ஏகத்துவம் – ஜூன் 2019

இந்தியத் தேர்தலும் இறையின் ஆறுதலும்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 வரை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது.
ஆசியா கண்டத்தில் அமைந்திருக்கும் நமது இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலைப் பற்றி அலசுவீர்கள் என்று பார்த்தால் இங்கிருந்து ஐரோப்பா கண்டத்திற்குத் தாவி விட்டீர்களே என்று கேட்கலாம். கேள்வி நியாயம் தான். ஆனால் அதிலும் ஒரு பொருத்தம் இருப்பதால் தான் உக்ரைனுக்கு ஒரு தாவல்.
அங்கு நடந்த அதிபர் தேர்தலில் 41 வயது நிரம்பிய இளைஞர் வொலாதிமீர் ஸெலன்ஸ்கி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அவரது வெற்றி அறுதிப் பெரும்பான்மையாக அமைந்தது.
இவர் செய்த புரட்சி என்ன? ‘மக்களின் சேவகன்’ என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் மூன்றாண்டுகளாக நடித்திருக்கின்றார். அதில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள், லஞ்ச லாவண்யங்கள், வேலையில்லாத் திண்டாட்டங்கள், நிறைவேற்றப்படாத திட்டங்கள், பொய் வாக்குறுதிகளைப் போட்டு வறுத்தெடுக்கின்றார். அவ்வளவு தான் அவர் செய்த புரட்சி.
மக்களுக்கு இது போதாதா? நடிப்பிற்கும் நடப்பிற்கும் வித்தியாசம் பார்க்காதவர்கள், நிழலுக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றார்கள் என்று நினைத்த நமக்கு உக்ரைனிலும் இப்படிப் படித்த சிந்தனையாளர்கள் (?) இருக்கின்றார்கள் என்பது ஓர் ஆறுதல் அளிக்கும் விஷயம் தானே!
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆந்திராவில் என்.டி.ஆர். போன்றோர் நடிகர்கள் தான். ஆனால் கடவுளர்களாகப் பார்க்கப்பட்டனர். அவர்களது அரசியல் பிரவேசத்திற்கும் ஆட்சிப் பிடிப்பிற்கும் காரணமாக அமைந்தது வெள்ளித் திரை தான். மக்கள் இவர்களிடம் பார்த்தது நடிப்பைத் தான்.
அடுத்து, இந்திய வாக்காளர்கள் அறிவை விட உணர்ச்சிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதற்கு நாம் எந்த ஒரு நாட்டையும் முன்மாதிரியாகவும் முன்னுதாரணமாகவும் காட்ட முடியாது. உலகில் அந்தப் பெருமையை இந்தியா மட்டும் பெற்றிருக்கின்றது. வேறெந்த நாடும் அதைத் தட்டிப்பறிக்க முன்வரவில்லை.
இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31ல் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதும் அவருக்கு அடுத்து பிரதமர் வேட்பாளராக ராஜீவ் காந்தி நிறுத்தப்பட்டு காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்தது. அதில் காங்கிரஸ் மிருக பலத்துடன் மூன்றில் இருமடங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.
அதே கால கட்டத்தில் தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, வாதமடித்து வாய் பேச முடியாமல் இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. தாயில்லாத பிள்ளைக்கு (ராஜிவ் காந்திக்கு) மத்தியிலும், வாயில்லாத பிள்ளைக்கு (எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு) மாநிலத்திலும் வாக்களியுங்கள் என்று கூட்டணிக் கட்சிக் காரர்கள் வாக்கு சேகரித்தார்கள். அந்த அனுதாபம் மக்களிடம் எடுபட்டது. அது வாக்கு அறுவடையை அளித்தது.
1991ல் மீண்டும் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி. அப்போது ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அப்போதும் அனுதாப அலை கை கொடுத்தது. அதன் பலனாக திரைப்பட நாயகி ஜெயலலிதா அறுதிப்பெரும்பான்மையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார்.
இவ்வளவு உதாரணங்கள், மேற்கோள்கள் ஏன்? எதற்கு என்று கேட்கிறீர்களா? இந்திய வாக்காளர்களுக்கு மத்தியில் நிஜத்தை விட நிழல் தான் எடுபடும். அறிவை விட அனுதாபம் தான் எடுபடும் என்பதற்காகத் தான்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்தர தாமோதர தாஸ் மோடி மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். பொய்யை விதைத்து வாக்குகளை அறுவடை செய்திருக்கின்றார். தேர்தல் சமயத்தில் அவர் திட்டமிட்டபடி பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் அவருக்குத் தேர்தலில் அறுவடையைத் தந்திருக்கின்றது. நாட்டைக் காப்பாற்றுவதற்கு மோடியை விட்டால் வேறு ஆளில்லை என்ற பிம்பத்தை நன்றாகவே இந்தத் தேர்தலில் பிரபலப்படுத்தி விட்டார். தேசப்பற்று என்றதும் அதில் சமரசம் செய்வதற்கு எந்த ஓர் எதிர்க்கட்சியும் தயாராகாது. இதை மோடி லாவகமாகக் கையாண்டு விட்டார்.
இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றால் பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் அரசியல் வல்லுநர்கள் கணித்திருந்தார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மாட்டிற்காக நடந்த படுகொலைகள், ரஃபேல் ஊழல் என பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதால் பாஜக வெல்ல முடியாது என்ற நிலையே இருந்தது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றால் அதில் தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்று பலரும் நிரூபித்த பின்னரும் அதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒருங்கிணைந்து போராடவில்லை. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் தான் தேர்தலில் பங்கேற்போம் என்று உறுதியாக நிற்கவில்லை.
ஏற்கனவே தேர்தல் ஆணையம் முற்றிலுமாக பாஜக ஆதரவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை மறுக்க இயலாது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் கூட நூற்றுக்கு நூறு என்ற விகிதத்தில் அத்தனை தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது நம்பும்படியாக இல்லை.
மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் தென்மாநிலங்களிலும் வடக்கே ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இந்தத் தில்லுமுல்லு வேலைகள் செய்ய சாத்தியமில்லை. வட மாநிலங்களில் இருக்கின்ற அத்தனை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தபடியாக, எதிர்க்கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பாஜகவை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் மாநிலக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் பதவி கனவுடன் செயல்பட்டதால் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. குறிப்பாக உ.பி.யில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை. உ.பி.யில் 64 இடங்களை பாஜக கைப்பற்றுவதற்கு இது காரணமாக அமைந்தது.
எது எப்படியிருந்தாலும் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மோடி வரவு அவர்களுக்கு எந்த அச்சத்தையும் கொடுக்கப் போவதில்லை.
இஸ்லாமிய சமுதாயம் ஃபிர்அவ்னை விட ஒரு கொடியவனைச் சந்தித்திருக்க முடியாது. இறை நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரவேல் சந்ததியினரை ஃபிர்அவன் கருவறுத்தான். அப்போது மூஸா (அலை) அவர்கள் சொன்ன அறிவுரையும் ஆறுதலும் இது தான்.
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோருக்கே சாதகமாக இருக்கும்’’ என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்’’ என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்’’ என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் 7:128, 129)
மூஸா நபியின் சமுதாயத்தினர் பொறுமை காத்தனர். அதற்குரிய பலனை அடைந்தனர்.
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.
(அல்குர்ஆன் 7:137)
மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் ஃபிர்அவ்ன் வெறியேற்ற நினைத்தான். ஆனால் வல்ல அல்லாஹ் அவனை அழித்தான்.
இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள மோடியைப் பற்றி ஓர் அச்சம் இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உள்ளது. ஆனால் ஃபிர்அவ்னை விட இந்த மோடி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மோடி என்ன ஆட்டம் போட்டாலும் அது இஸ்லாமிய சமுதாயத்தைப் பாதிக்காது. மாறாக அவர்களைக் கொள்கை ரீதியாக அது ஒன்றுபடுத்தும், உறுதிப்படுத்தும்.
ஈமானிய அடிப்படையில் மோடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற போது இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத் தான். அப்போது இந்தப் பூமி அநியாயக்காரர்களுக்கு அல்ல, ஏகத்துவவாதிகளுக்குத் தான் என்பது உறுதியாகிவிடும். இதற்கு ஒரே நிபந்தனை, இந்தச் சோதனையில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்காமல் உண்மை முஃமின்களாக இருக்க வேண்டும். இதைத் தான் அல்குர்ஆன் சொல்கின்றது.
தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
(அல்குர்ஆன் 3:139)
இந்தச் சமுதாய மக்களிடம் ஈமான் இருக்கின்ற வரை அவர்கள் எதற்கும் கவலைப்படவோ, கலங்கவோ தேவையில்லை. திருக்குர்ஆன் ஏற்கனவே அவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கின்றது.
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 3:26)
அல்லாஹ்வே ஆட்சி அதிகாரத்தைத் தான் நாடியவர்களுக்குக் கொடுக்கின்றான் என்று முஸ்லிம்கள் அதைக் கடந்து செல்வார்கள்.
இப்படி முஸ்லிம்கள் கடந்து சென்றாலும் அவர்கள் முன்னிலையில் ஒரு கடமையும் இருக்கின்றது. அது விகிதாச்சார பிரதிநிதித்துவ ஆட்சி முறையைக் கொண்டு வருவதாகும்.
அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஜனநாயக வரைமுறைகளுக்குள் நின்று களமாடினால் அந்தக் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரமளானுக்குப் பின்
சபீர் அலி

«காடை வெயில் உக்கிரத்துடன் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் ரமலானை எதிர்நோக்கினோம்.
அப்போது வெயிலின் வெப்பத்துடன் ரமலானை எப்படி கடக்கப்போகிறோம்? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் கவலையாக தொற்றிக்கொண்டது.
ஆனால், மிக விரைவாக ரமலான் மாதம் கடந்துவிட்டது. அத்தகைய ஓர் உணர்வைக் கொடுத்து சிரமத்தை இறைவன் இலேசாக்கியுள்ளான்.
தற்போது ரமலான் மாதத்தை நிறைவு செய்துவிட்டு இருக்கும் நாம் என்ன மாற்றத்தை வாழ்வில் கண்டிருக்கிறோம்?
ரமலானுக்கு பிந்தைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம்? என்ற கேள்விகள் நம் அனைவரின் முன்னாலும் நிற்கிறது.
ரமலான் மாதம் எதற்காக?
இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் பசி, தாகத்தை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகவோ, வருடத்தில் பதினொரு மாதங்கள் உண்டு பருகியவர்கள் ஒரு மாத காலம் பசித்திருக்கும் போதுதான் உணவின் அருமையும் தாகித்து இருக்கும் போதுதான் நீரின் அருமையும் தெரியும் என்பதற்காகவோ ரமலான் மாதத்தின் நோன்பை இறைவன் கடமையாக்கவில்லை.
மாறாக, படைத்த இறைவனைப் பயந்து நடக்கின்ற இறையச்சம் எனும் பயிற்சிக்காகத்தான் கடமையாக்கியிருக்கின்றான்.
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆவீர்கள்.
அல்குர்ஆன் 2:183
இந்த ரமலான் மாதம் மூலமாக நம்மை நாம் பக்குவப்படுத்தி இறையச்சத்தை உள்ளத்தில் வார்த்தெடுத்துக் கொண்டு தீமைகளிலிருந்து விலகி நிற்கும் நன்மனிதர்களாக ஆவதற்காகவே இறைவன் நோன்பைக் கடமையாக்கியுள்ளான்.
அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பிற்கான முக்கிய விதிமுறையை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
‘‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903
ரமலானில் உணவை, பானத்தைத் துறந்துவிட்டு இருப்பது நமக்கு இறைவனிடத்தில் பயனளிக்க வேண்டுமெனில் அத்துடன் சேர்த்து தீய காரியங்களையும் துறக்க வேண்டும்.
அப்போதுதான் இறைவனிடத்தில் நமக்கான கூலியைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லையேல் நாம் பசித்து, தாகித்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை.
ஒருவர் தவறுகளை விட்டு விலகாமலிருக்கும் போது பட்டினியாக இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ளப்படுமே தவிர இறைவனுக்காக நோன்பிருந்தார் என்று எடுக்கப்படாது.
இதைப் பெரும்பாலும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். அதை நாம் மக்களிடம் ரமலானில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் காண முடியும்.
ரமலானுக்கு முன்…
பொய், புறம், கோள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களாகத் தன் வாழ்க்கையைக் கழித்திருப்பார்கள்.
சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சினிமா படங்களிலும் சீரியல்களிலும் மூழ்கியிருந்திருப்பார்கள்.
சிலர் புகை பிடிப்பது, இன்னபிற போதைப் பொருட்கள் என்று தன் வாழ்க்கையை போதையுடன் கழித்திருப்பார்கள்.
இதுபோன்ற இன்னும் ஏராளமான தீமைகள் ஒவ்வொரு மனிதரிடமும் குடி கொண்டிருந்திருக்கும்.
இன்னும் பலர் பள்ளிவாசலுக்கு வழி தெரியாதோர் போல் இருந்திருப்பார்கள்.
ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றாதோராக இருந்திருப்பர்.
பயான் சொற்பொழிவுகளில் பங்கெடுக்காதோராக இருந்திருப்பர்.
சட்டைப் பையிலிருந்து சல்லிகளை எடுத்து தர்மம் செய்ய மனமில்லாதோராக இருந்திருப்பர்.
இன்னும் இதுபோல் மார்க்கத்தோடு எவ்விதத் தொடர்புமில்லாமல் வாழ்க்கையைக் கழித்திருப்பார்கள்.
ரமலானில்…
இவ்வாறு குடி கொண்டிருந்த எல்லாத் தீமைகளையும் ரமலான் வந்துவிட்டது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மக்கள் துறந்தார்கள்.
பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றும் நிரம்பி இடப்பற்றாக்குறைக்கு உள்ளாகும்.
ஒவ்வொரு வீட்டிலும் குர்ஆன் தூசு துடைக்கப்பட்டு எடுக்கப்படும்.
மிஸ்கீன்களுக்கு உதவ சில்லறைகள் மாற்றி வைக்கப்படும்.
கடமையான தொழுகையை எண்ணியும் பார்த்திடாதவர்கள் கூட சுன்னத்தான இரவுத் தொழுகையில் பங்கெடுப்பார்கள்.
சொற்பொழிகளையும் கேட்பார்கள்.
இப்படி ஓராண்டு செய்த பாவத்திற்கு ஒரு மாதத்தில் பரிகாரம் செய்துவிடலாம் என்று முனைப்புக் காட்டுவார்கள்.
சிலர் ஸஹர் சாப்பிட்டு உறங்கியவர்கள் இஃப்தாருக்கு எழுவார்கள். இடையில் தொழுகைகளெல்லாம் கனவில் நிகழ்ந்திருக்கும்.
சிலர் இஃப்தார் முடிந்ததும் புகைபிடித்தல் எனும் கடமையான ஒரு வேலையைத் தவறாமல் செய்துவிடுவார்கள்.
சிலர் பசித்திருப்பார்கள், தாகித்திருப்பார்கள். மற்ற நாட்களுக்கும் ரமலானுக்கும் அவர்களிடமுள்ள வித்தியாசம் அதுவொன்றுதான்.
அல்லாஹ் தனது மன்னிப்பை அள்ளித் தரும் இம்மாதத்திலும் பசித்திருப்பதைத் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தாமலிருந்தால் அது நமக்கு மன்னிப்பைப் பெற்றுத் தருமா?
இஃப்தார் முடிந்ததும் தீமைகளைச் செய்வதன் மூலம், பசித்திருந்தால் தான் அல்லாஹ் பார்க்கிறான் என்று எண்ணுகிறோமா? இது இறையச்சமா?
இவ்வாறு இறைவனது மன்னிப்பை பெற்றுக் கொள்ளாமல் யார் தனது ரமலானைக் கடக்கிறாரோ அவருக்கு ரமலான் தரும் பரிசு இதோ!
‘‘ஒருவன் ரமலான் மாதத்தை அடைந்து, அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 3468 (ஹதீஸின் சுருக்கம்)
இறைவனது மன்னிப்பு, அருள் மற்றும் ஒரு நன்மைக்கு எழுநூறு மடங்கிற்கும் மேல் எண்ணிலடங்கா நன்மைகளைப் பெற்றுத்தரும் நன்மைக் களஞ்சியமான ரமலான், நாம் தீமைகளை விட்டு விலகவில்லையென்றால் சாபத்தைப் பெற்றுத் தந்துவிடும் என்பதை நபிகளார் நமக்கு எச்சரிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி ரமலானில் பலதரப்பட்ட நோன்பாளிகளை நாம் கண்டோம்.
ரமலானுக்குப் பின்…
நோன்புக் காலம் என்பது நமக்கான ஒரு இறையச்சப் பயிற்சி என்பதையும் தீமைகளை விட்டு விலகுவதே அதன் வெளிப்பாடு என்பதையும் அவ்வாறின்றி தீமைகளுடன் வாழ்பவர் பசித்திருப்பதில் பலன் ஏதும் இல்லை என்பதையும் மேலே பார்த்தோம்.
ரமலானில் அமல்களில் மூழ்கி, தீமைகளிலிருந்து விலகிய மக்கள் ரமலான் முடிந்த மறுநாள் பெருநாள் அன்றே தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றனர்.
பெருநாள் அன்று ஏதோ மற்ற மதத்தவர்களது பண்டிகையைப் போல சினிமா தியேட்டருக்குச் சென்று வருகிறார்கள்.
மக்கள் அப்படியே மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகின்றார்கள்.
நோன்புக் காலங்களில் மட்டும் அமல்கள் செய்கிறோம், தீமைகளிலிருந்து விலகுகிறோம் என்றால் சரி செய்ய வேண்டியது நம் செயல்பாடுகளை மட்டும் அல்ல! ஈமானையும் தான்.
ஏனெனில் ஏதோ நோன்புக் காலத்தில் மட்டும்தான் இறைவன் கண்காணிக்கிறான் என்பதைப் போன்ற ஒரு அலட்சியம் நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளது. இறைவனின் மேலுள்ள அத்தகைய அலட்சிய நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அமல்களில் பிரதிபலிக்கிறது.
ரமலானில் சொற்பொழிவுகளில் நபித்தோழர்கள் நன்மையில் விரைந்தது பற்றியும் தீமைகளைக் கண்டால் வெகுதூரம் விலகியது பற்றியும் செய்திகளைக் கேள்விப்படுகிறோமே! அதுவெல்லாம் ரமலானில் மாத்திரம் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள் என்றா நமக்கு சொல்லித் தருகிறது?
எல்லா நேரங்களிலும் தான் அமல்களில் விரைந்தார்கள், தீமைகளிலிருந்து விலகினார்கள். அதனால் தான் அவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை சமுதாயத்தில் இறைவன் வழங்கினான்.
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித் தோழர்களில் சிலர் பள்ளிவாசலின் தூண்களை நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்) என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 625
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: முஸ்லிம் 1319
இந்த நன்மைகளெல்லாம் நபித்தோழர்கள் தங்கள் வாழ்வில் செய்த்து நோன்புக் காலங்களில் மட்டும்தானா?
சுன்னத்தான வழிபாடாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு செய்திருக்கிறார்கள்.
இறைவனிடம் சுவன மாளிகையைப் பெறுவதற்கு அச்செய்தியைக் கேட்டதிலிருந்து அமலை விடாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
ரமலானோடு கடமையையும் சேர்த்து மறக்கின்ற நாம் எங்கே? ரமலான் அல்லாத நாட்களிலும் சுன்னத்தைக் கூட விடாமல் செய்த இவர்கள் எங்கே?
இவர்கள் ஒரு புறம் என்றால் இவர்களுக்கு இப்படிப் பயிற்சி கொடுத்த, பக்குவப்படுத்திய நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்.
இரவு கண் விழித்துத் தொழுவார்கள். நின்று வணங்கியதன் விளைவு அவர்களின் பாதங்கள் வீக்கம் பெறும் என்றால் எவ்வளவு தொழுதிருப்பார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் “தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)’’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’’ என்று கேட்டார்கள்.
நூல்: புகாரி 4836
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சுவனம் உறுதி என்று நன்மாராயம் சொல்லப்பட்ட தலைவர் இவ்வாறு அமல்செய்கிறார்கள் என்றால் நாம் எப்படியிருக்க வேண்டும்.
நமது பாவங்கள் மன்னிக்கப்படுமா? சுவனத்திற்குச் செல்வோமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியோடு பயணிக்கும் நாம் எப்படி நன்மைகளில் விரைய வேண்டும்?
நபித்தோழர்களை அல்லாஹ்வுடைய தூதர் பக்குவப்படுத்துவதற்காகப் பயன்படுத்திய அதே உபதேசங்கள் தானே நமக்கும் தரப்பட்டுள்ளன.
ஆனால் அதை ஏற்றுள்ள நாம் ஒவ்வொரு நாளும் மார்க்க வழியில் பயணித்து தீமைகளிலிருந்து விலகி நிற்காமல் ரமலானில் மட்டும் விலகி நிற்பது எவ்விதத்தில் நியாயம்?
இறைவனும் மார்க்கமும் ரமலானிற்கு மட்டுமல்ல! ஒவ்வொரு நாளும் தான்.
ஒரு மாத காலம் இறைவன் கொடுக்கும் இறையச்சப் பயிற்சி, அம்மாதத்தாடு முடித்துக் கொள்வதற்கு அல்ல! காலம் முழுவதும் தொடர்வதற்கு!

