ஏகத்துவம் – மே 2017

காற்றில் பரவும் தொற்று நோய்! காப்பவன் அல்லாஹ் ஒருவனே!

2015ஆம் ஆண்டு படையெடுத்த பன்றிக் காய்ச்சல் மீண்டும் படையெடுத்துள்ளது.  அந்தப் படையெடுப்பில் இதுவரை கடந்த இரண்டு மாதங்களில் 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் ஹபீஸ் என்ற 7 வயது சிறுவனும், நஸீரா என்ற 11 மாதக் குழந்தையும் பலியாகியுள்ளனர். இது  நெல்லை மாவட்டத்தில் பதட்டத்தையும், பயத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாவோரின் பட்டியலில் குழந்தைகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய அழுத்த நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் இந்தப் பட்டியலில் மற்றவர்களை விட பாதிப்பில் முந்தி விடுகின்றார்கள்.

பன்றிக் காய்ச்சல் நோய்த்தொற்று H-1N-1 என்ற வைரஸ் கிருமியால் பரவுகிறது. 2015ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கிய இந்த வைரஸ், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த நோய்க்கு மூன்று நிலைகள் உள்ளன. அவற்றுக்கான அறிகுறிகளும் வேறுபடும்.

முதல் நிலையில் மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு காணப்படும்.

இரண்டாம் நிலையில் கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி காணப்படும்.

மூன்றாம் நிலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை அறிகுறிகளுடன் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைச் சுற்றல், மயக்கம், மந்த நிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

தொண்டைப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியைப் பரிசோதித்தால் இந்த வைரஸ் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் சில வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். அவை வருமாறு:

 1. தினமும் மலம் கழித்த பின்பும், உணவு உண்ணும் முன்பும் சோப்பு போட்டு முறையாகக் கை கழுவ வேண்டும்.
 2. சளி-இருமல் இருப்பவர்கள் இருமும் போது கைகுட்டை கொண்டு வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
 3. வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது
 4. சளி-இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்துப் பராமரிக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்குப் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, குழந்தையும் பலவீனமடையும்.
 5. காய்ச்சல் வந்தால் சொந்த மருத்துவம் செய்யாமல் முறையான மருத்துவரை அணுக வேண்டும்.
 6. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனிருந்து பராமரிப்பவர்களும், மருத்துவம் செய்யும் பணியாளர்களும் பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
 7. பன்றிக் காய்ச்சல் வார்டுகளில் உள்ள கதவு நிலைகள், ஜன்னல் கண்ணாடிகள், கட்டில்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். காரணம் அதன் மூலமும் பிறருக்கு இந்நோய் பரவ வாய்ப்புள்ளது.
 8. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கின்ற பகுதிக்குத் தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற இந்த வழிமுறை களைப்  பார்க்கும் போது நமக்கு விழிகளெல்லாம் பிதுங்குகின்றன. விழிப் புருவங்கள் வியப்பில் உயர்கின்றன. மொத்தத்தில், இப்படியெல்லாம் வாழ முடியுமா? என்று  நம்முடையே வாழ்க்கையே கேள்விக் குறியாகி இருக்கின்றது.

காலராவைக் காலி பண்ணி விட்டோம்; அம்மை நோயை அறவே அண்ட விடாமல் அழித்து விட்டோம்; காச நோய்க் கிருமிகளைக் காணாமல் ஆக்கி விட்டோம்; போலியோவைப் போன இடம் தெரியாமல் ஆக்கி விட்டோம் என்று மனிதனுடைய அறிவியல் சவால் விடுத்து ஜம்பம் பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பன்றிக் காய்ச்சலால் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகமே அலறி அடித்து அரண்டு போயுள்ளது.

பன்றிக் காய்ச்சல் இந்திய நாட்டு உற்பத்தி இல்லை. ஆரம்பத்தில், பன்றி இனத்தில் பரவிக் கொண்டிருந்த இந்தத் தொற்று நோய் மெக்ஸிகோவில் 2009ல்  மனித இனத்தைத் தொற்றியது. அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பா என்று பல கண்டங்களுக்குத் தாவி ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியாவுக்குள் புகுந்து விட்டது.

காற்றுக்கு என்ன வேலி என்று கேட்பார்கள். ஆம்! காற்றுக்கு எப்படித் தடை போட முடியாதோ அது போல் இந்தத் தொற்று நோய்க்கும் தடை போட முடியவில்லை. காரணம் இது காற்றுடன் கலந்து தான் தொற்றுகின்றது. அதனால் இந்த நோயின் தாக்குதல் மிகக் கொடூரமாக உள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக 13,81,500 டாமி ஃப்ளூ மாத்திரைகள் உள்ளன. மேலும் 21,500 டாமி ப்ளூ சிரப் உள்ளது. 16,000 மருத்துவ பாதுகாப்புக் கவசங்கள் (மாஸ்க்), 11,73,000 மூன்று அடுக்கு முகக் கவசங்களும் கையிருப்பில் உள்ளன என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆனால் நோயின் தாக்கமோ மிகப் பயங்கரமாகவே உள்ளது

இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களையும், இவ்வகை நோயாளிக்கு சேவை செய்யக் கூடியவர்களையும், பராமரிக்கக் கூடியவர்களையும்,  இந்த நோய் தாக்குகின்றது. இவ்வகை நோயாளிகள் பராமரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் வீடுகளின் அறைகளில் கூட அந்நோயின் தாக்கம் நீடிக்கின்றது என்றால் அந்நோயின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் புரிந்துக் கொள்ளலாம்.

இந்த நோய்க்கு முதன் முதலில் செய்ய வேண்டியது இரத்தப் பரிசோதனை தான்.  அந்தப் பரிசோதனையும் சாதாரண பாட்டாளி மக்கள் தாக்குப்பிடிக்கும் விதத்தில் இல்லை. அதற்கு 3500 ரூபாய் செலவாகின்றது. அரசு மருத்துவமனையில் தான் இந்தப் பரிசோதனையைச் செய்ய முடியும்.  நோய் இருப்பது உறுதியாகி விட்டால் அதற்கு டாமி ஃப்ளு மாத்திரை கொடுக்கப்படுகின்றது. இது பன்றிக் காய்ச்சல் வந்த பிறகு கொடுக்கப்படுகின்ற மாத்திரையாகும்.

வருவதற்கு முன்னால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியின் விலையும் 900 ரூபாயாகும். ஒரு சில நோய்களுக்குத் தடுப்பூசி போட்டால் அது ஆயுட்காலத்துக்கும் போதுமானது. ஆனால் பன்றிக் காய்ச்சலுக்குப் போடுகின்ற தடுப்பூசியின் கால அளவு ஓராண்டு காலம் மட்டும்  தான். அதற்குப் பின்னர் மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வகையிலும் அதன் தீவிரம் பன்மடங்கில் அமைந்துள்ளது. பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு  அனுப்பினால் பிள்ளைகளுக்கு மத்தியில் பெரிய அளவில் பரவி விடும் என்ற எச்சரிக்கை அலட்சியப்படுத்தியக் கூடியதல்ல.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாட்டில் இத்தகைய நோய்  காற்றுத் தீ போல் பற்றிக் கொண்டால் அதன் விபரீதத்தை நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. பொதுவாக இந்திய மக்கள் தொகையில் 1700 பேர்களுக்கு ஒரு டாகடர் என்ற வீதத்தில் மருத்துவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற நோயின் தாக்குதல் ஏற்பட்டால் சுனாமியைத் தூக்கிச் சாப்பிடக் கூடிய பேரழிவைச் சந்திக்க நேரிடும். இது ஒரு புறமிருக்க ஏற்கனவே கொசுவின் மூலம் பரவுகின்ற தொற்று நோய்களிலிருந்து இந்தியா இன்னும் முழுமையாக விடுபடவில்லை. மலேரியா, சிக்கன் குன்யா, டெங்கு போன்ற நோய்கள் கொசுக்களால் பரவக் கூடியவை.

அவற்றில் பன்றிக் காய்ச்சல் இப்போது பலரைப் பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இது காற்றில் பரவுவதால் சுவாசக் காற்றில் பிரவேசம் செய்து விடுகின்றது.  காற்றில் பரவுவது கண்ணில் தெரிந்தால் கூட நம்மை தற்காத்துக் கொள்ளலாம். அதற்கும் வழியில்லை. என்னதான் மாஸ்க் எனும் முகக் கவசம்  அணிந்தாலும் கிருமியின் பிரவேசம் நமக்குத் தெரியாது.

எனவே காற்றில் பரவுகின்ற இந்தப் பன்றிக் காய்ச்சல், கொசுவின் மூலம் பரவுகின்ற டெங்கு, மலேரியா, சிக்கன் குன்யா போன்ற தொற்று நோய்களை விட்டும் நம்மை காக்கின்ற கவசத்தை தன் கைவசம் வைத்திருப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

இதிலிருந்தும், (கடல் பயணத்தின் சோதனையிலிருந்தும்) ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’

அல்குர்ஆன் 6:64

நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

அல்குர்ஆன் 26:80

என்று இப்ராஹீம் (அலை) துஆச் செய்தது போன்று  அந்த நாயனிடமே  நாம் உதவி தேடுவோமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலத்தைத் தேடி அன்றாடம் துஆச் செய்துள்ளார்கள். அந்த துஆக்களை நாம் தவறாமல் செய்வோமாக!

சுகத்தை வேண்டும் துஆக்கள்

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபிய(த்)த ஃபித் துன்யா வல்ஆகிரா. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் அஃப்வ வல்ஆஃபிய(த்)த ஃபீ தீனீ வதுன்யாய வஅஹ்லீ வமாலீ.

இதன் பொருள்:

இறைவா! இவ்வலகிலும், மறுமையிலும் ஈடேற்றத்தை உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! எனது செல்வம், குடும்பம், உலகம், மார்க்கம் ஆகிய விஷயங்களில் பாதுகாப்பையும், சுகத்தையும் வேண்டுகிறேன்.

நூல்:அபூதாவூத் 5076

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆஃபிய(த்)தி(க்)க வஃபுஜாஅ(த்)தி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க

இதன் பொருள்:

இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நிவாரணம் மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4922

اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

அல்லாஹும்ம ஃகலக்(த்)த நஃப்ஸீ வஅன்(த்)த தவஃப்பாஹா ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா இன் அஹ்யை(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா வஇன் அமத்தஹா ஃபஃக்ஃபிர் லஹா அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபியா

என்று படுக்கும் போது  ஓத வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் சுகத்தை வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4887

இதுபோன்ற துஆக்களின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுகின்ற அதேவேளையில், சுத்தம் சுகாதாரம் என்ற அடிப்படையில் மார்க்கம் கூறுகின்றபடி நம்மையும் நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————————————

ஆலிவ் எண்ணெய் அருள் நிறைந்ததா?

எம்.ஐ. சுலைமான்

سنن الترمذى (7 / 259)

1774 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ யு. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ يَضْطَرِبُ فِى رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا ذَكَرَ فِيهِ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَرُبَّمَا رَوَاهُ عَلَى الشَّكِّ فَقَالَ أَحْسَبُهُ عَنْ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَرُبَّمَا قَالَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مُرْسَلاً.

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: திர்மிதீ (1774)

இந்தக் கருத்து உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉஸைத் அல்அன்சாரி (ரலி) ஆகியோர் வழியாக நபிகளார் சொன்னதாக இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்திகள் அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் சரியானதா என்பதைப் பார்ப்போம்.

உமர் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்தி:

உமர் (ரலி) வழியாக இப்னுமாஜா (3310), பஸ்ஸார் (275), ஹாகிம் (7142), பைஹகீ ஷுஅபுல் ஈமான் (5539) உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்து செய்திகளும் அப்துர்ரஸ்ஸாக் வழியாகவே இடம்பெற்றுள்ளது.

அப்துர்ரஸ்ஸாக், இந்தச் செய்தியை சில நேரங்களில் நபித்தோழர் வழியாக நபிகளார் சொன்னதாகவும் சில நேரங்களில் நபித்தோழரை விட்டுவிட்டு (முர்ஸலாக) நபிகளார் சொன்னதாகவும் அறிவித்துள்ளார்.

علل الحديث لابن أبي حاتم – (2 / 15)

1520- وسمِعتُ أبِي يقُولُ : روى عبدُ الرّزّاقِ ، عن مَعْمَرٍ ، عن زيدِ بنِ أسلم.عن أبِيهِ ، عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم : كُلُوا الزّيت ، وائتدِمُوا بِهِ. حدّث مرّة ، عن زيدِ بنِ أسلم ، عن أبِيهِ ، أنَّ النّبِيّ صلى الله عليه وسلم هكذا رواهُ دهرًا.ثُمّ قال بعد زيدِ بنِ أسلم ، عن أبِيهِ : أحسبُهُ عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ثُمّ لم يمُت حتّى جعلهُ : عن زيدِ بنِ أسلم ، عن أبِيهِ ، عن عُمر ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم بِلا شكٍّ.

இந்தச் செய்தியை பல வருடங்களாக அப்துர்ரஸ்ஸாக், நபித்தோழர் வழியாக இல்லாமல் நபிகளார் அறிவித்ததாகவே (முர்ஸலாக) அறிவித்து வந்தார். பின்னர் உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக நான் எண்ணுகிறேன் என்று (சந்தேகமாக) அறிவித்தார். பின்னர் அவர் மரணமடையும் வரை உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக சந்தேகம் இல்லாமல் அறிவித்தார் என்று இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் ஹதீஸ், பாகம்: 2, பக்கம்: 15

அப்துர்ரஸ்ஸாக் கடைசி காலத்தில் முளை குழப்பத்திற்கு ஆளானார் என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

تقريب التهذيب – (2 / 354)

4064- عبدالرزاق ابن همام ابن نافع الحميري مولاهم أبو بكر الصنعاني ثقة حافظ مصنف شهير عمي في آخر عمره فتغير وكان يتشيع من التاسعة مات سنة إحدى عشرة وله خمس وثمانون ع

அப்துர்ரஸ்ஸாக் கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனார்; மூளையும் குழம்பிவிட்டது.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 354

நபித்தோழர் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெறும் செய்தியை அப்துர்ரஸ்ஸாக் கடைசி காலத்தில் தான் அறிவித்துள்ளார். அதற்கு முன்னர் வரை முர்ஸலாக நபித்தோழர் இல்லாமல்தான் அறிவித்துள்ளார். எனவே கடைசிக் காலத்தில் அவர் அறிவித்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக அமையாது.

