ஏகத்துவம் – ஜனவரி 2016

தலையங்கம்

இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

ஏப்ரல் 27, 2015 அன்று ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக் குழுவில் ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் மாநில அளவிலான ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அனைத்து வேலைகளும் ஊக்கத் துடனும், உற்சாகத்துடனும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வேளையில், வடகிழக்குப் பருவ மழை, சென்னை, கடலூர் பகுதிகளில் பேரிடரையும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இது, நம்முடைய சகோதரர்களின் மாநாட்டுப் பயணத்தில் ஒரு மாற்றுப் பாதையை ஏற்படுத்தி விட்டது.

மாநாட்டுக்காக வசூல் செய்ய இருந்த கொள்கைச் சகோதரர்கள் வெள்ள நிவாரண மனிதநேயப் பணியிலும், அதற்கான நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட வேண்டியதாயிற்று. மாநிலம் முழுவதிலிருந்தும் நம்முடைய மாவட்ட, கிளை நிர்வாகிகள், மாணவர் அணியினர் உள்ளிட்ட தொண்டர்கள் தீவாகக் கிடந்த தலைநகர் சென்னைக்கும், கடலாகவே மாறிப் போன கடலூருக்கும் தேனீக்களாகப் புறப்பட்டுச் சென்று  களப்பணி ஆற்றினர்.

கோபுரங்களாக  எழும்பி நின்ற குப்பைக் கூளங்களை வெள்ளம் தனது நினைவுச் சின்னமாக விட்டுச் சென்றது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைக்கு அடுத்து உடனடியாகத் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சனை கோபுரமாகக் குவிந்து கிடந்த இந்தக் குப்பை மேடுகளும், குமட்டலைத் தந்த கழிவுகளும் தான்.

இராணுவத்தையும் மிஞ்சிய கட்டுக் கோப்புமிக்க படையைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது பல்லாயிரக்கணக்கான படையினரை  சென்னையில் களமிறக்கியது. “தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடிப்பார் சுயம் நலம் உண்டு’ என்ற பாடல் வரிகள் சொல்வது போன்று படம் காட்டாமல் மாநபி வழியில் மற்றவர்களுக்குப் பாடமாகவே ஆனார்கள். பம்பரமாகச் சுழன்று துப்புரவுப் பணியாளர்களாக மாறி, நகரத்தை குப்பைக் கூள நரகத்திலிருந்து மீட்டெடுத்தார்கள். அவர்களின் அந்தக் களப்பணி அனைத்து அரசியல் கட்சிகளையும் துடைப்பங்களைத் தூக்கி வரச் செய்து துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வைத்தது என்றால் அது மிகை அல்ல! அந்த அளவுக்கு அவர்கள் ஆற்றிய பணி அரும்பணியாக அமைந்து விட்டது.

மாநாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த தளர்வு அறியா இந்தத் தன்னார்வலர் களை, தன்னலமில்லாத தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களை இடைமறித்த வெள்ள நிவாரணப் பணிகள்,  அதற்காக வசூல் செய்து முடித்து அந்த நினைவு கூட மாறவில்லை, அதற்குள்ளாக  மாநாட்டுக்குப் பொருள் திரட்ட முடியுமா? என்ற இயற்கையாக எழுகின்ற மலைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து மாநாட்டைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன என்ற எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையின் ஆரம்பப் படிக்கட்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கின்ற, ஏகத்துவத்தின் பிடிமானம் இன்னும் வேர் பிடிக்காத சில புதுமுகங்களின் அடி மனதில் கூட “இவ்வளவு பெரிய செலவில் இப்படி ஒரு மாநாடு தேவை தானா?’ என்ற வினாக்குறிகளும், வியப்புக் குறிகளும் எழுந்து நிற்கின்றன. அதற்குரிய விடையையும் விளக்கத்தையும் இப்போது பார்ப்போம்.

கோவையில் போக்குவரத்துக் காவல் துறையினர் திடீரென்று போக்குவரத்தை ஓரிரு நிமிடங்கள் நிறுத்துகின்றனர். ஷைரன் அலறலுடன் சர்ரென்று ஒரு கார் காற்றை மிஞ்சிய வேகத்தில்  சாலையில் பறக்கின்றது. யாரோ அமைச்சர் வருகின்றார்; அரசியல் தலைவர் வருகின்றார்; அல்லது எங்கோ தீப்பற்றி எரிகிறது அதனால் தீயணைப்பு வாகனம் விரைகிறது என்று வியப்புடன் விழிப் புருவங்களை உயர்த்தி பார்க்கின்றனர்.

ஆனால், அவர்களின் எண்ணங் களுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் நேர் எதிராக ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து செல்வதைப் பார்க்கின்றார்கள். விடை தெரியாமல் அங்கிருந்து விடை பெற்று வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மூளைச் சாவு காரணமாக  முடங்கிக் கிடந்த ஒருவரின் இதயம், விமான மூலமாக இரண்டு மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஒருவருக்குப் பொருத்துவ தற்காக எடுத்துச் செல்லப்பட்ட போது போக்குவரத்து ஒரு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  உரிய நேரத்தில் நோயாளிக்கு உறுப்பு பொருத்தப் பட்டு, அவரும் உயிர் பிழைத்துக் கொண்டார்.

கோவையில் போக்குவரத்து ஏன் நிறுத்தப்பட்டது என்று நேற்று எழுந்த வினாவுக்கு விடிந்ததும் வீட்டுக்கு வந்த செய்தித் தாள் விடை சொன்னது. நாம் தாமதித்த ஒரு சில நிமிடங்கள் ஒரு மனித உயிர் காப்பதற்கு பயன்பட்டிருக்கின்றது. இந்த நல்ல காரியத்திற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்றால் நாம்  ஒரு மணி நேரம் அதிகமாகக் கூட நின்றிருக்கலாம் என்று அந்தச் செய்தியைப் படித்தவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

ஒரு மனித உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காக விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவசர உதவி அளிக்கப்படுகின்றது. டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப் பட்டு கோரத் தாக்குதலுக்குள்ளான போது அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக மலேஷியாவுக்கு விமானம் மூலம் அவர் அனுப்பப்பட்டார்.    இதற்காக கோடிக்கணக்கான பணத்தை மத்திய அரசு செலவழித்தது. கடைசியில் அந்தப் பெண் உயிர் பிழைக்காமல் போனார் என்பது வேறு விஷயம். ஆனால், இதற்காகச் செலவு செய்ததை யாரும் வெறுப்பாகப் பார்க்கவில்லை.  மாறாக, மனிதாபிமான முறையில், அந்தச் செயலை வாழ்த்தி வரவேற்றார்கள். ஓர் உயிருக்கு முன்னால் கோடான கோடி ரூபாயெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம் என்ற கண்ணோட்டத்தில் தான் இது பார்க்கப்பட்டது.

மனித உயிரின் அருமை கருதித் தான் சென்னை, கடலூர் வெள்ளத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் தங்கள்  உயிர்களைப் பணயம் வைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். பல்லாயிரக்கான ரூபாய்கள் செலவழித்தாலும் பரவாயில்லை மனித உயிர் காக்கப்பட வேண்டும் என்ற இலட்சியம் ஒன்று மட்டும் தான் இங்கு முதன்மையாகவும், முக்கிய மாகவும் பார்க்கப்பட்டது.  ஒரு மனித உயிரைக் காப்பதற்கும், மீட்பதற்கும்  கோடான கோடி பொருளாதாரம் செலவு செய்யப்பட்டாலும் அதை ஒரு  பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இது இந்த எடுத்துக் காட்டில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாகும்.

இரண்டாவது நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இது போன்ற பேரிடர்களில் நாம் காட்டக்கூடிய அவசரமாகும். ஒரு நிமிடம் தாமதித்தாலும், அருமையான ஒரு மனித உயிரை இழக்க நேரிடும் என்பதால் நாம் இப்படிப்பட்ட அவசரத்தைக் காட்டுகின்றோம்.

ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி! முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி! அவர் அல்லாஹ் வுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விட்டால் அவர் நிச்சயமாக நிரந்தர நரகத்தைத் தான் அடைவார். அந்த நரகத்திலிருந்து அவர் ஒரு போதும் இவ்வுலகத்திற்குத் திரும்ப வரவே முடியாது. அப்படிப்பட்ட நரகத்திலிருந்து அவரை எப்பாடு பட்டாயினும் காப்பாற்றியாக வேண்டும்.

வெள்ள நிவாரணத்தில் நாம் காட்டிய அவசரத்தை விட அதிகமான அவசரத்தை நாம் இதில் காட்டியாக வேண்டும்.

இந்த வெள்ளப் பிரளயப் பேரிடரில் நம்முடைய  உயிரைப் பணயம் வைத்து நாம் களப் பணியாற்றினோம். நாளை மறுமை நாள் அப்படி அல்ல! இதோ அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்:

(மக்கள்) அவர்கள் ஒருவருக் கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவி யையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்த வனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.

அல்குர்ஆன் 44:11-18

ஆம்! அந்த உலகத்தில்  ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பணயம் வைத்து, அடுத்தவரை அந்த நரகத்திற்குப் பலி கொடுத்து விட்டு தன்னைத் தப்புவித்துக் கொள்ளவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் நினைப்பான்.

மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டு வரப்பட்டு “உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகை யாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் “ஆம்என்று பதிலளிப்பான். அப்போது “இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)என்று கூறப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 6538

அந்த நரகத்தின் கொடுமையை இதை விட வேறு வார்த்தையில் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. மழை முடிந்தது; வெள்ளமும் வடிந்தது. ஆனால் நாளை நரகம் அப்படி அல்ல!

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்கு மிடம் நரகம். அது தணியும்போதெல் லாம் தீயை அதிகமாக்குவோம்.

அல்குர்ஆன் 17:97

அந்த நெருப்பு அணையவே அணையாது என்று சொல்கின்றான்.  அது சதாவும் சாஸ்வதமாக எரிந்து கொண்டே இருக்கும். மாடி அளவு வந்த வெள்ளத்திற்கே இவ்வளவு பெரிய முயற்சி எடுத்தோமே! மலை அளவுக்கு எழுகின்ற நெருப்புக்கு எவ்வளவு முயற்சியை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இதோ அல்லாஹ் நரக நெருப்பின் பன்மடங்கு பரிமாணத்தை விவரித்துச் சொல்கின்றான்.

அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

அல்குர்ஆன் 77:32

இணை வைத்தவர்களும் அதில் எரிந்து கொண்டே இருப்பார்கள் அதில் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டே இருப்பார்கள்.

எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? எச்சரிக்கை செய் பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவி யாளரும் இல்லை” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 35:37

அந்த நரகத்தை விட்டு வெளியேற நினைத்தாலும் வெளியே வரமுடியாது.

அவர்கள் நரகிலிருந்து வெளி யேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:37

அப்படியே அவர்கள் வெளியே வந்தாலும் அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள்.

கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).

அல்குர்ஆன் 22:22

வெள்ள நேரத்தில் நாம் மக்களை மீட்க  முடிந்தது. ஆனால் இணை வைத்தவர் எவரையும் அந்த உலகத்தில் மீட்கவே முடியாது.

நபி (ஸல்) அவர்களால் கூட முடியாது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (வேதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான்  பசுமையாக்குவேன் (இந்த உலகில் உங்களுடைய உறவைப் பேணி நடந்து கொள்வேன்)என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 303

மீட்க முடியாத அந்த வேதனை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற் காக நபி (ஸல்) அவர்கள் கடுமையான அவசரத்தைக் காட்டியுள்ளார்கள். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ்களி லிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எனக்கும், என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று “நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன் ஆவேன். ஆகவே, (ஓடுங்கள்😉 தப்பித்துக் கொள்ளுங்கள்; தப்பித்துக் கொள்ளுங்கள்என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படை யினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ(ரலி)

நூல்: முஸ்லிம் 6482

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தம்மை நிர்வாணமான  எச்சரிக்கையாளன் என்று சொல்வதன் மூலம் இந்த விஷயத்தின் விபரீதத்தையும் விவகாரத்தையும் விவரிக்கின்ற அதே வேளையில் அதற்கு அவர்கள் காட்டுகின்ற அவசரத்தையும் தெளிவாக விளக்கி விடுகின்றார்கள்.

எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைக் (தீயில் விழாமல்) தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்தி-ருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக் கிறீர்கள் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6483

இந்த ஹதீஸ் மக்கள் எவ்வளவு விரைவாக ஷிர்க் என்னும் நரகத் தீயில் போய் சாடி, ஓடி விழுகின்றனர் என்பதையும், நாம் அதற்காகக் காட்ட வேண்டிய அவசரத்தையும், அவசியத் தையும் விளக்கி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்து விடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப் போகின்றனர்என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1435

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தமக்கும் மறுமை நாளுக்கும் இடைவெளி இல்லை என்பதைச் சொல்லி அழைப்புப் பணியின் அவசரத்தை உணர்த்துகின் றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் தமது காலத்திலேயே இவ்வளவு அவசரப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களை விட மறுமை நாளுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய நாம் எவ்வளவு அவசரப்பட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேர விருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டதுஎன்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளைய மிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் “அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; தீமை பெருகி விட்டால்…என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த்    ஜஹ்ஷ் (ரலி), நூல்: புகாரி 3346

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கருத்து, நெருங்கி வரும் மறுமை நாளை மேலும் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் யாரேனும் ஒருவர் நோயாளியாகி விட்டால் அவரைச் சந்தித்து, அவருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அறிவுரை வழங்குவார்கள். இதற்குப் பின்வரும் செய்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்‘- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லைஎன்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரைஎன்று சொன்னார்கள். அப்போது தான், “இணை வைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கை யாளர்களுக்கும் உரிமையில்லைஎன்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர் வழியில் செலுத்தி விட முடியாதுஎன்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

நூல்: புகாரி 3884

அபூதாலிப், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அது நபி (ஸல்) அவர்களைப் பெரிய அளவில் பாதித்தது. இருப்பினும், நபி (ஸல்) அவர்கள் அந்த வழிமுறையைக் கைவிடவில்லை. தன்னிடம் பணிபுரிந்த ஒரு யூதச் சிறுவன் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அவரிடம் போய் இஸ்லாத்தை ஏற்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். நபி (ஸல்) நரகத்திலிருந்து இவரை பாதுகாத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி வெளியேறு கின்றார்கள் என்றால்  நரகத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு ஆர்வமும் அவசரமும் காட்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஷிர்க்கிற்கு எதிரான பிரச்சாரத்தில் எவ்வித கால தாமதமும் இல்லாமல் தொடர்ந்து துரிதமாக தொய்வில்லாமல் கடமை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்  தெளிவு படுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது உயிர் மூச்சுக் கொள்கையான தவ்ஹீத் பிரச்சாரத்தை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணியைப் போன்று இடைக்காலப் பணியாக அல்லாமல், தனது முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கின்றது.

தற்போது, நம்மை இடைமறித்த வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணி போன்ற இந்த இடைக் காலப் பணிகளுக்காக நமது முழு நேரப் பணியை தள்ளிப் போடக்கூடாது என்று விளங்கிக் கொள்ளலாம்.

தீப்பற்றி எரியும் போது தீயணைப்புப் படை வரும். சுனாமி, பெருவெள்ளம் பொன்ற பேரிடர் ஏற்படும் போது இராணுவம் வரும். தீ அணைந்ததும், பேரிடர் முடிந்ததும், தீயணைப்புப் படை, இராணுவம் திரும்பப் போய் விடும். நம்முடைய ஜமாஅத்தின் பணி அது மாதிரி அல்ல!

நம்முடைய ஜமாஅத்தின் பணி இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக் களின் பணியைப் போன்றதாகும். நான் இன்ன நேரத்தில்  தான் எனது வேலையைச் செய்வேன்; இன்ன நேரத்தில் செய்ய மாட்டேன்; இன்ன நேரத்தில்  ஓய்வு எடுத்துக் கொள்வேன்; இன்ன நேரத்தில் உழைப்பேன் என்று வெள்ளை அணுக்கள் இஷ்டத்திற்கு வேலை செய்ய முடியாது. அப்படி வேலை செய்தால், உடல் தீவிர நோய்த் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்க நேரிடும்.

நம்முடைய ஜமாஅத்தைப் போன்று தவ்ஹீதுப் பணியை நூற்றுக்கு நூறு  தூய வடிவில் முழு நேரப் பணியாக வேறெந்த அமைப்பும் கொண்டிருக்க வில்லை. நாம் மட்டும் தான் அவ்வாறு முழு நேரப் பணியாகக் கொண்டிருக் கின்றோம். அதனால் நாம் நமது ஏகத்துவ  பயணத்தில் இப்ராஹீம் நபியின் பாதையில் வெள்ளை அணுக்கள் போன்று ஓய்வின்றி பணியாற்றுவோமாக!

இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம்.

தவ்ஹீத் பிரச்சாரத்தை செய்து கொண்டு தானே இருக்கின்றோம். இந்த மாநாடு அப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா? என்பது தான் அந்தக் கேள்வியாகும்.

பொதுவாக சத்தியப் பிரச்சாரம் ஒரே நாளில் வளர்ந்து விடாது. அதன் வளர்ச்சியே படிப்படியான பரிணாம வளர்ச்சி தான். நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் சரி! அதற்கு முந்தைய காலத்திலும் சரி! சத்தியத்தின் வளர்ச்சி அப்படித் தான் இருந்தது. ஆட்கள் கொஞ்சமாக இருக்கும் போது மக்களின் வரத்து அதன் பக்கம் கொஞ்சமாகவே இருக்கும். இன்னும் ஆட்கள் சேரட்டும்! அதன் பிறகு நாம் சேர்வோம் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது மக்களின் வரத்தும் அதிகமாக இருக்கும். இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வை வைத்தே இவ்வாறு நாம் குறிப்பிடுகின்றோம்

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள். மக்கா வெற்றி நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத் தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்….

அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)

நூல்: புகாரி 4302

அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர வேறெந்த இஸ்லாமிய அமைப்பு நடத்துகின்ற பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு மக்கள் அலைகடலாகத் திரண்டு வருவதில்லை. அதிலும் குறிப்பாக, அல்லாஹ்வின் மகத்தான கருணையினால், வெள்ள நிவாரண மும், மீட்புப் பணியும் மக்களிடம் நன் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

இந்த நேரத்தில் வந்து கூடுகின்ற, குவிகின்ற மக்கள் கூட்டம், பார்க்க வந்த மக்களின் இதயங்களை நிச்சயம் ஈர்க்கும். இதற்கு முன்னால் நடந்த மாநாடுகள் அப்படிப் பலருடைய இதயங்களை ஈர்த்திருக்கின்றது.

