள், ஊரை விட்டும் ஒதுக்கப்பட்டவர்கள், நாட்டைத் துறந்தவர்கள் என்று அவர்களின் தியாகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இறைவனுடைய அன்பையும் நட்பையும் பெற்ற அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தச் சோதனையையும் இந்த இறைத் தூதர் தனது ஏகத்துவப் பயணத்தில் சகித்துக் கொள்கின்றார்கள்.

குழ்நதை பாக்கியம் இல்லாததால் அவர்கள் எத்தனை விமர்சனங்களை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பது நமது மனக்கண் முன்னால் ஓடுகின்றது. அந்தக் குழந்தைப் பாக்கியம் அவர்களது வயோதிகத்தில் கிடைக்கின்றது. நன்றி மிக்க அந்தத் திருமகனார் நன்றிப் பெருக்குடனும் நம்பிக்கையுடனும் நளினமான வார்த்தைகளில் தெரிவிப்பதைப் பாருங்கள்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

அல்குர்ஆன் 14:39

வெல்ல முடியாத பிள்ளைப் பாசம்

இந்தப் பச்சிளம் பாலகனைத் தான் அன்னாரது மனைவி ஹாஜருடன் பாலைவனத்தில் அல்லாஹ் விடச் சொல்கிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!  (அல்குர்ஆன் 14:37)

இங்கும் அன்னாரது இறைப் பாசத்திற்கு முன்னால் குழந்தை, குடும்பப் பாசம் தோற்றுப் போய்விடுகின்றது.

அடுத்தக்கட்ட சோதனை, அந்தச் செல்ல மகனை அறுத்துப் பலியிடும் சோதனைக் கட்டம்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம்  (அல்குர்ஆன் 37:103, 104)

இயற்கையாகவே பிள்ளை மீது ஏற்பட்டிருக்கும் அந்தக் கொள்ளைப் பாசம் அன்னாரின் எல்லையில்லாத இறைப் பாசத்தை வெல்ல முடியவில்லை.

தோல்வியைத் தழுவும் தவ்ஹீதுவாதிகள்

ஒவ்வொரு ஏகத்துவவாதிக்கும் இப்ராஹீம் நபியின் இந்த மன வலிமை, உறுதிப்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஊர் நீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்குத் திருமணப் பதிவேடு தரப்படுவதில்லை. அடக்கத்தலம் மறுக்கப்படுகின்றது. சுன்னத் ஜமாஅத்தினரின் வணிகத் தலங்களில் கடை வைத்திருந்தால் காலி செய்யப்படுகின்றனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். சிறை வாசத்தையும் அனுபவிக்கின்றனர். சமயங்களில் கொலைவெறித் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.

தவ்ஹீதுக் கொள்கையை ஏற்ற பிறகு குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்படுதல், விபத்தில் சிக்குதல், மரணத்தைத் தழுவுதல், வியாபாரத்தில் பெரு நஷ்டம் ஏற்படுதல், வேலையை விட்டு நீக்கப்படுதல் இதுபோன்ற சோதனைகளில் ஒன்றோ, இரண்டோ ஏற்பட்டு விட்டால் போதும். தவ்ஹீது முகாமையே காலி செய்து விட்டு அசத்தியக் கொள்கைக்குத் தாவி விடுகின்றனர்.

இத்தகையோருக்கு இப்ராஹீம் நபியின் வாழ்க்கை மாபெரும் பாடமாகவும் படிப்பினையாகவும் அமைந்து விடுகின்றது. அவர்கள் சந்தித்த அளவுக்குச் சோதனையை யாரும் சந்திக்கப் போவதில்லை. யாரும் சந்தித்ததில்லை.

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுதல் என்ற கண்ணோட்டத்தில் ஏகத்துவவாதிகளுக்கு இப்ராஹீம் நபியின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி இருக்கின்றது.

பந்த பாசம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இப்ராஹீம் (அலை) தியாகம் மகத்தான முன்மாதிரியாக அமைகின்றது. தவ்ஹீதுவாதிகள் இந்த பந்த பாசம் என்ற சறுகல் பாதையில் வெகு வேகமாகவே சறுகி விடுகின்றார்கள்.