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – தொடர் 35
சுப்ஹானல்லாஹ் ஒரு ஷிர்க்! சொல்கிறார் கஸ்ஸாலி
மூலம் : முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அலீ மக்ராவி
தமிழில் : எம்.ஷம்சுல்லுஹா

சுப்ஹானல்லாஹ் சொல்வது ஷிர்க்!
இது கஸ்ஸாலி திருவாய் மலர்ந்தருளிய மாணிக்க வாசகமாகும். அதைக் கீழ்காணும் சம்பவத்தில் குறிப்பிடுகின்றார். அதன் மொழிபெயர்ப்பை இப்போது பார்ப்போம்.
بيان جملة من حكايات المحبين وأقوالهم ومكاشفاتهم
ولذلك حكى أن شاهدا عظيم القدر من أعيان أهل بسطام كان لا يفارق مجلس أبى يزيد فقال له يوما أنا منذ ثلاثين سنة أصوم الدهر لاأفطر وأقوم الليل لا أنام ولا أجد فى قلبى من هذا العلم الذى تذكر شيئا وأنا أصدق به وأحبه فقال أبو يزيد ولو صمت ثلثمائة سنة وقمت ليلها ما وجدت من هذا ذرة قال ولم قال لأنك محجوب بنفسك قال فلهذا دواء قال نعم قال قل لى حتى أعمله قال لا تقبله قال فاذكره لى حتى أعمل قال اذهب الساعة إلى المزين فاحلق رأسك ولحيتك وانزع هذا اللباس واتزر بعباءة وعلق فى عنقك مخلاة مملوءة جوزا واجمع الصبيان حولك وقل كل من صفعنى صفعة أعطيته جوزة وادخل السوق وطف الأسواق كلها عند الشهود وعند من يعرفك وأنت على ذلك فقال الرجل سبحان الله تقول لى مثل هذا فقال أبو يزيد قولك سبحان الله شرك قال وكيف قال لأنك عظمت نفسك فسبحتها وما سبحت ربك فقال هذا لا أفعله ولكن دلنى على غيره فقال ابتدئ بهذا قبل كل شىء فقال لا أطيقه قال قد قلت لك أنك لا تقبل
மதிப்பும் மரியாதையும் நிறைந்த பிரமுகர் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து அபூயசீத் பிஸ்தாமியின் அவைக்கு வருகையளித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பிஸ்தாமியிடம், ‘‘நான் முப்பது ஆண்டுகள் காலம்பூராவும் நோன்பு நோற்கின்றேன். இடையில் ஒரு நாள் கூட நான் நோன்பை விட்டது கிடையாது. அது போல் இரவில் தூங்காமல் நின்று தொழுகின்றேன். ஆனால் நீங்கள் கூறக்கூடிய ஞானத்திலிருந்து என்னுடைய உள்ளத்தில் எதையுமே நான் பெறமுடியவில்லையே? அதே சமயம் அதை நான் உண்மையென்று நம்புகின்றேன். அதை நேசிக்கவும் செய்கின்றேன்’’ என்று அந்த பிரமுகர் தெரிவித்தார். அதற்கு பிஸ்தாமி பதிலளிக்கும் போது, ‘‘நீ முப்பது ஆண்டுகள் என்ன? முன்னூறு ஆண்டுகள் நோற்றாலும் இந்த ஞானத்திலிருந்து அணுவளவு கூட உன்னால் கற்க முடியாது. காரணம் உன் உள்ளத்தின் காரணமாக உனக்கு திரையிடப்பட்டிருக்கின்றது’’ என்று சொன்னார். ‘‘அப்படியானால், இந்நோய் நீங்க என்ன மருந்து?’’ என்று கேட்டார். ‘‘அதற்கு மருந்து இருக்கின்றது’’ என்று பிஸ்தாமி சொன்னதும் ‘‘அந்த மருந்தை சொல்லுங்கள். அப்போது தான் அதை நான் செயல்படுத்த முடியும்’’ என்று பிரமுகர் கேட்டார். ‘‘அதை நான் சொல்வேன்.ஆனால் நீ அதை ஏற்றுக்கொள்ளமாட்டாயே’’ என்று பிஸ்தாமி பதிலளித்தார். ‘‘கூறுங்கள். நான் அதை செயல்படுத்துகின்றேன்’’ என்று மீண்டும் பிரமுகர் வலியுறுத்திக் கேட்டார். ‘‘நீ இப்போதே நாவிதரிடம் சென்று உன்னுடைய தலைமுடியை மழித்து தாடியையும் எடுத்து விடு. இந்த ஆடையைக் களைந்து விட்டு நீ ஒரு மேலங்கியை அணிந்துக் கொள். கழுத்தில் பாதாம் பருப்புகள் நிறைந்த உணவுப் பையை மாட்டிக் கொள்! கூடவே சிறுவர்களை உன்னைச் சுற்றிலும் திரட்டிக் கொண்டு, ‘என்னை ஒரு முறை அறையுங்கள்! அவ்வாறு அறைபவருக்கு கொஞ்சம் பாதாம் பருப்பு தருகின்றேன்’ என்று சொல்! கடைத்தெருவுக்கு சென்று மக்கள் முன்னிலையில் வீதிகளில் வலம் வா! இதே கோலத்தில் உன்னை தெரிந்தவருக்கு மத்தியில் சுற்றி வா!’’ என்று கூறினார். இதைக் கேட்டதும், பிரமுகர் ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்) இது மாதிரி என்னைச் செய்யச் சொல்கின்றீர்களே!’’ என்று ஆதங்கப்பட்டார். இவ்வாறு சொன்ன மாத்திரத்தில் பிஸ்தாமி ‘‘சுப்ஹானல்லாஹ் என்று நீ சொன்னது ஷிர்க் (அதாவது ஓர் இணைவைப்பு) ஆகும்’’ என்று குறிப்பிடுகின்றார். ‘‘இது எப்படி ஷிர்க் ஆகும்?’’ என்று பிரமுகர் கேட்கின்றார். ‘‘நீ உன்னுடைய நஃப்ஸை பிரம்மாண்டப்படுத்தி அதைத் தான் நீ தூய்மைப்படுத்துகின்றாய். உன்னுடைய இறைவனை நீ தூய்மைப்படுத்தவில்லை’’ என்றார். ‘‘இதை நான் செய்யத் தயாரில்லை. இதல்லாமல் வேறு வழிமுறையை எனக்கு காட்டுங்கள்’’ என்று பிரமுகர் சொல்லவே ‘‘இதை முதலில் செய்’’ என்று பிஸ்தாமி கூறுகின்றார். ‘‘அதை என்னால் செய்ய இயலாது’’ என்று பிரமுகர் மறுத்து விடுகின்றார். ‘‘அதனால் தான் நீ அதை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்று முதலில் நான் சொன்னேன்’’ என பிஸ்தாமி தெரிவித்தார்.
இஹ்யா உலூமித்தீன், பாகம் 4, கிதாபுல் மஹப்பத்தி வல் இஷ்க் வர்ரிளா (அன்பு, ஆசை, திருப்தி தொடர்பான அத்தியாயம்)
பாபு பயானி ஜும்லத்தின் மின் ஹிகாயாத்தில் முஹிப்பீன் வ அக்வாலிஹிம் வ முகாஷாஃபாதிஹிம் (நேசர்களின் நிலைகள் மற்றும் அவர்களின் ஞான வெளிப்பாடுகள் பற்றிய தொகுப்பை விவரிக்கும் பாடம்)
சுப்ஹானல்லாஹ் சொல்வது ஷிர்க்! இது சூஃபிஸத்தின் உச்சக் கட்ட உளறலாகும். ஏகத்துவக் கொள்கையையே இடித்துத் தரைமட்டமாக்கும் இருட்டுச் சித்தாந்தத்தை இஹ்யாவின் ஆசிரியர் கஸ்ஸாலி தூக்கிப் பிடிக்கின்றார். ‘அல்லாஹ் தூய்மையானவன்’ என்று சொல்வது இணைவைப்பு என்றால் இந்த விநோத விளக்கத்தை என்னவென்று சொல்வது? திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் சுப்ஹானல்லாஹி என்று அல்லாஹ்வே சொல்வதாகவும் வருகின்றது.
அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
அல்குர்ஆன் 37:159
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்
அல்குர்ஆன் 37:180
அடியார்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற சோதனையின் போதும் சொல்வதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்’’ என்றனர்.
அல்குர்ஆன் 68:29
இந்த வசனத்தில் பாதிக்கப்பட்ட தோட்டத்துக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையின் போது அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகின்றார்கள். மனிதன் தனக்கு ஒரு சோதனை ஏற்படும் போது அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துவது என்பது குர்ஆன் கூறுகின்ற வழிமுறையாகும். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மனிதன் ஒன்றைத் தவறாகச் செய்யும் போது சுப்ஹானால்லாஹ் சொல்வதை நபி வழியில் நாம் காண முடிகின்றது.
நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?’ என்று கேட்டதற்கு, ‘குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்’ என்றேன். அப்போது ‘ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 283
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தான் பிஸ்தாமியின் சீடர் சொல்கிறார். பிஸ்தாமி சொல்கின்ற கட்டளை தனக்கு ஒரு சோதனையான காரியம் என்பதற்காக சுப்ஹானல்லாஹ் என்று சொல்கின்றார். இதில் என்ன இணை வைப்பு வந்து விட்டது? தன்னை உயர்த்தி அல்லாஹ்வைத் தாழ்த்துகின்ற நிலை இதில் எங்கே வருகின்றது? அதனால் கஸ்ஸாலியின் இந்த வாதம் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இது நாம் பிஸ்தாமியிடத்தில் நாம் காணக்கூடிய வழிகேடாகும்.
இப்போது பிஸ்தாமியிடத்திலும் பிரமுகரிடத்திலும் காணப்படும் மார்க்கத்திற்கு முரணான வழிமுறைகளைப் பார்ப்போம்.
‘‘நான் முப்பது ஆண்டுகள் காலம் பூராவும் நோன்பு நோற்கின்றேன். இடையில் ஒரு நாள் கூட நான் நோன்பை விட்டது கிடையாது. அது போல் இரவில் தூங்காமல் நின்று தொழுகின்றேன். ஆனால் நீங்கள் கூறக்கூடிய ஞானத்திலிருந்து என்னுடைய உள்ளத்தில் எதையுமே நான் பெறமுடியவில்லையே? அதே சமயம் அதை நான் உண்மையென்று நம்புகின்றேன். அதை நேசிக்கவும் செய்கின்றேன்’’ என்று அந்தப் பிரமுகர் தெரிவித்தார். இது பிஸ்தாமியிடம் பிரமுகர் கொடுக்கின்ற வாக்குமூலமாகும். பகல் பூராவும் நோன்பு நோற்கவும் இரவில் நின்று தொழவும் மார்க்கத்தில் அனுமதியிருக்கின்றதா? என்றால் இல்லை.
நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்’ என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்’ என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணந்து கொள்ளமாட்டேன்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5063
இரவு முழுவதும் நின்று தொழுவதும் பகல் பூராவும் நோன்பு நோற்பதும் தன்னுடைய வழிமுறை இல்லை. அதையும் தாண்டி அதைக் கடைப்பிடிப்பவர் தன்னைச் சார்ந்தவரில்லை என்பதையும் சேர்த்தே சொல்லி விடுகின்றார்கள். வருடம் பூராவும் ஒருவர் நோன்பு நோற்றால் அது இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இத்தனைக்குப் பிறகும் பிரமுகர் பிஸ்தாமியிடம் நான் காலம் பூராவும் நோன்பு நோற்றேன். இரவு முழுவதும் நின்று தொழுதேன் என்று சொல்கின்றார். அதை பிஸ்தாமி ஆமோதிக்கவும் செய்கின்றார். இதிலிருந்து இவர்கள் பின்பற்றுவது தூய இஸ்லாமிய மார்க்கம் இல்லை. இவர்கள் ஒரு தனிவழியைப் பின்பற்றுகின்றார்கள் என்பதைத் தான் பிஸ்தாமி, பிரமுகரின் சம்பவம் எடுத்துச் சொல்கின்றது.
‘நீ இப்போதே நாவிதரிடம் சென்று உன்னுடைய தலைமுடியை மழித்து, தாடியையும் எடுத்து விடு’ பிஸ்தாமி, பிரமுகர் சம்பவத்தில் இடம்பெறுகின்ற இன்னொரு மார்க்கத்திற்கு முராணன வழிமுறையாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: புகாரி 5892
தாடியை வைக்கும்படி மார்க்கம் வலியுறுத்துகின்றது. ஒரு சில சுன்னத்துகள் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பவர்கள், கிறிஸ்துவர்கள், யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுக் கடைப்பிடியுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். அப்படிப்பட்ட அடையாள சுன்னத்தில் உள்ளது தான் தாடி வைப்பதாகும். அந்த அடையாளத்தையும் தடந்தெரியாமல் துடைத்தெடுக்கும் வேலையைத் தான் பிஸ்தாமி போன்றவர்கள் செய்கின்றார்கள். பிஸ்தாமி வகையறாக்கள் பின்பற்றுவது சுத்தமாக பிறமதக் கலாச்சாரங்களாகும். அதற்கு கஸ்ஸாலி இஸ்லாமிய வர்ணம் தீட்டி முஸ்லிம்கள் சந்தையில் விற்பனை செய்வதை நாம் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட பிற மதக் கலாச்சாரங்களின் கதைத் தொகுப்பாகப் திகழும் இஹ்யாவை, முஸ்லிம்களைக் கரையேற்றுகின்ற, கடைத்தேற்றுகின்ற நூல் நம்ப வைக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

