ஏகத்துவம் – மே 2019

உயிரூட்ட வரும் உன்னத ரமலான்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
இது அல்லாஹ்வின் வசனம். ஆம்! ரமளானின் சிறப்பை உணர்த்துகின்ற வசனமாகும். உண்மையில் ரமளான் என்பது, திருக்குர்ஆன் இறங்கிய மாதத்திற்கு வல்ல ரஹ்மான் எடுக்கின்ற திருவிழாவாகும்.
விழா என்றதும் நமக்கு ஒருவிதமான ஒவ்வாமை வந்து விடும். அந்த ஒவ்வாமை வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது. காரணம், விழா என்றதும் கோயில் திருவிழா, தர்ஹா கந்தூரி விழா போன்ற விழாக்கள் நம் மனக்கண் முன் படையெடுத்து வந்து விடும். அந்த விழாவின் பெயரால் அரங்கேறும் ஆட்டங்கள், கச்சேரிகள், கூத்து கும்மாளங்கள் நினைவுக்கு வந்து விடும். அதனால் அந்த அலர்ஜி நமக்கு வருவதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
நாம் பெருநாள் கொண்டாடுகிறோம். அன்றைய தினத்தில் தர்மங்கள் வழங்கி, வணக்கத்தில் ஈடுபட்டு, உறவினர்களைச் சந்தித்து நாம் நமது பெருநாளைக் கழிக்கிறோம். பிறமத சமுதாய மக்களுக்கும் பெருநாட்கள் வருகின்றன. அந்நாட்களில் அவர்கள் மது பானங்கள் அருந்தி, இசைக்கச்சேரிகள், வீண் கேளிக்கைக் கூத்துகள் நடத்தி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அந்தப் பெருநாட்களைக் கழிக்கின்றனர்.
பெருநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களைப் பொறுத்து பெருநாட்கள் வித்தியாசப் படுகின்றன. அதுபோன்று தான் விழா என்பது அதை நடத்துபவர்களைப் பொறுத்து வித்தியாசப்படுகின்றது, வேறுபடுகின்றது. விழா என்பது மகிழ்ச்சியாக ஒரு நிகழ்வை விரும்பி நடத்துவதாகும்.
நான்காண்டு கல்லூரியில் படிப்பை முடித்தவர்களுக்குப் பட்டமளிப்பு நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதில் மார்க்கச் சொற்பொழிவு நடத்தப்படுகின்றது. பட்டம் பெறுகின்ற மாணவர்களின் குடும்பங்கள், ஊரில் உள்ள மக்கள் அதில் பங்கெடுக்கின்றனர். அந்த அடிப்படையில் அது ஒரு விழாவாகும்.
அல்லாஹ் பனூ இஸ்ராயீல்களை ஃபிர்அவ்ன் என்ற மாபெரும் கொடியவனிடமிருந்து காப்பாற்றினான். அந்நாளை அவர்கள் பெருநாளாகக் கொண்டாடினார்கள். அவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்? இதைப் பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் விளக்குகின்றன.
நபி ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 2004, 2005, 3397
இந்த ஹதீஸ், யூதர்கள், தங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருட்கொடைக்கு நன்றிக் கடனாக, நோன்பு நோற்று அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதை நாம் பார்க்க முடிகின்றது. அதை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள் தாங்களும் நோன்பு நோற்கின்றார்கள். பிந்தைய நாட்களில் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்கச் சொல்லி மக்களுக்குக் கட்டளையிடுகின்றார்கள்.
ரப்புல் ஆலமீன் நமக்குப் புனிதமிக்க குர்ஆனை, புனித ரமளானில் இறக்கியது மாபெரும் அருட்கொடையாகும். அதற்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக, நமக்கு ஒரு மாதம் நோன்பைக் கடமையாக்கி அதை நிறைவேற்றும்படி மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இதன் மூலம் குர்ஆனை நினைவுகூர்கின்ற அந்த விழாவை ஒரு மாத காலம் தொடரச் செய்கின்றான். அந்த ஒரு மாதகால விழாவை முன்னிட்டு அடியார்களுக்கு அல்லாஹ் பரிசு மழைகளைப் பொழிகின்றான். இதோ அந்தப் பரிசு மழைகள்:
1. ஒவ்வொரு வணக்கத்திற்கும் பத்து முதல் 700 மடங்குகள் வரை பரிசுகளைத் தருகின்ற நாயன், இந்த ரமளான் மாத நோன்புக்கு அளப்பரிய, அளவிடற்கரிய, அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1904 முஸ்லிம் 2119
அவன் நாளை மறுமையில் அடியானை நேரில் சந்திக்கும் போது நோன்புக்குரிய பரிசுகளை நேரடியாக வழங்குகின்றான்.
2. ரமளான் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். (புகாரி 1899)
3. ரமளான் மாதம் நோன்பு நோற்பவருக்குப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி 38)
4. ரமளான் இரவில் நின்று தொழுபவருக்குப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி 37)
5. ரமளான் மாதத்தில் செய்கின்ற உம்ராவுக்கு ஹஜ்ஜுக்குரிய கூலி கிடைக்கிறது. (புகாரி 1782)
6. ஒன்றுக்குப் பத்து நன்மைகள் என்ற பரிசு மழைத் திட்டத்தின் கீழ், ரமளானைத் தொடர்ந்து யார் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாகின்றார். (முஸ்லிம் 2159)
7. எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் எனும் இரவில் வணங்கும் வணக்கத்தை ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கிய வணக்கத்திற்குரிய நன்மைகளை அள்ளிப் பொழிகின்றான். (பார்க்க: திருக்குர்ஆன் அத்தியாயம் 97)
இவை ரமளான் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் அள்ளி வழங்கும் ரமளான் பரிசு மழையாகும்.
இத்தனையும் எதற்கு? நாம் நல்லமல்கள் செய்து, நல்லடியார்களாகி சுவனத்தில் நுழைய வேண்டும்; நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு பக்கம் அதற்குரிய பயிற்சி! இன்னொரு பக்கம் அதற்குரிய பரிசு!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903
பொய் மற்றும் பாவமான காரியங்களிலிருந்து விலகுவது போன்ற பண்புகளை உருவாக்குகின்ற ஒரு பயிற்சிக் கூடமாக, பாடசாலையாக ரமளான் மாதம் விளங்குகின்றது. ஒரு மாதப் பயிற்சி என்பது ஒரு மாணவர் நல்ல பண்புகளை, வணக்க வழிபாடுகளை ஒருவர் தன்னுள் வரவழைத்துக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் உரிய போதுமான பாட நாட்களாகும். எனவே, ரமளான் எனும் பள்ளிக் கூடத்தில் அத்தகைய பாடத்தை, அதற்குரிய வாய்ப்பை நழுவ விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்வோமாக!
அதிலும் குறிப்பாக லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு. இந்த இரவை அடைவதற்கு இப்போதே நாம் பெரிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இரவை நாம் இழந்து விட்டோம் என்றால் நம்மை விட நஷ்டவாளிகள் வேறு யாரும் இருக்கமுடியாது என்பதை இந்நேரத்தில் மனதில் பதிய வைத்துக் கொள்வோமாக!
பொதுவாக நம் அனைவரிடத்திலும் ஜமாஅத் தொழுகைகளைத் தவற விடும் அலட்சியப் போக்கு அதிகமாக வந்து விடுகின்றது. முன் பின் சுன்னத் தொழுகைகளில் கவனமின்மையும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
மிகப் பெரிய நன்மையைப் பெற்றுத் தருகின்ற தஹஜ்ஜத் தொழுகையைக் கடைப்பிடிக்காமல் கைகழுவி விடுகின்றோம். நோன்புக்காக நாம் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதற்கு எழுந்திருப்பது ஏறத்தாழ உறுதியாக இருக்கின்றது. அந்த ஸஹர் நேரத்தில் தஹஜ்ஜத் தொழுவதற்காக நாம் ஏன் ஒரு சிறிய முயற்சியை எடுக்கக் கூடாது? ஒரு மாத காலம் இந்தப் பயிற்சியை எடுத்தோம் என்றால் இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்குப் பிறகும் அந்தப் பயிற்சி நம்மிடம் தொடர்ந்து கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, வருகின்ற ரமளானை நற்பண்புகளை, நல்லமல்களை வளர்க்கும் ஒரு பாடசாலையாக ஆக்கிக் கொள்வோமாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப் படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 3468
ரமளான் மாதம் வந்தும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாத சாபத்திற்குரிய மக்களாகி விடாமல் நம்மை நாம் காத்துக் கொள்வோமாக!
மொத்தத்தில் இந்த ரமளான் மாதம் நம்மை உயிர்ப்பிக்க வருகின்றது. இதில் நம்மை உயிர்ப்பித்து, புதுப்பித்து புது இரத்தம் பாய்ச்சிக் கொள்வோமாக!

இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் ஓர் இஸ்லாமியப் பார்வவை
ஆர். அப்துல் கரீம்

