ஏகத்துவம் – ஜனவரி 2017

இணையை விரும்பாத ஏகாதிபத்திய தலைமை

ஜெயலலிதா மரணம் சொல்கின்ற சிந்தனைகள்

இந்தியாவில் முக்கியத் தலைவர்கள் இறந்து விட்டால் அந்தச் சாவு, அந்தத்  தலைவர்களை மட்டும் காவு கொள்வதில்லை. கூடவே குடிமக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினரையும் காவு கொண்டு  விடுகின்றது. குடிமக்களில் ஒரு கூட்டத்தையே கூட்டிப் போய் விடுகின்றது. இது இந்தியாவின் தலையெழுத்து.

1984ல் தனது சீக்கிய மெய்க்காப்பாளரால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சாவின் வெறியாட்டம்,  தலைநகர் டெல்லியை கொலை நகராக்கியது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோரத் தாண்டவம் ஆடியது. இந்திய அரசாங்கத்தின் கணக்குப்படி 2700 பேர் கொலை வெறிக் கூட்டத்தால் கொல்லப்பட்டனர்.

டெல்லி காவல் துறையே உயிர்க்கொல்லி காவுத் துறையாக மாறி சீக்கியர்களின் உயிர்களை கண்மூடித்தனமாகப் பறித்தது. ‘செத்து விடு அல்லது ஊரை விட்டுச் சென்று விடு’ என்ற முழக்கத்துடன் கொலைவெறிக் கும்பல் சீக்கியர்களை ஊரை விட்டே துரத்தியடித்தது.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான கருவறுப்புப் படலத்திலிருந்து 20,000 பேர் தலை தப்பியது புண்ணியம் என்று தப்பி ஓடினர்.

நாஜியின் ஜெர்மனியில் ஒரு யூதர் எந்த நிலையில் இருந்தாரோ அது போல சொந்த நாட்டிலேயே தான் அகதியாக உணர்ந்ததாக பிரபல எழுத்தாளரும் 1984 கலவர சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான குஷ்வந்த் சிங் குறிப்பிட்டார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் தம் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் அளவு கலவரத்தின் தாக்கம் இருந்ததை பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ். நருலா குறிப்பிட்டுள்ளார். இது டெல்லி கலவரத்தின் கோரத்தின், கொடூரத்தின் பரிமாணத்தையும், பயங்கரத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தனது தாயார் மரணத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜிவ் காந்தியிடம் சிறுபான்மை சீக்கிய சமுதாயம் குறிவைத்துக் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டதற்கு, ‘ஒரு பெருமரம் பெயர்ந்து விழும் போது பூமி குலுங்குவதைத் தடுக்க முடியாது’ என்று தான்தோன்றித்தனமான பதிலை அளித்தார். இதிலிருந்து இந்தியாவில் மனித உயிரின் மதிப்பென்ன? என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைவர் என்ற மரம் செத்து, சரிகின்ற போது அல்லது சாய்க்கப்படும் போது அதை ஒட்டி எத்தனை இதர மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன என்பதற்கு இந்திரா காந்தி மரணம் ஓர் எடுத்துக்காட்டாகும். இதுதான் இந்தியாவின் நிலை! இந்தியாவின் தலைவிதி!

இது மனித உயிருக்கு ஏற்படுகின்ற பாதிப்பென்றால் தனி மனித  உடைமைகளுக்கும், பொது  உடைமைகளுக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை ஏட்டில் வடித்து விட முடியாது.

நடிகர் ராஜ்குமார் இறந்த போது கொளுத்தப்பட்ட பஸ்கள் எண்ணிக்கை 100 ஆகும்.

இது எதை உணர்த்துகின்றது?  இதைச் செய்பவர்கள் மனிதர்கள் அல்ல! மிருகங்கள் தான் என்பதை உணர்த்துகின்றது. தலைவர் இறந்து விட்டால் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும். கடைகள் இழுத்து மூடப்பட வேண்டும்.  அரசு அலுவலகங்களுக்கு, பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட வேண்டும். மருத்துவமனையிலிருந்து தலைவரின் சவத்தை ஆம்புலன்ஸ் ஏற்றியது முதல் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டு சவ வண்டியில் ஏற்றி சகல ராணுவ மரியாதையுடன் சவக்குழியில் இறக்குகின்ற வரை அல்லது கொளுத்தி சாம்பலாக்கப்படுகின்ற வரை நேரலை காட்சிகளாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும். அது வரை நாடே செயல்படாமல் முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவெல்லாம் நடைபெறவில்லை என்றால் தலைவரின் ஆன்மா சாந்தியடையாது.

இதுபோன்ற அநியாயத்தையும் அராஜகத்தையும் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

ஆனால் அண்மையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது இந்த அவல நிலையில் கொஞ்ச மாற்றம் ஏற்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அவை கொளுத்தப்படவில்லை. ஒரு சில இடங்களில் தவிர பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் கூட  நடைபெறவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்றாலும் அவை அடித்து உடைக்கப்படவில்லை. அரசாங்க மற்றும் தனியார் சொத்துகள் எதுவும் சூறையாடப்படவில்லை. தீக்கிரையாக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர் இறந்தவுடன் எதிர்க்கட்சியான திமுகவின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. அதுபோன்ற அராஜக நடவடிக்கைகள் ஜெயலலிதா மரணத்தின் போது அரங்கேறவில்லை. ரயில் பயணங்கள் பாதிப்புக்குள்ளாகவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் மூடிக் கிடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்த்து வேறு பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த வகையில் தமிழகம் இந்த முறை தகாத சம்பவங்களை விட்டும் தப்பி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

அதற்காக தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் தலைவர்களின் இறப்பின் போது இந்தப் பண்பாடு தொடருமானால் தமிழகம் இந்த  நல்முன்மாதிரிக்கு இந்தியாவிற்கே சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமில்லை

இது, ஜெயலலிதாவின் இறப்பையொட்டி நாம் பார்க்க வேண்டிய முதல் சிந்தனையாகும்.

ஜெயலலிதாவின் ஆசான் எம்.ஜி.ஆர். இறந்த போது 30க்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இலட்சக்கணக்கோர் மொட்டை அடித்துக் கொண்டனர்.

ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் இறந்த போதும் இதுவரை 77 பேர்கள் இறந்துள்ளனர். இந்தத் தகவலை ழிஞிஜிக்ஷி குறிப்பிடுகின்றது. ஆனால் 470 பேர் இறந்ததாக அதிமுக அறிவித்துள்ளது. இதில் அதிர்ச்சியில் இறந்தவர்களும் உண்டு; தற்கொலை செய்தவர்களும் உண்டு. இவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலிலதா இறந்த செய்தி கேட்டு தனது கை விரலை ஒருவர் வெட்டியுள்ளார். தற்கொலை முயற்சி செய்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 50,000 ரூபாய் ஆறுதல் தொகை அளிக்கப்பட்டது.

தலைவர்களும், தங்களுக்குப் பிடித்த நடிகர்களும் சாகின்ற போது அல்லது குற்றம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்படும் போது தற்கொலை சாவுகள்  நடப்பது இந்தியாவின் மற்றொரு சாபக் கேடும் தலைவிதியுமாகும். இதில் ஜெயலலிதாவின் சிறைவாசம், சுகவீனம், மரணம் ஒரு விதி விலக்கல்ல! இந்த சாபக்கேட்டை விட்டு தமிழ் நாடும் இந்தியாவும் தப்ப வேண்டுமென்றால், அதற்கு இஸ்லாமிய மார்க்கம் தான் தீர்வாகும்.

தாம் விரும்புகின்ற பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய தலைவர்கள் சாகக் கூடாது என்று நினைக்கும் தொண்டர்கள், தோழர்கள், சீடர்கள், பக்தர்கள் இருக்கத் தான் செய்வார்கள். முஸ்லிம்களிலும் அவ்வாறு இருந்திருக்கின்றார்கள்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒழுக்க புருஷருமான முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) அவர்கள், ‘முஹம்மது நபி (ஸல்) மரணிக்கவில்லை’ என்ற வாதத்தை வைக்கின்றார்கள். நபித்தோழர்களும் இந்த  வாதத்தின் மயக்கத்தில்  தம்மை மறந்து விடுகின்றார்கள். இத்தனைக்கும் இடையே ‘‘ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” (அல்குர்ஆன் 29:57, 21:35, 3:185)  என்று ஒவ்வொரு முஸ்லிமுக்கும் திருக்குர்ஆன் பாடம் நடத்தியிருக்கின்றது.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்

அல்குர்ஆன் 3:144

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள்  என்று அல்லாஹ் இந்த வசனத்தில் உலக மக்களுக்கு  தெளிவாகச் சொல்லி விடுகின்றான்.

நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

அல்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

அல்குர்ஆன் 21:35

நீரும் மரணிக்கக்கூடியவர் தாம் என்றும், நீங்கள் நிரந்தரமாக வாழக்கூடியவர் அல்லர் என்றும் நபி (ஸல்) அவர்களை நோக்கி நேரடியாகவும்  கூறிவிடுகின்றான். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தங்கள் வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பத்தில் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன் என்று தன்னுடைய தோழர்களுக்கும் மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்கள். இதை ஆதாரபூர்வமான நபிமொழிகளில் நாம் அதிகம் பார்க்க முடிகின்றது.

  1. இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு முஸ்லிமும் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும் விழிக்கும் போதும் மரணத்தை நினைவூட்டுகின்ற சில பிரார்த்தனைகளை சொல்ல வேண்டும் என்று கூறுகின்றது (மரணம் சம்பந்தமாக இதே இதழில் ‘இன்னாலில்லாஹி’ என்ற தனிக் கட்டுரை இடம் பெறுகின்றது. அதனால் இங்கு இந்த விபரம் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது)
  2. மரணத் தகவல் ஒருவரை அடைகின்ற போது, தானும் மரணிக்கக் கூடியவன் தான் என்ற கருத்துகள் அடங்கிய சமாதான, தன்னையே தேற்றிக் கொள்கின்ற ஆறுதல் வாசகங்களை வாயால் சொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் தன்னையும் அந்த மரணம் தழுவாமல் விடாது என்று உளவியல் ரீதியாக அவரை ஒப்புக் கொள்ள வைத்து, அந்த மரணச் செய்தியை ஜீரணிக்கச் செய்கின்றது. அத்துடன் இதன் மூலம் அவருக்கு ஏற்படவிருக்கின்ற மரண அதிர்ச்சியின் பாதிப்பை விட்டும் அவரைக் காக்கின்றது.
  3. நோயாளிகளை விசாரிக்கச் செல்லுமாறு ஒரு முஸ்லிமுக்கு வழி காட்டுவதன் மூலமும் மரணத்தை மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.
  4. மரணத்தை நினைப்பதற்காக மயானங்களைச் சந்தியுங்கள் என்று குறிப்பிட்டு, இறந்தவர்களின் அடக்கத்தலங்களான பொது மையவாடிகளை அடிக்கடி சந்திக்கச் சொல்கின்றது. அடக்கத்தலங்களைச் சந்திக்கும் போது, இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்றாலும் ‘நாங்களும் இறைவன் நாடினால் உங்களுடன் விரைவில் வந்து சேர்ந்து விடுவோம்’ என்ற செய்தியைச் சேர்த்து சொல்லச் செய்கின்றது. இதன் வாயிலாக அவ்வப்போது மரண ஒத்திகைப் பயிற்சியை இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அளிக்கின்றது.

இத்தனை பாடங்களை படித்தவர்களில் ஒருவர் தான் உமர் (ரலி) அவர்கள். அப்படிப்பட்ட உமர் தான் முஹம்மது நபி மரணிக்கவில்லை என்ற வாதத்தை வைக்கின்றார்கள்.

அப்போது தான் அந்த உமரை விடவும் மூத்தவரும் முன்னவருமான அபூபக்ர் (ரலி) அவர்கள், அந்த முஹம்மது நபியின் மரணத்தைப் பற்றிய குர்ஆன் வசனங்களை நினைவுபடுத்தியதும் உமர் (ரலி) சுதாரித்து நிதானத்திற்கு வந்து விடுகின்றார்கள்.

வரலாற்றின் இந்த முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் முஸ்லிம்களிடம் மரணத்தைப் பற்றிய சரியான பார்வை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிந்து விட்டது. அதனால் முஸ்லிம்களிடம் மரணம் பற்றிய செய்தி பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்குத் தமிழகத்தில் ஒரு வழக்கம் உள்ளது.ஒருவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போது, நான் போகின்றேன் என்று சொல்லக் கூடாது. மாறாக, நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்ல வேண்டும்.  காரணம் போகின்றேன் என்ற சொல்லிச் சென்றவர் திரும்ப வராமல் ஆகி விடுவார் என்ற பயம் தான். அந்த அளவுக்கு மரணத்தைப் பற்றிய பயம் மக்களிடம்  ஆட்கொண்டுள்ளது. சாவு, இறப்பு என்ற வார்த்தையை அபசகுனமான வார்த்தையாக மக்கள் கருதுகின்றனர்.  இஸ்லாம் ‘மவ்த்’ மரணம்  என்ற வார்த்தையை தண்ணீர் மாதிரி மக்களுடைய வாய்களில் புழங்க வைத்துள்ளது.

எம்மாபெரிய பாசத்திற்குரிய  தலைவரானாலும், நெருங்கிய உறவினரானாலும் அவர் இறந்து விட்டால் அவரது இறப்புச் செய்தி  ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் பாதிப்பையும், கவலையையும் ஏற்படுத்தினாலும் அந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்தில்  அவர் அதிர்ச்சியில் மரணிக்கின்ற நிலைக்கு  அல்லது தற்கொலை செய்து தன்னை மாய்த்துக் கொள்கின்ற விரக்தி மற்றும் விளிம்பு  நிலைக்கு அது அவரைக் கொண்டு போவதில்லை. இதற்கெல்லாம் காரணம் இஸ்லாமிய மார்க்கம் படித்துக் கொடுத்த மரணம் பற்றிய பயிற்சியும் பக்குவமும் தான். இஸ்லாம் கொடுக்கின்ற  இந்த உளவியல் ரீதியான தொடுதல் தான் இது போன்ற மரணச் செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் மரணிக்கின்ற மரணத்தை விட்டும் மக்களைக் காக்கின்றது.

ஜெயலலிதாவின் மரண செய்தி கேட்டு இத்தனை பேர்கள் இறந்திருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் இறப்பு பற்றிய இதுபோன்ற உளவியல் ரீதியான பயிற்சி இல்லாதது தான். மரணத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்து விதமான சோதனைகளுக்கும் இஸ்லாம் இது போன்ற மாமருந்தை மக்களுக்கு அளிக்கின்றது. இத்தகைய பாடத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் இருக்கின்ற ஒரே வழி அவர்கள் இஸ்லாத்தை ஏற்பது தான். இது ஜெவின் மரணத்தை ஒட்டி நாம் பார்க்க வேண்டிய இரண்டாவது சிந்தனையாகும்.

