ஏகத்துவம் – ஜனவரி 2019

அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும்

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019, ஜனவரி 27 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறவுள்ள மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டையொட்டி நவம்பர் மாத ஏகத்துவம், நமது சமுதாய மக்களை திருக்குர்ஆன் பக்கம் ஈர்க்கும் வகையில் “வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம்” என்ற தலைப்பில் சிறப்பிதழாக வெளியானது.

டிசம்பர் மாத ஏகத்துவம் இதழ், முஸ்லிமல்லாத பிற சமுதாய மக்களைத் திருக்குர்ஆன் பக்கம் அழைக்கும் விதமாக “அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல! ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்” என்ற தலைப்பில் சிறப்பிதழாக வெளியானது.

மாநாடு நடக்கவிருக்கின்ற ஜனவரி 2019 ஏகத்துவம் மாத இதழ், அரபு மொழியில் “ஸபபுன்னுஸூல்” என்றழைக்கப்படும் ‘‘அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும்” என்ற ஒரு வித்தியாசமான தலைப்பில் வெளியாகி உங்கள் கரங்களில் தவழ்கின்றது.

திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இறங்கிய அத்தனை வசனங்களுக்கும் காரணங்கள் சொல்லப்படவில்லை. பெரும்பான்மையான வசனங்கள் காரணமே சொல்லப்படாவிட்டாலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் கணிசமான வசனங்கள் இறங்கியதற்குக் காரணங்களும் பின்னணிகளும் உள்ளன. அவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றைத்தான் இவ்விதழில் தொகுத்து அளித்திருக்கின்றோம்.

இவ்விதழில் கூறப்பட்டுள்ளவை தவிர இன்னும் பல வசனங்களுக்கு, அருளப்பட்ட காரணங்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளன. அவை அனைத்தையும் தொகுக்க வேண்டும் என்றால் இந்த இதழின் பக்கங்கள் போதாது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவை மட்டுமே இங்கு தொகுத்திருக்கின்றோம்.

தவ்ராத் மற்றும் இதர வேதங்களைப் போன்று திருக்குர்ஆன் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறிது சிறிதாக, அவ்வப்போது நபித் தோழர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்ப, அவற்றுக்கான தீர்வாக அருளப்பட்டது. என்ன பிரச்சனையையொட்டி இந்த வசனம் அருளப்பட்டது என்பதற்குரிய காரணம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உதாரணத்திற்குப் பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:158

இந்த வசனத்தைப் படிக்கும் ஒருவர், ஸஃபா மர்வாவில் தவாஃப் செய்யலாம், அல்லது செய்யாமலும் இருக்கலாம், இரண்டுமே குற்றமில்லை என்று விளங்கிக் கொள்வார். ஆனால் உண்மை அது கிடையாது.

ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வாவில் கண்டிப்பாக தவாஃப் செய்ய வேண்டும் என்றே இந்த வசனம் வலியுறுத்துகின்றது என்பதை இது இறங்கிய பின்னணியை வைத்துத் தான் விளங்கமுடியும். (இது குறித்து இவ்விதழில் விளக்கப்பட்டுள்ளது.)

ஸபபுன்னுஸூல் என்பது குர்ஆன் வசனத்தின் சரியான பொருளை விளங்குவதற்குத் துணை செய்கின்றது. இதிலிருந்து ஸபபுன்னுஸூல் என்பதன் பயனை நாம் அறிய முடிகின்றது.

குர்ஆனுக்கு ஒருவர் விரிவுரை அளிக்க வேண்டுமென்றால் அவர் கண்டிப்பாக ஸபபுன்னுஸூல் எனப்படும் அருள்மறை வசனம் அருளப்பட்ட பின்னணியைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போருக்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 6:82

இந்த வசனத்தைப் படிப்பவர்கள் நடுங்கிப் போய்விடுவார்கள். காரணம், எந்த ஓர் இறைநம்பிக்கையாளரும் அநீதியிலிருந்து தப்ப முடியாது. அவ்வாறு தான் நபித்தோழர்களும் பதறிப் போய் இதுகுறித்து வினவுகின்றார்கள்.

அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது தான் மிகப் பெரிய அநீதி என்பதை நபியவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

(பார்க்க: புகாரி 32)

இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்ட வசனங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

எனவே, திருக்குர்ஆன் மாநாடு நடைபெறும் இந்தச் சமயத்தில், குர்ஆன் பற்றிய இந்த விளக்கங்களை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம் என்ற அடிப்படையில் இங்கு ஸபபுன்னுஸூல் எனப்படும் அருளப்பட்ட காரணங்கள் வாசகர்களுக்குத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன.

விளங்குவதற்கு எளிதாக இருக்கும் வகையில் தலைப்பு வாரியாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்டு, அதற்குக் கீழே அது இறங்கிய பின்னணி அடங்கிய ஹதீஸைக் குறிப்பிட்டுள்ளோம்.

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு வழங்கப்பட்ட இந்தத் தொகுப்பு குர்ஆனின் முழு சுவையையும் வாசகர்களுக்கு அளிக்கும் என்று நம்புறோம்.

நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம்

(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

அல்குர்ஆன் 96 : 1-5

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.
தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்து வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘ஓதுவீராக!’ என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னைவிட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று கூறினார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்று கூறினேன். உடனே, அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார்.
பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்’ எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறை வசனங்களை அவர் ஓதினார்.
பிறகு அந்த வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்கத் திரும்பி வந்து, கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது.
கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு,) ‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு கதீஜா (ரலி), ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கிறீர்கள். (அதனால் உங்களுக்கு ஒன்றும் தீங்கு நேராது)’ என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வரக்கா இப்னு நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். வரக்கா என்பார் அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் மகனே! உங்களுடைய சகோதரரின் புதல்வரிடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!’ என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள்.
இதைக்கேட்ட ‘வரக்கா’, ‘(நீர் கண்ட) அவர் தாம் மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்மை உம் சமூகத்தார் (உம்முடைய நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்த சமயத்தில் உயிருடன் இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை (நாட்டைவிட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று கேட்க, வரக்கா, ‘ஆம். நீர் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதத்)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரச்சாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன்’ என்று கூறினார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.

