ஏகத்துவம் – ஜூன் 2015 (ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர்)

தலையங்கம்

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு

இம்மாத ஏகத்துவம் ஏனைய வழக்கமான இதழை விட முற்றிலும் வேறுபட்டு மலர்ந்து மணம் பரப்புகின்றது.

இவ்விதழ் முழுவதும் இஸ்லாமியக் கல்லூரியில் படித்து முடித்து இவ்வாண்டு பட்டம் பெறவிருக்கின்ற இறுதியாண்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கல்லூரியின் இந்த மாணவர்கள் மே மாதம், 31ஆம் தேதி பட்டம் பெறுகின்ற இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகள் ஒத்துழைப்புடன் “ஹதீஸ் மாநாடாக” நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த ஹதீஸ் மாநாட்டை நடத்துவதற்கு அடிப்படைக் காரணமே, தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் “ஹதீஸ் மறுப்பாளர்கள்’ என்ற மாயையை நமக்கு எதிராகப் பரவ விட்டிருக்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எத்தனையோ பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிரிகள் சாட்டியிருக்கின்றனர். அந்த வரிசையில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஹதீஸ் பற்றிய உறுதியான நிலைபாடு உண்டு! பிடிமானம் உண்டு! அதைச் சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற கடமை இருக்கின்றது. அதற்காகவே இந்த ஹதீஸ் மாநாடு! அதையொட்டி இந்த மாநாட்டு மலர் வெளியீடு!

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை அல்லாஹ்வின் வஹீயாகவே நம்புகின்றது!

ஏனென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:3,4

குர்ஆனும் வஹ்யிதான்! ஹதீசும் வஹ்யிதான்!

ஒரு சில ஹதீஸ்களை, ஹதீஸ் குதுஸீ என்று ஹதீஸ் கலையில் வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு வகைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்த வகை ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் சொன்னதாகச் சொல்வார்கள். இதை வைத்து ஹதீஸ் குதுஸீ – புனித ஹதீஸ் என்று குறிப்பிடுவார்கள்.

இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு, எல்லா ஹதீஸ்களும் வஹீயின் அடிப்படையில் புனிதமானவைதான்! அல்லாஹ் சொன்னதாக ஒரு சில ஹதீஸ்களில் வருவதை வைத்துக் கொண்டு ஏனைய ஹதீஸ்களை பின்னுக்குத் தள்ளி விடக்கூடாது! அதற்குரிய மதிப்பை அளிக்கத் தவறிவிடக் கூடாது என்பதாகும்.

இப்படிப்பட்ட கொள்கையுடைய ஒரு ஜமாஅத் எப்படி ஹதீஸை மறுக்கும்?

குர்ஆன் மட்டும் போதும் என்ற  கூட்டம் தமிழகத்தில் உருவெடுத்தது. அந்தக் கூட்டத்தை விவாதக்களங்கள் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் ஓட ஓட விரட்டியது.

குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இயக்கம் நடத்துகின்ற எவரும் அந்தக் கூட்டத்தை எதிர்கொள்ள வரவில்லை. இன்று தங்களை ஹதீஸ் பற்றாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் எவரும் அன்று அவர்களுக்குப் பதில் கூற முன்வரவில்லை.

ஹதீஸை மறுப்பது தெளிவான இறைநிராகரிப்பு என்று பிரகடம் செய்து, அதற்கான ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே எடுத்துக் காட்டி, தமிழகத்தில் அவர்களைத் தலை தூக்கவிடாமல் செய்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

இதிலிருந்து ஹதீஸை வஹீ என்று நம்புவதில் இந்த ஜமாஅத்துக்கு இருக்கும் உறுதியை அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனோடு ஹதீஸ் மோதும் போது, அதுபோன்ற கட்டத்தில் குர்ஆனுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குர்ஆனை மறுத்த நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற நிலைபாட்டை இந்த ஜமாஅத் தயவு தாட்சண்யமின்றி  விமர்சனத்திற்கும் விளைவிற்கும் அஞ்சாது சொல்கின்றது.

அதற்காகவே இந்த ஜமாஅத்தினர் மீது ஹதீஸ் மறுப்பாளர்கள் என்ற முத்திரையைக் குத்துகின்றனர்.

ஆனால் உண்மையில், இத்தகையவர்கள் ஹதீஸ்களின்படி நடக்காமல் தெரிந்தே அவற்றைப் புறக்கணிக்கின்றனர். பின்பற்ற வேண்டும் என்று நாம் சொல்லும் ஹதீஸ்களைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி நாம் ஒரு அமலைச் செய்யும் போது, இவர்கள் மத்ஹபு இமாம்களைக் காட்டி, “எங்கள் இமாம் இப்படித் தான் சொல்லியிருக்கிறார்’ என்று கூறி ஹதீஸை மறுக்கின்றார்கள்.

சமாதி வழிபாட்டை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த செய்திகளை நாம் ஹதீஸ்களிலிருந்து எடுத்துக் காட்டும் போது, இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் அதை நியாயப்படுத்தி, ஹதீஸை மறுக்கின்றார்கள்.

கப்ருகள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, இவர்கள் தரை மட்டத்திற்கு மேல் மட்டுமல்லாது வானளாவிற்கு அதில் கட்டடம் எழுப்பி, ஹதீஸைக் கேலிப் பொருளாகச் சித்தரிக்கின்றனர்.

இப்படி ஒவ்வொன்றிலும் ஹதீஸைச் செயல்பூர்வமாக மறுக்கும் இவர்கள் நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று கூறுவது வேடிக்கையும், வினோதமும் ஆகும்.

இந்த ஜமாஅத், ஹதீஸை அல்லாஹ்வின் வஹ்யி என்று நம்புகிறது. அந்த வஹ்யி எப்படி பாதுகாப்பான வழியில் நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போது நமது மேனி சிலிர்க்கின்றது.

மேனியைச் சிலிர்க்க வைக்கின்ற ஹதீஸ் வரலாறுகளை இந்த ஏகத்துவம் மாத இதழ் மூலம் விரிவாக இந்த ஜமாஅத் எடுத்துரைக்கின்றது.

இந்த இதழ், நாங்கள் ஹதீஸின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை உங்களுக்குப் பறைசாற்றுகின்றது.

என்னிடத்திலிருந்து ஒரே ஒரு செய்தி கிடைத்தாலும் அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 3461

என்று இறைத்தூதர் அவர்கள் சொன்னதற்காக நபித்தோழர்கள் முதல் புகாரி, முஸ்லிம் போன்ற நூலாசிரியார்கள் வரையிலான ஹதீஸ் துறையினர் பெரும் உழைப்பைச் செய்திருக்கின்றனர். அதே சமயம்,

என் மீது யார் இட்டுக்கட்டிப் பொய் சொல்வானோ, அவன் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110

என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவிற்கேற்ப பொய்யான ஹதீஸ் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக வேலிகளை அமைத்திருக்கின்றார்கள். இதையெல்லாம் இந்த ஹதீஸ் மாநாட்டு சிறப்பு மலர் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர்களின் ஆழமான மேற்பார்வையில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கிய இம்மலர், சமுதாய மக்கள் குறிப்பாக தஃவா களத்தில் உள்ள அழைப்பாளர்களுக்கு அதிகம் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

—————————————————————————————————————————————————————-

அல்ஹதீஸும் அல்லாஹ்வின் வஹீயே!

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகத் திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.  இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.

“திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதும்;  நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை’ என்று கூறுவோர் வழிகேடர்கள் என்பதே நமது வாதம்.

குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹி – இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல என்று யாராவது சொன்னால் அவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார்கள்.

இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான்.  குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்படவில்லை என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப் பட்டுள்ளதோ – குர்ஆன் எப்படி வஹியாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல – ஏராளமான இடங்களில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:2, 3, 4

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை;  அவர்கள் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

“இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்” என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப்படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

உள்ளத்தில் எந்த அபிப்ராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் – முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதிட்டால் – அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதிட்டால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே அல்லாஹ் கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 42:51)

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளைச் சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும். மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்டபோது தீப்பிழம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆனில் 20வது அத்தியாயம் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது.

இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக – வஹீ மூலம் – என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் அல்லாஹ் வஹீ என்கிறான்.

இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை  இப்படித்தான் செயல்படுத்த வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது, அவர்களது இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வேதமும் ஞானமும்

அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை.  இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.

உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட் கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:231

உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

அல்குர்ஆன் 4:113

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிட மிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.

இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆ னிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல் களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்

அல்குர்ஆன் 2:129

இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.

“உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்”

“அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்”

என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் – வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் – இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.

உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். அல்லது வேதத்தை அவர்களுக்குக் கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு.  ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

அல்குர்ஆன் 2:151

இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும், அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப்பட்டார்கள்.  அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும்.

ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

 1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.
 2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!
 3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.
 4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.
 5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.

இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும் பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்ன பிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன.  அவ்வாறு இருப்பதால் தான் வசனங் களை ஓதிக் காட்டுவார்.  மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருளை விளங்கலாம்.  ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும்.  உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருளை விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, “சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப் போம்எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.  அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:150, 151, 152

திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன.

“அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம்.  வேறு சிலதை நிராகரிப்போம்” என்று கூறுபவர்கள் உண்மையான காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதைப் பல சான்றுகள் வலியுறுத்துகிறன.

திருக்குர்ஆனில் தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.  மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளன.  இவ்வாறு அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் “அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல.  ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளு டனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாள ராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:92)

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! (அல்குர்ஆன் 8:20)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அதுபோலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————————————————-

தமிழகம் கண்ட ஹதீஸ் தமிழாக்கப் புரட்சி

தவ்ஹீது ஜமாஅத் முளைவிடத் துவங்கியதும் அது மக்களிடம் குர்ஆன் ஹதீஸ்களைப் படியுங்கள் என்ற சிந்தனைப் புரட்சியைத் தூண்டியது.

அல்ஜன்னத் மாத இதழில் தொடர்ந்து அபூதாவூத், சுனன் திர்மிதி, சுனன் நஸாயி, சுனன் இப்னுமாஜா  ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸ்கள் மொழிபெயர்க்கப்பட்டு மாதா மாதம் வெளியாயின.

அபூதாவூத் முதல் பாகம் மவ்லவி எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானியால் மொழிபெயர்க்கப் பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் முடங்கிப் போனது.

முஸ்லிம் ஹதீஸ் நூலும் அல்முபீன் மாத இதழில் மாதா மாதம் வெளியானது. வேலைப்பளுவால் முஸ்லிம் மொழியாக்கம் நிறைவு பெறாமல் ஆனது. அதே சமயம் இந்த ஹதீஸ் நூல்களின் மொழியாக்கங்கள் மற்றவர்கள் மூலம் பின்னால் வெளியாகிவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் தமிழகத்தில் இம்மாபெரிய ஹதீஸ் புரட்சியையும், எழுச்சியையும், தாகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத்தைத்தான் ஹதீஸ் மறுப்பாளர் என்று ஏகத்துவத்தின் எதிரிகள் முத்திரை குத்துகின்றனர். மத்ஹபு மாளிகைகள் சுக்குநூறாக நொறுங்குவதற்கு இந்த ஹதீஸ் புரட்சிதான் காரணம்.

ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை உருவானது.

இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டு ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத் தான் ஹதீஸ்களின் மீது தீராப்பற்று கொண்ட ஜமாஅத்தாகும்.

தமிழக மக்களிடையே புரையோடிப் போயிருந்த, நபிவழிக்கு மாற்றமான அனாச்சாரங்களைக் கடுமையாக எதிர்த்து, அவற்றை ஒழிக்கப் பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஜமாஅத்தும் இதுவே!

முன்னோர்கள், பெரியார்கள், ஊர்ப் பழக்கம் போன்றவற்றைக் காரணம் காட்டி எண்ணற்ற நபிமொழிகளைத் தமிழக மக்கள் அடியோடு புறக்கணித்து வாழ்ந்து வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத் தான் அவர்களிடையே மறக்கடிக்கப்பட்ட அந்நபிவழிகளை உயிர்ப்பித்து, நடைமுறைப் படுத்தியது. அதற்காகப் பல்வேறு எதிர்ப்புகளையும், சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டுள்ளது.

தமிழக வரலாற்றில் இந்த ஜமாஅத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நபிமொழிகள் ஏராளம். அவற்றை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக இந்தத் தகவலைத் தொகுத்து தருகிறோம்.

இந்தப் பட்டியலைக் கண்ட பிறகு தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸ்களை மக்களிடையே நிலைநாட்ட, நடைமுறையில் கொண்டுவர எந்த அளவு பாடுபட்டுள்ளது என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதற்கு மேலும் இந்த ஜமாஅத் ஹதீஸ்களை மறுக்கின்றது என்று குற்றம் சாட்டுவார்களேயானால் சந்தேகமற அவர்கள் மனநோயாளிகளே!

இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாக விளங்குவது தொழுகையாகும். அத்தகைய தொழுகை முறை, தொழுகைக்கான பாங்கு முறை ஆகியவற்றைக் கூட மக்கள் நபிவழி அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.

தொழுகை, பாங்கு ஆகிய வணக்கங்கள் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப் படுத்திய நபிமொழிகள் பின்வருமாறு:

அத்தஹிய்யாத்தில் விரலசைத்தல்

நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன்கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு  வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜர் (ரலி)

நூல்: நஸயீ 879.

இந்த நபிமொழியை செயல்படுத்துவதற்காகத் தான் ஊர் நீக்கம் உள்ளிட்ட இன்னல்களை இந்த ஜமாஅத் எதிர்கொண்டது. இந்த ஹதீஸைக் காப்பதற்காக  அனைத்தையும் சகித்துக் கொண்டது.

நெஞ்சின் மீது கைகளை வைத்தல்

நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும்போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்என்று ஹுல்புத் தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதைச் சொல்லும்போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.

நூல்: அஹ்மத் 20961

கை கட்டும் விஷயத்தில் ஹதீஸ் ஆதாரமில்லாமலும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முறைகளை இந்த ஹதீஸின் துணையுடன் இந்த ஜமாஅத் முறியடித்தது.

மஃக்ரிபுக்கு முன் சுன்னத்

மஃக்ரிபிற்கு முன்னர் தொழுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை “விரும்பியவர் தொழட்டும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி).

