ஏகத்துவம் – மே 2014

தலையங்கம்

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான்.

முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை கொடுத்து இந்துக்கள் பகுதியில் சொத்து வாங்குவார்கள். பிறகு பாதி விலையில் வாங்குவார்கள். முஸ்லிம்களின் இந்த சதித்திட்டத்தை இரு வகைகளில் முறியடிக்க வேண்டும்.

  1. அரசாங்கம் கலவரப் பகுதி சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அசையா சொத்துக்களை அந்தப் பகுதி மக்கள் விற்க முடியாது.
  2. முஸ்லிம்கள் வாங்கிய அந்த வீட்டில் பஜ்ரங்தளம் என்று அறிவிப்புப் பலகை வைத்து, பலவந்தமாக அந்த வீட்டைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் சட்டரீதியிலான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவி வெறியன் தொகாடியா பேசிய பேச்சாகும்.

“48 மணி நேரத்திற்குள் அந்த முஸ்லிம் வியாபாரி வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் வீட்டைச்  சூறையாடுவோம்; கொளுத்துவோம். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கே இந்த நாட்டில் தூக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. அதனால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை” என்று தொகாடியா தனது கொடிய விஷத்தைக் கக்கியுள்ளான். இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் அவன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பாவ்நகர் காவல் நிலையத்தில் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19.04.2014 சனிக்கிழமை அன்று பாவ்நகரில் தொகாடியா தனது வெறிப்பேச்சைக் கொட்டினான். அதற்கு முந்தைய நாள் 18.04.2014 அன்று பீகார் மாநில பாஜக தலைவரும், நவாடா தொகுதி வேட்பாளருமான கிரிராஜ் சிங் என்பவன் ஜார்கண்ட் மாநிலம், பொகாரேயில் உரையாற்றும் போது, “மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் பாகிஸ்தான் சென்றுவிடலாம்” என்று விஷம் கக்கியிருக்கின்றான். இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை, கல்யாணில் நடந்த பேரணியில் நரேந்திர மோடி முன்னிலையில் சிவசேனாவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ராமதாஸ் கடம் என்பவன் பேசும் போது, “மோடி பதவியேற்ற ஆறு மாதத்தில் பாகிஸ்தானை அழித்துவிடுவார்” என்று உறுதி கூறினான்.

அஸ்ஸாம், மியான்மர் படுகொலைகளைக் கண்டித்து ஆகஸ்ட், 12, 2012ல் மும்பை ஆசாத் மைதானத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. இதன் எதிரொலியாக காவல்துறை வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பெண் காவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ராமதாஸ் கடம், “ஆட்சிக்கு வந்ததும் மோடி இதற்குப் பழிக்குப் பழி வாங்குவார்” என்று மோடியை வைத்துக் கொண்டே பேசினான். மோடியும் அதைக் கண்டிக்கவில்லை. இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியாகி, வேறு வழியில்லாத நிலையில் தான் தேர்தல் ஆணையம் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற வெறிப்பேச்சுக்களை சங்பரிவார்கள் விஷமாகக் கக்கியிருக்கின்றார்கள். அவற்றுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவை அனைத்தும் நமக்குத் தெரிவிப்பது என்ன? முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது; அவர்களைத் துரத்திவிட வேண்டும்; அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் சங்பரிவார்கள் வெறியாய் இருப்பதைத் தான் காட்டுகின்றது.

வரலாற்றுரீதியாக இந்த வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு அந்நிய வார்த்தைகள் அல்ல. புதிய வார்த்தைகள் அல்ல. இவை இறைத்தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இதைத் திருக்குர்ஆனில் நாம் பார்க்கலாம்.

உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (அல்குர்ஆன் 14:13,14)

இறைத்தூதர்களுக்கு எதிரிகள் வைத்த அந்த நிபந்தனைகளைத் தான் இன்று இந்துத்துவா சக்திகள் இந்திய முஸ்லிம்களை நோக்கி வைக்கின்றனர். எங்களுடன் இரண்டறக் கலந்து விடு அல்லது அழிந்து விடு என்ற இரண்டு நிபந்தனைகளைத் தான் வைக்கின்றார்கள். இந்து மதத்தில் ஐக்கியமாகிவிட்டால் அவர்கள் நம்மை விட்டுவிடுவார்கள்.

அந்த அடிப்படையில் தான் பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியிருக்கின்றார்கள். இதற்கு நாம் கட்டுப்படாவிட்டால் நம்மை நாட்டை விட்டு விரட்டுவோம் அல்லது குஜராத்தில் கொன்று, கொளுத்தியது போன்று கொளுத்துவோம் என்கிறார்கள்.

நாம் தூய இஸ்லாமியக் கொள்கையில் வாழ்ந்தால் இவர்களால் ஒருபோதும் நம்மை நாட்டை விட்டு விரட்டமுடியாது. மாறாக அவர்களே அழிந்துபோவார்கள் என்பதைத் திருக்குர்ஆனின் இந்த வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.

இங்கே ஒரு கேள்வி எழலாம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் போன்று ஏகத்துவவாதிகள் இல்லையே! பரேலவிகள், கப்ரு வணங்கிகள், சூபிகள் என இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தானே இருக்கிறார்கள்? இவர்கள் எப்படி முஸ்லிம்கள் என்ற கணக்கில் வருவார்கள் என்பது தான் அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வி சரியானது தான். ஆனால் எதிரிகள் பார்ப்பது கப்ரு வணங்கிகளான முஸ்லிம்களை அல்ல. குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவத்தையும், இஸ்லாத்தையும் தான் பார்க்கிறார்கள். அந்தக் குர்ஆனை ஏற்றவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் சரி! கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்தாலும் சரி! அவர்கள் இந்தப் பூமியை விட்டு, நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் எதிரிகளின் பார்வையில் உள்ளது.

இங்கு வாழும் முஸ்லிம்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில், தூய இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்தால் இந்தப் பூமி நிச்சயமாக ஏகத்துவவாதிகளுக்குச் சொந்தமாகிவிடும். ஆனால் அது சாதாரணமாகக் கிடைத்துவிடாது. அதற்கென்று சில விலைகளைக் கொடுத்தாக வேண்டும். அல்லாஹ் வைக்கின்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டும். அதில் பொறுமை காக்க வேண்டும்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)

நபித்தோழர்கள் அப்படித் தான் பொறுமை காத்தார்கள். இந்தச் சோதனையின்போது அதற்குத் தலைமை தாங்குகின்ற இறைத்தூதர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 2:144)

இறைத்தூதர்கள் கொல்லப்பட்டாலும் கொள்கை நீடிக்கும். அதற்கான இறை உதவியும் நீடிக்கும்.

(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். (அல்குர்ஆன் 40:77)

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தான் இறுதி வெற்றி கிடைக்கும். அதாவது, அல்லாஹ்வின் வேதத்திற்கும் அவனது தூதர்களின் போதனைக்கும் தான் இறுதி வெற்றி! இந்தக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான்.

நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள். (அல்குர்ஆன் 37:171-173)

நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 58:21)

இதற்கு ஒரே நிபந்தனை, இந்தச் சோதனையில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயம் ஃபிர்அவ்னை விட ஒரு கொடியவனைச் சந்தித்திருக்க முடியாது. இறை நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரவேல் சந்ததியினரை ஃபிர்அவன் வெட்டிக் கருவறுத்தான். அப்போது மூஸா (அலை) அவர்கள் சொன்ன அறிவுரையும் ஆறுதலும் இது தான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்என்றும் கூறினார். (அல்குர்ஆன் 7:128, 129)

மூஸா நபியின் சமுதாயத்தினர் பொறுமை காத்தனர். அதற்குரிய பலனை அடைந்தனர்.

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம். (அல்குர்ஆன் 7:137)

மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் ஃபிர்அவ்ன் வெறியேற்ற நினைத்தான். ஆனால் வல்ல அல்லாஹ் அவனை அழித்தான்.

அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்பதைக் கவனிப்பீராக!  (அல்குர்ஆன் 7:103)

நாளை ஆட்சியைப் பிடிக்கப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் மோடியைப் பற்றி ஓர் அச்சம் இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உள்ளது. ஃபிர்அவ்னை விட இந்த மோடி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மோடி என்ன ஆட்டம் போட்டாலும் அது இஸ்லாமிய சமுதாயத்தைப் பாதிக்காது. மாறாக அவர்களைக் கொள்கை ரீதியாக அது ஒன்றுபடுத்தும், உறுதிப்படுத்தும்.

ஈமானிய அடிப்படையில் மோடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற போது இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத் தான். அப்போது இந்தப் பூமி அநியாயக்காரர்களுக்கு அல்ல, ஏகத்துவவாதிகளுக்குத் தான் என்பது உறுதியாகிவிடும். அந்த வெற்றி நாளைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். (அல்குர்ஆன் 3:139)

இங்கே பரேலவிகளுக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேம். இந்துத்வா நம்மை அழிக்க வரும்போது ஏகத்துவவாதிகளை மட்டும் குறிவைத்து அழிக்கப்போவதில்லை. முஸ்லிம் என்று பெயரளவில் இருந்தால் போதும். இஸ்லாத்தின் அடையாளங்களான தாடி, கத்னா, புர்கா போன்றவை இருந்தால் போதும். அவை அவர்கள் அழிப்பதற்குரிய ஆதாயத் தடயங்கள் ஆகும்.

கொள்கையில் பரேலவிகள் என்பதால் அவன் விட்டுவைக்கப் போவதில்லை. அவனுக்குத் தேவை நீங்கள் குர்ஆனை நம்புவதாகக் கூறினால் போதும். உங்களைக் கொளுத்திப் போட்டுவிடுவான். எனவே நீங்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின்பால் திரும்பிவிடுங்கள் என்ற அழைப்பையும் எச்சரிக்கையையும் விடுத்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                தொடர்: 10

குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

கஸ்ஸாலியின் இஹ்யாவைப் பற்றியும், அவரது நச்சுக் கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்கள் பற்றியும் பல்வேறு நூற்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை நாம் இதுவரை கண்டோம்.

“குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது; ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு நம்மைத் தடுத்துவிடும்’ என்று கஸ்ஸாலி கூறியதாக காழி அப்துல்லாஹ் என்பார் கூறியதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அவர் கூறுகின்ற இந்தச் செய்தியை நேரடியாக இஹ்யாவிலிருந்து பார்ப்போம்.

யார் அல்லாஹ்வுக்காக ஆகி விட்டாரோ அவருக்காக அல்லாஹ்வும் ஆகிவிட்டான். இந்த ஞானப்பாதையை அடையும் முயற்சியில் ஈடுபடுபவர், உலகத் தொடர்புகள் அனைத்தையும் முழுமையாக அறுத்துவிட வேண்டும்.  குடும்பம், குழந்தை குட்டிகள், காசு பணம், நாடு, உலக அறிவு, ஆட்சியதிகாரம், அந்தஸ்து அனைத்தை விட்டும் தனது நாட்டத்தை, சிந்தனையைத் துண்டித்து விடவேண்டும்.

ஒரு பொருள் இருப்பதும் அது இல்லாமல் ஆவதும் சமம் என்ற நிலைக்கு அவனது உள்ளம் மாறிவிட வேண்டும். பிறகு கடமையான தொழுகை, வழமையான சுன்னத் தொழுகைகளுடன் மட்டும் நிறுத்திக் கொண்டு அவன் தனியாக ஒரு மூலையில் அமர்ந்துவிட வேண்டும். ஒட்டுமொத்த ஊக்கத்துடன் வெறும் வெள்ளை உள்ளத்துடன் ஓரிடத்தில் அவன் உட்கார வேண்டும்.

குர்ஆனை ஓதுவது, அதன் விளக்கத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம், ஹதீஸ் அல்லது வேறு விஷயங்களை எழுதுவதன் மூலம் தன்னுடைய சிந்தனையை அவன் கலைத்துவிடக்கூடாது.

