தலையங்கம்
ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள்
அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான்.
இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து ஒரு சிலர் விடுபடுவதும், விலகுவதும் உள்ளே இருக்கின்ற கொள்கைச் சகோதரர்களில் சிலரது உள்ளத்தில் ஒருவித விரக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. “இவர்களே இப்படிப் போய் விட்டார்களே! நமது நிலை என்ன?’ என்று எண்ணத் தலைப்பட்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அருமருந்தாக, அற்புத அரணாக இந்த வசனம் அமைந்திருக்கின்றது.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)
அல்லாஹ்வின் எதிரிகளை, அவனது தூதரின் எதிரிகளைத் தமது எதிரிகளாகப் பாவிப்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசுகளையும் பலன்களையும் பார்ப்போம்.
- உள்ளத்தில் ஈமான் (இறை நம்பிக்கை) பதிவாகுதல்
- பதியப்பட்ட ஈமான் பலமாகுதல்
- அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுதல்
- வெற்றியடைதல்
- சுவனத்தில் நுழைதல்
இறைவனின் எதிரிகளை, இறைத் தூதர்களின் எதிரிகளைத் தன் எதிரிகளாகக் கொண்டவர்களுக்கு இத்தனை பாக்கியங்களும் கிடைக்கின்றன. இந்தப் பாக்கியங்களைப் பெறுபவர்கள், அவர் போய் விட்டாரே! இவர் போய் விட்டாரே! நாம் எப்படி? நமது நிலை என்ன? என்று கவலைப்படத் தேவையில்லை. கலக்கமடைய வேண்டிய அவசியமில்லை.
இன்று இந்த ஜமாஅத்திலிருந்து வெளியே செல்பவர்கள் மேற்கண்ட இறை வசனம் கூறும் இலக்கணங்களிலிருந்து விலகியவர்கள் தான். உதாரணத்திற்கு, வரதட்சணையை எடுத்துக் கொள்வோம்.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! (அல்குர்ஆன் 4:4)
வரதட்சணை திருமணங்களை ஆதரிப்பவர்கள் திருக்குர்ஆனின் 4:4 வசனத்தை வகை வைக்கவில்லை. அதனால் அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டவர்கள். இதே போன்று தான் பெண் வீட்டு விருந்து. ஏனெனில் இதுவும் ஒரு தெளிவான வரதட்சணை தான். இவற்றை ஆதரிப்பவர்கள் சத்திய வேதத்தின் இந்த வசனத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாதவர்கள். இது வேதக்காரர்கள் மற்றும் இறை நிராகரிப்பாளர்களின் பண்பாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 5:57)
அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை. (அல்குர்ஆன் 18:106)
அதனால் தான் இத்தகையோரின் விருந்துப் படையல்களை, விழா சபைகளை அல்லாஹ் புறக்கணிக்கச் சொல்கிறான்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)
ஆனால் இத்தனையும் மீறி வரதட்சணை விருந்துகளில் போய் கலந்து கொள்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய பாசத்தை விட உறவுகளின் பாசமும் நேசமும் தான் மேலோங்கி நிற்கின்றது, மிகைத்து நிற்கின்றது. அதனால் தான் இத்தகையோர் எளிதில் இந்த அமைப்பை விட்டு வெளியேறி விடுகின்றனர்.
இங்கே இன்னொரு கேள்வி எழலாம். இந்த இயக்கத்தில் இருந்தால் தான் கொள்கை உறுதி இருக்குமா? இதை விட்டு வெளியே போய் விட்டால் கொள்கை உறுதி இருக்காதா? இங்கிருந்தால் தான் ஏகத்துவாதியா? இதை விட்டு வெளியே போய் விட்டால் தடம் புரண்டவரா? என்பது தான் அந்தக் கேள்வி.
பொதுவாக இப்படிக் கூற முடியாது என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற இயக்கங்களை எடை போட்டுப் பார்த்து இப்படிக் கூற முடியும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற அடித்தளத்தின் மீது அமையப்பெற்று எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து செய்து கொள்ளாத ஒரு இயக்கம் நம் கண்களுக்குத் தென்படவில்லை. இருக்கும் இயக்கங்களில் இந்த ஒரு இயக்கம் தான் இந்தத் தகுதியில் இருப்பதால் அப்படிச் சொல்கிறோம்.
இதை விட்டு வெளியே போனவர்கள் தர்ஹா வாசலில் போய் நிற்பதையும் அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் பார்க்க முடிகின்றது.
இந்த ஒரு அமைப்பு மட்டும் தான் வரதட்சணை விருந்தை, பெண் வீட்டு விருந்தை ஒரு பாவமாகப் பார்க்கின்றது. அதை ஒழிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது. ஜாக் உள்ளிட்ட இன்ன பிற இயக்கங்கள் இதைச் சரி காணுகின்றன. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. இதிலிருந்தே தவ்ஹீத் ஜமாஅத்தின் தூய்மையை விளங்கிக் கொள்ளலாம்.
கடையநல்லூர் என்ற ஊரில் இதுவரை பெண் வீட்டு விருந்தை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் தான் பெண் வீட்டு விருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட, நபிவழி அடிப்படையிலான திருமணம் நடந்தேறியது. இது தான் தவ்ஹீத் ஜமாஅத்.
உறவுகளுடைய பிரியத்தை விட, பாசத்தை விட அல்லாஹ்வுடைய பாசம் மேலோங்கி நிற்பதால் தான் இந்த ஜமாஅத்தினரால் இப்படி உறுதியாக நிற்க முடிகின்றது. அப்படி நிற்பதைத் தான் இந்த ஜமாஅத் வலியுறுத்துகின்றது. அதனால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் கொள்கைப் பிடிமானத்துடன் இருக்க முடிகின்றது. தடம் மாறாமல் நிற்க முடிகின்றது.
இது போன்று இதர கொள்கை விஷயங்களிலும் 58:22 வசனத்தின்படி உறுதியாக நின்றால் அவர்களது உள்ளம் ஈமான் பதியும் தளமாக மாறி விடுகின்றது. அவர்களது ஈமான் பலமாக ஆகின்றது. உண்மையில் இது ஓர் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இறைவன் நாடினால் இவர்கள் தடம் மாறாமல் இருப்பார்கள். இவர்களின் உள்ளங்கள் எந்தச் சோதனையையும் தாங்குகின்ற, எந்தத் தீமையையும் எதிர் கொள்கின்ற எஃகு உள்ளங்களாகி விடுகின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?
மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டியும், உலக மகளிர் இயக்கம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. கடுமையான, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு அதற்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று ராஜ்யசபையில் இந்த மசோதா, கடந்த மார்ச் 9 அன்று நிறைவேறியது. ஆனால் இது நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்குரிய கருத்தொற்றுமை இன்னும் ஏற்படவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆக மூன்று யாதவ்களும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணினத்தைத் தலைவியாகக் கொண்ட மற்றொரு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.
சட்டத்தின் சாதனை என்ன?
இது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்கு அளிக்கின்றது. இதன்படி 543 இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும். நாட்டில் இருக்கும் 28 சட்டமன்றங்களில் 4109 இடங்களில் 1370 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும்.
பெண்களுக்கான இந்த இடங்கள் சுழற்சி முறையில் அமையும். இதன்படி ஒரு தொகுதி மூன்று தேர்தலுக்கு ஒருமுறை பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதுதான் இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சாதனை.
இதைத் தான் இந்த அறிவுஜீவிகள் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாகக் கருதுகிறார்கள். அதனால் தான் இந்தச் சட்டத்தை ஒரு வரலாற்றுச் சாதனை, பெண்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி, பெண்களின் அரசியல் முன்னேற்றம் என்றெல்லாம் பீற்றிக் கொள்கின்றனர்.
ஏற்கனவே இந்த இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் அறிமுகமாகி நடைமுறைக்கு வந்து விட்டது. அதனால் பெண்களின் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் உதயமானதா? புதிய புரட்சி படைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. இவர்களின் இந்தக் கூக்குரல்களால் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
கருவறையா? கல்லறையா?
இப்போது பெண்களுக்கு மிக மிக இன்றியமையாத தேவை உயிர் வாழும் உரிமை தான். தாயின் கரு என்பது கருணையின் மறு பெயர். இப்போது அந்தக் கருவறையே கல்லறையாக மாற்றப்பட்டு விட்டது.
கருவறையில் நவீன கருவிகளின் நாசகாரக் கதிரலைகள் பாய்ந்து பெண் சிசு என்று கண்டறியப்படுகின்றது. அங்கே அந்தத் திடப் பொருள் (கரு) திரவப் பொருளாக மாற்றப்பட்டு, கழுவி, கழிவு நீராக வெளியேற்றப்பட்டு விடுகின்றது. கருவறை காலி செய்யப்படுகின்றது.
உள்ளத்தை உருக வைக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, அக்கிரமத்தை அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பட்ங் கஹய்ஸ்ரீங்ற் என்ற இதழ் படம்பிடித்துக் காட்டுகின்றது. அந்த ஆய்வை இப்போது பார்ப்போம்.
பஸ்பமாக்கப்பட்ட 12 மில்லியன் பெண் சிசுக்கள்
4.2 மில்லியன் முதல் 12.1 மில்லியன் வரையிலான பெண் குழந்தைகள் 1980க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில், குறி வைத்துக் கருவிலேயே பஸ்பமாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பெண் குழந்தைகள் 1990ல் அழிக்கப்பட்டுள்ளனர்.
கருவில் உருவாகும் பெண் குழந்தை, தலைக் குழந்தையாக இருந்தால், அதாவது தாய்க்கு முதல் குழந்தையாக இருந்தால் அது இந்தக் கொலையை விட்டுத் தப்பி விடுகிறது. இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்.
இந்தியாவில் அதிகமான மக்கள் தொகையினர் வசிக்கும் மாநிலங்களில் தான் இது போன்று பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கருக்கலைப்பு செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது.
பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான மொத்தக் குழந்தைகளில் ஆண் குழந்தைகளை விட 71 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர் என்று 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
இதே வயதுக் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகள் 60 லட்சம் குறைவான இருந்தனர் என்று 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
42 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே குறைவாக இருந்ததாக 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது.
1990ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது. 2005ஆம் ஆண்டு இந்த விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்று சரிந்து விட்டது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
மொத்தக் குழந்தைகளில் ஆண்களை விட 42 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக இருந்தது, தற்போது 71 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது பெண் குழந்தைகள் குறைவதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பிலும் கருக்கலைப்பு கூடிக் கொண்டிருப்பதையே இந்தப் புள்ளி விபரம் காட்டுகின்றது.
