ஏகத்துவம் – மே 2013

தலையங்கம்

கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம்

இது கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. அதிகமான மாவட்டங்களில் சூரியன் சதத்தைத் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் கிழக்கிலிருந்து கிளம்பும் போதே அனல் தெறிக்கின்றது. அது உச்சி நோக்கி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வெப்பத்தின் அடி கூடிக் கொண்டே போகின்றது.

மாலையில் மேற்கே மறைகின்ற வரை சூரியனின் சர்வாதிகார சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கின்றது. மறைந்த பின்னாலும் அடிக்கின்ற அனல் காற்றின் வேகம் தணிய மறுக்கின்றது; உஷ்ணத்தின் வீரியம் அடங்க மறுக்கின்றது.

சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் உடலில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக உடல் வியர்வைத் துளிகளை வடிக்கின்றது.

இரவு நடுநிசி ஆனாலும் வியர்வையின் வரத்து நின்றபாடில்லை. பூமியில் ஏறிய சூரிய உஷ்ணத்தால் பூத உடல் முழுவதும் எரிய ஆரம்பித்து விடுகின்றது.

உடலிலிருந்து உதிர்ந்த வியர்வைத் துளிகளின் மூலம் இழந்த நீர்ச் சத்தை ஈடுகட்டுவதற்காக, திரும்பப் பெறுவதற்காக தாகத்தால் வாய் தவிக்கின்றது. அதன் விளைவு, குடம் குடமாய் தண்ணீரை உடல் உள்ளே இழுத்துக் கொள்கின்றது. இழப்பீட்டைச் சரி செய்து கொள்கின்றது. தாகம் தணிந்து, உடலில் தெம்பு கிடைத்ததும் வெயிலின் கொடுமையில் ஒரு சிறிய விடுதலை கிடைக்கின்றது. ஒருநாள் முடிந்து மறுநாள் என்று இந்தக் கோடை காலம் முழுவதும் இப்படியே கழிகின்றது. இரண்டு மாதங்களில் கோடைக்காலம் முடிவுக்கு வருகின்றது. அதன் பிறகு ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கோடையின் கொடுமை!

இதிலிருந்து தப்பிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல் என்றும், ஓரளவு வசதி உள்ளவர்கள் சிம்லா, காஷ்மீர் போன்ற இடங்களுக்கும், பெரும் பணக்காரர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று கோடையின் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். உள்நாட்டுக் கோடை என்பதையே இந்த உல்லாசப் பயணத்தில் மறந்து விடுகின்றனர். இது இந்த உலகத்தில்!

ஆனால் மறு உலகில், கொடிய நரகில் மாட்டிக் கொள்வோரின் கதி என்ன? அந்த நரக நெருப்பு என்பது வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் வந்து காட்டி விட்டுப் போகின்ற கோடை போன்றதா? நிச்சயமாக இல்லை.

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.  (அல்குர்ஆன் 78:21-23)

அதிலிருந்து அவர்கள் தப்ப நினைக்கும் போதெல்லாம் திரும்ப நரகத்திற்கே அனுப்பப்பட்டு விடுவர்.

கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).  (அல்குர்ஆன் 22:22)

அந்த நரகத்தில் நிரந்தரமாக வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

தண்ணீர், தண்ணீர் என்று அவர்கள் கேட்கின்ற போது, உருக்கப்பட்ட செம்பினாலான கொதிநீர் தான் கொடுக்கப்படுவார்கள். ஆனால் அந்தத் தண்ணீரை அவர்கள் குடிக்க முடியாது.

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 18:29)

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.  (அல்குர்ஆன் 14:16-17)

இவ்வுலகில் கோடை காலத்தில் தாகத்தைத் தணிப்பதற்காகக் குளிர்ந்த நீரைப் பருகுகின்றோம். ஆனால் அங்கு குளிர்ந்த நீர் கிடையாது. கொதிநீரே தரப்படும்.

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.  (அல்குர்ஆன் 78:23, 24)

இவ்வளவு தண்டனையும் நிந்தனையும் ஏன்? எதற்காக?

அல்லாஹ்வுக்கு இணை வைத்து, அவனது அடியார்களை அழைத்துப் பிரார்த்தித்ததற்காகத் தான்.

குடிநீர் கிடைக்காத அந்தக் கொடிய நரகைப் பரிசாகத் தரும் இணைவைப்பு என்ற பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்வோமாக! மற்றவர்களையும் இதிலிருந்து விலக்கி, காப்பாற்றப் பாடுபடுவோமாக! நாம் இந்த நரக வேதனையைக் கோடை காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து சுவனத்திற்குரிய அமல்களைச் செய்ய அதிகம் உழைப்போமாக!

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 2

துறவறம் – ஒரு போலி வேடம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை வைத்துக் கொண்டே கட்டுப்படுத்துவதாகச் சொல்வது. இது ஆசையே வராத அளவுக்கு ஆண்மையை நீக்குவதாகும்.

மிருகங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதைப் போன்று, மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு முறையில் ஆண்மை நீக்கம் செய்வார்கள். அதனால் தான் நபித்தோழர்கள் அதை நபியவர்களிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?” என்று கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),  நூல்: புகாரி 5071, 4615, 5076

எனவே ஆண்மை நீக்கம் செய்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறதெனில், எப்படியாவது ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதைத் தான் இது வலியுறுத்துகிறது.

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி), நூல்: புகாரி 5073

எனவே ஒரு முஸ்லிம் எந்த நிலையை அடைந்தாலும் கல்யாணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு ஒருக்காலும் வரவே கூடாது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் வரை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோன்பைத் தவிர்த்து, துறவறம், ஆண்மை நீக்கம் என்று வேறு எந்த வழிகளையும் தேடக்கூடாது.

மேலும் துறவறம் என்பது தவறானது என்பதைப் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தாலே புரிந்து கொள்ளலாம். துறவறம் என்றால் கடவுளுக்காக நமது ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, கடவுளை நெருங்குவது என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களின் துறவு போலித்தனமாகவும் இரட்டை வேடமாகவும் இருக்கிறது. சிலர் மனைவி, மக்களைத் துறக்கிறார்கள். இன்னும் சிலர் ஆடையைக் கூட துறந்து தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எந்தத் துறவியும் இதுவரை சாப்பாட்டைத் துறக்கவே இல்லை. சாப்பிடுவதும் மனிதனின் ஆசையில் உள்ளது தானே.

இன்னும் சொல்லப் போனால், மனைவி, மக்கள், ஆடை எதுவும் தேவையில்லை என்று சொல்லி துறவறக் கோலம் பூணுபவர்கள், தங்களது முழு ஆசையையும் சாப்பாட்டின் மீது வைத்து திருவோட்டைத் தூக்கிக் கொண்டு போகின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், சாப்பாடும் தேவை, எல்லாம் தேவை என்று மக்களோடு மக்களாக இருந்து, துறவறம் கூடாது என்று சொல்லும் நாம், சாப்பாட்டிற்காக எந்தத் திருவோட்டையும் எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கவில்லை. எனவே ஆசையைத் துறப்பது என்பது போலித் தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஒரு மனிதன் ஆசையைத் துறக்க முடியுமா என்றால், முடியவே முடியாது. ஆசையைத் துறப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள், இரண்டு விதமாக இருப்பார்கள். ஒரு சாரார், பெண்களோடு தனிமையில் இருக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனே கெட்டுவிடுவதையும் உலகத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். துறவறம் என்று திரிந்தவர்களில் 99 சதவீதம் பேர் நாறிப் போன கதைகளை நமது நாட்டில் பார்த்தோம். உச்ச நிலையில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர்களெல்லாம் கூட, பெண்களுடன் தனிமையில் இருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையில் தனது துறவறத்தைத் துறந்து, தான் ஒரு பொய்யன் என்பதை உலகிற்குக் காட்டிவிடுகிறார்கள்.

எனவே பசித்தால் எப்படி சாப்பிடாமல் இருக்கமுடியாதோ அதே போன்றது தான் இந்த இல்லற சுகம். பெண்களின் மூலம் ஆண்களும் ஆண்களின் மூலம் பெண்களும் சுகம் அனுபவித்தல் என்பதும் ஒரு வகையான பசி. இந்தப் பசிக்குத் திருமணம் என்ற முறையான தீனி கொடுக்காவிட்டால், திருடித் திண்ணும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுவிடுவான். ஹலாலான சாப்பாடு கிடைக்காத போது ஹராமைத் தேடிச் செல்வது இயற்கையான ஒன்றுதான். இல்லறப் பசிக்கு ஹலாலான வடிகால் அமைக்கவில்லையெனில், ஹராமான முறையில் பெண் சுகத்தை மனிதன் தேடி, தன்னையும் சமூகத்தையும் அழிக்கத் துணிகிறான். எனவே பலர் இதை விளங்காமல், நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு சித்தாந்தத்தை உலகில் சொல்லி சமூகத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனாலும் இந்தச் சித்தாந்தம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

இருப்பினும் முஸ்லிமல்லாத மக்களிடம் துறவறம் சிறந்தது என்ற ஒரு நம்பிக்கை இருக்கத் தான் செய்கின்றது. “நாம் தான் அப்படி இருக்க முடியவில்லை; சிலரால் இப்படித் துறவியாக இருக்க முடிகிறது. இது சிறந்த பண்பு தான்’ என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் அது தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் எல்லாவற்றையும் துறந்த துறவி செய்கிற நன்மையை விட, துறவறம் கூடாது என்று குடும்பத்துடன் வாழ்கிறவர்கள் தாம் அதிகமான நன்மைகளைச் செய்கிறார்கள். துறவிகள் மனைவி, மக்கள், சொந்த பந்தம், உற்றார், உறவினர் என்று குடும்ப அமைப்பையும் துறக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்கிற நன்மையை இழந்து விடுகிறார்கள். எனவே தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் அவர்களுக்குத் துரோகம் செய்த கேடுகெட்ட பிறவிகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம்.

அதேபோன்று பிள்ளைகளைக் கொஞ்சுகிற பாக்கியமும், அவர்களின் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்துக் கவனித்து வளர்க்கிற பாக்கியத்தையும், அப்படி வளர்ப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சியையும் இன்பங்களையும் இந்தத் துறவிகள் இழக்கிறார்கள். அதற்குரிய நன்மைகளும் கிடைக்காது.

ஒருவரைச் சந்திக்கும் போது முகமன் கூறுவது, நலம் விசாரித்துக் கொள்வது, கஷ்டப்படுபவருக்கு உதவுவது, போராட்டத்தில் ஈடுபடுவது, சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்வது என்று எதற்கும் வரமாட்டார்கள் இந்தத் துறவிகள்.

சாதாரண மக்களிடம் இருக்கிற நிறைய நன்மையான காரியங்கள் துறவிகளிடம் இருக்காது. இவர்கள் தான் உலகத்தில் முதல் தர சுயநலவாதிகள். எனவே எதிலும் கலந்து கொள்ளாத, நன்மை தீமைகளைக் கண்டு கொள்ளாமல் விலகிக் கொள்பவர்கள் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படவே கூடாது. இவர்கள் மிகவும் மட்டமான மனிதர்கள் என்பதை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் சமூகத்தில் மிகவும் கீழ்த்தரமானவர்கள்.

எனவே துறவறம் என்ற இந்தச் சித்தாந்தம் குடும்ப அமைப்பை அழித்து நாசமாக்கிவிடும். குடும்ப உறவு என்பதே கணவன், மனைவி என்ற இருவரின் மூலமாகத் தான் உருவாகிறது. அண்ணன் தம்பி, அக்காள் தங்கை, மாமன் மைத்துனர், தாத்தா பாட்டி என்ற குடும்ப உறவுகளே இல்லாமல் ஆக்கி விடும் கேடுகெட்ட சிந்தாந்தம் தான் இந்தத் துறவறம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்….