علل الترمذي الكبير – (2 / 210)

357 – حدثنا يحيى بن موسى ، حدثنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن زيد بن أسلم ، عن أبيه ، عن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « ائتدموا (1) بالزيت وادهنوا (2) به فإنه يخرج من شجرة مباركة யு سألت محمدا عن هذا الحديث فقال : هو حديث مرسل قلت له : رواه أحد عن زيد بن أسلم غير معمر ؟ قال : لا أعلمه

இந்தச் செய்தியைப் பற்றி புகாரி அவர்களிடம் திர்மிதீ அவர்கள் கேட்ட போது, ‘இது நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான செய்தி’ என்று குறிப்பிட்டார்கள் என திர்மிதீ அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 210

تاريخ ابن معين – رواية الدوري – (3 / 142)

 595 سمعت يحيى يقول حدث معمر عن زيد بن أسلم عن أبيه قال قال رسول الله صلى الله عليه و سلم كلوا الزيت وادهنوا به ليس هو بشيء إنما هو عن زيد مرسلا

ஆலிவ் எண்ணெய் தொடர்பாக வரும் செய்தி முர்ஸான செய்தி என்று இப்னு மயீன் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தாரீக் இப்மயீன், பாகம்: 3, பக்கம்: 142

எனவே நபித்தோழர் இல்லாமல் வரும் இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதைப் பல அறிஞர்களின் கூற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்தி:

سنن ابن ماجه ت الأرنؤوط – (4 / 434)

3320 – حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ابْنُ سَعِيدٍ، عَنْ جَدِّهِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: “كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ، فَإِنَّهُ مُبَارَكٌ”

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: இப்னுமாஜா (3320)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி ஹாகிம் (3505) நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸயீத் என்பவர் இடம்பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

تهذيب التهذيب ـ محقق – (5 / 209)

.قال أبو طالب عن أحمد منكر الحديث متروك الحديث وكذا قال عمرو بن علي ஞ் وقال الدارمي عن ابن معين ليس بشئ وقال محمد بن عثمان بن أبي شيبة عن يحيى لا يكتب حديثه وقال أبو زرعة ضعيف الحديثஞ் وقال النسائي ليس بثقة

ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், விடப்பட்டவர் என்று அஹ்மத் மற்றும் அம்ர் பின் அலீ ஆகியோர் கூறியுள்ளனர். மதிப்பற்றவர் என்றும் இவருடைய ஹதீஸ்களைப் பதிவு செய்யப்படாது என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், நஸாயீ அவர்கள் நம்பகமானவர் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:5, பக்கம்: 209

எனவே அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியும் பலவீனமானதாகும்.

அபூஉஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:

سنن النسائي الكبرى – (4 / 163)

 6702 – أخبرنا محمد بن بشار قال ثنا عبد الرحمن قال ثنا سفيان عن عبد الله بن عيسى قال حدثني عطاء رجل كان يكون بالساحل عن أبي أسيد عن النبي صلى الله عليه و سلم قال : كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி),

நூல்: ஸுனுல் குப்ரா -நஸாயீ (1774)

இதே செய்தி அஹ்மத் (15474), தப்ரானீ (15940), ஷுஅபுல் ஈமான் – பைஹகீ (5538) உட்பட பல நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் அதா அஷ்ஷாமீ என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب ـ محقق – (7 / 197)

قال البخاري لم يقم حديثه وذكره العقيلى في الضعفاء.

இவருடைய செய்திகள் தகுதி வாய்ந்தவை இல்லை என்று புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள். உகைலீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:7, பக்கம்: 197

ஆலிவ் எண்ணெய் தொடர்பாக சிறப்பித்து வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

ஆயினும் ஆலிவ் மரம் பாக்கியம் நிறைந்த மரம் என்று திருக்குர்ஆன் 24:35 வசனம் கூறுகிறது.

மருத்துவ ரீதியில் அதில் குணம் உண்டு என்றோ அல்லது மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றோ உறுதியான செய்திகள் இருந்தால் அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————————————

சூனியத்தை நம்பிய முந்தைய இமாம்கள்  அனைவரும் முஷ்ரிக்குகளா?

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

சூனியத்தின் மூலம் மனிதனுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்று நாம் கூறுகின்றோம். அல்லாஹ்வுடைய ஆற்றல் மனிதனுக்கு இருப்பதாக நினைப்பது இணை கற்பித்தல் ஆகும். எனவே சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என்று நம்புபவர்கள் முஷ்ரிக்குகள் என்று நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். நம்மை எதிர்ப்பவர்கள் கீழ்க்கண்ட கேள்வியை நம்மிடம் எழுப்புகின்றனர்.

சூனியத்தை நம்புவது இணை கற்பித்தல் என்றால், சூனியத்தை உண்டு என்று நம்பிய இதற்கு முந்தைய இமாம்களின் நிலை என்ன? அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகளா? என்று நம்மிடம் கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் முஷ்ரிக்குகள் தானா என்றும் கேட்கின்றனர்.

சூனியம் உண்டு, அதனால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புதல் இரு வகைகளில் உள்ளன.

சூனியம் எவ்வாறு ஷிர்க்காக உள்ளது என்று உரிய காரணங்களுடன் விளக்கப்பட்ட பிறகு, அதற்குத் தக்க பதில் இல்லாமல், இணை கற்பிக்கும் செயலாக இருந்தாலும் நான் அப்படித்தான் நம்புவேன் என்று ஒருவர் கூறுவதும், நம்புவதும் ஒரு வகையாகும். இந்த நம்பிக்கை அப்பட்டமான இணை கற்பித்தலாகும்.

சூனியத்தை நம்புதல் எவ்வாறு ஷிர்க்காக உள்ளது என்று தானும் சிந்திக்காமல் மற்றவர்களாலும் எடுத்துச் சொல்லப்படாமல் ஹதீஸ்களில் உள்ளது என்று நம்புதல் மற்றொரு வகை. இவ்வாறு நம்புவது தவறு, அறியாமை என்றாலும் இவர்கள் சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தலில் சேராது.

பளிச்சென்று தெரியும் இணை வைத்தலில் இரு வகைகள் இல்லை. நுணுக்கமான இணை கற்பித்தலில் இப்படி இரு வகைகள் உள்ளன.

சூனியத்தை நம்புவது இணை கற்பித்தல் என்பது தெளிவுபடுத்தப்படாத நிலையில், ஏதோ சூனியம் என்ற ஒன்று உண்டு என ஒருவர் அறியாமையின் காரணமாக நினைப்பதாலோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது; இது உண்மையாகத்தான் இருக்கும் என்று அறியாமையின் காரணமாகவோ நினைப்பதால் அவர் முஷ்ரிக் ஆக ஆகமாட்டார்; மாறாக அவர் அறியாமையில் இருந்துள்ளார். இதுதான் நமது நிலைப்பாடு.

இப்படி இரு வகைகளாகப் பிரிப்பதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளது.

ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு ‘அது என்ன?’ என்று வினவினார்கள்.

அதற்கு அந்தப் பாதிரியார் ‘‘(முஸ்லிம்களாகிய) நீங்கள் சத்தியம் செய்யும் போது, ‘கஃபாவின் மீது ஆணையாக!’ எனக் கூறுகிறீர்களே அது தான்’’ என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘இனிமேல் சத்தியம் செய்வதாக இருந்தால், ‘கஃபாவின் அதிபதி மீது ஆணையாக’ எனக் கூறுங்கள்’’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

பின்னர் அந்தப் பாதிரியார் ‘முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று கூறினார். ‘சுப்ஹானல்லாஹ்’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது என்ன?’ என்று கேட்டார்கள்.

‘(முஸ்லிம்களாகிய உங்கள் சமுதாயத்தினர்) இது அல்லாஹ் நினைத்ததும் (நபியாகிய) நீங்கள் நினைத்ததுமாகும் என்று (உங்களை நோக்கி)  கூறுகிறார்களே அது தான்’ என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனிமேல் யாரேனும் ‘அல்லாஹ் நினைத்த படி’ என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு ‘பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’ என்று கூறுங்கள்’’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 25,845

கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறும் வழமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் இருந்து வந்துள்ளது; அதை ஆரம்பத்தில் நபிகளார் கண்டிக்கவில்லை; இவ்வாறு சொல்வது இணை கற்பிக்கும் செயல் என்பதை யூதப் பாதிரியார் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கேள்வி எழுப்பியவுடனேயே ‘இனிமேல் கஃபாவின் மீது சத்தியமாக’ என்று யாரும் சத்தியம் செய்யக்கூடாது என்று நபிகளார் தடை விதித்தார்கள் என்ற இந்தச் செய்தியிலிருந்து ஏராளமான படிப்பினை நமக்கு இருக்கின்றது.

அதாவது அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது இணை கற்பித்தலாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

இது ஏன் இணைகற்பித்தலாகும் என்றால், இறைவன் நம்மைக் கண்காணிப்பது போல நாம் எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்கின்றோமோ அந்தப் பொருளும் நம்மைக்  கண்காணிக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அல்லாஹ் அல்லாத பொருட்களின் மீது சத்தியம் செய்வதாகும். அப்படியானால் யார் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாமல் வேறு பொருட்களின் மீது சத்தியம் செய்கின்றார்களோ அவர் இணை கற்பித்துவிட்டார் என்று அர்த்தம்; இதைத்தான் அந்த யூதப் பாதிரியார் தனது கேள்வியில் முன்வைக்கின்றார்.

கஃபாவின் மீது சத்தியமாக என்று சொல்வது இணை கற்பித்தல் தான் என்பதை ஒப்புக்கொண்டு நபிகளார் இந்த மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்கள்.

அப்படியானால் இதற்கு முன்னதாக கஃபாவின் மீது சத்தியமாக என்று சொல்லிவிட்டு மரணித்த நபித்தோழர்கள் அனைவரும் நரகவாசிகளா? இப்படி யாரும் சொல்ல மாட்டார்கள்.

கஃபாவின் மீது ஆணையாக என்று சத்தியமிடுவது ஷிர்க் தான் என்றாலும் கூட, அது இணை கற்பித்தல் என்ற அந்த நுணுக்கம் தெரியாததன் விளைவாக இதை ஒருவர் கூறியிருப்பாரேயானால் அவர் எப்படி முஷ்ரிக் ஆகமாட்டாரோ அதுபோலத்தான் இந்த சூனிய நம்பிக்கை குறித்தும் நாம் விளக்கமளிக்கின்றோம்.

சூனியத்தை நம்புவது இணைகற்பித்தல் என்ற அந்த நுணுக்கம் ஒருவருக்கு விளக்கப்படாமலேயே சூனியம் என்பது உண்டு என்று நம்பியிருப்பாரேயானால் அது இணைகற்பித்தலாக ஆகாது; அவர் அறியாமையில் இருந்துள்ளார் என்றுதான் அர்த்தமாகும்.

அதுபோலத்தான், ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று நபித்தோழர்கள் சொன்ன வாசகமும்.

அதாவது எந்த ஒன்று நடந்தாலும், அது குறித்து சொல்லும்போது நீங்களும், அல்லாஹ்வும் நாடியது என்று சொல்லும் வழக்கம் நபித்தோழர்கள் மத்தியில் இருந்துள்ளது.

இது இணைகற்பித்தல் ஆகும்; அல்லாஹ்வுக்கு இணையாக நபிகளாரை ஆக்குவது இணை கற்பித்தல் தானே என்பதுதான் யூதப் பாதிரியின் வாதம். அதை ஏற்ற அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், “முதலில் அல்லாஹ் நாடினான்; பின்னர் நீங்கள் நாடினீர்கள்” என்ற வாசகத்தை திருத்தித் தருகின்றார்கள்.

அப்படியானால் அதற்கு முன்னதாக, ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று இணை வைப்பிற்குரிய வாசகத்தைச் சொல்லி வந்த நிலையில் இறந்து போன நபித்தோழர்களின் நிலை என்ன? அவர்கள் முஷ்ரிக்குகளா? என்று கேட்டால் நம்மை விமர்சிப்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

அந்த நபித்தோழர்கள் எல்லாம் இணை கற்பித்தவர்கள் இல்லை; அந்த நுணுக்கம் தெரியாமலேயே அவர்கள் மரணித்து விட்டதாலும்,  அவர்களது உள்ளத்தில் நபியவர்களை அல்லாஹ்விற்கு இணையாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததாலும் இது ஷிர்க் ஆகாது; அறியாமை என்ற அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது என்று தானே சொல்வார்கள்.

அதுபோலத்தான் சூனியம் குறித்த நிலைப்பாட்டில் சூனியம் என்பதற்கு ஆற்றல் உண்டு என்று சொல்லும் போதும், அதை நம்பும் போதும் அதை நம்பியவர் ஆய்வு செய்யாமல் மேலோட்டமாக அதை நம்பிக்கை கொள்கின்றார்; இதை நம்புவதால் இணை கற்பித்தல் என்ற பெரும்பாவம் நமது உள்ளத்தில் ஏற்படும் என்று அவர் நினைக்கவில்லை; இது குறித்து அவருக்குச் சுட்டிக்காட்டப்படவும் இல்லை. இப்போது இவரது நிலை என்ன?

சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல் தான் என்று நுணுக்கமாகக் கவனிக்காமல் நம்பினால் அவர் இணை கற்பித்தவராக ஆகமாட்டார். அந்த அடிப்படையில் இதற்கு முந்தைய இமாம்கள் சூனியம் உண்டு என்று நம்பியிருந்தாலும், நபிகளாருக்குச் சூனியம் செய்யப்பட்டது என்று வரும் சில ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை என எண்ணி ஏற்றிருந்ததால், அவர்கள் முஷ்ரிக்குகளாக மாட்டார்கள்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்    தொடர்: 38

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 760, 758, 759

தனது நறுமணத்தைப் பிறர் நுகர வேண்டும் என்பதற்காக எவள் நறுமணம் பூசி மக்களிடையே செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள் (தவறான நடத்தையுடையவளாவாள்) என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

நூல்: நஸாயீ 5036

அதே நேரத்தில் எந்தவிதமான நறுமணமாக இருந்தாலும் கணவரிடத்தில் வீட்டிற்குள் இருக்கிற போது போட்டுக் கொள்வதில் தவறில்லை.

ஆடை அணிவதில் ஒழுக்கம்

பெண்கள் தாறுமாறாக, அரைகுறையாக ஆடையணிவதுதான் குடும்பத்தில் இல்லறக் குறைவுக்குக் காரணம் என்பதைப் புரியவேண்டும். நாட்டில் நடக்கிற பலவிதமான பாலியல் வன்முறைகளுக்கும் காரணம் பெண்களின் தவறான ஆடையணியும் முறைதான் என்பதை இஸ்லாமியப் பெண்கள் புரிந்து கொண்டு வெளியில் செல்லும் போது மார்க்கம் அனுமதித்த ஆடையணிந்து செல்ல வேண்டும்.

தாம்பத்திய ஈடுபாடு ஆண்களிடத்தில் குறைந்துள்ளது. நமது அப்பன் பாட்டன் காலத்தில் இருந்த ஈடுபாடு இன்றுள்ள ஆண்களிடம் இல்லை. அதனால்தான் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆண்மை குறைவுக்கு வகைவகையான மருந்து விளம்பரங்கள். இந்த அளவு ஆண்மை குறைவு இருப்பதினால் தான் இது சம்பந்தமான வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் நன்றாகச் சாப்பிட்டு நல்ல வகையில் உழைப்பில் ஈடுபட்டாலும் மனைவிமார்களின் மீதுள்ள ஈர்ப்பு குறைவதற்குக் காரணம் என்ன? மனைவியின் மீது இச்சை உணர்வு வராமல் இருப்பதற்குக் காரணம் என்ன? மனைவியுடன் சரியாக இல்லறத்தில் ஈடுபடமுடியவில்லை என ஆண்மை குறைவுக்காக மருத்துவர்களைத் தேடிச் செல்வது ஏன்? என்று ஆய்வு செய்ததில் வெளியான முடிவு என்ன  தெரியுமா?

