தொடரும் தாயீக்கள் பற்றாக்குறை தவிர்க்க வழி என்ன?
ஊர் உலகத்திற்கு ரமலான் மாதம் வருவதற்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தாலும் தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை ரமலான் வந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். காரணம், இரவுத் தொழுகைக்காக எங்களுக்கு ஹாபிழ்கள் வேண்டும்; தொடர் பயான் செய்வதற்கு எங்களுக்குப் பேச்சாளர்கள் வேண்டும் என்று கடிதங்கள், மெயில்கள் வரத் துவங்கி விட்டன. வேதனை என்னவெனில், தாயீக்கள் விஷயத்தில் நமது ஜமாஅத்தில் அன்று என்ன நிலைமையோ அதே நிலைமை தான் இன்றும் தொடர்கின்றது.
நூறு மர்கஸுகள் இருக்கும் போது இருபது தாயீக்கள் இருந்தார்கள். இருநூறு மர்கஸுகள் என்றால் நாற்பது தாயீக்கள்! ஆயிரம் மர்கஸுகள் இருநூறு தாயீக்கள் என்ற விகிதத்தில் பற்றாப்படி என்பது விடாப்பிடியாகத் தொடர்ந்து, நமது ஜமாஅத்தைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றது. இது எப்போதும் உள்ள நிலையாகும். ரமலான் வந்ததும் இந்தத் தேவை இன்னும் பன்மடங்கு பெருகி விடுகின்றது.
தாயீ வேண்டும்; தாயீ வேண்டும் என்று ஒவ்வொரு கிளையும் தவியாய் தவிக்கின்றது. அழைப்பாளர்களைத் தாருங்கள் என்று ரமளான் வரும் போது ஆளாய் பறப்பதும் ரமலான் முடிந்ததும் இனிமேல் அடுத்த வருடம் தானே என்று அமைதியாக அடங்கி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. எனினும், ரமலானுக்குப் பின்னரும் தாயீக்கள் வேண்டும் என்ற தேவையிலும் அவசியத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
அதனால் ரமலான் மற்றும் ரமலான் அல்லாத காலங்களில் இந்த பற்றாப்படியை சரி கட்டவும் சமாளிக்கவும் வட மாநிலங்களிலிருந்து வருகின்ற தாயிக்களை, ஹாபிழ்களை நியமிக்கும் நிர்பந்தத்திற்கு கிளைகள் ஆளாகின்றன. வட மாநிலங்களிலிருந்து வரும் தாயீக்களுக்கு ஜமாஅத்தின் நிலைபாடுகள் புரிய வைக்கப்பட்டாலும் அது முழுநிறைவு அளிக்கவில்லை என்பது தான் உண்மையாகும். அவர்களிடம் உள்ள மற்றொரு குறை, அவர்களால் எந்த மார்க்கப் பிரச்சாரமும் செய்ய முடிவதில்லை. காரணம் அவர்களுக்குத் தமிழ் தெரியாது. மொழி அவர்களுக்கு ஒரு தடையாகி விடுகின்றது. மக்களுக்குத் தேவையும் காலத்தின் கட்டாயமும் மார்க்க உரை தான். அது இவர்களால் நிறைவேறாதது ஒரு பெரிய குறைபாடாகும்.
மொத்தத்தில் இவை அனைத்தும் தாயீக்கள் பற்றாக்குறையின் வெளிப்பாடு தான். இந்த நிலையில் ஏகத்துவ வாதிகளின் கடமை என்ன? அதிகமான தாயீக்களை உருவாக்க வேண்டும். அதற்காக உங்கள் பிள்ளைகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு மார்க்கம் கற்க அனுப்பி வையுங்கள் என்று ஏகத்துவம் இதழ் வாயிலாகவும் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் வாயிலாக, தலைமை சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன் மாவட்டங்கள், கிளைகளிலிருந்து பதில் வருகின்றது. பதில் வருகின்ற திசையை நோக்கி ஆவலுடன் திரும்பும் போது நமக்கு ஏமாற்றம் தான் மிச்சமாகின்றது. பையன் 8ஆம் வகுப்பு முடித்திருக்கின்றான்; படிப்பு வரவில்லை; இஸ்லாமியக் கல்லூரியில் சேர்த்து விடலாமா? என்று கேட்கின்றனர். தாய்மொழியில் ஆரம்பக் கல்வியையே சரிவரப் படிக்க முடியாதவர்களால் அரபி மொழியியல், இலக்கணச் சட்டங்கள் அடங்கிய இந்தக் கல்வியை எப்படிக் கற்க முடியும் என்று யோசிப்பதில்லை.
வேறு சிலரோ, பையன் சேர்க்கை சரியில்லை; சில கெட்டப் பழக்கங்களுக்கு ஆளாகி விட்டான். அதனால் அவனை கல்லூரியில் சேர்த்துத் திருத்த முடியுமா? என்று கேட்கிறார்கள். இதுமாதிரியான நபர்களைச் சேர்த்து என்ன செய்வது? இஸ்லாமியக் கல்லூரி சீர்திருத்தப் பள்ளி இல்லை. இதுபோன்றவர்கள் கல்லூரிக்கு வந்தால் இருக்கின்ற மாணவர்களையும் சேர்த்துக் கெடுத்து விட்டுப் போய் விடுவார்கள் என்பதை கல்லூரியின் நடைமுறை அனுபவத்தில் பார்க்க முடிகின்றது.
அதனால் நல்ல திறைமையான, பள்ளிப் படிப்பில் நன்றாகவும் சராசரியாகவும் படிக்கின்ற இளைஞர்களை அனுப்பி வையுங்கள் என்று பெற்றோர்களிடம் வேண்டுகிறோம். அதிலும் குறிப்பாக, வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மார்க்கக் கல்வியைக் கற்க அனுப்பி வையுங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றோம்.
இதை வலியுறுத்துவதற்குக் காரணம் வசதி மிக்கவர்கள் அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலும் மார்க்கக் கல்வி கற்பதற்கு அனுப்புவது கிடையாது. ஏழைகள் தான் இந்த கல்வியைக் கற்க முன்வருவார்கள் என்ற தவறான தோற்றம் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. அதனால் அந்தத் தவறான தோற்றத்தைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம்.
தவ்ஹீதுவாதிகள் தங்கள் பிள்ளைகளை மார்க்கக் கல்வி கற்பதற்கு அனுப்ப முன்வரவில்லை என்றால் இந்தக் கொள்கையை எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் போவதை நமது வாழ்நாளில் நம் கண்களால் காண நேரிடும். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வளர்த்த ஏகத்துவக் கொள்கை நமக்கு மட்டும் தான் சொந்தம்; அடுத்தத் தலைமுறைக்கு வேண்டாம் என்று எண்ணினால் அதை விட சுயநலமான சிந்தனை வெறெதுவும் இருக்க முடியாது.
எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
அதனால் நாம் பெற்ற இந்த அருட்கொடையை அடுத்தத் தலைமுறையினருக்கு நகர்த்த முனையவில்லை என்றால் அல்லாஹ்விடம் நாம் குற்றவாளிகளாகி விடுவோம்.
இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி கஅபா எனும் ஆலயத்தைச் சீரமைத்து முடித்த பின் ஓர் அருமையான துஆவைச் செய்கின்றார்கள்.
“எங்கள் இறைவா! (எங்கள் சந்ததிகளான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர் உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’
அல்குர்ஆன் 2:129
இந்த துஆவில் அவர்கள் உணர்த்துகின்ற விஷயம் ஏகத்துவக் கொள்கையை நிலை நாட்ட ஆலயம் மட்டும் போதாது; அழைப்பாளரும் அவசியம் என்பது தான். இன்று நம்மிடம் ஆயிரக்கணக்கான மர்கஸுகள் சொந்தமாக அல்லது வாடகைக் கட்டிடமாக இருக்கின்றன. ஆனால் தாயீக்கள் இல்லை.
தாயீக்கள் இல்லை என்றால் தவ்ஹீது ஜமாஅத், கொள்கை மற்றும் செயல்பாடுகளில் அழிவைத் தழுவுகின்ற இன்னோர் அஹ்லே ஹதீஸ் இயக்கமாக மாறிவிடும். அதனால் தாயீக்களை அதிகமதிகம் நாம் உருவாக்கியாக வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் 9:122
கல்வி கற்பதற்காக ஊரையே காலி செய்து விட்டுச் செல்லும் அளவிற்கு அன்றைய நபித் தோழர்களிடம் கல்வி கற்கும் ஆர்வம் கரை புரண்டு ஓடியது. ஆனால் இன்று நம்மிடம் அது போன்ற ஆர்வமும் அதற்கான ஏற்பாடும் அறவே இல்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் ஜின்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்தபோது “வாயை மூடுங்கள்!’’ என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராகத் தமது சமுதாயத்திடம் திரும்பின.
அல்குர்ஆன் 46:29
நாம் கற்றுக்கொண்ட இந்தக் கொள்கையை அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்திச் செல்கின்ற கைங்கரியத்தை உடனே கையில் எடுப்போம்.
தாயீக்களை உருவாக்குவதற்காக அழைப்பு விடுக்கும் அதே வேளையில் நமக்குக் கையில் கிடைத்திருக்கும் தாயீக்களை அவர்கள் இன்னபிற துறைகளுக்குத் தாவுவதை விட்டும் தடுக்கும் விதமாக ஒரு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்த தாயீக்களுக்கு வருவாய் ஈட்டுவதற்குரிய பல்வேறு வாசல்கள் விசாலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் அனைத்தும் அவர்கள் சம்பாதிக்கின்ற வருவாய்த் தலங்களாக இருக்கின்றன. இது அல்லாமல், ஒரு பயானுக்குச் சென்று விட்டால் கைமடக்கு என்ற பெயரில் கணிசமாகக் கவனிக்கப்படுகின்றனர்.
ஆனால் நமது ஜமாஅத்தில் உள்ள தாயீக்களுக்கு மார்க்கத்தின் பெயரால் வருவாய் ஈட்டுவதற்குரிய வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் யாரும் மார்க்கத்தை வருவாய்க்குரிய வாசலாக ஆக்கிக் கொள்ளவில்லை. காரணம் தவ்ஹீதுக் கொள்கை அத்தகைய பிழைப்பிலிருந்து அவர்களைக் காத்து விட்டது. அத்துடன் தவ்ஹீது அவர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியிருக்கின்றது.
பயானுக்குச் செல்லும் இடங்களில் போதிய அளவு பயணச் செலவைக் கொடுக்கவில்லை என்றாலும் அதைக்கூட கேட்பதற்கு வெட்கப்படும் நிலையில் தான் நமது தாயீக்கள் உள்ளார். சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் ஹஜ் உம்ரா சர்வீஸ், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை தாராளமாகச் செய்து கொள்ளலாம். அதுபோன்ற வருவாய்க்குரிய வாய்ப்புகளும் நமது ஜமாஅத்தில் இல்லை.
எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தாயீக்கள் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு மாவட்ட, கிளை நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். இது அவர்கள் வேறு துறைக்குத் தாவாமல் தஃவா களத்திலேயே தங்கள் பணியைத் தொடர்வதற்கு வழி வகை செய்யும்.
இதேபோன்று தாயீக்களுக்கும் அதிலும் குறிப்பாக, இஸ்லாமியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற தாயீக்களுக்கு தலைமை சார்பில் ஓர் அறிவுரையை முன்வைக்கிறோம்.
இஸ்லாமியக் கல்லூரி உருவாக்கப்பட்டது உங்களை போன்ற தாயீக்கள் காலா காலம் இந்த அழைப்பு பணி ஆற்றுவதற்காகத் தான். எனவே அழைப்புப் பணியை உங்கள் வாழ்வியலாகக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் கல்வி பயின்று முடித்த பின்னர் இந்தத் துறையை விட்டு முழுவதும் ஒதுங்கிக் கொள்வீர்கள் என்றால் அது, நாளை மறுமையில் இறைவனிடத்தில் விசாரிக்கப்படும் ஒரு செயலாக ஆகி விடும் என்பதை அறிவுரையுடன் கூடிய ஓர் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தஃவா பணி தொய்வின்றி தொடர முழுமையாக ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உயிர் பிரியும் தருணம் மூன்று இல்லாதிருந்தால்…
ஆர். அப்துல் கரீம்
ஒவ்வொரு மனிதனும் தனது மரணத்திற்கு முன்பாக பல்வேறு இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என ஆசை கொள்கிறான்.
தனக்கென்று வீடு, கார், சொகுசு பங்களா, அதிக சொத்து இதுவே சராசரி மனிதனின் கனவு, இலட்சியம் எல்லாமே! அதுவும், தான் மரணிப்பதற்குள் இவற்றை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் இவ்வுலக வாழ்க்கையில் பயணிக்கின்றனர்.
மார்க்கம் அனுமதித்த வழிமுறையில் இவற்றைச் சம்பாதித்தால் அதில் எந்தப் பிரச்சனையுமில்லை தான்.
ஆனால் மரணிக்கும் முன் இவையெல்லாம் தனக்குக் கிடைத்திட வேண்டும் என்றெண்ணி அதை நோக்கிச் செயல்படுவதை விட, மரணிக்கும் தருவாயில் மார்க்கம் எச்சரித்த செயல்கள், பண்புகள் தன்னிடத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் கவனமாக இருக்க வேண்டும் என மார்க்கம் போதிக்கின்றது.
உயிர் பிரியும் தருணம் குறிப்பிட்ட மூன்று பண்புகள் – செயல்கள் இல்லாத நிலையில் ஒருவர் மரணத்தைத் தழுவினால் அவர் சொர்க்கம் செல்வார் என்று நபிகளார் கூறுகிறார்கள்.
சொர்க்கம் செல்ல விரும்புகிற அனைவரும் எப்போதும் தம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நபிமொழியையும் அது குறித்த சிறியதொரு விளக்கத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.
‘‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: அஹ்மத் (21356), திர்மிதீ (1497)
பெருமை
ஒருவர் சொர்க்கம் செல்ல விரும்பினால் முக்கியமான மூன்று பண்புகளுக்குத் தமது வாழ்க்கையில் இடமளித்து விடக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி அதில் முதலாவதாக ‘பெருமை கூடாது’ என்ற செய்தியை மேற்படி நபிமொழி எடுத்துரைக்கின்றது.
பெருமை என்பது மனிதனுக்குத் தகுதியானதல்ல. அது முழுக்க முழுக்க இறைவனுக்கு உரிய பண்பாகும். எச்சமயத்திலும் மனிதன் பெருமை கொள்ளலாகாது.
வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 45:37
பெருமை கொள்ளும் எந்தத் தகுதியும் மனிதனுக்கு இல்லை.
வானம் பூமியை, அதில் உள்ளவற்றை படைத்தவன் இறைவன் ஒருவனே! இவற்றைப் படைத்ததில் மனிதனுக்கு எள்முனையளவும் பங்கில்லை என்ற போது பெருமை கொள்வது மனிதனுக்கு எப்படித் தகும்?
