ஏகத்துவம் – மார்ச் 2012

தலையங்கம்

தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர்

மாநபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டும் இறை மறுப்பாளர்கள் துரத்தியடித்தனர். அதனால் நாடு துறந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தஞ்சம் அடைந்தார்கள். மதீனாவுக்கு வந்த மாத்திரத்தில் அவர்கள் செய்த தலையாய பணி, ஒரு பள்ளிவாசலை நிறுவியது தான். அதுவும் சொந்தப் பணத்தில் பள்ளியை நிறுவினார்கள்.

இந்தப் பள்ளி தான் ஐவேளையும் அல்லாஹ்வைத் தொழுகின்ற ஆலயமாக, மார்க்கப் பிரச்சாரம் செய்கின்ற மையமாக சட்டமியற்றும் சட்டமன்றமாக, நீதி வழங்கும் நீதிமன்றமாக, குற்றவியல் தண்டனையை நிறைவேற்றும் கூடாரமாக, கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக, படையனுப்பும் இராணுவத் தளமாக, பாடம் பயிற்றுவிக்கின்ற பள்ளிக்கூடமாக, தான தர்மங்களை வழங்குகின்ற தர்மச் சத்திரமாக – மொத்தத்தில் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்பட்டது.

இந்தப் பள்ளிவாசல் தான் மக்காவை, இதர அரபிய அந்நியத் தலைநகரங்களை வெற்றி கொள்கின்ற வியூகக் களமாகவும், வீர நிலமாகவும் போர் பயிற்சிப் பாசறையாகவும் திகழ்ந்தது. உலகமெல்லாம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு ஓர் ஒலி-ஒளிபரப்பு நிலையமாகச் செயல்பட்டது.

இன்று அல்லாஹ்வின் கிருபையால் நமது ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகம், ஆட்சியதிகாரம் தவிரவுள்ள அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்படுகின்றது.

இந்தத் தலைமையகத்திலிருந்து ரமளான் மாதம் முழுவதும் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ஆற்றப்படுகின்ற சொற்பொழிவுகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகி இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களால் பார்க்கப்படுகின்றது. பெயரளவுக்கு முஸ்லிமாக வாழும் மக்களிடமும், முஸ்லிமல்லாத பிற மத மக்களிடமும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயரளவு முஸ்லிம்கள் உண்மையான மார்க்கத்தை, ஏகத்துவக் கொள்கையை அறிந்து ஏற்றுக் கொள்வதற்கும், முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை அறிந்து அலையலையாக ஏற்றுக் கொள்வதற்கும் தொலைக்காட்சிப் பிரச்சாரம் தக்க சாதனமாக அமைகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4831

இந்த நன்மைகள் பன்மடங்காகப் பெருகுவதற்குத் தலைமையகம் தான் காரணமாக அமைகின்றது.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகள், பிரிவினை அளவுக்குச் செல்லும் நிலையில் தீர்வுக்காகவும் தீர்ப்புக்காகவும் இங்கு வருகின்றன. பல தம்பதியர்களின் மனங்களை ஒன்றிணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாகவும் தலைமையகம் செயலாற்றுகின்றது. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தும் சமரசக் கோட்டையாகவும் நீதிமன்றமாகவும் இது திகழ்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களின், அநீதியிழைக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாகவும் இந்தத் தலைமையகம் ஒலிக்கின்றது.

கோடிக்கணக்கில் ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு இந்த ஜமாஅத் வினியோகிக்கின்றது. ஹஜ் பெருநாளின் போது குர்பானி இறைச்சி வினியோகம் செய்கின்றது.

சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணங்கள் வழங்குகின்றது.

அனாதைகளை ஆதரிக்கின்ற, ஆதரவற்ற முதியோரைப் பாதுகாக்கின்ற அறப்பணியை இந்தத் தலைமையகம் செய்கின்றது.

ஆபத்து, அவசர சிகிச்சைகளுக்காக இரத்த தானம் அளிப்பது, இரத்த தான முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்வது போன்றவற்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் முதன்மையாகத் திகழ்வதற்கு இந்தத் தலைமையகம் தான் காரணம்.

இப்படி வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் செயல்படுத்துகின்ற ஒரு தலைமைச் செயலகமாக இது இயங்குகின்றது.

அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் பள்ளியாகவும், ஏகத்துவத்தை நிலைநிறுத்துகின்ற மையமாகவும் செயல்படுகின்றது.

அனைத்து நன்மைகளின் அடித்தளமாக, ஆணி வேராகச் செயல்படுகின்ற இந்தத் தலைமையகம் ஒரு வாடகைக் கட்டடத்தில் செயல்படுகின்றது. இதற்கான மாத வாடகை மட்டும் அறுபதாயிரம் ரூபாய்.

ஒவ்வொரு கொள்கைவாதிக்கும் ஏகத்துவக் கொள்கை என்பது தன்னுடைய உயிரினும் மேலாக இருக்குமானால் இந்தத் தவ்ஹீது மையம் சொந்தக் கட்டடத்தில் அமைவதற்காகத் தங்கள் பொருளாதாரத்தை அள்ளி வழங்க வேண்டும்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

இந்த வசனத்தில் அல்லாஹ் சொன்னது போன்று நபித்தோழர்கள் அன்று தங்கள் உயிரை இந்த மார்க்கத்திற்காக அர்ப்பணித்தனர். உடைமைகளை, பொருளாதாரத்தை அர்ப்பணித்தனர்.

இன்றைக்கு நமது உயிரை அர்ப்பணிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அதற்காகவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது நமது நாட்டில் இல்லை.

இருக்கின்ற வாய்ப்பு பொருளாதாரத்தை அர்ப்பணிப்பது தான். அந்த அர்ப்பணத்தை நாம் செய்து, தவ்ஹீதுக்கு மையமான தலைமையகம் அமைய அள்ளி வழங்குவோமாக! பன்மடங்காகப் பெருகும் அந்தப் பயன்களைப் பெறுவோமாக!

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:261

—————————————————————————————————————————————————————-

? கேள்வி பதில் !

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமா தெரியாதவர்கள் முஸ்லிமே இல்லை என்ற அளவுக்குக் கூறுகிறார்களே! விளக்கவும்.

அப்துல் அலீம்

ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும்.

ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. ஒரு நபித்தோழர் கூட அதைச் சொல்லவும் இல்லை. அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.

நான்கு மற்றும் ஐந்தாவது கலிமாக்களை எவனோ ஒருவன் சுயமாகக் கற்பனை செய்து அதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று என நம்பச் செய்துள்ளான் என்றால் இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரத்துல் குஃப்ர் என்ற பெயரில் இவர்கள் கற்பனை செய்த அந்தக் கலிமா இது தான்:

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅன்வ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரஃத்து மினல்குஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.

கலிமா தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் ஆதாரமில்லாமல் கற்பனை செய்த நன்காம் கலிமா இது தான்:

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.

மேற்கண்ட கலிமாவின் வாசகங்கள் சில ஹதீஸ்களில் வந்துள்ளது என்றாலும் அந்த ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரின் வழியாக வரவில்லை. மேலும் பலவீனமான அந்த ஹதீஸ்களும் ஈமானின் கடமை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை.

மூன்றாம் கலிமா என்ற பெயரில் இவர்கள் கடமையாக்கியுள்ள சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்துள்ளனர். ஆனால் ஈமானுக்கு ஐந்து கடமைகள் உள்ளதாகவும் அதில் இது மூன்றாவது கலிமா என்றும் அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் இதுவும் ஒரு துஆ என்ற அடிப்படையில் இதைக் கற்றுத் தந்துள்ளனர்.

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கு அவர்கள் துஆக்கள் கற்றுத் தந்தனர். இந்த துஆ தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தால் ஓத வேண்டிய துஆ என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்)என்று கூறிவிட்டு, “அல்லாஹும்மஃக்பிர்லீ” (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.

நூல்கள்: புகாரி 1154, இப்னு மாஜா 3868

முதல் கலிமா என்றும் இரண்டாம் கலிமா என்றும் இவர்கள் கூறுவது ஒரே கலிமா தான்.

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பது முதல் கலிமாவாம்.

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்பது இரண்டாம் கலிமாவாம்.

இரண்டும் ஒரே கலிமா தான். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராகவும் ஒப்புக் கொள்வதை இது குறிக்கிறது.

ஒன்றில் சில வார்த்தைகள் கூடுதலாக இடம் பெற்ற போதும் இரண்டில் எதைச் சொன்னாலும் ஒருவர் முஸ்லிமாக ஆகிவிடுவார்.

எனவே ஐந்து கலிமாக்கள் என்பது மார்க்கத்தில் உள்ள விஷயங்களும் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களும் கலந்த கலவையாக உள்ளது. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.

? நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?

பாரிசல்

மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான்.

ஒவ்வொரு நபிக்கும் ஒரு அத்தாட்சியை இந்த உலகத்தில் வைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடவில்லை என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனில் சில நபிமார்களின் வரலாறு மட்டுமே கூறப்பட்டுள்ளது. பல நபிமார்களின் வரலாறுகளை இறைவன் கூறவில்லை.

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.

அல்குர்ஆன் 40:78

எனவே அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள ஒரு விஷயத்தை அல்லாஹ் ஏன் செய்யவில்லை என்று கேட்க முடியாது.

அவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.

அல்குர்ஆன் 85:16

அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.

அல்குர்ஆன் 21:23

—————————————————————————————————————————————————————-

மகரந்தச் சேர்க்கையும்  மாநபி வாழ்க்கையும்

பின்பற்ற முடியாததா நபியின் வாழ்க்கை?

சென்ற இதழின் தொடர்ச்சி…

கே.எம். அப்துந் நாசிர்

சிலர் நபியவர்களின் வாழ்க்கையை உலக விஷயம், மார்க்க விஷயம் என்று பிரித்துப் பார்ப்பது கூடாது. நபியவர்கள் செய்த அனைத்தையும் பின்பற்றுவது தான் மார்க்கக் கடமை என்று கூறுகின்றனர்.

