ஏகத்துவம் – மே 2012

தலையங்கம்

கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள்

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.

அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59

அன்றைய அறியாமைக் காலத்தின் அவல நிலையை இந்த வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைக்கின்ற கோர, கொடூரச் செயல் அன்றைய அரபிகளிடம் குடிகொண்டிருந்தது. இஸ்லாம் அதைத் தகர்த்தெறிந்து, பெண்களுக்கு வாழ்வுரிமை மட்டுமல்ல, வாரிசுரிமையையும் சேர்த்து வழங்கி பெண்ணினத்திற்கு மரியாதையையும் மகிமையையும் சேர்த்தது.

ஆனால் இந்தியாவில் இன்றும் இந்தக் கொடுமை தொடர்கின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களிடம் இந்த அவல நிலை தொடர்வது வேதனையும் வெட்கக்கேடும் ஆகும்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஊடகங்களில் ஒரு சோக செய்தி முதன்மை இடத்தைப் பிடித்தது. அது தலைப்புச் செய்தியுமானது.

அஃப்ரீன் என்ற மூன்று மாதப் பெண் குழந்தையை உமர் பாரூக் என்ற கொடியவன் சித்ரவதை செய்து கொன்ற செய்தி தான் அந்த சோகச் செய்தி!

உமர் பாரூக் என்பவன் வேறு யாருமல்ல. அந்தக் குழந்தையைப் பெற்ற தந்தை தான்.

குழந்தைக்கு அதிகாரப்பூர்வமாக உயிர் பிரிந்தது ஏப்ரல் 12ஆம் தேதி தான். ஆனால் அது பிறந்த நாளிலிருந்து இந்தப் பாவியின் கையால் அன்றாடம் அணு அணுவாகச் செத்தது. அவ்வப்போது உயிர் பிரிந்து, பிரிந்து திரும்ப வந்தது.

குழந்தையின் தொடை, பித்தட்டுப் பகுதிகளை இந்தக் கோர மனம் படைத்த மிருகம் கடித்துக் குதறியிருக்கின்றான். குழந்தையின் இளந்தளிர் மேனியில் பதிவான கோரப் பற்களின் காயத் தழும்புகள் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தின.

இவன் கைகளில் குழந்தை மட்டுமல்ல, தாயும் சேர்ந்து தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றாள்.

குழந்தையின் தாயும் உமர் பாரூக்கின் மனைவியுமான ரேஷ்மா பானு இதைத் தெரிவிக்கின்றார்.

குழந்தையின் தலைப்பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததை ஸ்கேன் தெளிவுபடுத்தியது. கண்களின் பார்வைப் பகுதிகளும் அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருந்தன.

வெண்டிலேட்டர் துணையுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து வைத்தியம் பார்த்தும் சிகிச்சை பலன் இல்லாமல், சிறகடித்துப் பறக்க வேண்டிய அந்தக் குழந்தையின் உயிர் சித்ரவதை தாங்காமல் சிறகடித்துப் பறந்தது.

அதுவரையில் முப்பதாயிரம் வரை செலவழித்து குழந்தை கையில் திரும்ப வராதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த தாய்க்கு இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது. குழந்தையின் இன்னுயிர் நிரந்தரமாகப் பிரிந்து போனது.

குழந்தையின் சாவுக்குக் காரணமான அந்தக் கொடியவனை, தனது கணவனைத் தூக்கிலிடுங்கள் என்று அந்தத் தாய் கதறி அழுதது அனைவரின் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்தது.

இப்படி இந்தக் காட்டுமிராண்டி, சின்னஞ்சிறிய மழலையை முளையிலேயே கொய்வதற்கும் கொல்வதற்கும் என்ன காரணம்? ஏதோ புத்தி சுவாதீனம் இல்லாமல் கொலை செய்தானா என்றால் காரணம் அதுவல்ல என்று மருத்துவர்கள் அடித்துச் சொல்கின்றனர். பின்னர் என்ன காரணம்?

பெண் குழந்தை வேண்டாம்; ஆண் குழந்தை தான் வேண்டும் என்பது தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று கொலையாளியே வாக்குமூலம் தந்திருக்கின்றான். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றான்.

இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போம். இதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. பெண் என்றால் இழவு, பெண் என்றால் செலவு என்று மக்கள் கருதுவது தான். இதை, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் பார்க்கலாம்.

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், “நானே பால் புகட்டுகிறேன்’ என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.

பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை தான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.

இவ்வாறு ஏப்ரல் 13, 2012 அன்று தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் வரதட்சணை தான். நாளை மறுமையில் விசாரிக்கப்படும் போது அந்தக் குழந்தை மட்டுமல்ல, கொல்லப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் இறைவனுக்கு முன்னால் இதை அணுவணுவாக எடுத்து வைக்கும். அப்போது வரதட்சணை திருமணத்திற்கு அல்ஃபாத்திஹா ஓதியவர்கள், வரதட்சணை திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள், அங்கு போய் விருந்து சாப்பிட்டவர்கள், பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் இந்தக் குழந்தைகளின் முறையீட்டுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெண் சிசுக் கொலைக்குக் காரணமான, பெண் வீட்டில் ஏற்றப்படும் பாரமான பெண் வீட்டு விருந்து உட்பட அனைத்தையும் புறக்கணிக்கச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தின் அக்கினிப் பிரச்சாரத்தின் மூலம் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றம், மறுமலர்ச்சி ஏற்பட்டு இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த இலட்சியத் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் ஏகத்துவம்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

அல்குர்ஆன் 14:24

இந்தத் தீமை தொடர்வதற்குக் காரணம் இணை வைப்பு தான்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.

அல்குர்ஆன் 6:137

பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்தப் பேதமை ஒழிய வேண்டுமென்றால் இணை வைப்பை விட்டு நீங்கி, ஏகத்துவத்தைப் பின்பற்றுவது ஒன்றே வழி! இதைத் தவிர வேறு வழியில்லை.

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்  தொடர்: 3

கிரகணத் தொழுகையில் குத்பா

மாநபி வழி

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறும் வகையில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற தொழுகை முறையிலிருந்து சற்று வேறுபடும் அந்தத் தொழுகைகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகுற காட்டித் தந்துள்ளார்கள்.

மற்ற தொழுகைகளில் ஒரு ரக்அத்தில் ஒரு ருகூவு செய்ய வேண்டும். ஆனால் இந்தத் தொழுகையில் இரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். தொழுகை முடிந்த பிறகு குத்பா எனும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்பது நபிகளார் காட்டிய நல்வழி.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம்  முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்  ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.  (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ 1046

இது போன்ற இன்னும் ஏராளமான நபிமொழிகளில் கிரகணத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு நபிகளார் குத்பா உரையாற்றியதாக இடம் பெற்றுள்ளது. இதுவே நபிவழி. ஆனால் குத்பாவைப் பற்றி ஹனபி மத்ஹபு கூறுவதென்ன?