—————————————————————————————————————————————————————-

கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிர், உடைமை அத்தனையையும் இழந்தனர். அத்துடன் நில்லாமல், “அடிமை இந்தியா வெள்ளையர்களிடமிருந்து நில அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும் பெறுவது மட்டும் விடுதலையாகாது; வெள்ளையரின் கல்வி, கலாச்சாரம், பண்பாடு அடிப்படையிலும் விடுதலை பெற வேண்டும்’ என்ற நோக்கில் “ஆங்கிலம் படிப்பது ஹராம்’ என்று முழங்கினர்.

இந்தக் கலாச்சார விடுதலை தான் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து, ஆங்கில ஆதிக்கபுரிகளிடமிருந்து அடைகின்ற முழுமையான விடுதலை என்று முடிவு கட்டி, முழு மூச்சாகக் களமிறங்கினர்; அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு அது முஸ்லிம்களுக்குப் பெரும் பாதகமாக அமைந்தது.

வெள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் இன்று கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டனர். ஆனால் முஸ்லிம்களோ பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரிய பின்னடைவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் உந்தி எழுந்து, எகிறி மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் முந்தி வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

கல்வித் துறையில் முன்னேறிய ஒரு சமுதாயம் கிறித்தவ சமுதாயம் என்று அடித்துச் சொல்லலாம். கல்வி, மருத்துவம் என்ற இரண்டு துறைகளையும் கையில் எடுத்துக் கொண்டு அந்தச் சமுதாயம் முன்னேறியது. இவ்விரண்டிற்கும் சேவை செய்கிறோம் என்ற சாயத்தைப் பூசிக் கொண்டு, கிறிஸ்தவம் என்பதைக் குறியீடாகக் கொண்டு இன்று வரை செயல்படுகின்றது.

இந்த இரண்டு துறைகள் மூலம் வலிந்து கிறிஸ்தவ மதத்தைத் திணிக்கின்றனர்.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

அல்குர்ஆன் 2:120

அல்லாஹ் சொல்வது போன்று அவர்களின் அந்த முயற்சியில் பின்தங்காமல் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வகையில் முஸ்லிம்களைப் பார்த்தால் இவ்விரு துறைகளிலும் பூஜ்யமாகவே உள்ளனர். இவர்களிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தும் கல்யாணப் பந்தல்களிலும் விருந்துகளிலும் காலியாகி, கரைந்து போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம்களிடம் இவ்விரு துறைகளிலும் வெற்றிடமே நிலவுகின்றது.

குறிப்பாக, தவ்ஹீது சிந்தனை கொண்ட கொள்கைவாதிகள் இந்தக் கிறித்தவ கல்வி நிறுவனங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியாகும். இதற்கு 10ஆம் வகுப்பு முடிந்தவுடன் எஸ்எஸ்எல்சி சான்றிதழும் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் எச்.எஸ்.சி. சான்றிதழும் வழங்குகின்றனர். இதற்குப் பின்னால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்கின்றனர்.

12ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூடங்களை அரசாங்கமும் நடத்துகின்றது, தனியாரும் நடத்துகின்றனர். அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களை விட தனியார் நடத்துகின்ற பள்ளிக்கூடங்கள் தான் தரமிக்கவையாக உள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்கள் அடிப்படையில் அமைந்தவை. கல்வித் தரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் அதிகமாக அமையும். அதனால் இங்கு ஓரளவு வசதியான மாணவர்கள் தான் படிக்க முடியும். அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் 90 சதவிகிதம் கிறித்தவ நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் கல்வி மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.

கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் கல்வியைத் தரமாக வழங்குகின்றன. அதனால் அவர்கள் நிர்ணயிக்கும் எந்தக் கட்டணத்தையும் மக்கள் செலுத்தத் தயாராக இருக்கின்றனர்.

இந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கத் தயங்குவதில்லை. காரணம் முஸ்லிம்களிடம் தரமான கல்வி நிறுவனங்கள் இல்லை.

இந்தக் கிறித்தவ நிறுவனங்கள் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய வகுப்பான LKG,  UKG  (KINDER GARDEN)  என குழந்தைகளுக்கான இரண்டு வகுப்புகளை நடத்துகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் Pre KG எனும் அதற்கு முந்தைய வகுப்பையும் நடத்துகின்றன.

இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளில் துவங்கி அவர்கள் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து கல்லூரி செல்கின்ற வரை தங்களுடைய கிறித்தவ மதக் கொள்கைகளை அவர்களிடம் புகுத்துவது தான்.

  • சிறு குழந்தைகளாக இருக்கும் போது தும்மல் ஏற்பட்டால் கூட “ஏசப்பா’ என்று சொல்வதற்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
  • காலையில் பள்ளி ஆரம்பிக்கும் போது பிரேயர் என்ற பெயரில் மண்டியிட்டு பைபிளின் அத்தியாயங்கள், வசனங்களைப் படிக்கச் செய்கின்றனர்.
  • தொழுகின்ற நேரம் வந்தால் மாணவ, மாணவியரை தொழுகைக்கு அனுமதிப்பதில்லை.
  • ஜும்ஆ தொழுகைக்கும் அனுமதி மறுக்கின்றனர்.
  • தாடி வைக்கும் மாணவர்களிடம் தாடியை மழிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆ அதிகமான மாணவர்கள் கிறித்தவ கல்விக்கூடங்களுக்கு 5 முதல் 10 கி.மீ. வரை சைக்கிளில் பயணம் செய்து செல்கின்றனர். இப்படிச் செல்லும் மாணவ, மாணவியருக்கு நோன்பு நேரங்களில் வழக்கமான பாட நேரமான காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை என்ற நேரத்தில் எந்தச் சலுகையும் காட்டுவதில்லை. இதனால் நோன்பு வைப்பதையே மாணவ, மாணவியர் தவிர்க்கும் நிலை ஏற்படுகின்றது.

  • பெருநாளைக்குக் கூட சில கிறித்தவக் கல்வியகங்களில் விடுமுறை அளிப்பதில்லை.
  • பருவமடைந்த, அல்லது பருவ வயதுக்கு நெருங்கிய மாணவிகளைக் கூட தொடை தெரியுமளவுக்கு ஆடைகளை (சீருடைகளை) அணியச் சொல்கின்றனர்.
  • அவர்களை தலையைத் திறந்து போடச் சொல்கின்றனர். புர்கா அணிவதற்கு அனுமதியில்லை. இப்படி புர்கா இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் மாணவியர் படிக்கும் கல்விக் கூடங்களில் ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவல நிலை.
  • ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் கல்விமுறை. இதனால் வழிதவறிய பாதைக்கு மாணவ, மாணவியர் செல்லும் நிலை.
  • பள்ளி ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர், சிறுமியரையும் பருவ வயதுடைய மாணவ, மாணவியரையும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது, நாடகங்களில் நடிக்கச் செய்வது, சினிமா பாடல்களை பாடி ஆடச் செய்வது போன்ற கலாச்சாரச் சீரழிவில் தள்ளுகின்றனர்.

தற்போது இருக்கின்ற ஒரு சில முஸ்லிம் நிறுவனங்களில் நமது பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால் அந்த நிறுவனங்கள் கிறித்தவ நிறுவனங்களை விட சற்றும் வேறுபட்டவையாக இல்லை. அங்கு நடக்கும் அத்தனை தீமைகளும் இங்கும் நடக்கின்றன. ஒரு சில வித்தியாசங்கள் என்னவென்றால் அங்கு பாடம் துவங்கும் போது பைபிளை வாசிப்பார்கள். இங்கு முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்து வணங்குகின்ற யாநபி பாடலைப் படிக்கின்றனர். அத்துடன் இவர்கள் கல்வி நிறுவனம் நடத்தும் நோக்கமே வணிகம் தான்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தான் என்ன?

ஏகத்துவக் கொள்கையில் உள்ள நாம் தான் இந்தக் கல்வித் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். ஆனால் இன்று தவ்ஹீதுப் பாதையில், பணியில் உள்ள அழுத்தத்தையே நம்மால் தாங்க முடியாததால் கல்வித் துறையில் உரிய கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இனி வரும் எதிர் காலத்தில் இதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் நமது சந்ததிகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் போது மேற்கண்ட பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு இஸ்லாமிய கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத, பாதுகாப்புள்ள நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

முஸ்லிம் நிறுவனங்கள் என்றால் மிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கிறித்தவ நிறுவனம் எனும் போது அது ஓர் அந்நிய நிறுவனம் என்ற எண்ணம் நமது குழந்தைகளைக் காப்பதற்கு ஒரு சிறிய கவசமாகச் செயல்படும். முஸ்லிம் நிறுவனம் எனும் போது இந்தக் கவசம், கவனம் இருக்காது.

இணை வைப்புக் கொள்கையில் இருப்பவர்கள் முஸ்லிம் பெயர்களில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நம் குழந்தைகளைச் சேர்க்கும் போது, இணை வைப்பில் நம் குழந்தைகளைத் தள்ளி விடும் அபாயம் இருக்கின்றது.

எனவே கிறித்தவ நிறுவனம் என்றாலும், முஸ்லிம் நிறுவனம் என்றாலும் ஏகத்துவக் கொள்கை, ஒழுக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எந்தப் பங்கமும் வராத அளவில் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நமது குழந்தைச் செல்வங்களைப் பாதுகாப்போமாக!

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!       நரகமே தங்குமிடம்!

புராக்கின் பெயரால் ஒரு பொய்

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் (35:28) கூறுகின்றான். ஆனால் அல்லாஹ்வை அஞ்சாதவர்கள் ஆலிம்கள் தான் என்பதை தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சுன்னத் வல்ஜமாஅத் ஆலிம்கள் நிரூபித்து வருகின்றனர்.

அல்லாஹ்வை விட்டு விட்டு அவனது அடியார்களான முஹம்மத் (ஸல்), முஹ்யித்தீன் அப்துல் காதிர், காஜா முஈனுத்தீன், ஷாகுல் ஹமீத் போன்றோரை அழைத்துப் பிரார்த்தனை செய்யும் இணை வைப்பை இவர்கள் எந்தவித அச்சமுமின்றி செய்து வருவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

இங்கே இந்தத் தலைப்பையொட்டிய எடுத்துக்காட்டு, இவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அள்ளி, அளந்து விடுகின்ற பொய்யான ஹதீஸ்களாகும்.

நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்தச் செய்தி புகாரி 106, 107, 108, 109, 110 ஆகிய எண்களிலும் புகாரியிலேயே வேறு பல இடங்களிலும், இன்னும் முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூற்களிலும் பதிவாகியுள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.

இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தி புகாரி 1291, முஸ்லிம் 5 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது பொய் சொன்னால் நரகம் தங்குமிடம் ஆகிவிடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தி துணுக்காக ஒருவர் அறிவித்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையும் ஆவணப்படுத்தப்பட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்தது அல்லாஹ்வின் அச்சம் தான். அந்த அச்சத்தின் காரணமாகவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதில் அதிகக் கவனம் செலுத்துகின்றது.

இந்த ஜமாஅத்தில் உள்ள ஆலிம்களும், அழைப்பாளர்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை தங்கள் உரைகளில் ஆதாரமாகக் காட்டுவதில் அதிகபட்சக் கவனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றது. ஹதீஸ்களை தங்கள் சொற்பொழிவுகளில் ஆள்கின்ற போது அதிக அக்கறை எடுக்கச் சொல்கின்றது.

