ஏகத்துவம் – ஜூன் 2012

தலையங்கம்

கொள்கை உறவே குருதி உறவு

அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகப்பட்சமாக பதின்மர். அவ்வளவு தான்.

இப்படி இருந்த இந்தக் கொள்கையாளர்கள் பத்து நூறாக, இருபது இருநூறாக படிப்படியாகப் பல்கிப் பெருகி இன்று இலட்சக்கணக்கில் வளர்ந்து ஒரு தனிப்பெரும் தவ்ஹீது சமுதாயமாக உருவெடுத்துள்ளனர்.

ஏகத்துவக் கொள்கை புகுந்த ஊரெல்லாம் ஒரு கூரை வேயப்பட்ட பள்ளி கண்டு, ஐங்காலத் தொழுகைகள், ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளிலும், திருமணம் போன்ற வாழ்க்கை விவகாரங்களிலும், இறந்தவருக்குச் செய்கின்ற ஜனாஸா இறுதிக் கடமைகள் வரை அனைத்திலும் முழுமையாகக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பின்பற்றுகின்ற ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஜமாஅத்தாகச் செயல்பட்டு வருகின்றது.

இப்படி ஒரு கொள்கைப் பிடிப்புள்ள நமது ஜமாஅத்தில் உள்ள பெண் குழந்தைகள், தவ்ஹீதையே கொள்கையாகக் கொண்ட கொள்கைக் குமரிகளாக மலர்ந்து நிற்கின்றனர்.

நாம் ஏன் தவ்ஹீதுக்கு வந்தோம்? தனிப்பள்ளி, தனிப் பதிவேடு ஏன் கண்டோம்? சிறைச்சாலைகளை ஏன் சந்தித்தோம்? நீதிமன்றங்களுக்கு ஏன் போய் அலைந்தோம்? ஏன் ஊர் நீக்கம் செய்யப்பட்டோம்? என்ற கேள்விகளை நமக்கு நாமே தொடுத்தோமானால் கிடைக்கும் விடை, அல்லாஹ் சொல்வது போல் நம்மையும் நமது மனைவி மக்களையும் நரகத்திலிருந்து காப்பதற்காகத் தான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

கொழுந்து விட்டு எரியும் நரகிலிருந்து நமது குலக் கொழுந்துகளை, குழந்தை குட்டிகளை காப்பாற்றுவது தான் நமது கொள்கை, லட்சியம் எனும் போது நம்முடைய இந்தக் கொள்கைக் குமரிகளை சுன்னத் வல் ஜமாஅத் மாப்பிள்ளைக்குக் கொடுக்க முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனைவியர், தர்ஹாவுக்குப் போவேன், முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பேன் என்று சொன்னால் அவளுடன் நாம் சேர்ந்து வாழ முடியுமா? ஒருபோதும் முடியாது. அந்த மனைவி மூலம் பத்துக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவளை நாம் விவாகரத்துச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏன்?

அல்லாஹ் கூறுகின்றான்:

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இதே அடிப்படை தானே நம்முடைய பெண் மக்களுக்கும் பொருந்தும். இந்தச் செல்ல மகளை கடைந்தெடுத்த முஷ்ரிக்கிடம் கொண்டு போய் எப்படிச் சேர்க்க முடியும்? அவ்வாறு கொண்டு போய்ச் சேர்த்தால், நம்முடைய பெண் மக்களை நாமே நரகத்தில் கொண்டு போடுகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம்.

ஏகத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஒரு பெண் கடலில் கிடக்கும் மீன். அவளை ஓர் இணை வைப்பாளருடன் சேர்த்து வைப்பது கரையில் தூக்கிப் போடுவதைப் போன்று! இத்தகைய கோர நிலையை நம்முடைய சத்தியக் கொள்கையின் பெண் சந்ததிகள் சந்திப்பதை விட்டும் காப்பதற்காக வேண்டி நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத் எனும் தனிப்பெரும் சமுதாயத்திலேயே பெண் பார்ப்போமாக!

இப்போதும் கூட பணக்கார வட்டம் சொந்த ஊரை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி சம்பந்தம் பேசுகின்றனர்; சம்பந்தி ஆகின்றனர். பணம், பணத்துடன் முடிச்சுப் போடுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதே அளவுகோலை நாம் கொள்கைக்காக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? நாம் நமதூரில், நமது விருப்பத்திற்குத் தக்க பெண் தேடுவோம். கிடைக்கவில்லையெனில் அடுத்த ஊர். அதுவும் இல்லையெனில் அடுத்த மாவட்டம், அங்கும் அமையவில்லை என்றால் மாநிலத்தில் ஏதேனும் ஓர் ஊர் என்று கொள்கைக்காக, கொள்கை காக்க பெண் தேடுவோம்.

மாநிலம் தழுவிய ஒரு ஜமாஅத்தில் நமது விருப்பத்திற்குரியவள் கிடைக்கமாட்டாள் என்று யாரும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம், கனவு, எதிர்பார்ப்பு என்று இருக்கும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அதற்கு ஒரு எல்லையை வைத்து கொள்கையைக் காப்போமாக!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5090

ஒரு சிலர், எனது தாய்மாமன் மகள், எனது மாமி மகள் என குருதி உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இணை வைக்கின்ற பெண்களை முடிக்கின்றனர். அவர்கள் தவ்ஹீதுக்கு வந்து விடுவார்கள் என்று சாக்குச் சொல்கின்றனர். இவர்களுக்குப் பதில் அல்லாஹ்வின் இந்த வசனம் தான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்கள் அவ்விருவருக்கும் (அவ்விரு பெண்களும்) துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!”’என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

இரண்டு இறைத்தூதர்களின் மனைவிமார் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனும் போது, இவர்கள் மணமுடிக்கும் மனைவியர் எம்மாத்திரம்? இவர்கள் ஏகத்துவத்திற்கு வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர் குமர்களை வீட்டில் வைத்துக் கொண்டு கவலையுடனும் கண்களில் கண்ணீருடனும் மாப்பிள்ளைக்காகக் காத்து நிற்கின்றனர். இப்படி ஒரு சூழலில் இந்தக் கொள்கை உறவுகளை விட்டு விட்டு, குருதி உறவை ஒரு கொள்கைவாதி தேர்வு செய்யலாமா? சிந்திப்போமாக!

—————————————————————————————————————————————————————-

நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?

குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் குர்ஆனைப் போன்று ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் பாதுகாக்கப்படவில்லை. எந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம்? எந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இன்றைக்கும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

முறையான ஆய்வுக்குப் பிறகு நல்ல செய்திகளை தனியே பிரித்துவிட முடியும். நபியுடன் தொடர்பில்லாத பலவீனமான செய்திகளையும் தனியே பிரித்துவிட முடியும். இந்த வகையில் நபிமொழிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாக்கப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் குர்ஆனுக்கு விளக்கமாகவும் தனிமனிதனை நல்வழிப்படுத்தகூடியதாகவும் அமைந்துள்ளன. ஆனால் பலவீனமான பொய்யான ஹதீஸ்கள் பெரும்பாலும் குர்ஆனுக்கு எதிராகவும் மனிதனை மானக்கேடான வழிக்கு இழுத்துச் செல்லக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்குப் பெரும்பாலும் பொய்யான ஹதீஸ்களையே முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம்களின் பெயரில் இருந்துகொண்டு இணைவைப்பு, மூட நம்பிக்கை மற்றும் கிறுக்குத்தனங்களை ஆதரிப்பவர்கள் இதுமாதிரியான பொய்யான ஹதீஸ்களையே தங்களுக்கு ஆதாரங்களாகக் கூறிக்கொள்கின்றனர். இந்த ஹதீஸ்களுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட வேலைகளை அரங்கேற்றுகின்றனர்.

இந்த வகையில் சில நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்களின் சிறுநீரைப் பருகினார்கள் என்ற கருத்தில் சில செய்திகள் இருக்கின்றன.  எனவே இச்செய்தியின் உண்மை நிலையை இந்த ஆய்வில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்த இருக்கின்றோம்.

இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்புவது, மனிதர்களை நாகரீகமான சமுதாயமாக ஆக்குவதற்காகவே அனுப்புகிறான்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் சிறுநீரைக் குடித்தால், அல்லது குடிக்கச் சொன்னால், அல்லது தனது சிறுநீரை பிறர் குடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால், அதை ஊக்குவித்தால் அது காட்டுமிராண்டித்தனம், அநாகரீகம் என்று நாம் விளங்கி இருக்கிறோம்.

கல்லையும் மண்ணையும் மனிதர்களையும் கடவுளாகக் கருதும் சிந்தனையற்றவர்களும் கூட மனித மூத்திரத்தைக் குடிப்பதை அநாகரீகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கருதுகிறார்கள். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்களையும் ஒழித்துக் கட்ட அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு வழிகாட்டினார்கள் என்று ஒரு செய்தி புகாரியில் இடம் பெற்றாலும் முஸ்லிமில் இடம்பெற்றாலும் அனைத்து ஹதீஸ் நூற்களிலும் இடம் பெற்றாலும் அது நபி சொன்னது அல்ல. அது கட்டுக்கதை என்று தான் நாம் முடிவுக்கு வரவேண்டும்.

இது போன்ற செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்துவதற்குத் தகுதியற்றவை. ஆனாலும் இந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலும் இடம் பெறவில்லை. இதன் அறிவிப்பாளர் தொடரும் சரியானதல்ல என்பதைக் கூடுதல் தகவலாக எடுத்துக் காட்டுகிறோம்.

இதோ நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி), நூல்: அஹ்மத் 15478

பிரச்சனைக்குரிய செய்தி

உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. “பாத்திரம் எங்கே?” என்று கேட்டார்கள். “அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்” என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்” எனக் கூறினார்கள்.

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தி பைஹகியிலும் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸில் முதல் அறிவிப்பாளராக இடம்பெறும் உமைமா (ரலி) அவர்கள் நபித்தோழியர் ஆவார். இந்த நபித்தோழியரிடமிருந்து அவர்களின் மகள் ஹுகைமா பின்த் உமைமா என்பவர் அறிவிக்கின்றார்.

இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் இவர் யாராலும் அறியப்படாத நபர் என்று கூறியுள்ளனர்.

ஹ‚கைமா பின்த் உமைமா அறியப்படாத நபர் ஆவார்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 7, பக்கம்: 524

மேலும் அல்பத்ருல் முனீர் என்ற நூலாசிரியர் இப்னுல் முலக்கன் என்பவர் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்று யாரும் நற்சான்று அளிக்கவில்லை என்று கூறுகிறார்.