மலஜலத்தைச் சுமந்து கொண்டு பசி, மறதி உள்ளிட்ட பல்வேறு பலவீனங்களைக் கொண்ட மனிதன் எந்த முறையில் பெருமை கொள்ள முடியும்?
ஆச்சரியத்தக்க கண்டுபிடிப்புகள் பலவற்றை மனிதன் நிகழ்த்தினாலும் மனிதனுக்கு இறைவன் வழங்கிய அறிவே அக்கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது எனும் போது அதன் பெருமை எப்படி மனிதனுக்குரியதாகும்?
இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் மனிதன் பெருமை கொள்ளத் தகுதியற்றவன் என்பதை அறியலாம்.
ஆகவே தான் பெருமை கொள்வோருக்கு மறுமை வாழ்வு சிறப்பானதாக இருக்காது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு இறையச்சமுடையவர்களுக்கே!
(அல்குர்ஆன் 28:83)
இத்தகைய இழிகுணமான பெருமையடிப்பதை விட்டும் மனிதன் தவிர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக மரண நெருக்கத்தில் பெருமை என்ற குணம், அதன் வாடை மனிதனுக்குத் துளியும் இருந்திடக் கூடாது.
பெருமை என்ற குணத்திலிருந்து விலகாத நிலையில் மரணத்தைத் தழுவினால் அத்தகையோர்க்கு நரகமே பரிசு என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
‘‘தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரத்தில் நுழையமாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் (148)
‘‘எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், ‘‘ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?)’’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை இழிவாகக் கருதுவதும் தான்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (147)
மனிதன் பெருமை கொள்வதற்குக் கல்வி, பொருளாதாரம், அழகு, அந்தஸ்து போன்றவை காரணங்களாக ஆகிவிடுகிறது.
இவையனைத்தையும் அல்லாஹ்வே நமக்கு வழங்கினான் என்ற உணர்வு மேலிட்டால் பிற மனிதர்களை அற்பமாகக் கருதும் மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, பெருமையை நமது வாழ்விலிருந்து இல்லாமல் ஆக்கலாம்.
மோசடி
ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும்.
இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது.
எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் மோசடி வியாபித்திருக்கின்றது. ஆலமரம் போல ஆங்காங்கே தனது கிளைகளை அது பரப்பி விட்டிருக்கின்றது.
மனிதன் உண்ணும் உணவுகளான அரிசி, காய்கறி, பழங்கள் துவங்கி குழந்தைகளின் பசி போக்கும் பால், நோயாளிகள் உட்கொள்ளும் மருந்துகள் என எல்லாவற்றிலும் மோசடி நிரம்பியுள்ளது.
கடல் உணவான மீன்களைத் தான் ஓரளவு நம்பத் தகுந்ததாக மக்கள் கருதினர். இப்போது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அந்தக் கடல் உணவுகளிலும் ரசாயன மருந்துகளை ஏற்றி விற்கின்றனர் என்ற செய்தி மோசடியின் நவீன வடிவத்தைப் படம் பிடித்துப் காட்டுகின்றது.
இது தவிர, ஆன்லைனில் ஆப்பிள் போன் ஆர்டர் செய்தால் ஆப்பிள் பழத்தை வைத்து அனுப்புவது ‘பவர் பேங்க்’ எனப்படும் மின் சாதனத்தை வாங்கினால் உள்ளே கடற்கரை மணலை வைத்து அனுப்புவது இதெல்லாம் மோசடியின் இன்னொரு ரகம்.
இப்படிப் பல வகைகளில் மோசடி செய்யும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என நபிகளார் முன்னரே கூறியுள்ளார்கள்.
‘‘உங்களுக்குப் பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன்வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி (2651)
இத்தகைய மோசடிக் குணம் ஒரு முஸ்லிமின் குணமல்ல! மாறாக, நயவஞ்சகனின் குணம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
‘‘பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (33), முஸ்லிம் (107)
மோசடிக் குணம் கொண்ட ஒருவன் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் அது நயவஞ்சகனின் குணமே என்று நபிமொழி எச்சரிக்கின்றது.
‘‘நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (109)
பிற மக்களை ஏமாற்றுவது அவனை முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே வெளியேற்றிவிடும் மகா மோசமான, நாச காரியமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதில் தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. ‘‘உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது’’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘‘மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (164)
அதுமட்டுமல்ல! ஈமானைப் பறிக்கும் மாபாதகக் காரியம் இந்த மோசடிக் குணம். இவ்வாறு தான் நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
‘‘மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை. உங்களை நான் எச்சரிக்கிறேன்; உங்களை நான் எச்சரிக்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம்(103)
ஈமானைப் பறிக்கின்ற, முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் வெளியேற்றுகின்ற, சுவனம் செல்வதைத் தடுக்கின்ற, நயவஞ்சகனின் பண்பான மோசடிக்குணத்தை அது எந்த வடிவில் இருந்தாலும் நமது வாழ்விலிருந்து அகற்றி, விட்டொழிக்க வேண்டும். அதுவே நரகிலிருந்து மீட்சி பெற உரிய வழி என்பதை இனியும் தாமதியாமல் உணர வேண்டும்.
கடன்
ஒருவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்ற நிலையில் இறைவனை வணங்கி வழிபட்டு, பெருமை, மோசடி, கடன் ஆகிய மூன்று இழிகுணங்களை விட்டும் விலகிய நிலையில் மரணித்தால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று மார்க்கம் கூறுகிறது அல்லவா? இந்தப் பட்டியலில் மூன்றாவது கடன்.
அதாவது கடன் இல்லாத நிலையில் மரணிப்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் அனுதினமும் இந்தக் கடனிலிருந்து தான் பாதுகாப்புக் கோரினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆ செய்யும் போது இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (2397)
அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்த உயிர் தியாகியாக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது கடனை விட்டுச் சென்றால் அல்லாஹ் அந்தப் பாவத்தை மன்னிக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு, கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3498)
உயிர் தியாகியின் எல்லாப் பாவங்களையும் மன்னிக்க முன்வரும் அளவற்ற அருளாளன் அல்லாஹ், கடனை மன்னிக்க மாட்டான் என்றால் இறைவனின் பார்வையில் கடன் எத்தகையது என்பதைப் புரியலாம்.
இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கு ஒரு உயிர் தியாகிக்கே கடன் தடையாக இருக்கும் என்றால் சாமானியர்கள் நமது நிலை என்ன? என்பதை சற்று ஆழமாகவே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆணவ குணத்தை அடியோடு அழிப்போம்!
மோசடிப் பண்பை முற்றாக மாய்ப்போம்!
பொருளாதாரக் கடனை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவோம்!
இறைவா! ஆணவம், மோசடி, கடன் ஆகிய இந்த மூன்று பண்புகளை விட்டும் நீங்கிய நிலையில் மரணித்து சொர்க்கம் செல்லும் வாய்ப்பைத் தந்தருள்வாயாக என இறைவனைத் தொடர்ந்து பிரார்த்திப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக!
மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என மற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது.
பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் போது அவர்களின் நலம் நாடி, பொதுநல சேவை செய்யக்கூடிய சமூக ஊழியனாகவும் இருக்க வேண்டிய கடமை ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கிறது.
அனைவரையும் சார்ந்தும் இருக்க வேண்டும், அனைவருக்கும் தன்னளவில் ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்குபவனாக இருக்க வேண்டும் என்றால் அவன் நல்ல குணம் படைத்தவனாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சமூகத்தில் அவன் சந்திக்கின்ற பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்ற வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
ஒரு நாணயத்தின் இரு பக்கத்தைப் போல நல்லவன், வல்லவன் என்கிற இரு தன்மைகளையும் உள்ளடக்கியவனாக வாழ்ந்தால் தான் சமூகத்தில் அவனால் காலத்தைக் கடத்த முடியும்.
நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்க்கை தான் நமக்குப் பாடமும் படிப்பினையுமாகும்.
இப்பொழுது அந்த முன்மாதிரியான வாழ்க்கையை எங்கிருந்து தேடுவது?
யாரிடமிருந்து கற்றுக்கொள்வது?
கடந்த கால ஆட்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், சீர்திருத்தச் செம்மல்கள், படித்த பட்டதாரிகள், மாமேதைகள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களின் வரலாற்றை ஆய்வு செய்கிற பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் ஒருவர் அறிவியலில் மிகப்பெரிய தேர்ச்சி உடையவராக இருந்தாலும் அவர் ஒரு தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவராக இல்லை.
ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் திறமைசாலியாக இருந்தாலும் தனது குடும்பத்தில் ஒரு சிறந்த தலைவனாக வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு விடை இல்லை.
குடும்பத்தைக் கவனிப்பவராக இருக்கும் ஒருவர் ஆன்மீகவாதியாக, சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக வாழ்ந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது.
ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்று வருகிறபோது அவர் சிறந்த ஒரு குடும்பத்தை வழி நடத்தினாரா? பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பொதுநல சேவைகள் புரிந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது.
இப்படி ஒரு துறையில் கரை கண்டவர்கள் பல துறைகளைக் கண்டும் காணாதவர்களாக இருந்துள்ளார்கள்.
ஆனால் குடும்பம், ஆன்மீகம், ஆட்சி என அனைத்துத் துறைகளிலும் கரை கண்டு, அகில உலகத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்து விளங்கியவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தேடுபவர்களுக்கு விடைதான் முஹம்மது நபிகள் நாயகம் ஆவார்கள்.
இதை முஸ்லிம்கள் உயர்த்திச் சொன்னாலும் முஸ்லிம்கள் தங்கள் தூதரை முன்னிலைப் படுத்துவதற்காகச் சொல்கிறார்களோ என்ற ஒரு பார்வை பிற மத நண்பர்களுக்குத் தோன்றலாம்.
ஆனால் இதை நாம் சொல்வதை விட மைக்கேல் ஹார்ட் எனும் கிறிஸ்தவ அறிஞர் சொல்கிறார் இதோ பாருங்கள்!
சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ (ஜிலீமீ பிuஸீபீக்ஷீமீபீ) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (விவீநீலீமீணீறீ பிணீக்ஷீtமீ) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட ‘மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான்’ என்று குறிப்பிடுகிறார்.
நபிகளாரை முதன்மைப்படுத்தியமைக்கு அவர் கூறும் விளக்கம் இதோ!
இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும் மற்றும் சிலருக்கு “ஏன் அப்படி?” என்று வினாவும் எழலாம்.
ஆனால் ஆன்மீகம், அரசியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கி, அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார். அவர் உயிர் நீத்து பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவரது தாக்கம் சக்திமிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
உலகத்தில் முஸ்லிம்களை விடக் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ இரு மடங்கினராக இருந்தாலும் கூட, ஏசு நாதரை விட முஹம்மது நபியவர்களை முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று:
கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (ஜிபிணிளிலிளிநிசீ) உருவாக்கியதில் முதன்மையானவரும் அதன் பால் மக்கள் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான பவுல் (ஷிt.றிகிஹிலி) தான்.
ஆனால் இஸ்லாத்தின் இறைமையியல் (ஜிபிணிளிலிளிநிசீ), அதன் அறநெறி, ஒழுக்கவியல் அனைத்தையும் எடுத்துரைத்தவர் முஹம்மது நபிதான். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்டாக அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனிதக் குர்ஆனின் போதகரும் அவர்தான்.
முஹம்மது நபியின் வாழ்நாளிலேயே இறைச்செய்திகள் பதிவுச் செய்யப்பட்டன. நபி அவர்கள் இறந்து சில ஆண்டில் அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துக்களும் போதனைகளும் கொள்கைகளும் குர்ஆனுடன் நெருக்கமானவை.
ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) கிடைக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி ஏற்படுத்திய தாக்கம், மிகப்பெரும் அளவிலானதாகும். கிறிஸ்தவத்தின் மீது ஏசுநாதரும் தூய பவுலும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.
சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.
இரண்டாவது:
மேலும், ஏசுநாதரைப் போன்று அல்லாமல் முஹம்மது நபி ஆன்மீகத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள்.
உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்குப் பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார், எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிக்கத் தலைவராக இடம் பெறலாம்.
இவ்வாறு அறிஞர் மைக்கேல் ஹார்ட் குறிப்பிடுகிறார்.
உலகளாவிய அளவில் 175 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக முஹம்மது நபி அவர்களை நேசித்துக் கொண்டிருந்தாலும், அவர்களது ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை, அழகிய குடும்ப வாழ்க்கை, அதிலிருந்து உலகத்திற்கு அவர் எடுத்துச் சொன்ன போதனைகள், அதனால் ஏற்பட்ட எழுச்சி, புரட்சிகள், அதை 14 நூற்றாண்டுகளாகப் பின்பற்றுகின்ற தலைமுறையினர் இவற்றை எல்லாம் பார்த்து மைக்கேல் ஹார்ட் போன்ற பல கோடிக்கணக்கான மக்கள் முஹம்மது நபி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை உலகத்திற்குப் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.
புரட்சி மிக்க, புத்துணர்ச்சி மிக்க ஒரு தலைமுறையினரை உருவாக்கிட முஹம்மது நபியவர்களின் ஆன்மீகத் தலைமை பற்றியும் ஆட்சித் தலைமை பற்றியும் குடும்ப வாழ்வைப் பற்றியும் உலகத்திற்குச் சொல்ல வேண்டிய ஒரு சில முக்கியக் குறிப்புகளை இந்தத் தொடரில் இடம் பெறச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் : முஹம்மது
பிறப்பு : கி.பி. 570
ஊர் : சவுதி அரேபியாவில் உள்ள மக்கா.
குலம் : மிக உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்தார். குலப் பெருமையை ஒழித்தார்கள்.
நிறம் : அழகிய சிவந்த நிறம் கொண்டவர்கள். நிறவெறியை ஒழித்தார்கள்.
மொழி : தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்ட அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மொழிவெறியை ஒழித்தார்கள்.
கல்வி : பள்ளி சென்று படிக்கவில்லை. கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சென்று பட்டங்கள் பெறவில்லை. எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தபோதிலும் இயல்புடன், இனிமையுடன் அழகிய நடையில் அரபுமொழி பேசினார். அரபுலகத்தை வென்றார்கள்.
தாய் : ஆமினா
தந்தை : அப்துல்லாஹ்
தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள்.
அனாதையாகப் பிறந்தார்கள். ஆறு வயதில் தன் தாயையும் இழந்து ஆதரவற்று நின்றார்கள்.
அதற்குப் பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அவருக்குப் பிறகு பெரிய தந்தை அபூதாலிபின் ஆதரவிலும் வளர்ந்தார்கள்.
சிறு வயதிலேயே யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்து, தமது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டார்கள்.
