தலையங்கம்
பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே!
காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலுக்கு ஜனவரி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 60 பேர் பலியாகியுள்ளார்கள்.
நாடு முழுவதிலும் இதுவரை 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 925 பேரை இந்த நோய் தனது பசிக்கு இரையாக்கியுள்ளது.
அண்டை மாநிலமான ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு வருகையளித்த பன்றிக் காய்ச்சல் தமிழகத்திற்கு வராது என்று தைரியமாக இருக்க முடியுமா? அவ்வாறு இருக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக கோவையில் 26 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 வயதில் ஒரு பெண்ணும் 40 வயதில் ஓர் ஆணும் பலியாகியுள்ளனர். மதுரையில் 55 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் பலியாகியுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று கூறப்படுகின்றது. இது தமிழக அளவில் பன்றிக் காய்ச்சல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பும், பலிகளும் ஆகும்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எனும் உதவி மையங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அளவுக்குப் பன்றிக் காய்ச்சல் நோயால் அபாயம் அதிகரித்திருக்கின்றது. மலேரியா, டெங்கு, டைபாய்டு, சிக்கன்குனியா என படையெடுத்து வந்த நோய்களில் இது படுபயங்கரமான நோயாக உள்ளது. மேற்கண்ட நோய்கள் அனைத்தும் கொசுவின் மூலமாகப் பரவியது என்றால் இது காட்டுத்தீ போல் காற்று வழியாகப் பரவுகின்றது.
இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நாட்டில் இந்தக் காட்டுத்தீ பரவுமானால் பெருமளவு மக்களை அழித்து விடும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இப்போது தான் விழித்துக் கொண்டுள்ளன. ஆனால் மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஆபத்தான, அபாயகரமான நோய் வந்த வரலாற்றையும் அது ஏற்படுத்துகின்ற விளைவுகளையும் சற்று நாம் தெரிந்து கொள்வோம்.
பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது.
இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.
இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்நோய் பரவும் வாய்ப்பு அதிகம்.
வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.
இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியைத் தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரைத் தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமைப் படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.
இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?
ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப்படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (ரஐஞ) அறிவித்துள்ளது.
இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர், நோய் தன்னைத் தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் ண்ய்ச்ங்ஸ்ரீற் செய்து விடுகிறார்.
முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.
நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்குத் தடுக்கும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து இவ்வாறு பல தடுப்பு நடவடிக்கைகளைக் கூறினாவலும் அது பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் ஏதுமில்லை என்றே தோன்றுகின்றது.
உலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் பன்றி இறைச்சியைத் தடை செய்துள்ளது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்
அல்குர்ஆன் 2:173
இந்த நோய் காட்டுத்தீ போல் இந்தியாவில் பற்றி எரிகின்றது. இப்போது என்ன செய்வது? இப்போது மனித சமுதாயத்திற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி, படைத்தவனிடம் பணிந்து பாதுகாவல் தேடுவது தான். இதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்காகத் தனி தடுப்பூசி எதுவுமில்லை, தனி தடுப்பு மருந்துகள் எதுவுமில்லை. இருக்கின்ற தடுப்பு மருந்துகளுக்கு, பன்றிக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்கின்ற வலிமை இல்லை என்று சுகாதார அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இதற்கு டாமிஃபுளூ போன்ற மாத்திரைகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தும்மினால் போதும்; பக்கத்தில் நிற்பவரின் நாசியிலுள்ள ஈர நைப்பில் அல்லது உமிழ் நீரில் அந்தக் கிருமிகள் பட்டுவிட்டால் போடும். அவரும் இந்த நோய்க்கு ஆட்பட்டு விடுவார் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றனர்.
தொட்டால் பன்றிக் காய்ச்சல்! பட்டால் பன்றிக் காய்ச்சல்! ஏன்? மூச்சு விட்டால் போதும் பன்றிக் காய்ச்சல்! இதற்குத் தீர்வு தான் என்ன?
இஸ்லாத்தில் தொற்று நோய் இல்லை. நோயைக் கொடுப்பவன் இறைவன் தான். இதுபோன்ற நோய்கள் கொசுவின் மூலம் பரவினாலும், தண்ணீரின் மூலம் பரவினாலும், காற்றினால் பரவினாலும் அது இறைவனின் நாட்டப்படியே நோயை ஏற்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொற்று நோய் கிடையாது. “ஸஃபர்‘ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று சொன்னார்கள்.
அப்போது கிராமவாசியொருவர், “அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்ற (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
“உங்களுக்கு மேலே இருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழே இருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும், உங்களைப் பல பிரிவுகளாக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றலுடையவன்” என்றும் கூறுவீராக! அவர்கள் புரிந்து கொள்வதற்காகச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக!
அல்குர்ஆன் 6:65
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அவன் மக்களைச் சோதிக்கின்றான். இதற்கு அவனிடம் மட்டும் தான் பாதுகாவல் தேடவேண்டும்.
“இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6:64
நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற தீமைகளிலிருந்து காலையிலும் மாலையிலும் பாதுகாப்புக் கோரியிருக்கின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(இ) அஸ்அலு(க்)க கைர மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(இ)ஃதஹா, வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(இ)ஃதஹா, ரப்பி(இ) அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(இ)ரி, ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ன் பி(எ)ன்னாரி, வஅதாபி(இ)ன் பி(எ)ல் கப்(இ)ரி
இதன் பொருள்:
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
இன்னும் இதுபோல் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்காகப் பல்வேறு பிரார்த்தனைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள். நாம் அந்த துஆக்களைச் சொல்லி, பிரார்த்தித்து அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவோமாக!
—————————————————————————————————————————————————————-
பூமி நிலையாக நிற்கிறதா?
இஸ்லாமிய அறிஞரின் அறியாமை
அபூ அதீபா
சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார்.
அதே பிப்ரவரி 15, 2015 ஆம் நாளில் துபாய் சார்ஜாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய அறிஞர் “பன்தர் அல்ஹைபரி” அவர்களிடம் பூமி சுற்றுகிறதா? அல்லது நிலையாக நிற்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பூமி சுற்றவில்லை. நிலையாகத்தான் நிற்கிறது என்பதற்கு சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்துப் பதிலளித்தார்.
இந்தப் பதில் உலகம் முழுவதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சவூதி அரேபிய அறிஞரின் பதில், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரானது இஸ்லாம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமி சுற்றவில்லை என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதா? அதற்குச் சான்றாக சவூதி அரேபிய அறிஞர் எடுத்து வைக்கும் சான்றுகள் சரியானவையா? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பூமி சுற்றுகிறதா? நிலையாக உள்ளதா?
பூமி சுற்றுகிறதா? நிலையாக உள்ளதா? என்ற கேள்விக்கு சவூதி அறிஞர் அளித்த பதிலின் சாராம்சத்தைக் காண்போம்.
அறிஞர்களான அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஸாலிஹ் அல் ஃபவ்சான் ஆகியோர் பூமி நிலையாக நிற்கிறது. அது இடம் பெயரவில்லை என்ற கருத்தில்தான் உள்ளனர். இதுதான் குர்ஆன், ஹதீஸ் சான்றுகளின் அடிப்படையிலும், அறிவின் அடிப்படையிலும் முற்றிலும் சரியானதாகும்.
ஆனால் சிலர் பின்பாஸ், ஸாலிஹ் அல்ஃபவ்சான் போன்ற அறிஞர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பைக் கேலி செய்கின்றனர். கேலி செய்யும் அவர்கள் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள். எனவே அவர்களின் கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை.
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க (அல்குர்ஆன் 16 : 15) என்ற வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று பூமி அசையாமல்தான் உள்ளது.
பின்வரும் வசனங்களின் அடிப்படையில் சூரியன்தான் சுற்றக் கூடியதாகும்.
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
(அல்குர்ஆன் 36 : 38)
சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
(அல்குர்ஆன் 21 : 33)
இபுறாஹிம் நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான் :
“அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார்
(அல்குர்ஆன் 2 : 258)
மேற்கண்ட வசனங்களிலிருந்து சூரியன்தான் சுற்றுகிறது என்பதை அல்லாஹ் அறிவிக்கின்றான்.
பூமி சுற்றவில்லை என்பதற்கு நமக்கு அறிவு ரீதியிலான சான்றுகளும் உள்ளன.
(இதற்குச் சான்றாக தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு விளக்கம் அளித்தார். எடுத்துக்காட்டாக) நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம் எனக் கூறிய அவர், அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால், பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது என்ற கூற்றின்படி, சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும் என்று தெரிவித்தார். எதிர்த் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவைச் சென்றடைய முடியாது. ஏனென்றால் விமானம் செல்லும் போது சீனாவும் சுழல்கிறதே என்று விளக்கம் அளித்தார்.
பூமி சுற்றவில்லை என்பதற்கு மற்றொரு ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பைதுல் மஃமூர் என்பது ஏழாவது வானத்தில் உள்ளது. அது கஅபாவிற்கு நேராக மேலே உள்ளது. அது கீழே விழுகின்றது என்று வைத்துக் கொண்டால் கஅபாவின் மீதுதான் விழும். (ஹதீஸ்)
இப்போது பைத்துல் மஃமூர் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். பூமி சுற்றினால் அது கஅபாவின் மீது விழாது. மாறாக கடலிலோ, அல்லது தரையிலோ விழும்.
இதிலிருந்தும் பூமி சுற்றவில்லை, நிலையாகத்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.
யாராவது ஒருவர் எதையாவது சொன்னால் அதனை நாம் நம்பி விடுகிறோம். இதனால்தான் மேற்கத்தியர்கள் “நாங்கள் சந்திரனுக்குச் சென்றுவிட்டோம்” என்கிறார்கள். நாம் அதை உண்மை என்று நம்பி அவர்களுக்குப் பின்னால் செல்கின்றோம்.
ஆனால் அவர்கள் சந்திரனுக்குச் செல்லவுமில்லை, சந்திரனைப் பார்க்கவுமில்லை. எதையுமே பார்க்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் சந்திரனுக்குச் சென்றதைப் போன்ற “ஹாலிவுட்” திரைப்படத்தைத் தான். அதைப் பார்த்து விட்டு அவர்களை நாம் உண்மைப்படுத்துகின்றோம்.