இலங்கையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் பண்டிகையின் போது கிறித்தவ ஆலயங்கள், பிரபல ஹோட்டல்கள் என மொத்தம் 9 இடங்களில் அதிபயங்கரக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
40க்கும் அதிகமான சிறார்கள் பலியாகி உள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, அதில் சிலர் மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
துளியும் மனித நேயமற்ற, காட்டுமிராண்டித் தனமான இச்சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பயங்கரவாதச் சம்பவத்தை யார் நிகழ்த்தி இருந்தாலும் அது ஏற்க முடியாது.
மனித உயிரைப் பறிக்கும் காட்டுமிராண்டிகள் எவராயினும் இவ்வுலகில் உயிர்வாழும் தகுதியை இழந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தூக்கிலிடப்பட வேண்டும்.
மீடியாக்கள் பற்ற வைக்கும் நெருப்பு
இத்தகைய குண்டு வெடிப்பு சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும் உடனே அதை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி எழுதி வருவது சில மீடியாக்களுக்கு வழக்கமாகி விட்டது.
வன்முறையாளர்களுக்கு மதம் கிடையாது. அவர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் இது போன்ற தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிடும் மீடியாக்கள் அவர்கள் சார்ந்த மதத்தை, அந்தப் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபடுத்தி எழுதுவதில்லை.
நியூசிலாந்து பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஒரு கிறித்தவன் தொடுக்கும் போது அங்கே மதத்தை சம்பந்தப்படுத்துவது கிடையாது.
இந்தியாவில் மாட்டின் பெயரால் முஸ்லிம்களும் தலித்களும் கொல்லப்படும் போது, மாட்டைப் புனிதப்படுத்தும் மதம் அங்கே எந்தப் பத்திரிக்கையாலும் சம்பந்தப்படுத்தப்படுவது கிடையாது.
குஜராத்தில் ஒரே நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படும் போதும் அங்கே கலவரத்தை நிகழ்த்தியவர்களின் மதம் எவ்விதத்திலும் சம்பந்தமாவதில்லை.
சாதியின் பெயரால் பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் போது சாதிய பாகுபாட்டைக் கற்பிக்கும் வேதம், வன்முறைக்குக் காரணமாக அங்கே துளியும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.
அவ்வாறு சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நமது நிலைப்பாடு அல்ல!
பயங்கரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அம்மதத்துடன் தொடர்புபடுத்தாமல் தனிமைப் படுத்த வேண்டும்.
அதுவே இந்தியா போன்ற பன்மைத்துவ தன்மை கொண்ட நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும் எனும் அடிப்படையில் இது சரியான நடவடிக்கையே!
ஆனால் முஸ்லிம்களில் உள்ள ஒரு சில அறிவிலிகள், இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்கும் போது மாத்திரம் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கம் தொடர்பு படுத்தப்படுவது எவ்விதத்தில் சரியாகும்?
ஒரு ஹிந்து, பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது அவனது மதம் அங்கே பேசுபொருளாவதில்லை.
ஒரு கிறித்தவன், பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது அவனது மதம் விவாதிக்கப்படுவதில்லை.
ஆனால் ஒரு முஸ்லிம், பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது.
அவனது மதம் அங்கே பேசு பொருளாகிறது, விவாதிக்கப்படுகிறது மட்டுமின்றி அவன் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு அவனது மதமே காரணம் என்று மீடியாக்களால் பேசப்படுகின்றது.
இதன் விளைவாக, இந்தப் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கின்ற பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் மீதும், முஸ்லிம்களின் மீதும் தவறான பார்வை விழுவதற்கு மீடியாக்களின் இந்தப் போக்கு அடித்தளமிடுகிறது.
அல்லாஹு அக்பர் எனும் கோஷம்
இதற்கு ஒரு காரணத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார்கள்.
பிற மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் தாங்கள் நடத்தும் தாக்குதலுக்கு மதத்தைக் காரணமாக்குவதில்லை. ஆனால் முஸ்லிம்களில் ஒருவர், தான் நடத்தும் தாக்குதலுக்குத் தனது இஸ்லாமிய மார்க்கத்தைக் காரணம் காட்டுகின்றார்.
அதன் அடையாளமாக அல்லாஹு அக்பர் என்று கூறித்தானே தாக்குதல் தொடுக்கின்றார். இப்படிப் பிற மதத்தவர்கள் செய்வதில்லையே என்கிறார்கள்.
இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்று கோடான கோடி முஸ்லிம்கள் உரக்க சப்தமிட்டுக் கூறுவது இவர்களுக்குக் கேட்கவில்லை.
ஆனால் பயங்கரவாதிகள் சொல்வது மட்டும் இவர்களுக்குக் கேட்கிறது, அதுவே இவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் என்ன செய்வது?
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் ஒரு கூட்டம், ஒரு முதியவரை அடித்தே கொல்கின்றது. இதனால் அவர்கள் சார்ந்த மதம் அதைப் போதிக்கின்றது என்று அர்த்தமா? அப்படி யாரும் சொல்வதில்லை.
ஒரு பயங்கரவாதி அல்லாஹு அக்பர் என்று கூறித் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதாலேயே அதை இஸ்லாத்துடன் முடிச்சுப் போட்டு விட முடியாது. மாறாக பயங்கரவாதம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அல்லாஹு அக்பர் என்ற வாசகம் இஸ்லாத்தில் உண்டு. ஆனால் இவர்கள் செய்யும் பயங்கரவாதம் இஸ்லாத்தில் இல்லை.
மனித உயிர் புனிதமானது என்பதே இஸ்லாத்தின் போதனை. ஒரு கொலையாளியின் உயிரைப் பறிக்க வேண்டுமானால் கூட அதை அரசு தான் செய்ய வேண்டுமே தவிர தனி நபர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்கிறது இஸ்லாம். (இது குறித்து விரிவாக, தனிக்கட்டுரையில் காண்க!)
மனித உயிரைப் பறிப்பதை மிகப் பெரிய பாவமாக இஸ்லாம் கண்டிக்கின்றது. அத்தகைய இஸ்லாத்துடன் பயங்கரவாதத்தை, சிலர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதாலேயே முடிச்சுப் போடுதல் நியாயமா?
பிஸ்மில்லாஹ் என்பது கூட இஸ்லாத்தில் உண்டு.
உண்ண, பருகத் துவங்கும் போது முஸ்லிம்கள் இதைக் கூற வேண்டும் என மார்க்கம் அறிவுறுத்துகின்றது. அல்லாஹ்வின் பெயரால் என்பது இதன் பொருள்.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள மதுவை ஒருவர் பிஸ்மில்லாஹ் என்று கூறி அருந்தினால் இஸ்லாம் மதுவை அனுமதிக்கின்றது என்று புரிவோமா?
அல்லது அதை அவரது தவறான செயல் என்போமா?
பிஸ்மில்லாஹ் என்று கூறுவது எப்படி மதுவை ஆகுமாக்கி விடாதோ அதுபோலவே இவர்கள் கூறும் அல்லாஹு அக்பர் எனும் வார்த்தை பயங்கரவாதத்தை ஆகுமாக்கி விடாது.
தற்கொலையின் நிலை என்ன?
பயங்கரவாதிகள் பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியே குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்துகிறார்கள்.
தற்கொலைப்படைத் தாக்குதலைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொண்டாலே இத்தகைய பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை அறியலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தற்கொலை செய்தல் தகாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.
ஒருவர் தற்கொலை செய்தால் அவர் மறுமை வாழ்வின் போது நரகில் இருப்பார் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1365
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5778
நாட்டு மக்களைக் காப்பதற்காக, எதிரி நாட்டுடன் போர் செய்யும் போது கூடத் தற்கொலை கூடாது என்பதே இஸ்லாத்தின் அறநெறி.
நபிகளார் காலத்தில் அவ்வாறு நடைபெற்ற போரின் போது காயமுற்ற ஒருவர் வேதனை தாளாமல் தற்கொலை செய்கிறார்.
அவரின் தொழுகை, நோன்பு, தியாகம் உள்ளிட்ட இதர அறப்பணிகள் எதையும் கவனத்தில் கொள்ளாது தற்கொலை செய்த காரணத்தினாலேயே அவரை நரகவாசி என்று நபிகளார் தீர்ப்பளித்து விடுகிறார்கள்.
இதைப் பின்வரும் சம்பவத்தில் காணலாம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணை வைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பிய போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். (எதிரணியில் போரிடாமல்) விலகிச் சென்றவர், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்டவர் என எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் அவர் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்தது போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், ‘நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்’ என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.
அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், ‘அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு’ என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 4203
தற்கொலை எனும் வடிவத்தை நபிகளார் அறவே அனுமதிக்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவாகத் தெரிவித்து விடுகிறது.
நாட்டு மக்களைக் காக்கும் போரிலேயே தற்கொலை கூடாது என்று திட்டவட்டமாக இஸ்லாம் தெரிவிக்கும் போது அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் தற்கொலையை இஸ்லாம் எப்படி ஆதரிக்கும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
சமூகப் புறக்கணிப்பு
தற்கொலைப் படையை ஆதரிப்பவர்கள் அல்லது இஸ்லாம் தற்கொலைத் தாக்குதலை ஆதரிக்கிறது என்று ஓலமிடுபவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாற்றை எவ்வளவு தான் புரட்டினாலும் தற்கொலை செய்வதை நபிகள் நாயகம் அனுமதித்தார்கள் என்று ஒரு சம்பவத்தைக் கூட சுட்டிக் காட்ட முடியாது.
மாறாக, தற்கொலை செய்பவருக்கு நரகம் என்றும் அவ்வாறு தற்கொலை செய்தவரை சமூகம் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றும் கூறியதைத் தான் பார்க்க இயலும்.
ஆம். ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவருக்காக சக முஸ்லிம்கள் இறுதிப் பிரார்த்தனை புரியும் வகையில் ஜனாஸா தொழுகை நடத்திட வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.
ஆனால் தற்கொலை செய்தவருக்கு இத்தகைய இறுதிப் பிரார்த்தனை எனப்படும் ஜனாஸா தொழுகை அறவே கூடாது என்று நபிகள் நாயகம் தெரிவித்து விட்டார்கள்.
இதோ நபியின் முன்மாதிரியைப் பாருங்கள்.
தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் கொண்டு வரப்பட்ட போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1779
தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்திருப்பதே தற்கொலை செய்வோருக்கு இத்தகைய சமூக அங்கீகாரம் கிடையாது என்பதைப் பறைசாற்றுகின்றது.
நீ தற்கொலை செய்தால் உனது இறுதிச் சடங்கில் கூட நாங்கள் பங்கேற்க மாட்டோம். உனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டோம் என தற்கொலை செய்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தவே நபிகளார் இவ்வாறு கற்றுத் தருகிறார்கள்.
இது தான் தற்கொலை பற்றி இஸ்லாத்தின் நிலை எனும் போது இங்கே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நபிகள் பெருமகனார் இவ்வளவு கடுமையான கண்டிப்பை வழங்கிய பிறகும் இஸ்லாத்தின் மீது பற்று கொண்ட, நபிகள் மீது நேசம் கொண்ட ஒருவரால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த முடியுமா?
*இறைவனின் மன்னிப்பு எனக்கு தேவையில்லை.
*இறைத்தூதரின் எச்சரிக்கை பற்றி எனக்குக் கவலையில்லை.
* முஸ்லிம்களின் பிரார்த்தனை தேவையில்லை.
*இறந்த பிறகு நான் நரகம் போனாலும் கவலையில்லை.
என எல்லாவற்றையும் உதாசீனப்படுத்தும் ஒருவனாலேயே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த முடியும்.
அத்தகைய எண்ணம் கொண்டோரால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்படும் போது அதை இஸ்லாத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படுத்தவே முடியாது.
தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கே இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதியில்லை எனும் போது அப்பாவிகளைக் கொல்வதற்காக நடைபெறும் தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதற்கு இஸ்லாத்தில் அனுமதியும் இல்லை என்பதைச் சந்தேகமின்றி அறியலாம்.
தற்கொலைப்படை மீறும் போர் நெறிகள்
இஸ்லாம் கூறும் போருக்கென்று பல நெறிகள் உண்டு.
ஒரு அரசு தான் போரை நடத்த முடியும். தனிநபர்களோ, குழுக்களோ போரை நடத்தக்கூடாது.
போர் என்பது நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே பாதுகாப்பதற்காக இருக்கக் கூடாது.
எதிரணியில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படக் கூடாது என்பதும் போர் நெறியாகும்.
பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பார்க்க: புகாரி 3015
பெண்கள் போர் வீரர்களாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! (பெண்களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களுக்கு) சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ்ஜாகும்!’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1861
பிறமத வழிபாட்டுத்தலங்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
அல்குர்ஆன் 20:40
கோவில்களோ, சர்ச்சுகளோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.
இவற்றில் எந்த ஒன்றையும் தற்கொலைப்படை எனப்படுவோர் கவனத்தில் கொள்வதில்லை.
குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு அரசுதான் போர் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய நெறியைக் கண்டு கொள்ளாமல் சில மூளை வெந்த தனிநபர்கள் போர் என்று பிதற்றுகிறார்கள்.
அப்பாவிகளை, பெண்களை, குழந்தைகளைக் கொல்கிறார்கள்.
இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தற்கொலையை, தாக்குவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதில் ஒரு சில பெண்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
இப்படி போருக்கான எந்தவிதமான தார்மீக நெறியையும் கடைப்பிடிக்காமல் செய்யப்படும் கொடூரத் தாக்குதலை இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
ஒரு அரசு இதைச் செய்தால் கூட இஸ்லாம் அதை ஒரு போதும் அனுமதிக்காது.
எனவே குடிமக்களைக் காக்கும் நோக்கில் இஸ்லாம் கூறும் போர் வேறு.
அப்பாவிகளைக் கொல்ல இவர்கள் செய்யும் தாக்குதல் வேறு.
இதிலிருந்தும் இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் புரியலாம்.
கண்ட இடத்தில் வெட்டுங்கள்
இஸ்லாம் பயங்கரவாதத்தை அனுமதிக்கின்றது எனும் பொருளில் சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர், ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்று திருக்குர்ஆனின் நீண்ட வசனத்தில் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டுகிறார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என திருக்குர்ஆன் போதிக்கின்றது என்பதை நிரூபிக்க (?) இந்த வசனத்தைத் தவறாகக் கையாள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த வசனம் என்ன சொல்கிறது?
முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என இவ்வசனம் போதிக்கவில்லை. இது தனிநபருக்கான அறிவுரையுமல்ல.
மாறாக, போருக்கு வருவோருடன் நீங்களும் போருக்குச் செல்லுங்கள். அவர்களைக் களத்தில் சந்திக்கும் போது போரில் கொல்லுங்கள் என்று போர் குறித்து அரசுக்குச் சொல்லும் அறிவுரையாகும்.
இதோ இந்த அரைவேக்காடுகள் படித்துக் காட்டும் வசனத்தின் முழுமையை பாருங்கள்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (களத்தில்) சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள்!
அல்குர்ஆன் 2:190, 191
இந்த வசனத்தை ஒருவன் தவறாகப் பயன்படுத்துகிறான் என்றால் அவன் அயோக்கியன் என்றாகுமே தவிர இஸ்லாம் வன்முறையைப் போதிக்கின்றது என்றாகாது.
உதாரணமாக, ஒருவன் வருவோர் போவோரை எல்லாம் தூக்கிலிட்டுக் கொலை செய்கிறான். அதற்கு அவன், ‘இந்திய தண்டனைச் சட்டப் புத்தகத்தில் ‘சாகும்வரை தூக்கிலிடுங்கள்’ என்று உள்ளது. அதைத் தான் நான் செயல்படுத்தினேன்’ என்று கூறுகிறான் எனில் அதை நாம் அங்கீகரிப்போமா?
குறிப்பிட்ட குற்றச் செயல் புரிந்தோரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தானே குற்றவியல் தண்டனை சட்டப் புத்தகத்தில் உள்ளது. நீ வருவோர் போவோரை எல்லாம் கொல்வதற்கு இதை எப்படி ஆதாரமாகக் காட்டுவாய் என்று கேட்க மாட்டோமா?
அப்படிக் குற்றச் செயலில் ஈடுபட்டோரைக் கூட அரசு தான் தூக்கிலிட வேண்டுமே தவிர இதை நீ எப்படி சட்டத்தைக் கையிலெடுப்பாய்? என்று கேட்போம் அல்லவா?
குற்றவியல் தண்டனைச் சட்டப் புத்தகத்திலிருந்து ‘சாகும்வரை தூக்கிலிடுங்கள்’ என்று பாதியை மட்டும் படித்துக் காட்டி கொலை செய்பவனின் நிலை என்னவோ அது தான் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ எனும் திருக்குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டுவோரின் நிலையும்.
இருவரின் குற்றச்செயல்களுக்கும் அந்தந்த புத்தகங்கள் காரணமாக இல்லை.
(முஸ்லிம் அல்லாதோருடன் நபிகள் நாயகம் இணக்கமாக நடந்துள்ள எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. நீளம் கருதி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.)
இஸ்லாமிய சமூகத்தின் பரிதாப நிலை
இங்கே இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் அவல நிலையையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு சில பெயர் தாங்கி முஸ்லிம்களால் பயங்கரவாதச் சம்பவம் நிகழ்த்தப்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் அவலம் தொடர்ந்து நடைபெறவே செய்கிறது.
அவர்களின் தேசப்பற்றும் நன்னடைத்தையும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலை பிற மதத்தவர்களுக்கு ஏற்படுவதில்லை.
ஹிந்துக்களோ கிறித்தவர்களோ பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் போது அவனை அவன் சார்ந்த மதத்திலிருந்து பிரித்துப் பார்க்கும் போக்கு உள்ளது.
அதுவே ஒரு முஸ்லிம் பயங்கரவாதச் சம்பவத்தில் பங்கெடுக்கும் போது, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் அந்தப் பயங்கரவாதியை இஸ்லாமிய சமூகத்திலிருந்தே அந்நியப்படுத்த முனையும் போதும், இல்லை அவனும் முஸ்லிம் தான் என்று ஊடகங்கள் எழுதுகின்றன.
அவன் பயங்கரவாதி என்பதால் முஸ்லிம்களாகிய நீங்களும் பயங்கரவாதிகள் தான் என்று அவனைக் கண்டிப்பவர்களை நோக்கியே பயங்கரவாத முத்திரையைக் குத்த முனைகிறது.
அவன் பெயரும் உங்கள் பெயரும் ஒன்றாக உள்ளதே! உங்கள் பெயரிலும் ‘அபு’ என்று உள்ளதே! நீங்களும் தீவிரவாதிகள் தாமா? என்று ஊடகங்கள் கொளுத்திப் போடுகின்றன.
சில ஊடகங்கள் தீவிரவாதியின் பெயரை வைத்திருக்கும் நபர்களையும் தீவிரவாதி என்று உறுதியே செய்து விடுகின்றன.
அப்பாவிகளை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்வோர் பயங்கரவாதிகள் எனில், ஒரு சிலர் செய்யும் தவறினால் எவ்விதக் குற்றமும் செய்யாத ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்களின் இத்தகைய போக்கும் பயங்கரவாதமே!

மனிதகுல முன்னோடி நபிகள் நாயகம் – தொடர் 3
வர்க்க பேதங்களை ஒழித்துக் காட்டியவர்
ஆர். ரஹ்மத்துல்லாஹ்

ஒன்றே குலம்!
அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள்.
ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும் நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சொல்லிலும் தமது ஆட்சிக் காலத்திலும் ‘ஒன்றே குலம்’ என்ற உண்மையைப் பறைசாற்றி, அனைத்துக் குலத்தவர்களையும், மதத்தவர்களையும், மொழியினரையும் சமமாக நடத்தினார்கள். அதுமட்டுமின்றி அன்றைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்பட்டவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பையும் வழங்கினார்கள்.
தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷி என்ற உயர்ந்த குலத்தவரின் குருட்டுக் கவுரவத்தை நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள்.
அடிமை இனமாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3730
மொழிவெறியை மாய்த்தவர்
மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப்பற்றும், மொழிவெறியும் திகழ்கின்றன.
இலங்கை பற்றி எரிந்ததற்கும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழிவெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழிவெறி தான் காரணம்.
இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: முஸ்லிம் 3440
இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம், மொழி உணர்வு!
என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழிவெறியின் குரல்வளையைப் பிடித்துத் திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழங்கி, அனைத்து மக்களையும் சமநிலைப்படுத்தினார்கள்.
மத உணர்வுகளை மதித்தவர்
ஒரு ஆட்சித் தலைவர் என்றால் அவருக்குக் கீழ் வாழும் மக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
எல்லா மதத்தவர்களும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை உயர்வாகக் கருதுவார்கள்.அவர்களின் மத சுதந்திரத்தைப் பறிப்பதோ தனது மத நம்பிக்கையை அவர்களிடம் திணிப்பதோ கூடாது. அதுமட்டுமில்லாமல் அனைத்து மதத்தவர்களுக்கும் சமமாக உரிமை வழங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை அள்ளிக் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு தலைவன் செயல்பட வேண்டும்.
தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை, மற்ற மதத்தவர்களை பின்னுக்குத் தள்ளக் கூடிய பாரபட்சம் இருந்துவிடக்கூடாது. அடுத்த மதத்தவர்களை அடக்குமுறையில் ஆழ்த்தக்கூடாது.
அனைத்து மதத்தவர்களும் நிம்மதியாக எந்த ஆட்சித் தலைமையின் கீழ் வாழ்கிறார்களோ அந்த ஆட்சிக்குச் சொந்தக்காரனே தலைசிறந்த அரசனாவான்.
அதற்குச் சிறந்த முன்னோடி நபிகள் நாயகம் ஆவார்கள்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு வாரி வழங்கிய முஹம்மது நபி
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.
நூல்: முஸ்லிம் 4629
மதங்களைக் கடந்த மனிதநேயம்
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல்: திர்மிதி 1866
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.
இறந்தவர் வேறு மதத்தவர்!
காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். ‘இறந்தவர் வேறு மதத்தவர்’ என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.
நூல்: புகாரி 1313
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டுக் குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆட்சியில், அதுவும் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாகப் பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களாக இருந்த யூதர்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை.
முஹம்மதா? மூஸாவா? யார் சிறந்தவர்?
முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும், யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ‘அகிலத்தாரை விட முஹம்மதைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று முஸ்லிம் குறிப்பிட்டார். ‘அகிலத்தாரை விட மூஸாவைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று யூதர் கூறினர். இதைக் கேட்டதும் முஸ்லிம், யூதருடைய முகத்தில் அறைந்து விட்டார். உடனே யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும், முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமை அழைத்து வரச் செய்து விசாரித்தனர். அவரும் நடந்ததைக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூஸாவை விட என்னைச் சிறப்பித்துக் கூறாதீர்கள். ஏனெனில் நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாவார்கள். அவர்களுடன் நானும் மூர்ச்சையாவேன். நான் தான் முதலில் மூர்ச்சையிலிருந்து விழித்தெழுவேன். ஆனால் அப்போது மூஸா அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் மூர்ச்சையடைந்து எனக்கு முன் விழித்தெழுந்தாரா? அல்லது அல்லாஹ் யாருக்கு விதிவிலக்கு அளித்தானோ அவர்களில் அவரும் ஒருவரா? என்பதை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2411, 2412, 308, 6517
யூதரும் முஸ்லிமும் தகராறு செய்த போது தனது மதத் தலைவரும், நாட்டின் அதிபருமான நபி (ஸல்) அவர்களை முஸ்லிம் உயர்த்திப் பேசுகிறார். அவருக்குச் சற்றும் சளைக்காமல் அது போன்ற வார்த்தையை யூதரும் பயன்படுத்துகிறார்.
தனது நாட்டின் அதிபராக உள்ள நபிகள் நாயகத்தை விட, தனது மதத்தின் தலைவராகக் கருதப்பட்ட மூஸா நபியை அவர் சிறப்பித்து தைரியமாகக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமுக்கு உள்ள உரிமை தனக்கும் உண்டு என்று அவர் நினைக்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சி அமைந்திருந்ததால் தான் இவ்வாறு அவர் கூற முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விசாரித்து விட்டு, பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் அனுசரித்து அல்லது அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக உடனே முஸ்லிமை அழைத்து வரச் செய்கிறார்கள்.
முஸ்லிம் தான் குற்றம் செய்திருக்கிறார் என்பது உறுதியானவுடன் தன்னை மூஸா நபியை விட சிறப்பித்துக் கூற வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, ஒரு வகையில் மூஸா நபி என்னை விடச் சிறந்தவராக இருக்கிறார் எனக் கூறி யூதருடைய மனதையும் குளிரச் செய்கிறார்கள்.
மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிச் சொல்லிவிட்டு…
பசு அரசியல்
சமஸ்கிருத மொழித் திணிப்பு
யோகாசனம் செய்ய நிர்ப்பந்திப்பது
வந்தே மாதரம் சொல்லத் தூண்டுவது
பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறித்தல்
இதுபோன்ற காரியங்களில் நபிகளார் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
ஒவ்வொரு மதத்தவர்களும் அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு வாழலாம். அதன்படி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம். திருமணம், விவாகரத்து உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை தான் அவர்களது ஆட்சியில் இருந்தது.
வளரும் இன்ஷா அல்லாஹ்