போட்டி, பொறாமை, மோசடி, கொள்ளை, வழிப்பறிகளால் சூழ்ந்த அன்றைய அரபு தேசத்தில் இளமைக்காலத்தில் தன் பெரிய தந்தை அபூதாலிபுடன் சிரியா தேசம் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். உண்மையாளர் என்ற பெயரையும் பெற்றார்.
ஏழைகளுக்கு உதவி செய்வது, பாதிக்கப் பட்டோருக்குக் கை கொடுப்பது, அநீதி இழைக்கப் பட்டவனுக்காக ஆர்ப்பரிப்பது, சிக்கலான பல்வேறு பிரச்சனைகளில் தன்னிடம் முறையிடும் மக்களுக்கு நீதமான தீர்ப்புகள் வழங்கி சமநீதியை எடுத்துரைப்பது போன்ற பொதுநலச் சேவைகளை சிறந்த முறையில் செய்தார்.
விபச்சாரம் எனும் மானக்கேடான செயல்கள் மலிந்து காணப்பட்ட பூமியில் ஒழுக்க சீலராகவும் கற்புக்கரசராகவும் விளங்கினார். தமது 25ஆவது வயதில் கதீஜா எனும் விதவைப் பெண்ணை மணந்தார்.
தூய்மை, நேர்மை, ஒழுக்கம், தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் நண்பர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்ற சமூக நலன், அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற சமூகநீதி, இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ள ஒருவரே ஒட்டுமொத்த உலகத்திற்கும் வழிகாட்டத் தகுதியானவர் என்ற நிலையில் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்படுகின்றார்.
நாற்பதாவது வயதில் மக்காவில் உள்ள ஹிரா என்ற மலை உச்சியில் தூதர் என்ற பொறுப்பை இறைவன் புறத்திலிருந்து பெற்றார்.
ஒரே ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் எனவும், கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும் என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாக அறிவித்தார்.
இந்த சீர்திருத்தப் பிரச்சாரத்தைத் தமது சொந்த ஊரான மக்காவில் பல்வேறு சிரமங்களுக்கிடையில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிமூன்று ஆண்டுகள் எடுத்துரைத்தார்.
பிறகு மக்காவில் இந்த சமூக சீர்திருத்தம் மற்றும் சத்திய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்ய இயலாத நெருக்கடிக்கு ஆளான பிறகு, வேறு வழியில்லாமல் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்று பத்தாண்டுகள் அங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்காவில் முஹம்மது நபியவர்கள் எடுத்துரைத்த சத்திய மார்க்கம் மற்றும் சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தோழர்களும் மதீனா வந்தடைந்தார்கள்.
மதீனாவில் நபிகளாருடைய நேர்மையையும் ஒழுக்கத்தையும் சேவையையும் பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். இறுதியில் மதீனா என்ற அந்தப் பகுதிக்கு முஹம்மது நபியவர்களை ஆட்சியாளராகவும் நியமித்தார்கள்.
13 ஆண்டுகாலம் தூதுத்துவப் பணியைச் செய்து ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம், இறுதிப் பத்தாண்டுகளில் ஆன்மீகத் தலைவர் என்ற பொறுப்புடன் ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பையும் பெற்று செவ்வனே செயலாற்றினார்கள்.
23 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குக் பிறகு 63ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.
ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம்
ஒரு நாட்டைப் பண்படுத்தவும் அதில் வளமான ஆட்சியை நிலைப்படுத்தவும் மற்ற எல்லா நாடுகளை விடவும் தனது நாட்டை வல்லரசு நாடாக மாற்றவும் அதிலும் குறிப்பாக சர்வாதிகாரம் இல்லாமல் சமநீதியோடும் நியதியோடும் உருவாக்கிட ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் பத்தே ஆண்டுகளில் இந்தச் சீர்திருத்தங்களை நபிகளாரால் கொண்டு வர முடிந்தது எப்படி? விடை அறிவோம், வாருங்கள்!
தொடரும் இன்ஷா அல்லாஹ்…
சீரழிவை நோக்கி
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.
இறைவன் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி அற்புதமான முறையில் கற்றுத் தருகின்றான். குறிப்பாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் எவ்வாறு வாழக்கூடாது என்பதைப் பற்றியும் இஸ்லாம் அற்புதமான முறையில் எச்சரிக்கையோடு வழிகாட்டித் தருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் நவீன கருவிகளின் வளர்ச்சிகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு வடிவத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நவீன கருவிகளின் வளர்ச்சி, மனிதர்களை எந்தளவிற்கு முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்றதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்கு வழிகேட்டின் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்ற வாசல்களும் திறந்து விடப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
இன்றைய நவீன காலகட்டம் என்பது முஸ்லிமான ஆண்களையும் பெண்களையும் இன்னபிற மனிதர்களையும் இலகுவான முறையில் நரக நெருப்பில் தள்ளி விடக்கூடிய மோசமான கால கட்டமாகவும், வழிகேட்டில் விழுந்து விடக்கூடிய வாசலைத் திறந்து விடக் கூடியதாகவும் ஷைத்தானுடைய சேட்டைகள், தூண்டுதல்கள் அதிகமதிகம் இருப்பதையும் பார்க்கிறோம். இன்றைய நவீன யுகத்தில் நல்லவனாக வாழ்வதே மிக மிகக் கடினம் என்று சொல்கின்ற அளவுக்கு, இன்றைய காலச் சூழ்நிலையின் விபரீதத்தைப் பார்க்கின்றோம்.
உலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள மற்ற உயிரினங்களை விட மனிதகுலத்தை இறைவன் மேன்மைப்படுத்தியிருக்கின்றான். மற்ற உயிர்களைக் காட்டிலும் இறைவன் மனிதர்களை மேன்மைப்படுத்தியிருப்பது சிந்தனை அறிவு என்ற பகுத்து உணர்கின்ற அறிவை வழங்கியிருப்பதன் காரணத்தினால் தான்.
ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம்.
அல்குர்ஆன் 17:70
இறைவன் மனிதர்களை மற்ற உயிர்களை விட வேறுபடுத்தி, சிறப்புப்படுத்தி, மேன்மைப் படுத்தியிருக்க, மனிதர்களோ இறைவன் வழங்கியிருக்கின்ற கண்ணியத்தையும், மகத்துவத்தையும் மறந்தவர்களாக, சீரழிவின் பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.
அல்குர்ஆன் 6:44
இறைவன் புறத்திலிருந்து வழங்கப் பட்டிருக்கின்ற அறிவுரையையும் கண்ணியத்தையும் சிறப்பையும் மறந்து தன்னுடைய மனம் போன போக்கில், மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு யார் நடக்கின்றார்களோ அவர்களுக்கு வழிகேட்டின் வாசல்கள் அனைத்தையும் இறைவன் திறந்து விட்டு சீரழிய விட்டு விடுவான். பிறகு அவர்களுக்குத் திடீரென்று தண்டனை இறங்கி விடும்.
டிக்-டாக்கும், சீரழியும் இளைஞர்களும்
இன்றைய காலத்தில் இளமைப்பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆண்களையும், பெண்களையும் வேகமாக சீரழிவை நோக்கி இழுத்துச் செல்கின்ற பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளும் அறிவியல் சாதனங்களும் வளர்ந்துள்ளன. இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் ஏராளமான நன்மைகள் விளைந்தாலும் மனிதர்களுடைய உள்ளங்கள், குறிப்பாக இளைஞர்களுடைய உள்ளங்கள் தீமையைத் தான் அதிகம் தூண்டுகின்றன.
சமீப காலமாக இளம் வயதினரிடம் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்ற செயலி டிக் டாக் (ஜிவீளீ – ஜிஷீளீ). இந்தச் செயலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை நபர்களையும் தனக்கு அடிமையாக்கி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தச் செயலியின் தாக்கம் சமூகத்தில் அதிகப்படியாக உலா வருவதைப் பார்க்க முடிகின்றது.
எத்தனையோ ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்ற வேளையில், எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக, சென்சார் கூட இல்லாத அளவுக்கு டிக் டாக் செயலி மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
15 நொடிகள் இதில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நடிக்கலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் இந்த 15 நொடிகளில் காட்டப்படுகின்ற ஆபாசம் எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றது.
இந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னைத்தானே ஒரு ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ கற்பனை செய்து கொண்டு அதே போன்று வீடியோ எடுத்து அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்கின்றனர். இதை சமூக வலைதளங்களில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பகிர்கின்றனர். இதில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் டிக் டாக் வீடியோ செயலியில் வரும் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. டிக் டாக் செயலி மூலம் வெளியாகும் இளம் பெண்களின் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் செயலியை விமர்சிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிக் டாக் செயலி, இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட செயலி என்று சென்சார் டவர் நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சேட் போன்ற செயலிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு டிக் டாக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சீனாவின் (Byte Dance) என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது இந்த டிக் டாக் அப்ளிகேஷன். இது ஒரு குறிப்பிட்ட நபரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் செயலி என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒழுக்கத்தை விரும்புகின்ற மக்களிடத்தில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் இதுபோன்ற மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணநலன்களை டிக் டாக் செயலி குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது.
டிக் டாக் (Tik Tok) ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்த டிக்டாக் செயலி எவ்வளவு மோசமான பாதையின்பால் அழிவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றது என்பதைப் பற்றியான ஆய்வறிக்கை இந்த ஆப் பயன்பாட்டாளர்களுக்கும், பயன்படுத்துகின்ற பிள்ளைகளை கவனிப்பாரற்று விட்டு விடக்கூடிய பெற்றோர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.
இந்த ஆப் முன்வைக்கும் சுதந்திரக் கோட்பாடு,(“Raw, Real and without Boundaries”) அதாவது கட்டுப்பாடுகள் கிடையாது என்பதே. 12 வயது குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது.
இந்த அப்ளிகேஷன் இந்திய சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இளம் பெண்கள் ஆபாசம் பொதிந்த பாடல் வரிகளை சர்வ சாதாரணமாகப் பாடி, ஆடி மகிழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் பெண்களின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டு சீர்குலைப்பதாக இருந்தாலும் கூட அதைப் பற்றி எவ்வித நெருடலும், கூச்சமும் இல்லாமல் பாடுகின்றனர்.
கடந்த ஆண்டு, இந்தோனேசிய அரசாங்கம் இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. அந்நாட்டில் 1,70,000 பேர் டிக் டாக் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்த நிலையில் அது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி இந்தோனேசிய அரசு இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. பின்னர் சீனாவில் இருந்து டிக் டாக் பிரதிநிதிகள் ஜகார்தாவுக்கு விரைந்தனர். டிக் டாக் செயலியில் இருந்து ஆபாச கன்டன்ட்டை நீக்குவதாக உறுதியளித்த பின்னரே இந்தோனேசியா தடையை நீக்கியது.
அமெரிக்காவின் இணைய கண்காணிப்புத் தளமான காமன் சென்ஸ் (Common Sense) டிக் டாக் செயலியில் உள்ள வயது வந்தோருக்கான உள்ளீடுகளும் தனிநபர் சுதந்திரம் அத்துமீறப்படுவதற்கான அபாயமும் கண்காணிக்கப்பட வேண்டியது என்கிறது. எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டிக் டாக்கில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது எனப் பரிந்துரைக்கிறது.
ஆனால், வயது வரம்பைக் குறைப்பது டிக் டாக்கின் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதில் தயக்கம் காட்டுகிறது.
பிரான்ஸ் நாட்டில், 11 வயது முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 38% பேர் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளதாக அந்நாட்டின் இணயப் பயன்பாடு கண்காணிப்பு அமைப்பான ஜெனரேஷன் நியூமரிக் கூறுகிறது. அதேபோல் 58% பெண் பிள்ளைகள் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதனால், கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டு போலீஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். டிக் டாக் செயலியால் உங்களது பிள்ளைகள் பாலியல் ரீதியான தொல்லைகளில் சிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
இதுமாதிரியாக குழந்தைகள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் சூழல் என்பது பெற்றோர், கல்வியாளர்கள், மருத்துவர்களுக்கு புதியதொரு சவால். சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை எப்படி மீட்டெடுப்பது என்பதில் இன்னும் தெளிவான வரைமுறைகளை நிபுணர்களே வகுக்க முடியாத சூழலே நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இளம் தலைமுறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
மேலும், பள்ளிச் சீருடைகளை அணிந்து கொண்டு, தங்களைத் தாங்களே மிகப்பெரிய சினிமாக் கதாநாயகிகளாக எண்ணிக் கொண்டு டிக்டாக் செயலியில் தங்களின் முகத்தைக் காட்டுகின்றார்கள். இதுவே ஆபாச இணயதளத்தில் தங்களைத் தள்ளி விடுகின்ற ஒரு காரியமாக அமைந்து விடுகின்றது.
மேலும், இதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களோடு சேர்ந்து கூத்தும், கும்மாளமும் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
மேலும் குத்துப்பாடல்கள், கேடுகெட்ட இரட்டை அர்த்தத்தை தருகின்ற பாடல்களுக்கு நாவசைக்கின்ற பெண்களின் முகங்கள் அப்படியே ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.
ஷைத்தானின் வலையில் விழுந்து சீரழியாதீர்
இதுபோன்ற செயலிகளின் மூலமாகவும் வலைத்தளங்களின் மூலமாகவும் செல்ஃபோன்களின் மூலமாகவும் சீரழிவின் பாதையை நோக்கி அழைத்துக் கொண்டிருப்பது ஷைத்தான் தான். ஆனால் இதை உணராதவர்களாக கேடுகெட்ட காரியங்களை செய்து அதற்குப் பலியாகி அடிமையாகக்கூடிய அவலநிலையைப் பார்க்கின்றோம்.
“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்’’ என்று கூறினான்.
“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்’’ (என்றும் ஷைத்தான் கூறினான்).
அல்குர்ஆன் 7:16,17
“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’’ என்று கூறினான்.
அல்குர்ஆன் 15:40
நாம் செய்துவருகின்ற அனைத்துக் கெட்ட காரியங்களும், அருவருக்கத்தக்க காரியங்களும் தீமைகளை நன்மைகளைப் போன்று ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுவது தான் என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றான்.
துரோகியைத் தெரிந்து கொள்வோம்!!
மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்குப் பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
அல்குர்ஆன் 35:6
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
அல்குர்ஆன் 2:168
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் 12:5
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:29
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
அல்குர்ஆன் 7:27
இன்னும் இதுபோன்ற ஏராளமான உபதேசங்களில் ஷைத்தான் மனிதர்களுக்கு கேவலத்தையும் அவமானத்தையும் பெற்றுத் தருகின்ற பகிரங்க எதிரியாகவும் துரோகியாகவும் இருக்கின்றான் என்று இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
ஆண்ட்ராய்ட் சீரழிவுகள்
அறிவியல் சாதனங்களில் முன்னணியில் இருப்பது ஒவ்வொருவருடைய கரங்களிலே தவழ்கின்ற ஆண்ட்ராய்ட் செல்போன்கள். இந்த செல்போன்களின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியாக வளர்ந்து அதிகமான நன்மைகளை வழங்கினாலும், அதிகமான தீமைகளின் காரணத்தினால் பல நபர்களுடைய வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக இளைஞர்கள் ஆண்ட்ராய்ட் அபத்தங்களினால் சீரழிவின் உச்சத்தில் விழுந்து விடுகின்றார்கள். சர்வ சாதாரணமாக வாட்ஸ்அப், முகநூல், யூ-டியூப் போன்ற வலைதளங்களின் மூலமாக ஆண்கள் அந்நியப் பெண்களிடத்தில் பேசுவதும், பெண்கள் அந்நிய ஆண்களிடத்தில் பேசுவதும், கொஞ்சிக் குலாவுவதும், காதல் என்ற பெயரில் கேடுகெட்ட காரியத்தில் விழுந்து சீரழிவதையும், கேவலமான ஆபாசப்படங்கள் பார்த்துச் சீரழிவதையும் பார்க்கின்றோம்.
நம்முடைய உடல் உறுப்புகளை விபச்சாரத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அற்புதமான முறையில் சில உபதேசங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மனிதனுடைய இரண்டு கண்கள் விபச்சாரம் செய்கின்றது. மனிதனுடைய இரண்டு கைகள் விபச்சாரம் செய்கின்றது. மனிதனுடைய இரண்டு கால்கள் விபச்சாரம் செய்கின்றது. இவைகள் அனைத்தையும் மறைஉறுப்பு உணமைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகின்றது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்னத் அஹ்மத் 3912
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
ஆதாரம்: புகாரி 6243
இந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கின்ற கடைசிக் கட்டத்தைத் தவிர மற்ற அனைத்து விதமான செயல்பாடுகளும் செல்ஃபோன்களில் உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியூப் போன்ற பல்வேறு வலைத்தளங்களில் உடல் உறுப்புகளின் விபச்சாரம் சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்றைக்கு சினிமா பாடல்களைப் பார்ப்பதிலும், கேட்பதிலும், இரசிப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், சினிமா பாடல்களில் ஆபாசக் கருத்துக்களும், இரண்டு அர்த்தத்தைத் தரக்கூடிய வார்த்தைகளும் உலாவந்து சீரழிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும்.
ஆதாரம்: புகாரி 6155
ஒரு மனிதன் தன்னுடைய உள்ளத்தில் கவிதை, பாடல் போன்ற பல்வேறு விஷயங்களால் நிரம்பியிருப்பதை விட, ஒரு மனிதனுக்கு உடலில் காயம் ஏற்பட்டால் அந்தக் காயம் ஆறாமல், அதிலிருந்து சீழ், சலம் வெளிப்படும். சீழ், சலத்தைப் பார்த்தாலே வாந்தி வருமளவுக்கு அதனுடைய துர்வாடை வீசும். அப்படிப்பட்ட சீழ், சலத்தால் தங்களுடைய உள்ளங்களை நிரப்பிக் கொள்வது சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.
அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு நேரத்தையும், காலத்தையும் வீணாக்கி, நரக நெருப்பின் பக்கம் இழுத்துச் செல்லக்கூடிய சினிமாக்களையும், கூத்தாடிகளையும் ரசிப்பதன் பக்கம் சென்று, தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டக்கூடியவர்களுக்கு அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கை:
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் 17:32
வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும் இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!
அல்குர்ஆன் 6:151
அவர்கள் வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் 23:3
இறைவனின் எச்சரிக்கை
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
“என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?’’ என்று அவன் கேட்பான்.
“அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்’’ என்று (இறைவன்) கூறுவான்.
தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
அல்குர்ஆன் 20:124-127
இந்த வசனங்களை ஆழமாகப் படித்துப் பார்த்தால், இறைவனின் கடுமையான எச்சரிக்கையை நம்முடைய கண்களுக்கு முன்னால் படம் பிடித்துக் காட்டுகின்றது. இறைவனின் வரம்புகளையும் போதனைகளையும் அறிவுரைகளையும் மீறி நடப்போரை மறுமை நாளில் இறைவன் குருடர்களாக எழுப்புவான்.
இந்த உலகத்தில் இறைவனுக்காகவே கஷ்டப்பட்டு வாழ்ந்து, கடும் சிரமத்திற்கு மத்தியில் அதிகமான நல்லமல்களைச் செய்து வந்த நாம், சில முட்டாள்தனமான செயல்களின் காரணத்தினால் நம்முடைய பார்வைப்புலன்களையும், செவிப்புலன்களையும், இன்னபிற உடல் உறுப்புகளையும் செம்மையாக, சரியாகப் பயன்படுத்தாமல், கேடுகெட்ட காரியத்திற்குப் பயன்படுத்திய காரணத்தினால், மறுமைநாளில் இறைவனைக் காண்கின்ற அற்புதமான பாக்கியத்தையும் கூட இழக்க நேரிடலாம்.
பெற்றோர்களின் கையில்…
மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடாமல் ஒழுக்கமான முறையில் வாழ வேண்டும் என்றால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை பேணிப் பாதுகாக்கக் கடமைட்டுள்ளோம். குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் தங்களின் பிள்ளைகளை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
முன்னொரு காலம் இருந்தது. பெண்கள் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், வெட்க உணர்வோடும் வாழ்ந்து வந்த காலம் அது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில நல்ல பெண்களைத் தவிர, பெரும்பாலான பெண்கள் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும், ஆபாச உணர்வுகளை தூண்டுவதற்காகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள்.
பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் பாக்கியம் பெற்றவர்கள். பெண் குழந்தைகள் இறைவனின் அருட்கொடை, பரக்கத், ரஹ்மத், நற்செய்தி. தங்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை, கஷ்டங்களை சகித்துக் கொண்டு ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக நம்முடைய பிள்ளைகள் வளர்க்கப்பட்டால் நாம் அடைகின்ற நன்மைகள் ஏராளம்! ஏராளம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்’’ என்றார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
ஆதாரம்: முஸ்லிம் 5125
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்‘’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 5127
பெண்குழந்தைகள் மூலமாக பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள், சிரமங்கள் ஏற்பட்டாலும், அந்தச் சோதனைகளையெல்லாம் சகித்துக் கொண்டு மார்க்க அடிப்படையில், ஒழுக்கத்தோடு நம்முடைய பிள்ளைகளை வளர்த்தெடுத்தால் அந்தக் குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோரை நரகத்திலிருந்து காப்பாற்றும் திரையாக இருக்கும்.
இன்றைய காலத்தில் பெண்குழந்தைகள் நரக நெருப்பில் விழுகின்ற காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், ஆண் – பெண் இருவரும் சேர்ந்து படிக்கின்ற கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் ஒரு சிலர் சீரழிந்து சின்னாபின்னமாகி தங்கள் வாழ்க்கையைக் குழிதோண்டி புதைப்பதைப் பார்க்கின்றோம்.
பெற்றோர்களின் அலட்சியத்தின் காரணத்தினால், நம்முடைய பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் என்று நம்பி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் காரணத்தினால் இவர்கள் தாங்களும் கெட்டு, பெற்றோருக்கும் அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விடுகின்றார்கள
எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களாகத்தான் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். ஆனால், காலச்சூழல் அவர்களைக் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை கவனத்துடனும், கூரிய பார்வையுடனும் கவனித்து வந்தால் அந்நிய ஆண்களோடு தொடர்பு வைப்பது, காதலிப்பது, செல்ஃபோன்களில் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது, வீட்டை விட்டு ஓடிப் போவது போன்ற பல்வேறு கேடுகெட்ட காரியங்களுக்கு மரணஅடி கொடுத்து விடலாம்.
பெற்றோர்களே! சீரழிவைத் தடுத்து நிறுத்துவது உங்களுடைய கரங்களிலே இருக்கின்றது. பிள்ளைகளுக்கு மார்க்க விஷயங்களை அதிகம் கற்றுக் கொடுத்து அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
அவர்களுக்கு ஷைத்தான் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
அல்குர்ஆன் 4:120
உங்கள் பிள்ளைகள் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாமல் பாதுகாப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்
அப்துல்லாஹ் (இஸ்லாமியக் கல்லூரி)
ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான் இருக்கிறது.
அடிப்படையில் இதற்குரிய காரணம், மனிதன் அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அன்பையும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை என்பதே! தமக்கு ஏதேனும் ஒரு சோதனை ஏற்பட்டால் அதன் தாக்கத்தைத் தாங்க முடியாமல் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடுகிறான்.
இதுபோன்று பலவீனம் அடையாமல் இறைவனை எப்போதும் சார்ந்திருக்க வேண்டுமே தவிர சோர்ந்திருக்கக் கூடாது என்று பல வசனங்கள் நம்முடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன.
எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் (64:11)
மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.
அல்குர்ஆன் (25:58)
நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் (8:2)
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (9:51)
அல்லாஹ்வையே சாராமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்கள் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
அல்குர்ஆன் (14:12)
அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.
அல்குர்ஆன் (65:3)
இதுபோன்று இன்னும் ஏராளமான இறை வசனங்கள் நமக்குச் சொல்ல வரக்கூடிய கருத்து, இறைவனை நாம் சார்ந்திருந்தால் உலகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்துத் துன்பங்களையும் அவன் தூள் தூளாக்கி விடுவான். இதற்குரிய ஆணித்தரமான ஆதாரமாக நபிகளாரின் வாழ்க்கைச் சம்பவம் நமக்கு ஒரு முன்னுதாரணம்.
நபித்துவத்தின் ஆரம்பக்கட்ட நிலையில் ஹிஜ்ரத் செய்து பல நபித்தோழர்கள் சென்றுவிட்டார்கள். அந்நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்யாமல் அல்லாஹ்வின் அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
புறப்படுவதற்குரிய அனுமதி அல்லாஹ் விடமிருந்து வந்து விட்டது. ஒருபுறம் நபியவர்களும் அபூபக்ர் சித்தீக் அவர்களும் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் குறைஷியர்கள் வெறி கொண்டு நபிகளாரைத் துரத்தி வந்துகொண்டிருந்தார்கள். இதையறிந்த நபியவர்கள் உடனே ஒரு சிறிய குகையில் இருவரும் தஞ்சம் புகுந்தார்கள். ஆபத்தான அந்தத் தருணத்தில் அபூபக்ர் சித்தீக் (ரலி), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவர் நம்மைப் பார்த்தால் கூட நாம் மாட்டிக் கொள்வோம்’’ என்று பதறியவாறு சொன்னார்கள். அதற்கு ‘‘தோழரே! பயப்படாதீர். இறைவன் நம்முடன் இருக்கிறான்’’ என்று உரத்துச் சொன்னார்கள். இதை இறைவன் தன் திருமறைக் குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.
நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’’ என்று அவர் தமது தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் (9:40)
இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் அறிவுரை, இந்த உலகத்தில் வாழும் போது நம்முடைய நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், இறைவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. அதைத் தான் நபிகளார் நமக்குப் பாடமாகக் கற்றுக் கொடுத்தார்கள்.
இத்துடன் நம்மை வலுப்படுத்தும் மற்றொரு சம்பவம் நபி மூஸா அவர்களின் வரலாறு.
ஒரு கட்டத்தில் தம்முடைய கூட்டத்தாரை ஃபிர்அவ்னின் படையினரிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்திருந்த சமயம். அச்சமயத்தில் நபி மூஸா (அலை) அவர்களின் தோழர்களுடைய அடிவயிறு ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. ஏனென்றால் எதிரே பார்த்தால் தப்பித்துச் செல்லாத படி பறந்து விரிந்து காணப்படும் கடல். பின்னால் ஃபிர்அவ்னின் படையினர் துரத்தி வருகின்றார்கள். அப்போது மூஸா நபியின் தோழர்கள் சொன்னார்கள். ‘‘மூசாவே! இத்துடன் நம்முடைய கதை முடிந்துவிட்டது இனிமேல் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்ற முடிவிற்கு வந்து விட்ட சமயத்தில், மூஸா (அலை) கூறியதை இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துச் சொல்கிறான். அல்லாஹ் மீதுள்ள நம்பிக்கையை அவர் பிரகடனப்படுத்தினார்.
இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’’ என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
“அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 26:61,62)
இவ்வாறு மூஸா நபியின் இறை நம்பிக்கை இறுதி நேரத்திலும் எதிரிகளை வென்று காட்டியது.
இறைவனை சார்ந்திருப்பதைப் பற்றிய செய்திகள் இத்துடன் முடிந்து விடவில்லை. முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணின் இறை நம்பிக்கை பற்றிய செய்தி நமக்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது. அதையும் நாம் தெரிந்து கொள்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
(மழலைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்:) ஒரு குழந்தை தன் தாயிடம் பாலருந்திக் கொண்டிருந்தது. அப்போது வனப்பு மிக்க ஒரு மனிதன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், “இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!’’ என்று பிரார்த்தித்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப் பார்த்து, “இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே’’ என்று பேசியது. பிறகு மறுபடியும் மார்புக்குச் சென்று பால் அருந்தலாயிற்று.
பிறகு தாயும் மகவும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, “நீ விபச்சாரம் செய்தாய்; திருடினாய்’’ என்று கூறி அடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்’’ என்று கூறிக்கொண்டிருந்தாள்.
அப்போது அக்குழந்தையின் தாய், “இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கி விடாதே’’ என்று கூறினாள். உடனே அக் குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), “இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!’’ என்று கூறியது.
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4986)
இந்த ஹதீஸ் நமக்குத் தரக்கூடிய மிக முக்கிய படிப்பினை, ஓர் ஆண் மீது அபாண்டமாக ஒழுக்கத்தைப் பற்றி ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டால் சில காலங்கள் கழிந்த பிறகு அவனால் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும். குற்றம் சுமத்தப்படும் போதும் கூட, பெருமளவு இழிவை அவன் சந்திக்கப் போவதில்லை.
ஆனால் இதே குற்றச்சாட்டு ஒரு பெண் மீது சுமத்தப்பட்டால் அவளுடைய வாழ்க்கை முழுதும் இருண்ட உலகமாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் நெருப்பில் இருப்பதை போல சமூகத்தால் பழிக்கப்படுவாள். அது போன்ற ஒரு நிலை தான் மேலுள்ள ஹதீஸில், மக்களால் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டது. அந்தத் தருணத்திலும் கூட அனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு “அல்லாஹ் எனக்குப் போதுமானவன், பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்’’ என்று அந்தப் பெண்மணி சொன்னது போல நம்முடைய உள்ளத்திலும் உறுதிப்பாட்டை வளர்க்கவேண்டும்.