இதுதான் அந்த அறிஞர் அளித்த பதிலின் முழுமையான சாராம்சம் ஆகும்.
தவறான ஆதாரங்களை முன்வைத்த அறிஞர்
சவூதி அரேபிய அறிஞர் எடுத்து வைத்த எந்தச் சான்றிலும் பூமி சுற்றவில்லை என்ற கருத்து இல்லவே இல்லை.
பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு 16:15 வசனத்தை எடுத்துக் கூறுகிறார். அந்த வசனத்தின் முழுமையான கருத்தைக் காண்போம்.
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான்
(அல்குர்ஆன் 16 : 15)
மேற்கண்ட வசனத்தில் “பூமி அசையாமல் இருக்கிறது” என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாக “மனிதர்களை பூமி அசைத்து விடாமல் இருப்பதற்காக அதில் மலைகளை முளைகளாக அமைத்தான்” என்றுதான் குறிப்பிட்டுள்ளான்.
விமானம் மேலே ஏறும் போதும் இறங்க்கும் போதும் விமானப்பயணிகள் அதிர்வை உணர்வார்கள். ஆனால் அது சீராகப் பயணிக்கும் போது எவ்வித அசைவும் இல்லாமல் செல்லும். 500 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் அது நமக்குத் தெரியாது. இதனால் விமானம் நகரவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள்.
அது போன்றுதான் அல்லாஹ் பூமியைப் பற்றி மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.
இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.
வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.
இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்கள் நொறுங்கி விடும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காகவே மலைகள் உருவாக்கப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன
பூமியின் மேலே நாம் பார்க்கும் மலைகளின் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் மலைகள் அறையப்பட்டுள்ளன.
ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகளின் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் இணைந்து சுழல முடிகிறது.
பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு எந்த வசனத்தைக் அந்த அறிஞர் எடுத்துக் காட்டுகிறாரோ அந்த வசனம்தான் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும், பூமி சுற்றும் போது அது மனிதர்களை அசைத்துவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் மலைகளை முளைகளாக அமைத்துள்ளான் என்றும் குறிப்பிடுகிறது.
மேற்கண்ட வசனத்தில் பூமி அசையாமல் இருக்கிறது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. மாறாக அந்த அறிஞர்தான் அவ்வசனத்தின் கருத்தை சரியாக விளங்காமல் தவறான முறையில் விளங்கி முன்வைத்துள்ளார் என்பது தெளிவாகிவிட்டது.
அறிவுச் சான்று என்ற பெயரில் அறியாமை
பூமி சுற்றவில்லை என்பதற்கு அறிவுச் சான்று என்று கூறி சவூதி அறிஞர் ஒரு கருத்தை முன்வைக்கின்றார்.
நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம் எனக் கூறிய அவர், அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால், பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது என்ற கூற்றின்படி, சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். ஆனால், எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் விமானம் செல்லும் போது சீனாவும் சுழல்கிறதே!
இதுதான் பூமி சுற்றவில்லை என்பதற்கு அந்த அறிஞர் வைத்து அறிவுச் (?) சான்று. இது போன்ற உதாரணத்தை முன் வைத்ததிலிருந்தே பூமியன் இயக்கம் பற்றி எந்த அறிவும் அந்த அறிஞருக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
பூமி தன்னுடைய புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொண்டு சுற்றுகிறது என்பதை அறியாமல் பேசுகிறார். ஒரு விமானம் ஆகாயத்தில் உயர்ந்து அப்படியே நிற்பதாக வைத்துக் கொண்டால் (அப்படி நிற்க முடியாது) அது எந்த நாட்டின் உயரத்தில் உள்ளதோ அந்த நாட்டோடு சேர்ந்து அதுவும் செல்கிறது.
பின்வரும் உதாரணத்திலிருந்து இதனை நீங்கள் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு இரயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-9 பெட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் இரயிலிற்குள் எஸ்-9 பெட்டியை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் இரயிலிற்குள் இருந்தாலும், அல்லது நடந்து சென்றாலும் இரயில் உங்களை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கொண்டு செல்லும். அதாவது இரயிலிற்குள் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டியை அடைவதற்கு நீங்கள் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் இரயிலிற்குள் இருக்கும் ஒவ்வொரு விநாடியும், இரயிலின் ஒவ்வாரு சென்டி மீட்டரிலும் இரயில் உங்களை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கொண்டு செல்லும்.
இரயில் தான் 120 கி.மீ. வேகத்தில் செல்கிறதே! இரயிலுக்குள் நாம் நடந்து செல்லாமல் அதே இடத்தில் நின்றால் எஸ்-9 பெட்டி நம்மை நோக்கி வந்து விடாதா? என்று அறிவுடையவர் யாரும் கேட்க மாட்டார்கள்.
இரயில் இஞ்சின் செல்லும் வேகத்தில் அதன் பின்னால் இணைக்கப்பட்டுள்ள இரயில் பெட்டிகளும் செல்லும். அது போன்றுதான் பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் அதன் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பொருட்களும் சுற்றுகின்றன. அவை தரையில் இருந்தாலும், ஆகாயத்தில் இருந்தாலும் பூமி தன்னுடைய வேகத்தில் அந்தப் பொருளைக் கொண்டு செல்லும். அதே நேரத்தில் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் நாம்தான் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டும்.
ஒரு ஆகாய விமானம் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பகுதியில் தான் பறக்கிறது. பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட பகுதியில் பறப்பதும், இரயில் பெட்டிக்குள் நடப்பதும் ஓரே விதம்தான். நாம் இரயில் பெட்டிக்குள் நடக்கும் போது இரயிலின் வேகத்தில் அதற்குள் இருக்கும் நாம் கொண்டு செல்லப்படுவதோடு, ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு நாம்தான் நடந்து செல்கிறோம். அது போன்று பூமியின் ஈர்ப்பு விசைக்குள் பறக்கும் விமானத்தை பூமி தன்னுடைய வேகத்தில் சேர்த்துக் கொண்டு போகும். அதே நேரத்தில் பூமியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை அடைவதற்கு விமானம் பறந்துதான் போக வேண்டும்.
சாதாரண விமானங்கள், போர் விமானங்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவையே. ஒரு நிமிஷம் இயங்காமல் இருந்தால் அவை பூமியில் வந்து விழுந்து விடும். மேற்கண்ட சவூதி அறிஞர் கற்பனை செய்வது போல் நின்று விட்டால் என்று வைத்துக் கொண்டு பேசவே முடியாது.
நீங்கள் கல்லை எறிகிறீர்கள். வேகம் இருக்கும் வரை சிறிது தூரம் செல்கிறது. பிறகு விழுந்து விடுகிறது. விமானங்களின் வேகம் அவை கீழே விழாமல் இருக்க உதவுகின்றன.
நாம் இரயில் பெட்டிக்குள் இருக்கும் போது இரயிலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நாம்தான் நகர்ந்து செல்ல வேண்டும். ஆனால் ஒரு இரயில் வந்து கொண்டு இருக்கும் போது நீங்கள் இரயிலுக்கு வெளியே நின்றால் நீங்கள் நகர வேண்டியதில்லை. அப்படியே நீங்கள் நின்றால் நீங்கள் ஏற வேண்டிய பெட்டி உங்கள் அருகில் வந்துவிடும்.
அது போன்று பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு வெளியில் நாம் இருந்தால் தான் பூமி சுற்றும் போது குறிப்பிட்ட பகுதி நாம் இருக்கும் பகுதிக்கு நேராக வரும்.
இந்த அடிப்படையை அறியாத காரணத்தினால்தான் மேற்கண்ட சவூதி அரேபிய அறிஞர் அறிவுச் சான்று என்ற பெயரில் உளறிக் கொட்டியுள்ளார்.
புவி ஈர்ப்பு எல்லையைக் கடந்து ஒரு விமானம் மேலே சென்று சில மணி நேரம் கழித்து கீழே இறங்கினால் அப்போது இவர் கூறுவது போல் சீனா நம்மை நோக்கி வந்து இவரைப் பொய்ப்பித்து விடும். புவி ஈர்ப்பு எல்லையைக் கடந்து விமானம் பறப்பதில்லை.
பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்.
நூல் : முஃஜமுல் கபீர் லித்தப்ரானீ, பாகம் : 11 பக்கம் : 417)
மேற்கண்ட செய்தியில் “பைத்துல் மஃமூர்” என்ற பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக மேல் வானத்தில் இருப்பதாகவும், எந்த அளவிற்கென்றால் அது விழுந்தால் கூட கஅபாவின் மீதுதான் விழும் அந்த அளவிற்கு நேராக உள்ளது என்று வந்துள்ளது.
இதிலிருந்து கஅபா எப்போதும் மஸ்ஜிதுல் மஃமூருக்கு கீழாகத்தான் இருக்கும். பூமி சுற்றினால் கஅபா பள்ளி மஸ்ஜிதுல் மஃமூருக்கு நேராக இருக்காது. எனவே பூமி சுற்றவில்லை. அது அசையாமல் தான் உள்ளது என மேற்கண்ட செய்தியை வைத்து சவூதி அறிஞர் வாதிக்கின்றார்.
ஆனால் மேற்கண்ட செய்தி பலவீனமான செய்தியாகும்.
“மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக வானத்தில் இருக்கிறது. அதில் விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமாதாகும்.
தப்ரானியில் இடம் பெறும் அறிவிப்பில் “இப்னு ஜுரைஜ்” என்பார் இடம் பெறுகிறார். இவர் “முதல்லிஸ்” (அறிவிப்பாளர்களை இருட்டடிப்பு செய்பவர்) ஆவார். இவர் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அவருடைய அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நூலிலும் இவர் நேடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைக் கூறி அறிவிக்கவில்லை. மேலும் இப்னு ஜுரைஜ் என்பாரிடமிருந்து அறிவிக்கும் மாணவர்களும் பலவீனமானவர்களாகவே உள்ளனர்.
இதே செய்தி அபூஹுரைரா அவர்கள் வழியாகவும் சில நூற்களில் இடம்பெற்றுள்ளது. அனைத்து அறிவிப்புகளிலும் “அபூ ஸஃத் ரவ்ஹ் பின் ஜனாஹ்” என்பார் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அறிவிப்பவர் ஆவார். எனவே இந்த அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானதல்ல.