ஹுகைமா பின்த் உமைமாவின் நிலை அறியப்படவில்லை.

நூல்: அல்பத்ருல் முனீர், பாகம்: 1, பக்கம்: 485

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டுவிட்டு அதன் கீழ் இந்தச் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத நபரைக் கொண்டதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது.

நூல்: அல்ஃபுசூல், பாகம் : 1, பக்கம் : 307

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இந்த இமாம் அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறுவதில் அலட்சியப் போக்குடையவர். நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர் என்று கூறக்கூடியவர். எனவே இவரது கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஹுகைமா நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைச் சரி என்று சொன்னதாகவும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்று சொன்னதாகவும் சிலர் தவறான தகவலைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்தில் உள்ளவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் எந்த ஒரு இடத்திலும் ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்றோ, அவர் இடம்பெற்றுள்ள மேற்கண்ட செய்தி சரியானது என்றோ நற்சான்று அளிக்கவில்லை. இதை இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

மரப்பாத்திரம் தொடர்பான சம்பவத்தை உமைமா (ரலி) அவர்களின் மகள் ஹுகைமா அறிவிக்கின்றார். இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்றோ பலவீனமானது என்றோ எந்த முடிவும் கூறவில்லை. மேலும் அறிவிப்பாளர் ஹுகைமா குறித்து நிறையோ குறையோ கூறவில்லை.

எனவே இதில் இடம்பெற்றுள்ள ஹுகைமாவின் நிலை தெரிந்தால் தான் ஹதீஸ் சரியானது என்று கூற முடியும். இவர் நம்பகமானவர் என்று உறுதியானால் தான் இவரது அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாகும். ஆனால் இவருடைய நம்பகத்தன்மை நிரூபணமாகவில்லை. இவ்விஷயத்தில் இமாம் தாரகுத்னீ அவர்களை ஆதாரமாகக் காட்டுவது போதுமான ஆதாரமாக இல்லை.

நூல்: பயானுல் வஹ்மி வல் ஈஹாம், பாகம் : 5, பக்கம் : 516

மேலும் இமாம் ஹைஸமீ அவர்கள் அறிவிப்பாளர் ஹுகைமா நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் இமாம் ஹைஸமீ அவர்களின் இந்தக் கூற்றை எடுத்துக் காட்டுகின்றனர்.

ஹைஸமீ அவர்களைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 807ல் மரணிக்கின்றார். எனவே இவர் பிந்தைய காலத்தில் வந்த அறிஞர்.

அறிவிப்பாளர்கள் குறித்து முந்தைய இமாம்கள் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கக்கூடியவர். முந்தைய இமாம்களின் கூற்றுக்கள் இல்லாமல் இவர் அறிவிப்பாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது.

ஹுகைமா பின் உமைமா அவர்களை முந்தைய இமாம்களில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களின் இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டே இமாம் ஹைஸமீ அவர்கள் ஹுகைமா நம்பகமானவர் என்று கூறியிருக்க வேண்டும்.

ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் இமாம் இப்னு ஹிப்பான் அவர்களின் கருத்தை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இப்னு ஹிப்பான் விஷயத்தில் நம்மைப் போன்று பல அறிஞர்கள் இந்த நிலைபாட்டில் இருக்கின்றார்கள்.

மேலும் இமாம் ஹைஸமீ, இப்னு ஹிப்பானைப் போன்று அறிவிப்பாளர்களை நம்பகமானவர் என்று முடிவு செய்வதில் அலட்சியப் போக்குடையவர்.

எனவே அறிவிப்பாளர் ஹுகைமா விசயத்தில் இமாம் இப்னு ஹிப்பான் கூற்றை அடிப்படையாகக் கொண்டு இமாம் ஹைஸமீ அவர்கள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹுகைமா பின்த் உமைமா நம்பகமானவர் என்பதற்கு ஏற்கத் தகுந்த எந்தச் சான்றும் இல்லாத காரணத்தால் இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி பலவீனமானதாகும்.

இரண்டாவது செய்தி

உம்மு அய்மன் என்ற நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் சிறுநீரைக் குடித்தார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து வீட்டின் ஓரத்தில் இருந்த மண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தார்கள். எனக்கு தாகம் ஏற்பட்டதால் இரவில் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்ததைத் தெரியாமல் பருகிவிட்டேன். விடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! எழுந்து அந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதில் இருந்ததை நான் பருகி விட்டேனே!” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைவாய் பற்கள் தெரிகின்ற அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு, “இனி உனக்கு வயிற்று வலி ஒருபோதும் ஏற்படாது” என்று கூறினார்கள்.

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடமிருந்து நுபைஹ் என்பவர் அறிவிக்கின்றார். நுபைஹ் நம்பகமானவராக இருந்தாலும் இவர் உம்மு அய்மன் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

இவர் இந்த ஹதீஸை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நேரடியாகச் செவியுறவில்லை என்பதால் இவருக்கும் உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். விடுபட்ட நபர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? என்பது தெளிவாகவில்லை. இதன் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமாக உள்ளது.

மேலும் நுபைஹ் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அபூமாலிக் நகயீ என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று இமாம்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.

இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் நஸாஹி, இமாம் புகாரி, இமாம் அபூ ஹாதிம், இமாம் அபூதாவுத், இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தல்கீஸ் என்ற தன் நூலில் இந்த இரு காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அபூமாலிக் பலவீனமானவர். நுபைஹ் உம்மு அய்மன் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

நூல் : தல்கீஸுல் கபீர், பாகம் : 1, பக்கம் : 171

இந்தச் செய்தி பலவீனமானது என்பதை இமாம் ஹைஸமீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்த ஹதீஸை இமாம் தப்ரானீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதில் அபூமாலிக் நகயீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

நூல் : மஜ்மஉ ஸவாயித், பாகம் : 8, பக்கம் : 271

ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட அறிவிப்பு

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக மண் குடுவை ஒன்று இருந்தது. அவர்கள் விடிந்தவுடன் “உம்மு அய்மனே! இந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு” என்று கூறுவார்கள். ஒரு நாள் இரவில் எனக்கு தாகம் ஏற்பட நான் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்த சிறுநீரைக் குடித்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! அந்த மண் பாத்திரத்தில் உள்ளதை கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாகத்துடன் நான் எழுந்து அதில் உள்ளதைக் குடித்துவிட்டேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இன்றைய நாளுக்குப் பிறகு இனி ஒருபோதும் உனக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்படாது” என்று கூறினார்கள்.

நூல்: அல்மதாலிபுல் ஆலியா

இந்த அறிவிப்பில் பின்வரும் அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  1. உம்மு அய்மன் (ரலி)
  2. வலீத் பின் அப்திர் ரஹ்மான்
  3. யஃலா பின் அதாஉ
  4. அல்ஹசன் பின் ஹர்ப்
  5. சில்ம் பின் குதைபா
  6. முஹம்மது பின் அபீபக்ர்
  7. அபூ யஃலா

இந்த அறிவிப்பாளர்களை மேலோட்டமாகப் பார்த்தால் இதில் குறை சொல்லப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது போல் தெரியும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் நான்காவது அறிவிப்பாளராக ஹசன் பின் ஹர்ப் என்பவர் கூறப்பட்டுள்ளது. இவரிடமிருந்து சில்ம் பின் குதைபா அறிவிக்கின்றார். ஹசன் பின் ஹர்பை கூறியிருப்பதில் தான் குழப்பம் உள்ளது.

தாரீகு திமஷ்க், அல்பிதாயா வந்நிஹாயா ஆகிய நூற்களில் இந்த பெயருக்கு பதிலாக ஹுசைன் பின் ஹுரைஸ் என்று வேறு பெயர் சொல்லப்பட்டுள்ளது.

இப்னு சகன் என்பவருடைய நூலில் இதே அறிவிப்பாளர் தொடர் உள்ளது. அதில் ஹுஸைன் பின் ஹர்ப் என்பதற்குப் பதிலாக அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்று கூறப்பட்டுள்ளது. அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்பது அபூ மாலிக் அவர்களின் பெயராகும்.

அபூ மாலிக் என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதை முன்பு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அந்த அபூமாலிக்கைத் தான் இங்கே ஹசன் பின் ஹர்ப் என்றும் ஹுசைன் பின் ஹுரைஸ் என்றும் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது.

இதை இமாம் தாரகுத்னீ அவர்கள் அல்இலல் என்ற தன் நூலில் தெளிவுபடுத்துகிறார்கள். அபூமாலிக்கிடமிருந்து வரும் செய்திகள் ஒரே விதத்தில் அமையாமல் அதில் பல முரண்பாடுகள் அமைந்தள்ளது என தாரகுத்னீ தெளிவுபடுத்துகின்றார்.

இமாம் தாரகுத்னீ அவர்கள் மேலே நாம் கூறிய அறிவிப்பாளர் தொடரை குறிப்பிடுகிறார். ஆனால் நான்காவது அறிவிப்பாளராக ஹசன் பின் ஹர்பைக் கூறாமல் அந்த இடத்தில் அறிவிப்பாளர் அபூமாலிக்கை குறிப்பிடுகின்றார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் பலவீனமான அறிவிப்பாளர் அபூ மாலிக்கை, ஹசன் பின் ஹர்ப் எனவும் ஹுஸைன் பின் ஹுரைஸ் எனவும் தவறாக மாற்றிக் கூறிவிட்டனர் என்பது தெளிவாகின்றது. இதன் காரணத்தால் இது பலவீனமான அறிவிப்பாகும்.

நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் சிறுநீரைக் குடித்தார்கள் என்ற கருத்தில் வரும் அருவருக்கத்தக்க இது போன்ற பலவீனமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியவர்களாவர்.

சில மூடர்கள் இந்த ஹதீஸை மக்களிடம் பரப்பி இதன் மூலம் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் தவறான எண்ணத்தை உருவாக்கி வருகின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் போர்வையில் இருந்தாலும் அல்லாஹ் தன் மார்க்கத்தை நிச்சயம் பாதுகாப்பான்.

—————————————————————————————————————————————————————-

பைத்தியம் பலவிதம்     தொடர்: 3

பின்புறம் நடப்பதை பெருமானார் அறிவார்களா?

நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல. ஒளிப் படைப்பு என்று பரேலவிகள் நீண்ட காலமாக உளறி வருகின்றனர். அதற்கு அவர்கள் வைக்கின்ற உருப்படாத ஆதாரங்களில் ஒன்று, நபி (ஸல்) அவர்களின் தொடர் நோன்பு குறித்த ஹதீஸாகும்.

