ஏகத்துவம் – ஜூன் 2010

தலையங்கம்

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:8, 9

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

அல்குர்ஆன் 92:18-20

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

விடைபெறும்ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்என்றார்கள். பின்னர் நான் “பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 1295

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி), “அப்துல்லாஹ்வின் மனைவிஎனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியதுஎனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1466

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2067

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள்.

இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:272

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!

————————————————————————————————————————————————

கடலில் விழுந்த ராக்கெட் கைவிட்ட ஏழுமலையான்

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து “ஜிசாட்-4′ செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – டி3 ராக்கெட் 29 மணி நேர கவுண்ட்டவுனுக்குப் பிறகு விண்வெளியை நோக்கி 4.27 மணிக்கு சீறிப் பாய்ந்தது.

மணிக்கு 36 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ராக்கெட்டின் இன்ஜினுக்கு கிரையோ ஜெனிக் (Cryogenic) என்று பெயர். கிரையோஜெனிக் என்றால் “கடும் குளிர்விப்பு’ என்று பொருள். இந்த ராக்கெட்டைச் செலுத்துவதற்கு ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்கள் கூட்டாகத் தேவை.

இந்த இன்ஜின் இயங்குவதற்கு இவ்விரு வாயுக்களையும் வாயு நிலையிலேயே பயன்படுத்த முடியாது. மாறாக இவ்விரு வாயுக்களையும் திரவ நிலைக்கு மாற்றித் தான் பயன்படுத்த வேண்டும்.

நமது வீட்டுச் சமையலுக்காக வருகின்ற கியாஸ், வாயு நிலையில் அதாவது காற்று நிலையில் வருவதில்லை. மாறாக, திரவ நிலையில் மாற்றப்பட்டுத் தான் வருகின்றது. இவ்வாறு மாற்றப்படுவதற்குக் காரணம் வாயுவுக்கு அதிகமான இடம் தேவை. வாயு நிலையில் தந்தால் இந்த சிலிண்டர்கள் போதாது. அதனால் அதைத் திரவ நிலைக்கு மாற்றி சிலிண்டரில் கொண்டு வரப்படுகின்றது. இந்த வாயுவை அழுத்தத்தின் மூலம் திரவ நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் திரவ நிலைக்குக் கொண்டு வர முடியாது. மாறாக இதற்கு வேறு தொழில்நுட்படம் அவசியம். ஆக்ஸிஜன் வாயுவை, மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்விக்க வேண்டும். அப்போது அது திரவ நிலையை அடையும். ஹைட்ரஜனை, மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்க வேண்டும்.

அண்மையில் செலுத்தப்பட்ட ராக்கெட் மூன்று கட்டமைப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு கட்ட ராக்கெட்டிலும் தனித்தனி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

முதல்கட்ட ராக்கெட்டில், அதாவது அடிப்புற ராக்கெட்டில் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.

இரண்டாவது கட்ட ராக்கெட்டில் குளிர்விப்பு தேவைப்படாத எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.

மூன்றாவது கட்ட ராக்கெட்டில் அதாவது உச்சியில் பொருத்தப்பட்ட ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜனும், திரவ ஹைட்ரஜனும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு தான் திரவ வடிவில் உள்ள இவ்விரு வாயுக்களும் ராக்கெட்டின் என்ஜின் பகுதிக்கு வந்ததும் வாயுக்களாக மாறி ஒன்று சேர்ந்து எரியும் போது 3000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தோன்றுகின்றது.

இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் சுமார் 200 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் இந்த கிரையோஜெனிக் ராக்கெட் செயல்பட ஆரம்பித்தது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள ஜிசாட்-4 செயற்கைக் கோளை மணிக்கு 36 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் வீசும்.

அதன் பின்னர் அந்தச் செயற்கைக் கோள் நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும்.

இப்படி ஓர் எதிர்பார்ப்பில் அனுப்பப்பட்ட ராக்கெட், பாதை தவறி கடலில் விழுந்தது. 420 கோடி ரூபாய், இந்த ராக்கெட்டை உருவாக்குவதற்குத் தேவைப்பட்ட உழைப்பு அனைத்தும் கடலில் கரைந்து போனது.

ஜிஎஸ்எல்வி-டி3 மற்றும் ஜிசாட் செயற்கைக் கோளின் மதிப்பு ரூ.420 கோடி. இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் 170 கோடி!

இதன் எடை 416 டன்

இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 2000

இதைத் தயாரிக்க செலவான காலம் 18 ஆண்டுகள்

1992ஆம் ஆண்டு இதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா விற்பதாக இருந்தது. அவ்வாறு கொடுக்கக் கூடாது என்று ரஷ்யாவை அமெரிக்கா தடுத்து விட்டது. அதனால் இந்த ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

ஈயைக் கூட ஓட்ட இயலாத ஏழுமலையான்

இம்மாபெரிய ராக்கெட் உருவாக எவ்வளவு காலம் தேவைப்பட்டது? எவ்வளவு பணம் செலவானது? எத்தனை பேர்களின் உழைப்பு என்பதையெல்லாம் நாம் மேலே பார்த்தோம். இவை அத்தனைக்கும் மேலாக மனித மூளை இதற்கு மிக அவசியமானது. அந்த மூளையைத் தான் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அடகு வைத்து விட்டார்.

ஏப்ரல் 10ஆம் தேதி இவர் திருப்பதிக்குப் போய் ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்கின்றார். இவ்வாறு தரிசிப்பது அவரது தனிப்பட்ட உரிமை; அவரது மதத்தின் நம்பிக்கை.

அங்கு போய் ஏழுமலையானின் பாதத்தில் ஜிஎஸ்எல்வி டி3 ராக்கெட்டிற்கான திட்ட அறிக்கையை வைத்து, அது வெற்றிகரமாகப் பறக்க வேண்டும் என்று வேண்டியது தான் இங்கு கேள்விக்குரிய விஷயமாகும்.

இந்த நாட்டின் இவ்வளவு பெரிய திட்ட அறிக்கையை இன்று ஏழுமலையானிடம் எடுத்துச் செல்வது போன்று, பக்கத்து நாடான நேபாளத்தில் ஏதாவது எட்டுமலையானிடம் கொண்டு சென்றால் என்ன ஆகும்? குருட்டு பக்தியின் காரணமாக இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய ஆவணத்தை எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

சரி! இவரது இந்த தரிசனத்திற்குப் பிறகு, வேதப் பண்டிதர்களின் வேத மந்திரத்திற்குப் பிறகு, தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்ட பிறகு ராக்கெட் தன்னுடைய வட்டப் பாதையை அடைந்ததா? என்றால் இல்லை.

விண்ணை நோக்கி எகிறிப் பாய்ந்த சிறிது நேரத்தில் இந்த ராக்கெட் இடறி கடலில் போய் விழுந்து விட்டது. எதிர்பார்த்த அத்தனை பேருக்குமே பெருத்த ஏமாற்றம்! சிவகாசிப் பட்டாசு போல் பொசுங்கிப் போனது; எல்லோரின் ஆசையும் கருகிப் போனது.

இது எதைக் காட்டுகின்றது?

ஏழுமலையானுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் இணைந்த ஓர் எரிபொருள் இருந்தால் தான் ராக்கெட் இயங்க முடியும் என்று தெரிந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு, ஏழுமலையான் இயங்க வேண்டுமென்றால் அவனிடம், அந்தச் சிலையிடம் என்ன எரிபொருள் – ஆற்றல் இருக்கின்றது என்பது தெரியவில்லை. ஏழுமலையான் என்பது வெறும் சிலை என்பதைச் சிந்திக்கும் அளவுக்கு இவரது மூளை இயங்கவில்லை. இப்படிப்பட்ட கருத்துக் குருடர்களை விஞ்ஞானிகள் என்று எப்படி நாம் ஒப்புக் கொள்ள முடியும்? சாதாரண அறிவாளி என்று கூடச் சொல்ல முடியாது.

ஏழுமலையான் இராக்கெட்டை இயக்குவது இருக்கட்டும்! தன் மேல் உள்ள ஓர் ஈயை ஓட்ட முடியுமா?

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

திருக்குர்ஆன் கூறும் இந்தக் கருத்து ஒரு பாமரனுக்குக் கூட தெளிவாகப் புரிகின்றது. எத்தனையோ பாமரர்கள் இது போன்ற கல்லுக்கு முன்னால், களி மண்ணால் படைக்கப்பட்ட சிலைகளுக்கு முன்னால் போய் நிற்பதில்லை; பிரார்த்திப்பதில்லை. இவன் தான் அறிவாளி! இஸ்ரோ தலைவர் விஞ்ஞானியாக இருந்தாலும் அறிவிலி!

இந்த அறிவிலி தான் இராக்கெட் கடலில் விழுந்ததும், “கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!” என்று தத்துவம் பேசுகிறார். இனிமேல் மத்திய அரசு இவருக்குச் சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. காரணம், இந்த ஏழுமலையான் பக்தர், பலனை எதிர்பார்க்காமல் பணி செய்பவர். அரசு சம்பளத்தை நிறுத்தியதும், இவர் ஏன் என்று கேட்கும் போது இந்தப் பதிலைக் கூறினால் மிகப் பொருத்தமாக அமையும்.

