ஏகத்துவம் – பிப்ரவரி 2016

தலையங்கம்

இதயங்களை ஈர்த்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்

அல்லாஹ் ஒருவன்  என்று முஸ்லிம்கள் அனைவருமே  சொல்கிறார்கள். ஆனால் தங்களது  வணக்க வழிபாடுகளில் அல்லாஹ் அல்லாதவர்களையும் அவனுடன் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்த போது நம்மைக் கடுமையாக எதிர்த்தார்கள். நம் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

அல்லாஹ்வின் பள்ளியில் தொழ விடாமல் தடுத்தார்கள். ஊர் நீக்கம் செய்தார்கள். பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்குத் தடை விதித்தார்கள். பொது மையவாடியில் ஜனாஸாவை அடக்க அனுமதி மறுத்தார்கள். திருமணப் பதிவேடும் தர முடியாது என்று அறிவித்தார்கள்.

காவல்துறையில் தொடர்ந்து புகார்கள், நீதிமன்றத்தில் வழக்கு என சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் உள்ள இணை வைக்கும் (ஷிர்க்) ஜமாஅத்துக்கும் நமக்கும் இடையே  ஒரு நீண்ட போராட்டம் இது வரையில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பள்ளிவாசலுக்குள் வராதே என்று இவர்கள் அறிவிக்காவிட்டாலும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதை அல்லாஹ் தடுத்துள்ளதால், நாமே ஒதுங்கி விடும் கடமை நமக்கு உள்ளது என்பதால் நீயும் வேண்டாம்; உன் பள்ளிவாசலும் வேண்டாம் என்று தமிழகத்தில் நமக்கென்று தனிப் பள்ளிவாசல்கள் கட்டித் தொழ ஆரம்பித்தோம்.

அல்லாஹ்வின் கிருபையால் வளர்ச்சி பலமடங்கு பல்கிப் பெருகியது. திருமணத்திற்கு தனிப் பதிவேடு கண்டோம். அதனால் அவர்களின் அடக்குமுறைகள் ஒரு கட்டுக்குள் அடங்கியது. இருப்பினும் நமக்கும் அவர்களுக்கும் பாத்தியப் பட்ட அடக்கத்தலத்தில் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் இன்னும் சில ஊர்களில் பிரச்சனைகள் தொடரத் தான் செய்கின்றன.

இது மட்டுமல்லாமல், புதிதாகப் பள்ளி கட்டுகின்ற போது அதற்கும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஜமாஅத் உலமா என்ற பெயரில் உள்ள செல்வாக்கு இழந்த சில பரேலவிகள்,  சமுதாயத்தில் சல்லிக் காசுக்குக் கூடத் தேறாத அனாமதேயங்கள் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் மீது காஃபிர் ஃபத்வா கொடுத்தார்கள். இவர்களின் ஃபத்வா சிந்தனை உள்ள எவராலும் சீண்டிக் கூட பார்க்கப்படவில்லை.

அவ்வப்போது  ஸைஃபுத்தீன் ழலாலியை அழைத்து வந்து, தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது  வெறுப்பேற்றியும் சுன்னத் ஜமாஅத்தை உசுப்பேற்றியும் ஒரு பரேலவிக் கூட்டம் தொடர்ந்து முழு நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றது.

இத்தனை எதிர்ப்புகளும், ஏவு கணைகளும் நம் மீது வருவதற்குக் காரணம் என்ன?

புகழுக்குரியவனும், மிகைத்தவனு மாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை

(அல்குர்ஆன் 85:8)

என்று அல்லாஹ் சொல்வது போன்று படைத்தவனாகிய ஒரே ஒரு அல்லாஹ்வை நம்பிய பாவத்திற்காகத் தான் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும், தண்டனையும்!

எனினும் தவ்ஹீதுகளாகிய நாம் இந்தக் கொள்கையிலிருந்து பின் வாங்கி விடவில்லை.

உங்களை விட்டும், அல்லாஹ் வையன்றி எதனை வணங்குகிறீர் களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக் கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என் றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன் 60:4)

என்று இப்ராஹீம் நபியவர்கள் கூறியதைப் போலவே நாமும் முழங்கினோம்.

  1. இப்ராஹீம் நபியவர்களின் வழியில், இவர்கள் பள்ளியில் தொழுவிக்கின்ற இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழமாட்டோம் என்று பிரகடனப்படுத்தினோம். இதை நாம் நமது சொந்த விருப்பத்திற்கேற்ப செய்யவில்லை.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ் வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்

(அல்குர்ஆன் 9:18, 19)

என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற வசனங்களின் அடிப்படையில் தான் இவ்வாறு பிரகடனப்படுத்தினோம். ஒரு பள்ளிவாசலில் மின்  விளக்கை மாட்டுவது, மின் விசிறி பொருத்துவது, ஏதாவது கட்டட வேலை அல்லது பழுது செய்வது தான் நிர்வாக வேலை என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. தொழுவிப்பது தான் மாபெரும் நிர்வாக வேலையாகும். எனவே, தொழுவிக் கின்ற இமாம் இணைவைப்பவராக இருந்தால் அவரைப் பின்பற்றித்  தொழ மாட்டோம் என்று பிரகடனப் படுத்தியதற்கு இதுதான் பின்னணியாகும்

  1. சுன்னத் (?) ஜமாஅத்தில் இருந்து கொண்டு இணை வைத்த நிலையில் யாராவது இறந்து விட்டால், இறந்தவர் நம்மைப் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் கூட அவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ளமாட்டோம்.

“இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக் கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார் இப்ராஹீம் பணி வுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

(அல்குர்ஆன் 9:113, 114)

என்று எல்லாம் வல்ல அல்லாஹ் தடை விதித்தது தான் இதற்குக் காரணமாகும்.

  1. ஒருவர் ஏகத்துவத்திலேயே மரணித்திருப்பார். ஆனால் அவரது ஜனாஸாவிற்கு சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஒரு இமாமே நின்று தொழுவித்தால் நாம் அந்த ஜனாஸாவில் நின்று தொழமாட்டோம். முடிந்த வரையில் அந்த ஜனாஸா விற்கு நபி (ஸல்) காட்டிய முறைப்படி நாம் தான் தொழுவிப்போம். பல ஊர்களில் ஜனாஸாவை ஒட்டி பெரிய போராட்டக்களமே நடந்தேறுகின்றது. அதே சமயம், ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக நாம் தொழ முடியாமல் தடுக்கப்பட்டு அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டால், நாம் தனியாக காயிப் ஜனாஸா தொழுது கொள்வோம்.
  2. ஷிர்க், பித்அத் நிறைந்த திருமணங்கள், வரதட்சணை, பெண் வீட்டு விருந்து போன்ற சமூகக் கொடுமைகள் நடைபெறும் திருமணங் களை நாம் புறக்கணித்து விடுகின்றோம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப் படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர் களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்

(அல்குர்ஆன்  4:140)

என்ற அல்லாஹ்வின் கட்டளை தான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். நமது ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த ஜமாஅத்தும் பெண் வீட்டு விருந்தை சமூகக் கொடுமை என்ற பாவப்பட்டியலில் சேர்ப்பதே கிடையாது. பெண் வீட்டு விருந்து என்றால் போய் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து விடுகின்றார்கள். பெண் சிசுக் கொலைக்குப் பின்னணியாக பெண்  வீட்டு விருந்து இருக்கின்றது என்பதை விளங்காமல் இயக்கம் நடத்தும் ஜாக் இதில் முன்னணியில் உள்ளது என்பதையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை மட்டும் தான் திருமணம் முடிக்க வேண்டும். பிற பெண்களை, அவர்கள் ஏகத்துவத்தை ஏற்காத வரை புறக்கணிக்க வேண்டும். இதே போன்று பெண்களும் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மணமகனையே தேர்வு செய்ய வேண்டும்.
  2. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக் கின்ற மவ்லிது போன்ற ஷிர்க்கான காரியங்களில் பங்கு கொள்ளாமல் இருப்பது, அதற்காக சமைக்கப் படுகின்ற உணவுகளைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

உதாரணத்திற்கும் மட்டும் ஒரு சில புறக்கணிப்புகளை இங்கு சுட்டிக் காட்டி உள்ளோம்.  கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத இந்தப் புறக்கணிப்புப் போர் பிரகடனத்தை ஊருக்கு ஊர் நான்கைந்து பேர்கள் இருக்கும் போதே துவக்கி விட்டோம்.

இன்றைக்கு அல்லாஹ்வின் அருளால் ஊருக்கு ஊர் கிளைகள், மர்கஸ்கள் என்று தோன்றியுள்ளன. அன்று அப்படியில்லை. அப்படி மிக அரிதிலும் அரிதான எண்ணிக்கையில், அறுதி சிறுபான்மையாக இருக்கும் கட்டத்தில் தான் இந்த அறிவிப்பைச் செய்திருந்தோம். கொள்கைச் சகோதரர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தாங்கிக் கொண்டு அவற்றை எதிர்கொண்டார்கள்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

(அல்குர்ஆன் 58:22)

இது போன்ற அல்லாஹ்வின் வசனங்கள் உணமையிலேயே பெரிய உறுதிப்பாட்டையும், உள ஓர்மைப் பாட்டையும் உத்வேகத்தையும் உந்து சக்தியையும் ஒவ்வொரு ஏகத்துவக் கொள்கைவாதிக்கும் அளித்தன.

உதாரணத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண விஷயத்தில் வைத்திருக்கின்ற, வகுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் கண்டிப்பாக உறவுகளிடம் பகைக் காமல் இருக்க முடியாது.

சூனியத்தில் நம்பிக்கை கொண்ட வர்களுக்குப் பின்னால் நின்று தொழ முடியாது என்ற நிலைப்பாட்டை நாம் பகிரங்கமாக அறிவித்ததன் காரணமாக  கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பின் வட்டம் நீண்டது.

இத்தனைக்குப் பிறகும் என்ன நடக்க வேண்டும்? மக்கள் நம்மை விட்டு விலக வேண்டும்.  நம்மை விட்டு இன்னும் பல மைல்கள் ஓட்டமெடுக்க வேண்டும். மக்கள் நம்மை அண்டவும் கூடாது; ஒண்டவும் கூடாது. ஆனால் இத்தனைக்குப் பிறகும் மக்கள் இந்தக் கொள்கையை நோக்கி ஓடி வருகின்றார்கள். நம்மை நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்த்தவர்கள், எதிர்த்தவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர் அல்லது நண்பர்கள் போன்றவர்கள் தான் இந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு இணைந்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடு தான் ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெற்றுள்ள இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு!

இம்மாபெரும் மக்கள் வெள்ளம்  என்பது அதிகமான கொள்கைவாதி களையும், என்னதான் நடக்கின்றது என்று பார்க்க வருபவர்களையும், நம்மை விமர்சிக்க வருகின்ற எதிரணியினரையும் உள்ளடக்கியது தான் என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

இருப்பினும் திருச்சியில்  பெருக்கெடுத்திருக்கின்ற இந்த மக்கள் வெள்ளம், அன்றைக்கு ஆரம்ப காலகட்டத்தில் இணைந்த எண்ணிக்கையை விடப் பல்லாயிரம் மடங்கு அதிகம்.

இந்த ஜமாஅத்தில் இணைந்தவர் களின் எண்ணிக்கை ஒருவர், இருவர், மூவர் என்று பெருகிப் பெருகி, காட்டாற்று வெள்ளமாக மாறி இருக்கின்றதே அது பிரகடனப் படுத்துகின்ற செய்தி என்ன? அதன்  விளக்கம் என்ன?