நூல்: புகாரி (4953)

இரண்டாவதாக இறங்கிய வசனங்கள்

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!

அல்குர்ஆன் 74:1-5

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ், ‘போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!’ எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை, தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.

நூல்: புகாரி (4925, 4922, 4923)

வஹீயைப் பாதுகாப்பது அல்லாஹ்வின் பொறுப்பு

(நபியே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் 75:16 – 19

திருக்குர்ஆன் 75:16 வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே காணப்படலாயிற்று.
எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75வது அத்தியாயத்திலுள்ள) ‘இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.
அதாவது, ‘உங்கள் உள்ளத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!’ என்ற (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:19) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான்.
(இதன் பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு) வரும்போது தலையைத் தாழ்த்தி (கேட்டுக்) கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

நூல்: புகாரி (4929)

இறைவிருப்பப்படியே வானவர்கள் வருகிறார்கள்

(நபியே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல.

அல்குர்ஆன் 19:64

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதை விட அதிகமாகச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான் ‘உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல’ எனும் (19:64) இறைவசனம் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4731)

அபூஜஹ்ல் அரங்கேற்றிய அநியாயம்

அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

அல்குர்ஆன் 96:6-19

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்’’ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடறியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைகளையும் கண்டேன்” என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்” (96:6-19) எனும் வசனங்களை அருளினான்.

நூல்: முஸ்லிம் (5390)

அபூலஹபின் மீது அல்லாஹ்வின் சாபம்

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

அல்குர்ஆன் 111:1-5

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (26:214) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (மறுமையைக் குறித்து) கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீர் நாசமாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினீர்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4770)

நபி இருக்கும் போது வேதனை வராது

(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 8:33 , 34

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழிந்து விடு! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்’ எனும் (08:33,34) வசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: புகாரி (4648)

ஹுதைபிய்யா உடன்படிக்கை

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (ஏக இறைவனை) மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

மர்வான் பின் ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:

சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிய போது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றாயிருந்தது.
இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல் (ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி.
முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை.
அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்’ (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.

நூல்: புகாரி (2711, 2712)

அல்ஃபத்ஹ் (48வது) அத்தியாயம் அருளப்படுதல்

(நபியே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

அல்குர்ஆன் 48:1-5

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உம்ரா வழிபாட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால்) ஹுதைபியா எனுமிடத்திலேயே பலிப்பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன.
இந்நிலையில்தான் (அவர்களுக்கு), “(நபியே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்” என்று தொடங்கி, “இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது” என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்“ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3660)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘நிச்சயமாக, தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்’ எனும் (48:01) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்’ என்று கூறினேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், ‘(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள். எங்களுக்கு என்ன?’ என்று (இந்த வெற்றியின் பயன் குறித்துக்) கேட்டனர். அப்போது, ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்’ என்னும் (திருக்குர்ஆன் 48:05) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4172)

மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 48:24

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர் தாக்குதல் தொடுப்பதற்காக “தன்ஈம்” மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்” (48:24) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (3696)

கிப்லா மாற்றம்

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(நபியே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:143, 144

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144 வசனத்தை அருளினான்.)
உடனே, அவர்கள் அஸர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர். அவர், ‘அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்’ என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.
கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’ எனும் (2:143) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4486)

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே “நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்’’ எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.

நூல்: முஸ்லிம் (1251)

இறைத்தூதரை இறைவன் கைவிடமாட்டான்

முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

அல்குர்ஆன் 93:1-3

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.

நூல்: புகாரி (4950)

இறைத்தூதர் முன்னிலையில் குரல்களை உயர்த்தக்கூடாது

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 49:1

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன.
இது தொடர்பாகவே ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’ எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.

நூல்: புகாரி (4847)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் 49:2

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாயுஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) அவர்களிடம், ‘எனக்க மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்கள். உமர் (ரலி), ‘தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று’ என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!’ எனும் (49:2) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி (4845)

இறைத்தூதரிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டல்

நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

அல்குர்ஆன் 5:101

அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும்’ எனும் இந்த (5:101) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி 4621

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் ‘என் ஒட்டகம் எங்கே?’ என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த (5:101) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 4622

கேள்வியும் பதிலும்

(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:85

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரிச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரிச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றவர், ‘உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?’ என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் ‘நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)’ என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) ‘அவரிடம் கேளுங்கள்’ என்றனர்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உயிரை (ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’’ எனும் (17:85) இறைவசனத்தைக் கூறினார்கள்.

நூல்: புகாரி (4721)

அன்னையார் மீது அவதூறு

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.
இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு’’ என்று கூறியிருக்கக் கூடாதா?
இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.
உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.
இதைக் கேள்விப்பட்டபோது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)

அல்குர்ஆன் 24:11-20

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா அவர்களிடம்) ‘நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு’ என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை விட (சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று). நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்’ (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ‘அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே…’ என்று (தொடங்கும் 24:11முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.

நூல்: புகாரி (4690)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு’ எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்’ என்பவனைக் குறிக்கிறது.

நூல்: புகாரி (4749 , 4750)

இறை மன்னிப்பே சிறந்தது

“உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 24:22

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே.. என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அல்லாஹ் அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் என்பவர் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் இந்த (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.

நூல்: புகாரி (4750)

வளர்ப்பு மகன் குறித்த சட்டம்

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்’’ என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33 :37

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘(நபியே!) அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர்’ எனும் இந்த (33:27) வசனம் (நபியவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் நபியவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4787)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், “ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை (மணந்து கொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம். எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னை மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார். அப்போது (நபியவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது.

நூல்: முஸ்லிம் (2798)

குறிப்பு: ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்தவர். அவருக்கு நபியவர்கள் தமது அத்தை மகள் ஸைனபை மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற சூழ்நிலையில் அவரை ஸைத் விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துக் கொடுக்கிறான்.

ஒருவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்தால் இஸ்லாமிய சட்டப்படி அப்பெண்ணை, அந்தக் கணவனின் தந்தை மணக்க முடியாது.

அன்றைய காலத்தில் மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கும் உண்டு என்று நம்பி வந்தனர். இந்த அடிப்படையில் வளர்ப்பு மகன் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின், வளர்ப்புத் தந்தை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என்று அரபுகள் கருதி வந்தனர்.

இந்த நம்பிக்கையை உடைத்து, வளர்ப்பு மகன் ஒருபோதும் உண்மையான மகனைப் போன்றவர் அல்ல, அவரது மனைவி வளர்ப்புத் தந்தையின் மருமகளும் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தவே இத்திருமணத்தை அல்லாஹ்வே நடத்தி வைத்தான் என்பதை மேற்கண்ட வசனமும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

நபியின் மனைவியருக்கான ஹிஜாப் சட்டம்

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:53

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை “ஹிஜாப்” (திரையிட்டு இருக்கும்படி) கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!’’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் “ஹிஜாப்” தொடர்பான வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4790, 4483)

(நபியவர்கள் ஸைனப் அவர்களை மணமுடித்த போது அளித்த விருந்திற்குப் பின் எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பிவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்து வந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். “நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும்’’ என்பதே அந்த வனமாகும்.
“இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியர் “ஹிஜாப்” (திரை) இட்டு மறைக்கப்பட்டது தொடர்பாகவும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்’’ என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2803)

மனைவியருடன் கருத்து வேறுபாடு

உங்களை அவர் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.

அல்குர்ஆன் 66:5

உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு “ஸாஉ” அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
என் கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!” என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்தி தான்)” என்றேன்.
அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் தங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்’’ என்று சொன்னேன்.
நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் – நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன் – நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது “உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்’’ (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், “அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்” (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் 2947

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாகவிலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (66:5) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4916)

உலக வாழ்வா? மறுமை வாழ்வா?

இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்’’ என்று நபியே உமது மனைவியரிடம் கூறுவீராக!
நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:28,29

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களில் நல்லவர்களுக்காக மகத்தான கூலியை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் இந்த (33:28,29) வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் (2946)

ஜின் (72வது) அத்தியாயம் அருளப்படுதல்

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு) விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன.
அப்போது தலைவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், ‘வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன’ என்று பதிலளித்தனர். ‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்’ என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
‘திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது ‘உக்காழ்’ சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ‘ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) ‘வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்’ என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, ‘எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்’ என்று கூறினர்.
மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, ‘ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது’’ எனக் கூறுவீராக!…’ என்று தொடங்கும் இந்த (72வது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி ‘வஹீ’யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

நூல்: புகாரி (4921)

பாரசீகர்கள் குறித்த இறை வசனம்

அவர்களில் மற்றவர்களுக்காகவும் (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 62:3

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)’ எனும் (3வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதனை அடைந்தே தீருவார்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4897)

மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5:3

உமர் (ரலி), ‘இவ்வசனம் (5:3) எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’ என தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி (45)

இஸ்லாமியப் போர்கள்

பத்ருப் போரில் இறையுதவி

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்’’ என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

அல்குர்ஆன் 8:9

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டி, தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
“இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! முஸ்லிம்களில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை வழிபட யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவிக் கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (3621)

கைதிகள் விடுதலை தொடர்பான சம்பவம்

பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மை யானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 8:67-69

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?’’ என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறை மறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்’’ என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?’’ என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள்’’ என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!’’ என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது’’ என்று தொடங்கி, “போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்!’’ (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.

நூல்: முஸ்லிம் (3622)

உஹதுப் போரில் ஏற்பட்ட குழப்பம்

உங்களுக்குப் பின்னால் இத்தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்கும்போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 3:153

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு (தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான் ‘இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்)’ எனும் இந்த (3:153) இறைவசனம் குறிப்பிடுகிறது. அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.

நூல்: புகாரி (4561)

உறுதிமொழியை உண்மைப்படுத்திய நபித்தோழர்

அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.

அல்குர்ஆன் 33:23

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்” என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார்.
பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வர, “அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?” என்று கேட்டுவிட்டு, “இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்” என்று கூறினார்.
பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)
“அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை” (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.

நூல்: முஸ்லிம் (3861)

தபூக் போர்

(போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும்போது அவர்கள் உங்களிடம் சமாளிக்கின்றனர். “சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

அல்குர்ஆன் 9:94

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
‘அல்உஸ்ரா’ (எனும் தபூக்) போர், பத்ருப்போர் ஆகிய இரண்டு போர்களைத் தவிர, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த எந்த அறப்போரிலும் ஒருபோதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.
மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில் தான் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக்போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.
(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.
எனவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரமும் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தாமல் இருந்துவிடுவார்களோ! அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்தால்) எனக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான்.
அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (ஐம்பது நாள்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முஸலமா (ரலி) என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உம்முஸலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி), ‘கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்துவிடுவார்கள்’ என்றார்கள்.
ஆக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.
(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப் போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை.
அல்லாஹ் (அவர்களைப் பற்றி) இவ்வாறு கூறினான் என்று கூறி 9:94 வசனத்தை ஓதினார்கள்.

நூல்: புகாரி (4677)

உண்மைக்குப் பரிசு

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 9:117-119

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததை விடச் சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்ததாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் இந்த (9:117-119) வசனங்களை அருளினான்.