எனவே தான் நம்முடைய மார்க்கம் நமக்கு சொல்லித் தருகின்ற பாடம், அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டும் தெரியுமா? மனிதனால் செய்ய முடிவதையும் அல்லாஹ் செய்வான்; மனிதனால் செய்ய முடியாததையும் அல்லாஹ் செய்து முடிப்பான் என்ற உறுதிப்பாட்டை நம்முடைய உள்ளத்தில் பசுமரத்தாணியைப் போல் பதிவு செய்திட வேண்டும். அல்லாஹ் நமக்கு உதவி செய்ய நாடினால் நம்மை வெல்ல எவராலும் முடியாது என்பதைத் தன் வசனத்தின் மூலமாகத் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:160)
திருக்குர்ஆனில் இடம்பெறும் மக்கீ, மதனீ அத்தியாயங்கள்
எம்.ஐ.சுலைமான்
திருக்குர்ஆன் அத்தியாயங்களின் முகப்பில் சில அத்தியாயங்கள் மக்கீ என்றும் சில அத்தியாயங்கள் மதனீ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நபிகளார் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் கருத்து என்ன? எதன் அடிப்படையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதைக் காண்போம்.
மக்கீ என்பதன் நேரடிப் பொருள் மக்காவைச் சார்ந்தது. மதனீ என்பதன் நேரடிப் பொருள், மதீனாவைச் சார்ந்தது.
மக்கீ என்றால் என்ன? மதனீ என்றால் என்பதில் மூன்று கருத்துக்கள் அறிஞர்களிடம் இடம்பெற்றுள்ளது.
1. நபிகளார் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னால் உள்ள இறங்கிய வசனங்கள் மக்கீ வகையைச் சார்ந்ததாகும்.
ஹிஜ்ரத் செய்ததற்குப் பின்னர் இறங்கிய வசனங்கள் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.
அதாவது நபிகளாரின் மக்கா வாழ்க்கையில் சுமார் 13 ஆண்டு காலத்தில் எந்த இடத்தில் ஒரு வசனம் இறங்கியிருந்தாலும் சரி! அது மக்கீ வகையைச் சார்ந்தது என்று சொல்லப்படும்.
நபிகளாரின் மதீனா வாழ்க்கையில் சுமார் 10 ஆண்டு காலத்தில் எந்த இடத்தில் ஒரு வசனம் இறங்கியிருந்தாலும் சரி! அது மதனீ வகையைச் சார்ந்ததாகும்.
2. மக்காவாசிகளை முன்னோக்கி அழைக்கப் படும் வசனங்கள் மக்கீ வகையைச் சார்ந்ததாகும். மதீனாவாசிகளை நோக்கி அழைக்கப்படும் வசனங்கள் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.
3. மக்கா என்ற நகரில் இறங்கிய அனைத்து வசனங்களும் மக்கீ வகையைச் சார்ந்ததாகும். மதீனா என்ற நகரில் இறங்கிய அனைத்து வசனங்களும் மதனீ வகையைச் சார்ந்ததாகும்.
இந்த மூன்று கருத்துக்களில் முதலாவதே சரியானதாகும். ஏனெனில் அந்தக் கருத்துப்படியே அனைத்து வசனங்களையும் இரு வகையில் உள்ளடக்க முடியும். மற்ற இரண்டு கருத்துக்கள்படி அனைத்து வசனங்களையும் இரு வகைகளில் உள்ளடக்க முடியாது.
சில வசனங்கள் யாரையும் முன்னோக்கிப் பேசாமல் பொதுவாகச் சொல்பவையும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதை இரண்டாம் கருத்துள்ளவர்களின் பார்வையில் எதிலும் சேர்க்க முடியாமல் போகும்.
குறிப்பாக முதல் அத்தியாயமான ஃபாத்திஹா அத்தியாயம் யாரையும் முன்னோக்கிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கா நகரில் இறங்கியது மக்கீ என்றும் மதீனா நகரில் இறங்கியது மதனீ என்றும் மூன்றாவது சாரார் கூறும் கருத்தின்படி மக்கா, மதீனா அல்லாத பகுதியில் இறங்கிய வசனங்களை எதில் சேர்ப்பது என்ற கேள்வி எழும்.
உதாரணமாக, முனாஃபிகூன் என்ற 63வது அத்தியாயம் தபூக் போரில் இறங்கியது. (புகாரி 4900, திர்மிதீ 3236) இது போன்று மக்கா, மதீனா அல்லாத இடங்களில் இறங்கிய வசனங்களை இவர்களின் கருத்துப்படி இரண்டில் எந்த ஒன்றோடும் சேர்க்க முடியாது. எனவே முதல் சாரரின் கருத்தே ஏற்புடையதாக உள்ளது.
எவ்வாறு அறிந்து கொள்வது?
எந்த வசனங்கள் அல்லது எந்த அத்தியாயங்கள் மக்கீ வகையைச் சார்ந்தது? அல்லது மதனீ வகையைச் சார்ந்தது என்று எப்படிக் கண்டுகொள்வது?
நபித்தோழர்களின் நேரடியான கூற்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், ‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப் படுத்திவிட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன் (5:3)’ என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்கள்: புகாரி 45, முஸ்லிம் 5740
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அலகுர்ஆன் 5:3)
என்ற வசனம் எப்போது இறங்கியது என்ற விவரம் மேற்கண்ட நபிமொழிகளில் கிடைக்கிறது.
அரஃபா என்ற இடத்தில் நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கியது என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபிகளார் தன்னுடைய மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரீ 10ல் தான் ஹஜ் செய்தார்கள். எனவே இந்த வசனம் மதனீ வகையைச் சார்ந்தது என்று ஐயமின்றி சொல்லலாம்.
(நபியே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
அல்குர்ஆன் 26:214
இந்த வசனம் மக்கீ வகையைச் சார்ந்தது என்பதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள் என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 2753, முஸ்லிம் 348
அல்குர்ஆன் 26:214 என்ற வசனம் இறங்கிய போது மக்காவிலிருந்த தம் உறவினர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் மறுமை வாழ்க்கைப் பற்றி எச்சரிக்கை செய்ததலிருந்து இது நபிகளாரின் மக்கா வாழ்க்கையில் நடந்தது என்பதையும் இது மக்கீ வகையைச் சார்ந்தது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
நபித்தோழர்கள் கூற்று அல்லாமல், வசனங்களில் இடம்பெறும் கருத்துக்களைக் கொண்டும் அது மக்கீயா? அல்லது மதனீயா? என்று புரிந்து கொள்ளலாம்.
நபிகளாரின் மக்கா வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? மதீனா வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? அப்போது அவர்களின் சூழ்நிலைகள் எவ்வாறு இருந்தது? என்பதை அடிப்படையாக வைத்து அவை மக்கீயா? மதனீயா என்று விளங்கிக் கொள்ளலாம்.
இது தொடர்பாக ஆய்வு செய்த அறிஞர்கள் மக்கீய்யா வகை சார்ந்த வசனங்களில் இடம் பெறும் கருத்துக்களையும் மதீனிய்யா வகை சார்ந்த வசனங்களில் இடம் பெறும் கருத்துக்களையும் வகைப்படுத்தியுள்ளனர்.
மக்கீய்யா வகை சார்ந்த வசனங்களில் எவ்வகை கருத்துக்கள் இடம்பெறும் என்பதை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவைகள் வருமாறு :
1. ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
كلا
2. கல்லா என்ற சொல் இடம்பெறும் வசனங்களைக் கொண்ட அத்தியாயங்கள்.
3. ‘மனிதர்களே!’ என்றழைக்கும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
4. நபிமார்கள் வரலாறு சொல்லப்படும் வசனங்கள், முந்தைய சமுதாயங்களைப் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
5. பகரா அத்தியாயத்தைத் தவிர்த்து ஆதம் (அலை), இப்லீஸ் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
6. பகரா, ஆலு இம்ரான் அத்தியாயங்களைத் தவிர்த்து அலிஃப் லாம் மீம், அலிஃப் லாம் ரா, ஹா மீம் என்று தனி எழுத்துக்களாகத் துவங்கும் அத்தியாயங்கள்.
7. ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைத்தல், மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் அகியவற்றைக் குறிப்பிடுதல், இணை வைப்பவர்களின் வாதங்களுக்குப் பதில் அளித்தல் போன்று இடம்பெறும் அத்தியாயங்கள்.
8. கொலை செய்தல், அனாதைகளின் சொத்துக்களை அபகரித்தல், பெண் குழந்தைகளைக் கொல்லுதல் போன்ற கருத்துக்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
9. இணைவைப்பவர்களின் கெடுதல்கள், நபிகளாருக்கு ஆறுதல் கூறுதல் போன்ற கருத்துக்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
10. திருக்குர்ஆனின் சிறப்புகளைக் கூறி இதுபோன்று கொண்டு வர முடியுமா? என்று சவால் விடும் வசனங்கள் இடம்பெறும் அத்தியாயங்கள்.
இதைப் போன்று மதனீ வகை சார்ந்த அத்தியாயங்களையும் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
1. கடமை சார்ந்த கட்டளைகள் மற்றும் தண்டனை சார்ந்த கட்டளைகள் இடம்பெறும் அத்தியாயங்கள்.
2. நயவஞ்சகர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் அத்தியாயங்கள்.
3. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் வாதிடும் வசனங்கள் இடம்பெற்ற அத்தியாயங்கள்.
4. ‘ஈமான் கொண்டவர்களே!’ என்று துவங்கும் வசனங்கள் இடம்பெறும் அத்தியாயங்கள்.
5. மார்க்கம் தொடர்பான சட்டங்கள் இடம் பெறும் வசனங்கள் அத்தியாயங்கள். தொழுகை, உளு, தயம்மும், நோன்பு, ஹஜ் போன்றவை.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு வசனம் மக்கீயா? அல்லது மதனீயா என்று கண்டுபிடிக்கலாம் என்று அறிஞர்கள் விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
ஆனால் இந்த விதிகளுக்கு மாற்றமாகவும் சில அத்தியாயங்கள், சில வசனங்கள் அமைந்துள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து மேலும் தகவல்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
இறை சொர்க்கத்தில் இணையில்லா இல்லங்கள்
யாஸர் (இஸ்லாமியக் கல்லூரி)
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அதிலும் தற்போதைய காலத்தில் உணவு உடையைக் காட்டிலும் தனக்கென ஒரு வீட்டைச் சொந்தமாக ஆக்கிட வேண்டும் என்ற பேராவலுடன் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிலர் சற்று ஒரு படி மேலேறி, உணவிலும் உடையிலும் கூட நம்மில் சிலர் கஞ்சத்தனமாக இருந்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டைக் கட்டிட ஆவலில் இருக்கிறார்கள். இதில் மாட மாளிகைகளையும் கூட கோபுரத்தையும் அமைப்பது என்பது கானல் நீராக தான் இருக்கிறது.
உலகில் ஒரு வீடு வாங்குவது என்பது எவ்வளவு தேவையோ அதை விடப் பன்மடங்காக ஓரிறைக் கொள்கையில் உள்ள நாம், சுவன பூமியில் நமக்கென ஒரு வீட்டை அமைத்திடும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ்வும் மறுமையில் மாளிகைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறான்.
அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான்.
அல்குர்ஆன் 25:10
சுவனத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் ஒரு கூடாரத்தின் நிலையைக் குறித்து பெருமானார் கூறுவதைப் பாருங்கள்.
‘‘சொர்க்கத்தில் நடுவில் துளையுள்ள முத்தாலான கூடாரம் ஒன்று உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். இறை நம்பிக்கையாளருக்குரிய துணைவியர்கள் அதன் ஒவ்வொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அந்தத் துணைகளைச் சுற்றி வருவார்கள்’’ என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபுமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 5459
இந்த சுவன மாளிகைகளில் ஏற்படும் வேறுபாட்டைக் குறித்தும், அதனால் உயர் தகுதி பெற்ற சுவனவாசிகளை, தகுதி குறைந்த சுவனவாசிகள் ஏக்கதுடன் பார்ப்பதைப் பற்றி நபியவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
‘‘சொர்கவாசிகள் தங்கள் மேலேயள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி உமிழும் நட்சத்தித்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்’’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3256, முஸ்லிம் 5446
இதுவெல்லாம் போக, கற்பனைக்கு எட்டாத வகையில் இன்னொரு மாளிகையைக் குறித்தும் நபிமொழிகள் பேசுகின்றன.
நபி (ஸல்) கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மாளிகை இருக்கும். அதில் உட்பகுதியில் இருந்து வெளிப்பகுதியையும் வெளிப்பகுதியிலிருந்து உட்பகுதியையும் பார்க்க முடியும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான், பாகம்: 2, பக்:262, ஹாக்கிம் 270, தப்ரானீ கபீர், பாகம்:3, பக்:301
இவ்வளவு பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட கூடாரங்கள், மாளிகைகள் சுவனத்தில் வழங்கப்படுகிறது என்றால் நம்மால் அவற்றைப் பற்றிக் கற்பனையால் கூட வர்ணிக்க முடியாது என்பதை நம்மால் உணர முடிகிறது.
உலகத்தில் உள்ள வானுயர்ந்த அரச மாளிகையைக் காட்டிலும் இறைவனின் சுவனத்தில் உள்ள வீடே சிறந்தது என்பதை உணர்ந்து தன் விருப்பத்தை அல்லாஹ்விடம் முறையிடும் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலை) அவர்கள் முஃமின்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.
‘‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக’’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 66:11
இப்பெண்மணியின் வாழ்க்கையும், அவர் கேட்ட துஆவும் நம்பிக்கை கொண்டவர்களுக்கே முன்னுதாரணம் எனும் போது இந்த துஆவின் முக்கியத்துவம் நமக்குத் தெரிகிறது.
இன்னும் இறை திருப்தியைப் பெற்ற நபி தோழர்களுக்குக் கூட இறைவன் சுவன மாளிகை குறித்து நற்செய்தி சொன்னதாக நபிகளார் கூறினார்கள். அதில் கதீஜா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இஸ்மாயீல் பின் அபீ காலித் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் சொன்னார்களா?’’ என்று நான் கேட்டேன். அவர்கள், “ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி சொன்னார்கள்)’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 3819 முஸ்லிம் 4818
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3242, முஸ்லிம் 4767.
இதன் சிறப்பம்சத்தை உணர்ந்ததால் தான் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது மரணத்திற்குப் பிறகு நடத்தப்படும் ஜனாஸா தொழுகையில் செய்யும் பிராத்தனையில் கூட சுவனத்தில் உள்ள வீட்டைக் குறித்தும் பிரார்த்திக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டை விடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக; இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக; இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!)
என்று இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா? என்று எண்ணினேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் (1756)
சுவனத்தில் கிடைக்கும் மாளிகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் ஏராளமான இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவற்றை இப்போது பார்ப்போம்.
