ஏகத்துவம் – ஜூலை 2019

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும்

நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது.
மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது என்றால் இனி எப்படியிருக்கும் என்று எடை போட்டுக் கொள்ளுங்கள்.
மிருகத்தனம்: 1
ரமளான் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயது நிரம்பிய காஸிம் தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, கடுமையான காயத்துடன் கிடத்தப்பட்டு, மருந்து ஏறிக் கொண்டிருக்கின்றது. அவருக்குத் துணையாக வந்த அவரது உறவினர் வெள்ளிக்கிழமை என்பதால் ஜுமுஆ தொழுகைக்கு விரைந்து செல்கின்றார். அதைப் பார்த்துப் பரவசப்பட்ட காஸிம், ‘என் தோள் பட்டையில் பாய்ந்த தோட்டாவின் வலியை விட ஜுமுஆ தொழாமல் முடங்கிக் கிடப்பது பெரிய வலியாக உள்ளது’ என்று கூறிய போது அவரது வார்த்தைகளில் அந்த வலியை உணர முடிந்தது.
இது எங்கு நடந்தது? மோடியின் கைக்கூலியான நிதீஷ் ஆளுகின்ற பீகாரில் தான்! காஸிமுக்கு ஏன் இந்தத் துப்பாக்கிச் சூடு? பத்திரிக்கைச் செய்தி நடந்த நிகழ்வை விவரிக்கின்றது.
குளிர் காலத்தில் கம்பளி உறைகள் தைப்பது, கோடை காலத்தில் ஏதாவது சிறு சிறு தொழில்கள் செய்வது, இப்படித் தான் காஸிமின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது.
இந்தக் கோடையில் சொந்த பந்தங்களிடம் கடனை வாங்கி, 25 ஆயிரத்துக்கு ஒரு மொபட், கூடவே 800 ரூபாய்க்கு ஓர் ஒலிபெருக்கி எடுத்துக் கொடுத்துக் கொண்டு டிடர்ஜெண்ட் பவுடர் வியாபாரத்தைத் தொடங்கி அது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. காஸிமின் டிடர்ஜெண்ட் பவுடர் கிராம மக்களிடம் அங்கீகாரத்தைப் பெற்றது.
கும்பி என்ற கிராமத்தில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். இது காஸிமின் சொந்தக் கிராமமான கஞ்சான் பூரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம். மைக்கில் தனது டிடர்ஜெண்ட் பவுடரின் விளம்பரத்தை ஓட விட்டு, விற்பனை செய்து கொண்டிருந்தபோது, சினிமா பட வில்லனைப் போன்று அங்கு நின்று கொண்டிருந்த ராஜீவ் யாதவ் என்பவன், மைக்கை அணைக்கச் சொல்கின்றான். பெயரைக் கேட்கின்றான். காஸிம் என்று சொன்னது தான் தாமதம்! ‘நீ பாகிஸ்தானுக்குப் போ’ என்று கத்துகிறான். அத்துடன் நில்லாமல், தன் இடுப்பிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காஸிமை நோக்கிச் சுடவும் செய்கின்றான். துப்பாக்கித் தோட்டா தோள்பட்டையில் பாய்கின்றது. உடனே இரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடுகின்றது. பீறிட்டு வழிகின்ற இரத்தத்தைப் பார்த்து யாருக்கும் ஈவு இரக்கம் பிறக்கவில்லை.
வீதியில் வியாபாரம் செய்ய வந்த ஒருவனை வெறித்தனமாகச் சுடுகின்றான். சூழ நின்ற கூட்டம் வெறிக்க வெறிக்க வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தது. கற்பாறையில் கூட ஈரம் சுரக்கும். ஆனால் சுற்றிச் சூழ நின்ற மக்களின் இதயங்கள் கற்பாறையை விடவும் கடினமாகி விட்டதால் ஈவு இரக்கம் பிறக்கவில்லை. இரத்தம் வழிகின்றது; நேரமும் கழிகின்றது.
அடிபட்டு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஒருவருக்கு, தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மரண வாசலை நோக்கி எடுத்து வைக்கும் அடியாகும். பீறிட்டு வழியும் இரத்த வெள்ளத்தில் சுயநினைவற்றுக் கிடக்கும் காஸிமுக்கு நொடிகள் அல்ல! நிமிடங்கள் அல்ல! பல மணி நேரங்கள் கழிகின்றன.
முதலுதவி செய்வதற்குக் கூட ஒரு நாதியும் இல்லாத போது ஒரு பெண்மணி காயத்திற்குக் கட்டுப்போட வருகின்றார். துடைக்க ஒருவர் துண்டைக் கொண்டு வருகின்றார். அதன் பின்னர் கிராம அலுவலர் அலுவலகம், காவல் நிலையம் என கொண்டு செல்லப்படுகின்றார். ஆனால் உயிர் காப்பதற்காக உரிய சிகிச்சைக்கு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை! கொடுமையிலும் கொடுமை!
இப்போது துப்பாக்கிச் சூடு செய்தி காட்டுத் தீயாய் பரவி காஸிமின் குடும்பத்தினரின் காதுகளில் கசிகின்றது. அவர்கள் அடித்துப் புரண்டு ஓடோடி வந்து அவரை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மனிதநேயம் மிக்க (?) அந்த மருத்துவமனை ஊழியர்களோ தலைநகர் பாட்னா மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்கின்றனர். உயிர் காக்கும் உயர் பணியில் உன்னத இந்தியாவின் உச்சக்கட்ட நடவடிக்கையைக் கண்டு நீங்கள் மெச்சாமல் இருக்க முடியாது.
இதற்கு மேல் தாங்காது என்று குடும்பத்தார் மருத்துவமனையில் கோரிக்கை விடுக்க, இறுதியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். அதன் பின்னர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிடுகின்றார்.
அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மருத்துவமனைக்குக் காவல் துறையினர் வருகின்றனர். முஸ்லிம் என்று சொன்னதால் தான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதை காவிக்கறை படிந்த காவல் துறை ஏற்கவில்லை. டிடர்ஜெண்ட் விற்பனையில் ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடந்தது என்று காவித்துறை கதை எழுதியது. ஏட்டு முதல் எஸ்பி வரை இதையே உடைந்த ரிக்கார்ட் மாதிரி இன்றுவரை ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மருத்துவமனைக்குச் சென்ற நிருபர்கள் தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். மோடி 2.0 ஆட்சி மகிமையை அவர்கள் இதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
காஸிமின் புகார் மீது ஒருவாறாக, வேண்டாவெறுப்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரவுடி ராஜீவ் யாதவ் மீது கொலை முயற்சி இன்னும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டின் போது குடிபோதையில் இருந்த அவன், கள்ளச் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி என்றும், பல்வேறு குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்றும் காவல் துறை அவனது வாழ்க்கைச் சரித்திரத்தை வாசித்துக் காட்டியது.
ஆனால் காஸிமின் கதியும் கதையும் படிப்போரைக் கண்கலங்க வைக்கின்றது. வியாபாரம் பாதித்தது மட்டுமல்லாமல் உயிரைக் காப்பதற்காக வேண்டி நகை நட்டுக்களை விற்றும் அடகுக்கு வைத்தும் ஒன்றரை லட்சம் அளவுக்குள்ள மருத்துவமனைச் செலவைச் சந்தித்தனர். ஊர் மக்கள் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கினர்.
ராஜீவ் யாதவ் போன்ற ரவுடிகள் சூடேற்றப்பட்டதற்கு இப்போதைய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் ஒரு காரணமாகும். ‘நாங்கள் இறந்து விட்டால் எங்கள் மூதாதையர்கள் வழியில் எங்களை எரியூட்டி விடுவார்கள். ஆனால் முஸ்லிம்கள் இறந்தால் அவர்களுக்குப் பெரிய கப்ருஸ்தான் வேண்டும்’ என்று முஸ்லிம் விரோதத் தீயை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது விசிறி விட்டிருந்தார். பீகாரில் பெகுசாரை நாடாளுமன்றத் தொகுதியில் தான் இவர் நின்று போட்டியிட்டு வென்றார். அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்தத் தொகுதியில் மதவெறியை அனல் தெறிக்க விட்டிருந்தார். எரியும் இந்தச் சூழல் தான் துப்பாக்கிச் சூட்டிற்கு அஸ்திவாரமிட்டிருந்தது.
இதில் இந்தச் சம்பவம் நடந்த நாள் மிக முக்கியமானது. தேர்தல் முடிவு வெளியான மூன்றாம் நாள் அது. அதில் தான் இந்தக் கண்மூடித்தனமான காரியம் நடந்தேறியது. அதாவது மோடி 2.0 ஆட்சியின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறியது. இந்த அராஜகம், அக்கிரமம் பீகாரில் நடந்தேறியது என்றால் டெல்லி அருகே குருகாவன் பகுதியில் இன்னொரு அராஜகம் நடந்தது.
மிருகத்தனம்: 2
தலையில் தொப்பி அணிந்து கொண்டு, பள்ளியில் தொழுது விட்டுத் தன் பாட்டுக்கு வீட்டிற்கு வருகின்றான் 25 வயது நிரம்பிய அப்பாவி இளைஞன் ஆலம். அவனை இடை மறிக்கின்றது பைக்கிலும் நடந்தும் வந்த ரவுடிக் கும்பல். தொப்பியைக் கழற்றச் சொல்கின்றனர். இந்தப் பகுதியில் தொப்பி போடுவதற்கு அனுமதியில்லை என்று காட்டுக் கூச்சலிடுகின்றனர். ஆலம் மறுக்கவே தலையில் அடிக்கின்றனர். ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்பச் சொல்கின்றனர். கோஷம் எழுப்பவில்லை என்றால் பன்றி இறைச்சியை வாயில் திணிப்போம் என்றும் மிரட்டுகின்றனர். வழக்கம் போல் சுற்றி நின்றவர்கள் வேடிக்கையே பார்க்கின்றனர். ஆலத்தைக் காக்க முன்வரவில்லை. கையறு நிலையில் நின்ற ஆலமுக்குக் கண்ணீர் விட்டு அழத் தான் முடிந்ததது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த மிருகத்தனம் நடந்தது மே 25! தேர்தல் முடிவுகள் வெளி வந்த மூன்றாம் நாள்!
மிருகத்தனம்: 3
ஜார்கண்ட் மாநிலம், சரைகேலா மாவட்டம், கடம்தியா கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞன் தப்ரேஸ் அன்சாரி. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவன் புனேவில் பிழைப்புக்காகச் சென்றவன் மணம் முடிக்க ஊருக்கு வருகின்றான். 19 வயது ஷஹிஷ்தா பர்வேஸை ஏப்ரல் 27 அன்று மணமும் முடிக்கின்றான். புனேவுக்குக் குடும்பத்தை அழைத்துச் செல்வதற்காக ஜூன் 24 தேதியில் டிரைனில் டிக்கட்டும் முன்பதிவு செய்கின்றான்.
இந்நிலையில் ஜூன் 17 அன்று தகிதி என்ற கிராமத்தில் அவனைப் பிடித்துத் திருடன் என்று முத்திரை குத்துகின்றார்கள். பெயர் என்னவென்று கேட்கின்றார்கள். முஸ்லிம் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தர்ம அடி விழுகின்றது. மின்கம்பத்தில் கட்டி சக்கையாகப் பிழிந்து எடுத்திருக்கின்றார்கள், அஹிம்சை நாட்டின் அரக்கர்கள். இது போதாது என்று அருகில் உள்ள புல்லுக்காட்டில் போட்டுப் புரட்டி எடுக்கின்றார்கள். ‘ஜெய்ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்’ என்று சொல்லச் சொல்லி அவனைக் குதறி எடுத்திருக்கின்றார்கள்.
இறுதியில் இரத்த வாராக சரைகேலா காவல்துறையில் கொண்டு ஒப்படைக்கின்றார்கள். காவல்துறை மனிதாபிமான (?) அடிப்படையில் முதலுதவி செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக, இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி பாபா மண்டலை காவல் நிலையத்தில் வைத்து அழகு பார்த்திருக்கின்றது.
தப்ரேஸின் மாமியார் ஷெஹ்னாஸ் பேகம் காவல் நிலையம் சென்ற போது உள்ளே செல்லவிடாமல் மறிக்கின்றார்கள். ‘அப் தக் ஏ மர்கயா நஹீ – இன்னும் அவன் சாகவில்லை’ என்று உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் தலைவன் பாபா மண்டல் கத்தியிருக்கின்றான் என்றால் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கை என்ன சொல்வது? பேய் நாடாண்டால் பிணந்தின்னும் சாத்திரம் என்று சொல்வார்கள். மோடி நாடாண்டால் மணமகன் பிணமாவது சாத்திரம் என்றாகி விட்டது.
ஆம்! காவித்துறையின் ஏவல் துறையாக மாறி விட்ட காவல்துறை, தப்ரேஸுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதில் சிறைவாசத்தை அளித்தது. அவன் இஸ்லாம் என்ற விசுவாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் சுவாசத்தைப் பறித்தது. மருத்துவமனையில் அனுமதியுங்கள், மருமகனைக் காப்பாற்றுங்கள் என்று ஷெஹ்னாஸ் பேகம் காவல்துறையிடம் எழுப்பிய கெஞ்சல் எடுபடவில்லை.
காவல்நிலையத்தில் அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய சகோதரரைக் காவல்துறையினர் பார்க்க விடாமல் தடுத்ததுடன் விரட்டியடித்துள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த தப்ரேஸ் அன்சாரி உடல்நிலை பலவீனமடையத் தொடங்கியது. இதைக்கண்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடைசியில் ஜூன் 23ந்தேதி தப்ரேஸின் உயிர் பிரிந்தது.
இந்தப் படுகொலைக்குப் காரணமானவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பது ஒரு புறமிருக்க, அவர்களுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்த்த காவல்துறையினரும், காவி பயங்கரவாதிகளால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்குப் போராடிய தப்ரேஸ் அன்சாரிக்கு சிகிச்சை வழங்காமல் சிறைக்கு அனுப்பிய நீதிமன்றமும் இதில் குற்றவாளிகள் தான்.
தான் பிணக்கோலமாவோம், தன் மனைவி விதவையாவாள் என்று தெரிந்திருந்தால் ஏப்ரல் 17 அன்று மணக்கோலம் பூண்டிருக்கமாட்டான் தப்ரேஸ்.
மோடியின் 2.0 ஆட்சியின் மிருகத்தனத்திற்கு இது மூன்றாவது எடுத்துக்காட்டாகும்.
இதில் வேதனை என்னவென்றால் நிழல் நேசமணியின் உடல்நிலை பாதிப்பை உலக அளவில் டிரண்டாக்கிய சமூக வலைத்தளங்கள் கூட, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் துவைக்கப்பட்ட தப்ரேஸுக்கு, அவன் முஸ்லிம் என்பதால் பாரபட்சம் காட்டியது தான்.
மிருகத்தனம்: 4
டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் மவுலவி மூமின். இவர் அங்குள்ள மதரஸா ஒன்றில் குழந்தைகளுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்து வருகின்றார்.
கடந்த ஜூன் 21ஆம் தேதி மாலை அந்தப் பகுதியில் மவுலவி மூமின் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த மூன்று பேர் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி அவரிடம் வம்பிழுக்கும் நோக்கில் பேச்சுக் கொடுத்து அந்த மூன்று பேரும் மவுலவியைத் தாக்கத் துவங்கினார்கள். அவரைப் பிடித்து வைத்து “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல் என்று மீண்டும் தாக்கியுள்ளனர். ஆனால் அவர் ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுக்கவே தங்களின் காரைக் கொண்டு மூமினை இடித்துள்ளனர்.
இதனால் காயமடைந்த மூமினை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயங்களுடன் மூமின் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மிருகத்தனம்: 5
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சௌத் பார்கனாஸ் மாவட்டத்தில் இருந்து ஹூக்ளிக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் இருந்த ஒரு கும்பல் ஹபீஸை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ஹபீஸ் அவ்வாறு சொல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பார்க் சர்க்கஸ் என்ற ரயில் நிலையத்தில், ரயில் சென்று கொண்டிருந்தபோது ஹபீஸைக் கீழே தூக்கி வீசியுள்ளனர். நல்ல வேளையாக ஹபீஸ் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.
அப்பாவி இஸ்லாமியர்களைப் பிடித்து அடித்து ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி வதம் செய்யும் கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் படுகொலைகள் இன்று நேற்றல்ல! முப்பது ஆண்டுகளுக்கு முன் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அத்வானி ரத யாத்திரை சென்ற போது, இந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம் தான் மூவாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்தது.
மோடியின் சப்பைக்கட்டு
தப்ரேஸ் அன்சாரியின் படுகொலை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். இந்தச் சம்பவம் அவர் மனதைப் பெரிதும் வருத்துவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கூடவே, இந்த ஒரு கொலைக்காக ஜார்கண்ட்டையே இழித்துப் பேசுவது தவறு என்றும், கொலை எங்கே நடந்தாலும், அது கேரளாவோ மேற்கு வங்கமோ, தவறுதான் என்றும் சேர்த்துப் பேசியிருக்கிறார். அதாவது கேரளம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதையும், தப்ரேஸ் படுகொலையையும் சேர்த்துப் பேசியிருக்கிறார்.
இந்தியாவில் அனுதினமும் கொலைகள் நடக்கின்றன. தேசிய குற்றவியல் கழக அறிக்கையின் படி ஆண்டுக்குக் கிட்டத்தட்ட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவாகின்றன. நான்கரை லட்சம் வன்முறை வழக்குகள் பதிவாகின்றன.
ஆனால் தப்ரேஸ் விஷயத்தில் பிரச்சினை அவர் கொலையுண்டார் என்பதல்ல. அவர் ஒரு இந்துவாக இருந்து, பைக் திருடினார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தால் கூட்டத்தினர் நாலு போடு போட்டுக் காவலரிடம் ஒப்படைத்திருப்பார்கள். அவர் முஸ்லிம் என்று தெரிய வரவே ‘தண்டனை’ வேறு மாதிரி மாறி விட்டது. அங்கே குற்றம் அவர் பைக் திருடினாரா இல்லையா என்பதல்ல! அவர் முஸ்லிமாக இருந்தது தான் குற்றம் என்றாகி விட்டது. அதனால்தான் ராமர், அனுமர் பெயர்களைப் போற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி இருக்கிறார். இந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமே பாஜகவின் பிரச்சாரத்தின் விளைவுதான் என்பதை அவர்களே மறுக்க மாட்டார்கள். வேறு எந்த இயக்கமும் இந்தியாவில் இந்த கோஷத்தைப் பயன்படுத்துவதில்லை.
ஆகவே, உண்மையில் ராமர் பெயரை ஒரு கொலை செய்யப் பயன்படுத்தியது குறித்து ராம பக்தரான பிரதமருக்குக் கோபம்தான் வந்திருக்க வேண்டும். ‘ராமர் பெயரை வன்முறைக்குப் பயன்படுத்துவது குறித்து வருந்துகிறேன்’ என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் பிரதமருக்கு ஒரு மனிதன் கொலையுண்டிருக்கிறான் என்ற அளவில் மட்டும்தான் தெரிய வருகிறது. அதையும் கூட ‘எங்க ஆளு சாகும் போது யாரும் பேசலையே!’ என்ற அளவில் ஒப்பிட்டு, சாதாரண பாஜக தொண்டன் செய்யும் வேலையை ஒரு நாட்டின் பிரதமரும் செய்திருப்பது மிகவும் கொடுமையான விஷயம்.
நாடாளுமன்றத்தில் தக்பீர் முழக்கம்
வீதிகளில் முஸ்லிம்களைத் தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம், மோடி 2.0 ஆட்சிக்கு வந்ததும் இப்போது நாடாளுமன்றத்திலும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. அஸாதுத்தின் உவைஸி பதவிப் பிரமாணம் ஏற்க வரும் போது ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷங்களை பாஜக எம்பிக்கள் முழங்கினர். ‘நன்றாகக் கத்துங்கள்’ என்று சைகை செய்து கொண்டே வந்த அவர், பதவியேற்கும் போது அதற்குப் பதிலடியாக, தக்பீர் முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.
அதுபோல் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் பதவியேற்கும் போதும் ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் கோஷத்தை முழங்கினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற தவ்ஹீது விளக்கத்தைக் கொடுத்து சங்கிகளுக்கு சாட்டையடி கொடுத்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி எம்பிக்கள் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு பதவியேற்ற அற்புதமும் அரங்கேறியது.
இந்த அடிப்படையில் நாடாளுமன்ற வரலாற்றில் தக்பீர் முழக்கமும் தவ்ஹீது விளக்கமும் முதன்முறையாகப் பதிவாகியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் அதே வேளையில் இதுவரை சாலைகளில் ஒலித்த ஜெய்ஸ்ரீராம் இப்போது நாடாளுமன்றத்தில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதை நாம் அறிய முடிகின்றது.
மோடி சாம்ராஜ்யத்தின் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான். நாம் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பது தான். மோடியின் கடந்த ஆட்சியில் பசுவின் பெயரால் முஸ்லிம்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் மாடுகளின் பெயரால் நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ஜார்கண்டில் மட்டும் மார்ச் 16, 2018 முதல் ஜூன் 17, 2019 வரை மொத்தம் 11 பேர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் நாம் நம்முடைய அடையாளத்தை இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இதைத் தான் அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
“அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனது போல் நீங்களும் இறை மறுப்பாளர்களாக ஆகி, அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்’’ என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அல்குர்ஆன் 4:89
முஸ்லிம் என்ற அடையாளத்தை விட்டுவிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் மோடிக் கும்பலுக்கு, ‘ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்கமாட்டோம்’ என்பது தான் ஒவ்வொரு முஸ்லிமின் பதிலாக இருக்கும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
“நமது இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்’’ என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்
அல்குர்ஆன் 18:14

