கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!
இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
அல்குர்ஆன் 4:116
இணை வைப்பு மட்டும் தான் மன்னிக்கப்படாது. நாம் தான் இணை வைக்கவில்லையே! அதனால் தொழுகை போன்ற விஷயங்களில் நாம் குறை வைத்தால் அல்லாஹ் பெரிதாகப் பிடிக்கமாட்டான் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உருவாகி விட்டது.
‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 5827
இணை வைக்கவில்லையென்றால் நமக்கு சுவனம் உறுதி தான் என்று இந்த ஹதீஸ் அடித்துச் சொல்கின்றது. அதனால் தொழாமல் இருந்து விட்டால் அது பாதகமில்லை என்ற தப்பான எண்ணம் மேலும் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இணை வைப்பு இல்லை என்றால் சுவர்க்கம் உறுதி என்று இந்த வசனம், ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
தான் செய்த பாவத்திற்காக ஒரு முஃமின் நரகில் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பார். அவரை அல்லாஹ் எப்படிக் காப்பாற்றுகின்றான் என்று பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
‘‘இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.
சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த வடுக்களைத் தவிர ஆதமின் மைந்தர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.
இந்த நிலையில் அவர்கள் கருகிப் போன நிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்” என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நிகழ்வுகளைப் பற்றி புகாரியில் இடம் பெறும் நீண்ட ஹதீஸிலிருந்து)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (806)
இந்த ஹதீஸ் நரகிலிருந்து ஒரு முஃமின் காப்பாற்றப்படுவதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக தொழுகை இருக்க வேண்டும் என்று விவரிக்கின்றது. அதாவது ஸஜ்தாவின் தழும்புகள், அடையாளங்கள் அவரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமைகின்றன. அதனால் தொழுகை இல்லையென்றால் அவர் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. அப்படியானால் மேலே இடம் பெற்றிருக்கும் புகாரி ஹதீஸ், ‘ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹு சொல்லி விட்டால் சொர்க்கம் சென்று விடுவார்’ என்று தெரிவிக்கின்றதே என்று கேட்கலாம். இதை முஸ்லிமில் இடம்பெறுகின்ற இன்னொரு ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கின்றது என்று நற்செய்தி சொல்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 52
இந்த ஹதீஸும் லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்பவருக்குச் சொர்க்கம் என்று தான் சொல்கின்றது. ஆனால் ‘உள்ளத்தால் நம்பி’ என்ற ஒரு வார்த்தை கூடுதலாக இடம் பெறுகின்றது.
‘அணை உடைந்து வெள்ளம் வருகின்றது. அதனால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்’ என்று ஓர் அறிவிப்பு வெளியானால் உடனே மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்குத் தயாராகின்றார்கள்.
இதற்கு என்ன அர்த்தம்? இந்த அறிவிப்பு அவர்களது உள்ளங்களில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால் தான் தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செயல்பாட்டில் இறங்குகின்றார்கள்.
அதுபோல் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒருவர் உள்ளத்தால் உறுதியாக நம்பி விட்டால் அமல்கள் என்ற செயல்பாடுகளில் அவர் இறங்கியாக வேண்டும். அவ்வாறு இறங்கவில்லை என்றால் அந்த ஈமான் அவரிடத்தில் எந்த ஒரு பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அர்த்தமாகி விடும்.
ஒரு பணியாளர் ஒரு கம்பெனியில் சேரும் போது முதலாளி அவரிடத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வார். அவ்வாறு ஒப்பந்தம் செய்து பணியில் சேர்ந்த தொழிலாளி பணி செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
முதலாளி அவரிடத்தில் நீ ஏன் வேலை செய்யவில்லை? என்று கேட்டால், ‘உங்களை முதலாளி என்று நான் ஏற்றுக் கொண்டு விட்டேனே! அப்புறம் என்ன வேலை செய்யவில்லையா? வேலை செய்யவில்லையா? என்று கேட்டு நச்சரிக்கின்றீர்கள்’ என்று திரும்பக் கேட்டால் அந்தத் தொழிலாளியின் நிலை என்ன? அந்த முதலாளி இவரை இதன் பின்னரும் அங்கு வேலையில் வைத்திருப்பாரா? நிச்சயம் வைத்திருக்க மாட்டார். அவர் இந்தத் தொழிலாளியை தனது கம்பெனியிலிருந்து நீக்கி விடுவார்.
அதுபோல் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை; அவன் தனது எஜமானன் என்று ஒப்புக் கொண்டு விட்டு அமல்கள் எதுவும் செய்யவில்லை என்றால் அதை எப்படி அவன் ஒத்துக் கொள்வான். அல்லாஹ் திருக்குர்ஆனில் ஈமானைப் பற்றிச் சொல்கின்ற போதேல்லாம் அமல்களையும் சேர்த்தே சொல்கின்றான்.
குர்ஆனில் ‘இன்னல்லதீன ஆமனூ’ என்று சொல்கின்ற போதெல்லாம் அல்லாஹ், ‘வ அமிலுஸ் ஸாலிஹாத்தி’ என்று சேர்த்தே சொல்கின்றான்.
இதற்குப் பின்வரும் வசனத்தை ஓர் எடுத்துக் காட்டாக கூறலாம்.
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
அல்குர்ஆன் 4:57
இன்னும் அதிகமான இடங்களில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். அதாவது, ஈமான் (நம்பிக்கை) கொண்டு நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கம் என்று அமல்களை சேர்த்தே சொல்கின்றான்.
அதனால் உள்ளத்தால் நம்புதல் என்றால் அது செயல் வடிவத்தில், அமல்கள் என்ற வடிவத்தில் வெளிவந்தாக வேண்டும்.
இதன்படி, லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொன்னவருக்குச் சொர்க்கம் என்றால் அதன் கருத்து, அதன்படி அமல் செய்தவருக்குச் சொர்க்கம் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வெறுமனே வாயளவில் சொன்னாலோ அல்லது நம்பிக்கை மட்டும் கொண்டு விட்டு அமல் செய்யாமல் இருந்தாலோ அவர் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி நாம் தவ்ஹீதுக் கொள்கையைப் புரிந்து கொண்டால் நம்மிடம் தொழுகையில் அலட்சியமும், அசட்டைத்தனமும் வராது. ஒரு சில ஊர்களில் மர்கஸ்களில் மக்ரிப் நேரம் மக்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால் அவை ஃபஜ்ர் தொழுகை நேரங்களில் காற்றாடிக் கொண்டிருக்கின்றன.
ஃபஜ்ர் தொழுகையைப் பற்றி நிறைய சிறப்புகள் ஹதீஸ்களில் இடம் பெறுகின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.’
இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’ (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
நூல்: புகாரி 648
இந்த ஹதீஸில், மலக்குகள் சங்கமிக்கின்ற சங்கைமிகு நேரம் என்று ஃபஜ்ர் தொழுகை சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளைப் பேணக் கூடியவர்களுக்கு இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஜரீர் (ரலி) அறிவித்தார்.
நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!’ என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!’ (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
நூல்: புகாரி 554
இது போன்ற ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. எடுத்துக் காட்டுக்கு இந்த ஹதீஸ்கள் போதும் என்பதால் அவை அனைத்தும் இங்கு குறிப்பிடப்படவில்லை. இவ்வளவு சிறப்புக்குரிய தொழுகை அன்று நயவஞ்சகர்களுக்குத் தான் பாரமாகவும் பளுவாகவும் இருந்தது.
இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 657
அண்மையில் தான் நம்மைப் புனிதமிகு ரமளான் மாதம் கடந்து சென்றிருக்கின்றது. ஒரு மாத காலம் அது நமக்குப் பயிற்சியும் பாடமும் நடத்தியிருக்கின்றது.
ஒரு மாதப் பயிற்சி என்பது சாதாரணமானதல்ல! அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் ஒரு துறைக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் போது அவருக்கு ஒரு மாத காலம் பயிற்சியை வழங்குகின்றது. அதுபோல் அல்லாஹ் நமக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்திருக்கின்றான். ரமளான் மாதம் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்தாலும் குறைந்த பட்சம் கீழ்க்காணும் இரண்டு பாடங்களை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
- சஹ்ர் நேர பாவமன்னிப்பு
இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது.
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
அல்குர்ஆன் 51:17-18
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
அல்குர்ஆன் 3:17
இந்த நேரத்தில் அல்லாஹ் தஆலா தனது அடியார்களிடத்தில் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1145
அதனால் இந்த நேரத்தில் நாம் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனிடத்தில் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றது.
- வித்ரு தொழுகை
ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் நாம் வித்ரை இரவின் கடைசி நேரத்தில் தொழுதோம். அந்த வித்ரை நாம் ஏன் எப்போதும் பிந்திய நேரத்தில் தொழுகின்ற பழக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது?
‘‘இரவின் இறுதியில் எழ முடியாது என்று பயப்படுபவர் இரவின் ஆரம்பத்தின் வித்ரு தொழுவாராக! இரவின் இறுதியில் எழ முடியும் நம்புகின்றவர் இரவின் இறுதியில் வித்ரு தொழுவாராக! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும் போது (மலக்குகள்)பங்கேற்கின்றனர். இது மிகச் சிறந்ததாகும்’’ என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1255
அதிகாலையில் பாவமன்னிப்புத் தேடல், வித்ர் தொழுதலுக்குரிய சிறப்புக்களை மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் விவரிக்கின்றன. அதனால் ரமளான் படித்துத் தந்த பாடங்களில் இந்த இரு அமல்களை ரமளான் பரிசாகப் பெற்றுச் செயல்பட வேண்டும்.
இரவில் சுபுஹுக்கு ஓர் அரை மணி நேரத்திற்கு முன்பு எழுந்து குறைவான எண்ணிக்கையில் முதலில் தொழப் பயிற்சி மேற்கொள்வோமாக! அதன் பிறகு பக்குவம், பழக்கம் ஏற்பட்டதும் இன்னும் கொஞ்சம் முந்தி எழுவோம். அதன் பின்னர் கொஞ்சம் ரக்அத்துகளின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு தொழ முனைவோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய ஃபஜ்ர் தொழுகை நமக்குத் தப்பாத நிலை நமக்கு ஏற்படும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து தொழ ஆரம்பித்து விட்டால் மற்ற தொழுகைகள் அவனுக்கு உளவியல் ரீதியாக ஒரு பிரச்சனையாக இருக்காது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுவோம். இதன் மூலம் கொள்கை, தொழுகை இரண்டையும் பேணி, சுவனம் செல்லும் நன்மக்களாக ஆவோம்.
————————————————————————————————————————————————–
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா?
அப்துந்நாசிர்
பிறையைக் கண்களால் பார்ப்பதன் அடிப்படையில் தான் மாதங்களின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிக, மிக உறுதியாக வலியுறுத்தி உள்ளார்கள்.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’’ எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:189
‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
‘பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
‘நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907
‘‘(முப்பதாக) எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை அல்லது பிறையைக் கண்ணால் பார்க்கும் வரை மாதத்தை முற்படுத்தி விடாதீர்கள். (முப்பதாக) எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை அல்லது பிறையைக் கண்ணால் பார்க்கும் வரை நோன்பு வையுங்கள். நோன்பை விட்டுவிடாதீர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து ரிப்யீ இப்னு ஹிராஸ் அறிவிக்கின்றார்.
நூல்: அஹ்மத் (18825)
நாங்கள் (பிறையை) கண்களால் பார்த்து வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும். நாங்கள் அதைக் கண்ணால் பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில் நாங்கள் வணக்கவழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி)
நூல்: அபூதாவூத் (1991)
மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் நோன்பின் ஆரம்பத்தையும், முடிவையும், மாதங்களின் துவக்கத்தையும், முடிவையும் தீர்மானிக்க வேண்டும் என்பதை மிகத் தீர்க்கமாக அறிவிக்கின்றன.
‘‘பிறையைப் பார்த்து வையுங்கள்! பார்த்து விடுங்கள்!”
என்று உடன்பாடாகவும்
‘‘பிறையை பார்க்காமல் வைத்துவிடாதீர்கள்! பார்க்காமல் விட்டுவிடாதீர்கள்!”
என்று எதிர் மறை வாக்கியமாகவும்
‘‘பார்க்கும் போதுதான் வைக்க வேண்டும்! பார்க்கும் போதுதான் விட வேண்டும்”
என்று நிபந்தனை வாக்கியமாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்தே கண்களால் பார்த்து முடிவு செய்வதைத் தவிர வேறு வழிமுறைகள் அனைத்தும் நபிவழிக்கு எதிரானது என்பதை எள்ளளவும் சந்தேகமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.
அதிகாரம் பெற்றவர்களே அறிவிக்க வேண்டும்
பிறையை மக்கள் கண்களால் பார்த்தால், அல்லது நீதமான இரண்டு சாட்சிகள் கண்களால் பார்த்தால் பார்த்தவர்கள் அவர்களாக நோன்பையோ, நோன்புப் பெருநாளையோ ஆரம்பம் செய்ய முடியாது.
பிறை பார்த்தவர்கள் மக்களுக்கு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்து அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்களிடம் அத்தகவலை சாட்சி கூற வேண்டும்.
அந்தப் பொறுப்பாளர்கள்தான் அதை மக்களுக்கு முறையாக அறிவிப்பார்கள், அறிவிக்க வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைஆகும்.
நபி (ஸல்) அவர்களுடைய கால கட்டத்தில் பிறை பார்த்தவர்கள் அவர்களாகவே நோன்பையும், பெருநாளையும் தீர்மானித்து விடவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களிடம் தான் வந்து சாட்சி கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் பிறைத் தகவலை உறுதி செய்து மக்களை நோன்பு நோற்குமாறும், நோன்பை விடுமாறும், பெருநாள் கொண்டாடுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள்.
இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இரண்டு கிராமவாசிகள் பிறைபார்த்த தகவலை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி சொன்னார்கள். அவருடைய தகவலை ஏற்று நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1992) என்ற நூலில் பதிவாகி உள்ளது.
அதுபோன்று, வாகனக் கூட்டத்தினர் பிறை பார்த்து விட்டு அத்தகவலை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி சொன்னார்கள். அவர்களின் சாட்சியை ஏற்று அவர்கள் நோன்பை விட வேண்டும் என்றும் அவர்களின் பெருநாள் திடலிற்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி இப்னுமாஜா 1653வது செய்தியாகப் பதிவாகி உள்ளது. இன்னும் பல நூற்களிலும் இச்செய்தி பதிவாகி உள்ளது.
மிக உறுதியான சாட்சியாக இருந்த இப்னுஉமர் (ரலி) அவர்கள், பிறை பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் பிறைத்தகவலை சாட்சி சொன்னார்கள். சாட்சியை ஏற்று நபி (ஸல்) அவர்கள்தான் மக்களுக்கு நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். இச்செய்தி அபூதாவூத் 2344வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்துமே பிறை பார்த்த தகவலை மக்களின் பொறுப்புதாரி தான் தீர்மானித்து மக்களுக்கு நோன்பு என்றும் பெருநாள் என்றும் அறிவிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு
நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது நம்முடைய தலைமைக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும், நம்முடைய கருத்தில் உள்ள மக்களுக்கும் பெருநாள் தொடர்பாகவும், நோன்பு தொடர்பாகவும் வழிகாட்டி வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இதன் அடிப்படையில்தான் இந்த ஆண்டும் ரமலான் 29ஆம் நாள் முடிந்த உடன் 30ஆம் இரவில் தமிழகம் முழுவதும் ஷவ்வால் மாதத்திற்கான பிறைத் தகவல் வருகிறதா என மாநிலத் தலைமை எதிர்பார்த்தது. ஆனால் குறித்த நேரத்தில் எங்கிருந்தும் பிறைத் தகவல் வரவில்லை.
