ஏகத்துவம் – நவம்பர் 2007

தலையங்கம்

புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்

“ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957

இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.

பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான், பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.

அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.

விபத்தில் கை, கால்கள் ஒடிந்து முடங்கிப் போனவர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து, உலோகத் தகடுகள் பொருத்தி, அவர்கள் நடப்பதற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுப்பார்கள். அந்தப் பயிற்சியில் பழைய நடையைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.

அது போன்று தான், பாவம் என்ற விபத்தில் மாட்டி, படுக்கையில் கிடந்த நம்மை, இந்த ரமளான் மாதம் சரி செய்து நடக்க விட்டிருக்கின்றது. நாம் அப்படியே நம்முடைய நடையைப் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும். புனித மிக்க இந்த ரமளான் மாதம் நமது உடலில் புது ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளது.

செல்போன்கள் இயங்குவதற்காக அதிலுள்ள பேட்டரிகளுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்கிறோம். அது போன்று நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை சார்ஜ் செய்யும் கருவியாக இந்த ரமளான் அமைந்துள்ளது.

அதிகாலை ஸஹர் நேரத்தில் நம்மை எழச் செய்தது.

அந்த நேரத்தில் இரவுத் தொழுகைகளைத் தொழ வைத்தது.

ஐந்து நேரங்களிலும் தனியாக அல்ல! ஜமாஅத்துடன் தொழ வைத்தது.

அதிகமதிகம் தான, தர்மங்களை அள்ளி வழங்க வைத்தது.

அன்றாடம் குர்ஆனுடன் தொடர்பை அதிகப்படுத்தியது.

பொய், புறம், சினிமா, சீரியல் என அனைத்துத் தீமைகளை விட்டும் அப்புறப்படுத்தியது.

வாய் கொப்பளிப்பதற்காக உள்ளே சென்ற சுத்தமான சுவையான தண்ணீர், தொண்டைக் குழிக்குள் விழுவதற்கு எத்தனை மைல் தூரம்? ஒரு மயிரிழை தூரம் தான். இருப்பினும் அந்தத் தண்ணீர் உள்ளே செல்லவில்லை. ஏன்?

அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம். இந்த அச்சத்தை ரமளான் நம்மிடம் பதித்தது; புதுப்பித்தது.

அனுமதிக்கப்பட்ட நமது மனைவியர் பகல் வேளைகளில் அருகில் இருந்தும், அடையாமல் தடுத்தது எது? அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம் தான்.

எங்கோ இருந்த நம்மை இந்த ரமளான் அல்லாஹ்வின் பக்கம் மிக அருகில் கொண்டு வந்து விட்டுள்ளது.

இறையச்சம் என்ற மின்னூட்டத்தை நம்முடைய உள்ளத்தில் ஏற்றியுள்ளது.

புனித ரமளான் ஏற்றிய இந்த மின்னூட்டம் இறங்கி விடாமல், இறைவன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வுடன் அவன் அருகிலேயே நாம் இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி, ரமளானில் செய்த அந்த வணக்கங்களை அப்படியே விடாது தொடர்வதாகும்.

இந்த உறுதிப்பாட்டுடன் ரமளானுக்குப் பிறகுள்ள நம்முடைய வாழ்வைத் தொடர்வோமாக!

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு                                    தொடர்: 4

அஹ்லுல் குர்ஆன்  ஏன் தோன்றினார்கள்?

குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதிலும், இரண்டும் மார்க்க ஆதாரங்கள் என்பதிலும் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் இரண்டும் பாதுகாக்கப் பட்ட விதத்தில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களைக் கூறுவதால் ஹதீஸ்களைப் பின்தள்ளுகிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

குர்ஆனா? ஹதீஸா? என்று வரும் போது இரண்டில் எதை எடுப்பது என்ற கேள்விக்கான பதிலாகத் தான் இந்த வித்தியாசங்களைக் கூறுகிறோம்.

  1. குர்ஆன் பல்லாயிரக் கணக்கான நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் அனைத்து நபித் தோழர்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.
  2. நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே குர்ஆனைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டு குழப்பங்கள் பரவுவதற்கு முன்பே உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் நிறைவுக்கு வந்தது.

நபி (ஸல்) அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆன பிறகு நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டுவது அதிகரித்த காலத்தில் ஹதீஸைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இமாம்கள் ஹதீஸைத் தொகுக்கும் முயற்சியை முடுக்கி விட்டார்கள். பெரும்பாலான அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்ந்து பார்த்த அளவிற்கு செய்திகளை ஆராயவில்லை.

  1. குர்ஆனும் ஹதீஸும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹதீஸை எழுதி வைப்பதை ஆரம்பத்தில் தடை செய்தார்கள். முதலில் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக குர்ஆனை மட்டும் எழுதி வைக்கச் சொன்னார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கிய குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்.

குர்ஆன் தூய வடிவில் முழு பாதுகாப்புடன் விளங்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இரு முறை குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். இது போன்ற சிறப்புக் கவனம் ஹதீஸ்களுக்குக் கொடுக்கப் படவில்லை.

  1. நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே ஒலி வடிவில் பல உள்ளங்களில் குர்ஆன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குர்ஆன் பதிவு செய்யப்பட்டதைப் போல் பல உள்ளங்களில் ஹதீஸ் பதிவு செய்யப்படவில்லை.
  2. குர்ஆன் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கவனத்திற்கும் காலங்காலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஹதீஸ் இவ்வாறு அனைவருடைய கவனத்திற்கும் கொண்டு வரப்படவில்லை.

இது போன்ற வித்தியாசங்களைக் கவனிக்கும் போது பாதுகாக்கப்பட்ட விதத்தைப் பொறுத்த வரை, ஹதீஸை விட குர்ஆன் வலிமை வாய்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வித்தியாசங்களால் தான் பல அறிஞர்கள் குர்ஆனுக்கு கதயீ என்றும் ஹதீஸிற்கு லன்னீ என்று பிரித்துக் கூறியுள்ளார்கள்.

கதயீ என்றால் அதில் ஒரு போதும் எப்போதும் எந்த விதமான தவறுகளும் வராது என்று பொருள். லன்னீ என்றால் அதில் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று பொருள்.

இதை மையமாக வைத்து குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை அறிவித்தவர்களிடத்தில் தவறு வர வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள்.

குர்ஆனுடன் ஹதீஸ் முரண்படும் போது ஹதீஸை வைத்து குர்ஆனுடைய சட்டத்தையும் மாற்ற மாட்டார்கள். ஹதீஸை விட குர்ஆன் வலிமையானது என்பதே இதற்குக் காரணம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் ஒன்று இன்னொன்றுக்கு முரண்படுவது உண்டு. முரண்படும் செய்திகள் அனைத்தும் ஒன்றை விட இன்னொன்றுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத விதத்தில் எல்லாம் ஒரே தரத்தில் அமைவதோடு அவற்றை இணைத்து எந்த விளக்கமும் கொடுக்க முடியவில்லையென்றால் இப்போது அறிஞர்கள் இந்த ஹதீஸ்களில் எதையும் ஏற்க மாட்டார்கள்.

இந்த வகைக்கு முள்தரப் (குளறுபடி உள்ளது) என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இரண்டு நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி முரண்படும் போது இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று பார்ப்பார்கள். இருவரும் நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும் முரண்பாடு வரும் போது இருவரில் அதிக வலிமையானவர் அறிவிக்கும் செய்திக்கு முன்னுரிமை கொடுத்து அவரை விட வலிமை குறைந்தவர் அறிவிக்கும் அந்தச் செய்தியை பின்தள்ளி விடுவார்கள்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திக்கு மஹ்ஃபூள் என்றும் பின்தள்ளப்பட்ட செய்திக்கு ஷாத் என்றும் கூறுவார்கள்.

இதனால் யாருடைய செய்தி பின்தள்ளப்பட்டதோ அவர் அறிவிக்கும் எந்தச் செய்தியையும் ஏற்கக் கூடாது என்ற முடிவுக்கு வர மாட்டார்கள். மாறாக முரண்பாடாக அறிவிக்கும் அந்தச் செய்தியை மாத்திரம் புறக்கணிப்பார்கள்.

இவ்விதி நம்மை விமர்சிப்பவர்கள் ஒத்துக் கொண்ட விதி தான். ஹதீஸ் கலையில் எழுதப்பட்டது தான்.

நம்பகமானவர்கள் முரண்பாடாக அறிவிக்க மாட்டார்கள் என்று நம்மை விமர்சிப்பவர்கள் கருதுவதால் தான் நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுடன் முரண்படாது என்று கூறுகிறார்கள்.