தவ்ஹீத் கொள்கைவாதிகள் என்றால் ஊருக்கு ஒரு நான்கு பேர்கள் இருப்பார்கள் என்று எண்ணி, இதுவரை ஏகத்துவத்தின் பக்கம் வராமல் இருந்த மக்களை, இவர்கள் ஒரு பெரும் சமுதாயம் என்று ஏகத்துவத்தின் பக்கம் அவர்களின் இதயங்களை பிணைப்பதற்கு இந்த மாநாடு இன்ஷாஅல்லாஹ் வழி வகுக்கும்.

மாநாட்டுக்கு வருகின்ற பெரு வாரியான மக்கள் தொகை மட்டும் ஈர்க்கும் என்று  நினைத்து விடக்கூடாது. மாநாட்டுத் திடலில் நபிவழி அடிப்படையில் நடைபெறு கின்ற தொழுகை, ஆற்றப்படுகின்ற உரைகள், விற்கப்படுகின்ற நூல்கள், சிடிகள், விவாத சிடிகள் என்று நாம் அறியாத எத்தனையோ அம்சங்கள் ஒருவரை ஈர்த்து விடலாம். அதை அல்லாஹ்வே அறிந்தவன்.

மொத்தத்தில், இந்த மாநாடு என்பது அழைப்பு பணிக்கான ஓர் யுக்தி! மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற ஒரு வியூகம்!  வளரும் தலை முறையிடம் ஏகத்துவக் கொள்கையை விதைக்கின்ற விளை நிலம்! தமிழகத்தில் இதுவரை  தவ்ஹீத் கண்ட வளர்ச்சியின் பரிமாணம்! தவ்ஹீத் கொள்கை வாதிகளின் பழைய புதிய தலைமுறையினரின் சங்கமம்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளால் ஈர்க்கப்பட்ட பிறமத சமுதாய மக்களை இந்த மாநாட்டின் மக்கள் வெள்ளம் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும்.

இந்த மாநாடு ஏன்? எதற்கு? என்று இப்போது தெளிவாகப் புரிந்திருக்கும். இதில் பங்கேற்கவும் அதற்காகப் பணியாற்றவும் இனியும் தாமதிக்கலாமா?

—————————————————————————————————————————————————————-

அன்புடன் அழைக்கிறோம்

ஷிர்க் ஒழிப்பு மாநாடு

இடம்: திருச்சி

நாள்: இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

அன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதரர்களே! சகோதரிகளே!

நாங்கள் உங்களிடம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறோம். அல்லாஹ்விற்காக இதனைத் தொடர்ந்து படியுங்கள்.

அன்பிற்குரியவர்களே! நாம் கொதிக்கின்ற தண்ணீரினாலும், எரிகின்ற நெருப்பினாலும் ஏற்படும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அறிந்திருக்கின்றோம். பார்த்திருக்கின்றோம்.

கொதிக்கும் வெந்நீர் நம்மீது கொட்டிவிட்டால், அல்லது நமது அன்புக் குழந்தைகள் மீது கொட்டிவிட்டால் அந்த வேதனையை நம்மால் தாங்க முடியுமா?

அன்பிற்குரியவர்களே! கொதிக்கின்ற நீராலும், எரிகின்ற நெருப்பாலும் பட்ட காயங்களை, கடும் வேதனைகளை இவ்வுலகில் மருந்திட்டு ஆற்றிட முடியும்.

ஆனால் மறுமையில்…!

ஆம்! மறுமையில் இவ்வுலக நெருப்பை விட 70 மடங்கு

அதிகமான நரக நெருப்பு காத்திருக்கின்றது. கொதிக்கும் நீரும், சீழும் சலமுமே நரகத்தில் குடிபானமாகும். அங்கே நெருப்பு ஆடைகளும், சம்மட்டி அடிகளுமே நிறைந்திருக்கும். அங்கே வாழவும் முடியாது, சாகவும் முடியாது.

இந்த நரக நெருப்பில் நிரந்தரமாக தங்கப் போகிறவர்கள் யார் தெரியுமா சகோதரர்களே! அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்கள் தான்!

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.

அல்குர்ஆன் 5:72

யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி (1238)

இந்த இணை கற்பிக்கும் பாவம் இறைவனுக்குச் செய்யும் மாபெரும் அநியாயமாகும்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக் காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும். (அல்குர்ஆன் 31:13)

ஒருவன் இறைவனுக்கு இணை கற்பித்த நிலையில் மரணித்து விட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். 

அல்குர்ஆன் 4:48

அன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர, சகோதரிகளே! இப்போது சிந்தித்துப் பாருங்கள். யாருமே காப்பாற்ற முடியாத அந்த மறுமை நாளில் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது இந்த இணைகற்பிக்கும் பாவம்தான்.

இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கவழிபாடுகளை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வதும், அல்லாஹ்வின் வல்லமையைப் போன்று, பண்புகளைப் போன்று இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், இறைவ னல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கச் சட்டமாகப் பின்பற்றுவதுமே இணைகற்பிக்கும் பாவமாகும்.

இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் தர்ஹாவழிபாடுகள், தரீக்கா வழிகேடுகள், கொடிமரத்தை வழிபடுதல், தாயத்து, தகடுகளைத் தொங்கவிடுதல், மவ்லிதுகள், ஸலாத்துன் நாரியா, சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புதல், ஜோசியம் பார்த்தல், மைபோட்டு பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், சகுனம் பார்த்தல், திருமணப் பந்தலில் வாழை மரத்தைக் கட்டிவைத்தால் குழந்தை பாக்கியம் உருவாகும் என்ற நம்பிக்கை, ஆரத்தி எடுத்தல், கழித்து வைத்தல், தாலிகட்டுதல், படியரிசி போடுதல், புதுவீடு கட்டும் போது நாள் செய்வது, சிக்கன் பாக்ஸ் நோய் ஏற்பட்டால் கோயிலில் சென்று மந்திரிப்பது போன்ற எண்ணற்ற இணைவைப்புக் காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்பிற்குரியவர்களே! இந்த இணைவைப்புக் காரியங்கள் நம் மறுமை வாழ்வைப் பாழாக்கி நம்மை நிரந்தர நரகத்திலே சேர்த்துவிடும். மறுமையில் நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தில் சேர்ப்பது ஏகத்துவம் என்ற தவ்ஹீத் கொள்கைதான்.

எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை யாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி 1237)

நம்மை நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த இணை வைப்பை ஒழித்திடவும், சுவர்க்கத்தைத் தந்திடும் தவ்ஹீத் கொள்கைக்கு வழிகாட்டிடவும் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31 அன்று  மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை  தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நடத்த உள்ளது. இதில் தாங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

அல்குர்ஆன் 47:19

ஒவ்வொருவரும் ஓரிறைக் கொள்கையைத் தான் முதன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் பெரும் பாலான முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர்.

இவ்வாறு நாம் கூறும் போது, நாங்கள் ஓர் இறைவனைத் தானே வணங்குகிறோம் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர். அல்லாஹ்வை இறைவன் என்று கூறுவதால் மட்டுமே ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாகக் கருதப்பட மாட்டான். மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாத ஒரு பொருளுக்கு இறைத் தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவான். மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகி விடுவான். இதன் காரணமாகத் தான் இறைவன் இந்தக் கொள்கையைக் கற்றுக் கொள்ளுமாறு மேற்கண்ட வசனத்தில் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் நம்மைப் படைத்ததன் நோக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புகாரீ 2856

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ 1238

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள் ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: முஸ்லிம் 20

இறை நம்பிக்கையின் முதல் நிலை ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையானது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்ட தாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 58

ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணை வைப்புக் காரியங்களாகும். இந்த இணை வைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத் தான் முக்கியத்துவம் தருவான்.

இதை அறியாதவர்களாக இருப்பதால் தான் இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

இவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராபத்தானவை என்பதைப் பின்வரும் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை

இறைவனுக்கு இணை கற்பிக்காத வர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் சென்று விடுவார்கள். இதிலிருந்தே நாம் ஓரிறைக் கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப் தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக்(ரலி)

நூல்: புகாரி 4250

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (மிஃராஜ் பயணத்தின் போது) மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப் பட்டன. 2. அல்பகரா அத்தியா யத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர் களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப் (படுவதாக அறிவிக்கப்)பட்டது.

நூல்: முஸ்லிம் 279

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்-, பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந் தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5827

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகு எனும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் உண்மை தான் என்றும், நரகம் உண்மை தான் என்றும், எவர் (உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

நூல்: புகாரி 3435

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட அதிகமாக வேறெதைதையும் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்க வாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

நூல்: புகாரி 1396

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன் னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 44

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பயணத்தில் வாகனம் ஒன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், “முஆத் பின் ஜபலே!என்று அழைத்தார்கள். “அல்லாஹ் வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள். முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்என்று கூறினார்கள்.

உடனே முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களே!என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள்என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத் திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 99

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலைக்) காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள், “அபூ ஹுரைராவா?’ என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!என்றேன். “என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். “நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான் தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவே தான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஹுரைரா! (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணி களையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற் செய்தி சொல்!என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.

நான், உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித் தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு, திரும்பிச் செல்லுங் கள் என்று கூறினார்என்றேன்.

அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?’ என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 52

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத் திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் “இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்)என்று அவன் கூறுவான். “(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். “அவ்வாறில்லை உனக்கு நம்மிடத் தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாதுஎன்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக் கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)’ என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்என்று கூறுவான். அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2563

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) “ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

நூல்: அஹ்மத் 20349

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்குச் செய்கின்ற சேவை களிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.

ஏனென்றால் இதனை எடுத் துரைக்கும் போது பலவிதமான சோதனைகள் பலவிதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனை கள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங் கினாலும், எவ்வளவு பின்னடைவு களைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதி கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கையின் அவசியத்தை இதுவரை கண்டோம். இணை வைத்தலின் தீமைகளைப் பற்றி காண்போம்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

திருக்குர்ஆன் 4:36

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக் கிறான். அவன் உணவளிக்கப் படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாம வனாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, நீங்கள் அல்லாஹ் வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே.

திருக்குர்ஆன் 6:151

மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை நான் வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்ட வனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்!

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 10:104-106

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை யிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனி டமே உள்ளது என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:36

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 28:87, 88

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:20

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 31:13

இணை வைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப் பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிகக் கடுமையான பாவமாக இணை வைத்தலைத் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணை வைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை, அதாவது ஓரிறைக் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

பின்வரும் ஹதீஸ்கள் இணை வைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதுஎன்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்என்று சொல்லிவிட்டு பிறகு எது? என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வதுஎன்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபச்சாரம் செய்வதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 4477

நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 2653

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 2766

இணை கற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து விடும்

இணை கற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச் சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதுபோல் ஒருவன் இணை வைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாக மாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள் நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணை கற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65, 66

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

திருக்குர்ஆன் 98:6

இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது

தனக்கு இணை கற்பிக்கப்படு வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோ ருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணை வைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4654

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத் தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்ப தற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ஆம் என்று கூறுவான். இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்) என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6538

ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர். இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, “அபூ ஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 99

இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் பிறமதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?

மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதன் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

இணை வைப்பதின் பேராபத் தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்த மானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ் வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 9:28

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளி யேற்றாதோருக்கும் நன்மை செய்வ தையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங் களிலிருந்து உங்களை வெளியேற்றி யோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 60:8, 9

இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப் படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

அல்குர்ஆன் 31:15

நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் ஃபித்துன்யா – இவ்வுலகில் என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.

இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.

  1. திருமணம்
  2. பள்ளிவாசல் நிர்வாகம்
  3. பாவ மன்னிப்புத் தேடுதல்
  4. ஜனாஸா தொழுகை

போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.

திருமணம்

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யா தீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந் தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப் பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப் பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

பள்ளிவாசல் நிர்வாகம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். அல்லாஹ் வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருது கிறீர்களா? அவர்கள் அல்லாஹ் விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:17, 18, 19

பாவ மன்னிப்புத் தேடுதல்

இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண் டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.

(நபியவர்களுடைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்என்று சொன்னார்கள். அப்போது தான், இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான் எனும் (28:56வது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 4772

இணை வைப்பில் இறந்தவர் களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப் படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1622

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக் காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை

இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்குக்காக அதாவது இணை வைத்த நிலையில் இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.

(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:80

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ் வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

அல்குர்ஆன் 9:84

நாம் மேலே பட்டியலிட்ட விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.

இணை வைப்போரைப் புறக்கணித்தல்

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன் பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும் புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்கு வோரே அநீதி இழைத்தவர்கள். உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத் தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:23, 24

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப் போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 15:94

இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன் 12:106

அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.

(தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்)

—————————————————————————————————————————————————————-

இணைவைப்பே தீமைகளின் தாய்!

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை.

இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் மக்களும் அல்லது ஏக இறைவனுக்கு இணையாக துணை யாக ஏதேனும் ஒன்றைக் கருதும் மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் மனிதர்களின் சொந்தக் கரங்களாலும் கற்பனை களாலும் உருவாக்கப்பட்ட சடங்கு களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எனவே, இந்த உலகில் வாழும் போது எண்ணற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அல்லது எதிர்ப்படும் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பாவமான காரியங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், இவர்களிடம் இருக்கும் இணை வைப்புக் கொள்கையே இவர்கள் செய்யும் அனைத்து தீமைகளுக்கும் பாவங்களுக்கும் உண்மைக் காரணமாக, முக்கிய அடிப்படையாக உள்ளது. இது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

மக்களைத் துண்டாடும் தீண்டாமை

இனம், மொழி, நிறம் ரீதியாக மக்களைத் துண்டாடும் தீண்டாமைக் கொடுமை இன்னும் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல நாடுகளிலும் நிறவெறி என்ற பெயரில் தீண்டாமை பரவியுள்ளது. இதைக் கண்டித்து, பல குரல்கள் ஒலித்துள்ளன. பல்வேறு விதமான போரட்டங்கள், புரட்சிகள் நடந்துள்ளன. ஆனாலும், இதை ஒழிக்க முடியவில்லை.

காரணம், இதன் மூலம் பாதிக்கப் படும் மக்கள் நினைப்பது போல, கல்வி, பொருளாதரம், அதிகாரம் போன்றவை கிடைக்காமல் இருப்பது தீண்டாமைக்குக் காரணமல்ல. மனிதர் களிடம் இருக்கும் இணைவைப்பு கலந்த ஆன்மீகக் கொள்கையே மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. தீண்டாமைக்கு எதிராகப் போராடும் நபர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக அளவிலும், உள்ளூர் அளவிலும் கவனித்துப் பாருங்கள். வெள்ளை நிறத்தவர்கள் அல்லது குறிப்பிட்ட இனத்தவர்கள், குலத் தவர்களின் கடவுள் கொள்கையை எடுத்துப் பார்த்தால், இறைவன் தங்களை மட்டுமே மேன்மையாகவும் மற்றவர்களை இழிவாகவும் படைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ சமரசம் செய்து கொள்ளவோ முன்வர மறுக்கிறார்கள்.

அதனால் தான், பல காலங்கள் கடந்தாலும், சமூக நிலை மாறினாலும், வாழ்க்கை முன்னேற்றம் அடைந் தாலும் இதுபோன்ற பாகுபாடுகள் மறையாமல் இருக்கின்றது.

இந்நிலையில், ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் மட்டுமே இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கிறது. உலக ஒற்றுமைக்கான காரணியை அழகாக அழுத்தமாக முன் வைக்கிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத் திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர் ஆன் 4:1

இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆரம்பத்தில் ஒரு மனித ஜோடியை மட்டுமே படைத்தான். அந்த ஒரு தாய் தந்தையரில் இருந்தே முழு மனித சமுதாயமும் தோன்றியது என்று இஸ்லாம் கூறும் உண்மையை ஒவ்வொருவரும் உளமாற உணர்ந்து, அதற்கேற்ப வாழும்போது தீண்டா மைக்கு அறவே இடம் இருக்காது.

மனித குலத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க இஸ்லாம் மட்டுமே உரிய, உயரிய வழியாக இருக்கிறது. தீண்டமைக்குரிய அடையாளங்களை அவலங்களைச் சுமந்திருக்கும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதுமே அவை அனைத்தும் காணாமல் போய்விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கும் மேலாக, ஏற்றத் தாழ்வுக்கு வித்திடும் அனைத்து வாதங்களையும் பின்வரும் வகையில் கடுமையாகக் கண்டித்து வெறுப்பது இஸ்லாத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

அரபி மொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களை விட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (22391)

அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப் பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ் வின் பாதையில் செய்யப்படும் போர் எது?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, “எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.

நூல்: புஹாரி (123)

இனத்திற்காகப் போரிடுபவர் இஸ்லாத்திற்காகப் போரிடுபவர் அல்ல என்பதை இதன் மூலம் நபியவர்கள் விளக்குகின்றார்கள். தனது சாதியைச் சேர்ந்தவன், தனது மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் செய்த தவறுகளை நியாயப்படுத்துவதையும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிப் போராடுவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் இஸ்லாம் இதைக் கண்டிக்கின்றது.

இரக்கமற்ற பெண்சிசுக் கொலை

மகப்பேறு மருத்துவ மனைகளில், பரிசோதனை மையங்களில் ஒரு பொது அறிவிப்பு வைக்கப்பட்டு இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பரிசோதிப்பது பெரும் குற்றம்; இந்தத் தடையை மீறுவோருக்குத் தண்டனை கிடைக்கும் என்று அதில் இடம் பெற்றிருக்கும். இதற்குரிய காரணம் சொல்லாமலே அனைவருக்கும் புரிந்து விடும்.

பெண் பிள்ளை பிறந்தால் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் கொடூரர்கள் நிறைய இருக்கிறார்கள். காரணம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறப்பது அவமானமாகவும், வாழ்க்கை சுமையாகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு கருதுவதற்கும் இருப் பதற்கும், அவர்களின் வாழ்க்கை நெறியான இணை வைப்புக் கொள்கையே அடிதளமாக இருக்கிறது.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தை களைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.