அருள் பொங்கும் மாதமே வருக! வருக
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம்.
அருள் பொங்கும் மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களை அதிகரிக்கச் செய்கின்ற மாதம்! பொறுமையைப் போதிக்கின்ற மாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில் அக்கறை செலுத்த வைக்கின்ற மாதம்!
இதுபோன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங் களைக் கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்து வைத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில் வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியும், ஆர்வமும், இனம் புரியாத மகிழ்ச்சியும் நம்மை அறியாமலேயே நம்மிடத்தில் தொற்றிக் கொள்கின்றது.
எத்தனயோ ரமளான் நம்மிடத்தில் வந்து சென்றிருக்கின்றது. முன்னர், ரமளான் நம்மை வந்து அடைவதற்கு அதிகப்படியான மாதங்களும், நாட்களும் எடுத்துக் கொண்டது போன்ற ஒரு சிந்தனை ஓட்டம் நமக்கு ஏற்ப்பட்டது. ஒரு ரமளானுக்கும் மறு ரமளானுக்கும் நீண்ட நாட்கள் இடைவெளி இருப்பதைப் போன்ற தோற்றம் இருந்தது.
ஆனால் காலம் செல்லச் செல்ல ரமளான் மாதம் நம்மை வேகமாக அடைந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றோம்.
சென்ற வருட ரமளான் இப்போது தானே முடிந்த மாதிரி தெரிகின்றது. அதற்குள் அடுத்த ரமளான் வந்து விட்டதா? என்ற கேள்விக்கணைகள் அனைவரின் உள்ளங்களிலும் எழச் செய்தால் அதற்கு அற்புதமான ஒரு பதிலும் கிடைக்கிறது. அதாவது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகம் வேகமாகப் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. மரணத்தை அடையக்கூடிய நாட்களை நோக்கி நாம் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை நம்முடைய உள்ளங்களில் நாம் அசை போட்டுக் கொள்கின்றோம்.
மேலும், ரமளான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் நம்மை நோக்கி வரும்போது, ஒவ்வொரு மனிதர்களும் தங்களுக்குத் தாங்களே எடுத்துக் கொள்கின்ற சபதம் என்னவென்றால், இந்த வருட ரமளானில் அதிகமாக அமல்கள் செய்வேன்! வீணான காரியங்களில் ஈடுபட்டு ரமளான் மாதத்தை வீணாக்கி விட மாட்டேன்! என்னுடைய உள்ளங்களில் உள்ள பாவங்கள் என்ற அசுத்தங்களை நன்மை செய்வதன் மூலமாகத் துடைத்தெறிவேன் என்பதாகும்.
நாம் நினைப்பது ஒன்று! ஆனால் நடப்பதோ வேறொன்று! நினைத்தால் மட்டும் போதுமா? உள்ளங்களில் என்ன சபதம் எடுத்தோமோ, அந்த சபதத்தை வெறியுடன் அமுல்படுத்த வேண்டாமா?
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே ரமளான் நம்மை விட்டுப் பிரியாவிடை கொடுக்கும் நேரம் நெருங்கி விடும். பிறகு, வருத்தத்தோடு இந்த ரமளான் தான் முடிந்து விட்டது, அடுத்த ரமளானையாவது சரியாகப் பயன்படுத்த முயற்சிப்போம் என்ற விரக்தியோடு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவோம்.
இதுபோன்ற நிலைகளில் நம்மை நோக்கி வந்திருக்கின்ற இந்த வருட ரமளானை வீணடித்து விடாமல், ரமளான் ஏன் வந்திருக்கின்றது? ரமளான் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கின்றது? ரமளான் எதை நோக்கி அழைக்கின்றது? ரமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்பது? இதுபோன்ற அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொண்டு ரமளானை ஆரத்தழுவி வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இறையச்சமே இலக்கு
ரமளான் நோன்பு நம்மீது கடமையாக்கப் பட்டதற்கு மிகமிக முக்கியமான அடிப்படைக் காரணம் நாம் அனைவரும் தக்வா எனும் இறையச்சத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான்.
ரமளான் மாதத்தில் நாம் பெறக்கூடிய இறையச்சத்தின் மூலமாக மீதம் இருக்கின்ற பதினோரு மாதங்களிலும் அற்புதமான ஒரு இலட்சியப் பாதையை அடைந்து விடலாம் என்று சொல்கின்ற அளவுக்கு ரமளான் நோன்பு நமக்கு இறையச்சத்தைப் போதிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:183
நோன்பின் நோக்கமே தக்வா எனும் இறையச்சத்தைப் பெறுவதற்குத் தான் என்றும், இறையச்சத்தை இலக்காகக் கொண்டு தான் ரமளான் மாதத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் இறைவன் அழுத்தந் திருத்தமாகப் பதிய வைக்கின்றான்.
இன்றைய நவீன காலகட்டத்தில் இந்த இறையச்சம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இறையச்சம் இல்லாமலும் இறையச்சத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமலும் நம்முடைய வாழ்நாளை நாம் கழிக்கும்போது மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதே, கடந்த கால வரலாறுகள் நமக்குச் சொல்லித் தருகின்ற பாடம்.
தக்வாவைப் பெறுவது எப்படி?
அருள் பொங்கும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும்போது நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும், மேலும் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற குணநலன்களையும், இறைவன் தடுத்த காரியங்களைச் செய்யாமல், அவற்றை விட்டும் தவிர்ந்து இருக்கின்ற அற்புத ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றோம்.
நோன்பு நேரங்களில் ஹலாலான சில விஷயங்களையும், இறைவன் சொல்லி விட்டான் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, நம்முடைய மனோ இச்சைகளுக்குக் கட்டுப்படாமல் அல்லாஹ் ஒருவனுக்காகவே தியாகம் செய்து புறந்தள்ளி ஒதுக்கி விடுகின்றோம்.
அதிகாலை ஃபஜ்ர் நேரம் முதல் மாலை மக்ரிப் நேரம் வரை அன்றைய தினத்தின் கடுமையான உஷ்ணத்தையும், வெயிலையும் கூடப் பொருட்படுத்தாமல் இறைவனுக்காகப் பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்கின்றோம். இந்தப் பயிற்சி தான் அல்லாஹ் ஹராமாக்கியவற்றைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, பயபக்தியை ஊட்டக் கூடிய பயிற்சிக் களமாக மாறி நிற்கும்.
நோன்பு நோற்றிருப்பவர் தொழுகைக்காக உளு செய்கின்ற போது தங்களின் தொண்டைக் குழி வரைக்கும் சென்ற தண்ணீரை, யாருமே கண்டு கொள்ளவில்லையென்றாலும், அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி, ஒரு துளி கூட தொண்டைக்குழியில் இருந்து கீழிறக்கி விடாமல் அப்படியே வெளியே கொப்பளித்து விடுகிறார். இந்தப் பயிற்சி இறைவன் மீது இருக்கின்ற பயத்தை அதிகரிக்க நிச்சயம் உதவுகின்றது.
ஒரு நோன்பாளி தனது வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்கின்ற போது, குளிர் பானங்களும், ருசிகர உணவுகளும் அவருக்கு முன்னால் வீற்றிருக்கும். யாருமே இல்லாத நேரமான தனிமையில் கூட அவற்றைத் தொட்டுப் பார்ப்பதற்குக் கூட உள்ளத்தில் சிந்தனை எழாது. இந்தப் பயிற்சி இறைவன் தடுத்திருக்கின்ற காரியங்களைச் செய்ய விடாமல் உள்ளத்தைப் பக்குவப்படுத்த உதவுகின்றது.
ஒரு நோன்பாளி, மனிதர்கள் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் அதிகாலை நேரத்தில் எழுந்து ஸஹர் உணவை உண்ணுகின்றான். மற்ற மனிதர்கள் உண்ணுகின்ற நேரங்களில், உணவுகள் மற்றும் பானங்களை விட்டும் தவிர்ந்து கொள்கின்றான். இந்தக் காரியம் அவனுக்குச் சிரமத்தை ஏற்படுத்தினாலும், அல்லாஹ்வுக்காகச் செய்கிறான். இதன்மூலம் கடுமையான, சிரமமான சூழலிலும் கூட அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற உபதேசத்தை உள்ளங்களில் ஆழப் பதிய வைக்க உதவுகின்றது.
ஒரு நோன்பாளி இதுபோன்ற ஏராளமான காரியங்களை, செயல்பாடுகளை ரமளான் மாதத்தில் அரங்கேற்றும் போது இறையச்சத்தை அச்சுப் பிசகாமல் பெறுவதற்குண்டான வாய்ப்பு அற்புதமான முறையில் கிடைக்கின்றது. இதன்மூலம் இறையச்சத்தை நாம் இலகுவாக சுவைத்து விடலாம்.
இறையச்சவாதிகளே! உங்களைத்தான்!!
உண்மையான முறையில் இறையச்சத்தை இலக்காகக் கொண்டு ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று விட்டால், அத்தைகைய மனிதர்களுக்கு இறைவன் வழங்குகின்ற அருட்கிருபைகள் ஏராளம்! ஏராளம்!
மனிதர்களே! இறையச்சவாதிகளாக மாறி விடுங்கள் என்று அழைப்பு விடுத்து, இறைவன் தனிப்பட்ட சிறப்புகளை வாரி வாரி வழங்குகின்றான்.
இறைவன் எப்படிப்பட்ட மனிதர்களை நேசிக்கின்றான்? இறைவன் எந்தக் குணம் படைத்தவர்களோடு இருக்கின்றான்? இறைவன் அறியாப் புறத்திலிருந்து யாருக்கு உதவி செய்வான்? இறைவன் தனது அடியார்களில் யாருடைய பாவங்களைத் துடைத்தெறிந்து, இல்லாமல் ஆக்குவான்? இறைவன் மகத்தான கூலியை யாருக்கு வழங்குவான்? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்வதாக இருந்தால், இத்தனை சிறப்புகளும் இறையச்சவாதிகளுக்குத் தான் கிடைக்கும் என்பதாகும்.
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 3:76
குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் அல்லாஹ்வைப் பயந்து விட்டு, மற்ற காலங்களில் பொடும்போக்காக வாழ்பவர்களைப் போல் அல்லாமல், மிகச் சரியான முறையில் அல்லாஹ்வை யார் அஞ்சுகின்றாரோ, அத்தகைய மனிதர்கள் தான் இறைவனின் நேசத்திற்குரியவர்கள்.
இறைநேசர்களாக, இறைவனின் விருப்பத்திற் குரியவர்களாக, இறைவனின் அன்பைப் பெறுகின்ற மனிதர்களாக மாறுவதற்கு அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி நடக்காத துர்பாக்கியசாலிகளை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 2:194
அல்லாஹ்விற்கு பயந்து இறையச்சத்தோடு ஒவ்வொரு நாட்களையும் கழிக்கின்ற மனிதர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். அல்லாஹ் உடன் இருக்கின்றான் என்றால், அல்லாஹ்வின் உதவி இருக்கின்றது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இருக்கின்றது. அல்லாஹ்வின் கண்காணிப்பு இருக்கின்றது. இதுபோன்ற ஒட்டுமொத்த இறைவனின் கண்காணிப்புக் கீழ் வலம் வருபவர்களாக நாம் மாறுவதற்கும், இறைவன் நம்மை அவனது பாதுகாப்பிற்குக் கீழ் வைத்திருப்பதற்கும் இறையச்சத்தைப் பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இறையச்சவாதிகளுக்கு இன்னும் அதிகப்படியான சிறப்பம்சங்களை இறைவன் குறிப்பிடும்போது…
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
அல்குர்ஆன் 65:2,3
இறைவனை அஞ்சுவோருக்கு ஒரு அற்புதமான போக்கிடம் தயாராக இருக்கின்றது என்று இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான். மேலும் எவ்விதச் சிரமமும் இன்றி அல்லது சிரமப்பட்டாலும் கூட இறையச்சவாதிகளுக்கு அறியாப் புறத்திலிருந்து உணவளிப்பதும், உதவி செய்வதும் அல்லாஹ்விற்குக் கடமை என்றும், அல்லாஹ்வை சார்ந்திருப்போருக்கு இறைவன் ஒருவன் மட்டுமே போதுமானவன் என்றும் உணர்வுப்பூர்வமான அறிவுரையை இறைவன் நமக்கு வழங்குகின்றான்.
இறையச்சவாதிகள் அடையும் மிக முக்கியமான சிறப்பாக இறைவன் குறிப்பிடும் போது…
அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவருக்கு மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் 65:5
நம்முடைய வாழ்நாளில் நாம் செய்து வருகின்ற அத்தனை தீமைகளையும் கழுவி, தீமைகளை நம்மை விட்டு அப்புறப்படுத்தி, பரிசுத்தமான மனிதர்களாக இறைவனை அஞ்சுவோரை மாற்றுவதற்கு அல்லாஹ் விரும்புகின்றான். மேலும், இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியையும் இறைவன் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
இதுபோன்ற ஏராளமான சிறப்புகளையும், கண்ணியத்தையும், மகத்துவத்தையும் இறைவனை அஞ்சக்கூடிய மனிதர்களால் மட்டுமே பெற முடியும். இறைவனை அஞ்சுவோரை இறைவன் உச்சத்தில் வைத்து நன்மைகளை அருவிகளாகக் கொட்டித் தீர்க்கின்றான்.
இறையச்சம் இல்லாமல் தங்களின் வாழ்க்கையை தான்தோன்றித்தனமாக, தங்களின் மனம் போன போக்கில் வாழ்பவர்கள் இந்த ரமளானில் தங்களின் உள்ளங்களைக் கழுவி, இறையச்சம் என்ற ஆயுதத்தின் மூலமாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெறுமனே அழிந்து போகின்ற அற்ப உலக சுகபோகங்களுக்காகவும், பதவிக்காகவும், புகழுக்காவும், காசு பணம் சம்பாதிப்பதற்காகவும் ஆசைப்பட்டு இறைவனை அஞ்சாமல் வாழ்ந்தால் மேற்குறிப்பிட்ட இறைவனின் எந்தச் சிறப்புகளையும் கடுகளவிற்குக் கூட நம்மால் சுவைக்கவோ, சுவாசிக்கவோ முடியாது என்பதை உள்ளங்களில் அழுத்தந் திருத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அழைப்பாளர் அழைக்கின்றார்
அருள் பொங்கும் மாதத்தில் பாவமான காரியங்களை விட்டும் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நோன்பாளிகள் தவிர்ந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், நோன்பாளிகள் இறையச்சத்தோடு தங்களின் வணக்க வழிபாடுகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் புறத்திலிருந்து சிறப்பான முறையில் பிரத்தியேக அழைப்பாளர் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கின்றார்.
ரமளான் மாதத்தில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும்; நரகத்தின் வாசல்கள் மூடப்படும்; கெட்டவர்களான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அதன் இரவுகளில் ஒரு அழைப்பாளர் (வானவர்) இறக்கி, ‘‘நல்லதைத் தேடுபவனே! (நன்மையில்) முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைத்) தடுத்துக் கொள்!’’ என்று அழைக்கிறார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உத்பா பின் ஃபர்கத் (ரலி)
நூல்: நஸாயீ 2108
ரமளான் மாதத்தில் இறைவனின் அருள் மழையில் ஒட்டுமொத்த நோன்பாளிகளும் நனைய வேண்டும் என்பதற்காக முரண்டு பிடித்த, அகம்பாவம் கொண்ட, ஆணவத்தன்மை மிகைத்திருக்கின்ற ஷைத்தான்களை இறைவன் பிடித்து வைத்து விலங்கிட்டுச் சிறை பிடிக்கின்றான்.
ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான் என்றால் தீமைகளே நடக்காது என்று அர்த்தமல்ல! மற்ற நாட்களை விட நோன்பு நாட்களில், நோன்பாளிகளிடம் அவனது ஆதிக்கம் குறைவாக இருக்கும் என்றே இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறையடியார்கள் இறையச்சத்தோடு நன்மைகளை அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பதற்காக, ஷைத்தான்களின் ஆதிக்க சக்தியிலிருந்து நம்மைக் காப்பாற்றி அமல்களை அதிகப்படுத்த இறைவன் உதவிக்கரம் நீட்டுகின்றான்.
மேலும், இறையச்சம் கலந்த அமல்களை நோன்பாளிகள் செய்வதற்காகவே சிறப்பு அழைப்பாளர் அழைக்கின்றார். ‘நன்மைகளை அதிகம் செய்பவர்களே! விரையுங்கள்! மேலும், தீமைகளை அதிகம் செய்பவர்களே! தீமைகளை விட்டும் தூரமாகுங்கள்’ என்கின்றார்.
இறையச்சம் மிகைத்திருக்கின்ற நோன்பாளிகள் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இறையச்சமில்லாத சில மனிதர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்பு ஏற்பாட்டை இறைவன் செய்து வைத்திருக்கின்றான். இறையச்சவாதிகளைத் தவிர இந்த அழைப்பாளருக்கு வேறு எவராலும் பதிலளிக்க முடியாது. அழைப்பாளரின் சிறப்பு அழைப்பை ஏற்று கண்ணியத்தோடு இந்த ரமளானைக் கழிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பரிசுத்தத்தின் பக்கம் அழைக்கின்றது
ரமளான் மாதம் என்பது நோன்பாளிகளைப் பரிசுத்தப்படுத்தி, இறையச்சத்தைப் பாடமாக நடத்தி, நற்குணம் கொண்டவர்களாக மாற்றுகின்ற மாதம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் இன்னும் ஒருபடி மேலாகச் சென்று ரமளான் ஒட்டு மொத்த பாவத்தையும் கழுவி மனிதர்களைப் பரிசுத்தப்படுத்துகின்ற அற்புதமான வாசலைத் திறந்து வைத்து, உண்மையான நோன்பாளிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
நூல்: புகாரி 38
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.
நூல்: புகாரி 37
இறைவனுக்காகவும், நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நோன்பு நோற்றால் நாம் அடைகின்ற பாக்கியத்தை ஒட்டுமொத்தமாகவும், இரத்தினச் சுருக்கமாகவும் இந்தச் செய்திகள் சாறு பிழிந்து நமக்கு உபதேசிக்கின்றது.
மேலும், ரமளான் மாதத்தில் நோன்பாளிகள் உளத்தூய்மையோடும், இறையச்சம் கலந்த உண்மையான நம்பிக்கையோடும் நோன்பு நோற்றாலோ அல்லது இரவு நேரங்களில் நின்று வணங்கினாலோ இறைவன் தருகின்ற வெகுமதியாக, நாம் முன்னர் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்துப் பரிசுத்தப்படுத்துகின்றான்.
ஒரு மனிதர் ரமளானில் மிகச் சரியாக ஒவ்வொரு நாட்களையும் பயன்படுத்தினால் இறைவனுக்காகவும், இறைவன் நன்மைகளை அள்ளித் தெளிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றான் என்ற காரணத்துக்காகவும் நோன்பு பிடித்தால் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற இனம் புரியாத ஒரு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைப்போம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி’’ என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2790
இந்த செய்தியை நன்கு ஆழமாகப் படித்துப் பாருங்கள்! இறைநம்பிக்கையும், இறையச்சமும் கலந்த நோன்பு ஒரு மனிதரை அவர் செய்த தவறுகளிலிருந்து திருத்தி பரிசுத்தப்படுத்துகின்றது. மேலும், ரமளானில் இறைவனுக்காக நோன்பு நோற்ற மனிதர்களை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வது இறைவன் தனக்குத் தானே எழுதி வைத்துக் கொண்ட கட்டாயக் கடமைகளிலும், விதிகளிலும் உள்ள ஒன்றாகும்.
இறையச்சத்தோடு நோன்பு நோற்றால் கட்டாயமாக இறைவன் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என்று இருக்கும் போது, நம்மை ஆரத்தழுவி இருக்கின்ற அருள் பொங்கும் ரமளான் மாதத்தை வீணடிக்கலாமா? சிந்தித்துப் பாருங்கள்!
ரய்யான் அழைக்கின்றது
ரமளான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு, நன்மையை எதிர்பார்த்து நம்முடைய அமல்களையும், வணக்க வழிபாடுகளையும் நோன்பாளிகள் செய்து முடிக்கும் போது நாம் அடைகின்ற பரிசுகளை இறைவன் தந்து தூதரின் மூலமாக அழகான முறையில் விளக்கித் தருகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
நூல்: புகாரி 3257
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்!
நூல்: புகாரி 1896
உண்மையான முறையில் நோன்பை நிறைவேற்றினால், எனக்காக நோன்பு நோற்ற என்னுடைய நோன்பாளிகள் எங்கே? என்னுடைய நோன்பாளிகள் எங்கே? எங்கே? என்று நம்மை எதிர்பார்த்துக் காத்திருந்து கூலியை அள்ளி வழங்குகின்றான்.
சொர்க்கத்தில் ஏராளமான படித்தரங்கள் இருந்தாலும், நோன்பாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற ரய்யான் என்ற சொர்க்கவாசலுக்குச் சொந்தக்காரர்களாக நோன்பாளிகளை இறைவன் அழைக்கின்றான். மேலும், நோன்பாளிகள் ரய்யானில் நுழைந்தவுடன் ரய்யானின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.
நோன்பாளிகள் ரமளான் மாதத்தில் பட்ட சிரமத்தினாலும், கஷ்டத்தினாலும் நாளை மறுமையில் இறைவன் மகத்தான பரிசாக, நோன்பாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக ரய்யான் எனும் சொர்க்கத்தின் வாசல் வழியாக அழைக்கின்றான். ரமளான் எப்படி நம்மை ஒவ்வொரு வருடமும் ஆரத்தழுவி வரவேற்கின்றதோ, அதுபோன்று ரமளானில் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்ற நோன்பாளிகளை இறைவன் முகமலர்ச்சியோடு ஆரத்தழுவி ரய்யான் என்ற சொர்க்கவாசல் வழியாக வரவேற்கின்றான்.
அருள்பொங்கும் மாதத்தை வீணாக்காதீர்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ 3468 (ஹதீஸ் சுருக்கம்)
இந்தக் கடுமையான எச்சரிக்கைக்குப் பயந்து, வீணான காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதிலிருந்து நாம் அறிவது, ரமளான் மாதம் நம்மை நோக்கி வருவதற்குண்டான பிரதான நோக்கமே, நன்மைகளை நாம் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தினால் தான். ரமளானை நன்மைகள் செய்வதற்காக வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ரமளான் மாதத்தை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். ரமளான் மாதத்தை ஒரு நிமிடம் கூட வீணடிக்காத வகையில் கிட்டத்தட்ட 720 மணி நேரங்களும் அயராது இறையச்சத்தை பெறுவதற்கு பாடுபட வேண்டும்.
அதிகமதிகம் உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி சரணடையுங்கள்!
இரவுத் தொழுகையில் மிகவும் பேணுதலாக இருங்கள்!
குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள்!
இறை தியானம், பிரார்த்தனை, துதித்தலில் அதிகமாக ஈடுபட வேண்டும்.
கடைசிப் பத்து நாட்களில் பம்பரமாகச் சுழன்று, ஓய்வெடுக்காமல் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவைத் தேடப் பாடுபட வேண்டும்.
அதிகமதிகம் தர்மம் செய்ய வேண்டும்.
கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களி லிருந்து விலகி விட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடந்து நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல் இருக்க வேண்டும்.
ரமளானில் ஒய்வு நேரங்கள் போக மற்ற நேரங்களில் தூங்கியே கழித்து விடாமல் அமல்களை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
ஏராளமான பாக்கியங்களை பெற்றுத் தந்து, பாவம் கலவாத மனிதர்களாக நம்மை மாற்றுவதற்கு அருள் பொங்கும் ரமளான் நம்மிடத்தில் வந்து அடைந்து இருக்கின்றது. நம்மையெல்லாம் பரிசுத்தமான மனிதர்களாகவும், இறையச்சமுள்ள மனிதர்களாகவும் மாற்றுவதற்கு ரமளான் முயற்சிக்கின்றது.
ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இந்த அருள் பொங்கும் சங்கை நிறைந்த ரமளான் மாதத்திலும் கூட தேவையில்லாத, வீணான, அருவருப்பான, அசிங்கமான காரியங்களில் ஈடுபட்டு, இறையச்சமா? அது எனக்குக் கடுகை கோடி பங்காக வைத்து அதில் ஒரு பங்கு கூட வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, விரண்டோடி, நரகத்தின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இந்த வருட ரமளானை அடைந்திருக்கின்ற நாம் அடுத்த வருட ரமளானில் இருப்போமா? இல்லையா? என்பது தெரியாது. நம்மை நோக்கி வந்திருக்கும் அருள் பொங்கும் ரமளான் மாதத்தைக் கன கச்சிதமாக, சரியான முறையில் பயன்படுத்தியே தீருவேன், நன்மைகளைக் கொள்ளையடிக்க விரைவேன் என்ற வேட்கையுடன் இந்த ரமளானில் காலடி எடுத்து வைத்து, சொர்க்கத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!!

