ஏகத்துவம் – ஜூலை 2017

இந்த இறையச்சம்  ஈது வரையா? இறுதி வரையா?

ரமளான் மாதத் தலைப்பிறையைப்  பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு ஐங்கால ஜமாஅத் தொழுகைகளில் ஜன சமுத்திரம் திரண்டது என்று சொன்னால் அது மிகையல்ல!

சின்னஞ்சிறுவர்கள், இளைய தலைமுறையினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வாழ்க்கையின் அனைத்துப் பருவத்தினரும் பள்ளிவாசலுக்குப் படையெடுத்து வந்தனர். பெண்கள் அனுமதிக்கப் பட்ட பள்ளிகளில் அவர்களும் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தனர். இரவு நேரத் தொழுகைகளுக்கு இருபாலர்களும் பள்ளியில் வந்து குழுமுவதைப் பார்க்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில்  மூன்று நாட்கள் தொழுது விட்டு, ‘இவர்களின் இந்த ஆர்வம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கி விடுமோ?’ என்று அஞ்சியதும் அதன் காரணமாக மூன்று நாட்களுடன் நிறுத்திக் கொண்டதும் சரியான முடிவு என்பது நிரூபணமாகின்றது.

முன்னேரத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அலைமோதுகின்றனர் என்றால் பின்னேரத்தில் நள்ளிரவில் தொழுகை துவங்கும் போதும் அதே அலைமோதலையும் ஆர்வமேலீட்டையும் அபாரமாகக் காண முடிகின்றது.

மற்ற நாட்களில் எத்தனையோ பேர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையே படுதாளம் போட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களெல்லாம் நள்ளிரவில் தங்கள் விழிகளில் வழிகின்ற உறக்கத்தைக் கலைத்து விழித்தெழுந்து இந்த இரவுத் தொழுகைகளை எப்படி உயிராக்க முடிந்தது என்று எண்ணும் போது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இது தொழுகை என்ற வணக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் மறுமலர்ச்சியுமாகும்.

ஜகாத் எனும் கடமையை எடுத்துக் கொண்டால்  அது ரமளான் மாதத்தில் மட்டும் நிறைவேற்றக் கூடிய கடமை அல்ல.  வாணிபம், விவசாயம் என்று வருமானத்தைப் பொறுத்து பல்வேறு கால கட்டங்களில் நிறைவேற்றக் கூடிய கடமையாகும். இருப்பினும் ரமளான் மாதத்தில் ஜகாத்தை வழங்கும் மக்களைப் பார்க்கின்றோம்.

இது கடமையான வணக்கமென்றால் உபரியான தர்மங்கள் மக்களிடம் அணை உடைத்த வெள்ளமாய்  பொங்கிப் பிரவாகிப்பதைப் பார்க்க முடிகின்றது. செல்வந்தர்கள் தங்கள் வளத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வாரி வழங்குவதையும் ஏழைபாழைகள், அன்றாடங்காய்ச்சிகள், பாட்டாளி வர்க்கத்தினர் தங்கள் சக்திக்கு ஏற்ப வழங்குவதையும் நாம் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?  மக்களிடம் எப்படி இந்த மாற்றம் வந்தது? அதற்கு ஒற்றைப் பதில் ரமளான் தான்.

பல்வேறு அலுவல்கள் நம் அனைவரையும் ஆழ்கடல் அலைகளாக அலைக்கழிக்கும் இந்த நவீன யுகத்தில் அல்குர்ஆனை, அன்றாடம் எடுத்து ஓதுவதற்கு அவகாசமோ, அதற்கான வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. ஆனால் ரமளான் மாதத்தில் இரவு நேரத் தொழுகைகளில் அதிகமான அளவு குர்ஆனைச்  செவியுற்றது போக அவர்கள் அதை ஓதுவதற்கும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கும் எப்படி முடிந்தது? அதற்குரிய விடை ரமளான் மாதம் என்பது தான்!

இன்னிசை தான் மக்களை ஈர்க்கும் ஈர்ப்பு விசை என்று அதிகமானோரால் கருதப்படுகின்றது. அதனால் முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மார்க்கத்திலும் இசையைப் புகுத்தி அதை ஒரு வணக்கமாக்கி அதில் பரவசமடைகின்றனர். ஆனால் இஸ்லாமோ இசையையும், வாத்தியக் கருவிகளையும் தன் பக்கம் அண்டவிடாமல், அணுக விடாமல் தடுத்து வைத்திருக்கின்றது. அத்துடன் தொழுகை போன்ற வழிபாடுகளில் வாத்தியக் கருவிகள் துணையில்லாமல் ஓங்கி ஒலிக்கின்ற குர்ஆன் ஓங்காரமாக மக்கள் காதுகளில் ரீங்காரமிடுகின்றது.

ஒரு தடவை கேட்ட இசையை  நாம் திரும்பத் திரும்பக் கேட்க முடிவதில்லை. அதனால் அது புதிய இசை, பழைய இசை என இரு வகைகளாகவும், இரு கூறுகளாகவும் பிரிக்கப்படுகின்றது. ஆனால் குர்ஆன் ஒரே இசை தான்!  அதுதான் புவி ஈர்ப்பு விசையாகத் திகழ்ந்து மக்களை ரமளான் மாதம் உள்ளூர்களில் அந்தந்த பள்ளிகளை நோக்கியும் உலக அளவில் மக்காவை நோக்கியும் அழைக்கின்றது.

மொத்தத்தில், இந்தக் குர்ஆன் தான் ரமளான் மாதத்தில் கொடிகட்டிப் பறக்கின்றது. வாத்திய இசைப் பாடல்கள் எதற்குமில்லாமல் இப்படி ஒரு கூட்டம் ஒவ்வொரு பள்ளியிலும், மக்காவிலும் கூடுகின்றது என்றால் அது இந்தக் குர்ஆனுக்காகத் தான். இது ரமளான் மாதத்தில் குர்ஆன் ஓதுதல் என்ற வணக்கம் கோலோச்சுவதற்குரிய ஓர் எடுத்துக் காட்டாகும்.

அடுத்து ரமளான் மாதத்தில் மிளிர்கின்ற வணக்கம் உம்ரா என்ற வணக்கமாகும். ஹஜ் மாதங்களில் மக்கா திக்குமுக்காடுவதும், திணறுவதும் நமக்குத் தெரியும். ஆனால் ரமளான் மாதத்தில் மக்கா திக்குமுக்காடுவதும், திணறுவதும் ஏன்? காரணம் ரமளான் தான்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய போது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், ‘நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, ‘என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்’ என்றார்கள்.

நூல்: புகாரி 1863

ரமளான் மாதத்தில் இலட்சக்கணக்கான செலவில் நெடிய பயணம் மேற்கொண்டு உம்ரா என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதை நாம் பார்க்க முடிகின்றது, இவை எல்லாம் ரமளான் மாதத்தில் ஏற்பட்ட இறையச்சத்தின் வெளிப்பாடும் விளைவுமாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமல்லாமல், உறவு களை ஆதரித்தல், சகோதரத்துவ வாஞ்சையுடன் நடத்தல், மனித நேயம் காத்தல் போன்ற இறையச்சத்தின் வெளிப்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தும் நன்மையின் பக்கம் என்றால் தீமையின் பக்கத்தைக் கவனிக்கின்ற போது அங்கும் ரமளான் மாதம் பெரும் சாதனை படைத்திருக்கின்றது.

செயின் ஸ்மோக்கர் என்ற சங்கிலித் தொடர் புகைப் பழக்கமுள்ளவரை ஒரு மணி நேரம் கூட புகையின் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு இந்த நோன்பு தடுத்து நிறுத்தி விடுகின்றது. அவரால் நோன்பு அல்லாத காலத்தில் ஒரு மணி நேரம் கூட புகைக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தொடர் புகை வண்டியைக் கூட ஒரு பதினான்கு அல்லது பதினைந்து மணி நேரம் புகையின் பக்கம் நெருங்காமல் தடுக்கின்றது என்றால் உண்மையில், அது நபி (ஸல்) அவர்களின் சொல்லை உண்மை என்பதை நிரூபிக்கின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 1899

இவ்வளவு நேரம் உன்னால் எப்படிப் புகைக்காமல் இருக்க முடிந்தது? எப்படி சாத்தியமானது? அதிகாலை முதல் அந்தி நேரம் வரை இறைவன் தடுத்திருக்கின்றான் என்ற இறையச்சம் தான். இதே  இறைவன் தான் நோன்பு துறந்த பிறகும் இதைத் தடுத்திருக்கின்றான். இதை ஏன் நோன்பு துறந்த பிறகு நீ செய்கின்றாய்? என்று புகைப்பவனைச் சிந்திக்க வைக்கின்றது.   சுருக்கமாகச் சொல்லப் போனால்  இறைவன் அனுமதியளித்த அதாவது ஹலாலான உணவு, நீர் ஆகியவற்றை நோன்பு நோற்கும் போது ஒரு நோன்பாளி தவிர்த்து விடும் போது, தடுக்கப்பட்டதை நோன்பிற்குப் பிறகும் செய்யக் கூடாது என்று உணர்த்துவது தான் நோன்பின் நோக்கமாகும்.

நோன்பின் பயனால் இப்படிப் புகைப் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கின்றார்கள்.

சினிமா சமூகத்தில் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை ஆட்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத் தீமையாகும். இந்த திரைப்படத் தீமையிலிருந்து ரமளானை முன்னிட்டு  விலகியவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இதுவெல்லாம் புறத் தீமையென்றால் நபி (ஸல்) அவர்கள் சொன்னது போன்று இந்த நோன்பு ஒரு நோன்பாளியிடத்தில் அகத்தூய்மையையும் ஏற்படுத்தி விடுகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1903

இப்படி  ஒரு பக்கம் நன்மைகளைச் செய்வதற்கும் மறுபக்கம் தீமைகளை விடுவதற்கும் பல்வேறு பரிமாணங்களில் இறையச்சம் இந்த ரமளான் மாதத்தில் துணை நின்றது.

வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், இந்த இறையச்சம் ஈது அன்று பறந்து போய் விடுகின்றது பெருநாள் அன்று கடமையான தொழுகைகள் காற்று வாங்கத் துவங்கி பள்ளிகள் வெறிச்சோடி விடுகின்றன. ஈது தொழுகை முடிந்தவுடன்  திரைப்படத்தைக் காண ஆண்களும் பெண்களும் படையெடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு காலத்தில் இது அதிகமாக இருந்தது. இப்போது குறைந்து விட்டாலும் திரைப்படத்திற்கு போகாதவர்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை.

நோன்புக் காலத்தில் அரும்பி ததும்பி வழிந்த நல்லமல்கள், நற்பண்பாடுகள் எல்லாம் தொலைந்து போய் விடுகின்றன. ரமளான் காலத்தில் திரையிடப்பட்ட டிவி பெட்டிகள் மீண்டும் திறந்து விடப்படுகின்றன. எத்தனையோ குடும்பங்களை சீரியல்கள் சீரழித்து சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இவர்களிடம் இறையச்சம் என்பது ஈது தினத்தின் காலைத் தொழுகையுடன் விடை பெற்று விடுகின்றது. ரமளான் மாதம் வந்தும் புகைப்பழக்கத்தை நிறுத்தாதவர்கள் உள்ளனர். அத்தகையவர்கள் பின்வரும் நபிமொழியின் எச்சரிக்கைக்கும் இறை சாபத்திற்கும் உள்ளானவர்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ஆமீன் ஆமீன் ஆமீன்என்று கூறினார்கள். ‘‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’’ என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன். பிறகு, ‘எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றிச் சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்என்று கூறினார்கள். அதற்கு ஆமீன் என்று கூறினேன். எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: பைஹகீ 8767

இந்த ஹதீஸின் எச்சரிக்கையின் படி ரமளானில் ஏற்பட்ட இந்த இறையச்சம் ஈது வரை தொடராமல் இறுதி மூச்சு வரை தொடரட்டுமாக!

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் 3:102

—————————————————————————————————————————————————————————————

 

நபித்தோழியர் வாழ்வினிலே…

கே.எம். அப்துந்நாஸர்

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகம்தான் கியாமத் நாள் வரை தோன்றும் சமூகங்களிலேயே சிறந்த சமுதாயமாகும்.

இறைத்தூதர் உருவாக்கிய அந்தச் சிறந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல்வேறு மார்க்க விஷயங்களில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் பட்ட நபித்தோழியர் வாழ்விலிருந்து சில வரலாற்றுத் துளிகளை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் குர்ஆன் ஞானம்

அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஞானத்தில் மிகவும் தலைசிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் திருக்குர்ஆன் ஞானத்திற்கு பின்வரும் சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகும்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:  நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘‘அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்… எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4855

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின்  பேணுதல்

நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கடமையான தொழுகைகளைப் பேணியதுடன் சொர்க்கத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்காக சுன்னத்தான தொழுகைகளில் மிகவும் பேணுதலாக இருந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: முஸ்லிம் 1319

தர்மத்தில் சிறந்து விளங்கிய இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!’’ என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்’’ என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’’ எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்’’ என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, ‘‘இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்’’ என்று கூறப்பட்டது. ‘‘அவருக்கு அனுமதி வழங்குங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்வது?)’’ என்று கேட்டார். ‘‘இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1462

நற்காரியங்களில் கணவனுக்குத் துணை நின்ற ஸஹாபி பெண்மணி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

(மனைவியிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, ‘‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார்.

அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு’’ என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும், அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.

பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்…அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்என்னும் (59:9ஆம்) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 3798

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அபூதல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, “அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு’’ என்று பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்‘’ என்று கூறினார்கள்.

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்’’ என்று சுஃப்யான் கூறுகின்றார்.

 நூல்: புகாரி 1301

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூதல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், “அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?’’ என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), “கூடாது’’ என்று பதிலளித்தார். “(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), “என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?’’ என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக’’ என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்தி எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4496

பொதுவாக பிள்ளைகளை இழந்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, “அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்’’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும், அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதல் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக – அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்’’ என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3

உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை

நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் உம்ரா செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்! அறுத்துப் பயிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!’’ என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! மக்கள் பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்’’ என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மைமிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சாதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

வீரப் பெண்மணி உம்மு சுலைம்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா  (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும், (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல்: புகாரி 4064

போர்க்களத்தில் நீர் புகட்டிய உம்மு சலீத் (ரலி)

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினர். அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.’’ என்று கூறினார்கள். (மேலும்) அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்’’ என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅலபா பின் அபீ மாலிக்(ரலி)

நூல்: புகாரி 4071

நாயகத்திற்கு மருந்திட்ட அன்னை ஃபாத்திமா

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டது. (அவர்களுடைய) தலைக் கவசம் அவர்களுடைய தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்த போது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்று விட்டது.

