ஏகத்துவம் – மே 2011

தலையங்கம்

சாகாதவனே சத்தியக் கடவுள்

கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.

“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்)

இந்த அத்தியாயத்தின்படி கடவுள் என்பவன் யாருடைய பெற்றோராகவோ அல்லது யாருக்கும் பிறந்த பிள்ளையாகவோ இருக்கக் கூடாது. அவனுக்கு மனைவி இருந்தாலோ அல்லது அவன் பிள்ளை பெற்றிருந்தாலோ அவன் ஒரு போதும் கடவுளாக முடியாது. அவன் மனிதன் தான் என்று திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது.

கடவுளுக்குரிய அடுத்த இலக்கணத்தை இதோ திருக்குர்ஆன் வரையறுக்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.  (அல்குர்ஆன் 2:255)

கடவுள் என்றால் என்றென்றும் உயிருடன் இருக்க வேண்டும். உயிருள்ளவன் என்று பொதுவாகச் சொல்லும் போது கொஞ்ச காலம் உயிருடன் இருந்து மரணிப்பவரையும் அது குறிக்கும் அல்லவா? அதனால் திருக்குர்ஆன் அந்தச் சந்தேகத்தையும் களைந்தெறிகின்றது.

மரணிக்காமல், உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (அல்குர்ஆன் 25:58)

ஆம்! கடவுள் என்றால் “சாவு’ அவனைக் காவு கொள்ளக்கூடாது. மரணம் அவனை அண்டவோ அணுகவோ கூடாது. இவ்வளவு ஏன்? உறக்கம் கூட அவனுக்குத் தவறியும் வந்து விடக் கூடாது. உறக்கம் வந்தால் கூட அவன் கடவுள் அல்லன். அவன் மனிதனோ அல்லது இன்ன பிற பிராணியோ தான்.

உலகில் உறக்கமில்லாத எந்த ஓர் உயிர்ப் பிராணியும் இல்லை. தூங்கா நகரம் என்று சொல்லப்படும் மதுரை அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயர் கூறப்படுகின்றது. காரணம் மீன் தூங்காமல் இருப்பது போன்று தூங்காமல் இருந்து ஆட்சி செய்வதாகக் கூறி மீனாட்சி என்று அழைக்கின்றனர். ஆனால் நீரில் வாழும் உயிரினமான மீனும் நீரில் மிதந்தே தூக்கம் போட்டுக் கொள்வதாக அறிவியல் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

எனவே எல்லா உயிரினத்தையும் உறக்கம் ஆட்கொள்கின்றது. உறக்கத்திற்கு ஆட்படாதவன் அல்லாஹ் ஒருவனே! உறக்கம் ஒரு தற்காலிக ஓய்வு என்றால் மரணம் என்பது நிரந்தர ஓய்வு!

எனவே ஒருவன் மரணித்து விட்டால் நிச்சயமாக அவன் மனிதன் தான்; மரணத்தைத் தழுவுபவன் ஒரு போதும் கடவுளாக முடியாது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

புட்டபர்த்தி சாய்பாபாவை அவரது பக்தர்கள் இதுவரை கடவுள் என்று நம்பியிருந்தனர். ஆனால் அவரோ மரணித்து விட்டார். அழுது புலம்பும் அவரது பக்தர்கள் அவரது மரணத்தை நம்ப மறுக்கின்றனர். சிந்திக்கும் அறிவிருந்தால் அல்குர்ஆன் கூறுகின்ற மேற்கண்ட அளவீட்டின்படி அவரைக் கடவுளாக்கியிருக்க மாட்டார்கள்.

இப்போது அவர் இறந்து விட்டார். அவர் அறவே கடவுள் இல்லை; மனிதர் தான் என்பது உறுதியாகி விட்டது. அறிவை அடகு வைத்த அவரது பக்தர்கள் இதைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள். காரணம், “பாபாவின் உடல் தான் எங்களை விட்டுப் போகும்; ஆன்மா எங்களிடம் இருக்கும்” என்று புலம்புகின்றனர்.

தன்னுடைய உயிர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தான் கடந்த மார்ச் 28ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 27 நாட்கள் போராடினார். கடவுளான (?) அவரால் தன்னுடைய ஆத்மாவைத் தக்க வைக்க முடியவில்லை. அவருடைய ஆத்மா அவரிடமே இல்லாத போது இந்தக் குருட்டு பக்தர்களிடம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.

அதனால் தான் அவருடைய பக்தர்கள் – பித்தர்கள், இறந்து போய் விட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக, “முக்தி அடைந்து விட்டார்’, “சித்தி அடைந்து விட்டார்’ என்று உளறிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு உளறுவதற்குக் காரணம் ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அழகாக்கிக் காட்டுகின்றான்.

அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 27:24)

அவர்களது செயல்கள் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டப்பட்டுள்ளன என்ற கருத்தில் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம்பெறுகின்றன. இந்த வசனங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் தான் சாய்பாபா பக்தர்கள்.

இதே பக்தக் கூட்டங்கள் முஸ்லிம்கள் என்ற பெயரிலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளிக் கூட்டம். இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று இவர்களும் நம்புகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்:

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:19-22)

அப்படியிருந்தும் இந்தக் கோமாளிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்றால் ஷைத்தான் இவர்களது அமல்களை அலங்கரித்துக் காட்டியிருப்பதால் தான்.

இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில் கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 6:122)

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 35:8)

ஃபிர்அவ்ன் தன்னைக் கடவுள் என்று வாதித்தான். அது அவனுக்குச் சரியெனத் தோன்றியது. இதற்குக் காரணம் என்ன? ஷைத்தான் அவனது அமலை, செயல்பாட்டை, சிந்தனையை அழகாக்கிக் காட்டியது தான்.

“ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது. (அல்குர்ஆன் 40:36, 37)

அவனது குடிமக்களும் அவனைக் கடவுள் என்று நம்பினர். அது அவர்களுக்கு சரியெனத் தோன்றியது. இதற்குக் காரணம் என்ன?

உண்மை இறைவனை மறுப்போருக்கு அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவது தான்.

அல்லாஹ் கண்டிக்கின்ற இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

தமிழகத்தில் சமுதாய இயக்கங்கள் என்றழைக்கப்படும் முஸ்லிம் லீக்குகளில், ஒரு லீக் திமுகவுடன் இருக்கும் போது மற்றொரு லீக் அதிமுகவுடன் இருக்கும்.

ஒவ்வொரு அணியும் தாங்கள் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் சமுதாயத்திற்குத் துரோகமிழைத்தாலும் அதற்கு ஆதரவளித்து முட்டுக் கொடுத்துக் கொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவர்; தங்கள் அடிமை சாசனத்தை உறுதி செய்வர். அத்துடன் வஞ்சகமில்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களை வானத்திற்கும் பூமிக்குமாகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

தங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்காக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்வார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் பேராசிரியர் காதர் மைதீன் ஒரு தேர்தல் கூட்டத்தில் கருணாநிதியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசியதாகும்.

“சிறுபான்மை சமுதாயத்தின் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் அறிபவர்’ என்று கருணாநிதியை நோக்கி அவரை மேடையில் வைத்துக் கொண்டு இந்த இணை வைப்பு, இறை மறுப்பு வார்த்தையைக் குறிப்பிட்டார். இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். காதர் மைதீன் வார்த்தையை குர்ஆன் வார்த்தையில், அரபியில் சொல்ல வேண்டுமானால் “அலீமுன் பிதாத்திஸ் ஸுதூர்’ என்று குறிப்பிடலாம். இது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தமான தனிப் பண்பு! இந்தப் பண்பில் வேறு யாரையும் கூட்டாக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இருப்பினும் இவ்வாறு இவர்களைப் பேச வைப்பவது எது? ஒரு சில எம்.எல்.ஏ. சீட்டுகள், எம்,பி. சீட்டுகள்.

லீக்குகள் நிலை தான் இப்படி என்றால் சமுதாய மானம் காக்கப் புறப்பட்டதாகக் கூறிக் கொண்டு கிளம்பிய, சாக்கடையைச் சந்தனமாக்கக் களமிறங்கிய மாமாகவின் வாத்தியாரைப் பாருங்கள்.

மூன்று சீட்டுகள் தருகின்ற “அம்மா’விடம் அவர் காட்டுகின்ற முத்துப் பல்வரிசையைப் பார்த்தீர்களா? “அரசியல் களத்தில் உங்களைப் போன்று இளிக்கின்ற எத்தனையோ பேரைப் பார்த்து விட்டேன்; உங்களைப் போன்ற எச்சில் பேர்வழிகளை நான் பார்த்ததில்லை’ என்று கூறுவது போன்று அந்தப் பெண்மணியின் முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு உருவாவதை யாரும் காணலாம்.

 சரி! மூணு சீட்டு மோகத்தில் இப்படி ஒரு இளிப்பு வந்திருக்கலாம் என்று விட்டு விடுவோம். இவரது கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த கோவை பொதுக்கூட்டத்தில் இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சைப் பார்த்தால் இவர்கள் எம்.எம்.ஏ. சீட்டுக்காக ஈமானை இழக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வருங்கால முதல்வர் ஜெயலலிதா தான் என்று அடித்துச் சொல்கின்றார். ஒரு கட்டத்தில் இன்ஷா அல்லாஹ் என்று சொல்ல வந்தவர் இன்ஷா என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டார். அல்லாஹ் நாடத் தேவையில்லை, அவர் தான் முதல்வர் என்று வாத்தியார் முடிவு செய்தால் போதும் என்று நினைத்துக் கொண்டார் போலும்.

மறைவான ஞானத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு இறை மறுப்பு வார்த்தைகளை அவிழ்த்து விடுகின்றார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது எது? இந்த எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்கள் தான்.

அத்துடன் அன்புச் சகோதரரி என்று பாசம் பொங்க அழைத்து, மோடியின் சகோதரியான ஜெயலலிதாவை தனது சகோதரியாக ஆக்கிக் கொண்டார். இவரும் மோடியின் சகோதரராகத் தன்னை ஆக்கிக் கொண்டார்.

பதவி ஆசையும் பாத பூஜையும்

பதவிக்காக இவர்கள் எதையும் இழக்கத் தயார் என்று இறங்கி விட்டார்கள். அந்தப் பதவி சுகத்திற்காகப் பாத பூஜையும் செய்வதற்குத் தயார் என்பதற்கு இதோ எடுத்துக்காட்டு!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்:  மனிதநேய மக்கள் கட்சி

எதற்கும் விலை போக மாட்டோம் என்று மார் தட்டியவர்கள் கேவலம் மூன்று சீட்டுக்காக ஈமானையும் இழக்கத் தயார், எங்களுக்கு விலை எம்.எல்.ஏ. சீட் போதும் என்று தெளிவாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர். (அல்குர்ஆன் 2:16)

இவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற நிலையை அடைவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

தன்னைக் காக்காதவர் தரணியைக் காப்பாரா?

தன்னையும் காத்து, தரணியையும் காப்பவன் தான் கடவுள். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த விபரமாகும். ஆனால் பருவமடைந்த பெரியவர்கள் மட்டுமல்ல! பண்டிதர்களுக்கும் இந்த விபரம் புரியாமல் இருப்பது வேதனையும் வினோதமும் ஆகும்.

தன்னைக் கடவுள் என்று பீற்றியும், பிதற்றியும் கொண்டிருந்த சாய்பாபா தன்னையும் காக்காதவர் என்பது அவருடைய வாழ்க்கையில் வெளிப்படையாக, வெள்ளிடை மலையாகத் தெரிந்த ஒன்று.

கடலில் ஒரு கப்பல் மூழ்குகின்றது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் மூழ்கப் போகும் மற்றொரு கப்பலில் உள்ளவர்களைப் பார்த்து, நான் உங்களைக் காக்கப் போகின்றேன் என்று சொன்னால் அதைக் கேலிக் கூத்து என்று உலக விஷயத்தில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆன்மீக விஷயத்தில் இதைப் புரிந்து கொள்வதில்லை.

கடவுளைக் கைவிட்ட உடல் உறுப்புக்கள்

சாய்பாபாவின், அதாவது கடவுளின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக அவருக்கு உதவி செய்ய மறுக்க ஆரம்பித்தன.