ஒரு நம்பகமானவர் தன்னைப் போன்ற இன்னொரு நம்பகமானவருக்கோ அல்லது தன்னை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவருக்கோ முரண்பாடாக அறிவிப்பார். அப்படி அறிவித்தால் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கலையின் விதி உணர்த்துகிறது.

அப்படியானால் குர்ஆனிற்கு முரண்பாடாக அவரது செய்தி அமையாது என்று எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? இவரது செய்தி முரண்பாடாக இருப்பதால், இவர் அறிவிக்கும் செய்தியை விட வலிமையான குர்ஆனுக்கு ஏன் முக்கியத்துவம் தரக்கூடாது?

சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீஸிற்கு முரண்படும். ஆனால் ஹதீஸ் குர்ஆனிற்கு ஒரு போதும் முரண்படாது என்று கூற வருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது?

ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு குர்ஆனுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க மறுக்கிறார்கள். தங்களை அறியாமல் ஹதீஸை ஏற்றுக் கொண்டு குர்ஆனை மறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

குர்ஆனுடன் மோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமைந்த இந்தச் செய்திகள் தான் ஒருவனை குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளுகிறது.

முரண்படும் இந்தச் சில செய்திகள் ஒட்டு மொத்த ஹதீஸையும் அவன் மறுப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் முரண்படும் அந்தச் செய்திகள் ஹதீஸ் கலையில் உள்ள விதியின் பிரகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று கூறி, நபியின் சொல்லுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் ஒரு போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறவே மாட்டான்.

இனியும் இவர்கள் குர்ஆனுக்கு ஹதீஸ் எதுவும் முரண்படாது என்று வார்த்தை ஜாலம் காட்டி முரண்பட்ட தகவல்களைச் சொல்வார்கள் என்றால் இவர்களின் இந்த நடவடிக்கை தான் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் உருவாவதற்குக் காரணமாக அமையும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

சிந்தனைக்கு எட்டாத மோசமான செய்திகளை நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொன்னால் கேட்பவர் நபி (ஸல்) அவர்களைத் தவறாக மதிப்பிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் சில நபித்தோழர்கள் இது போன்ற செய்திகளைக் கூற வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றி பேசி அதனால்) அல்லாஹ்வும் அவன் தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ன?

நூல்: புகாரி 127

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பது அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.

நூல்: முஸ்லிம் 12

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? எனக்குப் பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா? அதற்கு நன்மை உண்டா?

ஏ. செய்யது இனாயத்துல்லாஹ், குவைத்

மார்க்கத்தில் சில அமல்களைக் குறிப்பிட்ட காலத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அதை அந்தக் காலத்தில் தான் செய்ய வேண்டும். அதுவல்லாத நாட்களில் செய்யலாம் என்றால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களுக்கும் இது தான் சட்டமாகும். கடமையல்லாத, சுன்னத்தான அமல்களுக்கும் இது பொருந்தும்.

உதாரணமாக ஆஷுரா நோன்பு, அரஃபா நோன்பு போன்ற நபிவழிகளை அந்தந்த நாட்களில் செய்தால் தான் அதற்கான நன்மை கிடைக்கும். இந்த அமல்களை வேறு நாட்களில் செய்ய முடியாது.

அது போன்று அகீகா எனப்படும் நபிவழியையும் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் செய்ய வேண்டும் என்று தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதுவல்லாத மற்ற நாட்களில் கொடுப்பதால் அகீகா என்ற அந்த நபிவழிக்குரிய நன்மை கிடைக்காது.

“ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப்(ரலி)

நூல்: நஸயீ 4149

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.

அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14ஆம் நாள், 21ஆம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன.

எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.

ஏழாவது நாளில் கொடுப்பதற்கு வசதியில்லை என்றால் நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான்.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)

? பொது மையவாடிகளில் அடையாளக் கல் வைத்துக் கொள்ளலாமா?

கௌ. பஜ்ருல்லாஹ், வத்தலக்குண்டு

கப்ருகள் கட்டப்படுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், அது பூசப்படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 2000

கப்ருகளில் அதிகப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளதால் அடையாளக் கல் உள்ளிட்ட எதையும் கப்ரின் மேல் வைப்பது கூடாது.

குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தக் கூடாது.

? சுபுஹுக்கு பாங்கு சொன்ன பிறகு இஷா தொழுகையையும், வித்ரு தொழுகையையும் தொழுலாமா? இரவு 4 மணிக்கு தஹஜ்ஜத் தொழலாமா?

எஸ். முஹம்மது ரபீக், காளி (நாகை)

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

அல்குர்ஆன் 4:103

இந்த வசனத்தில் தொழுகையை அதற்கான குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களில் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.

“இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1074

சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ் 5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30 மணியாகும்.

எனவே இஷா தொழுகையை சுப்ஹ் வரை தாமதிப்பதற்கு அனுமதியில்லை. இந்தப் பொது விதியிலிருந்து தூக்கம், மறதி ஆகிய இரண்டுக்கு மட்டும் சலுகை உள்ளது.

ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.

“யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 597, முஸ்லிம் 1218

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1340

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஹஜ்ஜத் தொழுகையை இஷாவிலிருந்து சுப்ஹ் வரை எப்போது வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். எனினும் இரவின் பிந்திய பகுதிகளில் தொழுவது சிறந்ததாகும்.

சுப்ஹுக்கு முன்னர் வித்ரு தொழுகையை முடித்து விட வேண்டும். தவறி விட்டால் சுப்ஹுக்குப் பின்னர் நிறைவேற்றலாம்.

முஹம்மது பின் முன்தஷிர் என்பவர் அம்ர் பின் ஷர்ஹபீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது முஹம்மது பின் முன்தஷிர் வந்து, “நான் வித்ரு தொழுதேன்” என்று சொன்னார். (இது குறித்து) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பாங்குக்குப் பின் வித்ரு தொழுவது கூடுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்! இகாமத்துக்குப் பின்னரும் தொழலாம். நபியவர்கள் (வித்ரு தொழாமல்) உறங்கி விட்டால் சூரியன் உதயமான பின்னரும் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்ராஹீம்

நூல்: நஸயீ 1667

? ஒருவனது சுமையை இன்னொருவன் சுமக்க மாட்டான் என்று 17:15 வசனம் கூறுகின்றது. இன்னொரு வசனத்தில், “உன் பாவத்துடன் என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (5:29) என்று இடம் பெறுகின்றது. இரண்டும் முரணாகத் தோன்றுகிறதே! ஒருவர் சுமையை மற்றொருவர் சுமப்பாரா? மாட்டாரா? விளக்கவும்.

காதர், மேலப்பாளையம்

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் 17:15

ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று திருக்குர்ஆன் மேற்கண்ட வசனத்திலும், 6:164, 35:18, 39:7 உள்ளிட்ட பல வசனங்களிலும் கூறுகிறது.

இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் தான் நீங்கள் குறிப்பிடும் 5:29 வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

“என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்”

“உன் பாவத்துடன், என் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்” (எனவும் அவர் கூறினார்)

அல்குர்ஆன் 5:27, 28, 29

இந்த வசனங்கள் ஆதம் (அலை) அவர்களின் இரண்டு புதல்வர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் பற்றிப் பேசுகின்றன. அதில் ஒருவர், மற்றொருவரைக் கொல்வேன் என்று கூறும் போது, அந்த நல்லவர், “நான் உன்னைக் கொல்ல முயற்சி செய்ய மாட்டேன்; நீ ஏற்கனவே செய்த பாவங்களுடன் என்னைக் கொலை செய்த பாவத்தையும் சுமந்து நரகவாசியாக ஆக வேண்டும்” என்று கூறுகிறார்.

இந்த வசனங்களில் ஒருவரது பாவத்தை மற்றொருவர் சுமப்பார் என்று கூறப்படவில்லை.

எனது பாவம் என்பது, என்னைக் கொலை செய்த பாவம் என்ற கருத்தில் இங்கு கையாளப்படுகிறது. இது எல்லா மொழிகளிலும் வழக்கில் உள்ளது தான். என்னுடைய பாவம் உன்னைச் சும்மா விடாது என்று நாம் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. அது தான் இந்த வசனத்திலும் கூறப்படுகின்றதே தவிர, ஒருவரது பாவத்தை மற்றவர் சுமப்பார் என்ற கருத்தில் கூறப்படவில்லை.

? சுன்னத் ஜமாஅத்தினரால் ஊர் நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பள்ளிவாசலில் இருக்கும் ஜனாஸா பெட்டியைத் தர மறுக்கிறார்கள் என்றால் எப்படி மய்யித்தைக் கொண்டு போய் அடக்கம் செய்வது? மேலும் ஜனாஸா தொழுûயை வீட்டு முன்பாகத் தொழுது விட்டு ஜனாஸாவைக் கொண்டு போய் அடக்கம் செய்யலாமா?

எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

முஸ்லிம்களில் யாருக்கும் ஜனாஸா பெட்டி தர மறுப்பதற்கோ, அல்லது அடக்கம் செய்வதைத் தடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு தடுப்பவர்கள் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அடக்கம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

இனி கேள்விக்கு வருவோம்.

ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கென குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.

ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். “அபூ ஹம்ஸாவே நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். “நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?” என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.

நூல்கள்: திர்மிதீ 955,

அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640

“நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் “என்னை முற்படுத்துங்கள்!’ என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் “எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று அது கேட்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: நஸயீ 1882

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப் பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச் செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.

இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.

எனவே பள்ளிவாசலில் ஜனாஸா பெட்டி தரவில்லை என்றால் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. சாதாரண கட்டிலில் வைத்துக் கொண்டு போய் அடக்கம் செய்யலாம்.

அது போன்று ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. வீட்டில் கூட ஜனாஸாவை வைத்துத் தொழுது விட்டுப் பின்னர் அடக்கத்தலம் கொண்டு சென்று அடக்கலாம்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா

நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

? தங்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஜாமிவுத் திர்மிதீ தமிழாக்கத்தில் ஹதீஸ் எண்: 45ல் பின்வருமாறு ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. “பின்னர் தமது தலையையும், முகத்தையும் மூன்று தடவை கழுவினார்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தலையை மஸஹ் செய்யும் முன்னர் மேலதிகமாக மூன்று தடவை கழுவ வேண்டுமா?

எஸ்.எல்.எம். அர்ஷத், காத்தங்குடி, இலங்கை

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸின் அரபு மூலத்தில், “முகத்தை மூன்று தடவை கழுவினார்” என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. “தலையையும்” என்ற வார்த்தை கவனக்குறைவாக இடம் பெற்றுள்ளது. இதை நீக்கி விட்டு வாசித்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

? குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதற்கு நேரடியான ஆதாரம் தரவும். மேலும், “என்னுடைய தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்” என்ற ஹதீஸை ஆராயவும். ஸஹீஹாக இருந்தால் ஸஹாபாக்களையும் பின்பற்றவும்.

சுன்னத் ஜமாஅத் பேரவை, ஏர்வாடி

குர்ஆன், ஹதீஸ் அல்லாத மற்றவற்றைப் பின்பற்றுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பதை விட்டு விட்டு, குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதற்கே ஆதாரம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது.

இவை இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். இவற்றை ஒருவர் நம்பினால் தான் அவர் முஸ்லிம். இந்த நம்பிக்கை இருப்பவருக்குத் தான் மார்க்க ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸிலிருந்து சான்றைக் காட்ட முடியும். ஆனால் நீங்களோ அடிப்படைகள் மீதே சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு வேறு எதிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கின்ற வரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும், அவனது நபியின் வழிமுறையுமாகும்.

நூல்: ஹாகிம் 318, பாகம்: 1, பக்கம்: 171

இது போன்ற கருத்தில் அமைந்த திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தான் ஆதாரமாகக் காட்ட முடியும். உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த ஆதாரங்கள் போதுமானவை என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“என்னுடைய தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள்; இவர்களில் யாரைப் பின்பற்றினாலும் வழி தவற மாட்டீர்கள்” என்ற கருத்தில் அமைந்த ஹதீஸின் தரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.

இந்த ஹதீஸ் பைஹகீயில் 381வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இதே கருத்தில் இப்னு அப்பாஸ் வழியாக தைலமீயும் அறிவிக்கின்றார் என்று கஸ்ஃபுல் கஃபா என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸாகும். இந்த ஹதீஸின் தரம் குறித்து ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் குறை கூறியுள்ளனர்.

இதை இப்னு உமர் (ரலி)யிடமிருந்து அப்து பின் ஹமீது என்பாரும், மற்றவர்கள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை அனைத்துமே பலவீனமானவை.  இது போன்ற கருத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல் என்று கூறுவதே தவறு என்று இமாம் பஸ்ஸார் குறிப்பிடுகின்றார்கள். இது இட்டுக் கட்டப்பட்ட அப்பட்டமான பொய் என்று இப்னு ஹஸ்ம் குறிப்பிடுகின்றார் என குவாஸா அல்பத்ருல் முனீர் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் ஜாஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமில் காழி எனபவரால் அறிவிக்கப் படுகின்றது. இவர் இட்டுக்கட்டுபவர் என்று இமாம் தாரகுத்னீ குறிப்பிடுகின்றார்கள். இவர் அடிப்படையில்லாத ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று அபூசுர்ஆ குறிப்பிடுகின்றார். இவர் ஹதீஸ் திருடர், நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி மோசமான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னுஅதீ கூறுகின்றார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்)

இந்த ஹதீஸ் குறித்த விமர்சனங்களில் சிலவற்றை மட்டுமே இங்கு தந்துள்ளோம். இச்செய்தி பற்றிய அனைத்து விமர்சனங்களும் மேற்கண்டவாறு அல்லது அதைவிட மோசமாகவே அமைந்துள்ளன.  எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

————————————————————————————————————————————————

மறு ஆய்வு

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

“யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)

நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்,

பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி

இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார்.

உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார்.

ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.

இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன.

அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்.

அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார்.

உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸலீம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது.

ஸஃப்வான் பின் ஸலீம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.

உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா? என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.

ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார்.

இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

“இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார்” என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, “சில நேரம் தவறு செய்து விடுவார்’ என்று கூறப்படுவதுண்டு)

அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.

இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது.

மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.

“ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)

நூல்: தாரிமி 1690

ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்.

அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.

யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.

யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.

இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.

அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.

இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.

மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————

பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்

எம். ஷம்சுல்லுஹா

ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.

தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.

இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது.

நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது.

இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.

இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.

பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார்.

(தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.)

பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன. இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது.

ஹிந்து நாளேட்டின் மதுரை பதிப்பில், “ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளல்ல” என்ற தலைப்பில் 21.10.2006 அன்று வெளியான செய்தி இதோ:

யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! என்பது போல் எட்டு வயது பவித்ராவுக்கு வண்ண வண்ண மத்தாப்புக்கள், வாய் சிந்தும் புன்னகைப் பூக்கள், வகை வகையான இனிப்புக்கள் என தீபாவளி வருகையை அட்டகாசமாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.

அவள் பட்டாசு கொளுத்தி பண்டிகையைத் துவக்கியதும் இரண்டு நாட்களாகத் தொடர் இருமலும், இளைப்பும் அவளது பண்டிகை மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது. கடைசியில் அவள் கடுமையான ஆஸ்துமாவின் பிடியில் சிக்கி, தீபாளிக்கு முன்னால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

“கடந்த எட்டு மாதமாக அவள் சுகமாகத் தான் இருந்தாள். இந்த சீசன் தான் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பட்டாசுப் புகை அவளது இளைப்பை அதிகரித்து, ஆட்டி அலைக்கழிக்கின்றது” என்று அவளது தாயார் லெட்சுமி கூறுகிறார்.

பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது.

அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.

“ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்” என்று ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின் மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

“ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது” என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார்.

இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.

இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.

இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.

மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.

பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் கூட,  சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம்.

பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.

இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா?

பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா?

ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு?

மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.

திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள்

பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன.

வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.

இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.

“பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 10

வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா?

வீணாகச் செலவழிக்கும் போது, “காசைக் கரியாக்காதே!” என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.

அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 102:8

பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும்.

“ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)

நூல்: திர்மிதீ 2341

இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————

விஞ்ஞான ஆடிப்படையில் பிறையைக் கணிப்பதுகுர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதே!

ஒரு சில இடங்களைத் தவிர இந்தியா முழுவதும் கடந்த 14.10.07 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ரமளானின் 30ஆம் இரவு மேக மூட்டத்தின் காரணமாக பிறை தென்படாததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி 30 நோன்புகள் பூர்த்தியாக்கப்பட்டு பெருநாள் கொண்டாடப்பட்டது.

பிறை பார்க்கத் தேவையில்லை; கணித்தல் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையுடைய ஜாக் இயக்கத்தினர் 12.10.07 அன்று பெருநாள் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்தனர். அத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம் என்றும், மாதத்தை மாற்றுவது குஃப்ர் (இறை மறுப்பு) என்றும் கூறி சுவரொட்டிகளை ஒட்டினர்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானித்துள்ளார்கள்; எனவே அந்த வழிமுறையைப் பின்பற்றுவது ஹராம், குஃப்ர் என்றால் அல்லாஹ்வின் தூதரையே இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ்வின் தூதரையே குற்றம் சாட்டும் இந்த யூதக் கூட்டத்தினரின் குழப்பத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக” என்று நமது தரப்பிலிருந்து சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதன் பின்னர் தற்போது, “பிறை விஷயத்தில் விஞ்ஞானக் கணிப்பை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதா?” என்ற தலைப்பில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு முரண்பாடுகளையும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் அம்சங்களையும் கொண்ட அந்தப் பிரசுரம் குறித்து உரிய விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது நமது கடமையாகும்.

ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தைப் பின்பற்றி வரும் ஒரு மிகப் பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் நவீன யுகத்திலும்  தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.

இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகின்றது. அதாவது உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடா விட்டால் அது ஈமானில் பலவீனமான செயல் என்றும், மாற்று மதத்தினர் இஸ்லாமைப் பற்றித் தவறாக நினைப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்ற கருத்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பெரும்பாலும் ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த இரு நாட்களில் மக்கள் பெருநாள் கொண்டாடி வந்தனர்.

உலகம் முழுவதும் ஒரே நாள் என்ற கருத்து வந்த பிறகும் பொதுவாக மக்களின் நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்றாலும் இந்தக் கருத்தைச் சொல்பவர்கள் – உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்று வாதிடுபவர்கள் தமிழகத்தில் கூட ஒரே நாளில் பெருநாள் கொண்டாடவில்லை. ஒரே நாளில் இல்லாவிட்டாலும் பழைய நிலையில் அடுத்தடுத்த இரு நாட்களிலாவது பெருநாள் கொண்டாடினார்களா? என்றால் அதுவும் இல்லை.  வெவ்வேறு மூன்று நாட்களில் பெருநாள் கொண்டாடி குழப்பத்தை ஏற்படுத்தினர்.

15.12.2001 சனி – ஏர்வாடி ஜாக்…

16.12.2001 ஞாயிறு – நாகர்கோவில் ஜாக்…

17.12.2001 திங்கள் – கடையநல்லூர் ஜாக்…

இப்படி தங்கள் இயக்கத்திலேயே மூன்று நாட்கள் பெருநாள் கொண்டாடினார்கள்.

கோட்டாரில் சந்தித் தெருவுக்கு ஒரு பெருநாள்; புதுத் தெருவுக்கு மறு நாள் தான் பெருநாள்.

நாகர்கோவிலுள்ள ஒரு மதனி புதன் கிழமை நோன்பு நோற்கிறார். இன்னொரு மதனி வியாழக்கிழமை நோன்பு நோற்கிறார். இரண்டு மதனிகளுமே ஒரே இயக்கத்தில் இருக்கிறார்கள்; சவூதியில் தான் சம்பளம் வாங்குகிறார்கள்.

ஒரு வீட்டிலேயே அண்ணனுக்கு ஒரு நாளும், தம்பிக்கு அடுத்த நாளும் பெருநாள் வரக் கூடிய நிலையைத் தோற்றுவித்தவர்கள் தான் ஜாக் இயக்கத்தினர்.

கணிப்பு தான் சரி என்று வாதிடும் இந்தப் பிரசுரத்தை, செய்யது அலீ பைஜி என்பவரின் பெயரால் வெளியிட்டுள்ளனர். இவரது நிலை என்ன தெரியுமா? இவர் இமாமாகப் பணி புரியும் கோட்டாறு அஷ்ரப் பள்ளிவாசலில் 11.09.07 அன்று செவ்வாய்க்கிழமை மக்ரிப் தொழுகையில், “இரவு பத்தரை மணி வரை தகவல் வருகிறதா? என்று பார்ப்போம்” என்று அறிவிக்கிறார். அதன் பிறகு பதினொன்றரை மணி வரை பார்ப்போம் என்று கூறுகிறார்.

கடைசியில் நோன்பா? இல்லையா? என்று தெரியாமலேயே 12.09.07 அன்று அங்குள்ளவர்களில் சிலர் நோன்பு நோற்றும், நோற்காமலும் இருக்கும் நிலை ஏற்பட்டது. கணிப்பு தான் சரி என்று நோட்டீஸ் போடுபவர்கள் எதற்காக இரவு 11 மணி வரை பார்க்க வேண்டும்? இப்படித் தங்களுக்குத் தாங்களே முரண்படுபவர்கள் அடுத்தவர்களை எப்படி ஒன்றிணைக்க முடியும்?

இவர்கள் தான், உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடாவிட்டால் மாற்று மதத்தினர் தவறாக நினைப்பார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இனி விஷயத்திற்கு வருவோம்.

இவர்கள் வெளியிட்டுள்ள இந்தப் பிரசுரத்தில் லூனார் சிஸ்டம், சோலார் சிஸ்டம் என்று பயங்கர ஆய்வுகளில் ஈடுபட்டு, இறுதியாக இவர்கள் சொல்ல வரும் விஷயம் இது தான்.

“லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தைப் பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.

இப்படிச் செய்வதால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்கள் செயல்பட்டார்கள். நாம் நமது காலத்திற்கேற்ப செயல்படுகிறோம்”

“தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு சோலார் சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு லூனார் சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்”

அதாவது தொழுகைக்காக சூரியக் கணிப்பைப் பின்பற்றும் நாம், நோன்பின் துவக்கத்தை அறிவதற்கு சந்திரக் கணிப்பைப் பயன்படுத்தினால் தவறில்லை என்பது தான் இந்தப் பிரசுரத்தின் சாராம்சம்.

இதற்கான பதிலை நாம் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அல்முபீன் மாத இதழிலும், அதன் பின்னர் பல உரைகளிலும், நூல்களிலும் இதற்குப் பதிலளித்துள்ளோம்.

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

அதாவது பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கூறியது போல், சூரியன் மறைவதைப் பார்த்து மக்ரிப் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் “சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது. (பார்க்க: புகாரி 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ, அது உதிப்பதையோ, மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழுதிருக்க முடியும்.

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான்; முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது; அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும், நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டுக்கும் ஒரே மாதிரியான அளவுகோலைத் தான் எடுக்க வேண்டும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் அது இவர்களுடைய நிலைபாட்டிற்கு எதிராகவே அமையும்.

தொழுகை விஷயத்தில் சூரியக் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் உலகத்தில் எங்கு சூரியன் மறைந்தாலும் அதை ஏற்று மக்ரிப் தொழலாம் என்று கூறுவதில்லை. அந்தந்த பகுதிக்கு எப்போது சூரியன் மறைகிறதோ, அல்லது மறையும் என்று கணிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் மக்ரிப் தொழுகிறோம்; நோன்பு துறக்கிறோம்.

உதாரணமாக இந்தியாவில் சூரியன் மறையும் நேரத்தில் சவூதியில் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவில் சூரியன் மறைந்து விட்டது என்று சவூதியில் உள்ளவர்கள் நோன்பு துறப்பது கிடையாது. நமது பகுதியில் சூரியன் எப்போது மறையும் என்பதைக் கவனித்தே நோன்பு துறக்கிறோம்; தொழுகிறோம். இதே அளவுகோலைத் தான் பிறை விஷயத்திலும் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் எப்போது பிறை தென்படும் என்று கணிக்கப்படுகிறதோ அப்போது தான் தமிழகத்தில் முதல் பிறை; சவூதியில் எப்போது தென்படும் என்று கணிக்கப்படுகிறதோ அப்போது தான் சவூதியில் முதல் பிறை என்ற முடிவுக்குத் தான் இவர்கள் வர வேண்டும். ஆனால் இவர்கள் அப்படிச் செய்வதில்லை. உலகில் எங்கு பிறை தோன்றினாலும் உலகம் முழுவதும் அந்த நாள் தான் மாதத்தின் துவக்கம் என்று வாதிடுகின்றனர். இதிலிருந்து “சூரியன், சந்திரன் இரண்டுக்கும் ஒரே அளவு கோலைத் தான் எடுக்க வேண்டும்’ என்ற வாதத்தில் கூட இவர்கள் உண்மையாளர்களாக இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அடுத்து இவர்கள் இந்தப் பிரசுரத்தில் எடுத்து வைக்கும் வாதத்திற்கு வருவோம்.

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்துத் தீர்மானிப்பது ஒன்று தான்! முற்கூட்டியே துல்லியமாகக் கணித்துச் சொல்லும் வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்குக் காரணம். இவ்வுண்மையை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

“நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். (அதாவது 29 ஆகவோ அல்லது 30 ஆகவோ இருக்கலாம்)  அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.

  1. லூனார் சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
  2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியைப் பயன்படுத்திக் கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.

இது தான் இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸுக்குத் தவறான பொருளைத் தருவதால் தான் இவ்வாறு வாதிக்கின்றனர்.