மாறாக, அல்லாஹ்வைத் தவிர அவனுடைய உள்ளத்தில் வேறெந்த சிந்தனையும் தோன்றாதவாறு அவன் முயற்சி செய்ய வேண்டும்.

உள்ளம் ஒன்றிய வண்ணம் தொடர்ந்து அல்லாஹ், அல்லாஹ் என்று தனது நாவினால் உருப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆடிக் கொண்டிருக்கும் நாவு தான் இறுதியில், அசைவின்றி அப்படியே நிற்க வேண்டும். ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவை தான் கஸ்ஸாலி இஹ்யாவில் உதிர்க்கின்ற அஞ்ஞான முத்துக்களாகும்; ஆபத்தான அபத்தங்களாகும். கஸ்ஸாலியின் இந்த அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  1. தனிமை தவம்

கஸ்ஸாலி தெரிவிப்பது போன்று குடும்பம், குட்டிகள் அத்தனையும் மறந்துவிட்டு ஒருவர் தனியாக உட்கார முடியுமா? அப்படி ஒரு வழிமுறை மார்க்கத்தில் இருக்கின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை. அப்படியானால் இது கஸ்ஸாலி மார்க்கத்தில் புகுத்துகின்ற பித்அத் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

அதே சமயம், தனிமையில் உட்கார்ந்து ஒருவர் அழுது கண்ணீர் வடித்து, அல்லாஹ்வை நினைவுகூர்வதை மார்க்கம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கின்றது. அத்தகையவர் மறுமையில் அர்ஷின் நிழலில் அரவணைப்பைப் பெறுகின்றார் என புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

கஸ்ஸாலி குறிப்பிடுகின்ற தனிமை தவம் இந்த வகையைச் சார்ந்தது அல்ல. மாறாக, அது வானுல வஹீயின் வாசலைத் திறந்துவிடுகின்ற வகையைச் சார்ந்ததாகும். நபிமார்கள் இனியும் வருவார்கள் என்ற நாசக்கருத்தை நிலைநாட்டுகின்ற வாதமாகும்.

அத்துடன் இப்படி அனைத்தையும் மறந்துவிட்டு வெறும் தியானத்தில் ஈடுபட முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே இது சாத்தியமில்லை.

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுது கொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்என விளக்கினார்கள்.

நூல்: புகாரி 1221

இந்த ஹதீஸில், நபியவர்கள் தொழுகையில் இருக்கும் போது வீட்டில் தங்கக் கட்டி இருப்பது நினைவுக்கு வந்ததாகக் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்என்று மூன்று முறை கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4937

தன் மனைவி, மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டு தவம் புரிவது, தியானமிருப்பது என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது, மார்க்கத்திற்கு முரணானது என்பதை இதன் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

  1. உபரியான தொழுகை வேண்டாம்?

தனித்து தவமிருத்தல் என்ற பிறமதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் கஸ்ஸாலி, தொழுகையே தியானம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார். தொழுகையை விட உயர்ந்த வணக்கம், தியானம் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் தொழுகை என்பது ஓர் அடியான் அல்லாஹ்விடம் நடத்துகின்ற ஓர் உரையாடலாகும்.

தொழுகையி(ல் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தி)னை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய)  இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்

(அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்என்று கூறுவான். அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்என்று கூறுவான்.

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

நூல்: முஸ்லிம் 395

இறையிடம் இரகசியம்

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவே, எவரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 405

பிரார்த்தனை என்பது ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் நடத்துகின்ற ரகசிய உரையாடலாகும். இதைவிட ஒருவன் இறைநெருக்கத்தைப் பெறவேண்டுமானால் அவன் அதிகமதிகம் தொழ வேண்டும். கடமையான தொழுகைகள், அதற்கு முன்பின் அமைந்திருக்கின்ற வழமையான தொழுகைகள், அவற்றைத் தாண்டி உபரியான தொழுகைகள் மூலம் இறைநெருக்கத்தைப் பெற வேண்டும். இதை நாமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்களே சொல்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 6502

இந்த ஹதீஸ் உபரியான தொழுகை மூலம் தான் ஒருவன் உயர்வான அல்லாஹ்வை அடைய முடியும் என்று அல்லாஹ்வே கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கஸ்ஸாலியோ இந்தத் தொழுகைகளை விட்டும் தனிமையில் உட்கார்ந்து அல்லாஹ், அல்லாஹ் என்று அழைக்க வேண்டும் என்ற தனித் தவத்தை, அந்நிய மதக் கலாச்சாரத்தை இஸ்லாத்திற்குள் புகுத்துகின்றார்.

  1. சிந்தனையைக் குலைக்கும் குர்ஆன்?

எல்லாவற்றையும் தாண்டி குர்ஆன் ஹதீஸைப் படிப்பது பற்றி கஸ்ஸாலி சொல்வது தான் மிகவும் கொடூரமானது. குர்ஆன் ஓதவேண்டாம், குர்ஆனுடைய விளக்கவுரையை சிந்திக்க வேண்டாம், ஏனென்றால் பக்தனுடைய சிந்தனையைக் குலைத்துவிடும் என்று கூறுகிறார். இங்கு தான் கஸ்ஸாலி தனது வேடத்தைக் கலைக்கின்றார்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:25)

அவர் திருந்தியிருந்தால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார். இல்லையேல் அல்லாஹ் திருமறையில் கூறுவது போன்று இதற்கான தண்டனையையும் இதைப் பின்பற்றி குர்ஆனை விட்டு விலகி ஓடியோரின் தண்டனையையும் சேர்த்தே அவர் சுமக்க வேண்டும்.

தமிழக மதரஸாக்களை கஸ்ஸாலியின் ரசிகர் மன்றங்கள் என்று தான் கூற வேண்டும். குர்ஆன், ஹதீஸைப் பற்றி யாரேனும் இகழ்வாகப் பேசிவிட்டால் கூட சகித்துக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியைப் பற்றிப் பேசிவிட்டால் போதும். கொதித்து, கொந்தளித்து விடுவார்கள். அந்த அளவுக்கு கஸ்ஸாலியின் போதை அவர்களது தலையில் அளவுக்கு மீறி ஏறியிருக்கின்றது. கஸ்ஸாலியின் மீதான காதல் அவர்களது உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றது.

குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். அவை நிச்சயமாக அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அன்பையும் பெற்றுத் தருகின்ற அற்புத, அருள்மிகு வேத வரிகளாகும். இது சிந்தனையைக் கெடுக்கும், மன ஓர்மையைக் குலைக்கும், அமைதியைக் கலைக்கும் என்று சொல்கின்றார் என்றால் இஹ்யா என்ற நூலை எரிக்காமல் விடுவது அநியாயம் அல்லவா?

குர்ஆனைக் கண்டு யார் வெருண்டு ஓடுவார்கள்?

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல்குர்ஆன் 74:51)

கஸ்ஸாலி இந்த ரகத்தைச் சார்ந்தவராகத் தானே இருக்க முடியும்?

உண்மையில் குர்ஆன் இறை சிந்தனையையும், இறை நேசத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஓர் அற்புத ஆயுதம். அல்லாஹ்விடம் ஓர் அடியான் உரையாடுகின்ற ஊடகம். அது சிந்தனையைக் குலைக்கின்றது என்றால் கோளாறு குர்ஆனில் இல்லை. இவர் கொண்டு வந்த சித்தாந்தத்தில் தான் கோளாறு இருக்கின்றது. இறை நினைவு என்ற பெயரில் இவர் சொல்கின்ற தவம், தியானம், தனிமை அனைத்துமே பிற மதத்தின் தத்துவங்கள் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குர்ஆனை ஓதுமாறு பல்வேறு இடங்களில் உத்தரவிடுகின்றான். குர்ஆனில் முதன்முதலில் இறங்கிய வசனமே “ஓதுக’ என்பது தான்.

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.

அல்குர்ஆன் 96:1-4

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்!

அல்குர்ஆன் 73:20

இந்த வசனத்திலும் குர்ஆன் ஓதுமாறு இறைவன் கட்டளை யிடுகின்றான்.

குர்ஆன் ஓதுவதன் மகிமை

குர்ஆன் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அதிகமான சிறப்புக்களையும் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் செய்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு, குர்ஆனையும் ஓதிவருகின்றவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),  நூல்: புகாரி 5020

மலக்குகளின் நெருக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 4937, முஸ்லிம் 1329

குர்ஆன் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு சிறப்புகளைக் குறிப்பிடுகின்றார்கள். இதைத் தான் கஸ்ஸாலி ஓதக்கூடாது என்று தடுக்கின்றார். இத்தோடு அவர் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. குர்ஆனைப் பற்றி சிந்திக்கவும் கூடாது என்று சொல்கிறார் கஸ்ஸாலி!”

ஆனால் வல்ல அல்லாஹ்வோ குர்ஆனைச் சிந்திக்க வேண்டும் என்று ஏராளமான இடங்களில் கட்டளையிடுகின்றான். உதாரணத்திற்கு இந்த ஒரு வசனத்தைக் காட்டியுள்ளோம்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4867

இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். தொழுகையைத் தவிர மற்ற திக்ருகளை எடுத்துக் கொண்டால் குர்ஆன் ஓதுதல் தான் அதில் மிகச் சிறப்பான வணக்கமாகும்.

நபியவர்களின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக, கஸ்ஸாலி குர்ஆன் ஓதுவதைத் தடை செய்கின்றார். இந்தக் கருத்தைத் தாங்கிய இஹ்யா தான் இன்றைக்கு மதரஸாக்களில் புனித வேதமாகப் போதிக்கப்படுகின்றது. குர்ஆன், சிந்தனையைக் குலைக்கும் என்று குருட்டு வாதம் பேசுகின்ற கஸ்ஸாலியின் நூலான இஹ்யா, கொளுத்தப்படுவதற்கு நூற்றுக்கு நூறு தகுதியான நூல் என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

மாமியார் மருமகள் பிரச்சனை

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் மிக முக்கிய பிரச்சனையான மாமியார், மருமகள் பிரச்சனையைப் பார்த்து வருகிறோம்.

சில மாமியார்கள், வீட்டில் மகன் இருக்கும் போது மருமகளை  நல்ல விதமாக நடத்துவார்கள். ஆனால் மகன் வீட்டில் இல்லாத போது அவளைக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5077

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

மருமகள் எப்போது சறுக்குவாள்? நாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்ற பழிவாங்கும் உணர்வுடன் சிலர் நடந்துகொள்கிறார்கள். மருமகளுக்கு ஒரு மனவேதனை என்றால் அதன் மூலம் இவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தவறே செய்திருந்தாலும் மன்னிப்பதையே மார்க்கம் வலியுறுத்துகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.

நூல்: முஸ்லிம் 5447

யாராவது மருமகளைக் குறை சொன்னால் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்களும் புறம், அவதூறு போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்என்று பதிலளித்தார்கள். அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5048

அந்தரங்கத்தில் தலையிடுதல்

சில வீடுகளில் கணவன், மனைவி ஆகிய இருவரும் அருகருகே அமரக்கூடாது; ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது; உணவு உண்ணக்கூடாது; ஊட்டிவிடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சொந்த மனைவியையே திருட்டுத்தனமாகப் பார்க்குமளவிற்கு மாமியாரின் குத்தலான பார்வைகளும் பேச்சுகளும் அமைந்துள்ளன.

பகல் நேரங்களில் தங்களுடைய அறைகளில் மகனும் மருமகளும் ஒன்றாக உறங்குவதற்கும் அனுமதியில்லை. அப்படித் உறங்கினால் அதையும் அநாகரீகமாக விமர்சிக்கின்றனர்.

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (“கமூஸ்என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்த போது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த  ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் பெற்று (மணந்து) அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.  (கைபருக்கு அருகிலுள்ள) “சத்துஸ் ஸஹ்பாஎன்னுமிடத்தை நாங்கள் அடைந்த போது மாதவிடாயி-ருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். அதன் பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) “ஹைஸ்எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடுஎன்று கூறினார்கள்.

ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வலீமா – மண(மகன்) விருந்தாய் அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல் ஒரு போர்வையால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள். பிறகு,தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, தமது முழங்காலை வைக்க, அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி)

நூல்: புகாரி 4211

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் அந்தரங்கமான விஷயத்தில் தேவையின்றி தலையிடுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இறைக்கட்டளைக்கு மாறு செய்ய வேண்டிய நிலைக்கு தம்பதியினர் தள்ளப்படுகின்றனர்.

பகல் நேரமாக இருந்தாலும் கணவன், தன் மனைவியை தேவைக்காக அழைக்கும் போது மறுக்கக்கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (உபரி) நோன்பு நோற்கக் கூடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5192

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.

நூல்: புகாரி 5193

தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக் கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி), நூல்: திர்மிதி 1080

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! (அல்குர்ஆன் 2:223)

மார்க்கக் கடமைகளுக்கு இடையூறு

குளிப்பு கடமையான நிலையில் குளிக்காத வரை தொழக்கூடாது என்பது இறைக்கட்டளை! ஆனால் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்குக் குளிப்பு கடமையாகி விட்டால் அவள் அதை நிறைவேற்றுவதற்குப் படுகின்ற பாடு இருக்கின்றதே! சொல்லி மாளாது.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்!         (அல்குர்ஆன் 4:43)

இல்லறத்தில் ஈடுபட்ட பின் ஒரு பெண் குளித்தால், “எதற்காக இந்த நேரத்தில் குளிக்கின்றாய்?” என்பது போன்ற அநாகரீகக் கேள்விகளைக் கேட்கின்றனர். இதுபோன்ற அசௌகரியமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இறைக்கட்டளையை மறுத்து, மற்றவர்களுக்காகத் தொழுகையை விடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதைவிடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர்.

(அல்குர்ஆன் 4:77)

மார்க்கக் கட்டளைகளை அறிந்துகொள்வதற்கு, செயல்படுத்துவதற்கு வெட்கம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. மார்க்கக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பார்ப்பார்கள் என்ற அச்சம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

ஒழுக்க வாழ்வுக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை விட அதிக வெட்கப்படக்கூடியவர்களாக இருந்தும் பல பேருக்கு மத்தியில் தமது கடமையான குளிப்பை நிறைவேற்றி விட்டு வந்து தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.

(ஒரு தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுதொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்றபோது  தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்என்று கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்- தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 275

சில வீடுகளில் மருமகள் தன் பெற்றோரிடம் செல்போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு அதைப் பெரிய பிரச்சனையாக்குகின்றனர். அவள் என்ன பேசுகிறாள் என்பதை மறைந்திருந்து ஒட்டுக் கேட்கின்றனர். இதுவும் மிக மோசமான செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்.

நூல்: புகாரி 5143

விருந்தினரை அவமதித்தல்

மருமகளுடைய குடும்பத்தார் அவளைப் பார்ப்பதற்கு வரும் போது மகள் வீடு தானே என்று ஓரிரு நாட்கள் அங்கு தங்கிவிட்டால் அவர்களைச் சோற்றுக்கு வழியில்லாதவர்களைப் போன்று கேவலமாகப் பேசுகின்றனர். விருந்தினர்களை உபசரிப்பது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் அல்குஸாஈ (ரலி), நூல்: முஸ்லிம் 77

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்என்று கூறினார்கள். மக்கள், “அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி), நூல்: முஸ்லிம் 3558

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்.  என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 2620

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தனி முத்திரை பதித்த தவ்ஹீத் ஜமாஅத்

ஏப்ரல் 2014 ஏகத்துவ இதழ், “வாழ்வுரிமைக்கே வாக்குரிமை’ என்ற தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. அதிமுக அரசு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காகப் பரிந்துரைக்குமாறு பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டிருந்தது. இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் வாழ்வுரிமையாகும், அதனால் தனது வாக்குரிமையை வாழ்வுரிமைக்காக வழங்க வேண்டும் என்று சமுதாயத்தை அந்தத் தலையங்கம் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த ஏகத்துவம் இதழ் வெளிவந்து, ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அதற்குள்ளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழு 12.04.2014 அன்று கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.

இதற்குக் காரணம், ஏப்ரல் 7ஆம் தேதியன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இவ்வாறு பாஜக வெளியிடும் போது முதல்கட்டமாக அஸ்ஸாமிலும் திரிபுராவிலும் தேர்தல் துவங்கிவிட்டது. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட இந்தக் கால தாமதம் தற்செயலாக நடந்ததல்ல. கூட்டணிக் கட்சிகள் விழித்துக் கொண்டு தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டே இந்தத் தாமதம். இதை அந்தத் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கின்றது.

  1. பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது.
  2. ராமர் கோவில் கட்டுவது.
  3. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்வது.

இவையே பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.

முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து, நாட்டில் மதக் கலவரத்தைத் தோற்றுவிக்கும் இந்த அம்சங்களை மதச்சார்பின்மை கொண்ட அத்தனை கட்சிகளும் எதிர்த்து, கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பின!

திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. காங்கிரஸையும் திமுகவையும் ஊர் ஊராக, நார் நாராகக் கிழித்த ஜெயலலிதா, பாஜகவையும் அதன் தேர்தல் அறிக்கையையும் கண்டுகொள்ளவில்லை.

இதைப் பற்றி ஓ. பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி வைத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய அதிமுக தேர்தல் பணிக் குழுவினரிடம் திரும்பத் திரும்ப நமது ஜமாஅத் வலியுறுத்தி, ஜெயலலிதாவை இதுகுறித்துப் பேசச் சொல்லுங்கள் என்றோம். அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

இடஒதுக்கீடு என்பது நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையாகும். இதை அனுபவிக்க வேண்டுமென்றால் நமது சந்ததிகள் உயிருடன் வாழ வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்துள்ளது. உயிரா? உரிமையா? என்றால் உயிர் தான் முக்கியம்.

இந்த அடிப்படையில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை 12.04.2014 அன்று திரும்பப் பெற்றோம். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளிக்காது என்பது பொதுக்குழுவின் ஏகமனதான முடிவு என்பதால் உயர்நிலைக் குழு கூடி இந்த முடிவை எடுத்தது.

அடுத்து ஆதரவு யாருக்கு? என்பதைத் தீர்மானிப்பதற்காக 15.04.2014 செவ்வாய்கிழமையன்று திருச்சி ரோஷன் மஹாலில் அவசர செயற்குழு கூடியது. அந்த செயற்குழுவில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி, தேனி, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது என்றும், மீதமுள்ள 36 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவளிப்பது என்றும் ஏகமனதாக முடிவானது. புதுவை மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி தவிர மற்ற கட்சிகளுக்கு மனசாட்சி அடிப்படையில் வாக்களிப்பது என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முடிவு சமுதாயத்தின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றது. அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒருபக்கம் செய்தியாகவும் மறுபக்கம் விவாதப் பொருளாகவும் ஆனது. மின்னணு ஊடகங்களைப் போலவே அச்சு ஊடகங்களிலும் இந்தத் தாக்கம் பதிவானது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி, ஸ்டாலின், ப. சிதம்பரம், கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அனைவரும் கேள்வி எழுப்பிய பிறகும் பாஜகவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்த ஜெயலலிதா, தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு வாய் திறந்தார். பாஜகவை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

திமுகவை ஆதரிப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த மறுநாளே ஜெயலலிதா, காவிரிப் பிரச்சனையில் பாஜக துரோகம் செய்துவிட்டது என்று குற்றம் சாட்டிப் பேசினார். இது கொஞ்சம் கொஞ்சமாக வலுத்து, மோடியா? இந்த லேடியா? என்று அவர் கேட்கும் அளவுக்குச் சென்றது.

குஜராத்தை விட தமிழகம் தான் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புள்ளிவிபரத்துடன் ஜெயலலிதா எடுத்து வைத்த வாதத்திற்குப் பின்னணியில் இருந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என அனைத்து ஊடகங்களிலும், குறிப்பாக செய்தி சேனல்களில் நடைபெற்ற விவாதங்களிலும் தெரிவிக்கப்பட்டது. பிரபல செய்தி இணையதளம் இதற்கென தனியாகக் கருத்துக் கணிப்பே நடத்தியது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக சேராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று செயற்குழு உறுப்பினர்களில் பலர் கேள்வியெழுப்பினர். பாஜகவுடன் சேரமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி வாங்கிவிட்டுத் தான் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்ற கருத்தை செயற்குழுவில் பதிவுசெய்தனர்.

அதற்குப் பதிலளித்த மாநிலத் தலைவர் “திமுக தலைவர்கள் வாழ்வா? சாவா? என்ற நிலையில் தேர்தல் கள பயணத்தில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உறுதிமொழியைப் பெறுவதற்கான கால அவகாசம் அறவே இல்லை. அப்படியே அரசியல்வாதிகள் எழுத்துப்பூர்வமாகத் தந்தாலும் அதையெல்லாம் அப்பட்டமாக மீறி கூட்டணி வைக்கத் தயங்க மாட்டார்கள். நாம் இப்போதைய வெளிப்படையான நிலையை மட்டுமே பார்க்க வேண்டும். இப்போதைக்கு ஜெயலலிதா பாஜகவுடன் நெருங்கி வருகிறார். திமுக தலைவர்கள் பாஜகவை, அதன் தேர்தல் அறிக்கையைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். எனவே இதை மையமாக வைத்தே நாம் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் திமுகவை இஸ்லாமிய சமுதாயத்தின் துரோகி என்று அடையாளப்படுத்துவோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் திமுகவுக்கு எதிராக அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை உடனேயே ஆரம்பித்துவிடுவோம்” என்று தெரிவித்தார். இதை செயற்குழுவும் பலத்த தக்பீர் முழக்கத்துடன் ஆமோதித்தது.

ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நமது ஆதரவை அறிவித்தவுடனேயே கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலமாகவும், அறிக்கையாக வெளியிட்டு எழுத்துப்பூர்வமாகவும் இந்த உறுதிமொழியை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அளித்தார். இத்தனைக்கும் நாம் கருணாநிதியையோ, ஸ்டாலினையோ இந்த ஆதரவு தொடர்பாக நேரில் சந்திக்கவில்லை. அப்படியிருந்தும் கருணாநிதி ஓர் உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் வெளியான செய்தியை வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர்   “ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் போது பாஜகவை மட்டும் விமர்சிப்பதில்லை’ எனக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்குப் பின் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஜெயலலிதா செயல்பட்டு வருவதால் அதிமுகவிற்கு அளித்து வந்த ஆதரவைக் கடந்த சனிக்கிழமை திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்தார். சிறுபான்மையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 3 தொகுதிகளைத் தவிர 36 தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தி.மு.கழக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பதாக கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அவசரச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்று, அந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 36 தொகுதிகளில் தி.மு.கழகத்தை ஆதரிப்பதாக அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்; நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைப் பொதுக்கூட்டத்திலேயே நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை வரவேற்பதாக அறிவித்திருக்கிறேன்.

மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் மட்டும் தி.மு.கழக அணியினரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த மூன்று தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியிலும் தி.மு.கழகத்தின் அணியினரை ஆதரித்து உதவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.கழகம் ஏற்கனவே தெரிவித்திருப்பதைப் போல, மத்தியில் மதச்சார்பற்ற ஓர் அரசு அமைவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்ற உறுதியையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(முரசொலி 17.04.2014)

இது அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். இந்தப் பேரியக்கம் தன்னலம் பாராமல் சமுதாய நலத்தை மட்டும் அல்லாஹ்வுக்காகக் கையில் எடுத்திருப்பதால் தான் இந்தக் கண்ணியம் கிடைக்கின்றது. பதவிக்காகவோ, பணத்திற்காகவோ எந்தவொரு முடிவையும் இந்த இயக்கம் எடுப்பதில்லை. அதனால் இப்படி ஒரு மரியாதையையும் மதிப்பையும் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி முதலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தபோது, பெட்டி வாங்கிவிட்டதாகக் கூறியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார்கள்; அரண்டு போனார்கள். பத்து பைசா வாங்கியிருந்தால் கூட இதுபோன்ற துணிச்சலான முடிவை எடுக்க முடியாது, தவ்ஹீத் ஜமாஅத் ஒரு தூய்மையான அமைப்பு என்பதற்கு இது ஒரு சான்று என சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்.

எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் கூட்டணியில் இருப்பவர்களால் இப்படி ஒரு உறுதிமொழியை, உத்தரவாதத்தைக் கருணாநிதியிடம் கேட்டுப் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். வாய் திறந்து சொல்லக் கூட முடியாது. ஏகத்துவவாதிகளால் மட்டுமே இது சாத்தியம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

பொதுவாக அரசியலில் சில விதிமுறைகள் இருக்கின்றன. காங்கிரஸை திமுக ஆதரித்தால் அந்தக் கூட்டணியில் அதிமுக இருக்காது. அதிமுக ஆதரித்தால் அதனுடன் திமுக சேராது. இதைப் போன்றே ம.ம.க. இருக்கும் இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேராது என்ற தவறான கண்ணோட்டம் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது.

2007ல் திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்தது. அதன் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. மமக அப்போது திமுகவுடன் தான் இருந்தது. இடஒதுக்கீடு தந்தால் ஆதரவளிப்போம் என்று ஏற்கனவே அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் திமுகவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் அப்போது திமுக கூட்டணியில் இருந்த மமக, தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த உண்மை பலருக்கும் தெரியவில்லை.

அதுபோன்றே இந்தத் தேர்தலிலும் திமுகவுடன் மமக கூட்டணி வைத்திருப்பது தெரிந்து தான் திமுகவை ஆதரிக்கின்றோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை எப்போதும் சமுதாய நலனையே முன்னிறுத்திப் பார்க்குமே தவிர இதுபோன்ற குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 22

மறைவான ஞானம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறுதித்தூதர், அகிலத்தார் அனைவருக்கும் அனுப்பப்பட்டவர் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் அவ்லியாக்களுக்கெல்லாம் மிகப் பெரிய அவ்லியா; மகான்களுக்கெல்லாம் மிகப்பெரிய மகான்; இறைநேசர்களுக்கெல்லாம் மிகப்பெரிய இறைநேசர் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. இருக்கவும் கூடாது. அத்தகைய இறைநேசரிடம் அல்லாஹ் பின்வருமாறு மக்களிடத்தில் சொல்லச் சொல்கிறான்.

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

மறைவான விஷயம் மலக்குமார்கள், ஜின்கள், நபிமார்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது என்பதை மிகத் தெளிவாக இறைவன் விளக்குகின்றான். ஜோசியம் பார்ப்பது, அருள்வாக்கு சொல்வது, பால் கிதாபு பார்ப்பது ஆகிய அனைத்திற்கும் இந்த ஒரு வசனமே மரண அடியாக இருக்கிறது.

அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்று மக்களைப் பார்த்துக் கூறுமாறு அல்லாஹ் தனது தூதருக்குக் கட்டளையிடுகின்ற போது, எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் அல்லாஹ்வைப் பொய்ப்பித்தவனாக ஆகின்றான்.

“அல்லாஹ்வின் தூதருக்கே மறைவானவற்றை அறிய முடியாது என்று குர்ஆன் கூறுகின்ற போது நீங்கள் எவ்வாறு உங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுவீர்கள்? அப்படியானால் நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட சிறந்தவர் எனக் கூறுகின்றீர்களா?’ என்று பால்கிதாபுப் பேர்வழிகளிடம் கேளுங்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதரை விட மேலானவர்கள் என்பது அவர்களது பதிலாக இருக்குமானால் அவர்கள் இந்த வார்த்தையின் மூலம் நிராகரிப்பைத் தேடிக் கொண்டவர்கள். அவர்களது பதில், “இல்லை; நம்மை விட அல்லாஹ்வின் தூதர் தான் மேலானவர்’ என இருக்குமானால், நாம் அவர்களிடம் கேட்பது, “உங்களை விட மேலானவருக்கு கிடைக்காத மறைவான ஞானம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?’ என்பது தான்.

அல்லாஹ் தனது திருமறையில் தன்னைப் பற்றிக் கூறுகின்ற போது:

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.  (அல்குர்ஆன் 72:26, 27)

எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் தன்னை நிராகரிப்பாளனாக ஆக்குகின்ற இரண்டாவது ஆதாரம் இதோ! அல்லாஹ் தனது தூதருக்கு மக்களைப் பார்த்து இவ்வாறு கூறுமாறு கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!  (அல்குர்ஆன் 6:50)

தனக்கு மட்டும்தான் மறைவான ஞானம் இருக்கிறது என்று இன்னும் பல்வேறு இடங்களில் இறைவன் கூறுகிறான்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.   (அல்குர்ஆன் 6:59)

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.  (அல்குர்ஆன் 31:34)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாவது (பெண்ணா? ஆணாஅதன் நிலை என்ன? என்பது) பற்றி யாரும் அறியமாட்டார்கள்.

எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.

எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.

மழை எப்போது வரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

நூல்: புகாரி 1039

எப்படிப்பட்ட வித்வானாக இருந்தாலும், மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும், ஜோசியக்காரனாக இருந்தாலும், குறிபார்த்து சொல்லக்கூடியவனாக இருந்தாலும் என்றைக்கு உலகம் அழியும் என்பதைச் சொல்லவே முடியாது. அதே போன்று மழை எப்போது வரும்? எவ்வளவு நேரம் பெய்யும்? அது சாரல் மழையாக இருக்குமா? அல்லது பெருமழையாக இருக்குமா? என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது.

தொலைக்காட்சி செய்திகளில் வானிலை அறிக்கை என்ற ஒரு சிறு நிகழ்ச்சி இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைக்கு மழை வருமா? வராதா? வெயில் அடிக்குமா? அடிக்காதா? என்பதைக் கணித்துச் சொல்வதாகும். அதில் பேசக்கூடிய வானிலை ஆய்வாளர், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தான் சொல்வாரே தவிர, இன்று மழை கண்டிப்பாகப் பெய்யும் என்று உறுதியிட்டுச் சொல்வாரா? சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னாலும் அது நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.

இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இலேசான (மிதமான) அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றுதான் சொல்வார். கண்டிப்பாக இன்று மழை பெய்யும் என்று உறுதியாகச் சொல்ல மாட்டார். இன்றைய தினம் மழை பெய்யும் என்பார். ஆனால் அன்றைய தினம் தான் வெயில் உச்சி மண்டையைப் பிளக்கும். இன்றைய தினம் வெயில் அடிக்கும் என்பார். ஆனால் அன்றைய தினம் குளிர்ந்த காற்றுடன் இலேசான மழையோ அல்லது கன மழையோ பெய்யும்.

என்ன தான் வானம், பூமியை ஆராய்ந்து சொல்பவராக இருந்தாலும், ஆராய்ச்சியாளராக இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதைத் தான் சொல்ல முடியுமே தவிர கண்ணுக்குத் தெரியாத அறிவுக்கு எட்டாத விஷயங்களை யாராலும் சொல்ல முடியாது.

அதே போன்று ஒரு தாயின் கருவறையில் உள்ளதையும் இறைவன் மட்டும் தான் அறிய முடியும். கருவில் குழந்தை உண்டாகுமா உண்டாகாதா? அல்லது கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அது உயிருடன் பிறக்குமா? அல்லது இறந்த நிலையில் பிறக்குமா? உடல் ஊனமா பிறக்குமா? அல்லது முழு உடம்புடன் பிறக்குமா? எத்தனை குழந்தை பிறக்கும்? பிறக்கின்ற குழந்தை நல்லவனாக இருக்குமா? தீயவனாக இருக்குமா? என்பதையெல்லாம் அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

அதே போன்று, நாளைக்கு நாம் எங்கெங்கு போவோம்? என்னென்ன செய்வோம் என்பதை யாராலும் சொல்ல முடியுமா? நாளை நமக்குப் புகழ் கிடைக்குமா? அல்லது கெட்ட பெயர் கிடைக்குமா? நாளைக்கு நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? நாளைக்கு நாம் வேலைக்குப் போவோமா? போய்விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி வருவோமா? நாளை நமக்கு என்னென்ன கிடைக்கும்? என்ன சாப்பிடுவோம்? என்ன குடிப்போம்? இதுபோன்று நாளை நடக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது.

உதாரணமாக, நம்முடைய உறவினர்கள், நமது நண்பர்கள் திருமணத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கோ நம்மை அழைத்திருப்பார்கள். நாளை திருமணம் நடக்க இருக்கிறது, நீங்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பார்கள். அதற்கு நாமும், உங்கள் கல்யாணத்திற்கு வராமல் இருப்பேனா? நீங்கள் கூப்பிட்டும் வராமல் இருப்பேனா? இது நம்ம வீட்டு கல்யாணமாச்சே? கண்டிப்பாக வந்து விடுகிறேன் என்று சொல்லியிருப்போம். ஆனால் அந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய நாளில் நாம் அங்கு இருப்போமா? என்றால் சொல்ல முடியாது.

திடீரென அன்றைய நாள் பார்த்து நமக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கும். அல்லது பேருந்தைப் பிடிக்காமல் விட்டிருப்போம். அல்லது பேருந்தே ரத்தாகியிருக்கும். அந்த நிகழ்ச்சிக்கு பைக்கில் செல்வதாக முடிவு செய்திருப்போம். ஆனால் அன்றைய தினம் பைக் பஞ்சராக ஆகியிருக்கும். கடைசியில் அந்த நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். பிறகு நம்முடைய உறவினர்களை அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு நாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையை எடுத்துச் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதுதான் நிலை.

அது போன்று, ஒரு மனிதன், தான் எங்கே மரணிப்பான்? வீட்டில் மரணிப்பானா? அல்லது வேறு இடத்தில் வைத்து மரணிப்பானா? அவனுக்கு மரணம் எந்த வகையில் வரும்? தூங்கும் போது மரணம் வருமா? அல்லது நெஞ்சுவலி வந்து மரணிப்பானா? என்பதை இறைவனைத் தவிர வேறு எவராலும் அறிய முடியாது.

ஆக மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள விஷயங்களாகும்.

கியாமத் நாளைப் பற்றியும் இறைவன் கடுமையாக சொல்லிக் காட்டுகிறான்.

யுகமுடிவு நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளதுஎன்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.  (அல்குர்ஆன் 7:187)

மேற்கண்ட வசனத்தில், “நபியே! இந்த மக்கள் உமக்கு மறைவான ஞானம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மறைவான ஞானம் தெரியாது. அல்லாஹ்வுக்கு மட்டும்தான் மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல் இருக்கிறது என்று  அவர்களிடம் சொல்லி விடுங்கள்’ என்று கட்டளையிடுகிறான்.

ஆனால் இன்றைக்கு இதற்கு நேர் மாற்றமான காரியங்களில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். திருமணத்திற்காக ஹஸரத்திடம் (ஆலிம்சாக்களிடம்) நல்ல நாள் பார்த்துத் தருமாறு கேட்கின்றோம். நமக்கெல்லாம் தெரியாத விஷயம் இந்த ஆலிம்சாவுக்குத் தெரியும் என்று நினைக்கின்றோமா இல்லையா?

நாம் என்றைக்குத் திருமணம் செய்தால் எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ்வோம்? என்ற விஷயம் அவருக்குத் தெரியும் என்று நாம் கருதுவதால் தானே அவரிடம் கேட்கின்றோம். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் நல்லது நடக்கும் என்றால் அது எப்படி அவருக்குத் தெரியும்? இவையெல்லாம் மறைவான செய்திகள்.

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு சீட்டுக் குலுக்கிப் பார்ப்பார்கள். அதை வைத்து எப்படி அந்த காரியத்தைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும்? ஆனால் மக்களில் பலர் இப்படியெல்லாம் செய்கின்ற காட்சியைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான்.

அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள இந்தச் சம்பவத்தை வரும் இதழில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

—————————————————————————————————————————————————————-

பல்லிக்குப் பகுத்தறிவு?

பைத்தியம் முத்திப்போன ஜாக்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்ததுஎன்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி),

நூல்: புகாரி 3359

புகாரியில் இடம் பெறும் பல்லி தொடர்பான இந்த ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

அதை விரிவாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்து தக்க ஆதாரங்களுடன் முன்னரே, ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் எழுதியிருந்தோம்.

பல வருடங்களாக இது தொடர்பான வாதங்களுக்கு யாராலும் பதிலளிக்கப்படாத நிலையில் கோமா நிலையில் இருந்த, தற்போதும் அவ்வாறே இருக்கின்ற ஜாக் அண்மையில் இதற்குப் பதில் சொல்கிறேன் என வெகுண்டெழுந்து புறப்பட்டு வந்தது. ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பான நம்முடைய வாதங்களை முன்வைத்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டியிருந்தது.

அந்தோ பரிதாபம்! நாம் எழுப்பியிருந்த வலுவான வாதங்களுக்கு ஜாக் அளித்திருந்த பதில் தனக்கு கோமா நிலை உண்டென்பதை சந்தேகமறப் பறைசாற்றும் வகையில் பல உளறல்களையும், முரண்பாடுகளையும், கிறுக்குத்தனமான வாதங்களையும் உள்ளடக்கியிருந்தது.

குறிப்பாக ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற இஸ்லாத்தின் அடிப்படையை முன்வைத்து இந்த அடிப்படையுடன் பல்லி ஹதீஸ் முரண்படுகிறது என்ற நம்முடைய விளக்கத்திற்கும் வாதங்களுக்கும் ஜாக் அளித்திருந்த பதில் அக்மார்க் உளறல்களாகும். மேலும் பல்லியைப் பகுத்தறிவுள்ள ஜீவியாக ஆக்கி அவர்கள் அளித்திருந்த பதிலோ பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம். இவை அனைத்தையும் அக்டோபர் 2013 ஏகத்துவத்தில் நாம் தெளிவாக்கியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பாக நாம் முன்னர் வைத்த சில வாதங்களுக்கு (அனைத்து வாதங்களுக்கும் அல்ஜன்னத் பதிலளிக்கவில்லை) பதிலாக வழக்கம் போல் உளறிக் கொட்டியுள்ளது.

அவர்களின் உளறல்களை படிக்கும் போது ஜாக்கிற்குப் பிடித்திருக்கின்ற (பல்லிக்கு பகுத்தறிவு உண்டு என்ற) பைத்தியம் விலகாதோ என்ற அச்சமும் கவலையுமே நம்மை தொற்றிக் கொண்டது. இப்போது அவர்களது உளறல்களை காண்போம்.

நமது வாதம்

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன. 

(அல்குர்ஆன் 13:15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

(அல்குர்ஆன் 22:18)

உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு எதிராகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?

என்று நாம் கேட்டிருந்தோம். (இந்த வாதங்கள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்னரே கேட்கப்பட்டவை என்பதை மீண்டும் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்)

அவர்களது உளறல்

மேற்கண்ட வசனங்கள், வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்ற கருத்தை தருகின்றன. இதனடிப்படையில் பல்லி இப்றாஹீம் நபியின் நெருப்புக் குண்டத்தை ஊதுவது சாத்தியமில்லை என்றால் நபிமார்களுக்கு எதிராக நிராகரிப்பாளர்கள் போர் செய்வதற்கு பயன்படுத்திய குதிரைகள் எல்லாம் திரும்பி ஓடியிருக்க வேண்டுமே? குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எதிரிகள் பயன்படுத்திய ஒட்டகங்கள், குதிரைகள் எல்லாம் திரும்பி ஓடியிருக்க வேண்டும். நிராகரிப்பாளர்களோடு முரண்டுபிடித்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறு செய்யவில்லை?

எனவே இவர்கள் குர்ஆன் வசனத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஜாக்கினர் பதிலளித்துள்ளார்கள்.

நமது பதில்:

கட்டுரையாளர் கொஞ்சமேனும் சுய நினைவுடன் இதை எழுதினாரா? என்று கேட்க தோன்றுகின்றது. அந்த அளவுக்கு அப்பட்டமான உளறல் இது.

எல்லா உயிரினங்களும் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்றால் எதிரிகளின் ஒட்டகங்கள், குதிரைகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு எதிராக நபிமார்களை எதிர்த்துப் போரிட்டது ஏன்? என்று கேட்கிறார்.

என்னமோ ஒட்டகங்களும் குதிரைகளும் ஒன்று சேர்ந்து, திட்டம் தீட்டி, படை திரட்டி, தானே வலிய முன்வந்து நபிமார்களை எதிர்த்து நின்றதைப் போன்று கட்டுரையாளர் கற்பனை செய்து கொண்டு எழுதியுள்ளார்.

நாம் என்ன வாதத்தை முன் வைக்கிறோம் என்பதைக் கவனிக்காமல் தனக்குத் தோன்றியதை எல்லாம் பதில் என்று எழுதியினால் அது இப்படி உளறலாகத் தான் அமையும்.

வானம் மற்றும் பூமியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றன என்றால் அனைத்து ஜீவராசிகளும் இயல்பாக அல்லாஹ்வுக்கு அடிபணிந்து தான் செயல்படும். அவைகளாக அல்லாஹ்வை எதிர்த்து நிற்காது. புரட்சி செய்யாது என்று அர்த்தம். அதே வேளை மனிதன் தனது ஆளுமையைச் செலுத்தி ஒரு உயிரினத்தைப் பயன்படுத்தினால் அது மனிதன் எவ்வாறு பயன்படுத்துகிறானோ அதற்கு தகுந்தாற் போல செயல்படும். அவ்வாறு செயல்படும் போது அந்த பிராணி அல்லாஹ்வுக்கு எதிராகச் செயல்பட்டது, கட்டுப்படவில்லை என்றாகாது.

போர்க்களத்தில் ஒட்டகங்களும் குதிரைகளும் நபிமார்களை எதிர்த்து நின்றது என்றால் இந்தப் போரில் எப்படியும் நபிகளாரை வீழ்த்த வேண்டும், அபூஜஹல் ஜெயிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவைகளாக ஒன்று திரண்டு வந்தா நின்றன?

மாறாக, எதிரிகள் (மனிதர்கள்) குதிரைகளையும் ஒட்டகங்களையும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போரிட பயன்படுத்தினார்கள். வெறுமனே குதிரைகளும் ஒட்டகங்களும் மாத்திரம் நபிமார்களை எதிர்த்து ஆயுதமேந்தி போர்க்களத்தில் நின்றிருந்தால் இந்த மூளை குழம்பிய கட்டுரையாளரின் கேள்வி நியாயம் எனலாம். ஆனால் மனிதர்கள் அவற்றில் தங்களது ஆளுமையைச் செலுத்தி தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதே நிகழ்வு.

ஒரு மரத்தைக் கூட உருட்டுக்கட்டையாகப் பயன்படுத்தி, ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்கிறான். அதனால் மரம் கொலை செய்துவிட்டது என்று கூறுவோமா? மனிதன் கொலை செய்துவிட்டான் என்று கூறுவோமா? மரக்கட்டையால் அடித்ததால் மரம் இறைவனுக்கு மாறு செய்துவிட்டது என்று கூற முடியுமா?

மனிதன் பயன்படுத்தும் போது அதற்கு தகுந்தாற்போலத் தான் உயிரினங்கள் செயல்படும். அப்போது அவை அல்லாஹ்வுக்குக் கட்டுப்படவில்லை என்றாகாது.

ஆனால் மேற்படி பல்லி தொடர்புடைய ஹதீஸ் அவ்வாறல்ல.

இப்றாஹீம் நபி நெருப்புக்குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி தானே முன்வந்து இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்று தான் ஹதீஸில் உள்ளது. நெருப்பை ஊதுமாறு பல்லியை யாரும் வலியுறுத்தவில்லை. போர்க்களத்தில் எதிரிகள் நபிமார்களுக்கு எதிராக குதிரைகளையும் ஒட்டகங்களையும் பயன்படுத்தியதைப் போன்று பல்லியின் மீதமர்ந்து இப்றாஹீம் நபிக்கு எதிராக யாரும் அதைப் பயன்படுத்தவில்லை. அது தானாகவே இப்றாஹீம் நபிக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தான் ஹதீஸ் கூறுகிறது.

இந்த அடிப்படையில் பல்லி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட மறுத்து, புரட்சி செய்வதாக இந்த ஹதீஸ் கூறுகிறது; எனவே இந்த ஹதீஸ் மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகிறது என்று நாம் எழுதியிருந்தோம். இதற்குப் பதிலளிக்கப் புகுந்த சுயநினைவு இழந்த கட்டுரையாளர் இந்த வித்தியாசத்தைப் புரியாமல் சகட்டு மேனிக்கு உளறியிருக்கிறார்.

முதலில் பல்லிக்கு பகுத்தறிவை வழங்கிய ஜாக்கினர் தற்போது குதிரை ஒட்டகம் ஆகியவற்றுக்கும் பகுத்தறிவு உண்டு; அவைகளும் அல்லாஹ்வுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிடும் என வாதிடுகிறார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

நமது வாதம்: 2

சாதாரணமாக அண்டாவுக்குக் கீழ் எரிகின்ற நெருப்புக்கு அருகில் மனிதனே அண்ட முடியவில்லை எனும் போது இத்தனை சிறிய அற்பப் பிராணி, ஆர்ப்பரித்து எரியும் அத்தனை பெரிய நெருப்புக் குண்டத்திற்கு அருகே வந்தால் அது அனல் சுவாலைகளில் பஸ்பமாகப் பொசுங்கியிருக்காதா?

இவ்வாறு அவர்களுக்கு நாம் எழுதிய ஏகத்துவம் மறுப்புக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு அவர்கள் உளறிய உளறலை படிக்க வேண்டுமே!

அவர்களது உளறல்: 2

எரியும் நெருப்புக் குண்டத்தின் பாதிப்புக்கு உள்ளாகாமல் அதன் உஷ்ணத்தை மட்டும் உணரும் தூரத்திலிருந்து பல்லி ஊதியதாகப் புரிவது தான் எதார்த்தமான புரிதல். இப்படித்தான் நபிகள் நாயகம் கூறியதாக முஸ்லிம்கள் நம்பிவருகிறார்கள்.

நமது பதில்:

அடேங்கப்பா! என்னே விளக்கம்! என்னே தத்துவம்! இப்படித்தான் நபிகளார் கூறியதாக முஸ்லிம்கள் நம்புவதாக குறிப்பிட்டீர்களே! யார் அவர்கள்? அந்த முஸ்லிம்களைப் பார்க்க வேண்டுமே! அப்படியே இந்த தத்துவத்தை உதிர்த்த தங்களையும் காண வேண்டும்.

என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா? அவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை அற்பமான பல்லி எப்படி ஊத முடியும்? அதன் அருகில் கூட செல்ல முடியாதே என்று கேள்வி எழுப்பினால் நெருப்பை ஊதிய பல்லி அதன் ஜுவாலைக்கு இரையாகாத வகையில் நெருப்பை விட்டும் தூரமாக தள்ளி நின்று பக்கா பாதுகாப்புடன் ஊதியதாம். ஊதும் போது தலைக்கவசம் ஏதும் அணிந்திருந்ததா என்பதையும் கட்டுரையாளர் விளக்கினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இது தான் பதிலா? இந்த நிலையில் இவ்வாறு புரிவது தான் யதார்த்தமான புரிதல் என்று எகத்தாளம் வேறு.

