ஏகத்துவம் – மார்ச் 2011

மதி மயங்கும் மாணவர்கள்

மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தத் தீமைகளில் தலையாயது காதல் என்ற பெயரில் உள்ள காமம்! அடுத்து போதை, சூதாட்டம் என தீமைகளின் பட்டியல் நீள்கின்றது. குறைந்தபட்சத் தீமை புகைப் பழக்கமாவது ஒரு மாணவனை ஆட்கொள்ளாமல் விடுவதில்லை. சுற்றிலும் தீமைகளின் தீ நாக்குகளைக் கொண்ட ஒரு வளையத்தின் மத்தியிலும் பற்றி எரியாமல் இருக்கும் ஒரு சூடத்தைப் போன்று அவற்றிலிருந்து தப்புகின்ற, மதி மயங்காத மாணவர்களும் இருக்கின்றார்கள்.

பளிங்கு போன்ற தெளிந்த உள்ளத்தைக் கொண்ட இத்தகைய மாணவர்களிடம் தான் பல இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் பார்வைகளைத் திருப்புகின்றனர். தங்கள் கருத்துக்களை அவர்களிடம் பதிய வைக்கின்றனர். அலை மோதிய பல்வேறு பயங்கரத் தீமைகளிலிருந்து தப்பிய மாணவர்கள் இந்த இயக்கங்களிடம் மதி மயங்கி விடுகின்றனர். தடம் மாறி விடுகின்றனர். அந்த இயக்கங்களில் ஒன்று தப்லீக் ஜமாஅத்! இது ஒரு வழிகெட்ட இயக்கம் என்பதற்கு வானளாவிய ஆதாரம் தேவையில்லை. இவர்கள் தொழுகைக்குப் பின்னர் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து தஃலீம் தொகுப்பு என்ற புத்தகத்தைப் படிப்பார்கள். அப்போது அவர்களிடம், குர்ஆன் தர்ஜுமாவைப் படியுங்கள் என்று சொன்னால் போதும். அவர்களுடைய முகம் அல்லாஹ் சொல்வது போன்று மாறி விடும்.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.  (அல்குர்ஆன் 74:49-51)

கண்ட கண்ட குப்பைகளைப் படிக்கும் இவர்களிடம், கண்ணியமிக்க குர்ஆனைப் படியுங்கள் என்று சொன்னால் கோபக் கனல் வீசுகின்றது. இவர்கள் வழிகெட்ட இயக்கம் என்பதற்கு இது சிறந்த ஒரு அடையாளம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் படிப்பு, குடும்பம், வேலை அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு மனம் போன போக்கில் அலைகின்றனர்.

அடுத்து, ஜமாஅத்தே இஸ்லாமி சிந்தனையைப் பின்னணியாகக் கொண்ட இயக்கங்கள். இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஷிர்க் என்று சுற்றி வளைத்துக் கொண்டு நிலை நிறுத்துவார்கள். ஆனால் திருக்குர்ஆனும் ஹதீசும் நேரடியாகவே கண்டிக்கின்ற இணை வைப்பை, ஷிர்க்கை, சமாதி வழிபாட்டை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே இவர்களது வழிகேட்டைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இவர்களின் அழைப்புப் பணி, நட்சத்திர விடுதி அழைப்புப் பணியாகும். நாற்சந்தி, நடுவீதி அழைப்புப் பணி அல்ல!

இந்த இயக்கங்களின் வார்ப்பாக வந்த எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் போன்ற இயக்கங்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கின்றன. துவக்கத்தில் ஜனநாயகம் ஷிர்க், ஜிஹாத், இஸ்லாமிய ஆட்சி என்று புரட்சிகரமாகப் பேசி புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் தலை கீழாக மாறி, தறி கெட்டுப் போய், தேசத்தைப் பொதுவாக்குவோம்; அரசியலை நமதாக்குவோம் என்று வெற்றுக் கூச்சல் போடுகின்றனர்.

தமுமுகவாவது தேர்தல் களத்திற்கு வந்த பிறகு தான் சாமியாருக்கு ருகூவு செய்தார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் களத்திற்கு வருவதற்கு முன்பே அரசியல் ஆதாயத்திற்காக சாமியார்களுக்கு ஸஜ்தா செய்வார்கள் போல் தெரிகிறது. பொங்கல் வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து என்று தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பே தங்களை வழிகெட்ட அமைப்பினர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் இவர்கள் விரிக்கும் மாய வலைகளில் விழுந்து விடுகின்றனர். இந்த இயக்கத்தினர் சமுதாயம், ஜிஹாத், ஆட்சி அதிகாரம் (இஸ்லாமிய ஆட்சி அல்ல) போன்ற பசப்பு வார்த்தைகளில் தங்கள் பாசறைக்கு மாணவர்களிடம் தான் அதிகம் தூண்டில் போடுகின்றனர். இவர்களது தூண்டிலில் தொங்கும் மண் புழுவை நம்பி இம்மை, மறுமையை இழந்து விடக் கூடாது என்று மாணவர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவர்களது வலையில் சிக்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்து தேர்வுக்குக் கூட சரியாகப் படிக்காமல் கண்ட கண்ட போஸ்டர்களை ஒட்டிக் கொண்டு திரிந்து தேர்வில் தோல்வியடைகிறார்கள்; தங்கள் எதிர்காலத்தை இருண்ட பாலைவனமாக ஆக்குகின்றனர்.

நாம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுவாக இளைஞர்கள் அனைவரையும் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான். இந்த இயக்கம் மட்டுமல்ல! தவ்ஹீத் ஜமாஅத் உட்பட எந்த இயக்கமாக இருந்தாலும் கண்டதும் காதல் என்பது போல் இல்லாமல் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)

அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போன்று அசை போட்டு, ஆய்வு செய்து பின்பற்றுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள். இம்மையில் மாற்றம் காணுங்கள்; மறுமையில் ஏற்றம் காணுங்கள்.

—————————————————————————————————————————————————————-

மறு ஆய்வு

பெண் தனியே பயணம் செய்யலாமா?

கணவன். அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல்  ஒரு பெண் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பரவலாகக் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் குழு சென்னையில் கூடி 15.02.2011 மற்றும் 16.02.2011 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்து மக்களுக்கு விளக்குவதற்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஒரு பெண், திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்; அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர்.

பெண்ணின் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்கும் காலத்தில் அவள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக வரும் செய்திகளில் ஒன்றை ஏற்று, மற்றதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் தான் கருத்து வேறுபாடு உருவாகின்றது. அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமின்றி தெளிவான முடிவுக்கு வரலாம்.

இது தொடர்பாக வரும் செய்திகளை நாம் ஆய்வு செய்யும் போது “அச்சமற்ற காலத்தில் பெண் தனியே பயணம் மேற்கொள்வதில் தவறல்ல’ என்ற இரண்டாவது சாராரின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

நமது நிலைபாட்டுக்குரிய ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் “குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்’ என்று கூறுவோர் ஆதாரமாகக் கருதும் செய்திகளின் உண்மை நிலையை முதலில் அறிந்து கொள்வோம்.

முரண்பட்ட செய்திகள்

பெண்கள் மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அளவுகள் கூறப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

  1. ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.
  2. இரண்டு நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.
  3. மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.
  4. ஒரு பரீத் தூரத்திற்கு ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது. (ஒரு பரீத் என்பது 12 மைல்களாகும். ஏறத்தாழ 19 கிலோ மீட்டார் இதன் தொலைவாகும்)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1088)

“ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (1995)

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத்தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (2382)

“ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) ஒரு பரீத் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (2350)

இந்த நான்கு விதமான அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தூர அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்றால் மற்றவற்றை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்று மற்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் சமமான தரத்திலமைந்த செய்திகள்.

இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அந்த முரண்பாடு நீங்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க முடியாத வகையில் முரண்பாடு இருந்தால் அந்த இரண்டில் எது தரத்தில் உயர்ந்தது என்று பார்த்து உயர்ந்த தரத்தில் அமைந்த செய்தியை ஏற்று, தரத்தில் குறைந்த செய்தியை விட்டுவிட வேண்டும்.

முரண்பாடு நீங்காமலும் ஒன்றை விட மற்றொன்றை முற்படுத்த முடியாத வகையில் தரத்தில் சமமாகவும் அவை இருந்தால் இவற்றில் முந்தியது எது? பிந்தியது எது? என்று பார்க்க வேண்டும். முந்திய சட்டத்தை மாற்றப்பட்ட சட்டமாக முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும். பிந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முந்தியது எது? பிந்தியது எது? என்பதை முடிவு செய்ய முடியாவிட்டால் ஒரே தரத்தில் அமைந்த, முரண்படும் இந்தச் செய்திகளை அமல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

பெண் தனியே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட தூரத்தைப் பற்றிப் பேசும் மேற்கண்ட செய்திகள், இணைத்து விளக்கம் கூற முடியாத வகையில் முரண்படுகின்றன. இவை அனைத்தும் சமமான தரத்தைக்  கொண்டிருக்கின்றன. இவற்றில் முந்தி கூறப்பட்டது எது? பிந்தி கூறப்பட்டது எது? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இந்தச் செய்திகளில் எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் இவை அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.

முரண்படாத செய்தி

ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுக்காமல் பொதுவாக, பெண் எவ்வளவு தூரமானாலும் தனியே பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூறுகின்றது.

“மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1862)

ஒன்றுக்கொன்று முரண்படுவதாக முன்பு நாம் எடுத்துக் காட்டிய நான்கு வகையான செய்திகளில் ஒரு பெண் தனியே பயணம் மேற்கொள்வது கூடாது என்ற அம்சம் மட்டுமே சரியானது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுப்பது தவறு என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

எனவே ஒரு பெண் தக்க துணை இல்லாமல் தனியே எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யக்கூடாது என்பதே சரியான நபிமொழி.

அச்சமற்ற சூழ்நிலையில் அனுமதி உண்டு

மணமுடிக்கத்தகாத ஆண் துணை இல்லாமல் பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்ற இச்சட்டம் பெண்ணுடைய பாதுகாப்புக் கருதியே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக பெண் என்பவள் உடல் அளவிலும் மன அளவிலும் பலவீனமானவளாக இருக்கின்றாள். இவள் தனியே பயணம் செய்யும் போது இவளுடைய உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குத் தீயவர்கள் பங்கம் விளைவித்தால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இவளிடம் இல்லை. எனவே தான் இஸ்லாம் இந்தத் தடையை விதித்துள்ளது.

பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத அச்சமான காலகட்டத்தில் தான் இந்தத் தடை பொருந்தும். பாதுகாப்பு உள்ள அச்சமற்ற சூழ்நிலையில் ஒரு பெண் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் தனியே பயணம் செய்தால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாறாக இதற்கு அனுமதி வழங்குகின்றது.

நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீரா’வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று  பதிலüத்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட “தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி (3595)

மேற்கண்ட சம்பவத்தில் கூறப்படும் பெண் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் தனியே பயணம் செய்வாள். அப்போது வழிப்பறி கொள்ளை இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.

இந்தப் பெண் இறையில்லமான கஅபாவை தவாஃப் செய்து இறைவனை வணங்கக்கூடியவள் என்றும், ஏக இறைவனுக்கு அஞ்சக்கூடியவள் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள்.

அச்சமற்ற நிலையிலும் ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்று மார்க்கம் கூறுமேயானால் இந்தக் காரியத்தைச் செய்யும் இப்பெண்ணைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ மாட்டார்கள். இப்பெண் செய்த இந்தக் காரியத்தை நல்லாட்சிக்கு அடையாளமாக நபியவர்கள் கூறியிருக்கவும் மாட்டார்கள்.

ஆனால் நபியவர்கள் இப்பெண் இறையச்சமுள்ளவள் என்று சான்று தருவதிலிருந்து அச்சமற்ற பாதுகாப்பான சூழ்நிலையில் பெண் தனியே பயணம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

மக்காவிற்கு மட்டும் உரிய அனுமதியா?

