ஏகத்துவம் – ஜூலை 2016

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய  சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான்.

நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!’’ என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!

அல்குர்ஆன் 2:63

இப்படி உறுதிமொழி எடுத்த பின்பும் அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்தனர். அந்த வேதத்தை விட்டு விலகினர். அந்த வேதமும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த சமுதாயம் வேதத்தின் படி நடப்பதற்கு இதுபோன்று  தூர் மலையெல்லாம் தலைக்கு மேல் தூக்கி வைக்கவில்லை. புனித மிக்க குர்ஆன் இறங்கிய மாதமான ரமளான் மாதத்தில் நோன்பைக் கடமையாக்கி, அந்த நோன்பின் மூலமாக இந்தச் சமுதாயத்தை  வேதத்தின் திரும்பச் செய்கிறான்.

வேதத்தை விட்டும் காத தூரம் சென்ற மக்களில் பலர் தத்தமது சக்திக்கேற்ப இதன் பக்கம் திரும்பி வந்து தங்களால் இயன்ற அமல்களைச் செய்கின்றனர். அதிலும் ஒரு மாத காலப் பயிற்சி என்பது  ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு பள்ளிக்கூடத்தில் போய் படிப்பதற்குரிய, போதிய கால அவகாசமாகும். இந்த வகையில் ரமளான் மாதம் ஒரு பள்ளிக்கூடமாகவே பாடம் நடத்தி விட்டுப் போயிருக்கின்றது.

முஸ்லிம்களில் நோன்பு நோற்காதவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் மிகக் குறைவான  விகிதாச்சாரம் எனும் அளவில் தான் உள்ளனர். அந்த அளவுக்கு இந்தக் குர்ஆன் அவர்களிடம் குடிகொண்டு ஆட்சி நடத்துகின்றது. நோன்பின் மூலம் அவர்களைத் தன் பக்கம் குர்ஆன் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல்வேறு விதமான பாடங்களை அவர்களிடம் பதிய வைக்கின்றது.

தாகமெடுக்கும் போது தண்ணீர் பக்கத்தில் இருக்கின்றது ஆனால் பருகுவதில்லை. பசியெடுக்கும் போது  உண்பதற்குப் பானையில் சோறு அருகில் நிறையவே இருக்கின்றது. ஆனால் ஒரு பருக்கை சோற்றைக் கூட வாயில் போட்டு பதம் பார்ப்பதில்லை. ஆரத் தழுவுவதற்கு அருமை மனைவி  அண்மையில் இருந்தாலும் தடுக்கப்பட்ட பகல் நேரத்தில் ஆசையைத் தணிப்பதற்கு முன் வருவதில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அல்லாஹ் அருகில் இருந்து கண்காணிக்கின்றான் என்ற அச்சம் தான். அந்த அச்சத்தை அல்குர்ஆன் ரமளான் மாதத்தில் உருவாக்கி விடுகின்றது.  இது திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் ஊட்டுகின்ற முதல் பாடமாகும். இந்த இறையச்சம் இதயத்தில் பதிந்து விட்டால் மற்ற நன்மைகள் தானாகவே ஊற்றெடுக்க ஆரம்பித்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ரமளான் மாதம் வந்ததும் தனியாகவும், தொழுகையில் அணியாகவும் (ஜமாஅத்தாகவும்)  இந்தக் குர்ஆனை அதிகம் அதிகம் ஓதுகின்றனர். அதாவது தங்கள் உறவை குர்ஆனுடன் புதுப்பித்துக் கொள்கின்றனர். இப்படி ஒரு நெருக்கத்தை, குர்ஆன் மக்களிடம் உண்டாக்கிக் கொள்கின்றது. இம்மாதத்தில் முஸ்லிம்கள், ஏழைகளுக்கு ஏராளமான தான தர்மங்களைச் செய்கின்றனர். தர்மங்கள் வழங்குதற்கு அவர்களை ஊக்குவித்து இயக்கிய உந்து சக்தியாக இந்தத் திருக்குர்ஆன் தான் திகழ்கின்றது.

ரமளான் மாதம்  என்ற பள்ளிக்கூடம் தருகின்ற பாடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அது  தருகின்ற மற்றொரு முக்கியப் பாடம் இரவுத் தொழுகையாகும். சாதாரண காலங்களில் இந்தத் தொழுகையில் நாம் ஆர்வம் காட்டுவது கிடையாது.

நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி எண்: 37

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதால் நாம் ஆர்வம் காட்டுகின்றோம். இந்தத் தொழுகையை நாம் முன்னேரத்திலும் தொழுகின்றோம். பின்னேரத்திலும் தொழுகின்றோம். குறிப்பாக ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் பின்னேரத்தில் தான் தொழுகின்றோம். ஏன்? அந்த நேரம் அவ்வளவு சிறப்புக்குரிய நேரமாகும்.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?’’ என்று தூதர்கள் கூறினார்கள்.

அல்குர் ஆன் 11:81

இங்கு வைகைறைப் பொழுது என்று அல்லாஹ் குறிப்பிடுவது சுபுஹ் நேரமாகும். அல்லாஹ் லூத்  (அலை) சமுதாயத்தை அழிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம் சுபுஹ் நேரமாகும். அதே சமயம் லூத்  (அலை) சமுதாயத்தின் நல்லவர்களைக் காப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம் ஸஹர் நேரமாகும்.

அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம்

அல்குர்ஆன் 54:34

இந்த வசனத்தில் இரவின் கடைசி நேரம் என்று அல்லாஹ் குறிப்பிடுவது ஸஹர் நேரமாகும்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்என்று கூறுவான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி எண்: 1145

நீங்கள் சேவல் கூவுவதைச் செவியுற்றால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். ஏனென்றால் அது மலக்குகளை பார்த்து விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்:  4908

இது ஸஹர் நேரம் பற்றி ஹதீஸ்கள் கூறும் சிறப்பாகும்.

எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ என்று அவர்கள் கூறுவார்கள்.  (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட் டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) 

அல்குர்ஆன் 3:16,17

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

அல்குர்ஆன் 51: 17,18

இந்த வசனங்களில் நல்லடியார்களின் பண்புகளைப் பற்றிக் கூறும் போது  அவர்கள், ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் என்றும் இரவில் அவனை நினைப்பதற்காக விழித்திருப்பார்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

இந்தப் பண்புகளை வளர்க்கின்ற, வார்க்கின்ற பள்ளிக் கூடமாகவும் பயிற்சிப் பட்டறையாகவும் இந்தப் புனித ரமளான் அமைந்திருக்கின்றது. ஸஹர் உணவு சாப்பிடுவதற்காகவும் பிந்திய 10 இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி ஸஹர் நேரங்களில் தொழுவதற்காகவும் எழுந்து பழகி ஒரு பாடத்தையும், பயிற்சியையும் பெற்றிருக்கின்றோம். எவ்வளவு தான் இரவில் நாம் கால தாமதமாகப் படுத்தாலும்  ஏதேனும் ஓர் ஏற்பாடு செய்து  அதிகாலையில் எழுவதற்குக் காரணம், ரமளான் ஊட்டிய இறையச்சம் தான்.

இந்த அச்சம் பெருநாளைக்குப் பிறகு பிரியா விடை கொடுத்து விடக் கூடாது. அடுத்த ஆண்டு வரைக்குமல்ல; ஆயுட்காலம் முடிகின்ற வரையில் உள்ள  மிச்ச சொச்சமுள்ள நாட்களிலும் அது தொடர வேண்டும் என்ற பயிற்சியையும், பக்குவத்தையும் அது ஊட்டி விடுகின்றது. தூர்ந்து போன நம் இதயத்தில் இப்படியொரு ஜோதியை ஏற்றி விடுகின்றது.

இந்த ஜோதி பெருநாளைக்குப் பிறகு அணைந்து விடக்கூடாது. பெருநாளுக்குப் பிறகு உடலை விட்டு உயிர் பிரியும் நாள் வரை   ரமளானில் பற்றிய இந்த ஜோதி பற்றி எரிய வேண்டும்.

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு, அல்லது அதைவிடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73:1,2,3,4) என்ற வசனங்களின் அடிப்படையில்  இரவுத் தொழுகை ஆரம்பக் கால கட்டத்தில் கடமையாக இருந்தது. 

பின்னர், “(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 73:20) என்ற வசனங்கள் மூலம் இறைவன் சலுகையை வழங்கி இரவுத் தொழுகையை உபரியான வணக்கமாக ஆக்கிவிட்டான். இந்த விளக்கத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள்.

(பார்க்க: முஸ்லிம் ஹதீஸ்  எண்: 1233)

இந்த ஹதீஸிலிருந்து இரவுத் தொழுகையின்  முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இதே 73வது  அத்தியாயம் 7வது வசனத்தில் இரவில் எழுவது மிக்க உறுதியானதும், சொல்லைச் சீராக்குவதுமாகும் என்றும் அல்லாஹ் இரவுத் தொழுகை பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.

புனித போர்க் களத்தில் பங்கெடுக்கின்ற போராளிகளாக இருந்த நபித் தோழர்கள் இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக இருந்துள்ளனர்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)யை எடுத்துக் காட்டாகக் கூறலாம். பின்வரும் ஹதீஸ் இதை தெளிவுபடுத்துகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர் களும் இருந்தனர். உடனே நான் நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்’’ என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்’’ என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)’’ என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

நூல்: புகாரி 1122

நமது தலைமையின் சார்பில் அண்மையில் மாநிலம் முழுவதையும் நெல்லை, கோவை, திருச்சி, சென்னை என்று மண்டலங்களாகப் பிரித்து தர்பியா நடத்தப்பட்டது.  இந்த தர்பியாவில் இரவுத் தொழுகைக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்குப் பின் ரமளான் மாதம் பொருத்தமாக வந்து விட்டது. இவையனைத்தும் நம்மிடத்தில் இரவுத் தொழுகை என்ற வணக்கத்தை இறுதி மூச்சு வரை தொடரச் செய்யட்டுமாக! குறைந்தபட்சம் மூன்று ரக்கஅத்துகள் வித்ரையேனும் பின்னேரத்தில் தொழத் துவங்க வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே அவர்களுக்கு விருப்ப மானதாக இருந்தது! ஒரு தொழுகை யை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

நூல்: புகாரி 1970

இந்த ஹதீஸ் அடிப்படையில் குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்வோமாக!

—————————————————————————————————————————————————————-

பித்அத்துகளின் ஊற்றுக்கண் இஹ்யா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர் 27

இதுவரை இஹ்யாவில் நீங்கள் பார்த்த பலவீனமான ஹதீஸ்கள் கடலிலிருந்து ஒரு துளியளவு தான். இஹ்யாவுக்குள் படித்து ஆய்வு செய்யும் நோக்கில்  அதில் இடம்பெற்றிருக்கின்ற பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட, எந்த ஓர் அடிப்படையும் இல்லாத ஹதீஸ்களைத் துல்லியமாகக் கணக்கெடுக்கவும் விரும்பி ஒருவர் களமிறங்கினால் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹதீஸ்களைக் காண நேரிடுவார். அந்த அளவுக்கு அப்படிப்பட்ட ஹதீஸ்கள் இஹ்யாவுக்குள் குவிந்து கிடக்கின்றன. அறிவுரைகள், அறவுரைகள், உள்ளங்களை நெகிழச் செய்கின்ற நெஞ்சுருக வைக்கின்ற சம்பவங்கள் போன்றவற்றை மேடைப் பேச்சாளர்கள் அடுக்கடுக்காக அள்ளி வீசுகின்ற பெரும்பான்மையான போலி ஹதீஸ்களுக்கு ஊற்றுக் கண்ணாக இருப்பது  இந்த இஹ்யா என்ற உருப்படாத நூல் தான்.

இவ்வாறு நாம் கூறினால் அது மிகைப்படுத்திக் கூறியதாக ஆகாது.  இந்தப் பொய்யான ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படுத்தவிருக்கின்ற விபரீதத்தைப் புரிந்தவர்களால் மட்டும் தான் இதன் அபாயத்தைப் பற்றி மதிப்பீடு செய்ய முடியும். மற்றவர்களால் இதனை மதிப்பீடு செய்ய முடியாது.  நபி (ஸல்) அவர்கள் மீது இப்படி பலவீனமான ஹதீஸ்களை அடித்து விடுவது நியாயமாகுமா?  இதற்கு கஸ்ஸாலியின் காதல் பக்தர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

கஸ்ஸாலியின் மீது பைத்தியம் பிடித்தவர்களைப் பற்றி இங்கு நாம் பேச வேண்டியதில்லை. காரணம் முந்தைய நூற்றாண்டுகளில் பொய்யான ஹதீஸ்களை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவ விடுவதின் மூலம் இஸ்லாத்திற்கு எதிராகத் தீட்டப்பட்ட தீய சதித் திட்டத்தைப் பற்றி இந்த ஆசாமிகளுக்குத் தெரியாது. தங்களது நல்ல அல்லது கெட்ட எண்ணத்தின் மூலம் சமுதாயத்தில் இந்தப் பொய்யான ஹதீஸ்களை பதிய வைப்பதின் மூலம் அந்த சதித் திட்டத்திற்கு இவர்கள் துணை போகின்றார்கள் என்ற விபரத்தை இவர்கள் உணரவும் மாட்டார்கள்.