நம்பிக்கை கொண்டோர்
சொர்க்கத்தில் மாளிகையைப் பெறுவதற்கு முதல் தகுதி, மார்க்கம் போதித்த அனைத்து நம்பிக்கைகளையும் மறைவான செய்திகளையும் முழுவதுமாக ஏற்று, அதை நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 9:72
இதைத் தான் நபிகள் பெருமகனார் (ஸல்) அவர்கள் கூட தன் போதனையின் வாயிலாக நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள்:
‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளி உமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்’ என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3256, முஸ்லிம் 5446
நல்லறங்கள் செய்தோர்
இன்றைக்கு ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், ‘நாம் இஸ்லாமியக் கொள்கையைத் தெரிந்து கொண்டோம்; அதை ஏற்றும் விட்டோம். எனவே நாம் மறுமை வாழ்க்கைக்காக எந்தச் சேமிப்பிலும் ஈடுபட வேண்டாம்; இறைவன் சுவனத்தையும் அதன் இன்பங்களையும் நமக்கு முழுமையாக வழங்கி விடுவான்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சுவன மாளிகை யாருக்கு என்பதை அல்லாஹ் நமக்கு மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
அல்குர்ஆன் 13:29
உங்களின் மக்கட்செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
அல்குர்ஆன் 34:37
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
அல்குர்ஆன் 29:58
சுவன மாளிகைக்கும் நல்லமல்களுக்கும் எவ்வளவு பெரிய தொடர்பு உள்ளது என்பதை இறைவன் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இறையச்சமுடையோர்
நவீன காலம் வளர வளர தவறுகளும் தீமைகளும் அதை விட மிக வேகமாக வளருகின்றது. மாபாதகச் செயலாக இருந்தாலும் அதை ஒரு சிறு தவறாகக் கூட கணக்கிட மறுக்கிறார்கள்.
ஆனால் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் நம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் நம்மை விசாரிப்பான், தண்டிப்பான்; அவனை யாரும் நிர்பந்திக்க முடியாது என்ற இறையச்சம் ஒருவரிடம் இருந்தால் அவர் சுவனப் பூங்காவில் தனக்கென ஒரு மாளிகையைப் பெற்றுக் கொள்வார் என இஸ்லாம் போதிக்கிறது.
தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.
அல்குர்ஆன் 39:20
இறைவன் இறையச்சவாதிகளுக்கு வழங்க இருக்கும் மாளிகையை எவ்வளவு சிலாகித்துக் கூறுகிறான் என்று பார்த்தாலே அதன் தன்மை நமக்கு புரியும்.
அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்
நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 61:11, 12
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததேயில்லை. (அவர்களில் ஒருவர்,) “இந்த வீடு இறைவழியில் உயிர் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்று சொன்னார்.
அறிவிப்பவர்: சாமுரா பின்த் ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி 2791
பொறுமையை மேற்கொள்பவர்கள்
இறைவன் நம்மைச் சோதிக்கும் ஒரு கூடமாகத் தான் இந்த உலகத்தை ஆக்கியுள்ளான். இதில் ஏற்படும் நன்மையும் தீமையும் ஒரு சோதனை தான். நமக்கு இறைவன் தரும் இந்த உலகத் துன்பங்கள் அனைத்திலும் பொறுமையாக இருந்து, அதை சகித்துக் கொண்டால் அதனால் நமக்குக் கிடைக்கும் பரிசைக் குறித்தும் இறைவன் பேசுகிறான்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன் களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் 2:155
இப்படி இறைவன் வழங்கும் சோதனைகளைப் பொறுத்து கொண்டோருக்கு எண்ணிலடங்கா பரிசுகள் வழங்குவதாகக் கூறுகிறான். இந்தப் பொறுமையாளர்களுக்கு இறைவன் வழங்கும் பரிசுகளில் ஒன்று தான் சுவன மாளிகை ஆகும்.
அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
அல்குர்ஆன் 25:75
இவ்வாறு மாளிகைகளில் வரும் சுவனவாசிகளுக்கு வாழ்த்துக் கூறி அழைக்கும் பணியாளர்களும் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். மாளிகைகளைத் தருவதுடன் பணியாளர்களையும் தந்து கவுரவிக்கின்றான்.
இதுபோக, இன்னும் சில குறிப்பிட்ட அமல்களை நபியவர்கள் கூறி, இதற்குப் பரிசாக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை எழுப்புகிறான் என்று கூறினார்கள். அதைக் குறித்து இப்பொழுது நாம் பார்ப்போம்.
உபரியான தொழுகைகள்
ஒரு நாளில் நாம் வீணுக்காகவும் விளையாட்டுக்காகவும் செலவழிக்கும் நேரம் கணக்கில் அடங்காது. அந்த அளவிற்கு நாம் பயனற்ற காரியத்தில் ஈடுபட்டு வருகிறோம். அந்த நேரத்தில் உபரியான வணக்க வழிபாட்டில் ஈடுபட்டால் அதனால் நாம் எண்ணிலடங்கா கூலிகளைப் பெறலாம் என்று இஸ்லாம் நமக்குப் போதிக்கிறது.
‘‘யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களைக் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1319
இந்த அளவிற்கு சுவன மாளிகையை ஆசைப்பட்டு, அமலாக மாற்றிய ஒரு பெண்மணியையும் இந்த ஹதீஸ் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
பள்ளிவாசலைக் கட்டுதல்
இறைவனை நினைவு கூர்வதற்காகவும் அந்த ஏகனை வணங்குவதற்காகவும் பெருமைப்படுத்துவதற்காகவும் இறைவேதம் வாசிப்பதற்காகவும் மக்களுக்கு நன்மை போதிப்பதற்காகவும் வேண்டி எழுப்பப்படும் இறை ஆலயம், சுவனத்தில் வசிப்பிடத்தை ஏற்படுத்தும் என்பதைக் கீழ்க்காணும் நபி மொழி நமக்குப் பறைசாற்றுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்காக ஓர் இறை ஆலயத்தைக் கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் அது போன்ற வீட்டைக் கட்டுகிறான்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்வான் (ரலி)
நூல்: முஸ்லிம் 1218
இப்படி எத்தனையோ பல நன்மையான காரியங்கள் மறுமையில் தூய்மையான, ரம்மியமான, கண்ணைக் கவரும் வகையில் அமைந்த மாளிகையை நமக்கு உறுதிப்படுத்துகின்றது.
குற்றவாளிகளுக்கு நெருப்பு மாளிகை
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்! அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும். அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
அல்குர்ஆன் 77:28-33
வல்ல ஏகனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் இறைவனின் சுவன பூமியில் வாரிசுதாரர்களாக மாறிவிடலாம். அதே நேரத்தில் அவனுக்கு மாறு செய்தால் நரகத்தில் இரையாகத் தான் ஆகமுடியும்.
சுவனவாசிகளுக்கு அழகிய மாளிகை வழங்கப்படுவது போன்று, நரகத்திலும் மாளிகை போன்ற நெருப்பு அவர்கள் மீது வீசியெறியப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.
எனவே அந்த இறைவனுக்கு அஞ்சி, கட்டுப்பட்டு நடந்து, சுவன பூமியில் அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றிணைத்து, அவனது அருளில் நம்மை இளைப்பாறச் செய்வானாக!
மக்களை நேசித்த மாமனிதர்
எம்.முஹம்மது சலீம், M.I.Sc.
1400 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் போற்றும் தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அவர்களை உலகம் முழுவதும் கோடான கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், மக்களால் நேசிக்கப்படும் தலைவர் என்பதற்கும் மேலாக, மக்களை நேசிப்பவராக, மக்களுக்காகவே வாழ்ந்த தலைவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள்.
உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.
(திருக்குர்ஆன் 9:128)
இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரை கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
(திருக்குர்ஆன் 7:15)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார்கள். மக்கள் சிரமப்படுவது நபிகளாருக்குப் பெரும் துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்தது.
ஆகவே, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி மனித குலத்தை வாட்டி வதைக்கும் தீமைகளை ஒழித்து, நல்லறங்களைப் போதித்தார்கள். ஈருலகிலும் வெற்றி பெறுவதற்குரிய வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தார்கள். அதைப் புறக்கணித்து மறுமை வாழ்வை நாசப்படுத்திக் கொள்ளும் மக்களுக்காக வருத்தப்பட்டார்கள்.
இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு, உம்மையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்.
(திருக்குர்ஆன் 18:6)
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்.
(திருக்குர்ஆன் 26:3)
தூதராகத் தேர்வான பிறகுதான் முஹம்மது நபியவர்கள், இப்படி மக்கள் மீது அக்கறை கொண்டவராக நடந்து கொண்டதாகக் கருதிவிடக் கூடாது. அதற்கு முன்பும் அண்ணலாரிடம் சமூக சிந்தனை மேலோங்கி இருந்தது. எல்லா வகையிலும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தி மூலம் அறியலாம்.
(ஹிரா குகையில் முதன் முதலில் வானவர் ஜிப்ரீல் மூலம் நபிகள் நாயகத்திற்குக் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.)
…பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி) இடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள், ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3)
·உற்றார் உறவினருடன் இணக்கம்
·மற்றவர் சிரமத்தை நீக்குவது
·வறியவர்களுக்கு உதவுவது
·விருந்தினரை உபசரிப்பது,
·துன்பத்தில் இருப்போரை மீட்டெடுப்பது
இப்படி மனிதநேயத்தின் மகுடமாக முஹம்மது நபி வாழ்ந்தார்கள். மார்க்க விஷயத்திலும் கூட மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாதென நினைத்தார்கள்.
எனவே, முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய தொழுகையின் என்ணிக்கையைக் குறைத்துத் தருமாறு அல்லாஹ்விடம் கோரினார்கள். அல்லாஹ்வும் அருள் புரிந்தான்.
(மிஃராஜ் பயணத்தின் போது நபிகளாரை ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் சென்றார்கள்.) அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது’ என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், ‘முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?’ என்று கேட்டான்.
நபி (ஸல்) அவர்கள், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்’ என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். அதே இடத்தில் நின்றவாறு நபி (ஸல்) அவர்கள், ‘என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது’ என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியது. ஐந்துக்கு வந்த போதும் மூஸா (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறினார்கள்.
ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவன் ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அல்லாஹ், ‘(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப் படுவதில்லை; அதை (ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது ‘என்ன செய்தீர்?’ என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப்போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்’ என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (7517)
ஐம்பது நேரம் தொழுவது மக்களுக்கு மிகவும் கடினம். ஆகையால், தொழுகையைக் குறைத்து வழங்குவாயாக என அல்லாஹ்விடம் மக்களுக்காக நபியவர்கள் மன்றாடினார்கள். இந்தச் செய்தி நபிகளார் சமூக அக்கறைக் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சான்று. இதுபோன்று இன்னொரு நிகழ்வைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) எழுந்து ‘தொழுகை’ எனக் கூறினார்கள். உடன் நபி (ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. ‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்’ என்று அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (571), முஸ்லிம் (1121)
மார்க்கத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பம் நேரம், இறுதி நேரம் சொல்லப்பட்டுள்ளது. தொழுகைகளை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறந்தது. ஆனால், இஷா தொழுகையை அதன் இறுதி நேரத்தில் தொழுவதே சிறந்தது. ஆகவே அந்த நேரத்தில் இஷாவை ஜமாஅத்தாகத் தொழுமாறு மக்களுக்கு ஏவலாம் என்று எண்ணுகிறார்கள். மக்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதால் அவ்வாறு கட்டளையிடும் முடிவை மாற்றிக் கொள்கிறார்கள்.
இங்கு, அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்கும் சிறந்தவொரு பாடம் இருக்கிறது. வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் மக்களின் செல்வங்களை, சொத்துக்களை அபகரிக்கிற ஆன்மீகத் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் அறியாமையை ஆதாயமாக்கிக் கொள்கிறார்கள்.
இத்தகைய ஆட்கள் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து ஆன்மீகத் தலைவருக்குரிய தகுதியைத் தெரிந்து கொள்ளட்டும். ஏன் தெரியுமா? பத்து நிமிடத் தொழுகையிலும் கூட மக்களுக்குத் தொல்லை ஏற்பட்டு விடக் கூடாதென நினைக்கும் மகானாக முஹம்மது நபி திகழ்ந்தார்கள்.
‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (709)
தொழுகைக்குத் தூய்மை அவசியம். முஹம்மது நபியவர்கள் தூய்மையை அதிகம் விரும்புவார்கள். மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இயற்கை மரபுகளில் ஒவ்வொரு நாளும் பல்துலக்குவதையும் முக்கிய ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்கள். பல் துலக்குவதை அதிகம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கடமையான தொழுகைக்கு முன்பும் பல்துலக்குவதை நபியவர்கள் கட்டாயம் ஆக்க நினைக்கிறார்கள். ஆனாலும் ஆக்கவில்லை. ஏன் தெரியுமா? அதற்குரிய பதிலை நபியவர்களே கூறியிருக்கிறார்கள்.
‘‘இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (7240), முஸ்லிம் (422)
இப்படி, மக்கள் நலன் நாடும் ஆன்மீகத் தலைவரையே முஸ்லிம்கள் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பின்வரும் செய்தியும் முஹம்மது நபியின் சிறப்பைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.
நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபியவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத் தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் “அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப் பின்…) எனக் கூறிவிட்டு, ‘‘நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை)’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (924)
ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறந்த தொழுகை இரவில் தொழுவதாகும். அதைத் தொழுவது முஹம்மது நபிக்குக் கட்டாயமாக இருந்தது. அத்தொழுகை மக்களுக்கும் கடமையாக ஆக்கப்பட்டிருந்தால் பெரும் பாரமாக இருந்திருக்கும். அந்த நிலை ஏற்பட்டு விடாதவாறு நபியவர்கள் நடந்து கொண்டார்கள். இன்னொரு நிகழ்வைப் பாருங்கள்.
‘தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1966)
இதுபோன்ற ஆன்மீக குருவை இன்று காண முடியுமா? ஆன்மீகத்தின் பெயரால் பொய்யான சடங்குகள், பரிகாரங்கள் சொல்லி மக்களை அலைய விடும் ஆன்மீகவாதிகளின் பின்னே போகும் மக்கள் சிந்திக்க வேண்டும். பொய்யான கொள்கைகள், மூடநம்பிக்கைகளை விட்டும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? முஹம்மது நபி பற்றித் தெரிந்து கொள்ள முன்வாருங்கள். எதிலும் மக்கள் துயர் அடைந்து விடக் கூடாதென நினைக்கும் அற்புதத் தலைவரைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் பனூ ஃகிஃபார் குலத்தாரின் நீர்நிலை அருகே இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஒரேயொரு ஓதல் முறைப்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். (பல்வேறு மொழிவழக்குகள் கொண்ட) என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி) நபியவர்களிடம் வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் இரண்டு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். என் சமுதாயத்தார் இ(வ்வாறு ஓதல் முறையை இரு முறைகளுக்குள் அடக்குவ)தற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்றாவது முறை (இறைவனிடம் சென்று விட்டுத் திரும்பி)வந்து, “உங்கள் சமுதாயத்தார் குர்ஆனை மூன்று ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். இ(வ்வாறு ஓதல் முறையை மூன்று முறைகளுக்குள் அடக்குவ)தற்கு என் சமுதாயத்தார் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு நான்காவது முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி)வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அவர்கள் (இந்த ஏழு முறைகளில்) எந்த முறைப்படி ஓதினாலும் அவர்கள் சரியாகவே ஓதினார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
நூல்: முஸ்லிம் (1492)
திருக்குர்ஆனை ஓதுவது மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டான். இப்படி ஆன்மீகம், அரசியல் என்று எல்லா விஷயத்திலும் மக்களுக்கு நலன் நாடும் நாயகராக விளங்கினார்கள்.