காட்டுமிராண்டியாக்கும் கல்வியறிவு
படிக்காத, பாமர, பரம ஏழை வர்க்கத்தினரை விட படித்த, பணக்கார வர்க்கமே இந்தப் பெண் சிசுக் கலைப்பில் மிஞ்சி நிற்கின்றனர் என்பதையும் இந்த ஆய்வு விவரிக்கின்றது. அதாவது கற்றவர்கள், கல்வியறிவு மிக்கவர்கள் தான் காட்டுமிராண்டித்தனத்தில் மிஞ்சியுள்ளனர்.
இதன் விளைவாகத் தான் 2001ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் என்றிருந்த பிறப்பு விகிதம், 2011ல் 1000க்கு 914 ஆகக் குறைந்தது.
கலைப்பிற்குக் காரணம் என்ன?
இந்தக் கருவழிப்புகள், கருக்கலைப்புகள் மட்டும் நிகழாவிட்டால் இயற்கையாகவே 1000 ஆணுக்கு 952 பெண் என பிறப்பு விகிதம் அமைந்திருக்கும். ஆனால் அந்த அளவை அடைவதை விட்டும் கருக்கலைப்பு தடுத்து விட்டது.
இன்று விலங்கின உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணின உரிமைக்குப் பெரும் கோஷமிடுபவர்கள், பேயாட்டம் போடுபவர்கள் அந்தப் பெண்ணினத்தின் கருவுயிரைக் காக்கும் உரிமைக்கு, மனித உயிரின் புனிதம் காப்பதற்காகப் போர்க் குரல் எழுப்ப வேண்டாம். குறைந்தபட்சம் இதற்காக முணுமுணுப்பதற்குக் கூட மறுப்பது தான் பெரும் வேதனைக்குரிய விஷயம்.
இப்படிக் கருக்கலைப்பிற்கும், அதைக் கண்டு கொள்ளாத மனப்பான்மைக்கும் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
- பிரசவத்திற்கு முந்திய கண்டுபிடிப்புத் தொழில் நுட்பச் சட்டம் (டழ்ங்ய்ஹற்ஹப் உண்ஹஞ்ய்ர்ள்ற்ண்ஸ்ரீ பங்ஸ்ரீட்ய்ண்வ்ன்ங்ள் ஆஸ்ரீற்) அதாவது பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கருவிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான இந்தச் சட்டத்தின் செயலிழப்பு மற்றும் முடக்கம். இந்தச் சட்டத்தின்படி கருக்கலைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- பெரும் பெரும் பண முதலைகள், பேராசை கொண்ட ரேடியாலஜிஸ்ட், பணமே குறியாகக் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள், சட்டத்திற்குப் புறம்பாகப் பெருகிக் கொண்டிருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரங்கள்!
இவர்கள் தான் ஆணாதிக்கம் கொண்ட கருக்கலைப்பையும், கருவழிப்பையும் நாடுகின்ற கொலைகார மக்களுக்குக் கொலைக் கருவிகளாகவும் கொலைக் காரணிகளாகவும் ஆகியிருக்கின்றார்கள்.
கருக்கலைப்புக்காக வரக் கூடியவர்கள் சொல்லும் காரணங்கள் சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கின்றன. சமயங்களில் பொய்யாகவும் ஆகி விடுகின்றன.
- கருக்கலைப்பு மருத்துவச் சட்டம் (பட்ங் ஙங்க்ண்ஸ்ரீஹப் பங்ழ்ம்ண்ய்ஹற்ண்ர்ய் ர்ச் டழ்ங்ஞ்ய்ஹய்ஸ்ரீஹ் ஆஸ்ரீற் – 1971) இந்தச் சட்டத்தை டாக்டர்களின் காவல் சக்தி என்றழைக்கலாம்.
கருவில் வளரும் குழந்தை தாயின் நலத்திற்குப் பெரும் ஆபத்து என்று ஒரு டாக்டர் கருதினால் போதும். அந்தக் கருவை அவர் கலைத்து விடலாம்.
சட்டத்திற்குப் புறம்பாக அவர் கருவைக் கலைக்கும் போது கூட இந்தச் சட்டத்தின் காரணமாக அவரைத் தண்டிக்க முடியாது. தாயின் நலத்திற்குப் பேராபத்து என்ற காரணத்தைச் சொல்லி அவர் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.
- தடுக்க முடியாத தடுப்பு சாதனங்கள்:
கருவுறாமல் இருப்பதற்காக வேண்டி கருத்தடைச் சாதனங்களை தம்பதியர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கருத்தடைச் சாதனங்கள் பல கட்டங்களில் காலை வாரி விடுகின்றன. இந்தக் கருத்தடைச் சாதனங்களுக்கு டாக்டர்கள் எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்க முடிவதில்லை. இறுதியில் இதன் காரணமாகவும் கருக்கலைப்பு தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
- தாய் மரணம்:
தாராளமயமான கருக் கலைப்பின் காரணமாகத் தாயின் உயிர் பாதுகாக்கப்படுகின்றது; இதனால் தாய் மரணம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது என்ற தவறான நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதற்கு அயர்லாந்து ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு கருக்கலைப்பிற்கு எதிரான கடும் சட்டம் அமலில் இருக்கின்றது. இப்படி இருந்தும் அங்கு தான் தாய் மரணம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதனால் தாராள கருக்கலைப்பு தான் தாய் மரணத்தைத் தடுக்கின்றது என்ற கருத்து தவறானது என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகின்றது.
இவை இந்திய மற்றும் உலக அளவில் கருக்கலைப்பிற்காகச் சொல்லப்படுகின்ற காரணங்கள். மேற்கத்திய நாட்டில் ஆண் பெண் பாகுபாடின்றி கருக்கலைப்பு நடைபெறுகின்றது. ஆனால் இந்தியாவிலோ பெண் இனம் குறி வைத்து அழிக்கப்படுகின்றது.
இப்போது பெண்களுக்கு உடனடியான, அவசியமான, அவசரத் தேவை அவர்களின் உயிர் வாழும் உரிமை தான். அந்த உரிமைக்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் செய்யாமல் 33 சதவிகித இடஒதுக்கீட்டில் இந்த அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் களமிறங்கியிருக்கிறார்கள்.
உயிரைக் காக்க உரிய வழி
சரி! அப்படியே இவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரும்பி, கருக்கலைப்பை தடுப்பதற்குச் சட்டம் இயற்றி, கருக்கலைப்பு தடுக்கப்பட்டு விடும் என்று எண்ணினால் அதுவும் முற்றிலும் தவறாகும். காரணம் இப்போதும் கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் நம் நாட்டில் அமலில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனாலும் கருக்கலைப்பைத் தடுக்க முடியவில்லையே! ஏன்? எனவே இந்தச் சட்டம் இதற்குத் தீர்வாகவோ திருப்பமாகவோ ஆகாது.
இதற்கு ஒரே வழி, உரிய வழி இஸ்லாமிய மார்க்கம் தான். அது எப்படி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கூறுகின்றது என்பதை நாம் தனித் தலைப்பில் பார்க்கவுள்ளோம்.
உறையச் செய்யும் உ.பி. கற்பழிப்புக்கள்
உத்தர பிரதேச மாநில மனித உரிமை ஆணையம், பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாயாவதி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் வேளையில் உ.பி.யில் கடந்த ஐந்தாறு நாட்களில் மட்டும் ஆறு கற்பழிப்புக்கள் அரங்கேறியுள்ளன.
- ஜூன் 13: லக்கிப்பூர்கேரி மாவட்டத்தில் நிதாஷான் காவல் நிலையத்தில் 14 வயதுப் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
- ஜூன் 19: உ.பி. கன்னாவுஜ் மாவட்டத்தில் 14 வயது இளம் பெண், ஒரு காமவெறிக் கும்பலின் கற்பழிப்புக்கு இணங்க மறுத்து, எதிர்த்துப் போரிட்டதில் ஒரு கண்ணில் கத்தியால் குத்தி குருடாக்கி விட்டு, மறு கண்ணையும் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பி விட்டனர். கற்பையும் கண்ணையும் இழந்த அந்தப் பெண்ணை கிராம மக்கள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு கண் முழுமையாகப் பறி போய் விட்டதாகவும் மறு கண் 80 சதவிகிதம் சேதமடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- ஜூன் 20: எடா மாவட்டம் பிரபாப்பூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஒரு வீட்டில் நுழைந்து தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அனார்கலி என்ற 35 வயதுப் பெண்ணைக் கற்பழித்தனர். பின்னர் அந்தப் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அப்பெண்மணி இறந்து விட்டார். இறப்பதற்கு முன்னால் அப்பெண்ணிடம் மாவட்ட கூடுதல் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றுக் கொண்டார். பிள்ளைகள் அடையாளம் காட்டியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்பெண்ணின் கணவர் சம்பவத்தன்று ஊரில் இல்லை. அவர் டெல்லியில் பணி புரிகின்றார்.
- ஜூன் 21: லக்னோ, சீதாப்பூரில் ஸாலிஹா என்ற 12 வயதுப் பெண், தனது சகோதரனுடன் மதரஸாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது கடுமையான மழையில் மாட்டிக் கொள்கிறாள். அதனால் ஒரு மரத்திற்கு அருகே ஒதுங்குகின்றாள். ஆனால் உடன் வந்த சகோதரனோ மழையில் ஓட்டம் பிடித்து வீட்டுக்குச் சென்று விடுகின்றான். அவனது சகோதரி வீட்டுக்குத் திரும்பவே இல்லை. பெற்றோர் வலைவீசித் தேடியதில் ஒரு கரும்புத் தோட்டத்தில் ஸாலிஹாவைப் பிணமாகத் தான் கண்டெடுக்கின்றார்கள். உடலில் கோரக் காயத்துடன்.
- ஜூன் 24: பைசாபாத் மாவட்டத்தில் அன்ஜ்ராலி கிராமத்தில் ஒரு பருவ வயதுப் பெண், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு மத விழாவுக்குச் சென்ற போது 20 வயது வாலிபர்களான ரமேஷ் யாதவ், மகேஷ் யாதவ் ஆகியோரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகின்றாள்.
- ஜூன் 25: முஸஃப்பர் நகரில் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்ற 14 வயது இளம் பெண்ணை லால் என்ற இளைஞன் துப்பாக்கி முனையில் அருகிலுள்ள வயல் வெளிக்குக் கடத்திச் சென்று கற்பழித்தான்.
- ஜூன் 25: பக்ருபூர் நகரில் 17 வயது இளம் பெண் ஒரு போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டாள்.
இந்தக் கற்பழிப்புக்கள் அனைத்தும் உ.பி.யில் மட்டும் கடந்த ஐந்தாறு நாட்களில் நடந்தவை. நாடெங்கும் நடந்த கற்பழிப்புக்களைக் கொண்டு வந்தால் இந்த ஏடு தாங்காது.
பெண்களுக்கு எதிராக நடந்த இந்தக் கற்பழிப்புகளுக்கும் கொடூரமான கொலைகளுக்கும் தீர்வு என்ன?
