ஏகத்துவம் – ஜூன் 2013

தலையங்கம்

ஆய்வே அமைப்பின் ஆணிவேர்

எண்பதுகளில் தவ்ஹீத் ஜமாஅத் உதயமான வேளைகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பலைகளையும் எரிமலைகளையும் அது சந்தித்தது. எதிர்ப்பவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் பயன்படுத்தி, மொத்த சக்தியையும் பிரயோகித்து மூர்க்கத்தனமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தனர். முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும் என்பது அவர்களின் மூளையில் படிந்திருந்தது. அதனால் தங்கள் கட்டுப்பாட்டிற்கும் கைவசத்திற்கும் உட்பட்ட அனைத்து காட்டுத் தர்பார்களையும் கட்டவிழ்த்து விட்டனர்.

ஏனிந்த எதிர்ப்பு? எதற்காக இந்த ஏகோபித்த தாக்குதல்கள்? காரணம், தவ்ஹீத் ஜமாஅத் தொடுத்த இருமுனைத் தாக்குதல்கள். ஒன்று இணை வைப்பு, மற்றொன்று மத்ஹபு. இவ்விரண்டிற்கும் எதிரான இருமுனைத் தாக்குதல் தான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

தமிழகத்தில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஹைத்ரூஸ் ஆலிம், தென்காசி இ.எம். அப்துர்ரஹ்மான் ஆலிம் போன்றோரும், ஆலிம் அல்லாத வட்டத்தில் சிம்மக்குரலோன் என்று பாராட்டப்பட்டவரும் மறுமலர்ச்சி ஆசிரியருமான முஹம்மது யூசுப் போன்றவர்களால் சமாதி வழிபாடு எனும் இணை வைப்பு எதிர்க்கப்பட்டது.

இந்த வகையில் இணை வைப்பிற்கு எதிரான யுத்தம் தமிழகத்திற்கு ஓரளவு அறிமுகமாகியிருந்தது. ஆனால் தமிழக முஸ்லிம்கள் அறியாததும் அறவே காணாததும் மத்ஹபுக்கு எதிரான யுத்தம். வணக்க வழிபாடுகள், வாழ்க்கை விவகாரங்கள் அனைத்திலும் மாநபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றவேண்டும்; அவர்கள் மட்டும் தான் இமாமுல் அஃலம் – மாபெரும் தலைவர் என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடனம் தமிழக முஸ்லிம்களிடம் ஒரு புது அத்தியாயமாகவும் புரட்சியாகவும் பார்க்கப்பட்டது. போர்ப் பிரகடனமாக அர்த்தம் செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் இந்தக் கொள்கைப் பிரகடனத்தை அறிவிக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவுகளில் மட்டுமே போற்றப்பட்டார்கள். ஷாபி, ஹனபி இமாம்கள் தான் பின்பற்றப்பட்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பிரகடனத்தில் தொழுகையில் உளூ, தக்பீர் தஹ்ரீமா முதல் ஸலாம் கொடுத்தல் வரையிலும் இதர வணக்கங்களிலும் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே நேர்முகமாகப் பின்பற்றப்பட்டு, அவர்கள் மட்டுமே இமாமாக ஆக்கப்பட்டார்கள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் நபி (ஸல்) அவர்களே முன்மாதிரியாகவும் முன்னுதாரணமாகவும் ஆனார்கள்.

இந்த இருமுனைத் தாக்குதல்கள், குறிப்பாக மத்ஹபுக்கு எதிரான தாக்குதல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எழச் செய்தது; எதிர்க்கச் செய்தது.

எனினும் இந்தத் தாக்குதலில் தவ்ஹீத் ஜமாஅத் வெற்றி கண்டது. அல்லாஹ்வின் அருளால் கிடைத்த இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது ஆய்வுகள் தான். மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு எந்த மத்ஹபு நூலையும் ஆதாரமாகக் கொள்ளாமல் நேரடியாகக் குர்ஆன், ஹதீஸிலிருந்து பதில் அளிக்கப்பட்டது.

இன்றளவும் ஆன்லைன் பிஜே இணைய தளத்திலும், ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி இதழ்களிலும் கேள்வி பதில்கள் அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஸே நேரடியாக ஆளப்பட்டு ஆதாரமாக அளிக்கப்படுகின்றது. மத்ஹபு நூல்கள் இல்லாமல் அணுவளவும் அசையாது என்பது சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரின் ஆழமான, அழுத்தமான நம்பிக்கை! அதைத் தகர்த்தெறிந்து, அணுவளவு அல்ல, ஆகாயமே குர்ஆன், ஹதீஸின் வசமாகும் என்று அவ்விரண்டிலிருந்தும் நேரடியாக தவ்ஹீத் ஜமாஅத் அளிக்கும் தனது பதில்கள் மூலம் நிரூபித்து வருகின்றது.

இதற்கு அடிப்படை என்ன? தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் செய்த ஆய்வுகள் தான். இணை வைப்பிற்கு எதிரான போராகட்டும்; மத்ஹபுக்கு எதிரான போராகட்டும். இரண்டுக்கும் இன்றியமையாதது ஆய்வுகள் தான். இந்த ஆய்வுகள் இல்லை என்றால் இந்த ஜமாஅத் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.

அசத்தியவாதிகள் தங்களது இணை வைப்புக் கொள்கைக்கு ஆதாரமாகக் குர்ஆன் வசனங்களைத் தான் வைத்தார்கள். அதற்குப் பதிலளிப்பதற்கு ஆய்வு அவசியமானது. ஹதீஸ்களை எடுத்து வைத்தார்கள். அதற்கும் ஆய்வு மிக மிக அவசியமானது. காரணம், பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு வந்து தங்கள் அசத்தியக் கொள்கைக்கு ஆதாரமாக நிறுத்தினார்கள். குர்ஆனைப் பொறுத்தவரை பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரை பலம், பலவீனம் என்ற நிலைகள் உண்டு.

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரங்கள், தகுதிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆய்வுத் திறனும் இருந்தே தீர வேண்டும். இதை வைத்துத் தான் விவாதக் களத்தில் வைக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் தகர்க்கப்பட்டன.

ஜகாத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு, உலகின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான நிலைப்பாடு! இந்த நிலைப்பாடு சுயமாக எடுக்கப்பட்டதல்ல. ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நிலைப்பாடாகும். ஜகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் அதாவது, ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூடக் கிடையாது.

இந்த முடிவை எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்தது, ஜகாத் தொடர்பான அனைத்து ஹதீஸ்கள், அவற்றின் அறிவிப்பாளர்களின் தரங்களை ஆய்வு செய்தது தான்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதிலும் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு வேறுபட்டே நிற்கின்றது. குர்ஆனுக்கு மாற்றமான ஒன்றை, உலகமே ஒன்று சேர்ந்து சொன்னாலும் அதை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக நிற்கின்றது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:8

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்று குர்ஆன் வசனங்கள் தெளிவாக மறுக்கின்றன என்பது தான் நமது இந்த நிலைப்பாட்டிற்குக் காரணமாகும்.

இந்தத் தெளிவான முடிவை அடையத் துணை புரிந்தது ஆய்வுகள் தான். எனவே இப்படி ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் உருவாகியாக வேண்டும்.

இப்படி ஆய்வாளர்கள் உருவாக வேண்டுமென்றால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பணிக்காக அனுப்பி வைக்க வேண்டும். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுவோர் அனைத்து நன்மைகளும் அளிக்கப்பட்ட அருட்கொடை பெற்றவராகி விடுகின்றார். அபரிமிதமான நன்மைகளைப் பெற்றவராகி விடுகின்றார்.

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 2:269

நபி (ஸல்) அவர்களும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 71

மார்க்கத்தைக் கற்று, ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்குவோருக்கு நபி (ஸல்) அவர்கள் உயரிய இடத்தை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 79

மார்க்கத்தில் ஆய்வு செய்கின்ற சாராரை நபி (ஸல்) அவர்கள், நீரை உள்வாங்கி, புற்பூண்டுகளை முளைக்கச் செய்கின்ற நிலத்திற்கு ஒப்பிட்டு, அவர்களை முதல் தரத்தில் வைக்கின்றார்கள்.

பேச்சாளர்கள் உருவாகி விடலாம். ஏனைய பேச்சாளர்களின் பிரச்சாரத்தைக் கேட்டு, அதை அப்படியே ஒப்பிவித்தால் பேச்சாளர் என்ற பெயரைப் பெற்று விடலாம். அல்லது குர்ஆன், ஹதீஸ் நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை, இதர மார்க்க விளக்க நூல்களைப் படித்து, அதன் மூலம் பேச்சாளராகி விடலாம். அப்படி ஏராளமான அழைப்பாளர்கள் உருவாகியும் இருக்கிறார்கள்.

ஆனால் ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் தேவை. அப்படி ஆய்வு செய்கின்ற அறிஞர்களை உருவாக்கும் பொறுப்பு நமது ஜமாஅத்தைச் சார்ந்த பெற்றோர்கள் மீது இருக்கின்றது. தங்கள் பிள்ளைகளை இந்த மார்க்கப் பணிக்கு அனுப்பி, ஏகத்துவக் கொள்கையைக் காக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை ஆய்வில் இருந்தவர்கள் உலகத்தை விட்டு விடை பெற்றாக வேண்டும். அதை ஈடுகட்ட இளைய தலைமுறை ஏகத்துவம் காக்க முன்வந்தாக வேண்டும்.

எனவே, அடுத்த தலைமுறையே! ஆய்வு செய்ய வா என்று கனிவாக அழைக்கின்றோம். இது பெற்றோர் துணை நின்றால் மட்டுமே சாத்தியம் என்பதைப் பணிவுடன் அவர்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————-

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?

ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை.

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

அல்குர்ஆன் 42:2

எனவே எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் அதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டும் ஒதுங்கி விட வேண்டும். இதுவே நபிவழியைக் கடைப்பிடிக்கும் அழகான வழிமுறையாகும்.

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும், மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை) கேட்டும், மூன்று யாஸீன் சூரா ஓதியும் விசேஷமான தொழுகைகளை நடத்தியும் இன்னும் இது போன்ற பல்வேறு செயல்களைச் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேஷமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

“பராஅத் இரவு’ “ஷபே பராஅத்’ என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது.

ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. பராஅத் எனும் அரபிச் சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.

நன்றி: சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, சென்னை மாவட்டம்.

“லைலத்துல் கத்ரு’ “லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் “லைலத்துல் பராஅத்’ என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ, இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.

பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதைச் செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)

மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட  100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது)

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடைவீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராயிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

ஏன் இந்தச் சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? ஷஅபான் பிறை 15 அன்று தான் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிவமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான்.

அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி. மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனைத் தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

அதில் குறிப்பாக நீடுரைச் சார்ந்த மவ்லவி. எ. முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி என்பவர் ”அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா” என்ற (மே-ஜூன் 2013) மாத இதழில் ”ஷஅபான் மாதத்தின் சாந்த நாள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஷஅபான் மாதம் 15-ம் நாள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்கு இப்னுமாஜாவில் வரக்கூடிய ஒரு ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்.

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, “பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், அவர் அடுத்ததாக ஒரு வாதத்தை வைக்கிறார். அது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில மாதங்களாக பைத்துல் முகத்திஸை நோக்கித் தொழுது வந்தார்கள். பிறகு அவர்கள் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு பொய்யைக் கட்டவிழ்த்து விடுகிறார். ஆனால் இதற்கான ஆதாரத்தை அவர் காட்டவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதோ அவர் வைக்கும் ஆதாரம்:

புனித ஷஃபான்  15ஆம் நாள் ஜெருசலத்திலுள்ள பைத்துல் மக்தஸிலிருந்து புனிதக் கஅபாவை நோக்கி கிப்லா மாற்றித் தொழும்படி உத்தரவு இறங்கியதாக அறிஞர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. அதா பின் பஸார் (ரஹ்) அவர்கள் இதை நினைவில் வைத்துத் தான் இவ்வாறு கூறுகிறார்கள். லைலத்துல் கத்ரு இரவுக்குப் பின் சிறந்த இரவு பராஅத் இரவு ஆகும்.

“கிப்லா மாற்று சம்பவம் ஷஃபான் 15 பராஅத் பெருநாளில் நிகழ்ந்ததாக பல வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு” என்று இவரே கணித்துக் கூறியிருக்கிறார்.

இவர் இதனை தன்னுடைய சொந்தக் கூற்றாகச் சொல்லியிருந்தால் கூட இதனை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால் அப்படியில்லாமல் கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஷஅபான் 15-ல் தான் நடந்தது. எனவே அந்த நாளுக்கு சிறப்பு இருக்கிறது. என்று இமாம்கள் கூறியதாக வேறு இவர் இதனை இட்டுக்கட்டிச் சொல்கிறார். இமாம்கள் எந்த நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும் தெளிவுபடுத்தவில்லை.