சில நூற்களில் கதாதா என்பவர் நபியவர்களிடமிருந்து அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. கதாதா என்பவர் நபித்தோழர் கிடையாது. எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.
மொத்தத்தில் “பைத்துல் மஃமூர்” கஅபாவிற்கு நேராக வானத்தில் இருக்கிறது என்று நபி கூறியதாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். எனவே இது போன்ற செய்திகளை ஆதாரமாகக் காட்டுவது கூடாது.
மேலும் பூமி சுற்றுகிறது என்று திருமறை வசனங்களிலிருந்து நாம் பெறும் சட்டத்திற்கும் இது முரணானதாக உள்ளது.
சுற்றும் சூரியன்
அத்துடன் சவூதி அரேபிய அறிஞர் சூரியன் சுற்றுகிறது என்பதற்கு சில சான்றுகளை அவர் முன்வைக்கின்றார்.
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது
(அல்குர்ஆன் 36 : 38)
சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
(அல்குர்ஆன் 21 : 33)
“அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார்
(அல்குர்ஆன் 2 : 258)
மேற்கண்ட ஆதாரங்களை முன்வைத்து சூரியன் சுற்றுவதாக சவூதி அறிஞர் கூறுகின்றார்.
சூரியன் சுற்றுகிறது என்றும் திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் சூரியன் சுற்றுகிறது என்று திருக்குர்ஆன் கூறியதினால் பூமி சுற்றவில்லை என்ற கருத்தை நிருபிக்க முடியாது.
மேற்கண்ட அரபி அறிஞர் இப்படி உளறியுள்ளார் என்று கூறினால் அவர் உளறினார் என்ற கருத்தைத் தான் தரும். இவரைத் தவிர உலகில் ஒருவரும் இதுபோல் உளறவில்லை என்ற கருத்தை இது தராது.
13:2, 31:29, 35:13, 36:38 39:5 ஆகிய வசனங்களில் சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
எனவே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் ஒருபோதும் மறுக்கவில்லை. மாறாக, இந்த நவீனக் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது என்பது தான் உண்மை!
—————————————————————————————————————————————————————-
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 17
நபி மீது பொய்! நரகமே கூலி!
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
பலவீனமான ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இஹ்யாவில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் சொல்வதற்கு நரகமே கூலி என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் கண்டோம்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்றும், அதற்கு மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை என்றும் பல்வேறு அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றை இப்போது பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர் சதாவும் ஒரு ஹராமை, ஹலால் ஆக்கிக் கொண்டிருப்பார். அல்லது அதை ஹலாலாக்க மற்றவரைத் தூண்டிக் கொண்டிருப்பார். தடை செய்யப்பட்டவற்றை ஹலாலாக்குவது இறை மறுப்பாகும். அதற்குத் தூண்டி விடுவதும் இறை மறுப்பாகவே ஆகும். இப்படி ஓர் ஆய்வை மாலிக் மத்ஹபைச் சேர்ந்த நாஸிருத்தீன் பின் அல்முனீர் என்பார் தெரிவிக்கின்றார்.
ஹாபிழ் இமாம் சுயூத்தி அவர்கள், தஹ்தீருல் கவாஸ் மின் அஹாதீபில் குஸ்ஸாஸ் – கதையளப்பவர்களின் பொய்கள், கூட இருப்பவர்களுக்கு எச்சரிக்கை என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார்கள். அந்த நூலில் அவர் குறிப்பிடுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்கள் இறை மறுப்பாளர்கள் என்ற கருத்தைத் தான் அபூபக்ர் பின் இப்னுல் அரபியைப் போன்றே, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஷைக் இப்னு அகீல் என்பாரும் கொண்டிருக்கின்றார் என்று சுயூத்தி தெரிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது, ஹலாலை ஹராமாக்கும் செயலுக்கு ஒருவரைக் கொண்டு சென்று விடுகின்றது. இதனால் அறிஞர்களில் ஒரு சாரார், நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்ற கருத்திற்குச் சென்று விட்டனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்
ஒரு ஹலாலை ஹராமாக்கும் விஷயத்தில் அல்லது ஒரு ஹராமை ஹலாலாக்கும் விஷயத்தில் அல்லாஹ்வின் மீதோ, அவனது தூதர் மீதோ திட்டமிட்டுப் பொய் சொல்வது தெளிவான இறை மறுப்பு என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை என்று ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அல்கஷ்புல் ஹஸீஸ்
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று முன்னோர்களும், ஹதீஸ் கலை அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது நம்முடைய கருத்திற்கு வலு சேர்க்கின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (மீஸானுல் இஃதிதால்)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, தவறான செய்திகளை அறிவிக்கின்ற சுவைத் அல் அன்பாரியின் உயிரைப் பறிப்பது அனுமதிக்கத்தக்கது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் மிகக் கடுமையாகக் குறிப்பிடுகின்றார்கள். (மீஸானுல் இஃதிதால்)
“தலையை மறைப்பது நபிமார்களின் பண்பாகும். நபி (ஸல்) அவர்கள் தலையை மறைப்பவர்களாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் – முஜாஹித் – அபூநஜீஹ் வழியாக முஅல்லா பின் ஹிலால் அறிவிக்கின்றார். இவரது தலையைத் துண்டிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மீது சொல்கின்ற இந்தப் பொய்யை விட வேறென்ன காரணம் வேண்டும்?” என்று சுஃப்யான் பின் உயைனா குறிப்பிடுகின்றார். (நூல்: மீஸானுல் இஃதிதால்)
“தாவூத் பின் யஸீத் அல் அஸ்திய்யி, ஜாபிர் அல் ஜுஃபி ஆகிய பலவீனமான அறிவிப்பாளர்களை நோக்கி, உங்கள் இருவரையும் தண்டிப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்து, வெள்ளிக் கட்டியைத் தவிர வேறு எந்த ஆயுதமும் என் கைக்குக் கிடைக்காத பட்சத்தில் அதை உருக்கியாவது உங்கள் இருவருக்கும் விலங்கு மாட்டுவேன்” என்று ஷஅபீ தெரிவித்தார்கள். (நூல்: தஹ்தீருல் அவாஸ்)
அபூஹிஷாம் ரிபாயீ என்பவர் வெறுக்கத்தக்க ஹதீஸை அறிவித்துக் கொண்டிருக்கும் போது அவரை நோக்கி, “இன்னொரு முறை இதுபோன்று ஹதீஸை அறிவித்தால் உன்னை நான் சிலுவையில் அறைந்துவிடுவேன்” என்று இப்னு ஹுதைல் எச்சரிக்கை விடுத்தார்.
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அறிஞர்கள் யாரும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் நபியவர்கள் மீது பொய் சொல்வது இறை மறுப்பு என்ற அடிப்படையில் அமைவதை வைத்து, அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், எச்சரிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர்கள் இந்தப் பாவத்திற்கு மரண தண்டனை விதிப்பது சரி என்ற கருத்தில் இருந்ததையே இவை உணர்த்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பேணுதலைப் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டதை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
நபி மொழிக்கு அவசியம்
நம்பத் தகுந்த வழி மட்டுமே!
ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத் தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவர், தாம் அறிந்த தரமான மற்றும் நேர்மையான அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக இருப்பவர்கள் ஆகியோரால் அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
நாம் கூறிய இக்கருத்தே சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6).
அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (2:282).
உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (65:2).
இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும், நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிகிறது.
தகவல் அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் அவ்விரண்டும் ஒன்றுபட்டே இருக்கின்றன.
கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின் தகவலும் அவர்கள் அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போன்றே, மறுக்கப்பட்ட அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.
இது குறித்து பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.
பொய்ச் செய்தியை அறிவிப்பவர் ஒரு பொய்யர் தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்கள்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) சமுரா பின் ஜுன்தப் (ரலி).
நூல்: முஸ்லிம் 1
நபி மீது பொய் நரகமே தண்டணை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார் பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.
இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 2
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அனஸ் (ரலி)யின் அதிக கவனம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்களை அறிவிக்கவிடாமல் தடுக்கிறது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்
அறிவிப்பவர்: அலீ பின் ரபீஆ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 5
– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பது கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 7
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அனஸ் (ரலி)யின் அறிவுரை
அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “தெரிந்துகொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து) தப்பமாட்டார்; கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்க மாட்டார்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 8
புதுப் புது பொய்யர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 13
வரும் வழியை உரசி பார்த்தல்
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக இந்த (நபிமொழி)க் கல்வியும் மார்க்கம்தான். எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள்.
அறிவிப்பவர்: ஹிஷாம் பின் ஹஸ்ஸான் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 24
செய்தியைக் காக்கும் சங்கிலித் தொடர்
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின் ஓர் அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்) மட்டும் இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
நூல்: முஸ்லிம் 30
அரிதாக இருப்பதில் தப்பில்லை!
ஆதாரப்பூர்வமாக இருக்க வேண்டும்
நான் அபூமுஹம்மத் காசிம் பின் உபைதில்லாஹ் (ரஹ்) மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது யஹ்யா (ரஹ்) அவர்கள் காசிம் (ரஹ்) அவர்களிடம், “அபூமுஹம்மதே! மார்க்க விவகாரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களிடம் வினவப்பட்டு, அதற்குரிய விடையோ தீர்வோ உங்களிடம் இல்லாதிருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பெருங்குறையாயிற்றே!” என்று கூறினார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், “ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், “நீங்கள் நேர்வழித் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் வழித் தோன்றலாயிற்றே!” என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், “நான் (தக்க) அறிவின்றிப் பேசுவதோ, நம்பத் தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களிடம் இதைவிட மோசமானதாகும்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) யஹ்யா (ரஹ்) அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்தவக்கில் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 31
—————————————————————————————————————————————————————-
குடும்பவியல் தொடர்: 21
பெண்ணின் குணம்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
ஒரு பிரயாணத்தில் ஆயிஷா நாயகியை அழைத்துக் கொண்டு நபியவர்கள் சென்ற போது, அவர்கள் இரவலாக வாங்கி வந்த கழுத்துமாலை (நெக்லஸ்) தொலைந்துவிடுகிறது. மதிப்புமிக்க மாலையாக இருந்ததால் அனைவரும் தேடவேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைசியில் தொழுகை நேரம் கடந்துகொண்டே செல்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தயம்மும் உடைய வசனம் நபியவர்களுக்கு இறங்குகிறது.
