ஏகத்துவம் – பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ்! பாடமும் படிப்பினையும்

பன்றிக்காய்ச்சல் (Swine flu), பறவைக் காய்ச்சல்  Bird Flu அல்லது Avian Influenza, சார்ஸ், டெங்கு, சிக்குன் குன்யா, எலிக் காய்ச்சல் என்று இதுவரை வந்த தொற்று நோய்களின் வரிசையில் இப்போது கொரோனா வைரஸ்

தன்னை இணைத்துக் கொண்டது. கடந்த 2002-2003-ம் ஆண்டில் சீனா, ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 650 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதைப் போன்று வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் காரணமாகப் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது வரை சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த 17 நகரங்களில்தான் பெரும்பாலும் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.  இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்தப் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் உள்ளிட்ட 12 நகரங்கள், முழுவதுமாக வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஹுபெய் மாகாணம், வுஹான் நகரத்திற்கு வரும் விமானங்கள் முதல் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில்  வுஹான் நகரத்தை சீன அரசு தனித் தீவாக ஆக்கியிருக்கின்றது. இதைத் தவிர்த்து ஓர் அரசு எந்த ஒரு தற்காப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

சீன அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அறிவியல் அடிப்படையிலானது. இந்தத் தடுப்பு நடவடிக்கையைத் தான் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கத்தரிசனமாக அறிவித்திருக்கின்றது. இந்தத் திட்டத்தை இப்போது சீனா செயல்படுத்துகின்றது.  இதை உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அமைந்த அரசாங்கம் அன்றே செயல்படுத்தியிருக்கின்றது.

உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக) புறப்பட்டார்கள். சர்ஃக்எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தொரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’’ என்று சொல்ல அவர்களை நான் (உமர் அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தொரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவர்களில் சிலர், ‘நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொருத்தமாகக் கருதவில்லைஎன்று கூறினார்கள். வேறு சிலர், ‘உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை’’ என்று கூறினார்கள்.

அப்போது உமர்(ரலி), ‘நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்’’ என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர் (ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.

அப்போதும் உமர் (ரலி), ‘‘நீங்கள் போகலாம்என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பொரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’’ என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), ‘மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்என்றனர்.

எனவே, உமர் (ரலி) மக்களிடையே ‘‘நான் காலையில் வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்’’ என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), ‘அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’ என்று கேட்க, உமர்(ரலி), ‘அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சாரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம்! நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?’ என்று கேட்டார்கள்.

அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், ‘‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்என்று சொல்லக் கேட்டேன்’’ என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபியவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5729

உலகத்தில் தொற்று நோய்க்கு இப்படி ஒரு தீர்வை இஸ்லாம் அளித்திருக்கின்றது என்றால் இது மனித மூளையில் முளைத்த மார்க்கமில்ல! மனித அறிவில் உதித்த மார்க்கமல்ல!

“இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான்” (அல்குர்ஆன் 30:30) என எல்லாம் வல்ல இறைவன் சொல்வது போல், அவன் உருவாக்கிய மார்க்கம் என்பதை இன்றைய தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை நிரூபித்திருக்கின்றது.

சீனாவை தவிர்த்து இந்தியா (1), தாய்லாந்து (8), ஜப்பான் (3), தென் கொரியா (4), அமெரிக்கா (5), வியட்நாம் (2), சிங்கப்பூர் (3), நேபாளம் (1), ஹாங்காங் (8), மாக்காவ் (5), தைவான் (8), பிரான்ஸ் (3), ஆஸ்திரேலியா (4), இலங்கை (1)  ஆகிய நாடுகளிலும் பரவியுள்ள இந்த நோய் உலகத்தை அதிரவும் அலறவும் வைத்திருக்கின்றது.

இது சுகாதார ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தியதை மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல் அச்சம் காரணமாக பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த வைரஸ் காரணமாகப் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது உணர்த்தும் பாடம் என்ன? இன்று உலகம், கடவுளை அதாவது படைத்த இறைவனை  மூட்டை கட்டி ஓரத்தில் வைத்து  விட்டு நாட்டைக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கின்றது. ஆனால் அவனோ, தான் இருப்பதை அவ்வப்போது சோதனைகளை அனுப்பி உணர்த்துகின்றான். அதை மனித சமுதாயம் கண்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.

உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். மேலும் அ(ச்சமுதாயத்த)வர்கள் பணிவதற்காக வறுமையாலும் நோயாலும் அவர்களைப் பிடித்தோம்.

அவர்களிடம் நமது தண்டனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்கக் கூடாதா? மாறாக, அவர்களது உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான்.

தமக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது எல்லாவற்றின் வாசல்களையும் அவர்களுக்குத் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டவற்றில் அவர்கள் இன்புற்று இருந்தபோது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகி விட்டனர். 

அல்குர்ஆன் 6:42,43,44

நாம் மேலே கண்டது போன்று பல்வேறு சோதனைகளை அனுப்பி மனித சமுதாயத்தைச் சோதித்து, திருந்துமாறு எச்சரிக்கின்றான். ஆனால் அவர்கள் திருந்திய பாடில்லை. பழைய வழிக்குத் திரும்பிய பாடாகத் தான் இருக்கின்றார்கள்.

அப்படியிருந்தால் இறைவனின் சோதனைகளும் தொடரத்தான் செய்யும். இறுதியில் அவன் ஒரேயடியாகப் பிடிக்கின்றவரை!

—————————————————————————————————————————————————————————————————————

அவள் ஒரு நற்செய்தி!

ஆர். அப்துல் கரீம்

ஒரு பெண் இளம் பருவத்தை அடைகிற போது இனக்கவர்ச்சியினாலும் இளமைப்பருவத்தினாலும் பலராலும் விரும்பப்படுகிற நபராகிறாள். அதிலும் பொலிவான முகத்தோற்றம் அமைந்து விட்டால் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு திருமணத்திற்காகப் பெண் கேட்பர்.

ஆனால் அந்தப் பெண், குழந்தையாகப் பிறந்த பொழுது இதே அளவில் அவள் விரும்பப்பட்டாளா? என்றால் ஆம் என்று நம்மால் உறுதியாகக் கூறிவிட முடியாது. அதிலும் முதல் குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

குழந்தை பிறப்பை ஆண் – பெண் என பாகுபடுத்தி மகிழ்ச்சியுறும் மனநிலையிலேயே மனித சமூகம் இன்றளவும் உள்ளது.

ஆண் குழந்தை என்றால் சந்தோஷமும் பெண் குழந்தை என்றால் ஏளனமும் ஏமாற்றமும் பெற்றோரையும் உற்றாரையும் தொற்றிக் கொள்கிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண் குழந்தை பிறப்பைப் பெரும் துக்க நிகழ்வாகக் கருதி வந்த மக்களிடையே பெண் குழந்தை ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றிய நற்செய்தி கூறப்பட்டால் அவன் துக்கமடைந்து, அவனது முகம் கருத்துப் போய் விடுகிறது. அவனுக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் மூலம் ஏற்பட்ட கவலையால், அதை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்துவிடுவதா என (எண்ணி) மக்களை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தீர்மானிப்பது மிகக் கெட்டது.

அல்குர்ஆன்  16:58, 59

பெண் குழந்தை பிறப்பை துக்கமாகக் கருதுவதும், அவளை உயிருடன் புதைப்பதும் மிகவும் கெட்டது என்று கண்டிப்பதுடன் அவள் ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் பகிரங்கப்படுத்துகின்றது.

ஆண் குழந்தை – பெண் குழந்தை இரண்டுமே இறைவனின் நாட்டப்படியே பிறக்கின்றது. இதில் ஆண் குழந்தை பிறந்தால் உயர்வு என்றோ, பெண் குழந்தை பிறந்தால் தாழ்வு என்றோ அல்லாஹ் வகைப்படுத்தவில்லை. இரண்டுமே இறைவனின் அருளின் வெளிப்பாடுகளே!

பெண் குழந்தை பிறப்பை தாழ்வாகக் கருதும் சமூகம் பின்வரும் வசனத்தைச் சிந்திக்க வேண்டும்.

வானங்கள்  மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49,50

நபியின் நெருக்கம்

ஓர் ஆண் தவறிழைப்பதையும் ஒரு பெண் தவறிழைப்பதையும் இந்தச் சமுதாயம் சமமாகக் கருதுவதில்லை. இதுபோன்ற பாரபட்சத்தை இஸ்லாமிய மார்க்கம் காட்டவில்லை. எனினும் சமுதாயத்தின் நிலை அவ்வாறுதான் உள்ளது.

ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகள் வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டியவர்கள்.

அதனால்தான் கண்ணும் கருத்துமாக இரு பெண் குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு மறுமையில் நபியின் நெருக்கம் எனும் பாக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் கூறுகிறார்கள்.

யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்”  என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள்.

(நூல்: முஸ்லிம் 5127)

இந்த வகையில் நபிகளாரின் நெருக்கம் எனும் பாக்கியத்தைப் பெற்றுத்தர பெண் பிள்ளைகள் உதவுகிறார்கள். அவர்களை நாம் சரியாக வளர்த்தால் அந்தச் சிறப்பு நிலையை அடையலாம்.

நரகைத் தடுக்கும் திரை

பெண் குழந்தைகள் என்றாலே பெரும் சோதனைகள் தாம் என்று சிலர் சலித்துக் கொள்கின்றனர்.

எந்தக் குழந்தையாக இருப்பினும் அதை வளர்த்து ஆளாக்குவதில் சில சிரமங்கள் இருக்கவே செய்யும்.

ஆனாலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்ற போது அது மறுமையில் மிகப் பெரிய சேமிப்பாக மாறுகிறது.

பெண் குழந்தைகளால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவோருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள் என்று நபிகளார் நவின்றுள்ளார்கள்.

ஒரு பெண்மணி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ‘இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 1418

ஒரு பெண் குழந்தையை வளர்க்கப் பொறுப்பேற்று சிரமத்தைச் சந்தித்தால் அவருக்கும் இத்தகைய சிறப்பு உண்டு.

என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. எனவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 5995

இதன் மூலம் பெண் குழந்தை என்பவள் வெறுக்கப்பட வேண்டியவள் அல்ல! விரும்பப்பட வேண்டியவள் என்பதை அறியலாம். ஏனெனில் அவள் ஒரு நற்செய்தி!

—————————————————————————————————————————————————————————————————————

இஸ்லாத்தின் பார்வையில் என்கவுண்டர்

பெங்களூர் கனி

மக்களை நெறிப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் உலக நாடுகளில் பல வகையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளாக, பல லட்சம் குற்றவாளிகளைத் தண்டித்த இந்தச் சட்டங்கள், அவ்வப்போது காலாவதி ஆவதும், திருத்தப்படுவதும் தொடர் கதையாய்  நீண்டு கொண்டே போகிறது.

பெரும்பாலான தண்டனைகள்  மக்களின்  கூட்டு மனசாட்சியை மையப்படுத்தியே நிறைவேற்றப்படுவது கடந்த காலங்களில் உருவாக்கிய ஒரு தவறான முன் உதாரணத்தின் மோசமான வெளிப்பாடே!

ஆம்! கடந்த காங்கிரஸ் ஆட்சி, “மக்களின் கூட்டு மனசாட்சியை” மையமாக வைத்தே அப்சல் குருவுடன் இந்த நாட்டின் சட்டத்தையும், நீதியையும் தூக்கில் போட்டது. ஆட்சியாளர்கள் நேர்மையான ஆட்சியை வழங்கினால் மக்களின் பேராதரவைப் பெற  முடியும். இதைச் செய்வதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை ஒரு குறுகிய காலம் குளிர வைப்பதன் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று விட முடியும் என்கிற தவறான சிந்தனையே இதற்குக் காரணம்.

இந்த நிலைக்கு மக்களும் ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது.

மக்களின் ஆதரவைப் பெற அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் பல குறுக்கு வழியை தேர்வு செய்கிறார்கள். அனால் இத்தகைய சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது

தெலங்கானா என்கவுன்டர் 

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு என்கவுன்டரை நாடே கொண்டாடியது. காரணம், இந்தக் குற்றப்பின்னணியின் கொடூரமும் அதை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்த்த விதமும் தான்.

கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி என்பவர் கடந்த நவம்பர் 27ம் தேதி இரவு நால்வரால் கற்பழிக்கப்பட்டு,  கொடூரமான முறையில் எரிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் சில மணித் துளிகளுக்கு முன் அந்தப் பெண் தனது சகோதரியுடன் பேசும்  உரையாடல்  கேட்கும் அனைவரின் உள்ளங்களையும் கரைக்கக்கூடிய விதத்தில் இருந்தது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி, பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி, வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுநாள் வரை தூக்குத் தண்டனையைத் தடை செய்யவேண்டும் என்று சொல்லி வந்தவர்கள் கூட இந்தக் குற்றத்தின் கொடூரத்தைப் பார்த்த பின்பு உடனடியாக இந்தக் காம மிருகங்களைப் பொது வெளியில் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினார்கள்.

மக்கள் ஏன் என்கவுன்டரால் ஈர்க்கப்படுகிறார்கள்?

நாட்டில் நடக்கும் கற்பழிப்பு – கொலைகளுக்கு என்கவுன்டர்களை  மக்கள் ஆதரிக்கும்  காரணங்கள் இரண்டு:

 1. தாமதிக்கப்படும் நீதி – அநீதி

பொதுவாக எல்லாக் கோணத்திலும் வேகத்தை விரும்பும் மனித சிந்தனை, நீதி செலுத்தலிலும் தண்டனைகளை நிறைவேற்றுவதிலும் வேகத்தையே விரும்புகிறது. தாமதிக்கப்படும் நீதி, அநீதி என்பது சரியான நிலைப்பாடு தான். இதை நாம் உன்னாவ் சம்பவத்திலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.

உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 04.06.2017 அன்று 17 வயதுடைய ஒரு பெண், பாஜாகவைச் சேர்ந்த குலதீப் சிங் செங்கார் என்ற சட்டமன்ற உறுப்பினரால்  கற்பழிக்கப்பட்டார். ஆனால் அரசியல் பின்புலத்தை வைத்து, சட்டத்தின் ஓட்டைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குல்தீப் சிங் தப்பித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, லாக்கப்பில் வைத்தே கொல்லப்பட்டார்.

லக்னோ நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரியால் மோதப்பட்டு, அவரது உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். இந்த ‘விபத்து’ பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு  நடந்த இந்தக் கற்பழிப்பு சம்பவத்திற்கு, கடந்த டிசம்பர் 16, 2019 அன்று தான் முக்கியக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் செய்த இந்தக் கொடூரச் செயலுக்கு வழக்குப் பதிய முடியாத நிலை இருக்கும் சட்டத்தில், சாமானியர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது யதார்த்தத்தில் சாத்தியமற்றது.

இதே உன்னாவில் கற்பழிக்கப்பட்ட 23 வயதுடைய மற்றொரு பெண், பல போராட்டங்கள் நடத்தியும் வழக்குப் பதிவதையே ஒத்திவைத்தது காவல் துறை. அதன்பிறகு அந்தப் பெண்ணைக் கற்பழித்தவர்கள் கைதாகி பெயிலில் வெளியே வந்ததும் அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்கள். வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. உயிரைக் காப்பாற்ற காவல் நிலையம் நோக்கி விரைந்தோடிய அந்தப் பெண் அநியாயமாக உயிரிழந்தார்.

இங்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்குத் தாமதமானதால் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையே கொலை செய்துவிட்டார்கள்.

 1. சட்டத்தின் மீதிருக்கும் அவ நம்பிக்கை

இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த, சமூக ஊடகங்கள் மூலம் அறிந்த நாட்டு மக்கள் இந்தக் குற்றத்திற்கு தெலுங்கானா பாணியில் என்கவுன்டர் தான் தீர்வு என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்

நமது நாட்டில் இருக்கும் சட்டம் குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் இல்லை. இதில் இருக்கும் ஓட்டைகளை வைத்துக் குற்றவாளிகள் வயதை, முதுமையை, நோயைக் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் இது போன்ற ஏராளமான சம்பவங்களைப் பார்த்த மக்களுக்கு, சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைத்து கொண்டே போகிறது.

நீதித்துறையின் மெத்தனம், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், ஆதிக்க வர்க்கத்தின் பிடியில் அரசாங்கம் போன்ற காரணங்களால் மக்கள் வெறுத்துப் போயுள்ளார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது  நாடு தழுவிய கொந்தளிப்பைப் பார்க்கும் மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். துரித நீதி என்பது என்கவுன்டரின் மூலம் தான் கிடைக்கும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  காவல்துறை நடத்தும் என்கவுன்டர் கொலைகளைக் கொண்டாடுகின்றனர். இது நாட்டு மக்களுக்கு ஆரோக்கியம் இல்லை.

கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் இதுபோன்ற என்கவுன்டர்  கொலைகள் அநியாயமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு சொராபுதீன் போலி என்கவுன்டர்  ஒரு மிகப் பெரிய சான்று. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இதுபோன்ற என்கவுன்டர்களை நாட்டு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் காவல்துறை தங்களுக்குப் பிடிக்காத மக்களைக் கொலை செய்ய இதை ஓர் அங்கீகாரமாக எடுத்துக் கொள்வார்கள்.

இஸ்லாமிய சட்டமே தீர்வு

எந்த இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை காட்டுமிராண்டிச் சட்டமாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்தார்களோ, அந்த  இஸ்லாமிய சட்டங்களை மக்கள் விரும்புவதைத் தான் இந்த என்கவுன்டர் ஆதரவு நிலைப்பாடுகள் காட்டுகின்றன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று எல்லோருடைய மனதிலும் ஒரு சிந்தனை உருவாக்கம் தோன்றியுள்ளது.

எனவே, இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே குற்றங்கள் குறைய சரியான தீர்வாக அமையும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தினால் குற்றம் செய்த எந்த வலியவரும் தப்பிக்கமாட்டார், அப்பாவியாக இருக்கும் எந்த எளியவரும் பாதிக்கப்படமாட்டார்.

மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர்.

அவ்வாறே உஸாமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா நீ பரிந்துரை செய்கிறாய்என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு, “உங்களுக்கு முன்னிருந்தவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடிவிட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 3485

நம் நாட்டிலோ ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஆனால் இது  உண்மையில் நிலைநாட்டப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக இந்தச் சட்டம் குற்றம் செய்தவனை தப்பிக்க வைக்க ஒரு சாக்குப் போக்கை உருவாக்கியதே தவிர நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதை கவனிப்பதில்லை.