நூல்: புகாரி 1183.

அபூதாவூதின் (1089) அறிவிப்பில் “மஃக்ரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித்தோழர்கள் (சுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்(ரலி).

நூல்: புகாரி 625.

மக்ரிப் பாங்கு 6 மணிக்கு என்றும், இகாமத் உடன் என்றும் பள்ளிவாசல்களில் எழுதிப் போட்டு இந்த ஹதீஸைச் சாகடித்தனர், ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கண்ட ஹதீஸ்களுக்கு உயிரூட்டியது.

திடலில் பெருநாள் தொழுகை

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர் களாக இருந்தார்கள்

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).

நூல்: புகாரி 956 (ஹதீஸின்சுருக்கம்).

தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்லுமாறு (பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்போது, மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், மணமுடித்த பெண்கள், திரைக்குள்ளிருக்கும் (குமரிப்) பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்லிம்கள் கூடும் இடங்களிலும் அவர்களின் வணக்க வழிபாட்டிலும் கலந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி),

நூல்: புகாரி 351

ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் உள்ளிட்ட போலித் தவ்ஹீத்வாதிகள் புறக்கணித்த இந்த ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் தான் செயல்படுத்திக் காட்டியது.

ஸஹர் பாங்கு

பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார்என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா(ரலி), இப்னுஉமர்(ரலி).

நூல்: புகாரி 621, 5299, 7247.

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இருக்கும் என்பதை விளக்கும்போது, “அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார்” என்று ஆயிஷா (ரலி) இப்னுஉமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம்பெற்றுள்ளது.

நூல்: முஸ்லிம் 1829, புகாரி 1919.

தமிழகத்தில் இந்த ஹதீஸைச் செயல்படுத்தி வரும் ஒரே ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது. இந்தக் காலத்தில் கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டதால் ஸஹர் பாங்கு தேவையில்லை என்று போலி தவ்ஹீத் கூட்டமான ஜாக் பகிரங்கமாக எழுதியதை எண்ணிப் பாருங்கள்!

இரவுத்தொழுகை

ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா (ரலி )இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா.

நூல்: புகாரி 1147, 2013, 3569.

நபி (ஸல்) அவர்கள் (இரவில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்துகள், மறுபடியும் இரண்டு ரக்அத்துகள், மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும்வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். (சுருக்கம்)

நூல்: புகாரி 183.

அல்லாஹ்வின் தூதர் சொல்லாத, செய்யாத 20 ரக்அத் தொழுகையை உண்டாக்கி அதுதான் மார்க்கம் என்று போலி உலமாக்கள் மக்களுக்குத் தவறான வழிகாட்டி வந்தனர். இதை உடைத்து நபிவழியைச் செயல்படுத்தியதற்காக புனித ரமலானிலும்  அடிஉதைகளைச் சந்தித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

பித்ரா-நோன்புப் பெருநாள் தர்மம்

அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்ள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர், ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும், (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி),

நூல்: புகாரி 1503.

பித்ரா என்றால் என்னவென்றே முஸ்லிம்கள் அறியாதிருந்தனர். ஏதோ பத்து, இருபது ரூபாய்களைச் சில்லறைகளாக மாற்றி, வாசலில் வரும் யாசகர்களுக்கு 20 பைசா 50 பைசா என்று கொடுப்பதே பித்ரா என்று தவறாகப் புரிந்து கொண்டு மக்கள் நடைமுறைப்படுத்தி வந்த வேளையில் நபிகள் நாயகம் காட்டித் தந்த பித்ராவின் சரியான முறையை இந்த ஜமாஅத்தான் மக்களிடையே எடுத்து சொல்லியது.

பெருநாள் தினத்தில் ஏழைகள் பசியாற உண்டு மகிழும் வகையில் பித்ரா அமைய வேண்டும் எனவும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் பித்ரா வழங்குவது கட்டாயக் கடமை என்றும்  பறைசாற்றக் கூடிய மேற்கண்ட நபிமொழிகளை மக்களிடையே எடுத்துரைத்து பித்ரா வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தது இந்த ஜமாஅத்தே.

கடந்த மூன்று ஆண்டுகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை மூலம் மட்டும் விநியோகிக்கப்பட்ட பித்ரா விபரங்களைத் தருகிறோம்.

2012ல் 72 லட்சத்து 62 ஆயிரத்து 733 ரூபாய்கள்!

2013ல் 89 லட்சத்து 87 ஆயிரத்து 243 ரூபாய்கள்

2014ல் ஒரு கோடியே 2 லட்சத்து 37 ஆயிரத்து 593 ரூபாய்கள்!

உள்ளூரில் கிளைகளில் வசூலிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்ட தொகை இதில் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் ஆண்டு தோறும் பித்ரா வினியோகம் இரண்டு கோடி ரூபாய்களைத் தாண்டும்.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஹதீஸ்களை நிலைநாட்டுவதில் இந்த ஜமாஅத் கொண்டுள்ள பற்றை இதிலிருந்து அறியலாம்.

பெண்கள் பள்ளிக்கு வருதல்

அல்லாஹ்வின் ஆலயமான பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று நபிவழிக்கு மாற்றமாக சட்டமியற்றி அதற்கு மார்க்கத்தின் சாயம் பூசி, பெண்களை பள்ளிக்குள் வரவிடமால் தடுத்த காலம் தமிழகத்தில் இருந்தது.

இதன் காரணமாக தர்காவுக்குப் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் ஆலிம்கள் என்போர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் தான் பெண்கள் பள்ளிக்கு வரும் நபிவழியை நடைமுறைப் படுத்தியது. தர்காவுக்குச் செல்லும் கூட்டத்தை பெருவாரியாகக் கட்டுப்படுத்தியது.

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் சுப்ஹு இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச்செல்வார்கள். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செல்வதை வெறுக்கிறார்கள்; ரோஷப் படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “(என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களை தடுக்கிறதுஎன்று பதில் வந்தது.

நூல் : புகாரி 849

எளிய திருமணம்

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 23388

தவ்ஹீதின் ஆதிவாசிகள் என்று கூறிக் கொள்வோரும், மார்க்க அறிஞர்கள் என்று தம்பட்டம் அடிப்போரும் கூட பெரும் பொருட் செலவில் திருமணம் செய்யும் போது, தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே இதை முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி செயல்படுத்தி வருகிறது.

மூன்று தலாக்

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலக்காக கருதப்பட்டு வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று இப்னு அப்பாஸிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் ஆம் என்றார்கள்

நூல்:  முஸ்லிம் 2690

இஸ்லாத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலி முத்தலாக் சட்டத்தை உடைத்து எறிந்து இந்த நபிவழிக்கு உயிரூட்டியது தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.

பாங்கிற்குப் பின் நபி மீது ஸலவாத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாங்கு சொல்பவரின் தொழுகை அழைப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அவருக்கு அருள் புரிகிறான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள் வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும் அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமைநாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

நூல்: முஸ்லிம் 384

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு

ஒருவர் ரமலானில் நோன்பு நோற்று அடுத்து தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் நோன்பு வைத்தால் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1164

ஒரு சில முதியவர்கள் மட்டுமே ஆறு நோன்பு நோற்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆண்கள், பெண்கள், இளம் வயதினர் என அனைத்து தரப்பு மக்களும் இந்நோன்பை நோற்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது இந்த ஜமாஅத்தாகும்.

இந்த அடிப்படையில் ஆறு நோன்பும் இந்த ஜமாஅத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நபிவழியே.

அரஃபா நோன்பு

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த நோன்பு அதற்கு முன்சென்ற ஒரு ஆண்டு பாவத்தையும் அதற்கு பின் வரும் ஒரு வருட பாவத்தையும் அழித்து விடுகிறது என்று பதில் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2804.

ஆஷுரா நோன்பு

ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன்சென்ற வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று பதில் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 2804

கூட்டுக் குர்பானி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும் ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்) கொள்ள கட்டளையிட்டார்கள்

நூல்: முஸ்லிம் 2999

குர்பானிப் பிராணிகளின் தோல்

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக் கூடியவருக்கு கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

நூல்: புகாரி 1717

கூட்டாகச் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்பதும், குர்பானியின் தோல் முழுக்க முழுக்க ஏழைகளுக்குப் பயனளிக்கும் வகையில் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுமே மேற்கண்ட நபிமொழிகள் சொல்லும் பாடங்களாகும்.

தமிழக முஸ்லிம்கள் இந்த நபிமொழிகளையும் புறக்கணிக்கவே செய்தனர்.

இந்நபிமொழிக்கு மாற்றமாக மக்களிடமிருந்து தோல்களைப் பெற்றுக் கொண்டு அதை பணமாக்கி காலம் காலமாக அதைச் சேமித்து வைக்கும் பழக்கமே பல பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து இருந்து வந்தது.

தோல்கள் மூலம் பெற்ற வருவாயை வைத்து மத்ரஸாக்கள் நடத்துவதும், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிடுவதும் என முற்றிலும் நபிவழிக்கு மாற்றமாகவே இவர்கள் பயன்படுத்தி வந்தனர். அல்ஹம்துலில்லாஹ். இந்தத் தவறான நடைமுறையையும் தவ்ஹீத் ஜமாஅத்தான் களைந்தது.

மக்களிடமிருந்து குர்பானித் தோல்களை பெற்று, அதைப் பணமாக்கி உரிய ஏழைகளிடம் முறையாக கொண்டு சேர்ப்பிக்கும் நபிவழி அடிப்படையிலான பணியை தவ்ஹீத் ஜமாஅத்தே மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.

நபிகள் நாயகம் கற்றுத் தந்த கூட்டுக் குர்பானி முறையை மக்களின் நடைமுறைக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி இன்றைக்கு ஆயிரக் கணக்கான கூட்டுக் குர்பானி பங்குகள், பல லட்சம் மதிப்புள்ள தோல்கள் இந்த ஜமாஅத்திடம் வருகிறது. அதன் வருவாயை உரிய ஏழைகள் பயன்பெறும் வகையில் பெரும் சேவையையும் இந்த ஜமாஅத் ஆற்றி வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் பல நபிமொழிகளை நடைமுறைப் படுத்தியுள்ளது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும்.

தொழுகையில் தக்பீரின் போது கையை உயர்த்துதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போது தமது தோல்களுக்கு நேராக கையை உயர்த்துவார்கள் ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) மீண்டும் இரண்டு கைகளையும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலக்கல் ஹம்து என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதும் ஸஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்)

நூல்: புகாரி 735

ஷாபி மதஹபுக்கு மட்டுமே உள்ளதாகக் கருதப்பட்டு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த சுன்னத்தை அனைவருக்கும் உரியதாக ஆக்கியது இந்த ஜமாஅத் தான்.

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை

நூல்: முஸ்லிம் 2309

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி மேற்கண்ட நபிமொழியை அமலுக்குக் கொண்டு வந்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

மெல்லிய குரலில் திக்ர் செய்தல்

திக்ர் என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் அடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களிடேயே திக்ர் என்ற வணக்கத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நபிவழியையையும் இந்த ஜமாஅத் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஎன்றும் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்ததுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2992

நரைமுடிக்குச் சாயமிடுதல்

நரைமுடிக்குச் சாயமிடும் பழக்கம் தமிழக மக்களிடையே அறவே இல்லாமலிருந்தது. அது ஏதோ சபிக்கப்பட்டுள்ள செயல் போன்று கருதி வந்தனர். சாயமிடும் சிலர் கூட மார்க்க அடிப்படையில் அல்லாமல் கருப்பு நிற சாயமிடுபவர்களாகவே இருந்தனர்.

ஆனால் நரைமுடிகளைக் கறுப்பு அல்லாத நிறத்தைக் கொண்டு சாயமிடுவது நல்ல விஷயமே என்று அது தொடர்பான நபிவழியை, நடைமுறையை மக்களிடையே அறிமுகப் படுத்தியதும் இந்த ஜமாஅத் செய்த பணியாகும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3925

தடுக்கப்பட்ட இசை

இசையையும் இஸ்லாத்தையும் பிரித்து பார்க்க முடியாது எனும் வகையில் இசையை இஸ்லாத்தின் ஒரு அம்சமாகவே முஸ்லிம்கள் கருதினர்.

நாகூர் ஹனிபாவின் பாடல்களை பெருநாள் தினத்தன்று ஒலிக்கவிட்டு தங்கள் மார்க்கப்பற்றை வெளிப்படுத்துவதாகக் கருதிவந்த காலம் அது. இக்கால கட்டத்தில் ஆலிம்கள் என்போர் இதை அகற்ற ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

அத்தகைய அறியாமையை அகற்றி இசை இஸ்லாத்தில் ஹராம் எனும் ஹதீஸை மக்களிடையே தெளிவுபடுத்தி இசைப்பிரியர்களை இறைப்பிரியர்களாக இந்த ஜமாஅத் வார்த்தெடுத்தது என்றால் அது மிகையல்ல.

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், “நாளை எங்களிடம் வாஎன்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

நூல்: புகாரி 5590

தடை செய்யப்பட்ட கப்ர் வழிபாடு

தர்கா வழிபாட்டின் மூலம் நிரந்தர நரகில் தள்ளும் இணைவைப்பில் இருந்த அதிகமான முஸ்லிம்களை தர்கா கட்டுவது கூடாது, அது சாபத்திற்குரிய செயல் என்பது தொடர்பான நபிமொழிகளை மக்களிடையே எடுத்துரைத்து அவர்களை ஏகத்துவவாதிகளாக மாற்றியது இந்த ஜமாஅத்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது, தம் முகத்தின் மீது சதுரமான கறுப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

நூல்: புகாரி 3454.3453

கப்ரைச் சமப்படுத்துதல்

கப்ருகள் கட்டப்படுவதையும் அதில் அதிகப்படுத்தப் படுவதையும் அது பூசப் படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: திர்மீதி 1052

மஹர் கொடுத்து மணம் முடித்தல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டதாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நபியவர் களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக் கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தைஎன்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளிப்பீராக!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5153

நோன்பு துறப்பதை விரைவுப்படுத்துதல்

தங்கள் இஷ்டத்திற்கு விடி ஸஹர் செய்து கொண்டு, காலதாமதாக நோன்பு துறக்கம் வழக்கம் கொண்டவர்களை நபிவழி அடிப்படையில் குறித்த நேரத்தில் விரைவாக நோன்பு திறக்கும் பழக்கம் கொண்டவர்களாக ஆக்கியதும் இந்த ஜமாஅத்தான் என்பதை மறந்து விடக் கூடாது.