சில ஹதீஸ்களில் அடங்கியிருக்கின்ற சம்பவங்கள், கேட்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்ற சுவையும், சுண்டியிழுக்கின்ற ரசனையும், ஒரு சில கட்டங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்ற அளவுக்கு உள்ளங்களை உருக்கும் உணர்ச்சி மிகு நிகழ்வுகளும் இருக்கும். ஆனால் சுவைமிக்க அந்தக் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் அடி வாங்கியிருக்கும். அதாவது பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் அந்த ஹதீஸ் அமைந்திருக்கும்.

ஒரு ஜும்ஆ உரைக்காக ஹதீஸ்களைத் தேடும் போது, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் மொத்த சாரமும், சக்கரமும் எடுப்பான அந்தச் சம்பவத்தை அச்சாணியாகக் கொண்டு சுழன்றிருக்கும். அச்சாணி கழன்று விடும் போது சக்கரம் எப்படிச் சுழல முடியும்? அந்தச் சம்பவம் பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் அமைந்தது என்று தெரிந்து விடும் போது அதை விட்டு விட்டு வேறு தலைப்புக்கு மாறுவதைத் தவிர அந்தப் பேச்சாளருக்கு வேறு வழியில்லை.

இந்த அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளர்கள் கவனம் எடுக்கையில், சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் அணுவளவும் அல்லாஹ்வின் அச்சமின்றி, நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, ஹதீஸ்களில் இல்லாததை, ஏனோ தானோவென்று அடித்து விடுகின்றனர். அது அவர்களை ஆதரிக்கின்ற, அல்லது அவர்களது ஆதரவில் உள்ள மாத இதழ்களில் எழுத்து வடிவத்திலும் வருகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மீது யார், எங்கிருந்து, எப்போது பொய்யை அவிழ்த்து விட்டாலும் அதைத் தட்டிக் கேட்கவும் சுட்டிக் காட்டவும் வேண்டிய பொறுப்பு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமே இருக்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தலையாய பணிகளில் இதுவும் ஒன்று. எனவே ஹதீஸ்களின் பெயரால் இவர்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்துவதற்காக, இதற்கென ஒருசில பக்கங்களை ஒதுக்கி, இந்த அரும்பணியை ஏகத்துவம் செய்யவிருக்கின்றது.

ஆலிம்கள் எனப்படுவோர் இட்டுக்கட்டிக் கூறுகின்ற பொய்யான ஹதீஸ்கள் இங்கு போட்டு உடைக்கப்பட்டு, மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புராக்குகளிடம் ஒரு நேர்முகத் தேர்வு

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தில புராக் வாகனத்தில் செல்வார்கள் என்ற நிலைப்பாடு இருந்தது. அப்போது ஜிப்ரயீல் அவர்கள் புராக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வந்த நேரத்தில் எல்லா புராக்குகளும் அவர்கள் வந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு மிடுக்காகவும், துடிப்பாகவும் இருந்த நிலையில் ஒரு புராக் மட்டும் மெலிந்து நலிந்து கடைசியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த புராக்கிடம், “நான் இங்கு வந்ததற்கான காரணம் தெரியுமா?’ என்று ஜிப்ரயீல் கேட்டார்கள். “ஆம், என்னைப் போன்ற புராக்கில் தான் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் செய்வார்கள் என்றும், அதற்காகத் தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்றும் எனக்கு நன்றாகவே தெரியும்’ என்று அது சொன்னது. “மகத்தான அந்தப் பாக்கியம் என்னைப் போன்று நலிந்து மெலிந்து போய் இருப்பவர்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்ற கவலையிலும் மனவாட்டத்திலும் இருக்கிறேன்’ என்று அந்த புராக் சொன்னதும், “உனக்கே அந்த வாய்ப்பைத் தருகிறேன்’ என்று சொல்லி ஜிப்ரயீல் (அலை) அதை உற்சாகப்படுத்தி நபி (ஸல்) அவர்கள் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்தார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை (?) மவ்லவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி என்பவர், தான் ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டதாக இஸ்லாமிய இதழ் ஒன்றில் எழுதியுள்ளார்.

விண்ணுலகப் பயணம் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது ஒரு புராக் தான். இதை புகாரி 3207, 3887, முஸ்லிம் 234, திர்மிதி 3056 உள்ளிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணம் தொடர்பான ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவாகியுள்ளன. ஆனால் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி சொல்வது போன்ற சம்பவத்தை ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் பார்க்க முடியவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைச் சொல்லும் போது அறிவிப்பாளர் தொடருடன் சொல்ல வேண்டும். தற்போது ஹதீஸ்கள் நூல் வடிவத்தில் வந்து விட்டதால் அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடாவிட்டாலும் குறைந்தபட்சம் நூல் பெயரையாவது குறிப்பிட வேண்டும்.

இப்படி எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் சொன்னால், இதுவும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று சொன்னால் அது நபி (ஸல்) அவர்கள் மீது திட்டமிட்டுப் பொய் சொல்வதைத்  தவிர்த்து வேறென்ன? இப்படிச் சொல்பவர் இறையச்சமுள்ள ஒரு ஆலிமாக இருக்க முடியுமா?

இதுபோன்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற நரக தண்டனைக்குரியவர்கள்; அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பிள்ளை பிடிக்க  தப்லீக் வருகிறது பப்ளிக் ஜாக்கிரதை!

கோடை காலம் வந்ததும் கடுமையான வெயில் வந்து விடுகின்றது. அந்த வெயிலுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளும் வந்து விடுகின்றன. அவற்றில் முதன்மையானது பள்ளிகளுக்கான விடுமுறை!

வளர்கின்ற இளைய தலைமுறையினரில் ஒரு கூட்டம், விடுமுறை விட்ட மாத்திரத்தில் கொதிக்கும் வெயிலில் கிரிக்கெட் மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து விடுகின்றது. ஒரு கூட்டம் ஊதாரித்தனமாக இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர்.

ஒரு கூட்டத்தினர் விடுமுறைக் காலத்தை வீணாக்காமல் மார்க்கக் கல்வி கற்பதில் கழிக்கின்றது. இந்தக் கூட்டம் வரவேற்கப்பட வேண்டிய கூட்டம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் மாணவர்களைப் பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருக்கின்றனர். இந்த இயக்கங்களில் சரியான இயக்கத்தைப் பெற்றோர்கள் தேர்வு செய்து தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும்.

படிக்கின்ற பிள்ளைகளை பிடிக்கின்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தும் ஒன்று! இந்த தப்லீக் ஜமாஅத்தினர் பிள்ளைகளை 40 நாட்களுக்கு ஊர் ஊராக அழைத்துச் செல்கின்றனர். பிள்ளைகள் இந்த தப்லீக் ஜமாஅத்திற்குப் போய் விட்டு வந்தால் மார்க்கப் பற்றுடனும் பயபக்தியுடனும் தலையெடுப்பான் என்று பெற்றோர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கையாகும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்கின்ற பிள்ளைகள் உண்மையான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றி நடந்தால் சரி என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரோ மார்க்கத்தைத் தவறாக விளங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் வழிகெடுக்கின்றனர். அவற்றை இப்போது பார்ப்போம்.

  1. குர்ஆன், ஹதீஸை வெறுக்கும் கூட்டம்

தஃலீம் என்ற பெயரில் காலை, மாலை நேரங்களில் ஒரு புத்தகத்தைப் படிப்பார்கள். இதற்குப் பதிலாக குர்ஆன் மொழிபெயர்ப்பையோ, ஹதீஸ் மொழிபெயர்ப்பையோ படியுங்கள் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதை விட லட்சம் மடங்கு இதில் தான் நன்மை அதிகம் என்பதாகப் பிதற்றுவார்கள். அதிகம் வலியுறுத்தினால் கோபத்தில் கொந்தளிப்பார்கள்; கொதிப்பார்கள்.

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். “இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 22:72

அல்லாஹ் கூறுகின்ற இந்த அடையாளத்தை இவர்களது முகத்தில் நாம் காணலாம்.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்

அல்குர்ஆன் 74:49-51

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று குர்ஆன் என்று சொன்னதும் இவர்கள் வெருண்டு ஓடுவார்கள். இதிலிருந்து இவர்கள் யார் என்று தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

  1. குர்ஆன் வசனங்களை அப்பட்டமாக மறுத்தல்

இவர்கள் வாசிக்கும் தஃலீம் கிதாபில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் நேர்மாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, ஒரு பெரியார் கப்ரில் நின்று தொழுதார் என்றும் அதை ஒருவர் பார்த்தார் என்றும் கதையளப்பார்கள்.

இது சுத்தமான பொய் மட்டுமல்ல! குர்ஆன் வசனத்தை நிராகரிக்கின்ற இறை மறுப்பாகும்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:100

உலகில் உள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரையைத் தாண்டி கப்ரில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்குள்ளவர்கள் அறிய முடியாது. இங்குள்ளதை அவர்கள் அறிய முடியாது. ஆனால் அல்லாஹ் கூறும் இந்தக் கருத்துக்கு எதிராக அமைந்துள்ள தஃலீம் கிதாப் கதையையும் இதுபோன்ற எண்ணற்ற கதைகளையும் இவர்கள் நம்புகின்றார்கள். இது அல்குர்ஆனை அப்பட்டமாக மறுப்பதாகும்.

  1. தீமையைக் கண்டு ஊமையாய் இருப்பது

இவர்களது பார்வையில் தப்லீக் என்றால் தொழுகைக்கு அழைப்பது மட்டும் தான். அல்லாஹ்வுக்கு இணையாக “யா முஹ்யித்தீன்’ என்று அழைத்துப் பிரார்த்தனை செய்யும் கொடிய பாவத்தை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தப்லீக் ஜமாஅத்தில் இருப்பவரின் தாய் தந்தையர் இந்தப் பாவத்தைச் செய்தால் கூட அவர்களை அதிலிருந்து இவர்கள் விலக்க மாட்டார்கள். தர்காவுக்குச் செல்வோரிடம், தர்காவுக்குச் செல்லாதீர்கள் என்று தடுக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் செய்தது இதுபோன்ற தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியைத் தான். காரணம், இந்தப் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான்.

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் கூறினார்.

அல்குர்ஆன் 5:72

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அதாவது அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகக் கிடப்பார்கள். இத்தகைய பாவத்தை விட்டும் மக்களைத் தடுக்கும் பணியை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் செய்ய மாட்டார்கள். தொழுகைக்கு மட்டும் அழைப்பார்கள்; மற்ற தீமைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

  1. தூதர் நபி மீது துணிந்து பொய் சொல்லுதல்

அந்தப் பெரியார் சொன்னார்; இந்தப் பெரியார் சொன்னார் என்று இல்லாததை எல்லாம் அடித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்திகளையெல்லாம் அவர்கள் சொன்னதாகக் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1291

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை தப்லீக் ஜமாஅத்தினர் கொஞ்சம் கூடப் பொருட்படுத்துவதில்லை. கஷ்த் என்ற பெயரில் ஊர்வலம் வருவார்கள். அந்த ஊர்வலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் லட்சக்கணக்கான நன்மைகள் இருக்கின்றன என்று கதையளப்பார்கள். பத்து, நூறு, ஆயிரம் என்ற இலக்கங்களிலெல்லாம் நன்மைகளை அளக்கமாட்டார்கள். லட்சங்களில் தான் அளப்பார்கள்.

