ஏகத்துவம் – ஜனவரி 2013

தலையங்கம்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!

கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு 8.30 மணியளவில் 23 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பயிற்சிப் பணியை முடித்து விட்டு, தனது ஆண் நண்பருடன் டேராடூனிலிருந்து டெல்லிக்குத் திரும்புகிறார். பயிற்சிப் பணி முடித்து விட்டு வருவதால் அவர் மருத்துவப் படிப்புடன் சம்பந்தமில்லாத ஆண் நண்பருடன் வந்திருக்க முடியாது. இருவரும் இரவுக் காட்சி சினிமா பார்த்து விட்டு, முனிர்கா என்ற இடத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு நிற்கின்றனர். அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. “பேருந்து துவாரகா செல்கிறது’ என்று உள்ளே இருந்தவர்கள் குரல் கொடுத்ததும் இருவரும் அதில் ஏறுகின்றனர்.

“நீங்கள் இருவரும் இரவில் ஏன் பயணம் செய்கிறீர்கள்?’ என்று உள்ளே இருந்தவர்கள் கேட்கின்றனர். “இதைக் கேட்க உங்களுக்கு என்ன அவசியம்?’ என்று பதிலுக்கு ஆண் நண்பர் கேட்கின்றார். உடனே அவர் தாக்கப்படுகின்றார். அவரைக் காப்பாற்ற அந்தப் பெண் குறுக்கிடவும் அந்தப் பெண்ணைத் தரதரவென்று பின்னிருக்கைக்கு இழுத்துச் செல்கின்றனர். ஆறு பேர் அவளை மாறி மாறிக் கற்பழிக்கின்றனர். கற்பழித்ததுடன் நில்லாமல் அவளது அடிவயிற்றில் கடுமையாக அடித்து விட்டு, இரும்புக் கம்பியால் அந்த இருவரையும் தாக்கி ஆடைகளை உருவி ஒரு பாலத்தின் அருகே இருவரையும் அரைகுறை நிர்வாணத்தில் வீசி எறிந்து விட்டனர்.

சாலையில் இருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர். இதன் பின்னர் காவல்துறையினர் அவர்களை சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இப்போது அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இந்தியாவை உலுக்கிய இந்தக் கோரக் கற்பழிப்புச் சம்பவம் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் காரசார விவாதத்தில் கலந்து கொண்ட பிஜேபி தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், பெண்களைக் கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன், “ஒரு பெண் அநியாயமாக தலைநகரில் கற்பழிக்கப்படும் போது நான் இந்த அவையில் இருந்து என்ன பயன்?’ என்று கூறி அழுது விடுகின்றார். அமைச்சர் புரந்தேஸ்வரி “இந்தக் கற்பழிப்பை மற்றொரு புள்ளிவிபரமாக ஆக்காமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கூறுகின்றார். டி.வி. சேனல்கள் இந்தச் செய்தியை மாறி மாறி வெளியிட்டு விவாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருந்தன. நாளேடுகளில் இந்தக் கொடூரச் சம்பவம் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில், டிசம்பர் 20 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த புனிதா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்படுகின்றாள்.

பொதுவாக, இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள் என்று குற்றப் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டோடு இருட்டாகக் கலந்து விடுகின்றன. இதுபோன்று தலைநகரில் நடந்து வெளிச்சத்திற்கு வருபவை மட்டுமே விவாதப் பொருளாக ஆகின்றன. இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். அப்புறம் அத்தனையும் மறந்து போய் விடும். அப்புறம் வேறொரு விவகாரம் வரும்; அதுவும் மறந்து போகும். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்று யாரும் உருப்படியாகச் சொல்லவில்லை. அவர்களால் சொல்ல முடியாது.

இந்தியாவின் குற்றவியல் சட்டம் 375 கற்பழிப்புக் குற்றத்தைப் பற்றி விவரிக்கின்றது. விதி 376, கற்பழித்தவனுக்குக் குறைந்தபட்சம் 7 வருடங்கள் தண்டனை விதிக்கலாம்; இருப்பினும் கோர்ட் நினைத்தால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். இவை தான் கற்பழிப்புக் குற்றத்திற்கு இந்தியாவின் குற்றவியல் சட்டம் கூறுகின்ற தண்டனையாகும். இந்தத் தண்டனையால் இதுபோன்ற காமக் கொடூரன்களைத் திருத்திவிட முடியுமா? இதற்குத் தீர்வு இஸ்லாமிய சட்டம் தான்; குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் தான். இதைத் தான் சுஷ்மா சுவராஜ் வேறு வார்த்தையில் சொல்கின்றார்.

கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனுக்கு இதுபோன்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் குரல்கொடுத்தனர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திய காவல்துறை, குற்றவாளிகளில் ஒருவனை என்கவுண்டரில் கொன்றது. இந்த என்கவுண்டருக்கு, எதிர்ப்புக்குப் பதிலாக மக்களிடம் ஆதரவே இருந்தது. பாதிக்கப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும் இது தான் பரிகாரமாகும். குற்றம் இனி நிகழாமல் தடுக்க வேண்டும், சமுதாயத்தைக் காக்க வேண்டும் என்ற நியாய நோக்கத்துடன் பார்ப்பவருக்குரிய எதிர்பார்ப்பும் இதுதான். இதைத் தான் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.  (அல்குர்ஆன் 24:2)

கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், “உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்என்று தீர்ப்புக் கூறினார்கள்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராகஎன்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது “அஸ்லம்குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் செய்துவிட்டேன்என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டார்கள். பின்னர், “உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (“அல்ஹர்ராஎனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270

இஸ்லாமிய சட்டத்தைக் காட்டுமிராண்டிச் சட்டம் என்பவர்கள் கூட வேறு வார்த்தைகளில், அது மனித குலத்தைக் காப்பதற்குத் தேவையான சட்டம் என்று கூறுகின்றனர். இஸ்லாம் இதை மட்டும் தீர்வாகச் சொல்லவில்லை.

வெளியே செல்கின்ற ஒரு பெண், தனது மார்பகங்கள் தெரிகின்ற வகையில் இறுக்கமான ஆடை அணிந்து செல்கின்றனர். கிஸ் மீ – என்னை முத்தமிடு என்ற வார்த்தைகளை தங்கள் மேலாடைகளில் பதித்து, ஆண்களை பலவந்தமாக, பலாத்காரமாக அழைக்கவே செய்கின்றனர். பின்பாகங்கள் பிதுங்கித் தெரிகின்ற பிடிப்பான ஜீன்ஸ் அணிந்து கொண்டு செல்வார்களாம். ஆனால் இவர்களிடம் யாரும் சேட்டை செய்யக் கூடாதாம். என்ன எதிர்பார்ப்பு?

இந்தக் கற்பழிப்புக்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களில் கூட, “ஙஹ் இர்க்ஹ், ஙஹ் தண்ஞ்ட்ற் – என் உடல், என் உரிமை” என்ற திமிரான வார்த்தைகள் அடங்கிய பதாகைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஆண்களைச் சீண்டி இழுப்பார்களாம். பதிலுக்கு ஆண்கள் எதுவும் செய்யக்கூடாதாம். இந்தத் திமிர்த்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஸ்லாம் பெண்களை பர்தா அணியச் சொல்கின்றது. இரு பாலர்களையும் பார்வைகளைத் தாழ்த்தச் சொல்கின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.  (அல்குர்ஆன் 24:30, 31)

ஒரு பெண்ணை நேரில் ஆடையின்றி, ஆபாசமாகப் பார்ப்பது எப்படித் தடையோ அதுபோன்றே திரைப்படங்களிலும், இதர ஊடகங்களிலும் பார்ப்பது தடையாகும். அந்த அடிப்படையில் இன்றைய திரைப்படங்கள் அத்தனையும் தடை செய்யப்பட வேண்டும். அந்தப் படக்காட்சிகளில் பள்ளியறை படுக்கைக் காட்சிகளைக் காட்டி விட்டு, இதைப் பார்க்கும் ஆண்கள் பெட்டையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாகும்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே! அவர்கள் என்ன ஆபாச ஆடையா அணிகிறார்கள்? என்ற கேள்வியை பெண்ணுரிமை இயக்கத்தினர் முன்வைக்கிறார்கள். பெண்களின் ஆபாச ஆடைகளும், திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதும் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்குக் காரணமாக அமைகின்றது. வெறி தலைக்கேறி ஏதுமறியாத சிறுமிகளையும் சீரழிக்கத் துணிந்து விடுகின்றான்.

இதனால் திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பத்திரிகைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். குட்டைப் பாவாடை சானியா மிர்ஸா விளையாடும் டென்னிஸ் போன்ற கூறுகெட்ட ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாணவி புனிதா கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா என்பவன், போதையில் தான் இந்தக் காரியத்தைச் செய்தேன் என்று கூறியுள்ளான். ஆக, மதுவை விற்பனை செய்யும் அரசாங்கமே இந்த மாணவியின் கொலைக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளது. எனவே மனிதனுடைய மதியை மறக்கடிக்கச் செய்கின்ற மதுவையும் தடை செய்ய வேண்டும்.

இன்னும் இதுபோன்ற, ஆண்களைச் சுண்டியிழுக்கின்ற, கிளப்பி விடுகின்ற அத்தனை காரியங்களையும் தடை செய்வது தான் இதற்குத் தீர்வும் திருப்பமும் ஆகும். இல்லையேல் இது அடுத்த மாதம் அல்ல! அடுத்த நாளே மீண்டும் நடக்கத் தான் செய்யும். இதற்கு ஒரு முடிவும் விடிவும் இல்லை.

—————————————————————————————————————————————————————-

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அப்துந் நாசிர், கடையநல்லூர்

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும்.

தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

அல்குர்ஆன் 4:103

ஒருவன் முஸ்லிம் என்பதற்கு மிக முக்கியமான அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

இப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயக் கடமையான தொழுகையை மனித சமுதாயம் சிரமப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் கடமையாக்கவில்லை. மாறாக தன்னுடைய அடியார்களுக்குத் தனது அளவற்ற அருளை வாரி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.

தொழுகையை முன்னிட்டு ஒரு அடியான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் இறைவன் வழங்கும் நன்மைகளை ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் அளவற்ற அருளை அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாக்கியம் தொழுகையாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்குமே தவிர தொழுகையை முறையாகப் பேணாதவர்களுக்குக் கிடைக்காது.

தொழுகைக்காக நாம் எத்தனையோ காரியங்களைச் செய்கின்றோம்.  பல் துலக்குதல், உளூச் செய்தல், பள்ளியை நோக்கி நடந்து செல்லுதல், பாங்கிற்குப் பதில் கூறுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், வரிசையில் நிற்பது, குனிவது, சுஜூது செய்வது போன்ற பல செயல்களைச் செய்கின்றோம்.

இவை ஒவ்வொன்றிற்கும் எப்படிப்பட்ட சிறப்புகள்? எவ்வளவு பாக்கியங்கள்? என்பதை ஒருவன் அறிந்து கொண்டால் தொழுகை என்ற வணக்கம் வாரி வழங்கும் ஒரு வற்றாத ஜீவ நதி என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தொழுகைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எப்படிப்பட்ட சிறப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் வாக்களித்துள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இறைநேசத்தை பெற்றுத் தரும் தூய்மை

தொழுகைக்குத் தயாராவதற்காக ஒருவன் பல் துலக்குகிறான், உலூச் செய்கின்றான்; குளிப்புக் கடமையானவனாக இருந்தால் குளிக்கின்றான். இவை ஒவ்வொன்றுமே தூய்மைக்குரிய காரியங்கள் தான்.