நூல்: புகாரி 2911

அல்லாஹ்வின் வாக்குறுதி

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:35

—————————————————————————————————————————————————————————————

வலீமார்களிடம் உதவி தேடலாமா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்குத் திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும், அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம்.

வாதம்: 5

அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

 குர்ஆன் கூறுகிறது:

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்.

அல்குர்ஆன் 16:43

இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்தக் காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.

என்று வாதம் செய்கின்றனர்.

பதில்: 5

இதைப் படித்ததும் நபிகள் நாயகம் காலத்து இறைமறுப்பாளர்களும், யூதர்களும் தான் நம் சிந்தனைக்கு வருகிறார்கள்.

அவர்கள் தான் இறைவனின் வசனத்தையும், இறைத்தூதரின் போதனையையும் தங்கள் மனோ இச்சைக்கு தகுந்தவாறும் தங்களுக்கு சாதகமாகவும் திரித்துக் கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அதனாலே இறைவனின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!’’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:41

இன்றைய கப்ர் வணங்கிகளின் செயல் அச்சரம் பிசகாமல் அன்றைய காஃபிர்கள் – யூதர்களின் செயலை அப்படியே ஒத்திருக்கின்றது.

இருக்கின்ற குர்ஆன் வசனங்களை தங்கள் கருத்திற்குத் தோதாக வளைத்து திரிப்பது, இல்லாத நபிமொழிகளை நபிகள் நாயகம் கூறியதாக அபாண்டமாகப் பொய் சொல்வது இவ்விரண்டுமே கப்ர் வணங்கிகளின் ஆதார செயலாகும். இவ்விரண்டு வழிமுறையைப் பயன்படுத்தியே தங்களின் அழிந்து போன கொள்கைகளை மக்களிடையே உயிரூட்ட முற்படுகிறார்கள்.

வலிமார்களிடம் உதவி தேடலாம் எனும் இந்தத் தலைப்பிலும் தங்களின் வழக்கமான பாணியில் அதே வழியில் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.

அது சரி! அல்ஹம்து சூராவில் 7 வசனம் உள்ளதை ஏழாம் நாள் பாத்திஹா ஓதுவதற்கு ஆதாரம் காட்டிய மூளையற்ற கூட்டம் தானே!

மண்ணை வணங்கும் மடையர்களிடம் வேறு என்ன ஆதாரத்தை எதிர்பார்க்க இயலும்?

இனி இவர்களின் அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரத்திற்கு வருவோம்.

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

உங்களுக்குத் தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்.

அல்குர்ஆன் 16:43

இதுதான் அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பதற்கு கப்ர் வணங்கிகள் குறிப்பிடும் ஆதாரம்.

திக்ர் உடையவர்கள் என்றால் அவ்லியாக்களாம். என்னே இவர்களது குர்ஆன் ஞானம்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் செய்த பொருளின்படி திக்ர் செய்பவர்கள் – திக்ரை உடையவர்கள் என்று அர்த்தம் வைத்தாலும் திக்ர் செய்யும் அனைவரையும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!

 ஒரு வார்த்தைக்கு என்ன பொருள் செய்தாலும் அடைப்புக்குறி போட்டு அதில் அவ்லியா என்று மறக்காமல் எழுதி விட வேண்டும் என்று யார் தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ?

இவர்கள் குறிப்பிட்ட வசனத்தை முழுமையாகப் படித்தாலே திக்ர் உடையவர்கள் என்றால் யார்? அவர்கள் அவ்லியாக்களா? என்பதை இலகுவாகப் புரியலாம்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

அல்குர்ஆன் 16:43

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் என்பது இறைவன் நபிகள் நாயகத்திற்குச் சொல்லும் சேதியாகும்.

இதுவரை ஆண்களையே இறைத்தூதர்களாக அனுப்பியதாக அல்லாஹ் நபிகளாரிடம் தெரிவித்து விட்டு, வேண்டுமானால் திக்ர் உடையவர்களிடம் கேட்டுப்பார் என்கிறான்.

இவர்கள் செய்த பொருளின் படி அவ்லியாக்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் சொன்னான் என்றாகி விடும்.

நபிகள் நாயகம் எந்த அவ்லியாவிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்? முஹ்யித்தீனா? ஷாகுல் ஹமீது பாதுஷாவா? அல்லது வேறு யாருமா?

முதலில் அஹ்லுத் திக்ர் என்றால் அவ்லியா என்று இவர்களுக்கு யார் சொன்னது? என்ன ஆதாரம்? மனம் போன போக்கில் அர்த்தம் வைத்துப் பழகியதன் விளைவினாலும் திக்ர் மஜ்லிஸ் என்று அவ்லியாக்களின் பெயரால் அதிகம் கூத்தடிப்பதாலும் எங்கே திக்ர் என்று பார்த்தாலும் இவர்களுக்கு அவ்லியாக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் போலும்.

அதற்காக குர்ஆனில் திக்ர் என்று வந்தாலும் கூட இறைவனை நினைவு கூராமல் அவ்லியாக்கள் என்று மனிதர்களை நினைவு கூர்வது திக்ர் மஜ்லிஸ் தாக்கம் சற்றே அதிகம் எனத்தோன்றுகிறது.

திக்ர் என்றால் அறிவுரை என்று பொருள்.

குர்ஆனும் திக்ர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.  (பார்க்க: அல்குர்ஆன் 15:6,9)

அஹ்லுத் திக்ர் என்றால் அறிவுரை வழங்கப்பட்டவர் எனப் பொருளாகும். எந்த அகராதியிலும் அவ்லியா என்று பொருள் கிடையாது.

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம் எனக் கூறிவிட்டு, வேண்டுமானால் திக்ர் வழங்கப்பட்டவர்கள் அதாவது தவ்ராத், இன்ஜீல் எனும் அறிவுரைகள் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இது தான் இந்த வசனத்திற்கு விளக்கமாகும்.

மனம் போன போக்கில் இறைவசனத்திற்கு அர்த்தம் வைக்க ஆரம்பித்தால் இப்படித்தான் கண்டதையும் உளறும் படி மறை கழன்று போகும் என்பதை அறிவுறுத்துகிறோம்.

வாதம்: 6

‘அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்’ (ஹதீது குத்ஸி புகாரி)

அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான்.

பதில்: 6

இறைநேசர்கள் என்போர் திக்ர் அதிகமதிகம் செய்து இறைவன் அளவில் சேர்ந்து விட்டார்களாம். அதனால் அவர்கள் இப்போது மனிதர்கள் இல்லையாம் அல்லாஹ் தானாம்.

அல்லாஹ்விடமிருந்து வெளிப்படும் அத்தனையும் அந்த அவ்லியாவிடமிருந்தும் வெளிப்படுமாம். அதனால் அவரிடம் நாம் துஆ செய்யலாமாம்.

இவர்கள் செய்யும் இருட்டு திக்ர், குருட்டு திக்ர், பாட்டு திக்ர், கைகோர்த்து டான்ஸ் ஆடும் திக்ர், சினிமா பாடல் பாடும் திக்ர் என்று அதிகமாக திக்ர் செய்வதால் அல்லாஹ் ஆகிவிடுவார்களாம்.

அல்லாஹ் தான் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படும் ஸ்தலமாக மாறிவிடுகிறார்கள் என்றால் ஒருவரையாவது அப்படி காட்ட முடியுமா?

அல்லாஹ்வின் சக்தி எல்லாம் வெளிப்பட வேண்டாம். அற்ப மனிதர்களின் சக்தியாவாது வெளிப்படுமா?

உயிருள்ள மனிதனிடம் பேசினால் பதிலளிக்கிறான்.

திக்ரின் மூலம் அல்லாஹ்வைத் தஞ்ச மடைந்த, இறந்து போன இறைநேசர்களின் ஸ்தலங்களில் அவர்களை அழைத்தால் அவர்கள் பதிலளிப்பார்களா?

மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்பு மனித சக்தியே வெளிப்பட வக்கில்லை. இங்கு அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுமாம்.

இவர்கள் குறிப்பிடும் செய்திக்கு என்ன விளக்கம் என்பதை பிஜே அவர்கள் தமது தர்ஜூமா விளக்கக் குறிப்பில் விளக்கியுள்ளார்கள்.

அதையே இதற்குப் பதிலாகத் தருகிறோம்.

யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.

“பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்’’ என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?’’ என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?’’ என்று கேட்பான், அதற்கு இறைவன் ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்’’ என்று கூறுவான்.

(பார்க்க: முஸ்லிம் 5021)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?

இந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ அப்படியே புகாரீ 6502வது செய்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அல்லாஹ் மட்டுமே பிரார்த்திக்கப்பட தகுதி படைத்தவன்.

அவனை மட்டுமே வணங்குவோம் அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வோம்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

(ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

அல்குர்ஆன்  40:14

அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பதை மீண்டும் நினைவு கூர்கிறோம்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 23:117

—————————————————————————————————————————————————————————————

விபச்சாரக் குழந்தைகள்

எம்.ஐ. சுலைமான்

الضعفاء الكبير للعقيلي – (3 / 148)

613 – ومن حديثه ما حدثناه علي بن عبد العزيز قال : حدثنا عارم قال : حدثنا حماد بن سلمة ، عن علي بن زيد ، عن زيد بن عياض ، عن عيسى بن حطان الرقاشي ، عن عبد الله بن عمرو ، أن رسول الله صلى الله عليه وسلم قال : « أولاد الزنا يحشرون يوم القيامة في صورة القردة والخنازير

விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் மறுமை நாளில் குரங்கு மற்றும் பன்றிகளின் தோற்றத்தில் எழுப்பப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அல்லுஃபாவுல் கபீர் – உகைலீ,

பாகம்: 3, பக்கம்: 148

இந்தச் செய்தியைப் பதிவு செய்த உகைலீ அவர்கள் இந்தச் செய்திக்கு முன்னர் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

الضعفاء الكبير للعقيلي – (3 / 147)

زيد بن عياض أبو عياض ، بصري حدثنا محمد بن إبراهيم بن جناد قال : حدثنا ابن عائشة قال : حدثنا سلام بن أبي مطيع قال : حدث رجل أيوب يوما حديثا ، فأنكره أيوب ، فقال أيوب : من حدثك بهذا ؟ قال : محمد بن واسع قال : بخ ثقة ، قال : عمن ؟ قال : عن زيد بن عياض قال : لا تزده

அய்யூப் அவர்களிடம் ஒரு நாள், ஒரு மனிதர், ஒரு ஹதீஸை அறிவித்தார். இதை மறுத்த அய்யூப் அவர்கள், இந்தச் செய்தியை உமக்கு அறவித்தது யார்? என்று கேட்டார்கள். முஹம்மத் பின் வாஸிவு என்று சொன்னார். அவர் நம்பகமானவர்தான். அவருக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்டார். ஸைத் பின் இயாள் என்றார். உடனே இதற்கு மேல் அதிகப்படுத்தாதே என்று நிறுத்திவிட்டார்.

அதாவது ஸைத் பின் இயாள் என்பவர் மோசமானவர். எனவே இது தவறான செய்தி என்பதற்கு இவரைக் கூறியதே போதுமானது சான்று என்பதை குறிக்கவே இதற்கு மேல் அதிகப்படுத்த வேண்டாம் என்று அய்யூப் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிய பிறகுதான் இந்தச் செய்தியை உகைலீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தச் செய்தியில் ஸைத் பின் இயாள் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

الموضوعات لابن الجوزي – (3 / 109)

عن عبدالله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: “ أولاد الزنا يحشرون يوم القيامة في صورة الخنازير “.

هذا حديث موضوع لا أصل له.

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி, இதற்கு அடிப்படை எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அல்மவ்ளுஆத் – இப்னுல் ஜவ்ஸீ,

பாகம் :3, பக்கம் :109

الضعفاء والمتروكين لابن الجوزي – (1 / 306)

1330 زيد بن عياض أبو عياض البصري  قال أيوب لا ترده زيد بن واقد أبو علي السمتي البصري  يروي عن حميد الطويل  وقال أبو زرعة ليس بشيء

ஸைத் பின் இயாள் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று அபூஸுர்ஆ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் – இப்னுல் ஜவ்ஸீ, பாகம் :1,பக்கம் :306

மேலும் திருக்குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கும் எதிராக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 6:164)

யார் தவறு செய்கிறார்களோ அவரே அந்தத் தவறுக்குப் பொறுப்பாளியாவார் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி, குழந்தை செய்யாத குற்றத்திற்கு அவரைக் குரங்காக, பன்றியாக மாற்றுவதாகச் சொல்கிறது.

விபச்சாரம் செய்த ஆணையோ, பெண்ணையோ தண்டித்தால் அது நியாயம். இதில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத குழந்தைக்குத் தண்டனை தருவது திருக்குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கு எதிரானதாகும். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற நிலையை அடைகிறது.

இதைப் போன்று இன்னொரு செய்தியும் உள்ளது.

المعجم الكبير للطبراني – (19 / 142)

337 – حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ: نا الْحُسَيْنُ بن إِدْرِيسَ الْحُلْوَانِيُّ، قَالَ: نا سُلَيْمَانُ بن أَبِي هَوْذَةَ، قَالَ: نا عَمْرُو بن أَبِي قَيْسٍ، عَنْ إِبْرَاهِيمَ بن الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بن أَبِي ذُبَابٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”لا يَدْخُلُ وَلَدُ الزِّنَا الْجَنَّةَ، وَلا شَيْءٌ مِنْ نَسْلِهِ إِلَى سَبْعَةِ آبَاءٍ”. لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ إِبْرَاهِيمَ، إِلا عَمْرٌو

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை சொர்க்கத்தில் நுழைய முடியாது. (ஏன்) அந்தக் குழந்தையின் சந்ததிகளில் ஏழு தந்தை வரை (பிறந்தவர்களில்) எவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : தப்ரானீ கபீர், பாகம் :19, பக்கம்:142

இந்தச் செய்தியும்  “ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் கருத்துக்கு எதிரானதாகும்.

யாரோ செய்த தவறுக்கு இந்த குழந்தைகளில் ஏழு தலைமுறையைத் தண்டிப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?

மேலும் இந்தச் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இப்ராஹீம் பின் அல்முஹாஜிர் என்பவர் பலவீனமானவராவார்.

الجرح والتعديل – (2 / 133)

قال علي بن المديني قال يحيى – يعني القطان – لم يكن إبراهيم بن مهاجر بالقوي.-حدثنا عبد الرحمن قال قرى على العباس بن محمد الدوري قال وسألت  يحيى بن معين عنه فقال: ضعيف الحديث.

இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் வலிமை வாய்ந்தவர் அல்ல என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்,

பாகம் : 2, பக்கம் :133.

