ஏகத்துவம் – பிப்ரவரி 2018

முத்தலாக் விவகாரம் சிவில் பிரச்சனைக்கு கிரிமினல் தண்டனை!

(திரு. கபில் சிபல் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞரும் ஆவார். முத்தலாக் சட்டம் தொடர்பாக ஜனவரி 5 – 2018 அன்று வெளியான ஆங்கில ஹிந்துவில் Civil Wrong, Criminal act என்ற தலைப்பிட்டு அவரது கட்டுரை வெளியானது. அதில் அவர் இந்தச் சட்டத்தின் பாதகங்களையும், பாதிப்புகளையும், அரசாங்கத்தின் அறிவீனத்தையும், அவசர கோலத்தையும் அழகாக விளக்கி விமர்சனம் செய்திருந்தார். அந்த ஆக்கத்தை ஏகத்துவ வாசகர்களின் பார்வைக்குத் தருகின்றோம். திரு. கபில் சிபல் அவர்கள், முத்தலாக் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் வாதாடுகின்ற வழக்கறிஞரும் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

கடந்த டிசம்பர் 2017, 28ஆம் தேதி முத்தலாக் தடைச் சட்டம் (முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம்) நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேறியது. ஆனால் ராஜ்யசபாவில் கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அது நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் முஸ்லிம் ஆண்களை சிறைக் கொட்டடியில் தள்ளி கொடுமைப்படுத்த வேண்டும் என்பதையே குறீயீடாகக் கொண்டு அவசரக் கோலத்தில் இந்தச் சட்டம் கொண்டு  வரப்பட்டுள்ளது.

முத்தலாக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்குக் காரணம் என்று  மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு கூறுகின்றது. அது கூறுகின்ற காரணம் உண்மையா என்று பார்ப்பதற்கு முன் உச்சநீதிமன்றத் தீர்ப்பை இப்போது பார்ப்போம். முத்தலாக் தொடர்பாக மூன்று தனித்தனி தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.  அந்தத் தீர்ப்புகள் விவரத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

 1. ‘‘(ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கணவன் சொல்கின்ற) தலாக் பித்அத் மனம் போக்கில் அமைந்தது; தன்னிச்சையானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அது செல்லாததாகி விடுகின்றது”

இது நீதிபதி ஆர்.எஃப் நாரிமன், நீதிபதி யூ.யூ. லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பாகும்.

 1. ‘‘(மேற்குறிப்பிட்ட அந்த) தலாக் 1400 ஆண்டுகளாக வழக்கத்தில் இருப்பதால் அது முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு உட்பட்டதாகும். அதனால் அது அரசியல் சட்டம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றது என்று கூறி அதைச் சட்ட விரோதமாக்க முடியாது. அதே சமயம், உலக முஸ்லிம் நாடுகள் அதை வெறுப்பிற்குரிய செயலாகவும், சட்டத்திற்குப் புறம்பானதாகவும் ஆக்கியிருப்பதால் அது தொடராமல் தடுக்கப்பட வேண்டும்”.

இது நீதிபதி ஜே.எஸ். கெஹார், நீதிபதி அப்துல் நாஸர் ஆகியோர் அளித்த தீர்ப்பாகும். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் நிலைபாடு இது தான்.  அதை இந்தத் தீர்ப்பு பிரதிபலிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு வழி செய்யும் வகையில் ஆறு மாத கால அளவிற்கு இந்த முத்தலாக் சொல்லக் கூடாது என்று ஓர் இடைக்கால உத்தரவு போட்டனர்.

 1. ‘‘நீதிபதி ஆர்.எஃப் நாரிமன், நீதிபதி யூ.யூ. லலித் ஆகியோர் கூறிய காரணங்கள் அடிப்படையில் முஸ்லிம் தனியார் சட்ட விதிகள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க முடியாது. ஆனால் இந்த தலாக் பித்அத், ஒரு பாவமான செயலாகும். அத்துடன் அது குர்ஆன் அங்கீகரிக்காத ஒரு சட்டமாகும். அதன்படி, அது முஸ்லிம் தனியார் சட்ட விதியாக ஆக முடியாது”.

இது நீதிபதி கூரியன் ஜோசஃப் அளித்த தீர்ப்பாகும். இந்த அடிப்படையில் இவர், நீதிபதி ஆர்.எஃப் நாரிமன், நீதிபதி யூ.யூ. லலித் ஆகியோரின் தீர்ப்புக்கு மாறுபடுகின்றார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தலாக் பித்அத்தை செல்லாதது என்று தீர்ப்பளித்திருக்கின்றனர்.

இந்தத் தீர்ப்புகளில் சட்டம் இயற்ற வேண்டும் என்று  நீதிபதி கெஹார், நீதிபதி அப்துல் நாஸர் ஆகியோர் அளித்த தீர்ப்பு சிறுபான்மை தீர்ப்பாகும். மத்திய அரசு இந்தச் சிறுபான்மை தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சட்டமியற்றி உள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 3 அம்சங்கள் கொண்டதாகும்.

 1. முத்தலாக் அல்லது ஒரே சமயத்தில், மீட்ட முடியாத அளவுக்கு ஒரு முஸ்லிம் விடுகின்ற எந்த விதமான தலாக்கும் செல்லாததாகும்.
 2. ஒரு முஸ்லிம் கணவன் விடுகின்ற முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 3. முத்தலாக் விடுவது, பிடி ஆணையில்லாமல் கைது செய்யத் தக்க, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்.

மத்திய அரசாங்கம் இங்கு தனது அறிவைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்தவில்லை என்பது இதிலிருந்து  தெளிவாகத் தெரிகின்றது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் முத்தலாக் செல்லாது என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. அதைத் தான் செல்லாது என்று மீண்டும் இந்தச் சட்டம் குறிப்பிடுகின்றது. ஒருவேளை இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும் இந்த தலாக் செல்லாத தலாக் தான். அதனால் இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ள நடைமுறையைச் செல்லாது என்று சொல்ல வந்திருக்கின்றது. இதைச் சொல்வதற்கு இப்படி ஒரு சட்டம் தேவையா? என்று கேட்டால் இதற்குப் பதிலில்லை. அதனால் இந்தச் சட்டத்தின் நோக்கம் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

மூன்று தீர்ப்புகளில் எந்த ஒரு தீர்ப்பும் நாடாளுமன்றம் இப்படி ஒரு குற்றவியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு சட்டத்தை பிஜேபி அரசாங்கம் கொண்டு வருவதற்குக் காரணம் என்ன? தலாக் சொல்கின்ற ஒரு முஸ்லிமைக் குறிவைத்து இதன் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து இதில் வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இஸ்லாமியத் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அது ஒரு சிவில் விவகாரம். அதுபோல் தலாக் என்ற விவாக விலக்கின் மூலம் ஒரு முஸ்லிம் அதை  முறிக்கின்றார் என்றால் அதுவும் ஒரு சிவில் விவகாரம். இதில் கிரிமினல் சட்டத்திற்கு என்ன வேலை இருக்கின்றது?

முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் நீலிக் கண்ணீர் வடித்து முஸ்லிம் ஆண்களைச் சிறையில் தள்ளி  அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற பிஜேபி அரசாங்கத்தின் கொடூர சிந்தனை இதன் மூலம் அம்பலமாகி விட்டது.

கணவர் முத்தலாக் சொல்லி விட்டார் என்று  தலாக்கினால் பாதிப்புக்குள்ளான மனைவி மட்டும் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் உள்ள எந்தப் பிரிவும் குறிப்பிடவில்லை. மாறாக ஒருவரைப் பிடிக்காத ஒரு மூன்றாம் நபர் புகார் செய்தால் போதும். உடனே அவர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவார் என்பது இந்தச் சட்டத்தின் மிகப் பெரிய கொடூரமான அம்சமாகும்.

இது, ஜாமீனில் வரமுடியாத குற்றம் என்பதால், இதற்கு கோர்ட் மட்டுமே ஜாமீன் கொடுக்க முடியும். இது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை வருமாறு:

 1. தன் கணவன் தலாக் சொன்னதும் ஒரு மனைவி புகார் செய்ய முன் வர மாட்டாள். காரணம் திருமண பந்தம் முறியாமல் இருக்கும் நிலையில் புகார் செய்து கணவன் சிறையில் அடைக்கப்பட்டு விட்டால் அவளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் எந்தப் பொருளாதார உதவியும் அவரால் செய்ய முடியாது. அதனால் தனக்குப் பாதகமான அந்த விளைவுகளைச் சந்திக்க அவள் முன் வரமாட்டாள்.
 2. பிடிக்காத மனைவி, பொய்யாகக் கூட புகார் கொடுத்து கணவனைச் சிறையில் அடைத்து விடலாம்.
 3. திருமண உறவு நீடிக்கையில், கணவன் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்? என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

ஜீவனாம்சம் கொடுப்பது, மைனர் பிள்ளைகளின் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் தலாக்கிற்குப் பின்னால் வருகின்ற பிரச்சனைகளாகும். இவ்விரண்டுமே கணவன், மனைவியாக வாழ்கின்ற தம்பதியர்களுக்கு மத்தியில் ஒரு போதும் வரப் போவதில்லை.  தலாக் சொன்ன பிறகு கணவன் ஜீவனாம்சம், மைனர் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பை மறுத்தால் இந்த பிரச்சனைகள் வரும். ஆனால் அப்படி ஒரு விவகாரமே இங்கு வரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டத்திற்கு மதச் சாயம் பூசக் கூடாது. பாலியல்  நீதியை, நிலை நாட்டுவதற்காகத் தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக பிஜேபி அரசு ஒரு நொண்டிச் சமாதானத்தை சொல்லிக் கொள்கின்றது.

இதுதான் காரணம் என்றால், இந்து மத சகோதரிகள் கணவனால் கைவிடப்பட்டு நீதி, நிவாரணம் தேடி, நியாயம் கேட்டு வீதியில் இறங்கி, விதியே என்று காவல் துறை, நீதித் துறை என்று அலைகின்றார்களே அவர்களுக்காக இந்த அரசு கண்ணீர் வடிக்காதது ஏன்? கரிசனம் காட்டாதது ஏன்? கணவன் இருந்தும் கையறு நிலையில் கைம்பெண்ணாக, கண்ணீருடனும் கம்பலையுடனும் பரிகாரம் கிடைக்காமலேயே ஆண்டு பல உருண்டோடி விடுகின்றனவே அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப் போகின்றது?

இந்தக் காரணம் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் கணவர்களால்  கைவிடப்படுகின்ற  எல்லா மதத்துப் பெண்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். பாலியல் நீதி என்பது முஸ்லிம்களை மட்டும் குறியீடாகக் கொண்டு அமையக் கூடாது.

மொத்தத்தில், இது வாக்கு அறுவடையை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்ற பிஜேபி அரசின் பக்கா அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் பச்சோந்தித் தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால், இது பிஜேபி அரசின் மற்றொரு ஏமாற்று வேலையாகும்.

திருமண பந்தம் முறியாமல் ஒன்றாகக் கூடி வாழ்கின்ற குடும்பங்களிலிருந்து கணவன்மார்களை தலாக் என்ற பெயரில் பிரித்து, அவர்களை சிறைச்சாலைகளில் தூக்கிப் போட்டு, அந்தக் குடும்பங்களைத் துண்டாடத் துடிக்கின்ற பிஜேபி அரசின் கண்மூடித்தனமான கோரச் சிந்தனையை, கொடூரச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.

———————————————————————————————–

ஒன்றுக்குப் பத்து! ஓரிறையின் பரிசு!

எம். ஷம்சுல்லுஹா

ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்ற அளவுக்கு முன்வாழ்ந்த சமுதாய மக்கள் ஆயுள் வழங்கப்பட்டிருந்தனர். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார்.

அல்குர்ஆன் 29:14

ஆனால் நமது இந்தச் சமுதாயமோ அதில் பத்தில் ஒரு பங்கு அளவுக்குரிய ஆயுட்காலத்தை விடவும், அதாவது நூறு வயதிற்கும் குறைவான அளவு வாழ்நாள் தான் அளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் குறைந்த வாழ்நாளில் ஒரு மனிதன் செய்கின்ற அமல்கள் அவனது மறுமை வாழ்க்கை நன்றாக அமையப் போதுமானதாக இருக்குமா? அதனால் எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் போன்ற பாக்கியம் பொருந்திய இரவுகளை அளித்து அவர்களுக்கு அளப்பெரும் நன்மைகளையும் அபரிமிதமான பாக்கியங்களையும் வழங்குகின்றான். இதை நமக்கு கத்ர் என்ற அத்தியாயம் தெரிவிக்கின்றது.

மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

அல்குர்ஆன் 97:1-3

இது அல்லாமல் அன்றாடம் நாம் செய்கின்ற  ஒவ்வொரு அமலுக்கும் பத்திலிருந்து 700 மடங்கு வரை நன்மைகளை அள்ளித் தருகின்றான்.

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 6:160

பத்து மடங்கிலிருந்து பல மடங்காகாக பெருகி 700 மடங்கு வரை செல்கின்றது என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம் 183

நினைத்தாலே நன்மை!

நன்மையைச் செய்ய நினைத்தாலே ஒரு நன்மை! செய்து விட்டால் பத்து நன்மைகள். அதே சமயம் தீமையைச் செய்ய நினத்து விட்டாலே ஒரு தீமை பதிவாவதில்லை. தீமையைச் செய்தால் மட்டுமே தீமை, அதுவும் ஒரு தீமை மட்டுமே என்று  பதிவாவது அல்லாஹ்வின் மற்றொரு மிகப் பெரும் அருட்கொடையாகும். நாளை மறுமையில் தீமைகள் தூக்கலாகி தீமையின் தட்டு கனத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அல்லாஹ்வின் இந்த ஏற்பாடு.