அதிலும் குறிப்பாக பல்வேறு சிந்தனை, சித்தாந்தம் கொண்டவர்கள் நம்மை எதிர்ப்பது என்ற மையப்புள்ளியில் மட்டும் சந்திக்கக் கூடியவர்கள், நம்மை அழிப்பதை மட்டுமே ஒரே ஒரு குறிக்கோளாகக் கொண்டு சிந்திக்கக் கூடியவர்கள் எத்தனையோ இலட்சங்களை செலவழித்து பெருங்கூட்டம் வராதா? என்று  ஏங்கி எதிர்பார்த்து. பெரும் மைதானத்தில் மாநாட்டை நடத்து கின்றனர். ஆனால், காலி மைதானத்தில்  ஈயாட்டத்தை மட்டும் பார்த்து விட்டு,  பேயாட்டம் ஆடி ஏமாந்து திரும்பிப் போன வரலாற்றை அடிக்கடி நாம் கண்ணாறக் கண்டிருக்கும் போது, தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் இவ்வளவு மக்கள் வெள்ளம் வருகின்றது என்றால் அதன் பொருள் என்ன?

அதிலும் குறிப்பாக, பெரும் எண்ணிக்கை கொண்ட  முஹல்லா ஜமாஅத்துகள்; பெரும்பான்மை ஜமாஅத்தினர் என்று பரம்பரை, பாரம்பரிய பெருமை பேசி பாசுரமும் பாயிரமும் பாடக் கூடிய இயக்கங் களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய மக்கள் சங்கமம் தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் சாத்தியமானது எப்படி?

அரசியலில் இறங்கி, ஆதாயம் அடைந்து, மாநிலம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகள் கூட பெரும் பொருளாதாரத்தைத் திரட்டி, கார்களில் வலம் வரும் இயக்கங்களின் செல்வச் செழிப்பைப் பார்த்த பின்னரும் அந்தக் கவர்ச்சியில் மதி மயங்காமல் மக்கள் நமது ஜமாஅத்தில் வந்து மொய்ப்பதற்குக் காரணம் என்ன?

மாநாட்டுக்கு வாருங்கள் என்று நமது ஜமாஅத் சார்பில் நேர்மறைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு புறத்தில் மாநாட்டுக்குப் போகாதீர்கள் என்று பரேலவிகளால் பகிரங்க எதிர்மறைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது.

இத்தனையும் தாண்டி இறை யருளால் இந்தத் திடல் கடலாகப் பொங்கி வழிகின்றது என்றால் காரணம் என்ன?

இதற்குரிய காரணம் ஒன்றே ஒன்று தான்! அது தான் நாம் இது வரை கட்டிக் காத்து, கடைப்பிடித்து வருகின்ற கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பு என்ற ஆயுதம்!

இந்த ஆயுதமேந்திப் போராடுபவர் களுக்கு, புறக்கணிப்பு என்ற புடம் போடும் சோதனையில் புரட்டி எடுக்கப் படக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஒரு பரிசை அதே மும்தஹினா அத்தியாயத்தின் 7வது வசனத்தில் அறிவிக்கின்றான். அதென்ன பரிசு என்று ஆச்சரியமாகக் கேட்கின்றீர்களா?

உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்கு மிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 60:7)

இது தான் அந்தப் பரிசாகும்.

அன்று தவ்ஹீதுக்காக தனி மரமாக நின்றோம். அல்லாஹ்வுக்காக உறவுகளைப் பகைத்தோம். நட்புகளைப் பறிகொடுத்தோம். பரிதவிப்புக்கும் பல பாதகங்களுக்கும் உள்ளானோம்.  அப்படிப்பட்ட நமக்கு, நாம் பகைத்த மக்களையே நம்முடன் சங்கமிக்கச் செய்கின்றான்; நம்முடன் கொண்டு வந்து சேர்க்கின்றான் என்பது தான் அந்தப் பரிசாகும். அல்லாஹ் நமக்கு அளிக்கின்ற நற்செய்தியும் நன்மாராயமும் ஆகும்.

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் விடுக்கும் செய்தி இதுதான்.

ஏகத்துவவாதியே! உன்னுடைய ஒரே பணி ஏகத்துவத்தை மக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்ற பணி மட்டும் தான். அதை அவர்கள் எதிர்த்தால் அல்லாஹ்வுடைய பிரியத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு  நீ அவர்களிடம் உறவு வைக்காதே! நட்பு பாராட்டதே!

இதில் குறுக்கே வருவது உன் தாய் தந்தையாகக் கூட இருக்கலாம், திருக்குர்ஆனில் (9:114) அல்லாஹ்  குறிப்பிட்டது போன்று தன் தந்தையைப் பகைத்த  இப்ராஹீம் நபியை நீ முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்! அல்லாஹ் நினைத்தால் உனது உறவினர்களை இப்படி நிரந்தரப் பகையாளியாகவும் ஆக்கி விடுவான்.

அதே சமயம், முஸ்லிம்கள் பத்ர் போர்க்களத்தில் சொந்த பந்தங்களை எதிர்த்துப் போரிட்டதையும் முன்னுதாரணமாக ஆக்கி கொள்! இந்தப் போர்க்களத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் தனது சிறிய தந்தை அப்பாஸையும், அலீ (ரலி) தனது சகோதரர் அகீலையும் எதிர்த்துத் தான் களம் கண்டார்கள். பின்னால் அவ்விருவரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.

இப்படி அவர்களுக்கு மத்தியில் இணைப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தியது போன்று உங்களுக்கும் உங்கள் எதிரிகளுக்கு மத்தியில் அல்லாஹ் இணைப்பையும், பாசத்தையும் ஏற்படுத்துவான்.

உஹத் போர் முதல் அஹ்ஸாப் போர் வரை எதிர்த்து நின்ற அபூ சுஃப்யானையும், ஏனைய போர்களில் எதிர்த்து நின்றவர்களையும் இஸ்லாத்தில் இணைத்ததைப் போன்று உங்களுடைய எதிரிகளின்  இதயங் களை அல்லாஹ் இணைக்கவும் செய்யலாம்.

நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பகைத்துக் கொண்ட எதிரிகள் அத்தனை பேர்களும் பல்வேறு  போர்க்களங்களில் கொல்லப்பட்டு விடவில்லை. அவர்கள் போர்க் களங்களில் கொல்லப்பட்டதை விட பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றது தான் அதிகம் என்று நீங்கள் தெரிந்திருக்கலாம்.

நீங்கள் இந்தக் கொள்கையில்,  கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பைக் கடைப் பிடிப்பதில் உறுதியாக இருந்தால் மக்களை உங்கள் பக்கம் அல்லாஹ் திருப்பி விடுவான். காரணம், இதயத்தை ஈர்ப்பதும், மக்களைக் கொண்டு வந்து  சேர்ப்பதும் அவனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது.

இது தான் 60:7 வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு விடுக்கும் செய்தியாகும். இதை மாநாடு நமக்கு விடுக்கின்ற முதல் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது, ஒட்டு மொத்த தமிழகமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு மற்ற அரசியல், சமுதாய அமைப்புகளுக்குக் கூடாத அளவிற்கு நமக்கு பிரம்மாண்டமான, பிரமாதமான கூட்டம் கூடிவிட்டது என்று நினைத்தால் நாம் அழிந்து விட்டோம். இவ்வாறு நாம் நினைக்கத் தலைப்பட்ட நேரத்திலேயே அழிவு உறுதியாகி விட்டது என்று உறுதி செய்து கொள்ள வேண்டியது தான்.

அல்லாஹ் அத்தகைய ஆணவ மான, அகங்காரமான எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக!

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுகின்ற 110வது அத்தியாயத்தை நம்முடைய உள்ளங் களில் பதிய வைத்துக் கொள்வோமாக!

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது, அல்லாஹ் வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் அத்தியாயம் 110)

இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கட்டளையிட்டபடி இறைவனைத் துதித்து அவனிடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்வோமாக!

இதை இந்த மாநாடு நமக்கு விடுக்கின்ற இரண்டாவது செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.

(அல்குர்ஆன் 9:25)

அல்லாஹ் கூறுகின்ற இந்த எச்சரிக்கையையும் நாம் இதயத்தில் பதிய வைத்து, பாடமாகக் கொள்வோமாக! இவ்விரண்டும் நமக்கு மாநாடு விடுக்கும் செய்தியாகும்.

நம்மை இது வரைக்கும் சளைக்காமல் சடையாமல் சதாவும் எப்போதும் எதிர்த்துக் கொண் டிருக்கும் மக்களுக்கு இந்த மாநாடு விடுக்கும் செய்தி என்ன?

இந்த ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய எண்பதுகள் முதல் இன்று வரை நீங்கள் எங்களை  ஊர் நீக்கம் செய்வதிலிருந்து உயிருக்கு உலை வைப்பது வரையிலான அத்தனை வேலைகளையும் எங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தொய்வின்றி செய்து கொண்டே தான்  இருக் கிறீர்கள். ஆனால் அந்தச் சதி வேலை களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இவர்கள் யார்? நேற்று வரை உங்களுடன் இருந்தவர்கள் தான். அவர்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள் என்றார்கள் அதற்குக் காரணம் என்ன?

நாங்கள் குர்ஆன், ஹதீஸை அவர்களிடம் தூய வடிவில் எடுத்து வைக்கின்றோம். அது தான் அவர்களை அலை அலையாக இங்கு கொண்டு வந்து சேர்க்கின்றது.

இது அல்லாஹ்வின் வேலையாகும். எனவே நீங்களும் இந்தக் கொள்கையை ஏற்று இந்த சத்தியத்தில் உங்களை  ஐக்கியமாக்கிக் கொள்ளுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் பின்னரும் எங்களுக்கு எதிரான சதி வேலைகளில் இறங்கினீர்கள் என்றால், “(எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாக சூழ்ச்சி செய்பவன்” (அல்குர்ஆன் 3:54) என்ற அல்லாஹ்வின் வசனத்தை உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றோம்.

—————————————————————————————————————————————————————-

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும்ஒரு கொள்கை ஒப்பீடு

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

லா இலாஹ இல்லல்லாஹ்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை

இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும்.

இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர்.

குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது.

“அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம் களாகி விட முடியாது.

ஏனெனில் “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ என்பதில் மக்கா காஃபிர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை.

இதில் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களை விட அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற் குரிய இறைவன் – வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்ல எனும் சித்தாந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் ஆவர்.

இந்த அளவீட்டின் படி, குர்ஆன் வசன சான்றுகளின் துணை கொண்டு அலசினால் அதற்கான விடை மக்கா காஃபிர்களுக்கும், தமிழக முஸ்லிம் களில் அனேகமானவர்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதாகத்தான் உள்ளது.

இறைக் கோட்பாடு தொடர்பாக மக்கா காஃபிர்களின் கொள்கை என்னவாக இருந்ததோ அதையே தான் இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வோர் கொண்டிருக்கின்றனர்.

ஒப்பீடு: 1

வானம் பூமியைப் படைத்தது யார்?

வானம் பூமியைப் படைத்தது யார் என்று இன்றைக்கு உள்ள முஸ்லிம் களிடம் கேட்டால் அல்லாஹ் என்பார்கள். இதையே மக்கா காஃபிர்களும் சொன்னார்கள் என்கிறது திருக்குர்ஆன்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர் களிடம் நீர் கேட்டால் அல்லாஹ்என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். 

அல்குர்ஆன் 31:25

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”

அல்குர்ஆன் 29:61

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்எனக் கூறுவார்கள். 