நாம் நோன்பு வைக்கின்ற போது ஸஹரில் உணவு சாப்பிடுவோம்; மாலையில் நோன்பு துறப்போம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஸஹர் சாப்பிடாமலும் நோன்பு துறக்காமலும் சில நாட்கள் நோன்பைத் தொடர்வார்கள். இதே போன்று நபித்தோழர்களும் தொடர் நோன்பு பிடிக்க ஆரம்பித்த போது, நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1962, 1922, 1961

இந்த ஹதீஸில், “நான் உங்களைப் போன்றவன் அல்லன்’ என்று வருகின்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு, “பாருங்கள்! நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒளிப் படைப்பு என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் ஒளிமயம் என்று வாதிடுகின்ற இவர்களின் அறிவு சூன்யமயம் இங்கு தெளிவாகப் பளிச்சிடுகின்றது.

நான் உங்களைப் போன்றவன் அல்லன் என்ற இந்த ஹதீஸின் முதல் பகுதியை மட்டும் தங்களுக்குச் சாதகமாக்கி எடுத்துக் கொள்கின்றார்கள். அதன் பிற்பகுதியை வேண்டுமென்றே கண்டுகொள்ள மறுக்கின்றார்கள்.

இந்த ஹதீஸின் பிற்பகுதியில், அல்லாஹ்விடமிருந்து எனக்கு உணவும் பானமும் அளிக்கப்படுகின்றது; அதாவது, “நான் சாப்பிடுகின்றேன், தண்ணீர் குடிக்கின்றேன்; அது உங்களுக்குத் தெரியாது’ எனற கருத்தில் இடம் பெறும் பிற்பகுதியை இவர்கள் பார்ப்பது கிடையாது.

எதையும் சாப்பிடாமல் பருகாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை. மாறாக, தமக்கு அல்லாஹ்விடமிருந்து யாரும் அறியாத விதத்தில் உணவும் நீரும் கிடைக்கின்றது, அதை உண்டும் பருகியும் தான் இந்தத் தொடர் நோன்பைத் தம்மால் நோற்க முடிகின்றது.

இதுபோன்ற மறைமுகமான உணவும் நீரும் உங்களில் யாருக்கும் கிடைக்காது. அந்த அடிப்படையில் என்னைப் போன்று உங்களில் யாரும் கிடையாது என்று தான் நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்களே தவிர, பசியே இல்லாத, தாகமே இல்லாத ஒளியினால் படைக்கப்பட்ட மலக்கு வகையினர் என்று தெரிவிக்கவில்லை.

ஆனால் இந்தக் கோணல் புத்திக்காரர்கள் இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதரல்ல. மலக்கு என்று நிலைநாட்ட முயல்கின்றார்கள். ஒளிக்கு ஏது பசி? அதற்கு எதற்கு உணவு? ஒளிக்கு ஏது தாகம்? அதைத் தீர்ப்பதற்கு எதற்காகத் தண்ணீர் என்பதை உணர மறுக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் மனிதர் என்ற வட்டத்தை விட்டுத் தாண்டவில்லை என்பதைத் தான் இந்த ஹதீஸ் தெளிவாக, ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்பது இவர்களாக ஏற்கனவே எடுத்துக் கொண்ட முடிவு. இது இவர்களது மனோ இச்சை. இதற்குத் தக்க இந்த ஹதீஸை வளைக்கின்றார்கள்.

பரேலவிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் புகாரியில் வரும் செய்தியாகும்.

(ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, “வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 719

நபி (ஸல்) அவர்கள் முன்னால் உள்ளதைப் போன்றே பின்னால் உள்ளதையும் பார்க்கின்றார்கள் என்றால் அவர்களது கண்கள் மனிதக் கண்களல்ல! மலக்குகளின் கண்கள் என்பது இவர்களின் அபத்தமிக்க வாதம்.

இவர்கள் வாதிடுவது போன்று நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் இருப்பதைப் பார்ப்பது போன்று பின்னால் இருப்பதையும் பார்த்திருக்கின்றார்களா? என்பதைச் சற்று ஆய்வு செய்வோம்.

நபி (ஸல்) அவர்கள் பின்னால் உள்ளதைப் பார்ப்பது ஒருபுறமிருக்கட்டும். முன்னால் உள்ளதை உள்ளபடி பார்ப்பார்களா? இதோ இந்த ஹதீஸ் தரும் பதிலைப் பார்ப்போம்.

அப்துல்கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது “இம்மக்கள் யார்?’ அல்லது “இத்தூதுக் குழுவினர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தினர்என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே வருக! உங்கள் வரவு நலவரவாகுக!என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.

அத்தூதுக் குழுவினர் “நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறை மறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தினர் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர்நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங் களில் எங்களால் தங்களிடம் வர முடிய வில்லை. எனவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்என்று கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கை செயல்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்; நான்கை (கைவிடுமாறு) அவர்களுக்குத் தடைவிதித்தார்கள். வல்லோன் அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. மேலும் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கிட வேண்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 53, 87, 4368

தம் முன்னால் நேரில் வந்து நிற்கின்ற சமுதாயத்தை எந்தச் சமுதாயம் என்று நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை. முன்னால் நிற்பதையே அறிய முடியவில்லை எனும் போது பின்னால் உள்ளதை எப்படி அறிய முடியும்?

நபி (ஸல்) அவர்கள் “அர்ரவ்ஹாஎனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது “இக்கூட்டத்தினர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “முஸ்லிம்கள்என்றார்கள். அப்போது அக் குழுவினர், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர்என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர் கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டுஎன விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2377

இந்த ஹதீஸ் தெரிவிப்பது என்ன? தமக்கு முன்னால் இருந்த ஒரு கூட்டத்தைப் பற்றி, மற்றவர்களிடம் விளக்கம் கேட்டுத் தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொள்கின்றார்கள்.

பின்னால் உள்ளதை அறிவார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) பின்தொடர்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதைப் பின்வரும் முஸ்லிம் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.

உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் “அல்பகீஉபொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன். நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து “ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லைஎன்றேன். அதற்கு அவர்கள் “ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்என்று கூறினார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் “ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?” என்று கேட்டார்கள். நான் “ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்துவிடுவானே!என்று கூறினேன். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களின் மூச்சிறைப்பை வைத்துத் தான் அவர்கள் தொடர்ந்ததைக் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர வேறு வழியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது எதுவும் தெரியாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

நபி (ஸல்) தமக்குப் பின்னால் நடப்பதையும் பார்க்கிறார்கள் என்பதற்குத் தொழுகை தொடர்பான ஹதீஸை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இதற்கு நேர் எதிரான ஆதாரம் கொண்ட தொழுகை தொடர்பான ஹதீஸை இவர்கள் பார்க்கத் தவறி விட்டனர்.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” “எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி)

நூல்: புகாரி 799, 5458

இந்த வார்த்தைகளைச் சொன்னவர் யார் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதை இந்த ஹதீஸ் நமக்குக் கடுகளவு சந்தேகமின்றி தெரிவிக்கின்றது.

அப்படியானால் பின்னால் உள்ளதையும் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் ஹதீஸின் விளக்கம் என்ன?

புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸிலும் இதே கருத்து இடம் பெறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் “எனக்கு பின்புறமாகஅல்லது “என் முதுகுக்குப் பின்புறமாகநீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 742, 6644

இந்த ஹதீஸில், தொழுகையில் பின்னால் உள்ளதை நான் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது மேலதிக வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. அதில், நீங்கள் ருகூவு செய்யும் போதும், ஸஜ்தா செய்யும் போதும் நான் பின்புறமிருந்து உங்களைப் பார்க்கிறேன் என்று கூறுகின்றார்கள்.

நான் நிற்கும் போது பார்க்கிறேன் எனக் கூறாமல், அல்லது இருப்பில் உங்களைப் பார்க்கிறேன் எனக் கூறாமல் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தா செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறுகிறார்கள். பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மேலே நாம் காட்டிய பல்வேறு ஹதீஸ்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது தெரியாது என்பதை அறிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் பின்னால் நடப்பதை அறிவார்கள் என்ற பரேலவிகளின் வாதப்படி மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் தெரிந்து கொண்டே பொய் சொன்னார்கள் என்ற கருத்து வந்து விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எனவே இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நிலைநாட்ட முற்படுவது அபத்தமும் பைத்தியக்காரத்தனமும் ஆகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

சாப்பிடுவதன் ஒழுங்குகள்

கடந்த இதழின் தொடர்ச்சி….

மதுபானங்கள் மற்றும் போதை தரக்கூடிய பொருட்களைச் சாப்பிடுவது கூடாது

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90, 91

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 6124

வேதக்காரர்களின் உணவு

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 5:5

இந்த வசனத்தில் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு நமக்கு அனுமதிக்கப்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

முதலில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

“இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்” என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?

மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?” என்று கேட்ட போது, “வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.

எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விலங்கு மற்றும் பறவையினங்களில் ஹலாலானவை

விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.  புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா(ரலி),

நூல்: புகாரி 5781, 5530.

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும்.  கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூஅலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை, மத்ஹபுகளில் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அல்குர்ஆன் 5:96

புத்தம் புதிய மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

அல்குர்ஆன் 16:14

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

அல்குர்ஆன் 2:195

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்.

அல்குர்ஆன்4:29

இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

முஸ்லிமல்லாதவர்களின் விருந்து மற்றும் ஹோட்டல் சாப்பாடு

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.

அல்குர்ஆன் 6:121

“அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.

அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர். எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.

பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பிஸ்மில்லாஹ் என்பதை வெறும் சடங்குக்காக, மந்திரச் சொல்லாகக் கூறக் கூடாது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை எந்தச் செயலாக இருந்தாலும் அது உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் என்றால் யார்? அவனது ஆற்றல் என்ன? என்பதையெல்லாம் விளங்கியவர்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுப்பதையே இது எடுத்துக் கொள்ளும்.

உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் வெறும் மந்திர வார்த்தையாக பிஸ்மில்லாஹ் கூறி அறுத்தால் அதையும் சாப்பிடக் கூடாது.