லா நக்துபு வலா நஹ்சுபு என்ற அரபி வாசகத்துக்கு “நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த ஹதீஸில், “துல்லியமாகக் கணித்துக் கூறத் தெரியாத சமுதாயம்’ என்பதைக் கூறும் எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. திட்டமிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரில் பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர்.

“என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 108, 1291

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

“துல்லியமாகக் கணித்துக் கூறத் தெரியாது’ என்று இவர்கள் மொழிபெயர்த்துள்ள இடத்தில் நஹ்சுபு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.

இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்கு இன்றைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் “வானியல் தெரியாது’ என்ற கருத்தில் தான் இதைப் பயன்படுத்தினார்கள் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம்.

ஆனால் திருக்குறளில், துப்பார்க்கு… எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. “(துப்பாக ஆக்கி) உணவாக ஆக்கி’ என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

  1. போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.)

2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68, 9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  1. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.

2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 859, 9.16,14.42, 14.47, 18.9, 18.18, 18.102, 18.104, 23.55, 23.115, 24.11, 2415, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37, 43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 6.4, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3

இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

  1. கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு, எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள், உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும், சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது.

2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41, 14.41 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10, 40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26

ஆகிய 46 இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப், ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.

உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது, பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.

கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125 இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீஸுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் “வானியல் அறிய மாட்டோம்’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.

நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது.

இதைத் திட்டமிட்டு மறைத்து விட்டு இந்த ஹதீஸை வெளியிட்டுள்ளனர்.

வேதத்தில் சிலவற்றை மறைத்து விட்டுக் கூறும் யூதர்களின் வழிமுறையை இவர்கள் இங்கு கையாண்டுள்ளனர்.

உம்மி சமுதாயம் என்றால், எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.

நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.

எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.

இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?

இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?

எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.

ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.

அதாவது எழுதவும் தெரியாத, எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.

எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.

எனவே, “எங்களுக்கு வானியல் தெரியாது; அதனால் நாங்கள் பிறை பார்க்கிறோம்; உங்களுக்கு வானியல் தெரிந்து விட்டால் நீங்கள் பிறை பார்க்கத் தேவையில்லை; பிறையை வானியல் அடிப்படையில் கணித்துக் கொள்ளலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸிலிருந்து வாதிப்பது அறியாமையாகும்.

பிறையை விஞ்ஞான அடிப்படையில் கணித்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்கலாம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தெளிவுபடுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

கியாமத் நாள் நெருங்குகையில், தஜ்ஜால் வரும் போது கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட முந்திய காலமான இந்தக் காலத்தில் கணித்துக் கொள்வதைப் பற்றி தெளிவுபடுத்தாமல் இருப்பார்களா? எத்தனையோ விஷயங்களைப் பற்றி முன்னறிவிப்புச் செய்த நபியவர்கள், இந்த விஷயத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தாமல் இருப்பார்களா?

வானியல் பற்றிய அறிவு இல்லாததால் நபி (ஸல்) அவர்கள் பிறை பார்த்து நோன்பு வைத்தார்கள்; நமக்கு அந்த அறிவு வந்து விட்டதால் நாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்று கூறுவது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும். அவர்கள் மார்க்கத்தைத் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதாகும்.

உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 19:64)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் நமது கட்டளை இல்லாத ஒன்றை புதிதாக யார் உண்டாக்குகின்றாரோ அவருடைய அந்தச் செயல் நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243

பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல்நாளைத் தெரிந்து கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான செயலாகாது. ஏனெனில் இரண்டுமே லூனார் சிஸ்டத்திற்கு உட்பட்டவை தான்.

இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகிறது.

பிறையைப் பார்த்து நோன்பு வைப்பது ஹராம் என்றும், குஃப்ர் என்றும் கூறியவர்கள், தற்போது இரண்டுமே லூனார் சிஸ்டத்திற்கு உட்பட்டவை தான் என்றும், விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுக் கொள்வது சுன்னத்துக்கு மாற்றமில்லை என்றும் கூறுகின்றனர். அதாவது விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுக் கொள்வது குற்றமில்லை என்பது தான் இந்தப் பிரசுரத்தில் இவர்கள் எடுத்து வைக்கும் வாதம்.

அப்படியானால் விஞ்ஞானக் கணிப்பை ஏற்று பெருநாள் கொண்டாடாதவர்களை காஃபிர்கள் என்ற கருத்தில் சுவரொட்டி ஒட்டியது ஏன்?

இவர்கள் நோன்பு என்று அறிவித்த மறு நாள் தான் சவூதி அரேபியாவில் நோன்பு வைத்தனர். அதனால் சவூதியும் காஃபிராகி விட்டது என்று கூறுவார்களா? புனித மாதத்தை மாற்றும் இறை நிராகரிப்பை சவூதி அரசாங்கம் செய்கிறது என்று இவர்கள் வாதிடத் தயாரா? அத்தகைய சவூதி அரசாங்கத்திடமிருந்து கமாலுத்தீன் மதனீ சம்பளம் வாங்கலாமா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இவர்களின் மற்றொரு சந்தர்ப்ப வாதத்தையும் பாருங்கள்.

லூனார் சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறைகளையும் பொதிந்தே தான் நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்’ (2:185)

இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர் கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் சொல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.

என்று இந்தப் பிரசுரத்தில் கூறியுள்ளனர்.

அதாவது, “ரமளானை யார் அடைகிறாரோ’ என்று குர்ஆன் கூறுவது கணிப்பிற்கும் பொருந்தும் என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் இதே வசனத்திற்கு நாம் மேற்கண்ட பொருளைக் கொடுத்த போது, நாம் மிகப் பெரிய பாதகத்தைச் செய்து விட்டதாக வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் இவர்கள் எழுதியதைப் பாருங்கள்.

இதன் சரியான பொருள், உங்களில் யார் அம்மாதத்தில் ஊரில் தங்கியிருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பதாகும். இதற்குச் சான்றாக திருமறைக் குர்ஆனின் மொழியாக்கம் மற்றும் விரிவுரை நூல்களில் வந்துள்ளதைக் கீழே தருகிறோம்….

…தப்ஸீர் மனார், தப்ஸீர் பத்ஹுல் கதீர் இது போன்ற இன்னும் பல தப்ஸீர்களிலும் இப்படித் தான் பொருள் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி அவற்றைக் குறிப்பிடவில்லை.

….ஆனால் மேற்கண்ட வசனத்தில் அடிக்கோடிடப்பட்ட குர்ஆன் வார்த்தைகளுக்கு,

உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று சிலர் பொருள் கொடுத்து, இந்த வார்த்தைகள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது என்று ஒரு வாதத்தை எடுத்து வைத்து விட்டு, அந்த வார்த்தைக்கும் ஏதாவது ஒரு பொருள் பொதிந்து இருக்கத்தான் செய்யும் என்று கூறி, “உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அந்த மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்ற பொருள் பொதிந்துள்ளது என்றும் வாதிடுகின்றனர்.

இந்த வசனத்திற்கு சரியான பொருள் கொள்ளாததினால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.

….யார் ரமளான் மாதத்தில் ஊரில் தங்கியிருக்கிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற சரியான பொருள் கொள்வதற்குப் பதிலாக, யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று தவறான பொருள் கொடுத்ததினால் வந்த விபரீதம் இதுவாகும்.

ஒரு வார்த்தைக்கு அதனுடைய சரியான பொருள் கொடுக்காமல் மாற்றுப் பொருள் கொடுப்பதால் ஏற்படக் கூடிய பாதகங்களை இதனால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

….எனவே ஃபமன் ஷஹித மின்கும் என்ற வார்த்தையின் சரியான பொருளை விளங்கி விடுவோமானால் எல்லா பிரச்சனைகளுக்கும் எளிதாகத் தீர்வு கிடைத்து விடும். அதன் சரியான பொருளை ஆதாரத்துடன் நாம் மேலே கூறியுள்ளோம்.

அல்ஜன்னத், பிப்ரவரி 2000

மேற்கண்ட வசனத்திற்கு எந்தப் பொருளைக் கொடுப்பது மிகப் பெரும் குற்றம், விபரீதம், விளைவு, பாதகம் என்று அவர்களே எழுதினார்களோ அதே பொருளை, அதே வசனத்திற்குக் கொடுத்துள்ளார்கள். இதிலிருந்து இவர்களின் சந்தர்ப்பவாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.

யார் அடைகிறாரோ என்பது கணிப்பையும் உள்ளடக்கும் என்பது இவர்களின் வாதம். ஆனால் குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிறை பார்த்தே மாதத்தின் முதல் நாளைத் தீர்மானித்துள்ளார்கள்.

எனவே பிறை பார்ப்பதன் மூலம் ரமளானை அடைவதில் ஏற்படும் வித்தியாசத்தைத் தான் இந்த வசனம் கூறுகிறது என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது.