திருக்குர்ஆன் 6:137

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடு கிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தி யினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:58,59

ஏக இறைவனே தான் நாடியோருக்கு குழந்தை பாக்கி யத்தைத் தருகிறான். இது அவனது மிகப்பெரும் கிருபை, அளப்பறிய அருள் என்கிறது இஸ்லாம். குழந்தை இல்லாமல் சோதனையில் துடிக்கும் தம்பதியர்களைப் பார்க்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர் ஆன் 42:49, 50

இன்னும் ஒருபடி மேலாக, பெண் குழந்தையைச் சீராக வளர்க்கும் நபர்களுக்கு மறுமையில் நிறைவான நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கிறது. எனவே தான், ஓரிறைக் கொள்கையை ஏற்று, பின்வரும் செய்திகளை மனதில் கொண்டு வாழும் முஃமின்களிடம் பெண் சிசுக் கொலை எனும் கொடிய காரியத்தைக் காண முடியவில்லை.

இரு சிறுமிகளை பருவம் அடையும் வரை யார் பராமரிக் கிறார்களோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கை விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4765)

மூளையை மழுங்கடிக்கும் மூடநம்பிக்கைகள்

மனிதப் படைப்பின் முக்கியமான முதன்மையான அடையாளமே பகுத் தறிவு தான். அதை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் ஏராளமான மூடநம்பிக்கைகள் மனிதர்களிடம் இருக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறுவது முதல் வீடு கட்டுவது வரை அனைத்திலும் இதன் தாக்கத்தைக் காணலாம்.

பெரும்பாலான மக்கள் சகுனம், ஜோசியம், சூனியம், நரபலி என்று மூளையை மழுங்கடிக்கும் சிந்தனை களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவற்றின் மூலம் செல்வத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கிறார்கள்.

நன்றாக இருக்கும் வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடித்துத் தள்ளுவார்கள். ஒழுங்காக நடக்கும் வியாபாரத்தை யாரோ செய்வினை வைத்து விட்டதாகக் கருதி இழுத்து மூடுவார்கள். நோய் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்காமல் பேய் பிடித்து விட்டதாகக் கூறி மந்திரவாதிகளிடம் சென்று தங்கள் பொருளாதாரம், கற்பு, உயிர் போன்றவற்றை இழப்பார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது அவர்களின் வாழ்க்கை முறையாக விளங்கும் இணைவைப்புக் கோட்பாடு தான்.

நாம் அவர்களுக்கு வழங்கிய வற்றில் இருந்து ஒரு பாகத்தை தாங்கள் அறியாதவைகளு(க்காக கற்பனைக் கடவுளு)க்காகப் படைக்கின்றனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் இட்டுக் கட்டியது பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

திருக்குர் ஆன் 16:56

அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும், கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்து கின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியதுஎன்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங் களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தை களைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாதுஎன்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

இக்கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 6: 136-139)

இவை மட்டுமல்ல, விளக்கேற்றிய பிறகு செல்வத்தை யாருக்கும் தரக் கூடாது; மாதவிடாய் பெண்கள் வீட்டுக்குள் வரக் கூடாது; கணவனை இழந்த பெண்கள் எதிரே வந்தால் காரியம் விளங்காது; காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள்; கை அரித்தால் பணம் வரும்; கயிறு கட்டினால் நோய் குணம் ஆகும்; தகடு மாட்டி வைத்தால் துன்பம் வராது; ஜோசியம் மூலம் நாளை நடப்பதை அறியலாம் என்று ஆயிரக்கணக்கான மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.

இதுபோன்ற பகுத்தறிவுக்குப் பங்கம் விளைவுக்கும் சிந்தனைகளை இஸ்லாம் துடைத்து எறிகிறது. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப் படியே நடக்கின்றன. அவனுடைய அனுமதி இல்லாமல் எந்தவொரு இன்பமும், துன்பமும் வராது என்கிறது, இஸ்லாம்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறை களில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 31:34

எல்லாம் அவன் செயல் என்று ஏக இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் போது குருட்டுத் தனமான காரியங்கள் பக்கம் போக வேண்டிய அவசியமே இருக்காது. இந்த நேரம் இதை செய்யக் கூடாது; அந்த இடத்தில் அதைச் செய்யக் கூடாது என்றொல்லாம் சிந்தனையை குழப்பிக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்காது. ஒரு வரியில் விளக்குவதாக இருந்தால், இணை வைப்பு கொள்கைக்கு மாற்றமாக ஓரிறைக் கொள்கை சொல்லும் வகையில் நம்பிக்கை இருக்கும் போது மட்டுமே மூடநம்பிக்கைகள் மண்மூடிப்போகும்.

ஏக இறைவனுக்கு இணை கற்பிப்பதால் ஏற்படும் இன்னும் சில சமூகத் தீமைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

ஜோதிடமும் சூனியமும்

ஆர். ரஹ்மத்துல்லாஹ். எம்.ஐ.எஸ்.சி.

அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ் வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவனைப் போல் எதுவும் இல்லை.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும்.

எந்த ஒரு பண்பாவது அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவருக்கும் உள்ளது என்று நம்பினால் அதுவும் இணை கற்பித்தல் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு ஜோசியத்தையும் சூனியத்தையும் ஆராய்வோம்.

ஜோசியம் பார்ப்பது இணை வைத்தலே!

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 27:65

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 

அல்குர்ஆன் 6:59

மறைவான விஷயம் மலக்கு மார்கள், ஜின்கள், நபிமார்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது என்பதை மிகத் தெளிவாக இறைவன் விளக்குகின்றான். எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகச் சொல்லி ஜோசியம் பார்ப்பது, அருள்வாக்கு சொல்வது, பால் கிதாபு பார்ப்பது ஆகிய அனைத்திற்கும் இந்த ஒரு வசனமே மரண அடியாக இருக்கிறது.

மறைவான ஞானத்திற்குச் சொந்தக் காரன் அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள அந்த ஆற்றல் ஜோசியக்காரனுக்கும், பால் கிதாபு பார்ப்பவனுக்கும் இருப்பதாக நம்பினால் அது இணை வைத்தலாகும்.

இதைப் பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒருவர் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் அவர் முஹம்மதுக்கு அருளப்பட்ட(இஸ்லாத்)தை விட்டும் நீங்கிவிட்டார்.

அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவுத் (3405)

சூன்யமும் ஒரு இணைவைத்தலே!

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது. அது எப்படி என்று பார்ப்போம்.

பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உண்டு. மனிதர்களுக்கும் உண்டு.

அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.

ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்குத் தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.

இந்த விஷயத்தில் அல்லாஹ் வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?

சூனியக்காரன் உருட்டுக்கட்டை யால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப் படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.

இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காகத் தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்பவனிடம் போய் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனைப் பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டிய வரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்தப் பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வுக்கே உரித்தான ஆற்றலை சூனியக் காரனுக்கு இருப்பதாக நம்புவதும் இணைவத்தலாகும். சூனியத்தை உண்மையென்று நம்பியவன் ஒரு போதும் சுவனம் செல்லமாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

நூல்: அஹ்மது (26212)

சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது.

அல்லாஹ்வின் ஆற்றலை ஜோதிடக்காரனுக்கும் சூனியக் காரனுக்கும் இருப்பதாக நம்பி இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம் அடையாமலிருக்க வல்ல ரஹ்மான் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இணையில்லா இறைவனுக்கு இணை கற்பிப்பது மன்னிக்கப்படாத குற்றம்

நன்மைகளை நாசமாக்கும் நச்சுக் காரியம்

நிரந்தர நரகில் தள்ளும் நிகரில்லாப் பாவம்

மனிதன், இறைவனுக்கு இழைக் கின்ற மகத்தான அநீதி

இணை வைப்பு தொடர்பான இந்தத் தகவல்களையெல்லாம் நாம் நன்கறிவோம். இந்தச் சிறப்பிதழில் பல்வேறு தலைப்புகளில் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அத்தகைய இணைவைப்பைச் செய்வதால் ஏற்படும் இம்மை, மறுமை இழப்புகளை, இணைவைப்பின் விபரீதங்களை அல்லாஹ் திருக் குர்ஆனில் நிறையவே கூறியுள்ளான்.

அந்த வரிசையில் தனக்கு இணை கற்பிப்பது எந்த வகையிலும் தகாது என்பதை மனித சமுதாயத்திற்கு விளக்குவதற்காக இணைவைப்பிற்கு இறைவன் சில உதாரணங்களையும் குறிப்பிடுகிறான்.

அந்த உதாரணங்கள் மக்களுக்கு சொல்லும் பாடம் ஒன்று தான்.

இறைவனுக்கு இணையாக்கப் படுபவர்கள் மிகவும் பலவீனமான வர்கள். அவர்கள் ஒரு போதும் இறைவனுக்கு இணையாக மாட்டார்கள். எனவே இறைவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்பது தான் அது மக்களுக்கு சொல்லும் மகத்தான சேதி.

சொர்க்கத்தை ஹராமாக்கி, அழித்தொழிக்கும் இந்த ஷிர்க் எனும் பெரும்பாவத்திலிருந்து மக்கள் முற்றாக விலகிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளுடன் இணைவைப்பிற்கு திருக்குர்ஆனில் இறைவன் சொன்ன உதாரணங்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

வானத்திலிருந்து விழுபவனைப் போல்…

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவன் நேர்வழியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறான் என்பதை விளக்கும் விதமாக அல்லாஹ் பின்வருமாறு உதாரணம் கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காத வர்களாக (ஆகுங்கள்!)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.