புகழுக்கு ஆசைப்படாத பெருமானார்
எம்.முஹம்மது சலீம் M.I.Sc.

சமூகத்தில் மனிதர்கள் அனைவருக்கும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சில வகையான ஆசைகள் பரவலாகப் பலரிடமும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பட்டியலில் புகழ் ஆசை என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று.
இந்த உலகில் சின்னச்சின்ன விஷயத்திலும் கூட, பொதுவெளியில் தனது பெயர் பெருமையாகச் சொல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பலரின் இயல்பாக இருக்கிறது. இதனால் தம்மைப் பற்றி உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தும் செய்திகளை மட்டுமே மக்களிடம் பகிர்ந்து கொளவார்கள். தங்களது அந்தஸ்த்தை குறைத்துக் காட்டும் வகையிலான வாழ்வியல் நிகழ்வுகளைத் தப்பித் தவறியும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தார்கள். தேவையற்ற புகழ்ச்சிகளைத் தடுத்தது மட்டுமின்றி, தமது கவுரவத்தைக் குறைத்து விடும் என்று கருதி எந்தச் செய்தியையும் மறைக்காமல் வாழ்ந்து காட்டினார்கள்.
‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2262)
இந்தச் செய்தி மூலம் நபிகளாரின் பண்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மக்கள் தம்மைப் பெருமையாக நினைக்க வேண்டும்; புகழ்ந்து மெச்ச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு உண்மைக்கு மாற்றமாகச் சொல்லும் குணம் தூதருக்குத் துளியளவும் கிடையாது.
ஆதலால் தான், அவர்களை அல்லாஹ் கண்டித்து அருளிய வசனங்களைக் கூட, கடுகளவும் மறைக்காமல் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். இப்படியான ஒரு வசனத்தைப் பாருங்கள்.
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
(திருக்குர்ஆன் 80: 1-3)
இந்த வசனத்தின் பின்னணி என்ன தெரியுமா? தங்களை உயர்ந்த குலமென பீற்றிக் கொண்ட ஆட்கள் ஒருநாள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பேரம் பேசினார்கள்.
உங்களுடன் இருக்கும் ஏழைகள், அடிமைகள், அனாதைகள் போன்ற தாழ்ந்த குல மக்களைத் திருப்பி அனுப்பிவிட்டால், இஸ்ஸாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறினார்கள். அந்த சமயத்தில் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஏழை நபித்தோழர் அங்கு வரவே, அவரது வருகையை நபிகளார் வெறுத்தார்கள். இதனால் மேற்கண்ட வசனத்தை இறக்கி நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான்.
அந்த வசனத்தை மறைக்காமல் அப்படியே மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள் என்றால் அதன் மூலம் நபிகளார் உண்மையை மறைக்காமல் சொன்னார்கள் என்பதை மட்டுமல்ல, மக்களிடம் எவ்வித பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
யதார்த்த நிலைக்கு மாற்றமாக மக்கள் தம்மைப் புகழ்ந்து பேசுவதை நபியவர்கள் விரும்பியது கிடையாது என்பதற்கு ஏராளமான செய்திகள் சான்றுகளாக உள்ளன. இந்த வகையில் ஒரு செய்தியைப் பார்ப்போம்.
“எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே!” என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12093
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் நிகரில்லா ஆன்மீகத் தலைவர். அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் தலைவர். இவ்வாறு உயரிய அதிகாரத்தில் இடம் வகித்தாலும் நபியிடம் கொஞ்சம் கூடப் பெருமை உணர்வோ, புகழ் ஆசையோ இருக்கவில்லை.
ஆனால், தம்மிடம் இல்லாத அம்சங்களை எல்லாம் சொல்லி மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் என்று சிலர் விரும்புவதையும் அதற்காக ஏங்குவதையும் காண்கிறோம். அப்படியான ஆட்கள் நபியவர்களைப் பார்த்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
“கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியார் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர்’ என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (3445)
மனித சமுதாயத்தை வழிநடத்த இறைவன் அனுப்பிய தூதர்களுள் ஒருவரே, இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா நபி. ஆனால் அவரை ஏற்றுக் கொண்ட மக்கள் பிந்தைய காலத்தில் அவரை அளவு கடந்து புகழ்ந்து புகழ்ந்து கடைசியில், கடவுளின் மகன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சாரார் அவரைக் கடவுளாகவே இன்றளவும் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது.
இப்படியான ஒரு நிலை, இறுதித் தூதராகவுள்ள தமது விஷயத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் முஹம்மது நபி உறுதியாக இருந்தார்கள். தம்மை வரம்புமீறிப் புகழ்ந்து விடாதீர் என்று எச்சரித்தார்கள்.
அதுவும் பெயரளவுக்கு அல்ல! மக்களில் எவரேனும் தம்மை வரம்பு மீறிப் புகழும் போது உடனடியாகத் தடுத்தார்கள்; மறுத்துப் பேசினார்கள். அண்ணலார் துளியளவும் புகழை விரும்பவில்லை என்பதற்கு இன்னும் பல நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன.
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.
அங்கு சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு, பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே! (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல்: புகாரி 4001, 5147
எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. மறைவான ஞானங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அவன் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர அவற்றிலுள்ள செய்திகளை நபிமார்களும் கூட அறியமாட்டார்கள்.
இவ்வாறிருக்க, நாளை நடப்பதெல்லாம் நபிகளாருக்குத் தெரியும் என்று சிறுமி புகழ்ந்து பாடும் போது அதை ஆமோதித்து அமைதி காக்கவில்லை. உடனே அவ்வாறு பாட வேண்டாமென்று கூறுகிறார்கள். இப்படியான தலைவரை இன்று பார்க்க முடியுமா?
பெரும்பாலான தலைவர்களின் நிலை எப்படி இருக்கிறது? புகழ வேண்டாம் என்று அவர்கள் தொண்டர்களிடம் கூறினால் அதன் அர்த்தம், புகழுங்கள் என்பது தான். வேண்டாம் என்று சொல்லும் போது எப்படியெல்லாம் புகழ வேண்டும் என்றெல்லாம் சொல்லியும் வைத்திருப்பார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதரோ இந்த விஷயத்திலும் தனித்து விளங்குவதைப் பார்க்கிறோம். தம்மீது உயிருக்கும் மேலான பாசத்தை வைத்திருந்த தோழர்கள் அவர்களாகவே மரியாதை செலுத்த முன்வந்த போதும் நபிகளார் மறுத்துவிட்டார்கள்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபி (ஸல்) அவர்களே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
மக்கள் மண்டியிட்டு மரியாதை செலுத்தும் மற்ற சாதாரண மன்னர்களை விடவும், ஈருலக வெற்றிக்கு வழிகாட்டுகிற தூதர் பல மடங்கு சிறந்தவர். ஆகவே அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்துவது தவறில்லை என்று நினைத்து, தோழர் ஒருவர் அதற்கு அனுமதி கேட்கிறார்.
அவரது ஆசையை ஆட்சேபித்து அறிவுரை கூறியதோடு, அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் தாழ்த்தி அடிபணிய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள் நபியவர்கள்.
தமக்கு கடவுளுக்குரிய பண்புகள் இருப்பதாகவும், தம்மை வணங்கினால் கடவுளின் அன்பையும் அருளையும் பெறலாம் என்றும் உளறித் திரியும் ஆன்மீகவாதிகளை இன்றைய காலத்திலும் பார்க்கிறோம்.
அவர்களில் சிலர் தம்மைக் கடவுளின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். புகழ் போதை தலைக்கேறி நிற்பதும் இதற்கு முக்கிய காரணம். நபிகளாரின் நிலையோ இதற்கு நேர்மாற்றமாக இருந்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, “நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி (2458)
‘உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள். (ஆனால்) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2753
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 1742, 1863, 2430, 3077
தமக்கு எல்லாம் தெரியும் என்றோ, எல்லாம் முடியும் என்றோ எந்த நேரத்திலும் முஹம்மது நபி கூறியது கிடையாது. தம்மை அல்லாஹ்வுக்கு நிகராக்கும் வகையில் மக்கள் அறியாமல் பேசும் போது உடனே தவறைச் சுட்டிக் காட்டித் திருத்தி உள்ளார்கள். அந்த வகையில், மக்கள் செலுத்தும் தனிப்பட்ட மரியாதையை வெறுக்கும் தலைவராக நபிகளார் திகழ்ந்தார்கள்.
உலகத்தில் நபி (ஸல்) அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895, திர்மிதீ 2678
அதிகார மட்டத்திலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பிறகு தங்களது காலில் விழுந்து பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நபர்களுக்கு வந்து விடுகிறது. அவ்வாறான ஆசை கடுகளவும் நபியவர்களுக்கு இருக்கவில்லை. தமக்கு மரியாதை செலுத்துவதற்காக எழுந்து கூட நிற்கக் கூடாதென கட்டளையிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி).
முஆவியா (ரலி) வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) “அமருங்கள் என்றார். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று முஆவியா (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: அபூ மிஜ்லஸ்
நூல்கள்: அபூதாவூத் 4552, திர்மிதி 2769
மனிதன் மனிதனை வணங்கக் கூடாது; அத்தகைய தோற்றம் வந்துவிடக் கூடாது என்பதால் தான் மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நிற்பதைத் தடுத்தார்களே தவிர, வரவேற்பதற்காகவோ வழியனுப்பி வைப்பதற்கோ எழுந்து செல்வதை நபிகளார் தடுக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றுகளாக உள்ளன.
மக்களோடு வாழும் போது மட்டுமல்ல, இறந்த பிறகும் தம்மை மக்கள் அளவுகடந்து புகழ்ந்து விடக் கூடாது; தம்மைத் தகுதிக்கு மீறி உயர்த்தி மார்க்க வரம்புகளை மீறிவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். ஆகவே, மரணத்தைத் தழுவும் வரையிலும் அடிக்கடி மக்களுக்குப் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.
“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்; எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1746, அஹ்மத் 8449
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்வார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக் கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, ‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்’ என்று அவர்கள் செய்ததைக் குறித்து (அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள் என்று) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (4443)
ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் வாழ்ந்து விட்டாலேயே அவரைக் கடவுள் அளவுக்கு உயர்த்தி விடும் மக்களைப் பார்க்கிறோம். இவ்வாறு நிறைய நல்ல மனிதர்கள் இன்று கடவுளாக மதிக்கப்படுகிறார்கள்; வணங்கப்படுகிறார்கள்.
இவ்வாறிருக்க, பரிசுத்தமாக வாழ்ந்த நபியை சும்மா விடுவார்களா? எனவே, இந்த நிலை தமது விஷயத்தில் ஏற்பட்டு விடக் கூடாதென்று முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.
“எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே” என்று இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத்: 7054
புகழப்படுவதற்குரிய தகுதி இல்லாவிட்டாலும் கூட அதை எதிர்பார்க்கும் மக்கள் அநேகம் உள்ளனர். இதில் அதிபர்கள், ஆட்சியாளர்கள் என்று அதிகார மட்டத்தில் இருப்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆனால், அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரோ புகழை விரும்பாத தலைவராகத் திகழ்ந்தார்கள். அண்ணலாருடைய சொல்லும் செயலும் இதற்குரிய ஆதாரங்களாக இன்றளவும் உள்ளன.