அப்படியே அந்தச் சம்பவம் ஷஅபான் 15-ல் தான் நடந்தது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அந்த நாள் சிறப்புக்குரிய நாள் என்றும். அந்த நாளை மையமாக வைத்து நோன்பு நோற்க வேண்டும், 100 தடவை யாஸீன் ஓத வேண்டும், இரவு முழுவதும் நின்று தொழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டித் தந்துள்ளார்களா? அதற்கான ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸாவது இருக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இவர் இதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாக வைக்கிறார்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நபிகளார் என்னோடு தங்கும் நாளில் நடுநிசியில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன். இடையில் விழிப்பு ஏற்பட்டது. என் அருமைக் கணவரை படுக்கையில் தேடினேன். அவர்கள் இல்லை. எழுந்துப் பார்த்தால் அவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக நின்று ருகூஉ செய்த அவர்கள் நெடுநேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். இரண்டாம் ரக்அத்தையும் அவ்வாறே நிறைவேற்றினார்கள். பின்பு ஸஜ்தாவிலேயே பஜ்ரு வரை அசையாமல் கிடந்தார்கள். எங்கே அவர்கள் புனித ஆத்மா கைப்பற்றப்பட்டு விட்டதோ? என்ற கவலையுடன் அவர்களது பாதங்களை நான் தொட்டேன். அவர்களின் பொற்பாதங்கள் அசைந்தன. அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். அப்பொழுது அவர்கள் ஸஜ்தாவில் இந்த துஆவை ஓதினார்கள்.

ஸஜத லக அஸ்வதீ வஆமன பிக ஃபுவாதீ வ ஹாதிஹி யதீ யல்லதீ ஜனய்த்து பிஹா அலா நஃப்ஸீ ஃபக்ஃபிர்லீ அத்தன்பல் அலீம். ஃப இன்னஹூ லா யக்பிருத் தனூப இல்லர் ரப்புல் அளீம். அவூது பிரிளாக மின் சுக்திக, வபி முஆபாதிக மின் உகூபதிக. வபிக மின்க லா உஹ்ஸீ தனாஅன் அலைக. அன்த கமா அத்னய்த அலா நஃப்ஸிக

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பொழுது, “ஆயிஷாவே! இது என்ன இரவு என உனக்கு தெரியுமா?” எனக் கேட்டுவிட்டுக் கூறினார்கள். இது ஷஃபான் பதினைந்தாம் இரவு. இவ்விரவில் அல்லாஹ் ஒரு சில பாவிகளை தவிர மற்ற முஃமின்களுக்கு மன்னிப்பு வழங்குகிறான். அந்த பாவிகள் மதுக்குடியை நிரந்தரமாக்கிக் கொண்டிருப்பவர்கள். விபச்சாரம், வட்டியில் மூழ்கியிருப்பவர்கள். தம் பெற்றோரை வேதனைப்படுத்துபவர்கள். உருவப்படம் வரைபவர்கள். பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்துபவர்கள்.

ஷஅபானின் பதினைந்தாம் இரவு மிகவும் புண்ணியம் வாய்ந்த இரவு என்பதற்கு இந்நிகழ்ச்சி போதுமான சான்றாகும் என்று அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் செய்தி ஷுஅபுல் ஈமான் மற்றும் பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு நிகரானதாகும்.

இந்தச் செய்தியில் இடம்பெறும் சுலைமான் இப்னு அபீ கரீமா என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

சுலைமான் பின் அபீ கரீமா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள் (நூல்: இப்னு அபீ ஹாதிம்)

சுலைமான் பின் அபீ கரீமா என்பாரின் பெரும்பாலான ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை ஆகும். இத்தகைய நிராகரிக்கத்தக்க செய்திகளை இவரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பார் அறிவிக்கின்றார் என இமாம் இப்னு அதீ அவர்கள் தம்முடைய காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட செய்தியை சுலைமான் பின் அபீ கரீமா என்பாரிடமிருந்து அம்ர் பின் ஹாஸிம் அல்பைரோத்தி என்பாரே அறிவிக்கின்றார். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட வகைக்கு மிக நெருக்கமான மிகப் பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மேலும் இதே செய்தியை அன்நள்ர் பின் கசீர் என்பார் வழியாக ஃபளாயிலுல் அவ்காத் என்ற நூலில் பைஹகீ அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் சில நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அந்நள்ர் பின் கஸீர் என்ற அறிவிப்பாளரும் மிகப் பலவீனமானவராவார். இமாம் புகாரி அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கத் தகுந்தவை என்றும் தம்முடைய தாரீகுல் கபீர் மற்றும் தாரீகுஸ் ஸகீர் என்ற நூற்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் முன்திரி அவர்கள் தம்முடைய தஹ்தீபு சுனன் என்ற நூலில்  அந்நள்ர் பின் கஸீர் என்பார் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

இமாம் அபூஹாதிம் அவர்களும் அந்நள்ர் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

மேலும் இவர் உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக செய்திகளை இட்டுக்கட்டி அறிவிக்கக் கூடியவர். இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்வது கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாமல் உறுதியாகிறது.

மேலும் இதே செய்தி உறுதியான அறிவிப்பாளர்கள் வழியாக முஸ்லிம் போன்ற பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஷஅபான் மாதத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. பொதுவான ஒரு இரவில் நடந்த சம்பவமாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரகமே கூலி

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

மறுமை நாளில் நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன், “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கு) திரும்பிச் சென்று விட்டார்கள்என்று சொல்வான்.

புகாரி  6575, 6585

இதன்படி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கையை மீறி அமல் செய்தால் நாளை மறுமையில் அது சாந்த நாளாகாது; சாப நாளாக ஆகிவிடும்.

மார்க்கத்தில் இல்லாத பராஅத் இரவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு அடங்கிய ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் செய்ய வேண்டிய அமல்களைச் செய்வதில்லை. 27ஆம் இரவில் மட்டும் சில பித்அத்தான காரியங்களைச் செய்து விட்டு முடித்துக் கொள்கின்றனர்.

மறுமையை நம்பியவர்களே! உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட  தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!      நரகமே தங்குமிடம்!

பொய்யான ஹதீஸுக்கு புகாரி முத்திரை

நபி மீது பொய் கூறினால் நரகமே தங்குமிடம் என்ற கருத்தில் புகாரி உள்ளிட்ட ஏராளமான நூற்களில் இடம்பெற்றுள்ள நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையே தலைப்பாகக் கொண்ட இப்பகுதியில் பொய்யான ஹதீஸ்களை அடையாளம் காட்டி வருகின்றோம்.

அந்தப் பொய்யான ஹதீஸ்களை ஏடுகளில் பதிவு செய்வோரையும் அடையாளம் காட்டி வருகின்றோம். அந்த அடிப்படையில் ஷரீஅத் இஸ்லாமியா என்ற ஒரு மாத இதழில் திண்டுக்கல் பி. ஜமால் முஹம்மது ஆலிம் உலவி என்பவர், “முஹம்மத் என்ற பெயரின் முத்தான சிறப்பு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இரண்டு பொய்யான ஹதீஸ்களை இடம்பெறச் செய்துள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.

பெயர்களுக்கு ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அப்பெயருக்குரிய குணமும், பரக்கத்தும் உண்டு. நபிமார்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்களின் பெயர் வைப்பதால் அவர்களின் பெயரைக் கொண்டு பரக்கத் இருக்கின்றது. பெயர்களில் சிறந்த பெயரையே இறைவன் நபிமார்களுக்கு வைத்துள்ளான். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எல்லாப் பெயர்களையும் விட உயர்ந்த பெயரை இறைவன், முஹம்மத் என்று வைத்துள்ளான். முஹம்மத் என்ற பெயர் யாருக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பெயருடையவரை கண்ணியப்படுத்தவும். ஏனெனில் இந்தப் பெயர் நபி (ஸல்) அவர்களின் பெயராக இருக்கின்றது. முஹம்மத் என்ற பெயரை வைத்திருப்பவரும் தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. மேலும் இந்த முஹம்மத் என்னும் பெயருக்கு அதிகமான சிறப்புகள் இருக்கின்றன. மறுமை நாளில் இறைவன் மனிதப் படைப்பைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மத் என்ற பெயரை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.

(ஹதீஸே குத்ஸி)

மேலும் யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில் வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி

ஹதீஸே குத்ஸி என்று இந்தப் பொய்யான ஹதீசுக்கு ஒரு நீண்ட பெயரையும் சூட்டியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் முன்னிலையில் இரண்டு அடியார்கள் நிறுத்தப்படுவார்கள். இவ்விருவரையும் நோக்கி சுவனத்திற்குச் செல்லுங்கள் என்று அவன் சொல்வான். “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழைவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? சுவனத்தை எங்களுக்குக் கூலியாக நீ அளிப்பதற்கு நாங்கள் எந்த ஒரு அமலையும் செய்யவில்லையே!” என்று கேட்பார்கள். “என்னுடைய இவ்விரு அடியார்களையும் (சுவனத்தில்) நுழையுங்கள். அஹ்மது, முஹம்மது பெயரைக் கொண்டவர்கள் நரகத்தில் நுழையலாகாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்” என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இப்படி ஒரு பொய்யான செய்தி, ஹதீஸ் குத்ஸீ என்ற பெயரில் நூற்களிலும் ஆலிம்களின் நாவுகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றது.

இமாம் சுயூத்தி, தமது நூலான அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் (புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) என்ற நூலில் பதிவு செய்து இந்தச் செய்தியை இனம் காட்டுகின்றார்.

இதில் உள்ள அபாயமும் ஆபத்தும் இதை அறிவிக்கின்ற இப்னு புகைர் என்பவரின் ஆசிரியரிடத்தில் அடங்கியிருக்கின்றது. அவர் பெயர் அஹ்மத் பின் அப்துல்லாஹ் தர்ராஃ. இவர் ஒரு பொய்யர். இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பாளர் ஸதகா பின் மூஸா என்பவர் நம்பத்தகுந்தவர் அல்லர்; செய்திகளில் புரட்டு செய்பவர் என்று தஹபீ அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் சுயூத்தி குறிப்பிடுகின்றார்கள்.

முஹம்மது என்று பெயர் வைப்பதைச் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வருகின்ற ஹதீஸ்கள் எதுவுமே உருப்படியானதல்ல. அவற்றில் எதுவும் சரியான ஹதீஸ் அல்ல என்ற கருத்தில் அபூஹாத்தம் அர்ராஸி, இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கய்யூம் ஆகிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

நரகத்தை விட்டும் ஈடேற்றம் பெறுவதற்கும் சுவனம் செல்வதற்கும் காரணமாக அமைவது ஈமானும் நல்ல அமல்களும் தான். முஹம்மது, அஹ்மத் என்ற பெயர்கள் அல்ல. அத்துடன் இது இஸ்லாமிய மார்க்கத்திற்கு நேர்முரணான கொள்கையாகும் என்று இப்னுல் கய்யூம் அவர்கள் அல்மனாருல் முனீஃப் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே மேற்கண்ட விபரம் நமக்குத் தெளிவாகத் தெரிவிப்பது ஒன்றே ஒன்றைத் தான். முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சுவர்க்கம் செல்வார்; நரகம் செல்ல மாட்டார் என்று எவர் சொன்னாலும் அவர் சொன்ன செய்திக்கு நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிரானது என்ற அடிப்படையில் இந்தச் செய்தி முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

ஒருவன் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள வேண்டியதில்லை; இறைவனுக்கு இணை கற்பிக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் வாழலாம்; அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றால் அது குர்ஆனுக்கு நேர்எதிரான கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளனஎன்று நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 2:25

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:82

இன்னும் அதிகமான இடங்களில் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தவர்களுக்குத் தான் சுவனம் என்று கூறுகின்றான். அத்துடன் இறைமறுப்பாளர்களுக்கு சுவனம் தடை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

அல்குர்ஆன் 7:40

இதையெல்லாம் தாண்டி முஹம்மத் அல்லது அஹ்மத் என்று ஒருவர் தனக்குப் பெயர் சூட்டிக் கொண்டால் அவர் சுவனம் செல்வார் என்பது குர்ஆன் வசனத்தைக் கேலிக்கூத்தாக ஆக்குவதாகும். தன்னை நபியென்று வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் இவர்களது பார்வையில் சொர்க்கவாதி என்றாகி விடும்.

அடுத்து, இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடும் இரண்டாவது ஹதீஸைப் பார்ப்போம்.

யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில் வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி

கொஞ்சம் கூட அல்லாஹ்வின் பயமில்லாமல், நபி (ஸல்) அவர்களின் நரக எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் நெஞ்சழுத்தத்துடன், அதிலும் பொய்யான, பலவீனமான ஹதீஸ்கள் தன்னுடைய நூலில் பதிவாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த இமாம் புகாரி அவர்களின் பெயரைப் போட்டு பொய்யான ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸை (?) இந்தக் கட்டுரையாளர் புகாரியிலிருந்து ஒருபோதும் எடுத்துக் காட்ட முடியாது. காரணம் இப்படி ஒரு ஹதீஸ் புகாரியில் பதிவாகவே இல்லை.

இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி அவர்கள் தம்முடைய அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் என்ற நூலில் பதிவு செய்து, இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இனங்காட்டுகிறார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகின்ற உஸ்மான் என்பார் ஹதீஸ் கலை அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவர். அவருடைய ஆசிரியர் முஹம்மது பின் மாலிக் என்பார் ஹதீஸை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று விவரிக்கின்றார்கள்.

இந்தப் போலி ஹதீஸைத் தான் புகாரியில் இருப்பதாகக் கதை அளக்கின்றனர்.

இன்று அல்லாஹ்வின் அருளால் இந்த சுன்னத் வல்ஜமாஅத்தினரால் அவாம்கள் – பாமரர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் புகாரியின் தமிழாக்கமும் கையுமாக அலைகின்ற இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு பொய்யான செய்தியை அரங்கேற்றுகின்றார் இந்தக் கட்டுரையாளர்.