இவை நம்முடைய உடலுக்குத் தூய்மையைத் தருகின்றன. இதன் மூலம் நாம் இவ்வுலகில் அறியாத முடியாத பல நன்மைகளைப் பெறுகின்றோம். ஆனால் இத்துடன் மட்டுமல்லாமல் இறைநேசத்தையும் இந்தத் தூய்மை பெற்றுத் தருகிறது.

திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்எனக் கூறுவீராக!

அல்குர்ஆன்  2:222

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்குர்ஆன் 9:108

ஈமானில் பாதி தூய்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 381

மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் எந்த நல்லமல்களைச் செய்தாலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அது போன்றுதான் ஈமானிற்கு அடுத்து மிக முக்கிய வணக்கமாகிய தொழுகை, உலூ என்ற தூய்மை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படாது. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை ஈமானில் பாதி என்று குறிப்பிடுகிறார்கள்.

தொழுகை என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுபவர்கள் தான் ஈமானின் முழுமைத் தன்மையை அடைந்து கொள்ள முடியும் என்பதையும் இந்தச் செய்தியிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பல் துலக்குவதன் சிறப்புகள்

தொழுகைக்காக நாம் உலூச் செய்கின்றோம். இப்படி உலூச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் பல்துலக்குவது சுன்னத்தாகும்.

பல நோய்களுக்கு மூலமாகத் திகழ்வது நம்முடைய வாய் தான். இதன் காரணமாக ஒவ்வொரு பல் மருத்துவமனையிலும் நாம் நம்முடைய வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளம்பரம் வைத்துள்ளார்கள்.

அதிகமாகப் பல் துலக்குவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒரு தொழுகையாளிக்கு இந்தக் காரியம் இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தருகிறது என்றால் தொழுகை எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குதல் வாய்க்கு நறுமணத்தையும், இறைவனின் திருப்தியையும் பெற்றுத்தருகிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 5

உலூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள்

தொழுகையை முறையாக நிறைவேற்றும் ஒருவன் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உலூவை நிறைவேற்றுகின்றான். இந்தச் சிறிய நற்காரியத்தின் மூலம் இவ்வுலகில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் இதற்கு இறைவன் வாரி வழங்கும் ஏராளமான நன்மைகளை அறிந்து கொண்டால்  தொழுகையாளிகளை இறைவன் எந்த அளவிற்கு நேசிக்கின்றான் என்பதையும், தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மறுமை அந்தஸ்தையும் புரிந்து கொள்ளலாம்.

உலூவை முறையாக, பரிபூரணமாக நிறைவேற்றும் தொழுகையாளிகள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

முஃமின்களின் அடையாளம் உலூவைப் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான்.  முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: அஹ்மத் 22467

உலூவைப் பேணுவதை முஃமின்களின் அடையாளமாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவங்களை அழிக்கும் உலூ

நாம் நம்முடைய உடல் உறுப்புக்கள் மூலம் எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். கண்கள் மூலமாக, கைகள் மூலமாக, கால்கள் மூலமாக நாம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல சிறுபாவங்களைச் செய்கின்றோம்.

செய்த பாவங்களுக்கு நாம் இறைவனிடம் மன்னிப்பு தேடுவதும் இல்லை. செய்த பல பாவங்களை உடனேயே மறந்தும் விடுகின்றோம். இறுதியில் நம்முடைய சிறுபாவங்கள் நம்மிலேயே தேங்கி நம்மை வாட்டும் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன.

ஆனால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் மிகப் பெரும் பாக்கியம் நாம் தொழுகைக்காக செய்யும் உலூவின் மூலமாகவே நாம் உறுப்புக்களால் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்ற அற்புத அருளை இறைவன் வழங்கியுள்ளான்.

இது தொழுகை மூலம் நாம் அடையும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு “முஸ்லிமானஅல்லது “முஃமினான‘ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்அல்லது “நீரின் கடைசித் துளியுடன்முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடுஅல்லது “நீரின் கடைசித் துளியோடுவெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 412

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்:  உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம் 413

முன்பாவங்கள் மன்னிக்கப்படுதல்

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 159

இரு தொழுகைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிப்பு

உலூச் செய்யும் போதே நம்முடைய பாவங்கள் உடல் உறுப்புகள் வழியாக வழிந்தோடும் தண்ணீருடன் வெளியேறுகிறது என்பதைக் கண்டோம். அது மட்டுமில்லாமல் அழகிய முறையில் உளூச்  செய்தால் ஒவ்வொரு இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூ செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) உளூ செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.

அறிவிப்பவர்: ஹூம்ரான் (ரலி)

நூல்: முஸ்லிம் 385

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லைஎன்று சொன்னார்கள். உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று கூறினோம். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள உளூவை முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 390

மறுமையில் ஒளிவீசும் உறுப்புகள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 415, புகாரி 136

கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லாநகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 416

நபித்தோழர்களின் அடையாளம் உளூ

நாம் தொழுகைக்காக செய்கின்ற உளூ நமக்கு நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. நாம் நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்றால் அதன் கூலி மாபெரும் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை. இந்தப் பாக்கியமும் தொழுகையாளிகளுக்குத் தான் கிடைக்கிறது.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்‘ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள் தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ள மாட்டாரா, கூறுங்கள்என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் உளூவினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 419

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ

தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 421

அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

இதுவரை நாம் உளூச் செய்வதினால் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி பார்த்தோம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

 1. தூய்மைப் பேணுவதினால் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.
 2. தூய்மை ஈமானில் பாதி. அந்த பாக்கியத்தை அடைகின்றோம்.
 3. பல்துலக்குவது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது.
 4. உளூச் செய்யும் போது உறுப்புக்களின் வழியாகத் தண்ணீருடன் பாவங்கள் வெளியேறுகின்றன.
 5. முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
 6. இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
 7. மறுமையில் உளூவினால் உறுப்புகள் ஒளிமயமாகக் காட்சி தருகின்றன.
 8. மறுமையில் கவ்சர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் கிடைக்கிறது.
 9. நபிகள் நாயகத்தின் தோழர்களாகும் பாக்கியம் கிடைக்கிறது.
 10. சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்.
 11. சுவர்க்கம் கட்டாயமாகிறது.
 12. சுவக்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாசல் வழியாக நுழையும் பாக்கியம்.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் இதழ் சரியான சாட்டையடிகளையும் சம்மட்டி அடிகளையும் கொடுத்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் வஸீலாவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இறந்து போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு.

முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வஸீலா என்பது ஆட்களை வைத்துத் தேடுவதல்ல. ஒருவர் செய்கின்ற அமல்களை வைத்துத் தான்.

இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 5:35

இவ்வசனத்தில் “இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று கூறப்படுகிறது.

வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் “வஸீலாவாக’ – சாதனமாக உள்ளது என்பர்.

“வஸீலா என்பது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வது” என்று மார்க்க அறிவு இல்லாத சிலர் கருதுகின்றனர்.

“நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்” என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது.

இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் “வஸீலாவை’ சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே “வஸீலா தேடுங்கள்!’ என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை “இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் “நம்பிக்கையாளர்களே’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். “மகான்களும் வஸீலா தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

அல்குர்ஆன் 17:57

ஆனால் பரேலவிகளோ ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபித்தோழர் உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(நான் மஸ்ஜிதுந்நபவியில் அமர்ந்திருக்கும் சமயம் பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யும்படி வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் துஆச் செய்கிறேன். நீ விரும்பினால் பொறுத்துக் கொள்ளலாம். பொறுத்துக் கொள்வது சிறந்தது” என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் துஆச் செய்யும்படி வேண்டினார். அப்பொழுது அம்மனிதரை முழுமையாக உளூச் செய்து விட்டு வந்து கீழ்வரும் துஆவை ஓதப் பணித்தார்கள்.

பொருள்: யா அல்லாஹ்!! அருள் நிறைந்த அண்ணல் முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன். இறைவனே! என் காரியத்தில் அவர்களின் பரிந்துரையை நீ அங்கீகரிப்பாயாக!

பின் அவர் சுகம் பெற்று, பார்வையுடன் திரும்பினார்.

நூல்: திர்மிதீ, நஸாயீ, பைஹகீ, தப்ரானி

இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற உஸ்மான் பின் ஹுனைஃப் ரலி) அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை அகற்ற, தேவை நிறைவேற இந்த துஆவையே ஓதுவார்கள். இந்த துஆவிற்கு அப்படி என்ன மகத்துவம் என்றால் வஸீலா தான். அதுவும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் திருவாயினால் கற்றுக் கொடுக்கப்பட்ட வஸீலா.

இவ்வாறு வஸீலா குறித்து எழுதியுள்ளனர்.

பொதுவாக பரேலவிகள் குர்ஆன் வசனத்தின் அல்லது ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு ஆதாரமாகச் சமர்ப்பிப்பார்கள்.

இந்தப் பாணியில் தான் இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் வளைத்திருக்கின்ற – தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த்திருக்கின்ற இந்த ஹதீஸைச் சரியான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் பார்ப்போம்.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்குச் சுகமளிக்கும் படி பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டார். “நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமையாக இரு! அது உனக்கு (மறுமையில்) சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், “அவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்.

உளூவை நிறைவாகச் செய்து இந்த துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் நான் முன்னோக்குகிறேன். எனது தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: திர்மிதீ 3502

இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். “நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: இப்னுமாஜா 1375, முஸ்னத் அஹ்மத் 16604

முதலில் திர்மிதியில் இடம்பெற்ற ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். இரண்டாவதாக இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் மொழியாக்கத்தைப் பார்த்தோம்.

இரண்டாவது ஹதீஸில் கூடுதலாக இரண்டு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

 1. இரண்டு ரக்அத்கள் தொழுவது.
 2. பார்வை தெரியாத அந்த நபித்தோழர், முஹம்மதே என்று அழைப்பது.

இவ்விரண்டு விஷயங்கள் தவிர மற்ற செய்திகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை தான்.

இந்த ஹதீஸைத் தான், நபியின் பொருட்டால் என்று மொழிபெயர்ப்பு செய்து, மனிதர்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இறந்து போன ஆட்களை வைத்து வஸீலா தேடலாம் என்ற தங்களின் இணைவைப்புச் சிந்தனைக்கு இதைத் திருப்புகின்றனர். இதற்குரிய விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் பார்ப்போம்.

இப்போது நாம் பார்க்க வேண்டியது, மேற்கூறப்பட்டுள்ள இந்த துஆவில், “யா முஹம்மத்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

யா முஹம்மத் என்றழைப்பது ஷிர்க் இல்லையென்று நபிகள் நாயகம் அவர்கள் ஸஹாபிகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஸஹாபிகளும் தனது வாழ்வில் யா முஹம்மத் என்று துஆச் செய்யும் போது கூறியிருக்கிறார்கள். யா முஹம்மது என்று கூறுவதில் ஷிர்க் இல்லையென்றால் யா முஹ்யித்தீன் என்ற அழைப்பதில் எப்படி ஷிர்க் வந்து விட்டது? யா முஹ்யித்தீன் என்று அழைப்பது ஷிர்க் என்றால் யா முஹம்மத் என்றழைப்பதும் ஷிர்க் ஆகி விடும். ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய நபித்தோழர்கள் யா முஹம்மத் என்றழைத்து ஷிர்க் செய்து விட்டார் என்று கூறுவார்களா?