பலவிதமான மாடல் ஆடைகளுடன் அரைகுறை ஆடை அணிந்து செல்கிற பெண்களைப் பார்க்கிற ஆண்களுக்கு இதுபோன்ற இல்லறக் குறைபாடுகள் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். தங்களது மனைவிமார்களை விடவும் அவை ஈர்க்கத் தக்கதாக இருக்கிறது. பிறரின் நிலையை தனது மனைவியுடன் ஒப்பிட்டு மனைவியைக் குறைவாக மதிப்பிடுகிறான். அதுதான் இல்லறக் கோளாறுக்குக் காரணம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

எனவே பெண்கள் அரைகுறையாகவும், இறுக்கமாகவும் ஆடையணிந்து வெளியிடங்களில் செல்வது ஆணைப் பாதிக்கின்ற பிரச்சனை மட்டுமின்றி, குடும்பத்தில் ஒழுக்கமாக வாழ்கிற குடும்பப் பெண்களையும் பாதிக்கும் பிரச்சனை என்பதை இச்சமூகம் உணரவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் ஆண்களோ, பெண்களோ நுகர்வோர் கலாச்சாரத்தினை நோக்கிப் பயணிப்பதாக மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நுகர்வோர் கலாச்சாரம் என்றால், நாம் பயன்படுத்துகிற செல்போனை விட வேறு ஒன்று நம் கண்களுக்கு சிறப்பானதாகத் தெரிந்தால் அதை அடைய வேண்டும் என்கிற மனோநிலையில் இருப்பது. அதுபோன்று குடும்ப வாழ்க்கைக்கும் பிறருடன் தன்னையும் தன் மனைவியையும் ஒப்பிட்டு பார்க்கும் மனோ நிலையே நுகர்வோர் கலாச்சாரம்.

இது குடும்ப உறவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இல்லறக் கடமையையே இல்லாமல் ஆக்கிவிடும் என்பதைப் புரிந்து கொண்டு பெண்கள் வெளியில் மார்க்கம் அனுமதித்த ஆடைகளுடன் செல்ல வேண்டும்.

அதே போன்று தற்கால சினிமாக்களில் அந்தரங்கக் காட்சிகளையும் உடலைக் காசுக்காக விற்கின்ற பெண்களையும் பார்க்கின்ற ஆணுக்கு தனது மனைவியின் மீது எப்படி ஈர்ப்பு ஏற்படும்?

இதற்காக எந்த மருத்துவமும் தேவையில்லை. சினிமாக்கள் பார்ப்பதையும், அந்நியப் பெண்களை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதையும் நிறுத்தினாலே போதும். ஓர் ஆண் யானை பலத்தை அடைவான். மனைவியிடத்தில் தேவையான அளவுக்கு ஈர்க்கப்படுவான். இதைத் தவிர வேறெந்த மருத்துவமும் இத்தகைய ஆண்களுக்குத் தேவையில்லை.

இதில் முக்கியமான செய்தி பிறருடன் தனது மனைவியை ஒப்பிடுவது தான். ஏனெனில் நம் உடலில் எல்லாவற்றையும் இயக்குவது மூளைதான். மூளை தான் இச்சை உணர்வையும் தூண்ட வேண்டும். அதேபோன்று ஆண்களிடம் சரியான இல்லற சுகம் கிடைக்கவில்லையெனில் ஒரு பெண் தவறான வழிக்கு செல்வதற்கும் பெண்களின் ஆடைக் குறைப்பு காரணமாக அமைந்துவிடுகிறது.

இதில் இன்னொன்றையும் நாம் சுட்டிக் காட்டுவது கடமையாகும். சினிமாக்களில் காட்டப்படுகிற பாடல் காட்சிகளும் மற்றவைகளுமே ஏறக்குறைய நீலப்படங்களாகத்தான் இருக்கின்றன. இதில் அதற்கென்றே தயாரிக்கப்படுகிற ஆபாச வீடியோக்களைப் பார்க்கின்ற ஆண் முற்றிலும் மனைவியுடன் இல்லறத்தில் தோல்வியைத் தழுவுகிறான். கண்ணைக் கொண்டு மட்டுமே இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, உடலைக் கொண்டு ஒன்றையும் செய்யவே முடியாது. இப்படியெல்லாம் பார்ப்பது நல்லது என்று நினைப்பது அறியாமையாகும்.

அதேபோன்று பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் ஆண்கள் ஈவ் டீசிங் எனப்படும் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தச் செயல் ஆண்களையும் குடும்பப் பெண்களையும் பாதிக்கிறது. எனவே பெண்கள் தன்னளவில் ஆடையைச் சரியாக பேணிக் கொண்டால், மற்றவர்களையும் பேணச் சொன்னால் தன் வாழ்க்கையும் பிறரது வாழ்க்கையும் பாதுகாப்பைப் பெறும் என்பதை உணரவேண்டும். அப்படியான சூழ்நிலை நம் சமூகத்தில் உருவானால் இயற்கையான, உண்மையான குடும்பவியல் கோலோச்சும். அப்போதுதான் வளமான சமூகம் உருவாகும்.

இவை தவிர, ஆண்கள் தங்களது பார்வைகளைப் பேணிக் கொள்வது நமது தாம்பத்தியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும். அல்லாஹ் இதனைத் திருமறையில் இரு பாலருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறான்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

திருக்குர்ஆன் 24:31

—————————————————————————————————————————————————————————————

ரிஸ்கை அதிகப்படுத்த தொழுகை உண்டா?

அபு ஆதில்

வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் வந்த பிறகு உலகம் கையடக்க அளவில் சுருங்கி விட்டது.

உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வு கூட சொற்ப நேரத்தில் நமது கையில் (மொபைலில்) வந்து விழுந்து விடுகிறது.

அதன் மூலம் பல நன்மைகளை அடைகிறோம் என்பது ஒருபுறமிருந்தாலும் பல நேரங்களில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையுமே அந்நிகழ்வுகள் நமக்கு அளிக்கின்றன.

இணையத்தில் உலா வருகிற சில வீடியோக்களைப் பார்க்கும் போது இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புருவம் உயர்த்தி யோசிக்க வைக்கின்றது.

உலகியல் ரீதியிலான ஆச்சரியங்களைக் காட்டிலும் மார்க்க ரீதியிலான ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் தான் அதிகம் ஏற்படுகிறது.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு அஜ்ரத் பயான் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பார்க்க நேர்ந்தது? அந்தக் கொடுமையை என்னவென்பது?

ஏன் இவ்வளவு அலட்டல் என்கிறீர்களா? அவர் பேசிய பேச்சு அப்படி இருந்தது.

உணவில் பரக்கத் ஏற்பட, வாடிக்கையாளர்களை அதிகம் கவர உங்களுக்கு ஒரு வழி சொல்லித் தருகின்றேன் என்று சொல்லி மக்களுக்கு பயான் செய்கிறார். அதில்…

ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்திடம் வந்து, ‘நாயகமே! நீங்க சொன்னீங்கன்னு அவ்வாபீன் (?) முதல் கொண்டு பல தொழுகைகள் நான் தொழுகிறேன். ஆனா ரிஸ்க் என் வீட்டைத் தேடி வரும்படி நான் தொழுவதற்கு எனக்கு மட்டும் தனியா ஒரு தொழுகையை சொல்லித் தாங்களேன்’ என்று கேட்கிறார்.

(அந்தக் கிராமவாசியின் ஆர்வத்தைப் பார்த்தீர்களா என்று ஆர்வமூட்டல் வேறு நடக்கிறது)

பெருமானார் அவரைப் பார்த்து சிரித்து விட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் லுஹருக்குப் பிறகு இரண்டு சலாமில் நான்கு ரக்அத்களைத் தொழுவீராக.

முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – இன்னா அன்ஸல்னாஹூ 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத்

இரண்டாம் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – இதா ஜூல்ஜிலதுல் அர்ளு.. 10 முறை – குல்ஹூ வல்லாஹூ அஹத் ஓதி சலாம் கொடுத்து விட வேண்டும்.

அடுத்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – வல்ஆதியாத் 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக்

இறுதி ரக்அத்தில் அல்ஹம்து சூரா – குல் யா அய்யுஹல் காஃபிரூன் 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத்,  குல் அஊது பிரப்பின் நாஸ் ஓதி சலாம் கொடுத்து விட வேண்டும்.

நீ இப்படிச் செய்தால் உனக்கு ரிஸ்கை அல்லாஹ் கொட்டுவான் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அவரும் அதன்படியே தொழுது விட்டு அவரின் கடைக்குச் செல்கிறார். அங்கே மற்ற கடைகளில் எல்லாம் யாரும் இல்லை. ஆனால் அவர் கடைக்கு மட்டும் வாடிக்கையாளர் ஈ மொய்ப்பதைப் போல மொய்த்து விட்டார்கள். அல்லாஹ் ரிஸ்கை கொட்டு கொட்டுன்னு கொட்டிட்டான்.

இதுதான் அவரது மெய்மறக்கச் செய்யும் பயான்.

இந்த பயானைக் கேட்ட பிறகும் அதிர்ச்சி அடையவில்லை எனில் அது தான் ஆச்சரியம்.

அத்தனையும் அப்பட்டமான பொய்.

மழைத்தொழுகை, பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, வித்ரு தொழுகை,  என எத்தனையோ தொழுகையை நபிகளார் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

ஆனால் இந்த தஜ்ஜால் – பெரும் பொய்யன் – குறிப்பிடுவதைப் போன்று உணவில் பரக்கத் ஏற்படவென்று எந்தத் தொழுகையையும் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவில்லை.

நாம் உத்தரவிடாத வணக்கத்தைச் செய்பவரின் வணக்கம் மறுக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3243

இத்தகைய தஜ்ஜால்கள் குறிப்பிடுவதை நம்பி முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்தை அமைத்துக் கொண்டால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாத, தண்டனைக்குரிய நிலை உண்டாகும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

திட்டமிட்ட பொய்

இப்படித் தொழுதால் அல்லாஹ் ரிஸ்கைக் கொட்டுவான் என்றும், வாடிக்கையாளர் ஈ மொய்ப்பதைப் போன்று கடையில் மொய்ப்பார்கள் என்றும் ஒரு மலிவான வியாபாரியின் தரத்திற்கு செய்திகளைச் சொல்லி, இதை நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று நபியின் மீது துணிந்து துள்ளிக் குதித்துப் பொய் சொல்கிறார்.

இவர் சொல்வது எந்த நபிமொழியிலும் இல்லாதது. நபிகளாரின் மீது சொல்லப்பட்ட திட்டமிட்ட பொய்.

நபிமீது பொய் சொல்லாதீர்கள் என்று இந்த மத்ஹபினருக்கு எச்சரிக்கை செய்து, எச்சரிக்கை செய்து கையும் வாயும் வலித்து விட்டது.

வாய் வலித்தாலும் பிரச்சனை இல்லை; நான் நபி மீது பொய் சொல்வேன் என்று அவர்கள் சொல்லும் போது, நாமும் கை வலித்தாலும் பரவாயில்லை என்று அது குறித்த எச்சரிக்கையைப் பதிவிட வேண்டும் அல்லவா?

என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 106

‘(தந்தையே! உங்களைப் போன்று நபி (ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?’ என்று என்னுடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் ‘என் மீது இட்டுக்கட்டிச் சொல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)’ என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) கூறினார்.

நூல்: புகாரி 107

என் மீது, வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 108

நான் கூறாத ஒன்றை ‘கூறினார்கள்’ என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஸலமா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 109

இவர்கள் இந்த எச்சரிக்கையூட்டும் செய்திகளை எத்தனை முறை படித்தாலும் தொடர்ந்து தொய்வின்றி நபி மீது பொய்களை அனாயசமாக அள்ளி விடுவதற்கு முக்கியக் காரணம் அவர்கள் படித்த மத்ஹபு அவர்களை அப்படி வார்த்தெடுத்துள்ளது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இறைவன் கூறிய வழி

ரிஸ்கை அதிகப்படுத்த இறைவனும், இறைத்தூதரும் பல வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் ஒன்றிரண்டை இங்கே நினைவு கூர்கிறோம்.

இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான் என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 71:10,11,12

உறவைப் பேணுங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும்; அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல்: புகாரி 2067

இறைவனை முறையாக அஞ்சுங்கள்

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

திருக்குர்ஆன் 65:2,3

இதன் மூலம் இறைவனிடம் பரக்கத் வேண்டுவோமாக! பித்அத்களைத் தவிர்ப்போமாக! நபி மீது பொய் சொல்லத் தூண்டும் மத்ஹபை ஒழிப்போமாக!

—————————————————————————————————————————————————————————————

புத்திக்கூர்மையுள்ள ஆயிஷா (ரலி) அவர்களும் பாடம் பெறவேண்டிய போலி ஆலிம்களும்

எம்.எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

உடலாலும், பொருளாலும் இஸ்லாத்திற்காக அதிகமதிகம் தியாகம் செய்த அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் தான் ஆயிஷா (ரலி) அவர்கள். இவர்களது தாயார் உம்மு ரூமான்.

தன் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களும் புத்திக் கூர்மையுள்ளவராகத் திகழ்ந்தார்கள். ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்களுக்கு இணையாக அறிவித்த இவர்கள், நபிகளாருக்குப் பிறகு ஸஹாபாக்கள் தவறாக விளங்கிய சில ஹதீஸ்களைத் திருத்தி, தெளிவுபடுத்தி, அதற்குரிய சரியான சான்றுகளை குர்ஆன் ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கமளிப்பவர்களாவும் இருந்துள்ளார்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், “(குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி – ஸல் – அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்’’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்’’ என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்: (நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80)

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22)

நூல்: புகாரி 3978, 3979

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்  என்ற வசனத்தை ஆதாரம் காட்டி நபித்தோழர்களுக்குப் பாடம் கற்பித்த ஆயிஷா (ரலி) எங்கே? பேய், பிசாசுகளை நம்பி மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கின்ற இன்றைய பெண்கள் எங்கே? மேலும் இணை வைப்பு விஷயத்திலும் ஆயிஷா (ரலி) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘‘யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்’’ என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல்: புகாரி 1330

நபிகளாரின் அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ? இணைவைப்பு ஏற்பட்டு விடுமோ? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் மிகவும் அஞ்சினார்கள். நபிகளாரின் கப்ரில் மக்கள் கையேந்தி விடக்கூடாது என்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் எதைப் பயந்தார்களோ அதுவே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற அவல நிலையைக் காண்கிறோம். அல்லாஹ்வின் தூதரின் கப்ரும் இதில் விதிவிலக்கல்ல! தெருவிற்கு ஒரு கப்ர். ஊருக்கு ஒரு கப்ர் என்று அவ்லிய்யாக்கள் பெயரில் பெண்கள் செய்யக்கூடிய அனாச்சாரங்களுக்கு எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

பக்கீர் ஷா கொடுக்கின்ற எலுமிச்சை பழத்தின் மேல் உள்ள நம்பிக்கை கூட படைத்த இறைவன் மேல் இல்லை என்பதே கொடுமையிலும் கொடுமை. இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக நம்புகின்ற பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களைப் பார்த்து பாடம் கற்க வேண்டும்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அருகில் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’’ என்று கூறினார்கள்; நான், “அவை எவை?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்’’ என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலில்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், ‘அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர்  கண்டார்’ (81:23) என்றும், ‘அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் கூறவில்லையா?’’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது’’ என்று கூறினார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) ‘‘அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?’’ என்று கேட்டார்கள். “அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்’’ (6:103).

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்’’ (42:51)

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேதத்திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைக் இட்டுக்கட்டிவிட்டார். அல்லாஹ்வோ, ‘‘தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்!’’ (5:67) என்று கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள்’ என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். அல்லாஹ்வோ, “வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்’’ என்று கூறுவீராக! (27:65) என்று கூறுகின்றான்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைப்பவராக இருந்தால், பின்வரும் வசனத்தை மறைத்திருப்பார்கள்:

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்’’ என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். (33:37)

அதில், மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், “நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் தூயவன். நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது…’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 287

20ஆம் நூற்றாண்டான இக்காலகட்டத்திலும் ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை இழப்பவர் களையும், ஆன்மீகத்தின் பெயரால் தன்னைக் கடவுளுக்கு நெருக்கமானவர் என்று கூறக்கூடிய சாமியார்களின் காலடியில் விழுந்து கற்பை இழந்து கொண்டிருக்கின்ற பெண்களையும் நாம் காண்கின்றோம். ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானீ அல்லாஹ்வைப் பார்த்துள்ளார்கள் என்றும், ரசூலுல்லாஹ்வைக் கனவிலும் நனவிலும் கண்டு களிப்போமாக என்றும் கூறி இஸ்லாத்தின் பெயரால் கப்ஸாக்களை கூறித் திரிபவர்களையெல்லாம் எவ்வித கேள்விகளையும் கேட்காமல் கண்மூடித்தனமாக நம்புவது மூடத்தனமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் காணவில்லை. நாம் அல்லாஹ்வின் தூதரைக் காண இயலாது என்ற தெள்ளத் தெளிவான ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தும் கூட குர்ஆன், ஹதீஸ்களில் விளையாடுகின்ற இந்த ஆலிம்களுக்குக் கொஞ்சம் கூட இறை பயம், மறுமை அச்சம் இல்லை என்றே கூறவேண்டும்.