இல்லறம் இனிக்க
சபீர் அலி

ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றிய மனித சமுதாயம் இன்று கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் ஒரு குடும்பத்தைச் சுற்றி வாழ்கிறான்.
ஒவ்வொரு மனிதனின் நிம்மதியையும், மன நெருக்கடியையும் தீர்மானிக்கும் விஷயங்களில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவையாக குடும்பங்களே இருக்கின்றன.
நிம்மதிக்கான வழி பொருளாதாரத்தில் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டு ஓடுகிற சில மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் கிட்டுகிறது. ஆனால் நிம்மதியில்லை.
எவ்வளவு கோடிகள் தன்னிடத்தில் அவர் வைத்திருந்தாலும் அதனால் குடும்ப நிம்மதியையோ சந்தோஷத்தையோ அவரால் வாங்க இயலவில்லை.
ஆனால், அதற்கு நேரெதிரில் வேறு சிலர் ஏழ்மையில் பயணிக்கின்றனர். அவர்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியுடன் வாழ்கின்றனர்.
நிம்மதி என்பது பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல. அது நாம் வாழும் வாழ்க்கை முறையினால் கிடைக்கக்கூடிய ஓர் இன்பமாகும்.
அத்தகைய இன்பம் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க வேண்டும் என்றால் முஃமின்கள் தங்கள் குடும்பத்தை எப்படி வார்த்தெடுக்க வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குச் சொல்லித்தருகிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமே ஆகும்.
அல்குர்ஆன் 66:6
ஒரு குடும்பத்தின் அடிப்படை உறவுமுறை என்பது கணவன், மனைவி உறவுதான். இங்கிருந்துதான் குடும்பம் உருவாகிறது.
அத்தகைய அந்த அடிப்படையான உறவைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தகுதியை நபிகளார் நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்கத்திற்காக.
ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5090
ஓர் இல்லம் இனிய இல்லமாக உருவாவதற்கான பயணத்தின் முதல் பயணச்சீட்டே இந்தத் தகுதிதான்.
உலக வழக்கங்களில் திருமணத்திற்குத் தகுதிகளாக மேற்படி நான்கு விஷயங்களையும் கொண்டுள்ளனர்.
ஆனால் ஒரு முஃமினுடைய வெற்றி எங்கே இருக்கிறது என்றால் மார்க்கமுடைய பெண்ணை மணந்து கொள்ளும் போதுதான் என்று நபிகளார் சொல்லித் தருகிறார்கள்.
மார்க்கத்தை அறிந்து அதன் ஒழுங்கு நெறிகளைப் பேணி நடக்கும் தகுதியைத்தான் முதல் தகுதியாகப் பார்க்க வேண்டும். அதன்பின் தான் அழகு மற்ற விஷயங்கள் எல்லாமே!
ஆனால், நம்மிடத்தில் இந்த விஷயம் தலைகீழாகக் கடைபிடிக்கப்படுகிறது.
மார்க்க ஒழுக்கம் என்பது கடைசிதான். முதலில் பெண் அழகாக இருக்கிறாளா? பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவளாக இருக்கிறாளா? ஊரில் அறியப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பமா? என்றுதான் பார்க்கின்றனர்.
இவை எதுவும் இல்லை. ஆனால் பெண் மார்க்கப் பற்றுள்ளவளாக, ஒழுக்கமானவளாக இருக்கிறாள் என்றால் அப்பெண் கரை சேர்வதற்கு வருடங்கள் உருண்டோடுகின்றன.
மார்க்க ஒழுக்கத்தைத் தவிர இங்கு பார்க்கப்படும் அனைத்து விஷயங்களுமே சில நாட்கள் தான் போலி இன்பம் தரும். கடைசி வரை நிம்மதியையும் நன்மைகளையும் நமக்குத் தருகின்ற உண்மையான இன்பம் மார்க்கப் பற்றில்தான் இருக்கிறது.
ஏனெனில் பிரச்சனைகள் இல்லாத குடும்பம் இல்லை. எந்தவொரு பிரச்சனை வரும்போதும் அது பெரிதாகாமல் தடுத்து, அதை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பக்குவமும், குடும்ப அமைப்புக்கு முக்கியத் தேவையான சகிப்புத் தன்மையும் மார்க்கத்தை அறிந்து கொள்கிற போது மட்டுமே கிடைக்கிறது.
இதை உணர்ந்து தங்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட தம்பதிகள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அதிகம் இருந்தாலும் ஒரே ஒரு உதாரணம் இதற்குப் போதுமானதாகும்.
உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூ தல்ஹா அவர்கள் (திருமணத்திற்காக) பெண் பேசினார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், “அபூதல்ஹாவே! உங்களைப் போன்றவர் (திருமணம் செய்துக் கொள்ள) மறுக்கப்பட மாட்டார். என்றாலும் நீங்கள் இறைநிராகரிப்பாளர். நான் முஸ்லிமான பெண் ஆவேன். (அதனால்) எனக்கு உங்களைத் திருமணம் செய்துக் கொள்வது ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே (திருமணத்திற்கான) எனக்குரிய மணக்கொடையாகும். அதைத் தவிர வேறு எதையும் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதுவே அவர்களின் மணக்கொடையாக இருந்தது.
நூல்: நஸாயீ 3341
அபூதல்ஹா (ரலி) அன்று பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் உம்முசுலைம் (ரலி) அவர்கள் திருமணத்திற்கு அந்தப் பொருளாதாரம் எதையும் அடிப்படைத் தகுதியாக எதிர்பார்க்கவில்லை.
இஸ்லாம் இருக்க வேண்டும் என்றும் அதுவே எனக்கு மஹராகவும் போதுமானது என்றும் அதைத் தாண்டிய எந்தப் பொருளாதாரமும் வேண்டாம் என்றும் உம்மு சுலைம் (ரலி) உறுதியாக இருந்துள்ளார்.
இவர்கள் தங்கள் திருமணத்திற்கு மார்க்கத்தை அடிப்படை விதியாகக் கொண்ட காரணத்தினால், இவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வளவு இனிமையாக மார்க்க அடிப்படையில் கடந்து சென்றது!
அனஸ் (ரலி) என்ற தனது மகனை அல்லாஹ்வின் தூதரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்படைத்தார்கள் உம்மு சுலைம்(ரலி).
நன்மையை அதிகம் அடைவதற்காகத் தனது மிக செழிப்பான செல்வத்தையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க முன்வந்தவர்கள்.
உஹதுப் போரில் நபிகளாரைக் காப்பதற்காக தன்னையே கேடயமாக ஆக்கியவர் அபூதல்ஹா(ரலி).
இன்னும் இதுபோன்ற ஏராளமான சிறப்பு களைக் கொண்ட குடும்பமாக இக்குடும்பம் உருவானதற்கு அடிப்படை விதை எங்கே போடப் பட்டது என்றால் அந்தத் திருமணத்தில்தான்.
இவ்வாறு நமது திருமணங்கள் இருக்க வேண்டும். அன்று அபூதல்ஹா(ரலி) இஸ்லாத்திற்கு வெளியில் இருந்தார். அதனால் திருமணத்தை மறுத்து இஸ்லாம் இருந்தால் திருமணம் என்ற விதியை வைத்தார்கள் உம்மு சுலைம்(ரலி).
இன்று ஒரு சிலர் இறைநிராகரிக்கும் ஆண்களோடு காதல் என்ற வலையில் வீழ்ந்து தங்கள் இம்மை மறுமை வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.
சிலர் இஸ்லாத்தில் இருந்தாலும் மார்க்கம் என்றால் என்னவென்று அறியாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். செல்வம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைத் தங்கள் துணையாகத் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் இரு தரப்பிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வை நம்பியவர்கள் உலகத்தின் போலி இன்பங்களுக்கு இடமளித்து, திருமணம் எனும் மனித வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வை வீணடித்து விடாமல், நபிகளார் சொன்ன அடிப்படைத் தகுதியை எடுத்துக் கொண்டால் வாழ்வு வளமாகும்; மறுமை வசமாகும்.
இதோ அதற்கு மற்றுமொரு முன்மாதிரி!
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை அவர் எனக்குக் கொடுத்தால்) அதையும் சேர்த்து எனது சுற்றுச்சுவரை அமைத்துக் கொள்வேன். அதை எனக்கு வழங்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அன்னாரிடம், “அதை நீ கொடுத்து விடு! உனக்குச் சுவனத்தில் அதற்குப் பகரமாக ஒரு மரம் கிடைக்கும்” என்று கூறினார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
அப்போது, அபூ தஹ்தாஹ்(ரலி) அவர்கள் அவரிடம் வந்து, “என்னுடைய தோட்டத்திற்கு பகரமாக உன்னுடைய ஒரு மரத்தை எனக்கு விற்பனை செய்துவிடு” என்று கூறினார். அவரும் விற்றுவிட்டார். உடனே, அபூ தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது தோட்டத்திற்குப் பகரமாக அந்த மரத்தை நான் வாங்கிவிட்டேன். இதை உங்களிடம் கோரிக்கை வைத்தவருக்கு நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் தந்து விட்டேன்” என்று கூறினார்கள்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எத்தனையோ பேரீத்த மரங்கள் சுவனத்தில் அபூதஹ்தாஹ்விற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன” என்று பல முறை கூறினார்கள்.
உடனே, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தனது மனைவியிடத்தில் வந்து, “உம்மு தஹ்தாஹ்வே! உடனே இந்த தோட்டத்திலிருந்து வெளியேறு! ஏனெனில் சுவனத்தில் கிடைக்கவிருக்கும் பேரித்த மரத்திற்காக இந்தத் தோட்டத்தை நான் விற்றுவிட்டேன்” என்று கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “இதுவே லாபகரமான வியாபாரம்” என்றோ அதற்கு ஒப்பான வார்த்தையையோ கூறினார்கள்.
நூல்: அஹ்மது 12025
இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் கூலியைப் பெறுவதற்காகத் தன் தோட்டத்தையே அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர் அபூதஹ்தாஹ் (ரலி) என்பது ஒரு புறம் இருக்கிறது.
மறுபுறம் இன்னுமொரு மிக முக்கியத் தகவலையும் நமக்குத் தருகிறது.
தனது பேரீச்சந் தோட்டத்தைக் கொடுத்து ஒற்றை மரத்தை வாங்கி, அதையும் தர்மம் செய்து விட்டு ஒரு மனிதர் தன் மனைவியிடம் வருகிறார்.
அந்த மனைவி அவரைத் திட்டவில்லை; வசை பாடவில்லை.
அவர் செய்த வியாபாரத்தைப் பாராட்டி, “இதுதான் உண்மையில் லாபமான வியாபாரம்” என்றும் தெரிவிக்கிறார் என்றால் இத்தகைய ஒற்றுமை எங்கிருந்து கிடைக்கும்?
தம்பதியர்களில் ஒருவருக்கு மட்டும் மார்க்கம் இருந்து மற்றவருக்கு இல்லையென்றால் கிட்டுமா?
இருவருமே மார்க்கம் அறிந்தவர்களாகவும் மறுமைக்காக வாழ்பவர்களாகவும் இருந்தால் மாத்திரம் தான் இத்தகைய இனிமை நிகழும்.
கணவன் மனைவியிடத்தில் மார்க்கம் இருக்கிற போதுதான் அவர்களைப் பார்த்துப் பிரதிபலிக்கும் கண்ணாடி பிம்பமாக அவர்களது குழந்தை மார்க்க ஒழுக்கமுள்ளதாக வளரும்.
எளிமையில் வாழ்க்கையைப் போதுமாக்கிக் கொள்வதெல்லாம் மார்க்கம் இருக்கும் போதுதான் சாத்தியமாகும்.
இப்படி எல்லா உண்மையான சந்தோஷங்களும் இந்த அடிப்படை உறவின் அடிப்படைத் தகுதியிலிருந்துதான் பிறக்கிறது.

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – தொடர் 36
குர்ஆன் கேட்கையில் அழுபவர் குறைப்பாடு கொண்டவர் கஸ்ஸாலியின் குறைப்பார்வை
மூலம் : முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அலீ மக்ராவி
தமிழில் : எம்.ஷம்சுல்லுஹா

இஹ்யாவில் அச்சம், ஆதரவு என்ற அத்தியாயத்தில் அச்சத்தின் தரங்கள், பலம் மற்றும் பலவீனம் அதில் ஏற்படும் வேறுபாடு என்ற பாடத்தில் கஸ்ஸாலி பின்வருமாறு கூறுகின்றார்.
فأما القاصر منه فهو الذي يجرى مجرى رقة النساء يخطر بالبال عند سماع آية من القرآن فيورث البكاء وتفيض الدموع
بيان درجات الخوف وإختلافه في القوة والضعف
كتاب الخوف والرجاء
குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை ஒருவர் செவியுறும்போது அது அவரது உள்ளத்தில் ஊடுருவிய மாத்திரத்தில் அவரிடம் கண்ணீரை வரவழைத்து விடுகின்றது. அவரது கண்கள் அருவியாகப் பெருகிவிடுகின்றன. பெண்களைப் போன்று இப்படிப்பட்ட இளகிய மனமுடையவர் இதில் குறைபாடுள்ளவர் ஆவார்.
இஹ்யாவைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகின்ற மக்கள், தங்களின் கனிவான பார்வையை கஸ்ஸாலி கூறுகின்ற கருத்தின் மீது தயவு செய்து படியவும் பதியவும் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குர்ஆன், ஹதீசுக்கு நேரெதிர் திசையில் கஸ்ஸாலி இலக்கின்றி பயணிக்கின்றார் என்பதற்கு இதை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்று சொல்லி விடலாம். குர்ஆன் ஓதும் போது அழுவது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களை முதலில் பார்ப்போம்.
இறைவசனங்களில் இளகிய தூதர்கள்!
அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித்தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள்.
அல்குர்ஆன் 19:58
கண்கலங்கும் கல்விமான்கள்
“இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!’’ என்று கூறுவீராக! இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவார்கள்.
எங்கள் இறைவன் தூயவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக உள்ளது எனக் கூறுவர்.
அழுது, முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.
அல்குர்ஆன் 17:107-109
காதில் வசனங்கள்; கண்களில் கண்ணீர்
இத்தூதருக்கு அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.
“அல்லாஹ்வையும், எங்களிடம் வந்த உண்மையையும் நாங்கள் நம்பாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) உள்ளது? நல்ல சமுதாயத்துடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்திட ஆவல் கொள்கிறோம்‘’ (எனவும் கூறுகின்றனர்).
அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.
அல்குர்ஆன் 5:83-85
நினைக்கும் உள்ளங்கள்; சிலிர்க்கும் தோல்கள்
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.
அல்குர்ஆன் 39:23
இந்த வசனங்கள் உரக்க உணர்த்தும் விஷயங்கள், குர்ஆன் வசனங்கள் காதுகளில் விழும்போது கண்களில் கண்ணீர் வருவது இறையச்சமிக்க நல்லடியார்களின் நற்பண்புகள் என்பதைத் தான்.
ஆனால் கஸ்ஸாலியோ அதை கண்ணியக் குறைவாகப் பார்க்கின்றார் என்றால் கோளாறும் குறைபாடும் கஸ்ஸாலியிடம் தான் இருக்கின்றதே தவிர வசனங்களைச் செவியுற்ற மாத்திரத்தில் அழக்கூடிய மக்களிடம் இல்லை.
கண்ணீர் சிந்திய கண்மணி நாயகம் (ஸல்)
இந்த வசனங்களின் பார்வையில் தான் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடு அமைந்திருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு ‘அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி(ஸல்) அவர்கள், ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரி 4582
அபூபக்ர் (ரலி)யின் இளகிய மனம்
அபூபக்ர் (ரலி) தம் வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளிவாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன் அவரைக் கவனிக்கலாயினர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும்போது தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
நூல்: புகாரி 2297
பெண்கள் போன்று இளகிய மனம் படைத்தவர் என்று கஸ்ஸாலி எதைக் குறை காண்கிறாரோ அதைத் தான் அபூபக்ர் (ரலி) குணமாகக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கீழ்காணும் ஹதீஸ் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. கஸ்ஸாலி ‘ரிக்கத்’ என்று எந்த அரபி வார்த்தையைப் பயன்படுத்துகின்றாரோ அதை வார்த்தையைத் தான் ஆயிஷா (ரலி) ரகீக் (இளகிய மனமுடையவர் என்று) பயன்படுத்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்” என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும், ‘அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி) இடமும் கூறினேன். அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் ‘உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 679
குர்ஆன் வசனங்களைச் செவியுறும் போது உள்ளம் உருகுவதும் கண்களில் வெள்ளம் பெருகுவதும் நல்லடியார்களின் போற்றத் தக்க நற்பண்புகளில் உள்ளதாகும்.
ஜஃபர் (ரலி) அவர்களின் குழுவினர் அபீசீனிய நாட்டின் மன்னர் நஜ்ஜாஷியிடம் அடைக்கலம் தேடிச் சென்ற போது அவையில் நடந்த வாதப் பிரதிவாதத்தைப் பார்ப்போம்.
“இறைத்தூதர் கொண்டு வந்த வசனங்கள் ஏதேனும் இருக்கின்றதா?” என்று நஜ்ஜாஷி கேட்டார். ஆம் என்றார் ஜஃபர் (ரலி). “அப்படியானால் அதை ஓதுக” என்று நஜ்ஜாஷி கூறினார். அப்போது “காஃப், ஹா, யா, அய்ன், ஸாத்” என்ற (19வது) அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஜஃபர் (ரலி) ஓதினார்கள். ஜஃபர் (ரலி) ஓதுவதைக் கேட்ட நஜ்ஜாஷி அல்லாஹ்வின் மீது ஆணையாக தனது தாடியை நனைக்கின்ற அளவுக்கு அழுது விட்டார்கள். தங்களுடைய ஏடுகளை நனையும் அளவிற்கு மார்க்க அறிஞர்களும் அழுது விட்டார்கள்
அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி)
நூல்: முஸ்னத் அஹ்மத் 1649 (ஹதீஸ் சுருக்கம்)
ஜஃபர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய அப்போதைய கால கட்டத்தில் நஜ்ஜாஷி இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. ஆனால் பிந்தைய கால கட்டத்தில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
(அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஷி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1327
ஜஃபர் (ரலி) ஓதிய குர்ஆன் நஜ்ஜாஷியின் உள்ளத்தில் ஊடுறுவிய மாத்திரத்தில் அவரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. முடிவில் அது அவரை இஸ்லாத்திலேயே கொண்டு வந்து இணைத்து விட்டது. இதை எப்படிக் குறை காண முடியும்? இம்மாபெரிய ஒரு மாற்றத்தை எப்படிப் பெண்களின் இளகிய மனநிலையோடு ஒப்பிட முடியும்?
பொதுவாக, சூபிஸ சிந்தனையாளர்களுக்கு, மக்களைக் குர்ஆனை விட்டும் ஹதீஸை விட்டும் தடுப்பது தான் முக்கியமான வேலையாகும். அந்த வேலையைத் தான் கஸ்ஸாலி உறுத்தலின்றி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட இஹ்யா, மக்களின் மறுமை வாழ்க்கைக்குப் பயன் தருமா? இனியும் இஹ்யாவைத் தூக்கிப் பிடிக்கும் கண்ணியமிக்கோர் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களா? என்று கண்ணியத்துடன் கேட்கின்றோம்.
من لم يقرأ الإحياء فليس من الأحياء
“இஹ்யாவைப் படிக்காதவர் உயிர் உள்ளவர்களுடன் இருக்கத் தகுதியில்லாதவர்” என்று மதரஸாக்களில் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு இஹ்யாவை ஆகாயத்திற்குக் கொண்டு சென்ற மக்கள் அத்தகைய தகுதிக்கும் தரத்திற்கும் அது தகுதியானது தானா என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்
ஆர். அப்துல் கரீம்