கன்னியாகுமரி கோட்டார் பகுதியில் ஒருவர் பிறை பார்த்ததாகத் தகவல் கிடைத்தது. ஆனால் அவருடைய வாக்குமூலங்கள் அடிப்படையில் மிக உறுதியான சாட்சியாகத் தீர்மானிக்க முடியாத நிலை இருந்தது.
சுன்னத் ஜமாஅத்தினர் தலைமை காஜியின் அறிவிப்பை அடிப்படையாக வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிக்கின்றனர். தலைமை காஜி அறிவிப்பது நபிவழிக்கு உட்பட்டதா? எதிரானதா? என்பதைக் கூட அவர்கள் சிந்திப்பது இல்லை. அந்தத் தலைமை காஜி என்பவர் நாளை பெருநாள் கிடையாது என அறிவித்துவிட்டார்.
ஆனால் நம்முடைய மாநிலத் தலைமை பிறைத்தகவல் எங்கிருந்தாவது வருகிறதா? என்பதை நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்தனர். பிறை பார்த்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எங்கிருந்தும் வராத காரணத்தினால் நாளை பெருநாள் இல்லை. எனவே ரமலானை முப்பதாக முழுமைப்படுத்துவோம் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது.
தாமதமாக வந்த தகவல்
நம்முடைய மாநிலத் தலைமை, நாளை பெருநாள் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டு அது அதிகமான மக்களைச் சென்றடைந்த பின்னர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சில பெண்கள் பிறை பார்த்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிய செய்தி மாநிலத் தலைமையின் கவனத்திற்கு வந்தது.
செய்தி வந்தவுடன் நமது நிர்வாகிகள் மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கையினை மாநிலத் தலைமை மேற்கொண்டது. பிறை பார்த்ததாகக் கூறிய பெண்களைச் சந்தித்து அவர்களின் வாக்கு மூலத்தை மாநிலத் தலைமை உறுதிப்படுத்தியது.
இவ்வாறு உறுதிப்படுத்தும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது.
மாநிலம் முழுவதிலும் உள்ள நபிவழியைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் சில தனிநபர்கள் செயல்படுவதைப் போன்று ஏனோ தானோவென்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலோ செயல்படமுடியாது.
தவ்ஹீத் ஜமாஅத் நாளை பெருநாள் இல்லை என்று அறிவித்த காரணத்தினால் பல ஊர்களிலும் நாளை பெருநாள் இல்லை என முடிவு செய்து அடுத்த கட்டக் காரியங்களில் மக்கள் கவனம் செலுத்தத் துவங்கி விட்டனர்.
நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை சுன்னத் ஜமாஅத்தினரைப் போன்று கிடையாது.
சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளிவாசல்களில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நபிவழி அடிப்படையில் திடல்களில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.
சுன்னத் ஜமாஅத்தினர் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதை வலியுறுத்துவது கிடையாது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நபிவழி அடிப்படையில் மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பெருநாள் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தகிறது.
சுன்னத் ஜமாஅத்தினர் கூட்டு முறையில் ஃபித்ராவை நிறைவேற்றுவதில்லை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நபிவழி அடிப்படையில் கூட்டு முறையில் ஃபித்ராவை நிறைவேற்றி வருகின்றனர். நாளை பெருநாள் இல்லை என்று அறிவித்த காரணத்தினால் நாளை விடிந்த உடன் ஃபித்ராவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என பல கிளைகளில் முடிவெடுத்ததும் மாநிலத் தலைமையின் கவனத்திற்கு வந்தது.
சுன்னத் ஜமாஅத்தினர் சில ஊர்களில் திடலில் தொழுதாலும் அவர்களுக்கு மிக இலகுவாக ஏற்பாடுகள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் பல ஊர்களில் திடலில் தொழுகை நடத்துவதற்கான பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். பல ஊர்களுக்குப் பெருநாள் தொழுகையில் உரையாற்றுவதற்காகப் பிரச்சாரகர்கள் செல்ல வேண்டிய நிலையும் இருந்தது.
நபிவழி அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெருநாள் தொழுகையில் பல குக்கிராமங்களிலும் உள்ள தவ்ஹீத் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் பல கிலோ மீட்டர் தாண்டி வந்து தொழுகையில் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதையும் மாநிலத் தலைமை கவனத்தில் கொண்டது.
நாளை பெருநாள் தொழுகை நடத்துங்கள் என்று அறிவித்தால் கணிசமானோருக்கு நபிவழி அடிப்படையில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளக் கூடிய நிலை இல்லை என்பதையும் மாநிலத் தலைமை கவனத்தில் கொண்டது.
இதற்கு மார்க்க அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதை குர்ஆன், சுன்னா அடிப்படையில் கலந்தாலோசனை செய்தது.
பெருநாள் தொழுகைக்கான அடிப்படைகள்
பெருநாள் தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் பல அடிப்படைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.
வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்செய்தி புகாரி 324வது செய்தியாகப் பதிவாகி உள்ளது.
தலைமுக்காடு இல்லாத பெண்கள் கூட இரவல் வாங்கி அணிந்து கொண்டாவது பெருநாள் திடலுக்கு வரவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘எங்களில் ஒரு பெண்ணுக்கு தலைமுக்காடு இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘(ஒரு பெண்ணிடம் தலைமுக்காடு இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது தலைமுக்காடுகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!’’ என்று சொன்னார்கள்.
இச்செய்தி புகாரி 324வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பெருநாள் தொழுகையில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
தீர்மானிக்கும் உரிமை
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (633)
பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும், பிறை பார்த்து பெருநாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் ‘‘நீங்கள் நோன்பையும், நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று மக்களுக்கு கூறுகின்றார்கள்.
நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது பிறை பார்க்காமல் நோன்பையோ, பெருநாளையோ, தீர்மானிப்பதாக நிச்சயமாக இருக்க முடியாது.
அப்படியென்றால் ‘‘நீங்கள் முடிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வழங்கும் அதிகாரம் நிச்சயமாக மக்களுக்கு இலகுவை நாடக்கூடிய ஒரு விசயம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை மிகத் தூரமான மற்றொரு பகுதியை கட்டுப்படுத்தாது என்பது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் ஆகும்.
சிரியாவில் பார்க்கப்பட்ட பிறையை மதீனாவில் வாழ்ந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ‘‘மதீனாவில் நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’’ என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இது தொடர்பான விரிவான செய்தி முஸ்லிம் (1983)ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாகனக் கூட்டத்தினர் பிறை பார்த்த செய்தியை அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அந்த வாகனக் கூட்டத்தினர் நோன்பை விடுமாறும், மறுநாள் காலையில் அவர்களின் பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டார்கள். இது தொடர்பான செய்தி இப்னுமாஜா 1653வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘‘உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்” என்று அல்குர்ஆன் 2:185வது வசனம் குறிப்பிடுகிறது.
உலகின் ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறையை தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியினரும் ஏற்கலாம் என்றால் இந்த திருமறை வசனம் பொய்யாகிவிடும். ஏனெனில் ‘‘உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும்” என்று திருமறைக் குர்ஆன் குறிப்பிடுவதிலிருந்து மாதத்தைத் தாமதமாக அடைபவர்களும் இருப்பார்கள். மேலும் மாதம் ஆரம்பமாவது ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் வித்தியாசப்படும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டால் தூரமான மற்றொரு பகுதியை அப்பிறைத்தகவல் கட்டுப்படுத்தாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில் நமது பகுதியாக எதைக் கருதுவது? எவ்வளவு தூரத்திலிருந்து பிறைத்தகவல் வந்தால் அதனை ஏற்று மக்கள் ஒன்றுபட வேண்டும்? என்ற கேள்வி ஏற்படுகிறது.
இதற்கு மேற்கண்ட ஹதீஸ் விடைதருகின்றது.
‘‘நீங்கள் நோன்பை முடிவு செய்து கொள்ளுங்கள், நீங்கள் பெருநாளை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதின் மூலம் நபி வழிக்கு முரணில்லாத வகையில் எப்பகுதியிலிருந்து பிறைத் தகவல் வந்தால் ஏற்று ஒன்றுபடலாம் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட நபிமொழி திகழ்கிறது.
அது போன்று பிறைத்தகவல் தாமதமாகக் கிடைக்கும் போது, மக்கள் அனைவரும் ஒன்றுபட முடியாத சூழல் ஏற்படும் என்றால் ஒருநாள் தாமதமாகப் பெருநாளைக் கொண்டாடுவோம் என்று தீர்மானிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது.
மக்கள் ஒன்றுபடுதற்கான சாத்தியக் கூறுகளை மக்களுக்குப் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள் தான் தீர்மானிக்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள் வாழும் காலகட்டத்தில் பிறை பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள்தான் நோன்பு வையுங்கள், பெருநாள் கொண்டாடுங்கள், முடியாத நிலையில் மறுநாள் பெருநாள் கொண்டாடுங்கள் என்று மக்களுக்கு அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
பிறை பார்த்த தகவல் கிடைத்தவுடன் மக்கள் சிரமமில்லாத வகையில் ஒன்றுபட முடியுமென்றால் உடனே பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
பிறை பார்த்த தகவல் கிடைத்தவுடன் மக்கள் ஒன்றுபடமுடியாத நிலை இருந்தால் மறுநாள் பெருநாளைக் கொண்டாடுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
பின்வரும் செய்தியிலிருந்து காலை நேரத்தில் பிறைத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாகப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்,
நூல்: அபூதாவூத் (1992)
அது போன்று மக்கள் ஒன்றுபட்டு நிறைவேற்ற முடியாத நிலையில் பிறைத் தகவல் வரும் போது நபி (ஸல்) அவர்கள் மறுநாள் பெருநாள் கொண்டாடுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீயின் அல்குப்ரா, பைஹகீ, தாரகுத்னீ,அல்முன்தகா, இப்னு ஹிப்பான், நஸயீ, அஹ்மத்
மாலை நேரத்தில் வந்த காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் மறுநாள் காலை நிறைவேற்றுமாறு சொன்னார்கள். காலையிலேயே வந்திருந்தால் உடனே தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டிருப்பார்கள் என்று சிலர் வாதிக்கின்றனர்.
இவர்களின் வாதம் அறவே தவறானதாகும். பெருநாள் தொழுகையைக் காலை நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் மற்ற ஃபர்ளான தொழுகைகள் தவறி விட்டால் ஞாபகம் வந்தவுடன், அல்லது தூங்கி எழுந்தவுடன் உடனே நேர, காலம் பார்க்காது நிறைவேற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
உதாரணமாக ஒருவர் சுபுஹு நேரத்தில் தொழ மறந்து விட்டார். அவருக்கு லுஹருக்குப் பிறகுதான் தான் சுபுஹ் தொழவில்லை என்று ஞாபகம் வருகிறது. இப்போது என்ன சட்டம்? அவர் மறுநாள் சுபுஹ் நேரத்தில்தான் அதை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது லுஹர் நேரம் என்று பாராமல் உடனே சுபுஹைத் தொழவேண்டுமா?
இக்கேள்விக்கு என்ன பதில் வரும்? ‘‘லுஹர் நேரமாக இருந்தாலும் ஞாபகம் வந்தவுடன் உடனே தொழுது விட வேண்டும்” என்றுதான் பதில் கூறுவார்கள். அதுதான் சரியான பதிலும் கூட.
அப்படியென்றால் வாகனக் கூட்டத்தினர் பெருநாள் பிறையைப் பார்த்துவிட்டு பெருநாள் தொழால் அஸர் நேரத்தில் வருகிறார்கள். அவர்களை, உடனே நீங்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுங்கள் என்று சொல்லாமல் மறுநாள் காலையில் திடலுக்குச் சென்று நிறைவேற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் நோக்கம் என்ன?
பெருநாள் தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்து நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளும் இறையச்சமுள்ள மார்க்க அறிஞர் ஒருவர் ‘‘மக்கள் ஒன்று பட்டுத் தொழவேண்டும் என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் மறுநாள் காலையில் தொழுங்கள்” எனக் கூறியுள்ளார்கள் என்ற முடிவிற்கே வரமுடியும்.
மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பெருநாள் தொழுகையை காலையில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு காலையில் நிறைவேற்ற முடியவில்லை என்றால் மதியமோ, மாலையிலோ, இரவிலோ நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூற முடியாது. மாறாக மறுநாள் காலை நேரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுங்கள் என்றே கூறமுடியும்.
எனவே பிறைத்தகவல் எந்நேரத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து, பெருநாள் தொழுகையை உடனே நிறைவேற்றுவதா? அல்லது நாளை நிறைவேற்றுவதா? என்பது முடிவு செய்யப்படாது.
மாறாக, மக்கள் ஒன்றுபட முடியுமா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் வாகனக் கூட்டத்தாரை மறுநாள் காலையில் நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
நபிவழிக்கு எதிரானது
பெருநாள் தொழுகை தொடர்பான அனைத்து ஹதீஸ்களையும் உற்று நோக்காத சிலர் காலையில் வந்தால் காலையிலேயே தொழுது விட வேண்டும். மாலையில் வந்தால் மறுநாள் தொழவேண்டும் என்று தவறான வழிமுறையை மக்களுக்குப் போதித்து, ஒன்றுபடுதலைக் கெடுத்து நபிவழிக்கு எதிரான நடைமுறையை உருவாக்குகின்றனர்.
மக்கள் ஒன்றுபட முடியாத சூழல் ஏற்படும் போது மறுநாள் தொழுகையை நடத்திக் கொள்வோம் என பொறுப்பாளர்கள் முடிவு செய்யும் போது, ‘நாங்கள் இன்று தான் தொழுகை நடத்துவோம்’ என சிலர் ஒன்றுபட்டுத் தொழுவதற்கு எதிராகச் செயல்பட்டால் நிச்சயமாக அவர்கள் அந்த விஷயத்தில் நபிவழிக்கு எதிராகத்தான் செயல்பட்டுள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மக்கள் ஒன்றுபடும் சூழல் உள்ளதா இல்லையா என்பதை சில தனிமனிதர்களை விட ஒரு நிர்வாகம் தான் தீர்மானிக்க முடியும்.
சில தனிமனிதர்கள், மக்கள் ஒன்றுபடுவது சாத்தியம் தான் என சூழல்களை அறியாமல் கிணற்றுத் தவளைகளைப் போல் கூச்சலிட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது இறையச்சத்தின் அடிப்படையில் தான். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு என்னென்ன அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானித்தது.
ஆனால் சிலர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ளாமல், அல்லது அறிந்தும் அறியாதவர்களைப் போன்று சில எதிர்வாதங்களை வைத்துள்ளனர்.
அவர்கள் வைக்கும் வாதங்களில் ஒன்று ‘‘பிறைத் தகவல் மாலை நேரத்தில் வந்த காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் மறுநாள் தொழுதார்கள். ஆனால் உங்களுக்கோ ஸஹர் நேரத்திலேயே தகவல் வந்துவிட்டது. எனவே நீங்கள் மறுநாள் தொழுதது தவறு” எனக் கூறுகின்றனர்.
இவர்களின் அடிப்படையான வாதமே பிறைத்தகவல் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதை முடிவு செய்ய வேண்டுமே தவிர சிரமத்தை கவனத்தில் கொள்ளக் கூடாது என்பதுதான்.
இந்த அடிப்படை குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியா எனக் காண்போம்.
மையக்கரு அறிதல்
பொதுவாகத் திருமறைக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்யும் போது ‘மையக்கரு அறிதல்’ என்றொரு அடிப்படை உள்ளது.
இதனை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களே மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க இயலும். இல்லையென்றால் தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்கும் நிலைதான் உருவாகும்.
ஒரு காரியங்கள் அதிகமாக எந்நேரத்தில் நிகழுமோ, அல்லது யாருக்கு நிகழுமோ அல்லது எந்த நிலையில் நிகழுமோ அதனைக் குறிப்பிட்டு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் பேசியுள்ளனர்.
