ஏகத்துவம் – மார்ச் 2018

சத்திய நெறியும் சங்க விதியும்

ஒரு நாட்டை வழிநடத்துவதற்கு எப்படி அரசியல் சட்டம் அவசியமோ அதுபோல் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை வழிநடத்துவதற்கு அமைப்புச் சட்டம் அவசியமாகும். அதைத் தான் ஆங்கிலத்தில் ஙிஹ்றீணீஷ் என்றும், தமிழில் துணை விதி, அமைப்புச் சட்டம், சங்க விதி என்றும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றார்கள். அந்த அவசியத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கும் போது அதன் அமைப்புச் சட்டமும் உருவாகி விட்டது.

வணக்க வழிபாடுகள், வாழ்வியல் வழிமுறைகள் அனைத்திற்கும் திருக்குர்ஆனையும், திருத்தூதரின் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையில் இந்த ஜமாஅத் உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றது.

அதே சமயத்தில் ஜமாஅத்தின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களுக்கு இந்த பைலா எனும் அமைப்புச் சட்டம் அவசியமாகின்றது.

ஒரு நிறுவனம், ஓர் ஊழியரைப் பணியில் சேர்க்கும் போது அந்த நிறுவனம், தான் வகுத்திருக்கும்  விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் அவரிடம்  குறிப்பிட்டு, இதன்படி நீங்கள் நடக்க வேண்டும், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று நிபந்தனையிட்டுத் தான் பணியில் அமர்த்துகின்றது. அவர் அந்த ஒப்பந்தத்தைப் பார்த்து, படித்து, ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டுப் பணியில் சேர்கின்றார்.

இதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, தனக்காக பைலா என்ற பெயரில்  விதிமுறைகளையும், ஒழுங்குகளையும் வகுத்து, அதன் அடிப்படையில் தான் நீங்கள் அமைப்பில் சேர வேண்டும் என்று இதில் சேர வருகின்ற மக்களை நோக்கிச் சொல்கின்றது.  மக்களும் அதைப் பார்த்து, படித்து, ஒப்புக் கொண்டு தான் அமைப்பில் சேர்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, இந்த ஜமாஅத்தில் சேர்வது மற்ற அமைப்புகளில் சேர்வதைக் காட்டிலும் சிரமமானது. ஒருவர் வேறெந்த அமைப்பில் சேர்ந்தாலும் அந்த அமைப்பு, அவருடைய திருமணம், மரணம் போன்ற வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளிலும், நிரல்களிலும் குறுக்கே வந்து நிற்பதில்லை.

ஆனால் இந்த ஜமாஅத் ஒருவரின் வீட்டில் நடக்கும் திருமணம் முதல் மரணம் வரையிலான அத்தனை நிகழ்வுகளிலும் குறுக்கே வந்து நிற்கும்.

ஒருவர் தன் திருமணத்தின் போது வரதட்சணை வாங்கக் கூடாது என்பது மட்டுமல்ல; வரதட்சணை வாங்குகின்ற மற்றவர்களின் திருமணத்தில் போய் கலந்துக் கொள்ளக் கூடாது. அந்தத் திருமணத்தின் போது நடைபெறுகின்ற விருந்திலும் கலந்து கொள்ளக் கூடாது. பெண் வீட்டில் திருமண விருந்து வைக்கக் கூடாது; அப்படியே விருந்து வைத்தாலும் அந்த விருந்திலும் கலந்து கொள்ளக் கூடாது. ஏன்? மாப்பிள்ளை வீட்டில் விருந்து வைத்தாலும் ஆடம்பரமாக வைக்கக் கூடாது. சிக்கனமாகச் செலவு செய்யப்படும் திருமணமே பரக்கத் நிறைந்த திருமணம் என்ற ஹதீஸ் அடிப்படையில் மிக சிக்கனமாக விருந்து வைக்க வேண்டும். மண்டபத் திருமணம் கூடாது இப்படிப் பல அடுக்கடுக்கான திருமணம் தொடர்பான கட்டுபாடுகள், கடிவாளங்கள்!

மரணம் என்று வந்து விட்டால், பெற்ற தந்தை யாகவோ, அல்லது தாயாகவோ இருந்தாலும் சரி! அவர்கள் இணை வைத்தவர்களாக மரணித்திருந்தால் அவர்களது ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள முடியாது என்று மரணம் வரையில்  தொடரும் கட்டுப்பாடுகள்.

நமது ஜமாஅத் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளையும், கடிவாளங்களையும் போட்டிருக்கும் போது,  ஊர் ஜமாஅத்துகள் வேறு தங்கள் பங்கிற்கு திருமணத்திற்குத் தடைகளை விதிக்கின்றன. ஜனாஸாக்களை அடக்குவதற்கும் முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன. இது மாதிரியான நெருக்கடிகள் வேறு எந்த ஜமாஅத்தில் உள்ள உறுப்பினருக்கும் வருவதில்லை.

இதுபோன்ற கட்டுப்பாடுகளும், கடிவாளங்களும் மற்ற ஜமாஅத்துகளில், அமைப்புகளில் அறவே கிடையாது. இது ஜமாஅத்திற்கு வெளியில் உள்ள இளைஞர்களின்  கவனத்தை இந்த ஜமாஅத்தை நோக்கி ஈர்க்கின்றது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தும் தேனடையாக இந்த இயக்கத்தில் இளைஞர் படை வந்து மொய்க்கின்றனர். மடை உடைத்த வெள்ளமாய் இந்த அமைப்பிற்குள் தடை உடைத்து வந்து பாய்கின்றனர்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? நாம் கொண்டிருக்கின்ற குர்ஆன், ஹதீஸ் என்ற கொள்கை, கோட்பாடு தான். அதை நோக்கிய நமது பிரச்சாரத்தின் தாக்கமும் வெளிப்பாடுமாகும். இந்த ஜமாஅத்தில் சேர்ந்தால் இவ்வளவு பிரச்சனை களையும், பின்விளைவுகளையும், எதிர்ப்புகளையும், எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டும் என்று தெரிந்து தான் இந்த ஜமாஅத்தில் ஓர் உறுப்பினர் அடி எடுத்து வைக்கின்றார்.

அப்படி அடி எடுத்து வைக்கும் அவரிடம் இந்த ஜமாஅத் வெறுமனே ஒற்றை வார்த்தையில், நீங்கள் உள்ளே நுழைந்து கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை. ஒரு சாதாரண  நிறுவனமே  தன்னிடம் பணிக்குச் சேர வருகின்ற ஊழியரிடம் தனது விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் தெரிவித்து சேர்க்கும் போது கொள்கைக்காக நிறுவப்பட்ட இந்த அமைப்பு தனது விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் தெரிவிக்காமல் ஓர் உறுப்பினரைச் சேர்க்குமா? ஒருபோதும் சேர்க்காது.

அதற்காகத் தான் இந்த இயக்கத்தின் அமைப்பு நிர்ணயச் சட்டத்தைப் பார்த்து,  படித்து, அதை ஒப்புக் கொண்டு உறுப்பினராகச் சேரும்படி கூறுகின்றது.

இந்த அடிப்படையில் அமைப்பு நிர்ணயச் சட்டம் ஓர் ஒப்பந்தமாகி விடுகின்றது. இந்த ஜமாஅத்தைத் தேர்வு செய்பவர், எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமாக, சுதந்திரமாக  சிந்தித்துத் தான் இந்த இயக்கத்தைத் தேர்வு செய்கின்றார். அது விதிக்கின்ற ஒப்பந்தத்தை  ஒப்புக்   கொண்டு தன்னை ஓர் உறுப்பினராக இந்த இயக்கத்தில்  இணைத்துக் கொள்கின்றார். எப்போது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டு விடுகின்றாரோ அப்போதிலிருந்து   மார்க்க விஷயத்தில் குர்ஆன் ஹதீஸுக்குக் கட்டுப்பட்டவராகவும் நிர்வாக அடிப்படையில் இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவராகவும் ஆகி விடுகின்றார்.

ஒப்பந்த மீறல் விசாரணைக்குரிய குற்றமே!

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

அல்குர்ஆன் 17:34

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்!

அல்குர்ஆன் 16:91,92

இந்த ஜமாஅத்தின் பயணத்தின் போது  பல பாதகங்களையும், பலவிளைவுகளையும் சந்தித்து, அது போன்றவை எதிர்காலத்தில் வரக்கூடாதே என்று சிந்தித்து சிந்தித்து அல்லாஹ் சொல்வது போல், ஒரு நூற்கண்டை நூற்பது போன்று நூற்று இந்த அமைப்பு விதிகளை உருவாக்கியிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் இந்த உதாரணம் நம்முடைய ஜமாஅத்திற்கு நூற்றுக்கு நூறு அப்படியே பொருந்திப் போகின்றது. அதற்கு எடுத்துக் காட்டாக விதி எண்.10 – அரசியல் நிலைபாடுகள் குறித்து பார்ப்போம்:

தேர்தல் நிலைப்பாடு

10(1) உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்தத் தேர்தலிலும் இவ்வமைப்பு போட்டியிடாது. இவ்வமைப்பின் உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது. அமைப்பின் பெயரையோ, கொடியையோ, அடையாளத்தையோ பயன்படுத்தக் கூடாது.

10(2) உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதோ, ஆதரித்து கருத்துச் சொல்வதோ கூடாது.

தேர்தல் களத்தில், தேர்தல்  காலத்தில் எப்படி, என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்தோம் என்பதை நாம் அனைவருமே நன்கு அறிவோம்.  கொள்கையில் உறுதிமிக்கவர்கள் கூட தேர்தல் திருவிழாக்களில் திரும்ப வராத அளவிற்குக் காணாமல் போய் விட்டார்கள். இதற்கு தமுமுக ஓர் எடுத்துக்காட்டு.  அந்த அளவுக்கு அது சீரழிந்ததற்கு அடிப்படைக் காரணமே அரசியல் தலைவர்களின் சங்காத்தமும், அவர்களின் சகவாசமும் தானே!

நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் வரலாற்றிலும் எதிரிகள் தேர்தல் காலத்தில் பெட்டி கைமாறியிருக்கின்றது நா கூசாமல்  நம்மீது குற்றஞ்சாட்டினார்கள்.

இது நம்முடைய தவ்ஹீத் பிரச்சாரப் பாதையில் சந்தேக நிழலைப் படிய வைத்தது. இட ஒதுக்கீடு என்ற லட்சியத்திற்காக மட்டுமே தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தோம்.  ஆனால் அது ஏகத்துவம் என்ற முதன்மை லட்சியத்தை அழித்து விடும் என்று அனுபவத்தில் புரிந்து கொண்டோம். எனவே அந்தச் சந்தேகத்தின் சாயல் கூட இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் மீது படியக் கூடாது என்று உறுதி பூண்டோம். அந்தத் தாக்கத்தில்  உருவானவை தான் நமது அமைப்பு நிர்ணயச் சட்டத்தில், தேர்தல் நிலைப்பாடு குறித்த விதி ஆக்கங்கள்.

இந்த விதி ஆக்கங்களை பொதுக்குழுவில் படித்துக் காட்டி ஒப்புதல் வாங்கும் போது ஒட்டுமொத்த உறுப்பினர்கள் எழுப்பிய ‘அல்லாஹு அக்பர்’ என்ற தக்பீர் ஒலி முழக்கத்தை பொதுக்குழு மண்டபமே எதிரொலித்தது.

ஆம்!  மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களின் அடிப்படையில் அந்த விதிகளுக்கு எல்லாம் நாம் எழுப்பிய தக்பீர் முழக்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ்வைப் பொறுப்பாக்கியிருக்கின்றோம்.

பாலியல் குற்றச்சாட்டுக்கள்

அதுபோல் ஜமாஅத் நிர்வாகிகள் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அது விசாரணைக்கு உட்படுத்தி நிரூபிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை என்ன என்ற விதி முன்னர் இல்லாமல் இருந்தது.

பொதுச் செயலாளராக இருந்த பாக்கர் மீது இதுபோல் குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட பின் அவர் மீது நிர்வாகக் குழு நடவடிக்கை அறிவித்தது. 37 நாட்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட பின் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனாலும் பைலாவில் எந்த விதியும் இது குறித்து இல்லாத நிலையில் பாக்கர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மாநில நிர்வாகத்தால் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபணமானது.

இதன் காரணமாக பாக்கர் மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அது குறித்து செயற்குழுவில் விளக்கிய போது இப்படி நிர்வாகிகள் மீது தொடர்ந்து புகார் வருவதற்குக் காரணம் சரியான சட்டம் இல்லாதது தான் என்று செயற்குழுவில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அடிப்படையில் பின்வரும் சட்டம் உருவாக்கப்பட்டு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

53 (7) விபச்சாரம் செய்ததாகவோ, அல்லது அதற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு எப்பொறுப்பிற்கும் தேர்வு செய்யப்பட மாட்டார். தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமையும் இல்லை.  32 (9) விதியில் உள்ள உரிமை எதுவும் வழங்கப்படாது.

விபச்சாரம் செய்தால் இந்த நடவடிக்கை என்று தான் முன்னர் எழுதினோம். இதில் பல கேள்விகள் வந்தன. ஒருவர் விபச்சாரம் செய்தார் என்று எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் இருக்கும் வீட்டுக்குப் போய்விட்டு நேரம் கழித்து வருகிறார்; அல்லது ஒரு பெண்ணை, தான் மட்டும் தனித்து இருக்கும் வீட்டுக்கு வரச்சொல்லி சில மணி நேரங்கள் தனியாக இருக்கிறார்; இவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

ஆனால் கண்டிப்பாக விபச்சாரம் செய்யத்தான் வரச் சொல்லி இருக்கிறார் என்று அனைவரின் மனசாட்சி சொன்னாலும் விபச்சாரம் செய்தார் என்று நிரூபிக்க முடியாது. எனவே தான், அதற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ என்ற சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்தச் சட்டம் பீஜே முன்னர் தலைவராக இருக்கும் போது வரை நடைமுறையில் இருந்தது.

அல்தாபியை தலைவராகத் தேர்வு செய்த பொதுக்குழுவில் இவ்விதியை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஏகமனதான ஒப்புதலுடன் அது நிறைவேற்றப்பட்டது.

அதாவது ஐந்து ஆண்டுகள் என்ற வாசகத்துக்குப் பதிலாக எக்காலமும் என்ற சொல்லாக மாற்றம் செய்யப்பட்டது.

பொதுக்குழுவில் பைலாவாக திருத்தம் செய்யப்பட்டாலும் அதன் பின் பைலா புத்தகம் அச்சிடப்படாததால் அந்தத் திருத்தம் புத்தக வடிவில் இல்லை.

இந்த விதியின் படி அல்தாபி தலைவராக இருந்த போது சிலர் மீது அவரே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் தான் அல்தாபி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவார்கள்.

இப்படி பிரச்சனைகளைச் சந்திக்கும் போது தேவையான சட்டவிதிகள் உருவாக்கப்படுகின்றன. இப்படித் தான் ஒவ்வொரு பிரச்சனையை ஒட்டி பைலாவின் விதிகளை உருவாக்கியிருக்கின்றோம்.

இவ்வாறு அல்லாஹ்வை முன்னிறுத்தி பொறுப்பாக்கிய அந்த ஒப்பந்தத்தை முறிக்கலாமா? அல்லாஹ் சொல்வது போன்று கஷ்டப்பட்டு நூற்ற  அந்த நூற்கண்டை  துண்டு, துண்டாக நம் கைகளால்  அறுத்துப் போடலாமா? சிந்திக்க வேண்டும்.

இந்த உலகத்தில் அறுத்தெறிந்து விட்டுப் போகலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படிச் செல்பவர்களை தண்டிக்கவும் முடியாது. ஆனால் நாளை அல்லாஹ்வின் மன்றத்தில் விசாரணைக்குரிய குற்றவாளிகளாகி விடுவோம் என்பதை மட்டும் இங்கு உறுதியாக நமது உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்வோமாக!

இந்த இயக்கத்திற்கும், இதில் பயணிக்கின்ற ஒவ்வொரு ஏகத்துவக் கொள்கை உறுப்பினருக்கும் உள்ள பந்ததமும், உறவும் இந்த பைலா என்ற ஒப்பந்தம் தான்.  அதைத் தான் சங்க விதி, அமைப்பு நிர்ணயச் சட்டம் என்றழைக்கின்றோம். அந்தச் சங்க விதியின் சங்கை நாம் நெறித்து விட்டால் சத்திய நெறியின் பாதை அடைக்கப்பட்டு அதற்கு சங்கூதப்பட்டு விடும்.

சங்க விதியில் ஏதாவது ஊரில் விதிவிலக்கு கோரி, சலுகை கேட்டு அதைத் தலைமை  கொடுத்தால் சட்டத்தில் பாரபட்சம் காட்டும் பாவத்திற்குப் பலியாகிவிடுவோம். அது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதை  நாம் அனைவருமே அறிவோம். அதனால் அப்படி எந்த ஊருக்கும் எந்த மனிதருக்கும் சட்டத்தில் சலுகையை அளிக்க முடியாது.

தலைமை எல்லாக் கிளைகளையும், எல்லா உறுப்பினர்களையும் சமமாக நடத்துவதற்குத் தான் மார்க்க அடிப்படையில் கடமைப்பட்டிருக்கின்றது.  ஒரு கிளை இப்படி சலுகை கேட்டு அது கிடைக்கவில்லை என்றதும் நாங்கள் தனியாகப் போகின்றோம் என்று கழன்று கொண்டால் இந்த கட்டமைப்பு உடைந்து விடும். ஒவ்வொரு கிளையும் இப்படி கழன்று போக ஆரம்பித்து விடும். மொத்த அமைப்பே ஆட்டம் கண்டு சத்திய நெறி பாதிப்புக்குள்ளாகும்.  இதற்கு சம்பந்தப்பட்ட அந்தக் கிளை அல்லது  அந்த  மாவட்டம் அமைப்பின் கட்டமைப்பை சீர்குலைத்ததற்குரிய பாவத்தைச் சுமக்க நேரிடும்.