நோன்பு துறப்பதை விரைவுப்படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல்: புகாரி 634

பயணத் தொழுகை

பயணத்தில் சுருக்கி தொழும் சலுகையை மக்களில் பலர் அறியாதிருந்தனர். நபிவழியில் வழங்கப்பட்டுள்ள இச்சலுகையையும், அது தொடர்பான நபிவழி சட்டங்களையும் மக்களிடையே அறியச் செய்தது இந்த ஜமாஅத் நடைமுறைப்படுத்தியவைகளில் ஒன்றாகும்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1116

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாதிஹா

ஜனாஸா தொழுகையில் பாத்திஹா அத்தியாயத்தை ஓதும் வழக்கம் இல்லாமலிருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே பாத்திஹா அத்தியாத்தை ஓதாவிடில் தொழுகை கூடாது எனும் நபிவழியை நடைமுறைப்படுத்தியது இந்த ஜமாஅத்தே.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)என்றார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா (ரலி)

நூல்: புகாரி 1335

களா தொழுகை இல்லை

தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை எனும் குர்ஆன் வசனத்தை மறுக்கும் விதமாக முஸ்லிம்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய தொழுகைகளை களாத் தொழுகை என்ற பெயரில் தொழுது வந்தார்கள்.

குறித்த நேரத்தில் குறித்த தொழுகையைத் தொழவேண்டும். தூக்கம், மறதி மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பிரச்சனை ஆகிய காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழக் கூடாது என்பதை விளக்கி, களாத் தொழுகை என ஒன்று கிடையாது என்பது தொடர்பான நபிமொழியை இந்த ஜமாஅத்தே மக்களிடம் பிரச்சாரம் செய்தது.

யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1600

தொழுகையின் ஆரம்ப துஆ

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கு மிடையே நீங்கள் மௌனமாக இருக்கும்போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “நான், “அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்என்று கூறுகிறேன்என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

நூல்: புகாரி 744

மத்ஹபு அடிப்படையில் ஸனாவை ஓதிவந்த மக்களிடம் மேற்கண்ட நபிமொழியைச் செயல்படுத்திக் காட்டியது தவ்ஹீத் ஜமாஅத்.

சோதனையின் போது குனூத்

முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்படும் போது அவர்களுக்காகத் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் விதமாக குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த நபிவழியையும் தவ்ஹீத் ஜமாஅத் பல நேரங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவுக்கப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணை வைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். இவர்கள் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்கள் எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்

நூல்: புகாரி 1002

இவை மட்டுமின்றி, குல்ஆ எனும் பெண்களுக்கான விவாகரத்து உரிமையை நிலைநாட்டியது, இத்தா என்ற பெயரில் நடைபெற்ற மூடப்பழக்கங்களை ஒழித்து நபிவழியில் இத்தாவை எளிமைப்படுத்தியது, லைலத்துல் கத்ரு 27ஆம் இரவு என்ற நம்பிக்கையைத் தகர்த்து ரமளானின் பிந்திய பத்து இரவுகளிலும் மக்களை அமல் செய்ய வைத்தது, பெருநாள் தொழுகையை விரைவுபடுத்தியது, ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு என்ற நடைமுறையை மாற்றி ஒரு பாங்கை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் இரண்டாவது ஜமாஅத் நடத்துதல், தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை, தஹிய்யத்துல் உளூ தொழுகை என்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய ஹதீஸ்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.

இது போன்ற இன்னும் ஏராளமான ஹதீஸ்களையும் மக்களிடையே நிலைநாட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம்.

—————————————————————————————————————————————————————-

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!

இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே!

திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (5734)

மேற்கண்ட நபிமொழியிலிருந்து ஹதீஸ்களை எடுத்துச் சொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதையும் அவற்றை எழுதுவதற்குத்தான் தடை விதித்தார்கள் என்பதையும் நாம் அறியமுடிகிறது.

குர்ஆனுடன், ஹதீஸின் வாசகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் நபியவர்கள் அதனை எழுத வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் குர்ஆனுடன் நபிமொழிகள் கலந்து விடாது என்ற அச்சம் தீர்ந்த உடன் நபியவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் மக்கமா நகரின் புனிதத்தைப் பற்றி உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.)

இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக் கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் “அபூ ஷாஹ்என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவருக்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (6880)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.

நூல்: புகாரி (113)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

என்றாலும் ஸஹாபாக்கள் காலத்தில் அதிகமாக ஹதீஸ்கள் எழுதப்படவில்லை. அதிகமாக வாய் மொழியாகத் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணத்தினால் நபியவர்கள் கூறாத செய்திகளெல்லாம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்களால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் நிலை ஏற்பட்டது. பல பொய்யர்கள் நபியவர்கள் கூறாத செய்திகளையெல்லாம் அவர்களின் பெயரில் இட்டுக்கட்டி அறிவித்தனர்.

இந்நிலையில் நபியவர்கள் கூறிய அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களின் நிலைகளை அறிந்து அவர்களின் ஏற்றுக் கொள்ளத் தக்கவர்களின் அறிவிப்புகள் மட்டுமே சரியான ஹதீஸ்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தவறானவற்றிலிருந்து சரியானவற்றைப் பிரித்து அறிவதற்கு உதவும் கல்வியே “ஹதீஸ் கலை’ என்பதாகும்.

திருமறைக் குர்ஆனையும், நபிமொழிகளையும் ஆய்வு செய்பவர்கள் ஒரு செய்தியை எவ்வாறு அறிவிக்க வேண்டும், எத்தகையவர்கள் அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கான அடிப்படைகளைத் தெளிவாகப் பெற்றுக்  கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:6)

மேற்கண்ட வசனத்தில் ஒரு செய்தி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகவும், ஏற்றுக் கொள்ளத் தகுந்த அடிப்படையிலும் வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை அல்லாஹ் கூறுகிறான்.

செய்தியைக் கொண்டு வருபவர் தகுதியானவராக இருப்பதுடன், அவர் கூறும் செய்தியும் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.

அது போன்று நபி மொழிகளை எடுத்துரைப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)

நூல்: திர்மிதி (2657)

ஒரு செய்தியைச் செவியேற்றவாறு எதையும் கூட்டாமல், குறைக்காமல் அறிவிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)

நூல்: புகாரி 3461

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 106

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில்தான்  ஹதீஸ்கலை விதிகள் தொகுக்கப் பெற்றன என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியவாறே எடுத்துரைக்க வேண்டும், நபியவர்களின் மீது பொய்யாகக் கூறினால் நிரந்தர நரகமே தங்குமிடம் என்ற நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய காரணத்தினால் ஸஹாபாக்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விசயத்தில் மிகப் பேணுதலாக நடந்து கொண்டனர். நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் என்றால் அதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது “ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.

(அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)

நூல்: முஸ்லிம் (2963)

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது:

இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை) “இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங் கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22)

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1697)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது அதில் முரண்பாட்டைக் காணும் போது நபித்தோழர்கள் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்கவில்லை என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அது போன்றே சில நேரங்களில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் சந்தேகத்தை தெளிவுபடுத்திய பிறகே அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைப் பின்வரும் சான்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூ மூஸா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் “அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் “இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்ததுஎனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 2062, 6245, 7353

ஹதீஸ்களை ஏற்பதிலும் மறுப்பதிலும் அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்பாடாக இருக்கக் கூடாது என்பதோடு அறிவிப்பாளர் தொடரும் (இஸ்னாத்) மிக மிக முக்கியமானதாகும். ஒரு ஹதீஸை ஏற்பதா? மறுப்பதா? என்று முடிவு செய்வதில் அறிவிப்பாளர் தொடர் மிக முக்கியப் பங்குவகிக்கிறது.

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது “உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்என்று கூறலாயினர். ஆகவே, அந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படாது.

அறிவிப்பவர்:  ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்)

நூல்: முஸ்லிம் முன்னுரை (25)

அறிவிப்பாளர் தொடர் சரியாவதின் அடிப்படையில்தான் ஒரு ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற காரணத்தினால் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அறிவதற்குரிய ”இல்முல் ஜரஹ் வத்தஃதீல்” (குறை நிறைகள் பற்றிய கல்வி), அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சனங்கள், முறிவடைந்த அறிவிப்பாளர் தொடரிலிருந்து முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரை அறிதல், மறைமுகமான குறைகளை அறிதல் போன்ற கல்விகள் முதன் முதலாக உருவாக ஆரம்பித்தன்.

அதன் பிறகு இத்துறையில் மிக விரிவாக பல விசயங்கள் அலசி ஆராயப்பட்டன. ஒரு ஹதீஸை எப்படி ஏற்றுக் கொள்வது, மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது, மாற்றப்பட்ட சட்டங்கள் (மன்ஸுஹ்) எவை, புதிய சட்டங்கள் (நாஸிஹ்) எவை, அரிதான ஹதீஸ்கள் பற்றிய நிலைப்பாடு இன்னும் பல்வேறு பிரிவுகளில் ஹதீஸ்கலை அறிஞர்கள் விரிவாக விளக்கினர். என்றாலும் இவை அனைத்தும் வாய்மொழியாக இருந்ததே எழுத்து வடிவில் புத்தகங்களாக தொகுப்படவில்லை.

அதன் பிறகு கால ஓட்டத்தில் ஹதீஸ் கலைச் சட்டங்கள் புத்தக வடிவில் தொகுப்பட்டன என்றாலும் ஹதீஸ் கலை என்று தனியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டாமல் ஒரே புத்தகத்தில் இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ், என்ற வரிசையில் உலூமுல் ஹதீசும் ஒரு பிரிவாக எழுதப்பட்டது.

இதற்குச் சான்றாக இமாம் ஷாஃபி அவர்களின் ”அர்-ரிஸாலா” மற்றும் ”அல் உம்மு” போன்ற கிதாபுகளைக் குறிப்பிடலாம். நாம் அறிந்த வரை முதன் முதலாக ஹதீஸ்கலை தொடர்பாக தொகுக்கப்பெற்றது இமாம் ஷாஃபி அவர்களின் ”அர்-ரிஸாலா” என்ற புத்தகம்தான். என்றாலும் இந்த  நூலில் ஹதீஸ் கலையுடன் சேர்ந்து இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ் போன்ற ஏனைய கல்விகளும் இணைந்தே காணப்படுகிறது. ”அல் உம்மு” என்ற நூலும் இதே அடிப்படையில் தான் தொகுக்கப்பட்டுள்ளது.

பிறகு ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில்தான் ஒவ்வொரு துறை சார்ந்த நூற்களும் தனித்தனியாக தொகுக்கப்பட ஆரம்பித்தன. ஹதீஸ்கலை தொடர்பாகவும் தனியாக நூற்கள் தொகுக்கப்பட்டன.

ஹதீஸ்கலை தொடர்பாக தனியான ஒரு நூலை முதன் முதலாகத் தொகுத்தவர் ”காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி” என்பவர் ஆவார். இவர் தொகுத்த நூலின் பெயர் ”அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ”  என்பதாகும்.

ஹதீஸ் கலை தொடர்பான முக்கிய நூற்கள்

 1. அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ – தொகுத்தவர் “காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி” (மரணம் ஹிஜிரி 360)
 2. மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ். தொகுத்தவர்: இமாம் ஹாகிம் (மரணம் ஹிஜிரி405)
 3. அல் முஸ்தஹ்ரிஜ் அலா மஃரிஃபத்தி உலூமில் ஹதீஸ் – தொகுத்தவர்: அபூ நுஐம் அல்உஸ்பஹானீ (மரணம் ஹிஜிரி 430)
 4. “அல்கிஃபாயா ஃபீ இல்மிர் ரிவாயா” – தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி463)
 5. “அல்ஜாமி லி அஹ்லாகிர் ராவி வஆதாபிஸ் ஸாமிஃ – தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி 463)
 6. “அல்இல்மாவு இலா மஃரிஃபத்தி உஸுலிர் ரிவாயா வதக்யீதிஸ் ஸிமாஃ” – தொகுத்தவர்: காழீ இயாள் பின் மூஸா (மரணம் ஹிஜிரி 544)
 7. “மாலா யஸவுல் முஹத்திஸ ஜஹ்லுஹு” – தொகுத்தவர்: “அபூ ஹப்ஸ் அம்ருப்னு அப்துல் மஜீது” (மரணம் ஹிஜிரி 580)
 8. “உலூமுல் ஹதீஸ்” – தொகுத்தவர்: இப்னுஸ் ஸலாஹ் (மரணம் ஹிஜிரி 643)
 9. “அத்தக்ரீப் வத்தய்சீர் லிமஃரிஃபத்தி ஸுனனில் பஸீர் அந்நதீர்” – தொகுத்தவர்: முஹ்யித்தீன் அந்நவவீ (மரணம் ஹிஜிரி 676)
 10. தத்ரீபுர் ராவி – தொகுத்தவர்: இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி (மரணம் ஹிஜிரி 911)
 11. “நல்முத் துரர் ஃபீ இல்மில் அஸர்” – தொகுத்தவர்: ஸைனுத்தீன் அல்இராக்கி (மரணம் ஹிஜிரி 806)
 12. “ஃபத்ஹுல் முகீஸ் ஃபீ ஷரஹி அல்ஃபியத்தில் ஹதீஸ் – தொகுத்தவர் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அஸ்ஸஹாவி” (மரணம் ஹிஜிரி 902)
 13. “நுஹ்பத்துல் ஃபிக்ர் ஃபீ முஸ்தலஹி அஹ்லில் அஸர்” – தொகுத்தவர்: இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (மரணம் ஹிஜிரி 852)
 14. “அல் மன்லூமத்துல் பைகூனிய்யா” – தொகுத்தவர்: ”உமர் இப்னு முஹம்மத் அல்பைகூனி” (மரணம் ஹிஜிரி 1080)
 15. “கவாயிதுத் தஹ்தீஸ்” – தொகுத்தவர்: ”முஹம்மத் ஜமாலுத்தீன் அல்காஸிமி (மரணம் ஹிஜிரி 1332)

ஹதீஸின் வகைகளும் அதன் வரைபடங்களும்

அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

 1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
 2. கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)

முதவாதிர் (அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது)

ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன.