அவ்வாறு பேசிய காரணத்தினால் அது அந்த நேரத்திற்கு மட்டும்தான், அல்லது அவருக்கு மட்டும்தான் அல்லது அந்த நிலைக்கு மட்டும்தான் என்று முடிவு செய்வது மிகப்பெரும் வழிகேட்டில் தள்ளிவிடும்.
உதாரணமாக சில வசனங்களைச் சுட்டிக் காட்டலாம்.
அறியாமைக் காலத்தில் வறுமையின் காரணமாகக் குழந்தைகளைக் கொலை செய்யும் செயல் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் திருமறைக் குர்ஆன் பின்வருமாறு மக்களுக்குக் கட்டளையிட்டது.
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!
(அல்குர்ஆன் 6:151)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கரு. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமாக வறுமையின் காரணத்தினால் கொன்ற காரணத்தினால் வறுமைக்காகக் கொல்லாதீர்கள் என குர்ஆன் பேசுகிறது.
வறுமைக்காகத் தான் கொல்லக் கூடாது என குர்ஆன் கூறுகிறது. எனவே குழந்தை ஊனமாகப் பிறந்தால், புத்தி சுவாதீனமாகப் பிறந்தால் கொல்லலாம். அதில் குற்றமில்லை என்று ஒருவர் வாதிட்டால் அது நிச்சயமாக மிகப்பெரும் வழிகேடு என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடையாது.
அது போன்று அறியாமைக் காலத்தில் அதிகமான அடிமைப் பெண்கள் நல்லொழுக்கத்தை விரும்பிய நிலையிலும் அவர்களை விபச்சாரத்திற்கு நிர்பந்தம் செய்தார்கள். அப்போது அம்மக்களைப் பார்த்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு வழிகாட்டியது.
கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 24:33)
எப்பெண்களையும் விபச்சாரத்திற்கு நிர்பந்திக்கக் கூடாது என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கரு. கற்பொழுக்கம் நாடும் பெண்களை நிர்பந்திப்பது அதிகமாக இருந்ததால் அதனைக் குறிப்பிட்டு இந்த வசனம் பேசுகிறது.
இந்த அடிப்படையை சிந்திக்காமல், ‘விபச்சாரத்தை விரும்பும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தலாம். அதனை மேற்கண்ட வசனம் தடுக்கவில்லை’ என ஒருவன் வாதிட்டால் அவனுடைய அந்த வாதம் மிகப்பெரும் வழிகெட்ட வாதமாகும்.
அதுபோன்று பயணத்தில் இருக்கும் போது கடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் எழுத்தர் கிடைக்காத நிலை அதிகமாக இருந்தது. இதனால் குர்ஆன் பின்வருமாறு மக்களுக்கு வழிகாட்டியது.
நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆன் 2:283
எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானம் செய்து கொள்ளலாம் என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கருவாகும். பயணத்தில் அதிகமாக இந்த நிலை ஏற்பட்டதால் அல்லாஹ் பயணம் என்று குறிப்பிடுகின்றான்.
பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் தான் அடைமானம் வாங்கலாம். ஊரில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானம் வைக்கக் கூடாது என ஒருவர் வாதிட்டால் அது அவருடைய மார்க்க அறியாமையின் வெளிப்பாடாகும்.
இவ்வாறு சில நேரங்களில் சில சட்டங்களைக் கூறும் போது நேரம், இடம் போன்ற காரணங்கள் இருந்தாலும் மையக் கரு வேறொன்றாக இருக்கும். அது போன்ற நேரங்களில் மையக் கருவை கவனத்தில் கொண்டுதான் மார்க்கச் சட்டங்களை வகுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுடைய கால கட்டத்தில் அஸர் தொழுகைக்குப் பிறகு செய்யும் வியாபாரங்களில் பொய் சத்தியம் செய்யும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது…..
………இன்னொருவர், ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2672)
பொதுவாகவே எந்நேரத்திலும் பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்யக் கூடாது என்பதுதான் இச்செய்தியின் மையக் கரு ஆகும். ஆனால் அஸருக்குப் பிறகு அவ்வாறு நடந்து கொண்ட காரணத்தினால் அந்த நேரத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்களே தவிர அஸருக்குப் பிறகுதான் பொய் சத்தியம் செய்யக் கூடாது. லுஹருக்குப் பிறகு செய்தால், முற்பகல் நேரத்தில் செய்தால் தவறில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.
சில நேரங்களில் சம்பவம் நிகழும் நேர, காலங்கள் கூறப்பட்டாலும் மையக்கரு வேறொன்றாக இருக்குமென்றால் மையக் கருவைக் கவனித்துதான் அடிப்படைச் சட்டங்களை வகுக்க வேண்டும். நேர, காலம் என்பது கவனத்தில் கொள்ளப்படாது.
அதுபோன்று தான் வாகனக் கூட்டம் அஸர் நேரத்தில் வந்து சாட்சி சொன்ன காரணத்தினால் மறுநாள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக மக்கள் ஒன்றுபட்டுச் செய்ய முடியாது என்பதுதான் இங்கு அடிப்படையான மையக் கரு ஆகும்.
ஜும்ஆ தொழுகை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை தான். அந்த ஜும்ஆ தவறிவிட்டால் லுஹராகத் தொழுது கொள்ளலாம்.
மற்ற எந்த ஒரு பர்லான, சுன்னத்தான தொழுகைகளையும் தூக்கம், மறதி, நிர்பந்தம் போன்ற காரணங்களினால் நேரம் தவறி விடும் என்றால் முடியும் நேரத்தில் உடனே தொழுதுவிட வேண்டும் என்றுதான் மார்க்கம் வழிகாட்டுகிறது.
சுபுஹின் முன்சுன்னத்தைக் கூட தவறும் போது அதன் நேரத்தை விடுத்து சுபுஹுக்குப் பின்னர் தொழுது கொள்வதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூட சில நாட்களில் சுன்னத்தான தொழுகைகளை, குறித்த நேரத்தில் தொழ முடியாத போது மற்ற நேரங்களில் தொழுதுள்ளார்கள்.
ஏன்? எக்காரணமும் இல்லாமல் வாழ்நாளில் ஒரு தடவை உள்ளூரில் இருக்கும் போது லுஹரையும், அஸரையும், அதுபோன்று மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள்.
இப்படியெல்லாம் செய்து காட்டிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை தவறிவிட்டால் வேறு நேரங்களில் தொழலாம் என வழிகாட்டாமல் அடுத்த நாள் அதற்குரிய நேரத்தில் தொழச் சொல்வதன் காரணம் என்ன? என்பதைச் சிந்தித்தாலே, தகவல் எந்நேரத்தில் வருகிறது என்பதை வைத்து முடிவு செய்வதல்ல. மாறாக தகவல் எந்நேரத்தில் வந்தாலும் மக்கள் ஒன்று கூடுவதில் சிரமம் ஏற்படுமென்றால் தாமதப் படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் மையக் கரு ஆகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதிகாலை நேரத்தில் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய பிரகாரம் பெருநாள் தொழுகைக்குரிய நேரத்தில், திடலில், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இயலுமென்றால் தொழுவதில் தவறில்லை.
மக்ரிப் நேரத்திலேயே பிறை பார்க்கப்பட்டாலும் பெருநாள் தொழுகைக்குரிய நேரத்தில், திடலில், பெண்கள் உட்பட அனைவரும் ஒன்று கூடக்கூடிய வகையிலே நிறைவேற்ற முடியாத நிலை இருந்தால் ஒரு நாள் தாமதிக்கலாம் என்பதும் நபிவழியே.
மக்களுக்குச் சிரமம் என்பதை, தனிநபர்களை விட மக்களின் பொறுப்புதாரிகளே தீர்மானிக்க இயலும்.
தவ்ஹீத் ஜமாஅத் எந்த மக்களுக்குப் பொறுப்புதாரியாக உள்ளதோ, அம்மக்களின் சிரமத்தைக் கவனத்தில் கொண்டே நபிவழி அடிப்படையில் முடிவெடுத்து அறிவித்தது. இதில் அறியாமை விமர்சனங்கள் எள்ளளவும் எம்மைப் பாதிக்காது.
நம்முடைய நிலைப்பாடு இறையச்சத்தின் அடிப்படையில் நபிவழிக்கு உட்பட்டு இருக்கும் போது இதற்கு எதிராக எத்தனை பேர் பழித்தாலும், அவதூறு கூறினாலும் இறையச்சவாதிகளிடம் அவற்றிற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதே உண்மையாகும்.
————————————————————————————————————————————————–
புகாரியின் மூலப் பிரதி குறித்த விமர்சனங்களும் விளக்கங்களும்
எம்.ஐ.சுலைமான்
நபிமொழிகளின் மீதும் அதைத் தொகுத்தவர்கள் மீதும் பல காலங்களாகக் கடும் விமர்சனங்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் வைக்கப்பட்டு வந்துள்ளது. அல்லாஹ்வின் பேரருளால் அந்தந்தக் கால அறிஞர்கள் அறிவுப்பூர்வமாகவும் ஆதாரத்துடனும் அதை உடைத்தெறிந்து வந்துள்ளனர்.
இதில் முக்கியமாக, ஸஹீஹுல் புகாரியில் இடம்பெறும் செய்திகளின் நம்பகத்தன்மையில் இதுபோன்ற ஐயத்தை ஏற்படுத்துவர்கள் குறிப்பாக ஷியாக்கள் ஆவர்.
புகாரியின் அறிவிப்புகள் நம்பகத்தன்மை அற்றவை என்றும், அதற்குரிய ஆதாரமாக புகாரி இமாம் எழுதிய மூலப்பிரதி தற்போது கிடையாது என்றும் வாதிடுகின்றனர்.
தற்போது உள்ள புகாரி பிற்காலத்தில் உள்ளவர்களால் எழுதப்பட்டது என்றும் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனம் சரியா என்பதைக் காண்போம்.
மூலப்பிரதி
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பான்மையான நூல்களின் மூலப்பிரதிகள் தற்போது எங்கும் கிடைப்பதில்லை. அதனால் அந்த நூல்கள் பொய்யானவை என்று சொல்லிவிட முடியாது. யாரும் இந்தக் காரணத்தை வைத்து இவ்வாறு சொல்லவும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்த கால சூழ்நிலை அப்படி!
எழுது கோல், எழுதுவதற்குரிய பேப்பர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. முக்கியமாக, அதைப் பாதுகாப்பதற்குரிய வசதிகள் இல்லை. இதனால் பெரும்பாலான நூல்களின் மூலப் பிரதிகள் கிடைப்பதில்லை.
எனவே அந்தக் காலங்களில் செய்திகளை மனன முறையில் தான் பாதுகாத்து வந்துள்ளனர். திருக்குர்ஆனைக் கூட அல்லாஹ் இவ்வாறுதான் பாதுகாப்பதாகச் சொல்கிறான்.
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.
(அல்குர்ஆன் 29:49)
அன்றைய காலத்தில் ஒரு ஆசிரியரிடம் பாடம் பயிலும் மாணவர், ஆசிரியர் சொல்லும் செய்திகளை மனனம் செய்து கொள்வார். அதைச் சரிபார்க்க மாணவர் மனனமிட்டதை ஆசிரியரிடம் சொல்லிக் காட்டுவார். அதை ஆசிரியர் சரி பார்ப்பார். அல்லது ஆசிரியர் அந்த செய்திகளைச் சொல்வார். அதை மாணவர் சரியா என கவனிப்பார். ஒரு சிலர் எழுதியும் கொள்வர்.
அன்றைய காலத்தில் எழுத்து வடிவங்கள் ஒழுங்குற அமையாததாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதுவதாலும் எழுத்து வடிங்களில் பாதுகாப்பது சிரமமாக இருந்தது.
ஒரு ஆசிரியரின் நூலிலிருந்து ஒருவர் செய்திகளை அறிவித்தால் அவர் அந்த ஆசிரியரின் எழுத்து வடிவங்களை அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது விதி.
تدريب الراوي – (2 / 57(
) ثم يكفي ) في الرواية بالكتابة ( معرفته ) أي المكتوب له ( خط الكاتب(
எழுதிக் கொள்பவர் எழுதியவரின் எழுத்துமுறை அறிந்திருக்க வேண்டும்.
(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 2, பக்கம் 57))
எழுத்து வடிவங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிந்திருந்ததால் தான் இந்த விதியை அறிஞர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய காலத்தின் வழிமுறைகள் பெரும்பாலும் மனனம் மூலமே வந்துள்ளது. நாளடைவில் எழுத்து வடிவிலும் நூல்கள் உருப்பெற்றன.
எனவே மனன முறையில் ஆதாரப்பூர்வமான நபர்கள் மூலம் வந்திருந்தால் அதையும் நாம் ஏற்கலாம்.
புகாரி இமாம் எழுதி வைத்திருந்தார்களா?
இமாம் புகாரி அவர்கள் ஸஹீஹுல் புகாரி என்ற நூலை எழுதித்தான் வைத்திருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த புகாரியைத் தன் மாணவர்களுக்கும் அதை மனனம் செய்ய வைத்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமான மாணவர்கள் ஸஹீஹுல் புகாரியைப் படித்தும் உள்ளனர்.
تاريخ بغداد – (2 / 9)
أخبرنا القاضي أبو بكر احمد بن الحسن الحيري بنيسابور قال سمعت أبا إسحاق إبراهيم بن احمد الفقيه البلخي يقول سمعت أبا العباس احمد بن عبد الله الصفار البلخي يقول سمعت أبا إسحاق المستملى يروى عن محمد بن يوسف الفربري انه كان يقول سمع كتاب الصحيح لمحمد بن إسماعيل تسعون ألف رجل
ஸஹீஹுல் புகாரியை, இமாம் புகாரியிடமிருந்து செவியுற்றவர்கள் 90,000 நபர்கள் என்று புகாரியின் இமாமின் முக்கிய மாணவரான முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ குறிப்பிடுகிறார்.
(நூல்: தாரீக் பக்தாத், பாகம் 2, பக்கம் 9)
முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ என்ற மாணவரிடத்தில் இமாம் புகாரியின் அசல் பிரதி இருந்துள்ளது.
التعديل والتجريح , لمن خرج له البخاري في الجامع الصحيح ـ تح أحمد لبزار – (1 / 287)
وقد أخبرنا أبو ذر عبد بن أحمد الهروي الحافظ رحمه الله حدثنا أبو إسحاق المستملي إبراهيم بن أحمد قال انتسخت كتاب البخاري من أصله كان عند محمد بن يوسف الفربري فرأيته لم يتم بعد وقد بقيت عليه مواضع مبيضة كثيرة منها تراجم لم يثبت بعدها شيئا ومنها أحاديث لم يترجم عليها فأضفنا بعض ذلك إلى بعض
முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ அவர்களிடம் இருந்த புகாரியின் அசல் பிரதியிலிருந்து நான் நகல் எடுத்தேன். அதில் பல இடங்களில் வெண்மையாக (ஒன்றும் குறிப்பிடாமல் இருந்தது) சில இடத்தில் தலைப்பிட்டிருந்தது. அதற்குப் பிறகு எந்த ஒரு செய்தியும் இல்லை. சில ஹதீஸ்கள் இருந்தன. அதற்கு எந்தத் தலைப்பும் குறிப்பிடாமல் இருந்து. எனவே நாங்கள் சிலதை சிலதுடன் இணைத்துக் கொண்டோம் என்று அபூஇஸ்ஹாக் அல்முஸ்தம்லீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அத்தஃதீல் வத்தஜ்ரீஹ்,
பாகம் 1, பக்கம் 287)
புகாரியை அறிவித்தவர்கள்
ஸஹீஹுல் புகாரி ஹதீஸை இமாம் புகாரி யிடமிருந்து செவியுற்று, ஆறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வுலகத்திற்கு அறிவித்துள்ளார்கள்.