திருக்குர்ஆனைப் பொருளுணராமல் படித்ததும், இறந்த வீட்டில் மட்டும் குர்ஆன் ஓதியதும், குர்ஆனுக்கும் நமக்கும் மத்தியில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்த்தவர்களையெல்லாம் குர்ஆன் ஹதீஸ்களை விட மேலாக மதித்ததும் தான் இந்த மடமைகளுக்கெல்லாம் காரணம்.

தான் கண்டிக்கப்பட்ட தனது சொந்த விஷயங்களையும் கூட இறைவன் வஹியாக அறிவிக்கும் போது மக்களுக்கு மத்தியில் பிரகடனப்படுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ஆனால் இந்த இறைத்தூதரின் மீது நேசம் வைத்ததாகக் கூறிக்கொண்டு அவர்களின் மீதே பொய்யான செய்திகளை இட்டுக்கட்டிக் கொண்டு மார்க்கத்தில் இல்லாத மவ்லிது, மீலாது போன்ற விழாக்களையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அன்றாடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த உலமா பெருமக்கள்.

குர்ஆன் ஹதீஸ்களில் இணைவைப்பை ஒழிக்க வேண்டும், கப்ர்களை தரைமட்டமாக்க வேண்டும் என்று இடம்பெற்றுள்ள செய்திகளையெல்லாம் அப்பட்டமாக மறைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த மவ்லவிகள்.

மக்களிடம் தங்கள் மீதுள்ள செல்வாக்கிற்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் குர்ஆன் ஹதீஸ் விஷயத்தில் சற்றும் இறைவனைப் பயப்படாத இந்த ஏமாற்றுக்காரர்களைப் பின்பற்றக்கூடியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் எவருக்கும் அஞ்சாத, கலங்காத மனதைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும்.

ஒரு பெண்மணிக்கு இருக்கின்ற சுயசிந்தனை, இறைபயம், பகட்டான வாழ்க்கையைத் தியாகம் செய்ய முன்வருகின்ற எண்ணப்போக்கு கூட ஏழு வருடம் மார்க்கத்தைப் படித்த ஆலிம்களுக்கு இல்லையென்றால் இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமல்லவா?

மார்க்கத்தைப் பின்பற்றுவதின் அடையாளம் ஜிப்பாக்களிலும், தஸ்பீஹ் மணிகளிலும், வயிறு வரை வளர்க்கின்ற தாடிகளிலும் இல்லை. மாறாக அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்படுவதில் தான் இருக்கின்றது என்பதை இத்தருணத்தில் இஸ்லாமிய சமுதாயம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்ட பெண் சமுதாயத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பதற்கு பரீரா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா, முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?’’ என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள், ‘‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?’’ என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ‘‘இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா?’’ என்று கேட்டார். ‘‘இல்லை நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்’’ என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை’’ என்று கூறிவிட்டார்.

நூல் : புகாரி:5283

நபிகளாரின் சொந்தக் கருத்திற்கும் இறைக் கட்டளைக்கும் வித்தியாசத்தை நபித்தோழியர்கள் நன்கு உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் இன்றோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல, பெண்கள் கண்ணில் கண்டதையெல்லாம் கடவுளாகக் கருதி வணங்கி வருவதைக் காண்கின்றோம். இவ்வாறு கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடியவர்கள் பரீரா (ரலி) அவர்களைப் பார்த்துத் திருந்த வேண்டும். மேலும் இறைவனும் தன் திருமறையில், கேட்டதையெல்லாம் பின்பற்றக் கூடாது; அதனை ஆய்வு செய்த பிறகே பின்பற்ற வேண்டும் என்றே கூறுகின்றான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது  செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர்ஆன்  25:73

—————————————————————————————————————————————————————————————

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளலாமா?

ஜாக்கின் இரட்டை வேடம்

எம்.எஸ். சுலைமான்

திருமறைக் குர்ஆனுக்கும், நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கும் எதிராக இருக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம்.

திருக்குர்ஆன் வசனங்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மற்றும் நபித்தோழர்கள் காலம் முதல் தற்காலம் வரை உள்ள பல அறிஞர்களின் கருத்துக்களை இதற்கு ஆதாரமாக நாம் முன்வைத்தோம்.

மாற்றுக் கருத்து கொண்டவர்கள், குறிப்பாக ஜாக் இயக்கத்தினர், இவற்றில் எதற்குமே சரியான பதிலை இதுவரை சொன்னதில்லை. நாம் முன்வைக்கும் ஆதாரத்தைத் தக்க காரணம் கொண்டு அதை மறுத்திருக்க வேண்டும்.

நபித்தோழர்கள் உட்பட பல அறிஞர்கள், குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் ஹதீஸ் அல்ல என்று கூறியுள்ளார்களே! இதற்குப் பதில் என்ன என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டோம்.

நாம் முன்வைக்கும் வாதங்களுக்கும், கேள்விகளுக்கும் உருப்படியான பதிலைச் சொல்லாமல் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய விதமாகப் பேசி விட்டு, நாங்கள் பதில் கூறி விட்டோம் என்று இவர்கள் கூறுவார்கள். சமீப காலமாக, நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

ஒரு குற்றச்சாட்டை அடுத்தவர்கள் மீது சுமத்துவதற்கு முன்பு அதே குற்றச்சாட்டு தம்மிடம் இருக்கிறதா என்பதை சிந்திப்பவன் தான் முஃமினாக – அறிவாளியாக இருக்க முடியும்.

நம்மீது ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று குற்றம் சுமத்தும் இந்த ஜாக் அமைப்பினர், தங்கள் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக தாங்கள் கூறியிருக்கும் விஷயங்கள் என்ன என்பதைக் கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஜாக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய பாடத்திட்டம் – ஹதீஸ் விளக்கவுரை என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

“ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவற்றையெல்லாம் நூலுருவில் முறையாக தொகுக்கக்கூடிய பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தொகுக்கப்பட்ட போது அந்த ஹதீஸின் கருப்பொருள் (மதன்) மற்றும் அதை எடுத்துரைத்தவர்களின் சீலம், வாய்மை, நினைவாற்றல், வழி வழித் தொடர் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டன”

அதாவது ஒரு ஹதீஸ் சரியானதா அல்லது பலவீனமானதா என்று தெரிந்து கொள்ள இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.

ஒன்று, அறிவிப்பாளர்களைத் தரம் பிரித்துப் பார்த்தல்.

இரண்டாவது, அறிவிப்பாளர்கள் சரியானவர் களாக இருந்தாலும் ஹதீஸில் சொல்லப்பட்ட கருத்து (மதன்) சரியானதாக இருக்கிறதா என்று பார்த்தல்.

“ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் சரியானவர் களாக இல்லாவிட்டாலும் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. அதேபோன்று ஹதீஸின் கருத்து (மதன்) சரியானதாக இல்லாவிட்டாலும் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல” என்ற விதிமுறை கடந்த காலத்தில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

ஒரு ஹதீஸ் ஸஹீஹ், லயீஃப் என்று சொல்வதற்கு அறிவிப்பாளர்களை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். அதன் கருத்தை (மதன்) பார்க்கக்கூடாது என்று வாதிக்கும் ஜாக்கினர் இக்கருத்தை எழுதலாமா? இத்துடன் அவர்கள் முடித்துவிடவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றால் என்ன என்பதற்கு அவர்கள் கூறும் 5 நிபந்தனைகளைப் பாருங்கள்.

1) எந்தவொரு ஹதீசும் திருக்குர்ஆனுடைய மூலத்திற்கு, அதன் போதனைகளுக்கு முரண்படாத தாகவும், இஸ்லாமிய அடிப்படைகளை உறுதிப்படுத்து வதாகவும் இருக்க வேண்டும்.

இதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

சரியான ஹதீஸ் என்றால் அது குர்ஆனுக்கு முரண்படக்கூடாது என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இதையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று நமக்குப் பெயர் சூட்டுகிறார்கள்.

மற்ற நிபந்தனைகள்

 1. ஏற்கனவே மார்க்க மேதைகளால் ஆதாரப்பூர்வ மானதாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பவைகளுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும்.
 2. குறிப்பாக ஒரு குலத்தினர் அல்லது ஒரு வட்டாரத்தினரின் பெருமைகளைப் பெரிதுபடுத்திப் பேசுபவை ஒதுக்கப்பட வேண்டும்.
 3. எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி தேதி, நிமிடம் போன்ற விபரங்களும் குறிப்பிட்டுச் சொல்லும் செய்திகளைப் புறந்தள்ள வேண்டும்.
 4. பெருமானார் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் நபித்துவத்திற்கும் மாறாகவோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகுதிக்கு ஏற்றதல்லாத நிலை எடுத்தார்கள் என்றோ அல்லது கருத்தைக் கூறினார்கள் என்றோ குறிப்பிடும் செய்திகள் உள்ள ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன அனைத்து நிபந்தனைகளையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அனைத்துமே தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்வதைப் போன்று இருக்கின்றதா?

அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கும் எந்த ஹதீசும் குர்ஆனுக்கு முரண்படாது; அப்படி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்பவர்கள் தங்களின் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்;  தங்களின் அறிவைப் பயன்படுத்தி ஹதீஸை நிராகரிக்கிறார்கள் என்றெல்லாம் யார் நம்மை நோக்கிக் கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்களோ அந்த சாக்குக்காரர்கள் தான் இப்படி எழுதி வைத்துள்ளனர்.

தறுதலை ஜமாஅத், ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்றெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தை தெருத்தெருவாக விமர்சனம் செய்தீர்களே! உங்களின் இரட்டை முகத்தை அல்லாஹ் எப்படி தோலுரித்துக் காட்டுகிறான் என்று பாருங்கள்.

மேலே கூறப்பட்ட 3, 4, 5 ஆகிய நிபந்தனைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.

இத்தகைய ஹதீஸ்கள், “ஒதுக்கப்பட வேண்டும்” “புறந்தள்ள வேண்டும்” “நிராகரிக்கப்பட வேண்டும்”

இந்த வாசகங்கள் மூலம் நீங்கள் உலகிற்குச் சொல்லும் கருத்து என்ன?

அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் ‘மதன்’ என்று சொல்லப்படும் ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கும் மாற்றமாக இருந்தால் அது ஹதீஸே இல்லை, அதை நிராகரிக்க வேண்டும் என்று தானே நீங்களும் சொல்கிறீர்கள்?

அடுத்தவர்களுக்கு நீங்கள் சூட்டும் ஹதீஸ் மறுப்பாளர்கள் பட்டத்தை இனி உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கும்.

இவர்கள் எப்போதுமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடியவர்கள் தான்.

ஜாக்கினர் ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறார்கள் என்று இவர்கள் மீது தக்க காரணத்தைக் காட்டி நாம் குற்றம் சுமத்தினோம்.

உடனே இவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். நாங்கள் எப்போது ஸஹாபாக்களைப் பின்பற்றினோம்? ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் எங்கு பேசினோம்? ஆதாரத்தைக் காட்ட முடியுமா? என்று மேடை தோறும் முழங்கினார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினர் அவதூறு பரப்புவதாக அனைத்து மட்ட சாக்குக்காரர்களும் குமுறினார்கள்.

ஆனால் கடந்த ஜூன் 2016 அல்ஜன்னத் என்ற அவர்களின் அதிகாரப்பூர்வ இதழில் அவர்கள் விட்ட சவாலுக்கு அவர்களே பதிலளித்துக் கொண்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறியது அவதூறு அல்ல, முற்றிலும் உண்மை என்பதை அவர்கள் ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுக்கிறார்கள்.

“நாம் நேர்வழியிலிருந்து வழிதவறி விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஸலஃபு ஸாலிஹீன்களின் வழியை மார்க்கம் நமக்கு வலியுறுத்தியுள்ளது. இன்னும் ஸலஃபு ஸாலிஹீன்கள் வழியைப் பின்பற்றுவதை மார்க்கம் நம்மீது கடமையாகவும் ஆக்கியிருக்கின்றது”

இவ்வாறு எழுதியுள்ளார்கள். இவர்கள் உள்ளொன்றும் புறமொன்றும் பேசுபவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இதைப் போலத்தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று நாம் கூறும் கருத்தை எழுத்து வடிவில் ஒத்துக் கொண்டு, மேடைகளில் பேசும் போது மாத்திரம் இதற்கு மாற்றமாகப் பேசி வருகிறார்கள். நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று வசை பாடுகிறார்கள்.

நம்முடைய எழுத்துக்களையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்று எண்ணி, தங்களின் கொள்கையை எழுத்து வடிவில் மட்டும் சொல்கிறார்கள் போலும்.

—————————————————————————————————————————————————————————————

ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

கே.எம். அப்துந்நாஸர்

செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக  அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை நவீன அறிவியல் உலகில் மிக முக்கிய தகவல் தொடர்பு வழித்தடமாகத் திகழ்கின்றன.

இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்பாடுகள் சிலருக்கு நல்வாய்ப்பாகவும் பலருக்கு துர்பாக்கியமாகவுமே உள்ளன. ஆம்! இன்றைக்கு அதிகமானோர் இவற்றை இம்மை மற்றும் மறுமை வாழ்வை நாசமாக்கும் செயல்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சிந்தனை ரீதியிலான மலட்டுத் தன்மையையும், நடைமுறை சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுதலையும் அதிகமான இளைஞர்களிடம் உருவாக்கியுள்ளது.

செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் ஊமைத் திரைகளில் நிலைகுத்திய பார்வையும்,  கீ போர்டுகளில் அசைந்து கொண்டிருக்கும் விரல்களுமாய் வெளி உலகத் தொடர்புகளை இழந்து, கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் கலந்துறவாட மறந்து, எந்நேரமும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகளில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனை நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் ஏற்பட்ட ஒரு கொள்ளை நோய் என்று கூட வர்ணிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் மூழ்கியவர்கள் தாம் புதியதோர் உலகத்திலும், நட்பிலும், நேசத்திலும், விளையாட்டிலும் சஞ்சரிப்பதாய் எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஊமை உலகம் அவனுடைய சமூக வாழ்வையும் குடும்ப வாழ்வையும் பாழ்படுத்துகிறது என்பதை அறியாமல் உள்ளனர்.

ஒரு சராசரி இளைஞன் 7 நாட்களில் 38 மணிநேரம் அதாவது ஒரு வாரத்திற்கு ஒன்றரை நாட்கள் இணைய தளங்களில் மூழ்கிக் கிடப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் என்றால் இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்படும் பெரும்பாவங்கள் ஏராளமும் தாராளமும் ஆகும். அவற்றில் சிலவற்றைப் பற்றித்தான் இக்கட்டுரையில் காணவிருக்கின்றோம்.