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – தொடர் 34
கஸ்ஸாலி கூறும் ஏச்சுப் பயிற்சி
மூலம் : முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அலீ மக்ராவி
தமிழில் : எம்.ஷம்சுல்லுஹா

ஆன்மீகம், அகமியம் என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான வழிமுறைகளை, வணக்க முறைகளை கஸ்ஸாலி, தனது இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் பதிய வைத்திருப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அந்தத் தொடரில் கீழ்க்காணும் செய்தியைப் பார்ப்போம்.
كما حكي عن بعضهم، أنه كان يعود نفسه الحلم ويزيل عن نفسه شدة الغضب، فكان يستأجر من يشتمه على ملإ من الناس ويكلف نفسه الصبر ويكظم غيضه حتى صار الحلم عادة له، بحيث كان يضرب به المثل
( كتاب رياضة النفس باب بيان الطريق إلى تهذيب الأخلاق) الجزء الثالث من إحياء علوم الدين
ஒருவர் தனது ஆத்மாவுக்கு பொறுமைக்குரிய பயிற்சி அளித்து, அதை விட்டும் கொடிய கோபத்தைக் களைகின்ற முயற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமாக மக்கள் முன்னிலையில் தன்னைத் தீட்டித் தீர்ப்பதற்காக ஒருவரை கூலிக்கும் அமர்த்தியிருந்தார். பொதுமக்கள் முன்னிலையில் அவர் இவரைத் திட்டும் போது எவ்வித ஆத்திரமும் படாமல் பொறுமையைக் கையாண்டார். கோபத்தை மென்று விழுங்கி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார். பொறுமை அவருக்குக் கைவந்த கலையாகி விட்டது. இதன் மூலம் மக்களிடம் அவர் இதற்கு ஓர் உதாரண புருஷராகவே ஆகி விட்டார்.
இஹ்யா உலூமித்தீன் பாகம்: 3
கிதாபு ரியாளத்துன் நஃப்ஸி
(அத்தியாயம்: மனதைப் பக்குவப்படுத்தி, குணங்களைச் சீர்ப்படுத்தி, உள்ளத்தின் நோய்களுக்குச் சிகிச்சை அளித்தல்
பாடம்: குணங்களைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளை விவரித்தல்)
இந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டி, ஆத்திரத்தை அடக்குவதற்கும் கோபத்தை மென்று விழுங்குவதற்கும் பயிற்சி பெற, திட்டுவதற்காகக் கூலிக்கு ஆள் பிடிக்கச் சொல்கின்றார் கஸ்ஸாலி!
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
3:134
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கோபத்தை மென்று விழுங்குவதை முஃமின்களின் சிறந்த பண்பாக எடுத்துச் சொல்கின்றான்.
ஆனால் இயற்கையாகக் கோபம் வரும் போது இந்தப் பண்பை கடைப்பிடிக்க வேண்டும்.
கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (மேற்கொள்வது) தான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1283
இப்படி இயற்கையாக வரும் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சம்பவத்தில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள். ஒரு பெண்மணி கோபம் கொள்கிறார். அனைத்து அதிகாரம் படைத்த ஓர் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராக இருந்தும் அந்தப் பெண் மீது நபி (ஸல்) அவர்கள் சீறிப்பாயவில்லை. முதல் கட்டத்திலேயே தனது கோபத்தை அடக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.
பின்னர் அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது, தாம் எதைத் தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டினார்களோ அதையே போதிக்கின்றார்கள். கோபத்தை அடக்குவது இப்படி இயற்கையாக, உண்மையாக வரவேண்டும். உண்மையாக இப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பொறுமை, செயற்கையாக வரவழைக்கப்படுவதல்ல.
ஆனால் கஸ்ஸாலியோ இதற்கென்று கூலிக்கு ஆள் பிடிக்கச் சொல்கின்றார். பயிற்சி என்ற பெயரில் அதைச் செயற்கையாக வரவழைக்கப் பரிந்துரைக்கின்றார். அதை ஓர் அவ்லியாத்தனமாகவும் அழகிய குணமாகவும் பார்க்கின்றார். இதில் மறைந்திருக்கும் மார்க்க ரீதியான தடைகளை பார்க்கத் தவறி விடுகின்றார்.
இரட்டைப் பாவத்திற்கு இரையாகும் பெரியார்
ஒரு முஃமினைத் திட்டுவது பாவமான காரியமாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரி 6044
கஸ்ஸாலி கையாளச் சொல்கின்ற பயிற்சி குர்ஆன், ஹதீஸுக்கு எதிரான ஒரு பயிற்சி! ஒரு பாவமான காரியம்! திட்டுவது என்று சொன்னால் அதில் சாபம் அடங்கி விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒரு முஃமினை சபிப்பது அவரைக் கொலை செய்தது போன்றாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறை நம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி)
நூல்: புகாரி 6047
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செயலைப் பாவம் என்று, அதுவும் கொலையளவுக்குரிய பாவம் என்று சொன்ன பிறகு அதை ஒருவர் பயிற்சியாக அரங்கேற்றம் செய்தால் அதை மார்க்கம் என்று சொல்லமுடியுமா? பயிற்சி என்ற பெயரில் கஸ்ஸாலி கைகாட்டும் பெரியவர் இரு பாவங்களை செய்கின்றார். முதலாவதாக, இவர் அடுத்தவரைத் திட்டச் சொன்னாலும் அவர் தன்னையே தான் திட்டிக்கொள்கின்றார்.
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நூல்: புகாரி 5973
இந்த ஹதீஸில் ஒருவர் நேரடியாகத் தம் பெற்றோர்களைத் திட்டவில்லை. இன்னொருவரின் பெற்றோரைத் திட்டியிருக்கின்றார். அவர் இவரது பெற்றோரை பதிலுக்குத் திட்டிவிடுகின்றார். அதனால் இது இவர் தன் பெற்றோரை நேரடியாகத் திட்டியது போன்றாகி விடுகின்றது.
இந்த அடிப்படையில் இவர் அடுத்தவரை திட்டச் சொன்னாலும் இவர் தன்னையே நேரடியாகத் திட்டியவராகி விடுகின்றார். நீ தொலைந்து போ! நாசமாகப் போ என்பதும் திட்டுவதில் ஒரு வகை தான். இது ஒரு வகையான சாபமும் ஆகும். ஒருவர் இப்படி தனக்கு எதிராகச் சாபமிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? என்றால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
‘‘உங்களுக்கு எதிராக நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஃப் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5328
இந்த விவகாரத்தில் இவர் தனக்கு எதிராகத் திட்டுவதற்கு காரணமாகி இருக்கின்றார். இரண்டாவதாக, இவர் இன்னொரு முஃமினைத் திட்ட வைத்திருக்கின்றார்.
சாபத்தையும், திட்டுவதையும் தடுக்கின்ற ஹதீஸ்களைப் பற்றிய கஸ்ஸாலியின் மதிப்பீடு தான் என்ன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது தொடர்பாகக் கண்டிக்கின்ற, கடிந்துரைக்கின்ற ஹதீஸ்களை கஸ்ஸாலியின் கலா ரசிகர்களுக்கும் அன்னாரின் மீது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தாண்டி அபிமானம் வைத்திருக்கும் பக்த கோடிகளுக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம்.
சபிப்பவர் சித்தீக் அல்லர்
சித்தீக் எனப்படுபவர் மார்க்கத்தில் உயர்ந்த நிலையிலும் உன்னத நிலையிலும் வைத்து பார்க்கப்படுபவர். அவர் சபிக்கின்ற காரியங்களில் இறங்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் வரம்பு கட்டுகின்றார்கள். ஆன்மீகப் பாசறையில் பயிற்சி எடுத்து தன்னைப் பட்டை தீட்டிக் கொள்பவர் சபிப்பதன் மூலம் அதற்குப் பட்டை நாமம் போடலாமா? என்று சிந்திக்க வேண்டும். இதை கீழ்க்காணும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு உண்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருக்கக்கூடாது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5062
பறிக்கப்படும் பரிந்துரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரைப்பவர்களாகவோ சாட்சியமளிப் பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 5063
சபிப்பவர்கள் நாளை மறுமையில் பரிந்துரைக்கின்ற வாய்ப்பை இழந்து விடுவதை இந்த ஹதீஸ் தெளிவுப்படுத்துகின்றது. ஆன்மீகப் பயிற்சி என்ற பெயரில் அதை உதாசீனம் செய்கின்ற இந்த நடவடிக்கைகளில் ஓர் ஆன்மீகவாதி எனப்படுவர் ஈடுபட முடியுமா?
பாதிக்கப்பட்டவரைத் தவிர மற்றவர்களுக்கு சாபமிடுதல், திட்டுதல் அனுமதியில்லை என்பதையும் மார்க்கம் தெளிவுபடுத்துகின்றது.
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:148
அதே சமயம் நாம் மேலே குறிப்பிட்டது போன்று ஏச்சு பேச்சு, வசை மழை, சாபம் போன்ற கடுஞ்சொற்கள், கண்டனக் கணைகள் ஒரு முஃமினை நோக்கிப் பாயும்போது அவர் சகிப்புத் தன்மையை மேற்கொள்வதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிப் புகழ்கின்றான். இதோ அந்த வசனங்கள்:
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
அல்குர்ஆன் 25:72
ரஹ்மானுடைய அடியார்களின் பண்புகளைக் கூறும் போது இதை அல்லாஹ் சிலாகித்துச் சொல்கின்றான்.
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 42:43
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!
அல்குர்ஆன் 7:199
ஆனால் இது, தானாக நிகழும் போது ஒரு முஃமின் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அதை ஒருவர் செயற்கையாக வரவழைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே ஒரு கேள்வி எழலாம். பயிற்சிக்காகத் தானே இப்படி கஸ்ஸாலி கூறுகின்றார் என்பது தான் அந்தக் கேள்வி.
அல்லாஹ் விபச்சாரத்தைத் தடை செய்திருக்கின்றான். ஒருவர் தன்னைப் பக்குவப்படுத்துகிறேன் என்ற பெயரில் அந்நியப் பெண்ணை அலங்கரித்து வரச்சொல்லி, அல்லது அரைகுறை ஆடையுடன் நிற்கச் சொல்லி, இப்போது என் மனதைப் பக்குவப்படுத்துகிறேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அதுபோல் தான் இந்த வாதம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மொத்தத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒருவர் நடந்தாலே போதும். அது அவரிடம் நல்ல பண்பையும் பக்குவத்தையும் வளர்த்து விடும். அதுவே அவரைச் சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