இப்ராஹீம் நபியை எரிப்பதற்காக மூட்டப்பட்ட நெருப்புக் குண்டம் என்றால் அது எவ்வளவு பிரம்மாண்டமானதாய் இருந்திருக்கும். அதை ஒரு பல்லியால் ஊதி நெருப்பைப் பெருக்க முடியாது என்பது தான் யதார்த்தம். அதன் அருகில் கூட நெருங்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

ஜாக்கினர் கூறுவதைப் போன்று தூரமாக, பக்கா பாதுகாப்புடன் நின்று ஊதினால் கூட அதன் ஊதுதல் ஒரு சில அங்குலங்கள் கூட தாண்டாது என்பது தான் யதார்த்தம். அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது யதார்த்தம். இதற்காக பல்லியை இறைவன் தண்டிக்க தேவையில்லை என்பது யதார்த்தம். அப்படியே தண்டித்தாலும் ஒட்டு மொத்த பல்லியையும் தண்டிப்பது நியாயமில்லை என்பது யதார்த்தம். இப்படி குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டு யதார்த்தமாகப் புரிந்தால் அந்தச் செய்தி குர்ஆனுடன் முரண்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இப்படி யதார்த்தத்திற்கு மாற்றமாக, பல்லி பாதுகாப்புடன் நெருப்பை விட்டும் தள்ளி நின்று, ஃபயர் சேப்டி – நெருப்புப் பாதுகாப்புக் கவசம் அணிந்து ஊதியது என்று விளக்கமளித்து, அதையே யதார்த்தம் என்று கூறுவதை என்னவென்பது?

மறுபடியும் தங்கள் பகுத்தறிவை இழந்து, பல்லிக்குப் பகுத்தறிவை வழங்கும் பகுத்தறிவற்ற செயலைத் தவிர்த்து, கொஞ்சம் பகுத்தறிவுடன் சிந்திக்குமாறு ஜாக்கினரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நமது வாதம்: 3

இப்ராஹீம் நபி தீக்குண்டத்தில் போடப்பட்டதும் உடனே, மறுகணமே, “நீ குளிர்ந்து, இப்ராஹீமுக்குப் பாதுகாப்பாக ஆகிவிடு” என்று நெருப்புக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இதை 21:69,70 வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அப்படியானால் பல்லி எப்போது போய் ஊதியது? என்று நாம் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலைப் பாருங்கள்.

அவர்களது உளறல்: 3

இப்றாஹீம் நபி நெருப்புக் குண்டத்தில் இருக்கும் போது தான் ஊத வேண்டும் என்பதில்லை. மாறாக அவர்கள் அதில் போடப்படுவதற்கு முன்பே ஊதியிருக்கலாம் என்று வியாக்கியானம் அளித்துள்ளனர்.

நமது பதில்:

போடப்படுவதற்கு முன்பே ஊதியது என்றால் இந்த நெருப்பில் தான் இப்றாஹீம் நபியைப் போடுவார்கள். எனவே இதை ஊதி நெருப்பை பெருதாக்குவோம் என்று முன்யோசனையுடன் ஒரு பல்லி செயல்பட்டது என்று சொல்ல வருகிறீர்களா?

அல்லது இதில் தான் இப்றாஹீம் நபி போடப்படுவார்கள் என்றெல்லாம் அதற்கு தெரியாது; அது தற்செயலாக நெருப்பை ஊதியது என்றால் தற்செயலாக செய்த ஒன்றுக்காக இறைவன் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாகத் தண்டிப்பது தான் இறைநியதியா? அவ்வாறு தற்செயலாக செய்த ஒன்றுக்காக ஒட்டு மொத்த (பல்லி) பரம்பரையையும் தண்டிப்பது குர்ஆன், சுன்னா அடிப்படையில் இறைவனுக்குரிய சரியான செயலா?  இதற்கும் கட்டுரையாளர் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நமது வாதம்: 4

இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊத வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே மனிதர்களின் சதித்திட்டம் பற்றி ரகசிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் மறைவான ஞானம் அந்தப் பல்லிக்கு இருந்ததா? என்றும் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

இதற்கும் மேற்கண்டவாறு அர்த்தமற்ற உளறலையே பதிலாக்கியுள்ளார்கள்.

அவர்களது உளறல்: 4

உஷ்ணம் வந்த திசையில் பல்லி ஊதியது அவ்வளவு தான். அதற்கு மனிதர்களின் சதித்திட்டம் பற்றியெல்லாம் தெரியாது என்று கூறியுள்ளார்கள்.

நமது பதில்:

மறுபடியும் பல்லி எதேச்சையாகத்தான் ஊதியது என்ற முன்னரே பதிலளிக்கப்பட்ட சொத்தை வாதத்தை முன்வைத்து தங்கள் கருத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள்.

மேற்கண்ட கேள்வியை நாம் எதற்காக எழுப்பியிருந்தோம் என்ற அடிப்படையை சரியாக அவர்கள் விளங்கவில்லை என்பதையே இந்த பதில் தெரிவிக்கின்றது.

மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய அந்த ஹதீஸை நன்றாக படியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்ததுஎன்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி), நூல்: புகாரி 3359

இந்த ஹதீஸில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பல்லியைக் கொல்ல வேண்டும்

அது இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது.

பல்லியைக் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணமாக அது இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தை ஊதியது என்று தெளிவாக இதில் சொல்லப்பட்டுள்ளது.

இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியதன் காரணத்தால் இறைவன் அவற்றைத் தண்டிக்கிறான் என்றால் (மேற்படி ஹதீஸில் அவ்வாறு தான் உள்ளது) அவை வேண்டுமென்றே திட்டமிட்டு இச்செயலை செய்திருக்க வேண்டும். எதிரிகள் இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை மூட்டியுள்ளார்கள். இப்றாஹீம் நபியை ஒழிப்பதில் நம்முடைய பங்காக அவர்களுடன் சேர்ந்து கொண்டு நெருப்பை நன்றாக ஊதிப் பெரிதாக்குவோம் என்ற யோசனையுடன் பல்லி செயல்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் இந்தக் காரணத்தை முன்னிட்டு பல்லிக்கு இறைவன் தண்டனை வழங்க முடியும். அது எதேச்சையாக இச்செயலைச் செய்திருந்தால் அது பெரும் தண்டனை வழங்குவதற்குரிய செயல் அல்ல.

எனவே பல்லிக்கு இறைவன் தண்டனை வழங்கியதாக ஹதீஸில் வருகிறதே அப்படியென்றால் பல்லி எதிரிகள் தீட்டிய திட்டத்தை அறிந்து கொண்டு யோசனையுடன் செயல்பட்டதா? அவ்வாறெல்லாம் யோசிப்பதற்கு பல்லிக்கு பகுத்தறிவு உண்டா? இந்த கருத்து சரியா? என்ற வாதங்களின் அடிப்படையில் இந்த ஹதீஸ் சரியானது அல்ல என்று எழுதியிருந்தோம்.

இந்தக் கருத்தை சரியாக உள்வாங்காமல் திரும்பத் திரும்ப அது எதேச்சையாக உஷ்ணம் வந்த திசையை நோக்கி ஊதியது அவ்வளவு தான்; அதற்கு மேல் பேசக் கூடாது என்பது போல பதிலளித்துள்ளார்கள்.

எதேச்சையாகச் செய்திருந்தால் அதை ஏன் தண்டிக்க வேண்டும்? அதுவும் எதேச்சையாகச் செய்த செயலுக்காக ஒட்டு மொத்த பல்லிகளையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும்? எனவே ஹதீஸின் போங்கு அது எதேச்சையாகச் செய்ததாக குறிப்பிடவில்லை. வேண்டும் என்றே திட்டத்துடன் செய்ததாகத் தான் ஹதீஸ் கூறுகிறது. இதற்கு அவர்களிடத்தில் சரியான, தெளிவான பதில் இல்லை என்பதே உண்மை.

அடுத்து பல்லி நெருப்பை ஊதியது எதேச்சையாக நடந்த செயல் தான் என்பதை நிறுவ பின்வருமாறு உளறுகிறார்கள்.

அவர்களது உளறல் 5

மேற்கண்ட புகாரியின் செய்தியில் பல்லியைக் கொல்லுங்கள் என்பது தனித்தகவலாகவும், நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது தனித்தகவலாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நெருப்பை ஊதிய செயல், தண்டனைக்குக் காரணமாக இடம் பெறவில்லை; தகவலாகத் தான் இடம் பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள்.

நமது பதில்:

என்ன பிதற்றல் இது! தண்டனைக்கான காரணமாகத் தான் நெருப்பை ஊதிய செயல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக முன்னர் விளக்கியுள்ளோம். இதை விட வேறு எப்படி விளக்குவது?

ரஃபீக் அஹ்மதை மென்டல் ஆஸ்பத்திரியில் சேருங்கள்;

அவர் கண்ட மேனிக்கு உளறுகிறார்.

என்று கூறினால் அறிவுள்ள யாரும் ரஃபீக் அஹ்மதை மென்டல் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு, அவர் உளறுகிறார் என்ற செயல் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வார். அதைவிடுத்து அது தனித்தகவல், இது தனித்தகவல் என்று மூளையுள்ள யாரும் பிதற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மேலும் நெருப்பை ஊதி விட்டதன் காரணமாகத்தான் பல்லியைக் கொல்லுமாறு நபிகளார் உத்தரவிட்ட நஸயீயில் பதிவு செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் பதிலளிக்கையில், ஹதீஸ் சரியானது தான். எனினும் இது புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக உள்ளது. இதில் இடம் பெறும் முஆத் பின் ஹிஷாம் என்பவர் சில வேளை தனது எண்ணத்தில் தோன்றியதை அறிவித்து விடுவார். எனவே அந்தக் கூடுதல் தகவல் நஸயீ அறிவிப்பில் உள்ள குறையாகும் என்று கூறியுள்ளார்.

இதுதான் ஹதீஸை இவர்கள் ஆய்வு செய்யும் இலட்சணம்!

புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக இந்தச் செய்தியில் மேற்படி ஹதீஸ் கலை அறிஞர் (?) என்ன கண்டு விட்டார்?

புகாரியின் அறிவிப்பில் நபிகள் நாயகம் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். “அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

“(பல்லி என்ற) இந்தப் பிராணியைத் தவிர அனைத்துமே இப்ராஹீம் நபியின் நெருப்பை அணைத்தன. அதனால் அதைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் கட்டளையிட்டார்கள் என்று நஸயீயில் உள்ளது.

இதில் என்ன முரண்பாடு? புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக நஸயீயில் என்ன உள்ளது? ஒன்றுக்கொன்று மேலதிக விளக்கமாக உள்ள ஒரு செய்தியை, ஒன்றுக்கொன்று மோதவிட்டு, அதற்கு இது மாற்றமாக உள்ளது என்கிறார் எனில் இவரின் இலட்சணம் என்ன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

சாதாரண அறிவுள்ள யாரும் புகாரியின் அறிவிப்புக்கு மாற்றமாக நஸயீயில் எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று விளக்கமாகத் தான் உள்ளது என்பதை விளங்க முடியும். ஆனால் இவரின் மாலைக்கண்ணுக்கு அல்லது மழுங்கிப் போன மூளைக்கு முரண்படுவதாகத் தெரிகிறது எனில் எண்ணத்தில் தோன்றியதை அறிவிப்பவர் கட்டுரையாளரே என்பதையும், அவரது அறியாமையையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

அவர்களது உளறல்: 6

அரபி மூலத்தில் உள்ளபடி அவர்களின் (நெருப்புக் குண்டம்) மீது ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்று இருக்க வேண்டிய தமிழாக்கம், அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்று தமிழ் வெளியீட்டில் உள்ளது. ஆகையால் பல்லி வேண்டுமென்று தான் ஊதியது என்று சொல்ல முடியாது.

என்று இரண்டுக்குமிடையில் ஏதோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதைப் போன்று தத்து பித்து என தத்துவமாய் உளறிக் கொட்டியுள்ளார்.