அதாவது நபியவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்துள்ளதால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத்து தான்.

நபியவர்கள் கோதுமை சாப்பிட்டுள்ளார்கள் என்று எண்ணி நாமும் கோதுமை மட்டும் சாப்பிடுவதும் சுன்னத்து தான்.

நபியவர்கள் இரத்தக் காயத்திற்கு சாம்பலைப் பூசினார்கள் என்றால் நாம் அவ்வாறு செய்வது சுன்னத்து தான் என்று வாதிக்கின்றனர்.

இவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் உள்ளனர் என்பதற்கு மேற்கண்ட அவர்களின் கூற்றே சான்றாகும்.

நபியவர்கள் மார்க்க அடிப்படையில் ஒன்றைச் செய்தால் அதற்கு மாற்றமாகச் செய்வது பித்அத் ஆகும். பித்அத்கள் அனைத்தும் வழிகேடு. வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்று நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

லுஹர் தொழுகையை நபியவர்கள் நான்கு ரக்அத் தொழுது காட்டினால் நாம் ஐந்தாகத் தொழுதாலும் மூன்றாகத் தொழுதாலும் அது தொழுகையாகாது. மார்க்கத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் லுஹர் தொழுகை மூன்று ரக்அத் என்று மாற்றினால் அவன் வழிகேடன் ஆவான்.

ஒட்டகத்தில் செல்வது மார்க்கம் என்றால் அது அல்லாத வேறு வாகனங்களைப் பயன்படுத்துவது பித்அத் ஆகும். எனவே தற்போது உலக முஸ்லிம்களில் 95 சதவிகிதம் பேர் நரகவாசிகள், பித்அத் செய்பவர்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

ஹஜ்ஜுக்குச் செல்லும் போது ஒட்டகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் கால கட்டத்திலேயே அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபியவர்களுக்குப் பின்னால் எந்த ஒன்றும் மார்க்கச் சட்டம் ஆகமுடியாது. நபியவர்களுக்குத் தெரியாத மார்க்க விஷயம் ஒன்றும் இஸ்லாத்தில் கிடையாது.

அதே நேரத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்றைக்கு உலகத்தில் உள்ளன. விமானம், பேருந்து, கார், பைக், சைக்கிள், ஆட்டோ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒட்டகத்தில் செல்வதும் மார்க்க விஷயம் என்றால் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்று உலகத்தில் தோன்றியுள்ளதே! முஸ்லிம்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே!

அப்படியென்றால் இஸ்லாமிய மார்க்கம்  நபியவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற இறை வசனத்தின் பொருள் தான் என்ன?

மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன் என்று உரைக்கும் திருமறைக் குர்ஆன் வாகனங்களில் நபியவர்கள் காலத்தில் இல்லாத புதியவைகளும் பின்னால் உருவாகும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளது.

குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.

அல்குர்ஆன் 16:8

உலக விஷயம் வேறு; மார்க்க விஷயம் வேறு!

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது; உலகம் புதுமை அடையும்.

மார்க்கத்தில் நபியவர்களுக்குத் தெரியாதது கிடையாது; உலகத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை நாம் அடைந்துள்ளோம்.

மேற்கண்ட வசனத்திலிருந்து இந்த விஷயங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் வாழும் காலகட்டத்தில் மனிதன் என்ற அடிப்படையிலும், அன்றைய கால மக்களின் உலகப் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் செய்த காரியங்கள் மார்க்கம் என்று கூறினால் இஸ்லாம் பின்பற்ற முடியாத மார்க்கமாகவும். நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியற்ற வாழ்க்கையாகவும் ஆகிவிடும். இதைக் கூட இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் வசதியான வீடுகளில் வசிக்கின்றனர். ஏசி, வாஷிங் மிஷின், ஏர்கண்டிஷனர், மின்விசிறி போன்ற வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். விபத்துகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களையும், வசதிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் நபியவர்கள் கூரை வீட்டில்தான் வசித்துள்ளார்கள். நபியவர்கள் இரத்தக் காயங்களுக்கு சாம்பலைத் தான் பூசியுள்ளார்கள். இவ்வாறு தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறினால் இன்றைய உலகில் ஒரு சதவிகிதம் மக்கள் கூட இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாது. நபிகள் நாயகத்தை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது. இதைக் கூட விளங்காதவர்களாகத் தான் இந்த ஆலிம்கள் உள்ளனர்.

உடும்புக் கறியும் உண்மை விளக்கமும்

நபியவர்கள் வெறுத்ததை நாமும் வெறுக்க வேண்டும் என்பது தான் மார்க்கச் சட்டம். ஆனால் அதே சமயம் நபியவர்கள் வெறுத்த ஒன்று இறைச் செய்தியின் அடிப்படையில் வெறுத்ததாக இருக்க வேண்டும்.

அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் வெறுத்ததையும் நாம் மார்க்கம் என்று கருதி வெறுத்தால் இறைவன் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்கிய மிகப்பெரும் பாவத்தில் வீழ்ந்து விடுவோம். இதனைப் பின்வரும் செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது “இது உடும்பு இறைச்சிஎன்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?” எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லைஎன்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் வெறுத்ததை நாம் வெறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் யாராவது உடும்புக் கறி ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? அப்படி வழங்கினால் அவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியுமா?

நபியவர்கள் உடும்பு இறச்சியை வஹீ அடிப்படையில் சாப்பிடாமல் இருந்திருந்தால் அது ஹராம். நாம் அதைச் சாப்பிடுவதும் ஹராம்.

நபியவர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் சாப்பிடாமல் இருந்ததால் அது வஹீ அடிப்படையில் உள்ளது அல்ல.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சாப்பிடாவிட்டாலும் நபித்தோழர்கள் உடும்பு இறைச்சியைச் சாப்பிட்டார்கள். இது இறைத்தூதருக்கு மாறு செய்தல் என்று யாராவது கூறமுடியுமா?

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

  1. மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
  2. இறைவனின் செய்தியைப் பெற்று, தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணை வைப்பாக ஆகிவிடும் என்பதையும் உணர வேண்டும்.

மார்க்கத்தில் இறைக்கட்டளை! உலக விஷயத்தில் ஆலோசனை!

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

அல்குர்ஆன் 7:3

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 43:43, 44

மேற்கண்ட வசனங்களில் இறைக் கட்டளைகளை மட்டும்தான் இறைத் தூதர் பின்பற்ற வேண்டும் என்றும், இறைவன் அல்லாதவர்களைப் பொறுப்பாளர்களாக்கி, அவர்களுடைய கருத்துக்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

ஆனால் பின்வரும் வசனத்தில் ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், எடுக்கப்படும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்றும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்

அல்குர்ஆன் 3:159

இறைவனைத் தவிர வேறு யாரையும் பொறுப்பாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஒரு வசனம் கட்டளையிடுகிறது.

பிறருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களாகிய ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்து எடுக்கும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்று மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இவை முரண்பாடு போல் தோன்றினாலும் இந்த இரண்டு வசனங்களுக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

இறைக்கட்டளையை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்பது மார்க்க விஷயத்தில்!

ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்பது உலக விஷயத்தில்!

மார்க்கம் என்பது இறைச் செய்தி மட்டும் தான். அதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

 உலக விஷயத்தில பயனுள்ள யாருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். மார்க்கமல்லாத விஷயங்களில் நபியவர்கள் கூட பிறருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்பது தான் மேற்கண்ட வசனங்களின் சாரம்சம்.

இறை மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காகத் தான் இறைத்தூதர் வந்தார்கள். எனவே இறைச் செய்தியின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்து காட்டியவை நமக்கு முன்மாதிரியாகும்.

நாம் இறைத்தூதரின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பது இறைச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் போதித்தவை தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நபியவர்கள் உயிரோடு வாழும் காலகட்டத்தில் பல்வேறு உலக விஷயங்களிலும், வழக்குகளிலும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்; கட்டளையிட்டுள்ளார்கள். நபியவர்கள் கட்டளையிட்டுவிட்டால் தீர்ப்பு வழங்கி விட்டால் அது மார்க்கமாகி விடும். இப்போது நாம் அதை உலக விஷயம் என்று கருதுவது கூடாது.

உதாரணமாக ஹுதைபியா உடன்படிக்கை என்பது நபியவர்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் செய்த ஒன்றாகும். இதன் காரணமாகத் தான் நபித்தோழர்கள் விரும்பாத நிலையிலும் நபியவர்கள் ஒப்பந்தங்களைச் செய்தார்கள். நபித்தோழர்களும் அதற்குக் கட்டுப்பட்டார்கள். நபியவர்கள் வாழும் போது எதையெல்லாம் கட்டளையிட்டுவிட்டார்களோ அவை அனைத்துமே மார்க்க விஷயம் தான்.

இரண்டு நபித்தோழர்களுக்கு மத்தியில் நீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்படும் போது நபியவர்கள் இருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கினார்கள். நபியவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டால் அதற்கு கட்டுப்படுவது மார்க்கச் சட்டமாகிவிடும்.

இறைத்தூதர் முடிவும் இறைவனின் கண்டனமும்

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காணமுடியும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான். இறைவனால் கண்டிக்கப்பட்ட இது போன்ற விஷயங்களை நாம் பின்பற்றக் கூடாது.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 66:1

நான் அனுமதித்ததை நீ எப்படி ஹராமாக்கலாம்? என்று இறைவன் கேட்டதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே இவ்வாறு ஹராமாக்கினார்கள் என்பதை அறியலாம். மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூற அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது.

எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள்.

ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

அல்குர்ஆன் 18:28

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

அல்குர்ஆன் 80:1-10

அவர்களின் இந்த நடவடிக்கை வஹீயின் அடிப்படையில் அமையவில்லை என்பதை இறைவனே சுட்டிக் காட்டுவதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள், வெளிப்படையாக முஸ்லிம்களைப் போலவே நடந்து வந்தனர். தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களிலும் பங்கு பெற்று வந்தனர்.

ஆனால் போருக்குச் செல்லும் நிலை வந்தால் ஏதாவது பொய்க் காரணம் கூறி, போரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு நபிகள் நாயகத்திடம் விதிவிலக்குப் பெற்றுக் கொண்டனர்.

இது பற்றி இறைவனின் முடிவு என்ன? என்பதற்குக் காத்திராமல் அவர்களின் பொய்ச் சமாதானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தவறு எனப் பின்வருமாறு இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

(முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும், தூரமாகவும் இருந்தது. “எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்பதை அல்லாஹ் அறிவான். (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

அல்குர்ஆன் 9:42,43

எனது கட்டளைக்குக் காத்திராமல் நீர் எப்படி அனுமதியளிக்கலாம் என்று கேட்டு மேற்கண்ட செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறான்.

பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.

பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

அல்குர்ஆன் 8:67,68

வஹீ வருவதற்கு முன் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. வஹீக்கு மாற்றமாக கவனக் குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்று அல்லாஹ் இறைவசனத்தை அருளிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்த போது அவனுக்காகப் பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு அல்லாஹ் அதையும் கண்டித்து திருமறை வசனத்தை அருளினான். இதனை புகாரி (4670, 4671, 4672 ஆகிய) ஹதீஸ்களில் காணலாம்.

எனவே நபியவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் நமக்கு போதித்தவை தான் இஸ்லாம் ஆகும். அவற்றைப் பின்பற்றுவது கடமையாகும். மனிதன் அடிப்படையிலும், அன்றைய காலப் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலும் நபியவர்கள் போதித்தவை மார்க்கச் சட்டம் ஆகாது. அவற்றில் நன்மையிருந்தால் நாம் பின்பற்றிக் கொள்ளலாம். இதனை விளங்கிப் பின்பற்றி வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்      தொடர்: 2

தடை செய்யப்பட்ட  பொருட்களை விற்கலாமா?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

அபூஹனிஃபாவின்  ஃபத்வா

மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.

நூல்: ஃபதாவா ஆலம்கீரி

பாகம் 3, பக்கம் 116

(ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.)

இந்த ஃபத்வாவின் விபரீதத்தை, அபத்தத்தைப் புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும் ஹராமே!

யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம் ஆக்கினான். ஆனால் அவர்கள் அதை உருக்கி, பிறருக்கு விற்ற காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள் என்று நபிகளார் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களை அல்லாஹ்  தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2224

இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை விற்பதும் ஹராமே என்பதையும், அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  இந்த அடிப்படையிலே மது, பன்றி, சிலை, செத்தவை ஆகியவை இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப் போன்று விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.

எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்க, பருகக் கூடாது என்று ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது என்பதை இந்த அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாக, தடை செய்யப்பட்ட பானங்களை விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு மட்டும் விலக்களித்திருக்கின்றார். இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல. மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை, அசுத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பது அனுமதி என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.

இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது கூடும் என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?

பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய போதனை. இதை வலியுறுத்தி எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா கண்டு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

மேலும் ஒன்றை ஹராம் என்பதும், ஹலால் என்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோ, அவன் அனுமதித்த ஒன்றைத் தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும் அதிகாரம் இல்லை.

பணத்திற்காகத் தொழுகை

மத்ஹப் வழி

“நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன்” என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற வேண்டும். தங்கக் காசுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது.

(துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 473)

ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.

மாநபி வழி

வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்ற, தூய எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோ, விளம்பர நோக்கமோ இருக்கும் எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

அல்குர்ஆன் 5:27

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்காக தொழுவது நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின் குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 4:142

இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த ஒரு வணக்கத்திற்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.

மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டும், மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும் இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.

இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத் தொழுதால் அந்தத் தொழுகை செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம் எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும் எதிரானது; முரணானது.

மழைத் தொழுகை இல்லை (?)

மத்ஹபு வழி

இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை வேண்டுவதிலே ஜமாஅத்தாகத் தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள் தனித்தனியாகத் தொழுதால் கூடும். “உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்’ என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது துஆ செய்வதும் பாவமன்னிப்புத் தேடுவதும் தான்.  நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை.

நூல்: ஹிதாயா

பாகம் 1, பக்கம் 87

மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

மாநபி வழி

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),

நூல்: புகாரி 1012

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 1024

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: திர்மிதீ 512

இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து. அபூஹனிபாவின் கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு விட்டார் என விமர்சிக்கின்றார். அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.

மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு ஆதாரங்களை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக் கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா? என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நாம் கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும் தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில் அவர் தப்பும் தவறுமாகத் தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.

தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

தொழுகையின் துவக்கம் இனி “அர்ரஹ்மானு அக்பர்‘?

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என கூறுவோம். இது தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம். இதைத் தான் அல்லாஹ் தன் தூதர் மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு மாற்றமாக, நாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது. அந்த அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.

தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குப் பதிலாக அர்ரஹ்மானு அக்பர், அல்லாஹு அஜல்லு என்று கூறினால் அவரது தொழுகை செல்லும், அதில் எந்தத் தவறும் இல்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகிறார்.

தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லு, அல்லாஹு அஃலமு, அர்ரஹ்மானு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக் கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம் செல்லும்.

நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 47

அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தொழுகையில் குர்ஆன் வசனங்களை பாரசீக மொழி, வங்காள மொழி என எந்த மொழியில் ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே. (பார்க்க: நூல் ஹிதாயா, பாகம்: 1, பக்கம் 47)

அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. யாருக்காகத் தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமா? அவன் ஏற்றுக் கொள்வானா என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.

அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப் பின்பற்றும் மத்ஹப்வாதிகள் தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களா? இறைவனின் உண்மையான அடியார்கள், நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

உளூவில் ஒரு வினோத சட்டம்

ஒருவர் உளூ செய்யும் போது ஒரு உறுப்பைக் கழுவ மறந்து விடுகின்றார். அது எந்த உறுப்பு? கையா? காலா? அல்லது முகமா என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும் என்று சாதாரண அறிவுள்ள யாரும் எளிதாகப் பதிலளித்து விடுவார். இதற்குப் பெரிதாக மார்க்க அறிவு இருக்க வேண்டும் என்பதில்லை. சந்தேகம் ஏற்பட்டு விட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, சந்தேகமற்ற காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளதால் இது தான் மார்க்கத்தின் நிலைப்பாடுமாகும். ஆனால்  இதற்குப் பதிலளிக்கப் புகுந்த ஹனபி மத்ஹப் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.

 (உளுவில்) அவன் ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுவ வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும்

நூல்: துர்ருல் முக்தார்

பாகம் 1 பக்கம் 150

உளூவின் போது கழுவப்பட வேண்டிய உறுப்புகளில் எந்த உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் கொண்டாலும் இடது காலைக் கழுவி விட்டு கூலாகச் சென்று விடலாமாம். இது தான் ஹனபி மத்ஹபின் சட்டம்.

இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரத்தைக் குறிப்பிடுவார்களா? நிச்சயம் இதற்கான ஆதாரத்தை அவற்றிலிருந்து காட்ட முடியாது.

ஒருவர் முகத்தைக் கழுவ மறந்திருப்பார், மற்றொருவர் கையைக் கழுவ மறந்திருப்பார் இந்த இரண்டிற்கும் இடது காலைக் கழுவுவது எப்படிப் பரிகாரமாக அமையும்? இறைவனோ, இறைத்தூதரோ கூறியிருந்தால் இது பரிகாரமாக அமையுமே ஒழிய வேறு யார் கூறினாலும் பரிகாரமாகாது.

மேலும் இத்தகைய வினோத தீர்ப்புக்கு, “இதுதான் அவனுடைய கடைசிச் செயல்’ என்பதையே காரணமாகக் கூறுகின்றார்கள். கடைசிச் செயலுக்கும், மறந்த காரியத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப் போனால் கடைசியாகச் செய்த காரியம் தான் மறக்காமல் இருக்கும்.

தொழுகையில் ஒருவர் ஒரு காரியத்தை மறந்து, அது ருகூவா, ஸஜ்தாவா என்றும் தெரியவில்லை எனில் அவர் ஸலாம் கூறவேண்டும். ஏனெனில் இதுவே அவரின் கடைசிச் செயல் என்று பதிலளிப்பார்களா?

இது கொஞ்சமும் பொருத்தமற்ற, மார்க்க ஆதாரமற்ற (மத்ஹபு) சட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ருகூவு செய்யும் முறை

மத்ஹப் வழி

ருகூவில் சீராக இருக்காமல் தலையைச் சிறிது தாழ்த்தினாலே அபூஹனிபாவிடம் தொழுகை கூடும் என்பதே தெளிவான பதிலாகும்.

நூல்: ரத்துல் முக்தார்

பாகம் 3 பக்கம் 392

ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்த வேண்டும் என்பதில்லை. மாறாக சிறிது தாழ்த்தினாலே போதும் என ஹனபி மத்ஹப் சட்டம் சொல்கின்றது.