நபி (ஸல்) அவர்களின் ஒட்டுமொத்த மதீனா வாழ்க்கையும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது என்பதை எல்லோரும் சர்வ சாதாரணமாக அறிவார்கள். எடுத்துக்காட்டாக புகாரியில் உள்ள கீழ்க்கண்ட செய்தியைப் பார்த்தாலே நபியவர்களின் வறுமையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாதுஎன்று கூறினார்கள். நான், “என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2567

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். “முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

நூல்: புகாரி 2508

முஹம்மது என்ற பெயரில் உள்ள அவர்களையே வறுமை வாட்டி எடுத்திருக்கும் போது அவர்களது பெயரை வைத்து விட்டால் வறுமை வராது என்று எந்த அடிப்படையில் சொல்ல முடியும் என்று கடுகளவு சிந்தனை கூட இல்லாமல் இப்படிச் சரடு விடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற பொய்யான ஹதீஸ்களை விட்டும் விலகிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக!

அல்லாஹ்வின் தூதர் மீதே பொய் சொல்லத் துணிந்தவர்கள், மற்றவர்கள் பெயரால் அடித்து விடுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆலம்கீர் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு கதையையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நமது ஏகத்துவம் இதழில் நகைச்சுவைப் பகுதி இல்லை. அதை நிறைவு செய்யும் வகையில் இந்த ஆலம்கீர் ஜோக்கை ரசித்துக் கொள்ளுங்கள்.

மாமன்னர் ஔரங்கசீப் அவர்களிடம் ஒரு அடிமை வேலை பார்த்து வந்தார். அவரது பெயர் முஹம்மத் கல்லீ என்பதாகும். எப்போதும் அவரை மன்னர் முழுப்பெயருடனே அழைப்பார். ஒருமுறை மன்னர் ஔரங்கசீப் அவர்கள் அந்த அடிமைப் பணியாளரை முஹம்மத் கல்லீ என்ற முழுப் பெயருடன் அழைக்காமல், “கல்லீ, தண்ணீர் கொண்டு வாரும்’ என்று கூறினார். இச்செயல் அந்த அடிமைக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது.

அந்த அடிமையும் மன்னருக்குத் தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் கழித்து, “மன்னா, தாங்கள் என்னை எப்போதும் முழுப் பெயருடன் தானே அழைப்பீர்கள். ஆனால் இப்போது வழமைக்கு மாறாக கல்லீ என்று மட்டும் அழைத்தீர்கள். இதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “உன் பெயருடன் நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மத் என்ற பெயர் உள்ளது. நான் நபி (ஸல்) அவர்களின் பெயரை உளூ இல்லாமல் உச்சரிப்பதில்லை. இப்போது நான் உன்னை அழைக்கும் போது உளூ இல்லை. ஆகவே தான் கல்லீ என்று அழைத்தேன்” என்று கூறினார். (நூல்: ஆலம்கீர்)

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? முஹம்மது என்ற பெயரை யாருக்கு வைத்தாலும் அதனுடன் கல்லீ என்றோ, சல்லீ என்றோ சேர்த்துத் தான் வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்களா? அல்லது முஹம்மது என்ற பெயரைக் கூற வேண்டுமானால் உளூச் செய்து விட்டுத் தான் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களா?

ஒரு பக்கம் முஹம்மது என்ற பெயர் வைத்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மறுபக்கம் முஹம்மது என்ற பெயர் வைப்பதையே தடுக்கும் விதமாக, உளூ இல்லாமல் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற கதையை வெளியிடுகின்றார்கள். இவர்கள் மார்க்கத்தை எந்த அளவுக்குக் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டார்கள் என்பதற்கு இந்தக் கதைகள் ஓர் உதாரணம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்      தொடர்: 3

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும்.

“நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது’ என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், “நான் எப்படி வேண்டுமானலும் எந்த ஆணோடும் போவேன். இது எங்களுக்குரிய உரிமை, எங்களது சுதந்திரம், எங்களது சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது’ என்று கூறி தான்தோன்றித் தனமாகத் திரிவது.

இப்படிக் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில்லாமல் உல்லாசமாக, கட்டுபாடற்று சுற்றித் திரிவதாகும். இவனுக்கு மனைவி யார்? இவளுக்குக் கணவன் யார்? கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு இல்லாவிட்டால் பிறக்கின்ற குழந்தைக்குப் பொறுப்பு யார்? அந்தக் குழந்தையை யார் வளர்ப்பது? உறவு முறைகள் எப்படி வரும்? இதற்கெல்லாம் எந்த விடையும் கிடைக்காது.

சமூகத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழலாம் என்கிற சிந்தாந்தமும் இன்றைய நவீன யுகத்தில் விதைக்கப்படுகிறது. அதை ஒரு புரட்சியாகவும் பலர் நினைக்கின்றனர். பெரிய பெரிய அறிஞர்களும் நீதிபதிகளும் கூட, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு தேவையில்லை என்கிறார்கள். அதாவது கணவன் மனைவி என்பது போன்ற பொறுப்பைச் சுமக்காமல் 3 மாதத்திற்கோ, 6 மாதத்திற்கோ வாழ்ந்து பார்ப்போம். நன்றாக இருந்தால் தொடரலாம். இல்லையெனில் விட்டுவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள்.

இதில் புரிய வேண்டிய விஷயம், திருமணம் என்றால் பொறுப்பைச் சுமக்கிறோம் என்பதாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணோடு சேர்கிறான். அதன் பிறகு அவளுக்கு வருகின்ற நல்லது கெட்டதை இவன் சுமக்கிறான். இவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதை அவள் சுமக்கிறாள். அவள் குழந்தையைச் சுமக்கும் போது இவன் அவளையும் சேர்த்துச் சுமக்கிறான். அவளது நலத்திற்காகப் பாடுபடுகிறான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிற இப்படியொரு அழகிய குடும்பவியலமைப்பை நாசமாக்குகின்ற சித்தாந்தம் தான் “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்ற கட்டுப்பாடில்லாத சுதந்திரம்.

ஆண்-பெண் விஷயத்தில் எந்தச் சட்டமும் இருக்கக் கூடாது என்று ஒரு நடிகை பேசி, வழக்கெல்லாம் போடப்பட்டு, அதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றமும் அதைச் சரி காண்பதைப் பார்க்கிறோம். இப்படியொரு கேடுகெட்ட சட்டம் நமது நாட்டில் இருக்கிறது. ஒரு ஆண் தான் விரும்பிய எந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது பலாத்காரம், வன்புணர்வு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தை மக்கள் அனைவரும் புறக்கணிப்பதிலிருந்தே இது கேடுகெட்டது என புரிந்து கொள்ள முடிகிறது.

சில கேடுகெட்ட இழிந்தவர்கள் தவறு செய்வதை நியாயப்படுத்துவதற்காக நமது நாட்டில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள அனைவரும் தவறான கட்டுப்பாடற்ற பாலியல் உறவை ஆரம்பித்தால், குடும்பம் என்கிற கட்டமைப்பு காணாமல் போய்விடும்.

இந்தக் கட்டுபாடற்ற உடலுறவு முறையில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கொஞ்ச நேரம் தவறான சுகம் அனுபவிப்பதற்காக இதைச் சரி கண்டால், அதன் பிறகு உருவாகிற குழந்தையைச் சுமப்பது பெண் தான். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு எந்த நாதியும் இருக்காது. அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் தங்கள் கையைக் கொண்டு தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் பலவீனத்தைக் கவனித்துத் தான் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

எனவே பெண்கள் இதை விரும்பி ஆதரிப்பது தவறான போக்காகும். உடலில் இளமையும் முறுக்கும் இருக்கும் போது இந்தக் கட்டுப்பாடற்ற உறவின் கேடு தெரியாது. ஆனால் ஒரு நேரம் வரும். அல்லாஹ் ஒரு நரம்பைப் பிடித்து இழுப்பான். முதுமையை அனைவரும் அடைவதைப் போன்று பெண்களும் அடைவார்கள். இரத்த ஓட்டம் சோர்ந்து போய்விடும். பெண்கள் தங்கள் உடல் அழகை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வாழ முடியாது. 40 வயதைக் கடந்து விட்டால் அவள் தன்னுடைய அழகை இழக்கத் தொடங்கி விடுவாள். அந்த நேரத்தில் இதனால் ஏற்பட்ட விளைவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதூரமான கஷ்டப்படுகிற சூழ்நிலை ஏற்படும்.

இதில் ஏற்படுகிற இன்னொரு விளைவு, இன்றைய நவீன காலத்தில் பரவலாகப் பேசுகின்ற எய்ட்ஸ் என்னும் ஒரு நோயாகும். ஹெச்.ஐ.வி என்ற வைரஸ் ஒருவரைத் தாக்கினால், இரண்டு அல்லது மூன்று அல்லது பத்து வருடத்தில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கிவிடும். அதாவது இந்த வைரஸ் ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் அவரது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.

அல்லாஹ் மனிதனின் உடலிலேயே எல்லா நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் வைத்திருக்கிறான். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடாமல் இருந்தாலும் குணமாகி விடுகிறதெனில், அதற்குக் காரணம் நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி தான். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்கள். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரம் என்று பழமொழி கூடச் சொல்வார்கள். ஜலதோஷமும் ஒரு வைரஸினால் தான் வருகிறது. அதை எதிர்த்து நமது உடல் போராடுகிறது. ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமியை நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி போராடி ஒரு வாரத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

காய்ச்சலுக்கும் அப்படித் தான். காய்ச்சலினால் ஏற்பட்ட வலியைக் குறைப்பதற்குத் தான் மருந்து சாப்பிடுகிறோமே தவிர காய்ச்சலை முழுவதுமாகக் குணப்படுத்துவது நம் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதனால் தான் எந்த நோய் வந்தாலும் அது நீங்கிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஒரு அருட்கொடை.

அதேபோன்று பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசி போடுவார்கள். நலமாக இருக்கிற குழந்தைக்கு எதற்கு மருந்து என்று கேட்டால், மஞ்சள் காமாலை வருகிற வைரஸைத் தான் தடுப்பூசி என்ற பெயரில் போடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த ஊசியில் மஞ்சள் காமாலையை வரவைக்கிற வைரஸ் தான் இருக்கும். அப்படியெனில் இதில் என்ன மருத்துவ முறை இருக்கிறது என்றால், குழந்தையின் இரத்தத்தில் தேவையான நோய் எதிப்பு சக்தி இருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள் நல்ல நிலையில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலையை எதிர்த்து போராடி, ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். மீண்டும் நமது வாழ்நாளில் அதுபோன்று வந்தால், குழந்தையாக இருக்கிற போது நம் உடல் எப்படி போராடியதோ அதேபோன்ற முறையில் போராடி மஞ்சள் காமாலையை வென்றுவிடும். இதுவெல்லாம் இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடை தான்.

ஆனால் இந்த ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ், மனித உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடுகிறது. அப்படியெனில் ஜலதோஷம் பிடித்தால் அது போகாது. ஏனெனில் அதை எதிர்க்கிற சக்தியை ஹெச்.ஐ.வி அழித்துவிடும். இப்படி என்னென்ன நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடுகிற சக்தியை இந்த எய்ட்ஸ் கிருமிகள் அழித்துவிடும். முடிவு மரணம் தான்.

ஒரு நோய் காலம் முழுவதும் இருந்தால் மனிதன் வாழமுடியுமா? தலைவலியே காலம் முழுவதும் இருந்தால் இறந்துவிடுவோம். எனவே ஒரு நோய் என்றால் வரவேண்டும்; போக வேண்டும். ஆனால் நீங்காமல் போகாமல் இருந்தால் மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத பல்வேறு மாற்று விளைவுகளை உண்டாக்கிவிடும். அப்படியெல்லாம் வராமல் இருக்க வேண்டுமெனில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். ஆனால் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மனித உடலில் புகுந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி எய்ட்ஸை உருவாக்கிவிடும் என்று கூறுகின்றன இதுவரை நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள்.

எனவே இந்த எய்ட்ஸ் எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இரண்டு காரணங்களால் தான். எய்ட்ஸ் பல காரணங்களால் தொற்றும். ஆனால் ஏற்படுவது இரண்டு காரணங்களால் தான். தொற்றுவது வேறு,  உருவாவது என்பது வேறு. தகாத பாலியல் உறவு கொள்கிற பெண்கள் பல ஆண்களிடம் செல்வதால் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருக்கின்ற திரவங்களிலிருந்து வெளியாகிற நச்சுக் கிருமிகள் பல ஆண்களின் உயிரணுக்களுடன் கலந்துவிடுகிற போது, இந்தக் கேடுகெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகிறது. விரைவாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே எய்ட்ஸ் வந்த ஒரு பெண்ணுடன் இன்னொரு ஆண் உடலுறவு கொள்ளும் போது அவனுக்கும் நோய் தொற்றுகிறது.

ஆனால் இங்குள்ள மருத்துவர்களும் அரசாங்கமும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த விளம்பரம் முற்றிலும் தவறானது. ஒருத்திக்கு ஒருவன் என்றுதான் விளம்பரம் செய்யவேண்டும். அரபு நாட்டில் ஒன்றுக்குப் பதிலாக நான்கு மனைவிமார்கள் வைத்திருக்கிறார்கள். எந்த எய்ட்ஸும் அவர்களுக்கு வரவில்லை. எனவே ஒருவன் நான்கு மனைவியை வைத்திருந்தால் எய்ட்ஸ் வராது. ஆனால் ஒருத்திக்கு நான்கு புருஷன் இருந்தால் எய்ட்ஸ் வந்துவிடும்.