நூல்: புகாரி (4678, 4676)

இஸ்லாத்தின் எதிரிகள்

நயவஞ்சகர்கள்

(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்’’ என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். ‘நயவஞ்சகர்கள் பொய்யர்களே’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது. அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நீர் அவர்களைக் காணும்போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
“வாருங்கள்! உங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் பாவமன்னிப்புத் தேடுவார்’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். மேலும் அகந்தை கொண்டு தடுப்போராக அவர்களைக் காண்பீர்.
(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடுவதும், அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடாமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமாகும். அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். “அல்லாஹ்வின் தூதருடன் இருப்போர் (அவரை விட்டும்) விலகாத வரை அவர்களுக்குச் செலவிடாதீர்கள்!’’ என்று கூறுவோர் அவர்களே. வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனினும் நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். “மதீனாவுக்கு நாம் திரும்பினால் அங்குள்ள உயர்ந்தோர் இழிந்தோரை வெளியேற்றுவார்கள்’’ என்று கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் உரியது. எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்63:1-8)

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரைவிட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்’ என்று கூறுவதையும் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.
எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை’ என்று சத்தியம் செய்தனர். எனவே, அவர்களை நம்பிவிட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். இதுபோன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன்.
அப்போது அல்லாஹ், ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது’ என்று தொடங்கி ‘எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்’ என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4901)

நயவஞ்கர்களுக்காகப் பாவமன்னிப்பு கோரக்கூடாது

வர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அதன் மூலம் இவ்வுலகில் அவர்களைத் தண்டிப்பதையும், (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.

அல்குர்ஆன் 9:84, 85

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்தபோது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!’ என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, ‘ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே!’ என்று கூறினார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், ‘இவருக்காகப் பாவமன்னின்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவருமாயின் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் ‘பராஅத்’ (9வது) அத்தியாயத்திலிருந்து ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸா) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்தனர். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (9:84,85) இரண்டு வசனங்கள் அருளப்பெற்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.

நூல்: புகாரி (4671)

யூதர்கள்
வேத வசனங்களை மறைத்த யூதர்கள்

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!’’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:41

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, “விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் “ஆம்’’ என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, “மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்’’ என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் உனது சட்டம் ஒன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்” என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்…” என்று தொடங்கும் வசனத்தை “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்” (5:41) என்பதுவரை அருளினான்.
‘அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள்’ என்று யூதர்கள் கூறினர்.
மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர். (5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர். (5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர். (5:47)
இந்த (5:47) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)

நூல்: முஸ்லிம் (3505)

யூதர்களின் இழிசெயல்

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 58:8

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க” (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் “வ அலைக்கும்’’ (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொன்னார்கள். நான் “அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு” (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான்தான் அவர்கள் சொன்னதற்கு “வ அலைக்கும்’’ (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று பதில் சொல்லி விட்டேனே?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், “ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்” (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.

நூல்: முஸ்லிம் (4374)

இஸ்லாத்தை ஏற்ற யூதர்

‘‘இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!’’ என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 46:10)

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். நாங்கள் இருவரும் யூதர்களுக்குரிய திருவிழா நாளில் மதீனாவில் உள்ள அவர்களின் மடாலயத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் அவர்களிடம் நுழைந்ததை அவர்கள் வெறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் “யூத சமூகமே! (உங்களில்) “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்” என்று சாட்சி கூறும் பன்னிரண்டு நபர்களை எனக்குக் கூறுங்கள். (அப்படி நீங்கள் தெரிவித்தால்) வானம் எனும் முகட்டின் கீழுள்ள ஒவ்வொரு யூதரின் மீதும், அவர் மீது தான் கொண்ட கோபத்தை அல்லாஹ் அழித்து விடுவான்” என்று கூறினார்கள். அவர்கள் வாய்பொத்தி மவுனிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையும் கேட்டார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
அப்போது நபியவர்கள் “நீங்கள் (பதிலளிக்க) மறுத்துவிட்டீர்கள். நீங்கள் நம்பினாலும் மறுத்தாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நானே ஹாஷிர் (ஒன்று திரட்டுபவர் ஆவேன்), நான்தான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவேன்), நான்தான் (முந்தைய வேதங்களில் கூறப்பட்ட) தேர்ந்தெடுக்கப்பட்ட நபியாவேன்” என்று கூறிவிட்டுப் பிறகு திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன்.
நாங்கள் (அங்கிருந்து) வெளியேறுவதற்கு எத்தனித்த போது எங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு மனிதர் “முஹம்மதே அப்படியே நில்லுங்கள்” என்று அழைத்தார். பிறகு அந்த மனிதர் முன்னோக்கி வந்து “யூதர்களே! உங்களில் மிகவும் கற்றறிந்த மனிதர் யார்?” எனக் கேட்டார். அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களில் உம்மை விட அல்லாஹ்வின் வேதத்தை மிகவும் கற்றிந்தவரும், ஞானமிக்கவரும் வேறு யாருமில்லை. உமக்கு முன்னால் உம்முடைய தந்தைக்கு மேல் வேறுயாருமில்லை. உமது தந்தைக்கு முன்னால் உமது பாட்டானாருக்கு மேல் வேறு யாருமில்லை” என்று கூறினார்கள்.
(யூதர்கள் இவ்வாறு கூறியதும் அந்த மனிதர்) “நான் இவருக்காக அல்லாஹ்வை சாட்சியாக்கி கூறுகிறேன். தவ்ராத்தில் கூறப்பட்டதாக நீங்கள் காண்கிறீர்களே அந்த அல்லாஹ்வின் நபி இவர் தான்” என்று கூறினார். உடனே யூதர்கள் ”நீர் பொய்யுரைத்துவிட்டீர்” என்று கூறி அவருடைய பேச்சிற்கு அவரிடம் மறுப்பு தெரிவித்தனர். அவரைப் பற்றி மிகக் கெட்டதைக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களை நோக்கி) “நீங்கள்தான் பொய்யுரைத்தீர்கள். உங்களின் பேச்சு ஏற்கப்படாது. சற்று முன்புதான் அவர் மீது நல்லவற்றைக் கூறி போற்றிப் புகழ்ந்தீர்கள். அவர் நம்பிக்கை கொண்டதும் அவரை பொய்யுரைத்துவிட்டார் என்கிறீர்கள். அவர்மீது (பொய்யாக) கூறவேண்டியவற்றை எல்லாம் கூறிவிட்டீர்கள். எனவே உங்களின் பேச்சு ஏற்க்கப்படாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர், நான், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ஆகிய நாங்கள் மூவரும் வெளியேறினோம்.
அப்போதுதான் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) தொடர்பாக “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!’’ என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” (49:10) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

நூல்: அஹ்மத் (22859)

 

கொள்கை விளக்கங்கள்

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லை

(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்குமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 3:128

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (3:128) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (3667)

நபியின் தீர்ப்பில் அதிருப்தி கொள்ளக்கூடாது

(நபியே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4:65

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ‘ஹர்ரா’ எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)’ என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரைவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
ஸுபைர் (ரலி) கூறினார்:
குர்ஆனின் இந்த (4:65) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே எண்ணுகிறேன்.