மனித முயற்சியில் இது போன்ற தவறு ஏற்படுவது இயல்பு தான் என்று சொல்வதை விட்டு விட்டு, பகவத் கீதை வசனத்தைச் சொல்கிறார். பகுத்தறிவை சிலையின் பாதத்தில் கொண்டு அடகு வைக்கும் இவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

இஸ்ரோ போன்ற மிகப் பெரும் அறிவியல் ஆய்வு மையத்திற்கு இப்படிப்பட்ட விபரம் இல்லாதவர்களைத் தலைவர்களாக நியமிப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

————————————————————————————————————————————————

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத அனாச்சாரங்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தன.

ஹதீஸ் கலையைப் படிக்காத, அல்லது படித்தும் அதனைச் செயல்படுத்தாத போலி ஆலிம்கள் இந்த அனாச்சாரங்களுக்குப் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினர்.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் ஏகத்துவம் வந்த பிறகு இந்த ஹதீஸ்களின் உண்மை நிலை மக்களுக்கு விளக்கப்பட்டு ஓரளவுக்கு இந்த அனாச்சாரங்கள் ஒழிந்துவிட்டன. இது போன்று பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர்.

இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று நம் சமுதாயத்தில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றன.

அபூ ழிலாலுடைய அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்கிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 535

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ழிலால் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் நஸாயீ, இமாம் யஃகூப் பின் சுஃப்யான், இமாம் இப்னு ஹிப்பான், இமாம் இப்னு அதீ, இமாம் அபூதாவுத் மற்றும் ஹாகிம் ஆகியோர் இவரைப் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகின்றது.

மூசா பின் அலீ என்பவரின் அறிவிப்பு

அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாகவும் இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்கிறார். சூரியன் உதித்த பிறகு அவர் எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மையுடன் அவர் திரும்புகிறார்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக மூசா பின் அலீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் யாரென்ற விபரம் தெரியவில்லை. இவருடைய நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இவர் பலவீனமானவராவார்.

இவரிடமிருந்து உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத நபர்களிடமிருந்தும் பலவீனமானவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர் என்று இமாம்கள் குறை கூறியுள்ளனர்.

மேற்கண்ட ஹதீஸை இவர் மூசா பின் அலீ என்பவரிடமிருந்து அறிவிப்பதால் மூசா பின் அலீ நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர் அல்லது பலவீனமானவர் என்பது மேலும் உறுதியாகின்றது.

மூசா பின் அலீ பின் ரபாஹ் என்ற பெயரில் நம்பகமான அறிவிப்பாளர் ஒருவர் இருக்கின்றார். மேலுள்ள செய்தியில் கூறப்படும் மூசா பின் அலீ என்பவர் இவராக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஆனால் அறிஞர்களின் கூற்றைக் கவனித்தால் இவர் மூசா பின் அலீ பின் ரபாஹ் அல்ல என்பதை அறியலாம்.

இமாம் மிஸ்ஸி அவர்கள் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மானுடைய ஆசிரியர் பட்டியலில் மூசா பின் அலீ பின் ரபாஹைக் குறிப்பிடவில்லை. இவரிடமிருந்து உஸ்மான் அறிவித்திருந்தால் உஸ்மானுடைய ஆசிரியர் பட்டியலில் மூசா பின் அலீ பின் ரபாஹ் இடம்பெற்றிருப்பார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. அதே போன்று மூசா பின் அலீ பின் ரபாஹ் அவர்களின் மாணவர் பட்டியலில் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெறவில்லை.

எனவே இந்தச் செய்தியை உஸ்மான் என்பவர் மூசா பின் அலீ பின் ரபாஹிடமிருந்து அறிவிக்கவில்லை. இதே பெயர் கொண்ட நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத வேறு ஒரு மூசா பின் அலீயிடமிருந்து தான் அறிவித்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஆகையால் இச்செய்தியும் பலவீனமாக உள்ளது.

அல்அஹ்வஸ் பின் ஹகீமுடைய அறிவிப்பு

உத்பா பின் அப்த் (ரலி) அவர்கள் வழியாகவும் இது போன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சூரியன் உதிக்கும் வரை அமர்ந்திருந்து லுஹா தொழுகையை நிறைவேற்றினால் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் நிகரான நன்மை அவருக்கு உண்டு.

அறிவிப்பவர்: உத்பா பின் அப்த் (ரலி)

நூல்: முஃஜமுஸ் ஸஹாபா

இதில் அல்அஹ்வஸ் பின் ஹகீம் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், இமாம் அபூஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ மற்றும் முஹம்மது பின் அவ்ஃப் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் வ-மையானவர் இல்லை என்று யஃகூப் பின் சுஃப்யான் மற்றும் ஜவ்ஸஜானி ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.

இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு அறிவிப்பு இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தொகுத்த அல்மஜ்ரூஹீன் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தியில் இடம்பெற்ற பலவீனமான அறிவிப்பாளர் அல்அஹ்வஸ் பின் ஹகீம் இதிலும் இடம் பெற்றுள்ளார்.

ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவரின் அறிவிப்பு

இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகப் பின்வரும் செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டால் (சூரியன் உதித்த பிறகு) தொழும் வரை தான் அமர்ந்த இடத்திலிருந்து எழமாட்டார்கள். மேலும் அவர்கள் ஒருவர் ஃபஜ்ர் தொழுது விட்டுத் தன் இருப்பிடத்திலேயே அமர்ந்து பிறகு தொழுதால் அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் உம்ராவாகவும் ஆகிவிடுகின்றது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: தப்ரானி

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்றும் இமாம் அபூஹாதம் குறை கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

தய்யிப் பின் சல்மான் என்பவரின் அறிவிப்பு

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது விட்டு சூரியன் உதிக்கும் வரை தான் தொழுத இடத்திலேயே அமர்ந்து பிறகு நான்கு ரக்அத்கள் தொழுதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: தப்ரானி

இதில் தய்யிப் பின் சல்மான் என்பவர் இடம்பெறுகிறார். தய்யிப் பின் சல்மான் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவர் நம்பகமானவர் என்று ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் சான்றளிக்கவில்லை. எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

சரியான செய்திகள்

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் வரை பள்ளியில் அமர்ந்திருப்பார்கள் என்றும் சூரியன் உதித்த பிறகு எழுந்து சென்று விடுவார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழி கூறுகின்றது.

சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்த பின் சூரியன் உதயமாவதற்கு முன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்க மாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4641

சூரியன் உதித்த பிறகு தொழுவதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மை கிடைக்குமானால் இந்த வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

எனவே இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அதே நேரத்தில் ஒருவர் சூரியன் உதித்த பிறகு உபரியாகத் தொழ நாடினால் இதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

மற்ற நேரங்களில் உபரியான வணக்கங்களைத் தொழுதால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையே சூரியன் உதித்த பிறகு நிறைவேற்றப்படும் தொழுகைக்கும் கிடைக்கும்.

இந்நேரத்தில் தொழப்படும் தொழுகைக்கு பிரத்யேகமாக எந்தச் சிறப்பும் இல்லை. மாறாக தொழுவதற்கு அனுமதி மட்டுமே இருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறைவும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (586)

சூரியன் முழுமையாக உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரியன் உதித்துவிட்டால் இதற்குப் பிறகு உபரியான தொழுகைகளை தொழுது கொள்ள அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

————————————————————————————————————————————————

பொருளியல்  தொடர்: 4

செல்வந்தர்கள் கவனத்திற்கு…

இறை நினைவை திசை திருப்பக்கூடாது

செல்வம் இருப்பதால் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடக் கூடாது. இன்று எத்தனையோ நபர்கள் பணம் வருவதற்கு முன் வணக்க வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்கள், பணம் வந்தவுடன் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இறை நினைவை விட்டும் திருப்பி விடாது என்று உறுதியாக நம்பினால் மட்டுமே காசு பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)

சோதனையில் வெற்றி பெறுதல்

இறைவன் தன்னுடைய அடியானை எப்படியும் சோதிப்பான். அந்த வகையில் ஒருவனுக்குப் பணத்தைக் கொடுத்து, அவனை செல்வந்தனாக மாற்றி அவனுடைய பணத்தை எந்த முறையில் பயன்படுத்துகிறான் என்று சோதிக்கிறான். இன்னொருவனுக்குப் பணத்தை எடுத்து வறுமையைக் கொடுப்பான். வறுமையினால் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கிறான் ஆக எது நமக்கு வந்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும்.

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்எனக் கூறுகிறான். (அல்குர்ஆன் 89:15, 16)

சம்பாதிப்பதும் செலவழிப்பதும்

பணத்தை எப்படியும் சம்பாதிக்க முடியும் என்று சம்பாதிக்கக் கூடாது. அதில் ஹலாலானதை மட்டும் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பின் அந்தப் பணத்துக்குரிய ஸகாத்தை கொடுக்க வேண்டும். நல்ல முறையில் ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம்.

பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு கா-யானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

நூல்: புகாரி 6427, 1425, 2842

“இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச் செல்வம் மறுமை நாளில் அவனுக் கெதிராக சாட்சி சொல்லும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 2842)

பொருளாதாரத்தை விட வணக்கம் சிறந்தது

அன்றைய காலகட்டத்தில் கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை வாங்க முடியாது. அவர்கள் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் வாரத்துக்கு ஒருமுறை நடக்கும் சந்தைக்குச் சென்று வாங்க வேண்டும். அல்லது வியாபாரக் கூட்டம் அந்த ஊருக்கு வந்து முகாமிட்டு இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருக்கும். அப்போது வாங்கினால் தான் உண்டு.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது வியாபாரக் கூட்டம் வந்ததைப் பார்த்த ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை நிற்க வைத்து விட்டு வணிகக் கூட்டத்தை நோக்கி ஓடி விட்டார்கள். பதினேழு ஸஹாபாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். இதைக் கண்டித்து அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்குகின்றான்.

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்என கூறுவீராக!.

(அல்குர்ஆன் 62:11)

தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது வியாபாரம் தான் முக்கியம் என்று இருந்து விடக் கூடாது. வணக்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரத்தை நிறுத்தி வைத்துவிட்டுத் தொழுகைக்கு வரவேண்டும். பொருளாதாரமும் அவசியமானது தான். பொருளாதாரமா? வணக்கமா? என்று வருகின்ற போது வணக்கம் தான் சிறந்தது என்று நினைக்க வேண்டும்.

வறுமை, செல்வம் ஆகிய இரண்டை விட்டும் பாதுகாப்பு தேடுதல்

வறுமையின் சோதனையிலிருந்தும் செல்வத்தின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் அதிகமதிகமாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதரே இவற்றிலிருந்து பாதுகாப்பு கேட்டதிலிருந்து அது எவ்வளவு பயங்கரமானது என்பதை உணர்ந்து அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டுமென்று விளங்குகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலிலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி, வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்ககைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்தி-ருந்தும், கடனி-ருந்தும், மண்ணறையின் சோதனையி-ருந்தும் அதன் வேதனையி-ருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையி-ருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜா-ன் சோதனையி-ருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னி-ருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கி-ருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக. (நூல்: புகாரி 6368, 3375, 6376, 6377)

செல்வத்தைப் பொறுத்த வரை, படித்தவன், படிக்காதவன், அறிவாளி, முட்டாள், நல்லவன், கெட்டவன், குறிப்பிட்ட நாட்டுக் காரன், குறிப்பிட்ட ஊர்க்காரன், குறிப்பிட்ட மொழி பேசக் கூடியவன் என்று யாரையும் குறிப்பிட்டு செல்வம் கொடுக்கப்படவில்லை.

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு வகையில் சான்றாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் உலகக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது அறிவாளிகள் தான் செல்லவந்தராக இருக்க வேண்டும். ஆனால் இன்று எத்தனையோ அறிவாளிகள், படிக்காத முட்டாளிடம் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அறிவில்லாதவர்கள் தான் படித்தவனை விடப் பணக்காரனாகவும் இருக்கின்றார்கள்.

உலக நியதிப்படி அறிவாளிகள் தான் செல்வந்தராகவும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஆக பணக்காரனாக்குவதும் ஏழையாக்குவதும் அல்லாஹ்வுடைய கையில் தான் இருக்கின்றது என்பதை அறியலாம்.

பணத்தைப் பொறுத்த வரை அறிவாளி, அறிவில்லாதவன், திறமைசாலி, திறமையில்லாதவன், படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் அல்லாஹ் யாருக்குக் கொடுக்க நாடுகின்றானோ அவனுக்குக் கொடுப்பான். பணமுடையவன் அல்லாஹ்விடத்தில் பாக்கியசாலி; மற்றவர்கள் பாக்கியம் கொடுக்கப்படாதவர்கள் என்று எண்ணக் கூடாது.

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை  (அல்குர்ஆன் 13:26)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 17:30)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங் குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:37)

செல்வத்தை பொறுத்த வரை நமக்கு இல்லாவிட்டலும் அல்ஹம்துலில்லாஹ், அது இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி இது அல்லாஹ்வின் சோதனை தான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

செல்வம் கொடுக்கப்பட்டவன் நல்லவன் என்றோ செல்வம் கொடுக்கப்படாதவன் கெட்டவன் என்பதோ கிடையாது. அவனுடைய செயலினால் தான் அவன் நல்லவனாக மாறுவதும் கெட்டவனாக மாறுவதும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லவர்களுக்கும் வறுமை

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)

மேற்கண்ட வசனம் நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் அனைவருக்கும் இறைவன் ஏழ்மையின் மூலம் சோதனையைக் கொடுப்பான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கெட்டவனுக்கும் செல்வம்

இப்றாஹீம் (அலை) அல்லாஹ்விடம், “என்னையும் இஸ்மாயீலையும் எப்படி மக்களுக்கு இமாமாக ஆக்கினாயாயோ அதே போன்று என் வாரிசுகளையும் இமாமாக ஆக்கு’ என்று பிரார்த்தனை செய்த போது அவரது சந்ததி அனைவரும் நல்லவர்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க அல்லாஹ் மறுத்து விட்டான்.

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:75)

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

இப்படிக் கேட்பது ஒரு வேளை அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை என்று நினைத்து துஆவை மாற்றிக் கேட்கின்றார்கள். “இந்த ஊரில் இறை நம்பிக்கையாளராக யார் இருக்கின்றார்களோ அவர்களுக்கு செல்வத்தை வழங்கு’ என்று பிராத்தனை செய்தார்கள். இதையும் மறுத்து, “நான் அனைவருக்கும் செல்வத்தைக் கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவா! இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டதுஎன்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:126)

காரூனுக்கு வழங்கப்பட்ட செல்வம்

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்கு சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 28:76)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல்குர்ஆன் 28:79)

மேற்கண்ட வசனம் காரூன் என்ற கெட்டவனுக்கு அல்லாஹ் எவ்வளவு பெரிய செல்வ வளத்தை வழங்கியிருந்தான் என்பதை விளக்குகின்றன. கீழ்க்கண்ட வசனங்களும் தீயவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுப்பான் என்பதற்குச் சான்றாகும்.

அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)

அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து “நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:55, 56)

கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னிடம் செல்வம்

எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 10:88)

குரைஷிக் காஃபிர்களின் பொருளாதாரம்

குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும், இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான். (அல்குர்ஆன் 106வது அத்தியாயம்)

மேற்கண்ட அத்தியாயம் குரைஷிக் காஃபிர்களுக்கு அல்லாஹ் வியாபாரப் பயணங்களின் மூலம் ஏராளமான செல்வங்களை வழங்கினான் என்பதைக் குறிப்பிடுகின்றன.

கெட்டவர்களுக்கு, அவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்லாஹ் செல்வத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை சோதித்துப் பார்ப்பதற்காகத் தான் கொடுத்தான். கெட்டவனுக்குத் தான் செல்வத்தைக் கொடுப்பான் என்று எண்ணிவிடக் கூடாது நல்லவர்களுக்கும் கொடுப்பான் என்பதைப் பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சுலைமான் நபியின் செல்வச் செழிப்பு

சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்ட செல்வங்களைப் போன்று யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இவ்வளவு கொடுக்கப்பட்டாலும் கெட்டவர்கள் அல்லாஹ்வை மறந்ததைப் அவர் அல்லாஹ்வை மறந்துவிடவில்லை. சுலைமான் நபியின் மாளிகையைப் பற்றி திருக்குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

இம்மாளிகையில் நுழைவாயாக!என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகைஎன்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்என்று அவள் கூறினாள்.  (அல்குர்ஆன் 27:44)

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.  (அல்குர்ஆன் 27:16, 17)

சுலைமான் நபிக்கு நல்லவர் என்பதற்காக கொடுக்கவில்லை. நல்லவராக இருப்பாரா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத் தான் செல்வத்தைக் கொடுத்தான். இதே போன்று காரூனுக்கும் கொடுக்கப்பட்டது. அவன் அல்லாஹ்வை மறந்தான். சுலைமான் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பணம் இருப்பதால் அகம்பாவம் வரக் கூடாது. சுலைமான் (அலை) அவர்கள் எவ்வளவு பணிவானவர்களாக இருந்தார்கள் என்பதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். (அல்குர்ஆன் 27:40)

அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்என்று கூறினோம். (அல்குர்ஆன் 34:13)

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் இவ்வீட்டுக்குச் செல்லலாமா?

ரஃபீக், நாகர்கோவில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, நபியவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச் சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, “எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ 5256

தமது மருமகன் அலீ (ரலி) அவர்கள் விருந்து ஏற்பாடு செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்த போது வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் வெளியேறி விட்டனர். உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டனர்.

ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 1341

உருவம் வரைந்த கிறித்தவர்களைத் தான் கண்டித்தனர். நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள் என்று தமது மனைவியரைக் கண்டிக்கவில்லை. அதன் அழகை வர்ணித்ததையும் கண்டிக்கவில்லை.

முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளில் சிலைகளோ இன்ன பிற உருவங்களோ இருந்தால் அங்கே நுழைவது தவறில்லை. அவர்களின் வழிபாட்டுத்தலங்களைப் பார்வையிடுவதும் தவறல்ல.

? ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?

முஹம்மத் ருக்னுத்தீன்

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஒரு மனிதர் வரிசைக்குப் பின்னால் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

நூல்: திர்மிதி 213

இன்னும் பல நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையில் அறிஞர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுதால் தொழுகை செல்லாது என்பது தெளிவாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

முன் வரிசையில் இடம் இருக்கும் போது அதில் சேராமல் தனித்து நிற்பவரை இது குறிக்குமா? அல்லது இடமிருந்தாலும் இடமில்லாவிட்டாலும் தனித்து நிற்பதைக் குறிக்குமா?

இதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள பின்வரும் ஹதீஸ் நமக்கு உதவுகிறது.

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன்என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புஹாரி 380

அனஸ் (ரலி) அவர்களின் தாயார் பெண் என்பதால் அவர்கள் ஆண்களுடன் சேரவில்லை. தனியாகத் தான் நின்றார்கள். அதாவது வரிசையில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாத போது அவர்கள் தனியாக நின்றார்கள். தனியாக நிற்பவரின் தொழுகை செல்லாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள்.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்வது அவசியம். வரிசையில் காலி இடம் உள்ள போது வரிசையில் சேர்வதை வெறுத்தோ அல்லது அந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியோ வரிசையில் சேராமல் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் ஒழுங்கைக் கெடுத்தவராகிறார். இது போல் செய்தவரின் தொழுகை செல்லாது என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும். இப்படிப் புரிந்து கொண்டால் தான் மேற்கண்ட ஹதீஸுடன் ஒத்துப் போகும்.

நின்று தொழ வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. நிற்க முடியாதவருக்கு இந்தக் கட்டளை பொருந்தாது என்று நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாத்தின் எல்லாக் கட்டளைகளுமே இப்படித் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது எந்தக் கட்டளையானாலும் இயலும் போது அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இப்படிப் புரிந்து கொள்ளாமல் வரிசை முடிந்து விட்டாலும் தனியாகத் தொழக் கூடாது என்று கூறினால் மேற்கண்ட ஹதீஸுக்கு அது முரண்படுவதுடன் மேலும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

கடைசியில் ஒருவர் வருகிறார். அவருக்கு வரிசையில் இடம் இல்லை. இவருடன் துணைக்குச் சேர யாருமே வரவில்லை என்றால் இவர் ஜமாஅத்தில் சேர முடியாது. ஜமாஅத் முடியும் வரை காத்திருந்து தனியாகத் தான் தொழ வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அவர் இழக்கும் நிலை ஏற்படும்.

அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முதல் வரிசையின் நன்மையை நாடி முன் கூட்டியே வந்தவரை இழுத்து அவருக்கு முதல் வரிசையின் நன்மையை இல்லாமல் ஆக்குவது அநீதியாகும். மேலும் வரிசையைச் சீர்குலைக்கும் வேலையுமாகும். எனவே இடம் இல்லாவிட்டால் தனியாக நிற்கலாம்.

? பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் விரையுங்கள் என்று தான் உள்ளது. இதற்கு விளக்கம் தரவும்.

எஸ்.ஏ. ஷர்புன்னிஸா,  கிள்ளை

திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள்.

அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அபூதாவூத் 901

திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுச் செயல்படுவது தான் ஒரு முஃமின் மீது கடமையாகும். இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:216)

இந்த வசனத்தில் “போர் செய்வது கடமை’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தொழுகைக்கும், நோன்புக்கும் எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றானோ அதே வார்த்தையைப் பயன்படுத்தி போரை அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். இதன் அடிப்படையில் பெண்களுக்கும் போர் கடமை என்று கூற முடியாது. ஏனெனில் போரிலிருந்து பெண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிப்பது, இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயின் அடிப்படையிலானது தான். எனவே இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும். இவ்வாறு பாரபட்சம் காட்டுவோரை இறை மறுப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ‘சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்’ எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 4:150, 151

————————————————————————————————————————————————

முதஷாபிஹாத்       தொடர்: 12

இஸ்லாமும் அத்வைதமும்

முதஷாபிஹாத் வசனங்களை விளங்கிட இயலுமா? இயலாதா? என்பது பற்றி எழுந்துள்ள ஐயங்களுக்கும் ஆட்சேபணைகளுக்கும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னர் மேலும் சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம்.

இறைவனும், இறைவனது அடிமைகளாகிய மனிதர்களும் இரண்டறக் கலந்து விட முடியும்; அதாவது மனிதனே சில சமயம் இறைவனாகி விட முடியும் என்ற அத்வைதக் கொள்கை இஸ்லாத்தின் பெயரால் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் உருவெடுத்தது. இஸ்லாத்திற்கும் அத்வைதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் முதஷாபிஹான சில வசனங்களுக்குத் தவறான பொருள் கொண்டதால் வழிகேடர்கள் இஸ்லாத்திலும் அத்வைதம் உண்டு எனச் சாதிக்கலானார்கள்.

சூஃபிஸம் என்ற பெயரால் இக்கொள்கையுடையவர்கள் உளறிக் கொட்டியவை ஏராளம். இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு படைத்தவனும் கூட ஜீரணிக்க முடியாத அளவுக்கு அவர்களின் உளறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன.

“ஃபஇன் தஅய்த்து குன்துல் முஜீப” என்று இப்னுல் ஃபாரில் எனும் சூபிக் கவிஞன் கூறுகின்றான். இதன் பொருள் “நான் பிரார்த்தனை செய்தால் அதற்குப் பதிலளிப்பவனும் நானே!” என்பதாகும்.

“வமா கான லீ ஸல்லா ஸிவாய வலம் தகுன்ப் ஸலாதீ லி கைரீ ஃபீ அதா இ குல்லி ஸஜ்தத்தீ” என்றும் இவன் குறிப்பிட்டுள்ளான். இதன் பொருள், “என்னைத் தவிர வேறு யாரையும் நான் தொழவில்லை. ஒவ்வொரு ஸஜ்தாவையும் நான் நிறைவேற்றும் போது என்னைத் தவிர வேறு யாரையும் நான் தொழவில்லை” என்பதாகும்.

தொழுகின்ற அடிமையும் நானே, தொழப்படும் இறைவனும் நானே என்று கூறுகின்றான். பிரார்த்தனை செய்பவனும், பிரார்த்தனை செய்யப்படுபவனும் நானே என்று கூறுகிறான். அதாவது, தானே இறைவனாகி விட்டதாக இவன் கூறுகின்றான்.

(பார்க்க: இப்னுல் ஃபாரில் எழுதிய “தாஇய்யா”)

“ஃபயஹ்மதுனீ வ அஹ்மதுஹு வயஃபுதுனீ வஅஃபுதுஹு” என்றான் மற்றொரு சூபிக் கவிஞனான இப்னு அரபி என்பவன். இதன் பொருள், “என்னை அவன் புகழ்கிறான்; நான் அவனைப் புகழ்கிறேன். என்னை அவன் வணங்குகிறான்; நான் அவனை வணங்குகிறேன்” என்பதாகும். அடிமையும் நானே! எஜமானும் நானே! வணங்குபவனும் நானே! வணங்கப்படுபவனும் நானே! என்ற கருத்தில், “ஃபுஸுஸுல் ஹிகம்’ என்ற தனது நூல் நெடுகிலும் இவனது உளறலைக் காணலாம்.

“லியல் முல்கு ஃபித்தாரைனி லம் அர ஃபிஹிமா ஸிவாய ஃபஅர்ஜு ஃபழ்லஹு அவ் ஃபஅஹ்ஷாஹு” என்றான் அப்துல் கரீம் ஜியலீ என்பவன். “இரு உலக ஆட்சியும் எனக்கே உரியது. இரு உலகிலும் என்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. எனது அருளையே நான் எதிர்பார்க்கிறேன்; அல்லது எனக்கே நான் அஞ்சுகிறேன்” என்பது இதன் பொருள்.

ஃபிர்அவ்ன் எப்படித் தன்னை இறைவன் என வாதிட்டானோ அதே போல் இவனும் இறைத் தன்மைக்கு உரிமை கொண்டாடுவதை இவனது “அல்இன்ஸானுல் காமில்’ என்ற நூல் முழுவதும் காணலாம்.

இதுபோன்ற ஃபிர்அவ்னிய்யக் கொள்கையைக் கொண்டவர்கள் ஏராளமாக இருந்துள்ளனர். அப்துல்கனி அன்னாபிலிஸீ, ஹஸன் ரிள்வான், அல்காஷானீ, அபூஸயீத் அல்ஹர்ராஸ், ஹுஸைன் இப்னு மன்சூர் அல்ஹல்லாஜ், இப்ராஹீமுல் கவ்வாஸ், முஹம்மது இப்னு இஸ்ஹாக் அல்கூனவீ, அப்துஸ்ஸலாம் இப்னு பஷீஷ், இப்னு அஜீபா, அத்தப்பாக், துன்னூன் அல்மிஸ்ரீ, அபூயஸீத் அல்பிஸ்தாமீ என்று இவர்களின் பட்டியல் நீளும்.