மறைந்த எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சித் தலைமை 1989ல் ஜெயலலிதாவிடம் வந்தது. அதன் பிறகு 1991ல் ஆட்சித் தலைமையும் அவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர் 2001 முதல் 2006, 2011 முதல் 2016, மீண்டும் 2016ல்  ஆட்சித் தலைமை கிடைத்தது. மரணிக்கின்ற வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.

இக்காலக் கட்டங்களில் யாரும் அதிகாரத்தில் தனக்கு இணையாகவும், சமமாகவும் ஆக்கப்படுவதை அவர் ஒரு போதும் சம்மதித்ததுமில்லை; சரி கண்டதுமில்லை.  திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று நான்கு அதிகார மையங்கள் இருக்கின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே ஓர் அதிகார மையம் தான்.  காரணம் தனக்கு இணையாக எந்த ஒரு சக்தியும் உருவாகாத அளவில் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்.

‘வருங்கால முதல்வரே!’ என்று வார்த்தையளவில் யாராவது  ஒரு தொண்டன் அவரது அமைச்சர்களில் ஒருவரை வாழ்த்தி விட்டாலோ, வர்ணித்து விட்டாலோ போதும், அவ்வளவு தான்! தொண்டர் செய்த தப்புக்கு அந்த அமைச்சர் பொறுப்பாக மாட்டார் என்றாலும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு அதள பாதாளத்தில் தூக்கி எறியப்படுவார். கட்சியில் இப்படி இணையாகப் புறப்பட்டவர்கள் புரட்டி எறியப்பட்டுள்ளார்கள். அந்த அளவுக்கு இணை வைப்பை விரும்பாதவர்.

தனக்கு நிகராக யாரும் எழுந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்  இரண்டாம் கட்டத் தலைவரை, தான் உயிருடன் இருக்கும் வரை அவர் அறிமுகப்படுத்தவில்லை. தான் இறந்த பின்பு தனது கட்சி பிளவுண்டு விடக் கூடாது; பிரிந்து, சிதறுண்டு சின்னா பின்னாமாகி விடக் கூடாது என்று கட்சி நலனில் கரிசனம் கொண்டு, கவலை கொண்டு ஓர் இரண்டாம் கட்டத் தலைவரை அவர் அடையாளம் காட்டியிருக்க  வேண்டும். அப்படிக் காட்டினாரா என்றால் இல்லை. இதற்குக் காரணம் தனக்கு இணை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்.

மரணத்தை தழுவக் கூடிய இவரே தனக்கு நிகரான இணை ஏற்படுவதை விரும்பாத போது, என்றென்றும் உயிருடன் இருக்கக் கூடிய வல்ல நாயன் தனக்கு இணை வைப்பதை எள்ளளவேனும் விரும்புவானா? என்று  நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

அல்குர்ஆன்  30:28

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்

அல்குர்ஆன் 16:71

தனக்கு கீழுள்ளவர்களை, தன்னளவிற்குத் தரம் உயர்த்தி, பங்காளியாக்குவதை பலவீனமான இந்த மனிதன் பயப்படுகின்றான். அதற்கு  இசைய மறுக்கின்றான். ஆற்றல் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இணையாளர், பங்காளியரை வைத்துக் கொள்ள விரும்புவானா? என்பதை  மேற்கண்ட இரண்டு வசனங்களும்  தெளிவாக உணர்த்துகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பிடிக்குமா? என்று முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது சிந்தனையாகும்.

அதிமுகவுக்காகத் தங்களையே அர்ப்பணித்து, தியாகம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் இலட்சோப இலட்சம் தொண்டர்கள் இருந்தாலும்  பொதுச் செயலாளர் பதவி இன்று சசிகலாவை நோக்கிப் பாய்கின்றது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் பதவியாகும். அப்படி அந்தப் பொறுப்புக்கு சசிகலா தான் என்றால் அவர் தான் தமிழகத்தின் முதல்வராவார். இன்று அஇஅதிமுக வட்டாரம் அதையும் பேச ஆரம்பித்து விட்டது. இது எதைக் காட்டுகின்றது? அதிகாரத்தை தான் நாடியவருக்கு  வழங்குவபவன் அல்லாஹ் தான்.

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக! 

அல்குர்ஆன் 3:26

என்று குர்ஆன் கூறக் கூடிய அந்த உண்மை இங்கு நிரூபணம் ஆகின்றது. இது நாம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து தெரியக் கூடிய நான்காவது சிந்தனையாகும்.

ஜெயலலிதா அப்போல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அம்மா குணமாகி திரும்ப வந்து விடுவார்கள் என்று  சோதிடர்கள் பலர் சோதிடம் சொன்னார்கள். அது நிறைவேறாமல், ஜெயலலிதா பிணமாகத் தான் திரும்ப வந்தார். இதிலிருந்து சோதிடம் முழுக்க முழுக்கப் பொய் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி உள்ளது. இது ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து  தெரியக் கூடிய ஐந்தாவது சிந்தனையாகும்.

ஜெயலிலாதா இறந்த பின்பு எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றார். இதற்காக முதலமைச்சர் பன்னீர் செல்வம்  தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக 15 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இறந்த தலைவர்கள் பெயரால் நினைவு மண்டபங்கள், நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுக்கின்றன. சலவை மற்றும் பளிங்குக் கற்களில் சமாதிகள் கட்டப்படுகின்றன. வாழ்க்கையைக் கழிப்பதற்காகக் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகி, கடைசியில் ஏதுமறியாத பச்சைக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டுத் தாங்களும் தற்கொலை செய்கின்ற தம்பதிகள் பற்றிய  செய்திகள் பத்திரிக்கைகளில் அன்றாடம்  வெளியாவதை நாம் பார்க்கின்றோம்.

கிட்னி செயல்பாடு இழந்தவர்கள் கிட்னி மாற்றுப் பதிகத்திற்கும் டயாலிசிஸுக்கும், இதய நோயாளிகள் மாற்று இதய சிகிச்சைக்கென்றும் குழந்தைகளின் இதய வால்வுகளை மாற்றுவதற்கும்  பணத்திற்காக ஆளாய் பறக்கின்ற, அலையாய் அலைகின்ற மக்கள் வசிக்கக் கூடிய நம் நாட்டில் பல கோடி மக்கள் வரிப் பணத்தை, பொருளாதாரத்தை இப்படி சமாதிகளில்  சாம்பலாக்குவதும், வெண்கலச் சிலைகளில் விரயமாக்குவதும் அக்கிரமும் அநியாயமும் ஆகும். இது   இந்தியாவின் மற்றொரு சாபக்கேடாகும்.

இது நாம் ஜெயலலிதாவின் மரணத்திலிருந்து பெறக் கூடிய ஆறாவது சிந்தனையாகும்.

—————————————————————————————————————————————————————————————————————

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்

திருவருள் தாரும் நாகூரார்

நாகூர் இப்னு அப்பாஸ்

ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை வாழ்வியல் நெறியாக இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்றான்.

ஏகத்துவத்தைத் தெளிவுபடுத்தி வழிகாட்டு வதற்காகத் திருமறைக் குர்ஆனையும் மானுடத்திற்கு அருளியுள்ளான். திருக்குர்ஆனோடு தொடர்புள்ள ஒருவன் தன்னுடைய வாழ்வைக் கொள்கையளவிலும், தனிமனித ஒழுக்கத்திலும் பக்குவப்படுத்திக் கொள்வான்.

ஆனால், இன்றைக்கு இருக்கும் தமிழ் பேசும் மக்களிடத்தில் அத்தொடர்பு குறைந்துவிட்டது.

திருக்குர்ஆன் அவர்களது வாழ்வில் பெற்றிருக்கும் இடத்தைவிட இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் உலா வரும் பாடல்கள் பெரும் இடத்தைப் பிடித்து இருக்கின்றன.

அதனால் அம்மக்கள் இஸ்லாத்தின் அடிப் படையைக் கூட விளங்காதவர்களாக உள்ளனர்.

அப்பாடல்களின் வரிகள் எடுத்துரைக்கும் கருத்துக்கள் தான் இஸ்லாம் என அவர்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், அப்பாடல்களோ இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல் நரகிற்கு அழைத்துச் செல்லும் பாதையாகவே அமைந்துள்ளன.

அந்த பாடல்கள் இஸ்லாத்திற்கு எவ்வாறெல்லாம் எதிராக உள்ளன என்பதைத்தான் இக்கட்டுரையின் வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம்.

அந்த அடிப்படையில், “கடலோரம் வாழும் காதர் மீரா” என்ற பாடல் எவ்வாறு ஏகத்துவத்திற்கு முரண் என்பதை இம்மாதக் கட்டுரையில் அறியவிருக்கின்றோம்.

இப்பாடலில் இடம்பெறும் தெளிவான ஷிர்க்கை உள்ளடக்கியிருக்கும் வரிகளை முதலில் காண்போம்.

கடலோரம் வாழும் காதர் மீரா”

சாதக வடிவாய் இறங்கும் சிங்காரா”

திருவருள் தாரும் நாகூரார்”

தஞ்சை மன்னன் பிணியினை தீர்த்தீர்”

மெய்யருள் தாரும் நாகூரார்”

பல்லாண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்ட நாகூரில் அடங்கியிருக்கும் காதர் மீரா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றும், அவர் அருள் வடிவாய் விளங்குகின்றார் என்றும் தஞ்சை மன்னனுக்கு ஏற்பட்ட நோயையே இவர்தான் குணப்படுத்தினார் என்றும் அவரிடமே தான் அருளை வேண்டுவதாக இப்பாடல் தொடர்கிறது.

அருள் செய்வது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள அதிகாரம் என்பதையும் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்பதையும் சென்ற இதழில் அறிந்துவிட்டோம்.

அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களை வணங்குவது எவ்வாறு ஷிர்க்கோ அவ்வாறே இறைவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்புகள் ஆகியவற்றில் அணுவளவு மற்றவர்களுக்கு இருக்கிறது என்று கற்பனை செய்வதும் ஷிர்க்கே!

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின் றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணு வளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

அல்குர்ஆன் 35:13

ஆனால், தர்கா வாதிகள் இறைவனுக்கு மட்டும் சொந்தமான பல்வேறு தன்மைகளை அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பிரேதங்களுக்கு வழங்கி வழிபடுகின்றார்கள்.

இப்பாடலின் “தஞ்சை மன்னன் பிணியினை தீர்த்தீர்” என்ற வரிக்குப் பின்னால் ஒரு கதை கூறப்படுகிறது.

ஷாகுல் ஹமீது ஒரு முறை தஞ்சாவூருக்கு வருகை தந்தாராம்.

அப்போது தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கர் நோய்வாய்ப்பட்டிருந்தாராம். மன்னன், ஷாகுல் ஹமீதின் வருகையை அறிந்து அவரை அழைத்து வரச் சொன்னாராம். இவரும் சென்று மன்னனுக்கு நிவாரணம் அளித்தார் என்றும் இவரின் அருளால் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த மன்னனின் மனைவி பிள்ளை பாக்கியம் பெற்றாள் என்றும் கதையை கட்டவிழ்க்கின்றார்கள்.

நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கே!

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்

அல்குர்ஆன் 26:80

பிள்ளை பாக்கியத்தை வழங்குபவன் அல்லாஹ்வே!

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

பிள்ளை பாக்கியத்தைத் தரும் ஆற்றலை இறைவன் தனது அதிகாரமாக இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ஆனால், ஷாகுல் ஹமீத் அவர்களை நல்லடியார் என்றும் அவர் நல்லடியார் என்பதால் பிள்ளை பாக்கியத்தைத் தரும் ஆற்றலைப் பெற்றிருந்தார் என்றும் இவர்கள் கதைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

நல்லடியார்களுக்கு இவ்வாற்றல் இருக்கும் என்றால் இறைவனின் உற்ற தோழர் என்று நற்சான்று வழங்கப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களே தள்ளாத வயது வரை ஏன் பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருக்க வேண்டும்.

அவர்களுக்கும் இறைவன் தானே அந்த பாக்கியத்தைத் தருகிறான்.

இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக! அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்’’ என்றார். நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்’’ என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார். உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!’’ என்று அவர்கள் கூறினர். வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?’’ என்று அவர் கேட்டார்.

அல்குர்ஆன் 15:51-56

இப்ராஹீம் நபிக்கு அந்த ஆற்றல் இருக்கும் என்றால் அவரே தனக்கு ஒரு வாரிசை ஏற்படுத்தியிருக்கலாமே!

அல்லாஹ்தான் அவர்களுக்கும் குழந்தை பாக்கியத்தை வழங்கியிருப்பதிலிருந்து பிள்ளையைத் தரும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே என்று தெளிவாகிறது.

இப்ராஹீம் நபிக்கே இந்த ஆற்றல் இல்லை எனும் போது ஷாகுல் ஹமீதுக்கு எங்கிருந்து வந்தது?

அதே போன்று ஸக்கரிய்யா (அலை) அவர்களும் முதுமையை அடைந்தும் தனக்கென்று ஒரு வாரிசு இல்லாதவர்களாக இருக்கின்றார். அவருக்கும் இறைவன் பிள்ளைப் பேறை வழங்குகின்றான்.

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை’’ (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்’’ என்று அவர் கூறினார். அப்படித் தான்’’ என்று (இறைவன்) கூறினான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன்எனவும் உமது இறைவன் கூறினான்’’ (என்று கூறப்பட்டது.)

அல்குர்ஆன் 19:2-9

இவ்வாறு இறைத்தூதர்கள் கூட பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார்கள்.

அவர்கள் உட்பட அனைவருக்கும் இறைவன் தான் அந்த பாக்கியத்தை வழங்குகின்றான். அது இறைவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயமாக உள்ளது.

ஆனால், அந்த அதிகாரத்தில் ஷாகுல் ஹமீதுக்குப் பங்கு இருப்பதைப் போன்ற ஒரு விஷமத்தனத்தை மக்கள் மனதில் விதைக்கக் கூடியதாக இப்பாடல் வரியும் கஃப்ஸாக்களும் அமைந்துள்ளன.

இறந்துவிட்ட பெரியார்களை, இறைத்தூதர்களை விட பெரும் நல்லடியார்களாகச் சித்தரிக்க முயன்று அவர்களைக் கடவுளாக ஆக்கிவிட்டனர் இக்கயவர்கள்.

இவ்வாறு இஸ்லாமியப் பாடல்கள் எனும் பெயரால் சமுதாயத்தில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் அனைத்தும் இஸ்லாமிய அகீதாவிற்கு நேர் எதிராக உள்ளன.