1963ஆம் ஆண்டு சாய்பாபாவைப் பக்கவாதம் தாக்கியது. மூளையில் இரத்த உறைவு ஏற்படும் போது கை கால்கள் செத்து விடுகின்றன. இது தான் வாதம் எனப்படுகின்றது. அதாவது கடவுளின் மூளையே வேலை நிறுத்தத்தில் இறங்கியதால் கை கால்களும் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டன.

இயங்க மறுத்த இறைவனின் (?) இதயம்

ஒருவரின் உடலை இயக்குவது இதயம் தான். இந்தக் கடவுளுக்கோ அந்த இதயம் நான்கு முறை இயங்க மறுத்துள்ளது. வாத நோய் ஏற்பட்ட அதே ஆண்டு கடவுளுக்கு மாரடைப்பும் ஏற்படுகின்றது. இயங்க மறுத்த இதயத்துடன் மருந்துகளைக் கொண்டு சமாதான உடன்படிக்கை செய்த பின்னர் தான் கடவுள் இயங்கத் துவங்கினார்.

புட்டி உடைந்த புட்டபர்த்தியார்

2005ஆம் ஆண்டு சாய்பாபா தனது பக்தர்களை பரிபாலணம் செய்து கொண்டிருந்த போது ஒரு குட்டிப் பையன் இரும்பு நாற்காலியிலிருந்து அவர் மேல் விழுந்ததால் கடவுளின் புட்டி உடைந்தது. ஆம்! இறைவனின் இடுப்பு முறிந்தது. தன் பக்தன் மூலம் தனக்கு இப்படி ஒரு ஆபத்து ஏற்படப் போகின்றது என்று அறிய முடியாதவர் ஒரு கடவுளா? இதற்குப் பிறகு பாபாவின் கால்கள் தரையில் பாவ மறுத்தன. பாதங்கள் தரையில் பதியத் தவறின. அதனால் சக்கர நாற்காலியில் கட்டுண்டு கிடக்க ஆரம்பித்தார்.

பரவசத்துடன் வந்த பக்த கோடிகளை நகரும் நான்கு சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு ஆசி (?) வழங்கிக் கொண்டிருந்தார். பாவம் அந்த பக்தர்கள். பக்தர்கள் என்று சொல்வதை விட பைத்தியங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவரை திடமாக நடமாடிய சாய்பாபா சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடைப்பிணமாகக் கிடக்கின்றாரே! இவர் எப்படிக் கடவுளாக முடியும் என்ற சிந்தனை பறி போன இவர்களைப் பைத்தியங்கள் என்று குறிப்பிடாமல் வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் இயங்க மறுத்த இதயம்

மார்ச் 2011ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் செயல்படாமல் கடவுளுக்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.

கல்லீரல் கழுத்தறுத்தது. சிறுநீரகம் செயல்படாமல் படுத்துக் கொண்டது. அடுத்து தலைமை இயக்குனரான இதயமும் செயல்பட மறுத்தது. இயற்கை சுவாசம் போய், கடவுளுக்கு செயற்கை சுவாசம் உயிர்ப் பிச்சை கொடுத்தது. கடைசியில் இந்தக் கடவுள் மரணத்தைத் தழுவுகின்றார். மரணம் என்ற கழுகு கடவுளின் உயிரைக் கொத்திக் கொண்டு பறந்து விட்டது.

கவலைக்கிடமான கடவுள்

கவலைக்கிடமானவர்களைக் காப்பவர் தான் கடவுள். ஆனால் அந்தக் கடவுளே கவலைக்கிடமானது பக்தர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. கடவுளின் ஒவ்வொரு உறுப்பும் இவ்வாறு செயல்பட மறுத்துக் கொண்டிருக்கும் போது புட்டபர்த்திக்கும் சேர்த்து ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சூரியன் அன்றாடம் உதித்து, தன்னுடைய கடமையைச் செய்து கொண்டு தான் இருந்தது.

இரவில் சந்திரன் தன் பாட்டுக்குத் தன் பாட்டையில் பவனி வந்து பணி செய்து கொண்டிருந்தது.

காற்று சாய்பாபாவைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சுவாசத்தையும் கொடுத்து தனது சூறாவளி சுழல் பணியைச் செய்து கொண்டிருந்தது.

புட்டபர்த்தியை உள்ளடக்கிய பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் செயல்படாமல் போனது கடவுளின் உறுப்புக்கள் மட்டும் தான்.

இது எதைக் காட்டுகின்றது?

சாய்பாபாவின் உயிர் ஒருவனின் கைவசமிருக்கின்றது. அந்த ஒருவன் தான் சூரியன், சந்திரன், பூமி, காற்று அனைத்தையும் தன் கைவசத்தில் வைத்திருக்கின்றான். அவன் தான் உண்மையான கடவுள். அவனிடம் தான் இந்த சாய்பாபாவின் உயிரும் உள்ளது. அந்த உண்மையான இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 67:1, 2

உயிரினங்களின் உயிர்களைக் கைவசத்தில் வைத்திருப்பவன் தான் உண்மையான கடவுள் என்று குறிப்பிடுகின்றான். அவன் தான் சாய்பாபாவின் உயிரைப் பறித்துள்ளான்.

இங்கு ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.

(நபி (ஸல்) இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பி விட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)” என்றார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1242

அபூபக்ரின் அசத்தல் வார்த்தைகள்

தங்களின் உயிரினும் மேலான இறைத் தூதரைப் பிரிந்த சோகத்தில் உறைந்து போயிருந்த நபித்தோழர்கள் சற்று உணர்ச்சி வசமாகி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று எண்ணத் தலைப்பட்டனர்.

அந்த வேளையில் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறவாமை என்பது இறைத் தன்மை, மனிதன் என்றால் மரணிக்கக் கூடியவன் தான்’ என்பதை உரிய நேரத்தில் பதிய வைக்கின்றார்கள். மயக்கத்தில் இருந்த மக்களை மீட்டெடுக்கின்றார்கள்.

நபித்தோழர்கள் கடவுள் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு விளங்கி வைத்திருந்ததாலும், குர்ஆன் கூறும் இறைக் கோட்பாட்டை உள்ளத்தில் நன்கு பதிய வைத்திருந்ததாலும் எளிதில் மீண்டு விட்டனர்.

“தான் ஒரு மனிதன் தான், கடவுள் அல்ல’ என்று முஹம்மத் (ஸல் அவர்கள் விதித்து வைத்த கோட்பாட்டின் அடிப்படையில் நபித்தோழர்கள் நேர்வழியில் நிலைத்து நின்றனர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் – ஷியாக்கள், பரேலவிகள் போன்ற வழிகேடர்களைத் தவிர உள்ள அனைத்து முஸ்லிம்களும் – முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இந்த நம்பிக்கை இல்லாவிட்டால், சாய்பாபாவைப் போன்று ஏமாற்று வித்தைகள் செய்யாமல் உண்மையான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, உண்மையையே பேசிய, ஒழுக்க சீலராக வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் கடவுளாக்கியிருப்பார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவரைக் கடவுளாக்கவில்லை. ஆக்கவும் செய்யாது. காரணம், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர். அவரையும் படைத்து, உலகிலுள்ள அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை மட்டுமே முஸ்லிம்கள் வணங்குகின்றனர். இந்தப் பகுத்தறிவுப் பாதையை பாபாவின் பக்தர்கள் பின்பற்ற முன்வர வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பணம் கொட்டும் கடவுள் தொழில்

பொருள் முதலீடு இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமா? அதுவும் கொள்ளை லாபம் தருகின்ற, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகின்ற தொழில் வேண்டுமா? அது மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட கடவுள் தொழில் தான். பொதுவாக முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்களில் லாபமும் ஏற்படும்; நஷ்டமும் ஏற்படும். சாய்பாபா செய்த இந்தக் கடவுள் தொழிலில் கிடைத்த லாபம் 40,000 கோடி (நாற்பதாயிரம் கோடி) ரூபாய். உலகெங்கும் உள்ள மூன்று கோடி “பக்தர்கள்’ இந்த வியாபாரத்தில் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியை வைத்து அவரைக் கடவுள் என்று நம்ப முடியுமா? ஒருபோதும் முடியாது. இதோ திருக்குர்ஆன் கூறும் பிரகடனத்தைப் பாருங்கள்.

“கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

அல்குர்ஆன் 5:100

எவ்வளவு தான் கோடான கோடி பக்தர்கள் இருந்தாலும், கோடான கோடி செல்வம் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு கெட்டதை, நல்லதாக்கி விட முடியாது. இது தான் நீதியான, நியாயமான பார்வையாகும். பகுத்தறிவுப் பார்வையாகும். அல்குர்ஆன் இந்தப் பார்வையைத் தான் பார்க்கின்றது.

கோடான கோடி பணத்தைத் திருடுபவன், அந்தப் பணத்தை கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றை அமைத்து அதை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டால் சமூகத்தின் பார்வையில் அவன் நல்லவனாகி விடுவான்.

அதனால் தான் ஆந்திரத்தில் சாய்பாபாவுக்காக அரசு விடுமுறையும், அரசு மரியாதையுடன் அடக்கமும் நடைபெறுகின்றது.

ஆனால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பார்வையில் நல்லவர்களாகி விடுவார்களா? சாய்பாபாவின் நிலை இது தான். சாய்பாபா, மக்களின் அறியாமையை முதலீடாக்கி, மூடத்தனத்தை மூலதனமாக்கி, சில ஏமாற்று வித்தைகளைச் செய்து தன்னைக் கடவுள் என்று காட்டிய பொய்யர்.

பொய்: 1

தேள் கொட்டிய பின் தேவன்?

சத்ய நாராயண ராஜுவுக்கு (சாய்பாபாவின் இயற்பெயர் அது தான்) 14 வயது இருக்கும் போது புட்டபர்த்திக்கு அருகேயுள்ள உரவகொண்டா என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கடைந்தானாம். மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தானாம்; அழுதானாம்; பாடினானாம். அவனது செயல்கள் எல்லாம் புரியாத புதிராக இருந்ததாம். அன்று முதல் தான் அவரது வாழ்க்கை திசை மாறி விட்டது என்று கூறுகிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.

சாதாரண கூலித் தொழிலாளி ஒருவன் இதைப் போன்று கூத்துப் போட்டால் அவனை எந்த முதலாளியாவது வேலைக்கு வைத்துக் கொள்வானா?

ஆனால் இப்படி ஒரு கூத்துப் போட்ட சாய்பாபா கடவுளாகி இருக்கின்றார். அதுவும் தேள் கொட்டியவுடன் தெய்வீக வசனம் பேசி தேவனாகியிருக்கின்றார். சமஸ்கிருதம் பேசத் தெரியாத அவர் திடீரென சமஸ்கிருதம் பேசத் தொடங்கினாராம். அவர் பேசியது சமஸ்கிருதம் தானா என்று அந்த மொழி அறிஞர் யாரையேனும் வைத்து ஒப்பு நோக்கினார்களா? இது ஓர் அபத்தமான, அப்பட்டமான பொய்!

பொய்: 2

அவதாரம்

சிறுவன் சத்ய நாராயணா தனது பெற்றோர், சகோதரர்கள் அனைவரையும் அழைத்தானாம். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து விபூதி, இனிப்பு போன்றவற்றை வரவழைத்துக் கொடுத்தானாம். இதைப் பார்த்த அவனது தந்தை தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து, பிரம்பை எடுத்து, “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டாராம். அதற்கு சத்ய நாராயணா, “நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்” என்று கூறினானாம். அன்று முதல் அந்தச் சிறுவனை சாய்பாபா என்று அழைக்க ஆரம்பித்தார்களாம்.

ஷீரடி சாய்பாபா என்பவர் இறந்து போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. இறந்து போன ஒருவர் எழுந்து வர முடியும் என்றால் அவர் தன்னுடைய உருவத்திலேயே வரலாம். அது தான் அவருக்கு மரியாதையையும் மதிப்பையும் தரும். அந்த சாய்பாபா ஏன் இவரிடத்தில் ஊடுறுவ வேண்டும்?

