ஏகத்துவம் – ஜூன் 2018

நீதியை நிலைநாட்டிய நியாயமிக்க ஜமாஅத்!

பி.ஜே. ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஓர் ஆடியோ பதிவு வெளியானது. அது தொடர்பாக, அதைத் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அப்போதைய மாநில பொதுச்செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஒரு பகிரங்க அறைகூவல் விடுத்தார். அந்த அறைகூவல் இதோ:

நிரூபிக்க அழைக்கிறோம்!

கடந்த சில நாட்களாக  ஒரு பெண்ணுடன் சகோதரர் பீஜே அவர்கள் தொலைபேசியில் உரையாடுவது போலவும், அந்த உரையாடலில் மார்க்கம் தடுத்த ஆபாசப் பேச்சுக்கள் பேசப்பட்டிருப்பது போலவும் சகோதரர் பீஜே அவர்களின் குரல் போல அந்த உரையாடல் வடிவமைக்கப்பட்டு ஏகத்துவ எதிரிகளால் அது பரப்பப்பட்டு வருகின்றது.

பொதுவாக சகோதரர் பீஜே அவர்களின் 30 ஆண்டுகால ஏகத்துவப் பிரச்சார வரலாற்றில் அவர் மீது சொல்லப்படாத அவதூறுகளே இல்லை என்னும் அளவிற்கு இதுவரைக்கும் அவதூறுகளை ஏகத்துவ எதிரிகள் பரப்பி வந்துள்ளனர்; இன்னும் பரப்பியும் வருகின்றனர்.

இதைப் பரப்பி வருபவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க வருமாறு இதைப் பரப்பியவர்களை அழைக்கிறோம்.

தொலைபேசி உரையாடல் என்ற பெயரில் தான் இது பரப்பப்படுகிறது.

தொலைபேசி உரையாடல் என்றால்…

எந்த நம்பரில் இருந்து போன் செய்யப்பட்டது?

அது யாருடையது?

எந்த நம்பருக்கு போன் செய்யப்பட்டது? அவர் யார்?

எந்த தேதியில் பேசப்பட்டது?

கால் ஹிஸ்டரி எனும் சம்மரி ஆதாரத்துடன்

சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து வந்து நிரூபிக்க முன் வாருங்கள்!

ஆதாரங்களை நேரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் கொண்டு வந்து சமர்ப்பித்தால் அதை உரிய வகையில் விசாரித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமேயானால் பீஜே மீது நடவடிக்கை எடுத்து அவரை இந்த ஜமாஅத்தின் பிரச்சாரகர் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருந்தும் தூக்கி எறிய இந்த ஜமாஅத் தயாராக உள்ளது என்பதை அறிவிக்கின்றோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் விசாரணையை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை.

எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் குற்றம் செய்தது  நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜமாஅத் துளியளவும் தயக்கம் காட்டாது.

என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவளது கையை வெட்டுவேன் என்ற நபிகளாரின் வழி வந்த தவ்ஹீத் ஜமாஅத்தில் எளியவன் – வலியவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

எனவே பீஜே அவர்கள் மீதான அவதூறைப் பரப்புவோர் யாராக இருந்தாலும் அதை நான் நிரூபிக்கப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்ற உத்தரவாதத்தோடு வரும் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமைக்குள் தக்க ஆதாரங்களுடன் நான் நிரூபிக்கத்தயார் என்று சொல்லி நிரூபிக்க முன்வரட்டும்.

இதற்கு இடைப்பட்ட நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்தால் அந்தத் தேதிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக எந்த நாளில் எந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு அதற்கான ஆதாரங்களுடன் தாங்கள் வருகின்றோம் என்பதை அவர்கள் முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிப்பார்களேயானால் அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் கொண்டு வரும் ஆதாரங்களுடன், குற்றம் சுமத்தப்பட்ட சகோதரர் பீஜே அவர்களையும் நேரில் வைத்து இந்த விசாரணையை தவ்ஹீத் ஜமாஅத் நடத்த தயாராக உள்ளது.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டு முன் வந்தால் அந்த விசாரணைக்கு உடன்படுவதற்குத் தான் தயார் என்றும், எப்படி வேண்டுமானாலும் என்னை விசாரிக்கலாம் என்றும் சகோதரர் பீஜே அவர்கள் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் பொறுப்பேற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு வருவதற்கு யாருக்கும் எந்த தயக்கமும் தேவையில்லை.

யார் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் பொறுப்பேற்று தலைமையகம் வருகின்றாரோ அவர் திரும்பிச் செல்லும் வரைக்கும், அவரது உயிருக்கும்,  உடமைக்கும்  எந்தப் பாதிப்பும் வராது என்பதற்கும் இந்த அறிவிப்பின்      வாயிலாகவே உறுதி கூறுகின்றோம்.

பேஸ்புக்கில் அவதூறு பரப்புவோர் இதை நிரூபிக்கப் பொறுப்பேற்று நேரில் வர மறுத்தால் இதிலிருந்தே இது பச்சை அவதூறு என்பதும், மிகத் துல்லியமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கைதேர்ந்த தொண்டை தொழிலாளிகளை வைத்து, செய்த செட்டிங் என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

கவுண்டவுன் ஸ்டார்ட்.

இன்னும் 10 நாட்களே உள்ளன;

இன்னும் 242 மணி நேரங்களே உள்ளன.

உங்களுக்குத் துணிவிருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன்வாருங்கள்!

இப்படிக்கு,

மாநிலப் பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

குறிப்பு:

அவதூறு பரப்புவோருக்கு அறிவுப்பூர்வமாக மட்டும் பதில் கொடுங்கள். ஆபாசமாக எதிரிகள் குடும்பப் பெண்களை இழிவுபடுத்தும் எந்த பதிவையும் போட வேண்டாம். இதில் ஜமாஅத்துக்கு  உடன்பாடு இல்லை என்பதை கொள்கைச் சகோதரர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம்.

இது தான் அந்த அறைகூவலாகும். இது கடந்த ஆண்டு 24.08.17 அன்று பகிரங்கமாக விடுக்கப்பட்டது.

10 நாட்கள் அவகாசமும் அளித்து விடுக்கப்பட்ட அந்த அறைகூவலை ஏற்று யாரும் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வரவில்லை.அதனால் அது எதிரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறு என்று முடிவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜமாஅத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது மீண்டும் அண்மையில் ஓர் ஆடியோ வெளியானது. இதற்கும் மேலாண்மைக்குழுத் தலைவர் நாஸர் அவர்கள் 09.05.18 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

சமீபகாலமாக பிஜே அவர்கள் பேசுவது போல ஆபாச ஆடியோ ஒன்றை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் இது போல ஒரு ஆடியோவைப் பரப்பினர்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை சட்டம் அனைவருக்கும் சமம் தான்.

வலியவனுக்கு ஒரு நீதி, எளியவனுக்கு ஒரு நீதி எனும் யூதக்கலாச்சாரத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் இடமில்லை.

இதை அனைவரும் நன்கறிவார்கள்.

பிஜேவின் தொலைபேசி உரையாடல் என்று பரப்புவோர் அது செட்டிங் அல்ல, உண்மை தான் என்று நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

எனவே பிஜே அவர்கள் மீது குற்றம் சுமத்துவோர் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பொறுப்பேற்றுக் கொண்டு மேலாண்மைக்குழுவை அணுகினால் ஜமாஅத் விதிப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஜமாஅத் தயாராகவே உள்ளது.

இந்த ஆடியோவுக்கு மட்டுமல்லாமல் இது போன்று எத்தனை ஆடியோக்களை வெளியிட்டாலும் அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் இதுவே.

இந்த ஜமாஅத்தில் யாருக்காகவும் சட்டம் வளையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,

கே.எம்.அப்துன்னாசர்

மேலாண்மைக்குழு தலைவர்

இதற்கிடையே மாநிலத் தலைவராக இருந்த பிஜே தனது பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விலகல் கடிதம் கொடுத்தார். அது தொடர்பாக  விவாதிப்பதற்காக உயர்நிலைக் குழு 12.05.2018 அன்று கூடுவதாக மாநில நிர்வாகம் அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட ஆடியோவில் பேசும் பெண்ணின் குடும்பத்தார் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் எஸ். கலீல் ரசூல் அவர்களைச் சந்தித்து, ஆடியோவில் பேசியது பிஜே தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்பித்தனர்.

12.05.2018 அன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு  கூட்டத்தில் அந்த ஆதாரம்  சமர்ப்பிக்கப்பட்டு, அது சரியானது தான் என உறுதி செய்யப்பட்டது. மார்க்க அடிப்படையில் விபச்சாரத்திற்கு நான்கு சாட்சிகள் அவசியமாகும். இது இஸ்லாமிய அரசால் தண்டனை நிறைவேற்றுவதற்கான சட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவின் படி நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு, ஒருவர் விபச்சாரம் செய்தார் என்ற அளவுக்கு  ஆதாரம் தேவையில்லை. ஒரு பெண்ணுடன் தனித்திருந்தார் என்ற அளவுக்குத் தக்க ஆதாரம் இருந்தாலே போதும்; தகுந்த முகாந்திரம் இருந்தாலே போதும். அவர் ஜமாஅத்திலிருந்து, மீண்டும் பொறுப்புகளுக்கு வரமுடியாத அளவுக்கு நீக்கப்பட்டு விடுவார்.

இந்த அடிப்படையில்  பிஜே, ஜமாஅத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்.

நவீன தொழில் நுட்பக் காலத்தில் இது போன்ற ஆடியோக்கள் வெளிவருவது ஆச்சரியமானது கிடையாது என்ற சிந்தனையில் இருந்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்தது. அதன் அடிப்படையில் அவர்  நீக்கப்பட்டு விட்டார்.

இதுபோன்ற ஒரு தவறான நடத்தையை பிஜேவிடமிருந்து உயர்நிலைக் குழுவினர் எதிர் பார்க்கவில்லை; எண்ணிப் பார்க்கவுமில்லை. உயர்நிலைக் குழு அவர் மீது வைத்திருந்த மதிப்பு மரியாதை அனைத்தையும் அவரது இந்தச் செயல் தகர்த்தெறிந்து விட்டது. அதன் அதிர்வலைகளைப் பற்றி எழுத்தில் ஒருபோதும் வடிக்க முடியாது.

உயர்நிலைக்குழு மட்டுமல்ல! ஒட்டுமொத்த ஜமாஅத்தின் உறுப்பினர்களும் அவர் மீது கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன்னால் எந்தப் பாசத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரை நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதற்கு முன்பு பாக்கர், அல்தாஃபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோலவே இவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.

அல்குர்ஆன் 24:2

இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது போன்று அவர் மீது எந்தக் கருணையும் ஜமாஅத் சார்பில் காட்டப்படவில்லை.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்க மானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3475

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலும் ஹதீஸ் அடிப்படையிலும்  தலைமை அவர் மீது  எந்தப் பாரபட்சமும், பாகுபாடும் காட்டாமல் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அல்தாஃபி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போது, அவர் நிரந்தரமாக வரக்கூடாது என்பதற்காகவே பைலாவில் திருத்தம் செய்யப்பட்டது என்று ஒரு தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பிஜே மீதான நடவடிக்கையின் மூலம் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்தாஃபிக்கும் அதே பைலா விதி தான். பிஜேவுக்கும் அதே பைலா விதி தான் என்று நீதியை இந்த ஜமாஅத் நிலைநாட்டியுள்ளது. இதன் மூலம் இது ஒரு நியாயமான ஜமாஅத் என்பதை நிரூபித்துள்ளது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

———————————————————————————————–

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள்

முகாஷஃபாத் எனும் அகப்பார்வை உண்மையா?

அபூ அதீபா

நவீன ஸலஃபிக் கொள்கையைப் பின்பற்றுபவர்களிடத்தில் பல்வேறு வழிகேடுகள் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான பல்வேறு சான்றுகளை சென்ற இதழில் நாம் கண்டோம். அதைத் தொடர்ந்து இன்னும் பல சான்றுகளை நாம் பார்க்க இருக்கின்றோம்.

நவீன ஸலஃபுகள், இமாம் இப்னு தைமிய்யா அவர்களைத் தங்களுடைய கொள்கைக்கு முன்மாதிரியாகக் கருதுகின்றனர். தங்களுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் இமாம் இப்னு தைமிய்யா அவர்களை மிகவும் சிலாகித்துக் கூறுகின்றனர். இப்னு தைமிய்யா அவர்கள் மிகச் சிறந்த அறிஞர் என்றாலும் அவரிடமும் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. நவீன ஸலபியிஸத்தின் வழிகேடுகளுக்கு அத்தவறுகளே மிக முக்கியக் காரணங்களாகவும் உள்ளன.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் தவறான கொள்கைகளில் சிலவற்றை இந்த இதழில் காண்போம்.

சில நேரங்களில் ‘‘முகாஷஃபாத்” எனும் அகப்பார்வை மூலம் எவ்வளவு தூரத்தில் உள்ளவற்றையும் நல்லடியார்கள் பார்க்கலாம், கேட்கலாம் என்பது இப்னு தைமிய்யாவின் கொள்கையாகும். இது நல்லடியார்களுக்கு இறைவன் வழங்கும் ‘‘கராமத்” (அற்புதம்) என இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

இதற்குப் பின்வரும் சம்பவத்தை இப்னு தைமிய்யா சான்றாகக் காட்டுகின்றார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 161)

وعمر بن الخطاب لما أرسل جيشا أمر عليهم رجلا يسمى سارية، فبينما عمر يخطب فجعل يصيح على المنبر: يا سارية! الجبل، يا سارية الجبل الجبل، فقدم رسول الجيش فسأله، فقال يا أمير المؤمنين! لقيننا عدونا فهزمونا فإذا بصائح: يا سارية الجبل، يا سارية الجبل، فأسندنا ظهورنا بالجبل فهزمهم الله.

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு படையை அனுப்பிய போது ‘‘ஸாரியா” எனப் பெயர் குறிப்பிடப்படும் ஒருவரை அவர்களுக்கு அமீராக நியமித்தார்கள். உமர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘‘ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!) ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்)! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று மிம்பரின் மீது நின்றவர்களாக சப்தமிட்டார்கள். (பின்னர் போர் முடிந்து) அப்படையின் தூதர் வந்த போது அவரிடம் உமர் அவர்கள் விசாரித்தார்கள். அவர் ‘‘அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் எதிரிகளைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தோற்கடித்தார்கள். அப்போது ‘‘ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்! ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்” என்று ஒருவர் சப்தமிட்டார். நாங்கள் அம்மலையை எங்கள் பின்புறத்திற்கு அரணாக்கிக் கொண்டோம். அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்தான்.

நூல்: அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 161

மேற்கண்ட சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத கால தூரத்தில் உள்ள படையின் நிலையைப் பார்த்ததாக வந்துள்ளது. அது போன்று உமர் அவர்கள் மதீனாவில் இருந்து சப்தமிட்டதை ஒரு மாத கால தூரத்தில் இருந்த ‘‘ஸாரியா” என்ற படைத்தளபதியும், படை வீரர்களும் கேட்டதாக வந்துள்ளது.