நூல்: புகாரி (4585)

இறைமறுப்பாளனின் மறுமை நிலை

நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்.

அல்குர்ஆன் 19:77 – 80

கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லராக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உன்னுடைய கடனைச் செலுத்தமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.
அதற்கவர் ‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்’ என்று கூறினார்.
அப்போதுதான் ‘நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்’ எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: புகாரி (4735, 4733 , 4732)

உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தைப் பின்பற்றுதல்

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

அல்குர்ஆன் 22:11

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியதாவது:

‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்’ எனும் (22:11) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகையில், ‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களது குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘இது (இஸ்லாம்) நல்ல மார்க்கம்’ என்று கூறுவார்கள். அவர்களின் மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லையென்றால், ‘இது கெட்ட மார்க்கம்’ என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4742)

நேர்வழியைக் கொடுக்க நபியாலும் முடியாது

(நபியே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 28:56

முஸய்யப் பின் ஹஸன் (ரலி) கூறியதாவது:

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்’ என்று கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் ‘அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?’ என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்’ என்பதாகவே இருந்தது. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார்….
…அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘(நபியே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்’ எனும் (28:56) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4772)

இணைவைப்பவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோரக்கூடாது

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த (முஹம்மது) நபிக்கும் தகாது.

அல்குர்ஆன் 9:113

முஸய்யப் பின் ஹஸன் (ரலி) கூறியதாவது:

(நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்த போது) நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும் வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்கள். அப்போதுதான், ‘இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் தகாது’ எனும் (9:113) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி 4675

சுயமாகத் தடை செய்யும் அதிகாரம் நபிக்கு இல்லை

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.
இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறியபோது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டினான். அப்போது அதில் சிலவற்றை (அம்மனைவியிடம்) நபி எடுத்துக்காட்டி, சிலவற்றை எடுத்துக்காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்தபோது “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்’’ என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என நபி விடையளித்தார்.
(நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது.) உங்கள் இருவரின் உள்ளங்கள் தடம் மாறி இருந்தன. அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் அல்லாஹ்வே அவரது உதவியாளன். ஜிப்ரீலும், நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும், வானவர்களும் அதன் பின் (இவருக்கு) உதவுபவர்கள்.

அல்குர்ஆன் 66:1-4

ஆயிஷா (ரலி) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.
எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
(இந்த 66:4வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.

நூல்: புகாரி (5267)

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

அல்குர்ஆன் 31:14,15

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாவது:

என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)
நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ண மாட்டேன்; பருக மாட்டேன் என்று (என் தாயார்) உம்மு சஅத் சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் “உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)” என்று கூறினார்.
இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், “மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தொடங்கி, “உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்” (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4789)

இணை கற்பித்தலே மிகப் பெரும் அநீதி

ம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போருக்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 6:82

‘நம்பிக்கை கொண்டு அதில் அநீதியைக் கலக்காதவர்களுக்கே அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றோர்’ (6:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் ‘நம்மில் யார் அநீதி செய்யாமலிருக்க முடியும்?’ எனக் கேட்டனர்.
அப்போது, ‘நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவது தான் மிகப் பெரும் அநீதியாகும்’ (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி (32)

பெரும்பாவம் செய்தவர்களுக்கும் மன்னிப்பு

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைச் செய்தனர்; விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர். அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் கூறுபவையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர். அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள்…’ எனும் (25:68) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!..’ எனும் (39:53) வசனமும் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4810)

இறைவன் அனைத்தையும் கண்காணிக்கின்றான்

உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.
இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நட்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள்.
இவர்கள் காத்திருந்தால் நரகமே இவர்களின் தங்குமிடமாகும். இவர்கள் (மீண்டும் உலகுக்கு அனுப்பி) வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை இவர்கள் கோரினால் அந்தச் சிரமம் அவர்களுக்கு அளிக்கப்படாது

அல்குர்ஆன் 41:22-24

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. உள்ளங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்’ என்று கூறினார்.
அப்போது அல்லாஹ், ‘உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை’ எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.

நூல்: புகாரி (4817, 4816)

நட்சத்திரங்களால் மழை பொழியுமா?

நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்? உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?

அல்குர்ஆன் 56:75-82

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர். நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, இன்ன இன்ன நட்சத்திர இயக்கம் மெய்யாகிவிட்டது என்று கூறுகின்றனர்” என்றார்கள்.
அப்போதுதான், “நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்” என்று தொடங்கி, “உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?” என்று முடியும் இறைவசனங்கள் (56:75-82) அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் (127)

இறை மறுப்பாளர்களுக்கான தண்டனை

அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்’’ (எனக் கூறப்படும்) ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.

அல்குர்ஆன் 54:48,49

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, “அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்’’ (எனக் கூறப்படும்) ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்’’ எனும் (54:48,49) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் (5163)

இறைக் கூலியில் ஆண், பெண் பேதமில்லை

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 33:35

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு என்ன நேர்ந்தது? குர்ஆனிலே ஆண்கள் பேசப்படுவதைப் போன்று (பெண்களாகிய) நாங்கள் பேசப்படுவதில்லையே” என்று கேட்டேன். (சிறிது நாட்கள் கழித்து) சொற்பொழிவு மேடையில் “யா அய்யுஹன்னாஸ்” (மக்களே) என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பு என்னை திடுக்கிடச் செய்தது. (அப்போது) நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். எனது தலைமுடியைச் சுருட்டிக் கட்டிவிட்டு வாசல் அருகில் சென்று (அதன்) ஓலைக் கீற்றின் மீது எனது காதை வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த (33:35) வசனத்தைக் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (25363)

இறைவன் முன் ஏற்றத்தாழ்வுகள் இல்லை!