இன்று பெண்ணியம் பேசுபவர்கள், பெண் விடுதலைக்காகப் போராடுபவர்கள், அரசியல்வாதிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி, மாபெரும் புரட்சி ஏற்பட்டு விடும் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்; பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு இப்போது உண்மையான, உடனடியான, அதிரடியான, அவசியமான தேவை ஆளும் உரிமை அல்ல, வாழும் உரிமை! காரணம் ஒரு பெண் கருவில் உருவெடுத்தாலே அதைக் கருவியின் கழுகுப் பார்வையில் கதிர் வீச்சு அலைப் பாய்ச்சலில் கண்டுபிடித்து, தாயின் கருவறையையே கல்லறையாக்கி விடுகின்றனர். ஒரு கருப் பொருள் கருக்கலைப்பு என்ற பெயரில் கழிவுப் பொருளாகக் கழுவப்படுகின்றது.
இப்படிக் கழுவப்பட்ட, கலைக்கப்பட்ட, கழிவு நீராக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1980 முதல் 2010 வரையிலான முப்பது ஆண்டுகளில் மட்டும் 12 மில்லியன் (ஒரு கோடியே இருபது லட்சம்) ஆகும்.
அப்படியே கருவறையில் தப்பி உருவெடுத்து உயிரெடுத்து உலகத்தில் உதயமாகி விட்டால் இருக்கவே இருக்கின்றது கள்ளிப்பால், எருக்கம்பால்! இந்தக் கைப்பக்குவ மருந்துகளில் அந்தப் பெண் குழந்தைகளின் உயிர்களைப் பறித்து விடுகின்றனர்.
பெண் சிசுக் கொலை செய்வதில் இந்தப் பழைய முறைகள் நமக்குத் தெரியும். ஆனால் “புதிய கலைகள்’ என்ற தலைப்பில் இந்து நாளேடு வெளியிட்ட செய்தி, நம்மை மலைப்பில் அல்ல. மயக்கத்திலேயே ஆழ்த்தி விடும். பெண் குழந்தைகளை எருக்கஞ்செடி அல்லது கள்ளிப் பாலை வைத்துக் கொலை செய்வது பழைய முறை. இப்போது புதிய கொலை முறைகளைப் பாருங்கள்.
(1) புகையிலைச் சாற்றை குழந்தை வாயில் புகட்டி சாகடித்தல்
(2) காரம் நிறைந்த கோழி சூப்பை கொடுத்தல். இதன் விளைவால் கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் குருத்து, குய்யோ முறையோ என்று கீச் குரலில் கத்தி விட்டு இறந்து குளிர்ந்து போதல்.
(3) குழந்தைக்கு அளவுக்கு அதிகம் பால் புகட்டி விட்டு ஈவு இரக்கமின்றி ஒரு ஈரத்துணியால் பொதிந்து அதிலேயே உயிர் துடிப்பு நிற்கும் வரை உறையச் செய்தல்.
(4) பிறந்த அந்த இளங்கொழுந்தின் அறுக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து வழிகின்ற இரத்தத்தை நிறுத்தாது அப்படியே ஓட விட்டு உயிரிழக்கச் செய்தல்.
(5) குழந்தையை கைக் காற்றாடியின் முன்னால் படுக்க வைத்து அந்தக் காற்றாடியின் விசிறிகளை அறுந்து போகும் வேகத்தில் சுழலச் செய்தல். புயலென வீசும் இந்தச் சுழல் காற்று வீச்சில் இந்த அரும்பின் சுவாசக் காற்றை நிறுத்தி விடுதல்.
என இந்த மாபாதகங்களை சேலம் பகுதியில் வசிக்கும் பெண்கள் செய்கின்றனர். “எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தைகள் இரண்டு. நான்காவது ஒரு பெண் என்றால் அக்குழந்தையை விட்டு வைக்க மாட்டேன்’ என்று இந்தப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருத்தி குறிப்பிடுகின்றாள். பெண் குழந்தை எனில் பெரும் செலவு, கல்யாணம் முடிக்கக் காசு பணம் அதிகம் தேவை. இதுதான் பெண் குழந்தைகளை கொல்லக் காரணம் என்று அந்தப் பெண் சொல்கின்றாள்.
இதையும் தாண்டி அந்தப் பெண் குழந்தை வளருமானால் பருவமடைவதற்கு முன்போ, அல்லது பருவமடைந்த பின்போ கற்பழித்து, கழுத்தை நெறித்து அல்லது கொளுத்தி சாகடித்து விடுகின்றனர்.
திருமணம் முடித்த பின்பு ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளுக்கு முன்னாலேயே கதறக் கதற காமுகர்களின் கும்பலால் கற்பழித்துக் கொல்லப்படுவது இதயம் உள்ள எவராலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு கோர, கொடூரச் சம்பவமாகும்.
இப்படிக் கற்பழிப்புகளிலிருந்து தப்பி விட்டால் வரதட்சணை என்ற கொடுமையால் மாப்பிள்ளை வீட்டுக் கோடரியால் ஒரு பெண் கொல்லப்படுகின்றாள். மாப்பிள்ளை வீட்டில் ஸ்டவ் வெடித்து, மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்தி, அல்லது அடித்தே கொல்லப்படுகின்றாள்.
கண்ணைப் பறித்த காட்டுமிராண்டித்தனம்
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தில் 1995ஆம் ஆண்டு முஹம்மது யூசுஃப் என்பவர் 24 வயது நிரம்பிய நஜ்மாவை திருமணம் முடிக்கின்றார்.
வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள் நம்முடைய கொத்தடிமை என்ற எகத்தாளத்தில் மாமியார் வீட்டு ஆதிக்க வர்க்கம் அத்துமீறி நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கும் – மிருகத் தனமான அடி உதைகளுக்கும் நஜ்மாவின் உடல் மத்தளமானது. அணுதினமும் அவளது வாழ்க்கை அவள் வடிக்கும் கண்ணீரிலேயே கரைந்தது.
கொண்டு வா! இல்லையேல் கொன்று விடுவேன் என அவளின் கொண்டையைப் பிடித்து மாமியார் வெட்டினார். அவளது மேனியில் நடத்திய கோர நடனத்தை, இந்தப் பெண் தன்னைப் பெற்றவர்களின் குடும்பத்திற்குக் கொண்டு செல்லவில்லை! ஒருநாள் கூட இந்தக் கொடுமைகளை விட்டும் நஜ்மா தப்பவில்லை!
மாமி வீட்டு அரசாங்கம் கப்பம் கட்டச் சொல்லும் போதெல்லாம் பெண் வீட்டுக்காரர்கள் எதுவும் கட்ட முடியாத கையறு நிலையில் கை பிசைந்து நின்றனர். அவ்வப்போது நஜ்மாவின் சகோதரர்கள் வாய்க்கரிசியாக மாப்பிள்ளை வீட்டாருக்குப் போடாமலில்லை. ஆனால் அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற கதையானது. ஏற்கனவே மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த நஜ்மாவுக்கு நான்காவதாக ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் நஜ்மாவின் கண்ணுக்கு மை போடும் குடும்ப நிகழ்ச்சி. இது குழந்தை பிறந்ததும் அந்தப் பகுதியில் நடக்கும் சடங்கு! இதற்கு கஜல் என்று கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்வைத்து காட்டரக்கியான மாமி, நஜ்மாவிடம் சென்று கண்ணில் “மை’ வைக்கின்றாள். கண்ணில் வைத்தது வெறும் கரு”மை’ அல்ல! நஜ்மாவின் கண்களில் நாசக்கார மாமி வைத்தது என்ன தெரியுமா? “ஆசிட்’டில் தோய்க்கப்ட்ட விஷ”மை’. நஜ்மாவின் விழிகளுக்கு வேட்டு வைக்கும் வெடிமருந்து. கைக்குழந்தையைக் கையில் வைத்திருக்கும் “நஜ்மா’ கண்ணைக் கசக்கி மாளவில்லை! கதறி அழுகின்றாள்!
அவளை கட்டாகத் தூக்கிக் கொண்டு ஓர் அறையில் போட்டு அடைக்கின்றனர் கணவன் வீட்டு காட்டுமிராண்டிகள். எரிகின்ற விழிகளுடன் 24 மணித்துளிகள் அந்த அறையிலேயே எரிந்து போனது! இதை உன் அப்பன் வீட்டுக்குத் தெரிவித்தால் இதய நோயாளியான உன் தாய் இறந்து போவாள் என்று இதயமற்றவர்கள் நஜ்மாவை எச்சரித்தனர். இதுவரை அடங்கிக் கிடந்த அந்த அபலைப் பெண், நான்கு குழந்தைகளின் தாய், நான்காவது குழந்தை பிறந்து நான்கு நாட்கள் முடிந்து நரக வேதனையை அனுபவித்த “நஜ்மா’ ஒருவாறாக துணிவைப் பெற்று பிறந்த வீட்டிற்குச் செய்தி அனுப்பி விடுகிறாள்.
அலறியடித்து ஓடிவந்த அண்ணன் தம்பிகள் அவசரமாக அருமைச் சகோதரியை மருத்துவமனைக்குக் கொண்டு போகின்றார்கள். அங்கு மருத்துவர் ஓர் அதிர்ச்சி செய்தியை அறிவிக்கின்றார். அந்த அதிர்ச்சி செய்தி, இனிமேல் நஜ்மா நிரந்தரமாக இந்த உலகத்தைக் காண முடியாது என்பது தான்.
இப்படிப் பெண்ணினம் கருக்கலைப்பு, சிசுக் கொலை, கற்பழிப்புக் கொலை மற்றும் வரதட்சணைக் கொலை போன்ற பல கொலைக் களங்களைக் காணுகின்றது. இந்தப் பெண்ணினத்திற்கு ஆளும் உரிமையை அதாவது 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி விட்டால், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் தந்து விட்டால் பெண்கள் எதிர் கொள்ளும் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? ஒரு போதும் தீராது.
இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டுத் தான் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் உ.பி. மாநிலத்தில் சமீபத்தில் நிகழும் கற்பழிப்புக் கொலைகள்.
எனவே பெண்களுக்கு இப்போதைய தேவை ஆளும் உரிமை அல்ல! வாழும் உரிமை தான். அந்த வாழும் உரிமையையும் சட்டத்தின் மூலம் நிலைநாட்ட முடியுமா? அதுவும் ஒருபோதும் முடியாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு, இஸ்லாமிய ஷரீஅத்தும், இறை நம்பிக்கையும் தான்.
அன்று அரபுலகில் இந்தப் போக்கு தான் நிலவியது, நீடித்தது. அதைத் தான் இஸ்லாமிய மார்க்கம் தலைகீழாக மாற்றி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது. அதைத் தான் இந்த இதழ் சற்று உற்றுப் பார்த்திருக்கின்றது.