ஒரு நன்மை உண்டு என்று சொன்னாலும் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் சொல்ல வேண்டும். மார்க்கம் இவர்களது அப்பன் வீட்டுச் சொத்து என்பது போல் இவர்கள் இஷ்டத்திற்குச் சொல்வது, இவர்கள் மார்க்கத்தில் துணிந்து பொய் சொல்பவர்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

  1. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

காடே, செடியே, கண்ணே, ரஹ்மானே என்று மனைவி மக்களை விட்டு விட்டு, அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று நாற்பது நாட்கள், நான்கு மாதம் பத்து நாட்கள் ஊர் ஊராய் சுற்றக் கிளம்பி விடுவார்கள். மனைவி மக்களுக்கு உழைத்துக் கொடுப்பது மார்க்கக் கடமை என்பதை உணர மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!என்றார்கள். “தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வருடத்தில் பாதி நாட்கள்!என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: புகாரி 1974

இந்த ஹதீஸின் அடிப்படையில் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை இவர்கள் செய்வதில்லை. மனைவி மக்களுக்காகப் பாடுபட்டு சம்பாதிப்பதற்கும் அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதும் ஒரு தர்மம் என்பதை இவர்கள் அறவே சிந்திப்பது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 56

சூஃபிகள் என்ற வழிகேடர்கள் திருமணம் முடிக்காமல் சன்னியாசி ஆனார்கள். ஆனால் இவர்கள் திருமணம் முடித்து விட்டு, பிள்ளைகளையும் பெற்று விட்டு அவர்களைக் கவனிக்காமல் அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் அநீதி இழைக்கின்றனர். இத்துடன் இவர்களது அநியாயங்கள் நின்று விடுவதில்லை. தனது பிள்ளை தப்லீக்கில் செல்லவில்லை என்பதற்காக காட்டுமிராண்டித் தனமாக அந்தப் பிள்ளையைத் தாக்கி, சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட கொடுமையும் நடந்துள்ளது.

  1. குரல் எழுப்பாத கோழைத்தனம்

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டாலும் சரி! குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் சரி! இந்த அக்கிரமத்திற்கு எதிராக, அநீதிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள். மாறாக வாய் மூடி வாளாவிருப்பார்கள்.

வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டிக்காததுடன் மட்டுமில்லாமல் அந்த வரதட்சணைத் திருமணத்தையும் அதில் நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்க மாட்டார்கள். அவ்வாறு புறக்கணிப்பது நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியில் மிக உயர்ந்த தரத்தில் உள்ள செயலாகும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

இதைக் கவனத்தில் கொண்டு இத்தகைய திருமண விருந்துகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்பது போன்று சாப்பாட்டிற்கு முதல் ஆளாய் முந்திக் கொள்கிறார்கள்.

இது தவிர தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி, சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண முடியும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும் ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.

அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள், 4 மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால் திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில் இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு இந்த இதழ் போதாது. விரிவான விளக்கங்களுக்கு தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும்.

மேலே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச் செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் தடம் மாற்றி தஃலீம் புத்தகத்தை மட்டும் வேதமாகி, அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம் என்பதில் சந்தேகமில்லை.

சமாதி வழிபாட்டிலிருந்து மக்களைக் காப்பதற்காக இல்யாஸ் மவ்லானா ஆரம்பித்த தப்லீக் இயக்கம் இப்போது தடம் மாறி நிற்கின்றது.

நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை என்று எச்சரிக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————-

திருமண விருந்து

அப்துந் நாசிர்

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன?

திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது.

அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல. மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

  1. நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.
  2. உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “ஹைஸ்எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, “அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்என்றார்கள்.

அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, “என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை (ஓரிடத்தில்) வைஎன்று கூறிவிட்டு, “நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.

இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.-

(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடுஎன்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர்.

ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, “அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்குஎன்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் “ஹைஸ்எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள்.

(அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.

நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான்.

“ஹைஸ்” என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை.

நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும்.

அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா?

நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும்.

அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.  (அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள்.

நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்…

ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா?

விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது.

எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

—————————————————————————————————————————————————————

மழைத் தொழுகை ஓர் ஆய்வு

விண்ணிலிருந்து மழை பொழிந்தலே மண்ணில் உயிர்கள் வாழ முடியும். உயிரினங்களுக்கு ஜீவாதாரமாக அமைந்துள்ள இந்த மழை பெய்யாவிட்டால், பருவ மழைகள் பொய்த்து விட்டால், மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் பலவகையான மூடநம்பிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுகை என்ற அழகான வழிமுறையை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகின்றது. எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் நமது ஜமாஅத் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழைத் தொழுகையை நடத்தி வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் நடத்திய மழைத்தொழுகையைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ்கள் இரண்டு விதமாக அமைந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு இறுதியாகத் தொழுகை நடத்தினார்கள் என்று பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. சில ஹதீஸ்களில் இதற்கு மாற்றமாக முதலில் தொழுகை நடத்திவிட்டு இறுதியாகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மழைத் தொழுகை தொடர்பான இந்த ஹதீஸ்களில் உள்ள வேறுபாட்டால் மக்களிடையே சமீபத்தில் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

எனவே நபி (ஸல்) அவர்கள் முதலில் தொழுகை நடத்திவிட்டுப் பிறகு பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பிரர்த்தனை செய்து விட்டுப் பிறகு தொழுதார்களா? இவ்விஷயத்தில் சரியான கருத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் விதமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பல முறை மழைத்தொழுகை நடத்தியிருப்பார்கள். ஒரு நேரத்தில் முதலில் தொழுதிருப்பார்கள். வேறொரு நேரத்தில் பிரார்த்தனைக்குப் பிறகு தொழுதிருப்பார்கள் என்று புரிந்துகொண்டால் இரண்டு விதமாக வரும் செய்திகளுக்கு மத்தியில் முரண்பாடில்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாக அமையுமே என்று சிலருக்குத் தோன்றலாம்.

நபியவர்களின் மழைத் தொழுகையைப் பற்றி இரண்டு விதங்களில் வரும் ஹதீஸ்கள் வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக வருமேயானால் இவ்வாறு யூகிக்கலாம். மேற்கண்ட அடிப்படையில் இரண்டு விதங்களிலும் நபியவர்கள் தொழுது காட்டியுள்ளார்கள் என்று முடிவெடுக்கலாம்.

ஆனால் இரண்டு விதமாக வரும் இந்த ஹதீஸ்கள் வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக வரவில்லை. ஒரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவே இரண்டு விதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன் பிரார்த்தனை செய்தார்கள் என்ற செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் வரும் நபித்தோழர் மற்றும் தாபிஃ ஆகிய இருவரும் இதற்கு மாற்றமாக வரும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். எனவே இந்தச் செய்திகள் வெவ்வேறு நிகழ்வைப் பற்றிப் பேசவில்லை. ஒரு சம்பவம் குறித்தே முரண்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்தால் சரியான தகவல் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஹதீஸ் கலையில் விதி கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆராய்ந்தால் சரியான தகவல் எது? தவறான தகவல் எது? என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

இது தொடர்பாக வரும் அனைத்து செய்திகளையும் ஒன்று திரட்டி அவற்றின் அறிவிப்பாளர் தொடரையும் தகவலையும் ஆராய்ந்தால் சரியான செய்தியைக் கண்டுபிடித்துவிட முடியும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் ஒரு விதமாக அறிவிக்கையில் ஒருவர் மட்டும் அதற்கு மாற்றமாக வேறு விதமாக அறிவித்தால் அந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும் அவரின் அறிவிப்பு “ஷாத்’ என்ற பலவீனமான அறிவிப்பைச் சார்ந்ததாகும். இந்நிலையில் இவருடைய அறிவிப்பை ஏற்கக்கூடாது. பலர் ஒன்றுபட்டு அறிவிக்கும் அறிவிப்பே சரியானது.

இதே போன்று ஒரு நம்பகமானவர் தன்னை விட அதிக நினைவாற்றல் உள்ள ஒருவருக்கு மாற்றமாக அறிவித்தாலும் அந்த நம்பகமானவரின் அறிவிப்பு “ஷாத்’ என்ற பலவீனமான செய்தியாகும்.

அதே நேரத்தில் ஒரு பலவீனமானவர் நம்பகமானவருக்கு மாற்றமாக அறிவித்தால் இது ஹதீஸ் கலையில் முன்கர் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தியாகும். இது ஷாத் வகையை விட பலவீனமானது. ஏனென்றால் பலருக்கு மாற்றமாக ஒரு நம்பகமானவர் அறிவித்தாலே அதை ஏற்ககக்கூடாது எனும்போது நம்பகமானவருக்கு மாற்றமாக பலவீனமானவர் அறிவித்தால் அது மேலும் பலவீனமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகை நடத்தியதை விவரிக்கும் ஹதீஸ்களை இந்த விதியின் அடிப்படையில் ஆராய்ந்தால் நபி (ஸல்) அவர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு இறுதியாகத் தொழுகை நடத்தினார்கள் என்ற அறிவிப்பே சரியானது. இதற்கு மாற்றமாக முதலில் தொழுதுவிட்டுப் பிறகு பிரார்த்தனை செய்தார்கள் என்று வரும் அறிவிப்பு பலவீனமானது என்பதை அறியலாம்.

  1. இஸ்ஹாக்கின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் சென்றார்கள். உரையாற்றுவதற்கு (பிரார்த்தனை செய்வதற்கு) முன்பு தொழுகையைத் துவங்கினார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: அஹ்மது (15871)

நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையில் நீண்ட உரையாற்றியதில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து சில வார்த்தைகளை கூறிவிட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். ஹதீஸ்களில் இதை குத்பா (உரை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்பது இதன் பொருளாகும்.

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பின்வறுமாறு அமைந்துள்ளது.

  1. நபி (ஸல்) அவர்கள்
  2. நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத்
  3. அப்பாத் பின் தமீம்
  4. அப்துல்லாஹ் பின் அபீ பக்ர்
  5. இமாம் மாலிக்
  6. இஸ்ஹாக்
  7. இமாம் அஹ்மது

இந்தச் செய்தியில் இமாம் மாலிக் அவர்களின் மாணவரான இஸ்ஹாக் என்பவரே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தவறான தகவலைக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை இமாம் மாலிக் அவர்களிடமிந்து…

  1. இஸ்ஹாக்
  2. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ
  3. யஹ்யா பின் யஹ்யா
  4. குதைபா பின் சயீத்
  5. அப்துல்லாஹ் பின் மஸ்லமா
  6. இமாம் ஷாபி
  7. இப்னு வஹப்

ஆக மொத்தம் 7 நபர்கள் அறிவிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இஸ்ஹாக்கை விட மிக வலுவானவர்கள். இவர்களில் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தகவலைக் கூறியுள்ளார். இவரல்லாத மீதமுள்ள ஆறு நபர்களும் இந்தத் தகவலைக் கூறவில்லை.

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீயின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.

நூல்: அஹ்மது (15840)

யஹ்யா பின் யஹ்யாவின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (1486)

குதைபா பின் சயீதின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.

நூல்: நஸாயி (1494)

அப்துல்லாஹ் பின் மஸ்லமா மற்றும் இமாம் ஷாபியின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.

நூல்: பைஹகீ (பாகம்: 3, பக்கம்: 488)

இப்னு வஹபின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.

நூல்: முஸ்னது அபீ அவானா (1993)

மேலும் இந்த ஹதீஸ் இப்னு இஸ்ஹாக், அம்ர் பின் யஹ்யா ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. இஸ்ஹாக் கூறிய வாசகத்தை இவ்விருவரும் தங்களுடைய அறிவிப்புகளில் கூறவில்லை. இமாம் மாலிக் அவர்களின் 6 மாணவர்கள் அறிவிப்பதைப் போன்றே இவர்களும் அறிவித்துள்ளனர்.