(பார்க்க: புகாரி 334)
ஆயிஷா (ரலி) அவர்கள் செய்த இந்தச் செயலின் காரணமாக அனைவருக்கும் கோபம் வந்து, அதை ஆயிஷாவின் தந்தை அபூபக்கரிடம் சென்று முறையிடுகிறார்கள். அபூபக்கர் கோபப்பட்டு திட்டுவதற்காகவோ அடிப்பதற்காகவோ ஆயிஷாவைத் தேடி வருகிறார்கள். அப்போது நபியவர்கள் ஆயிஷா (ரலி)யின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அபூபக்கர் ஆயிஷாவை வந்து அடிக்கிறார்கள். வலி தாங்கமுடியவில்லை. நபியவர்கள் தமது மடியில் தூங்கியதால் ஆயிஷா (ரலி) அசையாமல் இருந்து கொண்டார்கள்.
இவ்வளவு பெரிய விவகாரங்கள் நடந்து, எல்லோரும் கோபப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நபியவர்கள் தமது கோபத்தைக் காட்டாமல், அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தேடிப் பார்க்கச் சொல்லிவிட்டு, தமது மனைவியின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு விவகாரமாக நபியவர்கள் எடுத்துக் கொள்ளவே இல்லை.
பெண்கள் மட்டும்தான் தொலைப்பார்களா? பெண்கள் மட்டும்தான் கைதவறிக் கீழே போடுவார்களா? ஆண்களுக்கும் அப்படி நடக்கத்தான் செய்யும். மனைவியின் கைதவறி ஒரு பொருள் உடைந்துவிட்டால், உடனே கணவன், உன் பெற்றோர் உன்னை வளர்த்த லட்சணம் இது தானா? என்றெல்லாம் சண்டை போடுகிற கணவன்மார்களைப் பார்க்கிறோம்.
ஆண்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆண்களும் கைதவறி ஏதாவது பொருளை உடைக்கத்தான் செய்வார்கள். எதிர்பாராமல் என்றாவது ஒருசில நாட்களில் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும்.
காணாமல் போனதால் மனைவிக்கு கவலை வந்துவிடக் கூடாது; இதற்காக அவர்களது மனம் புண்பட்டுவிடக் கூடாது என்கிற வகையில் நபியவர்கள் நடந்துகொண்ட விதம் வியப்பாக இருக்கிறது.
இந்தச் செய்தி புகாரியில் 3672, 4608 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறைய இடங்களில் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நபியவர்களின் மனைவிமார்கள் தங்களுக்குள்ளேயே இரண்டு பிரிவினராக இருந்துள்ளனர்.
ஆயிஷா, ஹப்ஸா, ஸஃபிய்யா, ஸவ்தா இவர்கள் நான்கு பேரும் ஒரு பிரிவாக இருப்பார்கள். மற்ற மனைவிமார்கள் இன்னொரு பிரிவு. ஆயிஷா (ரலி) பிரிவினர் சேர்ந்து கொண்டு மற்ற பிரிவினருக்கு எதிராகப் பேசுவது, சண்டை போட்டுக் கொள்வது என்று இரண்டு அணியாகச் செயல்பட்டுள்ளனர்.
நபியவர்களுக்கு சில ஸஹாபாக்கள் உணவுப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கமாகியிருந்தது. நபியவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் இருக்கும் போதுதான் கொடுத்து விடுவார்கள். எல்லா நாட்களிலும் கொடுத்துவிட மாட்டார்கள். கதீஜா (ரலி)க்குப் பின் மனைவிமார்களில் ஆயிஷா (ரலி)யிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் என்பது தான் இதற்குரிய காரணமாகும். நபியவர்கள் ஆயிஷாவின் மீது வைத்த அன்பை அறிந்து கொண்டுதான் சஹாபாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.
இப்படி சஹாபாக்கள் செய்துவந்த காரியம், மற்ற மனைவிமார்களுக்கு ஒருவகையான வெறுப்பை ஊட்டியது. இதுவெல்லாம் நல்ல முறை கிடையாது, எனவே இதுபற்றி நபியவர்களிடம் தெளிவாகக் கேட்டாக வேண்டும் என்று முடிவெடுத்து ஒவ்வொரு மனைவியாக நபியவர்களிடம் வந்து இந்தப் பிரச்சனையைச் சொல்கிறார்கள்.
நாங்களும் உங்களுக்கு மனைவிமார்கள் தான். ஆயிஷா வீட்டில் நீங்கள் தங்கும் போது மட்டும்தான் சஹாபாக்கள் தங்களுக்கு அன்பளிப்பை வழங்குகிறார்கள். எங்களது வீட்டில் தங்குகிற போது அன்பளிப்பு எதுவும் வருவதில்லை. ஆயிஷாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது ஏன்? அபூபக்கர் மகளுக்காக அதிகம் நீதியை வளைக்கிறீர்களா? எங்களிடம் நீதியாக நீங்கள் நடக்கவில்லை என்றெல்லாம் கடுமையான முறையில் மற்ற மனைவிமார்கள் சண்டை போடுமளவுக்குப் பேசிவிடுகிறார்கள். அப்போது நபியவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.
அதன் பிறகு அந்தக் குறையை நபியவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சொல்லி நபியவர்களிடம் சொல்லச் சொல்கிறார்கள். அதை ஃபாத்திமா (ரலி) நபியவர்களிடம் போய்ச் சொல்கிறார்கள். அப்போது நபியவர்கள் அதெல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.
அதன் பிறகு ஜைனப் (ரலி)யிடம் சொல்கிறார்கள். ஆயிஷாவுக்கு எதிரான பிரிவினருக்கு தலைவி ஜைனப் தான். இவர்கள் கொஞ்சம் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள். ஜைனப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டையிடுகிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள். ஆயிஷா நாயகியை இழுத்துப் பேசுகிறார்கள். என்னùன்ன வார்த்தைகள் என்று ஹதீஸில் வரவில்லை. ஜைனபுக்கு நாம் பதில் சொல்வதை விட, ஆயிஷா பதில் சொன்னால் நன்றாயிருக்குமே என நபியவர்கள் நினைக்கிறார்கள்.
ஜைனப் அவர்கள் எல்லை மீறியதும் ஆயிஷா எழுந்து ஜைனபின் வாயடைத்துப் போகும் வகையில் பதிலுரைக்கிறார்கள். என்ன பதில் என்பதும் ஹதீஸில் வரவில்லை. அந்த உரையாடலை சஹாபாக்கள் தெரிவிக்கவில்லை.
பெண்கள் பேச்சு எப்படியிருக்கும் என நமக்கெல்லாம் தெரிந்ததுதான். அதுபோன்று இருந்திருக்கும். கடைசியில் ஆயிஷா (ரலி) அவர்களின் கை ஓங்கிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் நன்றாக தர்க்க ரீதியாகப் பேசுவார்கள். ஆயிஷாவின் பேச்சுக்கு முன்னால் ஜைனபு (ரலி)யால் பதில் சொல்ல முடியவில்லை.
ஜைனபின் ஒவ்வொரு கேள்விக்கும் நபியவர்கள் சார்பாகவே ஆயிஷா அவர்கள் பதில் கொடுக்கிறார்கள். இப்படி நபியவர்களுக்கு முன்னிலையில் இரண்டு மனைவிமார்கள் சண்டைபோட்டு, ஆயிஷா வெற்றி பெறுவதைப் பார்த்த நபியவர்கள், “அபூபக்கர் மகள் உண்மையில் அபூபக்கர் மகள்தான்” என்று உரைக்கிறார்கள்.
அதாவது ஆயிஷாவைப் பார்த்து, நீ அபூபக்கர் மகள் என்பதைக் காட்டிவிட்டாய் என்று கூறுகிறார்கள். ஏனெனில் அபூபக்கர் நபித்தோழர்களில் மிகவும் விபரமிக்க நபர். சின்ன சின்ன விசயங்களில்கூட மிகவும் நுணுக்காமாக சிந்திப்பவர்கள்; செயலாற்றுபவர்கள். அதனால்தான் ஆயிஷாவைப் பார்த்து, ஒவ்வொரு விமர்சனத்துக்கும் மறுப்புக் கொடுத்து ஜைனபின் வாயைத் திறக்க முடியாமல் ஆக்கிவிட்டாயே என்று சொல்கிறார்கள்.
இப்படி ஒரு நீண்ட சம்பவம் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இப்படியெல்லாம் நமது வீடுகளில் பெண்கள் நடந்து கொள்வதைப் போன்றுதான் நபியவர்களின் மனைவிமார்களும் நடந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பெண்களாகத்தான் இருந்தார்கள். உரிமை என்று வருகிற போது விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இரண்டு மனைவிகள் இருந்தால் ஒரு மனைவி இன்னொரு மனைவியின் விசயத்தில் உரிமை கோருதலும் சண்டையிடுதலும் பிரச்சனைகளும் வரும். அம்மாவுக்குக் கொடுப்பதில், அண்ணன் தம்பிகளுக்கும் அக்கா தங்கைகளுக்கும் கொடுக்கிற விசயத்திலெல்லாம் பிரச்சனைகள் வரும்.
தனது கணவன் அவனது அக்காவிற்குக் கொடுப்பதைத் தடுப்பார்கள். பலரது மனைவிமார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் போது அக்காவைப் பார்த்துவிட்டு வந்தால், அதோடு அவன் வாழ்க்கை தொலைந்தது. இப்படியெல்லாம் பெண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
இதுபோன்று நமது குடும்பத்தில் மாமியார் மருமகள் சண்டை போடும் போது நாம், ஆயிஷா நாயகி சண்டை போடவில்லையா? என்று நினைக்க வேண்டும். நபியவர்களின் மனைவி ஜைனப் (ரலி) அவர்கள் சண்டை போடவில்லையா? என்று நினைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான். பெண்கள் என்றாலே அப்படித்தான் இருப்பார்கள். அப்படி வரும் போது நபியவர்கள் சமாளித்ததைப் போன்று சமாளித்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக பெண்களை அடிமைப்படுத்திட இயலாது.