மேலுள்ள சம்பவத்தில் அந்தப் பெண் கஅபாவிற்கு வருகை தருவாள் என்று கூறப்பட்டுள்ளதால் பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற சட்டம் இறையில்லம் கஅபாவிற்குச் செல்வதற்கு மட்டுமே பொருந்தும். இதைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் போது பெண் மஹ்ரமான துணையுடனே செல்ல வேண்டும் என்று நாம் முன்னர் கூறி இருந்தோம்

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முன்னறிவிப்பைப் போன்று இன்னொரு முன்னறிவிப்பையும் செய்துள்ளார்கள். இந்த முன்னறிவிப்பு இந்த அனுமதி மக்காவிற்கு மட்டும் உரியதல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக எந்த ஊராக இருந்தாலும் நாடாக இருந்தாலும் பாதுகாப்பு நிலவும் பட்சத்தில் மார்க்கம் இந்த அனுமதியை பெண்ணுக்கு வழங்குகின்றது. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதீ பின் ஹாதிமே! ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் அல்லாஹ்வையும் தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் எமன் நாட்டுக் கோட்டையிலிருந்து ஹியராவிற்கு வருகை தருவாள்” என்று கூறினார்கள். நான், “(வழிப்பறி கொள்ளையர்களான) தய்யி குலத்தினரும் அவர்களின் குதிரைப் படையும் இருக்குமே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அப்போது அக்கூட்டத்தினரையும் (வழிப்பறியில் ஈடுபடும்) மற்றவர்களையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: தப்ரானீ (14039)

இந்தச் செய்தியில் யமன் நாட்டிலிருந்து ஹியரா வரை பெண் தனியே பயணம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு உள்ள காலத்தில் பெண் தனியே மக்காவிற்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உண்டு என்பதை அறிய முடிகின்றது.

இன்றைக்கு ஒரு பெண் அச்சமில்லாமல் தனியே பயணம் மேற்கொண்டு தன் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வர முடியும்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு பகுதியில் இதற்கு மாற்றமான நிகழ்வு நடக்கலாம். ஆனால் இவை அரிதாக நிகழக் கூடியதாகும். பயணம் செய்யும் அனேக பெண்களைக் கவனத்தில் கொண்டால் அவர்கள் பாதுகாப்புடன் சென்று வருகிறார்கள் என்பதே உண்மை.

எனவே தற்காலத்தில், திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட மஹ்ரமான உறவினர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்தால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. இதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

விமர்சனமும் விளக்கமும்

அச்சமற்ற காலத்தில் பெண் யாருடைய துணையுமின்றி தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதற்கு எதிராக பின்வரும் ஹதீஸை சுட்டிக் காட்டுகின்றனர்.

“மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1862)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் தனியே ஹஜ் செய்ய நாடிய போது அதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பெண் தனது கணவனுடன் தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். எனவே பெண் மஹ்ரமான துணை இல்லாமல் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் பெண்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அச்சமின்றி தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்படவில்லை என்பதை அறியலாம். எனவே தான் அந்த நபித்தோழரை மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அச்சமான காலத்தில் சொல்லப்பட்ட விதியை அச்சம் நீங்கிய காலத்திற்குப் பொருத்தக் கூடாது.

அதாவது இந்த நிகழ்வு நடந்த போது பாதுகாப்பான, அச்சமற்ற நிலை இருக்கவில்லை. எனவே தான் தன் மனைவியுடன் சேர்ந்து ஹஜ்ஜுக்குப் புறப்படுமாறு அந்த நபித்தோழருக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள் என்று இதை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

பெண்கள் அச்சமற்ற காலத்தில் தனியாகப் பயணம் செய்யலாம் எனும் போது, அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சிலர் காரணம் கூறுகின்றனர். இந்தக் காரணத்தை நாம் ஏற்க முடியாது.

ஏனெனில் தவறான நடத்தையில் ஈடுபட நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. இருக்கும் இடத்திலிருந்தே தீய நடத்தையில் ஈடுபட முடியும். மேலும் ஒரு நாள், இரு நாள் அல்லது சில நாட்கள் தூரம் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். ஒரு பெண் தீய நடத்தையில் ஈடுபட விரும்பினால் இது போதுமான அவகாசம் தான்.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தையிலிருந்து பெறப்படும் அனுமதியை இதுபோன்ற காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய முடியாது.

மஹ்ரமான ஆண் துணையின்றி பெண் தனியாகப் பயணம் செய்யலாமா? என்பது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு முடிவு எடுக்கப்பட்டது.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தஃப்ஸீர்கள்…       தொடர்-3

விஷமத்தனமான விரிவுரை

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாத்தை அழிக்க எண்ணும் எதிரிகள், அதன் பிரச்சாரம் மக்களைச் சென்றடையாமலிருக்க விஷமத்தனமான பிரச்சாரங்களைக் கையிலெடுப்பார்கள்.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது; இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்பது கயவர்கள் கையிலெடுக்கும் விஷமப் பிரச்சாரங்களில் சில!  இது போன்ற வகையில் சில விஷமத்தனமான விளக்கங்கள் இமாம்களின் பெயரில் தஃப்ஸீர் நூல்களிலும் காணக் கிடைக்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் பிரச்சாரத்தை விட இதுவே மிகவும் அபாயகரமானது. இது இமாம்களோடு தொடர்பாவதால் உண்மை என எளிதில் மக்கள் நம்பி விடுகின்றனர். அது போன்ற விஷமத்தனமான ஒரு தஃப்ஸீரை இங்கே காண்போம்.

நபிகளார் தன் வளர்ப்பு மகனான ஸைத் (ரலி) அவர்களுக்குத் தனது மாமி மகள் ஜைனபைத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதால் ஜைனபை ஸைத் (ரலி)  விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு ஜைனபை நபிகளாருக்கு இறைவனே திருமணம் செய்து வைத்ததாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மண முடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

(அல்குர்ஆன் 33: 37)

ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)  அவர்கள் தொடர்பாக இந்த வசனம் இறங்கிய போது ஸைத் (ரலி) நபிகளாரிடம் வந்தார். அவரை தான் விவாகரத்து செய்ய விரும்புவதாக முறையிட்டு நபிகளாரிடம் அனுமதி கோரினார். அப்போது நபியவர்கள் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி 3136

வளர்ப்பு மகனைச் சொந்த மகனாகக் கருதி, சொந்த மகனுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை யாவும் வளர்ப்பு மகனுக்கும் உண்டு என அன்றைய சமுதாய மக்கள் நம்பினர். வளர்ப்பு மகனின் மனைவி மருமகள் ஆவாள். அவளை (விவாகரத்து செய்த பின்னர்) வளர்ப்புத் தந்தையர் திருமணம் செய்யக்கூடாது என்றும் அவர்கள் நம்பினர்.

இந்தத் தவறான நம்பிக்கையை உடைத்து, வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் செய்வது மருமகளைத் திருமணம் செய்வதைப் போல் ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இத்திருமணத்தை இறைவன் செய்து வைத்துள்ளான். வளர்ப்பு மகனின் மனைவியை வளர்ப்புத் தந்தையர் திருமணம் செய்வது மக்களால் குற்றச் செயலாகப் பார்க்கப்படக் கூடாது என்பதற்காக தன் தூதருக்கே இப்படியொரு திருமணத்தை இறைவன் நடத்தி வைத்ததாக மேற்கண்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.

உண்மை இவ்வாறிருக்க ஸைத் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கும், பிறகு அவரை நபிகளார் திருமணம் செய்ததற்கும் ஒரு கட்டுக் கதையை தஃப்ஸீர் என்ற பெயரில் அவிழ்த்து விட்டிருக்கின்றனர். அந்த கட்டுக் கதையைப் படிக்கும் யாரும் இது இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளால் புனையப்பட்டுள்ளது என்பதை எளிதாக உணர்வார்.

நபிகளார் தனது மாமி மகளான ஜைனபை ஸைத் பின் ஹாரிஸாவிற்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். ஒரு நாள் ஸைதை (சந்திக்க) விரும்பி நபியவர்கள் அவரின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். வாசலில் மெல்லிய திரை இருந்தது. காற்று அத்திரையை விலக்கியதால் அது விலகியது. அப்போது ஜைனப் (ரலி) அரைகுறை ஆடையுடன் அவரது அறையில் இருந்தார். அவரின் ஈர்ப்பு நபிளாரின் உள்ளத்தில் உண்டானது. இது நடந்த போது மற்றவருக்கு (ஸைதுக்கு மனைவியை பற்றி) வெறுப்பு உண்டானது. உடனே அவர், “அல்லாஹ்வின் தூதரே!  நான் எனது மனைவியை விட்டும் பிரிந்து செல்ல விரும்புகிறேன்” என்றார். அப்போது நபியவர்கள், “ஏன்? அவளுடைய நடத்தை உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவளுடைய நடத்தையில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் விஷயத்தில் நல்லதையே கருதுகிறேன்” என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று கூறினார்கள். இதுவே இவ்வசனத்தின் விளக்கமாகும்.

நூல்: தஃப்ஸீருல் பகவி, பாகம்: 6,  பக்கம்: 354

ஒரு நாள் ஒரு தேவைக்காக நபியவர்கள் ஸைதிடம் வந்தார்கள். அப்போது உருக்குச் சட்டை, முக்காடு ஆகியவைகளை அணிந்து, நின்ற நிலையில் ஜைனப் (நபியவர்களுக்கு) காட்சியளித்தார். அவர்கள் குறைஷிப் பெண்களிலேயே நற்குணமுள்ள, அழகான, வெண்மை நிறப்  பெண்ணாக இருந்தார். எனவே நபியவர்களின் உள்ளத்தில் (தவறான எண்ணம்) ஏற்பட்டது. அவரது அழகு நபியவர்களைக் கவர்ந்தது. “அல்லாஹ் தூயவன். உள்ளங்களைப் புரட்டுபவனே” என்று கூறி திரும்பிச் சென்றார்கள். ஸைத் வந்த போது ஜைனப் இதனை அவரிடம் கூறினார். பிறகு ஸைத் குழம்பி விட்டார். அந்நேரத்தில் அவரது உள்ளத்தில் அவரை (ஜைனப்) பற்றி வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

நூல்: தஃப்ஸீருல் பய்லாவீ, பாகம்: 5, பக்கம்: 14

இஸ்லாத்தின் வெகு வேகமான வளர்ச்சியைக் கண்டு மனம் குமுறும் இஸ்லாத்தின் எதிரிகள் நபிகளாரின் கண்ணியத்தைச் சீர் குலைத்து, இஸ்லாம் பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு அவதூறை அள்ளி வீசியிருக்கின்றனர் என்பதை சாதாரண அறிவுள்ள யாரும் உணரலாம்.

நபியவர்கள் இன்னொருவர் மனைவியின் அழகில் மதிமயங்கி, அவர் மீது ஆசை கொண்டார்கள். இதனால் ஸைத் தனது மனைவியை வெறுத்து, விவாகரத்துச் செய்ய விரும்பினார் என்ற அபத்தமான கருத்தை எந்த வித மறுப்பும் இல்லாமல், பல தஃப்ஸீர் நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

“நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்’ என்று இறைவன் யாருடைய நற்குணத்திற்கு உத்தரவாதம் அளித்தானோ அத்தகைய குணசீலரை இழிவு படுத்தும் விதத்தில் இவ்விளக்கம் அமையவில்லையா?

அடுத்தவர் மனைவியை ஆசை கொண்டு அபகரிக்கும் காமுகராக நபியவர்களைச் சித்தரிக்கும் இந்த விளக்கம் இஸ்ரவேலர்களின் கட்டுக் கதையே என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகமிருக்காது. அப்படியிருக்கையில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யாமல் இந்த விளக்கங்களைத் தங்களுடைய நூல்களில் பதிவு செய்திருப்பதை என்னவென்பது?

நபியவர்களை இழிவுபடுத்தும் இந்த விளக்கத்தை ஒரு முஸ்லிம் கேட்கின்ற பொழுதினில் இது பொய்! அவதூறு! என நிச்சயம் பொங்கி எழுவான். ஏனெனில் நபியவர்கள் முஸ்லிம்களுக்குத் தங்களின் உயிரை விடவும் மேலானவர்கள்.

இதைப் பதிவு செய்த இமாம்களுக்கு இது ஏன் தெரியவில்லை என்று இதைப் படிக்கும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் உள்ளத்திலும் கேள்வியெழும்.