பெண்கள் ஒரு பாத்திரத்தைப் போன்று இருப்பதினால், அந்தப் பெண்களிடம் பல ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது தான் இந்த கெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, கட்டுப்பாடற்ற உடலுறவு எனும் சுதந்திரத்தைக் கொடுத்தால் எய்ட்ஸ் என்கிற கிருமி உருவாகி, அது பிறருக்கும் பரவி விடுகிறது என்பதைப் புரியவேண்டும்.

மேலை நாடுகளில் ஆணுறை போன்ற பாதுகாப்பான உடலுறவு முறையைக் கடைப்பிடித்து எய்ட்ஸைக் குறைத்துக் கொள்கிறார்கள். உலகத்திலேயே எய்ட்ஸுக்கு முதலிடம் ஆப்பரிக்கா தான். அதன் பிறகு இந்தியா. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் எய்ட்ஸ் அதிகமுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு தான். இதற்குக் காரணம் உடலுறவில் கட்டுப்பாடற்ற முறை தான். இந்த தவறான பாலியல் உறவு முறையின் மூலம் எய்ட்ஸ் உருவாகி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிக் கொண்டே இருக்கிறது.

எனவே இப்படி எய்ட்ஸ் நமக்கும் வந்துவிடக் கூடாது என்றால், நாம் இதைத் தடுப்பதற்குச் சட்டம் போடவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் தீமையை ஒழிக்கப் பாடுபட வேண்டும். எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து சின்னச் சின்ன காரணங்களால் கூட நமக்கும் பரவும். அதற்காக எய்ட்ஸ் நோயாளியைத் தொடுவதாலோ அல்லது பார்ப்பதாலோ அல்லது அவனுடன் பழகுவதாலோ அல்லது அவனுடன் ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ நமக்கு வராது. அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய அதே ஊசியை நமக்கும் பயன்படுத்தினால் அவரது உடலிலுள்ள நச்சுக் கிருமி நமது உடலுக்கும் வந்துவிடும். நமக்கு வேண்டுமானால் தவறான பாலியல் உறவு மூலம் வராமல் இருக்கலாம். எனவே எப்படியிருப்பினும் முதன் முதலில் எய்ட்ஸ் கிருமிகள் உருவாகுவதற்குக் காரணம், பல ஆண்களிடம் கட்டுப்பாடில்லாமல் உறவு வைக்கிற பெண்களின் மூலமாகத் தான் வருகிறது. பிறகு அவளிடம் உடலுறவு கொள்கின்ற அனைத்து ஆண்களுக்கும் பரவுகிறது.

எனவே கட்டுப்பாடற்ற உடலுறவு முறை எய்ட்ஸை உருவாக்குவதுடன், குடும்ப அமைப்பையும் சீரழித்துவிடும்; வாரிசு முறையை இல்லாமல் செய்துவிடும்.

அதிலும் அரசாங்கம், கணவன் மனைவியாக இருந்து இல்லறத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, பாதுகாப்பான ஆணுறை அணிந்து தவறான பாலியல் உறவான விபச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. இப்படி உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் பாதுகாப்பான முறையில், கணவன் மனைவி என்கிற எந்தக் கட்டுப்பாடும் குடும்ப அமைப்பும் இல்லாமல் உடலுறவு மட்டும் கொண்டால் இந்த மனிதச் சமூகம் தழைக்குமா? சந்ததிகள் உருவாகுமா? எப்படி எல்லோரும் சன்னியாசியாகவும் சாமியாராகவும் துறவறம் சென்றால் மனித சந்ததிகள் உருவாகாதோ, அதேபோன்று தான் இந்தக் கட்டுப்பாடற்ற உறவு முறையின் மூலமும் மனித சந்ததி நின்றுவிடும். நாம்தான் இவ்வுலகில் கடைசி சந்ததிகளாக இருப்போம். இப்படி இவர்கள் சொன்ன இந்த முடிவை, இவர்களது தாய் தந்தையர்கள் எடுத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்

சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. அவர் உனக்கு மகனாகி விடுவார். உனது கணவர் அபூஹுதைபாவும் கோபம் கொள்ள மாட்டார்’ என்று நபி (ஸல்) கூறியதாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்கும் போதே சாதாரண அறிவுள்ளவர்கள் இப்படி ஒரு சம்பவம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்திருக்க முடியாது. இது தவறான தகவல் என்பதை அறிந்து கொள்வார்கள்.

ஆனால் அறிவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஜாக் இயக்கம் சமீபத்தில் அல்ஜன்னத் இதழில் மேற்கண்ட சம்பவம் குர்ஆனுக்கு முரண்படவில்லை. இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் நம்மைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்தச் சம்பவம் சரியானது என்பதற்கு அந்த இதழில் இவர்கள் தற்போது வைத்துள்ள வாதங்கள் புதியவை இல்லை. சில வருடங்களுக்கு முன்னபாகவே இவற்றுக்கு புத்தக வடிவில் நாம் பதில் சொல்லிவிட்டோம்.

நம்முடைய மாத இதழான ஏகத்துவத்திலும் இதற்கான விளக்கம் தரப்பட்டுவிட்டது. இவர்கள் இப்போது வைத்துள்ள வாதங்கள் அனைத்திற்கும் இணையதளத்திலும் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுள்ளது.

அடித்து, சாகடிக்கப்பட்டு, புதைக்கப்பட்ட பாம்பை மறுபடியும் தோண்டி எடுத்து மக்களைப் பயமுறுத்தும் முட்டாள்தனமான வேலையை தற்போது ஜாக் செய்து கொண்டிருக்கின்றது.

இந்தச் செய்தி குர்ஆனுக்கும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் இஸ்லாமிய ஒழுக்க முறைகளுக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதை விளக்கி, “ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நாம் வெளியிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது.

இதில்…

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்ககக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சில ஹதீஸ்களை நபித்தோழர்களும் மறுத்துள்ளனர்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சில ஹதீஸ்களை இமாம்களும் மறுத்துள்ளனர்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்டாது. குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. இதுவே ஹதீஸ் கலை விதி

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்கள் எவை? அவை எப்படி குர்ஆனுடன் முரண்படுகின்றது? இதைச் சரிகாணுபவர்கள் கூறும் உளறல்களுக்கு பதில்.

இதுபோன்ற விஷயங்களை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

இவர்கள் சரிகாணும் சாலிமுடைய சம்பவத்தைக் குறித்தும் விரிவான விளக்கங்களைத் தந்துள்ளோம். இதில் ஒன்றுக்குக் கூட ஜாக் இது வரை பதிலளிக்கவில்லை.

ஜாக் செல்லும் தனிப்பாதை

தான் கேட்ட கேள்விகளுக்கும் வைத்த வாதங்களுக்கும் எதிர்த் தரப்பில் உள்ளவர் பதில் கூறினால் அவருடைய விளக்கங்களுக்குப் பதில் கூறுவது கேள்வி கேட்டவரின் கடமை. இந்த அடிப்படையான அறிவு கூட ஜாக்கிற்கு இல்லை.

இன்றைக்கு ஜாக் வைக்கும் வாதங்களுக்கு ஏற்கனவே நாம் பதில் சொல்லி விட்டோம். நம்முடைய விளக்கத்திற்குத் தான் இன்று வரை ஜாக் பதில் சொல்லாமல் இருக்கின்றது. பதில் சொல்லப்பட்டுவிட்ட கேள்விகளை மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவன் விளங்காமல் கேள்வி கேட்டால் அவனை ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். விளங்கிய பிறகும் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்தால் இவன் வடிகட்டிய அயோக்கியன். இந்த அயோக்கியத்தனத்தை ஜாக் செய்து கொண்டு நம்மைப் பார்த்து வழிகேடர்கள் என்று கூறுகின்றது.

பொதுவாக ஜாக் இயக்கத்திற்கு என தனிப் பாதை உள்ளது. அது சூடு, சொரணை, மானம், வெட்கம், ரோஷம் இல்லாதவர்கள் செல்லும் பாதையாகும்.

தவ்ஹீத் ஜமாத்தை விமர்சித்து மக்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டியது. அந்தக் குழப்பத்திற்கு நாம் பதில் சொல்லிவிட்டால் அந்தப் பதிலை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. இந்தக் கேவலமான செயலை ஜாக் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.

சாலிமுடைய சம்பவத்தைக் கூறி குழப்பம் செய்வதற்கு முன்னால் சூனியம் தொடர்பாக ஜாக் உளறிக் கொட்டியது. அவர்களின் உளறல்கள் ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி ஏகத்துவத்தில் நாம் பதில் அளித்திருந்தோம்.

மார்க்கம் சொல்லும் தகுதி கடுகளவாவது இவர்களுக்கு இருந்திருந்தால் நமது மறுப்புக் கட்டுரைக்குரிய பதிலை இவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பதிலையும் இது வரை இவர்கள் கூறவில்லை.

பதில் சொல்லும் திராணி இவர்களுக்கு இல்லை எனும் போது இவர்கள் நமக்கு மறுப்பு எழுதினால் இவர்களை அரைவேக்காடுகள் என்று தான் சொல்ல முடியும். இந்த லட்சணத்தில் சாலிம் தொடர்பான பழைய பித்னாவை மறுபடியும் பரப்ப ஆரம்பித்து விட்டது அல்ஜன்னத் மாத இதழ்.

நம்முடைய இந்தக் கட்டுரைக்கும் பதில் சொல்லாமல் ஜாக் ஊமையாக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பித்தலாட்டமா? பொம்மலாட்டமா?

சாலிம் தொடர்பான சம்பவத்தில் பித்தலாட்டம் செய்ததாக ஜாக், தனது அல்ஜன்னத்தில் ஒரு நாடகம் ஆடியுள்ளது. அல்ஜன்னத் பின்வருமாறு இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றது.

இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் தவ்ஹீத் பிரச்சாரகர் என்று சொல்வதற்கு மட்டுமல்ல, ஒரு சரியான முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதோ தனது தவறான கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஹதீஸிலேயே எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்பதைப் பாருங்கள். பெரியவர் பால் குடிப்பது தொடர்பான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதற்காக அந்த ஹதீஸிலேயே தனது கீழ்த்தரமான சிந்தனையை புகுத்தி எழுதுவது.

ஸாலிம் எனும் இளைஞர் அபுஹூதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தனது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபுஹூதைபாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது இந்த ஹதீஸ் நிராகாரிப்பாளர் தனது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் விளக்கப்பகுதியில் நபிகள் நாயகத்துக்கு சூனியம் எனும் தலைப்பில் 1309 வது பக்கத்தில் எழுதியிருப்பதாகும். 7-வது பதிப்பு.

இதே ஹதீஸை அடுத்த பதிப்பில் எழுதியிருப்பதை பாருங்கள்..

அபுஹூதைபா(ரலி)அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர்; அபுஹூதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தனது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபுஹூதைபாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

பக்கம்: 1446, 8-வது பதிப்பு

இரண்டு பதிப்பிலும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். தான் மறுக்கிற ஹதீஸை கொச்சைப்படுத்தி அருவருப்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு இளைஞர் அபுஹூதைபா(ரலி) அவர்களின் மனைவியிடம் பழக்கம் வைத்து வந்து பேசிக் கொண்டிருந்ததாக முந்தைய பதிப்புகளில் சித்தரித்துள்ளார். இந்த பித்தலாட்டம் சிலரால் வெளிப்படுத்தப்பட்ட பின் எட்டாவது பதிப்பில் அபுஹூதைபா (ரலி)அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட இளைஞர் தான் அவர் என்பதை குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவர் அபுஹூதைபா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகன் தான். அபுஹூதைபாவின் மனைவியும் ஸாலிம்(ரலி) அவர்களை மகனாகக் கருதினார்கள். இவ்வாறு தான் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தான் மறுக்கிற ஹதீஸைக் கொச்சைப்டுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக ஹதீஸில் உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் படிக்கும் போதே அந்த ஹதீஸை மறுக்கத் தோன்றும் விதத்தில் வார்த்தைகளை அமைத்திருப்பது.

ஹதீஸிலேயே இப்படி தில்லுமுல்லு செய்பவர் மார்க்க விஷயத்தைப் பேசுவதில் நம்பகமானவர் அல்ல. ஹதீஸை மறுக்கத் துணிந்து விட்டால் ஹதீஸைத் திரிக்க ஆரம்பித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

நமது விளக்கம்

பழைய பதிப்பில் சாலிம் எனும் இளைஞர் வந்து போய்க் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளனர். புதிய பதிப்பில் அபூஹுதைபாவின் மனைவியால் வளர்க்கப்பட்டவரான சாலிம் எனும் இளைஞர் என்று கூறியுள்ளனர்.

அபூஹுதைபாவின் மனைவியால் வளர்க்கப்பட்டவரான சாலிம் எனும் தகவலை ஆரம்பத்தில் கூறாமல் விட்டதால் பித்தலாட்டம் செய்துள்ளார் என்று இவர்கள் நாடகம் ஆடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியின்படி என்னமோ சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட மகனாக இருந்தது போலவும் அந்தத் தகவலை இவர்கள் சொல்லாமல் சாலிம் எனும் இளைஞன் என மொட்டையாகக் கூறியது போலவும் கூச்சலிடுகின்றனர்.

சஹ்லா (ரலி) அவர்களால் சாலிம் வளர்க்கப்பட்டிருந்தார் என்ற தகவலைச் சொன்னால் மட்டும் சஹ்லா (ரலி) அவர்களுக்கு சாலிம் மகனாகி விடுவாரா? அவர் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்று வருவது சரியானதாகி விடுமா?

சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டாலும் அவர் சஹ்லாவிற்கு அன்னியராகவே இருந்தார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

வளர்க்கப்பட்டவர் பெற்ற மகனாக முடியாது என்ற சட்டம் வந்த பிறகும் சாலிம் (ரலி) சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதனால் தான் அலாஹ்வின் சட்டப்படி அன்னியராக உள்ள சாலிம் தமது மனைவியிடத்தில் வருவதை அபூஹுதைபாவும் விரும்பவில்லை என இச்சம்பவம் கூறுகின்றது.

சில ஹதீஸ்களில் முன்னர் எழுதியவாறு, அதாவது திருக்குர்ஆன் தமிழாக்கம் 7வது பதிப்பில் உள்ளது போன்ற செய்தி மட்டும் உள்ளது. அந்த ஹதீஸை எடுத்து எழுதியது அவதூறு என்றால் அதைப் பதிவு செய்த முஸ்லிம் இமாம் அவதூறு கூறி விட்டாரா?

ஒரு நபித்தோழர் தவறு செய்யாமல் இருக்கும் போது தவறு செய்தார் என்று சொல்வது தான் பித்தலாட்டம். செய்த தவறைச் சுட்டிக் காட்டுவது பித்தலாட்டமல்ல. பித்தலாட்டத்தின் சரியான பொருளைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

வளர்ப்பு மகன் பெற்றெடுக்கப்பட்ட மகனைப் போன்று ஆக முடியாது என்ற அல்லாஹ்வின் சட்டம் வந்த பிறகு சாலிம், சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு செல்லும் போது சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களுக்கு அந்நிய ஆணாகவே இருந்துள்ளார். இது மார்க்க அடிப்படையில் தவறான செயலும் கூட.

சாலிம் அந்நியராக இருக்கும் நிலையில் தான் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு சென்றார் என்பதை “சாலிம் எனும் இளைஞன்’ என்ற சொல்லின் மூலம் உணர்த்தியுள்ளோம். இது பித்தலாட்டம் இல்லை. இவர்கள் ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்ட விசயமாகும்.

பிறகு ஏன் “சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்ட சாலிம்’ என புதிய பதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு சந்தேகம் வரலாம்.

சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவலாகும். இதைச் சொல்வதாலோ சொல்லாமல் விட்டாலோ ஹதீஸின் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

நம்மை விமர்சிப்பவர்கள் இதை ஒரு பெரிய ஃபித்னாவாகப் பேசிக் கொண்டிருப்பதால் அந்த வாசலையும் அடைக்கும் விதமாகவே புதிய பதிப்பில் “சஹ்லா (ரலி) அவர்களால் வளர்க்கப்பட்ட சாலிம் எனும் இளைஞர்’ என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளார்.

தற்போது நாம் இதைச் சொன்ன பிறகும் நீங்கள் அன்று அப்படிச் சொன்னீர்கள்; இன்று இப்படிச் சொல்கிறீர்கள் என ஜாக் பித்னாவைப் பரப்புகின்றது என்றால் பித்னா செய்வது இவர்களின் இரத்தத்தோடு கலந்துவிட்ட விஷயம், அதைச் செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது என்பதைத் தெளிவாக நிரூபித்து பித்தலாட்டம் என்ற பெயரில் பொம்மலாட்டத்தை நடத்தியுள்ளது ஜாக்.

பால் எடுத்துக் கொடுக்கப்பட்டதா?

சஹ்லா (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதை சாலிமுக்கு பருகக் கொடுத்தார்கள் என்று இவர்கள் பின்வருமாறு வாதிடுகின்றனர்.

முதல் வாதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல் நேரடியாகப் பால் கொடுக்கப்படவில்லை. பாத்திரத்தில் எடுத்துத் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படித் தான் நடந்தது என்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் உள்ளது. அதாவது மார்க்கத்தில் ஒரு விஷயம் சொல்லப்படும்போது அதை ஏற்கனவே மார்க்கம் தடை செய்துள்ள விதத்தில் செய்வதாகவும் புரிய முடிகிறது. இப்படி இரு விதத்திலும் புரிந்து கொள்கிற விதத்தில் அமைந்திருந்தால் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் காட்ட முடியும். லூத்(அலை)அவர்களிடம் வானவர்கள் மனித வடிவத்தில் வந்த போது அசிங்கமான நோக்கத்துடன் அவர்களின் சமூகத்தவர் அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது லூத்(அலை)அவர்கள் அக்கூட்டத்தைப் பார்த்துக் கூறியதை அல்லாஹூதஆலா இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்.

என் சமுதாயமே!இதோ என் புதல்விகள் உள்ளனர் .அவர்கள் உங்களுக்கு தூய்மையானவர்கள்.

(அல்குர்ஆன் 11:78 மற்றும் இதன் கருத்து 15: 71)

இங்கு தவறான செயல் செய்யும் நோக்கத்துடன் வந்தவர்களிடம் வெறுமனே என் புதல்விகள் உங்களுக்குத் தூய்மையானவர்கள் என்று லூத் (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு திருமணம் செய்து என்று கூறப்படாவிட்டாலும் திருமணம் செய்து முறைப்படி அணுகுவதைத் தான் சொன்னார்கள் என்று தான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் திருமணம் செய்யாது அணுகுவது தடை செய்யப்பட்டதாகும். அதனால் தான் சில திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புக்களில் திருமணத்திற்கு எனும் வார்த்தையை அடைப்புக் குறியில் எழுதியிருக்கிறார்கள்.

நமது பதில்

ஒரு நிகழ்வு மார்க்கத்திற்கு முரணாக நடந்ததாகப் புரியவும் வாய்ப்புள்ளது; மார்க்கம் அனுமதிக்கப்பட்ட வழியில் நடந்திருப்பதாக புரியவும் வாய்ப்புள்ளது என்றால் மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்திருப்பதாகவே புரிய வேண்டும் என்ற அடிப்படை சரியானதாகும். இதை நாம் மறுக்கவில்லை.

இதனடிப்படையில் லூத் (அலை) அவர்கள் தன்னுடைய மகள்களைத் திருமணம் செய்து அனுபவித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்தில் தான் கூறியிருப்பார்கள் என்பது சரிதான்.

ஆனால் இந்த அடிப்படை சாலிம் (ரலி) சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பொருந்தாது. ஏனென்றால் ஒரு நிகழ்வை இரண்டு விதமாகப் புரிவதற்கு சாத்தியமுள்ள விஷயங்களுக்குத் தான் இந்த அடிப்படை பொருந்தும்.

இரண்டு விதங்களுக்கு வாய்ப்பில்லாமல் ஒரு கருத்தை மட்டும் தெளிவாகக் கூறினால் அங்கே இந்த அடிப்படையைப் பொருத்த இயலாது.

சாலிம் (ரலி) சம்பந்தப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் சஹ்லா (ரலி) அவர்களிடம் நீ சாலிமுக்குப் பால் புகட்டிவிடு (அர்ளியீஹி) என்று கூறியதாக வந்துள்ளது.

ஹதீஸில், “அர்ளியீஹி’ (அவருக்குப் பால் புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தபட்சம் அகராதியிலாவது ஆதாரம் காட்ட வேண்டும்.

நேரடியாகக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து கொண்டே இல்லாத அர்த்தத்தைக் கூறி, இந்தச் செய்தியில் உள்ள குறைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். நேரடியாகக் கொடுப்பதையே இந்த வார்த்தை குறிக்கும் என்பதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

ஹாமிதிய்யா குலத்தைச் சார்ந்த பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். (தண்டனை கொடுத்து) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்னை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பி விட்டார்கள். மறு நாள் அப்பெண் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? மாயிஸை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பியதைப் போல் என்னை அனுப்ப நினைக்கிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் (விபச்சாரத்தினால்) கர்ப்பமாக இருக்கிறேன்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) தண்டனையை நிறைவேற்ற முடியாது. குழந்தையைப் பெற்ற பின் வா!என்று கூறினார்கள். குழந்தையைப் பெற்றவுடன் அப்பெண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இதை நான் பெற்றெடுத்து விட்டேன்என்று கூறினார். “இக்குழந்தைக்குப் பால்குடியை மறக்கடிக்கும் வரை பால் புகட்டிவிட்டு (பின்பு) வாஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

ஸாலிமுடைய ஹதீஸில் இடம் பெற்ற “அர்ளியீஹி’ என்ற அதே வாசகம் இங்கேயும் வந்துள்ளது. இந்த இடத்தில், “குழந்தைக்கு இரண்டு வருடம் கறந்து பால் கொடுத்து விட்டு வா’ என்று இவர்கள் அர்த்தம் செய்வார்களா?

பால்குடி உறவு ஏற்படுவதற்கு எப்படி இரண்டு வருட காலம் நிபந்தனையாக இருக்கிறதோ, அது போல் தாயின் மார்பகத்தில் குழந்தை வாய் வைத்துக் குடிப்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை.

கறந்து கொடுத்தார்கள் என்ற வாதத்தை எழுப்புபவர்கள் கூட, கறந்து கொடுத்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஸாலிமுடைய சம்பவத்தில் மட்டும் பல்டி அடித்து விடுகிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தைச் சரி காண்பதற்காக, குர்ஆன் வசனத்திற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் எதிரான பல கருத்தைக் கூற வேண்டிய மோசமான நிலையை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். மார்பகத்திலே உறிஞ்சிக் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது, பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: திர்மிதி 1072

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்பட்டு விடாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 2869

ஸஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது ஸஹ்லா (ரலி) அவர்கள், “அவர் பெரிய மனிதராக இருக்க நான் எப்படி அவருக்குப் பால் புகட்டுவேன்?’ என்று ஆட்சேபணை செய்ததாகவும், இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்ததாகவும் முஸ்லிம் 2878வது செய்தியில் பதிவாகியுள்ளது. “தாடி உள்ளவராக சாலிம் உள்ளாரே!’ என்று கேட்டதாக முஸ்லிம் 2882வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள், “பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவராக இருக்கிறாரே? நான் எப்படிப் பால் புகட்டுவேன்?’ என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் ஸஹ்லா (ரலி) அவர்கள் இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டிருந்தாலும் அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கறந்து கொடுப்பதைத் தான் சொன்னேன்’ என்று விளக்கமளித்திருப்பார்கள்.

இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார். பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம், “பயப்படாதே! நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய்!’ என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880வது எண்ணில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் கறந்து கொடுப்பதைப் பற்றி பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்? ஸாலிமுக்கு நேரடியாகப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மக்களுக்கு சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் இதைச் சொல்ல விடாமல் அவரைத் தடுத்துள்ளது.

சஹ்லா (ரலி) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம் என்ற வாதம் எப்போது சரியாகும் என்றால் ரிளாஃ என்ற சொல் கறந்து கொடுப்பதையும் எடுத்துக்கொள்ளும் என்பதற்கு ஆதாரம் காட்டினால் தான். ஆனால் அவ்வாறு ஒரு ஆதாரத்தையும் இவர்களால் காட்ட முடியாது.

மேலும் ஒரு வாசகத்தை யார் கூறுகிறார் என்பதைப் பொறுத்து அதன் பொருள் வேறுபடும்.

விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்யும் ஒருவன் இன்னொருவனிடம் என் மகளை உனக்குத் தருகிறேன் என்று கூறினால் என் மகளை விபச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள் என்பது இதன் பொருள்.

லூத் (அலை) அவர்களைப் போன்ற ஒழுக்கமுள்ளவர்கள், “என் புதல்வியர்களை உங்களுக்குத் தருகிறேன்’ என்றால் ஆணுடன் புணராமல் என் மகளை திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்பது இதன் பொருளாகும்.

குழந்தை தாயின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் தான் பால்குடி சட்டம் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அப்படியிருக்க நபியவர்கள் சஹ்லா (ரலி) அவர்களிடம், “தாய் மகன் உறவை ஏற்படுத்த சாலிமுக்குப் பால் கொடு’ என்று சொன்னார்கள் என்று நம்புவதாக இருந்தால் இங்கு கறந்து கொடுப்பதைச் சொன்னார்கள் என்று புரிய முடியாது.

எனவே சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமுக்குப் பாலை எடுத்துக் கொடுத்தார்கள் என்று இவர்கள் உறுதியாகக் கூறுவது ஹதீஸில் இல்லாத இவர்களின் சொந்தக் கற்பனையாகும்.

பொய் சொன்னால் கூட பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். இந்தக் கற்பனையை அவிழ்த்துவிட்ட ஜாக் இது அந்த ஹதீஸிற்குப் பொருந்தாது என்பதை கூட அறியவில்லை.

இமாம் அபூதாவூதின் மீது அவதூறு

ஆகவே இந்த ஹதீஸில் பால் கொடுக்குமாறு சொல்லப்படுவது எடுத்துக் கொடுப்பதைத் தான் சொல்லப்படுகிறது. அப்படித்தான் நடந்துள்ளது. இந்த ஹதீஸை இப்படித்தான் புரிய வேண்டும் என்று நாம் சொல்வது இந்த வழிகேடருக்கு நாம் மறுப்பளிக்க வேண்டும் என்பதற்காக நாமே சொல்வதல்ல. இதைப் பதிவு செய்துள்ள இமாம் அபுதாவுத் அவர்களே கூறியிருப்பதுதான்.