ஃபாத்திஹா, மவ்லிது, வரதட்சணை சாப்பாடு

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப்படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

“பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்” என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் “தபர்ருக்” (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

—————————————————————————————————————————————————————-

நபிவழிக்கு முரணாண மத்ஹபுகள்              தொடர்: 4

தடை செய்யப்பட்ட உறவுகள்

மாநபிவழி

இஸ்லாத்தின் பார்வையில் சில உறவுகள் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணம் செய்ய விலக்கப்பட்ட அவர்கள் யார்? யார்? என்ற விவரம் முழுவதையும் இறைவனும், இறைத்தூதரும் நமக்கு விளக்கி விட்டார்கள். அதன் விவரம் வருமாறு:

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5108

இவர்களே திருமணம் புரிய தடை செய்யப்பட்ட உறவுகள் ஆவர். இந்நிலையில் மத்ஹபு யாரையெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றது? அது மார்க்கத்தின் பார்வையில் சரிதானா? என்பதை இப்போது பார்ப்போம்.

மத்ஹபு வழி

இச்சையுடன் தொட்ட பெண்

இச்சையுடன் ஒரு பெண், ஓர் ஆணைத் தொட்டால், தொட்டவளின் தாயும், மகளும் அவனுக்குத் தடையாகி விடுவர். (அதாவது அவ்விருவரையும் அவன் திருமணம் முடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது)

நூல்: ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 192

ஒரு பெண், ஓர் ஆணை இச்சையுடன் தான் தொடுகின்றாளா? அல்லது சாதாரணமாகத் தொடுகின்றாளா? என்பதை அவனால் எப்படி அறிந்து கொள்ள இயலும் என்ற கேள்விக்குள் செல்லாமல் இதை நபிகளார் கூறினார்களா? அதற்கான ஆதாரம் எங்கே? என்பதே நமது கேள்வி. இது மாத்திரம் அல்ல. மத்ஹபின் பார்வையில் இன்னும் சில பட்டியல் உள்ளது.

தலைமுடியைத் தொட்டாலே தடை

 (தான் மணமுடித்த பெண்ணின் தாயை (மாமியாரை) ஒருவர் திருமணம் செய்வது தடையாகும் என்ற) திருமணச் சட்டத்தின் படி தன்னால் விபச்சாரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயைத் திருமணம் முடிப்பது இவனுக்குத் தடையாகும். (ஜினா என்றால் தவறான உறவு) இவன் இச்சையுடன் தொட்ட பெண்ணின் தாயை இவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவன் தொட்ட பகுதி உஷ்ணத்தைத் தடுக்காத திரையுடன் கூடிய தலையின் ஒரு முடியாக இருந்தாலும் சரியே! திருமணம் முடிக்கத் தடை தான்! அவனைத் தொட்டு விட்ட பெண்ணின் தாயையும் அவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவனது ஆணுறுப்பைப் பார்த்தவளின் தாயும் அவனுக்குத் தடை! அவன் எவளது வட்ட உள்ளுறுப்பைப் பார்த்தானோ அவளது தாயும் இவனுக்குத் தடை! அவளது உறுப்பை அவன் கண்ணாடியிலோ அல்லது அவள் தண்ணீரில் நிற்கும் போது பார்த்தாலும் சரி! அவளது தாய் அவனுக்குத் தடை தான். மேற்கண்ட பெண்ணின் தாய் அவனுக்குத் தடையானது போல், அவளது மகளும் அவனுக்குத் திருமணம் முடிக்கத் தடை!

(நூல்: துர்ருல் முக்தார்  பாகம் 3, பக்கம் 32)

இவைகளுக்கெல்லாம் மூல ஆதாரங்கள் எவை? இறை வார்த்தையா? நபிகளாரின் விளக்கமா?

முடியைத் தொட்டாலும் திருமணத் தடை ஏற்படும் என்று திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் உள்ளது? எந்த ஹதீஸிலிருந்து இந்தச் சட்டத்தை எடுத்தார்கள்? மத்ஹபை ஆதரிக்கும் போலி உலமாக்களும், அவர்களை நம்பும் அறிவிலிகளும் பதில் சொல்வார்களா?

மதுபான விற்பனை

மாநபி வழி

இஸ்லாத்தில் போதை தரக்கூடிய பொருட்கள் அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. போதை தரும் மதுபானம் உட்கொள்ளவும், விற்கவும் தடை செய்யப்பட்டவைகளில் ஒன்று. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நான், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரலி,

நூல்: புகாரி 6124

மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்,

நூல்: புகாரி 4296

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்என்று கூறினார்கள்.  அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்எனக் கேட்கப்பட்டது.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2236

இந்த செய்திகள் மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்றும், மீறி விற்றால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் மார்க்கம் எச்சரிக்கின்றது. நபிகளாரின் இந்த எச்சரிக்கைகளை மனதில் நிறுத்திக் கொண்டு இது தொடர்பான மத்ஹபு சட்டத்தைக் காண்போம்.

மத்ஹபு வழி

ணூóவீöஙுóளீ ரீóசூóசுó ளீகூúசூõடுúகூöசூõ ஞூóதுúசுóளீஞூöலூøளூளீ றீöறீóலூúருö க்ஷீóசூúசுனூ ரீóணூú ணுöசுóளீழீöடூóளீ ழுóழுóருóகூó ஷீóளீஞுó ருöஞூúகுó ரீóறீöலூ ஹீóஞூöலூழுóனீó சுóஹீöசூóடூõ ளீகூகூøóடூõ

ஒரு முஸ்லிம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார்.  இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.

(ஹிதாயா, பாகம் 2, பக்கம் 41)

மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்று ஏராளமான நபிமொழிகள் எச்சரித்த பிறகும் இப்படி ஒரு சட்டத்தை ஹனபி மத்ஹபு போதிக்கின்றது.

ஒரு முஸ்லிம் நேரடியாக சாராயக்கடை வைத்து விற்பனை செய்யாமல் கிறித்தவரின் மூலம் கடை வைத்து மதுபானத்தை விற்பனை செய்யலாம் என்று சொல்கின்றார்களே! இதற்கு என்ன ஆதாரம்? மத்ஹபில் கூறப்பட்டுள்ள இந்தச் சட்டம் எந்த நபிமொழியை, குர்ஆன் வசனத்தை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது? மத்ஹபை பின்பற்றுவோர் பதிலளிப்பார்களா?

மதுவில் கறி சமைத்தல்

மதுவில் சமைக்கப்பட்ட இறைச்சி மூன்று தடவை கொதிக்க வைக்கப்பட்டு ஆற வைக்கப்பட்டால் தூய்மையாகிவிடும்

(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 361)

மதுவில் கறியைப் போட்டு மூன்று தடவை கொதிக்க வைத்து, ஆற வைத்தால் அந்த மதுக் குழம்பை (கறிக்குழம்பு போன்று மதுக்குழம்பு) சாப்பிடலாம் என்று ஹனபி மத்ஹபு சொல்கின்றது. இதற்கு என்ன ஆதாரம்?

மது ஹராம் என்று ஆன பிறகு அதை வைத்துக் குழம்பு செய்யலாம் என்று ஐடியா சொல்லித் தரும் மத்ஹபு நம்மை இறைவழியில், நேரிய பாதையில் அழைத்துச் செல்லுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

இப்படியே போனால் ஜம்ஜம் நீரில் பன்றிக் கறியை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அது தூய்மையாகி விடும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு சட்டம் போதிக்கும் மத்ஹபை, மத்ஹபின் இமாம்களைப் பின்பற்றினால் இறைவன் தடுத்த ஒன்றை ஆகுமாக்குதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிவு பெற்றவர்களாக, தந்திரம் செய்யும் தந்திரக்காரர்களாக மாறிவிடுவோம். எனவே நபிவழிக்கு முரணாண மத்ஹபைப் பின்பற்றுவதிலிருந்து விலகிடுவோமாக!

குதிரைக் கறி

மாநபி வழி

குதிரைக் கறியை உண்பது மார்க்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் அதை உண்ண அனுமதி வழங்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதைகüன் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 4219

பல ஸஹாபாக்கள் குதிரைக் கறியை மார்க்கம் அனுமதித்த காரணத்தால் சாப்பிட்டிருக்கின்றார்கள்.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (நஹ்ர் செய்து) அதை உண்டோம்.

நூல்: புகாரி 5510

இது பற்றி மத்ஹபு சொல்வதென்ன? பாருங்கள்.

மத்ஹபு வழி

குதிரை இறைச்சியை சாப்பிடுவது அபூஹனீஃபாவிடம் மக்ரூஹ் ஆகும். இதுவே மாலிக் இமாமின் கருத்து.

(நூல்: ஹிதாயா, பாகம் : 4, பக்கம் 68)

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைக் கறியை உண்ண அனுமதி அளித்த பிறகு இமாம் அபூஹனிஃபா, இமாம் மாலிக் ஆகியோர் வெறுக்கத்தக்கது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இறைத்தூதர் என்பார் தம் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை அனுமதிக்கவோ, தடை செய்யவோ முடியாது. இறைத்தூதர் ஒன்றை அனுமதி அளித்தால் அது இறைவன் அனுமதி அளிப்பதைப் போன்றதாகும். இறைத்தூதர் ஒன்றைத் தடை செய்தால் அது இறைவன் தடை செய்வதைப் போன்றதாகும். இந்தக் கருத்தை குர்ஆனில் பல இடங்களில் இறைவன் தெளிவுபடக் கூறியிருக்கின்றான்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.

அல்குர்ஆன் 7 : 157

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை.. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:3,4,5

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 59:7

இந்த வசனங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் அவர்கள் ஒன்றை அனுமதித்தால் அதை இறைவன் அனுமதிக்கின்றான் என்று பொருள். எனவே குதிரைக் கறியை உண்ண நபிகள் நாயகம் அனுமதித்தது இறைவன் அளித்த அனுமதியையே அவர்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.

இறைவன் இதை அனுமதிக்கும் போது இமாம் அபூஹனிபா அதை வெறுக்கத்தக்கது என்று கூற அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்?

மார்க்கத்தில் ஒரு காரியத்தை அனுமதிக்கவோ, தடை செய்யவோ, இது நல்லது, இது கெட்டது என்று சொல்லவோ இறைவன் ஒருவனே அதிகாரம் படைத்தவன். இறைவனின் தூதர்களுக்கே இந்த அதிகாரம் இல்லை எனும் போது இதை அபூஹனிஃபா கையிலெடுத்து, குதிரைக் கறியை உண்பது வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றார். இது நபிவழியை மீறும் காரியம். மத்ஹபுகள் நபிவழியுடன் மோதக்கூடியதாகவே இருக்கின்றது என்பதை இது மீண்டும் நிரூபணம் செய்கின்றது.

வாகனத்தில் வித்ர் தொழுவது

மத்ஹபு வழி

வாகனத்தில் வித்ர் தொழுவது கூடாது என அபூஹனிஃபா மற்றும் அவரது சகாக்கள் கூறுகின்றனர்.