எனவே ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்வது என்பது இப்படித்தான். கரடுமுரடாக நடந்து கொண்டு, பெண்களை வெறுத்துவிடாமல் இருக்க வேண்டும். மனைவியின் மீதோ தாயாரின் மீதோ கோபம் வருகிற போது, ஆயிஷா (ரலி)யையும் கப்ஸா (ரலி)யையும் நினைத்தால் நமக்கு ஏற்பட்ட கோபம் தானாகவே மறைந்து விடும்.
அதேபோன்று ஆயிஷா (ரலி), நபியின் மனைவிமார்களில் மற்றவர்களை விடவும் தான் சிறந்தவள் என்று நினைக்கிறார்கள். மேலும் மற்ற மனைவிமார்களுடன் நபியவர்கள் இருப்பதை விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் ஒருநாள் நபியவர்களிடம் ஆயிஷா ரலியவர்கள், நபியவர்களே சிந்திக்காத விசயத்தைக் கேட்கிறமாதிரி பொடிவைத்துப் பேசுகிறார்கள். உள் அர்த்தம் வைத்துப் பேசுகிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப் படாத ஒரு மரத்தையும் காண்கின்றீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)” என்று பதிலளித்தார்கள்.
தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
நூல்: புகாரி 5077
தொலை தூரப் பயணத்தில் ஒட்டகத்தில் செல்லும் போது, மக்கள் பயன்படுத்திய ஒன்றுமில்லாத பட்டுப்போன மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? அல்லது நன்றாக பசுமையாக இருக்கிற மரத்தில் ஒட்டகத்தை மேயவிடுவீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் யாராக இருந்தாலும் பசுமையான மரத்தில்தான் மேயவிடுவார்கள் என்ற கருத்தைச் சொல்கிறார்கள்.
எதற்காக நபியவர்களிடம் இவ்வாறு கேட்டார்கள் எனில், நபியவர்களது மற்ற மனைவிமார்கள் இரண்டாம் தாரமாகவும் மூன்றாம் தாரமாகவும் வாழ்க்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவர்கள். ஆனால் ஆயிஷா (ரலி) கன்னிப் பெண்.
அப்படியெனில் தனக்குத்தான் மற்றவர்களை விடவும் நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிக் கேட்டார்கள்.
இப்படியெல்லாம் சொல்லும் போது கோபம் வரத்தான் செய்ய வேண்டும். ஆனாலும் நபியவர்கள் கோபப்படாமல் இதுபோன்ற பிரச்சனைகளைச் சமாளித்துத்தான் வாழ்ந்துள்ளார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
திருமண நிலைப்பாடு திருத்தங்களும் தீர்வுகளும்
“கல்யாணம் முடித்தேன்! கடனாளியாகி விட்டேன்!”
“வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன்! இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்!”
இப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல்? பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.
கால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா? பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன?
வரதட்சணைக் கொடுமை! வாட்டுகின்ற திருமணச் செலவு! இவை தான் இதற்குரிய பதில்.
இதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
இந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், “மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.
நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில் நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.
மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
விருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,
மண்டப திருமணங்களில் (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
சில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.
இது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.
மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
திருமண விருந்து
எளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819
விருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.
இதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.
விருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் “எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்” என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.
இந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழைப்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்
விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.
ஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.
விருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.
அதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.
ஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
—————————————————————————————————————————————————————-
இணை கற்பித்தல் தொடர்: 28
நபிமார்களின் அற்புதங்கள்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
மூஸா நபிக்கு இறைவன் பல அற்புதங்களை வழங்கியிருந்தான். மூஸா நபியவர்கள் காலத்தில் உள்ள இஸ்ரவேலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர்.
மூஸா நபி அந்தக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கும் போது தாகம் ஏற்படுகின்றது. உடனே அவர்கள், நீங்கள் தான் அல்லாஹ்வுடைய தூதராயிற்றே! எங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படுகிறது! நீங்கள் தண்ணீருக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரினர்.
உடனே மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் தண்ணீர் வேண்டி கோரினார்கள். உடனே இறைவன் உன்னுடைய கையில் இருக்கும் கைத்தடியால் அருகில் இருக்கும் பாறையை அடிப்பீராக! என்று கட்டளையிடுகின்றான்.
அவர்கள் அவ்வாறு ஒரு அடி அடித்த உடன் அந்த 12 கோத்திரத்திற்கான அடையாளங்களுடன் அந்த பாறையிலிருந்து 12 ஊற்றுகள் வந்தன. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களுடைய ஊற்றுகளை அடையாளம் கண்டு அதில் தண்ணீர் அருந்தினார்கள். இந்தச் சம்பவம் மூஸா நபி அவர்கள் மூலமாக நிகழ்ந்த அற்புதமாகும்.
இதை 2:60, 7:160 ஆகிய வசனங்களில் அறியலாம்.
தண்ணீர் வேண்டும் என அம்மக்கள் முறையிட்ட போது தமது கைத்தடியைப் பயன்படுத்தி அல்லது வேறு மந்திரம் செய்து தண்ணீரை அவர்கள் வரவைக்கவில்லை. அல்லாஹ்விடம் தான் துஆ செய்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு தமது கைத்தடியால் அடித்ததால் தான் தண்ணீர் வந்தது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அதே போன்று. மூஸா நபியவர்கள் கைத்தடியை போட்டு பாம்பாக மாற்றிய சம்பவங்கள் குர்ஆனில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது.
அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.
(அல்குர்ஆன் 7:107)
அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.
(அல்குர்ஆன் 26:32)
“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
(அல்குர்ஆன் 7:117)
உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.
(அல்குர்ஆன் 26:45)
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். “மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்”.
(அல்குர்ஆன் 27:10)
மூஸா நபிக்கு அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இருக்குமென்றால் ஏன் தன்னுடைய கைத்தடியை கீழ போட்டு அது பாம்பாக மாறிய போது பயந்து ஓடினார்கள்?
கையில் இருக்கும் தடியை கீழே போடு என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஏன் அல்லாஹ் இத்தடியை கீழே போடச் சொல்கிறான் என்பது மூஸா நபிக்கு தெரியவில்லை. அவ்வாறு போட்டால் என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அதனால் தான் திரும்பிப் பார்க்காது ஓடினார்கள்.
ஆக மேற்கண்ட வசனங்களிலிருந்தே மூஸா நபிக்கு சுயமாக அற்புதங்கள் செய்யக்கூடிய ஆற்றல் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதே போன்று மூஸா நபிக்கு மேலும் ஒரு அற்புதத்தை வழங்கினான். எதிரிகள் இவர் தூதர் என்பதில் சந்தேகத்தைக் கிளப்பிய போது இறைவன் மூஸா நபிக்கு உம்முடைய கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுப்பீராக என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறு செய்தார்கள். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருந்த அவர்களுடைய கை அந்த நேரத்தில் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிடும் ஒளியைப் போன்று ஆனது. இந்த அற்புதத்தை அல்லாஹ், தான் நிகழ்த்திக் காட்டியதாகக் குறிப்பிடுகின்றான்.
உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.
(அல்குர்ஆன் 28:32)
உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்” (என்று இறைவன் கூறினான்.)
(அல்குர்ஆன் 27:12)
நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 27:13)
அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.
(அல்குர்ஆன் 7:108)
இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 7:109)
சட்டைப் பைக்குள் இருந்து கையை வெளியே எடுப்பீராக! என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மூஸா நபி அவர்களுக்கு ஏன் இவ்வாறு செய்யச் சொல்கிறான் என்பதும் தெரியவில்லை. சட்டைப் பைக்குள் இருந்து கையை எடுத்தால் என்னவாகும் என்பதும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், மொத்தம் ஒன்பது அற்புதங்கள் – சான்றுகளுடன் சென்று அந்த சான்றுகளை அவர்கள் (எதிரிகள்) கண்ணால் பார்த்தும் அந்த அற்புதங்களை சூனியம் என்றே தான் கூறினார்கள்.
அது போன்று மூஸா நபியவர்கள் தன்னுடைய சமுதாய மக்களிடத்தில் உடன்படிக்கை எடுக்கும் போதெல்லாம் அம்மக்கள் அந்த உடன்படிக்கையை மீறுபவர்களாக இருந்தார்கள். இவர்களிடத்தில் சரியான முறையில் உடன்படிக்கை எடுக்க வேண்டும் என்று கருதி அல்லாஹ் வழங்கிய அற்புத்தைக் காட்டி உடன்படிக்கை செய்தார்கள். அதைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்.
மலையை அவர்களுக்கு மேல் மேகத்தைப் போன்று நாம் உயர்த்தி, அது தம் மீது விழுந்து விடும் என்று அவர்கள் நினைத்த போது “உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள்! அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள்! (நம்மை) அஞ்சுவோராகலாம்” (என்று கூறினோம்)
(அல்குர்ஆன் 7.171)
இறுதி கட்டமாக, பிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவையும் அவரை ஈமான் கொண்டவர்களையும் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வருகிறார்கள். கடைசியில் கடற்கரையை அடைகின்றார்கள். தப்பிப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஒன்று பிர்அவ்னிடம் அகப்பட்டு, கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்படும். அல்லது கடலில் விழுந்து இறக்க நேரிடும் என்பதை அறிந்த மூஸா நபியின் கூட்டத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அல்லாஹ் அங்கும் அனைவரும் பார்க்கும் விதமாக ஒரு அற்புதத்தை மூஸா நபிக்கு நிகழ்த்திக் காட்டினான். அதைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
“எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலில் மூட வேண்டியது அவர்களை மூடிக் கொண்டது.
(அல்குர்ஆன் 20:77)
காலையில் (ஃபிர்அவன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(அல்குர்ஆன் 26:62,63)
மூஸா நபியின் கையில் கைத்தடி இருந்தும் அவர்கள் தன்னிச்சையாக கடலில் அதை அடித்து, பிளக்கச் செய்யவில்லை. என் இறைவன் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் வழிகாட்டலுக்காகக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகுதான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அற்புதங்கள் செய்யும் ஆற்றலும் அதிகாரமும் நபிமார்களுக்கு இல்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றுகளாகும்.