மத்ஹபு வழி

கிரகணத் தொழுகையில் குத்பா கிடையாது. ஏனென்றால் அவ்வாறு ஹதீஸ் பதிவுசெய்யப்படவில்லை. (ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 88)

கிரகணத் தொழுகைகளில் நபிகளார் குத்பா உரையாற்றியதாக புகாரியில், இன்னும் பிற நூல்களில் வந்துள்ள செய்திகள் ஹதீஸ்கள் இல்லையா? நபிவழியைக் கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் அமைக்கப்படவில்லை என்பதற்கு இது போதுமான சான்றாகும்.

மஃரிப் தொழுகையின் முன் சுன்னத்

மத்ஹபு வழி

தமிழகத்தில் உள்ள அதிகமான பள்ளிவாசல்களில் ஐந்து நேரத் தொழுகைகளின் பாங்கு, இகாமத் சொல்லப்படும் நேர அட்டவணையை சிறு கரும்பலகையில் எழுதியிருப்பார்கள். அதில் ஒவ்வொரு நேரத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத் சொல்லப்படுவதற்கும் இடையில் 15, 20 நிமிட இடைவேளை விடப்பட்டிருக்கும். ஆனால் மக்ரிபு தொழுகைக்கு மாத்திரம் “பாங்கு: 6.30, இகாமத்: உடன்’ என்று எழுதியிருப்பர். குறித்த நேரத்தில் பாங்கு சொல்லி முடித்த உடன் சற்றும் தாமதிக்காமல் இகாமத் சொல்லத் துவங்கி விடுவார்கள். இது தான் பெரும்பாலான மத்ஹப் பள்ளிவாசல்களில் நடைபெறும். இதற்குக் காரணம் மக்ரிபிற்கு முன், சுன்னத்தான தொழுகைகள் ஏதும் இல்லை என மத்ஹப் கூறுகின்றது.

சூரியன் மறைந்த பிறகு ஃபர்ளு தொழுவதற்கு முன்னால் எந்த உபரியான தொழுகைகளும் நிறைவேற்றப்படாது. அதன் காரணமாக மஃரிப் தாமதமாகிவிடும் என்பதினால். (ஹிதாயா, பாகம் : 1 பக்கம் : 41)

மாநபி வழி

ஆனால் மாநபி வழிமுறையைப் பாருங்கள்:

அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்” (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்” என்றார்கள். (புகாரி 1183)

மக்ரிபின் முன் சுன்னத்தைத் தொழ விரும்புவர்களுக்கு அதற்கான இடைவெளியை, கால அவகாசத்தை அளிப்பது தான் நபிவழி என்பதை இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதற்கான நேரத்தை அளிக்காமல் உடனடியாக ஜமாஅத் தொழுகையை ஆரம்பிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?

முன் சுன்னத் தொழுவதால் மக்ரிப் தாமதமாகி விடும் என்ற காரணம் இங்கு கூறப்படுகின்றது. படித்த உடனே இது பொய்யான காரணம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 10 நிமிட இடைவெளி விடுவதால் எப்படி மக்ரிப் தொழுகை தாமதாகும் என்பதை இந்தச் சட்ட வல்லுனர்கள் (?) சிந்திக்கவில்லை போலும். என்ன காரணம் கூறப்பட்டாலும் அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்த ஒரு காரியத்தை, வணக்கத்தைத் தடை செய்யும் அதிகாரம் உலகில் வேறு யாருக்கும் இல்லை என்பதைப் புரிந்து மத்ஹபினர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

நபிவழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள்

குர்ஆன், ஹதீஸை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்; அவையல்லாத வேறு எதையும், யாரையும் பின்பற்றக் கூடாது. நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டியாக மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இதையே தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டு, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இன்றளவும் நிலைமாறாமல் இறையருளால் நிலைத்து நிற்கின்றது.

ஆனால் சில போலி தவ்ஹீத்வாதிகளும், மத்ஹபைச் சார்ந்தவர்களும் ஸஹாபக்களைப் பின்பற்றலாம், அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டி என்பதால் அவர்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாமவர்களின் முகமூடியையும், இரண்டாமவர்களின் அறியாமையையும் விளக்கக்கூடிய வகையில் நாம் பதிலளித்து இருக்கிறோம், இன்றும் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தனி விஷயம்.

ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபினர் மக்ரிபின் முன் சுன்னத் விஷயத்தில் ஸஹாபாக்கள் நிலையைப் பார்க்கத் தவறிவிட்டார்களே? என்பதையே இப்போது கேள்வியாக முன்வைக்கின்றோம்.

நபித்தோழர்கள் நபிவழி அடிப்படையில் மக்ரிபின் முன் சுன்னத் தொழுபவர்களாகவும், தொழ விரும்புபவர்களுக்கு அவகாசம் அளிப்பவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித் தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர். (முஸ்லிம் 1521)

மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, “அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?” என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் “அலுவல்களே காரணம்” என்றார்கள். (புகாரி 1184)

இவர்கள் நபித்தோழர்களை மதிப்பதாக, பின்பற்றுவதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள், வெற்று ஜாலங்கள் என்பதும், மேலும் இவர்கள் யாரை இமாம்களாகக் கருதுகின்றார்களோ அவர்களை நபித்தோழர்களை விட சிறப்புக்குரியவர்களாக மதிக்கின்றார்கள், நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது.

தொழுகையை முடிக்கும் ஸலாம்

நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபுகளின் பெயரால் தொழுகையை முறை தவறித் தொழுது, தங்கள் நன்மைகளைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொழுகையின் பல செயல்களில் நபிவழிக்கு மாற்றமான முறையை மத்ஹபுகள் போதிப்பதே இதற்குக் காரணம். தொழுகையின் ஆரம்ப தக்பீரிலிருந்து ஸலாம் வரை நபிவழிக்கு முரணாண பல காரியங்களை மத்ஹபுகள் போதிக்கின்றன.

வேற்று மொழிகளில் தொழுகையைத் துவக்கலாம், அர்ரஹ்மானு அக்பர் என்று சொல்லலாம், ருகூவின் போது லேசாக தலையைத் தாழ்த்தினாலே போதும் என்பன போன்ற மார்க்கம் அனுமதிக்காத பல விஷயங்களை மத்ஹபு அனுமதித்து இருந்ததை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இப்போது ஸலாம் கூறும் முறையில் நபிவழியுடன் மத்ஹபு எவ்வாறு முரண்படுகின்றது என்பதை காண்போம்.

நபிவழி

நாம் தொழுகையின் முடிவில் ஸலாம் கொடுக்கும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுகிறோம். இதுவே நபிவழி. இந்த நபிவழி அடிப்படையில் தான் அனைத்து முஸ்லிம்களும் தொழுது வருகிறோம். சிறு குழந்தைகள் கூட ஸலாம் கூறும் முறையை சரியாகக் கடைபிடிப்பதை இன்றளவும் பள்ளிவாசல்களில் காணலாம்.

வலது புறமும், இடது புறமும் திரும்பி “அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல்: திர்மிதீ (272), அபூதாவூத் (845)

ஸலாம் கொடுக்கும் முறை இது தான் என்பதில் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மத்ஹபு வழி

இரண்டு தடவை அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கூறுவது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும். இரண்டாவது தடவை வாஜிபாகும். அலைக்கும் என்பது கடமையன்று.

(துர்ருல் முக்தார், பாகம் : 1 பக்கம் : 504)

மேற்கண்ட வார்த்தைகளின் விளக்கமென்ன?