ஒரு சிலர் தாங்கள் பெரிதும் மதிக்கின்ற இமாம்கள் பதிவு செய்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இது உண்மை தான் என்று மனமுரண்டாகக் கூறுகிறார்கள் எனில் இவர்களுடைய உள்ளத்தில் நபிகளாரின் நேசம் கொஞ்சமேனும் உண்டா என்பது கேள்விக்குறியே!

இவர்களைப் பொறுத்த வரை நபிகளாரின் மானத்தை யார் பறித்தாலும் இவர்களுக்குத் துளியும் கவலையில்லை. காரணம் இவர்கள் வருடா வருடம் தவறாமல் நபிகளாருக்குப் பிறந்த நாள் விழா (மீலாது விழா) கொண்டாடுகின்றனர். அவர்களின் பெயரால் மவ்லித் ஓதி, வயிறு நிரம்ப, மணக்க மணக்க நெய்ச்சோறு சாப்பிடுகின்றனர். இது போதாதா? நபிகளாரை நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த என்று நினைத்து விட்டனர் போலும்?

நபிகளாரின் கண்ணியத்தைக் களங்கப்படுத்துவதை எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அந்த வகையில் அமைந்துள்ள இந்த தஃப்ஸீர் (?) கட்டுக் கதையே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அந்தோ பரிதாபம்! அத்திப்பழமும் ஆலிவ் மரமும்!

என்ன தான் இருந்தாலும் அத்திப் பழத்துக்கும், ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. இதற்கு இமாம்கள் அளித்துள்ள விளக்கங்களையே இவ்வாறு கூறுகிறோம். இறைவன் அத்திப்பபழம், ஆலிவ் மரம் ஆகியவற்றின் மீது சத்தியம் செய்து மனிதனை நாம் அழகிய வடிவில் படைத்தோம் என்றும், பின் பல விஷயங்களையும் கூறுகிறான்.

அத்தியின் மீதும் ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக! தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

அல்குர்ஆன் 95:1 ,2,3,4

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முற்பட்ட இமாம்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்.

அத்தி என்பது திமிஷ்க் நகரில் உள்ள பள்ளிவாசலாகும். ஒலிவ மரம் என்பது பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை குறிக்கும். தூர் ஸீனீன் என்பது மூஸா அலை (நின்ற) மலை என்பதாகும் என்று அபூ அப்துல்லாஹ் ஃபாரீஸி கூறுகிறார்.

முஹம்மத் பின் கஃப் என்பார் கூறுகிறார்: அத்தி என்பது குகைத் தோழர்கள் தங்கிய பள்ளிவாசல். ஒலிவ மரம் என்பது ஈலியா நகரின் மஸ்ஜித். தூருஸீனீன் என்பது தூர் பள்ளிவாசலாகும்.

அத்தி மற்றும் ஜைத்தூன் என்பது ஷாம் (சிரியா) நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களை குறிக்கும்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்: 509

தூர்ஸீனீன் என்பது (நபிகளாரின் பேரர்) ஹஸன் (ரலி) அவர்கள் ஆவார்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்: 511

அத்தி என்றால் அத்திப்பழம், ஜைத்தூன் மரம் என்பது ஆலிவ் மரம் என்று நம் அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. இப்படியிருக்க இந்த இரண்டுக்கும் தொடர்பே இல்லாதவைகளை விளக்கம் என்ற பெயரில் கூறுவதேன்?

பழத்திற்கும் பள்ளிவாசலுக்கும் தொடர்பு உண்டா? மரத்திற்கும் மஸ்ஜிதிற்கும் என்ன சம்பந்தம் என்று படிப்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன.

இப்போது சொல்லுங்கள்! அத்திப்பழத்திற்கும் ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது தானே!

நபிகளாருடன் இருந்தோர்?

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.

அல்குர்ஆன் 48:29

நபிகள் நாயகம் இறைத்தூதர் என்றும் அவர்களுடன் உள்ள ஸஹாபாக்களின் உயர்ந்த பண்புகளைப் பற்றியும் இந்த வசனம் பேசுகின்றது. நபித்தோழர்கள் தங்களிடையில் அன்போடும், தங்களை அழிக்க எண்ணும் எதிரிகளிடம் விரோதத்துடனும் நடந்து கொள்கின்றனர் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகின்றான்.

மேலே சொல்லப்பட்ட பண்புகள் யாவும் அனைத்து ஸஹாபாக்களையும் குறிக்கும். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவ்வாறே இருந்தனர். ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம்…

நீங்களே படித்துவிட்டு எவ்வாறு இருக்கிறது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அவருடன் இருந்தோர் என்பது அபூபக்கர் (ரலி)யை குறிக்கும். (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாக.. என்பது உமர் (ரலி) ஆகும். தமக்கிடையில் மிகுந்த அன்புடன் இருக்கின்ற என்பது உஸ்மான் (ரலி) ஆவார். ருகூவு, ஸஜ்தா செய்தோராக என்பது அலீ (ரலி) ஆவார். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள் என்பது ஜுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரைக் குறிக்கும் என்று அவர்களில் சிலர் கூறுகின்றனர்.

நூல்: ஸமர்கன்தியின் பஹ்ருல் உலூம், பாகம்: 4,  பக்கம்: 173

மேற்கண்ட வசனத்தில் உள்ள ஒவ்வொரு பண்பையும் தனியாகக் குறிப்பிட்டு அதற்கென்று ஒவ்வொரு ஸஹாபாக்களின் பெயரையும் இமாம்கள் கூறியுள்ளனர்.

இறைவன் பொதுவாகக் கூறியிருக்கும் போது இன்னின்ன பண்புகள் இன்னின்ன நபித்தோழர்களைக் குறிக்கும் என்று எவ்வாறு கூற முடியும்? நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா?

அர்த்தமுள்ள இறை வார்த்தையில் அர்த்தமற்ற முறையில் விளக்கமளித்து விளையாடியுள்ளனர் என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. இவைகளை இனம் கண்டு தவிர்ப்போமாக!

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்

வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும்.

ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர்.

  1. முஸ்லிம் மன்னர்கள் வருவதற்கு முன்னாலேயே இந்தியாவிலிருந்த ஒவ்வொரு மன்னரும் தங்கள் வெற்றியை நினைவு கூரும் விதமாக பரஸ்பரம் தங்கள் எதிரிகளின் தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்; அழித்து ஒழித்திருக்கின்றனர்.
  2. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்யும் போது அரசாங்க வருவாயில் அல்லது அரசு நிலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் கோயில்களின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட்ட போது அந்தக் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதை இஸ்லாத்துடன் முடிச்சு போடக் கூடாது.

இவ்விரு காரணங்களால் கோயில் இடிப்பை முஸ்லிம்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேச முடியாது என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

இதல்லாமல் இந்துக் கொத்தனார்கள், கல் செதுக்கும் சிற்பிகள் தான் பள்ளிவாசல்களைக் கட்டினார்கள். இதைத் தான் இந்துத்துவா சக்திகள் பழங்கால இந்துக் கோயில்களின் இடிபாடுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

எழுப்பிய கட்டடங்களில் கண்ணைக் கவருகின்ற வகையில், உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற விதத்தில் கலை நுணுக்கங்களையும் கைவண்ண வேலைப்பாடுகளையும் அந்தக் கொத்தனார்கள் மற்றும் சிற்பிகள் மூலம் முஸ்லிம்கள் செய்தனர்.

இந்தக் கொத்தனார்களுக்கும் சிற்பிகளுக்கும் இஸ்லாமியக் கலை நுணுக்கமோ, இஸ்லாமிய கட்டடக் கலை வடிவமைப்போ தெரியாது. இருப்பினும் அவர்கள் கட்டிய கட்டடங்களில் தங்கள் கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் மிகத் திறம்படப் பதிய வைத்தனர்.

இந்துக் கட்டட அமைப்பிற்கும் இந்துக் கலை நுணுக்கத்திற்கும் அவர்களுடைய கட்டட அமைப்பு ஒத்திருக்கின்றது என்பதை அறவே அவர்கள் பொருட்படுத்தவில்லை.

சில கட்டடங்களில் கை கழுவப்பட்ட, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட, பாழான பழைய கோயில்களில் உள்ள கட்டடப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பிற மத வழிபாட்டுத்தலங்களை அவமதிக்கும் அடிப்படையில் அமையவில்லை. தாங்கள் ஆள்கின்ற, வாழ்கின்ற பகுதியில் கட்டடக் கலையை தங்கள் கட்டட அமைப்பில் பதிய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள் என்பது அபத்தமாகும் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். உண்மையில் அவர்களின் கருத்துப்படி இது சங்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு வாதமாகும்.

வளைத்து, வளைத்து இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்று சதாவும் குற்றம் சாட்டுகின்ற சங்பரிவார்களுக்கும் அவர்களது சார்பாளர்களுக்கும் நாம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.

முஸ்லிம் மன்னர்கள் ஒரு வாதத்திற்குக் கோயில்களை இடித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்கு இதை ஒப்புக் கொள்வோம். முஸ்லிம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதச் சார்பின்மை என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியா, மதச் சார்பின்மையை உயிர் மூச்சாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்துத்துவா சக்திகள், அவற்றின் சார்பு சக்திகள் எவற்றை விமர்சனம் செய்தார்களோ அது, அதாவது வழிபாட்டுத் தலங்களை இடிப்பது இப்போது மதச் சார்பின்மை அடிப்படையிலான அரசாங்கத்தின் ஆசியுடன், அனுமதியுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்த அக்கிரம, அநியாய அத்தியாயத்தை இப்போது பார்ப்போம்.

1984ல் பாதிப்புக்குள்ளான பொற்கோயில்

1992ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்

1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்

இந்த வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை.

இவை தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எதிரிடை அனுபவத்தில் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது.

சண்டிகர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள் அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக, மாட்டுத் தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.

இதற்குக் கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட நியாயமும் என்ன?

1947ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத் தான் என்று பதில் தரப்படுகின்றது.

முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற பொய்யான, போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும் அதிகமதிகம் முஸ்லிம்கள் பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் மன்னர் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த அதே கதியைத் தான் சந்தித்தன.

நாடு விடுதலையின் போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. லாகூரில் உள்ள கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் படலம் தான் என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.

1947க்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

1979ல் மத்திய பிரதேசத்தில் 55 பள்ளிவாசல்கள்!

1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக் கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!

1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம் கட்டடங்கள்!

2002ல் குஜராத் இனப் படுகொலையில் 236 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள், தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.

குஜராத்தைப் புகழ்ந்து கவிதை பாடிய “வலி தக்கானி’ என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து ஓடிய காவி பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.

தொல்லியல் துறையின் துரோகத்தனம்

இதல்லாமல் தொல்லியல் துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.

தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் 118 பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில் தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும் பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.

மத்திய அரசின் பெரும் துரோகம்

1979ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொல்லியல் துறையின் கீழிருக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடையை நீக்குவதாக வாக்களித்தது. அந்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அந்தப் பள்ளிகளில் மீண்டும் தொழச் செல்லும் போது அந்த வாக்குறுதி பொய் என்று புலனானது.

ஒரு பக்கம் தொல்லியல் துறையின் சதி! மற்றொரு பக்கம் இந்துத்துவா சக்திகளின் சதி! மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தலைமையில் சுமார் 2000 பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், முன்னாள் இந்துக் கட்டட அமைப்புகள் என்று ஒரு பட்டியல் திரட்டி வைத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய தலங்களும் அவற்றில் உள்ளடங்கும்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தவ்லதாபாத் கோட்டையில் இருக்கும் இடைக்கால வரலாற்றுப் பள்ளியான ஜும்ஆ மஸ்ஜிதின் மிஹ்ராபில் சிலைகளைக் கொண்டு வைத்து அதைப் பாரத மாதா கோயில் என்றாக்கி விட்டனர். அதன் பிறகு இதே பாணியை இந்துத்துவா சக்திகள் ஏனைய பள்ளிவாசல்கள் விஷயத்திலும் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

ஒரு கட்டடத்தின் தூண் அல்லது அமைப்பு இந்துக் கோயிலுக்கு ஒத்திருக்கின்றது என்றோ, அல்லது அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்டது என்றோ ஒரு கதை கட்டி விட்டால் போதும். அடுத்த கணம் அது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.