இந்த சறுக்கல் பாதையில் முதலிடம் வகிப்பது திருமணம்.

  1. திருமணம்

தவ்ஹீதை ஏற்காத அல்லது தரீக்கா கொள்கையுடைய பெண்ணைத் தேர்வு செய்தல்

விருந்து என்ற பெயரில் பொருளாதாரத்தை விரயம் செய்தல்

திருமணத்தை ஆடம்பரமாக நடத்துதல்

பெண் வீட்டில் விருந்து வைத்தல்

பொருள், நகை, விருந்து என்ற வடிவங்களில் பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணை கொடுத்தல்

இத்தகைய திருமணங்களில் போய் கலந்து கொள்ளுதல்

தவ்ஹீதுவாதிகள் இத்தகைய திருமணங்களைத் தங்கள் வீட்டில் நடத்தாமல் இருப்பதில் ஓரளவு கட்டுப்பாடாக இருக்கின்றனர். தங்களது உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களில் போய் கலந்து கொள்வதில் தங்களது கொள்கையை இழந்து விடுகின்றனர்.

  1. இணை வைப்பாளரின் மரணம்

திருமணத்தைப் போன்று மரணமும் தவ்ஹீதுவாதிகளின் சறுகல் பாதையாக அமைகின்றது. ஒருவரது தந்தை அல்லது தாய் அல்லது பிள்ளைகள் தவ்ஹீது எதிரியாக இருந்து மரணத்தைத் தழுவினால் அவர்களுடைய ஜனாஸாவில் போய் கலந்து கொள்ளுதல். இதில் ஏகத்துவவாதிகள் பாசத்திற்கு அடிமைப்பட்டு அந்த இணை வைப்பாளர்களுக்குப் பாவ மன்னிப்புத் தேடி விடுகின்றனர்.

திருமணத்தைப் போன்று மரண விஷயத்திலும் அல்லாஹ்வின் வரம்பைத் தாண்டி விடுகின்றனர்.

இவர்களுடைய விஷயத்தில் தான் அல்லாஹ் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:113-114)

  1. இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல்

தவ்ஹீதுவாதியின் சறுக்கல்களில் மிக முதன்மையான இடத்தைப் பிடிப்பதில் இதுவும் ஒன்று! இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி ஒருபோதும் தொழக் கூடாது. இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.  (அல்குர்ஆன் 9:18, 19)

மின் விளக்கு பொருத்துவது, அதைச் சரி செய்வது, மோட்டார் போட்டு தொட்டியில் தண்ணீர் சேமிப்பது போன்ற காரியங்கள் பள்ளியின் நிர்வாகமல்ல! பள்ளியில் நிர்வாகம் என்பதே தொழுகை நடத்துவது தான். இந்தத் தூய பணியைச் செய்வோர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றார் எனில் அவருக்குப் பின்னால் நின்று ஒருபோதும் தொழ முடியாது.

ஒரு தவ்ஹீதுவாதி இறந்து விட்டால் அவருக்காக இப்படிப்பட்ட ஒரு இமாம் தொழுகை நடத்தினால் அப்போதும் அவருக்குப் பின்னால் நின்று தொழ முடியாது. ஏனெனில் இவர்கள் ஷிர்க்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் கேந்திரங்களாகவும் அதைப் பன்மடங்காக உருவாக்கி, பரப்புகின்ற எந்திரங்களாகவும் செயல்படுகின்றனர். இவர்களெல்லாம் இப்ராஹீம் நபியின் பார்வையில் முழுமையாகப் பகைக்கப்பட வேண்டியவர்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட இணை வைப்பு மற்றும் இதர தீமைகளில் மூழ்கியிருப்போரைத் திருத்த வேண்டுமெனில் அதற்கான ஆயுதம் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு தான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

இங்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓர் எல்லையை நிர்ணயிக்கின்றார்கள். அவர்கள் கையிலெடுத்த இந்தக் கொள்கைப் பிரகடனத்தை, திருக்குர்ஆனில் வேறோர் இடத்தில் அல்லாஹ் வெகுவாகப் பாராட்டுகின்றான்.

