ஏகத்துவம் – ஜூன் 2007

தலையங்கம்

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

இந்த வசனம் நம்மை இணை வைப்பவர்களிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்தது. அதன் பலனாய் முதலில் நம்மையும் அடுத்த கட்டமாய் நம்முடைய குடும்பத்தையும் காத்துக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தைக் காப்பது எனும் போது நம்முடைய குழந்தைகளைக் காப்பது அதில் முக்கிய அம்சத்தை அடைகிறது.

நம்முடைய குழந்தைகளை நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற நாம், ஆண் குழந்தைகளைக் காப்பது போல் பெண் குழந்தைகளைக் காப்பதில்லை. நமது பெண் குழந்தைகள் நரகத்திற்குச் செல்ல நாமே காரணமாகி விடுகின்றோம். அது எப்படி? என்று கேட்கலாம்.

இந்த உலகத்தில் கூட ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மத்தியில் வேறுபாடு காட்டுவதை விமர்சிக்கும் நாம், மறுமையில் எப்படி வேறுபாடு காட்டுவோம்? என்று வீராவேசமாகக் கேட்கலாம்.

இதற்கு விடை காண்பதற்கு முன்னால் இணை வைப்பவர்களைப் பற்றி நம்முடைய நிலைபாடு என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

இந்த வசனத்தில் மக்கத்து முஷ்ரிக்குகளைப் பற்றி அல்லாஹ் கூறும் நிலை இன்று இணை கற்பிப்பவர்களிடம் அப்படியே இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நாம் ஏகத்துவக் கூட்டத்தைக் கூட்டுகின்ற போது அதில் ஏகத்துவவாதிகள் மட்டும் கலந்து கொள்கிறோம்; நம்முடைய சொற்பொழிவைக் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இணை வைப்பாளர்கள் தங்கள் வீடுகளின் கதவை அடைத்துக் கொண்டு, வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம், நாம் அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று சொல்வது தான். அவ்லியாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் நாம் பேசினால் அதில் அவர்கள் கலந்து கொள்வார்கள். இது எதைக் காட்டுகின்றது? இம்மக்கள் மக்கத்து முஷ்ரிக்குகளின் நிலையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

அல்லாஹ் என்று கூறப்படும் போது அலறாதவர்கள், அசையாதவர்கள், முஹய்யித்தீன் என்று கூறியதும் குதூகலிக்கின்றார்கள்; பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர். ஏன்? இவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகளின் தன்மையை அப்படியே கொண்டிருப்பதால் தான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

கடலில் ஏற்படும் கடுமையான ஆபத்தின் போது மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை மட்டும் அழைத்தார்கள். ஆனால் இவர்களோ பிரசவ வேதனை போன்ற சோதனையான கட்டத்திலும், “யா முஹ்யித்தீன்’ என்றல்லவா அழைக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் அவர்களை விட மிகக் கடுமையான முஷ்ரிக்குகள்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

இவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கப் போவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறி விட்டது. இவர்களுக்குச் சுவனம் தடை செய்யப்பட்டு, நரகம் நிரந்தரம் என்று உறுதியாகி விட்டது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.

அல்குர்ஆன் 5:72

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 9:17

இணை கற்பிப்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

இணை வைத்தல் என்பது மிகப் பெரும் பாவம். அது நம்முடைய சுவன வாழ்க்கைக்கு உலை வைத்து விடும் என்பதால் நாம் அந்தச் சித்தாந்தத்திற்கு நிரந்தரமாக முழுக்குப் போட்டோம்.

ஒருவர் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு இணை வைத்தால் அவரை அல்லாஹ் விட்டு விடுவான்; முஸ்லிமல்லாதவர் இணை வைத்தால் தான் அவரை அல்லாஹ் தண்டிப்பான் என்றெல்லாம் ஷிர்க்கில் எந்த வேறுபாடும் நாம் காட்டவில்லை. இது தான் நம்முடைய நிலைபாடு! அதனால் தான் நாம் தனிப் பள்ளிவாசல் கண்டோம்; தனி ஜமாஅத் கண்டோம்.

அதே போன்று அவர்களும் நம்மைப் பிரித்துத் தான் பார்க்கிறார்கள். அதன் காரணமாகத் தான் நம்மைப் பள்ளியில் தொழ விடாமல் தடுக்கிறார்கள்; ஊர் நீக்கம் செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் அருளால் இன்று தனியொரு சமுதாயமாக தவ்ஹீத் ஜமாஅத் உருவெடுத்திருக்கின்றது. இப்படிப்பட்ட நாம் தான் இன்று நம்முடைய பெண் மக்களை இந்த முஷ்ரிக்குகளிடம் திருமணம் செய்து கொடுக்கின்றோம்.

நம்மிடத்தில் ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த நம்முடைய மகளையே ஒரு தர்ஹாவாதிக்கு, தரீக்காவாதிக்குக் கட்டிக் கொடுக்கின்றோம். தர்ஹாவாதிக்கு வாழ்க்கைப்பட்ட நமது மகள் தன் கணவனுடன் ஐக்கியமாகி விடுகின்றாள். விளைவு! நிரந்தர நரகவாதியாகி விடுகின்றாள். அல்லாஹ் காப்பானாக!

ஏன் இப்படி ஒரு தர்ஹாவாதிக்கு வாழ்க்கைப்பட்டாய்? என்று அவளிடம் கேட்டால், “நானும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து விட்டேன்; எனக்கு ஒரு தவ்ஹீதுக் கணவன் கிடைக்கவில்லை. தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் குடும்பத்திலுள்ள இணை வைக்கும் பெண்களையே அவர்கள் திருமணம் செய்தனர். அதனால் தான் இந்த நிலைக்கு ஆளானோம்’ என்று   தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கின்றார்கள்.

நம்முடைய பெண் மக்களை நரகப் படுகுழியில் தள்ளுவதற்கு நாமே காரணமாவது இப்படித் தான்.

ஆண் மக்களை நரகத்திலிருந்து காக்கும் நாம், பெண் மக்கள் நரகத்தில் வீழ்வதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

அன்று நாம் தனி மரமாக இருந்தோம். ஆனால் இன்று நாம் ஏகத்துவ சமுதாயம்! இந்தச் சமுதாயத்தில் உள்ள நாம் ஏகத்துவத்தில் உள்ள பெண்களை திருமணம் முடிக்காமல் இவர்களை அசத்தியவாதிகளிடம் வாழ்க்கைப்பட வைக்கிறோம் என்றால், இந்தப் பெண்கள் நரகம் செல்ல நாமே காரணமாக இருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்கு தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இந்த இறை வசனத்தின் கட்டளையை இங்கு ஒருமுறை எண்ணிப் பார்ப்போமாக!

————————————————————————————————————————————————

இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்

எம். ஷம்சுல்லுஹா

எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம்.

இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடுவதற்குக் காரணமாகவும், கருவாகவும் அமைந்திருப்பது, “அந்தப் பெரியார்கள் சமாதிகளில் உயிருடன் இருக்கிறார்கள்; தங்கள் சமாதிகளுக்கு முன்னால் பக்திப் பரவசத்துடன் நின்று கெஞ்சிக் கேட்கும் பக்த கோடிகளின் பிரார்த்தனைகளை அவர்கள் பரிவோடும் பாசத்தோடும் செவிமடுக்கின்றார்கள்; அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார்கள்’ என்ற நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை சரியானது தானா? என்று பார்ப்போம்.

இரும்புத் திரையை மிஞ்சும் இறைத் திரை

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

அல்குர்ஆன் 55:19, 20

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

இரு கடல்களும் சந்திக்க முடியாத அளவிற்கு, நம்முடைய புறக் கண்களுக்குத் தெரியாத ஒரு நிரந்தரத் திரையை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். அது போலவே உலகத்தில் வாழ்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரையைப் போட்டுள்ளான். இந்தத் திரை இரும்புத் திரையை மிஞ்சும் வலுவான திரையாகும்.

அல்லாஹ்வின் இந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு இவ்வுலகில் வாழ்வோரின் அபயக் குரல்களை இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்று நம்புவது இறை மறுப்பாகும்.

இறந்தவர்கள் செவியுறுகிறார்கள் என்ற இந்த வாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் சம்மட்டியாக உஸைர் (அலை) அவர்களின் மரணச் சம்பவம் அமைந்துள்ளது. ஈஸா (அலை) அவர்களின் பிறப்பில் அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினான் என்றால், உஸைர் (அலை) அவர்களின் இறப்பில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

எல்லோரையும் அல்லாஹ் ஒரு தடவை மரணிக்கச் செய்கிறான் என்றால் உஸைரை அல்லாஹ் இரு தடவை மரணிக்க வைத்துள்ளான். முதலில் ஒரு தடவை இறந்து, உயிர் பெற்று, பிறகு இரண்டாவது தடவை எல்லோரையும் போல் இறக்கின்றார்கள்.

இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக உஸைர் (அலை) அவர்களின் மரணத்தில் என்ன அடங்கியிருக்கின்றது? என்பதைக் காண்பதற்கு முன்னால், ஒருவர் உறங்கும் போதும், அவர் மரணிக்கும் போதும் உயிரின் நிலை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

உறங்கும் போது ஓடி விடும் உயிர்

வீட்டையே அதிர வைக்கும் பேரிடி முழக்கத்துடன், பேய்க் காற்றுடன் பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். ஆனால் வீட்டிற்குள் உறங்குகின்ற மனிதன் விழித்த பின்பு வெளியே வெறித்துப் பார்த்து, மழை பெய்ததைத் தெரிந்து கொள்கிறான். இதற்குக் காரணம் புலன்களின் உணர்வுக்குப் பூரண காரணமாக இருக்கும் அவனது உயிர் பூத உடலை விட்டு எங்கோ போயிருக்கின்றது என்று தானே பொருள். ஆம்! அது தான் உண்மையாகும்.

ஓடுகின்ற பேருந்தில் ஒருவன் உறங்குகின்றான். ஓரிடத்தில் அந்தப் பேருந்து முட்டி மோதி நிற்கின்றது. மோதியவுடன் அவனது தலையில் இடி விழுந்தாற்போல் ஓர் அடி விழுகின்றது. ரத்தம் பீறிட்டு வருகின்றது. அத்துடன் அவனது உணர்வும் சேர்ந்தே திரும்புகின்றது. “நாம் விழித்திருந்தால் நமது மண்டையில் அடி விழுந்திருக்காதே! இந்தக் காயத்தை விட்டுத் தப்பியிருக்கலாமே!’ என்று நினைக்கிறான். தன்னை இழந்து தூங்கிய இவனிடமிருந்து உயிர் எங்கே போனது? இதை அல்லாஹ்வே சொல்கிறான்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 39:42

உறங்குவோரின் உயிர் அல்லாஹ்விடமே சென்று விடுகின்றது என்பதை இந்த இறை வசனம் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றது. பேருந்தில் பயணித்தவன் அடிபட்டு மீண்டும் உணர்வு பெற்று விட்டான் என்றால் அவனை குறிப்பிட்ட தவணை வரை இறைவன் வாழ விட்டிருக்கின்றான் என்று அர்த்தம். விழிக்காமலேயே விபத்தில் அவன் இறந்து விடுகின்றான் என்றால் அவனது உயிரை அல்லாஹ் தன் கையிலேயே வைத்துக் கொள்கின்றான்.

இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது,

உனது திருப்பெயரால் மரணித்து, (உனது பெயராலேயே) உயிர் பெற்று எழுகின்றேன்என்றும், விழிக்கும் போது, “எங்களை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடம் தான் உயிர் பெற்றெழுதல் இருக்கின்றதுஎன்றும் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூல்: புகாரி

உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால், தான் அணிந்திருக்கும் ஆடையின் உட்புறத்தைக் கொண்டு அவரது படுக்கை விரிப்பை உதறி விட்டுக் கொள்ளட்டும். ஏனெனில் அவரில்லாத சமயத்தில் அதில் என்ன விழுந்தது என்று அவருக்குத் தெரியாது. அதன் பிறகு, “என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!என்று கூறுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி  6320

உறங்கும் போது நமது உயிர்கள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன என்பதை அண்ணலாரின் இந்த ஹதீஸ்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்து விடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமக்கு விதிக்கப்பட்டிருந்த அளவுக்குத் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உறங்கினார்கள்.  ஃபஜ்ர் நேரம் நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை திசையை முன்னோக்கிய படி தமது வாகனத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்த படியே கண்ணயர்ந்து உறங்கி விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும் வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள், “பிலாலே!என்று அழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! உங்களது உயிரைப் பிடித்த அதே நாயன் தான் எனது உயிரையும் பிடித்து விட்டான்என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்என்று கூற, உடனே மக்கள் தங்கள் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) உளூச் செய்தார்கள். பிலால் (ரலி)யிடம் இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும், “தொழுகையை மறந்து விட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவு கூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக‘ (அல்குர்ஆன் 20:14) என்று கூறுகின்றான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1097

இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் உயிரும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. அல்லாஹ் அதை விட்டால் தான் அவர்களும் விழிக்க முடியும் என்பதைப் பார்க்கிறோம்.

அத்துடன் உறங்குகின்ற அத்தனை பேரின் உயிர்களும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன. அதை ஒரு நொடிப் பொழுதும் வைத்திருப்பான்; அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்திருப்பான். அவன் நாடினால் நாடிய நேரத்தில் விடுவான்.

வழமையாக ஒரு மனிதன் உறங்கும் நேரம் அரை நாள்! அதிக பட்சம் ஒரு நாள் உறங்குவதைப் பார்க்கிறோம். இதற்கு மாற்றமாக முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்களைக் கைப்பற்றி தனது அடியார்களை உறங்க வைக்கவும் இறைவனால் முடியும். இதைத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.)

அல்குர்ஆன் 18:25

அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்என்றனர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்என்றும் கூறினர்.

அல்குர்ஆன் 18:19

இந்தக் குகைவாசிகள் உறங்கினார்களா? அல்லது இறந்து விட்டார்களா? என்ற சந்தேகம் வரலாம். இதற்கும் அல்லாஹ்வே விளக்கம் தருகின்றான்.

அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.

அல்குர்ஆன் 18:18

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், அந்த நேரம் சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகை வாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம்.

அல்குர்ஆன் 18:21

மறுமை நாள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான். இந்தச் சம்பவத்தின் மூலம், தான் கைப்பற்றும் உயிர்களை அல்லாஹ் முன்னூறு ஆண்டுகள் கழித்தும் விட்டு விடுகின்றான் என்பதை அறிந்து கொள்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழாமல் உறங்கி விட்ட ஹதீஸிலிருந்தும், குகைவாசிகள் உறங்கி எழுந்த பின் உரையாடிய நிகழ்ச்சியிலிருந்தும் உயிர்கள் அல்லாஹ்வால் அவர்களின் உடல்களில் திருப்பியனுப்பப்படும் வரை உலகில் என்ன நடந்தது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிய முடியும்.

உறங்குவோருக்கு உலகில் நடப்பது தெரியவில்லை எதுவும் என்றால் இறந்தவர்களுக்கு உலகில் நடப்பவை எப்படித் தெரியும்? இத்தனைக்கும் நாம் மேலே காட்டியுள்ள சம்பவங்களில் உறங்கியவர்கள் நல்லடியார்கள் தான் என்பதில் சந்தேகமேயில்லை. அவர்களுக்குத் தான் உறங்கும் போது என்ன நடந்தது என்ற விஷயம் தெரியவில்லை.

மக்களுக்கு அத்தாட்சியான மாமனிதர் உஸைர்

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 2:259

இந்த வசனத்தில் “உம்மை அத்தாட்சியாக்குவதற்காக” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒரு நூற்றாண்டுக்குப் பின் உயிர் பெற்று வந்த அதிசய மனிதர் என்ற கோணத்தில் மட்டும் உஸைர் (அலை) அவர்கள் மக்களுக்கு அத்தாட்சியாகத் திகழவில்லை. அவர்கள் இன்னொரு கோணத்திலும் அத்தாட்சியாகத் திகழ்கிறார்கள்.

இறந்து விட்ட பெரியார்கள், நல்லடியார்கள் செவியுறுகின்றார்கள் என்று சங்கு முழங்கும் சாட்சாத்களின் வாதங்களைச் சாம்பலாக்கி விடுகின்றது இவரது மரணச் சம்பவம்.

அல்லாஹ் அவரிடம், “எவ்வளவு நாள் தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு, “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி” என்று பதில் கூறுகிறார். இதன் மூலம், தனக்கு என்ன நடந்தது என்றே அந்த நல்லடியாரால் அறிய முடியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று அவர் அறிந்தால் தானே, அவரைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியும்?

உஸைர் (அலை) அவர்களின் இந்தப் பதிலின் முலம், அவர்களைக் கடவுளின் குமாரர் என்று அழைக்கும் கூட்டத்தாருக்கு, “நீங்கள் நம்பி அழைத்த உஸைர் இப்போது கைவிரித்து உங்கள் முகத்தில் கரி பூசி விட்டார்” என்று அல்லாஹ் ஒரு பக்கம் தெளிவாக்குகின்றான்.

சமாதிகளில் சங்கமித்து விட்ட சங்கை மிக்க பெரியார்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அஜ்மீர் ஹாஜா முஈனுத்தீன், நாகூர் ஷாகுல் ஹமீது போன்றோர் செவியுறுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்று ஒரு கூட்டம் ஊர் தோறும் உரக்கப் புலம்பிக் கொண்டிருக்கின்றது அல்லவா? இந்தப் புலம்பல் சங்கதிகளுக்கும், சமாச்சாரங்களுக்கும் உஸைர் (அலை) அவர்கள் அளித்த இந்தப் பதிலின் மூலம் சாவு மணி அடிக்கின்றான்.

உஸைர் (அலை) அவர்களது உடல் கல்லறையில், கப்ரில் அடக்கப்படாமல் வெட்ட வெளியில் தான் கிடந்தது என்று தெளிவாகவே குர்ஆன் கூறுகின்றது. உடல் வெளியே கிடந்தும் வெளியுலகில் நடக்கும் எதுவும் அவருக்குத் தெரியவில்லை எனும் போது, சப்த அலைகளைச் சுமந்து திரியும் காற்றலைகள் கடுகளவும் நுழைய முடியாத கப்ருகளில் கிடக்கும் நல்லடியார்கள் எப்படிச் செவியுற முடியும்? நிச்சயம் செவியுற முடியாது.

இந்தக் கோணத்திலும் உஸைர் (அலை) அவர்கள் எல்லாக் காலத்திற்கும் சிறந்த அத்தாட்சியாகத் திகழ்கின்றார்கள்.

அகல மறுக்கும் ஆழ்ந்த தூக்கத்திலுள்ள, வழிகேடர்கள் என்று முத்திரை இடப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, சத்திய மறையின் இந்தச் சான்று போதுமானதே!

————————————————————————————————————————————————

மறு ஆய்வு – 3

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும்.

ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இத்தகைய ஹதீஸ்கள் நூற்றுக்கணக்கான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து, தெளிவான முடிவுக்கு வருவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளன.

அடிப்படைக் கொள்கைகளை வகுக்க வழி காட்டும் அத்தகைய ஹதீஸ்களில் பின்வரும் ஹதீஸும் அடங்கும்.

மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும்

பொருள்: பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!

இந்த நபிமொழி இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தருகின்றது.

திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ தடுக்கப்படாத ஒன்றை பிற மதத்தவர்கள் தமது மதச் சடங்காகச் செய்து வந்தால், அவர்களுக்கு ஒப்ப நடந்து விடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அடிப்படைக் கொள்கையாகும்.

தாலி கட்டுதல், மெட்டி அணிதல், திருமணத்தின் போது வாழை மரம் நடுதல், ஆரத்தி எடுத்தல், மங்கள நிகழ்ச்சிகளை அறிவிக்க மஞ்சள் தடவுதல், நெற்றியில் பொட்டு வைத்தல், நாமம் போடுதல், குடுமி வைத்தல், ஜெபமாலை எனப்படும் தஸ்பீஹ் மணி பயன்படுத்துதல், மீலாது விழா கொண்டாடுதல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காரியங்கள் குறித்து மேற்கண்ட நபிமொழியின் மூலம் தீர்வு காணலாம்.

இக்காரியங்களைச் செய்யக் கூடாது என்று நேரடியாகத் தடை இல்லாவிட்டாலும், இக்காரியங்களை நேரடியாக அனுமதிக்கும் சான்றுகள் இல்லாததால் – மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் முடிவு செய்யலாம்.

எனவே தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் அதிகமதிகம் பயன்படுத்தப்படும் நபிமொழிகளில் ஒன்றாக இந்த நபிமொழி அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து விலகி, பிற சமயக் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவோருக்கு இந்த ஹதீஸ் பெரும் அச்சுறுத்தலாகவும் சவலாகவும் இருக்கின்றது.

எனவே இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனமாக்கி விட்டால் எண்ணற்ற போலிச் சடங்குகளை நியாயப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் பொருந்தாத காரணங்களைக் கூறி இதைப் பலவீனமாக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த ஹதீஸைப் பலவீனமானது என்று நிறுவுவதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் காரணங்கள் ஏற்புடையது தானா? என்பதை விரிவாக அலசுவோம்.

இந்தக் கருத்தில் ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலிலும், பஸ்ஸார் நூலிலும்

இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூதிலும்

இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியல் இது தான்.

 1. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி)
 2. ஹுதைபா (ரலி) கூறியதாக அவரது மகன் அபூஉபைதா
 3. அபூஉபைதா கூறியதாக இப்னு ஸீரீன்
 4. இப்னு ஸீரீன் கூறியதாக ஹிஷாம் பின் ஹஸ்ஸான்
 5. ஹிஷாம் பின் ஹஸ்ஸான் கூறியதாக அலீ பின் குராப்
 6. அலீ பின் குராப் கூறியதாக அப்துல் அஸீஸ் பின் கத்தாப்
 7. அப்துல் அஸீஸ் பின் கத்தாப் கூறியதாக முஹம்மத் பின் மர்சூக்
 8. முஹம்மத் பின் மர்சூக் கூறியதாக மூஸா பின் ஜக்கரிய்யா
 9. மூஸா பின் ஜக்கரிய்யா கூறியதாக நூலாசிரியர் தப்ரானி

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக தப்ரானியில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒவ்வொரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றியும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றாலும் இந்த ஹதீஸைப் பொறுத்த வரை அதற்கு அவசியம் இல்லை.

ஏனெனில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று விமர்சனம் செய்பவர்கள், மேற்கண்ட அறிவிப்பாளர்களில் ஒரே ஒருவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள். அந்த ஒரு அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

எனவே அந்த ஒரு அறிவிப்பாளர் பற்றி அவர்கள் செய்துள்ள விமர்சனத்தை மட்டும் அலசுவதன் மூலம் இந்த ஹதீஸின் தரத்தை நாம் முடிவு செய்து விட முடியும்.

ஐந்தாவது இலக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அலீ பின் குராப் என்ற அறிவிப்பாளர் காரணமாகவே இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

அலீ பின் குராப் பற்றிய விமர்சனம்

அலீ பின் குராப் என்ற அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் அறிஞர்களிடையே இருக்கின்றது.