ஏந்தல் நபியின் எளிய வாழ்க்கை
எம்.முஹம்மது சலீம் M.I.Sc.

ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். அவர் நினைத்தால் பல இடங்களை விலைக்கு வாங்க முடியும். பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். நிறைய வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், ஏழை என்று அடுத்தவர்கள் சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கிறது. ஓலைக் குடிசையில் குடும்பத்தோடு வசிக்கிறார். எல்லோரும் அணிவது போன்றே இயல்பான ஆடையை அணிகிறார். பெரும்பாலும் எங்கு போனாலும் நடந்து போவது தான் அவருடைய இயல்பு.
இந்த மாதிரியான நபரைப் பற்றி மக்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்? நாமும் கூட என்ன சொல்வோம்? அவர் பற்றில்லா வாழ்க்கையை வாழ்கிறார் என்று அனைவரும் ஒப்புக் கொள்வோம், இல்லையா? இப்படித்தான் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது.
மக்காவில் இருக்கும் வரை மிகப்பெரும் செல்வந்தராக இருந்த நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு வந்த பிறகு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதரென தம்மை ஏற்றுக் கொண்ட மக்களிடம் எவ்வித ஆதாயத்தையும் எதிர்பார்க்கவில்லை. எவரையும் சார்ந்து இருக்காமல் சுயமரியாதையோடு வாழ அவர்களிடம் ஒரு திட்டம் இருந்தது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். ‘கிடாய்க் குட்டியா? பெட்டையா?’ என்றார்கள். அவர் ‘கிடாய்’ என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி ‘‘நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி)
நூல்: அஹ்மத் 17172
முஹம்மது நபிக்கு ஓர் ஆட்டுப் பண்ணை இருந்தது. அதன் வருவாய்க்கு ஏற்ப தமது குடும்பத்தின் பொருளாதார தேவையைத் திட்டமிட்டுக் கொண்டார்கள். பிறருக்கு உதவி செய்யவும் அந்தப் பண்னை கைகொடுத்தது.
நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று, தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.
அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி)
நூல்: முஸ்லிம் 3831
இங்கு சற்று யோசித்துப் பாருங்கள். ஆட்சியாளர்; ஆன்மீகத் தலைவர் எனும் ரீதியில் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும் பகட்டில்லாமல் வாழ்ந்தார்கள். எளிமையின் சிகரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டால் மிகையாகாது.
அந்தளவுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்று அனைத்திலும் தாமாக விரும்பி ஏழ்மையைத் தேர்வு செய்து கொண்டார்கள். இதோ தூதரின் உணவு முறையை எப்படி இருந்தது என்று பாருங்கள்.
‘‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். ‘‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்’’ என விடையளித்தார்.
அறிவிப்பவர்: உர்வா
நூல்: புகாரி 2567, 6459
பேரிச்சம் பழமும் தண்ணீரும் தான் நபிகளாரின் அன்றாட உணவாக இருந்தது. விதவிதமாக சமைத்து சாப்பிடவில்லை. இவ்வாறு மூன்று மாதங்கள் சமைத்துச் சாப்பிடாத நிலையில் நாம் இருக்கிறோமா?
வாரத்தில் ஒரு நாள் கூட அடுப்பு எறியாத நிலையில் தவிக்கும் ஏழை மக்கள் மிகவும் குறைவு தான். வாரத்தில் பெரும்பாலான நாட்கள் சாதாரண உணவையாவது சமைத்துச் சாப்பிடும் நிலை பலருக்கும் இருக்கவே செய்கிறது. இந்த இயல்பான நிலையைக் கூட முஹம்மது நபி ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சில நேரங்களில் பசியோடு தவித்துள்ளார்கள். இந்த நிலை எந்த ஆட்சித் தலைவராவது சந்தித்து இருப்பாரா?
சிலர் தன்னளவில் எளிமையைக் கடைப்பிடிப்பது உண்டு. ஆனால் தமது குடும்பத்தாருக்கு எல்லா விதமான சகல வசதிகளையும் செய்து கொடுத்து விடுவார்கள். அவரைத் தவிர அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் சுகபோகமாக இருக்கும். முஹம்மது நபியின் வாழ்க்கையோ வித்தியாசமானது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5416, 6454, 5374
தொடர்ந்து மூன்று வேளை வயிறு நிரம்ப சாப்பிடாத அதிகாரியின் குடும்பத்தை எங்காவது பார்க்க முடியுமா? மனைவி மற்றும் வாரிசுகள் பெயரில் சொத்து வாங்கிப் போடுவதற்காக பதவியை முறைகேடாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை எங்கும் பார்க்கவே செய்கிறோம்.
மக்களுக்குச் சேவை செய்ய ஒதுக்கப்பட்ட பணத்தில் சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள் முஹம்மது நபியை நினைத்துப் பார்த்தாவது தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்.
ஏனெனில், நபியவர்கள் எளிமையைத் தன்னளவில் வைத்துக் கொள்ளாமல் தமது குடும்பத்திலும் கடைப்பிடித்தாரகள். பெரும் ஆட்சிப் பீடத்தில் இருந்தாலும் அதை மூலதனமாகக் கொண்டு நபியின் வாழ்க்கை இருக்கவில்லை என்பதற்கு அவர்களின் எளிய வாழ்க்கையே மிகப்பெரும் சான்று.
‘‘தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதுண்டா?’’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதே இல்லை’’ என்றார்.
அறிவிப்பவர்: அபூஹாஸிம்
நூல்: புகாரி 5413
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி ‘சாப்பிடுங்கள்’ என்று அனஸ் (ரலி) கூறி விட்டு ‘‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை’’ எனக் கூறினார்.
அறிவிப்பவர்: கதாதா
நூல்: புகாரி 5385, 5421, 6457
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5386, 5415
மிருதுவான ரொட்டியை சாப்பிடவில்லை; அதுவும் ரொட்டியை தட்டில் வைத்து சாப்பிட்டது கிடையாது. பொறிக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை கண்டதில்லை. மக்கள் சாதாரணமாக உண்ணும் உணவு கூட முஹம்மது நபியின் வாழ்வில் இடம் பெற்றிருக்கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால், எதைச் சாப்பிடுவதற்கு நடுத்தர மக்களும் ஏழை எளிய மக்களும் யோசிப்பார்களோ அத்தகைய உணவுகளை நபியவர்கள் சங்கடப்படாமல் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆபிஸ் இப்னு ரபீஆ அல்கூஃபீ(ரஹ்) கூறியதாவது:
நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘(ஈதுல் அள்ஹா’ பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்’ என்று பதிலளித்தார்கள். ‘உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (5423)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2508)
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், “நம்மிடம் காடி (வினிகர்) மட்டுமே உள்ளது” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் (வினிகரைக்) கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு) கொண்டு உண்ணலானார்கள். மேலும், “குழம்புகளில் அருமையானது காடியாகும்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4169)
பதினைந்து நாட்கள் மீதம் வைத்த கறிக்குழம்பு, வாசனை இழந்த நெய், வினிகர். இதையெல்லாம் நாம் சாப்பிடுவோமா? ஒரு கட்டளை இட்டால் எப்பாடுபட்டாவது தினந்தோறும் விருந்து கொடுக்கும் தோழர்கள் எவருக்கேனும் இருந்தால் முஹம்மது நபியைப் போல இருப்பார்களா?
இத்தகைய தலைவரை காண்பது அரிதிலும் அரிது என்பதைப் பின்வரும் செய்திகள் எவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக் காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில் தான் நபி(ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபுர்தா (ரலி)
நூல்: புகாரி (5818)
‘ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!’ எனக் கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! அது ஓரப்பகுதி நெய்யப்பட்ட ஒரு சால்வை!’ என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அப்பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)
நூல்: புகாரி (2093)
உணவில் மட்டுமல்லாது உடை, உறைவிடம் விஷயத்திலும் எளிமையின் வடிவமாய் திகழ்ந்தார்கள், முஹம்மது நபி. அவர்களின் வீடு மதீனா பள்ளிவாசலில் இருந்தது. அதில் தமது அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் குடியிருந்தார்கள். அந்த வீடு எவ்வளவு சிறியது என்பதை நீங்களே பாருங்கள்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (382)
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குரிய இடத்தை முஹம்மது நபி தான் விலைகொடுத்து வாங்கினார்கள். ஆயினும், பெரும் பரப்பளவு கொண்ட அந்தப் பள்ளிவாசலின் ஓர் ஒரத்தில் சிறு அறையே நபியின் வீடாக இருந்துள்ளது. அந்த வீட்டின் வசதிகளும் பொருட்களும் கூட சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்க வில்லை.
நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி (730)
நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (729)
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6456)
இந்த செய்திகள் மூலம் ஒரு செய்தி புரிய வருகிறது. சிலர் வெளிப்படையில் அடுத்த மக்களின் பார்வைக்கு எளிமையாக இருப்பது போல நடந்து கொள்வார்கள். அதேசமயம், அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை, குடும்பத்திற்குள் இருக்கும் நிலையைப் பார்த்தால் சொகுசாக இருப்பார்கள். முஹம்மது நபி அப்படி இருக்கவில்லை. எங்கும் எதிலும் எளிமையே நிறைந்து இருந்தது.
நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது.(ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 1980
வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.
நூல்: அஹ்மத் 23756, 24176, 25039
பீரோ முழுவதும் புதிய ஆடைகளையும் ஆபரணங்களையும் பொன்னையும் அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருத்திருக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், பழைய ஆடைகளையும் செருப்பையும் தைத்துப் பயன்படுத்தும் நபிகளாரின் பண்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவ்வாறு வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவர் இருக்கிறார் என்றால் அதுவே அவர் ஆடம்பர மோகத்தை அறுத்து எறிந்து விட்டார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இதை சுய வாக்குமூலமாகவும் நபியவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?’’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தி அளிக்கவில்லையா?’’ எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 4913
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்’’ எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’’ எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991
இந்த உலகம் அற்பமானது; அதில் மூழ்கி விடக் கூடாது என்ற உணர்வு எப்போதும் நபிக்கு இருந்தது. அதனால் தான், 23 ஆண்டுகள் ஆன்மீகத் தலைவராகவும் அதில் 10 ஆண்டுகள் ஆட்சித் தலைவராகவும் இருந்தாலும் மரணிக்கும் வரை அவருடைய வாழ்வு அனைவரும் நெகிழ்ந்து போகும் அளவுக்கு இருந்தது.
தமது (இரும்பு) போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (2916)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ, அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ (வேறு எச்செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; ‘பைளா’ எனும் தம் கோவேறுக் கழுதையையும் தம் ஆயுதங்களையும் வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி (4461)
பதவிக்குப் பிறகு ஏழ்மை நீங்கி செழிப்பில் இருப்பவர்கள் உண்டு. பணக்காரராக இருந்து கோடிஸ்வரனாக உயர்ந்தவர்கள் உண்டு. குறைந்த பட்சம் பதவியை விட்டு இறங்கும் போதாவது சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்துவிட்டு வருவார்கள்.
இத்தனை விஷயத்திலும் முஹம்மது நபி மாறுபட்டுத் திகழ்ந்தார்கள். ஆன்மீகம், அரசியல் என்ற இரு துறையிலும் மாபெரும் தலைவராக இருந்த போதிலும் பகட்டில்லாமல் வாழ்ந்து எல்லோர் மனதிலும் நிறைந்து விட்டார்கள் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.