இங்கே நாம் ஒரு தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. நன்மையுடன் ஒப்பிடுகையில் பதிவேட்டில் தீமைகள் குறைவாகத் தான் பதியப்படுகின்றது. அதனால்  தீமைகளைக் கொஞ்சம் கூடுதலாகச் செய்தால் என்ன? என்பது தான் அந்த தப்புக் கணக்காகும். ஒரு நாளில் நாம் செய்கின்ற நனமை தீமைகளை கணக்குப் போட்டு பார்த்தோம் என்றால், அதுவும் நவீன சாதனங்களான டீவி, மொபைல், இன்டர்நெட் போன்றவை நிறைந்த இந்த உலகத்தில், இந்தக் காலத்தில் தீமைகள் தான் நம்மிடம் மிகைத்து நிற்பதைப் பார்க்கலாம். அந்த அளவுக்குத் தீமைகள் நம்முடைய தலைக்கு மேல் போகக் கூடிய வெள்ளமாக நம்மை சூழ்ந்து நிற்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் அல்லாஹ்வின் ஒன்றுக்குப் பத்து என்ற பரிசு இல்லை என்றால் நம்முடைய தீமைத் தட்டு கனத்து, நாம் நரகத்தில் வீழ்பவர்களாகி விடுவோம். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

நாளை மறுமையில் நம்முடைய நன்மை தீமையை நிறுக்கின்ற தராசில் நன்மைத் தட்டை கனக்கச் செய்து, தீமைத் தட்டை கீழிறங்கச் செய்து, நம்மை சுவனத்தில் நுழையச் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்க வேண்டும்.

இப்படி அல்லாஹ் அளிக்கக் கூடிய ஒன்றுக்கு பத்து என்று வருகின்ற அந்த நன்மைகளின் பட்டியலை பார்ப்போம்.

மூன்று எழுத்துக்கள் முப்பது நன்மைகள்

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் கிடைக்கின்றன. (அல்பகரா அத்தியாயத்தின் துவக்கத்தில் குறியீடின்றி ஓரெழுத்தைப் போன்று இடம் பெறுகின்ற) அலிஃப் லாம் மீமை ஓர் எழுத்து என்று கூறமாட்டேன். மாறாக, அலிஃப் ஓர் எழுத்து; லாம் ஓர் எழுத்து; மீம் ஓர் எழுத்து (மொத்தம் மூன்று எழுத்துக்கள்) ஆகும் 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)

நூல்: திர்மிதி 2835

ஸலவாத்து ஒன்று! சன்மானம் பத்து!

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 577

சொல்வது ஒன்று! சுருட்டுவது பத்து!

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், ‘‘உங்களில் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நன்மைகளை சம்பாதிப்பதற்கு இயலாமல் ஆவாரா?’’ என்று கேட்டார்கள். அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், ‘‘எப்படி (ஒரு நாளில்) ஆயிரம் நன்மைகளை சம்பாதிப்பது?’’ என்று கேட்டார். அதற்கு, ‘‘நூறு தடவை அவர் தஸ்பீஹ் செய்ய வேண்டும். அப்படி தஸ்பீஹ் செய்தால், அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன. அல்லது அவரை விட்டும் ஆயிரம் பாவங்கள் அழிக்கப்படுகின்றன’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4866

தொழுவது ஐந்து! பெறுவது ஐம்பது!

மிஃராஜ் இரவின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது வேளை தொழுகை விதிக்கப்பட்டுத் திரும்ப வருகின்றார்கள். அப்போது மூஸா நபி அவர்கள் நபியவர்களைத் திரும்ப அனுப்பி  குறைக்குமாறு கோரிக்கை வைக்கின்றார்கள். அதை ஏற்று நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் சென்று குறைத்து வருகின்றார்கள். கடைசியில் அது ஐந்தாகின்ற வரை அலைகின்றார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது ‘உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?’ என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது’ என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது ‘ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்குச் சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை’ என்று அல்லாஹ் கூறினான்.

நூல்: புகாரி 349

அல்லாஹ், ‘சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.

நூல்: புகாரி 7517

இந்த ஹதீஸின் படி, இன்று நாம் தொழுகின்ற தொழுகைகள் ஒன்றுக்கு பத்து என்ற வீதக் கணக்கில் பின்னப்பட்டிருப்பதை நாம் காண  முடிகின்றது.

50 நேரத் தொழுகைகளை 5 நேரத் தொழுகைகளாக ஆக்குவதற்கு மூஸா நபியவர்கள் பெரிய காரணமாக அமைந்திருக்கின்றார்கள். அதனால் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் அவர்களது சந்திப்பைப் பற்றி சிலாகித்தும் சிறப்பித்தும் சொல்கின்றான்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்.

அல்குர்ஆன் 32:23

ஆஷூரா நோன்பு தொடர்பாகக் கூறும்போது, மூஸா நபிக்கு  நான் அதிகம் உரிமை படைத்தவன் என்று  நபி (ஸல்) அவர்கள் பொருத்தமாகவே குறிப்பிடுகின்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

நூல்: புகாரி 2004

ஒவ்வொரு வணக்கத்திற்கும் ஒன்றுக்குப் பத்து என்ற வீதத்தில் அல்லாஹ் நன்மைகளை வழங்குகின்றான். ஆனால் ஜமாஅத் தொழுகை போன்றதற்கு  27 நன்மைகளை வழங்குகின்றான். அதை பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 645

இப்படியே உயர்ந்து அது 700 மடங்கு வரை சென்று விடுகின்றது.

கொடுப்பது ஒன்று! கிடைப்பது எழுநூறு!

சில வணக்கத்திற்கு அல்லாஹ் 700 மடங்கு நன்மைகளை வழங்குகின்றான். அதில் தர்மம் இடம் பெறுகின்றது. எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:261

இதற்குப் பொருத்தமாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அழகாக இதை விவரிக்கின்றது.

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டுவந்து, “இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்’’ என்று கூறினார்கள்.

நூல் முஸ்லிம் 3845

நோன்புக்கும் அதே மாண்பு!

நாம் நோற்கின்ற நோன்பிற்குப் பத்து மடங்கு நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன.

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?)’’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை விட்டுவிடுவீராக! ஏனெனில், உம்முடைய உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப்படாமல் போகலாம். எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6134

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி)

நூல்: முஸ்லிம் 2815

அதாவது, ரமளானில் முப்பது நாட்கள் நோன்பு நோற்பதற்கு 300 நாட்களுக்கான நன்மையும், ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோற்றதற்கு 60 நாட்கள் நோற்ற நன்மையும் ஆக மொத்தம் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீஸ்கள் நோன்பிலும் ஒன்றுக்குப் பத்து வீதம் என்ற கணக்கில் நன்மைகள் வழங்கப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.

இறைச் சந்திப்பின் போது எல்லையற்ற நன்மைகள்

எல்லா வணக்கங்களுக்கும் வழங்கப்படுவது போன்று நோன்புக்கும் பொதுக் கோட்டா  அடிப்படையில் ஒன்றுக்கு பத்து என்ற வீதத்தில் கூலி வழங்கப்படுகின்றது என்பதை மேலே இடம்பெற்றிருக்கின்ற ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நோன்புக்குக் கணக்கு வழக்கில்லாத வகையில், எவ்வளவு என்று மதீப்பீடு செய்ய முடியாத விதத்தில் அல்லாஹ் எல்லையற்ற நன்மைகளையும் மறுமையில்  அவனைச் சந்திக்கும் போது வழங்கவிருக்கின்றான். அதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2119

ஒன்றுக்குப் பத்து என்ற இந்தக் கணக்கு  மறுமையிலும் தொடர்கின்றது. அதை இப்போது பின்வரும் ஹதீஸ் வாயிலாகப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்பான்.

அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார்.

அதற்கு அல்லாஹ் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். எனவே, அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார்.

அதற்கு அவன் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள். ஏனெனில், ‘உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று சொல்வான்.

அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னை நகைக்கிறாயா?’ என்று கேட்பார்.

(இதைக் கூறியபோது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்ததைப் பார்த்தேன்.

நூல்: புகாரி  6571

ஒன்றுக்குப் பத்து என்ற அருட்கொடை இம்மையுடன் நிற்கவில்லை. மறுமை வரை தொடர்கின்றது.

அல்குர்ஆன் அளிக்கின்ற இந்த அரிய பரிசுகளுக்கான நன்மைகளை ஆயுள் முடியும் வரை செய்து நாளை மறுமையில் நமது நன்மை தட்டுக்களை கனக்கச் செய்வோமாக!

———————————————————————————————–

கேள்வி பதில்

பெண்கள் மோதிரம் அணிந்து வெளியே செல்லலாமா?

கேள்வி :

பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளையல், கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா?

பதில்:

பெண்கள் தங்களது அலங்காரங்களை  கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

 திருக்குர்ஆன் 24:31

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும்.

ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.

என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவுபடுத்தவே, ‘வெளியே தெரிபவை தவிர’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவை கருதி ஆடை எனும் அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் இவ்வசனத்தின் மூலம் அனுமதிக்கின்றது.

அதுவல்லாத மேலதிக அலங்காரம் எதையும் பிற ஆண்களிடத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்பதே மேற்கண்ட வசனம் தெரிவிக்கும் கருத்தாகும்.

இதே வசனத்தின் பிற்பகுதி, பெண்கள் தங்களது அலங்காரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட ஆண்களைப் பட்டியலிட்டு விட்டு, இவர்களல்லாத வேறு எந்த ஆண்களிடத்திலும் அலங்காரத்தை வெளிப்படுத்தலாகாது எனக் கூறுகிறது.

தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

திருக்குர்ஆன் 24:31

இதே வசனத்தின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது.

 ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن

பெண்கள் தாங்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

திருக்குர்ஆன் 24:31

தாம் அணிந்திருக்கும் அலங்காரத்தை பிற ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கால்களால் அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் இதில் கூறுவதன் மூலம், வெளி அலங்காரம் எதுவும் அந்நிய ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்பதை தெளிவாக, திட்டவட்டமாக அல்லாஹ் உணர்த்தி விடுகிறான்.

அலங்காரம் என்றால் என்னவென்பதை அறிந்து கொள்வதும் இக்கேள்விக்கான பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்.

அலங்காரம் என்பது உடலில் அங்கமாக இல்லாத வெளிப்பொருட்களால் செய்யப்படும் எந்த ஒன்றையும் குறிக்கும் சொல்லாகும்.

அதாவது முகத்தில் குத்தப்படும் மூக்குத்தி, கையில் அணிந்துள்ள வளையல், காலில் அணிந்துள்ள கொலுசு, காப்பு போன்ற அனைத்தும் அலங்காரம் எனும் பட்டியலிலேயே வருகிறது.

கைவிரல்களில் அணியப்படும் மோதிரமும் அலங்காரமே ஆகும். எனவே அதை இதர ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது.

பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அந்நிய ஆண்களுக்குத் தெரியும் வகையில் மோதிரம் அணியலாம் என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.

سنن أبي داود

1565 – حَدَّثَنَا أَبُو كَامِلٍ وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ – الْمَعْنَى – أَنَّ خَالِدَ بْنَ الْحَارِثِ حَدَّثَهُمْ حَدَّثَنَا حُسَيْنٌ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِى يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا « أَتُعْطِينَ زَكَاةَ هَذَا யு. قَالَتْ لاَ. قَالَ « أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ யு. قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ.

ஒரு பெண்மணி ஏமன் நாட்டிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்மணியை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டீரா?’ எனக் கேட்க அதற்கவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார். உடனே நபியவர்கள் ‘நெருப்பினாலான இரு காப்புகளை அல்லாஹ் அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்குமா?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உரியதாகும்’ எனக் கூறினார்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஷூஐப் (ரலி)

நூல்: அபூதாவூத் 1565

ஒரு பெண்மணி கையில் காப்பு அணிந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே மோதிரம், வளையல் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்பது அவர்களின் வாதம்.

இது ஆதாரப்பூர்வமான செய்தி தான் என்றாலும் இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

பொதுவாக எந்த ஒரு நபிமொழியையும் குர்ஆனுக்கு இணக்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனின் கருத்தை உடைத்தெறியும் விதத்தில் நபிமொழிகளுக்குப் பொருள் கொள்வது ஏற்புடையதல்ல. குர்ஆனை விளக்கவே நபிகள் நாயகம் அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

அந்நியர்கள் முன்னிலையில் அலங்காரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் திருக்குர்ஆன் கூறும் அடிப்படை விதியாகும்.

இந்நிலையில் அபூதாவூதில் இடம்பெற்ற நபிமொழியை குர்ஆன் கூறும் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

மேற்படி நபிமொழியில் அவர்கள் ஆதாரமாகக் காட்டும் வாசகம்

‘ஒரு பெண்மணி ஏமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன’ என்பதாகும்

இந்த வார்த்தையிலிருந்து வளையல் அணிந்த அப்பெண்மணியின் மகள், விபரமறிந்த பெரிய பெண் என்று எடுத்துக் கொள்ளும் போது தான் இவர்கள் கொண்ட பொருள் வரும்.

அவருடன் வந்த மகள் பருவ வயதை அடைந்தவர் என்றால் மார்க்கச் சட்டத்தை அவரிடமே நபியவர்கள் கூறி இருப்பார்கள். அதாவது அந்த மகளை நோக்கி, இதன் ஜகாத்தைக் கொடுத்து விட்டாயா? என்று கேட்டிருப்பார்கள்.

மகளிடம் கேட்காமல் தாயிடம் இக்கேள்வியைக் கேட்டதிலிருந்து உடன் அழைத்து வரப்பட்ட மகள் பருவமடைந்த பெண் அல்ல என்பது உறுதியாகிறது. பருவமடையாத சிறுமிகளுக்கு அலங்காரத்தை வெளிப்படுத்துவது உள்ளிட்ட எந்தச் சட்டமும் இல்லை. அதனால் தான் அது பற்றி நபியவர்கள் பேசவில்லை.

சிறுமியின் நகை என்றாலும் அதற்கான ஜகாத் சிறுமியின் தாய், தந்தையருக்குத் தான் கடமை என்பதால் ஜகாத் பற்றி மட்டும் கேட்கிறார்கள்.

அந்நியர் முன் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டதில் வளையலும் அடங்கும்.

பெண்கள் அணியும் வளையல் உண்மையில் அந்நிய ஆண்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்ற அலங்காரம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

எனவே கையில் வளையலுடன் காட்சி அளித்தது பெண் அல்ல, சிறுமி என்று பொருள் கொண்டால் குர்ஆனுடன் மோதல் போக்கும் வராது. அந்நியர் முன் அலங்காரத்தை வெளிப்படுத்துவதாகவும் இது ஆகாது.

மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ் இதுதான்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும்,  மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 98

பெருநாள் தினத்தில் நபித்தோழியர்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் பிலால் (ரலி) முன்னிலையில் கழற்றிப் போட்டார்கள் என்றால் இத்தகைய அலங்காரத்தை அந்நிய ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தலாம் என்று தானே புரிய முடியும் என்றும் சிலர் வாதம் வைக்கின்றனர்.

பெருநாள் தினத்திலோ, மற்ற நாட்களிலோ மோதிரம், வளையல் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை. அன்னிய ஆண்களுக்கு அந்த அலங்காரத்தை வெளிப்படுத்துவது தான் தடுக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தினத்தில் குழுமிய பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் மாத்திரம் இருக்கும் இடத்தில் தான் இருந்தனர். அந்த இடத்தில் ஆண்களுக்கு வேலை இல்லை என்பதால் அவர்கள் மோதிரம் அணிந்திருந்தது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல.

அன்னிய ஆணாகிய பிலாலுக்கு அலங்காரத்தைக் காட்டினார்களா என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னும் சில அறிவிப்புக்களில் மோதிரம் மட்டுமின்றி மெட்டி, காதணி, கழுத்தணிகளை போன்றவற்றையும் கழற்றிப் போட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் காட்டி அன்னிய ஆண்களுக்கு வெளிப்படுத்திக் காட்டும் வகையில் கழுத்தணிகளை அணியலாம் என்று இவர்கள் வாதிட மாட்டார்கள்.

கழுத்தணியை கழற்றிப் போட்டார்கள் என்றால், பிலால் வரும் போது கழுத்தில் ஆபரணம் இருப்பதைக் காட்டாத வகையில் ஆடையால் மறைத்து கழுத்தணியைக் கழற்றிப் போட்டார்கள் என்று தான் விளக்கம் கொடுப்பார்கள். இது போல் தான் மோதிரம் பற்றிய ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது பெண்கள் மட்டும் உள்ள சபை என்பதால் அவர்கள் மோதிரம் அணிந்திருப்பார்கள். பிலால் என்ற அந்நியர் வந்ததும் விரல்களில் உள்ள அலங்காரத்தை மறைத்து அதைக் கழற்றியும் போட்டு இருப்பார்கள். இப்படி புரிந்து கொள்வது தான் குர்ஆனுக்கு நெருக்கமானது. கழுத்தணியையும் மோதிரத்தையும் முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ள ஏற்றது.

———————————————————————————————–

சொர்க்கத்திற்குத் தவழ்ந்து செல்லும் நபித்தோழர்?

எம்.ஐ. சுலைமான்

مسند أحمد موافقا لثلاث طبعات – (6 / 115)

23698- حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَسَّانَ ، قَالَ : أَخْبَرَنَا عُمَارَةُ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : بَيْنَمَا عَائِشَةُ فِي بَيْتِهَا إِذْ سَمِعَتْ صَوْتًا فِي الْمَدِينَةِ ، فَقَالَتْ : مَا هَذَا ؟ قَالُوا : عِيرٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَدِمَتْ مِنَ الشَّامِ تَحْمِلُ مِنْ كُلِّ شَيْءٍ ، قَالَ : فَكَانَتْ سَبْعَ مِئَةِ بَعِيرٍ ، قَالَ : فَارْتَجَّتِ الْمَدِينَةُ مِنَ الصَّوْتِ ، فَقَالَتْ عَائِشَةُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : قَدْ رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَدْخُلُ الْجَنَّةَ حَبْوًا ، فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ، فَقَالَ : إِنْ اسْتَطَعْتُ لأَدْخُلَنَّهَا قَائِمًا ، فَجَعَلَهَا بِأَقْتَابِهَا ، وَأَحْمَالِهَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ.

நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த போது மதீனாவில் (பெரும்) சப்தத்தைக் கேட்டோம். ‘இது என்ன சப்தம்?’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘இது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் ஒட்டங்களின் சப்தம், அனைத்து விதமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு (அப்போது) எழுநூறு ஒட்டகங்கள் இருந்தன. அவற்றின் சப்தத்தால் மதீனா அதிர்ந்தது.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களை சொர்க்கத்தில் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, ‘நான் நின்றவாறு சொர்க்கத்தில் செல்வேன்’ என்று சொல்லிவிட்டு ஒட்டகச் சேணங்களையும் அவை சுமந்து வந்த பொருட்களையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் (23698), பஸ்ஸார் (6899), தப்ரானீ-கபீர் (267,5269)

பெரும் பணக்காரர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், அவரது செல்வத்தின் காரணத்தால் மறுமையில் தவழ்ந்து சொர்க்கம் செல்லும் நிலை ஏற்படும் என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையில் குறையுள்ளது.

இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் உமாரா பின் ஸாதான் என்பவர் பலவீனமானவராவார்.

ميزان الاعتدال – (3 / 176)

قال البخاري: ربما يضطرب في حديثه.

சில நேரங்களில் இவர் குளறுபடியாக அறிவிப்பார் என்று புகாரி குறிப்பிடுகிறார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أحمد: له مناكير.

இவரிடம் மறுக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أبو حاتم: يكتب حديثه ولا يحتج به.

இவரது செய்திகளைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال الدارقطني: ضعيف.

இவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أبو داود: ليس بذاك.

இவர் வலிமையானவர் இல்லை என்று அபூதாவுத் குறிப்பிடுகிறார்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

எனவே இந்தச் செய்தி பலவீனமானதாக உள்ளது.

சொர்க்கத்தில் ஏழைகளுக்குப் பிறகே செல்வந்தவர்கள் செல்வார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன. தவழ்ந்து செல்வார்கள் என்பதற்குத்தான் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வந்தர்களை விட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்’

நூல்:  முஸ்லிம் 5699

———————————————————————————————–

வருமுன் காப்போம்

ஆஃப்ரின் சிதிரா

இஸ்லாம் மார்க்கம் இதர மதங்களின் கொள்கைகளை விட்டும், நம்பிக்கைகளை விட்டும் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது.

கற்சிலைகளையும், கால்நடைகளையும், கண்ணில் கண்டவைகளையும் கடவுளாக நம்பி வழிபட்டு வரும் மதத்தினருக்கு மத்தியில், கண்ணால் காணாமலேயே இவ்வுலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் மட்டுமே, அவன் தான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் என்று நம்பி வாழ்ந்து வருபவர்கள் தான் முஸ்லிம்கள்.

நமது செயல்களுக்கான கூலி மறுமையில் கிடைக்கும் என்ற மறைவான விஷயங்களை நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லிம்களில் சிலர், இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, இறைத்தூதர் காட்டிய தூய வழிமுறைகளுக்கு மாற்றமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கான காரணம் என்னவெனில், இவ்வுலகமும் அதன் மீது கொண்ட மோகமும் தான். இவ்வுலக வாழ்க்கை நம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதனால், இந்த வாழ்க்கையை விட்டும் துண்டிக்கின்ற மரணத்தையும், அதற்குப் பின்னுள்ள நிலையான வாழ்வையும் பல நேரங்களில் நாம் மறந்து விடுகின்றோம். நமது பார்வையில் மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் இவ்வுலகத்தைப் பற்றிய நமது மார்க்கத்தின் மதிப்பீடு இதோ:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) “ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக் கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்ப மாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 5664

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 6:32

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீது ஆணை! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த விரலை, –அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)

அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5490

மாய உலகில் மனிதனின் தேடல்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கை என்பது காணாமல் போகும் கானல் நீரும், போதை தரக்கடிய மாயை நிறைந்ததும் தான். இந்த உண்மையை உணராத மக்கள் தமது இந்த வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும், சுகபோகமாக வாழ வேண்டும் என்பதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

தமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செய்யக் கூடாத காரியங்களையும் செய்யத் துணிகின்றனர். நாளை, நாளை என்று நாளைய வாழ்வுக்காக  சிறுகச் சிறுக பொருளை சேகரித்துக் கொள்கின்றனர். இவ்வளவு ஏன்? இன்றைய  பொழுது நிறைவுறுவதற்கு முன்பே நாளைய வாழ்விற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு நாளைய வாழ்விற்காக ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன், பொருள் திரட்ட வேண்டும் என்ற ஆவலிலும், தேடலிலும் பிறரது பொருட்களை முறையின்றி அபகரிப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது, வட்டி வாங்குவது, சக மனிதர்களின் மானத்தோடு விளையாடுவது, அநீதியிழைப்பது என எண்ணில்லா அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றான்.

இறைவன் அனுமதிக்காத பல காரியங்களைச் செய்பவனாகவும், இறைவன் கட்டளையிட்ட தர்மங்களை வழங்காமல் பதுக்கி  வைத்துக் கொள்பவனாகவும், இணைத்து வாழ வேண்டும் என்று வலியுறுத்திய உறவுகளைப் பகைத்து வாழ்பவனாகவும் இருக்கிறான். அதனால் தான் இஸ்லாம் கூறக்கூடிய சகோதரத்துவத்தை முஸ்லிம்களிடையே இன்று முழுமையான அளவில் காண முடிவதில்லை.

உயிர் வாழ்கின்ற வரை நம்மால் இயன்ற பொருளாதாரத்தைத் திரட்டி சேகரித்து விட வேண்டும் என்ற ஆவலில் நாம் ஒன்றை மட்டும் மறந்து விடுகின்றோம். ஆம்! அதுதான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்ற மரணம். அத்தகைய மரணம் நம்மை எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம். அது நமக்கென குறித்த நேரத்தில் வந்து நம்மை அழைத்துச் செல்லும். அதிலிருந்து முந்தவோ, பிந்தவோ முடியாது. நமது நிழலை விடச் சமீபமாக இருக்கின்ற மரணத்தைப் பற்றி படைப்பாளன் கூறுவதைக் கேளுங்கள்.

நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

திருக்குர்ஆன் 4:78

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

காணாமல் போகும் சொத்தும் சொந்தமும்

மன இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு அழிச்சாட்டியத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதனிடம் மரணம் வந்து விட்டால் அவன் எதையெல்லாம் நிலையானது, நிரந்தரமானது என்று எண்ணிக் கொண்டிருந்தானோ அவை அனைத்தும் உயிர் பிரியும் போதே அவனை விட்டும் காணாமல் போய்விடும்.

இன்னும் சொல்வதென்றால் நாம் சேகரித்த செல்வம் எதுவும் நமக்குச் சொந்தமானதில்லை என்று நபிகளார் கூறுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), ‘எனது செல்வம்; எனது செல்வம்’ என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 5665

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றன.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5667

பின்தொடர்ந்து வரும் பாவச் செயல்கள்

இவ்வுலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அறுந்து விட்டது என்றால் அவனது செல்வமும் சொந்த பந்தமும் அவனை விட்டு நின்று விடும். ஆனால் வாழும் போது அவன் செய்த அமல்கள் அவனது மரணத்திற்குப் பின்னரும் தொடரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான தர்மம் 2. பயன்தரும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 3358

மனிதன் தன் வாழ்வில் செய்த நல் அமல்கள் மரணத்திற்குப் பின் அவனைத் தொடர்வது போன்றே, சக மனிதர்களுக்கு அவன் செய்த தீவினைகளும் மறுமையில் அவனுக்கெதிராக வந்து நிற்கும். இறைவனின் விசாரணையின் போது மனிதனின் தீமைகள் மிகைத்து விட்டது என்றால் அவனது நன்மைகள் அனைத்தும் அழிந்து விடும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 2449

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி 1496

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 5034

கைகொடுக்கும் நல்லறங்கள்

மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள்.

அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 75:13-15

இத்தகைய பயங்கரமான நாளில் நமக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுவது நாம் செய்த நல் அமல்கள் மட்டுமே!

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.

திருக்குர்ஆன் 18:46

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1777

இறைவனின் எச்சரிக்கை

இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

அல்குர்ஆன் 31:33

நிலையானது என்று எண்ணி நாம் வாழ்ந்து வரும் இவ்வாழ்க்கை கவர்ச்சி நிறைந்ததும் ஏமாற்றமானதுமே என்றும், அதைக் கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கின்றான். இதை உணராமல் நிலையில்லா உலகில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளும் நாம் நிலையான வாழ்வில் வெற்றி பெற என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்?

இவ்வுலகில் சுகமாய் வாழ்வதற்காக செல்வங்களைச் சேமித்து வைத்திருக்கும் நாம் மறுமையில் சுகமாய் வாழ்வதற்கு எதனைச் சேமித்துள்ளோம்? பகைமையும் பாவச் சுமைகளுமே மேலோங்கி நிற்கின்றது.

ஓர் ஊருக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலே ஒரு வாரத்துக்கு முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோம். ஆனால் மறுமைப் பயணத்திற்காக நாம் திரட்டி வைத்திருப்பது என்ன? என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்.

மரணம் தானே! அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம், எனது குழிக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றெல்லாம் நக்கலாகப் பேசிக் கொண்டு, அசட்டையாக நமது வாழ்வைக் கழிக்கிறோம்.

இறைவனிடம் நமது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புத் தேடாமலும் மனம் வருந்தாமலும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மரணம் ஒரு நிமிடத்தில் நம்மை வந்தடையலாம். மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனங்கள் இதை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நேற்று வரை நம்முடன் உறவாடியவர்கள் இன்று இல்லை. இன்று காலை ஓடி ஆடித் திரிந்தவர் மாலையில் உயிர்த் துடிப்பின்றி ஓய்ந்து விடுகின்றார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் மட்டுமே மரணம் வரும் என்பதில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்காத பச்சிளம் குழந்தைகளையும் மரணம் விட்டு வைப்பதில்லை. நமக்குரிய கெடு வந்து விட்டால் நம்மால் தப்பித்து விடமுடியாது.

நம்மைச் சுற்றிலும் கேட்கக் கூடிய மரணச் செய்திகள் வெறும் செய்திகள் மட்டும் அல்ல! நம்மை எச்சரிக்கை செய்யக்கூடிய அபாய ஒலி! அத்தகைய மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்பாக நாம் செய்த பாவச் செயல்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதும், நன்மையை சேகரிப்பதும் அவசியமானதாகும்.