இவ்வாறு பரேலவிகள் கேட்கின்றனர்.

இந்தச் செய்தியில் பல்வேறு விஷங்களை பரேலவிகள் கொட்டித் தீர்த்திருக்கின்றனர். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இவர்கள் சுய நினைவோடும் சிந்தனைத் தெளிவோடும் தான் இப்படி வாதிடுகிறார்களா? அல்லது மறை கழன்று விட்டதா? என்று நாம் நினைக்க வேண்டியுள்ளது.

யா முஹம்மத் என்றால் முஹம்மதே என்று பொருள். நம் முன்னால் நாம் சொல்வதைக் கேட்கும் வகையிலும் அவர் சொல்வதை நாம் கேட்கும் வகையிலும் இருக்கும் போது அவரை அழைப்பது இணை வைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவில்லை. கருணாநிதியை சந்திக்கும் போது கருணாநிதி அவர்களே என்று அழைக்கலாம். ராம கோபாலனே என்று அழைக்கலாம். யாரையும் அழைக்கலாம். இதை நாம் ஷிர்க் என்று சொல்லவில்லை. வேறு யாரும் எந்தக் காலத்திலும் சொன்னதில்லை.

நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை முஹம்மதே என்று அழைத்துள்ளதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிண்றனர். அப்படியானால் நபித்தோழர்கள் அபூஜஹலை, அபூஜஹ்லே என்று அழைத்துள்ளார்கள். இவர்கள் அபூஜஹ்லை அழைப்பார்களா? எல்லா காபிர்களையும் அவர்கள் பெயரைச் சொல்லி நபித்தோழர்கள் அழைத்துள்ளார்கள். இவர்களும் அபூலஹபை. அவனைப் போன்றவர்களை இப்போதும் உதவிக்காக அழைப்பார்களா?

உயிருடன் உள்ள ஒருவரை அழைப்பது ஷிர்க்காக ஏன் ஆகாது? மரணித்தவரை அழைத்தால் எப்படி அது ஷிர்க்காகின்றது என்ற வேறுபாட்டை எத்தனை முறை விளக்கினாலும் இவர்கள் விளங்குவதில்லை.

அந்த வித்தியாசத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்.

உயிருடன் உள்ளவரை ஒரு நேரத்தில் ஒருவர் தான் அழைப்பார். அதுவும் அவர் காதில் விழக் கூடிய தூரத்தில் இருந்து தான் அழைப்பார். இறந்தவரை அழைக்கும் போது அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரை அழைப்பார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றனர்.

அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும். இறைவனுக்கு இருப்பது போன்ற கேட்கும் திறன் மனிதனுக்கும் இருப்பதாக நம்பினால் அது ஷிர்க் அல்லாமல் வேறு என்ன?

இந்தப் பரேலவிய விஷமிகள் யா முஹம்மத் என்று திக்ரு செய்கின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு திக்ரு செய்வது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பகிரங்க இணை வைப்பாகும். இது ஏகத்துவவாதிகளான நாம் மட்டும் சொல்லவில்லை. சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் இவர்களுடைய மத்ஹபு சிந்தனையிலும் கண்மூடித்தனமான தக்லீதிலும் ஒன்றிணைந்த, ஒட்டியிருந்த மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ என்பவர், “யா முஹம்மத் என்று அழைத்து திக்ரு செய்வது, பிரார்த்திப்பது இணை வைப்பு” என்று தமிழகத்திலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் 1974ல் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தார். இந்த மார்க்கத் தீர்ப்புகள் அடங்கிய ஒரு நூல் தொகுப்பை “இர்பானுல் ஹக்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்.

யா முஹம்மத் என்று அழைப்பது சு.ஜ.வினரே விளங்கியுள்ள தெளிவான இணை வைப்பும், இறை மறுப்பும் ஆகும். ஆனால் பரேலவிச கோணல் புத்திக்காரர்களோ இந்த இறைமறுப்புக்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்கிட வளைக்கின்றனர்.

உயிருடன் இருக்கும் ஒருவர் மற்ற மனிதரை உதவிக்கு அழைக்கும் போது, அவரைக் கடவுள் அம்சம் பொருந்தியவராக ஒருபோதும் அழைப்பதில்லை. மாறாக தன்னைப் போல் அவரும் பலவீனமானவர் என்ற அடிப்படையில் தான் அழைக்கிறார். இப்போது இவருக்காக உதவி செய்ய முன்வருகின்ற மனிதருக்கு, பின்னாளில் இவரும் உதவி செய்வார். இதை யாரும் இணை வைப்பு என்று சொல்ல மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ தடவை, யா அபா பக்ர் (அபூபக்ரே), யா உமர் (உமரே) யா ஆயிஷா (ஆயிஷாவே) என்று அழைத்திருக்கின்றார்கள். அவர்களும் பரஸ்பரம் நபியே என்று அழைத்திருக்கின்றார்கள். இந்த அழைப்புகள் அனைத்தும் பலவீனத்தைக் கொண்ட பரஸ்பர அழைப்பு தான்.

ஆனால் இறந்து போன ஒருவரை இவ்வாறு அழைத்தால் அது இணை வைப்பாகும். காரணம், அங்கு தெய்வீகத்தன்மை, கடவுள் அம்சம் வந்து விடுகின்றது. ஒருவர் இறந்து விட்டால் அவர் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார். இறந்தவர் பார்க்கிறார் என்றோ அல்லது செவியுறுகிறார் என்றோ நம்பி விட்டால் அது இணை வைப்பாகும். அல்லாஹ் தான் சாகாதவன்; எப்போதும் செவியுறுபவன்.

இந்த ஹதீஸில் பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் தான் அழைக்கின்றார்.

தன்னுடைய துஆவை விட நபி (ஸல்) அவர்களின் துஆ அங்கீகரிக்கப்பட மிகவும் தகுதியானது என்ற அடிப்படையில் முஹம்மதே என்று அழைத்து, இறைவனிடம் பிரார்த்திக்கச் சொல்கின்றார்.

இங்கே அவரது பலவீனம் தெரிகின்றது. அதே சமயம் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களுடைய துஆவைக் கொண்டு முன்னோக்குகிறேன்’ என்று சொல்லிவிட்டு இறுதியில், “என்னுடைய விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்’ என்று அல்லாஹ்விடம் கேட்கின்றார். இங்கே நபி (ஸல்) அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுகின்றார்.

நபி பரிந்துரைத்து விட்டால் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஏனெனில் அல்லாஹ்வை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது என்ற விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் “இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாகஎன்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6339

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நபி (ஸல்) அவர்களே இந்த துஆவைக் கற்றுத் தருகின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் இணை வைப்பைக் கற்றுத் தரமாட்டார்கள்.

பார்வை தெரியாதவர், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கோரிக்கையை தனது பலவீனத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்களோ, “எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு நீ அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்’ என்று தமது பலவீனத்தையும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

இறந்த பிறகும் “யா முஹம்மத்’ என்று கூப்பாடு போடுவதற்கும், கும்பிடு போடுவதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, உயிருடன் இருக்கும் போதே மனிதன் பலவீனன் தான்; இறந்த பிறகு எந்த ஆற்றலும் இருக்காது; என்னிடம் எதையும் கேட்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்ற எதிர்மறையான ஆதாரம் தான் இதில் இருக்கின்றது.

இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு தான் தனது தூதரை நோக்கி கூறச் சொல்கின்றான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

நபி (ஸல்) அவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்றும் வல்ல இறைவன் சொல்கின்றான்.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

உண்மை இவ்வாறிருக்கையில் நபி (ஸல்) அவர்கள் தமக்குச் சக்தி இருப்பதைப் போன்று எவ்வாறு தம்மை அழைக்கச் சொல்வார்கள்?

அல்லாஹ் சொல்கின்றான்:

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!” (என்றே நபி கூறுவார்.)

அல்குர்ஆன்  3:79

மொத்தத்தில் மேற்கண்ட ஹதீஸில் சுருக்கமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், பார்வை தெரியாத நபித்தோழர், முஹம்மதே என்று நபி (ஸல்) அவர்களை நேரில் அழைத்திருக்கிறார். அவ்வாறு நேரில் அழைப்பது இணைவைப்பாகாது. காரணம், நபி (ஸல் அவர்கள் மற்றவர்களை அழைத்தாலும், மற்றவர்கள் நபியை அழைத்தாலும் அது மனிதப் பலவீனத்திற்கு உட்பட்டது தான்.

ஆனால் இறந்த பிறகு, முஹம்மதே என்று அழைத்தால் அது இணை வைப்பாகும். இவ்வாறு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்; பார்க்கின்றார்கள்; கேட்கின்றார்கள்; குறைகளைத் தீர்க்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் அழைப்பதாகும்.

எப்போதும் உயிருடன் இருந்து, பார்க்கின்ற, கேட்கின்ற, குறைகளை நிவர்த்தி செய்கின்ற ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான். அல்லாஹ்வுடைய இந்த ஸ்தானத்தில் யாரை வைத்தாலும் அது கொடிய இணை வைப்பாகும். இந்த விஷயத்தைப் புரியாமல் பரேலவிகள் மொட்டைத்தலைக்கும் முழங்காலும்கும் முடிச்சுப் போடுகின்றனர்.

இதை வைத்துக் கொண்டு முஹ்யித்தீனை அழைப்பதற்கும் முனைகின்றனர் பரேலவிகள்.

முஹம்மது (ஸல்) அவர்களை அழைப்பதற்கே அனுமதியில்லை எனும் போது, இந்த முஹ்யித்தீனை அழைப்பதற்கு எங்கே முடியும்? ஒருபோதும் முடியாது.

இந்த ஹதீஸிலிருந்து முஹ்யித்தீனை அழைப்பதற்குரிய தில்லுமுல்லுகள், எத்துவாளித்தனங்கள் அனைத்தையும் செய்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இனி வஸீலா தொடர்பாக இவர்கள் செய்கின்ற தில்லுமுல்லுகளை விரிவாகப் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்       தொடர்: 8

அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

நாம் யாரையாவது இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால், அது அல்லாஹ்வின் மூலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒருவரை இறைநேசர் என்று சொல்லிவிட்டால் அதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. முந்திச் சென்ற சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது.

இறைவன் அந்தந்த சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களிலேயே ஒரு மனிதரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்குத் தன்னுடைய பொறுப்புகளைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக அவர்கள் இறைவனுடைய நேசர்களாகத் தான் இருக்க முடியும். மூஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான். ஈஸா நபி இறைநேசரா? என்று கேட்டால் ஆம் என்று சொல்வோம். எதனால்? அல்லாஹ் சொல்லியிருக்கின்றான்.