ஒரு மாத கால தூரத்தில் உள்ள ஒரு நிகழ்வைப் பார்ப்பதும், கேட்பதும் மனிதர்களுக்கு இயலுமா? இதுபோன்ற ஒரு ஆற்றலை மனிதர்களுக்கு இறைவன் வழங்குவானா? என்பதை நாம் குர்ஆன், சுன்னா ஒளியில் உரசிப் பார்க்கும் முன் இப்னு தைமிய்யா அவர்கள் இதற்குக் கூறும் காரணத்தையும், மற்ற ஸலஃபுகள் இதற்குக் கூறும் காரணத்தையும் நாம் தெரிந்து கொள்வோம்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67)

المكاشفات -: ما حصل لأمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه حيث كان يخطب الناس يوم الجمعة على المنبر، فسمعوه يقول: يا سارية! الجبل! فتعجبوا من هذا الكلام، ثم سألوه عن ذلك؟

இப்னு தைமிய்யா கூறுகிறார் :

‘‘(நல்லடியார்களுக்கு நிகழும் கராமத்துகளில் ஒருவகை) ‘‘அல்முகாஷஃபாத்” என்பதாகும். அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் அவர்கள் வெள்ளிக் கிழமை மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ‘‘ஸாரியாவே! அம்மலையை அரணாக்கிக் கொள்!’’ என்று கூறுவதை அவர்கள் செவியேற்றார்கள். இந்த வாசகத்தினால் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் பிறகு அவரிடம் அதைப் பற்றி விசாரித்த இந்த நிகழ்வை ‘‘முகாஷஃபாத்” என்பதற்குரிய சான்றாகக் கொள்ளலாம்.

நூல்: அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67

உமர் (ரலி) அவர்கள் ‘‘முகாஷஃபாத்” என்ற அகப்பார்வையின் மூலம் மதீனாவில் இருந்தே ஒரு மாத கால தூரத்தில் இருந்த படையினரைப் பார்த்தார்கள் என இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

நவீன ஸலஃபுகள் மிக முக்கியமாகக் கருதும் அகீதா தொடர்பான நூல்களில் ஒன்று ‘‘ஷரஹ் அகீததுத் தஹாவியா” என்ற நூலாகும். இதன் ஆசிரியர் ‘‘ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ்” என்பவர் ஆவார். இவர் தன்னுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

شرح العقيدة الطحاوية – صالح آل الشيخ (ص: 678)

فمن القدرة في السمعيات سَمَاعْ سارية كلام عمر رضي الله عنه وهو في المدينة حيث كان يخطب، فقال (يا سارية الجبل الجبل)، يعني الزم الجبل، وسارية كان في بلاد فارس وسَمِعَ الكلام.وهذا لاشك قدرة في السماع خارقة للعادة أُوتِيَهَا. وكذلك هي من جهة عمر رضي الله عنه قُدْرَةْ في الإبصار حيث إنَّهُ أَبْصَرَ ما لم يُبْصِرُهُ غيره، فقال: يا سارية الجبل الجبل. فنظر إلى سارية ونظر إلى الجبل ونظر إلى العدو وكأنَّ الجميع أمامه، ولهذا قال: الزم الجبل.

உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருடைய பேச்சை ஸாரியா அவர்கள் செவியேற்றது செவிப்புலன் சார்ந்த வல்லமையில் உள்ளதாகும். உமர் (ரலி) அவர்கள் ‘‘ஸாரியாவே அம்மலை(யை அரணாக்கிக் கொள்!), ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று கூறினார்கள். ஸாரியா அவர்கள் பாரசீக தேசத்தில் இருந்து அவருடைய பேச்சை செவியேற்றார். இது வழமைக்கு மாற்றமான (அற்புதமான) செவியேற்கும் திறன் என்பதிலும் அது அவருக்கு வழங்கப்பட்டது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை உமர் (ரலி) அவர்கள் தொடர்பாகப் பார்க்கும் போது மற்றவர்கள் பார்க்காத ஒன்றை உமர் பார்த்தார் என்ற அடிப்படையில் இது பார்வைப் புலன் சார்ந்த வல்லமையில் உள்ளதாகும். ‘‘ஸாரியாவே அம்மலை(யை அரணாக்கிக் கொள்!), ஸாரியாவே! அம்மலை(யை அரணாக்கிக் கொள்!)’’ என்று அவர் கூறினார். ஸாரியாவையும், அம்மலையையும், எதிரிகளையும் அவர் பார்த்தார். அவர்கள் அனைவரும் தனக்கு முன்னால் இருப்பதைப் போன்று பார்த்தார். இதனால் தான் ‘‘அம்மலையை அரணாக்கிக் கொள்” என்று கூறினார்.

நூல்: ஷரஹூல் அகீததித் தஹாவியா

பக்கம் 678

படைப்பினங்களில் யாருக்கும் இல்லாத கேட்கும் திறன் ஸாரியாவிற்கு வழங்கப்பட்டதாகவும், படைப்பினங்களில் யாருக்குமே இல்லாத பார்க்கும் திறன் உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மேற்கண்ட நூலாசிரியர் விளக்கமளிக்கின்றார்.

நிச்சயமாக ஸலஃபு அறிஞர்களின் இந்த விளக்கம் ஓரிறைக் கொள்கைக்கும், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் எதிரானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இது பலவீனமான செய்தியே!

‘‘யா ஸாரியா! அல்ஜபல்” என்பது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பொய்யர்களும், இட்டுக்கட்டக்கூடியவர்களும், மிகப் பலவீன மானவர்களும் அறிவிக்கும் செய்தியாகவே உள்ளது.

இமாம் அல்பானி அவர்கள் தம்முடைய ‘‘ஸில்ஸிலத்துல் அஹாதீஸுஸ் ஸஹீஹா” என்ற நூலில் ஒரே ஒரு சரியான அறிவிப்பாளர் தொடரில் இச்செய்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அதுவும் பலவீனமான செய்தி என்பதே உண்மையாகும். அது தொடர்பான விவரங்களைக் காண்போம்.

இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் என்று குறிப்பிடும் அறிவிப்பு பின்வரும் அறிவிப்பாகும். இது தலாயிலுன் நுபுவ்வா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

دلائل النبوة ـ للبيهقى (6/ 370)

وأخبرنا أبو عبد الرحمن محمد بن الحسين السلمي أخبرنا أبو الحسين محمد بن محمد بن يعقوب الحجاجي الحافظ أخبرنا أحمد بن عبد الوارث بن جرير العسال بمصر حدثنا الحارث بن مسكين أخبرنا ابن وهب قال أخبرنا يحيى بن أيوب عن ابن عجلان عن نافع عن ابن عمر ان عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر رضي الله عنه يخطب فجعل يصيح يا ساري الجبل فقدم رسول من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا صائح يصيح يا ساري الجبل فأسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله فقلنا لعمر كنت تصيح بذلك  قال ابن عجلان وحدثنا إياس بن معاوية بن قرة بذلك والله تعالى أعلم

(‘‘யா ஸாரியா! அல்ஜபல்” என்ற இந்தச் செய்தியின் மொழிபெயர்ப்பு முன்னர் கூறப்பட்டுவிட்டதால் இங்கே மீண்டும் மொழிபெயர்க்கவில்லை)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவரை சில அறிஞர்கள் பாராட்டினாலும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

‘‘இவர் மனன சக்தியில் மோசமானவர்” என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார். ‘‘இவரது ஹதீஸ்கள் எழுதப்படும், ஆனால் ஆதாரமாகக் கொள்ளப்படாது” என அபூஹாதம் கூறுகின்றார். ‘‘இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்பட்டவர்” என இப்னு ஸஃது கூறுகின்றார். ‘‘இவருடைய சில ஹதீஸ்களில் குளறுபடிகள் உள்ளன” என தாரகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார். ‘‘இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இஸ்மாயீலி கூறுகின்றார். ‘‘இவர் உண்மையாளர் இன்னும் தவறிழைக்கக்கூடியவர்” என ஸாஜி கூறுகின்றார். ‘‘யஹ்யா இப்னு அய்யூப் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்” என அஹ்மத் கூறியுள்ளார். ‘‘இவர் தனது மனனத்திலிருந்து அறிவிக்கும் போது தவறிழைக்கக்கூடியவர், தன்னுடைய புத்தகத்திலிருந்து அறிவித்தால் பிரச்சினையில்லை” என அல்ஹாகிம் அபூ அஹ்மத் கூறியுள்ளார். இமாம் உகைலி அவர்கள் இவரை பலவீனமானவர்கள் பட்டியலில் கொண்டுவந்துள்ளார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம் 11, பக்கம் 163

‘‘இவருடைய நிலையை நான் அறிந்துள்ளேன். இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார்” என இப்னுல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். ‘‘இவர் உறுதியானவர் இல்லை” என இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்.

(மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 362)

‘‘இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்” என இமாம் அபூ சுர்ஆ விமர்சித்துள்ளார்.

(நூல்: சுஆலாத்துல் பர்தயீ, பக்கம் 433)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” மிகவும் பலவீனமானவர் என்பதையும் இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவையல்ல என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இந்த அறிவிப்பில் மற்றொரு பலவீனமும் உள்ளது. ‘‘யஹ்யா இப்னு அய்யூப்” என்பாரின் ஆசிரியராக ‘‘முஹ்ம்மத் இப்னு அஜ்லான்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் ‘‘நாஃபிஉ” என்பாரிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கின்றார்.

‘‘முஹம்மத் இப்னு அஜ்லான்” என்பவரின் அனைத்து அறிவிப்புக்களையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை இவரைப் பற்றிய விமர்சனங்களை ஆய்வு செய்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

‘‘முஹம்மத் இப்னு அஜ்லான் அல்மதனீ” என்பவர் உண்மையாளர். என்றாலும் அபூஹுரைரா வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூளை குழம்பிவிட்டார்” என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

(தக்ரீபுத் தஹ்தீப், பாகம் 2, பக்கம் 496)

‘‘ஸயீதுல் மக்புரி வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் மூளை குழம்பிவிட்டார்” என தாவூத் இப்னு கைஸ் கூறுகின்றார். ‘‘இமாம் முஸ்லிம் இவருடைய அறிவிப்புகளை துணைச் சான்றாகத்தான் கொண்டுவந்துள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை” என இப்னு ஹஜர் கூறியுள்ளார். ‘‘இவர் நாஃபிஉ வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் குளறுபடியானவை” என உகைலி கூறுகின்றார்.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்கம் 304)

இமாம் அஹ்மத், இப்னு மயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். மற்றவர்கள் ‘‘இவர் மனனத் தன்மையில் மோசமானவர்” எனக் கூறியுள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப், பாகம் 2, பக்கம் 201)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து இப்னு அஜ்லான் என்ற அறிவிப்பாளர் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளையும் குறைகளற்றவை என ஏற்க இயலாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக ‘‘நாஃபிஉ வழியாக இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் குளறுபடியானவை” என்று உகைலி விமர்சித்துள்ளார். மேற்கண்ட அறிவிப்பு இப்னு அஜ்லான் என்பார் நாஃபிஉ வழியாக அறிவிக்கும் செய்தியாகும்.

எனவே இச்செய்தி மிகவும் பலவீனம் என்ற நிலையை அடைகின்றது.

இது உமர் (ரலி) அவர்கள் மீது வழிகேடர்கள் இட்டுக்கட்டிய சம்பவம் என்பதே சரியானதாகும். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ உரையாற்றும் போது ஏராளமான ஸஹாபாக்கள், தாபியீன்கள் அந்தச் சபையில் இருந்திருப்பார்கள். உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமென்றால் மிகவும் ஆதாரப்பூர்வமான பல வழிகளில்,  இச்செய்தி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அறியப்பட்ட பல நூல்களில் இது இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லாமல், இப்னு அஜ்லான், யஹ்யா இப்னு அய்யூப் என்பவர்களின் வாயிலாக மட்டும் இது அறிவிக்கப்படுவதிலிருந்தே இதனை வழிகேடர்கள் உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டியது என்பதை மிகத்தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் உமருடைய சப்தத்தை படைத் தளபதி ஸாரியாவும், படைவீரர்களும் கேட்டதாக வந்துள்ளது. உண்மையில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமென்றால் இந்த அதிசய சம்பவத்தை அந்தப் படையில் இருந்த ஏராளமானோர் மற்றவர்களுக்கு அறிவித்திருப்பார்கள். ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. பல்லாயிரக் கணக்கானோர் முன்னால் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு அதிசய சம்பவம் மிகப் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற குறிப்பிட்ட ஒரு வழியில் மட்டும் அறிவிக்கப்படுவதிலிருந்தே இது இட்டுக்கட்டப்பட்டது என்பதை நாம் உறுதி செய்ய முடியும்.

மேலும் இச்சம்பவம் இஸ்லாத்தின் பல அடிப்படைகளுக்கு எதிரானதாக உள்ளது.

இச்சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத கால பயண தூரத்தில் உள்ள பாரசீக நாட்டில் இருந்த படையின் நிலையைப் பார்த்ததாக வந்துள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் காண முடியாது.

அது போன்று ஸாரியாவும், அவரது படைவீரர்களும் ஒரு மாத கால பயண தூரத்தில் இருந்து பேசிய உமரின் பேச்சைக் கேட்டதாக வந்துள்ளது. இவ்வாறு மனிதர்களால் செவியேற்க இயலாது.

மனிதர்கள் மிகத் தூரமான பகுதியில் உள்ளதைக் காண்பதற்கும், கேட்பதற்கும் கருவிகளின் உதவியால் மட்டும்தான் இயலும். உமர் அவர்களின் காலத்தில் அப்படிப்பட்ட கருவிகள் கிடையாது.

மனிதர்கள் ஒரு பொருளைக் காண்பதற்கு என்னென்ன வழிமுறைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளானோ அதைத் தாண்டிய மற்ற அனைத்து வழிமுறைகளும் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானதாகும். தனக்கு மட்டுமே சொந்தமான ஒன்றில் இறைவன் யாரையும் கூட்டாக்கிக் கொள்ளமாட்டான்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

தன்னைப் போல் எதுவும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டு ‘‘அவன் செவியுறுபவன், பார்ப்பவன்” எனக் கூறியுள்ளான். இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வைப் போன்று யாரும் செவியுறமுடியாது, பார்க்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:58, 134)

அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 17:1, 22:75, 31:28, 40:20,56, 58:1 )

பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 57:4)

அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன் என்பதே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன் 22:61)

என் இறைவன் வானத்திலும், பூமியிலும் உள்ள சொல்லை அறிகிறான். அவன் செவியுறுபவன்; அறிபவன்’’ என்று (தூதர்) கூறினார்.

(அல்குர்ஆன் 21:4)

மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் செவியுறுகின்ற தன்மையும், பார்க்கின்ற தன்மையும் தனக்கு மட்டுமே சொந்தம் என அனைத்தையும் அறிந்த இறைவன் எடுத்துரைத்துள்ளான்.

மனிதர்களாகிய நாமும் பார்க்கின்றோமே, கேட்கின்றோமே! அப்படி இருக்கையில் செவியுறுதலும், பார்த்தலும் இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று எப்படிக் கூறமுடியும் என சிலருக்குத் தோன்றலாம்.

இதற்கான பதில் மிக எளிதானதாகும். இறைவன் எப்படிச் செவியுறுவானோ, இறைவன் எப்படிப் பார்ப்பானோ அது போன்று அணுஅளவு கூட மனிதர்களால் செவியுற முடியாது, பார்க்க முடியாது என்பதுதான் இதற்கான பதிலாகும்.

மனிதர்கள் செவியேற்பதற்கும், பார்ப்பதற்கும் என்னென்ன வழிமுறைகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகளைத் தாண்டி மனிதர்களால் எதையும் செவியேற்கவோ, பார்க்கவோ இயலாது.

இறைவன் தன்னைப் போன்று செவியேற்கின்ற, பார்க்கின்ற ஆற்றலை அணுஅளவு கூட தன்னல்லாத மற்றவர்களுக்கு வழங்க மாட்டான் என்பதைப் பின்வரும் வரும் இறைவசனங்கள் கடுகளவு சந்தேகமின்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

‘‘வானங்களிலும் பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகச் செவியுறுபவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 18:26)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.  நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35:13,14)

என் தந்தையே! செவியுறாததையும், பார்க்காததையும், உமக்கு எந்தப் பயனும் அளிக்காததையும் ஏன் வணங்குகிறீர்?’’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 19:42)

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 6:36)

இறைவன் எப்படிச் செவியுறுவானோ, இறைவன் எப்படிப் பார்ப்பானோ அது போன்ற ஆற்றலை ஒரு விநாடி நேரம் கூட, ஒரு கடுகளவு கூட இறைவன் தன்னல்லாத மற்றவர்களுக்கு வழங்கமாட்டான் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட இறைவசனங்களைப் படிக்கின்ற யாரும் புரிந்து கொள்ள முடியும்.