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 6:52

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாவது:

நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள் மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது” என்று கூறினர்.
நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிடாத இன்னும் இரு மனிதர்களுமே அந்த ஆறு பேர்.
(இணைவைப்பாளர்கள் இவ்வாறு கூறியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனதில் (இணைவைப்பாளர்களின் கூற்றுக்கு ஆதரவான) அல்லாஹ் நாடிய ஓர் எண்ணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குள் (அவர்கள் சொல்வது சரியாயிருக்குமோ) என்று நினைத்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “(நபியே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்!…” (6:52) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4792)

 

குடும்பவியல்

திருமணச் சட்டங்கள்

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:24

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) “அவ்தாஸ்” என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (சிறை பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:
மேலும், உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். (4:24)
அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா) காலம் முடிந்துவிட்டால், அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர்.

நூல்: முஸ்லிம் 2885

கட்டாயத் திருமணம் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

அல்குர்ஆன் 4:19

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

‘(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க மாட்டார்கள். (வாழ அனுமதிக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்) ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!’ எனும் (4:19) வசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4579)

செல்வத்திற்காக அனாதைகளை மணக்கக்கூடாது

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

அல்குர்ஆன் 4:3

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், இந்த (4:3) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கிற அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அனாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் – மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.
இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அனாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல் அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

நூல்: புகாரி (4574)

பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்’’ எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:127,128

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள். (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அனாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரிச்ச மரம் உள்பட அவரின் செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணந்துகொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகிறவ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்துவந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போதுதான் ‘தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது’ எனும் (4:128) வசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4600)

உடலுறவுச் சட்டங்கள்

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 2:223

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!’ எனும் (2:223) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4528)

மாதவிடாய்

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:222

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!…’ என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்’ என்று கூறினர்.

நூல்: முஸ்லிம் (507)

தலாக் சட்டங்கள்

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:232

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) கூறியதாவது:

மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவரது கணவர் விவாகரத்துச் செய்து ‘இத்தா’ காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே)விட்டுவிட்டார். (எனவே, இது முழு விவாகரத்து ஆகும்.) பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.
அப்போதுதான், ‘அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4529)

வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:240

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ எனும் (2:240) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 2:234) மாற்றிவிட்டதே! இதை ‘ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?’ அல்லது ‘இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தை விட்டு மாற்றமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (4530)

லிஆன் சட்டங்கள்

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். “அவனே பொய்யன்’’ என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். “அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்’’ என்பது ஐந்தாவதாகும்.

அல்குர்ஆன் 24:6-9

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை ‘ஷரீக் இப்னு சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்‘ என்று கூறினார்கள். அதற்கு ஹிலால் (ரலி), ‘தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்’ என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு ‘தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர்’ என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவியிடம் ஆளனுப்பினார்கள். ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி ‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)’ என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், ‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை’ என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் இப்னு சஹ்மா’வுக்கே உரியதாகும்’ என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், ‘இது பற்றிய இறைச்சட்டம் (லிஆன் விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4747)

பாகப்பிரிவினைச் சட்டங்கள்

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:11

ஜாபிர் ( ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!’ என்று கேட்டேன். அப்போதுதான் ‘உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்’ என்று தொடங்கும் (4:11) வசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4577)

இரத்த உறவுகளே வாரிசாவார்கள்

பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:33

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

இந்த (4:33) வசனத்தின் மூலத்திலுள்ள ‘மவாலிய’ எனும் சொல்லுக்கு ‘வாரிசுகள்’ என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகி வந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம்.
‘பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம்’ எனும் (4:33) வசனம் அருளப்பட்டபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.
பின்னர் இப்னுஅப்பாஸ் (ரலி) கூறினார்:
நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவை தாம் உள்ளன. உடன்படிக்கை செய்து கொண்டவருக்காக மரண சாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.

நூல்: புகாரி (4580)

 

நற்பண்புகள்

இணக்கம் ஏற்படுத்துதல்

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 49:9

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்‘ என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, ‘நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்!’ (49:9) வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

நூல்: புகாரி (2691)

பட்டப்பெயர் சூட்டாதீர்!

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 49:11

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வந்த நேரத்தில் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பட்டப்பெயர்கள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அவரது பட்டப்பெயர் கூறி அழைத்த போது “அல்லாஹ்வின் தூதரே! அவர் இதனை வெறுக்கிறார்” என்று கூறினோம். அப்போது, “பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம்” (49:11) வசனம் இறங்கியது.
இதை அபூ ஜபீரா என்பார் தனது சிறிய தந்தையான அன்சாரி நபித்தோழரிடமிருந்து அறிவிக்கின்றார்.

நூல்: அஹ்மத் (16045)

தம்மை விடப் பிறருக்கு முன்னுரிமை

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 59:9

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்’ என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!’ என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, ‘(இவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!’ என்று கூறினார்.
அதற்கு அவர் மனைவி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை’ என்று பதிலளித்தார். அவர், ‘(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்’ என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.
பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் ‘வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) ‘சிரித்துக்கொண்டான்’ என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்’ எனும் (59:9) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4889)

சக்திக்கு உட்பட்டு நல்லறங்கள் செய்தல்

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

அல்குர்ஆன் 2:286

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்” எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று “செவியுற்றோம்; மாறு செய்தோம்’’ என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம். “எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது” என்றே கூறுங்கள்” என்றார்கள். அவ்வாறே மக்கள், “எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது” என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு பணிந்தது.
அதைத் தொடர்ந்து அல்லாஹ், “இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். “அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு’’ எனக் கூறுகின்றனர்” எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.
ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், (“உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்” எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்:
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! (2:286)
“ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)” என்றான் அல்லாஹ்.
“எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே!”
அப்போதும் “ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.
“எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே!”
அதற்கும் “ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.
“எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!”
அதற்கும் “சரி! ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

நூல்: முஸ்லிம் 199

நன்மைகள் தீமையை அழித்துவிடும்

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன் 11:114

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை’ எனும் (11:114) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும் தான்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (4687)

 

தீய பண்புகள்

பெரும் பாவங்கள்

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். “எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது’’ என்று அவர்கள் கூறுகின்றனர். அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.

அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

கியாமத் நாளில் வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான். திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:63-70

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:

‘அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)’ என்று பதிலளித்தார்கள்.
நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது’ என்று கூறினார்கள்.
நான் ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள் ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது’ என்று பதிலளித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4761)

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியதாவது:

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்’ எனும் (திருக்குர்ஆன் 4:93) இறைவசனத்தைப் பற்றியும், ‘அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்’ என்று தொடங்கி ‘திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர’ என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), ‘இந்த வசனங்கள் (25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்க இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடை விதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)’ என்று கூறிக்கொண்டனர். எனவே, அல்லாஹ் ‘அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத் தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (4765)

விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்

கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 24:33

ஜாபிர் (ரலி) கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலிடம் முசைக்கா, உமைமா எனப்படும் இரு அடிமைப் பெண்கள் இருந்தனர். அவன் அவ்விருவரையும் நிர்பந்தித்து விபசாரத்தில் ஈடுபடுத்திவந்தான். அவ்விரு (அடிமைப்) பெண்களும் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அதைப் பற்றி முறையிட்டனர். அப்போதுதான், “உங்கள் பெண்களை விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்” என்று தொடங்கி, “மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (24:33) என்பது வரை அல்லாஹ் அருளினான்.

நூல்: முஸ்லிம் (5764)

மது

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

அல்குர்ஆன் 5:90

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நான் அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்’’ என்று கூறினர். – இது மது தடை செய்யப்படுவதற்குமுன் நடைபெற்ற நிகழ்வாகும் – அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன்.
அங்கு அவர்களுக்கு அருகில் பொறிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.
அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் “அன்சாரிகளைவிட முஹாஜிர்களே சிறந்தவர்கள்” என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடை எலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்படுத்தி விட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக “நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும்’’ (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4789)

தடைக்கு முன் செய்தவை குற்றமல்ல!

(இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:93

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது தடைசெய்யப்பட்ட நாளன்று மக்கள் “மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)” என்று கூறினர்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை” (5:93) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4006)

ஆபாசக் கலாச்சாரம்

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7 ; 31

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். அப்போது அவர்கள், “தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கூறி, (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு,
“இன உறுப்பில் சிறிதளவோ முழுவதுமோ வெளிப்படுகிறது இந்நாள். இதை எவரும் பார்க்க அனுமதிக்க முடியாது என்னால்” என்று பாடுவார்கள்.
எனவேதான், “ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!” (7:31) எனும் வசனம் அருளப்பெற்றது.

நூல்: முஸ்லிம் (5762)

பொய் சத்தியம்

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 3:77

அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) கூறினார்கள்.

என் தொடர்பாகத் தான் இந்த (3:77) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டு சென்றோம்.)
நபி (ஸல்) அவர்கள், உனது (இரு) சாட்சி(கள்) அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது) என்று சொன்னார்கள். உடனே நான், ‘அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே!’ என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிராமண(வாக்குமூல)த்தின்போது அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கின்றாறோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4549, 4550)

வீணான சத்தியங்கள்

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

அல்குர்ஆன் 5:89

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான்’ எனும் (5:89) இறைவசனம் ‘லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!’) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!’ என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகிறவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4613)

 

வணக்க வழிபாடுகள்

தொழுகை
தயம்மும்

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:43)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமிருந்து) தொலைந்துவிட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் உளுவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளுச் செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, உளு இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோனாகிய அல்லாஹ் – தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை – அருளினான்.

நூல்: புகாரி (4583)

நடுத் தொழுகை

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

(அல்குர்ஆன் 2:238)

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

நூல்: புகாரி (4534)

அச்ச நிலை தொழுகை

(நபியே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், அப்போது திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏகஇறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன் 4:102)

அபூ அய்யாஷ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு யுத்தத்திற்காக) நபி (ஸல்) அவர்களுடன் உஸ்ஃபான் என்னும் இடத்தில் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களில் (அப்போது) ஹாலித் பின் வலீத் அவர்களும் இருந்தார். அவர்கள் எங்களுக்கும் கிப்லாவிற்கும் மத்தியில் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹரைத் தொழுவித்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள்: ”இப்போது அவர்கள் (முஸ்லிம்கள்) ஒரு நிலையில் ஆகிவிட்டார்கள். அவர்களில் முதலாமவர்களின் மீது நாம் தாக்குதல் நடத்தினால் (நன்றாக இருக்கும்) எனப் பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் ”இப்போது அவர்களுக்கு (மீண்டும்) ஒரு தொழுகை வரும். அது அவர்களுக்கு தங்களது பிள்ளைகளை விட உயிர்களை விட மேலானதாகும். (அப்போது நாம் தாக்குதல் நடத்துவோம்) எனக் கூறினர். அப்போது லுஹருக்கும், அஸருக்கும் மத்தியில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் (4:102) (என்று துவங்கும்) வசனங்களைக் கொண்டு இறங்கினார்கள்.

நூல்: அஹ்மத் (15985)

ஜும்ஆ தொழுகை

“(நபியே!) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 62:11)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிருந்த மக்கள்) கலைந்து சென்றார்கள். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்’ எனும் (62:11) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல் :புகாரி (4899)

நோன்பு
வசதிபடைத்தவர்களும் நோன்பு நோற்பது கடமை

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

(அல்குர்ஆன் 2:185)

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்‘ எனும் (2:184) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (‘உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற வசனம்) அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4507)

இரவு நேரங்களில் உறவு கொள்வது குற்றமில்லை

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்!