இஹ்யாவில் இடம் பெற்றிருக்கின்ற போலியான, பொய்யான ஹதீஸ்களைப் படித்து ஆய்வு செய்பவர் இவை முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய பாதிப்புகளையும் பெரும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நன்கு தெளிவாகப் புரிந்ததால் தான் முராபிதீன்கள் – மொரோக்கோவில் இஸ்லாமிய ஆட்சியை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடத்திய அமைப்பினர் – இஹ்யாவை எரிப்பதைத் தங்கள் சமூகக் கடமையாகக் கொண்டு அதை ஏன் எரித்து சாம்பலாக்கினார்கள்   என்ற உண்மையை தெளிவாகப்  புரிந்து கொள்வார். அவர்கள் செய்த சமுதாயப் புரட்சிக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

இஹ்யா என்ற நூல் மக்களை விட்டும் அந்நியப் படுத்தப்பட வேண்டும் அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்பதற்கு  இம்மாபெரிய அளவில் பலவீனமான, பொய்யான, போலியான ஹதீஸ்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன என்பதே போதுமான சான்றாகும். இது இஹ்யாவின் முதல் தீய அடிப்படையாகும்.

பித்அத்துகள்

அடுத்து, பித்அத்கள் அதில் இடம் பெற்றிருக்கின்ற இரண்டாவது தீய அடிப்படையாகும். முதன் முதலில்  சூஃபிய்யாக்களிடம் பரவி விரவிக் கிடக்கின்ற பல பித்அத்துகளுக்கு ஆணிவேராக இருப்பது இந்த இஹ்யா தான். அடுத்து, இரண்டாவதாக பித்அத்துக்காரர்களிடம் பல்வேறு பரிமாணங்களில் தலை விரித்தாடுகின்ற பித்அத்துகளுக்கு அஸ்திவாரமாக இருப்பதும் இந்த இஹ்யா தான்!  மொத்தத்தில் இஸ்லாமிய உலகில் பேயாட்டம் போடுகின்ற ஒட்டுமொத்த பித்அத்துகளுக்கும் ஊற்றுக்கண் இந்த இஹ்யா தான் என்றால் அது மிகையல்ல!

இஹ்யாஉ உலூமித்தீன் முதல் பாகத்தில்,  கிதாபுத் தர்த்தீபுல் அவ்ராத், வ தஃப்சீலு இஹ்யாயில் லைல் (வழமையாக ஓதுகின்ற துஆக்களை வரிசைப்படுத்தல், இரவுகளை உயிர்ப்பித்தல் என்ற அத்தியாயத்தில், இரவில் நின்று தொழுவதற்கு எளிமையாக்கப் படுவதற்குரிய காரணங்கள் என்ற பாடத்தில்)  சிறப்புக்குரிய இரவு பகல்களின் விளக்கம் என்ற தலைப்பில் கீழ் கஸ்ஸாலி கூறுவதாவது:

சில இரவுகளுக்கு தனிச் சிறப்புகள் உள்ளன. அந்த இரவுகளில் நின்று வணங்குவது அதிகமான  சிறப்பு என்று நபி வழியில் உறுதியாகி உள்ளது. அவை 15 இரவுகளாகும்.  நன்மையை நாடுகின்ற நல்லடியார் அந்த இரவுகளில் வணக்கம் புரிவதை விட்டும் அலட்சியம் கொள்ளலாகாது. ஏனென்றால் அவை நன்மைகளை விளைவிக்கின்ற வியாபாரம் அதிகமாகவும் அபரிமிதமாகவும் நடக்கின்ற பருவ காலங்களாகும்.  சீசன் (பருவக்கால) வியாபாரத்தைத் தவற விடுபவர் லாபம் ஈட்டமாட்டார்.   அது போல் சிறப்பான  நேரங்களில் கிடைக்கின்ற நன்மையை நாடுகின்ற நல்லடியார் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர் லாபம் ஈட்ட மாட்டார்.

சிறப்பான 15 இரவுகளில் 6 இரவுகள் ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றில் 5 இரவுகள் பிந்திய 10 ல் ஒற்றைப் படை இரவுகளில் உள்ளன. காரணம் இந்த இரவுகளில் தான் லைலத்துல் கத்ர் அடங்கியுள்ளது. அதனால் அவற்றில் அந்த இரவைத் தேடுவது அவசியமாகும். அடுத்து ரமளான் மாதத்தில் அமைந்திருக்கின்ற 17வது இரவாகும். அந்நாள் இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாள் மற்றும் சத்தியவாதிகளையும் அசத்திய வாதிகளையும் வேறுபடுத்திக் காட்டிய நாளாகும்.  அந்த நாளில் தான் பத்ர் போர் நடந்தது.  இப்னு சுபைர் (ரஹ்)  பத்ர் போர் நடந்த அந்த இரவு லைலத்துல் கத்ர் என்று குறிப்பிடுகின்றார்.

மீதமுள்ள 9 இரவுகள், 1) முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு  2) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) இரவு 3) ரஜப் மாதத்தின் முதல் இரவு 4)  அம்மாதத்தின் 15 ஆம் இரவு 5) அதே மாதத்தின் 27 ஆம் இரவு. அது தான் மிஃராஜ் இரவாகும். அந்த  இரவில் தொழுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

فقد قال صلى الله عليه وسلم للعامل في هذه الليلة حسنات مائة سنة، فمن صلى في هذه الليلة اثنتي عشر ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة من القرآن، ويتشهد في كل ركعتين، ويسلم في آخرهن ثم يقول: “سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، مائة مرة، ثم يستغفر الله مائة مرة ويصلي على النبي صلى الله عليه وسلم مائة مرة، ويدعو لنفسه بما شاء من أمر دنياه وآخرته، ويصبح صائما، فإن الله يستجيب دعاءه كله إلا أن يدعو في معصية

இந்த இரவில் அமல் செய்யக்கூடியவருக்கு நூறு வருட நன்மைகள் கிடைக்கும்.

இவ்விரவில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழ வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் குர்ஆனிலிருந்து ஃபாதிஹா அத்தியாயத்தையும், வேறொரு அத்தியாயத்தையும் ஓதி, ஒவ்வொரு இரண்டு ரக்கஅத்துக்களுக்கிடையிலும் ஓர் (அத்தஹிய்யாத்) அமர்வு அமர்ந்து, இறுதி (அத்தஹிய்யாத்)  அமர்வில் அமர்ந்து  இவ்வாறாக   பன்னிரண்டாவது ரக்கஅத்தில் சலாம் கொடுக்க வேண்டும்.

பிறகு சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்ல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நூறு தடவை சொல்ல வேண்டும். பிறகு நூறு தடவை இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். பிறகு நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும்.  பிறகு தனக்காக இம்மை, மறுமை தொடர்பான விஷயங்களில் தான் விரும்பியதைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும். பிறகு அன்று பகலில் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு யார் செய்கின்றாரோ  அவர் செய்த அனைத்துப் பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். பாவமான விஷயத்தில் அவர் பிரார்த்தனை செய்தாலே தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وليلة النصف من شعبانففيها مائة ركعة يقرأ في كل ركعة بعد الفاتحة سورة الإخلاص عشرة مرات

ஷஃபான் பிறை 15 ஆம் இரவில் நூறு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு குல்ஹுவல்லாஹு என்று துவங்குகின்ற இக்லாஸ் அத்தியாயத்தை பத்து தடவைகள் ஓத வேண்டும்.

 உபரியான தொழுகை, அரஃபா இரவு, இரு பெரு நாட்கள் இரவுகள் என்ற பாடத்தில் நாம் குறிப்பிட்டது போன்று  இந்த தொழுகைகளை அவர்கள் (முன்னோர்கள்) விட்டதே இல்லை.

قال صلى الله عليه وسلم : “من أحيا ليلتي العيدين، لم يمت قلبه يوم تموت القلوب

யார் இரு பெருநாட்கள் இரவுகளை உயிர்ப்பிக்கின்றாரோ அவரது உள்ளம் உள்ளங்கள் மரணிக்கின்ற நாளில் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் சில சிறப்புக்குரிய நாட்கள் உள்ளன. அவை 19 நாட்களாகும். அந்நாட்களில் சில திக்ருகளைத் தொடர்வது  விரும்பத்தக்கதாகும். அவை:

1)     அரஃபா நாள்.  2)ஆஷூரா நாள்.  3) ரஜப் 27 ஆம் நாள்.

இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது

روى أبو هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: “من صام يوم سبع وعشرين من رجب كتب الله له صيام ستين شهرا” )وهو اليوم الذي أهبط الله فيه جبرائيل عليه السلام على محمد صلى الله عليه وسلم بالرسالة(

ரஜப் 27ஆம் அன்று யார் நோன்பு நோற்கின்றாரோ  அவருக்கு அல்லாஹ் அறுபது மாதங்கள் நோன்பு நோற்ற நன்மைகளை பதிவு செய்கின்றான்.

அந்த நாளில் தான் அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை தூதுச் செய்தியைக் கொண்டு (பூமிக்கு) முஹம்மது (ஸல்) அவர்களிடம் இறக்கி வைத்தான் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஞ்4) ரமளான் 17வது நாள் அந்நாளில் தான் பத்ர் போர் நடந்தது. 5) ஷஃபான் மாதம் 15ஆம் நாள். 6) வெள்ளிக் கிழமை. 7) இரு பெருநாட்கள். 8) துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள். 9) அய்யாமுத் தஷ்ரீக் என்று 11,12,13 ஆகிய நாட்கள்.

وقد روى أنس عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: “إذا سلم يوم الجمعة سلمت الأيام، وإذا سلم شهر رمضان سلمت السنة

ஜும்ஆ நாள்  பாதுகாப்பாகி விட்டால் மற்ற நாட்களும் பாதுகாப்படைந்து விடும். ரமளான் மாதம் பாதுகாப்பு அடைந்து விட்டால்  அந்த  வருடம் பாதுகாப்படைந்து விடும் என்று ரசூல் (ஸல்) சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 உலகத்தின் ஐந்து நாட்களில் எவர்  (வணங்காமல்) இன்பம் அனுபவிக்கின்றாரோ அவர் மறுமையில் இன்ப பானத்தை அனுபவிக்க மாட்டார் என்று ஓர் அறிஞர் கூறினார். இதன் மூலம் அவர் இரண்டு பெருநாட்கள், ஜும்ஆ, அரஃபா, ஆஷூரா ஆகிய நாட்களையே குறிப்பிடுகின்றார்.  வார நாட்களில் சிறந்த நாட்கள் வியாழக்கிழமையும்  திங்கட்கிழமையுமாகும். இவ்விரு நாட்களில் அல்லாஹ்விடம் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. நாம் நோன்பு பாடத்தில் நோன்பு நோற்பதற்குரிய மாதங்கள், நாட்களுடைய சிறப்புகளை கூறிவிட்டோம். அதை மீண்டும் இங்கு திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். உலகத்தார் அனைவரை விடவும் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அடியார் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக!

இவை தான் இஹ்யாவில் கஸ்ஸாலி குறிப்பிடும் செய்திகளாகும்.

இப்போது இஹ்யாவின் அடிக்குறிப்பில் இடம் பெற்றிருக்கின்ற இந்த ஹதீஸ்களின் தரங்களைப் பார்ப்போம்:

1) பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொடர்பான இந்த ஹதீஸை இமாம் பைஹகீ தனது ஷுஃபில் ஈமானில் பதிவு செய்து விட்டு அதை பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிடுகின்றார். காரணம் இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அறிவித்ததாக அபான் வழியாக முஹம்மது பின் அல்ஃப்ள்ல் மூலம் அறிவிக்கப் படுகின்றது. இவ்விருவருமே பலவீனமானவர்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தப்யீனுல் அஜப் ஃபீ பயானி இப்தாலி மா வரத ஃபீ ரஜப் (ரஜப் மாதம் தொடர்பாக வந்திருக்கின்ற பொய்யான ஹதீஸ்களை முறியடிப்பது குறித்துள்ள ஆச்சரியத்தை விவரித்தல்) என்ற நூலில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இருள் நிறைந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.  (பைஹகீ கூறிய அதே விமர்சனத்தை ஹாபிழ் இராக்கி அவர்களும் தனது தக்ரீஜ் அஹாதீஸில் இஹ்யா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

 2) ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்:

பைஹகியின் ஷுஃபில் ஈமானில் அலீ (ரலி) அறிவிப்பதாகப்       பதிவாகியுள்ளது. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸாகத் தான் தெரிகின்றது என்று குறிப்பிடுகின்றார்கள்.  சந்தேகமில்லாமல் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுகின்றார்கள்.

3) பெருநாள் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்:

அபூ உமாமா – காலித் பின் மிஃதான் – சவ்ர் பின் யஜீத்- பகிய்யா பின் வலீத் – என்ற தொடர் மூலம்  இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் 1772 ல் பதிவாகியுள்ளது. இந்த்த் தொடர் பலவீனமானது. காரணம் இதில் பகிய்யா இடம் பெறுகின்றார். இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்வர்  என்று பூசரி ஜவாயித் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.  ஹாபிழ் இராக்கி அவர்கள் தனது தக்ரீஜ் அஹாதீஸ் இஹ்யாவில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.

4) ரஜப் மாதம் 27ஆம் இரவில் தொழுவது தொடர்பான ஹதீஸ்:

இதை கதீப் தாரீக் என்ற நூலிலும்  ஜவ்ஸஜானீ,  அபாதீல் (அபத்தங்கள்) என்ற நூலிலும்  இப்னு அஸாகீர் தாரீக் திமிஷ்கிலும்  இப்னுல் ஜவ்ஸிய்யி,  இலல் என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர். அனைவருமே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து தான் பதிவு செய்துள்ளனர்.  இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது என்று இப்னுல் ஜவ்ஸியும் இது ஒரு பொய்யான ஹதீஸ் என்று ஜவ்ஸகானிய்யும் கூறுகின்றார்கள்.