எனவே இந்தச் செய்தியும் அடிப்படையற்ற பலவீனமான செய்தியாகும்.

—————————————————————————————————————————————————————————————

வலை தளங்களின் வலை விரிப்புகள்

வழுக்கி விழும் வாலிபப் பெண்கள்

(கடந்த மே 27ஆம் தேதி ஆங்கில இந்து நாளேட்டில் Predators on the prowl on social networking site) ‘சமூக வலைத்தளங்களில் இரை தேடி அலைகின்ற காமுக மிருகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி ஆந்திரா மாநிலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது. பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்பதால் இதை வாசகர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.)

சமூக வலைதளங்களில் சாதகங்கள், சாதனைகள்  நிறைந்து  இருப்பது போலவே அதில் பாதகங்களும் படுசாபக்கேடுகளும் நிறைந்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் அண்மையில் விஜயவாடாவில் நடந்த ஒரு கோர, கொடூர சம்பவம்.

ஒரு பதினாறு வயதுப் பெண் ஆன்லைன் மூலம் ஒரு பையனிடம் நட்பு கொள்கின்றாள். அது காதலாக மலர்கின்றது. காதல் காமத்தில் விடிகின்றது. அதுவரைக்கும் உரையாடலாக இருந்த தொடர்பு  உடலுறவாக மாறியது. இதன் பின்னர் மூன்றாவது நண்பனுடன் ஓர் உல்லாசப் பயணம் ஏற்பாடுகின்றது.

மதுவுடன் சேர்த்து  சகல, சரச, சல்லாப விளையாட்டுகள் நடந்து முடிந்து திரும்புகையில் வரும் பாதையில்  பாதியிலேயே போதையுடன்  அவள் கீழே இறக்கி விடப்படுகின்றாள். புத்தி சுவாதீனத்துடன் உள்ள பெண்களையே கொத்திக் கபளீகரம் செய்து, கற்பழித்து, காமப் பசியைத் தணித்துக் கொள்ள அல்லும் பகலும் ஆலாய் பறந்து  அலையாய் அலைந்து  திரிகின்ற காமக் கயவர்கள் நிறைந்த இந்த  நாட்டில்  இளம் பெண் ஒருத்தி தன்னிலை  மறந்து வெறும் சடலமாக சாலையில் தனியாக வந்து மாட்டும் போது விட்டு வைப்பார்களா?

நான்கு கயவர்கள் அவளைக் கவர்ந்து சென்று ஒரு தனி வீட்டில் வைத்து மாறி மாறிக் கற்பழித்து, தங்கள் காமத்தின் கோரப் பசியை, கொடூரப் பசியைத் தணித்திருக்கின்றார்கள். தாகந்தீர பருகியிருக்கின்றார்கள். கடைசியில் காவல் துறை அபிஷேக், ஸ்ரீகாந்த், சுனீல், பவன் என்ற அந்த காம மிருகங்களை கைது செய்துள்ளது. கூடவே அந்த இளம்பெண்ணை இந்த கதிக்கு ஆளா­­க்கிய பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.  கைது செய்யப்பட்டு என்ன பயன்?  பிணையில் வெளியே வந்து மீண்டும் இதை விட பன்மடங்கு வீரியமாக விளையாடுவார்கள் இந்த வல்லூறுகள். இது தான் இந்த நாட்டின் தலைவிதி.

ஒரு காமுகன் ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு அழைக்கின்றான். அப்பெண் அவனது  அழைப்புக்குக் காது கொடுக்க மறுத்தது தான் தாமதம்! உடனே அவளது படம் விபச்சாரி என்ற பட்டத்துடன் வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்து விட்டது, வலைத்தளங்களில் தொடர்கின்ற பழிவாங்கும் படலத்திற்கும் வரம்பில்லாத பிளாக்மெயில் அராஜக ராஜ்ஜியத்திற்கும் இது ஓர் அப்பட்டமான எடுத்துக் காட்டு.

விசாகப்பட்டணத்தைச் சார்ந்த ஓர் 26 வயது பெண் யூடியூபில் தன் மேனியில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக தனது படம் உலா வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றாள். தனக்கும் தான் கல்யாணம் முடிக்கப் போகும் கணவனுக்கும் மத்தியில் பரிமாறப்பட்ட சாதாரண படங்கள் எப்படி நிர்வாணக் கோலத்தில் தனக்குத் தெரியாமல் இப்படிக் காற்றலையில் காற்றாட விடப்படுகின்றது? என்று கதி கலங்கி நிற்கின்றாள். கண்ணீர் வடிக்கின்றாள்.

காமுகனாகிய ஒருவனது கள்ள அழைப்புக்கும் காம வலை விரிப்புக்கும் வளைந்து கொடுக்காததால் அவன்  பிளாக் மெயில் போர் தொடுத்திருக்கின்றான். இன்னும் கால அவகாசம் இருக்கின்றது, இல்லையேல் மற்ற வலைத்தளங்களிலும் உன் ஆடையில்லாத அப்பட்ட மேனி  அப்படியே  மேடையேறும் என்று அவனது அராஜக மிரட்டல் தொடர்கின்றது. அவள் காவல் துறையில் புகார் செய்கின்றாள்.

இருவரும் தங்களுக்கு மத்தியில் தங்கள் மொபைல்களில்  பரிமாறிய இந்தப் படங்கள் மூன்றாம் நபரால் ஹேக் செய்யப்பட்டு அந்தப் பெண்மணி ஆடை அவிழ்க்கப்பட்டுள்ளாள் என்று காவல் துறை அதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது. வலைத்தளத்தின் வக்கிரம புத்தியுள்ளவர்களின் அக்கிரமச் செயலுக்கு இது மற்றொரு எடுத்துக் காட்டாகும்.

வலைத்தளத்தில் இப்படிப்பட்ட கள்ளக் கலை வண்ண, கைங்கரிய விளையாட்டுகளெல்லாம் சர்வ சாதாரணம் என்பது அப்போது தான் அந்த பெண்ணுக்குப் புரிய வருகின்றது.

கர்ப்பிணியான கன்னிப்பெண்

அங்கோல் என்ற ஊரில் 15 வயது பருவ வயதுப் பெண் ஓரு வீடியோ கிராஃபருடன் நட்பு கொள்கின்றாள். நட்பு சமுதாய அரங்கில் நேருக்கு நேர் நேர்முகமாகப் பார்த்து ஏற்படவில்லை. சமூக வலைத்தளங்களில் மூலமாகத் தான் நட்புக் கொள்கின்றாள். சமூக வலைத்தள நட்பு என்ற பரிசு எப்படி அவளுக்குக் கிடைக்கின்றது? அவளது தந்தை அவளது பிறந்த நாள் பரிசாக அவளுக்கு அளித்த ஸ்மார்ட் ஃபோன் மூலமாகத் தான் கிடைக்கின்றது. இறுதியில், வீடியோக்காரனுடன் வீட்டை விட்டு ஓடுகின்றாள். அவன் அவளை உலவுப்படு என்ற ஊருக்கு அவளை ஓட்டிச் சென்று  ஒரு தொலைதூர வீட்டில் அடைத்து வைத்து  பல்வேறு கோணங்களில்  ஆபாசமான நிலைகளில் படமெடுத்து பதிவு செய்கின்றான்.

செய்தி கசிந்து சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷனுக்கு வருகின்றது. அது தலையிட்டு ஸஅவளை கன்னிப் பெண்ணாக அல்ல! கர்ப்பிணிப் பெண்ணாக மீட்டெடுக்கின்றது.  சமூக வலைத்தள நட்பு, சகவாசம் ஒரு பருவ வயதுப் பெண்ணை சவக்குழியில் கொண்டு போய் தள்ளி விட்டிருக்கின்றது என்பதற்கு இது பிரிதொரு உதாரணமாகும்

முகத்தைக் காட்டாத மெக்கானிக்

வீடியோக்காரனை அடுத்து ஆட்டோமொபைல் மெக்கானிக் வருகின்றான். இவனுடைய சமாச்சாரம் என்ன? முன்னால் ஒரு போதுமே முகம் பார்த்திராத,  முன்பின் தெரியாத இவனை சிறாலா என்ற ஊரைச் சார்ந்த ஒரு பதின்ம வயது இன்ஜினியரிங் படிக்கும் மாணவி காதலிக்கின்றாள். காதல் மலர்ந்தது எப்படி?

அரசியை மண முடிக்க விரும்புவர்கள் சில சாகசங்களை நிகழ்த்த வேண்டும். அடங்காத குதிரையை அடக்க வேண்டும் அல்லது ஒற்றைக்கு ஒற்றையாக வாள் சண்டையில் ஜெயிக்க வேண்டும் இப்படி சாதனைகளை நிகழ்த்தி அல்லது சாகசகங்கள் செய்து அரசியைத் திருமணம் முடிக்க வேண்டும்.  ஆட்டோமொபைல்காரனுக்கு கல்யாணம் முடிக்க அவசியமெல்லாம் இல்லை. காதல் மட்டும் தான் அவனுக்குத் தேவைப்பட்டது.  இந்த இளவரசியின் காதலை  அடைவதற்கு எந்த சாகசமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.  அவன்  ஒரு ராங்க் கால் மட்டும் செய்தான். அவ்வளவு தான் அதிலிருந்து அவள் அவனது வலையில் விழுகின்றாள். ஸ்மார்ட் ஃபோனில் எஸ்.எம்.எஸ்கள் பறக்கின்றன.

காணாமல் போன கள்ளக் காதலன்

இறுதியாக அவளும் அனைத்து நகை நட்டுகளுடன் வீட்டுக்கு தெரியாமல் இறக்கை கட்டிப் பறந்து விடுகின்றாள். இந்த ஆன்லைன் காதல் ஒரு வித்தியாசமான விநோதமான காதல். காரணம் காதல் கதாநாயகனுக்குப் படமில்லை. அதனால் அவள் தன் ஆன்லைன் காதலனின் பாத்திரத்தை தன் காதில் ரீங்காரமிட்ட அவனது குரல் ஓசையை மட்டும் அடையாளமாகக் கொண்டு தேடி அலைகின்றாள், அலைகின்றாள். அவளது அத்தனை நகைகளும் தொலைகின்ற வரையில் தேடி அலைகின்றாள்.

ஆன்லைன் காதலன் தனது அடையாளத்தைக் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக ஃபோனை அடிக்கடி மாற்றி மாற்றி ஏமாற்றி விட்டான் என்பது இந்தக் கழிசடைக்குப் பின்னால் தான்  தெரிய வருகின்றது.

இவை எல்லாம் காவல் துறையின் கவனத்திற்கு வந்தவை. வராதவற்றின் எண்ணிக்கையை வரையறுத்துச் சொல்ல முடியாது என்று காவல் துறை சொல்கின்றது.

அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களால் சர்வ சாதாரணமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளிக் கல்லூரி மாணவிகள் தான் இதில் கவிழ்ந்து விழுந்து கல்லூரி வாழ்க்கையை மட்டுமல்ல! கற்பு நெறி வாழ்க்கையையும் சேர்த்தே இழந்து நாசமாகி விடுகின்றனர் என்று காவல்துறை தெரிவிக்கின்றது.

காவல்துறையில் இது போன்ற வழக்குகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. அத்துடன் குற்றவாளிகள் பெண்களை ஏமாற்றுவதற்குப் புதுப்புது வழிமுறைகளைக் கையாளுகின்றனர். காவல்துறை இதுபோன்ற ஏமாற்று வழிகளையும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் தொடர்ந்து மக்களுக்கு எச்சரித்த வண்ணமாகத் தான் இருக்கின்றது. சமூக வலைத்தளங்களினால் விளைகின்ற விபரீதங்களையும் விளைவுகளையும் காவல்துறை விலாவாரியாக விளக்குகின்றது.

சமூக வலைத்தளங்களில் இப்படி ஏமாற்றப்படுகின்ற பெண்கள் பற்றிய சாபக்கேடுகளை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்ற விதம் இளைஞர்களைச் சீர்திருத்தும் விதத்தில் இல்லை. மாறாக, அந்த இளைஞர்களை எதிர்மறையாக இந்தப் பாதாளத்தில் அதிக வேகத்தில் தள்ளி விடுவதாகவே உள்ளது என்று சமூக ஆர்வலரான ஒரு வழக்கறிஞர் ஆதங்கப்படுவது  நாம் கவனத்தில் கொள்ள  வேண்டிய விஷயமாகும்.

—————————————————————————————————————————————————————————————

அவதூறுகளும், பதில்களும்!

புகாரி இமாம் உள்ளிட்ட முந்தைய அறிஞர்களை முஷ்ரிக்குகள் என்று நாம் சொன்னோமா?

எம்.எஸ். செய்யது இப்ராஹிம்

சூனியத்தை நம்பிய முந்தைய இமாம்கள் அனைவரும் முஷ்ரிக்குகளா? என்பதற்கான விளக்கத்தைக் கடந்த இதழில் கண்டோம்.

சூனியம் உண்டு, அதற்கு ஆற்றல் உண்டு என்று ஒருவர் நம்பிக்கை கொள்கின்றார்; ஹதீஸில் இப்படி இருப்பதால் அதை நம்புவது இணை கற்பித்தல் என்று அவருக்குத் தோன்றவில்லை. இது இணைவைப்பு தான் என்று தக்க ஆதாரங்களுடன் அவருக்குச் சுட்டிக்காட்டப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் சூனியத்தை நம்பினாலும் இவர் அறியாமையில் இருக்கிறார் என்றுதான் நாம் கருதுவோம்; இணை கற்பித்தவர் என்று கருத மாட்டோம்.

முந்தைய இமாம்கள் சூனியம் உண்டு என்று இந்த அடிப்படையில் நம்பியிருந்தால், அவர்கள் முஷ்ரிக்குகளாக மாட்டார்கள்.

அந்த இமாம்களிடத்தில் இவ்வாறு நம்புவது இணை கற்பித்தல் என்ற அந்த நுணுக்கமான செய்தி எடுத்து விளக்கப்பட்டு, அதை அந்த இமாம்கள் ஏற்காமல் மறுத்து நாங்கள் அப்படித்தான் நம்புவோம் என்று சொல்லியிருப்பார்களேயானால் அவர்கள் இணைகற்பித்தவர்கள் என்ற நிலைக்கு வருவார்கள் என்பதுதான் நமது நிலைப்பாடு.

எனவே இதற்கு முந்தைய இமாம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதாகச் சொல்வது அவதூறு தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதற்கான காரணத்தையும் ஆதாரத்தையும் கடந்த இதழில் நாம் விளக்கியுள்ளோம்.

இந்த விளக்கத்தை நாம் சொல்லும் போது இன்னும் பல கேள்விகளை நம்மிடம் எழுப்புகின்றனர்.