அலீ பின் குராப் என்பவரைப் பற்றிச் சொல்லப்படும் குறைகள் யாவை என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.

 1. ஷியாக் கொள்கையில் பற்றுடையவர்

இவரது ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கூறும் முதல் காரணம், “இவர் ஷியாக் கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்தார்” என்பது தான்.

இப்னு ஹிப்பான், இப்னு மயீன் உள்ளிட்ட சில அறிஞர்கள், “இவர் ஷியாக் கொள்கையில் பற்று கொண்டவராக இருந்தார்’ என்று கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக  இவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் எத்தகைய கொள்கை உடையவர் என்ற அடிப்படையில் ஒருவரது நம்பகத்தன்மையை ஹதீஸ் கலை வல்லுநர்கள் எடை போடுவதில்லை. அவரது நாணயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம்பகத்தன்மையை எடை போடுவார்கள்.

ஹதீஸ் கலை வல்லுனர்களால் நம்பகமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் பலர் ஷியாக்களாகவும், கத்ரியாக்களாகவும், முர்ஜியாக்களாகவும் இன்னும் பல தவறான கொள்கையுடையவர்களாகவும் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

இதனால் தான் இவரைப் பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறும் போது, “இவர் பழுதில்லாதவர்; ஆயினும் ஷியாக் கொள்கையுடையவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“இவர் ஷியாக் கொள்கையுடையவர் என்பதால் இவரைக் குறை கூறியுள்ளனர். ஆனால் இவரது அறிவிப்புக்களைப் பொறுத்த வரை இவரை உண்மையாளர் என்று வர்ணித்துள்ளனர்’ என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன் பின் இத்ரீஸ் அவர்கள் பின்வரும் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அலீ பின் குராப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்மாரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “அவர் ஹதீஸில் ஈடுபாடு உள்ளவராகவும், ஹதீஸ் ஞானமுள்ளவராகவும் இருந்தார்” என்று விடையளித்தார்கள். “அவர் பலவீனமானவர் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

அதற்கவர்கள், “அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். ஹதீஸ் பற்றி ஞானமுள்ள ஒருவர் பொய்யராக இல்லாத போது, ஷியாக் கொள்கை அல்லது கத்ரியாக் கொள்கையுடையவர் என்ற காரணத்துக்காக அவரது ஹதீஸ்களை நான் விட்டு விட மாட்டேன். மூஸிலியை விடச் சிறந்தவராக இருக்கும் ஒருவர் ஹதீஸ் பற்றி ஞானமில்லாதவராக இருந்தால் அவர் வழியாக எதையும் நான் அறிவிக்கவும் மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

இப்னு கானிவு அவர்கள் இவரைப் பற்றிக் கூறும் போது, “இவர் நம்பகமானவர்; ஷியாக் கொள்கை உடையவர்” என்று குறிப்பிட்டார்கள்.

ஒருவரது கொள்கை எது என்பது ஹதீஸ் துறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

புகாரியில் ஷியாக்கள்

இதை இன்னும் உறுதிப்படுத்திட புகாரியில் இடம் பெற்ற ஷியாக்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

புகாரி இமாமின் ஆசிரியரான உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அத்துடன் மிகவும் நம்பகமானவராகவும் இருந்தார். இதன் காரணமாக புகாரி இமாம் அவர்கள் இவர் வழியாக ஏராளமான ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

அவை வருமாறு: 8, 126, 127, 354, 520, 865, 1139, 1140, 1330, 1915, 2006, 2341, 2518, 2700, 3359, 3632, 4039, 4043, 4053, 4150, 4251, 4512, 4706, 4839, 4904, 4917, 4928, 4979, 4990, 5054, 5152, 5541, 5836, 6154, 6536, 6744, 6864, 6908, 6920, 7063, 7311, 7511.

இது போல் அதீ பின் ஸாபித் அன்ஸாரி என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்; அத்துடன் நம்பகமானவராகவும் இருந்தார். இவரது கொள்கையைக் கவனிக்காமல் நம்பகத்தன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு இமாம் புகாரி அவர்கள் இவர் வழியாகப் பல ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

55, 769, 964, 989, 1382, 1674, 1884, 2398, 2474, 2727, 3213, 3255, 3282, 3783, 4050, 4124, 4222, 4225, 4414, 5351, 5397, 5516, 5881, 6048, 6115, 6195, 7546.

இவரைப் போலவே அவ்ஃப் பின் அபீஜமீலா என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடையவராகவும் இருந்தார். இவர் வழியாகப் பின்வரும் ஹதீஸ்களை இமாம் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

47, 344, 348, 547, 599, 1143, 2225, 3275, 3345, 3404, 3915, 3947, 4425, 4674, 4799, 4849, 5010, 5198, 6075, 6546, 6669, 7047, 7099, 7112

இது போன்று முஹம்மத் பின் ஃபுளைல் பின் கஸ்வான் என்பவரும் நம்பகமானவராகவும், அதே சமயம் ஷியாக் கொள்கையுடையவராகவும் இருந்தார். இவர் வழியாகவும் பல ஹதீஸ்களை புகாரி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

38, 595, 1300, 1728, 2041, 2064, 2544, 2963, 3821, 4022, 4170, 4268, 5374, 5483, 6460, 6682, 7079, 7563

இன்னும் இவர்களைப் போன்று வேறு சில ஷியாக்களின் அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் ஷியாக் கொள்கை உடையவர் என்பதற்காக ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தைப் பற்றியும் அவ்வாறு கூற வேண்டும். அப்படி எந்த அறிஞரும் கூறவில்லை.

எனவே அலீ பின் குராப் என்பவர் ஷியாக் கொள்கையுடையவர் என்றாலும் அவர் நம்பகமானவர்; உண்மையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைக் காரணம் காட்டி இவரது அறிவிப்புகளை நிராகரிக்க முடியாது.

 1. அலீ பின் குராப் – தத்லீஸ் செய்பவர்

ஒரு ஹதீஸை அறிவிப்பவர், தனக்கு அறிவித்தவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிட்டால் தான் அவரின் நம்பகத் தன்மையை மற்றவர்கள் பரிசீலிக்க முடியும்.

இப்படித் தான் ஹதீஸ்கள் நூல் வடிவில் திரட்டப்பட்ட காலத்தில் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் அறிவித்து வந்தனர். ஆயினும் சில அறிவிப்பாளர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறாமல், அறிவித்தவரின் ஆசிரியரைக் கூறி விடுவார்கள். அதாவது தம்முடைய ஆசிரியரைக் கூறாமல் ஆசிரியரின் ஆசிரியரைக் கூறி விடுவர்.

தமது ஆசிரியரை விட ஆசிரியரின் ஆசிரியர் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, மறதியாகவோ இவ்வாறு சிலர் கூறி விடுவர்.

தனது ஆசிரியரை இருட்டடிப்புச் செய்வதை தத்லீஸ் எனக் குறிப்பிடுவர்.

அப்துல்லாஹ் என்பவர் அப்துர்ரஹ்மானுக்கு ஒரு ஹதீஸைக் கூறுகிறார்; அப்துர்ரஹ்மான், அப்துல் காதிருக்கு இதைக் கூறுகிறார்.

இதை அப்துல் காதிர் எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்றால் “எனக்கு அப்துர்ரஹ்மான் கூறினார்; அவருக்கு அப்துல்லாஹ் கூறினார்” என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்காமல் “அப்துல்லாஹ் கூறினார்” என்று மட்டும் அறிவித்தால் இவர் தனது ஆசிரியர் அப்துர்ரஹ்மானை இருட்டடிப்புச் செய்து விட்டார்.

அப்துர்ரஹ்மான் என்பவர் நம்பகமற்ற அறிவிப்பாளராக இருக்க வாய்ப்புள்ளது எனும் போது அதை இருட்டடிப்புச் செய்தால் தவறான ஹதீஸ் சரியான ஹதீஸாகி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இத்தகைய வழக்கமுடைய ஒருவர் “அப்துர்ரஹ்மான் கூறினார்” என்று தனது ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தி அறிவித்தாலும் இடையில் யாரையும் விட்டிருப்பாரோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய குணமுடையவர், “அப்துர்ரஹ்மான் கூறினார்” என்று கூறாமல், “அப்துர்ரஹ்மான் என்னிடம் கூறினார்” என்றோ, அல்லது “அப்துர்ரஹ்மானிடம் நான் செவியுற்றேன்” என்றோ கூறி, யாரையும் இருட்டடிப்பு செய்யவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.  இவ்வாறு தெளிவுபடுத்தி விட்டால் அந்த ஹதீஸ் ஏற்கப்படும். அவ்வாறு தெளிவுபடுத்தா விட்டால் அது நிராகரிக்கப்படும்.

இந்த அடிப்படையைக் கவனத்தில் வைத்துக் கொண்டு அலீ பின் குராப் பற்றிய விமர்சனத்துக்கு வருவோம்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், தாரகுத்னீ உள்ளிட்ட சில அறிஞர்கள், “இவர் தத்லீஸ் செய்பவர்’ என்று கூறியுள்ளனர். அதே சமயம் இவர் உண்மையாளர் என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளனர். யஹ்யா பின் மயீன், நஸயீ, அபூதாவூத், தாரகுத்னீ உள்ளிட்ட பலர் இவரைப் பற்றி நல்லெண்ணம் கொள்ளும் வகையில் கருத்துக் கூறியுள்ளனர்.

எனவே நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவர் தத்லீஸ் செய்யும் வழக்கம் உள்ளவராக இருக்கிறார். மேற்கண்ட ஹதீஸையும் இருட்டடிப்புச் செய்து தான் அறிவித்துள்ளாரா? அல்லது தனது ஆசிரியரிடம் நேரடியாகக் கேட்டு அறிவிப்பதைத் தெளிவுபடுத்தி அறிவித்துள்ளாரா? என்பதன் அடிப்படையில் இது பற்றி நாம் முடிவு செய்ய வேண்டும்.

தப்ரானியின் அறிவிப்பில் “ஹிஷாம் பின் ஹஸ்ஸான் வழியாக’ என்று தான் இவர் கூறுகிறார். ஹிஷாம் பின் ஹஸ்ஸானிடம் தான் நேரடியாகக் கேட்டதாகக் குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு மட்டுமே இருந்தால் இதில் இருட்டடிப்புச் செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆனால் பஸ்ஸார் என்ற நூலில் உள்ள அறிவிப்பில், தான் இருட்டடிப்புச் செய்யவில்லை என்பதை அவர் தெளிவாகவே சொல்லிக் காட்டுகிறார்.

இந்த அறிவிப்பில் “ஹிஷாம் பின் ஹஸ்ஸான் என்பவர் எனக்குக் கூறினார்” என்ற வாசகத்தை அலீ பின் குராப் பயன்படுத்தியுள்ளார். எனக்குக் கூறினார் என்ற சொல் இவர் நேரடியாக அவரிடம் கேட்டதை உறுதிப் படுத்துகிறது என்பதால் இந்த ஹதீஸில் எந்த இருட்டடிப்பும் இருக்க வழியில்லை. எனவே தத்லீஸ் என்ற காரணம் கூறி இதைப் பலவீனமான அறிவிப்பு என்று கூறுவது ஹதீஸ் கலை விதிகளுக்கு முரணானதாகும்.

 1. இப்னு ஹிப்பானின் கடுமையான விமர்சனம்

இறுதியாக, இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளதை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

“இவர் இட்டுக்கட்டப்பட்ட பல விஷயங்களை அறிவித்துள்ளார். எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது; மேலும் இவர் ஷியாக் கொள்கையில் தீவிரமானவராக இருந்தார்” என்பது இப்னு ஹிப்பான் அவர்களின் விமர்சனம்.

