ஏகத்துவம் – ஜூன் 2014

தலையங்கம்

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி!

பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி!

ஊழலற்ற அரசு! உன்னத நாடு!

இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள் பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து களத்தில் இறங்கியது.

மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன் முஜாஹிதீன் சதித் திட்டம் என்று உளவுத்துறை தன் பங்குக்கு மோடிக்கு அனுபதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

மோடி நடத்தும் கூட்டங்களில் மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பாணியில் சங்பரிவார் குண்டுவெடிப்புகளை நடத்தி, மக்கள் கவனத்தை மோடியின் பக்கம் திருப்பி விட்டது.

ஊடகத்துறை மோடியின் பிம்பத்தை பலமுனை பரிமாணங்களில் பிரம்மாண்டமாக்கிக் காட்டியது.

உண்மையில் பல்வேறு துறைகளில் புள்ளி விபரங்களின் அடிப்படையில் குஜராத், தமிழ்நாட்டை விடவும் கேரளாவை விடவும் மகாராஷ்ட்ராவை விடவும் பின்தங்கிய நிலையில் 9வது,10வது இடத்தில் தான் உள்ளது. எனவே குஜராத் முன்மாதிரி, முன்னோடி என்பதெல்லாம் பக்கா மோசடியாகும்.

ஊழலை ஒழிப்பதில் உத்தமபுத்திரன் மோடி என்பதும் கடைந்தெடுத்த பொய்யே! காரணம், ஊழல் பெருச்சாளியான எடியூரப்பாவையெல்லாம் மோடி தன் வலையில் இழுத்துப் போட்டுக் கொண்டதன் மூலம் இந்தப் பொய் அம்பலமானது. ஆனால் இதையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் காசுக்கு விலை போயின. மோடியை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். மிகவும் நுட்பமாகச் செயல்பட்டது.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த நரேந்திர மோடி, தனது அடியாள் அமீத்ஷாவை உத்தரபிரதேசத்தில் களமிறக்கி, கைவரிசையைக் காட்டினார். இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கற்பழிப்பது போன்ற பொய்யான வீடியோக்களை உ.பி.யில் பரவ விட்டதன் எதிரொலியாக, அதுவரை இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டது.

உ.பி. அரசாங்கத்தை மட்டுமல்லாது, மத்தியிலும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்த உ.பி. முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன மக்கள் திட்டமிட்டு வன்முறைக் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். கலவரம், வன்முறை வெடித்தது. முஸஃப்பர் நகர் முஸ்லிம்கள், ஜாட் இனத்தவரால் துவைத்து எடுக்கப்பட்டனர்; கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சொந்த வீடுகளை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த நாட்டிலேயே ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் அகதிகளான சோகமும் நிகழ்ந்தது.

மவ்லானா முலாயம் என்று அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், முஸ்லிம்களின் முதுகில் குத்தினார். கொலைகாரக் கும்பல் மீது ஒரு கொலை வழக்குக் கூட பதிவு செய்யாமல் ஜாட் இன மக்களை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி விட்டார். இதன் எதிர்விளைவு, நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யிலுள்ள 80 இடங்களில் 73 இடங்களை பாஜக அறுவடை செய்தது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.

இப்போது முஸ்லிம்கள் அச்ச உணர்ச்சியிலும், அபயமற்ற மனநிலையிலும் இருக்கின்றனர். இப்படியொரு தேர்தல் முடிவு வந்துவிடக்கூடாது என முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இறைவனை இருகரம் ஏந்தி இறைஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

இப்போது முஸ்லிம்கள் இந்த இறை விதியை சகித்துக் கொண்டாக வேண்டும். இறை நாட்டத்தின் முடிவு என்ன என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்; பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

மோடியின் ஆட்சியில் கீழ்க்கண்ட விஷயங்கள் நடக்கலாம்.

 1. எல்லாம் வல்ல அல்லாஹ் உள்ளங்களைப் புரட்டுகின்ற ஆற்றல் உள்ளவன். இத்தனை சிரமப்பட்டு ஆட்சியைப் பிடித்து விட்டோம்; அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லிம்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்று மோடியின் உள்ளத்தில் சிந்தனையை ஏற்டுத்தினால் அதன் மூலம் முஸ்லிம்களிடம் ஓர் இணக்கமான போக்கைக் கைக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் இந்துத்துவக் கொள்கையில் சமரசம் செய்து அதை நீர்த்துப் போகச் செய்யலாம்.
 2. ஒருவேளை மோடியோ அல்லது அவரது சங்பரிவாரோ முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இஸ்லாம் காட்டுத்தீயாகப் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கும்.
 3. எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன். தரையில் வைத்து ஒருவனின் கதையை முடிக்காமல் உச்சிக்குக் கொண்டு போய் உருட்டி விடுவது போல், மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்து ஒரேயடியாக உருட்டிவிடலாம்.

என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம். அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.

அல்குர்ஆன் 68:44, 45

இந்த வசனத்தில் கூறுவது போன்று அல்லாஹ் விட்டுப் பிடிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்என்று கூறிவிட்டு, பிறகு, “அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானதுஎனும் (12:102வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

நூல்: புகாரி 4686

ஒரேயடியாக மோடியையும் அவரது பரிவாரத்தையும் ஓய்ப்பதற்கு அல்லாஹ் அளித்திருக்கும் அவகாசமாக இந்த ஆட்சியதிகாரத்தை வழங்கியிருக்கலாம். இவற்றில் எதை அல்லாஹ் நிகழ்த்தப் போகின்றான் என்பதை நாம் அறிய மாட்டோம். அவனே அறிவான். அதனால் நாம் இதற்காகக் கலக்கமோ, கலவரமோ, கவலையோ அடையத் தேவையில்லை. பாஜக ஆட்சி படைத்தவனின் சூழ்ச்சியே என்று எண்ணி அவனது இறுதி முடிவுக்காகக் காத்திருப்போமாக!

—————————————————————————————————————————————————————-

பரேலவிஷ பயங்கரவாதம்

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்குக் கூறுகெட்ட குருட்டு பரேலவிஷ சிந்தனைவாதிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

உங்களுக்குப் பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஆனால் நீங்கள் இவர்களிடையே நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)  அல்குர்ஆன் 4:3

நம்மில் ஒருவருக்கு வசதியும் நீதமும் எவ்வளவு தான் அளவு கடந்து இருந்தாலும் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே கட்டத்தில் 9 மனைவியருக்குக் கணவராக இருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர். நூல்: புகாரி, முஸ்லிம்

இதுதான் பரேலவிகளின் ஆதாரம்.

நாம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய முடியாது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த வரம்பைத் தாண்டி திருமணம் முடிக்கலாம். இந்தச் சிறப்பை, இறை நம்பிக்கை கொண்ட எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய தனிச் சலுகை, தனிச் சிறப்பு!

இதை நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து நபி (ஸல்) அவர்களை மனித நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாற்றம் செய்வதைத் தான் நாம் மறுக்கிறோம். அதாவது நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் கடவுள் நிலைக்கு உயர்த்துவதைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இங்கு தான் இவர்கள் புத்தி சுவாதீனத்துடன் பேசுகிறார்களா? அல்லது புத்தி பேதலித்துப் பேசுகிறார்களா? என்று கேட்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் 9 மனைவியரைத் திருமணம் முடித்தது அவர்களின் மனிதத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் ஒன்பது பேரையல்ல! ஒன்பதாயிரம் பேரை மணம் முடித்தாலும் அது அவர்களுக்குரிய சிறப்பு என்றாலும், சலுகை என்றாலும் அது அவர்களின் மனிதத் தன்மையை பக்காவாகவும் பலமாகவும் நிரூபிக்கின்றது. இப்படித் தான் கொஞ்ச நஞ்ச புத்தியுள்ளவர் புரிந்து கொள்வார். ஆனால் இந்த பரேலவிகளோ அல்லாஹ் சொல்கின்ற கால்நடைகள் என்ற நிலையில் உள்ளவர்கள். இன்னும் அதைவிடக் கீழானவர்கள்; கேவலமானவர்கள்.

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 7:146)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (அல்குர்ஆன் 7:179)

எதை மனிதத் தன்மைக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை இவர்கள் கடவுள் தன்மைக்கு இலக்கணமாக ஆக்கிக் கொண்டு தங்களை அறிவிலிகள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு இப்படி ஒரு சலுகையைக் கொடுத்ததே அந்த மாமனிதரை, மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படும் இந்த ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியதே நபியவர்களின் மனிதத் தன்மையை நிரூபிப்பதற்காகத் தான் என்ற அளவுக்குள்ள ஒரு இலக்கணத்தை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொள்கின்றார்கள்.

திருமணத்தில் சாட்சி

நம்மில் திருமண நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் இரண்டு சாட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் திருமணம் நிறைவேறும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: சாட்சிகள் இல்லாத திருமணம் செல்லாது. (நூல்: தாரகுத்னீ) ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய திருமணம் சாட்சிகள் இல்லாமலேயே நிறைவேறிவிடும்.

அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, யா ரசூலுல்லாஹ், உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். திருமணத்தின் மூலம் தங்களுக்கு என்னை அர்ப்பணம் செய்து விட்டேன் என்று சொல்லி, இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டால் திருமணம் நிறைவேறிவிடும். சாட்சிகள் தேவையில்லை.

முஃமினான ஒரு பெண் நபி (ஸல்) அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினால் (திருமணம் நிறைவேறிவிடும். நபியே! இது) உமக்கு மட்டும் (வழங்கப்பட்ட) உரிமை. மற்ற முஃமின்களுக்கு அல்ல.

(அல்குர்ஆன் 33:50

உங்களுக்கு மட்டும் தான் மற்ற முஃமின்களுக்கல்ல என்று சொன்னதின் மூலம் அல்லாஹ் ஒரு கருத்தைத் தெளிவாக்கிக் காட்டுகிறான். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களைப் போல் அல்ல.

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்கு பரேலவிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம், “நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிப்பதற்கு சாட்சி தேவையில்லை’ என்பதாகும்.

திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்படுவதால் கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் சாட்சி அவசியம் என்று சொல்கிறோம்.

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 2:282)

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 5:106)

33:50 வசனத்தின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமணத்திற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். இந்தச் சிறப்பை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே திருமணம் முடித்து வைத்ததாகக் கூறுகின்றான்.

ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். (அல்குர்ஆன் 33:37)

இப்படி சாட்சி இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்றாகிவிடுமா? ஆதம் நபிக்கும் ஹவ்வா அவர்களுக்கும் அல்லாஹ் தான் திருமணம் முடித்து வைத்தான்.

அதனால் ஆதம் நபி உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் வாதிடுவார்களா?

நபிமார்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் இந்தப் பரேலவிகளின் நம்பிக்கையாகும். ஆதம் நபியும் உயிருடன் இருக்கிறார்கள் என்று இந்தக் கூட்டம் வாதிடுமானால் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்பு இங்கு அடிபட்டுப் போய்விடுகின்றது என்பதை இந்த நேரத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 14

அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஒரு பெண், மஹ்ரமான ஆணைச் சந்திக்க நேரிட்டால் அவள் தனது அலங்காரத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து திருக்குர்ஆன் சில சட்டங்களைக் கூறுகின்றது.

ஒரு பெண் அந்நிய ஆடவர் ஒருவரைச் சந்திக்கும் போது, பெண்ணுக்கு நெருக்கமான, திருமனத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினர் பெண்ணுடன் இருந்தாலும் அந்த நேரத்தில் சில விதிமுறைகளைப் பேண வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நகை அணிவதும், பவுடர் போடுவதும், தலைக்குப் பூ வைத்துக் கொள்வதும், இன்னபிற சாயங்களைப் பூசிக் கொள்வதும் (மேக்கப் செட்), தலைமுடியை விரும்பியவாறெல்லாம் வடிவமைத்துக் கொள்வதும் அலங்காரம் எனலாம்.