ஒரு சில அறிவீனர்கள் இவர்களை மகான்கள் என்று வர்ணித்தாலும், இவர்களின் போதனைகள் முற்றிலும் ஃபிர்அவ்னுடையதாக இருக்கின்றன. அவன் எவ்வாறு தன்னை இறைவன் என்று பிரகடனம் செய்தானோ அதே போல் இவர்களும் பிரகடனம் செய்திருக்கின்றார்கள். வித்தியாசம் என்னவென்றால் இவர்கள் தங்களது அத்வைதக் கொள்கைக்கு – தாங்களே இறைவனாகி விட்டதற்கு (?) திருக்குர்ஆன் வசனங்களையே சான்றாகக் காட்டினார்கள்.

பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கைப்பிடி அளவுக்கு சிறு கற்களை எதிரிகள் மேல் எறிந்தனர். அவை அனைத்து எதிரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காணப்படும் உண்மை. இது பற்றி இறைவன் குறிப்பிடும் போது,

அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:17)

என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

“நபி (ஸல்) அவர்கள் தம் கையில் கற்களை அள்ளி எறிந்திருக்கும் போது, அல்லாஹ், தானே எறிந்ததாகக் கூறுகின்றான். எனவே அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கே நபி (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. அல்லாஹ் நபிக்குள் புகுந்து விட்டான். நபியே அல்லாஹ்வாக, அல்லாஹ்வே நபியாக இரண்டறக் கலந்து விட்டதையே இங்கே குறிப்பிடுகின்றான்’ என்றனர் இந்த வழிகேடர்கள்.

நபித்தோழர்கள் தங்கள் உயிரையும் இறைவனுக்காக அர்ப்பணிப்பதாக மரத்தடியில் உறுதிமொழி எடுத்தனர். பைஅத்துர்ரிள்வான் எனும் இவ்வுறுதிமொழியின் போது நபித்தோழர்களின் கைகள் மீது தம் கையை வைத்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இது பற்றி இறைவன் குறிப்பிடும் போது,

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

உண்மையில் நபி (ஸல்) அவர்களின் கை தான் நபித்தோழர்களின் கைகள் மேல் இருந்தது. ஆனால் அல்லாஹ் நபியின் கையைத் தனது கை என்று கூறுகின்றான். இதிலிருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வே நபியாக, நபியே அல்லாஹ்வாக இரண்டறக் கலந்து விட்டனர் என்று இந்த வழிகேடர்கள் விளக்கம் தந்தனர்.

முதஷாபிஹான இவ்விரு வசனங்களுக்கும் தவறான விளக்கம் அளித்ததுடன் முதஷாபிஹான ஒரு ஹதீஸையும் தங்களின் நவீன விளக்கத்திற்குத் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.

“என் அடியான் என்னிடம் நெருங்கி விடும் போது அவன் பிடிக்கும் கையாக, நடக்கின்ற காலாக, பார்க்கின்ற பார்வையாக, கேட்கின்ற செவியாக நான் ஆவேன்” என்று இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தான் அது! (புகாரி, முஸ்லிம்)

இறைவனுடன் நெருங்கிவிட்ட அடியார்களுக்கு இறைவனே கண்ணாக, காதாக, காலாக, கையாக ஆகி விடுகின்றான் என்றால் இறைவன் அடியானுடன் இரண்டறக் கலந்து விடுவதைத் தானே இது விளக்குகின்றது என்பது இவர்களின் வாதம்.

இந்த வசனங்களை இவர்கள் இவ்வாறு புரிந்து கொண்டதற்குக் காரணம், இவர்களின் உள்ளங்களில் குடிகொண்டு விட்ட வழிகேடும், ஏனைய வசனங்களில் இதுபற்றிக் கூறப்படுவது என்ன என்பதைப் பற்றிய அறியாமையுமே ஆகும். “கலிமத்துல்லாஹ்’ என்பதைக் கிறித்தவர்கள் புரிந்து கொண்டதற்கும், இவர்களின் இந்த விளக்கத்திற்கும் இது தான் காரணம்.

“உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை” (3:128) என்றும், “சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்” (69:46) என்றும், “அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று கூறுவீராக” (7:188) என்றும், “நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது!” (28:56) என்றும், அற்புதங்கள் நிகழ்த்துமாறு காஃபிர்கள் கேட்ட போது, “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!” (17:93) என்றும், “எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன்’ என்று கூறுவீராக” (48:9) என்றும், “எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!’ என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை” (3:79) என்றும் இறைவன் பல்வேறு இடங்களில் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனங்கள் இறைவன், இறைவன் தான்; நபிமார்களேயானாலும் அவர்கள் இறைவனின் அடிமைகள் தான் என்று தெளிவாக அறிவிக்கின்றன. இவற்றுக்கு ஏற்ப அந்த இரு வசனங்களை வழிகேடர்கள் விளங்க முயலவில்லை.

ஒரு மனிதர் எறிந்தால் சாதாரணமாக என்ன விளைவு ஏற்படுமோ அதைவிடப் பெரும் விளைவை கைப்பிடிக் கற்கள் ஏற்படுத்தியதால், அதில் தன்னுடைய தனிப்பட்ட கவனம் இருந்ததையே 8:17 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இறைவன் நினைத்தால் எதன் மூலமும் பெரும் விளைவுகளை ஏற்படுத்திட முடியும் என்பதைக் காட்டவே அவ்வாறு கூறுகிறான் என்று அறிவுடையோர் புரிந்து கொள்வர்.

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (3:123)

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. (9:25)

எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. (2:249)

இந்த வசனங்களின் மூலம் எப்படி அல்லாஹ் தன் வல்லமையை உணர்த்துகின்றானோ அதுபோன்ற வசனமே 8:17 வசனமாகும்.

இறைவனது தூதரிடம் செய்யும் உறுதிமொழி யாவும் இறைவனிடமே செய்யும் உறுதிமொழியாகும். ஏனெனில் இறைத்தூதர்கள் தன் சொந்த லாபத்திற்காக எந்த உறுதிமொழியும் எடுக்கவில்லை. இறைவனின் மார்க்கத்திற்காகவே உறுதிமொழி எடுத்தனர். எனவே அல்லாஹ்விடமே அந்த உறுதிமொழி எடுத்ததாகக் கருதி உறுதியாக அதை நிறைவேற்றுங்கள் என்பதைக் காட்டவே 10:48 வசனத்தில் தன் கை அவர்களின் கை மேல் இருந்தது என்று இறைவன் கூறுகின்றான். அறிவுடையோர் எவரும் இவ்வாறே உணர்வர்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஊடுறுவ இயலாத போது, மனிதனால் அதையே தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது இறைவன் ஊடுறுவி விட்டான் என்றால் இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்பதை வழிகேடர்கள் உணர்வதில்லை.

இவ்வசனங்களை தங்களின் அத்வைதக் கொள்கைக்குச் சான்றாகக் காட்டுபவர்கள் செய்யும் மோசடிகள் இவர்களின் போலித்தனத்தை நன்கு அடையாளம் காட்டி விடும்.

ஹராமானவற்றைச் செய்யும் போதும், கடமைகளை அலட்சியம் செய்யும் போதும், மனிதர்களிடம் அதிகப்படியான மரியாதையை எதிர்பார்க்கும் போதும் இறைவன் தம்மிடம் இரண்டறக் கலந்து விட்டதாகச் சாதிக்கின்றனர் இந்த சூபிகள்! இவர்கள் இறைத்தன்மை பெற்றுவிட்டதாகக் கூறும் அதே சமயத்தில் உண்ணுகின்றனர்; அருந்துகின்றனர்; மனைவியுடன் சல்லாபிக்கின்றனர்; உறங்குகின்றனர்; மலஜலம் கழிக்கின்றனர்; குழந்தை குட்டிகள் பெறுகின்றனர்.

இறைவனே இவர்களிடம் வந்து விட்டால் இந்தச் செயல்களில் ஈடுபட முடியுமா? இறைத் தன்மைக்கு மாற்றமான இக்காரியங்களை இவர்கள் செய்வதிலிருந்து வேண்டுமென்றே, மக்களை வழிகெடுப்பதற்காகவே இந்த வேஷத்தைப் போடுகின்றனர் என்பது தெளிவு.

இன்னும் சொல்வதென்றால் இறைத் தன்மை இவர்களிடம் குடிகொண்டுள்ளது உண்மையென்றால் அவர்களுக்கு இறப்பு ஏற்படக் கூடாது. அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டால் இறைவனே இறந்து விட்டதாக ஆகாதா? இப்படியெல்லாம் அறிவுடையோர், கல்வியில் சிறந்தோர் விளங்கி அவ்வசனங்களின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

மறு ஆய்வு – சென்ற இதழின் தொடர்ச்சி…

காலாடை கரண்டையைத் தாண்டலாமா?

ஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த இதழில் கண்டோம். இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். “நான் கீழாடையை எதுவரைக்கும் அணியலாம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து, “இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இதுவரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்பமாட்டான்என்று கூறினார்கள். (நூல்: அஹ்மது 15389)

இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.

இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்த செய்தியை அறிவித்துள்ளார்.

காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.

அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.

காலிதுடைய அறிவிப்பு

கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது 22121)

அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அபூதாவுத் 3562)

அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), அபூசயீத் (ரலி), அனஸ் (ரலி), சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.

எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.

மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்துக் கூறப்படுகின்றது.

ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக்கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலின் அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது ஆதாரம்

அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: அஹ்மது (10151)

இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்த செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.

அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: அஹ்மது (7519)

இதுவே முஹம்மது பின் இப்ராஹீமின் அறிவிப்பாகும். இவர் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது.

மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்தச் சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.

எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.

மூன்றாவது ஆதாரம்

ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப்பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையான) இடம். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லைஎன்று கூறினார்கள். (நூல்: திர்மிதி 1705)

இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.

இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.  (நூல்: திர்மிதி 1705)

இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதாரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.

ஆய்வின் சுருக்கம்

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.

கணுக்கால்களின் மேற்பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

எனவே ஒருவர் தன் கீழாடையை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாகப் பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பாவிட்டாலே இதற்கு அடுத்த நிலையைக் கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.

————————————————————————————————————————————————

அருகி வரும் விருந்தோம்பல்

எம். ஷம்சுல்லுஹா

ஏகத்துவத்தின் இமாமாகத் திகழும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் விருந்தினர் வருகின்றனர். இந்தச் சம்பவத்தைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:69, 70

இந்தச் சம்பவம் இன்னும் சுவையாகப் பின்வரும் வசனங்களில் இடம்பெறுகின்றது.

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா? அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து “சாப்பிட மாட்டீர்களா?” என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். “பயப்படாதீர்!என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

அல்குர்ஆன் 51:24-28

வந்தவர்கள் மனிதர்கள் அல்லர்; மலக்குகள் என்பது பின்னர் தான் தெரிய வருகின்றது. இப்ராஹீமின் விருந்தினர் என்று அடைமொழியிட்டு அல்லாஹ் குறிப்பிடுவது இந்தச் சம்பவத்தின் சுவையை மேலும் மெருகூட்டிக் காட்டுகின்றது. இப்ராஹீம் நபியின் விருந்தளிக்கின்ற பாங்கும், மாண்பும் இதிலேயே தெளிவாகத் தொனிக்கின்றது. ஸலாம் எனும் முகமனுக்குப் பிறகு அவர்கள் முறையாகப் பேணுவது விருந்து உபசரிப்பைத் தான். வந்தவர்கள் அறிமுகமற்றவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கின்றார்கள்.

ஏகத்துவ இமாம் என்று சொல்லும் போது அவர்களிடம் விருந்தோம்பல் என்ற இந்த உயர் பண்பு மின்னி மிளிர்வதைப் பார்க்கின்றோம்.

இதே போன்று இறைத் தூதுச் செய்தி வருவதற்கு முன்பும், வந்த பின்பும் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பண்பு மின்னியதை நாம் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் தூதுச் செய்தியைப் பற்றி ஒருவிதமான மன பாரத்துடன் திரும்புகின்ற போது அவர்களை நோக்கி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறுகின்றார்கள். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயர் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது விருந்தோம்பலையும் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து “எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு “எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3

இதே பண்பை அபூபக்ர் (ரலி) அவர்களும் பெற்றிருந்ததை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கா காஃபிர்களால் சோதனைக்குள்ளான போது அபீசீனியாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து புறப்படுகின்றார்கள். அப்போது அவர்களை வழியில் சந்தித்த இப்னு தஃகினா என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முன்வருகின்றார். அப்போது அவர் கூறும் வார்த்தைகள் இங்கு கவனிக்கத்தக்கது.

முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கி சென்றார்கள். “பர்குல் ஃகிமாத்எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் “என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறு பகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தஃகினா, “உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர்! எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!எனக் கூறினார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2297

அபூபக்ர் (ரலி) அவர்களின் நற்பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு தஃகினா இந்த விருந்தோம்பலையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார். அதிலும் குறிப்பாக முஸ்லிமல்லாத ஒருவர் இவ்வாறு குறிப்பிடுவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விருந்தோம்பல் இறை நம்பிக்கையே!

விருந்தளிப்பதை இஸ்லாம் ஓர் இனிய பண்பாக மட்டும் பார்க்காமல் அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6018

விருந்தோம்பலை நபி (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையுடன் தொடர்புபடுத்துவதால் ஒரு முஸ்லிம் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

விருந்து ஓர் இனிய தர்மமே!

இன்று இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒரு நாள் விருந்து வழங்குவது இருக்கட்டும். ஒரு வேளை விருந்து வழங்குவது கூட அரிதாகி விட்டது. குறிப்பாக தவ்ஹீதுவாதிகளிடம் இந்தக் குறை பரவலாகக் காணப்படுகின்றது.

தவ்ஹீதுவாதி என்றால் அவர் ஒட்டுமொத்த நன்மைகளின் ஒரு தொகுப்பாக, நன்மைகளின் ஓர் ஆக்கமாகத் திகழ வேண்டும். ஆனால் நம்மிடம் இந்த விருந்தோம்பல் பண்பு அரிதாகி விட்டது என்று சொல்வதை விட அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏதோ வந்து விட்டாரே என்ன செய்வது? என்று ஏதாவது தரம் குறைந்த ஹோட்டல்களில் எதையேனும் வாங்கிக் கொடுத்து தனது மார்க்கக் கடமையை விட்டும் தப்பித்து விடுவது தவ்ஹீதுவாதிகளின் பண்பல்ல! அப்படியானால் ஹோட்டலில் வாங்கிக் கொடுப்பது தவறா என்று கேட்கலாம்.

பொதுவாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது இரண்டு விதங்களில் அமைகின்றது. தங்களுடைய வீட்டை விடச் சிறந்த உணவு ஹோட்டலில் கிடைக்கிறது என்று விருந்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது. மக்கள் பொழுதுபோக்குக்காகத் தங்கள் வீடுகளில் சமைக்காமல் இதுபோன்ற ஹோட்டல்களுக்குக் குடும்பம் குடும்பமாகச் சென்று சாப்பிடுவார்கள்.

இப்படிப்பட்ட ஹோட்டல்களுக்கு விருந்தினரை அழைத்துச் சென்று மரியாதை செய்தால் அது போற்றப்படக் கூடியதாகும். ஆனால் சில ஊர்களில் தண்ணியடிப்பவர்கள் சாப்பிடுவதற்கென்றே சில ஹோட்டல்கள் இருக்கும். இப்படிப்பட்ட அட்டுப்பிடித்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றோ அல்லது அங்கிருந்து வாங்கிக் கொண்டு வந்தோ கொடுத்தால் அது வரவேற்கத்தக்க பண்பல்ல! இதற்குத் தங்கள் வீடுகளில் உள்ள சாதாரண உணவு மேலாகும். பெரும் செலவில் உணவுகள் சமைத்துத் தான் விருந்தளிக்க வேண்டும் என்பதல்ல! தன்னிடம் இருப்பதைத் தான் மார்க்கம் வழங்கச் சொல்கின்றது. இத்தகைய பண்புகளை கைக்கொள்ள வேண்டும்; கடைப்பிடிக்க வேண்டும்.

விருந்தாளிகளைக் கண்ணியப்படுத்துவதற்கு ஆண்கள் பெரும்பாலும் தயங்குவதற்குக் காரணம் பெண்களைக் கவனத்தில் கொண்டு தான். எனவே பெண்கள் தான் விருந்தோம்பலுக்கு முன்வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழியர் எப்படி விருந்து உபசரிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லைஎன்று பதிலளித்தார். அவர், “(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக்கொண்டான்என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4889

தங்களுக்கு இல்லாமல் விருந்தினருக்கு வழங்கிய இந்தப் பண்பைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். நமக்கு இல்லாமல் நாம் வழங்க வேண்டியதில்லை. நம்மிடம் இருப்பதையாவது விருந்தாளிக்கு வழங்கி இறை திருப்தியையும் திருப் பொருத்தத்தையும் பெறுவோமாக!

————————————————————————————————————————————————

தொடர்: 5

ஸிஹ்ர்  ஒரு விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் பின் வருமாறு கூறியிருந்தோம்.

சூனியம் வைக்கப்பட்டவர் அல்ல

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர்.

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மன நிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.

பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:153

நீர் சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:185

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

திருக்குர்ஆன் 17:101

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகம் (ஸல்) சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விசயம்; அதனால் அவரது தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத் தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்தவர்களை வழி கெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத் தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது இதன் மூலம் உறுதியாகிறது.

நாம் இவ்வாறு கூறியதற்குப் பல விதமான மறுப்புக்களை இஸ்மாயீல் ஸல்ஃபி கூறுகிறார்.

அவை அனைத்துமே தவறாக அமைந்துள்ளன.

இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர வித்தை, மாயாஜாலம், மெஜிக் என்று விளக்கம் கூறி விட்டு இந்த இடத்தில் மஸ்ஹூர் என்பதற்கு விளக்கமளிக்கும் போது அவருக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் கூறும் விளக்கத்தையே ஏற்றுக்கொண்டு வாதிப்பதன் மூலம் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என்ற மொழிபெயர்ப்புக்கு அவரது விளக்கப்படி சூழ்ச்சிக்குள்ளானவர், மாயாஜால வித்தைக்குள்ளானவர், மெஜிக்குக்குள்ளானவர் என்றல்லவா அர்த்தமும் விளக்கமும் எடுத்திருக்க வேண்டும்? இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே, இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் தனக்குத் தானே முரண்படுவதுடன் சூனியத்திற்கு வெறும் தந்திர வித்தை, மெஜிக், மாயாஜாலம் என்று இது வரை அவர் அளித்த அர்த்தமற்ற வாதத்தை அவரே தவறு என ஒப்புக்கொண்டவராகின்றார்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி வாதிடுகிறார். ஸிஹ்ர் என்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரிடமும் ஒரு அர்த்தம் உள்ளது. சூனியம் செய்பவர்களிடம் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அறிவற்ற பாமர மக்களிடம் ஒரு அர்த்தம் இருக்கும். ஸிஹ்ர் என்பதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று முடிவு செய்ய வேண்டும்.

கல்லைக் கடவுளாகக் கருதும் மக்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு. முஸ்லிம்களிடம் கடவுள் என்பதன் அர்த்தம் வேறு.

கடவுள் சிலை ஒன்று திருடு போய்விடும் போது, “உங்கள் கடவுள் என்னவானார்?’ என்று நாம் கேட்கிறோம். இதைப் பார்க்கும் ஒருவர் கல்லை கடவுள் என்று நாம் ஒப்புக் கொண்டதாகக் கூறினால் அதன் நிலை என்னவோ அந்த நிலையில் தான் இஸ்மாயீல் ஸலபியின் இந்த வாதம் அமைந்துள்ளது.

ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை என்பது மார்க்கத்தின் நிலை. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கருதிய காபிர்களிடமும் இஸ்மாயீல் ஸலபியிடமும் இதன் அர்த்தம் வேறு.

ஒரு மனிதனுக்கு ஸிஹ்ர் செய்து அவனை மன நோயாளியாக ஆக்க முடியும் என்று காபிர்கள் நம்பினார்கள். இஸ்மாயீல் ஸலபியும் அப்படித் தான் நம்புகிறார். எனவே கிறுக்கனை சூனியம் செய்யப்பட்டவன் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

மறுமை, சொர்க்கம் உள்ளிட்ட மறைவான விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அதில் காபிர்களுக்கு நம்பிக்கை வராததால் நபிகள் நாயகத்தைப் பைத்தியக்காரர் என்று கூறினார்கள். யாரோ சூனியம் வைத்து இவரைப் பைத்தியமாக்கி விட்டனர் என்று அவர்கள் நம்பிக்கைப் படி கூறினார்கள்.

அவர்கள் எந்த அர்த்தத்தில் கூறினார்களோ அதற்கேற்பவே மறுப்பு அளிக்க வேண்டும்.

நீங்கள் நினைக்கிற படி முஹம்மது நபி பைத்தியக்காரர் அல்லர். யாரோ சூனியம் வைக்கவும் இல்லை. இவ்வாறு கூறுவது அநீதி என்ற கருத்துப்பட அல்லாஹ் பதிலளிக்கிறான்.

தராவீஹ் 20 ரக் அத் இல்லை என்று நாம் கூறும் போது குராபிகள் இவரைப் போலவே எதிர்க் கேள்வி கேட்டனர். தராவீஹ் தொழுகை இல்லை என்று கூறியவர்கள் இப்போது தராவீஹ் தொழுகை உள்ளது என்பதை ஒப்புக் கொண்டு விட்டனர் என்பது தான் அவர்களின் கேள்வி.

நாம் தராவீஹ் என்று ஒரு தொழுகை இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. உங்கள் வாதப்படி தராவீஹ் தொழுகை என்று எதை நினைக்கிறீர்களோ அது இருபது ரக்அத் இல்லை என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டோம் என்று விளக்கம் அளித்தோம்.

அது போன்ற நிலையில் தான் இஸ்மாயீல் ஸலபியும் இருக்கிறார்.

ஸிஹ்ர் என்பது குறித்து நாம் கொண்ட நிலைப்பாட்டுக்கும் காபிர்கள் ஸிஹ்ர் குறித்து கொண்ட நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இவரது வாதம் முழுவதும் அறிவு சார்ந்ததாக இல்லாமல் மேம்போக்காகவே உள்ளது. எனவே எப்படிச் சிந்திப்பது என்ற அடிப்படை அறிவை இவர் வளர்த்துக் கொள்வது நல்லது.

இந்த வசனம் நேரடியாக நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதைத் தான் கூறுகின்றது என்பதை அவர் தெளிவாகத் தெரிந்திருந்தால், இதையே முதல் வாதமாக வைத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பிரச்சினையை முடித்திருப்பார். பல்வேறு வாதங்களை முன்வைத்து மக்கள் மனதில் குறித்த ஹதீஸ் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி, அதன் பின்னர் இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் இந்த வாதம் வலுவற்றது என்பதைப் புரிந்து கொண்டே இந்த வாதத்தை முன்வைத்துள்ளார் என யூகிக்கலாம். (இந்த யூகத்திற்கு வலுவூட்டுவதாக அவரது எழுத்து அமைந்துள்ளதைப் பின்னர் குறிப்பிடுவோம்.)

என்று அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறார். எதற்கெடுத்தாலும் யூகம் என்று ஓலமிட்டவர் தானே யூகம் செய்வதை ஒப்புக் கொள்கிறார்.

எது வலிமையானதோ அதைத் தான் முதலில் வைக்க வேண்டும் என்று சட்டமோ, தர்மமோ இல்லை. அப்படி எந்த மரபும் இல்லை. முதலில் சாதாரணமானதை வைத்து விட்டு கடைசியில் வலிமையானதை வைப்பதும் உண்டு. எவ்வித வரிசைக் கிரமத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நினைவுக்கு வரும் வரிசைப்படி வாதங்கள் வைக்கப்படுவதும் உண்டு.

திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள இந்த வாதம் வலுவானது என்பதை இஸ்மாயில் ஸலபி உணர்ந்திருக்கிறார். இதற்கு ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இவரிடம் இல்லை. எனவே தான் இந்த வாதத்தை முதலில் வைக்க வேண்டும்; இதை இரண்டாவது வைக்க வேண்டும் என்று பக்கத்தை நிரப்புவதற்காக எதையாவது எழுதுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அடுத்து இஸ்மாயில் ஸலபி எடுத்து வைக்கும் ஆதாரம் இதை விடக் கேலிக் கூத்தாக அமைந்துள்ளது.

முரண்பாடு இல்லையே!

அல்குர்ஆனில் மஸ்ஹூரா – சூனியம் செய்யப்பட்டவர் என்ற வார்த்தை நபி(ஸல்) அவர்களைக் குறித்து காஃபிர்களால் இரு இடங்களிலும், மூஸா நபியைக் குறித்து பிர்அவ்னால் ஒரு இடத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிர்அவ்னும் மூஸா நபியும்:

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்தபோது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன் என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் எனக் கூறியதைக் குர்ஆனோ, மூஸா நபியோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பதில் கூறும் போது மூஸா(அலை) அவர்கள்,

வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனே இவைகளைத் தெளிவான சான்றுகளாக இறக்கி இருக்கிறான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். பிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிவுக்குள்ளாக்கப் படுபவனாகவே எண்ணுகிறேன் என (மூஸா) கூறினார். (17:102)

மேற்படி வசனத்தின் மூலம் அவன் கூறியதை மறுத்ததுடன் அவன் அழிவுக்குள்ளாகக்கூடியவன் என்றும் மூஸா நபி கூறினார் என்பது தெளிவாகின்றது. எனினும் மூஸா நபி பின்னர் சூனியத்திற்குள்ளானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவை பாம்புகள் போன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்தின. மக்களுக்கு மட்டுமன்றி மூஸா நபிக்குக் கூட அவை பாம்பாகத் தென்பட்டன. அவர் அச்சமுற்றார். இதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது. (20:65-68)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்கின்றான்! அவன் சொன்னபடியே அவர் சூனியம் செய்யப்பட்டார். அதன் பாதிப்புக்குள்ளானார். இப்போது பிர்அவ்ன் சொன்னது சொன்னபடி நடந்தது என்று யாரும் கூறுவார்களா? மூஸா நபிக்கு சூனியத்தால் கயிறும், தடியும் பாம்பாகத் தென்பட்டது என்று கூறுவது பிர்அவ்னை உண்மைப்படுத்துவதாகுமா? குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகுமா? குர்ஆன் குர்ஆனுக்கே முரண்படுகின்றதா?

இப்படி இருக்க அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்றுக்கொண்டால் அது குறைஷிகளின் கூற்றை உண்மைப்படுத்துவதாகி விடும் என விவாதிப்பது எப்படி நியாயமாகும்?

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி கூறியுள்ளார்.

எவ்வளவு கூர்மையான ஆராய்ச்சி என்று பாருங்கள்!