ஒரு சமயம், மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் அருளால் அந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வை முன்வைத்தார்கள். இதோ பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்‘ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா இப்னு அக்வஃ (ரலி)
நூல்: புகாரி (5569)
இன்றிருக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அன்றாடம் ஒருவேளை உணவுக்காகத் தவிக்கும் மக்களின் பசியைப் போக்காமல், தங்களின் முன்னாள் தலைவர்களுக்காகப் பல்லாயிரம் கோடி செலவில் சிலைகளையும் மணி மண்டபங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்காக அது செய்வேன், இது செய்வேன் என்று வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, கடமைகளை மறந்து சொகுசாக சுற்றித் திரிகிறார்கள். அரசுப் பணத்தை அள்ளி வைத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய் சொல்லும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஏராளம்!
ஆண்டுகள் பல ஓடினாலும் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாமல் இருக்கின்றன. சாலை, போக்குவரத்து, குடிநீர் போன்ற பல அடிப்படை வசதிகள் இன்னும் பலருக்குக் கிடைக்கவில்லை. எங்கும் எதிலும் ஊழல் சப்தம் அதிகமாய் ஒலிக்கிறது.
இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகளை மறந்து, அவர்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3732)
இந்தப் பிரார்த்தனை நபிகளாருக்குள் இருந்த மக்கள் மீதான பாசத்தின் நேசத்தின் வெளிப்பாடு. மக்கள் துன்பம் அடைந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தின் அடையாளம். மக்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்காமல், கடமைகளை சரிவரச் செய்யாமல், சமூகத்தைச் சீரழிப்போர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் கேட்ட பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.
தலைவர்களாக இருப்பவர்கள் தங்களின் பொறுப்புக்குக் கீழிருக்கும் மக்கள் மீது எந்தளவுக்கு அக்கறை காட்ட வேண்டும் என்பதற்கு முஹம்மது நபி முன்மாதிரியாக இருக்கிறார்கள். இதைப் பின்வரும் செய்தி மூலமும் அறிய முடிகிறது.
நான் என் இறைவனிடம் ‘‘என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே’’ எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்து விடும்’’ என்றும் பிரார்த்தித்தேன். என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்க மாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் (5538)
மக்களுக்கு அழிவு ஏற்படுவதை, அவர்களின் வாழ்வுக்கு ஆபத்து வருவதை முஹம்மது நபியவர்கள் வெறுத்தார்கள். இன்றைய பல தலைவர்கள் எப்படி அவர்களின் சுயநலத்திற்காக, உலக ஆதாயத்திற்காக, சமூகத்தில் வேண்டுமென்றே கலவரங்களை, குண்டு வெடிப்புகளை, வகுப்பு வாதப் பிரச்சனைகளை உண்டாக்குவதை மறுக்க முடியுமா?
மக்களை அழித்தாவது ஆட்சிக் கட்டிலில் ஏறவும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் துடிக்கும் அவலம் நேரிடுகிறது. ஆனால், முஹம்மது நபியவர்கள் அப்போது இருந்த மக்கள் மட்டுமல்ல! இனிமேல் வரப்போகும் தலைமுறைகள் கூட நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறைய துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3231)
உலக வாழ்வில் மட்டுமல்ல! அழியா மறுமை வாழ்விலும் மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள், முஹம்மது நபி.
இங்கு மட்டுமல்ல! வாய்ப்புக் கிடைத்தால் மறுமையிலும் மக்களுக்காக உதவி செய்ய முடிந்தளவு முயற்சிப்பார்கள். இது குறித்த முன்னறிவிப்பு நபிமொழியில் இடம் பெற்றுள்ளது.
‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (338), புகாரி (6304)
முஹம்மது நபியவர்கள் மறுமயிலும் மக்களுக்கு உதவக் காத்திருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல! நிரந்தரமான மறுமை வாழ்வின் போது, மக்கள் சொர்க்கத்தில் நிறைந்து இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் ஆசையாக இருந்தது என்பதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் இருப்பார்கள்’ என்று கூறிவிட்டு பிறகு, ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்’ என்று கூறினார்கள். பின்னர் ‘(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த நற்செய்தி கேட்டு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்களில், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (மகிழ்ச்சியால் மீண்டும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல்: புகாரி (4741)
சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இம்மையிலும் மறுமையிலும் மக்கள் வெற்றி பெற வேண்டும், ஈடேற்றம் பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி தமது வாழ்வையே அர்ப்பணம் செய்தார்கள். அசத்திய அழிவிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவது தான் அவர்களின் பணியாக இருந்தது.
எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் தம் சமூகத்தாரிடம் சென்று, “என் சமுதாயமே! நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (அப்படை எந்நேரமும் உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான் நிர்வாணமாக (ஓடி)வந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே, தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்து காலையிலும் அங்கேயே தங்கியிருந்தனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.
இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறுசெய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (4588)
‘‘எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4589)
இதுவரை பார்த்த செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இப்படி மக்களை நேசித்த, மக்களுக்காகவே வாழ்ந்த மாபெரும் தலைவராக முஹம்மது நபி இருந்தார்கள். ஆகையால் தான் முஸ்லிம் அல்லாத மக்களும் கூட முஹம்மது நபியின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, குடிமக்களாக வாழ்ந்தார்கள்.
இத்தகைய தலைவரையே மனித குலத்திற்கு வாழ்க்கை நெறியைக் கற்றுத் தரும் இறுதித் தூதராக ஏக இறைவன் அனுப்பியுள்ளான். இதை மனதில் கொண்டு எல்லா விஷயத்திலும் நபிவழிப்படி செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!
வலைதளங்களில் பரவும் பொய்யான ஹதீஸ்கள்
சபீர் அலி
வலைதளங்களில் பரப்பப்படும் பலவீனமான செய்திகளில் ஒன்றுதான் பின்வரும் செய்தியாகும்.
“லா இலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்” என்பதை ஒரு நாளைக்கு மூன்று தடவை ஓதுங்கள்.
அவ்வாறு ஓதினால்,
1. வறுமை வராது,
2. கப்ரின் கேள்வி கணக்கு எளிதாக இருக்கும்,
3. குடும்பத்தில் பிரச்சனை வராது,
4. சொர்க்கம் கடமையாகிறது.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இச்செய்தியை பரப்பி வருகிறார்கள்.
இந்தச் செய்தி மேற்குறிப்பிடப்பட்டதைப் போன்று எங்கும் கிடைக்கப் பெறவில்லை.
அதே சமயம், மூன்று முறை மேற்படி துஆவை ஓத வேண்டும் என்பதற்குப் பதிலாக நூறு முறை ஓத வேண்டும் என்றும், குடும்பத்தில் பிரச்சனைகள் வராது என்பதற்குப் பதிலாக செல்வம் வழங்கப்படும் என்றும் சில மாற்றத்துடன் ஒரு சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صفة الجنة لأبي نعيم الأصبهاني (2/ 32)
185 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ سُلَيْمَانَ الْمُقْرِئِ بْنِ الْخَطَّابِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ، ثنا الْفَضْلُ بْنُ غَانِمٍ، ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ , عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: ، مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ فِي كُلِّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَ [ص:33] لَهُ أَمَانًا مِنَ الْفَقْرِ وَيُؤْمَنُ مِنْ وَحْشَةِ الْقَبْرِ، وَاسْتُجْلِبَ بِهِ الْغِنَى، وَاسْتُقْرِعَ بِهِ بَابُ الْجَنَّةِ
“லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்” என்று ஒவ்வொரு நாளும் நூறு முறை கூறுபவருக்கு,
1. வறுமையிலிருந்து பாதுகாப்பும்,
2. மண்ணறையின் அச்சத்திலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும்,
3. செல்வது அவரிடம் இழுத்துக் கொண்டு வரப்படும்,
4. சுவனத்தின் வாசல் அவருக்கு சீட்டு குலுக்கிப் போடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தி இமாம் அபூ நுஐமுடைய ஸிஃபத்துல் ஜன்னா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாக அறிவிப்பாளர் தொடர் இடம்பெற்றுள்ளது.
அலீ (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியைக் கேட்டதாக இடம்பெறும் அறிவிப்பாளர் அலீ பின் ஹுசைன் என்பவர் ஆவார். இவர் அலீ (ரலி) அவர்களின் பேரன் ஆவார்.
அலீ (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 40ல் மரணித்தார்கள்.
அவர்களது பேரனான அலீ பின் ஹுசைன் அவர்கள் ஹிஜ்ரி 38ல்தான் பிறக்கிறார்.
(تهذيب التهذيب محقق (7/ 270)
قلت: مقتضاه أن يكون مات سنة (94) أو (95) لانه ثبت أن أباه قتل وهو ابن (23) سنة وكان قتل أبيه يوم عاشوراء سنة (61)
அலீ பின் ஹுசைன் அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்துக்களை தனது தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் பதிவு செய்த இப்னு ஹஜர் அவர்கள் அது பற்றிய தெளிவை இறுதியில் விளக்கும்போது, அலீ பின் ஹுசைனிற்கு 23 வயது இருக்கும்போது அவரது தந்தை ஹுசைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஹுசைன்(ரலி) அவர்கள் மரணித்த ஆண்டு ஹிஜ்ரீ 61 ஆகும் என்று கூறுகிறார்.
தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 7, பக்கம் 270)
ஹிஜ்ரி 61ஆம் ஆண்டில் இவருக்கு 23 வயது என்றால் இரண்டு எண்ணிக்கையையும் கழிக்கும்போது இவரது பிறப்பு ஆண்டான ஹிஜ்ரி 38 நமக்குக் கிடைக்கிறது.
இதன் அடிப்படையில் ஹிஜ்ரி 40ல் மரணித்த அலீ (ரலி) அவர்களிடத்தில் ஹிஜ்ரி 38ல் பிறந்தவர் எவ்வாறு கேட்டிருக்க முடியும்?
அலீ (ரலி) மரணிக்கும் போது இவருக்கு வெறும் 2 வயது தான் இருந்திருக்கும்.
2 வயதுக் குழந்தை ஒரு செய்தியை எவ்வாறு கேட்டு உள்வாங்கியிருக்க முடியும்?
அப்படியென்றால் இந்தச் செய்தியில் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் பேரன் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் மத்தியில் யாரோ ஒரு அறிவிப்பாளர் இருந்திருந்தால் மாத்திரம்தான் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கு இந்தச் செய்தி அறியக் கிடைத்திருக்கும்.
ஆனால், அப்படியொரு அறிவிப்பாளர் அவ்விருவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் தொடரில் இல்லை என்பதால் இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தியாக இருக்கிறது.
அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தி ஏற்கத்தக்கச் செய்தியாக ஆகாது.
அந்த வகையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
மேலும், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் “ஃபழ்ள் பின் கானிம்” என்பவர் இடம்பெறுகிறார்.
இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
لسان الميزان لابن حجر(اتحقيق أبو غدة) (6/ 347)
الفضل بن غانم الخزاعي عن مالك قال يحيى ليس بشيء وقال الدارقطني ليس بالقوي وقال الخطيب ضعيف
ஃபழ்ள் பின் கானிம் என்பார் ஒரு பொருட்டாக இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் பலமானவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் கதீப் கூறியுள்ளார்.
லிஸானுல் மீஸான், பாகம் 6, பக்கம் 347
எனவே, மேற்படி குறைகள் இச்செய்தியின் அறிவிப்பாளர் விஷயத்தில் இருப்பதால் இந்தச் செய்தி இதன் காரணமாகவும் பலவீனமானதாகும்.
மேலும், இதே செய்தி ஹில்யத்துல் அவ்லியா எனும் புத்தகத்தின் 8ஆம் பாகம், 280ஆம் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
حلية الأولياء وطبقات الأصفياء (8/ 280)
حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ , ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سَعْدٍ الْوَاسِطِيُّ , ثنا إِسْحَاقُ بْنُ رُزَيْقٍ، ثنا سَالِمٌ الْخَوَّاصُ , عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ , عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: “ مَنْ قَالَ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ: لَا إِلَهَ إِلَّا اللهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ كَانَ لَهُ أَنِيسًا فِي وَحْشَةِ الْقَبْرِ وَاسْتَجْلَبَ الْغِنَى وَاسْتَقْرَعَ بَابَ الْجَنَّةِ “ غَرِيبٌ مِنْ حَدِيثِ سَالِمٍ عَنْ مَالِكٍ، رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ
இந்தச் செய்தியில், ஏற்கனவே கூறப்பட்டதைப் போன்று வறுமையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற கூலி கூறப்படாமல் மற்ற மூன்று கூலிகள் மாத்திரம் கூறப்பட்டுள்ளது.
இதுவும் பலவீனமானதாகும்.
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக அலீ பின் ஹுசைன் என்பவர் கூறுகிறார்.
இதற்கு முந்தைய அறிவிப்பிலாவது அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் அலீ (ரலி) அவர்கள் நபித்தோழரின் இடத்தில் இருந்தார்.
அலீ (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் ஹுசைன் எந்த செய்தியையும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே அது பலவீனமானது.
ஆனால் இந்தச் செய்தியில் அலீ பின் ஹுசைன் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக வருகிறது. இவர் நபித்தோழர் அல்ல. இவர் தாபீஃ ஆவார்.
தாபீஃ என்ற அந்தஸ்தில் உள்ளவர்கள் நபி காலத்திற்குப் பின்னால் வந்தவர்கள் ஆவர். எனவே, ஒரு தாபீஃ நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருக்க வாய்பில்லை
அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த நபித்தோழரும் இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறவில்லை என்பதால் இது “முர்ஸல்” என்ற வகையைச் சார்ந்த, அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.
மேலும், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஸாலிம் அல்கவ்வாஸ் என்பார் இடம்பெறுகிறார்.
இவர் பலவீனமானவர் ஆவார்.