விரும்பினால் உடலுக்குக் கேடு தராது எனில் உதட்டுச் சாயம் கூட ஒரு பெண் பூசிக் கொள்ளலாம். ஒரு பெண் தனது உடலில் அழகு சாதனங்களால் செயற்கை முறையில் அலங்கரித்துக் கொள்வதும் அழகை மெருகேற்றிக் கொள்வதுமே அலங்காரம் எனப்படுகின்றது.

இதுபோன்ற இயற்கை அழகை மெருகேற்றி, அலங்காரம் செய்து கொண்டால் அந்த அலங்காரத்தை யார் யார் முன்னால் காட்டிக் கொள்ளலாம் என்றும் யார் முன்னால் காட்டக் கூடாது என்றும் விதிமுறைகளை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

அலங்காரத்தைக் காட்ட அனுமதிக்கப்பட்டவர்கள்

முதலாவதாக, ஒரு பெண் தனது அலங்காரத்தை கணவனுக்குக் காட்டலாம். இதற்குத் தான் திருமணமே நடைபெறுகிறது.

பிறகு, ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரமாக இருந்து கொள்ளலாம். தனது மகளின் எந்த மாதிரியான அலங்காரத்தைப் பார்த்தாலும் தந்தைக்குக் கெட்ட எண்ணங்கள் ஏற்படாது. அந்தப் பெண்ணுக்கும் வராது.

ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரத்தைக் காட்டிக் கொண்டிருப்பது போன்று தனது கணவனின் தந்தை, அதாவது மாமனார் முன்னாலும் வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது மார்க்கத்தில் தவறில்லை.

அடுத்து, தனது மகனுக்கு முன்னால் அலங்காரம் தெரியும் வகையில் ஒரு பெண் இருந்தாலும் அவள் மீது குற்றமில்லை. மகன் தன் முன்னால் இருக்கிறான் என்று ஒரு தாய் வெட்கப்படத் தேவையில்லை.

மகனும் தனது தாயைப் பற்றி, இவ்வளவு பெரிய வயதில் அலங்காரமெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்கக் கூடாது. அதைத் தவறாகவும் நினைத்துவிடக் கூடாது. என்னதான் தனக்குத் தாயாக இருந்தாலும் நம் தந்தைக்கு மனைவி எனும் போது, ஒரு மனைவி தனது கணவன் நினைப்பது போன்று நடந்தால் தான் கணவனின் அன்பைப் பெறமுடியும். அப்படிப் பெறுவது தான் மார்க்க அடிப்படையில் சரியானதாக இருக்கும். யாருக்கு முன்னிலையில் அலங்காரம் என்பது தான் முக்கியமே தவிர, அலங்காரமே கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடல்ல என்பதைப் புரிய வேண்டும்.

ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே முதலில் திருமணம் நடந்து அந்த மனைவியின் மூலமாக ஒரு ஆண் மகன் இருந்தால் அந்த ஆண் மகன் முன்னிலையிலும் ஒரு பெண் அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை.

ஒரு பெண், தனது சகோதரர்கள் முன்னிலையில் அலங்காரத்துடன் இருப்பது குற்றமில்லை. சகோதரர்கள் என்றால் மூன்று வகையில் வருவார்கள். ஒன்று தன்னுடன் பிறந்தவர்கள், அல்லது தனது தாயின் வகையில் பிறந்தவர்கள், அல்லது தகப்பனார் வழியில் பிறந்தவர்கள். எந்த வகையில் சகோதரர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் அலங்காரத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

தனது சகோதரர்களுடைய மகன் முன்னிலையில் ஒரு பெண் அலங்காரம் வெளிப்படுவது குற்றமல்ல. சகோதரிகளின் மகன்கள் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் அலங்காரம் வெளிப்படலாம்.

மற்ற பெண்களிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை. இதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். இதைத் தவறு என்று கூற முடியாது. இருப்பினும் பிற பெண்களை மட்டம் தட்டக் கூடாது. அப்படிச் செய்தால் அது பெருமையடிப்பது என்ற குற்றத்தில் சேர்ந்துவிடும்.

பெண்கள் சபையில் அந்நிய ஆண்கள் இருந்தால் அதில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. இதற்கு உதாரணமாகச் சொல்வதென்றால், கல்யாண வீடுகளைச் சொல்லலாம். இங்கு அதுபோன்ற நிலை இருப்பதால்தான் அதைத் தவறு என்கிறோம்.  பெண்கள் மட்டுமே இருக்கிற ஒரு சபையில் ஒரு பெண் தன்னைப் போன்ற சக பெண்களிடம் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

பெண்களின் மீது நாட்டமில்லாத நிலையை அடைந்த, தள்ளாத வயதுடைய ஆண்களின் முன்னால் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நின்றுகொள்வது குற்றமில்லை. அந்நிய ஆணாக இருந்தாலும் தள்ளாத வயதுடையவர்கள் என்றால் கொள்ளுத் தாத்தா வயதுடையவர்கள் என்று பொருள். இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, வயது முக்கியம் என்பதை விட நிலை தான் கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஏனெனில் சிலர் எண்பது வயதிலும் வலுவானவர்களாகவும் பெண்கள் மீது நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை இந்தச் செய்தி குறிக்காது. பெண்கள் மீது நாட்டமில்லாத நிலை என்றால் இல்லறத்திற்குத் தகுதியில்லாதவர், அதன் மீது நாட்டம் ஏற்படாத அளவுக்கு முதிர்ந்தவர் என்ற பொருள் தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

பெண்களின் மறைவிடங்களைப் பற்றிய அறிவு இல்லாத சிறுவர்களின் முன்னிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நிற்பது குற்றமில்லை. இது காலத்திற்குக் காலம் மாறுபடக் கூடியதாகவும் இருக்கிறது. இந்தக் காலத்தில் 5 வயதிலேயே எல்லாம் தெரிகிற அளவுக்கு மாறிவிட்டது.

50 வருடங்களுக்கு முன்னால் 15 வயது ஆணுக்குக் கூட மறைவிட விவரங்கள் தெரியாமல் இருந்தது. கல்யாண மாப்பிள்ளைக்குக் கூட திருமணம் முடித்தவர்கள் “எதற்கு கல்யாணம் முடிக்கிறோம்’ என்பதை சொல்லிக் கொடுக்கிற அளவுக்குத்தான் இருந்தது.

குடும்ப விவகாரங்களும் கணவன் மனைவி விவகாரங்களும் புரியாத சிறுவயது குழந்தைகளிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஒரு கணவனும் மனைவியும் தனியாக அமர்ந்திருப்பது எதற்கு? என்ற காரணம் புரியுமானால் அந்த ஆண் பிள்ளை வளர்ந்து ஆளாகிவிட்டான் என்று பொருள். அப்படிப் புரியாதவனாக இருந்தால் அவன் குழந்தை என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற அந்நியச் சிறுவர்களிடம் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஏனெனில் புரியாத வயதில் இருப்பவர்களுக்கு அந்தரங்க விஷயங்கள் ஈர்க்காது என்பதுதான் காரணமாகும்.

தங்களது கணவருடன் இருக்கும் போதோ, அல்லது திருமணத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினருடன் இருக்கும் போதோ ஒரு பெண் அலங்காரத்துடன் இருக்கும் போது ஒரு அந்நிய ஆண் அவர்களைப் பார்க்க நேர்ந்தால் அப்போது அவரிடம் அலங்காரத்தைக் காட்டக் கூடாது.

கணவன் உடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் அலங்காரத்தை ஒரு பெண் காட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. அதாவது நகை நட்டுக்கள் அணிந்திருந்தால் அல்லது மேக்கப் என்கிற அலங்காரச் சாயங்கள் பூசியிருந்தால் மஹ்ரமான உறவு தன்னுடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் இவைகளைக் காட்டக் கூடாது என்று மேற்சொன்ன வசனம் நமக்குக் கட்டளையிடுகிறது.

அலங்காரத்தில் ஒரு பெண் தனது தகப்பனுடன் இருந்தாலும் எதிரில் இருக்கிற அந்நிய ஆணிடம் ஷைத்தான் கெட்ட எண்ணங்களை விதைத்து விடுவான். அதனால் தான் இறைவன் இவ்வசனத்தில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களை பட்டியலிட்டுத் தந்துவிடுகிறான். இந்த பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களிடம் அலங்காரத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்குரிய சட்டமாகும்.

இவை தவிர, இந்த வசனத்தில் இன்னும் சில செய்திகளை பெண்களுக்கு அறிவுறுத்துகிறான். ஒரு பெண் சலங்கைக் கொலுசு அணிவதைத் தடை செய்கிறது. சலங்கை இல்லாத, சத்தம் வராத முத்துக்கள் பதிக்காத கொலுசு அணிவதைத் தடை செய்யவில்லை. நடக்கிற போது சத்தம் வந்தால் அந்த சத்தம் அந்நிய ஆணை ஈர்த்திழுக்கும் ஒரு அபாயக் குரல் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

கொலுசு அணிவது பெண்களுக்கு உரியது என்று ஆகிவிடுகின்ற போது, சத்தம் வருகின்ற கொலுசு அணிந்தால் பிற ஆண்கள் அவர்களைப் பார்ப்பதற்குத் திரும்புவதைக் காண்கிறோம். பிறர் திரும்ப வேண்டும் என்பதற்காகவே கால்களை அடித்து நடக்கும் பெண்களையும் பார்க்கிறோம். இதைத்தான் அல்லாஹ் தடுக்கிறான்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24:31)

எனவே அலங்காரத்தைப் பெண்கள் யார் யாரிடம் காட்ட வேண்டும் என்பதற்கும் எப்படியெல்லாம் காட்டக் கூடாது என்பதற்கும் வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளான் இறைவன். அவற்றைப் பேணுவதுதான் ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

குடும்ப வாழ்வு குறித்த தலைப்புக்குள் விரிவாக உள்ளே செல்வதற்கு முன்னால் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இதுவரை கண்டோம்.

முதலாவது, நேரடியாக தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது, தவறைத் தூண்டக்கூடிய வகையில், அந்தச் சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலுள்ள எல்லா வகையான வாய்ப்புக்களையும் விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அதாவது பெண்ணோடு ஆணும், ஆணோடு பெண்ணும் தனித்திருப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தில் சந்தேகமோ, சஞ்சலமோ, குழப்பமோ ஏற்படாமல் நல்ல முறையில் குடும்ப உறவுகள் மேம்படுவதற்கு மார்க்கம் இந்த வழிமுறைகளைக் கற்றுத் தந்துள்ளது.

அதில் நாம் கண்ட அடிப்படையான விஷயங்கள், திருமணத்தின் மூலம் மட்டும்தான் குடும்ப அமைப்பு ஏற்படும்; இதைத் தவிர்த்து வேறு எந்த வகையிலும்  குடும்ப அமைப்பு ஏற்படாது. குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய காரியங்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு செய்திகளை இதுவரை நாம் கண்டோம். இதை நமது மனதில் ஆழமாக நிறுத்திக் கொண்டு குடும்பவியல் தலைப்புக்குள் செல்வோம்.

குடும்பவியல் என்ற தலைப்பில், குடும்பம் என்பது எப்படி அமையும்? குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய கடமைகள், உரிமைகள் என்ன? இதுபோன்ற பல்வேறு செய்திகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக அறிவோம். இன்ஷா அல்லாஹ்..

—————————————————————————————————————————————————————-

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

மருமக்களிடையே பாரபட்சம்

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் மாமியார், மருமகள் பிரச்சனை குறித்து விரிவாக அறிந்து வருகிறோம்.

மாமியார்கள், தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்கின்றார்கள் என்பதை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

வெளிநாட்டிலோ, அல்லது வெளியூரிலோ வேலை செய்யும் மகன் தன் மனைவிக்கென்று அனுப்பும் பணத்தையும், பொருட்களையும் அவளுக்குக் கொடுக்காமல் தடுக்கும் காரியத்தை சில மாமியார்கள் செய்கின்றனர்.