5)  இது வெறுக்கப்படக் கூடிய ஹதீஸாகும். இது  இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் போன்றது தான் என்று அபூ அஹ்மத் அல் ஹாகிம் தெரிவிக்கின்றார்கள். இந்த விமர்சனங்கள்  இஹ்யாவின் அடிக்குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இவை இந்த ஹதீஸ்களின் தரங்களைப் புரிந்துக் கொள்வதற்கு போதும் என்பதால் அதிகமான விமர்சனங்களை விட்டு விட்டோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்திடுவோம்

எம்.எஸ். ஜீனத் நிஸா, ஆசிரியை அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கும், தாங்கள் சிறந்த பேச்சாளர்களாக ஆவதற்கும் அனைவருமே விரும்புகின்றனர். ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது பல விஷயங்கள் அவர்களுக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தாழ்வு மனப்பான்மை தான். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மிகச்சிறந்த பணியைக் கையில் எடுத்திருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இந்தத் தாழ்வு மனப்பான்மை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள் மக்களில் இரு வகைகளாக உள்ளனர்.

1.ஆலிம் படிப்பை முழுவதுமாக படித்து முடித்தவர்கள் (அவர்கள் 3 வருட பாட திட்டத்தையோ அல்லது 1 வருட பாடத்திட்டத்தையோ முடித்தவர்களாக இருக்கலாம்.)

2.ஆலிம் கோர்ஸ் பயிலாமல் பயான் பேசுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் மார்க்கத்தை ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி போன்ற இதழ்களில் வருகின்ற கட்டுரைகளின் மூலமோ அல்லது தங்களுக்குத் தேவையான தலைப்புகளை ஆடியோ, வீடியோவின் மூலம் பேச்சாளர்கள் பேசியவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டோ அல்லது நமது வெளியீடுகளில் உள்ள புத்தகங்களின் உதவியினாலோ தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வார்கள்.

இந்த இரு சாராரையும் தன் கைப்பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைத்து உரை நிகழ்த்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து கொண்டிருக்கின்றது தாழ்வுமனப்பான்மை.

ஆலிமாக இருப்பவர்கள் தங்களுக்கு மேலுள்ள சிறப்புப் பேச்சாளர்களைப் பார்த்து, இவர்களைப் போல் நம்மால் ஏன் ஆக்ரோஷமாக, மக்களால் விரும்பப்படக்கூடிய வகையில் பேச முடிவதில்லை. நமது கருத்துக்கள் மக்களுக்கு மத்தியில் ஏன் பேசப்படுவதில்லை என்று தனக்குள்ள திறமையைக் குறைத்து மதிப்பிட்டு, பிற பேச்சாளர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

ஆலிம் கோர்ஸ் பயிலாமல் மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் நாம் ஒரு ஆலிம் கிடையாதே! நமக்கு அரபி இலக்கணம், மஸாயில் சட்டங்கள், குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடும் போது வருகின்ற உச்சரிப்புப் பிழைகள், ஸஹீஹான ஹதீஸ்கள் எவை? பலவீனமான ஹதீஸ்கள் எவை? என்றெல்லாம் தெரியாதே! என்று தன்னை மார்க்கம் படித்த ஆலிம்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  தனது திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நீங்கள் மார்க்க அடிப்படையில் எடுக்கும் முயற்சி நிச்சயம் உங்களுக்குப் பலனை ஈட்டித்தரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. தெரியாது என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கிச் செல்லாமல் நாமும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, “என்னைப்பற்றி ஒரு செய்தி கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்ற மாநபியின் பிரகடனத்தை ஏற்று அதற்காக அனுதினமும் முயற்சி எடுத்து, தங்களால் இயன்ற அளவு மார்க்கத்தை எத்திவைத்துக் கொண்டிருக்கின்ற உங்களது முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்வகையில் ஆலிமை விட நீங்கள் ஒரு படி உயர்ந்து தான் நிற்கின்றீர்கள்.

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்.

திருக்குர்ஆன்17:19

இது போன்ற உங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளை உங்களுக்கு ஷைத்தான் நினைவூட்டி உங்களது முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான். எனவே அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டு தவறுகளாக நீங்கள் கருதுபவற்றை திருத்திக்கொண்டு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்களானால் நீங்களும் சாதனை படைக்கலாம்.

நீங்கள் இரு சாராரும் உண்மையிலேயே இறைவனிடத்தில் கூலியை எதிர்ப்பார்ப்பீர்களாயின் இது போன்ற விஷயங்கள் உங்களது அழைப்புப் பணிக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

மக்கள் எதையும் பேசட்டும்; நமக்கு அவை தேவையில்லை என்று உலக விஷயங்களில் தமது இலட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களை நாம் காண்கின்றோம். உலகத்திற்காக வாழ்பவர்களே பிறரது விமர்சனங்களைக் காதில் வாங்காமல் தன் விருப்பம் போல் செயல்படும் போது  மறுமை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இறைவழியில் செயல்படும் நாம் இது போன்ற விமர்சனங்களைத் தூக்கியெறிய வேண்டாமா?

நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம். நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.

திருக்குர்ஆன்  12:56,57

மேலும் இரு நபர்கள் ஒரே மேடையில் பயான் பேசும் போது, ஒருவரது பயான் ரசிக்கத்தக்க வகையில் உயர்ந்த நடையில் இருந்தது என்று மக்கள் குறிப்பிட்டால், இனி அந்தப் பேச்சாளரோடு நாம் பேசக்கூடாது என்று நினைக்கின்றோம். நம்மை விட சுமாராகப் பேசுவோருடன் நாம் பேசினால் நமது மனது புண்படாது என்றும் கருதுகின்றோம். இது தவறாகும்.

ஏனெனில் பிறரோடு நமது திறமையை ஒப்பிட்டுப் பார்க்கின்ற நாம், நமது பேச்சிற்கும், அவரது பேச்சிற்கும் மத்தியில் எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தன? எந்தெந்த இடத்திலெல்லாம் நாம் சறுக்கினோம்? மக்கள் எந்தெந்த இடத்திலெல்லாம் அவரது பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்தனர் என்பதை சுதாரித்துக் கொண்டு, நமது உரைகளில் உள்ள தவறுகளைக் களைந்து நம்மை நாம் முறைப்படுத்திக்கொண்டால் அதுவே நாம் சிறந்த பேச்சாளராக ஆவதற்கு வழிவகுக்கும்.

எனவே நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்போம் என்ற சிந்தனைப் போக்கும், விடாமுயற்சியும் தான் நம்மை சிகரத்திற்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாகும். இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் நீங்களும் சிறந்த பேச்சாளராக வருவீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

திருக்குர்ஆன் 3:139

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.    

திருக்குர்ஆன்  3:160

எனவே தொடர் பயிற்சியையும், விடாமுயற்சியையும் விட்டு விட்டு, பிறரைப் பார்த்து புழுங்குவதிலோ, கவலைப்படுவதிலோ உங்களுக்கு எவ்விதப் பயனுமில்லை. உங்களிடத்தில் உள்ள தாழ்வு மனப்பான்மையையும், பதற்றத்தையும் தூக்கியெறிந்து விட்டு முழு கவனத்துடன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் நீங்கள் தான் சிறந்த பேச்சாளர்கள்.

ஆனைக்கும் அடி சறுக்கும்

சிலரது பேச்சு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஸ்டைலில் ஏற்ற இரக்கமில்லாமலும், சிலரது பேச்சில் உரத்த சப்தமும் ஆக்ரோஷமும் மட்டும் தான் இருக்குமே தவிர கருத்தாழமில்லாமலும் இருக்கும். சிலரது பேச்சில் கருத்தாழமிருக்கும். ஆனால் ஆக்ரோஷமில்லாமல் இருக்கும்.

சிலர் மக்களுக்குப் புரிகின்ற நடைமுறைத் தமிழில் பேசாமல் இலக்கணத் தமிழில் பேசுவதையும், சிலரது பேச்சு முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருப்பதையும், சிலரது பேச்சில் தலைப்புக்குச் சம்பந்தமான குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அதிகமில்லாமல் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே நிறைந்து காணப்படுவதையும் காண்கின்றோம்.

இவையனைத்துமே பேச்சில் கலந்திருக்க வேண்டும். இவ்வாறு பேச்சாற்றல் வழங்கப்பட்டவர்கள் ஒரு சிலரே! இவற்றில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அந்தப் பேச்சு மக்களிடத்தில் எடுபடுவதில்லை. எல்லோருடைய பேச்சுக்களிலும் இது போன்று ஏதேனும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லோரும் அதனைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள், தனக்கு மட்டும் தான் இது போன்ற குறை இருக்கின்றது, மற்றவர்கள் தன்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள்,  திறமைசாலிகள் என்று எண்ணிக் கொள்கின்றனர். இச்சிந்தனை ஒருவருக்குள் நுழைந்தால் அது அவரை ஒரு போதும் வெற்றி பெறச் செய்யாது.

எனவே குறைகளைச் சரிசெய்ய வேண்டுமே தவிர நான் இனி பேச மாட்டேன்; நான் பேசுவது மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்து வதில்லை; நான் சொல்கின்ற கருத்து அவர்களுக்குப் புரிவதில்லை; நான் பயான் பேசியதில் எனக்கே திருப்தி இல்லை என்று கூறி பிரச்சாரப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக் கூடாது. இதற்காகக் கவலைப்படுவது தவறில்லை. அதில் மூழ்கிப்போய் தாழ்வுமனப்பான்மை கொள்வதே தவறாகும். இவ்வாறு நீங்கள் வருந்துவது இறைவன் உங்களுக்கு கொடுத்த சிறப்பம்சங்களை மறுக்கும் நிலையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ்  புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.

நூல்: முஸ்லிம் 5671

அல்லாஹ் எல்லா மனிதருக்கும் திறமைகளைக் கொடுத்துள்ளான். எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்குள்ளும் ஏதேனும் ஒரு சில திறமைகள் இருக்கத்தான் செய்யும். தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை அவர் தான் தோண்டி எடுக்க வேண்டும். தனக்குள் இப்படிப்பட்ட திறமைகளும் இருக்கின்றது என்பதைப் பலர் உணர்வதில்லை. உணர்ந்தால் மட்டும் தான் அதை வெளிக்கொண்டு வர முடியும். அதுபோல எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில குறைகள் எல்லோரிடத்திலும் இருக்கும். நம்மிடத்தில் இருக்கும் குறைகளை அலட்டிக் கொள்ளாமல் நமக்கிருக்கும் திறமைகளை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

பொறாமையும், தாழ்வுமனப்பான்மையும்

ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறைவுக்குப் பெயர் தான் பொறாமை. இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியமாகும். பிறருக்குக் கிடைத்துள்ள செல்வம், ஆற்றல், திறமை போன்றவற்றைக் கண்டு அவை அவரிடமிருந்து நீங்க வேண்டும் என நினைப்பது மோசமான பண்பாகும். ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் போது இது போன்ற கெட்ட எண்ணங்கள் அவனது மனதிற்குள் ஊடுறுவுவதை நம்மால் காணமுடிகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

நூல்: புகாரி 73

பிறரிடமுள்ள கல்வி, செல்வம் ஆகியவை என்னிடமிருந்தால் நானும் அவரைப் போன்று நல்லறங்கள் செய்வேன் என ஆர்வம் காட்டுவது சிறந்ததாகும். வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் விஷயங்களில் இத்தகைய போட்டி ஏற்படுவது ஆரோக்கியமானது தான். ஆனால் அதுவே பாவமான காரியங்களில் ஏற்படுவது தவறானதாகும்.

இவ்வாறு தடுக்கப்பட்ட பொறாமை என்ற செயல்கூடக் கல்வி விஷயத்தில் கூடும் என்று இஸ்லாம் கூறுகின்றது. மார்க்க ஞான விஷயத்தில் பொறாமைப்படுவதில் தவறில்லை. அதே சமயம் தாழ்வு மனப்பான்மை கொள்வதே தவறாகும்.

—————————————————————————————————————————————————————-

காதியானிகள் யார்?

எம்.ஐ. சுலைமான்

முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைத்தூதர்களில் இறுதியானவர் என்பது பற்றித் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம்.

இனி போலி இறைத்தூதர்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள முன்னறிவிப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

பொய்யான இறைத் தூதர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணை வைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: திர்மிதி 2145

3535حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مَثَلِي وَمَثَلَ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ  رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி (3535)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا فَأَتَمَّهَا وَأَكْمَلَهَا إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ مِنْهَا وَيَقُولُونَ لَوْلَا مَوْضِعُ اللَّبِنَةِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنَا مَوْضِعُ اللَّبِنَةِ جِئْتُ فَخَتَمْتُ الْأَنْبِيَاءَ و حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سَلِيمٌ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ بَدَلَ أَتَمَّهَا أَحْسَنَهَا  رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும், இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் நிறைவாகவும் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கலின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!என்று கூறலாயினர். நானே அந்தச் செங்கலின் இடத்தில் இருக்கிறேன். நானே நபிமார்களில் இறுதியாக வந்தேன்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் ( 4595)

812 و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மற்ற இறைத்தூதர்களை விடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:

  1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
  2. (எதிரிகளின் உள்ளத்தில்) என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
  3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
  4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
  5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப் பெற்றுள்ளேன்.
  6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்று விட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (907)

நபித்துவம் முடிந்து விட்டது

2198 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زيَادٍ حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ قَالَ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ فَقَالَ لَكِنْ الْمُبَشِّرَاتُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ رُؤْيَا الْمُسْلِمِ وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ كُرْزٍ وَأَبِي أَسِيدٍ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ  رواه الترمدي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை. நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. உடனே நபியவர்கள் என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஷ்ஷராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2198

6990 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَمْ يَبْقَ مِنْ النُّبُوَّةِ إِلَّا الْمُبَشِّرَاتُ قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ  رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுகின்றவை (“முபஷ்ஷிராத்‘) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லைஎன்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நல்ல (உண்மையான) கனவுஎன்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 6990

ரசூல் என்று வாதிடும் பொய்யர்கள்

3609 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ دَعْوَاهُمَا وَاحِدَةٌ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ  رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் (ரசூல்) என்று வாதிடுவான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3609)

நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள்

2145حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ  رواه الترمدي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணைவைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தன்னை நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

நூல் : திர்மிதி 2145

மிர்சா என்பவன் நபி என்பதற்குக் காதியானிகள் வைக்கும் ஆதாரங்களையும், அதற்குரிய பதில்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்க்கலாம்.