ஒரிஜினல் சாய்பாபாவின் கடவுள் தன்மையே கேள்விக்குறியானது. சூரத்துல் பாத்திஹா மூலம் ஓதிப் பார்த்தவர் காலப்போக்கில் பரதேசி போன்று திருவோடு ஏந்தி பிச்சையெடுக்க ஆரம்பித்தார் என்று அவரது வரலாறு கூறுகின்றது. தன்னுடைய தேவைக்காகப் பிறரிடத்தில் கையேந்திய ஷீரடி சாய்பாபா எப்படிக் கடவுளாக முடியும்? அவர் எப்படி இன்னொருவரிடம் புகுந்து அவதாரம் எடுக்க முடியும்?

அறிவியல் அடிப்படையில் ஒருபோதும் ஒருவர் அடுத்தவர் மீது ஊடுறுவவோ, மேலாடவோ முடியாது. எனவே இதுவும் அப்பட்டமான பொய்யாகும்.

பொய்: 3

அற்புதங்கள்

சாய்பாபா சில அற்புதங்களை (?) நிகழ்த்தியிருக்கின்றார். அதனால் அவர் கடவுள் என்று அவரது பக்தர்கள் வாதிடுகின்றனர். அந்த அற்புதங்கள் என்னென்ன?

விபூதி (அதாவது திருநீறு எனும் சாம்பல்), மோதிரம், தங்கச் சங்கிலி, சந்தனம், ஹெச்.எம்.டி. வாட்சுகள் போன்றவற்றை எடுத்துக் காட்டுவது தான் அந்த அற்புதங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் தந்திரக் கலையில் வல்லுநர்! அதைப் பயன்படுத்தி லிங்கம் கக்குவது, கையிலிருந்து திருநீறு கொண்டு வருவது போன்றவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கினார் என்பது தான் உண்மை.

விபூதி

டாக்டர் ஆபிரஹாம் கோவூர் என்பவர் 1976ஆம் ஆண்டு சாய்பாபாவின் ஆசிரமத்திற்குச் சென்று சாய்பாபாவை நேரிலேயே சந்தித்து சவால் விடுத்தார். அந்தச் சவாலைச் சந்திக்க சாய்பாபா மறுத்து விட்டார். உண்மையில் இவர் ஒரு கடவுள் என்றால் டாக்டர் கோவூரின் சவாலை ஏற்றுக் கொண்டு, தான் கடவுள் என்று நிரூபிக்க வேண்டியது தானே! அவ்வாறு நிரூபிக்காததன் மூலம் தான் ஒரு போலிக் கடவுள் என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

சாய்பாபாவின் மோசடியை அம்பலப்படுத்த வேண்டும் என்று பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் ஒரு திட்டம் போட்டார். சாய்பாபாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதினார். சாயிபாபா அவருக்கு  நேரம் ஒதுக்கித் தரவில்லை. பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? அசாம் வியாபாரி என்று சொல்லி சாய்பாபாவைச் சந்திக்க நேரமும் பெற்று விட்டார்.

சாய்பாபா கை அசைப்பில் சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சார்க்காரும் அவ்வாறே கையிலிருந்து சாய்பாபாவுக்கு ஒரு ரசகுல்லாவை வரவழைத்துக் கொடுத்தார். சாயிபாபா கூச்சல் போட்டார். “நான் தான் பி.சி. சர்க்கார்!” என்று கம்பீரமாகக் கூறி வெளியேறினார். (இம்பிரிண்ட் 1983 ஜூன்)

ஹெச்.எம்.டி. வாட்சுகள்

ஒரு முறை சாய்பாபா காற்றில் கையைச் சுழற்றி, அந்தரத்திலிருந்து 200 ஹெச்.எம்.டி. வாட்சுகள் வரவழைத்துக் கொடுத்தார். இதையறிந்த ஆந்திராவைச் சேர்ந்த நரசய்யா என்பவர் அந்தப் பகுதியில் எந்த இடத்தில் 200 ஹெச்.எம்.டி. வாட்சுகள் வாங்கப்பட்டன என்று விசாரித்த போது, பெங்களூரில் ஒரு கடையில் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை ரசீதுடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் நரசய்யா! ஆனால் நீதிமன்றமும் அதிலிருந்த நீதிமான்களும் பெரும்பான்மையானவர்கள் பாபா பக்தர்கள் என்பதால் அதைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் நரசய்யா பொது மேடையில் ஒரு சவால் விட்டார். ஆனால் அந்த சவால் இன்று வரை ஏற்றுக் கொள்ளப்படாமல் அந்தரத்தில் நிற்கின்றது.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இயற்பியல் வேந்தருமான ஹெச். நரசிம்மையா என்பவர் சாய்பாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சூழலில் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுமாறு அந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சாய்பாபா ஏற்க மறுத்து விட்டார்.

இவர் உண்மையான கடவுள் என்றால் நரசிம்மையாவின் அழைப்பை ஏற்று அவர் கூறிய நிபந்தனைப்படி அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டியது தானே! ஏன் மறுத்தார்? அவர் ஒரு போலிக் கடவுள் என்பதால் தானே! அவர் ஒரு பொய்யர் என்பதற்கு இவற்றை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

பொய்: 4

ஞானக் கண்ணா? ஊனக் கண்ணா?

1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். நான்கு இளைஞர்கள் உள்ளே நுழைந்து அவரது இரு காவலாளிகளைச் சுட்டுத் தள்ளினர். பதிலுக்கு அந்த நால்வரும் காவல்துறையினரால் சுட்டுத் தள்ளப்பட்டனர். (சாய்பாபாவே, அதாவது கடவுளே இந்தக் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.)

இப்போது இங்கு எழுகின்ற கேள்வி:

கொலையாளிகள் உள்ளே வருகின்றனர் என்ற விபரம் ஏன் கடவுளுக்குத் தெரியாமல் போனது? அப்படியானால் அதிலும் இவரது போலித்தனம் தெளிவாகப் புலனாகின்றது. இவர் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழி என்பது உறுதியாகின்றது.

பொய்: 5

முன்னறிவிப்பு

இந்தக் கடவுள் ஜென்மம் ஒரு முன்னறிவிப்புச் செய்ததாம். “தங்களுக்குப் பின் அறக்கட்டளையை நிர்வகிப்பது யார்? அந்தப் பொறுப்புக்குத் தாங்கள் இப்போது ஆளை நியமியுங்கள்” என்று பக்தர்கள் கேட்டதற்கு இந்தப் பகவான், “நான் 96 வயது வரை வாழ்வேன்; அதனால் கவலைப்படாதீர்கள்; கலங்காதீர்கள்!” என்று ஆறுதல் சொன்னாராம். ஆனால் வாக்களித்தபடி 96 வயதிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, 84 வயதிலேயே பக்க வாத பகவான் பரலோகம் போய் விட்டார்.

இந்த லட்சணத்தில் இந்த ஜென்மம் கர்நாடக மாநிலம், பாண்டியா நகரில் பரத்வாஜா கோத்திரத்தில் பிரேம, பிரேம சத்ய சாய்பாபாவாக மறு ஜென்மம் எடுக்கப் போகின்றதாம். எடுத்த ஒரு பிறவியிலேயே கொடுத்த வாக்கு ஒரு துளி கூட நிறைவேறவில்லை. இது மறு பிறவி எடுக்கப் போகின்றதாம்.

இது இந்தக் கடவுள் கூறுகின்ற பிரம்மாண்ட பொய்யாகும். இத்தனை பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்ட இந்த சாய்பாபா ஒரு பொய்க் கடவுள்; போலிக் கடவுள்! இத்தகைய போலிக் கடவுள்கள் இந்த உலகில் தப்பி விடலாம். ஆனால் மறு உலகில் உண்மையான கடவுளின் தண்டனையை விட்டுத் தப்ப முடியாது. அவ்வளவு ஏன்? மரணத்திற்கு முன்பு மலக்குகளிடமிருந்து மரண அடி வாங்கி விட்டுத் தான் சாய்பாபா கூட மரணத்தைத் தழுவினார்.

இதோ திருக்குர்ஆன் சொல்கின்றது:

“அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்” என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

சாய்பாபாவைப் போன்று இஸ்லாமிய சமுதாயத்திலும் தங்களை அல்லாஹ்வின் அடிமைகள் என்று கூறிக் கொண்டே தங்களுக்குக் கடவுள் தன்மைகளைக் கற்பிக்கின்ற போலிக் கடவுள்கள் இருக்கின்றார்கள்.

இதுபோன்ற போலிக் கடவுள்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினாலும் அவர்களை அடையாளம் காட்டுவது தான் ஏகத்துவம் இதழின் தூய பணி! அந்தத் தூய பணியின் ஓரம்சமாகத் தான் சாய்பாபாவைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்

உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். “நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர்ஆன் 27:15

பறவைகளின் மொழி அறிந்தவர்

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:16

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத்‘ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

“அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.

“நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது”

அல்குர்ஆன் 27:20-23

ஜின்களின் அரசர்

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அல்குர்ஆன் 27:17

ஜின்களின் பணிகள்

தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்” (என்று கூறினோம்.)

அல்குர்ஆன் 34:12, 13

காற்று ராஜா

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.

அல்குர்ஆன் 34:12

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

அல்குர்ஆன் 21:81

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

அல்குர்ஆன் 38:36

எறும்புகளின் பேச்சையும் அறிபவர்

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்.

அல்குர்ஆன் 27:18, 19

செம்பு ஊற்று

அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.

அல்குர்ஆன் 34:12

இம்மாபெரிய அதிகாரத்தையும் ஆட்சியையும், இறைத் தூதையும் ஒருசேர இணையப் பெற்ற ஒரு பாக்கியமிக்க, பாராண்ட மன்னர் சுலைமான், “நான் கடவுள்’ என்று ஒருபோதும் வாதித்ததில்லை. இதோ அவர் எறும்புகளின் பேச்சை ரசித்தவாறு பணிந்து, கனிந்து உதிர்த்த பிரார்த்தனையைப் பாருங்கள்.

“என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” என்றார்.

அல்குர்ஆன் 27:19

இம்மாமன்னரையும் மரணம் தழுவிக் கொண்டது.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14

இது ஒரு நல்லடியாரின் வாழ்க்கை! ஒரு நபியின் வாழ்க்கை! நல்ல முன்மாதிரியை, நல்ல எடுத்துக்காட்டைக் கொண்டது.

இப்போது ஒரு தீய அடியானைப் பற்றி இங்கு பார்ப்போம். ஆணவ அரசனான அவன் தான் ஃபிர்அவ்ன்! அவனும் தன்னைக் கடவுள் என்று வாதிட்டான்.

(மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான். நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.  அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.

அல்குர்ஆன் 79:23-25

அவனை அல்லாஹ் கடலில் மூழ்கடித்து அவனது உடலைப் பாதுகாத்து வைத்துள்ளான். தன்னைக் கடவுள் என்று சொன்னவனின் கதியைப் பாருங்கள் என்று கூறி அதைப் பாடமாக்கி வைத்துள்ளான்.

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

அல்குர்ஆன் 10:90, 91

போலிக் கடவுளின் உடல் இங்கே! உயிர் எங்கே? அவனது உயிர் என்னிடம் தான் உள்ளது என்று உண்மையான கடவுள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றான்.

ஃபிர்அவ்னாவது ஓர் ஆட்சியாளன். ஆனால் சாய்பாபாவோ சாதாரண குடிமகன் தான். இவர் தன்னைக் கடவுள் என்று கூறியது வெட்கக் கேடு! இவரையும் கடவுளாக பக்தர்கள் நம்புவது ஒரு கேலிக் கூத்து!

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தஃப்ஸீர்கள்      தொடர் 5

முட்டையிடும் ஷைத்தான்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை போலும். ஒரு விஷயத்தை முழுமையாக, சரியாகத் தெரிந்து கொள்ள அவற்றை ஆய்வு செய்வது அவசியமே. எனினும் நாம் செய்யும் ஆய்வு இறைவன் விதித்த வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்து நமது ஆய்வு அமைவது அவசியம்.

உதாரணமாக ஒருவர் விதியைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப் போகிறார் எனில் அது தொடர்பாக மார்க்கம் கூறுகிற ஒழுங்கை அவர் கடைப்பிடிக்க வேண்டும்.