நூல்: ஷரஹ் அபூதாவூத்

பாகம் 5 பக்கம் 92

மாநபி வழி

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத் தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் ரலி

நூல்: புகாரி 1000

நபியவர்கள் தமது வாகனத்தில் வித்ர் தொழுவார்கள் என்று இந்தச் செய்தி தெளிவாகக் கூறுகின்றது.  ஆனால் நபிகளாரின் இந்தச் செயலுக்கு முரணாக ஹனபி மத்ஹபு கூடாது என்று சட்டம் சொல்கின்றது. மத்ஹபு சட்டங்கள் நபிவழிக்கு முரணாணவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் இதன் மூலம் தெளிவாகின்றது.

தீண்டாமை

மாநபி வழி

இஸ்லாத்தில் தீண்டாமை, கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதை முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதோர் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆதலால் தான் இன்றளவும் பலர் சாதிக் கொடுமையிலிருந்து மீள இனிப்பை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளை போன்று இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இன, குல, மொழி அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு அறவே காட்டக்கூடாது என்ற பிரச்சாரம் இஸ்லாத்தின் அடிநாதம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள்  அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 22391

குலம், கோத்திரம் என்பது மனிதர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளத் தானே தவிர ஏற்றத்தாழ்வு கற்பிக்க அல்ல என்று குர்ஆன் கர்ஜிக்கின்றது. அது மட்டுமல்ல! இறைவனை அஞ்சக்கூடியவர்களே இறைவனிடத்தில் உயர்ந்தவர் என்றும் கூறுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இறையச்சம் தான் ஒரு மனிதனை இறைவனிடத்தில் உயர்த்துமே தவிர அவனுடைய பிறப்பு, செல்வம், குலம், கோத்திரம் எதுவும் இறைவனிடத்தில் அவனை உயர்த்தாது என்பதை இவற்றிலிருந்து அறியலாம். இதுவே நபிவழி. ஆனால்…

மத்ஹபு வழி ?

அரபி அல்லாதவன் அரபிக்கு நிகரானவனாக மாட்டான். அரபி அல்லாதவன் ஆலிமாக இருந்தாலும் அல்லது அரசனாக இருந்தாலும் சரியே. இதுவே மிகச்சரியானதாகும்.

(துர்ருல் முஹ்தார், பாகம் : 3, பக்கம் : 101)

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது?

தீண்டாமையை ஒழித்துகட்டி, மண்ணோடு மண்ணாக புதைத்து விட்ட இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் மத்ஹபு கூறும் இச்சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க முயலும் மத்ஹபை மக்கள் தூக்கி எறிவது அவசியம் என்பதை இக்கருத்து உறுதி செய்கின்றது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 22

கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 3184

கடனைத் தள்ளுபடி செய்வதால் எவ்வளவு பெரிய சிறப்பு இருக்கிறது என்பதைப் பாருங்கள். நபித்தோழர்கள் மறுமை வாழ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்; கஷ்டப்படுகிறேன் என்று சொன்னவுடன் எப்படி கட்டுப்பட்டு நடந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

பிரச்சனை ஏற்பட்டால்….

கடன் வாங்கிய ஒருவனுக்கும் கடன் கொடுத்த ஒருவனுக்கும்  பிரச்சனை ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சிக்கு வழக்கு முறையாக வந்து, அதை விசாரித்துப் பார்த்தால் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருக்கிறான். அவனிடத்தில் இருப்பது, கடனை விடக் குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய ஆட்சி எப்படித் தீர்வு அளிக்கவேண்டும்?

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்குத் தர்மம் செய்யுங்கள்என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3170

கடனை எழுதிக் கொள்ளுதல்

ஒருவரிடம் கடன் வாங்கும் போது அவரிடத்தில் எழுதிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதனிடம் நல்ல முறையில் பழகிவிட்டோம் என்றால் அவரிடம் கடன் வாங்கும் போது “எழுதிக் கொள்ளுவோம்’ என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்? “என் மீது உனக்கு நம்பிக்கையில்லையா? எப்படி எல்லாம் நாம் பழகியிருக்கிறோம்’ என்று கூறுவார்.

இந்த நேரத்தில் அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான் என்பதைப் பாருங்கள். அதாவது உங்கள் மீது எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை தான் என்றாலும் அல்லாஹ் எழுதச் சொன்னதற்காக இதை எழுதுகிறோம் என்றால் பேச்சு முடிந்துவிடும். அண்ணன் தம்பியிடம் கடன் வாங்கும் போது அல்லது தம்பி அண்ணனிடம் வாங்கும் போது, “எப்படி எழுத முடியும்?’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:282

இதை ஏன் அல்லாஹ் கட்டளை இட்டுச் சொல்கின்றான் என்றால் இன்றைக்குக்  கடன் வாங்கியவன் கடனைக் கொடுக்காமல் மறுத்து விடுவதையும், வாங்கியதை இல்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம்

கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

  1. முதலில் அடிப்படையை, அதாவது கடன் வாங்கியதையே மறுத்து விடுவான்.
  2. எவ்வளவு தொகை என்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
  3. தவணை விஷயத்தில் பிரச்சனை எழலாம்.

கடனை எழுதும் முறை

இந்தக் காலத்தில் அரசாங்க சட்டத்துக்கு உட்பட்டு எழுத வேண்டும்.  நம்முடைய இஷ்டத்துக்கு எழுதக் கூடாது. அன்றைய காலத்தில் ஒரு துண்டில் எழுதினார்கள் என்றால் அது அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருந்தது. இப்போது எப்படி எழுதினால் அதைத் திருப்பி வாங்க முடியுமோ அப்படி எழுதிக் கொள்ள வேண்டும்.

அப்படி எழுதிக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால் அடமானம் வாங்கி விட்டுக் கொடுங்கள். அப்படி இல்லாமல் அவரை நன்றாக நம்புகிறீர்கள் என்றால் கொடுத்து கொள்ள முடியும். ஆனால் தவறு நடந்தால் மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:283

தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்

உலகெங்கிலும் பெண்களின் ஒழுக்க வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கையில் சவூதி அரேபியாவில் ஓரளவுக்குப் பெண்களின் கற்பு நெறியும் கட்டுப்பாடும் காக்கப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் கொஞ்ச நஞ்சம் அங்கே இருக்கின்ற இஸ்லாமிய நெறி தான். இந்த இஸ்லாமிய நெறியைக் கழுத்து நெறிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் முயற்சியைக் கையாண்டு வருகின்றன.

சவூதியில் பெண்களுக்குரிய அனைத்து சுதந்திரமும் கிடைப்பதில்லை; காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை என்று மேற்கத்திய நாடுகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூக்குரல்களுக்கும் கூப்பாடுகளுக்கும் பயந்து குவைத் போன்ற நாடுகளில் பெண்களும் அரசியலில் குதிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கும் வாசல் திறக்கப்பட்டு விட்டது. சவூதியிலும் பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் சவூதி மன்னர் அனுமதி வழங்கியிருக்கின்றார்.

ஏற்கனவே சவூதியைச் சுற்றியுள்ள நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பெண்களுக்குரிய ஆடைகளில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. இந்தச் சீரழிவு சவூதியையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27 அன்று தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் பின்வருமாறு கருத்தை வெளியிட்டிருந்தது.

சவூதி தனியார் பள்ளிக்கூடங்களில் பெண் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் அரசுப் பள்ளிக்கூடங்கள், மாணவிகளுக்கான விளையாட்டுக்களை பகிரங்கமாகவே ஊக்குவிக்கின்றன. சவூதியில் பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அனுமதியில்லை. இப்படி ஒரு காலகட்டத்தில் சவூதி மகளிர் பள்ளிக்கூடங்களில் கூடைப்பந்து விளையாட்டுக் கம்பங்கள், வளையங்கள் நட்டப்பட்டு வருகின்றன. தடையை மீறி நடைபெறும் இந்த ஏற்பாடுகள் சவூதியில் வீசுகின்ற காற்றின் திசை மாற்றத்தை அறிவிக்கின்றன.

இதுவரையில் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பெண்களை அனுப்பாத நாடுகள் சவூதி அரேபியா, கத்தார், புருணை ஆகிய மூன்று நாடுகள் தான். இவற்றில் கத்தாரும் புருணையும் இவ்வாண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெண்களை அனுப்ப இசைந்துள்ளன.

இவை இவ்வாறு முன்வந்ததற்குக் காரணம், “உங்கள் நாட்டுப் பெண்களையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பவில்லை என்றால் உங்கள் நாடு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்படும்; ஆண்களை மட்டும் போட்டிக்கு அனுப்பி விட்டுப் பெண் வீராங்கனைகளை விளையாட்டுக்கு அனுப்பாமல் விடுவது பாரபட்சமான, அநீதியான நடைமுறையாகும். எனவே இந்தப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது” என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கைக்கு இவ்விரு நாடுகளும் பணிந்து விட்டன. சவூதி இன்னும் பணிய மறுக்கின்றது. அதனால் சவூதிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.

இது தான் இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தீட்டியுள்ள தலையங்கத்தின் சாராம்சம்.

இன்றைக்கு விளையாட்டு என்ற சாக்கில், சுதந்திரம் என்ற போர்வையில் பெண்களை ஆடவிட்டு அவர்களது அங்க அவயங்களை அங்குலம் அங்குலமாக ரசிக்கின்ற ஆண் வர்க்கத்தின் ஆதிக்க வெறியின் உச்சக்கட்ட அறிவிப்பு தான் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் இந்த எச்சரிக்கை!

சவூதியில் உள்ள பெண்கள் மட்டும் தங்களின் உடல் அழகை எங்களின் காமக் கொடூரக் கண்களுக்கு விருந்து படைக்க முன்வருவதில்லை என்று ஏங்குவோர் எழுப்புகின்ற எக்காளக் குரல் தான் இந்த எச்சரிக்கை!

டென்னிஸ் விளையாடுகின்ற ஆண்களின் ஆடையையும் அதே விளையாட்டை விளையாடும் பெண்களின் ஆடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களின் வக்கிர புத்தியைப் புரிந்து கொள்ளலாம்.

ஆண் வீரர்கள் முட்டுக்கால் வரை கீழாடையும் கழுத்தை ஒட்டி மேலாடையும் அணிந்து விளையாடுகின்றனர். ஆனால் டென்னிஸ் விளையாடும் பெண்களோ பின்பக்கம் தெரியும் அளவுக்குக் குட்டைப் பாவாடையும் மார்பு தெரியும் அளவுக்கு டி-சர்ட்டும் அணிந்து கொண்டு ஆபாச ஆட்டம் போடுகின்றனர். பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக்கி அவர்களை ரசிக்க நினைக்கும் ஆணாதிக்க வெறியர்களின் சபலத்தை இதிலிருந்து அறிய முடியும்.