சூனியம் குறித்த செய்திகளை பல இமாம்கள் தங்களுடைய நூல்களில்  பதிவு செய்துள்ளார்களே! அப்படியானால் அந்த இமாம்கள் எல்லாம் முஷ்ரிக்குகளா?

உங்கள் விளக்கம் யாரையெல்லாம் சென்றடைந்ததோ அவர்களெல்லாம் முஷ்ரிக்குகளா? என்ற உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்கின்றனர்.

இது குறித்த அவதூறுகளுக்கான பதிலை இப்போது காண்போம்.

யாரை நாம் இணைகற்பித்தவர்கள் என்று சொல்கிறோம்?

நினைத்த நேரத்தில் நினைத்தவரையெல்லாம் மந்திர சக்தியால் தான் நாடியவாறு வீழ்த்தக்கூடிய ஆற்றல் சூனியக்காரனுக்கு உள்ளது என்ற இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, நபிகளாருக்கு ஒரு யூதன் சூனியம் வைத்ததாக வரும் செய்தியையும் அவர்கள் நம்புகின்றார்கள்.

இந்த நம்பிக்கையின் மூலம் மிகப்பெரும் அற்புதமாகத் திகழ்ந்த நபிகளாரை சூனியக்காரன் தனது சூனியத்தால் வீழ்த்திவிட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள்.

அப்படியானால் அல்லாஹ்வுடைய தூதரையே வீழ்த்தும் அளவிற்கு மகத்தான ஆற்றல் சூனியக்காரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நம்புவது மாபெரும் இறைநிராகரிப்பு ஆகும் என்றும், எனவே நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்திகளை நம்பக்கூடாது; அது திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய பொய்யான செய்தி என்றும் நாம் சொல்லி வருகின்றோம்.

இதை ஒருவர் நம்பும் போது அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த மாபாதகச் செயலைச் செய்துவிடுகின்றார் என்று நாம் சொல்கிறோம்.

 புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் தமது நூல்களில் சூனியம் தொடர்பான ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளதால் அவர்கள் அதை அப்படியே நம்பிப் பதிவு செய்தார்கள் என்ற பொருள் வராது.

அதாவது புகாரி இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ள செய்திகள் அனைத்தையுமே அவர் நம்பி, அதைத் தனது கொள்கையாக ஏற்றுத்தான் பதிவு செய்துள்ளதாக இவர்கள் நம்புவதுதான் நம்மீது இவர்கள் இப்படி துணிந்து இட்டுக்கட்டுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

புகாரி இமாம் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள் என்றால், அதன் பொருள் என்ன?

ஒரு செய்தி ஆதாரப்பூர்வமானவர்கள் என்று நம்பப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக எனக்குக் கிடைத்துள்ளது; ஆட்களைப் பொறுத்தவரை எந்தக் குறையும் தென்படவில்லை என்பதே அவர்களின் கருத்தாகும்.

நான் பதிவு செய்த அனைத்தையும் அப்படியே நம்பி அதை எனது கொள்கையாக ஏற்றுக் கொண்டுதான் பதிவு செய்துள்ளேன் என்பது அதற்கான அர்த்தமல்ல.

இதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ள  புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சில செய்திகளை உதாரணங்களாக இங்கே காண்போம்.

குரங்கு விபச்சாரம் செய்ததாக வரும் செய்தியை புகாரி இமாம் ஏற்றாரா?

ஒரு பெண் குரங்கு விபச்சாரம் செய்ததாகவும், விபச்சாரம் செய்த அந்தப் பெண் குரங்கை பல குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறி தண்டனை நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தியை இமாம் புகாரி அவர்கள் தனது நூலில்  பதிவு செய்துள்ளார்கள்.

இதோ அந்தச் செய்தி:

அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

அறிவிப்பவர்: அம்ர் பின் மைமூன்

நூல் : புகாரி  3849

மேற்கூறப்பட்ட செய்தியை  சிந்தனைத் திறன் கொண்ட எவரும் நம்பமாட்டார்கள்; இப்படி ஒரு செயல் நடப்பதற்குண்டான சாத்தியமே இல்லை என்றுதான் நமது அறிவு சொல்லும்.

குரங்கு விபச்சாரம் செய்ததற்காக கல்லெறி தண்டனை வழங்கப்பட்டதா?

அதெப்படி இது சாத்தியமாகும்? அவைகளுக்குத்தான் திருமண பந்தம் என்பதே கிடையாதே! திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால்தான் அவருக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கச் சொல்லி நபிகளார் கட்டளையிட்டார்கள்; அப்படியானால் கல்லெறி கொடுக்கப்பட்ட குரங்கானது திருமணம் முடித்த குரங்கா? குரங்குகளுக்கு ஏது திருமண முறை?

என்றெல்லாம் கேள்வி எழும்போது, இப்படிப்பட்ட ஒரு மூடத்தனமான செய்தியை புகாரி இமாம் அவர்கள்  நம்பினார்கள் என்று சொல்வது அவர்களை இழிவுபடுத்துவதாகாதா?

இமாம் புகாரி அவர்கள், தனக்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் என்று அவர் நம்பி வைத்திருந்தவர்கள் வழியாக இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டதால் இதைப் பதிவு செய்துள்ளார்களே தவிர அதை அவர் ஏற்கவில்லை; அது அவரது கொள்கையும் இல்லை என்று தானே சொல்வோம்.

அதைத் தான் நபிகளாருக்கு  சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தது குறித்தும் நாம் சொல்கின்றோம்.

நபிகளாருக்கு சூனியம் செய்ததாக வரும் செய்தியானது தான் நம்பிய ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாக அறிவிக்கப் பட்டுள்ளதால் அதைப் பதிவு செய்தார்களேயொழிய, அதை உண்மையென்று நம்பித்தான் பதிவு செய்தார்கள் என்று அர்த்தமில்லை.

அபூலஹப் விரலில் நீர் வடியும் செய்தி உண்மையா?

இதுபோல நரகத்தின் கொள்ளிக்கட்டையான அபூலஹப் என்பவனது கையில் தண்ணீர் வடிவதாகவும், அந்தத் தண்ணீரைக் குடித்து நரகத்தில் அவன் ஓரளவு தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் என்ற பொருள் அடங்கிய ஒரு செய்தியை இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதோ அந்தச் செய்தி:

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன? என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

அறிவிப்பாளர் : உர்வா

புகாரி : 5101

அபூலஹபுடைய இரண்டு கரங்களும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் தனது வேதத்தில் அபூலஹப் என்பவனைச் சபித்துள்ளான். அப்படியிருக்கையில், அல்லாஹ் எந்தக் கைகளை நாசமாகட்டும் என்று சபித்தானோ அந்தக் கையின் ஒரு விரலில் இருந்து நீர் வடிகின்றது என்ற கனவு மார்க்கத்திற்கு உட்பட்டது என்று புகாரி நம்பினார்கள் என்று சொல்ல மாட்டோம்.

சகுணம் பார்த்து இணைகற்பிக்கச் சொல்லி நபிகளார் கட்டளையிட்டார்களா?

அடுத்ததாக பாரதூரமான கருத்தை தரக்கூடிய ஒரு செய்தி நபிகளார் பெயரில் தவறுதலாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் வழியாக இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்தப் பாரதூரமான செய்தியையும் இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதோ அந்தச் செய்தி:

குதிரையில் அப சகுனம் உண்டு – என்னும் கூற்று.

அபசகுனம் என்பது குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 2858

மேற்கண்ட செய்தியில் ‘குதிரையில் அபசகுனம் உள்ளது என்ற கூற்று’ என்ற தலைப்பிட்டே புகாரி இமாம் அவர்கள் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஆனால் சகுனம் பார்ப்பது இணைகற்பித்தல் என்பதை நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

சகுனம் பார்ப்பதை ஷிர்க் என்று நபிகளார் சொல்லியிருக்கும் நிலையில், மூன்று விஷயங்களில் மட்டும் சகுனம் பார்த்துக் கொள்ளலாம் என்றும், மூன்று விஷயங்களில் மட்டும் சகுனம் பார்த்து அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்துக் கொள்ளலாம் என்றும் எப்படி நபிகளார் சொல்லியிருப்பார்கள் என்ற அடிப்படையில் இது பொய்யான செய்தி என்று புகாரி இமாம் இதைத் தள்ளியிருக்கலாம் தானே! ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.மாறாக இது இணைகற்பித்தல் என்ற பாரதூரமான செயலைச் செய்யத்தூண்டும் வகையில் இந்தச் செய்தி இருந்த போதிலும் கூட நம்பகமானவர்கள் வழியாக இந்தச் செய்தி கிடைத்த காரணத்தால் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்களே தவிர, இந்தச் செய்தியை உண்மை என்று ஏற்று அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் சொல்கின்றோம்.

“இல்லை; இல்லை; தான் பதிவு செய்த அனைத்துமே தனது கொள்கை என்று நம்பித்தான் இமாம் புகாரி அவர்கள் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள்’’ என்று யாரும் சொல்வார்களேயானால் அவர்கள் இமாம் புகாரி அவர்களை முஷ்ரிக் என்று சொல்கின்றார் என்று அர்த்தமாகிவிடும்.

நம்மை நோக்கி எந்த அவதூறை இவர்கள் வீசினார்களோ! அது இப்போது அவர்கள் மீது திரும்பிவிட்டது.

சகுனம் குறித்த இந்தச் செய்தியானது திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்தி மட்டுமல்லாமல் இன்னபிற நபிகளாரின் செய்திகளுக்கும் முரண்படுவதால் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட அது பொய்யான செய்தி என்பதுதான் நமது நிலைப்பாடு.

எப்படி ஷிர்க் செய்யத் தூண்டும் சகுனம் குறித்த செய்தியை நாம் பொய் என்று சொல்கின்றோமோ, அதுபோலத்தான் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்தியையும் பொய் என்று நாம் சொல்கின்றோம்.

புகாரி இமாம் அவர்கள் சூனியம் உண்டு எனத் தலைப்பிட்டுள்ளார், எனவே அவர் சூனியத்தை நம்பியுள்ளார் என்று சிலர் முட்டாள்தனமான வாதத்தை முன்வைக்கின்றார்கள்.

சகுனம் குறித்த செய்தியில் இமாம் புகாரி அவர்கள் போட்டு வைத்துள்ள தலைப்பைப் பாருங்கள்:

குதிரையில் அப சகுனம் உண்டு – என்னும் கூற்று.

குதிரையில் அப சகுனம் உண்டு என்பதையே தலைப்பாக இமாம் புகாரி அவர்கள் ஆக்கியுள்ளதால் அபசகுனம் பார்த்த இமாம் புகாரி அவர்கள் முஷ்ரிக் என்று சொல்லி நம்மை விமர்சிப்பவர்கள் இமாம் புகாரி அவர்களுக்கு இந்த ஃபத்வாவை வழங்குவார்களா?

நிச்சயம் அவ்வாறு செய்யமாட்டார்கள்;

அதற்கு அவர்கள் அளிக்கும் வியாக்கியானம் என்ன?

தான் போட்ட  தலைப்பையெல்லாம் புகாரி இமாம் அவர்கள் கொள்கையாக வைக்கவில்லை; அவர்கள் கொண்டு வரும் செய்தியில் என்ன கருப்பொருள் உள்ளதோ அதைத் தலைப்பாகப் போட்டுள்ளார்கள் என்று அவர்கள் விளக்கமளிப்பார்கள்;  நாமும் இவ்வாறே கூறுகின்றோம்.

தலைப்பிடுவது கொள்கையை முடிவு செய்ய உதவாது என்பதையும், எவ்வளவோ ஹதீஸ்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இமாம் புகாரி அவர்கள் தலைப்பிட்டுள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரதூரமான கருத்தைத் தரும் சகுனம் உண்டு என்ற செய்தி குறித்துக் கூட இது தவறான செய்தி என்று புகாரி இமாம் அவர்கள் சொல்லாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்;

தான் தனது நூலில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு செய்தியின் கருப்பொருள் என்ன? அந்தச் செய்தியின் மையக் கருத்தானது சரியான கருத்தா? தவறான கருத்தா? என்பதையெல்லாம் புகாரி இமாம் அவர்கள் ஆய்வு செய்து இந்த புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுக்கவில்லை;

மாறாக ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைத் தொகுப்பது மட்டும் தான் அவரது நோக்கம். அந்த அடிப்படையில் தான் மேற்கண்ட எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை அவர்கள் பதிவு செய்தார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, இதய நோய்க்கு சிறப்பு சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவரிடம் நாம் செல்கின்றோம்; நமக்கு இதய நோய் குறித்த சோதனைகளை அவர் செய்வார். நமது பல்லில் ஏதேனும் ஒன்று சொத்தைப் பல்லாக இருந்தால் அதை அவர் கண்டு கொள்ளமாட்டார். ஏனெனில் அவரது நோக்கம் இதய நோய்க்குண்டான சிகிச்சை அளிப்பதுதான். அதனால் நீங்கள் பேசும் போது வெளிப்படையாகவே உங்களது வாயில் இருக்கும் சொத்தைப் பல் வெளியில் தெரிந்தால் கூட அவர் அதை உங்களிடம் சுட்டிக்காட்ட மாட்டார்.

நமக்கு உள்ள சொத்தைப் பல்லை சுட்டிக்காட்டாததால் இவர் மோசமான மருத்துவர் என்று யாரும் சொல்லமாட்டோம்.அல்லது சொத்தைப் பல் குறித்து இதய நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் பேசாத காரணத்தால் சொத்தைப் பல்லை அவர் ஆதரிக்கின்றார் என்றும் அர்த்தமல்ல. அவர் சுட்டிக் காட்டாததால் அது சொத்தைப் பல்லே அல்ல என்றும் நாம் சொல்ல மாட்டோம்.

அதுபோலத்தான் இமாம் புகாரி அவர்கள் ஆதாரப்பூர்வமான செய்தியாகத் தான் கருதும் செய்திகளை தனக்குப்பட்ட விதிகளின்படி தனது நூலில் தொகுத்துள்ளார்.

அது குரங்கு விபச்சாரம் செய்த செய்தியாக இருக்கட்டும்; அல்லது அபூலஹபின் கையில் நீர் வடிந்த செய்தியாக இருக்கட்டும்; சகுனம் பார்ப்பது மூன்று விஷயத்தில் உண்டு என்று சொல்லப்படும் செய்தியாக இருக்கட்டும்; சூனியம் குறித்த செய்தியாக இருக்கட்டும்; இவை அனைத்துமே அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று  அவர்கள் கருதிய செய்திகள் தானே தவிர, இவை அனைத்தையும் நம்பி கொள்கையாக இமாம் புகாரி அவர்கள் ஏற்றிருந்தார்கள் என்று சொல்வது சரியானதல்ல. எனவே புகாரி இமாம் அவர்களை முஷ்ரிக் என்று நாம் சொன்னதாக இவர்கள் கூறுவது அவதூறு என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எப்போது இந்தச் செய்திகளை  புகாரி  இமாம் அவர்கள் நம்பினார்கள் என்று சொல்ல முடியும் தெரியுமா?