அருள் செய்யும் அதிகாரம், குழந்தை பாக்கியம் தருவது, மறைவான ஞானம், நோய் நிவாரணம் அளிப்பது போன்ற இறைவனுக்கு மட்டுமே குறிப்பாக எந்தத் தன்மைகள், அதிகாரங்கள் உள்ளனவோ அவற்றில் பங்காளிகளை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் ஒட்டுமொத்த பாடல்களின் கருவும் அமைந்துள்ளன.

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

அல்குர்ஆன் 17:111

இதுபோன்ற பாடல்கள் கூறும் கருத்து உண்மை என நம்பினால் இணை கற்பித்தல் எனும் மாபாதக பாவத்தைச் சம்பாதித்தவர்களாக ஆவோம். அப்பாவம் இறைவனால் மன்னிக்கவும் படாது. அப்பாவச் சுமையுடன் சுவனத்தின் வாடையையும் நுகர முடியாது என்பதைச் சிந்திக்கும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

—————————————————————————————————————————————————————————————————————

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

பகல் நேர தொழுகை கால்நடைகளா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

ஒற்றைப்படையில் ருகூவு, ஸஜ்தா தஸ்பீஹ்கள்?

கமர்ஷியல் பத்திரிக்கைகளை மக்களி டையே விளம்பரப்படுத்த, பக்கத்திற்குப் பக்கம் பரபரப்பு என்று குறிப்பிடுவார்கள்.

அந்த பாணியில் ஹிதாயா நூலை விளம்பரப்படுத்துவதாக இருந்தால் பக்கத்திற்கு பக்கம் பச்சைப் பொய்கள் என்று கூறலாம். சாதாரணமான பொய்கள் அல்ல, நரகைப் பரிசளிக்கும் நபி மீதான பொய்கள் நிறையவே ஹிதாயாவில் உள்ளன. அதுவும் பக்கத்திற்குப் பக்கம் உள்ளது எனலாம்.

கடந்த இதழில், ஒரு முஃமின் ஸஜ்தா செய்யும் போது அனைத்து உறுப்புக்களும் ஸஜ்தா செய்கின்றன என நபி மீது பொய்யுரைக்கப்பட்டிருப்பதை வாசித்தோம் அல்லவா? அதை வாசித்ததன் மூச்சை முழுமையாக வெளியிடும் முன் – அதற்கு இரண்டு வரிகளில் இன்னுமொரு பொய்யை நபி மீது அள்ளி வீசுகிறார்.

الهداية شرح البداية – (1 / 50)

 ويستحب أن يزيد على الثلاث في الركوع والسجود بعد أن يختم بالوتر لأنه عليه الصلاة والسلام كان يختم بالوتر

ருகூவு, ஸஜ்தாவில் (தஸ்பீஹ்களை) மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்துவது விரும்பத்தக்கதாகும். அப்போது அவற்றை ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஒற்றைப்படையான இலக்கத்தில் முடிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 50

ருகூவு, ஸஜ்தாவில் செய்யும் தஸ்பீஹ்களை மூன்று தடவைக்கு மேல் அதிகமாகச் செய்வதாக இருந்தால் ஒற்றைப்படையான இலக்கத்தில் தான் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு நபிகள் நாயகம் செய்துள்ளதாக ஹதீஸ் உள்ளது என்றும் நபி மீது பச்சைப் பொய்யைக் கூறுகிறார்.

எங்கிருந்து இந்தச் செய்தியை எடுத்தார்? இதற்கு ஆதாரமாக அமைந்த ஹதீஸ் நூல் எது? மத்ஹபினரே பதில் சொல்லுங்கள்.

பகல் நேர தொழுகை கால்நடைகளா?

கிராஅத் (ஓதுதல்) சம்பந்தமான பிரிவு என்று தலைப்பிட்டு விட்டு அதில், லுஹர், அஸர் நேர தொழுகைகளில் இமாம் சப்தமின்றி மௌனமாக கிராஅத் – ஓத வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஆதாரமாக நபிகள் நாயகம் கூறியதாகப் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்.

الهداية شرح البداية – (1 / 53)

لقوله عليه الصلاة والسلام صلاة النهار عجماء

பகல் நேர தொழுகையாகிறது கால்நடைகளாகும். (அதாவது கால்நடை பேசாது  – மௌனம் காப்பதை போன்று கிராஅத் சப்தமாக ஓதப்படாது)

இந்தச் செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

மேலும் இமாம் நவவீ அவர்கள் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு இது அடிப்படை ஆதாரமில்லாத தவறான செய்தி என்று விமர்சித்துள்ளார்.

المجموع شرح المهذب – (3 / 389)

وقوله صلاة النهار عجماء ,,,وهذا الحديث الذى ذكره باطل غريب لا أصل له.

அல்மஜ்மூஉ, பாகம் 3, பக்கம் 389

மேலும் தாரகுத்னீ மற்றும் பிற அறிஞர்கள் இந்தச் செய்தி நபிகளாரின் கூற்றல்ல, மாறாக சில மார்க்க அறிஞர்களின் கூற்றே என்று கூறியுள்ளதாகவும் இமாம் நவவீ கூறுகிறார்.

المجموع شرح المهذب – (3 / 46)

 (صلاة النهار عجماء) قلنا قال الدارقطني وغيره من الحفاظ هذا ليس من كلام النبي صلى الله عليه وسلم يرو عنه وانما هو قول بعض الفقهاء

அல்மஜ்மூஉ, பாகம் 4, பக்கம்  46

மத்ஹபு அறிஞர்களே இது நபி மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இனம் காட்டும் அளவுக்கு ஹிதாயாவின் வாய்மையின் இலட்சணம் இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த லட்சணத்தில் இந்த ஹிதாயா நூலை தான் அரபி மத்ரஸாக்களில் ஆலிம்களுக்கு (?) பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பாட போதனைகளாக படித்தால் நபி மீது பொய்யுரைப்பதில் புடம் போட்ட தங்கங்களாக வருவார்கள் என்பதில் என்ன சந்தேகம்? அது தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தக் கூடாது?

ஹிதாயாவில் இமாம் அபூஹனிஃபா அவர்களின் பெயரால் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

الهداية شرح البداية – (1 / 67)

قال أبو حنيفة رحمه الله إن صلى ثمان ركعات بتسليمة جاز وتكره الزيادة على ذلك ,,,ودليل الكراهة أنه عليه الصلاة والسلام لم يزد على ذلك

எட்டு ரக்அத்களை ஒரு சலாமில் தொழுதால் அது கூடும். ஆனால் அதை விட அதிகப்படுத்துவது வெறுப்பிற்குரியதாகும் என்று அபூஹனிபா கூறுகிறார். நபிகள் நாயகம் இதை விட அதிகப்படுத்தியதில்லை என்பதுவே அவ்வெறுப்பிற்கான காரணமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம்  67

அதிகபட்சமாக ஒரு சலாமில் எட்டு ரக்அத்களே தொழ இயலும் என்றும் அதற்கு மேல் அதிகமாக தொழுவது வெறுக்கத்தக்கது என்றும் அபூஹனிபா கூறியதாகக் கூறுகிறார்.

இங்கே நாம் கேள்விக்குள்ளாக்குவது அபூஹனிபா இப்படிச் சொன்னாரா? இல்லையா? அது சரியா? தவறா? என்பதை அல்ல. அபூஹனிபா இவ்வாறு சொன்னதை முட்டுக் கொடுக்க நபி மீது இட்டுக்கட்டிய குட்டு வெளிப்பட்டதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்துவது சரியல்ல என்று அபூஹனிபா சொன்னதை நிறுவ நபிகளாரை ஏன் வம்பிழுக்க வேண்டும்? நபிகள் நாயகம் இவ்வாறு தொழவில்லை என்று நபி மீது ஏன் துணிந்து பொய் சொல்ல வேண்டும்?

இப்படி நாம் விமர்சிக்கக் காரணம் உண்டு.

நபிகளார் ஒரு சலாமில் எட்டு ரக்அத்களை விட அதிகப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?’’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

அறிவிப்பவர்: சஅத் பின் ஹிஷாம் (ரஹ்)

நூல்: முஸ்லிம் 1357

இந்தச் செய்தி நபிகளார் ஒரு சலாமில் ஒன்பது ரக்அத்கள் தொழுதுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்க இதை வெறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டதோடு நபிகள் நாயகம் இவ்வாறு செய்யவில்லை என்று அறிவிப்பது நூலாசிரியரின் அலட்சியத்தை அப்பட்டமாக அறியத்தருகின்றது.

பெண்ணே! செல் பின்னே!

இமாமத் பற்றி அலசும் பாடத்தில் பெண்ணை இமாமாக முன்னிறுத்த கூடாது என்றுரைக்கிறார். அதற்கு அவர் நபியின் பெயரில் குறிப்பிடும் செய்தி அபத்தமானது.

الهداية شرح البداية – (1 / 56)

 أما المرأة فلقوله عليه الصلاة والسلام أخروهن من حيث أخرهن الله فلا يجوز تقديمها

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியுள்ளவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளதால் பெண்களை (இமாமாக) முன்னிறுத்துவது கூடாது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 56

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது என்ற கருத்தில் நாம் உடன்படுகிறோம். அதற்கு வேறு சில நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன.

தொழுகை வரிசை முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கும் போது ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளதால் பெண் இமாமத் செய்வது இதற்கு முரணாகிறது என்பது போன்ற பல ஆதாரங்களால் நாமும் அதைக் கூடாது என்றே கூறுகிறோம்.

ஆனால் ஹிதாயா நூலாசிரியரோ புதிதாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ் அவர்களை (பெண்களை) அப்புறப்படுத்தியவாறு நீங்களும் அப்பெண்களை அப்புறப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் சொன்னதாகப் பதிவு செய்து தம் கருத்திற்கு வலு சேர்க்கின்றார்.

ஆனால் இதை நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீசும் இல்லை. இவ்வாறு கூறுவது நபிகளாரின் மேல் கூறும் வடிகட்டிய பொய்யாகும்.

மத்ஹபினர்களுக்குத் துணிவிருந்தால் – தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக கருதுவதில் உண்மையிருந்தால் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை மக்களிடம் சமர்ப்பிக்கட்டும்.

ஸஜ்தா திலாவத்

ஸஜ்தா திலாவத் பற்றிய பாடத்தில் குர்ஆனில் மொத்தம் 14 இடங்களில் இறை வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்றும் அவ்விடங்கள் எவையெவை என்பதையும் விளக்குகிறார்.

அதை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

الهداية شرح البداية – (1 / 78)

والسجدة واجبة في هذه المواضع على التالي والسامع سواء قصد سماع القرآن أو لم يقصد لقوله عليه الصلاة والسلام السجدة على من سمعها وعلى من تلاها وهي كلمة إيجاب

இவ்விடங்களில் சஜ்தா திலாவத் செய்வது ஓதுபவர், செவியேற்பவர் இருவர் மீதும் அவசியமானதாகும். அவர் குர்ஆனை செவியேற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியே. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியேற்பவர் – ஓதுபவர் இருவர் மீதும் ஸஜ்தா உண்டு என கூறியுள்ளார்கள். இது கட்டாயம் எனும் கருத்தை தரும் வார்த்தையாகும்.

ஸஜ்தா வசனங்கள் மொத்தம் 14 என்பதற்கு ஆதாரமில்லை என்பது தனி விஷயம்.

ஸஜ்தா வசனங்களைக் கேட்பவர், ஓதுபவர் என இருவரும் சஜ்தா செய்வது கட்டாயம்; இவ்வாறு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள் என்று புழுகியுள்ளார்.

இல்லாத நபிமொழியை எப்படி குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

இவர் குறிப்பிட்ட வார்த்தையை நபிகள் நாயகம் மொழிந்தார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை நிலைநாட்டுவார்களா?

நபிகள் நாயகம் கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் பதிவாகாத நபிமொழிகள் (?) இவருக்கு மட்டும் எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ? வாய் திறப்பார்களா வக்காலத்து வாங்குவோர்?

—————————————————————————————————————————————————————————————————————

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம்            தொடர் – 6

அந்நியப் பெண்ணுடன்  நபியவர்கள் தனித்திருந்தார்களா?

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

திருக்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் குறித்த கோவை விவாதத்தில் உம்மு ஹராம் (ரலி) என்ற அந்நியப் பெண்ணுடன் நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் தனித்திருந்ததாகவும், அந்தப் பெண் நபிகளாருக்குப் பேன் பார்த்து விட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுக்கதை குறித்து விவாதிக்கப்பட்டது.

முதலில் அந்தப் பொய்ச்செய்தி குறித்து காண்போம். புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தப் பொய்ச் செய்தி பின்வருமாறு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி (7001)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேன் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3535)

நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3536)

மேற்கண்ட செய்தியில் உம்மு ஹராம் என்ற பெண்மணியின் வீட்டிற்கு நபிகளார் தனிமையில் சென்றதாகவும், அங்கு அந்தப் பெண்மணி நபிகளாருக்குப் பேன் பார்த்து விட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதை எப்படி ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள முடியும்? இன்னும் ஒரு படி மேலே போய் தெளிவாகச் சொல்வதென்றால் இந்த ஹதீஸிற்கு புகாரியின் விளக்கவுரையாக இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ள   ஃபத்ஹுல் பாரி என்ற நூலில், “உம்மு ஹராம் என்ற அந்நியப் பெண்ணுடன் நபிகளார் தனித்திருந்தது குறித்தோ, அவர்களது மடியில் தலை வைத்தது பற்றியோ, அவர்கள் நபிகளாருக்குப் பேன் பார்த்துவிட்டது பற்றியோ சொல்லப்படும் இந்தச் செய்தியை எவ்விதத்திலும் சரிகாண இயலாது.மாறாக, நபிகளாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இது என்று நாம் எடுத்துக் கொள்வது தான் இதற்கான சரியான விளக்கம்’’ என்று கூறியுள்ள செய்தியையும் நாம் சுட்டிக் காட்டி கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினோம்.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற அன்னியப் பெண்ணிடம் அடிக்கடி வந்து செல்லும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். உம்மு ஹராம் நபியவர்களுக்குப் பேன் பார்த்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமின் மடியில் தூங்கி விட்டார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரு ஆண் ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் இது போன்று படுத்து உறங்குபவனாகவும், அடிக்கடி அங்கு சென்று வருபவனாகவும் இருந்தால் அவன் ஒழுக்கங்கெட்டவன் என்று மக்கள் கூறுவார்கள். சாதாரண மனிதன் இதைச் செய்தாலும் அதை யாரும் அங்கீகரிக்காத போது நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது; அப்படியானால் இந்தக் கட்டுக்கதையை ஹதீஸ் என்று சொல்லலாமா?