இந்தியாவில் சமீபத்தில் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெண்களுக்கு இடமில்லை என்பதால் “சியர் கேர்ல்ஸ்’ எனப்படும் ஆபாச நடனக்காரிகளை மைதானத்தில் ஆடவிட்டு அழகு பார்க்கின்றனர். காபரே நடனத்தை மிஞ்சும் இந்தக் காம நடனத்தை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யும் கொடுமையும் நடக்கின்றது.

அன்றாடம் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை பன்மடங்குப் பரிமாணங்களாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணமே பெண்களின் ஆபாசமான அரை நிர்வாணமான ஆடைகள் தான்.

இவை தான் இந்த வன்கொடுமைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதனால் தான் இஸ்லாம் அதற்கு ஒரு கடிவாளத்தையும் கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. இது சவூதியில் பேணப்படுகின்றது. இதற்குக் காரணம் அங்குள்ள ஷரீஅத் சட்டம். இதன் காரணமாகத் தான் அங்கு பாலியல் வன்கொடுமைகளின் விகிதாச்சாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

அதுபோன்று பெண்களைப் பகிரங்கமாக ஆடவிட்டு, அழகை வியாபாரமாக்கும் பக்கா விபச்சாரத் தொழிலான திரைப்படத் துறையும் அங்கு இல்லை. இதன் காரணமாகவும் அங்கு பிற நாடுகளில் உள்ளது போன்ற விகிதாச்சாரத்தில் பாலியல் வன்கொடுமைகள் இல்லை.

நீச்சல் போட்டி, கபாடி போட்டி, கூடைப்பந்துப் போட்டி, டென்னிஸ் போட்டி, ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் பெண்கள் அரைகுறை ஆடைகளில் அங்கங்கள் குலுங்க விளையாடுகின்ற வாய்ப்புகள் சவூதியில் இல்லை.

சானியா மிர்ஸா போன்ற விரச, விபச்சார விளையாட்டுக்காரிகள் தன்னுடன் விளையாடுகின்ற ஆண் ஜோடியை பகிரங்கமாக மைதானத்திலேயே கணவன் மனைவி போன்று கட்டி அணைக்கும் கேடுகெட்ட ஆபாசமும் அங்கு இல்லை.

இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு சவூதியில் அனுமதி இல்லாததால் தான் அங்கு பாலியல் கொடுமை மற்றும் விபச்சாரங்கள் மலிவாக நடப்பதில்லை.

இதனால் பெண்களுக்கு விளையாட்டுப் பயிற்சியே தேவையில்லை என்று இஸ்லாம் சொல்லவில்லை. இந்த விளையாட்டு உள் அரங்கத்தில் இருக்க வேண்டும். வெளியரங்கத்தில் இருக்கக் கூடாது. அன்னிய ஆடவர்களின் கண்களுக்கு, காமப் பார்வைக்கு விருந்தாக இருக்கக்கூடாது. இதை சவூதியில் ஷரீஅத் சட்டம் பாதுகாத்து வருகின்றது.

அந்நாட்டை உடைத்து, ஒழுக்கரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்பதே இந்த ஒலிம்பிக் சங்கம் எனும் மேற்கத்தியக் கைக்கூலிகளின் உள்நோக்கம். இதற்கு சவூதி அரசு பலியாகாமல் இருக்க வேண்டும்.

கத்தார் போன்ற நாடுகள் இதற்குப் பலியானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இங்குள்ள மன்னர் அடுத்த நாட்டுக்கு அரசு முறைப் பயணம் செல்கின்ற போது தன்னுடைய மனைவியை இஸ்லாமிய ஆடையுடன் அழைத்துச் செல்வதற்குத் தயாரில்லை. அந்த அளவுக்கு அரபக அரசர்கள் மார்க்கத்தை விட்டுத் தங்களை அன்னியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஆட்சியதிகாரம் ஏகத்துவம் எனும் பாக்கியத்தால் கிடைத்தது என்பதை மறந்து விட்டனர். ஓரளவுக்கு மார்க்கப் பிடிப்புள்ளவர்கள் வாழும் கத்தார் போன்ற நாட்டின் கதியே இப்படியென்றால் புருணை போன்ற நாடுகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஒலிம்பிக் தடையினால் கிடைக்கப்போகும் அதிகப்பட்சத் தண்டனை என்ன? ஆண்களை விளையாட விடாமல் தடுப்பார்கள். இதனால் இந்த நாடுகளுக்கு என்ன குடிமுழுகி விடப் போகின்றது என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

ஆண் பெண் சரி நிகர் சமம் என்ற பெயரில் இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களைப் பணிக்குச் சேர்த்து, அதனால் ஆங்காங்கு பாலியல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதை இந்த நாடுகள் உணர்ந்தால் பெண்கள் விஷயத்தில் மார்க்கம் சொல்கின்ற இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தவும் தகர்க்கவும் முன்வரமாட்டார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டு என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளின் மகளிர் ஒழுக்கத்தை வீழ்த்த உலகளாவிய சதியே நடக்கின்றது. இந்தச் சதிக்கு முஸ்லிம் நாடுகள் பலியாகி விடக்கூடாது.

ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கெடுப்பதை விமர்சிக்கின்ற நாம் ஆண்கள் வீர, தீர விளையாட்டுக்களில் பங்கெடுப்பதை விமர்சிப்பதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை       தொடர்: 9

கியாமத் நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப்பார். “நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)

அல்குர்ஆன் 5:116-118

இவ்வசனங்கள் மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன.

இவ்வசனத்தில் ‘என்னை நீ கைப்பற்றிய போது” என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் ‘தவஃப்பைத்தனீ” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று பொருள் கொள்வதா? ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்வதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுவர். ‘என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு” என்று ஈஸா நபியே கூறியுள்ளதி-ருந்து அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அறியலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாக வும் இருக்கிறேன்என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்.

அல்குர்ஆன் 3:55

உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என்ற இடத்தில் முதவஃப்பீக என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லும் தவஃப்பாவிலிருந்து பிறந்த சொல்லாகும். எனவே ‘உம்மை மரணிக்கச் செய்பவனாகவும்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

அவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து விட்டு இதன் சரியான விளக்கத்தைக் காண்போம்.

‘தவஃப்பா” என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.

இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும்.

எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். ‘தவஃப்பா” என்ற சொல்-ன் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல; ‘முழுமையாக எடுத்துக் கொள்ளுதல்” என்பதே அதன் நேரடிப் பொருளாகும்.

மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான்.

அல்குர்ஆன் 6:60

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.

அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள்

அல்குர்ஆன் 4:15

மரணம், மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள முடியாது.

உயிர்கள், மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்

அல்குர்ஆன் 39:42

கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்கு இந்த இடத்தில் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.

இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூ- தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூ- தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும்.

தொழுகையைக் குறிக்கும் ‘ஸலாத்” என்ற சொல்லும் அதி-ருந்து பிறந்த சொற்களும் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.

இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம் பெற்ற ‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?

என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ‘ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார்” (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடனும், ‘ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:159) என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.

மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் கருத்தாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய நேரடிப் பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொள்வது தான் சரியானதாகும்.

மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது. ‘நான் உயிருடன் இருந்தவரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று ஈஸா நபி கூற மாட்டார்கள்.

‘நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்” என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

‘நான் உயிருடன் இருந்த போது” எனக் கூறாமல் ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.

‘நான் உயிருடன் இருந்த போது” என்று கூறி விட்டு ‘ஃபலம்மா தவஃப்பைதனீ” என்று அவர்கள் கூறினால், அந்த இடத்தில் ‘என்னை மரணிக்கச் செய்த போது” என்று தான் பொருள் கொள்ள முடியும்.

ஆனால் அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு ‘நான் அவர்களுடன் இருந்த போது” என்ற முற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள்; உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.

‘தவஃப்பா” என்ற சொல்லுக்கு ‘என்னைக் கைப்பற்றிய போது” என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.

அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்த போது அம்மக்களைக் கண்காணித்தார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து, முன்னர் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.

இவை தவிர தர்க்க ரீதியான சில கேள்விகளையும் கேட்கின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கிறார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டால் அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமை அவனுக்கு இருக்கின்றது.

சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மை தான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தைச் சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (5:110)

இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை.

இறந்தவர்களை உயிர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடியதன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் (3:49, 5:110) அதை நம்பித் தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று.

களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப் பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றது தான். ஆனால் இதை அல்லாஹ் கூறுவதால் (3:49) நம்பித் தான் ஆக வேண்டும்.

இது போல் பல நூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது.

‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.” என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளார்கள் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஈஸா (அலை) அவர்கள் ஒரு போதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார் என்று கூறக் கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டார் என வாதிக்க முடியாது.

ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியை விடச் சிறந்தவர்கள் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியேயாக வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்குக் கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது.

ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா?

இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாகச் சந்திக்க இயலும்.

எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக் கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.

கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்படவில்லை.

ஏசு தீமைக்கு எதிராக ஏதும் போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை.

வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வைக் கூறியதாக பைபிள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புகள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புகளைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்காக சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார்.

 (அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

கே.எஸ். சுக்ருல்லாஹ்

நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதீ, அபூதாவுத், இப்னு மாஜா, பைஹகீ, தப்ரானீ, ஹாகிம் மற்றும் பல ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் மற்ற இருவர் நரகத்திற்கும் செல்வர். உண்மையைப் புரிந்து அதனடிப்படையில் தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார். உண்மையை புரிந்த பின் அநியாயமாகத் தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச் செல்வார். (உண்மையை) அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச் செல்வார்.

இதை புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவுத் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டுப் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர் என்று துவங்கும் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியே இது தொடர்பாக வரும் அறிவிப்புகளில் சரியானதாக உள்ளது.

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. அனைத்து தொடர்களிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடர்களில் மேலுள்ள புரைதா (ரலி) அவர்கள் வழியாக வரும் தொடரே சிறந்ததாக அமைந்துள்ளது என இமாம் அபூதாவுத் கூறுகிறார்கள்.