ஆக எந்த நபிமார்களைப் பற்றிக் கேட்டாலும் அவர்கள் இறைநேசர்கள் தான். அவ்லியாக்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக நாம் சொல்ல முடியும். அவ்வாறு தான் சொல்லவும் வேண்டும். ஏனென்றால், அல்லாஹ்வே அவர்களை நேசிப்பதாக நமக்குச் சொல்லித் தந்து விட்டான். அவர்களை உயரிய அந்தஸ்திற்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் சொல்லித் தந்து விட்டான். எனவே எந்த நபியாக இருந்தாலும், அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்ட நபிமார்களாக இருந்தாலும், பெயர் குறிப்பிடப்படாத நபிமார்களாக இருந்தாலும் அனைவருமே இறைநேசர்கள் தான். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை எத்தனை நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அத்தனை பேருமே இறைநேசர்கள் தான் என்று நாம் சொல்லலாம்.

நாம் அவர்களுடைய உள்ளத்தை அறிந்து இவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ் அவ்வாறு சொல்லித் தந்ததால் நாம் இதைச் சொல்கிறோம். அவரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ்வே காட்டித் தந்ததால் நாம் இதை சொல்லிக் கொள்கிறோம். அதேபோல் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி நல்லடியார் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 3:42

மர்யம் (அலை) அவர்களையும், பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக, ஒரு முஃமின் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த இருவரைப் பார்த்து வாழ்ந்து கொள்ளுங்கள் என்று படிப்பினையாக ஆக்கியிருக்கின்றான் என்றால் இதிலிருந்தே நாம் அந்த இருவரும் இறைநேசர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்களைப் பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்:

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

அல்குர்ஆன். 66:11, 12

எனவே இவர்கள் இருவரையும் இறைநேசர்கள் என்று நாம் சந்தேகமறச் சொல்லலாம். ஆசியா என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்தாவிட்டாலும், ஃபிர்அவ்னின் மனைவி என்று சொல்லிவிட்டதால் நாம் அவர்களையும் இறைநேசர் என்று முடிவு செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆசியா என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் “ஸரீத்உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி),  நூல்: புகாரி 3411

இந்தச் செய்தி மேலும் புகாரி 3434, 3769, 5418 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதேபோன்று குகைவாசிகளையும் நல்லடியார்கள் என்று இறைவன் சொல்கிறான். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் யாரை அல்லாஹ் இறைநேசர் என்று சொல்கிறானோ அவர்கள் கண்டிப்பாக இறைநேசர்களாகத் தான் இருப்பார்கள் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

இது போக நாம் இந்த சமுதாயத்தில் சொர்க்கவாசிகள், நல்லடியார்கள் என்று சொல்வதாக இருந்தால் உண்மைத் தோழர், நபியவர்களின் உற்றதோழர் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 3675, 3686

அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நல்லடியார் என்பதற்கு இந்த ஹதீஸே மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது.

சித்தீக் என்றால் நல்லடியார்களிலேயே மிக உயர்ந்த அந்தஸ்தை உடையவர்கள். இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்:

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

அல்குர்ஆன். 4:69

மேற்கண்ட வசனத்தில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்மையாளர்கள். அதாவது அனைத்தையும் உண்மையெனக் கருதியவர்கள். இஸ்லாத்தில் இறைத்தூதர் சொல்வதைச் சந்தேகமில்லாமல் உண்மைப் படுத்தியவர்கள். இத்தகைய சிறப்பை நபித்தோழர்களில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டும் தான் பெற்றிருந்தார்கள். அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் என பெயர் வந்தது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர் தான் அபூபக்கர் (ரலி) அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட ஹதீஸை ஆதாரமாக வைத்தே உமர் (ரலி) அவர்களையும், உஸ்மான் (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார்கள் என்று சொல்லலாம்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்என்று சொன்னார்கள். நான் அவருக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்என்று சொன்னார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒரு மனிதர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், “அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்என்று சொன்னார்கள். (நானும் சொன்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, “(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (சகிப்பாற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),  நூல்: புகாரி 3693

இந்த ஹதீஸ் மேலும் புகாரியில் 3674, 3695, 6216, 7097, 7262 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்னவென்றால், நாம் ஒருவரை அவ்லியா, மகான், இறைநேசர் என்று சொல்வதற்கு மிகவும் தகுதி படைத்தவர்கள் இந்த மூவரும் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அம்மூவருக்கும் சொர்க்கம் என்னும் நற்செய்தியைக் கூறியிருக்கிறார்கள்.

அதேபோல, மறுமை நாளில் அனைத்து வாசல் வழியாகவும் அழைக்கப்படக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் மறுமையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாச–ருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாச–ருந்தும், “அர்ரய்யான்என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாச–ருந்தும் அழைக்கப்படுவார்என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.)என்று கூறி விட்டு, “அவை அனைத்தி-ருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே!என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், “நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அபூபக்ரே!என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3666

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின்போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின்வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் “ஜிஹாத்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் “ரய்யான்எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் “ஸதகாஎனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன்!என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 1897

மேற்கண்ட ஹதீஸில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய சிறப்பு இருப்பதால் அவர்களை அவ்லியா, நல்லடியார் என்று நாம் சந்தேகமில்லாமல் உறுதிபடக் கூறலாம்.

அபூபக்கர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ சொர்க்கத்தில் இருப்பார். தல்ஹா சொர்க்கத்தில் இருப்பார். ஸுபைர் சொர்க்கத்தில் இருப்பார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் இருப்பார். ஸஅத் பின் அபீ வக்காஸ் சொர்க்கத்தில் இருப்பார். ஸயீத் பின் ஸைத் சொர்க்கத்தில் இருப்பார். அபூஉபைதா அல்ஜர்ராஹ் சொர்க்கத்தில் இருப்பார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),  நூல்: அஹ்மத் 1543

மேலும் இச்செய்தி திர்மிதியில் 3680, 3748 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் முதல் நான்கு பேரும் கலீபாக்கள். அவர்களிடத்தில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த நேரத்தில், அவர்களுடைய ஆளுமை மக்களுக்கு அதிருப்தியைத் தந்தாலும் அவர்களுடைய தியாகத்திற்கு முன் அது சாதாரண காரியமாகத் தான் அமையும்.

நம்முடைய பார்வையில் அது தவறாகத் தெரிந்தாலும் அல்லாஹ்வுடைய பார்வையில் அது மன்னிக்கப்படக்கூடிய பாவமாகத் தான் தெரிந்திருக்கிறது. அந்த 10 பேரும் பாவங்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ் அதை மன்னித்து விட்டான். அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நற்செய்தி கூறினார்கள். ஆனால் இன்றைக்கு நாம் யாரை அவ்லியாக்கள் என்று சொல்கிறோமோ அவர்கள் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்திருக்கிறார்களா? அவர்களுடைய தியாகத்திற்கு இவர்கள் ஒப்பாவார்களா? அல்லது நபியவர்களால் சொர்க்கத்திற்குரியவர் என்று நற்செய்தி கூறப்பட்டவரா? இத்தகைய எந்த அம்சமும் இல்லாதவர்களைத் தான் நாம் அவ்லியாக்கள் என்று கூறி வருகின்றோம்.

அதேபோல இரண்டாம் ஆட்சியாளராகிய உமர் (ரலி) அவர்களையும் நாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்லலாம்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த போது அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொ-வையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீ-டம்), “இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், “உமர் அவர்களுக்குரியதுஎன்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, “தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 3680

மேலும் இச்செய்தி புகாரியில் 3422, 5227, 7023, 7025 ஆகிய இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலீ (ரலி) அவர்களையும் நாம் நல்லடியார் என்று கூறலாம்.

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனேஎன்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்என்றோ, “அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்என்றோ அல்லது, “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்என்றோ சொல்- விட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி),  நூல்: புகாரி 2975

மேலும் இச்செய்தி புகாரியில் 3702, 4209 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியில் அலீ (ரலி) அவர்களை அல்லாஹ் நேசிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே அவர்களை நாம் சந்தேகமே இல்லாமல் நல்லடியார் என்று சொல்லலாம்.

அதே மாதிரி ஸஅத் பின் முஆத் அவர்களையும் நபிகளார் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 2616, 3248

இவர்களையும் நாம் நல்லடியார், சொர்க்கவாசி, மகான் என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு அனுமதி இருக்கிறது.

இதுபோன்று இன்னும் ஏராளமானவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியிருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

அலங்காநல்லூர் அநியாயம் அனுமதிக்கும் அரசாங்கம்

இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரு பண்டிகை என்பது அதைக் கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதில் மற்றவர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது.

ஆனால் ஒரு சமுதாயம் கொண்டாடும் பண்டிகை தனக்கு மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பை, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் போது அந்தப் பண்டிகையை, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். பிற சமுதாயத்தினரும் விமர்சிக்க நேரிடுகின்றது.

இந்த அடிப்படையில் இந்தியாவில் நடைபெறுகின்ற தீபாவளியை எடுத்துக் கொள்வோம். நள்ளிரவு முதல் அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என பல நாட்களுக்குத் தொடர்ந்து வெடிக்கப்படும் பட்டாசுகள்.

இந்தப் பட்டாசுகள் வெடிக்கும் போது தொட்டிலில் கிடக்கும் குழந்தைகள் பதைபதைக்கின்றன. வாசல்நடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடு மாடுகள் அலறுகின்றன. பகல் நேரகத்தில் உணவுக்கு அலைந்து, இரவில் மரக்கிளையின் கூடுகளில் துயில்கின்ற பறவைகள் அல்லல்படுகின்றன.

இதனால் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள், பட்டாசு ஓசை இத்தனை டெசிபல் அளவுக்குத் தான் இருக்க வேண்டும் என்று வரையறை சொல்கின்றன. ஆனால் பட்டாசு ஓசையோ அந்தக் காவல்துறையினரின், நீதிபதிகளின் செவிப்பறைகளைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவர்கள் சொல்லும் வரையறைக்குள் அந்த ஓசை நிற்பதில்லை.

பட்டாசு உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள், அதை விற்பனை செய்யும் கடைகள், வெடிக்கும் போது அவை போய் விழுகின்ற இடங்கள் ஆகியவை அடிக்கடி தீக்கிரையாகின்றன. பல உயிர்ப்பலிகள் நடக்கின்றன. பலருக்குக் கை, கால்கள் முடமாகின்றன. கண்கள் பறிபோகின்றன. குழந்தைகளுக்கும் இதே கதி ஏற்படுகின்றது.

இத்தனை நடந்தும் யாரும் திருந்தியபாடில்லை, வருந்தியபாடில்லை.

மாசுபடும் சுற்றுச்சூழல்

இத்துடன் இந்த விபரீதம் நின்றுவிடுவதில்லை. சுற்றுப்புறச் சூழல் மிகக் கடுமையான அளவில் மாசுபடுகின்றது. அன்றைய தினத்தில் மாசுபட்ட காற்றின் அளவை, புகை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இதனால் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களும் நோய்வாய்ப்படுவதுடன் குழந்தைகள் – குறிப்பாக ஆஸ்துமா உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக அன்றைய தினம் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு அதனுடைய அவலமும் ஆபத்தும் தொடர்கின்றது. இது தீபாவளியின் நிலை.