இருக்கின்ற அமைப்புகளில் குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் பயணம் செய்கின்ற அமைப்பு இது ஒன்று தான் எனும் போது, இந்த அமைப்பு அந்தப் பாதையிலிருந்து விலகாத வரை அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகின்றது.

எங்களது விருப்பிலும், வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும், இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் செவிசாய்ப்போம், கட்டுப்படுவோம் என்றும் அல்லாஹ்விடமிருந்து அமைந்திருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாத வரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போட மாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம்.

அறிவிப்பவர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 7056

இந்த ஹதீஸைத் தானே அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்கு ஜாக் ஆதாரமாகக் காட்டியது. அப்போது நீங்கள் மறுக்கவில்லையா? என்று கேட்கலாம். ஜாக் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, மார்க்க விஷயங்களிலும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறியது. பிறை விஷயத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு மாற்றமாக முடிவெடுக்கிறீர்களே என்று நாம் ஜாக் தலைமையிடம் கேட்டபோது, அமீர் சொன்னால் கட்டுப்பட வேண்டும் என்று இந்த ஹதீஸை ஆதாரம் காட்டியது. ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் கட்டுப்படுவது பற்றிப் பேசவில்லை.

நிர்வாகக் கட்டமைப்பு சீரழிந்து விடக்கூடாது என்றால் நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறக்கூடாது, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட தலைமைக்கு நிர்வாக விஷயங்களில் கட்டுப்படுவதைப் பற்றியே நாம் கூறுகிறோம் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இந்த அடிப்படையில் சத்திய நெறிப் பிரச்சாரத்தை அடுத்த சந்ததி வரை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக, இசைவாக சங்க விதி என்ற ஒப்பந்தத்தைப் பேணுவோமாக!

———————————————————————————————–

ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள்

அப்துல் கரீம்  எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் கொள்கையே பரேலவிசக் கொள்கை எனப்படும்.

இக்கொள்கைக்கு அடிப்படை பொய், புரட்டு, புளுகு மூட்டைகள் தாம். இவையே பரேலவிசக் கொள்கையின் அஸ்திவாரங்கள் ஆகும்.

அத்தகைய பரேலவிசம் எனும் விஷத்தைத் தாங்கிய இதழ் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

(அவ்விதழின் பெயரை அலட்சியம் செய்து விட்டு, அதனுள் பொதிந்திருந்த விஷமக் கருத்திற்கான விளக்கத்தை இக்கட்டுரையில் தருகிறோம்.)

நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்பது தான் அந்தப் பரேலவிச இதழ் எழுதிய குறிப்பிட்ட கட்டுரையின் சாராம்சம்.

நபிகளாரின் தாயாரை முஸ்லிம் என்று நிறுவ அக்கட்டுரையில் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். அதற்காகப் பல புளுகு மூட்டைகளை மார்க்கத்தின் பெயரால் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் புளுகு மூட்டைகளை அறிந்து கொள்ளும் முன் நபியின் தாயார் முஸ்லிமா? காஃபிரா? மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்வாம்.

நபியின் தாயார் காஃபிரே!

நபிகள் நாயகத்தின் மீது முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கும் அளவிட முடியாத நேசத்தின் காரணத்தால் நபியின் பெற்றோரை காஃபிர் என்று கூறுவதிலும், நம்புவதிலும் சில முஸ்லிம்கள் பெரிதும் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு அடிப்படையை இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

அல்லாஹ்வும் ரசூலும் யாரை, எதை, எப்படி நம்பச் சொல்கிறார்களோ அவ்வாறு நம்புவதே முஸ்லிம்களின் கடமையாகும். நமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை மார்க்க விவகாரங்களில் தலையிட அனுமதிப்பது முஸ்லிம்களுக்கு அழகல்ல.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

இவ்வசனத்தின் படி நபியின் தாயார் முஸ்லிமா? காஃபிரா? என்று நாம் முடிவு செய்யும் போது இதுபற்றி குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.

இறைத்தூதரைப் பெற்றெடுத்த பெற்றோர் எப்படி முஸ்லிமல்லாதவர்களாக இருப்பார்கள்?

ஒரு நபியைப் பத்து மாதம் சுமந்து மண்ணில் ஈன்றெடுத்த தாய் எப்படி காஃபிராக இருப்பார்கள்? அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப் பட்ட அண்ணலாரின் தாயை இணைவைப்பாளராகக் கற்பனை செய்ய முடியுமா? என்பன போன்ற தனிப்பட்ட விருப்பங்களின்படி முடிவெடுக்க கூடாது; அவற்றுக்கு இடமளிக்கவும் கூடாது. மாறாக, இது தொடர்பான முடிவை மார்க்கத்தின் ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டு தான் எடுக்க வேண்டும்.

முஸ்லிமில் இடம்பெறும் நபிமொழி, நபிகளாரின் தாயார் முஸ்லிமல்ல என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1777

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாருக்காக பாவமன்னிப்புக் கோர அல்லாஹ்விடம் அனுமதி கேட்ட போது இறைவன் அனுமதி தர மறுக்கின்றான் என்று இந்நபிமொழி தெரிவிக்கின்றது.

நபிகளாரின் தாயாரை இறைவன் முஸ்லிமாக அங்கீகரித்திருப்பான் எனில் அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடவும் அல்லாஹ் அனுமதி வழங்கியிருப்பான். அவ்வாறு இறைவன் அனுமதி வழங்காததலிருந்து நபியின் தாயார் காபிராகவே மரணித்துள்ளார் என்பதை உறுதியாக அறிய முடிகிறது.

ஏனெனில் இணைவைப்பாளருக்குப் பாவ மன்னிப்புத் தேட இறைவன் அனுமதிக்கவில்லை என்று திருக்குர்ஆன் உரைத்து விட்டது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது

அல்குர்ஆன் 9:113

இவ்வசனத்தின்படி நபியின் தாயார் இணை வைப்பாளராக மரணித்துள்ளார் என்பதாலே அவருக்காக நபிகள் நாயகத்தை பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று தடுத்துள்ளான் என்பதை அறியலாம்.

மேலும் நபியின் தாயார் முஸ்லிமாக மரணிக்க வாய்ப்பே இல்லை என்பதை நபியின் வரலாற்றை அறிந்த எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஏனெனில் நபிகள் நாயகத்தின் குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் தாயார் இறந்து விட்டார்கள்.

நபிகள் நாயகமோ தமது நாற்பதாம் வயதில் தான் தூதுத்துவப் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்யும் முன்பே, அதாவது நபியின் குழந்தைப் பருவத்திலேயே நபியின் தாயார் இறந்து விடுவதால் அவர்கள் முஸ்லிமாக மரணித்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேற்கண்ட முஸ்லிம் நபிமொழியும் இக்கருத்தைத் தெளிவுபட எடுத்துரைத்து விடுகிறது.

ஆனால் மார்க்க ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, தங்களது சொந்த அபிப்ராயங்களையே எப்போதும் முன்னிறுத்தி, பரேலவிச நாற்றத்தைப் பரப்பும் பரேலவிகள், நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிறுவ அரும்பாடு படுகிறார்கள். அதற்காகவே பல பொய்களையும் வாதங்கள் எனும் பெயரில் முன்வைக்கிறார்கள்.

நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிலைநாட்ட மேற்படி பரேலவிசச் சிற்றேடும் சில வாதங்களை முன்வைத்துள்ளது.

பரேலவிச இதழின் சிரிப்பூட்டும் வாதங்கள்

தலைப்புக்கு ஏற்ப எள்ளி நகையாடும் வகையிலேயே அந்தச் சிற்றேட்டில் வைக்கப்பட்ட வாதங்கள் அமைந்துள்ளன.

அவர்களின் மொத்த வாதங்களையும் பார்த்தால் நாம் போட்ட தலைப்பு சரிதான் என்றே வாசகர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

இதோ அவர்களின் வாதம்…

  1. ஈமான் கொண்டோரே! என்னுடைய விரோதியையும் உங்களுடைய விரோதியையும் அவர்கள் பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அல்குர்ஆன் 60:1

இந்த வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களைத் தன்னுடைய விரோதி என்று கூறி விட்டு, அந்த விரோதியின் வயிற்றிலிருந்தா தன்னுடைய நேயரான, அகில உலக நாயகரான ஸல் அவர்களை சுமக்கச் செய்து இவ்வுலகில் பிறக்க வைத்தான்?

  1. நபி(ஸல்) அவர்களை தனது ஹபீபாக (நேயராக)த் தேர்ந்தெடுத்த அல்லாஹ், அவர்களை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தனது விரோதிகளில் ஒருவராக ஆக்கிக்கொண்டானா?
  2. ஒரு ஹபீபை (நேயரை) சகலரிலும் விஷேசமாகத் தேர்ந்தெடுத்த அல்லாஹ் அவர்களைப் பெற்றெடுக்கும் அன்னையைத் தனது நேசத்திற்க் குறியவராகவும் ஆக்கிக் கொள்ளமாட்டானா?
  3. இணை வைப்பவரைத் தனது விரோதி என்றும் நஜீஸ் (அசுத்தமானவர்) என்றும் கூறிய அல்லாஹ், தனது விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்துமா இந்த அகில உலக நாயகரைப் பெற வைத்தான்?
  4. இஸ்லாம் அல்லாஹ்வின் விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்தும் பிறந்ததா?

இதுதான் அறிவுகெட்ட பரேலவிகளின் ஆவிபறக்கும் (சூடான) வாதம் (?)

அதாவது இணைவைப்பாளர் இறைவனின் விரோதி என்று திருக்குர்ஆன் கூறுகிறதல்லவா? அப்படியான விரோதிகளிலிருந்து இறைவன் தன் தூதரைத் தேர்வு செய்வானா?

இந்த ஒரு கேள்வியைத் தான் மேற்கண்டவாறு பல விதங்களில் பல கேள்விகளைப் போல் அடுக்கியுள்ளார்கள்?

குர்ஆனைக் கருத்தூன்றிப் படிக்கும் யாரும் இது எந்தளவு அபத்தமான வாதம் என்பதைச் சிரமமின்றி அறிந்து கொள்வர்.

இணைவைப்பாளர் எனும் விரோதியிலிருந்து ஓர் இறைத்தூதர் தோன்ற மாட்டார் எனும் இவர்களின் கருத்து குர்ஆனின் கருத்தல்ல. நபிகளாரும் இந்த அடிப்படையை நமக்குப் போதிக்கவில்லை. மாறாக முழுக்க முழுக்க இவர்களின் கற்பனையான பிதற்றலின் வெளிப்பாடிது.

திருக்குர்ஆனில் இதற்கு நேர்மாறானதை அதிகமாகவே காண முடியும்.

இறைவனின் விரோதியிலிருந்து இறைநேசர் தோன்றுவதும், இறைநேசரிலிருந்து இறைவனின் விரோதி தோன்றுவதும் சாதாரணமான ஒன்று என்பதையே திருக்குர்ஆன் பிரதிபலிக்கின்றது.

ஆஸர் எனும் இணைவைப்பாளரான இறைவனின் விரோதியிலிருந்து தான் இப்ராஹீம் எனும் இறைத்தூதரை இறைவன் வெளிப்படுத்தினான்.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

அல்குர்ஆன் 9:114

அதே போல நூஹ் எனும் இறைத்தூதரிலிருந்து வெளிப்பட்ட அவரது மகன் இறைவனின் விரோதியாகவே இருந்தார். அப்படியே மரணிக்கவும் செய்தார்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’’ என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’’ என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 11:45,46

இவ்விரண்டு வசனங்களே இவர்களின் தத்துவத்தை அடியோடு நிராகரித்து விடுகின்றது. இப்போது என்ன செய்ய போகிறார்கள்?

திருக்குர்ஆனின் இந்த வசனங்களை எல்லாம் மறுக்க போகின்றார்களா?

அல்லது திருக்குர்ஆனின் தெளிவான கருத்துக்கு மாற்றமாக நூஹ் நபியின் மகனும் முஸ்லிம் தான், இப்ராஹீம் நபியின் தந்தை ஆஸர் அற்புதமான முஸ்லிம் (?) என்று விளக்கமளிக்கப் போகிறார்களா?

பரேலவிகளின் பிதற்றல்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

நபியைப் பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தன் நேசத்திற்குரியவராக ஆக்கிக் கொள்ளமாட்டானா?

ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்?

இவ்வாறு இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை அறிவு இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒருவரை முஸ்லிமாக்குகின்ற இஸ்லாம் எனும் பாக்கியத்தை, நேர்வழியை இறைவன் தான் நாடியோர்க்கு வழங்குவான்.

இஸ்லாத்தை ஒருவருக்கு வழங்குவது இறைவனின் அதிகாரத்தில் உள்ள அம்சமாகும்.

நபியின் விருப்பத்திற்குரிய, துவக்க காலத்திலிருந்து நபியின் பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக இருந்த நபியின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்குக் கூட அல்லாஹ் இஸ்லாம் எனும் நேர்வழியைக் கொடுக்கவில்லை.

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’  எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’  என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ்’  எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி)

நூல்: புகாரி 1360

அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்பதை நபிகள் நாயகம் பெரிதும் விரும்பியிருந்தும் அவர்களுக்கு இஸ்லாம் எனும் பொக்கிஷத்தை இறைவன் வழங்கவில்லை என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் அல்லாஹ் இவரை இப்படி ஆக்குவானா? இவருக்கு இஸ்லாத்தை வழங்காமல் இருப்பானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அது முறையா? திருக்குர்ஆனின் அறிவு இல்லாதவர்கள் தாம் இப்படியான கேள்விகளை எழுப்புவார்கள்.

கொஞ்சம் சுதாரிப்பு இல்லையென்றால் ‘‘தன் சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று தனது ஹபீப் பெரிதும் விரும்பிய நிலையில் அல்லாஹ் அபூதாலிபை முஸ்லிமல்லாதவராக மரணிக்கச் செய்வானா?” என்று கேள்வி எழுப்பி அபூதாலிபையும் இவர்கள் முஸ்லிம் என்றாக்கி விடுவார்கள்.

(அட மறந்து விட்டோமே! ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி எப்போதோ இந்த அரிய தத்துவத்தை உதிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

‘ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்?’

குர்ஆனைப் பற்றிய அரைகுறை அறிவுடன் இப்படிக் கேள்வி எழுப்ப ஆரம்பித்தால் குர்ஆனின் நிலை என்னாவது?

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’’ என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

ஒரு இறைத்தூதரின் அந்தரங்கங்களை அறிந்த அவரின் மனைவியை இறைவன் தன் நேசத்திற்குரியவராக ஆக்காமல் இருப்பானா? என்று கேள்வி எழுப்பி இந்த வசனத்தையும் பரேலவிகள் மறுக்கலாம்.

உலக முஸ்லிம்கள் எல்லாம் இன்றளவும் ஓதி வரும், மறுமை வரையிலும் ஓதவிருக்கும் ஆயத்துல் குர்ஸீயை ஒரு கெட்டவன் மூலம் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவானா?

ஒரு கெட்டவன் எப்படி ஆயத்துல் குர்ஸீயை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுப்பான்?

இவ்வாறு கேள்வி எழுப்பி ஆயத்துல் குர்ஸீ தொடர்பான புகாரி 2311வது செய்தியையும் இவர்கள் மறுத்து விடுவார்கள் போலும்.

இப்படிக் குர்ஆனையும் ஹதீஸையும் ஒரு சேர மறுக்கும் பரேலவிசக் கூட்டம் நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பது உலக விந்தை.

இது தான் பரேலவிகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் இலட்சணம்.

இனி இடைவிடாத அவர்களின் புளுகல் பட்டியலைக் காண்போம்.

  1. கர்ப்ப ஸ்திரிகளுக்கு ஏற்படும் பளுவையும், வேதனையையும் அன்னை ஆமினா ரழி (?) அவர்களுக்கு இல்லாமல் இலகுவாக அல்லாஹ் ஆக்கினானே, தனது விரோதிக்கா இப்படிச் செய்தான்?

ஆமினா அவர்களுக்கு நபியை ஈன்றெடுத்த பொழுது பிரசவ வலி ஏற்படவில்லையாம். அதனால் ஆமினா அவர்கள் முஸ்லிமாம்.

அப்படியானால் ஒரே பிரசவத்தில் மூன்று, நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் முதல் தர முஸ்லிம் என்ற முத்திரையைக் குத்திவிடுவார்கள் போலும்.

முதலில் ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பெதல்லாம் காதில் பூ சுற்றும் வேலையாகும்.

ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்று சொல்வதாக இருந்தால் அதை சம்பந்தப்பட்ட ஆமினா அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆமினா அவர்களே இதைக் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு செய்தி பைஹகீ அவர்களின் தலாயிலுன் நுபுவ்வத் எனும் நூல் (பாகம் 1, பக்கம்  136)  உள்ளிட்ட சில நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இதில் அஹ்மத் பின் அப்துல் ஜப்பார் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அறிஞர்கள் பொய்யர் என்றும் பலவீனமானவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 (பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1, பக்கம் 44)

மேலும் இதில் ஜஹ்ம் பின் அபீ ஜஹ்ம் என்பவர் இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மை ஹதீஸ்கலை அறிஞர்களிடம் உறுதி செய்யப்படவில்லை.