மாநபி வழி

ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்தி, முதுகை நேராக வைக்க வேண்டும் என்று நபிவழி கூறுகின்றது. எந்த அளவிற்குத் தலையைத் தாழ்த்துகிறோமோ அதைப் பொறுத்து தான் நமது முதுகு வளைவின்றி நேராக, சீராக அமையும். இந்தச் சீரான அமைப்பு இல்லையெனில் தொழுகை கூடாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)

நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லைஎன்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லைஎன்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே எனக்கு கற்றுத் தாருங்கள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 757

ருகூவை பூரணமாகச் செய்யாதவனை தொழுகையில் திருடுபவன் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: அஹ்மத் 11106

இன்னும் இதுபோல் ஏராளமான ஹதீஸ்கள், நன்றாகக் குனிந்து ருகூவு செய்வதை வலியுறுத்துவதுடன் அவ்வாறில்லையெனில் தொழுகை கூடாது என்றும் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) எந்தத் தொழுகையைக் கூடாது என்று கூறினார்களோ அந்தத் தொழுகையைக் கூடும் எனக் கூறி நமது தொழுகைகளைப் பாழாக்கும் மத்ஹபுகள் இனியும் தேவையா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.

—————————————————————————————————————————————————————-

SAN ஓட்டமும் JAQH வாட்டமும்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அபாரமிக்க வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. கழுத்தறுப்புக்கள், காலை வாருதல், முதுகில் குத்தல், முடமாக்கும் முயற்சிகள் அத்தனையையும் தாண்டி இந்த இயக்கம் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றது; சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது.

நாம் இதற்கு முன்பு உருவாக்கிய அமைப்புக்கள், நமது சரிவிலும் சாவிலும் குறியாக, வெறியாக இருக்கின்றன. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுகின்றது. இந்த அமைப்புக்கு ஒரு வீழ்ச்சியும் வேதனையும் ஏற்பட்டு விட்டால் அவர்களுக்குத் தலைகால் புரியாத சந்தோஷமும் சகலவிதமான ஆனந்தமும் உருவாகி விடுகின்றது.

இந்த இயக்கத்திற்குப் பெயரும் பெருமையும் கிடைத்து விட்டால் அவர்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3:120

ஜாக், தமுமுகவினரின் மனநிலையை இந்த வசனம் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது. அதில் குறிப்பாக ஜாக் நமது விஷயத்தில், “மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும்’ என்பது போன்று, தவ்ஹீது அழிந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் அழிய வேண்டும் என்பது தான் ஜாக்கின் நாட்டமும் தேட்டமுமாக உள்ளது.

இதை நாம் வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை.

2006ஆம் ஆண்டு பரேலவிசத் தலைவன் அப்துல்லாஹ் ஜமாலியின் கோஷ்டியினருக்கும தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையே களியக்காவிளையில் விவாதம் நடைபெற்றது.

அது தொடர்பாக அல்ஜன்னத் மாத இதழில் ஓர் அலசல் இடம் பெற்றிருந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தங்கள் வெறுப்பையும் விஷ(ம)த்தையும் கக்கியிருந்தார்கள். இது அவர்களின் வாடிக்கை என்று சொல்லி விடலாம்.

அந்தக் கட்டுரையாளர் அந்த அலசலை முடிக்கும் போது, தனது உள்ளக்கிடங்கை, ஜாக்கின் ஏக்கத்தை அப்படியே வெளிப்படுத்துகின்றார்

“பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கடந்த காலங்களில் ஏற்கனவே விவாதங்களை நடத்தி வென்றெடுத்த கொள்கைகளை மீண்டும் விவாதிக்கும் நிலை ஏற்பட்டும் கூட அவற்றை எதிர்த்து வாதாடிய தவ்ஹீது ஜமாஅத்தினர், “ஜெயித்த கேஸில் தோற்று விட்டார்களோ’ என்ற பிரமை களியக்காவிளை விவாதங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது”

அல்ஜன்னத், அக்டோபர் 2006

எந்த விவாதம் நடந்தாலும் இரு தரப்பினரும் தாங்கள் தான் வென்றோம் என்றே வாதிடுவார்கள்; வழக்காடுவார்கள். உண்மையில் ஒரு வாதத்தில் வென்றவர் யார்? வீழ்ந்து விட்டு வென்றது போல் மாய்மாலம் செய்பவர் யார்? என்பதை அந்த விவாதத்தில் கிடைக்கும் விளைவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1986ல் கோட்டாற்றில் நடந்த முனாளரா எனும் விவாதத்தைத் தொடர்ந்து சமாதி வழிபாட்டுக்கும், மத்ஹபு மாயைக்கும் முழுக்குப் போட்டு விட்டு ஒரு பெருங் கூட்டமே சத்தியத்தில் வந்திணைந்தனர். அதே போன்று 2006ல் களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகும் கூட்டம் கூட்டமாக மக்கள் சத்தியத்தின் பக்கம் வந்து சேர்ந்தனர்.

களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு தான் குமரி மாவட்டத்தில் கடையாலுமூடு, ஈத்தாமொழி, நம்பாளி போன்ற ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் வேர் பிடித்தது. அதாவது சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து வெளியேறி தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர்.

இது தான் விவாதத்தின் வெற்றியைத் தெளிவுபடுத்துகின்ற உண்மை விளக்கமாகும். இதில் பிரம்மை எதுவும் கிடையாது. வெற்றியின் பிரமாதமும் பிரமாண்டமும் தான் தெரிகின்றது. ஆனால் இந்த மாலைக்கண் காரர்களுக்கு இது பிரம்மையாகத் தெரிகின்றது. இதற்குக் காரணம் நாம் தோற்க வேண்டும் என்ற இவர்களது ஏக்கமும் எதிர்பார்ப்பும் தான்.

இதற்கு ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனியின் பதிலும் மற்றொரு ஆதாரமாகும்.

களியக்காவிளை விவாதம் நடைபெறுவதற்கு முன் இது குறித்து ஜாக் என்ன நிலைபாட்டில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், கமாலுத்தீன் மதனியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்துல்லாஹ் ஜமாலி அணியினர் பேசுவது போன்று பேசினார். ஆதாரங்கள் வேண்டும் கோவை ரஹ்மத்துல்லாஹ் கேட்ட போது. திருச்சி அபூஅப்துல்லாஹ்விடம் கேட்டுப் பாருங்கள் என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். அதாவது விவாதத்தில் முஷ்ரிக்குகள் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தார்.

இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகின்ற, அப்பட்டமாகத் தெரிகின்ற விஷயம், ஏகத்துவக் கொள்கை தோற்றாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் தோற்க வேண்டும் என்ற இவர்களின் நிலைப்பாடு தான்.

வாடும் ஜாக்

பரேலவிகள், தவ்ஹீதை எதிர்க்கின்ற பக்கா குராபிகள். கடுகளவு ஈமான் கொண்டவன் கூட இவர்களிடம் இணக்கத்தையும் நெருக்கத்தையும் காட்ட முடியாது. ஆனால் ஜாக்கோ பரேலவிகள் மீது காட்டத்தைக் காட்டாமல் ஒரு மறைமுகமான ஈர்ப்பைத் தான் காட்டுகின்றது. இந்த ஈர்ப்பு இல்லாமலா போகும்? குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற அஸ்திரத்தில் இவ்விரு சாராரும் ஒன்றுபடும் போது ஏன் பரேலவிகள் மீது இவர்களுக்கு ஈர்ப்பு இருக்காது? அதன் பிரதிபலிப்பு, நாம் அழிய வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு!

இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு சான்று…

கிறிஸ்தவ சபையினர், பிற மதத்தவர்கள் வாழ்கின்ற வீதிகளில் மட்டுமல்ல, வீடுகளிலும் புகுந்து கிறிஸ்தவத்தைத் திணிக்கின்றர். முஸ்லிம்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்கள் தான் அவர்களின் வேட்டையாடும் இலக்குகள்.

ஈஸா (அலை) அவர்கள் தொடர்பான குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களின் சான்றுகளையும் எடுத்துக் காட்டி முஸ்லிம்களைத் தங்கள் வலைகளில் வீழ்த்துவதற்குப் பெரும் முயற்சிகளை இந்தக் கிறித்தவ சபையினர் மேற்கொள்கின்றனர். இதை முறியடிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

இந்நிலையில் SAN என்ற அமைப்பினர் நம்மிடம் வசமாக மாட்டினர். விவாதத்திற்கு வந்து சிக்கினர். அவர்களை அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் நொங்கெடுத்து நொறுங்க வைத்தனர். அசத்திய வாதம் ஆட்டம் கண்டது. அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கிக் குண்டுகள் முதல் சுற்றிலேயே தீர்ந்து போயின. இனி அடுத்தடுத்து வருகின்ற சுற்றுக்களுக்கு அவர்களிடம் சரக்கு இல்லை.

அதனால் அடுத்த சுற்று விவாதத்திற்கு வருவது தங்கள் கழுத்துக்களுக்குப் போடுகின்ற சுருக்குக் கயிறு என்று எண்ணிய SAN அமைப்பினர் செய்த தந்திரம் தான் காவல்துறையின் தடையுத்தரவு, போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்ற சாக்குப் போக்குகள்; சால்ஜாப்புகள். இது உலகறிந்த உண்மை.

இதைத் தான் ஜாக்கின் மாவட்ட நிர்வாகி, ஹாமீம் பிர்தவ்ஸி என்பவர் தனது முகநூல் இணைய தளப் பக்கத்தில், “பி.ஜே.யின் வெற்றியா? காவல்துறையின் அனுமதி மறுப்பா?” என்ற தலைப்பிட்டு வெளியிட்டு ஜாக்கின் ஏக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

காவல்துறை அனுமதி மறுத்ததாக SAN அமைப்பினர் வெளியிட்டுள்ள காவல்துறையின் கடித நகலை மேற்படி தலைப்பில் ஜாக் அமைப்பினர் வெளியிட்டு தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டனர்.

உண்மையில் இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்ட பிறகு தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் விவாதத்தை நடத்துவதற்கு SAN சம்மதித்தது. அதன் பிறகு, “நேரடி ஒளிபரப்பு கூடாது என்று காவல்துறை தடை செய்துள்ளது; எனவே நேரடி ஒளிபரப்பு இல்லாவிட்டால் தான் விவாதத்திற்கு வருவோம்” என்று விவாதம் துவங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் SAN அமைப்பு மின்னஞ்சல் அனுப்பியது.