நடந்து முடிந்த விஷயத்தில் இறைவன் விதித்த விதியின் மீதும், நடக்கவிருக்கும் காரியங்களில் நம்முடைய முயற்சியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விதி தொடர்பாக இறைவனும், இறைத்தூதரும் நமக்குக் கூறியுள்ளனர். இதை தாண்டி விதி சம்பந்தமாக விவாதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும் என்பதால் அதை நமது மார்க்கம் தடை செய்துள்ளது.

விதி தொடர்பாக ஆய்வு செய்பவர் இறைவன் விதித்த மேற்கண்ட வரம்பை மீறாத வகையில் தனது ஆய்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவனைப் பற்றி ஆய்வு செய்யத் தலைப்பட்ட ஒருவர் இறைவன் எவ்வாறு தோன்றினான்? அவனுக்கு மகத்தான ஆற்றல் எவ்வாறு உண்டானது என்பன போன்ற ஆய்வுகளுக்குள் செல்லக் கூடாது.

இது போன்ற இறைவன் நிர்ணயித்த எல்லைகளைக் கவனத்தில் கொண்டு ஆய்வு அமைந்திட வேண்டும்.

ஆக, ஆய்வு செய்வது அவசியம் என்றாலும் அது ஒரு வரையரைக்குள் நிற்க வேண்டுமே தவிர வகுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி சென்றுவிடக் கூடாது. அவ்வாறு ஆய்வு செய்வது அறிவார்ந்த செயலாகக் கருதப்படாது. மாறாக, குற்றச் செயலாகவே கருதப்படும்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

“ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 18:50

ஷைத்தான்களுக்குச் சந்ததிகள் இருப்பதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வசனத்தில் (நபிமொழிகளின் துணையுடன்) விளக்குவதற்கும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவும் வேறு விஷயமே இல்லாதது போல ஷைத்தான்கள் எவ்வாறு சந்ததிகளை உருவாக்குகிறார்கள் என்ற ஆய்வை அறிஞர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.

அதைப் பற்றிய ஆய்வில் இறைவன் வகுத்த எல்லையைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பின்வரும் விளக்கங்களைக் கண்டால் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

அவன் (ஷைத்தான்) தனது வாலை அவனுடைய பின் துவாரத்தில் நுழைத்து, ஒரு முட்டையை இடுவான். பிறகு அம்முட்டை ஷைத்தான்களின் கூட்டத்தை வெளிப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

 (அவர்களின் இனப்பெருக்கமாகிறது) கிழக்குத் திசையில் பத்து, மேற்கு திசையில் பத்து, பூமியின் மையப்பகுதியில் பத்து என அவன் (ஷைத்தான்) முப்பது முட்டைகளை இடுவான். ஒவ்வொரு முட்டையிலிருந்தும் இஃப்ரீத் எனும் ஜின்கள், பாலைவனத்தில் காணப்படும் ஒரு வகை ஷைத்தான்கள், கதாரிப் எனும் ஷைத்தான்கள் ஆகியோரைப் போல ஷைத்தான்களின் இனத்தவர் தோன்றுவார்கள். அவர்களின் பெயர்கள் பலதரப்பட்டது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆதமின் மக்களுக்கு எதிரிகளாவர்.

நூல்: தஃப்ஸீருல் ரூஹூல் பயான்

பாகம் 5, பக்கம் 197

ஷைத்தான்களின் சந்ததிகள் என்ற இறைவனின் ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் யோசித்து விளக்கமளித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

ஷைத்தான் ஒரு சமயத்தில் முப்பது முட்டைகள் (?) இட்டு, தன் சந்ததியைப் பெருக்குவதாக இமாம்கள் விளக்கமளிக்கின்றனர். அதிலும் கிழக்கு, மேற்கு என வாஸ்து பார்த்து முட்டையிடுவதாக வேறு கூறுகின்றார்கள்.

இது தான் மார்க்க வரம்பிற்கு உட்பட்டு ஆய்வு செய்வதன் இலட்சணமா? இவற்றில் ஒன்றுக்காவது குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தைக் குறிப்பிட இயலுமா?

இமாம்களைப் பின்பற்றுவோர் இதற்குப் பதிலளிக்கட்டும் பார்க்கலாம்.

சோதனை மேல் சோதனை?

இறைவன் இப்ராஹீம் நபிக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கினான். இறைவன் வழங்கிய அனைத்து சோதனைகளிலும் இப்ராஹீம் நபியவர்கள் வென்றார்கள். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

இப்ராஹீம் நபியவர்கள் எப்படியெல்லாம் சோதிக்கப்பட்டார்கள் என்பதைக் குர்ஆனிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஹஜ்ஜூப் பெருநாள் உரையின் போதும் இப்ராஹீம் நபிக்கு இறைவன் வழங்கிய சோதனைகளையும், அதில் அவர் வென்ற வரலாறையும் மார்க்க அறிஞர்கள் தவறாமல் நமக்கு நினைவூட்டுகின்றனர்.

ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தன் தந்தைக்கு எடுத்துரைத்த போது தந்தை அவரை வீட்டிலிருந்து வெளியேற்றியது, மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொன்ன போது நெருப்பிலிட்டுத் துன்புறுத்தியது, நெடுங்காலத்திற்குப் பின் தனக்குப் பிறந்த மகனை அறுத்துப் பலியிட உத்தரவு, மனைவி மற்றும் மகனைப் பாலைவனத்திலே தன்னந்தனியாக விட்டுவிடுமாறு இடப்பட்ட கட்டளை போன்ற எண்ணற்ற சோதனைகளுக்கு இப்ரஹீம் நபி ஆளானார்கள். இது போக இன்னும் பல கட்டளைகளையிட்டு இறைவன் இப்ராஹீமைச் சோதித்துள்ளான்; இவை அனைத்திலும் இப்ராஹீம் வெற்றி பெற்றார் என்று இவ்வசனத்தின் மூலம் நாம் புரிகிறோம்.

மேற்கண்ட வசனத்திற்கு இமாம்கள் விளக்கமளிக்கின்றனர். அதாவது இப்ராஹீம் நபியவர்கள் எவ்வாறெல்லாம் சோதிக்கப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக தங்களுக்கே உரிய பாணியில் (அதாங்க.. கதை சொல்வது) விளக்குகின்றனர். இதோ அவை உங்கள் பார்வைக்கு:

நட்சத்திரத்தின் மூலம் அவரை (இப்ராஹீமை) அவன் சோதித்தான். அதை அவர் பொருந்திக் கொண்டார். சந்திரன் மூலம் சோதித்த போது அதையும் அவர் பொருந்திக் கொண்டார். சூரியன் மூலம் சோதித்த போது அப்போதும் பொருந்திக் கொண்டார். அற்புதத்தை கொண்டு சோதித்த போதும் பொருந்திக் கொண்டார். கத்னா விஷயத்தில் சோதித்தான். அதைப் பொருந்திக் கொண்டார். அவரது மகன் மூலம் சோதித்த போது அதையும் பொருந்திக் கொண்டார் என்று ஹஸன் அவர்கள் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீரு இப்னு அபீ ஹாதம்

பாகம் 4, பக்கம் 432

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹன்ஷ் பின் அப்துல்லா கூறுகிறார்:

(இறைவன் இப்ராஹீமை பல கட்டளைகள் மூலம் சோதித்தான்) அக்கட்டளைகள் மொத்தம் பத்தாகும்.  அவற்றில் ஆறு மனிதனுடன் தொடர்புள்ளது. மேலும் நான்கு இஸ்லாமிய சின்னங்கள் தொடர்புடையதாகும். மறை உறுப்பு மற்றும் அக்குள்களில் உள்ள முடிகளை மழிப்பது, கத்னா செய்வது, (இம்மூன்றும் சேர்ந்து ஒன்று என இப்னு ஹூபைரா கூறுகிறார்) நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது, மிஸ்வாக் செய்வது, வெள்ளிக்கிழமை குளிப்பது, ஆகியவை மனிதனுடன் தொடர்புடையது.  கஅபாவை தவாஃப் செய்வது,  ஸஃபா மர்வாக்கிடையில் ஸயீ செய்வது, ஷைத்தான்களுக்கு கல்லெறிவது, தவாஃபுல் இஃபாளா செய்வது ஆகியவை இஸ்லாமியச் சின்னங்கள் தொடர்புடையதாகும்.

நூல்: தஃப்ஸீரு இப்னு அபீ ஹாதம்

பாகம் 4, பக்கம் 428

இறைவன் இப்ராஹீம் நபிக்கு இரு வகைகளாக மொத்தம் பத்துக் கட்டளைகளை இட்டதாக மேற்கண்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற கட்டளைகளை இட்டு இப்ராஹீம் நபியை இறைவன் சோதித்தான் என இமாம்கள் கூறுகின்றார்கள்.

இவைகள் தாம் சோதனைகளா? இவைகள் ஒவ்வொன்றையும் இப்ராஹீம் நபிக்குக் கட்டளையிட்டான் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்?

இறைவன் இப்ராஹீம் நபிக்கு வழங்கிய சோதனைகள் மொத்தம் பத்து தான் என்று குறிப்பிடுகிறார்களே! இதற்கு என்ன ஆதாரம்?

மேலும் பல இமாம்கள் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் குறிப்பிட்டு விட்டு இவைகள் தாம் இப்ராஹீம் நபிக்கு ஏற்பட்ட சோதனைகள் என்று குறிப்பிடுகிறார்கள்.  இதை என்னவென்பது? இப்போது தலைப்பின் அர்த்தத்தை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

பொருளில்லா பொருள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 4:36

இவ்வசனத்தில் முதலில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லி விட்டுப் பின், நெருங்கிய அண்டை வீட்டுக்காரர், தூரத்து அண்டை வீட்டார் என அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என இறைவன் கூறுகிறான்.

இவை ஒவ்வொன்றுக்கும் ஸஹ்ல் என்ற அறிஞர் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்.

அல்ஜாரிதுல் குர்பா (நெருங்கிய அண்டை வீட்டுக்காரர்) என்பது உள்ளமாகும். அல்ஜாரிதுல் ஜூனுப் (தூரமான அண்டை வீட்டுக்காரர்) என்பது ஆத்மாவை குறிக்கும். அஸ்ஸாஹிபு பில் ஜன்ப் (பயணத் தோழர்) என்பது  நபிவழி மற்றும் ஷரீஅத்தைப் பின்பற்றுவதில் வெளிப்படுகிற அறிவு என்பதாகும். இப்னுஸ் ஸபீல் (நாடோடிகள்) என்பது இறைவனுக்குக் கட்டுப்படக்கூடிய உறுப்புகள் ஆகும்.

நூல்: தஃப்ஸீருல் பஹ்ருல் முஹீத்

பாகம் 3, பக்கம்  199

இந்த வார்த்தைகளுக்கு இவர் குறிப்பிடும் பொருள் அரபு அகராதி நூல்களில் தேடினாலும் கிடைக்காது என்ற அளவில் தன்னுடைய தத்துவங்களை உதிர்த்துள்ளார்.

இறைவனுடைய வசனங்களைக் கேலி செய்வதில் இதுவும் ஒரு வகை. இதை இமாம்கள் செய்யத் துணிந்திருக்கிறார்கள். அல்லது துணிந்து செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேசம்

காயத்ரி மந்திரத்துடன் கட்சி துவக்கம்

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை.

எனவே நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.  ஆனால் ஜமாஅத் இஸ்லாமி என்ற இயக்கம் ஜனநாயகம் என்பது நவீன இணை வைத்தல் என்று பிரச்சாரம் செய்து வந்தது.

நாடு பிரிவினைக்கு முன் 1941ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி லாகூரில் மவ்லானா அபுல் அலா மவ்தூதி தலைமையில் துவக்கப்பட்ட இயக்கம் தான் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த்! நாடு பிரிவினை அடைந்ததும் இந்த இயக்கம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இரு தனி அமைப்புகளாகச் செயல்பட்டன.