இப்னு ஹிப்பான் அவர்களின் விமர்சனத்தை ஆய்வு செய்த அறிஞர்கள் இப்னு ஹிப்பான் எல்லை மீறி விமர்சனம் செய்திருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்தவர் என்ற இப்னு ஹிப்பானின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

“இவரைப் பலவீனமாக்கியதில் இப்னு ஹிப்பான் வரம்பு மீறி விட்டார்” என்று இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

“இவரைப் பற்றிக் குறை கூறியவர்கள் இவருக்கு அநீதி இழைத்து விட்டனர்” என்று இப்னு மயீன் அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால்)

எனவே “பிற சமயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவரே’ என்று தப்ரானியிலும் பஸ்ஸாரிலும் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஆதாரப் பூர்வமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அபூதாவூதில் இடம் பெறும் அறிவிப்பில் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் என்பவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். “இந்த ஹதீஸ் மிகவும் பலமான அறிவிப்பு” என்று இப்னு தைமிய்யா போன்றவர்கள் கூறியிருந்தாலும் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பற்றிய விமர்சனத்திற்கு அவர்களிடம் பதில் இல்லை.

முஸ்னத் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பும் இதே காரணத்துக்காக பலவீனமாக உள்ளது.

இவ்விரு அறிவிப்புக்கள் பலவீனமானவை என்றாலும் தப்ரானியிலும், பஸ்ஸாரிலும் பதிவான அறிவிப்புக்கள் பலமானவை என்பது மறு ஆய்விலும் உறுதிப்படுகின்றது.

————————————————————————————————————————————————

அறிவியல் அற்புதங்கள்                          தொடர்: 3

ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி

எம். ஷம்சுல்லுஹா

ஆட்சித் தலைவர் வரும் போது அவருடன் முப்படைகளும், அதிகாரிகளும் அலுலவர்களும் உடன் வருவர். சமூகப் பிராணியான மனித சமுதாயத்தில் மட்டும் தான் இது உள்ளது என்று நினைக்காதீர்கள். பூச்சியினத்தில் சமூகப் பூச்சி என்றழைக்கப்படும் தேனீக்களிடமும் இது உள்ளது.

கூட்டில் வலம் வந்து ஆட்சி செலுத்தும் இந்த ராணித் தேனீயுடன் சதாவும் காவலாளி, எடுபிடித் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் மொய்த்துக் கொண்டு நிற்கின்றன. ராணித் தேனீயின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதியியல் திரவம் அல்லது ஆவி தான்.

மனிதனுக்கு உயிர் எப்படி அவசியமோ அது போன்று ஓர் அரசாங்கத்திற்கு, அதை ஆள்கின்ற ஆட்சித் தலைவனுக்கு அதிகாரம் மிக மிக அவசியமாகும். அந்த அதிகாரம் இல்லையெனில் ஆட்சித் தலைவன் பிணத்திற்குச் சமம். உடனே குடிமக்கள் புதியதொரு அரசாங்கத்தை நிறுவி, புதிய ஆட்சித் தலைவரைத் தேர்வு செய்கின்றனர்.

இந்தப் புத்திசாலித்தனம் மனித இனத்திற்குத் தான் சொந்தம்      என்று மனிதன் பெருமைப்பட்டுக் கொள்வானானால் அது பைத்தியக்காரத் தனமாகும். காரணம், இந்தப் புத்திசாலித்தனம் சமூகப் பூச்சியான தேனீக்களிடம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகின்றது.

அரியணை ஏறும் இளைய ராணி

ராணித் தேனீயிடம் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற வேதிப்பொருள் வெளிப்பட வில்லையாயின் அது ராணியாக நீடிப்பதற்குரிய தகுதியை இழந்து விடுகின்றது; அது ஆள்வதற்கான அதிகாரத்தை இழந்து விடுகின்றது. காரணம், இந்த வேதியியல் சுரப்பி தான் கூட்டின் மொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் மையமாகும். அது பாதிக்கப்பட்டு விட்டால் கூட்டின் நிர்வாகம், உள்நாட்டு விவகாரம், வெளி விவகாரம் எல்லாம் ஸ்தம்பித்து விடும். இது போன்ற நிர்வாகச் செயலின்மை தொடரலாகாது என்று பாட்டாளி வர்க்கத் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.

உள்நாட்டு நிர்வாகம் எனும் போது ராணித் தேனீயின் முக்கியப் பணியே பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிக்காமல் தடுப்பது தான். இந்தப் பாட்டாளித் தேனீக்கள், ராணித் தேனீயை நக்குகின்ற போது ராணித் தேனீயிடமிருந்து வெளியாகும் வேதிப் பொருள், பாட்டாளித் தேனீக்கள் முட்டை பொரிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது. அந்த வேதிப் பொருள் ராணித் தேனீயிடம் சுரக்கவில்லை எனில், பாட்டாளித் தேனீக்கள் முட்டையிட்டு, அதனால் தேன் கூட்டின் நிர்வாகம் நிர்மூலமாக நேரிடும். இது தேன்கூட்டின் உள்நாட்டு விவகாரமாகும்.

வெளி விவகாரம் எனும் போது, மலர்களிலிருந்து தேன் கொண்டு வரும் பணியைக் குறிப்பிடலாம். இதையெல்லாம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எல்லாமே ராணித் தேனீயிடமிருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான்.

இப்படி ஒரு நிர்வாகச் சீர்குலைவு ஏற்படுவதைப் பாட்டாளித் தேனீக்கள் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அடுத்த கட்ட ஆட்சித் தலைவியை, ராணித் தேனீயை உருவாக்கும் பணியில் அவசரமாக ஈடுபடுகின்றன. நிர்வாகம் ஸ்தம்பித்து விடாமல் இருக்க, பாட்டாளித் தேனீக்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றன.

ஏற்கனவே ராணித் தேனீ இட்டிருக்கும் முட்டைகளிலிருந்து ராணிக்களை உருவாக்குகின்றன. இந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் கன்னி ராணி அடுத்த கட்ட ராணியாக அரியணை ஏறுகின்றது. எப்படி?

ஒரே சமுதாயம்! ஒரே தலைமை!

இலங்கையில் இன வாதத்திற்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பை உலகம் மறக்காது. அன்றிலிருந்து இன்று வரை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தான். தனக்கு எதிராக யார் கிளம்பினாலும் அவரைத் தீர்த்துக் கட்டி விடுவார். அதனால் தான் இப்போதும் அந்த அமைப்பின் தலைவராக நீடித்துக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு இன வாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்ற நிலைபாட்டிற்காக அவரை இங்கு உதாரணம் காட்டியுள்ளோம்.

இந்த நிலைபாடு பிரபாகரன் கண்டுபிடித்ததல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகிற்குக் கற்றுத் தந்த அரசியல் வழிகாட்டல் ஆகும்.

யார் ஓர் ஆட்சியாளரிடம் பைஅத் செய்து, அவரிடம் கைப்பிடித்து உளமாற உறுதி வழங்கி விடுகிறாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3431

சீர்மிகு சமுதாயத்தை வழி நடத்திச் செல்வோருக்கு, சமுதாயத்தைக் கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு இந்த வழிகாட்டல் துணை புரியும். இப்படியொரு வழிகாட்டலை இறைவன் சின்னஞ்சிறு தேனீக்கும் வழங்கி உள்ளான். அந்த வழிகாட்டலைப் பெற்ற தேனீக்கள் அதைத் திறம்படவே செயல்படுத்துகின்றன.

முட்டையிலிருந்து வெளிவந்த கன்னி ராணி, முதன்முதலில் செய்கின்ற வேலை, குழந்தையாக உள்ள அதாவது முட்டைக்குள் உள்ள மற்ற ராணித் தேனீக்களைக் கொல்வது தான். இது தான் அதன் முதல்கட்டப் பணி! அதற்கு அடுத்த கட்டப் பணி, தனது தாய் ராணியின் பக்கம் திரும்புகின்றது. ஒன்று, அந்தத் தாய் ராணி தானாகச் சாக வேண்டும். அல்லது புதுக் கூட்டைக் கட்டுவதற்கு வேறு இடத்தை நோக்கிப் புறப்பட வேண்டும். இல்லையெனில் தாய் என்றும் பார்க்காமல் அதை இந்தக் கன்னி ராணி கொன்று விடும்.

அடுத்து, முட்டைகளிலிருந்து ராணிக்களாக வெளிவந்த தேனீக்களைக் கொல்லும் பணியில் கன்னி ராணி ஈடுபடுகின்றது.

இவ்வாறு தனக்கு எதிராகக் கிளம்பவிருக்கும் அத்தனை சக்திகளையும் அழித்து விட்டு, தனியொரு ராஜாங்கத்தை நடத்துகின்றது.

மனித இனத்தில் ராணுவத் தளபதிகள் நடத்துகின்ற, ராணுவ ஆட்சியை மிஞ்சுகின்ற வகையில் ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி அமைந்திருக்கின்றது.

இப்படி ஒரு புத்திசாலித்தனத்தை இந்தச் சின்னஞ்சிறு பூச்சியினத்திற்குக் கொடுத்தவன் யார்? எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? இந்த அருளைத் தான் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:1, 2, 3

தனது படைப்பாற்றலைக் கூறி தன்னை துதிபாடச் சொல்கிறான். அல்லாஹ்வின் இந்தப் படைப்பாற்றலை உணர்த்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தொழுகையில் ஸஜ்தாவின் போது, “மிக உயர்ந்த எனது இறைவன் தூய்மையானவன்” என்று பணிந்து போற்றுகின்றார்கள்.

மனிதன் நாட்டுக்குள் ஆட்சி செலுத்தும் தன் திறமைகளைக் கண்டு வியந்து கொண்டிருக்கிறான். ஆனால் இவனது கண்களால் காண முடியாத ஒரு பேராட்சி இந்தத் தேன் கூட்டுக்குள் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை நடத்துபவன் யார்? மாபெரும் அரசனான அந்த அல்லாஹ் தான். அதனால் தான் அவன் தனக்குப் பங்காளன் இல்லை என்று கூறுகின்றான்.

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

அல்குர்ஆன் 25:2

ஒவ்வொரு பொருளையும் படைத்து, அதைத் திட்டமிட்டு அமைத்த அந்த அல்லாஹ், அவனுடைய படைப்பின் அற்புதத்தை, தேன் கூட்டுக்குள் நடக்கும் ஆட்சியின் அதிசயங்களை தேனீ என்ற அத்தியாயத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கச் செய்கிறான்.

இன்னும் பார்ப்போம்

இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

பிடிவாதம் சத்தியத்தை அறிய உதவாது

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஏராளமான சான்றுகளையும், இதன் அடிப்படையில் ஹதீஸ்களை விமர்சித்த அறிஞர்களின் வழிமுறை களையும் சென்ற இதழில் வெளியான “அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்’ என்ற கட்டுரையில் விரிவாக, தெளிவாகப் பார்த்தோம். நியாயமாகச் சிந்திக்கும் யாரும் அக்கருத்துக்களை மறுக்க மாட்டார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று  தமிழகத்தில் சொன்ன போது அதைப் பலர் எதிர்த்தார்கள்; இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்காகப் பல நாட்களை ஒதுக்கி ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது தான்  இந்த விதி ஹதீஸ் கலையில் உறுதி செய்யப்பட்ட ஒன்று தான் என்பதும், இவருக்கு முன்னால் பல அறிஞர்கள் பல ஹதீஸ்களை இந்த அடிப்படையில் புறக்கணித்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது. ஹதீஸ் கலையின் இந்த விதிகளைப் படிக்காத காரணத்தினால் தான் மாற்றுக் கருத்துடையவர்கள் நமக்கெதிராகக் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவானது.