என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 43:26, 27

இந்தப் பகை, புறக்கணிப்பு ஏன்? எதற்காக? அசத்தியத்தில் இருப்பவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக! அதனால் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் இதற்கு ஓர் எல்லையை நிர்ணயிக்கின்றார்கள். “அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை” என்பது தான் அந்த எல்லை!

ஒரு கொள்கைவாதி சாகும் வரை அல்லாஹ்வுக்காகப் பகைத்துக் கொண்டு இருந்து விடுவார். ஆனால் ஓர் அசத்தியவாதியால் பெரும்பாலும் அப்படி இருக்க முடியாது.

இன்றைக்குத் தவ்ஹீதுவாதிகள் இரண்டு வகையான விளைவுகளையும் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்டு வருகின்றார்கள். ஒரு தவ்ஹீதுவாதி அசத்தியவாதிக்குத் தக்க இறங்கிப் போனால் அசத்தியவாதி ஏறி மிதிக்கின்றான். அசத்தியத்தில் மேலும் மேலும் முன்னேறிச் செல்கின்றான். காலப் போக்கில் இந்தத் தவ்ஹீதுவாதி கரைந்து காணாமல் போய் விடுகின்றான்.

அதே சமயம், சத்தியவாதி தனது கொள்கையில் பிடிமானமாகவும், புறக்கணிப்பில் உறுதியாகவும் இருந்து விட்டால் கொள்கைத் தீயின் ஜுவாலையில் அசத்திய இரும்பு எரிந்து, தீயுடன் கலந்து தீயாகவே மாறி விடுகின்றது.

அதனால் அசத்தியவாதிகளை, அவர்கள் திருந்துகின்ற வரை அல்லாஹ்வுக்காகப் பகைப்பதும் புறக்கணிப்பதும் நமது கடமை! அவர்களின் உள்ளங்களில் ஏகத்துவத்தையும் இணக்கத்தையும் அன்பையும் போடுவது அல்லாஹ்வின் உரிமை!

இதைத் தான் திருக்குர்ஆன் நமக்கு உணர்த்துகின்றது.

உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:7)

எனவே இப்ராஹீம் நபியின் நினைவை மலரச் செய்யும் இம்மாதங்களில் அன்னாரின் ஏகத்துவ உறுதியைப் பேணுவோமாக! அவரைப் போன்ற தூய மரணத்தை அடைவதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 17

அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

ஹராம், ஹலால் என்றால் என்ன?

ஒரு பொருளைத் திரட்டுவதாக இருந்தால் ஹராமான வழியில் திரட்டக்கூடாது. பொருளைத் திரட்டுவது ஹலாலான அடிப்படையில் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதித்த காரியம் ஹலால் ஆகும். ஒருவரின் பொருளை அவரது அனுமதியுடன் பெற்றுக் கொள்வதும் ஹலாலாகும்.

மற்றவரின் பொருள் நமக்கு ஹராம் ஆகும். அந்தப் பொருள் பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ, எதுவாக இருந்தாலும் சரியே. அது நமக்கு ஹலால் ஆகாது.

பிறருடைய பொருள் நமக்கு எந்த அளவிற்கு ஹராம்?

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி பேருரையில் இதைப் பற்றி வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

…(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள்  எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம்.  அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது துல்ஹஜ் இல்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், “ஆம்என்றோம். (பிறகு,) “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (புனித மிக்க) நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்என்றோம். மேலும், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்என்றோம்.  அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார் களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?” எனக் கேட்க, நாங்கள், “ஆம்என்றோம். (பிறகு,) “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் – உங்கள் மானமும் – உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.  அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். பிறகு, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?” என்று இரண்டு  முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி 67, 105, 1741, 4406, 550, 7447

புனிதம் என்றால் என்ன?