வாரி வழங்கிய வள்ளல் நபி
எம்.முஹம்மது சலீம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தமது தந்தையை இழந்து விட்டார்கள். ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போது தாயும் இறந்து விட்டார்.
நபிக்கு ஆறு வயதாக இருக்கும் போது அதுவரை பாசத்தோடு வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்து விட்டார். அதன் பிறகு, தமது சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுடைய அரவணைப்பில் வளந்தார்கள்.
சிறுவராக இருக்கும் போது ஆடுமேய்க்கும் வேலையைச் செய்த அனுபவம் நபிகளாருக்கு உண்டு. வாலிபராக ஆனதும் சிரியா சென்று வியாபாரம் செய்து வர, தமது சிறிய தந்தைக்கு உதவியாளராக இருந்தார்கள். வியாபாரத்தைக் கற்றுக் கொண்ட பிறகு சுயமாக வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் மிக ஆர்வமாகவும் நேர்மையாகவும் இருந்ததால் நபியிடமே பலரும் வியாபாரத் தொடர்பு வைக்கத் துவங்கினர். குறுகிய காலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது; வறுமை நீங்கி முன்னேற்றம் கிடைத்தது. செழிப்பான வாழ்வுக்கு உயர்ந்தார்கள்.
உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான். உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
அல்குர்ஆன் 93:8
சிறுவயதில் வறுமையில் வாடிய நபியவர்கள் இளம்பருவத்தில் நாணயமாகத் தொழில் செய்து செல்வத்தில் தன்னிறைவு பெற்ற நிலைக்கு உயர்ந்தார்கள். அப்போது, மற்றவர்களுக்குச் செய்து தருவது போன்று கதீஜா எனும் செல்வச் சீமாட்டிக்கும் வியாபாரம் செய்து வந்தார்கள்.
ஏற்கனவே கணவனை இழந்து விதவைப் பெண்ணாக இருந்த கதீஜா (ரலி) நற்குணவதியாகத் திகழ்ந்தார். அவருக்கு நபிகளாரிடம் இருந்த நற்பண்புகள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இருவருக்கும் இடையே மணமாகும் போது முஹம்மது நபிக்கு வயது 25. கதீஜா அவர்களுக்கு வயது 40.
இருவருக்கும் அல்லாஹ் அளப்பறிய செல்வச் செழிப்பை அள்ளிக் கொடுத்திருந்தான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற மனமும், அதற்குரிய வாய்ப்பும் இருந்தது. இருவரும் சேர்ந்து சமூக அக்கறையுள்ள தம்பதிகளாகத் திகழ்ந்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவர் செய்யும் அனைத்து நல்லறங்களுக்கும் ஆதரவாக இருந்தார்கள். ஆகையால், அனைத்து வழிகளிலும் சமூகத்திற்கு உதவி செய்பவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். இதைப் பின்வரும் சம்பவம் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
(முதன் முதலில் குர்ஆன் வசனம் இறங்கிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்துச் சதைகள் படபடக்கத் திரும்பிவந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் சென்றார்கள். “எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்” என்றார்கள். அவ்வாறே (வீட்டாரும்) அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு “எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கின்றீர்கள்; உண்மையே பேசுகின்றீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கின்றீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3), முஸ்லிம் (252)
முஹம்மது (ஸல்) அவர்களுக்குத் திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 40வது வயதில் தான் ஏக இறைவனால் தூதாராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நபியவர்கள் செல்வந்தராக ஆவதற்காக ஓரிறைக் கொள்கையை முன்வைக்கவில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், தூதராக ஆவதற்கு முன்பாகவே மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நிலையில் இருந்தார்கள். இதற்கு முக்கிய ஆதாரமாக மேலுள்ள செய்தி இருக்கிறது.
மக்காவில் கடும் எதிர்ப்புகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக இருந்த அபூதாலிப் இறந்த பிறகு, நபிகளாருக்கு நெருக்கடி ஏற்பட்டது. முஸ்லிமாக இருப்பதே உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் அவ்வூரை விட்டுச் செல்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்தான்.
செழிப்பாக வாழ்ந்து வந்த நபியவர்கள் கையில் தூக்கிச் செல்லும் அளவுக்குத் தங்க காசுகளை, வெள்ளிக் காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு நாடு துறந்து சென்றார்கள். அப்போது தம்மிடம் இருந்த காசுகள் மூலம் மதீனாவில் பள்ளிவாசல் கட்டுவதற்குச் சொந்தமாக இடம் வாங்கினார்கள்.
மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருற்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து விட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தம் வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், ‘அரபுக் குழாமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்…’ என்று கூவினார்.
உடனே, முஸ்லிம்கள் (நபிகளாரைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக). ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (‘குபா’வில் உள்ள) பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது.
அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) எழுந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத – அன்சாரிகளில் சிலர் (அபூ பக்ர் அவர்களை இறைத்தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் இப்னு அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து ‘இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை’ நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாள்களில்) அந்தப் பள்ளியில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தம் வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது.
அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த ஸஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்‘ என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், ‘இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா இப்னு ஜுஃஷும் (ரலி)
நூல்: புகாரி (3906)
தம்மிடம் இருந்த செல்வத்தைக் கொண்டுதான் முஹம்மது நபி மதீனாவில் பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கினார்கள். அடக்குமுறை மூலமோ, அதிகாரம் செய்தோ அல்ல! தம்மிடம் மீதமுள்ள தொகை மூலமாக வருமானத்திற்கு உரிய வழியை ஏற்படுத்திக் கொண்டார்கள். சுய மரியாதையாக வாழ்ந்தார்கள்.
மக்காவில் கடும் தொல்லைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான முஸ்லிம்கள் நாடு துறந்து மதீனாவுக்கு வந்த சமயம், அங்கு அடிப்படை வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த முஹம்மது நபி அவர்கள் அந்த நிலையை சமாளிக்கப் பெரும் முயற்சி எடுத்தார்கள்.
ஜகாத் எனும் தர்மம் பற்றிய இறைக் கட்டளை இறங்கியது. பொதுநிதியில் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. பொருளாதாரத் தேவையுடைய மக்களுக்கு அதிலிருந்து வாரி வழங்கப்பட்டது. ஆதரவற்ற மக்களுக்கு அள்ளித் தரப்பட்டது.
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘அதைப் பள்ளிவாசலில் பரப்பி வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அது நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது. அப்போது, அப்பாஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப் போரில் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத் தொகை கொடுத்திருக்கிறேன்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
உடனே, அப்பாஸ் (ரலி), தம் துணியில் அதை அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைச் சுமக்க) முடியவில்லை. எனவே, ‘(உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோளின்) மீது தூக்கி வைக்கும்படி உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நான் உத்தரவிட மாட்டேன்’ என்று சொல்லி விட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ‘நீங்களாவது என் தோள் மீது இதைத் தூக்கி வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘வைக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும்) அதை அவர்களால் தூக்க முடியவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்களிடம், ‘இதைத் தூக்கி என் மீது சுமத்தும்படி இவர்களில் ஒருவருக்கு உத்தரவிடுங்கள்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மாட்டேன்’ என்று சொல்லி விட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தம் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்து விட்டு அவர்கள் மறையும் வரை அவர்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம் கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் நபி(ஸல்) அவர்கள் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (3165)
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா (ரலி)
நூல்: புகாரி (851)
ஒரு திர்ஹம் கூட மிஞ்சாமல் தர்மம் செய்த பின்புதான் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள் என்பது முஹம்மது நபியிடம் இருந்த மக்கள் சேவையை விளக்குகிறது.
மேலும், மறந்தும் கூட மக்களுக்குரிய பணத்தைத் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது; அவர்களுக்கு உரியதை உடனே தந்துவிட வேண்டும் என்ற எண்ணம் நபிக்கு இருந்ததை அறிய முடிகிறது. அதன் வெளிப்பாடாக, எல்லா வகையிலும் நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் அராசாங்கக் கருவூலத்தை முறையாக பயன்படுத்தினார்கள்.
எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவர்’ எனும் (திருக்குர்ஆன் 33:6) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
ஒரு நம்பிக்கையாளர் (இறந்துபோய்) செல்வத்தை விட்டுச் சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் – அவர்கள் எவ்வகையினராயினும் சரி – அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்!
(இறக்கும் போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (4781)
கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், ‘இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும்விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்பது வழக்கம். ‘அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச் சென்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம் ‘உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், ‘நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறைநம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்து விடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை விட்டுச் செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்’ என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5371)
நாட்டு மக்களின் தனிப்பட்ட கடனையும் கூட அடைக்கும் ஆட்சியாளரை நினைத்தால் மனம் நெகிழ்ந்து போகிறது. இன்றோ, குடிமக்களின் பெயரால் கடனை வாங்கி விட்டு அதை அடைக்காமலும் அதை மக்களுக்கு முழுமையாகச் செலவழிக்காமலும் ஊழல் செய்யும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் பொதுநிதியை எப்படிப் பக்குவமாகக் கையாள வேண்டும் என்ற அரசியல் பாடம் முஹம்மது நபியின் வாழ்க்கையில் இருக்கிறது. இதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்குக் கொடுக்கும் ஜகாத் போன்ற பொதுநிதியில் இருந்து தமது தேவைக்காகக் கடுகளவும் நபியவர்கள் எடுத்துக் கொண்டதில்லை. தமக்கு மிக நெருக்கமான நபர்கள் வற்புறுத்திக் கொடுத்த ஒரு சில அன்பளிப்புகளைத் தவிர, தமது வாழ்க்கையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு மற்றவர்கள் கொடுக்கும் தர்மப் பொருட்களை ஒருபோதும் வாங்கவில்லை. அவற்றை ஒரேயடியாகப் புறக்கணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரப்படும்போது, அது குறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று) கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1953)
‘‘நான் என் வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பது உண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று அஞ்சி, உடனே அதைப் போட்டு விடுகின்றேன்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இதை அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1940)
(நபியவர்களின் பேரனான) ஹஸன் (ரலி) ஸதகா பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘சீ; சீ’ எனக் கூறி துப்பச் செய்துவிட்டு, ‘நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1491)
தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது; பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு நபியவர்களின் குடும்பத்திற்கும் இருந்தது. இதில் எந்தளவுக்கு நபியவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட சம்பவம் சான்று.
ஆட்சித் தலைவர், ஆன்மீகத் தலைவர் எனும் வகையில், வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்வதே நபியின் இலட்சியமாக இருந்தது.
அதேசமயம், தமக்கும் குடும்பத்தாருக்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம் போன்ற உலகியல் இன்பங்களைச் சுருக்கிக் கொண்டார்களே தவிர, மறுமை வெற்றிக்காக அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதை, அள்ளிக் கொடுப்பதை ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை.
‘நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமளான் மாதத்தில் சந்திக்கும்போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (6)
..நபி (ஸல்) அவர்கள் ‘அபூ தர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்’ என்றேன். ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமல் இருப்பதை நான் விரும்பவிலலை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி (1407)
இந்தச் செய்தி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நபியிடம் கொடைக் குணம் நிறைவாக இருந்தது என்பதைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது.
எவரேனும் எதாவது உதவி கோரினால், அவர் கேட்டது தம்மிடம் இருக்கும் பட்சத்தில் நபியவர்கள் அதைக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். எதையும் வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்லும் பேச்சுக்கு இடமே கிடையாது.
நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னது கிடையாது.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி (6034)
‘ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என மக்களிடம் கேட்டார்கள். அப்போது மக்கள், ‘அது சால்வை’ என்றனர். அப்போது ஸஹ்ல் (ரலி), ‘அது கரை வைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்’ என்று கூறினார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:)
அப்போது அந்தப் பெண்மணி, ‘இதனை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்(து கொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை எனக்கு அணிவித்துவிடுங்களேன்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘சரி’ என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்றுவிட்டார்கள்.
அந்தத் தோழரிடம் அவரின் நண்பர்கள் ‘நீர் செய்தது அழகல்ல! நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் தான் அதைப் பெற்றுக் கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே’ என்று கூறி அவரைக் கண்டித்தனர். அதற்கு அவர் ‘நபி (ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட சுபிட்சத்தை (பரக்கத்தை) அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும் போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை கேட்டேன்)’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூ ஹாஸிம்
நூல்: புகாரி (6036)
அல்லாஹ்வின் தூதர் அணிந்திருக்கும் சட்டையை ஒரு நபித்தோழர், தாம் இறந்த பிறகு பிரேதத்தைப் போர்த்தும் ஆடையாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். அவர் எதற்காகக் கேட்கிறார் என்பது நபிக்கும் தெரியாது. இருந்தாலும், கேட்ட உடனேயே தமது சட்டையைக் கழற்றித் தந்து விட்டார்கள்.
அண்ணலார் மீது நபித்தோழர்கள் எந்தளவுக்கு உயரிய பாசம் வைத்தார்கள் என்பதையும் இந்தச் சம்பவம் பறைசாற்றுகின்றது.
நபியவர்கள் கட்டளையிட்டால் பொருளா தாரத்தை அள்ளிக் கொடுக்கும் நிலைக்கு, அடுத்தவரிடம் திரட்டித் தரும் அளவுக்கு அவரது தோழர்கள் பெரும் பாசம் வைத்திருந்தார்கள். உயிரையே கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள்.
அந்த நேசத்தை தமக்குச் சாதகமாக, அதுவும் உலக ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் பயன்படுத்திக் கொண்டதேயில்லை. மாறாக, தான தர்மங்கள் செய்வது உட்பட அனைத்து விஷயத்திலும் அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
சில நேரங்களில் எவரேனும் தம்மிடம் உதவி தேடி வரும் போது, கொடுப்பதற்கு ஏதும் இல்லாவிட்டால், அவருக்கு உதவுமாறு தமது தோழர்களிடம் பரிந்துரை செய்வார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும் இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்’’ என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றிக் கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3562)
ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்’ என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘(இவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!’ என்று கூறினார்.
அதற்கு அவர் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை’ என்று பதிலளித்தார்.
அவர், ‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்’ என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.
பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் வந்த போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 59:9) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (4889)
நபி (ஸல்) அவர்கள் தமது கையில் காசு இல்லாத போது கூட, என்னிடம் இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளாமல், தமது தோழர்களிடம் அனுப்பி உதவியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். கொடுத்து உதவும் நிலையில் இல்லாத மக்களுக்கும் கொடை உணர்வைத் தூண்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தேவையுடைய நபர்களுக்குத் தம்மால் முடிந்தளவு உதவி செய்யும் பண்பு முஹம்மது நபிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்தது. இந்தப் பண்புகளை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வள்ளல் நபியின் வழிப்படி நடப்பவர்கள் என்பதைப் பேச்சுடன் நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் வெளிப்படுத்துவோமாக! அதற்கேற்ப அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோமாக!