இந்த அடிப்படையில் தான் ஆந்திராவில் 1970ல் கட்டப்பட்ட பாக்கியலட்சுமி கோயில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சார்மினார் மீது துருத்திக் கொண்டிருக்கின்றது. அலெ நரேந்திரா என்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி. சார்மினாரை இந்துக் கோயிலாக மாற்றுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.

பி.ஜி. கெஸ்கார் என்பவன் மக்கா மஸ்ஜிதைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கொக்கரித்தான்.

இவை இந்துத்துவா சக்திகளின் வெறித்தனத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்.

பள்ளிவாசல்களில் ஒரு தடவை சிலைகள் கொண்டு வைக்கப்பட்டால் போதும். மறுகணம் பூஜை புணஸ்காரம் தொடங்கி விடும். அரசு அதிகாரிகள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியச் சின்னத்தை அழித்து அதில் இந்துச் சின்னத்தைப் பதிய வைத்து விடுகின்றனர்.

அதிகாரிகளின் ஓர வஞ்சனை

இந்துக்கள் ஆட்சேபணை செய்து விட்டால் போதும். முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி தர மறுத்து விடுகின்றனர்.

இந்தத் தடை எங்கோ இருக்கும் கிராமத்தில் நடைபெறவில்லை. நாட்டின் தலைநகரத்திலேயே நடக்கின்றது. மொத்தத்தில் இந்தப் பாணியும் பணியும் இந்தியாவில் இஸ்லாம் இல்லாத இந்து மயமாக்கும் நாடு தழுவிய சதியாகும்.

இந்துத்துவா சக்திகள் இஸ்லாத்தை வெறுக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றுவதோ அவர்கள் யாரை எதிரிகள் என்று கருதுகிறார்களோ அவர்களுடைய வழியைத் தான்.

டிசம்பர் 21, 2010 அன்று, உண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீற் ச்ர்ழ் தங்ப்ண்ஞ்ண்ர்ய் ண்ய் உங்ம்ர்ப்ண்ற்ண்ர்ய் – “ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும் மதம்’ என்ற தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது!

இந்தியாவில் பாழாக்கப்பட்ட, பறிக்கப்பட்ட 12,000 பள்ளிவாசல்களைப் புள்ளி விபரங்களுடன் தருகின்றார். அதையே இங்கு நாம் ஏகத்துவம் இதழில் தந்திருக்கின்றோம்.

இந்தக் கட்டுரையில் தர்ஹாக்கள் பறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத், தர்ஹாவை ஆதரிக்கின்றது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

தர்ஹாக்களை அபகரிப்பதை, முஸ்லிம்களின் சின்னத்தை அழிப்பதாக இந்துத்துவா சக்திகள் பார்க்கின்றனர். எனவே ஒரு சொத்து அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அதை மீட்பது ஒரு முஸ்லிமின் கடமை என்ற அடிப்படையில் தான் இதைத் தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கின்றது என்பதை இங்கே பதிய வைக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 12

செல்வமும் விதியும்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சிறுவனாக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்:

உனக்கு நான் சில சொற்களை கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ்வை கண் முன்னே பார்ப்பாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் நீ அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! சமுதாயம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து உனக்கொரு தீமையை செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன.

நூல்: திர்மிதி (2440)

இந்த நம்பிக்கை மிக முக்கியமான நம்பிக்கை! நாம் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடம் தான் உதவி தேட வேண்டும். இப்படி இருந்தால் நாம் சுய மரியாதையுடன் இருக்கலாம். இப்படி இருந்தால் நாம் அல்லாஹ்வைப் பார்க்கலாம்.

நபி (ஸல்) கூறுகிறார்கள்: ஒட்டுமொத்த சமுதாயமே சேர்ந்து உனக்கு ஒரு தீமையோ, நன்மையோ செய்ய நாடினால் அது அல்லாஹ் நாடியதைத் தவிர எதுவும் நடக்காது. இப்படி ஒருவன் நம்பினால் அவன் எந்த நேரத்திலும், யாரிடமும் யாசகம் கேட்க மாட்டான்.

அனைத்தும் எழுதப்பட்டு ஏடுகள் காய்ந்து விட்டன என்றும் கூறுகிறார்கள். அப்படியென்றால் நமது நன்மை, தீமை எல்லாம் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எவராலும் அல்லாஹ் விதியாக்கியதைத் தடுக்கவோ அல்லது தடுத்ததைக் கொடுக்கவோ முடியாது. இப்படிப்பட்ட ஒரு அடிப்படையை நாம் நம்பவேண்டும்

அல்லாஹ்வின் மீது நாம் உறுதியான நம்பிக்கை வைத்தால் ஒன்றுமில்லாமல் சூனியத்திலிருந்தும் தருவான். இதற்கு உதாரணமாக அல்லாஹ் குர்ஆனில் ஒரு சம்பவத்தை செல்லிக் காட்டுகிறான்.

அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார்.

அல்குர்ஆன் 3:37

மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவருக்கு ஸக்கரியா (அலை) அவர்கள் தான் வழக்கமாக உணவைக் கொண்டு வருவார்கள்.

ஒருநாள் பள்ளியின் மிஹ்ராபில் சென்று பார்த்த போது உணவைக் கண்டார்கள். “மர்யமே! இது உனக்கு எப்படி வந்தது?” என்று கேட்ட போது, “இது எனக்கு அல்லாஹ்விடம் இருந்து வந்தது. அல்லாஹ் தான் நாடியோருக்குக் கணக்கின்றி கொடுக்கின்றான்” என்றார்கள்.

இது பரக்கத்தை விட மிஞ்சிய ஒன்று! நபிமார்களைப் பற்றிச் சொன்னால் இது அவர்களுக்கு மட்டும் உள்ளது என்று கூறி விடுவார்கள் என்பதால் தான் மர்யம் (அலை) அவர்களை பற்றிக் குறிப்பிடுகிறோம்.

ஏனென்றால் தன்னை நம்பினால் தானே தருகிறேன் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

அல்குர்ஆன் 65:2, 3

நாம் என்ன செய்வது? ஏது செய்வது என்று தவிப்பவருக்கு அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமானால் அவருக்கு அல்லாஹ் போக்கிடத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அல்லாஹ் குர்ஆனில் சொன்னால் அதை நாம் நம்ப வேண்டும்.

அதே போன்று அல்லாஹ் குர்ஆனில் ஒரு மனிதரைப் பற்றி, அவருக்குச் செய்த பரக்கத்தைப் பற்றிக் கூறுகிறான்.

அவர் தான் இப்ராஹீம் நபி! அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி பாரான் பெருவெளியில் தனது மனைவியையும், மகனையும் விட்டு விட்டு வருகிறார்கள். அவருக்குச் செய்த பரக்கத் தான் உலகத்திலேயே பெரிய பரக்கத்!

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்கும் கனிகளை உணவாக வழங்குவாயாக!

அல்குர்ஆன் 14:37

இப்ராஹீம் நபி தனது மனைவியையும் பிள்ளையையும் அல்லாஹ் கூறியதற்காக பாரான் பெருவெளியில் விட்டுச் சென்றார்கள். அந்த ஊரை புதுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் கட்டளையிட்டான். காரணம் அந்த அல்லாஹ்வின் ஆலயம் சிதிலமடைந்து போயிருந்தது. பிறகு அது ஒரு ஊரானது.

அவர்களின் நம்பிக்கைக்கு அல்லாஹ் தந்த பரிசு தான் ஜம் ஜம் நீரூற்று! மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்குத் தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான்.

நான்கு விஷயங்கள் மனிதன் கருவறையில் இருக்கும் போதே  எழுதப்பட்டு விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் (பெண்ணின்) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும் போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துü) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும் போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி)

நூல்: புகாரி (318)

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஸகாத்         சென்ற இதழின் தொடர்ச்சி…

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

அப்துந் நாசிர்

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும், மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.

இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள்.

மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.

இணை கற்பிப்பவர்களின் பண்பு

இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 41:6, 7

இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற ஒருவன் தான் ஸகாத்தை நிறைவேற்ற மாட்டான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கலாமா? ஒரு போதும் இருக்கக் கூடாது. உண்மையான முஸ்லிம்கள் ஸகாத்தை முறையாக நிறைவேற்றி விடுவார்கள்.

மறுமையில் நஷ்டவாளிகள்

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது அவர்களிடம் நான் போய்ச் சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் “கஅபாவின் அதிபதி மீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்” என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன்.

என்னால் இருப்புக் கொள்ள முடியாததால் உடனே எழுந்து, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர” என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, “ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததை விடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்” என்று கூறினார்கள் 

நூல்கள்: புகாரி (6638), முஸ்லிம் (1809)

சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்”

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி (1408)

பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும்

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். “இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 9:34

தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் (1417)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1803)

அல்லாஹ் மறுமை நாளில் மக்களை மஹ்ஷர் மைதானத்தில் ஒன்று கூட்டுவான். மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். ஸகாத் வழங்காதவனுக்குக் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவனுடைய செல்வங்கள் பழுக்கக் காய்ச்சி அவனுக்கு சூடு போடப்டும்.

அல்லாஹ் ஸகாத் வழங்காதவனிடம் கேள்வி கணக்குக் கேட்பதற்கு இரண்டு நாட்கள் தாமதமாக்கினால் ஒரு லட்சம் வருடங்களாகி விடும். அது வரை அவனுக்கு இந்த வேதனை தான். ஆனால் எத்தனை நாட்கள் தாமதமாக்கி நம்மிடம் கேள்வி கேட்பான் என்று நாம் உறுதியாகக் கூற முடியுமா? இதனை எண்ணிப் பார்க்கும் போது நம்முடைய உள்ளம் பதறுகிறது. அல்லாஹ் இந்த வேதனையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய செல்வத்திற்கான ஸகாத்தை நாம் வழங்கி விட வேண்டும்.

ஸகாத் வழங்காதவர் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவருக்கு மஹ்ஷர் மைதானத்தில் வேதனை நடைபெறும். இவ்வாறே கால்நடைகளுக்கான ஸகாத்தை வழங்காவதர்களுக்கும் மஹ்ஷர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை வேதனை செய்யப்படும். பிறகு அவனிடம் கேள்வி கணக்கு கேட்ட பிறகு அவனுக்கு சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ தீர்ப்பளிக்கப்படும் என நபியவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கூறியுள்ளார்கள்.

இதிலிருந்து ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்றாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கழுத்து நெரிக்கப்படுதல்

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 3:180

இவ்வசனம் ஸகாத் வழங்காதவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பாம்பாக மாறும் செல்வம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம், கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான் தான் உனது கருவூலம்’ என்று சொல்லும்

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, “அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.”  எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1403)

பாம்பின் வாயினால் கடிபடுதல்

“(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது “இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்” என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று  அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1807)

நரகத்தின் காப்புகள்

யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தன்னுடைய மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவளுடைய மகளின் கையில் கெட்டியான இரு தங்க வளையல்கள் இருந்தன. “இதற்குரிய ஸகாத்தை நீ நிறைவேற்றி விட்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள், இல்லை என்று கூறினாள். “இந்த இரண்டிற்கும் பகரமாக மறுமை நாளிலே நெருப்பாலான இரண்டு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு சந்தோசமளிக்குமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண் அந்த இரண்டையும் கழற்றினார். பிறகு அந்த இரண்டையும் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கினார். பிறகு, “இவையிரண்டும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்குமுரியது” என்று கூறினார்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்: நஸாயீ (2434)

ஒட்டகத்திற்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

“அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால் – தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும் – மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1803)

ஆடுகளுக்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை

“அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்று விடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1803)

நபியவர்களின் உதவி இல்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும்.

மேலும் உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்) “முஹம்மதே‘ எனக் கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை’ என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன்.