மவ்தூதியின் தலைமையில் பாகிஸ்தான் ஜமாஅத் இஸ்லாமி இயங்கியது. மவ்லான அபுல் லைஸ் நத்வி தலைமையில் இந்தியாவில் இயங்கியது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

ஜமாஅத் இஸ்லாமியின் கொள்கையே உலகெங்கிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது தான். இதற்கு இவர்கள் ஆதாரமாகக் கொள்வது திருக்குர்ஆனின் 6:57, 12:40, 12:67 போன்ற வசனங்களைத் தான்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.

அல்குர்ஆன் 6:57, 12:40, 12:67

நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றுகின்ற சட்டங்கள் அனைத்தும் வழிகேடு! இந்தச் சட்டங்களைப் பின்பற்றுவோர் இறை மறுப்பாளர்கள் ஆவர். இதையும் ஜமாஅத் இஸ்லாமி 5:44-46 வசனங்களின் அடிப்படையில் நிறுவுகின்றது.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

அல்குர்ஆன் 5:44

இன்றைய உலகில் நடைபெறும் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் மனிதச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை பெரும்பான்மை என்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்பது ஜமாஅத் இஸ்லாமியின் நிலைப்பாடாகும்.

“அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர். இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:42

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒருபோதும் முரண் கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 5:95

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். “பயப்படாதீர்!’ நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 38:21, 22

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

அல்குர்ஆன் 21:78

தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.

ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுத்தனர்.

பாகிஸ்தானில் இயங்கும் ஜமாஅத் இஸ்லாமி, மவ்தூதியின் மறைவுக்குப் பின் அரசியலில் குதித்தது. அதன் பின்னரும் இந்திய ஜமாஅத் இஸ்லாமி அரசியலில் குதிக்காமல் இருந்தது.

ஆனால் அது இப்போது, ரங்ப்ச்ஹழ்ங் டஹழ்ற்ஹ் ர்ச் ஒய்க்ண்ஹ என்ற பெயரில் அரசியலில் களமிறங்கியிருக்கின்றது; கட்சி துவங்கியிருக்கின்றது.

கொள்கையில் சமரசம்

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அதைப் பற்றி யாரும் விமர்சிக்கலாம்; விமர்சிக்காமலும் விட்டு விடலாம். ஆனால் இஸ்லாத்தின் பெயரால் ஒரு நிலைப்பாட்டைக் கூறி, அரசியலில் குதிக்காமல் இருந்த ஒரு அமைப்பு இப்போது அரசியலில் குதிக்கும் போது அது விமர்சனத்திற்குள்ளாகி விடுகின்றது.

அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்ற நிலைப்பாடு என்ன ஆனது?

அதிகாரம் அல்லாஹ்வுக்கு இல்லை, மக்களுக்குத் தான் என்று ஏதேனும் இறை அறிவிப்பு வந்ததா? அல்லாஹ் அதிகாரம் மக்களுக்கு என்ற நிலைப்பாடு தவறானதா? என்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.

ஜனநாயகம் என்பது இணை வைப்பு இல்லை, அது தூய ஏகத்துவம் தான் என்று ஏதேனும் இறை அறிவிப்பு வந்ததா? அல்லது ஜனநாயகம் இணை வைப்பு என்ற இவர்களின் நிலைப்பாடு தவறானதா? என்ற கேள்வி மக்களுக்கு எழுகின்றது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான், ஜனநாயகம் இணை வைத்தல் என்ற இவர்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை இவர்களின் இயக்க நூல்களிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலைபாட்டின் படி இவர்கள் ஒருபோதும் அரசியலில் குதிக்கக் கூடாது. ஆனால் அரசியலில், அதுவும் இந்திய அரசியலில் குதிக்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு எந்தக் கொள்கைப் பிடிமானமும் இல்லை என்பதைத் தான் இது பறைசாற்றுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி என்று இவர்கள் சொல்லி வந்தது வெறும் பிதற்றலும் வெற்றுக் கோஷமும் தான் என்று ஆகியுள்ளது. இவர்கள் எந்தக் கொள்கையை இதுவரை பின்பற்றினார்களோ, பிரச்சாரம் செய்தார்களோ அந்தக் கொள்கைக்கே இன்று நேர் எதிராக முரண்பட்டு நிற்கின்றார்கள். இது தூய இஸ்லாத்திற்கு மாற்றமான நடவடிக்கையாகும்.

தான் கொண்ட கொள்கையிலிருந்து என்றைக்கு ஒருவர் மாறுபடுகின்றாரோ அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறும் அழகிய கருத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. (அல்குர்ஆன் 11:88)

ஜமாஅத் இஸ்லாமியைத் தாய் இயக்கமாகக் கொண்ட எஸ்.ஐ.எம். என்ற அமைப்பில் உருவான திருவாளர் ஜவாஹிருல்லாஹ் இந்தக் கொள்கைகளை ஊர் தோறும் பிரச்சாரம் செய்தவர். பின்னர் தமுமுகவிற்கு வந்த பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று மக்கள் மத்தியில் சத்தியம் செய்தவர். அப்படி மீறி வந்தால் செருப்பைக் கழற்றி அடியுங்கள் என்று மக்களிடம் வேண்டிக் கொண்டவர். இன்று ஆட்சி அதிகாரம் அம்மாவுக்கே என்று பிரச்சாரம் செய்கிறார். இணை வைப்பு ஜனநாயகத்தில் பண நாயகத்துடன் இணைந்து, வாக்குப் பொறுக்க வலம் வருகின்றார்.

வேருக்கு வந்த பழுது

இது ஜவாஹிருல்லாஹ் என்ற, வளர்ந்து விட்ட விழுதுக்கு வந்த பழுது என்று நினைத்தோம். ஆனால் அந்தப் பழுது இப்போது ஜமாஅத் இஸ்லாமி என்ற வேருக்கே வந்திருக்கின்றது.

இது கொடியில் படர்ந்த நோய் என்று நினைத்தோம். ஆனால் இது அடியிலும் தொடர்ந்த நோய் என்று இப்போது தான் புரிகின்றது.

விடியல் என்ற பெயரில் முளைத்த இயக்கமும் இந்தச் சிந்தனையில் பிறந்தது தான். இன்று அதுவும் அரசியல் இலையில் வாக்கு என்ற எச்சிலைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது.

விளையும் பயிர் முளையில் தெரியும்

இப்போது ஜமாஅத் இஸ்லாமி துவங்கியிருக்கும் இயக்கமும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான் என்பதில் எந்தச் சந்கேமும் இல்லை.

ஏப்ரல் 18ஆம் தேதி திங்கள் அன்று துவங்கப்பட்ட வெல்பேர் பார்ட்டி ஆப் இன்டியா என்ற இந்தக் கட்சி, தன்னை முஸ்லிம் கட்சி அல்ல என்றும் ஜமாஅத் இஸ்லாமியின் அரசியல் பிரிவு அல்ல என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றது.

கட்சி இப்போது உதயமானாலும் அதைத் துவங்குவதற்கான திட்டம் இரண்டாண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்தும் இந்த இயக்கம், தான் ஒரு மதச் சார்பற்ற இயக்கம் என்று பிரகடனப்படுத்திக் கொள்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடும், நீதி, நியாயம், சமத்துவம், விடுதலைக்காகப் போராடும் என்று வழக்கமான வசனங்களையும் இந்தக் கட்சி பேசியிருக்கின்றது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்று வசனம் பேசி அதற்கே மாற்றமாக நடந்த இவர்கள், தாங்கள் பேசும் இந்த வசனங்களின் படி எப்படி நடக்கப் போகின்றார்கள்? என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றது.

இதற்குப் பளிச்சென்று பதிலும் கிடைத்து விடுகின்றது.

ஒரு கிறித்தவப் பாதிரியார் காயத்ரி மந்திரத்தை ஓதிய பின் இந்தக் கட்சி துவங்கப்படுகின்றது. இந்த இயக்கத்தின் துவக்கம் விளையும் போதே தெரிந்து விட்டது. மதச் சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய அடையாளத்தைத் தொலைப்பதற்கும், தூக்கி எறிவதற்கும் எந்த அளவுக்குத் தயாராக உள்ளது; அதற்கு இப்போதே துணிந்து விட்டது என்பதை இந்த ஆரம்பம் நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றது.

ஏற்கனவே சாக்கடை சுத்தம் செய்யப் புறப்பட்ட இவர்களின் வாரிசுகளான மாமாக, புரட்சித் தலைவி (?) அம்மாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி பாதபூஜை செய்வது, மீலாது விழா, கந்தூரி வாழ்த்துக்கள் சொல்வது, மறைந்த அரசியல்வாதிகளுக்கும், பாபாக்களுக்கும் அஞ்சலி செலுத்துவது, விடியல் வெள்ளிகள் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வது, இஸ்லாமிய அடையாளம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு இறை நாமத்தைத் தவிர்ப்பது, கை தட்டுவது போன்ற காரியங்கள் மூலம் படிப்படியாக இஸ்லாத்தை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்நிலையில் தான் இவர்களின் தாய்ச் சபை காயத்ரி மந்திரத்துடன் கட்சி துவங்கியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே சமரசம் என்றால் இனி போகப் போக சங்கமம் தானே! எனவே இதனால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை. பிற சமுதாயங்களுக்கும் எந்தப் பயனும் இல்லை.

ஆக மொத்தத்தில் தனக்கும் ஓர் அரசியல் அணி இருக்க வேண்டும் என்ற அதிகார ஆசையைத் தவிர்த்து, ஜமாஅத் இஸ்லாமியின் இந்த முயற்சியில் வேறெந்த விவேகமும் புத்திசாலித்தனமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஜமாஅத் இஸ்லாமி தன் பாதையை விட்டும் தடம் புரண்டிருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா

அப்துந் நாசிர்

மவ்லிது, மீலாது விழா போன்ற அனாச்சாரங்களை ஆதரிக்கக் கூடியவர்கள் தங்களுடைய இந்த பித்அத்தான காரியங்களை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுக்கதைகளை ஆதாரங்களாகக் கூறிவருகின்றனர். அந்த கட்டுக்கதைகளில் ஒன்றுதான் அபூ லஹப் விரலில் நீர் வடிந்ததாக வரக்கூடிய செய்தி.

நபிகள் நாயகம் பிறந்த உடன் அந்தப் பிறப்புச் செய்தியை சுவைபா என்ற பெண் அபூ லஹபிடம் கூறினாராம். உடனே அபூ லஹப் தன்னுடைய விரலால் சுவைபாவை நோக்கி, “நீ விடுதலையாகி விட்டாய்’ என்றானாம். இதனால் அபூ லஹப் நரகத்திற்குச் சென்றாலும் நபிகள் நாயகத்தின் பிறப்பிற்காக அவன் சந்தோஷப்பட்டு விரலால் சுட்டிக்காட்டி சுவைபாவை விடுதலை செய்த காரணத்தினால் தான் அவனுக்கு இந்த இன்பமாம்.

இது அபூ லஹப் கொண்டாடிய மீலாது விழாவாம். இந்த அபூ லஹப் வழியைப் பின்பற்றித் தான் இவர்கள் மீலாது விழா கொண்டாடுகிறார்களாம். அபூ லஹப் மீலாது விழா கொண்டாடிய ஹதீஸ் புகாரியிலேயே வருகிறதாம்.

அபூ லஹபிற்கு நரகத்தில் விரல்கள் வழியாக நீர் புகட்டப்படுவதாக புகாரியில் வரக்கூடிய செய்தியைப் பற்றி அறிவதற்கு முன்னால் புகாரி இமாம் அந்த நூலை எவ்வாறு தொகுத்திருக்கிறார் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

புகாரி இமாம் அவர்கள் நபிகள் நாயகம் கூறியதாக ஒரு ஹதீஸைக் கூறுவதற்கு முன்னால் அந்த ஹதீஸின் பாடத் தலைப்பின் கீழ் சில அறிஞர்களின் கருத்துக்களையோ அல்லது அறிவிப்பாளர் தொடர் முறிந்த வழியில் வரக்கூடிய நபிமொழிகளையோ குறிப்பிடுவார்.