இறைவனைப் போன்று யாரும் செவியேற்க முடியாது, பார்க்க முடியாது என்பதைத் திருமறை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் போது உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து  கொண்டே ஒரு மாத தூரத்தில் உள்ள பாரசீக நாட்டில் உள்ள படைகளைப் பார்த்தார்கள் என்று நம்புவதும், உமருடைய பேச்சை ஸாரியாவும், அவரது படை வீரர்களும் கேட்டார்கள் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு நேர் எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்னு தைமிய்யாவும், ஏனைய ஸலபு முன்னோடிகளும் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் நவீன ஸலஃபுகள் இதனை நியாயப் படுத்த முனைந்தால் நிச்சயம் அது வழிகேட்டைத் தவிர வேறு எந்த ஒன்றையும் அதிகப்படுத்தாது.

எந்த ஒரு செய்தியையும் அறிவிப்பாளர் தொடரை மட்டும் வைத்து நம்பிக்கை கொள்ளாமல் அது குர்ஆன், சுன்னாவின் அடிப்படைகளுக்கு ஒத்துப் போகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே!

நவீன ஸலஃபுகளின் முன்னோடியான இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் பல்வேறு இடங்களில் நல்லடியார்களுக்கு வழங்கப்படும் கராமத் எனும் அற்புதங்களில் ‘‘கஷ்ஃபு” என்னும் ஆற்றல் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது ஓரிடத்தில் இருந்து கொண்டே கண்களால் பார்க்க முடியாத தூரமான பகுதிகளில் உள்ளதைப் பார்ப்பதற்கு ‘‘கஷ்ஃபு” என்று குறிப்பிடுவார்கள். இதற்குத்தான் மேற்கண்ட உமர் தொடர்பான கட்டுக் கதையை இப்னு தைமிய்யா சான்றாகக் காட்டுகிறார்.

அது போன்று கண்களால் பார்க்க முடியாத விஷயங்களையும் இந்த ‘‘கஷ்ஃபு” எனும் அகப்பார்வையினால் பார்க்கலாம் எனவும் வழிகெட்ட பரேலவிகள் நம்புகின்றனர்.

உளூவில் முகத்தை, கைகளைக் கழுவும் போது வழிந்தோடும் தண்ணீரில் என்னென்ன பாவங்கள் வெளியேறுகிறது என்பதை இமாம் அபூஹனீஃபா அறிந்தார்கள் என்பதாகவும் பரேலவிகள் நம்புகின்றனர்.

வழிகெட்ட பரேலவிகளின் நம்பிக்கைக்கு நிகராக ஸலஃபுகளின் நம்பிக்கையும் உள்ளது.

இதோ இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

يعني: أن الكرامة تنقسم إلى قسمين: قسم يتعلق بالعلوم والمكاشفات، وقسم آخر يتعلق بالقدرة والتأثيرات

கராமத்துகள் இரண்டு வகையாகப் பிரிகின்றது. ஒன்று ‘‘உலூம்” மற்றும் ‘‘முகாஷஃபாத்” என்பதோடு தொடர்புடையதாகும். மற்றொன்று ‘‘குத்ரத்” (ஆற்றல்) மற்றும் ‘‘தஃஸீராத்” (தாக்கங்கள்) என்பதுடன் தொடர்புடையதாகம்.

(அல்ஃபுர்கான், பக்கம் 67)

مجموعة الرسائل والمسائل لابن تيمية – (5/ 6(

وأما المعجزات التي لغير الأنبياء من باب الكشف والعلم فمثل قول عمر في قصة سارية، وأخبار أبي بكر بأن ببطن زوجته أنثى، وأخبار عمر بمن يخرج من ولده فيكون عادلاً.

நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்குரிய அற்புதங்களாகிறது ‘‘கஷ்ஃப்” மற்றும் ‘‘இல்ம்” என்ற வகையைச் சார்ந்ததாகும். இதற்கு ஸாரியாவினுடைய சம்பவத்தில் உமர் பேசியது, தன்னுடைய மனைவியின் வயிற்றில் பெண்குழந்தை உள்ளது என அபூபக்ர் (ரலி) அறிவித்தது, தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அவன் நீதிமானாக இருப்பான் என்றும் உமர் அறிவித்தது போன்ற சம்பவங்களைக் கூறலாம்.

(மஜ்மூஅத்துர் ரஸாயில் வல்மஸாயில் லிஇப்னி தைமிய்யா, பாகம் 5, பக்கம் 6)

பரேலவிகள் நம்புவதைப் போன்று ‘‘கஷ்ஃப்” எனும் ஆற்றல் இருப்பதாக இப்னு தைமிய்யா வாதிக்கின்றார். பல்வேறு ஸலஃபு அறிஞர்களும் இதை வாதிக்கின்றனர்.

இவ்வாறு நம்புவது குர்ஆன், சுன்னாவிற்கும், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் எதிரானதாகும்.

மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

அது போன்று மறைவான விஷயங்களில் தான் நாடியவற்றை மட்டும் இறைத்தூதர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டுவான் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

தானாக அறிபவன் இறைவன். இறைத்தூதர்கள் தானாக அறிய முடியாது. இறைவன் வெளிப்படுத்திக் காட்டிய பிறகுதான் இறைத்தூதர்கள் கூட அறிந்து கொள்ள முடியும்.

உமர் (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டே ஒரு மாத பயண தூரத்தில் உள்ள பாரசீக தேசத்தில் நடக்கும் நிகழ்வைப் பார்த்தார்கள் என்றும் இறைவன் அத்தகைய ஆற்றலை வழங்கினான் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானதாகும்.

அதுபோன்றே ஸாரியாவும் அவரது படை வீரர்களும் உமரின் பேச்சைக் கேட்டார்கள் என்று நம்புவதும், இறைவன் அத்தகைய ஆற்றலை அவர்களுக்கு வழங்கினான் என்று நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும்.

மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிய பின்பும் ‘‘முகாஷஃபாத்” என்னும் அகப்பார்வை மூலம் நல்லடியார்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்று நம்புவது இணை கற்பிக்கும் பாவமாகும்.

அது போன்று மறைவான விஷயங்களை நபிமார்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டியது போல் உமர் (ரலி) அவர்களுக்கும் நல்லடியார்களுக்கும் காட்டியிருக்கலாம் என்றும் வாதிக்க இயலாது.

ஏனெனில் அல்லாஹ் மறைவான விஷயங்களை நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்திக் காட்டமாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்

(அல்குர்ஆன் 72:26, 27)

எனவே இந்த ‘முகாஷஃபாத்’ என்ற அகப்பார்வை என்பது முழுக்க முழுக்க பொய்யான ஒரு கற்பனையாகும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பதே சரியானதாகும்.

குர்ஆன், சுன்னாவை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாத காரணத்தினால் தான் இதுபோன்ற வழிகேடுகளை மார்க்கமாகக் கருத வேண்டிய நிலை நவீன வழிகெட்ட ஸலபிக் கொள்கையினருக்கு ஏற்பட்டுள்ளது.

———————————————————————————————–

அற்பமாகக் கருதாதீர்!

ஆஃப்ரின் சிதிரா

ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு, திருப்தி கொள்ளப்பட்ட இஸ்லாம் எனும் ஓர் உன்னத மார்க்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, இறைவன் நமக்கு வழங்கிய வற்றாப் பேரருள் ஆகும். இம்மார்க்கத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்செயலுக்கும் அளவில்லாக் கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பாக்கியம் முஸ்லிமல்லாத வேறெவருக்கும் கிட்டுவதில்லை.

சக மனிதர்களை பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு தர்மம் என்ற அளவிற்கு இறைவன் தனது அடியார்களுக்கு எல்லையில்லாக் கூலியை வழங்குகிறான்.

இதன் காரணமாகத் தான் நற்செயல்களில் சிறியது, பெரியது என்று பாகுபாடு காட்டி, எந்த ஒன்றையும் அற்பமாகக் கருதி விட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5122

இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் முதற்கொண்டு சிறுசிறு அமல்கள் உட்பட அனைத்து விதமான நற்காரியங்களையும் வலியுறுத்தி, அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.

ஏந்தல் நபி வலியுறுத்திய நல்லமல்களில் ஒன்று தான் திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்தலாகும். இப்பண்பு இன்றைய காலத்தில்  பெரும்பான்மையானவர்களிடம் இல்லாமலே போய்விட்டது.

திக்ர் செய்வதை சாதாரண ஒரு செயலாகக் கருதி நாம் அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அல்லாஹ்வோ இதற்கென்று அளப்பரிய வெகுமதியை வாரிவழங்குகின்றான்.

எனவே நமது அலட்சியம் நீங்க வேண்டும் என்பதற்காகவும், சிறு அமலையும் நாம் அற்பமாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும், இறைவனை நினைவு கூர்வதால் கிடைக்கும் பிரதிபலனை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது

தனது அடியார்கள் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நினைவு கூர வேண்டும் என்றும், அவ்வாறு அவனை நினைத்துத் துதிப்பது இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களை விடவும் உயர்வானது என்றும் தனது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது.

அல்குர்ஆன் 29:45

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன்.

அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5195

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!

அல்குர்ஆன் 2:152

இறைவன் நம்மை நினைக்கிறான் என்றால் நாம் நினைப்பது போன்று அல்ல. நாம் இறைவனைப் புகழ்ந்து, துதித்து அவனை அழைக்கும் போது அதற்காக நன்மையை வழங்குகிறான் என்பதாகும்.

மக்கள் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களில் காட்டும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் திக்ர் செய்வதில் காண முடிவதில்லை.  பிரச்சாரங்களில் கூட மேற்சொன்ன வணக்கங்கள் வலியுறுத்தப்படும் அளவிற்கு இது வலியுறுத்தப்படுவதும் இல்லை. இதில் ஏகத்துவவாதிகளும் விதிவிலக்கு இல்லை.

ஆனால் அல்லாஹ்வோ எந்த நிலையிலும் தன்னை நினைவுற வேண்டும் என வலியுறுத்துகின்றான்.

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்!

அல்குர்ஆன் 4:103

இறைவனைப் புகழ்ந்து, துதித்து, தூய்மைப்படுத்துவதற்கென்று நபி (ஸல்) அவர்கள் அழகிய திருநாமங்களையும் கற்றுத் தந்து, அதற்கான கூலியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தராசைக் கனமாக்குவதற்கு…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.

நூல்: புகாரி 6406, முஸ்லிம் 381

இலகுவான இரு வார்த்தைகளை மொழிவதன் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதோடு, மீஸான் என்ற தராசுத் தட்டிலும் எடை கனத்து சுவனத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

சொர்க்கத்தின் கருவூலம்

அபூமூசா அப்தில்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி (ஸல்) அவர்கள் ஒரு குன்றில்அல்லது மேட்டில்ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒரு மனிதர் உரத்த குரலில் லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன் – என்று முழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கோவேறு கழுதையில் இருந்தபடி, “(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை’’ என்று கூறினார்கள்.

பிறகு, “அபூமூசா!அல்லது அப்துல்லாஹ்!’ (என்று என்னைக் கூப்பிட்டு) சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?’’ என்று கேட்டார்கள். நான், “ஆம் (அறிவித்துத் தாருங்கள்)’’ என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)’’ என்று சொன்னர்கள்.

நூல்: புகாரி 6409

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்  – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ்அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்’’ என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6403, முஸ்லிம் 5221

ஷைத்தான் நம்மில் ஒவ்வொருவருடனும் இருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (புகாரி 7288).

அப்படிப்பட்ட ஷைத்தானின் ஊசலாட்டத்திற்கு ஆட்படும் போது தான் நாம் தீமைகளை அதிகமதிகம் செய்கிறோம். மேற்கூறிய வார்த்தைகளைக் கூறுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஷைத்தானிடமிருந்து விடுதலை பெறும் அரிய வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான்.

கடல் அளவு பாவமும் கரைந்து விட…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!’’

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6405

ஈடு இணை ஏதுமில்லை

நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)ர்களையும் நீங்கள் பிடித்து விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர. (அந்தக் காரியமாவது:)

நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் ‘‘சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்’’ என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.

நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 843, முஸ்லிம் 5222

மேற்கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கூறித் துதிப்பதன் மூலம் நாம் ஏகப்பட்ட நன்மைகளைக் கொள்ளையடித்துவிட முடியும். நாமோ இதை உணராமல் தஸ்பீஹ் செய்வது எல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே உரிய அமலைப் போன்று ஓரம் கட்டி வைத்து விட்டோம்.

உண்மையில் நன்மை செய்வதாயினும், தீமை செய்வதாயினும் அதற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமே! கிடைக்கின்ற நேரங்களை எல்லாம் வீண் பேச்சிலும் வெட்டி அரட்டையிலும் ஈடுபட்டுக் கழிக்கின்ற நாம் நன்மை செய்யும் வாய்ப்பை இழந்து விடுகின்றோம். தீமைகளை அதிகமாகச் சேமிக்கின்றோம்.

இறைவனின் நினைவு நமது உள்ளத்தில் குடி கொண்டு விட்டால் தீமைகள் கட்டுக்குள் வந்துவிடும். நாம் அற்பமாகக் கருதும் திக்ர் என்ற இந்த அமல் அதற்குச் சிறந்த வழியாகும்.நன்மைகளின் மூலம் தீமைகளை அழிக்க முடியும் என்றே திருக்குர்ஆனும் கூறுகின்றது.

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 23:96

திக்ர் செய்யும் முறை

திக்ர் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது, கூட்டமாகச் சேர்ந்து கொண்டு ஹூ ஹூ ஹை, ஹக் தூ ஹக் என்று சப்தம் போட்டுக் கொண்டே ஆட்டம் போடுவது தான்.

ஷாதுலிய்யா திக்ரு, ஜலாலியா திக்ரு, ரிபாயிய்யா திக்ரு என்ற பெயர்களில் இப்படி ஆட்டம் போடுவதைத் தான் திக்ர் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தினர் திக்ர் என்ற பெயரில் அல்லாஹ்வின் பெயரைத் திரித்து, வரம்பு மீறிப் பாவம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களைப் போன்றே திக்ர் செய்வதும் இறைவனுக்காகச் செய்யக்கூடிய ஒரு வணக்கமாகும். எனவே இதில் பணிவுடனும் பயபக்தியுடன், இறைவனைத் துதிக்கிறோம் என்ற அச்சத்துடனும் இந்த வணக்கத்தை நாம் செய்ய வேண்டும். தன்னை நினைவு கூர வேண்டும் என்று கட்டளையிடும் தனித்தவனாகிய அல்லாஹ், அதற்கான வழிமுறையையும் கற்றுத் தருகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

இதுதான் இறைவன் நமக்குக் கற்றுத்தரும் வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக, சப்தமிட்டு திக்ர் என்ற பெயரில் ஆட்டம் போடுபவர்கள் பாவத்தையே சம்பாதிக்கின்றனர்.

இறை நினைவினால் கிடைக்கும் இறையருள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும்போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் நினைவுகூருகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5232

இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி

இவ்வுலகத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளாயினும், இதர விஷயங்களாயினும், நமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாயினும் இவை அனைத்துமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே! இதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மறுமையில் திருப்தியான வாழ்வு அமைய வேண்டும் என்றால் நன்மையின் எடை கனமானதாக இருக்க வேண்டும்.

எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 23:102, 103)

யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.

(அல்குர்ஆன் 101:6-9)

மேலும் இறைவனை நினைவுகூரும் நல்லடியார்களே வெற்றியாளர்கள் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்டபோது ஜும்தான்எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள்: இது ஜும்தான்மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்’’ என்று சொன்னார்கள். மக்கள், “தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 5197

நம்மிடம் அரிதாகிப் போன ‘திக்ர்’ என்ற நல் அமலை நாள்தோறும் செய்வதன் மூலம் நன்மையின் எடையை அதிகரித்து, மறுமையில் வெற்றி பெறும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!