துரு துருவென ஓடும் எறும்பை சுறுசுறுப்புக்கு உதாரணம் காட்டுவதும், உணவிற்காகப் பல மைல்கள் தூரம் பறந்து செல்லும் பறவையை கடின உழைப்பிற்கு உதாரணம் காட்டுவதும் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்றே! எறும்பிலும் பறவையிலும் மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தக்க பல சிறப்புமிக்க அம்சங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுரையில் நாம் அதனைப்பற்றி ஆராய முற்படவில்லை.
மனித குலத்திற்கு அறிவுரையாக அருளப்பட்ட திருக்குர்ஆன் பல இறைத்தூதர்களின் வரலாறுகளைப் பதிவு செய்துள்ளது. சில நல்லடியார்களின் வரலாற்றினையும் எடுத்துக் கூறுகிறது.
அவற்றை கதை ரசனைக்காகவோ, இலக்கியச் சுவைக்காகவோ இறைவன் கூறவில்லை. மாறாக மனிதர்கள் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனால் எடுத்துக் கூறப்பட்ட உண்மை வரலாறாகும்.
பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணியபோது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் யாரை நாடினோமோ அவர்கள் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது. அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல்குர்ஆன் 12:110, 111
இறைத்தூதர்களின் வரலாறு மனிதர்கள் படிப்பினை பெறவே என்பதை இவ்விரு வசனங்கள் விளக்குகின்றன.
அந்த வரிசையில் இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் எடுத்துரைக்கின்றான்.
நபி சுலைமான் (அலை) அவர்களைப் பொறுத்த வரை பல்வேறு அற்புதங்கள் வழங்கப்பட்ட இறைத்தூதர் ஆவார்.
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
அல்குர்ஆன் 27:17
பறவைகளின் பாஷையும் சுலைமான் நபியவர்களுக்கு இறைவனால் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்’’ என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:16
இத்தகைய சுலைமான் நபியின் வாழ்வில் ஓர் எறும்பினைப் பற்றியும் ஒரு பறவையைப் பற்றியும் அல்லாஹ் கூறுகிறான்.
இறைவன் எந்த ஒன்றையும் வீணாகக் கூறுபவன் அல்ல என்ற அடிப்படையில் இது தொடர்பாக இறைவன் கூறும் நிகழ்வை நோக்கும் போது, மனிதர்கள் படிப்பினை பெறத்தக்க அம்சம் இதிலே அடங்கியுள்ளது என்ற முடிவிற்கு எளிதாக வரலாம்.
எறும்பு தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார்.
அல்குர்ஆன் 27:18, 19
சுலைமான் நபியவர்கள் தனது படை, பரிவாரங்களுடன் புறப்பட்டு செல்லும் போது ஓர் எறும்பு சுலைமான் நபியின் படை வருவதை அறிகிறது. படையினரின் மிதிக்குள்ளாகி நசுங்கி விடாமல் தன்னைப் பாதுகாப்பதுடன் சக எறும்புகளையும் பாதுகாக்கக் குரலெழுப்புகின்றது.
‘‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’
இது தான் எறும்பு எழுப்பிய குரல்! என்னே ஒரு பொதுநலம்!
ஓர் ஆபத்திலிருந்து தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதாது. சக கூட்டாளிகளையும் காக்க வேண்டும் என்ற எறும்பின் பொதுநல உணர்வை, சமூக அக்கறையை என்னவென்பது?
சுயநலத்தைத் துறந்து, பொதுநலத்துடன் வாழும் அழகிய பண்பை திருக்குர்ஆன் கூறும் இந்த எறும்பு கற்றுத்தருகிறது.
தானுண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல் சமூக அக்கறையுடன் வாழும் போக்கை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் எனும் சிந்தனையை இது தூண்டுகிறது.
இதுமட்டுமின்றி சுலைமான் நபியவர்களின் வாழ்வில் ஹுத்ஹுத் எனும் பறவை பற்றியும் கூறப்படுகிறது.
தன்னைத் தாண்டி, பிறர் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிற போதனை பறவைக்கும் சுலைமான் நபிக்கும் நடைபெறும் உரையாடலினூடாகவும் ஊட்டப்படுவதை உணரலாம்.
இதோ பறவை பற்றி இறைவன் கூறும் தகவல்…
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா?” என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’’ என்று கூறியது.
“நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள். வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி” (என்றும் கூறியது)
அல்குர்ஆன் 27:20-26
பறவைகளை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்பதை முன்னர் கண்டோம்.
அதன்படி பறவைகளை அவர் ஆய்வு செய்கின்ற போது, ஹுத்ஹுத் எனும் பறவை தாமதமாக வருகின்றது.
ஸபா எனும் ஊரில் அதன் அரசியும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்கி வழிபடுகின்றனர். வானம், பூமியைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் அல்லாஹ்வையல்லவா அவர்கள் வணங்க வேண்டும்? என்று தகவல் தெரிவிக்கின்றது.
அதன் பிறகே சுலைமான் நபியவர்கள் அந்நாட்டு அரசிக்குக் கடிதம் மூலம் இஸ்லாத்தை எத்திவைத்தார்கள்.
இறுதியில் அந்நாட்டு அரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.
(பார்க்க: அல்குர்ஆன் 27வது அத்தியாயம், வசனம் 28 முதல் 44 வரை)
அந்நாட்டு மக்கள் சூரியனை வணங்குகிறார்கள் எனும் போது, அல்லாஹ்வை அல்லவா இவர்கள் வணங்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவிப்பதிலிருந்து அப்பறவைக்குள்ள சமூக அக்கறை வெளிப்படுவதை அறியலாம்.
இவை யாவும் இறை அற்புதத்தில் நடைபெற்ற நிகழ்வுகளாகும்.
இவ்விரு நிகழ்வுகளும் மனிதர்களுக்குக் கற்பிக்கும் போதனை…
நமக்கேன் வம்பு என்று இருந்து விடாமல் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்பதைத்தான்.
இத்தகைய சமூக அக்கறை என்பது அல்குர்ஆனும் அண்ணல் நபியவர்களும் போதிக்கும் அழகிய குணமாகும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:71
முஃமினான ஆண்கள், பெண்கள் பிற மக்களுக்கு நன்மையை ஏவுவார்கள்; தீமையைத் தடுப்பார்கள் என்கிறது இவ்வசனம்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்பது சமூக அக்கறையின் விளைவே.
முஃமின்கள் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு முஸ்லிமிடமும் இத்தகைய சமூக உணர்வு மேலிட வேண்டும் என்று நபியவர்கள் போதிக்கின்றார்கள்.
பாதையில் கிடக்கும் முற்களை அகற்றச் சொன்னது இதன் அடிப்படையிலேயாகும்.
“தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 246
“ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2472
வாகனத்தில் ஏற சிரமப்படும் ஒருவரை வாகனத்தில் ஏற்றி விடுவதும் சிறந்த நற்காரியம் என்று நபிகளார் நவின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2891
இப்படி, பசித்தோருக்கு உணவளித்தல், அனாதைகளைப் பராமரித்தல், பாதிக்கப் பட்டோருக்காகக் குரலெழுப்புதல் இன்னும் இதுபோன்று நபிகளார் கூறும் பல பணிகள், நம்மைச் சுற்றிலும் வாழும் சமூக மக்கள் மீது அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் என்பதையே பிரதிபலிக்கின்றன.
ஆனால் சில முஸ்லிம்களிடம் இந்தச் சமூக அக்கறை உள்ளதா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்குரிய நியாயமான பதிலாகும்.
இத்தகையோர் பல செயல்களில் நமக்கேன் வம்பு என்று இருந்து விடுகிறார்கள்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் அழைப்புப் பணியில் அக்கறை செலுத்துவதில்லை.
சமுதாயத்திற்கு ஆட்சியாளர்களாலோ பிற மக்களாலோ தீமை ஏற்படும் போது அதை உரிய விதத்தில் தட்டிக் கேட்பது, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது போன்ற செயல்களில் பங்கெடுப்பதில்லை.
இத்தகைய சுயநலம் வெறுப்பிற்குரியதாகும்.
நான், எனது என்ற சுயநல உணர்வைத் தாண்டி, பிற மக்கள் நலன் குறித்தும் சிந்திக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவரிடமும் இத்தகைய சமூக அக்கறை மேலிட வேண்டும்.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட எறும்பும் பறவையும் கற்றுத் தரும் பாடமும் அதுவே!

அலீயின் சிறப்பை ஏற்க மறுத்த யூனூஸ் நபி ஆழ்கடலில் சிறை வைப்பு
நபிமார்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
அல்குர்ஆன் 25:74
இது திருக்குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதியாகும். ‘உன்னை அஞ்சுவோருக்கு எங்களை முன்னோடியாகவும் ஆக்குவாயாக!’ என்பது இதன் பொருள்.
இந்த வசனம் அபூ அப்தில்லாஹ்விடம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போது அவர், “எங்களை இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடிகளாக (இமாமாக) ஆக்குவாயாக என்று ஒரு பாரதூரமான விஷயத்தை முஸ்லிம்கள் கேட்கின்றார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார். “ரசூலுல்லாஹ்வின் பேரரே! இது எப்படி?” என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்
وَاجْعَلْ لنا من المتقين إماما
(வஜ் அல்லனா மினல் முத்தகீன இமாமா)
“எங்களுக்கு அஞ்சக்கூடியவர்களிலிருந்து முன்னோடியை ஆக்குவாயாக!’ என்று தான் அருளப்பட்டது” என்று இவ்வசனத்திற்கான விரிவுரையில் கிம்மி எடுத்துச் சொல்கின்றார்.
ومَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا (71)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
திருக்குர்ஆன் 33:71 கூறுகின்ற சரியான வசனமாகும்.
ஆனால் கலீனீ என்பவர் தனது நூலான அல்காஃபி என்ற நூலில்
ومَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ في ولاية على والأئمة بعده فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
“அலீ (ரலி) மற்றும் அவருக்குப் பின் வருகின்ற இமாம்களின் அதிகார விஷயத்தில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார் என்று தான் குர்ஆன் வசனம் அருளப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார்.
இப்படி ஒரு வாசகம் குர்ஆனில் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.
இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள் தான். வேதத்தில் விளையாடுகின்ற யூத, கிறிஸ்துவர்களின் வேலைகளை இவர்களது வேலைகள் மிஞ்சி விட்டன. தவ்ராத், இன்ஜீலில் அவர்களின் வேலைகள் எடுபட்டன. ஆனால் ஷியாக்களின் விளையாட்டுக்கள் திருக்குர்ஆனில் எடுபடவில்லை; எடுபடவும் செய்யாது. காரணம் அல்லாஹ் இந்த வேதத்தை, திருத்தம், மாற்றம், நீக்கல், சேர்த்தல் அனைத்தை விட்டும் இறுதி நாள் வரை இரும்புத் திரையை மிஞ்சிய தனது திரையைப் போட்டுப் பாதுகாத்து விட்டான். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9
இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.
அல்குர்ஆன் 69:43-45
திரித்தல் என்ற திருட்டு வாதம்
திருக்குர்ஆனில் திருத்தம் உள்ளது. மாற்றம் உள்ளது என்று இவர்கள் தில்லுமுல்லு வாதம் செய்வது ஏன்? திருகுதாளப் பேச்சு ஏன்? இதற்கு அடிப்படைக் காரணம் வேறொன்றுமில்லை. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைமை தங்களுக்கு மட்டுமே சொந்தம்; வேறு யாருக்கும் கிடையாது என்ற அவர்களின் அலாதியான, அபரிமிதமான நம்பிக்கை தான். அதாவது ஒட்டுமொத்த சமுதாயமும் அவர்களின் தலைமைத்துவத்தை நம்பிக்கை கொள்ளவேண்டும்.
எப்படி நாம் அல்லாஹ்வையும் தூதர்களையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறோமோ அதுபோன்று ஷியாக்களின் தலைமைத்துவத்தை நம்ப வேண்டும்.
இதோ கலீனீ அறிவிக்கின்றார்:
மக்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது விதியாக்கியுள்ளான். மக்கள் நம்மை அறியாமல் இருப்பது தகாது. நம்மைத் தெரியாது என்று சொல்லி அவர்கள் தப்பிக்கத் தக்க காரணமில்லை. நம்மை அறிந்தவர் நம்பிக்கை கொண்டவாராவர் (அதாவது முஃமினாவார்) மறுத்தவர் இறைநிராகரிப்பாளர் ஆவார். நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் விதித்திருக்கின்ற நேர்வழியின் பக்கம் அவர்கள் திருந்தி, திரும்புகின்ற வரை நம்மை அறியாமல் இருந்து நம்மை மறுக்காதவர் வழி கெட்டவராவார்.
இது ஷியாக்களின் தலைமைத்துவ வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
மார்க்க விஷயத்தில் கட்டுப்படுதல் என்பது முதலில் அல்லாஹ்வுக்கும் அதன் பின்னர் அவனது இறைத்தூதர்களுக்கும் மட்டும் தான். ஆனால் இந்த ஷியாக்கள் இதைப் பொதுவுடைமையாக்கி விட்டார்கள்.
அவர்களது இமாம்களில் ஒருவரான அபூஅப்தில்லாஹ், “கட்டுப்படுவது என்பது இறைத்தூதர்களுக்கும் இறைநேசர்களுக்கும் பொதுவானதாகும்” என்று சொல்கின்றார். இவ்வாறு கலீனீ தனது அல்காஃபீ என்ற நூலில் அறிவிக்கின்றார்.
“அல்லாஹ்வையும் அஹ்லுல் பைத்தை (நபியவர்களின் குடும்பத்தாரைச்) சார்ந்த அவனது இமாமையும் அறிந்தவர் தான் அல்லாஹ்வை அறிந்தவரும் அவனை வணங்குபவருமாவார்; அல்லாஹ்வையும் அஹ்லுல் பைத்தைச் சார்ந்த நம் இமாமையும் அறியாதவர் அவனை அறியாதவரும் அல்லாஹ் அல்லாத மற்றவரையும் வணங்கியவருமாவார். அல்லாஹ்வின் மீது வழிகேட்டை வணங்கியவருமாவார்” என்று அபூஜஃபர் அறிவித்ததாக ஜாபிர் வழியாக அறிவிக்கப்படுகின்றது.
இது அல்காஃபி என்ற அவர்களின் நூலில் இடம்பெறுகின்றது.
இது ஷியாக்களின் உயர்சாதி மனப்பான்மை யையும் அவர்களின் ஆதிக்கவெறியையும் தெளிவாகவே பறை சாற்றுகின்றது. அதற்காகத் தான் அவர்கள், ‘குர்ஆனில் பிழையிருக்கின்றது, திருத்தமிருக்கின்றது, தில்லுமுல்லு இருக்கின்றது’ என்று திருட்டு வாதம் புரிகின்றார்கள். என்ன விலை கொடுத்தேனும் தலைமைத்துவம் தங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்பது அவர்களிடம் கொழுந்து விட்டு எரிகின்ற கோர நெருப்பாகும். இந்தக் காரணத்தால் அவர்கள் தலைமைத்துவத்தை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஆக்கிவிட்டார்கள்.
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து என்பது நமது தூய மார்க்கம் கூறும் அடிப்படையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
ஆனால் களங்கமும் கலப்படமும் நிறைந்த ஷியாக்களின் மதம் கூறும் அடிப்படையைப் பாருங்கள்.
1. தொழுகையை நிலைநிறுத்துவது.
2. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
3. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
4. ரமளானில் நோன்பு நோற்பது.
5. விலாயத்.
(இறுதி ஹஜ்ஜின் போது)கதீர் (என்ற இடத்தில் பேசிய) தினத்தன்று விலாயத்துக்கு அழைப்புக் கொடுத்தது போன்று நபி (ஸல்) அவர்கள் வேறெதற்கும் அழைப்புக் கொடுக்கவில்லை.
இவ்வாறு இமாம் அபூஜஃபர் கூறியதாக கலீனீ தனது அல்காஃபி என்று நூலில் அறிவிக்கின்றார்.
இந்த ஐந்து கடமைகளில் எது சிறந்தது? என்று கேட்ட போது, “விலாயத்தை விட வேறு எது சிறந்ததாக இருக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார்.
தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தூய கலிமா முதலாவது அடிப்படையாக இடம்பெறுகின்றது. அதற்குப் பதிலாக ஷியா மதத்தின் கடமைகளில் விலாயத் இடம்பெறுகின்றது.
விலாயத் என்றால் இறைநேசம் என்று பொருள்.
“நாங்கள் நபியின் குடும்பம். எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே விலாயத் என்ற இறைநேசம் சொந்தம். அதன் ஏகபோக உரிமை வேறு யாருக்கும் கிடையாது. எங்கள் குடும்பத்தில் தான் இறைநேசர்கள் அதாவது வலீமார்கள் இருக்கின்றார்கள். நாங்கள் தான் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இதனால் நாங்கள் தான் தலைமைத்துவத்திற்குத் தகுதி வாய்ந்தவர்கள்” என்ற யூத வாதத்தை வைக்கின்றார்கள்.
இவர்களின் இந்த வாதத்திற்கு எதிராகத் திருக்குர்ஆன் கொள்கை இருப்பதால் அதில் திருத்தம் உள்ளது என்ற திருட்டு வாதத்தை வைக்கின்றார்கள்; திருகுதாளம் புரிகின்றார்கள்.
விலாயத்தை மறுத்ததால் விழுங்கிய கடல் மீன்!
இங்கே இயற்கையாகவே ஒரு கேள்வி எழுகின்றது. தொழுகைக்கும் ஜகாத்திற்கும் குர்ஆனில் இடம் கிடைத்த அளவிற்கு விலாயத்திற்கு கிடைக்கவில்லையே! விலாயத் என்பது தொழுகை, ஜகாத்தைப் போன்ற இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றல்ல என்பது இதன் மூலம் விளங்குகின்றதல்லவா? என்பது தான் அந்த கேள்வி.
உண்மை அது தான். ஆனால் ஷியாக்களோ குர்ஆனில் விலாயத்திற்கு மிகப் பெரிய இடம் உள்ளதாக நம்புகின்றனர். அதிலும் அலீ (ரலி) அவர்களின் விலாயத்தைப் பற்றி அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறுவதாகத் திரிக்கின்றனர்.
அலீயின் விலாயத்தைப் பற்றி அல்லாஹ் நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்து விட்டான். இவ்வாறு அபூஜஃபர் அறிவிக்கின்றார்.
நூல்: அல்காஃபி, பாடம்: இறைநம்பிக்கை.
“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?’’ என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்’’ என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 3:81
அல்லாஹ் இந்த வசனத்தில் நபிமார்களிடம் எடுத்த உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகின்றான். உங்களிடம் ஒரு நபி வந்தால் அவரை உண்மைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட இறைவசனத்தை அலீ அவர்களுக்குப் பொருத்துகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்குக் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதைப் புரியலாம்.
இப்போது தெரிகின்றதா ஷியாக்களின் விஷம விளையாட்டு?
ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை. விலாயத் என்பது பொதுவானது. முஃமின்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று அல்லாஹ்வின் திருவசனம் விலாயத்தைப் பொதுவுடமையாக்கி விட்டது.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 10:62,63
தலைமைத்துவத்தைத் தங்களுக்காக ஆக்க வேண்டும் என்ற தணியாத பதவி தாகத்தில் ஷியா மதம் விலாயத்தைத் தனியுடைமை ஆக்குகின்றது. இதற்காகப் பல்வேறு பொய் மூட்டைகளை அடித்தும் அவிழ்த்தும் விட்டுக் கொண்டிருக்கின்றது.
இதை விடக் கொடுமை என்ன தெரியுமா?
قال أمير المؤمنين على:
إن الله عرض ولايتي على أهل السموات وعلى أهل الأرض.. أقر بها من أقر وأنكرها من أنكر.. أنكرها يونس فحبسه الله في بطن الحوت حتى أقر بها – بصائر الدرجات
அமீருல் முஃமினீன் அலீ (ரலி) கூறுகின்றார்கள்:
அல்லாஹ் எனது விலாயத்தை வானவர்கள், பூமியில் உள்ளவர்கள் மீது எடுத்துக் காட்டினான். அதை ஏற்பவர்கள் ஏற்றுக் கொண்டனர். மறுப்பவர்கள் மறுத்தனர். அதை யூனூஸ் நபி (அலைஹி) ஏற்க மறுத்துவிட்டார். அதனால் அதை ஏற்கும் வரை அல்லாஹ் அவரை மீன் வயிற்றில் சிறைப்பிடித்து விட்டான்.
நூல்: பஸாயிருத்தரஜாத்
அல்லாஹ் நம்மை இந்த அபத்தமான வாதத்தை விட்டும், இறைமறுப்பை விட்டும் காப்பானாக!
தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்பும், தங்களின் எதிர்பார்ப்புக்கும் ஏக்கத்திற்கும் மாற்றமாகத் திருக்குர்ஆன் இருக்கின்றது என்பதற்காக அதில் திருத்தல், திரித்தல் இருக்கின்றது என்ற இறை மறுப்பும் இவர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கின்றது என்பதை அலீ (ரலி) அவர்கள் கூறியதாக மேலே இடம்பெற்றுள்ள வானளாவிய பொய்ச் செய்தியிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இறையருளை பெற்றுத்தரும் துல்ஹஜ் பத்து நாட்கள்
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