புகாரி இமாம் அவர்கள் பாடத் தலைப்பில் நபியவர்கள் கூறியதாக ஒன்றைக் குறிப்பிட்டால் அது ஸஹீஹ் என்பது கிடையாது. அது ஸஹீஹாகவும் இருக்கலாம், பலவீனமானதாகவும் இருக்கலாம். அது போன்று ஒரு ஹதீஸைப் பதிவு செய்த பின் சில இடங்களில் அந்த ஹதீஸோடு சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்களின் கருத்துக்களையும் பதிவு செய்திருப்பார்.

இவ்வாறு புகாரி இமாம் பதிவு செய்திருப்பதால் அந்த அறிஞரின் கருத்து சரியானது என்றோ அல்லது அதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்றோ எந்த உத்தரவாதமும் கிடையாது.

புகாரி இமாம் அவர்கள் சரியான, முறிவில்லாத அறிவிப்பாளர்கள் வரிசையுடன் எதனைக் குறிப்பிட்டுள்ளார்களோ அது மட்டும் தான் ஸஹீஹானதாகும். இது புகாரி நூலைப் பற்றி ஞானமுடைய உலகத்திலுள்ள அனைத்து அறிஞர்களும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயமாகும். இப்போது இவர்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்கு வருவோம்.

புகாரியில் 5101வது ஹதீஸாக வரக்கூடிய செய்தியை இமாம் புகாரி அவர்கள் சரியான அறிவிப்பாளர்கள் வரிசையில் பதிவு செய்துள்ளார்கள்.  இவ்வாறு பதிவு செய்த பின் அந்த அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா என்ற அறிஞர் கூறிய கருத்தை அதன் கீழ் பதிவு செய்துள்ளார்கள்.

உர்வா என்ற அறிஞர் கூறியதாக வருவது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்ததாகும். இதற்கும் 5101வது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடருக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.

இது சம்பந்தமான விளக்கங்களைக் கீழே தருகின்றோம்.

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.  உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.  (புகாரி 5101 வது ஹதீஸின் கீழ் உள்ள குறிப்பு)

  1. மேற்கண்ட செய்தியை உர்வா என்ற அறிஞர் கூறுகின்றார். இவர் தாபியீன்களில் (ஸஹாபாக்களுக்கு அடுத்த தலைமுறையினர்) நடுத்தரத்தில் உள்ளவராவார். ஆனால் அபூ லஹப் சுவைபாவை விடுதலை செய்த நிகழ்வோ நபியவர்கள், நபியாக ஆவதற்கு முன்னால் அதிலும் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது நடைபெற்றதாகும். அப்படியென்றால் இந்தச் செய்தியை உர்வா நேரடியாகக் கண்டிருக்க முடியாது. இதனை நேரடியாகக் கண்ட ஒருவர் தான் கூறியிருக்க முடியும்.

நபியவர்களின் காலத்தில் நடந்த இந்தச் செய்தியை உர்வாவிற்குக் கூறியவர் யார் என்பதை உர்வா குறிப்பிடவில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயே இந்தச் செய்தி உண்மையானதல்ல என்பது நிரூபணமாகிவிட்டது.

இதைப் பற்றி புகாரியின் விரிவுரையாளரான இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தி முர்ஸலானதாகும். இதனை முர்ஸலாக உர்வா என்பவர் அறிவித்துள்ளார். தனக்கு இதனைக் கூறியவர் யார் என்பதை உர்வா அறிவிக்கவில்லை.  (நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 9, பக்கம்: 145)

முர்ஸல் என்றால் தாபீ ஆக உள்ள ஒருவர் ஸஹாபி இல்லாமல் அறிவிப்பதாகும்.

  1. அபூ லஹப் இறந்த போது அபூ லஹபின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் கனவில் கண்டதாக மேற்கண்ட செய்தியில் வந்துள்ளது. அவர் யார்? அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரா? அல்லது இஸ்லாத்தை ஏற்ற பிறகு இந்தக் கனவைக் கண்டாரா? அல்லது காஃபிராக இருக்கும் போது இந்தக் கனவைக் கண்டாரா? என்பது போன்ற எந்த விவரங்களும் மேற்கண்ட செய்தியில் இல்லை. மேலும் உண்மையில் அவர் கனவில் அவ்வாறு கண்டார் என்பதை உறுதிப்படுத்துபவர் யார்? ஏனெனில் தான் காணாத ஒன்றைக் கூட கனவில் கண்டதாக பொய் சொல்லக்கூடிய பொய்யர்கள் ஏராளமாக உள்ளனர். மேலும் நபிமார்களைத் தவிர வேறொரு ஒருவர் கனவில் ஒன்றைப் பார்த்துவிட்டால் அது மார்க்க ஆதாரமாகிவிடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? சில ஸஹாபாக்கள் கண்ட கனவிற்கு நபியவர்கள் விளக்கம் கூறி உள்ளார்கள். அது போன்ற மேற்கண்ட கனவிற்கு மீலாது விழா கொண்டாடுவது தான் விளக்கம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்களா? என்பதையெல்லாம் மேற்கண்ட கனவுச் செய்தியை கேடுகெட்ட மவ்லிதிற்கு ஆதாரம் காட்டுபவர்கள் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிலர் அப்பாஸ் (ரலி) அவர்கள் கனவில் கண்டதாக எழுதி வைத்துள்ளனர். இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் இல்லாத ஆதாரமற்ற செய்தியாகும்.
  2. சுவைபாவை விடுதலை செய்ததன் காரணமாக அபூ லஹபின் விரல்கள் வழியாக அவனுக்கு நீர் புகட்டப்படுவதாக மேற்கண்ட செய்தியில் வந்துள்ளது. மேலும் இது யாரோ ஒருவர் கனவில் கண்ட காட்சிதான். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரும் முறிவுடையது தான்.  இத்தனை குறைகளுக்கு மேல் இது உண்மையான இறைவேதத்தின் வரிகளுக்கு நேரடியாக முரண்படுகிறது.

அல்லாஹ் அபூ லஹபைச் சபிக்கும் போது அவனுடைய இரு கரங்களும் நாசமாகட்டும் என்று அவனது கரத்தை குறிப்பிட்டுத் தான் சபிக்கின்றான்.

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.  கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. (அல்குர்ஆன் அத்தியாயம் 111)

மேற்கண்ட வசனங்களை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

“அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன’ என்று அல்லாஹ் கூறுகிறான். இரு கைகள் என்றால் அதில் உள்ள விரல்களும் சேர்ந்து தான் அழியும். ஆனால் மேற்கண்ட பலவீனமான செய்தியோ அபூ லஹபின் இருவிரல்களில் இருந்தும் தண்ணீர் வருவதாகக் கூறுகிறது. இது இறைவனின் வசனத்திற்கு நேர் எதிரானதாகும்.

இறைவசனத்துடன் நேரடியாக மோதுவதே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்குப் போதுமான மிகப்பெரும் சான்றாகும்.

மேலும் மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் சுவைபாவை விடுதலை செய்ததற்குப் பகரமாக அபூ லஹபிற்கு விரலில் இருந்து தண்ணீர் வந்ததாக வந்துள்ளது. அதாவது சுவைபாவை விடுதலை செய்தது என்ற நற்செயலுக்குக் கூலியாகத் தான் அவனுக்கு விரலிலிருந்து தண்ணீர் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுவும் குர்ஆன் வசனத்திற்கு நேர் எதிரானதாகும்.

அபூ லஹப் செய்த எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் நற்கூலி கிடையாது என அல்லாஹ் கூறிவிட்டான். இதனைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை’ இந்த வசனத்தில் அபூ லஹப் செய்த எந்த ஒரு செயலும் அவன் நாசமாவதிலிருந்து அதாவது அவன் நரகத்தில் நுழைவதிலிருந்து காக்கவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

அதாவது அபூ லஹப் செய்த எந்த நற்செயலுக்கும் கூலியில்லை என்று உண்மை இறைவனின் உயர்வான வசனம் சான்று பகர்கிறது. ஆனால் அறிவிப்பாளர் தொடர் சரியில்லாத, யாரோ ஒருவர் கனவில் கண்டதாக வருகின்ற மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியோ அபூ லஹப் செய்ததற்கு கூலி கிடைக்கும் என்று கூறுகிறது. இப்பொழுது இதைக் காட்டி மவ்லூது ஓதவேண்டும் என்று கூறுபவர்கள் இறைவசனத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது யாரோ ஒருவர் கண்ட கனவை, அதிலும் அது உண்மையா? பொய்யா? என்று அல்லாஹ்வை தவிர யாருமே அறிய முடியாத ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?

“கொழுந்து விட்டெரியும் நரகில் அவன் கரிவான்’ என்று அல்லாஹ் கூறிவிட்டான். இதில் அவன் விரல்கள் மட்டும் கரியாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறவில்லை. ஆனால் மேற்கண்ட செய்தியோ இறைவசனத்திற்கு நேர் முரணாக அவன் விரலில் நீர் வடிவதாகக் குறிப்பிடுகிறது. இப்படி முழுவதுமாக, நேரடியாக இறைவசனங்களுக்கு முரணாகத் தான் யாரோ ஒருவர் கண்ட மேற்கண்ட கனவுச் செய்தி அமைந்துள்ளது.

  1. மேலும் மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் பிறந்ததற்காகத்தான் அபூ லஹப் சுவைபாவை விடுதலை செய்தான் என்பது இல்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய பிறகுதான் அபூலஹப் சுவைபாவை விடுதலை செய்தான் என்று வரலாற்றில் உள்ளதாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூலஹப் ஹிஜ்ரத்திற்கு முன்னால் சுவைபாவை விடுதலை செய்தான் என்றே வரலாற்றில் வந்துள்ளது. இது பாலூட்டுதலுக்கு மிக நீண்ட காலத்திற்குப் பிறகாகும். (ஃபத்ஹுல் பாரி, பாகம் : 9, பக்கம் : 145)

ஒரு வாதத்திற்கு அபூ லஹப் நபியவர்கள் பிறந்ததற்காகத் தான் சுவைபாவை விடுதலை செய்தான் என்று வைத்துக் கொண்டாலும் அபூ லஹப் செய்தது மார்க்கமாகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குப் பிறந்த நாள் கொண்டாடுங்கள் என்று எங்காவது கூறியுள்ளார்களா? மாறாக பிறந்த நாள் கொண்டாடுவது எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரமாகும். யார் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை (அஹ்மத்) என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே இந்த மவ்லூது, மீலாது அனைத்தும் நபியவர்களுக்குப் பின்னால் உருவாக்கப்பட்ட அனாச்சாரங்களான பித்அத்துகளாகும். இன்னும் சொல்லப் போனால் அபூ லஹபின் கலாச்சாரமாகும். எனவே இது போன்ற அனாச்சாரங்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ  அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

—————————————————————————————————————————————————————-

அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய அழகிய பண்புகள்

தாஹா

நமது ஜமாஅத்தின் தாயீக்கள் (பிரச்சாரகர்கள்) அவர்கள் நம் அனைவருக்கும் தாய்கள். அதாவது அழைப்பாளனிடத்தில் ஒரு தாய்க்கான பக்குவமும் பொறுமையுடன் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.

பிரச்சாரகர்கள் கத்தியின் மீது நடப்பதற்குச் சமமானவர்கள். கொஞ்சம் கவனம் தவறினாலும் ஆபத்து நடப்பவருக்கே என்பதை நன்குணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு அழைப்பாளன் ஆபத்தை உணராமல் போதுமான பக்குவமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதினால் அவருக்கும் அவரைச் சார்ந்த கொள்கைக்கும் பங்கம் வந்துவிடும் என்பதை முதலில் புரிந்திருக்க வேண்டும்.

எனவே ஒரு அழைப்பாளனிடத்தில் முடிந்தளவுக்குக் குறைகள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பாலியல் குறித்த பார்வை

பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வைப் பெற்றவராக ஒரு அழைப்பாளர் இருக்க வேண்டும். இது போன்ற விசயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காதல் கத்தரிக்காய் போன்ற வேலைகளைச் செய்யவே கூடாது. சாதாரண மக்களிடமும் இருக்கக் கூடாத இந்தப் பண்புகள் ஒரு அழைப்பாளனிடம் அறவே கூடாது.