ஸலாம் கூறும் போது இரண்டு தடவை அஸ்ஸலாம் என்று சொல்வது தான் கடமை; அலைக்கும் என்று சொல்வது அவசியமில்லை என மேற்கண்ட மத்ஹபு சட்டத்தில் கூறப்படுகின்றது. அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துள்ளார்களா? அல்லது  அவ்வாறு முடிக்கலாம் என்று அனுமதித்துள்ளார்களா? இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் தங்கள் பள்ளிகளில் இவ்வாறு ஸலாம் கூறி தங்கள் இமாம்கள் இயற்றிய மத்ஹபு சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்களா?

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று நபிகளார் கூறியதில் அஸ்ஸலாமையும் அலைக்கும் என்பதையும் வித்தியாசப்படுத்த என்ன அடிப்படை? இக்கேள்விகளுக்கு மத்ஹபைப் பின்பற்றுவோர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இச்சட்டத்திற்குத் தங்கள் மனோஇச்சைகளைத் தவிர மார்க்க ஆதாரம் ஏதும் இல்லை.

அது சரி! வேண்டுமென காற்று பிரித்தும், ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தும் தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே! மத்ஹபைப் பின்பற்றுவோர் சிந்திக்கட்டும்.

பாங்கிற்காக எழுந்து நிற்பது

நபிவழி

யாருக்காகவும், எதற்காகவும் எழுந்து நிற்பது என்ற கலாச்சாரத்தை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. நம்மை ஒரு ஜனாஸா கடந்து சென்றால் நம்மைக் கடக்கும் வரை அதற்காக மட்டும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டுள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவுமில்லை, கட்டளையிடவுமில்லை.

மத்ஹபு வழி

ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தாரில் பாங்கு சொல்லப்படும் போது எழுந்து நிற்பது சிறப்புக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாங்கு சப்தத்தைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும்

(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 397)

இதற்கான ஆதாரம் நபிவழியில் எங்கே இருக்கிறது? நபியவர்கள் கூறாத ஒன்றை மார்க்கம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை உணர்வார்களா?

பள்ளியைக் கட்டியவருக்கே பாங்கு இகாமத் உரிமை

மத்ஹபு வழி

பள்ளிவாயிலைக் கட்டியவருக்குத் தான் பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் அதிகாரம் உண்டு. இது பொதுவானதாகும். (அவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை) இமாமத் செய்யும் அதிகாரமும் அவருக்கே உரியது. (இது பொதுவானதன்று) அவர் நேர்மையாளராக இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார், பாகம் : 1, பக்கம் 431)

மாநபி வழி

ஒருவர் பள்ளிவாயிலைக் கட்டினால் அதற்குரிய கூலி அல்லாஹ்விடம் அவருக்கு உண்டு. ஆனால் பள்ளிவாசலில் அவருக்கென்று பிரத்தியேகமான எந்த உரிமையும் கிடையாது.

ஏனெனில் “நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன” என்று அல்லாஹ் கூறுகிறான். (72:18)

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிவாசல் என்று ஆகும்போது அவனது அடியார்கள் அனைவருக்கும் அதில் சமமான உரிமைகள் உள்ளன. இஸ்லாம் காட்டக்கூடிய வழிமுறைப் பிரகாரம் முஸ்லிம்கள் தமக்கென ஒரு தலைவரைத் தேர்வு செய்வார்கள். அந்தத் தலைவர் இஸ்லாம் கூறக்கூடிய தகுதிகளின் அடிப்படையில் பாங்கு சொல்பவரை, தொழுகை நடத்துபவரை ஏற்பாடு செய்வார். இதுதான் இஸ்லாம் காட்டக்கூடிய வழிகாட்டுதல் ஆகும். பள்ளிவாசலைக் கட்டியவருக்கு அதிகப்படியாக உரிமைகள் இருப்பதாக அல்லாஹ்வோ அவனது தூதரோ நமக்குக் கூறவில்லை.

பள்ளிவாசலைக் கட்டியவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பு உரிமை அவரோடு முடிந்து விடப்போவதில்லை. மாறாக பரம்பரை பரம்பரையாக இந்த உரிமை தொடருமாம்.

பள்ளிவாசலைக் கட்டியவரின் மகனும் அவனது குடும்பத்தினரும் மற்றவர்களை விட அதிக உரிமை படைத்தவர்கள்.

ரத்துல் முக்தார், பாகம் 3, பக்கம் 241

இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இது மாநபி வழியில் அமைந்த சட்டம் என்று கருதமுடியுமா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்

கல்லில் தயம்மம் செய்தல்

நபிவழி

உளூ செய்வதற்காகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை நேரும் போது தயம்மும் என்ற முறையை இறைவன் மாற்றுப் பரிகாரமாக ஆக்கியுள்ளான். தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து முகத்தையும், கையையும் தடவுவதே தயம்மும் எனப்படும். மண்ணில் தயம்மும் செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதர் அவர்களும் கூறியுள்ளார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:43)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

மத்ஹபு வழி

குர்ஆனின் இவ்வசனங்களுக்கு எதிராகக் கல், மரகதம் போன்றவற்றிலும் தயம்மும் செய்யலாம் என மத்ஹபு போதிக்கின்றது.

மண், கல், சாந்து, ஜல்லிக் கல், சுர்மா, மரகதம் போன்ற பூமியின் வகையைச் சார்ந்த அனைத்தின் மூலம் தயம்மம் செய்வது இமாம் அபூஹனிபா மற்றும் (அவரது மாணவர்) முஹம்மத் ஆகியோரிடம் அனுமதியாகும்.

நூல் : ஷரஹ் ஹிதாயா, பாகம் 1, பக்கம் 194

மண் என்பது உதிரியாகக் கிடந்தாலும், அல்லது ஒன்று சேர்ந்து திரளாக, கட்டியாக இருந்தாலும் அதில் தயம்மும் செய்வது குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாக ஆகாது. ஆனால் எந்த அடிப்படையில் கல்லில் தயம்மும் செய்யலாம் என்று இமாம் அபூஹனிபா சட்டம் எடுத்தார்? மரகதம், ஜல்லிக்கல் ஆகியவற்றிலும் தயம்மும் செய்யலாம் என்றால் அதற்கு ஆதாரம் என்ன? அவை மண்ணின் வகையைச் சார்ந்ததா?

தயம்மும் செய்ய ஏற்ற பொருள் தூய்மையான மண் என்று இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது கல், மரகதம் ஆகியவற்றையும் அதில் சேர்த்திருப்பது நபிவழிக்குப் பொருத்தமானதா? இது போலவே மத்ஹபுச் சட்டங்களில் அதிகமானவை குர்ஆன், நபிவழிக்கு முரணாகவே உள்ளன என்பதை மத்ஹபின் விசுவாசிகள் உணர வேண்டும்.

முரண்பாடுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பைத்தியம் பலவிதம்          தொடர்: 2

உத்தம நபி ஒளியால் படைக்கப்பட்டார்களா?

நபி (ஸல்) அவர்கள் மனிதரல்ல! ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்பது பரேலவிகளின் வாதம். இது எவ்வளவு பைத்தியக்காரத்தமானது என்பதைச் சென்ற இதழில் கண்டோம்.