இதே நிலை தான் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் பொங்கல் தினத்திலும் நடக்கப் போகின்றது. இந்தப் பொங்கல் வருவதற்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதல் என்ற அறியாமையின் அடிப்படையில் கொளுத்தப்படும் பொருட்களிலிருந்து கிளம்புகின்ற புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகின்றது. அதற்குப் பின்னால் பட்டாசுகளின் புகை மண்டலம். மொத்தத்தில் புவி மண்டலம், புகை மண்டலமாக மாறும் அளவுக்கு மாசாகிவிடும்.

பொங்கல் என்றால் நல்ல விளைச்சல் கொடுத்தற்காகப் பூமிக்கும், அதற்கு ஒளி தருகின்ற சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவுகின்ற மாட்டிற்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து இவை அனைத்திற்கும் வழிபாடு செய்யும் நாள் எனக் கருதப்படுகின்றது.

இது நாளடைவில் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மறுநாள் காணும் பொங்கல் என மூன்று நாட்களாக மாறியது. மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் ஒரு பக்கம் மாட்டை வணங்குகின்றனர். மறுபக்கம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

ஐந்தறிவை அடக்க ஆறறிவு போதும்

ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பகுத்தறிவு அடிப்படையில் இவர்களின் வீர விளையாட்டைச் சற்று பார்ப்போம். வீரம் என்றால் என்ன? தனக்குச் சரி சமமான அல்லது தன்னை விட பலத்தில் சிறந்த மனிதனுடன் மோதினால் அதை வீரம் என்று கூறலாம்.

ஆனால் இவர்கள் தன்னை விடக் கீழ் நிலையிலுள்ள ஆறறிவு இல்லாத ஓர் அற்பப் பிராணியுடன் இவர்கள் மோதுகின்றார்கள். தனக்கு இருக்கும் வீரத்தைச் சோதிப்பதற்காக மோதுகின்றான் என்பது அந்தக் காளை மாட்டிற்குக் கொஞ்சமாவது தெரியுமா? களத்தில் நிற்கும் ஐந்தறிவுப் பிராணியான காளை மாடு, தனக்கு எதிரே நிற்பவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றது. அதனால் அது தன்னை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தப்பிக்கவும் தற்காக்கவும் முயற்சிக்கின்றது. இப்படி ஓர் ஐந்தறிவுப் பிராணியுடன் ஆறறிவு மனிதன் மோதுவது எப்படி வீரமாகும்?

ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகள்

என்ன தான் மனிதன் வீரனாக இருந்தாலும் நிராயுதபாணியாக இருக்கும் போது அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு பத்துப் பேர் தாக்கினால் அவன் பிழைக்க மாட்டான். இதுதான் யதார்த்தமும் உண்மையுமாகும். சினிமா படத்தில் வேண்டுமென்றால் ஒரு கதாநாயகன் பத்துப் பேரை அல்ல, நூறு பேரை ஒரே நேரத்தில் அடக்கலாம். நடிப்பில் அது சாத்தியம். ஆனால் நடப்பில் அது சாத்தியமல்ல.

இங்கே காளை மாட்டை அடக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரம் பேர் அதைச் சுற்றி வளைத்து வதை செய்கின்றனர். இதற்குப் பெயர் வீரமா? அல்லது அநியாயமா? ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகளா? இதற்கு எப்படி வீர விளையாட்டு என்று சொல்ல முடியும்?

ஆனையை அடக்க அங்குசம் போதும்

மனிதனை விட எடையிலும் எடுப்பிலும் பெரிய தோற்றம் கொண்ட யானையை மனிதன் ஒருபோதும் தன் பலத்தால் அடக்க முடியாது; வெல்லவும் முடியாது. அறிவால் தான் வெல்ல முடியும். ஓர் அற்ப ஆயுதத்தை, அங்குசத்தை வைத்துக் கொண்டு அதை எளிதில் அடக்கி விடலாம்.

இதைப் போன்று சிங்கம், புலி போன்ற கொடிய, கோர மிருகங்களை அறிவு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி எளிதில் மனிதன் அடக்கி கூண்டுக்குள் அடைத்து விடலாம்.

மாட்டை அடக்க சாட்டை போதும்

இம்மாபெரிய மிருகங்களே ஆயுதங்களில் அடங்கும் போது, மாட்டை அடக்க சண்டைக் களமா தேவை? ஒரு சாதாரண சாட்டைக் கம்பு போதும். எனவே மாட்டுடன் மோதுவதை வீர விளையாட்டு என்று கூறுவது பகுத்தறிவு அடிப்படையில் கடைந்தெடுத்த பைத்தியக்காரத்தனமான வாதமாகும்.

மாடுகள் மனிதர்களிடம் பழகி விடும் போது அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கின்ற நன்றியுள்ள பிராணியாகும். பழகி விட்டால் தன்னைவிட உடலிலும் உருவத்திலும் சிறிய ஒரு சிறுவன் இழுக்கின்ற இழுப்புக்கு இணங்கி விடும் ஓர் அரிய ஜீவனாகும்.

வயலை உழுதல், வண்டி இழுத்தல், தண்ணீர் இறைத்தல், சூடடித்தல் என மனிதச் சமுதாயத்திற்குத் தேவையான அவ்வளவு ஆக்கப்பணிகளையும் செய்கின்ற ஓர் அற்புதமான, அருமையான பிராணி! இந்தப் பிராணிக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக அந்தப் பிராணியை வதை செய்கின்றார்கள், நன்றி மறந்த இந்த மனித வர்க்கத்தினர்.

ஒருபக்கம் வணக்கம்; மறுபக்கம் வதைப்பு

இதில் வேடிக்கை என்னவென்றால் மாட்டுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்! அது செய்கின்ற வேலைகளுக்கு நன்றி சொல்லத் தான் மாட்டுப் பொங்கல்!

ஒருபக்கம் மாட்டை வணங்கவும் செய்கின்றனர். மறுபக்கம் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

வதைக்கும் விதங்கள்

 1. ஒரு பெருங்கூட்டம் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை முழு வேகத்தில், மூர்க்கத்தனமாக, அதன் முன்பக்கமாக இழுக்கின்றனர். இதன் காரணமாக அதன் கழுத்தில், தொண்டைப் பகுதியில் அந்தக் கயிறு அறுத்து, அதனால் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது.
 2. அதன் வாலைச் சுருட்டி இடது பக்கமாகச் சுண்டி இழுத்தல். வலி தாங்க முடியாமல் அது துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கின்றது.
 3. அதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் விதமாக, அதன் பின்னங்கால்கள் இரண்டையும் அப்படியே பின்பக்கமாகத் தூக்கி அதை வேகமாகத் தரதரவென்று இழுத்தல்.
 4. முரட்டு இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவினர் முதுகில் உள்ள திமிலில் ஏறுகின்றனர். அந்தக் காளையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கைகளில் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் விரல்களில் வளர்த்திருக்கும் கூரிய நகங்களைக் கொண்டு அதன் உடலில் பாய்ச்சுகின்றனர். இந்தக் கோரச் செயல் காளையின் உடலில் இரத்த ஊற்றுக்களைத் தோற்றுவிக்கின்றது.
 5. மற்றொரு முரட்டு சாரார் அதன் கொம்புகளைப் பிடித்து இழுத்து, சரமாரியாக இடைவிடாமல் மொத்தித் தள்ளுகின்றனர்.
 6. வலுக்கட்டாயமாக மலிவு சாராயத்தை அதன் வாயில் ஊற்றிக் கொடுமைப்படுத்துகின்றனர். இதன் விளைவால் போதையுண்ட அந்த அற்பப் பிராணி, வெறியேறி மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக மனிதர்களைத் தாக்க வருகின்றது.
 7. காளையின் கண்களில் மிளகாய்த் தூள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அதன் கண்களை எரிச்சல் அடையச் செய்து அதனை வெறியேற்றச் செய்தல்.
 8. காணும் காணாததற்கு, கத்தியால் அதன் உடலில் குத்தி அதைக் கிளறி எழச் செய்தல்.
 9. நமக்கு இடையூறு செய்கின்ற ஏதாவது ஒரு பிராணியைக் கைத்தடியால் அல்லது சாட்டைக் கம்பால் தாக்குகின்ற போது அதைக் கண்டு பயந்து தன் கண்களுக்குத் தெரிகின்ற வாசல் வழிகளில் விழுந்து தப்பி ஓடி தம்மைக் காத்துக் கொள்கின்றன.

ஆனால் இந்த ஜல்லிக்கட்டில் சுற்றி தடுப்புகளை வைத்துத் தடுத்து, மனித மிருகங்கள் முற்றுகையிட்டு நிற்கும் போது அந்தக் கொடுமையிலிருந்து தன்னைத் தப்புவித்து, தற்காத்துக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கின்ற இந்த அற்பப் பிராணியைப் பார்த்து ஈவு இரக்கமுள்ள மனிதன் அழாமல் இருக்க முடியாது. இவ்வளவு கொடுமையை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கட்டவிழ்த்து விடுகின்றன.

மூன்று கொடுமை முறைகள்

காளையை அடக்குவதற்குக் கோழைகள் மூன்று விதமான கொடுமையை, கொடூரங்களைச் செய்கின்றனர்.

 1. காளை நேரான பாதையில் பல மீட்டர் தூரம் விரட்டி ஓட வைக்கப்படுகின்றன. இரு பக்கங்களிலும் காளைகளை அடக்கும் கோழைகள் நிற்பர். பார்வையாளர்களும் நிற்பர். பார்வையாளர்களை விட்டுத் தடுப்பதற்குத் தடுப்புகளோ, கம்புகளோ எதுவும் இருக்காது. நூற்றுக்கணக்கானோர் இந்தக் காளையின் மீது பாய்ந்து அடக்குவார்கள். இந்தக் கோரச் செயல் அந்தக் காளையில் உடலில் இரத்தக் காயங்களை ஏற்படுத்தும்.

மஞ்சு விரட்டு

 1. காளைகளை அடக்குகின்ற வகைகளில் இது மிகக் கொடுமையான முறையாகும். பற்பல குழுக்களாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் காளை துரத்தப்படுகின்றது. ஓரிடத்தில் கூட காளை தன் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் முடியும் இடத்திலும் வேறொரு குழுவினர் எதிர்பார்த்து நிற்கின்றனர். தங்கள் இடத்திற்குக் காளை வந்ததும் அவர்கள் துரத்துகின்றனர்.

இப்படி ஒரு கொடூரமான, இடைநில்லாத தொடர் ஓட்டத்தின் காரணமாக நீர்ச்சத்தை இழந்து நிலைகுலைந்து போய் விடுகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி, தளர்ந்து, அது சரணடையும் தருவாயில் கழுத்தில் தொங்கும் அதன் மணியின் கயிறை மிகக் கடுமையாக ஒரு முரட்டு வாலிபன் இழுக்கின்றான். அதன் கழுத்தில் ரத்தம் சொட்டுகின்ற வகையில் புண் ஏற்படுகின்றது. இந்த அடக்குமுறையைத் தான், அத்துமீறலைத் தான் வெற்றி என்று மார்தட்டிக் கொள்கிறான்.

வடம்

 1. பெரிய வடக்கயிற்றால் காளை கட்டப்படுகின்றது. பதினைந்து அடி நீளக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் காளையை 9 கோழைகள் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை அடக்குவர். அதாவது வதை செய்வார்கள்.