இன்னும் சில வீடுகளில் மருமகள் கருத்தரிப்பதற்குத் தாமதமானால் அந்தக் குறை தன் மகனிடம் உள்ளதா? அல்லது மருமகளிடம் உள்ளதா? என்பதை ஆராயாமல் மருமகள் மீதே பழியைப் போடுகின்றனர். இதையே சாக்காக வைத்து அவளிடம் அதிக வேலை வாங்குவதும், ஒவ்வொரு நிமிடமும் அவளைக் குறை காண்பதும், குத்திக் காட்டுவதும், எள்ளும் கொள்ளுமாக வெடிக்கவும் செய்கின்றனர். இதன் காரணமாக நல்ல காரியங்களில் அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர். இது மார்க்க அடிப்படையில் மாபெரும் தவறாகும்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

குழந்தை பாக்கியத்தைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள விஷயம் என்பதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் மருமகளைக் குறை சொல்வது, படைத்தவனுக்கே மாறு செய்யும் செயல் அல்லவா?

பாரபட்சம் காட்டும் மாமியார்கள்

மருமக்கள் இருவர் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டும் பழக்கம் மாமியார்களிடம் உள்ளது. பல்வேறு வகைகளில் பாரபட்சம் காட்டுகின்றனர்.

 1. பணக்கார மருமகளிடம் ஒரு விதமாகவும், ஏழை மருமகளிடம் ஒருவிதமாகவும் நடப்பார்கள்.

பணம் இருப்பதால் ஒருவர் உயர்ந்தவராகவும், பணம் இல்லையென்றால் தாழ்ந்தவராகவும் கருதப்படுவது இஸ்லாத்தில் அறவே கூடாது. ஒருவரின் ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி அவரை இழிவுபடுத்துவது மார்க்க அடிப்படையில் தவறாகும். மேலும் இஸ்லாம் வறியவர்களைச் சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிப்பட்ட உன்னதமான மார்க்கத்தில் இருந்து கொண்டு பணத்தை வைத்து பாரபட்சம் காட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய காரியமாகும். அல்லாஹ்விடத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி இறையச்சமுடையவரே சிறந்தவராவார்.

மனிதர்களே ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுபவோரே அல்லாஹ்விடம் சிறந்தவர். அல்லாஹ அறிந்தவன். நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 49:13

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஏழைகளை விட்டுவிட்டுசெல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

நூல்: புகாரி 5177

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டு வாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம்  தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.

நூல்: புகாரி 2703

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்-ம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 5091

 1. அழகான மருமகளிடம் ஒரு விதமாகவும் அழகில் குறைந்த மருமகளிடம் ஒரு விதமாகவும் நடப்பது என்ற அடிப்படையிலும் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மனிதனை அழகிய வடிவத்தில் படைத்திருப்பதாக இறைவன் கூறுகின்றான்.

மேலும் அவன் திட்டமிட்ட வடிவத்தில் தான் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் இருக்கின்றனர். ஒருவருடைய நிறத்தையும் அழகையும் வைத்து ஒருவரைக் குற்றம் காண்கிறோம், பாரபட்சம் காட்டுகிறோம் என்றால் படைத்த இறைவனையே குறை காண்பதற்குச் சமம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்.

நூல்: முஸ்லிம் 5011

மேலும் இஸ்லாம் ஒருவருடைய தகுதியை வைத்தே உயர்வை, உயர் பதவியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றது; நிறம், அழகை அது பொருட்படுத்தவில்லை என்பதற்கு பிலால் (ரலி)யின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகும். அபிசீனிய நாட்டைச் சார்ந்த கருப்பு நிற அடிமையான பிலாலை அவர்களின் குரல் வளத்தைக் கவனத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்வதற்கு ஏவினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்-ம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்என்று கூறினர். வேறு சிலர், “யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள்என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக்கூடாதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 604

மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டு, நபியவர்களின் கட்டுப்பாட்டில் கஅபா வந்த போது நபியவர்கள் தம்முடன் அந்த கஅபாவிற்குள் அழைத்துச்சென்ற சொற்ப நபர்களில் ஒருவராக பிலால் (ரலி)யும் இருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியி-ருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்து கொண்டு) உஸாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான் தான் (அதனுள்) முத-ல் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், “எத்தனை ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க, “மறந்துவிட்டேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4289

எத்தனையோ விருப்பத்திற்குரிய நபித்தோழர்கள் இருந்த போதும் நபியவர்கள் இந்த கருப்பு நிற அடிமையை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும். நபிமொழிகளை அதிகம் அறிவித்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்களே, நபியவர்கள் எங்கே நின்று தொழுதார்கள் என்பதை பிலால் (ரலி)யிடம் கேட்டுத் தெரிந்துள்ளார்கள்.

மேலும் மூத்த நபித்தோழர்களில் ஒருவரான உமர் (ரலி) அவர்கள் கூட, பிலால் (ரலி) அவர்களை, “தலைவரே’ என்று அழைத்து சிறப்பித்திருக்கின்றார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்என்று சொல்வார்கள்.

நூல்: புகாரி 3754

மேலும் சொர்க்கம் என்ற நற்செய்தியை நபியவர்களின் நாவால் பிலால் நற்செய்தியாகப் பெற்றார்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்என்று சொன்னார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளூ செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4854

கருப்பு நிற அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) அவர்களிடமும் ஏனைய நபித்தோழர்களிடமும் இருந்த மதிப்பு, மரியாதையைப் பார்த்தோம். எனவே அழகின் அடிப்படையிலோ, செல்வத்தில் அடிப்படையிலோ ஒருபோதும் ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது.

 1. அதிகமாகச் சம்பாதிக்கும் மகனின் மனைவியிடம் ஒருவிதமாகவும், சம்பளம் குறைவாக வாங்கும் மகனின் மனைவியிடம் ஒருவிதமாகவும் நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தத்தில் பெண் எடுத்திருந்தால் அவளிடம் ஒரு மாதிரியாகவும், அந்நியத்தில் பெண் எடுத்திருந்தால் அவளிடம் ஒரு மாதிரியாகவும் நடக்கின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ, பாதகமாக இருந்தாலும் நீங்கள் நிதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சிகூறுவோராகவும் ஆகிவிடுங்கள். (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளான். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:135

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், “அவள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி  பரிந்து) பேசுவது யார்?” என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி (ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வ-யவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரது கையைத் துண்டித்துவிடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரது கையை நான் துண்டித்திருப்பேன்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3733

நீதியாக நடப்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்தியுள்ளது. எனவே அற்பக் காரணங்களுக்காக மருமக்களிடையே இதுபோன்ற பாரபட்சம் காட்டுவதை மாமியார்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 1. மருமகள் அப்பாவியாக இருந்தால் அவள் மீது அடக்குமுறை செய்வதும், அகங்காரமாக நடக்கும் மருமகளிடம் அடங்கிப் போவதும் சில மாமியார்களின் வழக்கம்.

இந்தப் பாரபட்சங்களின் அடிப்படையில் தான் பேரக் குழந்தைகளிடம் கூட சில மாமியார்கள் நடந்துகொள்கிறார்கள்.

இதுபோன்ற பாரபட்சங்களை பெரியவர்களே தாங்கிக் கொள்ள முடியாத போது, குழந்தைகளிடம் இவ்வாறு நடந்துகொள்வது மிகப்பெரும் அநீதியாகும்.

நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் “என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்என்று கூறினார். ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லைஎன்று சொன்னார்கள். “அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3326

செயல்களை திருத்திக்கொள்ளுங்கள்

மகனுக்கு வாழ்க்கைப்பட்டதால் மட்டுமே ஒரு பெண் நமக்கு அடிமையாகி விடமாட்டாள். அவளும் ஒரு பெண் என்பதையும் அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கும் என்பதையும் மாமியாராக இருக்கும் பெண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் கூட்டுக் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் மகனுடைய வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் தங்களுடைய வாழ்விலும் நிம்மதியில்லாத நிலை ஏற்படும்.

மார்க்கம் அறியாத நிலையில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அத்தகையவர்கள் இதன் மூலம் திருந்திக் கொள்ள வேண்டும்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான்.

அல்குர்ஆன் 67:2

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

நூல்: புகாரி 6514

எனவே செயல்களைத் திருத்தி, புண்படும் படி நடந்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்டு, பெரியவர்கள் தங்களது வயதிற்கேற்ப பக்குவத்துடனும், பெருந்தன்மையுடனும், மன்னித்தும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக நடக்க முயற்சி எடுக்கவேண்டும். அல்லாஹ் உதவி செய்வானாக!

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 11

உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவைப் பற்றி அறிஞர்களின் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் சாய்வு, சார்பு சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அலாதியான அலசல்களையும் பார்த்து வருகிறோம்.

கனவில் கஸ்ஸாலியின் நூல்களைக் கண்டேன். அவரது நூல்களின் எழுத்துக்கள் படங்களாகக் காட்சியளித்தன என்று அபூநஸ்ர் அஹ்மத் பின் முஹம்மது பின் அப்துல்காதிர் என்பார் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஆமிரில் அப்தரீ விமர்சனம் செய்துள்ளார்.

இதை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரில் தெரிவிக்கின்றார்.

கஸ்ஸாலியின் நூல்களுக்கு மதிப்பேற்றுவதற்காக மலிவான இந்தக் கனவுக் கதைகளை அடித்து விடுகிறார்கள் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஷியா தாக்கம்

தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்களிடம் ஷியா மார்க்கமே ஆக்கிரமித்து அரசாட்சி செய்கின்றது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய காலத்திலிருந்து பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை அடையாளம் காட்டி வருகின்றது. இன்னும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத் அடையாளப்படுத்தி, அம்பலமாக்கிய ஷியா மார்க்கக் கூறுகள் இதோ:

 1. தர்ஹா வழிபாடு

இறந்தவர்களை வழிபடுவது ஷியாக்களின் வழிமுறையாகும். அது தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 1. தனிமனித வழிபாடு

ஷைகு, முரீது, பீர், தரீக்கா என தனி மனிதர்களைக் கடவுளாக்கும் அனைத்தும் ஷியாக்களின் நடைமுறைகளாகும். இது தமிழகத்தில் தலைவிரித்தாடுகின்றது.

 1. தரீக்காக்களின் தலைவர் அலீ (ரலி)

தமிழகத்திலுள்ள தரீக்காக்கள் அனைத்தும் அலீ (ரலி) அவர்களிடம் தான் போய் முடியும். ஒரு தரீக்கா கூட அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற தலைசிறந்த கலீபாக்களிடம் போய் முடியாது.

 1. பஞ்சா எடுத்தல்

முஹர்ரம் பத்தாம் நாளில் பஞ்சா எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. பஞ்சா என்றாலே ஐந்து என்று பொருள். அதாவது, முஹம்மது (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரையும் கடவுளாக்கி வழிபாடு செய்யும் விழா தான் பஞ்சாவாகும்.

 1. மீன் உணவுக்குத் தடை

ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோகத்தின் காரணமாக முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடத் தடை செய்வார்கள். கணவன் மனைவி தாம்பத்தியத்திற்கும் தடை விதிப்பார்கள்.

 1. ஹுசைனுக்காக ஆஷுரா நோன்பு

முஹர்ரம் 10ஆம் நாள் மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்ட நாளாகும். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் ஆஷுரா நோன்பு என்பது ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக வைக்கப்படும் சோக நோன்பு என்று தமிழகத்திலுள்ள பெண்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 1. மகான்களுக்கு மறைவான ஞானம்

இருக்கின்ற, இறந்து போன மகான்களுக்கு, இமாம்களுக்கு, தலைவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்பது ஷியாக்களின் நம்பிக்கையாகும். அதே நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன், நாகூர் ஷாகுல் ஹமீது போன்ற இறந்து போன அடியார்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புகிறார்கள். தமிழக உலமாக்களும் இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.

 1. கலீபாக்கள் மீது கசப்புணர்வு

அலீ (ரலி) அவர்களைத் தவிர ஏனைய கலீபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய கலீபாக்களையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அல்லாத ஏனைய நபித்தோழர்கள் யாரையும் ஷியாக்களுக்கு அறவே பிடிக்காது. அந்த நபித்தோழர்களைத் திட்டுவதும் அவர்களின் கொள்கையாகும். அந்த ஷியாக்களின் கொள்கையை தமிழக உலமாக்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

நாம் இவ்வாறு சொல்லும் போது, குற்றம் சாட்டும் போது, “எங்களைப் போன்று ஸஹாபாக்களை மதிப்பவர்கள் யார்?’ என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். ஆனால் இவர்கள் உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறிபிடித்தவர் என்று விமர்சிக்கின்றனர்.