இமாம் அபூதாவுத் கூறுவதைப் போன்று இந்த ஹதீஸ் வந்த வழிகள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளார். மேற்கண்ட அறிவிப்பிலும் ஹலஃப் பின் ஹலீஃபா என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

இருக்கக்கூடிய அறிவிப்புகளில் மேற்கண்ட அறிவிப்பு பராவாயில்லை என்பதைத் தான் இமாம் அபூதாவுத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹலஃப் பின் கலீஃபா நேர்மையானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையே மாற்றுக் கருத்தில்லை. இறுதி காலத்தில் இவருடைய நினைவாற்றல் பாதிப்படைந்தது என்பதே இவர் மீதுள்ள குறையாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இவர் நல்ல நிலையில் இருக்கும் போது இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானவை என்று கூறியுள்ளார்கள்.

ஹலஃப் பின் ஹலீஃபா மேற்கண்ட ஹதீஸை நல்ல நிலையில் அறிவித்தாரா? அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பின் அறிவித்தாரா? என்று முடிவு செய்ய சான்றுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.

? தினசரி பத்திரிகைகளில் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. அவற்றை வாசித்து முடித்த பின் வேறு உபயோகத்திற்கு எடுக்க முடியுமா? உதாரணமாக, சாப்பாட்டு விரிப்பு, கண்ணாடி துடைப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாமா? விளக்கம் தரவும்

நிஜாமுத்தீன்

குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்துகொண்டால் தான் இது பற்றிச் சரியான முடிவை எடுக்க முடியும்.

அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது.  இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களில் காகிதத் தன்மையைத் தாண்டி அவற்றில் வேறு எந்த புனிதமும் இல்லை.

இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும் கணிணியிலும் செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டுவிட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருதமாட்டோம்.

குர்ஆன் என்பது மக்களுக்குப் பயன்படுகின்ற நல்லுபதேசமாகும். நல்லுபதேசத்தை மதிப்பதாக இருந்தால் அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். பிறருக்கு அதைப் பரப்ப வேண்டும். நல்லுபதேசங்களை மதிப்பதற்கு இதைத் தவிர்த்து வேறு வழி இல்லை.

ஒருவர் பெற்றோரின் உபதேசங்களை எழுதிக்கொண்டு எழுதப்பட்ட காகிதங்களுக்கு மரியாதை செலுத்தினால் அவர் காகிதத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார் என்று கூறலாமே தவிர பெற்றோரையோ அவர்கள் செய்த உபதேசத்தையோ மதித்தவராகக் கருதப்படமாட்டார். உபதேசங்களை வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் தான் அவர் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும்.

குர்ஆனுக்கு மரியாதை செலுத்துவதும் இதைப் போன்றதாகும். அதாவது அதன் போதனைகளைப் பேணி நடப்பது மட்டுமே குர்ஆனுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக்கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்துவிடுவோம். குர்ஆனுடைய கருத்துக்களில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்க கூடாது. ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான்.

குர்ஆன் மீது நமக்குள்ள மரியாதையை, அதனைக் கடைபிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

தவறான வாதங்களும் தக்க பதில்களும்

(“தவறான வாதங்களும் தக்க பதில்களும்” என்ற தலைப்பில்  கடந்த ரமளானில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. மார்க்கப் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் அறிந்திருக்க வேண்டிய செய்திகள், ஆதாரங்கள், வாதப் பிரதிவாதங்கள் அந்த உரையில் அடங்கியிருப்பதால் அதை எழுத்துவடிவில் ஏகத்துவம் இதழில் தொடராக வழங்கத் தீர்மானித்துள்ளோம். இஸ்லாமியக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த உரையாக்கத்தை, எழுத்தாக்கமாக மாற்றித் தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். – ஆசிரியர்)

பிரிவினை ஏன்?

முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே இறைத்தூதரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே ஒரு புத்தகத்தை நம்முடைய இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், வணக்க வழிபாடுகளிலும் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம்.

நமது இறைவன் ஒருவனாக இருந்தாலும் நமக்குள் ஒரே மாதிரியாக அவனைப் புரிந்து வைத்திருப்பவர்களாக இல்லை. நம் எல்லாருடைய வேதம் திருக்குர்ஆனாக இருந்தாலும், எல்லாரும் அதை ஒரே மாதிரியாகப் புரிந்து நடக்கக்கூடியவர்களாக இல்லை என்பதை நாம் பார்க்க முடிகிறது. நமது சமுதாயத்தில் இஸ்லாத்தின் பெயரால் நமக்குள் பலவிதமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்தத் தவறான கருத்தில் இருக்கக் கூடியவர்களெல்லாம் ஒவ்வொரு சாராருமே தாங்கள் சொல்வது தான் சரி என்று கூறுகின்றனர். ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்; அவர்கள் தங்கள் கருத்து தான் சரி என்று சொல்வதற்குச் சில ஆதாரங்களையும், சில வாதங்களையும் கைவசம் வைத்திருப்பார்கள்.

கூடும் என்று சொல்பவன் ஒரு ஆதாரத்தைக் காட்டினால், கூடாது என்று சொல்லக்கூடியவன் வேறொரு ஆதாரத்தைக் காட்டுவான். இது ஹலால் என்று சொல்லக்கூடியவன் ஒரு ஆதாரத்தைக் காட்டினால், இது ஹலால் இல்லை, ஹராம் என்று சொல்லக்கூடியவன் வேறொரு ஆதாரத்தைக் காட்டுவான். இப்படி ஒவ்வொரு விதமான முரண்பாடான கொள்கைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு சாராரும் ஒரு குர்ஆன் வசனத்தையோ, அல்லது ஒரு நபிமொழியையோ ஆதாரமாக எடுத்துக் காட்டி தாங்கள் செய்வது சரி தான், தாங்கள் சரியாகத் தான் நடக்கிறோம் என்று நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் இது எல்லாம் சரியாக இருக்குமா? ஹலால் என்று சொல்வது சரியாக இருந்தால் ஹராம் என்று சொல்லக்கூடியது தவறாகத்தான் இருக்கும். இரண்டும் சரியாக இருக்காது. கூடும் என்று சொல்வது அல்லாஹ்விடத்தில் சரியாக இருந்தால், கூடாது என்று சொல்வது நிச்சயமாக தவறானதாகத் தான் இருக்க முடியும்.

எனவே மாறுபட்ட முரண்பட்ட இரண்டு, மூன்று, நான்கு செய்திகளில் நான்குமே சரியானது என்று சொன்னால் அல்லாஹ் நம்மைக் குழப்பி விட்டான். அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தெளிவில்லாமல் கூறிச் சென்று விட்டார்கள் என்ற கருத்து வந்துவிடும். ஆனால் எந்தக் கொள்கையில் உள்ளவனாக இருந்தாலும் அதற்கு ஒரு ஆதாரத்தைக் காட்டுகிறான்.

மார்க்கத்திற்கு முரணாக இருக்கக்கூடிய பித்அத், மூடநம்பிக்கை, இணைவைத்தல் போன்றவை அனாச்சாரங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதெல்லாம் சரிதான், அவற்றைச் செய்தால் என்ன? அதிலிருந்து இந்த அர்த்தம் வருகிறது என்று சொல்லி அவரவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

நிச்சயமாக இப்படி மாறுபட்ட, முரண்பட்ட விஷயங்கள் கண்டிப்பாக உண்மையாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். ஒரு விஷயத்தில் 5 அல்லது 10 மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அதில் ஏதாவது ஒன்று தான் உண்மையாக, சரியானதாக இருக்க முடியும் என்பதை நாம் முதலில் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு மாத்திரம் மட்டுமல்ல! மனிதர்களுடைய பேச்சுக்களை எடுத்துக் கொண்டாலும் சரி! ஒருவர் இறந்து விட்டார் என்று சொல்கிறார். இன்னொருவர் இறக்கவில்லை என்று சொல்கிறார். இதில் இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இறந்து விட்டார் என்று சொன்னால், இறக்கவில்லை என்று சொன்னது பொய்யாகி விடும். இறக்கவில்லை என்று சொன்னால் இறந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய செய்தி பொய்யாகி விடும். இந்த மாதிரி நாம் பலவிதமான முரண்பாடான செய்திகளை வைத்திருக்கிறோம்.

மனிதன் சொல்கின்ற பேச்சுக்களிலேயே ஒன்றுக்கொன்று முரணாக இருக்குமேயானால் இரண்டில் ஏதோ ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும் என்று நம்முடைய அறிவு சொல்லும் போது, நம்மை விட இந்த அறிவைத் தந்திருக்கின்ற படைத்த இறைவனுடைய மார்க்கத்தில் இதுவும் சரி, அதுவும் சரி என்று இருக்க முடியுமா?

நமக்குத் தான் பேசத் தெரியாது; விளக்கத் தெரியாது; பிறர் தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் ஏதாவது சொல்லி விடுவோம். படைத்த இறைவனுக்குமா பேசத் தெரியாது? அவனை மாதிரி யாருக்குப் பேசத் தெரியும்? அவனை மாதிரி யாருக்குத் தெளிவுப்படுத்த தெரியும்?

இந்த மார்க்கத்தில் மாறுபட்ட கருத்துக்கள், முரண்பட்ட கருத்துகளுக்கு இடமே கிடையாது. ஆனாலும் அவர்கள் குர்ஆன், ஹதீஸை எடுத்துக் காட்டுவார்களேயானால், அதை நீங்கள் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அவர்கள் வைக்கும் ஆதாரத்திற்கும், அவர்களுடைய கருத்திற்கும் சம்பந்தமே இருக்காது. சம்பந்தமே இல்லாத வகையில் அந்த வசனத்தை, ஹதீஸை திசை திருப்பி, வளைத்து தங்களுடைய செயலை நியாயப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தவறான கொள்கையில் இருககக்கூடியவர்கள் என்னென்ன தவறான கருத்துக்களை வைத்துக் கொண்டு அதைச் சரி என்று வாதிடுகிறார்கள்? அது எப்படியெல்லாம் தவறாக இருக்கிறது? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்படித் தெளிவுபடுத்தினால் தான் முரண்பாடற்ற ஒரு சமுதாயமாக நாம் மாற முடியும்.

நம்முடைய சமுதாயத்தில் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடு வருகின்றது. இந்தக் கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒன்றுபடுத்துவதற்காகப் பலவிதமான முயற்சிகளைப் பலரும் மேற்கொள்கின்றார்கள். ஒற்றுமை காண ஆலோசனை கூட்டம், ஒற்றுமை காண வழிகாட்டி கூட்டம், ஒற்றுமை காண செயல் திட்டம் என மக்கள் ஒன்றாகக் கூடியிருக்கக்கூடிய காட்சியைக் காண்கிறோம்.