மகத்தான குணம் கொண்ட மாநபி

நபிகள் நாயகம் (ஸல்) மகத்தான குணம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் அவர்களைச் சிலாகித்துச் சொல்லிக் காட்டுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்ணுடன் தோலும் தோலும் உரசும் நிலையில் இருந்தார்கள் என்று நம்பினால் நபி (ஸல்) அவர்கள் மோசமான குணத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டிய நிலைவரும். நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)

அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது படும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால் குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (24:30)

எந்த அந்நியப் பெண்ணும் தன்னைத் தொட்டுவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். ஆண்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து பைஅத் (உறுதிப் பிரமாணம்) செய்தார்கள். பெண்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் பைஅத் செய்ய வந்த போது அவர்களைத் தொடாமல் பேச்சின் மூலமாக பைஅத் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம், அல்லாஹ்வுக்காக எதையும் இணை வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி வாங்குங்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (7214)

இவ்வளவு பேணுதலாக நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் முறையின்றி உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் சென்று வந்திருக்க முடியாது. இந்த ஹதீஸ் முற்றிலும் நபி (ஸல்) அவர்களின் அழகிய குணத்திற்கு மாற்றமாக உள்ளது.

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் கணவர் உட்பட யாரும் இல்லாத போது நபி (ஸல்) அவர்கள் உம்முஹராமின் வீட்டில் படுத்து உறங்கினார்கள் என்று நம்புவது இஸ்லாத்தை விட்டும் நம்மை வெளியேற்றிவிடும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்த உத்தம நபி ஒரு போதும் உம்மு ஹாரமுடன் தனித்து இருந்திருக்க மாட்டார்கள்.

அன்னியப் பெண்களிடம் வந்து செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த விஷயத்தில் சமுதாயத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் இந்த மானக்கேடான காரியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே செய்தார்கள் என்று ஒரு முஸ்லிம் நம்பலாமா? எனக்கேள்வி எழுப்பினோம்.

நபிகளாரை இழிவுபடுத்திய கப்ரு வணங்கிகள்

மேற்கண்ட செய்தியை நாம் சொல்லிக் காட்டியவுடன் நபிகளார் அந்நியப் பெண் மடியில் படுத்தார்கள் என்று சொல்வது அவதூறு; இப்படித் தான் ஹதீஸ்களை ஆபாசமாக நாம் சித்தரிப்பதாகப் பொய்யை அள்ளிவிட்டார்கள்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் மடியில் நபிகளார் படுத்ததாக நீங்கள் நம்பக்கூடிய, நீங்கள் பெரிதும் புகழ்ந்து போற்றக்கூடிய, உங்களது முக்கிய இமாம்களில் ஒருவரான அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் தானே கூறியுள்ளார்கள். அப்படியானால் அவரைப் பொய்யர் என்றும், இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர் என்றும், நபிகளாரை இழிவுபடுத்திய காஃபிர் என்றும் சொல்வீர்களா என்று கேள்வி எழுப்பினோம். நீண்ட நேரமாக வாய்திறக்காமல் மௌனம் காத்த கப்ரு முட்டி உலமாக்கள் கடைசியாக இது குறித்து ஒருபடுபயங்கரமான(?) விளக்கத்தை அளித்தார்கள்.

நபிகளாரை இழிவுபடுத்தினால் அவர் முஸ்லிமாம்

அதாவது அந்நியப் பெண்ணின் மடியில் நபிகளார் தலைவைத்துப் படுத்ததாக அவர்கள் மதிக்கக்கூடிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சொல்வது உண்மைதானாம்; அந்தச் செய்தியை இமாம் அவர்கள் நம்புகின்றார்களாம்; ஆனால் அவரை காஃபிர் என்றோ, நபிகளாரை இழிவுபடுத்தி விட்டார் என்றோ சொல்ல மாட்டார்களாம்;  காரணம் என்னவென்றால், அவர் இந்த ஹதீஸை மறுக்கவில்லையாம்; அது உண்மை என்று மனப்பூர்வமாக நம்பிச் சொல்கின்றாராம்; அதனால் அவர் முஸ்லிமாம்; நாம் இதைப் பொய் என்று சொல்வதால் நாம் காஃபிராகி விட்டோமாம் என்று உலகமகா உளறலை வெளிப்படுத்தினர் கப்ரு வணங்கி உலமாக்கள்.

இதுபோன்ற ஒரு மானக்கேடான செயலை நபிகளார் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவதுதானே சரி; அப்படி நம்புவதுதான் இறைநம்பிக்கைக்கு அழகு.

அவ்வாறு நம்புபவர் காஃபிர்; நபிகளார் மானக்கேடான செயலைச் செய்துள்ளார்கள் என்று நம்பி அதை உண்மை என்று சொல்பவர் முஸ்லிமா என்று நாம் எழுப்பிய கேள்விக்கு கடைசி வரைக்கும் கப்ரு வணங்கி உலமாக்கள் வாய்திறக்கவே இல்லை.

பொய்யான விளக்கம் கொடுத்து மாட்டிக் கொண்ட கப்ரு வணங்கிகள்

அதுமட்டுமல்லாமல் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் பால்குடி செவிலித் தாயார் என்று பொய்யான விளக்கத்தை இவர்களாக இட்டுக்கட்டிச் சொல்லி மாட்டிக் கொண்டனர்.

உம்மு ஹராம் அவர்கள் நபிகளாரின் செவிலித்தாயாக இருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுங்கள் என்று கேள்வி எழுப்பினோம்; நபிகளார் இறந்து பல நூறு வருடங்களுக்குப் பின்னதாக எழுதப்பட்டுள்ள சில நூல்களில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அடித்துவிடப்பட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் சின்னமாகவும் இருக்கலாம்; மஹரமான உறவு அல்லாத நபராகவும் இருக்கலாம்; செவிலித்தாயாகவும் இருக்கலாம்; மாமியாகவும் இருக்கலாம் என்று அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆதாரமில்லாத பொய்யான செய்தியைத்தான் தங்களது பொய் வாதத்திற்கு ஆதாரமாக காட்ட முடிந்ததே தவிர உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் செவிலித்தாய் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் கடைசி வரைக்கும் அவர்கள் தரவில்லை. இதிலிருந்தே அவர்கள் சொன்னது தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது நிரூபணமானது.

இந்த கட்டுக்கதையை உண்மையென்று சொல்லி கடைசி வரைக்கும் அண்ணலாரின் மகத்தான குணத்தை  களங்கப்படுத்துவதிலேயே தான் இந்தக் கூட்டம் குறியாக இருந்தது.

உண்மையிலேயே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் செவிலித்தாயாக இருந்திருந்தால் புகாரியில் வரும் இந்தச் செய்திக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அவர்கள் அந்தப் பதிலையே சொல்லியிருப்பார்கள். ஆனால் அவரோ உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அண்ணலாருக்கு அந்நியப்பெண் தான்; அதனால் தான் அவர்களது மடியில் தலைவைத்துப் படுத்ததாக வரும் இந்தச் செய்திக்கு எவ்வித விளக்கம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது; மாறாக அது அண்ணலாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்று விளக்கமளித்துள்ளாரே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு கப்ரு வணங்கிகள் கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

அடுத்ததாக தாடி வைத்த அந்நிய ஆணுக்கு அந்நியப் பெண்ணை பால் புகட்டச் சொல்லி நபிகளார் கட்டளையிட்டதாக வரும் கட்டுக்கதை ஹதீஸ் கிடையாது என்பது குறித்த வாதங்களை எடுத்து வைத்தோம். அந்தச் செய்தியை நியாயப்படுத்த கப்ரு வணங்கிகள் எப்படியெல்லாம் உளறினார்கள் என்ற செய்தியை அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————————————————————

மாநபி வழியில் மழைத் தொழுகை

அப்துந் நாசிர்

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் மழைப் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்கள்.  ஒரு மிம்பரை (ஏற்பாடு செய்யுமாறு) கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள்  அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று கூறி அல்லாஹ்வைப் பெருமைப் படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழிய வேண்டும் ஆரம்ப காலத்தை விட்டும் மழை தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள்  முறையிட்டீர்கள்.  நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான்.  உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள்.

பின்னர்  பின்வருமாறு கூறினார்கள்.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَلِكِ يَوْمِ الدِّينِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.

பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

அல்லாஹ் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. அல்லாஹ்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள்  நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள்.  பிறகு அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் அல்லாஹ்வின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் (992)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெறப்படும் மழைத் தொழுகை முறைகள்:

பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத் துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வரவேண்டும்.

திடலில் தொழ வேண்டும்.

இமாமிற்கு மிம்பர் மேடை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.

இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று  இறைவனைப் பெருமைப்படுத்தி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

பிறகு இமாம் மக்களை நோக்கி ‘‘மக்களே நமதூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் இந்த மழைத் தொழுகையை ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு மழை பொழிய வேண்டிய காலத்தில் மழை பொழியாமல் தாமதமாகிவிட்டது.  அல்லாஹ் நாம் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அவன் நிறைவேற்றுவான் என்றும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான் என்று கூறி பின்னர்

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

என்று மக்களை நோக்கி இமாம் கூறி பிறகு புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.

இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி கைகள் உயர்ந்து இருக்கும் நிலையிலேயே மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு மிம்பரிலிருந்து இறங்கி பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

இவற்றுக்கான ஏனைய  ஆதாரங்கள் வருமாறு:

புறங்கைகளை மேல்நோக்கி வைத்து பிரார்த்தனை செய்தல்

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1632

நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்திக்கும் போது தம்முடைய முன்கைகளின் வெளிப்பகுதியை தம்முடைய முகத்தை நோக்கியும் உள்ளங்கைகளை பூமியை நோக்கியும் ஆக்குவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் (12261)

நான் நபி (ஸல்) அவர்களின் இரு அக்குள் பகுதியின் வெண்மையைப் பார்க்கும் அளவிற்கு தமது இருகைகளையும் நீட்டி உள்ளங்கைகளை பூமியை நோக்கி வைத்து மழைவேண்டிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் (1173)

இமாமுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் மாற்றிப் போடுதல்

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்கள்: புகாரீ 1012, முஸ்லிம் 1489

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 1024

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் துஆவை நீட்டினார்கள். வேண்டுதலை அதிகப்படுத்தினார்கள். பிறகு கிப்லாவை நோக்கி திரும்பி தம்முடைய மேலாடையை மாற்றிப் போட்டார்கள். அதன்  வெளிப்பகுதியை உள்பகுதியாக புரட்டினார்கள். நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் (தங்களுடைய மேலாடையை) மாற்றினார்கள்.

நூல்: அஹ்மத் (16465)

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் புரட்டிப் போட்டதாக இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து இமாம் மேலாடையை மாற்றிப் போடும் போது மக்களும் தங்களது மேலாடையை மாற்றிப் போட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் பெண்கள் இவ்வாறு மேலாடையை மாற்றிப் போட வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.

பெண்கள் தங்களின்  முகம், முன்கைக்கும் சற்றும் கூடுதலான கைப்பகுதி, கால்பாதம் ஆகியவற்றைத் தவிர பிற பாகங்களை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவற்கு அனுமதியில்லை. இதனை நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே மழைத் தொழுகை என்பது ஆண்களும் பெண்களும் கூட்டாக நிறைவேற்றுகின்ற தொழுகையாக இருப்பதினால் பெண்கள் தங்களது மேலாடையை மாற்றிப் போட வேண்டியதில்லை என்பதே சரியான கருத்தாகும்.

பெருநாள் தொழுகையைப் போன்று தொழவைத்தல்

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள்.

பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160

மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடியசெழிப்பானஉயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 988

اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1013

—————————————————————————————————————————————————————————————————————

ஜும்ஆ உரையில்  மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

அப்துந் நாசிர்

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1015)

இதே சம்பவம் பின்வரும் ஹதீஸில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடைக்கு எதிர்த் திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிக்குள்) வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான்’’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

நூல்: புகாரி (1013)

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை ஆற்றிக்கொண்டிருக்கும் போது ஒரு கிராமவாசி கோரிக்கை வைத்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையின் இடையிலேயே மழைக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலிருந்து மழைப் பஞ்சம் ஏற்படும் கால கட்டங்களில் ஜும்ஆவின் முதல் உரையிலோ அல்லது இரண்டாவது உரையிலோ ஏதாவது ஒரு பகுதியில் மழைக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலலாம்.

இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தல்

ஜும்ஆவில் உரையாற்றும் இமாம் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் போது மக்களும் தங்களுடைய கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு ஜுமுஆ நாளில் கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியினால்) கால் நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காக தமது கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து தம் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியேறவில்லை. எங்களுக்கு மழைபெய்தது. மறு ஜுமுஆ வரும் வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டுவிட்டன என்று கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1029)

மழைத் தொழுகையில் புறங்கைகள் வானத்தை நோக்கியும் உள்ளங்கைகள் பூமியை நோக்கியும் இருக்குமாறு பிரார்த்திப்பதைப் போன்றே ஜும்ஆவில் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போதும் செய்ய வெண்டும்.  இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

‘‘அல்லாஹ்வின் தூதரே! செல்வம் அழிந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரே ! எங்களுக்கு மழைப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எங்களுக்காக (இறைவனிடம்) மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள்’’ என மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினர். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளிலே  சொற்பழிவு மேடையின் மீது நின்றவர்களாக மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சிற்கு நேராக கைகளை விரித்து தமது உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு வைத்து ( பிரார்த்தித்தார்கள் என அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாத் அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் (13894)

ஜும்ஆவின் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்.

ஜும்ஆவில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் என்பது நீண்ட நேரம் செய்ய வேண்டிய ஒன்றல்ல. ‘‘அல்லாஹும் மஸ்கினா” என்ற வார்த்தையை மூன்று தடவை இமாம் புறங்கைகள் உயர்த்திய நிலையில் கூற வேண்டும். மக்களும் அவ்வாறே உரத்த சப்தமில்லாமல் இதே துஆவை மூன்று தடவை கூறவேண்டும். அவ்வளவுதான். நபியவர்கள் இவ்வாறுதான் செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி,

اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

(அல்லாஹும் மஸ்கினா, அல்லாஹும் மஸ்கினா, அல்லாஹும் மஸ்கினா)

இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று  (மூன்று தடவை) பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1013)

அது போன்று ‘‘அல்லாஹும்ம அகிஸ்னா” என்று மூன்று தடவை பிராத்தித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி,

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

(அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா)

இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1014)

மேற்கண்ட நபிமொழிகளின் அடிப்படையில் ஜும்ஆவிலும் மழைவேண்டிப் பிரார்த்தனை செய்யலாம். மழைத் தொழுகையில் செய்வதைப் போன்று மேலாடையை மாற்றிப் போட வேண்டியதில்லை. ஏனெனில் நபியவர்கள் ஜும்ஆவில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது அவ்வாறு செய்ததாக ஆதாரம் இல்லை.

மழை பாதிப்பிலிருந்து விடுபடப் பிரார்த்தித்தல்

மேலும் அதிக மழை பொழிந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும் இதே போன்று ஜும்ஆவில் மழை நிற்பதற்காகப் பிரார்த்தனை செய்யலாம்.