—————————————————————————————————————————————————————-

அல்லாஹ்வின் தூதரே  அழகிய முன்மாதிரி

தொடர் 2

“எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள்.

இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள்.

இறைத்தூதர் என்று ஒருவர் வாதிட்டால் அவர் கொண்டு வந்த செய்தி இறைவன் கூறுவது போல் அமைந்திருக்க வேண்டும். அப்படித் தான் அவர்கள் கொண்டு வந்த செய்திகள் அமைந்து உள்ளன. அவர்களுக்கு எந்த ஆதாயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத வகையிலும் இறைவனை மட்டும் பெருமைப்படுத்தும் வகையிலும் தான் அந்தச் செய்திகள் அமைந்துள்ளன.

எந்தக் கொள்கையைச் சொன்னால் இவ்வுலகில் பதவியையும், பெருமையையும் பெறமுடியாதோ அந்தக் கொள்கையைத் தான் அவர்கள் சொன்னார்கள். படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான். உலகத்தை அழித்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து எல்லா மனிதர்களையும் அல்லாஹ் எழுப்புவான். அந்த வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என்பதுதான் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் முன்வைத்த செய்தி.

அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; அவன் கண்கானிக்கிறான் என்று கருதியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். என்று சொன்னவர் மற்றவர்களை விட அதற்கேற்ப வாழ்ந்தாக வேண்டும். இது கடைப்பிடிக்க மிகவும் கஷ்டமானதாகும். நிஜமாகவே அல்லாஹ்வின் தூதராக இருந்தால் மட்டுமே தனக்கு கடுகளவும் உலக ஆதாயத்தைப் பெற உதவாத இந்தக் கொள்கையை அவர் முன் வைத்திருக்க முடியும்.

நியாயத் தீர்ப்பு நாள் குறித்து அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்தது போல் அந்த நாளை அதிகம் பயந்து தன் மேல் அளவு கடந்த சிரமங்களைச் சுமத்திக் கொண்டார்கள்.

நான் ஒரு சபைக்கு வரும் போது நீங்கள் அமர்ந்து இருந்தால் என்னைக் கண்டதும் எழக் கூடாது என்று அவர்கள் கூறியதும், என் காலில் யாரும் விழக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததும், இயேசுவை கிறித்தவர்கள் எல்லை மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்புமீறி புகழாதீர்கள்; நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதருமே என்று மட்டும் சொல்லுங்கள்  எனச் சொன்னதும் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இறைத்தூதர் என்று கூறவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளன. மெய்யாக இறைத்தூதராக அவர்கள் இருந்ததால் தான் இப்படிக் கூற முடிந்தது.

என் அடக்கத்தலத்தில் விழா நடத்தாதீர்கள். என் அடக்கத்தலத்தை வழிபாட்டுத்தலமாக ஆக்காதீர்கள் என்றும் சொன்னார்கள்.

ஆன்மிகத்தைச் சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களின் பின்னே திரண்ட பின்பும் என்னிடம் கடவுளின் எந்த சக்தியும் இல்லை. நான் நினைத்ததை எல்லாம் கடவுள் செய்து தருவான் என்பதும் இல்லை. நானே தவறு செய்தால் என் இறைவனிடம் நான் தப்பிக்க முடியாது என்று சொன்னார்கள்.

மற்றவர்களிடமிருந்து தம்மைத் தனித்துக் காட்டும் வகையில் வித்தியாசமான தோற்றங்களில் மதகுருக்கள் சீன் போடுவது போல் அவர்கள் சீன் போட்டதில்லை. ஒரு சபையில் அவர்கள் இருக்கும் போது வெளியூர்வாசி ஒருவர் வந்தால் உங்களில் முஹம்மது யார்? என்று கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் தான் அவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இருந்தார்கள்.

பின்னர் மக்களின் பேராதரவு பெற்று மாபெரும் சக்கரவர்த்தியாக ஆன போதும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

இறைவனுக்கும், மறுமை வாழ்க்கைக்கும் அதிகம் அஞ்சி அவர்கள் நடத்திய வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை உறுதி செய்தது.

அவர்கள் இறைத்தூதர் என்று வாதிட்ட பின்னர் வாழ்ந்த வாழ்க்கையைக் கவனித்தால் இந்த மனிதர் வாதிடுவது போல் இவர் இறைவனின் தூதராகத் தான் இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.

இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை.

அரண்மனையில் வசிக்கவில்லை.

கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.

அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை.

ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.

வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.

தமது கவச ஆடையைச் சிறிதளவு கோதுமைக்காக அடைமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள்.

நானும், எனது குடும்பத்தினரும் பொது நிதியிலிருந்து எதையும் பெறுவது ஹராம் – இறைவனால் தடுக்கப்பட்டது – என்று பிரகடனம் செய்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.

ஒரு நிலப்பரப்பு, ஒரு குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் அவற்றுக்கு வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

அதிக அதிகாரம் படைத்த மன்னர்கள் எப்படி ஆணவமாகவும் செருக்கொடும், சுக போகங்களில் திளைத்தும் நடப்பார்களோ அதில் கோடியில் ஒரு பங்கு கூட அவர்கள் நடக்கவில்லை. தன்னைத் தூதராக அனுப்பிய அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்று அவர்கள் அஞ்சியதால் தான் அவர்களால் இப்படி நடக்க முடிந்தது. இதுவும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை உறுதி செய்கிறது.

நாற்பது வயது வரை வெற்றிகரமான வியாபாரியாக இருந்து, அதன் மூலம் ஊரில் பெரிய செல்வந்தர் என்ற நிலையை அடைந்தவர் அதை மேலும் பெருக்கவே ஆசைப்படுவார். அல்லது இருக்கின்ற செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே போராடுவார். செல்வத்தை அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதாக அதை விட்டுக் கீழே இறங்க மாட்டார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் இக்கொள்கையைச் சொன்னதற்காக சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத்தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத்தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்ததற்கு அவர்கள் இறைத்தூதர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

அனைவருக்கும் சமநீதி, கொள்கை உறுதி, உலகே திரண்டு எதிர்த்த போதும் கொண்ட கொள்கையில் எள் முனையளவும் வளைந்து கொடுக்காத நெஞ்சுரம், பிறமத மக்களையும் மனிதர்களாக மதித்த மாண்பு, உயர் குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் பெருமை இல்லை என்று அடித்துச் சொல்லி செயல்படுத்திக் காட்டியது, மன்னராக இருந்தும் தாமே தளபதியாகக் களத்தில் இறங்கிப் போராடிய வீரம் ஆகிய நற்பண்புகளின் சிகரமாக அவர்கள் திகழ்ந்தார்கள். வரலாற்றில் இவற்றில் ஒன்றிரண்டு பண்புகள் சிலருக்கு இருக்கலாம். அனைத்தும் ஒரு சேர முஹம்மது நபியிடம் அமைந்திருந்தது இறைவனின் தூதர் என்பதால் தான்.

தலைவர்களாகக் கருதப்படுவோர் ஏதோ சில துறைகளில் சில வழிகாட்டுதலை வழங்குவார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வழிகாட்டுகிறேன் எனக் கூறி அவ்வாறு வழிகாட்டிய ஒரு தலைவரையும் உலகில் காண முடியாது. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இதிலும் விதிவிலக்காகத் திகழ்ந்தார்கள்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி அரசியல், பொருளாதாரம், குடும்பவியல், சிவில் கிரிமினல் சட்டங்கள், உண்ணுதல், பருகுதல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு வழங்கினார்கள். அந்தத் தீர்வுகளும் இன்றும் பொருந்தக் கூடியவையாக உள்ளன.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

அருள் மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும்

தொடர் 2

தொழுகையை நிறைவாக்கும் சூரத்துல் ஃபாத்திஹா

அல்ஹம்து சூராவை ஃபர்லான, நஃபிலான அனைத்து தொழுகைகளிலும் கண்டிப்பாக ஓத வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அல்ஹம்து சூரா ஓதப்படாமல் தொழப்படும் தொழுகை குறை உடையது என்றும், முழுமையற்றது என்றும், அது தொழுகையே கிடையாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ  ) رواه البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர் :  உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல் : புகாரி 756

و حَدَّثَنَاه إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ ثَلَاثًا غَيْرُ تَمَامٍ (رواه مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவுபெறாததாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் ( 655)

قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ يَقُولُهَا ثَلَاثًا (رواه مسلم)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

முஸ்லிம் (658)

அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் தலையாயது தொழுகை தான். அதற்கு நிகராக எந்தக் கடமையும் இல்லை. அந்தத் தொழுகையே ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாவிட்டால் தொழுகையாக அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.

பாவமன்னிப்பு

ஜமாஅத் தொழுகையின் போது இமாம் “கைரில் மஃக்ளுபி அலைஹிம். வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் பின்னால் தொழுபவர்கள் “ஆமீன்“ என்று சொன்னால் யாருடைய ஆமீன் மலக்குமார்களின் ஆமீன் கூறுகின்ற நேரத்துடன் ஒத்தமைகிறதோ அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் ஆமீன்கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன்கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (780)

முதல் வசனத்தின் சிறப்புகள்

சூரத்துல் ஃபாத்திஹாவின் முதலாவது வசனம் ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வசனம் ஆகும். இதுதான் முதல் வசனம் என்று முடிவு செய்வதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَتْ مَدًّا ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَمُدُّ بِبِسْمِ اللَّهِ وَيَمُدُّ بِالرَّحْمَنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ (رواه البخاري )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்?’’ என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள்’’ என்று கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: புகாரி 5046

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ وَابْنُ السَّرْحِ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قُتَيْبَةُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  (رواه أبو داود)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 669

அத்தியாயம் முடிந்ததன் அடையாளமாகப் பின்னால் வந்தவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்கவில்லை என்பதையும், அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளையே என்பதையும், எனவே அது குர்ஆனின் ஒரு பகுதி என்பதையும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான்’’ என்ற சொற்றொடர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அல்ஹம்து சூராவை ஓதும் போது ”அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்ற வசனத்திலிருந்து ஓதியதாகச் சில ஹதீஸ்களில் வந்துள்ளது. இதிலிருந்து நாம் அவர்கள் பிஸ்மில்லாஹ் ஓதமாட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அவர்கள் பிஸ்மில்லாஹ்வை சப்தமில்லாமல் ஓதியுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். இது தெளிவாகவே ஹதீஸ்களில் வந்துள்ளது.

1802 – أخبرنا محمد بن أحمد بن أبي عون قال: حدثنا هارون بن عبد الله الحمال قال: حدثنا يحيى بن آدم قال: حدثنا سفيان عن خالد الحذاء عن أبي قلابة  عن أنس قال: وكان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضوان الله عليهما لا يجهرون بـ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ   (صحيح إبن حبان)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்பதை சப்தமாக ஓதமாட்டார்கள்.

நூல் : இப்னு ஹிப்பான் 1802

பிஸ்மில்லாஹ்வை சப்தமில்லாமல் ஓதிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்பதிலிருந்து சப்தமாக ஓதிக்கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹ் கூறுவதின் சிறப்புகள்

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘’ என்ற இறை வசனத்திற்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்” என்று பொருள்.

முஸ்லிம்கள் தங்களின் எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கூறியே செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் மட்டுமின்றி, ஏனைய நபிமார்களும் அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனின் திருப்பெயர் கூறியே தங்கள் காரியங்களைத் துவங்கியுள்ளனர்.

நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் ஏறும் போது “அல்லாஹ்வின் திருநாமத்தால் இதில் ஏறுங்கள்!’’ என்று கூறியதாக திருக்குர்ஆனின் 11:41 வசனம் குறிப்பிடுகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு ராணிக்கு எழுதிய மடலில் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று எழுதியதாகத் திருக்குர்ஆனின் 27:30 வசனம் குறிப்பிடுகின்றது.

அது போன்று நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னர் ஹிர்கல் அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்த போதும் ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று எழுதியே அழைப்பு விடுத்தார்கள்.

فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى  (رواه البخاري)

ஹிர்க்கல் அந்தக் கடிதத்தை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…  இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

(நூல் : புகாரி 7)

“படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் நீர் ஓதுவீராக!’’ என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம். முதல் வசனத்திலேயே தனது திருநாமத்தால் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதிலிருந்து பிஸ்மில்லாஹ்வின் மகத்துவத்தை நாம் தெளிவாக உணரலாம்.