காரணங்கள் – தீர்வுகள்
- சினிமா
இன்று பெண்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் தாக்குதலுக்கு, கண்மூடித்தனமான காமப் பசிக்கு இரையாவதற்குப் பல்வேறு காரணங்களை நாம் கூறலாம். அவற்றில் மிகவும் முதன்மை மற்றும் தலையாயது சினிமா என்று அடித்துச் சொல்லலாம்.
ஒரு பெண்ணை ஈவு இரக்கமற்ற முறையில் எப்படிக் கற்பழிக்கலாம்? கற்பழித்து விட்டு எப்படியெல்லாம் கொலை செய்யலாம்? கொலை செய்து விட்டு எப்படியெல்லாம் தப்பிக்கலாம்? என்பதைப் பற்றி சினிமா நன்கு விவரிக்கின்றது.
35 வயதுப் பெண்ணை வீடு புகுந்து பெற்ற பிள்ளைகள் முன்னிலையில் கற்பழிப்பதும் தீ வைத்து எரித்துக் கொலை செய்வதும் சினிமா பட பாணி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இரவு நேரத்தில் இக்கட்டான நிலையில் ஏடாகூடமாக ஒரு பெண் மாட்டிக் கொண்டால் அந்தச் சூழ்நிலையை சமூக விரோதிகள் சாதகமாக்கிக் கொள்வது சினிமா தரும் பலான பாடம் தான்.
துப்பாக்கி முனையில் பெண்களைக் கடத்திக் கற்பழிப்பதும் பின்னர் கொலை செய்வதும் சினிமா படத்தின் சாகசம் தான்.
அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவது, நீர் வீழ்ச்சிகளில் அரை நிர்வாணத்துடன் காட்சியளித்து ஆண்களை நிலை குலையச் செய்வது, பாலியல் உணர்வுகளைத் தூண்டி விடுகின்ற படுக்கையறைக் காட்சிகள் என பற்பல ஆபாச, அந்தரங்கக் காட்சிகள், வேட்டை நாய்களைப் போன்று வெறியேற வைக்கும் நீலப் படங்கள் எல்லாமே ஒரு மனிதனிடம் உள்ளடங்கி உறைந்து கிடக்கும் பாலியல் உணர்வை உசுப்பி விட்டு, கொதி நிலைக்குக் கொண்டு வந்து, வெடித்துச் சிதற வைக்கும் வெடி மருந்தாக இயங்குகின்றன. எனவே இந்த சினிமாக்களை, ஆபாசப் படங்களை முதலில் தடை செய்ய வேண்டும். இவற்றைத் தடை செய்யாத வரை இந்தத் தீமைகளுக்கு விடை காண முடியாது.
- ஆண்களைக் கவர்கின்ற ஆபாச ஆடைகள்
பெண்கள் அணிகின்ற ஆடைகளைத் தீர்மானிப்பவையாகத் திகழ்வது சினிமா! அதிலும் இலைமறை காயாக மேனியை வெளிப்படுத்துகின்ற, மினு மினுக்கின்ற கண்ணாடி போன்ற, ஆண்களின் பார்வைகளைச் சுண்டி இழுக்கின்ற, சொக்க வைக்கின்ற சல்லாப ஆடைகளைப் பெண்கள் அணிவதும் அவர்களை இந்தப் பேராபத்தில் வீழச் செய்து விடுகின்றது.
இதற்கு இஸ்லாம் கூறுகின்ற ஆடை தான் பெண்களைக் காக்கின்ற கவசமாக, காவல் அரணாகத் திகழும். காமுகர்களின் காட்டுத்தனமான காமத் தீயிலிருந்து அது காக்கும்.
- மது
தங்கு தடையற்ற மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆண்களை இந்த மிருக நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
இந்தத் தீமையும் பெண்களின் கற்பழிப்புக்கும் கொலைக்கும் மிக முக்கியக் காரணமாகின்றது. பெண்கள் ஒரு நாட்டில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அந்த நாடு மதுவையும் தடை செய்ய வேண்டும். ஓர் இஸ்லாமிய நாட்டில் மது விற்க, பருக அனைத்திற்கும் தடை தான். இதை ஒரு நாடு அமல்படுத்தாத வரை பெண்களுக்கு இது போன்ற கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு அறவே கிடையாது.
- ஆபாசப் புகைப்படங்கள், ஆபாச நூல்கள்
ஆண்களை மிருகமாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள், ஓவியங்கள், நீலப் படங்கள் அடங்கிய புத்தகங்கள், மஞ்சள் பத்திரிகைகள், தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள். இவை அனைத்தும் தாவணியில்லா பெண்களின் படங்களை முதல் பக்கத்தில், அட்டையில் தாங்காமல் வெளிவருவதில்லை.
மார்பில் துணியில்லாமல் நிற்கும் பெண்களை அட்டைப் படத்தில் தாங்கிய இந்த இதழ்களுக்குக் குடும்பப் பத்திரிகை என்ற பெயர் வேறு!
நீலப் படங்களைப் போன்று நீலப் புத்தகங்களும் ஆடவர்களின் காம உணர்வைக் கிண்டிக் கிளறுவதில், அவனை ஒழுக்க ரீதியில் நிர்மூலமாக்குவதில், நீர்த்துப் போகச் செய்வதில் முன்னணி வகிக்கின்றன. இதுபோன்ற புத்தகத்தை ஒருவன் படித்தால் போதும். அவன் தன் காமப் பசிக்கு இரை தேடுவதில் ஒரு காட்டு விலங்காக மாறி விடுகின்றான். எனவே இவை பெண்களின் கற்பழிப்புகளுக்கும் கொலைகளுக்கும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. பெண்களை இதுபோன்ற தீமைகளிலிருந்து ஓர் அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமெனில் இவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும்.
தூய இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் இந்நூல்கள், படங்கள், ஓவியங்கள் தணிக்கை அல்லது தடையை விட்டு ஒருபோதும் தப்பாது.
இந்தக் காரணங்களைப் போன்று இன்னும் இதர காரணங்களையும் அறிந்து அவற்றிற்குரிய தீர்வுகளைக் கண்டு விட்டால் அப்போது தான் கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்களுக்குரிய வாழ்வுரிமை கிடைக்கும். இந்த வாழ்வுரிமையைப் பெண்களுக்கு அளித்த ஒரே மார்க்கம் இஸ்லாம். அது எப்படி? தனித் தலைப்பில் பார்ப்போம்.
—————————————————————————————————————————————————————-
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய வாழ்வுரிமை
இன்று இந்தியாவில் பெண்களின் வாழ்வுரிமை கருவறையிலிருந்து கல்லறை வரை பல்வேறு கட்டங்களில் பறிக்கப்படுவதைப் பார்த்தோம்.
இது போன்ற ஓர் அநியாயம், அரக்கத்தனம் அன்று அரபகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை அல்குர்ஆன் அழகாக விவரித்துச் சொல்கின்றது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 16:58, 59
இது அன்றைய நிலை! இன்றைய நிலை என்ன?
ஒரு தம்பதியருக்குப் பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படுவதில்லை. மாறாக அவர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். காரணம் என்ன? ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளை தான் அவளுக்கு லட்சக்கணக்கில் அளிக்க கொடுக்க வேண்டும்.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!
அல்குர்ஆன் 4:4
என்று அல்குர்ஆன் ஆணையிடுகின்றது. எனவே அங்கு பெண் குழந்தை பிறந்தால் வரவு! இங்கு பெண் குழந்தை பிறந்தால் செலவும் இழவும் ஆகும். இந்தியாவைப் போன்று வரதட்சணைக் கொடுமை என்பது ஒரு வாடைக்குக் கூடக் கிடையாது. அதனால் பெண் குழந்தைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
பொதுவாக அரபக முஸ்லிம்கள் ஆண் குழந்தையானாலும் சரி! பெண் குழந்தையானாலும் சரி! அதை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம் அல்குர்ஆன் தான்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49, 50
இப்படி ஒரு பக்குவத்தையும் பண்பையும் அவர்களுடைய உள்ளத்தில் அல்குர்ஆன் ஊட்டி விடுகின்றது. அதனால் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
(உம்ராவுக்காக வந்த) நபி (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று நாட்களில் மக்காவை விட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், “என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!” என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின் தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், “இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைச் சுமந்து கொள்” என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், “அவளை நான்தான் வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். அலீ (ரலி) அவர்கள், “நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், “இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், “(இவள்) என் சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், “சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். மேலும் ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, “நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2699
பெண் குழந்தைகளைப் புதைத்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயம், அந்தப் பெண் குழந்தையை அரவணைப்பதற்கும் அன்பு செலுத்தி வளர்ப்பதற்கும் முன் வருவது ஏன்? திருக்குர்ஆன் அவர்களுடைய உள்ளத்தில் ஊட்டிய மறுமை உணர்வு தான்.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
அல்குர்ஆன் 81:7, 8
திருக்குர்ஆனின் இந்த வசனம் – நாளை மறுமையில் நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற இறையச்சம் – தான் மிருக நிலையில் இருந்த அவர்களை மனிதர்களாக மாற்றியது. அத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “பெண் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் காவல் அரண்களாக, கவசங்களாகத் திகழும்’ என்று சொன்னதால் பெண் குழந்தைகளைப் பேணி வளர்க்கத் துவங்கினார்கள்.
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1418
“இரு பெண் குழந்தைகளைப் பருவமடைகின்ற வரை யார் பாதுகாத்து வளர்க்கின்றாரோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்” என்று நபி (ஸல்) அவர்கள் தமது இரு விரல்களை இணைத்துக் காட்டிச் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4765
தனது இரு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓர் ஏழைப் பெண் என்னிடத்தில் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீத்தம்பழங்களைக் கொடுத்தேன். அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பேரீத்தம்பழத்தைக் கொடுத்து விட்டு ஒரு பேரீத்தம்பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக வாயை நோக்கி உயர்த்தினார். அப்போது அவரது இரு பெண் குழந்தைகளும் அதையும் சாப்பிடத் தருமாறு கேட்டனர். தான் சாப்பிட விரும்பிய அந்தப் பேரீத்தம்பழத்தை இரண்டாகப் பிய்த்துக் கொடுத்து விட்டார். அவரது இந்தச் செயல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் செய்த இந்தக் காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். “அவர் செய்த இந்தக் காரியத்தின் காரணமாக அவருக்குச் சுவனம் உறுதியாகி விட்டது” அல்லது “அவர் செய்த இந்தக் காரியத்தின் காரணமாக அவரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 4764
இன்று கடுமையான வறுமையின் காரணமாகத் தன் பெண் குழந்தைகளைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களைப் பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆனால் இந்தத் தாயோ தனக்கு இல்லாவிட்டாலும் தன் பெண் குழந்தைகளுக்கு வழங்குகின்றார்.