சில ஊர்களில் சில பெண்களே ஆலிமிடம் கேள்வி கேட்பதாகச் சொல்லிக் கொண்டு சும்மா சும்மா எதையாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதும் தவறான விஷயம். அடிக்கடி போன் செய்து ஆலிமிடம் பேசி, கடைசியில் காதலில் விழுகிற, விழ வைக்கிற பிரச்சாரகர்களும், தவ்ஹீத் என்ற பெயரில் இந்தக் காரியங்களைச் செய்யும் பெண்களும் இதுபோன்ற மானக்கேடான, வெட்கங்கெட்ட செயல்களை விட்டொழிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், பெண்கள் குழைந்து பேசுவதும் அதிக உரிமை எடுத்துப் பேசுவதும் தான். எனவே ஒவ்வொரு பெண்ணும் பிரச்சாரகர்களிடத்தில் கேள்வி கேட்கும் போதும் ஏதேனும் ஒரு தேவையைக் கேட்கும் போதும் தனது தந்தை, சகோதரன், மாமா போன்ற மஹ்ரமான நபர்களிடம் கேள்வியை எழுதிக் கொடுத்து கேட்கச் சொல்லலாம். அல்லது அவர்கள் மூலமாக கேட்டுவரச் சொல்லி பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு வழி இல்லாத போது, மார்க்கம் சொல்லுகிறபடி குழையாமல் நெளியாமல் மென்மையில்லாமல் கேள்வியை நெற்றியில் அடித்தாற்போல் கேட்டு முடித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் பேசக் கூடாது.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன்: 33:32

நிர்வாகத்தினரில் சிலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி பிரச்சாரகர்களை அழைத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே தங்களது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். அதுவும் அவருடன் நாமும் இருப்பது கட்டாயத்திலும் கட்டாயம். பிறகு தவறான அசம்பாவிதங்கள் நடந்தால் இரு தரப்பு நஷ்டத்தினையும் அந்த நிர்வாகியே சந்தித்தாக வேண்டும்.

திருமணமாகாத பிரச்சாரகர்களுக்குக் கடையில் சாப்பாடு ஏற்பாடு செய்வதே சிறந்த வழிமுறை.  அவரை அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பதை கட்டாயம் தவிர்ந்து கொள்வது இரு சாராருக்கும் நல்லது.

அதே போன்று சிலர் அடிக்கடி வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பார்கள். இதிலும் கவனம் மிக முக்கியம்.

இவையெல்லாம் ஒரு அழைப்பாளனை பாலியல் சீண்டல்களிலிருந்தும் கெட்ட சிந்தனைகளிலிருந்தும் பாதுகாக்கும். ஏன் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், பிரச்சாரகர்களும் மனிதர்கள் தாம் என்பதை எந்த நேரத்திலும் நிர்வாகத்தினர் மறந்துவிடக் கூடாது. இவரெல்லாம் இப்படிச் செய்வாரா என்ற எண்ணத்தை அறவே ஒழித்துவிட்டு, முடிந்தளவுக்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையையும் மீறாமல் நடந்து கொள்ள முயற்சித்தால் பாலியல் குறித்த ஒரு சில குற்றச்சாட்டுகளும் நடக்காமல் தடுக்கலாம்.

நிர்வாக நட்பு குறித்த பார்வை

நிர்வாகிகள் தங்களது பிரச்சாரகர்களிடத்தில் எப்போதுமே மரியாதையாக நடந்து கொள்வது ஆரோக்கியமான நட்பாகவும் பணிகளைச் சரியாகச் செய்வதற்கும் வழிவகுக்கும்.

நிர்வாகத்தில் இருக்கிற தனி நபர்கள் அவருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். அதே போன்று பிரச்சாரகர்களும் நிர்வாகத்தினரிடம் தேவைக்கு ஏற்ப பழகினாலே போதுமானது. எப்போதும் அவர்களின் மரியாதையை தனிமையிலும் பிறருக்கு முன்னிலையிலும் குறைத்துவிடக் கூடாது. நிர்வாகத்தினருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அளவுக்கு அவர்களிடம் நட்பைப் பேணினால் அதுவே போதுமானதாகும்.

நிர்வாகத்தில் ஆலோசனை செய்யும் போது, தன்னுடைய கருத்துத் தான் சிறந்தது என்று நினைத்துக் கொண்டு, தனது கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் இருப்பதே பிரச்சாரகருக்கு உகந்தது.

நிர்வாகத்தினரும் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் தான் அழைப்பாளர் இருக்க வேண்டும் என்று நினைத்து கரடுமுரடாகக் கட்டளையிடாமல், அதிகாரத் தொனியில் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பிரச்சாரகராக இருப்பவர், நிர்வாகத்தினரிடமும் பொதுமக்களிடமும் குறைகள் இருந்தால் தகுந்த நேரத்தில் தகுந்த மாதிரி கையாண்டு குறைகளைச் சரிசெய்ய முயற்சிக்காமல், எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டே திரியக் கூடாது.

அதே போன்று நிர்வாகத்தினரும் அனுபவமில்லாத அழைப்பாளரை அலைக்கழிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுத்து நல்ல பக்குவமிக்க அழைப்பாளனாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதெனில் ஒருவருக்கொருவர் உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உபதேசம் பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

அல்குர்ஆன் 103வது அத்தியாயம்

முதலில் நிர்வாகிகள் அழைப்பாளரையும், அழைப்பாளர் நிர்வாகத்தினரையும் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் புரியாமல் நடப்பதினால் தான் பிரச்சனைகள் எழுகிறது.

அதே போன்று ஒவ்வொருவரும் பிறரைத் தவறாக எண்ணாமல் இருக்க வேண்டும். ஒருவரைத் தவறாக எண்ணும் போது அவர் செய்கிற அனைத்துமே எரிச்சலூட்டுவதாகத் தான் மற்றவர் கருதுவார்.

எனவே இருவரில் ஒருவர் எந்தச் செயலைச் செய்தாலும் மறுமை நன்மைக்குத் தான் செய்வார் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவரும் அது போன்றே நினைத்துக் கொள்ள வேண்டும். இப்போது யாராவது ஒருவர் தவறு செய்யும் போது, அதைப் பற்றி தௌவுபடுத்துவற்கு விளக்கம் கேட்கலாம்.

பொறுமையும் கலந்தாலோசித்தலும் 

சிலர் தன்னிச்சையாகச் செயல்படுவதினால் தான் நிறையக் குழப்பங்கள் உருவாகின்றன. எனவே எதையும் சக நிர்வாகிகளுடனும் அழைப்பாளர்களிடமும் ஆலோசித்து விட்டுத் தான் களத்தில் இறங்க வேண்டும்.

பதறாத காரியம் சிதறாது என்பார்கள். எனவே நிர்வாகியாக இருந்தாலும் அல்லது பிரச்சாரகராக இருந்தாலும் எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் எதையும் சரியாக முழுமையாக முறையாகச் செய்ய முடியாது என்பதை இருவருமே கற்றுக் கொள்ள வேண்டும்.

ரோஷம் (ஈகோ) களைந்தால் மோசம் வராது

ஈகோ என்கிற ரோஷம் கொள்கிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை கைவிட்டால் எட்டாதவையும் கைகூடும் என்பதில் எள்முனைக்கும் சந்தேகமில்லை. நீ என்ன கேட்பது? நான் எதையும் செய்வேன் என்கிற மனப்பாங்குடன் செயல்படுவது நிர்வாகத்திலும் பிரச்சாரக் களத்திலும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்திவிடும்.

இன்று நம்மிடத்தில் பலர் கொள்கையிலிருந்து புரண்டதற்குக் கூட தேவையில்லாத ரோஷ உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே காரணம் எனலாம். அதே நேரத்தில் ரோஷமே படக்கூடாதா என்றால், உலகில் அப்படியொருவன் மனிதனா என்று கேட்கத் தோன்றும். ஆனால் இவன் சொல்லி நான் கேட்பதா? என்ற ஈகோவிற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.

எனவே எதற்கெடுத்தாலும் தனது மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகக் காரியத்தை நிறைவேற்றாமல் இறை திருப்திக்காக செயலாற்ற வேண்டும்.

கொள்கைத் தவறுகளும் குழப்பங்களும் ஏற்படும் போதும், நமது ஜமாஅத்தின் மதிப்பைக் குறைக்கிற எதற்காகவும் ரோஷப்படுவது நியாயமானது. அதைக் குறை சொல்ல முடியாது. பாராட்ட வேண்டிய பண்பு தான்.

பணியைப் பகிர்ந்தளிக்காமை

பிரச்சாரகர்களிலோ நிர்வாகத்தினரிலோ அனைத்துப் பணிகளையும் தானே சுமந்து கொண்டு, தானும் சரியாக முறையாக முழுமையாக நிறைவேற்றாமல் பிறருக்கும் பகிர்ந்தளிக்காமல் அதைப் பற்றி பேசிப் பேசியே நேரம் கடத்துகிறவர்களும் நம்மில் உண்டு.

எந்தப் பணியைத் துவங்கினாலும் அதை முடிக்காமல், நானே அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எதையும் செய்ய மாட்டார்கள். இத்தகையவர்கள் நமது ஜமாஅத்தின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே எந்தப் பணியாக இருந்தாலும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், யார் யாரெல்லாம் எதை எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே ஆலோசனை செய்து, அதன் பிரகாரம் பணிகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

அதில் எவராவது கொடுத்த பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் அவரைக் கண்டிப்பதற்கும் வசதியாக இருக்கும். மேலும் இப்படி பணியைப் பகிர்ந்தளிக்கும் போது தான், யார் யார் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மக்களோடு மக்களாகப் பணி செய்தல்

பிரச்சாரகர்களில் பலரிடம் இருக்கும் குறை இது. மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றாமல் வெறுமனே சொற்பொழிவுகளை மட்டுமே செய்து கொண்டிருக்கக் கூடாது. அதே போன்று சில இடங்களில் எல்லா வேலைகளையும் பிரச்சாரகர்களிடத்தில் விட்டுவிட்டு எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிற நிர்வாகிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சில ஊர்களில் ஒரு தெருமுனைப் பிரச்சாரம் நடக்கிறதென்றால், அழைப்பாளரே சேர் போடுவது, ஒலி பெருக்கியை வைப்பது என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சொற்பொழிவையும் அவரே நிகழ்த்துவார்.

இது பரிதாபமான நிலை. இந்த நிலையை மாற்றி மக்கள் அழைப்பாளரோடும் அழைப்பாளர் மக்களோடும் கலந்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். எனவே நாம் செய்கிற அனைத்துப் பணிகளையும் ஒழுங்காகவும் முழுமையாகவும் செய்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறைகள் யாரிடமிருந்தாலும் சரி செய்து கொண்டு, நிறைகளுக்காக இறைவனைப் புகழ்ந்து, எண்ணத்தில் கலப்பில்லாமல் இறைவனுக்காகவே எல்லாவற்றையும் செய்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக நமது பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வழிவகுப்பானாக!

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். “இஸ்தவா’ என்பதற்கு “அமருதல்’ என்ற அர்த்தம் கிடையாது. “அமருதல்’ என்பதற்கு அரபியில் “ஜலசா’ என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்

அஹ்மத்

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (7:54)

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (10:3)

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன்; (13:2)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (20:5)

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் (25:59)

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் (32:4)

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (57:4)

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் (11:44)

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது.

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் “அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (23:28)

எனவே இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல், மலையின் மீது அமர்தல், வாகனத்தின் மீது அமர்தல், மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், “எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்” என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

அல்குர்ஆன் (43:13, 14)

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை…. அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை…. கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ….அல்லது தமது வாகனத்தில்…. வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், “நீங்களும் நோன்பை விடுங்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4277)

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நூல்: நஸாயீ (1379)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

நூல்: புகாரி (7269)

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாசனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப் (பாகம்: 14 பக்கம்: 408)

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

? அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

நஸ்ரீன்

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது.

பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாவிடுவர்.

ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பான ஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்தக் கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாய சட்டமாகக் கூறுவது கூடாது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்த ஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

இக்ரிமா கூறுகிறார் :

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி-

நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது” என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.

அப்பெண்மணி, “(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

நூல்: புகாரி 5825

மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடு அணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள் என்பதை இதன் மூலம் புரிகின்றோம்.

பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது.

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24:31)

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும். தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆடைகளில் இரண்டு வகைகள் இருக்கின்றது. சாதாரண ஆடைகள் பிறருடைய கவனத்தை ஈôக்கும் வகையில் அமைந்த ஆடைகள்.

பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளை பெண்கள் அணிவதைத் தான் மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்ற அலங்கார ஆடைகளைப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது.

எனவே பெண்கள் அணியும் பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ள அலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல.

எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி காட்டக்கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக்கூடியதாகவும் அமைந்துள்ளதோ அது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக்கூடாது.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்    தொடர்: 13

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்

உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம்; நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு  நிலையைப் பார்க்கிறோம்.

நேர்மையாக, சரியான அடிப்பûயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இது எப்படி நியாயம் என்ற ஒரு கேள்வி நமக்குள் எழுவதைப் பார்க்கிறோம். இதற்கு இஸ்லாம் பலவிதமான பதிலைத் தருகிறது.

இந்த உலகத்தில் எப்படிப்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு 100 சதவீதம் நிறையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவருக்குச் செல்வம் வேண்டுமானால் நிறையாக இருக்கலாம். மற்ற குறை இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, கோடீஸ்வரனாக இருப்பான்; ஆனால் கிட்னி ஃபெய்லியர் என்று கூறி விடுவார்கள். தனது சிறுநீரைக் கூட வெளியேற்ற முடியாமல் இருப்பார்.

இப்படி அல்லாஹ் குறை நிறையை இந்த உலகில் சரி சமமாகத் தான் போட்டிருக்கிறான். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் பணம் மட்டும் தான் செல்வம் என்று நினைக்கிறோம். ஆனால் பணம் இருந்து நோய் இருப்பவனை விட பணம் இல்லாமல் நோயின்றி இருப்பவன் சிறந்தவன் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மனிதனை குறை நிறையுடன் தான் படைத்திருக்கிறான். இப்படி ஒருவன் நினைப்பானேயானால் அவன் கவலைப்படமாட்டான்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்களே! அது போல அனைத்தும் சமமாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு, பெரிய பணக்காரராக இருப்பார். ஆனால் சுகர் என்று சொல்லி விடுவார்கள். இனிப்பு உண்ணக் கூடாது என்று கூறியிருப்பார்கள். அதேபோல சில நோய்களுக்கு  மாமிசம் தின்னக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அவனுடைய வீட்டில் வேலை செய்யக் கூடியவன் வாய் ருசியாக சாப்பிடுவான். அவனைப் பார்த்து இவன் ஏங்குவான். அவன் செல்வம் வைத்திருந்தாலும் அவனால் விரும்பியதை உண்ண முடியாமல் அல்லாஹ் குறையைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ்வை குறை சொல்லக் கூடிய அறிவிலிகளைப் பார்க்கிறோம். ஆனால் இப்படி ஏற்றத்தாழ்வு இருந்தால் தான் நல்லது. அப்போது தான் மனிதன் அல்லாஹ்விற்குப் பணிந்து நடப்பான். 100 சதவீதம் நிறையைக் கொடுத்தால் மனிதன் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டான். பின்னர் துஆ என்ற ஒன்று அவசியமாகாது.

குறைகள் இருந்தால் தான் மனிதன் தனது தேவையை அல்லாஹ்விடம் கேட்பான். அப்போது தான் அவன் இறையச்சத்துடன் நடப்பான்.

இந்த ஏற்றத் தாழ்வைக் காட்டி இறை மறுப்புக் கொள்கையான நாத்திகத்தைப் பேசுகிறர்கள். உண்மையிலேயே இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வை அல்லாஹ் இந்த உலகத்தில் ஆக்கியதன் மூலம் தான் அல்லாஹ் தான் ஹகீம் (ஞானமுள்ளவன்) என்பதை நிரூபிக்கின்றான். உதாரணத்திற்கு, அனைவருக்குமே கண் பார்வை நன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எவனாவது கண்ணைப் பற்றிச் சிந்திப்பானா? என்று பார்த்தால் சிந்திக்க மாட்டான்.

அதைப் பற்றியான அறிவு வளர்ந்திருக்காது. அதை வைத்துப் பிழைப்பு நடத்தக் கூடியவர்களின் நிலை என்னவாகும்? அவன் பாதிக்கப்படுவான். அதேபோல யாரும் நொண்டியாக இல்லாமல் நன்றாக நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவனும் காலைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டான். அப்படி கால் நொண்டியாக இருப்பதால் தான் அதைப் பற்றி, எலும்பை எப்படிச் சேர்ப்பது? என்று கண்டுபிடிக்கிறான். அதன் மூலம் ஒரு கூட்டம் பிழைப்பு நடத்துகிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் அனைவருக்கும் ஒரு கோடி ரூபாய் தந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நிலைமை என்னவாகும்? இந்த உலகம் ஒரு வாரம் கூட இயங்காது; அழிந்து விடும். எவனும் வேலைக்குப் போகமாட்டான்.

இப்போதே அரசின் இலவசத் திட்டங்களால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. எல்லோரிடமும் காசு இருந்தால் யார் வேலை செய்வார்கள்?

இதை வைத்து அல்லாஹ்வை குறை கூறப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் மூலமாகத் தான் அல்லாஹ், ஞானமிக்கவன் எனபதை நிரூபிக்கிறான். எனவே இப்படி இருந்தால் தான் ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பார். உதாரணத்திற்கு வியாபாரியைச் சார்ந்து மக்கள்; மக்களை சார்ந்து வியாபாரிகள். நோயாளியைச் சார்ந்து மருத்துவர்; மருத்துவரைச் சார்ந்து நோயாளி. இப்படித் தான் உலகம் இயங்க முடியும்

அதே போல் நாம் அனைவரும் செல்வத்தை மட்டும் பாக்கியம் என்று எண்ணுகிறோம். அது மட்டும் பாக்கியமில்லை. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் சீராக இயங்குவதே ஒரு பெரிய பாக்கியமாகும்.

அல்லாஹ்வே இதைக் கூறிக் காட்டுகிறான்:

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தை யும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 89:15, 16

இதை இன்றைக்கு மனிதன் நிதர்சனமாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதேபோல் இன்றைக்கு நேர்மையாக நடப்பவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவன் எனறெல்லாம் கூறி கேலி செய்வதைப் பார்கிறோம். ஆனால் அந்த மறுமையில் நாம் அவர்களைக் கேலி செய்யலாம். அது தான் நிலையான இன்பம் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் கவலைப்பட மாட்டோம். செல்வத்தின் மீதுள்ள பேராசை நம்மை விட்டு அகன்றுவிடும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டோம்.

என்ன தான் கூறினாலும் பணக்காரர்கள் சொகுசாகத் தான் இருக்கிறார்கள். கார், பங்களா என்று இன்பத்தை அனுபவிக்கிறார்கள். மினரல் தண்ணீரைக் குடிக்கிறார்கள். அந்த மாதிரியான இன்பத்தை நாம் அனுபவிக்கவில்லை என்பது ஒரு குறையாகத் தான் இருக்கும். என்ன தான் நோய் நொடி இல்லாமல் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஏழையாக வாழக்கூடிய அனைவருக்கும் வரும். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5645

இப்படிப்பட்ட ஒரு எண்ணம் யாருக்காவது வந்தால் அவன் செல்வம் அதிகமாக இல்லை என்று கவலைப்படமாட்டான்.

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்கள், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாகத் தருகின்றான் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதே போல் நாம் செய்த அமல்கள் குறைவாக இருந்தால் அதைச் சரி செய்வதற்கு அல்லாஹ் துன்பங்களைத் தருகிறான்.

இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறுகிறார்கள்: நீங்கள் அனுபவிக்கும் வருத்தம், துன்பம், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாக்குகிறான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களி-ருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5642

அல்லாஹ் மறுமையிலே கொடுக்கவிருக்கும் தண்டனையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவெல்லாம் ஒரு செல்லமாகத் தட்டுவதைப் போன்று தான் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலி-ருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: புகாரி 5652

அப்படியானால் நமக்கு இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம், சோதனையைப் பொறுத்துக் கொண்டால் அதற்கு அல்லாஹ் கூலியை வழங்குவான் எனற நம்பிக்கையை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்குச் சான்றாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி)

நூல்: புகாரி 5653

இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண் என்பது 50 சதவீதம் அருட்கொடையை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் இந்தக் கண்.

எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக்கூடாது. அல்லாஹ்வைத் திட்டவும் கூடாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் 5726

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தொடர்: 14

ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கு இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தைப் பார்த்து வருகிறோம்.

இது குறித்து புகாரியில் இடம் பெற்ற ஹதீசுக்கு அவர் கொடுத்த விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.

அடுத்து சூனியம் செய்யப்பட்ட பொருள் எடுக்கப்பட்டது குறித்து நஸயீ, அஹ்மத் ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அது பலவீனமானது என்றும் அஃமஷ் அவர்கள் ஹதீஸில் மோசடி செய்பவர் என்றெல்லாம் அவர் எழுதி தன் அறியாமையைப் பின் வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

சலபியின் வாதம்

அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.

இவை முரண்பாடுகள் தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.

பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.

அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

(1) அல் அஃமஷ் என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், இன்னாரிடம் நான் கேட்டேன் என்று தெளிவாக அறிவிக்காமல் அன் அனா என்று கூறப்படக் கூடிய விதத்தில் அவர் மூலம் என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அஃமஷ் மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.

(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.

அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.

அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் என நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல.

113, 114 வது அத்தியாயங்கள் என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது, ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.

ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.

அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் – இந்தத் தொடரில் தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)

இதில் ஒன்றை ஏற்று பார்த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர், அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார். தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

நமது மறுப்பு

நஸயீ, அஹ்மதில் இடம் பெறும் சூனியம் தொடர்பான ஹதீஸ் பலமானது என்று நாம் வாதிடுவது போலவும், இவர் மறுப்பது போலவும் எழுதியுள்ளார்.

நம்மைப் பொறுத்த வரை இவர் சுட்டிக்காட்டும் இந்த ஹதீஸ்கள் மட்டுமின்றி நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களுமே இட்டுக்கட்டப்பட்டவை என்பது தான் நமது நிலை.

இந்த நிலையில் அவர் பலவீனமானது என்று ஒப்புக் கொள்ளும் ஒரு ஹதீஸை நாம் பலமானது என்று கூறும் அவசியம் நமக்கு இல்லை. அவரது ஆதாரத்தில் ஒன்று குறைந்து விட்டதால் நமக்கு நல்லது தான். எனவே அவர் பலவீனமானது என்று தள்ளி விட்ட ஹதீஸை நாமும் விட்டு விடுகிறோம். அவர் பலமானது என்று கருதும் மேற்கண்ட அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாட்டுக்கு உரிய முறையில் விளக்கம் தரட்டும். அல்லது குர்ஆனுக்கு முரண்படுவதால் அவற்றை நாமும் நிராகரிக்கிறோம் என்று கூறட்டும்.

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டது என்ற கருத்தில் உள்ள ஹதீஸும் நம்மைப் பொறுத்த வரை இட்டுக் கட்டப்பட்டது தான். குர்ஆனுடன் மோதும் காரணத்துக்காக அது பலவீனமானது எனும் போது அறிவிப்பாளர் குறித்து அலசும் அவசியம் நமக்கு இல்லை.

அறிவிப்பாளர் பலமாக இருந்தாலும் குர்ஆனுடன் மோதினால் ஏற்க மாட்டோம் என்ற நமது நிலைபாடு அவருக்கு இன்னும் புரியவில்லை. அவரைப் போலவே நாமும் கருத்து கொண்டிருப்பதாக எண்ணி நிழலுடன் சண்டை போடுகிறார். தள்ளுபடி செய்ய வேண்டிய செய்திகளில் அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டியதில்லை.

மொத்தத்தில் பயனற்ற வாதங்களை எடுத்து வைத்து நேரத்தைப் போக்கி இருக்கிறாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை மறுத்து நாம் எடுத்து வைத்த எந்த ஆதாரத்துக்கும் உருப்படியான பதில் தரவில்லை.