அல்குர்ஆன் 22:31

வானத்திலிருந்து கீழே விழுபவன் சீராக அவனது இலக்கை அடைந்து விட முடியாது, வழியிலேயே பறவைகள் அவனை கொத்தி தூக்கி சென்று விடும், அல்லது காற்று அவனைத் தொலைதூரத்தில் வேறு திசையை நோக்கி வீசியெறிந்து விடும். இப்படி அவன் சரியான இலக்கை அடைய முடியாமல் அலைக்கழிக்கப் படுவான்.

அது போலத்தான் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் தங்கள் நோக்கம் என்னவோ அதை அடையவே முடியாது. அவர்களுக்கு உறுதியான, எந்த நிலைத்தன்மையும் இல்லை என்பதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் விளக்குகிறான்.

பறவையின் வாயில் அகப் பட்டிருக்கும் இணைவைப்போரே! காற்றலையில் சிக்கித் தவிக்கும் முஷ்ரிக்குகளே! இனியாவது அதிலிருந்த விடுபட முற்படுங்கள்.

தண்ணீரை நோக்கிக் கையை விரிப்பவன்

இணை கற்பிப்பவன் தனது நோக்கத்தை அடைய முடியாது, அவன் எதை வேண்டுகிறானோ அது ஒரு போதும் நிறைவேறாது என்பதை விளக்கும் விதமாக இன்னொரு உதாரணத்தையும் அல்லாஹ் கூறியுள்ளான்.

ஒருவன் கடுமையான தாகத்துடன் இருக்கிறான் எனில் அதற்கான தீர்வு தண்ணீரை மொண்டு குடிப்பதாகும். அதை விடுத்து ஒருவன் தண்ணீரை நோக்கி இரு கரங்களையும் விரித்து வைத்துக் கொண்டால் தண்ணீர் தானாக வாய்க்குள் சென்று விடாது. கைகளுக்குள்ளும் நிரம்பி விடாது.

அப்படிச் செய்பவன் அடி முட்டாளாகவே பார்க்கப்படுவான்.

இறைவனுக்கு இணை கற்பிப் பவன் அப்படியொரு அடிமுட்டாளா கவே பார்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தில் அல்லாஹ் இந்த உதாரணத்தை குறிப்பிடுகிறான்.

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனையன்றி இவர்கள் யாரைப் பிரார்த் திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

அல்குர்ஆன் 13:14

அல்லாஹ் அல்லாதவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்பவன் தண்ணீரை நோக்கி கையை விரித்து வைத்திருப்பவனைப் போன்று என அல்லாஹ் குறிப்பிட்டு விட்டு, தண்ணீர் எப்படித் தானாக வாய்க்குள் செல்லாதோ அது போல் இவர்களது பிரார்த்தனை ஒரு போதும் நிறைவேறாது என்று விளக்குகிறான்.

அல்லாஹ் அல்லாதவர்களிடம் இவர்கள் என்னதான் மன்றாடினாலும் அந்த பிரார்த்தனை வீணானதே என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இந்த உதாரணம் பறைசாற்றுகின்றது.

சிலந்தி வலை

மழை, வெயில் போன்ற இடர்களிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள விரும்புவன் உறுதியான கட்டடத்தைப் பாதுகாப்புத்தளமாகத் தேர்வு செய்ய வேண்டும். ஓட்டை விழுந்த குடிசையைப் பாதுகாப்பிற் கான இடமாகத் தேர்வு செய்வானேயானால் அது மனிதனுக்கு இத்தகைய இடர்களிலிருந்து எந்தப் பாதுகாப்பையும் அளித்து விடாது.

ஓட்டை விழுந்த குடிசையே பாதுகாப்பளிக்காது என்றால் சிலந்தி வலையின் நிலை என்ன?

மழைக்கோ, வெயிலுக்கோ சிலந்தி வலையை ஒதுங்குமிடமாகத் தேர்வு செய்தவனை என்னவென்பது? அவனுக்கு அறிவு உண்டு என நாம் ஒப்புக் கொள்வோமா?

தங்களுக்கு ஏற்படுகிற துன்பங் களிலிருந்து விடுவிப்பதற்காக அல்லாஹ்வை அழைக்காமல் இறைவனால் படைக்கப்பட்டவர்களை அழைப்பவர்கள், சிலந்தி வலையை பாதுகாப்பிற்காகத் தேர்வு செய்தவர் களின் நிலையை ஒத்திருக்கிறார்கள்.

சிலந்தி வலை எப்படி மிகவும் பலவீனமானதோ அது போல அல்லாஹ் அல்லாத இவர்கள் தேர்வு செய்திருக்கும் இணையாளர்களும் அதை விடப் பலவீனமானவர்களே!

இவ்வாறு பின்வரும் உதாரணத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு இணையாக்கப்படுவோர் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இறைவன் விளக்குகிறான்.

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடு களிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

அல்குர்ஆன் 29:41

முஸ்லிம்களே! நீங்கள் எதைத் தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உறுதியான பாதுகாப்பை வழங்கும் வல்லோன், வலியோன் அல்லாஹ்வை விட்டு விட்டு அவனால் படைக்கப் பட்ட அற்ப மனிதர்களையும், கற் சிலைகளையுமா உங்கள் பாதுகாவலர் களாகத் தேர்வு செய்திருக்கிறீர்கள்?

எளிதில் அறுந்து போகும் சிலந்தி வலையை அறுத்தெறிந்து விட்டு அல்லாஹ்வின் உறுதியான பாதுகாப்பை இறைஞ்சுங்கள்.

எஜமானனும் அடிமையும் சமமா?

தனக்கு நிகராக, சமமாக யாரும் இருக்க இயலாது என்பதை விளக்க இறைவன் நம்மையும் உதாரணமாகக் குறிப்பிடுகிறான்.

ஒரு எஜமானன் தம் செல்வத்தில் ஒரு பகுதியை தனது அடிமைக்கு வழங்கி தனக்குச் சமமாக ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை.

அது போலத்தான் நான் எனது ஆற்றலை, அதிகாரத்தை என் அடிமைகளுக்கு வழங்கி எனக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை என்று பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

அல்குர்ஆன் 16:71

இறைவன் தன் ஆற்றலை யாருக்கும் வழங்க மாட்டான் என்பதை விளக்க இறைவன் காட்டியிருக்கும் இவ்வுதாரணம் அதி அற்புதமானது.

இன்றைக்கு இணை கற்பிக்கும் அதிகமானோரால் தங்களது இணை வைப்பை நியாயப்படுத்த முன் வைக்கப்படும் வாதம், அல்லாஹ்தான் இந்த அதிகாரத்தை அவ்லியாக்களுக்கு வழங்கினான்; அல்லாஹ் தான் இந்த அதிகாரத்தை இன்னாருக்கு வழங்கினான்; அல்லாஹ் தான் வழங்கினான் என்று நாங்கள் நம்புவதால் இது இணை வைப்பல்ல என்று தங்களுக்கு தாங்களே போலிச் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள்.

அத்தகையவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இறைவன் காட்டும் இந்த உதாரணம் அமைந்துள்ளது.

உனக்குச் சொந்தமான பொருளை உன் அடிமைக்கு வழங்கி அவனை உனக்குச் சமமாக்கிக் கொள்வாயா?

நீயும் உன் அடிமையும் சமம் என்கிற நிலையை நீயே ஏற்படுத்திக் கொள்வாயா?

இதை நீயே விரும்புவதில்லை என்றால் அகிலத்துக்கும் இறை வனாகிய நான், என் அடிமைகள் எனக்குச் சமமாவதை எப்படி விரும்புவேன்?

நானே என் அதிகாரத்தை அடிமைகளுக்கு வழங்கி எனக்குச் சமம் என்கிற நிலையை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டேன்.

இது தான் இந்த உதாரணத்தின் வாயிலாக மக்களுக்கு அல்லாஹ் முன் வைக்கும் கருத்தாக்கமாகும்.

எனவே அவ்லியாக்களுக்கு இறையதிகாரத்தை அல்லாஹ்வே வழங்கினான் என்று சொன்னாலும் இணை வைப்பு எனும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும்.

ஒரு அடிமையும் பல எஜமானர்களும்

இறைவனல்லாத பலருக்கும் இறைத்தன்மை வழங்குவோரைக் கண்டிக்கும் விதமாகப் பின்வருமாறு மற்றொரு உதாரணத்தை அல்லாஹ் கூறுகிறான்.

ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகி றான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 39:29

ஒரு அடிமைக்கு ஒரு எஜமானன் இருக்கிறான் எனும் போது அந்த அடிமை தன் எஜமானனுக்கு விசுவாசமாக நடந்து நற்பெயர் எடுப்பான். தன் எஜமானனிடத்தில் நன்மதிப்பைப் பெறுவான்.

அதே சமயம், ஒரு அடிமைக்கு மாறுபட்ட தன்மை கொண்ட பல எஜமானர்கள் இருக்கிறார்கள் எனில் இவன் யாருக்குத் தான் விசுவாசமாக நடக்க இயலும்?

அவன் சரியான வேலையாளாகச் செயல்பட இயலாது என்பதுடன் குழப்பங்களும், கோளாறுகளுமே மிஞ்சும்.

அது போல இறைவன் ஒருவனையே எஜமானனாக தேர்வு செய்து அவனுக்கே அடிமையாக இருப்பவன் குழப்பமற்ற நேரான கொள்கையில் இருக்கிறான்.