அதே போன்று, மூஸா நபியுடைய சமுதாயம் ஒரு நாடோடி சமுதாயமாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்யாமல், எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டு தான் இருப்பார்கள். அப்போது அவர்கள் உணவுக்கு வழியில்லாத காரணத்தால் மூஸா நபியிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டனர். அப்போது இறைவன் அவர்களுக்கு மன்னு ஸல்வா எனும் அற்புத உண்வை இறக்கினான். அதைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
இஸ்ராயீலின் மக்களே! உங்கள் எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். தூர் மலையின் வலப்பகுதியை உங்களுக்கு வாக்களித்தோம். உங்களுக்கு “மன்னு, ஸல்வா‘ (எனும் உண)வை இறக்கினோம்.
(அல்குர்ஆன் 20:80)
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்).
(அல்குர்ஆன் 2:57)
அந்த உணவை சிறிது காலம் சாப்பிட்டு அனுபவித்து விட்டு மீண்டும் மூஸாவிடம், “ஒரே உணவை எவ்வளவு காலத்திற்குத் தான் சாப்பிடுவது? எங்களை ஏதாவது ஒரு நல்ல இடத்தில் குடியமர்த்தி, வகை வகையான காய்கறிகளைச் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்கத் தொடங்கினர். அதற்கு மூஸா நபியவர்கள் “அல்லாஹ் உங்களுக்கு எவ்வளவு அருமையான உணவை வழங்கியிருக்கிறான்; அதை விட்டுவிட்டு இப்போது வேறு உணவு கொண்டு வா என்கிறீர்களே’ என்று அவர்களை நோக்கிக் கேட்டார்கள். பிறகு அதையும் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். அந்தக் கோரிக்கையை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் நிறைவேற்றியதாகக் குறிப்பிடுகிறான்.
“மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக் காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்” என்று நீங்கள் கூறிய போது, “சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 2:61)
“இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! ‘மன்னிப்பு‘ என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்” என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்!
(அல்குர்ஆன் 2:58)
அதே போன்று ஈஸா நபியவர்கள் களிமண்ணால் ஒரு பறவையைச் செய்வார்கள். அது உடனே நிஜப் பறவையாக மாறுகிறது.
இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது” (என்றார்)
(அல்குர்ஆன் 3.49)
இது அல்லாமல் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட பல்வேறு அற்புதங்களை பற்றியும் இறைவன் குறிப்பிடுகிறான்.
மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத் தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 5.110)
மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?” என்று சீடர்கள் கூறிய போது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார். “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண் மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர். “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார். “உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் 5.112,115)
மேலும் குர்ஆனில் 19:20, 3:37, 21:91, 66:12, 3:45-47 ஆகிய இடங்களில் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைப் பற்றி இறைவன் கூறுகறான்.
அதே போன்று, யஃகூப் நபிக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டு, யூசுப் நபியின் சட்டையை எடுத்துப் போட்டவுடன் பார்வை திரும்ப வந்துவிடும். இந்த சம்பவம் குர்ஆனில் 12வது அத்தியாயத்தில் 93 முதல் 96 வரை வருகின்றது
“எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்) “ஒட்டகக் கூட்டம் புறப்பட்ட போது “நான் யூஸுஃபுடைய வாசனையை உணர்கிறேன். நீங்கள் என்னைப் பழிக்காதிருக்க வேண்டுமே” என்று அவர்களின் தந்தை கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் உமது பழைய தவறான முடிவில் தான் இருக்கிறீர்” என்று (குடும்பத்தினர்) கூறினர். நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 12:93-96)
அதே போன்று, இப்ராஹீம் நபிக்கு, நான்கு பறவைகளை அறுத்து துண்டு துண்டா ஆக்கி அவற்றை தனித் தனியாக நான்கு மலையின் மீது வைத்து விட்டு பிறகு நீ அவற்றை அழைத்தால் அவை உன் அழைப்பை ஏற்று உயிர் பெற்று வரும் என்று இறைவன் கூறியதாக குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
“என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” எ ன்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.” என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 2:260)
இப்ராஹீம் நபியவர்களை எதிரிகள் தூக்கி தீயில் போட்டவுடன் அந்த தீயை இறைவன் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் குளிர்ச்சியாக ஆக்கினான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை இழப்பை அடைந்தோராக ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 21:68-70)
இதுபோன்ற பல அற்புதங்கள் நபிமார்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றை இதுவரை நாம் பார்த்தோம்.
இதையெல்லாம் பார்த்து விட்டு, இறந்து போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து எழுப்பியிருக்கிறார்கள்; களிமண்ணால் பறவையை செய்திருக்கிறார்கள்; வானத்திலிருந்து உணவை இறக்கியிருக்கிறார்கள்; இதெல்லாம் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய விஷயமா? நபிமார்கள் மனிதப் படைப்பு அல்ல என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கலாம்.
இவற்றை நபிமார்கள் செய்தார்கள் என்பதில் நமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்தந்த சம்பவங்களிலேயே அந்த அற்புதத்தை எப்படிச் செய்தார்கள்? யார் மூலமாகச் செய்தார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கின்றது. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
—————————————————————————————————————————————————————-
இறைப் பொருத்தம்
அமீன் பைஜி, கடையநல்லூர்
உலகில் பிற மனிதர்களின் நெருக்கம், அவர்களின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு செயலிலும் தமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பிறர் இதைப் பொருந்திக் கொள்வார்களா என்ற எண்ணமே அதிகமான மனிதர்களிடம் மேலாங்கி உள்ளது.
ஆடை, வாட்ச் போன்ற சாதாரண பொருட்களைக் கூட பிறரின் பொருத்தத்தை முன்னிறுத்தியே தேர்வு செய்யும் பழக்கம் பலரிடமும் காணப்படுவது இதற்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக் காட்டு.
அற்பமான இவ்வுலகில், சாதாரண மனிதனின் பொருத்தம் பெற முயற்சி செய்யும் நாம், நம்மைப் படைத்த இறைவன் நம்மை இரு உலகிலும் திருப்தி கொள்வதற்காக எதைச் செய்கிறோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைதிருப்தியே மேலானது
ஏனெனில் மனிதனின் திருப்தியை விடவும் ஏன், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான்.
இதோ அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது.
அல்குர்ஆன் (9:72)
இறை திருப்தியைப் பெறுவது என்பது பெரும் பாக்கியமாகும். இறை திருப்திக்கு எண்ணற்ற சிறப்புகளும் மகிமைகளும் உண்டு. ஆதலால் தான் இறை திருப்தியைப் பெற்றோரும் அதனை பெறாதோரும் சமமாக மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவன், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவனா? (அது) சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 3:162
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுதினமும் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இறை திருப்தியைக் கோருபவர்களாகவும் இறைக் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
“அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”
இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 751
மேலும் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கப் பெற்றவர்கள் தான் மறுமை நாளில் மலக்குமார்களின் பரிந்துரைக்குத் தகுதி பெறுவார்கள் என திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
அல்குர்ஆன் (21:28)
இப்படிப்பட்ட சிறப்புமிக்க அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் காரியங்கள் எவை என்பதை குர்ஆனும் ஹதீஸும் நமக்குக் கற்றுத் தருகின்றது. அவைகளை நமது வாழ்வில் கடைப்பிடித்து அல்லாஹ்வின் மகத்தான திருப்தியை, இறை பொருத்தத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல்
அல்லாஹ்வுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்வதும், அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்தோருக்கு உதவி செய்வதும் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் செயலாகும்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் (9.100))
ஹிஜ்ரத் என்பது சாதாரண ஒன்றல்ல, தன் சொந்த ஊரைவிட்டு, நாட்டை விட்டு, மனைவி மக்களை விட்டு, சொத்து மற்றும் உடமைகளை விட்டு மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரே நோக்கத்துடன் வேறு நாடு செல்வதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏனைய நபித்தோழர்களும் மக்காவில் இறைவனை வணங்கவிடாது தடுக்கப்பட்டு பல்வேறு துன்பம் இழைக்கப்பட்டதால் மதீனா மற்றும் அபீசினீயா போன்ற நாடுகளை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர்களே.
நம்மைப் பொறுத்தவரை இன்றைக்கு ஹிஜ்ரத் செய்யும் அவசியேமா, தேவையோ, வாய்ப்போ இல்லை. ஆதலால் இறைவனுக்காக ஊரை விட்டோ, நாட்டை விட்டோ, மனைவி மக்கள் மற்றும் சொத்துக்களை விட்டோ நாடு துறந்து செல்ல வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு சூழல் இருந்தாலும் இறைவனுக்காக ஹிஜ்ரத் செல்வோமா என்பது பெரும் கேள்விக்குறியே!
எனினும் நாடு துறந்து செல்லும் ஹிஜ்ரத் இல்லையென்றாலும் இறைவனுக்காக அவன் தடை செய்தவற்றை வெறுப்பதும் ஒரு வகையில் ஹிஜ்ரத்தே. அதையாவது நாம் செய்து ஓரளவு இறை திருப்தியைப் பெற முயல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 10
இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 39:7
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது இறைவனுடைய பொருத்தத்தை பெற்றுத்தரும் என்று இக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்த கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த மூவரை இறைவன் சோதித்த போது ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியதால் அவர் இறைவனின் திருப்திக்குரிய நபராக ஆனார் என்று ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் அந்த சுவையான சம்பவத்தை இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடுதான்…(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.
பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.
அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.
பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.
அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.
பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.
பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.” என்று சொன்னார்.
உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3464
எனவே இறைவனுக்கு வணக்க வழிபாடுகளைப் புரிந்து நன்றி செலுத்துவதன் மூலம் இறை திருப்தியைப் பெறலாம்.
பாவத்திலிருந்து விலகியிருத்தல்
அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க சிற்சில குற்றங்களை விட்டும் விலகி இருத்தல் அவசியம். ஏனென்றால் பாவங்கள் செய்பவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் பொருத்தம் அவர்களுக்கு கிடைக்காது.
நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.
அல்குர்ஆன் (9.96)
அல்லாஹ்வின் கோபத்திற்குரிய, சாபத்திற்குரிய வார்த்தைகளை பேசி விடாமல் அல்லாஹ் திருப்திக் கொள்ளும் வார்த்தைகளையே பேச வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6478
எந்தச் சூழ்நிலையிலும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை உதிர்த்து விடக் கூடாது.