அல்குர்ஆன் 43:9

ஒப்பீடு: 2

மழையைத் தருபவன் யார்?

வானிலிருந்து மழையைப் பொழிவித்து, மக்களை இரட்சிப்பவன் யார் என்று கேட்டால் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கூட மாறுபட்ட பதில்கள் வெளிப்படலாம். ஆனால் மக்கா காஃபிர்கள் சந்தேமற அல்லாஹ் தான் மழையைப் பொழிவிக்கிறான் என்று உறுதியாக நம்பினார்கள்.

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ்என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. 

அல்குர்ஆன் 29:63

மழையை இறக்குபவன் அல்லாஹ் தான் எனும் நம்பிக்கையில் முஸ்லிம்களுக்கு சற்றும் சளைக்காத வர்களாக மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பதை இவ்வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பீடு: 3

மனிதர்களைப் படைத்தவன் யார்?

இந்த வினாவிற்கு மக்கா காஃபிர்கள், இன்றைய முஸ்லிம்கள் ஆகிய இரு சாராரும் அளிக்கும் பதில் அல்லாஹ் என்பது தான்.

இதோ மக்கா காஃபிர்களிடம் அவர்களைப் படைத்தது யார் என்று வினவினால் அவர்களும் அல்லாஹ் என்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

அல்குர்ஆன் 43:87

ஒப்பீடு: 4

பூமி யாருக்குச் சொந்தம்?

வானம், பூமியைப் படைத்தது மட்டுமின்றி அவற்றை நிர்வகிப் பவனும், அதற்கு உரிமை படைத் தோனும் அல்லாஹ்வே என்பதும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதிலும் இப்போதுள்ள முஸ்லிம்களுடன் ஒன்றுபடவே செய்கின்றனர்.

இதைப் பின்வரும் வசனத்தில் அறியலாம்.

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! 

அல்குர்ஆன் 23:84, 85

ஒப்பீடு: 5

அர்ஷின் அதிபதி யார்?

அர்ஷ் என்றால் என்னவென்று சில முஸ்லிம்களே அறியாத நிலையில் உள்ளனர். ஆனால் அர்ஷின் அதிபதி யார் என்று முஹம்மது நபியவர்கள் மக்கா காஃபிர்களிடம் கேட்டால் அதற்கும் அவர்கள் அல்லாஹ் என்பார்களாம்.

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷின் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக! 

அல்குர்ஆன் 23:86, 87

இவ்வசனத்தின் பிரகாரம் இப்போதுள்ள முஸ்லிம்களை விட சற்றுத் தெளிவு உள்ளவர்களாகவே மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது.

ஒப்பீடு: 6

பெரும் துன்பத்தைப் போக்குபவன் யார்?

மக்கா காஃபிர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தத் தகவல் நம்மில் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.

உலகில் தங்களுக்கு ஏற்படும் பேரிடரை, பெரும் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் மட்டுமே என்று மக்கா காஃபிர்கள் உறுதியாக நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை இன்றுள்ள முஸ்லிம்களிடம் கூட சற்று குறைவாகத் தான் பார்க்க முடிகிறது.

கல் தடுக்கி கீழே விழும்போது கூட, “அம்மா’ என்றோ “முஹ்யித்தீனே’ என்றோ அழைப்பவர்கள் நம்மில் அதிகம் உள்ளனர்.

அப்படியிருக்க பெரும் துன்பத்தின் போது மட்டும் இவர்களுக்கு அல்லாஹ்வா ஞாபகத்திற்கு வரப் போகிறான்?

இதோ இந்த விஷயத்தில் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடத் தெரிவிக்கின்றான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக் கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. 

அல்குர்ஆன் 31:32

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் (அவனைப்) புறக்கணிக் கிறீர்கள். மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.  

அல்குர்ஆன் 17:67

ஒப்பீடு: 7

நம்பிக்கையின் உச்சம்

அல்லாஹ்வை பற்றிய மக்கா காஃபிர்களுடைய நம்பிக்கையின் உச்சமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)என்று கேட்பீராக! அல்லாஹ்வேஎன்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

எல்லாவற்றையும் அல்லாஹ்வே பாதுகாக்கிறான்

அல்லாஹ்வுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை

அனைத்து பொருளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

இவைகள் யாவும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

சுப்ஹானல்லாஹ்.

தமிழக முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி என்னென்ன நம்பிக்கைகள் உள்ளனவோ அவற்றில் பெரும்பாலானவை மக்கா காஃபிர்களிடம் இருந்துள்ளன.

சில விஷயங்களில் இன்றுள்ள முஸ்லிம்களை விட அதிகத் தெளிவு உள்ளவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

அப்படியிருந்தும் அவர்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. காஃபிர்களாகவே அடையாளப்படுத்துகிறான்.

திருக்குர்ஆனின் வழிநெடுக காஃபிர்களே, இறை மறுப்பாளர்களே என்று அல்லாஹ் அழைப்பது இந்த மக்களை நோக்கித் தான்.

அல்லாஹ்வைப் பற்றி பரவலான, அதிகமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருந்தும் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகளே என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டும் ஏன் இறைவன் அவர்களை முஸ்லிம் களாக ஏற்றுக் கொள்ளவில்லை?

இது தான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கியத் தருணமாகும்.

அல்லாஹ்வைப் பற்றிய பெரும் பாலான நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தும் அல்லாஹ்வுக்கு இணை உண்டு என அவர்கள் நம்பியது தான் அல்லாஹ் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காததற்கு முக்கியக் காரணமாகும்.

“காஃபிர்களே’ என்று இம்மக்களை நோக்கி அல்லாஹ் அழைப்பதன் பின்னணியிலும் இதுவே உள்ளது.

பரிந்துரையை வேண்டுதல்

அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

சில குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவைகளுக்கு அவர்கள் செலுத் தினார்கள். அவர்களிடம் பரிந்துரையை வேண்டினார்கள். ஆகவே தான் இறைவன் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமல் காஃபிர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங் களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். “வானங் களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே ஒற்றுமை, காரணம் இப்போதுள்ள முஸ்லிம்களிடமும் உள்ளது.

இவர்களும் அவ்லியாக்கள் மகான்கள் என்று சிலரை (குட்டித் தெய்வங்கள்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களை இறைவனுக்கு இணையாக்குகின்றனர்.

அவர்களிடம் பிரார்த்தனை புரிகிறார்கள்; ஸஜ்தா செய்கின்றனர்; பரிந்துரையை வேண்டுகிறார்கள்.

ஏன் இவர்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் இவர்களை வணங்கவில்லை; இவர்கள் அல்லாஹ் விடம் எங்களை நெருக்கி வைப்பார்கள்; அதற்காகத்தான் இந்த வழிபாடு’ என்கிறார்கள்.

இதே பதிலைத் தான் குட்டித் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கா காஃபிர்களும் கூறினார்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்க வில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 

அல்குர்ஆன் 39:3

ஆக இணைவைப்பிலும் அதை நியாயப்படுத்தக் காரணம் கூறுவதிலும் கூட அப்படியே மக்கா காஃபிர்களை இந்த முஸ்லிம்கள் ஒத்துள்ளனர்.

இடைத்தரகர் ஏற்படுத்தல்

இறைவனை நெருங்க வேண்டு மானால் ஒரு இடைத்தரகர் தேவை என்ற நம்பிக்கை மக்கா காஃபிர்களிடம் இருந்தது.

அதனால் தான் அல்லாஹ் அம்மக்களிடம் நான் நெருக்கமாகவே இருக்கிறேன். என்னை நெருங்க எந்த இடைத்தரகரும் தேவையில்லை என்று அறிவிப்புச் செய்கிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

தர்காவை வழிபடும் முஸ்லிம் களிடமும் மக்கா காஃபிர்களின் இந்த நம்பிக்கை உள்ளது. அல்லாஹ்வை நாம் நேரடியாக நெருங்க முடியாது. அவ்லியாக்கள், மகான்களின் பரிந்துரை தேவை என்று முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். தர்ஹா வழிபாட்டைக் கூட இறைவனை நெருங்குவதற்காகவே செய்கிறோம் என்று பிதற்றுகின்றனர்.

சிலை வழிபாடு

மக்கா காஃபிர்களிடம் சிலை வழிபாடு இருந்தது. பொய்யான கற்பனைக் கதாபாத்திரங்களை கற்சிலைகளாக வடித்து அவற்றை இணை தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர்.

கஃபாவினுள்ளே பல நபிமார் களின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களாஉங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை.

அல்குர்ஆன் 53:20-23

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352, 4289,

மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாடும் இப்போதுள்ள முஸ்லிம்களிடம் தன்மை மாறாமல் அப்படியே, நிறையவே உள்ளது.

பல இடங்களில் கற்பனை பாத்திரங்களைச் சொல்லி அவற்றின் பெயரில் அடக்கத்தலங்கள், தர்காக்கள். சில இடங்களில் நல்லடியார்கள், மகான்கள் என்று சொல்லி அவர்களின் பெயரில் பள்ளிவாசலிலேயே சமாதிகள். அவற்றின் மேல் போர்வை கள், பூமாலைகள், சந்தனங்கள், ஊதுபத்திகள், அவற்றுக்கு முன் ஸஜ்தா செய்வது, பிரார்த்தனை புரிவது என மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாட்டிற்கும் இந்த முஸ்லிம்களிடம் கொஞ்சமும் குறைவில்லை.

கூத்து, கும்மாளம்

வணக்கம் என்ற பெயரில் சீட்டியடிப்பது, கும்மாளமிடுவது என்பன போன்ற காரியங்களில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று குர்ஆன் சொல்கின்றது.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 8:35

தர்காவை வழிபடும் முஸ்லிம்களும் வணக்கம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றனர்; கும்மாளமிடுகின்றனர்.

இருட்டு திக்ர், ராத்திபு ஜல்ஸாக்களில் இவர்கள் போடும் ஜல்சா ஆட்டம் உலகம் அறிந்த ஒன்றே!

வணக்கம் என்கிற பெயரில் அவர்களாவது கைதட்டினர்; சீட்டி எழுப்பினர். இவர்களோ இசைக் கருவிகளை வைத்து இசைக்கின்றனர்.

இறை நம்பிக்கையில் இவர்களை அவர்கள் மிஞ்சினார்கள்.

கூத்தடிப்பதில் அவர்களை இவர்கள் மிஞ்சுகிறார்கள். என்னவொரு போட்டா போட்டி?

அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வின் பெயர்களைத் திரித்துக் கூறும் பாவச் செயலில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டார்கள் என்றும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 

அல்குர்ஆன் 7:180

இன்றைய முஸ்லிம்கள் அதற்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போன்று இதிலும் மல்லுக் கட்டிக்கொண்டு ஈடுபடுகின்றனர்.

அல்லாஹ்வின் அழகான பெயர்களை அநியாயத்திற்கு சிதைத்து சின்னாபின்னாமாக்கும் கண்டனத்திற்குரிய பாவத்தை மக்கா காஃபிர்களைப் போலவே இவர்களும் அரங்கேற்றுகிறார்கள்.

அல்லாஹ் என்பதை ஹூஹூ என்றும் அஹ் அஹ் என்றும் இன்னும் பல பெயர்களை, பலவாறாக திரித்துக் கூறி அதையும் வணக்கம் என்று சொல்லித் திரிகின்றனர்.

இப்படி இறை நம்பிக்கை, வழிபாடு என எல்லாவற்றிலும் மக்கா காஃபிர் களைப் பிரதிபலிக்கும் இவர்கள் யார்?

அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பிக் கொண்டே இத்தகைய காரியங்களில் ஈடுபட்ட அவர்கள் காஃபிர்கள் என்றால்…

அதைத் தங்கள் வாழ்வில் அப்படியே ஒத்திருக்கும் இவர்கள் மட்டும் முஸ்லிம்களா?

இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே செயல்பாடு, ஒரே வழிபாடு.

ஆனால் அவர்கள் காஃபிர்கள், இவர்கள் முஸ்லிம்கள் என்றால் இது எப்படி நியாயம்?

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஒப்பீடுகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்.

இன்னின்ன செயல்பாடுகளைக் கொண்டிருந்த மக்கா வாழ் மக்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக் காமல் காஃபிர்கள் என பகிரங்க அறிவிப்புச் செய்கிறான் எனில் அவர்களது நிலையை ஒத்திருக்கும் முஸ்லிம்களுக்கும் இறைவனின் தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

இணை கற்பித்தல் என்றால் ஏன்ன?

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

சென்ற இதழின் தொடர்ச்சி….

நாம் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர் மறையான இணை வைத்தல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்துமே இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் பெரும் அறியாமையிலேயே வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அவர்கள் இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக, முன்னேற்றத்திற்காகச் செய்கின்ற முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட இந்த மாபெரும் அநியாயத்தை அகற்றுவதற்காகவோ அல்லது அவர்கள் அதனை அறிந்து தவிர்ந்து வாழ்வதற்காகவோ செய்வது கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் தீனை நிலைநாட்டப் போகிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் கூட தீனின் அடிப்படையைத் தகர்க்கக் கூடிய இந்த இணைவைத்தல் எனும் பாவத்தை அறியாதவர்களாகத் தான் உள்ளனர்.

திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவையெல்லாம் இணை கற்பிக்கின்ற காரியங்கள் என்று நமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அவற்றை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. அல்லாஹ் எந்த ஆற்றலையும் ஏற்படுத்தாத பொருட்களில், காரியங்களில், இடங்களில் நமக்குப் பலன் இருப்பதாக நம்புதல். அதாவது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை அவற்றால் நீக்கிவிட இயலும், நமக்கு நன்மைகளை அவை தந்து விடும் என்று நம்பிக்கை வைப்பது. இவ்வாறு ஒருவன் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்.
  2. அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது. அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள் பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ, மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல். மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறுவது கூடாது. இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான்.
  3. இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை இறைவனல்லாதவர்களுக்குச் செய்தால், அல்லது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அவனுக்காகச் செய்வதற்கு மறுத்தால் அவனும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
  4. இறைவன் வஹீயாக இறக்கி வைத்த இறைச் சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும். ஒருவன் இறைவனுடைய வஹீயான இறைச் சட்டங்களை மறுத்தாலோ, அல்லது இறைவனல்லாத மற்றவர்களின் கருத்தையோ அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்டவற்றையோ, அல்லது தன்னுடைய மனோ இச்சையையோ மார்க்கமாகக் கருதினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த வனாவான். இறைவனல்லாதவர்களைக் கடவுளர்களாக வணங்கியவனாவான்.

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் நடைபெறுகின்ற சில இணை கற்பிக்கின்ற காரியங்களில் மேற்கண்ட நான்கு வகையுமோ அல்லது அதிகமானவையோ நிறைந்து காணப்படும்.

உதாரணமாக சமாதி வழிபாட்டை எடுத்துக் கொள்வோம். அதில் சமாதி எனும் மண்சுவர் நமக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தடுத்துவிடும்; நமக்கு நன்மைகளைக் கொண்டு வந்து விடும் என்று சமாதி வழிபாடு செய்பவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதன் காரணமாகத் தான் சமாதிகளைச் சுற்றி வலம் வருகின்றனர்.

சமாதிகளையும், தர்ஹாவின் நிலைப்படிகளையும், மூலைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். சமாதியில் வழங்கப்படும் சந்தனத்தைக் கழுத்திலும் தலையிலும் பூசிக் கொள்கின்றனர். கொடிமரங்களைத் தொட்டு முத்தமிடுகின்றனர். சாம்பலும் சர்க்கரையும் கலந்து வழங்கப்படும் பொருளைப் புனிதமாகக் கருது கின்றனர். இது நாம் வகைப் படுத்தியதில் முதலாவது வகையான இணை வைத்தலாகும்.

மறைவானவற்றை அறிதல், உள்ளத்தில் உள்ளவற்றை அறிதல், ஒரே நேரத்தில் பலர் பேசுவதை அறிதல் போன்ற இறைவனுக்கே மட்டும் உரித்தான பண்புகள் சமாதிகளில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களுக்கும் இருப்பதாக, சமாதி வழிபாடு செய்வோர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான், “யா முஹ்யித்தீன் கவ்சுல் அஃலம் (முஹ்யித்தீனே! மகதத்தான இரட்சகரே!)’ என்றெல்லாம் அழைக்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் இரண்டாவது வகையான இணை கற்பித்தலாகும். அதாவது இறைத் தன்மைகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புதல்.

இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளான பிரார்த்தனை செய்தல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், ஸஜ்தாச் செய்தல் போன்ற பல வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் மூன்றாவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

மேலும் ஊர்வலம், சந்தனக்கூடு, கந்தூரி, உரூஸ் போன்றவற்றை உருவாக்கி அவற்றை மார்க்கமாகப் பின்பற்றுகின்றனர். இறைவனால் இறக்கப்பட்ட இறைச் சட்டமாகிய வஹீயில் இது போன்ற கட்டளைகள் கிடையாது. மொத்தத்தில் சமாதி வழிபாடு என்ற ஒன்றே இறைக் கட்டளைகளில் கிடையாது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது நாம் வகைப்படுத்தியதில் நான்காவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

நாம் வகைப்படுத்திய நான்கு வகைகளையும் நாம் மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல வழிகெட்ட கொள்கைகள் ஒரு மனிதனிடம் புகுந்து விடும் போது ஓரிறைக் கொள்கையை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு தான் உத்தரவிடுகிறான்.

வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதைக் கற்றுக் கொள்வீராக.

அல்குர்ஆன் 47:19

பின்வரும் வசனத்தில் இறைக் கட்டளைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவுமே உண்மையான இறையடியார்களாக, அதாவது ஏகத்துவவாதிகளாக ஆக முடியும் என்பதைத் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள் என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப் பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்! (என்றே கூறினர்)

அல்குர்ஆன் 3:79

நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் இவற்றைத் தாமும் கற்றுக் கொள்வதோடு தர்பியா போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி பெரியவர் களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் முயற்சி, தியாகம் செய்ய வேண்டும்.

வழிகெட்ட இயக்கத்தினர்கள் தங்களுடைய வழிகேட்டைப் பல வழிகளிலும் புகுத்தி மறுமையில் நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காலகட்டத்தில், மக்களை இதிலிருந்து பாதுகாப்பது, எச்சரிக்கை செய்வது நம்முடைய தலையாய கடமையாகும். நிச்சயமாக இந்தக் கொள்கையை அறிந்தவர்களைத் தவிர வேறு யாரும் இதற்காகத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

இனி நாம் இணைவைத்தலின் முதல் வகையை விரிவாகக் காண்போம்.

இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல்

அல்லாஹ் இவ்வுலகில் பல்வேறு பொருட்களைப் படைத்துள்ளான். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு தன்மைகளை வழங்கியுள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் என்ன தன்மையை வழங்கியுள்ளானோ அதை மீறிய சக்தி ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் நிச்சயமாக அது இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

உதாரணமாக எலுமிச்சையை எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் சர்பத் தயாரிக்கலாம்; எலுமிச்சையை ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம்; சமையலுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற காரியங்களுக்காக ஒருவன் எலுமிச்சையைப் பயன்படுத்தினால் அது இணை கற்பித்தலாகாது. மாறாக ஒரு எலுமிச்சையை வாகனத்தின் முன்னால் கட்டித் தொங்க விட்டால் அது வாகனத்தையே காப்பாற்றும் என நம்புவது அதில் அல்லாஹ் என்ன பலனை ஏற்படுத்தவில்லையோ அதை இருப்பதாக நம்புவதாகும். இது இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும்.

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என உலக மக்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ள சிலை வழிபாடும் இவ்வகையான இணை வைத்தலைச் சார்ந்தது தான்.

சிலை வழிபாட்டில் நாம் வகைப்படுத்திய நான்கு வகையான இணை வைப்பும் நிறைந்துள்ளன என்றாலும் அதற்கு அடிப்படையான காரணம் இந்த முதல் வகையான இணைவைப்பு தான். அதாவது கற்களில் இல்லாத பலனை இருப்பதாக நம்புவது.

சிலை வழிபாட்டைத் தகர்த்த இஸ்லாம்

திருமறைக் குர்ஆன் சிலை வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. பின்வரும் திருமறை வசனங்கள் இதைத் தெளிவாக விளக்குகிறது.

சிலைகள் எனும் அசுத்தத் திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 22:30

இறைவா! இவ்வூரை அபய மளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!. இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 14:35, 36

சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 6:90

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக! என்று கேட்டனர். நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள் என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. அல்லாஹ் அல்லாதோரையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக் கிறான் என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

நபியவர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமே சிலை வழிபாடுகளை ஒழிப்பதற்குத் தான்.

அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?” என்று கேட்டேன். அதற்கு, “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவு மில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1512

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரை களையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.

அல்குர்ஆன் 34:13

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்திற்கு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சிலை வடிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உருவம் வரைபவனைச் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி),

நூல்: புகாரி 2086

உருவம் வரைதல் என்பது சிலை வடிப்பதையும், படங்கள் வரை வதையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.

(பள்ளிக் கூட மாணவர்கள் படம் வரைவது, சிறிய அளவிலான உருவங்கள், ஆதாரங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்காக போட்டோ எடுப்பது இவற்றைப் பற்றி முந்தைய ஏகத்துவ இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பி னார்களோ அந்தப் பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1764

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் வைத்து, “மது பானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின்  அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3223

சிலைகள் அறவே கூடாது என்று இறைவன் கட்டளையிட்டதற்குக் காரணம் கற்களில் இல்லாத சக்தியை இருப்பதாக நம்பிக்கை கொள்வது தான். இந்த நம்பிக்கை தான் அச்சிலைகளை வணக்கத்திற்குரியதாக மாற்றி விட்டது.

ஒரு கற்பாறையை வீட்டின் வாசற்படியாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதையே கற்சிலையாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதற்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அதன் தன்மை மாறாது. ஆனால் சிலை வணங்கிகள் உருவமாகச் செதுக்கப்பட்ட கற்களில் இல்லாத தன்மையைக் கற்பனை செய்து இறைவனுடைய ஆற்றல்களெல்லாம் அதற்கு இருப்பதாக இட்டுக் கட்டுகின்றனர்.

திருக்குர்ஆன் சிலைகளைப் பற்றி பேசும் அதிகமான இடங்களில் இரண்டு வாதங்களை முன் வைக்கின்றது.

  • ஒன்று, அந்தச் சிலைகள் எந்தப் பயனையும் தராது.
  • இரண்டாவது, அவற்றால் எந்த இடையூறையும் செய்ய முடியாது.

பயனையும், இடையூறையும் செய்கின்ற ஆற்றல் சிலைகளுக்கு இருக்கிறது என்று நம்பிய காரணத்தினால் தான் அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். இணை வைப்பாளர்களாக ஆனார்கள்.