இப்படி ஒரு மாற்றம் அவரிடத்தில் வருவதற்கு முக்கியக் காரணம் இஸ்லாம் அவர்களுடைய உள்ளத்தில் பதிய வைத்த மறுமை வாழ்க்கை தான்.
இதயத்தில் பதியப்படும் இறையச்சம்
தாங்கள் மறுமையில் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற பயம் தான் மக்களை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: அறிந்து கொள்க! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 52
இந்த யுக்தியைத் தான் இஸ்லாம் கைக்கொண்டது.
இஸ்லாம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தாலும் உள்ளத்தில் மறுமை பற்றிய பயத்தைப் பதிய வைப்பதில் தான் அதிகக் கவனம் செலுத்துகின்றது. அதனால் இஸ்லாமிய அரபுலம் அன்றும் இன்றும் பெண் குழந்தைகள் மீது எந்த வெறுப்பையும் வேறுபாட்டையும் காட்டுவதில்லை.
இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் வேண்டும் என்றால் இஸ்லாமிய மயமாவது தான் வழி.
ஓரிறைக் கொள்கை
இவை அனைத்தையும் விட, எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாம் கொண்டு வந்த கடவுள் கொள்கை! ஓரிறைக் கொள்கை தான் மக்களை மக்களாக வாழ வைக்கும். பல தெய்வக் கொள்கை தான் பாழாய் போன அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகின்றது.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
அல்குர்ஆன் 6:137
குழந்தைகளைக் கொல்வதற்கு மக்களின் கொள்கையும் கோட்பாடும் முக்கியக் காரணமாக அமைகின்றது. கோணலான, கோளாறான கடவுள் கொள்கை இந்தக் கொடுமைகள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாகின்றது.
மூடப் பழக்கங்கள், முடைநாற்ற சிந்தனைகள் தான் தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொல்ல வைக்கின்றது. இதை அல்குர்ஆன் அழகாக விளக்குகின்றது.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.
அல்குர்ஆன் 6:140
உயிர் காக்கும் உயர் கொள்கை
இன்று முஸ்லிம்களும் கருக் கொலையில் ஈடுபடுகின்றார்கள். பெண் குழந்தைகளை அழிக்கின்றார்கள். வரதட்சணை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றார்கள். உண்மையான ஓரிறைக் கொள்கையுடையவர்கள் இந்தக் காரியங்களிலும் அதன் காரணிகளிலும் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.
ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம்(சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்)க் கொள்கிறேன்” என்று சொல்வார்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல்: புகாரி 3828
இன்று இஸ்லாமிய சமுதாயம் இப்ராஹீம் என்று பெயர் வைப்பதில் குறை வைப்பதில்லை. ஹஜ் பெருநாள் வந்ததும் குர்பான் கொடுப்பதிலும் குறை வைப்பதில்லை. ஆனால் இப்ராஹீம் நபியின் கொள்கையைப் பின்பற்றுவதில் மட்டும் குறை வைத்து விட்டனார். அவரது கொள்கைகளைப் பின்பற்றினால் கருவறை முதல் கல்லறை வரை குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணமான வரதட்சணை போன்ற காரியங்களில் ஒருபோதும் இறங்க மாட்டார்கள்.
மேற்கண்ட செய்தியில் இஸ்லாம் வருவதற்கு முன்பே ஜைத் பின் அம்ர் என்பார் பெண் குழந்தைகளைக் கொல்லாமல் காக்கின்றார் என்றால் அவரை இந்தக் குணத்தில் கொண்டு அமைத்தது அவர் கொண்ட ஏகத்துவக் கொள்கை தான்.
எனவே இந்த ஓரிறைக் கொள்கை தான் உயிர் காக்கும் உயர் கொள்கையாகும். அந்தக் கொள்கையை மக்கள் கடைப்பிடித்தால் பெண்களின் வாழ்வுரிமை காக்கப்படும். பெண்களின் கண்ணியம் போற்றப்படும்.
கற்பழிப்பு இல்லை! கருக்கலைப்பு இல்லை!
சவூதியில் பொதுவாக கருக்கலைப்பு என்பது இல்லை. அதனால் பெண் குழந்தைகள் என்று கண்டறிந்து கருவைச் சிதைப்பது என்பது அறவே இல்லை. பெண் சிசுக் கொலை, கருக்கலைப்புக்கு அடிப்படைக் காரணம் வரதட்சணைக் கொடுமை தான். அந்த வரதட்சணை அங்கு இல்லை எனும் போது பெண் கருவா என்று கண்டுபிடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள்; கொலை செய்யப்படுவார்கள் என்ற கவலையும் அங்கு இல்லை. காரணம் இஸ்லாத்தின் இலக்கே ஒரு பெண் தனியாகச் செல்லும் போது அவள் பாதுகாப்பாகச் சென்று வருவது தான். இதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீரா’வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளை யர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.- நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மைதான்)” என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன்.
மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்” என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
இந்த ஒரு நிம்மதி அந்த நாட்டில் நிலவுகின்றது. இதற்கு மற்றொரு காரணம் மிகக் கடுமையான குற்றவியல் சட்டம் தான்.
திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்; திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால் 100 கசையடிகள் கொடுத்து அவர்களை ஒரு வருடத்திற்கு நாடு கடத்த வேண்டும். இப்படிக் கடுமையான சட்டம் இருப்பதால் இதுபோன்ற குற்றங்கள் உலக நாடுகளை விட அங்கு குறைவாக உள்ளது. அந்நாடு மட்டும் முழுமையான அளவில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்துவார்களானால் இன்னும் மிக மிகக் குறைவான அளவிலேயே குற்றங்கள் இருந்திருக்கும்.
ஆடை கட்டுப்பாடு
பெண்கள் உயிர் காப்பதற்கு இஸ்லாம் மேற்கொண்டிருக்கும் மிக முக்கியமான நடவடிக்கை பெண்களின் ஆடைக் கட்டுப்பாடாகும்.
பெண்கள், அவர்களின் உடல் முழுவதையும் மறைக்கின்ற கண்ணியமான ஆடையை அணியச் செய்கின்றது.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:60
இன்று ஆண்களைக் கவர்ந்திழுப்பதில் கவர்ச்சிகரமான, ஆபாசமான, அரைகுறை ஆடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே இஸ்லாம் கண்ணியமான ஆடை மூலம் இந்தக் காம வாசலை அடைத்து விடுகின்றது.
அதுமட்டுமில்லாமல் ஆண், பெண் ஆகிய இரு சாராரும் தங்களுக்கு மத்தியில் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:30, 31
ஆண்கள், பெண்களின் பார்வைக்கு இவ்வாறு ஒரு கட்டுப்பாடு விதித்து இரு பாலரின் கற்பு நெறியை பரஸ்பரம் பாதுகாக்கும் வகையில் பார்வைக்குக் கடிவாளம் போடுகின்றது.
குடும்பக் கொலைகள்
பெண்களுக்கு எதிரான கொலைகள் வீதியில் மட்டும் நடைபெறவில்லை. வீட்டிற்குள்ளும் நடைபெறுகின்றன. இந்தக் குடும்பக் கொலைகளுக்கு எதிராக இஸ்லாம் போதிய நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இதுபோன்ற கொலைகள் இஸ்லாமிய நெறிக்கு மாற்றமாக வாழும் குடும்பங்களில் தான் நடைபெறுகின்றன. அண்ணன் மனைவியை தம்பி அனுபவித்தான்; தம்பி மனைவியை அண்ணன் அனுபவித்தான் என்ற காரணங்களால் தான் இந்தக் கொலைகள் நிகழ்கின்றன. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5232
இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சட்ட மற்றும் ஒழுக்க நெறிகள் மூலமாக இஸ்லாம் பெண்களுக்குக் கருவறை முதல் கல்லறை வரை வாழ்வுரிமையை வழங்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓரிறைக் கொள்கை, மறுமை வாழ்க்கை எனும் உயர்ந்த உன்னத நம்பிக்கை மூலமாகப் பெண்களை கண்ணியமான முறையில் பாதுகாக்கின்றது.
இந்தியா இந்த இஸ்லாத்தைப் பின்பற்றாத வரை இந்நாட்டுப் பெண்களுக்கு விமோச்சனமும் விடுதலையும் இல்லை.
—————————————————————————————————————————————————————-
திருக்குர்ஆன் விளக்கவுரை
(1993ஆம் ஆண்டு அல்முபீன் இதழில் திருக்குர்ஆன் விரிவுரை எழுதப்பட்டது. பல்வேறு காரணங்களால் தொடர முடியாமல் போன அந்தத் தொடரை நமது வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழில் வெளியிடத் தீர்மானித்துள்ளோம். – ஆசிரியர்)
மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். மிகவும் உயர்வான இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தாலும், இதுபோன்று எவராலும் கொண்டு வர முடியாது என்று சவால் விடும் அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும் சராசரி மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அதன் வசனங்கள் எளிமையாக அமைந்துள்ளன.
மனிதர்களால் எழுதப்பட்ட நூல்கள் இலக்கியத் தரத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மனிதர்களை விட்டு அன்னியமாகிப் போவதை நாம் உலகில் காண்கிறோம்.
அல்குர்ஆன் மட்டும் எவரும் எட்ட முடியாத இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஒன்றே இது இறைவேதம் என்று நிரூபணம் செய்திடப் போதுமானதாகும்.
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
அல்குர்ஆன் 54:17, 22, 32, 40
இவ்வாறு பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.
(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம்.
அல்குர்ஆன் 19:97
(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
அல்குர்ஆன் 44:58
இந்த வசனங்களும் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்பதை அறிவிக்கின்றன.
அனைவரும் எளிதில் விளங்கிட ஏற்ற வகையில் அல்குர்ஆன் அமைந்துள்ளதால் விரிவுரைகளோ, விளக்கவுரைகளோ இல்லாவிட்டாலும் அல்குர்ஆனை அனைவரும் விளங்கலாம். மனிதனுக்கு அந்தத் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியை அனைவரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட மேலதிகமான விளக்கத்திற்காக இரண்டு வழிமுறைகளில் முயற்சி செய்வதை திருக்குர்ஆன் அனுமதிக்கின்றது. அந்த வழிகளில் முயற்சிப்பதை வலியுறுத்தவும் செய்கின்றது.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 16:64)
குர்ஆன் விளங்குவதற்கு எளிதானதாக இருந்தாலும், அதைப் பூரணமாக விளங்கிக் கொள்ள நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரைகளும் அவசியம் என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன. குர்ஆனை முழுமையாக விளங்கிட நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் அவர்களின் வாழ்க்கையையும் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)
இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 38:29)
இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா? (அல்குர்ஆன் 23:68)
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
திருக்குர்ஆனைப் பூரணமாக விளங்க மற்றொரு வழி அதன் வசனங்களைச் சிந்திப்பதாகும். முன்பின் வசனங்களைப் பார்த்து அது சொல்ல வருவது என்ன என்று ஆராயாமல், அவசர முடிவுக்கு வராமல் சிந்தனையைச் செலுத்த வேண்டும் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.
