கேள்வி பதில்
? பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன்படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒருவர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.
ஏ. முஹம்மது அமீருத்தீன், காரைக்கால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கான அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது “ஸலவாத்‘ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை “ஸலவாத்‘ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா‘வைக் கேளுங்கள். “வஸீலா‘ என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 577
இந்த ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள கஅப் பின் அல்கமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
ஒவ்வோர் ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று தக்க காரணங்களுடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:
அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.
இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்.
எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.
இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, “நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்” என்று கூறுவார். “இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்பதே இதன் பொருளாகும்.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை
இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.
இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும், “இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்று தஹபீ கூறியுள்ளதாலும், இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும், பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர்.
கஅப் பின் அல்கமா என்பவரது நம்பகத்தன்மை குறித்து இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்தால், வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
ஆனால் கஅப் பின் அல்கமா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. புகாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து, அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.
ஹதீஸ்களைப் பதிவு செய்வதில் ஒவ்வொரு இமாமும் ஒவ்வொரு விதிமுறைகளை வகுத்துள்ளனர். இதில் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும், ஒரு அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று தங்கள் அளவில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே அவரது ஹதீஸைப் பதிவு செய்வது என்பதை விதிமுறையாகக் கொண்டுள்ளனர்.
கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.
புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து, மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி, அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.
கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.
கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள புகாரி ஹதீஸில் 38:24 என்று உள்ளது. மேலும் புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி? விளக்கவும்.
நாஜ்னீன் ஸயீத், தஞ்சாவூர்
ஸஜ்தா செய்ய வேண்டிய வசனம் 38:24 என்பது தான் சரியானதாகும். திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 33:24 என்று குறிப்பிடப்பட்டது அச்சுப் பிழையால் ஏற்பட்ட தவறு. இன்ஷா அல்லாஹ் இனி வெளியிடப்படும் பிரதிகளில் இந்தத் தவறு சரி செய்யப்படும்.
புகாரி 1068 ஹதீஸில், திருக்குர்ஆன் 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் “அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா‘ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், “ஹல் அத்தா அலல் இன்ஸான்‘ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1068
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று கூறப்படவில்லை.
“தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும்) 32ஆவது அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்” என்று புகாரி இமாம் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு தலைப்பிட்டு அவர்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட ஹதீஸில் இந்தக் கருத்து இடம்பெறவில்லை. இந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்ற கருத்தில் வேறு நூற்களிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. எனவே 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்யத் தேவையில்லை.
? நான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் உறுப்பினராக உள்ளேன். உறுப்பினர் அட்டையும் வைத்துள்ளேன். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் பொதுக்குழுக் கூட்டங்களில் என்னைப் போன்ற பெண் உறுப்பினர்களை அழைப்பதில்லை. இது ஏன்?
ஃபஜீரா, பெரியகுளம்
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் கிளை நிர்வாகியாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாது. நமது ஜமாஅத்தின் கிளை நிர்வாகத்தில் பெண்களுக்குப் பொறுப்பு வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லை.
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
அல்குர்ஆன் 4:34
ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகத்தில் பெண்கள் இடம் பெறுவதில்லை.
? ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன? அது குர்ஆன், ஹதீசுக்கு உடன்பட்டதா? அல்லது மத்ஹபு சார்ந்ததா? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா? இந்நிகழ்ச்சி 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்று வருகின்றது. சேவல் கூவினால் மலக்குமார்களை அது பார்க்கிறது என்றும், கழுதை கத்தினால் ஷைத்தானை அது பார்க்கிறது என்றும் ரியாளுஸ் ஸாலிஹீனில் படித்தேன். இது சரியான ஹதீஸா?
ரிஸ்வான், பரகஹதனியா, இலங்கை
ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இமாம் நவவீ அவர்கள் தலைப்பு வாரியாகத் தொகுத்த ஒரு நூலாகும். புகாரி, முஸ்லிம் போன்று இது நேரடியான ஹதீஸ் நூல் அல்ல!
நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் ஒருவர் அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தாபியீ அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தபவுத் தாபியீ அறிவிப்பார். இப்படியே சங்கிலித் தொடராக வந்து நூலாசிரியரிடம் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார். அதை அந்த நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.
ஆனால் ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இவ்வாறு அறிவிப்பாளர்களிடமிருந்து நேரடியாக இமாம் நவவீ கேட்டு ஹதீஸ்களைப் பதிவு செய்த நூல் அல்ல! புகாரி, முஸ்லிம் போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூலாகும்.
உதாரணமாக, ரியாளுஸ் ஸாலிஹீன் நூலில், “புறம் பேசுதல்’ என்ற தலைப்பை எடுத்துப் பார்த்தால் அதில் புகாரி, முஸ்லிம், திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ள புறம் தொடர்பான ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கும். இதில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இருக்கலாம்; பலவீனமான செய்திகளும் இருக்கலாம். எது சரியான ஹதீஸ், எது பலவீனமான ஹதீஸ் என்பதை அந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள மூல நூலைப் பார்த்து, அதன் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு தலைப்பு வாரியாக ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டிருப்பதால் மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்நூல் மிக உதவியாக உள்ளது. எனவே ஆலிம்கள் இந்நூலை தமது சொற்பொழிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.
ரியாளுஸ் ஸாலிஹீன் நிகழ்ச்சி என்று நீங்கள் குறிப்பிடுவது எவ்வாறு நடைபெறுகின்றது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. அனேகமாக அந்நூலில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களைக் கொண்டு நடத்தப்படும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியாக இருக்கலாம். அப்படி இருந்தால் அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு உடன்பட்டதா? அல்லது முரண்பட்டதா? என்பது அது யாரால் நடத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்துத் தான் அமையும்.
ஏனெனில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் ரியாளுஸ் ஸாலிஹீனில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் தமது பிரச்சாரத்தில் பயன்படுத்துவர். பலவீனமான ஹதீஸ்களைப் போதிக்க மாட்டார்கள். ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலவீனமான ஹதீஸ்களையும் பின்பற்றுபவர்களாக இருந்தால் அவ்வாறு ஆய்வு செய்து போதிக்க மாட்டார்கள். எனவே நிகழ்ச்சி நடத்துபவர்களைப் பொறுத்துத் தான் அது குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டதா என்பதை முடிவு செய்ய முடியும்.
சேவல் கூவினால் அவை மலக்குகளைப் பார்க்கின்றன, கழுதை கத்தினால் அது ஷைத்தானைப் பார்க்கின்றது என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான். இது புகாரியில் இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3303
மக்களவைத் தேர்தலும் மறைவான ஞானமும்
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பற்றியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவை பதவியேற்றதைப் பற்றியும் ஆயிரமாயிரம் பத்திரிகைகள் தங்கள் கருத்துக்களை எழுதித் தள்ளிவிட்டன. இந்த வரிசையில் ஏகத்துவம் தன் பங்குக்குக் கருத்து தெரிவிக்கின்றதே என்று யாரும் நினைக்க வேண்டாம்.
ஏகத்துவம் இந்தத் தேர்தலில் மார்க்க அடிப்படையிலான தனது பார்வையை மட்டுமே செலுத்துகின்றது. இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்த பாடங்கள் என்ன? என்பதை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இங்கு காண்பது தான் நமது நோக்கம். தேர்தல் முடிவுகள் இரண்டு விதமான பாடங்களை நமக்கு உணர்த்துகின்றன.
அதில் ஒன்று தான் மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கே என்ற இறை நம்பிக்கை.
சோதிடம் பார்ப்பது இஸ்லாத்தில் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களிடம் கூட தொற்றி நிற்கும் ஒரு தொற்று நோயாகும். இது அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும் அதிபயங்கர நோயாகும். சோதிடக்காரர்களுக்கும், கருத்துக் கணிப்பாளர்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது.