திருக்குர்ஆனை ஓதும் போது மட்டுமின்றி எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கொண்டே நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற இதே சொல்லைத் தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஏனெனில் உண்ணும் போது, அறுக்கும் போது, உடலுறவு கொள்ளும் போது என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) பிஸ்மிக்க (உன் பெயரால்) என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

மிகப்பெரும் ஆயுதம் பிஸ்மில்லாஹ்

“பிஸ்மில்லாஹ்” என்பது இறையுதவியைப்  பெற்றுத் தருகின்ற அற்புத வாசகம் ஆகும். அது போன்று ஷைத்தானை விரட்டி அடிக்கின்ற அற்புதமான துஆ ஆகும்.

பின்வரும் ஹதீஸ்களிலிருந்து “பிஸ்மில்லாஹ்” என்று கூறுவதின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

مسند أحمد بن حنبل (3/ 300)

 14249 – حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا عبد الواحد بن أيمن عن أبيه عن جابر قال : مكث النبي صلى الله عليه و سلم وأصحابه وهم يحفرون الخندق ثلاثا لم يذوقوا طعاما فقالوا يا رسول الله إن ههنا كدية من الجبل فقال رسول الله صلى الله عليه و سلم رشوها بالماء فرشوها ثم جاء النبي صلى الله عليه و سلم فأخذ المعول أو المسحاة ثم قال بسم الله فضرب ثلاثا فصارت كثيبا يهال قال جابر فحانت مني التفاتة فإذا رسول الله صلى الله عليه و سلم قد شد على بطنه حجرا

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط البخاري رجاله ثقات رجال الشيخين غير أيمن المكي والد عبد الواحد فمن رجال البخاري

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் மூன்று நாட்களாக எந்த உணவையும் ருசிக்காமல் அவர்கள் அகழ் தோண்டும் பணியிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இங்கே மலைப் பாறாங்கல் உள்ளதுஎன்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் மீது தண்ணீரைத் தெளித்து வையுங்கள்என்று கூறினார்கள். அவர்ளும் தண்ணீரைத் தெளித்து வைத்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து சம்மட்டி அல்லது கோடாரியை எடுத்து பிஸ்மில்லாஹ்” (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறி மூன்று தடவை அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள்: நான் தற்செயலாக நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டியிருந்தார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் (14249)

நபியவர்கள் உண்ண உணவில்லாமல் மிகப் பசியுடன் இருந்த போதிலும் கூட “பிஸ்மில்லாஹ்” என்று கூறி பாறையை உடைத்த போது அல்லாஹ்வின் அற்புதத்தால் அந்தப் பாறை குறுமணலாக மாறியது. “பிஸ்மில்லாஹ்” என்பதின் சிறப்பை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பிஸ்மில்லாஹ்வின் மேலும் பல சிறப்புகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

களவு போகும் கடவுளர்கள் கை பிசைகின்ற பக்தர்கள்

எம். ஷம்சுல்லுஹா

தமிழகத்தில் அவ்வப் போது ஏதாவது பரபரப்பான செய்திகள் பத்திரிக் கைகளிலும், தொலைக் காட்சிகளிலும்  இடம் பெறும். அண்மையில்  சிலைக் கடத்தலில் ஈடுபட்ட தீனதயாளன் என்பவர் கைதானது அந்தப் பரப்பரப்பான செய்திகளில் முக்கியச் செய்தியாகும்.

இந்தச் சிலைத் திருட்டில் ஈடுபடுவோர் அகில உலக அளவில் தொடர்பு வைத்துள்ளவர்கள். சிவபுரத்து நடராஜன் சிலை அமெரிக்காவில் குடியேறிய கதை எல்லாம் உண்டு.

சென்னை நகரின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் சாதாரண புகாருக்கு சோதனையிடச் சென்ற காவல்துறையினருக்கு அள்ள அள்ளக் குறையாத, பழைமை வாய்ந்த கற்சிலைகள், வெண்கலச்சிலைகள் மற்றும் பழைமை வாய்ந்த தஞ்சை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த பங்களாவின் பல்வேறு ரகசிய அறைகளில் இன்னும் சிலைகள் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் நவீன இயந்திரம் கொண்டு ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது கைப்பற்றப் பட்ட சிலைகளின் மதிப்பு ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சிலை திருட்டுப் பிரிவு காவல்துறையினரும், தொல்லியல் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.  இந்த சிலை திருட்டுக் கும்பலின் தலைவனாக திகழ்ந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர். இவர் தொழிலதிபர் என்ற போர்வையில் தமிழகத்தில் பல்வேறு பிரமுகர்களிடம் நல்ல பழக்கம் வைத்துள்ளவராம்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் கோயில்கள் அதிகம். பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில்கள் கட்டடக் கலை, சிற்பக் கலை மற்றும் வரலாற்றுப் பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளவையாகும். கோயில்களின் அழகைப் போற்றவும், கடவுளை வழிபடவும் மட்டுமே அனைவரும் அங்கு வருவதில்லை. இதனால் சிலை திருடர்களுக்குக் கோயில்கள் எளிதான இலக்காக ஆகிவிட்டன.

12ஆம் நூற்றாண்டுக்கு முன் கலை அழகு நயத்துடன் வார்க்கப்பட்டுள்ள நடராஜர், ஆழ்வார்கள், முருகன் சிலைகள், பாதுகாப்பு அதிகமில்லாத இக்கோயில்களிலிருந்து திருடப்பட்டு, பல அயல் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இச்சிலைகளுக்கு மேலை நாட்டினர் மிக அதிகப்படியான விலை தருகின்றனர்.

சோழர் காலத்தைச் சேர்ந்த தஞ்சை மதுரை கோயில்கள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர் கோயில்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருநெல்வேலி கோயில்களை இலக்காக வைத்து இத்திருடர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றித் திரிந்து, போதுமான பாதுகாப்பு அற்ற கோயில்களைத் தங்கள் இலக்காகத் தேர்ந்து எடுக்கின்றனர். கோயிலுக்குள் திருடச் செல்லும்போது, விலை உயர்ந்த சிலைகளை மட்டுமே அவர்கள் திருடுகின்றனர். பல நேரங்களில், கோயில் பாதுகாப்புக்காக இருக்கும் காவலர்களை அவர்கள் கொன்று விடுகின்றனர் என்று சிலை திருட்டுப் பிரிவு காவல்துறை அதிகாரி கூறுகிறார்.

சிலை திருடன் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பஞ்சலோக சிலைகளின் மதிப்பை தொல்பொருள் ஆய்வுத் துறையினராலும் கூட மதிப்பிட முடியவில்லையாம். இவை  முதல்நிலை இடைத் தரகருக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன. அதனை அவர் இரண்டாம்நிலை இடைத்தரகருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரைக்கும் விலை வைத்து விற்று விடுகின்றார். அவர் அதனை 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து மூன்றாம் நிலை இடைத்தரகருக்கு விற்றுவிடுகிறார். சர்வதேச சந்தையில் இந்தச் சிலைகள் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகின்றன என்று அந்த அதிகாரி கூறுகிறார்.

இந்த சிலை திருட்டை நாத்திகர்கள் விமர்சித்து, கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக இதைப் பதிகின்றார்கள். ஆனால் இவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக் கொண்டாலும் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை போட்டு வணங்கி வருவதின் மூலம் இவர்களின் பகுத்தறிவு வாதம் பளிச்சென்று பல்லிளிக்க ஆரம்பித்து விட்டது.

மரியாதை என்ற  பெயரில் சிலைகளுக்கு  மாலை போடுவது, அவற்றிற்கு முன்னால் சிரம் பணிந்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவது அந்தச் சிலைகளுக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை. இதில் என்ன பகுத்தறிவு வாழ்கின்றது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் பகுத்தறிவு என்ற பெயரில் இவர்களுடைய பைத்தியக்காரத்தனம் தான் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்த அடிப்படையில் இவர்கள் சிலை வணங்கக் கூடிய இந்த ஆத்திகர்களைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்களாகி விடுகின்றனர்.

சிலை வணக்கத்தை விமர்சிக்கின்ற அருகதை அல்லாஹ்வை மட்டும் கடவுளாக வணங்கக் கூடிய முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், இப்போது களவு போகும் இந்த சிலை விவகாரத்திற்கு வருவோம். சிலைத் திருட்டில் ஈடுபடுபவர்களைப் பார்க்கும் போது அவர்களில் பெரும்பான்மையினர் ஆத்திகர்களாகத்தான், அதாவது கடவுள் பக்தர்களாகத் தான் இருக்கின் றார்கள்.

சிலை திருட்டிலும், கடத்தலிலும் ஈடுபடுபவர் களின் உள்ளங்களில் இந்தச் சிலைகள் என்ன செய்து விடப் போகின்றன என்ற அசத்தலான, துணிச்சலான நம்பிக்கை தான் இவர்கள் திருடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. சிலைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்பது தான் உண்மையும் எதார்த்தமுமாகும்.

ஏதோ ஒரு தீன தயாளன் மாட்டியிருக்கலாம். மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ தீன தயாளன்கள் இருக்கின்றார்கள். அவர்களெல்லாம் காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிலை கடத்தல் எனும் வியாபாரக் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது உணர்த்தும் பாடமும், படிப்பினையும் என்ன?  சிலைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்பது தான்.

பிள்ளை பிடிப்பவன் ஒரு பிள்ளையைப் பிடிக்கும் போது  கூட அந்தப் பிள்ளை சுதாரித்துக் கொண்டு அலறி, அபய மற்றும் அபாயக் குரல் எழுப்பும். ஆனால் இந்தச் சிலைக்கு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது அலறக் கூடத் தெரியவில்லை. இது எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று மக்கள் சிந்திப்பது கிடையாது.

தன்னுடைய குழந்தையிடம் உண்மையில் ஒரு பாம்பு, தேள் என்று வந்து விட்டால் பெற்றோர்கள் துடிதுடித்துப் போய் அதை அடித்துக் கொன்று விடுகின்றனர். அதே சமயம் அந்த குழந்தைகளுக்கு முன்னால் செயற்கை பாம்புகள், செயற்கை தேள்கள் கிடந்தால் அதைக் கண்டு அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. காரணம் அவற்றிற்கு எந்த சக்தியும் இல்லை என்று விளங்கி வைத்திருப்பது தான்!. இதே அளவுகோலை ஏன் இந்த சிலைகளுக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை.

பொன்னால் ஆன பொருளிலிருந்து மண்ணால் ஆன பொருள் வரை அசல் தன்மையை ஊர்ஜிதம் செய்யும் மக்கள் தாங்கள் வணங்குகின்ற கடவுளர்கள் விஷயத்தில் ஊர்ஜிதம் செய்து பார்ப்பதில்லை. அதை ஊர்ஜிதம் செய்தால் களவு போகும் இந்தப் போலிக் கடவுள்களை வணங்கவும் மாட்டார்கள். அவை களவு போனதும் கை பிசைந்து கையறு நிலையில் நிற்க மாட்டார்கள். கவலைப்பட்டு கண்ணீர் விட்டு அழவும் மாட்டார்கள். காவல் நிலையத்தில் போய் புகார் செய்து தங்கள் காவல் தெய்வங்களை மீட்டுத் தரும்படிக் கோரிக்கை வைக்கவும் மாட்டார்கள்.

இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7: 191-195

இந்த அளவு கோலைப் பயன்படுத்தி உண்மையான   ஒரே ஒரு கடவுளை இனியாவது அடையாளம் கண்டு அவனை மட்டும் வணங்க முன் வருவார்கள் எதிர்ப்பார்ப்போமாக!

—————————————————————————————————————————————————————-

பள்ளிவாசலின் சிறப்புகள்

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

உலகில் இருக்கும் அனைத்துக் கொள்கைகள், கோட்பாடுகளைக் காட்டிலும் தனித்து விளங்கும் மார்க்கம் இஸ்லாம். இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றுள் முக்கிய ஒன்று, இஸ்லாம் கூறும் சமத்துவம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நிறம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியில் இருப்பினும் படைத்தவன் பார்வையில் அனைவரும் சமம் என்று இஸ்லாம் உரக்கச் சொல்கிறது. வெறுமனே வாயளவில் இல்லாமல், மனித ஒற்றுமையை, சமத்துவத்தை நடைமுறை வாழ்விலும் சாத்தியமாக்கிக் காட்டுகிறது. இந்தப் புரட்சிக்குரிய முக்கியக் களமாக பள்ளிவாசல் திகழ்வதன் மூலம் அதன் சிறப்பையும், புகழையும் நாமெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும்.

பள்ளிவாசலைப் பற்றிப் பேசாமல் இஸ்லாத்தை முழுமையாகப் போதிக்க இயலாது எனும் அளவிற்குப் பல்வேறு செய்திகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டமாக, அவற்றில் இருக்கும் பள்ளிவாசல் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையும், சிறப்புகளையும் இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

படைத்தவனுக்குப் பிடித்த இடம்

பூமியிலே விதவிதமான இடங்கள் இருக்கின்றன. ஆறுகள், மலைகள், காடுகள் என்று கண்கவரும் வகையிலான இயற்கைப் பகுதிகள் இருக்கின்றன. கோபுரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்று பிரமிக்க வைக்கும் செயற்கையான இடங்களும் உள்ளன. இன்னும் சொல்வதெனில், நவீன மனிதனின் தேடல் பார்வையில் அகப்படாத. அவனது கால்தடம் பதியாத பல்வேறு பகுதிகள் இருக்கவே செய்கின்றன. இப்படி இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1190)

உலகின் முதல் பள்ளிவாசல்

மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவனிடம் மதிப்பிற்குரிய இடங்களாக மஸ்ஜித்கள் இருக்கின்றன. எனவே தான், முதல் மனிதரும், இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்கள் மூலமாகவே பள்ளிவாசல் நிறுவப்பட்டு விட்டது. ஆதம் நபி அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல், மக்காவிலுள்ள கஅபதுல்லாஹ் என்பதையும் இரண்டாவது பள்ளிவாசல் பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்பதையும் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(திருக்குர் ஆன் 3:96)

நான் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்‘’ என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?’’ என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா’’ என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது’’ என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்’’ (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புஹாரி (3366)

பிந்தைய காலகட்டங்களில், இவ்விரண்டு பள்ளிவாசல்களும் மீண்டும் சீரமைக்கப்பட்டன. ஏகத்துவத்தின் தந்தையாக விளங்கும் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள், தமது மகனார் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களுடன் சேர்ந்து கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பித்துக் கட்டினார்கள். அதுபோல, சுலைமான் நபி (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் புனர்நிர்மானம் செய்தார்கள்.

…பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’’ என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், “நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியுங்கள்’’ என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டுமென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’’ என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், “அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்’’ என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார்கள். இருவரும் (அப்போது), “இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்தக் கல் மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்’’ (2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புஹாரி (3365)

சுலைமான் நபி அவர்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டிய பிறகு மூன்று நற்பேறுகளை மகத்தவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம் கேட்டார்கள். (அவை:) உண்மையான ஞானத்தை (பொருத்தமான தீர்ப்பை) கேட்டார்கள். அது வழங்கப்பட்டது. (மேலும், மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம்) தமக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாத ஆட்சியதிகாரத்தைக் கேட்டார்கள். அதுவும் வழங்கப்பட்டது. மஸ்ஜிதைக் கட்டிய பிறகு அல்லாஹ்விடம், எவரும் இங்கு தொழுகையைத் தவிர வேறெந்த வலிமையும் பெறக்கூடாது; அத்தொழுகை மூலம் அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தைப்போன்று அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: நஸாயீ (693)

பள்ளிவாசலின் முக்கியத்துவம்

மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.

கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடமையைத் தவறவிட்டுவிடாமல் உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனும் அடிப்படையில் நேரம் வரும் போது இருக்கும் இடத்தில் தொழுது கொள்ளும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் நபிமொழி மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன: (அவை)

1.ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப் பெற்றுள்ளேன்.

2.போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.

3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.

  1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப் பெற்றுள்ளேன்.
  2. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (905)

இந்த அனுமதி இருந்தாலும், பள்ளிவாசல் கட்டுவது, அதில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது குறித்து மார்க்கத்தில் நிறைய செய்திகள் போதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது பற்றி அதிகம் வலியுறுத்தி இருப்பதோடு, அதில் அலட்சியமாக இருப்பவர்களைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

ஏனெனில், பள்ளிவாசல் மூலமாக, அதனுடன் தொடர்புள்ள காரியங்கள் மூலமாக நமக்குப் பல்வேறு பாக்கியங்களை அல்லாஹ் கொடுக்கிறான். அளவற்ற அருள் வளங்களை அள்ளித் தருகிறான். அளப்பறிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பினைக் கொட்டிக் கொடுக்கிறான். இந்தச் சிறப்புகளை பெறுவதற்குப் பள்ளிவாசல் அமைப்பது அவசியம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

கப்ர் வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஸலபுக் கும்பல்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

கள்ள ஸலபுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், நமது ஜமாஅத்தினரை முஃதஸிலாக்கள் என்று விமர்சனம் செய்து எழுதிய கட்டுரைக்கான மறுப்பைப் பார்த்து வருகிறோம்.

ஹஸன் பஸரீ

ஹஸன் பஸரீயை அநியாயமாக விமர்சனம் செய்வதாகவும் தனது கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தன் சபையில் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கப்பட்ட போது அதற்கு முந்திக் கொண்டு வாஸில் பின் அதா தவறான, கண்டிக்கத்தக்க தீர்ப்பு சொன்னதுமே “வாஸில் நம்மை விட்டு விலகி விட்டார்” என்ற வாசகத்தைக் கூறி அவனை தன் சபையிலிருந்து ஹஸன் பஸரீ விரட்டி விடுகிறார் என்று வரலாற்று நூல்கள் கூறுகிறது.

இந்தச் செயலை விமர்சிக்கக் கூடாதா? வாஸிலை விரட்டி அனுப்பியது பெருங்குற்றம் என்றெல்லாம் நாம் கூறவில்லை. எடுத்த எடுப்பில் இந்த வழிமுறையைக் கடைபிடித்திருக்க வேண்டியதில்லை என்கிற கருத்தையே பதிவு செய்திருந்தோம். அவருடன் இக்கருத்து பற்றி பேசியிருக்கலாம் என்று தான் தெரிவித்திருந்தோம். இது அநியாயமான விமர்சனமா?

ஹஸன் பஸரீ (ரஹ்) என்ன அல்லாஹ்வின் தூதரா? அவர்களுடைய செயலை விமர்சிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினால் பார்த்தீர்களா? ஹஸன் பஸரீயை அநியாயமாக விமர்சிக்கிறார்கள் என்கிறார்.

இது தர்காவாதிகளின் செயலைத்தான் நமக்கு ஞாபகப் படுத்துகின்றது.

இமாம்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே என்று நாம் பிரச்சாரம் செய்த போது, “இமாம்களை அநியாயமாக ஏசுகிறார்கள்” என்றார்கள்.

இதற்கும், கட்டுரையாளர் கூறுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக நாம் கருதவில்லை.

மேலும் இந்தக் கட்டுரையில், “முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் விலகி தனியே சென்றவன் என்பது பொருள்” என்று இடையே தன் கருத்தை ஏதோ சமுதாயக் கருத்தைப் போன்று எழுதுகிறார்.

இதற்காகத்தான் அவர்கள் முஃதஸிலாக்கள் என்று துவக்கத்தில் அழைக்கப்பட்டார்களா? ஹஸன் பஸரீயை விட்டும் அவரது சபையை விட்டும் விலகியதாலேயே அவர் விலகியவர்கள் என்று அழைக்கப்படலானார்கள்.

الملل والنحل – (1 / 45)

فتفكر الحسن في ذلك وقبل أن يجيب قال واصل بن عطاء : أنا لا أقول إن صاحب الكبيرة مؤمن مطلقا ولا كافر مطلقا بل هو في منزلة بين المنزلتين : لا مؤمن ولا كافر

 ثم قام واعتزل إلى أسطوانة من أسطوانات المسجد يقرر ما أجاب على جماعة من أصحاب الحسن

 فقال الحسن : اعتزل عنا واصل فسمي هو وأصحابه معتزلة

ஹஸன் (ரஹ்) இது பற்றி சிந்திக்கலானார். அவர்கள் பதிலளிக்கும் முன்பே வாஸில், “பெரும்பாவம் செய்தவன் பொதுவாக முஃமின் என்றோ காஃபிர் என்றோ நான் கூற மாட்டேன். மாறாக அவன் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறான். அவன் முஃமினும் அல்ல காஃபிரும் அல்ல” என்று கூறி எழுந்து அப்பள்ளிவாசலின் தூண்களில் ஒரு தூணின் பக்கம் ஒதுங்கினார். ஹஸன் (ரஹ்) சகாக்களின் கூட்டத்தாருக்கு தாம் பதிலாக அளித்ததை உறுதிப்படுத்தினார்.

அப்போது ஹஸன் (ரஹ்), “நம்மை விட்டும் வாஸில் விலகி விட்டார்” என்று கூறினார். எனவே தான் அவரும் அவரது சகாக்களும் முஃதஸிலா என்று அழைக்கப்படலானார்கள்.

அல்மிலல் வந்நிஹல், பாகம் 1, பக்கம் 45

முதலில் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களோடு அமர்ந்திருந்த வாஸில், கருத்து மோதல் ஏற்பட்ட பின் அதே பள்ளிவாசலில் வேறு ஒரு தூணைத் தேர்வு செய்து அவரது சபையை விட்டு விலகி அமர்ந்து கொண்டார்.

தன்னோடு கருத்து வேறுபாடு கொண்டு தனது சபையை விட்டு விலகியதாலேயே வாஸிலை நம்மை விட்டும் விலகி விட்டார் என்று ஹஸன் (ரஹ்) கூறுகிறார்.

பிறகு முஸ்லிம்களின் கொள்கையிலிருந்தும் அவர்கள் விலகிச் செல்லும் அளவு வழிகெட்ட கொள்கைகளைத் தேர்வு செய்தார்கள். “விலகியவர்கள்” என்ற அப்பெயர் அவர்களுக்கு பொருத்தமாயிற்று.

இதற்கு மாற்றமாக முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் விலகி தனியே சென்றவன் என்பது பொருள் என்று புது விளக்கத்தை இந்தக் கள்ள ஸலபி அளிக்கின்றார்.

அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ்

அபூபக்கர் ஜஸ்ஸாஸ் பற்றி நாம் எழுதிய அக்கட்டுரையில் இப்படி கூறியிருந்தோம்.

குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை முஃதஸிலாக்கள் மறுத்திருக்கிறார்கள்.  அதே போன்று அந்த ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்தால் அவர்களையும் முஃதஸிலாக்கள் என்று கூறுவது என சில அறிவிலிகள் அறிவற்ற செயலைச் செய்கிறார்கள்.

இந்த அடிப்படையிலேயே சூனியத்திற்கு சக்தி உண்டு என்பதை மறுத்த அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் போன்ற முஃதஸிலா அல்லாத அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நமது இந்தக் கருத்துக்கு, ஸலபுக் கும்பலைச் சேர்ந்த இந்தக் கட்டுரையாளர், இமாம் தஹபீ, இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் முஃதஸிலாக்காரரான காழி அப்துல் ஜப்பார் ஆகியோர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா என்று கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறி பின்வருமாறு விமர்சனம் முன்வைக்கிறார்.

“அபூபக்கர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா எனக் கூறுபவர்கள் அறிவிலிகள் என பி.ஜே கூறுகிறார். அப்படியானால் இவ்வாறு விமர்சனம் செய்த இமாம் தஹபீ அவர்களை அறிவிலி என்று இவர் கூறுகிறாரா? இமாம் இப்னு தைமிய்யா அவர்களை அறிவிலி எனக் கூறுகிறாரா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்“

என்று கண்ணீர் வடிக்கிறார்.

முஃதஸிலா அல்லாத அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸை முஃதஸிலாக்களின் பட்டியலில் இமாம் இப்னு தைமிய்யாவும், முஃதஸிலா சார்புள்ளவர் என்று இமாம் தஹபீ அவர்களும் குறிப்பிட்டுள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அது சரியா என்பது தான் இங்கே கேள்வி.

முஃதஸிலாக்கள் தங்களுக்கென்று ஐந்து அடிப்படைகளை வகுத்துக் கொண்டு அதை ஏற்பவர் மட்டுமே முஃதஸிலா என்று பலரும் சொல்லியிருக்க அந்த ஐந்து அடிப்படைகளையும் ஏற்காத ஒருவரை முஃதஸிலா என்று சொல்வது எப்படி சரியாகும்?

அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளையும் ஏற்றுக் கொண்டவரா? அந்த ஐந்து அடிப்படை கொள்கைகளையும் அல்ஜஸ்ஸாஸ் ஏற்றுக் கொள்ளாத வரை அவரை முஃதஸிலா என்று யார் சொன்னாலும் அது செல்லுபடியாகாது.

இப்னு தைமிய்யா ஒருவரை முஃதஸிலாவின் பட்டியலில் சேர்த்து விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்கு மறுபேச்சில்லை என்ற நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கலாம். நமக்கு அந்த நிலைப்பாடு கிடையாது.

இமாம் இப்னு தைமிய்யாவும் தவறிழைக்கலாம் என்ற அடிப்படையில் இதுவும் அவருடைய தவறுகளில் ஒன்று என்பதே நம் நிலைப்பாடு.

நபிகள் நாயகமே மனிதர் என்ற அடிப்படையில் தவறிழைப்பார்கள் என்று நம்பும் முஸ்லிமிற்கு இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.

ஆனால் நபித்தோழர்கள், இமாம்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஊறித் திளைத்தவர்களுக்கு உண்மையில் இது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கக் கூடியதுமே!

இமாம் தஹபீ ஜஸ்ஸாஸை முஃதஸிலா சார்புள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் தங்களுக்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வை பார்க்க முடியாது என்று முஃதஸிலாக்கள் சொன்ன கருத்தைப் போன்ற ஒன்றிரண்டு கருத்துக்களை இமாம் அல்ஜஸ்ஸாஸ் தனது விரிவுரை நூலில் கூறியமையால் இமாம் தஹபீ இவரை முஃதஸிலாக்களின் பக்கம் சாய்ந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழுவதுமான முஃதஸிலா என்று இமாம் தஹபி குறிப்பிடவில்லை.

அதுமட்டுமின்றி இமாம் தஹபீ அவர்களே அல்ஜஸ்ஸாஸை  ஹனஃபீ மத்ஹபை சார்ந்தவர் என்றே அறிமுகப்படுத்துகிறார்.

سير أعلام النبلاء (16/ 340)

الإِمَامُ، العَلاَّمَةُ، المُفْتِي، المُجْتَهِدُ، عَلَمُ العِرَاقِ، أَبُو بَكْرٍ أَحْمَدُ بنُ عَلِيٍّ الرَّازِيُّ، الحَنَفِيُّ، صَاحِبُ التَّصَانِيْفِ.

அபூபக்கர் அஹ்மத் பின் அலி அர்ராஸி என்பவர் இமாம், பேரறிஞர், மார்க்க தீர்ப்பளிப்பவர், ஆய்வாளர், இராக்கின் அடையாளமாக திகழ்ந்தவர்,  ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர், பல நூல்களுக்குச் சொந்தக்காரர்.