———————————————————————————————–

மவ்லிதும் மீலாதும்

எம்.ஐ.சுலைமான்

மவ்வலிதும், மீலாதும் என்ற தலைப்பில் மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழாக் கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆதாரங்கள் சரியானவையா? அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா? என்பதைப் பார்த்து வருகிறோம்.

இதுவரை இறைத்தூதர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரம் என்று உளறியவர்கள், வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது என்று சில நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவர்கள் எடுத்து வைக்கும் நபிமொழிகள் இவர்களின் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ளதா என்பதைப் பாருங்கள்.

வலிமார்கள் மீது மௌலித் ஓதுவதற்கு ஆதாரம்?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 25)

5147- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ قَالَ : قَالَتِ الرُّبَيِّعُ بِنْتُ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ دَعِي هَذِهِ وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, ‘‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி)

நூல்கள்: புகாரி (5147),திர்மிதீ (1010), அபூதாவுத் (4276)

பத்ருப் போரில் கலந்து கொண்டு வீரதீர செயல்களைச் செய்த தம் முன்னோர்கனைப் பற்றி புகழ்ந்து பாடுவது வலிமார்கள் என்று இவர்களாகப் பட்டியல் போட்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக அமையும்?

வலிமார்கள் என்று இவர்கள் சொல்லும் நபர்கள் எந்தப் போர்க்களத்தில் இஸ்லாத்திற்காகப் போராடினார்கள்? இன்று வலிமார்களுக்கு மவ்லித் ஓதுபவர்கள் இந்த வலிமார்களின் வாரிசுகளா?

எள்ளளவும் தொடர்பில்லாத ஒரு நபிமொழியை வலிமார்களுக்கு மவ்லித் ஓத ஆதாரமாகக் காட்டுபவர்களை என்னவென்று சொல்வது?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 30)

2834- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ حُمَيْدٍ قَالَ : سَمِعْتُ أَنَسًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.

فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை.

அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி’’ என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்த வண்ணம், ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (2834)

அகழ் போரின் போது நபித்தோழர்கள் பட்ட கஷ்டத்தைக் கண்ட நபிகளார் கவிதை நடையில் அவர்களைப் புகழ்ந்தார்கள். இஸ்லாத்திற்காகவே இவ்வளவு கடும் குளிரிலும் பணி செய்கிறார்கள். இவர்களை இந்தப் பணி செய்ய வைத்தது மறுமையின் வாழ்க்கையே என்று நபிகளாரின் கூற்று, ஊதுபத்தி, வாழைப்பழம் மற்றும் உணவுப் பண்டங்களை வைத்து வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாக உள்ளதா? அல்லது மறுமை வாழ்க்கைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய வேண்டும் என்ற படிப்பினையாக உள்ளதா?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (5 / 155)

4146- حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ أَبِي الضُّحَى ، عَنْ مَسْرُوقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ وَقَالَ :

حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ .. وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ.

فَقَالَتْ لَهُ عَائِشَةُ لَكِنَّكَ لَسْتَ كَذَلِكَ قَالَ مَسْرُوقٌ فَقُلْتُ لَهَا لِمَ تَأْذَنِينَ لَهُ أَنْ يَدْخُلَ عَلَيْكِ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى : {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ} فَقَالَتْ وَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى قَالَتْ لَهُ إِنَّهُ كَانَ يُنَافِحُ ، أَوْ يُهَاجِي ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.

நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தமது பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, (அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம்சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள் என்று பாடினார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரி(4416)

இந்தச் செய்தியில் வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று எங்குள்ளது? அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு சொன்னால் அவர்களை எச்சரிக்கும் வாசகம் தானே உள்ளது. இதை வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று யாராவது எடுத்துக் கொள்வார்களா? இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் படித்த இந்த கவிதைகளைத் தான் முஹைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித்களில் ஓதுகிறார்களா?

سنن الترمذى – مكنز – (4 / 246)

1035 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّىِّ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ யு. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ. سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ عِمْرَانُ بْنُ أَنَسٍ الْمَكِّىُّ مُنْكَرُ الْحَدِيثِ وَرَوَى بَعْضُهُمْ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ. قَالَ وَعِمْرَانُ بْنُ أَبِى أَنَسٍ مِصْرِىٌّ أَقْدَمُ وَأَثْبَتُ مِنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّىِّ.

‘‘உங்களில் மரணத்தவர்களின் நல்லதைச் சொல்லுங்கள், தீயதை (சொல்லாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதீ (940), அபூதாவுத் (4254)

இந்தச் செய்தியில் வலிமார்கள் என்று எந்த வாசகமாவது உள்ளதா? யார் மரணித்தாலும் அவர்களின் நல்ல செய்திகளை மட்டுமே சொல்ல வேண்டும். அவர் தவறிழைத்திருந்தால் அந்தச் செய்திகளைப் பரப்பக்கூடாது என்றுதானே உள்ளது.

மேலும் இவர்கள் வலிமார்கள் என்று கதையளக்கும் போது, அவர்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள். முழுக்க முழுக்க நன்மையான காரியங்களைச் செய்பவர்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தியில் தீமை செய்திருந்தாலும் அவர்களின் நல்லதை நினைவு கூருங்கள் என்றுள்ளது. இதிலிருந்து இவர்கள் சொல்லும் அவ்லியாக்களை இது குறிப்பிடவில்லை என்பதும் தெளிவாகிறது.

الجامع الصغير من حديث البشير النذير – (1 / 412)

4331 – ذكر الأنبياء من العبادة، وذكر الصالحين كفارة، وذكر الموت صدقة، وذكر القبر يقربكم من الجنة

நபிமார்களை நினைவு கூர்வது வணக்கத்தில் உள்ளதாகும். நல்லவர்களை நினைவு கூர்வது (பாவ) பரிகாரமாகும். மரணத்தை நினைவு கூர்வது தர்மமாகும். கப்ரை நினைவு கூர்வது சொர்க்கத்திற்கு நெருக்கி வைக்கும்.

நூல்: அல்ஜாமிவுஸ் ஸகீர்,

பாகம் 1, பக்கம் 412

இந்த செய்தியை தைலமீ அவர்கள் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்துள்ளார்கள்.

عن أبي علي بن الأشعث : حدثنا شريح ابن عبد الكريم حدثنا جعفر بن محمد بن جعفر بن محمد بن علي الحسيني أبو الفضل في “كتاب العروس “ : حدثنا الوليد بن مسلم حدثنا محمد بن راشد عن مكحول عن معاذ بن جبل مرفوعا

இச்செய்தியில் இடம்பெறும் அபீ அலீ பின் அல்அஷஅஸ் என்பவரின் முழுப்பெயர், முஹம்மத் பின் முஹம்மத் பின் அல் அஷ்அஸ் என்பதாகும். இவர் நபிமொழிகளை இட்டுகட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

ميزان الاعتدال – (4 / 28)

وساق له ابن عدى جملة موضوعات.

قال السهمى: سألت الدارقطني عنه، فقال: آية من آيات الله، وضع ذاك الكتاب – يعنى العلويات.

இவர் இட்டுக்கட்டிய தொகுப்பை இப்னு அதீ அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். இவர் அல்லாஹ்வின் (பொய்யர்களின்) அத்தாட்சிகளில் ஒரு அத்தாட்சி. இவர் ஒரு நூலை இட்டுக்கட்டிச் சொல்லியுள்ளார் என்று தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்

பாகம் 4, பக்கம் 28

மேலும் இந்தச் செய்தியிலும் கூட வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று எங்கும் கூறப்படவில்லை. நல்லவர்கள் எவரையும் நினைவு கூரலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 121)

1367- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَجَبَتْ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، مَا وَجَبَتْ قَالَ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الأَرْضِ.

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உறுதியாகிவிட்டது என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்)கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது எனக் கூறினார்கள்.

உமர் (ரலி), ‘‘எது உறுதியாகி விட்டது?’’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1367)

இந்தச் செய்தியும் வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாம்.

ஜனாஸா கடந்து செல்லும் போது இறந்தவரின் நற்பண்புகளைப் புகழ்ந்து பாராட்டும் போது அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என்ற நபிமொழி வலிமார்களுக்கு ஒவ்வொரு வருடமும் பூவும் பழமும் உணவு பதார்த்தங்களும் வைத்து பாட்டுப் படிப்பதற்கு எப்படி ஆதாரமாக அமையும்?

இந்த நபிமொழியில் இடம்பெற்றுள்ள “நற்பண்புகளைப் புகழ்ந்து சொல்லுதல்’’ என்ற வாசகம், வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரம் என்றால் அவருடைய ஜனாஸா எடுத்துச் செல்லும் போதுதான் மவ்லித் ஓதவேண்டும். அவ்வாறு செய்வார்களா?

மவ்லித் ஓதுவதற்கும் மீலாது விழா கொண்டாடுவதற்கும் நேரடியாக அல்லது மறைமுகமாக எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் கிடையாது. இவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுத் தான் மவ்லிதை நியாயப்படுத்த முடிகிறதே தவிர நேரடியாக அவர்களிடம் எந்தச் சான்றும் கிடையாது.

———————————————————————————————–

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-?

டெலிஃபோன் தலாக், செல்ஃபோன் தலாக், ஸ்கைப் தலாக், வீடியோ கான்ஃபரன்ஸிங் தலாக், ஈமெயில் தலாக், ஃபேஸ்புக் தலாக்,  வாட்ஸ் அப் தலாக்,  எஸ்.எம்.எஸ். தலாக் என்று பல்வேறு  நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் பெயர்களை  முன்னொட்டாகக் கொண்டு தலாக் என்ற சொல்லாடல் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல! பிற மத சமுதாய மக்களிடமும் பிரபலமாகப் பரவி விட்டதை நாம் நன்கு அறிவோம். முஸ்லிம்களிடம் இந்த நவீன சாதனங்கள் மூலம் தலாக் சொல்லும் பழக்கம் அதிகரித்திருப்பதைத் தான் இது குறிக்கின்றது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

மணமுடித்த முஸ்லிம் பெண்களின் திருமணம் இத்தகைய நவீன தலாக்குகளால் ரத்தாகி, அவர்கள்  வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகி அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.  இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைத் தான் உச்ச நீதிமன்றம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதன் எதிர்வினையும் எதிர்விளைவும் தான் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டம் இப்போது ராஜ்ய சபையில் முடங்கிக் கிடக்கின்றது.

அதனுடைய பாதிப்பிலிருந்து சமுதாயம் வெளிவருவதற்கு முன்னால் இப்போது டெலிஃபோன் நிகாஹ், செல்ஃபோன் நிகாஹ், ஸ்கைப் நிகாஹ், வீடியோ கான்ஃபரன்ஸிங் நிகாஹ், ஈமெயில் நிகாஹ், வாட்ஸ் அப் நிகாஹ் போன்ற சொல்லாடல்கள் முஸ்லிம்கள் மத்தியில் வருவதற்குக் காத்திருக்கின்றன.

இதனாலும் பிரச்சனைகள் உருவாகி அது வெடித்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிலும் மோடி அரசாங்கம் மூக்கை நுழைப்பதற்கு அடித்தளமிடுகின்றது.

தலாக்கே ஆன்லைனில் நடைபெறும் போது நிகாஹ் ஆன்லைனில் நடக்கக்கூடாதா? என்ற புரட்சி படைக்க ஒரு கூட்டம் களமிறங்கி விட்டது.  அந்தப் புரட்சிப்படை இந்தத் திருமணத்திற்கு  வைத்த புதுப்பெயர் ஆன்லைன் நிகாஹ்! அது எங்கே அரங்கேறியது?

இதோ சமூக வலைத்தளம் அதற்கான விபரத்தைத் தருகின்றது.

இன்னார் இல்லத் திருமணம், நெல்லையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில், “புதுமையான முறையில்”, வெகு விமரிசையாக, நடைபெற்றது. தமிழகத்திலேயே, முதன்முறையாக, “ளிழிலிமிழிணி” என்று, ஆங்கிலத்தில் அழைக்கப்படும், “இயங்கு அலை” மூலம், “சவூதி அரேபியா”வில், இருந்தபடியே, மணமகன், இஸ்லாமிய முறைப்படியான, திருமண சடங்குகளை நிறைவேற்றி, மணமகளை தன்னுடைய, அதிகாரப்பூர்வ  மனைவியாக, ஏற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி “ஜாமியா மசூதி” தலைமை இமாம்.மவ்லானா.மவ்லவி. அல்ஹாபில். அல்ஹாஜ். றி.வி. அப்துல் காதிர் ஆலீம், இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். “சவூதி அரேபியா” நாட்டில், பெரிய நிறுவனம் ஒன்றில், முக்கிய உயர் பொறுப்பில், இருந்து வரும், மணமகனுக்கு, “விடுப்பு” கிடைக்காத காரணத்தினால்  திருமணத்திற்கு வர இயலவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை, “ஜெய மங்கள சுப முகூர்த்த  நாள்” என்பதால், “இருவீட்டார்கள்” சம்மதத்தின் பெயரிலேயே, திட்டமிட்ட தேதியில், அதாவது, இன்று, இந்தத் திருமணம், இனிதே நடந்தேறியது!- என மண வீட்டார்கள் உற்சாகம் பொங்கக் கூறினார்கள்.

புதுமையான முறையில், வெகு விமரிசையாக… என்ற புகழாரத்துடன் தொடங்குகின்ற இந்தப் புதுமை, புரட்சித்  திருமணத்தை நடத்தியவர்கள் மத்ஹபை பின்பற்றக் கூடியவர்கள்.

மத்ஹப் இமாம்கள் தங்கள் காலத்தில் இப்படியொரு நவீன தொலைத்தொடர்பு சாதனங்களைக் கற்பனையிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்.  அதற்குரிய சாத்தியம் அந்தக் காலத்தில் அறவே கிடையாது.

அதனால் இப்படிப்பட்ட நிகாஹ் கூடுமென்று எந்த இமாம்,  எந்த நூலில்  கூறியிருக்கின்றார்?  எந்த வசனம், எந்த ஹதீஸ்  அடிப்படையில் அவர் இந்தச் சட்டத்தை எடுத்திருக்கின்றார் என்று தெரிவித்தால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி அவர்கள் மத்ஹபு நூல்களிலிருந்து ஆன்லைன் நிகாஹ் தொடர்பான சட்டத்தைத் தெரிவிக்கவில்லை என்றால் இவர்கள் பின்பற்றுவது மத்ஹபல்ல!  மனோ இச்சை தான் என்று தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நாம் கூறுவதற்குக் காரணம் இவர்கள் மத்ஹபுகள் என்ற போர்வையில் மத்ஹபுகள் கூட சொல்லாதவற்றைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வதற்காக வேண்டித் தான்.  இப்போது  இந்த ஆன்லைன் நிகாஹ் செல்லுமா? என்று மார்க்க அடிப்படையில் பார்ப்போம்.

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர் மாட்டிக் கொள்ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப்படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

எண்பதுகளில் திட்டச்சேரியைச் சார்ந்த மறைந்த ஓர்  ஆலிம் மலேசியாவில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்து   தொலைபேசி வாயிலாக ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்.  இதற்குக் காரணம் முஸ்லிம் சமுதாயத்தில் சில மார்க்க அறிஞர்கள் அவ்வாறு திருமணம் செய்வதைச் சரி காண்கின்றனர்.

இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தொலைபேசியில் பேசி  திருமணம் செய்தேன் என்று தெரிவித்தால் சாட்சிகளின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து விட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்.

 அதுபோல் வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்துத் திருமணம் செய்தால் அது செல்லும் என்று  சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். வீடியோ மூலம் ஒருவன்  திருமணம் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.