நபிகள் நாயகம் அவர்கள் தம் குழந்தை இறந்து பெரும் துன்பத்தில் ஆழ்ந்த போதும் அல்லாஹ் பொருந்தாத எதுவும் தம்மிடம் நிகழ்ந்து விடக் கூடாது என்றே கவனத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!” என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1303
கணவனுக்குக் கட்டுப்படுதல்
கணவன் இல்லறத்திற்கு அழைக்கின்ற போது மனைவி அதற்கு இணங்கிக் கட்டுப்பட வேண்டும். தக்க காரணமின்றி மறுத்தால் அவள் மீது இறைக்கோபம் ஏற்படும் என நபிமொழி எச்சரிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2830
இப்படிப் பாவங்களிலிருந்து விலகி நன்மையின் பால் ஆர்வம் கொண்டு நல்லறங்களைப் புரிந்தால் மேலான இறைதிருப்தி நமக்கு கிடைக்கும் என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்களும், இறை திருப்தியைப் பெற்றவர்களும் ஆவர்.
அவர்கள் இறைவனிடம் அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.
அல்குர்ஆன் 98:8,9
(நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 57:20
நமது செயல்பாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ளும் படியாக அமைத்து கொள்ள இறைவன் அருள் புரிவானாக!
—————————————————————————————————————————————————————-
வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இமாலய வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தவற்றில் ஒன்று வரதட்சணைக்கு எதிரான போர் முழக்கமாகும்.
சமுதாயத்தின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற ஆலிம்கள் இந்தத் தீமைக்கு எதிராக இதுவரை ஊமைகளாக முடங்கிக் கிடப்பது மட்டுமில்லாமல், தங்களது திருமணங்கள், தங்களது பிள்ளைகளின் திருமணங்களில் தங்கு தடையின்றி வரதட்சணையைப் பல்வேறு வடிவங்களில் வாங்கிக் கொண்டும் உள்ளனர்.
இந்தக் கட்டத்தில் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தப் பிரச்சனையைத் தூக்கிப் பிடித்தது. அதன் விளைவாக இலட்சக்கணக்கான பெண்கள் கரையேறியுள்ளனர். கண்ணீர்க் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள் தான் இந்த ஜமாஅத்தைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்தும், அபாயங்களிலிருந்தும் பாதுகாக்கின்ற கவசங்களாக ஆயின.
இஸ்லாமிய சமுதாயத்தில் தவ்ஹீத் ஜமாஅத், வரதட்சணைக்கு எதிராகப் புரட்சியும், போர் முழக்கமும் செய்தது போன்று கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு குரல் இப்போது ஒலிக்கின்றது. அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரல்!
அவர் சாதாரணமானவர் அல்லர்! சென்னை ஐ.ஐ.டி.யில் கட்டிடக் கலையில் பி.ஹெச்.டி. முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரி! அவரது பெயர் திருமதி சத்யா சுதிர். அவர், Down with Dowry – வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடக்கின்ற வரதட்சணையை இந்து ஆங்கில நாளேட்டில் படம்பிடித்துக் காட்டியிருந்தார்.
வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபையை வகையாக ஒரு பிடி பிடித்திருந்தார். திருச்சபையில் வரதட்சணை விஷயத்தில் பாதிரிகள் கடைப்பிடிக்கும் மவுன விரதம், நமது சமுதாய ஆலிம்களின் மவுன விரதத்தை அப்படியே ஒத்திருந்தது.
அதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.
அத்துடன் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மட்டுமல்ல. வரதட்சணையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு சமுதாயத்திற்கும் விடிவும் விமோச்சனமும் விடுதலையும் இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு; அதற்கு இஸ்லாத்தின் தூய வழியில் சமுதாய மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறந்த எடுத்துக்காட்டு என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம்.
இப்போது, வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் திருமதி சத்யா சுதிர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்திற்கு வருவோம்.
வரதட்சணை ஒழிக!
திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது.
நான் சார்ந்திருக்கும் சாதியை எண்ணிப் பெருமிதம் அடைபவள் நான். பாளையங்கோட்டை மற்றும் கன்னியாகுமரியில் தான் எனது சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பனையேறும் நாடார்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
இன்று அந்தத் தலைமுறையில் பலர் டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் சி.எஸ்.ஐ. திருச்சபையை நிர்வகித்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு சமுதாயத்தில் வாழ்க்கை மூன்று கூறுகளைக் கொண்டது. Hatching (பிறப்பு), Matching (திருமணம்), Dispatching (மரணம்) ஆகியவை தான் அந்த மூன்று கூறுகள்.
வாழ்க்கையின் இந்த ஒவ்வொரு கூறுக்கும் நிகழ்வுக்கும், அதாவது பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. எனது சிறு வயதில் நான் அவற்றில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நான் வளர்ந்ததும் இந்தப் பெருமை என்னிடத்திலிருந்து விடைபெற்று, வெட்கமும் வேதனையும் என்னிடம் குடிகொண்டு விட்டது.
திருமணம் என்று வந்ததும் மாப்பிள்ளை தேடுவதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பறிப்பதும் தான் நடக்கின்றது. அதாவது ஒரு பெண் பருவமானதும் சிறந்த மாப்பிள்ளையைத் தேடும் படலம் பெண் வீட்டில் துவங்கிவிடுகின்றது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிலிருந்து பறிக்கும் வேலையும் துவங்கிவிடுகின்றனர்.
கடவுளால் அளிக்கப்பட்ட புனிதத் திருமணம், பேரம் பேசப்படுகின்ற கேடுகெட்ட வியாபாரமாக மாறிவிட்டது.
M.B.B.S. என்றால் அந்த மாப்பிள்ளையின் தலைக்கு விலை பத்து லட்சம்! M.D., M.S. என்றால் இருபது லட்சம்! B.E., M.E. என்றால் இதுபோன்ற பட்டதாரிகளுக்கு ஐந்து அல்லது பத்து லட்சம்! இதல்லாமல் நூறு சவரன் நகை, நவீன சொகுசு கார், புதிய வீடு அமைப்பதற்கு ஒரு தொகை, நிலம், புலம், வயல், வாசல், தோட்டம், துறவுகள், தாரைவார்ப்புகள், திருமணத்தின் செலவுகள் அனைத்தும் பெண்வீட்டின் மீது திணித்து தீர்த்துக் கட்டப்படுகின்றது.
ஒரு திருமணம் என்றால் அரை கோடி கரைந்து, காணாமல் போய்விடுகின்றது.
இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை நிலையாகும்.
பெண் குழந்தை பிறந்தது முதல் பெண் வீட்டில் மாப்பிள்ளை பிடிப்பிற்காக சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டில் பேரம் பேசும் வேளையில் எந்த அளவுக்குப் பிடுங்க முடியமோ அந்த அளவுக்குப் பிடுங்கிக் கொள்கின்றனர். அதிலும் ஒரேயொரு செல்ல மகள் என்றால் போதும். கொப்பில் ஏறிவிடுகின்றனர்.
என்னுடைய விஷயத்தில் என்னை ஒருவர் பெண் பார்க்க வந்திருந்தார். பையனின் தகப்பனார் பையனை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். அடக்கமானவன், அமைதியானவன், அறிவாளி, புத்திசாலி, கடவுள் பக்தி கொண்ட பக்திமான், புகழும் பிரபலமும் மிக்க விடுதியுடன் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தவன் என்று புகழ் மாலைகளைச் சூட்டினார். கை நிறைய சம்பளம் வாங்கும் கண்ணியம் மிக்கவன்; திருச்சபையின் பாடகர் குழுவில் உறுப்பினராக இருக்கிறான் என்றெல்லாம் பையனின் பண்புகளையும், பதவிகளையும் பட்டியலிட்டார்.
இவ்வளவும் அளந்து விட்டு, “உங்கள் மகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்ற பயங்கரவாதக் கேள்வியை என் தந்தையை நோக்கிக் கேட்டார்.
இப்படி ஒரு கேள்வி மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த மணமகன், இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு எதிராகப் பொங்கி எழுகின்ற புரட்சி மகன் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை என் வங்கிக் கணக்குக்காக இல்லாமல், என்னை எனக்காகத் திருமணம் முடிப்பார் என்று எண்ணியிருந்தேன். எனது அந்த எதிர்பார்ப்பிலும் எண்ணத்திலும் மண்ணள்ளிப் போட்டு விட்டார் அந்த மாப்பிள்ளை!
எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றும் வகையில், டிரைன் டிக்கெட், வருவதற்கும் போவதற்கும் உரிய போக்குவரத்துச் செலவுகள், மண்டபச் செலவுகள் அத்தனையும் எனது தகப்பனார் தான் செய்ய வேண்டும் என்ற வெட்கம் கெட்ட கோரிக்கையையும் வைத்தார் பக்திமான் மாப்பிள்ளையின் தகப்பனார்!
நல்ல வேளையாக எனது தகப்பனார் எனது திருமணத்திற்காக நையா பைசா செலவு செய்கின்ற முடிவில் இல்லை. நான் அந்தப் பையனுக்குச் சமமான படிப்பும் பட்டமும் பெற்றிருந்தேன். என்ன படித்து என்ன செய்வது? அந்த சில நொடிப் பொழுதில் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் என்று அவமானமடைந்தேன்; ஆற்றாமை கொண்டேன்.
இந்த நேரத்தில் பக்திமானான அந்த மாப்பிள்ளையைப் பார்த்தேன். முகத்தில் எந்த ஒரு வெட்கக் கோடுகள், வேதனை ரேகைகள் படியாத, பிரதிபலிக்காத வெறும் கற்சிலையாக, ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டிருந்தார். அவரது தகப்பனால் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் அவரது முகம் கோணவில்லை. அவரது உடல் நாணவில்லை. நல்லவேளை! இந்தக் கற்சிலையை, கையாலாகாததை நான் திருமணம் முடிக்கவில்லை.
இவ்வளவு காலமாக என் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்குத் திருமணம் நடப்பதை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். இதுபோன்று என்னுடைய அத்தை மகனுக்கு, கொடுத்த வரதட்சணையை வாங்கிக் கொண்டு திருமணம் முடித்தார். வரதட்சணையின் மதிப்பு உயர, உயர மாப்பிள்ளையின் அந்தஸ்தும் தகுதியும் உயர்கின்றது. இது தான் சமுதாயத்தின் மட்டரகமான அளவுகோலாகும்.