புனிதமாக கருத வேண்டும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், மனிதன் புனிதம் என்று ஒரு பொருளை நினைத்தால் தவறு செய்வதை விட்டும் விலகியிருப்பான்.

உதாரணமாக, திருடனை எடுத்துக்கொண்டால் வீட்டில் உள்ள பொருளைத் திருடுவான். ஆனால் பள்ளியில் உள்ள பொருளைத் திருடமாட்டான். ஏனென்றால் அதைப் புனிதமாகக் கருதியிருக்கின்றான். இவ்வாறே அடுத்தவர் பொருளை நினைக்க வேண்டும்.

அடுத்தவர் பொருளை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடையலாமா?

பிறரின் பொருளை அநியாயமான முறையில் பெறுவதற்க்காக நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது என்று திருக்குர்ஆன் 2:188 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

அல்குர்ஆன் 2:188

வீதியில் நிற்கும் ஆட்டில் பால் கறந்து குடிக்கலாமா?

ஆடு வீதியில் தான் நிற்கின்றதே, இதற்கு ஏன் அனுமதி கேட்க வேண்டும்? என்று பாலை கறக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரின் கால்நடையிடம் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின்  கால்நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையிடம் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 2435

அடுத்தவர் பொருளை அபகரித்துவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கி-ருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449, 6534

இன்று நாம் அறியாமையில் இருக்கும் அடுத்தவரின் பொருளை அபகரித்திருப்போம். நம்மை விட்டும் அந்தப் பாவம் நீங்க வேண்டும் என்றால் ஒன்று, அதைக் கொடுப்பதற்குரிய சக்தி இருந்தால் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு சக்தி பெறவில்லை என்றால் அவரிடம் மன்னிப்புக் கேட்டு சமரசம் செய்து கொள்ள வேண்டும். இதுவே இதற்குரிய பரிகாரம் ஆகும்.

இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்வதன் காரணம் என்ன?

ஏனெனில், அந்த எண்ணத்தை ஷைத்தான் சில மணி நேரத்திற்குள் கலைத்து விடக் கூடும் என்பதே இதற்குப் பிரதான காரணம் ஆகும். தமிழ் வழக்கில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. ஒன்றே செய்! நன்றே செய்! அதுவும் அன்றே செய் என்பதைப் போன்றதாகும்.

பேச்சு திறமையால் பிறரின் சொத்தை அபகரித்தல்

பேச்சு திறமையால் பிறரது சொத்தை ஒருவன் அபகரித்தால் அவன் அந்தச் சொத்தை அபகரிக்கவில்லை. அவன் நரக நெருப்பைத் தான் சேமிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நூல்: புகாரி 2680, 7169, 7181, 7185, 6967

அடுத்தவர் பொருளில் அனுமதிக்கப்பட்டவை

ஸகாத், ஸதகா, அன்பளிப்பு, தகப்பன் விட்டுச் சென்ற சொத்துக்கள் இவையெல்லாம் பிறருடையதாக இருந்தாலும் இவைகளுக்கு அனுமதி இருக்கின்றது. சில பொருள்களுக்குப் பொதுவான அனுமதி உள்ளது.