மழை நிற்பதற்காக நபியவர்கள் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வல்லிராபி வல் அவ்தியத்தி வமனாபிதிஸ் ஸஜரி

இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1013)

—————————————————————————————————————————————————————————————————————

இணை கற்பித்தல்          தொடர் – 45

படைப்பினங்களில் மோசமானவர்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

கப்ருகளைக் கட்டி அதை வணங்கக்கூடாது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, நபியவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அபூவாகித் அல்லைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க் கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.) நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் தாது அன்வாத்என்பது பெயராகும். இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாளைத் தொங்க விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.) எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு தாது அன்வாத்என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு தாது அன்வாத்என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!)’’ எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.

‘‘அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!என்று கேட்டனர்’’ (7:138)

என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர், ‘‘உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2180

மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது (முன்பிருந்தவர்கள் என்றால்) யூதர் களையும், கிறித்தவர்களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “வேறு யாரை?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

நூல்கள்: புகாரி 7320, முஸ்லிம் 2669

நாம் உயிருடன் இருக்கும் போதே மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் நாம் இறந்த பிறகு நம்முடைய கபுரையும் வணக்கத் தலமாக ஆக்கிவிடுவார்களோ என்று பயந்துதான் நபியவர்கள் தம்முடைய இறுதி மரண வேளையிலும் இதைப் பற்றி எச்சரித்தார்கள்.

இறை சாபத்தைப் பெற்றுத் தரும் தர்கா வழிபாடு

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கி விட்டார்கள்எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நூல்: புகாரி புகாரி 1390

மேலும் இதை விடக் கடுமையாகவும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களுடன் அல்லாஹ் போர் புரிகிறான்’’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 437

தர்ஹாக்கள் கட்ட கூடாது; விழா எடுக்கக் கூடாது என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களையும் காட்டிய பிறகு இவையெல்லாம் நபிமார்களுக்கு உரிய சட்டங்கள்; வலிமார்கள், நல்லடியார்கள். இறைநேசர்களுக்குப் பொருந்தாது; எனவே அவர்களுக்கு தர்ஹாக்கள் கட்டலாம்; விழா எடுக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால் இதற்கும் நபியவர்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுடைய கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் கபுர்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்.

நூல்:  முஸ்லிம் 827

மேற்கண்ட செய்தியில், நபிமார்கள் மட்டுமல்ல; நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கபுர்களைக் கட்டி அதை வணங்குமிடமாக – விழா கொண்டாடும் இடமாக ஆக்கக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கின்றது.

நபிமார்கள் அனைவருமே நல்லடியார்கள், இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை; சந்தேகமும் இருக்கக் கூடாது. அத்தகைய இறைநேசர்களுக்கே கப்ரு கட்டக்கூடாது என்றால் இன்றைக்கு வலிமார்கள் அவ்லியாக்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்களுக்குக் கபுர்களைக் கட்டுவதென்பது வரம்பு மீறிய செயலாகத்தான் இருக்க முடியும்.

நாம் அவ்லியாக்கள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றவர்களெல்லாம் இறைநேசர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த உலகத்தில் அவ்லியாக்கள் என்று நினைத்தவர்கள் ஒருவேளை நாளை மறுமையில் பாவிகளாக, ஷைத்தான்களாகக் கூட இருக்கலாம்.

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களையே அல்லாஹ் சபிக்கின்றான் என்றால் முகவரியற்ற இந்த அவ்லியாக்கள் எம்மாத்திரம்? எனவே, சபிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடுகின்ற இடத்திற்கு ஒரு இறைவிசுவாசி செல்லமாட்டான்.

படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் ஒன்றுகூடும் தளமே தர்ஹா

மேலும் நபியவர்கள் தமது வாழ்நாளில் இறுதியாகச் செய்த எச்சரிக்கையும் இது குறித்து தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்கள் யாரெனில், தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்.

நூல்: அஹ்மத் 1599

இறைவனின் படைப்புகளிலேயே மனிதப் படைப்பு தான் சிறந்த ஒரு படைப்பு. அந்த மனிதப் படைப்புகளில் ஃபிர்அவ்ன் என்பவன் ஒரு கொடியவன்; மோசமானவன். ஏனென்றால் அவன் தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆனால் அவனை விட மோசமானவர்கள் தான், ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட வந்த நபிமார்களையே கடவுள்களாக ஆக்கிக் கொண்டவர்கள். இவர்களைப் பற்றித்தான் நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:

உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர், தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத்தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்என்று கூறினார்கள். 

நூல்: புகாரி 427

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 434, 1341, 3873 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தன்மை அப்படியே நம்முடைய சமுதாய மக்களிடத்தில் இருக்கிறதா இல்லையா? இத்தகைய தன்மை பெற்றவர்கள் தான் படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என நபிகளார் எச்சரிக்கின்றார்கள். நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்களே படைப்பினங்களிலேயே மோசமானவர்கள் என்றால் முகவரியற்ற அவ்லியாக்களுக்குப் பின்னால் செல்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வணக்கத்தலமாக்கப்படாத அடக்கத்தலம்

மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இதைப் பற்றி எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல் தன்னுடைய கபுரையும் வணக்கத்தலமாக ஆக்கிவிடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதேஎன்று  அல்லாஹ்வின் தூதர்   (ஸல்) அவர்கள்  பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: அஹ்மத் 7054

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தான் அவர்களது கப்ர் பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றிருந்தால் நமது தர்ஹா பக்தர்கள் அவர்களது கப்ரடியிலும்  உட்கார்ந்து 12 நாட்கள் மௌலீது வைபவம் நடத்தி ஊதுபத்தி,  பழம், தேங்காய் சகிதம் அபிசேகம் செய்திருப்பார்கள். அல்லாஹ் அதை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

தர்ஹா (கப்ர்) கட்டுவது கூடாது

மேலும் நபியவர்கள் கப்ருகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள்.

கப்ரு பூசப்படுவதையும் அதன்மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரலி)

நூல்: முஸ்லிம் 1610

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி)

நூல்: அஹ்மத் 22834

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.  எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1609.

இன்னும் இதுபோன்று தர்ஹா வழிபாடு இணைவைப்பு சம்பந்தமான வரட்டு வாதங்களையும் அதற்குரிய நமது பதில்களையும் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————————————————————

இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி

எம். ஷம்சுல்லுஹா

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன?

“நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’

இதுதான் அதனுடைய பொருளாகும்.

நம்முடைய உயிர்களானாலும், உடைமை களானாலும் எதுவும் நமக்குச் சொந்தமில்லை. அவற்றைத் தந்த அந்த இறைவனுக்கே சொந்தம். இவை நம்மிடத்தில் இரவலாக இருக்கின்றன. அவற்றை அவன் எப்போது வேண்டுமானாலும் பறிக்கலாம். அவற்றைப்  பறிப்பதற்கு  அவன் முழு உரிமை படைத்தவன் என்ற கருத்தை யாரும் இதிலிருந்து எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

நம்மிடமிருந்து யார் பிரிந்தாலும் அல்லது எது பறி போனாலும் அந்தப் பாதிப்பை தாங்கக் கூடிய பக்குவத்தை இந்தப் பிரார்த்தனை உளவியல் ரீதியாக நமக்குத் தருகின்றது.

நாம் வெளிநாட்டில் இருக்கும் போது நமது அரபி விசாவை ரத்து செய்து எப்போது வேண்டுமானாலும் நம்மை ஊருக்கு அனுப்புவான் என்று பேசிக் கொள்வோம். அது போல் அவன் அனுப்பி விட்டால் அது நமக்குக் கவலையை ஏற்படுத்தினாலும் அது பெரிய பாதிப்பாக தெரியாது. அதே அடிப்படையில்  இந்த பிரார்த்தனையை அடிக்கடி சொல்கின்ற போது  நாம் எந்த உலகத்திலிருந்து வந்தோமோ அந்த உலகத்திற்குத் திரும்பப் போகின்றோம்  என்ற உணர்வு   ஏற்படுகின்றது. நம்மில் நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டால் நமக்கு பெரிய அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நாம் இறந்து விட்டாலும் நம்முடைய உறவினருக்கு அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

உதாரணத்திற்கு நமக்கு இருப்பது  ஒரே ஓர் ஆண் குழந்தை என்று வைத்துக் கொள்வோம். நாம் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டான் என்றால் இப்போது இது நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இது நம்முடைய இதயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி அதை இயங்க விடாமல் தடுக்கின்ற ஒரு பேரிடியாகும். அந்தக் கட்டத்தில் நாம் சொல்கின்ற இந்தப் பிரார்த்தனை வெறும் மந்திரச் சொல்லாக இல்லாமல் அந்த இடியின் பாரத்தை தாங்கி தடுக்கின்ற, ஏந்திக்  கடத்துகின்ற  இயந்திரக் கம்பியாக மாறி விடுகின்றது.

அண்மையில் ஜெயலலிதா இறந்தவுடன் 470 பேர்கள் இறந்துள்ளார்கள். தற்கொலை இறப்புகளைத் தவிர்த்து மீதி உள்ளவர்கள் இறந்ததற்குக் காரணம் அதிர்ச்சி தான். இந்த அதிர்ச்சித் தகவலைத் தாங்காமல் போனதற்குக் காரணம் இது போன்ற இடி தாங்கியாகத் திகழ்கின்ற  பிரார்த்தனை அவர்களுக்கு இல்லாமல் போனது தான்.

இமயம் போன்று வான் முட்ட உயரே எழுந்த ஒரு மாளிகையில், இடிதாங்கி இல்லாது போனால் இடி விழும் போது அது  அடி வாங்கி நொறுங்கி விடுகின்றது. அதுபோல் இதயம் என்ற மாளிகைக்கு இடிதாங்கியான இந்தப் பிரார்த்தனை இல்லை என்றால் அது இடிந்து நொறுங்கி விடுகின்றது. அப்படித் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் இதயங்கள் அதிர்ச்சியில் நொடிந்து நின்று விடுகின்றது. உடனே அவர்கள்  இறந்தும் விடுகின்றார்கள். இந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய அருள்களில் ஒன்றாக அமைந்து விடுகின்றது. இதைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’ என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:155,156,157

இந்த வசனத்தில் இடம் பெறுகின்ற அருள்கள், மறுமையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும்; இம்மையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும். இறப்புச் செய்தி வருகின்ற போது அதனுடைய அதிர்ச்சியினால் இதயம் நின்று விடாமல் காக்கின்ற வகையில் இது ஓர் இறையருளாக அமைந்து விடுகின்றது.

சில பேர்கள் அதிர்ச்சியில் இறக்க மாட்டார்கள். ஆனால் அது அவர்களிடம் நெஞ்சு வலியை ஏற்படுத்தி விடும்.  இது போன்ற சோதனைகள் ஏற்படாமல் ஒரு தடுப்பு அரணாக இந்தப் பிரார்த்தனை அமைந்து அருளாக ஆகி விடுகின்றது.

நபித் தோழர்கள் சிறிய, பெரிய அத்தனை சோதனைகளிலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த இந்தப்  பிரார்த்தனையைச் செய்திருக்கின்றார்கள். மார்க்கம் தெரிந்த முஸ்லிம்களும் இந்த வழிமுறையை அப்படியே கடைப்பிடித்து வருகின்றார்கள். இதனால் அவர்களிடம் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகமாக நிகழ்வதில்லை. இந்த  வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த  மாபெரும் அருட்கொடையாகும். இதற்காக முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த அருள்மிகு பிரார்த்தனையில் நபி (ஸல்) அவர்கள் கூடுதலாக ஒரு பிரார்த்தனையை இணைத்துச் சொல்லித் தருகின்றார்கள்.

சோதனை ஏற்படும் போது ஒருவர்

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

‘‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா

(பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக! எனக்கு இதை விட சிறந்ததை பகரமாகத் தருவாயாக!)’’

என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.  

(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, “முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்’ (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 1525

இது நபி (ஸல்) அவர்கள் கூடுதலாகச் சொல்லி தந்த பிரார்த்தனையாகும். இந்தப் பிரார்த்தனை செய்பவருக்குக் கை மேல் பலன் கிடைப்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கை மேல் கிடைக்கும் அந்தப் பலன் ஒருவர் நேரடியாக காணும் விதத்தில் அமைந்திருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் அமைந்திருக்கலாம்.

உறங்கும் போது மரண நினைவு

இது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹ்வே! உனது பெயரால் நான் மரணிக்கின்றேன் (தூங்குகின்றேன்); உனது பெயரால் உயிர் பெறுகின்றேன் (விழிக்கின்றேன்) என்றும், காலையில் விழிக்கின்ற போது…

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

‘உறங்குகின்றேன்’ என்பதற்கு ‘‘அனாமு” என்ற வார்த்தை அரபியில் உள்ளது ஆனால் அதற்குப் பதிலாக நபி (ஸல்) அவர்கள் ‘‘அமூது” நான் மரணிக்கின்றேன் என்ற  வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இரவில் தூங்கி விட்டுக் காலையில் எழுவதற்கு உனக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் பாவங்களிலிருந்து விலகிக் கொள் என்ற எச்சரிக்கையை இந்தப் பிரார்த்தனை மனிதனுக்கு தருகின்ற அதே வேளையில் தூங்கி எழுவதற்குள் உனது உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்ற மரணத்தைப் பற்றிய நினைவூட்டல் இதில் அடங்கியிருக்கின்றது.

மரணத்தை நினைக்க மையவாடி சந்திப்பு

அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை.  அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின்  அடக்கத்தலத்தை சந்தித்த பின்னர், ‘நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள். அது மறுமையை (மரணத்தை) நினைவூட்டுகின்றதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 1622

அவ்வாறு சந்திக்கும் போது…

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் முமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹி(க்)கூன்

இதன் பொருள்:

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும்.  அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே!

ஆதாரம்: முஸ்லிம் 367

வெளியிலிருந்து யார் என்ன பேசினாலும் இறந்தவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நம்பிக்கையாகும். அப்படியிருந்தும் இஸ்லாம் இந்தப் பிரார்த்தனையை செய்யச் சொல்கின்றது என்றால் இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

  1. உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களுக்காக அல்லாஹ்விடம் செய்கின்ற பிரார்த்தனையாகும்.
  2. உயிருடன் இருப்பவர்கள் தாங்களும் மரணமடைந்து அவர்களுடன் போய் சேரக் கூடியவர்கள் என்று உணரச் செய்வதாகும்.