அல்லாஹ்வுடன் சேர்த்து பலருக்கும் இறைத்தன்மையை வழங்கி, வணங்குபவர்கள் குழப்பமான கொள்கையில் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் இந்த உதாரணத்தின் வாயிலாகத் தெரிவிக்கின்றான்.

விளங்காத கால்நடைகள்

இறைவனுக்கு இணை கற்பிக்கும் இறைமறுப்பாளர்கள் வார்த்தைகளை விளங்காமல் வெறும் சப்தத்தை மட்டுமே கேட்கும் கால்நடைகளிடம் தங்கள் தேவைகளைக் கேட்பதற்கு ஒப்பானவர்கள் என்று இறைவன் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வெறும் சப்தத்தையும், ஓசை யையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:171

ஆடு மாடுகளிடம் அதன் மேய்ப்பர்கள் சொல்லும் வார்த்தைகளை அக்கால்நடைகள் முறையாகச் சிந்தித்து புரிந்து கொள்வதில்லை. வெறும் சப்தத்தை மட்டுமே அவை கேட்கின்றன. இந்த கால்நடைகளிடம் போய் எனக்கு செல்வத்தைக் கொடு, குழந்தையைக் கொடு என்று கேட்பவர்கள் எத்தகைய மூடர்கள் என்பதை இறைவன் இங்கு விளக்குகிறான். இவர்கள் காதிருந்தும் செவிடர்கள், கண்ணிருந்தும் குருடர்கள், வாயிருந்தும் ஊமைகள் என்று அல்லாஹ் உவமை காட்டுகிறான்.

செவிடன், குருடன்

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இவ்விரு பிரிவினருக் கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார்வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா? நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா?

அல்குர்ஆன் 11:23, 24

ஷைத்தானால் குழப்பத்தில் தள்ளப்பட்டவன்

ஈடு, இணையற்ற இறைவனுக்கு இணை கற்பிப்போர் ஷைத்தானால் குழப்பப்பட்டு வழிகேட்டில் தள்ளப் பட்டோர் ஆவார்கள் என்ற உவமையையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) “எங்களிடம் வந்து விடுஎன நேர்வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் யாரை வழிகெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டார்களோ அவனைப் போல் ஆகி விடுவோம்எனக் கூறுவீராக! “அல்லாஹ்வின் வழியே நேர்வழி. அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளோம்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:71

ஈயைக் கூட…

பின்வரும் வசனத்தில் இணை வைப்போருக்கும் இணையாக ஆக்கப்படுவோருக்கும் இறைவன் காட்டும் உதாரணம் எந்த விளக்கமும் கூறத் தேவையில்லாதது.

இதோ அல்லாஹ்வின் வார்த் தையைப் படித்துப் பாருங்கள்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனர்கள் என்கிற அல்லாஹ்வின் வார்த்தை ஒன்று போதும்.

இனியும் அவ்லியாக்கள், மகான்கள் என பிதற்றிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு ஸஜ்தா செய்வது, அவர்களிடம் பிரார்த்தனை புரிவது போன்ற இணை வைப்புக் காரியங்களை விட்டும் விலகி இணையில்லா இறைவன் ஒருவனையே வணங்குங்கள், அவனிடமே உங்கள் தேவைகளை கேளுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

புயல் காற்றில் புழுதியாகும் சாம்பல்

இணை கற்பிப்போருக்கு அல்லாஹ் உதாரணம் கூறுவதுடன் அவர்கள் உலகில் செய்கின்ற நன்மையான செயல்களுக்கும் இறைவன் உதாரணம் கூறத் தவறவில்லை.

இணை வைப்பாளர்கள் என்ன தான் நற்காரியங்கள் புரிந்தாலும் அது புயல் காற்றில் பறக்கும் சாம்பலைப் போன்று ஒன்றுமில்லாமல் அழிந்து விடும் என்கிறான்.

தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும்.

அல்குர்ஆன் 14:18

கானல் நீர்

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 24:39

ஆழ்கடல் இருள்கள்

(ஏகஇறைவனை மறுப்போரின் செயல்கள்) ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.

அல்குர்ஆன் 24:40

இணை வைப்போரின் நன்மைகள் அழிந்து போகும் என்று இறைவன் திருக்குர்ஆனில் பல இடங்களில் எச்சரித்துள்ளான்.

இந்த உதாரணங்கள் அவர்களது அமல்கள் அழிந்து எப்படி ஒன்றும் இல்லாமல் போகிறது என்பதைத் துல்லியமாக விளக்கி விடுகிறது.

அல்லாஹ்வே சிறந்த விளக்கமுடையோன் என்பதற்கு இவ்வுதாரணங்கள் ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.

இம்மை, மறுமையில் ஈடுகட்ட முடியாத இழிவை ஏற்படுத்தும் இணை வைப்பிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

உணரப்படாத தீமைகள்

எம்.எஸ். சுலைமான்

ஏக இறைவனாகிய அல்லாஹ் தனக்கு இணைகள், துணைகள் எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இணை இருப்பது ஒரு கடவுளுக்குத் தகுதியானதல்ல என்பதையும் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான்.

இதையும் மீறி அல்லாஹ்விற்கு இணையானவர்கள் உண்டு என்று யாராவது நம்பினால் அதற்கு மறுமையில் மிகப் பெரிய தண்டனை காத்திருக்கின்றது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்.

இணை வைப்பின் தீமைகளை, அவற்றின் வகைகளை இந்த இதழ் முழுவதும் விவரித்துள்ளோம்.

இது ஷிர்க் என்று அறிந்து கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ள சிறிய இணை வைப்புக் காரியங்கள் பல முஸ்லிம்களிடம் மலிந்து கிடப்பதைக் காணலாம்.

இதுபோன்ற இணைவைப்புகள் அவர்களுக்கு ஒரு பாவமாகவே தெரிவதில்லை. அது இணை வைப்புக் காரியம் என்று தெரியாமலேயே செய்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் சில நேரங்களில் இதுவும் ஒரு நன்மையான காரியம் என்று கருதியே செயல்படுகிறார்கள்.

மிகப் பெரிய இணைவைப்பான விஷயங்களை விட்டு எவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் விலகி இருக்க வேண்டுமோ அதுபோன்று இந்தச் சிறிய இணைவைப்புகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

உங்கள் விஷயத்தில் நான் அதிகம் பயப்படுவது சிறிய இணை வைப்பாகும்என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், “சிறிய இணை வைப்பு என்றால் என்ன?” என்று கேட்க, “முகஸ்துதி (பிறர் போற்ற வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் நற்செயல்கள்)என்று நபி (ஸல்) அவர்க்ள பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத்

நூல்: முஸ்னத் அஹ்மத்

மிகப் பெரிய இணை வைப்பிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிப் பயந்தார்களோ அதுபோல் சின்னச் சின்ன இணை வைப்புகளுக்கும் நபியவர்கள் கடுமையாகப் பயந்தார்கள். இணை வைப்பு என்ற இந்த விஷம் எந்த வடிவத்திலும் வந்து விடக்கூடாது என்பதில் நபியவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.

சில வகை இணை வைப்புகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இன்னும் சிலவற்றை விளக்கிப் புரிய வைத்தால் தான் விளங்கும். அதுபோன்ற சில இணை வைப்புகளைப் பார்ப்போம்.

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தல்

ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கஅபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதன் மூலம் நீங்கள் இணை வைக்கின்றீர்கள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கஅபாவின் இறைவன் மீது சத்தியமாகஎன்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: குதைலா (ரலி)

நூல்: நஸயீ 3713

அல்லாஹ் அல்லாதவற்றைக் கொண்டு யார் சத்தியம் செய்கின் றாரோ அவர் இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2829

யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2679

இன்றைக்கு சர்வ சாதாரணமாக, “தாயின் மீது ஆணை’ என்றும் “குர்ஆன் மீது சத்தியமாக’ என்றும் சிலர் சொல்வதைப் பார்க்கலாம்.

சத்தியம் செய்வது என்றாலே குர்ஆன் மீது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்றும், அதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை என்றும் சிலர் நம்பி வருவதைப் பார்க்கலாம்.

ஆனால் இவ்வாறு அல்லாஹ் அல்லாத மனிதர்கள் மீதோ, பொருட்கள் மீதோ சத்தியம் செய்வது இணை வைத்தல் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே இந்த இணை வைப்பிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.

அல்லாஹ் அல்லாதவர்களைப் பயப்படுதல்

பயம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக உள்ளது தான். தன்னைத் தாக்கக்கூடிய, அழிக்கக்கூடிய எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் மனிதன் பயப்படுவான்.

தன்னுடைய மேலதிகாரி தன்னைத் தண்டிப்பார் என்றோ, அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றோ ஒரு மனிதன் பயந்து வேலை செய்வதைப் பார்க்கலாம்.

ஒரு மாணவன், ஆசிரியருக்குப் பயப்படுவான். ஒரு தொழிலாளி, முதலாளியைப் பார்த்துப் பயந்து வேலை செய்வான். இவையெல்லாம் மனிதனுக்கு இருக்கும் யதார்த்தமான அச்ச உணர்வுகள்.

ஒரு மனிதனுக்கோ அல்லது பொருளுக்கோ என்ன ஆற்றல், சக்தி இருக்கின்றதோ அந்த அளவிற்கு ஒருவன் பயப்படுகின்றான் என்றால் அது தவறல்ல!