பொய்ச் செய்திகளைப் பரப்புதல்

ஒரு செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைப் பதற்கான அடிப்படையை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. செய்தியைக் கொண்டு வருபவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளைத் தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யர்களில் ஒருவனாவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்:  முஸ்லிம் முன்னுரை (6)

ஆனால் இன்றைக்கு பலர் தாம் கேள்விப் பட்டதையெல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் மக்களுக்கு மத்தியில் பரப்பி விட்டு சந்தோசம் அடைகின்றனர். நிச்சயமாக பொய்களைப் பரப்புதல் என்பது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் கொடும்பாவம் என்பதை ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் எச்சரிக்கை செய்கின்றன. சுருக்கத்தைக் கருதி அவற்றை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் பொய் என்பது அதன் தன்மைக்கேற்ப மிகப் பெரும் பாவம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செய்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவற்றை மக்களுக்கு மத்தியில் பரப்பிவிடுவது கூடாது. அதனைப் பற்றி தீர விசாரிக்கும் ஆற்றல் பெற்றவர்களிடம் தான் அதனைத் தெரிவிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வாறு பரப்பியவர்களை திருமறைக் குர்ஆன் கண்டித்து அது ஷைத்தானைப் பின்பற்றுதல் என்று எச்சரிக்கை செய்கிறது.

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

அல்குர்ஆன் 4:83

நன்மை செய்கிறோம், எச்சரிக்கிறோம் என்ற பெயரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் பயத்தைப் பரப்புவதைச் சிலர் செய்கின்றனர். பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் செய்யும் இந்த வேலையை முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்று இவ்வசனம் எச்சரிக்கை செய்கிறது.

ஒரு பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தால் அதைத் தக்கவர்களிடமும், ஆய்வு செய்வோரிடமும் கூற வேண்டும். மக்களிடம் பரப்பக் கூடாது.

“அங்கே பத்துப் பேர் செத்து விட்டார்கள். இங்கே நூறு வீட்டைக் கொளுத்தி விட்டார்கள்’’ என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதால் நாளைக்கு வர வேண்டிய கலவரம் இன்றைக்கே வந்து விடும். சமுதாயமும் பீதியில் உறைந்து நிம்மதியை இழந்து விடும். அதுபோல் மிகப் பெரிய பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கும்போது அதை மறைத்தோ, குறைத்தோ பரப்புவதும் தவறாகும். இன்னும் சொல்வதானால் இது போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றால் வழிநடத்தும் தலைவர்களின் கவனத்துக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். நாமாகப் பரப்பக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. இதைத்தான் இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் செய்து கொண்டிருக்கிறனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளையும், பலவீனமான ஹதீஸ்களையும் இன்றைக்குப் பலர் வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் பரப்பி பெரும்பாவத்தைச் செய்துவருகின்றனர்.

இஸ்லாம் தொடர்பான ஒரு செய்தியைக் கூறும் போது அது உண்மையான செய்திதானா என்பதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திய பிறகே மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 106, 107, 1291

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். 

அல்குர்ஆன் 6:21

நபியவர்கள் கூறாத பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்புவது நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளும் மிகப் பெரும் பாவமாகும். இப்பெரும் பாவத்திற்கு உலைக்களமாகப் பலர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நாம் மறுக்க இயலாது. எனவே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் செய்தி களைப் பரப்புவதில் மிகவும் பேணுதலாகச் செயல்பட வேண்டும்.

ஆபாசங்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புதல்

சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆபாசம் மற்றும் வதந்திகளை சர்வ சாதரணமாகப் பரப்பி வருகின்றனர்.

நடிகர், நடிகைகளின் ஆபாசப் படங்களையும், ஒன்றுமறியாத அப்பாவிகளின் அந்தரங்கங்களைப் படம் பிடித்து அவர்களின் மீது அவதூறுகளைச் சுமத்தி பரப்பி விடுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர். பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவர்கள் நிச்சயமாக மறுமையில் இறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது.

தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லா தவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

அல்குர்ஆன் 4:112

அன்னை ஆயிஷா (ரலி) மீது அவதூறுச் செய்தி பரப்பப்பட்டது தொடர்பாக திருமறைக் குர்ஆன் பேசுவதைப் பாருங்கள்.

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 24:15

இதைக் கேள்விப்பட்ட போது ‘‘இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

அல்குர்ஆன் 24:16

இது போன்ற வதந்திகளையும், ஆபாசமான தகவல்களையும் பரப்புவது கூடாது என அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

 நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:17, 18, 19

அது போன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக பரிசாகம், கேலி செய்தல், பட்டப் பெயர்களைச் சூட்டி அழைத்தல், குறைகூறுதல் போன்ற காரியங்களையும் பலர் செய்து வருகின்றனர். இதுவும் இஸ்லாம் தடுத்த, தீய பண்புகளில் உள்ளவையாகும். இதன் மூலம் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் உடைகின்றது. பகைமை நெருப்பாய் எரிகின்றனது.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர் களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.  நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 48:10, 11

இஸ்லாம் தடுத்துள்ள தீய பண்புகளை வளர்ப் பதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்வைச் சீரழிக்கும் சமூக வலைத்தளங்கள்

நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் குடும்ப உறவுகள் சீரழிந்து வருகின்றன.

பெற்றோர் பிள்ளைகள் உறவு, கணவன் மனைவி உறவு,  குடும்பத்தினர் மத்தியிலான அந்நியோன்யம் போன்றவை பாழ்பட்டு வருகிறது.

அதிகமான பெற்றொர்கள் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் மூழ்கிக் கிடக்கின்ற காரணத்தினால் குழந்தைகள் பெற்றோர்கள் மூலம் கிடைக்க வேண்டிய அரவணைப்பு இல்லாமல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மன அழுத்தம், பலரோடு கலந்துறவாட வெறுத்து தனிமையில் ஒதுங்குதல், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள் (இதனை ஆட்டிசம் என்று குறிப்பிடுவார்கள்) இதுபோன்ற பல பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

பல பெற்றோர்கள் குழந்தைக்கு உணவூட்டும் நேரத்தில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பல மணிநேரம் குழந்தைக்கு உணவூட்டுகின்றனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடித்தால் குழந்தையை அரவணைத்து அன்போடு அமுதூட்ட எரிச்சல்பட்டு  வாட்ஸ்அப் பார்க்கும் ஆர்வத்தில் குழந்தைகளை அடித்துத் திட்டுகின்றனர். பெற்ற பிள்ளைகளுக்கு உணவூட்டுவதை விட்டும் அவர்களை வாட்ஸ்அப் பேஸ்புக் திசைதிருப்பி விடுகிறது.

இன்னும் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகளின் கைகளில் ஏதாவது விளையாட்டுகள் அல்லது கார்ட்டூன்களை வைத்து பார்க்கக் கொடுத்து விட்டு, பல மணி நேரம் அவர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக்குகளில் மூழ்கி விடுகின்றனர்.

ஓடி விளையாட வேண்டிய குழந்தை யூடியூபில் கார்ட்டூன் பார்த்தவனாக ஒரு ஓரத்திலும், பெற்றோர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக்கில் மூழ்கியவர்களாக மறு ஓரத்திலும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் பல குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே பள்ளிவாசலுக்குச் செல்லுதல், மதரஸாவிற்குச் செல்தல், ஒழுக்க நடைமுறைகளைக் கற்றல் போன்றவற்றை வெறுப்பவர்களாகவும், கார்ட்டூன்களை அதிகம் நேசிப்பவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.

குழந்தைகளின் இம்மை மற்றும் மறுமை வாழ்விற்கு மிகப் பெரும் பாதிப்பாக பெற்றோர்களின் இந்தச் செயல்பாடு அமைவதுடன் பெற்றோர்களும் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்புதாரியாவாள். தன்னுடைய பொறுப்பைப் பற்றி அவள் மறுமையில் விசாரிக்கப்படுவாள்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (2554)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 66:6

குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாத பெற்றோர்கள் மேற்கண்ட வசனம் மற்றும் நபிமொழியின் பிரகாரம் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள். எனவே வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் மூழ்கி, குழந்தைகள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாத பெற்றோர்கள் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

மேலும் கணவன் மனைவிக்கு மத்தியிலான உறவிலும் இந்த சமூக வலைத்தளங்கள் பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்குகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங் களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2911

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு  மனிதன்  பெறுகின்ற  பொக்கிஷங்களிலேயே  சிறந்த  ஒன்றை  நான்  உனக்கு  அறிவிக்கவா? (அவள் தான்)  நல்ல  மனைவியாவாள்.  கணவன்  அவளை  நோக்கினால் அவனை  மகிழ்விப்பாள்.  அவன்  கட்டளை  இட்டால்  கட்டுப்படுவாள்.  அவன்  அவளிடம் இல்லாமல்  இருக்கும்  போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

மேற்கண்ட நபிமொழிகள் நல்லொழுக்கமுள்ள மனைவியின் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றன. கணவன் நோக்கும் போது அவனை மகிழ்விப்பதும், அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவதும் நல்லொழுக்கமுள்ள மனைவியின் இலக்கணமாகும்.

ஆனால் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகள் இதற்கு உலை வைக்கின்றன. அதிகமான பெண்கள் வெளியிலிருந்து சோர்வாக வீடு திரும்பும் கணவனுடன் ஆசையுடன் உரையாடாமல் வாட்ஸ்அப்பில் தோழிகளுடனும் வேறு யார் யாருடனோ உறவாடிக் கொண்டுள்ளனர்.

இதனால் கணவனுடைய உள்ளத்தில் மனைவியைப் பற்றிய வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. மனைவியின் மீது சந்தேகமும், கணவனுக்கு நிம்மதியும் இல்லாமல் வாழ்க்கையே வெறுப்பானதாக மாறிவிடுகிறது.

கணவன் உணவருந்தும் நேரத்தில் அவர் என்ன விரும்புகின்றார் அவருக்கு என்ன தேவை என்பதைக் கவனிக்காமல் செல்போன்களின் வண்ணத்திரையில் நிலைகுத்தி விடுகின்றனர்.

அது போன்று கணவன்மார்களின் நிலையையும்  சொல்ல வேண்டியதில்லை.

‘‘முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி (1082)

அழகிய கணவனின் உதாரணத்தை மேற்கண்ட நபிமொழி எடுத்துரைக்கின்றது. ஆனால் இன்றைய நிலையில் ஆசையுடன் காத்திருக்கும் மனைவியுடன் உரையாடாமல் பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் அதிகமானோர் தேவையற்ற உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவரோடு ஒருவர் கலந்த உறவு என கணவன் மனைவி உறவை திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகள் கணவன் மனைவியை ஒருவரை விட்டும் ஒருவரைப் பிரிந்த உறவுகளாக மாற்றிவிட்டது. ஆளுக்கொரு செல்போனை வைத்துக் கொண்டு ஊமைகளாக ஒரே அறையில் ஒதுங்கிக் கிடக்கின்றனர்.

கணவனின் அன்பிற்கும், ஆறுதலான பேச்சுக்கும் ஏங்கும் மனைவி அது கிடைக்காத போது கணவன் மீது வெறுப்புகின்றாள். இதனால் குடும்ப வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில சூழ்நிலைகளில் இது விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகின்றது.

சமூக வலைத்தளங்கள் என்பது கத்தியைப் போன்றதாகும். அதனை முறையாகப் பயன் படுத்தினால் அதன் மூலம் பல பயன்களை நாம் அடைந்து கொள்ளலாம்.

அதனை முறையற்றுப் பயன்படுத்தினால் அது நமக்கு மிகப் பெரிய பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

எனவே சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்குரிய வழியைத் தேடுவோமாக!

—————————————————————————————————————————————————————————————

இணை கற்பித்தல்  தொடர் – 48

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

‘‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’’

திருக்குர்ஆன் 49:7

‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை அறியாமல் பிதற்றுகின்றனர்.

இவ்வசனம் அருளப்பட்டது முதல் இப்போது வரை உயிருடன் இருக்கிறார்கள் என்றால் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை ஏன் அவர்கள் செய்யாமல் உள்ளனர்? தூதர் என்ற முறையில் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும் கடமையை அவர்கள் விட்டிருப்பார்களா?

இன்று சமுதாயம் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்துள்ள நிலையில் அதை ஏன் தடுக்க வராமல் உள்ளனர்?

முஸ்லிம் நாடுகள் தமக்கிடையே போர் செய்து கொண்டு பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? ஏன் அதைச் செய்யவில்லை? தூதருக்கு அதுதானே முதல் கடமை?

அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் குழி தோண்டி அடக்கம் செய்வது ஆகுமா? உயிருடன் உள்ளவரைத் தான் நபித்தோழர்கள் அடக்கம் செய்தார்களா?

இப்படிச் சிந்தித்துப் பார்த்தால் இது போல் உளற மாட்டார்கள்.

திருக்குர்ஆனில் உலகம் உள்ளளவும் கடைப்பிடிக்க வேண்டிய போதனைகளும் உள்ளன. அருளப்பட்ட காலத்து வரலாறும் உள்ளது. அது அந்தக் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும்.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற சொல்லுக்கு இவர்கள் கூறுகிறபடி பொருள் கொண்டால் நபித்தோழர்களும் உயிரோடு உள்ளனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். உங்களிடையே என்று யாரை அல்லாஹ் அழைத்துப் பேசுகிறார்களோ அவர்களும் உயிருடன் உள்ளனர். அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கலந்து வாழ்கின்றனர் என்று சொல்ல வேண்டும். அவ்வாறு இவர்கள் சொல்வதில்லை.

மேலும் இவ்வசனத்துக்கு முன்னுள்ள வசனங்களும் இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும் என்று இதற்கு முன்னுள்ள 49:2 வசனம் கூறுகிறது.

நபிகள்  நாயகத்தின் குரலை விட மற்றவர்கள் குரலை உயர்த்தக் கூடாது என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அவர்களின் குரல் எந்த அளவில் இருக்கும் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தான் அறிய முடியும். அவர்களின் குரலைக் கேட்டு அதைவிட குரலைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றால் இது அன்றைய காலத்தவர்களுக்குத் தான் பொருந்தும். எனவே இது வரலாற்று நிகழ்வாகச் சொல்லப்படுகிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பார்கள் என்ற கொள்கையைச் சொல்லவில்லை என்பது இதில் இருந்து உறுதியாகின்றது.

மேலும் அதற்கு அடுத்த வசனத்தைப் பாருங்கள். தீய கொள்கை உள்ளவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள். நீர் அவர்களிடம் வரும் வரை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:4, 5

நபியின் வீட்டுக்கு வெளியே நின்று அவர்களை அழைக்கக் கூடாது; அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அப்படியானால் இவர்கள் மதீனாவுக்குச் சென்று நபியவர்களின் வீடாகிய அவர்களின் அடக்கத்தலத்தின் வாசலில் காத்திருக்க வேண்டும். நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். கியாமத் நாள் வரை இவர்களுக்கு வாழ்நாள் அளிக்கப்பட்டு  இவர்கள் காத்திருந்தாலும் நபியவர்கள் வெளியே வந்து இவர்களைச் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்வது வரை வாழ்ந்த முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.

பினவரும் வசனமும் இது போன்றது தான். இவர்களின் தீய கொள்கைக்கு ஆதாரமாக ஆகாது.

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 3:101

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் நடப்பதை எப்போது அறிவார்கள், எப்போது அறிய மாட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப்பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை. விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர்ஆன் 13:40

(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.

திருக்குர்ஆன்  40:77

அந்த மக்களுக்கு எச்சரித்தவற்றில் சிலதைக் காட்டினால் என்பதற்கு எதிர்ச்சொல்லாக மரணிக்கச் செய்தால் என்ற சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உம்மை மரணிக்கச் செய்யாமல் விட்டு வைத்தால் நீர் அதனைக் காண்பீர். மரணித்து விட்டால் அவர்களுக்கு நேரும் கதியைக் காண மாட்டீர் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லித் தருகிறான்.