ஷியாக்களின் அபத்தம்
இறங்கிய குர்ஆன் வேறு இருக்கின்ற குர்ஆன் வேறு
அபு உஸாமா

அல்குர்ஆன் இறங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை அடித்தல், திருத்தலுக்கு இடமில்லாத வகையில் தனிப்பெரும் அற்புதமாக அது திகழ்ந்து வருகின்றது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியின்படி திருக்குர்ஆன் இதுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றது. இனியும் யுகமுடிவு நாள் வரை பாதுகாக்கப்படும்.
ஆனால் ஷியாக்களோ திருக்குர்ஆன் திருத்தப்பட்டது என்ற ஒரு குருட்டுத்தனமான வாதத்தை முன்வைக்கின்றனர். அலீ (ரலி) தனிக் குர்ஆன் ஒன்றைத் தொகுத்ததாக ஷியாக்கள் பொய்யான கதைகளைப் புனைந்து வைத்துள்ளனர்.
அலீ (ரலி) தொகுத்த குர்ஆனை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தான் அலீ (ரலி)யை உமர் (ரலி) கொலை செய்யத் திட்டமிட்டதாக ஒரு கொலைப் பழியை உமர் (ரலி) மீது ஷியாக்கள் துணிந்து சுமத்துவதை சென்ற தொடரில் பார்த்தோம்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைவது இறங்கிய குர்ஆன் வேறு! இருக்கின்ற குர்ஆன் வேறு என்ற ஷியாக்களின் அபத்தமான வாதம் தான். அது தொடர்பாக இன்னும் அவர்கள் என்னென்ன கதைகளை அளக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்:
அபுல்ஹசன் என்னிடம் ஒரு குர்ஆன் ஏட்டைத் தூக்கிக் காட்டி, ‘‘இதை நீ பார்க்காதே’’ என்றார். இருப்பினும் அதை நான் திறந்து பார்த்து, லம் யகுனில்லதீன கஃபரூ (அல்பய்யினா என்ற 98வது) அத்தியாயத்தை ஓதினேன். அதில் குரைஷிகளில் 70 பேர்களை அவர்களுடைய தகப்பனார்களின் பெயர்களுடன் பதிந்திருப்பதைக் கண்டேன். அவர் என்னிடம் அந்த ஏட்டை அனுப்பி வை என்றார். இவ்வாறு அஹ்மத் பின் முஹம்மத் பின் அபீநள்ர் என்பவர் அல்காஃபி என்ற நூலில் அறிவிக்கின்றார்.
அல்காஃபி என்பது அவர்களிடம் நம்முடைய புகாரியை போன்று மதிக்கப்படும் நூலாகும்.
உஸ்மான் (ரலி) மீது ஒரு குற்றாச்சாட்டு
மீஸம் அல்பஹ்ரானி என்பவர் சதாவும் உஸ்மான் (ரலி)யைக் குறை காண்பவர், அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர். அவர் நஹ்ஜுல் பலாகா என்ற நூலில் குறிப்பிடுவதாவது:
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கிராஅத் அடிப்படையிலேயே மக்கள் அனைவரும் ஒருமித்து ஓத வேண்டும் என்று உத்தரவிட்டு மற்ற குர்ஆன் ஏடுகளை உஸ்மான் (ரலி) தீயிட்டுக் கொளுத்தி விட்டார். கொளுத்தப்பட்ட அந்த ஏடுகளும் இறக்கப்பட்ட குர்ஆன் தான் என்ற உண்மையை சந்தேகமின்றி பாழடித்து விட்டார்.
அல்அன்வார் என்ற தன்னுடைய நூலில் அஸ்ஸய்யித் நிஃமத்துல்லாஹ் ஹுசைனி கூறுவதாவது: இறக்கப்பட்ட அதே மாதிரியான குர்ஆனை அலீ (ரலி)யைத் தவிர வேறு யாரும் தொகுக்கவில்லை.
இதை வலியுறுத்தும் விதமாகப் பின்வரும் பிரபலமான அறிவிப்பு அமைந்துள்ளது. ஜாபிர் அல்ஜுஃஃபி வழியாக யஃகூப் பின் அல்கலீனி அறிவிப்பதாவது:
‘இறக்கப்பட்ட மாதிரியே குர்ஆன் முழுவதையும் தொகுத்தேன்’ என யார் வாதிட்டாலும் அவர் பொய்யர் தான். அதை இறக்கப்பட்ட மாதிரி தொகுத்துப் பாதுகாத்தவர் அலீ (ரலி)யையும் அவருக்குப் பின்னால் வந்த இமாம்களைத் தவிர வேறு எவரும் கிடையாது என்று அபூஜஃபர் கூற நான் செவிமடுத்தேன்.
மேற்கண்ட இந்த அறிவிப்புகள் அனைத்தும் நம் கைவசமிருக்கின்ற இந்தக் குர்ஆன், பாதுக்காக்கப்பட்ட அந்தக் குர்ஆன் இல்லை. அதாவது, இறங்கிய குர்ஆன் வேறு! இருக்கின்ற குர்ஆன் வேறு! இது தான் ஷியாக்களின் அடிப்படை வாதமாகும்.
மாற்றப்படாத குர்ஆன் யார் கைவசமுள்ளது?
இப்போது ஷியாக்களிடம் மாற்றப்படாத, அலீ (ரலி) அவர்கள் திரட்டித் தொகுத்த அந்தக் குர்ஆன் யார் கைவசமுள்ளது? அதற்கு ஸாலிம் பின் ஸலமாவிடமிருந்து கலீனீ அறிவிக்கின்ற ஷியாவின் ஹதீஸ் பின்வருமாறு பதிலளிக்கின்றது:
அபூஅப்தில்லாஹ்விடம் ஒருவர் ஓதிக் கொண்டிருந்தார். குர்ஆனிலிருந்து மற்ற மக்கள் ஓதுகின்ற மாதிரி இல்லாமல் வித்தியாசமான சில எழுத்துக்களை நான் செவியுற்றேன். ‘‘இதற்கு என்று உரிமை கோருகின்ற நமது இமாம் (மஹ்தீ) வருகின்ற வரை, மக்கள் (உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்) ஓதுகின்ற வரை இந்தக் கிராஅத்தை ஓதாமல் நிறுத்திக் கொள். நமது இமாம் வந்ததும் அல்லாஹ்வின் வேதத்தை முறையாக ஓதிக்காட்டுவார்’’ என்று கூறி அலீ (ரலி) எழுதிய குர்ஆன் ஏட்டை எடுத்துக் காட்டினார். இந்த ஏட்டை அலீ (ரலி) எழுதி முடித்து விட்டு மக்களிடம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். ‘‘இது தான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய மாதிரியே தொகுத்த குர்ஆன் ஆகும். இதை நான் முதல் அட்டையிலிருந்து இறுதி அட்டை வரை தொகுத்திருக்கின்றேன்’’ என்று சொன்னதும் மக்கள், ‘‘இதோ எங்களிடம் குர்ஆன் தொகுப்பட்ட ஏடு இருக்கின்றது. நீங்கள் சொல்கின்ற அந்த ஏடு எங்களுக்கு தேவையில்லை’’ என்று பதிலளித்தனர். அதற்கு அலீ (ரலி), ‘‘என்னுடைய பணி நீங்கள் ஓதுவதற்காக நான் இந்தக் குர்ஆனை தொகுத்திருக்கின்றேன் என்று அறிவிப்பது மட்டும் தான். இனி இதற்குப் பிறகு இந்த ஏட்டை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்’’ என்று சொன்னார்கள்.
மாற்றப்படாத குர்ஆன் மஹ்தியின் கைவசம்?
மேற்கண்ட இந்தச் சம்பவம் அலீ (ரலி) தொகுத்த குர்ஆன் மக்களிடமிருந்து மாயமாகி விட்டது. யாருடன் மாயமானது? ஷியாக்களின் நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான மஹ்தீ என்பவர் திரைமறைவான உலகத்திற்குள் பிரவேசித்து விட்டார். அங்கிருந்து அவர் தனது பிரதிநிதிகளான இமாம்கள் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிண்றார். அவ்வாறு அவர் திரைமறைவிற்குள் செல்லும் போது இந்தக் குர்ஆனைத் தன் கையோடு எடுத்துச் சென்று விட்டார். அவர் வெளியே வரும்போது அந்தக் குர்ஆனை வெளியே கொண்டுவருவார் என்று அல்இஹ்திஜாஜ் மினல் லிஜாஜ் என்ற நூலில் அபூ மன்சூர் அஹ்மத் பின் அபீ தாலிப் அத்தப்ரஸீ என்பவர் தெரிவிக்கின்றார்.
அவர் வெளியே வருகின்ற போது ரசூல் (ஸல்) அவர்கள் வைத்திருந்த துல்ஃபிகார் என்ற வாளையும் கொண்டுவருவார். (இன்றைய அணு ஆயுத, ஏவுகணைகள் நிறைந்த இந்த உலகத்தில் துல்ஃபிகார் வாளைத் தூக்கிக் கொண்டு வந்து எப்படி சுழற்றப் போகின்றாரோ தெரியவில்லை.) இறுதி நாள் வரையில் உள்ள ஷியாக்கள் பெயர்கள் அடங்கிய ஏட்டையும் அவர் கொண்டு வருவார்.
ஆதமின் மக்கள் தேவையாகின்ற அனைத்து விஷயங்களும் அடங்கிய எழுபது முழ ஏடு அவர் வசமிருக்கும். அதற்கு அல்ஜாமிஆ என்று பெயர். அனைத்து ஞானமும் அடங்கிய ஏடும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் ஏடும் அவரிடம் இருக்கும் என்று அந்த நூலில் அபூமன்சூர் அஹ்மத் பின் அபீ தாலிப் அத்தப்ரஸீ குறிப்பிடுகின்றார்.
ஃபஸ்லுல் கிதாப் ஃபீ இஸ்பாத்தி தஹ்ரீஃப் கிதாபி ரப்பில் அர்பாப் (எஜமானர்களுக்கு எஜமான் ஆன இறைவனின் வேதத்தில் திருத்தலை நிரூபிக்கும் தெளிவுரை) என்ற நூலில் ஷியாவைச் சார்ந்த முஹம்மது தகியுத்தீன் என்பவர் நிஃமத்துல்ல்லாஹ் அல்ஜஸாயிரியை மேற்கோள் காட்டிக் கூறுவதாவது: திருத்தலைக் காட்டுகின்ற அறிவிப்புகள் அவை இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை என்று தெரிவிக்கின்றன. அது பிரபலமானது என்று ஒரு முஃபீத், முஹக்கிக் அத்தமாத், அல்லாமா அல்மஜ்லிஸி இன்னும் பிற அறிஞர்கள் அதை உறுதி செய்திருக்கின்றனர்.
மொத்தத்தில் மேற்கண்ட வாதங்களின் மூலம் ஷியாக்கள் துணிந்து பதியவைக்கின்ற செய்தி, இப்போது நம் கைவசத்தில் தவழ்கின்ற இந்தத் திருக்குர்ஆன் திருத்தப்பட்டது; மாற்றப்பட்டது; அடித்தலுக்கு உள்ளானது; தணிக்கைச் செய்யப்பட்டது என்பது தான். அல்லாஹ் காப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வேதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதைத் தானே பாதுகாப்பதாகவும், இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், இதில் எந்த மாறுதலும் இல்லை என்றும் பல்வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றான்.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
அல்குர்ஆன் 2:2
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.
அல்குர்ஆன் 41:42
அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது
அல்குர்ஆன் 75:17-19
அலிஃப், லாம், ரா. (இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
அல்குர்ஆன் 11:1
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்!
அல்குர்ஆன் 5:67
அவர் (முஹம்மது நபி) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
அல்குர்ஆன் 81:24
உண்மையுடனேயே இதை அருளினோம். உண்மையுடனேயே இது இறங்கியது. உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
அல்குர்ஆன் 17:105
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
அல்குர்ஆன் 47:24
இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழிகாட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது’’ என்று நற்செய்தியும் கூறுகிறது.
அல்குர்ஆன் 17:9
மாற்றத்திற்கோ, திருத்தத்திற்கோ இடந்தராத திருக்குர்ஆன் என்று இந்த வசனங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் தெரிவிக்கின்றான். ஆனால் ஷியாக்களோ பகிரங்கமாக இப்படிப்பட்ட பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விடுகின்றார்கள்.
சில எடுத்துக்காட்டுகள்
اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
இதன் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு தூக்கமோ ஆழ்ந்த தூக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம்.
ஆயத்துல் குர்ஸியியை நம்மில் யாரும் தெரியாமல் இருக்க மாட்டோம். இது குர்ஆனில் இரண்டாவது அத்தியாயமான அல்பகராவில் 255 வசனமாக இடம் பெறுகின்றது.
மேலே உள்ளது போன்று தான் ஆயத்துல் குர்ஸிய்யில் இடம் பெறுகின்றது. ஆனால் ஷியாக்கள் இவற்றை ஆயத்துல் குர்ஸிய்யில் சேர்த்து வைத்துள்ளனர்.
وما بينهما وما تحت الثرى عالم الغيب والشهادة الرحمن الرحيم
இதன் பொருள்: அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவையும் பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம். மறைவானவற்றையும் நேரில் உள்ளவையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
பன்னிரண்டு இமாம்களில் ஒருவரான அபுல்ஹசன் மூஸா அர்ரிளா என்பவர் ஆயத்துல் குர்ஸிய்யை இப்படித்தான் ஓதியதாக அலீ பின் இப்ராஹீம் அல்கிம்மிய்யு அறிவிக்கின்றார். (ஆதாரம் தஃப்ஸீருல் கிம்மி)
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ
மனிதனுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ந்து வருவோர் (மலக்குகள்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை பாதுக் காக்கின்றனர்
அல்குர்ஆன் 13:10
மேற்கண்ட வசனத்தை ஷியாக்கள் லஹு முஅக்கிபாத்துன் மின் கல்ஃபிஹி வ ரகீபுன் பைன யதைஹி என்றும் ‘மின் அம்ரில்லாஹ்’ என்பதை ‘பி அம்ரில்லாஹ்’ என்றும் மாற்றி ஓதுகின்றனர்.
له معقابات من خلفه ورقيب بين يديه يحفظونه بأمر الله
இதற்கு என்ன காரணம்?
அபூ அப்தில்லாஹ்விடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது.
مِنْ بَيْنِ يَدَيْهِ
ஒருவருக்கு முன்னர் வருபவர்களுக்கு
مُعَقِّبَاتٌ
எப்படி பின் தொடர்பவர்கள் என்று சொல்ல முடியும்? நீங்கள் அரபிகள் கிடையாதா? என்று அபூ அப்தில்லாஹ் கேட்டதும் பக்தர் ஒருவர் அப்படியானால், ‘‘இதற்கு என்ன விளக்கம்?’’ என்று திரும்பக் கேட்டார்.
அதற்கு அபூஅப்தில்லாஹ்,
له معقابات من خلفه ورقيب بين يديه يحفظونه بأمر الله
(மனிதனுக்கு பின்னர் தொடர்பவர்கள் இருக்கின்றனர். அவனுக்கு முன்னால் கண்காணிப்பவர்கள் இருக்கின்றனர். அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு அவனை பாதுக்காக்கின்றனர்)
என்று தான் குர்ஆன் வசனம் இறங்கியது என்று பதிலளித்தார்.
ஆதாரம்: தஃப்ஸீருல் கிம்மி