ஆம்! இவர்களது ஆன்மீக ஆசான், கண் குளிர்ச்சி, கல்விக் கடல் கஸ்ஸாலி தான் இந்த மட்டரகமான, மலிவான விமர்சனத்தை உமர் (ரலி) அவர்கள் மீது முன்வைக்கின்றார். அதை அப்படியே இந்த உலமாக்கள் ஆமோதிக்கின்றனர். இதன்படி தங்களை ஷியாக்களின் வாரிசுகள் என்பதைப் பகிரங்கமாக நிரூபிக்கின்றனர்.

கஸ்ஸாலியின் அந்தக் கொடூர விமர்சனத்தைத் தான் இப்போது நாம் பார்க்கவிருக்கின்றோம்.

உமர் (ரலி) அவர்களின் பதவி வெறி

இமாம் இப்னுல் ஜவ்ஸியின் பேரர் அபுல் முளஃப்பர் யூசுப் என்பார், “ரியாளுல் அஃப்ஹாம் ஃபீ மனாகிபி அஹ்லில் பைத்’ (நபியவர்களின் குடும்பத்தாரின் மகிமை போற்றும் சிந்தனைத் தோட்டங்கள்) என்ற நூலை எழுதியுள்ளார்.

அந்த நூலில் ஸிர்ருல் ஆலமீன் கஷ்ஃபு மாஃபித் தாரைன் (அகிலத்தாரின் ரகசியம், ஈருலக ஞானத்தில் அகமியம்) என்ற கஸ்ஸாலியின் நூலை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிடுவதாவது:

நான் யாருக்குப் பொறுப்பாளனோ அவருக்கு அலீயும் பொறுப்பாளர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், “சபாஷ்! சபாஷ்! ஒவ்வொரு முஃமினான ஆண், பெண்ணுக்கு நீங்கள் பொறுப்பாளராக ஆகிவிட்டீர்கள்என்று உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கிக் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 17749

(குறிப்பு: மேற்கண்ட அஹ்மத் ஹதீஸில் அலீ பின் ஜைத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். அதனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

இதே செய்தியில் உமர் (ரலி) அவர்களின் பாராட்டு இல்லாமல் திர்மிதியில் 3646வது ஹதீஸ் இடம் பெறுகின்றது. அது சரியான அறிவிப்பாகும்.

இந்த ஹதீஸில் “மவ்லா’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதற்குத் தான் “பொறுப்பாளர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு எஜமானன், நேசன், நண்பன் என்ற அர்த்தங்களும் உண்டு.

இதன்படி, நான் நட்பு கொண்டவருடன் அலீயும் நட்பு கொள்வார் என்பது தான் இந்த ஹதீஸின் பொருளாகும். நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை அலீ அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது.)

இந்த ஹதீஸைக் குறிப்பிட்டு உமர் (ரலி) அவர்களைப் பற்றி கஸ்ஸாலி செய்கின்ற விமர்சனம் இதோ:

அலீ (ரலி) மீதான நபி (ஸல்) அவர்களின் இந்தப் பாராட்டை உமர் (ரலி) அப்படியே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றார்கள். அப்படியே திருப்தியுடன் பொருந்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் இதற்குப் பின்னால் ஆட்சி, அதிகார, தலைமைப் பதவியிலும் அதற்கான நிபந்தனைகளை விதிப்பதிலும், ஆணைகள், தடைகளைப் பிறப்பிப்பதிலும் கொண்ட வெறியின் காரணமாக மனோஇச்சை உமரிடம் மிகைத்து மேலோங்கியது. அதனால் அவர் நபித்தோழர்களைக் கருத்து வேறுபாடு கொள்ளத் தூண்டினார்.

நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தனர். அதை அற்பக் கிரயத்திற்கு விற்றனர். அவர்களின் இந்த வியாபாரம் மிகக் கெட்டதாகும்.

இது உமர் (ரலி) அவர்களைப் பற்றி கஸ்ஸாலி செய்கின்ற விமர்சனமாகும்.

ஷியா இமாம்கள் கொட்டுகின்ற விஷக் கருத்தை கஸ்ஸாலி அப்படியே அள்ளிக் கொட்டியிருக்கின்றார். அவர் இதற்காக இறைவனிடத்தில் என்ன சாக்குப் போக்கு சொல்லப் போகின்றார் என்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் இந்த விஷக் கருத்திலிருந்து விலகி, சத்தியத்தைப் பின்பற்றியிருப்பார் என்று தான் நினைக்கிறேன். காரணம், இவர் ஒரு கல்விக் கடல். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இவ்வாறு அபுல் முளஃப்பர் கஸ்ஸாலியின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி விமர்சிக்கின்றார்.

நூலாசிரியர் மக்ராவியின் விமர்சனம்

கஸ்ஸாலியின் நூல்களில் இதுபோன்ற விஷக் கருத்துக்களைப் படிக்கும் போது அவர் மீது கொண்டிருக்கும் நல்லெண்ணம் காரணமாக உலமாக்கள் ஏதாவது முட்டுக் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் ஒருபோதும் அவரைக் காப்பாற்ற முடியாது. காரணம், கஸ்ஸாலியின் இந்தக் கூற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதன் பின்னால் அவர்களால் எப்படிக் காப்பாற்ற முடியும்?

பாவமன்னிப்பே பரிகாரம்

ஒரேயொரு பரிகாரம் பாவமன்னிப்பு தான். அவர் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தியிருந்தால் அல்லாஹ் அவரை மன்னித்து அவரது மன்னிப்பை அவன் ஏற்றிருப்பான். ஏனெனில் அவனது அருள் விசாலமானதாகும்.

நூலாக்கம் என்பது நிரந்தர நன்மையைக் கொண்டு வருகின்ற தர்மங்களின் பட்டியலில் இடம்பிடிக்கும். அல்லது தொடர்ந்து வருகின்ற சாபக்கேட்டின் பட்டியலில் இடம்பிடிக்கும். இவரது இந்த நூல் இரண்டாவது ரகம் தான் என்பதற்கு இந்தக் கருத்துக்களே சாட்சி சொல்கின்றன.

முஃமீன்களின் தலைவரான உமர் (ரலி) அவர்கள் மீது இப்படி ஒரு தவறான எண்ணம் தோன்ற முடியுமா? இப்படி ஒரு விமர்சனத்தை அவருக்கு எதிராகச் சொல்ல முடியுமா?

அவ்வாறு சொல்பவர் எவராக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் இழிவை அழிப்பானாக! கஸ்ஸாலியின் இந்தக் கூற்று நிரூபணமானால் அவர் மட்டரகமான, மலிவான, கேவலமான, கேடுகெட்ட ராஃபிளிய்யா (ஷியா) பேர்வழி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ராஃபிளிய்யாவின் கருத்துக்கள் இஹ்யாவில் பெரிய அளவில் மண்டிக் கிடக்கின்றன. அவ்வாறு மண்டிக் கிடக்கும் அந்தக் கருத்துக்கள் சுய அடையாளங்களைக் காட்டிக் கொண்டு கிடக்காமல் சூபிஸத்தின் பேரில் சூழ்ந்து கிடக்கின்றன. சூபிஸம் என்பது ராபிளிய்யாவின் கள்ள, செல்லப் பிள்ளையாகும்.

இவ்வாறு மக்ராவி அவர்கள் கூறுகின்றார்கள்.

நமது விமர்சனம்

கஸ்ஸாலியைத் தங்கள் கண்குளிர்ச்சியாகவும், மலர்ச்சியாகவும் காணும் மக்களுக்கு இந்தச் செய்தி எரிச்சலாகவே அமையும்.

உமர் (ரலி) அவர்களைப் பற்றிய கஸ்ஸாலியின் இந்தக் கருத்து நூலாசிரியர் மக்ராவி குறிப்பிடுவது போன்று கொடிய, கொடூரமான விஷமாகும். உண்மையில் இது ஷியாக்களின் நச்சுக் கருத்தே தவிர வேறில்லை.

ஷியாக்கள் தான் அலீ (ரலி) அவர்கள் மீது அலாதியான, அபாரமான பிரியத்தை வெளிப்படுத்துவார்கள். நபித்தோழர்களில் உச்ச இடத்தில் இருக்கும் அபூபக்ர் (ரலி), அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் உமர் (ரலி), இன்னும் ஏனைய நபித்தோழர்கள் மீது கசப்பையும் காழ்ப்பையும் கக்குவார்கள். அந்தக் கசப்பையும் காழ்ப்பையும் கஸ்ஸாலி தனது நூலான ஸிர்ருல் ஆலமீனில் வெளிப்படுத்தியுள்ளார்.

பதவி வெறி, மனோ இச்சை என்ற வார்த்தைக் கணைகளை நா கூசாமல் சர்வ சாதாரணமாக உமர் (ரலி) மீது ஏவி விடுகின்றார். உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களால் சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

அபூபக்ர் சுவனத்தில் உள்ளார். உமர், உஸ்மான், அலீ, தல்ஹா, சுபைர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ஆகியோர் சுவனத்தில் உள்ளனர். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் சுவனத்தில் உள்ளார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்கள்: திர்மிதி 3680, முஸ்னத் அஹ்மத் 1585

இப்படி சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறி பிடித்தவர் என்று சர்வ சாதாரணமாக கஸ்ஸாலி விமர்சிக்கின்றார்; குற்றம் சாட்டுகின்றார். உமர் (ரலி) அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரியவர்களா என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பதவியை விரும்பாத பண்பாளர் உமர்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், “நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப் போரில்) வெற்றியை அளிப்பான்என்று சொன்னார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்  கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவனாக நான் தலையை உயர்த்திக்காட்டினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2405

பதவியை நான் ஒருபோதும் விரும்பியதே இல்லை. இப்போது விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் அளிக்கப் போகும் பதவியைப் பெறுபவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக விரும்பினேன் என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது, அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரியத்திற்குரியவனாக வேண்டும் என்பதற்காக அந்தப் பொறுப்பை அடையவேண்டும் என்று விரும்பினேன் என்று கூறுகின்றார்கள். இவர்களைப் போய் பதவி வெறியர் என்று சொல்ல முடியுமா? ஆனால் தமிழக உலமாக்களின் சன்னிதானமாக, ஆன்மீக அவதாரமாகத் திகழ்கின்ற கஸ்ஸாலி, உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறியர் என்று சொல்கின்றார்.

(நபியவர்கள் நோயுற்ற போது) மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.-ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்என்று கூறினர்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் – அன்னார் இளகிய மனம் உடையவர் – “உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்என்று (உமர் ரலி அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இதற்கு நீங்கள்தாம் என்னைவிடத் தகுதியுடையவர்என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

நூல்: புகாரி 687

அபூபக்ர் (ரலி), உமரை நோக்கித் தான் தொழுவிக்குமாறு கூறுகின்றார்கள். ஆனால் உமர் (ரலி) அதை மறுப்பதுடன், நீங்கள் தாம் இந்தப் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்று குறிப்பிடுவதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

முன்னுரிமை அபூபக்ருக்கே!

உமர் (ரலி) அவர்களுக்குப் பதவி வெறி இருக்குமானால் அதை அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கள் தேர்வு செய்யும் போது அந்தரங்கமாகவோ, அப்பட்டமாகவோ வெளிப்படுத்தியிருக்கலாமே! அப்படி அவர்கள் செய்யவில்லை என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

(நபியவர்கள் மரணித்த போது, அடுத்த ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், “(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்என்று சொன்னார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், “இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் உங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

நூல்: புகாரி 3668

பதவியில் பற்றில்லாதவர்

உமர் (ரலி) அவர்களுக்குப் பதவியில் அறவே பற்று கிடையாது என்பதை இன்னும் அதிகமாகப் பின்வரும் ஹதீஸில் பார்க்க முடியும்.

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது உரையில்) குறிப்பிட்டார்கள்: (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டு வருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகக் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள்.

(இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே நான் விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

நூல்: புகாரி 6830

பதவியின் மீது பற்றில்லாமல் வாழ்ந்த பரிசுத்தமான உமர் (ரலி) அவர்கள் மீது தான் பதவிவெறி என்ற சேற்றை கஸ்ஸாலி வாரி வீசுகின்றார். இவரைத் தான் தமிழக ஆலிம்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இது ஷியா உணர்வைத் தவிர வேறெதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் தமிழகத்தில் ஷியாக்களின் தாக்கம் என்ற தலைப்பில், ஷியா கொள்கை தமிழக முஸ்லிம்களிடம் எப்படி ஆட்கொண்டு அவர்களை ஆட்டிப் படைக்கின்றது; அலைக்கழிக்கின்றது என்பதைக் கண்டோம். அதன்படி இஹ்யா என்பது ஷியாக் கொள்கையின் மறு ஆக்கம், மறுபிறவியாகும். இதை எரித்துச் சாம்பலாக்குவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்று சொன்னால் அது மிகையல்ல.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள அனைவரும் ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் என்று பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

தர்ஹா வழிபாடு, மவ்லூத் பாடல், இறந்தவர்களிடம் நேரடியாக உதவி தேடுவது இன்னும் சமுதாயத்தில் வணக்கம் என்ற பெயரில் செய்யப்படும் இது போன்ற காரியங்களை இணைவைப்பு என்றும் இவற்றை செய்யக்கூடாது என்று கூறும் மத்ரஸாக்களும் மவ்லவிமார்களும் சுன்னத் வல்ஜமாத்தில் இருக்கிறார்கள். இந்த விசயத்தில் இவர்களும் நாமும் ஒத்த கருத்தில் இருக்கின்றோம்.

பொய்யான செய்திகளையும், சம்பந்தமில்லாத தகவல்களையும் கூறி மேற்கண்ட இணைவைப்புக் காரியங்களை எப்பாடுபட்டாவது நியாயப்படுத்தி இவை தான் இஸ்லாம் என்று கூறும் வழிகேடர்களும் இணைவைப்பாளர்களும் சுன்னத் வல்ஜமாத் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

இவர்கள் ஒரு காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தவ்ஹீத் ஜமாஅத்துடன் சேர்த்து, இவர்களின் இணைவைப்புக் காரியங்களைக் கூடாது என்று சொல்லும் சுன்னத்வல்ஜமாத்தைச் சார்ந்தவர்களையே வெளிப்படையாக எதிர்க்கவும் விமர்சனம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

உண்மையை வெளிப்படுத்திய குர்ஆனின் குரல்

சமீபத்தில் குர்ஆனின் குரல் என்ற மாத இதழில் அவ்லியாக்களிடம் நேரடியாக உதவி தேடலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பின்வருமாறு அற்புதமாக சரியான மார்க்கத் தீர்ப்பை வழங்கினார்கள்.

மனிதருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும். அது துஆவாகும். துஆ இபாதத்தாகும். இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இறைத்தூதர்களையும் இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். எங்கிருந்து யார் அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதல்களையும் ஒரே நேரத்தில் கேட்கும் சக்தியும் அவற்றை அறியும் ஆற்றலும் அல்லாஹ்வின் பண்பாகும். இந்தப் பண்பில் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்ததாக ஆகிவிடும். அன்பியாக்களும் அவ்லியாக்களும் ஆலமும் பர்ஜகில் விசேசமான ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்பது சுன்னத் வல்ஜமாஅத்துடைய கொள்கை என்றாலும் இந்த உலக வாழ்க்கையை ஆலமுல் பர்ஜஹ் உடைய ஹயாத்துடன் ஒப்பிட்டு சட்டங்கள் எடுப்பது கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் கூடாது என்பதே நமது சுன்னத் வல்ஜமாஅத்தின் தீர்ப்பாகும்.

குர்ஆனின் குரல் (ஜனவரி 2014)

அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் காரியத்தை இணைவைப்பு என்றும் அதை செய்யக்கூடாது என்றும் கூறிய குர்ஆனின் குரல் மாத இதழையும் இந்த ஃபத்வாவை வழங்கிய மார்க்க அறிஞர்களையும் நாம் பாராட்டுகிறோம். அல்லாஹ் இவர்களுக்கு அருள் புரியட்டும்.

அன்பான அறிவுரை

அதே நேரத்தில் இங்கே இவர்களிடத்தில் உள்ள ஒரு பெரிய தவறையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை உள்ளது. பாரதுôரமான இணைவைப்புக்கு எதிராக ஒரு மாத இதழில் ஃபத்வா கொடுக்கும் இவர்கள் இந்த இணைவைப்பை இஸ்லாம் என்று இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு எதிராக இதே ஃபத்வாவை விளக்கி மக்களுக்கு ஜும்ஆ உரை ஆற்றியிருக்கிறார்களா?

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடப்படும் ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு இவையெல்லாம் இணைவைப்பு என்று விளக்கி பயான் செய்ததுண்டா? அல்லது இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும் மக்கள் கூடும் பயான் நிகழ்ச்சிகளிலும் இது குறித்த எச்சரிக்கையைச் செய்ததுண்டா?

இந்தப் பணியை இவர்கள் செய்யாத காரணத்தால் இவர்களின் ஏகத்துவ ஃபத்வா ஏட்டில் மட்டுமே இருக்கின்றது. மக்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நமது ஜமாஅத்தின் ஏகத்துவ அறிஞர்கள் இந்தப் பணியைக் கையில் எடுத்து மக்களிடம் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தில் கணிசமான மக்கள் இணைவைப்பை விட்டும் விலகி ஏகத்துவத்தின் பக்கம் வந்தனர்.

எனவே இணைவைப்பிற்கு எதிராக ஃபத்வா வழங்கிய இந்த சகோதரர்கள் யாருக்கும் அஞ்சாமல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இது இணைவைப்பு தான் என்பதை மக்களுக்கு மத்தியில் வீரியத்துடன் உண்மையை உடைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அறிவுரையை இவர்களுக்குக் கூறிக்கொள்கிறோம்.

சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர் இவர்கள் அளித்த ஃபத்வாவை விமர்சித்துள்ளனர். சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் விஷயங்களுக்குரிய சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.

சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா?

இறந்தோர்களை வணங்கக்கூடியவர்கள் இவர்களின் ஷிர்க் கொள்கையை நியாயப்படுத்த இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களை முஷ்ரிக்காகக் காட்டும் கேவலமான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு இவர்கள் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.

அல்குர்ஆன் 27:40

இந்த வசனத்தில் அரசியின் சிம்மாசனத்தை கண் மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது கூறியது என அல்லாஹ் கூறுகிறான்.

நீண்ட தொலைவில் உள்ள சிம்மாசனத்தை கண் மூடித்திறப்பதற்குள் கொண்டு வருவது சாதாரண மனிதனுக்கு இல்லாத ஆற்றல். இப்படிப்பட்ட ஆற்றல் ஒரு இறைநேசருக்கு இருந்துள்ளது. அந்த இறைநேசரிடம் சுலைமான் (அலை) அவர்கள் உதவி கேட்டுள்ளார்கள். எனவே இறந்துவிட்ட அவ்லியாக்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

கூறியது ஜின்னா? மனிதரா?

வேதம் வழங்கப்பட்ட இறைநேசர் இவ்வாறு கூறினார் என்று அல்லாஹ் கூறவில்லை. இந்த வசனத்தை அவ்லியாக்களுடன் கோர்ப்பதற்காக குர்ஆனில் இல்லாத இறைநேசர் என்ற இவர்களின் சொந்தச் சரக்கை இவர்களாகப் புகுத்தியுள்ளனர். அப்போது தான் இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்ற இணைவைப்பை நியாயப்படுத்தும் முயற்சியைத் தொடங்க முடியும்.

சிம்மாசனத்தை யார் கொண்டு வருவார் என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டபோது இப்ரீத் என்ற ஜின், “நீங்கள் எழுவதற்கு முன்பு கொண்டு வருகிறேன்’ என்று கூறியது. இதன் பின்னே வேத ஞானம் வழங்கப்பட்டது, “நான் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுவருகிறேன்’ என்று கூறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது மனிதரல்ல. ஜின் என்பது தான் பல காரணங்களால் சரியான கருத்தாகும்.

அல்லாஹ் மனிதர்களைக் காட்டிலும் ஜின்களை வலிமையான படைப்பாகப் படைத்துள்ளான். விண்ணுலகத்தில் பல லட்சக்கணக்கான கி.மீ. பயணத்தைக் குறுகிய நேரத்தில் செய்யும் ஆற்றலையும் அல்லாஹ் ஜின்களுக்கு வழங்கியுள்ளான். இந்த ஆற்றல் தீய ஜின்களுக்குக் கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே தான் ஜின்கள் வானுலகத்தில் பேசப்படும் விஷயங்களை ஒட்டுக்கேட்பதற்காகப் பயணம் செய்கின்றன. ஜின்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்பதற்குக் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் ஆதாரமாக உள்ளது. சாதனம் ஏதுமின்றி விண்ணில் சுயமாக நீண்டதூரம் சுலபமாகப் பயணம் செய்யும் இத்தகைய சக்தியை அல்லாஹ் மனித இனத்திற்கு வழங்கவில்லை.

இத்தகைய ஜின்களை அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான். நபி சுலைமான் (அலை) அவர்களால் செய்ய முடியாத காரியங்களை ஜின்கள் அவர்களுக்கு செய்து கொடுத்தன. எனவே தான் சுலைமான் (அலை) அவர்கள்  ஜின்களைப் பார்த்து யார் சிம்மாசனத்தை கொண்டு வருவார்? என்று கேட்டார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்ரீத் என்ற ஜின் பதிலளித்துள்ளது. எனவே சுலைமான் (அலை) அவர்கள் ஜின்களைப் பார்த்துத் தான் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

அல்லாஹ் எதையும் சுருக்கமாக பேசக்கூடியவன். இப்ரீத் என்ற ஜின் கூறியது என்று சொன்ன பிறகு வேத ஞானமுள்ள ஒருவர் கூறினார் என்றாலே அந்த ஒருவர் ஜின் தான் என்பதை எளிதாக விளங்க முடியும். அந்த ஒருவரும் ஜின் தான் என மறுபடியும் கூற வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ஐந்தும் ஐந்தும் எத்தனை என்று ஆசிரியர் கேட்டார். ஒரு மாணவன் எட்டு என்று கூறினான். அறிவுள்ள ஒருவன் பத்து என்று கூறினான் என்று சொன்னால் அறிவுள்ள ஒருவன் என்று சொல்லப்பட்டவனும் மாணவன் தான் என்பதை விபரமுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள். இதே போன்று தான் முன்பு நாம் சுட்டிக்காட்டிய வசனமும் அமைந்துள்ளது.

எனவே கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது வேதஞானமுள்ள ஜின்னே தவிர மனிதரல்ல.

இறைவாக்கை துஷ்பிரோயகம் செய்யும் பரேலவிகள்

ஒரு வாதத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர் மனிதர் என்றும் இறைநேசர் என்றும் நம்பினாலும் இவர்களின் இணைவைப்பை நியாயப்படுத்த முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் உதவி தேடியதற்கும் இவர்கள் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

இறந்தவர்களை நாம் கண்ணால் காண முடியாது. அவர்களால் நாம் பேசுவதைச் செவியுறவும் முடியாது. நாம் பேசினால் அதற்கு அவர்கள் பதிலளிக்கவுமாட்டார்கள். அவர்கள் இவ்வுலகவாழ்வை விட்டும் பிரிந்து திரையிடப்பட்ட மறைமுகமான வாழ்வுக்குள் சென்று உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேலவிகள் இத்தகையவர்களிடம் தாங்கள் விரும்பிய உதவிகளைக் கேட்கிறார்கள்.

மனதிற்குள் ரகசியமாக எங்கிருந்து கொண்டும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்தவர் உதவி செய்வார் என்று நம்புகின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கும் இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்று தான். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போன்று அப்படியே இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் முஷ்ரிக்குகளாக இருக்கிறார்கள்.