யாராவது ஒருவர் போய் இமாம் புகாரி அவர்களிடத்தில், “இமாம் புகாரி அவர்களே! குரங்குகள் விபச்சாரம் செய்ததாக ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளீர்களே! அதை நீங்கள் நம்புகின்றீர்களா? எனக்கேட்டு, அதற்கு அவர், “ஆம்! குரங்குகள் விபச்சாரம் செய்ததாக வரும் செய்தி சரியானதுதான்; அதை நான் நம்புகின்றேன்; விபச்சாரம் செய்யும் குரங்கைக் கல்லால் எறிந்து கொன்றது உண்மையிலும் உண்மை; குரங்குகளுக்கும் திருமணம், விபச்சாரம் ஆகிய வழிமுறைகள் உள்ளன’’ என்று அவர் கூறினால் தான் அவர் இதை நம்பினார் என்ற முடிவுக்கு வருவோம்.

அதுபோல் சகுனம், இதர சூனிய நம்பிக்கைகள் குறித்த செய்தியிலும் இமாம் புகாரி அவர்களின் நிலைப்பாடு குறித்து நாம் முடிவெடுக்க முடியும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இமாம் புகாரி அவர்களுக்கு மட்டுமல்ல; இமாம் முஸ்லிம், மற்றும் இன்னபிற ஹதீஸ் நூல்களை தொகுத்த அறிஞர்கள் அனைவரது விஷயத்திலும் நமது பதில் இதுதான்.

அவர்கள் பதிவு செய்ததை வைத்தே அதை நம்பித்தான் பதிவு செய்தார்கள் என்று சொல்வது மடைமை வாதம் என்பதுதான் நமது பதில். ​

—————————————————————————————————————————————————————————————

தவறான புரிதல்கள்

எம். எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

தற்போதுள்ள காலச் சூழ்நிலையில் எங்கு நோக்கினும்  சரியான புரிதல் இல்லை (மிஸ் அன்டஸ்டேன்டிங்), ஒத்துழைப்பு இல்லை என்பன போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம்.

குறிப்பாகக் கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, தாய் மகள், சக நண்பர்களுக்கு மத்தியில், சக ஊழியர்களுக்கு மத்தியில், முதலாளி, தொழிலாளி போன்ற எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மேலே நாம் குறிப்பிட்ட தவறான புரிதல் தான்.

எதையுமே நேரான சரியான பார்வையில் பார்க்காமல் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ பாதகமாகவே உற்று நோக்குவதின் விளைவு தான் தவறான புரிதல். அதாவது பிறரைத் தவறாக எடை போடுவது.

இவ்வாறு எந்தப் பிரச்சனையையுமே தவறாக உற்று நோக்குபவர்களிடத்தில் நாம் எவ்வளவு தான் பக்குவமாக எதார்த்தமாக பேசினாலும் அதற்கான காரண காரியத்தை அவர்கள் தேடுவார்கள். இது போன்ற நபர்களிடத்தில் நாம் பேசுவதை விட பேச்சைக் குறைப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று கூறுவார்கள். அதுபோல நம்மைப் பற்றி அவர்கள் தவறாகப் புரிந்ததை நாம் விளக்க முற்படும் போது அதிலும் ஆயிரத்தெட்டு குறைகளைக் கண்டுபிடிப்பார்கள். இதன் விளைவாகப் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே செல்லும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற மூடர்களைச் சந்திக்க நேரிட்டால் ஸலாமுடன் நிறுத்திக் கொண்டு அவர்களைப்  புறக்கணிக்குமாறு திருமறை நமக்குப் போதிக்கின்றது.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் என்று கூறிவிடுவார்கள்.

அல்குர்ஆன் 25:63

பெருமை, கர்வம் கொண்டு பிறரைத் தாழ்வாகக் கருதாமல் எல்லோரிடத்திலும் பழக வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, மூடர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு விளக்குகின்றான்.

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்பமாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 28:55

மேற்கண்ட வசனத்தில் நம்மைப் பற்றிய அவப்பேச்சுக்களைப் பிறர் பேசும் போது அதற்காக வருந்தாமல் அதை அலட்சியப்படுத்துமாறு நமக்கு திருமறைக் குர்ஆன் போதிக்கின்றது. ஆனால் நம்மில் பலரோ அதை நினைத்து நினைத்து வாடுவதைக் காண்கின்றோம். இது போன்ற சமயங்களில் நாம் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என்பதை நமக்கு  இஸ்லாம் போதிக்கின்றது

பெருந்தன்மையை மேற்கொள்ள வேண்டும்

பெருந்தன்மையை மேற்கொள்வீராக நன்மையை ஏவுவீராக அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக 

அல்குர்ஆன் 7:199

பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

நன்மையும், தீமையும் சமமாகாது நல்லதைக் கொண்டே பகைமையை தடுப்பீராக எவருக்கும் உமக்கும் பகைமை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப்பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது. 

அல்குர்ஆன் 41: 34,35

தான் தவறாகப் புரிந்ததை சம்பந்தப்பட்ட நபரிடத்தில் வெளிப்படுத்தி பேசும் போது தவறு செய்யாத அந்த நபரின் மனம் புண்படும் காட்சியை நாம் காண்கின்றோம். தான் தவறாகப் புரிந்ததை வெளிப்படுத்திப் பேசுவது சம்பந்தப்பட்டவருக்கு எந்த அளவு காயத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

நூல்: முஸ்லிம் 5006

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம்  கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிலி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள். 

முஸ்லிம்:480

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!’’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘‘என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’’ என்று -நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்- கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். -அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை- நான் உங்களை (யாரென) அறியவில்லை’’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1283

‘எனக்கு வந்த சங்கடம் உனக்கு வந்தால் தெரியும்’ என்று கூறிய உடன் அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் அந்தப் பெண்ணிடத்தில் வேறெதையும் பேசவில்லை. தொடர்ந்து அந்தப் பெண்ணிடத்தில் பேசுவதில் பயனில்லை. அப்படியே பேசினாலும் அதைக் கேட்கும் நிலையிலும் அவள் இல்லை என்பதை நபிகளார் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டார்கள். ஆனால் இன்றோ பெண்களைப் போல் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் ஆண்களைப் பார்க்கின்றோம்.

கடுமையாக சச்சரவிட்டுக்கொண்டு இடம், பொருள், ஏவல் அறியாமல் பிறர் மனதையும் காயப்படுத்தி விடுகிறோம்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

நூல்: முஸ்லிம் 78

மேற்கண்ட செய்தி தீமையை நாம் எந்த அளவு தடுக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை விளக்குகின்றது. இருப்பினும் சொந்தப் பிரச்சனைகளுக்காகப் பிறரைப் பழி தீர்க்க எண்ணுவதும், காலமெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைவதும் எவ்வகையில் நியாயம் என்பதை இவ்வேளையில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். தனது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ்வின் தூதர் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளார்கள் அதற்காக எடுத்ததெற்கெல்லாம் பழிவாங்கித் திரிந்தார்களா? அல்லது மனதில் குரோதத்துடன் தான் இருந்தார்களா?

மன்னர்கள் எதிரி நாட்டிற்குள் நுழைந்தால் அதை நாசமாக்குவார்கள். அங்குள்ள பெண்களின் கற்புகளை சூறையாடுவார்கள். சிறார்களையும் முதியவர்களையும் நோவினைப்படுத்துவார்கள். இந்நிலையில் தன்னையும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களையும் நோவினைப்படுத்திய நாட்டிற்குள் நபிகளார் நுழைந்த போது அவர்களைப் பழிவாங்கத் துடிக்கவில்லை. மாறாக அதில் உள்ள புற்பூண்டுகள் கூட பிடுங்கப்படக்கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான்.  இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது.  எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிரத் தான்’’ என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்’’ என்று கேட்டார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்’’ என்று உத்தரவிட்டார்கள்.

நூல்: புகாரி 2434

நல்லது கெட்டதில் மறந்துவிட்டால்…

ஒரு நல்ல காரியம் நடக்கும் போது அல்லது அனைவரும் சந்தோஷமாக இருக்கும் போது யாராவது ஒருவர் அந்த வீட்டில் முகத்தைத் திருப்பிக் கொண்டு சண்டையை இழுத்து வைக்கவில்லையென்றால் அந்தக் காரியம் சுபகாரியமாக இருக்குமா? அந்த வீடு சந்தோஷத்தில் களைகட்டுகின்றதோ இல்லையோ இதுபோன்ற சண்டையில் களைகட்டிவிடுகின்றது.

‘எனக்கு வேண்டுமென்றே தான் தெரியப்படுத்தவில்லை. ஒருத்தருக்கு மறந்தால் சரி என்று கூறலாம். வீட்டில் உள்ள அனைவருக்குமா மறக்கின்றது?  என்னை அனைவருமே இழிவாகத்தான் எப்போதுமே நினைக்கின்றீர்கள் மதியாதார் வாசலை நான் எப்படி மிதிப்பது? என் கௌவரமும், சுயமரியாதையும் என்னவாவது?’ என்றெல்லாம் கூறி தன்னைத் தானே இழிவுபடுத்தியும் பிறர் மனங்களை காயப்படுத்தியும் நோகடிக்கின்றனர்.

தனக்குப் பிறரால் இலாபம், ஆதாயம் கிடைக்கும் போதெல்லாம் மாமன், மச்சான், உடன் பிறப்பு என்று உறவு பாராட்டுபவர்கள் இது போன்ற எதார்த்தமாக நடந்த விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் அப்போதும் என் உடன் பிறப்பு, என் தாய், என் சகோதரன் என்று உறவுபாராட்ட வேண்டியது தானே!

பேசத் தெரியாமல் எதையேனும் ஒன்றைப் பேசிவிட்டால்…

சிலர் வார்த்தையின் கனத்தை அதன் விபரீதத்தை உணராமல் ஏதோ ஒரு அர்த்தத்தில் பேசப் போய் அது ஏதோ ஏதோ தொனிகளில் பிரதிபலித்து பூதாகரமாய் உருவெடுத்த காட்சிகளைப் பல குடும்பங்களில் காண்கின்றோம். ‘மனதில் உள்ளது தானே வார்த்தையில் வெளிவரும் அது வந்து விட்டது’ என்று கூறி மற்றவர்களைக் காயப்படுத்துகின்றனர். இது கணவன் மனைவிக்கு மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. கோபமாகப் பேசும் கணவனுக்குப் பயந்து எதையாவது ஒரு பதிலை இப்போது கூறித்தான் ஆக வேண்டும் என்பதற்காக எதையோ ஒன்றை மனைவி உளற, அதையே  ஒரு பெரும் குற்றமாக எடுத்துக்கொண்டு தையத்தக்கா என்று நடனமாடும் கணவன்மார்கள் ஏராளம்.

தனது மனைவி இப்படி பேசுபவளா? அவளுக்கு சரியாகப் பேசத் தெரியுமா? அவள் வெகுளியாயிற்றே? அவள் பேசக்கூடாது என்ற நோக்கத்தில் பேசாமல் இருக்கிறாளா? அல்லது நம் மீதுள்ள பயத்தினால் பேசாமல் இருக்கிறாளா? என்று ஒவ்வொரு கணவனும் சிந்தித்தாலே பெரும்பாலான பிரச்சனைகளும் மனக்கசப்புகளும் குடும்பத்தில் குறைந்துவிடும்.

—————————————————————————————————————————————————————————————

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

திருமணமே அந்த ரகசியம்

இத்தா இருக்கும் பெண்களிடம் திருமணம் குறித்து சாடையாகப் பேசலாம் என்றாலும்  வேறு எதையும் ரகசியமாக வாக்களித்து விடக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:235

இத்தா மேற்கொள்ளும் பெண்களுக்கு ரகசியமாக வாக்களித்து விடக்கூடாது என்று கூறப்படுவது திருமணம் குறித்துத் தான்  என்பதை இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே இலகுவாகப் புரியலாம்.

ஆனால் ஹிதாயாவில் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட ரகசியம் என்றால் எது? என்பதை விவரிக்க முற்படுகிறார்.

வேறென்ன? வழக்கம் போல நபிகள் நாயகம் பெயரில் பொய்ச் செய்தியைத் தான் வெளியிடுகிறார்.

இதோ:

الهداية شرح البداية (2/ 32)

{ ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا } وقال عليه الصلاة والسلام السر النكاح

திருமணமே அந்த ரகசியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 32

விளக்கமளிக்கத் தேவையில்லை என்கிற அளவில் படித்தாலே வசனத்தின் கருத்து புரிந்து விடும் எனும் நிலையில் நபி மீது பொய்யுரைக்கப்படுகிறது.

இந்த வார்த்தைக்கு நபிகளார் இப்படியொரு விளக்கம் அளித்தார்கள் என்று எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை. ஏன் விரிவுரை நூலிலும் கூட இப்படி ஒரு செய்தி அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றிருக்கவில்லை. பலவீனமான செய்தி கூட இல்லை.

அப்படியிருக்க ஏன் நபி பெயரில் பொய் சொல்ல வேண்டும்?

சாதாரணமாக விளங்கும் விஷயத்தினை விளக்கக் கூட நபிகள் நாயகம் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்துவது எத்தகைய போக்கு என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நான்கு விஷயம் ஆட்சியாளர்கள் வசமுள்ளது

இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் இரு வகைகளாக உள்ளன.

ஒன்று ஆட்சியாளர்கள் நிறைவேற்றத்தக்கது. இதை தனிமனிதர்கள் செய்ய இயலாது. விபச்சாரம், திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனை வழங்குவது போன்று. மற்றொன்று தனிமனிதர்கள் நிறைவேற்றத்தக்கது. இவற்றுக்கு ஆட்சியாளர்கள் உதவி தேவையில்லை. அவர்களின் உதவியில்லாமலேயே நிறைவேற்றிவிட முடியும். இறைவனை வணங்குவது, நோன்பு உள்ளிட்டவை போன்று.

இப்படி இருவகை சட்டதிட்டங்கள் இஸ்லாத்தில் இருப்பதை யாரும் மறுக்க மாட்டார். இதற்கு குர்ஆன் பல சான்றுகளை அளிக்கின்றது.