எனவே நபிகள் நாயகத்தை அல்லாஹ் கைப்பற்றிக் கொண்ட பின்னர் இவ்வுலகில் நடப்பதை அறியும் ஆற்றல் நபியவர்களுக்கு அறவே இல்லை என்பதை இவ்விரு வசனங்களும் அழுத்தமாகச் சொல்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாற்று நிக்ழ்ச்சிகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! ‘‘நாங்கள் கிறித்தவர்கள்’’ எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 5:82

முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களாக கிறித் தவர்களைக் காண்பீர்கள் என்று சொல்லப்படுவதன் கருத்து என்ன? இவ்வசனம் அருளப்படும் போது வாழ்ந்த கிறித்தவர்கள் அப்படி இருந்தார்கள் என்பதுதான் இதன் பொருள்.

காலாகாலம் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் கிறித்தவர்கள் முஸ்லிம்களின் முதல் எதிரிகளாக இருந்தார்கள் என்பதை சிலுவைப் போர்களும், இன்றுள்ள கிறித்தவ நாடுகளின் அத்துமீறல்களும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. எனவே இது அன்றைய காலத்து வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை. அது போல் தான் உங்களுடன் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:53

ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது மனைவியை மணந்து கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணம் என தீய கொள்கை உடையவர்கள் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதையும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவான சான்றுகள் மூலம் முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்தின் மனைவியரை மற்றவர்கள் மணக்கக் கூடாது என்ற சட்டம் தான் மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருப்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படவில்லை.

இவர்களின் இந்த வாதம் தவறு என்பதை இன்னொரு சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதனின் தந்தை, அவனது தாய் அல்லாத இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தந்தை இறந்த பின்னர் அவரது மனைவியை மகன் மணந்து கொள்ளக் கூடாது என்று திருக்குர்ஆன் 4:22 வசனம் கூறுகிறது.

தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இதனால் கெடும் என்பது தான் இந்தத் தடைக்குக் காரணம் என்று அறிவுடைய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

‘இல்லை… அந்தத் தந்தை செத்த பின்பும் உயிரோடு இருக்கிறார் என்பதற்காகத் தான் அவரது மனைவியை அவரது மகன் மணக்கக் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது’ என்று அறிவுடைய மக்கள் புரிய மாட்டார்கள்.

நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

—————————————————————————————————————————————————————————————

முத்தலாக் விமர்சனங்களும் விளக்கங்களும்

சபீர் அலீ M.I.Sc.

கடந்த சில மாதங்களாக “மனாருல் ஹுதா” என்ற மத்ஹப் பத்திரிக்கை ”குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முத்தலாக்” என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆக்கத்தைத் தொடராக வெளியிட்டு வருகிறது.

அதில் ஜனவரி மாத இதழின் தொடரில் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒரேடியாக மூன்று தலாக்கையும் சொல்கின்ற நடைமுறை இருந்தது என்றும் இவ்வாறு தலாக் சொல்லப்பட்ட போது அது செல்லுபடியாக்கபட்டது என்றும் கூறி அதற்கு சில செய்திகளை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு ஆதாரம் காட்டுவதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் இதற்கு அனுமதி தந்துள்ளார்கள் என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்க எண்ணுகின்றனர்.

அவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் செய்திகளிலிருந்து, மத்ஹபைத் தூக்கி நிறுத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் மேல் இட்டுக்கட்டுவதற்கும் தயங்க மாட்டார்கள் என்ற உண்மை புலப்படுகிறது.

அவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளின் தரம் என்ன? ஆதாரப்பூர்வமான செய்திகளில் எவ்வாறெல்லாம் திருகுதாளம் புரிந்துள்ளார்கள் என்பதையே இக்கட்டுரையின் வாயிலாக அறிய இருக்கின்றோம்.

முத்தலாக் சொல்லும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது என்பதற்கு இவர்கள் கூறும் அனைத்து ஆதாரங்களிலும் “தல்லக்கஹா ஸலாஸன்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைக்கு நேரடி பொருள் “மூன்று தலாக் சொல்லிவிட்டார்” என்பதாகும்.

இதன் நேரடிப் பொருளில் மூன்று தலாக்கையும் மொத்தமாகச் சொன்னாரா? அல்லது அல்லாஹ் சொன்ன கால இடைவெளிவிட்டு சொன்னாரா என்ற தகவல் கிடையாது.

இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

செய்தி – 1

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَجُلًا طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فَتَزَوَّجَتْ فَطَلَّقَ فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَحِلُّ لِلْأَوَّلِ قَالَ لَا حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا كَمَا ذَاقَ الْأَوَّلُ رواه البخاري 5261

‘‘ஒருவர் தன்னுடைய மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார் (தல்லக்கஹா ஸலாஸன்). அதனால், அவள் வேறொவரை மணந்து கொண்டாள். பிறகு அவரும் அவளை தலாக் விட்டுவிட்டார். இப்போது முந்தய கணவர் (திருமணம் செய்து கொள்வதற்கு) அவள் அனுமதிக்கப்பட்டவளா?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கபட்டது. அதற்கு, ‘‘இல்லை முந்தயை கணவர் அவளிடம் தாம்பத்திய இன்பம் பெற்றதைப் போன்றே இரண்டாம் கணவரும் இன்பம் பெறும் வரை முடியாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 5261

இந்தச் செய்தியில் தல்லக்கஹா ஸலாஸன் (மூன்று தலாக் கூறிவிட்டார்) என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியை தங்களின் ஆதாரங்களில் ஒன்றாக அவர்கள் எடுத்து வைத்து மூன்று தலாக்கையும் ஓரே நேரத்தில் சொல்லும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது என்றும், அது மூன்று தலாக்காகவே கருதப்பட்டது என்றும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்தச் செய்தி முழுமையாக அதே புகாரி நூலில் இடம்பெற்றுள்ளது. அதில் தல்லக்கஹா ஸலாஸன் எந்த அர்த்ததில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரமும் உள்ளது.

حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رِفَاعَةَ الْقُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَبَتَّ طَلَاقَهَا فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ فَجَاءَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ لِهُدْبَةٍ أَخَذَتْهَا مِنْ جِلْبَابِهَا قَالَ وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَابْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ جَالِسٌ بِبَابِ الْحُجْرَةِ لِيُؤْذَنَ لَهُ فَطَفِقَ خَالِدٌ يُنَادِي أَبَا بَكْرٍ يَا أَبَا بَكْرٍ أَلَا تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التَّبَسُّمِ ثُمَّ قَالَ لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ رواه البخاري 6084

ரிஃபாஆ அல்குரழீ (ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்து விட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் அவரை மணமுடித்துக் கொண்டார்கள். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கையும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் மணந்து கொண்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாம் கணவரான) இவருக்கு இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்று தான்’’ என்று கூறி தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் அந்த அறையின் வாசலில் அனுமதிக்காக (காத்துக்கொண்டு) அமர்ந்திருந்தார்கள். காலித் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாதென இவரை நீங்கள் கண்டிக்கக் கூடாதா?’’ என்று கேட்கலானார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ புன்னைகை செய்ததைவிடக் கூடுதலாக (வேறேதும்) செய்யவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்ணிடம்), “நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். நீ (உன் இரண்டாம் கணவரான) இவரிடமும் இவர் உன்னிடமும் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அது முடியாது’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6084

தல்லக்கஹா ஸலாஸன்  (மூன்று தலாக் சொன்னார்) என்றும் ப(தீ)த்த தலாக் (ஒட்டுமொத்த தலாக்கும் சொன்னார்) என்றும் இந்தச் செய்தியின் சில அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

அந்த வார்த்தைகள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும், “என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கையும் சொல்லிவிட்டார்”  என்ற வாசகம் விளக்குகிறது. இவர்கள் கூறுவது போன்று ஒரேயடியாக முத்தலாக் கூறாமல் இரண்டு தலாக்கிற்கும் உரிய தவணை அளிக்கப்பட்டு, பின்னர் மூன்றாவது தலாக் கூறியதையே இந்த வாசகம் உணர்த்துகின்றது.

இதுபோன்றே ஃபாத்திமா பின்த் கைஸ் தொடர்பாக வரும் செய்தியும் (முஸ்லிம் 2957) தெளிவுபடுத்துகிறது.

ஏற்கனவே இரண்டு தலாக் சொல்லிப் பிரிந்து, பிறகு சேர்ந்து மூன்றாம் தலாக்கையும் சொல்லி ஒட்டுமொத்தமாகப் பிரிந்துவிட்டார் என்றே இந்த ஹதீஸின் வார்த்தை எந்த வித வியாக்கியானமும் இல்லாமல் நேரடியாக உணர்த்துகிறது.

இந்த அர்த்தத்தில்தான் ‘தல்லக்கஹா ஸலாஸன்’ போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இதிலிருந்து விளங்குகிறது.

முத்தலாக்கிற்கு ஆதரவாக இவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரத்தை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————————————

பெண்கள் பகுதி

கடமையை மறந்தது ஏன்?

ஆஃப்ரின்

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும், தலையாய வணக்கமாகவும் இருப்பது தொழுகையாகும்.  இத்தொழுகையில் முஸ்லிம்கள் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர்.  இதற்குக் காரணம் இறைவனையும்,  இறைகட்டளையையும், அவன் அருட்கொடைகளையும் நாம் மறந்தது தான்.

கற்சிலைகளையும் கண்ணில் கண்டவைகளையும் கடவுள் என எண்ணி வணங்கி வரும் மக்கள் கூட  (கற்பனை தெய்வங்களுக்கு) வணக்கத்தில் குறை ஏதும் வைப்பதில்லை. அலகு குத்துதல், ஆணிச்செருப்பு, பூ (தீ) மிதித்தல், மண்சோறு சாப்பிடுதல் என பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, உடலை வருத்திக்கொள்ளக் கூடிய காரியங்களை வணக்கமாகச் செய்து வருகின்றனர். இது அவர்களுக்குப் பாரமாகவோ, சலிப்பாகவோ இருப்பதில்லை.

ஆனால் மிக எளிமையான மனித சக்திக்கு உட்பட்ட வணக்கங்களையே நம்முடைய மார்க்கம் நமக்கு ஏவுகிறது. ஐவேளைத் தொழுகை என்பது அனைத்து மனிதர்களும் நிறைவேற்றுவதற்கு சாத்தியமான மிக எளிமையான ஒரு வணக்கமே. இதை நாம் சரிவர நிறைவேற்றுகிறோமா என்றால் பதில் வெற்றிடமாகவே இருக்கிறது. அந்தளவிற்கு அதைச் செய்வதில் அலட்சியமாகவும், ஆர்வமில்லாதவர்களாகவுமே பெரும்பான்மையானோர் வாழ்கின்றனர்.  அசத்தியவாதிகளுக்குத் தமது  வணக்கத்தின் மீதுள்ள ஆர்வம் கூட சத்திய மார்க்கத்திலுள்ளவர்களிடம் காணமுடிவதில்லை என்பது வருத்தத்திற்குரியதே! இதோ நமது மார்க்கம் தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றிப் போதிப்பதைக் கேளுங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மனிதனுக்கும்  இணைவைப்பு மற்றும் இறைமறுப்புக்கும் மத்தியில் பாலமாக இருப்பது தொழுகையைக் கைவிடுவது தான்.

நூல்:முஸ்லிம் 134

புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: இப்னுமாஜா 194

இந்தத் தொழுகையாகிறது ஈமானுக்கும் இறை மறுப்பிற்கும் ஒரு திரையாகவும்,  ஒருவர் முஸ்லிம் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மிகப்பெரும் ஆயுதமாகவும் இருக்கிறது.  இதே போல் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய ஏராளமான வசனங்களும், ஹதீஸ்களும் இருக்கின்றன.

இறைவன்  இத்தொழுகையை வலியுறுத்தியது போல் வேறு எந்த வணக்கத்தையும் வலியுறுத்தியதாகக் காணமுடியவில்லை. எந்தளவிற்கு என்றால், ஒரு தாய், தன் மகளுக்கு திரும்பத் திரும்ப அறிவுரை கூறுவதைப் போன்று அல்லாஹ்வும் குர்ஆனின் வழிநெடுகிலும் தொழுகையை நிலைநாட்டுமாறு முஃமின்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

நானே அல்லாஹ். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!.

திருக்குர்ஆன்  20:14

இறைவனை நினைப்பதற்கான ஒரு சிறந்த வழியாக தொழுகையைக் குறிப்பிட்டு அதை நிலைநாட்டக் கட்டளையிடுகிறான்.

அற்ப உலகில் அழியும் அமல்கள்

ஒவ்வொன்றுக்கும் தகுந்த நேரம் குறிக்கப் பட்டிருப்பதைப் போன்று ஏக இறைவன் தன்னை வணங்குவதற்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துள்ளான்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமையாக உள்ளது.

திருக்குர்ஆன் 4:103

ஐவேளைத் தொழுகைகளை, குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்துவிட வேண்டும். அதைப் பிற்படுத்தக் கூடாது என அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டாயமாக ஆக்கியுள்ளான் என்பதை மேலுள்ள வசனம் தெளிவுபடுத்துகிறது.

அன்றாட வாழ்வில் காலை முதல் மாலை வரை நமது தேவைகளைச் செம்மையாகச் செய்து முடிப்பதற்கு ஒரு கால அட்டவணையை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் பம்பரமாய்ச் சுழன்று வருகிறோம். ஆனால்   கடமையான தொழுகைக்கான நேரத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியிருந்தும் தற்போதுள்ள காலத்தில் தொழுகை நேரம் வந்தவுடன் அறிவிப்பு செய்யப்பட்டாலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வணங்குவதில்லை.

நம் மார்க்கம் தொழுகைக்குப் பிறகு தான் ஏனைய விஷயங்கள் என்று கூறுகிறது. நாமோ நமது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நேரம் கிடைத்தால் தொழுகை என்றே வாழ்கிறோம். நிர்வாக மன்னர்களான ஆண்கள், உழைப்பு தான் பிரதானம்; மனிதன் உயிர் வாழப் பணமே இன்றியமையாமை; இறைவனுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கினால்  இலாபம் குறைந்து விடும் எனக்கருதி இறைவனை நினைக்க மறந்து விடுகின்றனர்.

வீட்டை ஆளும் இல்லத்தரசிகளோ, வீட்டா ருக்குப் பணிவிடை செய்வது, பிள்ளைகளைப்  பராமரிப்பது, வீட்டு வேலைகள் என தமது பொறுப்பைக் காரணம் காட்டி நழுவிச்செல்கின்றனர்.  ஆனால் தொழுகைக்குப் பிறகு தான் ஏனைய விஷயங்கள் என்றும் இறை நினைவிற்கு வேறு எதுவும் தடையாக இருக்கக் கூடாது எனவும் மார்க்கம் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம்.  இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.

திருக்குர்ஆன்  63:9

இவ்வாறு பொருளாதாரத்தையும் பொறுப்பை யும் முன்னிறுத்தி இறைவனை வணங்கவே நேரம் இல்லை எனப் பேசுபவர்களுக்கு, திருமணம் போன்ற இதர விஷேசங்களில் கலந்து கொள்வதற்கும் ஊர் சுற்றுவதற்கும் நண்பர்களுடன் லூட்டி அடிப்பதற்கும் தொலைக்காட்சியிலேயே லயித்துப்போய் விடுவதற்கும் மட்டும் நேரம் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வுலக இன்பத்தில் மதிமயங்கும் போது பொருளாதாரமோ பொறுப்புச் சுமையோ கண்முன் வருவதில்லை. மாறாக மார்க்கம் என்று வரும்போது மட்டும்  இந்தச் சுமைகள் கண்ணை மறைக்கின்றன. அற்பமான இவ்வுலகத்தின் மீது நமக்கிருக்கும் ஆசையும் ஆர்வமும் இறைவணக்கத்தில் காண முடிவதில்லை.  ஆனால் இவ்வுலகமும் அதன் மீது மனிதன் கொண்ட காதலும் அழியக்கூடியவையே. இவ்வுலகம் கவர்ச்சியும் சோதனைக்கூடமும் தான். இதோ படைப்பாளன் கூறுகிறான்:

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.  இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

திருக்குர்ஆன்  31:35

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்.  நிலையான நல்லறங்களே சிறந்ததுமாகும்.