இதுபோன்ற காரணங்களால் மக்களுக்கு, சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. சட்டமும் நீதியும் பணபலம், அரசியல் பலம் படைத்த வலியவர்களுக்குத் தான் நன்மை பயக்கும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது எந்த நன்மையையும் செய்யாது என்ற முடிவிற்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.

சட்டத்தின் முன், நீதியின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்து, அதைச் சரிவர நிறைவேற்றினால் தான் மக்கள் நீதித்துறையை நம்புவார்கள்.

பாதிக்கப்பட்டவனே நீதிபதி

அரசியல் அழுத்தங்கள், மக்களின் கூட்டு மனசாட்சி  ஆகியவற்றைத் தாண்டி இதுபோன்ற குற்றங்களுக்கு, சரிவர தீர்ப்புகளும்  தண்டனைகளும்  வழங்கப்படாததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு.

மனிதர்கள்  இயற்றும்  சட்டங்களில் நீதி, சட்டப் புத்தகத்தின் அடிப்படையிலும், வக்கீல்களின் வாதத் திறமையின் அடிப்படையிலும் தான் அமைந்திருக்கிறது. பல நேரங்களில் அரசியல் அழுத்தம், மக்களின் கூட்டு மனசாட்சி, லஞ்சம், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நியாயமான தீர்ப்பை வழங்காதது போல், நீதிபதிகளின் பாதிப்பை உணராத தன்மையும் நியாயமான தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கிறது. இஸ்லாமிய மார்க்கமோ இதனைப் பாதிக்கப்பட்டவனின் பொறுப்பில் ஒப்படைக்கிறது.

அல்லாஹ் தனது வேதத்தில் குற்றங்களுக்கான தண்டனைகளைப் பட்டியலிடும் போது, பாதிக்கப்பட்டவர் யாராவது மன்னித்தால் தண்டனையை ரத்துச் செய்யலாம் என்ற அழகிய முன்மாதிரியை எடுத்துரைக்கின்றது.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கு அதே அளவு (காயப்படுத்தி) பழிவாங்குதல்’’ என அதில் அவர்களுக்கு விதியாக்கியிருந்தோம். யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டால் அது அவருக்குப் பாவப் பரிகாரமாக அமையும். அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.

அல்குர்ஆன் 5:45

தீர்வை நோக்கிப் பயணிப்போம்

குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்து விடக் கூடாது என்ற இவர்களது எண்ணம் சரியானது தான். அதே நேரத்தில் குற்றங்கள் முதலில் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். அது விரைவாக விசாரித்து, விரைவான தீர்ப்பாக அமைய வேண்டும்.  அவ்வாறு நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும். இது போன்ற குற்றத்தை ஒருவன் செய்ய – ஏன் நினைக்கக் கூடத் தயங்கும் விதத்தில் கடுமையாக இருக்க வேண்டும்.

தண்டனையை நிறைவேற்றுவதா அல்லது மன்னிப்பதா என்பதைப் பாதிக்கப்பட்டவர் தான் முடிவு செய்ய வேண்டும். முழுமையான விசாரணை இல்லாமல் தண்டனையை அவசர கதியில் யாரும் (காவல் துறை உட்பட) நிறைவேற்றாமல் அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் இதைப் பொதுவெளியில் மக்களை ஒன்று கூட்டி நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தான் குற்றங்கள் குறையும். மக்களுக்கு நீதித்துறையின் மீது, சட்டத்தின் மீது நம்பிக்கை வரும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க மாட்டார்கள். உயிர்கள் பாதுகாக்கப்படும்.

அறிவுடையோரே! பழிவாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கை உள்ளது. நீங்கள் (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:178, 179

சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான் இதற்குத் தீர்வு!

—————————————————————————————————————————————————————————————————————

இறைவா!  எங்கள் பாதங்களை  உறுதிப்படுத்துவாயாக!!

M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்ற ஏகத்துவ முழக்கத்தோடு முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த உலகத்தில் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள், வேறு வேறு கொள்கை கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள், இன்ன பிற சித்தாந்தங்களின் அடிப்படையில் வாழ்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாமியர்கள் என்று சொன்ன மாத்திரத்திலே விஷக் கிருமிகளிடமிருந்தும், கருவறுக்கத் துடிக்கும் கயவர்களிடமிருந்தும் முஸ்லிம்கள் ஏராளமான துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் உள்ளாக்கப்படுவதை சமகால வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது.

குறிப்பாக, சமகால சூழல் என்பது முஸ்லிம்களைக் காவு வாங்குவதற்கும், கருவறுப்பதற்கும் ஒரு அக்கிரமக் கூட்டம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் காலம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், அக்கிரமங்கள் ஏராளம்! ஏராளம்!

உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடியையும், இன்னல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் சமீப காலமாகக் கடுமையான வேதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதுபோன்ற அசாதாரணமான சூழலில் இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது? சோதனைகளைக் கண்டு மனம் தளராமல் இருப்பதற்கான வழிகள் என்ன?  இஸ்லாமியர்களின் பாதங்கள் உறுதியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற செய்திகளை இஸ்லாமியர்களாகிய நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க கடமைப்பட்டுள்ளோம்.

பொதுவாகவே சந்தோஷமான கால கட்டங்களில், மகிழ்ச்சியான காலகட்டங்களில் மன உறுதியோடும், மன வலிமையோடும் இருப்பதை விட, சோதனையான காலகட்டங்களிலும், சோகமான காலகட்டங்களிலும் மன உறுதியோடு தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது தான் உண்மையான வலிமையாகும். அத்தகைய உறுதிப் பயணத்தைத் தான் அல்லாஹ்வும் விரும்புகின்றான்.

மேலும், நெருக்கடியான சூழலில் ஒரு முஸ்லிம் தங்களின் உள்ளங்களை உறுதிப்படுத்துவதற்கும், உள்ளங்களில் பொறுமையை மேற்கொள்வதற்கும், பாதங்களை உறுதிப்படுத்துவதற்கும் இறைவனும், இறைத்தூதரும் ஏராளமான வழிகாட்டுதல்களை கற்றுத் தருகின்றார்கள்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் எவ்வளவுதான் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தாலும், அயோக்கியத்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டாலும், அக்கிரமமான செயல்பாடுகளை செயல்படுத்தினாலும் இறைவனின் உதவியும், அருளும் இருக்கும் போது இஸ்லாமியர்களை எவ்வளவு பெரிய தீய சக்திகளாலும் ஒன்றும் செய்து விட முடியாது என்று இறைவன் பாடம் நடத்துகின்றான்.

இதோ இறைவனின் அற்புதமான அறிவுரை!

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறியவற்றையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் அவர்களின் கூற்றாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 3:147

யாரெல்லாம் இறைவனை மறுக்கின்றார்களோ, அத்தகைய நிராகரிக்கும் கூட்டத்திற்கு எதிராக இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! உன்னை மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்று இஸ்லாமியர்கள் இறைவனிடத்திலே இறைஞ்சுவார்கள் என்று இறைவன் உபதேசிக்கின்றான்.

ஒரு முஸ்லிம் இறைவனிடத்தில் வைக்கின்ற கோரிக்கைகளில், வேண்டுதல்களில் மிக முக்கியமானதும், அத்தியாவசியமானதும் குறித்து இறைவன் அற்புதமான வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்துகின்றான்.

எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறை மறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!

அல்குர்ஆன் 2:250

கயவர்களால் பாதிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் இறைவனிடத்திலே கேட்கும் போது, இறைவா! எங்கள் மீது பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிராகரிக்கின்ற அராஜகக் கூட்டத்திற்கு எதிராக உதவுவாயாக! என்று இறைவனிடத்தில் முறையிடுகின்ற வார்த்தைகளை அல்லாஹ் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றான்.

முஸ்லிம்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து வெளிப்படும் உதவி குறித்து இறைவன் கூறும் போது,

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

அல்குர்ஆன் 47:7

இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலும், வணக்க வழிபாடுகளிலும், இஸ்லாமிய மார்க்கத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதையும் இலக்காகக் கொண்டு பயணித்தால், அத்தகைய முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான். எதிரிகளுக்கு எதிராக இஸ்லாமியர்களின் பாதங்களை உறுதிப்படுத்துவதாகவும் இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.

மேலும் இறைவன் தன்னுடைய திருமறையில், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு சவாலைப் பதிய வைக்கின்றான்.

(நபியே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்!

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் சிறிதும் உம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். இறையச்சமுடையோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன்.

அல்குர்ஆன் 45:18, 19

யார் அல்லாஹ்வை அஞ்சுகின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்றும், அறியாதோரின் விருப்பங்களைப் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

மேலும், மூஸா (அலை) அவர்கள், தன்னுடைய சமுதாய மக்களுக்காகச் சொன்ன அறிவுரைகளையும், அதற்கு அவர்கள் பதிலளித்ததையும் ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் எடுத்துரைக்கும் போது,

என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தால், நீங்கள் முஸ்லிம்களாகவும் இருந்தால் அவன் மீதே முழு நம்பிக்கை வையுங்கள்என்று மூஸா கூறினார்.

நாங்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவா! அநியாயக்காரக் கூட்டத்தின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திடமிருந்து உன் அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாகஎன்று அவர்கள் பிரார்த்தித்தனர்.

அல்குர்ஆன் 10:84-86

அல்லாஹ்வை நம்பி உண்மையான முஸ்லிமாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்திருந்தால் அநீதி இழைக்கின்ற அக்கிரமக்காரர்களின் கொடுமையிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்.

மேலும் இறைவனை மறுக்கின்ற எத்தனை பெரிய அராஜகக் கூட்டமாக இருந்தாலும், அத்தகைய கூட்டத்திலிருந்தும் அல்லாஹ் முஸ்லிம்களைப் பாதுகாப்பான்.

இறையச்சமுடையோரை வெற்றி பெறச் செய்து அல்லாஹ் காப்பாற்றுவான். அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 39:61

இறைவனை அஞ்சினால் கண்டிப்பாக அல்லாஹ் வெற்றி பெறச் செய்வான் என்றும், விஷம சக்திகளிடமிருந்து எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும், ஒருபோதும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் இறைவன் ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றான்.

இதுபோன்ற ஏராளமான திருமறை வசனங்கள் இஸ்லாமியர்களுக்குச் சொல்கின்ற அற்புதமான செய்தி! இறைவனைச் சரியான முறையில் பின்பற்றி நடந்தால், தங்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சீர்திருத்தி அமைத்துக் கொண்டால் கண்டிப்பாக எதிரிகளின் துரோகத்திலிருந்தும், கயவர்களின் கயமைத்தனத்திலிருந்தும் அல்லாஹ் காப்பாற்றுவான். நம்முடைய பாதங்களை உறுதிப்படுத்துவான்.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளை எதிர்த்து நிற்கின்ற அளவுக்கு உள்ளத்தில் மன உறுதியும், மன வலிமையையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுபோன்ற மன வலிமைகளையும், திடகாத்திரமான உள்ளங்களையும் கொண்டிருந்தால் மட்டுமே எதிரிகளை ஓடஓட விரட்டி அடிக்க முடியும். இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எதிரிகளிடமிருந்து இறையுதவியால் காப்பாற்ற முடியும்.

கடந்த காலங்களில் மன உறுதியோடு இருந்த எத்தனையோ நபர்களின் பாதங்களை அல்லாஹ் உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதற்கு ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் சான்றாக அமைந்திருக்கின்றன.

எதிரிகளைக் கலங்கடித்த அஸ்மா பின்த் அபீபக்கர்

இறைவனின் உதவியும், அருளும் இருந்தால் இஸ்லாத்திற்கு எதிரான எவ்வளவு பெரிய கயவர்களையும் வேரறுத்து விடலாம். மேலும், இறைவனின் உதவியால் நம்முடைய பாதங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அயோக்கியர்களின் கூடாரங்களை இல்லாமல் ஆக்கி விட முடியும்.

அஸ்மா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணாக இருந்து, இஸ்லாத்தின் எதிரிகளைக் கலங்கடித்த வரலாறு மிகப்பெரிய உத்வேகத்தை நமக்குப் பாடம் நடத்துகின்றது.

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளங்களையும் தட்டி எழுப்புகின்ற மிகச் சிறந்த வரலாறு இதோ!

மிகப்பெரிய பொய்யன், நாசக்காரன், ஸகீஃப் குலத்தாரிடமிருந்து வருவான் என்று முன்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகப் பயங்கரமான எச்சரிக்கையை விடுத்திருந்தார்கள். அந்த ஸகீஃப் குலத்தாரிடமிருந்து வந்தவன் தான் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற நாசக்காரன்.

(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்க விடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது உடலை நான் மதீனா(விலிருந்து மக்கா வரும் வழியிலுள்ள) அகபாபள்ளத்தாக்கில் கண்டேன்.

அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, “அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சி யாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே!

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்த வரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக் கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?’’ என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார்.

அவரது உடல் மரத்திலிருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது.

நூல்: முஸ்லிம் 4975

அஸ்மா (ரலி) அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்கள் நாசக்கார மன்னராக இருக்கின்ற ஹஜ்ஜாஜுக்கு எதிராக களத்திலே நிற்கின்றார்கள். ஒரு கட்டத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களை எதிர்ப்பதற்காக ஹஜ்ஜாஜ் படையை அனுப்புகின்றான். சுமார் எண்பதுக்கும் மேற்ப்பட்ட நபர்களை ஹஜ்ஜாஜ் தன்னந்தனியாக நின்று வேரறுக்கின்றார்.

மேலும், அப்துல்லாஹ் பின் ஸுபைரின் கடுமையான வீரியத்தையும், ஆக்ரோஷத்தையும் கண்டு ஹஜ்ஜாஜ் கதிகலங்கி நிற்கின்றான். அப்துல்லாஹ் பின் ஸுபைரை கொடூரமாகக் கொலை செய்து, பிறருக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கழு மரத்திலே ஏற்றி சிலுவையில் அறைந்து தொங்க விடுகின்றான்.

மக்களெல்லாம் அப்துல்லாஹ் பின் ஸுபைரின் உடலைப் பார்த்து விட்டுக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மாத்திரம் தன்னுடைய ஆற்றாமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களின் உடலைப் பார்த்துக் கதற ஆரம்பித்து விட்டார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ஹஜ்ஜாஜ், அவரது உடலை யூதர்களின் அடக்கத்தலத்தில், அடக்கம் செய்யுமாறு கட்டளையிடுகின்றான்.

இதன் பிறகு நடைபெற்ற, உள்ளங்களைத் தட்டி எழுப்புகின்ற சம்பவங்களை தொடர்ச்சியாகப் படித்துப் பாருங்கள்!

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, “ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக் கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?’’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.

அப்போதும் அஸ்மா (ரலி) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை’’ என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ், “என் செருப்புகள் எங்கே?’’ என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்தார். பிறகு அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?’’ என்று கேட்டார்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்து விட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்து விட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை இரு கச்சுடையாளின் புதல்வரே!என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது.

அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.

நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசக்காரன் ஒருவனும் இருப்பார்கள்’’ என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த நாசக்காரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்’’ என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ரலி) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.

நூல்: முஸ்லிம் 4975

மேலே உள்ள சம்பவத்தை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! இஸ்லாத்திற்காகத் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் பாதங்களை அல்லாஹ் எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

மகனைக் கொன்று விட்டு, தாயார் அஸ்மாவை ஹஜ்ஜாஜ் என்ற கொடூரன் அழைத்து வரச் சொல்கின்றான். அந்த வீரத்தாய் வர மறுக்கிறாள். மீண்டும் கொடூரன் ஹஜ்ஜாஜ் கேட்கின்றான்; நீயாக வருகின்றாயா? தலைமுடி சடையைப் பிடித்து இழுத்து வர ஆள் அனுப்பவா? என்று கேட்கும்போது, தைரியம் இருந்தால் ஆள் அனுப்புடா? என்று பதிலளிக்கிறார் அஸ்மா (ரலி). செருப்பெடுத்து அணிந்து கொண்டு ஹஜ்ஜாஜே ஓடோடி சந்திக்க வருகின்றான்.

ஹஜ்ஜாஜ் என்ற கொடூரன் அஸ்மா அவர்களைச் சந்தித்து சில பசப்பு வார்த்தைகளைப் பேசுகின்றான். அதற்கு முத்தாய்ப்பாக அஸ்மா (ரலி) அவர்கள் சொன்ன பதில் இதோ!

“ஹஜ்ஜாஜே! நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்து விட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்து விட்டார் என்றே நான் கருதுகிறேன்”

வீரப்பெண்மணி வாயிலிருந்து உதிர்ந்த முத்தான வார்த்தைகள்! ஹஜ்ஜாஜ் என்ற கொடூர நாசக்கார மன்னனுக்கு மரண அடி கொடுக்கின்ற பதிலடியாக மாறியது.

அஸ்மா பேசியதற்குப் பதிலேதுமின்றி திணறிப் போய் ஓடோடி விடுகின்றான்.

இதற்குப் பிறகு அஸ்மா (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஜனாஸாவைத் தோண்டி எடுத்து, தன்னுடைய கைகளாலேயே தன்னுடைய மகனின் ஜனாஸாவைச் சுமந்து வந்து மதீனாவில் இருக்கின்ற மண்ணறைகளில் அடக்கம் செய்தார்கள் என்ற வரலாற்றுத் தகவல்களும் படிப்போரின் உள்ளங்களை உலுக்குகின்ற செய்திகளாக இருக்கின்றன.

யார் இந்த அப்துல்லாஹ் பின் ஸுபைர்? ஆரம்ப காலகட்டத்தில் ஹிஜ்ரத்திற்காக மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்து செல்லும் போது, இந்த வீரப்பெண்மணி அஸ்மா (ரலி) அவர்கள் இதே அப்துல்லாஹ் பின் ஸுபைர் என்ற தன்னுடைய மகனை வயிற்றிலே சுமந்தவாறு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சென்றார்.

ஆனால் அதே மகனை இறந்த ஜனாஸாவாக பிற்காலத்தில் நாம் தூக்கி செல்வோம் என்று அவர் ஒருக்காலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

மதீனாவில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்கள் பிறந்த போது, அந்தக் குழந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தை தன்னுடைய நாவினால் நசுக்கி அந்தக் குழந்தையின் வாயிலே இட்டார்கள்.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! எந்தத் தாய்க்காவது தன்னுடைய மகனை, அதுவும் இறந்த ஜனாஸாவை, தன்னுடைய கரத்தாலேயே சுமந்து வருகின்றார் என்றால், இதை விட உச்சகட்ட மன வருத்தமும், வேதனையும் இருக்க முடியுமா? என்றாலும் இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணித்த தன்னுடைய மகனுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு இறைவனிடத்திலே ஒப்படைத்து விடுகின்றார்.