திருத்தூதரின் விளக்கவுரையையும் அறிவுப்பூர்வமான சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கவுரையை நாம் எழுதியுள்ளோம். மக்களால் தொழுகையில் அதிக அளவில் ஓதப்படும் சிறு சிறு அத்தியாயங்களுக்கு விளக்கவுரையை எழுத வேண்டும் என்பதற்காக, சூரத்துந் நபா எனப்படும் அத்தியாயத்திலிருந்து இந்த விளக்கவுரையை ஆரம்பித்துள்ளோம். இந்த அத்தியாயங்களை ஓதும் போதே அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் மக்கள் விளங்கி ஓத வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில் தவறுகளைக் கண்ணுறும் அன்பர்கள் கடமை உணர்வுடன் சுட்டிக் காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அந்நபா – அந்தச் செய்தி
“அம்ம யதஸா அலூன்” என்று துவங்கும் இந்த அத்தியாயம் “அந் நபா’ என்றழைக்கப்படுகின்றது. இதன் பொருள் “அந்தச் செய்தி” என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.
நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும் என்பதை இதன் உள்ளடக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!
அல்குர்ஆன் 78:1, 2, 3
இவ்வாறு இந்த அத்தியாயம் துவங்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அதனை ஏற்காத மக்கள், ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தனர்.
மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அந்த மக்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான். (அல்குர்ஆன் 36:78)
“நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49)
“எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?” என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். (அல்குர்ஆன் 37:51-53)
“நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் 56:46, 47)
“குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?” என்று கேட்கின்றனர். மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா? அப்படியானால் அது இழப்பை ஏற்படுத்தும் மீளுதல் தான்” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 79:10-12)
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? (அல்குர்ஆன் 75:3)
இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:38)
தாம் உயிர்ப்பிக்கப்படவே மாட்டோம் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நினைக்கின்றனர். “அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 64:7)
“உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. “மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் “இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 11:7
“நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 6:29
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறு உலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் இறைத் தூதர்களை நம்புவதற்கு இந்த விஷயமே முதல் தடையாக இருந்தது என்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
“நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது உயிர்ப்பிக்கப்படுவீர்கள்’ என்று இவர் உங்களுக்கு எச்சரிக்கிறாரா?”
“நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது”
“நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ் கிறோம்; நாம் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்”
“இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை” (என்று அந்தப் பிரமுகர்கள் கூறினர்.)
அல்குர்ஆன் 23:35-38
மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனது தான் இறைத் தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்கள் நம்பாமல் போனதற்குக் காரணம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது.
ஆனால் அதே சமயம் இன்னொரு கூட்டமோ அதை விட உறுதியாக மறுமை வாழ்வின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது.
இதற்காக அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
தரக் குறைவான வார்த்தைகளால் ஏசப்பட்டார்கள். எனினும் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.
நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்து விட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்களும் அவர்களைச் சிறிதளவும் அசைக்க முடியவில்லை.
குறைந்த எண்ணிக்கையினராகவும் பலவீனர்களாகவும் இருந்த நிலையிலும், பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை தான் காரணம்.
இப்போது மீண்டும் அந்த மூன்று வசனங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!
அல்குர்ஆன் 78:1-3
மறு உலக வாழ்க்கையை நம்பும் விஷயத்தில் அவர்கள் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டு இருந்ததையும், அதுபற்றி அவர்கள் அடிக்கடி வினா எழுப்பிக் கொண்டிருந்ததையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் எழுப்பிய வினாக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இதற்கு முன் நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.
அவர்கள் வினா எழுப்பும் விஷயம் சாதாரணமானதல்ல. அது மகத்தான விஷயம் என்பதும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. அது எப்படி மகத்தான விஷயமாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
மறு உலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது.
கல்லுக்கும் மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சாதவர்களாக ஆனது இந்த நம்பிக்கையால் தான்.
அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 59:9)
தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது இந்த நம்பிக்கையால் தான்.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)
ஒற்றுமையின்றி தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது இந்த நம்பிக்கையால் தான்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:90)
மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம், அதிலிருந்து தங்களை முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையால் தான்.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:12)
தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாகப் பெண்களும் கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது இந்த நம்பிக்கையினால் தான்.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 2:273)
எந்த மனிதரிடமும் எந்த உதவியையும் தேடாமல் சுய மரியாதையைப் பாதுகாக்கக் கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் இந்த நம்பிக்கையால் தான்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 3:104
தங்களுக்கு நல்லது இது, கெட்டது இது என்று தெரியாமல் இருந்த ஒரு கூட்டம், அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் இந்த நம்பிக்கையால் தான்.
இப்படி ஒரு சமுதாயத்தின் வாழ்வையே அடியோடு மாற்றியமைப்பதற்கு இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளதால் அதை மகத்தான செய்தி என்று இறைவன் கூறுகின்றான்.
இந்த மகத்தான செய்தி பற்றி அவர்கள் வினா எழுப்பிக் கொண்டிருந்தார்கள் என்றால் அந்த வினாவுக்கு விடை என்ன? அவர்களின் மறுமை பற்றிய ஐயங்களை இறைவன் எவ்வாறு அகற்றுகின்றான்?
வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
பராஅத் இரவு ஓர் ஆய்வு
அப்துந்நாஸிர்
ஷஅபான் பிறை 15ஆம் நாள் இரவுக்கு பராஅத் இரவு என்று பெயரிட்டு, அந்த இரவில் பல்வேறு வணக்கங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் யாஸீன் அத்தியாயத்தை மூன்று தடவை ஓதுவார்கள்.
முதல் யாஸீன் பாவ மன்னிப்பிற்காகவும்
இரண்டாவது யாஸீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்
மூன்றாவது யாஸீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
இது தவிர வீடுகள் தோறும் பாத்திஹாவும் ஓதப்படும்.
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் “இஆனதுல் தாலிபீன்’ என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)
மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் “பஹ்ருர் ராஹிக்’ என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!
பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் “ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன்
பாகம்: 2, பக்கம்: 273
ஏன் இந்த சிறப்பு?
அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான்.
அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை.
இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
அல்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனைப் பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும்.
அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.
அல்குர்ஆன் 97:1
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
இந்த மூன்று வசனங்களிலிருந்து “பாக்கியமிக்க இரவு’ என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, “பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன்’ என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “இப்னு அபீ ஸப்ரா’ என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். “ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.
அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,
ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.
ஐந்தாவது ஆதாரம்
ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ
நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், “ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும்” என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. “என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன்” என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் “பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான்” என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
—————————————————————————————————————————————————————-
இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 7
தாவூத் நபியின் தவறு?
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
அல்குர்ஆன் 35:28
மார்க்க அறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சத்தை இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் உள்ளவர்களே உண்மையான அறிஞர்கள் என்பதைக் கூறி அறிஞர்கள் என்றாலே இறைவனின் அச்சம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று எடுத்துரைக்கின்றான்.
அவ்வாறான அறிஞர்கள் தாங்கள் ஆற்றுகின்ற மார்க்கப் பணியில் மனத் தூய்மையைக் கடைப்பிடிப்பார்கள். மக்களுக்கு மத்தியில் சத்தியத்தை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பார்கள். எப்போதும் இறை பயத்தை நினைவில் நிறுத்தி தங்களது மார்க்கப் பணியில் நேர்மையை ஒழுகுவார்கள்.
மார்க்க அறிஞருக்கு இறைவன் நிர்ணயித்த இறையச்சம் எனும் இந்தத் தகுதி தற்போதைய அறிஞர்களிடம் அரிதாகி விட்டது எனலாம்.
மார்க்கத்தின் போதனைகளை, உள்ளதை உள்ளபடி மக்களிடம் எடுத்துச் சொல்பவராக ஒரு மார்க்க அறிஞர் திகழ வேண்டும். அதுவே இறையச்சம் நிறைந்த மார்க்க அறிஞரின் இலக்கணம்.
சுன்னத் ஜமாஅத்தின் போர்வாள் என்று தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்ளும் போலிகள் நிகழ்த்தும் மார்க்க உரைகளைக் கேட்டால் அவ்வளவும் கட்டுக் கதைகள், அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள்.
குர்ஆனிலும், ஹதீஸிலும் மக்களுக்கு போதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க எதுவுமே இல்லாதது போல வாயில் வந்ததை உளறிக் கொட்டுகின்றார்கள். இறைவனின் பெயராலும், இறைத்தூதரின் பெயராலும் சர்வ சாதாரணமாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். எடுத்துக் காட்டாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.
தரீக்காவைச் சார்ந்த ஒரு அறிஞர் (?) பேசும் போது, ஒரு பெயரைக் குறிப்பிட்டு விட்டு “இவர் இறைவனோடு நூறு முறைக்கும் மேலாகக் கதைத்திருக்கிறார். இறைவன் இவரோடு ஆயிரம் முறைக்கும் மேலாக பேசியிருக்கிறான். “இதற்கெல்லாம் குர்ஆனில் ஆதாரம் உண்டா?’ என்று கேட்டால் இப்போதே தரீக்காவிலிருந்து போய் விடுங்கள். ஸஸீஹுல் புகாரியை, ஏனைய ஹதீதுகளைப் பார்த்து விட்டு இவற்றில் இதற்கு ஆதாரமில்லையே என்று கேட்டால் இப்போதே தரீக்காவிலிருந்து போய் விடுங்கள். குர்ஆன், அதுவே முழுக் குர்ஆன் அல்ல. குர்ஆன், ஹதீஸ் இவைகளே முழு இஸ்லாம் அல்ல. தரீக்கா என்றால் இது தான். தரீக்கா என்றால் இது தான்” என்று உளறுகிறார். (இதற்கான வீடியோ ஆதாரம் நம்மிடம் உண்டு.)
இதைக் கேட்கும் எந்தவொரு உண்மையான முஸ்லிமுக்கும் இரத்தம் கொதிக்கவே செய்யும். ஏனெனில் அத்தனையும் அவதூறு. இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான செய்திகள்.
இது போன்று ஒவ்வொரு போலி மார்க்க அறிஞர்களும் தங்கள் இஷ்டத்திற்குத் தகுந்தாற்போல மார்க்கத்தின் பெயரால் அவதூறை அள்ளித் தெளிக்கின்றனர். மார்க்க அறிஞருக்கு இறைவன் நிர்ணயித்த இலக்கணத்தை மீறிச் செயல்படுகின்றனர்.