الجرح والتعديل (4/ 267)
حدثنا عبد الرحمن نا محمد بن عوف الحمصى قال: كان سلم بن ميمون الخواص دفن كتبه وكان يحدث من حفظه فيغلط.حدثنا عبد الرحمن قال سمعت ابى يقول: ادركت سلم بن ميمون [ الخواص – 2 ] ولم اكتب عنه روى عن ابى خالد الاحمر حديثا منكرا شبه الموضوع.
ஸாலிம் அல்கவ்வாஸ் என்பவர் தனது புத்தகங்களைப் புதைத்து விட்டு, தனது மனனத் தன்மையிலிருந்து தவறாக அறிவிப்பார் என்று முஹம்மது பின் அவ்ஃப் கூறியுள்ளார்.
இவர் வழியாக நான் எதையும் பதிவு செய்ய மாட்டேன் என்றும் இவர் இட்டுகட்டப்பட்ட செய்திக்கு ஒப்பான, மறுக்கப்பட வேண்டியவைகளையே அறிவிப்பார் என்றும் இமாம் அபூ ஹாதம் கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்கம் 267
الضعفاء للعقيلي (2/ 165)
سلم بن ميمون الخواص.حَدَّثَ بمناكير لاَ يُتَابَعُ عليها
இவர் துணைச் சான்றாக கூட எடுத்துக் கொள்ள இயலாத, மறுக்கபட வேண்டியவைகளையே அறிவிப்பார் என்று இமாம் உகைலீ கூறியுள்ளார்.
அல்லுஅஃபா, பாகம் 2, பக்கம் 165
இத்தகைய பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றதாலும் இந்தச் செய்தி மேலும் பலவீனமடைகிறது.
மேலும், இந்தச் செய்தி வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் ஒரு அறிவிப்பாளர் தொடரை தனது இலல் (பாகம் 3, பக்கம் 107) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
علل الدارقطني 385 (3/ 107)
وَكَذَلِكَ رَواهُ أَبُو حُنَيفَةَ سَلمُ بنُ المُغِيرَةِ ، عَن مالِكٍ ، عَن جَعفَرٍ ، عَن أَبِيهِ ، عَن جَدِّهِ ، عَن عَلِيٍّ.والفَضلِ بنِ غانِمٍ لَيسَ بِالقَوِيِّ.
இந்தச் செய்தியிலும் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் பேரன் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் மத்தியில் வேறொரு அறிவிப்பாளர் இடம்பெறாமல் இவரே அலீ (ரலி) அவர்களிடமிருந்து கேட்டதைப் போன்று உள்ளது.
(இவர் அலீயிடமிருந்து கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை முன்னரே விளக்கிவிட்டோம்)
மேலும், இந்தச் செய்தியில் அபூஹனீஃபா ஸல்ம் பின் முகீரா என்பவர் இடம்பெறுகிறார்.
تاريخ بغداد وذيوله ط العلمية (9/ 147)
أَخْبَرَنَا الْبَرْقَانِيّ قَالَ: قَالَ لنا أَبُو الْحَسَن الدارقطني: سلم بن المغيرة يكنى أبا حنيفة، وهو بغدادي ليس بالقوي.
அபூஹனீஃபா ஸல்ம் பின் முகீரா என்பவர் பலமானவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.
தாரீகு பக்தாத், பாகம் 9, பக்கம் 147
இதைத் தாண்டி இவர் மீது எந்தக் குறையும், எந்த நிறையும் சொல்லப்படாததால் இந்த அறிவிப்பும் பலவீனமாகிறது.
ஆக, இந்தச் செய்தியின் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலவீனமாகவுள்ளதால் இது ஏற்கத்தக்க செய்தி கிடையாது.
மேலும், இந்த பலவீனமான செய்தியின் எந்த அறிவிப்பிலும் இடம்பெறாத வார்த்தைகளை அதில் சேர்த்தும் இருக்கிறார்கள்.
இவ்வளவு பலவீனமான செய்தியை நாம் பரப்பலாமா?
அவ்வாறு பரப்புவது பொய்யின் குற்றத்தை பெற்று தந்துவிடுமே?
நபியவர்கள் மீது இட்டுக்கட்டி, நரகத்தை முன்பதிவு செய்யும் பாவமாக அமைந்து விடும் என்பதால் இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம்.
நபித்தோழர்களின் கேள்விகளும் நபிகள் நாயகத்தின் பதில்களும்
அபு அம்மார்
கியாமத் நாள் வரை தோன்றக் கூடிய மனிதத் தலைமுறைகளிலேயே சிறந்த தலைமுறை நபி (ஸல்) அவர்களின் தலைமுறையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்கு மிகச் சிறந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களும் அதனை உண்மையாக நம்பி பின்பற்றினார்கள். இதன் காரணமாகத்தான் அந்தத் தலைமுறை மிகச் சிறந்த தலைமுறையாக ஆனார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் மறுமையில் வெற்றி பெறும் வகையில் இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எண்ணற்ற கேள்விகளை நபியவர்களிடத்தில் கேட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களும் கேள்வி கேட்ட நபித்தோழர்களின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
அருமை ஸஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்ட கேள்விகளும் அதற்கு நாயகம் அளித்த பதில்களும் ஒவ்வொரு முஸ்லிமும் தம்முடைய வாழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும். ஒரு சமூகத்தைச் சிறந்த சமூகமாக மாற்றக் கூடியதாகும். ஒழுக்க மாண்புள்ள, அறநெறிகளைப் பேணும் வகையில் மனித சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியதாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்களையும் இங்கே நாம் இடம் பெறச் செய்துள்ளோம்.
நாம் இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டிருப்பது மிக மிகக் குறைவான ஒரு அளவாகும். இது போன்று இன்னும் பன்மடங்கு போதனைகள் வழிகாட்டுதல்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியைக் காண்போம்.
இஸ்லாம் தொடர்பான சிறந்த விளக்கம் எது?
நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். ‘தங்களுக்குப் பிறகு யாரிடமும்’ அல்லது ‘தங்களைத் தவிர வேறு யாரிடமும்’ அது குறித்து நான் கேட்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது’’ என்று வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சுப்யான் பின் அப்தில்லாஹ்(ரலி)
நூல்: முஸ்லிம் (62)
சொர்க்கத்தில் நுழைவிக்கும் நல்லமல்கள்
முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழைவித்து, நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு நற்காரியத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நீ மிகப்பெரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டுவிட்டாய். அல்லாஹ் யாருக்கு அதனை இலேசாக்குகின்றானோ அவருக்கு அது இலேசானதாகும்.
அல்லாஹ்விற்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்காமல் அவனை நீ வணங்குவதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தை நிறைவேற்றுவதும், (கஅபா எனும்) அந்த ஆலயத்திற்கு பயணம் செய்வதற்கு நீ சக்தி பெற்றால் அதனை நீ ஹஜ் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு ‘‘நன்மையின் வாயில்களை உனக்கு நான் அறிவிக்கட்டுமா? 1. நோன்பு (அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற) கேடயமாகும், 2. தர்மம், (அது) தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று பாவங்களை அழித்துவிடும், 3. மனிதன் நடுநிசியில் தொழுகின்ற தொழுகை’’ இதனை தொடந்து (பின்வரும் வசனத்தை) ஓதினார்கள்: “அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்’’ (அல்குர்ஆன் 32:16) என்று கூறிவிட்டு, பிறகு ‘‘இம்மார்க்கத்தின் தலையாயதையும், அதனுடைய தூணையும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதியையும் உனக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்டார்கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம், அறிவியுங்கள்” என்று பதிலளித்தேன். அதற்கு நபியவர்கள் ‘‘இம்மார்க்கத்தின் தலையாயது இஸ்லாம் ஆகும். அதனுடைய தூண் தொழுகையாகும், அதனுடைய திமிழ் போன்ற உயர்ந்த பகுதி (அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிவதாகும்’’ என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவை அனைத்தையும் அழிக்கக் கூடிய விஷயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது நாவினைப் பிடித்து “இதை நீ பாதுகாத்துக் கொள்’’ என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்?’’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘உனது தாய் உனக்கு பாரமாகட்டும். மக்களை முகம் குப்புற நரகத்தில் விழச் செய்வது அவர்கள் நாவுகள் செய்கின்ற அறுவடையைத் தவிர வேறு என்ன (இருக்கமுடியும்)?’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: திர்மிதி (2541)
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, “என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை’ அல்லது ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை’ எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும்’’ என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள்.
நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது “இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தா செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்’’ என்றார்கள். பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅதான் பின் அபீதல்ஹா
நூல்: முஸ்லிம் (842)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’’ என்று கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு ஏதேனும் தேவை இருக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு, உமது வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்துவீராக’’ என்று சொன்னார்கள். அம்மனிதர் (அப்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
நூல்: புகாரி (5983)
“அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் அல்கவ்கல் (ரலி)
நூல்: முஸ்லிம் (16)
நபிகளாரின் பரிந்துரைக்குத் தகுதியானவர் யார்?
‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, ‘‘அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தாம்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (99)
அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’ என்று கேட்டேன். அவர்கள், ‘‘உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். ‘‘தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்று பதிலளித்தார்கள். இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (527)
சிறந்த இஸ்லாமிய பண்புகள்
மக்கள், ‘‘இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (11)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் (முகமன்) கூறுவதுமாகும்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (12)
நான் “அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்’’ என்று பதிலளித்தார்கள்.
“(விடுதலை செய்வதற்கு) எந்த அடிமை சிறந்தவர்?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)’’ என்று பதிலளித்தார்கள். “அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லையென்றால்…?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக’’ என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்!’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (136)
மனிதர்களில் சிறந்தவரும் அமல்களில் சிறந்ததும்
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ‘‘முஹம்மது அவர்களே! மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘யாருடைய ஆயுட்காலம் நீடித்து, அவருடைய செயல்களும் மிக நல்லதாகி விட்டதோ அவர்தான்” எனப் பதிலளித்தார்கள். மற்றொருவர் ‘‘இஸ்லாத்தின் (சுன்னத்தான) சட்டங்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எனவே (அனைத்து நன்மைகளும்) ஒருங்கிணைந்த, தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் வகையிலான (எளிமையான) ஒரு நற்காரியத்தைக் கூறுங்கள்!” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘மிகைத்தவனும் கண்ணியமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் நினைவில் நனைந்ததாக (திளைத்ததாக) உனது நாவு இருந்து கொண்டே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல்: அஹ்மத் (17716)
சிறந்த தொழுகை எது? சிறந்த நோன்பு எது?
நபி (ஸல்) அவர்களிடம் “கடமையாக்கப் பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்‘’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (2158)
சிறந்த தர்மம் எது?
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’’ எனக் கேட்டார். ‘‘நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை (தர்மம் செய்வதை) தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1419)
ஒவ்வொரு செயலிலும் சிறந்தது எது?
‘‘செயல்களில் மிகச் சிறந்தது எது?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “சந்தேகமில்லாத இறைநம்பிக்கை, மோசடி இல்லாத உயிர்தியாகம், பாவம் கலவாத ஹஜ்’’ என்று கூறினார்கள். மிகச் சிறந்த தொழுகை எது? என்று கேட்கப்பட்டது. “நீண்ட நேரம் நின்று வணங்குவது” என்று கூறினார்கள். எந்த தர்மம் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. ‘‘செல்வம் குறைவாக இருக்கும் போதும் தர்மம் செய்தலாகும்” என்று கூறினார்கள். ‘‘எந்த ஹிஜ்ரத் மிகச் சிறந்தது?” என்று கேட்கப்பட்டது. ‘‘யார் அல்லாஹ் தடைசெய்தவற்றை வெறுக்கிறாரோ அவர்தான் (சிறந்த ஹிஜ்ரத் செய்தவர்)” என்று கூறினார்கள். எந்த அறப்போர் மிகச் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. ‘‘யார் தனது பொருளாலும், உயிராலும் இணைவைப்பாளர்ளுடன் போரிடுகிறாரோ அவர் செய்வதுதான் மிகச்சிறந்த அறப்போர்” எனக் கூறினார்கள். ‘‘யார் மிகச்சிறந்த உயிர் தியாகி” என்று கேட்கப்பட்டது. ‘‘யாருடைய போர்க்குதிரையின் கால்கள் வெட்டப்பட்டு அவருடைய இரத்தம் ஓட்டப்படுகிறதோ அவர் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு ஹபஷீ(ரலி)
நூல்: அஹ்மத் (15437)
மக்களில் சிறந்தவர் யார்?
‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?’’ என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பாதையில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், பிறகு யார்? என்று கேட்டார்கள். ‘‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரி (ரலி)
நூல்: புகாரி (2786)
அழகிய தோழமைக்குத் தகுதியானவர்கள் யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பிறகு, உன் தந்தை என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5971)
மிகப்பெரும் பாவம் எது?
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’’ என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு, பிறகு எது? என்று கேட்டேன். ‘‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’’ என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், ‘‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (4477)
பயனளிக்கும் நற்செயல் எது?
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (இறந்து) போய்விட்ட பின்னரும் நான் வாழக் கூடிய நிலை ஏற்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, எனக்கு அல்லாஹ் பயனளிக்கக்கூடிய (நற்செயல்) சிலவற்றை முன்கூட்டியே சொல்லித்தாருங்கள்?’’ என்று கேட்டேன். “தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவீராக’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஸா (ரலி)
நூல்: முஸ்லிம் (5110)
அக்கிரமக்காரனுக்கு உதவி செய்வது எப்படி?
நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2444)
பெண்கள் நரகம் செல்லக் காரணம் என்ன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘‘பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது’’ என்று குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்’’ என்று கூறினார்கள்.
அப்போதும் அப்பெண்கள், மார்க்கத்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். ‘‘பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம் (பாதியளவுதான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்’’ என்று கூறிவிட்டு ‘‘ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?’’ என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது தான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்’’ என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: புகாரி (304)
நபியிடம் கற்றுத் தருமாறு ஸஹாபாக்கள் கேட்ட சில துஆக்கள்
ஷகல் இப்னு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு துஆவைக் கற்றுத் தாருங்கள்!’’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹூம்ம இன்னீ அவூது பிக்க மின் ஷர்ரி ஸம்யீ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிசானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ” என்று நீ கூறு’’ என பதிலளித்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! என்னுடைய செவிப்புலனின் தீங்கிலிருந்தும், என்னுடைய பார்வையின் தீங்கிலிருந்தும், என்னுடைய நாவின் தீங்கிலிருந்தும், என்னுடைய உள்ளத்தின் தீங்கிலிருந்தும், என்னுடைய மறைவுறுப்பின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகிறேன்)
நூற்கள்: அபூதாவூத் (1327), திர்மிதி (3414)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்தால் அதில் என்ன கூறவேண்டும் என தாங்கள் கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ (இறைவா நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னை மன்னிப்பாயாக)’’ என்று சொல்லுமாறு என்னிடம் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (3435)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார். ‘இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்,
‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்” என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் (16455)