இப்னு இஸ்ஹாக்கின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்கள் நீண்ட பிரார்த்தனை செய்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். பிறகு கிப்லாவின் பக்கம் திரும்பி தனது மேலாடையை மாற்றிப் போட்டார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து மாற்றினார்கள்.

நூல்: அஹ்மது (15870)

அம்ர் பின் யஹ்யாவின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தமது மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.

நூல்: புகாரி (6343)

எனவே எட்டு நம்பகமான அறிவிப்பாளர் கூறாத தகவலை இஸ்ஹாக் இங்கே கூறியுள்ளார். மற்றவர்கள் அறிவிக்காத தகவலை இஸ்ஹாக் கூடுதலாக அறிவித்திருப்பார் என்ற அடிப்படையில் இதை முரண்பாடில்லாமல் புரிந்துகொள்ளலாம் என நமக்குத் தோன்றலாம்.

ஆனால் குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இஸ்ஹாக் விஷயத்தில் இவ்வாறு கருத முடியாது. ஏனென்றால் அப்பாத் பின் தமீம் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்புகளில் பல நம்பகமானவர்கள் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்குப் பிறகே தொழுதார்கள் என்று இஸ்ஹாக்கிற்கு மாற்றமாக  அறிவித்துள்ளனர். பின்வரும் அறிவிப்புகளில் இதை அறியலாம்.

பிரார்த்தனைக்குப் பிறகே தொழுகை

ஸுஹ்ரியின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடல் நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (திட-ல்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமாக (குர்ஆன்) ஓதினார்கள்.

நூல்: புகாரி (1024)

சுப்யானின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். கிப்லாத் திசையில் திரும்பி, தமது தோள் துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

நூல்: புகாரி (1012)

அபூபக்ர் பின் முஹம்மதின் அறிவிப்பு

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டோம். அவர்கள் உரையாற்றினார்கள். கிப்லாவை முன்னோக்கி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். தனது மேலாடையை மாற்றிப்போட்டு மக்களுக்கு தொழ வைத்தார்கள்.

நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (1321)

மொத்தத்தில் இஸ்ஹாக்கிற்கு மாற்றமாக 11 அறிவிப்புகள் வந்துள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பாகத் தொழுகையைத் துவக்குவார்கள் என்று இஸ்ஹாக் கூறியது கூடுதல் தகவல் இல்லை. இவர் தவறுதலாக கூறிய வார்த்தை தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

  1. நுஃமான் பின் ராஷிதின் அறிவிப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டார்கள். பாங்கும் இகாமத்தும் இன்றி இரண்டு ரக்அத் தொழவைத்தார்கள். பிறகு எங்களிடம் உரையாற்றிவிட்டு கிப்லாவை முன்னோக்கி தன் கைகளை உயர்த்தி  அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு தம் மேலாடையின் வலப்புறத்தை இடப்புறமாகவும் இடப்புறத்தை வலப்புறமாகவும் மாற்றிப் போட்டார்கள்.

நூல்: பைஹகீ

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முதலில் தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று ஏராளமான இமாம்கள் கூறியுள்ளனர். யஹ்யா பின் சயீத், அஹ்மது பின் ஹம்பள், இமாம் புகாரி, அபூதாவுத், நஸாயி, இப்னு ஹஜர், இமாம் தஹபீ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் கமால்

இமாம் பைஹகீ அவர்கள் இவருடைய இந்த அறிவிப்பைப் பதிவு செய்து விட்டு இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து பல மாணவர்கள் ஒரு விதமாக அறிவித்திருக்கையில் இவர் மட்டும் வேறு விதமாக தனித்து அறிவித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து…

  1. ஷுஐப்
  2. இப்னு அபீ திஃப்
  3. யூனுஸ்
  4. ஸாலிஹ்
  5. நுஃமான் பின் ராஷித்

ஆகியோர் அறிவிக்கின்றனர். இவர்களில் பலவீனமானவரான நுஃமான் பின் ராஷித் மட்டும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றார்.

மற்றவர்கள் இதற்கு மாற்றமாக, முதலில் பிரார்த்தனை செய்து விட்டுப் பிறகு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் மிக நம்பகமானவர்கள்.

நுஃமான் பின் ராஷித் பலவீனமானவர் என்பதாலும் மற்ற நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிப்பதாலும் இவருடைய செய்தி முன்கர் என்ற மிக பலவீனமான செய்தியாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆய்வின் சுருக்கம்

நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையில் முதலில் பிரார்த்தனை ஈடுபட்டார்கள். பிறகு தொழுகை நடத்தினார்கள் என்று பல பலமான அறிவிப்பாளர்கள் அறிவிப்பதால் இதுவே சரியான தகவலாகும். இதனடிப்படையில் செயல்பட வேண்டும்.

இதற்கு மாற்றமாக நபியவர்கள் முதலில் தொழுதார்கள். பிறகு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இதனடிப்படையில் செயல்படக்கூடாது.

—————————————————————————————————————————————————————-

காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்

2006ஆம் ஆண்டு சவூதி அரேபியா, கதீஃப் நகரில் 19 வயது நிரம்பிய பருவப் பெண், தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவ்விருவரையும் காருடன் சேர்த்து ஏழு பேர் கடத்திச் சென்று ஆண் நண்பரைத் தாக்கி விட்டு அந்தப் பெண்ணைக் கற்பழிக்கின்றனர். இவ்வழக்கு சவூதி நீதிமன்றத்திற்கு வருகின்றது.

கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 80 முதல் 1000 வரையிலான கசையடியும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த அந்தப் பெண்ணுக்கும் அவளது நண்பருக்கும் 90 கசையடிகள் கொடுக்குமாறு நீதிபதி தீர்ப்பளிக்கின்றார்.

ஒரு பெண் அந்நிய ஆணுடன் இவ்வாறு தனித்திருப்பதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் இடமில்லை. இந்த வகையில் அப்பெண்ணுக்கும் ஆணுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் அப்துர்ரஹ்மான் அல்லாஹிம் மேல்முறையீட்டிற்குச் சென்றார். ஏற்கனவே நீதித்துறையை எதிர்த்து அந்தப் பெண் தரப்பினர் ஊடகங்களுக்கு இதைக் கொண்டு சென்றதால் மேல்முறையீட்டு நீதிமன்றம் 200 கசையடிகளும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்தது. அத்துடன் வழக்கறிஞரின் உரிமத்தையும் நீதிமன்றம் பறித்தது.

அவ்வளவு தான். மேற்கத்திய நாடுகள் அப்பெண்ணுக்கு ஆதரவாகவும், சவூதி சட்டத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதுபற்றி சவூதி அரசிடம் பேசினார்.

மனித உரிமைக் கமிஷன் என்ற போர்வையில் ஹில்லாரி கிளிண்டன் இப்பிரச்சனையில் விஷம் கக்கினார். இதன் எதிரொலியாக சவூதி மன்னர் அப்துல்லாஹ் அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்கின்றார். இதன் பயனாய் வழக்கறிஞருக்கும் உரிமம் திரும்பக் கிடைக்கின்றது.

21.04.2013 தேதியிட்ட நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், “சர் ஈர்ன்ய்ற்ழ்ண்ங்ள் ச்ர்ழ் ரர்ம்ங்ய் – மகளிர் வாழ மண்ணில் நாடு இல்லை” என்ற தலைப்பில் மேலே இடம்பெற்ற சவூதி கற்பழிப்புச் சம்பவத்தை வெளியிட்டு இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைக் காட்டியுள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்படும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை இங்கும் அரங்கேற்றியுள்ளனர்.

கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சவூதி நீதிமன்றம் வழங்கிய தண்டனை நியாயமானதே! அதுபோல் அந்தப் பெண்ணுக்கும் அவளது ஆண் நண்பருக்கும் அளித்த தண்டனையும் நியாயமானது தான். ஏனெனில் அந்நிய ஆடவருடன் இவள் தனிந்திருக்கிறாள். அதிலும் ஆடை அலங்கோலத்துடன் இருந்திருக்கின்றாள். இதற்காகவே இந்தத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.

ஒரு பெண் அந்நிய ஆடவருடன் தனித்திருப்பதற்காக இப்படி ஒரு தண்டனையை குர்ஆனோ, ஹதீஸோ கூறவில்லை. ஆனால் இதுபோன்ற ஒழுக்கக் கேடுகளை தடுப்பது ஒரு இஸ்லாமிய அரசின் கடமையாகும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

இந்த அடிப்படையில் சவூதி அரசாங்கம் தன்னுடைய கடமையை நிறைவேற்றிருக்கின்றது. பெண்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளும் ஆண்களை தவறான பாதைக்கு அழைக்கத் தூண்டுகின்றன. அவர்களது ஆபாச ஆடைகள், கட்டுப்பாடுள்ள ஆண்களைக் கூட கவரவும் கவிழவும் செய்து விடுகின்றன.

இதனால் இஸ்லாம் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றது. இதை சவூதி செயல்படுத்துகின்றது. ஒவ்வொரு ஆணிடமும் காம உணர்வு உள்ளடக்கமாய் அடங்கியிருக்கின்றது. காம உணர்வு என்பது சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும் எரிவாயுவைப் போன்றது. அது உலுக்கப்படுமானால் வெடித்துச் சிதறுகின்றது. அப்படி உலுக்குகின்ற அக்கினிப் பொறிகளாக திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

ஒரு மனிதனிடம் அடைக்கப்பட்டிருக்கும், அடக்கப்பட்டிருக்கும் உணர்வு தூண்டப்படுவதால் இந்தியாவில் ஐந்து வயதுச் சிறுமி, காட்டுமிராண்டி வாலிபர்களால் கற்பழிக்கப்படுகின்றாள். இந்த விரச, விரகதாபத்தை, காம வேகத்தைக் கிள்ளி, கிளறி விடக்கூடிய திரைப்படங்கள், திரையரங்குகள் சவூதியில் இல்லை. இதனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அங்கு இதுபோன்ற குற்றங்களின் சதவிகிதம் குறைவாக உள்ளது.

மனித உரிமை மீறல் என்று கொக்கரிக்கின்ற ஹில்லாரி கிளிண்டனின் நாடான அமெரிக்காவில், மூன்று பெண்களில் ஒரு பெண் என்ற விகிதத்தில் கற்பழிப்பு, தாக்குதல், தீய நோக்குடன் துரத்தல் போன்ற கொடுமைகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர் என 2010ல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

1.3 மில்லியன் அமெரிக்கப் பெண்கள் கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் கண்ணுக்கும் கணக்குக்கும் வந்த கற்பழிப்புக்கள் 84,767 மட்டுமே! இந்த அவமானச் சின்னங்களும், அலங்கோலங்களும் கொண்டவர்கள் தான் சவூதிச் சட்டத்தை விமர்சிக்கின்றனர்.

சவூதி அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து தண்டனையை ரத்துச் செய்திருக்கக்கூடாது என்பதே நமது நிலைப்பாடு!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காமவெறிக்குப் பலியான ஒரு பெண்ணின் உதிரத் துளிகள் உறைந்து சில நாட்கள் கழியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு கற்பழிப்புகள் நடந்து விட்டன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றத் தடுப்பு மசோதா எந்தப் பயனையும் தரவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

இப்படிக் கண்கூடாக உண்மையைக் கண்ட பின்னரும் இன்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் இஸ்லாத்திற்கு எதிராக விஷம் கக்குகின்றன.

காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போன்று, இவர்களிடம் குறையை வைத்துக் கொண்டு இஸ்லாமிய நாடுகளை நோக்கிக் குறை சொல்கின்றனர்.