நமது பதில்:

அவர்களின் மீது ஊதியது என்பதற்கும் அவர்களுக்கு எதிராக ஊதியது என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

அவர்களின் மீது ஊதியது என்றால் அவர்களுக்கு எதிராக ஊதவில்லை என்றாகிவிடுமா? எதிராக இல்லாமல் பிறகு எதற்காக அவர்களின் மீது ஊதியது. நெருப்பை அணைக்கவா? ஜில்லென்ற காற்றுக்காகவா? வழக்கம் போல் மூளை குழம்பி, ஆம் என்று கூறி விடாதீர்கள். அப்படி இருந்திருந்தால் அதைக் கொல்லும் படி நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் எதேச்சையாக ஊதியது என்ற பழைய பல்லவியையும் பாடி விடாதீர்கள் அதற்கும் நாம் தெளிவாகப் பதிலளித்துள்ளோம்.

அவர்களது உளறல்: 7

ஒரு வேளை வேண்டுமென்றுதான் பல்லி ஊதியது என்று அர்த்தம் வைப்போம் என பிடிவாதம் பிடித்தாலும் பாதகமில்லை.

இது அவர்களின் அடுத்த உளறல்.

நமது பதில்:

பாதகமில்லை என்றால் பிறகு எதற்காக இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு, தாறுமாறாக உளற வேண்டும்.

கால இடைவெளியில் முரண்பாடுகள் ஏற்படுவது ஒரு ரகம். ஒரு வரி எழுதி விட்டு அடுத்த வரியில் அதற்கு முரண்பட்டு எழுதுவது என்பது தனிரகம்.

இந்த முரண்பாட்டிலிருந்து பல்லியால் பைத்தியம் பிடித்தவர், முரண்பாட்டுப் பிரியர், பல்லிப்பித்தர் ஆகிய அடைமொழிகளுக்கு உரிமையாளர்கள் யார் என்பதும் தெளிவாகப் புலனாகிறது.

அவர்களது உளறல்: 8

மேற்கொண்டு தேள் மற்றும் எலி பற்றிய ஹதீஸ்களை எடுத்தெழுதி இவைகள் எப்படி இயல்பில் தீங்கிழைக்கக் கூடியதோ அது போன்று பல்லியும் இயல்பில் தீங்கிழைக்க கூடிய பிராணியாகும். எனவே அது இயல்பாகத் தீங்கிழைக்கும் செயலைத் திட்டமிட்டு செய்ததாகக் கூறுகிறது என்று வளவளத்துக் கொண்டிருப்பது கூடாது என்று சொல்லி கட்டுரையாளர் வளவளத்துக் கொண்டிருக்கிறார்.

நமது பதில்:

ஒரு பிராணி இயல்பில் எதைச் செய்யுமோ அதைச் செய்தால் அந்தச் செயலை அது திட்டமிட்டு செய்தது என்றாகாது; அவ்வாறு கூறமாட்டோம்; கூறவும் கூடாது.

தேள், பாம்பு போன்றவை இயல்பில் கொட்டும். சிங்கம் இயல்பில் வேட்டையாடும். இவைகள் தமக்குரிய இயல்பில் செயல்பட்டால் அப்போது அது திட்டம் தீட்டி செயல்பட்டது என்ற தோற்றம் வராது.

ஒருவன் சிங்கம் எனது பணத்தைத் திருடியது என்றாலோ, பாம்பு என்னை வாயால் ஊதி கிணற்றில் தள்ளிவிட்டு மேல்கதவையும் தாழிட்டது என்று சொன்னாலோ அவனிடம் என்ன கேட்போம்.

இவற்றைச் செய்ய சிங்கம், பாம்பு போன்றவற்றிற்குத் தகுதி, பகுத்தறிவு உண்டா? ஏனெனில் இவைகள் இதனுடைய இயல்பான குணமல்லவே என்று தானே கேட்போம்.

அதுபோன்று தான் பல்லி அதனுடைய இயல்பான செயலைச் செய்து அதனுடைய தண்டனையாக அதைக் கொல்லுமாறு நபிகள் நாயகம் உத்தரவிட்டிருந்ததாக ஹதீஸ் குறிப்பிட்டால் அதை ஏற்பதில் பிரச்சனை இல்லை.

ஆனால் ஹதீஸில் கூறப்பட்டது என்ன? இப்றாஹீம் நபி போடப்பட்ட நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது. இப்றாஹீம் நபிக்கு எதிராகச் செயல்பட்டது. எனவே அதைக் கொல்லுங்கள் என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

நெருப்புக் குண்டத்தை ஊதுவது பல்லியின் இயல்பான குணமா? ஒரு பிராணி நபிக்கு எதிராகச் செயல்படுவது அதனுடைய இயல்பா?

என்னவோ இப்றாஹீம் நபியைத் தன் எதிரியாகவும், தன்னை ஹீரோவாகவும் பாவித்துக் கொண்டு நெருப்பை பல்லி ஊதியது என்றால் அது  எப்படி பல்லியின் இயல்பான குணமாக ஆகும்?

எனவே பல்லியின் இயல்பான குணம் பற்றி அந்த ஹதீஸ் கூறவில்லை. தேள், எலி பற்றிய ஹதீஸ்களுக்கும் பல்லி தொடர்புடைய ஹதீஸுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என்பதை கட்டுரையாளருக்கு சொல்லிக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 13

சந்திப்பின் ஒழுங்குகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஒரு பெண்ணை ஐந்தாறு நபர்கள் கொண்ட, அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆண்கள் சேர்ந்து ஏதேனும் ஒரு விஷயமாகப் பார்க்கச் சென்றால் அதனை மார்க்கம் அனுமதிக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் அனைவரையும் விரட்டியடிக்கத் தேவையில்லை. இதுபோன்று ஒரு ஆணை, பல பெண்கள் சேர்ந்து ஏதேனும் மார்க்கம் அனுமதித்த காரியத்தை நிறைவேற்றுவதற்குச் சந்தித்தால் தவறில்லை.

இதற்கு ஆதாரமாக நபியவர்கள் காலத்தில் நடந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் சம்பவத்தைக் ஆதாரமாகக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (தனிமையிலிருந்த தம் துணைவியாரிடம்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, “(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்என்று கூறி விட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, “இன்றைய தினத்திற்குப்பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்; அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிரஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4385

அதாவது ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருக்கத் தான் தடை விதிக்கிறது மார்க்கம். ஆனால் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கிற அந்த ஆணுடன் இன்னும் ஒரு ஆணோ அல்லது இரண்டு ஆண்களோ சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆண்கள் இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணை சந்திக்கலாம் என்று நபியவர்கள் மிம்பரில் ஏறி நின்று மக்களுக்குச் சட்டம் சொல்கிறார்கள்.

எத்தனையோ காரியங்களில் தனித்திருக்கிற ஆணை, பல பெண்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணத்திற்கு, பள்ளியிலும் கல்லூரிகளிலும் பாடம் நடத்துகிற ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பார்கள். படிப்பவர்கள் பெண்களாக இருப்பார்கள்.

இதை விடச் சிறந்தது பெண்ணே பெண்ணுக்கு பாடம் நடத்துவது தான். இருப்பினும் மார்க்கத்தில் ஹராம் என்கிற அளவுக்குச் சொல்ல முடியாது. மார்க்கத்தின் பிற வரம்புகளை மீறாமல் இதில் ஒரு அனுமதியை மார்க்கமே கொடுக்கத் தான் செய்கிறது.

அதேபோன்று நன்மையான காரியங்களான ஜமாஅத்தின் மூலமோ இயக்கத்தின் மூலமோ அல்லது இஸ்லாமிய அரசு இருந்தால் அதன் மூலமோ அனாதைப் பெண்களுக்கு, ஏழைப் பெண்களுக்கு தர்மத்தைச் செலுத்தும் போது இதுபோன்ற சூழல் ஏற்படலாம்.

ஃபித்ராவை வசூலிக்கின்ற போதும் ஃபித்ராவை விநியோகிக்கின்ற போதும்கூட இந்தச் சூழ்நிலைகள் ஏற்படலாம். இப்படி எத்தனையோ விஷயங்களில் தனித்திருக்கிற ஒரு பெண்ணை குழுவாக இருக்கிற ஆண்களோ அல்லது தனித்திருக்கிற ஆணை குழுவாக இருக்கிற பெண்களோ சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம். இதற்கு எதிர்மறையாகவும் ஏற்படலாம். குழுவாக இருப்பவர்களை தனித்திருக்கிற எதிர் பாலினர் சந்திக்கின்ற வாய்ப்புக்களும் மார்க்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

பெருநாளில் நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று உரை நிகழ்த்திய சம்பவத்தை இதற்கு ஆதாரமாகச் சொல்லலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, “தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து “அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.

நூல்: முஸ்லிம் 1607

வெள்ளிக்கிழமை தொழுதுவிட்டு ஒரு மூதாட்டியின் வீட்டிற்குக் குழுவாகச் சென்ற சஹாபாக்களின் சம்பவத்தைப் பார்ப்போம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியைப் பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையைப் போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம். அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக் கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

நூல்: புகாரி 938

பெண்களுக்கும் தனியாகப் பயான் நடத்தப்பட வேண்டும் என்று நபியவர்களிடம் நபித்தோழியர்கள் கோரிக்கை வைத்ததால் அவர்களது கோரிக்கையை ஏற்று, தனியாக அந்தப் பெண்கள் சபைக்குச் சென்று பயான் செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே, எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 5130

இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு நபர் மட்டும் தனியாகச் செல்லாமல் கூட்டாக, குழுவாகச் சென்றோம் என்றால் மார்க்கம் அதை அனுமதிக்கத் தான் செய்கிறது. எனவே பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு நாம் செல்வதாக இருப்பின் நம்முடன் இன்னொருவரையோ அல்லது இருவரையோ சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்கம் நமக்கு உணர்த்துகிறது.

இவ்வாறு இரண்டு மூன்று நபர்கள் செல்கிற போது வேறுவிதமான தவறான எண்ணங்கள் தோன்றாது. அப்படி அதையும் மீறி தவறான எண்ணங்கள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அமையாது என்பது தான் உண்மை.

அதே நேரத்தில் தவறு செய்ய வேண்டும் என்றே திட்டம் செல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து ஒரு கருத்தை நிலைநாட்டக் கூடாது. பத்து பேர் கொண்ட குழுவும் தவறு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்றால் ஒரு பெண் தனிமையில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தவறு தான் செய்ய வேண்டும் என்றாகி விட்டால் குழுவையும் சீரழித்துவிடுவார்கள். அதை வைத்துக் கொண்டு மார்க்கம் அனுமதித்த ஒரு காரியத்தைத் தடை செய்ய முடியாது.

எனவே பொதுவான விஷயத்தைத் தான் பார்க்க வேண்டும். தனிமையில் ஒருவர் தவறு செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். தவறு செய்தாலும் அதை மறைப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகமிருக்கும். ஆனால் அதுவே இருவரோ, இருவருக்கு அதிகமானவரோ இருந்தால் தனிமையில் இருப்பதை விடவும் பாதுகாப்பும் கற்பொழுக்கத்தின் மீது சுமத்தப்படுகிற களங்கமும் நம்மீது ஏற்படாமலிருக்க உகந்தது என்று கூறலாம்.

எனவே ஒரு பெண்ணை ஒரு ஆண் சந்திப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு ஆணை ஒரு பெண் சந்திப்பதாக இருந்தாலும் மஹ்ரமான துணை இருக்க வேண்டும். அல்லது கணவர், மனைவி இருக்க வேண்டும். அல்லது இரண்டு ஆண்களோ இரண்டுக்கு மேற்பட்ட ஆண்களோ இருக்க வேண்டும்.

இரண்டு பெண்கள் இருக்கிற வீட்டிற்கு ஒரு ஆண் செல்வது தவறில்லை. ஆண்களுக்குரிய இந்தச் செய்தி அப்படியே பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் நபியவர்கள் ருபைஃ என்ற பெண்மனியைப் பார்க்கச் சென்ற போது அங்கு நிறைய பெண்கள் இருந்தார்கள். அப்படியிருக்கும் நிலையில் தான் அந்தப் பெண்மணியை நபியவர்கள் சந்தித்தார்கள்.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். – (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்-ம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்-க் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4001, 5147

நிறைய பெண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு அருகில் நின்று பேசுவது தவறு கிடையாது என்பதை இந்தச் செய்தியிலிருந்து புரியலாம்.