இதோ இறை வசனங்களைப் பாருங்கள்:

இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந் தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராத வற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 29:16, 17

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:76

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:55

நன்மையோ, தீங்கோ செய்ய இயலாத கற்களிடம் அந்தச் சக்தி இருப்பதாக நம்பிய காரணத்தினால் சிலைகளை உடைக்குமாறும் அவ்வாறு நம்பிக்கை வைத்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் திருமறை பேசுகின்றது.

கலையழகிற்காக ஒருவன் சிற்பங்களை வடித்தாலும் அறியாத சமுதாயத்தினர் அதை வணங்கப்படும் பொருளாக ஆக்கி விடலாம் என்பதால் தான் நபியவர்கள் உருவப் படங்களை வரைவதற்குக் கூடத் தடை விதித்தார்கள். விபச்சாரத்தைத் தடுக்கின்ற இஸ்லாம் விபச்சாரத்தைத் தூண்டும் சிறிய, பெரிய வாயில்கள் அனைத்தையும் அடைக்கின்றது. அதுபோல் நபியவர்கள் உருவ வழிபாட்டைத் தோற்றுவிக்கும் அனைத்து வாயில்களையும் அடைப்பதற்கு வழிகாட்டியுள்ளார்கள்.

சிலை வழிபாடு என்பதன் பொருள், உருவமாகச் செதுக்கப்பட்டவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புவது மட்டுமல்ல. மாறாக எந்த ஒரு பொருளுக்கு இது போன்ற ஆற்றல் இருப்பதாக நம்பினாலும் அது சிலை வழிபாடு தான். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

சமாதி வழிபாடும் சிலை வழிபாடே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வே! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக்கி விடாதே! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக எடுத்துக் கொண்ட சமுதாயத்தை அல்லாஹ் சபித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அஹ்மத் 7054

நபியவர்கள் தன்னுடைய கப்ர், சிலையாக ஆகி விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். கப்ர் என்பது சிலை அல்ல. பிறகு ஏன் நபியவர்கள் கப்ரை சிலையாகக் குறிப்பிட்டார்கள் என்பதை நாம் நன்றாகச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

உருவமாகச் செதுக்கப்பட்ட கற்சிலை நன்மையோ, தீங்கோ செய்ய முடியுமென்று நம்பிக்கை வைத்த வர்கள் இணை வைப்பாளர்கள் என்றால் கப்ர் என்ற மண்சுவர் நன்மையோ, தீங்கோ செய்ய முடியும் என்று நம்பிக்கை வைப்பவர்களும் இணை வைப்பாளர்களே!

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உயர்த்தப்பட்ட கப்ருகளையும் இணைத்து அதனைத் தரைமட்டமாக்குமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1764

ஏதாவது ஒரு பொருளில் இறைவன் ஏற்படுத்தாத தன்மைகள் இருப்பதாகக் கருதி அதனால் நமக்கு நன்மைகளைக் கொண்டு வரவோ, தீமைகளைத் தடுக்கவோ இயலும் என்று ஒருவன் நம்பினால் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

சிலை வணக்கமும் கொடி மரமும் சமமே!

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத் என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலீ)

நூல்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892

இலந்தை மரத்தின் கீழ் ஒருவன் நிழலுக்காகப் படுத்தால் அது இணை வைத்தலாகாது. ஏனென்றால் மரத்தின் மூலம் நிழல் பெறும் பாக்கியத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் அதே மரத்தின் கீழ் தங்கினால் நமக்கு நல்லது நடக்கும் என்று இல்லாத ஒன்றை நம்பி அதன் கீழ் தங்குவதை, அதைப் புனிதப்படுத்துவதை நபியவர்கள் சிலை வணக்கத்திற்கு நிகராகக் குறிப்பிடுகிறார்கள்.

சிலுவையை உடைத்தெறிந்த இஸ்லாம்

சிலுவை என்பது கூட்டல் குறியீட்டைப் போன்று மரத்தாலோ அல்லது ஏதாவது ஒரு உலோகப் பொருளாலோ ஆன ஒன்று தான். ஆனால் கிறிஸ்தவர்கள் சிலுவையின் மூலம் நன்மை தீமை உண்டாக முடியும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உருவச் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியது போல் சிலுவைகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 5952

சிலுவையை வணங்கியவர்கள் மறுமையில் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை நபியவர்கள் குறிப்பிடும் போது, சிலை வணக்கம் செய்தவர்களோடு இணைத்துத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நால்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள்.

நூல்: புகாரி 7439

சிலுவையை நபியவர்கள் சிலை யோடு இணைத்துக் கூறுதவற்குக் காரணம் சிலைகளுக்கு எப்படி இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புகிறார்களோ அதுபோல் சிலுவைகளில் இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புவதால் தான்.

தாயத்து, தகடுகள்

எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வைத்தல் ஆகியவையாகும். இதில் இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல.

நாம் உடலில் தொங்க விடும் ஒரு பொருளை தாயத்து என்கிறோம். ஆனால் அது மட்டும் தாயத்து அல்ல! மாறாக நமக்கு நன்மையைக் கொண்டு வரும், தீமையைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் எந்த ஒரு பொருளைத் தொங்க விட்டாலும், மாட்டி வைத்தாலும், கட்டி வைத்தாலும் அது தாயத்தே ஆகும்.

இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இது போன்ற இணை கற்பிக்கும் காரி யங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

திருமணப் பந்தலில் குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

மஞ்சள் நிறமும், மஞ்சள் பைகளும் மங்களகரமானது என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆரத்தி எடுத்தால் அது கண் திருஷ்டியைப் போக்கி விடும்.

தாலி என்பதைக் கழுத்தில் தொங்க விடுவதால் பல்வேறு பலன்கள் ஏற்படும்.

மணமகன் மாலை மாட்டுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை, மணமகன் அணிந்த மாலையில் கால்பட்டு விட்டால் கணவன் மனைவிக்கு ஆகாது; எனவே திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து அந்த மாலையை கால் படாதவாறு எங்காவது கிணற்றிலோ ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.

வீடு கட்டும் போது பூசணிக் காயையோ, சோளக்கொல்லை பொம்மையையோ தொங்கவிட்டால் அது வீட்டிற்கு வரும் ஆபத்துகளைத் தடுக்கும்.

வீட்டிற்கு மேல் கருப்பு வெள்ளைப் புள்ளிகள் போடப்பட்ட பானைகளை வைத்தால் அது கண் திருஷ்டியைத் தடுக்கும்.

வீட்டு வாசலில் சங்கு, சீனாக்காரம், சிப்பி போன்றவற்றைத் தொங்க விட்டால் அவை வீட்டிற்கு ஏற்படும் முஸீபத்துகளைத் தடுக்கும்.

புது வீடு கட்டுவதற்கு முன்னால் சேவலை அறுத்து அதன் இரத்தத்தைத் தெளித்தால் அது அந்த இடத்திலுள்ள பேய் பிசாசுகளை விரட்டி விடும்.

வீட்டிற்கு நிலை விடும்போது அதன் குழியில் காசு அல்லது பாலை ஊற்றினால் வீட்டிற்கு நல்லது என்ற நம்பிக்கை.

வீட்டின் அடுப்பங்கரை கிழக்குப் பகுதியில் இருந்தால் தான் வீட்டிற்கு நல்லது.

காசு வாங்கும் கல்லாப் பட்டறை மேற்கு அல்லது தெற்குத் திசையில் இருந்தால் தான் கடைக்கு நல்லது.

வீட்டிற்கு வாசற்படிகள் அமைக்கும் போது தெருவிலுள்ள முதல்படி இலாபம், இரண்டாவது படி நஷ்டம், மூன்றாவது படி லாபம், நான்காது படி நஷ்டம் என்ற வரிசைப் பிரகாரம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் படி இலாபமாகத் தான் இருக்க வேண்டும். அது தான் வீட்டிற்கு நல்லது என நம்பிக்கை வைத்துள்ளனர்.

குழந்தையின் கன்னத்தில் வைக்கும் கருப்புப் பொட்டு குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டியைத் தடுத்து விடும்.

ரூபாய், வெற்றிலை அல்லது ஏதாவது ஒரு பொருளை நோய் ஏற்பட்டவரின் மீது நன்றாகச் சுற்றி வீதியில் போட்டு விடுவார்கள். இதற்குக் கழித்து வைத்தல் என்பார்கள். யார் அதைத் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு இந்த முஸீபத் சென்று விடும்.

தர்ஹாவிலுள்ள சந்தனம், கொடிமரம், எண்ணை, நெருப்பு, சர்க்கரை, யானை என அனைத்தும் நமக்கு நன்மையைத் தரும்.

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாகப் பல்வேறு நம்பிக் கைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு நமக்கு நன்மையையோ, தீமையையோ கொண்டு வருகின்ற ஆற்றல் ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் அது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நம்பிக்கை தாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் நபியவர்கள் தாயத்து அணிவதை இறைவனுக்கு இணைகற்பித்தல் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின் றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: அஹ்மத் 16781

“நிச்சயமாக (இணைவைக்கும் வரிகளால்) ஓதிப்பார்ப்பதும், தாயத்துகள் அணிவதும், திவ்லாக்கள் அணிவதும் இணைவைத்தலாகும் என்பது நபி (ஸல்) அவர்களிட மிருந்து நாங்கள் மனனமிட்ட செய்திகளில் உள்ளதாகும்” என்று இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். அப்போது இப்னு மஸ்வூது அவர்களின் மனைவி “திவ்லா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூது அவர்கள் “தூண்டிவிடக் கூடியது” என்று கூறினார்கள். (அதாவது அது கணவன் மனைவிக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அணிவது)

நூல்: அல் முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானீ (1442)

சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல் இணை கற்பிக்கின்ற காரியமாகும் என்பதையும் அதற்குரிய சான்றுகளையும் பார்த்து வருகின்றோம்.

சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல், உருவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

நபியவர்கள், “இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே”என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது; மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.

சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.

அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும்.

அல்லாஹ்வின் சாபம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத் தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்என்று கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 925

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லா திருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1390

நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்குப் பணிதல், அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத் தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப் படவில்லை. இன்றளவும் நபியவர் களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.

“இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்” என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும், ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்

உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 918

கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்கதலமாக்குவதாகும்.

இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப் படுத்துகிறது.

கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ் விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.

அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.

இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரைப் பள்ளி வாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம்.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்து எறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1764

நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1430)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1768, 1769)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறை யையும் குளியலறையையும் தவிர

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் (11801)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: அபூ தாவூத் (1746)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே சமாதிகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

சபிக்கப்பட்ட பெண்கள்

கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி (976)

பெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக்காகப் பொது மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்ருகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.

சமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

கோமாளிக் கூத்து

தமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித் தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங் களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1430)

வீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும் வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான்.

ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு ஒரு வீடு இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே நபியவர்கள் விளக்குகிறார்கள்.

அது போன்று தான் “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டார்கள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல், ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்கியிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது  போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.

எனவே மேற்கூறப்பட்ட இணை வைத்தலின் வகைகளை நாம் விளங்கி, அவற்றிலிருந்து விலகி, நிரந்தர நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

நாளைய ஞானம் நபிக்கு உண்டா?

சபீர் அலி எம்.ஐ.எஸ்.சி.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! அவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்பு, ஆகிய எந்த ஒன்றிலும் அணுவளவும் கூட்டு இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை சங்கநாத முழக்கமாகும்.

இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை நியமித்தான்.

நமக்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள்.

ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் எந்த மக்களைச் சீர் செய்ய வந்தார்களோ, எந்தக் கடவுள் கொள்கையைக் கண்டிக்கப் புறப்பட்டார்களோ அந்த மக்கத்து இணை வைப்பாளர்களின் கொள்கையை அச்சுப் பிசகாமல் இன்று முஸ்லிம்கள் என்று நாவளவில் சொல்லிக் கொள்ளும் சில இஸ்லாமியர்கள் (?) செய்து வருவதைப் பார்க்கிறோம்.

அவரிடத்தில் பிரார்த்திக்கிறோம், இவரிடத்தில் பிரார்த்திக்கிறோம் என்று கண்டவரிடமும் அல்லாஹ்வுடைய ஆற்றலை பங்கு வைத்த இந்தச் சமூகம், ஏகத்துவத்தைப் போதிக்க அரும்பாடுபட்ட அல்லாஹ்வுடைய தூதரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு வைக்கவில்லை.

மறைவான விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது என்பது இஸ்லாத்தின் அசைக்க முடியாத கொள்கை!

ஆனால் இவர்களோ, அவ்லியாக்கள் மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலும் அவர்களுக்கு, மறைவான செய்திகளை அறியும் திறன் இருக்கிறது என்று வாதிடுகிறார்கள். இதே போன்று அல்லாஹ்வுடைய தூதுருக்கும் அந்த ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

ஏகத்துவத்திற்கு ஊசி முனை யளவும் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் கவனமாக இருந்து வருகின்றது. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் மறைவானவற்றை அறியும் ஆற்றல் சூனியக்காரன், ஜோதிடக்காரன், குறிசொல்பவன், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட மனிதன் உட்பட யாருக்கும் கிடையாது. அல்லாஹ்வுடைய தூதர்களுக்கும் அந்த ஞானம் கிடையாது என்றும் தன்னுடைய பிரச்சார பயணத்தை ஆரம்ப காலம் முதல் செய்து வருகிறது.

மறைவான ஞானம் என்பது, ஆறறிவால் எதை அறிய முடியாதோ அதுவேயாகும்.

மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட எந்த மனிதனுக்கும், ஜின்கள், வானவர்கள் உள்ளிட்ட யாருக்கும் இல்லை. அது தனக்கு மட்டுமே உரிய ஞானம் என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான்.

அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறை களில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் (31:34)

ஒரு மனிதன், தான் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்று தன்னைப் பற்றியே அறிய முடியாது எனில் அடுத்தவர்களுடைய நிலையை எவ்வாறு அறிய முடியும்?

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் (6:59)

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (27:65)

மறைவான ஞானம் அல்லாஹ் விற்கு மட்டுமே என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இன்னும், நபி (ஸல்) அவர் களுக்கும் மறைவானவற்றை அறியும் ஆற்றல் இல்லை என்பதை குறிப்பிட்டும் இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும்; மறைவானதை அறிவேன் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன்(6:50)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறை வானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (7:188)

ஒரு மனிதன் தனக்கு மறைவான ஞானம் இருந்தால் அவன் தன்னுடைய எதிர்கால வாழ்வை அறிந்து அதில் எந்தத் தீமையும் அமையாமல் அவற்றைத் தடுத்து நிறுத்தி, நன்மைகளை மட்டுமே தன் உடமையாக ஆக்கிக் கொள்வான்.

மேற்கண்ட வசனத்தில், “நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது” என்று கூறப்படுவதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறியக் கூடியவர்களாக இல்லை என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் கற்றுக் கொடுப்பதற்காக, குர்ஆனை நன்கு மனனம் செய்த எழுபது நபர்களை தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களை எதிரி நாட்டிற்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பும் போது எதிரிகள் அவர்களைக் கொன்று விட்டார்கள் (பார்க்க: புகாரி – 1300)

இவ்வாறு கொன்று விடுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்திருந்தால் நிச்சயம் அந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட பின் அது நபி (ஸல்) அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக, கடும் கவலையாக இருந்தது.

இன்னும், உஹதுப் போரின் இறுதியில் தோல்வி ஏற்படுவதற்கு அம்பு எய்தும் வீரர்களில் சிலர் செய்யும் தவறு காரணமாக இருக்கும் என்று முன்னரே நபி (ஸல்) அறிந்திருப்பார் களேயானால் அவர்களைச் சரி செய்து போரில் வெற்றிவாகை சூடியிருப் பார்கள். ஆனால் அவ்வாறில்லாமல் அவர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள். (புகாரி – 3039)

மேலும், நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய பாசத்திற்குப் பாத்திரமான சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அறிந் திருந்தால் அது ஏற்படாமல் தடுத்து நிறுத்தியிருப்பார்கள். (புகாரி – 4072)

இந்தச் செய்திகளும், இதுவல்லாத இன்னும் ஏராளமான செயதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான வற்றை அறியும் ஆற்றல் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறு அறிந்திருப்பார்கள் எனில் இவ்வளவு துயரங்களும் அவர்களின் வாழக்கையில் இடம்பெற்றிருக்கத் தேவையில்லை.

தன்னுடைய வாழ்க்கையில் நடை பெறவிருக்கும் எதிர்கால – மறைவான விஷயங்ளே அல்லாஹ்வுடைய தூதருக்கு சுயமாக அறிந்து கொள்ள முடியாது எனும் போது மற்றவர்களின் வாழ்க்கையின் செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

மேலும், மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயமாகும். அதுபற்றி நபிகள் நாயகத்திடம் கேள்வி வரும்போது இறைவன் நபி (ஸல்) அவர்களை அளிக்க சொல்லும் பதிலைப் பாருங்கள்.

யுக முடிவு நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளதுஎன்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

அல்குர்ஆன் (7:187)

இறைவனின் மறைவான ஞானம் தனக்கு இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மற்றொரு நிகழ்வு இதோ:

இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (10:20)

இதிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு மறைவான விஷயத்தை அறிய மாட்டார்களோ அது போன்றே நபியும் அறிய மாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

இன்னும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நபியைச் சுற்றி வாழ்ந்து வந்தார்களோ அது  போன்றே முஸ்லிம்களைப் போன்று நடித்து நயவஞ்சகத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்த முனாஃபிக்குகளும் எதிரிகளுக்கு சேவை செய்வதற்காக முஸ்லிம்களோடு கலந்து வாழ்ந்து வந்தார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள கிராம வாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்”.

அல்குர்ஆன் (9:101)

மறைவான விஷயம் என்பது எதிர்காலத்தை அறியக்கூடிய ஆற்றல் மாத்திரம் இல்லை. அடுத்தவர் உள்ளத்தில் உள்ளதை அறிவதும் மறைவானவற்றை அறிவது தான்.

நபி (ஸல்) அவர்கள் மறைவான வற்றை அறிவார்கள் எனில் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் நயவஞ்சகர்கள் யார்? நடிப்பவர்கள் யார்? உண்மை யாளர்கள் யார்? என்று அறிந்திருப் பார்கள். ஆனால் அவர்களால் அதை சுயமாக அறியமுடியவில்லை.

மறைவான ஞானம் அல்லாஹ் விற்கு மட்டுமே உரியது என்பதை உறுதிப்படுத்தும் நபியவர்களின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

(பெண்களின்) கருவறைகளில் என்ன உருவாகும் (பெண்ணா? ஆணா? என்று) யாரும் அறிய மாட்டார்கள்.

எந்த உயிரும் தாம் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.

எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.

மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி – 1039

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்

அறிந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப் படுவார்கள்.  அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர் கüல் சிலர்என்று சொல்வேன். அதற்கு “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாதுஎன்று கூறப்படும்.

புகாரி 4625 (ஹதீஸின் சுருக்கம்)

அல்லாஹ்வுடைய தூதர் உயிரோடு இருக்கும் போது மறைவான விஷயத்தை எப்படி அறியாதவர்களாக இருந்தார்களோ அதுபோன்றே மரணித்ததற்குப் பிறகும் அறிய வில்லை என்பது இச்செய்தியிலிருந்து தெளிவாகிறது.

தர்காவாதிகள் சொல்வதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் மரணித் தற்குப் பிறகும் மறைவானவற்றை அறிவார்கள் என்றிருக்குமானால் அவர்கள் தன்னுடைய தோழர்களில் யார் தவறு செய்தவர்கள் என்று அறிந்து கொண்டு அவர்களைப் பார்த்ததும் அவர்களுக்காக இரக்கம் காட்டியிருக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த தற்குப் பிறகு மறைவானவற்றை அறிய மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக் கட்டும். அவர்கள் உயிரோடு இருக்கும் போதுகூட மறைவான விஷயத்தை அறியக்கூடியவர்களாக இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தனது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுர்யமானவரிடமிருந்து) செவியேற்பதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதைத் தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)

நூல்: புகாரி 6967

நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வழக்குகளைக் கொண்டு வரும்போது அவர்களில் யார் வாதத் திறமை மிக்கவராக உள்ளாரோ அவருக்கே தன்னுடைய தீர்ப்பை வழங்குவதாக அல்லாஹ்வுடைய தூதர் இச்செய்தியில் கூறுகின்றார்கள்.

நபியவர்கள் மறைவானதை அறியக்கூடியவர்களாக இருந்தால் தன்னிடம் வழக்கை எடுத்து வருபவர்கள் வந்த உடனே, உன்னுடைய உரிமை இது, இவருடைய உரிமை இது என்று அவர்களிடம் எதையும் விசாரிக்கா மலேயே சரியான தீர்ப்பை வழங்கி யிருக்க வேண்டும். அல்லது அவர்களிடம் வாதத்தைக் கேட்டு விட்டாவது இதில் யார் பொய்யர், யார் உண்மையாளர் என்பதையாவது அறிந்து அதன்படி தீர்ப்பளிக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறெல்லாம் இல்லாமல் அவர்களுடைய வாதத்தைக் கேட்டு அவர்களில் யார் உண்மையுரைக்கிறார் என்பது தெரியாமல் சில வேளை தவறான தீர்ப்பை அறிவித்துவிடுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மறைவான விஷயத்தை அறியக்கூயடிவர்களாக இல்லை என்பது தெளிவாகிறது.

உயிரோடு இருக்கும்போதே மறைவான விஷயத்தை நபி (ஸல்) அறிய முடியவில்லையென்றால்  மரணித்ததற்குப் பிறகு எவ்வாறு அறிய முடியும்?

மறைவானற்றை அல்லாஹ்வுடைய தூதரால் அறிய முடியும் என்று சொன்ன சிறுமிகளைக் கூட நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

என்னுடைய திருமண தினத்தின் காலையில் நபியவர்கள் என்னிடத் தில் வந்தார்கள். (அப்போது) என்னிடத்தில் இரண்டு சிறுமிகள், பத்ரு போரில் கொல்லப்பட்ட எனது பெற்றோரை (நினைத்து) கவலைப் பட்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். “எங்களிடத்தில் நாளை நடக்கவிருப்பதை அறியும் நபி இருக்கிறார்என்று அதிலே அவ்விருவரும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வைத் தவிர நாளை நடப்பதை யாரும் அறிய மாட்டார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபைய்யிஃ பின்த் முஅவ்வித்

நூல்: இப்னு மாஜா 1897

சிறுமிகள் கூறுவதைக்கூட நபி (ஸல்) தடுக்கின்றார்கள் என்றால் எந்த அளவிற்கு மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. அதில் யாரும் கூட்டில்லை என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை இச்செய்தியிலிருந்து விளங்க முடிகிறது.