ஒரு திரையில், திருமணம் செய்பவரையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால்  இந்த நிகாஹ் செல்லத்தக்கதல்ல.

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். ஒப்பந்தம் செய்யும் மணமகன் புத்தி சுவாதீனத்துடன் இருக்கின்றாரா? அல்லது போதையுடன் இருக்கின்றாரா? என்பதெல்லாம் திரையில் அறிய முடியாது. சாட்சி சொல்பவர்களும் இந்த அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்அது  திருமணம் ஆகாது.

இரு குடும்பத்துக்கும் நெருக்கமானவன் அல்லது இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்தவர்கள் தான் இதற்கு சாட்சியாளர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் சாட்சியாளர்களாக இருக்க முடியாது.

இதில் இருந்து தபால் மூலமோ, எஸ்.எம்.எஸ். மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ, வாட்ஸ் அப் மூலமோ திருமணம் செய்வது அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்!

அல்குர்ஆன் 2:231

ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர், இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கியபோது, நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரி 2650)

ஓர் ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல்  திருமணம் முடிக்கும் போது அதற்கு சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான். இந்த அடிப்படையில் மேற்கண்ட நவீன சாதனங்கள் மூலம் நடத்தப்படும் திருமணம் செல்லாததாகும்.

அவசியம் என்ன? அவசரம் என்ன?

இங்கு நாம் இன்னொரு கேள்வியை கேட்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.  சவூதியில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்கு விடுப்பு இல்லை! அதனால் அவசர, அவசரமாக இந்தத் திருமணம் என்கின்றார்கள். அதற்கு இப்போது அவசரம் என்ன? அவசியம் என்ன? விடுப்பு கிடைக்கும் போது வந்து திருமணம் நடத்தினால் குடி மூழ்கிப் போய் விடுமா? என்று கேட்டால் இதோ  அதற்கான பதில்:

“ஜெய மங்கள சுப முகூர்த்த  நாள்”என்பதால் “இருவீட்டார்கள்” சம்மதத்தின் பெயரிலேயே, திட்டமிட்ட தேதியில், அதாவது, இன்று இந்தத் திருமணம் இனிதே நடந்தேறியது- என மண வீட்டார்கள் உற்சாகம் பொங்க, கூறினார்கள்.

இதுதான் அதற்குரிய பதில்! அதாவது நல்ல நாள், கெட்ட நாள் என்று  இவர்கள் சகுனம் பார்த்திருக்கின்றார்கள். ஜெய மங்கள சுப முகூர்த்த நாளாம். அந்த நாளை விட்டு திருமணம் தாண்டிப் போய் விடக்கூடாது. அதனால் இந்த ஆன்லைன் அவசரத் திருமணம். நல்ல நாள், கெட்ட நாள் என்று முடிவு செய்வதன் மூலம் இவர்கள் அல்லாஹ்வைத் திட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான். ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) என் கையிலேயே அதிகாரம் உள்ளது, நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

புகாரி 4826

அடுத்து இவர்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் இப்படி ஒரு திருமணத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.

ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: சஃபிய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 4137

ஒரு முஸ்லிம் இந்த ஹதீஸின் எச்சரிக்கையைப் பயந்து ஒரு போதும் சோதிடம் பார்க்க மாட்டான். ஆனால் இந்தத் திருமணத்தில் சோதிடம் பார்த்திருக்கின்றார்கள்.  இதன்படி இந்தத் திருமணம் இஸ்லாமியத் திருமணம் கிடையாது.

பிறமத சமுதாய மக்கள் தான் நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி காலை 10:40 க்கு நல்ல நேரம் முடிகின்றது என்றால் அதற்கு முன்பு தங்கள் காரியங்களை முடித்து விடுவார்கள்.

ஒரு பெண்ணுக்குக் காலை 11 மணிக்குத் தான் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறக்கும் என்றாலும் அதற்காகக் காத்திருக்க மாட்டார்கள். 10:40க்கு  முன்பே அறுவை சிகிச்சை செய்து அந்தக் குழந்தையை வெளியே எடுத்து விடுவார்கள். அதே நம்பிக்கை தான் இந்தத் திருமணத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைன் நிகாஹ் என்று முத்திரை குத்தப்பட்டு, ஒரு பிறமதக் கலாச்சார அடிப்படையிலான திருமணம் இஸ்லாமியத் திருமணமாக ஆக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்தத் திருமணத்தில் மார்க்கமும் கிடையாது, மத்ஹபும் கிடையாது. மனோ இச்சை தான் இவர்கள் மார்க்கமாக இருக்கின்றது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

———————————————————————————————–

இதுதான் உலகம்!

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி. மங்கலம்

இம்மைக்கும் மறுமைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். மறுமை வாழ்வின் உயர்வை அறிந்திருந்தால் மட்டும் போதாது. இந்த உலகம் எந்தளவுக்குக் கீழானது என்பதையும் புரிந்திருப்பது அவசியம். ஆகவேதான், உலகத்தின் நிலையைப் பற்றிய உதாரணங்கள், ஒப்பீடுகள் மார்க்கத்தில் அதிகம் கூறப்படுள்ளன. அந்தச் செய்திகளை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நிரந்தமற்ற வாழ்க்கை:

வானிலிருந்து வரும் மழைநீர் பூமியில் விழுந்து தாவரங்களுடன் கலந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் காணாமல் போகிறது. அதுபோன்று தான், ஒருநாள் நாமும் இருக்க மாட்டோம்; நமது வாழ்வும் இருக்காது. இன்னும் ஏன்? இந்த உலகமே இல்லாமல் போய்விடும். இப்படியான நிலையற்ற வாழ்க்கைதான் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

தண்ணீரை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். அது பூமியின் தாவரங்களுடன் இரண்டறக் கலந்தது. (பின்னர் காய்ந்து) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது. இதை இவ்வுலக வாழ்வுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(திருக்குர்ஆன் 18:45)

(இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு.

(திருக்குர்ஆன் 57:20)

அனைத்தும் அற்ப சுகம்:

பூமியில் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு ஏராளமான இன்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அவன் அளித்த அறிவைக் கொண்டு மனிதனும் செயற்கையாகப் பல்வேறு கேளிக்கைகளை, பொழுதுபோக்குகளை உருவாக்கியுள்ளான். இவ்வகையில், எத்தனை விதமான சுகபோகங்கள் இங்கு இருந்தாலும் மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது அவை அனைத்தும் அற்பத்திலும் அற்பமானதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? “அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!’’ என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.

(திருக்குர்ஆன் 9:38)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

(திருக்குர் ஆன் 13:26)

இது ஒரு சோதனைக் களம்:

மறுமை வாழ்க்கை இரு பிரிவைக் கொண்டது. ஒன்று சொர்க்கம். மற்றொன்று நரகம். அவ்வாறான சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தகுதியானவர்கள் யார் யாரென்று சோதிப்பதற்காகவே உலக வாழ்வு தரப்பட்டுள்ளது.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(திருக்குர்ஆன் 67:2)

உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

(திருக்குர் ஆன் 11:7)

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

(திருக்குர் ஆன் 18:7)

ஏமாற்றும் வசதிகளே உலகம்:

இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம்  கொடுத்து விடக் கூடாது.

மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(திருக்குர்ஆன் 57:20)

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(திருக்குர்ஆன் 35:5)

மயக்கும் மாய வாழ்க்கை:

மனிதனின் எண்ணத்தை, சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் வகையில் உலக வாழ்வின் கட்டமைப்பு இருக்கிறது. அதன் எந்த மூலைக்குச் சென்றாலும் மனதை மயக்கும் அம்சங்கள் மலிந்து இருக்கும். இதனால்தான் அதன் இனிமையிலும் பசுமையிலும் பலரும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.

(திருக்குர் ஆன் 20:131)

யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக!

(திருக்குர்ஆன் 6:70)

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ  இஸ்ராயீல் சமுதாயத்தார் இடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (5292)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)’’ என்று காணப்படுகிறது.

வீணும் விளையாட்டும் நிறைந்தது:

பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(திருக்குர்ஆன் 29:64)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(திருக்குர்ஆன் 6:32)

பகட்டுக்குப் பலியாகும் வாழ்க்கை:

பெரும்பாலான மக்கள், நீயா? நானா? என்று மற்றவர்களிடம் போட்டி போட்டு, பெருமை அடிப்பதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். அதற்குரிய இன்பங்களைப் பெருக்கும் முயற்சியில் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். எனவேதான் அல்லாஹ் உலகத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான்.

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை’’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 57:20)

(ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனை பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்’’ (என்று கூறப்படும்.)

(திருக்குர்ஆன் 46:20)

தரம் தாழ்ந்த உலகம்:

மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது. இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ஆலியாவின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’’ என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும்போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச்  செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்‘’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5664)

அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த, –அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5490

இது நிஜ வாழ்க்கையே அல்ல:

இன்னும் தெளிவாகக் கூறுவதாக இருந்தால், மறுமை வாழ்க்கை என்பதுதான் உண்மையான, மெய்யான வாழ்க்கை. இங்கு வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல. மாறாக, மறுமை வாழ்வுக்கான ஒரு முன்னோட்டம் அவ்வளவுதான்.

மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(திருக்குர்ஆன் 29:64)

(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்கள் இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை; ஆகவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (6413)

இதுவரை பார்த்தவை எல்லாம், உலக வாழ்வின் யதார்த்தமான நிலைகள். இவற்றைப் புரிந்து கொண்டவர்கள், மறுமைக்கு இணையாக உலக வாழ்வைப் பெரிதாக நினைக்க மாட்டார்கள். அதைவிடவும் உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். என்றும் எப்போதும் சுதாரிப்போடு வாழ்வார்கள்.

குறிப்பாக, மறுமை வெற்றியை விரும்பும் மக்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும்? இங்கு அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்தும் நபிகளார் போதித்து இருக்கிறார்கள்.

‘‘இவ்வுலகம், இறை நம்பிக்கை கொண்டவர்களுக்குச் சிறைச்சாலை ஆகும். இறைமறுப்பில் இருப்பவர்களுக்குச் சொர்க்கச் சோலை ஆகும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5663)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (6416)

ஆடை, உணவு, பொருளாதாரம் என்று வாழ்வின் அனைத்து விஷயத்திலும் முஃமின்களுக்குப் பல்வேறு  கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அவற்றுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

தமது சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்குச் சென்றிருக்கும் நபரைப் பாருங்கள். பெரும்பாலும் தம்மிடம் இருக்கும் பொருளாதாரத்தை கவனத்துடன் செலவழிப்பார்; அவசியமற்ற பொருட்களை வாங்கமாட்டார். ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் அமைத்துக் கொள்வார். எல்லாவற்றுக்கும் மேலாக, சொந்த தேசத்திற்குச் சென்று சந்தோஷமாக வாழ்வதற்குச் சிக்கல் ஏற்படுத்தும் காரிங்களில் ஈடுபட மாட்டார்.

இவ்வாறு, நாமும் இறைவன் தந்த பாக்கியங்களை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு அருட்கொடையையும் வீணடித்துவிடக் கூடாது. கடமையான காரியங்களை அக்கறையுடன் செய்வதோடு, பாவமான காரியங்களை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

குறிப்பாக, மறுமையில் நல்ல நிலையில் இருப்பதற்கேற்ப எல்லா வகையிலும் இங்கு விழிப்புடன் வாழ வேண்டும். இந்தப் பக்குவத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக!

———————————————————————————————–

தேவை ஆதாரம் தான்! அனுமானம் அல்ல!

எம்.ஷம்சுல்லுஹா

முந்தைய ஆடியோவைப் போன்று இந்த ஆடியோவும் அவதூறாகத் தான் இருக்கும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்த சகோதரர்கள் மட்டுமல்ல! சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த நமது அபிமானிகள் உட்பட அத்தனை பேர்களும் அப்படியொரு அறிவிப்பை ஏக்கத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட பெண் குடும்பத்தார் சமர்ப்பித்த ஆதாரம் அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருந்த நல்லெண்ணம், நம்பிக்கை எனும் சாம்ராஜ்யத்தைத் தகர்த்தெறிந்து விட்டது.  அவர்களின் தலைகளில் பெரும் வெடியும் பேரிடியும் விழுந்து விட்டது. ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத்தின் உறுப்பினர் போன்றே நினைத்திருந்தனர். தங்கள் குடும்பத்தினர் மீது பொழிகின்ற பாசத்தை விட அதிகமான அளவு பாச மழை அவர் மீது பொழிந்தனர்.  அவர்களுக்குத் தான் பிஜே துரோகமிழைத்து விட்டார். அதனால் அவரை அவர்கள் நிரந்தரமாகப் பிரியத் துணிந்து விட்டனர். அவர் மீது அவர்கள் கொண்ட பாசத்தின் காரணமாக அவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு சோதனையாகவும் ஒரு வேதனையாகவும் ஆகிவிட்டது. குறிப்பாக இந்தக் கட்டுரையை எழுதிய என்னால் கூட அதனால் ஏற்பட்ட சோகத்தின் காரணமாக, சில நாட்களாகக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்படிப்பட்ட சோதனையான கால கட்டத்தில்  அண்மைக் காலம் வரை நம்முடன் சங்கமித்திருந்த சகோதரர்கள் ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை கூடப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த இயக்கத்தின் மற்ற நிர்வாகிகள் மீதும் களங்கம் கற்பித்து, இந்த ஜமாஅத்தை இத்தோடு நிலைகுலையச் செய்து விடவேண்டும் என்று எண்ணத் துவங்கி விட்டனர்.

குறிப்பாக பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா, பொருளாளர் சாதிக்  ஆகியோர் பீஜே செய்த இந்தத் தப்பை வேண்டுமென்று திட்டமிட்டு தெரிந்தே மறைத்து விட்டனர் என்ற அடாத பழியை, அபாண்டமான அவதூறை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.

அல்லாஹ் தான் இந்த அவதூறுகள், அபாண்டங்கள் அனைத்தை விட்டும் கொள்கைச் சிந்தனை உடைய அனைவரையும் காப்பாற்ற வேண்டும். அதில் குறிப்பாக, பொருளாளர் சாதிக் ஜமாஅத்தின் ஜகாத் பணத்தை தப்பான வழியில் தாரை வார்த்தார் என்று எதிரிகள் சாட்டிய குற்றச்சாட்டுக்களை இவர்கள் வழிமொழிந்தனர்.

இது அல்லாஹ்விடத்தில் பதில் அளிக்க வேண்டிய பயங்கரக் குற்றச்சாட்டாகும். ஒரு சில அவதூறுகள் ஒரு சிலரின் பார்வையில் அவதூறாகத் தெரியும். இன்னொருவரின் பார்வையில் அது அவதூறாகத் தெரியாது. அப்படி இருவேறு பார்வைகளுக்கு இடமளிக்காத ஒரு அவதூறு தான் ஜகாத் பணத்தைத் தப்பான வழியில் செலவழித்தது என்ற குற்றச்சாட்டு. இது ஓர் அபாண்டம் ஆகும். அர்த்தமற்ற, ஆதாரமற்ற பழியாகும். இந்தக் குற்றச்சாட்டு மார்க்க அடிப்படையில் சரியா? என்று பார்ப்போம்:

மொத்தத்தில், இந்த ஜமாஅத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இரண்டு.

  • பிஜே செய்த பாலியல் பாவத்தை, தெரிந்தே மேலே குறிப்பிடப்பட்ட சகோதரர்கள் மறைத்தார்கள்.
  • ஜமாஅத்தின் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் தக்க ஆதாரத்துடன் வந்து நிரூபித்தால் இந்த ஜமாஅத்  உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருக்கின்றது என்று இது தொடர்பாக ஜமாஅத் பதில் அளித்தது. தகுந்த முகாந்திரத்துடன், தக்க ஆதாரத்துடன் பீஜே தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் காலையில் ஆதாரத்தைச் சமர்ப்பித்தனர். மாலையில் ஜமாஅத் பிஜேவின் மீது நடவடிக்கை எடுத்து பிஜேவை நீக்கி  விட்டது.

உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் பிஜே மீது நடவடிக்கை எடுத்து  நீக்கி, கையெழுத்துப் போட்ட மை காய்வதற்கு முன்னால் பொய்யான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர். ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்கும் போது ஆதாரம் எதையும்  சமர்ப்பிக்காமல் வெறும் அனுமானங்களை மட்டுமே  சமர்ப்பிக்கின்றார்கள். முகநூல் அபத்தங்களையும் மொட்டையான ஊகங்களையும்  சமர்ப்பிக்கின்றார்கள்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மார்க்கம் வரையறுத்திருக்கின்ற வரம்புகளையும் வரையறைகளையும் புறந்தள்ளி விட்டு, மனோ இச்சை அடிப்படையிலான வாதங்களை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக மார்க்கம் அளித்த நிபந்தனைகளையும் நிலைபாடுகளையும் முற்றிலும் மறந்து விட்டனர்.

குற்றம் சாட்டுபவர் ஆதாரத்தை அளிப்பது கடமையாகும். மறுப்பவர் சத்தியம் செய்வது கடமையாகும்.

செல்வம் தொடர்பான வழக்குகளில் பொருள் யார் கையில் உள்ளதோ அவர் பிரதிவாதி ஆவார். தன்னுடையது என வாதிப்பவர் வாதி ஆவார்.

தண்டனைகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் வாதி ஆவார். பாதிப்பை ஏற்படுத்தியவர் பிரதிவாதி ஆவார்.

வாதி ஆதாரம் காட்ட வேண்டும். பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும்.

அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) (வந்து), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று என்னைக் கேட்டார்கள். நான், ‘இல்லைஎன்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2667

கண்டமேனிக்குக் குற்றஞ்சாட்டுபவர்களின் வாசல்கள் திறக்கப்பட்டால் அதற்கு ஒரு வரையறை எதுவுமில்லாமல் யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லிவிட்டுப் போக நேர்ந்திடும்.

ஒருவர் இன்னொருவருடைய உயிர்களையும் உடைமைகளையும் மானம் மரியாதைகளையும் பறிக்க வேண்டியதாகி விடும்.  அதற்கு தான் மார்க்கம் ஓர் எல்லையை நிர்ணயிக்கின்றது.  இதைப் பின்வரும் புகாரி, முஸ்லிம் ஹதீஸில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

இரண்டு பெண்கள் ஒரு வீட்டில்அல்லது ஓர் அறையில்’ (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்என்று கூறினார்கள்எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லைஎனும் (திருக்குர்ஆன் 3:77வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்என்று கூறினார்கள்.

அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘‘பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 4552

தன்னுடைய மனைவி அந்நிய ஆடவருடன் தனித்திருந்தார் என்று ஹிலால் பின் உமைய்யா (ரலி) குற்றஞ்சாட்டியதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆதாரத்தைத் தான் சமர்ப்பிக்கும் படி கேட்கின்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹிலால் இப்னு உமய்யா (ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபச்சாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்குத் தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்: இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) லிஆன்தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.

நூல்: புகாரி 2671

இது தொடர்பாக லிஆன் சட்டம் திருக்குர்ஆனில் அருளப்பட்டு விட்டாலும் ஆதாரம் கேட்கும்  காரணம் இல்லை என்றாகி விடாது என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் அவதூறு விஷயத்தில் அல்லாஹ் ஆதாரத்தைத்  தான் கொண்டு வரச் சொல்கின்றான்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:4

இந்த வசனம் இதைத் தான் மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது. அப்படிக் கொண்டு வராவிட்டால் 80 கசையடி கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றது.  மேற்கண்ட இந்த வசனங்கள், ஹதீஸ்கள் அடிப்படையில் குற்றஞ்சாட்டுபவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு சமர்ப்பிக்க மறுத்து வருகின்றனர்.

நாம் இவ்வாறு சொல்கின்ற போது பின்வரும் ஹதீஸ் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தானே முன்வந்து சத்தியம் செய்ய வேண்டியது தானே என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!’’ என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) -அல்லாஹ்வின் தூதரே!’’ என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்’’ என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல்: புகாரி 2038

நபி (ஸல்) அவர்களை நபித் தோழர்கள் ஒரு போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க மாட்டார்கள். பார்த்ததில்லை. ‘சுப்ஹானல்லாஹ்’ என்று அவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிப்பது இதை விளக்கி விடுகின்றது.  இருப்பினும் நபி (ஸல்) அவர்கள் தான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்று தனது தோழர்கள் நினைக்க ஒரு முகாந்திரம் இருக்கின்றது என்று கருதி அந்த வாசலைத் தானே அடைக்க முன் வருகின்றார்கள் என்று அந்த ஹதீஸிலிருந்து  நாம் தெளிவாக விளங்க முடிகின்றது.

இந்த விவகாரத்தில் எதிரிகள் தங்கள் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால் அப்படி ஒரு முகாந்திரத்தை எள்ளளவு கூட எள் முனையளவு கூட யாருமே எண்ணிப்பார்க்கவில்லை. இன்று குற்றம் சாட்டுபவர்கள் கூட அன்று நம்முடன் இருந்தபோது அப்படி நினைக்கவில்லை.

பிஜே அப்படி ஒரு தப்பு செய்தார் என்று யாருக்கும் தெரியாது. சம்பந்தபட்ட பெண்ணின் குடும்பத்தார் தக்க ஆதாரத்துடன் வந்து கொடுக்கின்ற வரை யாருக்குமே தெரியாது.

குற்றஞ்சாட்டுவோர் தான் மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களான செய்யது இப்ராஹீம், ரஹ்மத்துல்லாஹ், சாதிக் ஆகியோர் அல்லாஹ்வை சாட்சியாக்கி கண்ணீர் மல்க மறுத்தது செயற்குழு உறுப்பினர்களை உருக வைத்து விட்டது.

இந்த இடத்தில் நான் ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். முதலில் சம்பந்தப்பட்ட பெண் குடும்பத்தினர் சகோதரர் கலீல் ரசூலைத் தான் சந்தித்தனர். அதன் பின் நான், கோவை ரஹ்மத்துல்லாஹ், கலீல் ரசூல் ஆகிய மூவரும் 12.05.2018 அன்று காலை 8.30 மணியளவில் சம்பந்தப்பட்ட பெண் குடும்பத்தாரைச் சந்தித்தோம். அப்போது ரஹ்மத்துல்லாஹ்விடம் கொந்தளிப்பையும் கொதிப்பையும் என்னால் காண முடிந்தது.

அதன் பின்னர் உயர் நிலைக்குழுவில் இந்த விவகாரத்தை நாங்கள் தெரிவித்து அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்த போது செய்யது இப்ராஹீமிடம் ஏற்பட்ட கொதிப்பையும் கொந்தளிப்பையும் என்னால் நிதர்சனமாகக் காண முடிந்தது. இவர்கள் யாரும் கடுகளவு கூட முட்டுக் கொடுக்க முனையவில்லை என்பதை விட  அவரை ஜமாஅத் பொறுப்புகளில்  விட்டு வைக்கக் கூடாது என்பதில் தங்கள் மொத்த கோபத்தையும் வெளிப்படுத்தியவர்கள்.

பாக்கர், அல்தாஃபி விஷயத்தில் என்ன கோபத்தைப் பிரதிபலித்தார்களோ அதைத் தான் அவர்கள் பீஜே விஷயத்திலும் பிரதிபலித்தனர். ஒட்டு மொத்த உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் இதே கண்ணோட்டத்தைத் தான் பிரதிபலித்தனர். மாநிலப் பொருளாளர் சாதிக், தன் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் உயர்நிலைக்குழுவிற்கு வரவில்லை. அதனால் அவர் தன் நிலைப்பாட்டை செயற்குழுவில் பிரதிபலித்தார்.

இங்கு கொள்கைச் சகோதரர்களிடம் கனிந்து நாம் கேட்டுக் கொள்வது இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி யாரையும் காயப்படுத்த வேண்டாம் என்று தான். அத்தகைய சகோதரர்களின் கவனத்திற்குக் கீழ்க்காணும் வசனங்களின் எச்சரிக்கை தரப்படுகின்றது.

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.

இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு’’ என்று கூறியிருக்கக் கூடாதா?

இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.

இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

இதைக் கேள்விப்பட்டபோது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:11-19

அல்லாஹ் நம் அனைவரையும் ஆதாரமற்ற அவதூறுகளிலிருந்து காப்பானாக!

———————————————————————————————–

முபாஹலா: அறிவிலிகளின் அறியாமை வாதம்

அபூராஜியா

தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கையை சமரசமில்லாமல் ஓங்கி ஒலிக்கும் ஓர் அமைப்பு உண்டென்றால் அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான். எத்தகைய சோதனை வந்தாலும் அதைச் சகித்துக் கொண்டு, அந்த சோதனைக்காகக் கொள்கையை விட்டுக் கொடுத்து விடாமல் “லாயிலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற ஏகத்துவக் கலிமாவை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உன்னதப் பணியை இந்த ஜமாஅத் செய்து கொண்டிருக்கின்றது. இதற்காக இந்த ஜமாஅத் சந்தித்த சோதனைகள் சொல்லி மாளாது.

உறவினர்களைப் பகைத்தல், ஊர் நீக்கம், பள்ளிவாசலில் தொழ அனுமதி மறுப்பு, அடி, உதைகள், கொலை முயற்சிகள், ஜனாஸாவை அடக்க மறுத்தல், திருமணத்திற்கு தஃப்தர் தர மறுத்தல், பெண் தர மறுத்தல், ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காத நிலை என்றெல்லாம் பல்வேறு சோதனைகளைக் கொள்கைவாதிகள் சந்தித்தனர். ஆனாலும் அவர்கள் தளர்ந்து விடவில்லை.

ஆனால் இன்றோ நிலைமை நேர் மாற்றம்!

இணை கற்பிக்கும் பெண்ணை நாங்கள் திருமணம் முடிக்க மாட்டோம்.

இணை வைக்கும் கொள்கையில் இருப்பதால் உங்களுக்கு நாங்கள் பெண் தரமாட்டோம்.

வரதட்சணை திருமணங்களைப் பதிவு செய்யும் உங்கள் தஃப்தர் எங்களுக்குத் தேவையில்லை.

உங்களது பள்ளியில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்கள் நடப்பதால் அங்கு வந்து நாங்கள் தொழ முடியாது.

ஜனாஸா தொழுகையாக இருந்தாலும் எங்கள் வீட்டு வாசலிலேயே தொழுது விட்டுத் தான் மையவாடிக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்வோம்.

என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்திப் பேசும் நிலையை ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். இது உண்மையில் அவனது அருளைத் தவிர வேறெதுவும் இல்லை. ஏகத்துவக் கொள்கையைக் கூறி, அதில் உறுதியாகவும் நிற்பதற்கு அல்லாஹ் வழங்கிய வெற்றியாகும்.

எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!’’ எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 41:30

சோதனை மேல் சோதனை

கொள்கை எதிரிகளிடம் சந்தித்த சோதனைகள் மட்டுமின்றி, கொள்கைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரிடமிருந்தே பல்வேறு சோதனைகளைச் சந்திக்க நேரிட்டது.

பொருளாதாரக் காரணங்களுக்காக சிலர் வெளியேறினர். அரசியல் காரணங்களுக்காக சிலர் வெளியே சென்றனர்.

அல்லாஹ்வின் ஆற்றல் சூனியக்காரர்களுக்கும் உண்டு என்று போதிக்கும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு முரணாக இருப்பதால் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறுதியிட்டுக் கூறிய போது, அதை ஏற்காமல் சிலர் தடம் புரண்டனர்.

பின்பற்றத் தகுதியான தலைவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமே! அவர்களது தோழர்கள் உள்ளிட்ட யாரையும் பின்பற்றக் கூடாது என்று அடித்துச் சொன்னதால் சிலர் ஆட்டம் கண்டனர்.

இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியவர்கள் சிலரென்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் உண்டு.

அதிலும் குறிப்பாக, பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பதவியில் இருந்த பாக்கர் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு மாநிலத் தலைவர் என்ற உயர் பதவியில் இருந்த பக்கீர் முஹம்மது அல்தாபி, ஒரு அன்னியப் பெண்ணுடன் தனித்து இருந்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்.

தற்போது அதே மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்த பி. ஜைனுல் ஆபிதீன் பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் நீக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி ஜமாஅத்திற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏராளமான சோதனைகளைச் சந்தித்த போதும் இந்தக் கொள்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதற்குக் காரணம், சமரசமில்லா சத்தியக் கொள்கையும், எளியவன் வலியவன் என்று பாராமல் அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதும் தான்.

பிஜே தான் தவ்ஹீத் ஜமாஅத்தை இயக்குகிறார், அவர் இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத் இல்லை என்றெல்லாம் சொன்னவர்களின் கூற்றுக்களைப் பொய்யாக்கி, இன்று அல்லாஹ்வின் அருளால் இந்த ஜமாஅத் நிலைத்து நிற்கின்றது.

இதைப் பொறுக்க முடியாமல் எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த ஜமாஅத்தை அழித்து விட வேண்டும் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.

இந்த ஜமாஅத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களும் எதிரிகளுடன் கரம் கோர்த்துக் கொண்டு இந்த ஜமாஅத்தை நிர்மூலமாக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

பிஜே என்ற தனிநபர் செய்த தவறுக்கு இந்த ஜமாஅத்தைப் பலிகடாவாக்கி, இத்துடன் கதையை முடித்து விட வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள்.

பிஜே மீது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் நீக்கப்பட்டதும் கொள்கை எதிரிகள் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ, இந்த முன்னாள் சகாக்கள் படுகுஷியாகி விட்டார்கள்.

பார்த்தீர்களா? எங்கள் மீது நடவடிக்கை எடுத்து வெளியேற்றியதால் தான் ஜமாஅத்திற்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என்று குராபிகள் பாணியில் காரணம் சொல்லிக் குதூகலிக்கத் துவங்கி விட்டார்கள். (இந்த ஜமாஅத்திற்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. முன்பைவிடப் பன்மடங்கு வீரியமாக இந்த ஜமாஅத் செயல்படுகின்றது என்பது வேறு விஷயம்)

கிறித்தவர்களுடனான விவாதத்தில் பைபிள் இறைவேதம் அல்ல என்று நிரூபித்ததைக் காரணம் காட்டி, நீங்கள் பைபிளை இழிவுபடுத்தியதால் கர்த்தர் இந்த தண்டனையைத் தந்துள்ளார் என்று கிறித்தவர்கள் கூறுகின்றார்கள்.

அவ்லியாக்களைத் திட்டியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று பரேலவிகள் புலம்புகிறார்கள்.

மிர்ஸா குலாமைப் பொய்யன் என்று கூறியதன் விளைவு தான் இந்த நிலைக்குக் காரணம் என்று காதியானிகள் தங்கள் பங்குக்கு ஒரு டோக்கன் போட்டு வைக்கின்றார்கள்.

இந்த அசத்தியவாதிகளின் வரிசையில், எங்கள் ஊரைச் சார்ந்த இன்னாரை நீக்கியதால் தான் இப்படி ஆகி விட்டது என்று ஒரு கூட்டத்தினர் கூப்பாடு போடுகின்றனர்.

பரேலவிகளின் பாதையில்…

2006ல் களியக்காவிளையில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடைபெற்றது. எம்.ஐ. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று விட்டுக் காரில் சென்று கொண்டிருந்த போது கார் ஒரு மரத்தில் மோதி விட்டது. கார் சிதைந்து, சின்னாபின்னமாகி விட்டது. எம்.ஐ.சுலைமான் அவர்களுக்குக் காலில் பலத்த காயம். ரஹ்மத்துல்லாஹ், கார் டிரைவர் ஆகியோருக்கும் காயம்.