ஆனால் ஹிதாயாவில் இது தொடர்பாக நபிகள் நாயகம் சொல்லாதது நபியின் பெயரால் பொய்யுரைக்கப்படுகிறது. இதோ அந்த பொய் செய்தி

الهداية شرح البداية (2/ 98)

ولنا قوله عليه الصلاة والسلام أربع إلى الولاة

நான்கு விஷயங்கள் ஆட்சியாளர்கள் கையில் உள்ளது என்ற நபிகளாரின் கூற்று நமக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 98

ஏதோ ஒரு நான்கு விஷயங்களை குறிப்பிட்டு இவை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்றும் அதுவே நமக்கு ஆதாரம் என்றும் கூறுகிறார்.

இவர் குறிப்பிடும் செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை. அநியாயமாக நபி மீது பொய்யுரைக்கப்படுகிறது. துணிவிருந்தால் இப்படி ஒரு செய்தியை நபி கூறினார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை ஹதீஸ் நூல்களிலிருந்து எடுத்துக் காட்டட்டும்.

ஒப்பந்தம் மீறாதே!

ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சான்றுகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே உள்ளன.

இருந்தும் என்ன பயன்? இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவதை விட இல்லாததை நபி மீது இட்டுக்கட்டி இருப்பதைப் போன்று காட்டுவது தானே மத்ஹபின் ஸ்பெஷல். அது தானே அவர்களின் அன்றாடம்.

இதோ இப்போது அதே பாணியில் எதிரிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டுகிறார்கள் பாருங்கள்.

الهداية شرح البداية (2/ 138)

وقد قال عليه الصلاة والسلام في العهود وفاء لا غدر

ஒப்பந்தங்கள் குறித்து நபிகள் நாயகம் சொல்லும் போது மோசடியில்லாது நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

ஒப்பந்தங்கள் என்றால் அது நிறைவேற்றப்பட வேண்டும். அதில் மோசடி கூடாது என்று நபி சொன்னதாக ஒரு ஹதீஸை (?) அள்ளிவிடுகிறார்கள்.

இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது?

ஒரு கருத்தை நிலைநாட்ட குர்ஆன் – ஹதீஸில் எவ்வளவோ சான்றுகள் இருந்தும் அவற்றைக் குறிப்பிடுவதை விட்டு விட்டு, பொய்யாக நபி மீது புனைந்து அதை ஆதாரம் என்று குறிப்பிடுவதில் மத்ஹபினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி போலும்.

இப்படி மத்ஹபில் நபி மீது பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிறகாவது, ஆம்! இவைகள் எல்லாம் பொய் தான். இப்படி நபி சொன்னதாக எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்று திருந்தி, தங்களை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும் அல்லவா?

அதுவுமில்லை. எங்கள் இமாம்கள் சொன்னால் எதையும் ஏற்போம் என்ற குருட்டுப் பார்வையில் தான் தாங்களும் இருக்கிறார்கள். அதை நோக்கியே மக்களையும் அழைக்கிறார்கள்.

என்று தணியுமோ இந்த மத்ஹபு வெறி. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

ஆட்டை அறுக்காதே!

சாப்பிடுவதற்காக மட்டுமே ஆட்டை அறுக்க வேண்டும் எனவும், அதைத் தவிர்த்து மற்ற நோக்கத்திற்கு அறுக்க கூடாது எனவும் ஒரு கருத்தை நபி பெயரில் பதிவிடுகிறார் நூலாசிரியர்.

பொதுவாக உண்ணத் தகுந்த பிராணிகள் எதை அறுத்தாலும் அதன் தோல் பயன்பாடு, இதர தேவைகளுக்காக அறுத்தாலும் கூட உண்ணுதல் என்பது அதில் பிரதான நோக்கமாகத் திகழும்.

ஆடு உண்ணத் தகுந்த பிராணி எனும் போது அதைப் பிற நோக்கங்களுக்காக மட்டுமே யாரும் அறுக்க மாட்டார்கள். அவற்றை அறுக்கும் போது அதன் இறைச்சியையும் உண்ண பயன்படுத்தவே செய்வார்கள்.

ஆனால் ஹிதாயா நூலாசிரியர் என்ன சொல்கிறார் எனில் ஆட்டை உண்பதற்காக மட்டுமே அறுக்க வேண்டும் என்று கூறிவிட்டு வழக்கம் போல அந்தப் பழியை நபி மீது சுமத்தி விடுகிறார்.

ஆம் நபிகள் நாயகம் இதை சொன்னார்களாம்.

الهداية شرح البداية (2/ 142)

لأنه عليه الصلاة والسلام نهى عن ذبح الشاة إلا لمأكلة

உண்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் ஆட்டை அறுக்க நபிகள் நாயகம் தடை விதித்தார்கள்.

ஹிதாயா, பாகம்  2, பக்கம் 142

இச்செய்தியின் தரம் என்ன நாம் சொல்ல வேண்டியதில்லை.

ஹனபி மத்ஹபு நூல்களில் ஒன்றே பின்வருமாறு குறிப்பிடுகிறது.

فتح القدير لكمال بن الهمام (12/ 471)

{ نَهَى عَنْ ذَبْحِ الشَّاةِ إلَّا لِمَأْكَلَةٍ } ) قُلْنَا : هَذَا غَرِيبٌ لَمْ يُعْرَفْ عَنْهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ نَعَمْ رُوِيَ مِنْ قَوْلِ أَبِي بَكْرٍ نَفْسِهِ

இச்செய்தி நபி (ஸல்) கூறியதாக அறியப்படவில்லை. ஆம். இது அபூபக்கர் (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கமால் அவர்களின் பத்ஹூல் கதீர்

பாகம் 12, பக்கம் 471

நபி சொன்னதாக இப்படி ஒரு செய்தி இல்லை என்று மத்ஹபு நூலே கூறும் நிலையில் தான் ஹிதாயாவில் பதிவாகியுள்ள செய்திகளின் தரம் இருக்கிறது என்பதை இதிலிருந்து புரியலாம்.

—————————————————————————————————————————————————————————————

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஏக இறைவன் பற்றிய பயம் நமக்கு முழுமையாக இருக்கும் போது, நாம் வாழ்வில் சரியான முறையில் நடந்து கொள்வோம். மார்க்கக் காரியங்கள் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் சீரிய வகையில் செயல்படுவோம். ஆகவே தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இறையச்சம் குறித்து அதிகமதிகம் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு மூலம் ரமலான் மாதம் முழுவதும் நமக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 2:183)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் சாப்பிடுவதற்கும், பருகுவதற்கும் வாய்ப்பு கிடைத்தால், மற்றவர்கள் முன்னிலையில் இருக்கும் போது மட்டுமல்ல, தனிமையில் உள்ள போதும் தவிர்த்துக் கொள்கிறோம்; விலகிக் கொள்கிறோம். இவ்வாறு எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுகிற குணத்தையே சத்திய மார்க்கம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. இது குறித்து சில முக்கிய கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்வோம்.

முஃமின்களிடம் இருக்கும் முக்கிய பண்பு

இம்மையில் வாழும்போது நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பாகப் பல செய்திகள் திருமறையில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையில் அல்லாஹ் கூறும்போது, முஃமின்கள் தனிமையில் இறைவனை பயந்து வாழ்வார்கள் என்று குறிப்பிடுகிறான். இதை மெய்ப்படுத்தும் வகையில் செயல்பட்டு நமது இறையச்சத்தை பரிபூரணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.

திருக்குர்ஆன் (21:49)

சிலர் சமூகத்தின் பார்வையில் இருக்கும் போது, சுத்த தங்கமாய் இருக்கிறார்கள்; மார்க்கக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்; தீமைகளை விட்டும் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடும்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான இறையச்சம் முஃமின்களுக்கு அழகல்ல.

அஞ்சுவோருக்கே அறிவுரை பயனளிக்கும்!

நாமெல்லாம் திருமறைக் குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது இறங்கிய மாதத்தில் நோன்பை நிறைவேற்றுகிறோம். இத்துடன் கடமை முடிந்து விட்டதென ஒதுங்கிவிடக் கூடாது.

திருமறைக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, தனித்திருக்கும் சமயத்திலும் வல்ல ரஹ்மானை பயந்து வாழும் தன்மை நம்மிடம் இருப்பது அவசியம்.

தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.

திருக்குர்ஆன் 35:18

இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:11

திருக்குர்ஆனின் வசனங்களை பள்ளிவாசல் சுவர்களில் பார்க்கிறோம்; பயான்களில் கேட்கிறோம். இப்படிப் பல வழிகளில் படைத்தவனின் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டாலும் பலருடைய வாழ்க்கை மார்க்கத்திற்கு எதிராகவே இருக்கிறது.

குர்ஆனையே மனனம் செய்தவர்கள், அதன் போதனைகளை அடுத்தவர்களுக்குச் சொல்பவர்களும் கூட அது தடுத்திருக்கும் காரியங்களைச் செய்கிறார்கள். இதற்கான முக்கிய காரணத்தை முன்கண்ட வசனத்தில் அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டான். அதைக் கவனத்தில் கொண்டு நம்மைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.

யூசுஃப் நபியும் படிப்பினையும்

இன்றைய காலத்தில் வழிகேட்டில் வீழ்வதற்கான வாய்ப்புகள் விசாலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, தனித்து இருக்கும் போது பாவங்களில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் தேடிவந்து அமையும். அதற்கான சிந்தனைகளை ஷைத்தான் அடிக்கடி தூண்டுவான். அப்போது அல்லாஹ்வை அஞ்சி சுதாரித்துக் கொள்ள வேண்டும். இந்தப் படிப்பினை யூசுஃப் நபி வாழ்வில் நமக்கு இருக்கிறது.

யூசுஃப் நபியை வளர்த்த மன்னனின் மனைவியே அவரைத் தவறான செயலுக்கு அழைக்கிறாள். அரண்மனை மாளிகையில் யாரும் இல்லாத தருணம். ஒருவேளை தவறு இழைத்தாலும் யாருக்கும் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும், யூசுஃப் நபி அல்லாஹ்வை                                     அஞ்சினார்கள். அவனிடம் உதவி தேடினார்கள். மனிதன் எனும் அடிப்படையில் மனதில் கெட்ட சலனம் ஏற்படும் போது படைத்தவன் அருளால் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து வா!என்றாள். அதற்கவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்’’ எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

திருக்குர்ஆன் 12:23, 24

நவீன தொடர்பு சாதனங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் யாருக்கும் தெரியாத வகையில் பல்வேறு அழிச்சாட்டியங்கள் நடக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் மூலம் மஹ்ரமாக இல்லாதவர்களுடன் மணிக்கணக்காக காம அரட்டை அடிக்கிறார்கள். ஒழுக்க நெறிகளைத் துறந்துவிடுகிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், நான்கு சுவருக்குள் இருந்தாலும் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் அச்சம் இல்லாததே ஆகும். இம்மாதியான மக்கள் திருந்திக் கொள்வதற்கு மாமனிதர் நபிகளாரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது ஸதகா பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புஹாரி (2432)

மன்னிப்பு பெற்றுத் தரும் இறையச்சம்

கொடுக்கல் வாங்கல், மற்றவர்களுடன் பழகுதல் என்று பலவிதமான செயல்களில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ தீமையான காரியங்களையும் செய்துவிடுகிறோம். இவ்வாறான நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெற வேண்டுமெனில், தனிமையிலும் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு எழ வேண்டும்.

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

திருக்குர்ஆன் 67:12

மிகைத்தவனிடம் வெகுமதியைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களிடம் உலக ஆதாயங்களைத் திரட்டிக் கொள்வதற்காக சில ஆலிம்கள் மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை மறைத்து விடுகிறார்கள். கௌரவம் குறைந்துவிடுமெனக் கருதி சத்தியக் கருத்துகளில் இருட்டடிப்புச் செய்கிறார்கள். இத்தகைய நபர்கள் அல்லாஹ்வைப் பயந்து தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:159,160

இம்மையிலே கிடைக்கும் இறையுதவி

திரைமறைவில் இருக்கும்போதும் படைத்தவனை நினைத்து திருத்திக் கொண்டால் இவ்வுலகிலேயே அவனுடைய உதவி நமக்குக் கிடைக்கும். துன்பங்கள், சிரமங்கள் ஆகியவற்றிலிருந்து அவன் நம்மைக் காப்பான். இதைப் பின்வரும் சம்பவம் மூலம் புரிந்து கொள்ள இயலும்.

‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.

ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துஎனக் கூறினார். அவ்வாறு இடைவெளி உண்டானது.

மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்குஎனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்குஎனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2215

அல்லாஹ்வை அஞ்சி மோசடி இல்லாமல் வியாபாரம் செய்தால் அதிலே பரக்கத் எனும் அருள் வளம் கிடைக்கும்.  பொய் பேசாமல், புறம் பேசாமல், அவதூறு கூறாமல், அடுத்தவர் மீது இட்டுகட்டாமல் தனிமனித ஒழுக்கத்தோடு நேர்மையாக வாழ்ந்தால் அவனது அன்பும் அரவணைப்பும் நிச்சயம் கிடைக்கும். இதைப் பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை.

அஞ்சுவோருக்கு அர்ஷின் நிழல்

ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி பரிசுத்தமாக வாழ்வோரை அல்லாஹ் மறுமையில் அடையாளம் காட்டுவான். முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் சங்கமித்திருக்கும் மஹ்ஷர் மைதானத்தில் இவர்களை கண்ணியப்படுத்துவான். அதன்படி, அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் நிற்கும் மகத்தான பாக்கியம் கிடைக்கும்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 660

மக்களிடம் மதிப்புடையவர்களாக இருக்க வேண்டுமென வெளிப்படையில் பாசாங்கு காட்டாமல், அல்லாஹ்விடம் நற்பெயர் பெரும் வண்ணம் எப்போதும் நல்லவர்களாகத் திகழ வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அழகிய முறையில் கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்போதுதான் நமக்கும் மறுமையில் உயர்வு கிடைக்கும்.

(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும். திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.

திருக்குர்ஆன் 50:31-33

தனிமையில் வரம்பு மீறுவோரின் மறுமை நிலை

மக்களிடம் மரியாதையோடு இருக்க வேண்டுமென அவர்களின் முன் மட்டும் நல்ல விதமாக நடந்து விட்டு, மறைவாக இருக்கும் போது மார்க்கத்தின் வரம்புகளை மீறுவோர் மறுமையில் மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்கள். குற்றவாளிகளாய் இருப்பார்கள். அவர்களின் நன்மையான காரியங்களை அல்லாஹ் அற்பமாக அலட்சியப் படுத்திவிடுவான்.

பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:120

அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4634

‘‘மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தில் திஹாமா மலையளவு நன்மைகளைக் கொண்ட கூட்டத்தினர் வருவார்கள் என்பதை நானறிவேன். மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ் அவர்களுடைய நன்மைகளை சிதறும் தூசுகளாக ஆக்கிவிடுவான்’’ என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அதற்கு சவ்பான் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவர்களைப் பற்றி அறியாத நிலையில் அவர்களில் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்; எங்களுக்கு சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

அதற்கு, ‘‘அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களுடைய சகோதரர்கள்; உங்களுடைய இனத்தை சார்ந்தவர்கள். உங்களைப் போன்று இரவில் (வணக்கத்தில்) ஈடுபடுபவர்கள். ஆனால், அவர்கள் தனித்திருக்கும் போது (மற்றவர்கள் முன்) எவற்றை விட்டும் விலகி இருந்தார்களோ அத்தகைய அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட காரியங்களை செய்யும் கூட்டத்தினர் ஆவர்’’ என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)

நூல்: இப்னுமாஜா 4245

அன்பார்ந்த சகோதரர்களே! எவரும் இல்லாத தருணத்திலும் கூட ஏக இறைவனை நினைத்து நம்மை நெறிப்படுத்திக் கொள்ளும் போது, பிறர் முன் இருக்கும் நேரத்திலும் தூய முறையில் பயணிக்கும் பக்குவத்தைப் பெற்றிடுவோம். இத்தகு நற்புரிதலையும், நல்ல மாற்றத்தையும் நோன்பு மூலம் பெற்று ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவனாக!

—————————————————————————————————————————————————————————————

கரணம் தப்பினால் மரணமே!

உம்முஹபீபா  

இவ்வுலகம் விஞ்ஞானத்திலும் நாகரீகத்திலும்  சிகரத்தை எட்டுமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. முந்தைய காலங்களில் மனிதன் மட்டுமே செய்து வந்த வேலைகளை தற்போது இயந்திரங்கள் வியக்கும் விதத்தில் நிறைவேற்றி வருகின்றன. புதிய புதிய இயந்திரங்கள், வாகனங்கள், சாதனங்கள் போன்ற பல கண்டுபிடிப்புகள் தலைதூக்கி நிற்கின்றன.

இந்த நாகரீக உலகத்தில் வாழும் மக்கள் இந்தக் கண்டுபிடிப்புகளின் பால்  தேவையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளில் வாகனங்கள் இன்றியமையததாக இருக்கிறது.

இந்த வாகனங்களில் ஏதோ ஒரு விதத்தில் மக்கள் ஒவ்வொரு நாளும் பிராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் பணிபுரிவதின் காரணமாக இருக்கலாம். அல்லது ஓட்டுநர்களாக இருக்கலாம். அவ்வப்போது தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே செல்பவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி யாராக இருந்தாலும் சாலை விதிமுறைகள் என்று அரசாங்கம் பிறப்பித்த கட்டளைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன் 4;59

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (கட்டளையைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக!’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3748

இன்றைய நவீன உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக சாலை நெருக்கடி, சாலை விபத்துக்கள், படுகாயங்கள், உயிரிழப்புகள் போன்றவை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குச் சான்றாக ஹிந்து நாளேட்டில் வெளியான ஒரு செய்தியைக் காண்போம்.

அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் கூறுகையில் காசநோய், மலேரியாவில் இறப்பவர்களை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு நபர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். 2020ஆம் ஆண்டில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் இன்றைய மக்களால் சாலை விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று கூறுவர். அது போன்றே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சாலை விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காதவர்களாகவே இருக்கின்றனர். வெறும் பாடப் புத்தகத்தில் மட்டுமே சம்பிரதாயத்திற்காகப் பாடம் நடத்தப்படுகின்றதே ஒழிய படித்தவர்கள் கூட இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே இச்சூழ்நிலையில் இந்த விபத்துகளைத் தடுப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்’’ என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?’’ என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 95

பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் சாலை விழிப்புணர்வு வாரமாக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத வாகனங்கள் வழக்கம் போல் சிட்டாய்ப் பறக்க போக்குவரத்து விதிகளும் காற்றில் பறக்கின்றன. தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்று சொல்கின்றோம். காரணம் பாதுகாப்பு இல்லாத சாலையில் பாதுகாப்பு இல்லாத பயணங்களால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் மனிதர்களுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச தண்டனை மரணம் தான்.

நம் உயிரும் நம்முடன் பிராயணிப்பவரின் உயிரும் விலை மதிக்க முடியாதவை. போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கும் அப்பாவி மனிதர் கூட, விதிமுறைகளை மீறும் நபரால் விபத்தில் இறக்கின்றார். மக்களிடம் சாலை விதிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று நம்மை நாமே ஆறுதல் படுத்திக் கொள்வது இதற்கான தீர்வாகுமா? என்பதை ஒரு கணம் நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைவரும் சாலை விதிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி நடப்பது தான் இதற்க்கான தீர்வாகும். பாதைகளின் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அடையாளங்களை அறிந்து கொண்டு அதன்படி சென்றால் ஆபத்து ஏற்ப்படுவதை தடுக்கலாம்.

இது தொடர்பான மார்க்கத்தின் கட்டளைகளைப் பார்ப்பதற்கு முன்னால் பொதுவான சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முதலில் காண்போம்.

பாதசாரிகளை கவனித்து சாலைகளைப் பயன்படுத்துதல்:

பல சமயங்களில் சாலை அனைவருக்கும் பொதுவானது என்பதை ஓட்டுநர்கள் மறந்து விடுவதால் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் தங்களது பாதுகாப்பை இழக்கின்றனர். எல்லா சமயங்களிலும் சாலையைக் கவனித்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் சாலையை கடக்கும் போது, அவர்கள் சாலையை கடந்து விடுவார்கள் என்பதை சரியாகக் கணித்து எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்டாத ஓட்டுநர்கள் விபத்தைச் சந்திக்க நேரிடும். எனவே பாதசாரிகளுக்கும், பிற வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தே (அவர்கள் சாலை விதிமுறைகளை மீறுவதாக இருந்தாலும்) வாகனத்தை ஓட்ட வேண்டும்.

பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களில் அவர்கள் அனைவரும் சாலையை கடக்கும் வரை வாகனத்தை நிறுத்தி பின்னர் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாக வாகனங்களை வளைத்து வளைத்து ஓட்டுவது தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதால் வாகனத்தை அவ்வாறு ஓட்டுதல் கூடாது. சாலையில் நின்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை வேகக் கட்டுப்பாடு இல்லாமல் கடந்து செல்ல முயற்சிப்பது விபத்தில் முடியலாம். எனவே பெரிய கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து பொறுப்புகளும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் இருக்க வேண்டும்.

விபத்துக்கள் ஏன் நிகழ்கின்றன?

விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணம் வாகன இயக்கத்தைத் தவிர்த்து ஓட்டுநர் மற்றும் சாலையில் செல்வோரின் வேறுபட்ட மனநிலையாகும். மனிதனுடைய சிந்தனைகளும், செயல்களும் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு மனிதன் ஒரு செயலைத் தவிர இரண்டு, மூன்று செயல்களை ஒரே சமயத்தில் செய்ய இயலாது. ஒருவரின் எந்தச் செயலும் அவருடைய சிந்தனைகள் அச்செயல் மீது இருக்கும் போது மட்டுமே நன்றாக இருக்கும்.

அது போலவே எந்த வாகனத்தை இயக்குபவர்களும் அல்லது சாலையை பயன்படுத்துபவர்களும் எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் சூழ்நிலைகள் போன்றவற்றின் மீது கவனமாக இருந்தால் விபத்தை தவிர்க்க இயலும்.

இதைத் தவிர நாம் எச்சரிக்கையாய் செல்லும் போது மட்டுமே பிற வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் திடீர் முடிவெடுக்கும் தன்மையை பொறுத்து, பாதுகாப்பைப் பெறுவது சாத்தியமாகும். எனவே சாலையில் நாம் செல்லும் போது நமது முழுக்கவனம் நமது பிரயாணத்தைப் பற்றியே இருக்கவேண்டும். நமது கவனம் பிரயாணத்தில் இல்லாத போதும் போக்குவரத்து விதிகள் மீறப்படும் பொழுதும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

விபத்தைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கான சில வழிமுறைகள்:

உலகத்தில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் போதிய திறமையும் பொறுப்பில்லாமல் அதிக வேகத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களால் தான் ஏற்படுகின்றன. இதனால் விபத்தில் மரணங்கள் ஏற்படுகின்றன.

பழகுநர் உரிமம் பெற்றவர்கள் தொடர்ந்து பல நாட்கள், பல மணி நேரங்கள் வாகனத்தை ஓட்டப் பழகுவதினால் மக்கள் தொகை அதிகம் இருக்கும் நெருக்கடியான இடங்களில் கூட வாகனத்தை நிறுத்தி, பிறகு எடுத்துச் செல்லும் திறமை பெறுகிறார்கள். எனவே அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் ஒருவர் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்வதும் சாலை விதிகள் மற்றும் குறியீடுகளைப் பின்பற்றி ஓட்டும் திறமையும் பெறுகிறார்கள்.

விபத்திற்கான காரணங்கள்

 1. போதிய அளவு ஓய்வில்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின் பேரில் வாகனத்தை ஓட்டுவது.
 2. மருந்து, மாத்திரைகள் உட்கொண்ட பிறகு வாகனங்களை ஓட்டுவது.
 3. மதுபான வகைகளை அருந்தி வாகனங்களை ஓட்டுவது.
 4. சிறுநீர், மலம் கழிக்க நினைத்துக் கொண்டே அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.
 5. வாகனத்திற்குள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மையைப் பொருத்துவது.
 6. வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது.
 7. ஓடும் வாகனத்திலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே தூக்கியெறிவது.
 8. பயணத்தைப் பற்றிய சிந்தனையில்லாமல் மற்றவற்றைச் சிந்திப்பது.
 9. செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது.

இவைகளை தவிர்த்துக் கொண்டால் ஓட்டுநர்கள் விபத்தினை தவிர்க்கலாம்.

விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநரின் மனநிலைகள்:

வாகனத்தை இயக்கும் போது அவசரம், கோபம், அதிக கவலை, பயம், அதிக சந்தோஷம், உடல் பலவீனம் போன்ற அதிகப்பட்ச உணர்ச்சிகளில் வாகனத்தை இயக்குவதை விட்டுவிட்டு சராசரியான மனநிலையில் செல்வது மட்டுமே பாதுகாப்பாகும்.

 1. குடி போதையில் வாகனத்தை இயக்குதல்.
 2. வாகன இயக்கத்தில் புகைபிடித்தல்.
 3. தூக்கத்தில் வாகனத்தை ஓட்டுதல்.
 4. நிதானிக்காமல் வாகனத்தை இயக்குதல்.
 5. போதைப் பொருட்களுக்கு அடிமையாய் இருத்தல்.
 6. தன்னை முந்திச் செல்லும் வாகனத்தை அவசியமில்லாமல் மீண்டும் முந்திச் செல்வது.
 7. பின்னால் வரும் வாகனங்களுக்கு வேண்டுமென்றே முந்த இடமளிக்காமல் செல்வது.
 8. விளையாட்டும், வேடிக்கையும் செய்து கொண்டு வாகனங்களை ஓட்டுவது.
 9. எதிர்வரும் வாகன ஓட்டுநரின் மன யூகங்கள் இவ்வாறு இருக்குமென தான் ஒரு யூகத்தை ஏற்படுத்தி வாகனத்தை ஓட்டுவது.
 10. தான் பாதுகாப்பாகச் சென்றால் போதும் என்றெண்ணி, பிறருக்கு ஏற்படும் விபத்தை பற்றிக் கவலைப்படாமல் வாகனங்களை ஓட்டுவது.
 11. பிறர் பயப்படும்படியாக வாகனங்களை ஓட்டுவது.
 12. தன்னிடத்தில் மிகுந்த திறமை உண்டென்றும், அதை மற்றவர்கள் காணவேண்டும் என்றெண்ணி வாகனத்தை வேகமாக ஓட்டுவது.

விபத்து ஏற்படும் போது பொதுமக்கள் செய்யவேண்டியவை: 

சாலை விபத்துகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. தினம், தினம் விபத்துச் செய்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாய் வருகிறது. சாலையில் நாம் பயணிக்கும் போது நம் கண்ணெதிரே சாலை விபத்தில் அடிபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடுவோரைப் பார்க்க நேர்ந்தால் நாமும் விபத்து நடந்த பகுதிக்குச் சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்காமல் காயமடைந்தோருக்கு உதவ நினைப்பது தான் நாம் செய்யும் மிகப் பெரிய நல்ல காரியம்.

‘108’ உட்பட அருகில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைகளுக்குத் தகவல் தெரிவித்தாலும் அவை வரும் வரை விபத்தில் காயமடைந்தவருக்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி சிகிச்சைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்

ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்என்றும், ‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

அல்குர்ஆன் 5:32

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனத்திற்கு:

இளைஞர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இரு சக்கர வாகனங்கள் தான். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் வாகனங்களை கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர். விளைவு சாலை விபத்துகளில் பலியாகின்றனர். சாலை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தாலும் சாலையில் மித வேகத்தில் வண்டியை ஓட்டிச் செல்வதும் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடமையாகும்.

பஸ்கள், லாரிகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் போன்றவைகளை விட ஆண்களாலும், பெண்களாலும் அதிகம் பயன்படுத்தக்கூடியவைகள் இரு சக்கர வாகனங்கள் தான். தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2000ஆம் ஆண்டில் 50.12 லட்சம். இது கடந்த நவம்பர் மாத நிலவரப்படி 1.95 கோடி. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 1.59 கோடி என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அதை முறையாகக் கையாள முயற்சிக்க வேண்டும்.

அரசாங்கம் செய்ய வேண்டியவை :

பொதுமக்களிடமிருந்து சரியான முறையில் வரி வசூலிக்கும் அரசாங்கம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட்டது. ஒரு ஆட்சியாளர் குடிமக்களுக்கு நலம் நாடவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய அரசாங்கம் பொறுப்பற்று எவ்வாறெல்லாம் நடக்கின்றது என்பதைப் பார்ப்போம்.