சோதிடக்காரர்கள் தங்கள் சொற்கள் பலிப்பதற்கும், தங்கள் சோதிட இறையாண்மையை நிரூபிப்பதற்கும் இந்தத் தேர்தல் களத்தை ஒரு சோதனைத் தளமாக ஆக்கியிருக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. இவ்வளவு இடங்களைப் பிடிக்கும், காங்கிரஸ் இவ்வளவு இடங்களைப் பிடிக்கும், இன்னார் தான் இந்நாட்டுப் பிரதமர் என்று அடித்துச் சொல்லியிருக்க வேண்டும்.
கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) எல்லாம் பொய்யாகப் போகின்றன என்று வானத்தில் உள்ள கோள்களின் துணையுடன் அரசியல் ராசி பலனைப் பறை சாற்றியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தார்கள் என்றால் சோதிடர்கள் காட்டில் என்றும் மழை தான். சோதிட உலகில் சோபிக்கின்ற முடிசூடா மன்னர்களாக அவர்கள் உலா வருவார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் அவர்களின் கால்களில் வீழ்ந்து விடுவார்கள். அவர்களின் சோதிட சாம்ராஜ்யம் என்றும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும்.
சொன்னார்களா? இல்லை! அறவே இல்லை! இன்றும் கிடையாது! இனி எப்போதும் கிடையாது. சொல்லப் போனால் விஞ்ஞான ரீதியான கணிப்பு என்று சொல்லப்படும் கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகளின் முடிவுகள் எல்லாம் மண்ணைக் கவ்வின.
எப்படியாவது பிரதமராகி விடவேண்டும்; பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது. 32 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைந்தன. அதிலும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட ஒவ்வொன்றையும் சோதிடக்காரர்களின் சொல்லைக் கேட்டுச் செயல்பட்ட ஜெயலலிதாவின் அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது. பாதாளத்தில் கிடந்த காங்கிரஸ் பாராள வந்து விட்டது.
இதுவும் எந்த சோதிடக்காரனும் சொல்லாத ஒன்று! எந்த ஆரூடக்காரனும் அறவே கணிக்காத ஒன்று!
நாளை நடக்கவிருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்பதைத் தான் இத்தகைய பலதரப்பட்ட கணிப்புகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதைத் தான் திருமறைக் குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
அல்குர்ஆன் 6:59
தான், நாளை சம்பாதிக்க உள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்ஆன் 31:34
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: இப்னு மாஜா 1887
சோதிடம் என்பது வெறும் ஏமாற்றுக் கலை தான் என்பதைப் பல விஷயங்களில் அறிந்த பிறகும் இன்று வரை மக்கள் அதில் ஏமாந்து விடுவதை நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு சில உதாரணங்களை நாம் தெளிவாகக் கூறலாம்.
ராஜீவ் காந்தி பத்தாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று மிகப் பிரபலமான ஜோதிட வித்வான் கணித்துக் கூறினார். ஆனால் அது பொய்யாகப் போனது.
கிரிக்கெட் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்து கூறியதும் பொய்யாகப் போனது.
சென்ற சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சராவார் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துக் கூறியதும் பொய்யாகப் போனதை நாம் கண்டோம். இது எதைக் காட்டுகின்றது?
“வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 27:65
என்ற அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் மாறாத உண்மை என்பதையே காட்டுகின்றது. நமது இறை நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றது. சோதிடக்காரர்கள் எதிர்காலத்தில் நடப்பதைச் சொல்வார்கள் என்பது சூன்யம் என்பதை இந்தத் தேர்தல் சுத்தமாக தெரியப்படுத்துகின்றது.
இப்படிப்பட்ட விஷயங்களை நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது என்பதால் தான் நபியவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன், அல்லது வருங்காலத்தைக் கணித்துக் கூறுபவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகிறானோ அவன், இந்த முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9171
மறைவான ஞானம் இறைவனுக்கே என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்து நிற்கின்றது. இந்த வகையில் இது நாம் காணும் முதல் பாடமாகும்.
ஆட்சியின் அதிபதி அல்லாஹ் ஒருவன் தான் என்பது இந்தத் தேர்தலில் நாம் கற்கும் இரண்டாவது பாடம்!
“அத்வானி தான் ஆளப் பிறந்தவர்’ என்று வகை வகையான பிரச்சார யுக்திகள் எல்லாம் நொறுங்கிப் போய் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மன்மோகன் சிங் ஒரு பலவீனமான பிரதமர், சோனியாவின் கைப்பாவை என்ற வலுவான பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. அவையெல்லாம் தவிடுபொடியாகி மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கூட்டணி மற்றும் இதர கட்சிகளும் பிரதமராவதற்கு ஏகமனதாகத் தேர்வு செய்தன.
இந்த நிகழ்வு நமக்கு எதைக் காட்டுகின்றது?
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:26
இந்த வேத வரிகளை அல்லவா நமக்கு நினைவுபடுத்துகின்றது?
பாழுங்கிணற்றில் கிடந்த நபி யூசுப் (அலை) அவர்களை ஆளும் பொறுப்புக்குக் கொண்டு வந்தது யார்? அல்லாஹ் தான்.
நேற்று வரை தொலைக்காட்சியைத் திறந்தால் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும். அதிமுக போன்ற கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் என்று பல தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்றோ அத்வானியின் முகத்தைக் காட்டுவதற்குக் கூட தொலைக்காட்சிகள் யோசிக்கின்றன. “நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க மாட்டேன்’ என அத்வானியே வெருண்டோடுகின்றார். இந்த இழிவுக்குக் காரணம் யார்? அந்த அல்லாஹ் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தமுமுகவினர், திமுக வென்றதும் தமிழகமே தங்கள் கைவசம் வந்தது போல் குதித்தனர். வாரியப் பதவியை வாங்கிக் கொண்டு தங்களால் இயன்ற வரை அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். தவ்ஹீதுக்கு எதிராகவும் களமிறங்கினர். ஆனால் மூன்றே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி, அனைத்தையும் இழந்து இன்று இழிவுக்குள்ளாகி நிற்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் இவர்களை விரட்டியடித்து, தனியாகப் போட்டியிட்டு, 16 அமைப்புகளின் ஆதரவு இருப்பதாகக் கூறியவர்கள் இன்று 13,000 வாக்குகள் வாங்கி சந்தி சிரிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர்.
இந்த இழிவுக்குக் காரணம் யார்? அல்லாஹ் தான்.
அவன் நாடியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றான். அவன் நாடியவர்களை இழிவுபடுத்துகின்றான்.
அவன் தான் எல்லாம் வல்ல அல்லாஹ்! அவன் தான் ஆட்சியின் அதிபதி! உலக ஆட்சியாளர்களின் அத்தியாயங்களைப் புரட்டிப் பார்க்கும் போது அவன் எத்தகைய அதிபதி என்பது இன்னும் தெளிவாகும்.
இப்படிப்பட்ட ஆட்சியின் அதிபதியாக அவன் இருக்கும் போது, மோடி போன்ற ஆட்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சாகின்றார்களே! இதற்கு ஒரு விடிவும் முடிவும் கிடையாதா? என்று கேள்வி எழுகின்றது.
ஃபிர்அவ்னால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் முறையிட்ட வேளையில் அவர்கள் அம்மக்களுக்குச் சொன்ன பதிலையே நமக்கும் பதிலாகத் தருகின்றான்.
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.
“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்” என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி, “எவ்வாறு செயல்படுகின்றீர்கள்‘ என்பதைக் கவனிப்பான்” என்றும் கூறினார்.
அல்குர்ஆன் 7:128, 129
அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றியும் வைத்தான்.