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் நபர் யாரென்றும் இதில் குறிப்பிடப்படவில்லை. இப்படிப் பல பலவீனங்கள் நிறைந்த பொய்யான செய்தி என்பது கவனத்தில் கொள்ளத்தக்க விஷயம்.

இது தவிர இந்த அறிவிப்பு கூட நபியின் தாயார் ஆமினா அவர்கள் சொன்னதைப் போன்று தான் உள்ளது.

ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பதை வஹி எனும் இறைச்செய்தி உறுதி செய்யவில்லை.

ஆமினா அவர்கள் முஸ்லிமே அல்ல எனும் போது அவர்கள் கூறும் செய்தி ஒன்றும் மார்க்கமாகாது. அதை முஸ்லிம்கள் நம்பத் தேவையுமில்லை.

  1. அன்னை ஆமினா (ரழி) அவர்களின் கர்ப்ப காலத்தில் அல்லாஹ் தனது மலக்கை (அமரரை) அனுப்பி ஆமினாவே! நீர் இந்த உம்மத்துகளின் தலைவரைச் சுமந்திருக்கிறீர் என்று சொல்லச் செய்தானே! தனது விரோதியிடமா இப்படி சொல்லச் செய்தான்?

இது அவர்களின் அடுத்த புளுகல்.

நபியின் தாயார் ஆமினா அவர்களுக்கு மலக்கை அனுப்பி இவ்வாறு சொல்லச் சொன்னதாக அண்டப்புளுகு புளுகுகிறார்கள்.

இது ஏதோ பிரபலமான, மக்கள் நன்கு அறிந்த ஹதீஸ் நூல்களில் இருப்பதைப் போன்ற தொனியில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். உண்மையில் இது எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை.

இதற்கு முழுமையான அறிவிப்பாளர் தொடர் ஏதும் கிடையாது.

பரேலவிச சித்தாந்த சிந்தனை கொண்ட இப்னு ஹஜர் அல்ஹைதைமீ (புகாரிக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அல்ல, அவர் அஸ்கலானீ என்று அழைக்கப்படுவார்) என்பவர், தான் எழுதிய மவ்லிதுர் ரசூல் எனும் சிறிய நூலில் இதைத் தன் சொந்தக் கருத்தாகப் பதிவு செய்கிறார்.

தற்காலத்தில் எழுதப்பட்ட மவ்லித் புத்தகங்களைப் போன்று அக்காலத்தில்  மேற்படி இப்னு ஹஜர் என்பவரால் எழுதப்பட்ட மவ்லித் புத்தகம் தானே தவிர ஹதீஸ் நூல் அல்ல, இதற்கு அறிவிப்பாளர் தொடரும் கிடையாது என்பதால் இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஹதீஸ் அல்ல. எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அடிப்படை ஆதாரமற்ற செய்திதான் இது.

எனவே ஆமினா அவர்கள் நபியை ஈன்றெடுத்த போது பிரசவ வலியை உணரவில்லை என்பது அடிப்படையற்ற கட்டுக்கதையாகும்.

அடுத்த இவர்களின் அண்டப்புளுகல்கள் யாவும் ஏற்கனவே கேட்டு சலித்தும் புளித்தும் போன பழைய புளுகல்களே.

நபிகள் நாயகம் பிறக்கும் போது ஷாம் நகரின் கோட்டைகள் எல்லாம் பிரகாசம் அடைந்தது. ஒரு மலக்கை அனுப்பி முஹம்மத் என்று பெயர் வைக்குமாறு கூறினார் என்பவை தான் அவர்களின் பழைய புளுகல்கள்.

இவைகளுக்கு விரிவாகவே பல ஆண்டுகளுக்கு முன்பே ஏகத்துவம் இதழில் ஆமினா கண்ட அற்புத ஒளி எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வடிவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாதத்திற்கு நபி பிறக்கும் போது இந்த அற்புதங்கள் (?) நடைபெற்றன என்று வைத்துக் கொண்டாலும் அதன் காரணத்தினால் நபியின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்றாகுமா?

கெட்டவர்கள் மூலம் கூட சில வேளைகளில் சில அற்புத நிகழ்வுகள் ஏற்படலாம் என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

ஸாமிரி என்ற கெட்டவன் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. (பார்க்க: அல்குர்ஆன் 20:7, 88) அதனால் ஸாமிரி முஸ்லிமாகி விடுவானா?

மறுமை நாளின் நெருக்கத்தில் தஜ்ஜால் எனும் கெட்டவன் மூலம் சில அற்புத நிகழ்வுகள் நடைபெறும். அதனால் தஜ்ஜாலும் முஸ்லிம் என்ற பட்டியலில் வந்து விடுவானா? இந்த பரேலவிகள் ஸாமிரி, தஜ்ஜால் ஆகிய இருவரையும் முஸ்லிம்கள் என்று இந்த அற்புத அளவுகோலின் படி தீர்ப்பளிப்பார்களா?

ஒருவருக்குக் குறிப்பிட்ட வேளையில் அற்புத நிகழ்வு நடந்தேறியது என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்கள் முஸ்லிமாகி விடமாட்டார்கள் என்பது தான் திருக்குர்ஆன் போதிக்கும் அறிவுரையாகும்.

திருக்குர்ஆனை மறுக்கும் பரேலவி கூட்டத்திடம் குர்ஆனின் அறிவுரையைக் கூறி என்ன பயன்?

சரி! பரேலவிகளின் புளுகல்களைப் பார்த்தாயிற்று.

நபியின் தாயாருக்குப் பாவமன்னிப்பு கேட்க இறைவன் தடைவிதித்தான் என்று முஸ்லிமில் இடம்பெற்ற செய்தியை துவக்கத்தில் பார்த்தோமே?  அந்தச் செய்தி தெளிவாக நபியின் தாயார் முஸ்லிமல்ல என்பதை நிரூபித்ததே! அந்தச் செய்திக்கு பரேலவிகள் என்ன பதிலளிக்கின்றார்கள்?

இன்ஷா அல்லாஹ் அதையும் அலசுவோம்.

———————————————————————————————–

கேள்வி – பதில்

வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

கேள்வி:

வைர, வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா? தங்கம், வெள்ளிக்கு ஜகாத் என்று குர்ஆனில் வருவதால் வைரத்திற்கு ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று சிலர் கூறுகிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?

டாக்டர் அஜ்மல் கான், ஆஸ்திரேலியா

பதில்:

ஜகாத் என்பது நம்முடைய செல்வத்தினைத் தூய்மைப்படுத்துவதற்காக இறைவன் கடமையாக்கிய ஒரு வணக்கமாகும்.

தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றதுஎன்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’  என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1417

நம்முடைய பொருளாதாரத்தில் எஞ்சிய செல்வத்தை அனுமதிக்கப்பட்டதாக இறைவன் ஆக்க வேண்டும் எனில் அதற்கு ஜகாத் வழங்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்தி விட்டார்கள். கால்நடைகளுக்கும், விளைபொருட்களுக்கும் உரிய ஜகாத் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளிக்கும் உரிய ஜகாத்தும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், பிளாட்டினம் போன்றவைகளுக்கு ஜகாத் உண்டு என்று மார்க்கத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் செல்வங்களுக்கு ஜகாத் உண்டு என்று பொதுவாகச் சொல்லப்பட்டதில் மேற்கண்டவையும் அடங்கும்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக் காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 9:103

இந்த வசனத்தில்  ‘அவர்களின் செலவங்களில் இருந்து தர்மத்தை எடுப்பீராக’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மதிப்புமிக்க அனைத்துமே செல்வங்களில் அடங்கிவிடும். தங்கம், வெள்ளி ஆகியவை மதிப்புமிக்க செல்வமாக இருந்தது மட்டுமின்றி அவை அன்றைக்கு நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே தங்கம், வெள்ளி என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுக்களுக்கு ஜகாத் உண்டு என்று என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். தங்கம், வெள்ளி பற்றித் தான் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது; அதனால் ரூபாய்களுக்கு ஜகாத் இல்லை என்று யாரும் சொல்வதில்லை.

ரூபாயை வைத்து தங்கம், வெள்ளியை வாங்க முடியும் என்பதால் ரூபாய்களுக்கும் ஜகாத் உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.

அதுபோல் தான் வைரம், வைடூரியம் போன்ற கற்களைக் கொண்டு தங்கம், வெள்ளியை வாங்க முடியும். எனவே ரூபாய்களை எப்படி நாம் தங்கமாக, வெள்ளியாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கிறோமோ அது போல் மதிப்பு மிக்க கற்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டுமே ஜகாத் என்று சொன்னால் ஜகாத் என்ற அம்சமே சமுதாயத்தில் இல்லாமல் போய்விடும்.

தனக்கு வரும் கோடானுகோடி ரூபாய்களை வைரமாக ஒருவன் பெற்றுக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வான். ஒருவருக்கு நாம் பத்து லட்சம் ரூபாய்களை அல்லது அதன் மதிப்பிலான தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுக்கிறோம். அன்பளிப்பாகப் பெற்றவருக்கு இது வருமானமாக சொத்தாக அமைந்துள்ளதால் அதற்கு அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் ரூபாய்களாகவோ, தங்கமாகவோ கொடுக்காமல் பத்து லட்சம் மதிப்புள்ள வைரத்தை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தால் அவருக்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். அதுபோல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை ஒருவன் பெற்றால் அதற்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். பல கோடி மதிப்புள்ள வீடு ஒருவனுக்குக் கிடைத்தால் அதற்கு அவன் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலை இதனால் ஏற்படும்.

நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி, செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்காமல் தப்பிக்க வழி வகுக்கும். எனவே வைரம், வைடூரியம் போன்றவைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதே சரியானதாகும். கற்களுக்கு ஜகாத் இல்லை என்று சில நபிமொழிகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாகும்.

السنن الكبرى للبيهقي (4/ 245)

7590 – رَوَى عُمَرُ بْنُ أَبِي عُمَرَ الْكَلَاعِيُّ الدِّمَشْقِيُّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَا زَكَاةَ فِي حَجَرٍ “. أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , ثنا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بِحِمْصٍ , ثنا كَثِيرُ بْنُ عُبَيْدٍ , ثنا بَقِيَّةُ , عَنْ عُمَرَ الْكَلَاعِيِّ فَذَكَرَهُ. وَرَوَاهُ أَيْضًا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْوَقَّاصِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مَرْفُوعًا وَرَوَاهُ [ص:246] مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ الْعَرْزَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ مَوْقُوفًا , وَرُوَاةُ هَذَا الْحَدِيثِ عَنْ عَمْرٍو كُلُّهُمْ ضَعِيفٌ وَاللهُ أَعْلَمُ

எந்தக் கல்லுக்கும் ஜகாத் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து ஷுஐப் என்பவர் அறிவிக்கின்றார்.

ஷுஐப் என்பவரிடமிருந்து அவரது மகன் அம்ரு அறிவிக்கின்றார்.

அம்ரு என்பவரிடமிருந்து உமர் பின் அபீ உமர், உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் ஆகிய இருவர் அறிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் பலவீனமானவர்கள் ஆவார்கள்.

இந்தச் செய்தியை சுனனுல் குப்ரா எனும் தனது நூலில் இமாம் பைஹகீ அவர்கள் பதிவுசெய்து விட்டு, இச்செய்தியை அம்ரு என்பவர் வழியாக அறிவிக்கும் அனைத்து அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களில் ஒருவரான உமர் பின் அபீ உமர் என்பவர் பற்றிய குறைகள்:

تهذيب الكمال 742 (21/ 475)

قال أبو أحمد بن عدي (1) : عُمَر بن أَبي عُمَر الدمشقي منكر الحديث عن الثقات (2). وَقَال أبو بكر البيهقي : وهو من مشايخ بقية المجهولين ، وروايته منكرة ، والله أعلم (3).

இவர் ஹதீஸில் மறுக்கப்படக் கூடியவர் என்று இப்னு அதீ கூறியுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் என்றும், இவரது அறிவிப்பு மறுக்கப்பட வேண்டியது என்றும் பைஹகீ கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 21, பக்கம் 475

அறிஞர்கள் இது போன்ற குறைகள் இவர் மீது சொல்லியிருப்பதால் இவரை ஆதாரமாகக் கொள்ள இயலாது.

மற்றொரு அறிவிப்பாளரான உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றிய குறைகள்:

تهذيب الكمال 742 (19/ 426)

قال ابراهيم بن عَبد الله بن الجنيد (1) ، عن يحيى بن مَعِين : لا يكتب حديثه ، كان يكذب. وَقَال عَباس الدُّورِيُّ (2) ، عن يحيى بن مَعِين :ضعيف. وَقَال في موضع آخر (3) : ليس بشيءٍ. وَقَال علي بن المديني (4) :ضعيف جدا. وَقَال أبو حاتم (4) : متروك الحديث ، ذاهب (5). وقَال البُخارِيُّ (6) : تركوه (7).

இவர் பொய் சொல்பவர், மதிப்பற்றவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இமாம் அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் விடப்படக்கூடியவர் (பொய்யர்) என்று இமாம் அபூ ஹாதமும் நஸாயீயும் கூறியுள்ளார்கள். இவரை இமாம்கள் (பொய்யர் என்று) விட்டுவிட்டனர் என்று புகாரி இமாம் கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 19, பக்கம் 426

இதுபோன்று இன்னும் ஏராளமான குறைகளை இவர் மீது அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதால் இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். எனவே, இது தொடர்பாக வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்,

வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணக் கற்களுக்கு ஜகாத் இல்லை என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாகாது.

———————————————————————————————–

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

ஷம்சுல்லுஹா

அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அந்தக் குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 41:26

இதை நாம் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பார்க்க முடிகின்றது. அதை புகாரி ஹதீஸிலிருந்து பார்ப்போம்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேற எண்ணிய போது, இப்னு தஃகினா என்பவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, திரும்ப அழைத்து வந்தார்.

(குரைஷிகள்) இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’ என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறியதை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது, இணை வைப்பவர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். இந்த நடவடிக்கை (தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து  விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.

அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுதுகொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்’’ என்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, “நான் எதன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை  என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான்  உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து  நான் திருப்திப்படுகிறேன்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3906

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதுகின்ற குர்ஆனைக் கேட்டு, தங்கள் மனைவிமார்கள் இஸ்லாத்திற்கு மாறி விடுவார்களோ என்று குரைஷிகள் குலை நடுங்கியதையும், அதற்காக அவர்கள் எடுத்த தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளையும் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.

மக்கத்து குரைஷிகள் போட்ட அத்தனை தடுப்பணைகளையும் தாண்டி குர்ஆனின் சீர்மிகு வசனங்கள் மக்களின்  செவிப்பறைகளில் சீறிப்பாய்ந்து ரீங்காரமிட்டன. இதயங்களைக் கொள்ளை கொண்டன. அதற்கு சில எடுத்துக் காட்டுகளை பார்ப்போம்:

கவிஞரைக் கவர்ந்த காந்தமிகு குர்ஆன்

அபூதர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பாகவே தனக்குத் தெரிந்த வழிமுறையில் இறைவனை ஏதோ ஒரு விதத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். உனைஸ் (ரலி) என்பவர் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். உனைஸ்  (ரலி) ஒரு கவிஞர் ஆவார். ஓர் அலுவல் நிமித்தமாக அவர் மக்காவுக்குச் செல்கின்றார். அது தொடர்பாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதைக் கேட்போம்:

என்னிடம் (எனது சகோதரன்) உனைஸ், “நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக் கொள்வீராகஎன்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பி வந்தார். அப்போது அவரிடம் நான், “(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்என்று கூறுகிறார்என்று சொன்னார்.

நான், “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “(அவர் ஒரு) கவிஞர், சோதிடர், சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்என்றார்.

ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்:

நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்து விட்டேன். வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள் தான் பொய்யர்கள்.

பிறகு நான் (என் சகோதரர் உனைஸிடம்), “இனி (என் பணிகளை) நீர் கவனித்துக் கொள்வீராக! நான் சென்று (அவரைப்) பார்த்துவிட்டு வருகிறேன்என்று சொல்லிவிட்டு மக்காவுக்குச் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபாவுக்கு) வந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டுவிட்டு, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய நண்ப(ர் அபூபக்)ரும் சுற்றி வந்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், நானே முதலில் (சென்று) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க! (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்)என இஸ்லாமிய முகமன் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வ அலைக்க, வ ரஹ்மத்துல்லாஹ் (அவ்வாறே உங்களுக்கும் சாந்தியும் இறையருளும் கிடைக்கட்டும்)என்று பதில் சொன்னார்கள்.

பிறகு நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். நான், “ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்தவன்என்று பதிலளித்தேன். நான் அவ்வாறு (என் குலத்தாரின் பெயரைக்) கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (கை) விரல்களைத் தமது நெற்றியின்மீது வைத்தார்கள். அப்போது நான் எனக்குள்ளே, “நான் ஃகிஃபார் குலத்தாரோடு இணைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் வெறுக்கிறார்கள்என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு (அன்போடு) அவர்களது கரத்தைப் பற்றிக் கொள்ளப் போனேன். ஆனால், அவர்களுடைய நண்பர் (அபூபக்ர்) என்னைத் தடுத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி என்னை விட அவரே நன்கறிந்தவராக இருந்தார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, “எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “இரவு பகலென முப்பது நாட்களாக இங்கிருந்து கொண்டிருக்கிறேன்என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இத்தனை நாட்களாக) உமக்கு உணவளித்து வந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஸம்ஸம் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும்,என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமனாகி விட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லைஎன்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (ஸம்ஸம்) பரகத் மிக்கதாகும். அது (ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்என்று சொன்னார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு இன்றிரவு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள்என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக தாயிஃப்நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும். பின்னர் இதே நிலையில் சில நாட்கள் இருந்தேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமி எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. அது யஸ்ரிப்” (மதீனா) என்றே நான் கருதுகிறேன். ஆகவே, நீங்கள் என்னைப் பற்றி(ய செய்தியை) உங்கள் குலத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பீர்களா? அல்லாஹ் உங்கள் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கக்கூடும். (நல்வழி அடைந்தால்) அவர்களுக்காக உங்களுக்கும் அவன் பிரதிபலன் அளிப்பான்என்று கூறி (என்னை அனுப்பி)னார்கள்.