ஸாலிம் (ரலி) அவர்கள் தொடர்பான இந்த ஹதீஸை பதிவு செய்து விட்டு இமாம் அவர்கள் எழுதுவது…

மார்க்கத்தைக் கற்றவர்களின் கருத்து இங்கு பால் குடித்தல் என்பதின் மூலம் நாடப்படுவது என்னவெனில் சஹ்லா (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தனது பாலை எடுத்து ஸாலிமுக்கு அவர் குடிப்பதற்காக அனுப்ப வேண்டும். இவ்வாறு ஐந்து தடவை தொடர்ந்து செய்வதால் அவர்கள் ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மஹ்ரமாக ஆவார்கள். (பார்க்க: அபுதாவுத் 2063)

நமது பதில்

சாலிம் (ரலி) தொடர்பான சம்பவத்திற்கு இமாம் அபூதாவுத் அவர்கள், சஹ்லா (ரலி) பாத்திரத்தில் பாலை எடுத்து சாலிமுக்கு குடிக்கக் கொடுத்தார் என்று கூறியதாக ஜாக் கூறுகின்றது.

நாம் அபூதாவுதில் தேடிப் பார்த்தோம். இவர்கள் கூறியது போன்று இமாம் அபூதாவுத் அவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. தங்களுடைய வழிகேட்டை நிலைநாட்ட இமாம் அபூதாவுத் மீது அவதூறு சொல்லும் அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டனர்.

ஒரு பேச்சிற்கு இமாம் அபூதாவுத் அவர்கள் அவ்வாறு விளக்கம் கொடுத்தாலும் அந்த விளக்கம் இந்த ஹதீசுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது.

இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்குப் பொருந்தும் வகையில் இல்லை என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். இதற்குப் பதில் சொல்லாமல் அபூதாவுதின் விளக்கம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அறிஞர்களின் கூற்றைக் கொண்டு வந்தாலும் அது ஆதாரமாக முடியாது.

விதிவிலக்கு என்று கூறித் தப்பிக்கலாமா?

சஹ்லா (ரலி), சாலிம் (ரலி) அவர்களுக்குப் பால் கொடுத்ததாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண், வயது வந்த அந்நிய ஆணுக்குப் பால் புகட்டலாமா என்ற நியாயமான கேள்வியை நாம் கேட்கிறோம்.

இந்தச் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிக்கும் விதமாக நாம் பல கேள்விகளை கேட்டுள்ளோம். ஆனால் ஜாக் இந்த கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அல்ஜன்னத் மாத இதழில் பின்வருமாறு உளறிக் கொட்டியுள்ளது.

இந்த ஹதீஸில் அபுஹூதைஃபாவின் மனதிலுள்ள அதிருப்தி மாறும் என்று நபி சொல்கிறார்கள். அதுபோலவே ஸாலிமுக்கு பால் கொடுத்தபின் அபுஹூதைஃபாவின் அந்த அதிருப்தி மறைந்து விட்டது என்று அவர்களின் மனைவி திரும்ப வந்து சொல்கிறார்கள்.

இப்படி மனதில் அதிருப்தி நிலவும் கணவர் எவருக்கும் இம்முறையில் பால் கொடுப்பதால் மட்டும் அதிருப்தி மாறிவிடாது. ஆனால் அபுஹூதைஃபா (ரலி) அவர்களுக்கு மாறியுள்ளது. எனவே இது இவர்களுக்கென குறிப்பாக சொல்லப்பட்டது தான் என்பது தெளிவாகிறது.

சாலிம் (ரலி), சஹ்லா (ரலி) அவர்களிடம் வந்து செல்வது அபூஹுதைஃபா (ரலி) அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சஹ்லா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய அடிப்படையில் சாலிமுக்கு பால் கொடுத்தவுடன் அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் கோபம் தணிந்தது என்று சம்பவம் கூறுகின்றது.

இம்முறையில் பாலருந்தும் அனைவருக்கும் அதிருப்தி நீங்காது; ஆனால் அபூஹுதைஃபா (ரலி) அவர்களுக்கு மட்டும் நீங்குகின்றது என்பதால் இது அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக உரியது. இது நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் ஒன்று என ஜாக் வாதிடுகின்றது.

அற்புதமா? அபத்தமா?

இது ஒன்றும் அற்புதம் இல்லை. அபத்தமான செய்தியை அற்புதமாக மாற்ற நினைக்கின்றார்கள்.

அபூஹுதைஃபா ஏன் அதிருப்தி கொண்டார் என்பதைச் சம்பவம் தெளிவாக அறிவிக்கின்றது. அவர் சாலிமை சிறு குழந்தையிலிருந்து மகனாகக் கருதி வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சாலிம், சஹ்லா (ரலி) அவர்களை சந்திப்பதை அபூஹுதைஃபா (ரலி) வெறுக்கவில்லை.

வளர்ப்பு மகன் அந்நிய ஆண் தான் என்று அல்லாஹ்வின் சட்டம் வந்த பிறகு சாலிம் வருவதையே அபூஹுதைஃபா வெறுத்தார் என்று சம்பவம் கூறுகின்றது.

ஆக அபூஹுதைஃபாவின் வெறுப்பிற்கு காரணம் சாலிம் அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறுகிறார் என்பதாகும். சஹ்லாவிடம் பால்குடித்த பின் சாலிம் மகனாகி விட்டார் என்று அபூஹுதைஃபா கருதுவதால் இதற்குப் பின் அவர் வெறுக்கவில்லை என்று சம்பவம் கூறுகின்றது.

இதில் அற்புதம் என்ன இருக்கின்றது? இந்தச் சம்பவம் உண்மை என்று நம்பினால் கூட இதை அற்புதம் என்று கூற முடியாது. ஏனென்றால் வளர்ப்பு மகன் அல்லாஹ்வின் சட்டத்தை மீறும் போது வளர்த்தவர் அதை வெறுக்கின்றார். அவர் மீறாத போது வெறுக்கவில்லை என்றால் இது பயங்கரமான அற்புதம் என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள்.

ஜாக்கிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் இந்த அறிவீனமான வாதத்தை ஜாக் வைத்துக் கொண்டிருக்கின்றது.

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக மாற முடியாது என்று அல்லாஹ் சட்டம் இயற்றிய பின்பு அந்தச் சட்டத்தை உடைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிற்கு குறுக்கு வழியைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று நம்புவது அற்புதமா? அபத்தமா?

யூகம் வேண்டுமா? உறுதி வேண்டுமா?

நபியின் மனைவிமார்கள் இந்தச் சட்டம் சாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறியுள்ளார்கள் என்ற வாதத்தை ஜாக் வைக்கின்றது. இந்த வாதத்திற்கு நாம் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றோம். அதை ஜாக் கண்டுகொள்ளாமல் மக்களை ஏமாற்றுவதற்காக பதிலளிக்கப்பட்ட கேள்வியை மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் முன்பு கூறிய பதிலையே இப்போது மறுபடியும் இவர்களின் இந்த வாதத்திற்குப் பதிலாகக் கூறிக் கொள்கிறோம்.

ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து, நபி (ஸல்) அவர்களின் அனைத்து மனைவிமார்களும் “இச்சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது’ என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

(ஸாலிமுக்குப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களுக்குப் பால் புகட்டும் படி தனது சகோதர, சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வர வைப்பதை உம்மு சலமாவும் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி ஸாலிமுக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் சுபைர்

நூல்: அபூதாவூத் 1764

நபி (ஸல்) அவர்கள் ஸாலிமுக்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்படக் கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக, “எங்களுக்குத் தெரியவில்லை; இது ஸாலிமுக்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும்’ என்று யூகமாகக் கூறியதாகத் தான் வந்துள்ளது.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களோ, இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்செய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் நபியவர்களின் ஏனைய மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டு விட்டு, பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே சரியானதாகும்.

ஏனென்றால் உறுதியான கூற்றை ஏற்க வேண்டுமா? அல்லது யூகத்தை ஏற்க வேண்டுமா? என்று வரும் போது உறுதியாகக் கூறும் நபரின் தகவலை ஏற்பது தான் அறிவுடமை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்ற வாதிப்பவர்கள், இதைச் சான்றாகக் காட்டுவதால் இந்த ஹதீஸில் அவர்களது வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம்.

இச்சட்டம் சம்பந்தமாக உம்மு ஸலமா மற்றும் ஆயிஷா (ரலி) ஆகிய இருவருக்கிடையில் விவாதம் நடந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. அதைக் கவனித்தால் பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்தலாம் என்ற சட்டம் அனைவருக்கும் உரியது என்ற முடிவையே இவர்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்கள் வீட்டிற்குள் வருகிறானே! ஆனால் அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்ப மாட்டேன்என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ ஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வருகிறார். அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் அபூ ஹுதைஃபாவின் மனதில் அதிருப்தி நிலவுகிறதுஎன்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்து விடு. (இதனால் பால்குடி உறவு ஏற்பட்டு) அவர் உன் வீட்டிற்கு வரலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் உம்மி ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 2881

பெரியவருக்குப் பால் புகட்டுவதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இல்லையா?’ என்று கேட்டு இச்சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிக்கலாம் என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தொடுத்த கேள்விக்கு உம்மு ஸலமா (ரலி) அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு இந்தச் செய்தி கூறுகிறது.

ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுவது தான் நபிவழி என்றால் உம்மு ஸலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்திற்கு எந்தவிதமான மறுப்பும் தராமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்?

ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மு ஸலமாவை நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, ஸாலிமுக்கு மட்டும் உரியது என இன்றைக்கு வாதிக்கும் இவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது

ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்கின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கு கவனிக்கத் தவறி விட்டார்கள்.

  1. ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தை தன்னுடைய யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
  2. ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் விஷயம் அப்படியல்ல! நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச் சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தான். ஸஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களைக் கூட ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உமர், இப்னு உமர் போன்ற பெரும் நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதையாகத் திகழ்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள், ஸாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

இந்த அறிவீனத்தால் தான் ஜாக் இந்த சம்பவத்தை சரி என்று கூறுகின்றது. இதை மறுக்கும் நம்மை வழிகேடர்கள் என்று பரப்பி வருகின்றது. மக்களுக்கு சத்தியத்தை உணர்த்துவது இவர்களின் நோக்கம் என்றால் இவர்களின் வாதங்களுக்கு யார் பதில் சொன்னாலும் அதற்கு இவர்கள் பதிலளிப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு அந்த நோக்கமில்லை. தர்ஜுமாவை விமர்சித்து மக்களிடம் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறிக்கோள். இதற்காகத் தான் இவர்கள் படாத பாடு படுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் தங்களுடைய விருப்பம் நிறைவேறாமல் கேவலத்திற்கு மேல் கேவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவான நிலைப்பாடு

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது நமது ஜமாஅத்தின் நிலைப்பாடில்லை. குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

குர்ஆன் மட்டும் போதுமானது. ஹதீஸ்களைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று கூறிய வழிகேடர்களுடன் விவாதம் செய்து நபிமொழிகளின் அவசியத்தை விவாதத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஒரே ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே.

ஆனால் மிகச் சில ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுடன் நேரடியாக முரண்படுவதால் அவை ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. அவற்றை ஏற்கக்கூடாது என்று கூறுகிறோம்.

பொதுவாக ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்படுவதைப் போன்று தெரிந்தால் முரண்பாடில்லாமல் இணைத்து விளங்க வாய்ப்பிருந்தால் அதைத் தான் நாம் முதலில் செய்வோம். இவ்வாறு பல செய்திகளுக்கு நாம் விளக்கம் கூறி அவற்றை ஏற்றிருக்கிறோம்.

சில செய்திகள் எந்த விளக்கமும் கொடுக்க முடியாத வகையில் குர்ஆனுடன் நேரடியாக முரண்படுகின்றன. இது போன்ற செய்திகளுக்கு எந்த விளக்கம் தந்தாலும் அது உளறலாகவும் அந்த செய்திகளுக்கு சற்றும் பொருந்தாததாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்ட கருத்தை மறுத்து சரிபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவ்விசயத்தில் நம்மை விமர்சிக்கும் ஜாக் போன்ற மற்ற இயக்கத்தினர் கூறும் அனைத்து விளக்கங்களும் இந்த அடிப்படையில் தான் உள்ளது. தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செய்திகளுக்கு கொஞ்சம் கூட இடம் கிடையாது. இதை குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக விவரிக்கின்றது.

இந்த தரத்தில் உள்ள மிகச் சில செய்திகளை ஏற்றால் குர்ஆனை புறக்கணிக்கும் நிலை ஏற்படும். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் இழிவுபடுத்தும் நிலை ஏற்படும். இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு இவையே மிகப்பெரிய ஆயுதமாக அமையும்.

எனவே தான் நாம் இந்த ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்று கூறுகிறோம். அறிவிப்பாளர் தொடரைப் பார்த்து அதில் குறை ஏதும் இருந்தால் அது பலவீனமான செய்தி என்று எவ்வாறு முடிவு செய்கின்றோமோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று முடிவு செய்ய வேண்டும் என்கிறோம். இஸ்லாமிய மார்க்கத்தைப் பாதுகாப்பதைத் தவிர இதில் வேறு நோக்கமில்லை.

பால்குடி சம்பந்தமாக ஜாக் இயக்கத்தில் இருந்த முஜீபுர்ரஹ்மான் என்பவர் இது குறித்து விவாதித்த போது, அந்த விவாதத்தில் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் வாய்மூடிக் கொண்ட வரலாறைத் தெரிந்து கொண்டே இப்போது அல்ஜன்னத்தில் உண்மைக்கு மாறாக உளறிக் கொட்டிக் கொண்டு உள்ளனர். அந்த விவாதத்தை இணையதளத்தில் காணலாம்.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட முஜீபுர்ரஹ்மான், அடுத்தவர் மனைவியான அன்னியப் பெண்ணிடம் பால் குடித்து, அந்தப் பெண்ணையே தட்டிப் பறித்துக் கொண்டார் என்பது தனி விஷயம்.