மேலும் யாரும் (மறுமை நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து “முஹம்மதே‘ எனக் கூற, அதற்கு நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை’ என்று சொல்லும் படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1402)

நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————-

அழைப்பாளர்களை அரவணைப்போம்

கே.ஏ. செய்யது அலீ

இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர், அதிலும் குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் அதன் தனித் தன்மையையும் மறந்து மூட மௌட்டீகப் பழக்க வழக்கங்களிலும், ஏக இறைவனுக்கு இணை வைக்கும் காரியங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்.

ஒரு சில தனி நபர்களின் குர்ஆன் மற்றும் ஹதீஸியத் தொடர்புக்குப் பின்னால் ஒன்றும் இரண்டுமாய் இஸ்லாத்தின் தனிச்சிறப்பை விளங்க ஆரம்பித்தனர். அதனைத் தயங்காமல் பிறருக்கு எடுத்துச் சொன்னதன் விளைவு, இன்று பரவலாக தமிழகத்தின் பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் தவ்ஹீத் எழுச்சி பெற்றுள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

தொடர்ச்சியாக ஏகத்துவப் பாதையில் பயணித்த நமது ஜமாஅத், பல ஏகத்துவப் படைப்பாளிகளை உருவாக்கிக் களம் கண்டது. ஆனால் அந்தப் படைப்பாளிகளில் சிலர் இன்று நம்மிடமில்லை. நம்மிடம் அவர்கள் இல்லை என்பதை விடவும் நமக்கெதிராகவே பலர் செயல்பட்டனர். ஆனாலும் வெற்றி தவ்ஹீத் ஜமாஅத்துக்கே! அதற்குக் காரணம் அரண்போல் மக்களை காத்த நமது தவ்ஹீத் பிரச்சாரகர்கள். நாம் பயணித்த பாதையில் பல கசப்பான உணவுர்களையும் உள்வாங்கிக் கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவையனைத்தையும் தாங்கி நின்றோம்.

அந்நஜ்ஜாத், ஜாக், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக என்று பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்த நாம் தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக பிரம்மாண்ட வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமது பயணங்களில் தங்கு தடை வந்தாலும் தடை தாண்டி மடை உடைத்த வெள்ளமாகப் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்கிறோம். இவை அத்தனைக்கும் அடிப்படை குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் பிடிவாதமாக நிற்கிற குணமும், எந்த பிரச்சனை வந்தாலும் ஏகத்துவத்திற்கு இழப்பு வராமல் காத்து நிற்கின்ற கொள்கைப் பிடிப்பும் தான்.

இப்படி இந்த ஜமாஅத்தும், இந்த ஜமாஅத்தின் நிர்வாகத்தினரும், இதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் கொள்கையைச் சரியாக நம்புவதற்கும் நம்பிய கொள்கையிலேயே உறுதியாக நிற்பதற்கும் அல்லாஹ்வின் அருளால் உறுதுணையாக நின்றவர்கள் நமது பிரச்சாரகர்கள்.

கிளைகளிலும், மாவட்டத்திலும் ஏன்? அதைத் தாண்டி மாநில அளவிலும் கூட சில பல பிரச்சனைகளைச் சரி செய்வதிலும், கொள்கை மாறாமல் காத்துக் கொள்வதிலும் கவனமாகச் செயல்பட்டவர்கள் நமது பிரச்சாரகர்கள்.

நாம் பல்வேறு ஜமாஅத்துக்களை உருவாக்கி அதற்காகப் பாடுபட்டு இரத்தம் சிந்தி உழைத்திருப்போம். சில பிரச்சனைகளினால் அவர்களிடமிருந்து பிரிந்தும் சிலரைப் பிரித்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மக்களிடத்தில் உண்மை நிலையை விளக்கி மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து உழைத்தவர்கள் நமது பிரச்சாரகர்கள். இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தினால் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கிளைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. விளைவு, பிரச்சாரகர்கள் பற்றாக்குறை.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் நம்மிடம் இருக்கிற பிரச்சாரகர்களிடமிருந்து பல்வேறு பிரச்சனைகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளன. பிரச்சனைகளை முளைக்கின்ற போதே முடக்கினால் தான் இருக்கிற இடம் தெரியாமல் போகும். இல்லையெனில், சின்னது தானே என்று கண்டும் காணாமல் விட்டுக் கொண்டே சென்றால் நம்மையே ஒட்டு மொத்தமாக அழித்துவிடும்.

ஆம்! இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி கொஞ்சம் ஆழமாகவே அலச வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எதையும் எதிர்பார்க்கவில்லை

தவ்ஹீத் பிரச்சாரத்தை ஆரம்பித்த காலத்தில் மேற்கொண்ட தாயிக்கள் பிரச்சாரங்களுக்குப் போன செய்தியை நம்மில் பலர் நமக்குச் சொல்வதுண்டு.

பயணச் செலவுக்காக பணத்தைக் கையில் வாங்காமல், போய் சேரும் இடத்திற்கு டிக்கட்டை எடுத்துக் கொடுக்கச் சொல்லி, அதை வைத்துக் கொண்டு பிரயாணம் செய்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்த காலம் அது!

போலி சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களிடமிருந்து முற்றிலும் மாற்றமாக, நமது பிரச்சாரகர்கள் பேசும் பேச்சுக்கு காசு பணம் வாங்காமல் பிரயாணச் செலவைக் கூட தந்தால் வாங்கிக் கொண்டு, தராவிட்டால் மனப்பூர்வமாக தனது சொந்த செலவிலேயே இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்றளவும் கூட இதுபோன்ற பல பிரச்சாரகர்கள் பிரயாணச் செலவை வாயினால் கேட்டு வாங்குவதற்கு வெட்கப்பட்டு, தந்தால் வாங்கிக் கொண்டும் தராவிட்டால் மௌனமாக வீடு திரும்பும் நிலையையும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

அதே நேரத்தில் நமது ஜமாஅத்தில் பிரச்சாரகர்களாக இருப்பவர்களின் நிலையை சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களோடு, மவ்லவிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமிருக்கும்.

சுன்னத் வல் ஜமாஅத் மவ்லவி ஒருவர், அதுவும் தொழுகை மட்டும் நடத்துகின்ற, வேறெந்த வேலையும் செய்யாத ஒருவர், வேறெந்த வேலையும் என்றால், நமது பிரச்சாரகர்களைப் போன்று நிர்வாகத்தை கவனித்தல், தெருமுனைப் பிரச்சாரம், பல்வேறு வகையிலான பிரச்சாரம் செய்தல், வசூல், சுவரொட்டி ஒட்டுதல், பள்ளியை சுத்தம் செய்தல், சமுதாயப் பிரச்சனைகள்… என்று இது போன்ற மக்களும் நிர்வாகிகளும் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாத சுன்னத் ஜமாஅத் மவ்லவிகளில் சிலர் கார் வைத்துள்ளனர். பலர் சொந்த வீடு வாசல், பங்களா என்று தனது அடிப்படைத் தேவைக்கும் மேலாக அபரிதமாக அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். அதுபோன்று நமது பிரச்சாரகர்களில் எவருமே இல்லை. வேண்டுமானால், ஏற்கனவே இந்த வசதிகளைப் பெற்றவர் பேச்சாளராக மாறியவர்கள் நம்மில் சிலர் இருக்கலாம்.

ஆனால் மக்களிடம் முழுநேரமாகப் பிரச்சாரம் செய்யத் தங்கள் வாழ்க்கையை இதில் தொலைத்துக் கொண்ட பிரச்சாரகர்களில் எவராவது ஒருவர், இந்தப் பணியை மேற்கொண்டு எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் உண்டா? இல்லவே இல்லை.

நமது ஜமாஅத்தில் அங்கம் வகிக்கிற எந்தப் பிரச்சாரகரும் தனது பேச்சுக்காக காசு பணம் வாங்கியதில்லை. அப்படி வாங்குபவர் நமது ஜமாஅத்தில் இருக்கவும் மாட்டார். அல்லாஹ் அவரை நம்மிடமிருந்து கழற்றியிருப்பான். அல்லது மக்களே அது போன்றவர்களைத் தூக்கி எறிந்திருப்பார்கள்.

எனவே எதனையும் எதிர்பார்த்து, எதனையும் என்றால்… பொருளாதாரம், புகழ், பட்டம், பதவி போன்ற சிற்றின்பங்களையோ பேரின்பங்களையோ எதிர்பாராமல் பிரச்சாரப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களையே அல்லாஹ் இதுவரைக்கும் நம்முடன் வைத்திருக்கிறான். இனியும் கடைசி வரைக்கும் அதுபோன்றவர்களை இந்த ஜமாஅத்திற்குத் தந்துதவ இறைவனை வேண்டுகிறோம்.

ஆரம்ப காலமும் இன்றைய நிலையும்

ஆரம்ப காலங்களில்…., நமது பிரச்சாரகர்கள் ஒரு புறம் எதையும் எதிர்பார்க்காவிட்டாலும் மறுபுறம் நிர்வாகிகளும் தனி நபர்களும் தேவையான அனுசரணைகளையும் பிரச்சாரகருக்குத் தேவைப்படுகிற அடிப்படை பொருளுதவியையும் செவ்வனே செய்யத் தான் செய்தார்கள்.

போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் போல் நமது பிரச்சாரகர்களும் செல்லவில்லை. நமது தவ்ஹீத் மக்களும் அவர்களைப் போன்று கஞ்சத்தனமாகவோ அல்லது பொருளாதார மன உலைச்சலையோ இன்ன பிற எரிச்சலையோ கொடுக்கவில்லை. அவர்கள் மனதைக்  கெடுக்கவில்லை.

ஆனால் இன்று பிரம்மாண்ட வளர்ச்சியடைந்த நாம், அந்த வளர்ச்சிக்கு அர்த்தம் என்ன தெரியுமா? மேன் பவர் என்று சொல்லக்கூடிய மனித வளம் (அதிகமான மக்கள் இந்தக் கொள்கையையும் இந்த ஜமாஅத்தையும் ஏற்றுக் கொள்ளுதல்), எந்தப் பிரச்சாரத்தையும் அல்லது நிகழ்ச்சியையும் நடத்துவதற்குத் தேவையான பொருளாதார, அறிவு வளர்ச்சி. இன்னும் பல்வேறு வகையான வளர்ச்சி. இத்தனையும் பெற்றுக் கொண்ட நாம், பிரச்சாரகர்களைப் பேணுவதில் அக்கறை செலுத்துதில்லை.

மாறாக, பிரச்சாரகர்களுக்கு மன உளைச்சலைக் கொடுப்பதாகப் பல பிரச்சாரகர்களும், நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபெறுகின்ற தவ்ஹீத் கல்லூரிகளில் படிக்கிற காலத்திலேயே பல்வேறு ஊர்களுக்குச் சென்று ஜும்ஆ, தெருமுனை, குர்ஆன் வகுப்பு போன்ற பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிற மாணவ பிரச்சாரகர்களும், மாணவர்களாக பயின்று இன்று எதாவது ஊர்களில் முழுநேர ஊழியர்களாகப் பணியிலிருக்கும் பிரச்சாரகர்களும் வேதனைப்படுவதுண்டு.

அவர்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்த வகையில் முழுக் குற்றமும் நிர்வாகத்தின் மேல் சொல்ல முடியாது. பல நிர்வாகத்தின் மேல் இருந்தாலும் சில பிரச்சாரகர்கள் மீதும் இருக்கத் தான் செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே நிர்வாகத்தினருக்கும் பிரச்சாரகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மத்தியில் சரியான புரிந்துணர்தல் வந்துவிட்டால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் களையலாம். அல்லது களையெடுக்கலாம்.

இணைவைப்பு, பித்அத்திற்கு வழிவகுத்த சம்பளம் – கிம்பளம்

நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களுக்கோ, இன்னபிற அமைப்பின் பேச்சாளர்களுக்கோ ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது ஜமாஅத்தின் பேச்சாளர்களுக்கு மட்டுமே எந்த விலையும் இல்லை. முன்னர் சிலருக்கு நிர்ணயித்திருக்கலாம். அவர்கள் இன்று நம்மிடமில்லை என்பதே நமக்குரிய தனிச்சிறப்பு. எனவே விலை பேசப்பட்டு அதற்குத் தலை சாய்த்த எவரும் நம்மிடமில்லை.