இந்த அற்புதமான செய்தியிலிருந்து…

அராஜக ஆட்சியாளனை எதிர்த்து, கடும் வீரியத்தோடு அப்துல்லாஹ் பின் ஸுபைர் களம் காண்கின்றார்.

அப்துல்லாஹ்வின் வீரியத்தை ஒடுக்க, கொடூரமான முறையில் கொலை செய்து கழு மரத்திலே ஏற்றி விடுகின்றான் கொடூரன் ஹஜ்ஜாஜ்.

பிறகு யூத மண்ணறையில் அடக்கம் செய்கின்றான்.

அப்துல்லாஹ்வின் தாயார் அஸ்மாவை அழைத்து வர சொல்கின்றான்.

வர மறுத்து கண்டித்து எச்சரித்து அனுப்புகின்றார் அஸ்மா (ரலி) அவர்கள்.

ஹஜ்ஜாஜே வந்து அஸ்மாவிடம் பேசுகின்றான்.

தான் ஒரு வீரப் பெண்மணி, இறைவன் தனது பாதங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதை அஸ்மா (ரலி) தன்னுடைய கண்டன வார்த்தைகளின் மூலமாக பதிய வைக்கின்றார்.

இறந்த, தன்னுடைய மகனை மதீனாவிற்குத் தூக்கி கொண்டு வந்து அடக்கம் செய்தார் அஸ்மா (ரலி) அவர்கள்.

நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன் என்று அந்தக் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜிடம் நேரடியாகவே அஸ்மா (ரலி) கூறுகின்றார்கள்.

உண்மையாகவே இந்தச் செய்தி நம்முடைய உள்ளங்களுக்கு வலுவூட்டுகின்ற செய்தி! உண்மையான இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளை இந்தச் செய்தி பறைசாற்றுகின்றது. மன உறுதியையும், மன வலிமையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறை மார்க்கத்தில் உள்ளவர்களின் பாதங்களை அல்லாஹ் எவ்வாறு உறுதிப்படுத்துவான் என்பதற்கு இந்தச் செய்தி அற்புதமான சான்று!

இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற வரலாறுகள், சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்ற செய்தி, எத்தனை பெரிய அயோக்கியத்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் ஒருக்காலும் இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் போதனைகளையும் இழந்து விடக் கூடாது.

எங்களின் உயிரே போனாலும் இஸ்லாத்தை இழக்க மாட்டோம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய உள்ளங்களில் ஆழப்பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எவ்வளவு பெரிய தீய சக்திகள், எத்தனை பெரிய துன்பங்களைக் கொடுத்தாலும், சிரமங்களுக்கு ஆட்படுத்தினாலும் நம் உடற்கூட்டிலிருந்து உயிரைப் பிரிக்கலாமே ஒழிய ஒருக்காலும் ஈமானை பிரிக்க முடியாது.

இறுதியாக, இறைவனின் அற்புதமான உபதேசம்…

அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் அவர்கள் தளர்ந்துவிடவில்லை; பலவீனப்படவில்லை; பணிந்துவிடவும் இல்லை. அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:146

“இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’

—————————————————————————————————————————————————————————————————————

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒளியில் அமல்களின் சிறப்புகள்

உறங்கும்போது உளூ

எம். ஷம்சுல்லுஹா

மிஸ்வாக் – பல் துலக்குதல் உளூவை ஒட்டி அமைகின்ற ஓர் இபாதத் என்பதால் அதன் விளக்கத்தை இதுவரை கண்டோம்.

உளூவின் சிறப்புகளைப் பற்றிக் கூறும் இந்த நேரத்தில் உளூவின் சிறப்புகளைப் பற்றிய ஒரு சட்ட விளக்கத்தையும் இங்கே காண்பது அவசியமாகும்.  ஒரே உளூவில் பல தொழுகைகளைத் தொழலாமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்வது சிறப்பான காரியமாகுமா? அதற்கு நிறைய நன்மைகள் உண்டா? என்பது பற்றிய விளக்கம் தான் அது.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன்.  லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  இப்னு உமர் (ரலி) உளூச் செய்து லுஹரைத் தொழுதார்கள்.  அஸர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் உளூச் செய்தார்கள்.  அப்போது நான் அவரிடம் (இது பற்றி விளக்கம்) கேட்டேன்.  அதற்கு, “யார் உளூவோடு இருக்கும்போது உளூச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து நன்மைகளை எழுதி விடுகின்றான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) பதிலளித்தார்கள்,

என்ற செய்தி அபூதாவூதில் 57வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் ஜியாத் என்பவர் இடம் பெறுகின்றார்.  இவர் பலவீனமானவர்.  இதில் இடம் பெறும் மற்றோர் அறிவிப்பாளரான குதைம் என்பார் யாரென்று அறியப்படாதவர்.  அதனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.  இதே ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.  இதைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸ் பலவீனமானது என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே உளூ இருக்கும் நிலையில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்வது நன்மை என்று வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.  அதே சமயம் இதுபோன்று ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்தாரானால் அதை தவறு என்று சொல்ல முடியாது.  ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்து தான் தொழுதிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூ செய்வார்கள் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.  நீங்கள் எப்படிச் செய்வீர்கள் என அனஸ் (ரலி) இடம் கேட்டேன்.  உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமல் இருக்கும்போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி  214

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்திருக்கின்றார்கள்.  அதே சமயம் நபித்தோழர்கள் ஒரு உளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதிருக்கின்றார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அனுமதியின் பேரில் தான் நபித்தோழர்கள் இவ்வாறு செய்தார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: புகாரி 466

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்திருக்கின்றார்கள். மக்கா வெற்றியின் போது ஒரே உளூவில் பல தொழுகைகளைத் தொழுது காட்டியதுடன் காலுறைகளுக்கு மேல் மஸஹ் செய்வதையும் காட்டித் தருகின்றார்கள்.  ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்வதன் மூலம் அது தவறான ஒன்றல்ல என்பதை மக்களுக்கு உணர்த்துகின்றார்கள்.

மேற்கண்ட இந்த ஹதீஸ்களின் மூலம் ஒருவர் விரும்பினால் ஒரு நேரத்திற்குச் செய்கின்ற உளூவுடன் பல தொழுகைகளைத் தொழுது கொள்ளலாம். அல்லது ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் உளூவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே செய்த உளூவுடன் மீண்டும் ஒரு தடவை உளூ செய்வதற்காகவோ அல்லது அந்த உளூவை முறித்துவிட்டுப் புதிதாக உளூச் செய்வதற்காகவோ சிறப்பான நன்மைகள் எதையும் நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை.

எனினும், ஒவ்வொரு உளூவின் போதும் ஏதேனும்  ஒரு தொழுகையைத் தொழுவது அல்லாஹ்விடம் மிகப்பெரும் நன்மையை பெற்றுத் தருகின்றது.

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால் (ரலி) அவர்களிடம் பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 1149

ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்வது அவசியமில்லை என்றாலும் ஒவ்வொரு உளூவுக்குப் பின் கடமையான அல்லது உபரியான ஏதேனும் ஒரு தொழுகையை தொழுகின்ற போது இறைவனிடத்தில் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுத் தருகின்றது என்பதை பிலால் (ரலி)யின் இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.

உறங்கும் போது உளூச் செய்தல்

பொதுவாக தொழுகைக்குத் தான், அதாவது வணக்கத்திற்குத் தான் உளூச் செய்யவேண்டும் என்று நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் போது உளூச் செய்வதற்கு ஆர்வமூட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது  தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு,

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ  அர்ஸல்த்த’’ என்று ஓதிக்கொள்.

பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்என்பதற்கு பதிலாக) நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை; ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்என்று சொல்’’ என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்..

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 247 ,6311

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்,

 1. தொழுகைக்கு உளூச் செய்வது போல உளூச் செய்து கொள்.
 2. உன் வலது பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.
 3. மேலே குறிப்பிட்டுள்ள பிரார்த்தனையைச் செய்.

என மூன்று கட்டளைகளை இடுகின்றார்கள்.  உறங்குவதற்கு முன் இம்மூன்று கட்டளைகளை ஒருவர் நிறைவேற்றுகின்ற போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்குச் சாதாரண பாக்கியத்தை வழங்கவில்லை.

நிச்சயமாக ஓர் அடியான் சுவனவாசிகளின் அமலைச் செய்கின்றார் என்று மக்கள் கருதும் வகையில் அமல் செய்கின்றார்.  ஆனால் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார்.  அந்த அடியான் நரகவாசிகளின் அமலைச் செய்கின்றார் என்று மக்கள் கருதும் வகையில் அமல் செய்கின்றார்.  ஆனால் அவர் சுவனவாசிகளில் ஒருவராக இருப்பார்.  நிச்சயமாக அமல்கள் எல்லாம் இறுதியைப் பொறுத்து தான் அமைகின்றனஎன்று நபி (ஸல்) அவர்கள் தற்கொலை செய்து இறந்தவர் தொடர்பான ஹதீஸில் தெரிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 6493

இந்த ஹதீஸின்படி ஒருவர் எவ்வளவு தான் வாழ்நாள் முழுவதும் நல்லமல்கள் செய்திருந்தாலும் அவருடைய இறுதி முடிவு நல்ல முடிவாக அமைய வேண்டும்.  அப்போது தான் அவர் சுவனம் செல்ல முடியும்.  இந்தப் பெரும் பாக்கியத்தைத்தான் படுக்கும்போது இம்மூன்று காரியங்களைச் செய்பவர் பெறுகின்றார்.

இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்கின்றபடி படுப்பவரின் கடைசிப் பேச்சு இந்தப் பிரார்த்தனையாக அமைந்து விடுமாயின் – எப்படி ஒரு குழந்தை பிறக்கும்போது பாவமற்றதாக பிறக்கின்றதோ அதுபோன்று அவர் பாவமற்ற தூய்மையான நிலையில் மரணித்து விடுகின்றார் என்றால் இது ஒரு சாதாரண விஷயமா? என்று எண்ணிப் பாருங்கள்.

இன்று எத்தனை தவ்ஹீதுவாதிகள் இந்த நபிவழியை இதுவரை நடைமுறைப் படுத்தியுள்ளனர்?  என்பதை நாம் சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.

நம்முடைய பிரச்சார அளவுக்கு நம்மிடம் தூய்மையான மார்க்கத்தின் செயல்பாடுகள் இருந்திருக்குமானால் நாம் இப்போது கண்டிருக்கும் வளர்ச்சியைக் காட்டிலும் பன்முக வளர்ச்சியைக் கண்டிருப்போம்.  நம்மில் எத்தனை பேர்கள் இந்த துஆ மனனம் செய்திருக்கின்றோம்? இந்த துஆவில், இன்னும் இதுபோன்ற சிறு சிறு அமல்களில் நாம் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், ஏகத்துவத்தை ஏற்று விட்டோம்! இனி நமக்கென்ன? சுவனம் நிச்சயமாகிவிட்டது என்ற எண்ணம் தான்!  இது நம்மை அலட்சியப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய தூதுத்துவப் பணியின் இறுதி ஹஜ் பேருரையில், “இந்த உங்கள் (புனித) ஊரில் எப்போதாயினும் கூட தான் வணங்கப்படுவோம் என்ற நம்பிக்கையை ஷைத்தான் அறவே இழந்து விட்டான்’’ என்று பிரகடனப்படுத்துகின்றார்கள்.  அதாவது ஷைத்தானுடைய ஆதிக்கங்கள் மக்கா பகுதியில் இருக்காது.  அதற்கான வாயில்கள் அடைக்கப்பட்டுவிட்டன. ஆயினும் அவன் ஊடுருவக் கூடிய ஒரு வாசல் உண்டு.  அதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், “எனினும் உங்களுடைய அமல்களில் நீங்கள் அற்பமாகக் கருதக்கூடிய சில அமல்களில் அவனுக்கு வழிபடுதல் உருவாகும்.  அதன் மூலம் அவன் திருப்தியடைவான்’’ என்று கூறுகின்றார்கள். 

அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வஸ்

நூல்: திர்மிதி  2085

அதாவது, ‘ஹூம்! இதென்ன சின்ன அமல்தானே! இதைச் செய்யாவிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இதையெல்லாம் செய்து தான் ஆகவேண்டுமா?’  என நாம் இளக்காரமாகக் கருதி விடுகின்றோம் அல்லவா? ஏன் இவ்வாறு விடுகின்றோம்?  ஷைத்தானின் தூண்டுதலால் தானே! இங்கு தான் ஷைத்தான் வந்து நுழைவதற்கு வசதியாக வாசல் கதவை திறந்து வைக்கின்றோம்.

இந்தக் காரியத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் – இறுதி ஹஜ்ஜின் போது கண்டிக்கிறார்கள்.  மற்றவர்களிடம் வாலாட்டி ஷிர்க்கில் வழுக்கி விழச் செய்வது போன்று ஏகத்துவத்தில் உள்ளவர்களிடம் வாலாட்டி ஷிர்க்கில் கொண்டுபோய் கவிழ்த்து விட மாட்டான்.  எனினும் இது போன்று சின்னஞ்சிறு அமல்களை ஏகத்துவவாதிகளிடம் அற்பமாகக் காட்டி அவர்களைக் கவிழ்த்து விடச் செய்கின்றான்.  அதனால் தான் கருணை நபி (ஸல்) அவர்கள் இதனைக் கண்டறிந்து தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையில் தெரிவிக்கின்றார்கள்.

உறங்கும் முன் உளூச் செய்வது, உளூச் செய்த பின் வலது பக்கமாக ஒருக்களித்துப் படுத்தல், நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவை கடைசியாக ஓதிவிட்டு உறங்குதல் ஆகிய அமல்கள் சிறிய அமல்கள் தான்.  அதனால் நாம் அந்த அமல்களை அலட்சியம் செய்கின்றோம்.

அந்தச் சிறிய அமலால் கிடைக்கும் பயன், எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டோமோ அதற்காக உயிரை விடவும் துணிந்தோமோ அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கண் மூடுவதற்கு உரிய கருவியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் ஓர் உத்தரவாதமாக அமையும் போது அதை நாம் உதறி, உதாசீனம் செய்யலாமா?  இதை உணர்ந்து சிறு சிறு அமல்களை விடாது செய்ய முன்வருவோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

பேச்சுக்கலை

ஆர்.ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc.

சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையானது.இதை நம்மில் பலர் உணரத் தொடங்கி விட்டனர். நாம் அறிந்த நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதில் பலரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இருப்பினும் சத்தியக் கருத்துக்களை சொற்பொழிவின் வாயிலாக எடுத்துரைக்கத் தெரியாத காரணத்தால் பிரச்சாரம் செய்வதை விட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர்.

 • நாம் அறிந்த கருத்துக்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமே!
 • பேச்சில் தங்கு தடையின்றி சரளமாகச் சொல்ல வேண்டுமே!
 • கேட்போரை ஈர்க்கும் வகையில் நமது பேச்சு அமைய வேண்டுமே!
 • ஏற்ற இறக்கத்துடன் நமது பேச்சு எடுபட வேண்டுமே!
 • சொல்ல வரும் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத் தெரிய வேண்டுமே!
 • சத்தியத்தை உள்ளது உள்ளபடி ஆதாரங்களுடன் எடுத்துரைக்கத் தெரிய வேண்டுமே!

மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்ற பொழுது, ஒலிபபெருக்கியில் நமது பெயர் அறிவிக்கப்படுகின்ற பொழுது, சட்டென்று எல்லோருடைய கண்களும் நம்மை உற்று நோக்கும் பொழுது, மேடை மிக அருகில் இருந்தாலும் அது பல நூறு கிலோ மீட்டர் அப்பால் இருப்பது போல் தோன்றும்.

கைகள் வியர்க்க ஆரம்பிப்பதும், கால்கள் துவண்டு விடுவதும், திடீரென வாய் வறண்டு விடுவதும் என பெரும் சங்கடமான சூழலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற பயத்தாலும் படபடப்பாலும் பலரும் பேச முன்வருவதில்லை.

இதுபோன்று முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு முறையான பேச்சுக் கலையை எடுத்துரைத்து சிறந்த பேச்சாளாராக்குவதே இத்தொடரின் நோக்கமாகும். இதன் மூலம் பேச்சுக்கலைகளை அறிந்து, சிறந்த பேச்சாளராக வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

பேச்சாற்றலின் முக்கியத்துவம்

சிலர் பேச்சுக்கலையை வளர்க்கலாம் என அதீத ஆர்வத்துடன் வந்த வேகத்திலேயே இது நமக்கு சரிப்பட்டு வராது என ஓடிவிடுகின்றனர். பேச்சாற்றலின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியாததே இதற்கான காரணமாகும்.

 • பேச்சாற்றல், சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கவும் அவர்களை இணைவைப்பு எனும் மாபாதகச் செயல்களிலிருந்து மீட்கவும் உதவும்.
 • இறையச்சம், கொள்கை உறுதி, மனத்தூய்மை, வணக்க வழிபாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆர்வமூட்ட இயலும்.
 • தீண்டாமை, மது, சூது, வட்டி,வரதட்சணை உள்ளிட்ட சமூகச் சீர்கேட்டிலிருந்து மக்களை மீட்க உதவும்.
 • அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் நியாயத்தை எடுத்துரைக்க உதவும்.
 • பொருளாதாரத்தை நல்வழியில் செலவழிக்கத் தூண்டுவதற்கும் தீய வழியில் செலவிடுவதைத் தவிர்ப்பதற்கும் உதவும்.
 • அறியாத மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளிக்க உதவும்.
 • அசத்தியவாதிகளின் விதாண்டா வாதங்களுக்கு ஆணித்தரமாக விளக்கிட உதவும்.

இப்படி மனித வாழ்வின் இம்மை மறுமை வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் இக்கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளும் எவரும் இத்திறமையை மேம்படுத்தும் முயற்சியினைக் கைவிடமாட்டார்கள்.

பன்மடங்கு நன்மையைப் பெற்றுத் தரும் பொக்கிஷம்

ஒருவர் சிறந்த பேச்சாற்றல் மூலம் பிரச்சாரம் செய்பவராக இருப்பார். நன்மை செய்யப் பிறரைத் தூண்டியதால், இவருக்கும் அந்த நற்செயலின் நன்மை வழங்கப்படும் என்ற ஒரு நற்செய்தி இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.

”(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. பின்தொடர்ந்தவர்களின் நன்மையில் எதையும் அது குறைத்துவிடாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல்: முஸ்லிம் 5194

உதாரணமாக, ஒருவரின் அறிவுரையைக் கேட்டு மற்றொருவர் தொழுகிறார், வேறொருவர் நோன்பு வைக்கிறார், இன்னொருவர் ஹஜ் செய்கிறார் என்றால், அவ்வாறு தொழுதவருக்கும் நோன்பு வைத்தவருக்கும் ஹஜ் செய்தவருக்கும் கிடைக்கும் நன்மையைப் போன்றே அறிவுரை வழங்கியவர் அடைந்து விடுகிறார்.