ஏனெனில் மரணம் என்பது முடிவல்ல! மற்றொரு வாழ்வின் துவக்கம். இன்னும் சொல்வதென்றால் மறு உலக வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஒரு நுழைவுச் சீட்டு தான் மரணம்.

வாழும்போது மார்க்கத்திற்கு முரணாக வாழ்ந்து விட்டு, மரணம் வந்த பிறகு இறைவன் நமக்களித்த வாய்ப்பையும் வாழ்வையும் நினைத்து வருந்துவதை விட, உடலில் உயிர் இருக்கும் போதே நம்மைப் படைத்தவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, அவனுக்கு அநீதி இழைக்காமலும், சக மனிதர்களுக்கு அநீதி இழைக்காமலும் இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!

———————————————————————————————–

தீமைக்குத் துணைபோகாதீர்!

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.

இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கேற்ப, மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள நற்செயல்களை நாம் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டும். மேலும், அவற்றைச் செய்வதற்கு மற்ற மக்களையும் தூண்ட வேண்டும்.

அதுபோன்று, மார்க்கம் எச்சரித்துள்ள தீமையான விஷயங்களை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுடன் பிறரையும் அவற்றில் விழுந்து விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்; அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:71

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

திருக்குர்ஆன் 3:114

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 3:104

சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம், அதன் நலனை நாடும் வகையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். இது குறித்து குர்ஆன் ஹதீஸில் நிறைய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், மற்றவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று பலர் சுயநலமாக இருக்கிறார்கள். தமது வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பொதுநலத்தோடு அழைப்புப் பணியை மேற்கொள்ளும் சகோதரர்களிலும் கூட பலர், மார்க்கம் கண்டிக்கும் தீமையைத் தடுப்பதற்குத் தயங்குவதைப் பார்க்கிறோம்.

சிலர் அதற்கும் மேலாக, பிறர் செய்யும் தீமையான செயல்களுக்கு உதவி செய்யவும் தயாராக இருக்கிறார்கள். துணிந்து தீமை செய்வோருடன் கரம் கோர்க்கிறார்கள். தீமையைத் தடுக்காமல் இருப்பதை விடவும் அதற்கு ஒத்துழைப்பு தருவது பெரும் குற்றம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5:2

தீமைகளை ஆமோதிக்கும் பண்பு ஒரு போதும் முஃமின்களிடம் இருக்கக் கூடாது. இது வழிகெட்டவர்களின் பண்பாகும். இதனை யூதர்களிடம் இருந்த கெட்ட குணங்களில் ஒன்றாகத் திருமறை கூறுகிறது. ஆகவே அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் இத்தன்மையை விட்டு நாம் என்றும் விலகி இருக்க வேண்டும்.

பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

திருக்குர்ஆன் 2:85

மனிதர்களிடம் நல்ல செயல்களும் இருக்கும்; கெட்ட செயல்களும் இருக்கும். ஆனால் அதன் அளவும் விதமும் ஆட்களுக்கு ஆள் வேறுபடும்.

ஒருவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை மட்டும் கவனத்தில் கொண்டு அவர் செய்யும் தீமையான காரியங்களுக்கு ஆதரவு அளித்துவிடக் கூடாது. அவர்கள் சாமானியர்களாக இருப்பினும் சரி; செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பினும் சரியே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று கூறினார்கள். மக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)

நூல்: முஸ்லிம் (3775)

மக்களுக்கு நல்லது செய்யப் போகிறோம் என்று அரசியல் களத்தில் குதித்து கையெடுத்துக் கும்பிடுவது, காலில் விழுவது, கொடிக்கு மரியாதை அளிப்பது, எழுந்து நிற்பது, மாலை போடுவது என்று பலவகையான தடுக்கப்பட்ட காரியங்களுக்கு மௌன சாட்சிகளாக இருப்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்.

எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நியாயம் யார் பக்கம் இருக்கிறது; அநியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நியாயத்தின் பக்கம் குரல் கொடுக்க வேண்டுமென மார்க்கம் வழிகாட்டுகிறது.

அதை விடுத்து, தமது கொள்கை அல்லது ஊர் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவரிடம் இருக்கும் கெட்ட செயல்பாடுகளை ஒருபோதும் ஆதரித்து விடக்கூடாது.

இன ரீதியான சிந்தனைகளுக்கு அடிமையாகி தவறான காரியங்களுக்கு கண்மூடித்தனமாக வக்காலத்து வாங்குவதை நபியவர்கள் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.

மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 3770

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே. அவ்வகையில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் எந்த அமலையும் செய்ய வேண்டும். அதன்படி செய்யப்படுகிற காரியங்களுக்கு மட்டுமே நாம் உதவி செய்ய வேண்டும்.

நபி (ஸல்)  அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள்.  அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர்.  அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்)  அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள்.  “நாம் சந்திக்கும் வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்!’’ என்று நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.  கடலோரமாகச் சென்று திரும்பிய போது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டினர்;  நான் மட்டும் இஹ்ராம் கட்டவில்லை.  இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.  நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன்.  அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். 

நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக் கொண்டனர்.  எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்)  அவர்களிடம் சென்றோம்.  என் தோழர்கள் நபி (ஸல்)  அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்:  அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை;  அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்:  அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார்.  ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்:  “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்:  பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!’’ என்று கூறினார்கள். 

அப்போது நபி (ஸல்)  அவர்கள், “உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’’ என்று கேட்டார்கள்.  நபித் தோழர்கள் “இல்லை!’’ என்றனர்.  “அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’’ என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புகாரி 1821, 1824

ஹஜ்ஜு அல்லது உம்ராவுக்குச் செல்பவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது வேட்டையாடுவது கூடாது. அவர்கள் வேட்டையாடுவது எப்படி குற்றமோ அது போன்று வேட்டையாடுவதற்கு உதவுவதும் குற்றம் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் விளங்க முடிகிறது.

மார்க்க வரம்புகளை நாம் மீறாவிட்டாலும் அவ்வாறு மீறுபவர்களுக்கு உதவி செய்வதும் தவறு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே, ஷிர்க் மற்றும் பித்அத்தான செயல்களைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குக் கடுகளவும் உதவி செய்யாமலும் இருக்க வேண்டும்.

பொருளாதாரம் அளிப்பது, ஆலோசனை வழங்குவது, உடல் உழைப்பு கொடுப்பது மட்டுமல்ல! தீமையான காரியம் நடைபெறும் இடத்திற்கே செல்லக் கூடாது. ஏனெனில், ஒரு வகையில் ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உதவுவதாகவே இருக்கிறது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!

திருக்குர்ஆன் 6:68

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 78

தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யாமல் இருப்பதைப் போல அவை நடைபெறும் இடங்களுக்குப் போகாமல் இருக்கும் போதுதான் நம்முடைய இறைநம்பிக்கை முழுமை பெறும்; உறுதி பெறும்.

எனவே, வெறுமனே தலைமட்டும் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான இடங்களுக்குச் சென்றுவிடக் கூடாது. குறிப்பாக, வரதட்சனை, பெண் வீட்டு விருந்து போன்றவை இடம்பெறும் திருமணங்களில் பங்கெடுப்பவர்கள் ஒரு கணம் யோசிப்பார்களா?

ஏனெனில், எவரேனும் நற்செயல் புரிவதற்கு நம்மால் முடிந்த வகையில் உதவினால் அச்செயல் மூலம் அல்லாஹ்விடம் அவருக்கு கிடைப்பது போன்று நன்மைகள் நமக்கும் கிடைக்கும். இதேபோன்று தான், தீமை செய்வதற்கு உதவினால் செய்பவருக்கு கிடைப்பது போன்ற தண்டனை உதவுபவருக்கும் கிடைக்கும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் வாயிலாக அறியலாம்.

நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி 2101

உலகில் வாழும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்; எதற்காகவும் பகைத்துக் கொள்ளக் கூடாதென அவர்கள் செய்யும் பாவமான காரியங்களுக்கு ஒத்தாசை அளித்துவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அவர்களோடு சேர்ந்து நாமும் குற்றவாளிகளாகத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!

திருக்குர்ஆன் 37:23

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம் 1848

பொதுவாக எந்தவொரு தீமையாக இருந்தாலும் முஃமின்கள் உடந்தையாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, சில தீமைகளைக் குறிப்பிட்டுக் கூறி அதற்கு உதவி செய்பவர்களையும் நபியவர்கள்  கண்டித்து இருக்கிறார்கள். அந்த விஷயங்களில் நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)’’ என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத்  துன்பம் தருவதும் (தான் அவை)’’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப்பெரும் பாவம்) தான்’’ என்று கூறினார்கள். ‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 2654

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3258

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபச்சாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)

நூல்: புகாரி 5347

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு மாஜா 3371

குடும்பத்தார், உறவினர், அண்டைவீட்டார், நண்பர்கள் என்று எவராக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதற்கு மார்க்கம் அனுமதி அளிக்கிறது; வலியுறுத்துகிறது.

அதேசமயம் அவர்கள் செய்யும் தீமையான காரியங்கள் சிறியதாயினும் பெரியதாயினும் அவற்றுக்கு எந்த வகையிலும் துணைபோய் விடக் கூடாதென கண்டிக்கிறது.

இதைப் புரிந்து, பிறர் செய்யும் நன்மையில் பங்கெடுத்து, தீமையில் விலகி இருந்து ஈருலகிலும் வெற்றி பெறும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக.

———————————————————————————————–

குழந்தைக்குத் தாய்ப்பால்! குர்ஆனை உறுதிப்படுத்தும் நாட்டு நடப்புகள்

தாய்ப்பால் தொடர்பாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ளதைப் போல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது.

இவர்களால் உலகப் பொதுமறை என்று மெச்சப்படுகின்ற திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலைப் பேசுகின்றது. ஆனால் அது தாய்ப்பாலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதமோ தாய்ப்பாலைப் பற்றிப் பேசுகின்றது.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் ர2:233

ஐக்கிய அரபு நாடுகள் என்று கோர்ட் கூறியிருந்தாலும் அது உண்மையில் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் கூறுகின்ற தாய்ப்பால் சட்டமாகும். ஐக்கிய அரபு நாடுகள் குர்ஆன் காட்டும் பாதையை விட்டும் விலகிப் போனாலும் அந்நாடுகளில் அல்குர்ஆனின் மிச்ச சொச்ச சட்டங்கள் இன்னும் இருக்கின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

நோய் தீர்க்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் கொடு‌க்கு‌ம் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல! தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு மார்பகப் புற்றுநோய் வருவதையு‌ம் தடுக்கும்.

குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் கொடுத்தால் அந்தத் தாய்க்கு, பிரசவத்திற்குப் பிறகு வெளியேறும் ரத்தப்போக்கு குறையும். குழந்தைக்கு மன அமைதி ஏற்படும். ஒவ்வாமை ஏற்படாது எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறுகின்றனர்.

இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடியே 50 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் ஒரு வயது நிறைவடையும் முன்பே 17 லட்சம் குழந்தைகள் இறந்துவிடுகின்றன. 5 வயதிற்குள் 22 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். குழந்தை இறப்பைத் தடுக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைக்கு இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தாய்ப்பால் வரப்பிரசாதம் ஆகும். குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் குடிக்க வைக்க வேண்டும். உடனே கிடைக்கும் தாய்ப்பால் மிகச்சிறந்தது. அதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகத்தில் 4000 பாலூட்டி இனங்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகின்றது. அந்தப் பாலூட்டி இனங்கள் அனைத்தும் தமக்குப் பிறந்த குட்டிகளுக்கு செயற்கைப் பால் புகட்டுவது கிடையாது. இயற்கையான தாய்ப்பாலைத் தான் புகட்டுகின்றன.

பசு தன் கன்றுக்கும், குதிரை, கழுதை, ஆடு போன்றவை தமது குட்டிகளுக்கும் பாலூட்டுவதை நாம் பார்க்க முடிகின்றது.

ஆனால் பாலூட்டி இனத்தில் உள்ள மனித இனம் தான் இந்த இயற்கை அருட்கொடைக்கு எதிராகச் செயல்படுகின்றது.

இதனால், தாய் தன்னுடைய உடலையும் கெடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற பிள்ளையின் உடல் நலத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறாள்.

ஒரு தாய் தனக்குச் சுரக்கும் பாலில் என்ன அடங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தால் அதைக் குழந்தைக்குக் கொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டாள்; தவிர்க்க மாட்டாள்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய் முதன் முதலில் கொடுக்க வேண்டியது தாய்ப்பால் தான். வேறெதையும் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. வீட்டிலுள்ள வயதான பெண்மணிகள், நாட்டு மருந்து என்ற பெயரில் பிறந்த குழந்தைக்கு எதையேனும் புகட்டி விடுகின்றனர். இது மாபெரும் தவறாகும். முதன் முதலில் தாய்ப்பாலைத் தவிர வேறெதையும் கொடுக்கவே கூடாது.

குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் சுரக்கும் அந்தத் தாய்ப்பால் வெறும் ஆகாரம் மட்டுமல்ல! அந்தக் குழந்தை வளர்ந்து, வாலிபமாகி, வயோதிகமடையும் வரை, ஆயுட்காலம் வரை காக்கும் அவ்டதம் (மருந்து) ஆகும்.

முதலில் சுரந்து வரும் பாலுக்கு சீம்பால் (Colostrum) என்று குறிப்பிடுவர். இதன் ஒவ்வொரு சொட்டும் நோய் எதிர்ப்பு மருந்தாகும். அதனால் இந்த சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறிவிடக் கூடாது. இந்தச் சீம்பால் சுவாசம், குடல் சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியிருப்பது மட்டுமல்லாமல், அனைத்து நோய் எதிர்ப்பு சக்தி உயிரணுக்களும் இதில் அடங்கியிருக்கின்றன.

இந்தத் தாய்ப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட கலவையைக் கொண்டிருக்கின்றது. செயற்கைப் பால் ஒருபோதும் இந்தக் கலவைகளைப் பெற முடியவே முடியாது.

Lactoferrin  என்ற ஒரு சேர்மானம் தாய்ப்பாலில் உள்ளது. இது, கிருமி நாசினிகள், காளான் நாசினிகள் போன்ற எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பல்முனை புரதச் சத்துக்களைக் கொண்டதாகும்.