எந்த நிலையிலும் விவாதத்திற்குத் தயார் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. உண்மையிலேயே விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பது SAN அமைப்பின் விருப்பமாக இருந்தால் அவர்கள் ஒப்புக் கொண்டபடி சபைக்கு வந்திருக்க வேண்டும். வந்த பிறகு நேரடி ஒளிபரப்பு கூடாது, அவ்வாறு ஒளிபரப்பினால் விவாதம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

அதை விட்டு விட்டு 10 மணிக்குத் துவங்கும் விவாதத்திற்கு 8.40 மணிக்கு மெயில் அனுப்பி நேரடி ஒளிபரப்பு இருந்தால் விவாதம் இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் நேரடி ஒளிபரப்பைக் காரணம் காட்டி SAN அமைப்பினர் மறுத்தார்கள்.

அது மட்டுமின்றி நேரடி ஒளிபரப்பு என்பது ற்ய்ற்த் & ர்ய்ப்ண்ய்ங்ல்த் தளங்களில் தான் நடக்கப் போகிறது. காவல்துறை உத்தரவை மதித்து இவர்கள் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கலாம். நமது தளங்களில் காவல்துறை உத்தரவை மீறுவதால் காவல்துறை SAN மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. நேரடி ஒளிபரப்பு காரணமாக நடவடிக்கை என்றால் அது தவ்ஹீத் ஜமாஅத் மீது மட்டும் தான் இருக்கும்.

பொது இடத்தில் நடத்துவதற்குத் தான் அனுமதி கோர வேண்டும். நமது இடத்தில் கலந்துரையாடல் மாதிரி நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை. எவ்வளவோ நிகழ்ச்சிகளை நமது மர்கஸ்களில் நடத்துகிறோம். அதற்கெல்லாம் எந்த அனுமதியும் கோருவதில்லை. இதனால் தான் தலைமையில் விவாதம் நடத்துவோம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்தனைக்குப் பிறகும் SAN அமைப்பினர் மேற்கண்ட காவல்துறை அனுமதி மறுப்பு என்ற கடிதத்தைக் காரணம் காட்டி, விவாதத்திற்கு வர மறுத்து விட்டனர்.

SAN வெளியிட்ட இந்தக் கடிதத்தைத் தான் JAQH வாந்தியெடுத்து, கொள்கையளவில் சானுக்குத் தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.

சான் அமைப்பு ஓட்டமெடுத்தது ஜாக்கை வாட்டமடையச் செய்திருக்கின்றது. இதிலிருந்து இவர்களது ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பும் பிணைப்பும் எக்கச்சக்கமாக வெளிப்பட்டுள்ளது.

கிறித்தவர்களிடம் தவ்ஹீதுக் கொள்கை வீழ்ந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் வெற்றி பெற்று விடக் கூடாது. என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? என்ன ஒரு கொள்கை இறுக்கம்?

இவர்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று வாதிடுவோர், வால் பிடிப்போர் இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் சரி!

—————————————————————————————————————————————————————-

கசக்கும் பெற்றோர்கள் கருகும் மலர்கள்

சென்னை செயிண்ட் மேரீ ஆங்கிலோ இண்டியன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பதினைந்து வயது மாணவன் தனது ஆசிரியையைக் கொலை செய்த கோரச் சம்பவம் நாட்டின் அனைத்து மக்களையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஒரு விதமான கவலை கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் மாணவ மாணவியர்களின் மனநிலையையும், மறுபக்கம் பெற்றோர்களின் மனநிலையையும் இது பகிரங்கமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

மாணவ மாணவியர்களின் மனநிலை இந்த சம்பவத்தின் பின்னணியில் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இங்கு பெற்றோர்களின் மனநிலையைக் கொஞ்சம் சற்று உற்றுப் பார்ப்போம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், வளர்கின்ற இளம் மலர்களிடம் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும், மாநிலத்தில் முதல் இடம் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாது இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். மாநில அளவில் இல்லையென்றால் மாவட்ட அளவிலாவது முதலிடத்தை அடைய வேண்டும் என்று பிள்ளைகளின் மனோபாவத்தைக் கொஞ்சம் கூட உணராமல் பிள்ளைகளைக் கசக்குகின்றார்கள்.

நாம் படிக்கும் காலத்தில் இல்லாத, மலை போல் குவிந்து கிடக்கும் பாடப் பிரிவுகள்! குழந்தைகளின் குறுக்குகளை ஒடித்து, கூன் விழச் செய்யும் பாரம் நிறைந்த பாடப் புத்தகப்பைகள்! காலையில் எழுந்ததுமே அரைகுறை உணவு, அரை வயிறு சாப்பாட்டுடன் பள்ளிக்கு அலறி ஓடும் அநியாயம்! மாலையில் வந்ததும் ஓய்வுக்கு, விளையாட்டுக்கு வழியில்லாமல் டியூசன்கள்! இரவில் பதினோரு மணியைத் தாண்டிய படுக்கை என்று படாதபாடு படுகின்ற பரிதாப நிலை, பாவநிலை!

இவையெல்லாம் நம்முடைய காலத்தில் இல்லை என்று கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காத, இதயத்திற்குப் பதிலாக இரும்பைப் பெற்ற பெற்றோர்களின் எக்கச்சக்க கசக்கலால், கசப்பால் கல்வி கற்க வேண்டிய மலர்கள் கசங்கிப் போய், கசந்து போய், உள்ளம் கருகிய அவர்களில் சிலர் உத்தரக் கட்டைகளில் கயிற்றை மாட்டித் தங்கள் உயிரை விட்டு சவக் கட்டைகளாக மாறுகின்றார்கள்.

மின்சார ரயில்கள் முன் பாய்ந்து, சிதறு தேங்காய்களாய் சில்லுகளாகிவிடுகின்றனர். பூச்சி மருந்து தின்று பூலோகத்தை விட்டு விடைபெற்று விடுகின்றனர்.

இவை கற்பனைகள் அல்ல. இதோ சில உண்மை நிகழ்வுகள் நிதர்சனங்கள்.

  1. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு பசுந்தளிர் மாணவி ஜமீன் பல்லாவாரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வியாழன் காலை, கொசு மருந்தைக் குடிக்கின்றாள். காரணம் என்ன? “நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை; அதனால் உனது பெற்றோர்களை அழைத்து வா!’ என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதற்குப் பரிகாரம் தான் இந்த பாரதூரமான நடவடிக்கை.

நல்ல வேளையாக இந்தச் சிறுமி இந்தக் கொலையின் கோரப் பிடியிலிருந்து தப்பிவிட்டாள். விஷத் திரவத்தின் வேகக் குறைவால் உயிர் பிழைத்தாள். இல்லையேல் பதினான்கு வயதுப் பயிர் வாடிப் போயிருக்கும்.

  1. சென்னை புறநகரின் பெரவல்லூர் உஃங காலணியைச் சேர்ந்த பதினாறு வயது மாணவன் கொளத்தூர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். இவன் தன்னுடைய படுக்கையறையின் கதவை வெள்ளிக்கிழமை காலை திறக்காததைக் கண்டு கலக்கமடைந்த பெற்றோர்கள் கதவைத் தட்டினர். திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்தனர். அவர்களது கலக்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் விளக்கம் காத்திருந்தது.

ஆம்! கூரையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியில் மாட்டியிருந்த கயிறு அவனது குரல் வளையை நெருக்கி உயிரைப் பறித்திருந்தது. ஒரு தனியார் ஆட்டோ மொபைல் கம்பெனியில் பணிபுரிந்த அவனது தந்தை அடித்து துவைத்து அறையில் அடைத்து வைத்திருந்தார். முன்பு நடந்த பரீட்சையில் தோல்வி அடைந்த அந்தப் பாடத்தில் சரியான பதில் ஒப்புவிக்கின்ற வரை உன்னை அறையை விட்டு வெளியே விட மாட்டேன் என்று கதவைப் பூட்டியும் போட்டார். அவனது வாழ்க்கையையும் சேர்த்தே பூட்டி விட்டார். தந்தையின் கேள்விக்கு விடை சொல்லாமல் ஒரேயடியாக விடை பெற்றுவிட்டான்.

கதையை முடிக்கும் கல்லூரி மாணவர்கள்

  1. பள்ளிக் கூடப் பையன்களும் பெண் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கைக் கதையை, கணக்கை விரைந்து முடிக்கின்றார்கள் என்றால் கல்லூரி மாணவர்களும் இதை விட அதிகமாக முடிக்கின்றார்கள்.

நண்பன் என்ற சினிமாவில் இறுதியாண்டு பொறியியல் மாணவன் தனக்கு கொடுக்கப்பட்ட பிராஜக்ட் வேலையை முடிக்க முடியாமல் வாழ்க்கை பிராஜக்ட்டை முடித்து விடுகின்றானாம். அது நிழல்ல நிஜம் தான் என்று கூறி “ஹிந்து’ பத்திரிக்கை, “வாழ்க்கையைத் தொலைக்கின்ற தொழிற்கல்வி மாணவர்கள்’ பற்றிய புள்ளி விவரங்களைப் பதிய வைக்கின்றது.

இரண்டு பொறியியல் மாணவர்கள் ஓடும் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தங்களை மாய்த்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் இரயில்வே போலீசாரிடம் புகார் செய்கின்றனர். ஆசிரியர்களின் குடைச்சல் இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று அவர்கள் இந்தப் புகாரில் தெரிவிக்கின்றனர்.