‘நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்கள்’ என்ற வார்த்தைகள் உளவியல் ரீதியாகத் தாங்களும் மரணிப்பவர்கள் என்ற ஒரு பயிற்சியை அளிக்கின்றது. இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம்  மரணச் செய்தியைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்றது. உண்மையில், இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

—————————————————————————————————————————————————————————————————————

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

எம்.ஐ. சுலைமான்

تاريخ بغداد – (6 / 328)

أخبرنا على بن محمد بن علي الأيادي أخبرنا احمد بن يوسف بن خلاد العطار حدثنا الحارث بن محمد حدثنا إسحاق بن بشر الكاهلى حدثنا أبو معشر المدائني عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه و سلم الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده

ஹஜ்ருல் அஸ்வத் பூமியில் அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு அடியார்களிடம் முஸாஃபஹா (கை குலுக்கல்) செய்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328

மக்காவில் உள்ள கஅபத்துல்லாஹ்வில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத்தை யார் முத்தமிடுவாரோ அவர் அல்லாஹ்விடம் கை குலுக்கியவரைப் போலாவார் என்று இந்தச் செய்தி குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சிலர் இதற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது அல்ல. இந்தச் செய்தியைப் பதிவு செய்த கதீப் பக்தாதி அவர்கள் இந்தச் செய்தி பொய்யானது என்பதை அந்த இடத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

والكاهلى من أهل الكوفة يروى عن مالك بن أنس وأبي معشر نجيح وكامل أبي العلاء وغيرهم من الرفعاء أحاديث منكرة

இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவர் கூஃபா பகுதியைச் சார்ந்தவர், மாலிக் பின் அனஸ், அபூமிஃஷர், காமில் அபில் அலா மற்றும் இவர்கள் அல்லாதவர்கள் வழியாகவும் நபிகளார் கூறியதாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தாரீக் பக்தாத், பாகம் 6, பக்கம் 328

قال أبو يعقوب كذاب

அபூ யஃகூப் என்பவர் இவர் பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328

قال أبو حفص عمر بن علي وإسحاق بن بشر الكاهلى متروك الحديث

இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டிய (பொய்யர்) ஆவார் என்று அபூஹஃப்ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வருமாறு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع – (1 / 342)

قال الشيخ وإسحاق بن بشر الكاهلي قد روى غير هذه الأحاديث وهو في عداد من يضع الحديث

இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்களில் உள்ளவர்.

நூல்: காமில், பாகம்: 1, பக்கம்: 342

இதைப்போன்று கஅபத்துல்லாஹ்வில் முத்தமிடும் இன்னொரு இடமான ருக்குனுல் யமானி என்ற இடத்தில் முத்தமிட்டால் அல்லாஹ்விடம் கை குலுக்குதல் போன்றாகும் என்றும் செய்தியும் உள்ளது.

صحيح ابن خزيمة -موافق للمطبوع – (4 / 221)

2737 – ثنا الحسن الزعفراني ثنا سعيد بن سليمان ثنا عبد الله بن المؤمل سمعت عطاء يحدث عن عبد الله بن عمرو : أن رسول الله صلى الله عليه و سلم قال : يأتي الركن يوم القيامة أعظم من أبي قبيس له لسان و شفتان يتكلم عن من استلمه بالنية و هو يمين الله التي يصافح بها خلقه

மறுமை நாளில் ருக்குனுல் யமானி என்பது அபூ குபைஷ் மலையை விட பிரமாண்டமானதாக வரும். அதற்கு ஒரு நாவு, இரண்டு உதடுகள் இருக்கும். அதை முத்தமிட்டவர்களைப் பற்றி அது பேசும். அது அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு அல்லாஹ் படைப்பினங்களை முஸாஃபஹா செய்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல்: இப்னு ஹுஸைமா, பாகம்: 4, பக்: 221

இந்தச் செய்தி தப்ரானீ – கபீர், அவ்ஸத் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்மானது அல்ல. இந்தச் செய்தியில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب ـ محقق – (6 / 42)

وقال ابن أبي خيثمة وغير واحد عن ابن معين ضعيف وقال النسائي ضعيف وقال أبو داود منكر الحديث.

அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர், ஹதீஸ் துறையில் மறுப்பட வேண்டியவர் என்று அபூதாவுத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 42

ஹஜ்ருல் அஸ்வத், ருக்குனுல் யாமனீ ஆகியவை அல்லாஹ் வலது கை என்ற கருத்தில் வரும் அனைத்தும் செய்திகளும் பலவீனமானவையாகும்.

எனினும் ஹஜ்ருல் அஸ்வத், ருக்னுல் யாமனீ ஆகியவற்றை முத்தமிட வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்மான நபிமொழிகள் உள்ளன.

—————————————————————————————————————————————————————————————————————

நல்லறங்களில் நிலைத்திருப்போம்

எம். முஹம்மது சலீம், M.I.Sc. மங்கலம்

நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத் தர வேண்டுமென நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மக்களே! உங்களால் இயன்ற (நற்)செயல்களையே செய்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (5861)

எந்தவொரு நற்காரியத்தையும் தொடர்ந்து செய்யும் போது நன்மைகள் கிடைப்பதோடு, அவை அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்றுத் தருமளவுக்கு உயர்ந்துவிடும். இந்தப் போதனையை வழங்கிய நபிகளார், தாமே அதற்கு முன்மாதிரியாக விளங்கியதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படைத்தவனை மறவாதீர்!

ஏக இறைவனைப் பற்றிய எண்ணம் என்றும் நம்மிடம் பசுமையாக இருக்கும் வன்ணம், பல்வேறு பிரார்த்தனைகள், திக்ருகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அடிக்கடி அல்லாஹ்விடம் ஆதரவு தேடுவதில் நீடித்திருக்க வேண்டும்.

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.  ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5235)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும் போதெல்லாம் இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல்கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’’ என்று அதிகமாகப்  பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (5425)

பெரும்பாடுபட்டு மனனம் செய்த துஆக்கள், பலருக்கும் நாளடைவில் மறந்துவிடுவதற்குக் காரணம், தினமும் சொல்லாமல் இருப்பதே ஆகும். ஆகையால், பிரார்த்தனைகளை ஒருசில நாட்கள் மட்டும் உச்சரிக்காமல், தினந்தோறும் நினைவுகூர வேண்டும். இதுபோன்று, எப்போதாவது தவ்பா தேடிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இல்லாமல் வல்ல நாயனிடம் அதிகமாக கையேந்தி மன்றாட வேண்டும்.

வழிபாடுகளைக் கடைபிடிப்போம்!

நாம் கடமையான வணக்கங்களை சரிவரக் கடைபிடிக்க விட்டால், மறுமையில் குற்றவளியாக நிற்கும் நிலை ஏற்பட்டுவிடும். அதேசமயம், கடமைகளைத் தவறவிடாமல் முறையாக நிறைவேற்றும் போது குற்றமற்ற நிலைக்கு வருவதுடன், அல்லாஹ்வின் பேரன்பும் அருளும் கிடைக்கும்.

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (6502)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர் ‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புஹாரி (1152)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (செலுத்துவதற்குத் தயாராக) தமது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் இருப்பதும் மனித வாழ்வின் நலமான அம்சமேயாகும். அவர் எதிரியின் ஆர்ப்பரிப்பையோ ஆவேசக் குரலையோ செவியுறும் போதெல்லாம், வீரமரணமும் இறப்பும் உள்ள இடங்களைத் தேடி அந்தக் குதிரையில் அமர்ந்து பறப்பார். அல்லது ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும்வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3838)

சில நாட்கள் மட்டும் மார்க்கம் கூறும் எல்லா வகையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு, பின்வரும் நாட்களில் அவற்றை அடியோடு மறந்து விடும் நபர்கள் இருக்கிறார்கள். நாளடைவில், கடமையான தொழுகைகளிலும் அலட்சிய குணம் நுழைந்து விடுகிறது. இதிலிருந்து மீளவும், தப்பிக்கவும் வேண்டுமெனில் வழிபாடுகளில் நிலைத்திருப்பது பற்றிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்போம்! கற்பிப்போம்!

மார்க்கத்தை அறிந்து கொள்வதிலும், அடுத்தவர்களிடம் பரிமாறிக் கொள்வதிலும் அக்கறை செலுத்துவது சாதாரண செயல் அல்ல. வாழ்நாள் முழுவதும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டிய பண்பாகும். இதன் மூலம் நமது மறுமை வெற்றிக்கான வழி எளிதாகும்.

இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்’’ என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், ‘மறக்க வைக்கப்பட்டு விட்டதுஎன்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு மஸ்ஊத்  (ரலி)

நூல்: புஹாரி (5032)

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5231)

தொடர வேண்டிய தர்மங்கள்

நமது பொருளாதாரத்தை இறைவழியில் செலவழிப்பதற்கு நன்மைகள் உண்டு. ஒருமுறை இருமுறை என்று எப்போது செலவழித்தாலும் நன்மை கிடைக்கும் என்றாலும், அதற்கான வாய்ப்புக்களை தவறவிடாமலும், தட்டிக்கழிக்காமலும் தொடர்ந்து வழங்கும்போது அளப்பறிய நன்மைகள் கிடைக்கும்.

இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ – அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்‘’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புஹாரி (1465)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் என்னை விட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்’’ என்று சொல்வேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1888)

சொல்வதெல்லாம் உண்மை

மார்க்கம் கூறும் நற்பண்புகளுள் முக்கிய ஒன்று உண்மை பேசுவதாகும். அத்திப் பூத்தாற்போல அரிதாக அல்லாமல், அதனை வாழ்வில் வழமையாக்கிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் நற்சான்றும் பாராட்டும் கிடைக்கும்.

உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் (5081)

உதவிக்கரம் நீட்டுவோம்!

சமூக சேவையைப் போற்றும் சத்திய கொள்கையில் இருக்கிறோம். நமது ஒட்டுமொத்த ஆயுளில், வெறும் ஓரிரு தருணங்களில் மட்டும் பிறருக்கு உதவிவிட்டு முடங்கி விடக்கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சகமனிதர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5231

அநீதிக்கு எதிராகத் தொடர் பயணம்

மார்க்கம் அனுமதித்த அடிப்படையில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணம் முஃமின்களிடம் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும். வரம்பு மீறுவோரைத் தடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதில் தொடர் முனைப்பு அவசியம். இதைப் புரிந்து கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு தொடர் ஒத்துழைப்பை கொடுப்போமாக!

இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான்.

(திருக்குர்ஆன் 49:9)

நல்லறங்களில் நீடிப்போம்

நம்பிக்கையின் அம்சமாக ஏராளமான நற்காரியங்கள், நற்பண்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனித குலத்தின் நன்மைக்காக வழங்கப்பட்டவை. அவற்றுள் நமக்கு இயன்ற காரியங்களை இறைத்திருப்தியை இலக்காகக் கொண்டு இடைவிடாது செய்தல் வேண்டும்.

விடைபெறும் ஹஜ்ஜின் போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக என்னை உடல்நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்களை விட்டுப் பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?’’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இங்கு இருந்த போதிலும் அல்லாஹ்வின் உவப்பை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்’’ எனக் கூறிவிட்டு, “உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்க வைக்கப்படலாம்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3349)

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ்தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம் நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்திருப்போம் என முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம்’’ என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவுமில்லை. எனவே, (மறுமையின் நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ அருள்வளம் புரிவாயாக!’’ என்று (பாடலிலேயே) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (4100)

மற்றொரு அறிவிப்பில் (புஹாரி 2834), ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம்’’  என்று (பாடியபடி) கூறியதாக உள்ளது.

மறுமையில் மகத்தான வெற்றியை விரும்பும் மக்கள் தங்களது கடமைகளைத் தவறாது கடைப்பிடிப்பதற்கும் மேலாக, தங்களால் முடிந்த சுன்னத்தான உபரியான காரியங்களையும் செய்துவர வேண்டும். அவை கூடுதல் குறைவாக இருப்பினும் அவ்வப்போது சுணக்கம் வந்தாலும் ஒரேயடியாக விட்டுவிடாமல் பக்குவமாகப் பின்பற்றி வருவது மிகவும் நல்லது; படைத்தவனுக்கு விருப்பமானது. இவ்வாறு தூய முறையில் செயல்புரிய வல்ல இறைவன் நமக்கு நல்லுதவி புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 30

கல்விக் கடலின் கலங்கிய பார்வை

புறாக் கவிதை இனிக்கின்றது புனித குர்ஆன் புளிக்கின்றது

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

குர்ஆனை விட இசைப் பாடல்கள்  இதயங்களை ஈர்க்கக் கூடியவை என்பதற்கு கஸ்ஸாலி  ஏழு வகை காரணங்களை கூறுகின்றார்.

அவற்றில் முதல் வகையில் குர்ஆனுடைய அனைத்து வசனங்களும் கேட்பவனுடைய சூழ்நிலைக்கேற்ப அமையாது. ஆனால் கவிதைகள் கேட்பவனின் சூழ்நிலைக்கேற்ப அமையும் என்று தனது வாதத்தை நிறுவியிருந்தார். அந்த வாதத்தின் அபத்தங்களை, அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற விமர்சனத்தில் தக்க ஆதாரங்களுடன் விளக்கியிருந்தோம்.

கஸ்ஸாலியின் இரண்டாவது வாதத்தை இப்போது பார்ப்போம்:

குர்ஆனை அதிகமானோர் மனனம் செய்திருக்கின்றனர். திருக்குர்ஆனின் வசனங்கள்  காதுகளிலும் உள்ளங்களிலும் திரும்ப திரும்ப வந்து விழுந்துக் கொண்டிருக்கின்றன. முதல் தடவை ஒருவன் கேட்கும் போது  உள்ளங்களில் குர்ஆனின் தாக்கம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். இரண்டாவது தடவை கேட்கும் போது அது   பலவீனமடையும். மூன்று தடவை அதன் தாக்கம் அப்படியே விழுந்து தகர்ந்து விடும். கவிதைகளில் அதிகமாக உள்ளம் உருகக் கூடிய ஒருவர் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்று அடிக்கடி அண்மைக் காலமாகத் தொடர்ந்து பாடக்கூடிய ஒரு கவிதையில் தனது  மனதை நிலை நிறுத்த வேண்டும் என்றால் அது அவரால் முடியாது. அதே சமயம் ஒரே கருத்தைத் தரக்கூடிய கவிதையாக இருப்பினும் அதற்குப் பதிலாக வேறொரு கவிதை அமைகின்ற போது அது அவரது உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனினும், முந்தைய கவிதையுடன் ஒப்பிடுகையில், ஒரே கருத்தில் அமைந்திருந்தாலும்,  அந்தக் கவிதை வரிகளும் வார்த்தைகளும் முற்றிலும் புதிதாக இருந்தால்  அது நிச்சயமாக உள்ளத்தைத் தொட்டு உருக வைத்து விடும். உணர்ச்சியைப் பெருக வைத்து விடும். இது கவிதையின் நிலை.