ஸியரு அஃலாமிந் நுபலாஃ,

பாகம் 16, பக்கம் 340

இத்துடன் தான் அல்லாஹ்வைப் பார்த்தல் உள்ளிட்ட சில விவகாரங்களில் முஃதஸிலாக்களின் கருத்தைக் கொண்டிருந்தார் என்று விமர்சிக்கின்றார்.

இதனால் அவர் முஃதஸிலா என்றாகி விடுவாரா? ஒரு போதும் ஆகிவிடமாட்டார்.

முஃதஸிலாக்கள் சொன்ன ஒன்றிரண்டு கருத்துக்களைச் சொல்வதால் ஒருவர் முழுவதுமான முஃதஸிலா ஆகிவிடமாட்டார் என்று ஏற்கனவே நாம் எழுதியிருப்பது இதற்கும் பொருந்தும்.

அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்ற கருத்தில் இன்றும் பலர் உள்ளனர். அவர்களை எல்லாம் இந்த ஒன்றுக்காக முஃதஸிலா என்று இவர்கள் சொல்வார்களா? ஜமாலி வகையறாக்களை இதற்காக முஃதஸிலா பாதையில் பயணிப்பவர்கள் என்று விமர்சித்து இந்த ஸலபுக்கும்பல் கட்டுரை எழுதியுள்ளார்களா? தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டுமே இவர்கள் விமர்சிப்பதிலிருந்து இவர்களது நோக்கம் மார்க்கத்தை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதல்ல – தவ்ஹீத் ஜமாஅத்தைக் குறைப்படுத்துவதே என்பதைத் தெளிவாக விளங்கலாம்.

மேலும் காழி அப்துல் ஜப்பார் அவர்கள்  அல்ஜஸ்ஸாஸ் அவர்களை முஃதஸிலா பட்டியலில் இணைத்துள்ளதால் அவர் முஃதஸிலா என்ற வாதம் முற்றிலும் தவறானதாகும்.

ஏனெனில் காழி அப்துல் ஜப்பார் இவரை மட்டும் முஃதஸிலாக்களின் பட்டியலில் இணைக்கவில்லை. இன்னும் பலரையும் இணைத்துள்ளார்.

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) , இப்னு அப்பாஸ் (ரலி) , இப்னு உமர் (ரலி), ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) உள்ளிட்ட இன்னும் பல நல்லோர்களையும் முஃதஸிலாக்களின் முதல் மற்றும் இரண்டாம் தரப் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

பார்க்க: காழி அப்துல் ஜப்பாரின் தப்காதுல் முஃதஸிலா, பக்கம் 214

முஃதஸிலாக்காரரான அப்துல் ஜப்பாரே சொல்லிவிட்டார் என்பதால் அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலா என்று ஒப்புக் கொள்வதாக இருந்தால் அபூபக்கர், உமர் போன்ற பெரும் நபித்தோழர்களையும் முஃதஸிலா என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஸயீத் பின் முஸய்யப் போன்ற மூத்த தாபியிக்களையும் முஃதஸிலா என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவாதத்திற்கு அல்ஜஸ்ஸாஸ் முஃதஸிலாவாகவே இருந்தாலும் எங்களுக்கு ஒரு பாதிப்புமில்லை.

எங்களைப் பொறுத்தவரை யாருமே நாங்கள் சொன்ன கருத்தைச் சொல்லியிருக்காவிட்டாலும் அதனால் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்லும் கருத்து யாருமே சொல்லாததால் அது அசத்தியம் என்றாகி விடாது.

அடுத்து அல்ஜஸ்ஸாஸை முஃதஸிலா என்ற தஹபீ அறிவிலியா? என்று கேட்கிறார். நாம் இவர்களை நோக்கி வர்ணிக்கும் வார்த்தைகளை இமாம்களை நோக்கி திருப்பி விடுகிறார்கள்.

இதையே நாம் திருப்பி இப்படி கேட்கிறோம்.

அறிவிப்பாளர் தொடர் சரியான, நபியின் பெயரால் வந்துள்ள செய்திகளை மறுத்தால் அது வழிகேடு, அசத்தியம் என்றெல்லாம் நரம்பு புடைக்க இந்த ஸலபுக் கும்பல் பேசுகிறார்கள்.

இதே வழிமுறையைக் கடைபிடித்த அன்னை ஆயிஷா வழிகேடரா?

உமர் (ரலி) வழிகேடரா? அபூஅய்யுப் (ரலி) வழிகேடரா? குர்துபி போன்ற இமாம்கள் வழிகேடர்களா என்று காலம் காலமாக கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். இதற்குக் கள்ள ஸலபுக் கூடாரத்தில் உள்ள யாரும் மூச்சுக்காற்றுக் கூட விடுவதில்லை. இவராவது மழுப்பாமல் பதில் சொல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைவர் மறுப்பதால் அதைச் சரிகாண்பதோ கண்டும் காணாமல் இருப்பதோ ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஈமான் உள்ள எந்த ஒரு முஃமினும் இந்த வழிகேட்டை நியாயப்படுத்த மாட்டான். இதைக் கண்டு ஊமையாக இருக்கவும் மாட்டான்.

என்று தான் தனக்கு எதிராகவே எழுதுகிறோம் என்பதை அறியாமல் ஏதோதோ எழுதுகிறார்.

சரி இவர் எழுதியது உண்மை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது பல வருடங்களாக ஏன் இங்கிருந்து மாறிப்போகும் நாளுக்கு முன்புவரை இக்கொள்கையை ஆதரித்து, நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்தாரே, அப்போது இவர் முஃமின் இல்லை என்று தன் எழுத்துக்களாலேயே ஒப்புக் கொள்கிறார்.

இன்றைக்கு எந்த ஹதீசும் முரண்படவில்லை என்று பேசும் பல நபிமொழிகள் குறித்து அன்றைக்கு வாய்திறக்காமலேயே காலம் கழித்தாரே, விலகிச் செல்வதற்கு சமீபம் வரை எந்த விளக்கமும் அளிக்காமல் வாதம் செய்யாமல் ஊமையாக இருந்தாரே அப்போது இவர் முஃமினா? காஃபிரா என்பதற்குப் பதிலளிக்கட்டும்.

இவர் சொல்லும் படி தவ்ஹித் ஜமாஅத்தில் யாரும் தலைவர் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் மறுபேச்சில்லை என்ற மனநிலையில் இல்லை.

மாற்றுக் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கும் ஆரோக்கியமான நிலை அல்லாஹ்வின் அருளால் இந்த ஜமாஅத்தில் மட்டுமே உள்ளது.

ஆனால் இமாம்கள் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவ்வளவு தான் அதற்கு மேல் யோசிக்கக் கூடாது என்றும், சவூதியின் பெரிய உலமாக்கள் பத்வா கொடுத்து விட்டால் அதற்கு எதிராக வாய் திறக்க மறுக்கும் இவருக்கு இதைப் பற்றி பேசத் தகுதியில்லை.

வழிகேட்டின் வரையறை

ஒட்டுமொத்தமாக இந்தக் கள்ள சலபுக் கூட்டம் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்றால் ஒரு கருத்து வழிகேடு என்பதற்கான அளவு கோல் முஃதஸிலாக்கள் தான். முஃதஸிலாக்கள் எந்த கொள்கையைக் கொண்டிருந்தார்களோ அதுதான் வழிகேடு. முஃதஸிலாக்களின் கொள்கையல்லாத வேறு எதுவும் இவர்களின் பார்வையில் வழிகேடு அல்ல. இப்படித்தான் வழிகேட்டின் வரையறையை அறிந்து வைத்துள்ளார்கள்.

குர்ஆன் ஹதீஸ் படியே நடப்பதாகக் கூறிவிட்டு, இந்தக் கருத்தை இதற்கு முன்பு யார் யார்? எந்தெந்த அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்? என்று வெட்கமே இல்லாமல் கேள்வி கேட்கும் இவருக்கு  வெட்கத்தைப் பற்றி பேச கிஞ்சிற்றும் தகுதியில்லை.

ஒருவர் சொன்ன கருத்தை குர்ஆன் ஹதீஸ் சரிகண்டால் அது சத்தியம், இல்லையென்றால் அது வழிகேடு என்ற சாதாரண தெளிவு கூட இவர்களிடத்தில் இல்லை. சத்தியத்தை வழிகேடர்கள் சொல்லியிருந்தாலும் அது சத்தியமே. சத்தியம் என்றைக்கும் அசத்தியமாகி விடாது.

—————————————————————————————————————————————————————-

குர்ஆன் வழி நடந்த கோமான் நபி

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

ஆலோசனை செய்!

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் அவர்களும் தம் சகாக்களிடம் பல விஷயங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் நபியவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

திருக்குர்ஆன் 3 : 159

ஒரு இறைத்தூதர் தனக்கு இறைவனின் புறத்திலிருந்து வஹியாக அருளப்படுபவை குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை. வஹீச் செய்தியை மற்றவர்களை விட நபியே நன்கறிந்தவர்கள் ஆவார்கள்.

அப்படியென்றால் ஆலோசனை செய்வீராக என்று அல்லாஹ் கட்டளையிடுவது வஹியல்லாத இதர விஷயங்கள் குறித்து தான் என்பதைத் தெளிவாக அறியலாம்.

இறைவனின் இவ்வசனத்திற்கும் நபிகள் நாயகம் அழகாய் செவிசாய்த்துள்ளார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதராயிற்றே, சமூகத்தில் பெரும் அந்தஸ்து மிக்கவனாயிற்றே, நான் போய் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதா? என்ற கர்வம் துளியும் இல்லாமல் பல விஷயங்கள் குறித்து நபிகள் நாயகம் மற்றவர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.

ஆலோசனை கேட்பது மட்டுமின்றி மற்றவர்களின் கருத்துக்களைச் சரியெனக் கருதும் போது அதற்கு மதிப்பளித்தும் உள்ளார்கள்.

பத்ருப் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடி முக்கிய எதிரிகளை கைதிகளாய்ப் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை என்ன செய்யலாம் என்று தம் சகாக்களுடன் நபிகளார் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

ஆலோசனையில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சீர்தூக்கி பார்த்தே அதில் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறை பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே! அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)என்று (ஆலோசனை) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும், உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாதுஎன்று தொடங்கி, “நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்” (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.

நூல்: முஸ்லிம் 3621

அதே போல ஒரு கட்டத்தில் தம் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை, ஸஃப்வான் பின் முஅத்தல் எனும் நபித்தோழருடன் இணைத்து விஷமிகள் அவதூறு பரப்பினர்.

இச்சம்பவம் நபியவர்களுக்கு மனக்கவலையை அளித்த போது தம் சொந்தக் குடும்ப விவகாரமாக இருந்த போதிலும் அலீ, உஸாமா, பரீரா ஆகியோரை அழைத்து அவர்களிடம் இது குறித்து ஆலாசனை நடத்தியுள்ளார்கள். கருத்து கேட்டறிந்து கொண்டார்கள் என்று வரலாறு சான்றளிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள்.  அப்போது “வஹீ‘ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), “தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லைஎன்று பதில் கூறினார்.

நூல் : புகாரி 2661

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவைத் தரிசிக்க நபித்தோழர்களுடன் புறப்பட்டுச் சென்ற போது ஹுதைபிய்யா எனுமிடத்தில் எதிரிகளால் தடுக்கப்படுகிறார்கள்.

பிறகு அங்கேயே இணை வைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நிறைவேறுகிறது. ஒப்பந்தம் எழுத்தாகி விட்ட போது முஸ்லிம்களிடம் முடியை மழித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள். ஆனால் இணைவைப்பாளர்கள் விதித்த பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிவானதால் இணை வைப்பாளர்களுக்குப் பணிந்து போய் விட்டோமே என்ற ஆதங்கத்தில் நபித்தோழர்கள் யாரும் நபியின் கட்டளைக்கு செவி சாய்க்கவில்லை.

இப்போது நபி ஸல் அவர்கள் தம் கட்டளைக்கு செவிசாய்க்காத தோழர்கள் குறித்து தம் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடந்தார்கள். நபியவர்களின் பிரச்சனையும் தீர்ந்தது என்பதை வரலாற்றில் அறிகிறோம்.

உம்மு சலமா அவர்கள் அப்படி என்ன ஆலோசனை வழங்கினார்கள் என்பது பின்வரும் செய்தியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி  ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டுதம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன்  மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப்  போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

நூல்: புகாரி 2732

பொதுவாக ஆண்கள் ஆலோசனை கேட்பதென்பதே அரிது. அதிலும் பெண்களிடம், மனைவியிடம் ஆலோசனை கேட்பது அரிதிலும் அரிது.

தான் ஓர் இறைத்தூதராக இருந்தும், இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்தும் தன்னிகரற்ற தலைவராக இருந்தும் நெருக்கடியின் போது தம் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை பெற்றிருப்பது நபியவர்களின் வாழ்க்கையில் ஆலோசனைகளுக்குப் பெரும் பங்கிருப்பதைச் சந்தேகமற உணர்த்தி விடுகிறது.

இறைத்தூதராகவும், சிறந்த அறிவாளியாகவும், போர் வியூகராகவும் திகழ்கிற நபிகள் நாயகம் மற்றவரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் ஆட்சித்துறை சம்பந்தமாகவும், குடும்ப தொடர்பாகவும் ஆலோனை கேட்டிருக்கிறார்கள் என்றால் குர்ஆன் வசனங்களையே தம் வாழ்க்கையாக ஏற்று நடந்துள்ளார்கள் என்பதும், குர்ஆனின் கட்டளைகளுக்கு அப்பால் நபியின் வாழ்க்கை இருக்கவில்லை என்பதுமே நாம் இவற்றிலிருந்து அறிய வேண்டிய முக்கிய பாடமாகும். காரணம், நபியின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது.