இவர்கள் என்ன தான் இஸ்லாத்தை வெறுத்தாலும் தங்களை அறியாமலே இஸ்லாமியச் சட்டங்கள் வேண்டும் என்று கேட்கவே செய்கின்றனர். ஏற்கனவே நிகழந்த கற்பழிப்பின் போதும், இப்போது நிகழ்ந்துள்ள 5 வயதுச் சிறுமி சம்பவத்திலும் பாரதீய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், மரண தண்டனை வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

ஆம்! இதுபோன்ற குற்றங்களுக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்று கூறுகின்றனர். இந்த இலக்கை நோக்கித் தான் இவர்கள் வந்து சேரப் போகின்றனர். இன்ஷா அல்லாஹ்!

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?

மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு நேர்முரணாக அமைகின்றன. நபி (ஸல்) அவர்கள் தடுக்காததைத் தடுக்கும் விதத்தில் இந்தப் பதில்கள் அமைகின்றன. மத்ஹபுகள் எவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பதில்களே போதுமான ஆதாரமாக இருப்பதால் இவற்றை நாம் தக்க ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் மனாருல் ஹுதா, மார்ச் 2013 இதழில் ஒரு கேள்விக்கு அவர்கள் அளித்துள்ள பதிலைப் பார்ப்போம்.

கேள்வி: ஹைளுடைய காலத்தில் குர்ஆனை எழுதலாமா? அதனை வாயால் ஓதலாமா?

பதில்: மாதவிடாய் நேரத்தில் குர்ஆனைத் தொடுவதோ, அதனை நாவால் ஓதுவதோ, அதனை எழுதுவதோ கூடாது. எனினும் திக்ர், ஸலவாத்கள் ஓதிக் கொள்ளலாம். அதுபோல் துஆவாக அமைந்த வசனங்களை ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை தனித்தனி வார்த்தையாகப் படித்துக் கொள்வது கூடும்.

(அஹ்ஸனுல் பதாவா 2/68)

இது தான் மவ்லான அளித்துள்ள பதில். இதற்கு ஆதாரமாக மனாரின் மவ்லான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ ஆதாரமாகக் காட்டவில்லை. மத்ஹபுச் சட்ட நூலையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஆனால் மாதவிலக்கு, பிரசவத் தீட்டு, ஜனாபத் உள்ளவர்கள் குர்ஆன் ஓதுவதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸிலோ எந்தத் தடையுமில்லை. இதை விரிவாகப் பார்ப்போம்.

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் ஆகியோர் திருக்குர்ஆனை ஓதக் கூடாது என்று கூறுபவர்கள் இக்கருத்துக்கு சில ஹதீஸ்களைச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.  அவற்றின் விபரங்களைப் பார்ப்போம்.

முதல் சான்று

மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),  நூல்: திர்மிதி 121

இதே செய்தி பைஹகீயில் 1375வது ஹதீஸாகவும், இப்னுமாஜாவில் 588வது ஹதீஸாகவும், பைஹகீயின் சுனனுஸ் ஸுக்ரா என்ற நூலில் 1044வது செய்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? செயல்படுவதற்கு ஏற்றதா? என்பதை இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த ஹதீஸின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இச்செய்தியில் இடம்பெறும்) இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக மறுக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரி இமாம்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்.  அதாவது இவர் மட்டும் தனியாக இவர்கள் வழியாக அறிவிக்கும் போது, அது பலவீனமானது என்ற கருத்தைக் கூறினார்கள்.  மேலும் ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பது மட்டுமே ஹதீஸாகும் என்றும் கூறினார்கள்.

இதே கருத்தை இன்னும் பல அறிஞர்களும் கூறியுள்ளனர்.

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிப்பதில் சில குறைகள் இருக்கின்றன.  ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பவை உறுதியானது, ஆதாரப்பூர்வமானது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  “இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் ஹதீஸ் துறையில் எப்படிப்பட்டவர்?’ என்று அபூஸுர்ஆவிடம் கேட்கப்பட்ட போது, “நல்லவர், எனினும் ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் குழம்பியிருக்கின்றார்’ என்று பதிலளித்தார்கள்.

(நூல்: அல்ஜரஹு வத்தஃதீல், பாகம்: 2, பக்கம்: 191)

“பகிய்யா என்பவர் அறியப்பட்டவரிடமிருந்து அறிவித்தால் அவரிடமிருந்து எழுதிக் கொள்ளுங்கள்! அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தால் அதை எழுதிக் கொள்ளாதீர்கள்! இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறியப்பட்டவரிடமிருந்து அறிவித்தாலும், அறியப் படாதவரிடமிருந்து அறிவித்தாலும் எழுதிக் கொள்ளாதீர்கள்!’ என்று அபூஇஸ்ஹாக் குறிப்பிடுகின்றார். “இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவரைப் பற்றி நான் யஹ்யா பின் முயீன் அவர்களிடம் கேட்டேன். ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பவை சரியானதாகும். இராக்வாசிகள், மதீனாவாசிகள் வழியாக அவர் அறிவித்தால் அது குழப்பத்திற்குரியதாகும்’ என்று கூறினார்கள். “இவர் தன்னுடைய ஹதீஸில் அதிகம் தவறிழைப்பவர். எனவே ஆதாரமாக எடுத்துக் கொள்ளுதல் என்ற வரையறையிலிருந்து இவர் நீங்கி விட்டார்’ என்று இப்னு ஹிப்பான் கூறியதாக மிழ்ரஸ் பின் முஹம்மத் அல்அஸதீ குறிப்பிடுகின்றார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1, பக்கம்: 401)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 16)

“மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்ற செய்தி மொத்தம் நான்கு ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு நூற்களிலும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவரே இடம் பெறுகின்றார். இந்த இஸ்மாயீல் பின் அய்யாஷைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள், இவர் இரு விதமான ஹதீஸ்களை அறிவித்திருப்பதை தெளிவுபடுத்துகின்றனர். ஒன்று இவர் தன்னுடைய நாடான ஷாம் நாட்டவர் வழியாக அறிவித்தவை. மற்றவை ஷாம் நாட்டவர் அல்லாத வேறு நாட்டவர் வழியில் அறிவித்தவை. இவற்றில் தன் நாட்டவர் வழியாக அறிவித்தவையே சரியானதாக அமைந்திருப்பதாகவும், வேறு நாட்டவர் வழியாக அறிவித்தவைகளில் குழப்பங்கள், தவறுகள் நிறைந்திருப்பதாகவும் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். எனவே இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். “மூஸா பின் உகபா’ என்பவர் வழியாகவே நான்கு நூற்களிலும் அறிவிக்கின்றார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கின்றது.

மூஸா பின் உக்பா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால், பாகம்: 29, பக்கம்: 115

தபகாத்துல் ஹுஃப்பாழ், பாகம்: 1, பக்கம்: 70)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் யாரிடமிருந்து அறிவித்தாரோ அந்த மூஸா பின் உக்பா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.

மதீனாவைச் சார்ந்தவர் வழியாக இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறிவிப்பதால் ஹதீஸ் கலை அறிஞர்களின் முடிவுப் படி இந்த ஹதீஸ் பலவீனமானதாக அமைகின்றது. எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

இச்செய்தி பலவீனமானது என்பதை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

இது பலமான செய்தி இல்லை.

(நூல்: பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 309)

மேலும் இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகக் கூறப்படுவது தவறாகும்.  இது இப்னுஉமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று என்பதே சரியாகும் என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

“மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுஉமர் (ரலி) அறிவிக்கும் செய்தியைக் குறிப்பிட்டு, “இது தவறாகும். இச்செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே!” என்று என் தந்தை குறிப்பிட்டார்கள்.  (நூல்: இலல் இப்னு அபீஹாத்தம், பாகம்: 1, பக்கம்: 49)

“மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்ற செய்தி மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பலவீனமாகின்றது. எனவே இச்சான்றை வைத்து, குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள் குர்ஆனை ஓதலாகாது என்ற சட்டத்தைக் கூற முடியாது.

இரண்டாவது சான்று

குளிப்பு கடமையானவர் குர்ஆனிலிருந்து எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),  நூல்: தாரகுத்னீ 417

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் மஸ்லமா என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தைக் காண்போம்.

என் தந்தையிடம் இவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “இவர் ஹதீஸ்களை குழப்பி அறிவிப்பவர், பலம் வாய்ந்தவர் இல்லை” என்று பதிலளித்தார்கள் என்று அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்டேன். “இவர் பலம் வாய்ந்தவர் இல்லை, ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர்” என்று கூறினார்கள் என்றும் அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகின்றார்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 5, பக்கம்: 371)

அப்துல் மலிக் பின் மஸ்லமா என்பவர் மதீனாவாசிகள் வழியாக ஏராளமான மறுக்கப்பட்ட செய்திகளை அறிவிப்பவர். நபிவழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இது மறைவானது கிடையாது என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 134)

மூன்றாவது சான்று

“மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனிலிருந்து எதையும் ஓத மாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: தாரகுத்னீ 418

இச்செய்தியும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் ஒரு மனிதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாமல் இடம் பெறும் ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தெரியாத நபர் பொய்யராகவோ, பலவீனமானவராகவோ இருக்கக் கூடும்.

நான்காவது சான்று

மாதவிடாய் ஏற்பட்டவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் குர்ஆனிலிருந்து எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: தாரகுத்னீ 1860

இச்செய்தியும் பலவீனமானதாகும்.  இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் முஹம்மது பின் ஃபழ்ல் என்பவர் பலவீனமானவர் ஆவார். ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

முஹம்மது பின் ஃபழ்ல் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீன் அவர்களிடம் கேட்டேன். “மதிப்பற்றவர், அவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது” என்று பதிலளித்தார் என இப்னு அபீ மர்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். முஹம்மது பின் ஃபழ்ல் என்பவர் பொய்யர் என்று ஸஅதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நான் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் இவரைப் பற்றிக் கேட்ட போது, “இவர் பிரமிப்பூட்டும் (பொய்யான) செய்திகளைக் கொண்டு வருபவர்” என்று கூறினார்கள்.                (நூல்: அல்காமில், பாகம்: 6, பக்கம்: 161)

முஹம்மத் பின் ஃபழ்ல் என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.  (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 93)

இவர் நம்பகமானவர்களின் பெயரைப் பயன்படுத்தி இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர். படிப்பினை பெறுவதற்காகவே தவிர இவருடைய செய்திகளை பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல் மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 278)

ஐந்தாவது சான்று

ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: திர்மிதீ (136)

இச்செய்தியின் கீழ் இமாம் திர்மிதீ அவர்கள் இது ஆதாரப்பூர்மானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நானும் இரண்டு மனிதர்களும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறுவார்கள். குர்ஆனை ஓதுவார்கள். எங்களுடன் இறைச்சியை சாப்பிடுவார்கள். ஜனாபத்தைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதைவிட்டும் தடுக்காதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ (265)

இக்கருத்து அபூதாவூதில் 198வது செய்தியாகவும் இப்னுமாஜாவில் 587வது செய்தியாகவும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவாகள், ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் குர்ஆனை ஓதக்கூடிவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ (266)

தூய்மையில்லாமல் குர்ஆனை ஓதக் கூடாது என்று வலியுறுத்தும் இச்செய்தி இமாம் திர்மிதீ குறிப்பிட்டது போல் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவர் பலவீனமானவராவார். இதன் முழு விபரத்தைக் காண்போம்.