சுலைமான் (அலை) அவர்கள்  இவர்களைப் போன்று இறந்தவரிடம் உதவி தேடவில்லை. கண்களுக்குத் தெரிகின்ற, சுலைமான் (அலை) பேசுவதைக் கேட்கின்ற, அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கின்ற ஒருவரிடத்திலேயே சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறினார்கள். எங்கிருந்து அழைத்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனைபேர் அழைத்தாலும் என்ற வாதத்திற்கே இங்கு வேலையில்லை. சுலைமான் (அலை) அவர்கள் இந்த அடிப்படையில் யாரையும் அழைக்கவில்லை.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டு வருமாறு கூறிய போது அந்த இறைநேசர் (இவர்களின் வாதப்படி) “நான் கொண்டு வருகிறேன்’ என்று பதிலளித்தார். அதை சுலைமான் (அலை) அவர்கள் தம் காதால் கேட்டார்கள். மேலும் சுலைமான் (அலை) அவர்களின் கண்களுக்கு முன்னால் அந்த சிம்மாசனத்தையும் கொண்டு வந்தார்.

அவ்லியாக்களின் அழைப்புக்கு இதை ஆதாரமாகக் காட்டும் இந்த பரேலவிகள், “இறந்தவர்கள் நமது பிரார்த்தனைக்கு எழுந்து வந்து நாம் கேட்கும் விதத்தில் பதிலளிப்பார்களா? நமது தேவைகளை நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நிறைவேற்றுவார்களா?’ ஆகிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அவ்லியாவே! எனக்குக் குழந்தை பாக்கியத்தைக் கொடுங்கள் என்று நான் கேட்டால் அவ்லியா எனக்கு முன்னால் தோன்றி நான் தருகிறேன் என்று சொல்ல வேண்டும். அவர் சொன்னது போல் அது கிடைக்கவும் வேண்டும். இதை நாம் உணரும் விதத்தில் இருந்தாலே இறந்தவர்களிடம் கேட்க முடியும். ஆனால் இது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. எனவே இறந்தவர்களிடம் நாம் தேவைகளை முறையிடவும் முடியாது.

சுலைமான் (அலை) அவர்கள் சிம்மாசனத்தைக் கொண்டுவருமாறு கூறியது சாதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் பேசுவதைப் போன்று தான் அமைந்துள்ளது. இவர்கள் இறந்தவர்களை அழைப்பது போன்ற அழைப்பு இல்லை.

நபி சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் கூறுகிறான். இதை நாம் நம்ப வேண்டும்.

சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்தது என்பதால் அவ்லியா (?) என்று இவர்கள் யாருக்கெல்லாம் பட்டம் தருகின்றார்களோ அவர்கள் அனைவரும் இத்தகைய ஆற்றல் உள்ளவர்கள் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.

நீங்கள் ஒரு மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டால் அந்த மனிதருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்பதைத் தாண்டி வேறு எதையும் அதிலிருந்து புரிய முடியாது. அவரல்லாத பலருக்கும் குறிப்பாக இன்னாருக்கும் இன்னாருக்கும் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தீர்கள் என்று அறிவுள்ள யாரும் புரிய மாட்டார்கள்.

ஆனால் இந்த பரேலேவிகள் அல்லாஹ்வுடைய ஆற்றல் விசயத்தில் இவ்வாறு புரியாமல் ஏறுக்குமாறாகப் புரிந்ததால் இணைவைப்புக்குக் குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டுகிறார்கள்.

இன்னாருக்கு இந்த ஆற்றல் இருந்தது என்று அல்லாஹ் சொன்னால் நாம் நம்ப வேண்டும். இந்த பரேலவிகள் சொன்னால் நாம் நம்ப வேண்டுமா? இவர்களாக அல்லாஹ் இந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான். அந்த அவ்லியாவுக்கு வழங்கியுள்ளான் என்று துணிந்து கூறுகிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தை இவர்கள் கையில் எடுக்க முனைகிறார்கள். அல்லாஹ் இந்த அவ்லியாக்களுக்கு வழங்கும் போது அதை இவர்கள் பார்த்தார்களா? குருட்டு நம்பிக்கையைத் தவிர இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது?

அல்லாஹ் நபிமார்களில் சிலருக்கு குறிப்பிட்ட சில ஆற்றலை விஷேசமாக வழங்கிய போது மக்கள் அனைவரும் வெளிப்படையாகக் கண்டு அது உண்மை என்று நம்பும் விதத்தில் அந்த ஆற்றல் இருந்தது. நபி ஈசா (அலை) அவர்களுக்கு குருடருக்குப் பார்வை கொடுப்பது, குஷ்ட நோயாளியின் தோலைச் சரிசெய்வது, இறந்தவரை உயிர்பிப்பது போன்ற ஆற்றலை வழங்கினான். ஈசா (அலை) அவர்கள் இதை மக்கள் கண்கூடாக கண்டு நம்பும் விதத்தில் மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

மூசா (அலை) அவர்களுக்கு கைத்தடியைப் பாம்பாக மாற்றும் அற்புதத்தை வழங்கினான். இதை மூசா (அலை) அவர்கள் மக்களுக்கு முன்னால் செய்து காட்டி மக்களை நம்பச் சொன்னார்கள். எனக்கு அல்லாஹ் சக்தி வழங்கியுள்ளான் என்று குருட்டுத்தனமாக நம்புங்கள் என்று அவர்கள் கூறவில்லை. இந்த சம்பவங்களை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துச் சொல்வதால் அதை நாம் கண்கூடாக பார்க்காவிட்டாலும் நம்புகிறோம்.

எனவே இறந்தவர்களுக்குப் பலவகையான ஆற்றல்கள் உண்டு என்றால் அதை நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தி நிரூபிப்பது இந்த பரேலவிகளின் கடமையாகும். ஆனால் இவர்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது. பிறகு ஏன் அவ்லியாக்களுக்கு (?) அது முடியும். இது முடியும் என்று குருட்டு நம்பிக்கை வைத்துக் கதை விட வேண்டும்?

மூசா (அலை) அவர்களுடை கைத்தடி பாம்பாக மாறியது என்பதால் உலகில் உள்ள மற்ற கைத்தடிகளும் பாம்பாக மாறும் என்று கூறுவதை மிஞ்சிய அறிவீனம் எதுவுமில்லை. ஈசா (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் மற்றவர்களும் உயிர்பிப்பவார்கள் என்று அறிவுள்ளவன் கூறமாட்டான்.

ஆனால் இந்த பரேலேவிகள் சுலைமான் நபி காலத்தில் ஒருவருக்கு ஒரு ஆற்றல் இருந்ததால் இறந்துவிட்ட இறைநேசர்களுக்கும் (?) இந்த ஆற்றல் உண்டு; எனவே அவர்களிடம் நேரடியாக உதவி தேடலாம் என்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை அறிய முடிகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் குறிப்பிட்ட ஆற்றல் ஒருவரிடம் இருந்ததைக் கண்ட போது அதற்குரிய வேலையைச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இவர்களோ அவ்லியாக்களிடம் (?) கணக்கு வழக்கில்லாமல் கண்டதையும் கேட்கிறார்கள். அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய விஷயங்களையும் கேட்கிறார்கள்.

அல்லாஹ் வேறு, அவ்லியாக்கள் வேறு என்பதெல்லாம் இவர்களின் வெறும் வார்த்தை தான். இவர்களின் நம்பிக்கையைப் பார்த்தால் அல்லாஹ்விற்குரிய அத்தனை ஆற்றல்களையும் அவ்லியாக்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.

சிலை வழிபாட்டிற்கும் இவர்களின் கப்று வழிபாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை கல்லின் மீது வைத்தால் ஷிர்க் என்றும் குஃப்ர் என்றும் கூறும் இவர்கள் அதே நம்பிக்கையை இறந்தவர்களின் மீது வைத்தால் ஷிர்க் இல்லை என்கிறார்கள்.

பாருங்கள்! இறந்தவர்களின் பெயரால் ஷைத்தான் இவர்களை எப்படி ஷிர்க்கில் தள்ளுகிறான்?

யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குக் குர்ஆனில் இன்னொரு வசனத்தையும் இவர்கள் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

“எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்)

நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:96

யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை இழந்த தனது தந்தையின் முகத்தில் தனது சட்டையைப் போடுமாறு கொடுத்து விடுகிறார்கள். சட்டையைப் போட்டவுடன் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

பார்வை இல்லாமல் இருந்த யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை கிடைக்க உதவியுள்ளார்கள். ஒரு நபி இன்னொரு நபிக்கு உதவி செய்ய முடியும் என்பதால் அவ்லியாக்களும் நமக்கு உதவி செய்வார்கள். எனவே நாம் அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பது இவர்களின் தரங்கெட்ட வாதம்.

முதலில் யூசுஃப் (அலை) அவர்களுக்கும் யஃகூப் (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவம் உலகத்தில் இருவரும் உயிருடன் இருக்கும் போது நடந்தது. யஃகூப் (அலை) அவர்கள் யூசுஃப் (அலை) அவர்களிடம் கண் பார்வையை எனக்குத் திருப்பி அளியுங்கள் என்று பிரார்த்தனை செய்யவில்லை.

எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்த பிறகும் அவ்லியாக்கள் உதவி செய்வார்கள் என்ற வாதத்திற்கும் இந்த நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவர்கள் செய்யும் ஷிர்க்கை நிலைநாட்ட குர்ஆன் வசனத்துடன் அநியாயமாக விளையாடுகிறார்கள்.

நபிமார்கள் எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்ய மாட்டார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தமது சட்டையை தந்தையின் முகத்தில் போட வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதால் அவ்வாறு யூசுஃப் (அலை) அவர்கள் செய்தார்கள். யஃகூப் (அலை) அவர்களுக்கும் பார்வை கிடைத்தது.

யஃகூப் (அலை) அவர்களுக்கு இவ்வாறு பார்வை கிடைக்கும் என்பதை யஃகூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்கூட்டியே அறிவித்துள்ளான். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.

நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். “நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:96

அல்லாஹ் ஏற்படுத்திய ஏற்பாட்டின் படியே யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. நபி யூசுஃப் (அலை) அவர்கள் சுயமாக இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அவ்வாறு செய்திருந்தால் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வையும் கிடைத்திருக்காது. எங்கிருந்து கொண்டும் குணமளிக்க முடியும் என்றால் தனது சட்டையைக் கொடுத்தனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்து அதன் படி அவர்கள் செய்த காரணத்தினாலேயே பார்வை கிடைத்தது.

அய்யூப் (அலை) அவர்கள் நோய்வாய்பட்டிருந்த போது புல்லை எடுத்து உடலில் அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அய்யூப் (அலை) அவர்கள் அல்லாஹ் கூறியவாறு செய்தார்கள். நோய் குணமாயிற்று. இதை அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கின்றான்.

இந்நிகழ்விலிருந்து நோயை நீக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு இருந்தது என்று புரிவோமா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் நோயை குணப்படுத்தும் சக்தி பெற்றிருந்தார்கள் என்று புரிவோமா?

மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது. அந்த கைத்தடி மூலம் அவர்கள் கடலை பிளந்தார்கள். இவையெல்லாம் கைத்தடியின் மகிமையினாலோ மூசா (அலை) அவர்களின் ஆற்றலினாலோ நடக்கவில்லை. அல்லாஹ் கைத்தடிக்கும் அதை வைத்திருந்த மூசா (அலை) அவர்களுக்கும் உத்தரவிட்ட காரணத்தாலே இவ்வாறு நடந்தது.

இதே போன்று தான் யூசுஃப் (அலை) தனது சட்டையை யஃகூப் (அலை) அவர்களின் முகத்தில் போட வேண்டும் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. இதன் மூலம் அல்லாஹ் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை தர விரும்பியுள்ளான். இதை அல்லாஹ் குர்ஆனில் சொன்னதால் நாம் நம்புகிறோம்.

இது போன்ற அற்புதங்களை நபிமார்களானாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நிகழ்த்த முடியும் என்று குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் கூறுகின்றது. நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தினாலும் அதன் அதிகாரம் முழுவதும் அல்லாஹ்விடம் தான் உள்ளது.