  1. ஜனவரி 30: நானோ டெக்னாலஜி பயில்கின்ற ஹைதராபாத்தைச் சார்ந்த பதினெட்டு வயது மாணவன் இரண்டு பாடங்களில் தோல்வி அடைகின்றான். ஆசிரியர் வகுப்பை விட்டுத் துரத்தி விடுகின்றார். பையனின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். சமாதானப்படுத்தி ரயிலில் அழைத்து வருகின்றார். பயணத்தில் இருவரும் உறங்குகின்றனர். விழித்துப் பார்த்த தந்தையின் விழித்திரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பையனைக் காணவில்லை. காகிதத் துண்டு செய்தி அறிவித்தது. “இனிமேல் என்றும் என்னை நீங்கள் காண மாட்டீர்கள்” என்று பிரியாவிடை கொடுத்திருந்தான். ஆனால் ஃபேஸ்புக்கில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அதைப் பார்த்த பெற்றோருக்குப் போன உயிர் திரும்ப வந்த பரம திருப்தி.
  2. வார விடுமுறையான இரு நாட்கள் உழைத்து விட்டு மீதி நாட்கள் படிக்கச் சென்ற இன்னொரு மாணவன், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து, தன்னை அழுத்திக் கொண்டு அழித்துக் கொள்கின்றான்.
  3. 2010-11 கல்வியாண்டில் ஐ.ஐ.டி.யில் பயிலும் இரு மாணவர்கள் அழுத்தம் தாங்க முடியாமல் தங்களை நிரந்தரமாகத் தொலைத்துக் கொள்கின்றார்கள்.

இவை அனைத்தும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், இந்து நாளேடுகளில் வெளிவந்தவை. இவையெல்லாம் எதை காட்டுகின்றன?

கல்லூரிகளில் ஆசிரியர் தொல்லை, தொந்தரவு எனப் புகார்கள் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்டாலும் உண்மை நிலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அவர்களது தகுதிக்கும் சக்திக்கும் மேலாக, அதிகமாக எதிர்பார்ப்பது தான்.

கலையியல் படிப்பதற்குத் தகுதியில்லாத மாணவர்களைக் கூட, பொறியியல் படிப்பிற்குப் பலவந்தமாகத் தள்ளி விடுகின்றார்கள். இந்தச் சுமையை மாணவ, மாணவியர்களால் சுமக்க முடியவில்லை. இந்தப் பாரத்தை சிறு பறவைகளான அவர்களால் தாங்க முடியவில்லை. அதன் முடிவு தான் தற்கொலைகள்.

மாணவ, மாணவியருக்கென்று ஒரு பாடத்தில் விருப்பமிருக்கும். அந்த விருப்பத்திற்கு எதிராக அவர்கள் திருப்பப்படும் போது அவர்கள் தங்களையே தொலைக்கத் துவங்கி விடுகின்றனர்.

எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிய வேண்டும். அவ்வாறு புரிந்து செயல்பட ஆரம்பித்தால் பிள்ளைகளின் படிப்பை மட்டுமல்ல! வாழ்க்கையையும் சேர்த்துக் காக்கலாம். பிள்ளைகள் கசங்க மாட்டார்கள்; கருகவும் மாட்டார்கள்.

—————————————————————————————————————————————————————-

ஜனவரி இதழின் தொடர்ச்சி…

நல்லவராவதும் தீயவராவதும்…

கே.எம். அப்துந் நாசிர் இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

குழந்தை முக்கியமல்ல! நல்லொழுக்கமுள்ள குழந்தையே முக்கியம்!

முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, “இறைவா எனக்கொரு குழந்தையைத் தா’ என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, “இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா’ என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.

மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

அல்குர்ஆன் 3:38

இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

அல்குர்ஆன்  37:100

எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).

அல்குர்ஆன் 2:128

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)

அல்குர்ஆன் 14:40

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:74

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராதுஎன்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்

ஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 10202

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி.  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3358

அழகிய முன்மாதிரி

திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.

நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.

என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாதுஎன்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

அல்குர்ஆன் 2:132

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்என்றே (பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் 2:133

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).

அல்குர்ஆன் 31:16-19

நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.

ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1485)

முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.

சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.

நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டனஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2440

சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)

நூல்: புகாரி 6247

இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்‘. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)என்று சொன்னார்கள்எனக் கூறினேன்.

அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: புகாரி 5479

ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 24:58, 59

மறுமைக்கு அஞ்சுவோம்

பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்? உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? போன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.

மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.

அல்குர்ஆன் 66:6

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2409

பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 33:67

சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல், செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்          தொடர்: 13

அர்ஷை சுமக்கும் வானவர்கள்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். “எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத் தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்குர்ஆன் 40:7

வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். “அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறப்படும்.

அல்குர்ஆன் 39:75

இறைவன் வானத்தில் உள்ள அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான். அந்த அர்ஷை சில வானவர்கள் சுமந்து கொண்டும், மேலும் சில வானவர்கள் அதைச் சுற்றிக் கொண்டும் இருக்கின்றார்கள் எனும் தகவல் மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.

அர்ஷை சுமக்கும் வானவரின் தன்மை பற்றி நபிகளார் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரலி

நூல்: அபூதாவூத் 4102

இவை தவிர இது தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் விரிவுரையாளர்கள் மேற்கண்ட ஹதீஸை மூலதனமாக ஆக்கிக் கொண்டு அதில் தங்கள் கற்பனைகளையும் அள்ளிக் கலந்து சில விளக்கங்களை (?) அளித்திருக்கின்றார்கள்.

அர்ஷைச் சுமக்கும் வானவர்களின் கால்கள் பூமிக்கு அடியிலும், அவர்களின் தலைகள் அர்ஷைக் கிழித்துக் கொண்டும் இருக்கின்றன.

நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294

பூமியிலிருந்து அர்ஷைத் தாண்டியும் அவர்களது உயரம் உள்ளது என இந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இதற்கு வக்காலத்து வாங்கும் இமாம்கள் யாராவது கூறுவார்களா?

அர்ஷை நெருக்கிய பாம்பு

மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்று விரிவுரையாளர்களின் (விளக்கமளிக்கும்) சிந்தனையும் பல நேரங்களில் ஒன்று தொட்டு ஒன்று என தாவிக் கொண்டே இருக்கும் போல!

பின்னே என்ன? அர்ஷைச் சுமக்கும் வானவரைப் பற்றி வர்ணிக்கப் புறப்பட்ட இமாம்களின் கவனம் திடீரென அர்ஷை நோக்கி (அதன் மூலத்தை நோக்கி) தாவி விட்டதே!  ஆம்! அர்ஷ் பச்சை முத்துக்களால் ஆனதாம்!

இறைவன் அர்ஷை பச்சை முத்துக்களால் உருவாக்கினான் என கூறப்படுகின்றது.

நூல்: தப்ஸீருல் குர்துபீ பாகம் 15 பக்கம் 294

யார் இதைக் கூறியது? அர்ஷைப் படைத்த அல்லாஹ்வா? அல்லது அவனது தூதரா? விளக்கம் என்ற பெயரில் யார் எதை உளறிக் கொட்டினாலும் கூறப்படுகின்றது என்ற ஒற்றை வார்த்தையுடன் ஆதாரமற்ற அந்தத் தகவல்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் நோக்கம் பக்கங்களை நிரப்புவதோ என எண்ணத் தோன்றுகின்றது.

நம்மில் ஒருவரை நோக்கி, “நீ எனக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும்” என ஒருவர் சொல்கின்றார். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறாய் என்ற நமது கேள்விக்கு, இல்லை அவ்வாறு கூறப்படுகின்றது என்று அவர் பதிலளித்தால் இதை நாம் ஏற்போமா? நம் தொடர்புடைய விஷயங்களில் கூறப்படுகின்றது என்று சொன்னால் வலுவாக மறுத்து, அதற்கான தகுந்த ஆதாரத்தை வேண்டுகிறோம். அதுவே மார்க்க விவகாரம் எனும் போது தலையாட்டிக் கொண்டு செல்கிறோம். இது சரியா என்பதை  அறிவுடைய மக்கள் சிந்தித்து பார்க்கட்டும்.

அர்ஷைச் சுமக்கும் வானவர்களைப் பற்றி விளக்கமளிக்க முன்வந்த விரிவுரையாளர்கள் சம்பந்தமில்லாது அர்ஷைப் பற்றி எதையோ கூறி, பிறகு அர்ஷுக்குக் கர்வம் வந்ததாகவும், அதன் கர்வத்தைப் போக்கும் விதமாக இறைவன் பலம் வாய்ந்த பாம்பை உருவாக்கி அதன் மூலம் அர்ஷைச் சுருட்டி, நெருக்கியதாகவும் ஒரு கட்டுக்கதையை தஃப்ஸீர் நூல்களில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.

கஃபுல் அஹ்பார் கூறியதாவது: இறைவன் அர்ஷைப் படைத்த போது என்னை விடச் சிறந்ததை இறைவன் படைக்கவில்லை என அர்ஷ் (கர்வத்துடன்) கூறியது. எனவே ஒரு பாம்பின் மூலம் இறைவன் அதை நெருக்கினான். அது நடுங்கியது. அந்த பாம்பிற்கு எழுபதாயிரம் இறக்கைகள் உண்டு. ஒரு இறக்கையில் எழுபதாயிரம் சிறகுகளும், ஒவ்வொரு சிறகிலும் எழுபதாயிரம் முகங்களும், ஒரு முகத்திற்கு எழுபதாயிரம் வாய்களும், ஒரு வாயில் எழுபதாயிரம் நாவுகளும் உள்ளன. ஒவ்வொரு நாளும் அதன் வாய்களிலிருந்து மழைத்துளிகளின் அளவிற்கு தஸ்பீஹ்கள் வெளிப்படும். மர இலைகளின் எண்ணிக்கை ஏற்ப, கற்கள் மற்றும் மண்களின் துகள்களுக்கேற்ப (தஸ்பீஹ்கள் வெளிப்படும்).

நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294, 295

குர்ஆனின் விளக்கவுரை நூலான குர்துபீயில், மேற்கண்ட வாசகத்தின் தொடர்ச்சியில் பாம்பு அர்ஷைச் சுருட்டியதாகவும் அந்த பாம்பின் பாதியளவு தான் இறைவனின் சிம்மாசனமான அர்ஷ்  இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

இவைகள் தாம் இறை வசனங்களை நமக்கு விளக்கித் தரும் அற்புத விளக்கங்களா?

இறைவன் வீற்றிருக்கும் அர்ஷை பாம்பு சுருட்டி, நெருக்கியது என்றால் அதில் இருந்த இறைவன் என்ன ஆனான்? பாம்பு விழுங்கிற்றா? நவூதுபில்லாஹ்.

விரிவுரை என்ற பெயரில் உலவும் இது போன்ற கதைகள் நம் வீட்டுக் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டுமானால் உதவுமே தவிர இறை வசனங்களை விளங்க ஒரு போதும் உதவாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

வய்ல்என்றால்…? தலைசுற்றும் விளக்கம்

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!

அல்குர்ஆன் 83:1

அளவு நிறுவையில் மோசடி செய்வோருக்கு மறுமையில் பெரும் வேதனை உண்டு என இறைவன் கூறுகின்றான். வேதனை என்பதைக் குறிக்க “வய்ல்’ என்ற அரபி வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வய்ல் என்ற அரபிப் பதம் கேடு, வேதனை, நாசம் என்ற பொருளைத் தரும்.

இந்த வார்த்தையின் விளக்கம் இதுதான். ஆனால் இவ்வளவு சிம்பிளாக ஒரு விஷயம் முடிந்து போவதை நமது இமாம்கள் விரும்புவார்களா? எனவே தான் ‘வய்ல்’ என்றால் என்னவாக இருக்கும் என்று மிதமிஞ்சிய ஆய்வுக்குள் சென்று, அதன் முடிவில் பின்வரும் விளக்கங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள். இதோ அந்த விளக்கங்கள்:

வய்ல் என்பது நரகில் உள்ள பள்ளத்தாக்கு. எழுபது வருடம் (பயணிக்கும் அளவு) அதன் தொலைவாகும். அதில் தொன்னூறாயிரம் கிளைகள் உண்டு. ஒரு கிளையில் எழுபதாயிரம் பிரிவுகளும், ஒரு பிரிவில் எழுபதாயிரம் குகைகளும், ஒரு குகையில் எழுபதாயிரம் கோட்டைகளும், ஒரு கோட்டையில் இரும்பால் ஆன பெட்டிகளும், ஒரு பெட்டியில் எழுபதாயிரம் மரங்களும், ஒரு மரத்தில் எழுபதாயிரம் கிளைகளும், ஒரு கிளையில் எழுபதாயிரம் கனிகளும், ஒவ்வொரு கனியிலும் அட்டைப்புழு இருக்கும். அதன் நீளம் எழுபதாயிரம் முழங்களாகும். ஒவ்வொரு மரத்திற்கு கீழ் எழுபதாயிரம் மலைப்பாம்புகளும், தேள்களும் உள்ளது. அந்த பாம்புகளின் நீளம் ஒரு மாத (பயணிக்கும்) தொலைவாகும். மலைகளைப் போன்று உடல் வலிமை, பேரீச்சமரத்தை போன்று பற்கள் அதற்கு இருக்கும்.

நூல்: தஃப்ஸீர் முகாதில் பின் சுலைமான், பாகம் 3, பக்கம் 460

இதைப் படித்தவுடன், “என்ன இது? நான் எங்கே இருக்கிறேன்?’ என்று ஒரு கணம் இந்த உலகை மறந்து வேறொரு கற்பனை உலகத்திற்குச் சென்று, திரும்பியதைப் போன்ற உணர்வைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில் வய்ல் என்ற இறைவனின் வார்த்தைக்கு இமாம்கள் அளித்த விளக்கம் அந்த நிலையில் உள்ளது.

இந்தக் கூறுகெட்ட விளக்கத்தில் ஆயிரத்தெட்டு எழுபதாயிரம் வருகின்றதே?. இதில் மாத்திரம் அல்ல, குறிப்பிட்ட இந்த விரிவுரை நூலில் எழுபதாயிரத்திற்குப் பஞ்சமில்லை எனலாம். அவ்வளவு முறை தொட்டதுக்கு எல்லாம் எழுபதாயிரம் என்று இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த விளக்கங்கள் அல்ல, எழுபதாயிரம் என்ற கணித முறை அடிப்படையில் அமைந்த ஒரு கூறு கெட்ட விளக்கம் என்பதே நமது கருத்து.

அபாபீல் பறவைகள் – ஓர் நேர்முக வர்ணனை (?)

(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

அல்குர்ஆன் 105:1,2,3,4,5.

அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஃபாவை இடிப்பதற்கு வந்த போது கூட்டம் கூட்டமாகப் பறவைகளை அனுப்பி அதன் மூலம் கஃபாவை அழிக்க வந்த யானைப் படையினரை அழித்து, கஃபாவை இறைவன் காப்பாற்றினான் என்ற வரலாற்றுச் செய்தியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் இறைவன் நினைவூட்டுகின்றான்.

இந்த அத்தியாயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதற்குக் கணக்கற்ற படிப்பினைகள், விஷயங்கள் நிரம்பி வழிகின்றன. இறைவனின் வல்லமை, கஃபாவின் பாதுகாப்புத் தன்மை போன்ற விஷயங்களை எடுத்து, அலசி ஆராய்ந்து, நபிவழி எனும் ஒளியின் துணையுடன் மக்களின் அறியாமை எனும் இருளை அகற்றியிருக்கலாம். ஆனால் அறிஞர்கள் ஆய்வுக்காக, தஃப்ஸீர் அளிப்பதற்காக கையில் எடுத்திருப்பதோ அபாபீல் பறவைகளைப் பற்றி!

(அபாபீல் என்றால் கூட்டம் கூட்டமாக, அதிகமாக என்று பொருள். ஆனால் சொல் வழக்கில் அதையே நாம் அப்பறவைகளின் அடையாளப் பெயராக பயன்படுத்துகின்றோம்.)

சூடான கற்களுடன் பறவைக் கூட்டத்தை அனுப்பி எதிரிகளை அழித்தான் என்று குர்ஆன் சொல்கிறதல்லவா? உடனே அந்தப் பறவைகளின் நிறம் என்ன? எத்தனை கற்களை அவைகள் சுமந்து வந்தன? அந்தக் கற்களைப் பறவைகள் எதில் சுமந்தன போன்ற தேவையற்ற விஷயங்களை விளக்கம் என்ற பெயரில் பக்கம் பக்கமாக விளக்கித் தள்ளியிருக்கின்றனர். இதில் எதிரிப் படையினரின் யானைகளின் எண்ணிக்கையையும் தவறவிடவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம்(?). அவை உங்கள் பார்வைக்கு:

அவை (பறவைகள்) கடலின் முன்பகுதியிலிருந்து வந்தன என்று சிலர் கூறுகின்றனர். பிறகு அதன் வர்ணனையில் அவர்கள் (விரிவுரையாளர்கள்) வேறுபடுகின்றனர். சிலர் அவை வெண்மை நிறம் கொண்டவை என்றும், மற்றும் சிலர் கறுப்பு நிறம் என்றும் வேறு சிலர் பச்சை நிறம், மேலும் அதற்கு பறவைகளின் மூக்கும், நாய்களின் உள்ளங்கைகளும் உண்டு எனவும் கூறுகின்றனர்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரி, பாகம் 24, பக்கம் 630

கால்களில் இரண்டு, அலகில் (வாயில்) ஒன்று என ஒவ்வொரு பறவையிடமும் மூன்று கற்கள் இருந்தன.

நூல்: தஃப்ஸீர் தப்ரி, பாகம் 4, பக்கம் 634.

அவர்களுடன் (யானைப் படை) ஒரு யானை மட்டுமே இருந்தது என முகாதில் கூறுகின்றார். எட்டு யானை என லிஹ்ஹாக் கூறுகின்றார். பன்னிரண்டு எனவும் ஒரு கருத்து உண்டு.

நூல்: தஃப்ஸீருல் பகவீ, பாகம் 8, பக்கம் 540

என்னே அற்புதம்? இந்தச் சம்பவம் நடைபெறும் போது நபிகள் நாயகம் அவர்களே பிறக்கவில்லை. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு தான் நபியவர்கள் பிறக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரவர்கள் சொல்லாத, ஆச்சர்யமான (?), அதிசயக்கத்தக்க (?) பல நுணுக்கமான விஷயங்களை இந்த விரிவுரையாளர்கள் தருகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நடைபெறும் போது இவர்கள் உடனிருந்தார்களா? இல்லையெனில் எப்படி ஒரு பத்திரிக்கையாளரைப் போன்று சம்பவத்துளிகள் அனைத்தையும், எட்டு யானை, பறவையின் வாயில் ஒரு கல், காலில் இரண்டு கற்கள், பறவைகளின் நிறம், அது புறப்பட்டு வந்த திசை என ஒன்று விடாமல் சொல்ல முடிகின்றது?

இவைகள் யாவும் கற்பனை. இமாம்களின் பல விளக்கங்கள் இந்த நிலையில் தான் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமான சான்றாகும்.

குர்ஆனை மறந்த நபிகள் நாயகம் (?) இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்…..

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 20

கடன் பற்றிய சட்டங்கள்

கடன்  விஷயத்தில் கடினப் போக்கு

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் நபியவர்கள் ஜனாஸா தொழுவிப்பது தான் வழக்கம். அப்படித் தொழ வைக்கும் போது முதலில் “இந்த ஜனாஸா ஏதாவது கடன்பட்டு உள்ளதா?’ என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால் அந்தக் கடனை அடைப்பதற்கு ஏதாவது விட்டுச் சென்று இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள்.