الفتح – (1 / 492)
وذكر الفربري أنه سمعه منه تسعون ألفا وأنه لم يبق من يرويه غيره وأطلق ذلك بناء على ما في علمه وقد تأخر بعده بتسع سنين أبو طلحة منصور بن محمد بن علي بن قريبة البزدوي وكانت وفاته سنة تسع وعشرين وثلمائة ذكر ذلك من كونه روى الجامع الصحيح عن البخاري أبو نصر بن ماكولا وغيره ومن رواة الجامع أيضا ممن اتصلت لنا روايته بالإجازة إبراهيم بن معقل النسفي وفاته منه قطعة من آخره رواها بالإجازة وكذلك حماد بن شاكر النسويஞ் ذكره الخليلي في الإرشاد وأن مهيب بن سليم رواه عنه
புகாரி இமாமிடமிருந்து ஸஹீஹுல் புகாரி ஹதீஸை அறிவித்தவர்கள் அல்ஃபரப்ரீ, அபூதல்ஹா மன்சூர் பின் முஹம்மத் பின் அலீ அல்பஸ்தவீ, இப்ராஹீம் பின் மஃகில் அந்நஸஃபீ, ஹம்மாத் பின் ஸாகிர், மஹீப் பின் சுலைம் ஆகியோர்.
(கருத்து – பத்ஹுல்பாரி முன்னுரை,
பாகம் 1, பக்கம் 492)
سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] – (23 / 390)
وَقَالَ مُحَمَّدُ بنُ طَاهِرٍ المَقْدِسِيُّ: رَوَى (صَحِيْحَ) البُخَارِيِّ جَمَاعَةٌ، مِنْهُم: الفرَبْرِيُّ، وَحَمَّادُ بنُ شَاكِرٍ، وَإِبْرَاهِيْمُ بنَ مَعْقِلٍ، وَطَاهرُ بنُ مُحَمَّدِ بنِ مَخْلَدٍ النَّسَفِيَان.
ஸஹீஹுல் புகாரியை அறிவித்தவர்கள் ஒரு கூட்டத்தினர். அவர்களில் அல்ஃபரப்ரீ, ஹம்மாத் பின் ஷாக்கிர், இப்ராஹீம் பின் மஃகில், தாஹிர் முஹம்மத் பின் முகல்லத் ஆகியோரும் அடங்குவர்.
(நூல்: ஸியரு அஃலாமுந் நுபலா,
பாகம் 23, பக்கம் 390)
புகாரியை அறிவித்தவர்களில் முக்கியமான ஆறு நபர்கள் இவர்கள்தான்.
- முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபரப்ரீ
- இப்ராஹீம் பின் மஃகில் அந்நஸஃபீ
- ஹம்மாத் பின் ஸாகிர்
- தாஹிர் பின் முஹம்மத் பின் முகல்லத் அந்நஸஃபீ
- அபூதல்ஹா மன்சூர் பின் முஹம்மத் பின் அலீ அல்பஸ்தவீ
- மஹீப் பின் சுலைம்
இவர்களிடமிருந்து அவர்களின் ஏராளமான மாணவர்கள் புகாரியை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது இமாம் புகாரியின் மூலப்பிரதி இல்லாவிட்டாலும் அவர்களின் நூல்களிலிருந்து பிரதி எடுத்தவர்கள், அவர்களிடம் மனனம் செய்து எழுதியவர்களின் மூலப்பிரதிகள் உள்ளன.
அறிவிப்பில் உள்ள குறை நிறைகள்
புகாரி இமாமிடமிருந்து அறிவித்த மாணவர்களின் பிரதிகளில் சில கூடுதல் குறைவான செய்திகளும், வாசக மாற்றங்களும் இருந்துள்ளன. இவை மிகக் குறைவானதே. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதுபற்றி விரிவாக இன்ஷா அல்லாஹ் வரும் தொடரில் விளக்குவோம்.
————————————————————————————————————————————————–
கேள்வி பதில்
கேள்வி
சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றுகின்றேன். எங்கள் நிறுவனத்தில் புதிதாக Health care, Life Insurance and Banking Finance சம்பந்தபட்ட சாஃப்ட்வேர் செய்யும் பணியை எனக்கு ஒதுக்கியுள்ளார்கள். இந்தப் பணியை நான் செய்யலாமா?
அபு நிஸ்மான் (இராமநாதபுரம்)
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
நீங்கள் தயாரிக்கும் மென்பொருள் வட்டித் தொழிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால் அதை நீங்கள் செய்துகொடுப்பது கூடாது.
உங்கள் மென்பொருள் மார்க்கம் அனுமதித்த இன்னும் பல விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக, பொதுவானதாக இருந்தால் அதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். உங்களிடமிருந்து இதை வாங்கியவர்கள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அதனால் உங்கள் மீது எந்த குற்றமும் ஏற்படாது.
உதாரணமாக, வங்கிகளுக்கு பீரோக்கள், ஸ்டேஸனரி பொருட்கள், டேபிள்கள், சேர்கள் விற்பனை செய்வது குற்றமாகாது. ஏனெனில் ஹலாலான பொருளைத் தான் அவர் விற்பனை செய்கிறார்.
நாம் விற்பனை செய்யும் பொருட்கள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கும் வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தினால் நாம் தீமைக்குத் துணை செய்தவராக ஆக மாட்டோம்.
எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது
திருக்குர்ஆன் 5:2
தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார்.
பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர்’ என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை. அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விடச் சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.
ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ, அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார்.
அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.
‘நன்மையான காரியத்துக்கு உதவுதல்’ என்பதில் ‘உதவுதல்’ என்ற பதத்தை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விற்பனை செய்யப் படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.
இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது, வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காகப் பயன்படுத்துவானோ? வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்று நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்று புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.
ஒருவரின் வண்டியில் வாடகை கொடுத்து பயணிப்பவர் எந்த நோக்கத்திற்காகப் பயணிக்கிறார் என்பதை வண்டி ஓட்டுபவர் கவனிக்க வேண்டியதில்லை.
போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.
நூல் : புகாரி : 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது.
நன்மை தீமை ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.
————————————————————————————————————————————————–
இறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்!
எம்.ஷம்சுல்லுஹா
மண்டலங்கள் ஆடி விட்டன; மாவட்டங்கள் கலகலத்து விட்டன; கிளைகள் கலைந்து விட்டன; மர்கஸுகள் காலியாகி, மயானமாகி விட்டன; அனைத்துக்கும் தலைமை தாங்குகின்ற தலைமை தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கின்றது; அதன் விளைவாக நாளொன்றுக்கு ஆளொன்றாக இந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜகாத் வசூல் சரிந்து விட்டது; ஃபித்ரா வசூல் பிசுபிசுத்து விட்டது; தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டு விட்டது; நிர்வாகத் திறமையின்மை; நீர்த்துப் போன நம்பகத்தன்மை; தலைமை பொறுப்பில் அனுபவமில்லாத சிறுவயதினர்; ததஜ உறுப்பினர்கள் ஆட்டு மந்தையினர்.
இவை எல்லாம் என்னவென்கிறீர்கள்? கூடப் பயணித்தவர்கள் கொளுத்தி போடுகிற கொத்து கொத்தான விமர்சனங்கள். தலைமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில், முகநூல் போராளிகளால் முழு நேரத் தொழிலாகப் பரப்பப்படுகின்ற அவதூறுகள். இதில் ஏதேனும் கடுகளவு உண்மை இருக்கின்றதா? என்றால் அதுதான் இல்லை என்பது தான் உண்மை.
இந்த முகநூல் புரளிகளுக்கு ஓர் உதாரணத்தை பார்ப்போம்.
சலீம் என்ற ஒரு குடும்பத் தலைவர். அவரது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக அவருக்கு வேண்டாதவர்கள் ‘சலீமுக்கு வாதம் அடித்து விட்டது; நாக்கு வெளியே தள்ளி விட்டது; நடமாட முடியாமல் முடங்கி விட்டார்; மூச்சு இழுத்துக் கொண்டிருக்கின்றது; பேச்சு நின்று விட்டது; இன்றோ நாளையோ இறந்து விடுவார்’ என்று முகநூலில் பதிவு செய்கின்றார்கள்.
இதைப் பார்த்து விட்டு வெளிநாடுகளில், வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் அலறுகின்றார்கள். ஆனால் ஊரில் உள்ளவர்கள் இந்தச் செய்திகளைப் பார்த்து விட்டு அலட்சியம் செய்கின்றார்கள். இவை முகநூல் போராளிகள் பின்னுகின்ற பிம்பங்கள், பிதற்றல்கள் என்று புறந்தள்ளுகின்றார்கள். காரணம் என்ன?
சலீம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகின்றார். வீட்டு வேலைகளை நன்கு கவனித்துக் கொண்டு தனது வியாபாரத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றார். நல்ல விதமாக நடமாடிக் கொண்டிருக்கின்றார். அதனால் தான் ஊரில் உள்ள மக்கள் இந்த முகநூல் செய்திகளைப் பார்த்து அவர்கள் ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்.
இதுபோன்று தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றிய மேற்கண்ட விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன.
ஜமாஅத்தின் அன்றாட அலுவல்கள் அதன்பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. அழைப்புப் பணிகள் அதன் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றன.
அதே சமயம், மண்டலங்களில் சிலர் சலனங்களை ஏற்படுத்தியது உண்மை என்றாலும் அது உடனடியாக சரி செய்யப்படுகின்றது.
மாவட்டங்களில் சில சலசலப்புகள் ஏற்பட்டதும் உண்மை தான். மாநில செயற்குழு அந்தச் சலனங்களையும் சலசலப்புகளையும் சரி செய்து சீர்படுத்துகின்றது. உண்மை விளக்கத்தை உள்ளது உள்ளபடி தலைமை போட்டு உடைக்கின்றது. உறுத்தலோடு வந்த சில உறுப்பினர்கள் உள திருப்தியோடு சென்றனர். உண்மையை விளங்கிய அவர்கள், கண் கலங்கிய மாநில நிர்வாகத்துடன் சேர்ந்து அவர்களும் கண் கலங்கினர்.
இது உண்மைக்குக் கிடைத்த பரிசு என்று தலைமை இதை உணர்கின்றது. அத்தனை உறுப்பினர்களும் தலைமையின் உண்மை நிலையை உள்வாங்கிக் கொள்கின்றார்கள்.
இதன் பிறகு மாவட்ட செயற்குழுக்கள் நடத்தப்பட்டு கிளைகளில் ஏற்பட்ட ஐயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.
பி.ஜே. என்ற பெருந்தலை உருண்டதில் ஒரு புயல் உருவாவது இயற்கையே. இப்போது புயலுக்குப் பின்னே அமைதி நிலவுகின்றது. ஜமாஅத் அடுத்தக் கட்ட நகர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதனால், ஃபித்ரா வசூலில் எந்தப் பின்னடைவும் இல்லை.
ஏழைக்கு போய்ச் சேர வேண்டிய இந்த ஃபித்ரா வந்து விடக் கூடாது; அது ஏழைக்குப் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தான் வெளியே சென்றவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி. இத்தனை ஃபித்னாக்களையும் தாண்டி ஃபித்ரா வசூல் எப்போதையும் போன்ற இலக்கத்தையும் இலக்கையும் எட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.
தடைப்பட்டு விட்டதா தவ்ஹீது வளர்ச்சி?
முகநூல் போராளிகள் முகநூலில் முகங்காட்டியும் முகங்காட்டாமலும் அள்ளி விட்ட சரடுகள், அவிழ்த்து விட்ட பொய்கள் அத்தனையையும் தாண்டி ஜகாத் வசூல்களும் சாதாரணமாக வந்து சேர்ந்தன. அதிலும் சரிவில்லை.
ரமலான் மாத இரவுத் தொழுகைகளில் எந்தவிதத் தொய்வும் தேய்வும் இல்லை. மர்கஸ்கள் மயானமாகவில்லை. மாறாக மக்கள் நிரம்பி வழிகின்ற தியானக் கூடங்களாகவே விளங்கின. இடப் பற்றாக்குறை தான் பெரும் குறை என்றானது.
பெருநாள் திடல் தொழுகைகளில் மக்கள் வெள்ளம் அதே அளவில் இன்னும் சொல்லப் போனால் வழக்கத்தை விட அதிகமான அளவில் பெருக்கெடுத்து ஓடியது.
எண்ணிக்கை அதிகம் இருந்தால் அல்லாஹ்வின் அருள் என்றும், எண்ணிக்கை குறைந்து விட்டால் அது அவனது சாபம்; இழிவு என்று ஒரு போதும் இந்த ஜமாஅத் முடிவு செய்யாது.
காரணம் விலகிச் சென்றவர்கள் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகத்திற்கு ஒரு சிறிய தலை வலி வந்தாலும் அல்லாஹ்வின் சாபம், இழிவு என்று தெரிவிக்கினறனர். இதன் மூலம் மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுகின்றனர் என்பதை விளக்குவதற்கு இடையே இந்தக் கருத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.
கூட்டம் குறைந்துவிட்டது, ஜமாஅத் அழிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணிக்கையை ஆதாரமாகக் காட்டிப் பொய்யைப் பரப்பும் போது, நாம் உண்மை நிலையை எடுத்துக்காட்டி விளக்குவது நம்மீது கடமை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
அண்மையில், மேலப்பாளையத்தில் ஜனாஸா அடக்கத் தடை மறு அவதாரம் எடுத்திருக்கின்றது. இதுவரையில் இங்கு பெரிய அளவில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டதில்லை. இப்போது அது ஏற்பட்டதற்குக் காரணம், ‘‘பீஜேவே போய் விட்டான், நீங்க என்னலே இதை தூக்கிக் கொண்டு அலையுறீங்க’’ என்று அவர்கள் திருநெல்வேலி தமிழில் எழுப்புகின்ற அந்தக் கேள்வியிலிருந்து பிரச்சனையின் மையக் கருவை விளங்க முடிந்தது.
மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளி முஹல்லாவில் நபிவழியில் தொழுகை நடத்தி அடக்குவதற்கு இதுவரையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த முஹல்லாவிலும் அடக்கத் தல மறுப்புப் பிரச்சனையைக் கிளப்புகின்றார்கள். இதன் மூலம் தவ்ஹீது ஜமாஅத்தின் நாடி பிடித்துப் பார்க்கின்றார்கள்.
இப்போது அடக்கத்தல மறுப்பு, அடுத்து திருமணம், தெருக்களில் நடைபெறுகின்ற பெண்கள் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் என்று தவ்ஹீதுக் கொள்கையை அடக்குவதற்கும் புதைகுழியில் போட்டுப் புதைப்பதற்கும் இதை அஸ்திரமாகவும் அஸ்திவாரமாகவும் ஆக்க நினைக்கின்றார்கள் என்பதை தவ்ஹீது ஜமாஅத் புரிந்துக் கொண்டது.
அதனால் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மையவாடியில் பூட்டை உடைத்துக் கொண்டு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு வந்தது. அந்த அடக்கத்தின் போது சிறிய தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன. காவல்துறை இருதரப்பிலும் வழக்குகள் பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், என் மீதும், மாநிலச் செயலாளர் செய்யது அலி, மாவட்டத் தலைவர் ஜுபைர் அஹ்மத், பொருளாளர் முஹைதீன் உட்பட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்யும் நிலையில் இருந்தது. அதனால் அவர்கள் அனைவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் எடுக்க நேர்ந்தது.
பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை. அடக்கம் செய்த மறுநாள் நள்ளிரவு மாவட்டத் தலைவர் ஜுபைர் அஹ்மது அவர்கள் விற்பனைக்காக தனது அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தியிருந்த 3 கார்கள் எதிரிகளால் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளது என்று இந்த முகநூல் போராளிகள் முராரி ராகம் பாடுகின்றார்களே, அது அத்தனையும் பொய் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.