அல்லாஹ்வின் அருள் பொங்கும் ரமலான் மாதத்தை மிகச் சிறப்பான முறையிலும் நன்மைகளை அதிகமதிகம் செய்தும் கழித்திருக்கின்றோம். நமக்கு வழங்கப்பட்ட அற்புதமான வாய்ப்பை நம்மில் பெரும்பாலானோர் கன கச்சிதமாகப் பயன்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்திருக்கின்றோம்.
ரமளானைத் தொடர்ந்து நன்மைகளை நாம் அதிகமதிகம் செய்து இறையருளில் நனைய வேண்டும் என்பதற்காக நம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது துல்ஹஜ் மாதம். இந்த துல்ஹஜ் மாதம் என்பது ரமளானுக்கு அடுத்தபடியாக நம்மை சொர்க்கத்தின் பாதையில் வெகு சீக்கிரமாக இழுத்துச் செல்கின்ற ஒரு அற்புத மாதமாகும்.
துல்ஹஜ் மாதத்திற்கு ஏராளமான சிறப்புகளும் மகத்துவமும் நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தருகின்ற சக்திகளும் இருக்கின்றன. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் துல்ஹஜ் மாதத்தின் புனிதத்தை அறிந்தும் அறியாதவர்களைப் போன்று அலட்சியமாகக் கழித்து வருவதைப் பார்க்கின்றோம்.
இன்னும் சொல்வதாக இருந்தால் துல்ஹஜ் மாதத்திற்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன? அதை அடைந்து கொள்வது எப்படி? அருள் பொங்கும் துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளைப் பெற என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகளுக்குத் திட்டங்கள் வகுக்கப்படாமலேயே பெரும்பான்மையான முஸ்லிம்களின் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கின்றது.
மாதங்கள் குறித்துத் திருக்குர்ஆன்
உலகம் படைக்கப்பட்ட நாட்கள் முதலே மனிதர்கள் தங்களின் வாழ்நாளையும், இன்னபிற காரியங்களையும் கணக்கிடுவதற்காக மாதங்களை அல்லாஹ் வகுத்திருக்கின்றான். இறைவன் வகுத்திருக்கின்ற மாதங்களில் சில புனித மாதங்களையும் இறைவன் கற்றுத் தந்திருக்கின்றான்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 9:36
உலகத்தைப் படைத்த ஆரம்ப கட்டத்திலேயே இறைவன் மாதங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து விட்டான். மேலும், அந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்கள் புனித மாதங்களாக இறைவனால் கருதப்படுகின்றது.
இந்தப் புனித மாதங்களில் எதிரிகள் வலுக்கட்டாயமாகக் கூட்டத்தைச் சேர்த்து போருக்கு வந்தாலே தவிர, முஸ்லிம்கள் கண்டிப்பாகப் போருக்குச் செல்லக் கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும்.
இந்த நான்கு புனித மாதங்களில் ஒன்று தான் நம்மை ஆரத் தழுவக் காத்துக் கொண்டிருக்கின்ற, இறையருளை வாரி இறைக்கின்ற துல்ஹஜ் மாதமாகும். இந்தப் புனித மாதத்தில் நன்மைகளை போட்டி போட்டுக் கொண்டு அதிகமதிகம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
இறையருளைப் பெற்றுத் தரும் பத்து நாட்கள்
நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கின்ற துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் என்பது அளப்பரிய சிறப்பையும் நன்மையும் வாரி வழங்குகின்ற நாட்கள்.
இந்தப் பத்து நாட்களில் ஒரு முஸ்லிமான அடியார் அல்லாஹ்வுக்காகச் செய்கின்ற அமல்கள் அல்லாஹ்விடத்திலே மகத்தான நற்கூலியைப் பெற்றுத் தந்து, அல்லாஹ்வின் அருளுக்குச் சொந்தக்காரர்களாக மாற்றுகின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறப்போர் (ஜிஹாத்)கூட (சிறந்தது) இல்லையா?’’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லைதான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி 969
துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் என்பது நற்செயல்களை அதிகமதிகம் செய்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற நாட்கள் என்பதை இச்செய்தி வலுவாக எடுத்துரைக்கின்றது.
எந்தளவிற்கென்றால், இந்தப் பத்து நாட்களில் நாம் செய்கின்ற அமல்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, இந்தப் பத்து நாட்கள் அறப்போரை விடவா சிறந்தது? என்று விழி உயர்த்திக் கேள்வி எழுப்பிய போது, ஆம்! அறப்போர் கூடச் சிறந்தது இல்லைதான். ஆனால், அல்லாஹ்வின் பாதையில் சென்று வெறுமனே ஒன்றுமில்லாமல் திரும்பிய மனிதரைத் தவிர என்று இந்தப் பத்து நாட்களை சிலாகித்துக் கூறினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழாத நமக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், நம்மில் ஒருவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்காக நற்காரியங்களில் ஈடுபடும் போது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடச் சிறந்த நற்கூலியை அல்லாஹ் தருகின்றான் என்றால், எவ்வளவு மகத்தான, சங்கைக்குரிய நாட்களை ஒவ்வொரு வருடமும் நாம் இழந்து வருகின்றோம் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
இறைவன் கூறுகின்ற அந்தக் குறிப்பிட்ட நாட்களான துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களில் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழும் வண்ணமாக தக்பீர் கூற வேண்டும். அதிகமான நேரங்கள் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகவும், இறைதியானத்தில் ஈடுபடுவதற்காகவும் ஒதுக்க வேண்டும் என்பதை விளங்க முடிகின்றது.
ஆனால் நம்மில் எத்தனை பேர் தக்பீரிலும், தியானத்திலும் ஈடுபட்டு வருகின்றோம்? என்ற கேள்விக்கணையை நம்முடைய உள்ளங்களில் நாமே கேட்டுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களில் இந்த நாட்களை வீணடிக்காமல் இருக்க அதிகம் சிரமத்தை எடுக்க வேண்டும்.
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!
அல்குர்ஆன் 89:1, 2
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே அல்லாஹ், வைகறையாக இருக்கின்ற காலத்தின் மீது சத்தியம் செய்து விட்டுப் பிறகு, முக்கியமான பத்து இரவுகளின் மீதும் சத்தியம் செய்கின்றான்.
இறைவனால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்ற அந்தப் பத்து இரவுகள் எவை என்பதை நேரிடையாக ஹதீஸ்களில் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வைத்து, அந்தப் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களைத் தான் குறிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் பத்து குறிப்பிட்ட இரவுகளின் மீது சத்தியம் செய்து விட்டு, சில முக்கியமான செய்திகளை மக்களுக்குச் சொல்ல வருகின்றான்.
அதாவது இறைவன், தான் படைத்த சில பொருட்களின் மீது சத்தியம் செய்யும் போது, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, இறைவன் சத்தியம் செய்கின்ற அந்தப் பொருட்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம். இரண்டாவது, அதன் மூலமாக நாம் பெற வேண்டிய படிப்பினை.
இதன் மூலம் இறைவன் நமக்குச் சொல்லித் தருகின்ற செய்தி என்னவென்றால், இந்தப் பத்து இரவுகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவங்களும், சிறப்புகளும் இருக்கின்றது என்பதையும், ஏராளமான படிப்பினைகளை நாம் பெற்று இறையருளைப் பெற வேண்டும் என்பதையும் அல்லாஹ் நமக்குப் பாடம் நடத்துகின்றான்.
இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்
துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உள்ள மிக முக்கியமான நாள் அரஃபா நாளாகும். அதாவது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் தான் ஹாஜிகள் அரஃபா என்ற பெருவெளியில் இலட்சோப இலட்ச மக்கள் திரண்டு நின்று அல்லாஹ்வின் அருளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், அன்பைப் பெறவும் ஆதரவு வைத்தவர்களாய் அணிதிரண்டு நிற்பார்கள்.
அன்றைய அரஃபா நாள் என்பது மக்காவில் கூடி இருக்கின்ற ஹாஜிகளுக்கு மாத்திரம் உரிய நாளாகக் கருதி விடக் கூடாது. மாறாக, பிறை ஒன்பது அன்று உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து முஃமினான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சொந்தமான புனிதம் நிறைந்த அரஃபா நாள்.
உலகத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலமாக தூதுத்துவப் பாடம் நடத்தினார்கள் அல்லவா! அந்தத் தூதுத்துவத்தின் இறுதி உபதேசமாக 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றைச் சாறு பிழிந்து மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்து, பிரம்மாண்டமான ஒரு பேருரை நிகழ்த்தியதும் இந்த அரஃபா நாளில் தான்.
அரபா தினம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம். வரலாறுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனித நாள் அரஃபா. அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.
தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்’’ என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?’’ எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’’ (என்பதே அந்த 5:3 வசனமாகும்)’’ என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகை நாள்தான்)’’ என்றார்கள்.
ஆதாரம்: புகாரி 45
ஹஜ் என்பதே அரஃபாவில் தங்குவது தான். பத்தாம் இரவில் ஃபஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: நஸயீ 2966
புனிதம் நிறைந்த ஹஜ் பயணம் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அரஃபாவுக்குச் சென்றால் தான் முழுமையாக அடைந்து கொள்ள முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்கள்.
நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள்
அரஃபா நாள் குறித்து இன்னும் ஏராளமான சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
இறைவன் நரகவாசிகள் மீது கொண்டுள்ள கோபத்தைக் கருணையாகவும் அன்பாகவும் மாற்றி, பெரும் பெரும் கூட்டமாக வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்ற நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கும் நாள் இந்த அரஃபா நாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?’’ என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
ஆதாரம்: முஸ்லிம் 2623
அரஃபா நாளில் அல்லாஹ் நரகவாசிகளுக்கு விடுதலை கொடுக்கின்றான். நரகத்திலிருந்து அதிகமான மக்களை வெளியே கொண்டு வருகின்ற இந்தக் காரியத்தை, சிறப்பிற்குரிய இந்த அரஃபா நாளில் தான் இறைவன் செயல்படுத்துகின்றான்.
மேலும், நபிகள் நாயகம் கூறும் போது, அரஃபா தினத்தில் அல்லாஹ் நரகவாதிகளுக்கு விடுதலை கொடுப்பது போன்று வேறு எந்த நாளிலும் நரகத்திலிருந்து விடுதலை அளிப்பதில்லை என்ற வாசகத்திலிருந்து அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான, தனது அருள் மழையைப் பொழிகின்ற, மன்னிப்பின் வாசலை திறந்து விடுகின்ற புனித நாள் இந்த அரஃபா நாள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும், அல்லாஹ் அரஃபா பெருவெளியில் கூடி இருக்கின்ற ஹாஜிகளை நெருங்கி வந்து, இவர்கள் எதற்காக இங்கே குழுமி இருக்கின்றார்கள் என்று கேட்டு, தனது கருணையை அவர்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்ற அற்புத நாள் இந்த அரஃபா நாள்.
கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள்
ஹஜ் செய்பவர்கள் அரஃபா என்ற பெரு வெளியில் கூடி இருக்கின்ற போது, படைத்த இறைவன் நெருங்கி வந்து தனது அருள் மழையைப் பொழிகின்றான்.
ஹாஜிகளாக இல்லாத, ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அரஃபா நாளின் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரிய வாய்ப்பையும், மகத்தான பாக்கியத்தையும் நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2151
அரஃபா தினத்தில் ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் பிறை ஒன்பது அன்று ஒரு நோன்பு நோற்றால் முந்தைய ஓராண்டு மற்றும் பின்னால் வர இருக்கின்ற ஓராண்டுப் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று கூறி அல்லாஹ்வின் மகத்தான அருளுக்குச் சொந்தக்காரர்களாக நம்மை மாற்றுகின்ற செயலை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
பிறை ஒன்பது அன்று ஒரே ஒரு நாள் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நோற்கின்ற நோன்பின் மூலமாக பின்னால் வர இருக்கின்ற ஒரு வருட காலம் நாம் செய்ய இருக்கின்ற பாவத்திற்கு இப்போதே பாவமன்னிப்பிற்கு முன்பதிவு செய்து விடுகின்ற அளவுக்கு சிறப்பிற்குரிய நாள் இந்த அரஃபா நாள்.
இந்த ஒரு நாள் நோன்பு என்பது கிட்டத்தட்ட 730 நாட்கள். அதாவது, முந்தைய ஒருவருட பாவத்திற்கும், பின்னால் வர இருக்கின்ற ஒருவருட பாவத்திற்கும் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்ற ஒரு அற்புதமான வாய்ப்பாகும். நம்மை ஆரத்தழுவ காத்துக் கொண்டிருக்கின்ற இந்த துல்ஹஜ் பிறை ஒன்பது அரஃபா நாளின் நோன்பைத் தவற விட்டு விடாமல் இருக்க சபதம் ஏற்போம்!!
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் என்பது இறைவனின் பார்வையில் போர் செய்வதை விட சிறந்த நாட்கள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அதிகப்படியான அமல்களைச் செய்து அல்லாஹ்வின் அருளையையும் மன்னிப்பையும் பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
வசதி வாய்ப்புள்ளவர்கள் ஹஜ் – உம்ரா செய்வது
நோன்பு நோற்பது
அரஃபா நோன்பு நோற்பது
அதிகமதிகம் தக்பீர் கூறுவது
ஹஜ்ஜுப் பெருநாளில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவது
வசதி வாய்ப்புள்ளவர்கள் குர்பானி கொடுப்பது
அதிகமதிகம் தான தர்மம் செய்வது
குர்ஆனோடு அதிகம் தொடர்பு வைப்பது
கடமையான மற்றும் உபரியான தொழுகைகளை சரியாகப் பேணுவது
இறை தியானத்தில் மூழ்கி இருப்பது
அதிகமதிகம் உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடிச் சரணடைவது
கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து விலகி இருப்பது
இரவுத்தொழுகையில் மிகவும் பேணுதலாக இருப்பது
இதுபோன்ற ஏராளமான கூலியையும் இறைவனிடமிருந்து மன்னிப்பையும் அருளையும் பெற்றுத் தந்து நம்மை சொர்க்கத்தின் பக்கம் வெகு சீக்கிரம் அழைத்துச் செல்கின்ற இந்த அரிய வாய்ப்பைத் தவற விடலாமா? இந்த மாதத்தின் சிறப்புகளை அறிந்தும், அறியாமல் தவற விடுவோமேயானால் நம்மை விட கைசேதத்திற்குரியவர்கள் வேறு யார் இருக்க முடியும்?
இத்தனை காலம் பல ஆண்டுகள் துல்ஹஜ் மாதம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து கடந்து சென்று விட்டாலும், இன்ஷா அல்லாஹ் இனிவரும் துல்ஹஜ் மாதத்தை கன கச்சிதமாகப் பயன்படுத்தி, களமிறங்கி அதிகமதிகம் நன்மையில் ஈடுபடுவேன் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.
இதுபோன்ற நற்காரியங்களில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு, துல்ஹஜ் மாதத்தில் இறையருளைப் பெற முயற்சிப்போமாக!

மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம் – தொடர் 5
நீதியை நிலைநாட்டியவர்
ஆர். ரஹ்மத்துல்லலாஹ்

ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்ப்பதற்கு, ‘அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா?’ என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
தாமும் பக்குவப்பட்டு, மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்கு மிக்கவனும், சாமானியனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த அளவுகோல் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் தமது நடவடிக்கைகளை அமைத்திருந்தார்கள் என்பதற்கு மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.
குரைஷ் கோத்திரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். இந்தக் கோத்திரம் அன்றைய மக்களிடம் மிக உயர்ந்த கோத்திரமாக மதிக்கப்பட்டது.
குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத்திற்காகக் கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். ‘நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபியவர்களிடம் பேச முடியும்’ என்று கருதினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?’ என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.
‘உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்’ எனப் பிரகடனம் செய்தார்கள்.
நூல்: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வையில் தமது குலத்தைச் சேர்ந்த பெண்மணியும், மற்றவர்களும் சமமாகவே தென்படுகிறார்கள். நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவின் பரிந்துரையையும் கூட அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை.
மிகப்பெரிய காரியங்களில் மட்டுமின்றி அற்பமான காரியங்களில் கூட மக்களை அவர்கள் சமமாகவே நடத்தியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஓர் இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் ‘உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள், மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.
நூல்: புகாரி 2351, 2366, 2451, 2602, 2605,
எதையும் பங்கிடுவதென்றால் தமது வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிமுறையாகக் கொண்டிருந்தார்கள்.
வலப் பக்கம் ஒரு இளைஞர் இருக்கிறார். இடப் பக்கமோ பிரமுகர்கள் இருக்கிறார்கள். பிரமுகர்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பாலைக் கொடுத்திருக்க முடியும். ஆனாலும் தாம் வகுத்த நல்விதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. அந்த இளைஞரின் அற்பத்திலும் அற்பமான உரிமையைக் கூட மதிக்கிறார்கள்.
நீ அனுமதி தந்தால் பெரியவர்களுக்குக் கொடுக்கிறேன். நீ அனுமதி தராவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வேண்டுகிறார்கள். அவர் விட்டுத் தர விரும்பவில்லை என்ற போது இந்த அற்பமான விஷயத்திலும் அவரது முன்னுரிமையை நிலை நாட்டுகிறார்கள்.
அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) ‘அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்’ என்றார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் ‘வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 2352
நபிகள் நாயகத்தின் தோழர்களில் முதலிடம் பெற்றவர்கள் அபூபக்ர் (ரலி). தமக்கு அடுத்து அபூபக்ர் தான் என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இதனால் தான் நபிகள் நாயகத்துக்குப் பின் அபூபக்ர் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்க முடிந்தது.
நபிகள் நாயகத்துக்கு இடது புறத்தில் நபிகள் நாயகத்தின் உயிர்த் தோழர் அபூபக்ர் (ரலி) இருக்கிறார். வலது புறத்திலோ யாரெனத் தெரியாத கிராமவாசி இருக்கிறார். நபிகள் நாயகத்தின் அருகில் அமரத் தக்கவர்கள் என்ற தர வரிசை ஏதும் நபிகள் நாயகத்தால் வகுக்கப்படவில்லை. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நபிகள் நாயகத்தின் அருகில் அமரலாம். எவ்வளவு சாதாரணமானவராக அவர் இருந்தாலும் பிரச்சனையில்லை என்பது தான் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறை.
அந்த அடிப்படையில் வலது புறத்தில் கிராமவாசி அமர்ந்து கொண்டார். அபூபக்ர் (ரலி) இடது புறத்தில் தான் அமர முடிந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாலை விநியோகம் செய்யும் போது தமது நெருங்கிய தோழர் பக்கத்தில் இருக்கிறாரே என்பதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அபூபக்ருக்கு அடுத்த தகுதியைப் பெற்ற உமர் (ரலி) சுட்டிக் காட்டிய பிறகும் அதை ஏற்கவில்லை. வலது புறத்திலிருந்து தான் எதையும் துவக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண விஷயமானாலும் அதிலும் நான் எவருக்காகவும் வளைந்து கொடுக்க முடியாது என்று தாட்சண்மின்றி அறிவித்து விடுகிறார்கள்.
வலது புறத்தில் இருந்த கிராமவாசிக்குக் கொடுத்த பிறகாவது அபூபக்ருக்குக் கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. வலது புறம் வலதுபுறமாகத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். அதாவது அந்தக் கிராமவாசிக்கு பின் அவரை அடுத்திருந்தவர், அதற்கடுத்தவர் என்ற முறையில் தான் கொடுப்பேன் என்கிறார்கள். இவ்வாறு கொடுத்தால் ஆகக் கடைசியில் தான் அபூபக்ருக்குக் கிடைக்கும். இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.
பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபி (ஸல்) அவர்களுடன் அபூ லுபாபா, அலீ பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 3706, 3769, 3807, 3834
இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய போர் பத்ருப் போர். நபிகள் நாயகம் (ஸல்) தலைமை தாங்கி நடத்திய இந்த முதல் போர் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் நடந்தது. முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் இருந்த நேரம். எண்ணிக்கையிலும் குறைவாக இருந்தனர்.
சுமார் 300 பேர் தான் நபிகள் நாயகத்தின் படையில் இருந்தனர். எதிரிகளின் படை மூன்று மடங்காக இருந்தது.
முன்னூறு பேருக்கும் சேர்த்து சுமார் நூறு ஒட்டகங்கள் மட்டுமே இருந்ததால் ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தனர்.
ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற விதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டிருந்தால் யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைவராக இருந்தார்கள். இப்போரில் தளபதியாகவும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள்.
இம்மூன்று தகுதிகளுக்காகத் தமக்கு மட்டும் தனியாக ஒரு ஒட்டகத்தை ஒதுக்கிக் கொள்வதை எந்த முஸ்லிமும் தவறாக நினைக்க மாட்டார்.
ஆனால் இந்த மாமனிதரோ மற்றவர்களுக்கு எவ்வாறு வாகன ஒதுக்கீடு செய்தார்களோ அதையே தமக்கும் ஒதுக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைக்கும் எத்தனையோ ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் தமது ஆசனத்தில் சற்று ஒதுக்கி இன்னெருவருக்கு, இடம் தர மாட்டார்கள். அவர்கள் ஆசனத்தில் மட்டுமின்றி அவர்கள் ஆசனத்திற்குச் சம உயரத்தில் இன்னொருவருக்கு ஆசனம் அளிப்பதில்லை. மாறாக, தாம் மட்டும் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களைத் தாழ்வான இடத்தில் அமரச் செய்து ஆணவத்தைக் காட்டுவார்கள்.
எதிரில் இருப்பவர் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் என்னை விடத் தாழ்வான இடத்தில் தான் அமர வேண்டும், ஏனெனில் அவர் பிறப்பால் என்னை விடத் தாழ்ந்தவர் என்று, இருக்கையில் கூட ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஆன்மீகத் தலைவர்களை நாம் சமகாலத்திலேயே பார்த்துள்ளோம்.
அற்பமான இந்தத் தலைவர்களே இப்படி நடக்கும் போது, உயிரையும் அர்ப்பணிக்கும் தொண்டர்களைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு உயரத்தில் அமர வேண்டும்? ஆனாலும் ஒரு ஒட்டகத்துக்கு மூவர் என்ற மற்றவர்களுக்குச் சமமான நிலையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் உள்ளம் பக்குவப்பட்டிருந்தது.
போர்த் தளவாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு ஒட்டகத்தில் மூவர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியாது. எனவே இருவர் ஒட்டகத்தில் ஏறிச் செல்லும் போது ஒருவர் ஒட்டகத்தைப் பிடித்து வழிநடத்திச் செல்ல வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொலைவு வந்ததும் நடப்பவர் ஒட்டகத்தில் ஏறிக் கொள்ள ஒட்டகத்தில் இருப்பவர் இறங்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் முறை வந்த போது, மற்ற இருவரும் அதை ஆட்சேபிக்கின்றனர். ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நீங்கள் ஒட்டகத்திலிருந்து இறங்க வேண்டாம்’ எனக் கூறுகின்றனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. மற்ற இருவரும் தத்தமது முறை வரும் போது எவ்வாறு நடந்தார்களோ அது போல் அவர்கள் இருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி விட்டு நடந்து செல்லும் இந்த அற்புத வரலாற்றைப் பார்க்கும் எந்த முஸ்லிமும் இம்மாமனிதரைத் தலைவராகப் பெற்றமைக்காக பெருமிதம் கொள்வார். இதற்காக மற்றவர்கள் முஸ்லிம்கள் மீது பொறாமைப்படும் அளவுக்கு அற்புதமான தலைவராகத் திகழ்கிறார்கள்.
அவர்கள் நடந்து சென்றது மட்டுமின்றி அதற்கு அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
யார் யார் எவ்வளவு சிரமப்படுகிறார்களோ அதற்கேற்பவே மறுமையில் இறைவனின் பரிசு கிடைக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை.
பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் எதைப் போதிக்கிறார்களோ அதில் மற்றவர்களை விட குறைவான நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் ஆன்மீகத்தின் பின்னே சுய லாபம் மறைந்திருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் போதித்த ஆன்மீக நெறியை மற்றவர்களை விட அதிகம் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தனர்.
மறுமையில் இறைவனிடம் பரிசு பெறும் போது உங்கள் இருவரையும் விடக் குறைவான தியாகம் செய்தவனாக நான் நிற்க மாட்டேன். எனவே உங்களைப் போலவே என் முறை வரும் போது நானும் நடந்து, உங்களுக்குக் கிடைக்கும் அதே பரிசைப் பெறுவேன் என்பது தான் அவர்கள் கூறிய காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். சந்தேகத்தின் சாயல் கூடத் தம்மீது படியக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
நான் சரியாகத் தான் நடக்கிறேன், எவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று சாதாரண இயக்கங்களுக்குத் தலைமை தாங்குபவர்களே நினைக்கிறார்கள். மக்களிடம் எது குறித்து சந்தேகம் நிலவுகிறதோ அதை நீக்கும் கடமை தமக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி எந்தச் சந்தேகம் வந்தாலும் மக்களிடம் உடனே தெளிவுபடுத்துவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலிலேயே தங்கி விடுவார்கள். அப்போது அவர்களைக் காண அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) வந்தார். நபி (ஸல்) அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் புறப்படலானார். அவருடன் நபி (ஸல்) அவர்களும் உடன் வந்து பள்ளியின் வாசல் வரை வந்தனர். அப்போது இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறி விட்டுக் கடந்து சென்றனர்.
அப்போது அவ்விருவரையும் நோக்கி ‘அப்படியே நில்லுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘இவர் என் மனைவி ஸஃபிய்யா’ என்றார்கள். இது அவ்விருவருக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சியே இதை உங்களிடம் கூறினேன்’ என்றார்கள்.
நூல்: புகாரி 2035
அவ்விருவரும் நபிகள் நாயகத்தைக் கண்டு ஸலாம் கூறிவிட்டுத் தான் சென்றார்கள். அவர்களின் மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பின்னர் ஷைத்தான் தனது வேலையைக் காட்டுவான். நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார்களே அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சி தெளிவுபடுத்தி விடுகிறார்கள்.
சந்தேகத்தின் சாயல் கூடத் தம்மீது படியக் கூடாது என்பதில் இந்த அளவுக்குத் தூய்மையாக இருந்தார்கள்.
அன்று முதல் இன்று வரை ஆன்மீகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த அடிப்படையில் மதிக்கப்படுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
ஆணவம் எந்த அளவுக்கு அதிகமாகவுள்ளதோ அந்த அளவுக்குத் தலைவர்கள் மதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண மக்களிடம் வெறுக்கத் தக்கதாகக் கருதப்படும் ஆணவமும், மமதையும் தலைவர்களிடம் இருந்தால், வீரமெனவும், துணிச்சல் எனவும் வர்ணிக்கப்படுகிறது.
சாதாரண மக்களிடம் ஏமாற்றும் பண்பு இருந்தால் அதை வெறுக்கின்ற மக்கள், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் பண்பு தலைவர்களிடம் இருந்தால் அதை ராஜதந்திரம் எனக் கருதுகின்றனர்.
சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடாது எனக் கருதப்படும் ஆடம்பரமும், படாடோபமும் தலைவர்களிடம் இருந்தால் அதுவே பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
தலைவர்கள் எதனால் மதிக்கப்படுகிறார்கள் என்று கவனித்தால் அவர்களிடம் காணப்படும் தீய பண்புகளால் தான் அதிகம் மதிக்கப்படுவதைக் காணலாம்.
தலைவர்களிடம் காணப்படும் லஞ்சம், ஊழல், விபச்சாரம் போன்ற எந்தத் தீய செயல்களின் காரணமாகவும் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதில்லை.
தீய செயல்களைச் செய்தாவது நூறு பேருக்குத் தெரிந்த முகமாக ஆவது மட்டுமே தலைவர்களுக்குரிய ஒரே தகுதியாக உள்ளது.
இதில் ஆன்மீகத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடு பார்க்கப்படுவதில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே தமது நற்பண்புகளுக்காவும், நன்னடத்தைக்காகவும் பாராட்டப்படும் தகுதியைப் பெற்றுள்ளார்கள்.
தம்மைப் பாதிக்கும் விஷயமானாலும் நீதியை நிலை நாட்டத் தவறவில்லை. தனது நாட்டின் பிரஜையை ஒட்டகத்தில் ஏற்றி ஒட்டகத்தைப் பிடித்து நடந்து செல்வதற்குக் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. நபியர்களுக்கு நீதி என்றால் நீதி தான். இதில் எந்தச் சமரசமும் கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்றாக உள்ளது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்