மேலும் தாய்ப்பாலில் அடங்கியுள்ள Aminoacid, Cystine, Methionine, Taurine ஆகியவை மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதவை.

மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் தாய்ப்பால் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்வதற்காக, அறிவுத்திறன் அளவெண் சோதனை நடத்துவார்கள். இதில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் 8 புள்ளிகள் குறைவாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அத்தனைக்கும் மூலாதாரமாக அமைவது தாய்ப்பால் தான்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு புரதச் சத்து, கனிமச் சத்து, துரித வளர்ச்சி, புத்திக் கூர்மை ஆகிய நன்மைகள் கிடைப்பதுடன், கேன்ஸர், ஆஸ்துமா, சுவாசம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், காது புண், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் இல்லை. அதாவது நோய்கள் தாக்கும் சாத்தியங்கள் குறைவு.

இது தவிர தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதனால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 • பிரசவத்தின் போது விரிந்த கருப்பை தாய்ப்பால் கொடுப்பதால் சுருங்குகிறது.
 • பால் கொடுக்கும் தாய்க்கு 200 முதல் 500 வரை கலோரி வெளியேறுகிறது. சாதாரணமாக இந்தக் கலோரியை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும்.
 • வாழ்க்கையில் 6 மாத காலம் தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருவதில்லை.
 • பால் கொடுக்கும் காலத்தில் மாதவிலக்கு தள்ளிப் போகிறது.
 • எல்லாவற்றுக்கும் மேலாக தாய், பிள்ளையின் பாசப் பிணைப்பு! தாய், தன் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் கட்டம் உண்மையில் உலகில் ஓர் உன்னத நிலையாகும்.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அதனால் தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை இத்துடன் நிறுத்திக் கொண்டு, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பார்ப்பபோம்.

தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் தீமைகள்

 • குழந்தைக்குப் பால் கொடுக்காத தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
 • பால் கொடுக்காவிட்டால் உதிரப் போக்கு அதிகமாகி உடலிலிருந்து இரும்புச் சத்து அதிகம் வெளியேறும்.
 • தாயின் உடல் எடை அதிகரித்தல்.
 • செயற்கைப் பால் கொடுக்கும் புட்டியிலும், ரப்பரிலும் கிருமிகள் சேர்வதால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுதல்.
 • தாய்ப்பால் கொடுப்பதற்கென எந்தத் தயாரிப்பும் தேவையில்லை. ஆனால் பயணத்தில் இருக்கும் போது செயற்கைப் பால் தயாரிக்க முடியாததால் குழந்தைக்கு ஏற்படும் வேதனை.

இது போன்ற எண்ணற்ற தீமைகள் உள்ளன. எனவே ஒரு தாய் தனது நலத்தையும், தான் உயிரையே வைத்திருக்கும் குழந்தையின் நலத்தையும் கவனித்துக் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் நோய் நிவாரணமாக  மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக அமைகின்றது. அதைக் கடந்த வருடம், ஆகஸ்ட் மாதம், தாய்ப்பால் வாரத்தில் தமிழ் இந்து நாளேடு வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வு இதோ:

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பற்றாக்குறையான தாய்ப்பாலைக் கொடுத்தால், அது இந்தியப் பொருளாதாரத்தை 14 பில்லியன் (1400 கோடி) டாலர்கள் குறைக்கக் கூடும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:

 • இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் தாய்ப்பால் பற்றாக்குறையால் இறக்கின்றனர். இதனால் 14 பில்லியன் டாலர்கள் அளவில் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
 • சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்ஸிகோ மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டும் போதுமான அளவு தாய்ப்பால் அளிக்காததால், ஒவ்வோர் ஆண்டும் 2,36,000 குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.
 • இந்த நாடுகளில் கணக்கிடப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்கால இறப்பு விகிதம் மற்றும் இழப்புகளின் அளவு சுமார் 119 பில்லியன் டாலர்களாக இருக்கும்.
 • தாய்ப்பாலே குழந்தையின் முதல் தடுப்பூசி. அதுவே குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றும்.
 • ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 194 நாடுகளில், உலகத்தில் உள்ள ஒரு நாடுகூட தாய்ப்பால் கொடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பிறந்த 6 மாதம் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் குழந்தைகள் 40% மட்டுமே! 23 நாடுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.
 • குழந்தைகளுக்கு 6 மாதம் முழுமையான தாய்ப்பால் அளிக்க ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஆண்டுக்கு 7 டாலர்கள் செலவழித்தால் போதும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 5,20,000 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும். இதனால் மருத்துவச் செலவுகள் குறைந்து, 10 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் டாலர்களை உருவாக்க முடியும்.
 • தாய்ப்பால் அளிப்பது என்பது மிகவும் உபயோகரமான முதலீட்டு வழி. இதன்மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தையும், பொருளா தாரத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
 • உலகளாவிய அளவில், தாய்ப்பால் அளிக்கக் கோரும் விழிப்புணர்வுக்கான முதலீடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் ஆண்டுதோறும் சுமார் 250 மில்லியன் டாலர்களை மட்டுமே அதற்காக செலவழிக்கின்றன.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித இனம் இந்த இயற்கைச் செயலை மீறும் என்று மனித இயல்பைத் தெரிந்த எல்லாம் வல்ல இறைவன், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தனது திருமறை மூலம் உத்தரவிடுகின்றான்.

உலகத்தில் எந்தச் சித்தாந்தமும், மதமும் காட்டாத வழிமுறையை மக்களுக்குத் திருக்குர்ஆன் காட்டுகிறது.

எவ்வளவு காலம் பால் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த இயற்கை வேதம் தெளிவுபடுத்தி விடுகின்றது. தாய்ப்பால் கொடுக்க முடியாத அன்னையருக்கு ஒரு மாற்று வழியையும் இந்தத் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்றது. அது தான் செவிலியர் முறை!

மனிதனுக்கு மனிதப் பால் தான் கொடுக்க வேண்டும். அதற்கு மாட்டுப் பாலோ அல்லது மாவுப் பாலோ மாற்றுப் பரிகாரமாகாது.

மாட்டுப் பால், கன்றுக் குட்டியின் கனமான குடலுக்குத் தான் பொருத்தம். மாவுப் பால் இரசாயனக் கலவைகளின் சங்கமம். இதை உட்கொண்ட எந்தக் குழந்தையும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு ஆட்படாமல் இருந்ததில்லை.

அதனால் மனிதனைப் படைத்த அந்த இறைவன் செவிலித் தாய் முறையை செயல்படுத்தச் சொல்கிறான். இன்று தாய்மார்கள், அல்லாஹ் கூறும் இந்த அரிய அறிவுரையைச் செயல்படுத்த முன்வருதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்திலுள்ள தாய்மார்கள் அல்லாஹ் கூறும் இந்த வழிமுறையைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

பால் சுரக்கும் பெண்கள் இதை ஒரு தொழிலாகச் செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு வருவாயைத் தேடிக் கொள்வதுடன், குழந்தைகளின் நலத்தையும் பாதுகாத்து நன்மைகளைப் பெறலாம்.

இந்த குர்ஆன் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துகையில், ‘மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்’ (2:185) என்று கூறுகின்றது.

அது போல் திருக்குர்ஆன் மனித குலத்தின் ஒரு வாழ்வியல் வழிக்காட்டியாக அன்றிலிருந்து இன்று வரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது.

———————————————————————————————–

குடும்பவியல் தொடர்  – 44

அனுமதிக்கப்பட்ட பொய்கள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது.

வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள். அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள்.

நூல்: புகாரி 1119, 1162

எனவே மனைவியோடு பேசுவதற்காகவும் கேலி கிண்டல் செய்வதற்கும் கணவன்மார்கள் நேரம் ஒதுக்க வேண்டும். கலகலப்பாக இருக்க வேண்டும். அவர்களது சிறுபிள்ளைத் தனங்களை ரசித்து, அதற்கு முட்டுக் கட்டை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது விளையாட்டுத் தனங்களை ஊக்குவிக்கும் விதத்தில் கணவன்மார்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் மார்க்கத்திற்கு எதிராக நன்மையைப் பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டும் நாம் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றபடி அவர்களது உரிமைகளுக்கும் ஆசைகளுக்கும் குறுக்கே நிற்கக்கூடாது.

அதேபோன்று திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்குச் செல்ல பெண்கள் மிகவும் ஆசைப்படுபவர்களாகவே இருப்பார்கள்.

நபியவர்கள் காலத்திலும் ஸஹாபியப் பெண்கள், திருமண வீடுகளுக்குப் போய்வருகிற வழக்கம் இருந்தது. இதை நபியவர்கள் தடுக்கவில்லை.

ஏனெனில் திருமணம் என்றால், இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலை கிடையாது. எல்லா திருமணமும் நபிவழியில் தான் நடந்திருக்கும். அதாவது வரதட்சணை வாங்கியிருக்க மாட்டார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான பித்அத்துக்கள் இருந்திருக்காது. அன்றைய திருமணத்தின் எல்லா வழிமுறையும் நபிவழியில் சுன்னத்தான முறையில்தான் இருக்கும்.

ஆனால் நம் சமூகத்தைப் பொறுத்தளவில், நாம் பார்த்துப் பார்த்து ஆய்வு செய்துவிட்டுத்தான் கலந்து கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. எந்தக் கல்யாணம் நபிவழியில் சுன்னத்தை மீறாமல், கலந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறதோ அதுபோன்ற கல்யாணத்திற்கு இன்றும் போகலாம்.

(அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள்  பார்த்தார்கள்.- அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இதை எனக்கு அறிவித்தவர் “ஒரு மண விழாவிலிருந்து வருவதை’’ என்று சொன்னதாக நினைக்கிறேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நேராக எழுந்து நின்று கொண்டு, “இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்’’ என்று சொன்னார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3785,5180

இந்த ஹதீஸ் அடிப்படையில், நமது பெண்கள் மார்க்கம் அனுமதித்த திருமணத்திற்குச் செல்ல ஆசைப்பட்டால் தடுக்கக் கூடாது.

கணவன் மனைவியாகிய இருவரும் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம். அதனால் முக்கியமான சட்டத்தைக் கூட, தளர்த்தி அனுமதி வழங்குகிறார்கள் நபியவர்கள்.

பொதுவாக இஸ்லாம் மார்க்கத்தில் பொய் சொல்வது பாவம். அதுதான் எல்லா பாவங்களுக்கும் தலையானது என்றும் கூட நபியவர்கள் சொன்னார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்காகப் பொய் சொல்லிக் கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்குகிறார்கள்.

கணவன் மனைவியை சந்தோஷப்படுத்த, மனைவியிடம் தேவைக்குத் தகுந்த மாதிரி பொய் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவியும் கணவனைச் சந்தோஷப்படுத்தும் அளவுக்கு உள்ள விஷயங்களில் பொய் சொல்லிக் கொள்ளலாம்.

பொய் என்றால் பொத்தாம் பொதுவாக, தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் விதமாகப் பொய் சொல்வது கூடாது. மோசடி செய்வதற்காகவெல்லாம் பொய் சொல்ல முடியாது. ஊதாரித்தனமாக இருப்பதற்காக மனைவியின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை வாங்கிவிட்டுச் செல்வதற்காக பொய் சொல்லக் கூடாது

இது மோசடி, ஏமாற்றுதல் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கணவன் மனைவிக்கிடையே யாரும் யாரையும் எதிலும் ஏமாற்றாமல், மோசடிக்குள்ளாக்காமல், பாசத்தை நேசத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் உள்ள பொய்களைச் சொல்லிக் கொள்ள அனுமதியுள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு கணவன், மனைவியைப் பார்த்து, உன்னிடம் உள்ள குணம் மாதிரி உலகத்தில் யாருக்குமே வாய்க்காது என்று சொல்லிக் கொள்ளலாம். உலகத்திலேயே நீதான் பேரழகி என்று சொல்லிக் கொள்ளலாம்.

அதேபோன்று மனைவி, கஞ்சனாக இருக்கிற கணவனைப் பார்த்து, உங்களை மாதிரி வள்ளலை நான் பார்த்ததே இல்லை என்று புகழ்வதில்,    கொஞ்சுவதில் பொய் சொல்லிக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் சொல்லும் போது மனைவி தன் கணவனைப் பற்றி அகமகிழ்ந்து கொள்வாள். இதனால் அவள் கணவனின் உறவில் மானசீகமாக நடந்து கொள்வாள். இல்லறக் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்வாள்.

இன்னும் சொல்வதாக இருந்தால், சின்னச் சின்ன பாராட்டுக்களெல்லாம் பெண்களுக்கு பெரிதாகத் தெரியும். சாப்பாட்டில் கூடக் குறைவு இருந்தாலும் உன் கைப்பக்குவம் யாருக்கு வரும்? என்று பாராட்டிவிட்டால் அவர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதுபோன்ற பொய்களினால் யாருக்கும் தொந்தரவுகள் இல்லை. யாருடைய உரிமையும் உடமையும் மானமும் சேதப்படாது. மோசடியோ ஏமாற்றுதலோ இதுபோன்ற பொய்களில் இருக்காது.

இப்படி மூன்று இடங்களில் பொய் சொல்வதை மார்க்கம் அனுமதிப்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்’’ என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

 1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
 2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவ தற்காகச் சொல்லப்படும் பொய்.
 3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

இந்தச் செய்தியை முக்கியப்படுத்திச் சொல்லக் காரணம், குடும்ப உறவில் கணவன் மனைவி உறவு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனின் சந்தோஷத்தைப் பெற்றுத் தருகிற காரியம், தடுக்கப்பட்டதாக இருந்தாலும் அனுமதியைத் தருகிறான். ஏனெனில் பொய் என்பது இறைவன் வெறுக்கின்ற பாவம். அல்லாஹ்வின் சாபத்தினை பெற்றுத் தரும் காரியம்.

இப்படியெல்லாம் இறைவன் விட்டுக் கொடுக்கிறான் எனில், கணவன் மனைவியாக வாழ்கிறவர்கள் எப்படியெல்லாம் தங்களது வாழ்வில் அனுசரித்து இணக்கமாகப் போக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டும்.