ஆகவே, நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.

பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “உங்கள் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.

பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் ஃகிஃபார்குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்; அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.

ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப் பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்’’ என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

அஸ்லம் குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்’’ என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார் குலத்தாரை அல்லாஹ் மன்னித்து விட்டான்; அஸ்லம் குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்றவர்களாக ஆக்கிவிட்டான்என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

நூல்: முஸ்லிம் 4520

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அடையாளத்தைக் கேட்ட மாத்திரத்தில் அடி உதைகள் அபூதர் (ரலி)க்கு விழுகின்றன. அத்தனையையும் தாங்கிக் கொண்டு கஅபாவே கதியாக ஹரமில் அடைக்கலமாகக்  கிடந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கின்றார்கள். அவர்களைச் சந்திப்பதற்குக் காரணமானவர்  கவிஞரான அவரது  சகோதரர் உனைஸ் (ரலி) தான்.

கவித்துவமிக்க அவர் திருக்குர்ஆனை கவிதை உரை கல்லில் உரைத்து பார்க்கின்றார். அது கவிதை அல்ல; இறை வசனமே என்று அவருக்கு தெளிவாகியது.

இவர்கள் அனைவரையும் இந்த இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது எது? இழுத்தது எது? அல்குர்ஆன்  என்ற கவின்மிகு காந்தசக்தி தான்!

ஜுபைர் பின் முத்இமை ஈர்த்த குர்ஆன்

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். “(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?’’ எனும் இந்த (52:35-,36,37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது என ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிக்கின்றார்கள்

நூல்: புகாரி  4854

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்’ (என்னும் 52-வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்க நான் கேட்டேன். இது தான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும் என ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

நூல்: புகாரி 4023

இந்தக் குர்ஆன், ஜுபைர் பின் முத்இமின் இதயத்தைச் சுண்டி இழுத்து  விடுகின்றது. இறுதியில், அது அவரை இஸ்லாத்திலேயே இணைத்து விடுகின்றது. அந்த அளவுக்கு அல்குர்ஆன்  அவரது இதயத்தை ஆட்கொண்டது.

அதைத் தான் உலகத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்’’ என்று குறிப்பிட்டார்கள்

நூல்: புகாரீ 4981, 7274

திருக்குர்ஆன் மாநாட்டை ஒட்டி மாநிலத்தில் எட்டுத் திக்குகளுக்கும் திருக்குர்ஆனை எட்டச் செய்வோம். இதயங்களை ஈர்க்கச் செய்வோம்!

———————————————————————————————–

நீயா? நானா?

சபீர் அலீ எம்.ஐ.எஸ்.சி.

மனித சமுதாயம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றியிருந்தாலும் அனைவரும் ஒரே குணம் படைத்தவர்களாக இல்லை.

சிலர் மென்மையானவர்களாக இருப்பார்கள். சிலர் அதற்கு நேரெதிராகக் கடும்போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள்.

சிலர் அதிகம் பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள். சிலர் அனைவருக்கும் நலம் நாடுபவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவரும் பல்வேறு குணங்களை தன்னகத்தே கொண்டவர்களாக உள்ளனர்.

இத்தகைய குணங்களில் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பயன் தருகிற குணம் எது? தீங்களிக்கிற குணம் எது? என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

இந்தச் செய்தியில் நன்மை என்பதற்கு வரைவிலக்கணமே நற்குணம்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இத்தகைய நன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் பல தீயகுணங்களில் ஒன்றுதான் “ஈகோ”.

ஈகோ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தமிழில் ஒரு வார்த்தையில் அர்த்தம் சொல்லிவிட முடியாது.

அகங்காரம், பெருமை, கர்வம், பொறாமை, பிறரை இழிவாகக் கருதுவது, வறட்டு கௌரவம் போன்ற பல தீய குணங்களின் ஒன்றிணைந்த வெளிப்பாடே ஈகோவாகும்.

மனிதர்களைப் பல்வேறு வேறுபாடுகளுடன் இறைவன் இந்த உலகத்தில் படைத்துள்ளான்.

ஒருவரைச் செல்வச் செழிப்பில் உயர்ந்தவராகப் படைத்துள்ளான். மற்றொருவரை அவருடைய பணியாளாக ஆக்கியுள்ளான்.

ஒருவரைக் கல்வி ஞானத்தில் சிறந்தவராக விளங்கச் செய்கிறான். இன்னொருவரை அவரிடத்தில் கற்றுக் கொள்பவராக ஆக்கியுள்ளான்.

ஒருவரை அதிகாரம் உள்ளவராக வைத்துள்ளான். இன்னொருவரை அவருடைய அதிகாரத்திற்குக் கீழ் செயல்படுபவராக வைத்துள்ளான்.

இப்படியான வேறுபாடுகளை இறைவன் இயற்கையிலேயே வைத்திருப்பதினால் தான் உலகம் சீராக இயங்குகிறது.

அவ்வாறில்லாமல், அனைவரையும் ஒரே சீராக வைத்திருந்தால் உலகத்தின் இயக்கமே சீர்குலைந்துவிடும்.

இத்தகைய வேறுபாடுகளுடன் இறைவன் மனிதர்களைப் படைத்திருந்தாலும், ஒரு சாராரை அனைத்து விஷயங்களிலும் உயர்ந்தவர்களாகவும், இன்னொரு சாராரை அனைத்து விஷயங்களிலும் தாழ்ந்தவர்களாகவும் இறைவன் படைக்கவில்லை.

ஒருவர் பொருளாதார உயர்வின் காரணத்தினால் முதலாளியாக இருக்கிறார். மற்றொருவர் இவருக்குக் கீழே வேலை செய்பவராக இருக்கிறார் எனில் தொழிலாளியை விட முதலாளி பொருளாதார விஷயத்தில் மட்டுமே உயர்ச்சியில் இருப்பார்.

உடல் ஆரோக்கியத்திலோ, சந்தோஷமான குடும்பம் விஷயத்திலோ தொழிலாளி முதலாளியை விட உயர்ச்சியில் இருப்பார்.

இவ்வாறு எல்லோரும் அனைத்து விஷயத்திலும் உயர்ந்தவர்களாகவோ, தாழ்ந்தவர்களாகவோ இருப்பதில்லை.

ஒருவர் ஒன்றில் உயர்ந்தவராகவும் வேறொன்றில் தாழ்ந்தவராகவும் இருப்பார். இத்தகைய சுழற்சி முறையிலேயே இறைவன் உலகை இயங்கச் செய்கிறான்.

ஆனால், இதைப் புரியாத குறைமதியுள்ள சிலர் ஈகோ எனும் தீய குணத்திற்கு அடிமையாகி தனக்குக் கீழ் நிலையில் இருப்பவர்களை இழிவாகக் கருதக்கூடியவர்களாக மாறிவிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்: முஸ்லிம் 147

இச்செய்தியில், தற்பெருமை என்பது மக்களை இழிவாகக் கருதுவதும், உண்மையை மறுப்பதுமே என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவே ஈகோவின் பிறப்பிடமாகவும் உள்ளது.

ஒருவன் தனக்கு இறைவன் வழங்கிய சிறப்பை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பொருளாதார வசதி வழங்கப் பெற்றிருப்பவன் தனது ஆடை, காலணி போன்ற விஷயங்களை விலைமதிப்புள்ளதாகப் பயன்படுத்துகிறான் எனில் இது ஆணவமோ, அல்லது ஈகோவோ கிடையாது.

தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்துவதற்காகப் பிறரை இழிவாகக் கருதுவதும், தனக்குக் கீழ்நிலையில் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்கிற உண்மையை மறுப்பதுமே ஈகோவாகும்.

உதாரணமாக, ஒருவர் முதலாளியாக இருக்கிறார். அவரிடம் தொழிலாளியாக மற்றொருவர் இருக்கிறார்.

முதலாளி தரமற்ற பொருளைத் தரமானது என்று பொய்ச்சொல்லி விற்பனை செய்கிறார்.

அவரிடம் வேலைபார்க்கும் தொழிலாளி இது தவறு என்று தன் முதலாளியிடம் கூறுகிறார் எனில் “ஒரு வேலைக்காரன் நீ எனக்கு புத்திமதி சொல்கிறாயா?’’ என்று அவரது ஏழ்மையை இழிவாகக் கருதி, தனக்குக் கீழ்நிலையில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்லும் உண்மையை ஏற்க மறுக்கின்றார்.

இவ்வாறு ஈகோ எனும் கெட்ட குணத்திற்கு இன்றைக்குப் பலர் பலியாகி விடுகின்றனர்.

இறையருளை விட்டும் தூரமாக்கும் ஈகோ

ஈகோ நம்மை இறையருளை விட்டும் தூரமாக்கி விடும். ஷைத்தான் இறையருளை விட்டும் தூரமானதற்கும் இறைவனின் சாபத்திற்குரியவனாகப் போனதற்கும் காரணமே இந்த ஈகோ எனும் அகங்காரம் தான்.

களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்; அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!’’ என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏக இறைவனை) மறுப்போரில் ஆனான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’’ என்று (இறைவன்) கேட்டான்.

நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’’ என்று அவன் கூறினான்.

இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது’’ என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 38: 71-78

ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான்.

களிமண்ணை விட சிறந்த மூலப்பொருள் எது என்று பார்த்தால் நெருப்புதான்.

இத்தகைய உயர்ச்சியின் காரணத்தினால் ஆதம் (அலை) அவர்களை இழிவாகக் கருதி அவர்களுக்குப் பணிய மறுக்கிறான்.

மேலும், அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நாம் அனைவரும் சமம்தான். அவன் சொல்லும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உண்மையை இப்லீஸ் தலைக்கேறிய ஈகோவினால் மறக்கிறான்.

இதனாலே, வானவர்களுடன் இருந்தவன் இறை சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான்.

இத்தகைய மாபாதகக் கெட்ட குணமான ஈகோ இன்றைக்குப் பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

நண்பர்களுக்கு மத்தியில், நிர்வாகங்களில், அலுவலகங்களில், பாடசாலைகளில் என்று மக்கள் எங்கெல்லாம் ஒன்றிணைகிறார்களோ அங்கெல்லாம் இந்த ஈகோ எனும் ஷைத்தானிய குணமும் சேர்ந்து வந்துவிடுகிறது.

இவ்வளவு ஏன் ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் கூட அதில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் மத்தியில் ஈகோ.

கணவன், தன் தாயை விடத் தன் மீதே அன்பு செலுத்த வேண்டும் என்று மனைவிக்கு ஈகோ;

மகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் அதீத அன்பு செலுத்தி விடுவானோ என்று மாமியாருக்கும் மருமகளுக்கும் மத்தியில் ஈகோ;

கணவனை விட மனைவி படித்திருந்தால் கணவன் மனைவிக்கு மத்தியில் ஈகோ;

ஒரு வீட்டில் பல மருமகள்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் மற்றவருடன் ஈகோ;

ஒரு பெண் ஆலிமாவாக இருந்தால் அவளது கணவன் அவளுக்கு அறிவுரை சொல்லும்போது அதை ஏற்காமல், நான் ஆலிமாவாக இருக்கிறேன்; நீங்கள் எனக்கு அறிவுரை செய்யுமளவுக்கு நான் ஒன்றும் தெரியாதவளா? அல்லது என்னை விட தங்களுக்கு எல்லாம் தெரியுமா? என்று மனைவி கணவனின் மீது கொள்ளும் ஈகோ;

ஒரு ஆண் குர்ஆன் கூட ஓதத் தெரியாதவனாக இருப்பான். மனைவியோ ஆலிமா. மனைவியிடம் சென்று ஓதக் கற்றுக் கொண்டு, ஓர் ஆண் என்ற ஆணவத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கணவனுக்கு மனைவியின் மீது ஈகோ.

இப்படி ஈகோ என்பது ஒரு குடும்பத்திற்குள் எடுத்துப் பார்த்தால் கூட பல பரிமாணங்களில் பரந்து விரிந்திருக்கிறது.

இந்த ஈகோ என்பது குடும்பம் உட்பட மக்கள் ஒன்றிணையும் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அந்த இடத்தில் பிளவுகளும், பிரிவினைகளும் ஏற்பட்டு சீர்கெட்டுப் போய்விடும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் ஈகோ பிரச்சனைகளினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.

மாமியார் மருமகள் மத்தியில் ஏற்படும் ஈகோவினால் முதியோர் இல்லங்களும் விவாகரத்து பிரச்சனைகளும் தான் அதிகரிக்கின்றன.

ஈகோவை விட்டொழிக்க இஸ்லாத்தின் வழிகாட்டல்

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோத ரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:10-13

மூஃமின்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்படாமலிருக்க என்னென்ன வழிமுறையைப் பேண வேண்டும் என்றும் மேற்கண்ட வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்.

யாரும் யாரையும் விட சிறப்பானவர்களாக இருக்கலாம். ஒருவர் தன்னிடம் இருக்கும் சிறப்பை வைத்து இன்னொருவனைக் கேலியாகக் கருதினால் கேலி செய்யப்படுபவன் இன்னொரு விஷயத்தில் அவனை விட உயர்ந்தவனாக இருப்பான் என்றும் அதனால் ஒருவர் மற்றொருவரை இழிவாகக் கருதாதீர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகிறான்.

அத்துடன் குலம், கோத்திரம் அடிப்படையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனை இழிவுப்படுத்தக் கூடாது.

இன்றைக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிலர் தொழிலின் அடிப்படையில் தங்களுக்கு மத்தியில் உள்ள பிரிவுகளான மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்றவைகளை வைத்து மரைக்காயர் என்றால் நான் உயர்ந்தவன், நீ எனக்குக் கீழே தான் இருக்க வேண்டும் என்று ஈகோ கொள்ளும் தன்மைகள் சில இடங்களில் இருந்து வருகிறது.

அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் தான் சிறந்தவர்களே தவிர, குலம் கோத்திரத்தால் எந்தச் சிறப்பும் கிடையாது என்று இவ்வசனங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

மேற்படி வசனங்களில் இறைவன் சொன்ன வழிமுறைகளைக் கையாண்டாலே ஈகோவிற்குப் பலியாவதிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.

அடுத்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆன்மீகத் தலைமைப் பொறுப்பையும் பெற்றிருந்தார்கள்.

தனக்காக உயிரையே கொடுக்கும் தொண்டர் படையைப் பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட அனைத்து விதமான அதிகாரமும் வழங்கப்பட்டவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், தனது வாழ்நாளில் ஒரு நாள் கூட பிறரை இழிவாகக் கருதியது கிடையாது. தனக்குக் கீழ்நிலையில் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக யார் சொல்லும் உண்மையையும் மறுத்தது கிடையாது. எந்த ஈகோவும் அவர்களது உள்ளத்தில் கடுகளவும் வந்தது கிடையாது.

ஒரு யூதப் பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’’  என்று கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)’’ என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு, ‘‘அது என்ன?’’ என்று வினவினார்கள்.

அதற்கு அந்தப் பாதிரியார், ‘‘நீங்கள் சத்தியம் செய்யும் போது கஅபாவின் மீது ஆணையாகஎனக் கூறுகிறீர்களே! அது தான்’’  என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இனிமேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஅபாவின் எஜமான் மீது ஆணையாக’  எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

பின்னர் அந்தப் பாதிரியார், ‘‘முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’’  என்று கூறினார். சுப்ஹானல்லாஹ்என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ‘அது என்ன?’  என்ற கேட்டார்கள். 

‘‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்’’  என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் விமர்சித்து விட்டார். எனவே, ‘‘இனிமேல் யாரேனும்  அல்லாஹ் நினைத்த படிஎன்று கூறினால் சற்று இடைவெளி விட்டுப்  பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’  என்று கூறுங்கள்’’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 25845

ஏகத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த இறைத்தூதரிடமே வந்து ஒரு யூதர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள் என்று சொல்லுகிறார்.

அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் ஒரு இறைத்தூதர்; எனக்குத் தெரியாதது ஒரு யூதனான உனக்குத் தெரிந்துவிட்டதா? என்று வந்தவரை அவமதிக்காமல், ஈகோ கொண்டு அவரை விரட்டிவிடாமல் அவர் சொல்லும் செய்தி என்ன என்று நபி (ஸல்) அவர்கள் நிதானிக்கிறார்கள்; தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் அள்பாஎன்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2872

அல்லாஹ்வின் தூதரின் ஒட்டகத்தை ஒரு கிராமவாசியின் ஒட்டகம் முந்திவிட்டதே என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஒரு ஜனாதிபதியின் ஒட்டகத்தை, ஒரு சாதாரண கிராமப்புறக் குடிமகனுடைய ஒட்டகம் எப்படி முந்தலாம் என்று அவருக்கு எதிராகவோ, அவருடைய ஒட்டகத்திற்கு எதிராகவோ ஈகோ கொண்டு நபி (ஸல்) தாக்குதல் தொடுக்கவில்லை.