நபியானாலும் விரும்பிய நேரத்தில் விரும்பிய அற்புதங்களைச் செய்ய முடியாது. எந்த நேரத்தில் எந்த அற்புதத்தைச் செய்ய அல்லாஹ் நாடுகிறானோ அப்போது தான் அது நடந்தேறும். இந்த அடிப்படையில் தான் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

இந்நிகழ்வை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். எனவே நம்புகிறோம். நம்ப வேண்டும். ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா, அப்துல் காதிர் ஜீலானீ இன்னும் இவர்களின் அவ்லியா பட்டியலில் வரக்கூடியவர்கள் இது போன்ற அற்புதங்களைச் செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்று அல்லாஹ் நம்பச் சொல்கிறானா? ஈமான் கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

ஒரு பேச்சிற்கு இவர்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய ஆற்றல் இவர்களுக்கு இருந்தது என்று குருட்டுத்தனமாக நம்பினாலும் இன்றைக்கு இறந்துவிட்ட இவர்களை உயிருடன் இருக்கும் நாம் எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் நமது அழைப்பை ஏற்று உதவி செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

மறுமையில் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்லவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஆனால் பரிந்துரை செய்பவர்கள் யார்? அவர்கள் யாருக்கு பரிந்துரை செய்வார்கள் என்பவை அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. இதை யாரும் அறிய முடியாது.

ஆனால் மக்கத்து காஃபிர்கள் தாங்களாக சிலரை, இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பி அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். இத்தகையவர்களைத் தான் அல்லாஹ் முஷ்ரிக்குகள் என்று குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மக்கத்து காஃபிர்களின் இந்தச் செயலுக்கும் இந்தப் பரேலேவிகளின் செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அல்லாஹ்வுடைய அதிகாரங்களில் அவன் கூறாமல் இவர்களாக இந்த அவ்லியாவுக்கு (?) அனைத்து ஆற்றலும் உள்ளது என்று நம்பி மக்கத்து இணைவைப்பாளர்களைப் போல் உதவி தேடுகிறார்கள்.

பரேலேவிகளே! உங்களின் கற்பனையும் மனோ இச்சையும் கட்டுக்கதைகளும் தான் மார்க்க ஆதாரமா? நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள்? யாரது அதிகாரத்தில் கை வைக்கின்றீர்கள்? அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்வதால் உங்களுக்கு என்ன கேடு வரப்போகின்றது? என்பதை சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகளைக் கூட அவ்லியாக்களின் (?) பொய்யான ஆற்றலை நிறுவுவதற்கு முடிச்சுபோடுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அல்லாஹ்வின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மாறாக இவர்களுக்கு அவ்லியா பைத்தியம் பிடித்துவிட்டது என்பது தான் உண்மை.

இந்த பரேலேவிகள் இறந்துவிட்ட அவ்லியாக்கள் (?) உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு இது போன்ற சொத்தை வாதங்களைத் தவிர்த்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. இவர்கள் சம்பந்தமில்லாத இதுபோன்ற வசனங்களைத் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் கொள்கை வழிகேட்டின் உச்சியில் உள்ளது என்பதையே இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

இவர்கள் குர்ஆனிலிருந்து காட்டிய இரண்டு வசனங்கள் தொடர்பாக மட்டுமே இந்தக் கட்டுரையில் பதிலளித்துள்ளோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய பதிலை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் அறிந்துகொள்வோம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 23

அன்னையார் மீது அவதூறு

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான்.

அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள அந்தச் சம்பவத்தை இப்போது காண்போம்,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

நான் (சிவிகையி-ருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்தி-ருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெ-ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள்.

படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர்நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன்.

ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், “இன்னா-ல் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன்.

பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்றுவிடும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது.

இறுதியில், நான் (நோயி-ருந்து குணமடைந்துவிட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த “மனாஸிஉஎன்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது.

நானும் அபூருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், “மிஸ்தஹ் நாசமாகட்டும்என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்-விட்டாய். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்என்று கூறினேன். அதற்கு அவர், “அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது.

நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் “என் தாய்தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய்தந்தையரிடம் சென்றேன்.

என் தாயாரிடம், “மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், “என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகு மிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளது சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்என்று கூறினார்கள்.

நான், “சுப்ஹானல்லாஹ்…! (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை(என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது “வஹீ‘ (தற்கா-கமாக) நின்று போயிருந்தது.

உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்களோ, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), “தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லைஎன்று பதில் கூறினார்.

உடனே, அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி(தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டி-ருக்கும் போதே தவிர) வந்ததில்லைஎன்று கூறினார்கள்.

உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனைத் தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகின்றேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்யவேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகின்றோம்என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாதுஎன்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டி விட்டது. உடனே, உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, “நீர் தாம் பெய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரி-ருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமாகி விட்டார்கள்.

அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய்தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)என்று கூறிவிட்டு, “ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக்  குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு.  ஏனெனில்அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், “அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லைஎன்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், “அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்என்று சொன்னேன். அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லைஎன்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனி-ருந்து அதிமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன்.

ஆகவே, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். …..நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்….. நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையையே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன்; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (அல்குர்ஆன் 12:18)” என்று கூறினேன்.

பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல; மிகச் சாதாரணமானவள்தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக்கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே – வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்தி-ருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டி-ருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியி-ருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, “ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்என்று கூறினார்கள். என் தாயார், “அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்என்று கூறினார்கள். நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்என்றேன். அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான்.

என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன்என்று கூறினார்கள்… மிஸ்தஹ் பின் உஸாஸா  தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். உடனே அல்லாஹ், “”உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்தோருக்கும் உதவ மாட்டோம்என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.என்னும்  (24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் என் விஷயத்தில் (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். “ஸைனபே!  நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே!  என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் தாம் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.

நூல்: புகாரி 2661

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டு விட்டது. மறைவான செய்தி நபியவர்களுக்குத் தெரியும் என்றிருந்தால் தமது மனைவி சம்பந்தப்பட்ட மறைவான செய்திகள் முதலில் தெரிந்திருக்க வேண்டும். இது அவர்களுடைய நிம்மதியை குலைக்கக்கூடிய விஷயமாக இருக்கிறதா? இல்லையா? அவர்களுடைய மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா? இல்லையா? மறைவான விஷயத்தை நபியவர்கள் அறிபவர்களாக இருந்திருந்தால் அவர்களுடைய உள்ளத்தில் கடுகளவு கூட சந்தேகமே வந்திருக்காதே!

இந்தச் சம்பவத்தில் உஸாமா (ரலி)-யிடமும், அலீ (ரலி)-யிடமும் எதற்காக நபியவர்கள் ஆலோசனை கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஆயிஷா மீது அவதூறு சொல்லப்பட்ட செய்தி உண்மையா? பொய்யா என்பது தெரியவில்லை  என்பதுதான் காரணம்.

ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்; அதற்காக நீ ஏன் கண் கலங்குகிறாய்? ஏன் கவலையடைகின்றாய்? உன் மீது எந்த தப்பும் கிடையாது என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மற்ற மனிதர்களுக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் அவர்களுக்கும் வருகிறது. ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு சலாம் மட்டும் சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் திரும்பி விடுகிறார்கள்.

தம்முடைய தோழர்களிடத்தில் இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார்கள். இந்த நிலை ஒரு மாதம் வரை நீடிக்கிறது. இதுகுறித்து அவர்களுக்கு வஹீயும் வரவில்லை. இந்த வதந்தி பரவ ஆரம்பித்து ஒரு மாத காலமாக மதீனாவில் இதுதான் முக்கியச் செய்தியாக – சூடான செய்தியாக மக்களிடத்தில் பேசப்பட்டு வந்தது.

நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, “நீ அந்தத் தவறைச் செய்யாமலிருந்தால் அல்லாஹ் உன்னைத் தூய்மையானவள் என்று காட்டுவான். ஒருவேளை இந்த மக்கள் எதை அவதூறாகப் பரப்புகின்றார்களோ அந்தத் தவறை நீ செய்பவளாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ பாவமன்னிப்பு தேடிவிடு’ என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? நீ தவறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவான். நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து கொள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்குக் காரணம் என்ன? இந்த அவதூறான வதந்தி அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பது தெரியவில்லையா? தமது மனைவி ஒரு அப்பழுக்கற்றவர் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனதா? இல்லையா?

இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பின்பு தான் அல்லாஹ் அவதூறு சம்பந்தமான  (அல்குர்ஆன் 24:11-24) வசனங்களை இறக்குகின்றான். இதற்கு பிறகு நபியவர்கள் ஆயிஷா மீது அவதூறு பரப்பியவர்களுக்குத் தண்டனை வழங்குகிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இறங்கிய பிறகுதான் மதீனாவில் பரப்பப்பட்ட இந்தப் பிரச்சினை ஓய்கிறது. இது பொய்யான அவதூறு என்று அனைவருக்கும் விளங்குகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் நாம் முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் நபியவர்களுக்கு ஒரு மானப் பிரச்சனை தானே! இந்த அவதூறு பரப்பப்பட்ட உடனேயே அல்லாஹ் இதைப் பொய் என்று நிருபித்திருக்க வேண்டும். அல்லது ஒரு மாத காலம் வரைக்கும் தாமதிக்காமல் அடுத்த நாளே ஜிப்ரயீலை அனுப்பி, அவதூறு சம்பந்தமான இந்த வசனங்களை இறக்கி, “நீர் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் அவதூறு; பொய்’ என்று அவர்களுடைய மனதை சமாதானப் படுத்தியிருக்கலாம்.

அப்படிச் செய்திருந்தால் மற்ற 29 நாட்கள் கவலைப்படுவதிலிருந்து அவர்களது உள்ளம் நிம்மதி அடைந்திருக்கும். ஆனால் இதை அல்லாஹ் இவ்வளவு பிற்படுத்துவதற்குக் காரணம் என்ன? முஹம்மது ஒரு மனிதர் தான்; அவருக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அதை அவரால் அறியவும் முடியாது என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்துவதற்காகத் தான்.

மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு மறைவான விஷயங்கள் தெரியாதோ அதே போலத் தான் இவருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது. அதனால்தான் தன் மனைவி மீது கூறப்பட்ட அவதூறுக்காக மற்ற மனிதர்கள் கவலைப்படுவதைப் போன்று இவரும் கவலைப்படுகிறார். அவர் கடவுள் தன்மை – இறைத் தன்மை கொடுக்கப்பட்டு அனுப்பப்படவில்லை என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த அவதூறு செய்தியை ஊர் முழுக்கப் பரவ வைத்து ஒரு மாதத்திற்குப் பின்னால் இதைப் பொய் என்றும், ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர் என்றும் அல்லாஹ் நிருபிக்கிறான்.

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிரோடு இருந்து, தாம் வாழுகின்ற மதீனாவில் தமது கண் முன்னால் இருந்து, எப்போதும் அவர்களை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது அவதூறு என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இறைநேசர் என்று சொல்லப்படுபவர் எப்பொழுதோ மரணித்து, அடக்கம் செய்து, அவருடைய எலும்பு கூட மிஞ்சாத நிலையில் அவர் மண்ணறையில் இருந்து கொண்டே நம்மைப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.

நாகூரில் உள்ள கப்ரில் இருந்து கொண்டே இங்கு நாம் செய்யக்கூடிய செயல்களைப் பார்ப்பார். பக்தாதில் உள்ள கப்ரில் இருந்து கொண்டு இங்கிருந்து நாம் கேட்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவார். அஜ்மீரில் உள்ள தர்காவில் இருந்து கொண்டே இங்கிருந்து நாம் பேசுவதைச் செவியேற்பார் என்று சொல்கின்றோம்.

ஆனால் இறைத்தூதருக்கே தமது மனைவி மீது சொல்லப்பட்ட இந்த அவதூறு பொய் என்பது தெரியாமல் போய் விட்டதே! மனைவி மீது சந்தேகம் கொள்கிறார்கள். அதனால் கவலையடைகின்றார்கள். இதையெல்லாம் பார்த்தும் நபியவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று எப்படி நம்மால் சொல்ல முடிகிறது? இறந்து போனவருக்கு இத்தகைய ஆற்றல் இருக்கிறது என்று நாம் எப்படி சொல்ல முடியும்.