இதுபோல் ஒருவரின் அறிவுரையைக் கேட்டு ஒருவர் அனாதைகளை அரவணைக்கிறார் என்றால் அவருக்கும் அனாதைகளை அரவணைத்த நன்மை எழுதப்படுகிறது.

இப்படி ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும் இந்தப் பேச்சாற்றல் நமக்குப் பொக்கிஷம் தானே!

தடைகளைத் தகர்ப்போம்

பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள ஆர்வமிருந்தாலும் பலருக்குச் சில தடைகளும் தவறான எண்ணங்களும் உள்ளன. அதன் காரணமாகவே பேச முன்வருவதில்லை. முதலில் அதற்கான தீர்வை அறிவோம்.

 1. நான் மதரஸாவில் படிக்கவில்லை. எனக்கு அரபு வாசிக்கவோ உச்சரிக்கவோ தெரியாது. எனவே என்னால் பேச இயலாது என்று சிலர்.
 2. எனக்கு ஞாபக மறதி அதிகம், எந்தக் குறிப்பு எடுத்தாலும் மேடையில் நின்ற உடன் மறந்துவிடுகிறது. ஆளை விடுங்க என்று சிலர்.
 3. நான் படிக்காதவன். எனக்குத் தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. எனவே என்னால் பேச இயலாது என்று சிலர்.
 4. எனக்கு மேடைக் கூச்சம் உள்ளது. மக்களைப் பார்த்தவுடன் கை கால்கள் நடுங்கத் துவங்கிவிடும். ஆகவே எனக்கு சாத்தியப்படாது என்று சிலர் கூறுவர்.
 5. சிலர், எனக்கு ஆவேசமாகப் பேச வராது. எனது குரல் வளம் மென்மையானது. கனீரென்று உச்சரிக்க வராது என்பார்கள்.
 6. இன்னும் சிலர், எனக்குத் திக்குவாய். பேச ஆரம்பித்தால் திக்குவேன், திணறுவேன்.ஆகையால் எனக்கு இது சரிப்பட்டு வராது என்பர்.
 7. எனக்கு மார்க்கச் செய்திகள் மட்டுமே தெரியும். உலகம் சார்ந்த எந்தத் தகவலும் தெரியாது. அதனால் என் பேச்சு மற்றவர்களைக் கேட்கத் தூண்டுவதில்லை என்பார்கள்

இதுபோன்ற பல தடைகளையும் தவறான எண்ணங்களையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டதன் விளைவால் பிரச்சாரக்களத்திலிருந்து பலரும் ஒதுங்கிவிடுகின்றனர்.

இத்தடைகளை அடுத்தத் தொடரில் தகர்ப்போம் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————————————————————

ஆலயத்தின் அடித்தளம்

சலீம், இஸ்லாமியக் கல்லூரி

இறைவன், தன்னுடைய உற்ற தோழனாய் தேர்வு செய்த இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.

இப்ராஹீம் (அலை) என்று சொன்னாலே நமது சிந்தனைக்குத் தோன்றுவது என்ன?

இந்த மார்க்கத்திற்காக அவர் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார்.

இறைவனுடைய சொல்லை நிறைவேற்றத் தன்னுடைய மகனயே அறுக்கத் துணிந்தவர்.

கைக்குழந்தையையும், தன்னுடைய மனைவியையும் எந்த மக்களும் வசிக்காத, தண்ணீர் கூட இல்லாத பாலைவனத்தில் விட்டுவிட்டு  இறைக்கட்டளையை நிறைவேற்றியவர்.

நெருப்புக்குண்டத்தில் தூக்கிவீசினாலும், ஒட்டுமொத்த சமுதாயமும் எதிர்த்து வந்து நின்றாலும் தன்னுடைய உடலில் இறுதி மூச்சு உள்ளவரை கொள்கையை விட்டு ஒருக்காலமும் அவர் தடம்புரளவில்லை.

இப்படி நம்முடைய சிந்தனைகள் சில செய்திகளைச் சொல்லும்.

மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களும் அதிகமாக இதைத்தான் சொல்வார்கள்.

உண்மைதான்! அவர் இந்த மார்க்கத்திற்காக நம்மால் யோசனை கூடச் செய்யமுடியாத அளவிற்குக் கடுமையான தியாகம் செய்தவர்தான்.

ஆனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்கையில் இது மட்டும்தான் நாம் பெறவேண்டிய படிப்பினைகளா? அவருடைய வாழ்க்கை குறித்து இறைவன் வேறெதுவும் பேசவில்லையா? என்று நாம் பார்த்தால் ஏராளமான படிப்பினைகள் இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்க்கையில் உள்ளன.

தூதர்களின் வரலாறுகளில் உமது உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தக்கூடிய அனைத்தையும் உமக்கு எடுத்துரைக்கிறோம். இதில் உண்மையும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் உம்மிடம் வந்துவிட்டது.

அல்குர்ஆன்  11:120

இறைவன் சொல்வது போல நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்கையில் கிடைக்கக்கூடிய படிப்பினைகளை அறிந்து அமல் செய்ய வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக!

ஆலயத்திற்க்கு அடித்தளம் அமைத்தவர்

இன்றைக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எந்த ஆலயத்தை நோக்கி சென்று, தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்களோ அப்படிப்பட்ட கஅபாவை மறுநிர்மாணம் செய்தவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன், நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)

அல்குர்ஆன்  2:127

இன்றைக்கு எத்தனையோ லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்த கஅபாவில் ஒன்றுசேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து உலகம் அழிக்கப்படுகின்ற நாள் வரை எல்லா முஸ்லிம்களும் அதை நோக்கித்தான் தொழுவார்கள். அதுதான் நபிகளார் காட்டித்தந்த வழிமுறை.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் போதனைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றுகின்ற நாம் இந்தப் படிப்பினையை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறோமா?

நம்முடைய இத்தனை ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் நாம் நின்று வணங்கி வழிபடுகின்ற இறை ஆலயத்திற்காக ஒரே ஒருமுறையாவது பொருளாதாரத்தைச் செலவு செய்திருப்போமா?

ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்தால் நம்முடைய செல்வம் குறைந்துவிடும் என்றுதான் நினைக்கிறோம்.

செலவு செய்வதில் ஆசை

நாம் நம்முடைய செல்வத்தைச் செலவுசெய்யத் தயங்குகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

நான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூதர்ரே!என்று என்னை அழைத்தார்கள். நான் இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!என்றேன். நபி (ஸல்) அவர்கள் இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்து செல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிரஎன்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.

பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர்ரே!என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!என்றேன். நபி ஸல்) அவர்கள் “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, “இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிரஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1811

இப்படி அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க, நாமோ நம்முடைய செல்வத்தைச் செலவு செய்யத் தயங்குகிறோம்.

உடலும் இறைப்பணிக்கே!

மேலே நாம் சுட்டிக் காட்டிய இறைவசனம் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பள்ளிவாசலுக்காக வெறும் செல்வத்தை மட்டும் செலவு செய்தார்கள் என்று சொல்லவில்லை. தம்முடைய உடல் உழைப்பையும் செலுத்தினார்கள் என்பதையும் நமக்குக் காட்டுகிறது.

ஆனால் நம்முடைய சமுதாயத்திலோ பள்ளிவாசலுக்காக உழைக்கின்றவர்களை கண்களில் எண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டியிருக்கிறது.

நம்முடைய இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறை ஆலயத்திற்காகச் செய்த பணிகள் என்ன?

நம்மால் பட்டியலிட முடியுமா? இவ்வளவு ஏன்? ஒரே ஒருமுறை பள்ளியை சுத்தம் செய்திருப்போமா?

சளியைக்கூட சுரண்டிய சத்தியத் தூதர்

நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 408

சளியைக்கூட அசிங்கமாக நினைக்காமல் அதைத் தானே சுத்தம் செய்யும் தூதரைப் பின்பற்றுகிற நாம், தொழுகின்ற பள்ளிகளைப் பார்த்தால் பாழடைந்த கட்டிடத்தைப் போன்று தோற்றமளித்தாலும் அதற்குத் தன்னால் உதவி செய்யத் தெம்பும் வலிமையும் இருந்தும் அதைக் கண்டும் காணாமல் தான் போகிறோம்.

ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் மீது ஊற்றினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 429

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த பெண்அல்லது இளைஞர்ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்துவிட்டார்என மக்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்  1742

பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால் மக்கள் அற்பமாகக் கருதி, அவரது மரணத்தை நபியவர்களிடம் தெரியப்படுத்தாமல் விட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிந்து கொள்கின்றார்கள். பிறகு அவருக்காக மண்ணறையில் சென்று தொழுகை நடத்துகிறார்கள்.

வயதான காலத்திலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பள்ளிவாசல் கட்டத் தன்னுடைய உடல் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

நமக்கு எல்லாக் காரியங்களிலும் முன்மாதிரியாக இருக்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருக்கின்ற சளியைத் தன்னுடைய கையால் சுரண்டி, சுத்தம் செய்திருக்கிறார்கள்.

எனவே பள்ளிவாசல் இல்லாத இடங்களில் பள்ளியைக் கட்ட, இருக்கின்ற பள்ளியைப் பாதுகாக்க நமது உழைப்பு அவசியம். இந்த அற்புதமான பண்பை படிப்பினையாகப் பெற்று, நாம் மரணித்தாலும் நமக்கு நன்மை வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்ற வாய்ப்பினைத் தேட வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                             தொடர்: 41

ஈயின் இறக்கைக்கு ஈடாகாத சுவனமாம்! இஹ்யாவின் இளக்காரம்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

قال الغزالي: ولهذا قال أبو سليمان الداراني: إن لله عبادا ليس يشغلهم عن الله خوف النار ولا رجاء الجنة، فكيف تشغلهم الدنيا عن الله، ولذلك قال بعض إخوان معروف الكرخي له، أخبرني يا أبا محفوظ أي شيء هاجك إلى العبادة والانقطاع عن الخلق، فسكت فقال: ذكر الموت، فقال: وأي شيء الموت؟ فقال: ذكر القبر والبرزخ، فقال: وأي شيء القبر؟ فقال: خوف النار ورجاء الجنة، فقال: وأي شيء هذا؟ إن ملكا هذا كله بيده إن أحببته أنساك جميع ذلك، وإن كانت بينك وبينه معرفة كفاك جميع هذا.

 1. அபூ சுலைமான் அத்தாரானீ சொன்னார்: அல்லாஹ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சில அடியார்கள் இருக்கின்றனர். நரகத்தைப் பற்றிய பயமோ சுவனத்தின் மீது உள்ள ஆசையோ அவர்களை  அல்லாஹ்விடமிருந்து வேறு கவனத்தில் திருப்பி விடாது. அவ்வாறிருக்கையில், இந்த உலகம் அவர்களை அல்லாஹ்வை விட்டும்  வேறு கவனத்தில் எப்படி திருப்பி விட முடியும்?

இதற்காக வேண்டித் தான் மஃரூஃபில் கர்கியின் சகோதரர்கள் அவரிடம், “அபூமஹ்ஃபூலே! அல்லாஹ்வை வணங்குவதற்கும் மக்களை விட்டும் தனித்து இயங்குவதற்கும் உங்களைத் தூண்டியது எது?” என்று கேட்ட போது, அவர் கொஞ்ச நேரம் மவுனமாக இருந்து விட்டு, “மரணத்தை நினைப்பது தான்” என்று பதிலளித்தார். மரணம் என்றால் என்ன? என்ற போது, கப்ர், மறு உலகம் என்று பதிலளித்தார். கப்ர் என்றால் என்ன? என்று கேட்ட போது, ‘நரகத்தைப் பற்றிய பயம் சுவனத்தின் மீதுள்ள ஆசை’ என்று பதிலளித்தார். “இது அனைத்தும் ஒரு நாயன் கைவசமிருக்கின்றது. நீ அவனை நேசித்தால் இவை அனைத்தையும் விட்டு அவன் மறக்கடிக்கச் செய்து விடுவான்.  அவனுக்கும் உனக்கும் மத்தியில் ஓர் அறிமுகம் இருந்தால் இவை அனைத்திற்கும் அவனே உனக்கு போதுமானவன்” என்று அவர் பதிலளித்தார்.

وفي أخبار عيسى عليه السلام: إذا رأيت الفتى مشغوفا بطلب الرب تعالى، فقد ألهاه ذلك عما سواه.

 1. “அல்லாஹ்வின் தேட்டத்தில் ஓர் இளைஞன் திளைத்திருக்குமாறு நீ பார்த்தால் அது அவனை அல்லாஹ் அல்லாததை விட்டும் அல்லாஹ்விடமே ஈடுபாடு கொள்ளச் செய்து விட்டது என்று புரிந்து கொள்” என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாகப் பதிவாகியுள்ளது.

ورأى بعض الشيوخ بشر بن الحارث في النوم فقال: ما فعل أبو نصر التمار وعبد الوهاب الوراق، فقال: تركتهما الساعة بين يدي الله تعالى يأكلان ويشربان، قلت: فأنت، قال: علم الله قلة رغبتي في الأكل والشرب فأعطاني النظر إليه.

 1. அறிஞர்களில் ஒருவர் பிஷ்ர் பின் அல்ஹாரிஸ் என்பாரைக் கனவில் கண்டார். அப்போது அவரிடம் அபூ நஸ்ர் அத்தம்மார், அப்துல் வஹ்ஹாப் அல்வர்ராக் என்ன செய்கின்றார்?  என்று கேட்டார்.  “அவ்விருவரையும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இப்போது சாப்பிடவும் பருகவும் விட்டு விட்டேன்” என்று பதிலளித்தார். “நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு, “சாப்பிடுவதிலும் பருகுவதிலும் என்னுடையை ஆர்வக் குறைவை இறைவன் புரிந்துக் கொண்டான். அதனால் அவனது காட்சியைக் காணும் பாக்கியத்தை எனக்கு  அளித்திருக்கின்றான்” என அவர் பதில் சொன்னார்.

وعن علي بن الموفق قال: رأيت في النوم كأني أدخلت الجنة فرأيت رجلا قاعدا على مائدة وملكان عن يمينه وشماله يلقمانه من جميع الطيبات وهو يأكل، ورأيت رجلا قائما على باب الجنة يتصفح وجوه الناس فيدخل بعضا ويرد بعضا، قال: ثم جاوزتهما إلى حديقة القدس فرأيت في سرادق العرش رجلا قد شخص ببصره ينظر إلى الله تعالى لا يطرف، فقلت لرضوان: من هذا؟ قال: معروف الكرخي عبد الله لا خوفا من ناره ولا شوقا إلى جنته، بل حبا له فأباحه النظر إليه إلى يوم القيامة

 1. அலீ பின் அல்முவஃப்பிக் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி வருமாறு: நான் சுவனத்திற்குள் அழைத்துச் செல்லப்படுதைக் கனவில் கண்டேன். அங்கு நான் கண்ட காட்சிகள் இதோ: ஒருவர் உணவுத் தட்டுமுன் அமர்ந்திருக்கின்றார். அவரது வலது, இடது பக்கமாக இரு மலக்குகள் அவருக்கு அனைத்து அழகிய உணவுகளையும் ஊட்டி விட்டனர். அவர் அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்னொருவர் சுவன வாசலில் நின்று கொண்டிருந்தார். அவர் மக்களின் முகங்களை நன்கு பார்த்து சிலரை சுவனத்தில் உள்ளே நுழைய விட்டார். சிலரை நுழைய விடாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.

பிறகு இவ்வருவரையும் தாண்டி தூய்மைமிகு தோட்டத்திற்குள் சென்றேன். அங்கு அர்ஷின் சுவர்களில் ஒருவரை பார்த்தேன். அவர் கண் சிமிட்டாமல் பார்வை நிலை குத்தியாறு அல்லாஹ்வையே  பார்த்துக் கொண்டிருந்தார்.  நான் சுவனத்தின் மலக்கு ரிள்வானிடம் இவர் யார் என்று கேட்டேன்.  இவர் தான் மஃரூபில் கர்கீ! இவர் அல்லாஹ்வின் நரகத்தை பயந்தோ, சுவனத்தில் ஆசை வைத்தோ அவனை வணங்கவில்லை. அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டு மட்டுமே  வணங்கினார்.  அதனால் அல்லாஹ் தன்னைக் காண்பதற்குரிய பாக்கியத்தை இறுதி நாள் வரை அனுமதித்து விட்டான்.

وقال الثوري لرابعة: ما حقيقة إيمانك، قالت: ما عبدته خوفا من ناره ولا حبا لجنته، فأكون كالأجير السوء، بل عبدته حبا له وشوقا إليه.

 1. உன்னுடைய ஈமானின் தன்மை என்ன? என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரி, ராபியாவிடம் கேட்ட போது, “அல்லாஹ்வின் நரகத்தை பயந்தோ அவனது சுவனத்திற்கு ஆசைப்பட்டோ அவனை நான் வணங்கவில்லை. அப்படி வணங்கினால் கூலிக்கு வேலை செய்கின்ற ஒரு கெட்ட கூலி ஆளை போன்று நான் ஆகிவிட்டேன் என்று அர்த்தமாகி விடும். அதனால் நான் அவனை ஆசைப்பட்டும் நேசம் கொண்டும் வணங்கினேன்” என்று பதில் சொன்னார்.

وقال إبراهيم بن أدهم: إلهي إنك تعلم أن الجنة لا تزن عندي جناح بعوضة في جنب ما أكرمتني من محبتك وآنستني بذكرك، وفرغتني للتفكر في عظمتك

 1. “இறைவா! நீ உனது அன்பின் மூலம் எனக்கு மரியாதை அளித்திருக்கின்றாய். உன்னை நினைப்பதன் மூலம் என்னை நேசித்து விட்டாய். உன்னுடைய மகத்துவத்தைச் சிந்திப்பதற்கு என்னை ஈடுபாடு கொள்ளச் செய்து விட்டாய். இந்த அருட்கொடையுடன் ஒப்பிடுகையில், சுவனம் என்னிடத்தில் ஓர் ஈயின் இறக்கையளவு எடைக்குக் கூடச் சமமாகாது” என்று இப்ராஹீம் பின் அத்ஹம் கூறுகின்றார். இவ்வாறு கஸ்ஸாலி தனது இஹ்யாவில் கூறுகின்றார்.