உடல் நலம் நன்றாக உள்ள ஒரு மனிதரை முகநூல் போராளிகள் நொடிந்து கிடக்கும் நோயாளியாக்கிய அதே பிம்பமும் பிதற்றலும் தான் ஜமாஅத் விஷயத்தில் எட்டி, எகிறிக் குதிக்கின்றதே தவிர ஜமாஅத் தனது நேர்முகப் பிரச்சாரக் களத்தில் அசுர பலத்தில் அச்சமின்றி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.
அனுபவமில்லாத தலைமையா?
முகநூல் போராளிகள் மாநிலத் தலைமையை நோக்கி வைக்கின்ற அடுத்தக் குற்றச்சாட்டு பலவீனமான தலைமை! அனுபவமில்லாதவர்களின் தலைமை!! இது பற்றி இப்போது பார்ப்போம்:
ஒரு முப்பது வயதுள்ள ஓர் இளைஞர் தான் இன்றைய மாநில நிர்வாகத்திற்குத் தலைமை தாங்குகின்றார். ஒப்பிட்டுப் பார்க்கையில் அனுபவமில்லாதவர் தான். அவரைத் தூக்கி வைத்தவர்கள் தான் இன்று இந்த விமர்சனத்தையும் வைக்கின்றார்கள். ஏற்றுக் கொள்வோம். ஆனால் அவரது தலைமையின் கீழ் ஒரு 36 ஆண்டு கால ஆலமரம் வீழ்த்தப்பட்டுள்ளது. பலவீனமான ஒரு ஜமாஅத், பலமான ஒருவர் மீது இப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?
அதற்கான நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் மை காய்வதற்கு முன்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம் நீக்கப்படுகின்றார். அனுபவமில்லாத தலைமைக்கு இது எப்படி சாத்தியமானது?
இங்கு ஆள்பவர் சிறு வயது இளைஞராக இருக்கலாம். ஆனால் அவரையும் உயர் நிலைக் குழுவினரையும், அனைத்து உறுப்பினர்களையும் ஆள்வது குர்ஆன் ஹதீசும், அதையொட்டி அமைந்த இந்த அமைப்பின் நிர்ணயச் சட்டமும் தான். அதனால் தான் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிகின்றது. இங்கு அனுபவின்மை என்ற பேச்சுக்கு அறவே இடம் இல்லை. சொல்லப்போனால் இந்த ஜமாஅத்தின் ஆளுமையும் அதன் பலமிக்க இறையாண்மையும் இப்போது வெளிப்பட்டிருக்கின்றதே தவிர அதன் பலவீனம் எதுவும் வெளிப்படவில்லை. இதை தான் முகநூல் போராளிகள் தலைகீழாகப் புரட்டிக் காண்பிக்கின்றார்கள்.
இந்த ஜமாஅத்திலிருந்து அன்றாடம் ஆட்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வாதமும் ஓர் அபத்தமாகும். இந்த ஜமாஅத்தை விட்டு யாரும் அப்படி வெளியாகவில்லை என்பது தான் மறுக்க முடியாத மற்றோர் உண்மையாகும்.
இந்த ஜமாஅத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறியவர்கள் எங்கே சென்றார்கள்? பிரிந்து சென்றவர்களிடமா? அப்படியானால் அவர்களிடம் கூட்டம் எகிறியிருக்க வேண்டுமே! எப்படிப் பார்த்தாலும் அந்தப் பக்கம் ஐம்பதைத் தாண்டவில்லையே! ஆனால் நாம் ஏற்கனவே சொன்னது போல நமது இரவுத் தொழுகைகளிலும் பெருநாள் திடல் தொழுகைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததே!
எனவே, இவர்கள் கள யதார்த்தத்தை உணரவில்லை. முகநூல் எனும் மாய உலகில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இவர்களது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் செவி சாய்க்காத போது அவர்களை நோக்கி இவர்கள் ஆட்டுமந்தைகள் என்ற கணைச் சொற்களை அள்ளி வீசுகின்றனர். அதாவது கண் மூடித்தனமாக தக்லீத் செய்கின்றவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
இவர்களின் ஆட்பிடிப்புக்கு ஆட்படாத, அகப்படாத உறுப்பினர்களை இப்படி வசை பாடுகின்றனர்.
உண்மையில், இந்தக் குற்றச்சாட்டிற்கும் இந்த கணைச் சொற்களுக்கும் இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் முற்றிலும் அப்பாற்பட்டவர்கள் ஆவர்கள்.
காரணம், இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் பிஜேவை தக்லீத் செய்பவர்களாக இருந்தால் அவரைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவரது நீக்கத்தை எதிர்த்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அவர் மீது மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர். அவருக்காக வேண்டி எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் ஓர் உறுப்பினர் கூட அவரது நீக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக மனச் சங்கடத்துடன் வரவேற்கவே செய்தனர். தக்லீத், தனிநபர் வழிபாடு இல்லை என்பதை நிரூபித்தனர்.
யார், யாரை தக்லீத் செய்கிறார்கள்?
ஆனால் இதற்கு நேர்மாறாக முகநூல் போராளிகள் அல்தாஃபி விஷயத்தில் ஆட்டு மந்தைகளாக உள்ளனர்.
அவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தது தப்புத் தான்! ஆனால் அவர் தப்பு செய்யவில்லை என்று சொல்லி விட்டார் என்று சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர்.
ஒரு காலத்தில் தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஒருவர் போனில் பேசிய விவகாரம் இந்த ஜமாஅத்தில் பூதாகரமாகப் பார்க்கப்பட்டது. இன்று ஜமாஅத்தை விட்டு வெளியே சென்ற பிறகு, ஒரு பெண்ணுடன் சில மணி நேரங்கள் தனித்திருந்த பாவம் சர்வ சாதாரணமாகப் பார்க்கப்படுகின்றது.
இங்கு தான் இந்த ஜமாஅத்தின் இறையச்சம் பளிச்சென்று தெரிகின்றது. இந்த ஜமாஅத்தில் உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது.
உங்களில் ஒருவர் (அந்நியப்)பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். காரணம் ஷைத்தான் அவர்களுடன் மூன்றாம் நபராக இருக்கின்றான் என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்னத் அஹ்மத் எண்: 114
இந்த ஹதீஸின் படி, பஞ்சுப் பொதியும் பற்றி எரியும் தீயும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தது. ஆனால் பற்றவில்லை என்பது பச்சைப் பொய். அதில் பத்தினி வாதம் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்! அப்படி ஒரு சாத்தியத்தை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.
அப்படி தனித்திருந்து தன்னை தற்காத்துக் கொண்டேன் என்று யாராவது வாதிடுவாரானால் அவர் தன்னை, கற்புக்கரசர் யூசுஃப் நபியை விட உயர்ந்தவர் என்று கற்பனை செய்கின்றார் என்றே அர்த்தம்.
உண்மையாளர், கற்புக்கரசர், பத்தினித்தனத்தின் மறுபதிப்பு என்று போற்றத்தக்க அல்லாஹ்வின் தூதர் சங்கைமிகு யூசுஃப் (அலை) அவர்கள் ஓர் அரசியின் கழுகுப் பிடியிலிருந்து சாக்குப் பை போன்ற தன் சட்டையின் பின்பகுதி கிழிய, தலைதெறிக்கத் தப்பி வந்த பின் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இதோ:
“எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’
அல்குர்ஆன் 12:53
இவை அவர்கள் சந்தித்த அந்தச் சோதனையின் பிம்பத்தையும் பிரமாண்டத்தையும் அப்படியே நம் மனக்கண் முன் பிரதிபலிக்கச் செய்கின்றன. எம்மாபெரிய கற்புக்கரசரும் எவ்வளவு பெரிய அதிபரம யோக்கியரும் ஒழுக்கத்தின் இமயமும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது ஒரு பெண்ணுடனான தனிமைச் சந்திப்பின் போது, அல்லாஹ் காப்பாற்றவில்லை என்றால் பற்றியெரியும் காமத் தீயில் கரிந்து பஸ்மாகி விடுவார்கள் என்பதற்கு அவர்களது வார்த்தைகள் எடுத்துக் காட்டுகளாகும். அதனால் அந்நியப்பெண்ணுடன் தனித்திருந்து விட்டு, தப்பி விட்டேன், தஃவா மட்டுமே செய்தேன் என்பதெல்லாம் கடுகளவும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும்.
இந்த ஜமாஅத்தின் தலைவர் எப்படி இருக்க வேண்டும்?
‘அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.
எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும்.
எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 52
ஒரு தலைவர் என்பவர் இந்த மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு தலைவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இந்த ஜமாஅத்திலிருந்து தூக்கி வீசப்படுவார். இந்த ஜமாஅத்திற்கு இந்த ஆதாரம் போதுமானது.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், பெண்ணுடன் தனித்திருந்தது ஒரு சிறிய பாவமாகவும் பரப்பியது ஒரு கொடூர பாவமாகவும் பார்க்கப் படுவது தான்.
அது போல் இப்படிப்பட்ட தப்பைச் செய்தவர் முபாஹாலாவுக்கு அழைத்தது அதை விடக் கொடிய பாவம்! இத்தகையவர்களுக்கு என்ன இறையச்சமிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகி விட்டது.
இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், முபாஹாலாவுக்கு அழைத்தவர் உத்தமராகவும் சத்திய சீலராகவும் அதற்கு பதில் கொடுக்க வந்தவர்கள் படுபயங்கரமான பாவிகளாகவும் இந்த முகநூல் போராளிகளால் பார்க்கப்படுவது தான்!
இது மாதிரியான கட்டத்தில் அதில் புலனாய்வு, புலன் விசாரணை என்று பூதக்கண்ணாடிப் போட்டுக் கொண்டு உள்ளே புகுந்து, புலனறிவைப் போட்டுக் கசக்க வேண்டிய அவசியம் இந்த ஜமாஅத்திற்கு அறவே தேவையில்லை.
அப்படிப்பட்டவரின் பழைய, பாழாய் போன வரலாறைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமோ, தேவையோ இந்த ஜமாஅத்திற்கு இல்லை.
அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமானால் போதும். அடுத்த நிமிடம் அவர் பதவியை விட்டு அப்புறப்படுத்தப்படுவார். மேலும் அவர், ஒரு காலத்துக்கும் இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்பதை தனது அமைப்புச் சட்டத்தின் ஒரு விதியாக இந்த ஜமாஅத் ஆக்கி விட்டது. இப்படி ஒரு சட்டத்தை வகுக்க அடித்தளமாக அமைந்தது அல்குர்ஆன் தான்.
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணை களிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 25:74
அதனால் இந்த ஜமாஅத் நெஞ்சு நிமிர்த்தி, இது இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடி ஜமாஅத் என்று அடித்துச் சொல்கின்றது.
————————————————————————————————————————————————–
பயனுள்ள கல்வியை வேண்டுவோம்
ஆஃப்ரின் சிதிரா
மனிதன் இணைந்திருக்கக் கூடிய குடும்பம், வணிகம், அரசியல் என எந்த ஒரு துறையையும் விட்டு வைக்காமல் நமது மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் மனித வாழ்வில் இன்றியமையாததாய் இருக்கக் கூடிய கல்வித் துறை குறித்தும் அதிகம் போதிக்கின்றது.
இஸ்லாம் அல்லாத இன்னபிற மதங்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவது மட்டுமல்லாமல், தாழ்ந்த சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நமது அருள்மறையோ உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என்ற சித்தாந்தத்தை அதிகமதிகம் வலியுறுத்தி அறிவுக் கண்ணைத் திறந்து விடுகின்றது.
கல்விக்காகப் பயணம் மேற்கொள்ளுதல்
அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும்.
அல்குர்ஆன் 22:46
அறிவாளிகள் தான் அருள் மறையை அறியமுடியும்
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.
அல்குர்ஆன் 29:49
கல்வியாளர்களின் சிறப்பு
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 58:11
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
அல்குர்ஆன் 39:9
இவ்வாறு திருக்குர்ஆன் கல்விக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்வதற்கு வழிகாட்டுவதுடன், கல்வியாளர்களே சிறந்தவர்கள் என்று கூறி, கல்விக்கு ஆர்வமூட்டி அதன்பக்கம் நம்மை அழைத்துச் செல்கின்றது.
இல்லாம் வலியுறுத்தும் இக்கல்வியைப் பற்றிய தற்போதைய நிலை என்ன? அதற்கான இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதைக் காண்போம்.
பெற்றோர்களின் பார்வையில் கல்வி
வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும், அதில் ஏற்படும் பிரச்சனைகளைப் போராடி வெல்வதற்கும் உரிய அறிவையும் ஆற்றலையும் தரக்கூடிய ஆயுதமாகக் கல்வி இருக்கின்றது.
தமது குழந்தைகளின் வாழ்விற்கு முழுப் பொறுப்பேற்றிருக்கும் பெற்றோர்கள், வாழ்வின் அஸ்திவாரமாக இருக்கும் கல்வி, தரமாக அமைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடும் எதிர்பார்ப்பும் கொள்கின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே தமது குழந்தையை டாக்டராக்க வேண்டும், கலெக்டராக்க வேண்டும் என்று எண்ண அலைகளை ஓட விடுவது இதன் வெளிப்பாடு தான்.
மழலையர்களுக்கு, கல்வி என்றால் என்னவென்பது கூட அறியாமல் பள்ளிக்கூட வாசலில் காலடி எடுத்து வைக்கும் அந்தத் தருணத்திலேயே, எந்தப் பள்ளியில் குழந்தையைச் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்கும்? இதுவா? அதுவா? என பல வகைகளில் அலைந்து திரிந்து, நண்பர்கள், உறவுகளிடம் விசாரித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.
பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் எந்தக் கல்வி நிறுவனம் அதிக வாக்குகள் வாங்குகின்றதோ அதைத் தேர்வு செய்து அங்கே சீட் வாங்குவதற்காக நாயாய் பேயாய் அலைந்து திரிந்து, லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். போதிய பணம் இல்லையென்றால் வட்டிக்கு வாங்கியாவது பணத்தைக் கட்டி ஒருவழியாகப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டு, சாதித்து விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஆக, பெற்றோரின் பார்வையில் சிறப்பான கல்வி என்பது ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் பட்டியலைக் காட்டக் கூடிய, மக்களிடத்தில் பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களில் தான் கிடைக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.
சிறந்த கல்வி எது?
குழந்தைகளின் அறிவுச் சுடர் தீட்டக்கூடிய கல்வி என்பது இன்றைய காலத்தில் ஒரு வியாபாரமாகவே மாறி நிற்கின்றது. தம்மால் இயன்றவரை பணத்தை வாரிச் சுருட்டிக் கொள்வதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொள்கின்றன. இந்தப் போட்டியை குழந்தைகளின் அறிவை மேம்படுத்துவதில், சிந்தனையைக் கூர் தீர்ட்டுவதில் காட்டுகின்றனவா என்று பார்த்தால் அது கேள்விக் குறியாகத் தான் இருக்கின்றது.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களது நிறுவனத்தை சிறப்பாகக் காண்பிப்பதற்காக, கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென அதிகக் கவனம் செலுத்தி, பயிற்சி கொடுத்து அவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கின்றனர். அந்த மாணவர்களின் பட்டியலைக் காட்டி தங்கள் பள்ளியின் பெயரைப் பிரபலப்படுத்துகின்றனர்.
ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக கண்கவர் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதைப் போன்றே கல்வி எனும் பொருளை விற்பனை செய்வதற்காக இந்த யுக்தியைக் கையாளுகின்றனர். அரசாங்கம் என்ன தான் சட்டம் போட்டு இதைத் தடுத்தாலும் அதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் படிப்பில் கீழ் நிலையில் உள்ள மாணவர்கள் மேலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களை யாரும் ஊக்குவிப்பதில்லை. ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப் படிப்பு வரையிலும் இதே நிலை தான்.