ஜிஹாத் யார் மீது கடமை அமைப்புகள் மீதா? அரசாங்கத்தின் மீதா?

இலங்கையில் நடைபெற்றக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலையொட்டி இஸ்லாமிய மார்க்கம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றது.
பொதுவாகவே இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது. போர் குறித்த திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி, முஸ்லிமல்லாத மக்களைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிடுகிறது என முஸ்லிமல்லாத மக்கள் கருதுகிறார்கள்.
அவர்கள் எண்ணுவதற்கேற்ப தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் போர் குறித்து அருளப்பட்ட வசனங்களைத் தங்கள் செயலுக்கு ஆதாரமாகக் காட்டி, இந்த விமர்சனத்துக்கு வலுவூட்டுகிறார்கள். போர் குறித்த சரியான விளக்கம் இவர்களிடம் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், இஸ்லாமிய அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.
கொலை செய்தவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுதல், திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இதுபோல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மீதும், குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்குக் குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.
“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாள ரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் 4:75
இந்த வசனத்தில் “பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது?’’ என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் ஏராளமான துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.
ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு திருக்குர்ஆன் கட்டளையிடவில்லை.
மாறாக, மக்காவில் பாதிக்கப்படும் மக்களுக்காகப் போர் செய்யுமாறு மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்குத் தான் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது தனி நபர்கள், குழுக்கள் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் மக்காவில் உள்ள அந்த மக்களுக்குத் தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களைப் போரிடுமாறு கட்டளையிடாமல் மதீனாவிலுள்ள இஸ்லாமிய அரசாங்கத்திற்குப் போர் செய்யுமாறு கட்டளையிடுகிறான். எனவே அரசாங்கத்தின் மீதுதான் போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 8:60
இந்த வசனத்தில் போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படித் திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
இஸ்லாமிய அரசுக்கும் எப்போது போர் கடமை?
இஸ்லாமிய அரசாகவே இருந்தாலும், போர் செய்ய வேண்டிய நியாயமான எல்லா காரணங்களும் இருந்தாலும் கூட, போதிய படைபலம் இல்லாவிட்டால் இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது.
போர் செய்யும் அவசியம் ஏற்பட்டு, எதிரிகளின் படைபலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்ய வேண்டும் என முதலில் சட்டம் இருந்தது. இதைப் பின்வரும் வசனத்தில் காணலாம்.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்குப் போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.
அல்குர்ஆன் 8:65
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு, எதிரியின் படைபலத்தில் பாதி அளவுக்குப் படைபலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள்.
அல்குர்ஆன் 8:66
அதாவது, எதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
அப்படியானால் ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
தனி நபர்களோ, அல்லது சிறு சிறு குழுக்களோ போர் குறித்த வசனங்களைக் காட்டி, ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது எப்படி திருக்குர்ஆன் கூறும் போர் நெறியாக இருக்க முடியும்?
ஓர் அரசாங்கம் இல்லாமல் அவரவர்கள் இதுபோன்று செய்வதால் மிகப் பெரிய இழப்புகள் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான், அதுபோன்ற கட்டங்களில் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்களின் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையின் போது அவர்கள் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. கொலை முயற்சி, ஊர் நீக்கம், தாக்குதல்கள் என அத்தனை துன்பங்களுக்கும் நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய தோழர்களும் உள்ளாக்கப்பட்டார்கள். ஆனாலும் அந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத்தான் கடைப்பிடித்தார்கள். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து, போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்டபோது தான் போர் செய்தனர்.
எனவே இஸ்லாமிய அரசாங்கத்திற்குத் தான் போர் கடமை என்பதையும், தனி நபர்களோ அல்லது குழுக்களோ இதுபோன்று அப்பாவி மக்களைத் தாக்குவது ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்ற போர் அல்ல என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
சிலர் இதனை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற அடிப்படையில் ஆளாளுக்கு ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதால் அது முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தின் மீது வெறுப்பை விதைக்கின்றது.
அரசாங்கம் இல்லாமல் தனி நபர்கள் போர் செய்வதற்கு அனுமதியில்லை என்பதை, திருக்குர்ஆன் கூறும் பின்வரும் வரலாற்றுச் செய்தியிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
மூஸாவிற்குப் பின்வந்த இஸ்ராயீல் சந்ததிகளின் தலைவர்களை நீர் அறியவில்லையா? அவர்கள் தமது நபியிடம் “எங்களுக்கு ஒரு மன்னரை நியமிப்பீராக! நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று கூறிய போது, “உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் இருந்து விடுவீர்களா?” என்று அவர் கேட்டார். அதற்கு, “நாங்கள் எங்கள் வீடுகளையும் பிள்ளைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்கள் மீது போர் விதிக்கப்பட்ட போது அவர்களில் குறைவானவர்கள் தவிர மற்றவர்கள் பின்வாங்கிவிட்டனர். அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
“அல்லாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை மன்னராக நியமித்துள்ளான்” என்று அவர்களுடைய நபி அவர்களிடம் கூறினார். அதற்கவர்கள் “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? நாங்களே அவரை விட ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். மேலும் அவருக்கு செல்வ வசதியும் வழங்கப்படவில்லை” என்று கூறினர். “உங்களை விட அவரையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் வாரி வழங்கியுள்ளான். அல்லாஹ், தனது (பூமியில்) அதிகாரத்தை, தான் நாடியோருக்கு வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 2:246, 247
இந்த வசனங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தி கூறப்படுகின்றது.
அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளால் பல்வேறு துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு, ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை. எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும் மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் சட்டமாகும்.
ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும் போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான். போரிடுமாறு அந்த நபிக்கே கட்டளை பிறப்பித்திருப்பான்.
ஆட்சியதிகாரம் இல்லாமல் போரிடுவதற்கு நபிக்கே கடமையில்லை எனும் போது, ஜிஹாத் என்ற பெயரில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் வன்முறையில் இறங்குவது எப்படி இஸ்லாம் கூறும் போராக இருக்க முடியும்?
இவர்களின் செயல்கள் சரியானவை அல்ல என்பதை இந்த வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு “அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம்’’ என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்லர். இவர்கள் பயங்கரவாதிகளே!

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒளியில் அமல்களின் சிறப்புகள்
எம்.ஷம்சுல்லுஹா

அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் 2000 ஆண்டுவாக்கில் அல்முபீன் என்ற மாத இதழில் தொடர் வெளியானது. இந்தத் தொடர் அப்போது எழுதப்பட்டதற்கு அடிப்படையான சில காரணங்கள் இருந்தன.
1. தப்லீக் ஜமாஅத்திலிருந்து அமல்களின் சிறப்புகள் என்ற நூல் பல பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் பலவீனமான ஹதீஸ்களின் கிடங்காக அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கின்ற, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு உலை வைக்கின்ற பெரியார்களின் கதைகள், கற்பனைகள் அந்த நூல்களில் நிரம்பி வழிந்தன.
அதனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அமல்களின் சிறப்புகளைக் கூறுகின்ற அமல்களின் சிறப்புகள் என்ற நூலாக்கம் காலத்தின் கட்டாயம் என்று உணரப்பட்டது.
2. தவ்ஹீது சகோதரர்கள் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீது புரட்சியின் காரணமாகத் தவ்ஹீது கொள்கையில் பெருவாரியாக ஈர்க்கப்பட்டனர். நடிக, நட்சத்திர சங்கங்களின் அங்கங்களாக இருந்த அவர்கள் தவ்ஹீத் கொள்கையைத் தாங்கிப் பிடிக்கின்ற, தூக்கி நிறுத்துகின்ற கொள்கைத் தங்கங்களாக மாறினர் என்றால் அது மிகப் பெரும் ஆச்சரியமாகும். உண்மையில் அது அல்லாஹ்வின் அற்புதமாகும். ஆனால் அவர்கள் உபரியான அமல்கள் விஷயத்தில் சற்றுப் பின்தங்கியிருந்தனர். அவர்களை அமல்களில் ஊக்கப்படுத்த இது ஓர் உந்து சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கிலும் இந்த தலைப்பில் தொடர் எழுதப்பட்டது.
இது போன்ற காரணங்களால் இந்தத் தொடர் எழுதப்பட்டது. அமல்கள் நாட்டம் கொண்ட மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்தது. இந்தக் கட்டத்தில் அல்முபீன் இதழ் 2002ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து விட்டது.
அதன் பின் ஏகத்துவம் மாத இதழ் வெளிவந்தது. அதில் இந்தத் தொடர் இடம்பெறவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் திருக்குர்ஆன் மாநாட்டிற்குப் பிறகு நமது ஜமாஅத், ‘அடுத்த இலக்கு அமல்கள்’ என்ற திசையை நோக்கி முழுமூச்சாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. அமல்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவாக இந்தத் தொடர் ஏகத்துவத்தில் இடம் பெறுவது சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் “ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒளியில் அமல்களின் சிறப்புகள்” என்ற தொடர் ஏகத்துவத்தில் இம்மாதம் முதல் வெளிவரவுள்ளது.
இந்தத் தலைப்பைக் கண்டவுடன் தப்லீக் இயக்கத்தின் சார்பில் கதைகளையும் கற்பனைகளையும் தாங்கி ‘அமல்களின் சிறப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்த நூலைப் பற்றிய விமர்சனம் என்ற எண்ணம் தான் நமக்கு உருவாகும்.
அமல்களின் சிறப்புகள் என்ற அந்த நூலில் உள்ள கற்பனைகளை – கதைகளை, ஏகத்துவக் கொள்கையை இடித்துத் தரைமட்டமாக்கும் சங்கதிகளை அக்கு வேறாக ஆணிவேறாக அலசி விமர்சனம் செய்த நூல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.
இங்கே நாம் அமல்களின் சிறப்புகள் என்று தலைப்பிட்டதன் நோக்கம், உண்மையில் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த அமல்களுக்கு என்னென்ன சிறப்பைக் கூறி ஆர்வமூட்டியுள்ளார்களோ அந்தச் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, ஆர்வமூட்டி, அந்த அமல்களைச் செய்ய வைப்பதும் அமல்களை விடுவதால் ஏற்படும் அபாயங்களையும் ஆபத்துக்களையும் எச்சரிக்கை செய்வதும் தான்.
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது கருத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தலைமுறை இன்று வளர்ந்து வருகிறது. தமிழத்தில் எல்லாப் பகுதிகளிலும் இந்த ஏகத்துவம் நூல் வடிவத்தில், ஆடியோ வீடியோ வடிவத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாம் நமது கொள்கையில் உறுதியாகவும் இருக்கின்றோம். ஆனால் அமல்கள் விஷயத்தில் சற்று பலவீனமாக இருக்கிறோம்.
கடமையான தொழுகைகளைத் தவிர்த்து சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், இரவுத் தொழுகை போன்ற அமல்கள் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இப்படிச் சொல்லி விடமுடியாது என்றாலும் இந்தக் குறைபாடு இருப்பதை மறுப்பதற்கில்லை.
சிலர் ஜமாஅத் தொழுகைகளைப் பேணுவதில்லை. சிலர் வேலை காரணமாக சுபுஹ் தொழாமல் உறங்கி விட்டு, எப்போது விழிக்கின்றோமோ அப்போது இரண்டு ரக்அத் சுபுஹ் தொழுதால் போதும் என்று நினைக்கின்றனர். இது மிகப் பெரிய தவறு.
கூட்டம் நடத்துகிறோம்; கொள்கை விளக்கம் கூறுகிறோம்; ஆனால் அமல்களில் நாட்டம் காட்டாமல் இருக்கிறோம். நபிவழியில் நம் தொழுகை என்பதே நம் கொள்கை என்றுள்ள நம்மிடத்தில் நெஞ்சின் மீது கை கட்டுதல், விரலசைத்தல் இவ்விரண்டையும் தாண்டி அடுத்தக் கட்ட அமலுக்கு நாம் சென்றிருக்கிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஊது பத்தி, சாம்பிராணி சகிதமாக, பக்திப் பரவசத்துடன் கத்தம் பாத்திஹா, மவ்லிது ஓதிக் கொண்டிருந்த நம்முடைய குடும்பத்தில் அன்பாகவோ அல்லது நம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியோ இந்த ஷிர்க், பித்அத்துகளை நிறுத்தியிருக்கிறோம். ஏன்?
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதால் தானே!
நம்மை நரகத்தை விட்டுக் காப்பாற்றியது போல் நம் குடும்பத்தையும் நரகத்தை விட்டுக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கம் தானே! இதே நோக்கத்தின் அடிப்படையில் நாமும் தொழுது நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் தொழச் செய்ய வேண்டாமா?
(நபியே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக!
அல்குர்ஆன் 20:132
என்ற வசனத்தின் அடிப்படையில் நம்முடைய மனைவி மக்களை எந்த அளவுக்குத் தொழச் சொல்லி ஏவியிருக்கிறோம்? அதில் என்ன மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் தொழுகையில் அலட்சியம் காட்டினால் நம்முடைய மனைவி மக்கள் அனைவரும் அலட்சியம் காட்டுவர். அதற்கு நாமே காரணமாக அமைந்து விடக் கூடாது.
நம்முடைய மகன் மவ்லிது நேர்ச்சையை வாங்கிச் சாப்பிட்டு விட்டால் அந்தத் தீமையைக் கண்டவுடன் சீறிப்பாய்ந்து கண்டிக்கிறோம். ஆனால் அதே மகன் தொழுகையில் அலட்சியமாக இருக்கும் போது அதைக் கண்டிப்பது கிடையாது, கண்டு கொள்வதும் கிடையாது.
எனவே மெற்கண்ட வசனத்தின் அடிப்படையில் நம்முடைய குடும்பத்தாரை, குழந்தைகளைத் தொழுகையைக் கொண்டு ஏவுவதற்கு நாம் தவறிவிடக்கூடாது.
எத்தனையோ அடி உதைகள், அவமானங்கள், ஆபாச வார்த்தைகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டு தொழுகையில் நெஞ்சின் மீது கை கட்டுவதில், ஆட்காட்டி விரலை அசைப்பதில் விடாது பிடிப்பு கொண்டிருக்கிறோமே! அந்தப் பிடிப்பு மேற்கண்ட வசனத்தைச் செயல் படுத்துவதில் நமக்கு ஏற்படுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? குர்ஆன், ஹதீஸின் கட்டளைகளில் நாம் வேறுபாடு காட்டாது சமச்சீராகப் பின்பற்றும் நிலையைப் பேண வேண்டும். இது போன்ற அமல்களில் நாமும் ஆர்வம் கொண்டு நம்முடைய குடும்பத்தையும் ஆர்வமூட்ட வேண்டும்.
நம்பிக்கையும் நற்செயல்களும்
அல்லாஹ் குர்ஆனில் ஈமானைப் பற்றிக் குறிப்பிட்ட உடனேயே அதைத் தொடர்ந்து நற்செயல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றான்.
‘‘நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன’’ என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
அல்குர்ஆன் 2:25
என்ற வசனத்தை மாதிரிக்காகக் காட்டலாம். இது போன்று குர்ஆனில் ஈமானைத் தொடர்ந்து நற்செயல்கள் இடம் பிடிக்கும் ஏராளமான வசனங்கள் இடம் பெறுகின்றன. ‘ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாத்’ (இறைநம்பிக்கை கொண்டு அமல்கள் செய்து) என்று ஈமானைக் குறிப்பிடுகின்ற இடங்களில் எல்லாம் அமல்களையும் சேர்த்தே கூறுகின்றான். இதிலிருந்து விதிவிலக்கு பெறுவோர் யாரையும் நாம் பார்க்க முடியாது.
அமல் செய்யாமல் சுவனம் சென்றவர்கள் என்று ஒரு பட்டியலைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் ஈமான் கொண்ட மாத்திரத்தில் கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இதற்கு உதாரணமாக, மூஸா நபி (ஸல்) அவர்களை எதிர்த்து நின்று பின்னர் ஈமான் கொண்ட மந்திரவாதிகளைக் குறிப்பிடலாம்.
“மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?’’ என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!’’ என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்’’ என்று நாம் கூறினோம்.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்’’ (என்றும் கூறினோம்.) உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’’ என்றனர்.
“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’’ என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 20:65-71
இது குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டும் உதாரணமாகும். ஹதீஸ்களிலிருந்து ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:
நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ (ரலி)
நூல்: புகாரி 2808
இப்படி ஈமான் கொண்ட மாத்திரத்தில் கொல்லப்படுவோர் தான் எந்த வித அமல்களும் செய்யாமல் சுவனம் சென்று விடுகின்றார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னது போன்று, குறைவான அமல் நிறைவான கூலி பெற்றுவிடுகின்றார்கள். மற்றவர்கள் உயிர் உள்ளவரை அமல் செய்கின்றார்கள். இறைத்தூதர்களுக்கு சுவனம் உறுதி என்றாலும் அவர்கள் அமல் செய்யாமல் இருந்ததில்லை.
நபி (ஸல்) அவர்கள் முன்பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் மரணமடைகின்ற வரை அமல்களை விடவில்லை. தனக்குத் தான் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதே! தனக்குத் தான் சுவனம் நிச்சயமாகி விட்டதே! என்று எண்ணி அமல்கள் செய்வதை விட்டும் அவர்கள் அலட்சியமாக இருக்கவில்லை.
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்: புகாரி 1130, 4836
நபி (ஸல்) அவர்கள் மட்டும் இவ்வாறு அமல் செய்யவில்லை. இதற்கு முன் வந்த நபிமார்களும் அமல்கள் செய்வதில் பின்தங்காமல் இருந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நூல்: புகாரி 3420
நபி தாவூத் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சியாளர், அதிபதி. அவர்களும் அமல்கள் செய்வதில் பின்தங்கவில்லை. ஒட்டுமொத்த நபிமார்களும் அப்படித் தான் இருந்துள்ளார்கள்.
இதைப் பின்வரும் வசனம் தெளிவாக விளக்குகின்றது.
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
அல்குர்ஆன் 21:90
நாமெல்லாம் தவ்ஹீதுவாதிகள், நமக்கு சுவனம் நிச்சயம் என்ற நம்பிக்கை காரணமாக சிலர் அமல்கள் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கின்றனர்.
இதற்கு ஒரு சில ஹதீஸ்களும் அவர்களுக்கு ஆதாரமாகத் தெரிகின்றன.
‘என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது, என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’ எனக் கேட்டேன். ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்’ என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1237, 5827
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா!” (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்” என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!” என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.
நான், “உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்” என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள் தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 52
மேற்கண்ட புகாரி ஹதீஸ்களும் முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் இந்த ஹதீஸும் வெறுமனே லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லி விட்டால் சுவனம் சென்று விடலாம் என்று தான் சொல்வது போல் இருக்கின்றது. நபி (ஸல்)அவர்களின் ‘மக்கள் அலட்சியமாக இருந்து விடுவார்கள்’ என்ற கருத்தும் அதைத் தான் தெரிவிக்கின்றது.
ஆனால் புகாரியில் வரும் ஒரு ஹதீஸில் ‘உளப்பூர்வமாக’ என்ற வார்த்தையும், முஸ்லிம் ஹதீஸில் ‘உள்ளத்தால் உறுதிக் கொண்ட நிலையில்’ என்ற வார்த்தையும் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று வெறுமனே சொன்னால் போதாது என்பதை உணர்த்துகின்றது.
ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என்று முஆத் (ரலி) கூறினார். ‘முஆதே!’ என்று என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். ‘இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என மீண்டும் முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது.
பிறகு ‘தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!’ என்று முஆத் கேட்டதற்கு ‘அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 128
‘உனக்குப் பின்னால் ஒரு மாடு முட்ட வருகின்றது’ என்று யாராவது நம்மிடம் கூறினால், உடனேயே அந்த வார்த்தை உள்ளத்தில் நம்பிக்கையையும் ஓர் உந்துதலையும் ஏற்படுத்துகிறது. அதனால் ஓடத் துவங்கி விடுகிறோம். மாடு வருகின்றதா என்று நின்று நிதானித்து ஓடுவது கிடையாது. இது போல் மறுமை என்ற நம்பிக்கை நம் உள்ளங்களில் உடனடியாக மாறுதல்களை ஏற்படுத்தவேண்டும். அவை வணக்கங்களாகப் பரிணமிக்க வேண்டும்.
ஆம்! உளப்பூர்வமாக ஒருவர் நம்பிவிட்டால் அது செயல்பாட்டளவில் வெளி வந்து விடும். உள்ளத்தால் நம்பியவர்கள் அமல்களில் அலட்சியம் காட்டமாட்டார்கள். இந்தக் கருத்தைத் தான் இந்த ஹதீஸ்களில் கூர்ந்து கவனிப்போர் விளங்க முடியும். இந்த நுணுக்கத்தை எல்லா மக்களும் விளங்குவதில்லை. அதனால் அமல்களில் அலட்சியம் ஏற்பட்டு விடுகின்றது.
உமர் (ரலி) இந்த அடிப்படையில் தான் மக்கள் அமல்கள் செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிடுகின்றார்கள். மொத்தத்தில் ஈமானுக்குப் பிறகு, அதாவது இறைநம்பிக்கை கொண்டவுடன் நல்லமல்கள் ஒவ்வொரு முஃமினுக்கும் கடமையாகும் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
(அமல்கள் தொடரும்)