உங்களுடைய மகள் திருமணத்திற்கு சேமித்து வைத்த மாதிரி, மகன் திருமணத்திற்காக சேமித்து வைக்கவில்லையே? என்று என்னுடைய அத்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், இதே அளவுக்கு என் மகளுக்குக் கொடுத்துத் தான் திருமணம் முடித்திருக்கின்றேன். நான் அப்படிக் கொடுக்கவில்லை என்றால் என் மகளை யார் திருமணம் முடிப்பார்? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். அத்துடன், நான் என் மகனுக்கு எதுவும் வாங்கவில்லை என்றால் பையனுக்கு ஏதோ குறையிருக்கின்றது என்று தவறாக நினைத்துவிடுவார்கள். அதனால் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சபையில் நான் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். ஒரு தடவை கூட வரதட்சணைக்கு எதிரான சொற்பொழிவை நான் கேட்டதே இல்லை.
ஒவ்வொரு வாரமும் “ஹோலியர் தேன் தோ….” என்று பாடுகிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் பெண் பிள்ளைகளுக்குப் பெரிய விலையில் மாப்பிள்ளை தேடுகின்றோம். அல்லது நமது மகன்களுக்குப் பெண் வீட்டாரிடமிருந்து பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றோம்.
மாப்பிள்ளையை இந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்களின் நிலை என்ன என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமா? இப்படி ஒரு நிலையை எத்தனை குடும்பங்களில் விரும்புவார்கள்? வெறுக்கத் தான் செய்வார்கள்.
வரதட்சணை கொடுக்கின்ற, அல்லது வாங்குகின்ற நாம் ஒவ்வொருவரும் பெண் குழந்தையின் சாவுக்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் ஆகின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
ஒவ்வொருவரும் இப்படிப் பெண் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணமாக இருந்துவிட்டு மற்றவர்களைப் பழிப்பது எப்படி நியாயமாகும்?
கடவுளே! நீங்கள் வருகையளியுங்கள் என்று திருமண நிகழ்ச்சிகளில் பாடல் பாடுகின்றோம். திரை மறைவில் நடக்கின்ற அநியாயங்களை ஏசு பார்த்தால், அவர் ஜெருஸலம் மாதா கோயிலில் செய்தது போன்று, புனித திருமணத்தை வியாபாரமாக்கிய நயவஞ்சகர்களே! என்னுடைய தேவாலயத்தைச் சந்தையாக்கி விட்டீர்கள். இதை விட்டு வெளியே செல்லுங்கள் என்று உங்கள் அனைவரையும் துரத்தி அடித்திருப்பார்.
என்னுடைய சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கின்றேன்.
திருமணத்தையொட்டி நடக்கின்ற நயவஞ்சகங்கள், ஆடம்பரங்கள் தொலைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.
திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது.
சமீபத்தில் வாங்கிய வைர மாலையை, வந்திருக்கும் பெண்களுக்குக் காட்டவும் அவர்கள் பொறாமைப்படவும் தேவையில்லை.
மணப்பெண்ணுக்கு 25,000 ரூபாய் செலவில் ஏன் சேலை எடுக்க வேண்டும்? ஒரு தடவை உடுத்திவிட்டு அது அப்படியே அலமாரிக்குள் மடித்து வைக்கப்படுகின்றது. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்படும் நகைகள் எதற்கு? கனமான நகைகளை கழுத்து, காது, கைகளில் போட்டு கல்யாணப் பந்தலில் பலருக்கும் போட்டுக் காட்டிவிட்டு, திருமணம் முடிந்ததும் வங்கிப் பெட்டகங்களில் வைத்து அவை பூட்டப்படுகின்றன.
இதற்குப் பதிலாக நூறு பேர்கள் கலந்து கொண்டு, மணமகள் ஒரு 3000 ரூபாய் அல்லது அதைவிடக் குறைந்த மதிப்பிலான சேலை அணிந்து, சாதாரணமான நகை போட்டுக் கொண்டு, எளிமையான முறையில் திருமணம் நடகக்கின்ற அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
இவை அத்தனைக்கும் தேவை நான் மாற வேண்டும்! நீங்கள் மாற வேண்டும்! இந்தச் சமுதாயம் மாற வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; இல்லையெனில், எப்போதும் போன்று அவர்கள் நம்மிடம் நன்றாக பழகமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்களின் பண்டிகைகளில் பல முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், அன்றைய தினங்களில் அவர்கள் செய்யும் காரியங்களை அப்படியே முஸ்லிம்களும் செய்கிறார்கள். இந்த நிகழ்வு, பிறமத மக்களின் உள்ளூர் திருவிழாக்கள் முதற்கொண்டு நாடுதழுவிய அளவில் நடைபெறும் பண்டிகைகள் வரையிலும் காணமுடிகிறது.
இவ்வாறு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள், இதுகுறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கடுகளவும் தெரியாமல் இருக்கிறார்கள். சிலரோ, இதுவென்ன பெரும்பாவமா? என்று எண்ணிக் கொண்டு தெரிந்து கொள்ள கொஞ்சமும் தயாரின்றி இருக்கிறார்கள். எனவே, இது தொடர்பாக இருக்கும் மார்க்கத்தின் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த ஆக்கம்.
இஸ்லாம் முழுமையான மார்க்கம்
இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கைத் திட்டம். ஆன்மீகம், அரசியல் என்று மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் தெளிவாகப் போதித்திருக்கும் சிறப்பான சித்தாந்தம். இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர்த்து இருக்கும் மற்ற மதங்கள், கொள்கைக் கோட்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மாற்றமாக இஸ்லாம் மட்டுமே, ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிலைக்கும் தேவையான தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. இத்தகைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு எந்த விஷயத்திலும் பிற கொள்கைகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அறவே இல்லை என்பதே உண்மை. எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் சடங்குகளை கடன் வாங்கிச் செய்ய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை என்பதைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
(ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(திருக்குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம்.
பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்!” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1741) (4403)
இஸ்லாம் தனித்து விளங்கும் மார்க்கம்
மூடநம்பிக்கைகள், சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் தலைச்சிறந்த கோட்பாடாக இஸ்லாம் திகழ்கிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் சிக்கலுக்கும் நிறைவான நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை; எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை.
ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
(திருக்குர்ஆன் 48:28)
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(திருக்குர் ஆன் 61:9)
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
(திருக்குர்ஆன் 9:33)
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
(திருக்குர்ஆன் 3: 83)
இத்தகைய இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விட்டுவிட்டு அடுத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை என்னவென்று சொல்வது? இவர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தின் போதனைகளை விடவும் மற்ற கொள்கைகள் சிறந்தவை என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறார்கள். இப்படி சத்திய மார்க்கத்தை விடவும் அசத்திய வழிமுறைகளை மேலானதாகக் காட்டும் மாபாதகக் காரியத்தை விட்டும் இவர்கள் இனியாவது விலகிக் கொள்வார்களா?
பிற மதத்தினருக்கு மாற்றமாக நடப்போம்
மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவன் கொடுத்திருக்கும் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்டத்தையே மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு மாற்றமாக, மனிதகளால் உருவாக்கப்பட்ட கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று எல்லா வகையான மக்களும் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட, திரிக்கப்பட்ட இடைச்செருகல் செய்யப்பட்ட சட்டங்களும் இருந்தன.
இவ்வாறான மக்களின் மூடநம்பிக்கைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் நிறைந்த காரியங்கள், முஸ்லிம் சமுதாயத்தில் கலந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். இஸ்லாத்தைப் போன்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் வகையில், பல்வேறு காரியங்களில் அவர்களுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவற்றை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
வணக்க வழிபாடுகளில் மாற்றம்
ஒரு மனிதனுடைய வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும், ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும் தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்நிலையில், அநேகமான மக்கள் அர்த்தமற்ற ஆன்மீகத்தை ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமது பெற்றோர்களிடம் இருக்கும் தவறான கடவுள் கொள்கையை நம்பிக்கையை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் காரியங்கள் என்று அவற்றைச் செய்கிறார்களே தவிர, சரியா? தவறா? என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. இதன் விளைவாக வாழையடி வாழையாக, குருட்டுத்தனமான வணக்கங்களிலே வீழ்ந்து கிடக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் மக்களிடம் இருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு விளங்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மார்க்கத்தின் ஆணையைப் பின்வரும் நபிமொழிகள் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.
(தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு “அதான்‘ எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (3457)
சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (583), (3273)
இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிமிலுள்ள 1373வது ஹதீஸில் இருக்கிறது.
(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: அபூதாவுத் (556)
புனிதமான செயல்களைச் செய்யும் போது செருப்பு அணிவது பாவம் என்ற தவறான நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது. இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் எப்போதாவது ஒருமுறையாவது செருப்பு அணிந்து தொழுது விட்டாலே யூதர்களுக்கு மாறு செய்ததாக ஆகிவிடும். எனவே தான், நபிகளார் அவர்கள் செருப்பணிந்தும் தொழுதுள்ளார்கள். அணியாமலும் தொழுதுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், அல்லாஹ் நாடினால் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1916), (1917), (2088)
உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுததை நான் கண்டேன். அங்கு தங்கிய உமர் (ரலி) அவர்கள், “இணை வைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை. மேலும் அந்த இணை வைப்பாளர்கள், “ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்‘ என்று கூறுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்” என்று கூறி விட்டு, சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.
அறிவிப்பர்: அம்ரு பின் மைமூன் (ரஹ்)
நூல்: புகாரி (1684)
மேற்கண்ட செய்திகளின் மூலம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முதன்மையான கடமைகள் உட்பட எந்தவொரு வணக்க வழிபாடும் பிற மதத்தவரின் வணக்கத்திற்கு ஒப்பாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, முஸ்லிம்கள் தங்களது மார்க்க செயல்களின் மீது பிற மத்தினரைப் பின்பற்றுவது போன்ற சாயல்கூடப் படிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களோ, பிற மதத்தவர்களின் வணக்க வழிபாடுகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை அப்படியே செய்யும் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
தேர் இழுப்பதை சந்தனக்கூடு என்றும், பொங்கலை பாச்சோறு என்றும், மந்தரிக்கப்படும் கயிறை தாவிஸ் என்றும், பிரசாதத்தை தபர்ருக் என்றும் எண்ணற்ற பிற மதச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் செய்கிறார்கள். இனியாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.