—————————————————————————————————————————————————————-

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி. மங்கலம்

சென்ற இதழின் தொடர்ச்சி…

ஊரின் எதிர்ப்பு உறுதியைத் தரட்டும்

சொந்த ஊரிலே மார்க்கப்படி தைரியாமாகச் செயல்படும் சிலர், வெளியூருக்குச் சென்றால் தங்கள் வழிபாட்டு முறையையே மாற்றிக் கொள்கிறார்கள். இதுபோன்று, உள்ளூரில் கொள்கையை மறைத்து கமுக்கமாக இருப்பவர்கள், வெளியூரில் மட்டும் ஏகத்துவவாதியாக அறிவித்துக் கொண்டு வீரியத்துடன் ஈடுபடுகிறார்கள்.

இப்படி நம்முடைய மார்க்க கருத்துக்களை ஊருக்குத் தோதுவாக திரிக்கவோ, வளைக்கவோ கூடாது. ஊருக்கு ஏற்ப வேடம்போடக் கூடாது. ஏகத்துவமே என் வழிமுறை என்று எங்கும் பகிரங்கப்படுத்தத் தயங்கும் நபர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது, மக்காவிற்கு வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதையடுத்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்கள் “கிஃபார்குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்என்று சொன்னார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்என்று சொல்விட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்என்று கூறினார்.

உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள், கொதித்தெழுந்து, அவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் “கிஃபார்குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (கிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்ல, அவர் மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3522, 4879

அல்லாஹ்வின் அனுமதியோடு நபியவர்கள் தமது தஃவா பணியை இரகசியமாகச் செய்து வந்த போது, நம்பிக்கையை மறைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட போது இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று ஊரிலே சகல உரிமையையும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் நிலையில் இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? மார்க்கப் பாதையை விட்டு சறுகிக் கிடக்கும் ஊர் ஜமாஅத்திற்கு எதிராக வாய் திறப்பதற்கு எத்தனை பேருக்குத் துணிவு இருக்கிறது? இதே கேள்வியும் படிப்பினையும் கீழிருக்கும் செய்தியிலும் இருக்கிறது.

மக்காவில் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அபிசீனியாவை நோக்கி, நாடு துறந்து சென்றார்கள். யமன் செல்லும் வழியில் “பர்குல் கிமாத்’ என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர், ஆபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். அவர்களின் நற்காரியங்களைக் குறிப்பிட்டு ஊர் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இப்னு தஃகினாவும் ஊர் திரும்பினார். அவர் குறைஷிகளைச் சந்தித்து அபூபக்ர் அவர்களின் பண்புகளை நினைவுடுத்திவிட்டு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைப் படியுங்கள்

(அபூபக்ர் அவர்களுக்கு அளித்த) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (அவரது வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப் படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணை வைப்பவர்களின் மனைவியரும் மக்களும் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லைஎன்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, “நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணிய மிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (3905)

ஊரின் அழிவை அஞ்சுவோம்

சில மக்கள், ஊரில் அதிகமான பேர் இருக்கும் அணியிலே தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்கைக் கோட்பாடு எப்படி இருக்கிறது என கொஞ்சமும் சிந்திப்பது இல்லை. மார்க்கத்தைத் தூக்கியெறியும் விரோதப் போக்கு கொண்டவர்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள். ஏகத்துவத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள். இவர்கள் எந்த ஊருக்காக உண்மையை உதறித் தள்ளுகிறார்களோ அது அழியக் கூடியது; அற்பமானது என்பதை உணரட்டும். அல்லாஹ் எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறான். இது குறித்த நிறைய வசனங்கள் திருமறையில் இருக்கின்றன. அவற்றைப் படித்த பிறகாவது உன்னதமான தீனை விடவும் ஊரே முக்கியமென தப்புக் கணக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 46:27

(அழிக்கப்பட்ட) அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7:94-96

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகல் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

திருக்குர்ஆன் 7:97-99

ஊர் மீதான பாசமோ பயமோ ஒருபோதும் நமது மார்க்கப்பற்றை மிகைத்து விடக் கூடாது. அல்லாஹ்வுக்கு அஞ்சி அழகிய முறையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோம். ஊருக்கும் உலகத்திற்கும் ஏற்ப கொள்கையில் சமரசம் செய்யாமல், மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம்; முஹம்மது நபியை மட்டும் பின்பற்றுவோம். மரணிக்கும் வரை தவ்ஹீத் வழியிலே பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ்வின் அருளும் உதவியும் நிச்சயம் கிடைக்கும். ஊராரின் சூழ்ச்சிகளும் இடைஞ்சல்களும் தூள்தூளாக உடைந்து போய்விடும். அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும். உலக வாழ்வில் மட்டுமல்ல! மறுமையிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு உதவிபுரிவானாக.

—————————————————————————————————————————————————————-

இறந்தவர்கள் செவியேற்பார்களா? தொடர் 40

எழுத்தாக்கம் : ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அவர்கள் சொர்க்கத்தில் பச்சை நிறப் பறவை வடிவத்தில் இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்பதையும் கண்டோம்.

ஒரு வாதத்திற்கு கப்ரு வணங்கிகள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே இன்று வரை உயிருடன்தான் உள்ளார். இதைத் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியாகும்? ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காக போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் தாமதிக்காமல் உடனடியாக சொர்க்கத்திற்குதான் முதலில் செல்வார்கள். அவர்களின் உடல் மட்டும்தான் மண்ணறைக்குள் இருக்கும். உயிர் (ஆத்மா) சுவனத்தில் இருக்கும் என்று மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதாவது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்பதற்கு யாசீன் என்ற அத்தியாயத்தில் வரக்கூடிய வசனங்களும் சான்றாக அமைந்திருக்கின்றன. (பார்க்க: யாசீன் அத்தியாயத்தில் 13-வது வசனம் முதல் 26 வரை)

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர். ஞ்ஞ்நாங்கள் உங்களை கெட்ட சகுனமாகவே கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையென்றால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும் என்று (அவ்வூரார்) கூறினர்.

…சொர்க்கத்திற்கு செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 36:13-26)

இவ்வசனத்தில் ஒரு நல்ல மனிதர் இறைத்தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென சொர்க்கத்திற்குச் செல் எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.

அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொல்லப்பட்டவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்ற கருத்தையும் இவ்வசனம் தருகிறது.

கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.

இதில் இவரைப் போன்ற அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சாகாமல் நம்மைப்போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்குப் பொருள் செய்தால் அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று இவர்களிடம் கேட்டால் செய்யலாம் என்று தான் பதிலளிக்கிறார்கள்.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

மேற்கண்ட வசனங்களை வைத்து இறந்தவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று சொல்வது தவறான வாதமாகும்.

அடுத்ததாக, நபியவர்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரத்தையும் காட்டுவார்கள்..

அதாவது நாம் நபியவர்கள் மீது சலவாத் சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். அதே போன்று அவர்கள் மீது சலாமும் சொல்ல வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறான். அந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, ‘நாம் நபியவர்கள் மீது சொல்லக்கூடிய சலாமை அவர்கள் செவியேற்று நமக்கு பதில் சலாம் சொல்வார்கள். எனவே அவர்கள் உயிருடன் தான் உள்ளார்கள். அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் தொடர்பு உள்ளது. பர்ஸக் எனும் தடையிலிருந்து அவர்கள் விதிவிலக்கு பெற்றவர்கள்’ என்ற ஒரு வாதத்தை வைக்கின்றனர்.

(குறிப்பு. சலவாத் என்பது நபியவர்களுக்காக நாம் அல்லாஹ்விடத்தில் செய்யக்கூடிய பிரார்த்தனை (துஆ) ஆகும். தொழுகையில் அத்தஹிய்யாத்தின் போது ”அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்” என நாம் ஓதக்கூடிய துஆ. சலாம் என்பது அவர்களுக்கு நேரிடையாக துஆ செய்வது ஆகும். அதுவும் அத்தஹிய்யாத்தின் போது ஆரம்பத்தில் வருகிறது.)

இவ்வாறு அவர்கள் வைக்கும் வாதம் எந்தெந்த வகையில் தவறானது என்பதை நாம் பார்ப்போம்.

அவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனம் இதுதான்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கைக் கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள். சலாமும் கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டுதான் கபுர் வணங்கிகள், நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் உயிருடன் இருப்பதால்தான் அல்லாஹ்வும் அவர் மீது சலாம் சொல்லச் சொல்கிறான். இறந்துபோன, செவியேற்காதவர்களுக்கு அல்லாஹ் சலாம் சொல்லச் சொல்வானா? அவ்வாறு சொல்ல மாட்டான்.

மாறாக உயிருடன் இருக்கின்ற, நாம் சொல்வதைச் செவியேற்கின்ற, புரிகின்ற தன்மையுள்ள, நாம் சொல்வதற்கு பதிலளிக்கின்றவர்களுக்குத்தான் சலாம் சொல்லச் சொல்வான். அந்த அடிப்படையில் நபியவர்கள் உயிருடன் உள்ளார்கள். எனவே நாம் அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும். பதிலுக்கு நபியவர்களும் நம் மீது பதில் சலாம் சொல்வார்கள் என்று கூறுகின்றனர்.

மேலும், அத்தஹிய்யாத் இருப்பில் நாம் நேரிடையாக நபியைக் கூப்பிட்டு ”அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்று ஓதுகின்றோமே! இதற்கு என்ன அர்த்தம்?

நபியே! உங்கள் மீது சலாமும், அருளும், அபிவிருத்தியும் உண்டாகட்டுமாக என்று சொல்கின்றோம் என்றால் உயிருடன் இல்லாத ஒருவரை இவ்வாறு கூப்பிடுவோமா! நாம் சலாம் சொல்வதாக இருந்தால் உயிருடன் உள்ள ஒருவரைத்தான் நாம் கூப்பிட்டு சலாம் சொல்வோம் என்றும் கூறுகின்றனர்.

இந்த வாதம் அடிப்படை அறிவற்ற வாதம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது அவர்கள் பதில் சலாம் சொல்வார்கள் என்றால், உயிருடன் இருக்கும் போது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ’’ என்று நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள். அப்படியானால் அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?

வளரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்

நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் (55: 26,27)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் (3: 2)

“நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

அல்குர்ஆன் (4: 78)

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப் படுவீர்கள்!

அல்குர்ஆன் (29: 57)

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (32:11)

இந்த வசனங்களும், இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர அனைவரும் மரணிக்ககூடியவர்கள்தான். மேலும், ஒவ்வொருவருடைய உயிரையும் அவர்களுக்கென்று இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவர் கைப்பற்றுவார் என்ற இந்த அடிப்படையை நமக்கு எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைத் தவிர அனைவரும் மரணிப்பவர்களே என்ற இந்த சித்தாந்தத்தை ஆழமாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்பினால்தான் அவர் இறைநம்பிக்கையாளராகக் கருதப்படுவார்.

அவ்வாறில்லாமல், மனிதனும் மரணிக்காமல் சாகாவரம் பெறலாம் என்று நம்பினால் அது நரகிற்கு அழைத்துச் செல்லும் தெளிவான இணைவைப்பே!

இதுபோன்று இஸ்லாத்திற்கு எதிரான ஒரு அடிப்படையைத்தான் “நமனை விரட்ட” என்று துவங்கும் நாகூர் ஹனிபாவின் பாடல் தெரிவிக்கின்றது.

“நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே!

அன்பு நாணயம் கொண்டு சென்றால், பெறலாம் குருநாதர் பதப்பூவிலே”

“விஞ்ஞான பண்டிதர் ஷாஹுல் ஹமீது ஒலி விற்கும் அருமருந்து

அது அஞ்ஞான அந்தகாரத்தை விலக்கும் அருளெனும் மாமருந்து”

இதுதான் அந்த பாடலின் ஆரம்ப வரிகளாகும்.

“நமன்” என்றால் தமிழில் “எமன்” என்று பொருளாகும். எமன் என்ற வார்த்தை உயிரைக் கைப்பற்றுபவர் என்ற அர்த்தத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

அன்போடும், பக்தியோடும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் ஷாகுல் ஹமீதைத் தரிசித்தால், உயிரைக் கைப்பற்றுவதற்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவரை விரட்டி விட்டு நாம் மரணிக்காமல் இருந்து விடலாம் என்று இந்த வரிகள் கூறுகிறன.

வானவர்கள் என்பவர்கள் இறைவன் கட்டளையிட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். அவனுக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16: 49, 50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் (66: 6)

இறைக் கட்டளைப்படியே நடப்பது வானவர்களின் இயற்கை குணம். மனிதர்களின் மீது இரக்கம் அல்லது பாசம் கொண்டு இறைக் கட்டளைக்கு மாறு செய்து விடமாட்டார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தப் பாடலோ வானவர்கள் நாகூர் ஷாகுல் ஹமீதுக்குக் கட்டுப்பட்டு அவருடைய பக்தர்களின் உயிரைக் கைப்பற்றாது விட்டுவிடுவார்கள் என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

மேலும், நாகூரில் தரிசித்த பின் ஒருவர் சாகாவரம் பெற்று விடலாம் என்ற விஷமக் கருத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது.

இந்தப் பாடல் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக இருப்பது ஒரு புறமிருக்க, நிதர்சனத்திறக்கும் கூட மாற்றமாக இருக்கிறது.