அந்தப் பெண்ணின் தந்தைமார்கள் பத்ருப் போரில் இறந்துவிட்டதால், குடும்பத்தில் மூத்த பெரியவர்கள் இல்லை என்பதால் நபியவர்கள் தந்தை அந்தஸ்தில் தான் ஒரு பொறுப்பாளராக இருந்ததால் இந்தத் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் போனார்கள்.

சிறுமிகளும் பெண்களும் கூட்டமாக நின்று கொண்டிருக்கையில் அந்தப் பெண் அமர்ந்திருந்த விரிப்பில் நபியவர்களும் அமர்ந்து அவர்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள். இதைத் தனிமை என்று யாரும் வாதிட்டுவிட முடியாது.

ஏனெனில் கல்யாணத்தில் சிறுமிகள் நிற்க, குடும்பத்தினர் வருகைக்கு முன்னால் பலர் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் நபியவர்கள் அந்தப் பெண்ணிடம் பேசினார்கள். இதுபோன்ற தனிமைக்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் நமக்குணர்த்துகிறது.

இன்னும் சொல்லப் போனால் இது தனிமையே கிடையாது. இன்னொருவர் கண் பார்வையில் படும் விதமாக நாம் நடந்து கொண்டாலேயே அது தனிமையாகாது.

எனவே இவை தவிர ஆணும் பெண்ணும் மட்டும் தனிமையில் இருக்கும் சூழ்நிலைகளை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது.

—————————————————————————————————————————————————————-

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.

கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

வெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில், நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைத் தெரிந்து கொள்வோம். குர்ஆன் ஹதீஸ் நிழலில் பயணத்தைத் தொடர்வோம்.

நிழலும் அருட்கொடையே!

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.

இந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.

(திருக்குர்ஆன் 16:81)

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும்  அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதீ (2292), முஸ்லிம் (4143)

படைத்தவனுக்குப் பணியும் நிழல்

காலையிலும் மாலையிலும் வெவ்வேறு திசையில் நிழல் விழுவதைப் பார்க்கிறோம். எந்தவொரு காரணமும் இல்லாமல் நிழல் விழுவதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அனைத்துப் படைப்பினங்களும் படைப்பாளனான அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டுப் பணிகின்றன. அவன் விதித்தபடி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் நிழலும் ஒரு அங்கம். எந்த நேரத்தில் எப்படி விழவேண்டும் என்று வல்ல இறைவன் செயல்திட்டம் வகுத்தானோ அதன்படி அங்குலம் மாறாமல் அப்படியே அடிபணிகிறது நிழல்.

இறைவனுக்கு மாறுசெய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் மனித இனம் இதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அப்படிச் சிந்தித்தால் நாம் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். இதோ, இறைவனே இறைமறையில் கேள்வியைத் தொடுக்கிறான் பாருங்கள்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

(திருக்குர்ஆன் 13:15)

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

(திருக்குர்ஆன் 16:48)

நிழலை நிலையாக்கும் வல்லவன்

சூரியன் எந்தத் திசையில் இருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் நிழல் தோன்றும். இதன் மூலம் நிழல் ஏற்படுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான திட்டமிடப்பட்ட கச்சிதமான ஏற்பாட்டிற்குச் சொந்தக்காரன் ஏக இறைவன் ஒருவனே என்பதை எவரும் மறுக்க இயலாது.

தம்மை இறைவன் என்று சொல்பவர்களும் அல்லது தமக்கும் இறைவனின் ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுபவர்களும் இந்த நிழலுக்குச் சொந்தம் கொண்டாடும் அருகதை அணுஅளவும் அற்றவர்கள் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். அந்த இறைவன் நினைத்தால் நிலைமாறும் விதத்தில் வைத்திருக்கும் நிழலை நிலையானதாக ஆக்கிவிடுவான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் நினைத்தால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலகையும் நிழல் கொண்டதாக மாற்றமுடியும். இன்னும் ஏன்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிழலை நிரந்தரமாக வைக்கவும் முடியும். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.

(திருக்குர்ஆன் 25:45)

(பனூ இஸ்ராயீல் சமுதாயமாகிய) உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

(திருக்குர்ஆன் 2:57)

(பனூ இஸ்ராயீல் சமுதாயமான) அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது “உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.

(திருக்குர்ஆன் 7:160)

உஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது.  அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன்.  எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன்.  மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரேதத்தை  தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். “அம்ருடைய மகள்என்றோ  அல்லது “அம்ருடைய சகோதரிஎன்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.  நபி (ஸல்) அவர்கள் “நீ ஏன் அழுகிறாய்?” அல்லது “நீ அழ வேண்டாம்”  என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

ஆதாரம்: புஹாரி (1293), (1244), (2816), (4080), முஸ்லிம் (4875), (4876)

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா” (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)என்று கூறினார். உடனே, “(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புஹாரி (3231), முஸ்லிம் (3674)

நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர்

பூமியில் குறிப்பிட்ட காலம் வாழும் நமக்கு, சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஏக இறைவன் நிழலைக் கொடுத்திருக்கிறான். ஆனால் ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, அவன் முன்னால் அடிமைகளாய் அனைவரும் மஹ்ஷர் மைதானத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு நிற்கும் அந்த மறுமை நாளின் போது. அவனது நிழல் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. மரங்களோ செடி கொடிகளோ கட்டிடங்களோ நிழல் கொடுக்கும் எந்தவொன்றும் இருக்காது.

அப்போது, அந்த அதிபதியின் நிழலில் சில வகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும் இருப்பார்கள். வேறு நிழலற்ற அந்த நாளில் மற்றவர்களின் நிலையை குறித்து யோசிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது இல்லையா? எனவே. இங்கு நிம்மதியளிக்கும் நிழலைக் கொடுத்ததற்காக நாம் தினந்தோறும் தவறாது ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவன் நம்மீது காட்டும் கருணையை இரக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது ஆற்றலை உணர்ந்து அவன் சொன்னபடி வாழ வேண்டும்.

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் “நான்       அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: புஹாரி (660), (1423), (6806), முஸ்லிம் (1869)

அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்என்று கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம் (5015)

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

ஆதாரம்: முஸ்லிம் (5736)

நிழல் நிறைந்த சொர்க்கம்

நம்பிக்கைக் கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கத்தைத் தருவதாக இறைவன் வாக்குறுதி வழங்கியிருக்கிறான். அத்துடன், அந்தச் சொர்க்கத்திற்கு செல்வதற்கேற்ப செயல்படுவதில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அதன் தன்மையை, அதில் இருக்கும் இன்பங்களைத் திருமறையில் வல்ல இறைவன் குறிப்பிட்டுள்ளான்.

ஆறுகள், சோலைகள், கனிகள் என்று அங்கு இருக்கும் இன்பங்களைக் குறிப்பிடும்போது நிழலைப் பற்றிப் பல இடங்களில் பேசுகிறான். இங்கு இருப்பது போன்று இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கும் நிழலானது நீண்டதாகவும் நிலையானதாகவும் மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்று எடுத்துரைக்கிறான். அத்தகைய நிழல்களில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்காகவே அந்த நிழல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வல்ல இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வாறு, சொர்க்கத்தின் இன்பங்களில் நிழல் என்பது முக்கிய ஒன்றாக  இருக்கும் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.  (திருக்குர்ஆன் 4:57)

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏக இறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே திருக்குர்ஆன் 13:35)

அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும்  கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.  (திருக்குர்ஆன் 36:55-58)

(அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள். (திருக்குர்ஆன் 56:27-40)

எனவே, அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.  (திருக்குர்ஆன் 76:11-17)

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா?

கடந்த மார்ச் மாத மனாருல் ஹுதா இதழில் நபிகளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தொடர்பாக ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது.

அதில், “நபிகளாரைக் கனவில் காணலாம். அது தொடர்பாக ஹதீஸ்கள் இருக்கிறது. ஆனால் நனவில் நபிகளாரைக் காண்பது தொடர்பாக நம்பகத்தனமான ஹதீஸ்கள் இல்லை. எனினும் நபிகளாரின் சுன்னத்துகளை அடிபிறழாமல் பின்பற்றும் அல்லாஹ்வின் நல்லடியார்களால் கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை மனித உருவத்தில் காணமுடியும்” என்று ஒரு அற்புதமான பதிலை மவ்லானா அளித்துள்ளார்.

நபிகளாரைக் கனவில் காண்பது தொடர்பாக ஹதீஸ் உள்ளது என்று பதிலளித்த மவ்லானா கஷ்பு என்ற அகஞானத்திற்கு ஆதாரம் இல்லை என்பதை வசதியாக மறைத்துக் கொண்டார்.

முதலில் நபிகளாரை நம்மால் கனவில் காண முடியுமா? என்பது பற்றி ஏற்கனவே நாம் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம்எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். யார் என்னைக் கனவில் கண்டாரோ உண்மையில் அவர் என்னைத் தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி  6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

‘என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கனவில் ஒருவர் தோன்றி, “நான் தான் முஹம்மத் நபி’ என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

“நான் தான் முகம்மது நபி’ என்று ஒருவர் கூறுவது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்ல. ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.

‘என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா? இல்லையா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும்.

நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும்.

நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து, நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு ‘நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்’ என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை அவர்களது உருவத்தில் காண முடியும் என்று மௌலான அளித்திருந்த பதிலுக்கான விளக்கத்தையும் காண்போம்.

கஷ்பு எனும் அகப்பார்வை உண்டா?

திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரம் உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழிகேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.

மற்றவர்களுக்கு இருப்பதைவிடக் கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக, தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.

இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்குக் கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.

அப்படியிருக்க கஷ்பின் மூலம் நபிகளாரைக் காண முடியும் என்பது அடிமுட்டாள் தனமான மார்க்கத்திற்கு எதிரான கருத்தாகும்.

கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரைக் கனவில் கண்டேன் என்று கூறுபவரிடம், “உங்கள் வீட்டை எனக்குத் தாருங்கள்; நபிகளார் என்னுடைய கஷ்பில் தோன்றி உங்கள் வீட்டைத் தருமாறு கூறினார்கள்’ என்று சொன்னால் ஒப்புக் கொண்டு வீட்டைத் தந்து விடுவாரா?

நீங்கள் இத்தனை லட்சம் எனக்குத் தருமாறு உங்கள் தந்தை கஷ்பில் என்னிடம் கூறினார் என்று சம்பந்தமில்லாத, நம் தந்தையைக் காணாத ஒருவர் கூறினால் அதை உண்மை என நம்புவோமா?

தான் தொழாமல் இருந்து கொண்டு மக்கள் கேட்கும் போது, “நான் கஷ்பில் தொழுதுவிட்டேன்’ என்று பதில் கூறுவதற்கும், கடன் தந்தவர் கடனை திருப்பிக் கேட்கும் போது, “நான் கஷ்பில் கடனை அடைத்து விட்டேன்’ என்று பதிலளிப்பதற்கும் தான் இந்தப் போலி கஷ்பு எனும் தத்துவம் உதவும்.

எனவே, இது மக்களை முட்டாளாக்குவதற்காக சூபியாக்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி தத்துவம் என்பதையும் இதற்குக் குர்ஆன் ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

பக்கா இணை வைப்பாளர்களான பரேலவிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் ஓரளவாவது ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற கருத்து உண்டு.

ஆனால் கஷ்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நனவில், அதாவது இந்த உலகில் காண முடியும் என்ற கொள்கையைச் சொல்வதன் மூலம் பரேலவிகளை விட மோசமான கொள்கையில் இவர்கள் இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.