கணித்துத் தீர்மானிக்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன்வைப்பதற்குக் காரணம், உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான். இதை இந்தப் பிரசுரத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்தக் கணிப்பை ஏற்றுக் கொண்டு நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானித்தாலும் நாள் வித்தியாசம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

கணிப்பின் அடிப்படையில் அமாவாசை விலகும் நேரத்தையே முதல் பிறையாக இவர்கள் கணக்கிடுகின்றனர். ஒரு வாதத்திற்கு இதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டாலும் ஒரே நாளில் பெருநாள் ஏற்படுவது சாத்தியமில்லை. இவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால், கணிப்பின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரே பெருநாள் கொண்டு வரலாம் என்று கூறி வருகின்றனர்.

அமாவாசை விலகுவதாகக் கணிக்கப்படும் அந்த நேரத்தில் உலகில் யாரெல்லாம் சுப்ஹ் நேரத்துக்கு முன்னர் இருக்கிறார்களோ அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நோன்பைத் துவக்க வேண்டும்; சுப்ஹ் நேரத்தைக் கடந்து விட்டவர்கள் மறு நாள் தான் நோன்பைத் துவக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். (இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? என்பது வேறு விஷயம்.)

சுப்ஹ் நேரம் என்பது சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடக்கூடியதாகும். உதாரணமாக 01.01.2008 அன்று திருநெல்வேலியில் 5.16 மணிக்கு சுப்ஹ் நேரம் என்றால் நாகர்கோவிலில் 5.14 மணிக்கு சுப்ஹ் நேரம் ஆரம்பமாகிறது.

இப்போது 5.15 மணிக்கு கணிப்பின் அடிப்படையில் அமாவாசை விலகுகின்றது என்று வைத்துக் கொண்டால், இவர்களின் வாதப்படி திருநெல்வேலியில் இருப்பவர்கள் முதல் பிறை என்று முடிவு செய்து நோன்பு நோற்க வேண்டும். ஆனால் நாகர்கோவிலில் இருப்பவர்களுக்கு சுப்ஹ் நேரம் துவங்கி விட்டதால் நோன்பு நோற்க முடியாது. இவர்கள் மறுநாள் தான் நோன்பு நோற்க வேண்டும். பெருநாளுக்கும் இதே நிலை தான். திருநெல்வேலி, நாகர்கோவிலை இங்கு உதாரணமாகக் காட்டியுள்ளோம். ஒவ்வொரு தலைப்பிறையின் போதும் உலகின் ஏதேனும் அடுத்தடுத்த இரு பகுதிகளுக்கு இந்த நிலை ஏற்படவே செய்யும். எனவே எந்தக் கணிப்பைப் பின்பற்றினாலும் நாள் வித்தியாசம், கிழமை வித்தியாசம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.

“பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்’ என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில் கொண்டேயாகும் என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அந்தப் பிரசுரம் கூறுகிறது.

அறிவியல் வளர்ச்சியடைந்து விட்ட இந்தக் காலத்தில் பிறை பார்க்கத் தேவையில்லை என்றால் அது மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். இன்ன காலத்தை அடைந்தால் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு எதுவும் மார்க்கத்தில் கூறப்படாத நிலையில், தற்போது இந்தச் சட்டம் தேவையில்லை என்றால் இவர்கள் அல்லாஹ்வுடைய அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்றே அர்த்தம்.

அதனால் தான் இவர்களாக ஒரு நாளை பெருநாள் என்று தீர்மானித்து, அந்த நாளில் நோன்பு நோற்பது ஹராம் என்றும், அவ்வாறு நோற்பவர்கள் காஃபிர்கள் என்றும் குற்றம் சாட்டும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.

ஒரு வாதத்திற்கு, மேற்கண்ட ஹதீஸுக்கு இவர்கள் கூறும் பொருள் சரியானது என்று வைத்துக் கொண்டாலும்…

  • அறிவியல் வளர்ச்சியடைந்த காலம் என்றால் அதற்கான அளவுகோல் என்ன?
  • எந்த நிலை ஏற்பட்டால் கணிக்க வேண்டும்?
  • அமாவாசை முடிந்தவுடன் பிறை தோன்றுவதாகக் கணிக்கப்படுவதை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா?
  • அல்லது இன்ன இடத்தில், இன்ன தேதியில் பிறை தெரியும் என்று கணிக்கப்படுவதை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா?
  • ஒரு பகுதியில் தென்படுவதாகக் கணிக்கப்படுவதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது அந்தந்த பகுதிக்குக் கணிக்கப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
  • கணிப்பிலுள்ள இந்தப் பல்வேறு நிலைகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தான் ஏற்க வேண்டும் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?

“விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படாதவர்கள் காட்டுமிராண்டிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஞ்ஞான அறிவில்லாததால் பிறை பார்த்து நோன்பு வைத்தார்கள், நாம் அறிவாளிகள்; அதனால் பிறை பார்க்கத் தேவையில்லை” என்றெல்லாம் திமிர்வாதம் பேசக் கூடியவர்கள் மேற்கண்ட கேள்விகள் எதற்குமே பதில் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றவில்லை. தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றுகிறார்கள்.

இவர்களின் ஆதாரமெல்லாம் யூத, கிறித்தவர்கள் உலகெங்கும் ஒரே நாளில் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போல் நாமும் கொண்டாட வேண்டும் என்பது தான். அதைத் தான் இந்தப் பிரசுரத்திலும் இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பைத் துவக்கி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.

இப்படி யூத, கிறித்தவர்களைப் பின்பற்றி உலகப் பெருநாள் கொண்டாடத் துடிக்கும் இவர்களைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைப் பாருங்கள்.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்’ என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்’ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்’ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி(ரலீ)

நூல்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892

இப்படிப்பட்ட தாக்கம் தன்னுடைய சமுதாய மக்களிடம் ஊடுறுவும்; அதற்கு இந்தச் சமுதாயம் பலியாகும் என்பதை நன்கு தெரிந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  இது குறித்து மிகக் கடுமையாகவே எச்சரித்துள்ளார்கள்.

“உங்களுக்கு முன்னிருந்த (யூத, கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம், அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்புப் பொந்துக்குள் புகுந்திருந்தால் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3456

முஸ்லிம்களைத் தவிர உலகெங்கிலும் உள்ள மக்களின் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் சூரியக் கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே கணிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் பிறை பார்த்த பிறகு தான் தீர்மானிக்கப்படுகின்றது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை.

“கிறிஸ்துமஸ் எப்போது என்பதை அந்த ஆண்டின் துவக்கத்திலேயே காலண்டரில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றது. இது போன்று நீங்களும் உங்கள் பெருநாளை முடிவு செய்தால் என்ன?” என்று மாற்று மதத்தவர்களும் நம்மிடம் கேட்கின்றார்கள்.

குர்ஆன், ஹதீஸைப் பெயரில் மட்டுமே கொண்டுள்ள ஜாக் இயக்கத்தினரும், நபி (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் “தாத்து அன்வாத்’ எனப்படும் மரத்தைக் கேட்டது போன்று, “இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் முன் கூட்டியே கணிப்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்கள். எனவே இவர்கள் தெளிவாக யூத, கிறித்தவ கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவர்களின் சதி வலையில் சமுதாயம் பலியாகி விடக் கூடாது.

————————————————————————————————————————————————

குடிப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்

மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையை படித்தவர்களும் படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்து கொண்டு மக்களிடம் மதுவை விற்பனை செய்து வருகிறது. பட்டப் பகலில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் சர்பத்தைக் குடிப்பது போல் மதுப்பிரியர்கள் இந்த விஷத்தைக் குடிக்கிறார்கள்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும் மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவே தான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப்பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர்.

சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன்வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகளும் மதுப்பிரியர்களும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறார்கள்.

திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

ஆனால் குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாத, காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி அரபு தேசத்தில் உருவானது. இந்தக் கருத்தை நாம் மக்களிடம் கூறினால் இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சீர்திருத்தவாதி யார்? அவர் என்ன மருத்துவம் செய்தார்? அவர் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்றெல்லாம் வியந்து கேட்பார்கள்.

அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு, குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புதப் பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோக நோய் தீர சிறந்த மருந்தாக இருந்தது.

எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக  வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

அல்குர்ஆன் 16:67

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.

இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்றக் கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்றக் கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.

இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.

தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்கு பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4:43

இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: அபூதாவூத் 3186

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.

சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.