இந்த மூன்று விதமான முரட்டுத்தனமான கொடுமைகளை, மூர்க்கத்தனமான ஒரு கூட்டம் அப்பாவியான ஓர் அற்பப் பிராணியின் மீது நடத்துகின்றது. இதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மரணமாகும் மாமன்றங்கள்

இந்த நாட்டில் 1960ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மிருக வதை தடுப்புச் சட்டமெல்லாம் இருக்கின்றது. மதம் என்றதும் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் அனைத்தும் மவுனமாகி விடுகின்றன, ஏன்? மரணமாகி விடுகின்றன.

செயல்படுத்தப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டத்தைச் சீர்குலைக்கும் சக்திகள் ராமர் பாலம் என்ற மதச் சாயத்தைப் பூசிய மாத்திரத்தில் நீதிமன்றம் கூட மரணமாகி விடுகின்றது. பாபரி மஸ்ஜித் விஷயத்திலும் இதே கதி தான். குறைந்தபட்சம் இதில் நடக்கும் மனித உயிர்ப்பலிகளைத் தடுக்கும் விதமாக நீதிமன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.

இடையில் நீதிமன்றங்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆர்வம் காட்டின. அதன் பின்னர் அவற்றின் ஆரவாரமும் ஆர்வமும் அடங்கிப் போய்விட்டது. கண்காணிப்பு, கட்டுப்பாடு என்ற போர்வையில் இந்த அநியாயம் அரங்கேறுகின்றது. இதனால் மிருகங்கள் ஈவு, இரக்கம், மனிதாபிமானம், அன்பு ஏதுமின்றி கொடுமைக்கும் கொடூரத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றன. அணு அணுவாக வதைக்கப்படுகின்றன. மனித உயிர்களும் பலியாக்கப்படுகின்றன.

பண்டிகை நாளா? பலி நாளா?

உயிர்களை வதைக்கின்ற இந்நாளை பண்டிகை நாள் என்பதா? அல்லது பலி வாங்கும் நாள் என்பதா? இந்த நாளில் பலியான, காயமடைந்த உயிர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பிப்ரவரி 17, 1999 திருச்சி கூத்தப்பர் கிராமத்தில் 17 வயது இளைஞர் மாடு முட்டி கொல்லப்படுகின்றார். 100க்கும் அதிகமானோர் காயமடைகின்றனர்.

பிப்ரவரி 24, 2002 புதுக்கோட்டை, திருவாப்பூரில் ஒருவர் கொல்லப்படுகின்றார். 30 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 17, 2004 மதுரை அலங்காநல்லூரில் ஒரு கொல்லப்பட்டார். 160 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 18, 2005 அதே அலங்காநல்லூரில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.

இதே நாளில் சிவகங்கையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.

ஜனவரி 2006, தேனி பல்லவராயன்பட்டியில் 2 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்தனர்.

2007, சேலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; 21 பேர் காயம்.

2008, பிப்ரவரி 23, புதுக்கோட்டையில் ஒருவர் சாவு; 140 பேர் காயம்.

2009, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூரில் 11 பேர் காயம்.

2010, புதுக்கோட்டையில் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்; 64 பேர் காயம்.

2011, மதுரை பாலமேட்டில் 22 வயது இளைஞர் பலி, 35 பேர் காயம்.

2012, சிவகங்கையில் ஒருவர் பலி, 30 பேர் காயம்.

இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. மாடு முட்டி சாவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இதைக் காண்பதற்குக் கூடுகின்ற கூட்டத்தில் ஏற்படுகின்ற நெரிசலில் சிக்கி, மிதிபட்டும் சாகின்றனர்.

இவ்வளவு உயிர்கள் பலியான பின்பும், பறிபோன பின்பும் அரசாங்கம் வாளாவிருக்கின்றது. எத்தனை உயிர்கள் சரிந்து போனாலும் பரவாயில்லை. தங்கள் வாக்கு வங்கி சரிந்து போகக் கூடாது என்பதில் ஆளுகின்ற, எதிர்க்கின்ற கட்சிகள் குறியாக இருக்கின்றன.

இப்படி பண்டிகை நாளில் உயிர்ப் பலி வாங்குகின்ற, வீர விளையாட்டு என்ற பெயரில் ஒரு கோர விளையாட்டை அரசாங்கம் அனுமதிப்பது மாபெரும் அநியாயமாகும்.

இதுபோன்ற கோர விளையாட்டுக்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. ஙஹற்ஹக்ர்ழ் என்ற பெயரில் வேன்கள் உலா வருவதைப் பார்க்கலாம். காளையுடன் போராடுபவர்களுக்குத் தான் இந்தப் பெயர். இதன் மூலம் எந்த அளவுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான விளையாட்டு மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்படிக் காளையுடன் சண்டை போடுபவன் ஓர் அரக்கன். அறிவாளியல்ல, மூளையில்லாத முட்டாள், மூடன். அதை அனுமதிக்கின்ற அரசாங்கம் ஓர் அநியாயத்தை அரங்கேற்றுகின்றது.

உயிர்காக்க வேண்டிய அரசு, வாக்கு வங்கிக்காக உயிர் குடிக்கும் வேலையைச் செய்கின்றது. இந்த அநியாயம் தான் தமிழகத்தில் அலங்காநல்லூரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் நடக்கின்றது. இதற்குத் தீர்வு இஸ்லாம் தான்.

ஆடு, மாடுகளை அறுத்து உணவுக்குப் பயன்படுத்தச் சொல்கின்ற இந்த மார்க்கம் அவற்றை வதை செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. அப்படி வதை செய்பவர் நரகவாதி என்றும் குறிப்பிடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லைஎன்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூற்கள்: புகாரி 2365, முஸ்லிம் 4160

அதே சமயம், ஒரு நாயை துன்பத்திலிருந்து காப்பாற்றியவர் சுவனம் செல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 173, 2363

இப்படி ஒரு மறுமை நம்பிக்கை இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குக் கூட வதையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்           தொடர்: 16

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாரா ஆதம் நபி?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ள பல பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொடரில் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். அதில் மற்றுமொரு அபாண்டமான கருத்தைக் கொண்டுள்ள ஒரு விரிவுரையை இப்போது காண்போம்.

“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்” என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

அவ்விருவருக்கும் (அங்கத்தில்) குறைகளற்றவனை அவன் கொடுத்த போது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்குப் பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.

அல்குர்ஆன் 7:189, 190

இவ்விரு வசனங்களும் ஆதம் நபி மற்றும் அவரது மனைவியைப் பற்றி குறிப்பிடுவதாகவும், இறைவன் அவர்களுக்குக் குழந்தையை வழங்கிய போது அவ்விருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டனர் என்றும் விரிவுரை நூல்களில் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஆதம், ஹவ்வா இருவரும் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தார்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு கதையையும் அளந்து விட்டுள்ளனர்.

ஹவ்வா கர்ப்பமுற்றிருந்த போது இப்லீஸ் அவர்களிடத்தில் வந்து, “உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவன் நானே. எனக்கு நீ கட்டுப்படவில்லையாயின் உனது பிள்ளைக்கு இரண்டு கொம்புகளை ஏற்படுத்துவேன். அது உனது வயிற்றைக் கிழித்து விடும். அல்லது இறந்த நிலையில் அக்குழந்தையை வெளிப்படுத்துவேன்” என்று கூறினான். அது இறந்த நிலையில் வெளி வர வேண்டும் என இறைவன் விதித்தான். (எனவே அவ்வாறே நடந்தது.) பிறகு இரண்டாவது பிள்ளையை ஹவ்வா சுமந்தார்கள்.  முன்னர் கூறியது போன்றே இம்முறை இப்லீஸ் ஹவ்வாவிடம் கூறினான்.  அதற்கு ஹவ்வா அவர்கள், “நான் உனக்குக் கட்டுப்பட (வேண்டும் என்று) நீ விரும்பும் காரியத்தைச் சொல்” என்று கூற, “அக்குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடு” என இப்லீஸ் கூறினான். ஹவ்வா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தனர். பிறகு அல்லாஹ்வின் அனுமதியுடன் குறைகளின்றி அக்குழந்தை வெளியானது. இது தான் 7:109 வசனத்தின் விளக்கமாகும்.

நூல்: ஸுனன் ஸயீத் பின் மன்சூர்

பாகம் 5 பக்கம் 173

ஹவ்வா கர்ப்பம் அடைந்த நேரத்தில் ஷைத்தான் விஜயம் செய்து பிறக்கும் குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் (ஹாரிஸின் அடிமை) என பெயர் வைக்க வேண்டும் என மிரட்டியதாகவும் அம்மிரட்டலுக்கு ஹவ்வா பணிந்து ஹாரிஸின் அடிமை என தன் குழந்தைக்குப் பெயரிட்டதாகவும் இச்சம்பவத்தில் கூறப்படுகிறது. சில விரிவுரைகளில் ஆதம் நபியவர்களும் பெயர் சூட்டும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுவதாக வருகிறது.

எனவே தன் பிள்ளைக்கு அப்துல் ஹாரிஸ் – ஹாரிஸின் அடிமை எனும் பெயரைச் சூட்டி ஆதம் ஹவ்வா இருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டதாக இந்தக் கதை மூலம் 7:109 வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.

இந்த கதையில் உள்ள அபத்தங்களை அறிந்து கொள்வதோடு இவர்கள் விளக்கமளித்த இரு வசனங்களின் உண்மை நிலை என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம்.

வசனத்தின் பொருள் என்ன?

முதலில் இவர்கள் ஆதம் தம்பதியினரை இணை வைப்பாளர்களாகச் சித்தரிக்கும் வகையில் எந்த வசனங்களுக்கு விளக்கம் அளித்தார்களோ அந்த இரு வசனங்களும் ஆதம் மற்றும் ஹவ்வா அவர்களைப் பற்றிப் பேசவில்லை. பொதுவாக மனிதர்களின் தன்மை, இயல்பு குறித்தே பேசுகின்றன.

மனிதர்கள் தங்களுக்குக் குழந்தை இல்லாத வரையிலும் அல்லாஹ்விடம் குழந்தையைத் தா என்று இறைஞ்சுவதும், மன்றாடி மனமுருகிப் பிரார்த்திப்பதுமாக இருப்பார்கள். அதுவே ஆரோக்கியமான குழந்தையை அவர்களுக்கு இறைவன் வழங்கி விட்டால் அதன் பின் இறைவனை மறந்து இறைவனுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலையும் துணிந்து செய்பவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு பொதுவாக மனிதர்களின் நன்றி கெட்டத் தனத்தை, இணை கற்பிக்கும் இழிசெயலைப் பழித்து இறைவன் இவ்வசனத்தில் கூறுகிறான். தவிர இவ்விரு வசனங்களும் ஆதம் நபியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

இக்கருத்தை அதற்குப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

“நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே” என இவ்வசத்தில் கூறப்படுகிறது. இது நிச்சயம் ஆதம் (அலை) அவர்களைக் குறிக்க முடியாது. ஏனெனில் ஆதம் (அலை) அவர்கள் தான் முதல் மனிதர் என்று நாமனைவரும் நன்கறிவோம். மனித குலத்தின் தந்தையே ஆதம் நபிதான். அவர் மூலம் தான் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது. அவர்களுக்கு முன் எந்த மனிதனும் வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. நிலை இவ்வாறிருக்க, ஆதம் நபி யாரை, தன்னைப் போன்ற எந்த அடியாரை அழைத்துப் பிரார்த்திருக்க முடியும்?