இப்போது குர்ஆனுக்கு  வருவோம். குர்ஆனை ஓதக் கூடிய ஒருவர் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு துஆவின் போதும்  புதுப்புது வார்த்தைகளில் குர்ஆனை ஓத முடியாது. குர்ஆன் இன்னது தான் வரையறுக்கப்பட்டதாகும். இருக்கின்ற அந்த வார்த்தைகளை விட எதையும் ஏற்றிச் சொல்ல முடியாது. கூட்டிச் சொல்ல முடியாது. திருக்குர்ஆன் திரும்ப திரும்ப ஓதப் படக்கூடியதாகும்.

கிராமப் புற அரபிகள் (மதீனாவிற்கு) வந்து குர்ஆன் ஓதுவதைச் செவியுறுவார்கள். அவ்வாறு செவியுறும் போது அவர்கள் அழுவார்கள். அவர்களை நோக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள்,  ‘உங்களைப் போன்று தான் குர்ஆனை செவியுற்று அழுபவர்களாக இருந்தோம். ஆனால் இப்போது எங்கள் இதயங்கள் இறுகி விட்டன. (அதனால் இப்போது எங்களுக்கு அழுகை வருவதில்லை)’  என்று  அபூபக்கர் (ரலி) கூறிய இந்தச் சம்பவம் நாம் கூறக் கூடிய இந்த கருத்தைத் தான் சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வாறு நாம் கூறும் போது, அபூபக்கர் (ரலி) அவர்கள் உள்ளம்  அறிவிலிகளான அந்தக் கிராமத்துப்புறத்து மக்களின் உள்ளங்களை விட மிகவும் இறுகிப் போய்  விட்டது. அந்த அரபிகளின் உள்ளங்களை விடவும் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நேசிப்பதில் அபூபக்கர் (ரலி) வெகு தூரம் விலகி போய் விட்டார்கள் என்று தப்பாக எண்ணி விடாதீர்கள். இருப்பினும் திரும்பத் திரும்ப குர்ஆன் அவர்கள் காதில் விழுவதால் அல்லது அதை ஓதுவதால் அது அவர்களுடைய உள்ளத்தில் ஓர் இறுக்கத்தன்மையை ஏற்படுத்துகின்றது.

இதற்குக் காரணம் ஒரு செய்தியைக் கேட்டு கேட்டு புளித்து போய் விடும் போது அதில் எந்தத் தாக்கமும் இருக்காது. ஒருவன்  இதுவரை செவியுறாத ஒரு வசனத்தைச் செவியுற்றவுடன் அழுவான். இது இயல்பாகும். ஆனால் இருபதாண்டுகளாக  அதே வசனத்தை கேட்டுக் கொண்டு அழுவது என்பதும் திரும்பவும் அதை கேட்டு அழுவது  என்பதும்  வழக்கத்தில் அசாத்தியம் தான்!

ஒரு செய்தி, இன்னொரு செய்திக்கு வித்தியாசமாக இருக்க வேஎண்டுமென்றால் பின்னால் வருகின்ற செய்தி புத்தம் புது செய்தியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது. ஒவ்வொரு புது செய்திக்கும் சுவையுண்டு. ஒவ்வொரு புது வரவுக்கும் ஒரு தாக்கம் ஏற்படும். ஒவ்வொரு பழகிப் போன பழைய செய்தியும் செயல்பாடும் மக்களுக்குப் புளித்து போய் விடும். அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இதன் காரணமாகத் தான் உமர் (ரலி) அவர்கள், மக்கள்  அதிகம் அதிகம் தவாஃப் செய்வதைத் தடுக்க நினைத்தார்கள். மக்கள் இந்த ஆலயத்தில்   திரும்ப திரும்ப தவாஃப் செய்வதை வழக்கமாகக் கொள்ளும் போது அவர்கள் அந்த ஆலயத்தின் கொண்டிருக்கும் மரியாதையை எடுபடச் செய்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று அவர்கள் கூறினார்கள்.

முதன் முதலில் ஹஜ் செய்ய வருபவன் அந்த கஃபத்துல்லாஹ்வைக் கண்டவுடன் கதறி அழுகின்றான். சில கட்டங்களில் அதன் மீது அவன் கண் பார்வை பட்டதும் மயக்கமடித்து விழுந்து விடுகின்றான். அதே சமயம் ஒரு மாதம் அங்கேயே  தங்கி விட்டான் என்றால் அந்த மரியாதை அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகன்று விடுகின்றது. இதுபோலத் தான் குர்ஆனும்.

மொத்தத்தில், ஓர் இசைப் பாடகன் ஒவ்வொரு நேரத்திலும் புதுப் புது பாடலை பாடுவதற்கு முடிகின்றது. ஆனால் குர்ஆனை ஓதக் கூடியவன் ஒவ்வொரு நேரத்திலும் புதுப் புது வசனங்களை ஓத முடிவதில்லை.

விமர்சனம்:

என்ன சொல்கிறார் தெரிகிறதா?

குர்ஆனில் ஓதியதையே திரும்பத் திரும்ப ஓதுவதால் அது கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விடுகின்றதாம்.

ஆனால் பாடல்கள் ஒவ்வொரு தடவையும் புதுப் புதுப் பாடலாக இறங்குவதால் அது இனிமையாக இருக்கின்றதாம்.

கஸ்ஸாலியின் இந்த வாதம் அபத்தமான வாதமாகும். இந்த அபத்தமிகு வாதத்தை குர்ஆனுடைய வசனங்கள் அப்பட்டமாக மறுக்கின்றன. கஸ்ஸாலியின் வாதத்தை நாம் மறுக்கத் தேவையில்லை. வார்த்தைக்கு வார்த்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனமே மறுக்கின்றது.

சிலிர்க்க வைக்கும் சிந்தனைக் குர்ஆன்

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

இந்த வசனத்தை  திரும்பத் திரும்பப் படியுங்கள். இந்த வேதச் செய்தியே திரும்பத் திரும்ப படிக்கக் கூடிய செய்தி என்று குறிப்பிடுகின்றான். இது இறைவனை அஞ்சுவோரின் தோல்களைச் சிலிர்க்க வைத்து விடுகின்றன. அவர்களின் தோல்களும், உள்ளங்களும் மென்மையடைகின்றன என்று கஸ்ஸாலிக்கு மறுப்பாகவே அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த வசனம், கஸ்ஸாலியின் மறுப்புக்காக இறங்கியது போல் இருக்கின்றது எனும் போது நமது மேனி சிலிர்த்து விடுகின்றது.

இவ்வசனத்தில் ‘திரும்ப திரும்ப வரக்கூடியச் செய்தி’ என்று சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப ஓதப்படுவது தான் திருக்குர்ஆனின் தனிச் சிறப்பு என்று திருக்குர்ஆன் சிறப்பித்து கூறி விடுகின்றது. திருக்குர்ஆனின் ஆண்மையும், ஆளுமையையும் அதில் அற்புதமாகப் பளிச்சிடுகின்றது.

குர்ஆன் ஓர் அற்புதம் என்பதை கஸ்ஸாலி மறந்து விட்டார் போலும். அற்புதம் என்பது எதிரிகள் அதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வரமுடியாது என்பதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. திரும்பத் திரும்ப ஓதப் பட்டாலும் அந்த வேதம் சலிப்பதுமில்லை, புளிப்பதுமில்லை என்பதிலும் அந்த அற்புதம் அடங்கியிருக்கின்றது

உலகில் மக்கள் இசைக் கச்சேரிகள், கூத்துகள், கும்மாளங்கள் நடக்கின்ற பகுதிகளில் இலட்சக் கணக்கில் கூடுவதைப் பார்க்கின்றோம். அதில் வியப்பேதுமில்லை. ஆனால் புனித மிக்க ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் புனித மக்காவில் பல இலட்ச மக்கள் கூடுகின்றார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இசைக் கச்சேரிகள் எதுவும் நடை பெறுவதில்லை. வேறென்ன நடக்கின்றது?  உலக மக்களின் இதயங்களை ஈர்க்கின்ற திருக்குர்ஆன் இரவு வேளைகளில் தொழுகையில் ஓதப்படுகின்றது. இதில் இலட்சக் கணக்கான மக்கள் லயித்துப் போய் நிற்கின்றனர்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும்  தொழுகையிலும் தொழுகை அல்லாத வேளைகளிலும் இந்தக் குர்ஆன் தான் ஓதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. திரும்ப திரும்ப ஓதப்படுகின்ற அதே குர்ஆனைத்  தான் அங்குள்ள இமாம்கள் ஓதுகின்றனர். மக்காவிலும் உலகெங்கிலும் பகுதிகளிலும் புதுக் குர்ஆன் எதையும் அவர்கள் ஓதவில்லை.

இது எதைக் காட்டுகின்றது?

குர்ஆனுக்கென்று இருக்கக் கூடிய ஈர்ப்பு விசையைத் தான் காட்டுகின்றது.  இது யாருடைய காதுக்கும் வெறுப்பாகவில்லை. இன்னும் சொல்லப் போனால் தோற்றுவாய் என்ற முதல் அத்தியாயம் அதிகமதிகம்  திரும்பத் திரும்ப ஓதப்படுகின்றது. மடக்கி மடக்கி ஓதப்படுகின்ற அந்த வசனங்கள் மக்களின் காதுகளில் விழுகின்றன.  யாருக்கும் இது சலிக்கவுமில்லை; புளிக்கவுமில்லை.  தோற்றுவாய் அத்தியாயத்திற்குப் பிறகு குர்ஆனில் பிந்திய பகுதிகளில் இடம் பெறுகின்ற சிறு சிறு அத்தியாயங்கள் அதிகமதிகம் அடிக்கடி ஓதப் படுகின்றன.  இந்த அத்தியாயங்கள் யாருக்கும் சலிப்புத் தட்டவில்லை; புளித்து போகவுமில்லை.

குர்ஆன் ஓதுபவரின் குரல் வளம் கேட்போரை ஈர்க்கும் வண்ணமிருந்து விட்டால் போதும். இந்த சூரா இவ்வளவு சிறியதாக முடிந்து விட்டதே! இன்னும் கேட்க முடியாமல் ஆகி விட்டதே!  என்று அவர்கள்  வேதனைப் படக்கூடிய அளவில் தான் அது அமைந்து விடுகின்றது.

குரல் வளமிக்கவர் ஓதினால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாமே என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் அந்தக் குர்ஆன்  மக்களிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. இது தான் எதார்த்தம். இப்படி திரும்பத் திரும்ப ஓதப்பட்டும் மக்கள் அதை திரும்பத் திரும்பக் கேட்கின்றார்கள். குர்ஆனுக்கென்று இருக்கின்ற இந்த அற்புதத்தை கஸ்ஸாலி மறந்து விட்டார்; அல்லது மறைக்கின்றார்.

உருக வைக்கும் உன்னதக் குர்ஆன்

சூழ்நிலைக்குத் தக்க மனிதனுக்குப் பொருத்தமாக அமைவது குர்ஆனை விட கவிதை தான் என்று இதற்கு முந்திய முதல் பகுதியில்  கஸ்ஸாலி வாதம் வைத்த போது ஒரு புறாக் கவிதையை உதாரணமாக காட்டியிருந்தார். அந்தக் கவிதை வரிகளில் எந்த ஓர் உப்பு சப்புமும் இல்லை. உணர்ச்சியூட்டுகின்ற உந்து சக்தியுமில்லை. அதைத் தான் கஸ்ஸாலி தூக்கிப் பிடித்திருந்தார்.

இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!’’ என்று கூறுவீராக! இதற்கு முன் (வேத) அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவார்கள்.  எங்கள் இறைவன் தூயவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக உள்ளது எனக் கூறுவர்.  அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது

அல்குர்ஆன்  17:107,108,109

இந்த வசனங்கள் மேற்கண்ட அந்த வசனத்தின் கருத்தை உறுதி செய்கின்றன.  ஓதப்படுகின்ற இந்த குர்ஆன் வசனங்கள் உள்ளத்தைத் தொடுகின்றன; உருக வைக்கின்றன; கண்களில் கண்ணீரை அருவியாகப் பெருக வைக்கின்றன; மேனியை சிலிர்க்க வைக்கின்றன; அவர்களது மேனிகளில் மின் அதிர்வுகளைப் பாய்ச்சி, பரவ விடுகின்றன; இறுதியில் அவர்களது சிரங்களையும் பணிய வைக்கின்றன.

திரும்ப திரும்ப ஓதப் படக்கூடிய  வசனங்கள் அவர்களை புரட்டிப் போடக் கூடிய அளவில் ஒரு  புத்துணர்வையும் ஒரு புது தாக்கத்தையும் கொடுக்கின்றன. பொருத்தமில்லாத புறாப் பாடலுக்கு புளகாங்கிதம் அடைகின்ற கஸ்ஸாலி புனித குர்ஆனின் புல்லரிக்கும் இந்தக் கருத்தின் பக்கம் தனது சிந்தனைப் புலன்களை செலுத்தத் தவறுகின்றார்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குர்ஆன் 8:2

இந்த வசனம் குர்ஆன் வசனங்களைச் செவியுற்றால் அவை அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களது உள்ளங்களை நடுநடுங்க வைக்கின்றன என்றும் கூறுகின்றன.  இந்த  உண்மையை  இந்த வசனங்களிலிருந்து நாம் சாதாரணமாக விளங்க முடிகின்றது. ஆனால் கல்விக் கடல் (?) கஸ்ஸாலிக்கு இது விளங்கவில்லை.

புனித குர்ஆன் புளிக்கின்றது; கவிதை இனிக்கின்றது என்று கஸ்ஸாலி வாதிடுவதின் மூலம் அவரிடம் சூஃபிஸ, ஷியாக் கொள்கை மண்டிக் கிடக்கின்றது என்பதை தான் இது எடுத்துக் காட்டுகின்றது.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய விஷயம், தனது வாதத்திற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியாகும்.  இந்தச் செய்தியின் தரத்தையும் தகுதியையும் முதலில் பார்ப்போம்:

இந்தச் செய்தி முஸன்னஃப் இப்னு அபீஷைபா என்ற ஹதீஸ் நூலில் 35524 எண்ணாக இடம் பெறுகின்றது.

இந்தச் செய்தியில் அறிவிப்பு ரீதியிலான குறை உள்ளது.

அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் நடைபெறுவதாக அமைந்த இச்சம்பவத்தை அபூஸாலிஹ் என்பார் அறிவிக்கின்றார்.

இந்த அபூஸாலிஹ் நம்பகமானவராக இருந்தாலும் உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் தான் இவர் பிறந்தார் என்று தஹபீ குறிப்பிட்டுள்ளார்.

 நூல்: சியரு அஃலாமின் நுபலா

அதனால், உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பிறந்த ஒருவர் அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிவிப்பது சாத்தியமாகாது.

அவருக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வேண்டும்.

அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்ன என்பது அறியப்படாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது. அதனால் இதை ஆதாரமாகக் கொண்டு கஸ்ஸாலி சொல்லக் கூடிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

அபூபக்கர் (ரலி) அவர்கள் தொடர்பான இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் அடி வாங்கி விட்டது. அத்துடன் கருத்து அடிப்படையிலும் இது அடி வாங்குகின்றது. காரணம் அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதும் போதெல்லாம் அழக் கூடியவர்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தொழுகின்ற வேளையில் அழுகின்ற அபூபக்கர்

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுதுகொண்டும் குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது இனை வைப்பாளர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக்கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை எங்கே தங்களது மனைவி மக்களை மதம் மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம் இணைவைப்பாளர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி எண்: 476

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த நோயின்போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்’’ என்று சொன்னார்கள். அதற்கு நான், “(என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனம் உடையவர்கள்; நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் அழுவார்கள். அவர்களால் ஓத முடியாது’’ என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் தொழுவிக்கச் சொல்லுங்கள்’’ என்று சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி எண்: 712

மேற்கண்ட இந்த ஹதீஸ்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகையில் தொடர்ந்து அழக்கூடியவர்கள் என்பதைத் தெளிவுபட உணர்த்துகின்றது. அதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் கஸ்ஸாலி எடுத்துக்காட்டிய பலவீனமான ஹதீஸில் உள்ளது போன்று இவ்வளவு பார தூரமான வார்த்தையைச் சொல்வதற்குரிய வாய்ப்பே இல்லை.  காரணம் அல்லாஹ் இந்த வார்த்தையை, திருந்தாத, அழிக்கப்பட்ட சமுதாயத்திற்குத் தான் பயன் படுத்துகின்றான்.

அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்

அல்குர்ஆன் 5:13

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். 

அல்குர்ஆன் 6:43

இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்ற பாடம், யார் அழிக்கப்பட்டார்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹ் கஸ்வத் – அதாவது உள்ளம் இறுகுதல்  என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அதனால் முஸ்லிம்கள் அது போன்று ஆகிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 57:13

இப்படிப் பட்ட கடுமையான, கொடுமையான ஒரு வார்த்தையை அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்தியிருக்க  மாட்டார்கள் என்பதையே இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அதனால் அபூபக்கர் (ரலி) உருகிய மனம் படைத்தவர் தானே தவிர இறுகிய மனம் படைத்தவர் அல்லர் என்பதையே இது  மேலும் உறுதிப்படுத்துகின்றது.

அபூபக்கர் (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விமர்சனத்தைப் பார்த்த பிறகு இப்போது கஸ்ஸாலி கூறுகின்ற உமர் (ரலி) அவர்கள் தொடர்பான தவாஃப் பற்றிய செய்தியின் விமர்சனத்தைப் பார்ப்போம்:

உமர் (ரலி) செய்தியைப் பொறுத்த வரை அதற்கு முறையான அறிவிப்பாளர் ஏதுமில்லை.

ஹதீஸ் நூல்களிலோ வரலாற்று நூல்களிலோ அவ்விதம் பதிவு செய்யப்படவில்லை.

மாறாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் கொண்டு வருவது தவிர்த்து ஹிஜ்ரி 966ல் மரணித்த அறிஞர் தியார் பக்ரி என்பவர் தனது தாரீகுல் கமீஸ் எனும் நூலில் இச்செய்தியினைக் கொண்டுவருகிறார்.

அதுவும் முறையான, அறிவிப்பாளர் ரீதியிலான சங்கிலித் தொடர் எதுவுமில்லாமல் ருவிய – அறிவிக்கப்படுகிறது – என்று ஒற்றை வார்த்தையில் இச்செய்தி பதிவு செய்யப்படுகிறது.

யாரோ சொல்கிறார்கள் என்பது தான் இதன் பொருள். யார் இத்தகவலைச் சொன்னார்கள் என்பது தெரியவில்லை என்று அர்த்தம். இந்த விதத்தில், அறிவிக்கப்படும் செய்தி ஆதாரமாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அத்துடன் ஒரு பேச்சுக்கு இது சரியென்று வைத்துக் கொண்டாலும் இது குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதுகின்ற, முரண்படுகின்ற செய்தியாகும். காரணம் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா,

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

அல்குர்ஆன் 22:29

என்று சொல்கின்றான்.

அபது மனாஃபின் பிள்ளைகளே! இரவிலும் பகலிலும் விரும்பிய எந்த நேரத்தில் இந்த ஆலயத்தில் தவாஃப் செய்கின்ற, தொழுகின்ற எவரையும் தடுக்காதீர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூல்கள் : திர்மிதி 795

அபூதாவூத் 1618, நஸயீ 2875

எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் இடுகின்ற இந்தக் கட்டளையைத் தடுப்பதற்கு உமர் (ரலி)க்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் கஸ்ஸாலி கொண்டு வந்த உமர் (ரலி)யின் செய்தியும் ஆதாரமற்ற, அர்த்தமற்ற செய்தியாகும்.

இதன் மூலம் கஸ்ஸாலி சொல்ல வருவது பழகப் பழக பாலும் புளித்து விடும் என்பது தான். அது போன்று குர்ஆனை அதிகம் அதிகம் கேட்பதால் அது புளித்துப் போய் விடுகின்றது. அதே சமயம் பாடல் ஒன்றைக் கேட்டால் அது புளிக்காது என்று தான்.

தான் யார்? என்று இங்குதான் கஸ்ஸாலி தெளிவாக அடையாளப்படுத்துகின்றார். அதாவது தன்னை ஒரு பகிரங்க ஷியா என்று பிரகடனப் படுத்துகின்றார். இனியும் இந்த கஸ்ஸாலிக் காதலர்கள் அவர்  மீது காதல் கொள்ளலாமா? அவர்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்கள், சீர்திருந்துவார்கள் என்று எதிர்பார்போமாக!

—————————————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்               தொடர்: 35

மஹர்  ஒரு கட்டாயக் கடமை

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!’’ எனக் கூறினார். அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?’’ எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது!’’ என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் (நான் வருவதைப் பார்த்த) நபி (ஸல்) அவர்கள், “நீ மண முடித்து விட்டாயா?’’ என்று கேட்டார்கள். நான் ஆம்!’’ என்றேன். யாரை?’’ என்றார்கள். ஓர் அன்ஸாரிப் பெண்ணை!’’ என்றேன். எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?’’ என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!’’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டையேனும் (அறுத்து வலிமா-) மணவிருந்தாக அளிப்பாயாக!’’ என்றார்கள்.

நூல்: புகாரி 2048, 2049, 3780, 5153

இந்தச் செய்தியில் நபியவர்கள் கேட்ட கேள்வி திருமணம் முடித்தாயா? என்றுதான். ஆம் என்றதும் அடுத்த கேள்வியே மஹர் எவ்வளவு? என்றுதான். இதிலிருந்து ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதாக இருப்பின் பெண்ணுக்குக் கட்டாயக் கடமையாக மஹரைக் கொடுத்துவிட வேண்டும் என்று தெரிகிறது.

எனவே வரதட்சணைக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் பொங்கி எழவேண்டும். பயங்கரமான, மிகவும் பாரதூரமான கொடூரங்களை விளைவிக்கும் இந்த வரதட்சணையை ஒழித்துக் கட்டினால்தான் நம் குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறும்.

அஸ்திவாரமே தவறாக இருந்தால் மற்றவை சரியாகாது. அதாவது மனைவியாக ஆக்கும் போதே ஹராமான வழியிலும் பெண்ணுக்கு அக்கிரமம் செய்தும் திருமணம் முடித்தால் எப்படி வாழ்க்கை சரியாக இருக்க முடியும்?

எனவே இந்தக் கொடுமைக்கு எதிராக பெற்றோர்களையும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் பெற்றோர்களை எதிர்ப்பதால் இஸ்லாமிய மார்க்கத்தில் குற்றம் பிடிக்கப்படாது. ஏனெனில் மறுமை நாளில் நம் பெற்றோர்கள் நம்மைக் காப்பாற்ற முடியாது. இறைவனிடம் நாம்தான் பிடிபடுவோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

எனவே மறுமை வாழ்க்கை சம்பந்தப்பட்டதில், அல்லாஹ் சம்பந்தப்பட்டதில், மார்க்க சம்பந்தப்பட்டதில் தாய் பிள்ளை என்றோ, கணவன் மனைவி என்றோ இறைவனிடம் பதில் சொல்லித் தப்பிக்கவே முடியாது. அதே நேரத்தில் உலக விஷயத்தில் தாய் தந்தையரை அனுசரித்து, அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். ஆனால் அல்லாஹ் விஷயத்தில், அல்லாஹ்வா? தாய் தந்தையரா? என்ற நிலை வருமானால், உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வைத்தான் தேர்வு செய்யவேண்டும்.

அதே போன்று இன்னும் சிலர், பெண் வீட்டாரிடம் நாம் கேட்காமல் அவர்களாகவே விரும்பித் தந்தால் வாங்குவது குற்றமில்லை என வாதிடுகின்றனர். இத்தகையோர் பணக்கார வீடுகளைத் தேடிச் சென்று அல்லது எவர்கள் வரதட்சணை தரத் தயாராக உள்ளார்களோ அந்த மாதிரி பெற்றோர்களைத் தேடிச் சென்று பெண்களை மணம் முடிக்கின்றனர்.

உங்கள் பெண்ணுக்குத் தானே நீங்கள் நகை நட்டுக்களைப் போடுகிறீர்கள், நீங்களாகப் பார்த்து ஏதாவது செய்யுங்கள், நாங்கள் கேட்கமாட்டோம் என்றெல்லாம் மறைமுகமாக வரதட்சணை கேட்கும் கூட்டங்கள் ஆங்காங்கே இருக்கிறது. இதுபோன்ற நிலைபாடுகள் மார்க்கத்தில் சரியா? என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————————————————————

மறைக்கப்படும் மார்க்கக் கல்வி

எம்.எஸ்.ஜீனத் நிஸா, கடையநல்லூர்

அல்லாஹ் மார்க்க அறிஞர்களை அவர்களுக்கென்று பல தகுதிகளைக் கொடுத்து பல விதத்திலும் சிறப்புப்படுத்தியுள்ளான். மக்களிடத்திலும் கூட உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் இம்மார்க்க அறிஞர்களே!

பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரையிலும் ஆலிம்களை புண்ணியவான்கள் எனக் கருதி அவர்களைக் கண்ணியப்படுத்துகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். இதற்கான காரணம் ஆலிம் என்பவர் மார்க்கம் படித்தவர், நம்மை விடவும் அதிகமாகத் தெரிந்தவர், தூய மார்க்கம் காட்டித் தந்த அனைத்து சட்டத்திட்டங்களையும் சரிவர நிறைவேற்றுபவர் என்றெல்லாம் கற்பனை கோட்டைகளைக் கட்டி போற்றி வருகின்றனர்.

ஆனால் இந்தக் கண்ணியத்திற்கு சொந்தக் காரர்களாக இருக்க வேண்டிய மார்க்க அறிஞர்களில் சில போலி ஆலிம்களோ மக்களின் இந்த நோக்கத்தை மண்ணில் போட்டு புதைக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர். தாம் கற்ற கல்வியையே வியாபாரமாக மாற்றிவிட்டனர். மக்களிடம் தனக்குக் கிடைத்த தகுதியை பயன்படுத்தியே அவர்களை ஏமாற்றிவருகின்றனர். இது போன்ற இழிவானவர்களால் உருவானது தான் மாதம் ஒரு மவ்லிது, கத்தம் பாத்திஹா, ஓதிப் பார்த்தல் போன்ற இணைவைப்புகள்.

அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பது இணை வைத்தல் என்று தெரிந்திருந்தும் கூட இந்த ஆலிம்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. அந்தப் பாவச்செயலை நியாயப்படுத்துகின்றனர். மேலும் ஒரு வீட்டில் கத்தம் பாத்திஹா ஓதினால் வயிறு நிறைய சாப்பாடு, கை நிறைய பணம் என்று இருந்த இடத்திலேயே சம்பாதிக்கலாம் என்பதால் இந்தத் தவறை சுட்டிகக்காட்டும் இடத்தில் இருக்கும் ஆலிம்களே இத்தவறைச் செய்து தம் சுயமரியாதையை இழந்து வருகின்றனர்.

மக்களும், ஆலிம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றிவருகின்றனர். ஆனால் இந்த ஆலிம்கள் மக்களின் இந்த அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி மார்க்கத்தை மறைத்து ராஜவாழ்க்கை வாழ்கின்றனர்.

யாரேனும் இவர்களிடத்தில் கேள்வி கேட்டால் இவன் ஆலிமையே எதிர்த்து பேசிவிட்டான், ஆலிம்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன் என்று பிரச்சாரம் செய்து தாம் செய்யும் தவறை யாரும் கண்டுபிடிக்காத வகையில் மக்களை வாயடைக்கச் செய்கின்றனர்.

இவ்வாறு சுக போக வாழ்க்கையைத் தான் வாழவேண்டும் என்பதற்காக தவறான கொள்கையை மக்களிடத்தில் எடுத்து வைத்து, தெளிவான மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்து வாழ்வோரை அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான வேதத்தில் சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:159, 160)

ஆனால் ஆலிம்களுக்கெல்லாம் மிகப்பெரும் ஆலிமாக இருந்த நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்கள் என்பதற்கும், இறுதி வரையிலும் சுயமரியாதையைப் பேணி வாழ்ந்தார்கள் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இந்தப் போலி ஆலிம்களோ காசுக்காக எதையும் செய்யத் தயார் என்று துணிந்து, தாம் கற்ற கல்வியை மண்ணில் போட்டுப் புதைத்து, சுயமரியாதையை இழந்து, பிறரிடம் கையேந்தும் காட்சியை நாம் பார்க்கின்றோம். இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வு ஒர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சுய இலாபத்திற்காகக் கல்வியை மறைக்கக்கூடிய போலி ஆலிம்களை நாம் பார்த்தோம்.

மார்க்கம் தடுத்த ஒரு செயலை, தான் செய்யும் ஒரே காரணத்திற்காக அந்தத் தவறை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டத் தவறும் சில மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.

திருத்திக் கொள்ள முடியாத தவறு தன்னிடத்திலும் இருக்கும் போது அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டாமல் மார்க்கத்தின் மீது தனக்கிருக்கும் பொறுப்பை அவன் மறந்து அதை மக்கள் மன்றத்தில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர்.

இவ்வாறு தனக்குச்  சாதகமானதை எடுத்துச் சொல்லியும் தனக்கு பாதகமானதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மார்க்கச் சட்டங்களை மறைப்பது யூதர்களின் பண்பாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய  வேதத்தில் என்ன காணப்படுகிறது?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் அறிஞர்கள், முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்’’ என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினார்கள். அவ்வாறே  தவ்ராத்கொண்டு வரப்பட்ட போது, யூதர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை (ரஜ்ம்’) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!’’ என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. ஆகவே, கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் பலாத்எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த யூதர் அவள் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்.

நூல்: புகாரி 6819

(அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்)