உடனே பரேலவிகள், “அவ்வளவு தான்! இது அவ்லியாக்களின் வேலை தான்” என்று கதை கட்டி விட்டனர்.

அதுபோன்று தான் இந்த முன்னாள் சகாக்களின் கருத்தும் அமைந்துள்ளது.

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலை கீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம்.

அல்குர்ஆன் 22:11

நன்மை வந்தால் அது நல்ல கொள்கை என்றும், ஒரு சோதனை ஏற்பட்டால் அதை வைத்து இது மோசமான கொள்கை என்றும், உலக ஆதாயங்களை அடிப்படையாக வைத்துக் கொள்கையை எடை போடுபவர்கள் நஷ்டவாளி என்று அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இந்த ஜமாஅத்திற்கு ஒரு சோதனை ஏற்பட்டவுடன், பார்த்தீர்களா? எங்களை வெளியேற்றியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று வாதிடுபவர்கள் திருக்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.

உஹதுக்களம் – ஓர் உரைகல்

சோதனையை வைத்து சத்தியம், அசத்தியத்தை எடை போடுபவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர்க்களத்தில் சந்தித்த சோதனையைப் பற்றி என்ன மதிப்பீடு செய்வார்கள்?

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்என்று கூறலானார்கள்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (3:128) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 3667

அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும் ‘(உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார்.

பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்என்றார். (இதைக் கேட்டு) உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மன வேதனையளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது?’ என்றார்கள்.

(உடனே) அபூ சுஃப்யான், ‘இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாதுஎன்று சொல்லிவிட்டு பிறகு, ‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டதுஎன்று கவிதை பாடலானார்.

நூல்: புகாரி 3039

உஹதுப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்ட போது அபூசுஃப்யான் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று இவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.

இவர்களுக்கெல்லாம் நாம் சொல்லிக் கொள்வது ஒன்றைத் தான். எந்தத் தனி நபரையும் நம்பி இந்த ஜமாஅத் இல்லை. அதன் தூய்மையான ஏகத்துவக் கொள்கையினால் மட்டுமே இந்த ஜமாஅத் நிலைத்து நிற்கின்றது என்பதை சமீபத்திய நிகழ்வுகளின் மூலம் அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான்.

எனவே இந்த ஜமாஅத்தின் தலைவராக இருந்த ஒருவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்த ஜமாஅத்திற்கோ அதன் கொள்கைக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்படவும் செய்யாது. அதற்கு எடுத்துக்காட்டு தான் தற்போது ரமளான் இரவுத் தொழுகைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம். தொழுவதற்கு இடமில்லாமல் மக்கள் சாலைகளில் தொழும் காட்சியைக் காண்கிறோம். இது இந்த ஜமாஅத் எந்தத் தனி நபரையும் சார்ந்து இருக்கவில்லை, கொள்கையை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

முபாஹலாவினால் விளைந்ததா?

இதையெல்லாம் மிஞ்சும் விதமாக, அல்தாபியின் பாலியல் புகாருக்காக முபாஹலா செய்ததால் தவ்ஹீத் ஜமாஅத் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுள்ளது என்று ஒரு சிலர் கிளப்பி விடுகின்றனர். இவர்களின் மார்க்க அறிவு எப்படி மழுங்கி விட்டது என்பதை எண்ணி ஆச்சரியமாக உள்ளது.

அடுத்தவர் மனைவி ஒருவருடன் சில மணி நேரம் தனித்திருந்த ஒருவருக்கு ஆதரவாக அல்லாஹ் களமிறங்கி விட்டான் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வை இவர்கள் எந்த அந்தஸ்தில் வைத்துள்ளார்கள் என்பதை விளங்க முடிகின்றது.

இவர்கள் மார்க்கத்தை எவ்வாறு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதற்கு முபாஹலா குறித்த இவர்களின் வாதம் ஓர் எடுத்துக்காட்டு.

முபாஹலா தொடர்பான அல்குர்ஆன் 3:61 வசனத்தில், பொய்யர்கள் மீது மரணம் உண்டாகட்டும் என்றோ, பொய்யர்கள் மீது இழிவு உண்டாகட்டும் என்றோ அல்லது பொய்யர்களுக்கு கை, கால் விளங்காமல் போகட்டும் என்றோ பிரார்த்திக்குமாறு கூறப்படவில்லை.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் – லஃனத் உண்டாகட்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் லஃனத் என்றால் என்ன அர்த்தம் என்பது கூட விளங்காமல் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வின் சாபம் எப்படி ஏற்படும் என்று யாரும் அறிய முடியாது. அது இம்மையிலும் ஏற்படலாம், மறுமையிலும் கிடைக்கலாம். அல்லாஹ்வின் சாபம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது. இதே லஃனத் – சாபம் என்ற சொல் பல்வேறு வசனங்களிலும் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். 

அல்குர்ஆன் 4:93

ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்பவனை அல்லாஹ் சபிக்கின்றான் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்தியாவில் சங்பரிவார்கள் முதற்கொண்டு, சர்வதேச அளவில் பெஞ்சமின் நேதன்யாகு, டொனால்டு டிரம்ப், விளாடிமிர் புதின், பஷர் அல் ஆஸாத்  என எத்தனையோ பேர் முஃமின்களை வேண்டுமென்றே கொலை செய்து கொண்டிருப்பதை நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று இவர்களுக்கு எதிராக உலகெங்கும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. நாமும் பலமுறை இவர்களைச் சபித்து குனூத் ஓதியிருக்கிறோம்.

அல்லாஹ்வின் சாபம் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தின் படி உலகில் எத்தனையோ பேருக்குக் கை, கால் விளங்காமல் போயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் கை, கால் விளங்காமலோ அல்லது அழிந்தோ போய் விடவில்லை.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

(அல்குர்ஆன் 2:161)

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போர், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போர், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு. 

(அல்குர்ஆன் 13:25)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. 

(அல்குர்ஆன் 24:23)

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். 

(அல்குர்ஆன் 2:159)

நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 9:68)

அல்லாஹ்வை மறுப்பவர்கள், அல்லாஹ்விடம் வாக்குறுதிக்கு மாறு செய்தோர், உறவுகளைத் துண்டிப்போர், குழப்பம் விளைவிப்போர், அவதூறு கூறுவோர், அல்லாஹ்வின் சான்றுகளை மறைப்போர், நேர்வழியை மறைப்போர், முனாஃபிக்குகள் ஆகியோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருப்பதாக இந்த வசனங்கள் கூறுகின்றன.

பச்சை குத்திக் கொள்ளும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

(புகாரி 4886)

திருடர்களை அல்லாஹ் சபிப்பானாக என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 6783)

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி 1330)

இவர்களது வாதப்படி அல்லாஹ்வின் சாபம் உள்ளவர்கள் அழிந்து போக வேண்டும் என்றால் உலகில் 90க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் அழிந்து போயிருக்க வேண்டும். ஏனெனில் மேலே குறிப்பிட்ட காரியங்களை அவ்வளவு பேர் செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே அல்லாஹ்வின் சாபம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் அழிந்து போவதோ அல்லது உடனடியாக தண்டனைக்குள்ளாவதோ மட்டும் அல்ல. அது எந்த விதத்திலும் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முபாஹலாவில் பரேலவிசம் வென்றதா?

முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியை அழைத்து இருட்டு திக்ரு செய்வது கூடாது என்று கூறி ஜலீல் முஹைதீன் என்பவருடன் 1985ல் காயல்பட்டிணத்தில் பிஜே முபாஹலா செய்தார்.

அவ்வாறு முபாஹலா செய்ததால் ஜலீல் முஹைதீனுக்கு உலக ரீதியாக எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை. அதற்கு மாறாக, பிஜே தான் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு சோதனைக்கு உள்ளானார். தற்போது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கவும் பட்டிருக்கிறார்.

முபாஹலாவுக்கு இந்தக் குறைமதியாளர்கள் கொடுக்கும் விளக்கத்தின்படி ஜலீல் முஹைதீனின் கொள்கை தான் சரியானது என்று கூறுவார்களா?

உண்மை, பொய் குறித்த தீர்ப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுவது தான் முபாஹலா ஆகும். அவனது தீர்ப்பு இந்த உலகத்திலேயே நமக்குக் காட்டப்படலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.  இறைவனின் உண்மையான தீர்ப்பு என்ன என்பது மறுமையில் தான் தெரிய வரும். முபாஹலாவினால் தான் இது ஏற்பட்டது என்று சொல்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

ஜலீல் முஹைதீன் என்பவருடன் முபாஹலா செய்ய முன்வந்த போது, பேராசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் என்ற அறிஞரிடம் இந்த முபாஹலா பற்றிக் கேட்டதற்கு அவர் தெரிவித்த பதிலை இந்த அறிவிலிகளுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

“உலக ரீதியிலான விபத்துக்கள், மரணங்கள் இதன் விளைவுகள் ஆகாது. இதன் விளைவு, சத்தியம் வளரும்”

இது தான் முபாஹலா குறித்து அவர் தெரிவித்த கருத்தாகும். இதுதான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்த கருத்தாகவும் உள்ளது.

எனவே அல்தாபி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்காக முபாஹலா செய்ததால் தான் தற்போது தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பிஜே நீக்கப்பட்டு விட்டார் என்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும்.

அல்தாபி மீதான பாலியல் புகாரிலோ, அது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முபாஹலா  செய்ய முன்வந்ததிலோ இன்றளவும் ஜமாஅத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அதை ஒப்புக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர், தற்போது பிஜே மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத் தூய்மையானவர் என்று வாதிட முற்பட்டால் அதை இந்த ஜமாஅத் ஒருபோதும் அனுமதிக்காது.

கிறித்தவர்களும், காதியானிகளும், பரேலவிகளும் வைக்கும் வாதத்தை இந்த முன்னாள் சகாக்களும் முன்வைத்து, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட முற்பட்டால் அதை உடைத்தெறிவது இந்த ஜமாஅத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.

———————————————————————————————–

சென்ற இதழ் தொடர்ச்சி…

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்!

எம்.ஷம்சுல்லுஹா

இஸ்லாமியக் கடமைகள் ஐந்து. அவற்றில் ஜகாத்தும் ஒரு கடமையாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

அல்குர்ஆன் 2:43

இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் மக்கள் ஜகாத் வழங்குகின்றார்கள். ஆனால் அதிலும் மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள்.

உதாரணமாக, ஒருவர் 50 பவுன் நகை வைத்திருக்கின்றார். அவர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து விட்டால் மறு ஆண்டு மீண்டும் அதே நகைக்கு ஜகாத் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்களும் உள்ளன.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.

எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு பொதுவாகக் கட்டளையிட்டால் அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

குர்ஆனிலோ, நபிவழியிலோ ‘தொழ வேண்டும்’ என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.

நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. “ரமளானை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும்’’ என்றும் கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?

வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.

அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.

ஹஜ் என்ற கடமையை இதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்ட பின் “ஒவ்வொரு வருடமுமா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் கேட்டதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம் 2380)

கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

இந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் முன்வைக்கின்ற ஆதாரங்கள், ஆய்வுகள் அடிப்படையில் ஜகாத் என்பது மிக எளிமையான வணக்கமாகும். இதன் மூலம் ஜகாத் வழங்குவோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும்.

உபரியான தர்மங்களில் ஓர் எளிமை! ஓர் எல்லை!

மேலே நாம் கண்டது கடமையான தர்மத்தில் மார்க்கம் அளித்திருக்கின்ற எளிய முறையாகும். இப்போது உபரியான தர்மங்களுக்கு வருவோம். உபரியான தர்மங்களைப் பொறுத்தவரையில் அதற்கு மார்க்கம் ஓர் எல்லையை நிர்ணயித்து விட்டது. அது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்என்றார்கள். பின்னர் நான் பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1295

இதைத் தாண்டி மார்க்கம் என்ற பெயரில் பொருளாதாரத்தைத் தாரை வார்க்கக் கூடாது என்று தடை விதித்து விட்டது. இதற்குக் காரணம் என்ன?

‘உம்முடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காரணம் கூறுகின்றார்கள்.

ஊரார்க்கு அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விட்டு, தன் குடும்பத்தினரை தரித்திர நிலையில் விடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.

பிற மதங்களில் தனது மனைவி மக்கள் யாருக்கும் ஒரு சல்லிக் காசு கூடக் கொடுக்காமல் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குடும்பத்தலைவர் மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்று விடுவதை நாம் பார்க்க முடிகின்றது. இஸ்லாம் அவ்வாறு மனைவியும் மக்களும் மற்ற வாரிசுகளும் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலையில் அவர்களை விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. இது இஸ்லாமிய மார்க்கம் பொருளாதார ரீதியில் மக்களுக்கு காட்டுகின்ற எளிமையும் இலகுவுமாகும்.

ஹஜ் என்ற வணக்கத்தின் கடமையைப்  பற்றி  அல்லாஹ் பின்வரும்  வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

திருக்குர்ஆன்   3:97

ஹஜ் என்ற வணக்கம் ஆண்டுக்கு ஒரு முறை செய்கின்ற வணக்கமாகும். ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்றால் மார்க்கம் அது தொடர்பாக மவுனத்தையே பதிலாகத் தருகின்றது.  அதாவது ஹஜ் ஒவ்வொரு ஆண்டும் கடமையில்லை என்பது அதன் பொருளாகும்.  இதைப் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் உறுதி செய்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்’’ என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா?’’ என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது’’ என்று கூறி விட்டு, “நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான் உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தனர்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2380

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிமையைத் தான் நாடியிருக்கின்றார்கள். தனது சமுதாயம் சிரமப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றார்கள் என்று இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

ஹஜ் எனும் வணக்கத்தின் கிளைமாக்ஸே பத்தாம் நாள் தான். அந்தப் பத்தாம் நாளில் செய்ய வேண்டிய முக்கியமான வணக்கங்கள் 1. கல்லெறிதல், 2. அறுத்து பலியிடுதல், 3. தலை முடியை மழித்தல், 4. ஹஜ்ஜூக்குரிய தவாஃப் செய்தல்.

இப்போதைய சூழ்நிலையில் மக்காவில் பத்து லட்சம் மக்கள் ஹஜ் செய்வதற்காகக் கூடுகின்றார்கள். இந்த 10 லட்சம் மக்களும் மேற்கண்ட அந்த வணக்கங்களை அந்த 10வது நாளிலேயே செய்து முடிக்க முடியுமா? என்றால் அது அறவே சாத்தியமில்லை என்பது தான் அதற்குரிய சரியான பதிலாகும். ஏனென்றால் எல்லோரும் இந்த வரிசை முறையைக் கடைப்பிடித்தால் மக்கள் அந்த வணக்கங்களை நிறைவேற்றுமிடங்களில் மக்கள் கூடி அவர்கள் பெரிய இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் ஆளாகிவிடுவார்கள். அதனால் இந்த மார்க்கம் தீர்க்க தரிசனமாக அதில் ஓர் எளிமையையும் இலகுவையும் அளிக்கின்றது.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், “நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்துவிட்டேன்!’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (இப்போது குர்பானிப்பிராணியை) அறுப்பீராக!’’ என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்து கல்லெறிவதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானி கொடுத்துவிட்டேன்!’’ எனக் கூறியதும் அவர்கள் குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!’’ என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக!’’ என்றே கூறினார்கள்.

நூல்: புகாரி 1736

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ராவில் (மக்களால்) கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல்லெறிந்துவிடும்!’’ என்றார்கள். மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலைமடியை மழித்து விட்டேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பரவாயில்லை; இப்போது குர்பானிகொடுத்துவிடும்!’’ என்றார்கள்.

(அன்றைய தினம் பிற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் பரவாயில்லை; (விடுபட்டதை) செய்வீராக!’’ என்றே சொன்னார்கள்.