எடுத்த எடுப்பிலே மதுவை குடிக்கக் கூடாது என்று கூறியிருந்தால் இச்சட்டத்திற்கு யாரும் கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:

எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம் என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)

நூல்: புகாரி 4993

இறை நம்பிக்கை அவசியம்

இஸ்லாம் என்பது உண்மையான ஆன்மீகம். மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்து வழி காட்டும் மார்க்கம். மறுமை வாழ்க்கையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மறுமைக்காகத் தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. எனவே இஸ்லாத்தை நேசித்து ஏற்றுக் கொண்ட நபித்தோழர்கள் மதுவின் சுகத்துக்கு அடிபணியாமல் மதுவை விடப் பன்மடங்கு நேசித்த குர்ஆனின் கட்டளைக்கு உடனே பணிந்தார்கள்.

மக்களிடத்தில் இது போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் வெறும் தந்திரங்கள் இருந்தால் மாத்திரம் போதாது. உண்மையான ஆன்மீகக் கொள்கை அவசியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சட்டங்களால் ஏன் பயன் ஏற்படுவதில்லை?

மக்களுடைய நன்மை கருதி ஆட்சியாளர்கள் சில சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் அந்த சட்டங்களைச் செயல்படுத்த விடாமல் மக்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்.

உதாரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் விபச்சாரத்தைத் தூண்டும் விதத்தில் பெண்கள் நடந்து கொண்டால் அதைச் சட்டம் தடுக்காது. விபச்சாரத்திற்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு சட்டம் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளும் ஆண்களை இச்சட்டம் கைது செய்வதில்லை. விபச்சாரம் செய்தால் ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது.

கற்பழிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு கற்பழிக்கத் தூண்டும் ஆபாசப் படங்களை அரசு கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறது. இப்படி தவறுக்கு அழைக்கும் காரண காரியங்களைக் களையாமல் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தினால் என்ன பயன் வரப் போகிறது?

எனவே தான் இஸ்லாம் மது குடிக்கக் கூடாது என்ற ஒரு தடையை மட்டும் விதிக்காமல் மதுவை குடிக்கத் தூண்டும் எல்லாக் காரியங்களையும் தடை செய்கிறது. மதுவைக் குடிப்பது எப்படி தடையோ அது போல் விற்பதும், பிறருக்கு அன்பளிப்பாகத் தருவதும், அதை வைத்து மருத்துவம் செய்வதும் மதுவை சமையல் காடியாக மாற்றுவதும் கூடாது என்று சொல்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3220

நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4014

நபி (ஸல்) அவர்களிடம் தரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “அது மருந்தல்ல! நோய்” என்றார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹ‚ஜ்ர்(ரலி)

நூல்: முஸ்லிம் 4015

மதுவைப் பற்றி மக்களுக்கு ஞாபகம் கூட வந்து விடக் கூடாது என்று கருதிய இஸ்லாம் மது பானங்கள் தயாரிப்பதற்கு அரபுகள் பயன்படுத்தி வந்த பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை செய்திருந்தது. ஏனென்றால் மதுவை மறப்பதற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மது பாட்டில்கள் அங்கு இருந்தால் அந்தப் பயிற்சி பலனற்று போய்விடும்.

மக்கள் மதுவை மறந்து, அதை வாங்கிக் கொடுத்தாலும் குடிக்க மாட்டார்கள் என்ற நிலையை  அடையும் போது அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள் எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 4067

மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு மாஜா 3371

மதீனத்துச் சாலைகள் மது ஆறுகளாக மாறியது

மதுவை ஒழிப்பதில் இத்தனை நுணுக்கங்களையும் இஸ்லாம் கவனித்துக் கொண்டு சட்டம் இயற்றியதால் தான், மதீனத்து மக்கள் தெருக்களில் மது பானங்களை கொண்டு வந்து கொட்டக் கூடிய உன்னத நிலை உருவானது

(முழு மது விலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக் கூடும். எனவே எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மது வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டி விட்டனர்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம் 3219

அடி உதவுவது போல்…

எவ்வளவு அற்புதமான, அறிவுப்பூர்வமான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டத்தை மீறுகின்ற வகையில் சிலரை ஷைத்தான் தூண்டிவிடாமல் இருக்க மாட்டான். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்தை மீறுவார்கள். இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தீட்டிய திட்டங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.

குற்றம் புரிபவனைப் பார்த்து மற்றவன் தவறு செய்ய ஆரம்பிப்பான். எனவே சட்டத்தை மீறுபவனுக்கு உண்மையான தண்டனையை வழங்கினால் அல்லாஹ்விற்குப் பயப்படாதவன் அரசாங்கத்திற்குப் பயந்தாவது சட்டத்தை மீறாமல் இருப்பான். எனவே தான் இஸ்லாம் மதுக் குடிப்பவர்களுக்கு தண்டனைகளை விதித்து அவர்களை இக்குற்றத்தைச் செய்ய விடாமல் தடுக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: அபூதாவூத் 3886

நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 18610

மது என்ற கொடிய தீமையைப் பரவ விடாமல் இஸ்லாம் ஒழித்துக் கட்டிய விதத்தை, இன்றைய உலகம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் இந்த உலகம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் ஆரோக்கியத்தையும் நிரம்பப் பெற்ற உன்னத உலகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

————————————————————————————————————————————————

அபூபக்ர் (ரலி) வரலாறு                       தொடர் – 34

சரணாகதி அடைந்த ஹீரா

எம். ஷம்சுல்லுஹா

“இஸ்லாம் அல்லது ஜிஸ்யா வரி அல்லது போர் என்ற மூன்று தான் உங்கள் முன் உள்ளன. இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று சரணடைய மறுத்தவர்களிடம் தளபதி காலித் தெரிவித்தார். இதற்காக ஒரு நாள் அவர்களுக்கு அவகாசம் அளித்தார். இம்மூன்றில் அவர்கள் போர் புரிவதையே தேர்வு செய்தனர்.

உலக ஆசையில் ஊறிப் போன இவர்களே போரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனும் போது மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இதற்குச் சளைத்து விடவா போகிறார்கள்? நிச்சயமாக இல்லை!

உடனே முஸ்லிம்கள் போர்க்களத்தில் குதிக்கிறார்கள். கோட்டைகள் முஸ்லிம்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தாக்குதல் தொடுத்த மாத்திரத்திலேயே, கொஞ்ச நேரத்திலேயே கோட்டையிலிருந்து அபயக் குரல்கள் எழுகின்றன.

அந்த அபயக் குரல்களை எழுப்பியவர்கள் வேறு யாருமில்லை. கிறித்தவப் பாதிரிகளும், துறவிகளும் தான்.

உயிர்ப் பலிகளைக் கண்டவுடன் அவர்கள் அலறியடித்துக் கொண்டு பரிதாபக் குரல்களை எழுப்புகின்றனர். “நீங்கள் வேண்டுமானால் எங்களைக் கொன்று விடுங்கள். முஸ்லிம்கள் எங்களைக் கொன்று விட வேண்டாம்” என்று அவர்கள் தங்கள் படையினரிடம் கூறுகின்றனர்.

இப்போது தான் கோட்டைத் தலைவர்கள் உணரத் தலைப்படுகிறார்கள். இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்பது வீண் என்று இப்போது தான் அவர்களுக்கு உரைக்க ஆரம்பிக்கிறது.

“அரபுப் படையினரே! இப்போது நாங்கள் சமாதானத்தைத் தெரிவு செய்து கொள்கிறோம். நாங்கள் இப்போது காலிதைச் சந்திக்க வேண்டும்” என்று கோட்டையில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலில் சவால் விட்டவர்கள், முடிவில் சமாதானம் மற்றும் சரணடைய வந்தனர்.

ஏற்கனவே காலித், ஒவ்வொரு கோட்டைக்கும் சென்று, “நீங்கள் அரபுகள் என்றால் உங்களைப் போன்ற அரபுகளாகிய எங்களை ஏன் பழி வாங்கத் துடிக்கிறீர்கள்? நீங்கள் அந்நியர்கள் என்றால் அநீதி, அநியாயத்திற்கு எதிராக ஏன் கிளம்புகிறீர்கள்?” என்று ஒரு போர் யுக்தி மொழியைப் பேசுகிறார். அது அவர்களிடம் எடுபட ஆரம்பித்தது.

“ஆம்! ஒன்று ஆரிபா! மற்றொன்று முஸ்தரிபா என்ற இரு வகை அரபியர் தாம் நாம்” என்று அவர்கள் பதிலளித்தனர்.

ஆரிபா என்றால் யஃரிப் பின் கஹ்தான் என்ற கிளையினர் பேசிய பழமை வாய்ந்த அரபியாகும். முஸ்தரிபா என்றால் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பேசிய புதிய அரபு மொழியாகும்.

அதாவது தாங்கள் யஃரிப் பின் கஹ்தான் மொழி வகையைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், காலித், இஸ்மாயீல் (அலை) அவர்களின் மொழி வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் உணர்த்தினர்.