உதாரணம்:

“என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ உள்ளிட்ட ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்படியே ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ணற்றவர்கள் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களால் அறிவிக்கப் படுவதே “முதவாதிர்” என்று குறிப்பிடப்படும். முதவாதிர் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் இதுவே பிரபலமான கருத்தாகும்.

கபருல் ஆஹாத் (தனிநபர் செய்திகள்)

முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது.

 1. கரீப்.
 2. அஜீஸ்.
 3. மஷ்ஹூர்.

இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்.

கரீப்

அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.

உதாரணம்:

பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 1804

நபி(ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி)” மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.

அவர்களிடமிருந்து “அபூ ஸாலிஹ்” என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.

அவரிடமிருந்து “சுமைஇ” என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.

அவரிடமிருந்து “மாலிக் பின் அனஸ்” என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.

இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில்  இது “கரீப்” என்று குறிப்பிடப்படப்படுகிறது.

அஜீஸ்

அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஜீஸ் என்றே சொல்லப்படும்.

உதாரணம்:

உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி).

நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 179.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி)” ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து “கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்” என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.

கதாதாவிடமிருந்து “ஷுஃபா மற்றும் சயீத்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.

அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து “இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.

இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஜீஸ் என்று குறிப்பிடப்படும்.

மஷ்ஹூர்

மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.

உதாரணம்:

நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 100

இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்.

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்

 1. குத்ஸீ
 2. மர்ஃபூஃ
 3. மவ்கூஃப்
 4. மக்தூஃ
 • அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்
 • நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்
 • நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்
 • தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.

குத்ஸீ

அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படும்.

உதாரணம்:

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.  தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, “உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்என்று அல்லாஹ் கூறினான்எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்(ரலி), நூல்: புகாரி 1038.

இந்த ஹதீஸில், “அல்லாஹ்  கூறுகிறான்” என்று அல்லாஹ்வுடன் இணைத்து நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதால் இது ஹதீஸ் குத்ஸீ எனப்படுகிறது. குத்தூஸ் (பரிசுத்தமானவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகும்.  அத்தகைய அல்லாஹ்வுடன் இந்த செய்தி இணைக்கப் படுவதால் “ஹதீஸ் குத்ஸீ” என்று சொல்லப்படுகிறது.

நபிகள் நாயகம் சொல்லும் அனைத்து ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்ட இறைச்செய்திகள் தான். இறைச்செய்திகளுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எனவே ஹதீஸ் குத்ஸிக்கு என்று தனிச்சிறப்புகள் ஏதும் கிடையாது.

மர்ஃபூவு

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களுக்கு மர்ஃபூவு எனப்படும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரும் விடுபட்டிருக்கலாம், விடுபடாமலும் இருக்கலாம். எனவே மர்ஃபூவு தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

உதாரணம்:

இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

நூல்: புகாரி 9

இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக, அங்கீகரித்ததாக வரும் செய்திகள் அனைத்தும் “மர்ஃபூவு” என்று ஹதீஸ் கலையில் சொல்லப்படும்.

மவ்கூஃப்

நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உதாரணம்:

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),  நூல்: புகாரி 1022

இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.

இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு “மவ்கூஃப்” என்று பெயரிடப்படும்.

மக்தூஃ

தாபீயீன்களின் சொல், செயல் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளுக்கு மக்தூஃ என்று சொல்லப்படும். இந்தச் செய்தியில் நபிகள் நாயகமோ, நபித்தோழர்களோ சம்பந்தப்பட மாட்டார்கள்.

உதாரணம்:

“மஸ்ருக் என்பவருடைய வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்”.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (25575)

இந்தச் செய்தி மஸ்ருக் என்ற தாபியை பற்றி அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இதுபோன்று தாபியைப் பற்றிய செய்திகளுக்கு “மக்தூஃ” என்று சொல்லப்படும்.

அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து

மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்

 1. முர்ஸல்
 2. முஃளல்
 3. முன்கதிஃ
 4. முஅல்லக்

முர்ஸல்

அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபியி, நபிகள் நாயகம் சொன்னதாக இதில் அறிவிப்பார்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்”. அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ். நூல்: தபகாத் 1455.

இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், “இம்ரான் பின் அபீ அனஸ்” என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.

இது போன்ற செய்திகள் “முர்ஸல்” என்று குறிப்பிடப்படும்.

முஃளல்

அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்தச் செய்திக்கு முஃளல் எனப்படும்.

உதாரணம்:

அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஅத்தா 1769

இந்தச் செய்தியில், தொடர்ந்து இரண்டு அறிவிப்பாளர்கள் விடுப்பட்டிருக்கிறார்கள்.

இமாம் மாலிக் அவர்களின் மாணவரான மாலிக் பின் அனஸ் அவர்கள், தனக்கு மேலுள்ள இரண்டு அறிவிப்பாளர்களை விட்டு விட்டு தானே நேரடியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டது போன்று அறிவித்திருப்பதால் இது “முஃளல்” என்று குறிப்பிடப்படுகிறது.

முன்கதிஃ

முன்கதிஃ என்றால் தொடர்பு அறுந்தது என்று பொருள். அறிவிப்பாளர் வரிசையில் தாபியியோ அல்லது தாபியிக்குக் கீழுள்ள ஏதோ ஒரு அறிவிப்பாளரோ விடுப்பட்டிருக்கும் செய்திக்கு முன்கதிஃ என்று சொல்லப்படும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஓதுவதைக் கொண்டும் ஆரம்பிப்பார்கள். ருகூஃவு செய்தால் தலையை உயர்த்தி விடாமலும், தாழ்த்தி விடாமலும் நடுத்தரமாக வைப்பார்கள். ருகூவிலிருந்து நிமர்ந்தால் சீராக நிற்கும் வரை ஸஜதா செய்ய மாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து  எழுந்தால் சீராக அமரும் வரை மீண்டும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். தனது இடது காலை விரித்து வலது காலை நட்டி வைத்து ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் அத்தஹிய்யாத்தை கூறுவார்கள். இன்னும் ஷைத்தானின் அமர்வை விட்டும், ஒரு மனிதன் குடங்கையை கால்நடை விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதை விட்டும் தடுத்தார்கள். மேலும், தொழுகையை ஸலாமைக் கொண்டு முடிப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768

இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து அபுல் ஜவ்ஸா என்பவர் அறிவித்ததாக அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

அவருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் மற்றொரு அறிவிப்பாளர் விடுப்பட்டிருக்கிறார்.

எனவே, இந்தச் செய்தி “முன்கதிஃ” என்று சொல்லப்படும்.

முஅல்லக்

ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்”. என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி

இந்தச் செய்தியை பத்தொன்பதாவது பாடத்தில் (634வது ஹதீஸின் கீழ்) புகாரி இமாம் கொண்டு வந்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அனைத்தையும் போக்கிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்களை மட்டும் குறிப்பிடுவதால் இது “முஅல்லக்” எனப்படும்.

(இந்த ஹதீஸின் முழுமையான அறிவிப்பாளர் தொடர் “ஸஹீஹ் முஸ்லிமில்” இடம்பெறுகிறது.)

இன்னும், இந்த வகை ஹதீஸ்களில் “முதல்லஸ்” என்று ஒரு வகையுள்ளது.

முதல்லஸ் (இருட்டடிப்பு செய்யப்பட்டது)

அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறையை மறைத்து விட்டு, வெளிப்படையில் அழகாகக் காட்டுவதற்கு “தத்லீஸ் (இருட்டடிப்பு செய்தல்)” என்று சொல்லப்படும்.

இவ்வாறு, எந்தச் செய்தியில் செய்யப்பட்டதோ அதற்கு “முதல்லஸ்” என்றும், தத்லீஸ் செய்தவருக்கு “முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்தவர்)” என்றும் சொல்லப்படும்.

ஒருவர், தனது ஆசிரியரிடம் கேட்காததை அறிவிப்பதும், அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனமானவரைப் போக்கிவிட்டு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைப் போன்று வெளிப்படையில் காட்டுவதும், தனது ஆசிரியரின் பிரபலமான பெயரை மறைத்துவிட்டு பிரபலமில்லாத பெயரைச் சொல்வதும் தத்லீஸ் (இருட்டடிப்பு) ஆகும்.

ஒரு அறிவிப்பாளர் மீது முதல்லிஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்ற குறை கூறப்பட்டிருந்தால் அவர், ஹதீஸ் அறிவிக்கும் போது கூறப்படும் தெளிவான வார்த்தைகளான “ஹத்தஸனா, அன்பஅனா, சமிஃத்து” போன்ற சொற்களைக் கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளலாம்.

அதேசமயம், மூடலான வார்த்தைகளான “அன், கால” போன்ற சொற்களை கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்ற துஆவை ஓதுவார்கள்.    

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 4431

இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இந்த செய்தியில் அவர் “அன்” என்ற மூடலான வார்த்தையைக் கூறியிருப்பதால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

முஅன்அன்

ஹதீஸை அறிவிக்கும் போது  ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது “முஅன்அன்” எனப்படும்.

”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள்  முஅன்அன் எனப்படும்.

”நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்” என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது.

”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது, முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

மேற்கூறப்பட்ட சட்டங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கவையும் ஏற்றுக் கொள்ளத் தகாதவையும்

 1. கரீப்
 2. அஜீஸ்
 3. மஷ்ஹுர்
 4. குதுஸீ
 5. மர்ஃபூவு

ஆகிய வகைகளில் அமைந்த ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரும், கருத்தும் சரியாக அமைந்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 1. முர்ஸல்
 2. முஃளல்
 3. முன்கதிஃ
 4. முஅல்லக்

ஆகிய வகைகளைச் சார்ந்த செய்திகளில் அறிவிப்பாளர்கள் விடுபடுவதாலும், விடுபட்டவர்கள் யாரென்றும் அவர்களின் நம்பகத்தன்மை என்னவென்றும் தெரியாததாலும் இந்த வகைகளைச் சார்ந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

“முதல்லஸ்’ என்ற வகையில் இருட்டடிப்பு செய்யக்கூடிய அறிவிப்பாளர் தெளிவான வார்த்தைகளை (ஹத்தஸனா, அன்பஅனா, ஸமிஃத்து என்று) கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். மூடலான வார்த்தைகளை (அன், கால) கூறினால் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

 1. மவ்கூஃப்,
 2. மக்தூஃ

போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.

ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.

ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி – வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.

எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)

முஸல்ஸல் (சங்கிலித் தொடர்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸை ஓர் அறிவிப்பாளர் அறிவிக்கும் போது நபியவர்களிடம் ஏற்பட்ட செயல்ரீதியிலான வெளிப்பாடுகளையும், அங்க அசைவுகளையும் செய்து காட்டி தனக்கு அடுத்த அறிவிப்பாளருக்கு அறிவிப்பார்.

இந்தச் செயல்முறை கடைசி அறிவிப்பாளர் வரை தொடர்வதற்குப் பெயர்  முஸல்ஸல் என்று சொல்லப்படும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் என்னுடைய கையை பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன், அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன்என்று கூறினார்கள். பிறகு, முஆதே! “அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாத்தத்திக்க” (பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என்று ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் கூறாமல் இருக்காதே என உனக்கு நான் உபதேசிக்கின்றேன் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ரலி)

                                                                                                                 நூல்: அபூதாவூத் 1524.

இந்த ஹதீஸில் “உன்னை நான் விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)க்கு சொன்னதைப் போன்றே, அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் போது “உன்னை நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அறிவித்திருக்கின்றார்கள்.

இது ஹதீஸ்களை அறிவிப்பதில் தனிச் சிறப்புமிக்க ஒரு முறையாகும்.

மகனிடமிருந்து தந்தை அறிவித்த ஹதீஸ்கள்

பொதுவாக, தந்தையிடமிருந்து மகன் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் மகனிடமிருந்து தந்தை அறிவிக்கும் நிகழ்வுகளும் அரிதாக நடந்துள்ளன. அவ்வகை ஹதீஸ்களையும் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்துக் கொண்டதற்காக கோதுமை மாவையும் பேரீச்சம் பழங்களையும் வலிமா விருந்தாக கொடுத்தார்கள்”.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ 1015.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் “வாயில் பின் தாவூத்” என்பவர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தனது மகனான பக்ர் பின் வாயில் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தபஉத் தாபி ஆவார்.

நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களை காப்பதில் அறிஞர்கள் எடுத்துக் கொண்ட அதிகபட்ச பேணுதலையும், ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்

ஓர் அறிவிப்பாளர் தன்னை விட வயதில், தரத்தில், கல்வியில் தனக்கு கீழுள்ள அறிவிப்பாளரிமிருந்து அறிவித்த செய்திகளை ஹதீஸ்கலை மேதைகள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இதற்கும் காரணம், அறிவிப்பாளர் வரிசை தவறுதலாக இடம்பெற்றுள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதாகும்.

உதாரணம்:

கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் “முத்அத்துன்னிஸா‘ (கால வரம்பிட்டு செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்று தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி). நூல்: நஸாயீ 3314

இந்த செய்தியில் யஹ்யா பின் சயீத் எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தபஉத் தாபியும் தனது மாணவருமான மாலிக் பின் அனஸ் என்பவர் வழியாக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மாணவரிடமிருந்தும், பெரியவர்கள் சிறியவர்களிடமிருந்தும் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பல உள்ளன.

நன்கு பிரபலமான நான்கு அப்துல்லாக்கள்

“அப்துல்லாஹ்” என்ற பெயரில் ஹதீஸ்களை அறிவிக்கின்ற நபித்தோழர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் நன்கு பிரபலமானவர் பின்வரும் நான்கு அப்துல்லாக்கள் ஆவர். அவர்களை அரபியில் பன்மையாக “அபாதிலா’ என்று ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர்.

—————————————————————————————————————————————————————-

நாஸிஹ், மன்ஸூஹ்

புதிய சட்டம் – பழைய சட்டம்

இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்து பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன்- 2:106.

அனைத்தையும் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பிறகு அதை ஏன் மாற்ற வேண்டும்?

பொதுவாக ஒரு மனிதன் 25 வயதை அடைந்த தனது மகனுக்கு அறிவுரை சொல்லும் போது மனைவியுடன நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்வான்.