மத்ஹப்வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை எந்த ஆலிமுக்கும் சரியாகச் சம்பளம் கொடுத்ததே இல்லை. இன்று வேண்டுமானால் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் நல்ல சம்பளத்தில் இருக்கலாம். ஆனால் அவரும் கூட கிம்பளமில்லாமல் இருக்க மாட்டார். இரண்டாயிரம் ரூபாய் பேரம் பேசி வேலைக்குச் சேரும் போதே பள்ளிவாசலின் முத்தவல்லிகளும் நிர்வாகத்தினரும் மறக்காமல் சொல்லி விடுவார்கள்: ஆலிம்ஷாவுக்கு கிம்பளம் முழுவதுமாக ஒதுக்கப்படும் என்று!

கிம்பளம் என்றால் என்ன? அதுதான் தகடு, தாவிசு (தாயத்து) அணிவித்தல், பேய் பிசாசு கழித்தல், பில்லி சூனியம் வைத்தல் – எடுத்தல், ஓதிப் பார்ப்பதன் மூலம் தனது ஆன்மீக பலத்தை நிறுவுதல், தர்ஹாக்களில் அப்படி… இப்படி…ன்னு ஏதாவது செய்தல், மறக்காமல் செத்தவருக்கு ஃபாத்திஹா ஓதி பையை நிரப்புதல், இதுவெல்லாம் போதாது என்று சொல்லி, வருடந்தோறும் புகழ் மாலை ஓதி பூமான் நபிக்குப் புகழ் சேர்க்கிறோம் என்ற பெயரில் அரபியில் எழுதப்பட்டிருக்கும் அண்டப் புளுகை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களின் ஹிட் பாடல்களில் மெட்டு எடுத்து ஓதுதல், ரமளானில் தராவீஹ் தொழுவித்தல், இப்படி இன்னும் பல இணை வைப்புக் காரியங்களையும் பித்அத்தான, இஸ்லாத்தில் இல்லாத நவீன நூதனப் பழக்க வழக்கங்களையும் செய்து வாய்க்கு ருசியாக சாப்பிடுவதும், வயிற்றுப் பிழைப்பை நடத்துவதும், பைக், கார், பங்களா என்று சேர்ப்பதும் தான் கிம்பளமாகும்.

இந்தக் கிம்பளத்தை நாம் பலவாரியாகக் கிண்டல் செய்வதும், அதனால் சில சு.ஜ. ஆலிம்கள் திருந்திய பலனும் உண்டு. இந்தச் செய்தியை இங்கே சொல்லக் காரணம் என்னவெனில், சு.ஜ. ஆலிம்களை விமர்சனம் செய்யும் போது இந்தக் காரணத்தையும் சொல்லத் தவற மாட்டோம்.

சு.ஜ. பள்ளிவாயிலை நிர்வாகம் செய்யும் முத்தவல்லிகளும் நிர்வாகிகளும் மக்களும் அவர்களது ஆலிம்களின் அடிப்படைப் பொருளாதாரத்தைக் கூட சரியாகக் கொடுக்கவில்லை. அதனால் மேற்சொன்ன, மார்க்கத்திற்கு மாற்றமான அத்தனை காரியத்தையும் செய்து சம்பாதித்தனர். வயிற்றுப் பிழைப்பை நடத்தினர் என்று குற்றம் சுமத்தினோம்.

ஆனால் இன்று நாமும் அதே நிலைக்குப் படிப்படியாகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது மிகையல்ல. தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினர் கீழ் மட்டத்தில் உள்ளவர்களோ, மேல் மட்டத்தில் உள்ளவர்களோ இதை உணர்வதாகத் தெரியவில்லை. பிரச்சாரகர்களின் அடிப்படையைக் கூட நிறைவேற்றிக் கொடுக்க முடியாத இந்தப் பொருளாதாரக் கொள்கை நமது பிரச்சாரகர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கப் பிரச்சாரத்தை விட்டும் மாற்றி விடுமோ என்று நாம் அஞ்ச வேண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து சரி செய்வார்களா? இப்படிச் சொன்னவுடன் என்னமோ சுயமரியாதை இல்லாமல் பேசியதாக நினைத்துவிடக் கூடாது. அனைத்து பிரச்சாரகர்களின் சுய மரியாதையும் பேணப்பட வேண்டும் என்பதே நமது அவா.

சுயமரியாதையும் சம்பளமும்

பிரச்சாரகர்களில் சிலர் சம்பளம் வாங்குவதை சுயமரியாதைக்கு உகந்ததாக இல்லை என்று கருதுபவரும் உண்டு. சிலர் அதை சுய மரியாதைக்கு இழுக்கென்று  பிறருக்குப் பிரச்சாரம் செய்வதுமுண்டு. இதே போன்ற மனநிலை மக்களிடமும் இருக்கிறது. ஒரு சிலர் சம்பளம் வாங்குவதை இழி செயலாகப் பார்ப்பார்கள். அதிகமானோர் சம்பளம் கொடுப்பதை வரவேற்பார்கள். இந்த விஷயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பிரச்சாரம் செய்வதற்காகச் சம்பளம் வாங்குவதை மார்க்க அடிப்படையில் தவறு என்று சொல்ல முடியாது. இதுவும் கூட சில நேரத்தில் ஒருவரின் சுய மரியாதையை சீண்டிப் பார்க்கத் தவறுவதில்லை. சம்பளத்தைப் பிரச்சாரகர்கள் கேட்குமளவுக்கு கிளை, மாவட்ட, மாநில நிர்வாகம் நடந்து கொள்ளக் கூடாது. சரியான தேதியில் கேட்காமலேயே சம்பளத்தைக் கொடுத்துவிட வேண்டும். நாமாக சம்பளத்தைக் கொடுத்து விடும் போது அவர் கேட்க மாட்டார். அவர் கேட்கத் தேவையுமில்லை என்றாகி விடும். இதைப் பற்றி குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்.

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.

அல்குர்ஆன்: 9:122

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?

வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும்.

அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது.

மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன்: 2:273

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வதைக் குறை கூறக்கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மன நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

அவசியம் கருதி தேவைகளை நிறைவேற்றுங்கள்

பிரச்சாரகர்களில் இரண்டு வகையினர். ஒன்று நிரந்தர பிரச்சாரகர். இன்னொன்று தேவைக்குத் தகுந்தாற் போல் வந்து செல்கின்ற பிரச்சாரகர்.

நிரந்தரப் பிரச்சாரகராக இருப்பவர், திருமணம் ஆகாதவராக இருந்தால், அவரது தேவைகள் குறைவாகத் தான் இருக்கும். எனினும் தனது உணவு, உடை என சொந்தத் தேவைக்காகவும், இத்துடன் தனது தாய் தந்தை குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டிய தேவைக்காகவும் அதிகமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது.

நிரந்தரப் பிரச்சாரகராக இருப்பவர், திருமணம் முடித்தவராக இருந்தால், அவரது தேவைகள் பலவாறாக இருக்கும். திருமணத்திற்கு முன்னால் தனக்கும், தனது பெற்றோர்களுக்கும் செலவளித்து கவனித்து வந்தவர் திருமணத்திற்குப் பின்னால் தனது மனைவிக்கும் சேர்த்துச் செலவளிக்கும் சுமை கூடுகிறது. குழந்தை பிறந்தால் மேலும் பொருளாதாரச் சுமை கூடுகிறது.

இத்தனையையும் சமாளிக்க அவர் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அப்படி சொந்தமாகத் தொழில் செய்து கொண்டு இருப்பவரால் முழு நேர பிரச்சாரகராகவும் இருக்க முடிவதில்லை. இப்படியொரு சிக்கல் நமது பிரச்சாரகர்களில் அதிமானோருக்கு இருக்கத் தான் செய்கிறது. இதை வெளிப்படையில் சொல்லாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே நிதர்சன உண்மை. எல்லா மட்டத்திலும் இந்த நிலை உணர்ந்து நிர்வாகத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.

நிரந்தரமில்லாத, தேவைக்குத் தகுந்தாற் போல் வந்து செல்லும் அழைப்பாளராக இருந்தால், அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட நமது நிர்வாகத்தினர் சரியாகச் செய்து கொடுப்பதில்லை. இந்தக் கருத்தை நமது ஜமாஅத்தின் நிறுவனரும் தற்போது மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருமான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த பொதுக்குழுவில், பிரச்சாரகர்கள் விஷயத்தில் நாம் சரியாக நடக்கவில்லை என்பதையும், இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பயணச் செலவும் பராமரிப்பும்

ஒருவர் ஒரு ஊரிலிருந்து வருகிறார் என்றால், அவருக்கு வெறுமனே பேருந்துச் செலவு மட்டுமே கொடுக்கக்கூடாது. அவர் சாதாரணக் கட்டண பஸ் கிடைக்காமல் ஒரு வேளை உயர் கட்டண பேருந்தில் வர நேரிடலாம். வரும் போது பயணத்திலேயே காலை உணவு உட்கொள்ளும் நிலையில் வரலாம். அதாவது அதிகாலை புறப்பட்டு 4 அல்லது 5 மணி நேர பயணத் தொலைவில் வருகிறவர் காலை உணவை பஸ் இடை நிறுத்தத்தில் தான் சாப்பிட்டிருப்பார் என்பதைக் கூட நிர்வாகிகளால் உணர முடியாதா?

அதே போன்று வரும் வழியில் குளிர்பானமோ அல்லது டீயோ குடித்து சாப்பிட்டிருந்தால் அதற்கும் சேர்த்துத் தான் பயணச் செலவைக் கொடுக்க வேண்டும். வருவதற்கு 50 ரூபாய், போவதற்கு 50 என்று கச்சிதமாய் கணக்குப் பார்ப்பதில் நமது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டக் கூடாது. தாரள மனமாய் கொடுக்க வேண்டும். அழைப்பாளன் தனது கையிலிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை போடுவான். ஒவ்வொரு தடவையும் போட முடியுமா?

அப்படிக் கொடுக்க முடியவில்லையெனில் நீங்களே உங்களது பகுதியில் நன்றாகப் பேசுகிற ஒருவரைத் தேர்வு செய்து ஜும்ஆவையும் மற்ற பிரச்சாரங்களையும் செய்யலாம். வெளியிலிருந்து பிரச்சாரகர்கள் வர வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை சரியாகச் செய்யுங்கள்.

சம்பளப் பிரச்சனைக்குச் சரியான வழி

ஒரு பிரச்சாரகருக்கு சம்பளம் வாங்குவதற்கு மனம் ஒத்துவரவில்லை என்றால் அது அவரது தனி விருப்பம். அதனால் சம்பளம் வாங்குகிற பிறரை மட்டமாகக் கருதுவது, பேசுவது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைத் திணிப்பதாகி விடும்.

இவ்வாறு கருதுபவர்கள் கிளை, மாவட்டத்தில் பிரச்சாரகராக இருப்பவருக்கு நிரந்தர வருமானம் வருவதற்கும், அதே நேரத்தில் அவரது பிரச்சாரப் பணியை பாதிக்காமல் இருக்கும் வகையிலும் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொடுக்கலாம். அவரும் கற்றுக் கொள்ளலாம். அல்லது ஜமாஅத்தினரில் எவராவது நிறுவனமோ தொழிலோ நடத்தினால் அதில் இவர் சார்பாக கொஞ்சப் பணத்தை கடனாகக் கொடுத்து கேஷ் பார்ட்னராக, பங்குதாரராகச் சேர்த்து அதற்குத் தகுந்த சதவீத லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பிரச்சாரப் பணி போக நேரம் மீதமிருந்தால், அதற்குத் தகுந்த உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான முயற்சிகளை செய்து கொடுக்கலாம். ஏதோ ஒரு வழியில் அவரது குடும்பத்தையும் அவரையும் பாதுகாக்கும் பொருளாதார உதவித் திட்டத்தை செய்து கொடுத்தால் ஓரளவுக்கு சம்பளப் பிரச்சனை சரியாகி விடும்.