இவர்கள் இவ்வாறு உருவாவதற்கு, இந்தப் பாணியை கடைப்பிடிப்பதற்கு அடிப்படைக் காரணம் விரிவுரை நூல்கள் எனலாம். விரிவுரை நூல்களில் சில இடங்களில் சில இமாம்கள் இது போன்ற அவதூறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். விளக்கம் என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றார்கள். அதையே படித்துப் படித்து வளர்ந்தவர்கள் அந்தப் பாணியை தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!
இமாம்களின் விளக்கங்களில் அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.
காஃப், ஹா, யா, அய்ன், ஸாத்
திருமறைக் குர்ஆனில் சில அத்தியாயங்களின் ஆரம்பத்தில் தனித்தனி எழுத்துக்களாகப் பிரித்து இறைவன் பயன்படுத்துகிறான். உதாரணமாக அலிப் லாம் மீம், யா ஸீன், அலிப் லாம் மீம் ஸாத் நூன் போன்றவைகள் இவற்றில் அடங்கும். அது போன்று 19வது அத்தியாயத்தின் துவக்கத்தில் காஃப், ஹா, யா, ஐன், ஸாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தனித்தனி எழுத்துகளுக்கு அரபு இலக்கணப்படி எந்தப் பொருளும் இல்லை. அல்லாஹ் என்று சொன்னால் இதற்குப் பொருளுண்டு. இறைவன் என்பது இதன் பொருள். ஆனால் இதையே அலிப், லாம், லாம், ஹா என்று ஒவ்வொரு எழுத்தாகப் பிரித்துச் சொன்னால் இதற்கு எந்தப் பொருளும் இல்லை.
(அன்றைய அரபுப் பண்டிதர்களிடம் தங்களது உயர்தர இலக்கியப் படைப்பின் துவக்கத்தில் இது போன்ற தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை இருந்திருக்கின்றது. அதே வழிமுறையை இறைவனும் பயன்படுத்தி இது இறைவேதம் என அறைகூவல் விடுக்கின்றான்.)
இந்த வார்த்தைகளுக்கு நாம் ஒரு பொருளை வழங்குவதாக இருந்தால் அதை இறைவனோ, இறைத்தூதரோ நமக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும். மாறாக நமது விருப்பம் போல ஒரு பொருளைச் சொல்வோம் எனில் அது அவதூறாக, இட்டுக்கட்டப்பட்டதாகக் கருதப்படும்.
ஆனால் மேற்கண்ட வார்த்தைகளுக்குப் பல்வேறு பொருள்களைக் கூறி அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இக்ரிமா கூறுகிறார் : காஃப், ஹா, யா, ஐன், ஸாத் அதாவது நானே கபீர் (பெரியவன்), ஹாதி (நேர்வழி காட்டுபவன்), அலிய்யி (உயர்ந்தவன்), அமீன் (நம்பிக்கையாளன்), ஸாதிக் (உண்மையாளன்) ஆவேன்.
முஹம்மது பின் கஃப் கூறுகிறார் : காஃப், ஹா, யா, ஐன், ஸாத் (என்பதின் விளக்கம்) காஃப் என்றால் மாலிக் என்பதை குறிக்கும். ஹா என்பது அல்லாஹ் என்ற வார்த்தையையும். அய்ன் அஸீஸ் என்பதையும் குறிக்கும். ஸாத் என்றால் ஸமத் ஆகும்.
காஃபி (போதுமானவன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமே காஃப் ஆகும். ஹா, ஹாதி (நேர்வழி காட்டுபவன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமாகும். அய்ன் என்பது ஆலிம் (அறிஞன்) என்ற அவனது பெயரின் துவக்கம். ஸாதிக் (உண்மையாளன்) என்ற அவனுடைய பெயரின் துவக்கமே ஸாத் என்பதாகும் என ரபீஃ பின் அனஸ் கூறுகிறார்.
குர்ஆனின் பெயர்களில் ஒன்று. அல்லாஹ்வே நன்கறிவான் என கதாதா கூறுகிறார்.
நூல்: அத்துர்ருல் மன்சூர்
பாகம்: 5, பக்கம்: 478
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பெயரை விளக்கம் என்று அளிக்கின்றனர். குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் அந்த வார்த்தையில் ஆரம்பிக்ககூடிய ஏதாவது ஒரு பெயரை விளக்கம் என்று கூறுகின்றார்கள்.
இறைவனும், இறைத்தூதரும் கூறாத இவ்விளக்கம் ஒரு அவதூறே என்பதை நினைவில் கொள்க!
அறிவை இழக்கச் செய்யும் தூய பானம் (?)
இப்னு உலவிய்யா அத்திம்கானி கூறுகிறார் : “அவர்களது இறைவன் அவர்களுக்குத் தூய பானத்தை புகட்டுவான் என்ற இறை வசனம் தொடர்பாக அபூ யஸீத் பிஸ்தாமி வினவப்பட்டார். அதற்கு அவர், “இறைவனல்லாத மற்றவர்களை நேசிப்பதை விட்டு அந்த பானத்தின் மூலம் அவன் அவர்களை பரிசுத்தப்படுத்துவான்” என்று கூறி விட்டு “அல்லாஹ்விடத்தில் ஒரு பானம் உண்டு. தனது சிறந்த அடியார்களுக்காக அதை சேமித்துள்ளான். அவர்களுக்கு புகட்டும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டான். (அதை) அவர்கள் பருகினால் மெய்மறந்து விடுவார்கள். மெய்மறந்து விட்டால் பறக்க ஆரம்பித்து விடுவார்கள். பறந்து விட்டால் சென்று விடுவார்கள். சென்று விட்டால் (இலக்கை) அடைந்து விடுவார்கள். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்க அரசனிடம் உண்மையின் இருப்பிடத்தில் நிற்பார்கள்” என்று கூறினார்.
நூல்: அல் கஷ்பு வல் பயான்
பாகம்: 13, பக்கம்: 467
“மறுமையில் சொர்க்கவாசிகளுக்குத் தூய பானத்தை இறைவன் பருகத் தருவான்” என்ற 76:21 வசனத்திற்கு விளக்கமாகவே மேற்கண்ட விளக்கத்தை இமாம்கள் கூறுகின்றனர்.
அதில் தூய பானத்தைப் பற்றி விளக்கமளிக்கும் போது வழக்கம் போல் தங்களது யூகங்களையும் கற்பனைகளையும் கலந்து விட்டனர். அதாவது அந்த பானத்தைப் பருகுவதினால் மெய்மறந்து விடுவார்களாம். பின் பறக்க ஆரம்பித்து செல்வார்கள், சேர்வார்கள், அடைவார்கள் என வார்த்தை விளையாட்டு வேறு விளையாடியுள்ளனர். இவர்கள் என்னவோ இந்த பானத்தைப் பருகி இத்தகைய நிலையை அடைந்தது போல கதை அளக்கின்றனர்.
மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு இறைவன் தரவிருக்கும் அந்த பானம் போதை தரக் கூடியதா? மெய் மறக்கச் செய்யும் தன்மை கொண்டதா? நிச்சயம் அவ்வாறில்லை என்று இறைவன் கூறுகின்றான்.
இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும், தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள். அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
அல்குர்ஆன் 56:17-19
இறைவன் தரவிருக்கும் பானத்திற்கு மெய் மறக்கச் செய்யும், போதையூட்டும் தன்மை இருக்காது என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
இவ்வசனத்திற்கு முரணான, அவதூறான கருத்தை விளக்கம் என்ற பெயரில் இமாம்கள் அள்ளிக் கொட்டியிருக்கின்றனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
தாவூத் நபியை தரக்குறைவாகச் சித்தரிக்கும் தஃப்ஸீர்
விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருக்கின்ற அவதூறான கருத்துக்கள் என்று நாம் மேலே கண்டவை ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்வதில் இமாம்கள் தங்களது கற்பனைகளைப் புகுத்தியுள்ளனர்; அர்த்தமற்ற வார்த்தை விளையாட்டு விளையாடியுள்ளனர் என்ற வகையிலேயே அமைந்திருந்தது.
அவர்களின் அவதூறான விளக்கங்கள் இந்த வகையோடு நின்றுவிடவில்லை. மாறாக, பாரதூரமான செயலைச் செய்யும் வடிவிலும் பல விளக்கங்களை இமாம்கள் அளித்துள்ளனர்.
மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் இறைத்தூதர்கள் மீதே அவதூறு கூறும் ரீதியில், அவர்களது கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பாணியில் பல்வேறு விளக்கங்களை இமாம்கள் அளித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் இமாம்களின் அவதூறான விளக்கத்தை முந்தைய தொடரில் கண்டோம்.
அதே பாணியில் அவதூறு எனும் சேற்றை தாவூத் நபி (அலை) அவர்கள் மீதும் வாரி இறைத்துள்ளனர்.
தாவூத் நபியின் தவறு
தாவூத் நபியவர்கள் ஏதோ ஒரு தவறைச் செய்திருக்கிறார்கள். இறைவன் அதை அவருக்கு ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்திய பிறகு தாவூத் நபி தன்னை திருத்திக் கொண்டார். இந்தத் தகவலைப் பின்வரும் வசனங்களில் இறைவன் கூறுகிறான்.
வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். “பயப்படாதீர்!’ நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!” என்று அவர்கள் கூறினர். “இவர் எனது சகோதரர். இவருக்கு தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடு தான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு! என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்” என்று ஒருவர் கூறினார். “உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்” என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார். எனவே அதை அவருக்கு மன்னித்தோம். அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.
அல்குர்ஆன் 38:21-25
தாவூத் நபியவர்கள் ஏதோ ஒரு தவறைச் செய்திருக்கிறார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டி அவரும் திருந்திக் கொண்டார் என்ற செய்தியை மட்டும் தான் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். இதைத் தாண்டி தாவூத் நபி என்ன தவறு செய்தார்? என்பது பற்றி இறைவனோ, இறைத்தூதரோ எந்த ஒரு செய்தியையும் நமக்குத் தெரிவிக்கவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. படிப்பினை பெற இந்தத் தகவலே போதுமானது.
இறைவன் போதுமான அளவுடன் நிறுத்திய எந்த விஷயத்தையும் அத்தோடு இமாம்கள் விட்டதில்லை. தங்களது கற்பனைகளை வெளிப்படுத்த அருமையான தருணம், வாய்ப்பு கிடைத்து விட்டது என்றெண்ணி அதில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பல்வேறு விளக்கங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
வழக்கம் போல் விரிவுரையாளர்கள் இந்த வசனத்தையொட்டி பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றனர். தாவூத் நபி செய்த தவறு என்ன என்பதைப் புலனாய்வு செய்தது போல புளுகி வைத்துள்ளனர்.
தாவூது நபிக்கு ஏற்கனவே 99 மனைவிகள் இருந்ததாகவும், பின்னரும் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாகவும் சில விரிவுரையாளர்கள் அவதூறான விளக்கத்தை அளித்துள்ளனர்.