நல்லது ஏற்படுமாயின் பொய் சொல்வது தவறில்லை. இதை சரியாகப் புரிந்து கொண்டால், மாமியார் மருமகள் பஞ்சாயத்தே அடிபட்டுப் போய்விடும். அப்படி சமாளிக்கத் தெரியாமல் பலபேர் வெகுளித்தனமாக நடப்பதினால் தான் குடும்பத்தில் பல பிரச்சனை மேலும் பெரிதாகி விடுகின்றது.

நமது தாயாருக்கும் நமது மனைவிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு நாம் தான் பெரும்பாடு படுகிறோம். அப்படியெனில் நம் தாயாரிடம் ஒரு பொய், நமது மனைவியிடம் ஒரு பொய் சொல்லி விட்டால் குடும்பம் உருப்படியாக சந்தோஷமாகச் சென்றுவிடும்.

சண்டையில் அம்மாவிடம், நான் அவளை எப்படி அடக்கி வைத்திருக்கிறேன் தெரியுமா? என்று கூட்டிக் குறைத்து மனைவியை எச்சரித்த மாதிரியும், கண்டித்த மாதிரியும் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவி கோபத்தைத் தணிப்பதற்காக, அம்மாவை மூத்தவர்கள் என்று பார்க்கிறேன். இருப்பினும் நான் சும்மா விடவில்லை. கடுமையாகக் கண்டித்தேன் என்று கூட்டிக் குறைத்து சொல்லிக் கொள்ளலாம்.

அதுபோன்றே தாயாரின் திருப்திக்காக அங்கே ஒரு பொய் சொல்லிக் கொள்வதிலும் எந்தத் தவறும் இல்லை. ‘அம்மாவுக்காக சும்மா உன்னை சபையில் திட்டுவேன். நீ அமைதியாக அடங்கிப் போய் நின்று கொள்ள வேண்டும்’ என்று முன்கூட்டியே மனைவியிடம் சொல்லிவைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் ‘உன் மருமகளை சும்மா விடமாட்டேன். எப்படி திட்டுகிறேன் பாருங்கள்’ என்று அவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம். இப்படி ஒரு ஆண் நடந்து கொண்டால் தாயாரையும் மகிழ்வித்துவிடலாம். மனைவியும் புரிந்து கொண்டு நமது சந்தோஷத்திற்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்வாள். இந்த வழிமுறைகளைத் தெரிந்த ஆண்களுக்கு மாமியார் மருமகள் பஞ்சாயத்தெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மாமியார் மருமகள் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துவிடலாம்.

ஆனால் நம்மில் பலர், அதெப்படி பொய் சொல்ல முடியும்? பொய் சொல்வது தவறான காரியம் என்று நினைத்தால், பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாமல், கடைசிவரை சண்டையோடு தான் வாழவேண்டும். எனவே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் களைவதற்கும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இந்த அனுமதிக்கப்பட்ட பொய் முக்கியமான அம்சமாக இடம்பெற்று விடுகிறது. அதாவது நன்மையைப் பெற்றுத் தரும் காரியத்திற்காக குடும்பத்தில் பொய்கூட சொல்லிக் கொள்வதற்கு இஸ்லாம் நமக்கு அனுமதியளிக்கிறது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று நபியவர்கள் பொதுவாகவும் அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து)  சொல்- மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

அறிவிப்பவர்: உம்மு குல்தூம் பின்த் உக்பா(ரலி)

நூல்: புகாரி 2692

இதுபோக மனைவியுடன் கணவன்மார்கள் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மார்க்கம் அனுமதித்த பல காரியங்களை, தவறு போன்று நம் சமூகம் விளங்கி வைத்துள்ளது. அவற்றில் மார்க்கம் எப்படியெல்லாம் இணக்கத்தைப் போதிக்கிறது என்றும், அதில் வழங்கப்பட்ட அனுமதிகள் என்னவென்பதையும் அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.

———————————————————————————————–

ஏழைகளே உங்களைத்தான்!

அப்துர்ரஹ்மான், இஸ்லாமியக் கல்லூரி

இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம்.

சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை அழகில் உயர்ந்தவர்களாகவும், சிலரை அழகு குறைந்தவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும், சிலரை அந்தஸ்து குறைவானவர்களாகவும் படைத்திருக்கின்றான்.

இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளோடு இறைவன் படைத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம், உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகத்தான்.   ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதற்காகவோ, நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்று அடையாளப்படுத்துவதற்காகவோ அல்ல.

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 6:26

இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம்தான் என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சமூகத்தில் பணவசதி படைத்தவர்களில்  பெரும்பாலானோர் தம்மைவிட சமூக அந்தஸ்தில் குறைந்த, பொருளாதார வசதி குறைந்த, ஏழைகளைப் பார்த்து ஏளனமாக, கேவலமாகப் பார்க்கின்றனர்.

———–கீழ்கண்ட செய்தி பலவீனமான செய்தியாகும்.———–

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرٌو ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” اصْبِرْ أَبَا سَعِيدٍ ، فَإِنَّ الْفَقْرَ إِلَى مَنْ يُحِبُّنِي مِنْكُمْ ، أَسْرَعُ مِنَ السَّيْلِ عَلَى أَعْلَى الْوَادِي ، وَمِنْ أَعْلَى الْجَبَلِ إِلَى أَسْفَلِهِ ” .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபூஸயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத்(ரலி) நூல்: அஹ்மத் 10952

மேற்கூறிய இச்செய்தியில் அம்ர் இப்னு ஹாரிஸ் என்பவர் சயீத் இப்னு அபீ சயீத் என்பவரிடமிருந்து எதையும் செவியுறவில்லை. என்ற காரணத்தினாலும் சயீத் இப்னு அபீ சயீத் என்பவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்பதினாலும் இச்செய்தி பலவீனமடைகின்றது.

ஏழைகளைப் போற்றும் இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த பொருளாதாரத்திலும், அந்தஸ்துக்களிலும் உயர்ந்த இடத்தில் இருந்த பெரும்பாலானோர் நபி (ஸல்) அவர்களோடு நெருக்கத்தில் இருந்த ஏழைகளைப் பார்த்து பொறாமை கொண்டு, எங்களை விட தகுதி குறைந்தவர்களுக்கு இவ்வளவு மிகப்பெரிய அந்தஸ்தா? என்று விழிதூக்கிப் பார்த்தனர். அவர்களின் எண்ணங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக திருக்குர்ஆனில் அல்லாஹ் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்து வசனம் இறக்குகின்றான்.

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத் தானா அல்லாஹ் அருள் புரிய வேண்டும்?’ என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?

அல்குர்ஆன் 6:52,53

யாரை அற்பமாக நினைத்தார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கண்ணியத்தைக் கொடுத்து, விரட்டாதே! விரட்டினால் கடும் குற்றம் செய்தவராவீர்! என்று தன்னுடைய தூதரை கடுமையாக எச்சரிக்கின்றான்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப் படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். (ஹதீஸ் சுருக்கம்)

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 5010

ஒரு மனிதரைப் பார்த்து இவனெல்லாம் ஒரு ஆளா? என்று நினைத்து கேவலப்படுத்துவதே ஒருவன் தீமை செய்கின்றான் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கின்றார்கள். யாராக இருந்தாலும் அவனுடைய அந்தஸ்தை வைத்தும், தகுதி தராதரத்தை வைத்தும் உள்ளத்தளவில் கூட கேவலமாக நினைத்து விடக் கூடாது.

ஏழைகளுக்கு கண்ணியம் சேர்த்த நபிகளார்

பள்ளிவாசலைச் சுத்தம் செய்யக்கூடிய ஒரு பெண்மணியின் இறப்புச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் தோழர்கள் அடக்கம் செய்து விட்டார்கள். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்  விசாரித்து விட்டு அடக்கம் செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்டவுடன் மீண்டும் அந்தப் பெண்மணிக்காக ஜனாஸா தொழுகை நடத்தி கண்ணியப்படுத்தியிருக்கின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒருநாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள்,  “அவர் என்ன ஆனார்?’’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! அவர் இறந்து விட்டார்!’’ என்றதும் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’’ எனக் கேட்டார்கள். தோழர்கள், “அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’’ எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது அடக்கத்தலத்தை (கப்று) எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறி, அங்கு வந்து (ஜனாஸாத் தொழுகை) தொழுதார்கள்.

ஆதாரம்: புகாரி 1337

மக்களெல்லாம் யாரைப் பற்றி அற்பமாகக் கருதினார்களோ அப்படிப்பட்ட ஒருவருக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை நடத்தி தன்னுடைய பிரார்த்தனை அந்தப் பெண்மணிக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகவும், அற்பமாகக் கருதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய செயலைச் செய்து காட்டியிருக்கின்றார்கள்.

தகுதியால் உயர்ந்தவர்கள்

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் குறைந்த அந்தஸ்தில் இருக்கின்ற மனிதர்களைப் பார்த்தாலோ, மிஸ்கீன்களைப் பார்த்தாலோ, ஏழைகளைப் பார்த்தாலோ தரக்குறைவாக மதிப்பிடுவதையும், அவர்களைப் பார்த்து முகம் சுளிப்பதையும் பார்க்கின்றோம்.

இன்னும் ஒருபடி மேலாகப் போய் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாலோ, வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினாலோ அருவருப்பாக நினைத்து சுத்தம் செய்வதையும் பார்க்கின்றோம்.

ஆனால், இது போன்ற மனிதர்களுக்கு இஸ்லாம் மகத்துவமிக்க கண்ணியத்தை வழங்கி சிறப்பிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 5116

நாம் யாரை அந்தஸ்தில் குறைவானவர்களாகக் கருதுகிறோமோ அவர்கள் இறைவனின் பார்வையில் தகுதியால் உயர்ந்தவர்கள் என்று கூறி ஏழைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.

ஏழைகளே மேலானவர்கள்

இன்றைக்கு சமூகத்தில் பணக்காரர்களாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வழங்கி சிறப்பிக்கின்றார்கள். அதே நேரத்தில் ஒரு ஏழையாக இருந்தால் அவரை இழிவாகவும், மட்டமாகவும் கருதி அவமதிப்பதைப் பார்க்கின்றோம். இந்த செயல்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றார்கள்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்’’ என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’’ என்று கேட்டார்கள். தோழர்கள், “இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்’’ என்று கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’’ எனக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 5091

இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! மக்களால் இழிவாகவும், தரக்குறைவாகவும் கருதப்படுகின்ற ஏழைகளுக்கு அல்லாஹ்வின் தூதர் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றார்கள். வசதி படைத்த எத்தனையோ பேர் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும், அவர்கள் அனைவரையும் விட மக்களால் மட்டமாகக் கருதப்படுகின்ற ஒரு ஏழை சிறந்தவர் என்று கூறி ஏழைகளை மகத்துவப்படுத்துகின்றார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் செல்ல வேண்டுமா?

இந்த உலகத்தில் சுகபோகத்தை அனுபவிக்காத, கஷ்டப்படுகின்ற, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற உண்மையான ஏழைகளுக்கு மறுமையில் பணக்காரர்களுக்கு முன்பே சொர்க்கத்திற்குள் நுழையச் செய்கின்ற அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கி கண்ணியப்படுத்துகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 2276

இந்த உலகத்தில் நல்ல முறையிலும், சுகபோகத்திலும் வாழ்ந்த பணக்காரர்களை விட ஐநூறு வருடங்களுக்கு முன்பாகவே, இந்த உலகத்தில் சிரமப்பட்ட, பொருளாதாரத்தில் பலவீனமான நிலையில் உள்ள ஏழைகளை சுவர்க்கத்தில் நுழையச் செய்கின்ற பிரம்மாண்டமான பரிசை இறைவன் வழங்குகின்றான்.

ஏழ்மை அதிகரிக்க ஆசைப்படுங்கள்:

ஏழைகளை மட்டமாகவும், இழிவாகவும் கருதுபவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணஅடி கொடுக்கும் விதமாக அற்புதமான முறையில் ஒரு அறிவிப்பை அறிவிக்கின்றார்கள்.

ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்என்று கூறுவார்கள். நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ‘‘அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்என்று கூறுவார்கள்.

நூல்: திர்மிதி 2291

மயங்கி விழுந்து கீழே கிடக்கின்ற ஏழைகளைப் பார்த்து பைத்தியக்காரர்கள் என்று சிலர் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள். மேலும் ஒரு முக்கியமான உபதேசமாக, உங்களுக்கு மறுமையில் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தால் ஏழ்மை அதிகரிக்க விரும்புவீர்கள் என்று ஏழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகிறார்கள்.

இறைவனிடத்தில் ஏழைகளுக்கு தனிச்சிறப்பாக ஏராளமான விஷயங்களைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கற்றுத் தருகின்றது. ஏழைகள் இந்த உலகத்தில் ஏற்படுகின்ற கஷ்டங்கள், சிரமங்கள், நோய்கள், துன்பம், கவலை போன்றவற்றுக்காக வருத்தப்படாமல் நம்மை விட பாக்கியம் பொருந்தியவர்கள் இந்த உலகத்திலும், மறுமையில் இறைவனிடத்திலும் இல்லை என்று மகிழ்ச்சி பெருக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக!!!!

———————————————————————————————–

அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும்

உம்மு இல்ஹாம், கடையநல்லூர்

எல்லா மதமும் எம்மதமே! எதுவும் எனக்கு சம்மதமே என்று கூறுகின்ற எவருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எல்லா மதமும் என் மதமில்லை. இஸ்லாம் மட்டுமே என் மதம். இது மட்டுமே எனக்கு சம்மதம் என்று கூறும் பொழுது ஏற்படுகிற பிரச்சனை அவ்வளவு சாதாரணமான பிரச்சனையாக இருக்கவில்லை. ஏனெனில் ஏனைய மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் சிறந்ததாக இருக்கிறது. இஸ்லாத்தில் அப்படியென்ன சிறப்பம்சம் இருக்கிறது என்று உற்று நோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போல இதன் இறைக் கொள்கை மற்ற கொள்கைகளை விட உயர்ந்து நிற்கின்றது.