நபிகளார் எப்போது பிறந்தார்கள்?
எம்.ஐ.சுலைமான்

இறைவனின் இறுதித் தூதுவராக அரபுலகத்தில் வருகை தந்து, மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, அழகிய வாழ்க்கை முறையை இவ்வுலகத்திற்குத் தந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நபிமொழி மற்றும் வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தவொரு தனிநபரின் பிறப்பு, இறப்பு அடிப்படையில் எந்தச் சிறப்பும் இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களின் பிறப்பை மையமாக வைத்து, மார்க்கத்திற்கு முரணான வகையில் மீலாது விழா கொண்டாடும் சில முஸ்லிம்களிடம், நபியவர்களின் பிறந்த நாள் எப்போது என்று கேட்டால் அதற்கு அவர்களால் சரியான பதிலைக் கூற முடியாது.
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம்.
இதுதொடர்பாக ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் எவை? அவற்றின் தரம் என்ன? அவற்றில் சரியான கருத்து எது என்பதைக் காண்போம்.
எந்த வருடம் பிறந்தார்கள்?
நபிகளார் பிறந்த காலத்தில் குறிப்பிட்ட வருடங்கள் தொடர்ச்சியாக இருந்து வரவில்லை. அவ்வப்போது நடந்த சில முக்கிய நிகழ்ச்சிகளைக் கொண்டே வருடங்களைக் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
நபிகளார் பிறந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு அதிசய சம்பவம் அன்றைய காலத்தில் ஆண்டுக் கணக்கைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் திரளாக வந்து செல்வதைக் கண்டு பெறாமைப்பட்ட ஏமன் நாட்டு மன்னன் அப்ரஹா என்பவன் கஅபா ஆலயத்தை இடிப்பதற்கு யானைப்படையுடன் வந்தான். அவனை அல்லாஹ், அபாபீல் எனும் பறவைகள் மூலம் அழித்தான்.
இந்தச் சம்பவம் அன்றைய மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. எனவே இந்தக் கால கட்டத்தில் பிறந்தவர்களை யானை ஆண்டில் (ஆமுல் ஃபீல்) பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் இந்தக் காலகட்டத்தில் தான் பிறந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைஸ் பின் மக்ரமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), குபாஸ் பின் அஷ்யம் (ரலி) ஆகியோர் வழியாக சில செய்திகள் வந்துள்ளன.
கைஸ் பின் மக்ரமா (ரலி) அறிவிக்கும் செய்தி:
سنن الترمذي – شاكر + ألباني (5/ 589)
3619 – حدثنا محمد بن بشار العبدي حدثنا وهب بن جرير حدثنا أبي قال سمعت محمد بن إسحاق يحدث عن المطلب بن عبد الله بن قيس بن مخرمة عن أبيه عن جده قال : ولدت أنا ورسول الله صلى الله عليه و سلم عام الفيل وسأل عثمان بن عفان قباث بن أشيم أخا بني يعمر بن ليث أأنت أكبر أم رسول الله صلى الله عليه و سلم ؟ فقال رسول الله صلى الله عليه و سلم أكبر مني وأنا أقدم منه في الميلاد ولد رسول الله صلى الله عليه و سلم عام الفيل ورفعت بي أمي على الموضع قال ورأيت حذق الفيل أخضر محيلا قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث محمد بن إسحاق
நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்.
அறிவிப்பவர்: கைஸ் பின் மக்ரமா (ரலி)
நூல்: திர்மிதீ (3552)
இதே செய்தி முஸ்னத் அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது.
مسند أحمد بن حنبل (4/ 215)
17922 – حدثنا عبد الله حدثني أبي ثنا يعقوب ثنا أبي عن بن إسحاق قال فحدثني المطلب بن عبد الله بن قيس بن مخرمة بن المطلب بن عبد مناف عن أبيه عن جده قيس بن مخرمة قال : ولدت انا ورسول الله صلى الله عليه و سلم عام الفيل فنحن لدان ولدنا مولدا واحدا
இதே செய்தி தப்ரானீ அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இடம்பெற்றுள்ளது.
المعجم الكبير للطبراني (13/ 285، بترقيم الشاملة آليا)
15265- حَدَّثَنَا دَاوُدُ بن مُحَمَّدِ بن صَالِحٍ الْمَرْوَزِيُّ، وَعَبْدُ اللَّهِ بن أَحْمَدَ بن حَنْبَلٍ، وَإِبْرَاهِيمُ بن نَائِلَةَ الأَصْبَهَانِيُّ، قَالُوا: حَدَّثَنَا جَعْفَرُ بن مِهْرَانَ السَّمَّاكُ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ، عَنِ الْمُطَّلِبِ بن عَبْدِ اللَّهِ بن قَيْسِ بن مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:”وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ، وَبَيْنَ الْفِجَارِ وَبَيْنَ الْفِيلِ عِشْرُونَ سَنَةً، قَالَ: سَمُّوا الْفِجَارَ لأَنَّهُمْ فَجَرُوا وَأَحَلُّوا أَشْيَاءَ كَانُوا يُحَرِّمُونَهَا، وَكَانَ بَيْنَ الْفِجَارِ وَبَيْنَ بناءِ الْكَعْبَةِ خَمْسُ عَشْرَةَ سَنَةً، وَبَيْنَ بناءِ الْكَعْبَةِ وَبَيْنَ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ سِنِينَ، فَبُعِثَ نَبِيُّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ”.
15266 – حَدَّثَنَا أَحْمَدُ بن عَبْدِ اللَّهِ بن عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بن هِشَامٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا زِيَادُ بن عَبْدِ اللَّهِ الْبَكَّائِيُّ، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ، حَدَّثَنِي الْمُطَّلِبُ بن عَبْدِ اللَّهِ بن قَيْسِ بن مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَيْسِ بن مَخْرَمَةَ، قَالَ:”وُلِدْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، عَامَ الْفِيلِ، فَنَحْنُ لِدَّانِ”
இதே செய்தி ஹாகிமிலும் இடம்பெற்றுள்ளது.
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (2/ 659)
4183 – حدثنا أبو العباس محمد بن يعقوب ثنا أحمد بن عبد الجبار ثنا يونس بن بكير عن ابن إسحاق قال : حدثني المطلب بن عبد الله قيس بن مخرمة عن أبيه عن جده ابن مخرمة قال : ولدت أنا و رسول الله صلى الله عليه و سلم عام الفيل كاللدتين
قال ابن إسحاق : كان رسول الله صلى الله عليه و سلم عام عكاظ ابن عشرين سنة
هذا حديث صحيح على شرط مسلم و لم يخرجاه
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (3/ 516)
5919 – حدثنا أبو العباس محمد بن يعقوب ثنا أحمد بن عبد الجبار ثنا يونس بن بكير عن إسحاق حدثني المطلب بن عبد الله بن قيس بن مخرمة بن المطلب بن عبد مناف عن أبيه عن جده قال : ولدت أنا و رسول الله صلى الله عليه و سلم عام الفيل فنحن لدان
கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்துச் செய்தியிலும் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார்.
இவரின் நம்பதன்மை உறுதிசெய்யபடவில்லை. இவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்ற செய்தி அல்ல.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி:
مسند البزار 18 مجلد كاملا (11/ 64)
4762- حَدَّثنا الحسين بن علويه البغدادي ، قَال : حَدَّثنا حجاج بن مُحَمد ، قَال : حَدَّثنا يونس بن أبي إسحاق ، عَن أَبِيه ، عَن سَعِيد بن جُبَير ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِي الله عَنْهُمَا ، قال : ولد النَّبِيّ صَلَّى الله عَلَيه وَسَلَّم عام الفيل.
مسند البزار 18 مجلد كاملا (11/ 240)
5017- حَدَّثنا الحسين بن علي البغدادي المعروف بابن علويه ، قَال : حَدَّثنا حجاج بن مُحَمد ، قَال : حَدَّثنا يونس بن أبي إِسحاق ، عَن أَبيهِ ، عَن سَعِيد بن جُبَير ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِي الله عَنْهُمَا ، قال : ولد النَّبِيّ صَلَّى الله عَلَيه وَسَلَّم عام الفيل.
وهذا الحديث لا نعلمه رواه عن يونس بن أبي إسحاق إلاَّ حجاج بن مُحَمد ، وَكان ثقة.
நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்னத் பஸ்ஸார் (4762,5017)
ஹாகிமிலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுள்ளது.
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (2/ 658)
4180 – حدثنا أبو العباس محمد بن يعقوب ثنا محمد بن إسحاق الصنعاني ثنا حجاج بن محمد ثنا يونس بن أبي إسحاق عن أبيه عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال : ولد النبي صلى الله عليه و سلم عام الفيل
هذا حديث صحيح على شرط الشيخين و لم يخرجاه
தப்ரானி அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுள்ளது.
المعجم الكبير للطبراني (10/ 193، بترقيم الشاملة آليا)
12262 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن أَحْمَدَ بن حَنْبَلٍ , حَدَّثَنِي يَحْيَى بن مَعِينٍ , حَدَّثَنَا حَجَّاجُ بن مُحَمَّدٍ , حَدَّثَنَا يُونُسُ بن أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِيهِ , عَنْ سَعِيدِ بن جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ:وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ.
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தி பைஹகீ இமாம் அவர்களின் தலாயிலுந் நுப்வா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
دلائل النبوة للبيهقى موافقا للمطبوع (1/ 75)
حدثنا أبو عبد الله محمد بن عبد الله الحافظ قال حدثنا أبو العباس محمد بن يعقوب قال حدثنا محمد بن إسحاق الصغاني قال حدثنا حجاج بن محمد قال حدثنا يونس بن أبي إسحاق عن أبيه عن سعيد بن جبير عن ابن عباس قال ولد النبي عام الفيل
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தி உறுதியான செய்தி என்று ஹைஸமீ உட்பட பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் அனைத்துச் செய்திகளிலும் யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவர் தம் தந்தை வழியாகவே அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது.
تهذيب التهذيب محقق (11/ 381)
وقال صالح ابن احمد عن علي بن المديني سمعت يحيى وذكر يونس بن أبي إسحاق فقال كانت فيه غفلة شديدة
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் இடத்தில் கடுமையான கவனக்குறைவு உள்ளது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம் 381
تهذيب التهذيب محقق (11/ 381)
وقال الاثر سمعت احمد يضعف حديث يونس عن أبيه
யூனுஸ், தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை அஹ்மத் அவர்கள் பலவீனமானது என்று சொல்லியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 381
تهذيب التهذيب محقق (11/ 382)
وقال عبدالله بن احمد عن أبيه حديثه مضطرب
யூனுஸ் உடைய செய்திகள் குளறுபடி நிறைந்தவை என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 382
شرح علل الترمذي لابن رجب (ص: 382)
ففي تاريخ الغلابي : (( كان يونس بن أبي إسحاق مستوي الحديث في غير أبي إسحاق مضطرباً في حديث أبيه )) .
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் என்பவர் ஹதீஸ் துறையில் நடுத்தரத்தில் உள்ளவர். எனினும் (தம் தந்தை) அபூஇஸ்ஹாக் வழியாக அறிவிப்பவை குளறுபடிஉள்ளவை.
நூல்: ஷரஹ் இலல் திர்மிதீ, பக்கம்: 382
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் என்பவர் குறிப்பாகத் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடி நிறைந்தவை என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதாலும் இந்தச் செய்தியில் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்திருப்பதாலும் இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.
சுவைத் பின் கஃப்லா (ரலி) அறிவிக்கும் செய்தி:
دلائل النبوة للبيهقى موافقا للمطبوع (1/ 79)
قال يعقوب وحدثنا يحيى بن عبد الله بن بكير قال حدثنا نعيم بن ميسرة عن بعضهم عن سويد بن غفلة قال أنا لدة رسول الله ولدت عام الفيل
قال الشيخ وقد روى عن سويد بن غفلة أنه قال أنا أصغر من النبي بسنتين
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே காலகட்டத்தில் பிறந்தவர்கள். நான் யானை ஆண்டில் பிறந்தேன்.
அறிவிப்பவர்: சுவைத் பின் கஃப்லா (ரலி)
நூல்: தலாயிலுந் நுபுவா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 79
இந்தச் செய்தியில் நுஐம் பின் மைஸரா என்பவர், தமக்கு அவர்களில் சிலர் வழியாகக் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? என்ற விவரங்கள் இல்லாததால் இந்தச் செய்தியும் பலவீனம் அடைகிறது.
குபாஸ் பின் அஷ்யம் (ரலி) அறிவிக்கும் செய்தி:
دلائل النبوة للبيهقى موافقا للمطبوع (1/ 77)
أخبرناه أبو عبد الله الحافظ قال حدثنا أحمد بن علي المقري قال حدثنا أبو عيسى الترمذي قال حدثنا محمد بن بشار فذكره أخبرنا أبو عبد الله الحافظ وأبو بكر أحمد بن الحسن القاضي قالا حدثنا أبو العباس محمد بن يعقوب قال حدثنا أبو بكر الصغاني قال حدثنا إبراهيم بن المنذر الجزامي قال حدثنا عبد العزيز بن أبي ثابت مديني قال حدثنا الزبير بن موسى عن أبي الحويرث قال سمعت عبد الملك بن مروان يقول لقباث بن أشيم الكناني ثم الليثي يا قباث أنت أكبر أم رسول الله قال رسول الله أكبر مني وأنا أسن منه ولد رسول الله عام الفيل ووقفت بي أمي على روث الفيل محيلا أعقله وتنبئ رسول الله على رأس أربعين
குபாஸ் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடம் “நீங்கள் பெரியவரா? அல்லது நபி (ஸல்) அவர்கள் பெரியவரா?” என்று அப்துல் மலிக் பின் மர்வான் அவர்கள் வினவினார்கள். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் என்னை விட (மதிப்பில்) பெரியவர்கள். ஆனால் நான் அவர்களைவிட வயதில் மூத்தவன். நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.
நான் மாற்றம் அடைந்திருந்த யானையின் சாணத்திற்கு அருகில் என்னை என் தாயார் கொண்டு போய் நிறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நாற்பதாவது வயதில் நபித்துவம் வழங்கப்பட்டது.
அறிவிப்பவர்: அபுல் ஹுவைரிஸ்,
நூல்: தலாயிலுந் நுப்புவா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 77
இதே செய்தி தப்ரானி அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இடம்பெற்றுள்ளது.
المعجم الكبير للطبراني (13/ 367، بترقيم الشاملة آليا)
15421- حَدَّثَنَا الْعَبَّاسُ بن الْفَضْلِ الأَسْفَاطِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بن الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بن أَبِي ثَابِتٍ الزُّهْرِيُّ، عَنِ الزُّبَيْرِ بن مُوسَى، عَنْ أَبِي الْحُوَيْرِثِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بن مَرْوَانَ، يَقُولُ لِقَبَاثِ بن أَشْيَمَ اللَّيْثِيِّ: يَا قَبَاثُ، أَنْتَ أَكْبَرُ أَمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، فَقَالَ:”رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْبَرُ مِنِّي، وَأَنَا أَسَنُّ مِنْهُ، وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ، وَتَنَبَّأَ عَلَى رَأْسِ أَرْبَعِينَ مِنَ الْفِيلِ”.
இந்த இரண்டு நூல்களில் அப்துல் அஸீஸ் பின் அபீ ஸாபித் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
تهذيب التهذيب محقق (6/ 313)
وقال عثمان الدارمي عن يحيى ليس بثقة إنما كان صاحب شعر وقال الحسين ابن حبان عن يحيى قد رأيته ببغداد كان يشتم الناس ويطعن في احسابهم ليس حديثه بشئ وقال محمد بن يحيى الذهلى علي بدنة إن حدثت عنه حديثا وضعفه جدا وقال البخاري منكر الحديث لا يكتب حديثه وقال النسائي متروك الحديث وقال مرة لا يكتب حديثه.
இவர் நம்பகமானவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்கள் எந்த மதிப்பும் இல்லாதவை என்ற யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியதாக ஹுஸைன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்படவேண்டியவர், இவருடைய ஹதீஸ்களை எழுதப்படாது என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் விடப்பட்டவர் என்றும் ஒரு முறையும் இவருடைய செய்திகளை எழுதப்படாது என்று இன்னாரு முறையும் நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 313
இதே செய்தி ஹாகிமில் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (3/ 724)
6624 – حدثنا علي بن حمشاد العدل ثنا العباس بن الفضل الأسفاطي ثنا إسماعيل بن أبي أويس حدثني الزبير بن موسى عن أبي الحويرث قال : سمعت عبد الملك بن مروان يقول للقباث بن أشيم : يا قباث أنت أكبر أم رسول الله صلى الله عليه و سلم ؟ فقال : بل رسول الله صلى الله عليه و سلم أكبر مني و أنا أسن منه ولد رسول الله صلى الله عليه و سلم عام الفيل و تنبأ على رأس الأربعين من الفيل
مجمع الزوائد ومنبع الفوائد . محقق (5/ 82)
عن شيخه العباس بن الفضل الأسفاطي ولم أعرفه،
இந்தச் செய்தியில் இடம்பெறும் அப்பாஸ் பின் ஃபழ்ல் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
நூல்: மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 5, பக்கம்: 82
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
நபிகளார் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று வரும் செய்திகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கவே செய்கிறது. என்றாலும் பெரும்பாலான அறிஞர்கள் நபிகளார் பிறந்தது யானை ஆண்டில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
دلائل النبوة للبيهقى موافقا للمطبوع (1/ 79)
قال أبو إسحاق إبراهيم بن المنذر هذا وهم والذي لا يشك فيه أحد من علمائنا أن رسول الله ولد عام الفيل وبعث على رأس أربعين سنة من الفيل
நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள், அந்த ஆண்டிலிருந்து நாற்பதாவது வருடத்தில் இறைத்தூதரானார்கள் என்ற கருத்தில் நமது அறிஞர்களிடம் எந்தச் சந்தேகமும் இல்லை என அபூஇஸ்ஹாக் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தலாயிலுந் நுப்வா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 79
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து தற்போது சுமார் 1440 சந்திர வருடங்களாகிறது.
இந்த கணக்கை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் நபிகளார் கி.பி.572ல் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்ற முடிவு செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத வெளிப்பாடு அருளப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறைமார்க்கத்திற்காகத் தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. ஆகவே, அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறப்பெய்தினார்கள்.
நூல்: புகாரி (3851)
நபி (ஸல்) அவர்கள் நாற்பதாவது வயதில் நபித்துவம் வழங்கப்பட்டது. நபித்துவத்திற்குப் பிறகு மக்காவில் 13 வருடங்கள் இருக்கிறார்கள். அதன் பின் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்கிறார்கள்.
இந்தக் கணக்கின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் போது வயது 53.
தற்போது ஹிஜ்ரி 1440. இத்துடன் நபிகளாரின் 53 வயதை கூட்டினால் 1493 சந்திர வருடங்களாகிறது.
சந்திரக் கணக்கின்படி வருடத்திற்கு 354 நாட்கள். 1493 வருடத்தை 354 ஆல் பெருக்கினால் மொத்தம் 528522 நாட்கள். நபிகளார் பிறந்து 528522 நாட்கள் ஆகிறது.
இதை சூரிய வருடமாக மாற்ற 528522 நாட்களை, சூரிய வருட நாட்களான 365.25 நாட்களால் வகுத்தால் 1447 சூரிய வருடம் வருகிறது.
அதாவது, நபிகளார் பிறந்து 1447 சூரிய வருடமாகிறது. தற்போதைய வருடம் கி.பி. 2019. இதில் 1447ஐக் கழித்தால் கி.பி. 572.
எந்த மாதம்?
நபிகளார் எந்த மாதம் பிறந்தார்கள் என்பதிலும் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளது.
ரபீவுல் அவ்வல் மாதம் 2ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 8ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 10ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 17ஆம் நாள் பிறந்தார்கள்.
ரமலான் மாதத்தில் பிறந்தார்கள்.
ஆதாரம்: அல்பிதாயா வந்நிஹாயா,
பாகம்: 2, பக்கம்: 320
இதில் ரபீவுல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி என்பது அறிஞர்களிடம் பிரபலமானதாகும்.
எனினும் சில வரலாற்று ஆசிரியர்கள் ரபீவுல் அவ்வல் 8ஆம் நாள் என்பதே சரியென்று சொல்லியுள்ளார்கள்.
البداية والنهاية (2/ 320)
وقيل لثمان خلون منه حكاه الحميدي عن ابن حزم. ورواه مالك وعقيل ويونس بن يزيد وغيرهم عن الزهري عن محمد بن جبير بن مطعم ونقل ابن عبد البر عن أصحاب التاريخ أنهم صححوه
ரபீவுல் அவ்வல் 8ஆம் நாள் என்பதையே வரலாற்று ஆசிரியர்கள் சரி காணுகிறார்கள் என்று இப்னு அப்துல் பர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்பிதாயா வந்நிஹாயா,
பாகம்: 2, பக்கம்: 320
تاريخ دمشق 003 (ص: 344)
أنبأنا محمد بن إسحاق أنبأنا خيثمة بن سليمان ( 5 ) أنبأنا خلف بن محمد كردوس الواسطي أنا المعلى بن عبد الرحمن أنبأنا عبد الحميد بن جعفر عن الزهري عن عبيد الله بن عبد الله عن ابن عباس قال ولد النبي ( صلى الله عليه و سلم ) يوم الاثنين في ربيع الأول ( 6 ) وأنزلت عليه النبوة يوم الاثنين في أول شهر ربيع الأول وأنزلت عليه البقرة يوم الاثنين في ربيع الأول وهاجر إلى المدينة في ربيع الأول وتوفي يوم الاثنين في ربيع الأول
நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: தாரீக் திமிஷ்க், பாகம்: 3, பக்கம்: 344
இந்தச் செய்தியில் இடம்பெறும் அல்முஅல்லா பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவராவார்.
المجروحين لابن حبان ت حمدي (16/ 351)
شيخ يروي عن عبد الحميد بن جعفر المقلوبات، لا يجوز الاحتجاج به إذا انفرد.
இவர் அப்துல் ஹுமைத் பின் ஜஅஃபர் வழியாக செய்திகளை அறிவிப்பவர். இவர் மட்டும் அறிவித்தால் ஆதாரமாக எடுப்பது அனுமதியில்லை என்று இப்னுஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மஜ்ரூஹீன், பாகம் 16, பக்கம் 351
இவர் இந்தச் செய்தியை அப்துல் ஹுமைத் பின் ஜஅஃபர் வழியாகவே அறிவித்துள்ளார்.
எனவே நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பதற்கும், அதில் 12ஆம் நாள் தான் பிறந்தார்கள் என்பதற்கும் தெளிவான, ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
எந்தக் கிழமை?
நபிகளார் எந்தக் கிழமையில் பிறந்தார்கள்? என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றி நபிகளாரிடம் கேட்கப்பட்டதற்கு, “அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் ‘நான் நபியாக நியமிக்கப்பட்டேன்’ அல்லது ‘எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் (2152)
நபிகளார் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்பதும், ரபீவுல் அவ்வல், பிறை 12ல் பிறந்தார்கள் என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் பிரபலமான செய்தியே தவிர ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் உள்ள செய்திகள் அல்ல.
நபிகளார் திங்கள்கிழமை பிறந்தார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

அமல்களின் சிறப்புகள்
சுவனத்தை நோக்கி விரையுங்கள்
எம்.ஷம்சுல்லுஹா

அமல்களின்றி சுவனம் இல்லை என்பதை சென்ற இதழில் தெளிவாகப் புரிந்து கொண்டோம். எப்போது அமல்கள் இல்லாமல் சுவனம் இல்லை என்று விளங்கிக் கொண்டோமோ அப்போதிலிருந்து அந்தச் சுவனத்தை அடைய நாம் ஆர்வமும் ஆசையும் கொள்ள வேண்டும், அதற்காக விரையவும் வேண்டும். காரணம் இது நபிமார்கள் மற்ற நல்ல மனிதர்களின் நற்பண்புகளாகும்.
அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
அல்குர்ஆன் 21:90
தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து அடைகின்றனர். அவர்களே அவற்றுக்கு முந்துபவர்கள்.
அல்குர்ஆன் 23:61
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 3:133
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
அல்குர்ஆன் 57:21
இந்த வசனங்களில் அல்லாஹ் பாவ மன்னிப்பைப் பற்றியும் சொர்க்கத்தைப் பற்றியும் குறிப்பிடும் போது விரையுங்கள், முந்துங்கள் என்று கூறுகிறான்.
பொதுவாக மனித மனம் ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விடுவதால் நன்மையைச் செய்வதற்கு மெதுவாகவும் தீமை செய்வதற்கு வேகமாகவும் உட்படும்.
உதாரணமாக, தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டு விடும். ஆனால் நம்முடைய மனம் இகாமத்துக்கு 20 நிமிடங்கள் இருக்கிறதே! மெதுவாகப் போவோம் என்று கூறும். இப்படியே நம்மைக் காலம் கடக்கச் செய்து நாம் ஜமாஅத்தையே தவற விட்டுவிடுவோம்.
‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார் களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 615, முஸ்லிம் 661
இந்த நன்மைகளை எல்லாம் நம்முடைய மனதில் ஷைத்தான் ஊடுருவி தடுத்து விடுகின்றான். அதே சமயம் தொழுகை முடிந்ததும் செய்யவேண்டிய தஸ்பீஹ்கள், திக்ர்கள், துஆக்கள் ஆகியவற்றை ஓதவிடாது தடுத்து நம்மைப் பள்ளியை விட்டு வெளியே துரத்தி விடுகின்றான். என்ன உட்கார்ந்திருக்கிறாயே! தொழுகை முடிந்து விட்டதே! கிளம்பவில்லையா? கிளம்பு, கிளம்பு என்று நமது மனம் நம்மைக் கிளப்பி விடுகின்றது! எதற்காக? பாவமான பேச்சுக்களைப் பேசவும், பயனளிக்காத செய்திகளை விவாதம் செய்யவும், இன்னும் இது போன்ற தீமைகளில் ஈடுபடவும் தொழுது முடித்தவுடன் தூசி தட்டி விட்டு, துண்டை உதறி விட்டு வெளியே கிளம்பி விடுகிறோம்.
இது போல் பாவமான காரியங்களின் பால் நமது மனம் பறந்து விரைந்து செல்வதால், அதற்கு நேர் மாற்றமாக அல்லாஹ் நம்மை நோக்கி, பாவ மன்னிப்பு, சொர்க்கத்தின் பக்கம் விரைந்து செல்லுங்கள் என்று கூறுகிறான். மேற்கண்ட வசனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அடைய தங்களது வாழ்க்கையை நபித்தோழர்கள் அர்ப்பணித்தார்கள். தங்களது உயிர்களைக் காணிக்கையாக்கினார்கள்.
விரையுங்கள் என்பதற்கு விரிவுரை எழுதிய தோழர்!
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதரும் அவர்களது தோழர்களும் பத்ருக் களத்திற்கு இணை வைப்பவர்களை விட முந்திச் சென்றுவிட்டார்கள். இணை வைப்பவர்களும் வந்து விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் அங்கு வருவதற்கு முன்பாக உங்களில் எவரும் எந்தக் காரியத்திலும் இறங்கி விட வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்கள்.
இணை வைப்பவர்கள் (போர் புரிய) நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சுவனத்தின் பக்கம் செல்லுங்கள். அதனுடைய விசாலம் வானங்கள் பூமியை ஒத்ததாகும்’ என்று கூறினார்கள்.
உமைர் பின் அல் ஹுமாம் என்ற அன்சாரித் தோழர் “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் விசாலம் வானங்கள் பூமியின் விசாலத்திற்கு இணையானதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அதற்கு அவர் ஓஹோ என்றார்.
“நீ ஓஹோ, ஓஹோ என்று கூறுவதன் காரணம் என்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சுவனவாசியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே தவிர நான் அவ்வாறு கூறவில்லை” என்று பதிலளித்தார். ‘நீ சுவனவாதி தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் தன் பையிலிருந்த பேரீத்தம் பழங்களை வெளியே எடுத்து அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர், “நான் இந்தப் பழங்களை சாப்பிட்டு முடிக்கும் வரை உயிர் வாழ்ந்தேன் என்றால் நிச்சயமாக அது நீண்ட வாழ்க்கை தான்” என்று கூறி தன்னிடம் இருந்த பேரீத்தங்கனிகளை தூக்கி வீசினார். பிறகு போராடி கொல்லப்பட்டார்.
நூல்: முஸ்லிம் 3520
எனக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொன்ன பிறகும் இந்த பேரீத்தம்பழங்களைச் சாப்பிடுவதற்காக நான் கால தாமதம் செய்தால் இந்த உலகத்தில் ஒரு பெரிய வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவேன் என்று அந்த நபித் தோழர் சொல்வது உண்மையில் சிந்திக்கத் தக்க வைர வரிகளாகும். பேரீத்தம் பழங்கள் சாப்பிடுவதற்கு மிஞ்சி மிஞ்சி போனால் எவ்வளவு நேரம் ஆகிவிடும்? நாம் கிரில் சிக்கன்கள் சாப்பிடுகின்ற அளவுக்கு நேரத்தை இந்தப் பேரீத்தம்பழங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சில நிமிடத்துளிகளைத் தான் எடுத்துக் கொள்கின்றன.
அந்த சில நிமிடத்துளிகளை இவ்வுலகில் எடுத்துக் கொண்டு நான் காலதாமதம் செய்வது இந்த உலகத்தில் ஒரு நீண்ட நெடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்குச் சமமாகும் என்று அந்த நபித் தோழர் கூறுவதும், பின்னர் போர்க்களத்தில் மின்னல் வேகத்தில் புகுந்து கொல்லப்படுவதும் “விரையுங்கள்” என்ற வசனத்தின் பொருளை ஹுமைர் பின் ஹும்மாம் எப்படி விளங்கி, சுவனத்தின் ருசியைச் சுவைத்திருக்கின்றார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
உயிரை அர்ப்பணிக்கும் விஷயத்திலிருந்து அற்பமான மயிர் விஷயம் வரை நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நபித் தோழர்கள் பேணியிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தொழுகைக்குப் பிறகு சொல்லப்படும் சுப்ஹானல்லாஹ்வையும் நபித்தோழர்கள் அலட்சியப்படுத்துவது இல்லை! தன் கொள்கைக்காக, கொள்கையைக் காக்க போர்க்களத்தில் கொல்லப்படும் ஷஹாதத்தையும் நபித் தோழர்கள் அலட்சியப்படுத்துவதில்லை.
“யார் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹு அக்பர் என்று 33 தடவையும் முடிவில் நுறாவதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்று கூறுகின்றாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருப்பினும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 939
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற இந்த ஹதீஸில் உள்ள அமலை நம்மில் எத்தனை பேர்கள் செயல் படுத்துகின்றோம்? தொழுது முடித்து, அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றோமே தவிர யாரும் அமைதியாக இருந்து இந்த திக்ருகளைச் செய்வது கிடையாது. தொழுது முடித்தவுடன் பெண்கள் தான் நபி (ஸல்) காலத்தில் விரைந்து சென்றதைப் பார்க்க முடிகின்றது. ஆண்கள் விரைந்து சென்றதைப் பார்க்க முடியவில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் ஏன் விரைந்து செல்ல வேண்டும். இந்த தஸ்பீஹ் விஷயத்தில் நபித் தோழர்களின் நடைமுறையைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பெரும் செல்வந்தர்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிலையான அருட்கொடைகளையும் தங்கள் செல்வத்தின் மூலம் தட்டிச் செல்கின்றனர். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கின்றனர். பொருளாதாரம் என்ற பாக்கியம் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அவர்கள் ஹஜ் செய்கின்றார்கள். உம்ரா செய்கின்றார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்கள், தான தர்மங்கள் வழங்குகிறார்கள் என்று முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள், உங்களை முந்தி விட்டவர்களை அடைந்திடவும் உங்களுக்கு பின் உள்ளவர்களை முந்தி விடவும் ஒரு வழியை கற்றுத் தரவா? நீங்கள் செய்த மாதிரி எவரேனும் செய்தாலே தவிர உங்களை விட எவரும் சிறந்தவராகி விட முடியாது என்று சொன்னதும் அவர்கள், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! கற்றுத் தாருங்கள்’’ என்று கேட்டனர். நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும் 33 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 843, முஸ்லிம் 936
ஏழை முஹாஜிர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பொருள் வசதி படைத்த எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்வதைச் செவியுற்று அவர்களும் அது போல் செய்கின்றனர்’’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் நாடியவர்களுக்கு அவன் வழங்குகிறான்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 936
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பாருங்கள்! ஏழை நபித் தோழர்கள் செல்வந்தர்களைப் போன்று நன்மைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று கவலைப் படுகிறார்கள். பணக்கார நபித் தோழர்களோ ஏழை நபித் தோழர்கள் செய்கின்ற தஸ்பீஹ்களையும் விட்டு வைக்காமல் செய்கின்றார்கள்.
இன்று காசு பணம் உள்ள, வசதி படைத்த சீமான்கள் தான் செல்போன்களைக் கைகளில் தவழ விட்டுக் கொண்டு இந்த அமல்களை நழுவவிட்டு விடுகிறார்கள் என்பதைக் கண்டு வருகிறோம். நபித்தோழர்கள் சுப்ஹானல்லாஹ் சொல்லும் இந்த நன்மையைக் கூட கொள்ளையடிக்கத் தவறவில்லை. இந்த அமல்களை அலட்சியம் செய்யவில்லை. ஆனால் நாமோ இதுவெல்லாம் சின்ன அமல் என்று விட்டுவிடுகிறோம். இத்தனைக்கிடையில் நாம் என்ன பெரிய அமல்களைச் செய்து விட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின் செய்யப்படும் தஸ்பீஹ்கள், ஹஜ், உம்ரா, ஜிஹாத், தான தர்மங்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு ஒப்பானவையாகத் திகழ்கின்றன என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