புத்தகத்திலுள்ளதை வாசித்து விட்டு, அதில் குறிப்பிட்ட சிலவற்றைக் குறித்துக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்ய வைத்து ஒப்பிக்கச் சொல்வது, அதிலிருந்தே ஒரு தேர்வை நடத்தி மதிப்பெண் வழங்குவது இது தான் இன்றைய கல்வி முறையாக உள்ளது. குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதமான கல்வியாக இல்லாமல் வெறும் மனப்பாடத்தை மட்டும் நம்பி, மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வியாக உள்ளது. இதைப் போன்ற பல கோளாறுகள் நமது கல்வி முறையில் உள்ளதைக் கல்வியாளர்கள் அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர்.
சிந்தனையைத் தூண்டும் சிறந்த கல்வி
எல்.கே.ஜி. முதற்கொண்டே குழந்தைகள் அதிகம் படித்து மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களது வயதை மீறிய சுமைகள் கொடுக்கப்படுகின்றன. பொதி சுமக்கும் கழுதையைப் போன்று ஒவ்வொரு குழந்தையும் புத்தக மூட்டையைச் சுமக்கின்றன.
அதிகப்படியான கல்வி அவர்களின் அறிவை வளர்த்துள்ளதா? ஆர்வத்தைத் தூண்டியுள்ளதா? என்றால் இல்லை. மாறாக சலிப்பைத் தான் தந்துள்ளது. ஆசிரியர் என்ன பாடம் நடத்தினார் என்று கேட்டால், யாருக்குத் தெரியும் என்று அங்கலாய்ப்பதைப் பார்க்கிறோம். நாமும் இதுபோன்ற ஒரு நிலையைக் கடந்து தான் வந்திருக்கிறோம். கனியாய் இனிக்க வேண்டிய கல்வி கசந்து போனதன் காரணம் என்ன? அறிவுக்கு வேலை இல்லாமல் போனது தான்.
அறிவுத் திறன் வளர்வதற்கு என்ன வழி? ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே அறிவுத் திறனில் போட்டி ஏற்படும் வகையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டும் விதமாகக் கேள்வி எழுப்பி, அறிவுக் கூர்மைக்கு விருந்தளித்து விடை காணல் வேண்டும். இதைத் தான் அறிவின் ஊற்றாய் இருக்கும் அருள்மறை போதிக்கின்றது.
மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்! நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம். பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம். உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் 80:24-32
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
அல்குர்ஆன் 88:17-19
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறையும் அவ்வாறே இருந்தது.
‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘பேரீச்சை மரம்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 61
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம். அடுத்து இது ‘எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து ‘(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்’ என்று கூறிவிட்டு ‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்’ என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
புகாரி 67
படித்த எத்தனையோ நபர்களைக் காட்டிலும் படிக்காதவர்கள் மேதைகளாக இருக்கின்றனர். பல பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்கின்றனர். சாதாரண கூட்டல் கணக்கிற்குக் கூட படித்தவர்கள் பேப்பரையும் பேனாவையும் தேடுவார்கள்.
96ஐயும் 36ஐயும் கூட்டினால் என்ன வரும் என்று படித்தவர்களிடம் கேட்டால் கால்குலேட்டரையோ அல்லது பேப்பர் பேனாவையோ எடுத்து கணக்குப் பார்ப்பார்கள். அல்லது குறைந்தபட்சம் கைவிரல்களையாவது பயன்படுத்திக் கூட்டுவார்கள். ஆனால் படிக்காதவர்களிடம் கேட்டால் மறுகணமே 132 என்று பதில் சொல்லி விடுவார்கள். ஏனெனில் இவர்கள் ஏட்டுக் கல்வியைப் படிக்கவில்லை. அனுபவ ரீதியான, உணர்வுப்பூர்வமான கல்வியைப் பயின்றுள்ளார்கள். எனவே சிந்தனையைத் தூண்டும் கல்வியே சிறந்த கல்வியாகும்.
கல்வியின் முதற்படி
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் முதன்மையானது அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றியது தான். ஏனெனில் இறைவனைப் பற்றிய அறிவு ஒருவருக்குக் கிடைத்து விட்டால் அவரது உள்ளத்தில் இறையச்சம் நிறைந்து விடும்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
அல்குர்ஆன் 35:28
எனவே நமது குழந்தைகளுக்கு வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காமல், மதிப்பெண்களை மட்டுமே நாளைய வெற்றியின் நோக்கமாகக் கொள்ளாமல் இறையச்சத்தை ஏற்படுத்தும் விதமான கல்வியையும் இஸ்லாம் கூறும் அடிப்படையில் கற்றுத் தர வேண்டும்.
ஆசிரியர்களையும், பள்ளிப் பாடத்தையும் மட்டும் நம்பியிராமல் நடைமுறை ரீதியிலான சிந்தனைகளைத் தூண்டும் விதமான கல்வியை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்கள் செய்யத் தவறியதை, அறிவுக்கு வேலை தரும் வேலையை நம்மால் இயன்ற வரை நாம் செய்ய வேண்டும். அத்துடன் இறைவனின் ஆற்றலையும் படைப்புகளின் அற்புதங்களையும் சொல்லிக் கொடுக்க ஒருபோதும் தவறிவிடக் கூடாது.
லுக்மான் தமது மகனுக்கு வழங்கிய அறிவுரையை இறைவன் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
“நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்‘’ (என்றும் அறிவுரை கூறினார்).
அல்குர்ஆன் 31:16-19
இறைவனின் ஆற்றலை முழுமையாக அறிந்து உணர்ந்தால் மட்டுமே தவறிலிருந்து ஒருவர் தவிர்ந்திருக்க முடியும். அத்தகைய கல்வியை நமது குழந்தைக்கு நாம் போதிக்க வேண்டும். அதுவே நமது குழந்தைகளைப் பண்படையச் செய்யும். அதுவே இம்மை, மறுமையில் வெற்றியைத் தரும் பயனுள்ள கல்வியாக அமையும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 3358
படித்த பட்டதாரிகளும், படிக்கும் மாணவர்களும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைக்கு அடிமையாதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது கல்வி பயனற்றுப் போனதே முக்கியக் காரணம்.
பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்பு தேடுவோம்
வருங்காலத்தைச் சீர்படுத்தக் கூடிய கல்வி என்பது நமது குழந்தைக்கும் பயனுள்ளதாக அமைந்து, அதன் மூலம் பிறருக்கும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். அப்படி அமைவதற்காக, பயனற்ற கல்வியை விட்டும் படைத்தவனிடம் நாள்தோறும் பாதுகாப்புத் தேட வேண்டும்.
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனை யிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப் படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.
இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்தி லிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
நூல்: முஸ்லிம் 5266
————————————————————————————————————————————————–
ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?
M.A. அப்துர்ரஹ்மான்
அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும் போவதுமாக இருந்து வருவதைப் பார்க்கின்றோம்.
அதே சமயம் முஸ்லிம்களில் சிலரிடம், அற்புதமான புனிதம் நிறைந்த ரமலான் மாதம், அருள் பொங்கும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம், நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவி சுத்தப்படுத்த வந்த ரமலான் மாதம் நம்மை விட்டும் இவ்வளவு அவசரகதியாகப் பிரிந்து சென்று விட்டதே என்ற வருத்தமும், ஏக்கமும் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
உண்மையிலேயே சொல்வதென்றால், ரமலான் மாதம் நம்மை விட்டுப் பிரிந்து சென்றதில் நாம் அடையக்கூடிய கவலையையும், வேதனையையும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
ஆனாலும், இந்த ரமலான் மாதம், கிட்டத்தட்ட ஒருமாத காலம் நமக்கு ஏராளமான பாடத்திட்டங்களையும், படிப்பினைகளையும், அறிவுரைகளையும், போதனைகளையும் கற்றுத் தந்துவிட்டு நம்மைப் பிரிந்திருக்கின்றது.
ரமலான் மாதம் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும் நமக்கு என்னென்ன போதனைகளை எல்லாம் பாடமாக நடத்தியதோ, அப்படிப்பட்ட உபதேசங்களை ஏனைய மாதங்களிலும், இன்னும் சொல்வதாக இருந்தால் நம்முடைய வாழ்நாள் முழுக்கக் கடைபிடிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட மகத்தான ஒரு சபதத்தைத் தான் ரமளானுக்குப் பிறகு நாம் அனைவரும் எடுக்க வேண்டும் என்பதே ரமலான் மாதம் நம்மிடத்திலே விட்டுச் சென்ற செய்தி ஆகும்.
தொடரட்டும் இறையச்சம்
ரமலான் மாதம் முழுக்க முழுக்க இறையச்சத்தால் சூழப்பட்டு, ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் நன்மையான காரியங்களை அதிகமதிகம் செய்தவர்களையும், பாவமான காரியங்களிலிருந்து விலகி இருந்தவர்களையும் பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட மகத்தான இறையச்சம் நம்முடைய வாழ்க்கை முழுக்கத் தொடர வேண்டுமானால், ரமளானில் எப்படி இறைவனுக்குப் பயந்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டோமோ அதுபோன்ற வாழ்க்கைப் பயணம் ஏனைய மாதங்களிலும் தொடர வேண்டும்.
இந்த ஒருமாத காலம் நன்மையான காரியத்திற்கும், இறையச்சத்திற்கு நெருக்கமான காரியங்களிலும் நம்முடைய உடலுதவி, பொருளாதார உதவி இன்னும் பல்வேறு விதமான செயல்பாடுகளின் மூலம் எவ்வாறு உதவி செய்து வந்தோமோ அதுபோல, வாழ்க்கை முழுவதும் இந்தப் பரிசுத்தமான செயல்களை அல்லாஹ்வை அஞ்சுவோரால் மட்டுமே செய்ய முடியும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 5:2
ரமலான் மாதத்தில் எவ்வாறு அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து பாவமான காரியங்களிலும், வரம்பு மீறுகின்ற காரியங்களிலும் உதவி செய்வதை விட்டு வெறுத்து ஒதுங்கினோமோ அதுபோன்று, இறையச்சத்தைப் பாடமாகக் கற்றுக்கொண்ட நாம் ஏனைய மாதங்களிலும் பாவமான காரியங்களில் உதவி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்;
இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.
அல்குர்ஆன் 78:31-34
ஒரு மாதத்தோடு இறையச்சம் புதைந்தும், மறைந்தும் விடாமல் வாழ்க்கை முழுவதும், நாம் மரணிக்கின்ற வரைக்கும் இறையச்சத்தோடு வாழ்ந்தால், சொர்க்கத்தில் மகத்தான வாழ்க்கை இருக்கின்றது என்று இறைவன் வர்ணிக்கின்றான்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்;
துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள்.
அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.
இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப் படுவார்.
அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.
பின்னர் அவர் திருப்தியடைவார்.
அல்குர்ஆன் 92:17-21
இறையச்சத்தோடு தன்னுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒவ்வொருவரும் நரகத்திலிருந்து விலக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் தன்னைப்படைத்த அல்லாஹ்வின் திருமுகத்தைத் தேடி அலைவாரே தவிர, வேறு எந்த நன்றிக்கடனையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.
இன்னும், இறைவன் கூறுகின்றான்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
அல்குர்ஆன் 65:2,3
அல்லாஹ்வை அஞ்சியவராகத் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோருக்கு கண்ணியமான ஒரு இடம் இருக்கின்றது என்றும், அறியாப் புறத்திலிருந்து அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்றும் இறைவன் ஆழமாகப் பதிய வைக்கின்றான்.
நாமெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது ஒரு குறிப்பிட்ட மாதம் நல்லமல்களையும், வணக்க வழிபாடுகளையும் செய்து விட்டு, அத்தோடு மூட்டை கட்டி வைப்பதற்குப் பெயர் இறையச்சம் அல்ல. இறையச்சம் என்பது வாழ்க்கை முழுவதும் நல்லமல்களும், வணக்க வழிபாடுகளும் தொடர்ச்சியாகச் செய்து வருவதும், தவறான காரியங்கள் செய்வதிலிருந்து விலகி இருப்பதுமே ஆகும்.
எனவே, ரமளானில் நம்மிடத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்ட இறையச்சம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் நம்மிடத்தில் பிரதிபலித்தால் இவ்வுலகிலும், மறுமையிலும் மகத்தான வாழ்க்கையில் நாம் இருப்போம் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.
தொடரட்டும் தொழுகை
நம்மில் பெரும்பாலானோர் ரமலான் மாதத்தில் ஐந்து நேரத் தொழுகையை மிகச் சரியாக ஜமாஅத்தோடு தொழுது வந்திருப்போம். ஆனால் ரமலான் முடிந்ததற்குப் பிறகு அப்படியே நமக்கு நாமே இழப்பைத் தேடிக் கொண்டு, ஐவேளைத் தொழுகையை கோட்டை விட்டு விடுவதைப் பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகையைத் தொழுதால் நாம் அடைகின்ற நன்மைகள் ஏராளம்! ஏராளம்!
தொழுகையை நிலைநாட்டுவோருக்கு ஏராளமான பதவிகளும், கண்ணியமும் மறுமையில் இருக்கின்றது. கூடுதலாக இறைவனின் மன்னிப்பும் இருக்கின்றது என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான்.
அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
அல்குர்ஆன் 8:3,4
ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்ஆ வரை, ஒரு ரமலான் முதல் அடுத்த ரமலான் வரை நாம் செய்த பெரும் பாவங்களைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமாளான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
ஆதாரம்: முஸ்லிம் 396
ஐவேளைத் தொழுகையை தொடர்ச்சியாகத் தொழுது வருகின்ற ஒவ்வொருவரும் மகத்தான கூலியைப் பெற முடியும்.
ஒரு நாளில் தொழுவோருக்கே இவ்வளவு மகத்தான நன்மை கிடைக்கின்றது என்று சொன்னால், இறைவனுக்கு அஞ்சி ஒவ்வொரு நாளும் தொழுதால் விசாலமான, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குண்டான நன்மையை அல்லாஹ் வாரி வாரி வழங்குகின்றான்.
ஐவேளைத் தொழுகையை முறையாக, உள்ளச்சத்தோடு தொழுது வருகின்ற ஒவ்வொருவருக்கும் சொர்க்கம் கட்டாயம் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவாதம் வழங்குகின்றார்கள்.
“ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.
ஆதாரம்: முஸ்லிம் 397
மேலும், தொழுகை நேரான பாதைக்கு வழிகாட்டும் ஒளி என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்.
ஆதாரம்: முஸ்லிம் 381 (ஹதீஸ் சுருக்கம்)
தொழுகையில் நாம் செய்து வருகின்ற காரியங்களுக்கு ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் தூதரால் நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. கூடுதலாக ருகூவு மற்றும் ஸுஜூது போன்ற நிலைகளுக்கு பிரமிக்க வைக்கின்ற அபரிமிதமான கூலியை அல்லாஹ் தருவதாக நபி (ஸல்) அவர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள்.
ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள் புஜத்தின் மீது வைக்கப்படுகின்றது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப்பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன். என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அஹ்மத், இப்னுஹிப்பான் 1734
ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை நாம் முறையாகத் தொழுது வந்தால் ஒவ்வொரு நேரத் தொழுகைகளிலும் நாம் செய்த பாவங்கள் நம்முடைய உடலிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்து, பாவம் கலவாத மனிதர்களாக நாம் மாறி விடுகின்றோம்.
ஒவ்வொரு நேரத் தொழுகையையும் தொழும் போதும், இந்த இரண்டு நிலைகளில் நாம் ஈடுபடுகின்ற நேரத்தில் நம்முடைய பாவங்கள் அனைத்தும் இப்போது நம்முடைய மேனியில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விட்டது, நம்முடைய பாவங்கள் உதிர்ந்து போகப்போகின்றது என்ற ஆனந்தத்தோடும், மகிழ்ச்சியோடும் நம்முடைய தொழுகையை நிறைவேற்றினால் பாவம் கலவாத மனிதர்களாக, தொழுகை நம்மை மாற்றி விடும்.