அத்தியாயம்:  அன்பு, நேசம்

பாடம்: “இன்பங்களில் சிறந்தது அல்லாஹ்வை அறிதலும் அவன் திருமுகத்தைக் காண்பதும்”

அறிவுக்கடல் (?) கஸ்ஸாலி அள்ளி விட்டிருக்கும் ஆறு விஷயங்களைத் தான் மேலே நீங்கள் படித்தீர்கள். இவை அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கின்றன. சுவனத்திற்கு ஆசைப்பட்டும் நரகத்திற்கு அச்சப்பட்டும் அல்லாஹ்வை வணங்கக் கூடாது. அவனை வணங்க வேண்டுமென்றால் அவனது நேசத்தை நாடியும் அன்பைத் தேடியும் வணங்க வேண்டும். சுவனத்திற்கு ஆசைப்பட்டு வணங்கினால் அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. மாறாக, பரிமாறப்படும் உணவும் பகிரப்படும் பானமும் தான் கிடைக்கும் என்பது தான் அந்த மையப்புள்ளி!

சுவனத்தைக் கோரி, நரகத்தை விட்டுக் காவல் தேடி வணங்குபவர்களெல்லாம் ஏமாளிகள்,  இளித்தவாயர்கள், சுயநலவாதிகள்.

அல்லாஹ்வின் நேசத்தை நாடி அவனது அன்பைத் தேடி வணங்குபவர்கள் புத்திசாலிகள், புண்ணியவான்கள் என்பது இவை தெரிவிக்கின்ற சாராம்சமாகும்.

சூஃபிஸ மகான்களின் சுவனலோக சஞ்சாரம்

இதன் விமர்சனத்தைப் பார்க்கும் முன்பு இதில் போகிற போக்கில் ஒரு சிலரை இன்னும் சொல்லப்போனால் சில அனாமதேயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இடத்தில் தூக்கி நிறுத்துவதை நாம் பார்க்க முடிகின்றது.

இது கஸ்ஸாலியின் இஹ்யாவில் ஏராளம், ஏராளம் என்றாலும் இந்த இடத்தில் இது நமது பார்வையில் தட்டுப்பட்டு விட்டதால் அதை கண்டுக் கொள்ளாமல் நாம் எளிதில் கடக்க முடியாது.

3, 4வது சம்பவங்களில் கஸ்ஸாலி  கனவு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கனவு மட்டும் தான் மார்க்க அடிப்படையில் ஆதாரமாகும்.  அதைத் தான்  நாம் நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். இதைத் தவிர்த்து வேறு எம்மாபெரிய மனிதரின் கனவும் மார்க்கத்தில் ஆதாரமாகாது. ஏன்? நபித்தோழரின் கனவு கூட ரசூல் (ஸல்) அவர்களின் ஒப்புதல் இல்லாமல்  மார்க்க ஆதாரமாகாது என்றிருக்கும் போது வேறு எந்த அனாமதேயங்களின் கனவுகளும் மார்க்கத்தில் ஒரு போதும் ஆதாரமாகாது.

இங்கு தான் கஸ்ஸாலி இந்த அனாமதேயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.  மிஃராஜ் சம்பவ ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் சுவனம் மற்றும் நரகத்தில் சில காட்சிகளைக் காண்பார்கள் அதற்குரிய விளக்கத்தை மலக்குகளிடம் கேட்பார்கள். அது போன்று இந்த அனாமதேயங்கள் மலக்குகளிடம் விசாரிப்பதாக இதில் இடம் பெறுகின்றது. இது சகிக்க முடியாத ஒரு கொடுமையாகும்.

மஃரூஃபில் கர்கீ என்பவர், அர்ஷின் சுவர்களில் இருந்துக் கொண்டு  அல்லாஹ்வை கண்டு ரசிக்கிறாராம். கண்ணே சிமிட்டவில்லையாம். கியாமத் நாளை வரைக்கும் அவருக்கு இந்தக் காட்சி வழங்கப்பட்டிருக்கின்றதாம்.அடித்து விடுகின்றது அந்த அனாமதேயம். அதைக் கஸ்ஸாலியும் பதிவு செய்கின்றார். கற்பனைக் குதிரைகளுக்குக் கடிவாளம் ஏது? காட்டு வெள்ளத்திற்கு அணைகள் ஏது? கனவுக் காட்சிகளுக்கு எல்லை ஏது? அதனால் கட்டுபாடு இல்லாத வேகத்தில் காற்றிலும் வேகமாய் அது பறந்து செல்கின்றது.  நாளை மறுமையில் விசாரணையைச் சந்தித்த பிறகு தான் சுவனம் செல்ல முடியும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. இதில் விதி விலக்கு அல்லாஹ்வின்  பாதையில் உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்களுக்கு மட்டும் தான். அதையும் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்கின்றது.

இதை முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒருமுறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

முஸ்லிம்: 3834

இது தான் மார்க்கம் கூறுகின்ற தெளிவான ஆதாரமாக இருக்கும்போது கஸ்ஸாலி தன் இஷ்டத்திற்குக் கதைகளை மார்க்கம் என்ற பெயரில் அளந்து விடுகின்றார். அந்த அடிப்படையில் மஃரூஃபில் கர்கீ போன்ற இந்த அனாமதேயங்கள் சுவனத்தில் அர்ஷின் மதில் சுவர்களில் உட்கார்ந்துக் கொண்டு அல்லாஹ்வை பார்த்து ரசிக்கின்றார்கள் என்றால் இதைவிட வேறு பொய் எதுவும் இருக்க முடியாது. இதில்   சுவனத்தில் வாட்ச் மேன் வேலை பார்ப்பதாகவும் இன்னோர் அனாமதேயம்  அடித்து விடுகின்றது.  என்ன அதீதமான கற்பனை!

ரிள்வான் சுவனத்தின் மலக்கா?

கனவு கண்டவர், சுவனத்தில் உள்ள மலக்கின் பெயர் ரிள்வான் என்றும் அடித்து விடுகின்றார். ஆனால் உண்மை அது கிடையாது. சுவனத்தின் மலக்கு ரிள்வான் என்று ஒரு செய்தி பரவலாக இடம்பெறுகின்றது. ஆனால் அது பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் அமைந்ததாகும். நரகத்தின் காவலர் மாலிக் என்று (பார்க்க: புகாரி 3239) ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இடம்பெறுகின்றது. ஆனால் சுவனத்தின் காவலர் ரிள்வான் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை. இதுவெல்லாம் போகின்ற கஸ்ஸாலி தெளித்து விடுகின்ற கொசுறுச் செய்திகள் என்றாலும் அவை இஸ்லாமிய கொள்கைக்கு உலை வைக்கின்ற எரி நெருப்பாகும். அதனால் அவற்றை சுட்டிக்காட்டுவது இங்கு அவசியமாகின்றது.

ஈஸாவின் ஹதீஸ்

இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமல்ல! பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் மலிந்து கிடக்கின்றன.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி ஒரு செய்தியைச் சொன்னால் அத்தகையவருக்கு நரகம் இருப்பிடமாகும் என்ற எச்சரிக்கை இருந்தும் அவர்கள் மீதே ஏராளமான ஹதீஸ்களை தாராளமாக கஸ்ஸாலி இஹ்யாவில் பரவ விட்டிருக்கும் போது  ஈஸா (அலை) சொன்னதாகச் செய்திகளைப் பதிவதில் என்ன கவனம் எடுத்துக் கொள்ளப் போகின்றார்? இதை ஈஸா (அலை) அவர்கள் சொன்னதாக அவர் பதியும் செய்தி உணர்த்துகின்றது. அதையும் இங்கு சொல்லத் தவறிவிடக்கூடாது என்பதற்காக இந்த விமர்சனத்தை இங்கு குறிப்பிடுகின்றோம்.

இப்போது கஸ்ஸாலி கூறுகின்ற சாராம்சத்திற்கு வருவோம்:

அல்லாஹ்வை வணங்குபவர்கள் அவனது சுவனத்திற்கு ஆசைப்பட்டு வணங்கக் கூடாது. நரகத்திற்குப் பயந்து அல்லாஹ்வை  வணங்கக் கூடாது. அல்லாஹ்வின் நேசத்திற்காக  மட்டுமே வணங்க வேண்டும் இது தான் அந்த சாராம்சமாகும்.

இது குர்ஆன், ஹதீஸுக்கு நேர் எதிரான சிந்தனையாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடித்தளத்தை வெடித்துச் சிதற வைக்கும் வெடி மருந்தாகும்.

நரகத்தை விட்டும் காவல் தேடுதல்

எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர். இவர்களுக்கே தாங்கள் செய்தவற்றுக்கான கூலி உண்டு. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் 2:201, 202

நல்லடியார்களின் பண்புகளை பற்றி அல்லாஹ் சொல்லும் போது அவனுடைய வேதனையை அஞ்சுவார்கள் என்று குறிப்பிடுகின்றான்.

எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:64

மேற்கண்ட அத்தியாயத்தின் கடைசி வசனங்கள் ரஹ்மானுடைய அடியார்களின் பண்புகளைப் பட்டியலிடுகின்றன. அவற்றில், நரக வேதனையை விட்டுப் பாதுகாவல் தேடுவது உயரிய இடத்தைப் பிடிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரிடம், ‘தொழுகையில் நீ என்ன ஓதுகின்றாய்?’ என்று கேட்டார்கள் அதற்கு அவர், நான் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) ஓதுகின்றேன். பிறகு

اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار 

(அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஜன்னத்த வ அவூது பிக்க மினன்னார்)

அல்லாஹ்வே! உன்னிடம் நான் சுவனத்தைக் கேட்கின்றேன். நரகத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்என்று சொல்கின்றேன். ஆனால் நீங்களும் முஆதும் மெதுவாக ஓதுகின்ற வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லைஎன்று சொன்னார். அதேபோன்று தான் நானும் முஆதும் ஓதுகின்றோம்என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: ஒரு நபித்தோழர்

நூல்: அபூதாவூத் 792 793

இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடியதை தெளிவாகத் தெரிவிக்கின்றது.

சுவனத்தை வேண்டுதல்

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சுவனத்தை வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்வதைப் பின்வரும் வசனம் கூறுகின்றது.

இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

அல்குர்ஆன் 26:85

மேலே இடம் பெற்றிருக்கும் அபூதாவூத் ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்ததற்கும் சிறந்த ஆதாரமாகும்.

இது போன்று சுவனத்தைக் கேட்டும் நரகத்தை விட்டுப் பாதுகாப்புத் தேடியும்  குர்ஆன், ஹதீஸில்  நிறைய துஆக்கள் இடம்பெறுகின்றன.

ஆனால் சுலைமான் அத்தாரானீ, மஃரூஃபில் கர்கீ, ராபியத்துல் பஸரிய்யா, சுஃப்யான் அஸ்ஸ்வரீ, இப்ராஹீம் பின் அத்ஹம் போன்ற சூஃபிய்யாக்கள் மேதாவித்தனமாகவும் அதிகப்பிரசங்கித்தனமாகவும் சுவனத்திற்கு ஆசைப்பட்டோ, நரகத்திற்குப் பயந்தோ அல்லாஹ்வை வணங்கக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்கள்.

இவர்கள் சூஃபிஸம் என்ற ஒரு தனி உலகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த அளவுகோல்படி பார்த்தால் நபி (ஸல்) அவர்களின் வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக ஆகி விடும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

போதை நிறைந்த இந்தப் பாதைக்குத் தான் மார்க்கம் என்ற முத்திரை குத்திக் கொள்கின்றார்கள். சூஃபிஸம் என்பது பிறமதக் கலாச்சாரம். இந்த அந்நிய சரக்கை இஸ்லாமிய சரக்கு என்ற பெயரில் கஸ்ஸாலி கூவி விற்பனை செய்கின்றார்.

இதனால்தான் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள், ‘இஹ்யாவில் சில நல்ல செய்திகள் இருக்கின்றன. ஆனால் சூஃபிஸம் என்று வருகின்ற போது ஓர் இஸ்லாமிய எதிரிக்கு இஸ்லாமிய ஆடையை அணிவித்து  உள்ளே உலவ விட்டு விடுகின்றார்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

கஸ்ஸாலியின் இஹ்யா அது போல் தான் அமைந்திருக்கின்றது. இது தான் இந்தியாவிலும் கஸ்ஸாலியின் போதை கொண்ட பிற நாடுகளிலும் மார்க்கம் என்ற பெயரில் புனிதமாகப் பார்க்கப்படுகின்றது. இந்தப் போதையை விட்டு சமுதாயம் எப்போது தெளிவாகப் போகின்றது?

—————————————————————————————————————————————————————————————————————

செயல்கள் யாவும்  எண்ணங்களைப் பொறுத்தே!

சபீர் அலீ

 صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 2)

1- حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: “ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى ، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا ، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ.

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான்  கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர்(ரலி)

நூல்: புகாரி 1

இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸ் நூற்களில் முதல் செய்தி

பல அறிஞர்கள் இந்தச் செய்தியைத் தங்கள் புத்தகத்தின் முதல் செய்தியாகக் கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இமாம் புகாரி அவர்கள்.

ஸஹீஹுல் புகாரி எனும் தனது புத்தகத்தின் முதல் அத்தியாயமாக வஹீயின் ஆரம்ப நிலை என்ற தலைப்பையே கொண்டு வருகிறார்கள். இந்தத் தலைப்பின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் முதல் செய்தியே மேற்படி, “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே!” என்ற ஹதீஸ்தான்.

தலைப்புடன் எந்த வகையிலும் பொருந்திப் போகாததாகவே இந்த செய்தி அமைந்துள்ளது. அவ்வாறு தலைப்புடன் பொருந்திப் போகாத போது இந்த இடத்தில் ஏன் இமாம் புகாரி இந்தச் செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலும் கிடைக்கிறது.

எந்தவொரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நிய்யத் எனும் தூய எண்ணம் அவசியமாகும். இதுதான் மார்க்கத்தின் அடிப்படை. அத்தகைய நல்லெண்ணத்துடன் நன்மையை எதிர்பார்த்தே புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது என்பதற்காகவும், மார்க்கத்தை அறிந்துக் கொள்தல் என்ற நற்காரியத்தைச் செய்வதற்கு இந்தப் புத்தகத்தைத் திறந்து படிக்க விரும்புபவர் தனது எண்ணத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒரு நினைவூட்டலாகவுமே இமாம் புகாரி இந்தச் செய்தியை முதல் செய்தியாகக் கொண்டு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இதனால்தான் பிற அறிஞர்களும் தங்கள் புத்தகத்தை இந்த ஹதீஸை வைத்து ஆரம்பித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

அறிவிப்பாளர் தொடர்

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரைப் பொறுத்த வரையில் ஹதீஸ் கலையின் ஓரிரு விதிகளுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

கரீப்

ஹதீஸ் கலையில் ‘கரீப்’ என்றொரு வகை இருக்கிறது. அதாவது, அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸே கரீப் எனப்படும்.

இந்த வகைக்கு ஓர் உதாரணமாக இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரை எடுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில், இந்த செய்தியை நபித்தோழர்களில் உமர்(ரலி) அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அறிவிக்கவில்லை.

அறிவிப்பாளர்கள் பயன்படுத்தும் சொற்கள்

அறிவிப்பாளர் தொடரில் ஒரு தலைமுறையிலிருந்து ஹதீஸைப் பெற்று, அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு அறிவிக்கும் போது சில வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

அவை, ஸமிஃத்து (நான் இன்னார் கூறச் செவியுற்றேன்), அக்பரனீ (இன்னார் எனக்குத் தெரிவித்தார்), ஹத்தஸனீ (இன்னார் எனக்கு அறிவித்தார்), அன் (இன்னாரிடமிருந்து பெற்றேன்), கால (இன்னார் கூறினார்) ஆகியவையாகும்.

இவற்றில் அன், கால ஆகியவைகளைத் தவிர மற்ற மூன்று வார்த்தைகளும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையில் இந்த வகைக்கும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரை உதாரணமாக கூறுவார்கள்.

“செயல்கள் யாவும் நிய்யத்(எனும் எண்ணங்)களை பொறுத்தே அமைகின்றன”

இந்தச் செய்தி மார்க்கத்தின் அனைத்து விஷயத்திற்குமான அடிப்படையைப் பற்றிப் பேசுவதால் மார்க்கத்தின் எந்தவொரு விஷயத்துடனும் இந்தச் செய்தியை இணைத்து விளக்கம் காணலாம்.

ஆனால், இந்த இடத்தில் நேரடியாக நாம் பெறும் சில விளக்கங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

மார்க்கத்தில் எந்தவொரு அமலைச் செய்தாலும் அதைச் செய்யும் போது நிய்யத் இருக்க வேண்டும். அமல் செய்யும் போதும் நிய்யத் இல்லை என்றால் அப்போது நாம் அந்த அமலை செய்ததாகக் கருதப்படாது. இறைவனிடம் கூலியும் வழங்கப்படாது.

உதாரணமாக, தொழுகையை நிறைவேற்ற உளூ எனும் அங்கத்தூய்மை அவசியமாகும். உளூ ஒரு வணக்கம். அதை நிறைவேற்றும் போது, உளூ செய்கிறோம் என்ற எண்ணமில்லாமல் நாம் தூய்மை செய்கிறோம் எனில் அப்போது நாம் உளூ என்ற வணக்கத்தைச் செய்தவர்களாக ஆக மாட்டோம். சாதாரணமாக முகம், கை, கால்கள் கழுவியதாகத்தான் ஆகும். ஒருவர் உளூவின் அத்துனை உறுப்புகளையும் கழுவியிருந்தாலும் உளூச் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அவர் செய்கின்ற போது உளூ என்ற வணக்கத்தைச் செய்ததாக அவர் கருதப்பட மாட்டார்.

அதே போல், இறைவனை நாம் தொழுகிறோம். தொழும்போது, “நான் இன்ன தொழுகையைத் தொழுகிறேன்” என்ற எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். தொழுகிறேன் என்ற எண்ணமில்லாமல் தொழுதால் நாம் தொழுகையை நிறைவேற்றியவர்களாகக் கருதப்பட மாட்டோம். ஒருவர் உடற்பயிற்சி செய்யும் எண்ணத்தில், தொழுகையின் அனைத்து முறைகளையும் செய்தாலும் ஏதோ குனிந்து, நிமிர்ந்து எழுந்ததாகத்தான் கருதப்படுமே தவிர தொழுததாக கருதப்படாது.

இதுபோன்றுதான் கடமையான, உபரியான எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்யும் போது, நான் இன்ன வணக்கத்தைச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் கவனமாகச் செய்ய வேண்டும். ஒருவர் எண்ணமுமில்லாமல் கவனமுமில்லாமல் செய்கிறார் எனில் அவர் அந்த அமலை செய்தவராகக் கருதப்படமாட்டார்.

ஹிஜ்ரத்தின் ஒப்பீடு எதற்காக?