எனவே எந்த அடியாரையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளராக ஆக்கவில்லை. மேற்கண்ட இரு வசனங்களும் பொதுவாக மனிதனின் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறது என்பதே உண்மை.

கப்ஸா கதையின் அபத்தம்

ஆதம், ஹவ்வா இருவரும் முஷ்ரிக்குகளாகிப் போனார்கள் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட கதையை தஃப்ஸீர் நூல்களில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். இது கட்டுக்கதை தானே ஒழிய இதற்கு ஹதீஸ் நூல்களில் தகுந்த ஆதாரம் எதுவுமில்லை.

அதுமட்டுமின்றி  ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்தியை நேரடியாகப் பெற்றவர்கள். முதல் மனிதராக மட்டுமின்றி முதல் தூதராக இருந்தவர்கள். இறைவனின் தூதர்கள் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில தவறுகளை வேண்டுமானால் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் ஒருக்காலும் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள்.

மேலும் அந்த கதையில் அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடுமாறு ஷைத்தான் சொல்லி அவ்வாறு பெயர் வைத்த காரணத்தினால் தான் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாக ஆனார்கள் என்று வருகிறது.

ஆதம் நபி தான் முதல் மனிதர் என்று இருக்கும் போது யாரப்பா அந்த ஹாரிஸ்? ஹாரிஸ் என்ற  ஒருவர் எப்படி இருக்க முடியும்? இவைகளைச் சிந்தித்தாலே இந்தக் கதை முற்றிலும் தவறானது, குர்ஆனுக்கு எதிரானது என்பதை அறியலாம்.

—————————————————————————————————————————————————————-

தேசவிரோதிக்கு அரசு மரியாதையா?

“மராட்டியம் மராட்டியருக்கே” என்ற இனவாதம் பேசிய நவீன ஹிட்லர் பால்தாக்கரே இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத ஒரு தேச விரோதி! அவருக்கு அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பூங்காவில் தகனம் நடைபெற்றது. இவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ததன் மூலம் மகாராஷ்டிர அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு அவமரியாதை செய்துள்ளது. பால்தாக்கரே ஒரு பிரிவினைவாதி என்பதை இவரது குற்றப் பின்னணியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 1. 1960ல் கர்நாடகத்துடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனையால் பம்பாய் கலவரக் காடானது. இந்தக் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
 2. தென்னிந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள் உடுப்பி எனும் ஹோட்டல்களை நடத்தினார்கள். அவை சிவசேனாவின் கலவரத் தாக்குதலில் தவிடுபொடியாயின.
 3. அந்நிய மாநிலங்களிலிருந்து வந்தேறிகளால் மண்ணின் மைந்தர்களுக்கு மராட்டியத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற மராத்திய வெறியை பால்தாக்கரே இவர்களின் மண்டைகளில் ஏற்றினார். இதன் விளைவாக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்களை நிர்மூலமாக்கி, அந்த இடங்களில் சிவசேனை, தனது சங்கங்களை அமைத்தது.
 4. அத்தோடு நில்லாமல், 1967ல் பரேல் என்ற இடத்திலுள்ள டால்வி என்ற கட்டடத்தில் துணி மில்களுக்கு நடுவே அமைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை அடித்து நொறுக்கி அழித்தது.
 5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பொதுக்கூட்டங்களைத் தடுத்து நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் அக்கட்சித் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை சிவசேனை தொடுத்தது.
 6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண் தேசாய் என்பவர் துணி ஆலைகள் பகுதியில் நன்கு பிரபலமான மக்கள் தலைவர். நான்கு முறை மும்பை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். அதன் பின் 1967ல் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1970ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அவரை சிவசேனை குண்டர்கள் கொலை செய்தனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் இந்தக் கொலையில் பங்கிருந்தது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேவிற்கும், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் வசந்தராவ் நாயக்கிற்கும் இந்தக் கொலையில் பங்குண்டு என்று எதிர்க்கட்சியினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இது சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் அரசியல் கொலையாகும்.

 1. பாலிவுட் என்றழைக்கப்படும் பம்பாய் திரைப்படத் துறை பால்தாக்கரேயின் பாதடியில் பணிந்து கிடந்தது. தடாவில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத், தனது கல்நாயக் என்ற திரைப்படம் சிவசேனை குண்டர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக, பால்தாக்கரேயிடம் சென்று ஆசி பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானின் மிகப் பெரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் என்ற விருது நடிகர் திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் திருப்பிக் கொடுக்குமாறு திலீப்குமாருக்கு உத்தவிட்டார் பால்தாக்கரே! பாலிவுட்டில் பால்தாக்கரேயின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு! எனினும் அந்த விருதைத் திரும்பக் கொடுக்க திலீப்குமார் மறுத்து விட்டார் என்பது வேறு விஷயம்.

சல்மான் கான் என்ற கூத்தாடியின் தந்தை சலீம்! இவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த ஷைத்தான், விநாயகர் சதுர்த்தியின் போது தனது வீட்டிற்கு விநாயகர் சிலைகளைக் கொண்டு வந்து வழிபடுவானாம். மவ்லவிகள் சொல்லை மதிக்க மாட்டானாம். அதனால் இவனது மதச் சார்பின்மையை பால்தாக்கரே வெகுவாகப் பாராட்டினார். சல்மான் கான், சலீம் கான் போன்றோரை ஷைத்தான்கள் என்ற கருதி முஸ்லிம்கள் என்றைக்கோ தூக்கி எறிந்து விட்டனர் என்பது இந்த மராத்திய வெறியனுக்குத் தெரியாததல்ல. முஸ்லிம்களைச் சீண்டுவதற்காகவே இதுபோன்ற பாராட்டுகளைத் தெரிவிக்கின்றார்.

கலாச்சாரக் காவல்துறை

 1. மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறை என்று ஒன்றிருந்தாலும் சிவசேனை கட்சி தங்களுக்கென்று கலாச்சாரக் காவலர்களை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் காதலர் தினம் கொண்டாடுபவர்களை தர்ம அடி கொடுத்துத் தண்டனை வழங்கியது. பாகிஸ்தானிய கலைஞர்கள், எழுத்தாளர்களைத் தாக்கியது. பாகிஸ்தான் அணி மும்பையில் கிரிக்கெட் விளையாடாமல் தடுத்தது. இவையெல்லாம் இந்திய அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் சிவசேனை குண்டர்கள் நடத்திய ஏவல்துறையின் அராஜகங்கள். இதில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சாரச் சீர்கேடுகள் தான் என்றாலும் அதற்காக சட்டத்தை இவர்கள் கையில் எடுத்ததைத் தான் இங்கு நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.

இவர்களின் கலாச்சார வேஷத்திற்கு மைக்கேல் ஜாக்சன் என்ற கூத்தாடி மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் 1996ல் ஷிவ் உதயர்க் சேனாவுக்கு மைக்கேல் ஜாக்சன் கச்சேரி நடத்தி, பணம் வசூலித்துக் கொடுத்தார். பால்தாக்கரேயின் வீட்டுக்கே வந்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அங்குள்ள கழிவறையை ஜாக்ஸன் உபயோகித்தாராம். இந்தப் பாக்கியத்திற்காக மைக்கேல் ஜாக்ஸனை மட்டும் சிவசேனைக் குண்டர்கள் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.

மதன் கமிஷன் குற்றச்சாட்டு

1960ல் துர்கா கோயில் மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை ஏற்பட்டது. அதில் தான் பால்தாக்கரேயின் மத அரசியல் துவங்கியது. இதை 1970ல் நடந்த பீவாண்டி, ஜல்கோவலன் மற்றும் மஹதியில் நடைபெற்ற கலவரங்களில் நன்றாக அறிய முடிந்தது. இந்தக் கலவரங்களுக்கு சிவசேனா தான் காரணம் என்று நீதிபதி மதன் கமிஷன் குற்றம் சாட்டியது.

பால்தாக்கரேயின் இந்துத்துவ அரசியலுக்கு முதன்முதலில் வெற்றி கிடைத்தது 1987ல் வைல் பார்லி என்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான்.

ரமேஷ் பிரபு என்பவர் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இப்படியே இந்துத்துவா விஷத்தை ஊட்டி, இறுதியில் 1995ல் சிவசேனை ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் அதற்கு அடுத்து வந்த தேர்தல்களில் சிவசேனா ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இது உதவவில்லை.

பாபரி மஸ்ஜித் இடிப்பும் பம்பாய் கலவரமும்

 1. பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் 1992 டிசம்பர் 6 முதல் 1993ஆம் ஆண்டின் துவக்கம் வரையிலான இரண்டு மாதங்களில் சிவசேனா கட்சி 1000 முஸ்லிம்களைக் கொன்றொழித்தது. இதற்கு 1990ல் துவங்கப்பட்ட சாம்னா என்ற பத்திரிகை துணை நின்றது. பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, “நான் ஒரு கலகக்காரத் தலைவன் அல்ல, நான் இந்துக்களைத் தான் பாதுகாத்தேன்” என்று தான் செய்த கொலைகளை நியாயப்படுத்தி, பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் பால்தாக்கரே!

இது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தெரிவித்ததாவது: ஜனவரி 1993லிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டு சிவசேனா உறுப்பினர்கள் நடத்தினர். சிவசேனா தலைவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.

இந்த வழக்குகளில் ஒன்றில் மட்டும் பால்தாக்கரே விடுதலையானார். மீது 8 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளிலும், இன்னும் சாம்னாவில் அவர் எழுதிய வெறியூட்டும் எழுத்துக்களுக்கும் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை.

பிஜேபி, சிவசேனா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; எடுக்கவும் மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் காங்கிரஸ் என்ற நயவஞ்சகக் கட்சி அவர் மீது இந்த வழக்குகள், எழுத்துக்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை.

பாயும் புலியா? பயந்தாங்கொள்ளியா?

 1. பால்தாக்கரே, இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தார். எதற்காக? தன்னையும் தன்னுடைய பரிவாரத்தையும் மிசா என்ற சட்டத்திலிருந்து காத்துக் கொள்வதற்காகத் தான். இதிலிருந்து அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸின் கள்ள உறவு

 1. சிவசேனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவு அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் சிவசேனை இந்த அளவுக்கு உச்ச நிலையை, உன்னத நிலையை அடைந்திருக்கவே முடியாது. மகாராஷ்ட்ராவின் முதல்வராக இருந்த காங்கிரஸின் வசந்தராவ் நாயக், அரசியல் லாபம் அடைவதற்காக சிவசேனையின் வளர்ச்சிக்கு உதவினார்.

2007ல் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக ஆவதற்கும், 2012ல் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக ஆவதற்கும் சிவசேனாவின் உதவியை காங்கிரஸ் நாடியது. இது காங்கிரசுக்கும் சிவசேனாவுக்கும் உள்ள ஆழமான நட்பையும் அழுத்தமான பிணைப்பையும் பறைசாற்றியது.