பரேலவிகள் தங்கள் அறியாமைக்கு ஆதாரமாகக் காட்டுகின்ற சில சான்றுகளை இந்த இதழிலும் பார்ப்போம். அதற்கு முன்னால், நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை, அவதூறை பரேலவிகள் கூறி வருகின்றனர். முதலில் அதைப் பார்த்து விட்டு அவர்கள் வைக்கின்ற சான்றுகளைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் சொன்னோமா?

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் என்று நாம் ஒரு போதும், எந்தவொரு காலகட்டத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு சொல்லவும் மாட்டோம். அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்?

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (வஹீ) வந்தது. இந்த இறைச் செய்தி இனி எவருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறுதிநாள் வரை வராது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அந்த இடத்தை மனித குலத்தில் யாரும் பிடிக்க முடியாது. இந்த அடிப்படையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது என்றே அடித்து, ஆணித்தரமாகச் சொல்கின்றோம்.

ஆனால் அதே சமயம் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களா? என்றால் நிச்சயமாக, ஒரு போதும் கிடையாது. அந்த வகையில் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றோம். இதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. இதற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் குர்ஆனை மறுத்தவர்கள். காரணம் இந்தக் கருத்தை நாமாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. அல்லாஹ் தான் இவ்வாறு கூறுகின்றான்.

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

குர்ஆனுடைய இந்த நிலைபாடு தான் நம்முடைய நிலைபாடு! இந்த நிலைபாட்டைச் சொல்லும் போது, “நபி (ஸல்) அவர்களை சாதாரண மனிதர்’ என்று நாம் கூறுவதாக பரேலவிகள் நம்மைப் பார்த்துக் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையில் இவர்கள் குர்ஆனுக்கு மாற்றமான நிலைபாட்டிற்குச் சென்று விட்டு, அதாவது இறை மறுப்பைச் செய்து கொண்டு, நம்மைக் குற்றவாளியாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.

இவர்களுடைய இந்த இறை மறுப்புக் கொள்கையை முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்து விட்டனர். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வளர்ச்சியே சிறந்த சான்றாக அமைந்திருக்கின்றது.

இது தான் நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக இவர்கள் சொல்கின்ற அவதூறுக்கும் அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலாகும்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல, ஒளியினால் படைக்கப்பட்ட உன்னதப் படைப்பு என்பதற்குக் காட்டுகின்ற சான்றுகளைப் பார்ப்போம்.

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த் தளத்திலும் நான் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?” என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், “கீழ்த் தளமே மிகவும் வசதியானது” என்று கூறினார்கள். நான், “நீங்கள் கீழேயிருக்க நான் மேல் தளத்தில் இருக்கமாட்டேன்” என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.

இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபியவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது “நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை” என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.

மேல் தளத்திற்கு ஏறிச்சென்று “அது (வெள்ளைப் பூண்டு) தடை செய்யப்பட்டதா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள்.

நான், “அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேதஅறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.

நூல்: முஸ்லிம் 3828

இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் சொல்ல வருவது என்ன?

நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதரல்ல என்று நபித்தோழர்கள் கருதியதால் தான் நபியவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, அபூஅய்யூப் அல்அன்சாரி அவர்கள் மேல் தளத்தில் இருக்க மறுத்து விடுகின்றார்கள். இது தான் இவர்கள் சொல்ல வருகின்ற சான்று.

அதாவது, நபித்தோழர்களே நபியவர்களைச் சாதாரண மனிதராகப் பார்க்கவில்லை என்று இதன் மூலம் நிறுவ வருகின்றார்கள்.

இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால் நபியவர்களுக்கென்று உள்ள தனிச்சிறப்புக்களைப் பற்றி நாம் அறிந்தாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் 49:2

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது; அப்படிப் பேசினால் அவ்வாறு பேசியவர்களின் வணக்கங்கள் பாழாகி விடும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் இந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டுமென்றால் அன்பளிப்பு வழங்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 58:12

இந்த உத்தரவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.

  1. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.

அல்குர்ஆன் 24:63

நபி (ஸல்) அவர்களை, நம்மில் சிலர் சிலரை அழைப்பது போல் அழைக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இந்த உத்தரவும் நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.

  1. முஸ்லிம்கள் யாரும் ஒரே சமயத்தில் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் முடிக்கக் கூடாது. ஆனால் இந்தச் சட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும். (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:50

இதிலும் நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசப் படுகின்றார்கள்.

  1. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4474

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை கூறப்படுகின்றது. இந்தத் தகுதியையும் யாரும் அடைய முடியாது. இதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது.

  1. ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தனித்தன்மை மிக்கவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.

 இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல்பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூ செய்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் (மீண்டும்) அவர்கள் உளூ செய்யவில்லை.

(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கண்கள்தாம் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது” என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)’ என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் “”இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும்’ என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். பிறகு “(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.

நூல்: புகாரி 138, 859, 3569

இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்ற தன்மைகள். இந்தத் தன்மைகளில் மற்றவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை நெருங்க முடியாது. காரணம், இவை அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் அமைந்தவை. இந்த வகையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது.

இந்த அடிப்படையில் தான் அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, நாம் மேல் தளத்தில் இருக்கலாமா? என்று கருதி தயங்கியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கீழ் தளத்திற்கு மாறியிருக்கின்றார்கள். அவ்வளவு தான்.

அபூஅய்யூப் அல்அன்சாரி இவ்வாறு மாறியதற்குக் காரணம், அவர் நபியவர்களை நம்மைப் போன்ற மனிதராகப் பார்க்காமல் வேறு படைப்பாகப் பார்த்திருக்கின்றார்கள் என்பது போன்ற தோற்றத்தை இதில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் அப்படிக் கருதுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இருப்பினும் இந்த ஹதீஸை இழுத்து வளைத்து நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் ஆன படைப்பு என்று நிறுவ முன்வருகின்றார்கள்.

இது பரேலவிச சிந்தனையின் பச்சையான பைத்தியக் காரத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இவர்களுடைய பரேலவிசக் கொள்கையே நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்; அவர்கள் மனிதப் படைப்பு கிடையாது என்பது தான்.

இவர்களுடைய இந்தக் கொள்கை மிகவும் ஆபத்தானது; அபாயகரமானது. இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தைத் தகர்க்கக் கூடியது. இதை மக்களிடம் தெளிவுபடுத்தும் போது, “நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர்’ என்று நாம் கூறுவதாக இவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவர்களது பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றாலும் இந்த வாதங்கள் ஒவ்வொரு ஏகத்துவவாதிக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலை ஏகத்துவத்தில் விரிவாக எடுத்து வைக்கின்றோம்.

அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் செலுத்திய மரியாதை இந்தத் தவறான, தறிகெட்ட பரேலவிசப் பாதையில் அமைந்ததல்ல. நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு என்ற வட்டத்தின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) போன்று அனைத்து நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களை மனிதர்களாகவே பார்த்தார்கள். ஏன்? அன்றைய இஸ்லாத்தின் எதிரிகளான மக்கா காபிர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பாகவே பார்த்தனர். அதனால் தான் நபியவர்களை மறுக்கவும் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பாக இல்லாமல் ஒளியினால் படைக்கப்பட்ட அற்புதப் படைப்பாக இருந்தால் அவர்களை அந்தக் காபிர்கள் மறுத்திருக்க மாட்டார்கள்.