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன” என்ற இந்தச் செய்தியின் முதல் பகுதிக்குப் பிறகு இரண்டாம் பகுதியொன்று துவங்குகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான்  கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.

இவ்வாறு அந்தச் செய்தியின் பிற்பகுதி தொடங்கி முடிகிறது.

இந்த விளக்கம் இந்தச் செய்தியின் முதல் பகுதியை விளக்கக்கூடியதாகவே இருக்கிறது.

ஒவ்வொருவரும் எந்த எண்ணத்தில் அமல் செய்கின்றாரோ அதுவே அவருக்குக் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் இந்த உலக ஆதாயத்திற்காகவும் பேருக்காகவும் புகழுக்காகவும் அல்லது இது போன்ற வேறு காரணங்களுக்காக ஒரு செயலைச் செய்தால் அவர் இறைவனுக்காகச் செய்தவராகவும் கருதப்படமாட்டார். அவருக்கு மறுமையில் எந்த கூலியும் கிடையாது.

அல்லாஹ்வுக்காகவும் அவனது கூலியை எதிர்ப்பார்த்தும், இன்ன செயலைச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் ஒருவர் அமல் செய்தால் அவருக்கே இறைவன் கூலி வழங்குவான் என்று மேலுள்ள ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளுக்கு நபிகளாரே ஹிஜ்ரத்தை உவமை காட்டி இந்த விளக்கத்தை அளிக்கிறார்கள்.

இதில் நபிகளார் ஹிஜ்ரத் என்ற குறிப்பிட்ட அமலை வைத்து விளக்கமளிக்க என்ன காரணம்?

நபிகளார் நிய்யத்தின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரிவித்துவிட்டு ஹிஜ்ரத்தைக் கொண்டு விளக்கம் சொல்வதற்குக் காரணம், பெரிய அமலை வைத்து உதாரணம் சொல்லப்படும் போது அதன் முக்கியத்துவத்திற்குக் கூடுதல் வலிமை சேர்க்கும்.

அதாவது, ஹிஜ்ரத் என்பது மிகப்பெரிய தியாகங்கள் அடங்கிய ஒரு அமலாகும். ஊர், உறவு மற்றும் உடமை என்று அனைத்தையும் துறந்து வேறொரு நாட்டிற்கு எதுவுமின்றி, அடுத்தக் கட்டம் என்ன? என்ற கேள்வியோடு இடம்பெயர்வதாகும்.

இவ்வளவு பெரிய அமலாக இருந்தாலும் அது தூய எண்ணத்துடன் இறைவனுக்காக, அவனது கூலியை எதிர்பார்த்துச் செய்யப்படாமல் உலக சுகத்திற்காக இருக்குமெனில் அது இறைவனிடம் எந்தக் கூலியையும் பெற்றுத் தராது.

இங்கு செய்யப்படுகிற அளவோ சிரமமோ முக்கியமல்ல. எண்ணமே பிரதானம் என்பதை விளக்குவதற்காக ஹிஜ்ரத் தொடர்புபடுத்தப்பட்டிருக்கலாம்.

உப்பும் உணர்வும்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றொரு பழமொழி கூறுவார்கள்.

உணவிற்கு உப்பு என்பது பிரதானமான ஒன்று. அதுபோல அமலுக்கு உணர்வு என்பது மிகஅவசியமான ஒன்று.

உணர்வு, எண்ணம், கவனம் இவை இல்லாமல் செய்யப்படும் எந்த அமலும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.

இதற்கு சில உதாரணங்களைக் காணலாம்.

கவனமற்ற தொழுகை

தொழுகை இஸ்லாத்தின் முதன்மையான அமலாகும். நம்மை மறுமை வெற்றிக்கு நெருக்கிக் கொண்டுச் செல்லும் அமலாகும்.

ஆனால், அத்தகைய தொழுகைக்கூட நிய்யத்துடன் கவனமாகத் தொழ வேண்டும்.

தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தொழுகின்றனர்.

அல்குர்ஆன் 107:4-6

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களை ஏமாற்றுவான். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்கு காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.

அல்குர்ஆன் 4:142

அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததே அவர்கள் செலவிட்டது அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக உள்ளது. மேலும்  அவர்கள் சோம்பேறிகளாகவே தொழுகைக்கு வருகின்றனர்; விருப்பமின்றியே செலவிடுகின்றனர்.

அல்குர்ஆன் 9:54

எண்ணமும் கவனமுமின்றி தொழுதால் அது எவ்வாறு கூடாதோ அதே போல எண்ணத்தைப் பறிக்கும் விதமான சூழல் இருக்கும் போதும் தொழக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக் கூடாதுஎன்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 969

பசியுடன் இருக்கும் போது உணவு கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்நேரத்தில் தொழச் சென்றால் தொழுகையின் எண்ணத்தை விட உணவு பற்றிய எண்ணமே மேலாடும் என்பதால் இந்தச் சூழலை நபிகளார் தவிர்க்கச் சொன்னார்கள்.

அதே போல சிறுநீர், மலத்தை அடக்கி கொண்டும் தொழக்கூடாது. அந்த இயற்கைத் தேவைகளை முடித்த பிறகே தொழ வேண்டும். ஏனெனில் அடக்கிய நிலையில் தொழுதால் தொழுகையில் கவனம் ஏதும் இருக்காது. எப்போது கழிவறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலிடும்.

எனவே, இதுபோல எண்ணமற்ற வணக்கங்களையும் கவனத்தைத் திசை திருப்புகிற சூழலையும் தவிர்க்க மார்க்கம் போதனை செய்கிறது.

நிய்யத் – எண்ணம் என்றால் என்ன?

எண்ணமில்லாமல் செய்யப்படும் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது சரி. நிய்யத் என்றால் என்ன? அது எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில்களையும் அறிவது அவசியமாகும்.

இஸ்லாமிய சமூகத்தில் சிலர் நிய்யத் என்பதைத் தவறாக விளங்கி வைத்துள்ளனர்.

நிய்யத் என்றால் எந்தவொரு வணக்க வழிபாட்டைச் செய்ய ஆரம்பிக்கும் போதும் அரபியில் சில வாசகங்களை மொழிவதுதான் என்று கருதுகின்றனர்.

ஆனால், நிய்யத் என்ற வார்த்தைக்கு மொழிதல் என்பது பொருள் அல்ல. மனதால் எண்ணுவது தான். மேலும், நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நிய்யத் என்று எந்த அரபு வாசகங்களையும் கற்றுத் தரவில்லை எனும் போது தாங்களாகவே இவ்வாறான வாசகங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராத விஷயங்களைச் சொல்வது, செய்வது அனைத்தும் பித்அத் ஆகும்.

எனவே, நிய்யத் என்பது நாம் அமல் செய்யும் போது இன்ன அமலைச் செய்கிறேன் என்ற எண்ணம் கொள்ளுதலே ஆகும்.

இரு வகை எண்ணம்

நிய்யத் என்பது வாயால் மொழிகின்ற சொற்கள் அல்ல. மனதால் கொள்கின்ற எண்ணம்தான் என்றால் அந்த எண்ணம் எப்படியிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கான விடையையும் மார்க்கம் தருகிறது.

எண்ணம் இரண்டு வகையில் உள்ளது.

 1. நன்மைக்குரியது. 2. நஷடத்திற்குரியது.

நன்மைக்குரிய எண்ணம்

நன்மைக்குரிய நிய்யத்தின் அடிப்படை இக்லாஸ் ஆகும்.

வணக்கம் புரியும் போது, இந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு யாருக்காகவும் எதற்காகவும் செய்யவில்லை. அவனது கூலியையே எதிர்பார்க்கிறேன் என்ற மனத்தூய்மையுடன் கூடிய எண்ணமே இக்லாஸ் ஆகும்.

சத்திய நெறியில் நின்று, மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டும் கலப்பற்றதாக்கி அவனையே வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தை வழங்குமாறுமே கட்டளையிடப்பட்டுள்ளனர். இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

எந்தவொரு வணக்கம் புரியும் போதும் நமது எண்ணம் அல்லாஹ்வுக்காகவே இதைச் செய்கிறேன். அவனது கூலியை எதிர்பார்த்து மட்டுமே செய்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.

இக்லாஸான நிய்யத்திற்கே கூலி

மனத்தூய்மையுடனும் இறைதிருப்தியை எதிர்ப்பார்த்தும் செய்யப்படுகிற அமலைத் தவிர மற்றதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா

நூல்: நஸாயீ 3089

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5012

நாம் ஏற்கனவே சொன்னதைப் போல எந்தவொரு அமல் செய்யும் போதும் இக்லாஸான எண்ணத்தையே இறைவன் கவனிக்கிறான்.

அந்த எண்ணத்திற்குத் தகுந்தாற் போலத்தான் கூலி வழங்கப்படும். இறைவனுக்காகவே அவனது கூலிக்காகவே என்று அல்லாஹ்விற்குப் பயந்து, பக்தியுடன் செய்யப்படும் போதே அதன் கூலி அளப்பரியதாக இருக்கும்.

நாம் செய்யும் அளவும் சிரமும் முக்கியமல்ல. நிய்யத்தின் தன்மையே முக்கியமானது என்பதற்குச் சில செய்திகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்’’ என்று கூறி(விட்டு அதை அப்புறப் படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

நூல்: முஸ்லிம் 5106

இவர் செய்த காரியம் சாதாரணமானதுதான். ஆனால் அவரது நன்நோக்கத்திற்குக் கிடைத்த பரிசு மிகப் பெரியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, “மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத் தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கின்றார்கள்என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ளவிடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது)என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: புகாரி 4423

தவிர்க்க இயலாத காரணங்கள், போருக்குச் செல்லும் வாய்ப்புக்குத் தடையாக வந்து நின்றாலும், ‘நல்லவேளை போகவில்லை’ என்ற வேண்டா வெறுப்பில்லாமல் உள்ளமெல்லாம் போர்க்களத்திலே இருந்ததால் அவர்களின் கூலி போரிடாமலே போரிட்டோர் என்ற அந்தஸ்து கிடைத்தது.

அந்த நபித்தோழர்களின் எண்ணமும் அதன் தூய்மையும் இறைக்கூலியின் மீதுள்ள அலாதிப் பிரியமும்தான் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரி வழங்கியது.

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தர்மம் எட்ட முடியாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

நிய்யத் நன்றாயிருந்தால் சிறு அமலும் விசாலமான கூலியைப் பெற்றுத் தரும் என்பதற்கு மேற்படி செய்திகள் சாட்சி.

நஷ்டத்திற்குரிய எண்ணம்

அல்லாஹ்விற்காகச் செய்கிறோம் என்றில்லாமல் பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தனக்குப் புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு காரியத்தை ஒருவன் செய்கிறான் எனில் இது நஷ்டத்திற்குரிய எண்ணம்.

இந்த எண்ணத்துடன் செய்யப்படும் காரியங்களால் எந்த நன்மையும் கிடையாது. மாறாக, சிறிய இணைவைப்பு என்ற குற்றம் நம் கணக்கில் பதியப்படும். நமது எண்ணத்தை அனைவருக்கும் இறைவன் அம்பலப்படுத்துவான். இறைவனை பார்க்கின்ற மிகபெரும் பாக்கியத்தையும் இழக்க நேரிடும்.

நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 22528

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப் படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப் படுத்துவான்என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 6499

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத் தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கை யுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கை யுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கஜன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூசயீத் (ரலி)

நூல் புகாரி 4919

தூய எண்ணத்துடன் சிறிய காரியம் செய்தால் கூட அதற்கு இறைவனிடம் பெரிய கூலி எப்படி வழங்கப்படுகிறதோ அதே போல தூய எண்ணமின்றி முகஸ்துதிக்காக செய்தால் பெரிய காரியத்திற்கு கூட எந்த நன்மையும் கிடைக்கப்பெறாமல் நரகமே பரிசாக கிடைக்கும்.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும்என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டதுஎன்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டதுஎன்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லைஎன்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டதுஎன்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3537

உயிர்த்தியாகி, கொடை வள்ளல், ஆலிம் என்று மூவரும் இஸ்லாத்தின் மிகபெரும் காரியங்களைச் செய்தவர்கள். ஆனால், அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தின் முடிவு?

என்ன காரியம் என்பது முக்கியமல்ல. எண்ணமே முக்கியம் என்பதை இந்தச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது.

எனவே, எந்தக் காரியம் செய்தாலும் எண்ணத்தின் முடிவை வைத்தே இறைவனிடம் கூலி வழங்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————————————————————————

 

கொடுங்கோல் ஆட்சியின் கொடூரச் சட்டங்கள்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சமூக அக்கறை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவது தற்போது தான் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்துள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதால் இந்தச் சட்டங்களை நாங்கள் அமல்படுத்துறோம் என்று கூறுகின்றது.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான்  பாஜக பெரும்பான்மையாகப் பெற்றுள்ளதே தவிர இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் வெறும் 37 சதவிகிதம் தான். மீதமுள்ள 63 சதவிகித மக்கள் பாஜகவை எதிர்த்தே வாக்களித்திருக்கின்றனர். நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாஜகவையும், அதன் மதவெறிப் பிரச்சாரத்தையும் எதிர்க்கின்றர். அதுதான் இப்போது எரிமலையாக வெடித்துள்ளது என்பது தன்னெழுச்சியான  குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன.

நரேந்திர மோடி, அமீத்ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர்,  இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று கூறி வருகின்றனர். ஆனால், வங்கதேச அகதிகள் வந்து விட்டார்கள் என்று ஒரு பாஜக எம்.எல்.ஏ.வின் பொய்யான வாட்சப் செய்தியை நம்பி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வீடுகளை கர்நாடக போலீசார் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். என்.ஆர்.சி.யைக் கொண்டு வருவதற்கு முன்பே இப்படிச் செய்பவர்கள் என்.ஆர்.சி. நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற மோடியின் வாதம் பொய் என்பதை ஹிந்து தமிழ் நாளிதழ் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

1950ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளையும், 1946ஆம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டத்தையும் திருத்தம் செய்து, பாஜக அரசு கடந்த 2018, அக்டோபர் 22 அன்று ஓர் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. அதில், இந்தியாவில் தங்குவதற்கான நீண்டகால விசாவை (எல்.டி.வி.) பெறுவதிலிருந்து முஸ்லிம்களுக்கும், கடவுள் மறுப்பாளர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டுமே நீண்டகால விசாவுக்கு (எல்.டி.வி.) விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம்  சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்ற பிஜேபியின் போலி வாதத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மதரீதியிலான அரசாணை

இந்திய நாட்டில் விசா பெற்று, விசா காலம் முடிந்தும் அத்துமீறி கூடுதலாகத் தங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்குரிய அபராதத் தொகை பின்வருமாறு வசூலிக்கப்படுகின்றது.

90 நாட்கள் கூடுதலாக தங்கினால் பிற மதத்தவர் எனில் 100 இந்திய ரூபாய். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் 300 அமெரிக்க டாலர்கள் (சுமார் 20000 ரூபாய்க்கும் மேல்)

90 நாட்களுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பிற மதத்தவர் எனில் 200 இந்திய ரூபாய். முஸ்லிம்களுக்கு 400 அமெரிக்க டாலர்கள் (சுமார் 29000 ரூபாய்க்கு மேல்)

2 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்தால் பிறமதத்தவர் எனில் 300 இந்திய ரூபாய். முஸ்லிம்களுக்கு மட்டும் 500 அமெரிக்க டாலர்கள் (சுமார் 35000 ரூபாய்க்கும் மேல்)

ஏன் இந்த பாட்சம்?

இதில் மத அடிப்படை இருக்கிறதா? இல்லையா? இதற்கு மேல் எப்படி நாங்கள் தற்போதைய இந்திய அரசை நம்ப முடியும்??

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் மதரீதியாகத்  துன்புறுத்தப்படுகிறார்கள், எனவே தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தோம் என்று மோடி கூறுகிறார்.

ஆனால் வங்கதேசப்  பிரதமர் ஷைக் ஹசீனா, எங்கள் நாட்டில் இந்துக்கள், கிறிஸ்தவர் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதோர் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று தெரிவித்து மோடியின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றார்.

நாங்கள் பாகிஸ்தானில் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று பாகிஸ்தானைச் சார்ந்த இந்துக்கள் கூறி, பாஜகவின் பகல் வேஷத்தைக் கலைத்திருக்கின்றர்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் குடியரசுத் தலைவர், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இங்கு இந்துக்கள் மட்டுமல்ல! முஸ்லிம்கள் உட்பட எல்லா மதத்தினரும் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்று கூறியுள்ளனார்.

எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணம் அனைத்துமே போலியானவை என்பது இதன் மூலம் அம்பலமாகியிருக்கின்றது.

நாடெங்கிலும் மக்கள் சி.ஏ.ஏ. மற்றும்  என்.ஆர்.சி.யை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய பாசிச அரசு எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் என்.பி.ஆரை செயல்படுத்தத் துடிக்கின்றது.

இந்த என்.பி.ஆர். என்பது அரசின் நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்குத் தான் என்றும், இது மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் என்றும் பாஜகவினர் பொய்யைப் பரப்பி வருகின்றனர். இந்த  இரண்டுமே ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது ஊர்ஜிதமாகின்றது. காரணம் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஆதார் ஐடி உள்ளது. இதன் மூலம் சுமார் 125 கோடி மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்சஸ் உள்ளது. இந்த இரண்டும் இருக்கும்போது என்.பி.ஆர். என்பது எதற்காக? அப்படியானால் என்.பி.ஆர். என்பது என்.ஆர்.சி. என்பதற்குரிய நுழைவாயில் என்பதைத் தவிர வேறெதுவும் கிடையாது என்பது உறுதியாகின்றது.

இது அமல்படுத்தப்படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்படுகின்றது. ஆனால் இதன் மூலம் மொழிவாரியான சிறுபான்மையினர் மற்றும் நாடோடி இன மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், வழக்கறிஞருமான சி.எஸ். துவாரகநாத் அவர்கள் கூறும்போது, “என்.ஆர்.சி. என்பது நாட்டை இரண்டு கூறாகப் பிரித்துவிடும். ஒன்று, தங்களது குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சிறுபான்மையினர், மற்றொன்று, எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாத நாடோடி பழங்குடி இனத்தவர். கர்நாடகாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடியினர் உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் அவர்களின் மொத்த மக்கள் தொகை 15 கோடி ஆகும். இந்த நாடோடிகளுக்கென நிரந்தரக் குடியிருப்புகள் எதுவும் இல்லை. மற்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை. வீடே இல்லாமல் நாடோடியாய் திரியும்  இரண்டு கோடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் அனைவரும் என்.ஆர்.சி. நடைமுறையில் தங்கள் குடியுரிமையை எவ்வாறு நிரூபிக்க முடியும்? இது சாத்தியமற்றது”எனக் கூறினார்.