இன்று மார்க்க அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய தூதருக்கு மறை வான ஞானம் இருக்கிறது என்றும், இன்னும் ஒருபடி மேலே சென்று நல்லடியார்களுக்கும் அந்த ஆற்றல் இருக்கிறது என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் மறைவான ஞானம் விஷயத்தில் சிறுமிகள் தானே என்று கூட பாராமல் கண்டிக்கிறார்கள் எனில், மார்க்கத்தை கற்றுக் கொண்ட ஆலிம்கள் இவற்றைச் சொன்னால் அது எவ்வளவு கண்டனத்திற்குரியது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மறைவான வற்றை அறிவார்கள் என்று ஒருவன் கூறினால் அவன் பொய்யன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் “அன்னையே!  முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத் தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்எனும் (6:103வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லைஎனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லைஎனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், “எவர் உங்களி டம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்…எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு “(மிஃராஜின் போது நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4855.

“அல்லாஹ்வுடைய தூதர் மறைவான வற்றை அறிவார்கள் என்று கூறுபவர் பொய்யரே’ என்று ஆயிஷா (ரலி) கூறுவதிலிருந்து நபியுடன் வாழந்த நபித்தோழர்களுக்கும் இந்த நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே இச்செய்தியை இங்கே சுட்டிக் காட்டுகின்றோம்.

அல்லாஹ்வுடைய தூதருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தினாலும் இங்கே சுட்டிக் காட்டியதே போதுமானதாக உள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலம், பிறரின் உள்ளத்தில் உள்ள விஷயம் போன்ற மறைவான ஞானம் இல்லையென்றாலும் அல்லாஹ் ஒரு சில இடங்களில் இதற்கு விலக்களிக் கின்றான். மறைவான செய்திகளை தூதர் (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

அல்குர்ஆன் – 3:179

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்தி களை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

அல்குர்ஆன் – 72:26-28

மக்களை நன்மையான காரியங் களின் பால் ஆர்வமூட்டுவதற்காக சொர்க்கம் இன்னும் அதில் வழங்கப்படும் கூலிகள், அவர்கள் தீமையின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காக நரகம் இன்னும் அதில் உள்ள தண்டனைகள், மேலும் அவர்கள் படிப்பினை பெறுவதற்காக கடந்த கால வரலாறுகள் போன்ற மனிதனுடைய அறிவால் அறிய முடியாத ஒரு சில செய்திகளை மாத்திரம் இறைவன் தனது தூதர்களுக்குத் தெரிவிப்பான். அந்தத் தூதர்கள் நமக்கும் கண்டிப்பாக அவ்விஷயங்களை தெரியப்படுத்தி விடுவார்கள். அவர்கள் அந்த மறைவான விஷயங்களை சரியான முறையில் குறைவில்லாமல் எடுத்துச் சொல்கின்றார்களா என்பதைக் கண்கானிக்க இறைவன் அவர்களைச் சுற்றி வானவர்களையும் ஏற்படுத்தி இருக்கின்றான்.

சாதாரண மனிதர்களுக்கும், நபிமார்களுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ – இறைச்செய்தி வாயிலாக அறிந்து கொள்வார்கள். நாம் அந்த தூதர்கள் வாயிலாக அறிந்து கொள்வோம். அவர்கள் நமக்கு எதை அறிவித் தார்களோ அதைத் தாண்டி அவர்களுக்கும் வேறெதுவும் தெரியாது. நமக்கும் தெரியாது.

இறைவன் இதுபோன்ற கூலிகள், தண்டனைகள் போன்ற ஒரு சில விஷயங்களைக் கூட அறிவிக்க வில்லையென்றால் மனிதன் நன்மையான எந்தக் காரியத்திலும் ஆர்வமில்லாதவனாகவும், எந்த அச்சமுமில்லாமல் பாவங்களில் தான்தோன்றித்தனமாக ஈடுபடுப வனாகவும் மாறிவிடுவான்.

மனிதன் ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்துவதாக இருந்தாலும், ஒரு விஷயத்திலிருந்து விலகுவதாக இருந்தாலும் அதன் விளைவைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால்தான் விலகுவான். நன்மையாக இருந்தால் ஆர்வம் காட்டுவான்.

அவ்வாறில்லாமல், பொதுவாக ஒரு ஏவலோ, விலக்கலோ இருந்தால் அதில் மனிதனுடைய ஆர்வமும், அச்சமும் இல்லாமல் போய்விடும்.

ஒரு சில செய்திகளை தூதர்களுக்கு இறைவன் அறிவித்து, அவர்கள் நமக்கு அறிவிப்பார்கள் என்பதற்கு கீழ்க்காணும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்என்று கூறினார்கள்.

நூல் – புகாரி 1149

பிலால் (ரலி) சொர்க்கத்தில் இருப்பார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து, அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு அறிவிக்கின்றார்கள் என்று தான் இச்செய்தியை புரிந்து கொள்ள வேண்டும். அதுவல்லாது, நபி (ஸல்) அவர்களே சுயமாக அறிந்து கொண்டார்கள் என்று புரிந்தால், இஸ்லாத்தின் ஏராளமான ஆதாரங்களுக்கு மாற்றமானதாகும்.

அதுமட்டுமல்லாமல், நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் என்று வாதிடுபவர்களுக்கு இந்த ஹதீஸிலேயே உரிய மறுப்பும் உள்ளது.

ஏனெனில், சொர்க்கத்தில் பிலால் (ரலி) அவர்கள் இருப்பார்கள் என்பதை மட்டும் தான் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். அவர்கள் என்ன காரியத்திற்காக சுவர்க்கம் புகுந்தார்கள் என்பது நபியவர்களுக்குத் தெரியாமல் பிலால் (ரலி) அவர்களிடமே அதுபற்றி வினவுவ திலிருந்தே மறைவான ஞானம் நபிக்கு இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது; ஒரு சில விஷயத்தை மாத்திரம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது வஹீயின் மூலமாக அறிவித்துக் கொடுப்பான். அவர்கள் மரணித்ததற்குப் பிறகு அந்த விஷயங்களும் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கும்  மறைவான ஞானம் கிடையாது என்பதை அறிவிக்கின்றன. ஆனால், அவ்லியாக்களும் நல்லடியார்களும் மறைவானவற்றை அறிவார்கள் என்று தர்காவாதிகள் வாதிடுகிறார்கள். அதற்கு இஸ்லாத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

அல்லாஹ்வுடைய தூதரே மறை வான விஷயங்கள் அனைத்தையும் அறிய முடியாதென்றால் மற்ற மனிதர்களின் நிலை என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய மறைவானற்றின் ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கும், நல்லடியார்களுக்கும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அது இறைவனுக்கு இணை கற்பிக்கும்  பெரும்பாவமாகும்.

—————————————————————————————————————————————————————-

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

வஸீலா என்றால் என்ன?

எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும். அதாவது தமிழில் “துணைச் சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று கூறுவர்.

நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:35)

மேற்கண்ட வசனத்தில் தன்னை நோக்கி ஒரு வஸீலாவை தேடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும் கடவுளை நெருங்கிடலாம் என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களில் இருக்கிறது.

ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப் பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலா என்ற துணைசாதனத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்றுதான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.

நாம் இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களும், நற்செயல்களும், நல்ல சொற்களும்தான் வஸீலா என்பதை நபிமொழிகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங் களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி

நூல்: புகாரி (6502)

நபி (ஸல்) அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள். அதில்  “அல்லாஹ்வே, நான் உன்னிடத்தில் சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட் கிறேன்என கேட்குமாறு சொல்லிக் கொடுக்கிறார்கள். 

நூல்  அஹ்மது ( 23870)

நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும் தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம், அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவற்றை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.

இறைவனின் பக்கம் நெருங்குவ தற்குத் தன்னை வஸீலாவாக எடுத்துக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறவேயில்லை. அப்படியிருக்க வேண்டுமென்றால் தன்னுடைய பாசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ், நல்லறங்களின் மூலமாகத்தான் தன்னிடத்தில் உதவி தேட வேண்டும் என்று கற்றுத் தருகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகை யின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

பல்வேறு ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாக நல்லறங்களைத்தான் கூறியிருக்கிறாôகள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

  1. குகைக்குள் மூன்று நபர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலமாகத்தான் இறைவனுடைய உதவியைக் கோருகின்றார்கள்.

(பார்க்க: புகாரி 2272)

  1. ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தை நெருக்கமாக்கியர் போன்றவராவார். இரண்டாவது நேரத்தில் வருபவர் மாட்டையும் மூன்றாவது நேரத்தில் வருபவர் கொம்புள்ள ஆட்டையும் நான்காவது நேரத்தில் வருபவர் கோழியையும் ஐந்தாவது நேரத்தில் வருபவர் முட்டையையும் நெருக்க மாக்கியவர் போன்றவராவார் என்று கூறியுள்ளார்கள்.

(பார்க்க புகாரி 881)

அதாவது ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை இவற்றைத் தர்மம் செய்து அதன் மூலம் இறை நெருக்கத்தைத் தேடியவர் போன்றவராவார்.

இந்தச் செய்தியிலும் தர்மம் செய்தல், ஜும்ஆவிற்கு வருதல்  போன்ற  நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய காரியங்களாகக் கூறப்படுகிறது.

  1. இரவு நேரங்களில் நின்று தொழுவது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகும். (திர்மிதி 3472)

இந்த ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை என்ற நல்லறத்தைத் தான் இறைநெருக்கத் திற்குரியதாக கூறுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய “வஸீலா” துணைச் சாதனம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மகான்களின் பொருட்டால் வஸீலா இணைவைப்பே!

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணை வைத்தல் ஆகும். ஏனெனில் இறைவனை நிர்பந்திப்பவர் யாரும் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வ-யுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத் துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6339)

நபிமார்களாக இருந்தாலும், மலக்குமார்களாக இருந்தாலும், மகான்களாக இருந்தாலும் இறைவனை யாரும் நிர்பந்திக்க முடியாது.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் “நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது வலியுறுத்திக் கேளுங்கள். தந்தால் தா, தராவிட்டால் போ” என்ற ரீதியில் பிரார்த்திக்கக் கூடாது என்று வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் இறைவனை யாருமே நிர்பந்திக்க முடியாது. யாருக்காகவும் செய்ய வேண்டும் என்ற இழிவை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன்.

மகான்கள் மூலம் வஸீலா தேடினால் இறைவன் தருவான் என்று கூறுவது இறைவனை இழிவுபடுத்தும் குஃப்ரான காரியம் ஆகும். இணை வைத்தல் எனும் பெரும் பாவம் ஆகும்.

குர்ஆன், சுன்னாவின் அடிப் படையில் கூறப்படும் இந்தச் சட்டத்தை இமாம் அபூஹனீஃபாவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருவன் “இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்” என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரிய தாகும். ஏனென்றால் படைத்தவனிடத் தில் படைக்கப்பட்ட பொருளுக்கு  எந்த அதிகாரமும் இல்லை

ஹனஃபி மத்ஹப் நூல்: ஹிதாயா

பாகம்: 4, பக்கம்: 459

நபி (ஸல்) அவர்களின் பொருட் டாலும், மகான்களின் பொருட்டாலும் இறைவனிடம் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள். அதற்கு ஆதாரமாக “இறைநம்பிக்கை யாளர்களே! அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:35) என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.

இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். “மகான்களும் வஸீலா தேட வேண்டும்” என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன.

  1. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
  2. அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.
  3. அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.

இறைவனை அஞ்சுவதும் அறப் போர் செய்வதும் எப்படி நபி (ஸல்) அவர்களுக்கும் கடமையோ அதைப் போன்றுதான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்வதும் அவர்கள் மீது கடமையாகும். எனவே, நபி(ஸல்) அவர்கள் வஸீலா தேடுவதற்கு எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.