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிடக்கூடாது என்பது தான். அதாவது நபியவர்கள் மலக்காக, ஒளியாக இருக்க வேண்டும் என்று தான் அந்த மக்கள் எதிர்பார்த்தார்கள்.

இது மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல! உலகத்தில் தூதர்கள் அனுப்பப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்த எதிர்பார்ப்பில் தான் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, அதாவது மனிதப் படைப்பாக அந்தத் தூதர்கள் இருந்ததால் தான் தூதரை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

இதோ அல்லாஹ் கூறுகின்றான்:

“மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

“பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்” என்பதைக்  கூறுவீராக!

அல்குர்ஆன் 17:94, 95

மக்கத்து காபிர்கள் வைத்த இந்த வாதங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மனிதத் தூதர் தான் என்று நம்பியே நபித்தோழர்கள் ஏற்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்ற வரையிலும், மரணித்த பின்பும் மனிதராகவே பார்த்தார்கள்.

இரத்தம் சிந்திய இறைத்தூதர்

நபி (ஸல்) அவர்கள் பசியுடன் இருந்ததையும், உணவு உண்டதையும், தண்ணீர் அருந்தியதையும் இதன் விளைவாக அவர்கள் மலஜலம் கழித்ததையும் அந்த மக்கள் கண்டார்கள். நபியவர்கள் திருமணம் முடித்ததையும் பிள்ளைகள் பெற்றதையும் கண்கூடாகக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் வெட்டப்பட்டதையும் அதன் விளைவாக அவர்களது உடலில் இரத்தம் பீறிட்டுக் கொப்பளித்ததையும் தங்கள் கண்களால் சந்தேகமின்றி பார்த்தார்கள்.

இவையெல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நபி (ஸல்) அவர்களை மனிதர் தான் என்பதைத் தெளிவுபடுத்தின.

ஆனால் இந்தப் பரேலவிகள் மட்டும், “நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை மனிதராகப் பார்க்கவில்லை, மலக்காக அல்லது ஒளியாகப் பார்த்தார்கள்’ என்பது போன்று சித்தரிக்கின்றார்கள். இதனைச் சிந்தனைக் குருடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

இன்னும் இதுபோன்று நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பிலிருந்து வேறுபடுத்துவதற்காக என்னென்ன உருப்படாத ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

சாப்பிடுவதன் ஒழுங்குகள்

தூய்மையானவற்றை உண்ணுதல்

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!

அல் குர்ஆன் 2:172

சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 256

பிஸ்மில்லாஹ் கூறி, அருகிலிருப்பதை உண்ணுதல்

உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது “நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பிஸ்மில்லாஹ்” கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: முஸ்லிம் 4105

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” (பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி 1781

இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4108

உணவுப் பொருள் கீழே விழுந்தால்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு கவள  வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4138

சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்

நபி (ஸல்) அவர்கள், “(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்” என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122

நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4115

நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5617

அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: “மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்

நூல்: புகாரி 5615

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: புகாரி 153

சாப்பிட்ட பின் விரல்களைச் சூப்புதல்

(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களைச் சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4136

பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு “அதிலே கொழுப்பு இருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 211

சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: புகாரி 5458

வலது புறமிருந்து வினியோகிக்கத் துவக்குதல்

நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு “வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5612

வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்

நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் “(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்” என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)

நூல்: புகாரி 5620

ஒருவரது உணவு இருவருக்குப் போதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4182

கூட்டாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகள்

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 24:61

அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது

(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2455

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5460

பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 671

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது”

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 969

உணவைக் குறை கூறுதல் கூடாது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

நூல்: புகாரி 3563

உணவை வீண் விரையம் செய்யக்கூடாது

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல் குர்ஆன் 7:31

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:27

பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816

—————————————————————————————————————————————————————-

மூஸா நபியின் கப்ர் தொழுகை

எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு “அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்” என நற்செய்தி கூறுவதற்காகவும், “அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.

அல்குர்ஆன் 18:1

என்று சிறப்பித்துக் கூறுகின்றான். பின்வரும் வசனத்திலும் குர்ஆனை கோணலற்றது என்று வர்ணிக்கின்றான்.

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் 39:28

ஆனால் பரேலவிகள் எனப்படும் சமாதி வழிபாட்டுச் சிந்தனையாளர்கள், குர்ஆனை கோணலாகவே பார்க்கின்றார்கள்.

அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள், அவன் தான் என்றென்றும் உயிருள்ளவன் என்று நாம் கூறுகின்ற போது இறந்து போன அவ்லியாக்களும் உயிருடன் இருக்கின்றார்கள் என்கின்றார்கள். ஆதாரம் என்ன? என்று கேட்டால் “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்’ (அல்குர்ஆன் 2:154) என்ற வசனத்தையும், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்’ (அல்குர்ஆன் 3:169) என்ற வசனத்தையும் காட்டுகின்றார்கள்.

ஆனால் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் பொதுவாக நாம் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இது கூட அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்த ஷஹீத்கள் எனும் உயிர்தியாகிகளுக்கான சிறப்புத்தகுதி என்பதையும் இருட்டடிப்பு செய்வார்கள்.  இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக விளக்குகின்றார்கள்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்’ (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

நூல்: முஸ்லிம் 3834

அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்களின் இந்த ஹதீஸைத் தான் கடத்தல் செய்து, இறந்து போன நல்லடியார்களுக்குக் கொண்டு போய் பொருத்துகின்றார்கள். இது ஷஹீத்களுக்குரிய ஹதீஸ் ஆயிற்றே? இதை எப்படி இறந்து விட்ட மற்ற நல்லடியார்களுக்குக் கொண்டு போய் சேர்க்க முடியும்? என்று கேட்டால் அவர்கள் சொல்கின்ற பதில் இதோ:

ஷுஹதாக்கள் தங்களுடைய இன்னுயிரை போர்க்களத்தில் மாய்த்ததைப் போன்று இந்த நல்லடியார்கள் அல்லாஹ்வை வணங்குவதில் தங்களை மாய்த்தவர்கள். எனவே இவர்களும் உயிருள்ளவர்கள். இதன் அடிப்படையில் இறந்து போன நல்லடியார்கள் உயிருடன் வாழ்கின்றார்கள். அதனால் அவர்களிடம் நமது கோரிக்கையை முன்வைத்து கேட்கலாம், துஆச் செய்யலாம் என்று சொல்கின்றார்கள்.

இறந்து போன நல்லடியார்களை ஷஹீத்கள் பட்டியலில் இவர்கள் சேர்த்தாலும் அது இவர்களின் குருட்டு நம்பிக்கையை நியாயப்படுத்த உதவாது. ஏனெனில் சொர்க்கத்தில் பறவை வடிவில் அவர்கள் உண்டு களித்து இருப்பார்கள் என்பது தான் உயிரோடு உள்ளார்கள் என்பதன் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிவிட்டதால் அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதை அந்த நல்லடியார்கள் கவனிக்காமல் இன்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

மேலும் ஒருவரை நல்லடியார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதையும் இவர்கள் மக்களிடமிருந்து மறைக்கிறார்கள்.