நபி வழியில் பிறைச் சட்டங்கள்
அபு அம்மார்

மாதங்களின் எண்ணிக்கை
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ )التوبة: 36(
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.
(அல்குர்ஆன் 9:36)
இவ்வசனத்தில் கூறப்படும் பன்னிரண்டு மாதங்கள் என்பது சந்திர ஓட்டத்தின் அடிப்படையிலான மாதங்களாகும். சந்திரனின் முதல் பிறை தோன்றியதிலிருந்து 29 அல்லது 30 நாட்கள் ஒரு மாதம் ஆகும்.
பிறைக் கணக்கின் படி செய்யப்படும் மார்க்கச் சட்டங்கள்
பல்வேறு மார்க்கச் சட்டங்கள் பிறைக் கணக்கின் படியே செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவற்றைக் காண்போம்.
ரமளான் மாதம் நோன்பு நோற்றல்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ )البقرة: 185(
ரமளான் மாதத்தில்தான் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நேர்வழியையும் (உண்மை பொய்யை) பிரித்தறிவிப்பதையும் தெளிவுபடுத்தும் சான்றுகளைக் கொண்ட இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
ஹஜ் செய்தல்
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ )البقرة: 197(
ஹஜ்(ஜின் காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அவற்றில் ஹஜ்ஜை கடமையாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது இல்லறத்தில் ஈடுபடுவதும், பாவம் செய்வதும், தர்க்கம் புரிவதும் கூடாது. (அல்குர்ஆன் 2:197)
ஈலா சட்டம்
لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ [البقرة: 226]
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லை என சத்தியம் செய்தவர்களுக்கு நான்கு மாதம் அவகாசம் உள்ளது. (அல்குர்ஆன் 2:226)
பரிகாரத்திற்கான நோன்பு
فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ [النساء: 92]
தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 4:92)
கணவன் இறந்து விட்டால் இத்தா கணக்கீடு
{وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا } [البقرة: 234]
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)
மாதவிடாய் அற்றுப் போனவர்கள், மாதவிடாய் ஏற்படாத பெண்களின் இத்தா கணக்கீடு
{ وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ} [الطلاق: 4]
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய இத்தா மூன்று மாதங்கள் ஆகும். (அல்குர்ஆன் 65:4)
போர் செய்யக் கூடாத நான்கு புனித மாதங்கள்
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ )التوبة: 36(
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அல்குர்ஆன் 9:36)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள மார்க்கச் சட்டங்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தின் அடிப்படையில் அமைந்த மாதக் கணக்கீட்டின் படி பேண வேண்டியவைகளாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகள் இதன் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது எனும் போது இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொள்ளலாம்.
ருஃயத்துல் ஹிலால்-கண்களால் பிறை பார்த்தல்
ருஃயத்
(رُؤْيَةٌ)
என்ற அரபி வார்த்தையின் பொருள், கண்ணால் காணுதல் என்பதாகும்.
இரண்டு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) வரும் நேரத்தில் இதற்கு அறிதல் என்ற பொருளும் வரும்.
) رأي( الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين – (لسان العرب-ج 14/ص 291)
ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) தான் வரும். ‘அறிதல்’ என்ற பொருளில் வரும் போது அதற்கு இரண்டு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) வரும்.
நூல்: லிஸானுல் அரப், பாகம் 14, பக்கம் 291
‘‘பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.
பிறை பார்த்தல் என்பதில் ‘‘பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட் தான் வந்துள்ளது. எனவே இதற்குக் கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.
புதிய மாதம் எப்போது பிறக்கிறது?
இருபத்தி ஒன்பதாம் நாள் சூரியன் மறைந்த பிறகு, பிறையைக் கண்களால் காண்பதன் மூலமோ அல்லது பிறையைக் கண்களால் கண்ட உறுதியான சாட்சியின் அடிப்படையிலோ புதிய மாதம் பிறந்தது உறுதிப்படுத்தப்படும். பிறை காணப்படவில்லையென்றால் முப்பது நாட்களாக முழுமைப்படுத்தப்பட்டு அடுத்த நாள், மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படும்.
தலைப் பிறையை கண்களால் பார்ப்பதன் மூலம் மாதத்தின் முதல் நாளை முடிவு செய்யாமல் பிறைக் கணக்கீட்டின் அடிப்படையில் முடிவு செய்வது முற்றிலும் நபிவழிக்கு எதிரான வழிகேடாகும்.
பிறையைக் கண்களால் காண்பதன் மூலமே மாதத்தின் முதல் நாள் பிறந்துவிட்டது என்பது உறுதி செய்யப்படும். இதற்கு திருமறை வசனங்களும், ஏராளமான நபிமொழிகளும் சான்றாக உள்ளன.
يَسْأَلُونَكَ عَنِ الأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالحَجِّ {البقرة:189}
பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)
இவ்வசனம் பிறைகள் தான் காலம் காட்டி என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பமும், முந்தைய மாதத்தின் முடிவும் அதன் தலைப்பிறையைக் கண்களால் காண்பது கொண்டே முடிவு செய்யப்படும். ஒரு வருடத்திற்கான பன்னிரண்டு மாதங்களும் தலைப்பிறையைக் கொண்டு முடிவு செய்யப்படுவதால் பிறைகள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.
மாதத்தின் ஆரம்பம் தலைப்பிறையைக் கண்களால் காண்பதன் மூலம்தான் உறுதியாகும் என்பதை அதிகமான நபிமொழிகள் மிகத் தீர்க்கமாக எடுத்துரைக்கின்றன.
பிறையின் அடிப்படையில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை பிறையைக் கண்களால் பார்ப்பதன் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடம் உறுதி மொழி வாங்கியுள்ளார்கள்.
أَنَّ أَمِيرَ مَكَّةَ خَطَبَ ثُمَّ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَنْسُكَ لِلرُّؤْيَةِ فَإِنْ لَمْ نَرَهُ وَشَهِدَ شَاهِدَا عَدْلٍ نَسَكْنَا بِشَهَادَتِهِمَا رواه أبو داود 1991
நாங்கள் (பிறையை) கண்களால் பார்த்து வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும், நாங்கள் அதை கண்ணால் பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில் நாங்கள் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி) நூல்: அபூதாவூத் (1991)
இதையே கட்டளை வாக்கியமாகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ، أَوْ قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ (بخاري 1909)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1909)
பிறை பார்க்காமல் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிப்பது கூடாது எனவும் எச்சரித்துள்ளார்கள்.
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له – البخاري 1906
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
தலைப்பிறையைக் கண்களால் பார்ப்பதுதான் நோன்பு நோற்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் அடிப்படையான நிபந்தனை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهِلَالَ فَقَالَ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், “நீங்கள் அதைப் பார்த்து நோன்பு வையுங்கள். அதைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள்
நூல்: முஸ்லிம் (1975)
பிறை பார்க்காமல் அல்லது முப்பதாக முழுமைப்படுத்தாமல் முந்தைய மாதத்தை முற்படுத்தி விடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்கள்.
عن ربعي بن حراش عن بعض أصحاب رسول الله صلى الله عليه و سلم قال قال رسول الله صلى الله عليه و سلم: لا تقدموا الشهر حتى تكملوا العدة أو تروا الهلال وصوموا ولا تفطروا حتى تكملوا العدة أو تروا الهلال (رواه أحمد)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணிக்கையை முழுமைப்படுத்தாமல் அல்லது பிறையை கண்களால் பார்க்காமல் மாதத்தை முற்படுத்திவிடாதீர்கள். நீங்கள் நோன்பு பிடியுங்கள். எண்ணிக்கையை முழுமைப்படுத்தாமல் அல்லது பிறையை கண்ணால் பார்க்காமல் நோன்பை முடித்து (பெருநாள் கொண்டாடி) விடாதீர்கள்.
அறிவிப்பவர்: நபித்தோழர் ஒருவரிடமிருந்து ரிப்யீ இப்னு ஹிராஸ்
நூல்: அஹ்மத் (18845)
பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்வதன் முக்கியத்துவத்தைப் பின்வரும் நபி மொழியிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
முதல் பிறையைக் காணும் நாளில் அது பெரிதாக இருந்தாலோ அல்லது நீண்ட நேரம் வானில் நின்றாலோ சிலர் அதனை இரண்டாம் நாள் பிறை, மூன்றாம் நாள் பிறை என்று கூறுவார்கள். முதல் நாளில் பிறை பெரிதாகத் தெரிவதாலோ அல்லது நீண்ட நேரம் வானில் நிற்பதாலோ அது இரண்டாம் நாள் அல்லது மூன்றாம் நாள் பிறையாக ஆகிவிடாது. நான் கண்களால் பிறையைக் காணவேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் அதன் அளவை அல்லது வானில் நிற்கும் காலத்தை நீட்டிக் காட்டுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்களால் காண்பதற்காகவே அல்லாஹ் பிறையை நீட்டுகிறான். அது நீங்கள் அதனை எந்த இரவில் கண்டீர்களோ அந்த இரவிற்குரியதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1984)
أَبَا الْبَخْتَرِيِّ الطَّائِيَّ يَقُولُ: أَهْلَلْنَا هِلَالَ رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا إِلَى ابْنِ عَبَّاسٍ نَسْأَلُهُ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا الْعِدَّةَ ثَلَاثِينَ ( مستخرج أبي عوانة 2/ 177)
அபுல் பஹ்தரி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் தாத்து இர்க் என்ற இடத்தில் ரமளான் முதல் பிறையைக் கண்டோம். அதைப் பற்றி கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது அவர்கள் ‘‘நீங்கள் பார்ப்பதற்காக அதனை அல்லாஹ் நீட்டியுள்ளான். உங்களுக்கு மேகமூட்டத்தால் மறைக்கப்பட்டால் எண்ணிக்கையை முப்பாதாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.
நூல்: முஸ்னத் அபீ அவானா (2736)
பிறையைக் கருவிகளின் உதவியால் பார்க்கலாமா?
நாம் மேற்குறிப்பிட்டுள்ள நபிமொழிகள் அனைத்துமே பிறையைப் புறக்கண்களால் மட்டும் தான் பார்த்து முடிவு செய்ய வேண்டுமென மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1909)
‘‘உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறையை மேகத்திற்கு கீழிருந்து புறக்கண்களால் பார்த்தால் மட்டும்தான் மேகமூட்டம் பிறையைக் காணமுடியாத வகையில் தடையாக இருக்கும். கருவிகளால் காணும் போது பிறையைக் காண்பதற்கு மேகமூட்டம் தடையாக இருக்காது. எனவே ‘‘உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்ற வாசகமே பிறையைக் கருவிகளால் காண்பதன் மூலம் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிப்பது கூடாது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
அதே நேரத்தில் 29ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகு பிறை இருக்கும் இடத்தை கருவியின் உதவியால் கண்ட பிறகு அதனைப் புறக்கண்களால் பார்த்தால் அது கண்ணால் கண்டதாகவே உறுதி செய்யப்படும். இங்கு புறக்கண்களால் காணப்பட்டுள்ளது என்பதுதான் அடிப்படையாகும்.
பிறைத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளின் எண்ணிக்கை
அதிகமான மக்கள் பிறை பார்த்ததாக சாட்சி கூறினால் கடுகளவு கூட சந்தேகமில்லாமல் நோன்பு அல்லது பெருநாள் என்பது உறுதியாகிவிடும்.
அதே நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதை உறுதி செய்வதற்குக் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
முஸ்லிமான நீதமான இரண்டு முஸ்லிம்கள் பிறை பார்த்தாக சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
أَمِيرَ مَكَّةَ خَطَبَ ثُمَّ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَنْسُكَ لِلرُّؤْيَةِ فَإِنْ لَمْ نَرَهُ وَشَهِدَ شَاهِدَا عَدْلٍ نَسَكْنَا بِشَهَادَتِهِمَا رواه أبو داود 1991
நாங்கள் (பிறையை) கண்களால் பார்த்து வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும். நாங்கள் அதை கண்ணால் பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில் நாங்கள் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி)
நூல்: அபூதாவூத் (1991)
عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், காலையில் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத் (1992)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களில் முதலாவது செய்தி நபியின் உத்தரவாகவும், இரண்டாவது செய்தி நபியின் நடைமுறையையும் காட்டுகிறது. இரண்டுமே நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிப்பதற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் என்பதைக் குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சாட்சியின் அடிப்படையிலும் நோன்பு நோற்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.
عن ابنِ عمر، قال: تراءى الناسُ الهِلالَ، فأخبرتُ رسولَ الله -صلَّى الله عليه وسلم- أني رأيتُه فَصَامَ وأمَرَ النَّاسَ بِصِيَامِهِ (رواه أبو داود)
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்கள் பிறையைக் காண்பதற்காக ஒன்று கூடினார்கள். நான் பிறையைக் கண்டதாக நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினேன். நபி (ஸல்) தாமும் நோன்பு நோற்று மக்களையும் ரமளானில் நோன்பு நோற்குமாறு உத்தரவிட்டார்கள்.
நூல்: அபூதாவூத் (1995)
ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டால் அதனை உலகிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளலாமா?
உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பார்க்கப்பட்ட பிறை அடிப்படையில் தான் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டும். இதுவே நபிவழி அடிப்படையில் சரியானதாகும்.
உலகில் ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டால் போதும். உலகிலுள்ள அனைவரும் அதன் அடிப்படையில் நோன்பு நோற்கலாம் என ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இது பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தவறான கருத்தாகும்.
இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
அவரவர் மாதத்தை அடையும் போதே நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டும்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ )البقرة: 185(
ரமளான் மாதத்தில் தான் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நேர்வழியையும் (உண்மை பொய்யை) பிரித்தறிவிப்பதையும் தெளிவுபடுத்தும் சான்றுகளைக் கொண்ட இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இவ்வசனத்தில் “உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்” என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
உலகில் எங்கு பார்த்தாலும் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்றால் அல்லாஹ் இவ்வாறு கூற வேண்டிய அவசியமில்லை.
உலகில் ஒரு பகுதியினர் ரமளானை அடைந்திருக்கும் போது மற்றொரு பகுதியினர் அடையாமல் இருப்பார்கள். இதனால்தான் “உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்” என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
ரமளான் மாதத்தை அடைவதில் மக்களுக்கு மத்தியில் வித்தியாசம் ஏற்படும். அதிலும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய பிரகாரம் கண்களால் தலைப்பிறையைப் பார்த்து மாதத்தை தீர்மானிக்கும் போது நாள் வித்தியாசம் கண்டிப்பாக ஏற்படும்.
எனவே உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அது முழு உலகினையும் கட்டுப்படுத்தும் என்பது திருக்குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் எதிரான வாதமாகும்.
ஓர் ஊரில் பிறை பார்ப்பது மற்றோர் ஊருக்குப் பொருந்தாது
عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي (رواه مسلم 1819)
(இப்னு அப்பாஸ் அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது “நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?’’ என்று கேட்டார்கள். நான், “நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்‘’ என்று பதிலளித்தேன். அவர்கள், “நீயே அதைக் கண்டாயா?’’ என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்’’ என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்’’ என்று சொன்னார்கள். அதற்கு நான், “முஆவியா (ரலி) அவர்கள் (முதல் பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?’’ என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்’’ என்று பதிலளித்தார்கள்
நூல்: முஸ்லிம் (1983)
மேற்கண்ட செய்தியில் சிரியாவில் ஒரு நாள் முன்னதாகவே பிறை பார்க்கப்பட்ட தகவல் ரமளான் முடிவதற்குள்ளாகவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மதீனாவில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் நாங்கள் புதிய பிறை தோன்றும் வரையில் நோன்பு நோற்போம், அல்லது முப்பதாகப் பூர்த்தி செய்வோம். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
எனவே ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறைத் தகவல் தூரமான மற்றொரு பகுதியைக் கட்டுப்படுத்தாது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
தத்தமது பகுதியின் எல்லை என்ன?
முதல் பிறையைக் கண்களால் பார்த்துத்தான் மாதத்தின் முதல் நாளை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கான ஏராளமான மார்க்க ஆதாரங்களைக் கண்டோம்.
அது போன்று உலகத்தில் ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தாது என்பதற்குரிய சான்றுகளையும் கண்டோம்.
அப்படியென்றால் ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பார்க்கப்பட்ட பிறைகளின் அடிப்படையில்தான் மாதக் கணக்கீட்டை ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதற்கான எல்லை என்ன? என்ற கேள்வி ஏற்படும்.
இதற்கான விடையை பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ * رواه الترمذي
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (633)
மேற்கண்ட நபிமொழி நோன்பையும், நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் மக்கள் முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
மக்கள் முடிவு செய்தல் என்பது மக்களின் சார்பாக அவர்களின் பொறுப்பாளர்கள் முடிவு செய்வதைத்தான் குறிக்கும்.
மக்கள் முடிவிற்கு விடப்பட்ட அந்த விஷயம் எது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆனிலும், நபிமொழிகளிலும் எவை மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதற்கு எதிராக மக்கள் முடிவு செய்யலாம் என்ற கருத்தை மேற்கண்ட நபிமொழி தராது.
பிறை பார்த்து, அல்லது முப்பது நாட்களாக நிறைவு செய்துதான் புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என நபிமொழிகள் வலியுறுத்துகின்றன. எனவே இதற்கு எதிராக முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்குக் கிடையாது.
அதுபோன்று உலகில் ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தாது என்பதையும் குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகிறது. எனவே இதற்கு எதிராக முடிவு செய்யும் அதிகாரமும் மக்களுக்குக் கிடையாது.
அப்படியென்றால் மக்கள் முடிவு செய்தல் என்பது இவை அல்லாத விஷயங்களாகத்தான் இருக்க முடியும்.
பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்? என்பதும், அது போன்று பிறை பார்த்ததாக சாட்சி கூறுபவர் நீதமானவரா? ஏற்றுக் கொள்ளத் தகுந்தவரா? என்பதும், பிறைத்தகவல் பெருநாள் தொழுகையை மக்கள் ஒன்று கூடி நிறைவேற்றமுடியாத அளவிற்குக் கால தாமதமாக வருமென்றால் அனைவரும் ஒன்றுகூடி மறுநாள் பெருநாளை வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் தான் மக்களுக்கு உரியதாகும்.
உதாரணமாக, தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் தமிழகத்தில் எங்கு பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று ஒன்றுபட்டு உள்ளனர். இது குர்ஆன் சுன்னாவிற்கு எதிரானதல்ல.
எனவே எதனை தமது பகுதியாக எடுத்துக் கொள்ளலாம், எவ்வளவு தூரத்திலிருந்து பிறைத்தகவல் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்பதைக் குர்ஆன் சுன்னாவிற்கு எதிரில்லாத வகையில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
பிறைத்தகவல் கிடைத்தவுடன் நோன்பை விடவேண்டும்
عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிக (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், காலையில் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத் (1992)
மக்களெல்லாம் நோன்பு நோற்ற நிலையில் இருக்கும் போது இரண்டு கிராமவாசிகள் வந்து பிறை பார்த்ததாக சாட்சி சொன்னவுடன் நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விடுமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.
உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அத்தகவலை உலகிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு 28 நோன்புகள் மட்டுமே நோற்கும் நிலை ஏற்படும். ஒரு மாதம் என்பது 29 நாட்களாகும். 28 நாட்களில் முடிந்தால் அது நபிவழிக்கு எதிரானதாகும்.
உதாரணமாக, பிறை 29 முடிந்து மாலை நேரத்தில் ஜப்பானில் இரவு ஏழு மணிக்குப் பிறை பார்த்துவிடுகிறார்கள். அந்தத் தகவல் இலங்கைக்குக் கிடைக்கும் போது அவர்கள் 29ம் நோன்பு நோற்றவர்களாக மதியம் 3:30 மணியில் இருந்து கொண்டிருப்பார்கள். பிறைத்தகவல் கிடைத்தவுடன் நோன்பை விட வேண்டும் என்ற நபிவழிச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கை மக்கள் நோன்பை விட்டுவிட்டால் அவர்களுக்கு மாதம் 28 நாட்களில் முடிவடைந்து விடும். பிறைத்தகவல் கிடைத்தும் அவர்கள் நோன்பை விடாவிட்டால் நபிவழிக்கு மாறு செய்தவர்களாக ஆகிவிடுவார்கள்.
உலகத்தில் எங்கு பிறை பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற அடிப்படையினால் இதுபோன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே திருமறை வசனம் 2:185ல் அல்லாஹ் கூறியுள்ளபடி ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிப்பதே சரியானதாகும் என்பதை இதனை அடிப்படையிலும் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
கடமையான நோன்பிற்கு ஃபஜ்ருக்கு முன்பே முடிவு செய்ய வேண்டும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُبَيِّتْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ رواه النسائي (2291)
‘‘நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)
நூல்: நஸாயீ (2291)
உலகத்தில் ஓரிடத்தில் பிறை பார்க்கப்பட்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தாது என்பதுற்கு இந்த ஹதீஸும் ஓர் அடிப்படையாகும்.
கடமையான நோன்பிற்கு ஃபஜ்ருக்கு முன்பாகவே நோன்பு நோற்பதாக முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஃபஜ்ரு பாங்கு காலை 5 மணிக்கு என்றால் அதற்கு முன்பாகவே நோன்பு நோற்பதாக முடிவு செய்திருக்க வேண்டும். 5 மணிக்கு பாங்கு கூறிய பிறகு நோன்பு நோற்பதாக முடிவு செய்தால் அது நோன்பாகக் கருதப்படாது.
உதாரணமாக, நியூசிலாந்து நாட்டில் மாலை 6 மணிக்கு ரமளானின் முதல் பிறை பார்க்கப்படுகிறது. அப்போது லண்டனில் காலை 7 மணியாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் லண்டன்வாசிகள் நியூசிலாந்து பிறை அடிப்படையில் முதல் நோன்பை நோற்க இயலாது. ஏனெனில் அவர்கள் ஃபஜ்ருக்கு முன்பாகவே நோன்பு நோற்பதை முடிவு செய்யவில்லை. எனவே லண்டன்வாசிகளுக்கு ரமளானில் முதல் நோன்பு தவறிவிடும்.
நியூஸிலாந்து நாட்டில் 30ஆம் இரவில் பிறை பார்க்கப்பட்டு விட்டால் லண்டன்வாசிகள் 28ம் நோன்பு காலையில் இருப்பார்கள். அப்போதும் அவர்கள் 28ஆம் நோன்பை விட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் லண்டன்வாசிகளுக்கு ஒரு மாதம் என்பது 28 நாளில் முடிவடையும் நிலை ஏற்படும்.
உலகில் ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்ற அடிப்படையில் முடிவு செய்தால் இது போன்ற குழப்பங்கள் கண்டிப்பாக ஏற்படும்.
அல்லது பிறை கண்டவுடன் நோன்பை விட வேண்டும், சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கக் கூடாது என்ற மார்க்கக் கட்டளைகளை மீற வேண்டிய நிலை ஏற்படும். இதன் அடிப்படையிலும் சர்வதேசப் பிறை என்பது மார்க்க ஆதாரங்களுக்கு உட்பட்டதல்ல என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
பிறையைக் கண்களால் காணாமல், அறிவியல் அடிப்படையில் கணித்து நோன்பு, பெருநாள் போன்றவற்றைத் தீர்மானிக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றார்கள். அந்த வாதங்களையும் அதற்கான விளக்கங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.