இன்றைக்கு இது போன்ற அரசியல் செல்வாக்கு உள்ள மனிதருக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் எந்த உயர்வுக்கும் ஒரு தாழ்வு இருக்கிறது என்று ஓர் அழகான நியதியை எடுத்துரைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் மட்டும். இதுபோன்று தான் நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்க்கை நெடுக எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள்.

இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, நீயா நானா எனும் ஈகோவை விட்டொழித்து, தூய உள்ளத்துடன் நாம் வாழ்ந்தாலே மறுமை வெற்றி நமக்குக் கிட்டும். இல்லையேல் நரகப் படுகுழிக்குக் கொள்ளிக்கட்டைகளாகி விடுவோம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!

அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.

அல்குர்ஆன் 91:7-10

———————————————————————————————–

மவ்லிதும் மீலாதும்

எம்.ஐ.சுலைமான்

மவ்லிதும் மீலாதும் என்ற தலைப்பில் ‘மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழா கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன’ என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆதாரங்கள் சரியானவையா? அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து   பங்கிட்டார்கள்.

பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் இந்தச் செய்தி மவ்லித் ஓதுவதற்கோ அல்லது மீலாது விழா கொண்டுவதற்கோ ஆதாரமாகத் திகழ்கிறதா? என்பதைப் பார்ப்போம்.

நபித்துவம் கிடைத்த போது நபிகளார் சில மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்ற செய்தியில் “அவர்களின் பிறந்த தினத்தில்” என்று அடைப்புக் குறியில் போட்டுள்ளார்கள்.

அடைப்புக் குறியில் உள்ளது ஹதீஸ் நூலில் உள்ளது அல்ல. இவர்களின் சொந்தச் சரக்கு! பிறந்த தினத்தில் தான் இதைச் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது.

நபித்துவத்திற்குப் பின்னர் அறுத்துப் பலியிட்டார்கள் என்பது எப்படி மவ்லித் ஓதுவதற்கும் மீலாது விழா கொண்டாடுவதற்கும் ஆதாரமாக அமையும்?

அவர்கள் காட்டிய நூலில் இடம்பெறும் செய்திதான் என்ன?

السنن الكبرى للبيهقي – (9 / 505)

19273 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ , أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ بْنِ سُفْيَانَ الطُّوسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الْأَبْيُورْدِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَرَّرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ. قَالَ عَبْدُ الرَّزَّاقِ: إِنَّمَا تَرَكُوا عَبْدَ اللهِ بْنَ مُحَرَّرٍ لِحَالِ هَذَا الْحَدِيثِ. قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللهُ: وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ قَتَادَةَ , وَمِنْ وَجْهٍ آخَرَ عَنْ أَنَسٍ , وَلَيْسَ بِشَيْءٍ

நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்குப் பின்னர் தமக்காக அகீகா கொடுத்தார்கள்.

நூல்: ஸுனனுல் குப்ரா – பைஹகீ,

பாகம்: 9, பக்கம்: 505

இது தான் அந்தச் செய்தியில் உள்ளது. இந்தச் செய்தியை எப்படி திசை திருப்புகிறார்கள்? என்று பாருங்கள்.

அவர்கள் இந்தச் செய்திக்குக் கொடுக்கும் விளக்கம் இதோ :

ஹதீஸ் விளக்கம்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்த போதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றைத் திரும்பச் செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.

இந்த விளக்கம் சரியானது தானா என்று பார்ப்போம்.

‘நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள்’ என்றால் ‘அகீகா கொடுத்தார்கள்’ என்று மட்டும் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்களோ அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்து விட்டார்கள். (அப்துல் முத்தலிப் ஷரீஅத் படி நடந்தவரா? இஸ்லாத்தை ஏற்றவரா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது) எனவே முடித்த அமலை மீண்டும் செய்யக் கூடாது என்று இவர்களாக முடிவு செய்துவிட்டு, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடத் தான் மிருகங்களை அறுத்துப் பலியிட்டார்கள் என்று சுய விளக்கத்தைத் திணித்துள்ளார்கள்.

நபிமொழியில் இவர்கள் சொல்லும் எந்த விளக்கமும் இல்லை. இவர்கள் விளங்குவது போல் விளங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள்.

நபிமொழியின் நேரடி மொழிபெயர்ப்பைப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்பது விளங்கும்.

நபிமொழியை ஆதாரம் காட்டுவதை விட்டு விட்டு முற்கால அறிஞர்கள் சொன்னார்கள் என்ற அவர்களின் கூற்றின் மூலம், நபிமொழியில் மீலாதுக்கும் மவ்லிதுக்கும் ஆதாரமில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விட்டார்கள்.

மேலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதும் இல்லை. இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் பலவீனமானவராவார்.

التاريخ الكبير – (5 / 212)

681 – عبد الله بن محرر (3) عن قتادة، منكر الحديث، العامري الجزرى.

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அத்தாரிகுல் கபீர், பாகம்:5, பக்கம்: 212

الجرح والتعديل – (5 / 176)

824 – عبد الله بن محرر الرقى قاضى الجزيرة روى عن قتادة ويزيد ابن الاصم روى عنه أبو نعيم سمعت ابي يقول ذلك.نا عبد الرحمن قال قرئ على العباس بن محمد الدوري قال سمعت (562 ك) يحيى بن معين يقول: ابن محرر ليس بشئ. نا عبد الرحمن نا محمد بن ابراهيم حدثنى عمرو ابن علي الصيرفى قال: عبد الله بن محرر متروك الحديث. نا عبد الرحمن قال سألت ابي عن عبد الله بن محرر فقال: متروك الحديث، منكر الحديث، ضعيف الحديث، ترك حديثه عبد الله بن المبارك.

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்களும், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ அவர்களும், ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், நிராகரிக்கப்பட்டவர், பலவீனமானவர் மேலும் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் இவரின் செய்தியை நிராகரித்துள்ளார் என்றும் அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல் ஜரஹ் வத்தஃதீல்,

பாகம்:5, பக்கம்: 176

இரண்டாவது ஆதாரம்:

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில் தான் நான் பிறந்தேன். மேலும் அன்று தான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.

ஸஹிஹுல் முஸ்லிம் 1162 – 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045

மீலாதும் மவ்லிதும் ஓதுவதற்கு அவர்கள் காட்டும் இரண்டாவது ஆதாரம் இது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 168)

وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ யு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அன்று தான் நான் பிறந்தேன்; அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன் முதலில்) அருளப்பெற்றது’’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 2153)

திங்கட்கிழமை நோன்பு நோற்பது தொடர்பாக கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் தான் பிறந்ததாகவும், அந்த நாளில் தான் திருக்குர்ஆன் இறங்கியதாகவும் விளக்கம் அளிக்கிறார்கள்.

இந்தச் செய்தியிலிருந்து என்ன விளங்கலாம். திங்கட்கிழமை நோன்பு நோற்கலாம்; நபிகளார் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று விளங்கலாமே தவிர ரபீவுல் அவ்வல் மாதம் மவ்லித் ஓதலாம், மீலாது விழா எடுக்கலாம் என்று எந்த அறிவாளியும் விளங்குவானா?

இதில் சொல்லப்பட்ட முக்கிய விஷயமானது நோன்பாகும். நபிகளார் பிறந்த நாளாக இவர்களால் கருதப்படும் ரபீவுல் அவ்வல் 12ல் இவர்கள் நோன்புதான் நோற்கிறார்களா? அன்று தான் கறிச்சோறு ஆக்கி சாப்பிடுகிறார்கள்.

இந்தச் செய்தியை ஆதாரம் காட்டும் இவர்கள் திங்கட்கிழமை மட்டும் மவ்லீத் ஓதுகிறார்களா? இந்தச் செய்தி மவ்லிதைப் பற்றிப் பேசவில்லை என்பது வேறு விஷயம்.

எப்படி இந்த நபிமொழியை ஆதாரம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தச் செய்தியில் ரபீவல் அவ்வல் மாதத்தைப் பற்றியும் பேசவில்லை, மவ்லித் ஓதுவதைப் பற்றியும் பேசவில்லை, மீலாது விழாக் கொண்டாவது பற்றியும் பேசவில்லை என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

மூன்றாவது ஆதாரம்

ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி – 5101

மவ்லித் ஓதலாம், மீலாது விழக்கள் எடுக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம் இது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 12(

5101- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ فَقَالَ أَوَتُحِبِّينَ ذَلِكَ فَقُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي قُلْتُ فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ فَقَالَ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ ، وَلاَ أَخَوَاتِكُنَّ قَالَ عُرْوَةُ وَثُوَيْبَةُ مَوْلاَةٌ لأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ.

அறிவிப்பாளர் உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன? என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

(புகாரி 5010)

இந்தச் செய்தி நபிகளார் சொன்ன செய்தி கிடையாது. மேலும் நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அறிவித்ததும் கிடையாது.

உர்வா என்ற தாபியீ அறிவித்த செய்தியாகும். இவர் நபித்தோழர் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர் நபிகளார் பிறந்த தினத்தில் நடந்த செய்தியை அறிந்தவரும் இல்லை. இவரின் கருத்து  மார்க்கத்தின் ஆதாரமாகவும் அமையாது.

மேலும் இந்தச் செய்தியிலும் இவர்கள் ஓதும் மவ்லித் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் இல்லை.

நான்காவது ஆதாரம் :

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஸஹிஹுல் புகாரி

புகாரியில் இடம்பெறும் செய்தியில் பல கைவேலைகளைக் காட்டியுள்ளார்கள். புகாரியில் இடம்பெறும் செய்தியைக் கவனமாக படியுங்கள். இவர்களில் புரட்டுக்கள் வெளிப்படும்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 45(

6152- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي أَخِي ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ فَيَقُولُ يَا أَبَا هُرَيْرَةَ نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللهِ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.

(கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘அபூஹுரைரா! அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகள் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா (ஜிப்ரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக!என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?’’ என்று விவரம் கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். (புகாரி 6152)

6153- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ ، عَنِ الْبَرَاءِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : لِحَسَّانَ اهْجُهُمْ ، أَوْ قَالَ هَاجِهِمْ – وَجِبْرِيلُ مَعَكَ.

நபி (ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின் போது, கவிஞர்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.

புகாரி 6153

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 44)

6150- حَدَّثَنَا مُحَمَّدٌ ، حَدَّثَنَا عَبْدَةُ ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَكَيْفَ بِنَسَبِي فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ.

இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்? என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும் தங்கள் வமிசப் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன் என்று பதிலளித்தார்கள். 

நூல்: புகாரி 6150

ஏகத்துவ எதிரிகளான இணைப்பவர்களைத் தாக்கியும் ஏகத்துவக் கொள்கைகளை உயர்த்தியும் பாடிய கவிதைகளை இவர்கள் மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டுவது வியப்பளிக்கிறது.

நபிகளாரைப் புகழ்ந்து கொண்டிருக்க ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்கவில்லை. இணைவைப்பவர்களை வார்த்தைகளால் வெட்டி வீழ்த்தவே அனுமதி கேட்டார்கள். அதற்குத்தான் நபிகளார் அனுமதியும் வழங்கி ஜிப்ரீல் (அலை) அவர்களின் உதவியும் உண்டு என்று குறிப்பிட்டார்கள்.

ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் நபிகளாரைப் பார்த்து, ‘நீங்கள் தான் பாவங்களை மன்னிப்பவர்கள்’ என்று பாடினார்களா? ‘எங்கள் பாங்களை மன்னித்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்களா?

அல்லது ‘எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்’ என்ற இணைவைப்பு பாடல்களை பாடினார்களா?

மவ்லிதுக்கு ஆதாரம் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் செய்திகளை ஆதாரம் காட்டுபவர்கள், அவர்கள் பாடிய வரிகளைப் பாடாமல் சுப்ஹான மவ்லித் வரிகளை ஏன் பாடுகிறார்கள்?

இந்தச் செய்திகள் நல்ல கவிதைகள் பாடத் தடையில்லை என்ற கருத்தைத் தான் தருகிறது. மவ்லித் ஓதுவதற்கோ, மீலாத் விழாக் கொண்டாடுவதற்கோ அனுமதியளிக்கவில்லை.

புகாரியில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்குத் தனிமேடை நபிகளார் அமைத்துக் கொடுத்து பாடச் சொன்னார்கள் என்று இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஐந்தாவது ஆதாரம் :

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கண்டித்தார்கள்) அதற்கு ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள்) இருக்கும் போதே (நான்) கவிபாடிக் கொண்டிருந்தேன்என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குத்ஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) ஆம்! (செவியுற்றிருக்கிறேன்)’’ என்று பதிலளித்தார்கள்.

ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப்  (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 3212

இந்தச் செய்தியிலும் மவ்லித் ஓதவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இணைவைப்பவர்களுக்கு எதிராகப் பள்ளிவாசலில் கவிதை நடையில் பதிலடி கொடுக்கலாம் என்ற செய்தியே இந்தச் செய்தியில் உள்ளது.

ரபீவுல் அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதை ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்கள் ஓதி, அதை உமர் (ரலி) அவர்கள் தடுத்த போது ‘இது நபிகளார் அனுமதித்த ஒன்று’ என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் சொல்லும் எந்தக் கருத்தும் இந்தச் செய்தியில் இல்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————–

திருக்குர்ஆனைத் திருப்பிப் பாருங்கள்!

M.A. அப்துர்ரஹ்மான், இஸ்லாமியக் கல்லூரி

அகில உலகத்திற்கும் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி, திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான். இந்தத் திருக்குர்ஆன் மூலமாக உலகம் அழிகின்ற நாள் வரைக்கும் உள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை வழிகாட்டுதல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் ஏராளமான இடங்களில் அறிவுரை கூறுகின்றான்.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலானோர் திருக்குர்ஆன் வழிகாட்டித் தந்திருக்கின்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தங்களுடைய மனம் போன போக்கில், அதிகமான தவறுகளில் மூழ்கித் திளைத்து, இறைவனின் அருட்கொடைகளை விளங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

உண்மையாகவே திருக்குர்ஆனின் போதனை களையும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் ஒவ்வொருவரும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தால் தங்களுடைய வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கின்ற, அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற ஏராளமான தவறுகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் விலகி இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துகின்ற நல்ல மனிதர்களாக வாழலாம்.

திருக்குர்ஆனைப் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரத்தை ஒதுக்காததன் விளைவாகப் பல்வேறு விதமான பேரிழப்புகளை, சோதனைகளை நம்மை அறியாமலேயே அடைந்து கொண்டிருப்பதையும், இறைவனின் வல்லமையையும், ஆற்றலையும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

ஒருபுறம் திருக்குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டிருப்பதால், அரபி மொழியில் குர்ஆனை ஓதினாலும், மனனம் செய்தாலும் ஏராளமான நன்மைகளைக் கொள்ளையடித்து விட முடியும். மற்றொரு புறம்,  ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குர்ஆனைப் படிக்கும் போது இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற பேரருட்கொடைகளை விளங்கி, சிந்தித்து, ஆய்வுசெய்து நம்முடைய மேனிகளை சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு இறைவனின் பாக்கியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் எளிதானது

உலகில் இருக்கின்ற எத்தனையோ மதங்களில் ஏராளமான வேதங்கள் அந்த மதத்தைச் சார்ந்த மக்களால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தாலும், அகில உலகத்திற்கும் இறக்கியருளப்பட்ட குர்ஆன் எனும் வேதத்தை அற்புதமான முறையிலும், விளங்குவதற்கும், படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் எளிதான முறையிலும் இறைவன் வழங்கியிருக்கின்றான்.

இதோ, இறைவனின் சவாலான வார்த்தைகள்;

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

அல்குர்ஆன் 54:22

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் 47:24

இறைவன் தனது திருமறையில், குர்ஆனைச் சிந்தியுங்கள்! இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து வந்திருந்தால் முரண்பாட்டுக் களஞ்சியமாக இருந்திருக்கும் என்றும்,

இந்தக் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது. படிப்பினை பெற மாட்டீர்களா! என்ற அன்பான அழைப்பையும்,

குர்ஆனைச் சிந்திக்க மாட்டீர்களா! உங்கள் உள்ளங்களில் பூட்டுக்கள் இருக்கின்றதா? என்றும்,

இதுபோன்ற ஏராளமான கேள்விக்கணைகளைத் தொடுத்து  திருக்குர்ஆனின் தனித்தன்மையையும், இதுபோன்ற ஒரு வேதம் உலகத்தில் இல்லவே இல்லை; திருக்குர்ஆனைப் போல் யாராலும் இயற்றவும் முடியாது என்று இறைவன் தன்னுடைய சவாலான வார்த்தைகளால் சிந்திக்கச் சொல்கின்றான்.

சிந்திக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் மனிதர்களிடத்தில் கேட்கின்ற மிக முக்கியமான கேள்வி? சிந்திக்க மாட்டீர்களா? படிப்பினை பெற மாட்டீர்களா? உள்ளங்களில் பூட்டுக்கள் உள்ளனவா? என்பவை தான்.

இன்னும் கூடுதலாக இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற இறைவேதத்தின் அடிப்படை நோக்கமே மனிதர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

‘‘நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?

அல்குர்ஆன் 19:67

ஒட்டுமொத்தமாக, திருக்குர்ஆனை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்தனையைக் கூர்மையாக்கி ஆய்வு செய்து பார்த்து ஏற்றுக் கொண்டால் உண்மையான மார்க்கம், உண்மையான வேதம் எது? என்பதை இலகுவான முறையில் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும் என இறைவன் அறிவுரை பகர்கின்றான்.