தொடரட்டும் கியாமுல்லைல்
ரமலான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு அதிகப்படியான நேரங்கள் இரவில் தொழுகின்ற கியாமுல்லைல் தொழுகைக்காக நேரத்தை ஒதுக்கித் தொழக்கூடியவர்களாக இருந்து வந்தோம். ஆனால் ரமலான் மாதம் முடிந்து விட்டால் இரவுத் தொழுகையையும் சேர்த்து மூட்டை கட்டி விடுவதைப் பார்க்கின்றோம்.
இந்த கியாமுல்லைல் தொழுகைக்கு ஏராளமான சிறப்புகளையும், மகத்துவத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
ஆதாரம்: முஸ்லிம் 2157
கடமையான தொழுகைக்குப் பிறகு இறைவனிடத்தில் மிகச்சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும். இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த இரவுத்தொழுகையை ஏனைய மாதங்களிலும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
‘மனிதர்களே! நீங்கள் உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள், உணவும் கொடுங்கள், இன்னும் மனிதர்கள் உறங்கும் வேளையில் தொழுவீர்கள் என்றால் சுவனத்தில் சாந்தியுடனும், சமாதானத்துடனும் நுழைவீர்கள்’
ஆதாரம் : அஹ்மத்
நிம்மதியாக சுவனத்தில் நுழைய வேண்டுமானால், மக்கள் உறங்குகின்ற நேரத்தில் எழுந்து தொழ வேண்டும் என்றும் நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்திருக்கின்றார்கள். சொர்க்கத்தில் எளிமையாக நுழைய வேண்டும் என்ற வெறியுடன் ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகையை நிறைவேற்றி வந்தது போல, எல்லா மாதங்களிலும் சபதமேற்று இரவுத்தொழுகையை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இரவில் தொழும் தொழுகையை சில நாட்கள் தொழுதுவிட்டு, கைவிட்டவரைப் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள் என்று ஒரு தோழரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து, இரவுத்தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இன்னாரைப் போன்று நீரும் ஆகிவிடாதீர்! இரவில் தொழும் வழக்கமுடைய அவர் அதை கைவிட்டுவிட்டார்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 1152
இனிவரும் காலங்களில் சபதம் ஏற்று, ரமலானுக்குப் பிறகும் இரவுத்தொழுகையை தொடர்ச்சியாகத் தொழுது வருவதற்கு அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இரவின் கடைசி நேரத்தில் வித்ருத் தொழுகையை நிறைவேற்றினால் வானவர்கள் பங்கேற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம் 1381)
இந்த அற்புதமான வாய்ப்பை ஒருகாலத்திலும் நாம் இழந்து விடக்கூடாது.
ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ரமலான் மாதம் முடிந்து விட்டால் இரவுத்தொழுகையையும், வித்ருத் தொழுகையையும் ரமளானோடு முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றோம். இந்த அமல்கள் செய்யும் விஷயத்தில் நாம் ரமளானில் அடைந்த நன்மைகளை, எல்லா மாதங்களிலும் செயல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடரட்டும் வணக்கவழிபாடு
அல்லாஹ்வின் கிருபையால் ரமலான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு தம்முடைய உள்ளத்தையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொண்டு பொய்யான காரியங்களில் ஈடுபடுவதிலிருந்தும், அவதூறுகளை அள்ளித் தெளிப்பதிலிருந்தும் தவிர்ந்து, நாவுகளால் இறைவனைத் தியானிக்கின்ற திக்ருகளை அதிகமதிகம் செய்து வந்தவர்களாகக் கழித்து வந்தோம்.
ஏனைய மாதங்களிலும் இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவதை விட்டும், அடுத்தவர்களின் மான, மரியாதை விஷயங்களில் விளையாடுவதை விட்டும், இல்லாத அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை விட்டும் தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இதுபோன்ற இழிவான காரியங்களில் நாம் ஈடுபடும்போது நாம் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நன்மைகளையும் மறுமையில் இழந்து நிற்கதியாக நிற்க வேண்டிய சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் என்பதை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 5037
நாம் ஒருவரை அநியாயமாகத் திட்டிய காரணத்தினால், அவதூறு பரப்பியதன் காரணத்தினால் இன்னும் பல்வேறு வகையான கேடுகளைச் செய்ததன் காரணத்தினால் நம்முடைய நன்மைகள் அனைத்தும் பிற மனிதர்களுக்குப் பங்கு வைக்கப்பட்டு, நம்மிடம் நன்மைகள் முடிந்து விட்டால் பிறருடைய தீமைகள் நம்முடைய தலையில் கொட்டப்படுகின்ற அவலநிலை மறுமையில் ஏற்படும். இந்தப் பேரிழப்பு தேவை தானா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாம் ரமளானில் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நன்மைகளையும் இழப்பதற்குண்டான வேலைகளில் ஈடுபடாமல், கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள, இறைதியானத்தில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும். நன்மைகளை வாரிச் சுருட்டுகின்ற திக்ருகளை ரமலான் மாதத்தில் அதிகமதிகம் செய்து வந்தது போல, இன்ஷா அல்லாஹ் ஏனைய மாதங்களிலும் செய்ய வேண்டும் என்ற சபதத்தை எடுத்துக் கொள்வோம்!!
ரமளானில் பெற்ற படிப்பினைகள்:
- தினமும் ஐவேளைத் தொழுகையை கட்டாயம் தொழ வேண்டும்.
- உள்ளத்தையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- குர்ஆனோடு தினமும் தொடர்பில் இருக்க வேண்டும்.
- தான, தர்மங்களை அதிகமதிகம் செய்ய வேண்டும்.
- திக்ருகளை அதிகமதிகம் செய்ய வேண்டும்.
- வீண் தர்க்கம் மற்றும் வீண் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது.
- ஜகாத்தை ஏழைகளுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டும்.
- பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாமல் மௌனம் காக்க வேண்டும்.
- ஹராமான காரியங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன சாதனங்களை அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும்.
————————————————————————————————————————————————–
தொப்பி அணிவது சுன்னத்தா?
சபீர் அலீ
இந்திய முஸ்லிம்கள் தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
மார்க்கத்தில் அதிகம் வலியுறுத்திச் சொல்லப் பட்ட தாடியை வைக்காதவர்கள் கூட, தொப்பி அணிந்திருப்பார்கள்.
அந்த அளவிற்குத் தொப்பி அணிதல் மார்க்கத்தின் ஓர் அம்சம் என்றும் நபிவழி என்றும் தொப்பி அணியாமல் தொழுதால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் நம்பியிருந்தனர்.
இதனால் தொப்பியில்லாமல் யாரேனும் தொழுதால் கூட, தொழுது கொண்டிருப்பவரின் தலையில் தொப்பியை வைத்துவிட்டு செல்லும் நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றன.
தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை வேரூன்றத் துவங்கிய பிறகுதான், தொப்பியை ஒரு ஆடை என்ற முறையில் அணிந்துக் கொள்ளலாம், அதை அணிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் மார்க்கத்தில் இல்லை என்பதை மக்கள் விளங்கத் துவங்கினர்.
தொப்பி ஓர் ஆய்வு எனும் ஆய்வுப் புத்தகம் கூட நம் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தொப்பி தொடர்பாக மாற்றுக் கருத்துடையோர் எடுத்து வைக்கும் நிலைகள் என்ன என்பது விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது தொப்பி அணிவது நபி வழி என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு அதில் சில ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். அதில் நாம் ஏற்கனவே பதில் சொன்ன செய்திகளும் உள்ளன. புதிய சில செய்திகளும் உள்ளன. அவை அனைத்தின் தரத்தை இக்கட்டுரையில் காண்போம்.
முதல் ஆதாரம்
شعب الإيمان (8/ 293)
5848 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْأَهْوَازِيُّ، ثَنَا يَزِيدُ بْنُ الْحرشِ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ خِرَاشٍ، عَنِ الْعَوَّامِ [ص:294] بْنِ حَوْشَبٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ ابْنِ عُمَرَ: “ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ قَلَنْسُوَةً بَيْضَاءَ “ “ تَفَرَّدَ بِهِ ابْنُ خِرَاشٍ هَذَا وَهُوَ ضَعِيفٌ “
நபி(ஸல்) அவர்கள் வெள்ளை நிறத் தொப்பி அணிந்திருந்தார்கள் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தி பைஹகீ இமாமிற்குரிய ஷுஅபுல் ஈமான் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கிராஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவரைப் பற்றி அறிஞர்களின் விமர்சனங்களில் சில….
تهذيب الكمال 742 (14/ 454)
قال أبو زُرْعَة (1) : ليس بشيءٍ ، ضعيف الحديث (2).
وَقَال أبو حاتم (3) : منكر الحديث ، ذاهب الحديث ، ضعيف الحديث.
وقَال البُخارِيُّ (4) : منكر الحديث.
இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும் இவர் எந்த ஒன்றும் இல்லை என்றும் இமாம் அபூஸுர்ஆ கூறியுள்ளார்.
இவர் ஹதீஸில் மறுக்கப்படவேண்டியவர், பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் கூறியுள்ளார்.
இவர் ஹதீஸில் மறுக்கப்படவேண்டியவர் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.
தஹ்தீபுல் கமால், பாகம் 14, பக்கம் 454
எனவே, அப்துல்லாஹ் பின் கிராஷ் எனும் பலவீனமான அறிவிப்பாளர் இந்தச் செய்தியில் இடம் பெற்றிருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
இரண்டாவது ஆதாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.
இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் காண்பித்துவிட்டு, ஜாமிவுஸ் ஸகீர் எனும் நூலில் பதிவுசெய்யப்ட்டிருப்பதாகக் கூறியுள்ளார்கள்.
ஜாமிவுஸ் ஸகீர் எனும் நூலின் ஆசிரியர் இமாம் சுயூத்தி ஆவார். இவர் ஹிஜ்ரி 849 – 911 வரை வாழ்ந்தவர் ஆவார். இவர் ஹதீஸ்களை தொகுத்த இமாம்களில் ஒருவர் அல்ல. நபி(ஸல்) அவர்கள் வழியாக ஒரு செய்தியை இவர் குறிப்பிடுவதாக இருந்தால் அறிவிப்பாளர் தொடருடனோ அல்லது அந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது என்பதையோ தெரிவிக்க வேண்டும்.
இந்தச் செய்திக்கான அறிவிப்பாளர் தொடரை சுயூத்தி அவர்கள் எடுத்துக் கூறாமல் இதை இமாம் ரவ்யானியும், இப்னு அஸாகிரும் இப்னு அப்பாஸ் வழியாகப் பதிவு செய்துள்ளனர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இருவருடைய புத்தகங்களில் நாம் தேடிப் பார்த்த வகையில் மேற்கண்ட செய்தியைக் காணமுடியவில்லை.
எனவே, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் உறுதியாகும் வரை இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள இயலாது.
இதே செய்தியை இதற்கு முன்னரும் வேறொரு நூலில் இருப்பதாக எடுத்துக் காண்பித்தனர். அதற்கு ஏற்கனவே தொப்பி ஓர் ஆய்வு எனும் நூலில் சொல்லப்பட்ட பதிலை இங்கே தருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.
நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130
ஸாதுல் மஆத் எனும் மேற்கண்ட நூலாசிரியர் இப்னுல் கையும் ஆவார். இவர் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை இவர் குறிப்பிடுவதாக இருந்தால் அந்தச் செய்திக்கான ஹதீஸ் நூலை இவர் குறிப்பிட வேண்டும். அப்படி எந்த நூலையும் குறிப்பிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தார்கள் என்று இவர் கூறுவதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இவர் கூறுவது போல் ஹதீஸ் நூல்களில் எந்தச் செய்தியும் இல்லை என்பதே உண்மை.
மூன்றாவது ஆதாரம்
‘‘நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருக்கானா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556
இந்தச் செய்தி குறித்து ஏற்கனவே நாம் தொப்பி ஓர் ஆய்வு எனும் புத்தகத்தில் எழுதியிருந்த தகவலையே கீழே தருகிறோம்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: ‘‘இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானதல்ல. இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் இரண்டாவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களும் இவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.
யார் என்றே தெரியாத இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்பதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வலியுறுத்துவதும் இல்லை. தொப்பி அணிவதை வலியுறுத்துவோர் வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். ஆனால் தொப்பி மட்டும் அணிபவர்கள் இணை வைப்பவர்களுக்கான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாக உள்ளது.
இது பலவீனமான ஹதீஸாக இருப்பதுடன் தொப்பி அணிவதற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.
நான்காவது ஆதாரம்
جامع الأحاديث (14/ 368، بترقيم الشاملة آليا)
14513- العمامة على القلنسوة فصل ما بيننا وبين المشركين يعطى يوم القيامة بكل كورة يدورها على رأسه نور (الباوردى عن رُكانة)
நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும். மறுமை நாளில் தலைப்பாகையின் ஒவ்வொரு சுற்றுக்கும் பகரமாக ஒளி வழங்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜாமிவுல் அஹாதீஸ் எனும் நூலில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தியை தங்களின் அடுத்த ஆதாரமாக எடுத்துக் காண்பித்துள்ளனர்.
இந்த நூலின் ஆசிரியரும் இமாம் சுயூத்தி தான். மேலே நாம் குறிப்பிட்டது போல அவர் ஒரு செய்தியை எடுத்துக்காட்டுவதாக இருந்தால் அறிவிப்பாளர் தொடருடன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்தச் செய்திக்கும் முழு அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடாமல் ருக்கானா (ரலி) வழியாக வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே செய்தி இதே ருக்கானா (ரலி) அவர்கள் வழியாக சற்று சுருக்கமாகத் திர்மிதியிலும் அபூதாவூதிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக முந்தைய ஆதாரத்தில் பார்த்தோம். அந்தச் செய்திக்கான விமர்சனமே இந்தச் செய்திக்கும் பொருந்தும்.
எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்ட வேண்டும், அதிகமான ஆதாரத்தை இம்முறை சம்ர்ப்பித்துள்ளார்கள் என்ற கண்கட்டி வித்தைக்காகவே ஒரே செய்தியின் ஒரே அறிவிப்பை பல வடிவத்தில் கூறுகின்றனர்.
ஐந்தாவது ஆதாரம்
தலைப்பாகை வானவர்களின் கவுரவச் சின்னமாகும். அதை நீங்களும் அணிந்து கொள்ளுங்கள். அதன் குஞ்சத்தை முதுகுக்குப் பின்னால் தொங்க விடுங்கள்.
இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் காண்பித்து இது பைஹகீயில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
شعب الإيمان (8/ 295)
5851 – وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ، أَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سُلَيْمَانَ، ثَنَا يَعْقُوبُ بْنُ كَعْبٍ، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَحْوَصِ بْنِ [ص:296] حَكِيمٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عُبَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ عَلَيْكُمْ بِالْعَمَائِمِ فَإِنَّهَا سِيمَا الْمَلَائِكَةِ وَأَرْخُوا لَهَا خَلْفَ ظُهُورِكُمْ “
பைஹகீ இமாமுக்குரிய ஷுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெற்றிருக்கும் இந்தச் செய்தியில் அஹ்வஸ் பின் ஹகீம் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.
تهذيب الكمال 742 (2/ 292)
وَقَال في رواية : لا يكتب حديثه (2).
وَقَال عَبد الله بن أحمد بن حنبل ، عَن أبيه (3) : أبو بكر بن أبي مريم أمثل من الأَحوص بن حكيم.
وكذلك قال عباس الدُّورِيُّ ، عن يحيى بن مَعِين.
وَقَال إبراهيم بن هانئ النيسابوري ، عن أحمد بن حنبل : لا يسوي حديثه شيئا.
وَقَال إسحاق بن منصور ، وإبراهيم بن عَبد الله بن الجنيد ، ومعاوية بن صالح ، ومحمد بن عثمان بن أَبي شَيْبَة ، عن يحيى ابن مَعِين (4) : ليس بشيءٍ.
وَقَال أحمد بن عَبد الله العجلي (5) : لا بأس به.