தாவூத் நபி எதிலிருந்து பாவமன்னிப்பு தேடி திருந்திக் கொண்டார்களோ அது எந்தத் தவறு என்பதில் விரிவுரையாளர்கள் பலவிதமான கருத்துகளில் வேறுபடுகின்றார்கள். முதலாவது கருத்து அவர் ஒரு மனிதரின் மனைவியை பார்த்து, அவளை தனது மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார் என்பதாகும். ஸயீத் பின் ஜபைர் மேலும் மற்றவர்களும் இவ்வாறே கூறுகின்றனர்.
நூல்: பத்ஹுல் கதீர்
பாகம்: 4, பக்கம்: 606
ஒரு நபி இவ்வாறு செய்ய மாட்டார் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இந்தக் கதையை இமாம்கள் விளக்கம் என்ற பெயரில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் இது போன்ற புளுகு மூட்டைகளை விரிவுரை என்ற பெயரில் அள்ளிக் கொட்டியிருக்கின்றனர். இவற்றிற்கு எந்தவிதச் சான்றும் இல்லை. அவர்களது பக்தர்களும் அதை அப்படியே மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்கின்றனர்.
இது நபியின் மீதே அவதூறு கூறும் மாபாதகச் செயல் என்பதை சிந்திக்கத் தவறி விட்டனர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
மாற்று மதத்தினருடன் நட்பு
முந்தைய காலங்களில் நமது சமுதாயத்தில் பலர், மாற்று மதத்தவர்களிடம் சரிவரப் பழகாமல் அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் பரவத் தொடங்கியது முதல் மாற்றாருக்கும் நமக்கும் மத்தியில் நல்லதொரு நட்பு ஏற்பட்டிருக்கின்றது.
மாற்று மதத்தவர்களுடன் அழகிய முறையில் பழகுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதுமில்லை. நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த, இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடம் அன்பாகப் பழகியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவுக்கு வந்த போது யூத மதத்தினர் முஸ்லிம்களுக்குத் துன்பம் கொடுத்தனர். முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டி, போர் புரிந்தனர். இப்படிப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களில் யாரேனும் தன்னிடம் அன்பாகப் பழக முன்வரும் போது அவர்களின் நட்பை நபியவர்கள் உதறித் தள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகலப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1356
நபியவர்களுக்குப் பணிவிடை செய்யும் அளவிற்கு யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்கள். இந்த நெருக்கத்தினால் தான் யூதச் சிறுவன் நோய்வாய்ப்படும் போது அவனை நலம் விசாரிக்கச் செல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சிறுவனைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று கூறிய மாத்திரத்தில் அவனுடைய தந்தை ஏற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கிறார் என்றால் பெருமானார் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்? நபியவர்கள் அவரிடத்தில் அழகிய முறையில் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.
ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களை விருந்துக்காக அழைத்த போது நபியவர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி-ருந்து (சிறிது) உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், “வேண்டாம்” என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
நூல்: புகாரி 2617
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மாற்றுக்கொள்கையைக் கொண்ட மன்னர்கள் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அளித்தனர். நபியவர்கள் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டதோடு அந்த மன்னர்களுக்கு தன் புறத்திலிருந்து அன்பளிப்புகளை அனுப்பியும் வைத்தார்கள்.
தூமத்துல் ஜந்தல் என்ற நாட்டின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2616
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். “அய்லா‘வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு (தல்தல் எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவருக்கு எழுதினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி 3161
அழைப்புப் பணிக்குச் சிறந்த வழி
மாற்று மத நண்பர்களிடம் அழகிய முறையில் நாம் பழகுவது அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். எனவே தான் அவர்கள் நம்மிடம் உதவி கேட்டு வந்தால் அவர்களுக்கு உதவலாம் என்று மார்க்கம் கூறுகின்றது.
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 9:6)
மேலும் ஜகாத்தை மாற்றார்களுக்குத் தருவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவி கிடைக்கும் போது இஸ்லாத்தின் மீது ஒருவிதமான நல்லெண்ணம் ஏற்பட்டு இஸ்லாம் மனித நேயமிக்க மார்க்கம் என்பதை அறிந்து கவரப்படுவார்கள்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருக்கின்றோம். நாம் அனைவரும் அரபு நாட்டிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படவில்லை. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நமது மூதாதையர் இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்திருப்பர்.
இஸ்லாத்தைப் பரப்புவதற்காக வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு வந்த ஓரிரு நபர்களால் நம் மூதாதையர் இஸ்லாத்தைத் தழுவினர். நம் நாட்டுக்கு இஸ்லாத்தைக் கொண்டு வந்த அந்த நல்லவர்களின் அழகிய பழக்க வழக்க முறைகளைக் கண்டே இவர்கள் கவரப்பட்டார்கள்.
மாற்று மத மக்களுடன் அவர்கள் நல்ல முறையில் பழகிய காரணத்தாலே இப்படிப்பட்ட சிறந்த மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் வெகுவாகப் பரவி இருக்கின்றது.
இஸ்லாம், இந்த மார்க்கத்தை மனித சமுதாயம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என உத்தரவிடுகின்றது. இந்தப் பொறுப்பை முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது.
மாற்று மதத்தவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் நாம் வாழ்ந்தால் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியாது. அவர்களுடன் அழகிய முறையில் பேசுவது பழகுவது ஆகியவற்றின் மூலமே இப்பணி சிறப்பாக நடைபெறும். நல்ல மாற்றமும் ஏற்படும்.
தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தவறான கருத்துக்களை பலர் திட்டமிட்டு பரப்பினர். இதனால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவறான கருத்துக்கள் அவர்களுடைய மனதிலே விதைக்கப்பட்டிருந்தது.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கும் நமக்கும் இடையே சந்திப்புகள் ஏற்பட்டது. இந்த சந்திப்புகளால் தான் அவர்களின் சந்தேகங்களுக்குச் சரியான விளக்கத்தை நம்மால் கொடுக்க முடிந்தது.
இஸ்லாமிய மார்க்கம் பற்றி அவர்களுக்கு நல்லதொரு அபிப்ராயம் ஏற்படவும் முஸ்லிம்களை எதிர்க்கும் போக்கை அவர்கள் கைவிடவும் இது காரணமாக இருக்கின்றது.
யாருடைய நட்பு கூடாது
திருக்குர்ஆனில் இறை மறுப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சரியான விளக்கம் இல்லாதவர்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் நட்பு கொள்ளக் கூடாது என்று இவ்வசனங்கள் கூறுவதாகக் கருதுகின்றனர்.
ஆனால் இதன் சரியான விளக்கத்தைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள பின்வரும் வசனம் விளக்குகின்றது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8, 9)
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிக்க நினைக்கும் இத்தகையவர்களுடனே நட்பு கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்க நாடாத மாற்று மதத்தவர்களுடன் அழகிய முறையில் பழகுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. மேலுள்ள வசனம் இந்த வித்தியாசத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
நட்பு எல்லை கடந்துவிடக் கூடாது
அதே நேரத்தில் மாற்று மதத்தவர்களுடன் நாம் கொள்ளும் நட்பு இஸ்லாமிய வரம்புகளையும் விதிமுறைகளையும் கடந்து விடக்கூடாது. உதாரணமாக அவர்களுடைய திருவிழாக்களிலும் கோயில் விஷேசங்களிலும் மத நம்பிக்கையுடன் அரங்கேறும் வைபவங்களிலும் கலந்துகொள்ளுமாறு அவர்கள் நம்மிடம் கூறினால் இப்போது நட்பைக் காரணம் காட்டி இவற்றில் கலந்து கொள்வது கூடாது.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக்கூடாது என்று நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கின்றான்.
தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் வைபவங்களில் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையை செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)
பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும் அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து நாம் அமரக்கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது. இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.
தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 70
முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.
மூன்றாவதாகக் கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை கூட பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்தச் சபைகளில் கலந்து அவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு “நான் மனதால் வெறுத்து விட்டேன்’ என்று கூற முடியாது.
மாற்று மதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு, மூடநம்பிக்கைகள், இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றைச் செய்த குற்றமும் ஏற்படும்.
மாற்றார்களின் திருமணத்தில் பங்கெடுக்கக்கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தீமைகள் அரங்கேறாத போது மணமக்களைப் பார்த்து விட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.
—————————————————————————————————————————————————————-
கேள்வி – பதில்
? கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? அந்தப் பள்ளிவாசலில் சென்று தொழலாமா?
செய்யது மசூது
கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
“அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 437
உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 427
கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை (தொழுகை நிறைவேற்றப்படாத) கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.
நூல்: புகாரி 432
கப்ருகளுக்கு மேல் பள்ளி மட்டுமல்ல! பொதுவாக எந்த ஒரு கட்டடத்தையும் கட்டுவது கூடாது.
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1765
மஸ்ஜிது நபவீ பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் இணை வைப்பாளர்களின் மண்ணறைகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அந்த மண்ணறைகளைத் தோண்டி அதை அப்புறப்படுத்திய பிறகே அதன் மேல் பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
எனவே கப்ரும் பள்ளியும் சேர்ந்துள்ள இடங்கள் தொழுவதற்குத் தடுக்கப்பட்டவை. கப்ரஸ்தான் இருந்த இடம் உரிய முறைகள் பண்படுத்தப்பட்டு அவை ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டால் அப்போது தான் அது பள்ளி என்ற அந்தஸ்தைப் பெறுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் “இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாலிசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1868
கப்ருகள் மீது பள்ளிவாசலைக் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதால் அவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் பள்ளிவாசலின் அந்தஸ்தைப் பெறாது. அங்கு சென்று தொழுவதும் கூடாது.
? மாலை நேரத்தில் சிறுவர்களை விடக்கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?
சிக்கந்தர், துபை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் முற்பகுதி வந்து விட்டால் – அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் – உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 3304
இந்த ஹதீஸில் விஷ ஜந்துக்களை ஷைத்தான்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடியவற்றை ஷைத்தான் எனக் குறிப்பிடும் வழக்கம் அரபு மக்களிடையே இருந்துள்ளது.
இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றித் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தமது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் பார்க்கின்றோம்.
சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக்குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஷைத்தான் பூட்டப்பட்ட கதவைத் திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகின்றது.
ஷைத்தான் மனதில் ஊடுறுவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டிவிடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. இரவில் கதவைப் பூட்டிவிட்டால் வீட்டிற்குள் பாம்பு, பல்லி, எலி போன்ற இடையூறு தரும் பிராணிகள் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்து.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாத்திரங்களை மூடி வையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டு விடுங்கள்; விளக்கை அணைத்து விடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.
உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4099
ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்க மாட்டான்; மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக எலியின் அபாயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பது நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.