பலமுறை பதில் சொன்ன பிறகும், இதற்கென ஒரு விவாதத்தை நடத்தி அதில் இவர்களது அணியினர் மண்ணைக் கவ்விய பின்னரும் அதில் நாம் எடுத்து வைத்த வாதங்களுக்குப் பதில் சொல்லாமல், இப்போது புதிதாக ஏதோ கேள்வி எழுப்புவது போன்ற பித்தலாட்டத்தை ஜாக் செய்துள்ளது.

இதே போன்று “நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?” என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையும் மேற்படி அல்ஜன்னத் ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியுள்ளது. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்புக் குண்டத்தை ஊதி விட்டதால் பல்லியைக் கொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவாகியுள்ள செய்தியை வெளியிட்டு, அதுகுறித்து நமது நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர்.

இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் கேள்வி எழுப்பி சில நாட்கள் அல்ல, சில மாதங்கள் அல்ல. ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை மவுனத்தில் இருந்தவர்கள் இப்போது பதிலளிக்க வந்து “பல்லி’ளித்திருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டு காலம் இதற்குப் பதிலளிப்பதற்காக ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலும். இப்படி யோசித்து, ஒரு நல்ல பதிலை, குர்ஆனுக்கு முரண்படாத ஒரு பதிலை அளித்திருந்தால் நாமும் வரவேற்போம். ஆனால் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் பல்லியைப் பகுத்தறிவாளியாக்கி, இவர்கள் பைத்தியமாகியிருக்கிறார்கள். அதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

குர்ஆனைச் செவியுற்றால்…….

மனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு ஹனபி மத்ஹபு அடிப்படையில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக அளிக்கப்படும் பதில்களை ஏகத்துவத்தின் ஆய்வுக்கூடத்தில் அலசி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் பிப்ரவரி 2013 இதழில் வெளியான ஒரு கேள்வியைப் பார்ப்போம்.

? நாங்கள் ஹனபி மஹல்லாவைச் சேர்ந்தவர்கள். வெள்ளிக்கிழமை சுப்ஹுடைய வக்தில் இமாம் ஸஜ்தா சூராவை மைக் மூலம் ஊரெல்லாம் கேட்கும் வண்ணம் தொழ வைக்கிறார். மேலும் சுப்ஹு பாங்கு சொல்வதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் வரை ஒலி நாடா மூலமும் உரை மற்றும் திருக்குர்ஆன் மூலமும் தமிழ் தர்ஜுமாவும் ஒலிபரப்பப்படுகின்றது. இத்தொடரில் 14 ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் இடம்பெறுகின்றன. இதுபற்றிய மார்க்க விளக்கம் என்ன?

பதில்: குர்ஆன் ஓதும் போது சில ஒழுக்கங்கள் இருக்கின்றன. அதை ஓதும் போது மற்றவர்கள் மவுனமாக அதைக் காது தாழ்த்திக் கேட்க வேண்டும். அல்லாஹ் குர்ஆனில், “குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவிமடுத்து மவுனமாகக் கேளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்’ (7:204) எனக் கூறியுள்ளான். எனவே மக்களின் நிலை தத்தமது அலுவல்களில் ஈடுபட்டு குர்ஆனைச் செவிமடுத்து கேட்க இயலாத நிலையாக இருப்பின் அச்சந்தர்ப்பங்களில் குர்ஆனுக்குக் கண்ணியக் குறைவு ஏற்பட்டு விடாமல் இருக்க ஓதுபவர்கள் பிறருக்குக் கேட்காத முறையில் மெதுவாக ஓத வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் சப்தமிட்டு ஓதுபவர் பாவியாவார்.

மஹல்லாவின் வீடுகளில் வயோதிகள், நோயாளிகள், பிற மதத்தார் போன்றோர் இருப்பர். ஃபஜ்ருக்கு முன்பாக மைக்கில் பெரும் சப்தத்துடன் குர்ஆன் ஓதுதல், மொழி பெயர்ப்பு செய்தல் போன்றவை ஒலிபரப்பப்பட்டால் மேற்குறிப்பிட்டோர் அதைப் புறக்கணிப்பார்கள். அதனால் இவ்வாறு செய்பவர்களுக்குக் குற்றம் ஏற்படும். மேலும் மேற்குறிப்பிட்டோருக்கு கஷ்டமாக இடையூறாக இருக்கும். பிறருக்கு இடையூறாக இருப்பது முஸ்லிமுக்கு அழகல்ல. உண்மை முஸ்லிம் எவரின் நாவாலும் கரத்தாலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதோ அவர்தான் எனு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

ஸஜ்தா திலாவத் இடம்பெற்றுள்ள வசனத்தை ஒரு மனிதர் ஓதுகின்றார். அப்படியே நேரடியாக அதை மைக் மூலம் ஒலிபரப்பப்பட்டால் அதைச் செவியேற்ற முஸ்லிம் மீது ஸஜ்தா செய்வது கடமையாகும். டேப் ரிக்கார்டரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஸஜ்தா வசனங்கள் ஓதப்பட்டால் அதைக் கேட்பவர் மீது ஸஜ்தா கடமையில்லை.

மனாருல் ஹுதா, பிப்ரவரி 2013, பக்கம் 96

இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தக் கேள்வியில் அடங்கியுள்ள மத்ஹபு வெறியை நாம் பார்க்க வேண்டும். கேள்வி கேட்பவர் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர். ஹனபி மத்ஹபில் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ஸஜ்தா அத்தியாயம் ஓதுவதில்லை. ஷாபி மத்ஹபினர் தான் ஸஜ்தா அத்தியாயம் ஓதுவார்கள். எனவே ஷாபி மத்ஹபைக் குறை சொல்லும் நோக்கிலேயே இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்.

இதற்குப் பதிலளிக்கும் மவ்லானாவும் ஷாபி மத்ஹபினர் செய்வது தவறு என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இவ்வாறு ஓதும் ஷாபி மத்ஹபினர் பாவிகள் என்ற கருத்தைப் பதிவு செய்கின்றார். இதிலிருந்து இவர்களிடம் எந்த அளவுக்கு ஹனபி மத்ஹபின் வெறி குடிகொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

இந்தக் கேள்விக்கு மவ்லானா அளித்துள்ள பதில் இரண்டு அடிப்படைகளில் அமைகின்றது.

  1. குர்ஆன் ஓதும் போது அதைச் செவியுற வேண்டும்.
  2. ஸஜ்தா வசனம் காதில் விழுகின்ற போது ஸஜ்தா செய்ய வேண்டும்.

அல்லாஹ் திருக்குர்ஆன் 7:204 வசனத்தில் கூறுகின்ற அடிப்படையில் செவிமடுக்க வேண்டும்; வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் அது எப்போது?

ஒருவர் சுப்ஹ் தொழுகைக்குப் பள்ளிக்கு வருகின்றார். அப்போது பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுகை ஜமாஅத் நடக்கின்றது. வந்தவருக்கு வயிற்றைக் கலக்குகின்றது. அவர் உடனே கழிவறைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். பள்ளிவாசலில் மைக் இல்லாமலேயே சாதாரணமாக இமாம் ஓதுகின்ற குர்ஆன் வசனங்கள் அவருடைய காதுகளில் விழுகின்றன. இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்?

குர்ஆன் முடிக்கின்ற வரை வயிற்றைக் கலக்கினாலும் பரவாயில்லை என்று வாய் பொத்தி நின்று கேட்க வேண்டுமா? அல்லது கழிவறைக்குச் செல்ல வேண்டுமா?

இந்த வசனத்தை மவ்லானா விளங்கியது போன்று விளங்கினால் இந்த இக்கட்டான நிலை தான் ஏற்படும். எதையும் யாரும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இவர்கள் நடத்துகின்ற ஹிப்ளு மதரஸாக்களில் மாணவர்கள் வாய்க்குள் ஓதிக் கொண்டே குர்ஆனை மனனம் செய்வதில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இப்போது அங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் குர்ஆனை மட்டும் தான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சமையல்காரர் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமையல் செய்யக் கூடாது. குர்ஆனை வாய்பொத்தி, காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டு மட்டும் தான் இருக்க வேண்டும்.

வீட்டில், வியாபாரக் கடையில் யாராவது குர்ஆனை ஓதினால் வாய் பொத்தி மவுனமாக நிற்க வேண்டும் என்ற இக்கட்டு ஏற்பட்டு பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போகும். குர்ஆனின் கட்டளைகளையே புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மார்க்கத்தில் சிரமத்தைத் தரவில்லை என்று எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

(முஹம்மதே!) நீர் துர்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை.

அல்குர்ஆன் 20:2

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கின்ற போது இந்த வசனம் தொழுகையில் ஓதுவதைத் தான் குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். தொழுகைகளில் இமாம் மற்றும் மஃமூமுக்கு கிராஅத் அவசியம் என்று புகாரியில் ஒரு பாடம் இடம்பெறுகின்றது. அந்தப் பாடத்தின் விளக்கத்தில் இப்னுல் பத்தான் அவர்கள், “7:204 வசனத்தின் கருத்து, தொழுகையில் குர்ஆனைச் செவியுறுவதைத் தான் குறிப்பிடுகின்றது; இந்தக் கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை’ என்று குறிப்பிடுகின்றார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் அளித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது எங்களுக்கு (நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய) எங்களது வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள். எங்களுக்குத் தொழும் முறையை விளக்கினார்கள். “இமாம் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடுங்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: முஸ்தக்ரஜ் அபீ உவானா

இது சரியான ஹதீஸ் ஆகும் என்று இமாம் முஸ்லிம் அவர்கள், தமது முஸ்லிம் நூலில் தெரிவிக்கின்றார்கள்.

குர்ஆனைச் செவியுற்றால் வாய்மூடி இருக்க வேண்டும் என்ற கட்டளை தொழுகையில் தான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

எனவே மைக் போட்டு ஓதினாலும், மைக் போடாமல் ஓதினாலும் அது தொழாதவரைப் பாதிக்காது என்பதை விளங்கலாம்.

அடுத்து, ஸஜ்தா வசனங்களைச் செவியுறுகின்ற போது தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. இதை புகாரியில் இடம் பெறும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (அந்நநஜ்ம் அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1072

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை.

நூல்: புகாரி 1073

மேலும் ஸஜ்தா சூரா ஓதும்போது நபி (ஸல்) ஸஜ்தா திலாவத் செய்ததற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. 38:24, 53:62, 84:21, 96:19 ஆகிய நான்கு வசனங்கள் தவிர வேறு வசனங்களின் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

மாநபி வழியில் இந்தப் பிரச்சனைகளுக்கு இவ்வளவு தெளிவான தீர்வு இருக்கையில் மத்ஹபு அடிப்படையில் மார்க்கத்திற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளிப்பது எவ்வாறு சரியாகும்?

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 12

இறைநேசரின் பிரார்த்தனையும் இறைவனின் மறுப்பும்

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாறுகளில் யூனுஸ் நபியின் வரலாறு மிக முக்கியமானதாகும். அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாக்களில் யூனுஸ் நபியும் ஒருவர். யூனுஸ் நபியவர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுப்பப்பட்ட நபியாவார். இவரைத் தவிர வேறு எந்த நபியையும் அதிகமான மக்களுக்கு அனுப்பியதாக இறைவன் சொல்லவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்:

யூனுஸ் தூதர்களில் ஒருவர்.  (அல்குர்ஆன் 38:139)

அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.  (அல்குர்ஆன் 38:147)

இவர்களும் மற்ற நபிமார்களைப் போல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். எதிர்ப்பையும் சந்திக்கிறார்கள். எல்லா நபிமார்களைப் போல் அவர்களும் பொய்யாக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு சோதனைகளை சகித்துக் கொண்டு பிரச்சாரம் செய்வார்கள். இனிமேல் நம்மால் தாங்க முடியாது. இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று வரும்போது அல்லாஹ்விடம், “இவர்களிடம் நான் எவ்வளவோ சொல்லி விட்டேன்; இவர்கள் திருந்துவது போல் தெரியவில்லை. எனவே இவர்களை நீ தண்டித்து விடு’ என்று சொல்வார்கள். இவ்வாறு பல நபிமார்களும் இறைவனிடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் யூனுஸ் நபியவர்களும் பொறுமை தாளாமல் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். இறைவனும் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, “இந்த ஊரை விட்டு நீ வெளியேறி விடு’ என்று சொல்கிறான். இறைவன் குற்றவாளிகளை அழிப்பதாக இருந்தால் நல்லவர்களை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்திலிருந்து வெளியேற்றி விட்டு குற்றவாளிகளை மட்டும் தான் தண்டிப்பான்.

சுனாமி. புயல். பூகம்பம் போன்ற அழிவுகள் இவையெல்லாம் ஏற்படும் போது, அல்லாஹ்வின் கோப்பார்வை மனிதன் மீது இறங்கிவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. அல்லாஹ் அவனது கோபப் பார்வையின் காரணத்தால் அழிப்பதாக இருந்தால் நல்லவர்களைப் பிரித்து எடுத்து விட்டுத் தான் கெட்டவர்களை அழிப்பான்.

இதைப் போன்று தான் யூனுஸ் நபி இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தவுடன் அவரையும் அவர்களுடன் இருந்தவர்களையும் இறைவன் அவ்வூரிலிருந்து வெளியேறச் செய்கிறான். அவர்களும் வெளியேறி விடுகிறார்கள்.