திருக்குர்ஆன்  18:4

அழியக்கூடிய உலகிற்காக நன்மைகளை அழித்து வருகிறோம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

தொழுகைகளை களாச் செய்யலாமா?

சிலர் தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல் அந்த தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று கருதுகின்றனர். இதனை களாத் தொழுகை எனவும் கூறுகின்றனர். ஆனால் மார்க்கத்தில் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  அல்லாஹ்வும், அவன் தூதரும் காட்டித்தராத எந்த ஒரு வணக்கமும் நிராகரிக்கப்படும். அது நன்மையாக அங்கீகரிக்கப்படாது. இதோ ஏந்தல் நபியின் எச்சரிக்கையைச் செவிமடுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நம்முடைய இந்த  (மார்க்க)  விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

நமது மறதியின் காரணமாகவோ, உறக்கத்தின் காரணமாகவோ தொழுகையைத் தவறவிட்டால் நினைவு வந்தவுடன் அல்லது விழித்தவுடன் தொழுது கொள்ள அனுமதி உள்ளது.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயனம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே  (ஓரிடத்தில் இறங்கி)  ஓய்வெடுத்தார்கள் அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள்  (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும்  (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம்  (பஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை  (கிழக்கு) த்திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், பிலால்! என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக் கொண்ட அதே உறக்கம் தான் என்னையும் தழுவிக்கெண்டது’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள் என்று கூற உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளு செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹூத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், ‘‘தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ் என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக (20:14) என்று கூறுகின்றான்’’ என்றார்கள். 

நூல்: முஸ்லிம் 1211

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம், அப்போது எங்களில் சிலர் சிலரிடம் ‘‘நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?’’ என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அறிந்து கொள்ளுங்கள். என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா? என்று கேட்டு விட்டு, ‘‘அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை. குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறு தொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான்.  இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுது கொள்ளட்டும். மறுநாளாகி விட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுது கொள்ளட்டும் என்றார்கள்.

 நூல்: முஸ்லிம் 1213

மேற்கூறிய காரணத்திற்காகவே தவிர வேறு எதற்காகவும் தொழுகையைத் தவற விடக் கூடாது.

மேலும் இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால், தூக்கத்தினால் தொழுகையின் நேரம் தவறியதால் விழிப்பு வந்ததும் அதை நிறைவேற்றி விடுகின்றனர். எனினும் நேரம் தவறியது பாவமாகி விடுமோ என்று நபித்தோழர்களின் உள்ளம் பயத்தில் படபடக்கிறது.

இதை உணர்ந்த நபிகளார், வேண்டுமென்றே தொழுகையைத் தாமதப்படுத்துவது தான் குற்றம் எனத் தெளிவுபடுத்திய பின் தான் ஸஹாபாக்களின் உள்ளம் அமைதி பெறுகின்றது. ஆனால் இன்றோ அற்ப காரணங்களுக்காகவெல்லாம் வணக்கத்தைப் பாழ்படுத்துகிறோம்; தாமதப்படுத்துகிறோம். அதை நினைத்து நம் உள்ளம் சற்றும் களங்குவதுமில்லை; கவலைப்படுவதுமில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை உரிய நேரத்தில் நிறைவேற்றுகின்ற நன்மக்களாக ஆவோம்.

—————————————————————————————————————————————————————————————

வலீமார்களிடம்  உதவி தேடலாமா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து, அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 23:117

அல்லாஹ் ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு உலகில் எவராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது.

உலகைப் படைத்த அல்லாஹ்வே ஒன்றிற்கு ஆதாரமில்லை என்று சொன்ன பிறகு அவ்விஷயத்திற்கு நான் ஆதாரம் தருகிறேன் என ஒருவன் கூறினால் அவன் சொல்வது உண்மையான ஆதாரமில்லை என்பதுடன் அவன் இறைவனுடனும், இறைவேதத்துடனும் மோதத் தயாராகி விட்டான் என்று பொருள்.

இறைவேதத்துடன் மோதும் இந்த வேலையைத் தான் கப்ர் வணங்கிகள் கலக்கமின்றி செய்து வருகிறார்கள்.

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்தனை  புரியவும், அவர்களிடம் உதவி தேடவும் திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆதாரமுண்டு எனக்கூறி அப்பாவி மக்களை நரகப்படுகுழிக்கு இவர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வே ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு இவர்கள் ஆதாரம் குறிப்பிடுகிறார்களாம்.

அதையும் திருக்குர்ஆன் – நபிமொழிகளிலிருந்தே காட்டுகிறார்களாம்.

இப்படி குறிப்பிடுவோர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் மோதவில்லை, இறைவனுடனே மோதுகிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் அப்பாவி மக்களை இணைவைப்பை நோக்கி அழைப்பதற்கு எம்மாதிரியான தந்திரங் களை, கைங்கர்யங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடிப்பது கொள்கைவாதிகளின் கடமையாகும்.

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் இவர்கள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.

வாதம்: 1

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي

‘என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்’ (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)

பதில்: 1

இது பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதில் இவர்களின் குட்டும் அம்பலமாகிறது.

இச்செய்தி இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் பைஹகீ, தப்ரானீயில் இல்லை. மாறாக இப்னு அஸாகிரின் தாரீகு திமிஷ்க், பாகம்: 43, பக்கம்: 5 மற்றும் இப்னு முன்தஹ் அவர்களின் மஜாலிஸ், பக்கம்: 33 உள்ளிட்ட நூல்களில் தான் இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்திகளில் உள்ள பலவீனத்தை அறியும் முன் இதற்கு இவர்கள் செய்த பொருள் சரியா? என்பதைப் பார்ப்போம்.

اطلبوا الحوائج الي ذوي الرحمة

என்ற வார்த்தைக்கு ரஹ்மத்தான கூட்டத் தார்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று பொருள் செய்து, ரஹ்மத்தான கூட்டத்தார் என்றால் அவர்கள் தான் வலீமார்கள், நாதாக்கள். அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என வியாக்கியானம் அளிக்கிறார்கள்.

இச்சொல்லுக்கான அர்த்தம் இதுவல்ல. இவர்கள் குறிப்பிடும் பொருளில் இச்செய்தி இல்லை.

மனிதர்களிடம் துஆ செய்வதைப் பற்றி இச்செய்தி பேசவில்லை. யாசகம், பொருளாதார உதவி கேட்பது பற்றித்தான் இச்செய்தியில் சொல்லப்படுகிறது. யாரிடம் யாசகம் கேட்கலாம் – யாரிடம் கேட்க கூடாது என்பதை தான் இச்செய்தி சொல்கிறது என்பதை அதன் முழுமையான மொழிபெயர்ப்பை அறியும் போது தெரியலாம்.

اطلبوا الحوائج إلى ذوي الرحمة من أمتي ترزقوا وتنجحوا فإن الله يقول رحمتي في ذوي الرحمة من عبادي ولا تطلبوا الحوائج عند القاسية قلوبهم فلا ترزقوا ولا تنجحوا

என் சமுதாயத்தில் உள்ள இரக்கமுடையோரிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள். அப்போது தான் உணவளிக்கப்படுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். எனது அருள் என் அடியார்களில் உள்ள இரக்கமுடையோருக்குத்தான் என்று அல்லாஹ் கூறியுள்ளான். கடின சித்தம் கொண்டோரிடம் தேவைகளைக் கேட்காதீர்கள். அவர்களிடம் கேட்டால் நீங்கள் உணவளிக்கப்பட மாட்டீர்கள். வெற்றியும் கிடைக்காது என நபிகள் நாயகம் கூறினார்கள்.

ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், அருள் என பல அர்த்தங்கள் உள்ளது.

ரஹ்மத் உடையோரிடம் கேட்டால் உணவு கிடைக்கும் என்றால் இந்த ரஹ்மத் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

இரக்கம் உள்ளோரிடம் யாசகம் கேட்டால் தான் அவன் எதையாவது தருவான். உண்ண உணவு கிடைக்கும். கடுகடுப்பான நபர்களிடம் கேட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள், உண்ண உணவும் கிடைக்காது. இது தான் இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இது மனிதர்களிடம் யாசகம், பொருளாதார உதவி கேட்பதைப் பற்றித் தான் குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்.

மற்றபடி மனிதர்களிடம் துஆ செய்து உங்கள் தேவைகளைக் கேளுங்கள் என்று இந்த பலவீனமான செய்தியில் (கூட) இல்லை.

ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லும் பொருளில் தான் இச்செய்தி உள்ளது என்றாலும் அப்போதும் இது ஏற்கப்படாது. காரணம் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இப்னு அஸாகிரின் அறிவிப்பில் கல்ஃப் பின் யஹ்யா என்பார் இடம் பெறுகிறார்.

الجرح والتعديل (3/ 372)

1697 – خلف بن يحيى الخراساني بخارى

وسألته عنه فقال: متروك الحديث كان كذابا لا يشتغل به ولا بحديثه

இவரை அபூஹாதம் இமாம் அவர்கள் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர், பொய்யர், இவரும் இவரது ஹதீஸ்களும் கண்டு கொள்ளப்படாது என்று விமர்சித்துள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 3, பக்கம்: 372

மேலும் இதில் இடம்பெறும் அலீ பின் தாஹிர் அல்குரஷீ என்பவரின் நம்பகத்தன்மை ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை.

இப்னு முன்தஹ் அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஹாரிஸ் என்பார் இடம்பெறுகிறார்.

இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று அறிஞர்களால் சந்தேகிக்கப்படுபவர் ஆவார்.

நம்பகமானவர்களிடமிருந்து ஆச்சரியப்படத் தக்கவைகளைச் சொல்கிறார் என்று இமாம் ஹாகிம் அவர்களும், பலவீனமானவர் என்று அபூஸூர்ஆ அவர்களும், ஆதாரம் கொள்ளப்பட மாட்டார் என்று அபூஹாதம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இன்னும் பல விமர்சனம் இவர் மீது உள்ளது.

பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம்: 2 பக்கம்: 496

அடுத்து இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் மர்வான் அவரையும் அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் நஸாயி மற்றும் அபூஹாதம் அவர்களும், மதிப்பற்றவர் என்று இமாம் ஸஃதீ அவர்களும், நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் அவர்களும் இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று இமாம் புகாரி அவர்களும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுல் கமால்,  பாகம்: 26,      பக்கம்: 392, 393

அந்தோ பரிதாபம்

கப்ர் வணங்கிகளின் நிலையைக் கண்டால் உண்மையில் பரிதாபமாகவே உள்ளது.

மிகவும் பலவீனமான செய்தியைக் கூட உள்ளது உள்ளபடிக் கூறி, தங்கள் கருத்தை நிலைநாட்ட இவர்களால் முடியவில்லை. மிகவும் பலவீனமான செய்தி, மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அதன் யதார்த்த அர்த்தத்தை மாற்றி தங்கள் சொந்தச் சரக்குகளை உள்ளே திணித்தால் மட்டுமே தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியும் எனும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கப்ர் வணக்கத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகம் அந்த இழிநிலைக்கும் இவர்களை இட்டுச்சென்று விட்டது என்பதை இது பளிச்சென்று காட்டுகிறது.

தப்ரானியில் என்ன உள்ளது?

இவர்கள் தப்ரானியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள் அல்லவா?

இவர்கள் குறிப்பிட்ட தப்ரானீயில் அபூஹூரைராவின் அறிவிப்பாகப் பின்வரும் வாசக அமைப்பில் உள்ளது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ”.

அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளைக் கேளுங்கள்.

தப்ரானீ, பாகம்: 19, பக்கம்: 309

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அழகானவர்களிடம் துஆ செய்யலாம், அழகற்றவர்களிடம் துஆ செய்யக் கூடாது என்று கப்ர் வணங்கிகள் வாதிடுவார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இமாமைப் பள்ளியில் சேர்க்க அவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொன்னவர்கள் அவ்லியா என்றால் அவர் அழகாக இருக்க வேண்டும், அழகான அவ்லியா(?)விடம் தான் நாம் துஆ செய்ய முடியும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட என்னவுள்ளது?

இந்தச் செய்தியின் பொருள் என்ன என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவும் பலவீனமான செய்தியே.

தப்ரானியின் அறிவிப்பில் தல்ஹா பின் அம்ர் இடம்பெறுகிறார்.

இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அஹ்மத் மற்றும் நஸாயி ஆகியோரும், இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று இமாம் புகாரி அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.

தஹ்தீபுல்  கமால், பாகம்: 13, பக்கம்: 427

ஜாபிர் (ரலி) அறிவிப்பு

இதே செய்தி  தமாமுர் ராஸி அவர்களின் ஃபவாயித் எனும் நூலில் ஜாபிர் (ரலி) அறிவிப்பாக உள்ளது.

இதில் இடம்பெறும் சுலைமான் பின் கராஸ் மற்றும் உமர் பின் சுஹ்பான் ஆகிய இரு அறிவிப்பாளர்களுமே பலவீனமானவர்கள் ஆவர். அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.

சுலைமான் பின் கராஸை இப்னு அதீ, அபூஹாதம் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன்

பாகம்: 2, பக்கம்: 23

அவரது அதிகமான செய்திகளில் தவறு உள்ளது என்று உகைலீ குறிப்பிடுகிறார்.

அல்லுஅஃபாஉ லில் உகைலீ

 பாகம்: 2, பக்கம்: 138

உமர் பின் சுஹ்பானை இமாம் புகாரி மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.

தாரீகுல் கபீர், பாகம்: 6, பக்கம்: 165

அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 6, பக்கம்: 116

தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில்,

المعجم الأوسط (5/ 76)

قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم

எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

முஃஜமுல் அவ்ஸத், பாகம்: 5, பக்கம்: 76

இச்செய்தியில் முஹம்மத் பின் மர்வான் என்பவர் இடம் பெறுகிறார். அவரது விமர்சனம் முந்தைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.

ميزان الاعتدال (4/ 219)

 موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى

كذبه أبو زرعة، وأبو حاتم.

وقال النسائي: ليس بثقة.

وقال الدارقطني وغيره: متروك.

قال الاسدي: فلم أعد إليه.

وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث.

وقال ابن عدى: كان يسرق الحديث.

இவரை இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரை பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 219

மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட இச்செய்தியில் இவர்கள் சொன்ன கருத்து எதுவுமில்லை. நாம் முன்னர் சொன்ன கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த பலவீனமான செய்தி அமைந்துள்ளது. அதாவது உணவோ, பொருளாதார உதவியோ கேட்பதாக இருந்தால் இரக்கமுள்ளவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு தந்து வாழ்வளிப்பார்கள் என்று தான் இதன் பொருள் அமைந்துள்ளது.

இந்தச் செய்தியும் பல்வேறு வாசக மாற்றங்களுடன் வரும் இச்செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கப்ர் வணங்கிகள் கூறும் மயிர்க்கூச்செறியச் செய்யும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப்போம்.