இந்த ஒற்றுமைக் கூட்டம் எது சம்பந்தமாகக் கூடியிருக்கிறது என்று பார்த்தால் நம்முடைய தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது? யாரை எம்.எல்.ஏ.வாக நிறுத்துவது? என்பதில் எல்லா இயக்கத்தினருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வந்தால் அதில் ஒற்றுமை ஏற்படுவதற்காக ஒன்று கூடுவார்கள்.

அல்லது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 வந்துவிட்டால் நமது போராட்டத்தை எங்கு எப்படி நடத்தலாம் என்பதைப் பற்றி அனைவரும் ஒன்று கூடிப் பேசி ஒருமித்த கருத்தில் வர வேண்டும் என்பதற்காக ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள். நம்முடைய பள்ளியில் யாரைத் தலைவராக நியமிப்பது என்பது பற்றி ஆலோசனை கேட்பதற்காக ஒன்று கூடுகிறார்கள்.

ஆனால் யாராவது, நாம் நம்முடைய மார்க்கத்தில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறோமே! அந்த முரண்பாட்டை நீக்குவதற்காக நாம் அனைத்து இயக்கத்தினரும் சேர்ந்து ஆலோசனைக் கூட்டம், ஒற்றுமை கூட்டம் நடத்தி, நம்முடைய முரண்பாட்டை நீக்கி ஒரே கருத்திற்கு வருவோம் என்று யாராவது முன்வந்ததுண்டா?

நான் தொழுவது சரியா? நீ தொழுவது சரியா? நான் அல்லாஹ்வைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது சரியா? நீ அல்லாஹ்வைப் பற்றி புரிந்து வைத்திருப்பது சரியா? என்று மார்க்க விஷயத்தில் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளைத் தான் முதலில் சரி செய்ய வேண்டும்.

உலக விஷயத்தில் கருத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து அதனைச் சரி செய்யாவிட்டால் அதன் மூலம் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. ஆட்சிக் கட்டிலில் இவனுக்குப் பதிலாக அவன் இருந்தால் என்ன? இவன் இருந்தால் நமக்கென்ன? எவனும் இருந்து விட்டு போகிறான். இதில் சண்டையிட்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் காரணத்தினால் பாரதூரமான, பயங்கரமான விளைவுகள் ஏற்படாது.

ஆனால் மார்க்க மற்றும் மறுமை விஷயத்தில் பிரிந்து கிடக்கக்கூடாது. கொள்கை விஷயத்திலும் நமக்கு மத்தியில் பிரிவினை ஏற்படக்கூடாது. அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் இந்த மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று தான் கூறுகிறான். ஒவ்வொருவரும் கருத்து வேறுபாடு உண்டாக்கி விட்டு, அவரவர் செய்வதை நியாயப்படுத்தி கொண்டு மார்க்கத்தைப் பிரித்து விடாதீர்கள் என்று கூறுகிறான்.

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.

அல்குர்ஆன்:3:105

இறைவன் இந்த வசனத்தில் தெள்ளத் தெளிவான சான்றுகளை, ஆதாரங்களைக் கொண்டு வந்த பிறகு மனோ இச்சையைப் பின்பற்றி தன்னுடைய மார்க்கத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து விட்டார்களே அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவ்வாறு முரண்பட்டு, பிரிந்து செல்வீர்களானால் உங்களுக்குக் கடுமையான வேதனை, தண்டனை இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறான்.

உலக விஷயங்களில் கருத்து வேறுபாடு கொள்வதால் எந்த விளைவும் ஏற்பட்டு விடாது. ஆனால் மார்க்க விஷயத்தில், அல்லாஹ் என்பவன் யார்? அவனுடைய தூதர் யார்? தொழுவது எப்படி? நோன்பு நோற்பது எப்படி? சொர்க்கம், நரகம் என்றால் என்ன? என்று இது போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான முடிவு எடுக்க வேண்டும். நமக்குள் முரண்பாடு வரக்கூடாது என்று கூறுகிறான். மேலும் இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

தமது மார்க்கத்தை பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து தொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

அல்குர்ஆன்: 6:159

இறைவன் இந்த வசனத்திலும் மார்க்கத்தைப் பல கூறாகப் பிரித்து விட்டவர் அவர் உம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை என்று கூறுகிறான்.

உலக விஷயங்களில் பிரிவினை வரலாம்; வராமல் இருக்கலாம். அதைப் பற்றி இறைவன் பேசவில்லை. மார்க்க விஷயங்களில் ஏற்படும் பிரிவினை, முரண்பாடைப்பற்றித் தான் பேசுகிறான். இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு தான் இருக்க முடியுமே தவிர, அதுவும் இஸ்லாம், இதுவும் இஸ்லாம் என்பதற்கு இங்கு இடம் கிடையாது.

நீங்கள் பின்பற்றுவது அல்லாஹ்வுடைய மார்க்கமா? நாங்கள் பின்பற்றுவது அல்லாஹ்வுடைய மார்க்கமா? என்பதில் நமக்குள் ஒற்றுமையான கருத்து வரவேண்டும் என்பதற்காகத் தான் நாம் 25 ஆண்டுகளாக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஆனால் மாற்றுக் கருத்துடையவர்களோ, “ஊர்த் தலைவரை அல்லது வேட்பாளரை நியமிப்பதில் பிரச்சினை ஏற்பட்டால் அதைப்பற்றிப் பேச வருகிறோம். ஆனால் மார்க்க விஷயத்தில் அனைவருமே நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் சொன்னதைத் தான் பின்பற்றுவோம் என்று கூறி வர மறுக்கிறார்கள்.

எனவே யார் எதை மார்க்கமாகச் சொன்னாலும் அதை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். அவன் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும். இவன் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும் என்று கருதக்கூடாது. இருவரில் யாராவது ஒருவர் சொல்வது தான் சரியாக இருக்க முடியும் என்ற கருத்துக்கு வர வேண்டும். அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மக்களிடம் பின்வருமாறு கூறச் சொல்லி இறைவன் கட்டளையிடுகிறான்.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை, அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன்: 6:153

இவ்வசனத்தில் மறுமையில் வெற்றியடைய வேண்டுமென்றால் அல்லாஹ்வின் வழியைத் தான் பின்பற்ற வேண்டும். அவ்வாறன்றி அவர்கள் வேறு யாருடைய வழியைப் பின்பற்றினாலும் அது சொர்க்கத்திற்குச் செல்லக்கூடிய வழியை விட்டும் அவர்களை திசை திருப்பி மறுமையில் நஷ்டமடையச் செய்துவிடுவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

அதேபோல் யார் இந்த மார்க்கத்தைப் பல கூறாகப் பிரித்து விட்டார்களோ அவர்களை இந்த உலகத்தில் நாம் முஸ்லிம் என்ற பட்டியலில் தான் நாம் வைத்திருக்கிறோம். 72 கூட்டத்தையும் நாம் இட ஒதுக்கீட்டுக்காக அழைப்பு விடுக்கும் போது முஸ்லிம் என்ற ஓரணியில் திரளுங்கள் என்று நாம் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பல பிரிவாகப் பிரித்தவர்களை இறைவன் முஸ்லிம்களுடைய பட்டியலில் சேர்க்காமல் முஷ்ரிக்கீன்களுடைய பட்டியலில் சேர்க்கிறான. அல்லாஹ்விற்கு நிகராக வேறு ஒருவனை வணங்குபவனை மட்டும் முஷ்ரிக் என்று சொல்லாமல், மார்க்கத்தை பல கூறாக பிரித்து அதுவும் சரி. இதுவும் சரி என்று நினைப்பபவர்களையும் முஷ்ரிக் என்றே குறிப்பிடுகிறான்.

தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஓவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன்: 30:31

இன்றைக்கு இம்மார்க்கத்தை பல கூறாகப் பிரித்திருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பள்ளிவாசல்களில் 4 மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று தெளிவாக எழுதி வைத்திருக்கின்றனர். இந்த நான்கும் சரி என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த நான்கு மத்ஹபுகளும் வெவ்வேறு கொள்கைகளையும், வணக்க வழிபாடுகளையும் உடையதாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மார்க்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு பிரித்து கொண்டு, தான் இருக்கும் கொள்கை தான் சரியானது என்றும், நாம் தாம் சரியான கொள்கையில் இருக்கின்றோம் என்றும் நினைத்து மகிழ்கின்றனர். எனவே தான் இந்த வசனத்தில் மார்க்கத்தை பல கூறாகப் பிரித்தவனையும் இணை கற்பித்தோர் பட்டியலில் அல்லாஹ் சேர்க்கிறான். மேலும் இறைவன் கூறுகிறான்,

நூஹூக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே) உமக்கு நாம் அறிவித்ததும், இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்! என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ் தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.

 அல்குர்ஆன்: 42:13

இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் எந்தப் பிரிவினையும் இல்லாத ஒரே மார்க்கத்தைத் தான் இறக்கினான். ஆனால் அவர்களுக்கு பின்னால் வாழ்ந்தவர்கள் அந்த மார்க்கத்தை 72 பிரிவுகளாக ஆக்கிக் கொண்டார்கள். இவ்வாறு பல குழுக்களாக, பிரிந்து கிடப்பதற்கு காரணம் மனோஇச்சை, முரட்டுப் பிடிவாதம் தான்.

எங்களுக்கு எங்களுடைய முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம்கள் எதை மார்க்கமாகச் சொன்னார்களோ அது எங்களுக்கு போதும். அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம். வேறு யார் சொன்னாலும், தெளிவான ஆதாரங்களை எடுத்து வைத்தாலும் அதை நாங்கள் செவியேற்கத் தயாராக இல்லை. நாங்கள் எங்களுடைய கொள்கையை விடமாட்டோம் என்று கூறுகின்றனர். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருறையில் கூறுகிறான்,

அவர்களிடம் அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. குறிப்பிட்ட காலக்கெடு வரை உமது இறைவனிடமிருந்து ஏற்பட்ட கட்டளை முந்தியிராவிட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்குப் பின் வேதத்திற்கு உரிமையாளர்களாக ஆக்கப்பட்டோர் அதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.

அல்குர்ஆன்: 42:14

குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று தெரிந்த பின்பும் இவர்கள் தங்களிடத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினால் இவர்கள் சொல்வதை நாம் கேட்பதா? அவ்வாறு கேட்டால் நாம் இத்தனை ஆண்டுகளாக மார்க்கமாகச் செய்து வந்ததற்கு அர்த்தமில்லாமல் போய் விடுமே! முன்னோர்கள் சொன்னது பொய்யாகி விடுமே! ஆலிம்கள் சொன்னது பொய்யாகி விடுமே என்று கருதி உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்