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.
அல்குர்ஆன் 7:137
நவீன ஃபிர்அவ்ன்களான மோடி வகையறாக்களிடம் மாட்டிக் கொண்ட நமக்கும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் 24:55
அந்த அதிபதி நாடினால் நம்மிடமும் ஆட்சியைத் தருவான். எப்போது? நாம் கொள்கையில் சமரசம் செய்யாத உண்மையான ஏகத்துவவாதிகளாக ஆகும் போது!
பித்அத்தை ஆதரிப்பவர்கள் சிந்திக்கட்டும்
இந்தத் தேர்தல் நமக்கு மற்றொரு படிப்பினையைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்தார்கள். அந்தப் பிரச்சாரம் தான் மக்களை மாற்றக் கூடியது என்றும், தாங்கள் யாரைத் தீய சக்திகளாக நினைக்கிறார்களோ அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கின்ற கேடயம் என்றும் கருதினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சாரம் செய்ததை நாம் காண முடிந்தது.
தேர்தல் பணிகளையெல்லாம் கண்காணிக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற தேர்தல் கமிஷன் ஒரு உத்தரவு பிறப்பிக்கின்றது. அதாவது 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. யாராவது 05:01 மணிக்குப் பிரச்சாரம் செய்தாலும் அவர் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இந்த உத்தரவிற்குக் கட்டுப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை 4:55 மணிக்கே முடித்துக் கொண்டதை நாம் கண்டோம்.
பிரச்சாரம் என்பது நல்ல விஷயம் தானே என்று கருதி யாரும் தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறிச் செயல்படவில்லை. என்ன காரணம்? நல்ல விஷயமாக இருந்தாலும் உத்தரவை மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டனை என்ற சட்டம் தான், அதன் மீது உள்ள பயம் தான் இதற்கான காரணமாகும்.
இவ்வுலகில் சாதாரண மனிதர்கள் பிறப்பிக்கக் கூடிய சட்டங்களுக்கே இவ்வளவு அச்சம் இருக்கிறதென்றால் அனைத்து உலகையும் கட்டியாளக் கூடிய இறைவனின் சட்ட திட்டங்களுக்கு நாம் எந்த அளவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று மார்க்கத்தின் பெயரால், நன்மை என்ற பெயரில் எவ்வளவு பித்அத்தான, இணை வைக்கக் கூடிய காரியங்கள் இஸ்லாமிய மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. மவ்லித்கள், தாயத்து, தர்ஹா வழிபாடுகள் என்று பல வகையான, நிரந்தர நரகத்திற்குரிய காரியங்களை நன்மை என்ற பெயரில் இன்றைக்குப் பலர் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்ல! பராஅத் இரவு, முஹர்ரம் பண்டிகை, மீலாது விழா, பாங்கிற்கு முன் ஸலவாத்து கூறுவது, கூட்டுத் துஆ, 3ம், 7ம், 40ம் பாத்திஹாக்கள் மற்றும் வருடாந்திர கத்தம் ஃபாத்திஹாக்கள், சுன்னத்துக் கல்யாணம், பெண் வீட்டு விருந்து, சடங்கு விருந்து என எத்தனை வகையான பித்அத்துகள் மலிந்து காணப்படுகின்றன?
இவ்வுலக விஷயங்களில் நல்லதாக இருந்தாலுமே பொறுப்பிலுள்ள சாதாரண மனிதர்களின் கட்டளைகளுக்குப் பயந்து அதை விட்டு விடக் கூடிய நாம், மார்க்கத்தின் பெயரால் அல்லாஹ்வும், அவன் தூதரும் கட்டளையிடாத விஷயங்களையெல்லாம் பொறுப்பற்ற முறையில் நன்மை என்ற பெயரில் செய்து வருகிறோமே! நாம் இறைவனின் கட்டளைகளைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மார்க்கத்தின் பெயரால் நாம் செய்கின்ற பித்அத்தான காரியங்கள் எல்லாம் நம்மை நரகத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காரியங்களில் தீயது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு புதிய காரியங்களும் அனாச்சாரங்களாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: நஸயீ 1560
நல்லது என்று கருதப்பட்ட தேர்தல் பிரச்சாரமே இரண்டு வருட சிறைத் தண்டனைக்குப் பயந்து ஐந்து நிமிடத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளப்படுகிறதென்றால், நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய, இணை வைத்தல் மற்றும் பித்அத்தான காரியங்கள் எந்த அளவிற்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் மூலம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
இவ்வுலகிலாவது மனிதர்களை ஏமாற்றி, தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியும். ஆனால் இறைவனை ஒரு போதும் நாம் ஏமாற்றி விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
———————————————————————————————————————————————–
நிர்வாகவியல் தொடர்: 4
இஸ்லாமிய நிர்வாகம்
முதிர்ச்சி
எதையும் சிந்திக்காமல் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களில் மிகுந்த அக்கரை காட்டுவது, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றவர்களின் தூண்டுதலால் செயலில் இறங்குவது, தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவது போன்றவை முதிர்ச்சி இல்லாதவர்களின் வெளிப்படையான அடையாளங்கள்.
ஒரு மனிதனின் உடல் முதிர்ச்சியடைந்து, அறிவு முதிர்ச்சியடையவில்லையானால் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அறிவு முதிர்ச்சி என்பது நடத்தையில் முதிர்ச்சி; சிந்திப்பதில் முதிர்ச்சி; மனோநிலை முதிர்ச்சி.
அ) நடத்தையில் முதிர்ச்சி
எதை எங்கு பேசுவது? யாருடன் எதைச் பேசுவது? எந்தெந்த அடிப்படையில் நடந்து கொள்வது? என்று விளங்கிச் செயல்படுவது.
ஆ) சிந்திப்பதில் முதிர்ச்சி
எந்தச் செயலைச் செய்யும் முன்பும் அதனுடன் தொடர்புடைய முந்தைய விஷயங்களோடு தொடர்புபடுத்தி யோசிப்பது.
இ) மனோநிலை முதிர்ச்சி
நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், குறிப்பாக நாம் விரும்பாதவை நடந்தால் பாதிக்கப்பட்டு விடாமல் நிதானமாக இருப்பது.
ஒருவரிடம் அறிவு முதிர்ச்சி இல்லை என்றால் அவர் நிர்வாகியாவதற்கான அடிப்படைத் தகுதிகள் எதுவுமே இல்லை எனலாம்.
எனவே முதிர்ச்சியை பயிற்சி செய்யுங்கள்.
உடல் தோற்றம்
“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்” என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை” என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 2:247
நோய்கள் குடியிருக்கும் வீடாக ஒருவரது உடல் இருந்தால் அவரால் அவரையே பார்த்துக் கொள்வது இயலாது. இந்நிலையில் நிர்வாகியாக எப்படிப் பணியாற்ற முடியும்?
அதனால் தான் இன்று ஆட்களை வேலைக்கு அமர்த்தும் பெரும் நிறுவனங்கள் அவர்களின் ஆரோக்கியம் பற்றிய சான்றிதழ் கேட்கின்றன.
இன்று வரும் நோய்கள் எல்லாம் அதிகமாகச் சாப்பிடுதல், தகுந்த உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றால் தான் ஏற்படுகின்றன.
உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை தினமும் செய்து வர முயல வேண்டும். முன்னர் பல காலங்களில் நல்ல வளர்ந்த தோற்றமும், கட்டான உடலும், சிவந்த நிறமும், அடர்ந்த தாடியும் என இப்படித் தான் தலைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி இவை முழுவதும் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி இருந்தாலும் ஆரோக்கியம், அதற்கான சரியான பயிற்சிகள் அவசியமே!