எனவே, பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானாலும், இனி கொண்டு வரப்போவதாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு போன்றவையானாலும் அதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல! அனைத்து இந்தியக் குடிமக்களும்தான்! ஏற்கனவே வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம், நாட்டில் நடைபெறும்  தொடர் போராட்டங்களாலும், இந்தக் கொடுங்கோல் அரசு கொண்டு வரும் கொடூரச் சட்டங்களாலும் மேலும் அதள பாதாளத்திற்குச் சென்று விடும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு

பெயரில் சுன்னத் ஜமாஅத்!

செயலில் ஷியா ஜமாஅத்!

யூனுஸ் நபி (அலை) மீன் வயிற்றில் சிறைப்பிடிக்கப்பட்டதற்கு காரணமே அலீ (ரலி)யின் விலாயத்தை மறுத்தது தான் என்று ஷியாக்கள் கதையளக்கின்றனர்.  ஆனால் யூனுஸ் நபி (அலை)யை சிறைப்பிடித்ததற்குக் காரணம் கோபம் கொண்டு சென்றதால் தான் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபமாக வெளியேறிய போது, அவரை நெருக்கடிக்குள்ளாக்க மாட்டோம் என எண்ணிக் கொண்டார். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன்என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன் 21:87

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் (அலை) அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)

நூல்: புகாரி 3412

தன்னை யூனுஸ் நபியை விட உயர்த்தாதீர்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னதற்கு காரணமும் நாம் அறிந்ததுதான். அல்லாஹ்வின் முடிவில் சாதாரண அடியாரிலிருந்து இறைத்தூதர் வரை எவருக்கும் குறை காணவோ, கோபம் கொள்ளவோ அருகதை கிடையாது. யூனுஸ் நபி (அலை) அவர்களிடம் அந்த ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது.

அதனால் அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை நோக்கி, யூனுஸ் நபியைப் போன்று ஆகிவிடாதீர் என்றும், அல்லாஹ்வின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (நம்மிடம்) பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன் 68:48

அல்லாஹ் இப்படிக் கூறுவதால் யூனூஸ் நபி (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்களுடன் ஓப்பிட்டு யாரும் விரும்பியபடி விமர்சனம் செய்ய விசாலமான வாசல் திறந்து கிடக்கின்றது என்று எண்ணி, ஏற்றத்தாழ்வு கற்பித்து அந்தத் தூதரின் கண்ணியத்தைக் களங்கப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வாசலை அடைத்து விடுகின்றார்கள்.

ஆனால் ஷியாக்களோ கற்பூர வாசனையைத் தெரியாத கழுதைகளாக உள்ளனார். ஷியாக்களுக்கு இந்த வரைமுறைகளோ வரம்புகளோ ஒரு பொருட்டே கிடையாது. எலும்பில்லாத நாவினால் எந்த நச்சுக் கருத்தையும் நாசக்கருத்தையும் மனம் போன போக்கில் அள்ளிவீசலாம் என்று அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்கள்.

யூனுஸ் நபியுடன் மட்டும் இந்த ஷியாக்கள் நிறுத்தவில்லை. எல்லா நபிமார்களும் அலீ (ரலி) விலாயத்தை ஒப்புக் கொண்டதாக சரடு விடுகின்றார்கள்.  இவ்வாறு கூற இப்படி ஒரு நெஞ்சழுத்தம் எப்படி வந்தது? என்று நாம் ஆச்சரியப்படும் நிலையில் இருக்கின்றது.

அலீ(ரலி)யின் வலீத்தன்மை ஒப்புக்கொண்ட நபிமார்கள்!

وروي أيضاً عن محمد بن الفضل عن أبي الحسن عليه السلام قال ولاية علي عليه السلام مكتوبة في جميع صحف – الأنبياء – فضلاً عن القرآن

ولن يبعث الله رسولاً إلا بنبوة محمدصلى الله عليه وآله ووصية علي عليه السلام”كتاب الحجة من الكافي

அலீ (ரலி)யின் விலாயத் பற்றி குர்ஆனில் கூறப்படுவது ஒரு புறமிருக்கட்டும். அனைத்து நபிமார்களின் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இதற்கு முன்பு) அல்லாஹ் எந்த ஒரு தூதரை அனுப்பினாலும் அந்தத் தூதரிடம் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை(தூதர்என்பதை)யும் அலீ (ரலி) விலாயத்தை (வலீ என்பதை)யும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உடன்படிக்கை எடுக்காமல் அனுப்பியதே கிடையாது என்று அபுல்ஹசன் தெரிவிக்கின்றார்.

நூல்: அல்காஃபீ, பாடம்:அல்ஹுஜ்ஜத்

ஆதம் நபி (அலை) அவர்களிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் வரை அத்தனை நபிமார்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் சிறப்புகளை இங்கு குறிப்பிட வேண்டிய அவசிமில்லை. அந்த அளவுக்குக் குர்ஆனிலும் ஹதீஸிலும் அவர்கள் சிறப்புகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவர்களை விடவும் அலீ (ரலி) சிறந்தவர் என்ற விஷக்கருத்தை வலிந்து திணித்து விடுகின்றனர்.

فهذه هي الأمانة وقد اهتم بها الله سبحانه وتعالى فما بعث الله نبياً إلا بها كما يرويه صاحب البصائر أيضاً – عن محمد بن عبد الرحمن عن أبي عبد الله أنه قال: ولايتنا ولاية الله التي لميبعث نبياً قط إلا بها”بصائر الدرجات

இது (அலீயின் விலாயத்) தான் அமானிதமாகும். அல்லாஹ் இதற்கு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றான். அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் இந்த விலாயத் தொடர்பாக அவரிடம் உடன்படிக்கை எடுக்காமல் அனுப்புவதில்லை. இதை பஸாயிர் என்ற நூலாசிரியர் அறிவிக்கின்றார். அது வருமாறு:  நம்முடைய விலாயத் அல்லாஹ்வின் விலாயத் ஆகும். எந்த ஒரு நபியையும் இதை அவரிடம் உடன்படிக்கை எடுத்தே தவிர அனுப்பவதில்லை என்று அபூ அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அமானிதத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். அதை சற்று ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் அது பகுத்தறிவு என்று விளங்கிக் கொள்ளலாம்.

வானங்களுக்கும், பூமிக்கும் மலைகளுக்கும் அமானிதத்தை நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:72

ஆனால் இந்த ஷியாக்கள் அதை விலாயத் என்று எளிதாக மடைமாற்றம் செய்கின்றனர்.  குர்ஆன் குறிப்பிடுகின்ற அந்த அமானிதம் விலாயத் என்று மாய்மாலம் செய்கின்றனர்.  தங்களின் தலைமைத்துவ வெறிக்கேற்ப திருக்குர்ஆனின் வசனத்தை வளைக்கின்றனர்.

அலீ (ரலி)யின் விலாயத் இத்துடன் நின்றுவிடவில்லை.  அது முந்தையை வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் ஒரு பொய்யை அவிழ்த்து விடுகின்றனர். முந்தைய வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதைத் திருக்குர்ஆன் சொல்ல வேண்டும் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் சொல்ல வேண்டும். இவ்விரண்டும் சொல்லாத ஒன்று பொல்லாத கற்பனையைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்?  ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த  கதை என்று சொல்வார்களே! அது போன்று  சாதாரண மக்களை விடவும் அலீ (ரலி) சிறந்தவர், அடுத்து நபிமார்களை விடவும் சிறந்தவர் என்ற அடிப்படையில் இறுதியாக அலீ (ரலி) மலக்குகளை விடவும் சிறந்தவர் என்று நாகூசாமல் கூறுவதைக் கேளுங்கள். ஆம்! அலீ (ரலி)யின் விலாயத்தை விண்ணகத்து மலக்குகளும் விண்ணப்பித்து விட்டார்கள் என்று வாக்குமூலம் தருகின்றனர்.

விண்ணக்கத்து மலக்குகள் விண்ணப்பித்த விலாயத்

قال صاحب البصائر: حدثنا أحمد بن محمد عن الحسن بن علي بن فضال عن محمد بن الفضيل عن أبي الصباح الكناني عن أبي جعفر قال قال: والله إن في السماء لسبعين صنفاً من الملائكة، لو اجتمع أهل الأرض أن يعدوا عدد صنف منهم ما عدوهم، وإنهم ليدينون بولايتنا”بصائر الدرجات

அல்லாஹ்வின் மீது ஆணையாக! மலக்குகளில் 70 சாரார்கள் இருக்கின்றனர். பூமியில் உள்ளோர் ஒன்று கூடி அவர்களில் ஒரு சாராரை எண்ண முற்பட்டால் கூட அவர்களை அவர்களால் எண்ணி முடிக்க முடியாது. அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கமே நமது விலாயத்தின் அடிப்படையில் தான் என்று அபூஜஃபர் தெரிவிக்கின்றார்.

நூல்: பஸாயிருத்தரஜாத்.

மலக்குகள் என்றால் அதில் சிறப்புக்கும் மரியாதைக்கும் உரிய  ஜிப்ரயீல், மீக்காயீல் போன்ற மலக்குகளும் அவர்களும் இதில் அடங்கி விடுகின்றனர்.

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

அல்குர்ஆன் 81:20,21

அப்படிப்பட்ட மாண்பும் மதிப்பும் நிறைந்த   ஜிப்ரயீல் (அலை) அவர்களும் அலீ (ரலி) யின் விலாயத்தை விண்ணப்பித்தார்கள் என்று சொல்லி தங்களின் குல வெறியை ஷியாக்கள் தூக்கிப் பிடிப்பதை இங்கே நாம் பார்க்கின்றோம்.

இவர்களுடைய நெஞ்சழுத்தம், திமிர்த்தனம் எந்த அளவுக்குச் சென்றிருக்கின்றது என்று  புரிகின்றதா? தாங்கள் தான் உயர்ந்த சாதியினர் என்பதை நிலை நாட்டுவதற்காகத் தான் இந்தப் பொய்யான கற்பிதங்களைக் கற்பிக்கின்றனர். இதனால்தான் ‘இறங்கிய குர்ஆன் வேறு! இருக்கின்ற குர்ஆன் வேறு!’ என்று விடாப்பிடியாக வாதிக்கின்றனர்.   அதற்கு ஏற்றவாறு  குர்ஆனை இப்படித் தங்களின் இழுப்புக்குத் தக்க இழுத்து  வளைக்கின்றனர். குர்ஆனில் திருத்தம், திரிபு இருக்கின்றது என்று இவர்கள் வாதிடும் நோக்கம் இது தான் என்பது நாம் இங்கு அறிய வேண்டிய முக்கிய விஷயம்.

இத்துடன் இங்கு சுன்னத் வல் ஜமாஅத்தையும் ஒரு பார்வையைப் பார்த்து வருவது பொருத்தமாக அமையும். இன்றைக்குத் தமிழகம், இந்தியா, இலங்கை சுன்னத் வல் ஜமாஅத்தினர் நூற்றுக்கு நூறு ஷியாவின் கொள்கையைத் தான் அச்சுப் பிசகாமல், அச்சரம் பிசகாமல் பின்பற்றுகின்றனர்.

முஹர்ரம் 10ஆம் நாள் மூஸா (அலை) அவர்களும் அவர்களது சமுதாயமும் ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து காக்கப்பட்ட நாளாகும். அந்த நாளில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புதத்தை மறைக்கும் விதமாக ஹுசைன் (ரலி)யின்  நினைவு நாளாக நீண்ட காலமாக அனுஷ்டித்து வருகின்றனர்.  அரசு விடுமுறையே முஹர்ரம் கொண்டாட்டம் என்ற அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றது. அதற்கேற்ப முஹர்ரம் 10 நாட்களுமே துக்க நாட்களாக அனுஷ்டிக்கப்படுகின்றன. அந்த  நாட்களில் மீன் சாப்பிடுவது கிடையாது. பத்தாம் நாள் பஞ்சா எடுப்பது என்று எல்லாமே ஷியாக்களின் வழிமுறைகளை மையமாகக் கொண்டு முஹர்ரம் மாதத்தின் பத்து நாட்களின்  செயல்பாடுகள் சுழல்கின்றன. அந்த 10 நாட்களில் தமிழகத்தில் ஹுசைன் மவ்லிதும் ஓதப்படுகின்றது.  ஹுசைன் (ரலி)யின் நினைவாக அது உருவாக்கப்பட்டிருக்கின்றது.  இதைக் குறிப்பிடுவதற்கு அடிப்படைக் காரணமே தமிழக்கத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்பது ஷியா ஜமாஅத்தின் வார்ப்புகள்.  பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத். செயல்பாடு எல்லாமே ஷியா ஜமாஅத் தான்.

பெயரில் சு.ஜ., செயலில் ஷியா 

ஷியாக்கள் தங்கள் பேச்சுக்களில், எழுத்துக்களில், ஏடுகளில் அலீ(ரலி)யை நபிமார்களை விடவும் மலக்குகளை விடவும் தூக்கி நிறுத்தும் வேலையை கச்சிதமாகச் செய்துக் கொண்டிருப்பார்கள்.

அதே வேலையைத் தான் இன்று தமிழகத்தில் சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள் செய்கின்றனர்.  அவர்களுடைய வார்த்தைகளிலும் வசனங்களிலும் இந்த திமிர்த்தனம் தெறிப்பதை நாம் பார்க்க முடியும்.

இதோ அதற்குச் சில எடுத்துக்காட்டுகள்:

يا قطب أهل السماء  والأرض غوثنها

தமிழகத்தில் பக்திப் பரவசத்துடன் பாடப்படும் யாகுத்பா என்ற பாடலில் இடம் பெறும் வரிகள் தான் இவை:

வானங்கள் பூமியின் அச்சாணியே!

அவ்விரு உலகத்தின் இரட்சகரே!

ஒரு கவிஞன் ஒருவரை வாழ்த்திப்படுகின்றான். அவர் வேறுயாருமில்லை. அவர் இன்றைய இந்தியா முஸ்லிம்களின்  கதாநாயகர், கனவு நாயகர், கடவுள் பாத்திரமாக ஆக்கப்பட்டவர்.  ஜீபூம்பாவாக நினைத்ததை முடிக்கும் நிவாரண, நிவர்த்தி மூர்த்தியாகப் பார்க்கப்படக்கூடியவர். அவர் தான் முஹ்யித்தீன் அப்துல் ஜீலானி.

இவரை  இங்குள்ள பெயர் தாங்கி சுன்னத் வல் ஜமாஅத்தினர்  அலீ (ரலி)யின் சந்ததி சங்கிலித் தொடரில் உதித்த வாரிசு என்று நம்புகின்றனர்.  அலீ (ரலி) யின் வழித்தோன்றல் வாரிசு என்பதால்,  அதே புனித ரத்தம் இவரிடம் ஓடுகின்றது என்ற நம்பிக்கையில் அவர் இந்த மாதிரி ஆகாய அளவுக்குப் பார்க்கப்படுகின்றார்.

அவரை நோக்கித் தான் இங்கொரு அரைகுறைக் கவிஞன் மேற்கண்ட புகழ்மாலையை பாடித் தள்ளியிருக்கின்றான்.  அதனால் வானம் பூமியில் உள்ளவர்களின் அச்சாணி என்று அடித்துச் சொல்கின்றான். அதாவது வானத்து மலக்குக்களுக்கு அவர் தான் அச்சாணி. அவர் தான் ரட்சகர். இதில் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களும் மீக்காயீல் (அலை) அடக்கம். அதுபோல் மண்ணில் உள்ள நபிமார்களும் அடக்கம். ஷியாயிஸம் என்ற விஷம் இவர்களின் இரத்த நாளங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதை நீங்கள் தெளிவாக உணரலாம்.

தலைகளில் பாதம்! தெறிக்கும் ஆணவம்!

இதற்கு அதே யாகுத்பாவிலிருந்து  இன்னொரு எடுத்துக் காட்டு:

قد قلت بالإذن من مولاك مؤتمرا

قدمي على رقبات الأوليا طرا

فكلهم قد وضعوا لها بشرى

يا من سما اسما عليهم محي اللدين

‘எனது பாதங்கள் எல்லா அவ்லியாக்களின் பிடரிகள் மீதும் உள்ளன’ என தங்கள் எஜமானாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்று கூறினீர்கள்.  அவ்வாறு தங்கள் பாதங்களை அனைவரும் மனப்பூர்வப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களையும் விட உயர்ந்து விட்ட முஹ்யித்தீனே!

وفي خزانة أسرار روى سندا

عن كل من وضعت في عنقه عددا

 إلا أبابكر منهم فتاب فدى

حزت المعالي جما محي الدين

முஹ்யித்தீன் அவர்கள் பாதம் பதித்த அனைவரின் பெயர்களையும் கிஸானத்துல் அஸ்ரார் என்ற நூலில் அறிவிப்பாளர்கள்  வரிசையுடன் (?) அறிவித்திருக்கின்றார்கள். அவர்களில் அபூபக்ர் என்பவர் மட்டும் தனது பிடரியை காட்ட மறுத்து விட்டார். பின்னர் அவர் தவ்பா செய்து திருந்தி விட்டார்.முஹ்யித்தீனே நீங்கள் அனைத்து உயர்வுகளை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டீர்கள்.

ஷியாக்களின் அதே ஆணவம் அப்படியே இந்தக் கவிதை வரிகளில் கொப்பளிப்பதை நாம் பார்க்கின்றோம்.  இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம்  ஷியாக்களின் கொள்கையைத் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ளவர்கள்  பின்பற்றுகின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான். இங்குள்ள சுன்னத் வல்ஜமாஅத்தினர் ஷியாக்கள் தான் என்பதற்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை இந்த கட்டுரையின் வழித்தடத்தில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு  மிகவும் தெளிவானவையாகும்.

அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டு, இறையச்சமுடையவர்களாக இருக்கும் அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன்  10:63, 64

இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் அத்தனை பேர்களும் அல்லாஹ்வின் நேசர்கள் தான். அத்தனை பேர்களும் அவ்லியாக்கள் தான்.  அதை மடைமாற்றம் செய்வதில் ஷியாக்கள் யூதர்களை மிஞ்சியவர்கள் தான் என்று சொல்லவேண்டும்.  ஆன்மீகத்தான் பெயரால் மக்களை ஏமாற்றி அடிமைப்படுத்தும் அதீத கலைகளை கையாள்பவர்கள் யூதர்கள் ஆவர். யூதர்களுக்குப் பின்னர் இந்தக் கலைகளைக் கையாள்பவர்கள், இன்னும் சொல்லப்போனால்  அதில் கைதேர்ந்தவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களின் அடிச்சுவட்டில் நடப்பவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆவர். இந்த அடிப்படையில் இவர்களும் ஷியாக்களும் ஒரு பாதையில் பயணிப்பவர்கள் தான். அதனால் இவர்களும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அதற்காகத் தான் இந்த எடுத்துக்காட்டு கூறப்படுகின்றது.