அறியாத காரணத்தினால் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு சத்தியத்தை உணர்த்துவதற்காக நாம் ஏகத்துவத்தில் வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்ற தகவல்களை கோவை, கோட்டார், விருதுநகர் போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் வெளிநாடு மற்றும் உள்ளூர்களில் குறுந்தகடுகள் வாயிலாகவும் கிடைக்கச் செய்தோம்.

இன்று வரை இதற்கு முறையான பதில்களை இவர்கள் தரவில்லை. இந்நிலையில் கோவையில் நாம் விளக்கமளித்த மறு வாரம், நாம் பேசிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஜாக் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தார்கள்.

நமக்கெதிராகப் பேச வேண்டும் என்பதற்காகவே அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறைவனுக்குப் பயந்து உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தால் நாம் வைத்த கேள்விகளுக்கு முறையான விளக்கத்தைக் கொடுத்திருப்ôர்கள். அல்லது பிடிவாதம் கொள்ளாமல் தாங்கள் கூறியது தவறு என்று ஒத்துக் கொண்டிருப்பார்கள்.

குருட்டுத்தனமான கேள்விகள்

அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும், அவர்கள் செய்த விமர்சனங்களையும் நாம் கூறிய போது, ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அது குறித்து ஹதீஸ் கலை அறிஞர் எழுப்பிய கேள்வியையும் வெளியிட்டிருந்தோம்.

அதற்குப் பதிலளிக்கும் போது, “இந்த ஹதீஸ் சரியாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்று உள்ளதா?” என்ற குருட்டுத்தனமான கேள்வியை கேட்டார்கள்.

குர்ஆனிற்கு முரண்படும் செய்திகள் சஹீஹாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்ற கருத்தில் நாம் கூறவேயில்லை. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தான் கூறினோம்.

ஏனென்றால் ஒரு ஹதீஸ் சரியாவதற்கு அறிவிப்பாளர் தொடரும் சரியாக இருக்க வேண்டும்; அந்த ஹதீஸில் இடம் பெறும் செய்தியும் சரியாக இருக்க வேண்டும். இதைத் தான் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

அறிஞர்கள் விமர்சனம் செய்ததாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் பெரும்பாலும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரி, முஸ்லிம் போன்ற நம்பத் தகுந்த புத்தகங்களில் இடம் பெற்றவை.

குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதி புதியதல்ல; ஏற்கனவே பல அறிஞர்கள் இவ்விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள். இதற்குப் பல சான்றுகளைக் கூறினோம். நாம் கேட்ட கேள்விக்குப் பதில் தராமல் சம்பந்தமில்லாத விளக்கங்களை இதற்குக் கூறுகிறார்கள். நாம் வெளியிட்ட ஹதீஸ்களுக்கு விளக்கங்களைக் கூறியுள்ளார்கள்.

அறிஞர்கள் மறுத்த ஹதீஸ்களுக்கு விளக்கம் என்னவென்று நாம் இவர்களிடத்தில் கேட்கவே இல்லை. நாம் கடைப்பிடித்த வழிகளை இந்த அறிஞர்களும் கடைப்பிடித்துள்ளார்கள் என்பதற்காகத் தான் அந்தக் தகவல்களைக் கூறினோம். இவ்விதி புதிய விதியல்ல என்று ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

குர்ஆனிற்கு முரண்படுவதாக அறிஞர்கள் கூறிய ஹதீஸ்கள் உண்மையில் முரண்படுகிறதா? அல்லது அதற்கு இணைத்து விளக்கம் கொடுக்க முடியுமா? என்று சிந்திப்பது இவர்களுடைய வேலை மட்டுமல்ல! நம்முடைய வேலையும் கூட! அந்த வேலையை இவர்களை விடப் பன்மடங்கு அதிகமாக நாம் செய்கின்றோம்.

இவ்விதி அறிஞர்கள் கடைப்பிடித்த விதியா? இல்லையா? என்பது தான் நம்முடைய கேள்வி. இதற்குப் பதில் சொல்லாத வரை இவர்கள் தப்பித்து ஓடுகிறார்கள் என்ற முடிவுக்குத் தான் மக்கள் வருவார்கள்.

அறிஞர்களின் பார்வை

இவர்களுடைய இந்த அறியாமையை அகற்றுவதற்காகவும் மக்களை இவர்களுடைய குழப்பத்திலிருந்து காப்பதற்காகவும் பின்வரும் தகவல்களைக் கூறுகிறோம். அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் போதாது; செய்தியும் சரியாக இருக்க வேண்டும் என்ற விதியை இந்தத் தகவல்கள் தெளிவாக எடுத்துரைக்கும்.

பெரும் பெரும் மாமேதகள் ஹதீஸைச் சரி காணுவதற்கு இரண்டு வழிமுறைகளைக் கடைப்பிடித்து உள்ளனர்.

 1. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது
 2. அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும். இந்த ஒன்று மட்டும் அதைச் சரியானது என்று நிறுவுவதற்குப் போதாது. இரண்டாவது நிபந்தனைக்கும் அவசியம் உட்பட்டதாக இருக்க வேண்டும்.

 1. ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.
 2. இதை விட வலிமையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக்கூடாது.
 3. நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக்கூடாது.
 4. ஒரே ஹதீஸ் முரண்பாடாக, பல விதங்களில் அறிவிக்கப்படக்கூடாது.

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இதுபோன்ற நிலையில் அறிஞர்கள் அந்த ஹதீஸிற்கு “அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி” (சஹீஹுல் இஸ்னாத்) என்று மட்டுமே கூறுவார்கள். அதாவது தகவல் சரியானது என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ்ஸலாஹ் அவர்களின் விளக்கம்

அறிஞர்கள் இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல், “இதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது’ என்றோ அல்லது “இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனானது’ என்றோ கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தை கவனிக்கும் போது) தன்னை விட வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதால் அல்லது ஏதோ ஒரு குறை (அதில்) இருப்பதால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும், இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல்: முகத்திமது இப்னிஸ்ஸலாஹ், பாகம்: 1, பக்கம்: 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று

தன்னை விட வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ தகவல் சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹாகவோ அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாகவோ சில வேளை இருக்கும்.

இமாம் நவவீ அவர்களின் கூற்று

தன்னை விட வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹாகவோ அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாகவோ சிலவேளை இருக்கும். (நூல்: அல்இர்ஷாத்)

இமாம் ஹாகிமின் கூற்று

உறுதிமிக்க அறிவிப்பாளர்களுக்கு குறை தென்படாத காரணத்தினால் அவர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறி விடும். உறுதி மிக்க அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.

நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும், இப்னு ஜமாஆ என்பரும் கூறியுள்ளார்கள்.

நூல்கள்: அல்மன்ஹலுர்ரவீ,  பாகம்: 1, பக்கம்: 37

அல்முக்னிஃ, பாகம்: 1, பக்கம்: 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் உறுதிமிக்க ஆட்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றம் செய்யப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.

நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்:99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும் குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

நூல்: மஜ்மூஉல் ஃபதாவா, பாகம்: 18, பக்கம்: 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் ஹதீஸ் பல விஷயங்களால் தான் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும், கருத்தில் குறை வராமல் இருப்பதும், வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும், மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல்: அல்ஃபரூசிய்யா, பக்கம்: 246

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற தீர்ப்பைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருப்பதென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல.  எனவே முரண்பாடும், குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.

நூல்: ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம்: 1 பக்கம்: 77

சன்ஆனீயின் கூற்று

ஹதீஸ் கலை அறிஞர்கள், ஹதீஸின் தகவலைப் பற்றிப் பேசாமல் அறிவிப்பாளர் தொடர் சரியானது, ஹசனானது, பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருப்பதால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்)  இருப்பதால் செய்தி சரியாகாது.

நூல்: தவ்ளீஹுல் அஃப்கார், பாகம்: 1, பக்கம்: 234

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?
ஏ. மெஹர் நிஸா, அம்மாப்பட்டிணம்

இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது  அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, “இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அதை கைதிகளுக்குச் சாப்பிடக் கொடுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்

நூல்: அபூதாவூத் 2899, அஹ்மத் 21471, பைஹகீ, தாரகுத்னீ

இந்த ஹதீஸில் ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

? எங்கள் ஊர் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகையில் இமாம் வரவில்லை. அங்கிருந்த ஒருவரை தொழுகை நடத்தச் சொன்னோம். அவர் பெரிய சூரா ஓத நினைத்து தட்டுத் தடுமாறி, தப்பும் தவறுமாக ஓதி தொழுகை நடத்தினார். இப்படித் தொழுதால் தொழுகை கூடாது என்றும், இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா?
திவான் மைதீன், பெரியகுளம்

பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாம் வரவில்லையென்றால் அதற்காக ஜமாஅத் தொழுகையே நடத்தாமல் தனித்தனியாகத் தொழக் கூடாது. ஏனெனில் பள்ளிவாசல்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதே ஜமாஅத் தொழுகைக்காகத் தான். இமாம் வரவில்லை என்பதற்காக ஜமாஅத் தொழுகை என்ற முக்கியமான நபிவழியைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 645

ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப்படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான்.  எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.  நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி)

நூல்: அபூதாவூத் 460, நஸயீ 238

இமாம் வரவில்லை என்றால் இருக்கும் நபர்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவர் தொழுகை நடத்தலாம்.

எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில்  குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபாரக் கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாகக் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிறுத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)

நூல்: புகாரி 4302

இவ்வாறு தொழுகை நடத்துபவர் குர்ஆனை முழுமையாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பதோ, பொருளுணர்ந்து ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பதோ இல்லை.

குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.

(அல்குர்ஆன் 73:20)

இந்த வசனத்தின் அடிப்படையில் சூரத்துல் ஃபாத்திஹாவுடன், திருக்குர்ஆனின் ஒரேயொரு வசனத்தை ஓதிக் கூட தொழுகை நடத்தலாம். தொழுகை நடத்துபவர் நிறைய ஓத வேண்டும் என்பதற்காக, தப்பும் தவறுமாக ஓதக் கூடாது. குறைவாக ஓதினாலும் தெரிந்த வசனங்களை ஓத வேண்டும்.

அப்படியே இமாம் தவறு செய்தாலும் அதனால் பின்பற்றித் தொழுபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்.  அவர்கள் சரியாகத் தொழுவார் களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்.  அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு.  உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 653

? “கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்” என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் “நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை’ என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸை தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.
ஏ.எம்.எஸ். ஹமீது, கல்முனை, இலங்கை

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

அல்குர்ஆன் 2:186

ரமளான் மாதத்தை அடைபவர்கள் மீது நோன்பு கடமை என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்தப் பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்கு இருக்கின்றது என்று ஒருவர் கூறினால் குர்ஆன், ஹதீஸிலிருந்து அதற்குத் தெளிவான ஆதாரம் காட்ட வேண்டும். அதாவது ஒருவருக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சலுகையளித்துள்ளான். அந்தச் சலுகை என்பது, வேறு நாட்களில் மீட்டிக் கொள்வது தான் என்பதையும் இந்த வசனமே விளக்கி விடுகின்றது.

இது தவிர நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு நோன்பில் சலுகை அளித்தார்கள் என்றால் அந்தச் சலுகையும் வேறு நாட்களில் மீட்டிக் கொள்ளத்தக்க சலுகை என்றே விளங்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பு கடமையில்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோன்பு கடமையா? இல்லையா? என்பது தான். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோன்பு கடமையே இல்லை என்றால்  கண்டிப்பாக அது மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள். பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருமறை கூறுகின்றது.

கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

? ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா? விளக்கவும்.
பி. ஹஸன் முஹம்மது, விழுப்புரம்

வியாழக்கிழமை இஷா தொழுகையில் மேற்கண்ட சூராக்களையோ அல்லது வேறு குறிப்பிட்ட சூராக்களையோ ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. குர்ஆனில் எந்த அத்தியாயத்தையும் எந்தத் தொழுகையிலும் ஓதலாம் என்ற அடிப்படையில் மேற்கண்ட சூராக்களையும் ஓதுவதில் தவறில்லை. எனினும் இது நபிவழி என்று கூறுவதற்கு ஆதாரமில்லை.

? ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டும் என்கிறார்களே? இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் உண்டா? விளக்கவும்.
அரஃபாத்துன் நிஸா

கால் பட்டால் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது மாற்று மதக் கலாச்சாரமாகும். இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஒருவர் மீது தவறுதலாகக் கை பட்டு விட்டால் எப்படி வருத்தம் தெரிவிப்போமோ அது போன்று கால் பட்டாலும் வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம். தொட்டு முத்தமிடுவது கூடாது.

? நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?
நிரவி சகோதரிகள்

நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்து ஹதீஸ் உள்ளது.

இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்என்று அலீ (ரலி) அவர்கள் கூறி விட்டு, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3911

? அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?
கௌ. பஜ்ருல்லாஹ், வத்தலக்குண்டு

நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை. சாக்ரடீஸின் கருத்துக்கள் மனித சிந்தனையில் உதித்தவை. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு போதும் சமமாக முடியாது.

“நபிகள் நாயகத்தைப் போல் சாக்ரடீஸ் என்பவரும் பல தத்துவங்களைக் கூறியுள்ளார்’ என்று கூறக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்திக்குப் பங்கம் வரும் வகையில் ஒப்பு நோக்கக் கூடாது.

? “தூரத்தில் மணம் புரியுங்கள்; (நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிவதன் மூலம்) பலவீனமடைந்து விடாதீர்கள்; மெலிந்து விடாதீர்கள்’ என்றும், “மிக நெருங்கிய உறவினர்களை மணக்காதீர்கள்; ஏனெனில் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும்’ என்றும் ஹதீஸ் உள்ளதா? அவ்வாறு திருமணம் செய்தால் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்பது உண்மையா?
எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை

நாம் தேடிப் பார்த்த வரையில் இந்தக் கருத்தில் ஹதீஸ் எதுவும் இல்லை. அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால் எந்த நூலில் உள்ளது என்ற விபரத்தைக் கேட்டு எழுதினால் பரிசீலிக்கலாம்.

இந்தக் கருத்தில் ஹதீஸ் இல்லாதபட்சத்தில், கீழ்க்கண்ட வசனத்தில் அல்லாஹ் தடை செய்துள்ள உறவுகளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே   நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23

நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிந்தால் குழந்தை குறைவுள்ளதாகப் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறினாலும் நடைமுறையில் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களும் சரி! முஸ்லிமல்லாத மற்றவர்களும் சரி! பெரும்பாலும் நெருங்கிய உறவுகளில் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்தக் காரணத்தால் குறையுள்ள குழந்தை பிறக்கும் என்றால் இங்கு அதிகமான குழந்தைகள் ஊனத்துடன் தான் பிறக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நமக்குத் தெரிந்த மக்களிடம் கணக்கெடுத்துப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

————————————————————————————————————————————————

அபூபக்ர் (ரலி) வரலாறு                     தொடர் – 33

பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்

எம். ஷம்சுல்லுஹா

காலிதின் கர்ஜனைக்குப் பெரும் புள்ளிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் காலிதின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. ஆனால் மாலிக் பின் கைஸ் என்பவன் மட்டும் காலிதுக்கு நேராக வந்து நின்றான். தனக்கு நிகரில்லாத ஒருவன் தன்னை எதிர்க்க வந்ததைக் காலிதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “இழிவான ஈனப் பிறவியே! உனக்கு என்ன இத்தனை துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது? நீ என்ன எனக்கு நிகரா?” என்று கூறி வாளில் ஒரே உரசல் தான். அவனது தலை கீழே விழுகின்றது. பந்தியில் இருந்தவர்களுக்குக் காலிதின் இந்தப் பந்தாட்டம் பயத்தைக் கொடுத்தது.

“உங்களை நான் எச்சரிக்க வில்லையா? இப்படியொரு தலையாய வன விலங்கு என் முன் களம் புகுந்த இந்நாளைப் போல் என் வாழ்நாளில் ஒரு நாளையும் நான் கண்டதில்லை” என்று தளபதி ஜாபான் கூறினான்.

 “காலித் படையை ஒரு கை பார்த்து விட்டு சாப்பாட்டில் வந்து கை வைக்கலாமா?” என்று பந்திக்கு முந்திய படை வீரர்கள் ஜாபானிடம் கேட்டனர். அதற்கு ஜாபான், “ஏதோ நீங்கள் தெரியாமல் பந்தியை விரித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. இப்போதாவது எனக்குக் கட்டுப்படுங்கள். நீங்கள் விரித்து வைத்திருக்கும் உணவில் விஷத்தைக் கலந்து வையுங்கள். ஒருக்கால் போர்க்களம் அவர்களுக்குச் சாதகமானால் வெற்றி பெற்ற பின்னர் நிச்சயமாக இந்த உணவில் கை வைப்பார்கள். அவ்வாறு கை வைத்தால் காலியாக வேண்டியவர்கள் வெகு சீக்கிரம் காலியாகி விடுவார்கள். ஒருக்கால் போர்க்களம் நமக்குத் தான் என்றாகி விட்டால் எதிரிக்காக இப்படி ஒரு சதி செய்தோம் என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளலாம்” என்று ஜாபான் அவர்களிடம் கூறினான்.

“அது தேவையில்லை! எதிரிகளை வீழ்த்துவோம்; வைத்திருக்கும் உணவையும் சாப்பிடுவோம்” என்று படை வீரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதில் ஒரு தெம்பையும் தெளிவையும் பெற்ற ஜாபான் தனது வலது, இடது பக்கங்களின் படைகளுக்கு அப்துல் அஸ்வதையும், புஜைரையும் தளபதிகளாக நியமித்துப் போரில் குதித்தான்.

முன்னரே தயார் நிலையில் காலிதும், அவரது படையினரும் போரில் குதித்தனர். இரு படைகளும் மிக உக்கிரமாக மோதின. “யா அல்லாஹ்! இந்த எதிரிகளின் படைகளைப் பிடிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பளித்தால் அவர்களில் எவரையும் விட்டு வைக்க மாட்டேன்” என்று அல்லாஹ்விடம் காலித் உருக்கமாகப் பிரார்த்தித்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான்.

பஹ்மான் ஜாதவைஹ் இந்தப் போருக்காக ஜாபானை அனுப்பி வைக்கும் போது, “அவசியம் ஏற்பட்டாலே தவிர நான் வருவதற்குள்ளாக போரில் குதிக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார். ஆனால் பஹ்மான் ஜாதவைஹ் குறிப்பிட்டது போல் போர் முனையின் சூழல் ஜாபானை விட்டு வைக்கவில்லை. அதனால் அவன் காலிதைக் களத்தில் எதிர் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானான்.

போர்க்களத்தில் முஸ்லிம்களும், எதிரணியினரும் மிகக் கடுமையாகப் போரிட்டனர். முஸ்லிம்கள் எதிரணியிடமிருந்து பலத்த தாக்குதலை எதிர் கொண்டனர். போர்க்களத்தில் மிகப் பெரும் வலிமை வாய்ந்த பேராயுதம் பொறுமை தான். அந்தப் பொறுமையை இழந்து, புறமுதுகு காட்டி ஓடி விடுவார்களோ எனுமளவுக்கு எதிரிகள் முஸ்லிம்களை அடர்ந்தேறினர். ஆனால் முஸ்லிம்கள் பொறுமை காத்தனர். பொறுமையில் எதிரிப் படையினரை மிகைத்தும் விட்டார்கள்.

வாக்களித்த பஹ்மான் வரவில்லை

கிறித்தவ, இணை வைப்பு, பாரசீகப் படையினர் பேராவலோடும், பெரும் நம்பிக்கையோடும் எதிர்பார்த்த பஹ்மான் ஜாதவைஹ் வாக்களித்தபடி வரவில்லை. இது எதிரிகளுக்குப் பெரும் பின்னடைவானது. எதிரணிக்குள் பிசுபிசுப்பு ஏற்பட்டது. அதனால் அவர்கள் பின்வாங்கி ஓடத் துவங்கினர்.

“கைது செய்யுங்கள்! கைது செய்யுங்கள்! கைதாவதற்கு மறுப்பவர்களை மட்டும் கொல்லுங்கள்” என்று வீரத் தளபதி காலித் பின் வலீத் வீர முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்.

இஸ்லாமியப் படையினரின் வாள் வீச்சில் எதிரிகள் சரமாரியாகத் தங்கள் தலைகளை இழந்து கொண்டிருந்தனர். அதனால் அருகில் ஓடும் ஆறு இரத்தச் சிவப்பானது. இந்த வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு அதற்கு இன்றும் “இரத்த ஆறு’ என்று அழைக்கப்படுகின்றது.

பாரசீகப் பந்தியில் முஸ்லிம்கள்

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான ஒரு வெற்றியை அளித்தான். படைக்கு முன்னால் பந்தியில் சாப்பிடுவதற்கு அமர்ந்த பாரசீகப் படையினர் போரில் பலியாயினர். அந்தப் பந்தியில் விரிக்கப்பட்ட பகட்டான விரிப்பில் உணவுப் பண்டங்கள் பரிமாறுவதற்கு ஏதுவாக வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உண்ணுவது தான் பாக்கி என்றிருக்கும் போது அவர்கள் போர்க்களத்தில் மாண்டனர்.

பந்திக்கு வந்த காலித் முஸ்லிம்களை நோக்கி, “சாப்பிடுங்கள்! இந்த உணவு வகையும் போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தான்! உண்ணுங்கள்! உண்ணுங்கள்” என்று தமது படையினரை பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னார்.

அல்லாஹ் போரில் மட்டும் முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்த உணவுக் களத்திலும் வெற்றியை அளித்தான். ஜாபானின் யோசனைப்படி இந்த உணவில் விஷத்தைக் கலந்திருக்க வேண்டும். ஆனால் பாரசீக, கிறித்தவப் படையினர் தாங்களே அந்த உணவை வந்து சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையில் அவற்றில் விஷம் கலக்க மறுத்தனர். அல்லாஹ்வின் அற்புத ஏற்பாடு! விஷமாக வேண்டிய விருந்து, முஸ்லிம்களின் வசமாக வேண்டும் என்பதற்காக அதைக் காத்து, போரின் வெற்றிப் பொருளாக முஸ்லிம்களுக்கு அளித்தான்.

பாரசீகத்தின் பகட்டான பந்தி

பொதுவாக முஸ்லிம்களைத் தவிர்த்து மற்றவர்கள் போருக்குப் புறப்பட்டு வரும் போது ஆடம்பரம், பெருமை மற்றும் ஆணவத்தோடு அணி வகுத்து வருவர். இதை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்என்று கூறினான்.