கச்சிதமாய் கணக்குப் பார்க்கும் தவ்ஹீத் ஜமாஅத்

நமது ஜமாஅத்தைப் பொறுத்தளவுக்கு, எல்லா விஷயத்திலும் கணக்குப் பார்த்துச் செலவழிப்பது கீழ் மட்டதிலிருந்து மேல் மட்டம் வரைக்கும் உள்ள ஒரே மாதிரியான ஒற்றுமைப் பண்பாகும். இதில் விதி விலக்காக ஒரு சில ஊர்கள் இருக்கலாம்.

அதற்காக, மாநாடு நடத்த எவ்வளவு செலவாகிறது? மாநாட்டு விளம்பரத்திற்கு இவ்வளவா? இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா? இந்தப் பணத்தை வைத்து எத்தனை மீட்டிங் போடலாம்! எத்தனை பள்ளிவாசல் கட்டலாம்! எவ்வளவு மார்க்க சமுதாயப் பணிகளைச் செய்யலாம் என்று யோசிக்கின்றனர். இது தவறான கருத்தாக்கமாகும்.

இப்படித் தான் ஒரு காலகட்டத்தில் தனிப்பள்ளி வேண்டும் என்ற சிந்தனை வரும் போது நம்மில் பலர் இந்தச் செலவு தேவை தானா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று அது முற்றிலும் தவறாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தனிப்பள்ளி வந்த பிறகு நாம் எழுச்சி பெற்றிருக்கிறோம். பிரச்சாரக் களம் அமைத்துப் பல்வேறு பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம். அதுமாதிரி தான் மாநாடு நடத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இந்தச் சமூக மக்கள் பலனடைவதோடு மாநாட்டுச் செலவை ஒப்பிட்டால் யானைப் பசிக்கு சோளப்பொறி தான் எனலாம்.

இது போலத் தான் பிரச்சாரகர்கள் விஷயத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். பிரச்சாரகர்களின் சம்பளம் மற்றும் இதர தேவைகளிலும் இப்படித் தான் யோசிக்க வேண்டும். கிளைகளிலும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் பிரச்சாரகர்களுக்கு தாராளமாகச் செலவு செய்வதற்கு, தாராளமாக என்றால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தேவைக்குத் தகுந்தாற் போல பொருளாதாரத்தை அமைத்துக் கொடுப்பது தான் சரியான செயல் திட்டம். அதனால் எதற்கெல்லாமோ செலவழிக்கிற நாம் தேவையில்லாத கணக்குப் பார்த்து பிரச்சாரகர்கள் விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியாததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

ஒரு பிரச்சாரகர் தான் தங்கியிருக்கும் ஊரிலிருந்து, பிரச்சாரம் செய்யும் ஊருக்கு வருகிறார் என்றால், அவரை அழைத்து வர யாராவது ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். முடியுமானால் நன்கு அறிமுகமானவரே அழைத்து வர வேண்டும். யாரும் வந்து அழைத்துச் செல்ல வசதி வாய்ப்புகள் குறைவு என்றால், தொலைபேசியின் மூலமாக வழிகாட்டலாம். இதில் எதையும் செய்யாமல் அவராக வந்து கொள்வார் என்று குத்துக்கல்லாக இருக்கும் நிர்வாகிகள் நம்மில் எத்தனை பேர்? கடைசியில் அவருக்குச் சரியாக வழிகாட்டாமல் 11 மணிக்கு வந்தவர் அந்த ஊரைப் பல சுற்று சுற்றி விட்டு இடம் தெரியவில்லை என்று சொல்லி 2 மணிக்கு வந்து சேர்ந்த சம்பவங்களும் உண்டு. இதனை நிர்வாகம் சரி செய்து கொள்ள வேண்டியது அவர்களது கடமை.

அதே நேரத்தில் அழைப்பாளராகச் செல்பவர் எதனையும் விசாரிக்காமல் தேவையில்லாமல் 78 ஊரைச் சுற்றி சுற்றி, கடைசியில் ஒரு வழியாக வந்து சேர்ந்தும் விடுவார். சில வேளை சேராமல் ஜும்ஆ முடிந்ததற்குப் பிறகும் வருவார்.

இந்தப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, புறப்படும் முன்பே, நாம் எந்த மாவட்டதில் எந்த ஊருக்குச் செல்ல இருக்கிறோம் என்பதையும், எந்த ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் சென்றால் சரியான நேரத்திற்குப் போய்ச் சேர முடியும் என்பதையும், எந்த பெயரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதையும், முடிந்தால் நாம் செல்லவிருக்கும் பஸ், 55-ஏ, 15-பி என எதுவும் குறிப்பிட்ட எண்ணைக் கொண்டு இருக்குமா? நாம் போகும் ஊரின் வண்டி நம்பர் என்ன என்பன உட்பட அனைத்தையும் தொலைபேசி வாயிலாகக் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நமது பயணத்தைப் பற்றி நிர்வாகிகளிடம் மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதாவது நமது பயணத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ஒரு அழைப்பாளரிடம் இயல்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம். இதை ஒவ்வொரு அழைப்பாளரும் சரி செய்து கொண்டால் பிரச்சனை சரியாகி விடும்.

முழு நேர பிரச்சாரகரும் நிர்வாகமும்

நமது ஜமாஅத்தில் பிரச்சாரகர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடக்கும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், கோபங்கள், உரசல்கள் எங்கு நடக்கிறது என்று கவனித்தால், பெரும்பாலும் நிரந்தரமாகப் பணிபுரியும் பிரச்சாரகர்களிடம் தான்.

ஏன் இப்படியொரு அவலநிலை என்று ஆழமாக அலசினால், இதற்கான காரணம் அவர்களில் இரு சாராருமே தான்.

பிரச்சாரகர்களாகப் பணி புரியப் போகிறவர்கள், ஒரு ஊருக்குப் போனவுடன் எதையும் எதிர்பார்க்காமல் காரசாரமாக அனைத்துப் பணிகளையும் தானே முன்வந்து இழுத்துப் போட்டுச் செய்வார். பிறகு கொஞ்ச காலம் சென்றவுடன் அவருடன் அவரது அபிமானிகளாக ஒரு கோஷ்டி சேர்ந்து விடும். அல்லது சேர்த்து விடுவார். இப்போது பிரச்சனை பூதாகரமாகிவிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கிளைக்குச் சொந்தமான மக்கள், இனி ஒருபோதும் நிரந்தர பிரச்சாரகர் தேவையில்லை. தேவைக்குத் தகுந்தாற்போல் ஒரு பிரச்சாரகரை அழைத்துப் பிரச்சாரம் செய்தால் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இதனால் ஏராளமான மார்க்க சமூகப் பணிகள் தேங்கி விடுகின்றன. இப்போது அந்தக் கிளையின் நிலை, கழுதை தேய்ந்து கட்டெறும்பு தான்.

அதே நேரத்தில் சில இடங்களில் கிளை நிர்வாகிகளாக இருப்பவர்கள், ஒரு பிரச்சாரகர் வந்த ஆரம்பத்தில் அவருடன் மெல்ல மெல்லப் பழகுவார்கள். உடனே அனைத்து உரிமைகளும் அவருக்குக் கொடுத்து விடவும் மாட்டார்கள். இவரும் எடுத்துக் கொள்ளவும் மாட்டார். இப்படியே தங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒட்டு உரசல் அதிகமானவுடன் இரு சாராரும் சம உரிமை கொடுக்கிறோம் என்ற பெயரில் மரியாதை குறைத்து அழைத்துப் பேசுவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு வகையில் அந்நியோன்னியமாக வந்ததும் திடீரென்று இரு சாராரில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் ரோஷம் வந்துவிடும். பிறகு அந்தச் சண்டையை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதில் அந்தப் பிரச்சாரகர் கொஞ்சம் இறங்கிப் போனாலோ அல்லது கிளை நிர்வாகிகள் இறங்கிப் போனாலே தவிர கிளை கொஞ்சம் நஞ்சமாவது மிஞ்சும். இல்லையென்றால் அதோ கதி தான்.

இன்னும் சில ஊர்களில் பார்த்தால், சில நிர்வாகிகள் பிரச்சாரகர்களிடம் ஆரம்ப காலத்திலிருந்தே ஒழுங்காகப் பழகாமல், இவரும் பேசுவதற்கே காசு கேட்கும் நிலையிலேயே இருப்பதால், இரு சாராருக்கும் சரியான புரிந்துணர்வில்லாமல் நேரடியாக எதையும் பேசும் கேட்கும் பக்குவமில்லாமல் பிறரிடமே பிரச்சனைகளைப் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் அது எரிமலையாய் வெடித்துச் சிதறும் போது எதிர்பாராத பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவண்டு.

இன்னும் சில ஊர்களில் நிர்வாகிகள், பிரச்சாரகர்களை சரியாக அரவணைக்காமல் ஆரம்பத்திலிருந்தே அலைக்கழிக்க வைப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது போன்றே சில பிரச்சாரகர்களும் நிர்வாகத்தினரிடம் நடப்பதுண்டு.

பிரச்சாரகர்களில் சிலர் யதார்த்தத்தை உணராமல் எதற்கெடுத்தாலும் குற்றங்குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நிர்வாகத்தினருக்கு எரிச்சலாகத் தான் இருக்கும். அதே போன்று நிர்வாகத்தினர்களில் அல்லது பொது மக்களில் சிலரும் இதே தவறை, எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு குறையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவருக்கும் எரிச்சலாக இருக்கும்.

எனவே மனிதன் என்ற முறையில் ஏற்படும் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு, அதைச் சரி செய்ய மென்மையாக நடந்து கொண்டால் பிரச்சனைகள் ஏற்படாது. பிரச்சனைகள் ஏற்பட்டால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதுபோன்று நம்மில் யார் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.

சின்ன சின்ன பிரச்சனைகளை ஆங்காங்கே சரி செய்து விட்டோமென்றால், குர்ஆன், ஹதீஸ் என்ற இரு சக்கரப் பாதையில் நமக்கு மத்தியில் இருக்கும் விலக்கத்தையும் கலக்கத்தையும் உடைத்தெறிந்து இலக்கை நிச்சயம் எட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்!

—————————————————————————————————————————————————————-

தொடர்: 12

ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை இதுவரை கண்டோம்.

இந்த வாதங்கள் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம்.

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

அந்த அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. நாம் இதுவரை சுட்டிக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கும் இஸ்மாயில் ஸலபி பதிலளிக்கின்றார். அவர் அளிக்கும் அந்த பதிலை முழுமையாகப் பார்த்து விட்டு நமது விளக்கத்தைப் பார்ப்போம்.

ஸலபியின் வாதம்

இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் என்ன என்பதை அவர் விவரிக்கும் போது அப்புறப்படுத்தல் என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.

அப்புறப்படுத்தல்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது அப்புறப்படுத்தவில்லை, அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று புகாரியின் 5765, 6063வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்குச் சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான் என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தர்ஜமா – பக்: 1310)

மேற்படி விளக்கத்தில் ஹதீஸில் இடம் பெற்றுள்ளதாக முரண்பாடுகளை ஒரு முறை தொகுத்துப் புரிந்து கொண்டதன் பின்னர் அவற்றிற்கான விளக்கத்திற்குச் செல்வது நல்லது எனக் கருதுகின்றேன்.

(1) சூனியம் வைக்கப்பட்ட பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரு முரண்பாடு. (என்பது அவர் வாதம்.)

(2) சூனியம் செய்யப்பட்ட செய்தியை இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசியதன் மூலமாக நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஒரு யூதன் உமக்குச் சூனியம் செய்துள்ளான் என்று கூறியதாகவும் வருகின்றது.

(3) நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் கிணற்றிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்ததாகவும், நபியவர்கள் ஆள் அனுப்பி, அவர்கள் அப்பொருளை நபியவர்களிடம் எடுத்து வந்ததாகவும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பது எப்படி?