பெண் நபி ஏன் இல்லை?
அபு ஷஹீன்

இஸ்லாம் ஆணாதிக்கம் நிறைந்த மார்க்கம் என்ற கருத்தினை நிறுவ சிலர் முன்வைக்கும் பிரதானமான கேள்வி, இறைத்தூதராக ஒரு பெண் தேர்வு செய்யப்படாதது ஏன்? என்பதாகும்.
இதற்கு அடிப்படையாக இருக்கின்ற வாதம், ஆணும் பெண்ணும் சமமல்லவா? அப்படியானால் ஆணைப் போல் பெண்ணையும் சமமாக அனைத்துத் துறைகளிலும் பங்களிக்க வைக்க வேண்டும் அல்லவா? என்பதாகும்.
எவற்றில் சமம், எவ்வாறெல்லாம் சமம் என்பதைத் தத்துவார்த்த ரீதியில் விளக்காமல் மேம்போக்காக ‘சமம்’ எனும் தத்துவத்தை மட்டும் சொல்வதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.
ஆண் வேறு, பெண் வேறு. இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் பண்புகளும், குண நலன்களும் வெவ்வேறானவை. இந்த வேறுபாடுகள் காரணமாகத்தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்கிறார்கள்.
எனவே, வேறுபாட்டைச் சிந்திக்காமல், பொத்தாம் பொதுவாக சமம், சமம் என பேசுவது எந்தப் பயனையும் தராது என்பதே அறிவார்ந்து சிந்திக்கையில் கிடைக்கின்ற விடையாக இருக்கும்.
ஆணும் பெண்ணும் பல அம்சங்களில் சமமானவர்கள். சில அம்சங்களில் ஆண், பெண்ணை விட சிறப்பு தகுதிகள் பெற்றிருக்கிறான். அதே போன்று, வேறு சில அம்சங்களில் பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான சிறப்புத் தகுதிகளை பெற்றிருக்கிறார்கள்.
இது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை இஸ்லாம் பேசுகிறது. எந்தெந்த அம்சங்களில் ஆணும் பெண்ணும் உண்மையிலேயே சமநிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது.
எந்தெந்த அம்சங்களில் ஆணும் பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை. பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள்.
இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது. ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும் கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும் சலுகைகளையும் வழங்குகின்றது. இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும்.
அவ்வாறு பேசுவது போலித்தனமான வாதமாகவே அமையும். உடற்கூறுகளின் படி, ஆண்கள் வலிமையான வேலைகளை எளிதில் செய்து விடுவார்கள். பெண்களால் அவர்கள் அளவிற்கு ஈடுகொடுத்து செய்ய முடியாது. ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்கும் ஏற்ப பெண்கள் தங்களை கூடுதலாகத் தற்காத்துக் கொள்வதற்கும், ஆடை விஷயத்தில் அதிகப்படியான பேணுதலைக் கொள்வதற்குமான தேவை இருக்கிறது.
குடும்பத்தினை நிர்வகிக்கின்ற பொறுப்பை அதிகமாக ஆண்கள் எளிதில் சுமந்து கொள்கின்றனர். விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலும் ஆண்கள் அளவிற்குப் பொருளாதாரத் தேடல்களிலும் குடும்ப நிர்வாகத்திலும் பெண்களால் ஈடுகொடுக்க இயலாமல் போகும்.
இவையாவும் இயற்கையாகவே ஆண்கள் பெண்களை விடக் கூடுதலாகப் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.
அதே போன்று, மன வலிமையை எடுத்துக் கொண்டால், ஆண்களை விட பெண்கள் அதிக மன வலிமை பெற்றவர்கள் என்று கூட சில மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதை பெண்களுக்கான சிறப்பம்சமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு விஷயத்தைப் பல வகைகளிலும் சிந்தித்து முடிவு செய்வது ஆண்களின் பண்பு எனவும், தற்சமய எண்ண ஓட்டத்திற்கேற்ப அவசரமாக முடிவு எடுத்து விடுவது பெண்களின் தன்மை எனவும் கருத்துக்கள் சொல்லப்படுவது ஆண்களின் சிறப்பைக் காட்டுகிறது.
ஆண்கள் பொருளாதார ரீதியில் குடும்பத்தை வழி நடத்தத் திறம் படைத்தவன் என்றால், இருக்கின்ற வருமானத்தைக் கொண்டு திறமையாக குடும்பச் செலவீனங்களைச் செய்து விடுவது பெண்களின் சிறப்பு.
குடும்ப சூழலுக்கேற்ப சேமிப்பையும் விரலுக்கேற்ற வீக்கம் கொள்கிற திட்டமிடலையும் ஒரு பெண் திறம்படச் செய்கிறாள்.
இதுவெல்லாம் அலசுகிற போது, ஒன்றில் ஆண் மேம்பட்டவனாக இருந்தால் இன்னொன்றில் பெண் மேலானவளாகிறாள். இந்த இருபக்கச் சமன்பாட்டை உணர்ந்து செயலாற்றுவதாக இருந்தால் ஆணும் பெண்ணும் சமம் என மொட்டையாக தத்துவம் பேசுவதில் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை விளங்கலாம்.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கு இறைவன் இயற்கையாகவே அமைத்து வைத்திருக்கின்ற இன்னும் சில பண்புகளைச் சிந்தித்தால் இந்த அடிப்படையை இன்னும் ஆழமாகப் புரியலாம்.
பெண்கள் பருவ வயதை அடைந்த பிறகு, அவர்களுடைய மாதவிடாய் முழுமையாக நின்று போகின்ற பருவம் வரை ஒவ்வொரு மாதமும் அவள் எதிர்கொள்கின்ற சிரமம் ஆண்கள் எதிர்கொள்ளாத ஒன்று!
திருமண பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் என்றாலும் கூட, அந்த பந்தத்தின் மூலம் உருவாகின்ற குழந்தையை தூக்கிச் சுமக்கின்ற சிரமம் பெண்களுக்கு மட்டுமே உரியது. கர்ப்ப காலமான அந்தப் பத்து மாதங்களில் பெண்கள் அனுபவிக்கின்ற சிரமங்கள் சொல்லி மாளாது.
பிரசவ வேதனை என்பது மரணத்தின் வாயிலைத் தொட்டு விட்டு மீள்வது என சொல்லப்படுவதில் ஒளிந்திருக்கும் பெண்களுக்கான பலவீனம் ஆண்கள் அனுபவிக்காத சிரமங்கள். உயிர் போகின்ற சிரமத்தை மீறி அவள் பெற்றெடுக்கின்ற அந்தக் குழந்தையைப் பராமரிக்கின்ற பொறுப்பையும் அவளே சுமந்து கொள்கிறாள்.
இரண்டு வருடங்கள் அந்தக் குழந்தைக்கு அவளுடைய மார்பு தான் பசியாற்றும் உணவுக்கூடம். குழந்தைக்குப் பசிக்கிறதா, எறும்பு கடித்து அழுகிறதா என சதா குழந்தையின் நினைவாலே தனது உடல் ஆரோக்கியத்தைக் கூட மறந்து வாழ்பவள் பெண்.
ஆணுக்கோ இதில் எந்தவொரு சூழலையும் அனுபவிக்க வேண்டிய கட்டாயமில்லாதவனாக, தமது வழக்கமான அலுவல்களை அவன் பார்க்கச் சென்று விடுவான். ஆக, இதையெல்லாம் சிந்திக்கையில், மேன்மைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, இது போன்ற சிரமங்களையும் தியாகங்களையும் கவனத்தில் கொண்டால், பெண்களின் பலவீனமான நிலையையும் சேர்த்தே புரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் அதன் காரணமாகவே பெண்களை அதிகமதிகம் கௌரவப்படுத்துகின்றது. பெண்ணாக இருக்கும் தாய், ஆணாக இருக்கும் தந்தை ஆகிய இருவரில் தாய்க்குத் தான் இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
‘நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாயாருக்கு’ என்றார்கள். ‘அடுத்ததாக யாருக்கு?’ என்று அவர் கேட்டார். அப்போதும் ‘தாயாருக்கு’ என்று நபி (ஸல்) கூறினார்கள். ‘அடுத்ததாக யாருக்கு?’ என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். ‘அடுத்தது யார்?’ என்று அவர் மீண்டும் கேட்ட போது ‘தந்தைக்கு’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971
தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள். எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது. எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர். எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர். எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.
காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இதைப் புரியாத சிலர், பெண் நபி இஸ்லாத்தில் இல்லாததால் இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மார்க்கம் என்பதாக விமர்சிக்கின்றனர். பல நூற்றாண்டுகளாகப் பெண்களுக்கு இல்லாத சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியிருப்பது இவர்கள் கண்களுக்குத் தென்படவில்லை.
திருமணத்தை தாமே முன்வந்து முடிவு செய்கிற உரிமையை சித்தாந்த ரீதியாக இந்த மார்க்கம் வழங்கியிருப்பது இவர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற உயரிய (?) கொள்கையிலிருந்த சமூகத்தின் மத்தியில் பிடிக்காத கணவனை உதறித் தள்ளுகிற, அதுவும், ஆண்களுக்கு வழங்கப்பட்டிருப்பது போல அல்லது அதை விட ஒரு படி மேலாக விவாகரத்து பெறுகின்ற உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருப்பது இவர்கள் சிந்தனையைத் தட்டவில்லை.
கல்வி கற்கும் உரிமை, சுயமாக சம்பாதிக்கின்ற உரிமை, வழிபாட்டிற்காகப் பள்ளிவாசல்களில் நுழையும் உரிமை, மார்க்கப் பிரச்சாரம் செய்கின்ற உரிமை என ஆண்களுக்கு நிகராகப் ‌பல துறைகளில் பெண்கள் அனைத்து உரிமையையும் பெற்று வாழவே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதையெல்லாம் சரி வர சிந்தித்திருந்தால், நபியாக மட்டும் ஏன் பெண் இல்லை என்கிற கேள்வியை முன்வைத்து அதன் காராணமாக இந்த மார்க்கம் பெண்ணுரிமையை மறுப்பதாக இவர்கள் அபத்தமாகப் புரிந்திருக்க மாட்டார்கள்.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல, ஆண்களால் இயன்ற காரியங்களை ஆண்கள் தான் செய்ய இயலும். பெண்களால் எளிதில் செய்ய இயன்றதை அவர்கள் கையில் விட்டு விட வேண்டும்.
இறைத்தூதர் எனும் பணி, காலத்திற்கும் முள் மேல் நடக்கின்ற பணியாகும். உயிர் அச்சுறுத்தல் முதல், எதிரிகளின் சொல்லெணா சோதனைகளை எதிர்கொண்டும் ஒரு அரசாங்கம் நிறுவ வாய்ப்பு உருவானால் அதை நிறுவுவதும் போர் செய்கிற சூழல் ஏற்பட்டால் போரில் கலந்து கொள்வதும், இன்னும் மக்களோடு மக்களாக என்றும் இரண்டற கலந்து, தம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் திறந்த புத்தகமாக வைத்திருப்பதும் ஓர் இறைத்தூதரின் அவசியத் தேவை.
காரணம், தமது வாழ்வு திறந்து புத்தகமாக இருந்தால் தான் அதைக் கொண்டு தனது சமுதாயம் நல்வழி பெறும். அவரது வாழ்வை முன்னுதாரணமாகக் கொள்ளும். நபியின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொள்வது என்பது மக்களின் அடிப்படைக் கடமையாகி விடுகிறது.
திறந்த புத்தகம் என்று சொல்கிற போது, இன்று நாம் மேம்போக்காகப் புரிந்து வைத்திருக்கின்ற ஒன்றல்ல. மாறாக, ஒருவர் தனது அந்தரங்க வாழ்வில் கடக்கின்ற தாம்பத்தியம் முதல், கழிவறையில் மலஜலம் கழிப்பதில் துவங்குகிறது அந்தத் திறந்த புத்தகம். முஹம்மது நபியவர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள், அவர்கள் எவ்வாறு வியாபாரம் செய்தார்கள், அவர்கள் எவ்வாறு மக்களிடையே அன்பை விதைத்தார்கள் என்பது மட்டும் படிப்பினையல்ல‌.
அவர்கள் எவ்வாறு மலஜலம் கழிப்பார்கள், எவ்வாறு குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்கள் என்பது வரை கூட படிப்பினையே! இப்படியான வாழ்க்கையை ஒருவர் வாழ வேண்டுமென்றால், அதிகமான உடற்சுமையும் அதற்கு அவசியம்.
அதே போன்று, அனைவரோடும் இரண்டறக் கலந்த, அந்தரங்க மற்றும் தனிப்பட்ட சூழல் குறைவாய் பெறுகின்ற வாழ்க்கையை வாழ்வதும் அதில் இருக்கிறது. அப்படியானால், இதற்குப் பெண்களை விட ஆண்களே அதிகம் தகுதி படைத்தவர்கள். உடல் வலிமை அதிகம் தேவைப்படக் கூடிய ஒரு வேலைக்கு இயல்பாகவே ஒரு ஆணைத் தான் எந்த நிறுவனமும் தேர்வு செய்கிறது.
அதென்ன? பெண்களில் வலிமை படைத்தோர் இல்லையா? அவர்களை சோதித்துப் பார்த்து தேர்வு செய்யலாமே என வறட்டு வாதம் புரிந்தாலும் அவை அறிவுக்கு ஏற்புடைய வாதமில்லை. காரணம், எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் விதிவிலக்குகள் இருக்கும். அதோ அந்தப் பெண் ஆட்சி செய்யவில்லையா? இதோ ஜான்சி ராணி போர் புரியவில்லையா? இதோ ஒலிம்பிக் போட்டியில் இந்தப் பெண் நூறு கிலோ தூக்கவில்லையா? என்றெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய உதாரணங்களை இவர்கள் முன்வைப்பதே, அதைத் தாண்டி, பல ஆயிரம் உதாரணங்கள் ஆண்களுக்கானது தான் என்பதை மறைமுகமாக இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் என்று ஆகி விடுகிறது.
விதிவிலக்கை வைத்து வாதம் புரியாமல், யதார்த்த நிலையை, பகுத்தறிவின் துணை கொண்டு சிந்தித்தால் இஸ்லாம் பெண்களை ஆண்களை விட உயர்ந்த இடத்தில் வைத்தே அழகு பார்க்கிறது என்பதையும், வேறு சித்தாந்தங்களில் இல்லாத பெண்ணுரிமை இந்தச் சித்தாந்தத்தில் நிரம்ப வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.