அதேவேளை அவன் ஐந்து வயதில் இருந்த போது வேறு விதமாக அறிவுரை செய்திருப்பார். ஐந்து வயதில் கூறிய உபதேசத்தை 25 வயதில் கூறினால் அதில் எந்தப் பலனும் இருக்காது. மனிதன் என்பவன் அனைத்து விஷயத்தையும் பிறந்த உடனே அறிந்து கொள்வதில்லை. மாறாக, கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்கிறான்.

மனிதனுடைய மூளையையும் உள்ளத்தையும் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை இறைவன் ஒரே சீராக ஆக்கவில்லை. எனவே, அவனது மூளை எதை எப்போது ஏற்றுக் கொள்ளுமோ அதை அப்போது கூற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இறைவன் மனிதர்களுக்கு திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சட்டங்களை அளிக்கின்றான்.

எனவே தான் படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக சட்டங்களைக் கூறும் போது, ஆரம்பத்தில் இலகுவாக இருந்த சட்டம் பின்னர் கடினமாக்கப்படலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்த சட்டம் பின்னர் இலகுவாக்கப்படலாம்.

எனவே, ஆரம்பத்தில் தொழுகையில் மட்டும் மதுவைத் தடை செய்கிறான். பின்னர் அவர்கள் ஒரு பக்குவத்தை அடைந்ததும் முழுவதுமாகத் தடை செய்து விடுகிறான். இது போன்ற நிலையில் முன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்படலாம்.

நாஸிஹ், மன்ஸூஹ் என்பது ஆரம்பத்தில் ஒரு சட்டம் கூறப்பட்டு, பின்னர் மற்றொரு சட்டத்தின் மூலம் முந்தைய சட்டம் மாற்றப்படுவதாகும். இதில் முந்தைய சட்டத்திற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும், புதிய சட்டத்திற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் பெயர் கூறப்படும்.  இதற்கு திருமறைக்குர்ஆனிலிருந்தே அழகிய எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்.

படிப்படியாக மது தடைசெய்யப்படுதல்

திருமறைக் குர்ஆனிலும் இது போன்ற மாற்றப்பட்ட வசனங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மது தொழுகையில் மாத்திரம் தடை செய்யப்பட்டது. பின்னர் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டது என்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

அல்குர்ஆன் 16:67

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.

இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.

இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4:43

இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: அபூதாவூத் 3186

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.

சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.

நாஸிஹ் மன்ஸுஹ் குர்ஆனில் உள்ளது போன்று ஹதீஸிலும் உள்ளது. அதற்குரிய எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம்.

ஆஷுரா நோன்பு கடமை என்ற சட்டம் மாற்றப்படுதல்

முதலில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கூறப்பட்டதற்கு உதாரணமாக ஆஷுரா நோன்பு தொடர்பான சட்டத்தைக் கூறலாம்.

ஆரம்பத்தில் ஆஷூரா நோன்புதான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு ஆஷுரா நோன்பு விருப்பத்திற்குரியதாக மாற்றப்பட்டது. இதில் ஆஷுரா நோன்பிற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும் ரமலான் நோன்பிற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் சொல்லப்படும்.

அதாவது ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டு ரமலான் நோன்பு கட்டாயக் கடமை என்ற புதிய சட்டம் விதிக்கப்பட்டது.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹாரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்கு புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷுராவுடைய) நோன்பை நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறரோ அவர் அதை விட்டுவிடட்டும்!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 1592.

நாஸிஹ் – மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம்

நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.

மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார்.

மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம். இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) சம்பந்தப்பட்ட பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

அல்கமா என்பவரும் அஸ்வத் என்பவரும் இப்னு மஸ்வூத்(ரலி)யிடத்தில் சென்ற போது, “உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தொழுது விட்டார்களா?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே, அவ்விருவருக்கும் மத்தியில் அவர் நின்றார். அவ்விருவரில் ஒருவரை தனது வலப்பக்கமும் மற்றவரை இடது பக்கமும் ஆக்கினார். பிறகு அவ்விருவரும், கைகளை முட்டுகளின் மீது வைத்து ருகூஃவு செய்தார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அவ்விருவரின் கைகளை அடித்தார்கள். பிறகு, தனது இரண்டு கைகளை ஒன்றினைத்து, அவ்விரண்டயும் தனது தொடைகளுக்கு மத்தியில் வைத்தார்கள். தொழுது முடித்தபோது இவ்வாறுதான் நபி(ஸல்) அவாகள் செய்தார்கள் என்றும் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1221.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுகையின் ருகூஃவில் இரண்டு முட்டுக் கால்களை கைகளால் பிடிக்காமல் தொடைகளுக்கு மத்தியில் தனது கைகளை வைப்பர்களாக இருந்தார்கள். ஆனால் இது ஆரம்பத்தில் இருந்த சட்டமாகும். பின்னர் இரண்டு முட்டுக்கால்களையும் பிடிக்க வேண்டும் என்ற சட்டம் அதை மாற்றிவிட்டது பின்வரும் ஹதீஸின் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூஃவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார்.

அறிவிப்பவர்: முஸ்அப் பின் சஅத் (ரலி).

நூல்: புகாரி 790.

எனவே, மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

நாஸிஹ் மன்ஸூஹை அறிவதற்குரிய அளவு கோல்கள்

முதல் வழிமுறை

நபி(ஸல்) அவர்களே ஹதீஸே அதை தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகும்.

உதாரணம்:

கப்ருகளை சந்திப்பதை விட்டும் உங்களை தடுத்திருந்தேன. (இதற்கு பிறகு) அவற்றை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மரணத்தை நினைவுப்படுத்துகிறதுஎன்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா(ரலி).

நூல்: முஸ்லிம்1623.

மேற்கண்ட செய்தியில் நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கப்ரை சந்திப்பதைத் தடுத்து பின்னர் அனுமதியளிப்பதின் மூலம் ஆரம்பத்தில் கூறிய சட்டத்தை பின்னர் மாற்றிவிடுகிறார்கள்.

இரண்டாம் வழிமுறை

நபித்தோழர் விளக்கம் அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துவிடும்.

உதாரணம்:

சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்காதுஎன்பது (உளூ நீங்குமா? நீங்காதா?) என்ற இரண்டு விஷயங்களில் இறுதியானதாக இருந்தது என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள்.

நூல்: நஸாயீ 185

மேற்கண்ட ஹதீஸில் இரண்டு விஷயங்களில் இறுதியானதை ஒரு நபித்தோழர் குறிப்பிடுவதிலிருந்து மாற்றப்பட்ட சட்டத்தை அறிய முடிகின்றது.

மூன்றாம் வழிமுறை

வரலாற்று  குறிப்பு அதைத் தெளிவு படுத்திவிடும்.

உதாரணம்:

இரத்தம் குத்தி எடுத்தவனும், எடுக்கப் பட்டவனும் நோன்பை விட்டுவிட்டார்கள்என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி).

நூல்: அபூதாவூத் 2021.

இந்த ஹதீஸின் சட்டம் பின்வரும் ஹதீஸின்படி மாற்றப்பட்டுவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள். நோன்பு நோற்று இருக்கும் போதும் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).

நூல்: புகாரி 1939.

இவற்றில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மக்கா வெற்றியின் போது நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயம், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது ஹஜ்ஜத்துல் வதாஃ எனும் இறுதி ஹஜ்ஜின் போதாகும். இறுதி ஹஜ் என்பது மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வாகும்.

எனவே, வரலாறைக் கவனித்தால் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி முதலில் நடந்த சம்பவம் என்றும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அதற்குப் பின்னால் நடந்தது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஷத்தாத் (ரலி)யுடைய ஹதீஸின் சட்டத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் சட்டம் மாற்றிவிட்டது.

குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முரண்பாடின்றி விளங்கிக் கொள்ள நாஸிஹ், மன்ஸூஹ் பற்றிய அறிவு மிக அவசியம் என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

—————————————————————————————————————————————————————-

முரண்படும் ஹதீஸ்கள் முடிவு தரும் அறிஞர்கள்

உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும் அதற்குரிய விளக்கமாகத் தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ எனும் இறைச் செய்திகளாகும்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்.

(அல்குர்ஆன் 7:3)

மேற்கண்ட வசனம் இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை ஓங்கி உரைக்கின்றது.

இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்ற ஒரு வழியிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் ஹதீஸ் என்ற இன்னொரு வழியிலும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த இரண்டு ஆதாரங்களையும் இரண்டில் ஒன்று மற்றொன்றுடன் முரண்படாத வகையிலேயே இறைவன் அருளியிருக்கின்றான்.

ஏக இறைவனான அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்ற திருமறைக்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்பது குர்ஆன் கற்றுத் தரும் பேருண்மையாகும்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:1, 2

நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயமாக எதனை எடுத்துச் சொன்னாலும் அது வஹீ – இறைச் செய்தியாகத் தான் இருக்கும். அவர்கள் மனோஇச்சைப்படி, தான் நினைத்தவற்றை யெல்லாம் பேசவோ, மார்க்கம் என்று கற்றுத் தரவோ மாட்டார்கள் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாக உணாத்துகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் 41:42

திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும்.

இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும். இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.

அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள், குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல. செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது இறைவேதம் என்பதற்கு அனைத்து நபித்தோழர்களும் சாட்சிகளாக உள்ளனர்.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர்.  பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் நபியவர்கள் கூறியதாக ஒரு  செய்தி வரும் என்றால் திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நபித்தோழர்கள் அரைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம் எனறே முடிவு செய்ய வேண்டும்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும்.

அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியு மானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி) மற்றும் அபூஹுமைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.

நபியவர்களின் பேச்சில் தவறு ஏற்படும் என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுவதாக சில வழிகேடர்கள் வாதிக்கின்றனர். இவ்வாறு கூறுவது அவர்களின் அறியாமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நபியவர்கள் மார்க்கமாகப் பேசும் விஷயங்கள் வஹி எனும் இறைச் செய்தி ஆகும். அதில் ஒரு போதும் முரண்பட்ட விஷயங்கள் வரவே வராது. நபியவர்கள் ஒரு போதும் குர்ஆனுக்கு எதிராகப் பேசமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்வதே சரியான கொள்கையாகும்.

அதே நேரத்தில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது நபியவர்கள் கூறாதவற்றையும், தவறான செய்திகளையும் நபியவர்களின் பெயரால் அறிவித்துவிடுவார்கள். நபியவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் ஒரு செய்தி நபியவர்கள் கூறியிருக்கவே முடியாது என்று நிரூபணமாகும்போது அவற்றை ஏற்றுக் கொள்ளாது மறுக்க வேண்டும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் விளக்கமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்…

 • அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.
 • நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.
 • மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது

என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது.

தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.

உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால் வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதை இப்போது பார்ப்போம்.

நல்லறிஞர்களின் வழிமுறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் இரண்டு செய்திகள் ஒன்றிற்கொன்று முரணாக இருக்குமென்றால் குர்ஆனுக்கு ஒத்த செய்தியையே நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல நல்லறிஞர்கள் வழிகாட்டியுள்ளனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் இமாம் ஷாஃபி அவர்கள் ஆவார்கள். இமாம் ஷாஃபி அவர்கள் தமது ”அர்ரிஸாலா” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

அதிகமான ஹதீஸ்களில் அவை உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை அறிவிப்பாளர் உண்மையாளரா? பொய்யரா? என்பதை அடிப்படையாக வைத்தே  முடிவு செய்யப்படும். ஹதீஸாகக் கருதப் படுவதற்குத் தகுதியற்ற செய்தியை அறிவிப்பாளர் அறிவித்தால் அது பொய்யானது என்றும்  நம்பகத்தன்மையில் மிக உறுதியான செய்திக்கோ, அல்லது அதிகமான அறிவிப்புகளுக்கு மாற்றமாக அறிவிப்பாளர் அறிவித்தால் அந்தச் செய்தி பொய் என்றும் மிக உறுதியான அந்த அறிவிப்பு உண்மை என்றும் மிகக் குறைவான குறிபிட்ட செய்திகளில் முடிவு செய்யப்படும்.

நூல்: அர்ரிஸாலா, பாகம்: 1, பக்கம்: 398

இரண்டு செய்திகள் முரண்பட்டால் மிக உறுதியான ஆதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் மிக உறுதியான ஆதாரத்திற்கு முரணான செய்தியை பொய் என்றே முடிவு செய்ய வெண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட அவருடைய கூற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தியை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இமாம் ஷாஃபி அவர்கள் தம்முடைய ”அல்உம்மு” என்ற நூலிலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு நம்பகமான அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு செய்தியை அறிவித்தால் அது நபியவர்களிடமிருந்து வரும் உறுதியான அறிவிப்பாகும்.

ஒன்றுக்கொன்று முரண்பட்டு வரும் அறிவிப்புகளைத் தவிர நபியவர்கள் கூறிய எந்த ஒரு ஹதீஸையும் நாம் ஒரு போதும் விட்டுவிட மாட்டோம்.

நபியவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ்கள் முரண்பட்டால் அந்த முரண்பாடு இரண்டு வகைகளில் இருக்கும்.

ஒன்று : இரண்டு செய்திகளில் ஒன்று ”நாஸிஹ்” – புதிய சட்டமாகவும், மற்றொன்று ”மன்ஸுஹ்” – மாற்றப்பட்ட சட்டமாகவும் இருக்கும். இப்போது நாம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவோம். மாற்றப்பட்ட சட்டத்தை விட்டுவிடுவோம்.

மற்றொரு வகை :  இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படும். இரண்டில் எது புதிய சட்டம் என்பதற்கு எந்தச் சான்றும் இருக்காது. இப்போது இரண்டு அறிவிப்புகளில் எது உறுதியானதோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டும் (உறுதித் தன்மையில்) சமமானதாக இருந்தால் இரண்டில் எது இறைவேதத்திற்கும், நபி வழிக்கும் ஒத்ததாக உள்ளதோ அதன் பக்கம் நான் சென்று விடுவேன்.