மகான்கள் கூட வஸீலா தேடு கிறார்கள் என்று பின்வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார் களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(திருக்குர்ஆன் 17:57)

மகான்களே அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக வஸீலாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அவர்களை வஸீலாவாகக் கொள்ள லாம் என்பது முட்டாள்தனமாகும். தன்னுடைய வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது போன்றதாகும்.

பரேலவிகளின் ஆதாரமும் சரியான விளக்கமும்

இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன் வைக்கின்றார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் போது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) அவர்கள் மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். “இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!என்று உமர் (ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல்: புகாரி (1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ, அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான சான்றாகும்.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை. இதிலிருந்தே இறந்து விட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலா வாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தி இறை வனிடம் மழைக்காகப் பிரார்த்திக் கிறார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.

யார் சிறந்தவர் என்ற அடிப் படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ் (ரலி) அவர்களை விட உமர் (ரலி) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர் (ரலி) அவர்கள் முன்னிருத்தப் படவில்லை. இதிலிருந்தே மகான் களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.

உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தியது அவர்களுடைய பணிவைக் காட்டுகிறது. மேலும், இதுபோன்று மக்கள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்து பிரார்த்திக்கும் போது ஒருவரைத் தலைமையாகக் கொள்ள வேண்டும் என்பதால் தான் அங்கே அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தி இருக்கிறார்கள். உமர் (ரலி) சிறந்தவராக இருந்தும் அப்பாஸ் (ரலி) அவர்களை முன்னிருத்தியதைப் போன்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் சாதாரண ஒரு மனிதரை முன்னிருத்துவார்களா?

இதிலிருந்தே இந்தச் செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, நல்லறங்களைத்தான் நாம் இறைவனை நெருங்குவதற்குரிய வஸீலாவாகக் கொள்ளவேண்டும். இதுவே தெளிவான நபிவழியாகும்.

ஆதம் நபி மன்னிப்பு கேட்டது எப்படி?

ஆதம் (அலை) அவர்கள் தாம் செய்த பாவத்திற்காக நபியவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள். எனவே நாம் மகான்களின் பொருட்டால் பாவமன்னிப்புத் தேடலாம் என வழிகெட்ட பரேலவிகள் கூறுகின்றனர்.

இது குர்ஆனுக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட ஒரு விசயமாகும்.

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிட மிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:37

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இதில் கூறப் படாவிட்டாலும் கீழ்க்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லை யானால் நட்டமடைந்தோராவோம்என்று அவ்விருவரும் கூறினர்

அல்குர்ஆன் 7:23

ஆதம் நபி பிரார்த்தனை செய்த வார்த்தைகள் இவை தான் என்று மேற்கண்ட வசனம் தெளிவு படுத்துகிறது.

இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதை யும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக பரேலவிகள் கூறும் கட்டுக்கதை இதுதான்:

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழை வாயிலில் “லாயிலாஹ இல்லல் லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப் பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?” என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் “அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்” என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். “இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பா யாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப் படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவ மன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக் கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.

எனவே இந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.

பார்வையற்றவர் எதன் பொருட்டால் வஸீலா தேடினார்?

பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்கு மாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். “நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன் வைத்து உன்னிடம் முன்னோக்கு கின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன் வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி)

நூல்: இப்னுமாஜா 1375,  அஹ்மத் 16604

மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் காட்டி மகான்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என பரேலவிகள் வாதிக்கின்றனர்.

ஆனால் மேற்கண்ட நபிமொழியை நன்றாகப் படித்து சிந்தித்துப் பார்த்தால் பரேலவிகளின் வாதத்திற்கு இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

“பார்வையற்ற நபித்தோழர் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தான் நபியவர் களிடம் கோரிக்கை வைக்கிறார்.

நபியவர்கள் வாழும் போது எத்தனையோ நபித்தோழர்கள் தங்களது இன்னல்கள் நீங்குவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இன்றைக்கும் நமக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் போது “எனக்காக துஆச் செய்யுங்கள்” என்ற நாம் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு தான் அந்த நபித்தோழர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்.

நபியவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்து விட்டு. அவருக்காக நபி செய்த துஆவின் காரணத்தினால் தமது நோயை நீக்குமாறு பிரார்த்திக்குமாறு அந்த கண் தெரியாத நபித்தோழருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

நபியவர்கள் தமக்காகச் செய்த பிரார்த்தனையின் பொருட்டால் தமது இன்னலை நீக்குமாறு தான் அந்த நபித்தோழர் பிரார்த்தித்தாரே தவிர நபியின் பொருட்டால் தமது இன்னலை நீக்குமாறு அவர் பிரார்த்திக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, “வ ஷஃப்பிஃனீ ஃபீஹி’ என்ற வார்த்தையாகும்.

இதன் பொருள்: என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை (துஆ) செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை (துஆவை) ஏற்பாயாக, நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக

இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.

இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்த அர்த்தமும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் மறைக்கின்றனர்.

மகான்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய் விடுகின்றது.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

இணைவைப்பே தீமைகளின் தாய்!

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

மதியை மயக்கும் மது

இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும் அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத் தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன.

ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.

அவற்றுள் ஒன்றாக, மதுப் பழக்கம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளது. இஸ்லாமிய பார்வையில், மதுப்பழக்கம் என்பது மனிதர்களை வழிகெடுக்கத் துடிக்கும் ஷைத்தானால் தூண்டப்படும் காரியம். இறை அருளை விட்டும் தூரமாக்கும் செயல்.

இணை வைப்புக் கொள்கையில் உள்ளவர்கள் மதுவை ஒரு பெரிய பாவமாகக் கருதாமல் பெருமைக்குரிய செயலாகக் கருதுவதைப் பார்க்கிறோம். அது மட்டுமின்றி மதுவைக் கொண்டே சிலைகளுக்குப் படையல் செய்வதையும், திருவிழாக்களில் மது விருந்தை, மதத்தின் பெயராலேயே நடத்துவதையும் காண்கிறோம்.

ஆனால் மற்றவர்கள் முன்னால் மதியையும் மானத்தையும் இழக்க வைக்கும் மதுவை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது; தடுக்கிறது.

மனிதர்களை கெடுத்து, குட்டிச் சுவராக்கும் மதுவை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை இந்த மார்க்கம் கற்றுத் தந்ததுடன், அதில் வெற்றியும் கண்டுள்ளது.

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண் டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 2:219)

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

(அல்குர்ஆன் 4:43)

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!  மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(திருக்குர் ஆன் 5:90,91)

போதை தரும் எல்லா பானமும்  தடை செய்யப் பட்டதேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (242)

முதலில் மதுவானது கேடு தரும் காரியம் என்றும், பிறகு மது அருந்திய நிலையில் வணக்க வழிபாட்டின் பக்கம் வரக் கூடாது என்றும், இறுதியாக இது ஷைத்தானிய செயல் என்றும் இஸ்லாம் முடிவை அறிவித்தது.

மதுவை விட்டும் மக்கள முழுமை யாக மீட்டெடுக்கும் வகையில், மனிதர்களின் இயல்பைக் கவனித்து மதுவிற்கு எதிராகக் களமிறங்கியது. மது மட்டுமல்லாது போதை தரும் அனைத்துப் பொருட்களையும் தடை செய்தது. இதையும் மீறி அதன் பக்கம் செல்பவர்களுக்குக் கடுமையான தண்டனையை வரையறுத்தது. மது உட்பட எல்லா வகையான போதைப் பழக்கத்தையும் வெறுக்கும் சமுதாயத்தை உருவாக்கியது.

மது தடை செய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.

(மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் “(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டதுஎன்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்), “வெளியே போய் பார்(த்து வா)என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் “அறிந்து கொள்ளுங்கள். மது தடை செய்யப்பட்டுவிட்டதுஎன்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.

(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “வெளியே சென்று இதையும் ஊற்றிவிடுஎன்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன். அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) “மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)என்று கூறினர்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(இறைவனை) அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார் களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை” (5:93) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் (4006)

இன்று எத்தனையோ சட்டங்கள் போட்டும் ஒழிக்க முடியாத மதுப் பழக்கத்தை ஒரேயொரு திருமறை வசனத்தின் மூலம் இஸ்லாம் தடை செய்து, அதில் வெற்றியும் கண்டது என்றால் அதற்குக் காரணம் அது கற்பிக்கும் ஓரிறைக் கொள்கையும், மறுமை நம்பிக்கையும் தான்.

மது இல்லாத சமூகம் மலருவதற்கு ஆட்சியாளர்களின் அதிரடிச் சட்டங்கள் தேவை இல்லை. இணைவைப்பு கொள்கைக்குப் பதிலாக ஒரிறைக் கொள்கையின் நம்பிக்கை எல்லோருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டால் போதும், மதுப்பழக்கம் மாயமாகிப் போகும்.

வாழ்வைக் கெடுக்கும் வட்டி

செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்க்க வேண்டும் எனும் பேராசையின் பிரதிபலிப்பே வட்டியாகும். இது, பிறருக்கு உதவும் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைக்கும் காரியம்.

வட்டியினால் வீடு வாசல் இழந்து வீதிக்கு வந்தவர்கள் பலர். மதிப்பு மரியாதையை இழந்து உயிரைத் துறந்தவர்கள் பலர். அடுத்தவர் உழைப்பை உறிஞ்சும் இது போன்ற செயல்களை எந்தவொரு கொள்கை யும் தடுப்பதில்லை; கண்டிப்பதில்லை.

குறிப்பாக, இணைவைப்பு கொள்கைகள் இதன் பக்கம் கடைக்கண் பார்வை கூட செலுத்துவது இல்லை. எப்படியும் பணத்தை பெருக்கிக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமோ இந்த விவகாரத்திலும் தனித்து விளங்குகிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.

(திருக்குர்ஆன் 2:275)

அல்லாஹ் வட்டியை அழிக் கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(திருக்குர்ஆன் 2:276)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:278, 279)

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

(திருக்குர்ஆன் 3:130)

எந்தவொரு கொள்கையிலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் வட்டிக்கு எதிராகக் களம் கண்டிருக்கிறது. காரணம், வட்டி என்பது தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தையே சீரழிக்கும் செயல். நாள்தோறும் விலை மாற்றம், விலைவாசி உயர்வு போன்றவைக்கு இதுவே மூல காரணம்.

எனவே தான் வட்டி வாங்குவதை மட்டுமல்ல! அதைக் கொடுப்பது, பதிவு செய்வது, அதற்கு சாட்சியாக இருப்பது அனைத்தையும் கண்டிக்கிறது. இவையெல்லாம் ஏக இறைவனிடம்  இருந்து சாபத்தை, தண்டனையை பெற்றுத் தரும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3528)

எந்த வழியிலும் செல்வத்தை திரட்டிக் கொள்ளலாம்; அதில் ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் போதும் என்கிற இணைவைப்பு கொள்கையின் அவலத்தை யோசித்து பாருங்கள். வட்டியின் மூலம் பலரின் அழிவுக்குக் காரணமாக இருப்பவர்கள் கூட கோவில் உண்டியலில் லட்சக் கணக்கான பணத்தைக் கொண்டு கொட்டுவதற்குக் காரணம் அவர்களது தவறான கடவுள் கொள்கை தான்.

சமூக நலன் காக்கும் ஏகத்துவ கொள்கையைக் கடைபிடித்தால் மட்டுமே வட்டிக் கொடுமைக்கு முழுமையாக முற்றுப் வைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.