உதறிய உறவினர்கள்

 1. ஊருக்கு உத்தமரான இவரால் உறவினர்களுடன் ஒத்துப் போகமுடியவில்லை. அவரது மகன் ஜெயதேவ் இவரை விட்டுப் பிரிந்து வாழ்கின்றார். இவரது மருமகன் ராஜ் தாக்கரே இவரைக் கைகழுவி விட்டு, மகா நவநிர்மான் சேனாவைத் துவக்கி விட்டார். இந்தக் கட்சி சேனாவின் வாக்கு வங்கியை உடைத்து, கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது.

பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் சந்திப்பு நடந்தது. ஆனால் சங்கமிப்பு நடக்கவில்லை. இவர் பிரிந்ததற்குக் காரணம், பால்தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேயை வாரிசாக ஆக்கியது தான். இதே காரணத்திற்காக இவரது கட்சியில் முன்னணித் தலைவராகச் செயல்பட்ட நாராயணன் ரானேயும் வெளியேறினார்.

இவை அனைத்தும் பால்தாக்கரேயின் உண்மை முகத்தை எடுத்துக்காட்டும் விஷயங்களாகும்.

மராட்டியத்தை மராட்டியரே ஆள வேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. இதன்படி சிவசேனா கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது மராட்டியத்தை ஆள முடியுமா? நிச்சயம் முடியாது. பால்தாக்கரேயின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது வாரிசு மட்டும் தான் ஆள வேண்டும். இப்படிப்பட்ட குறுகிய நிலைப்பாட்டைக் கொண்ட இவருக்குத் தான் மகாராஷ்ட்டிரத்தில் அரசு மரியாதை!

பால்தாக்கரே மட்டுமல்ல, அவருடைய சிவசேனா குண்டர்களும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்கள் என்பதற்கு அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வும் சான்றாகவுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில் அமைந்திருக்கும் பால்தாக்கரேயின் தற்காலிக நினைவுச் சின்னத்தை அகற்ற வேண்டும் என்று மும்பை மாநகராட்சி கோரிய போது, அதை எடுக்க முடியாது என்று சிவசேனா குண்டர்கள் மறுத்தே விட்டனர்.

மராட்டியம் மராட்டியருக்கே என்ற கொள்கை இந்தியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆனாலும் அந்த முழக்கத்தைத் துணிந்து செய்தவர்.

60களிலும் 70களிலும் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்தியடித்தவர். அவர்களது உணவு விடுதிகளை அடித்து நொறுக்கியவர்.

பத்திரிகை, பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த, காரோட்டிப் பிழைக்கின்ற பீகார், உபி மாநிலத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரை வந்தேறிகள் என்ற முத்திரை குத்தி விரட்டியவர். அவர்களுடைய கார்களை அடித்து உடைத்து அவர்களையும் தாக்கியவர்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவர்.

இத்தகைய குற்றப் பின்னணி உள்ள ஒரு தேச விரோதிக்கு அரசு மரியாதை! இந்தக் குற்றவாளியின் மரணத்தை, ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குடியரசுத் தலைவர் தெரிவிக்கின்றார். இந்தக் குற்றவாளிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் சூதாடிகள், சினிமா கூத்தாடிகள் அனைவரும் படையெடுத்து வந்தனர்.

இவர்கள் அத்தனை பேரிடமும் இந்த நாட்டு அரசியல் சட்டத்திற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையே இவர்களது இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இதை எதிர்த்து துணிச்சலாகக் குரல் எழுப்பியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் மட்டும் தான்.

இந்திய அரசியல் சட்டம் விதி 1 (1) மற்றும் 19 (1) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர் மட்டும் தான், “பால்தாக்கரே அரசு மரியாதைக்கு மட்டுமல்ல, இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்; தரத்தை இழந்தவர்’ என்பதை நாசூக்காகவும் நாகரீகமாகவும் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமானால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்காது. குண்டர்களின் ஆட்சி தான் நடக்கும். அது இந்த நாட்டின் அழிவுக் காலமாகும்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? அவர்கள் ஸலபி என்று கூறிக் கொள்கிறார்கள். அதைப் பின்பற்றலாமா?

சுதிர் அஹ்மத்

கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக் காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர்.

இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல அனாச்சாரங்களை இவர்களே அரங்கேற்றி வருகின்றனர்.

ஒருவர் இஸ்லாம் அங்கீகரிக்காத அனைத்து தவறான கொள்கைகளிலிருந்து விடுபட்டால் தான் அவர் சரியான ஓரிறைக் கொள்கையைக் கொண்டவராகக் கருதப்படுவார்.

தர்ஹா, மவ்லித் போன்ற இணை வைப்பை ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் மத்ஹபு என்ற வழிகேட்டை ஆதரிப்பவர்கள் ஏகத்துவவாதிகள் இல்லை என்று நம்புகிறோம். இது போன்று தான் இவர்களின் நிலையும் அமைந்துள்ளது.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதைப் போன்று ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இவர்களின் கொள்கையாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் சஹாபாக்களின் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபுவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றும் கூட்டம் தான் வெற்றி பெறும். இதுவே நேரான வழி என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவர்கள் மூன்றாவதாக ஸலஃபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னதன் மூலம் கொள்கை அடிப்படையில் நபியவர்கள் கூறிய நேர்வழியிலிருந்து விலகிவிட்டனர்.

இறைச் செய்தி அல்லாத விஷயங்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறியதன் மூலம் ஏராளமான பித்அத்கள் சமூகத்தில் ஊடுறுவ வழியைத் திறந்து வைத்துள்ளனர்.

இவர்களின் இமாம் ஜும்ஆ உரையின் இறுதியில் பிரார்த்தனை செய்வார். அதைக் கேட்பவர்கள் ஆமீன் என்று கூறுவார்கள். இவ்வாறு செய்வதற்குக் குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இவர்களும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

சவூதியில் உள்ள அறிஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள். மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றினால் தான் அவர்களிடமிருந்து இவர்கள் பண உதவி பெற முடியும். இதற்காகக் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மார்க்க விஷயங்களில் சவூதியைப் பின்பற்றி பித்அத் செய்து வருகிறார்கள்.

இறந்தவரை அடக்கம் செய்த பிறகு இறந்தவருக்காக அவரவர் தனியாக மனதுக்குள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது நபிவழி. ஆனால் இவர்கள் இந்த வழிமுறைக்கு மாற்றமாக மார்க்கம் காட்டித் தராத அடிப்படையில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

யாராவது ஒருவர் பிரார்த்தனைக்குரிய வாசகங்களை சப்தமிட்டுச் சொல்வார். அங்கு கூடியிருக்கும் மற்றவர்கள் அதைக் கேட்டு அவர்களும் அப்படியே சப்தமிட்டு கூறுவார்கள். நபிவழியில் இதற்கு ஆதாரமில்லை என்று தெரிந்தும் இந்த பித்அத்தைச் செய்து வருகிறார்கள்.

இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளை இவர்கள் ஆதரித்து வருகின்றனர். மூட நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் பொய்யான செய்திகளை ஆதாரங்களாகக் கூறி மக்களை வழிகெடுக்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் பல பொய்யான செய்திகள் ஹதீஸ் என்ற பெயரில் நுழைந்துள்ளன. ஹதீஸ்களைப் பற்றி சரியான கண்ணோட்டம் இல்லாவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரால் இணை வைப்பையும் மூட நம்பிக்கைகளையும் ஆதரிக்கும் நிலை ஏற்படும்.

ஆனால் இந்தச் செய்திகளுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தமில்லை. இவர்கள் சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாத காரணத்தால் ஹதீஸ்களின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத பல அனாச்சாரங்களை அங்கீகரித்து வருகின்றனர்.

எந்த புறச் சாதனங்களும் இல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது என்பது இஸ்லாமிய அடைப்படைக் கொள்கைகளில் ஒன்று. இவர்கள் சூனியம், கண் திருஷ்டி விஷயத்திலும், ஜின் விஷயத்திலும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நம்புகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்ற தவறான செய்தி ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தற்போது பில்லி, சூனியம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சரி காணுகின்றார்கள். இதனால் இறைவனுக்கு மட்டும் உரிய ஆற்றல் மனிதர்களுக்கும் உண்டு என்ற இணை வைப்பில் சிக்கியுள்ளனர்.

மேலும் ஜின் என்ற பெயரில் நடக்கும் அனைத்து பித்தலாட்டங்களையும் நம்புகின்றனர். ஜின் மனித உடலுக்குள் புகுந்து மனநிலையை மாற்றிவிடும் என்றும் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்றும் நம்புகின்றனர்.

ஜின்களை நம்புகிறோம் என்று கூறிக்கொண்டு பேய், பிசாசு, மூட நம்பிக்கையை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தர்ஹாக்களில் ஜின் பிடித்துவிட்டதாகக் கூறி நடக்கும் நாடகங்கள் உண்மையானவை என்று ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

நாம் யாருடைய உதவியையும் பெற முடியாத வகையில் ஏதாவது பிரச்சனையில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டால் அப்போது, “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்’ என சப்தமிட்டுக் கூறினால் உதவி கிடைக்கும் என்ற கருத்தில் ஒரு பலவீனமான செய்தி உள்ளது.

இதன் கருத்தைப் பார்த்தாலே இது பொய்யான செய்தி என்பதை எளிதில் அறிந்துவிட முடியும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட செய்தியை நம்ப முடியும்.

யாரும் உதவி செய்ய முடியாத நேரத்தில் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் அல்லாஹ்வை அழைப்பது தான் ஒரு முஸ்லிமுடைய செயல். இந்த நேரத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து வானவர்களை அழைத்தாலும் வானவர்களை வணங்கியவர்களாகி விடுவோம்.

ஆனால் இவர்களோ அல்லாஹ்வை விடுத்து அல்லாஹ்வின் அடியார்களை அழைக்கலாம். அழைத்தால் உதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதை விட பெரிய வழிகேடு என்ன உள்ளது?

—————————————————————————————————————————————————————-

பொருளியல்          தொடர்: 27

சங்கிலித் தொடர் வியாபாரம்

நபி (ஸல்) அவர்கள் காலத்திலுள்ள வியாபாரத்தின் வகைகளையும், நபி (ஸல்) அவர்கள் தடை செய்த வியாபாரங்களையும் பார்த்தோம். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் விற்கக் கூடியவன் அந்தப் பொருளைக் காட்டவேண்டும். அப்படி பொருளைக் காட்டவில்லை என்றால் விற்பவனுக்கும் ஹராம்; அதை வாங்குபவனுக்கும் ஹராம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்வதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். ஒரு பொருள் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அதை விற்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விலை பேசுவதைத் தடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.

மேற்கண்ட வியாபாரங்கள் எல்லாம் நபி (ஸல்) காலத்தில் இருந்தவையாகும். இதோடு ஒப்பிட்டு சம காலத்திலுள்ள வியாபாரத்தைப் பார்ப்போம்.

அதில் முதலிடத்தில் இருப்பது மல்டி லெவல் மார்க்கெட்டிங் (multi level marketing).

எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான்.

சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.

அதிக மதிப்புள்ள பொருளைக் குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.

அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள்.

இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன.

முதல்வகை

நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள்.

உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால்  6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள்

இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள்.

பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள்.

தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும்.

ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள்.

அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார்.

இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள்.

இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும்.

இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்.

இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும்.

இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது.

பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.

இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்?

இது சங்கிலித் தொடர் வியாபாரத்தில் முதல் வகையாகும். இன்னும் சில வகைகள் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.