அல்குர்ஆன் 8:47, 48

பத்ருப் போரில் புறப்பட்டு வந்த அபூஜஹ்லைப் போன்று தான் இவர்களும் ஆடம்பரத்துடனும், பெருமையுடனும் புறப்பட்டு வந்தனர். “நீங்கள் வெல்வீர்கள்; கொல்லப்பட மாட்டீர்கள்” என்று ஷைத்தான், அபூஜஹ்லின் படைக்கு ஊட்டிய அதே தைரியத்தை இந்தப் பாரசீகப் படையினருக்கும் ஊட்டியிருந்தான். அவர்களைப் போன்றே இவர்களும் கொல்லப்பட்டு விட்டனர்.

அந்த மக்கள் இவ்வுலக வாழ்க்கையின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடு தான் உயர் தரமான இந்த உணவுப் பந்தி!

இப்பந்தியில் கிராமப் புறத்து அரபிகள் அமர்ந்தனர். அவர்கள் இதுவரை இது போன்ற உணவு வகைகளைப் பார்த்ததில்லை. நாகரீகத்தின் உச்சியில் இருந்த பாரசீகத்தின் உணவு வகைகளை அவர்கள் இதுவரை கண்டதில்லை.

அதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த, அளவான வட்டத்தில் சமைக்கப்பட்ட ருகாக் எனும் மெல்லிய ரொட்டித் துண்டுகளைப் பார்த்து, “இதென்ன? ஆடை கிழிந்தால் ஒட்டித் தைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட (ருகாஃ எனும்) அளவுத் துண்டுகளா?” என்று கேட்கின்றனர்.

அதற்கு, பாரசீகத்தின் நாகரீக வாழ்க்கையைப் பற்றி அறிந்த மக்கள், “ரகீகுல் ஈஷ் (சுகபோக வாழ்க்கை) தெரியுமா? அது தான் இது” என்று நகைச்சுவையாகக் கூறினர். இது தொடர்பான வார்த்தைகளில் உள்ள ஒற்றுமை இவ்வாறு நகைச்சுவையாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு                        தொடர் – 5

முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

அபூஉஸாமா

மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.

அப்துல் ஹக் அறிவிப்பதாவது:

நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை. விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது.

அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.

ஸ்கட்டாக மாறிய செருப்பு ஜோடிகள்

தங்கத்திற்கு ஊடே (முஹ்யித்தீன் இரண்டு முறை சப்தமிட்டு வீசியெறிந்த) செருப்புகளும் வீற்றிருந்தன. ஆச்சரியமடைந்த சிஷ்ய கோடிகள், “இந்த செருப்பு ஜோடிகள் எப்படிக் கிடைத்தன?” என்று வினவுகின்றார்கள்.

“நாங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் அரபியக் கொள்ளையர்கள் எங்களை இடைமறித்துத் தாக்கத் துவங்கினர். எங்களில் சிலரை அவர்கள் கொன்று விட்டனர். எங்களது பொருட்களைக் கொள்ளையடித்தனர். “நாம் ஷைக் முஹ்யித்தீனுக்கு நேர்ச்சை செய்தால் என்ன?’ என்று நினைத்து நேர்ச்சை செய்தோம். அவர்களை இரு வார்த்தைகள் கூறி நினைவு கூர்ந்தோம். அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், இரு பெரும் பேரிறைச்சலைச் செவியுற்றோம். அவ்வளவு தான்! கொள்ளைக் கூட்டத்தில் ஒருவன், “வாருங்கள்! நம்மீது இறங்கிய சோதனையைப் பாருங்கள்’ என்று கூறினான். உடனே நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்களில் இரு முன்னணி வீரர்கள் பிணமாகக் கிடந்தனர். அவர்களில் ஒவ்வொருவர் மீதும் இந்தச் செருப்புக்களில் ஒவ்வொன்று கிடந்தது” என்று அந்த வணிகக் கூட்டத்தினர் விளக்கினர்.

(அப்போது தான் ஷைகு எறிந்த செருப்புக்கள் வெறும் செருப்புக்களாகச் செல்லவில்லை. பெரும் ஸ்கட் ஏவுகணையாகப் பறந்திருக்கின்றன என்று சிஷ்ய கோடிகளுக்குப் புரிந்தது.)

இது முஹ்யித்தீன் மவ்லிதுக் கிதாபில் உரை நடையிலும், கவிதை நடையிலும் இடம் பெற்றுள்ளது.

இப்போது இதிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

 1. எங்கோ ஒரு வணிகக் கூட்டம் சிக்கலில் மாட்டிக் கொண்ட விஷயம், பாக்தாதில் உள்ள முஹ்யித்தீனுக்குத் தெரிகின்றது.
 2. உடனே முஹ்யித்தீன் தனது செருப்புக்களைத் தூக்கி எறிகின்றார். அந்தச் செருப்புக்கள் இலக்கையும் அடைந்து விடுகின்றன.

ஒரு பொருளைத் தூக்கி எறியும் போது அதை இயக்குவதற்குரிய மின்சாரம், பேட்டரி, எரி பொருள் போன்ற விசை இல்லையெனில் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது பூமியில் விழுந்து விடும். இந்தச் செருப்பு எப்படிப் பறந்து சென்றது? என்றெல்லாம் இங்கு கேட்கக் கூடாது. அப்படி இந்த ஆலிம்கள் கேட்டிருந்தால் என்றைக்கோ மவ்லிதுக் கிதாபுகள் அடுப்பிற்குள் புகுந்திருக்கும், புகைந்திருக்கும்.

இந்தச் செருப்புக்கள் எப்படித் துல்லியமாக இலக்கை அடைகின்றன? எறியப்படும் செருப்பு இலக்கை அடைய வேண்டுமாயின் அதில் ரேடார் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இந்தச் செருப்பில் ரேடார் பொருத்தப்பட்டிருந்ததா?

 1. எறியப்பட்ட செருப்புக்கள் எதிரிகளின் தலைவர்களை இனங் கண்டு தாக்கி, அவர்களைக் கொன்றும் விடுகின்றன. கால் செருப்புக்கு ஆளை அடையாளம் கண்டு கொல்லும் இந்த அபார சக்தியும் இருக்கின்றதா?

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்த அபத்தங்கள் எதைக் காட்டுகின்றன? முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மறைவான ஞானம் அவருக்கு இருக்கப் போய் தான் வணிகக் கூட்டம் எழுப்பும் அபயக் குரல் அவரது காதுக்கு எட்டுகின்றது. மறைவான ஞானம் மற்றும் எப்போது, எங்கிருந்து அழைத்தாலும் செவியுறும் தன்மை அல்லாஹ்வுக்கு உரிய தனி ஆற்றலாகும். இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கு இந்த மவ்லிதுகள் அப்படியே தூக்கிக் கொடுக்கின்றன.

முஹ்யித்தீன் உடனே செருப்பை அனுப்பி வணிகக் கூட்டத்தைப் பாதுகாக்கவும் செய்கின்றார். இவர் இரட்சகர் அல்லவா? (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக) அதனால் முஹ்யித்தீன் தனது செருப்புக்களைப் பறக்க விட்டு அவர்களைப் பாதுகாக்கிறார். இது போன்ற பாதுகாத்தலும் அல்லாஹ்வின் தனிப் பெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றல்களை எல்லாம் முஹ்யித்தீனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்; ஆராதிக்கின்றனர்.

இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு வருவோம்.

நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர்களை பனூ ஆமிர் குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்ற போது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), “நான் உங்களுக்கு முன்னால் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைக்கிறேன். இல்லையென்றால் நீங்கள் என் அருகிலேயே இருங்கள்என்று கூறி விட்டுச் சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள். அவரை எதுவும் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது தங்களில் ஒருவனைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய்மாமனைக் குத்திக் கொன்று விட்டான். அவர், “அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதியின் மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்று விட்டேன்என்று கூறினார். பிறகு அவரது எஞ்சிய தோழர்கள் மீது பாய்ந்து அவர்களையும் கொன்று விட்டார்கள். மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர! (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 2801, 3064

நபித்தோழர்களை, அதுவும் குர்ஆன் ஓதத் தெரிந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் தெரியாமல் தான் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கொல்லப் படுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு போதும் அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள்.

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

நஞ்சூட்டப்பட்ட ஆடு

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

இவ்வாறு சாப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களுக்குப் பெரிய வேதனையைக் கொடுத்தது. “நான் கைபரில் சாப்பிட்ட உணவின் பாதிப்பை இதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அது என்ற நரம்பை அறுத்துக் கொண்டிருக்கும் நேரமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கையில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 4428, அபூதாவூத் 3912

தனக்கு ஆபத்து விளைவித்த அந்த ஆட்டைச் சாப்பிடுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களால் அதை அறிய முடியவில்லை.

அது போல் காரிகளான தமது 70 தோழர்களின் படுகொலை பற்றியும், எதிரிகளின் சதி மோசடி பற்றியும்    நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை. அவர்கள் அறிந்திருந்தால் முஹ்யித்தீனைப் போன்று செருப்பை எறிந்து காப்பாற்றாவிட்டாலும் குறைந்த பட்சம் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்தனையாவது செய்திருப்பார்கள். இது தான் உண்மை நிலை!

இதற்கு மாற்றமாக, முஹ்யித்தீன் வணிகக் கூட்டத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்ததாகக் கூறி அவருக்கு மறைவான ஞானம் இருப்பதாக மவ்லிதுக் கிதாபு வாதிடுகின்றது. அது மட்டுமின்றி ஆபத்தில் சிக்கிக் கொண்ட தமது தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கூட காப்பாற்ற முடியாத போது, இந்த முஹ்யித்தீன் செருப்பைத் தூக்கி வீசி காப்பாற்றி விட்டதாகக் கதை விடுகின்றது.

அதாவது இதன் மூலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகச் சித்தரிக்கின்றது. இது ஷியாக்களின் வேலை! அந்த வேலையை இந்த மவ்லிதுகள் செய்துள்ளன. இந்த மவ்லிதைத் தான் மவ்லவிகள் வீடு வீடாகச் சென்று ஓதுகின்றனர். (ஆனால் தங்கள் வீடுகளில் இவற்றை ஒரு போதும் ஓத மாட்டார்கள்.)

முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகளை ஓதும் இவர்கள் யாராக இருக்க முடியும்? கண்டிப்பாக ஷியாக்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வதும், தாங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லறங்கள் என்று கருதுவதும் தான். இதை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

என்னை நினைப்பதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. (உண்மையை) கேட்கவும் இயலாது இருந்தனர்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அவர்கள் (என்னை) மறுத்த தற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.

எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியேஎன்று கூறுவீராக!

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:101-110

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஆடைகள்

எஸ். யூசுப் பைஜி

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: “தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியதுஎனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்     

அல்குர்ஆன் 7:33

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை முழுமைப்படுத்தினான்.

அல்குர்ஆன் 16:81

ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள ஆடைகளின் நிறங்கள்

மஞ்சள்:

உபைது பின் ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “அப்துர் ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை நான் பார்க்கிறேன்என்று கூறி விட்டு, “நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன்என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை நான் பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 166, 5851

இந்தச் செய்திலிருந்து மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளலாம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

சிவப்பு:

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான்    சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கின்றேன். அதை விட அழகான ஆடையை நான் பார்த்ததில்லை.

நூல் : புகாரி 3551

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு, “சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது; யாருக்காவது செருப்பு கிடைக்காமல் இருந்தால் தோலினால் ஆன காலுறை அணிந்து கொள்ளலாம் அந்தக் காலுறை கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 366

இந்தச் செய்தியில் இஹ்ராம் அல்லாத மற்ற சமயத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ளலாம் என்று விளங்க முடிகின்றது. குங்கும நிற ஆடைக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஹஜ் அல்லாத மற்ற காலங்களிலும் காவி ஆடை அணியக் கூடாது என்று தனியாகத் தடை வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது சிவப்பு நிற ஆடை அணிவதையும் தங்கம் மோதிரம் அணிவதையும் ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.