இவரிடத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளும் மறுக்கக் கூடியவைகளும் உள்ளன என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் பாகம்: 1, பக்கம்: 64)

அப்துல்லாஹ் பின் ஸலிமா முதுமையடைந்தார். அப்போது எங்களுக்கு (ஹதீஸ்களை) அறிவித்தார். அதில் சரியானதையும் மறுக்கப்பட வேண்டியதையும் கண்டோம் என்று அவரின் மாணவர் அம்ர் பின் முர்ரா குறிப்பிடுகிறார். (நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 9, பக்கம்: 460)

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸலிமா அவர்கள் முதுமையை அடைந்த பிறகே அறிவித்தார் என்று ஷுஅபா குறிப்பிடுகிறார். (நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 15, பக்கம்: 53)

இவர் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஒத்த அறிவிப்புகள் இருப்பதில்லை என்று இமாம் புகாரீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 111)

இமாம் ஷாஃபீ அவர்கள் ஸுனன் ஹர்மலா என்ற நூலில் “இந்தச் செய்தி சரியானதாக இருந்தால் ஜனாபத் உள்ளவர்கள் குர்ஆன் ஓதுவது ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்” என்று கூறியுள்ளார்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தியை (ஆதாரப்பூர்வமானது என்று) உறுதி செய்யவில்லை என்று ஜிமாவு கிதாபுத் தஹுர் என்ற நூலில் இமாம் ஷாஃபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் பைஹகீ குறிப்பிடுகிறார்கள்: இமாம் ஷாஃபீ இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணம், இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸலிமா என்பவர் மூளை குழம்பி விட்டார். இச்செய்தியை முதுமையடைந்த (மூளை குழம்பிய) போது அறிவித்துள்ளார் என்று ஷுஅபா அவர்கள் அறிவித்துள்ளார். (எனவே தான் இமாம் ஷாஃபீ அவர்கள் இச்செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறவில்லை,) இச்செய்தி சந்தேகத்திற்குரியது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியதாக கத்தாபீ குறிப்பிடுகிறார்கள். (இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்ற) இமாம் திர்மிதீ அவர்கள் பெரும்பான்மையினருக்கு மாற்றமாக கூறியுள்ளார்கள். (இவரல்லாத) அனைவரும் இந்த ஹதீஸை பலவீனமாக்கியுள்ளனர் என்று இமாம் நவவீ அவர்கள், குலாஸா என்ற நூலில் குறிபிட்டுள்ளார்கள்.

(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 139)

(இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும்) குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்று சொல்பவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. இதில் (குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்பதற்கு) எந்தத் தடையும் இல்லை. இது நபி (ஸல்) அவாகளின் செயலை (அப்படியே) எடுத்து சொன்னது தான். (நபி (ஸல்) அவர்கள்) குர்ஆன் ஓதாமல் தடுத்துக் கொண்டது குளிப்பு கடமையினால் தான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தவில்லை (ஓதாமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருந்திருக்கலாம்.) என்று இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம்: 1, பக்கம்: 139)

ஆறாவது சான்று

“அலீயே நான் எதை பொருந்திக் கொள்வேனோ அதை உனக்கும் நாடுகிறேன்; எனக்கு எதை வெறுப்பேனோ அதை உனக்கும் வெறுக்கிறேன்; நீ குளிப்பு கடமையானவனாக இருக்கும் போது குர்ஆனை ஓதாதே; நீ ருக்கூவில் இருக்கும் போதும் நீ ஸஜ்தாவில் இருக்கும் போதும் (குர்ஆனை) ஓதாதே; உன் முடியை கொண்டை போட்டுக் கொண்டு தொழாதே; கழுதையைப் போல் (ருகூவில் அதிகமாக) முதுகையை தாழ்த்தாதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுனார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி),  நூல்: தாரகுத்னீ (420)

இச்செய்தியை இமாம் தாரகுத்னீ மூன்று அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். இந்த மூன்று அறிவிப்பாளர் வரிசையிலும் அபூ நயீம் அந்நகயீ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றிய விமர்சனங்களை காண்போம்.

இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், (நூல்: அல்இலல் வமஃரிபத்துர் ரிஜால், பாகம்: 3, பாக்கம்: 386)

இவர் அறிவிக்கும் பெரும்பாலான அறிவிப்புகளுக்கு ஒத்த அறிவிப்புகள் இருப்பதில்லை என்று இப்னு அதீ அவர்கள் குறை கூறியுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 324)

கூஃபாவில் அபூ நயீம் அந்நகயீ, ளிரார் பின் ஸர்மத் என்ற அபூ நயீம் அந்நகயீ ஆகிய இரு பொய்யர்கள் உள்ளனர் என்று யஹ்யா பின் முயீன் குறிப்பிடுகிறார்கள். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ, அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் உண்மையில் நல்லவர் எனினும் இவரிடம் பிரச்சனைகள் உள்ளன என்று இமாம் புகாரீ கூறியுள்ளார்கள். உகைலீ அவர்கள் இவரை பலவீனமாக்கியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 259)

மேலும் இச்செய்தியில் இடம் பெறும்  அல் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

அல்ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பொய்யர்களில் ஒருவர் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறார் ஷஅபீ அவர்கள். (நூல்: அஹ்வாலுர் ரிஜால், பாகம்: 1, பக்கம்: 43)

ஹாரிஸ் என்பவர் அலீ (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸ்களில் உண்மையாளராக இருக்கவில்லை என்று முகீரா குறிபிடுகிறார், பொய்யர் என்று இப்னுல் மதீனீ குறிப்பிடுகிறார். பலவீனமானவர் என்று இப்னு முயீன், தாரகுத்னீ ஆகியோர் கூறுகிறார்கள். பலம் வாய்ந்தவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொடர்பாக இச்சமுதாயத்தில் இவரைப் போன்று வேறு எவரும் பொய் சொன்னதில்லை என்ற ஷஅபீ குறிப்பிடுகிறார். இவர் அலீ (ரலி) அவர்கள் தொடர்பாக கூறும் பெரும்பாலான செய்திகள் பொய்யானதாகும் என்று இப்னு ஸீரீன் குறிப்பிடுகிறார். (நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 2, பக்கம்: 172)

இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று அபூஸுர்ஆ குறிப்பிடுகிறார். வலிமை வாய்ந்தவர் இல்லை என்று அபூ ஹாத்தம் குறிப்பிடுகிறார்கள். ஹாரிஸ் பெரும்பாலும் சியா கொள்கை கொண்டவர்; ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 2, பக்கம்: 127)

ஏழாவது சான்று

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் உணவருந்திவிட்டு, “நான் குளித்துக் கொள்வதற்காக என்னை மறைத்துக் கொள்” என்றார்கள். அதற்கு நான் “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருக்கிறீர்களா?” என்றேன். ஆம் என்றார்கள். இவ்விசயத்தை உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். (இதைக் கேட்டவுடன்)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இவர் நீங்கள் குளிப்பு கடமையான நிலையில் சாப்பிட்டதாகக் கூறுகிறாரே என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஆம் நான் உளூச் செய்து சாப்பிட்டேன். குடித்தேன். எனினும் குளிக்கும் வரை (குர்ஆனை) ஓதவில்லை” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல் காஃபிகீ (ரலி), நூல்: தாரகுத்னீ (421)

இதே கருத்து தாரகுத்னியில் 422வது செய்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தப்ரானியின் அல் முஃஜமுல் கபீர் (பாகம்: 19, பக்கம்: 295) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றிய விமர்சனங்களைப் பல இடங்களில் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

எட்டாவது சான்று

நாங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருக்கும் நிலையில் எங்களில் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ (424)

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமானவராவார்.

ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் வலிமை வாய்ந்தவர் இல்லை. மேலும் ஸுஹ்ரீ வழியாக ஏராளமான தவறுகளை செய்துள்ளார் என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார் (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 43)

அபூஸுர்ஆ, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம்: 119)

ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் நல்ல மனிதர் எனினும் சந்தேகத்துடன் அறிவிப்பவர். ஆனால் அதை அறிய மாட்டார். தவறிழைப்பார். அதை விளங்க மாட்டார். (இதனால் இறுதியில் அவர் அறிவிக்கும்) ஹதீஸில் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகள் மிகைத்தன. அப்துர் ரஹ்மான் அவர்கள் இவரிடமிருந்து அறிவித்து வந்தார். பின்னர் (இவரின் தவறின் காரணமாக அறிவிப்பதை) விட்டு விட்டார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். நான் யஃஹா பின் மயீன் அவர்களிடம் ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவரை பற்றிக் கேட்டேன். அதற்கு  அவர் பலவீனமானவர் என்று பதிலளித்ததாக ஜஃபர் பின் அபான் குறிப்பிடுகிறார்கள். (நூல்: மஜ்ரூஹீன், பாகம்: 1, பக்கம்: 312)

ஒன்பதாவது சான்று

மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் எவரும் குர்ஆனை ஓதக் கூடாது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),  நூல்: தாரகுத்னீ (428)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர்.

யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 109)

யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் (ஹதீஸ் அறிவிப்பதற்கு) தகுதி வாய்ந்தவர் இல்லை என்று இமாம் புகாரீ குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்லுஅஃபுஸ் ஸகீர் பாகம்: 1. பக்கம்: 118)

இவர் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றக் கூடியவர். நபித்தோழர்கள் விடுபட்டு அறிவிக்கப்பட்ட செய்திகளை (இவராக) நபித்தோழர்களுடன் அறிவிப்பார். இவர் உருவாக்கியதை ஆரம்ப நிலையில் உள்ளவன் கேள்விப்பட்டால்  இது உருவாக்கப்பட்டது என்று ஐயம் கொள்ள மாட்டான். எந்த நிலையிலும் இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யஹ்யா பின் அபீ உனைஸாவின் சகோதரர் ஸைத், “என்னுடைய சகோதரரிடமிருந்து (ஹதீஸ்களை) எழுதிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர் பொய்யர்” என்று கூறியதாக உபைதுல்லாஹ் பின் அம்ர் குறிப்பிடுகிறார்.

(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 3, பக்கம்: 110)

இதே செய்தியை பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களும் அந்த ஹதீஸின் இறுதியில் யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையின்றி குர்ஆனை ஓதக்கூடாது என்று வாதிடுபவர்களின் சான்றுகளைப் பார்த்தோம். அதில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே குர்ஆனை தூய்மையின்றி ஓதக் கூடாது என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை. இப்போது தூய்மையற்ற நிலையில் திருக்குர்ஆனை ஓதலாம் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

தூய்மையின்றி குர்ஆனை ஓதலாம் என்பதற்கான ஆதாரங்கள்

நபி (ஸல்) அவர்கள், அன்றைய காலத்தில் இருந்த சில மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தில் திருக்குர்ஆன் வசனங்களையும் எழுதியனுப்பினார்கள்.

ரோமாபுரி மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது, நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக நிற்க. இஸ்லாத்தைத்  தழுவாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக, நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர். அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64) என்று எழுதப்பட்டிருந்தது. (நூல்: புகாரீ 7)

திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக்கூடாது, ஓதக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்காத ரோமாபுரி மன்னருக்கு எப்படி திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பார்கள்? இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இஸ்லாம் கூறும் முறைப்படி தூய்மையாக இருப்பார்களா?

இஸ்லாத்தை ஏற்காத ரோமாபுரி மன்னர் அவ்வசனத்தைப் படிக்கவேண்டும், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பது எல்லோரும் திருக்குர்ஆன் வசனங்களை எல்லா நேரங்களிலும் ஓதலாம் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

நாம் எடுத்து வைக்கும் இக்கேள்விக்கு சிலர் விந்தையான விளக்கத்தைக் கூறுகின்றனர். நபி (ஸல்) குறிப்பிட்டது ஒரு வசனத்தைத் தான், முழுக் குர்ஆனையும் அல்ல என்கின்றனர்.

திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் வார்த்தைகளே! இதில் தனி வசனத்திற்கு ஒரு சட்டம் முழுக் குர்ஆனுக்கு ஒரு சட்டம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.