இதற்குச் சொல்வதாக இருந்தால் உதாரணங்களைச் சொல்லிக் கொன்டே செல்லலாம். வீதியில் நடப்பது, பீச்சில் அமர்வது, பள்ளியில் உள்ள தண்ணீரை அருந்துவது இவைகளுக்கெல்லாம் பொதுவான அனுமதி வழங்கப்படடுள்ளது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பராஉ பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்!” (2:267) என்ற வசனம் பேரீச்சை மரங்களுக்கு சொந்தக்காரர்களாகிய அன்சாரிகளாகிய எங்களுடைய விஷயத்தில் இறங்கியதாகும். பேரீச்ச மரங்கள் அதிகமாக இருப்பவரும், குறைவாக இருப்பவரும் அதனுடைய அளவிற்கு அதிலிருந்து கொண்டு வருபவராக இருந்தார். ஒரு மனிதர் ஒன்று அல்லது இரண்டு குலைகளை கொண்டு வந்து அதைப் பள்ளிவாசலில் தொங்க விடுபவராக இருந்தார். திண்ணை ஸஹாபாக்கள் எந்த உணவும் இல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பசித்தால் அந்தக் குலையின் பக்கம் வந்து அதை தன் கைத்தடியால் அடிப்பார். அதிலிருந்து பிஞ்சுகளும், பழங்களும் விழும். அதை அவர் சாப்பிடுவார். நல்ல விஷயங்களில் நாட்டமில்லாத சில மனிதர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு குலையை கொண்டு வருவார். அதில் விளையாத மற்றும் அழுகிய பழங்களும் இருந்தன. இன்னும் உடைந்த குலையையும் கொண்டு வந்து அதைத் தொங்க விடுவார். எனவே அல்லாஹ் “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”  (2:267) என்ற வசனத்தை அருளினான். அதற்குப் பிறகு எங்களில் ஒருவர் தன்னிடம் இருப்பதில் மிகச் சிறந்ததையே கொண்டு வருவார்.

நூல்: திர்மிதி 2913

பொதுவான மரத்தில் ஒரு சில கனிகளைச் சாப்பிடலாம். அதை முடிந்து எடுத்து வருவதற்குத் தடை உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்-ம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது  ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320, 6012

உப்பாதா பின் சுர்ஹபீல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எங்களுக்கு பசிக் கொடுமையான ஒரு வருடம் பீடித்தது. நான் மதீனாவிற்கு வந்து அங்குள்ள தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்குச் சென்று கதிர்களை பிடுங்கி அதிலுள்ள தானிங்களை எடுத்து அதைச் சாப்பிட்டேன். இன்னும் என்னுடைய ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். தோட்ட உரிமையாளர் வந்து என்னை அடித்தார். என்னுடைய ஆடையையும் பிடுங்கினார். நான் நபியவர்களிடம் வந்து அவர்களிடம் நடந்தவற்றை அறிவித்úன். நபியவர்கள் அம்மனிதரிடம், “அவர் பசியோடு இருக்கும் போது நீ அவருக்கு உணவளிக்கவுமில்லை. அவர் அறியாதவராக இருந்த போது நீ அவருக்கு கற்றுக் கொடுக்கவுமில்லைஎன்று கூறி என்னுடைய ஆடையை என்னிடம் திருப்பிக் கொடுக்குமாறும்  ஒரு வஸக் உணவுப் பொருளை எனக்குத் தருமாறும் அவருக்கு கட்டளையிட்டார்கள்.

நூல்: இப்னு மாஜா 2289

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? குடும்பக் கட்டுப்பாடு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? கூடாது எனில் ஏன் கூடாது? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

ஃபவாஸ்

கருவில் குழந்தை உருவாவதைத் தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சக்கட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் “அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5209

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “(அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்குப் பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கர்ப்பமாகி விடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2606

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2610

மேலுள்ள செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ, நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளைக் கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2542

தற்காலிகமாகக் குழந்தை உருவாவதைத் தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வது சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாகக் குழந்தை உருவாகாதவாறு குடும்பக் கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிகக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்த பின் பெற்றெடுத்த குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படிப் பெறமுடியும்? இதைச் சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்ய மாட்டார்கள்.

மேலும் இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் 4:119

எனவே பெரும் பாக்கியமான குழந்தை பாக்கியத்தை நிரந்தரமாக நீக்கி இறைப் படைப்பில் மாற்றம் செய்வது கூடாது.

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை      தொடர்: 4

கியாம நாளின் அடையாளங்கள்

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.  (திருக்குர்ஆன் 78:1-5)

உலக முடிவு நாள் வருவதற்கு முன்னர் உலகில் ஏற்படும், ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிக் கடந்த இதழ்களில் அறிந்தோம். அந்த நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்வோம்.