நூல்: நஸயீ 5171

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள், “முதலாவது செய்தியில் சிவப்பு நிறம் அனுமதிக்கப் பட்டதாக வருகிறது; இரண்டாவது செய்தியில் தடுக்கப்பட்டதாக வருகிறது; எனவே ஆடைகளில் குறைவாக சிவப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; முற்றிலும் சிவப்பாக இருக்கக் கூடாது” என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் நஸயீயின் இந்த அறிவிப்பில் மட்டுமே சிவப்பு என்று வருகிறது. இதே இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக, இதே வார்த்தையில் நஸயீயில் வேறு சில அறிவிப்புக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்கள் அனைத்திலும் காவி நிறம் என்று வந்துள்ளது.

எனவே இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் காவி நிறம் என்பதற்கு சிவப்பு என்று சொல்லி விட்டனர். ஏனென்றால் நிறத்தால் இரண்டும் ஒத்ததாக இருப்பதால் இப்படி மாற்றிக் கூறியிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை.

பச்சை:

அபீ ரிம்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தார்கள்.

நூல்: நஸயீ 5224

கருப்பு:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் நுழைந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2638

அப்தில்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிறமான கோடு போடப்பட்ட பட்டு இருந்த நிலையில் மழை வேண்டினார்கள்.

நூல்: நஸயீ 1490

வெள்ளை:

நபி (ஸல்) அவர்கள், “வெள்ளை நிறமான ஆடைகளை அணியுங்கள்; அது தான் ஆடைகளில் சிறந்ததாகும்; அதன் மூலம் உங்களில் மரனித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 915

நஸயீயின் மற்றொரு அறிவிப்பில்…..

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் வெண்மை நிறமான ஆடையை அணியுங்கள்; அது தான் தூய்மையானதும் சிறந்ததுமாகும். அதன் மூலம் உங்களில் மரணித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்என்று கூறினார்கள்.

நூல்: நஸயீ 5227

மேற்கூறப்பட்ட நிறங்களில் அமைந்த ஆடைகளையும், இங்கு கூறப்படாத மற்ற நிறங்களிலான ஆடைகளையும் அணியலாம்; எந்தத் தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட காவி நிறத்தை மட்டும் அணியக் கூடாது.

தடை செய்யப்பட்ட நிறம்

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, “இவை இறை மறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளதாகும்; எனவே இதை அணியாதீர்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4218

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஆண்கள் குங்குமப்பூ சாயமிட்டுக் கொள்ளக் கூடாது எனத் தடை விதித்தார்கள்என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: புகாரி 5846, முஸ்லிம் 4268

மேலே சொன்ன முதலாவது செய்தியில் பொதுவாகக் காவி ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. இரண்டாவது செய்தியில் ஆண்களுக்குத் தடை விதித்தார்கள் என்று வருகிறது. எனவே ஆண்கள் தான் காவி ஆடை அணியக் கூடாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தி மேலும் வலுவூட்டுகிறது.

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், “அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையேஎன்றார்கள்.

நூல்: அபூதாவூத் 3544

இந்தச் செய்தியிலிருந்து பெண்கள் காவி நிற ஆடையை அணிவது தவறில்லை என்பது தெரிகின்றது. இன்ன நிறங்கள் அணியலாம்; இன்ன நிறங்கள் அணியக் கூடாது என்பது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு இல்லை. பட்டாடை மற்றும் மற்ற ஆடைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பது போன்று இதிலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

முஸ்லிமில் வரக்கூடிய ஒரு செய்தி நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அந்தச் செய்தியில்…

நபி (ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது கோபமாக “உன்னுடைய தாயாரா (இதை அணியுமாறு) ஏவினார்கள்?” என்று கேட்டார்கள். நான், “இதைத் துவைத்து நிறத்தை மாற்றி விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள், “இல்லை! இதை எரித்து விடுஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3873

இதற்கு இமாம் நவவீ அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்: “இதை உன் தாய் தான் ஏவினார்களா?” என்ற நபியவர்களின் சொல், “இந்த ஆடை பெண்களுக்குரியதும் அவர்களுடைய அலங்காரமாகவும் இருக்கும் போது அதை எப்படி உனக்கு அணியக் கொடுத்தார்கள்?’ என்பது இதன் கருத்தாகும். இதை எரிக்க வேண்டும் என்ற நபியவர்களின் கட்டளை, தண்டனைக்குரியது; கடுமையானது என்பதைக் காட்டுவதற்காகவும் மற்றவர்கள் இதைச் செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும் தான்.

நூல்: ஷரஹ் முஸ்லிம்

ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.

 1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்என்று விடையளித்தார்கள். “ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2693, 3718

 1. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502

 1. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.

நூல்: திர்மிதி 1688

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.

நூல்: அபூதாவூத் 3612

 1. ஆடை அணியும் போது கூற வேண்டிய துஆ

நபி ஸல் அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு,

அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹு அஸ்அலுக ஹைரஹு வ ஹைர மா ஸீனிஅ லஹு வ அவூது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸீனிஅ லஹீஹுஹூ

என்று கூறுவார்கள்.

பொருள்: அல்லாஹ்வே! இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்! இந்த ஆடையின் நன்மையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம்  நான் கேட்கிறேன். இதன் தீமையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல் : திர்மிதி 1689

 1. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.

நூல்: புகாரி 5787

அபூதர் (ரலி) கூறியதாவது: “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்”  என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.

நூல்: புகாரி 3485

இது போன்ற செய்திகளை முன் வைத்து கரண்டைக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது; அப்படி அணிகிறவர் நரகில் புகுவார் என்று கூறுகின்றனர். இப்படி மட்டும் செய்தி இருந்தால் இவர்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற மற்ற செய்திகளைப் பார்க்கும் போது,  பொத்தாம் பொதுவாக இப்படிச் செய்கிறவர் நரகில் புகுவார் என்று சொல்லவில்லை. மாறாக பெருமைக்காக இப்படி அணிந்தால் நரகம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் தரையில் (படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5783

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தனது கீழாடையைத் தரையில் (படுமாறு) இழுத்துச் சென்றவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5788

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் தனது ஆடையைப் பெருமையுடன் தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லா விட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று சரிந்து விடுகிறதுஎன்று சொன்னார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  “நீங்கள் தற்பெருமையுடன் அப்படி செய்பவரல்லர்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5784

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் தற்பெருமையுடன் கர்வத்துடன் கணுக் கால்களுக்குக் கீழ் அணிந்தால் தான் நரகம் என்று வருகிறது. இதுதான் சரியாகவும் இருக்கிறது. ஏனென்றால் சாதாரணமாக ஆடை தரையில் படுவதற்காக இந்தத் தண்டனை கொடுப்பது சரியில்லை. மாறாக பெருமையுடன் நடந்ததால் தான் இந்தத் தண்டனை கொடுப்பது தான் சரியாகும்.

சில அறிஞர்கள் வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதாவது கரண்டைக்குக் கீழ் ஆடை இறங்கி விட்டால் அது நரகத்திற்குரியது என்பதும், பெருமைக்காக ஆடை அணிந்து தரையில் படுமாறு சென்றால் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் என்பதும் தனித்தனியான செய்திகள். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து பெருமைக்காகச் சென்றால் தான் இந்த எச்சரிக்கை என்று விளங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான எச்சரிக்கைகள் இருக்கின்றன.  எனவே பெருமைக்காக இருந்தாலும் பெருமை இல்லாவிட்டாலும் கணுக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பொதுவாக ஹதீஸ் கலையின் விதியில், ஒரு செய்தி காரணம் இல்லாமலும் இன்னொரு செய்தி காரணத்தைக் குறிப்பிட்டும் வந்தால் காரணத்தோடு வந்திருக்கும் செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்த விதியை அறியாத காரணத்தால் இப்படி விளக்கம் கூறி விடுகின்றனர்.

இந்த விதியை விளங்குவதற்காக, குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குர்ஆனில் அல் மாயிதா என்ற அத்தியாயத்தில் ஹராமாக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது இரத்தத்தையும் குறிப்பிடுகின்றான்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

அல் குர்ஆன் 5:3

இதே செய்தியை திருக்குர்ஆனில் அன்ஆம் என்ற அத்தியாயத்தில் இரத்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஓட்டப்பட்ட இரத்தம் என்று குறிப்பிடுகிறான்

தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர்கள் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 6:145)

இங்கே நாம் எப்படி விளங்கிக் கொள்வோம்? ஓடக் கூடிய இரத்தம் தான் ஹராம்! ஓடாத இரத்தங்கள் ஹராம் இல்லை என்று விளங்குவோம். இதே போன்று தான் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கக் கூடிய செய்தி பொதுவாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு செய்தியில் பெருமைக்காக என்று வந்துள்ளது. எனவே காரணத்தோடு வந்திருக்கக் கூடிய  செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் இந்த விஷயத்தில் இணைத்து முடிவு காண வேண்டும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியிலும், இமாம் நவவீ அவர்கள் முஸ்லிம் விளக்கவுரையிலும் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஆடையை பெருமைக்காக அணிவது குற்றம் என்றவுடன் இது வேட்டியை, கீழங்கியை மட்டும் குறிக்கும், மற்ற ஆடைக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக சட்டை, தலைப்பாகை இவைகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் (3571)

இந்தச் செய்தி கீழங்கியை அணிபவருக்கு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தலைப் பாகையின் ஓரங்களைப் பெரிதாகத் தொங்க விடுவதையும், சட்டையில் ஜுப்பா என்ற பெயரில் முட்டுக் கால் வரை தொங்க விடுவதையும் எச்சரிக்கை செய்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெரும் அப்துல் அஜீஸ் என்பவரைப் பலர் குறை கூறியிருப்பதாக இமாம் முன்திரி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் குறை கூறியவர்கள் இவர் கொண்டிருந்த கொள்கைக்காகத் தான் குறை கூறியுள்ளார்கள். கொள்கை ரீதியாக ஒருவரைக் குறை கூறுவதால் அவரது நம்பகத்தன்மையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.)

 1. எதுவரை உயர்த்தி கட்டலாம்?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், “அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். “இன்னும் உயர்த்திக் கட்டுஎன்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், “எதுவரை உயர்த்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “கணுக்கால்களின் பாதியளவுக்குஎன்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4238

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லை.  கரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான்.

நூல்: அபூதாவூத் 3570

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்திலும் பொதுவாக ஆடைகளை கரண்டைக்குக் கீழ் அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. எனினும் பெண்களுக்கு என்று இதில் விதி விலக்கு இருக்கிறது. அதைக் கீழ்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

 1. பெண்கள் கரண்டைக்குக் கீழ் அணியலாமா?

நபி (ஸல்) அவர்கள், “யார் தமது கீழாடையைப் பெருமைக்காகத் தரையில் படுமாறு இழுத்துச் செல்கிறாரோ அவரைக் கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்என்று கூறியவுடன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் தங்களுடைய கீழாடையை எப்படி அணிவது?” என்று கேட்டார்கள். “ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்என்றார்கள். “அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம்; அதை விட அதிகமாக்கக் கூடாதுஎன்றார்கள்.

நூல்கள்: அபூதாவூத் 5241, திர்மிதி 1651

பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது. எனவே அவர்களுக்கு மேற்கூறப்பட்ட எச்சரிக்கை பொருந்தாது என்பதை விளங்கலாம்.

 1. அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது “இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 3540

வளரும் இன்ஷா அல்லாஹ்