அல்குர்ஆனின் நேரிய வழி

அல்குர்ஆன் தெளிவாக, நேரடியாகச் சொல்வதும், கட்டளையிடுதும் என்ன?

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

அல்குர்ஆன் 1:4

அல்லாஹ் தன்னிடமே நேரடியாக உதவி தேடும்படி நமக்கு  இந்த வசனத்தின் மூலம் கற்றுத் தருகின்றான்.

“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

அல்குர்ஆன் 40:60

இந்த வசனத்திலும் அல்லாஹ் தன்னிடமே கேட்க வேண்டும் என்று அடியார்களுக்கு உத்தரவிடுகின்றான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

இதிலும் அடியார்கள் தன்னிடமே கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். தான் என்றென்றும் உயிருள்ளவன், நிர்வாகம் செய்து கொண்டிருப்பவன் என்று தன்னுடைய ஆற்றலையும் தெளிவுபடுத்துகின்றான். இப்படி உயிருள்ள ஒருவனிடம் நேரடியாகக் கேட்பதை விட்டு விட்டு இறந்து போனவர்களிடம் கேட்பதற்காக என்னென்ன குறுக்கு வழிகளை, கோணல்வழிகளைக் கையாளுகின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோணல் புத்தியும் குறுக்கு வழியும்

யூத, கிறித்தவர்கள் இப்படித்தான் குறுக்கு வழியைக் கையாண்டார்கள். நேரிய வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

“வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள்.

அல்குர்ஆன் 3:99

அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 11:19

இந்த பரேலவிசப் பேர்வழிகள் இத்தகைய பிரிவைச் சார்ந்தவர்கள் தான். யூத, கிறித்தவர்கள் செய்த அதே வேலையைத் தான் இவர்களும் செய்கின்றார்கள். இவர்களின் இந்தக் குறுக்கு வழிகளில் உள்ள ஒன்று தான் மூஸா நபி உயிருடன் இருக்கின்றார் என்ற வாதமும், அதற்காக அவர்கள் சமர்ப்பிக்கின்ற ஆதாரமும். அந்த ஆதாரம் என்ன? முஸ்லிமில் இடம் பெறக்கூடிய பின்வரும் செய்திதான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

முஸ்லிம் 4736

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது நடந்த இந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டி, மூஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள், எனவே நபிமார்களை, நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுகின்ற இந்தப் பரேலவிகள் யாரும் மூஸா நபியை அழைத்துப் பிரார்த்திப்பதில்லை. அது போல நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்றாஹீம் போன்ற நபிமார்களை அழைப்பதில்லை. மாறாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தோன்றி மறைந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஹ்யித்தீன், ஷாகுல் ஹமீது போன்ற அடியார்களைத் தான் அழைக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் மூஸா நபியின் இந்த ஹதீஸை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இவர்களாக நல்லடியார்கள் பட்டம் கொடுத்துக் கொண்டவர்களை அழைப்பது தான்.

நபிமார்களை அழைப்பது இவர்களது நோக்கமல்ல. குறைந்த பட்சம் அவர்கள் நபிமார்களை அழைத்தாலாவது ஓரளவுக்குத் தங்கள் வாதத்தில் சரியாக இருக்கின்றார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு இவர்கள் அழைப்பது கிடையாது. இதன் மூலம் அவர்கள் குறுக்கு வழியிலும் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது அவர்கள் காட்டுகின்ற மூஸா நபியின் கப்ர் தொழுகை ஹதீஸைப் பார்ப்போம்.

மூஸா நபி தனது கப்ரில் தொழுது கொண்டிருப்பதை நபிகள் நாயகம் கண்டது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை அவர்களது கப்ரில் மட்டும் காணவில்லை. அவர்களைப் பல இடங்களில் காணுகின்றார்கள். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பைத்துல் முகத்தஸில் மூஸா நபி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4736

மண்வெளியில் மூஸா நபி

நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.

நூல்: முஸ்லிம் 3410

விண்வெளியில் மூஸா நபி

அங்கிருந்து விண்வெளிக்கு செல்லும் போது மூஸா அங்கேயும் நபியைப் பார்க்கின்றார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை “ஸம்ஸம்” தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் “ஈமான்” எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.

பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், “திறங்கள்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், “யார் இவர்?” எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா?” எனக் கேட்டார். அவர்கள், “ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் “ஆம்” என்று கூறினார்கள்.

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் “திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன?” என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும்  இப்ராஹீம்  (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் தொடர்கிறார்கள்:

“என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)  அவர்கள், “இவர் தாம் இத்ரீஸ்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல  சகோதரரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்கள் தாம் மூசா” என்று பதிலளித்தார்கள்.

நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்தாம் ஈசா” என்று பதிலளித்தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் இப்ராஹீம்” என்று கூறினார்கள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்-ம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் விதிகளை பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுது கோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)

திரும்பும் போது ஒரு சந்திப்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்களிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். அவர்கள், “அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள்.

உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று “அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்” என்று சொன்னபோது மீண்டும் அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப்படாது” என்று கூறிவிட்டான்.

உடனே நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) “சித்ரத்துல் முன்தஹா”வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.

நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)

இது எதைக் காட்டுகின்றது? நபி மூஸா (அலை) அவர்கள் மண்ணுலகில் கப்ரில் மட்டும் தொழுது கொண்டிருக்கவில்லை. மாறாக விண்ணுலகில் நபி (ஸல்) அவர்கள் வரவேற்கவும் செய்கின்றார்கள், வழியனுப்பவும் செய்கின்றார்கள். மூஸா நபியின் பாத்திரம் கப்ரில் மாத்திரம் அடங்கி இருக்கவில்லை. விண்ணுலகு வரை விரிந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

ஈஸா நபியுடன் சந்திப்பு

மேலே இடம் பெற்ற ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை)  ஆகிய நபிமார்களைச் சந்திக்கின்றார்கள். இதில் ஈஸா நபியைத் தவிர மற்ற எல்லா நபிமார்களும் இறந்தவர்கள். ஈஸா நபியவர்கள் வானத்தில் தான் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களையும் சேர்த்தே நபியவர்கள் பார்த்திருக்கின்றார்கள். சந்தித்திருக்கின்றார்கள்.

பிலால் (ரலி) அவர்களுடன் சந்திப்பு

நபி (ஸல்) அவர்கள் நபிமார்களை மட்டும் பார்க்கவில்லை. சுவனத்தில் பிலால் (ரலி) அவர்களின் நடமாட்டத்தையும் காண்கின்றார்கள்.

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1149

இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, “நான் உலகில் தானே இருக்கின்றேன். சுவனத்திற்கு எப்படி வந்திப்பேன்’ என்று பிலால் (ரலி) கேட்கவில்லை. அப்படியானால் இதன் பொருள் என்ன?

பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இந்தப் பரேலவிகள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு போதும் இல்லை. இங்கு நாம் காணவேண்டியது அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலைத் தான். பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இந்த அற்புதம் தான் இதிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயமும் படிப்பினையுமாகும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஒருவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவர் இறந்து, மறுமை நாளில் அவர் எழுப்பப்பட்டு, விசாரணை முடிந்து தான் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் பிலால் (ரலி) முந்தியே சென்றிருக்கின்றாரே! எப்படி? இது எடுத்துக்காட்டப்பட்ட நிகழ்வு!

சுவனத்தில் உளூச் செய்யும் உமர் (ரலி) மனைவி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த போது அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியது’ என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3680

கியாமத் நாள் ஏற்பட்டு சுவனத்தில் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சுவனத்து மனைவியைப் பார்த்தது எப்படி?

ருமைசாவின் பிரவேசம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, “யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது’ என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி 3679

பூமியில் உள்ள அபூதல்ஹாவின் மனைவியை சுவனத்தில் எப்படிப் பார்க்க முடிந்தது?

நபி (ஸல்) கண்ட நரகக் காட்சிகள்

இதுபோல் நபி (ஸல்) அவர்கள் நரகத்திலும் சில காட்சிகளைக் கண்டார்கள். நரகம் எப்போது? மறுமை நாள் வந்து, கேள்வி கணக்கு விசாரணை முடிந்த பின்னர் தீயவர்கள் போய்ச் சேருமிடம் தான் நரகம். அந்த நரகத்தின் காட்சிகளை நபி (ஸல்) அவர்கள் முன்னரே கண்டார்கள்.

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும் மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அபூதாவூத் 4255

இந்தக் காட்சியும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது தான்.

பெண்கள் நிறைந்த நரகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 3241

நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்டதாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் இந்த ஹதீஸில் பார்க்கிறோம். பின்னால் நடக்கப்போகும் ஓர் உண்மையை அல்லாஹ் தனது தூதருக்கு இங்கு காட்சியாகக் காட்டியிருக்கின்றான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

தஜ்ஜாலின் காட்சி

இவை நபி (ஸல்) அவர்கள் சுவனத்திலும் நரகத்திலும் கண்ட சில காட்சிகளாகும். இவையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலையும் நரகத்தின் காவலர் மாலிக்கையும் பார்க்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை “ஷனூஆ‘ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3239

இவை அனைத்தும் பின்னால் நிகழவிருக்கும் நிகழ்வுகளையும், இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படக்கூடிய ஆட்களையும் தன் திருத்தூதருக்கு அல்லாஹ் காட்சியாக எடுத்துக் காட்டியனவாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வாறு மிஃராஜ் போன்று நேரிலும் எடுத்துக் காட்டுவான். கனவிலும் எடுத்துக் காட்டுவான். இது அவனுடைய மாபெரும் ஆற்றலுக்குரிய அத்தாட்சியாகும்.

ஆதம் நபி அவர்களைப் படைத்து, அவர்களிடமிருந்து தோன்றப் போகும் அனைத்து சந்ததிகளையும் அவர்களிடமே எடுத்துக் காட்டுகிறான்.

இதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

அல்குர்ஆன் 7:172

ஆதம் நபி உருவானதிலிருந்து இறுதி நாளில் மரணிக்கவிருக்கும் மனித சந்ததி அத்தனை பேரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சாட்சியம் அளித்திருக்கின்றனர். நாமும் அளித்திருக்கின்றோம். ஆனால் இது நமக்கு நினைவில் இல்லை. இப்படி அல்லாஹ் பின்னால் நடக்கவுள்ளதை முன்னாலேயே தனது தூதர்களுக்கு ஒரு டிரையலாக எடுத்துக் காட்டுகிறான்.

ஒரு பொறியாளர் தான் கட்டவிருக்கும் மாபெரும் மாளிகையின் மாதிரியை முதலில் தனது ஆட்களுக்குச் செய்து காட்டி விடுகின்றார். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.

எனவே மிஃராஜ் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு நிகழ்வாகும். இதை வைத்துக் கொண்டு மூஸா நபியவர்கள், இவர்கள் சித்தரித்துக் காட்டுகின்ற அர்த்தத்தில் உயிருடன் உள்ளார்கள் என்பது தவறாகும்.

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை       தொடர்: 8

கியாமத் நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்களையும் அதற்கான விளக்கத்தையும் கண்டு வருகின்றோம்.

ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று வாதிடுவோரின் அடுத்த ஆதாரம் இது தான்.

அவர் (அக்குழந்தை), ‘நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாயாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.

திருக்குர்ஆன் 19:30-32 இந்த வசனங்களுக்குப் பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர்.

தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

  1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
  2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
  3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)

இரண்டாவது வசனத்தில் ‘நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்” என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் ‘வ பர்ரன் பிவாலிததீ” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ‘எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பது இதன் பொருள்.

செய்பவனாகவும் (செய்பவன் + ஆக + உம்) என்பதில் ‘உம்”மைப் பொருளை எங்கே முற்றுப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

‘உம்”மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முத-ல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

‘இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன்” என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு ‘உம்”மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் ‘கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்” என்ற வரிசைப்படி அமையும்.

“நல்லவனாகவும்’ என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, திருக்குர்ஆன் 19:32 வசனத்தை ஆராய்வோம்.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும்.

‘என்னை நபியாகவும் ஆக்கினான்” என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக ‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்று முற்றுப் பெறச் செய்யலாம்.

‘என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்’ என்ற கருத்து கிடைக்கிறது.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.

‘நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்ற கருத்து இதி-ருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப் பெறச் செய்வது தான் மிகவும் சரியானதாகும்.

‘உம்மை’ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும். அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாக’ என்பது 19:32-வது வசனம்.

அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே ‘நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்” என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ஈஸா நபிக்கு ஸகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.

  1. ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
  2. அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால் தான் அவர்கள் மீது ஸகாத் கடமையாகும்.

ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும். அப்போது தான் அவர்கள் உயிருடனும் இருந்தார்கள். தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.

அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. தாயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.

இன்று கூட ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.

எனவே ஸகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஸகாத் கொடுப்பார் என்று கேட்பது அபத்தமானதாகும்.

ஒரு வாதத்திற்காக எதிர் தரப்பினரின் வாதத்தை ஏற்றாலும் அவர்களின் கேள்வி அர்த்தமற்றதாகும்.

அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் அதை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

‘முஃமின்களே! உங்கள் குரலை நபியின் குரலை விட உயர்த்தாதீர்கள்” (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஃமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படிச் செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் ‘அதற்கான சூழ்நிலை இருக்கும் போது” என்று கூறாவிட்டாலும் அது தான் பொருள் என விளங்குகிறோம்.

ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விட முடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.

ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அறியாமையின் அடிப்படையில் அவர்களின் வாதம் எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(திருக்குர்ஆன் 3:144)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது; இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது “ஈஸா நபி மரணித்து விட்டார்கள்’ என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.

ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித் தான் நபித் தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.

இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தை நபித் தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். “ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது’ என்று நபித் தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருப்பார்கள். இது அவர்களின் வாதம்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழி முறையல்ல.

இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்து கூறப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.

திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதி விலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.

“ஈஸா நபியைத் தவிர’ என்று இந்த இடத்திலேயே கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.

“முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்’ என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.      (திருக்குர்ஆன் 43:61)

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் 4:159)

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று இவ்விரு வசனங்களும் அறிவிக்கின்றன.

எனவே ‘அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்” என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து ‘ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் அவருக்கு முன் மரணித்து விட்டார்கள்” என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்யும் போது, எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.

இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(திருக்குர்ஆன் 5:75)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

‘ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா? ‘ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு, இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.

நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் ‘நபிகள் நாயகம் மரணிக்கவில்லை” என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள். எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

நோயாளி ஓதவேண்டிய பிரார்த்தனைகள்

கடந்த இதழில் நாம் சுட்டிக் காட்டியதைப் போன்று, அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹூம்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நோயாளிகள் ஓதிக் கொள்ளலாம்.

உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து,

பிஸ்மில்லாஹ்என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை

அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிருஎன்று சொல்வீராகஎன்றார்கள்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

நூல்: முஸ்லிம் 4430

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது

அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்தி(க்)க, வப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக, அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வநூர ஸத்ரீ, வஜிலாஅ ஹுஸ்னீ, வதஹாப ஹம்மீ

(பொருள்:  அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.

இறைவா! இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும். உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.)

என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி விடுவான். அவருடைய கவலையின் இடத்தில் சந்தோஷத்தைப் பகரமாக்கி விடுவான்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது எங்களுக்கு அவசியமானதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள், “அவற்றை யார் செவியுறுகிறாரோ அவர் அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத் 4091

அய்யூப் நபியவர்கள் தமக்குக் கடுமையான நோய் ஏற்பட்ட போது பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வஅன்த்த அர்ஹமுர் ராஹிமீன்

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்என அய்யூப் தமது இறைவனைப் பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன்  21:83

ஒருவருக்குத் தாங்க முடியாத துன்பம் அல்லது நோய் ஏற்படும் போது பின்வருமாறு பிரார்த்திக்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,

இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!என்று கேட்கட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல்: புகாரி 6351

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா?

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன்  அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளதுஎன்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடுஎன்று கூறினார்கள்.

உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்என்று கூறினார். மேலும் (உம்மு ஜுன்துப்) கூறுகிறார்: நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதாரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்என்று கூறினாள்.

நூல்: இப்னு மாஜா 3523

இந்த ஹதீஸைத் தான் தண்ணீரில் ஓதி ஊதும் தொழில் செய்வோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் பலமானவர் இல்லை’ என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

அபூஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீனமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக ஆக்கக் கூடாது’ என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்’ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இவரிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன’ என்றும் விமர்சித்துள்ளனர்.

யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், (பாகம்: 11, பக்கம்: 288)

மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் “சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்” என்ற அறிவிப்பாளரும் இடம் பெற்றுள்ளார். “இவர் யாரென்றே அறியப்படாதவர்” ஆவார்.

இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு வாதத்திற்கு இது சரியானது  என்று வைத்துக் கொண்டால் கூட இதில் எந்த ஒன்றையும் ஓதி ஊதிக் கொடுத்ததாக வரவில்லை. நபியவர்கள் எதையும் ஓதாமல் தம்முடைய கைகளைக் கழுவி வாய்கொப்பளித்து கொடுத்ததாகத் தான் வந்துள்ளது.

மேலும் நபியவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் தேடச் சொன்னதாகத் தான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இது சரியானதாக இருந்தால் கூட நபியவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு என்று தான் கருத முடியுமே தவிர இதிலிருந்து அனைவரும் இவ்வாறு செய்யலாம் என்று சட்டம் எடுப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதில் இல்லை.

ஓதி, தண்ணீரில் ஊதிக் குடிக்கலாம் என்பவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபியவர்கள் அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். “மனிதர்களின் இரட்சகனே ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோயைக் குணப்படுத்துவாயாகஎன்று பிரார்த்தித்தார்கள். பிறகு பத்ஹான் (என்ற இடத்தில்) இருந்து மண்ணை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டார்கள். பிறகு தண்ணீரை அதில் ஊதி அதனை அவர் மீது கொட்டினார்கள்

நூல்: அபூதாவூத் 3387

இந்த ஹதீஸ் ஓதி, தண்ணீரில் ஊதுவதைப் பற்றிப் பேசவில்லை என்பதுடன் இது பலவீனமான ஹதீஸாகவும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் யூசுஃப் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யார் என்று அறியப்படாதவராவார். இவர் நம்பகமானவர் என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்      தொடர்: 21

கடன் தள்ளுபடி

கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான்.

ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். “கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டால்  மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர்.  அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!என்று கூறினார்.  உடனே, “அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 2077

மற்றோர் அறிவிப்பில், “சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!” என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இன்னோர் அறிவிப்பில், “வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும்,  சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில் “வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இங்கு நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் எவ்வளவு தான, தர்மம் செய்தாலும் அதற்கு இப்படியான ஒரு வாய்ப்பை அல்லாஹ் தருவானா? இல்லை. ஆனால் கடனுக்கு இப்படியான ஒரு பாக்கியத்தை அல்லாஹ் வைத்துள்ளான்.

நாம் கடன் கொடுத்து, அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யும் போது, நான் இதை உனக்காகச் செய்யவில்லை.  மாறாக எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தரவேண்டும்; மறுமை வாழ்க்கையை அல்லாஹ் எனக்கு எளிதாக்க வேண்டும் என்று நினைத்து தள்ளுபடி செய்ய வேண்டும். மறுமை நன்மையை எதிர்பார்த்து இதைசெய்ய வேண்டும். அதே போல நபி (ஸல்) அவர்கள் ஒரு சம்பவத்தை சொல்லுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து  அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3480

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

ஒருவர் கடன் பட்டிருக்கிறார். இன்னொருவர் கடன் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது  கடன் வாங்கியவர் நம்மிடம் வந்து, எனக்காக அவரிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால், நாம் சொல்வதைக் கடன் கொடுத்தவர் கேட்பார் என்றால் நாம் சென்று அவரிடத்தில் அந்தக் கடனை விட்டுக் கொடுக்குமாறோ, அல்லது அவகாசம் கொடுக்குமாறோ அல்லது மன்னித்து விடுமாறோ அவருக்காகப் பேசலாம்.

நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள். (புகாரி 2706, 457, 471, 2418, 2424, 2710)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டி-ருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, “கஅப்!என்றழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உன் கடனி-ருந்து தள்ளுபடி செய்துவிடு!என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று கடனை அடைப்பீராக!என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 457

அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பரிந்த்துரை செய்கின்றார்கள். ஆனால் கடன் கொடுத்தவர் அதனை ஏற்று கொள்ளவில்லை என்ற செய்தியையும் ஹதீஸ்களில் (புகாரி 2127, 2395, 2396, 2406, 2601, 2709) காணமுடிகிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  என் தந்தையார் உஹதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.

நூல்: புகாரி 2395

வளரும் இன்ஷா அல்லாஹ்