படைத்தவன் ஒருவனே! அவனுக்கு இணை, துணை இல்லை. அவன் தனித்தவன், நிகரற்றவன், தேவையற்றவன், தூயவன், மிகப்பெரியவன், புகழுக்குரியவன் என்ற அனைத்து தன்மைகளும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறி உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரே சத்திய மார்க்கம் இந்த இஸ்லாம் மட்டும் தான்.

இன்ன பிற மதங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றுவது அவ்வளவு கடினம் கிடையாது. ஏனெனில் அவர்களுக்கென்று எவ்விதப் பண்பாடுகளோ, கலாச்சாரங்களோ, கொள்கைப் பிடிப்போ கிடையாது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வாழ்க்கை முறை தான் அவர்களுடையது. சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என்பது அவர்களின் ஏட்டளவிலே தானே ஒழிய அவர்களுக்கென்று எந்த ஒழுக்க மாண்புகளையும் அதில் காண இயலாது. அதே வேளையில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பது எளிதும் கிடையாது. இஸ்லாம் மார்க்கத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றது. ஆனால் அவர்களின் இந்த முயற்சியானது அவர்களில் பலரையே இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துவிடுகின்றது. ஏனென்றால் இது சத்திய மார்க்கம் அல்லவா!

இந்த சத்தியத்தை அழிக்க முற்படும் அசத்தியவாதிகளின் நிலைமை என்னவாயிற்று? இஸ்லாம் எனும் சத்திய மார்க்கம் வீழ்ந்துவிட்டதா? இல்லை வளர்ச்சி அடைந்துவிட்டதா? என்று பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம்மிடம் கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மிடம் அவர்கள் (முஸ்லிம்கள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள்என்று கூறினீர். இறை நம்பிக்கை அத்தகையதே. அது நிறைவடையும் வரை (வளர்ந்து கொண்டேதான்) இருக்கும்.

நான் உம்மிடம் அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு  அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லைஎன்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

 நூல்: புகாரி 51

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (ரோம் நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, “நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்து விட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு’’ என்று சொன்னார். (பிறகு முழு ஹதீஸையும் சொன்னார்.) (இறுதியில்) அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், “நீர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னுடைய இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர் (முஹம்மத்) அதிபராகி விடுவார் என அவரிடம் சொல்’’ என்று சொன்னார்.

நூல்: புகாரி 7196

இஸ்லாத்தை ஏற்காத ரோமப் பேரரசர் இஸ்லாத்தைப் பற்றியும் ஈமான் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்துள்ளார் என்பது மேற்கண்ட செய்தியில் நமக்கு நன்கு விளங்குகின்றது. இதில் நாம் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் வளர்ச்சியடையுமே தவிர அதில் பின்னடைவு ஏற்படாது என்பதை இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் கூறியிருப்பது மிகவும் பிரமிப்பை நமக்கு ஏற்படுத்துகின்றது.

நபி நூஹ் (அலை) காலம் முதல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் காலம் வரை, ஏன்? இன்றைய ஏகத்துவவாதிகள் வரை சத்தியத்தைச் சொல்லும் போதெல்லாம் அசத்தியவாதிகள் அழிச்சாட்டியம் செய்யாமல் இருந்ததில்லை.

நம்பிக்கை கொண்டோம்’’ என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

அல்குர்ஆன் 29:2

நூஹ் நபி

நூஹ் (அலை) மக்களிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். அந்த மக்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை பயம் சற்றும் இல்லாமல் இருந்தனர். அவர் கொண்டு வந்த கொள்கையை மக்களில் சாமானியர்களைத் தவிர வேறெவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் மனைவி மகன் உட்பட அனைவரும் இறை நிராகரிப்புக் கொள்கையிலே நீடித்திருந்தனர்.

ஏறத்தாழ 950 வருடங்கள் நூஹ் அம்மக்களோடு வாழ்ந்தார்கள். அவர்களின் பிரச்சாரம் வெறுப்பையும் புறக்கணிப்பையுமே அவர்களுக்கு அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அல்லாஹ், அந்தச் சமுதாயத்தை அழிக்க முடிவெடுத்தான். ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களையும், உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லுங்கள் என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அல்லாஹ் பேரலைகளை கொண்டு அவர்களை அழித்தான்.

“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்’’ என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்‘’ என்று அவர் கூறினார். இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!’’ (என்றும் கூறினார்) நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கியபோது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!’’ என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று (நூஹ்) கூறினார். மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது.

அல்குர்ஆன்:11:36-42

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

அல்குர்ஆன் 29:14-15

பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’’ என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்’’ எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் 11:44

நூஹ் (அலை) அவர்களும் அதே தண்ணீரில் தான் இருந்தார்கள். அசத்தியவாதிகளும் அதில் தான் இருந்தார்கள். அசத்தியவாதிகள் மட்டும் அழிந்தது எப்படி? அசத்தியவாதிகளின் கண்முன்னே சத்தியத்தை இறைவன் மேலோங்கச் செய்தான். சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அந்த சொற்பமானவர்களை வைத்தே இந்த சத்திய மார்க்கத்தைப் பரவச்செய்தான்.

இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயத்தினரும், அவர்களுக்குப் பின் பல சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். ஒவ்வொரு சமுதாயமும் தமது தூதர்களைத் தாக்க நினைத்தனர். பொய்யின் மூலம் உண்மையை அழிக்க தர்க்கம் செய்தனர். எனவே அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு அமைந்தது?

அல்குர்ஆன்  40:5

இப்ராஹிம் நபி

அடுத்ததாக இப்ராஹிம் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்து சொன்ன போது அவரது தந்தையே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உன்னைக் கல்லால் அடித்து கொல்வேன் என்று கூறினார். இப்ராஹிம் (அலை) அவர்கள் சற்றும் மனம் தளரவில்லை. அந்தச் சிலை வணங்கிகளிடம்  அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக சத்தியத்தை எடுத்துக் கூறினார்கள். அவர்களோ வெறுப்படைந்தார்கள். இறுதியில் இப்ராஹிம் நபி வீரியமாக எவருக்கும் அஞ்சாமல் சிலைகளை உடைத்தெறிந்தார்கள்.

இப்ராஹிம் என்ற இளைஞர் தான் இந்தச் சிலைகளை உடைத்தெறிந்திருப்பார் என்று அவர்களுக்குக் கூறப்பட்டவுடன் இப்ராஹிம் நபியை நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியக் கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வோ நெருப்பிலிருந்து அவரைக் காப்பாற்றி சத்தியத்தை மேலோங்கச் செய்தான்.

ஒரு தனி மனிதனால் என்ன செய்ய முடியும்? ஒரு தனி மனிதன் ஒரு கூட்டத்தை எதிர்கொண்டு சாதிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு இப்ராஹிம் நபியவர்கள் சாவுமணியடித்த காட்சியை திருமறையில் நாம் காண்கின்றோம்.

இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!’’ என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன

அல்குர்ஆன்  29:24

ஸாலிஹ் நபி

ஸமூத் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி தான் ஸாலிஹ் (அலை) அவர்கள். இந்தச் சமுதாயத்தினரும் சிலை வணங்கிகள் தான். அவர்களை நேர்வழிபடுத்திட தூதராக அல்லாஹ் ஸாலிஹ் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் அல்லாஹ்வை நம்புவதற்கு ஒரு அத்தாட்சி வேண்டுமென்று கூற, ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் ஓர் ஒட்டகத்தை அத்தாட்சியாக வழங்கினான்.

இந்த ஒட்டகத்தை அதன் பாதையில் செல்லவிடுங்கள். அதற்குத் துன்பம் தராதீர்கள் என்று அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான். அந்த அசத்தியவாதிகள் அல்லாஹ்வின் வார்த்தையை அலட்சியம் செய்தனர். அந்த ஒட்டகத்தை அறுத்து கொன்றனர். இதனால் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகினர். அல்லாஹ் நில நடுக்கத்தின் மூலம் அவர்களை அழித்தான்.

ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!’’ (என்று அவர் கூறினார்). ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?’’ என்று அவரது சமுதாயத்தில் கர்வம் பிடித்த பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர். அதற்கு, (பலவீனர்கள்) அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்’’ என்று கூறினர். நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்’’ என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர். பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்’’ எனவும் கூறினர். உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.  (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு நல்லதையே விரும்பினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் விரும்பவில்லை’’ எனக் கூறினார்.

அல்குர்ஆன் 7:73-79

அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் சிறப்பைக் கொடுத்திருந்தான். அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் கட்டும் அளவிற்குப் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ் தங்களுக்குக் கொடுத்த அருளை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. அவர்களின் பலம் அவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லை. அவர்களின் இறைமறுப்பே அவர்களை அழித்தது.

ஷுஐப் நபி

ஷுஐப் நபியவர்கள் சத்திய மார்க்கத்தைச் சொல்லும் போது மக்கள் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தி கேலி செய்தனர். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கோ, புரிந்து கொள்வதற்கோ அவர்கள் தயாராக இருக்கவில்லை. மாறாக அலட்சியம் செய்தனர். அவரால் நம்மை என்ன செய்ய முடியும்? அவரோ பலவீனமானவர் என்றே கருதினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அல்லாஹ் அந்த அசத்தியவாதிகளைப் பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்து அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கினான். இவ்வாறு தான் இந்த அசத்தியவாதிகளை அழித்து சத்திய மார்க்கத்தை இறைவன் சுடர்விடச் செய்தான்.

நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அங்கே வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர் (இறையருளைவிட்டு) தூரமானது போல் மத்யன்வாசிகளும் தூரமானார்கள்.

அல்குர்ஆன் 11:94-95

மூஸா நபி

மூஸா (அலை) அவர்கள் சத்திய மார்க்கத்தைச் சொல்லும் போது மக்களிடம் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; ஏராளம் என்று கூறலாம்.

நான் தான் கடவுள் என்று கூறிக்கொண்டு பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப்படுத்திக் கொண்டு திரிந்த ஃபிர்அவ்னிடம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி அவன் திருந்துவதற்காக இறைவனின் ஆற்றலினால் அற்புதங்களை அவனிடம் நிகழ்த்திக் காட்ட, அவனோ அதை ஏற்றுக் கொள்ளவுமில்லை. இறைவனுக்குக் கட்டுப்படவுமில்லை. மாறாக அவனது கர்வமும், அகந்தையும் அவனை அழிவில் ஆழ்த்தியது. அவன் மூஸாவை பொய்ப்படுத்துவதற்கு ஏவிவிட்ட சூனியக்காரர்களே அவனுக்கெதிராகத் திரும்பி அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிரம் பணிந்த வரலாற்றை நாம் குர்ஆனில் காண்கின்றோம்.

மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர். மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்’’ என்றனர். நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்’’ என்று அவன் கூறினான். கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்’’ என்று அவர்கள் கூறினர். நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்’’ (என்றும் கூறினர்).

அல்குர்ஆன் 20:45-51

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’’ என்று அவன் கூறினான். எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’’ என்று அவர்கள் கூறினார்கள். எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’’ (என்றும் கூறினர்.)

அல்குர்ஆன் 20:70-73

ஃபிர்அவ்னுக்கோ கடுமையான கோபம். இறுதியில் மூஸா நபியையும் அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் ஃபிர்அவ்ன் அழிக்க முடிவுவெடுத்தான். அவனும், அவனது படையும் மூஸா நபியையும், அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் விரட்டி வந்தனர்.

மூஸா (அலை) அவர்கள் தப்பிக்க முடியாமல் திணற நாம் அனைவரும் மாட்டிக் கொண்டோம் என அம்மக்கள் எண்ணிய வேளையில் கணப் பொழுதில் அல்லாஹ் சத்தியவாதிகளைக் காப்பாற்றி அசத்தியவாதிகளை அழித்தான். அழிக்க வந்த அசத்தியம் அழிந்து போனது. சாதிக்கப் பிறந்த சத்தியம் சாதனை புரிந்தது.

மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 20:65-67

———————————————————————————————–

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை

தும்மல் வரும் போது அடக்குகின்றீர்களா? அவ்வாறு அடக்காதீர்கள். காரணம் தும்மலை   அடக்கினால் அது பேராபத்தில் போய் முடியும் என லண்டனில், மருத்துவர்களின் மருத்துவ ஆய்வுகளையும் அனுபவங்களையும்  வெளியிடுகின்ற  BMJ Case Reports  என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.

அது குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:

முன்னர் எந்த நோயினாலும்  பாதிக்கப்படாத ஒரு 34 வயது  நோயாளி, வீங்கிய கழுத்துடன் தனக்கு உணவு எதுவும் விழுங்க முடியவில்லை;  தொண்டையில் ஒரே உறுத்தலாக இருக்கின்றது என்று  குறிப்பிட்டு  லீசெஸ்டர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்படுகின்றார்.  அவருக்குத் தொண்டையின் பின்புறம் உடைந்து போய்  பேச்சும் வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இது எப்படி ஏற்பட்டது என்று  ஆரம்பத்தில் குழப்பத்திற்குள்ளாயினர்.

லீசெஸ்டர் மருத்துவமனை டாக்டர்கள் அந்த நோயாளியைப் பரிசோதனை செய்யும் போது அவரது உடலுக்குள், காற்றுக் குமிழ்கள் மார்பை நோக்கி விரைகின்ற சப்தத்தின் அறிகுறியாக  கழுத்திலிருந்து விலா எலும்புகள் வரை ஒரு படபடக்கின்ற சப்தத்தைச்  செவியுற்றனர்.  தொற்று நோய் மற்றும் மற்ற சிக்கலான நோய்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவலையில்  அவருக்குக் குழாய் பொருத்தி அதன் மூலம் ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தினர்.

தும்மலை அடக்கியதால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி முழுமையாக நிவாரணம் பெற்று வீடு திரும்பி விட்டார். இனி தும்மல் வந்தால் மூக்கைப் பொத்தக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, காது மூக்கு தொண்டை நிபுணரும் லண்டனில் உள்ள  யுனிவர்ஸிட்டி ஹாஸ்பிடல் லீவிஷம் இயக்குநருமான டாக்டர் அந்தோணி ஐமட் கூறுகையில், “நீங்கள் தும்மும் போது 140 மைல்கள் வேகத்தில் காற்று வெளியேறுகின்றது” என்று குறிப்பிட்டார்.