மனிதகுல விரோதியும் பகிரங்க எதிரியும்
அபு ஆதிபா

திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான்.
மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து, அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட்டு, அவர்களை வழிகெடுத்து, நிரந்தர நரகவாதிகளாக ஆக்குவதே இந்த இறைவிரோதியின் நோக்கமாகும்.
இந்த இறைவிரோதியின் சூழ்ச்சியில் சிக்குண்டு மனிதர்கள் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் அதிகமான இடங்களில் இவனைப் பற்றியும் இவனது வழிகேடுகளைப் பற்றியும் பல எச்சரிக்கைகளைச் செய்துள்ளான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(அல்குர்ஆன் 35:6)
(நேர்வழியிலிருந்து) ஷைத்தான் உங்களைத் தடுத்திட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 43:62)
ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 7:22)
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 17:53)
ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி.
(அல்குர்ஆன் 12:05)
நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 2:208)
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:29)
நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான்.
(அல்குர்ஆன் 24:21)
ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்பவனாவான்.
(அல்குர்ஆன் 19:44)
ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 17:27)
மேலே நாம் குறிப்பிட்டுள்ள இறை வசனங்களும் இன்னும் அதிகமான இறை வசனங்களும் ஷைத்தானைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றன.
மனிதர்கள் மீது ஷைத்தானின் அதிகாரம் என்ன?
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்.
(அல்குர்ஆன் 6:17, 18)
இது திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கும் தவ்ஹீதின் ஓர் அடிப்படையாகும். சத்திய இஸ்லாத்தின் பல அடிப்படைகள் சிதைக்கப்பட்டும், வழிகேடர்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டும் மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அப்படித் தவறாகப் பதிய வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றுதான் ஷைத்தானால் மனிதனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையாகும்.
அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதே தவ்ஹீதின் அடிப்படையாகும். இந்த நம்பிக்கைக்கு நேர் எதிராக ஷைத்தான் தொடர்பான இந்த நம்பிக்கை அமைந்துள்ளது.
மார்க்கத்தை, இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து அறிந்து கொள்வதற்கு முற்படாத எண்ணற்ற முஸ்லிம்கள் தவறான நம்பிக்கைகளையே இஸ்லாத்தின் அடிப்படையாக எண்ணி, நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஷைத்தானுக்கு இறைவன் வழங்கியுள்ள ஆற்றலையும், இறைவனின் வல்லமைகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவாகப் புரிந்து கொண்டால் இது விஷயத்தில் சத்தியத்தின் கருத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மனிதர்களின் மீது ஷைத்தானுக்குரிய ஒரே ஆற்றல் அவர்களின் உள்ளங்களில் தவறான எண்ணங்களைப் போடுவது மட்டும்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு எந்த ஒரு ஆற்றலையும் மனிதர்களுக்கு எதிராக இறைவன் வழங்கவில்லை. இதைத் திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துகின்றன.
மறுமை நாளில் ஷைத்தானும், அவனால் வழிகெடுக்கப்பட்டவர்களும் நரக நெருப்பில் கருகும் போது தன்னுடைய உண்மையான ஆற்றலைப் பற்றி அந்த நரகவாதிகளுக்கு ஷைத்தான் எடுத்துரைப்பான். இது பற்றித் திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்’’ என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 14:22)
“உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று ஷைத்தான் தன்னுடைய உண்மையான நிலையைத் தெளிவுபடுத்துகின்றான்.
இது போன்று ஷைத்தானுக்கும் நரக வாசிகளுக்கும் மத்தியில் நடைபெறும் உரையாடலை 37வது அத்தியாயமும் எடுத்துரைக்கின்றது. அவ்வசனத்திலும் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர தனக்கு வேறு எந்த ஆற்றலும் இல்லை என ஷைத்தான் கூறுவது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
“அநீதி இழைத்தோரையும் அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்! அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!’’ (என்று வானவர்களுக்குக் கூறப்படும்.) “உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?’’ (என்று கேட்கப்படும்.) அவ்வாறு நடக்காது. இன்று அவர்கள் சரணடைந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள். “நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்’’ என்று (சிலர்) கூறுவார்கள். “இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை’’ என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.
உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள். எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம். “நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்களும் வழிகெட்டவர்களாக இருந்தோம்’’ (என்றும் கூறுவார்கள்) அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள். குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.
(அல்குர்ஆன் 37:22-34)
“நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்” என்று நரகவாதிகள், தாங்கள் வணங்கிக் கொண்டிருந்த ஷைத்தான்களை நோக்கிக் கூறும்போது அவை “இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை’’ என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள். ‘‘உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்’’ என்று பதிலுரைப்பார்கள்.
மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவது மட்டும் தான் ஷைத்தானுக்குரிய அதிகாரம் என்பதற்கு இவ்வசனங்கள் மிக உறுதியான சான்றாக அமைந்துள்ளன.
பின்வரும் நபிமொழியும் இந்த அடிப்படையை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (என்று கூறிவிட்டு ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் (4448)
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றள்ளது.
நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உள்ளங்களில் சில விஷயங்களை நாங்கள் எண்ணுகின்றோம். அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! உங்களிடம் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர (வேறு எதற்கும் ஷைத்தானாகிய) அவன் ஆற்றல் பெறவில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் (2995)
உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர ஷைத்தானுக்கு வேறு எந்த ஆற்றலும் இல்லை என்பதைத் திருமறை வசனங்களும் நபிமொழிகளும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எடுத்துரைத்த பிறகு நமது உடலில் நோய் உண்டாக்கும் ஆற்றல் ஷைத்தானுக்கு இருக்கிறது என்பது தவறான நம்பிக்கை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதனை இன்னும் விரிவாக நாம் காண்போம்.
வழிகெடுப்பதே ஷைத்தானின் நோக்கம்
மனித இனத்தை இறைவழியான நேர்வழியை விட்டும் வழிகெடுத்து, அவர்களை நிரந்தர நரகத்திற்குரியவர்களாக ஆக்குவதே ஷைத்தானின் லட்சியம் ஆகும்.
முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது வானவர்களையும், அவர்களுடன் இருந்த இப்லீஸையும் ஆதமுக்குப் பணியுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். வானவர்கள் இறைக்கட்டளைக்கு அடிபணிந்து ஆதமுக்குப் பணிந்தனர். ஆனால் ஷைத்தான் அகந்தை கொண்டு மறுத்தான். அப்போது அவனை அல்லாஹ் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரிவிட்டான். அப்போது ஷைத்தான் அல்லாஹ்விடம் சிறிது காலம் அவகாசம் கோரினான். மேலும் மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுப்பேன் என்றும் அல்லாஹ்விடம் கூறினான். இந்த நிகழ்வை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் “ஆதமுக்குப் பணியுங்கள்!’’ என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
“நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’’ என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!’’ என்று கூறினான். “இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்’’ என்று (இறைவன்) கூறினான்.
“அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!’’ என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்’’ என்று (இறைவன்) கூறினான்.
“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்’’ என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும் பின்னும், வலமும் இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்’’ (என்றும் கூறினான்).
“இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப் பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்’’ என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 7:11-18)
“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’’ என்று கூறினான்.
(அல்குர்ஆன் 15:39-40)
“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்’’ எனவும் கூறினான். “நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி’’ என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. “எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
(அல்குர்ஆன் 17:62-65)
மனிதர்களை வழிகெடுத்து அவர்களை நரகவாதிகளாக மாற்றுவதே ஷைத்தானின் லட்சியம் என்பதை மேற்கண்ட இறை வசனங்கள் அனைத்தும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
மறைந்திருந்து தீய எண்ணங்களைப் போடுபவன்
ஷைத்தான் மறைந்திருந்தே மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகின்றான்.
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
(அல்குர்ஆன் 114:1-5)
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத் தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
(அல்குர்ஆன் 7:27)
மனித உடல் முழுவதும் ஒவ்வொரு விநாடியிலும் இரத்த நாளங்களில் இரத்தம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் அது நமது கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோன்று ஷைத்தான் மறைந்திருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் எல்லா நேரங்களிலும் தீய எண்ணங்களைப் போடுவதற்கு முயற்சி செய்கின்றான். இதனைப் பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். – உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது – அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்’’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)’’ என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்’’ என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (3281)
அனைத்து மனிதர்களுடனும் ஷைத்தான் இருக்கிறான்
அல்லாஹ் மனிதர்களைச் சோதிப்பதற்காக ஒவ்வொரு மனிதனுடனும் ஒரு ஷைத்தானையும் ஒரு வானவரையும் நியமித்துள்ளான். ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதற்காக அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவான். அது போன்று வானவர்கள் மனிதர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களைப் போடுகின்றனர். நமக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஷைத்தானையும் வானவரையும் நாம் காண இயலாது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜின்களிலுள்ள (ஷைத்தான்) கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை’’ என்று கூறி னார்கள். அப்போது, “தங்களுடனுமா, அல் லாஹ்வின் தூதரே?’’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “என்னுடனும் தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்து விட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்’’ என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (5421)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட் டாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?’’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்‘ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்‘ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்’’ என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (5422)
சத்தியவாதிகளை அசத்தியவாதிகளாக்கும் ஷைத்தான்
இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்ற இயற்கையான மார்க்கத்தின் மீதே அனைத்து மனிதர்களையும் அவன் படைத்துள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான்.
(அல்குர்ஆன் 30:30)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1385)
ஆனால் இந்த இயற்கை நெறியிலிருந்து ஷைத்தான் மனிதர்களை வழிகெடுத்து அவர்களை அசத்தியவாதிகளாக மாற்றுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத் தருமாறு எனக்குக் கட்டளையிட்டான்.
(இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப் பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச் செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)
நூல்: முஸ்லிம் (5498)
ஒரு வழியைக் கெடுத்து, பல வழிகளின் பக்கம் அழைக்கும் ஷைத்தான்
பன்னெடுங்காலமாக முஸ்லிம்கள் இறைச் செய்தி மட்டுமே இறை மார்க்கம் என்ற சத்தியக் கொள்கையை விட்டும் வழிதவறி, கொள்கை ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் தமது கொள்கையே சத்தியக் கொள்கை என வாதிட்டும் வருகின்றனர்.
இவ்வாறு மார்க்கத்தைப் பல பிரிவுகளாகப் பிரிப்பது மிகப் பெரும் வழிகேடாகும். நேர்வழியாக ஒரு வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிடுவதுடன் வழிகெட்ட பிரிவுகளில் அங்கம் வகிப்பதை மிகக் கடுமையாக எச்சரிக்கையும் செய்கின்றான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!
(அல்குர்ஆன் 3:103)
மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!
(அல்குர்ஆன் 42:13)
தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:159)
தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
(அல்குர்ஆன் 30:32)
திருமறைக் குர்ஆன் எந்த ஒரு வழியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதில் பிரிந்து விடக் கூடாது என்றும் உத்தரவிடுகிறதோ அவ்வழியை விட்டும் மக்களை வழிகெடுத்து, அவர்களை நரகவாதிகளாக்க வேண்டும் என்பதும் ஷைத்தானின் லட்சியமாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு ஒரு கோட்டை வரைந்தார்கள். அதன் வலது புறம் ஒரு கோட்டையும் இடது புறம் ஒரு கோட்டையும் வரைந்தார்கள். பிறகு “இதுதான் அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள். பின்னர் இன்னும் பல கோடுகளை வரைந்து “இவை (வழிகேடான) பலவழிகளாகும். இந்த வழிகள் அனைத்திலும் ஷைத்தான் இருந்து கொண்டு அவற்றை நோக்கி அழைத்துக் கொண்டிருக்கின்றான். பிறகு “இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்” (அல்குர்ஆன் 6:153) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
நூல்: முஸ்னதுல் பஸ்ஸார் (1865)
தீய எண்ணங்களின் மூலமே ஆதி பிதாவை வழிகெடுத்தான்
ஷைத்தான் மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவதன் மூலமே அவர்களை நேர்வழியில் இருந்து வழிகெடுக்கின்றான். இதற்குரிய சான்றுகளில் ஒன்றுதான் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் துணைவியார் அன்னை ஹவ்வா (அலை) அவர்களையும் ஷைத்தான் வழிகெடுத்த சம்பவமாகும். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியே ஷைத்தான் ஏமாற்றினான். இது பற்றித் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.
“ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்’’ (என்றும் கூறினான்.)
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை’’ என்று கூறினான். “நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே’’ என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான்.
(அல்குர்ஆன் 7:19-22)
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.
(அல்குர்ஆன் 20:120, 121)
பிறகு ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் தாங்கள் செய்த தவறுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினர். இறைவன் அவர்களை மன்னித்து நல்லடியார்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து “இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?’’ எனக் கேட்டான். “எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்’’ என்று அவ்விருவரும் கூறினர். “(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன’’ என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 7:22-24)
பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.
(அல்குர்ஆன் 20:122)
ஆதம் (அலை) அவர்களையும், ஹவ்வா (அலை) அவர்களையும் தீய எண்ணத்தை ஏற்படுத்தி ஷைத்தான் வழிகெடுத்தது போன்றே நம்மையும் வழிகெடுப்பான் என அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளான்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம்.
(அல்குர்ஆன் 7:27)
ஷைத்தான் மனிதர்களை எந்தெந்த வழிகளிலெல்லாம் வழிகெடுப்பான் என்பதை வரக்கூடிய இதழ்களில் விரிவாகக் காண்போம்.