மாபெரும் பத்து அடையாளங்கள்

உலக முடிவு நாளின் மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 – புகை மூட்டம்

2 – தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 – ஈஸா (அலை) இறங்கி வருவது

6 – யஃஜுஜ், மஃஜுஜ்

7 – கிழக்கே ஒரு பூகம்பம்

8 – மேற்கே ஒரு பூகம்பம்

9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 – இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162

  1. புகை மூட்டம்

இவற்றில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை.

ஆயினும் திருமறைக் குர்ஆனில் புகை மூட்டம் என்ற 44-வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை. “எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். “பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” என்றும் கூறினர். வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.  (திருக்குர்ஆன் 44:10-16)

அந்தப் புகை வானிலிருந்து இறங்கி வரும். அதனால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும். அதைக் காணும் மக்கள் தம்மைத் திருத்திக் கொள்ள முன்வரும் அளவுக்கு அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

மக்காவாசிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த போது, புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் எனவே இந்த அடையாளம் ஏற்கனவே வந்து விட்டதாகவும் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.  (நூல்: புகாரி 1007)

இதை நாம் ஏற்கத் தேவையில்லை;. ஏற்கவும் கூடாது. ஏனெனில் மதீனா சென்ற பிறகு தான் மேற்கண்ட பத்து அடையாளங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இனி மேல் தான் அவை ஏற்படும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

மக்காவில் ஏதோ ஒரு புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரம்மாண்டமான பத்து அடையாளங்களில் ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அதைக் குறிப்பிட்டிருக்க முடியாது.

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி), நூல்: தப்ரானி

அப்புகையை காஃபிர்கள் சுவாசிக்கும் போது அப்புகை அவர்களின் காதுகள் வழியாக வெளியேறும் என்றும் அதனால் அவர்களின் உடல் ஊதிவிடும் என்றும் அவர்களுக்கு அதனால் மிகப் பெரிய வேதனை ஏற்படுமென்றும் இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.

  1. தஜ்ஜால்

பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனின் வருகை முக்கியமானதாகும்.

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.

முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றிப் பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.

பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன் மவ்லவிகள், “பிரிட்டன் தான் தஜ்ஜால்” என்றனர்.

இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர்.

ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ஜார்ஜ் புஷ் தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.

தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்புகளில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.

மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன் கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை

நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி), நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408

ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: முஸ்லிம் 5239

தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்

ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, 7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408

பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 7131,

தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407

ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.

ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே “காஃபிர்’ என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.

தஜ்ஜாலின் கண்களுக்கிடையே “காஃபிர்என்று எழுதப்பட்டிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 7131, 7404

எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே “காஃபிர்என்று எழுதப்பட்டிருக்கும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: முஸ்லிம் 5223

ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 5223

ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: அஹ்மத் 20220

இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.

அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 3441, 7026, 7128

அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: அஹ்மத் 2707, 2041

தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.

ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.

உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 3441, 7026, 7128

குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்; தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற்கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும், பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தியாக நபியின் தியாகக் குடும்பம்

இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு அவர் அளித்த ஆணித்தரமான பதிலைப் பார்ப்போம்.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்என்று அவர் கூறினார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர்.

ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர்.

அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்என்றனர்.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:51-67

அரசனிடம் வீர முழக்கம்

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

தந்தையிடம் ஆற்றிய தவ்ஹீதுப் பிரச்சாரம்

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்

என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்‘ (என்றார்.)

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!என்று (தந்தை) கூறினார்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 19:41-47

ஊர் கூடித் தண்டனை

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!என்றனர்.

அல்குர்ஆன் 21:68

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.

நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடுஎன்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:69, 70

இவ்வளவு சோதனையைச் சந்தித்து, இனிமேல்  அந்த ஊரில் வாழ முடியாது என்றாகி விடுகின்றது.

அன்னை சாரா அவர்களின் அரிய தியாகம்

ஊரார், உறவினர், நாடாளும் அரசன் அத்தனை பேரையும் பகைத்த பின்னர் அவர்களுக்கு நாடு துறந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால் அவர்கள் நாடு துறந்து செல்கிறார்கள்.

அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்என்று (இப்ராஹீம்) கூறினார்.