உண்ணும் உணவைச் சிந்திப்பார்களா?

மனிதர்களாகிய நாம் அன்றாடம் ஏராளமான உணவுப் பொருட்களை உண்ணுகின்றோம். அவ்வாறு உண்ணுகின்ற காரணத்தினால் தான் நம்மால் இந்த உலகத்தில் உயிரோடும், திடகாத்திரமான உடலோடும் வாழ முடிகின்றது. நம்முடைய வாழ்க்கைக்கு அவசியத் தேவையான உணவை நாம் எங்கிருந்து பெறுகிறோம்? அது எப்படி உருவாக்கப்படுகின்றது? அதை பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவது யார்? என்பது போன்ற ஏராளமான விஷயங்களை நாம் சிந்திக்க ஆரம்பித்தால் அதிகமான படிப்பினைகளை நம்மால் பெற முடியும்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்க்கின்ற ஒவ்வொருவருடைய சிந்தனை உணர்வுகளையும் மிக இலகுவான முறையில் திருக்குர்ஆன் தூண்டி விடுகின்றது.

மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?

அல்குர்ஆன் 80:17

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!

நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.

பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.

அல்குர்ஆன் 80:24-32

இந்த வசனங்களை நன்றாகப் படித்துப் பாருங்கள்! இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற, அற்புதமான பேரருட்கொடையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

பூமியின் இயற்கைப் பண்பு என்னவென்றால், பூமிக்குள் எந்தப் பொருட்களை வைத்துப் புதைத்தாலும், அந்தப் பொருட்களை தனக்கே உரிய பாணியில் மிச்சம் வைக்காது இல்லாமல் ஆக்கிவிடும். உதாரணமாக ஒரு மரக்கட்டையை புதைத்து வைத்தாலோ, ஒரு இரும்பை புதைத்து வைத்தாலோ, ஒரு மனிதனைப் புதைத்து வைத்தாலோ, மக்கும் பொருட்கள், மக்காத பொருட்கள் இதுபோன்ற எந்தப் பொருட்களைப் புதைத்து வைத்தாலும் சரிதான்! சிறிது காலகட்டத்திற்குப் பிறகு தன்னிடத்தில் தங்கிய பொருட்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும்.

ஆனால், மற்ற பொருட்களைப் பூமியில் வைத்து புதைப்பதைப் போன்று மனிதன் உண்ணுகின்ற உணவுப் பொருட்களின் வித்துக்கள் புதைக்கப்படுகின்றன. பூமிக்குள் வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் முளைகளாக, இலைகளாக, கிளைகளாக, மரமாக, காய்களாக, கனிகளாக மனிதனுடைய கரங்களுக்கு அள்ளி இறைக்கின்றது. ஏன்? கல், கட்டை, இரும்பு, மனிதன் இதுபோன்ற அனைத்துப் பொருட்களையும் சாப்பிடத் தெரிந்த மண்ணுக்கு, கைவிரல்களால் நசுக்கினால் இல்லாமல் போகக்கூடிய சின்னஞ்சிறிய விதையைச் சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? சிந்தித்தோமா? நீ அதைச் சாப்பிட்டால் மனிதன் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்காது; எனவே அதைச் சாப்பிடக்கூடாது என்று கூறியது போல் மண்ணை இறைவன் தடுத்து வைத்திருக்கின்றான்.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஒரு விதையை விதைப்பவர், பூமிக்குள் குழிதோண்டி உள்ளே  வைக்க மட்டும்தான் அவரால் முடியும். உள்ளே வைக்கப்பட்ட விதைகள் பூமியை கிழித்துக் கொண்டு வெளியே வந்து இலைகளாக, கிளைகளாக, காய்கனிகளாகப் பலன் தர வேண்டுமானால் அது படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

விவசாயி என்னதான் விதையைப் பூமிக்குள் புதைத்து தண்ணீரை ஊற்றினாலும், பூமிக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதும், பூமியை முறையாகப் பிளப்பதும் இறைவனின் கைவசமே உள்ளது. வேறு யாருக்கும் பூமியை பிளக்க அதிகாரமில்லை, பிளக்கவும் முடியாது என்று திருக்குர்ஆன் சவால் விடுகின்றது.

இந்தக் குர்ஆன் வசனங்களை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! திருக்குர்ஆனை எடுத்து புரட்டிப் பார்த்தால், படித்துப் பார்த்தால் நம்முடைய மேனிகளையெல்லாம் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அளப்பெரிய உண்மையையும், மகத்துவத்தையும், குர்ஆனின் அற்புதத்தையும் இந்த வசனங்களின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஐந்து அருட்கொடைகள்

மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் மூலமாக ஏராளமான அருட்கொடைகளை இறைவன் வழங்கியிருக்கின்றான். அதிலும் குறிப்பாக இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஏராளமான அருட்கொடைகளில் மிகமிக முக்கியமானது இரண்டு கண்கள், நாவு, இரண்டு உதடுகள்.

இதைத் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்;

அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?

அல்குர்ஆன் 90:8,9

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

அல்குர்ஆன் 16:78

அவனே உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

அல்குர்ஆன் 23:78

இறைவன் மனிதர்களுக்குக் கண்களையும், காதுகளையும், உள்ளங்களையும், உதடுகளையும் அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் தனித்தனியே ஆய்வு செய்து சிந்திக்க ஆரம்பித்தால் உண்மையாகவே திருக்குர்ஆனின் வசனங்களை உண்மைப்படுத்தும் அளவுக்கு, நம்முடைய உள்ளங்களை நேர்வழியின்பால் புரட்டிப் போடும் விதமாகவும், இறைவனுக்கு இன்னும் அதிகமதிகம் நன்றி செலுத்தும் விதமாகவும் ஏராளமான மாற்றங்களை நம்மளவில் நாம் பெற முடியும்.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த ஐந்து அருட்கொடைகளைப் பற்றி மட்டும் நாம் அலச ஆரம்பித்தாலே ஏராளமான வல்லமையை, ஆச்சரியங்களை நாம் பெற முடியும்.

கண்கள் ஓர் அதிசயம்:

அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரே ஒரு கருவியில் தான் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட  நிறங்களைப் பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தின் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக் கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும்.

அந்த கருவி வேறு எதுவும் இல்லை, நமது கண்கள்தான். இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களைப் புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுணர்வு தேவையில்லை.

நமது கண்ணின் கருவிழி வட்டமான விழியின் மையப்பகுதி தான் ஓரப்பகுதியை விட பொருட்களை தெளிவாக பார்த்து அறிகிறது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே, அதிக ஒளியை தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இதுவே இரவு நேரங்கள் என்றால், கருவிழியின் மையம் குறித்த ஒளியை காணுகின்றது. மாறாக ஓரப்பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகின்றது. இதற்குக் காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வு செல்களே ஆகும். இந்த அமைப்பின் அடிப்படையில், அவற்றுக்கு கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. 7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழிசெல்கள் கருவிழி ஓரத்தில் அமிழ்ந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்னும் சொல்வதாக இருந்தால், நமது கண்கள் ஒரு வினாடியில் 40-ல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒரு முறை இமைப்பதற்கு எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் தடவை கண்களை இமைக்கின்றான்.

கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு ‘பாக்டீரியா’ போன்ற நச்சுக்களை கொல்லும் கிருமி நாசினி குணம் உண்டு. ஒரு மனிதனின் கண்ணீர் சுரபிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.

உண்மையாகவே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கண்கள் விலைமதிப்பற்ற ஒரு கேமராதான். கண்களில் லென்ஸ் இருக்கின்றது. கண்களில் இருக்கின்ற “பியூபில்” என்பது கண் கேமராவின் முக்கியப் பணியைச் செய்கின்றது. இன்னும் இந்த “பியூபில்” வெளிச்சம் குறைவான இடங்களில் லென்ஸ்களை விரித்தும், வெளிச்சம் அதிகம் உள்ள இடங்களில் கண்களைச் சுருக்கியும் உதவி செய்கின்றது. இவைகளை இயக்குவதற்கு எந்தச் சாதனங்களும் கிடையாது. அனைத்து செல்களும் தானாகவே இயங்குகின்றது.

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு கேமராவை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியுமா? முடியவே முடியாது. முடியாது என்று சொல்வதை விட இதுபோன்ற பல்வேறு விதமான அற்புதங்கள் நிறைந்த வசதிகளுடைய கேமரா உலகத்தில் உருவாகவும் இல்லை, யாராலும் உருவாக்கவும் முடியாது.

இப்படிப்பட்ட அற்புதங்களால் அலங்கரிக்கப் பட்ட இரண்டு கண்களை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்றான். இது மாபெரும் பேரருட்கொடை அல்லவா? சிந்தித்தோமா!

இன்னும் சொல்லப்போனால், கண்களின் விழித்திரைகள் மூளைக்குப் பின்னால் ஏன் இருக்கின்றது? கண்களின் பிம்பங்கள் இடப்புறம், வலப்புறம் எப்படி மாறுகின்றது? தலைகீழான பிம்பங்கள் சரியாவது எப்படி? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் தலையை பிய்த்துக் கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உதடுகள் ஓர் அதிசயம்

மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளில் மிகவும் அவசியமானது நாவு மற்றும் இரு உதடுகள். உதடுகளைப் பெற்றிருக்கின்ற நாம் இந்த உதடுகளின் உதவியினால்தால் நம்மால் நம்முடைய கருத்துக்களையும், பேச்சுக்களையும் தங்குதடையின்றி பேச முடிகின்றது.

நாக்கு நம்மை பேசுவதற்குத் தூண்டுகின்றது. இரண்டு உதடுகளினால் தான், அந்த உதடுகள் விரித்துக் கொடுக்கின்ற காரணத்தினால்தான் நாம் நினைத்தவர்களையும், பொருட்களையும் நம்மால் அழைக்க முடிகின்றது. இரண்டு உதடுகளையும் பிடித்துக் கொண்டு ஒரு நபரையோ, ஒரு பொருளையோ அழைத்துப் பாருங்கள். நாம் என்ன பேசுகின்றோம் என்று விளங்க முடியாத அளவுக்கு அந்த வார்த்தைகள் புரியாப் புதிராய் இருக்கும்.

உலகத்தில் வாழ்கின்ற எத்தனையோ நபர்களுக்கு இந்த உதடுகள் கொடுக்கப்படாமலோ, அல்லது கொடுத்தும் குறைவுடனோ இருப்பவர்களுக்குத்தான் இந்த உதடுகளின் மதிப்பு தெரியும்.

சில மனிதர்களுக்கு உதடுகள் அலங்கோலமாகக் கொடுக்கப்பட்டு, முகத்தைப் பார்த்தாலே சக மனிதர்களால் அருவருப்பாகப் பேசி, கேலி கிண்டல் செய்யக்கூடிய நிலையைப் பார்க்கிறோம்.

ஒருவேளை இறைவனுடைய படைப்பில் மூக்கு இருந்த இடத்தில் உதடுகளையும், உதடுகள் இருக்கின்ற இடத்தில் மூக்கையும் வைத்துக் கற்பனை செய்து பாருங்கள்! நம்முடைய முகங்களை பார்ப்பதற்கே சகிக்க முடியாத அளவுக்கு இருந்திருக்கும்.

எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்தால் கன கச்சிதமாகப் பொருந்துமோ அப்படிப்பட்ட இடத்தில் அந்தப் பொருட்களை வைத்து தன்னுடைய படைப்பின் ஆற்றலை இறைவன் வெளிப்படுத்தியிருக்கின்றான். இப்போது விளங்குகின்றதா? உதடுகள் விலைமதிப்பற்ற பேரருட்கொடை என்று.

இதுபோன்ற ஏராளமான அருட்கொடைகளை, திருக்குர்ஆனைப் புரட்டுகின்ற வேளையில் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் பேரருட்கொடைகளுக்காக அனுதினமும் நன்றி செலுத்திக் கொண்டே இருந்தாலும் போதாது.

நம்முடைய வாழ்நாளில் ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாலும், கண்கள் என்ற ஒரு அருட்கொடைக்காகக் கூட நம்மால் நன்றி செலுத்தி முடிக்க முடியாது. திருக்குர்ஆனின் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்போம்!! படிப்பினை பெறுவோம்!!!

———————————————————————————————–

நினைப்பதெல்லாம் கிடைக்கும்  நித்திய வாழ்க்கை

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்

இம்மைக்கும், மறுமைக்கும் இடையேயான வேறுபாட்டினை நாம் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சத்தியப் பாதையில் உறுதியாக இருக்க முடியும். அவ்வகையில் இவ்வுலக வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு எந்தளவு சிறந்தது என்பது குறித்து ஒரு முக்கியமான செய்தியை இப்போது பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு விதமான விருப்பங்கள், கனவுகள் கண்டிப்பாக இருக்கும். மரணத்தை எதிர்நோக்கிய நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் மனிதனுக்கும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கு வழங்க இயலாது.

அந்தளவிற்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துப் பருவத்தினருக்கும் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அவை மனிதனின் வயது, சூழ்நிலை, தேவைகளுக்கு ஏற்ப ஆளாளுக்கு வேறுபடும்.

ஆயினும், மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக சில ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6420)

முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1.இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை. 2. பொருளாசை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1891)

நீண்ட நாள் வாழ வேண்டும்; செல்வம் அதிகமாக இருக்க வேண்டும்; உலக இன்பங்கள் விசாலமாக வேண்டும் என்று மனிதனிடம் இருக்கும் மனநிலையை நபிகளார் தெளிவுபடுத்துகிறார்கள்.

இதன் ஓர் அம்சமாக, வாழ்வில் எது இருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் இன்னும் நிறைய வேண்டும் என்கிற பேராசை மனிதனை பற்றிப் பிடித்துக் கொள்கிறது.

அதனால், அவன் தன்னிடம் இருக்கும் பொருட்களைப் பெருக்கிக் கொள்ளத் துடிக்கிறான். அதற்காக வரம்பு மீறவும் துணிந்து விடுகிறான் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்கு அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள்.

அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று விரும்புவான். அவனது வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

நூல்: புகாரி 6438

நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் பல வகையான தேடல்கள், ஏக்கங்கள் இருக்கும். அவை அனைத்தையும் அடைந்து கொள்ளும் வாழ்வு இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.

சாமானியர்கள், பாமரர்கள், ஏழைகள் போன்றவர்களுக்கு மட்டுமல்ல! செல்வந்தர்கள், ஆட்சியாளர்கள், மேதைகள் உட்பட உலகில் வாழும் எல்லோருக்கும் இந்த நிலைதான். இதோ படைத்தவனின் அறிவிப்பைப் பாருங்கள்.

விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா?

திருக்குர்ஆன்  53:24

எனவே, மனம் எதையெல்லாம் எண்ணுகிறதோ அதனை அடைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. உண்மையில், இந்த நொடிக்கு முன்பு எத்தனையோ விஷயங்களை எண்ணியிருப்போம். அவற்றுள் அனேகமானவை வெறும் பகல் கனவாகக் கடந்து போயிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

நாமிருக்கும் இந்த நொடியில், இனிமேல் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும், இதெல்லாம் கிடைக்க வேண்டுமென நிறையவே பட்டியல் போடுகிறோம். அவையெல்லாம் நிறைவேறும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இதோ நபிகளாரின் போதனையைப் பாருங்கள்.

 நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்தில் இருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் சூழ்ந்துள்ளஅல்லது சூழ்ந்து கொண்டுவிட்டவாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்: புகாரி (6417)

மனித வாழ்வின் யதார்த்தமான நிலையை நபிகளார் படம் வரைந்து விளக்கி இருக்கிறார்கள். எல்லையற்ற எதிர்பார்ப்புகள் கொண்டவன் மனிதன். அவன் அடைய துடிப்பவற்றுள் பல விஷயங்கள் கிடைக்காமல் போகும்.

சில விஷயங்கள் மட்டும் கிடைக்கும். அதுவும்கூட சிரமங்கள், சோதனைகள் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனது தேவைகளைத் தேடிப் போகும் போது இடையிலேயே மரணம் தொற்றிக் கொள்ளும். அதனிடம் யாரும் தப்ப முடியாது.

விரும்பியது கிடைக்கும்

பெரும்பாலும் போதுமான உணவு; தேவையான ஆடை, சொந்தமாக வீடு; நல்ல வேலை, தரமான வாகனம் போன்ற ஒரு சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் ஆயுள் கழிந்து விடுகிறது. பலருக்கு இவை கூட வெறும் கனவாகவே முடிந்து விடுகிறது. இதுதான் உலக வாழ்க்கை. இதற்கு நேர்மாற்றமானது சொர்க்க வாழ்க்கை. அது நினைப்பதெல்லாம் கிடைக்கும் நித்திய வாழ்க்கை.

அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நன்மை செய்வோருக்கு இதுவே கூலி.  (திருக்குர்ஆன் 39:34)

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மைப்படுத்தி விட்டான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பியவாறு தங்கிட, இப்பூமியை எங்களுக்கு உடமையாக்கினான். உழைத்தோரின் கூலி நல்லதாகவே இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 39:74)

அவர்கள் அதன் இரைச்சலைச் செவியுற மாட்டார்கள். தமது உள்ளங்கள் ஆசைப்படுவதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 21:102)

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.

(திருக்குர்ஆன் 41:32)

நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(திருக்குர்ஆன் 16:31)

சொர்க்கத்திலே பல படித்தரங்கள் உள்ளன. நம்முடைய நம்பிக்கை, நல்லறங்களுக்கு ஏற்ப அங்கு இடம் ஒதுக்கித் தரப்படும். அதில் நுழைந்தவருக்கு அளிக்கப்படும் குறைந்தபட்சமான பரிசு என்ன தெரியுமா? அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அவை அனைத்தும் கிடைப்பதாகும்.

உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு, சொர்க்கத்திற்குச் சென்று விட்டவருக்குக் குறைந்தபட்ச பாக்கியமாகக் கிடைத்து விடும். இதனை நினைத்துப் பார்ப்பதற்கே பெரும் பூரிப்பாக இருக்கிறது, இல்லையா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், “நீ (இன்னதை) ஆசைப்படுஎன்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், “ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “ஆம்’’ என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், “நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்’’ என்று இறைவன் கூறுவான்.

நூல்: முஸ்லிம் (301)

மறுமை வெற்றி என்பது எதிர்பார்க்கின்ற எல்லாமும் கிடைக்கும் பேரின்ப வாழ்க்கை. அங்கு சிலருக்கு அவர்கள் ஆசைப்பட்டது மட்டுமல்ல, அதுபோன்று பல மடங்கு இன்பங்கள் வாரி வழங்கப்படும். மறுமை வெற்றியின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…(மறுமை நாளில்) இறுதியாக இறைவன், தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.

அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள் மீது மாஉல் ஹயாத்எனப்படும் (ஜீவ)நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.

அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர் என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக!’’ என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். 

அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?’’ என்று கேட்பான். அதற்கு அவர் இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்’’ என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.

அதற்குப் பிறகு என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக!’’ என்பார் அவர். அதற்கு இறைவன் வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!’’ என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார்.

அப்போது இறைவன் நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்’’ என்பான். அதற்கு அவர் இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’’ என்று சொல்-விட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழி களையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார். பிறகு இறைவா! என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’ என்று கூறுவார். பின்னர் இறைவன் வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலை தான் என்ன!’’ என்று கேட்பான்.

அதற்கு என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!’’ என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்திக் கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான். சொர்கத்திற்குள் அவர் நுழைந்த பின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்’’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) நீ (விரும்பிய) இன்னதை ஆசைப் படலாம்’’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு (தன் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’’ என்பான். (இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6573)

சொர்க்கம் என்பது தூய எண்ணங்கள், நல்ல காரியங்கள் மட்டும் நிறைந்திருக்கும் இடம். அங்கே கெட்ட சிந்தனைகளுக்கும், தீய செயல்களுக்கும் அறவே இடம் கிடையாது. அதில் நுழைந்தவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இன்பங்களில் திளைப்பார்கள். அவர்கள் விரும்பும் விஷயம் சிறிதாயினும் பெரிதாயினும் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.)

அந்த மனிதர் விதை தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாதுஎன்று கூறுவான்.

(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2348)

உலகில் ஆசைப்படும் விஷயங்களை அடைவதற்கு அல்லும், பகலும் அயராது பாடுபட வேண்டியிருக்கிறது. அப்படி உழைத்தாலும் கூட அனைத்தும் கிடைத்து விடாது; அதுவும்கூட நினைத்தது போன்று நூறு சதவீதம் அமைந்து விடாது. ஆனால் சொர்க்கமோ அனைத்தையும் சாத்தியமாக்கும் பேரின்பத் தலம்.

இரு வாழ்க்கையையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூடச் சொல்ல முடியாது. உலக வாழ்வை விடவும் பல இலட்சம் மடங்கு உயர்ந்தது சொர்க்க வாழ்க்கை. அதற்குள் செல்ல அனுமதி கிடைப்பதே மிகப்பெரும் பேறு.

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதில் இருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதில் இருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்‘’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி (6415)

உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுடன் ஒப்பிட்டால்) சொற்பமானவையே ஆகும்’’.  இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்’’ எனும் (32:17ஆவது) இறைவசனத்தை  ஒதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (4780)

சொர்க்க வாழ்வு என்பது மகத்துவமானது. எந்தளவிற்கெனில், அங்கிருக்கும் இன்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு இங்கேயே கிடைத்தால் இப்போது போன்று நாம் இருக்க மாட்டோம்.

ஆர்வத்தோடும், அக்கறையோடும் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவோம். எந்தவொரு காரியத்தையும் அலட்சியமாகக் கருத மாட்டோம். இத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் நம்மிடம் விரும்புகிறது. ஆகவேதான் சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து மார்க்கத்தில் அதிகமதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர்.

பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். – அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் – உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும், உன்னைத் துதித்துக் கொண்டும் இருக்கின்றனர்என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லைஎன்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லைஎன்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லைஎன்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டு ஓடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6408)

சகோதரர்களே! சொர்க்கம் செல்வதே நமது முதன்மை இலக்காக இருக்க வேண்டும். உலக இன்பங்களைச் சேகரிப்பதற்காக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் தொழுகை, நோன்பு போன்ற கடமையான காரியங்களை விட்டுவிடாதீர்கள். அதுபோன்று, சொர்க்கத்தைத் தூரமாக்கும் இணைவைப்பு, மூடநம்பிக்கையான காரியங்களைத் தூக்கி எறியுங்கள்.

நரகத்தின் வாடை கூடப் படாமல் நேரிடையாக சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நற்காரியங்களைக் கவனத்தோடு செய்ய வேண்டும். அனைத்து வகையான தீமைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும். குறிப்பிட்டுக் கூறின், அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதுதான் மார்க்கம் என்பதை விளங்கி அதன்படி அழகிய முறையில் வாழ்ந்து வெற்றி பெறுவோமாக!

———————————————————————————————–

களை கட்டும் யாசகம் களையெடுக்கும் இஸ்லாம்!

லுஹா

இன்று லஞ்சத்தை விட இந்தியாவில் ஓர் அபாயகரமான தொழிலாகப் பிச்சை எடுக்கும் தொழில் பெருகி வருகின்றது. இதற்கு எந்த முதலீடும், மூலதனமும் தேவையில்லை. ஆனால், இது இரக்கத்தை மூலதனமாக, அனுதாபத்தை ஆதாயமாகக் கொண்டுள்ளதால், மக்களிடமிருந்து இரக்கத்தைப் பெறுவதற்கு என்ன வழி? அனுதாபத்தைச் சம்பாதிப்பதற்கு என்ன வழி? என்று இந்தத் தொழிலில் ஈடுபடக்கூடியவர்கள் சிந்திக்கின்றார்கள்.

அதன் விளைவாக, சிறு குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்களைப் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி ஈவு இரக்கமில்லாமல் ஈனத்தனமாகச் சம்பாதிக்கின்றனர். பால் முகம் மாறாத பச்சைக் குழந்தைகள் பாதைகளில் கந்தல் துணிகளோடும் கசங்கிய ஆடைகளோடும் பரட்டைத் தலைகளோடும் கையேந்தும் நிலையில்  பார்க்கும் போது பாறை நெஞ்சம் படைத்தவர்கள் கூட  பரிதாபப்படுகின்ற காட்சியைப் பார்க்கின்றோம். அவர்களையும் அறியாமல், கைகளைப் பைகளில் போட்டு பணத்தை எடுத்துக் கொடுத்து விடுகின்றனர். அதற்காகத் தான் கள்ளம் கபடமில்லாத சிறுவர், சிறுமியரை கடத்துகின்ற கயமைத் தொழிலிலும் காட்டரக்கத் தொழிலும் இந்த இரக்கமற்றவர்கள், இதயமற்றவர்கள் இறங்குகின்றனர்.

அண்மையில், தருமபுரியில் குழந்தைகளைக் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் கைதாகி உள்ளனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் 4 வயதுப் பெண் குழந்தைக்கு சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய போது பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து  3 பெண்களும் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த ரத்தினம்மாள், மஞ்சம்மாள், கங்கம்மாள் ஆகியோரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது ஜனவரி 25ஆம்தேதி பத்திரிக்கைகளில் வந்த செய்தியாகும். கடத்திச் செல்வதுடன் மட்டும் நிற்காமல், அவர்களுக்குச் சூடு போடுவது, கண்களைக் குருடாக்குவது, கைகால்களை  ஒடித்து நொண்டியாக்குவது போன்ற கொடூரமான செயல்களில் இறங்குவதையும் ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படிச் செய்தால் தான் பார்ப்பவர்களுக்கு இந்தக் குழந்தைகளின் மீது இரக்கம் பிறக்கும், அனுதாபம்  சுரக்கும். கருணை மேலீட்டால் காசு பணங்களை அள்ளி வீசுவார்கள் என்று கணக்குப் போட்டு இந்தக் கொடுமையைச் செய்கின்றார்கள்.

லஞ்சம் வாங்குபவன் கூட இது போன்ற கொடூரச் செயலில் கோரச் செயலில் இறங்குவது கிடையாது. பணம் தரவில்லை என்றால் காரியத்தைச் செய்து கொடுக்க மாட்டான். ஃபைல்களை நகர்த்த மாட்டான். அவ்வளவு தான். அவன்  இதுபோன்ற ஈவு இரக்கமற்ற ஈனத்தனமான காரியத்தில் இறங்க மாட்டான். ஆனால் பிச்சை எடுப்பவர்கள் இந்த மனிதாபிமானற்ற, மிருகத்தனமான காரியத்தைச் செய்கின்றனர்.  பெற்றோர்களிடமிருந்து பிரித்து குழந்தைகளைக் கடத்துவது ஒரு பெரிய கொடுமை! மற்றவர்களாலேயே அந்தக் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது பெற்றோர்களால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? இதற்காகவே இந்தப் பிச்சைக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அடுத்து, அந்தப் பிள்ளைகளுக்குச் சூடு போடுவது, கண்களைக் குருடாக்குவது, கைகால்களை முடமாக்குவது என்பது அதை விடக் கொடுமையாகும். இதற்காக இவர்களுக்கு கண்ணுக்குக் கண், காதுக்கு காது என்ற அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்.

அன்றாடம் அரங்கேறும் இந்த அநியாயங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வது கிடையாது. கைகட்டி, வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

பிச்சைக்காரிகள் அல்லது பிச்சைக்காரர்கள் அழைத்து வரக்கூடிய பிள்ளைகள் அவர்களது சொந்தப் பிள்ளைகளாக இருந்தாலும் அப்போதும் அவர்கள் அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுமை தான் இழைக்கின்றார்கள். அதிகாலை நேரத்தில் கொட்டும் பனியில் பள்ளிக்குத் தொழ வரக்கூடிய, கோயிலுக்குக் கும்பிட வரக்கூடிய, பஸ்கள், ரயில்களில்  பயணம் மேற்கொள்ளக் கூடியவர்களிடம் பிச்சை எடுக்க இந்தக் குழந்தைகளைக் கூடவே அழைத்துக் கொண்டு வருகின்றார்கள்.

கடுங்குளிரின் காரணமாக, தொழுகைக்கு வரக்கூடிய அந்த மக்களின் கைகால்கள் உதறல் எடுக்கும்; மேனிகள் நடுநடுங்கும். அந்தக் கொடும் பனியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மங்கி கேப், மஃப்ளர் போன்ற கனத்த  கம்பளி ஆடைகள் மூலம் மூடிக்கொண்டு வருகின்ற காட்சியைக் காண்கிறோம்.

இந்த ஈவு, இரக்கமற்ற ஈன ஜென்மங்களோ தங்கள் குழந்தைகளின் தலைகளை மூடாமல், உடல்களுக்கு குளிர் தாங்கக் கூடிய சட்டைகளை அணிவிக்காமல், நடுங்க வைக்கும் குளிரில் அரைகுறை தூக்கத்தோடு அவர்களைக்  கையேந்த விட்டிருக்கின்றார்களே என்று பார்ப்பவர்களின் மனங்கள் வேதனையில் அழுகின்றன.

அந்தி சாய்ந்ததும் தங்கள் தாய்க்கருகில்  போர்வைகளைப் போர்த்திக் கொண்டு தூங்கி, பொழுது விடிந்ததும் எழுந்து, புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் சிறகடித்துப் பறக்க  வேண்டிய இந்தச் சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள், பட்டாம்பூச்சிகள் பிச்சை எடுக்கின்றனவே! இவர்களின் வாழ்வில் பொழுது விடியாதா? புது வாழ்வு பிறக்காதா? என்று இதயங்கள் ஏங்குகின்றன.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்தப் பிச்சைக்காரிகள், பால் குடிக்கும்  தொட்டில் குழந்தைகளை இடுப்பில் தூக்கிக் கொண்டு வருவது தான். பாலுக்காக அழுகின்ற அந்தப் பச்சிளம் குழந்தைகளை மக்கள் பார்த்ததும் அவர்களது மனங்கள் பனிபோல உருக ஆரம்பித்து விடுகின்றன. அதனால் அவர்கள் பிஞ்சு முகங்களைப் பார்த்து விட்டுப் பிச்சை போடாமல் நகர்வதில்லை. இதுவெல்லாம் இந்தப் பிச்சைக்காரக் கும்பல்களின் சாதக மற்றும் சாதனை அம்சங்களாகி விடுகின்றன.

இதனுடைய எதிர்விளைவாகத் தான் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் களவு போகின்றன.எடுப்பது பிச்சைத் தொழில் தான். ஆனால் பக்கவிளைவுகள் எங்கெங்கெல்லாம் பாய்கின்றன? அதன் விஷக்கிருமிகள் எங்கெங்கெல்லாம் பரவுகின்றன? என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதனால் பிச்சை எடுக்கும் தொழில் தானே என்று சும்மா இருந்து விட்டுப் போகமுடியவில்லை. நிழல் உலக தாதாக்கள் போல் இந்தத் துறையிலும் இந்திய அளவிலான நெட்வொர்க்குடன் கூடிய ஒரு கும்பல் இருந்து காசு பணம் குவிக்கக் கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.

அந்த அளவுக்கு அதன் பின்னணியும் பின்புலமும் பரந்து விரிந்து கிடப்பதை அறிய முடிகின்றது.  ஆனால் அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கைக்குப் பதிலாக அசாத்தியமான மவ்னமே நிலவுகின்றது.

தெலுங்கான அரசின் தெளிவான நடவடிக்கை

கடந்த ஆண்டு, டிசம்பர் 20க்குள்ளாக தெலுங்கானா மாநில அரசு பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை முன் வைத்து அதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. அதன் ஒரு கட்டமாக பிச்சைக்காரர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 500 சன்மானம், தெருக்களில் யாசகம் எடுப்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அறிவித்தது.  இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் தெருவில் பிச்சை எடுத்துத் திரிகின்ற பிச்சைக்காரர்களை லாரிகளில் வாரிச்சென்று பிச்சைக்காரர்களுக்கென்று சஞ்சல்குடாவில் அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தில் கொண்டு போய் அடைத்தது. அதற்கு ஆனந்த் ஆசிரமம் என்று பெயர்.

இதுவரையில் 316 ஆண் பிச்சைக்காரர்களும் 164 பெண் பிச்சைக்காரர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 261 ஆண்களும் 140 பெண்களும் இனி பிச்சை எடுக்க மாட்டோம் என்று சபதமேற்றுள்ளனர் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  உண்மையில், இது போன்ற நடவடிக்கைகள் இன்றியமையாதவையாக உள்ளன. காரணம் அந்த அளவுக்கு அவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை.

டிராஃபிக் சிக்னல்களில், மக்கள் கூடுகின்ற வழிபாட்டுத் தலங்களில், வியாபாரச் சந்தைகள், ஏடிஎம் மிஷின்கள், கடைகள் என்று பல்வேறு இடங்களில் நின்று கொண்டு மக்களுக்கு அவதி தந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு தெருக்கள் என்று ஒதுக்கிக் கொண்டு அந்த நாட்களில் பெரும் பெரும் கூட்டமாக வந்து விடுகின்றனர். அதிலும் காலை நேரத்தில் இவர்கள் படை எடுத்து வந்து விடுகின்றனர்.

உடல் நலமுடன் பெரியவர்கள் அமைந்த வீடுகளின் வாசலில் வந்து நிற்பவர்களுக்குக் கையில் சில்லறைகளை வைத்து வினியோகித்து விடுகின்றார்கள். அதுபோன்ற ஆட்கள் வசதியில்லாதவர்கள் பாடு பெரும் அவதியாகி விடுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அவர்களைப் படுக்கையிலிருந்து எழுப்பி காலைக் கடன்களை நிறைவேற்றச் செய்ய வைத்து, உணவு சமைத்து பசியாறச் செய்து, டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு வைத்து அனுப்புவதற்காகப் பெரும் போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் படையெடுத்து வந்து நின்று படுத்தாத பாடுபடுத்தி விடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில்  பார்க்கும் போது இதற்கு ஒரு தீர்வு ஏற்படாதா? என்று மக்களிடம் ஓர் ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கின்றது.

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா?

இதில் பிச்சைக்காரர்கள் யார்? திருடர்கள் யார் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வீட்டு வாசல்களில் கவனமில்லாமல் போட்டு வைத்திருக்கின்ற சாமான்களையும் அடித்து விட்டுப் போகின்றார்கள். இவ்வாறு பறிபோகும் சாமான்களில் மொபைல் போன்கள் முதலிடம் பிடிக்கின்றன. பிச்சைக்காரர்கள் என்ற போர்வையில் திருடர்கள் செய்கின்ற அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. சில இடங்களில் புர்கா போட்டு வருகின்ற பிச்சைக்காரிகள் கொஞ்சம் உரிமை எடுத்து, உத்தரவின்றி உள்ளே நுழைந்து, பீரோக்களில் வைத்திருக்கும் தங்க நகைகளைச் சுருட்டி விட்டு ஓடி விடுகின்றார்கள்.