மேலும் எந்த வசனத்தைக் கொண்டு திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக்கூடாது என்கிறார்களோ அந்த (56:79) வசனம் இறக்கப்பட்ட போது முழுக் குர்ஆனும் இறங்கவில்லை. அப்போதும் அவற்றைக் குர்ஆன் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான். முதன் முதலில் இறங்கிய அலக் அத்தியாயத்தின் ஐந்து வசனங்களையும் குர்ஆன் என்றே குறிப்பிடப்பட்டது. எனவே இவ்வாதமும் சரியில்லை.

இரண்டாவது ஆதாரம்

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள். பிறகு,

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” (அல்குர்ஆன் 3:190, 191)

ஆகிய வசனங்களை ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பி வந்து பல் துலக்கி உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி,

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” (அல்குர்ஆன் 3:190, 191)

ஆகிய வசனங்களை ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி உளூச் செய்து நின்று தொழுதார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (376)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிய பின் எழுந்து 3:190,191 ஆகிய வசனங்களை உளூச் செய்யாமல் ஓதுகிறார்கள். பின்னர் தான் உளூச் செய்து விட்டு தொழுகிறார்கள். திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்குத் தூய்மை அவசியம் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அவ்வசனங்களை ஓதியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததிலிருந்து திருக்குர்ஆன் வசனங்களை  தூய்மையின்றி ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்களே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

இவ்வசங்களைக் கவனித்தால் உலக மாந்தர்கள் அனைவரும் எந்நிலையிலும்  திருமறைக் குர்ஆனை ஓதலாம் என்பதை ஐயமின்றி விளங்கலாம்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? ஆகிய வாசகங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களை மட்டும் பார்த்துப் பேசும் வசனங்கள் இல்லை.  தெளிவாகச் சொன்னால் இது இஸ்லாத்தை ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வசனம் இறக்கப்பட்டது. அப்போது நபித்தோழர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். மக்காவில் இணை வைப்பவர்கள் தான் திருக்குர்ஆனை மறுத்தார்கள். அப்போது இவ்வசனம் இறக்கப்பட்டதால் இது இஸ்லாத்தை ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது என்றே நாம் முடிக்கு வரமுடியும்.

ஓரிறைக் கொள்கையை ஏற்காதவர்கள் இந்தக் குர்ஆனை நன்றாகப் படித்து இதில் குறைபாடுகள் உள்ளதா? கருத்து மோதல்கள் உள்ளதா? முரண்பட்ட சட்டங்கள் உள்ளதா? மனிதனால் இது போன்ற வாசனங்களைக் கொண்டு வர முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்து இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தூய்மையான நிலையில் இருக்க மாட்டார்கள், உளூச் செய்தும் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் உளூச் செய்திருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. ஏனெனில் அவர்களிடம் இறை நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் அவர்களைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை ஏற்று, தூய்மையான நிலையில் இக்குர்ஆனைச் சிந்தித்துப் பாருங்கள் என்றால் அவர்கள் அதை ஏற்பார்களா? படித்துப் பார்த்துவிட்டுத் தான் அது சரியா? அல்லது தவறா? என்பதை விளங்கி இஸ்லாத்தை ஏற்க முடியும். இந்நிலையில் அல்லாஹ் திருக்குர்ஆனைச் சிந்திக்கச் சொல்வதும் படிப்பினை பெறச் சொல்வதும் யாரும் எந்நிலையிலும் திருமறைக் குர்ஆனை ஓதலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்!

உடும்பின் சாட்சி

நபி (ஸல்) அவர்களின் உண்மை வாழ்க்கை வரலாறும் அவர்களுடைய போதனைகளும் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகளாரைப் பற்றிய செய்திகள் மனிதர்களின் மூலமாகத் தொடராக அறிவிக்கப்பட்டு நூல் வடிவில் இன்று அவை நமக்கு கிடைத்துள்ளன.

இந்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பது அவசியம். ஏனென்றால் செய்தியைக் கூறுபவர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் தான் அறிவிக்கப்படும் செய்தி உண்மையான தகவலாக இருக்கும். நம்பகத்தன்மை இல்லாத நபர்கள் அறிவிக்கும் செய்திகளில் தவறான தகவல்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

இதை நன்கு உணர்ந்த இமாம்கள் அறிவிப்பாளர்களின் வரலாறுகளைப் பதிவு செய்தார்கள். ஹதீஸ்கலை விதியை ஏற்படுத்தி சரியான செய்திகள், ஆதாரமற்ற செய்திகள் என ஹதீஸ்களை இரண்டாகப் பிரித்தார்கள். தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்தத் துறைக்காகச் செலவிட்டார்கள்.

நம் சமுதாயத்தில் ஆலிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலருக்கு ஹதீஸ் கலையைப் பற்றிய ஞானம் கொஞ்சம் கூட இல்லை. கண்ணில் படும் செய்திகளை ஆராயாமல் தங்கள் விருப்பப்படி பரப்பி வருகிறார்கள். இவ்வாறு இவர்களால் சமுதாயத்தில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.

ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலே தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு காட்டரபி அங்கு வருகை தந்து, “முஹம்மதே! என்ன நீர் புதிதாக ஓரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளீராம்! உம்மை நபி என்று சொல்கிறீராம்! நீர் என்ன எங்களின் தெய்வங்களை ஏசுகின்றீராம்” என்று சொல்லிவிட்டு, “நீ யார் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரியாதா? உமக்கு என்ன புத்தி புரண்டு விட்டதா?” என்று கடுமையாக ஏசிவிட்டு, மனிதனின் வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தைகளையெல்லாம் சொல்லி தீய வார்த்தைகளினால் திட்டிவிட்டு, “இது போன்ற செயல்களை நீர் செய்யாதீர்” என்று கூறுகிறார்.

இவரின் பேச்சைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அனுமதி தாருங்கள். இவரை இங்கேயே என் வாளுக்கு இரையாக்கி விடுகின்றேன்” என்று கூறினார்கள்.

பொறுமையுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், “உமரே! பொறுமையாக இருங்கள்” என்று கோபப்பட்டவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, கடும் சொற்களைச் சொல்லி திட்டியவரை ஒன்றும் பேசவில்லை.

மீண்டும் அந்த காட்டரபி கோபப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களை தன் ஆசை தீர திட்டுகிறார். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கோவைக் கனியைப் போன்று சிவந்து விட்டது. கொதித்தெழுந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். “அல்லாஹ்வின் தூதரே! இப்போதாவது அனுமதி தாருங்கள். இவரை இங்கேயே துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தி விடுகின்றேன்” என்று சொல்லி உறையிலிருந்த வாளை வெளியில் எடுத்து விடுகிறார்கள்.

இப்போதும் நபி (ஸல்) அவர்கள் திட்டியவரை ஒன்றும் சொல்லாமல் கோபப்பட்ட உமர் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

அந்த அரபியிடம் நபி (ஸல்) அவர்கள், “நண்பரே! நீ இப்படி என்னைத் திட்டுகின்ற அளவிற்கு நான் உனக்கு என்ன தீங்குகள் செய்தேன்” என்று கூறிவிட்டு, “நண்பரே! அஸ்லிம் தஸ்லிம். நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள். சந்தோஷம் அடைந்தவனாக – நிம்மதி பெற்றவனாக ஆகிவிடுவாய் – உனக்கு சுவனத்தைக் கொண்டு சுபச்செய்தி சொல்கிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அந்த அரபி, “உம்மை நபி என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்? உம்மால் நிருபிக்க முடியுமா?” என்று கேட்கிறார். “நான் நபி என்பதை நிருபித்து விட்டால், என்னை நபி என்றும் நான் கொண்டு வந்துள்ள இஸ்லாமிய மார்க்கம் உண்மையானது என்றும் நம்பி இஸ்லாத்திலே வந்துவிடுகிறாயா?” என்று கேட்கின்றார்கள். “நீர் நபி என்பதை நிருபித்து விட்டால் நான் இஸ்லாத்திலே வந்து விடுகிறேன்” என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “நண்பரே! உன் கையில் என்ன இருக்கிறது. என்ன கொண்டு வந்துள்ளீர்” என வினவ அந்த அரபி, “முஹம்மதே! என் கையில் பை இருக்கிறது. பையின் உள்ளே உடும்பு இருக்கிறது. இதை நானே வளர்க்கிறேன். இது எனக்கே சொந்தமானது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியா! உனக்குச் சொந்தமான நீ வளர்க்கிற உன் உடும்பைப் பேச வைக்கிறேன் பார்” என்று சொல்லி அந்த உடும்பின் பக்கம் தங்களின் முபாரக்கான திருக்கரத்தை நீட்டி சைக்கினை செய்தது தான் தாமதம். உடனே உடும்பு, “அல்லாஹ்வின் தூதரே! இதோ பணிந்து விட்டேன்; என்னை எதற்காக தாங்கள் அழைத்தீர்கள்?” என்று உடும்பு கேட்டது. இதைப் பார்த்த அந்த அரபி உடல் சிலிர்த்தவராக ஆனந்தக் கண்ணீர் விடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த உடும்பிடம், “நான் யார்? நான் கொண்டு வந்துள்ள மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை இந்த அரபியிடம் சொல்” என்று கூறினார்கள். உடனே அந்த உடும்பு, “மனிதா! இது போன்ற ஒரு நபி உலகில் வேறு யாரும் கிடையாது. நீ இவர்களை நபி என்றும் இவர்கள் கொண்டு வந்துள்ள மார்க்கத்தையும் நீ ஏற்றுக் கொள். நீ சலாமத் பெற்றவராக ஆகிவிடுவாய். இல்லையானால் உன்னை விட ஒரு நஷ்டவாளி உலகில் யாரும் கிடையாது. இவர்களை நான் மட்டுமல்ல; உலகில் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளும் நபி என்று ஏற்றிருக்கின்றன” என்று கூறியது.

தன்னுடைய உடும்பின் உபதேசத்தை கேட்ட அந்த அரபி அழுதவராகத் தன் தவறை நினைத்து மனம் வருந்தியவராக, “யா ரஸூலல்லாஹ்! என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி முழு மனதுடன் நபி (ஸல்) அவர்களின் திருக்கரத்தைப் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறகு உமர் (ரலி) அவர்களைப் பார்த்து நபியவர்கள், “உமரே! நீ இவரை வெட்டுவதற்கு நான் அனுமதி கொடுத்திருந்தால் இஸ்லாத்திற்கு வருவதில் ஒருவர் குறைந்திருப்பார்” என்று சொல்லி கோபப்பட்ட உமர் (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

நூல்: தலாயிலே நுபுவ்வத்

இந்தச் செய்தி தப்ரானியிலும் இமாம் பைஹகீ அவர்களுக்குரிய தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது பின் அலீ பின் அல்வலீத் அஸ்ஸுலமீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூபக்ர் இஸ்மாயீலீ கூறியுள்ளார்.

முஹம்மது பின் அலீ பின் அல்வலீத் அஸ்ஸுலமீ என்பவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட வேண்டியவர்.

நூல்: முஃஜமு அஸாமி சுயூகி அபீ பக்ர் இஸ்மாயீலீ

பாகம்: 1, பக்கம்: 458

மேலும் இமாம் பைஹகீ இந்தச் செய்தியில் இவர் இடம் பெறுவதால் இது பலவீனம் என்று இமாம் பைஹகீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் தஹபீ அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இமாம் பைஹகீ அவர்களின் இந்தக் கூற்று உண்மையானது. உடும்பு தொடர்பான இந்தச் செய்தி தவறான செய்தி” என்று கூறியுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியை நாம் ஏற்கக்கூடாது.