வாதம்: 2

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

 اذا تحيرتم في الامور فاستعينوا باهل القبور

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ஆதாரம்: தஃப்ஸீருல் ரூஹூல் பயான், பாகம்: 5

பதில்: 2

கப்ர் வணங்கிகள் எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை இந்த வாதத்தின் மூலம் அவர்களை அறியாதவர்களும் அறிந்து கொள்ளலாம்.

தங்கள் வழிகெட்ட கொள்கையை நிலை நாட்டவும் மக்களிடம் அதை விற்கவும் எந்தச் செயலிலும் இறங்குவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது.

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரில் உள்ள வலிமார்களை கொண்டு உதவி தேடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.

தர்காவாதிகளுக்கு பகிரங்க சவால் விடுகிறோம்.

இந்தச் செய்தி எந்த ஹதீஸ் நூலில் உள்ளது? இதன் முழு அறிவிப்பாளர் தொடர் என்ன?

இணை வைப்பை ஒழிக்க வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?

இவர்கள் குறிப்பிடும் தஃப்ஸீருல் ரூஹுல் பயானிலிருந்து இதற்கான ஏற்கத்தக்க ஆதாரத்தை அரபி மூலத்துடன் வெளியிடுவார்களா?

ஒருக்காலும் அவர்களால் இப்படி ஒரு ஹதீஸை எடுத்துக் காட்ட முடியாது.

இது முழுக்க முழுக்க கப்ர் வணங்கிகளால் நபிகளார் மீது துணிந்து இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை.

நபிகளார் மீது இட்டுக்கட்ட எப்படி மனம் வந்தது? என்றெல்லாம் கப்ர் வணங்கிகளிடம் கேட்க முடியாது. அவர்களின் தொழிலே அது தானே!

தங்கள் கருத்தை நிலைநாட்ட நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்திப் பொய்களை அள்ளி விடுவது கப்ர் வணங்கிகளுக்குக் கைவந்த கலை. அவர்கள் படித்த மத்ஹபு நூற்கள் அவர்களை அப்படி பயபக்தி கொண்டவர்களாக பரிணமிக்கச் செய்கிறது.

அதனால் எப்படி நபி மீது இட்டுக்கட்டினீர்கள் என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டு வேறு சில கேள்விகளை தர்காவாதிகளிடம் கேட்கிறோம். முடிந்தால் பதிலளிக்கட்டும்.

கேள்வி: 1

ஒரு செயலில் தடுமாற்றம் ஏற்படும் போது வலிமார்களின் கப்ரில் உதவி வேண்டுமாறு நபிகளார் சொன்னது உண்மை எனில் பிறகேன் அதைச் செய்த யூத, கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் (தமது மரணத்தருவாயில்) நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்கள் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புகாரி 1390

கப்ர் வணங்கிகளின் வாதப்படி நபிகளார் சொன்னதைத் தானே யூத, கிறித்தவர்கள் செய்தார்கள்?

தடுமாற்றம் வரும்போது மட்டும் என்றில்லாமல் பல நேரங்களில் அவர்கள் நபிமார்களின் கப்ருகளுக்கு சென்று நபி சொன்னதை (?) விட ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.

பிறகேன் இந்த யூதர்களும் கிறித்தவர்களும் நபிகள் நாயகத்தால் சபிக்கப்பட்டார்கள் என்பதை யூத, கிறித்தவ கூட்டாளிகளான தர்காவாதிகள் விளக்குவார்களா?

கேள்வி: 2

எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேள் என்று குர்ஆன் வழியில் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’’ (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

இந்த இறைவசனத்தை நமக்கு கற்றுத் தந்த நபிகளார் இதற்கு மாற்றமாக, ‘உனக்குத் தடுமாற்றம் வந்தால் கப்ரில் உள்ளோரிடம் போய் உதவி தேடு, அவர்களிடம் போய் பிரார்த்தனை செய்’ என்று எப்படிக் கூறுவார்கள்?

தர்காவாதிகள் பதிலளிப்பார்களா? அல்லது பல்லிளிப்பார்களா?

கேள்வி: 3

நபிகள் நாயகம் கூறியதாக கப்ர் வணங்கிகள் இட்டுக்கட்டிச் சொன்ன செய்தியை சற்று நன்றாகக் கவனியுங்கள்.

நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை) கொண்டு உதவி தேடவும்.

இதில் வலிமார்களை என்பது நேரடிச் சொல்லில் இல்லை. அடைப்புக்குறிக்குள் தான் உள்ளது.

அப்படி பார்த்தால் கப்ரு உடையவர்களை அதாவது கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடவும் என்று தான் அந்தச் செய்தியில் உள்ளது.

கப்ரில் உள்ளவர்கள் என்பது பொதுவான சொல்லாகும்.

கப்ரில் நல்லோரும் இருப்பார்கள் தீயோரும் இருப்பார்கள்.

அதன்படி கப்ரில் உள்ள யாரைக் கொண்டும் உதவி தேடலாம் என்று சொல்லவேண்டியது தானே?

மேலும் முஸ்லிம்கள் மட்டுமின்றி இறை மறுப்பாளர்களும் கப்ரில் உள்ளவர்கள் தாம். கப்ரில் உள்ளவர்களைக் கொண்டு உதவி தேடு என்று நபி சொன்னது உண்மை எனில் கப்ரில் இறை மறுப்பாளர்களை கொண்டும் உதவி கேட்க வேண்டியது தானே? நபி சொன்னதற்குப் பிறகு அவர்களைக் கொண்டு உதவி தேடுவதில் இவர்களுக்கு என்ன தடை?

நபி மீது இட்டுக்கட்டிச் சொல்வது என்றாகி விட்டதற்குப் பிறகு வலிமார்களிடம் என்பது மட்டும் ஏன் அடைப்புக்குறிக்குள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? அதையும் நேரடியாக நபியின் வார்த்தையாக இட்டுக்கட்டி இது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாமே?

இப்படிப் பல கேள்விகள் இவர்களிடம் கேட்கலாம்.

பல வருடங்களாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு வாய் திறக்க மறுப்பவர்கள் இதற்கா பதிலளிக்கப் போகிறார்கள்?

எனவே அடுத்த வாதத்திற்குச் செல்வோம்.

—————————————————————————————————————————————————————————————

மார்க்க சபைகளில் சங்கமிப்போம்!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

மார்க்கத்தை அறியவும், அதன்படி வாழவும், அடுத்தவருக்கு அறிவிக்கவும் தேவைப்படும் வழிமுறைகள் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இருக்கின்றன. இவ்வகையில், இறைத்தூதரிடம் வந்து மக்கள் மார்க்கம் கற்றுக் கொண்ட சம்பவங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் நபிகளாரே மக்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள்; மக்களை ஒன்றுதிரளச் செய்தும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இவற்றின் மூலம் மார்க்கம் அறியும் வாய்ப்பு அன்றைய மக்களுக்கு கிடைத்தது. இதைப் பின்வரும் சம்பவங்கள் வாயிலாக விளங்கலாம்.

நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்-  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம்.  அவர் ஒருநாள்  செல்வார்; நான் ஒருநாள் செல்வேன்.  நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன்.  அது போன்று அவர் சென்றுவரும்போதும் அவ்வாறே செய்வார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (89)

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (படைப்பின் தொடக்கம் முதல் மறுமையில்) சொர்க்கவாசிகள் தமது தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் தமது தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார்; அதை மறந்தவர் மறந்துவிட்டார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (3192)

இப்படி, நாம் ஒன்றுகூடி மார்க்கம் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலும், ஆர்வமூட்டலும் குர்ஆன் ஹதீஸில் அதிகம் உள்ளது. ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகை போன்ற வணக்கங்களில் உரை நிகழ்த்துவதற்கு முக்கியத்துவம் தந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆயினும், அநேக மக்கள் மார்க்க அவைகளில் கலந்து கொள்ளாமல் கவனக் குறைவாக இருக்கிறார்கள்; ஈடுபாடின்றி ஒதுங்கி விடுகிறார்கள். அதனால் கிடைக்கும் நன்மைகளை அறியாததும் குறுகிய கண்ணோட்டமும் இதற்கு முக்கியக் காரணம் எனலாம். இது குறித்து சில செய்திகளை இப்போது பகிர்ந்து கொள்வோம்.

வீடு, அலுவலகம், கடை என்று எங்காவது தனியாக அமர்ந்து தீன் பற்றி அறிந்து கொள்வதற்கும் நன்மை உண்டு என்றாலும், மக்களோடு மக்களாக இருந்து மார்க்கம் குறித்துப் பேசும்போது, அல்லாஹ்வும் அவ்வாறே நம்மை நினைவு கூர்வான். பரிசுத்தமான அடியார்களான வானவர்களிடம் நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசுவான்.

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான்  அவனை நோக்கி ஓடிச்செல்வேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7405

பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, “நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர்.

முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிடச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, “நீங்கள் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்‘’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக் கொள்கிறான்’’ என்று தெரிவித்தார் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (5233)

தங்களைப் பற்றி பிறர் நல்ல முறையில் நினைக்க வேண்டும்; நம்மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள், அண்ட சராசரங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லவனிடம் நற்பெயரும் நற்சான்றும் பெறும் விஷயத்தில் ஆர்வமின்றி இருக்கிறார்கள். இனியாவது தங்களை மாற்றிக் கொள்ள முன்வருவார்களா?

அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் – அவர்களை நன்கறிந்திருந்தும் – “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், “பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்’’ என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?’’ என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்கிறான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்’’ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?’’ என்று கேட்பான்.

அதற்கு வானவர்கள், “இல்லை, இறைவா!’’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’’ என்று கூறுவான். மேலும், “உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்’’ என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?’’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “உன் நரகத்திலிருந்து, இறைவா!’’ என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், “அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?’’ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை’’ என்பார்கள். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’’ என்று கூறுவான். மேலும், “அவர்கள் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகிறார்கள்’’ என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், “அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கி விட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றி விட்டேன்’’ என்று கூறுவான்.

அப்போது வானவர்கள், “இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்து கொண்டான்’’ என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், “அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்’’ என (அல்லாஹ்) கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5218)

சத்தியத்தை அறியும் நோக்கம் சிறிதும் இல்லாமல் ஏதோ கடந்து போகும் போது அமர்ந்து கொள்ளும் பாவிக்கே பெரும் பாக்கியம் கிடைக்கும்போது, அல்லாஹ்வின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஆவலோடு கலந்து கொள்ளும் மக்களை அவன் வெறுமனே விட்டுவிடுவானா?

வாழ்க்கையில் எல்லோரும் எப்போதும் எதிர்பார்க்கும் நிம்மதியை அமைதியை அவர்களுக்கு அல்லாஹ் அளிப்பான்; அளவற்ற அருளை அள்ளித் தந்து வளமான வாழ்வை வழங்குவான்.

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் ஓர் இறையில்லத்தில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச்செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5231)

சிலர் தங்கள் பகுதியில் மார்க்க நிகழ்ச்சிகள் நடக்கும் போதுகூட அதில் கலந்து கொள்ள முன்வருவதில்லை; துளியளவும் முனைப்பு காட்டுவது இல்லை. நவீன சாதனங்கள் மற்றும் ஊடகங்களின் பயன்பாடு இருப்பதால் அதன் மூலம் மார்க்கத்தை தெரிந்து கொண்டால் போதும் எனும் மனப்போக்கு மிகைத்து விட்டது.

ஆனால், அந்த முயற்சியிலும் இறங்காமல் இறுதியில் முடங்கி விடுகிறார்கள். இவ்வகையில், எண்ணற்ற புத்தகங்கள் சிடிக்கள் வீட்டில் இருந்தும்கூட வாரத்திற்கு ஒருமுறை கூட தொட்டுப் பார்க்காத நபர்கள் பெருமளவு இருக்கிறார்கள். இப்படி ஷைத்தான் நம்மிடம் தவறான மனநிலையை அலட்சியப் போக்கை உருவாக்கி நன்மையை விட்டும் தடுத்து விடுகிறான். இதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.

பயான்களில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு களும் வசதிகளும் இருந்தால் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்; ஒருபோதும் தட்டிக் கழிக்க மாட்டேன் என்று இனியாவது இவர்கள் முடிவெடுக்கட்டும். நேர்வழியை அறிய முக்கியத்துவம் கொடுக்கட்டும்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்று பேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டு கொள்ளாமல்) சென்றுவிட்டார். (உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்துகொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் பேசி) முடித்ததும், “இம்மூவரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ (மக்களைத் தாண்டிச் செல்ல) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (அவரைத் தண்டிக்க) வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாகித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி (66) (474) (4389)

நாட்டு நடப்புகள், அரசியல் சம்பவங்கள், வீண் செய்திகள் பற்றி மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். அதேசமயம் மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள பத்து நிமிடங்கள், முப்பது நிமிடங்கள் கூட நேரம் ஒதுக்கத் தயங்குகிறார்கள்.

ஒருவேளை, நமக்கு எல்லாம் தெரியும் என்றோ அல்லது போதுமான அளவு தெரிந்து இருப்பதால் இனிமேல் அறியத் தேவையில்லை என்றோ அவர்கள் எண்ணினால் அது ஆபத்தின் அறிகுறி. நமக்குத் தெரிந்த செய்திகளைத்தானே சொல்லப் போகிறார்கள் எனும் பெருமித சிந்தனை வழிகேட்டில் விட்டுவிடும்.

ஏனெனில், அல்லாஹ்வைக் குறித்து அடிக்கடி நினைவு கூரும் போதுதான் நாம் எதிலும் சுதாரிப்போடு இருக்க முடியும். நம்முடைய நம்பிக்கையையும், அதற்குரிய பண்புகளையும் மெருகேற்றிக் கொள்ள இயலும். எனவேதான்,  குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன.

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று சமூகத்தில் பல நிகழ்ச்சிகள் மார்க்கத்தின் பெயரால் நடக்கின்றன. ஆனால், அங்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய வழிமுறைக்கு மாறுசெய்கிறார்கள். ஷிர்க்கான பித்அத்தான காரியங்களை ஆதரித்துப் பேசுகிறார்கள். முன்னோர்களை, இமாம்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுமாறு போதிக்கிறார்கள். இதுமாதிரியான சபைகளில் முஃமின்கள் ஒருபோதும் பங்கு கொள்ளக் கூடாது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

(திருக்குர்ஆன் 4:140)

நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!

(திருக்குர்ஆன் 6:68)

மீலாது, மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, தரீக்கா மஜ்லிஸ்கள் என்று இறைச்செய்திக்கு முரணாக நடக்கும் நிகழ்ச்சிகளை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த அசத்திய கருத்துக்களை ஆமோதிக்கும் அவலம் ஏற்பட்டுவிடும். மறுமையில் குற்றவாளியாய் நிற்க வேண்டியிருக்கும்.

இது குறித்து நபிகளார் ஓர் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள். மார்க்கத்தில் சரியாக நடப்போருடனும், வரம்பு மீறுவோருடனும் இருக்கும் சூழ்நிலையை அழகாகப் புரிய வைத்துள்ளார்கள்.

‘‘நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி (2101)

எனவே, மார்க்க நெறிமுறைகளை மதித்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்வதாயின் நல்லொழுக்கப் பயிற்சி, குர்ஆன் வகுப்பு, தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம், இனிய மார்க்கம், எளிய மார்க்கம் என்று எண்ணற்ற நிகழ்ச்சிகள் அல்லாஹ்வின் உதவியால் நமது ஜமாஅத் மூலம் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவற்றில் குடும்பத்தோடு பங்கு பெறுங்கள். நன்மைகளை அள்ளிச் செல்லுங்கள். நாம் ஈலகிலும் வெல்ல வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!