இறைவனுக்குப் பயப்படுவதைப் போன்று சில பொருட்களுக்கோ, சக மனிதனுக்கோ பயப்படுவது தான் இணை வைப்பாக மாறிவிடுகின்றது.

எந்தவித உபகரணங்களும் இல்லாமல் ஒரு மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அவன் நினைத்தால் எந்தவித உபகரணமும் இல்லாமல் ஒரு மனிதனின் கை, கால்களை செயலிழக்கச் செய்ய முடியும்.

ஆனால் இந்த ஆற்றல் சாதாரண மனிதனுக்கோ, பொருட்களுக்கோ உள்ளது என்று சிலர் நம்புகிறார்கள். இதில் ஜோதிடம் மற்றும் சூனியம் பற்றிய செய்திகளை தனித் தலைப்பில் விளக்கியுள்ளோம். இங்கு நாம் கூறுவது, சில பொருட்கள் மூலம் நமக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்புவதைப் பற்றியதாகும்.

முஸ்லிமல்லாதவர்களோ அல்லது முஸ்லிம்களில் அறியாமையினாலோ  சில பொருட்களைத் திருஷ்டி கழித்து தெருவில் போட்டிருப்பதைப் பார்க்கலாம். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம், வாழைப்பழம், மல்லிகைப் பூ போன்ற பொருட்களை இதுபோன்று திருஷ்டி கழிப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.

இந்தப் பொருட்கள் தெருவில் கிடக்கும் போது அதைத் தாண்டிச் சென்றால் தனது உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று மனிதன் பயப்படுகிறான். இந்தப் பொருட்களால் மனிதனுக்குத் தீங்கை ஏற்படுத்த முடியுமா? அவற்றுக்கு அந்தச் சக்தி உள்ளதா?

பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதில் தயாரிக்கப் படும் உணவு கெட்டுப் போய் விட்டால் அதனால் பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர அவற்றுக்கு வேறு என்ன சக்தி இருக்கின்றது?

சாதாரண உணவுப் பொருள், அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று நம்புவது இணை வைப்பு இல்லையா? இறைவனுக்கு உள்ளது போன்ற சக்தி, அந்தப் பொருட்களுக்கு இருப்பதாக நம்புவது இணைவைப்பு இல்லையா?

அல்லாஹ் எப்படி எந்த உபகரணமும் இல்லாமல் மனிதனுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துவானோ அதுபோன்று இந்தப் பொருட்களாலும் செய்ய முடியும் என்று நம்புவது தானே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்!

தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 3:175

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந் தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதி யுள்ளவன்.

அல்குர்ஆன் 9:13

அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.

அல்குர்ஆன் 33:39

சட்டமியற்றும் அதிகாரம்

இஸ்லாம் மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே இருக்கின்றது. தன்னுடைய இந்த அதிகாரத்தை அவன் வேறு யாருக்கும் கொடுக்க வில்லை. கொடுக்கவும் மாட்டான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 39:3

அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை.

அல்குர்ஆன் 6:57

மார்க்க விஷயத்தில் தலையிடு வதற்கு இறைவன் வேறு யாருக்கும் அதிகாரம் தரவில்லை.

ஆனால் சிலர் மார்க்க விஷயத்தைத் தீர்மானிப்பதற்கும், ஹலால் ஹராம் விஷயத்தை முடிவு செய்வதற்கும் ஆலிம்கள் மற்றும் இமாம்களுக்கு அதிகாரம் உண்டு என்று கருதுகின்றனர்.

அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டோ, அவன் தனது தூதர் மூலமாகக் காட்டிய வழிமுறையைக் கொண்டோ ஒரு சட்டத்தை, மார்க்கத் தீர்ப்பை வழங்குவது தவறில்லை. ஆனால் ஆலிம்களுக்கும், இமாம் களுக்கும் தாங்களாக சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பதாக நம்புவது இணை வைத்தல் என்ற குற்றத்தில் வந்து சேர்ந்து விடுகின்றது.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதையும், அந்த அதிகாரம் தனக்கோ அல்லது தான் பின்பற்றும் இமாமுக்கோ இருப்பதாக எண்ணு வதை இறைவனுக்கு இணை கற்பிக்கும் குற்றமாகவே இஸ்லாம் மார்க்கம் பார்க்கின்றது.

அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சிய மளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

அல்குர்ஆன் 6:150

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது” என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:116

அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல்

ஒரு மனிதனைத் தண்டிப்பதும் மன்னிப்பதும் இறைவனின் தனிப் பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அவன் யாரை வேண்டுமானாலும் மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப் பலாம்; அல்லது தண்டனை கொடுத்து நரகத்திற்கு அனுப்பலாம். இவை இறைவனது தனிப்பட்ட அதிகாரத் திற்கு உட்பட்டது. இதில் நபிமார்கள் உள்ளிட்ட யாரும் தலையிட முடியாது. இறைவன் இதை அனுமதிக்கவும் மாட்டான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 3:128

இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையை உரத்துச் சொல்லும் வசனங்களில் இது முக்கியமான வசனமாகும்.

உஹதுப் போரின்போது இவ் வசனம் அருளப்பட்டது. இப்போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடியது. “தமது நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்என்று வேதனை தாள முடியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது தான் “அதிகாரத்தில் உமக்குப் பங்கில்லைஎன்ற இவ்வசனம் (3:128) அருளப்பட்டது.

(நூல்: முஸ்லிம் 3667)

தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. நீ உருப்பட மாட்டாய் என்று சாபம் இடுவார்கள். பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதை அல்லாஹ்வும் மன்னிப்பான் என 4:148 வசனம் கூறுகிறது.

ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால் ஒருவரை வெற்றிபெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது தந்து விடும். எனவே தான் “எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?” என்று வேதனை தாளாமல் இறைவனின் தூதர் கூறியதை இறைவன் கண்டிக்கிறான்.

“நான் நினைத்தால் உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட வெற்றி யளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன்; எனது அதிகாரத்தில் தலையிட நீ யார்?” என்ற தொனியில் இவ்வசனம் அமைந்துள்ளது.

இறைவனின் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அல்லாஹ்வின் அதி காரத்தில் தலையிடுவது, இறைவனின் தன்மையில் தனக்குப் பங்கிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதுவும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இணை வைப்பை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப் பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந் தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற் கான பருவத்தையும் அது அடைய வில்லைஎன்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற் கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4812 (தமிழாக்கம் 5175)

காரிஜா பின் ஸைத் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்முல் அலா (ரலி) அவர்கள் எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.

அவர்கள் எனக்குத் தெரிவித்த தாவது: “முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பதுஎன்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களுடைய பங்காக வந்தது. ஆகவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்து விட்ட போது அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), “அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் “அவரிடம் எப்படி நடந்து கொள்ளப் படும்; (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)’ என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதே யில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலை யளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க் கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்ப தாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் “அது அவருடைய (நற்)செயல்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1243, 2687

இறைவனின் அதிகாரத்தில் தலையிடுவதைப் போன்று சில சமயங்களில் நம்மையும் அறியாமல் யதார்த்தமாகப் பேசி விடுகிறோம். ஆனால் அதைத் தெரிந்தே, வேண்டுமென்றே செய்யும் போது அது இறைவனின் வல்லமையில் நாம் தலையிட்டு, அவனுக்குச் சமமாக நம்மைக் கருதுகிறோம் என்றாகி விடும்.

அதனால் தான் இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்முல் அலா (ரலி) அவர்கள், இனிமேல் யாரையும் இப்படிப் புகழ்ந்து பேச மாட்டேன் என்று முடிவு செய்கிறார்கள்.

எனவே இறைவனுடைய ஆற்ற லில் வேண்டுமென்றே தலையிடுவது இணை வைப்புக் கொள்கையைச் சார்ந்ததாகும்.

மழை பொழிவது யாரால்?

ஓர் ஊரில் மழை பொழிந்தால், “எங்கள் ஊரில் எல்லோரும் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; அதனால் தான் மழை கொட்டுகின்றது’ என்ற ரீதியில் சர்வசாதாரணமாக மக்கள் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.

மழை பொழியவில்லை என்றால் ஊரில் ஏதோ ஒரு பாவி இருக்கின்றான்; அதனால் தான் மழையே இல்லை என்று சொல்வதையும் பார்க்க முடிகின்றது.

இதைச் சிலர் விளையாட்டாகவும், சிலர் உண்மையாகக் கருதியும் பேசுவார்கள். ஆனால் எப்படிப் புரிந்து கொண்டு இவ்வாறு பேசினாலும், எழுதினாலும் இது மார்க்க அடிப்படையில் இது இணை வைத்தல் என்ற பாவத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

மழையை இறக்குகின்ற ஆற்றல் இறைவன் ஒருவனுக்குத் தான் உள்ளது.

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

அல்குர்ஆன் 42:28

அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான்.

அல்குர்ஆன் 6:99

இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.

மழை பொழிவதற்கு அல்லாஹ் அல்லாத மற்றவற்றை நாம் காரணம் காட்டினால் அது இறைவனையே மறுப்பதாகும். இதோ நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதைப் பாருங்கள்:

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியாஎனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். -அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்என்று கூறினர்.

அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்ததுஎனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்என இறைவன் கூறினான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 846

எனவே இதுபோன்ற சிறிய, பெரிய இணைவைப்புக் காரியங்களை விட்டும் நாம் விலகி, சுவனத்தைப் பெறக் கூடிய நன்மக்களாக ஆவோம்.