சாட்சியமளிக்கும் சான்றிதழ்கள்

சில இடங்களில் பிச்சைக்காரர்கள் சில ஜமாஅத்தின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வாசல்களில் நின்று சத்தியா கிரகம் செய்து கொண்டு நிற்கின்றார்கள். பரிந்துரைக் கடிதங்களுடன் பள்ளி வாசல்கள் தோறும் படையெடுத்து வருகின்றார்கள்.  இவர்கள் ஏதோ தாங்கள் சாமானியமான சராசரியான பிச்சைக்காரர்கள்  கிடையாது. தரமும் தகுதியும் மிக்க பிச்சைக்காரர்கள். அதனால் தந்து தான் ஆக வேண்டும் என்று வாசலில் தகராறு செய்யும் அவல நிலையும் மக்களை அல்லலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

இதில் அதிகமானவர்கள் குமர் காரியத்திற்காக வருபவர்கள். இது சமுதாயத்தின் அவலங்களாகும். யாசகம் கேட்டு வரக்கூடிய அத்தனை பேர்களிடமும் நியாயமான காரணமில்லை என்று ஒதுக்கி விடமுடியாது. இதைப் பின்னர் பார்ப்போம்.

அரவாணிகளின் அட்டகாசகங்கள்.

இப்போது கடந்த சில ஆண்டுகளாக ரயில் பயணங்களில் அரவாணிகளின் ஆட்டமும் அட்டகாசமும் தாங்கும் விதத்தில் இல்லை.  கைதட்டி காசு கேட்கும் இந்தக் கூட்டம் அண்மையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய நாராயணன் (வயது 32), இவரது நண்பர் கரம்வீரம் பாபுவும் அவர்கள் நண்பர்கள் சிலரும் வேலைதேடி திருப்பூருக்கு வந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியிலிருந்து ரயிலில் பயணம் செய்துள்ளனர். படிக்கட்டு ஓரம் தரையில் அமர்ந்து இருவரும் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் வந்த அரவாணிகள் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்து சத்திய நாராயணன் வாக்குவாதம் செய்துள்ளார். அவ்வளவு தான் அரவாணி, எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலிலிருந்து அவர் கீழே  விழுந்து  சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரைக் காப்பாற்றக் குதித்த அவரது நண்பரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். உடல் உழைப்பின்றி, பாலினத்தை ஓர் ஆயுதமாக்கி பிச்சை எடுக்கும் இந்தக் கேடு கெட்ட ஜென்மங்களுக்குத் தமிழக அரசியல்வாதிகளிடத்தில் ஒரு மரியாதை. இவர்களுக்குத் திருநங்கைகள் என்று மங்களகரமான பெயர் சூட்டி அழகு பார்க்கின்றார்கள்.  அவர்களுக்கு சலுகைகள் என்று அரசாங்கம் அள்ளிக் கொடுக்கின்றன. உடல் ஊனமுற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகையளிப்பதில் ஒரு நியாயம் இருக்கின்றது. இவர்களுக்கு சலுகை அளிப்பதில் என்ன நியாயமிருக்கின்றது?

இவர்கள் செய்கின்ற  அட்டகாசங்களையும் அடாவடித்தனங்களையும் அரசியல்வாதிகள் கண்டிப்பது கிடையாது. அரசாங்கங்கள் கண்டு கொள்வது கிடையாது. வண்டி, வண்டியாக ஏறி பிச்சை எடுப்பவர்கள் என்று இவர்களைச் சொல்ல முடியாது. இவர்கள் பிச்சை என்ற பெயரில் வழிப்பறி நடத்தும் ஈனப்பிறவிகள் என்று தான் சொல்ல வேண்டும். வழிப்பறிக்காரர்கள் தான் கொள்ளை அடித்து விட்டுக் கொலையும் செய்வார்கள். அந்தக் காரியத்தைத் தான் இந்த இழிபிறவிகள் செய்திருக்கின்றார்கள். இந்தக் கொடூர சம்பவம் மூலம் பிச்சை எடுப்பதன் கேடுகெட்ட நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

மூலதனமில்லாத ஒரு தொழில்!

இலங்கையில் ஒரு பிச்சைக்காரரின் அன்றாட வரவு 4000 முதல் 5000 வரை என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

துபையில் ஓர் ஐந்து  நட்சத்திர ஓட்டலில் ஒரு பிச்சைக்காரரை அங்குள்ள காவல்துறை கைது செய்து விசாரித்ததில் பிச்சை எடுப்பதில் ஒவ்வொரு நாளும் தனக்கு அதிக வருவாய் கிடைப்பதால் இந்த நட்சத்திர ஓட்டலில் தங்குவதாகக் கூறியிருக்கின்றார்.

இதற்கிடையே துபையில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதற்கட்ட நடவடிக்கையாக  59 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று நகராட்சி ஆய்வாளர் ஃபசல் தெரிவித்துள்ளார். ஒரு பிச்சைக்காரரை விசாரித்த பொழுது அவர் தான் மாதந்தோறும் 45 லட்ச ரூபாய் அளவில் சம்பாதிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

பிச்சைக்காரர்களிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா விசாக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு சிறுமியைப் பிடித்து காவல்துறை விசாரித்ததில், தான் ஒரு பணக்கார வீட்டுப் பெண் என்றும், பிச்சைக்காரர்களை வைத்துத் தொழில் நடத்தும் ஒரு ஏஜெண்டால் கடத்தப்பட்டிருப்பதாகவும், தான் எடுக்கும் பிச்சையை அந்த முதலாளியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றாள். அந்த முதலாளியைப் பிடித்து விசாரித்ததில், இந்த பிச்சைக்காரர்கள் மூலம் தனக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகத் தெரிவித்திருக்கின்றான்.

எர்ணாகுளம் மாவூர் அருகே குறிக்காட்டு ஜும்மா பள்ளியில் பிச்சை எடுத்த பெரியவரிடம் பையைச் சோதனையிட்டதில் 80 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. தபால் நிலையத்தில் அவரது சேமிப்புக் கணக்கில் 13 லட்சம் ரூபாய் இருப்பு இருந்திருக்கின்றது.

மைசூரில் வொண்டிக்கொப்பில் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் வாசல் முன்பு பிச்சை எடுத்த சீதாலட்சுமி அதே கோயிலுக்கு இரண்டரை லட்சம் ரூபாயை காணிக்கையாகச் செலுத்தியிருக்கின்றார்.

திருக்குர்ஆன் தருகின்ற திருப்தியான தீர்வுகள்

தெலுங்கானா மாநிலம் யாசகத் தொழிலை ஒழிப்பதற்கு ஒரு முயற்சியை எடுத்திருக்கின்றது. தமிழகத்தில், பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னை, பிச்சைக்காரர்கள் இல்லாத  மதுரை என்று குரல் ஒலிக்காமல் இல்லை. ஆனால் பிச்சை எடுக்கும் தொழிலுக்குத்  தூர நோக்குடன் கூடிய பார்வை ஆட்சியாளர்களிடத்தில் இல்லை.

இந்த அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் யுக்தியும் அதற்குரிய புத்தியும் உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்களிடத்திலும் சித்தாந்தங்களிலும் சிந்தனைவாதிகளிடமும் இல்லை. உலகெங்கிலும் நிறைந்துள்ள மதங்களிலும் இல்லை. இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் தான் தீர்வும் திருப்பமும் இருக்கின்றது.

இப்போது இஸ்லாமிய மார்க்கத்தின் புனித நூலான திருக்குர்ஆன் தருகின்ற தீர்வை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.

———————————————————————————————–

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

அமீன் பைஜி

அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை.

முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. கடமையான தொழுகையை தொழாமல் விடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என இஸ்லாம் கூறுகின்றது.

என்றாலும், கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாக இருக்கின்ற உபரியான தொழுகைகளின் மூலமாகவும் இறைவனின் அன்பையும், நெருக்கத்தையும், வெகுமதியையும் நம்மால் அதிகம் பெற முடியும்.

கடமையான தொழுகையைப் பொறுத்தவரை அதைக் குறித்துத்தான் மறுமையில் முதன் முதலாக இறைவனிடத்தில் விசாரணை நடைபெறும் என்பதாலும், தொழுகையை நிறைவேற்றாமல் விடுவது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பதாலும் நம்மால் இயன்றவரை  கடமையான தொழுகைகளை நிறைவேற்றி வருகின்றோம்.

ஆனால் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகளைப் பொறுத்தவரை அவைகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படாது என்பதாலும், சுன்னத்தான தொழுகைகளை விட்டுவிட்டால் பாவங்கள் எதுவும் எழுதப்படாது என்ற காரணத்தினாலும் அவற்றை நிறைவேற்றுவதில் அலட்சியமாகவும், பொடும்போக்காகவும் இருந்து வருகின்றோம்.

எனவே, உபரியான வணக்கங்களுக்குக் குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட சிறப்புகளையும், மாண்புகளையும், முக்கியத்துவத்தையும் தெரிந்து கொண்டால் அவற்றை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்ட மாட்டோம்.

நல்லடியார்களின் நற்பண்புகளில் ஒன்று

நல்லடியார்களிடம் இருக்க வேண்டிய  நற்பண்புகளைப் பற்றி வர்ணனை செய்யும் இறைவன், இரவில் நின்றும் ஸஜ்தா செய்தும் இரவை வணக்கத்தில் கழிப்பதைக் குறிப்பிட்டு இரவுத் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். இதன் காரணத்தினால் மனிதர்களுக்கு மென்மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றது.

அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.

அல்குர்ஆன் 25:63

அந்த அடிப்படையில் இறைவனின் நேசத்திற்குரியவர்களாக மாற, மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்ற இரவு நேரங்களில் இறைவனை நினைத்துத் தொழ வேண்டும்.

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் உபரியான வணக்கங்கள்

உபரியான வணக்கங்களை, அதிலும் குறிப்பாக இரவின் கடைசி நேரத்தில் தொழுகின்ற இரவுத் தொழுகை உட்பட சரிவர நிறைவேற்றி வந்தால் இறைவனின் நெருக்கத்தைப் பெறுகின்ற மனிதர்களாகவும், இறையுதவி அதிகம் கிடைக்கின்ற மனிதர்களாகவும் நாம் மாறலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்:

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

ஆதாரம்: புகாரி 6502

உபரியான வணக்கங்களைச் சரியாக நிறைவேற்றினால் இறைவனின் பக்கம் நாம் நெருங்கிக் கொண்டே இருப்போம் என்றும், இறைவனின் நேசம் கிடைக்கும் என்றும், இறுதியாக இறைவனிடத்தில் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அல்லாஹ் கட்டாயம் வழங்குவான் என்றும் இறைவன் கூறுகின்றான். எனவே உபரியான வணக்கங்களை அலட்சியப்படுத்தாமல் பேணுதலாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

இரவு நேரக் கனவும், பெற வேண்டிய படிப்பினையும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு நபித்தோழரின் கனவில் வந்து வானவர் உபதேசம் செய்கின்றார்; நற்செய்தி கூறுகின்றார். அதற்குக் காரணம் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்ன உபதேசங்களை கீழ்க்கண்ட ஹதீஸ் மூலமாக நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்’’ என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்’’ என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)’’ என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்.

ஆதாரம்: புகாரி 1121, 1122

இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குகின்ற, தொழக்கூடிய ஒரு மனிதராக இருக்கின்ற காரணத்தினால் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு வானவர் கனவிலே வந்து நற்செய்தி கூறுகின்றார். அந்தக் கனவுக்கு அற்புதமான ஒரு விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள்.

இறையருளைப் பெற்றுத்தரும் இரவுத் தொழுகை

இரவுத் தொழுகையை இரவின் கடைசி நேரத்தில் நிறைவேற்றினால் இறையருள் இறங்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்என்று கூறுகிறான்.

ஆதாரம்: புகாரி 1145

ஒவ்வொரு இரவின் கடைசிப் பகுதியிலும் இறைவன் மனிதர்களை அழைத்து, என்னிடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா! என்னிடம் கேட்க மாட்டீர்களா! என்னிடம் பிராத்தனை செய்ய மாட்டீர்களா! என்று கேட்கிறான்.

எனது பேரருள் இரவின் கடைசிப் பகுதியில் அதிகமதிகம் இறங்குகின்றது. என்னை அதிகமதிகம் நினையுங்கள்! என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

படிப்பினை தரும் ஃபாத்திமா (ரலி) சம்பவம்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’’ என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்’’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.

ஆதாரம்: புகாரி 7347

இரவு  நேரத் தொழுகையில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்  என்றும் மேற்கண்ட இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகின்றது.

ரமளானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் இரவுத் தொழுகை என்று சொன்னாலே அது ரமலான் மாதத்தில் மட்டும்தான் என்ற ஒரு எண்ண ஓட்டத்தில் ரமளானில் மட்டும் நம்மால் இயன்ற அளவு இரவுத் தொழுகையை முழுமையாகவும், ஆர்வத்துடனும் கடைப்பிடித்து வருகின்றோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் இரவுத் தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதல்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’’ என்று கேட்டேன். அவர்கள், “என் கண் தான் உறங்குகின்றது; என் உள்ளம் உறங்குவதில்லைஎன்று பதிலளித்தார்கள்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 3569

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவுத் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

‘‘ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1982

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கடமையான தொழுகையைக் கூட முறையாகத் தொழாமல் சோம்பேறிகளாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதேவேளையில் கடமையான தொழுகைக்கு அடுத்த படித்தரத்தில் இரவுத் தொழுகையை இறைவன் வைத்திருக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபித்தோழர்களின் இரவுத் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த தோழர்களும் இரவுத் தொழுகை தொழுதிருக்கின்றார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்திகள் ஆதாரமாக இருக்கின்றது.

ஏற்கனவே மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்தியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவுத் தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள். இதன் காரணத்தினால் அவர்களுக்கு சிறப்புகள் கிடைத்திருப்பதைப் பார்க்கின்றோம். (புகாரி 1121, 1122)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் நபி (ஸல்) (அவர்களைப் பின்பற்றி) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது கையைஅல்லது எனது புஜத்தைப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னை தமது கரத்தினால் பிடித்து தம் பின் பக்கமாகவே கொண்டு சென்றார்கள்.

ஆதாரம்: புகாரி 728

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்து விடுவார்கள்என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்து விடுவார்கள்என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்து விடுவார்கள்என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) அந்நிசாஎனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக் கூறும் வசனத்தைக் கடந்து செல்லும் போது (இறையருளை) வேண்டினார்கள். (இறைத் தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.

பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் சுப்ஹான ரப்பியல் அழீம்’ (மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉ செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் சுப்ஹான ரப்பியல் அஃலா’ (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1421

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும்போது, ஹுதைஃபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதிருக்கின்றார்கள். அந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் ஆறில் ஒரு பகுதியை (அல்பகரா, ஆலுஇம்ரான், அந்நிஸா) ஓதி மிக நீண்ட நேரம் தொழுதிருக்கின்றார்கள். இந்தச் செய்தியும் இரவுத் தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகின்றது.

இரவில் தொழுவோருக்கு மறுமைப் பரிசு

இரவு நேரங்களில் கண்விழித்து, படுக்கையிலிருந்து விலகி, இறைவனை வணங்கினால் இறைவன் நம்மை சிலாகித்தும், நமக்குக் கிடைக்க இருக்கின்ற பரிசுகளையும் விளக்குகின்றான்.

நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காகக் கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

அல்குர்ஆன் 32:15-17

தனது அடியார்களின் செயல்பாடுகளைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது, படுக்கைகளிலிருந்து எழுந்து இறைவனைப் பிரார்த்திப்பார்கள் என்றும், அவர்களுக்குக் கூலியாக, மறைத்து வைக்கப்பட்ட பரிசு இருக்கின்றது என்றும் இறைவன் கூறுகின்றான்.

இரவுத்தொழுகை விடுபட்டுவிட்டால்…

இரவு நேரத்தில் தொழும் தொழுகை விடுபட்டு விட்டால் கூட அதற்கு ஈடு செய்யும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடாமல் தொழுது வந்தனர் என்றாலும் சில நேரங்களில் அவர்கள் இரவுத் தொழுகையை விட்டதற்கும் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிய போது ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகள் அவர்கள் தொழவில்லை.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),

நூல்: புகாரி 1124, 4983

ஏதேனும் ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை விடுபட்டு விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இரவுத் தொழுகை தவறி விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் 1234

இரவுத் தொழுகை தவறி விட்டால் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பகரமாக பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதிருக்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

இரவுத்தொழுகைக்கு நபியே முன்மாதிரி!

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று வழிகாட்டித் தந்தார்களோ அதனடிப்படையில் தான் நாம் தொழ வேண்டும்.

இது சம்பந்தமான மிக நீண்ட விளக்கம் ‘தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு’ என்ற நூலிலும், ‘நபிவழியில் நம் தொழுகை’ என்ற நூலிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த முறைகளில் ஏதாவது ஒரு முறையில் நாம் தொழுவது போதுமானதாகும்.

எனவே நபி (ஸல்) அவர்கள் இந்த இரவுத் தொழுகையை தமது வாழ்நாளில் ஓரிரு தினங்கள் தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து தொழுது வந்திருப்பதாலும், ஸஹாபாக்களில் பலரும் இந்த இரவுத் தொழுகையைத் தொழுதிருப்பதாலும், நாம் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதுடன் மேற்கூறப்பட்ட பல்வேறு சிறப்புகள் கொண்ட இரவுத் தொழுகையையும் தவறாமல் கடைப்பிடித்து அந்தச் சிறப்புகளை அடைகின்ற நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!!!