ஆனால் அதுவரை யூனுஸ் நபியை ஏற்றுக் கொள்ளாத அம்மக்கள் இறைவனின் தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடியதால் அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுகிறான். பிறகு அவ்வூரார் தண்டிக்கப்படாமல் இருந்ததை யூனுஸ் நபி திரும்பி வந்து பார்த்த போது அவர்களுக்குக் கோபம் ஏற்படுகின்றது. “நான் உன்னிடம் இவர்களை அழித்து விடுமாறு சொன்னேனே! ஏன் அழிக்கவில்லை?” என்று இறைவனிடமே கோபம் கொள்கிறார்கள். இதைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில்,

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21:87-88)

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

அல்குர்ஆன் 68:49

“ஒருவனை அழிப்பதும், அவர்களை அழிக்காமல் விட்டு விடுவதும் எனது அதிகாரத்திற்குட்பட்டது. நீ நினைத்த நேரத்தில் நான் தண்டிக்க மாட்டேன்’ என்று இறைவன் அவர்களை கண்டிக்கின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மக்கா காபிர்களால் பல துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். இந்நிலையில் அல்லாஹ் நபியவர்களைப் பார்த்து, “யூனுஸ் நபியைப் போன்று ஆகிவிடாதீர்’ என்று சொல்கிறான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். (அல்குர்ஆன் 68:48)

இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். (அல்குர்ஆன் 37:144)

மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் ஒரு நபிக்கு உரிய எல்லை என்ன? அதிகாரம் எவ்வளவு? அவர் விரும்பியதை அல்லாஹ் செய்வானா? அவர் விரும்பியதைச் செய்யவில்லை என்பதற்காக படைத்த இறைவனையே கோபிக்க இயலுமா?

இத்தனைக்கும் யூனுஸ் நபிக்கும் அந்த மக்களுக்கும் சொந்தப் பகையா? கொடுக்கல் வாங்கலில் ஏதேனும் பிரச்சினையா? எதுவும் இல்லை. அனைத்துமே தீனுக்காகத் தான். இறைவனுக்காகத் தான்.

யூனுஸ் நபிக்குக் கோபம் வரக் காரணமே, “இந்த மக்கள் இவ்வளவு அக்கிரமக்காரர்களாக இருக்கிறார்களே! இவர்களை அல்லாஹ் அழிக்காமல் விட்டு விட்டானே’ என்பதற்காகத் தான். ஆனால் அதற்காகக் கூட கோபம் வரக்கூடாது என்பதை மேற்கண்ட வசனத்தில் நமக்கு உணர்த்துகிறான்.

இன்றைக்கு நாமும் தவ்ஹீதை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்கிறோம். இதனால் நமக்குப் பல பிரச்சினைகள், துன்பங்கள் எதிரிகளால் கொடுக்கப்படுகின்றன. அடி உதைகளை வாங்குகின்றோம். அதற்காக நாம் கொள்கையை விட்டு விடமுடியுமா?

அல்லது நாங்கள் மட்டும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் உனக்காகப் பாடுபடுகிறோம். எங்களுடைய கை ஓங்காமல் எதிரிகளுடைய கை மட்டும் ஓங்கிக் கொண்டு இருக்கிறதே என்று அல்லாஹ்விடத்தில் கோபப்பட முடியுமா? அல்லாஹ் நினைத்தால் எதிரிகளுடைய கையை ஓங்க வைப்பான். நமக்குச் சிறு தடுமாற்றத்தைத் தருவான். அவன் நினைத்தால் எதிரிகளை சரிவுக்குள்ளாக்குவான். அனைத்தும் அவனது அதிகாரத்திற்குட்பட்டது. ஏன் என்று கேள்வி கேட்கக்கூடாது. யூனுஸ் நபியவர்கள் அவ்வாறு கேட்டதால் தான் இறைவன் அவர்களைத் தண்டிக்கிறான்.

இந்த வரலாறு நமக்கு எதை உணர்த்துகின்றது என்றால், நல்லடியார்களாக இருந்தாலும் நபிமார்களாக இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதனை மீறி ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே தவிர இறைவனுக்குக் கட்டளை இடும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நோய் நீக்கும் அதிகாரம் இறைவனுக்கே!

அய்யூப் நபியின் வரலாற்றையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இவர்களுடைய பிரச்சாரப் பயணம் எவ்வாறு இருந்தது என்பதைச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம், நோயை பற்றி சொல்லிக் காட்டுகிறான். அவருக்கு மிகக் கடுமையான துன்பம் வந்த போதும் அதைச் சகித்துக் கொண்டு இருந்தார். நான் தான் நபியல்லவா? எனக்கு ஏன் இப்படிப்பட்ட துன்பம் ஏற்பட வேண்டும்? என்று இறைவனிடத்தில் கோபம் கொள்ளவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்:

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

அல்குர்ஆன் 38:41-42.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன். 21:83, 84

அவரைத் தண்டிப்பதற்காக இறைவன் இதனைச் செய்யவில்லை. அவர் மீதுள்ள கோபப் பார்வையினால் இந்த நோயை ஏற்படுத்தவில்லை. அவரிடம் எந்தத் தவறும் இருந்ததில்லை. ஆனால் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் சரி, நல்லடியாராக இருந்தாலும் சரி; தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அவனிடம் தான் மனு போட முடியுமே தவிர தன்னால் அதனைச் சரி செய்ய முடியாது. அத்துன்பத்தை தானாக நீக்க முடியாது என்பதை இறைவனை மாத்திரமே வணங்கக் கூடியவர்களுக்கு ஒரு பாடமாக, ஒரு படிப்பினையாகவே இறைவன் அய்யூப் நபியின் வரலாற்றைக் கூறுகிறான்.

ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் ஒரு தலைவலி உட்பட என்ன நோய் வந்தாலும் அவ்லியாக்களிடம் சென்று அதை நீக்குமாறு கேட்கிறார்கள். மவ்லிது புத்தகங்களில் இதைத் தான் எழுதி வைத்து பாடுகிறார்கள்.

நாகூராரே! என்னுடைய வயிற்று வலியைப் போக்குங்கள். எங்களுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். எங்களுடைய கண் பார்வையயை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும். எங்கள் காதுகளில் உள்ள கோளாறுகளை நீங்கள் தான் போக்க வேண்டும். நீண்ட நாள் ஆயுளை எங்களுக்குத் தாரும். எங்களின் வாழ்நாளை குறைத்து விடாதீர்கள் என்றெல்லாம் பாடுகிறார்கள்.

இறந்து போன அவ்லியாக்கள் எல்லா நோயையும் நீக்கி விடுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு இந்த அய்யூப் நபியின் வரலாறு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

ஒரு நபியாலேயே தனக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க இயலாமல் இருந்த போது, இறந்து போன அவ்லியாக்கள் அடுத்தவர்களுடைய நோய்களை எவ்வாறு தீர்ப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த வரலாறை ஒருவன் படித்து, சிந்திக்க ஆரம்பித்தால் அவன் எந்த அவ்லியாக்களிடமும் சென்று தன்னுடைய துன்பத்தைப் போக்குமாறு கேட்க மாட்டான் என்பது மட்டும் உறுதி.

அற்புதங்கள் செய்தாலும் கடவுளாக முடியாது

அதேபோன்று ஈஸா நபியின் வரலாறையும் அல்லாஹ் குர்ஆனில் படிப்பினையாகக் கூறுகிறான். மற்ற நபிமார்களை விட ஈஸா நபியவர்கள் பல சிறப்புகளைப் பெற்ற ஒரு நபி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அற்புதங்களை எடுத்துக் கொண்டாலும் மற்ற நபிமார்களை விட இவர்களுக்கு அதிகமாக அல்லாஹ் வழங்கியிருந்தான்.

நாம் குர்ஆனைப் படித்துப் பார்த்தால் ஈஸா நபியவர்களுக்கு அல்லாஹ் நிறைய அற்புதங்களை வழங்கியிருப்பதைக் காணலாம். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது. இவரை ரூஹுல் குதுஸைக் கொண்டு பலப்படுத்தினோம் என்று கூறுகிறான். அவர் எங்கே சென்றாலும் அவருடன் ஜிப்ரயீல் (பரிசுத்த ஆவி) இருப்பார் என்று கூறுகிறான்.

மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.

அல்குர்ஆன் 2:253

மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

அல்குர்ஆன் 2:87

அதைப் போன்று அவர் பிறந்தவுடனேயே தொட்டிலில் இருக்கும் போது பேசினார். இது எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத ஒரு சிறப்பாகும்.

அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார்

அல்குர்ஆன் 3:46

அவர் தந்தை இல்லாமல் பிறந்தார் என்றும், ஜிப்ரயீலை அனுப்பி அல்லாஹ்வின் ரூஹை ஊதி அதன் மூலமாகப் பிறந்தார் என்றும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்? ” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் “ஆகுஎன்பான். உடனே அது ஆகி விடும்என்று இறைவன் கூறினான்.

அல்குர்ஆன் 3:47

அதைப் போன்று அவர் செய்த அற்புதங்களையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவர் களிமண்ணை எடுத்து உருட்டி பறவையைப் போன்று வடிவமைத்து அதில் ஊதினால் அது நிஜப் பறவையைப் போன்று பறந்து செல்லும். வெண்குஷ்ட நோய், பிறவிக் குருடு ஆகியவற்றை அவரது கையைக் கொண்டு தடவினால் அந்தக் குறை நீங்கிவிடும். சில நேரங்களில் இறந்தவர்களை உயிர்ப்பிப்பார். வீட்டில் ஒருவர் இன்றைக்கு என்ன சாப்பிட்டார் என்பதை சொல்வார். இப்படிப்பட்ட அற்புதங்களை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன் அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்றார்)

அல்குர்ஆன் 3:49

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லைஎன்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 5:110

இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்களே! குஷ்ட நோய்களைக் குணப்படுத்தி இருக்கிறார்களே! மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்களை ஈஸா நபியவர்கள் செய்திருக்கிறார்களே என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால் இத்தனையையும் அவர் சுயமாகச் செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதி பெற்றுத் தான் செய்தார்கள்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

இத்தனை அற்புதங்களையும் அவர் செய்ததால் அவரை நாம் அல்லாஹ்விடத்தின் இடத்தில் வைத்தால் அவன் பொறுத்துக் கொள்வானா? ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக

அல்குர்ஆன் 5:75

இத்தனை அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தந்தை இல்லாமல் பிறந்தாலும், இன்னும் சாகாமல் இருந்தாலும், இறந்தவர்களை உயிர்ப்பித்திருந்தாலும் அவர் தூதரைத் தவிர வேறில்லை. அவர் கடவுள் கிடையாது; அதுமட்டுமல்லாமல் அவருக்குத் தாய் இருந்தார். ஈஸா (அலை) அவர்களும் அவரது தாயார் மர்யம் (அலை) அவர்களும் உணவு சாப்பிட்டார்கள் என்கின்ற போது அவர் எப்படிக் கடவுளாக இருப்பார் என்று அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.

மேலும் இந்த உலகில் யாரெல்லாம் ஈஸாவைக் கடவுளாக வழிபட்டார்களோ, அவரிடம் பிரார்த்தித்தார்களோ, அவரிடம் உதவி தேடினார்களோ அவர்களை மறுமையில் ஒன்று திரட்டி, அவர்கள் முன்னிலையில் ஈஸா நபியிடம் அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப்பார்.

அல்குர்ஆன் 5:11

“இறைவா! நீயே குறைகளுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு தகுதியில்லாத ஒன்றை நான் எப்படிச் சொல்வேன். நானே உன்னால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு. நான் ஒரு மனிதன். நான் சில அற்புதங்களை நீ கொடுத்த நேரத்தில் உன்னுடைய அனுமதியுடன் நான் செய்திருக்கிறேன். இவ்வாறு இருக்கையில் என்னை வணங்குமாறு சொல்வேனா? நான் சொன்னதும் கிடையாது. அந்தத் தகுதியும் எனக்குக் கிடையாது. அவ்வாறு நான் சொல்லியிருந்தாலும் அது உனக்கு தெரியாமலா இருக்கும்? நான் மக்களிடம் சென்று என்னை வணங்குமாறு சொல்லியிருந்தால் நீ நியமித்துள்ள மலக்குமார்கள் விட்டு வைப்பார்களா? அதைப் பதிவு செய்திருப்பார்கள். அது எழுத்துப்பூர்வமாக உன்னிடத்தில் ஆதாரமாக இருக்கும். நான் செய்வதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டும் இருக்கிறாய். என்னுடைய மனதில் நான் என்ன நினைத்தாலும் அது உனக்கு தெரியாமல் இருக்காது. நான் சொல்லவில்லை என்று உனக்கும் தெரிந்திருக்க ஏன் இவ்வாறு என்னிடம் கேட்கிறாய்?” என்ற கருத்தில் ஈஸா (அலை) அவர்கள் இறைவனிடத்தில் கேட்பார்கள்.

ஆனால் அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பது எதற்காக? அவர் அற்புதங்களைச் செய்ததால் அவருக்குக் கடவுள் தன்மை வந்துவிட்டது என்று நம்பியிருந்தார்களே! அந்த மக்களுக்குச் சம்மட்டி அடி கொடுப்பதற்காகத் தான் இந்த நீதிமன்றத்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அவர்களுடைய நம்பிக்கையை மறுத்து. அவர்கள் தன்னை வணங்கியதையும் பொய்ப்பித்து கடைசியில் அவரைப் பின்வாங்கச் செய்து விடுகின்றான்.

மேலும் அதே போன்று நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாக புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி, இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களைத் தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து, தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகிறான். இன்ஷா அல்லாஹ் அவர்களுடைய சிறப்பைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.