பாதிப்பு அடைகின்ற நுரையீரல்

தும்மலை அடக்குவதின் மூலம் ஏற்படுகின்ற பிரச்சனைகள் காரணமாக ஆண்டுக்கு ஒரு நோயாளி அல்லது இரு நோயாளிகள் வருகின்றனர். ஆனால் அப்படி வருபவர்கள் அரிதிலும் அரிது என்று ஹவுஸ்டனில் உள்ள யுனிவெர்ஸிட்டி ஆஃப் டெக்ஸாஸ் ஹெல்த் சயின்ஸ் சென்டரில் பணிபுரிகின்ற தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி யங் ஜியாங்(Zi Yang Jiang) தெரிவிக்கின்றார்.

ஒரு துப்பாக்கியால் கழுத்தில் சுடும் போது என்ன அதிர்வு, வேதனை ஏற்படுமோ அதுபோன்ற வேதனை தும்மலை நாம் அடக்கும் போது ஏற்பட்டு உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அந்த அளவுக்குத் தும்மலின் வேகம் அமைந்துள்ளது என்பது ஒரு வினோதமான விஷயமாகும்.

நுரையீரல் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானால், அந்த சமயத்தில் தும்மல் அடித்து உடனடியாக வெளியேறுகின்ற காற்றை அது உள்வாங்கிக் கொள்கின்றது. இது நுரையீரல் சந்திக்கின்ற பிரச்சனையாகும்.

தும்மல் வருவதற்குக் காரணமே நம் உடலில் ஏற்பட்டிருக்கின்ற வைரஸ், பாக்டீரியாக்களை வெளியேற்றுவதற்காகத் தான். நாம் அதை நிறுத்தினால் அல்லது அடக்கினால் அந்த வைரஸ்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் போய் புகுந்து கொள்ளும்.

அதிகமான மக்களிடம் தும்மல் மூலம் உருவாகின்ற உபரியான காற்று பின்னால் உடலால் உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றது என்று டாக்டர் ஜி யங் ஜியாங் மேலும் குறிப்பிடுகின்றார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர்அல்லது நண்பர்யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ்என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்‘ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 6224

இறைவனுக்கு மனிதன் எப்போதும் நன்றி செலுத்தும் விதத்தில் பலவிதமான புகழாரங்களை இஸ்லாம் கற்றுத் தருகின்றது. ஒருவர் உணவு உண்ட பிறகு, உறங்கும் போது, உறங்கி எழுந்திருக்கும் போது என்று மனிதனுக்கு வாய்க்கின்ற நற்பேறுகள், நற்பாக்கியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வைப் புகழச் செய்கின்றது இஸ்லாம்.

சாப்பிட்ட பின் அல்ஹம்துலில்லாஹி என்று ஒருவர் அல்லாஹ்வைப் புகழும் போது அருகில் உள்ளவர் யர்ஹமுக்கல்லாஹு என்று சொல்லுமாறு நபிகள் பணிக்கவில்லை.

அதுபோல் உறங்கி எழுந்தவர் அல்ஹம்து லில்லாஹி சொல்லும் போது அருகில் உள்ளவர் யர்ஹமுக்கல்லாஹு என்று சொல்லுமாறு  பணிக்கவில்லை.

ஆனால் தும்மும் போது அல்ஹம்துலில்லாஹி என்று சொல்லும் போது ‘யர்ஹமுக்கல்லாஹு’ என்று சொல்லுமாறு பணிக்கின்றது. இதன் மூலம் மனித சமுதாயத்தை, இந்தத் தும்மலின் பின்னணியில் அடங்கியிருக்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையையும் அற்புதத்தையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

140 மைல் வேகத்தில் வீசுகின்ற ஒரு காற்று நமது உடற்கூட்டில் நாசி துவாரத்தில் பாய்ந்து நமது உடலில் தொற்றிய வைரஸ், பாக்டீரியாவை வெளியேற்றுகின்றது என்றால் இது சாதாரண விஷயமில்லை என்பதை உணர்த்துகின்றது.

அவ்வளவு வேகமான காற்று மூக்கிலிருந்து வெளியேறியதற்காக தும்மியவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது, அருகில் உள்ளவர் வைரஸ், பாக்டீரியாக்கள் வெளியேறுவதற்கு இதுபோல் என்றென்றும் அருள் புரிவான் என்று பிரார்த்திக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது.

அதற்குப் பதிலாக தும்மியவர், உங்கள் விஷயத்தை இதுமாதிரி சிக்கல் ஏற்படாமல் காப்பானாக என்று பிரார்த்திக்கும் விதத்திலும் அமைந்திருப்பதை நாம் காணமுடிகின்றது.

உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 51:21

எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்வது போன்று உடலில் ஒளிந்திருக்கும் அறிவியல் அற்புதங்களை உள்நோக்கிப் பார்ப்போமாக! உயரிய அந்த நாயனுக்கு உரிய முறையில் நன்றி செலுத்துவோமாக!

———————————————————————————————–

திருக்குர்ஆனைக் கற்போம்! கற்பிப்போம்!

அபு அதீபா, கடையநல்லூர்

மனித சமுதாயம் நேர்வழியில் நடப்பதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான்.

இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கினார்கள். வேதங்களின் கட்டளைகளையும் விளக்கிக் கூறினார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள்.

ஆனால் வேதம் கொடுக்கப்பட்ட எல்லா சமுதாயமும் இறைத்தூதர்களின் காலத்துக்குப் பின் வேதத்தின் போதனைகளையும், தூதர்களின் விளக்கத்தையும் புறக்கணிக்காமல் இருக்கவில்லை.

வேதமெல்லாம் நமக்கு விளங்காது எனக் கூறி வேதங்களை இழிவு செய்தனர் சிலர்.

வேறு சிலர் வேதங்களுக்குத் தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் கொடுத்து உலக ஆதாயத்தைத் தேடிக் கொண்டனர்.

மற்றும் சிலர் வேதத்தில் தங்களுக்குச் சாதகமானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேதத்திலிருந்து நீக்கினார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் சுயமாகக் கற்பனை செய்து கொண்டவைகளை வேதத்தில் சேர்த்து இறைவனின் வழிகாட்டுதலையே குழப்பினார்கள்.

எந்தச் சமுதாயத்திலும் இறைவன் வழங்கிய வேதம், இறைவன் வழங்கிய வடிவில் இருக்கவில்லை.

இறைவேதம் எது? மனிதக் கற்பனையில் உதித்தது எது? என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் செய்து விட்டனர்.

முஸ்லிம்கள் மட்டும் தான் இறைவன் வழங்கிய வேதத்தை அப்படியே பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் வேதத்தின் போதனையை முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் கூட, வேதத்தில் கைச்சரக்கு எதையும் சேர்க்கவில்லை.

தத்தமது மனோ இச்சைப்படி விளக்கம் கூறி வருபவர்கள் முஸ்லிம் சமுதாயத்திலும் உள்ளனர். ஆனாலும், அவர்களும் வேதத்தில் கை வைக்க முடியவில்லை.

பதினான்கு நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி இறைவனால் வழங்கப்பட்ட வடிவிலேயே திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புள்ளது.

இறைவனால் பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆனை ஓதுவதும், கற்பதும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் மிகச் சிறந்த நற்காரியங்களாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் குர்ஆனை ஓதுவதற்கும், மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஏராளமான நன்மைகளும், சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தவ்ஹீத்வாதியாக மாற்றும் திருக்குர்ஆன்

ஒருவனுக்கு இவ்வுலகில் கிடைக்கும் பாக்கியங்களிலேயே மிகப்பெரும் பாக்கியம் அவன் ஏகத்துவவாதியாக இருப்பதாகும். ஏனெனில் ஒருவன் இணைவைக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவன் மறுமையில் நிரந்தர நரகத்திற்கு உரியவனாக மாறி விடுகின்றான்.

ஒருவனை நிரந்தர நரகத்தில் இருந்து காப்பாற்றுவது ஏகத்துவக் கொள்கை மட்டுமே! இதற்கு ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் சான்றாக உள்ளன. இத்தகைய மிகப் பெரும் பாக்கியமான ஏகத்துவம் என்ற நற்பாக்கியம் திருக்குர்ஆனைக் கற்பதின் மூலமும் கற்றுக் கொடுப்பதின் மூலமும் கிடைக்கின்றது.

வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.)

அல்குர்ஆன் 3:79

திருக்குர்ஆனைக் கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மிகச் சிறந்தவர்களாக மாற்றும் திருக்குர்ஆன்

திருக்குர்ஆனைக் கற்பதும், கற்பிப்பதும் நம்மை மிகச் சிறந்த முஃமின்களாக மாற்றுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்:  உஸ்மான் (ரலி)

நூல்: புகாரி 5027, 5028

அந்தஸ்துகளை உயர்த்தும் அற்புத வேதம்

ஒரு சமுதாய மக்கள் எந்த அளவிற்கு திருக்குர்ஆனின் சட்டங்களை விளங்கி, அதன் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் சமூகம் உயர்ந்து காணப்படும். திருக்குர்ஆனின் வாழ்வியலைப் புறக்கணித்த சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்ததாகவே இருக்கும். இதனை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; (வேதத்தைப் புறக்கணிக்கும்) வேறு சிலரைத் தாழ்த்துகிறான்’’

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1487

குர்ஆனைக் கற்பதற்குப் பொறாமைப்படலாம்

பொறாமை என்பது ஒரு தீய குணமாகும். எந்த ஒருவர் மீதும் பொறாமை கொள்வது கூடாது. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும் என திருக்குர்ஆன் நமக்கு கற்றுத் தருகிறது. ஆனால் இஸ்லாம் இரண்டு விஷயங்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கிறது. இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)! என்று கூறுகின்றார்.

 1. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நல்வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒரு மனிதர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே என்று கூறுகின்றார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5026

ஒருவருக்கு இறைவன் செய்த அருள் அழிய வேண்டும் என்று நினைப்பது தான் பொறாமை ஆகும். ஆனால் மேற்கண்ட நபிமொழியில் பொறாமை என்பது அதன் நேரடிக் கருத்தில் கூறப்படவில்லை. மாறாக ஒருவருக்கு இறைவன் செய்த அருளைக் கண்டு, அது போன்று நமக்கும் இறைவன் அருள் செய்ய வேண்டுமே என்ற நல்லெண்ணத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் பொறாமை என்ற வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருக்குர்ஆனை ஓதுபவர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று சொன்னால் திருக்குர்ஆனை ஓதுவதினால் கிடைக்கும் மிகப் பெரும் நன்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆனை கற்றவருக்கும், கல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதிவருகின்றவரின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதாமலிருப்பவரின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது; சுவையோ கசப்பு.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூற்கள்: புகாரி 5059, முஸ்லிம் 1461

குர்ஆனைப் படிப்பது இலாபம் தரும் வியாபாரம்

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.

திருக்குர்ஆன் 35:29, 30

ஓவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள்

அல்லாஹ் எந்த ஓசை வடிவத்தில் இறக்கினானோ அந்த ஓசை வடிவத்தில் திருக்குர்ஆனை ஓதும் போது ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகளை இறைவன் நமக்கு வாரி வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். ‘‘அலிஃப் லாம் மீம்என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். மாறாக. அலிஃப்ஒரு எழுத்து லாம்ஒரு எழுத்து, ‘மீம்ஒரு எழுத்து ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: திர்மிதி 2835

மறுமையில் பரிந்துரைக்கும் திருக்குர்ஆன்

திருக்குர்ஆனை ஓதுவது மறுமையிலும் மிகப் பெரும் பாக்கியங்களை அள்ளித் தருகிறது. திருக்குர்ஆனை ஓதியவர்களுக்காக அது மறுமை நாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும், அவர்களுக்காக இறைவனிடம் வாதாடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு மலர்களான அல்பகராமற்றும் ஆலு இம்ரான்ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகராஅத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைப் பற்றிப் பிடிப்பது பரக்கத் (மறைமுக அருள்) ஆகும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். (அதன் படி நடப்பது) வீணர்களுக்கு இயலாது.

அறிவிப்பவர்: அபூ உமாமா அல்பாஹிலி(ரலி)

நூல்: முஸ்லிம் 1470

திறமைசாலிக்கும், சிரமப்படுவோருக்கும் கிடைக்கும் நற்கூலிகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்க தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1462

இறைவனின் வார்த்தைகளை ஓதக் கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நற்கூலியை மேற்கண்ட நபிமொழி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பெரும் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் திருக்குர்ஆனை ஓதுவதற்கும் பொருளுணர்ந்து படிப்பதற்கும் நாம் அதிகமதிகம் முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளியில் குர்ஆன் வகுப்பு

திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளை எந்த இடத்திலும் நடத்திக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, பள்ளிவாசலில் மக்கள் ஒன்று கூடி குர்ஆனைக் கற்றுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5231

ஃபஜ்ருக்குப் பின் குர்ஆன் வகுப்பு

குறிப்பாக சுபுஹு தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று  குறைந்த பட்சம் ஓரிரு வசனங்களையோ, அதன் விளக்கத்தையோ கற்றுக் கொள்வது மிகவும் சிறந்த நற்காரியமாகும். அதற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் புத்ஹான்அல்லது அகீக்’ (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும், உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?’’ என்று கேட்டார்கள். நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்’’ என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், “உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் கற்றுக் கொள்வதுஅல்லது ஓதுவதுஇரு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களை விடவும், நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களை விடச் சிறந்ததாக அமையும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1469

குர்ஆன் வகுப்பு என்பது மக்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுக்கும் சபையாக இருப்பதால் அதனை மக்களுக்கு வசதிப்பட்ட எந்த நேரத்திலும், அனுமதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நடத்திக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, பள்ளியில் நடத்துவது சிறந்ததாகும். சுபுஹு தொழுகைக்குப் பிறகு நடத்திக் கொள்வதும் சிறந்ததாகும்.

கணக்கிலடங்காத நன்மைகளையும், பாக்கியங் களையும், அந்தஸ்துகளையும் அள்ளித் தரும் திருக்குர்ஆனை நாமும் கற்போம், மற்றவர்களுக்கும் கற்பிப்போம். அதன் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை அடைவோமாக!