இறைநேசர் ஆகிட எளிய வழிகள்
அபு உஸாமா

அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான்.
இறைநேசராவதற்கு என்ன வழி? சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் இதற்குப் பின்வரும் வழிகளைக் கூறுகின்றனர்.
ஒருவர், அல்லாஹ்வின் நேசர் ஆக வேண்டுமென்றால் அதற்காக அவர் தன்னை ஆன்மீகப் பாதையில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு நான்கு வழிச் சாலை. ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பது அந்த நான்கு வழிச் சாலைகளுக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
ஷரீஅத் என்றால் பாதை. தரீக்கத் என்றால் பாதை. ஹகீகத் என்றால் உண்மை. மஃரிபத் என்றால் அறிதல்.
பொதுவாகப் பாதை தெரிந்த பின் பயணிப்பது புத்திசாலித்தனம். பாதையைக் கடந்த பின் அறிதல் என்பது பைத்தியக்காரத்தனம் என்பதை இந்த அகமியப் பெயர்கள் அழகாகவே அம்பலப்படுத்தி விடுகின்றன. இதிலிருந்து இதன் இலட்சணத்தையும் இலக்கணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆன்மீக உலகத்தில் நுழைந்தவர் ஐம்புலன்களை அடக்கி ஆள வேண்டும். அவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பட்டை தீட்டிக் கொள்ளவும் இறைநேசராகப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஓர் ஆன்மீக ஆசானிடம் பாடம் கற்க வேண்டும். தனது ஆசான் சொல்கின்ற கட்டளைக்கு மறு வார்த்தை பேசாமல் அப்படியே கட்டுப்படவேண்டும். அதற்காக ஒரு பைஅத், அதாவது ஓர் உடன்படிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பைஅத்திற்கு பின் ஷைகு என்ற அந்த ஆசானிடம் அப்படியே ஒர் மய்யித்தாக ஆகி விடவேண்டும். அதாவது குளிப்பாட்டப்படும் ஒரு மய்யித் ஏன், எதற்கு என்று கேட்காதோ அது போன்று அவர் தன்னை ஒரு செத்த சவமாக்கி அவரிடம் சரணாகதியாகி விடவேண்டும்.
இன்ன வீட்டில், இன்ன பெண்ணிடம் போய் நீ விபச்சாரம் செய் என்று ஷரீஅத்திற்கு மாற்றமாகச் சொன்னாலும் அவருக்குக் கட்டுப்பட்டு, அந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும். ஷைக் விபச்சாரமும் செய்யச் சொல்வாரா? என்று விழிப்புருவங்கள் வியப்புக்குறியில் விசாலமாக விரியலாம். வியக்காதீர்கள். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.
ஷைக் அனுப்பி வைத்த சீடர் விபச்சாரத்திற்கு என்று சென்றாலும் வீட்டில் சீடர் கண்டதும் கட்டியணைத்ததும் அனுபவித்ததும் கொண்ட மனைவி தான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. இதற்குத் தான் ஷைகின் சொல்லுக்கு வினா எழுப்பாது, ஷரீஅத்திற்கு மாற்றமாயிற்றே என்று சிந்திக்காமல் விழுந்தடித்து நம்ப வேண்டும்.
ஷரீஅத்திற்கு மாற்றமாக ஷைக் சொன்ன விஷயத்தைச் சரி தான் என்று நிறுவவும் நிரூபிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இதுதான் அவ்லியா ஆவதற்கு வழி என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறும் பாதைகளாகும்.
ஷைகுக்கு எல்லாம் தெரியும். எனவே அவர் சொன்னதை அப்படியே நம்ப வேண்டும் என்று கதை விடுவார்கள். ஆனால் விபச்சாரம் செய்வதற்குச் சென்ற சீடர் எந்த நோக்கத்தில் சென்றார்? என்பதை இந்த ஆன்மீகப் பேர்வழிகள் என்பதை வசதியாகவே மறந்து விடுவார்கள்.
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி)
நூல்: புகாரி 1
அல்லாஹ்விடம் மரியாதை எண்ணங் களுக்குத் தான் என்பதை மறந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5011
இந்த ஹதீஸையும் வசதியாக மறந்து விடுகின்றார்கள். இது போன்ற அறியாமையின் காரணமாக அவ்லியா ஆவதற்கு அகமியம் என்ற போர்வையில் இவர்கள் மக்களை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அடுத்து, வலியுல்லாஹ் ஆக, அதாவது இறை நேசனாக ஆக வேண்டுமென்றால் இவர்களாக உருவாக்கிக் கொண்ட அவ்லியாக்களின் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். அதாவது இந்த ஆன்மீகப் படையில் சேரவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் அவ்லியாக ஆவதை தனியுடைமையாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் இறைநேசர் ஆவதை பொதுவுடைமையாக்கியிருக்கின்றான். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 10:62,63
இறைநேசனாக ஆவதற்கு அல்லாஹ் இரண்டே இரண்டே அளவுகோல்களை மட்டுமே சொல்கின்றான். ஒன்று ஈமான் கொள்ள வேண்டும். இன்னொன்று அவனை அஞ்ச வேண்டும். இந்த இரண்டுமிருந்தால் அவர் இறைநேசராக ஆகிவிடலாம்.
ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடக்க ஆரம்பித்து விட்டால் அவர் இறைநேசராகி விடுவார். ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அவனை அஞ்சியும் நடக்கின்றார்கள். அதனால் அவர்கள் இறைநேசர்களாகி விடுகின்றார்கள்.
வலியுல்லாஹ்வுக்குரிய அளவுகோள் இது தான். அல்லாஹ் இந்த வசனத்தின் வாயிலாக இறைநேசத்திற்கு ஒளிமயமான ஓர் எளிய வழியைக் காட்டுகின்றான். ஆனால் இவர்களோ ஆன்மீக உலகம் என்ற பெயரில் ஓர் இருள் மயமான உலகத்தைக் காட்டுகின்றார்கள்.
அவ்லியா ஆவதற்குக் கடமையான வணக்கங்களை தாண்டி உபரியான அமல்களை தனக்காகச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் இந்த ஹதீஸ் குதூஸிய்யில் சொல்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 6502
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.
அல்குர்ஆன் 2:165
ஈமான் கொண்டவர்கள் தன்னை அதிகம் நேசிப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஏற்ப நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் விதமாக, அதிகமான அளவில் கடமையான வணக்கங்களைத் தாண்டி உபரியான வணக்கங்களைச் செய்ய ஆயத்தமாக வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வை நேசிப்பதற்கு ஒரு தனிவழி, ஓர் இருட்டு வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்று கடமையான வணக்கங்களின் பட்டியல் உள்ளது. அதில் நாம் முதலில் தொழுகையிலிருந்து உபரியான வணக்கங்களை துவக்குவோம். அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைகளை பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
தஹஜ்ஜத் தொழுகை
இப்போது தான் ரமளான் நம்மைத் தாண்டிச் சென்றிருக்கின்றது. அது நமக்கு அமல்களுக்குரிய ஒரு சரியான பயிற்சியையும் பாடத்தையும் கற்றுத் தந்திருகின்றது. அதில் குறிப்பாக ஸஹ்ர் நேரத்தில் நாம் ஒரு மாத காலம் எழுந்து பழகியிருக்கின்றோம். அதனால் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் தொழுகையை தொழத் துவங்குவோம்.
அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
அல்குர்ஆன் 51:18
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
அல்குர்ஆன் 3:17
என்று அல்லாஹ் சொல்வதற்கேற்ப அவனிடம் அந்த நேரத்தில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
முன், பின் சுன்னத் தொழுகைகள்
அடுத்ததாக, கடமையான தொழுகைகளுக்கு முன் பின் அமைந்த சுன்னத் தொழுகைகளை பேணித் தொழ வேண்டும். குறிப்பாக சுபுஹின் முன் சுன்னத்தை நபி (ஸல்) அவர்கள் விடாது தொழுதிருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: முஸ்லிம் 1319
இந்த ஹதீஸில் இடம்பெற்றிருப்பது போன்று 12 ரக்கஅத்துகள் பேணித் தொழவும் இதர சுன்னத்துகளையும் பேணித் தொழவும் முயற்சிக்க வேண்டும்.
லுஹா தொழுகை
அதுபோன்று நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1302
தஹிய்யத்துல் மஸ்ஜித்
அதுபோன்று தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற தொழுகையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
‘உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின்போது நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நூல்: புகாரி 1166
தஹிய்யத்துல் உலூ
தஹிய்யத்துல் உலூ தொழுகையையும் தொழ வேண்டும்.
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலேஸ இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1149
வித்ரு தொழுகை
ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹா தொழுமாறும் வித்ரு தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1178
இது தொழுகையில் நஃபிலான அதாவது உபரியான வணக்கமாகும்.
மாதம் மூன்று நோன்புகள்
நோன்பிலும் இது போன்ற உபரியான நோன்புகள் உள்ளன. மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதற்கு மேலே இடம்பெற்றுள்ள அந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
ஷவ்வாலில் ஆறு நோன்பு
இது ஷவ்வால் மாதமாகும். நபி (ஸல்) அவர்கள் ரமளான் முடிந்த கையோடு ஆறு நோன்பு நோற்றிருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம் 2159
அதனால் இந்த ஹதீஸ் அடிப்படையில் இந்த உபரியான வணக்கங்களைப் புரிந்து அல்லாஹ் நெருங்குவோம். அவ்லியாக்களாக மாறுவோம்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஓர் அடியான் செய்ய வேண்டிய அமல்கள் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் இப்படிப்பட்ட பட்டியலை, நிகழ்ச்சி நிரலைத் தந்திருக்கும் போது இதை நிறைவேற்ற ஓர் ஆன்மீக ஆசான் நமக்குத் தேவை தானா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது அல்லாமல் அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த அவ்ராதுகள் அதாவது அன்றாடம் எழுந்தது முதல் படுக்கையில் உறங்குகின்ற வரை ஓத வேண்டிய திக்ருகள், தஸ்பீஹுகள், துஆக்கள் என்று ஒரு பட்டியல் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் இருக்கின்றன. அவற்றை இங்கு சுருக்கம் கருதிக் கூறவில்லை. அவற்றையும் சேர்த்தால் நாம் அமல்கள் செய்வதற்கு எந்த ஓர் அந்நிய ஆசானும் நமக்குத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதரே நேரலையில் நமக்கு ஆசானாக அமைந்து விடுகின்றார்கள். அதனால் இதற்கு தரீக்கத், ஷைக் என்று எந்த ஏஜண்டுகளும் இடைத்தரகர்களும் தேவையில்லை. தூய குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமல்கள் செய்வோம், அவ்லியாவாக ஆவோம்.