தோற்றத்தில் ஆடை என்பது மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
“அல்லாஹ் ஒருவருக்கு அருட்கொடைகளை வழங்கியிருந்தால் அதை அவர் வெளிப்படுத்தட்டும்!” என நபியவர்கள் கூறினார்கள். (பைஹகீ)
பெருமை இல்லாமல் வீண் விரயம் இல்லாமல் நல்ல ஆடைகளை, சுத்தமானதை அணிவது தோற்றத்தில் மேலும் மெருகூட்டும்.
எளிமை
உலக வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பகட்டு மற்றும் பெருமையாக ஊதாரித்தனம் செய்யாமல், அதே நேரத்தில் அல்லாஹ் வழங்கி இருந்தால் கஞ்சத்தனமும் செய்யாமல் நமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் நடுநிலை பேண வேண்டும்.
வீடு, உடை, தங்குமிடம், செலவு செய்தல். வாகனம் போன்ற எல்லாவற்றிலும் இந்த நடுநிலை பேணப்பட வேண்டும். இப்படி சேர்க்கப்பட்ட பொருட்கள் நமது உபயோகத்திற்கு மட்டுமில்லை. நம் மூலமாக நலப்பணிகள் செய்வதற்காக ஏழை எளியோருக்கும் உரியது என்ற உண்மையை மறந்து விடக்கூடாது.
நடந்து போய் விடலாம் என்ற தூரத்திற்குக் கார் உபயோகிப்பது, ஊட்டியில் உள்ள அலுவலகத்துக்குக் குளிரூட்டி (ஏர்கண்டிஷனர்) பொருத்திக் கொள்வது போன்றவை ஆடம்பரம். அதே நேரம் சென்னையில் குளிரூட்டி பொருத்திக் கொள்வதை ஆடம்பரம் என வாதிட முடியாது.
அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.
அல்குஆன் 25:67
நீதி
ஒரு நிர்வாகி எல்லா விவகாரங்களிலும் நீதியாய் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சம்பந்தமான விவகாரங்களிலும் சக நிர்வாகிகள், குடும்பம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் நீதியாக நடக்க வேண்டும்,
தன்னுடைய மாணவர்களில் உறவினர் அல்லது முன்பே தெரிந்தவர் என்பதால் அவரை மற்ற திறமையானவர்களை விட முன்னேற்ற முயல்வது பெரிய அநீதி.
அது போல ஒரு பிரச்சனையில் திறமையானவர் ஒரு புறம், அவருக்கு எதிர் தரப்பாக நிர்வாகத்தில் சாதாரணமான ஒருவர் இருக்கலாம். திறமையானவர் தவறுதலாக நடந்திருந்து அதைப் பகிரங்கமாகக் கூறினால் நிர்வாகத்தில் அவரது ஆர்வம் குன்றிவிடும் என்பதற்காகச் சிலர் அநீதியாய் நடந்து விடுவார்கள். கேட்டால், “என் நலத்திற்காக நான் இந்த முடிவெடுக்கவில்லை; நமது நிர்வாக நலனுக்காகத் தான்’ எனப் பதிலுரைப்பார்கள். ஆனாலும் இது அநீதி தான். ஏனென்றால் இந்த நடவடிக்கையில் ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டிருக்கின்றார்.
ஒரு நபர் மீது ஏதாவது ஒரு காரணத்தால் முன்பே மனதில் வெறுப்பு இருக்கும். அது மனித இயல்பு! அதன் காரணமாக ஒரு பிரச்சனையில் அவர் குற்றமற்றவர் என்பதற்கு எல்லா வகையான ஆதாரங்களும் இருந்தும் அவர் மேல் குற்றம் சாட்டுவது, நடவடிக்கை எடுப்பது தவறு.
பல தரப்பட்ட, பல சிந்தனையுடையவர்கள் இருக்கும் ஒரு நிர்வாகத்தில் எல்லாருக்கும் நீதியாய் நடக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
அல்குஆன் 5:8
செலவுகளைக் கட்டுப்படுத்துதல்
இன்றைய நிர்வாக அமைப்புகளில் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் என்பது மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. செலவுக் கட்டுப்பாட்டிற்கு முக்கிய வழி எந்தத் திட்டத்தைத் தீட்டும் போதும் அதற்கு என்ன செலவாகும் என்று திட்டமிடுவது, அந்தத் தொகையை மிச்சப்படுத்தவும் முயல்வது.
அதற்காகக் கஞ்சத்தனம் செய்ய கூடாது. எது தேவையான செலவு? எது தேவையில்லாதது? என்பதை அதன் மூலம் கிடைக்கும் நன்மையைப் பொறுத்துத் தான் முடிவு செய்ய முடியும். பொது நிர்வாகமாக இருந்தால் செலவுகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
ஒரு நிர்வாகத்தில் காலப்போக்கில் அன்றாட நடவடிக்கைகளின் உள்ளே பல தேவையில்லாத சிறு சிறு செலவுகள் புகுந்து வரும். அதைக் கண்டறிந்து அச்செலவுகள் தொடர்ச்சியானவைகளாக இருந்தால் காரணமறிந்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குஆன் 17:27
நேர மேலாண்மை
இப்பொழுதெல்லாம் பிஸி என்பது சாதாரண மனிதர்கள் முதல் நாட்டை ஆள்பவர்கள் வரை தினசரி உபயோக வார்த்தைகளில் ஒன்று. நேரமில்லை, நேரமில்லை, யாரிடமும் நேரமில்லை.
உண்மை என்னவெனில் நேரம் இருக்கின்றது அதை முறைப்படுத்தி பயன்படுத்தத் தெரியவில்லை.
தொழுகை, முஸ்லிம்களுக்கு நேர மேலாண்மைக்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். காலையில் எழுவதில் நேரம் குறிக்கப்பட்டு விட்டது. மதியம், மாலை, இரவு அந்தந்த காரியங்களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஓரிடத்திற்கு ஐந்து மணிக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு ஐந்தரை மணிக்கு ஏன் போகிறோம்? நம்மிடம் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்யும் பழக்கமில்லை.
திட்டமிடுதல், முன்பதிவு, முன் அனுமதி இவையெல்லாம் பெரும் பெரும் தலைவர்கள், பணக்காரர்களுக்குரியது என்பது நமது எண்ணம். ஒவ்வொருவரும் நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க இயலாத, அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கும் பெரும் பாக்கியம் காலமாகும்.
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவர்கள் மட்டும் தான் தங்களது வாழ்வில் நிறைவு செய்தும் சாதித்தும் இருக்கின்றார்கள்.
உங்களின் ஒரு வாரத்திற்கான நேர அட்டவணையை உருவாக்குங்கள். உதாரணமாக, திங்கள் காலை என்ன செய்வீர்கள்? நீங்கள் அலுவலகத்துக்குப் போகிறவராக இருந்தால் எழுதுங்கள். எத்தனை மணிக்கு வீடு திரும்புவீர்கள்? காலை உணவு, மதிய உணவு, தேநீர் என உணவுப் பழக்கவழக்கத்தையும் தொடர்ச்சியான நேரங்களில் முறைப்படுத்துங்கள்.
குடும்பத்துக்கு, சொந்த பந்தங்களுக்கு நண்பர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதற்கு, இவ்வளவு ஏன்? இயற்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு உட்பட எல்லாவற்றையும் நேரம் குறித்து செய்யுங்கள்.
இவற்றில் தினமும் செய்ய வேண்டியது, வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்ய வேண்டியது, மாதம் செய்ய வேண்டியது, சிறப்பு நிகழ்ச்சி என அனைத்தையும் எழுதி வையுங்கள்.
எதையும் யாரிடமும் ஒப்புக் கொள்வதற்கு முன் உங்களிடம் அந்த நேரம் வேறெதற்கும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கின்றதா என்று பாருங்கள். “நேரமில்லை! நான் ஏற்கனவே வேறு வேலையை ஒப்புக் கொண்டிருக்கின்றேன்’ என்று கூறினால் தவறாக நினைத்து விடுவார்கள் என்று கற்பனை செய்யாதீர்கள்.
ஓரிடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பயணித்துச் செல்ல, பயண தூரத்தில் ஏதேனும் தடங்கல்கள் இருக்கும் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு புறப்படுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் நபியாக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த 23 ஆண்டு கால வாழ்க்கையில், ஒரு மனிதன் தனது நேரத்தை எப்படி முறைப்படுத்திப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
கட்டுப்பாடு
ஒரு மனிதர் எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைபவராகவும் விரைவில் கோபப்படுபவராகவும் இருந்தால் மற்றவர்கள் அவரை கலகலப்பில்லாத, அன்பு பொறுமையில்லாத, கரடுமுரடான மனிதர் என்று தான் புரிந்து கொள்வார்கள். இத்தகைய குண நலத்துடன் ஒருவர் நிர்வாகியானால் அவர் சார்ந்த நிர்வாகம் ஒன்றுமில்லாமல் போவதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை.
“ஒரு மனிதனின் பாரம்பரியம், அவன் வாழும் சூழல் ஆகியவை அவனது குண நலன்களை முடிவு செய்பவையாக இருக்கின்றன’ என்று இன்றைய ஒழுக்கவியல் கள ஆய்வுகள் சொன்னாலும் இது இறைவனின் அருள் என்று இஸ்லாம் கூறுகின்றது.
இதற்கான பயிற்சியை ஏக இறைவன் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குகின்றான்.
போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! உம் மீது கனமான சொல்லை நாம் போடுவோம். இரவில் எழுவது மிக்க உறுதியானதும் சொல்லைச் சீராக்குவதுமாகும். (முஹம்மதே!) பகலில் உமக்கு நீண்ட பணி உள்ளது. உமது இறைவனின் பெயரை நினைப்பீராக! அவனிடம் முற்றிலும் சரணடைவீராக!
அல்குஆன் 73:1-8
(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.
அல்குஆன் 17:79
இவற்றைக் கீழ்வரும் பயிற்சியாக வரிசைப்படுத்தலாம். கடமையான வணக்கங்கள் போக,
தஹஜ்ஜத் தொழுதல்
குர்ஆன் ஓதுதல்
எப்போதுமே இறை நினைவுடனிருத்தல்
அல்லாஹ்விடமே சரணடைதல் (தவக்கல்)
பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்து வருதல்
போன்ற பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் கட்டுப்பாடுள்ள மனிதனாக, பொறுமை அன்பு நிறைந்து காணப்படுவார். இனிப்பை ஈ மொய்ப்பது போல் மக்கள் அவரைச் சூழந்திருப்பார்கள். மாறாக, கடுகடுப்பு, கடுமை உள்ளவராக இருந்தால் அனைவரும் ஓடிப் போய் விடுவார்கள்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குஆன் 3:159
இந்த வசனத்தை ஒரு இஸ்லாமிய நிர்வாகிக்கான அடிப்படை விதிகள் என்று கூறலாம்.
எச்சரிக்கை! உங்களை மற்றவர்கள் எளிதில் கோபப்படுத்தி விடலாம் என்ற அளவுக்கு சுய கட்டுப்பாடில்லாத மனிதராக நீங்கள் இருந்தால் நீங்கள் நிர்வாகியாக இருப்பதற்கு, இஸ்லாமிய நிர்வாகியாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி உங்களிடம் இல்லை என்பது பொருள்.
தாராள மனம்
பொதுவாகவே ஒருவர் தாராள மனம் படைத்தவர் என்றால், அவர் பொருளாதாரத்தைக் கணக்குப் பார்க்காமல் தேவையுடையவர்களுக்குச் செலவு செய்வார். இது தாராள மனம் என்பதன் ஒரு வெளிப்பாடு மட்டும் தான்.
ஒரு இஸ்லாமிய நிர்வாகிக்கு இதையும் தாண்டி நிரம்பி வழியும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். இது அன்பு, பெருந்தன்மை, இரக்கம், திறந்த மனது, பொறாமை துளியளவும் இல்லாமை போன்றவை நிறைந்து வழிய வேண்டும்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளும் உரிமை எல்லா மக்களுக்கும் உண்டு என்ற அடிப்படையில் மற்றவர்களின் உணர்வுகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகள், தேவைகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாராளத் தன்மை இல்லாத ஒருவர் இறுகிய மனதுடன் காணப்படுவார். இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மற்றவர்களின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். மற்றவர்களின் வெற்றிகளையும் சாதனைகளையும் மகிழ்ச்சியையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் வெளிப்படையில், “உங்கள் முன்னேற்றம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது’ எனக் கூறுவார்கள். அதே வேளை, முன்னேற்றத்தைத் தடுக்க உள்வேலை செய்வார்கள். இது மிகவும் நுணுக்கமானதாக இருக்கும். உதாரணமாக, தன்னுடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தன் அளவோ அதற்கு மேலோ உயர்ந்து விடுவார் என அஞ்சினால் அவரை வேறொரு நிறுவனத்தில் தாமே வேலையில் சேர்த்து விடுவார்கள்.
இத்தகைய மனம் படைத்தவர்கள் நல்ல குழுப் பணியாளராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தனது பதவியையும் புகழையும் மற்றவர்கள் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மற்றவர்களிடம் நெருங்க மாட்டார்கள்.
இந்தக் குணமுடையவர்கள் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த குழுக்களில் இடம் பெறுவது அந்த நிர்வாகத்திற்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பல நேரங்களில் தனது பதவி, புகழுக்குப் போட்டியாக இவர்கள் கருதுகின்ற ஒருவரை ஓரம் கட்டுவதற்கு, தனக்கெதிராகப் பேசுபவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதற்கே ஆலோசனைக் கூட்டங்களைப் பயன்படுத்துவார்கள்.
ஆலோசனைக் கூட்டங்களில் ஆரோக்கியமான ஆலோசனைகள், விமர்சனங்கள் அனைத்தையும், அதை எடுத்து வைப்பவர்களின் முன்னேற்றத்திற்கான படிகள் என்ற கண்ணோட்டத்துடனே பார்ப்பார்கள். அதனால் நல்ல ஆலோசனைகளையும் மட்டம் தட்டுவார்கள்.
தமது நிறுவனத்தில் குழுவில் சேர்ந்து பணிபுந்த ஒருவர் இதை விட்டுப் போய் விட்டார் என்பதற்காக அவருக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுவார்கள்.
விமர்சிப்பவர்களிடம், குறைகளை சுட்டிக் காட்டுபவர்களிடம் வெளிப்படையாக ஒப்புக் கொள்வது போல் காட்டினாலும் மனதில் அவர்களுக்கெதிரான குரோதத்தை வளர்த்துக் கொள்வார்கள். இத்தகைய இறுக்கமான மனதுடன் ஒருவர் இஸ்லாமிய நிர்வாகியாக இருப்பது மிகவும் ஆபத்தானது.
ஒரு இஸ்லாமிய நிர்வாகியிடம் இருக்க வேண்டிய தாராள மனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் தான் முன் உதாரணம். தான் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு, அந்த ஊரில் வாழும் போது அடி உதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த போதும் உலக வரலாற்றிலேயே எந்த எதிர்ப்புமின்றி மக்காவில் வெற்றி வீரராக அவர்கள் நுழைந்த போது அத்தனை பரம எதிரிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்தார்கள்.
அத்தனை அதிகாரங்களும் பெற்றிருந்தும் “நீங்கள் பங்கு வைத்ததில் சரி சமமில்லை’ என விமர்சிக்கும் தைரியம் நிறைந்த சக தோழர்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார்கள்.