ஒரு மனிதருக்கு சூனியம் செய்து அவர் பைத்தியமானார் என்பது வேறு. அவர் முன்னிலையில் சில பொருட்களின் மூலம் வித்தை செய்து காட்டுவது என்பது வேறு.

மூஸா நபியவர்களுக்கு யாரும் ஸிஹ்ர் செய்யவுமில்லை. அப்படி குர்ஆன் சொல்லவும் இல்லை. அவர்கள் முன்னிலையில் கயிறுகள் மூலமும் கைத்தடிகள் மூலமும் வித்தைகள் செய்யப்பட்டன என்று தான் குர்ஆன் கூறுகிறது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் அவர்கள் முன்னிலையில் யாரோ வித்தை செய்து காட்டினார்கள் என்று கூறப்படவில்லை. அவர்களே மன நோயாளியாக ஆனார்கள் என்று தான் கூறப்படுகிறது. இதற்கும் இவர் எடுத்து வைக்கும் ஆதாரத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

மேலும் மூஸா நபி முன்னிலையில் கயிறுகளை பாம்புகள் காட்டினாலும் அது உடனடியாக முறியடிக்கப்பட்டு வித்தை தோற்கடிக்கப்பட்டது. மூஸா நபி தான் ஸிஹ்ரை வென்றார்களே தவிர அவர்களை ஸிஹ்ர் வெல்லவில்லை. ஆனால் நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்ட கட்டுக் கதையில் அப்படிக் கூறப்படவில்லை.

கயிறுகளும் கைத்தடிகளும் ஸிஹ்ர் செய்யப் பயன்பட்ட பொருளாக இருந்தது போல் இங்கே நபிகள் நாயகத்தின் உடல் ஸிஹ்ர் செய்யும் களமாக, பொருளாக ஆக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே இவ்வாறு கூறுவது நிச்சயம் குர்ஆனுக்கு முரணானது தான் என்பதில் ஐயம் இல்லை.

எனவே நபிகள் நாயகத்துக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக யார் கூறினாலும் அவர் குர்ஆன் தீர்ப்புப்படி அநியாயக்காரர் தான்.

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இலிருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்பி இஸ்மாயீல் ஸலபியுடன் சேர்ந்து அநியாயக்காரர்கள் பட்டியலில் சேர வேண்டாம் என்று பொது மக்களை எச்சரிக்கிறோம்.

இந்த வாதத்தை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.

சூனியம் செய்யப்பட்டவர்:

அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:08)

அவர்கள் உம்மிடம் செவியேற்கும் போது எதை செவியேற்கின்றார்கள் என்பதையும், சூனியம் செய்யப்பட்ட மனிதரை அன்றி வேறு எவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று அநியாயம் செய்தோர் இரகசியம் பேசிக் கொள்வதையும் நாம் நன்கறிவோம். (17:47)

இந்த இரு வசனங்களிலும் நபி(ஸல்) அவர்களையும் (17:101), மூஸா நபியையும் (26:153), ஷுஐப் நபியையும் (26:185) இதன் பன்மைப் பதம் ஸாலிஹ் நபியையும், குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இவர்களின் ஒட்டு மொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.

17:47 ஆம் வசனத்தில் அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக வருகின்றது. அதற்கு அடுத்து வரும் வசனங்களில்

எலும்புகளாகவும், உக்கிப்போனவர்களாகவும் நாம் ஆகிய பின்னர் நிச்சயமாக நாம் புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா? என அவர்கள் கேட்கின்றனர். (17:49)

எனவே, நபி(ஸல்) அவர்களது போதனை சூனியத்திற்குள்ளானவனின் உளறல் என்ற அர்த்தத்திலேயே காஃபிர்கள் இப்படிக் கூறியுள்ளனர் என்பதை அறியலாம்.

25:8ஆம் வசனத்திலும் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியத்திற்குள்ளானவர் எனக் கூறியதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதற்கு முந்தைய வசனங்களைப் பார்த்தால் தூதுத்துவத்தை முழுமையாக மறுப்பதற்காகத் தான் இப்படிக் கூறினர் என்பதைப் புரியலாம்.

இது பொய்யே அன்றி வேறில்லை. இதனை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். வேறு ஒரு கூட்டத்தினரும் இதற்காக அவருக்கு உதவி புரிந்துள்ளனர் என நிராகரித்தோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயமாக அநியாயத்தையும் பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர்.

(இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளாகும். இவற்றை இவரே எழுதச்செய்துகொண்டார். அது இவருக்குக் காலையிலும் மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நன்கறிந்தவனே இதனை இறக்கி வைத்தான் என (நபியே) நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.

அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:4,5,6,8)

இவ்வாறே ஸாலிஹ்(அலை) அவர்களையும் இப்படி விமர்சித்தனர். அவர்களது சமூகத்திற்குத் தன்னை ஒரு இறைத் தூதர் என அவர் அறிமுகம் செய்து, போதனை செய்த போது அவரது தூதுத்துவத்தை முழுமையாக மறுக்கும் விதமாக,

அ(தற்க)வர்கள், நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம் என்று கூறினர். (26:153)

இவ்வாறே ஷுஐப்(அலை) அவர்கள் தன்னை இறைத் தூதராக அறிமுகப்படுத்திப் போதனை செய்த போது,

அ(தற்க)வர்கள்,நிச்சயமாக நீர், சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம் என்று கூறினர். நீர் எம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக உம்மை நாம் பொய்யர்களில் உள்ளவராகவே எண்ணுகின்றோம். (26:185-186)

இந்த அடிப்படையில் நோக்கும் போது நபிமார்களது முழுத் தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே சூனியம் செய்யப்பட்டவர்கள் என அவர்கள் கூறினர் என்பதை அறியலாம். இவர்கள் சூனியம் செய்யப்பட்டதனால் உளறுகின்றனர் என அவர்கள் கூறினர்.

அவர்களின் இந்தக் கூற்றை மறுப்பது நபிக்குச் சூனியமே செய்ய முடியாது என்பதை மறுப்பதாகாது! நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை நம்புவது காஃபிர்களை உண்மைப்படுத்துவதாகவோ குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகவோ ஒருபோதும் அமையாது. எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸிற்கும் இந்த வசனங்களின் போக்கிற்கும் எந்த முரண்பாடும் இல்லை.

இதைச் சகோதரர் தெளிவாக விளங்கியிருந்ததனால் தான் இதை முதல் வாதமாகவோ, இறுதி வாதமாகவோ வைக்கவில்லை. அத்துடன் சூனியம் செய்யப்பட்டவர் என்று என்ன எண்ணத்தில் காஃபிர்கள் கூறினர் என்பதை அவரே எழுதும் போது,

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். (தர்ஜமா பக்: 1302)

காஃபிர்கள் கூறிய அர்த்தம் வேறு. அதைத் தான் குர்ஆனின் போக்கு கண்டிக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டே தவறான வாதத்தை முன்வைத்துக் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கு மிடையில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரிக்கும் இவரது தவறான போக்கையும் ஹதீஸ் மீதும், ஹதீஸ் நூற்கள் மீதும், கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவர் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் இவரது ஆபத்தான போக்கு குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இவர் நமது வாதத்தை மறுக்கிறாரா அல்லது சூனியம் செய்யப்பட்டு நம் சார்பில் வாதிக்கிறாரா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் மேற்கண்டவாறு வாதிடுகிறார்.

இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.

என்பதன் அர்த்தம் என்ன? சூனியம் செய்யப்பட்ட காரணத்தினால் முஹம்மத் உளறுகிறார் என்பது தான் அர்த்தம் என்று இவர் நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்.

நாமும் இதைத் தான் சொல்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸிஹ்ர் வைக்கப்பட்டு மன நோயாளியாகி உளறுகிறார் என்று தான் காஃபிர்கள் கூறினார்கள் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அதைத் தானே ஸிஹ்ர் சம்பந்தப்பட்ட ஹதீஸும் கூறுகிறது. மனநோய்க்கு ஆளாகி ஒன்று கிடக்க ஒன்று பேசினார்கள் என்று கூறும் ஹதீஸுக்கும் காஃபிர்களின் மேற்கண்ட விமர்சனத்துக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடு இல்லை.

சூனியம் செய்யப்பட்டதால் இவர் உளறுகிறார் என்று காபிர்கள் கூறினார்கள்.

இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுப்புக் கூறினான்.

நபிகள் நாயகம் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டு உளறினார்கள் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது.

இது காஃபிர்களின் கூற்றுக்கு வலு சேர்த்து குர்ஆனுடன் மோதுவது இவரது இந்த வாதத்தில் இருந்தே தெரிகிறது.

இந்த வசனம் அவரது கருத்துப்படி மிக வலுவானதாக இருப்பதால் இப்படி உளறும் நிலைக்கு ஆளாகி விட்டார். இந்த வசனத்துக்கு மாற்றமாக அந்த ஹதீஸ் அமைந்திருப்பதை அவரால் மறுக்க முடியவில்லை.

இப்போது என்ன செய்வது? சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு சூனியம் செய்தவர் என்று அர்த்தத்தை மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைத்து அப்படியும் வாதிடுகிறார்.

அதற்கு அரபு இலக்கணத்தையும் துணைக்கு அழைக்கிறார். அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.