உயிரோடு இருப்பவருக்கே ஒரு இடத்தில் இருந்து கொண்டு வேறொரு இடத்தில் நடப்பதை அறிய முடியாது என்று சொன்னால் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட ஒருவரால் எவ்வாறு மறைவானதை அறிய முடியும். நாகூரில் அடக்கம் செய்யப்பட்ட மகான் உயிரோடு இல்லை என்பது தனி விஷயம். அவ்வாறு அவர் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவர் அங்கிருந்து மற்ற ஊர்களில் அல்லது மாவட்டங்களில் நடப்பதை அறிய முடியுமா? அந்த ஆற்றலை அல்லாஹ் அவருக்கு கொடுத்திருக்கிறானா?

இங்கிருந்து கொண்டு, நாகூர் ஆண்டவரே எனக்கு வயிற்று வலிக்கிறது என்று சொன்னால் அவர் அதனைச் செவியேற்று வயிற்று வலியை நீக்கி வைப்பாரா? அவரால் வலியை நீக்க முடியுமா? என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவரால் இதை அறிய முடியுமா? அவரால் உலகத்தில் நடக்ககூடிய அனைத்தையும் அறிய முடியும், நிறைவேற்ற முடியும் என்ற இந்த வாதம் அறிவுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா? நம்முடைய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இதை ஒப்புக் கொள்ளுமா?

ஆக, இந்த ஒரு சம்பவத்திலிருந்தே நபிகளாருக்கு மறைவான விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதும், அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்ததில்லை என்பதும், நபிகளார் மற்றும் வானவர்கள் உட்பட இறைவனால் படைக்கப்பட்ட உலகில் உள்ள எவருக்கும் எதற்கும் அல்லாஹ்வைத் தவிர மறைவான விஷயத்தை அறிய முடியாது என்பதும் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி….

சுவனத்தின் நிழலும் நிழலில்லா நரகமும்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

இந்தக் கோடை காலத்தில் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து வல்ல இறைவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் நிழலும் உள்ளடங்கும். இறைவனின் அருட்கொடையான இந்த நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழிலும் பார்ப்போம்.

சுவனத்தில் நிழல்

(இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் விரும்புகிற கனிகளிலும் இருப்பார்கள். “நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (எனக் கூறப்படும். இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

(திருக்குர்ஆன் 77:41-44)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம்  நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, “உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், “மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவாஎன்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், “என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவாஎன்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், “என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக் கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்என்று கூறுவார். அதற்கு இறைவன், “மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், “என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!என்பார். அதற்கு இறைவன், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?” என்று கேட்பான். அதற்கு அவர், “என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?” என்று கேட்பார். அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்என இறைவன் கூறுவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் (310, 311)

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழ-ல் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புஹாரி (6552)

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழ-ல்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) (ரலி), நூல்: புஹாரி (6553)

நிழலே இல்லாத நரகம்

இறைமறுப்பிலும், இணைவைப்பிலும் வீழ்ந்து வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிக் கொள்வோர் மறுமையில் நரகில் வீழ்வார்கள் என்று அல்லாஹ் திருமறையில் எச்சரிக்கிறான். அத்துடன், அந்த நரகத்தின் கடுமையை எடுத்துச் சொல்லி, அதில் கொண்டு போய்ச் சேர்க்கும் காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான்.

குடிப்பதற்குக் கொதிநீர், சாப்பிடுவதற்குக் கற்றாழைச் செடி மற்றும் அணிவதற்கு நெருப்பு ஆடை என நரகில் இருக்கும் கொடுமையை விளக்கிப் பட்டியல் போடும்போது, அங்கு அடர்ந்த புகையே நிழலாக இருக்கும் என்று குறிப்பிடுகிறான். அது எந்த நிலையிலும் அங்கு இருப்பவர்களுக்கு அமைதியை அளிக்காது; அவர்களை எந்த வகையிலும் பாதுகாக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.

அத்தகைய நிழலற்ற நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி நம்பிக்கையாளர்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நரகில் விழச் செய்யும் காரியங்களை விட்டும் நீங்கிக் கொள்ள வேண்டும்.

(அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 56:41-43)

நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்! அது நிழல் தரக் கூடியது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

(திருக்குர்ஆன் 77:30-32)

நிழலும் நேர்ச்சையும்

இறைவன் நமக்காக கொடுத்திருக்கும் இன்பங்களை அவனது கட்டளைக்கு உட்பட்ட வகையில் அனுபவிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. இன்னும் சொல்வதெனில், நமக்காகவே உலகிலுள்ள அனைத்தையும் படைத்திருப்பதாக வல்ல இறைவன் தமது அருள்மறையில் குறிப்பிடுகிறான். எனவே, இறைவன் நமக்கு அனுமதித்திருக்கும் அருட்கொடைகளுள் எந்தவொன்றையும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நமக்கு நாமே தடைசெய்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு, நமக்காக வழங்கப்பட்டிருக்கும் இன்பங்களை தடுக்கப்பட்டதாக சித்தரிக்கும் எந்தவொரு செயலையும் இறைவனின் பெயரால் செய்தாலும் அதுவும் வன்மையாகக் கண்டிப்பதற்குரிய ஒன்றே ஆகும். இத்தகைய வரம்பு மீறுதலை ஒருபோதும் இறைவன் விரும்பவும் மாட்டான்; அதற்குக் கூலி வழங்கவும் மாட்டான் என்பதே நிதர்சனம். அந்த வகையில் எனது இறைவனின் அருளைப் பெறுவதற்காக  எப்போதும் நிழலில் நிற்கவே மாட்டேன்; எனது அனைத்துக் காரியங்களும் வெயிலில்தான் இருக்கும் என்று ஒருவர் சொன்னால் அதற்கேற்ப செயல்பட்டால் அவரை பழுத்த பக்திப் பழமாக பார்க்கக் கூடாது. அவர் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காதவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “(இவர் பெயர்) அபூஇஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்து கொண்டுள்ளார்என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி (6704)

நிழல்களை நாசப்படுத்தாதீர்

இஸலாமிய மார்க்கம் மக்கள் நலம் நாடும் வாழ்க்கைத் திட்டம் என்பதை நாம் அறிவோம். இந்த மார்க்கம் மட்டுமே மக்களுக்கு நன்மை தரும் காரியங்கள் எதுவாக இருப்பினும் அவற்றைச் செய்வதற்கு ஆர்வத்தை அளிக்கிறது. அதே வேளையில் மக்களுக்குத் தொல்லைகளை, இடையூறுகளைக் கொடுக்கும் காரியங்கள் எதுவாயினும் அவற்றைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறது.

எந்தளவிற்கெனில், பொதுநலத்தைப் போதிப்பதன் பிரதிபலிப்பாக சில தீமையான காரியங்களைப் பற்றிச் சொல்லும் போது, இந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனின் சாபம் கிடைக்கிறது என்று இஸ்லாம் வன்மையாக எச்சரிக்கிறது. அத்ததைய காôரியங்களில் ஒன்று மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும் நிழல்களில் அசுத்தம் செய்வதாகும். இந்த இழிச்செயல் பாமர மக்கள் பெருகியிருக்கும் கிராமம் முதல் படித்தவர்கள் நிறைந்திருக்கும் நகரம் வரை அனைத்துத் தரப்பு மக்கள் வாழும் இடங்களிலும் சர்வசாதாரணமாக அரங்கேறுகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலைவிட்டும் அனைவரும் அதிலும் குறிப்பாக நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக விலகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (448)

நிழல்களைத் தடுக்காதீர்

இறைவன் கொடுத்திருக்கும் இன்பங்களை சுயநலத்தோடு தம்மோடு தடுத்து கொள்ளும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, எந்த விஷயங்களில் கண்டிப்பாக  பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டுமோ அவற்றில் கருமித்தனத்தை கடைபிடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்டு கூறுவதெனில், தங்களது இடத்தில் இருக்கும் நிழல்களில் தொல்லை தராத வகையில் பிற ஜீவராசிகள் வெயிலுக்காக ஒதுங்குவதற்குக்கூட இடமளிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

இத்தகையவர்கள் தங்களது வீட்டின் அல்லது தோட்டத்தின் நிழலில் பாதைசாரிகள் சிறிது நேரம் நின்று ஒய்வு எடுத்தாலும் அவர்களை விரட்டிவிடுகிறார்கள். இவ்வாறு நிழல்கள் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டும் நபர்கள் பின்வரும் செய்திகளிலிருந்து படிப்பினை பெற்றுத் திருந்த வேண்டும். மேலும், பிறருக்கு நிழல் அளிப்பதும், அதற்கேற்ப மரம் நடுதல் போன்ற காரியங்களைச் செய்வதும் மறுமையில் நமக்கு நன்மை தரும் என்பதையும் விளங்கி கொள்ளலாம்.

ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் “உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்என்று கூறினேன்.

அவ்வாறே அம்மனிதர் வந்து, “அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், “உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?” என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.

அவருக்கே (எனது) அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்த போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, “அதை எனக்கு அன்பளிப்பாக வழங்குஎன்று கேட்டார். நான் “இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்என்று கூறினேன்.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி)

நூல்: முஸ்லிம் (4398)

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3159)

நிலையற்ற நிழல் உலகம்

மறுமையில் வெற்றி பெறுவோர் யார்? தோல்வியை அடைவோர் யார்? என்று நம்மைச் சோதிப்பதற்காகவே இந்த உலக வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரமான வாழ்க்கை மறுமை வாழ்க்கையே தவிர இந்த உலக வாழ்க்கையல்ல. இந்த உண்மையை உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏராளமான செய்திகள் பல்வேறு கோணத்தில் குர்ஆன் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான உதாரணத்தின் மூலம் இந்த உணர்வை நமக்குள் பதியச் செய்கிறார்கள்.

தொலை தூரமாக செல்லும் பயணி ஒருவர், ஒரு மரத்தின் நிழலில் கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்த பிறகு, அதை விட்டும் பிரிந்து சென்று விடுவதைப் போன்றே இந்த உலக வாழ்க்கை ஆகும். அனைவருமே இந்த உலகில் சில காலம் இருந்த பின்னர் இதை விட்டும் சென்றுவிடுவோம். எனவே, இந்த உலகமும் உலக வாழ்வும் நிரந்தரமற்றது என்பதை விளங்கி, நாம்  மறுமை வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். உலக வாழ்வை விட மறுமை வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடினமான பாயின் மீது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அது அவர்களுடைய தோள்பட்டையின் ஓரத்தில் தாரையை ஏற்படுத்தியிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்விழித்த போது அவரது தோள்பட்டையை தடவிக் கொடுத்த நிலையில், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டிருக்கக் கூடாதா? நாங்கள் இந்தக் கடினமான பாயின் மீது ஏதேனுமொன்றை (விரிப்பாக) விரித்திருப்போமே?” என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உதாரணம் ஒரு பயணி ஆவார். அவர் ஒரு மரத்தின் அடியில் நிழல் பெறுகிறார். பிறகு (அதிலே) ஓய்வு எடுக்கிறார். பிறகு அதை விட்டுச் சென்று விடுகிறார். இதுவே எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்புஎன பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: அஹ்மத் (3525)

அகிலத்திலுள்ள எந்தவொன்றையும் அல்லாஹ் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கவில்லை. மாறாக, ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சரியான மறுக்க முடியாத காரணம் மறைந்திருக்கிறது. அந்த வகையில் அகிலத்தின் இறைவனை அறியவும் அவனது ஆற்றலை விளங்கவும் நிழலும் ஒரு வழியாக, வாய்ப்பாக இருக்கிறது. இத்தகைய நிழல் சம்பந்தமாக மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை அறிந்து கொண்டோம். மேலும் நிழல் விஷயத்தில் நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்களையும் தெரிந்து கொண்டோம். நாமறிந்த செய்திகள் நமக்குப் பயனளிக்கும் வகையில் வாழ்ந்து இரு உலகிலும் வெற்றி பெறுவோமாக! அதற்கு ஏக இறைவன் நமக்குத் துணை புரிவானாக!