இவை நபியவர்களின் நிரம்பி வழியும் மனப்பான்மையின் சில உதாரணங்கள்.
அடுத்த தலைமுறை நிர்வாகிகளை அடையாளம் காட்டுதல்
ஒருவர் எவ்வளவு வெற்றிகரமான நிர்வாகியாக இருந்தார் என்பதற்கு அவர் பதவி, பொறுப்புகளிலிருந்த காலத்தில் செய்த சாதனைகள் மாத்திரம் அளவுகோல்கள் இல்லை. அவர் விட்டுச் செல்லும் பணிகளைத் தொடர அடுத்த தலைமுறை நிர்வாகிகளைப் பயிற்றுவித்து மக்களுக்கும் அடையாளப்படுத்த வேண்டும்.
தனது பதவிக்கு புகழுக்கு ஆபத்து என்ற எண்ணத்தில் மற்றவர்களை மட்டம் தட்டும் ஒருவர் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருவரைப் பயிற்றுவிப்பார் என்று எதிர்பார்ப்பதே தவறு.
அதே போல், “நான் இந்தப் பதவியிலிருந்து, பொறுப்பிலிருந்து வெளியேறிய பிறகு, எனக்குப் பின் இதை யாரும் நடத்த இயலவில்லை என்று ஊர் பேச வேண்டும்’ என்பதற்காகத் தனது பணிகளில் பலவற்றை மறைத்து வைப்பது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு வகையான பெரும் பணிகளை விட்டுச் சென்றார்கள். ஒன்று, இஸ்லாத்தை எடுத்துக் கூறுவது. மற்றொன்று, தனது ஆட்சித் தலைவர் பொறுப்பு.
இஸ்லாத்தை எடுத்துக் கூறும் பணியை ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதை அனைவருக்கும் எதையும் மறைக்காமல் கூறியும் விட்டர்கள். (பார்க்க: புகாரி 1740,1741)
ஆட்சிப் பொறுப்பைப் பொறுத்த வரை தனக்குப் பின் இருவரை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் எந்த அளவுக்குத் திறமைசாலிகள் எனவும் சூசகமாகக் கூறினார்கள். (பார்க்க: புகாரி 3676)
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
மண்டியிட வைத்த தொண்டி விவாதம்
கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
“நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 11:32
சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதற்கு விவாதக் களம் காண்பதும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
சத்தியத்தை நிரூபிப்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஒரு மைல் கல் தான் மார்ச் 29 அன்று தொண்டியில் நடைபெற்ற விவாதமாகும்.
விவாத அரங்கில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களை இங்கே விரிவாக அலச வேண்டிய அவசியமில்லை. விவாதத்தின் நேரடிக் காட்சிகளும், அதற்கு முன்பாக ஜனவரி 20 அன்று நடைபெற்ற விவாத ஒப்பந்த காட்சிகளும் சிடிக்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அசத்தியவாதிகளின் ஆணிவேர் அடியோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவாதத்தின் பின்னால் ஒளிந்துள்ள சிலரின் முகமூடிகளைக் கிழித்தெறிவது அவசியமானதாகும். விவாதம் மௌலவி முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் நடந்ததாக மக்கள் நினைக்கலாம். ஆனால் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கொண்டு சூரிய ஒளியின் மகிமையை அறிந்திராத சிலரும் இதன் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்களை வெள்ளை மனமுடையோர் போன்று காட்டிக் கொண்டாலும் அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதை விட அதிகம். உண்மையில் இவர்கள் மனத்தூய்மையான மார்க்கப் பற்றின் காரணமாக நம்மை விமர்சிக்கவில்லை. மாறாக நம்மீது கொண்டுள்ள தனி மனித குரோதத்தினாலேயே மார்க்க ரீதியாக உண்மையை அறிந்து கொண்டே நாம் தவறிழைத்து விட்டதாக நம்மை விமர்சிக்கின்றனர். உள்ளத்தில் உள்ளதை நான் அறிந்து கூறுகின்றேன் என்று வாதிக்க வரவில்லை. இதற்குச் சில சான்றுகளை உங்கள் முன் தருகின்றேன்.
இலங்கையைச் சார்ந்த ஜமால் முகம்மது மதனீ என்பவர் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு தொடர்பாக நம்முடைய தெளிவான கருத்துக்களை தப்பும் தவறுமாக விமர்சனம் செய்துள்ளார். இவர் தன்னுடைய விமர்சனத்தோடு நிறுத்தியிருந்தால் இவரிடம் குரோதம் இருப்பதாக நாம் வாதிக்க மாட்டோம். மாறாக இலங்கையைச் சார்ந்த இவர், தமிழ் நாட்டில் 25 ஆண்டுகாலமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளிலோ இயக்கப் பணிகளிலோ எதிலும் பங்கெடுக்காத இவர் இயக்கரீதியாக மிகவும் பாரதூரமான அவதூறுகளை தொடுக்கின்றார். இவரைப் பற்றி மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற வகையில் தலைப்பிற்குத் தொடர்பில்லாத விமர்சனங்களைச் செய்துள்ளார். இவரைப் போன்று இன்னொருவர் ரில்வான் மதனீ என்பவர். இவர்கள் மார்க்க விஷயத்தில் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளால் மட்டும் நம்மை விமர்சிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் இவர்களின் செயல்பாடுகள் இவர்களின் தனி மனித குரோதங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
நாம் சிலரை விமர்சிக்கும் போது சில நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம். அது பெரும்பாலும் நாம் முதலில் செய்கின்ற விமர்சனமாக இருக்காது. மாறாக அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு நிகரான பதிலடியாகவே அமைந்திருக்கும்.
திருக்குர்ஆன் தர்ஜமா தொடர்பாக தொண்டியில் நடைபெற்ற விவாதமும் இவர்கள் தூய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக மனத்தூய்மையோடு விவாதம் செய்தார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. தர்ஜமா தொடர்பாக முஜீப் செய்த விமர்சனத்தை அறிந்த சகோதரர்களுக்கு இது தெள்ளத் தெளிவானதாகும்.
ஹதீஸ்களை மறுப்பதற்குரிய வழிகளை திறந்து வைத்து விட்டார் என்றெல்லாம் மிகக் கடுமையான பல வார்த்தைப் பிரயோகங்களை வைத்து, தர்ஜமாவை கைகளில் உயர்த்தி உயர்த்திக் காட்டி ஜித்தா, பஹ்ரைன், மேலப்பாளையம், மதுரை ஜாக் தாயிகள் மீட்டிங், தமுமுக தலைமையகம் போன்ற பல இடங்களில் இவர் திரும்பத் திரும்ப என்னென்ன வாதங்களை எடுத்து வைத்தாரோ, எதை பிரம்மாண்டப்படுத்திக் காட்டினாரோ அதில் எந்த ஒன்றையும் விவாதக் களத்தில் அவர் வாழ்கின்ற காலத்திலேயே எடுத்து வைப்பதற்கு இவரால் இயலவில்லை.
முஜீப் அவர்கள் பல இடங்களில் உரையாற்றும் போது சில குறிப்பிட்ட விஷயங்களைத் தான் எடுத்து வைத்தார். 1. பால் குடி தொடர்பான ஹதீஸ் 2. தாவூத் நபி தொடர்பான விஷயம் 3. சுலைமான் நபி 99 மனைவிமார்களோடு ஒரே இரவில் உறவு கொண்டதாக வரக்கூடிய செய்தி 4. சொர்க்கம் நரகம் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்பது போன்ற செய்திகளைத் தான் தர்ஜமாவில் உள்ள மாபெரும் தவறுகளாக ஊருக்கு ஊர் பேசினார். இவையல்லாமல் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு தொடர்பாக மேலோட்டமாகவும், “இன்ன’ என்ற வார்த்தைக்குப் பொருள் செய்யாதது தொடர்பாகவும் சூனியம் தொடர்பாகவும், முதஷாபிஹாத் வசனங்கள் தொடர்பாகவும், ஷஃபாஅத் தொடர்பாக தன்னுடைய கருத்து எதையும் கூறாமல் ஹாமித் பக்ரி அவர்களின் கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டியும் ஒரு சில இடங்களில் விமர்சனம் செய்திருந்தார்.