(அல்குர்ஆன் 2:187)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அல்லாஹ், ‘(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்’ என்று (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4508)

ஸஹர் முடிவு நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:187)

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பத்தில்) ‘வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ எனும் (2:187வது வசனத்தின்) தொடர் ‘விடியலின்’ (‘மினல் ஃபஜ்ர்’) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், ‘மினல் ஃபஜ்ர்’ (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.

நூல்: புகாரி (4511)

ஹஜ்
மகாமு இப்ராஹீமில் தொழுதல்

இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 2:125)

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)

நூல்: புகாரி (4483)

ஸஃபா மர்வா குன்றுகளில் சுற்றிவருதல்

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்2:158)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமில்லை’ (2:158) என்ற வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா(ரலி), ‘(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு அந்த வசனத்தில் ‘அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை’ என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த ‘முஷல்லல்’ எனும் குன்றில் உள்ள) ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) ‘குதைத்’ எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகிறோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை’ என்ற இந்த (2:158) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4495)

அரஃபாவில் தங்குதல்

பின்னர், மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:199)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறையுயரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) ‘உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் ‘மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.

நூல்: புகாரி (4520)

அறியாமை கால பழக்கம்

வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 2:189)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4512)

ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்தல்

(ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

(அல்குர்ஆன் 2:198)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். எனவே, ஹஜ் பருவத்தில், ‘உங்களுடைய இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது’ எனும் (திருக்குர்ஆன் 02:198 வது) வசனத்தொடர் அருளப்பட்டது.

நூல்: புகாரி (4519)

ஜிஹாத் – அறப்போர்
போர் செய்ய எப்போது அனுமதி?

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப் பட்டுள்ளனர்’’ என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 22:39)

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து (ஹிஜ்ரத் செய்து) வெளியேறியபோது அபூ பக்கர் (ரலி) அவர்கள் ”இவர்கள் தங்களின் நபியை வெளியேற்றிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள்) என்று கூறினார்கள். எனவே “போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்’’ என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்” (22:39) என்ற வசனம் இறங்கியது. ”விரைவில் போர் ஏற்படும் என அறியப்பட்டுவிட்டது” என அபூபக்கர் (ரலி) கூறினார்கள். போர்விசயத்தில் இறங்கிய முதல் வசனம் இதுதான் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (1768) திர்மிதி (3095)

போருக்குத் தேவையான படைபலம்

இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான். (அல்குர்ஆன்8:66)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த (08:66) இறைவசனம் அருளப்பெற்றது. (அதன்மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.

நூல்: புகாரி (4652)

அறப்போரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:95)

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) கூறியதாவது:

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (4:95) வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மகத்தூம்(ரலி) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்’ என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு, அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் ‘தக்க காரணமின்றி ’ எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

நூல்: புகாரி (4592)

படைத் தளபதிக்குக் கட்டுப்பட்டு நடத்தல்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!’ எனும் (4:59) வசனம், நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ(ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.

நூல்: புகாரி (4584)

போரில் முஸ்லிம்களைக் கொல்லக்கூடாது

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக “நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை’’ என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:94)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது:

ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அவரின் ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக இந்த (4:94) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இங்கே ‘உலகப் பொருள்’ என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.

நூல்: புகாரி (4591)

கொள்கையை எதிர்க்காதவர்களுடன் நல்லிணக்கம்

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 60:8)

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்‘ என்று கூறினார்கள்.
‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, இந்த (60:8) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.

நூல்: புகாரி (5978)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

(அல்குர்ஆன் 3:169,170)

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுடைய சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்ட போது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சை நிற பறவைகளின் உடல்களில் செலுத்தினான். அவை சொர்க்கத்தின் ஆறுகளுக்குச் சென்று அதனுடைய கனிகளிலிருந்து சாப்பிட்டன. அர்ஷின் நிழலிலே தொங்கவிடப்பட்டிருக்கும் கூடுகளிலே அவை தங்கின. அவர்கள் சிறந்த உணவருந்தும் இடத்தினையும், குடிபானங்கள் அருந்தும் இடத்தினையும், தூங்குமிடத்தினையும் பெற்றுக் கொண்ட போது ”நாங்கள் சொர்கத்தில் உயிர்வாழ்பவர்களாக இருக்கின்றோம், உணவளிக்கப்படுகின்றோம் என்று எங்களைப் பற்றி எங்கள் சகோதரர்களுக்கு எடுத்துச் சொல்பவர் யார், (அவர்கள் இதனை அறிந்தால்) அவர்கள் தியாகம் செய்வவை வெறுக்கமாட்டார்கள், யுத்தத்திலே கோழைகளாகமாட்டார்கள்” என்று கூறினார்கள். எனவே அல்லாஹுத் தஆலா பின்வரும் வசனங்களை தன் தூதர் மீது இறக்கினான். ” அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். (3:169,170).

நூல்: அபதாவூத் (2522), முஸ்லிம் (3834)

தர்மம் செய்தல்
இறைவழியில் செலவழிக்கப்படாத தங்கம், வெள்ளி

நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு’’ என்று எச்சரிப்பீராக!

(அல்குர்ஆன் 9:34)

அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நாங்கள் ஷாம் நாட்டில் இருந்தோம். அப்போது நான், ‘தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்து, அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக’ எனும் (9:34) இறைவசனத்தை ஓதினேன். அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா(ரலி), இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்களின் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது’ என்று கூறினார்கள். நான், ‘இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிச்சை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்.

நூல்: புகாரி (4660)

தர்மம் செய்வோரை கேலி செய்வோர்

தாராளமாக (நல்வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)
அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) கூறியதாவது:
தான தர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்(ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரிச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், ‘(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்’ என்று (குறை) கூறினார்கள். அப்போதுதான் இந்த (9:79) இறைவசனம் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4668)