முஸ்லிம்களே தளர்ந்து விடாதீர்கள்
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களை இறைவன் படைத்திருக்கின்றான். ஒவ்வொரு சாராரும் ஒரு குறிப்பிட்ட மதங்களையும், சித்தாந்தங்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பான்மையான மக்கள் பல கடவுள் கொள்கையிலும், அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகக் கொண்டு ஒரு பெருங் கூட்டமும், கடவுளே இல்லை என்று ஒரு கூட்டமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இத்தனை கோடி மனிதர்களுக்கு மத்தியில், அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்றும் உறுதியாக நம்பிக்கை வைத்து இஸ்லாமியர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உலகத்தில் எந்த மதத்துக்கும், சித்தாந்தத்திற்கும், கடவுள் கோட்பாடுகளுக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புக் கணைகள், சொல்லெணா துன்பங்கள், வேதனைகள், சோதனைகள், பொருளாதாரத்தில் பின்னடைவு என இதுபோன்ற ஏராளமான கஷ்டங்களை முஸ்லிம்கள் இந்த உலகத்தில் அனுபவித்து வருகின்றார்கள்.
முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், ஒரு கடவுள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் என்பதைத் தெரிந்த மாத்திரத்திலே உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருசில விஷக்கிருமிகளின் பார்வையும் செயல்பாடுகளும் தனித்து தெரிவதைப் பார்க்கின்றோம். அதாவது இந்த அடையாளங்களில் பயணிப்பவர்களை உலகத்தில் வாழ விடக் கூடாது என்ற வெறித்தனத்திலும் சிலர் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் சதி வலைகளையெல்லாம் கீறி கிழித்துக் கொண்டு இஸ்லாம் எனும் சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் அழித்தொழிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த உலகமும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார்களே! ஏன்? மற்ற மதத்தைச் சார்ந்த மக்கள் அவர்கள் விரும்பி தத்தமது மதங்களைப் பின்பற்றுவது போல், இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்கள் விரும்பி உள்ளங்களில் ஆழப்பதிய வைத்துக் கொண்டு பின்பற்றுகின்றார்கள்.
இதில் மற்றவர்களுக்கு ஏன் வலிக்கின்றது? கசக்கின்றது? இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களைப் பார்த்து இவர்களுக்கு வயிறு எரிகின்ற காரணம் என்ன? இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கின்றார்கள்? இஸ்லாம் உலகத்திற்குச் சொல்கின்ற செய்தி என்ன? இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்ற சிறந்த மதம், மார்க்கம் வேறேதேனும் இருக்கின்றதா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் பார்ப்போரின் உள்ளங்களில் எழுவதைப் பார்க்கின்றோம்.
உண்மையில் சொல்வதாக இருந்தால் உலகளாவிய அளவில் எதிர்க்கப்படுவதில் முன்னணியில் இருக்கின்ற மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாக இருக்கின்றது. அதே வேளையில் உலகிலேயே அசுர வேகத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற மார்க்கமும் இஸ்லாமே!
எவ்வளவு தான் உலகமே சேர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமியர்களையும் எதிர்த்தாலும், வேதனைகள் கொடுத்தாலும் இஸ்லாமியர்களாகிய நாம் மனம் தளர்ந்து விடக் கூடாது. கவலையில் மூழ்கி விடக் கூடாது. உறுதியோடு இருக்க வேண்டும்.
இறைவன் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவும், நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலமாகவும் இந்த உலக முஸ்லிம்களுக்கு சொல்லித் தரும் செய்தி என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கமும், இஸ்லாமிய மார்க்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் பலதரப்பட்ட புறங்களிலிருந்தும், பல்வேறு நபர்களிடமிருந்தும் உலகம் அழிகின்ற நாள் வரை எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்பதை ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றார்கள்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாலா புறத்திலிருந்தும் எதிர்ப்புக் கணைகள் பாய்ந்தாலும், உயிர் போகின்ற அளவுக்குத் துன்பங்கள் கொடுக்கப்பட்டாலும், பொருட்கள் சேதப்படுத்தப்பட்டாலும், பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டாலும், ஊரை விட்டு அடித்து விரட்டப்பட்டாலும், தீவிரவாதிகள் என்ற கோரமான பட்டத்தைச் சுமத்தினாலும், உயிரை எடுத்து இரத்தத்தைக் குடித்தாலும் நாம் ஏற்று இருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மாத்திரம் உறுதியாகப் பயணித்து விட்டால் இறைவனின் பேருதவியின் மூலமாக அனைத்து எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி விடலாம்.
இறைவன் முஸ்லிம்களுக்கு சொல்லித் தருகின்ற, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் உள்ளங்களை பலப்படுத்துகின்ற அற்புதமான செய்தி,
தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
அல்குர்ஆன் 3:139
மேலும் இறைவன் கூறும்போது;
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்குர்ஆன் 3:146
இந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள்! படைத்த இறைவனிடமிருந்து ஏராளமான துன்பங்கள் ஏற்படும். துன்பங்கள் ஏற்படும் நேரத்தில் ஒரு முஸ்லிம் மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கடைப்பிடித்தால் கட்டாயம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை, தடம் தெரியாமல் துடைத்தெறிந்து விடலாம் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.
அதாவது ஒரு இஸ்லாமியனுக்கு துன்பம் ஏற்படும்போது, தளர்ந்தும் விடக் கூடாது; பலவீனமாகவும் ஆகி விடக் கூடாது; எதிரிகளுக்குப் பணிந்து விடவும் கூடாது; மாறாக சகித்துக் கொள்ள வேண்டும் என்றும், சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் இறைவன் ஆழப் பதிய வைக்கின்றான்.
அல்லாஹ்வின் ஜோதியை ஊதி அணைக்க முடியாது
இந்த உலகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களை எப்படியாவது அழித்தொழிக்க வேண்டும் என்றும், இஸ்லாத்தை உலக அளவில் பரவ விடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் ஒரு பெருங்கூட்டமே மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் என்னதான் முனகினாலும், கத்தினாலும், போராடினாலும், இரகசியமாகக் காய் நகர்த்தினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் இந்தச் செய்தியை அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைப்படுத்துகின்றது.
அதாவது கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு (மிஸீஸீஷீநீமீஸீt ஷீயீ விusறீவீனீ) என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தியும் இழிவுபடுத்தியும் அமெரிக்க ஏகாதிபத்திய அயோக்கியர்கள் ஒரு படம் ஒன்றை வெளியிட்டார்கள். அந்தப் படம் வெளிவந்ததும் இதுவரைக்கும் உலகம் சந்தித்திராத அளவுக்கு ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகளையும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உலகம் சந்தித்தது.
ஆனால் அந்தப் படத்தை உருவாக்கியவர் மனம் திருந்தி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த பத்து வருடங்களில் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது. 2000ஆம் ஆண்டில் ஒரு மில்லியனாக (பத்து இலட்சமாக) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 2.6 மில்லியனாக (அதாவது, இருபத்தி ஆறு இலட்சமாக) மாறியுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது. (ழிணிகீசீளிஸிரி ஞிகிமிலிசீ ழிணிகீஷி – ஜிலீuக்ஷீsபீணீஹ், விணீஹ் 03, 2012) பத்து வருடங்களுக்குள் 150% வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்தன. கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கின்றது. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றது என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என் (சிழிழி) குறிப்பிடுகின்றது.
‘2027இல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும், இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது.
நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர்லாந்தில் முஸ்லிம்கள் 50% சதவிகிதமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும், அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025ல் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050ல் ஜெர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது, 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது.
இதுபோன்ற ஏராளமான புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்ற செய்தி என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கம் எந்த அளவுக்கு எதிர்க்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
ஏனென்றால் இது படைத்த இறைவனின் மார்க்கம்; இது அல்லாஹ்வின் ஜோதி; அல்லாஹ்வின் ஜோதியை எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றவனாலும் ஊதி அணைக்கவே முடியாது. அவ்வாறு ஊதி அணைக்க நினைத்தாலும் அல்லாஹ் தனது ஜோதியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். இது உலகம் அழிகின்ற நாள் வரை எந்தக் கொம்பனாலும் நிறைவேற்றவே முடியாத சவாலாகும்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.
அல்குர்ஆன் 9:32
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்ஆன் 61:8,9
உலகமே வெறுத்தாலும், துன்பங்களைக் கொடுத்தாலும் அல்லாஹ் அனைத்து மார்க்கங்களை விட இஸ்லாமிய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாகச் செய்து வைத்திருக்கின்றான் என்பதை இறைவனின் வார்த்தை தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இதுபோன்ற செய்திகள் நமக்கு ஒரு உண்மையை ஆழமாகப் பதிய வைக்கின்றது. அது என்னவென்றால் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, மனம் தளர்ந்து விடாமல் படைத்த இறைவனை உளமாற நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். அவர்களுக்கு அறியாப் புறத்திலிருந்து தன்னுடைய உதவியை இறக்குவான் என்பதாகும்.
அல்லாஹ்வின் அற்புதமான உதவியை, அல்லாஹ்வை உளமாற ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல் பயணிக்கின்ற ஏராளமான நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் வழங்கி இருக்கின்றான் என்பதே நமது கண்களுக்கு முன்னால் கொட்டிக் கிடக்கின்ற நிதர்சனமான சான்று.
நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட இப்ராஹீம்நபி
அல்லாஹ் மனிதர்களில் ஒருவரைத் தன்னுடைய உற்ற நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றால் அந்த மாமனிதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டும் தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள்; ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்றார்கள்; பல கடவுள் கொள்கையை எதிர்த்து நிற்கின்றார்கள்; பல கடவுள் கொள்கைக்கு ஆதரவாக நிற்கின்ற நபர்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றார்கள்; இதுபோன்ற ஏராளமான காரியங்களை தனி ஒருவராக நின்று ஒரு கூட்டமைப்புக்கு நிகரான வேலைகளைச் செய்து முடிக்கின்றார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் மனம் தளராத பிரச்சாரத்தைக் கண்டு, கடுமையான வேதனையைத் தயார் செய்து இப்ராஹீம் (அலை) அவர்களை அந்த வேதனையில் எதிரிகள் உட்படுத்துகின்றார்கள்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?’’ (என்றும் கேட்டார்.)
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!’’ என்றனர்.
“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு’’ என்று கூறினோம்.
அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நட்டமடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் 21:67-70
இப்ராஹீம் நபி அவர்கள் மனம் தளராமல் தன்னந்தனியாக நின்று ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றியதாலும், ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொன்ன காரணத்தினாலும் அவருக்குக் கொடூரமான தண்டனையாக, தயவு தாட்சண்யமின்றி நெருப்பைத் தயார் செய்து அதில் வீசி எறிகின்றார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் மகத்தான உதவியாலும், இப்ராஹீம் நபியின் தளராத உள்ளத்தினாலும் அல்லாஹ் நெருப்பின் தன்மையை மாற்றி குளிரூட்டுகின்ற தன்மையாக மாற்றி விடுகின்றான்.
மனம் தளராத இப்ராஹீம் நபிக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் தவிடு பொடியாக்கி, எதிரிகளை நஷ்டமடைய வைக்கின்றான். இதுபோன்று முஸ்லிம்கள் மனம் தளராமல் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை வைத்தால் நமக்கும் அல்லாஹ்வின் மறைமுகமான உதவி நிச்சயம் கிடைக்கும்.
மூஸா நபியைக் காப்பாற்றிய இறைவன்
மூஸா (அலை) அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அட்டூழியம் தாங்க முடியாமல் தானும், தன்னோடு ஈமான் கொண்ட மக்களும் ஃபிர்அவ்னின் அடாவடித்தனத்திலிருந்து தப்பித்துச் செல்கின்றார்கள்.
வெகுதூரப் பயண ஓட்டத்திற்குப் பிறகு இறுதியாக, சுற்றும் சூழ்ந்த கடலுக்கு முன்னால் வந்து மாட்டிக் கொள்கின்றார்கள். கூடி இருக்கின்ற, நம்பி வந்த அத்தனை மக்களும் ‘மூஸாவே! கண்டிப்பாக நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்! வசமாக மாட்டிக் கொண்டோம்’ என்று சொன்ன போது, மூஸா (அலை) அவர்கள் மன உறுதியோடு அந்த நேரத்தில் சொன்ன வார்த்தை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கின்ற வார்த்தையாக இருக்கின்றது.
இதோ! அந்த அற்புத வார்த்தையின் செய்திகள்:
காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’’ என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
“அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.
“உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.
அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.
உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 26:60-68
மூஸா (அலை) அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும், மனம் தளராத உள்ளமும் கொண்டிருந்தால் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்க முடியும்.
வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்த பிறகும் கூட, ‘இல்லை! இல்லை! என்னுடன் என் இறைவன் இருக்கின்றான்’ என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு குழுமி இருந்த அத்தனை நபர்களும் ஆச்சர்யத்திலேயே மூழ்கித் திளைத்திருப்பார்கள். அதேபோன்று அவரின் மன உறுதிக்கு, கடலைப் பிளந்து அல்லாஹ் உதவி செய்கின்றான்.
இதுபோன்ற மன உறுதி, ஆழ்ந்த நம்பிக்கை, தடுமாறாத உள்ளம் ஆகியவற்றை முஸ்லிம்களாகிய நாமும் பெறுவதற்கு முயற்சி செய்தால் எத்தனை பெரிய பிரச்சனைகளிலிருந்தும் படைத்த இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான்.
யூனுஸ் நபியைக் காப்பாற்றிய இறைவன்
யூனுஸ் (அலை) அவர்கள் தன்னைப் படைத்த இறைவனிடத்தில் ஒரு காரியத்துக்காகக் கோபித்துச் செல்கின்றார்கள். அதற்கு இறைவன் யூனுஸ் (அலை) அவர்களுக்கு நடத்திய பாடமும், எவ்வளவு சிரமமான சூழலில் இருந்தாலும், தான் செய்த தவறை வருந்தி இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை, மன உறுதி கொண்டதும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்கு அற்புதமான பாடமாக இருக்கின்றது.
யூனுஸ் தூதர்களில் ஒருவர்.
நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.
இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.
அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 37:139-146
அல்லாஹ்வின் மீது கோபித்துக் கொண்டு மீன் வயிற்றில் கிடத்தப்பட்டாலும், இறைவனின் மீது கொண்ட ஆழமான மன உறுதியினால் அல்லாஹ் யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றி அருள் புரிகின்றான்.
எனவே இத்தனை காலமாக அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி கட்டுப்படாமல் வாழ்ந்திருந்தாலும், அல்லாஹ்வின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தால், உள்ளம் தளராமல் உறுதியாக இருந்தால் எத்தனை பெரிய சிரமங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் நிச்சயம் அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவான்.
நபி (ஸல்) அவர்களை காப்பாற்றிய இறைவன்
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்த நாள் முதல் கடும் துன்பத்தையும் துயரத்தையும் எதிரிகளும், துரோகிகளும் கொடுத்தார்கள்.
சில நேரங்களில் ஊரை விட்டு விரட்டினார்கள். கழுத்தை நெரித்துக் கொலை செய்வதற்கு முற்பட்டார்கள். முஹம்மதின் தலையைக் கொய்து வருபவருக்குப் பரிசுத்தொகை அறிவித்தார்கள். இழிவாகப் பேசினார்கள். சூனியக்காரர் என்றார்கள். பைத்தியக்காரர் என்றார்கள். அத்தனை ஏச்சுப் பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு, உள்ளம் உறுதி கொண்டவர்களாக அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிரிகளால் கொடுக்கப்பட்ட துன்பத்தை ஹதீஸ்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
(ஹிஜ்ரி-7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் “சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் முஹம்மது (ஸல்) அவர்களே!’’ என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தந்தை யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் தந்தை இன்னார்’’ என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்’’ என்று கூறினார்கள். யூதர்கள், “நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள்’’ என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “ நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், “சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே இதையும் அறிந்துகொள்வீர்கள்’’ என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நரகவாசிகள் யார்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’’ என்று பதிலளித்தார்கள்.
(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களிடம், “அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒரு போதும் புகமாட்டோம்‘’ என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், “நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?’’ என்று கேட்டார்கள். யூதர்கள், “சரி’’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள். அவர்கள், “ஆம் (கலந்திருக்கிறோம்)’’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் இப்படிச் செய்தீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கிழைக்காது” என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: புகாரி 5777
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரா? இல்லையா? என்பதைச் சோதிப்பதற்காக உணவை அன்பளிப்புச் செய்வது போன்று ஆட்டில் விஷத்தைத் தடவி, கொலை செய்வதற்கு முனைந்திருக்கின்றார்கள்.
ஆட்டில் விஷம் கலந்ததற்கான காரணம் என்ன? என்று யூதர்களிடம் கேட்கும் போது, “நீங்கள் இந்த விஷத்தின் மூலம் இறந்தால் நாங்கள் ஆனந்தமடைவோம்! நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அந்த விஷம் தீங்கிழைக்காது” என்றும் பதிலளித்தனர்.
நபி (ஸல்) அவர்களின் மன உறுதியினாலும், அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கையினாலும் விஷம் கலந்த உணவின் தீங்கை விட்டும் நபியை அல்லாஹ் காப்பாற்றி விட்டான். மனம் தளராமல் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் இதுபோன்ற மறைமுகமான பேருதவியினைச் செய்வான்.
இதுபோன்ற ஏராளமான சம்பவங்களில் இஸ்லாத்தையும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த எதிரிகளை விட்டும், முஸ்லிம்கள் கொண்டிருந்த தளராத உள்ளத்தின் காரணமாக அல்லாஹ் காப்பாற்றி உள்ளான்.
இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்திலிருந்து காப்பாற்றியது போன்று, மூஸா நபியைக் கடலில் மூழ்கடிப்பதிலிருந்து காப்பாற்றியது போன்று, யூனுஸ் நபியை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றியது போன்று, நபி (ஸல்) அவர்களை விஷத்தின் தீங்கிலிருந்து காப்பாற்றியது போன்று இன்னும், இதுபோன்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஏராளமான மக்களை அல்லாஹ் காப்பாற்றி இருக்கின்றான்.
எத்தனை பெரிய சோதனைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும் ஏராளமான முஸ்லிம்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டாலும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கினாலும் குர்ஆனைக் கிழித்து எறிந்தாலும் ஊரை விட்டு அடித்து விரட்டினாலும் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடித்தாலும் யாருக்கும் அஞ்சாமல் கொண்ட கொள்கையிலும், அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கையிலும் ஆழமான உறுதியோடு இருந்தால் நிச்சயமாக வெற்றி நமதே! முஸ்லிம்களே உயர்ந்தவர்கள்! எவ்வளவு பெரிய கொம்பனாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்து, வீழ்த்தி விட முடியாது என்பதை உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோமாக!!!
இறுதியாக, இறைவன் மற்றும் இறைத்தூதரின் அற்புதமான போதனைகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.
ஆதாரம்: முஸ்லிம் 5178 (ஹதீஸ் சுருக்கம்)
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9:51
தன்னைச் சார்ந்திருப்போர் அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்!!! முஸ்லிம்களைக் காப்பாற்ற அல்லாஹ் போதுமானவன்!!

மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம் – தொடர் 4
நிர்வாகத் திறன் நிறைந்தவர்
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும்.
உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் உலகின் பல நாடுகள் அடைமானத்தில் இயங்குகின்றன. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
விவசாயம் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த அடிப்படையாக இருக்கிறது என்பதை உணரும் ஒவ்வொரு அரசனும் அந்த விவசாயத்தை வளர்ப்பதற்கும் விவசாயிகளை மகிழ்விப்பதற்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் பல்வேறு திட்டங்களை வகுப்பான்.
விவசாயிகள் ஆர்வமாகக் களத்தில் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பதை உணர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு அரசனும் இப்படித்தான் செயல்படுவான். ஆனால் நம்முடைய இந்திய நாட்டில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த நாட்டில் விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. விளைச்சலுக்கு ஏற்றவாறு அறுவடை செய்வதற்குப் பொருளாதாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
சுமார் 40 ரூபாய்க்கு மேலே விற்கப்படுகின்ற ஒரு கிலோ அரிசியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பொழுது ஒரு விவசாயிக்குக் கிடைப்பது கிலோவுக்கு சுமார் எட்டு ரூபாய் தான். ஆனால் விவசாயி கேட்பதோ 12 ரூபாய். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு, தன்னுடைய அத்தியாவசியத் தேவைக்கு நான்கு ரூபாய் ஒரு கிலோவுக்கு அதிகரித்துக் கேட்கும் இந்த விவசாயியின் எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
அரசாங்கத்திடம் கடன் வாங்கும் நிலையில் தள்ளப்படும் விவசாயிகளின் கடனுக்குத் தள்ளுபடி இல்லை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அதிகப்பட்ச சலுகைகள் இல்லை என்ற நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர நாட்டின் பிரதமரைச் சந்திப்பதற்காகப் பலகட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையே என்று எண்ணி வேதனையில் மூழ்கிய விவசாயிகள் தற்கொலை என்கின்ற தவறான முடிவில் விழுந்து விடுகிறார்கள்.
பசுமை இந்தியாவின் மூலதனம் விவசாயம்.விவசாயத்தை மேம்படுத்துவதிலும் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு பசுமை இந்தியாவைப் பாலைவனமாக்கி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, நபிகளாரின் சிறந்த வழிகாட்டுதலால் பாலைவனமாக இருந்த அரேபியா சோலைவனமாக மாறிய வரலாறு உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது.
செல்வச் செழிப்பில் சவுதி அரேபியா
தற்போது சவுதி அரேபியா என்று சொல்லப்படுகின்ற நபிகளார் வாழ்ந்த அரபு தேசம் பேரித்தம்பழம், கோதுமை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் பூமி ஆகும்.
அன்றைய அரபுகள் பேரிச்சை, கோதுமை ஆகியவற்றின் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்து இருந்தனர்.
விவசாயம் செழித்தால் தான் அரபு மண்ணில் வாழ்பவர்களுக்கு அன்றாட உணவு கிடைக்கும், அண்டை நாட்டில் உள்ளவர்கள் இந்த பேரீச்சம் பழங்களையும் கோதுமைகளையும் இன்னபிற விளைச்சல் பொருட்களையும் பெற்று அதற்கு மாற்றாகத் தங்கம், வெள்ளிக் காசுகளாக அல்லது உடைகளாகக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
அன்றைய அரபுலக தேசத்தில் பேரிச்சம்பழங்களை விவசாயம் செய்தவர்கள், தாங்கள் அறுவடை செய்கின்ற பேரீச்சம் பழங்களின் விலை நிலவரங்களை விவசாயிகளே நிர்ணயித்தார்கள். கோதுமை கிலோ எத்தனை ரூபாய் எனவும் இன்னபிற விளைச்சலுக்கு என்னென்ன மதிப்பீடு எனவும் விவசாயிகளே முடிவு செய்து சந்தையில் விற்பனை செய்தார்கள்.
இதனால் அதை விலைக்கு வாங்கிய நுகர்வோர் அவ்வப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து, உயர்த்தியும் கூறுகிறார்களே! இதை ஏன் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கக் கூடாது என்று கேட்டு நபிகளாரிடம் முறையிட்டார்கள். அப்போது விவசாயிகளின் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த நபிகளார், அதில் விலை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிடாது என்ற ஒரு அறிவிப்பைச் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் விற்பவருடைய உரிமைகளையும் வாங்குபவருடைய உரிமைகளையும் கூறியுள்ளார்கள்.
ஒரு தடவை சிலர் நபியிடத்தில் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! பொருட்களுடைய விலை கூடி விட்டது. நீங்கள் விலையை நிர்ணயம் செய்யுங்கள்’’ என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘‘அல்லாஹ் தான் உணவை விசாலமாகக் கொடுக்கக் கூடியவன். நான் ஆதரவு வைக்கிறேன். அதே நேரம் (விவசாயிகளின் விலையை நான் நிர்ணயித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும் போது உங்களில் யாரும் என்னிடத்தில் பொருளுடைய விஷயத்திலோ அல்லது உயிர் விஷயத்திலோ அநீதிக்குள்ளாகி (கியாமத் நாளில்) நீதிவேண்டி வராமல் இருப்பதை விரும்புகிறேன்’’
(நூல் – அபூதாவூத் 340)
உற்பத்தி செய்பவனுக்கே அதன் அருமை பெருமைகள் தெரியும். எனவே விலை நிர்ணயத்தை அவனே முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்கள். விவசாயிகளை அரபு தேசத்தில் நிம்மதியாக வாழ விட்டதன் விளைவாக, தனது நாடு முன்னேறிவிட்டது என விவசாயிகள் மகிழ்ந்தார்கள். விவசாயிகள் மகிழ்வுடன் அறுவடை செய்தார்கள். செழிப்பை நோக்கி சவுதிஅரேபியா மலர்ந்தது.
வரி எனும் பெயரில் வழிப்பறி செய்யாதவர்
நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான கல்வி, வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கும் இலவச மருத்துவ சேவை செய்வதற்கும், ஏற்றுமதியைப் பெருக்கிட தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், தேசத்தை மற்ற நாடுகளிடமிருந்து ஏற்படுகிற பிரச்சினைகளிலிருந்து காப்பதற்கும் அரசாங்க நிதியாதாரம் போதுமானதாக இருக்க வேண்டும். அரசுக் கருவூலத்தில் பொருளாதாரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்காலத்தில் அரசு மக்களிடம் நிதியை எவ்வாறு திரட்டுகிறது எனப் பாருங்கள்.
முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு வசூலிக்கப்படும் வரி.
கலால் வரி (விற்பனைக்குரிய உற்பத்திப் பொருட்கள் அல்லது விற்பனைக்குரிய சில பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி).
விற்பனை வரி (வியாபார பரிவர்த்தனைகளின் மீதான வரி, குறிப்பாக விற்பனை மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி).
மதிப்புக் கூட்டு வரி (விற்பனை வரியின் ஒரு வகையை சார்ந்தது)
குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி.
சாலை வரி, சுங்க வரி, வாகனக் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவை.
பரிசுப்பொருட்கள் மீதான வரி.
இறக்குமதி மீதான வரிகள், சுங்க வரி விதிப்பு
பெருநிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி (ஒருங்கிணைந்த நிறுவனங்கள்).
சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி
தனி நபர் வருமான வரி (தனிநபர்கள், இந்தியாவில் இந்து கூட்டுக் குடும்பம் போன்ற குடும்பங்கள், இணைக்கப்படாத சங்கங்கள், போன்றவை மீது விதிக்கப்படும் வரி).
உணவுப் பொருட்கள் மீதான வரி. உணவகத்தில் சென்று சாப்பிடும் பொருட்களுக்கும் வரி.
இத்தனை வகையான வரிகளின் பெயரால் செல்வம் சேர்க்கும் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தால் வழிப்பறி செய்யப்படுகிறான். அரசாங்கம் குடிமக்கள் மீது இத்தனை வகையான வரிகளைத் திணிப்பதால் தான் நாட்டில் வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.
தனது சரியான பொருளாதார நிலையை வெளியுலகத்திற்குச் சொல்லாமல் மூடி மறைக்கிறார்கள். இதற்குத் தீர்வு பலதரப்பட்ட வரி என்ற பெயரால் மக்களிடம் வழிப்பறி செய்வதை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக, செல்வச் செழிப்புள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வரிவசூல் செய்து விட்டால் மிகச்சரியான முறையில் ஒவ்வொரும் தன்னுடைய வருமானத்தைச் சரியான முறையில் கணக்குக் காட்டி வரி கட்டுவார்.
இதன் முன்னோடியாக விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களிடத்தில் பொருளாதார அளவில் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியவர்களிடம் ஸகாத் என்ற பெயரில் சொத்தில் இரண்டரை சதவீத வரியைப் பெற்றார்கள்.
முஸ்லிமல்லாத மக்கள் மக்களிடம் ஜிஸியா வரி என்கிற பெயரில் நாட்டின் வளர்ச்சி நிதியாக வரி வசூலித்தார்கள். ஜிஸியா வரி என்பது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று, ஏனைய முஸ்லிம் குடிமக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார்.
ஆனால், ஜிஸ்யா வரி வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்பு வரி என்றும் கூறுவர்.
ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காகக் காவலர்களை நியமித்துக் கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.
ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் விரும்பினால் செய்யலாம்; விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
· முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
· முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.
· முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.
இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.
ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.
தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.
இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.
இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.
அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.
ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துகளை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.
முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.
வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.
இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஜகாத் என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.
பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.
சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போதைய சூழலில் ஜிஸ்யா எனும் காப்பு வரியாக ஒரு தீனார் மட்டுமே நபியவர்களால் விதிக்கப்பட்டது. (ஆதாரம்: அபூதாவுத் 3038)
பிறகு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியாவாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஒரு தீனார் என்பது மிக மிகச் சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் அன்றாடம் செலுத்தும் வரியை விடப் பல மடங்கு குறைவானதாகும்.
சொத்துவரி, விற்பனை வரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் இந்தியக் குடிமகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விடப் பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.
செலுத்துவதற்கு எளிதான தொகை யாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது.
இதனால் நாட்டின் கருவூலம் நிறைந்தது நாட்டு மக்கள் பலன் அடைந்தார்கள். அவர்களின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது. இறந்தவருக்குப் போர்த்துவதற்குக் கூட கருவூலத்தில் நிதி இல்லாத நிலை மாறி, இறந்தவர் விட்டு சென்ற கடனுக்கே பொறுப்பேற்கும் நிலை வந்தது.
எவர் மரணிக்கும்போது கடனை வைத்து விட்டு அதை அடைக்காமல் விட்டுச் செல்கிறாரோ அல்லது அவர் திக்கற்ற மனைவி மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்கு பொறுப்பாளன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1105
தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒழியில் அமல்களின் சிறப்புகள்
எம்.ஷம்சுல்லுஹா

‘அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்’ என்று முஆத்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) ‘இந்த நல்ல செய்தியை நான் மக்களுக்குச் சொல்லலாமா?’ எனக் கேட்டார்கள். ‘வேண்டாம் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 129
இதிலும் நபி (ஸல்) அவர்கள் இதை மக்களிடம் சொல்லவேண்டாம் என்று முஆத் பின் ஜபல் (ரலி)யிடம் தெரிவிப்பதை நாம் பார்க்க முடிகின்றது.
நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’ இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகிறவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கிவைப்போம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 4945
இந்த ஹதீஸிலும் விதியைக் காரணம் காட்டி நபித் தோழர்கள் அமல் செய்யாமல் இருப்பதற்கு அனுமதி கேட்கின்ற போது அமல்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதைத் தான் நாம் பார்க்க முடிகின்றது.
மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.
அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் கனமிழந்து விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.
அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2563
இது போன்ற ஹதீஸ்கள் கலிமா மட்டும் சொல்லி விட்டு சுவனம் சென்று விடலாம் என்பது போல் அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஹதீஸ்களை நமக்குப் போதிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அன்னாரிடமிருந்து இந்த ஹதீஸ்களை நமக்கு அறிவிக்கும் நபித்தோழர்களும் கலிமா சொல்லி விட்டு, எந்த அமலையும் செய்யாமல் இருந்ததில்லை.
அதிலும் குறிப்பாக நபித் தோழர்களில் பலர் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களாக இருந்தனர்.
சுவனத்தைக் கொண்டு நற்செய்திச் சொல்லப்பட்டவர்கள் என்று பத்து நபித்தோழர்கள் உள்ளனர்.
அபூபக்ர் சுவனத்தில், உமர் சுவனத்தில், அலீ சுவனத்தில், உஸ்மான் சுவனத்தில், தல்ஹா சுவனத்தில், ஜுபைர் சுவனத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சுவனத்தில், சஃது பின் அபீ வக்காஸ் சுவனத்தில், சயீத் பின் ஜைத் சுவனத்தில், அபூஉபைதத்துல் ஜர்ராஹ் சுவனத்தில் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்
நூல்: முஸ்னத் அஹ்மத் 1085
அடுத்து பத்ர் போரில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களுக்கு சுவனம் என்று இந்த வட்டம் விரிகின்றது.
உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்!’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்’ என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்’ என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’… என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3983
பைஅத்துர் ரிள்வானில் கலந்து கொண்டவர்களுக்கும் சுவனம் என்று இந்த வட்டம் இன்னும் விரிந்து செல்கின்றது.
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
அல்குர்ஆன் 48:18
சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட இந்த அத்தனை நிகழ்ச்சியிலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அமல் செய்யாமல் இருந்தார்களா? என்றால் இல்லை.
அபூபக்ர் (ரலி)யும் அமல்களும்
‘ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1897
‘இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 2841
தொழுகை, ஜிஹாத், நோன்பு, தர்மம் என்று அத்தனை தலைவாசல்களிலும் அழைக்கப்படும் பாக்கியமிக்கவராக அபூபக்ர் (ரலி) திகழ்வதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 1865
இந்த ஹதீஸும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சுவனவாசி என்ற சுபச்செய்தி கூறுவதுடன் அவர்களின் பலகட்ட அமல்களை எடுத்துக் கூடுகின்றது.
உமர் (ரலி)யின் அமல்கள்
அபூபக்ர் (ரலி)க்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் உமர் (ரலி) அவர்கள். அவர்களுக்கு சுவனம் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் பின்வரும் ஹதீஸ் சான்று பகர்கின்றது.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களுடையது’ என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 3242
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர் (ரலி) அவர்கள் நல்லமல்கள் செய்வதில் அலட்சியமாகவோ அசட்டையாகவோ இல்லை. கடமையான தொழுகைகளைக் காற்றாட விட்டதில்லை. அவர்கள் சுபுஹ் தொழுகையின் ஜமாஅத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது ஓர் யூதனால் கொல்லப்பட்டு ஷஹீத் ஆகின்றார்கள்.
பார்க்க: புகாரி 3700
பிலால் (ரலி)யின் பிரத்தியேக அமல்
பிலால் (ரலி) ஆரம்ப கால முஸ்லிம். தியாகத்தின் மறுபதிப்பு என்பதை நாம் அறிவோம் அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்தவர்கள். உமைய்யத் பின் கலஃப், பத்ருப் போரில் கொல்லப்படுவதற்கு அவர்கள் தான் காரணமாக அமைந்தார்கள். (பார்க்க: புகாரி 2301)
அந்த பிலால் (ரலி) அவர்கள் அமலில் பின் தங்கிவிடவில்லை.
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1149
இந்த ஹதீஸ் பிலால் (ரலி)யின் அமலுக்கு சாட்சி கூறி நிற்கின்றது.
இவை எல்லாம் நபித் தோழர்கள் சுவனவாசிகள் என்ற சுபச் செய்தி சொல்லப்பட்ட பிறகும் அமல்களில் அவர்கள் சோடை போகவில்லை. அந்த அமல்களில் விரைந்து செல்கின்ற நல்லடியார்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது.
கலிமாச் சொல்லி விட்டு அமல்கள் செய்யாமல் தவ்ஹீத் கொள்கை நம்மைக் காத்துவிடும் என்று நம்பிக் கொண்டு அமல்கள் ஏதும் செய்யாமல் இல்லை. அமல்களில் அவர்கள் தணியாத ஆர்வமும் ஆசையும் கொண்டிருந்தனர் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் அறிய முடிகின்றது.
அக்கரை சேர்க்கும் அழகான அமல்கள்
நாளை மறுமையில் ஒருவர் சுவனத்திற்குச் செல்லவேண்டுமென்றால் நரகத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்தே தீர வேண்டும்.
உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.
அல்குர்ஆன் 19:71
அந்தப் பாலத்தை ஒருவர் கடக்க வேண்டுமென்றால் அவரது அமல் தான் அவரை அக்கரையில் கொண்டு போய் சேர்க்கின்றது. இதை முஸ்லிமில் இடம்பெறுகின்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாளில்) மனிதர்களை ஒன்றுகூட்டுவான். அங்கு இறை நம்பிக்கையாளர்களும் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும். உடனே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “எங்கள் தந்தையே! எங்களுக்காகச் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும்படி கூறுங்கள்” என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் “உங்கள் தந்தை ஆதம் செய்த தவறுதானே உங்களைச் சொர்க்கத்திலிருந்தே வெளியேற்றியது! அ(வ்வாறு சொர்க்கத்தைத் திறக்குமாறு கூறுவ)தற்கு நான் உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் என் புதல்வரும் அல்லாஹ்வின் உற்ற நண்பருமான இப்ராஹீம் அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
(அவ்வாறே மக்களும் செல்ல) இப்ராஹீம் (அலை) அவர்கள், “நான் அதற்கு உரியவன் அல்லன். நான் உற்ற நண்பனாக இருந்ததெல்லாம் (வானவர் ஜிப்ரீல் தூதுவராக இருந்த) பின்னணியில் தான்; அந்தப் பின்னணியில் தான். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ் (நேரடியாக) உரையாடிய மூசா (அலை) அவர்களை நாடிச் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் “நான் அதற்கு உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய ஆவியுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
(அவ்வாறே மக்களும் செல்ல) ஈசா (அலை) அவர்கள், “நான் அதற்கு உரியவன் அல்லன்” என்று கூறுவார்கள். பின்னர் மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள்.
உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள “ஸிராத்” எனும்) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம் இடமாக நின்றுகொள்ளும்.
அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்துசெல்வார்கள். -இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, நான் (அபூஹுரைரா-ரலி), “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலைப் போன்று கடந்துசெல்வது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மின்னல் எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டுத் திரும்புகிறதென்று நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கேட்டார்கள்.- பிறகு காற்று வீசுவதைப் போன்றும், பறவை பறப்பதைப் போன்றும், மனிதர்கள் விரைந்து ஓடுவதைப் போன்றும் இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு அவர்களின் (நற்)செயல்கள் ஓடும். உங்கள் நபியோ அந்தப் பாலத்தின் மீது நின்றுகொண்டு, “இறைவா! காப்பாற்று! காப்பாற்று!” என்று கூறிக்கொண்டிருப்பார்கள். இறுதியில் அடியார்களின் செயல்கள் செயலிழந்துபோகும்; அப்போது ஒருவர் வருவார். அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே (அதைக் கடந்து) செல்வார். அந்தப் பாலத்தின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். சிலரைப் பிடிக்கும்படி அவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும். சிலர் காயப்படுத்தப்பட்டுத் தப்பிவிடுவர்; சிலர் நரகநெருப்பில் தள்ளப்படுவர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நரகத்தின் ஆழமானது, எழுபது ஆண்டுகள் தொலைதூரம் கொண்டதாகும்.
நூல்: முஸ்லிம் 329
இந்த ஹதீஸ் அமல்கள் இருந்தால் தான் சுவனம் செல்ல முடியும் என்பதை உணர்த்துகின்றது. அதில் அமல்களில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.