அல்குர்ஆன் 29:26

அவ்வாறு அடைக்கலம் புகுந்த அந்த நாட்டில் அவர்களையும்  அன்னை சாராவையும் தவிர்த்து வேறு எந்த இறை நம்பிக்கையாளரும் இல்லை. அந்தச் சூழ்நிலை எப்படியிருந்திருக்கும்? அவ்விருவரின் மனநிலை தான் எப்படி இருந்திருக்கும்? அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் வேறு யாருமே இல்லை.

இத்தனைக்கிடையில் அந்நாட்டு அரசன், திருமணம் முடித்த பெண்களை மட்டும் அனுபவிக்கும் ஒரு சபலம் நிறைந்த காமுகன். சோதனையான, அதே சமயம் சுவையான அந்த நிகழ்வை நபி (ஸல்) அவர்கள் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களை மன்னன் அழைத்து வரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் சகோதரிஎன்று சொன்னார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறை நம்பிக்கை கொண்டவர் யாரும் இல்லைஎன்று சொன்னார்கள்.

பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்து வந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பு நோயால்) கால்களை உதைத்துக் கொண்டான்.

மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்குத் திரும்பி, மீண்டும் ஸாராவை நெருங்கினான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தால் இந்த இறை மறுப்பாளனை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களை உதைத்துக் கொண்டான்.

மன்னனின் இந்த நிலையைக் கண்ட ஸாரா, “இறைவா! இவன் இறந்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று பிரார்த்தித்தார். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பி இருக்கின்றீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு ஹாஜரைக் கொடுத்து விடுங்கள்என்று மன்னன் சொன்னான். ஸாரா இப்ராஹீம் (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ் இந்த இறை மறுப்பாளனை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2217 முஸ்லிம் 4371

சாரா அம்மையாரின் இறை நம்பிக்கை சாமான்யமானதல்ல! மிகப் பெரியது.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

அல்குர்ஆன் 2:153

அல்லாஹ் கூறுகின்ற இந்த வசனத்திற்கு ஓர் உன்னத உதாரணமாகத் திகழ்கின்றார்கள்.

இன்றைய காலத்துப் பெண்ணாக இருந்தால், “உன்னைக் கல்யாணம் முடித்த நாளிலிருந்து நான் சோதனையைத் தான் அனுபவிக்கின்றேன்; ஒன்று இந்தப் பிரச்சாரத்தை விடு, அல்லது என்னை விட்டு விடு’ என்று வற்புறுத்தி இவ்விரண்டில் எதையேனும் ஒன்றைச் செய்ய வைத்து விடுவார்கள்.

இப்படி மாபெரும் ஒரு சோதனையில் சாரா அம்மையார் சாதனையைப் படைத்து, ஒரு தியாகத் திருவிளக்காகத் திகழ்கின்றார்கள்.

அன்னை ஹாஜராவின் அரிய தியாகம்

அரசன் கொடுத்த ஓர் அன்பளிப்பான இப்ராஹீம் நபியின் இன்னொரு மனைவியார் அன்னை ஹாஜரா அவர்களும் மாபெரும் ஒரு தியாக வரலாற்றைப் படைக்கிறார்கள்.

அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, “இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், “அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாகஎன்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14:37) ………..(சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3364

தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நாம், நமது பெண் மக்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்வருவதில்லை. உள்ளூரில் கொள்கை மாப்பிள்ளை வாய்க்காத போதும், வெளியூரில் சிறந்த மாப்பிள்ளை கிடைக்கும் போதும் கூட வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதற்கு நமக்கு மனம் வரவில்லை. ஆனால் இப்ராஹீம் நபி மனித சஞ்சாரமில்லாத பகுதியில் கொண்டு போய் தமது மனைவியை விட்டு விட்டு வருகிறார்கள்.