“நீங்கள் சொல்வது உண்மையானால் எங்களுடன் ஏன் மோதல் போக்கைக் கடைப் பிடிக்கிறீர்கள்? எங்களுடைய செயல்பாட்டை ஏன் வெறுக்கிறீர்கள்?” என்று காலித் கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் அரபியர்கள் தான். எங்களுக்கு அரபியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது என்று உணர்த்துவதற்காகத் தான் இவ்வாறு இழுத்தடித்தோம்” என்று பதில் கூறினர்.

இப்போது காலித் ஏற்கனவே முன் வைத்த மூன்று வாய்ப்புகளை மீண்டும் முன்வைக்கிறார்.

  1. எங்களுடைய மார்க்கமான இஸ்லாமில் இணைந்து விடுங்கள். சாதனைகளிலும், சோதனைகளிலும் நீங்கள் எங்களுடைய சகோதரர்கள். 2. ஜிஸ்யா, 3. போர்.

இம்மூன்றில் அவர்கள் ஜிஸ்யா வரி கொடுப்பதையே தேர்வு செய்தனர்.

ஒரு லட்சத்துத் தொன்னூறாயிரம் திர்ஹம் ஆண்டு தோறும் ஹீரா ஆட்சியாளர்கள் மத்திய இஸ்லாமிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்.

அந்நிய ஆதிக்க சக்திகள் படையெடுப்பை விட்டும் இஸ்லாமிய அரசு, ஹீராவைக் காக்க வேண்டும். இவ்வாறு காக்கத் தவறினால் ஹீரா, இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்தாது.

இவ்வாறு உடன்பாடு கையெழுத்தானது.

இஸ்லாமிய அரசின் சார்பாக தளபதி காலிதும், ஹீராவின் சார்பாக அதிய்யின் மக்களான அதீ மற்றும் அம்ர், அம்ர் பின் அப்துல் மஸீஹ், இயாஸ் பின் கபீஸா, ஹைர் பின் உக்காழ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

ஹீரா மக்கள் தங்கள் காணிக்கை மற்றும் அன்பளிப்புகளை காலிதுக்கு வழங்கினர். தளபதி காலித், அந்த ஒப்பந்தத்தை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அத்துடன் மக்களின் அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து, அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

நோன்பும் சலுகைகளும்

எஸ். யூசுப் பைஜி

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில் கடந்த இதழில் பல்வேறு செய்திகளைக் கண்டோம். ரமளான் மாதத்தின் சிறப்பிதழாக அவ்விதழ் வெளியிடப்பட்டது. இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதற்கு, நோன்பின் சட்டங்களில் இஸ்லாம் வழங்கியிருக்கும் சலுகைகளையும் நாம் உதாரணமாகக் கூறலாம்.

அதன் அடிப்படையில் நோன்பின் சட்டங்களில் இஸ்லாம் காட்டியிருக்கும் எளிமையையும், சலுகைகளையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாம் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது. இந்தக் கடமைகளை பொதுவாக விதித்து விடாமல், இந்தச் சமுதாயத்தின் பலவீனம், அவர்களுடைய உணர்வு போன்றவற்றை அறிந்து, அனைவரும் பின்பற்றத் தகுந்தாற் போல் மிக எளிமையாக விதித்திருக்கிறது.

எளிமையான சட்டங்களை, மனித சமுதாயம் அப்படியே பின்பற்றக் கூடிய சட்டங்களை விதித்ததன் மூலம் இஸ்லாம், இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

நோன்பு எனும் கடமையை எல்லோருக்கும் விதித்தாலும் சிலருக்கு விதிவிலக்கு அளித்திருக்கின்றது.

  1. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

“நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம்” என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, “இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

நூல்: புகாரி 4505

இஸ்லாம் மனிதர்களின் பலவீனத்தை கருத்தில் கொண்டு எவ்வளவு மிக எளிமையான கடமைகளை விதித்திருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று.

  1. நோயாளிகள்

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.

தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.

ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.

  1. பயணிகள்

பயணிகளுக்கு அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.

பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், வெளியூரில் சென்று தங்கியிருப்பவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.

பயணத்தின் இடையில் பல்வேறு கஷ்டங்கள் இருப்பதை நாம் பாôர்க்க முடிகிறது. சில பயணிகளுக்கு அதிகமான வாந்தி, மயக்கம்  ஏற்படுவதையும், சிலருக்குத் தாகம் ஏற்படுவதையும் சிலருக்கு உடல் சோர்வு ஏற்படுதையும் பார்க்கிறோம்.

இந்தப் பலவீனம் மனிதர்களிடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து தான் இஸ்லாம் இவர்களுக்கு நோன்பு நோற்பதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது.

பயணிகள், நோயாளிகள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்கவே விரும்புகிறான்” என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

  1. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாத விடாய் காலகட்டத்தில் பெண்கள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது. ஏனென்றால் மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு தொல்லையாகும். இதைத் திருக்குர்ஆனே குறிப்பிட்டுக் காட்டுகிறது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்வோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

எனவே இந்தச் சிரமமான கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்றவற்றின் மூலம் மேலும் சிரமத்தை அடைந்து விடக் கூடாது என்பதற்காக இது போன்ற கடமைகளில் இஸ்லாம் சலுகை அளிக்கின்றது.

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 508

மாத விடாய் கால கட்டத்தில் நோன்பு மற்றும் தொழுகைகளை விடச் சொன்ன இஸ்லாம், நோன்பை மட்டும் களாச் செய்ய வேண்டும் என்றும், தொழுகையை களாச் செய்யத் தேவையில்லை என்றும் கூறுகிறது.

  1. கர்ப்பிணிகளும்பாலூட்டும் தாய்மார்களும்

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

கர்ப்பமான காலகட்டத்தில் தாய்மார்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை நாம் வர்ணிக்க முடியாது. கர்ப்பம் தரித்த தாய்மார்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியாது. சாதரண காலத்தில் அவர்கள் படுத்து ஓய்வெடுத்தது மாதிரி கர்ப்பம் தரித்த காலத்தில் ஓய்வெடுக்க முடியாது. எனவே அளவற்ற அருளாளன் இவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்கியிருக்கிறான்.

இது போன்று பாலூட்டும் சமயத்திலும் பெண்களுக்கு போதிய உணவு அவசியம் என்பதால் இவர்களும் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

எளிமையாக்கப்பட்ட நோன்பின் சட்டம்

நோன்பு முதலில் கடமையாக்கப் பட்ட போது, ஒரு சிறு இடைவெளியைத் தவிர இரவு, பகல் முழுவதிலும் உண்ணாமல், பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற சட்டம் தான் இருந்தது.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணையினால் இந்தச் சட்டம் மாற்றப்பட்டு, பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்; இரவில் உண்பதற்கும், பருகுவதற்கும், இல்லறத்தில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

(ஆரம்ப நேரத்தில்) நபித் தோழர்கள் நேன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பு உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். ஒரு முறை கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார். நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, “உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டாôர் அவரது மனைவி “இல்லை. எனினும் நான் சென்று உமக்காக உணவைத் தேடி வருகிறேன்” என்றார். கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் கூலி வேலை செய்து விட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டு விட்டது. அவரது மனûவி வந்து அவரைக் கண்ட போது, “உமக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது” என்றார்.

நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்ட போது, “நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது” என்ற வசனமும் “பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள்” என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

அறிவிப்பவர்: பராவு (ரலி)

நூல்: புகாரி 1915

பரிகாரத்திலும் ஒரு சலுகை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

நாம் ஒரு கடை நடத்துகிறோம். அந்தக் கடையில் ஒரு தொழிலாளி வேலை செய்கிறார். வேலை செய்யக் கூடியவர் தவறு செய்து விட்டார் என்றால் நாம் அவருக்குத் தண்டனை கொடுப்போம். “இல்லை, தண்டனையை நான் நிறைவேற்ற முடியாது’ என்று தொழிலாளி சொன்னால் நாம் என்ன செய்வோம்? செய்யக் கூடாத தவறையும் செய்து விட்டு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறாயா? என்று கூடுதல் தண்டனையைக் கொடுப்போம்.

ஆனால் இஸ்லாம் தண்டனை நிறைவேற்ற முடியவில்லை என்று சொன்னால் அதிலும் தண்டனையைக் குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா? என்று கேட்கிறது. அதையும் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதிலும் தண்டனையைக் குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா? என்று கேட்கிறது. இப்படிச் சலுகை காட்டி எதிலும் முடியாது என்று போகவே கடைசியாக பைத்துல் மாலுக்குச் சொந்தமான பொருளிருந்து கொடுத்து நிறைவேற்றச் சொல்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு சட்டத்திலும் எளிமையையும், சலுகையையும் வழங்கி அனைவரும் பின்பற்றத்தக்க எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.