—————————————————————————————————————————————————————————————————————

மாமியார் vs மருமகள்

அபு ஆஃப்ரின்

ஒரு குடும்பம் உருக்குலைந்து விடாமல் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருக்கக் கூடிய பெண்கள், குறிப்பாக மாமியார் மருமகள் இருவருமே இணக்கமாக, ஒற்றுமையாக, பரஸ்பர உறவுடன் வாழ வேண்டும். இல்லையேல் அக்குடும்பம் சீரழிந்துவிடும்.

மாமியார், மருமகள் ஆகிய இருவருக்குமிடைய கருத்து வேறுபாடு, பிணக்கு, சரியான புரிந்துணர்வு இல்லாமை, நீயா நானா என்ற போட்டி, ஈகோ போன்ற காரணங்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றது. மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது இந்தியா, பாகிஸ்தான் போன்று நேரெதிர் துருவங்களாகவே இருக்கின்றது. முடிவுறாத தொடர்கதையாக இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதைப் பெண்களாகிய ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட்டால் நமது இல்லறம் நல்லறமாகும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் செழிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடக்கியாளும் அதிகார வர்க்கம்

மாமியாராக இருக்கும் ஒரு பெண், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மேற்பார்வையில்  திருமணமாகி வாழ வரும் மருமகள் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்றாற்போல் இருக்க வேண்டும், தனது கட்டுப்பாட்டில், தான் கிழித்த கோட்டைத் தாண்டாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அதன் உச்சக்கட்டம் என்னவென்றால் மருமகளுடைய சுய தேவைகள் விஷயத்தில் கூடத் தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று மாமியார் எதிர்பார்க்கின்றார்.

திருமணமாகிப் புதிதாக வாழ வரும் ஒரு பெண், பல வருடங்களாக அவள் வாழ்ந்த சூழல், பழகிய உறவுகள், நடைமுறைகள் அனைத்தையும் விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கணவனின் வீட்டாருடன் பொருந்திப் போவது, அவர்களுக்கு ஏற்றாற்போல் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது சற்றுக் கடினம்தான். அதற்குச் சில கால அவகாசம் தேவைப்படும் என்ற புரிதல் மாமியார்களிடம் இருப்பதில்லை. இதுவே மாமியார் செய்யும் முதல் தவறு.

இவ்வாறாக மாமியாரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும் போது அங்கிருந்தே இரு தரப்பினருக்கும் போர்ச்சூழல் ஆரம்பித்து விடுகின்றது.

மாமியார் உடைத்தால் பொன் குடமாக இருந்தாலும் அது மண் குடம் தான்; அதே சமயம் மருமகள் உடைத்துவிட்டால் அது மண் குடமாக இருந்தால் பொன் குடமாகி விடும் என்ற பழமொழிக்கேற்ப மருமகள் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூடப் பெரும் குற்றமாகப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

வழக்கத்திற்கு மாற்றமாகச் சிறிது நேரம் அசந்து தூங்கி விட்டாலோ, வீட்டு வேலைகளில் எதையேனும் செய்யாமல் விட்டு விட்டாலோ, எவ்வளவு நேரம் தூங்குகிறாள், ஒரு வேலை பார்ப்பதில்லை, இப்படி ஒரு மருமகள் எனக்கு வாய்த்திருக்கிறாள் என்று வீட்டிற்கு வந்து போகும் நபர்களிடமும், தனது மகனிடமும் குறைகூறி, சிறு தவறுகளையும் பெரிதாக்கி விடுகின்றனர்.

வாழ வந்தவளுக்கு இடமளித்து, நாம் கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று எண்ணாமல், மருமகளிடம் இறங்கிப் போய்விட்டால் நாம் இத்தனை காலம் கட்டிக் காத்த சாம்ராஜ்யம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்ற எண்ணத்தில், அன்பாக நடந்து கொள்ள வேண்டிய மாமியார்கள், ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விடுகின்றார்கள்.

அடக்கம், மரியாதை என்ற பெயரில் மருமகள் குறிப்பிட்ட ஆடையைத் தவிர வேறு ஆடைகளை அணியக் கூடாது, வீட்டில் சப்தமாகப் பேசி சிரிக்கக் கூடாது, அப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்கக்கூடாது என்று பல்வேறு “கூடாதுகள்” போட்டு அவளது சுதந்திரத்தைப் பறித்து விடுகின்றனர்.

காலை விடிந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் அந்த வீட்டு மருமகளே செய்தாக வேண்டும். அப்பெண்ணுடன் கூட்டு சேர்ந்து உதவிக்கரம் நீட்ட மாமியாரோ, நாத்தனாரோ முன்வருவதில்லை. வெறுமனே வேடிக்கை பார்ப்பதும், மருமகள் செய்யும் வேலையில் குறைகூறுவதுமே அவர்களிள் வேலை.

பசித்தாலும் கூட, கணவன் வீட்டிலுள்ளவர்கள் சாப்பிடும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையும் பல குடும்பங்களில் உண்டு.

இவ்வாறாக, வீட்டிற்கு வாழ வரும் பெண் அங்குள்ள அதிகாரம் படைத்தவர்களால் அடக்கியாளப்படுகிறாள். தனது மகனின் மனைவி, தனது சகோதரனின் மனைவி என்று எண்ணாமல் ஏதோ வேலைக்காரியைப் போல் நடத்தப்படுகின்றாள். இதுவே மருமகளாக வாழக்கூடிய ஒரு பெண்ணுக்கு எழுதப்படாத விதியாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் இளவரசியைப் போன்று செயல்படுவது நாத்தனார்கள் தான். தனது சகோதரனின் மனைவிக்கு ஒரு தோழியாக. சகோதரியாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய நாத்தனார்கள், மாமியாருக்கு நிகராக அல்லது மாமியாரையே மிஞ்சும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். தான் பிறந்த வீடு என்பதால் தனக்கே அதிக உரிமை, எனவே எனக்குத் தான் அதிக மரியாதை தர வேண்டும், எனக்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், சேவகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்றனர். தாங்கள் புகுந்த வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை, தனது பிறந்த வீட்டில் வந்து தன் சகோதரன் மனைவியிடம் காட்டுகின்றனர். ஒரு சிறு தீப்பொறி கிடைத்தாலும் அதைப் பெரும் தீப்பந்தமாக மாற்றி அதில் குளிர்காயும் நாத்தனார்களும் உண்டு.

என் வீட்டில் நான் படாத கஷ்டமா? என்று ஒவ்வொரு பெண்ணுமே தனது மனக்குமுறலைக் கொட்டுவாள். அப்படித் தனது கணவன் வீட்டில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாலும் கூட, தன் வீட்டிற்கு வாழ வரும் பெண்ணை அவள் விட்டுவைப்பதில்லை.

ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ நம்மைப் போன்றே சக மனிதர்களையும் மதிக்க வேண்டும் என்று போதிக்கின்றது.

சரி நிகர் சுதந்திரம்

நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதாஎன்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்என அபூதர் கூறினார்என மஃரூர் கூறினார்.

நூல்: புகாரி 30

உணவைக் குறை கூறக் கூடாது

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 5409

சமைப்பவரும் நம்முடன் உணவருந்தல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இருபிடிகள்அல்லது ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.

நூல்: புகாரி 5460

கலந்தாலோசித்ல்

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 604

வீட்டிற்கு வாழ வந்த மருமகள் என்பதல்ல! பொதுவாகப் பிற மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் செய்திகள் உதாரணமாக அமைந்துள்ளன. அப்படியானால் நமது குடும்பத்தின் அங்கமான மருமகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அடங்காத மருமகள்

மாமியாரையும் நாத்தனாரையும் மட்டும் குறிப்பிடுவதால் மருமகள்கள் அனைவருமே பத்தரை மாத்துத் தங்கம் என்று எண்ணிவிடக்கூடாது. மாமியாரையே அடக்கியாளும் மருமகள்களும் இருக்கிறார்கள். கணவன் மட்டுமே போதும், கணவனைச் சார்ந்தவர்கள் யாரும் தேவையில்லை. கணவனின் வீட்டாருக்குப் பணிவிடை செய்ய மாட்டேன் என்று பெரும்பான்மையான பெண்கள் எண்ணுகின்றனர். அதனால் திருமணம் ஆண குறுகிய காலத்திலேயே தனது கனவனைத் தன்வசப்படுத்தி, அவனது தாய், தந்தையரை விட்டுப் பிரித்து, தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர்.

மேலும், மாமியார் சொல்லக்கூடிய சிறு விஷயங்களைக் கூட ஒரு குறையாகவே பார்க்கின்றனர். பல நேரம் மாமியார் கூறும் அறிவுரைகளும் கெட்டதாகவே தெரிகின்றது. இல்லாததை இருப்பது போன்றும், கூடுதல் குறைவாகவும் கணவனிடம் கூறி, தாயின் மேல் வெறுப்பை ஏற்படுத்தும் பெண்களும் உண்டு!

மாமியார் சொல்லும் எதுவானாலும் தவறாகவே தெரியக் காரணம் என்ன?

அவர் யார் என்னைப் பேசுவதற்கு? அவர் சொன்னால் நான் கேட்க வேண்டுமா? என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுவதற்கு, சகிப்புத்தன்மை இல்லாமல் போனதே காரணம்.

அதிலும் மாமியார், மாமனார் வயதானவர்களாக இருந்தால் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களுக்கு இருக்கும் மதிப்பு கூட அந்தப் பெரியவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஒரு டம்ளர் டீக்காக ஒரு மணி நேரம் தனது மருமகளை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் மாமியார்களும் இருக்கிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட மருமகள்கள் இருக்கும் வீடுகளில், நான் மட்டும் தான் வேலை பார்க்க வேண்டுமா? மாமியார், மாமனாரைப் பார்த்துக் கொள்ளும் கடமை எனக்கு மட்டும் தானா? என்று தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள்.  பல வீடுகளில் ஒரு மாதம் அங்கே! ஒரு மாதம் இங்கே என்று முறை வைத்து அனுப்புவது, அல்லது பெண் பிள்ளைகளின் வீட்டிற்கு அனுப்பி விடுவது போன்ற நிலைகளும் உண்டு!

கணவர்  வெளிநாட்டிற்கோ, வெளியூருக்கோ சென்று விட்டால், கணவன் இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை என்று எண்ணி பிறந்த வீட்டிற்கே சென்றுவிடுகின்றனர். அவ்வப்போது விருந்தாளி போல் புகுந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர். மாமியாரும், மாமனாரும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு வேறு வழியின்றித் தங்கள் கடைசிக் காலத்தைத் தள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்கான காரணம் என்னவென்றால், வாழ வரும் ஒரு பெண் தனது மாமியார், மாமனாரை, தாய் தந்தையாகக் கருதாமல் எதிரியைப் போன்று பார்ப்பது தான்.

ஒரு குடும்பத்தின் ஆணிவேரே அவ்விருவரும் தான். அவர்கள் அனுபவக் காலம் நமது வயது என்பதை உணர்ந்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுகின்றர்.

திருமணமான ஒரு பெண்ணின் பொறுப்புகளில் கணவனின் உறவுகளைக்  கவனிப்பதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது குறித்தும் மறுமையில் கேள்விகள் உண்டு என்ற இறைபயம் இல்லாமல் போனது தான் இதுபோன்ற நிலைகளுக்குக் காரணம்.

என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், ‘திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!என்று கேட்டார்கள். நான், ‘ஆம்என்று கூறினேன். கன்னி கழிந்த பெண்ணையாக? கன்னிப் பெண்ணையா?’ என்று கேட்டார்கள். நான், ‘(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)என்று கூறினேன். உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் – ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களை விட்டுவிட்டு உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ செய்தது சரிதான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 4052

என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்து பத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் பையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி)

நூல்: புகாரி 5188, 5224

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி 5188, முஸ்லிம் 3733

உசுப்பேற்றும் உறவுகள்

குடும்பப் பிரச்சனைகளில் முக்கியப் பங்காளிகளாக இருப்பவர்கள் நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள். எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இரு தரப்புக்கும் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுக் குதூகலமாக இருப்பார்கள்.

உதாரணமாக, மாமியார் தனது மருமகளைப் பற்றி ஏதாவது குறைகூறினால், ‘சின்னப் பெண் தானே! கொஞ்சம் அனுசரித்துக் கொள்! எல்லாம் சரியாகி விடும்’ என்று சமாதானப்படுத்தாமல், ‘அப்படியெல்லாம் இடம் கொடுக்காதே! எந்த வீட்டிலாவது மருமகள் இப்படி நடக்கிறாளா? உன் கையை மீறிப் போக விட்டுவிடாதே!’ என்றெல்லாம் உசுப்பேற்றி விடுகின்றார்கள்.

அதே சமயம், இங்கே மாமியாரைப் பற்றி மருமகள் ஏதேனும் கூறினால், அவளிடம் நல்லுபதேசம் சொல்வதற்குப் பதிலாக, ‘குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகாதே! சுதாரிப்பாக இருந்து கொள்! எதிர்த்துப் பேசினால் தான் அடங்கிப் போவார்கள்’ என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். நல்லது செய்வது போன்றே நடித்து இரு தரப்புக்கும் பிளவு ஏற்படப் பாலம் அமைத்துக் கொடுப்பது இவர்கள் தான். இத்தகையோரைக் குழப்பவாதிகள் என்று திருமறை கூறுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை  உறுதிப்படுத்திய பின்னரும் அதை முறிக்கின்றனர்.  இணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதை  (உறவை) முறிக்கின்றனர். அவர்கள் பூமியில் குழப்பம் செய்கின்றனர். அவர்களே நஷ்டவாளிகள்.

அல்குர்ஆன்  2:27

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் செய்யவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அல்குர்ஆன்  47:22

அவதிப்படும் ஆண்கள்

குடும்பத்திலுள்ள பெண்களிடையே நடக்கும் உரிமைப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பது ஆண்கள் தான். நான் தான்  பெற்றெடுத்தேன், எனவே எனக்குத் தான் உரிமை அதிகம் என்று தாயும், நான் தான் இறுதி வரை வாழப்போகிறவள், எனக்குத் தான் உரிமை அதிகம் என்று தாரமும் நீயா நானா என்று மோதிக் கொள்கின்றனர். இடையே மாட்டிக் கொள்ளும் ஆண்கள் யார் பக்கம் பேசினாலும் மறுதரப்பில் அநியாயக்காரனாகவே பார்க்கப்படுகிறான். சரி! எதிலும் தலையிடாமல் இருந்து விட்டால், பொறுப்பற்றவன் என்று பெயரெடுக்கிறான்.

வேலையை முடித்து விட்டு, அமைதியைத் தேடி வீட்டிற்கு வரும் ஆணிடம் இரு சாராரும் ஒருவருக்கொருவர் சரமாரியாகக் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இதனால் கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து செய்வதறியாது தவிக்கிறான்.

இதனால்தான் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சோதனை என்று சொல்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களுக்கு, பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

நூல்: புகாரி 5096,

நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபசகுனம் என எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும் தான் இருக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி 5094

சகுனம் என்பது இல்லையென்றாலும், அப்படி ஒன்று இருந்தால் அது பெண்களாகத் தான் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.

தேவை மன மாற்றம்

ஆண்களின் மன அமைதி கெட்டு, குடும்பம் சந்தோஷத்தை இழந்து தவிப்பதற்குக் காரணியாக இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்குத் தீர்வு நல்ல மன மாற்றம் தான். இருவரும் பரஸ்பரம் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

 1. மாமியார், மருமகள் இருவருமே எது சொன்னாலும், எது செய்தாலும் அதை ஒரு குறையாக, தவறாகப் பார்க்காமல் சகித்துக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் குறையைக் காணும் போது, அவரிடமுள்ள நிறையைக் கண்டு திருப்தியடைந்து, குறையைக் கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும்.
 2. ஒருவருக்கொருவர் மூன்றாம் நபரைப் போல் பார்க்காமல் மாமியாரை தாயைப் போன்றும், மருமகளைத் தன் மகளைப் போன்றும் கருதவேண்டும். மனம் விட்டுக் கலந்துரையாடுவது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது, அவரவர் உரிமையில் தலையிடாமல் உணர்வுக்கு மதிப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 3. பல நேரங்களில் நமக்குப் பிடிக்காத செயல் நடக்கும் போது அல்லது தவறே செய்யாமல் விமர்சிக்கப்படும் போது அங்கே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் பேசுவதால் பிரச்சனை எனும் போது மவுனம் காப்பதே சிறந்தது.
 4. அதிகாரத்தால் அடக்கியாள்வதை விட அன்பால் ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் புத்தகம் நமக்கு அதையே கற்றுக் கொடுக்கின்றது.
 5. நான்தான் பெரியவள், நான் யாருக்கும் அடங்கிப் போக மாட்டேன் என்றிராமல் பல இடங்களில் விட்டுப் பிடித்தும், விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும். நீயா நானா என்று வாதம் செய்ய இது பட்டிமன்றமல்ல! வாழ்க்கைப் பயணம். எனவே சூழ்நிலைக்குத் தக்க நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
 6. முடிந்தவரை இரு தரப்பும் ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறாமல், வீட்டுப் பிரச்சனைகளை நமக்குள்ளே பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
 7. நம்மைப் போன்றே பிறரையும் கருத வேண்டும். ஒரு காலத்தில் தன் மாமியாரால், நாத்தனாரால் தான் பட்ட கஷ்டத்தை, தனது மருமகள் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அதேபோல் மருமகளும், நாளை நாமும் மாமியாராக ஆகலாம், நமக்கும் மோசமான நிலை ஏற்படலாம் என்பதை உணர்ந்து மாமியார், மாமனாரை தாய் தந்தையரைப் போல் அன்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் பட்ட கஷ்டம் நம்மைப் போன்ற ஒருத்திக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதை ஒவ்வொரு கனமும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறரது குறையை ஆராயாமல் நமது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை அவன் மாற்றுபவனாக இல்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன். 

அல்குர்ஆன்  8:53

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)

நூல்: புகாரி  13

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)

நூல்: புகாரி 6065

நமது செயல், பேச்சு என ஒவ்வொன்றைப் பற்றியும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற இறையச்சத்துடன், மார்க்கம் காட்டிய வழியில் வாழ்ந்தால் குடும்ப வாழ்வில் மட்டுமல்லாது மறுமை வாழ்விலும் வெற்றி பெறலாம்.