நூல்: அல்உம்மு,  பாகம் 7, பக்கம் 201

நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும் ஒத்ததாக உள்ளதை ஏற்று மற்றொன்றை மறுத்து விட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறையாகும். அறிவிப்பாளர்களின் குறைகளை வைத்து மறுக்கப்படுவதைப் போன்று, கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்கள் மறுக்கப்படும் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் ஒரு பெண், அல்லது நாய், அல்லது கழுதை கடந்து சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ”ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார்” (அல்குர்ஆன் 35:18) என்ற குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதினாலும், நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஆயிஷா (ரலி) குறுக்கே படுத்திருப்பார்கள் என்ற ஹதீஸிற்கு முரணாக இருப்பதினாலும் இதனை இமாம் ஷாஃபி மறுத்துள்ளார்கள். இதன் விபரம் இமாம் ஷாஃபி அவர்களுக்குரிய இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம்: 8, பக்கம் 623ல் இடம் பெற்றுள்ளது.

மேலும் இறந்தவரின் குடும்பத்தினர் அழுவதினால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று நபியவர்கள் கூறியதாக நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியையும் இமாம் ஷாஃபி அவர்கள் மறுத்துள்ளார்கள்.

இந்தச் செய்தியின் கருத்து ”ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்” (அல்குர்ஆன் 6:164) “மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” (அல்குர்ஆன் 53:39), ”அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்” (அல்குர்ஆன் 99:7, 8), ”ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப் படுவார்கள்” (அல்குர்ஆன் 20:15), ஆகிய இறை வசனங்கள் எந்த அடிப்படையைப் போதிக்கிறதோ அதற்கு எதிராக உள்ளது. இதனை மறுத்து ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியே குர்ஆனுடைய கருத்திற்கு ஒத்ததாக உள்ளது. என இமாம் ஷாஃபி அவர்கள் தம்மடைய ”இஹ்திலாஃபுல் ஹதீஸ்” என்ற நூலில் பாகம்:8, பக்கம் 648ல் விரிவாக விவரித்துள்ளார்கள்.

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வுடைய வேதத்தின் வெளிப் படையான கருத்திற்கு ஒத்திருக்கும் ஹதீஸ்களே (நபியவர்கள் கூறினார்கள் என்று) உறுதிப்படுத்துவதற்கு தகுதியானவை ஆகும்.

(நூல் : இஹ்திலாஃபுல் ஹதீஸ், பாகம் 8, பக்கம் 661)

குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால்தான் ஒரு ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், “கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்” என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438

இவ்வாறு குர்ஆன் என்ற மிகப்பெரும் ஆதாரத்திற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அது மறுக்கப்பட வேண்டும் என்பதே இமாம் ஷாஃபி அவர்களின் வழிமுறை என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்ததாக, “மிக உறுதியான ஆதாரமான குர்ஆனிற்கு முரணாக நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டால் அதனை ஏற்றுக் கொள்வது கூடாது’ என்பதுதான் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையாகும்.

ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ”முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல்முஆஃபிரீ” அவர்கள் ”அந்நஸ்ஸுல் காமில்” என்ற தனது நூலில் இமாம் மாலிக் அவர்களின் வழிமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையான (குர்ஆனிற்கு) முரண்படும் போது தனி நபர் செய்திகளை (இமாம்களில்) ஒரு கூட்டமே மறுத்துள்ளது. அவர்களில் ஒருவர்தான் இமாம் மாலிக் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

நூல்: அந்நஸ்ஸுல் காமில், பக்கம் 231

தெளிவான சுன்னாவை விட குர்ஆனுடைய வெளிப்படையான கருத்தே மாலிக் இமாமிடம் முற்படுத்தப்பட்டதாகும். மார்க்க மஸாயில்களில் தீர்வு சொல்லும் போதும் இவ்வாறுதான்.

நூல்: அல்ஃபிக்ருஸ் ஸாமி, பாகம் 1, பக்கம் 455

புகாரி 1854வது ஹதீஸ் குர்ஆனின் கருத்திற்கு முரணாக இருப்பதால் இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுடைய கருத்திற்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.

குர்துபீ கூறுகிறார்: கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70

இமாம் அவ்ஸாயீ அவர்களும் இதே வழிமுறையில்தான் சென்றுள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?” என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், “அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக் கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல” என்று கூறினார்கள்.

முனீப் அவர்கள், “அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே” என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, “நம்பகமானவர்கள் நம்பகமில்லாதவர்களிட மிருந்து அதைப் பெற்றிருக்கலாமே” என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

கருத்தைக் கவனித்தும் ஹதீஸ்களை மறுக்கின்ற வழிமுறைகளை இமாம்கள் பின்பற்றியுள்ளார்கள் என்பதற்கு ஒரு சில சான்றுகளை மட்டுமே இங்கே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி, தெளிவான நடைமுறை உண்மைகளுக்கு மாற்றமாக இருக்கும் போதும், அதை விட உறுதியான ஆதாரங்களுக்கு முரண்படும் போதும் மறுக்கப்படும் என்பதே மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.

கருத்தைக் கவனித்து ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடு மட்டுமல்ல என்பதும் மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெளிவாகிவிட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற அடிப்படையில் பல செய்திகளை மறுத்துள்ளார்கள். இதனை நம்முடைய பல நூற்களில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்ற செய்தியையும், இப்ராஹீம் நபிக்கு எதிராகப் பல்லி நெருப்பை ஊதியது, குரங்கு விபச்சாரம் செய்து அதற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட்டது, நபிகள் நாயகம் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள், மூஸா நபி மலக்குல் மவ்த்தை அடித்து மலக்கின் விழி பிதுங்கியது, நபியவர்கள் அந்நியப் பெண்ணை ஸாலிமிற்குப் பாலூட்டுமாறு கூறினார்கள் என்ற செய்தி, சுலைமான் நபிக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் என்று மறைவான விஷயத்தை அவர் முன்கூட்டியெ அறிவித்ததாக வரும் செய்தி போன்றவற்றையும் இவையல்லாத இன்னும் சில செய்திகளையும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

ஒரு செய்தி குர்ஆனுக்கு, அல்லது நிரூபிக்கப்பட்ட உலக உண்மைக்கு மாற்றமாக வந்தால் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை நாம் விரிவாகக் கண்டோம்.

கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

ஷாத்

ஹதீஸ் கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும். அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

ஷாதிற்கு உதாரணம்

“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது  வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.

ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)

மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.

இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.

அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விடப் பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக் குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்துள்ள ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?

இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்குத் தயங்குவதேன்?

அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது; ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் தொடர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?

முத்ரஜ்

ஹதீஸ் கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.

இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டு பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.

(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.

(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்,

பாகம் 2, பக்கம் 812)

அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.

முத்ரஜிற்கு உதாரணம்

“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள். மேலும் “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.

நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டார்கள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)

இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையைத் தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே! இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று இவர்கள் கூறத்தயாரா?

இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கும் மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.

மக்லூப்

நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.

அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.

மக்லூபிற்கு உதாரணம்

“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712) வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள். எனவே ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லூப்” என்று மறுக்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ்-பக்கம் 135)

இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர் தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்து விட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.

அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.

நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப் படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள். அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறிவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.

முஸஹ்ஹஃப்

நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.

முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்

“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும் அஹ்மதில் (18783) இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.

இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)

இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஒருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பினத் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் (596) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில் (1779)  “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலவீனமானது என்று முடிவு செய்ய முடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இதற்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற  செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகையால் அதை இங்கே கூறுவதை விட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில் தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 3516வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ் கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

 1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.
 2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
 3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.
 4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.
 5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்து நிபந்தனைகள் இடம் பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

அறிவிப்பாளர்களிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படும் செய்திகள்

மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும்.

ஒரு அறிவிப்பாளர் நபியின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று விமர்சிக்கப் பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ”மவ்ளூவு” என்று கூறப்படும்.

மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

ஹதீஸ்களில் இட்டுக்கட்டியதற்கான காரணங்கள்

 1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
 2. ஆர்வக் கோளாறு
 3. தனி மரியாதை பெறுவதற்காக
 4. மன்னர்களை மகிழ்விக்க
 5. இயக்க வெறி
 6. பேச்சைப் பிழைப்பாக்க
 7. சுயலாபத்திற்காக
 8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

இது போன்ற காரணங்களினால் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

உதாரணம்

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும்  மருந்தாகும்.  (நக்துல் மன்கூல், பாகம் 1, பக்கம் 2)

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும்.  (அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ, பாகம் 1, பக்கம்161)

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள். (அல்ஃபவாயிதுல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம்99)

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான்.  (நூல்: தன்ஸீஹுஷ் ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் 1, பக்கம் 283)

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை. (நூல்: மீஅத்து ஹதீஸ் மினல் அஹாதீஸில் லயீஃபா வல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம் 4)

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஷவ்கானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப் பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்

அலீ (ரலி), அம்மார் (ரலி) அறிவிப்பதாக வருகிறது. “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். அரஃபா காலைத் தொழுகையில் தக்பீர் கூறி அதனை அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் முடிப்பவர்களாக இருந்தார்கள்”

இந்தச் செய்தி நஸாயீ மற்றும் தாரகுத்னியில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் “அம்ருப்னு ஸமிர்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப் பட்டவர் ஆவார். எனவே இந்தச் செய்தி “மத்ரூக்” எனும் நிலையில் உள்ளதாகும்.

மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

முன்கர், மஃரூஃப்

ஒரு அறிவிப்பாளர் வெறுக்கத்தக்க தவறிழைக்க கூடியவராகவோ, அல்லது அதிகம் கவனமற்றவராகவோ, பெரும்பாவங்கள் செய்பவராகவோ இருந்தால் அவருடைய அறிவிப்பு முன்கர் என்று கூறப்படும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் ஆதமுடைய மகன் அதனைச் சாப்பிட்டால் ஷைத்தான் கோபம் கொள்கிறான்”

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியதாக இப்னுமாஜாவில் (3321) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”அபுஸ் ஸுகைர் யஹ்யா இப்னு முஹம்மது” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை இமாம் நஸாயி அவர்கள் ”முன்கர் என்றும் இதனை அபுஸ் ஸுகைர் தனித்து அறிவிக்கிறார்” என்றும் குறை கூறியுள்ளார்கள்.

முன்கர் என்பதற்குப் பின்வருமாறும் விளக்கம் கூறப்படும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை என்றால் இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அல் முஃஜமுல் கபீர் (12692)

இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் என்பாரிடமிருந்து ”ஹுபைய்யிப் இப்னு ஹபீப் அஸ்ஸய்யாத்” என்பார் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் மற்ற நம்பகமானவர்கள் அபூ இஸ்ஹாக் வழியாக இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றனர். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.

முஅல்லல்

ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது எவ்விதக் குறைபாடும் இல்லாததைப் போன்று இருக்கும். ஆனால் ஆழமாக ஆய்வு செய்யும் போது ஹதீஸின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் குறை காணப்படும். இத்தகயை செய்திக்கே முஅல்லல் என்று கூறப்படும்.

அதாவது குறையானது மறைமுகமாகவும், பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இல்லத் என்றால் என்ன?

மறைமுகமானதாகவும், ஹதீஸின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ள குறைகளுக்கே ”இல்லத்” என்று கூறப்படும்

இது போன்ற குறைகளை அறிகின்ற வழிமுறைதான் ஹதீஸ் கலையில் மிக மிக முக்கியமானதும், நுட்பமானதும் ஆகும். ஹதீஸ் கலையில் மிக ஆழ்ந்த ஞானமுடையவர்களுக்கே தவிர வேறு யாரும்  இது  போன்ற நுட்பமான குறைகளைக் கண்டறிய முடியாது.  இமாம் புகாரி, இப்னுல் மதீனி, அஹ்மத், அபூ ஹாதிம், தாரகுத்னீ போன்ற இமாம்கள்தான் இத்துறையில் மிகவும் ஆழ்ந்த ஞானம் மிக்கவர்கள்.

இல்லத் எவ்வாறு கண்டு பிடிக்கப்படும்?

ஒரு அறிவிப்பாளர் மற்றவர்களுக்கு மாற்றமாக தனித்து அறிவிப்பதைக் கொண்டு இது போன்ற மறைமுகமான குறைகள் கண்டறியப்படும்.

நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான ஒரு செய்தியை , நபித்தோழர் விடுபடாமல் ”மவ்சூலாக” ஒரு அறிவிப்பாளர் அறிவித்துவிடுவார்.

அல்லது நபித்தோழரின் சொந்தக் கூற்றாக (மவ்கூஃப்) உள்ள செய்தியை நபி கூறியதாக (மர்ஃபூவு) அறிவிப்பாளர் அறிவித்திருப்பார்.

அல்லது இரண்டு வெவ்வேறு ஹதீஸ்களின் வாசகங்களை கலந்து ஒரே ஹதீஸாக அறிவித்து விடுவார்.

அல்லது இது போன்ற வேறு ஏதாவது தவறினைச் செய்திருப்பார்.

இவ்வாறு தவறாக அறிவித்த அறிவிப்பாளரின் அறிவிப்பே ”முஅல்லல்” எனப்படும்.

அனைத்து அறிவிப்புகளையும் ஒன்றிணைத்து, அறிவிப்பாளர்கள் எவ்வாறு முரண்படுகின்றனர் என்பதையும், பலமான அறிவிப்பாளர் யார்? பலவீனமான அறிவிப்பாளர்கள் யார்? என்பதையும் அறிவதின் மூலமே தவறிழைத்த அறிவிப்பாளரைக் கண்டறிய முடியும்.

பெரும்பாலும் இது போன்ற ”இல்லத்” அறிவிப்பாளர் தொடரில்தான் நிகழும். இது பற்றி நாம் மேலே விளக்கி விட்டோம்.

சில நேரங்களில் ஹதீஸின் கருத்திலும் இது போன்ற மறைமுகமான, நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் தவறுகள் நிகழ்ந்து விடும். உதாரணமாக நபியவர்கள் தொழுகையில் கிராஅத்தைத் துவங்குவதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள். அதை இரகசியமாகக் கூறுவார்கள் என்றும் வந்துள்ளது. ஆனால் ஒரு அறிவிப்பில் நபியவர்கள் பிஸ்மில்லாஹ் கூறமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளையும் இணைத்துப் பார்க்கும் போதே இந்தக் குறை கண்டறியப்படும்.

இது போன்ற மறைமுகமான, பாதிப்பு ஏற்படுத்தும் குறைகளை உடைய ஹதீஸே ”முஅல்லல்” எனப்படும்.

அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித்

(முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரில் அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவித்தல் )

ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராகவும் இருக்கும். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பாளர் அதே செய்தியை அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவிப்பார்.  இத்தகைய செய்திக்குத்தான் ”அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்று கூறப்படும்.

இதற்கு பின் வரும் ஹதீஸை உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளின் மீது அமராதீர்கள், இன்னும் அதை நோக்கித் தொழாதீர்கள்.

நூல்: முஸ்லிம் (1613), திர்மிதி (971)

இந்த ஹதீஸ் முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வரும் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

 1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 4. இப்னு ஜாபிர் 5. அல்வலீத் இப்னு முஸ்லிம் 6. அலி இப்னு ஹுஜ்ர்.

மேற்கண்ட முஸ்லிமுடைய அறிவிப்பில் வாஸிலா என்ற அறிவிப்பாளரின் மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் இதே செய்திக்கான திர்மிதியின் அறிவிப்பாளர் தொடரைக் காண்போம்.

 1. அபூ மர்ஸதில் கனவீ (ரலி) 2. வாஸிலா இப்னு அஸ்கஃ 3.அபூ இத்ரீஸ் அல் ஹவ்லானீ 4. புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் 5. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் 6. அப்துல்லாஹ் இப்னு முபாரக்.

இந்த அறிவிப்பில் வாஸிலா என்பாரின் மாணவராக அபூ இத்ரீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். அவரின் மாணவராகத்தான் புஸ்ர் இப்னு உபைதில்லாஹ் வருகின்றார்.

திர்மிதி உடைய அறிவிப்பில் அபூ இத்ரீஸ் என்ற அறிவிப்பாளர் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளார்.

இவ்வாறு “அபூ இத்ரீஸ்” என்ற அறிவிப்பாளரை அதிகப்படுத்தி அறிவிப்பவர் “இப்னுல் முபாரக்” என்ற அறிவிப்பாளர் ஆவார்.

இவரை விட மிக உறுதியான அறிவிப் பாளர்கள் அனைவரும் வாஸிலா உடைய மாணவராக புஸ்ர் இப்னு உபைதுல்லாஹ் என்பாரைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகப்படியான அறிவிப்பாளர் வரும் அறிவிப்பு தவறான அறிவிப்பு என்றும், தவறிழைத்தவர் இப்னுல் முபாரக் என்பவர்தான் என்பதும் அறியப்படுகிறது.

அர்முர்ஸலுல் ஹஃபிய்யு

அதே நேரத்தில் மிக உறுதியான அறிவிப்பாளர் ஸனதில் ஒருவரை அதிகப்படுத்தி அறிவிக்கின்றார்.

அவரை விட நம்பகத் தன்மையில் குறைந்தவர் அதிகப்படியான அறிவிப்பாளர் இல்லாமல் அறிவிக்கின்றார். இந்நிலையில் நம்பகத் தன்மையில் குறைந்தவர் அறிவிக்கும் அறிவிப்பு வெளிப்படையில் எவ்வித குறைகளும் இல்லாவிட்டாலும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தியாகவே கருதப்படும்.

நம்பகத்தன்மையில் குறைவானவரின் அறிவிப்பு முறிவுடையது என்பது அவரை விட உறுதியானவரின் அறிவிப்பை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. அறிவிப்பாளர் தொடரில் ஏற்பட்டுள்ள முறிவு மறைமுகமாக இருப்பதால் இது போன்ற குறைகளுக்கு ”அல்முர்ஸலுல் ஹஃபிய்யு” (மறைமுகமான முர்ஸல்) என்று கூறப்படும்.

மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை எனில் இவரும் மஜ்ஹுல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

பித்அத் – தவறான கொள்கை

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாம் என்ற பெயரில் உருவான காரியங்களே பித்அத் எனப்படும்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் பித்அத்தான காரியங்களைச் செய்பவராக இருந்தால் அவருடைய ஹதீஸ்கள் எப்போது ஏற்கப்படும். எப்போது மறுக்கப்படும் என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பித்அத்தான காரியங்களைச் செய்யும் அறிவிப்பாளரின் அறிவிப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஒருவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பித்அத்தான காரியங்களைச் செய்தால் அவருடைய அறிவிப்பு இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

 1. அவர் தன்னுடைய பித்அத்தை நியாயப்படுத்தி அதன் பக்கம் மக்களை அழைப்பவராக இருக்கக் கூடாது. இவ்வாறு அழைப்பு விடுப்பவராக இருந்தால் அவருடைய எந்த அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளப்படாது.
 2. தன்னுடைய பித்அத்துகளை நியாயப் படுத்தும் விதத்தில் அறிவிப்பவராக இருந்தால் அவருடைய அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது.

—————————————————————————————————————————————————————-

கையெழுத்துப் பிரதி முதல் கணிணி மென்பொருள் வரை…

ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி

இன்று நாம் குர்ஆனை மனனம் செய்தவரை  ஹாபிழ் என்று அழைக்கின்றோம். ஆனால் அன்று ஹாஃபிழ் என்று அழைக்கப்பட்டவர் குர்ஆனை மட்டுமின்றி இலட்சக்கனக்கான ஹதீஸ்கள், அந்த ஹதீஸ்களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள், அவர்களது குறை நிறைகள் போன்ற அனைத்தையும் மனனம் செய்திருந்தார்கள்.

அந்த அளவுக்கு அபார மனனத்தன்மையை அன்றைய காலத்து முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான். இதற்கு காரணம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிந்தைய தலைமுறைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்!

ஒருபக்கம் மனனம் வாயிலாகப் பதிவான இந்தக் குர்ஆன் ஹதீஸ், மறுபக்கம் ஏடுகள் மூலமும் பதிவானது. அன்றைய காலத்து ஏடுகள் இன்றைய காலத்தைப் போன்று தாள்களில் அமைந்திருக்கவில்லை! அந்த அளவுக்கான தொழிநுட்பத்தை அன்று கண்டுபிடிக்கவில்லை. அதனால் அவர்களுக்குக் கிடைத்த பேரீச்ச மர மட்டைகள், மென்மையான பலகைகள், பதனிடப்பட்ட தோல்கள், கால்நடைகளின் நீண்ட எலும்புகள் ஆகியவை தான் ஏடுகளாக அமைந்திருந்தன.

தோல்களிலிருந்து தாள்களுக்கு…

மரப்பட்டைகள், மென்கற்கள், பலகைகள், கால்நடைகளின் எலும்புகள், தோல்கள் போன்றவற்றிலிருந்து தாள்கள் அடங்கிய நூல்களுக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் இடம் பெயர்ந்தன. ஆனால், கையழுத்துகளாக அவை பதிவாயின.

அதன் பின்னர் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் அச்சு இயந்திர புரட்சி ஏற்பட்டு கையெழுத்துப் பிரதிகள் கருவிப் பிரதிகளாயின! இதன் பின்னர் உலகம் கணிணி யுகமானது. குறுந்தகடு மயமானது. மொத்தத்தில் மரப்பட்டைகள், பலகைகள், எலும்புகள், தோல்கள் போன்ற கடினப் பெருட்களில் குடியிருந்த ஹதீஸ்துறை கணிணி யுக மென்பொருட்களுக்குக் குடிபெயர்ந்தது. இது ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சியும் புரட்சியுமாகும்.

1985 வாக்கில் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மது, தாரமீ, முஅத்தா மாலிக் ஆகிய ஒன்பது நூல்கள் அடங்கிய ஹதீஸ் அட்டவணை (ஒய்க்ங்ஷ்)-ஐ கிட்டத்தட்ட 10 மாதங்களாகத் தயாரித்து ஒரு யூதர் வெளியிட்டிருந்தார்.

துஆ தொடர்பாக ஒரு செய்தி நமக்கு வேண்டுமென்றால், துஆ என்ற ஒரு வார்த்தை ஒன்பது நூல்களில் எங்தெந்த பாடத்தில் இடம் பெறுகின்றது என்று அந்த அட்டவணை தெரிவித்து விடும். ஆனால் அது இடம்பெற்றிருக்கின்ற செய்தியை அந்த அட்டவணை நூலில் தேட முடியாது. புகாரி, முஸ்லிம் என்று ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்க்க வேண்டும். இந்தச் சிரமத்தை நீக்கும் விதத்திலும், கஷ்டத்தைக் களையும் விதத்திலும் ஹதீஸ் மென்பொருள் ஒரு பெரிய புரட்சி படைத்தது.

அணிஅணியாக ஹதீஸ் சிடி, குறுந்தகடுகள் மக்களின் தாகத்தை தீர்க்கக் கிளம்பின. அவற்றில் ஆரம்பத்தில் ஆயிரம் நூல்கள் அடங்கிய அல்ஃபியா (ஆயிரம்) என்ற பெயரில் உதயமானது. ஆனால் அதை விலைக்கு வாங்கியவருக்கு மட்டுமே அதன் பயன்பாடு கிடைத்தது.

அல்குதுபுத் திஸ்ஆ

ஒன்பது நூல்கள் என்ற பெயரில் மேற்கண்ட ஒன்பது ஹதீஸ் நூல்கள் அடங்கிய “மவ்சூஆ’ (கலைக் களஞ்சியம்) வெளியானது. அரபியில் குறைந்தபட்ச ஞானம் உள்ளவர்கள் கூடக் கையாள்கின்ற விதத்தில் இது எளிதாக அமைந்திருக்கின்றது.

ஒரு ஹதீஸை, அது இடம்பெறும் வார்த்தை வாரியாக, தலைப்பு வாரியாக, ஹதீஸ் எண் வாரியாக எளிதில் தேடுவதற்கு ஏதுவான ஒரு மென்பொருளாகும்.

மவ்ஸை கிளிக் செய்த அடுத்த நொடியிலேயே பார்வைக்குத் திரையில் காட்சி தரும். அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு அறிவிப்பாளரின் பலம் – பலவீனம் அவரைப் பற்றிய திறனாய்வு மிக்க ஹதீஸ் கலை அறிஞர்களின் சுருக்கமான விமர்சனம், ஹதீஸில் இடம் பெறும் புதிய வார்த்தைகளுக்குரிய அருஞ்சொற் பொருட்கள் என அனைத்து விபரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

புகாரி ஹதீஸின் விளக்கம் தெரியவில்லை என்றால் அதன் விரிவுரையான ஃபத்ஹூல் பாரியையும், இதர நூல்களுக்குரிய விரிவுரையையும் அதே ஹதீஸில் பார்க்கும் வசதி, ஒரு நூலில் ஒரு ஹதீஸைப் பார்க்கும் போது, அந்த ஹதீஸ் வேறெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை அறியும் வசதி, அதைப் போன்ற கருத்துடைய ஹதீஸ்கள் வேறு எந்த இடங்களில் உள்ளன என்று அறியும் வசதி, இந்த ஹதீஸ்களை வேர்ட் ஃபைலுக்கு காப்பி செய்வதற்குரிய வசதி என்று அதன் பயன்பாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உண்மையில் கையாள்வதற்கு இவ்வளவு எளிய முறையில் அமைந்த இந்த ஹதீஸ் மென்பொருளை அடிக்க வேறு எந்த மென்பொருளும் வெளிவரவில்லை என அடித்துச் சொல்லி விடலாம்.

அல்மக்தபதுஷ் ஷாமிலா

இது 16,0000 நூல்கள் அடங்கியது. இணைய தளத்தில் தற்போது இன்னும் மேலதிகமாக பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்து நூல்களும் அடங்கிய நூலகம் என்ற பெயர் இதற்கு மிகவும் பொருத்தமாகவே அமைகின்றது. இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான அனைத்து நூல்களும் இதில் இடம்பெறுகின்றன.

ஜாமிவுல் ஹதீஸின் நபவி

இந்த ஹதீஸ் மென்பொருளில் கிட்டத்தட்ட 401 ஹதீஸ் நூல்கள் உள்ளன.

ஜவாமிவுல் கலீம்

இந்த ஹதீஸ் மென்பொருளில் மொத்தம் 1400 ஹதீஸ் நூல்கள் உள்ளன.

குர்ஆன் மென்பொருள்

இதில் குர்ஆன், கிராஅத், விளக்கவுரைகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. இது அல்லாமல் குர்ஆன் சம்பந்தமாக மேலும் பல மென்பொருள்கள் உள்ளன.

மேற்கண்டவை தவிர ஹதீஸ்களிலும் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.

நவீன சாதனங்கள் வாயிலாக ஹதீஸ்களை ஆய்வு செய்யும் இவ்வசதி, ஹதீஸ் துறையில் மாபெரும் வளர்ச்சியும், புரட்சியும் ஆகும். அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!

—————————————————————————————————————————————————————-

இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு

இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகமான இமாம்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்த ஒரு துறை உண்டு என்றால் அது ஹதீஸ் துறைதான். அந்த அளவுக்கு அத்துறை அந்த இமாம்களின் வாழ்நாள் சேவையைத் தன்பால் ஈர்த்துள்ளது.

இதற்கு காரணம், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான். (நூல்: புகாரி 3461)

அதற்காகத் தான் நபித்தோழர்கள் முதல் ஹதீஸ்களை நூல்களில் பதிவு செய்த புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் காலம் வரையில் நான்கைந்து தலைமுறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் வாழ்நாளை ஹதீஸ்களை சேகரிப்பதிலும், சேமிப்பதிலும் கழித்தனர்.

அப்படிப்பட்ட அந்த அரும்பெரும் இமாம்களில் முக்கியமானவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இஸ்லாமிய சமுதாயத்தின் பார்வைக்கு சுருக்கமாகத் தருகிறோம்.

இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

இமாம் புகாரி தொகுத்த நூல்கள்:          

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுயையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:                 

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,            ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

இவரது மாணவர்கள்:                  

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத்,       ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய்,   அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும்.