நீங்கள் இதுவரை இந்த மொழிபெயர்ப்பிற்கு எதிராகப் பல மேடைகளில் எந்தெந்த கருத்துகளை எடுத்துரைத்தீர்களோ அதைப் பற்றித் தானே விவாதம் என்று விவாத ஒப்பந்தத்தில் நாம் கேட்டோம். அதில் பதிலளித்த முஜீப் அவர்கள், “இல்லை இல்லை இது வரை நான் கூறாத புதிய விஷயங்களையும் விவாதத்தின் போது எடுத்துரைப்பேன்’ என்றார்.
“விவாதம் என்பது போட்டியல்ல. திடீரென்று புதிதாக ஒரு கேள்வியைக் கேட்டு எதிரியை வாயடைக்கச் செய்வதற்கு! மாறாக நீங்களும் நாங்களும் உண்மையை உணர்ந்து அதை மக்களுக்குப் போதிப்பதற்குரிய ஒரு களம்’ என்று தவ்ஹீத் ஜமாஅத் உணர்த்திய பிறகு நான் வாதிக்கும் விஷயங்களுக்குரிய விவரங்களை விவாதத்திற்கு முன்கூட்டியே விபரமாகத் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் வாக்குறுதிக்கு மாற்றமாக பொத்தாம் பொதுவில் ஒரு பட்டியலை அளித்தார்.
அந்தப் பட்டியலில் கூட முஜீப் அவர்கள் நமக்கெதிராக மிகப் பயங்கரமாக எந்தெந்த கருத்துகளை விமர்சனம் செய்திருந்தாரோ அந்தக் கருத்துக்கள் இருக்கத் தான் செய்தன. இதை அவர் ஒரு போதும் மறுக்க முடியாது. அப்படியிருந்தும் வெளியில் பிதற்றிய அந்த விஷயங்களை எடுத்து வைப்பதற்கு அவர் தயங்கினார். நாம் அதை எடுத்துரைத்து வாதித்த போதும் அவற்றைப் பற்றி விவாதிக்க அவர் தயாராகவில்லை. எவற்றை ஈமானைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் என்று கூறுமளவிற்கு வெளியில் கர்ஜித்தார்களோ அவற்றை நாமே எடுத்து வைத்த போதும் விவாதிக்கத் தயங்கியது தான், இவர்களிடம் சத்தியத்தை அறிய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
விவாத ஒப்பந்ததின் போது மற்றொன்றையும் தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாகப் பதிவு செய்தது. அதாவது முஜீப் அவர்கள் தர்ஜமாவிற்கு எதிராக எடுத்து வைக்கின்ற எல்லா வாதங்களையும் விவாதிப்பதற்கு ஒரு நாள் போதாது. அனைத்தையும் விவாதித்து முடிப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ அத்தனை நாட்கள் விவாதிப்போம். அல்லது குறைந்தது இரண்டு நாட்களாவது விவாதிப்போம் என்று கெஞ்சாத குறையாக மன்றாடியது.
சத்தியத்தை எப்படியாவது மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏனென்றால் சமுதாயப் பணிகளையும் சத்தியப் பிரச்சாரத்தையும் எவ்வித இலாப நோக்கமும் இல்லாமல் செய்து வருகின்ற தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேரங்களையும் காலங்களையும் ஒதுக்கி ஒரு விவாதக் களத்தைச் சந்திப்பது என்பது மிகப் பெரும் சிரமமான ஒரு விஷயமாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்த பிறகு அனைத்தும் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.
ஏனென்றால் சிலர், “நான் கொடுத்த அனைத்து விஷயங்களையும் விவாதிக்கவில்லை’ என்ற முடிந்த பிறகும் பிதற்றிக் கொண்டு திரிவார்கள். இதற்காகத் தான் அனைத்து விஷயங்களையும் விவாதிக்கின்ற வரை விவாதம் நடைபெற வேண்டும் என்று நாம் பலமுறை கேட்டும் ஒரு நாளே போதுமானது என முஜீப் அவர்கள் பிடிவாதம் பிடித்ததும் சத்தியத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் இவர்களிடம் இல்லை என்பதற்குத் தெளிவான சான்றாகும்.
இப்போது விவாதக் களத்தில் முஜீப் எடுத்து வைத்து விஷயங்களுக்கு வருவோம்.
- “குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுள்ளன’ என்ற நம்முடைய கருத்தை மறுத்து “குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் எழுத்துப் பிழைகள் ஏற்படவேயில்லை’ என வாதித்தார். அதற்கு ஒரு சான்றாக பஸத, யப்சுது, பஸ்ததன் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து வைத்து வாதித்தார். இவற்றிற்கு மிகத் தெளிவான முறையில் ஆயிஷா (ரலி) அவர்கள், “குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் கூறியது, அல்இத்கான் போன்ற குர்ஆன் கலை தொடர்பான நூற்களில் கூறப்பட்ட கருத்துகள், மேலும் சவூதியிலிருந்தே வெளியிடப்பட்ட இக்பால் மதனீ தர்ஜமாவிற்கும் சவூதி வெளியீடு குர்ஆனிலும் உள்ள வித்தியாசங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆணியடித்தாற்போல் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.
மேலும் “பஸத’ என்பது தொடர்பாக 2:245வது வசனத்தில் ஸீன் என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக ஸாத் என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.
அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் ஸீன் எழுதுவதற்கு பதிலாக ஸாத் எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம் என்று பல உதாரணங்களைக் காட்டி விளக்கமாகப் பதிலளிக்கப்பட்டது.
மேலும் இத்கான் என்ற நூலிலிருந்து ஆதாரங்களைக் காட்டும் போது முஜீப் அவர்கள் முதல் வரியை மறைத்து விட்டுப் படித்தது போன்ற விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டதாகக் கூறுவதால் குர்ஆனின் பாதுகாப்பிற்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாது என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது. விவாத சிடிக்களைப் பார்வையிடுபவர்கள் இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் நம்முடைய ஏகத்துவம் இதழிலும் இது தொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட இருக்கின்றோம்.
- ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் ஒரு மரத்தைச் சாப்பிட்டதால் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது. எனவே அந்த மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்று விரிவுரை தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது. இதற்கும் பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி தெளிவாக பதிலளிக்கப்பட்டது.
- தர்ஜமாவில் ஒரு சில இடங்களில் சில வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்பு விடுபட்டுள்ளதாக முஜீப் சுட்டிக்காட்டினார். அவற்றில் பல இடங்களில் சரியாகத் தான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மாறாக முஜீப் அதைத் தவறு என்று விளங்கிக் கொண்டார். உதாரணமாக விவாத சிடிக்களை பார்ப்பவர்கள் ஸாமிரி என்பவன் கூறிய வாசகம் தொடர்பாக உள்ள கருத்துக்களைப் பார்வையிட்டால் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மேலும் முஜீப் கூறியது போல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் ஆண்பாலாக மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில் பெண்பாலாகவும் மற்றொரு இடத்தில் ஒரே பொருளுடைய இரு வார்த்தைகளில் ஒன்றிற்கு மொழி பெயர்ப்பு விடுபட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இவை விவாதத்திற்குரிய ஒரு விஷயம் இல்லை. முஜீப் அவர்கள் இதனை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி தெரியப்படுத்தியிருந்தால் அடுத்த பதிப்புகளில் அவை திருத்திக் கொள்ளப்படக்கூடியவையே! இப்படி சில இடங்களில் சிலர் சுட்டிக் காட்டிய பின் அவை அடுத்த பதிப்புகளில் மாற்றப்பட்டுள்ளன.
- குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் இட்டது தொடர்பாகவும் விரிவான விவாதம் நடைபெற்றது. திருக்குர்ஆனின் மூலப்பிரதி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மூலப்பிரதியில் குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் போடப்படவில்லை. பின்னால் வந்தவர்கள் தான் குர்ஆன் வசனங்களுக்கு எண்களை இட்டார்கள். இதன் காரணமாகத் தான் வசனங்களின் எண்கள், குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள், ஹுமைத் என்பார் 6212 என்கிறார்கள், அதா என்பார் 6177 என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார்.
மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள். இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.
வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.
எனவே தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் பல விதமான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.
ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற, குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற, எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்களால் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.
ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப் பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சில இடங்களிலே விதி ஒரு வசனமாகவும், அந்த விதியிலிருந்து விலக்கு இன்னொரு வசனமாகவும் அமைந்திருக்கும். அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அதைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும். உதாரணத்திற்காக சில வசனங்களை நாம் காண்போம்.
நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம். இதில் “அவர்களுக்கு வழி காட்ட மாட்டான்’ என்பது 168வது வசனத்திலும், “நரகத்தின் வழியைத் தவிர’ என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121-ல் “நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்’ என்றும் 122-ல் “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய’ என்றும் உள்ளது.
“மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய’ என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவே இல்லை. “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்’ என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது.
இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் “மூஸாவை தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்’ என்று இருக்கிறது. 97வது வசனத்திலே “ஃபிர்அவ்னிடம்’ என்று இருக்கிறது.
“ஃபிர்அவ்னிடம்’ என்பது இந்த 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொல். ஆனாலும் ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும் என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்கு பொருள் இல்லாமல் போய் விடுகிறது.
இப்படி ஏராளமான வாக்கியங்களை, கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குர்ஆன் என்பது அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.
வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும் போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும். அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தாலும் அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோலின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.
மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.
உதாரணமாக யஃலமூன், தஃல மூன், யஃப்அலூன் இப்படி வருகிறதா என்பதைப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்தார்கள்.
ஆனால் உண்மையிலேயே அவர்கள் கருத்தைத் தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். காரணம், வசனம் என்று நாம் தமிழில் குறிப்பிட்டாலும் அல்லாஹ் ஆயத் என்ற சொல்லைத் தான் இதற்குப் பயன்படுத்துகிறான்.
ஒரு கருத்து முழுமை பெறாத இடத்தில் துண்டாக்கினால் அதை அத்தாட்சி என்று கூற மாட்டோம்.
ஆனாலும் இப்போது நடைமுறையில் எண்களைக் குறிப்பிடுவது ஆதாரங்களை எடுத்துக் காட்டுவற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் புரிவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் உதவியாக இருக்கின்றன.
இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களை சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.
அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களை எல்லாம் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.
வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் அவர்களாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழிபெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.
ஆ.கா. அப்துல்ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார். இதையே நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் 73, 74 என இரண்டு வசனங்களாக எண்ணியுள்ளார். இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.
இந்தச் செய்திகளெல்லாம் சில சகோதரர்களுக்கு இது வரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதை அந்தந்த காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.
எனவே குர்ஆனில் நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை எவை? குர்ஆனிலே அல்லாஹ் அமைத்துத் தந்தவை எவை? என்ற வேறுபாட்டை நாம் விளங்கி வைத்திருந்தால் ஒவ்வொருவரும் இதைப் புரிந்து வைத்திருந்தால் குர்ஆன் என்ற பெயரால் யாரும் மக்களை வழி கெடுத்துவிட முடியாது.
சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதைத் தவிர வசன எண்களோ அத்தியாயத்தின் பெயர்களோ இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை. மூலப்பிரதியில் உள்ள செய்திகள் மாத்திரம் தான் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
என்பது போன்ற விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்து முஜீப் அவர்களின் வாதங்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளிக்கப்பட்டது.
மொத்தத்தில் விவாதத்தில் நடந்த அனைத்தையும் வரிக்கு வரி நாம் இங்கே குறிப்பிட முடியாது. முக்கியமான சில குறிப்புகளை மட்டும் தான் இங்கே தந்துள்ளோம்.
ஆனால் தொண்டியில் நடைபெற்ற விவாதம் சத்தியத்தின் முன்னால் அதற்கெதிரான அனைவரையும் மண்டியிட வைத்தது என்பதே யாவரும் தெரிந்து கொண்ட உண்மையாகும்.
————————————————————————————————————————————————
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 15
குர்இன், ஹதீஸ் ஒளியில் சூனியம்
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காண்பதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை.
ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.
திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன. இதன் காரணத்தால் தான் அறிஞர்கள் இதில் முரண்பட்டு நிற்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடம் இருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான முடிவாகும்.
சூனியம் என்பதற்கு அரபுமொழியில் “ஸிஹ்ர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்குப் பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு, தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.
கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து, அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.
ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்துகாட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.
ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர்.
மூஸா நபி செய்து காட்டிய அற்புதம்
மூஸா நபியவர்களுக்கு மகத்தான சில அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. “இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 7:107
அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது “இது தெளிவான சூனியம்” (ஸிஹ்ர்) என்றனர். “உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
அல்குர்ஆன் 10:75
“நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்” என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. “இவர் திறமை மிக்க சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். “தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?” (என்றும் கேட்டான்).
அல்குர்ஆன் 26:31
மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் (ஸிஹ்ரைத்) தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.
அல்குர்ஆன் 28:36
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 40:23
மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் என்னும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.
மூஸா நபியவர்கள் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன்வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் உண்மை என்று நம்ப ஃபிர்அவ்ன் மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தன் நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான். மூஸா நபியவர்கள் அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றிக் குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகிறது.
“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
அல்குர்ஆன் 7:116
அவர்கள் செய்தது சாதாரண சூனியமல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் எதுவென்றும் தெளிவாகக் கூறுகிறது.
மக்களின் கண்களை மயக்கினார்கள் என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.
“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
அல்குர்ஆன் 20:66
அவர்கள் செய்தது மகத்தான சூனியமாக இருந்தாலும் கயிறுகளையும் கைத்தடிகளையும் சீறும் பாம்புகளாக அவர்களால் மாற்ற இயலவில்லை. மாறாக, சீறும் பாம்பைப் போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது.
மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.
“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)
அல்குர்ஆன் 20:69
இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரனின் சூழ்ச்சி தான் என்று கூறுவதன் மூலம் சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஈஸா நபி செய்து காட்டிய அற்புதம்
மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் (தந்திரம்) செய்கிறார் என்று கூறி நிராகரித்து விட்டனர்.
“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி (ஸிஹ்ரேயன்றி) வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 5:110
“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “இது தெளிவான சூனியம்” (ஸிஹர்) எனக் கூறினர்.
அல்குர்ஆன் 61:6
நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள்.
மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள்.
அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறினார்கள்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். “இது வெளிப்படையான சூனியத்தைத் (ஸிஹ்ரைத்) தவிர வேறு இல்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.
அல்குர்ஆன் 6:7
“மக்களை எச்சரிப்பீராக” என்றும், “நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 10:2
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் (ஸிஹ்ரிடம்) செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
அல்குர்ஆன் 21:3
இன்னும் இந்தக் கருத்து 28:48, 34:43, 37:14, 38:4, 43:30, 46:7, 54:2 ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது.
வளரும் இன்ஷா அல்லாஹ்