இல்லையென்று சொன்னால் தமது தோழர்களைப் பார்த்து, “உங்களுடைய சகோதரருடைய கடனை உங்களில்  யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். யாராவது முன் வந்தால் அதனை நிறைவேற்றுவார்கள். அப்படி யாராவது முன்வராத போது, “உங்களுடைய சகோதரனுக்கு நீங்களே தொழ வையுங்கள்” என்று கூறி விட்டுச் சென்று விடுவார்கள்.

இதை எதற்காக சொல்கிறார்கள் என்றால் ஒரு மனிதனுக்கு கடன் இருக்கும் நிலையில் அவனுக்காக துஆ செய்தால் அது அவருக்குப் பயன் தராது என்பதற்காக ஜனாஸா தொழுவிக்காமல் இருப்பார்கள். ஏனென்றால் மறுமை நாளில் கடன் என்ற பாவம் மன்னிக்கப்படாமல் வந்து நிற்கும் என்பதற்காக வேண்டியோ அல்லது கடனைப் பற்றிய எச்சரிக்கைக்காக வேண்டியோ இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசின் பொருளாதாரம் வளம் பெற்ற பின் இது மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்களுடைய ஆரம்ப கால கட்டத்தில் பைத்துல்மாலில் அதிகமான பண வசதி இருக்கவில்லை. பின்னர் பஹ்ரைன் போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு பைத்துல்மாலுடைய நிதி அதிகமாகக் கிடைத்தது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய சகோதரன் ஒருவன் மரணம் அடைந்து ஏதாவது விட்டுச் சென்றிருந்தால் அதை அவருடைய வாரிசுகள் எடுத்துக் கொள்ளட்டும். கடன் பட்டிருந்தால் என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன்.  உங்களில் நான் தான் மிகத் தகுதி வாய்ந்தவன்என்று கூறுவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித் தோழர்கள் இல்லை என்றனர்.  அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.  பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  நபித்தோழர்கள் ஆம்! என்றனர்.  நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்என்றார்கள்.  அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்புஎன்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2295

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது “இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். “கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2298

ஒரு மனிதனுக்கு ஜனாஸா தொழுகை என்பது கடைசி தொழுகை, அதில் நபி(ஸல்) அவர்களுடைய துஆ முக்கியமானது. அதைக் கூட கடன்பட்டவன்  இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே கடன்பட்டவனுக்கு அந்தக் கடனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எற்படவேண்டும்.

வசதி படைத்தவன் காலம் தாழ்த்தக் கூடாது

இன்றைக்குச் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு எந்த வழியும் இருக்காது. உதாரணமாக மருத்துவச் செலவுக்கு வாங்குவான். அந்தக் கடனை அவனால் நிறைவேற்ற முடியாத நிலைமையில் அவகாசம் கேட்பது பரவாயில்லை.

ஆனால் வசதி படைத்த சிலர் கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடனை  நிறைவேற்றாமல், அதனை நிறைவேற்றுவதற்குரிய எல்லா தகுதியும் இருந்தும் அதனை நிறைவேற்றாமல் இருந்து ஏமாற்றுவது மிகப் பெரிய அநியாயமாகும்.

எனவே பணக்காரன் கடன் வாங்குவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு வீடு, வாசல் எல்லாம் இழக்கின்ற நிலைமை ஏற்ப்பட்டால் கடன் வாங்குவது பரவாயில்லை. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கக் கூடிய பணக்காரர்கள் எதற்கு வாங்குகிறார்கள்? ஒருவனிடம் ரூபாய் பத்து லட்சம் இருக்கும்; அதனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இன்னும் ஒரு பத்து லட்சம் வாங்குகிறான்.

எதற்கு இதனை வாங்குகிறார்கள்? ஏதோ அவசர தேவைக்காக வாங்குகிறார்களா? இல்லை மாறாக, தன்னுடைய தொழிலை அதிகரிப்பதற்காக வேண்டித் தான். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தால் அல்லாஹ் நாளை மறுமை நாளில் இவர் பட்ட கடனுக்காக இவர் யாரிடத்தில் வாங்கினாரோ அவருக்கு அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவான். கடன் கொடுத்தவர் மன்னிக்காவிட்டால், இவர் போகக் கூடிய இடம் நரகம் தான். எனவே கடன் வாங்குவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக்கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்:  புகாரி 2287 2288 2400

எனவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது கூடாது. ஏனென்றால் நமக்கு எந்த நேரத்திலும் மரணம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே அடுத்தவருடைய பணத்தை நாம் நம்முடைய வீட்டில் வைத்து  அழகு பார்க்க வேண்டுமா? அவசியம் ஏற்பட்டால் வாங்குவது தவறு இல்லை. அப்படி வாங்கினாலும் பணம் இருந்தால் உடனே கொடுத்து விட வேண்டும். கடனை அடைக்க வசதியில்லை என்றால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறையைத் தான் இஸ்லாம் கற்றுத் தருகின்றது.

நல்ல முறையில் திருப்பி கொடுத்தல்

ஒரு மனிதனிடம் நாம் கடன் வாங்கும் போது, எவ்வளவு வாங்குகிறோமோ அதை விட அதிகமாக நல்ல முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கும் வரை வளைந்து குனிந்து பணிவுடன் வாங்கி விடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்கும் போது கடன் கொடுத்தவரை அலையாய் அலைக்கழிப்பதையும் இழுத்தடிப்பதையும் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. திருப்பிக் கொடுக்கும் போது  கொஞ்சம் கூடுதலாகவே கொடுங்கள் என்று மார்க்கம் கூறுகின்றது.

இவ்வளவு கூடுதலாகத் தர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடன் கொடுத்தால் அது வட்டியாகி விடும்.

அதே போன்று திருப்பிக் கொடுப்பவர் இன்ன தொகைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, கூடுதலாகக் கொடுத்தால் அதுவும் கூடாது.

உதாரணமாக ஒருவன் பத்தாயிரம் கடன் வாங்கி விட்டு, கொடுக்கும் போது ஆயிரமோ, இரண்டாயிரமோ கூடுதலாக, தானாக முன்வந்து கொடுத்தால் அது தவறு கிடையாது. இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரை தண்டிக்க வேண்டாம்😉 விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்”  என்று கூறினார்கள்.

நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றதுஎன்று கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2305 2306 2390 2392 2393 2606 2609

நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கினால் அதை விட அதிகமானதையே  கொடுப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீசும் தெளிவுபடுத்துகின்றது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து, பலமிழந்து போனதால் என்னைப் பின் தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். “என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?” என்று கேட்டார்கள். “என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள்.  நான் (வாகனத்தில்) ஏறினேன்.  நபி (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னி கழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னி கழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன்.  நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள்.

நான், “எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்என்றேன்.  நபி (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர். ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், “உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள்.

பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன்.  நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். “இப்போது தான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். “உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள்.  அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன்.  நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) “இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லைஎன்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 2394 443 2097 2309

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளிவாச-ல் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.

நூல்: புகாரி 2603

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை             தொடர்: 6

கியாம நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். 

(திருக்குர்ஆன் 78:1-5)

உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் தஜ்ஜாலைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம்.

தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.

எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.

தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.

….மர்யமின் மகன் மஸஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.

நூல்: முஸ்லிம் 5228

மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2476, 3448, 3449

ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 221

நபியாக வர மாட்டார்

ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள்.

உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 3449

ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் “வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் “உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்” என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 225

தஜ்ஜாலைக் கொல்வார்கள்

ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் “எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர்களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் “எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின்வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறுவார்கள். அவர்கள் கான்ஸ்டான்டிநோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடேன அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.

அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காகப் படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5157)

தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்என விடையளித்தார்கள்.  (நூல்: முஸ்லிம் 5238)

தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.  (நூல்: முஸ்லிம் 5228)

தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இரண்டு நபர்களுக்கும் இடையில் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 5233)

இந்த நிலையில் “யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக” என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான். நூல்: முஸ்லிம் 5228)

ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்

ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.

இது குறித்து திர்மிதியில் 3550வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்….

—————————————————————————————————————————————————————-

கேக் விவகாரம்ஜாக்கிற்குப் பகிரங்க சவால்

“கேக் வெட்டிய ஜாக் மவ்லவி’ என்ற தலைப்பில் ஜனவரி 2012 ஏகத்துவத்தில் வெளியான கட்டுரை குறித்து, மேற்படி ஜாக் மவ்லவி யாஸீன் இம்தாதி சார்பிலும் ஜாக் நிர்வாகிகள் சார்பிலும் இணைய தளங்கள், பிரசுரங்கள் வாயிலாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் செய்யாத ஒரு விஷயத்தை நாம் இட்டுக்கட்டி ஏகத்துவம் இதழில் வெளியிட்டுள்ளதாகப் பரப்பி வருகின்றனர்.

  1. ஜாக் மவ்லவி யாஸீன் இம்தாதி, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டது உண்மை.
  2. அங்கு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியது உண்மை.
  3. கேக்கை மேடையிலேயே ரசித்துச் சாப்பிட்டதும் உண்மை.
  4. அந்தக் கிறிஸ்துமஸ் விழாவில் நடைபெற்ற இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்களைக் கண்டிக்காமல் ஆமோதித்தது உண்மை.

இந்த விஷயங்கள் அனைத்தும் பொய் என்று ஜாக் சார்பில் வெளியாகும் “அல்ஜன்னத்’ மாத இதழில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கத் தயாரா? என்று ஜாக் அமைப்புக்குப் பகிரங்க சவால் விடுக்கிறோம்.

இதை ஏற்று அல்ஜன்னத் இதழில் மறுப்பு வெளியிட்டால், இந்த உண்மைகளை உரிய சாட்சிகளுடன் நிரூபிக்கத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். – ஆசிரியர்