இமாம் முஸ்லிம்

முழுப்பெயர்: முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிமுல் குஷைரியி (ஸஹீஹுல் முஸ்லிம் என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம்)

புனைப்பெயர்:  அபூஹுஸைனின் நைஸாபூரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்:  முஸ்லிம்

தந்தைபெயர்:  ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர்: ஈரானில் உள்ள குராஸான் பகுதியில் உள்ள நைஸாபூரி என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 204 அல்லது 206

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத்  தனது 14 வயதிலிருந்தே ஈரானில் உள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும்  ஷாம், ரயீ, எகிப்து, ஹிஜாஸ்,  நைஸாபூரியை சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

இவர் தொகுத்த நூல்கள்:

ஸஹீஹ் முஸ்லிம்,

அல்குனா வல்அஸ்மா (அறிவிப்பாளார்கள் தொடர்பான நூல்),

அல்முன்ஃபரிதாது வல்வுஹ்தான்,

அத்தபகாத் இன்னும் பல நூல்களை தொகுத்துள்ளார்

இவரது ஆசிரியர்கள்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்லமதல் கஃனபி, அஹ்மத் இப்னு ஹன்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், யஹ்யா இப்னு மயீன், அபூபக்கர் இப்னு அபீஷைபா, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ, அப்து இப்னு  ஹுமைத், ஹம்மாது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

இவரது மாணவர்கள்:

முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப், அபூஈஸா அத்திர்மிதி, ஸாலிஹ் இப்னு முஹம்மது ஸஜ்ரத், அபூஹாதம் அர்ராஸியி, முகம்மது இப்னு அப்து இப்னு ஹுமைத், அபுஅவானதல் அல் இஸ்ஃபிராயினிய்யி இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 261ல் ரஜப் மாதம் ஞாயிற்றுக்கிழமை நைஸாபூர் என்ற தனது ஊரில் இறந்தார். அப்போது அவருக்கு 57 வயதாகும்.

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும்.

இமாம் நஸாயீ

முழுப்பெயர்: அஹ்மத் இப்னு ஷுஐப் இப்னு அலி இப்னு ஸினான் இப்னு பஹ்ர் இப்னு தீனார் (சுனன் நஸாயீ என்ற ஹதீஸ்  நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ

இயற்பெயர்: அஹ்மத்

தந்தை பெயர்: ஷுஐப்

பிறந்த ஊர்: இவர் நஸா எனும் ஊரில் பிறந்தார்,

பிறப்பு: ஹிஜ்ரி 215

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், அல்ஹிஜாஸ், எகிப்து, ஷாம் இன்னும் ஜஸீரா போன்ற உலகின் பல பாகங்களுக்கும் கல்விக்காகப் பிரயாணம் செய்துள்ளார்கள்.

இவர் தொகுத்த நூல்கள்:

அஸ்ஸுனன் நஸாயீ (ஸுனன் அல்குப்ரா, ஸுனன் அஸ்ஸுக்ரா),

ஃபலாயிலுல் குர்ஆன் (குர்ஆனுடைய சிறப்புகள் தொடர்பானது),

ஜுஸ்வுன் ஃபிஹி மஜ்லிஸானி,

அஷரதுந் நிஷா,

ஃபலாயிலுஸ் ஸஹாபா (சஹாபாக்களின் சிறப்புகள் தொடர்பானது),

அல்இக்ராப், அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் (ஹதீஸ்களில் பலவீனமானவர்கள் இன்னும் விடப்பட்டவர்கள் தொடர்பானது),

அமலுல் யவ்மி வல்லைலா,

அல்குனா, அத்தஃப்ஸீர்,

தஸ்மியதுல் ஃபுகஹாயில் வல்அம்ஸாரி போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா, திர்மிதி, முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா, முஹம்மது இப்னு இஸ்மாயில் தப்ரானீ, முஹம்மது இப்னு ஹுஸைன் இப்னு இப்ராஹீமுல் ஆமிரிய்யீ, அபூதாவூத் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

யஃகூப் இப்னு முபாரக், மன்சூர் இப்னு இஸ்மாயில் அல்ஃபகீஹ், முஹம்மது இப்னுல் காஸிம் இப்னு முஹம்மது இப்னுல் ஸியாருல் குர்துபீ, அபூதய்யிப் முஹம்மது இப்னு ஃபலுல் இப்னு அப்பாஸ், ஜஃபர் இப்னு முஹம்மது இப்னுல் ஹாரிஸ் அல்கஸாயீ, இஸ்ஹாக் இப்னு அப்துல்கரீமுஸ் ஸவாஃப் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 303ல் ஸஃபர் மாதம் 13ம்நாள் ஃபலஸ்தீனில் இறந்தார். அப்போது அவருக்கு 88 வயதாகும்.

இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

இவரது ஆசிரியர்கள்:

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும்.

இமாம் இப்னுமாஜா

முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது  அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)

புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: யஸீது

பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

சுனன் இப்னுமாஜா

தஃப்ஸீருல் குர்ஆன் (குர்ஆன் விரிவுரை)

தாரீகுல் கஸ்வீன்

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் இப்னு  முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64.

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இவரது ஆசிரியர்கள்:

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும்.

இமாம் மாலிக்

முழுப்பெயர் : மாலிக் இப்னு அனஸ் இப்னு அபீ ஆமிர் இப்னு அம்ரில் அஸ்பஹானீ அல்ஹுமய்ரீக் (அல்முஅத்தா என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபு அப்துல்லாஹ் அல்மதனீ

இயற்பெயர் : மாலிக்

தந்தைப்பெயர் : அனஸ்

பிறந்த ஊர் : அஸ்பஹானீ என்ற ஊரில் பிறந்தார். இவர் அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு : ஹிஜ்ரி 93

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:

இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயத்தை அறிந்து இருந்ததால் பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஒரு தடவை மட்டும் மக்காவிற்கு ஹஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார். என்றாலும் மார்க்கச் சட்டங்களை நன்கு அறிந்தவாராக இருந்தார். இவர் 21வது வயதில், தான் படித்ததைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் தொகுத்த நூல்கள் :

புகாரி, முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பாகவே இவர் எழுதிய அல்முஅத்தா என்ற நூல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து இமாம்களும் அதன் பக்கமே சார்ந்து இருந்தனர்.

ரிஸாலதுன்ஃபில் கத்ர்

ரிஸாலதுன் ஃபின் நஜ்ம்

ரிஸாலதுன் ஃபில் அக்லியா

ரிஸாலதுன் இலா அபிஹஸ்ஸான்

ரிஸாலதுன் இலல் லைஸ்

கிதாபுஸ் ஸிர்

இன்னும் பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

சியாத் இப்னு ஸஅத், ஸைது இப்னு அஸ்லம், ஸைது இப்னு அபீஉனைஸ், ஸைது இப்னு ரிபாஹ், சாலிம் அபிநல்ர், அப்துல்லாஹ் இப்னு தீனார், மூஸா இப்னு உக்பா, ஆயிஷா பின்த் ஸஅத் இப்னு அபிவகாஸ், ஹிஷாம் இப்னு உர்வா போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

இமாம் மாலிக் அவர்களுக்கு உலகின் அனைத்து பாகங்களிருந்தும் மாணவர்கள் அதிகமானார்கள். ஹிஜாஸ், யமன், குராஸான், ஷாம், மிஸ்ர், அன்தலூஸ் போன்ற பகுதிகளில் இவருக்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க சிலர்:

இப்ராஹீம் இப்னு தஹான், இஸ்மாயீல் இப்னு உலய்யா, சுஃப்யான் இப்னு உயைனா, அப்துல்லாஹ் இப்னு வஹாப், அபூஅலீ அல்ஹனஃபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி  179, ரபிவுல்அவ்வல் மாதம் ஞாயிற்றுக்கிழமை  இறந்தார். அப்போது அவருக்கு 86 வயதாகும்.

இமாம் தாரமீ

முழுப்பெயர்: அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னுல் ஃபலுல் இப்னு பஹ்ராமுத்தாரமீ அத்தைமீ (ஸுனன் அத்தாரமி என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபுமுஹம்மதுல் ஸம்ரகன்தீ  அல்ஹாபிழ்

இயற்ப்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்

பிறந்த ஊர் : ஸமரகன்த் என்ற ஊரில் பிறந்தார்.

பிறந்த நாள் : ஹிஜ்ரி 181

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  ஈரானில் உள்ள குராஸான், இராக்கில் கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும்  பஸரா, ஷாம், வாஸித்,  திமிஷ்க், ஜஸீரா  போன்ற ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

இவர் தொகுத்த நூல்கள்:

சுனனுத்தாரமீ

தஃப்ஸீர்

அல்ஜாமிஃ

முஸ்னதுத் தாரமீ

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

இப்ராஹீம் இப்னுல் முன்திர், கபீஸா இப்னு உக்பா, முஹம்மது இப்னு அஹ்மத் இப்னு  அபிகலஃப், முஹம்மது இப்னு குதாமா, காலித் இப்னு மக்லத், அஃப்வான் இப்னு முஸ்லிம், இஸ்மாயில் இப்னு அபிஅவ்ஸ், ஜஃபர் இப்னு அவ்ன், சுலைமான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு யஹ்யா அஸ்ஸகஃபி  போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, அபூஸுர்ஆ, பகீ இப்னு மக்லதில் அன்த லூஸ், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அபூ யஃகூபில் வர்ராக்,  இப்ராஹீம் இப்னு அபிதாலிபின் நைஸாபூரி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: இவர் ஹிஜ்ரி 255ல் மரணித்தார். அரஃபாவுடைய நாளில் (வெள்ளிக்கிழமை அன்று) அவர் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயதாகும்.

ஹாபிழ் இப்னு ஹஜர்

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் மறக்க முடியாத மாபெரும் அறிஞர்; மாமேதை.

ஹதீஸ் எனும் சமுத்திரத்தில் காலமெல்லாம் முத்துக்குளித்து அடுக்கடுக்கான ஆய்வு முத்துக்களை அகிலத்திற்கு அளித்த அரும்பெரும் ஆற்றல் ஞானி.

ஸஹீஹுல் புகாரிக்குப் பல்வேறு அறிஞர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். ஆனால் இவர்கள் எழுதிய ஃபத்ஹுல் பாரி என்ற விரிவுரை தலைசிறந்த விரிவுரையாகும்.

இந்த விரிவுரை அவரது அறிவின் ஆழத்தையும், கடின உழைப்பையும் எடுத்துரைக்கும்.

கணிணி இல்லாத – கையெழுத்து பிரதிகள்  மட்டுமே உள்ள காலத்தில் புகாரியில் இடம்பெறுகின்ற அதே ஹதீஸ் அல்லது அதே கருத்தில் அமைந்த அல்லது கூடுதல் குறைவான கருத்தில் அமைந்த ஹதீஸ் அல்லது நேர்மாற்றமான ஹதீஸ் இன்ன நூலில் இடம் பெற்றுள்ளது என்று அவர் காட்டுகின்ற மேற்கோள், மேனியை சிலிர்க்க வைத்து விடுகின்றது.

அத்தனை ஹதீஸ் நூற்களிலும் அவரது ஆய்வுப் பார்வை பதிந்திருப்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம், அவர்களின் குறை நிறையைப் பற்றிய அலசல் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர். ஹதீஸ் துறையில் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

ஹதீஸ் வரலாற்று வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இருந்த போதிலும் தமிழ்பேசும் மக்களிடம் அவருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை.

ஹதீஸ் ஆய்வுகளில் அவருக்கு ஓர் உயரிய இடத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய இந்தக் கூடுதல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

முழுப்பெயர்:  அஹ்மத் இப்னு அலீ இப்னு முஹம்மத் இப்னு முஹம்மது இப்னு அலீ  அல்கனானீ அல்அஸ்கலானீ

புனைப்பெயர்: ஷஹாபுத்தீன் அபுல்ஃபலலுல், இப்னு ஹஜர் (இந்தப் பெயரால் தான் இவர் பிரபலமாக அறியப்பட்டுள்ளார்)

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர்: அலீ

பிறந்த ஊர்: எகிப்தில் உள்ள காஹிரா என்ற ஊரில் பிறந்தார். இவரது குலம் அல்கனானீ என்பதாகும்.

பிறப்பு : ஹிஜ்ரி 773ம் ஆண்டு பிறந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இவர் மிஸ்ரிலிருந்து மக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு வருடம் தங்கிப் பயின்றார். பிறகு ஷாம், ஹிஜாஸ், யமன், இவற்றுக்கு இடையில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றுள்ளார். ஃபலஸ்தீன், அங்குள்ள காஸா இன்னும் இது போன்ற பகுதிகளுக்கும் சென்றுள்ளார். மிஸ்ரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்றுள்ளார்.

இவர்தொகுத்த நூல்கள்:

ஃபத்ஹுல் பாரி  ஃபி ஷர்ஹி ஸஹீஹுல் புகாரி (இது மிகவும் பிரபலமான நூலாகும்)

அல்அஜாயிபு ஃபி பயானில் அஸ்பாப்

நுஸ்ஹதந்நல்ர் ஃபிதவ்லீகீ நுஹ்பதுல் ஃபிக்ர் (ஹதீஸ் கலை விதிகள் பற்றிய சிறு ஏடு)

அல்கவ்லுல் முஸத்தது ஃபி தப்பி அனில் முஸ்னத்

நதாயிஜுல் அஃப்கார் ஃபி தக்ரீஜீ அஹாதீஸுல் அத்கார்

முவாஃபிகாதுல் கபரில் கபர்

அந்நுகதுல்லிராஃப் அலல் அத்ராஃப்

தக்ரீபுத் தஹ்தீப் (அறிவிப்பாளர்களின் குறை நிறை தொடர்பானது)

ஸில்ஸிலதுத்தஹப்

புலூகுல் மராம் (நோக்கங்களை அடைவது)

இவை அல்லாத சுமாôர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

அப்துர்ரஹ்மான் அல்இராகீ, இஸ் இப்னு ஜமாஆ, ஸகாவீ, அஹ்மத் இப்னு முஹம்மத், அல்ஐகீ, ஷம்சுதீன் கல்கஷன்தீ, அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கலீலீ, ஜமாலுத்தீன் இப்னு அல்லஹீரா போன்ற பல அறிஞர்களிடம் பல்வேறு கலைகளைக் கற்றுள்ளார்.

இவரது மாணவர்கள்:

இவருக்கு மக்கா,  ஸீராஷீ, ஷாம்,  பக்தாத் போன்ற பகுதிகளில் இருந்து 626க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர்:

இப்னு காலி, இப்னு ஃபஹ்த், இப்னு தஃக்ரீ, முஹம்மதுல் காஃபினீ, ஷம்சுதீன் ஸஹாவீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: இவர் எகிப்தில் ஹிஜ்ரி 852ஆம் வருடம் துல்ஹஜ் கடைசியில் மரணித்தார். அப்போது அவருக்கு 79 வயதாகும்.