وَقَال يعقوب بن سفيان (6) : كان – زعموا – رجلا ، عابدا ، مجتهدا ، وحديثه ليس بالقوي.
وَقَال الجوزجاني (7) : ليس بالقوي في الحديث.
وَقَال النَّسَائي (8) : ضعيف.
وَقَال في موضع آخر : ليس بثقة.
وَقَال عبد الرحمن بن أَبي حاتم (1) : سمعت أبي يقول : الأَحوص بن حكيم ليس بقوي ، منكر الحديث ، وكان ابن عُيَيْنَة يقدم الأَحوص على ثور في الحديث ، وغلط ابن عُيَيْنَة في تقديم الأَحوص على ثور ، ثور صدوق ، والأَحوص منكر الحديث.
இவர் எந்த ஒன்றும் இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவருடைய ஹதீஸ் பலமானதாக இல்லை என்று இமாம் யஃகூப் பின் சுஃப்யான் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
இவர் பலமானவர் இல்லை என்றும் இவர் ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் அபூ ஹாதம் கூறியுள்ளார்.
தஹ்தீபுல் கமால், பாகம் 2, பக்கம் 292
இன்னும் இதுபோன்ற ஏராளமான விமர்சனங்கள் இவர் மீது கூறப்பட்டுள்ளன. எனவே இந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும்.
ஆறாவது ஆதாரம்
தொப்பியின் மீது தலைப்பாகை அணியும் வரை எனது சமுதாயம் இயற்கை வழிமுறையிலேயே இருக்கும்.
இந்தச் செய்தியை தங்கள் அடுத்த ஆதாரமாக எடுத்துவைக்கின்றனர்.
இந்தச் செய்தி இமாம் தைலமீ அவர்களின் அல்ஃபிர்தௌஸ் பிமஃசூரில் கிதாப் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதை நபிகள் நாயகம் சொன்னார்கள் என்பதற்கு இந்தச் செய்தியில் எந்தச் சான்றும்இல்லை.
இதை ருக்கானா (ரலி) அறிவிப்பதாக இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் தைலமீ அவர்கள் யஸீத் பின் ருக்கானா வழியாக அதாவது ருக்கானா (ரலி) அவர்களின் மகனாரின் சொல்லாகத் தான் பதிவுசெய்துள்ளார்.
மேலும், இந்தச் செய்திக்கு எந்த அறிவிப்பாளர் தொடரும் இலலை.
இப்படி முழுவதும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியைத்தான் தங்களுக்கான ஆதாரமாகக் காண்பித்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
தொப்பி அணிவதற்கான ஆதாரங்களாக அவர்கள் வெளியிட்டுள்ள மேலும் சில செய்திகளையும் அவற்றுக்கான விமர்சனங்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
————————————————————————————————————————————————–
தர்மம் தலை காக்கும்!
M முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம்
இஸ்லாத்தில் எல்லா வகையான நற்காரியங்களும் நற்பண்புகளும் போதிக்கப்பட்டு உள்ளது. அவற்றுள் முக்கியமான ஒன்று, தர்மம் செய்வதாகும். தர்மம் தலைகாக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அது எப்படிக் காக்கும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறது. நாம் பெற்றுள்ள பொருளாதாரத்தை, பொருட்களை நல்வழியில் செலவழிப்பது பற்றிய செய்திகள் பல விதங்களில் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன.
இறைநம்பிக்கையின் அடையாளம்
நமது உள்ளத்தில் இருக்கும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் பண்புகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அதில் தர்மம் செய்வதும் உள்ளடங்கும்.
அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
(திருக்குர்ஆன் 8:3)
அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.
(திருக்குர்ஆன் 22:35)
தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (381)
தர்மம் பற்றிய தொடர் பிரச்சாரம்
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனுக்கு ஒருபோதும் இணைவைத்துவிடக் கூடாது என்று சொன்ன அளவுக்கு ஆரம்பம் முதலே நல்வழியில் செலவழிப்பது பற்றியும் அதிகம் போதிக்கப்பட்டுள்ளது. தமது நபித்துவத்தின் துவக்க காலம் உட்பட எல்லாக் கட்டத்திலும் நபிகளார் தர்மத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அபூ சுஃப்யான் (ரலி) அறிவித்தார்கள்:
(பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபியவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (5980)
நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (1429)
மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (2707)
‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்…?’ எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் முடியவில்லையாயின்’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவில்லையாயின்’ என்றதும் ‘நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (1445)
பொறாமை கொள்வதற்கு அனுமதி
எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களைப் பார்த்துப் பொறமை கொள்வதோ, பேராசைப் படுவதோ கூடாது. இவ்வாறு போதுமென்ற தன்மையோடு வாழச் சொல்லும் மார்க்கம், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குகிறது. அதிலொன்று தர்மம் எனும் போது அதன் சிறப்பை அறிய முடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
நூல்: புகாரி (73)
வெளிப்படையாக தர்மம் செய்யலாம்
தர்மம் செய்வது பற்றி மக்களிடம் சில தவறான கண்ணோட்டங்களும் உள்ளன. பிறருக்குத் தெரியும் வகையில் தர்மம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள். எப்படிச் செய்தாலும் அல்லாஹ்விடம் நற்கூலி பெறுவதற்காகச் செய்ய வேண்டும். இதன்படி ஒருவர் வெளிப்படையாக தர்ம்ம் செய்யும்போது அவரைப் பார்த்து எவரேனும் தர்மம் செய்தால் அவருக்குக் கிடைப்பது போன்றே இவருக்கும் கூலி கிடைக்கும்.
அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.
(திருக்குர்ஆன் 13:22)
செழிப்பற்ற நிலையிலும் தர்மம்
இனி தேவையே இல்லை எனும் அளவுக்கு செல்வம் குவிந்த பிறகு, தான தர்மம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை நம்மிடம் இருக்கக் கூடாது. வறுமை, நடுத்தரம், செழிப்பு என்று எல்லா நிலையிலும் தர்மம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(திருக்குர்ஆன் 3:134)
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தர்மத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, ‘இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (2748)
தேவைக்குப் போக தர்மம்
செல்வத்தில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கொடுப்பதோ அல்லது எந்தவொன்றையும் கொடுக்காமல் மொத்தமாக வைத்துக் கொள்வதோ சரியல்ல. அடிப்படையான காரியங்களுக்குப் போக மீதமிருக்கும் செல்வத்தில் முடிந்தளவு தர்மம் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. இப்பண்பை வாழ்வில் வழமையாக்கிக் கொள்வது நல்லது.
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
(திருக்குர்ஆன் 65:7)
அவர்கள் செலவிடும் போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.
(திருக்குர்ஆன் 25:67)
நான் ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக் கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வுன் தூதருக்காகவும் தர்மமாகக் கொடுத்து வடுவதை என் தவ்பாவில் (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டதற்காக மன்னிப்புக் கோரிப் பிராயச் சித்தம் தேடும் முயற்சிகளில்) ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது’ என்று கூறினார்கள். நான், ‘கைபரில் உள்ள என்னுடைய பங்கை (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினேன்.
அறிவிப்பவர்: கஅப் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி (2757)
‘நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி)
நூல்: புகாரி (1434)
இறைநெருக்கத்தை தரும் தர்மம்
ஏக இறைவனிடம் நெருக்கத்தைப் பெற்று விட்டால் வாழ்வில் எந்தவொரு கவலையும் இருக்காது; எப்போதும் நிம்மதியாக இருக்கலாம். இவ்வாறான இறைநெருக்கம் தர்மம் செய்யும் மக்களுக்குக் கிடைக்கும்.
கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(திருக்குர்ஆன் 9:99)
பாவங்களுக்குப் பரிகாரம்
நமது வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் தவறுகள் இருக்கவே செய்யும். அவை அனைத்தும் மன்னிக்கப்படும் நிலையில் படைத்தவனை சந்திக்கும் போதுதான் மறுமை வெற்றி கிடைக்கும். அவ்வாறு நமது பாவக் கறைகளைக் கழுவும் சிறந்த மருந்தாக தர்மம் திகழ்கிறது.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(திருக்குர்ஆன் 2:271)
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(திருக்குர்ஆன் 33:35)
நாங்கள் உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ‘‘ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்’’ என்றும் நான் விடையளித்தேன்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி (525)
நேர்ச்சை நிறைவேற்றாதவர்கள், சத்தியம் செய்து முறித்தவர்கள், நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்தவர்கள் போன்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களில் தர்மம் முக்கிய இடம் பிடித்திருப்பதைக் காணலாம். இதுபோன்ற சட்டங்கள் மூலம் நமது தவறுகள் மன்னிக்கப்படுவதற்கு தர்மம் நல்லதொரு வழியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
நரகத்தை விட்டுத் தடுக்கும் தர்மம்
தப்பித் தவறியும் நரகத்தில் விழுந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறோம். இத்தகைய மக்களுக்கு நபியவர்கள் சொல்லும் ஒரு முக்கிய அறிவுரை, முடிந்தளவு தர்மம் செய்யுங்கள் என்பதாகும்.
(மறுமையில்) உங்களில் ஒவ்வொரு நபருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘ஒரு நற்சொல்லைக் கொண்டாவது’ என்று காணப்படுகிறது.
அறிவிப்பவர்: என அதீ இப்னு ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி (7512)
நன்மைகளை அள்ளித்தரும் தர்மம்
நாம் மறுமையில் முழுமையான வெற்றி பெற வேண்டுமெனில், அதிகளவு நன்மைகளை செய்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கற்ற கூலிகளை அள்ளிக் கொள்வதற்குரிய அற்புதமான வழியே தர்மம் செய்வதாகும்.
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
(திருக்குர்ஆன் 57:18)
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(திருக்குர்ஆன் 2:276)
நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும். -பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (7430)
மறுமையில் கிடைக்கும் கண்ணியம்
நம்பிக்கை கொண்ட நிலையில் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்போர் மறுமையில் சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெறுவார்கள். இன்னும் கூறுவதாயின், இப்பண்பு கொண்ட மக்கள் சொர்க்கம் போகும்போதே கண்ணியமான முறையில் நுழைவார்கள்.
‘ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1897) (3216)
மறுமைக்கான முன்னேற்பாடு
தர்மத்தின் முக்கியதுவத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், தர்மம் என்பது மறுமை வெற்றிக்குரிய முன்னேற்பாடு. இப்படியான தர்மத்தைச் செய்வதற்குரிய சந்தர்ப்பம் நமக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. இதை மனதில் கொண்டு அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 14:31)
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
(திருக்குர்ஆன் 63:10)
(இப்போதே) தான தர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்து செல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி)
நூல்: புகாரி (7120)
இம்மையிலே வளம் அதிகரிக்கும்
தோண்டத் தோண்ட சுரக்கும் மணற்கேணி என்று சொல்வது போல, நாம் தர்மம் செய்யும் காலமெல்லாம் இம்மையிலேயே செல்வ வளம் அதிகரிக்கும். அதற்காக மலக்குமார்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள்.
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5047)
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ என்று கூறுவார். இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (1442)
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும்.
கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அந்த அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.
இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் இரண்டு அங்கிகள் என்பதற்குப் பதிலாக இரண்டு கவசங்கள் என்றுள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1443, 1444)
பொதுவாக நபியவர்கள் மக்களுக்கு அள்ளித் தரும் கொடை வள்ளலாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ரமளான் மாதம் வந்துவிட்டால் வேகமாக வீசும் காற்றை விட வேகமாக, அதாவது வாரி வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறான மாற்றத்தை ரமளான் மூலம் அல்லாஹ் நம்மிடமும் ஏற்படுத்துகிறான்; எதிர்பார்க்கிறான்.
ரமளானைக் கடந்திருக்கும் நாம், அந்தப் பயிற்சியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களிலும் தான தர்மம் செய்வதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மார்க்க மற்றும் சமூக விஷயங்களுக்காக நமது பொருளாதாரத்தை, செல்வத்தைச் செலவழிக்க வேண்டும். அதன் மூலம் ஈருலகிலும் வெற்றி பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு அருள்வானாக!
————————————————————————————————————————————————–
இறை நினைவும் அதன் நன்மைகளும்
எம்.ஐ.சுலைமான்
உள்ளங்கள் அமைதியுறும்
மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
(அல்குர்ஆன் 13:28)
இறைநினைவே மிகப் பெரியது
அல்லாஹ்வை நினைவு கூர்வது சாதாரண விஷயமல்ல. அதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்! அதனால்தான் அல்லாஹ் இறைநினைவு மிகப் பெரியது என்று குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
உயிருள்ள வரை நினைவு கூர வேண்டும்
படைத்தவனை நினைவு கூராமல் ஒருவன் இருந்தால் அவன் இறந்த உடலுக்குச் சமம் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உயிருடன் இருக்கும் காலமெல்லாம் படைத்தவனை நினைவு கூர்வது அவசியமாகும்.
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி (6407)
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: முஸ்லிம் (1429)
அதிகம் நினையுங்கள்
மன அமைதியையும் இறையருளையும் அள்ளித் தரும் இறைநினைவு அதிகமதிகம் நம்மிடம் இருக்க வேண்டும். இறைநினைவு அதிகம் இருக்கும் போது ஷைத்தானின் ஆதிக்கம் இல்லாமல் போய்விடும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!
(அல்குர்ஆன் 33:41)
ஆண்களும் பெண்களும் நினைவு கூர்வார்கள்
நல்லடியார்களாக இருக்கும் ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூர்வார்கள். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
எல்லா நிலையிலும் படைத்தவனை நினைவு கூரவேண்டும்.
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ (என்று அவர்கள் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 3:191)
வியாபாரமும் குடும்பமும் தடையாக இருக்காது
வாழ்வுக்கு அவசியமான வியாபாரம், குடும்பம் ஆகியவை, அல்லாஹ்வை நினைத்துப் பார்ப்பதைத் தடுத்துவிடக்கூடாது. அவ்வாறு நடந்துவிட்டால் மிகப்பெரிய நஷ்டவாளியாக ஆகிவிடுவோம்.
வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் 24:37)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் 63:9)
இறைவன் நினைவுகூர்வான்
அல்லாஹ்வை நாம் நினைக்கும் போதுதான் அல்லாஹ் நம் நிலையைக் கவனித்து, உரிய நல்வழியை நமக்குக் காட்டுவான்.
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 2:152)
அல்லாஹ்வை நினைப்பதற்கு நபிகளார் சில சொற்களை சொல்லிச் சென்றுள்ளார்கள். அந்த சொற்களைப் பொருளறிந்து நாம் சொல்லும் போது எண்ணற்ற நன்மைகளை அடைந்துவிடலாம்.
இறைநினைவு இல்லாதவனுக்குக் கட்டுப்படாதீர்கள்
அல்லாஹ்வைப் பற்றிய நினைவு இல்லாதவனின் அறிவுரைகளை ஏற்காதீர்கள். அவனிடம் ஷைத்தானின் வழிகாட்டுதல்கள் தான் அதிகம் இருக்கும். படைத்தவனைப் பற்றி அஞ்சி நடப்பவன் நல்ல அறிவுரைகளை வழங்குவான்.
நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
(அல்குர்ஆன் 18:28)
நன்மை தராசில் கனமான சொற்கள்
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
சுப்ஹானல்லாஹில் அழீம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
- சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
- சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (7563), முஸ்லிம் (5224)
செல்வந்தர்களின் நன்மைகளைப் பெற்றுத் தரும் சொற்கள்
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர்
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)’’ என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர!
நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (843), முஸ்லிம்(1044)
தர்மத்தின் நன்மை தரும் திக்ர்
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ்.
‘‘உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (-லாஇலாஹ இல்லல்லாஹ்-) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1302)
வலிமை தரும் திக்ர்
(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவு அரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்துலில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல்லாஹ்- – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: புகாரி (3113), முஸ்லிம்(5273)