நூல்: புகாரி 124

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டேன்என்றார். அதற்கு அவர்கள் குற்றமில்லை!’’ என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்’’ என்றதும் அவர்கள் குற்றமில்லை!’’ என்றார்கள். மேலும் அவர் நான் கல்லெறிவதற்கு முன்பாகப் குர்பானி கொடுத்துவிட்டேன்’’ என்ற போதும் அவர்கள் குற்றமில்லை’’ என்றார்கள்.

நூல்: புகாரி 1722

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!’’ என்று கேட்டதும். அவர்கள் குற்றமில்லை!’’ என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்!’’ என்றபோதும் அவர்கள் குற்றமில்லை!’’ என்றே கூறினார்கள்.

நூல்: புகாரி 1723

இந்த ஹதீஸ்களெல்லாம் கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சலுகையையும் சவுகரியத்தையும் வழங்கியிருப்பதை நாம் காண முடிகின்றது. இந்தச் சலுகையும் சவுகரியமும்  மட்டுமில்லை என்றால் இலட்சக்கணக்கான மக்கள் இந்த இடங்களில் முண்டியடித்துக் கொண்டு மரணத்தைத் தழுவ நேரிட்டிருக்கும்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 6:5

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது போன்று மக்களுக்கு சிரமங்கள் களையப் பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். இது உண்மையில் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.

இந்த ஹஜ்ஜில் அல்லாஹ் அளித்திருக்கக் கூடிய சலுகைகளில் முக்கியமான ஒன்று  12ஆம் நாள் மாலையிலேயே ஊர் திரும்புவது!  ஹஜ்ஜுடைய வணக்கம் 13ஆம் நாள் வரை தொடர்கின்றது. ஒருவர் ஒரு நாளைக்கு முந்தியே திரும்ப வேண்டும் நினைத்தால் 12ஆம் நாளே திரும்பிக் கொள்ளலாம். இந்தச் சலுகையை கீழ்க்காணும் அல்லாஹ்வின் வசனம் வழங்குகின்றது.

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் குற்றமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.

அல்குர்ஆன் 2:203

ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது அல்லாஹ் இரண்டு நாட்கள் என்று சொல்கின்றான். ஒரு நாள் என்பது சூரியன் மறைவுடன் முடிகின்றது அதனால் சூரியன் மறைவதற்கு முன்னால் மினாவிலிருந்து கிளம்பி விட வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் மறுநாள் தொடங்கிவிடும். அப்போது அந்த சலுகை அவர் இழந்து விடுகின்றார்.

மாதவிலக்குப் பெண்களுக்கு மார்க்கம் அளிக்கும் சலுகை

நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ஸரிஃப்என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டார்கள். இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். அப்போது இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வை வலம் வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்என்று கூறினார்கள்என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி  305, 314, 1650

நபி (ஸல்) அவர்களுடன் அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்த போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. அது அவர்களுக்குப் பெரிய உறுத்தலையும் கவலையையும் ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் அழுகின்றார்கள்.

நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ஸரிஃப்என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வை வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் குர்பானிகொடுத்தார்கள்என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 294

ஹஜ்ஜின் போது பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் கஃபாவிலும் ஸஃபா மர்வாவிலும் தவாஃப் செய்வதை மட்டும் தவிர்த்து மற்ற வணக்கங்களைச் செய்யும்படி நபி (ஸல்)அவர்கள் ஆறுதலும் அறிவுரையும் கூறுவதை நாம் பார்க்க முடிகின்றது.

இவை அனைத்தும் நமக்கு உணர்த்துகின்ற விஷயம் இந்த மார்க்கம் சலுகைகளிலும் சவுகரியங்களிலும் எளிமையிலும் இலகுவிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தான். இந்த எளிய, இனிய மார்க்கத்தில் இனிதாகப் பயணம் செய்து இலக்கை அடைவோமாக!

———————————————————————————————–

தடுமாற்றம்! தடம் மாற்றும்!!

M.A. அப்துர்ரஹ்மான், இஸ்லாமியக் கல்லூரி

உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏதோ ஒரு வேளையில் தன்னை அறிந்தோ, அறியாமலோ பாவமான காரியங்களில் தடுமாறி விழுந்து விடுவதைப் பார்க்கின்றோம்.

சிலர் செய்கின்ற பாவம் வெளியே தெரிந்து விட்டால் அவர் பாவி என்றும், பலர் செய்கின்ற பாவம் வெளியே தெரியாததன் காரணத்தினால் அவர் நல்லவர் என்றும் மக்களால் பெயர் சூட்டப்படுகின்றார்.

எது எப்படியோ ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் பாவம் செய்வதின் மூலமாகவோ அல்லது இன்ன பிற பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடப்பதன் மூலமாகவோ அல்லது பாவத்திற்குத் துணைபுரிவதன் மூலமாகவோ இறைக் கட்டளையிளிருந்தும், இறைவனுக்கு அஞ்சுவதிலிருந்தும் தடுமாறி விட்டால், அவர் தடம் தெரியாமல் போய் விடுவார் என்பதே கடந்த காலங்களிலும், நிகழ் காலங்களிலும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்ற நிதர்சனமான உண்மை.

தடுமாற்றம் என்பது மனிதர்களாகப் பிறந்த அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது தான். ஏனென்றால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தடுமாறக்கூடியவனாகவும், பதறக்கூடியவனாகவும், பலவீனமான ஒரு படைப்பாகவுமே படைத்திருக்கின்றான். ஆனால் பலவீனமான மனிதர்களாகிய நாம் எந்தச் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அந்தச் சூழலில் சுதாரித்து, இறைவனுக்குப் பயந்து தடுமாற்றத்தைத் தவிடுபொடியாக்கக்கூடிய ஒரு தந்திரத்தை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இறைவன் திருமறையில் மனிதனின் குணநலன்களைப் பற்றிப் பேசும் போது,

மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

அல்குர்ஆன் 4:28

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான். அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 16:4

மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

அல்குர்ஆன் 21:37

மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே நாம் படைத்துள்ளோம்.

அல்குர்ஆன் 90:4

மனிதர்களின் குணநலன்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக இறைவன் பிரித்துக் காட்டுகின்றான். மனிதன் பலவீனமானவனாகவும், வீண்தர்க்கம் செய்பவனாகவும், அவசரக்காரனாகவும், தேவை இல்லாத காரியத்தில் ஈடுபட்டு கஷ்டப்படுபவனாகவுமே மனிதனை இறைவன் படைத்திருக்கின்றான் என்று அற்புதமான வார்த்தைப் பிரயோகங்களில் பயன்படுத்துகின்றான்.

இப்படிப்பட்ட பலவீனமான குணநலன்களைக் கொண்ட மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தடுமாறுவதும், அற்பத்திலும் அற்பமான ஷைத்தானின் வலையில் சுலபமான முறையில் விழுந்து விடுவதும், அதிகமான தவறுகளைத் தங்களுடைய வாழ்க்கையில் செய்வதும் இயல்பு தான்.

ஆனால் உண்மையான இறையச்சவாதிகள், அல்லாஹ்விற்குப் பயந்து தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்பவர்கள், இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் எத்தனை பெரிய தடுமாற்றம் வந்தாலும், தனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் பந்தாடி விடுவார்கள்.

மனோஇச்சை ஒரு மரணப்படுகுழி:

இன்றைக்கு மிகப்பெரும் மனிதர்களாக, மக்களிடத்தில் நன்மதிப்பு பெற்றவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி! தடுமாறி விழுவதில் முதல் இடத்தில் இருப்பது தன்னுடைய மன இச்சையைப் பின்பற்றுவதன் காரணத்தினால் தான். இந்த விஷயத்தில் ஒருவர் நெருப்பாக இருந்து விட்டால், இறைவனின் பேருதவியால் தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடமுடியும்.

மனோஇச்சைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனைப் பற்றி அல்லாஹ் கடுமையான முறையில் விமர்சிக்கின்றான்.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் 45:23

மன இச்சைக்குக் கட்டுப்பட்டு, தடுமாறி வீழ்பவர்கள் செவியிலும், உள்ளங்களிலும் அல்லாஹ் முத்திரை குத்திவிட்டான் என்றும், பார்வையில் மூடியை ஏற்ப்படுத்தி விட்டான் என்றும் இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

நம் வாழ்க்கையைத் தடம் தெரியாமல் அழிப்பதற்கும், நம்முடைய கண்ணியத்தை இழப்பதற்கும், நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வதற்கும் இந்த மன இச்சை உச்சக்கட்டத்தில் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தில் ஆழப்பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இறைவன் குறிப்பிடுகின்றான்;

யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.

அல்குர்ஆன் 79:40,41

மன இச்சை என்ற கேடுகெட்ட தடுமாற்றத்திலே தவறி விழுந்து விடாமல், தன்னை விலக்கிக் கொள்வோருக்கு உறுதியாக சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் உத்தரவாதம் வழங்குகின்றான். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை மனோ இச்சைக்குக் கட்டுப்படாமல் வாழ்வோருக்கு அல்லாஹ் வழங்குகின்றான்.

மேலும் இறைவன் குறிப்பிடும் போது,

அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.

அல்குர்ஆன் 26:88,89

கேவலமான, அருவருக்கத்தக்க, நடித்த, இரட்டை வேடம் போட்ட உள்ளங்களுக்கு நாளை மறுமையில் எந்த வேலையும் இல்லை என்றும், தூய்மையான உள்ளத்திற்கே ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்றும் இறைவன் தெள்ளத்தெளிவான முறையில் விளக்குகின்றான்.

தடுமாற்றம் தடம் மாற்றும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தன்னுடைய உடலாலும், உழைப்பாலும், மூர்க்கத்தனமான எதிரிகளை விட்டு நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றியதாலும் அண்ணலாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லக்கூடிய மார்க்கம் சரியான மார்க்கம்தான் என்றும், அவர் சொல்லி வருகின்ற சத்தியத்தை யாரெல்லாம் எதிர்க்கின்றார்களோ, யாரெல்லாம் முஹம்மதை சித்ரவதை செய்கின்றார்களோ அவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவர் அபூதாலிப் அவர்கள்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றம் அவரைத் தடம் தெரியாமல் அழித்து விட்டது என்பதை வரலாறு நமக்குப் பாடம் புகட்டுகின்றது.

முசய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’  என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ்’  எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

ஆதாரம்: புகாரி 1360

இந்தச் செய்தியை நன்றாக ஆழமாகப் படித்துப் பாருங்கள்! உண்மையான மார்க்கம் எதுவென்று தெரிந்த பிறகும் கூட குடும்ப கௌரவத்தினால் ஏற்பட்ட தடுமாற்றம் உண்மையான மார்க்கத்தை தூக்கி எறிய வைக்கின்றது.

இத்தனை நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தோளுக்குத் தோளாக இருந்து,  எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கேடயமாக இருந்த அபூதாலிப் இறுதிக்கட்டத்தில் தெரிந்தே தடுமாறுகின்றார். தடுமாற்றத்தின் விளைவு என்னவென்றால் அல்லாஹ்வின் தூதரை இறைவன் கண்டித்து விட்டு, அபூதாலிப் நரகவாசிதான் என்று உறுதியாகச் சொல்கின்றான்.

தெரிந்து கொண்டே தடுமாறுவதன் காரணத்தினால் சத்தியத்தை விட்டு வெளியேற்றுகின்ற அளவுக்கு அந்தத் தடுமாற்றம் நம்மைத் தள்ளி சீரழித்து விடுகின்றது.

போர்க்களத்தில் தடுமாற்றம்

ஒரு நபித்தோழர் போர்க்களத்தில் கலந்து கொண்டு வீர தீரமாகப் போர் புரிகின்றார். அன்றைய தினம் அவர் போரிட்டதைப் போல வேறெவரும் போரிடவில்லை என்று பெயர் வாங்குகின்ற அளவுக்குக் கடுமையான முறையில் தியாகம் செய்து போர் புரிகின்றார். இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரைப் பற்றி சொன்ன வார்த்தை குழுமியிருந்த அத்தனை நபர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதோ, அந்த செய்தி;

நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்களத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன்’ (அவர் என்ன சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி அவர் நரகவாசிஎன்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்என்று கூறினார்.

ஆதாரம்: புகாரி 2898

கடுமையான முறையில் போர்புரிந்த ஒரு நபித்தோழர் போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனை தாங்க முடியாமல், சிறு தடுமாற்றத்தின் காரணத்தினால் தன்னைத்தானே குத்திக்கொண்டு கொண்டு செத்து மடிகின்றார். இறுதிக்கட்ட அவரது தடுமாற்றம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்கு முன்னால் அந்தத் தோழர் செய்த எல்லா தியாகத்தையும் குழிதோண்டி புதைக்கின்றது.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்;

மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் செய்து வருகின்ற காரியங்களைப் பற்றி  குறிப்பிடும்போது,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்றார்கள்.

ஆதாரம்: புகாரி 2898

ஒரு மனிதரின் வெளிப்படையான அமலை வைத்தோ அல்லது கெட்ட செயலை வைத்தோ நல்லவர் – கெட்டவர் என்று நாம் தீர்மானித்து விட முடியாது. இறைவனிடத்தில் எப்படிப்பட்ட நன்மதிப்பையோ, கெட்ட மதிப்பையோ பெற்றிருக்கின்றார் என்று நம்மில் யாரும் அறிய முடியாது.

போர்வையால் தடுமாற்றம்

அல்லாஹ்வின் பாதையில் கடுமையான முறையில் ஒரு நபித்தோழர் போர் புரிகின்றார். இறுதியாகத் தனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணத்தில் தடம் தெரியாமல் வெகு தொலைவிற்குச் சென்று விட்ட சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது;

நாங்கள் (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!’’ என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது’’ என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் ஒரு செருப்பு வாரைஅல்லது இரண்டு செருப்பு வார்களைக் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் செருப்பு வார்அல்லது நரகத்தின் இரு செருப்பு வார்கள்ஆகும்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 183 (ஹதீஸ் சுருக்கம்)

இவரோ இறைவழியில் தியாகம் செய்த தியாகி! இவர் செய்த பிழை என்ன? போர்ச் செல்வங்கள் பங்கிடுவதற்கு முன்பே ஒரு போர்வையை எடுத்துக் கொள்கின்றார். இதன் காரணத்தினால் நரக நெருப்பிலே எரிந்து கொண்டிருக்கின்றார்.

கொஞ்சம் சிந்தியுங்கள்! இறை தியாகிக்கே தடுமாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் நரகம் கிடைக்கின்றது என்று சொன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம். இறைவழியில் போரிட்டவர்களின் கால் தூசுக்குச் சமமாவோமா? நமக்கு ஏற்படும் தடுமாற்றம் நாம் செய்த தியாகத்தை சுக்கு நூறாக நொறுக்கி விடும் என்பதற்கு இந்தச் செய்தி அற்புதமான சான்று.

தடம்புரளாமல் இருக்க, கேட்க வேண்டிய துஆ

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கீழ்க்கண்ட துஆவை அதிகமதிகம் கேட்போம். தடம்புரண்டு விடுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம்!

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்’’ என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 5161

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

அவர்கள் தடம் புரண்ட போது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான்.

அல்குர்ஆன் 61:5

சத்தியத்தை விட்டு நாமாகத் தடம் புரண்டு விட்டால், அல்லாஹ்வே நம்முடைய உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடுவான் என்றும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு காரியத்திலும் தடம் புரண்டு விட்டால் தடம் தெரியாமல் அழிந்து விடுவோம் என்றும் இறைவன் பகிரங்க எச்சரிக்கை செய்கின்றான்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில், எல்லாக் காரியங்களிலும் நம்மை நாம் சீர்த்திருத்திக் கொண்டு தடுமாற்றம் ஏற்படும்போது, இறைவனின் கட்டளைகளை ஆழமாகப் பற்றிப் பிடித்தவர்களாக, தடுமாற்றத்தைத் தடம் தெரியாமல் அழித்து விடுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!