தண்ணீரில்லாத, தானியங்கள் இல்லாத பாலைவனத்தில், நீண்ட காலத்திற்குப் பின் பெற்ற பிள்ளையையும் சேர்த்து விட்டு விட்டு வருகின்றார்கள். இதில் அன்னை ஹாஜரா அவர்கள் கூறும் வார்த்தையை இங்கு கவனிக்க வேண்டும். “அவன் என்னைக் கைவிட மாட்டான்” என்ற வார்த்தை அனைத்துப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் உள்ளங்களிலும் அழுத்தமான இறை நம்பிக்கையைப் பதிய வைக்கின்றது.

 எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

அல்குர்ஆன் 14:37

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை உள்ளத்தைப் பிழிந்து, கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. தண்ணீருக்காக அவர்கள் மேற்கொண்ட அலைச்சல் இன்றைக்கு ஹாஜிகளின் வணக்கமாக ஆகி விட்டது.

கதறி அழுத இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலடியில் பொத்துக் கொண்டு, பீறிட்டு வந்த தண்ணீர், அன்னையாருக்கும் இஸ்மாயீல் நபிக்கும் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் புனிதப் பொதுவுடைமையாக, ஓர் அற்புதமாக அமைந்திருக்கின்றது. அன்னை ஹாஜராவின் தியாகம் அளப்பரியது, அரிதிலும் அரிதானதாகும்.

தியாக நபியின் தியாக மகன்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட நாட்கள், அவர்கள் முதுமையை அடைகின்ற வரை குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் அல்லாஹ்விடம் எந்த அவநம்பிக்கையும் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள்.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

அல்குர்ஆன் 37:100

அவர்கள் கேட்டது போன்றே ஸாலிஹான குழந்தையே அமைந்து விடுகின்றது.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருது கிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

அல்குர்ஆன் 37:104

கருத்துக் கேட்கும் தந்தையிடம் கழுத்தைத் தரத் தயார் என்று கூறி, “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று கூறும் மகன் உண்மையிலேயே ஸாலிஹான குழந்தை தான்.

இப்படித் தியாக மிக்க தந்தைக்குத் தப்பாத ஒரு தியாக மகனாக இஸ்மாயீல் (அலை) அவர்கள் திகழ்கின்றார்கள்.

மொத்தத்தில் மனைவியும் மக்களும் இப்ராஹீம் நபியின் தியாகத்திற்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் சிறந்த குடும்பமாக விளங்கினர்.

குடும்பத்தில் ஒருவர் கொள்கைக்காக உழைக்கும் போது அவர் சில சோதனைகளைச் சந்திப்பார். ஏன்? சிறைவாசம் கூடச் சந்திப்பார். அல்லது அடி, உதை வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவ்வளவு தான்! அந்தக் குடும்பம் அவரை வார்த்தைக் கணைகளால் கொன்று சாகடித்து விடும். உனக்கு இது தேவை தானா? என்று கேட்டு அவரது உள்ளத்தை நோகடித்து விடும். தவ்ஹீதுக் குடும்பமாக இருந்தாலும் இதில் விதிவிலக்கில்லை. தவ்ஹீதுக் குடும்பங்களின் நிலையே இதுவென்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் கொள்கையை ஏற்காத குடும்பமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.

எனவே நமது குடும்பத்தில் கொள்கைச் சகோதரர் ஒருவர், கொள்கைக்காக ஒரு பாதிப்பை அடைந்தால் அதை ஒரு பாக்கியமாகக் கருதி அதில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவரது சோதனையில் நாம் துணை நிற்க வேண்டும். இப்படித் தான் இப்ராஹீம் நபியின் மனைவி, மக்கள் கொள்கைக்கான சோதனையில் பங்கெடுத்தனர்.

இன்று இறைவனின் அருளால் ஒரு சில அழைப்பாளர்களின் துணைவியர் இது போன்ற தியாகத்தைச் செய்ய முன்வந்ததால் தான் தமிழகத்தில் தவ்ஹீதுக்குத் தளமும் ஒரு களமும் உருவானது. இந்தப் பயணத்தில் இருப்போருக்கு இப்ராஹீம் நபியின் மனைவி, மக்களைப் போன்று ஒத்துழைப்போம்; உறுதுணையாக இருப்போம்.