ஏதேனும் விழாக்காலங்களிலோ, விடுமுறை நாட்களிலோ தங்களுடைய வீட்டிற்கும், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் வழக்கமுடையவர்களாக மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் செல்வதற்கு ஏதுவாக அரசு பேருந்துகளின் எண்ணிக்கைகள் இருப்பதில்லை. கிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்தும் பேருந்து நிலையங்களில் சரியான முறையில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பேருந்து நிலையங்களில் நிற்பவர்கள் ஓடிச்சென்று ஏறும் நிலை உருவாகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் என்பதை அரசு ஊழியர்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்கான விதிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் என்பவர் பத்து முதல் ஐம்பது உயிர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர் தூக்கக் கலக்கத்துடனோ வேடிக்கை பார்த்துக் கொண்டோ கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டோ தங்களுடைய திறமையைப் பிறருக்கு காட்டுவதற்காக ஓட்டுவதோ, தான் மட்டும் பிழைத்தால் போதும் என்ற நோக்கில் ஓட்டுவதோ விபத்தை ஏற்ப்படுத்தும். அத்தனை உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓட்டுநர்களுக்குத் தான் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு சரியான முறையில் வாகனத்தை இயக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் அரசாங்கம் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளைச் சரிசெய்ய வேண்டும். காட்டுப் பாதைகளிலும் மக்கள் உபயோகிக்கும் சாலைகளிலும் சரியான மின் விளக்குகளை எரிய விட வேண்டும். இதுவும் விபத்து ஏற்படுவதற்கு பெரிதும் காரணமாக அமைகின்றது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நூல்: முஸ்லிம் 3733

சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்

சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்சொன்ன விதிமுறைகள் அனைத்தும் மக்கள் தொகை பெருக்கெடுத்து ஓடக்கூடிய இக்காலகட்டத்தில் அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ 1400 வருடங்களுக்கு முன்பாகவே மக்களுக்கு நலம் நாடும் விதமாக சாலை விதிமுறைகளையும் அதனைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் நமக்கு வலியுறுத்தியுள்ளது. ஒரு மனிதனின் வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்காமல் பொது வாழ்வில் அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகின்றது. ஏனெனில் இஸ்லாம் மார்க்கம் இயற்கை மார்க்கமாகும்.

உதாரணமாக ஓட்டுநர்கள் மது அருந்தக்கூடாது என்று அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. மது என்பது ஓட்டுநர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பவை அல்ல. பொது மனிதனுக்கு அவனது ஆரோக்கியமான உடலை ஆரோக்கியமற்றதாக ஆக்கிவிடும் கொடிய விஷம். அதனால் தான் இஸ்லாம் அதை மனித இனத்திற்கே  அறவே தடை செய்துவிட்டது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார்.

நூல்: முஸ்லிம் 4076

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ஜைஷான்எனுமிடத்திலிருந்து வந்து தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக் கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் ஆம் (போதையளிக்கக் கூடியதே)’’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) தீனத்துல் கபாலைநிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! தீனத்துல் கபால்என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள்

நூல்: முஸ்லிம் 4075

ஈமானில் உள்ள அம்சம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமானஅல்லது அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

நூல்: முஸ்லிம் 58

பாதைகளில் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவது இறைநம்பிக்கையில் உள்ள அம்சம் என்று கூறி, பிறர் நலம் நாட இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது.

போக்குவரத்துப் பாதைகளில் இடையூறு அளிக்கின்ற பொருட்களைக் கண்டும் காணாமல் இருப்பதினாலும் கூட விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த இடையூறுகளை அகற்ற வேண்டிய கடமை உள்ள மக்களில் சிலரோ போக்குவரத்து சாலைகளில் திருஷ்டி எனக் கூறி பூசணிக்காயை உடைக்கின்றனர். இது போன்றே பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களைக் குடித்து விட்டு குப்பைத் தொட்டிகளில் அவற்றைப் போடாமல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளில் வீசியெறிகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களும், வயதானவர்களும், ஊனமுற்றவர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிகளும், சிறுவர்களும், கவனமற்றுச் செல்லும் பொது மக்களும் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப் போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான்.     

நூல்: முஸ்லிம் 5105

பாதசாரிகளுக்கு இடையூறு தரும் பொருட்கள் சாலைகளில் கிடந்தால் அவற்றை அகற்றிவிட்டுச் செல்வது பாராட்டுக்குரிய நன்மையை பெற்றுத் தரும் செயலாகும். மேலும் இறை நம்பிக்கையில் ஒரு பகுதியுமாகும். மரம், மரக்கிளை, முள், கல், கண்ணாடி, அசுத்தங்கள் போன்ற மக்களுக்கு தொந்தரவு தரும் எந்தப் பொருளாக இருந்தாலும் அவறறை அகற்றுவது மக்களின் கடமையாகும். இன்னும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நல்லறங்களாகும்.

துர்நாற்றம் வீசக்கூடிய, அருவருப்பாகக் காட்சி தரக்கூடிய, வழுக்கி விட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடிய, போக்குவரத்துக்கு  இடையூறு அளிக்கின்ற, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அனைத்துமே இவற்றில் அடங்கும்.

பேருந்து நிலையம் என்றாலே நம் நினைவுக்கு வருவது துர்வாடை வீசும் கழிவறைகளும், தேங்கி நிற்கும் சாக்கடைகளும், சுத்தம் செய்யப்படாத குப்பைத் தொட்டிகளும் தான். இவைகள் பயணிகளுக்கு  உடலளவிலும், மனதளவிலும் மிகவும் வெறுப்பை ஏற்படுத்துவை. சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் இவற்றில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது நாம் அறிந்த கசப்பான உண்மை.

ஆகவே அரசாங்கம் மக்களின் நலன் கருதி இவற்றில் தக்க கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அனைத்திற்குமே வரி செலுத்துகின்றனர். எனவே இதில் முறைப்படி கவனம் செலுத்துவது அரசின் கடமையாகும்.

பாதையின் உரிமை

இன்றைய காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இது மட்டுமின்றி வன்முறைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும், வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சாலைகளை அவர்களால் இயன்ற அளவிற்கு அசுத்தப்படுத்துகின்றனர்.

இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. சாலைகளில் ஒன்று கூடி சீட்டியடிக்கின்றனர். மேலும் அங்கு வரக்கூடிய பெண்களிடம் கேலி கிண்டல் செய்து தவறான முறைகளிலும் அவர்களிடம் நடக்கின்றனர். இன்றைய கால சூழ்நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் கடைத்தெருவுக்குச் சென்று வருவது கூடக் கேள்விக்குறியாகி விட்டது. இவை பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளாகும். இவற்றை உணர்ந்த இஸ்லாம் சாலையில் பேண வேண்டிய ஒழுங்குமுறைகளை அழகிய முறையில் நமக்கு கற்றுத் தருகின்றது.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, “சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷயங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்; கலந்துரையாடுகிறோம்’’ என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்‘’ என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4365

எனவே சாலை ஓரங்களில் அமர்வதைத் தவிர்ப்பதே நல்லது. அமர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மேற்சொன்ன ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயணம் வேதனையின் ஒரு துண்டு

பிரயாணம் செய்வதென்றாலே அனைவருக்கும் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். இந்த மகிழ்ச்சி ஒரு சில மணிநேரங்களே அதன் பிறகு நாம் சேர வேண்டிய இடம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் நமக்குள் எழும். ஏனெனில் பிரயாணம் என்பது வேதனையின் ஒரு துண்டு என்று நமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப பிரயாணம் செய்வதால் உடல் களைப்பு, தூக்கமின்மை, சோர்வு போன்ற காரணங்களால் பிரயாணிகள் பலகீனர்களாக ஆகிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர், தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.

நூல்: முஸ்லிம் 3892

சுமைகளை ஏற்ற, இறக்க உதவுவதும் தர்மமே!

இதுபோலவே பிரயாணிகள் தங்களது வாகனங்களைப் பிடிக்க விரையும் போதோ அல்லது வாகனங்களிலிருந்து இறங்கும் போதோ அவர்களின் சுமைகள் அவர்களுக்குப் பாரமாகவே இருக்கும். இந்நிலையில்  அங்கே இருக்கும் இதர மக்கள் அவர்களின் சுமைகளை ஏற்ற இறக்க உதவுவது நற்காரியமாகும்.

மேலும் சில வாகனங்களில் முதியவர்களுக்கென்றும், மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் தனித் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதை எவரும் கவனிப்பதில்லை. இதுவும் மனிதாபிமானமற்ற செயலாகும். இப்படிப்பட்ட இரக்கமற்ற பண்புக்குரியவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (படைப்பினங்கள் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்

நூல்: புகாரி 6013

அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

நூல்: புகாரி 2891

அடுத்தவர்களின் உடைமைகளை அபகரிப்பது

ஒரு சிலர் பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மக்களிடம் அவர்களின் பலகீனத்தைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி அவர்களின் பொருட்களை அபகரிக்கின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளைக் கடத்துவது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சில பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் பிரயாணிகள் பதற்றத்துடன் இருப்பதால் தங்களது பொருட்களைத் தவற விடுவதுண்டு. அந்தப் பொருட்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை அடையாளம் தெரியவில்லையென்றால் காவல் நிலையங்களில் அதை ஒப்படைக்க வேண்டும். இதுவே நல்ல பண்பு.

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள்

நூல்: புகாரி 2474

மேற்கண்ட அனைத்து மார்க்கச் சட்டங்களையும் அரசால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் கடைபிடித்தோமேயானால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். எனவே சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து சாலை விபத்துகளைத் தவிர்ப்போம்.

—————————————————————————————————————————————————————————————

பெண்கள் பகுதி

தீய சபைகளைப் புறக்கணிப்போம்

எஸ். மெஹருன்னிஸா, உதகை

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

ஷைத்தான் என்பவன் மனிதனுக்கு மிகவும் மோசமான, கெட்ட எதிரியாவான். தீய எண்ணங்களைத் தூண்டி, தனக்கு அடிமையாக்கி நரகவாசியாக மனிதனை மாற்றுவதில் ஆவல் கொண்டவன்.

அவனிடமிருந்து, அவனுடைய ஊசலாட்டத் திலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமானால் இறைவன் தன் திருமறையில் அருளியவாறு தீய சபைகளைப் புறக்கணித்து, நல்ல சபைகளில் ஐக்கியமாக வேண்டும். அல்லாஹ்வை நினைவு கூரும் சபையே நல்ல சபைகள் ஆகும். ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாகப் பெண்கள் இதுபோன்ற மஜ்லிஸ்களை நடத்தி தீமைகளின் வீரியத்தைக் குறைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் வல்லமைகளையும், சொர்க்கத்தின் பேரின்பத்தையும் நரகத்தின் பயங்கரத்தையும், கப்ரின் வேதனைகளையும், ஷைத்தானின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் நற்செயல்கள் செய்திடவோ, நல்ல மஜ்லிஸ்களில் கலந்து கொள்ளவோ நேரத்தைச் செலவிட எண்ணும் போது, வீணான பொழுதுபோக்கில் நேரத்தைச் செலவிடும் மற்றொரு பெண் அவளை எளிதில் தடுத்து விட முடிகின்றது. ஏனெனில் ஷைத்தான் தீய விஷயங்களை அழகாக்கிக் காட்டுவதில் திறமை உள்ளவன்.

ஷைத்தான் தீய எண்ணங்களை உருவாக்கினாலும் அதைச் செயல்படுத்தாத வரை அல்லாஹ் நம்மைத் தண்டிப்பதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5269

நரகத்தில் அதிகமான எண்ணிக்கையில் பெண்களைக் கண்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதற்குக் காரணம், ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி, அவனுடைய கட்டுப்பாட்டில் அதிகம் சரணடைவது பெண்கள் தான்.

புறம் பேசி அலைபவர்கள், அவதூறு பேசித் திரிபவர்கள், சினிமா செய்தி ஆர்வலர்கள், பேராசையின் தூண்டுதல் ஏற்படுத்துபவர்கள், வீணான கவலைகளைப் பெரிதுபடுத்தி பொறுமையைத் தோற்கடிப்பவர்கள், ஷிர்க் மற்றும் பித்அத்தான காரியங்களை பிரம்மாண்டமாகச் செய்து, அதை அழகான முறையில் நியாயப்படுத்துபவர்கள் இப்படிப்பட்ட ஷைத்தானின் தாக்குதலுக்கு ஆளான பெண்களின் தொடர்புகளை விலக்கிக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி நற்செயல்கள் செய்து, சோதனைகளைப் பொறுத்துக் கொண்டு சொர்க்கத்தை எதிர்பார்க்கும் ஸாலிஹானவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும். நமது ஈமான் துருப்பிடித்து விடாமல் பாதுகாக்க இதுவே சிறந்த வழியாகும.

உலகெங்கிலும் நமது இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் நடைமுறைகளையும் பார்த்து, தெளிவடைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அதுபோன்று நாமும் தீய விஷயங்களுக்குத் துணை போகாமல் இறையச்சம் நிறைந்த நல்லோர்களுடன் இருந்தால் அதைக் கண்டு நம்மைச் சுற்றியுள்ள தீயவர்கள் கூட மாறி விட வாய்ப்புண்டு.

மறுமையில் வலது புறத்தாருடன் நாம் சேர்வதற்குக் கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றது.

நமது நண்பர்களுக்கு மன சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ, உறவுகள் விலகி விடுமோ, செல்வந்தர்களின் நேசம் குறைந்து விடுமோ, கொடுக்கல் வாங்கலைத் தவிர்த்து விடுவார்களோ என்றெல்லாம் எண்ணி மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவர்கள், தவறான நேசத்தை உடையவர்கள் மறுமையில் ஏற்படப் போகும் விளைவுகளைச் சிந்தித்து திருந்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:123

மறுமையைப் பற்றி இறைவன் தன் திருமறையில் எச்சரிக்கும் போது, அந்த நாளில் எந்த உறவுகளும், யாருக்கும் பயன் தரமாட்டார்கள்;  சிபாரிசுகள் எடுபடாது; இவ்வுலகில் குற்றம் செய்து உறவு கொண்டாடி குதூகலம் கொண்டவர்கள் மறுமையில் ஒருவருக்கொருவர் ஏசிக் கொள்வார்கள் என்றெல்லாம் அல்லாஹ் எச்சரிக்கின்றான். இத்தகையவர்கள் எந்தப் பலனும் அற்று நரகத்தின் கூட்டாளிகளாக நிற்கதியற்று நிற்பார்கள். இதனைத் தினமும் நம் சிந்தனையில் கொண்டு செயல்பட்டால் இம்மை வாழ்வு வளம் பெறும். அல்லாஹ்வின் நேசமும் கிடைக்கப் பெறும்.

குறைவான நாட்களே உடைய இந்த அற்ப உலகில் நல்லவர்களாக நடக்கும் போது அல்லது ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது சில சோதனைகளும் பிரச்சனைகளும் ஏற்படும். சிலர் நம்மை இழிவுபடுத்தவும் செய்வார்கள். இதை எதிர்கொள்ள அஞ்சினால், மறுமையில் உலகம் தோன்றியது முதல் அழிக்கப்படும் வரையுள்ள அனைத்து மக்களின் முன் இழிவுபட நேரிடும்.

இதை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக நாம் தீயோர்களின் சபைகளைத் தவிர்த்து, நல்லோர் சபை தேடி நம் தீனுக்கு உரம் போடலாம் இன்ஷா அல்லாஹ்!