கூறப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் ஆதாரபூர்வமானவை தாமா? என்பதை ஆராய்வதற்கு முன்னர் இப்படி ஆய்வு செய்து ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஆய்வு அணுகுமுறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

பிழையான ஆய்வு:

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சில போது தாம் கேட்டவற்றில் முக்கிய பகுதியை மட்டும் கூறினார்கள். சிலர் தாம் கேட்ட அதே வாசகத்தை அறிவிக்காமல் அந்தக் கருத்தைத் தனது வாசகத்தின் மூலம் அறிவிப்பர். இவ்வாறு அறிவிக்கும் போது சின்னச் சின்ன வார்த்தை வேறுபாடுகள் பெரும்பாலான, அதிலும் குறிப்பாக பெரிய ஹதீஸ்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள் ஹதீஸை மறுப்பதற்கான காரணமாக அமையக் கூடாது. அப்படியாயின் ஏராளமான ஹதீஸ்களை மறுக்க நேரிடும். இந்த சூனியம் குறித்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா அவரிடமிருந்து ஹிஸாம் அவரிடமிருந்து 12 மாணவர்கள் செவிமடுத்து அறிவிக்கின்றனர். இந்தப் பன்னிரெண்டு பேரின் வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்படும் வித்தியாசங்கள் நியாயமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஏற்கனவே நாம் குறிப்பிட்ட முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே (ஆதாரமாக எடுக்க முடியாமல்) விழுந்து விடும் எனக் கூறி இரண்டையும் ஏற்கக் கூடாது என சகோதரர் வாதிக்கின்றார். இந்த வாதமும் தவறாகும்.

ஏனெனில் அனைத்து ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்றே கூறுகின்றன. அதில் முரண்பாடு இல்லை. இவரின் வாதப்படி சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா? எப்படி எடுக்கப்பட்டது? என்பதில் தானே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து முரண்பாடே ஏற்படாத சூனியம் செய்யப்பட்டது என்ற தகவலை எப்படி நிராகரிக்க முடியும்? சூனியம் செய்யப்பட்டது என்பது உறுதி. ஆனால், அது எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதைத் தான் உறுதியாகக் கூற முடியாது என்றல்லவா முடிவு செய்ய வேண்டும்?

இவரின் இந்த அனுகுமுறை மூலம் தவறான வழியில் ஆய்வு செய்து பிழையான முடிவை நோக்கிச் சென்றிருப்பது தெளிவாகின்றது.

குர்ஆனில் முரண்பாடா?

இது போன்ற முரண்பாடுகள் தோன்றும் போது உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும். எதிலும் குறை காணும் குணத்துடன் செயல்பட்டால் எல்லாமே பிழையாகத் தான் தென்படும். குர்ஆனில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும். இதற்கு இவர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கும் சில வசனங்களையே உதாரணமாகத் தர விரும்புகின்றேன்.

அ(தற்க)வன், நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்ப(தாகக் கூறுவ)தில் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதைக் கொண்டு வாரும் என்றான்.

அப்போது மூஸா தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.

மேலும், தனது கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு (பளிச்சிடும்) வெண்மையாக இருந்தது.

பிர்அவ்னின் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர் என்று கூறினர்.

உங்களை, உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகிறார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என பிர்அவ்ன் கேட்டான்.)     (7:106-110)

மேற்படி வசனங்கள் மூஸா நபி அற்புதங்களைச் செய்த போது இவர் கைதேர்ந்த சூனியக்காரர். இந்தச் சூனியத்தின் மூலம் உங்களது பூமியை விட்டும் உங்களை வெளியேற்ற இவர் விரும்புகிறார் என பிர்அவ்னின் சமுகத்தின் பிரமுகர்கள் கூறியதாகக் கூறுகின்றது.

அ(தற்க)வன், நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டுவாரும் எனக் கூறினான்.

அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதோர் பாம்பாகி விட்டது.

மேலும், தனது கையை (சட்டையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையாக இருந்தது.

அ(தற்க)வன், தன்னைச் சூழ இருந்த பிரமுகர்களிடம், நிச்சயமாக இவர் கற்றறிந்த ஒரு சூனியக்காரர் என்று கூறினான்.

தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகின்றார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என்றும் கேட்டான்.) (26:31-35)

மேற்படி வசனங்களில் இவர் சூனியக்காரர்; உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார் என்ன கட்டடையிடுகின்றீர்கள் என பிர்அவ்ன் கூறியதாகக் கூறுகின்றன.

இந்த வாசகங்களை பிர்அவ்ன் கூறினானா? பிர்அவ்னினது சமூகப் பிரமுகர்கள் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பி இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்று கூறுவதா? அல்லது உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபடுவதா? எது இஸ்லாமிய ஆய்வாக இருக்கும்? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாத குர்ஆனை நிராகரிக்கும் குணம் கொண்டவர்கள் இதை முரண்பாடாகப் பார்க்கலாம். முஃமின்கள் முரண்பாடாகப் பார்க்க மாட்டார்கள். அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் குணம் கொண்டவர்கள் தான் வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுக்கும் மனோநிலைக்கு வருகின்றனர்.

அ(தற்க)வர், இல்லை, நீங்கள் போடுங்கள் என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.

அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக நீர்தான் மேலோங்கி நிற்பீர் என நாம் கூறினோம். (20:66-68)

மேற்படி வசனங்கள் சூனியக்காரர்கள் கயிற்றையும், தடியையும் போட்டபோது அவை பாம்புகள் போன்று தென்பட்டன. அதைப் பார்த்து மூஸா நபி பயந்தார் என்று கூறுகின்றன.

அவர்கள் போட்ட போது, நீங்கள் கொண்டு வந்தது சூனியமே! நிச்சயமாக அல்லாஹ் அதை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரின் செயலைச் சீர்செய்ய மாட்டான் என்று மூஸா கூறினார்.

குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (10:81-82)

அவர்கள் மேற்படி வசனங்கள் கயிறுகளையும், தடிகளையும் சூனியக்காரர்கள் போட்ட போது மூஸா நபி துணிச்சலுடன், இது சூனியம்; அல்லாஹ் இதை அழிப்பான் என்று கூறியதாகக் கூறுகின்றன.

சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது மூஸா நபி பயந்தாரா? துணிச்சலுடன் பேசினாரா? என்ற கேள்விகளை எழுப்பி இந்த வசனங்களுக்கிடையில் முரண்பாடு கண்டால் குர்ஆனின் நிலை என்னவாகும்? என்று சிந்திக்க வேண்டும். எனவே, இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தவறு என்பதை நாம் அறிய முடிகின்றது. உடன்பாடு காணும் எண்ணமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளைத் தேடி நிராகரிப்பதற்கான வழிகளைத் தேட முடியாது! நிராகரிப்பு நிலையிலிருந்து பார்த்தால் இது சரியாகத் தென்பட்டாலும், ஈமானிய மனநிலையிலிருந்து பார்க்கும் போது இது தவறாகத் தெரியும்.

தொடர்ந்து அவர் கூறும் முரண்பாடுகளின் உண்மை நிலை குறித்து ஆராய்வோம்!

சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா?

கடந்த கால அறிஞர்கள் பலரும் இந்த முரண்பாட்டிற்கு(?) உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்கள்! அவர் அளித்த விளக்கத்தை நிச்சயமாக அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். எனினும் ஹதீஸில் இல்லாத, ஆயிஷா(ரலி) அவர்கள் பயன்படுத்தாத வாசகங்களை இணைத்து, எழுதி உடன்பாடு காண முடியாத வகையில் ஹதீஸின் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார். இது தான் பிரச்சினையைப் பூதாகரமாக்கியுள்ளது.

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ, அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், உடன்பாடு காண முடியாத சிக்கலையுண்டாக்குவதற்காகவே “கிணற்றிலிருந்து’ என்ற இல்லாத வாசகத்தை வேண்டுமென்றே இணைத்துள்ளார்.

இந்த வாசகம் ஹதீஸில் இல்லாத வாசகம் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. அவரே இந்த ஹதீஸை இதே பகுதியின் முற்பகுதியில் மொழிபெயர்க்கும் போது

அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3268, (தர்ஜமா பக்கம் 1295)

அவரே செய்த இந்த மொழிபெயர்ப்பில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஹதீஸில் இல்லாத அவர் மேலதிகமாகச் சேர்த்த “கிணற்றிலிருந்து’ என்ற வாசகத்தை நீக்கி விட்டு நாம் இந்த முரண்பாட்டுக்கு உடன்பாடு காணும் முயற்சியில் இறங்குவோம்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் சென்று சூனியம் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துப் பார்க்கின்றார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, தாம் கண்ட காட்சியை விவரிக்கின்றார்கள். நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்ட போது, இல்லை. அல்லாஹ் எனக்கு சுகமளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் அஞ்சுகின்றேன என்கின்றார்கள்.

நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டது, கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லையா? என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லையா? என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகும்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலேயே

கிணற்றுக்குச் சென்று அதை வெளியில் எடுத்தார்கள் என்று கூறி விட்டு, நீங்கள் வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்கின்றார்கள் என்றால், கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்க முடியாது. காரணம், எடுத்ததாக அவர்களே கூறுகின்றார்கள்.

அஹ்மதில் இடம்பெற்ற அறிவிப்பில்,

நீங்கள் அதை மனிதர்களுக்காக வெளிப்படுத்த வேண்டாமா? என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது. எனவே, வெளிப்படுத்தினார்கள என்று வருவது கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது; வெளிப்படுத்தவில்லை என்பது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கூறுகின்றது. இரண்டும் வேறு வேறு அம்சங்களாகும். இந்த வேறுபாடு குறித்து அறிஞர்கள் பேசியுள்ளனர். இதை அறிந்ததனால் இந்த வேறுபாட்டை மக்கள் புரிந்து உண்மையை உணர்ந்து கொள்ள இடமளிக்காத வகையில் ஆயிஷா (ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து என்ற இல்லாத வாசகத்தை நுழைத்துள்ளார். இதன் மூலம் எடுக்கப்பட்டது; எடுக்கப்படவில்லை என்ற இரு செய்தியும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது; கிணற்றிலிருந்து எடுக்கப்படவில்லை என ஹதீஸ் கூறுவதாகச் சித்தரித்துள்ளார். முரண்பாட்டைத் தானாக உண்டுபண்ணியுள்ளார்.

எந்தப் பொருட்களில் சூனியம் செய்யப்பட்டதோ, அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) கேட்காத வாசகத்தை அவர்களது ஹதீஸில் நுழைத்தது பகிரங்க மோசடியாகும். இந்த இவரது மோசடியை நீக்கி விட்டால் ஹதீஸில் முரண்பாடு இல்லை என்பது புரிந்து விடும்.

அல்குர்ஆனின் 22:47, 32:5 ஆகிய வசனங்கள் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் எமது கணிப்பின் படி ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்று கூறுகின்றது. 70:4 ஆம் வசனம் 50 ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்கின்றது. இது குறித்து விளக்கக் குறிப்பு 293 இல்;

ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை (பக்கம் 1249) என்று குறிப்பிடுகின்றார்.

இதே போன்று வெளிப்படுத்தப்பட்டது என்பதும், வெளிப்படுத்தப் படவில்லை என்பதும் முரண்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிப்படுத்தப்பட்டது என்பது கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் கூறுகின்றது; வெளிப்படுத்தப்படவில்லை என்பது அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுகின்றது என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவாகி விடும்.

நாம் எழுதியதைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட விளக்கத்தை இஸ்மாயில் ஸலபி கூறுகிறார்.

அறிவிப்பாளர்களின் வார்த்தைகளில் வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து ஒன்றுக்கொன்று நேர் முரணாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புகிறார்.

இதற்கான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்வது கூடுமா? நபிமொழிகளில் இதற்கு ஆதாரம் உள்ளதா? சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே!

முஹம்மது ஜியாவுல் ஹக், மலேஷியா

தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: திர்மிதீ 3477

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை; மேலும் அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ் மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ் செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூற முடியாது என்று வாதிடுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், “இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை” என்று குறை கூறியுள்ளார்கள்.

மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்…

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491

இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறியப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். அங்கு தான் சில கொட்டைகளை வைத்துப் பின்னப்பட்ட மாலைகளை பயன்படுத்தித் துதிப்பார்கள். எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது.

“யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: பஸ்ஸார்)

சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுவதால் தஹ்பீஹ் மணி மார்க்கத்தில் உள்ளது என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஒரு காரியம் கூடுமா? கூடாதா என்று முடிவெடுக்க குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.